Author Topic: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~  (Read 86708 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218350
  • Total likes: 23050
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கலிலியோ கலிலி ('வானியல் சாஸ்திரத்தின் தந்தை') - வரலாற்று நாயகர்!
 
"உணர்வுகள், ஆறாம் அறிவு, பகுத்தறிவு ஆகியவற்றை மனிதனுக்குத் தந்த கடவுளே அவற்றை மனிதன் பயன்படுத்தக்கூடாது என்று சொல்கிறார் என்ற கூற்றை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது". சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன் உதிர்க்கப்பட்ட வசனம் இது. ஒன்பது கோள்களில் ஒன்றுதான் உலகம் என்பதும், நிலா பூமியை சுற்றுகிறது என்பதும், பூமி சூரியனை சுற்றுகிறது என்பதும் இன்று நாம் அறிந்த உண்மை. ஆனால் 500 ஆண்டுகளுக்கு முன்புவரை பூமிதான் பிரபஞ்சத்தின் நடுநாயகம் என்றும், நிலாவும் சூரியனும் பூமியை சுற்றுகின்றன என்றும் உலகம் நம்பிக்கொண்டிருந்தது. அது பொய் சூரியனை சுற்றிதான் அனைத்தும் சுழல்கின்றன என்ற உண்மையை துணிந்து சொன்னதற்காக சொல்லனா துயரங்களை அனுபவித்த ஒருவரை பற்றிதான் நாம் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். அவர்தான் பிரபஞ்சத்தின் உண்மையான அமைப்பை முதன்முதலில் அறிந்து சொன்ன வானியல் நிபுனர் கலிலியோ கலிலி (Galileo Galilei).



1564-ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் நாள் இத்தாலியில் Pisa-நகரில் பிறந்தார் கலிலி. ஆறு பிள்ளைகளில் மூத்தவர் அவர். அவரது குடும்பம் சமூகத்தில் உயரிய அந்தஸ்து பெற்ற குடும்பம் என்றாலும் பணக்கார குடும்பம் அல்ல. சிறுவயதிலேயே அறிவுக்கூர்மையும், ஆழமாக சிந்திக்கும் திறனும் பெற்றிருந்தார் கலிலி. அவருக்கு பதினேழு வயதானபோது பிசா (University of Pisa) பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கணிதமும், இயற்பியலும் கற்றார். அப்போது அந்த பல்கலைக்கழகத்தில் அவர்தான் அதிகமான கேள்விகள் கேட்ட மாணவராக இருந்திருப்பார். கற்பிக்கப்பட்ட அறிவியல் கருத்துகளை மற்ற மாணவர்கள் அப்படியே ஏற்றுக்கொள்ள, கலிலி மட்டும் அதற்கான ஆதாரங்களை கேட்பார். உதாரணத்திற்கு வெவ்வேறு எடையுடைய இரண்டு பொருட்களை உயரத்திலிருந்து கீழே போட்டால் அதிக எடையுடைய பொருள் முதலிலும், லேசான பொருள் பின்னரும் தரையில் விழும் என்று கற்பிக்கப்பட்டது.

அரிஸ்டாட்டில் கூறியிருந்த அந்த கருத்தை அப்படியே கற்பித்து வந்தன பல்கலைக்கழகங்கள் ஆனால் விஞ்ஞான கருத்து எதையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் அது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கபட்டிருக்க வேண்டும் என்று நம்பிய கலிலி அரிஸ்டாட்டிலின் கூற்றை மறுத்தார். அதனால் ஆசிரியர்களின் கண்டனத்திற்கு ஆளானார். பின்னர் பட்டம் பெற்ற பிறகு தமது 25-ஆவது வயதில் அதே பல்கலைக்கழகத்தில் கணித ஆசிரியராக சேர்ந்தார். மாணவனாக இருந்து செய்ய முடியாததை ஆசிரியராக இருந்து செய்வோம் என்று தீர்மானித்த அவர் அரிஸ்டாட்டிலின் கூற்றை பொய் என்று நிரூபிக்க விரும்பினார். நிறைய பார்வையாளர்களை அழைத்து பிசாவின் சாய்ந்த கோபுரத்தின் மீது ஏறி நின்று இருவேறு எடையுடைய இரண்டு உலோக குண்டுகளை ஒரே நேரத்தில் கீழே போட்டார். இரண்டு குண்டுகளும் ஒரே நேரத்தில் சமமாக தரையில் விழுந்தன.



ஓர் எளிய அறிவியல் உண்மையை கண்கூடாக கண்டபோதும் கூடியிருந்தவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? அதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என்றும், இயற்கைக்கு மாறானது என்றும் கூறி நம்ப மறுத்தனர் கலிலியை மந்திரக்காரன் என்று மறுதலித்தனர். அதன்பிறகு கலிலியோவால் பிசா பல்கலைகழகத்தில் தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை.  University of Padua பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக சேர்ந்தார். வானியல் ஆய்வில் அதிகம் ஆர்வம் கொண்ட கலிலி 1609-ஆம் ஆண்டில் telescope எனப்படும் உலகின் முதல் தொலைநோக்கியை உருவாக்கினார் அதைக்கொண்டு தினமும் விண்வெளியை ஆய்வு செய்தார். அதன்பலனாக விண்வெளியில் அதிசயிதக்க பல கண்டுபிடிப்புகளை செய்தார். முதலில் சனி கிரகத்தை சுற்றியுள்ள வளையத்தை கண்டுபிடித்தார். பின்னர் வியாழன் கோளுக்கு நான்கு துணைக்கோள்கள் அதாவது நான்கு நிலாக்கள் இருக்கின்றன என்பதை கண்டுபிடித்து சொன்னார்.

சூரியனில் கரும்புள்ளிகள் தெரிவதையும் அவர் கண்டார். அந்தப்புள்ளிகள் என்னவாக இருக்கும் என்று சிந்தித்தபோது அவை சூரியனை சுற்றும் கிரகங்களாகத்தான் இருக்க வேண்டும் என்று அனுமானித்தார். சூரியனை சுற்றியே அனைத்தும் சுழல்கின்றன என்ற தனது கருத்தை அதன்மூலம்தான் உறுதி செய்தார் கலிலி. ஏற்கனவே Copernicus அறிந்து சொன்ன கருத்துதான் அது என்றாலும் அதற்கான ஆதாரத்தை கண்டு சொன்னவர் கலிலிதான். அந்தக்கருத்தை சிலர் ஏற்றாலும், கேள்வி கேட்பதே தவறு என்று வாழ்ந்த பழமைவாதிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அது பைபிள் கருத்துக்கு எதிரானது என்று கூறி கிறிஸ்துவ சமூகமும் கலிலியோவுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. கலிலி கடவுளை மறுப்பவர் என்றும், சூனியக்காரர் என்றும்கூட பட்டம் கட்டியது ரோமன் கத்தோலிக்க தேவாலயம். 

அந்தக்காலகட்டத்தில் சர்வ வல்லமை பெற்றிருந்தன தேவாலாயங்கள். நாட்டை அரசன் ஆண்டாலும் அந்த அரசனையும் ஆளும் வல்லமை தேவாலாயங்களுக்கு இருந்தன. 1615-ஆம் ஆண்டில் கலிலியோ தமது கண்டுபிடிப்புகளையும், சூரியன்தான் பிரபஞ்சத்தின் நடுநாயகம் என்ற கருத்தையும் ஒரு புத்தமாக வெளியிட்டார். புனித தேவாலாயத்திற்கு எதிராக செயல்பட்டார் என்றுகூறி கலிலியோவை கைது செய்தனர் தேவாலாய அதிகாரிகள். தன்னுடைய கருத்துகள் தவறானவை என்று ஒப்புக்கொள்ளும்படி கலிலி வற்புறுத்தப்பட்டார் தன் உயிருக்கே ஆபத்து என்று உணர்ந்த கலிலி வேறு வழியில்லாமல் தன் கூற்று தவறு என்று உதட்டளவில் ஒப்புக்கொண்டார். பின்னர் பிரான்ஸுக்கு குடிபெயர்ந்த கலிலி தொடர்ந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். ஆண்டு செல்ல செல்ல பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்ற கருத்தில் அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்பட்டது.



ப்ளோரன்ஸ் (Florence) நகர அதிகாரிகளின் அனுமதியோடு 1632-ஆம் ஆண்டில் அவர் மற்றொரு புத்தகத்தை வெளியிட்டார். மீண்டும் தேவாலயத்தை அவமதிக்கிறார் என்றுகூறி ரோம் நகர உயரதிகாரிகள் அவரை மீண்டும் கைது செய்தனர் இம்முறை விடுதலை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் அவரை வீட்டுக்காவலில் வைத்தனர் அப்போது அவருக்கு வயது 68. பத்து ஆண்டுகள் வீட்டுக்காவலிலேயே காலம் கழித்த கலிலி 1642-ஆம் ஆண்டு தமது 78-ஆவது அகவையில் காலமானார். அவர் இறந்த பிறகு அவரது ஆராய்ச்சிகளையும், கண்டறிந்த உண்மைகளையும் உள்ளடக்கிய புத்தகம் ஐரோப்பா முழுவது வலம் வந்து பழமைவாதத்தில் சிக்காத சிலரின் அறிவுக்கண்ணை திறந்தது. கண்கூடாக காணும் வரை அல்லது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கபடும் வரை எதையுமே ஏற்றுக்கொள்ளாத மனோபாவம்தான் உலகம் வியக்கும் கண்டுபிடிப்புகளை செய்ய கலிலிக்கு உதவியிருக்கிறது. 'வானியல் சாஸ்திரத்தின் தந்தை' என்ற பெயரையும் அவருக்கு பெற்றுத்தந்திருக்கிறது.

உண்மை என்று நம்ப படுபவைகளை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்  என்ற அவசியம் கிடையாது. சந்தேகம் இருந்தாலும் துணிந்து கேட்கலாம் அது பொய் என்று தெரிந்தாலும் தைரியமாக சொல்லலாம். கலிலியோ போல் கேள்வி கேட்க துணிபவர்களுக்கும், புதிய உண்மைகளை கண்டுபிடிக்க முனைவர்களுக்கும் விடாமுயற்சியுடன் தன்னம்பிக்கையோடு உழைப்பவருக்கும் நிச்சயம் அந்த வானம் வசப்படும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218350
  • Total likes: 23050
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
லூயி பாஸ்ச்சர் (நுண்ணுயிரியலின் தந்தை) (1822-1895) -வரலாற்று நாயகர்!
 
மனித வரலாறு எழுதப்படத் தொடங்கிய காலத்திலிருந்து உலகின் ஏதாவது ஒரு மூலையில் போர்களோ, சண்டையோ நிகழாமல் இருந்த நாட்களே கிடையாது. ஆனால் போர்கள் வாங்கிய உயிர்ப்பலியைக் காட்டிலும் இயற்கை வாங்கிய உயிர்ப்பலி அதிகம் என்பதுதான் உண்மை. ஆம் போர்களில் இறந்தவர்களைக்காட்டிலும் எண்ணிலடங்கா நோய்களுக்கு பலியானவர்கள்தான் அதிகம் என்கிறது வரலாறு. இயற்கை மனுகுலும் மீது தொடுக்கும் போர்தான் நோய். எனவேதான் அந்த நோய்களை தோற்கடித்து உயிர்களைக் காப்பாற்றும் மருத்துவர்களும், மருந்து கண்டுபிடிக்கும் விஞ்ஞானிகளும் கடவுள் அந்தஸ்த்திற்கு உயர்த்தப்படுகின்றனர்.

நாம் தெரிந்துகொள்ளவிருக்கும் வரலாற்று நாயகரின் மருத்துவத்துறை பங்களிப்பு மற்றவர்களைக் காட்டிலும் தலையாயது என்று வரலாற்றில் 'நூறு முக்கியமான மனிதர்கள்' என்ற நூலை எழுதியை Michael Hart கூறுகிறார். அந்த நூலில் இந்த வரலாற்று நாயகருக்கு பதினோராவது இடம் வழங்கப்பட்டுள்ளது. அம்மை, ரேபிஸ் போன்ற கொடிய நோய்களுக்கு மருந்தையும் ஆந்தரக்ஸ் நோய்க்கு தடுப்பு மருந்தையும் கண்டுபிடித்ததோடு பாலை கிருமிநீக்கம் செய்யும் முறையையும் கண்டுபிடித்தார் அவர். அவரது கண்டுபிடிப்புகளின் அடிப்படையைக் கொண்டுதான் பிந்நாளில் பல்வேறு தடுப்பூசிகளும், மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டன. அவர்தான் உலகப்புகழ் பெற்ற பிரெஞ்சு வேதியியல் அறிஞரும், உயிரியல் விஞ்ஞானியுமான லூயி பாஸ்ச்சர் (Louis Pasteur).



1822-ஆம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் நாள் கிழக்கு பிரான்சில் உள்ள Dole எனும் ஊரில் பிறந்தார் லூயிபாஸ்ச்சர். சிறுவயதிலிருந்தே நாட்டுப்பற்றும், இயற்கை மீது ஆர்வமிக்கவராக அவர் இருந்தார். அறிவியலும், ஓவியமும் அவருக்கு பிடித்த துறைகள். பதினாறு வயது வரை தாம் பார்த்து ரசித்தவற்றையெல்லாம் ஓவியமாக வரையும் பழக்கம் அவருக்கு இருந்தது. கூச்ச சுபாவம் கொண்ட பாஸ்ச்சர் தமது இருபதாவது வயதில் அறிவியலில் பட்டம் பெற்றார். பிற்காலத்தில் வேதியியல் துறையில் மிகப்பெரிய பங்களிப்பை செய்யவிருந்த அவருக்கு பல்கலைக்கழகத்தில் வேதியியல் பாடத்தில் சராசரி மதிப்பென்கள்தான் கிடைத்தது என்பது ஆச்சரியமான உண்மை. பல்வேறு ஆராய்ச்சிகளின் மூலம் காற்றில்கூட கிருமிகள் இருக்கின்றன என்பதை கண்டுபிடித்து சொன்னார் பாஸ்ச்சர். தனது கண்டுபிடிப்பை நிரூபிப்பதற்கு அவர் ஆல்பஸ் மலையின் தூய காற்றை வடிகட்டியும் ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார். 

புதிதாக கறந்த பாலை அப்படியே வைத்திருந்தால் சிலமணி நேரங்களில் அது புளித்து கெட்டு விடும் என்பது நமக்குத் தெரியும். பாலை புளிக்க செய்வது அதில் இருக்கும் பாக்டீரியா கிருமிகள்தான் என்பதை கண்டுபிடித்தார் பாஸ்ச்சர். மேலும் ஒரு குறிப்பிட்ட அளவு வெப்பத்தில் வைத்தால் பெரும்பாலான கிருமிகள் அழிக்கப்படும் என்பதையும் அவர் கண்டுபிடித்தார். அவ்வாறு செய்வதன் மூலம் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களான தயிர்  நெய் போன்றவற்றை அதிக காலம் கெடாமல் வைத்திருக்கலாம் என்பதையும் அவர் நிரூபித்துக்காட்டினார். பாலில் உள்ள கிருமிகளை அழித்து அவற்றை பாதுகாப்பாக்கும் முறை அதனை கண்டுபிடித்த பாஸ்ச்சரின் பெயராலேயே 'பாஸ்ச்சரைசேஷன்' என்று அழைக்கப்படுகிறது. இன்று உலகம் முழுவதும் அந்த முறை பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. கிருமிகள் பற்றிய அந்த கண்டுபிடிப்பு மிக முக்கியமானது என்பதை மருத்துவ உலகம் உணர்ந்தது. எப்படி பாலை கொதிக்க வைப்பதால் கிருமிகள் அழிக்கப்படுகின்றனவோ அதேபோல் காச நோய் கிருமிகளை உஷ்ணத்தால் அழிக்க முடியும் என்பதை மருத்துவர்கள் கண்டனர். எனவே காசநோய்க்கும் மருந்து கிடைத்தது.



அடுத்து வெறிநாய்க்கடியால் உண்டாகும் ரேபிஸ் நோய் பற்றி ஆராய்ந்தார் பாஸ்ச்சர். அவரது ஆராய்ச்சின் பலனாக அந்த கொடூரமான நோய்க்கான தடுப்பூசி மனுகுலத்திற்கு கிடைத்தது. அந்த ஆராய்ச்சிகளின்போது அவர் அச்சமின்றி பல வெறிநாய்களை வைத்து சோதனை நடத்தினார். வெறிநாய்களின் எச்சிலில்தான் கிருமிகள் இருக்கின்றன என்பது தெரிந்தும் ஆராய்ச்சிக்காக ஒருமுறை அவர் ஒரு நாயின் வாயில் குழாய் வைத்து தான் வாயால் அதன் எச்சிலை உரிஞ்சு எடுத்ததாக ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது. தப்பித்தவறி அந்த எச்சில் அவர் வாய்க்குள் சென்றிருந்தால் அவரது நிலமை என்னவாகியிருக்கும்? அப்படி அச்சமின்றி தன் உயிரை துச்சமாக மதித்து போராடியதால்தான் பல உயிர்களை காக்கும் மருந்துகளை அவரால் கண்டுபிடிக்க முடிந்தது. வெறி நாய்க்கான மருந்தை கண்டுபிடித்த போது 1888-ஆம் ஆண்டு பாரிசில் Pasteur institute என்ற கழகம் அவரது பெயராலேயே அமைக்கப்பட்டது. பாஸ்ச்சரின் அடிப்படைக் கொள்கைகளை பயன்படுத்தி typhus எனப்படும் சன்னிக்காய்ச்சல், Polio எனப்படும் இளம்பிள்ளைவாதம் போன்ற நோய்களுக்கும் தடுப்பூசிகளை கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள். பாதுகாப்பான தடுப்பூசி மூலம் அந்த நோய்கள் கிட்டதட்ட துடைத்தொழிக்கப்பட்டன.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து உலக மக்களின் ஆயுட்காலம் இரட்டிப்பாகி இருக்கின்றன என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அப்படி உயிர்களை காப்பாற்றியதோடு மட்டுமின்றி மனித வாழ்க்கையை நீட்டிப்பதற்கும் முழுமுதற் காரணம் லூயி பாஸ்ச்சர் புரிந்த மருத்துவ சாதனைகளேயாகும். தமது அறிவியல் கண்டுபிடிப்புகளின் மூலம் உலக மக்களின் துன்பங்களையும், துயரங்களையும் போக்கிய மாமனிதர் தங்கள் நாட்டவர் என்று அன்றும் சரி இன்றும் சரி நியாயமாக கர்வப்பட்டுக்கொள்கின்றனர் பிரெஞ்சு மக்கள். அங்கு நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் இதுவரை பிரெஞ்சு தேசம் உருவாக்கியிருக்கும் ஆகச்சிறந்த குடிமக்களில் முதல் இடத்தை லூயி பாஸ்ச்சருக்கு வழங்கி கெளரவித்திருக்கின்றனர் அந்நாட்டு மக்கள். மாவீரன் நெப்போலியனுக்கு அந்த பட்டியலில் ஐந்தாம் இடம்தான்.



லூயி பாஸ்ச்சர் என்ற தனி ஒரு மனிதனின் மருத்துவ பங்களிப்பினால் எத்தனை உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கின்றன என்பதை நம்மால் துல்லியமாக கூற முடியாது என்றாலும் அது மில்லியன் கணக்கில் இருக்கும் என்பதை மட்டும் துணிந்து சொல்லலாம். அப்படி மில்லியன் கணக்கானோரின் வாழ்க்கையை காப்பாற்றித் தந்த அந்த உன்னத விஞ்ஞானி 73-ஆண்டுகள் வரை உயிர் வாழ்ந்தார். தன் இறுதி நாட்கள் வரைக்கும் உழைத்துக்கொண்டேயிருந்த அந்த ஜீவன் தனது மாணவர்களுக்கு சொன்ன அறிவுரை என்ன தெரியுமா?! உழையுங்கள்.. உழையுங்கள்.. உழைத்துக்கொண்டேயிருங்கள் எக்காரணத்திற்காகவும் உழைப்பதை நிறுத்தாதீர்கள் என்பதுதான். மனுகுலத்திற்கு அளிவிட முடியாத நன்மைகளை செய்த லூயி பாஸ்ச்சர் 1895-ஆம் ஆண்டு செப்டம்பர் 28-ஆம் நாள் காலமானார். மருத்துவ உலகில் அவருக்கு பிறகு அவர் அளவுக்கு உயர்ந்த பங்களிப்பை செய்த ஒரு விஞ்ஞானியை உலகம் இன்னும் சந்திக்கவில்லை. அதனால்தான் அவரை 'மருத்துவத்தின் தந்தை' என்றும், 'மனுகுலத்தின் இரட்சகர்' என்றும் உலகம் போற்றுகிறது. மண்ணில் மட்டுமல்ல விண்ணிலும் அவரது புகழ் நிலைத்திருக்கிறது செவ்வாய் கோளிலும், நிலவிலும் உள்ள grates எனப்படும் பள்ளங்களுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

நோய் என்ற ஆயுதத்தைக் கொண்டு மனுகுலத்தின் மீது இயற்கையே போர் தொடுத்த போது இயற்கையை வெல்ல முடியாது என்றுதான் பலர் வேதாந்தம் பேசினர். அதற்கும் மனிதனின் இயலாமை என்ற நோய்தான் காரணம். ஆனால் தன்னம்பிக்கையோடு முயன்றால் இயற்கையை மட்டுமல்ல, இமயத்தையும் வெல்லலாம் என வாழ்ந்து காட்டியவர்தான் லூயி பாஸ்ச்சர். "எழுந்தவனுக்கு விரல்களெல்லாம் சாவி, சோர்ந்தவனுக்கு கால்கள் முழுக்க பூட்டு" என்று அழகாக கூறுகிறார் கவிஞர் பா.விஜய் இயற்கைக்கு எதிராக எழுந்து நின்றதால்தான் மனுக்குலத்தின் துன்பங்களான நோய்களை குணப்படுத்தும் சாவிகள் பாஸ்ச்சரின் கைகளுக்கு கிடைத்தன. அவரைப்போல் தன்னம்பிக்கையோடும் விடாமுயற்சியோடும் எழுந்து நிற்பவருக்கு அவர்கள் விரும்பும் வானத்தை வசப்படுத்துவது இயற்கையின் கடமை.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218350
  • Total likes: 23050
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
விமானம் உருவான கதை - ரைட் சகோதரர்கள் (வரலாற்று நாயகர்கள்)
 
கிறிஸ்துவுக்குப் பின் நாம் இருபது நூற்றாண்டுகளை கடந்துவிட்டோம் அவற்றில் இருபதாம் நூற்றாண்டில்தான் அதிகமான அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன. அதனால்தான் இருபதாம் நூற்றாண்டை 'அறிவியல் நூற்றாண்டு' என்று பதிந்து வைத்திருக்கிறது வரலாறு. மனித வாழ்க்கையை மேம்படுத்திய ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளை கடந்த நூற்றாண்டில் உலகம் சந்தித்தது. அவற்றுள் இரண்டு கண்டுபிடிப்புகள் இந்த உலகையே ஒரு குக்கிராமமாக சுருக்க உதவின. ஒன்று அலெக்ஸாண்டர் கிரகம்பெல் கண்டுபிடித்த தொலைபேசி, மற்றொன்று:

“பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்”  ஆம் உண்மையிலேயே பறவைகள் பறக்கும் அழகைக் கண்டு வியந்து நாமும் அவற்றைப்போல் பறந்தால் நன்றாக இருக்குமே!! ஏன் மனிதனும் பறக்க முடியாது? என்று கேள்வி கேட்டு பல ஆண்டு காலம் உறுதியோடு உழைத்து தங்கள் உயிரையும் பணயம் வைத்து கடைசியில் தங்கள் கனவை நனவாக்கிய இரண்டு வரலாற்று நாயகர்களின் கதையைத் தெரிந்துகொள்வோம்...



மனுகுலத்திற்கு பறக்கும் சக்தியைக் கொடுத்த அந்த அபூர்வ சகோதரர்கள் ஆர்வில் ரைட் மற்றும் வில்பர் ரைட்.இவர்களை சுருக்கமாக ரைட் சகோதரர்கள் என்று அழைக்கிறது வரலாறு. அமெரிக்காவில் இண்டியானா மாநிலத்தில் மெல்வில் எனும் ஊரில் 1867 ஆம் ஆண்டு ஏப்ரல் 16ந்தேதி பிறந்தார் வில்பர் ரைட், நான்கு ஆண்டுகள் கழித்து 1871 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 9ந்தேதி பிறந்தார் இளையவர் ஆர்வில் ரைட் இவர்களது தந்தை மில்டன் ரைட் ஒரு பாதிரியார். குடும்பம் ஏழ்மையான குடும்பம்தான் அதனால் உயர்நிலைப் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்க முடியவில்லை ரைட் சகோதரர்களால் ஆனால் இருவருக்குமே அறிவுத்திறனும், ஆற்றலும் நிறையவே இருந்தது. ஒருமுறை இருவருக்கும் பறக்கும் விளையாட்டுப் பொம்மை ஒன்றை பரிசாகத் தந்தார் தந்தை. மூங்கில் தக்கை, காகித அட்டை ஆகியவற்றால் செய்யப்பட்ட அந்த பொம்மை வீட்டின் கூரைவரை ஒரு ஹெலிகாப்டரைப்போல் பறந்து செல்லக்கூடியதாக இருந்தது. அப்போதே ரைட் சகோதர்கள் இருவருக்கும் அந்தப் பொம்மையை பெரிய அளவில் செய்தால் அதனை வெளியில் இன்னும் அதிக உயரத்தில் பறக்க விடலாமே என்ற எண்ணம் உதித்தது. முயன்று பார்த்தனர் தோல்வியைத் தழுவினர்.

ரைட் சகோதரர்கள் இருவருக்குமே பறவைகள் பறக்கும் அழகைப் பார்த்து வியப்பதில் அலாதி பிரியம். அதே நேரத்தில் பலவிதமான பட்டங்களை செய்து பறக்க விட்டு மகிழ்வார்கள். அந்தப் பட்டங்களைப்போல், பறவைகளைப்போல் என்றாவது ஒருநாள் நாமும் வானத்தில் பறப்போம் என்ற நம்பிக்கையைச் சுமந்துகொண்டு பிழைப்புக்கு வழி தேடினர் இருவரும். ஒரு அச்சு நிறுவனத்தை தொடங்கி செய்தித்தாள்கள் அச்சிட்டனர் ஆனால் அது நொடித்துப்போனது. பின்னர் அப்போது சைக்கிள்கள் பிரபலமாக தொடங்கியிருந்ததால் அவர்கள் சைக்கிள் வியாபாரத்தில் ஈடுபட்டனர். அந்தச் சமயத்தில்தான்  Otto Lilienthal  என்ற ஜெர்மானியரைப் பற்றி கேள்விப்பட்டனர் இருவரும். தங்களுக்கு முன்பே பறப்பதைப்பற்றி சிலர் சிந்தித்திருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு அப்போதுதான் புரிந்தது. Otto தான் தயாரித்த கிளைடர் என்ற கருவியின் மூலம் இயந்திரம் எதுவுமின்றி காற்றின் சக்தியினால் ஆகாயத்தில் பறந்ததைப்பற்றி ரைட் சகோதரர்கள் கேள்விப்பட்டனர்.



பறக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்துவிடலாம் என்ற நம்பிக்கை மேலும் வளர்ந்தது. அதைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள முற்பட்டபோது Otto Lilienthal ஒரு பறக்கும் சோதனை முயற்சியில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். ரைட் சகோதரர்கள் அதிர்ந்து போனாலும் அவர்களது நம்பிக்கை உதிர்ந்து போகவில்லை.  Smithsonian Institution என்ற அமைப்பின் தலைவருக்கு அவர்கள் கடிதம் எழுதினர். ரைட் சகோதரர்களின் ஆர்வத்தை உணர்ந்த கழகத்தின் தலைவர் Samuel P. Langley ஆகாயத்தில் பறக்க அதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைப் பற்றியும், வெற்றி தோல்விகளைப் பற்றியும், முன்னேற்றம் பற்றியும் இப்படி எல்லாத் தகவல்களையும் அனுப்பி வைத்தார்.ரைட் சகோதரர்கள் தங்களுக்கு முன் பலர் மேற்கொண்ட அரிய முயற்சிகளைக் கண்டு அவர்கள் மலைத்தனர். அந்த முயற்சிகளால் பெறப்பட்ட அறிவைக்கொண்டு வெவ்வேறு கோணங்களில் சிந்தித்தனர்.   

ரைட் சகோதரர்கள் தங்கள் முதல் கிளைடரை 1900 ஆம் ஆண்டில் உருவாக்கினர் அதனை எங்கு சோதித்துப் பார்க்கலாம் என்று சிந்தித்தபோது பருவநிலை ஆராய்ட்சி நிலையத்திற்கு கடிதம் எழுதினர். வட கேரனொய்வில் உள்ள கிட்டிகாக் என்ற இடம் உகந்தது என்று பதில் வந்தது. அங்கு சென்று முயன்று பார்த்தனர் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அப்போதும் அவர்கள் மனம் தளரவில்லை அடுத்த நான்கு ஆண்டுகள் தங்கள் வடிவமைப்பில் வெவ்வேறு மாற்றங்களை செய்வதும் சோதிப்பதுமாக இருந்தனர் ரைட் சகோதரர்கள். வேறு முன்மாதிரிகள் இல்லாததால் சிந்தித்து சிந்தித்து மாற்றங்கள் செய்தனர். ஒவ்வொரு முறையும் அவர்களால் முன்னேற்றத்தை உணர முடிந்தது. 1903 ஆம் ஆண்டு தாங்கள் தயாரித்த ஒரு கிளைடரில் தாங்களே உருவாக்கிய ஒரு மோட்டார் இயந்திரத்தைப் பொருத்தினர். அதில் விமானி குப்புற படுத்துக்கொண்டே தன் கை, கால்களால் இயக்கி அதனை பறக்கச் செய்ய வேண்டும்.



1903 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ந்தேதி முதல் வெள்ளோட்டத்திற்கு தயாராக நின்றது ஃப்ளையர் என்று அவர்கள் பெயரிட்டிருந்த அந்த விமானம். யார் அதனை ஓட்டுவது என்று நாணயத்தை சுண்டிப் பார்த்ததில் வில்பருக்கு வெற்றிக் கிடைத்தது. இருவரின் மனமும் எதிர்பார்ப்பில் படபடக்க விமானத்தில் ஏறி குப்புற படுத்துக்கொண்டே விமானத்தைக் கிளப்ப முயன்றார் வில்பர், ஆனால் ஏதோ இயந்திரக் கோளாறு காரணமாக விமானம் நகரவே இல்லை. அப்போதுகூட அந்த சகோதரர்கள் மனம் தளர்ந்து போயிருந்தால் நமக்கு விமானம் கிடைக்காமல் போயிருக்கும். அடுத்த மூன்று நாட்கள் சிந்தித்து மேலும் சில மாற்றங்களை செய்தனர்.

டிசம்பர் 17ந்தேதி மீண்டும் முயன்றனர். இம்முறை நாணயத்தை சுண்டிப்பார்த்ததில் ஆர்விலுக்கு அடித்தது யோகம்.விமானத்தில் வயிறுக் குப்புற படுத்துக்கொண்டு அமெரிக்க நேரப்படி காலை 10:35 க்கு விசையை இழுத்தார் ஆர்வில்.அந்த இயந்திர விமானம் ஆடி குலுங்கி, கனைத்து புகையைக் கக்கியபடியே மெதுவாக மேலே எழத்தொடங்கியது. அந்தரத்தில் அப்படியும் இப்படியுமாக ஆடி சரியாக 12 வினாடிகள் பறந்து 37 மீட்டருக்கு அப்பால் போய் பத்திரமாக தரையிறங்கியது.அந்த 12 வினாடிகள்தான் ஆகாய போக்குவரவுக்கு அடிகோலிய மந்திர வினாடிகள். வெற்றிக் களிப்பில் மிதந்தனர் ரைட் சகோதரர்கள். அவர்கள் பல நாட்கள் சிந்திய வியர்வைக்கு கடைசியில் பலன் கிட்டியது. அதேதினம் மேலும் மூன்று முறை ரைட் சகோதரர்கள் மாறி மாறி பறந்து சோதனைகள் செய்தனர். நான்காவது முறை வில்பர் 57 வினாடிகள் அந்தரத்தில் பறந்தார். அதற்கு அடுத்த ஆண்டே ரைட் சகோதரர்கள் நூறு அடி உயரம்வரை சென்று பன்னிரெண்டு மைல்கள் பறந்து சாதனை படைத்தனர். தொடர்ந்து பல முன்னேற்றங்களை செய்து 1908 ஆம் ஆண்டு 57 நிமிடங்கள் ஆகாயத்தில் பறந்து சாதனை படைத்தார் ஆர்வில்.



அடுத்த சோதனையின்போது தன்னுடன் ஒரு பயணியை அழைத்துச் சென்றார் ஆனால் எதிர்பாராத விதமாக விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறால் அது பூமியில் விழுந்து நொறுங்கியது. பயணி மாண்டார் ஆர்வில் தெய்வாதீனமாக உயிர் தப்பினார். ஆகாயப் போக்குவரவை சாத்தியமாக்கிய வில்பர் ரைட் 1912 ஆம் ஆண்டு மே மாதம் 30 ந்தேதியும் ஆர்வில் ரைட் 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30ந்தேதியும் இயற்கை எய்தினர். அந்த சகோதரர்கள் கிட்டிக்காக்கில் வடிவமைத்து உருவாக்கி முதன் முதலில் பயணம் செய்த அந்த விமானம் வாஷிங்டெனில் உள்ள தேசிய வான்வெளி அருங்காட்சியகத்தில் இன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ரைட் சகோதரர்களின் அடிப்படையைக் கொண்டு பற்பல மாற்றங்களைக் கண்டு நவீன விமானம் உதயமானது.



இன்று உலகின் எந்த மூலை முடுக்குக்கும் நினைத்தவுடனே சென்று வர முடிவதற்கு காரணம் ரைட் சகோதரர்கள் அன்று கண்ட கனவும், சிந்திய வியர்வையும் அந்தக் கனவை நனவாக்க அவர்கள் மேற்கொண்ட விடாமுயற்சியும்தான். ஆனால் ஆரம்பத்தில் அவர்களின் கனவைக் கேட்டு உலகம் என்ன சொன்னது தெரியுமா? 'முட்டாள்கள் இவர்கள் வானத்தில் பறக்கப் போகிறார்களாம்' என்று எள்ளி நகையாடியது. அதேபோல இன்று நீங்கள் கானும் கனவை எள்ளி நகையாட ஆயிரம்பேர் அணிவகுத்து நிற்பார்கள். ஒருவர்கூட உங்களை தட்டிக் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை வள்ளுவன் கூறியதுபோல, ரைட் சகோதரர்கள் நிகழ்த்திக் காட்டியதுபோல் நிச்சயம் “முயற்சி தன் மெய்வருத்த கூலிதரும்” உங்கள் செயல்களில் தொடர்ந்து முயன்றுகொண்டே இருங்கள் தொய்வின்றி முயல்பவர்களுக்கு எந்த வானமும் வசப்பட்டே ஆக வேண்டும் என்பது வரலாறு சொல்லும் உண்மை.

 “பயிற்சியும் முயற்சியும் இருந்தால்
ஒவ்வொரு மனிதனும் சாதனையாளனே”

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218350
  • Total likes: 23050
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஹெலன் கெல்லர் (தன்னம்பிக்கையின் மறு உருவம்) - வரலாற்று நாயகி
 
தன்னம்பிக்கையையும், விடாமுயற்சியையும் உணர்வுப்பூர்வமாக பின்பற்றும் எவருக்கும் வானம் வசப்பட்டே ஆக வேண்டும் என்ற இயற்கை விதியை தெள்ளத் தெளிவாக உணர்த்தும் ஓர் அசாதரணமான கதை. 1880ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் நாள்  அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள தஸ்கம்பியா எனும் சிற்றூரில் ஒரு குழந்தை பிறந்தது. அழகாகவும் நல்ல உடல் ஆரோக்கியமாகவும் இருந்த தங்கள் குழந்தையின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும் என்று எல்லா பெற்றோரைப்போல் அந்த பெற்றோரும் நம்பினர், விரும்பினர். குழந்தைக்கு இரண்டு வயதுகூட நிரம்பாத தருணத்தில் திடிரென்று காய்ச்சல் வந்தது. அது என்ன காய்ச்சல் என்பது அப்போதைய மருத்துவர்களுக்கும் தெரியவில்லை குழந்தை இறந்துவிடும் என்றுதான் நினைத்து வருந்தினர். ஆனால் பெயர் தெரியாத அந்த நோய் குழந்தையின் உயிரை பறிக்கவில்லை மாறாக அந்த பச்சிளங்குழந்தையின் பசுமை மாறாத உடலில் இரண்டு கொடூரங்களை நிகழ்த்திக் காட்டியது. முதலாவதாக அந்த மழலையின் செவிகள் செயலிழந்தன. அடுத்து அந்த பிஞ்சுக் குழந்தையின் சின்னஞ்சிறு விழிகள் ஒளியிழந்தன. பேசிக்கூட பழகாத, தன் பெயரையே கேட்டறியாத அந்த பிஞ்சுப்பருவத்திலேயே கண் பார்வையையும், செவிகளையும் இழந்தது அந்த பச்சிளங்குழந்தை.

அந்தக்குழந்தை நீங்களாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? சிந்தித்தவாறே கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்....


உங்கள் விழிகளை நனைக்கப்போகும் இந்தக் கதையின் நாயகியின் பெயர் ஹெலன் கெல்லர். இரண்டு வயது நிரம்பும் முன்னே இரண்டு முக்கிய புலன்களை இழந்த ஹெலன் கெல்லர் ஏழு வயதாகும் வரை இருண்ட உலகில் மருண்டு போயிருந்தார். பின்னர் ஹெலன் கெல்லருக்கு நிபுனத்துவ உதவி தேவை என்று நம்பிய பெற்றோர் வாஷிங்டென் சென்று அலெக்ஸாண்டர் கிரகாம்பெல்லை சந்தித்தனர். தொலைபேசியைக் கண்டுபிடித்த கிரகாம்பெல் காது கேளாதருக்கான நலனிலும் கல்வியிலும் அதிகம் ஈடுபாடு கொண்டவர் என்று எமது முந்தைய வரலாற்று நாயகர் தொகுப்பில் பார்த்தோம். கிரகாம்பெல்  ஆன் சல்லிவன் என்ற ஆசிரியை ஹெலன் ஹெல்லருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அந்த ஆன் சல்லிவன்தான் கும்மிருட்டான, நிசப்தமான ஹெலன் கெல்லர் உலகுக்கு ஒளியையும், ஒலியையும் கொண்டு சேர்த்தார்.



பார்க்கவும், கேட்கவும் முடியாத ஒரு சிறுமிக்கு எப்படி எழுத்துக்களையும், சொற்களையும் அறிமுகம் செய்வது? ஹெலன் ஹெல்லரின் உள்ளங்கையில் தன் விரல்களால் எழுதி கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகம் செய்தார் ஆன், அவற்றை விளையாட்டாக எண்ணி கற்றுக்கொண்டார் ஹெலன் கெல்லர். ஆனால் தான் கற்றுக்கொண்ட எழுத்துக்களை அவரால் பொருட்களோடு தொடர்புபடுத்த முடியவில்லை. உதாரணத்திற்கு வாட்டர் (Water) என்று கைகளில் எழுதி காட்டும்போது ஹெலன் கெல்லருக்கு எழுத்துக்கள் புரியும் ஆனால் அது தண்ணீர் என்று தெரியாது. ஒருமுறை ஒரு தண்ணீர் குழாய்க்குக் கீழ் கெல்லரின் வலது கையில் தண்ணீர் படுமாறு வைத்து அவரது இடது கையில் வாட்டர் என்று எழுதி காட்டினார் ஆன் உடனே சட்டென்று மலர்ந்தது கெல்லரின் முகம். முதன் முதலாக ஒரு பொருளைத் தொட்டு அதன் பெயரை உணர்ந்தார். அதே குதூகலத்தில் தனது வலது கையை தரையில் வைத்தார் கெல்லர் அதனை எர்த் என்று இடது கையில் எழுதிக் காட்டினார் ஆன் ஒரு புதிய உலகத்தில் சஞ்சரிக்கத் தொடங்கினார் கெல்லர். சில நிமிடங்களிலேயே சுமார் முப்பது சொற்களைக் கற்றுக்கொண்டார்.



இப்படி ஒவ்வொரு பொருளையும் தொட்டு தொட்டு உணர்ந்தது அந்த எட்டு வயது பட்டாம்பூச்சி. பிறகு சிறிது சிறிதாக எழுத கற்றுக்கொண்ட கெல்லர் கண் பார்வையற்றோருக்கோன பிரெயில் எழுத்து முறையை கற்றுக் கொண்டார். எதையும் விரைவாக கற்றுக்கொள்ளும் திறமை கெல்லருக்கு இயல்பாகவே இருந்தது. பத்து வயது நிறைவதற்கு முன் லத்தீன், பிரெஞ்சு, ஜெர்மன், மற்றும் கிரேக்க மொழிகளை பிரெயில் முறையில் கற்றுக்கொண்டார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா!! பிறகு கெல்லருக்கு பேசக் கற்றுத்தர ஷேரபுலா என்ற ஆசிரியை உதவினார். எவர் பேசுவதையும்தான் கெல்லரால் பார்க்கவும் கேட்கவும் முடியாதே பிறகு எப்படி அவருக்கு சொல்லித்தருவது? நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ தனது ஆசிரியை ஷேரஃபுலா பேசும்போது அவரது வாய் உதடுகள் மற்றும் நாக்கின் அசைவுகளை தொட்டு தொட்டு உணர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக பேசக் கற்றுக்கொண்டார் ஹெலன் கெல்லர். நம்பமுடிகிறதா? கற்பனை செய்து பார்க்கக்கூட சிரமமாக இருக்கிறதல்லவா? தட்டுத் தடுமாறி பேசத் தொடங்கிய அவர் பல ஆண்டுகள் சிரமபட்டு பயிற்சி செய்தார். கடைசிவரை அவரால் தெளிவாக பேச முடியவில்லை ஆனால் ஒருமுறைகூட மனம் தளரவில்லை ஹெலன் கெல்லர்.



தனியாக பாடங்களை கற்றுக்கொண்ட கெல்லர் பல்கலைக் கழகத்திற்கு செல்ல விரும்பினார். ராட்கிளிஃப் பல்கலைக்கழகம் மிகுந்த தயக்கத்துடன் கெல்லரை சேர்த்துக்கொண்டது. ஆன் சல்லிவனை துணைக்கு வைத்துகொண்டு தொய்வின்றி உழைத்த கெல்லர் 1904 ஆம் ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றார். தனது கல்லூரி நாட்களிலேயே 'தி ஸ்டோரி ஆஃப் மை லைப்’ என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதினார் கெல்லர். தன் வாழ்நாளில் மொத்தம் 12 நூல்களை எழுதியுள்ளார். பிரெயில் தட்டச்சு இயந்திரத்தையும் சாதரணமான தட்டச்சு இயந்திரத்தையும் பயன்படுத்த கற்றுக்கொண்டிருந்தார். கெல்லருக்கு குதிரைச் சவாரி தெரியும் இருவர் அமர்ந்து இயக்கும் டேண்டம் பைசைக்கிள் ஓட்டத் தெரியும். 1919 ஆம் ஆண்டு அவரது கெல்லரின் கதை ஹாலிவுட்டில் படமாக்கப்பட்டபோது அந்தப் படத்தில் நடித்தும் இருக்கிறார். இரண்டு ஆண்டுகள் கழித்து அமெரிக்காவில் கண் பார்வையற்றோர் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. அதன் அதிகாரப்பூர்வ பேச்சாளாராக கெல்லர் நியமிக்கப்பட்டார். குறிப்பாக உடல் ஊனமுற்றோருக்காக பேசிய கெல்லரைப் பல நாடுகள் பேச அழைத்தன.



ஹெலன் கெல்லர் உதிர்த்த சில பொன்மொழிகள்:
1.பறக்க விரும்புபவனால் படர முடியாது.
2.மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.
3.ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.

1930 ஆம் ஆண்டு தொடங்கி இந்தியா உட்பட 39 உலக நாடுகளுக்கு சென்று பேசினார் கெல்லர். பேசிய இடங்களிலெல்லாம் கண் பார்வையற்றோருக்காக நிதி சேர்த்தார். 1932 ஆம் ஆண்டு கெல்லருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது ஸ்காட்லாந்தின் லாஸ்கோ பல்கலைக்கழகம். இரண்டாம் உலகப்போரின்போது உடல் உறுப்புகளை இழந்த வீரர்களை சந்தித்து ஆறுதல் சொல்லி ஊக்கமூட்டினார். தன் வாழ்நாளில் 12 அமெரிக்க அதிபர்களை சந்தித்து பேசியிருக்கிறார் கெல்லர். 1964 ஆம் ஆண்டு தனிமனிதருக்கான அமெரிக்காவின் ஆக உயரிய விருதான அதிபரின் சுதந்திர பதக்கம் கெல்லருக்கு வழங்கப்பட்டது. தன்னம்பிக்கையின் மறு உருவாக விளங்கிய ஹெலன் கெல்லர் 1968 ஆம் ஆண்டு ஜூன் முதல் தேதி தனது 87 ஆவது வயதில் காலமானார். உறக்கத்திலேயே கெல்லரின் உயிர் அமைதியாக பிரிந்தது. அவர் பிரிந்து 43 ஆண்டுகள் கடந்து விட்டன என்றாலும் இன்றும் ஹெலன் கெல்லர் அறக்கட்டளை உடல் ஊனமுற்றோருக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.

ஒருமுறை கெல்லரிடம் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் என்ன சாதித்தீர்கள் என்று கேட்கப்பட்டது அதற்கு கெல்லர்:

“இந்த இருண்ட அமைதியான என் வாழ்வை கடவுள் ஏதோ ஒரு திட்டத்தோடுதான் படைத்திருக்கிறார் என்று நான் நம்புகிறேன். அதை என்றாவது ஒருநாள் நான் உணர்வேன். அப்போது நான் அதுகுறித்து மகிழ்வேன்”



என்று கூறினார். இன்று நீங்கள் சோர்ந்துபோயிருக்கிறீர்களா? ஏதோ ஒரு மனச்சுமை உங்கள் தோள்களில் பெரும்பாரமாக கனக்கிறதா? தீராத மன உளைச்சலில் இருக்கிறீர்களா? 'ஹெலன் கெல்லர்’ என்ற இரண்டு மந்திர சொற்களை சொல்லிப்பாருங்கள்.

கண் பார்வையில்லாமலும், காது கேளாமாலும் கெல்லர் பட்ட சிரமங்களை விடவா உங்கள் பிரச்சினை பெரியது? சிந்தித்துப் பாருங்கள் இரண்டு முக்கிய புலன்கள் இல்லாமல் ஹெலன் கெல்லரால் இவ்வளவு சாதிக்க முடிந்ததென்றால் நமக்கு தடையாக இருப்பவை எவை? எந்த தடைகளையும் உடைத்தெரிய ஹெலன் கெல்லர் நம் காதுகளில் சொல்லும் உண்மை இரண்டு வார்த்தை மந்திரம் தன்னம்பிக்கை, விடாமுயற்சி. முயன்று பாருங்கள் உங்கள் இன்னல்கள் பஞ்சாய் பறக்காவிட்டாலும், 'முயற்சி செய்யும் வரைதான் நாமெல்லாம் மனிதர்கள்' என்ற கவிப்பேரரசு வைரமுத்துவின் கூற்று எவ்வளவு உண்மை என்பதை உணர்வீர்கள். நீங்கள் வசப்படுத்த விரும்பும் வானத்தில் மகிழ்ச்சியாக சிறகடித்துப் பறக்க வாழ்த்துக்கள்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218350
  • Total likes: 23050
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
லவாய்ஸியர் (இரசாயனவியலின் தந்தை) - வரலாற்று நாயகர்
 
1794 ஆம் ஆண்டு 'ஃபிரெஞ்சு ரெவூல்யூசன்' எனப்படும் ஃபிரெஞ்சு புரட்சி நடப்பிலிருந்த காலகட்டம். அப்போது ஃபிரான்ஸின் ஆட்சிப் பொருப்பிலிருந்த புரட்சி அரசாங்கம் மொத்தம் 28 பேரை கைது செய்தது. முந்தைய அரசாங்கத்தோடு அரசியல் தொடர்புடையவர்கள் என்பதும், புரட்சிக்கு எதிரானவர்கள் என்பதும் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு. ஒரே நாளில் அதாவது 1794 ஆம் ஆண்டு மே மாதம் 8ந்தேதி அந்த 28 பேரும் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் என தீர்ப்பளித்து அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதே தினம் அந்த 28 பேரின் தலையும் கிளெட்டின் எனப்படும் வெட்டுக் கருவியால் துண்டிக்கப்பட்டது. உலகில் புரட்சி நிகழ்ந்தபோதெல்லாம் இதுபோன்ற அநியாயமான மரணங்களை வரலாறு சந்தித்திருக்கிறது. ஆனால் அன்றைய தினம் நிகழ்ந்த அந்தச் சம்பவம் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக அமைந்துவிட்டது. காரணம் கொல்லப்பட்ட அந்த 28 பேரில் உலகம் இதுவரை கண்டிருக்கும் மிகப்பெரிய அறிவியல் மேதைகளில் ஒருவரும் இருந்தார்.

மனுகுலத்திற்கு அவர் செய்த பங்களிப்பிற்கு ஆயிரம் உயிர்களைக்கூட பரிசாகத் தந்திருக்கலாம். ஆனால் புரட்சி என்ற போர்வை கண்களை மறைக்க, அவரை மட்டுமாவது விடுவிக்குமாறு எழுந்த கோரிக்கைகளையும் நிராகரித்து அவரது உயிரை பறித்தது புரட்சி அரசாங்கம். அப்படி 51 வயதிலேயே அநியாயமாக உயிர் துறந்த அந்த அறிவியல் மேதையின் பெயர் Antoine Laurent Lavoisier. நவீன 'இரசாயனவியலின் தந்தை’ என்று அவரை போற்றுகிறது வரலாறு. 1743 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 26ந்தேதி பாரிஸில் பிறந்தார் லவாய்ஸியர். கல்வியில் சிறந்து விளங்கிய அவர் சட்டத்துறையில் பட்டம் பெற்றார். எனினும் அவர் சட்டம் பழகவில்லை லவாய்ஸியருக்கு ஆராய்ட்சிகள் செய்வதிலேயே அதிக ஆர்வம் இருந்தது. அதிலும் குறிப்பாக இரசாயனவியலில் அதிக ஆர்வம் காட்டினார்.



1766 ஆம் ஆண்டு பாரிஸின் தெருக்களில் விளக்குகளைப் பொருத்த வேண்டும் என்று லவாய்ஸியர் கருத்துரைத்தார். அதற்காக அவருக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது. வெடிகுண்டு தூள் அதிகாரியாக அவர் பணியாற்றியபோது வெடித்தல் பற்றியும் எரியும் தன்மை பற்றியும் நிறைய ஆராய்ட்சிகள் செய்தார். ஓர் உலோகத்தை எரித்தால் அதிலிருந்து கிடைக்கும் சாம்பலின் எடை அந்த உலோகத்தின் ஆரம்ப எடையைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் என்பதை லவாய்ஸியர் சோதனைகள் மூலம் நிருபித்துக் காட்டினார். இதேபோன்ற இன்னும் பல முக்கிய கண்டுபிடிப்புகளை அவர் செய்தார். அந்தக் காலகட்டத்தில் இயற்பியல், கணிதம், வானவியல் போன்ற அறிவியல் துறைகள் கண்டிருந்த வளர்ச்சியை இரசாயனவியல் கண்டிருக்கவில்லை, அது பெருமளவு பின்தங்கியிருந்தது.

அந்தக் காலகட்டத்தில் இரசாயனவியலார் பல்வேறு தனிப்பட்ட உண்மைகளைக் கண்டு கூறியிருந்தனர். அவையெல்லாம் சிதறி ஒருங்கினைக்கப்படாத உண்மைகளாக இருந்தன. மேலும் பல தவறான கருத்துகளும் நிலவின. உதாரணத்திற்கு காற்றும் தண்ணீரும் கம்பவுண்ட்ஸ்(compounds) எனப்படும் கூட்டுப்பொருள்கள் என்பது இப்போது நமக்கு தெரியும். ஆனால் லவாய்ஸியரின் வருகைக்கு முன் அவை Elementary Substances அதாவது தனிமங்கள் என்று தவறாகக் கருதப்பட்டது. மேலும் நெருப்பின் தன்மைப் பற்றியும் மிகத் தவறான கருத்து நிலவியது. எல்லா எரியக்கூடியப் பொருள்களும் 'ப்ளோஜிஸ்டான்' எனப்படும் பொருளை வெளியேற்றுவதாக அக்கால இரசாயனவியலார் நம்பினர். இந்த தவறான கருத்துக்களையெல்லாம் மாற்றி அமைத்தார் லவாய்சியர். 'ப்ளோஜிஸ்டான்' என்று எந்தப்பொருளும் கிடையாது என்பதை முதலில் சோதனைகள் மூலம் நிருபித்தார். இரசாயனக் கலப்பினால்தான் நெருப்பு எரிகிறது என்பதை லவாய்ஸியர் கண்டு சொன்னார்.



நெருப்பு எரிவதற்கு காற்றில் உள்ள பிராணவாயுதான் லவாய்ஸியர் கண்டறிந்தார். ஆக்ஸிஜன், நைட்ரஜன் ஆகிய இரண்டு வாயுக்கள் கலந்ததுதான் காற்று என்பதையும், அதேபோல் ஆக்ஸிஜனும், ஹைட்ரஜனும் கலந்ததுதான் தண்ணீர் என்பதையும் ஆதாரங்களுடன் நிருபித்தார். இவையெல்லாம் நமக்கு இப்போது தெரியும் உண்மைகள். ஆனால் லவாய்ஸியர் கண்டு சொல்லும்வரை அவை அறியப்படாமல் இருந்தன. புதிதாக கண்டுபிடிக்கப்படும் எதனையும் அறிவியல் உலகம் அவ்வளவு விரைவாக ஏற்றுக்கொண்டதில்லை. லவாய்ஸியரின் கண்டுபிடிப்புகளும் அதற்கு விதிவிலக்காக இல்லை. லவாய்ஸியர் தனது கண்டுபிடிப்புகளை தகுந்த ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டியும் அப்போது புகழ்பெற்றிருந்த இரசாயனவியலார்கள் அவரது கருத்துக்களை ஏற்க மறுத்தனர். ஆனால் தான் உண்மை என்று நம்பியவற்றை எடுத்துக்கூறவும், தற்காக்கவும் தயங்கவில்லை லவாய்ஸியர்.

1789 ஆம் ஆண்டில் லவாய்ஸியர் Elements of Chemistry என்ற மிகச்சிறந்த பாட நூலை எழுதி வெளியிட்டார். நவீன இரசாயனவியலுக்கு அடிப்படையாக விளங்கும் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் அந்த பாட நூலில் ஆதாரங்களுடன் விளக்கினார். அதனை படித்த இளைய இரசாயனவியலார் லவாய்ஸியரின் கருத்துக்களை ஏற்க தொடங்கினர். Elementary Substances அதாவது தனிமங்கள் என்று தான் கருதிய பொருட்களின் பட்டியலையும் அந்த பாட நூலில் இணைத்திருந்தார். ஒருசில தவறுகள் நீங்கலாக லவாய்ஸியர் கண்டு சொன்ன பெரும்பாலான இரசாயனப்பொருட்கள் இன்றைய நவீன இரசாயனவியலின் பொருட்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன. லவாய்ஸியர் அடுத்து இராசயனவியலுக்கான கலைச்சொல் தொகுதியை நன்கு திட்டமிட்டு உருவாக்கினார். அவர் உருவாக்கி தந்த அந்த கலைச்சொல் தொகுதிதான் இராசயனவியலுக்கு ஓர் ஒருங்கினைந்த அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.



உலகம் முழுவதிலும் உள்ள இராசயனவியலார்கள் ஒரே மாதிரியான கலைச்சொற்களை பயன்படுத்த தொடங்கினார்கள். அதனால் அவர்களால் தங்களது கண்டுபிடிப்புகளை ஒருவொருக்கொருவர் பரிமாறிக்கொள்ள முடிந்தது. இராசயவியல் துறையும் துரிதமாக வளர்ச்சியடையத் தொடங்கியது. மற்ற துறைகளிலும் தனது பங்களிப்பை செய்திருக்கிறார் லவாய்ஸியர். உடலியலில் அவர் ஒரு நுட்பமான உண்மையை கண்டுபிடித்துச் சொன்னார். நாம் மூச்சு விடும் செயல் ஸ்லோ கம்பாஷன் (Slow ) அதாவது மெதுவாக எரியும் செயலுக்கு சமமானது என்பதுதான் அந்த உண்மை. மனிதனும் விலங்குகளும் தாங்கள் சுவாசிக்கும் பிராண வாயுவைக் கொண்டு உடலுக்குள் கரிமப் பொருளை எரிப்பதன் மூலம் சக்தியைப் பெறுகின்றன என்று லவாய்ஸியர் கண்டறிந்து கூறினார். முக்கியத்துவம் வாய்ந்த அந்த கண்டுபிடிப்பு உடலில் இரத்த ஓட்டத்தை கண்டுப்பிடித்த வில்லியம் ஹாபியின் கண்டுப்பிடிப்புக்கு சமமானது என்று ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது.

பிரான்ஸ் முழுவதும் Weights & Measurements எனப்படும் எடை மற்றும் அளவுகளை கணக்கிடும் முறையை ஒருங்கிணைக்கும் பணிக்குழு அமைக்கப்பட்டபோது அதில் லவாய்ஸியர் முக்கிய உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்பட்டார். அந்த பணிக்குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில்தான் பிரான்ஸில் மெட்ரிக் அளவுமுறை நடப்பில் வந்தது. சுமார் இருபது ஆண்டுகள் அரசாங்கத்துறையில் விஞ்ஞானியாக பணியாற்றினார் லவாய்ஸியர். பொதுச்சேவையிலும் ஈடுபட்டார். பிரெஞ்சு ராயல் அறிவியல் கழகத்தில் முக்கிய உறுப்பினராக இருந்தார். Firm General என்ற அமைப்பின் முக்கிய பொறுப்பாளாராக பணியாற்றியதுபோது அந்த அமைப்பு வரி வசூலிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. அதில் ஈடுபாடுதான் அவருக்கு எமனாக அமைந்தது என்று ஒரு குறிப்பு கூறுகிறது. புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றியவர்கள்  Firm General அமைப்பைச் சேர்ந்தவர்களை சந்தேகக் கண்ணோடு பார்க்கத் தொடங்கினர். அந்த அமைப்பைச் சேர்ந்த 28 பேர்தான் புரட்சியாளர்களால் கைதுசெய்யப்பட்டு பின்னர் கிளெட்டின் மூலம் சிரச்சேதம் செய்யப்பட்டனர்.



லவாய்ஸியர் நாட்டிற்கும், அறிவியலுக்கும் ஆற்றியிருக்கும் அரும்பங்கை எடுத்துக்கூறி அவரை விடுவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டபோது நீதிபதி என்ன சொன்னார் தெரியுமா? இந்த நாட்டிற்கு மேதைகள், விஞ்ஞானிகள் தேவையில்லை என்று கூறி மரண தண்டனையை உறுதி செய்தார். அந்த அபத்தமான செயலால் ஒரு மிகச்சிறந்த மாமேதையை இழந்தது உலகம். அந்த மேதையின் தலையை துண்டிக்க ஒரு வினாடிதான் ஆனது. ஆனால் ஒரு நூற்றாண்டு வந்தாலும் லவாய்ஸியரைப்போன்று இன்னொரு மேதையை பெற முடியாது என்று அவரது நண்பரும் சிறந்த கணக்கியலாருமான லெக்ரென்ஞ் அப்போது கூறினார். உண்மைதான் வரலாற்றின் கருப்புப்பக்கங்களில் ஒன்று லவாய்ஸியர் சிரச்சேதம் செய்யப்பட்ட சம்பவம். புரட்சியாளர்கள் அவரைக் கொன்றாலும் அறிவியலும், வரலாறும் லவாய்ஸியருக்கு சாகா வரத்தை தந்துள்ளன. இன்று Chemistry எனப்படும் இராசயனவியலை விரும்பி படிப்பவர்கள் லவாய்ஸியருக்குதான் நன்றி சொல்ல வேண்டும்.

உலகம் உள்ளவரை தனது பெயரை நிலைத்து நிற்க செய்து வானத்தை வசப்படுத்திய லவாய்ஸியருக்கு உதவிய பண்புகள் கடும் உழைப்பும், விடாமுயற்சியும், புதியனவற்றை தேடிக்கானும் ஆர்வமும், அறிவியலில் அளவிடமுடியாத தாகமும்தான். இதே பண்புகளோடு நாமும் செயல்பட்டால் வானத்தை வசப்படுத்த நமக்கும் உதவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218350
  • Total likes: 23050
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சார்லி சாப்ளின் (சிரிப்பு ஜீனியஸ்) - வரலாற்று நாயகர்
 
வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பார்கள் அப்படிப்பார்த்தால் நம்மை வாய்விட்டு சிரிக்க வைப்பவர்களை மருத்துவர்களுக்கு சமம் என்று சொல்லலாம். உலகில் அதிக மக்களை சிரிக்க வைத்த நபர் யார் என்று கேட்டால் ஒரே ஒரு நபரைத்தான் வரலாறு புன்னைகையுடன் உதிர்க்கும். அவர்தான் ஈடு இணையற்ற ஆங்கில நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் (Charlie Chaplin). இன்று திரைப்படங்களில் வசனங்களை கேட்டு சிரிக்கிறோம் ஆனால் ஊமைப்படங்கள் மட்டுமே வெளிவந்த ஒரு கால கட்டத்தில் மொழியின் துணையின்றி வசனம் எதுவும் பேசாமல் தன் உடல் அசைவுகளாலே ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர்தான் சார்லி சாப்ளின்.

பல்லாயிரக்கணக்கான திரை  ரசிகர்களுக்கு 'நகைச்சுவை' எனும் மருந்து தந்த அந்த மாபெரும் கலைஞனின் வாழ்க்கை எவ்வளவு சோகம் நிறைந்தது தெரியுமா? சோகத்திலும் சிரித்த அந்த உன்னத கலைஞனின் கதையைத் தெரிந்துகொள்வோம்.



1889-ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ந்தேதி லண்டனில் பிறந்தார் சார்ல்ஸ் ஸ்பென்சர் சாப்ளின், அவரது பெற்றோர்கள் மேடை இசை கலைஞர்கள், மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்தவர்கள். மேடைக்கச்சேரிகளில் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் குடித்தே தீர்த்தார் தந்தை அதன் பலன் நடக்க பழகும் முன்பே நடனமாடவும் பாட்டு பாடவும் கற்பிக்கப்பட்டான் சிறு வயது சாப்ளின். 5 வயதே ஆனபோது சார்லி சாப்ளினின் முதல் மேடை அரங்கேற்றம். தாய் நோய்வாய்ப்பட்டதால் பையனை மேடைக்கு தள்ளினார் தந்தை மிரண்டுபோன சாப்ளின் மேடையில் ஏறி தனக்குத்தெரிந்த ஒரே பாடலை திரும்ப திரும்ப பாடினார் அதனால அவரை மேடையிலிருந்து இழுத்துச்செல்லும் நிலைமை ஏற்பட்டது.



அடுத்து தந்தையும் தாயும் பிரிந்தனர். குடித்து குடித்தே தந்தை இறந்து போனார். தாயாருக்கு அடிக்கடி உடல் நலமின்றி போனது சாப்ளினும் அவரது அண்ணன் சிட்னியும் அநாதை இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். 7 வயதானபோது சாப்ளின் ஒரு இசைக்குழுவில் சேர்ந்து பணியாற்றினார் ஆனால் அந்த குழு ஓராண்டில் கலைக்கப்பட்டது. அண்ணன் சிட்னி கப்பலில் வேலை பார்க்க சென்று விட்டதால் சில ஆண்டுகளை தனிமையில் கழித்தார் சாப்ளின். 14-ஆவது வயதில் ஒரு மேடை நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதனை நன்கு பயன்படுத்திக்கொண்டார். பத்திரிகைகள் அவரது நடிப்பை பாராட்டின. பின்னர் சாப்ளினும் அண்ணன் சிட்னியும் புகழ்பெற்ற ஃபெட்கானோ குழுவில் சேர்ந்தனர் அந்த குழு அமெரிக்காவுக்கு சென்று மேடை நாடகங்களை நடத்தியது. அதில் நடித்த சாப்ளின் பெயர் திரையுலகத்தின் கவனத்தை ஈர்த்தது.

1913 ஆம் ஆண்டு 24 ஆவது வயதில் 'கி ஸ்டோன் பிலிம் ஸ்டுடியோ’ என்ற அமெரிக்க திரைப்பட நிறுவனம் சாப்ளினுக்கு நல்ல வாய்ப்பை வழங்கியது. சாப்ளின் அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தார். 'மேக்கிங் எ லிவிங்’ என்ற தனது முதல் திரைப்படத்தில் ஒரு கருப்பு கோட்டும் பெரிய தொப்பியும் நீர் யானை மீசையும், கண்ணாடியும் அணிந்து நடித்தார் பின்னாளில் அதுவே சாப்ளினின் அடையாளமானது. தனது 25 ஆவது வயதிலேயே '20 minutes of love’ என்ற முதல் படத்தை இயக்கினார் சாப்ளின் அதன்பிறகு பல படங்கள் அவரது கைவண்ணத்தில் உருவாகின. தனது எல்லா படங்களிலும் எல்லோரையும் சிரிக்க வைத்த சாப்ளினின் திருமண வாழ்வில் கசப்புக்கு மேல் கசப்பு ஏற்பட்டது.



1918 ஆம் ஆண்டு 16 வயது நடிகை மேன்றோ ஹெரிசை காதலித்து மணந்து கொண்டார் அடுத்த ஆண்டு  அவர்களுக்கு பிறந்த குழந்தை மூன்றே நாட்களில் இறந்து போனது. பின்னர் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். 1924 ல் மீண்டும் ஒரு நடிகையை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார் இரண்டு குழந்தைகள் பிறந்தாலும் அந்த திருமணம் மூன்று ஆண்டுகள்தான் நீடித்தது. அதன் பின்னர் பாலத் கடாட் என்ற நடிகையை மணந்து கொண்டு அவரையும் விவாகரத்து செய்தார். இறுதியாக உனா உனில் என்ற பெண்ணை மணந்துகொண்ட பின்னர்தான் ஏழு பிள்ளைகளை பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்தார் சாப்ளின்.

சாப்ளினின் முதல் முழு நீள திரைப்படமான 'தி கிட்' 1921ல் வெளிவந்தது தனது ஆரம்ப வாழ்கையை அதில் சித்தரித்திருந்தார் அதனால் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று சாப்ளினுக்கு பெரும் புகழை சேர்த்தது. 1925ல் 'தி கோல்ட் ரஷ்’ என்ற அவரது படம் வெளியாகி சாப்ளினின் புகழை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றது அந்த படத்தின் மூலம்தான் நான் நினைவு கூறப்பட விரும்புகிறேன் என்று அவரே ஒருமுறை கூறியிருக்கிறார். அதன் பிறகு பல புகழ்பெற்ற படங்களை தந்தார் சாப்ளின் பல ஆண்டுகள் அமெரிக்காவில் இருந்தும் அவர் பிரிட்டிஷ் குடியுரிமையை விட்டு கொடுக்க வில்லை மேலும் அவர் கம்யுனிஷ்டுகளை ஆதரிப்பவர் என்ற சந்தேகம் அமெரிக்காவில் நிலவியது அந்த சந்தேகம் அவரது வாழ்க்கையை திசை திருப்பியது.

1951 ல் 'தி லைம் லைட்’ என்ற புகழ்பெற்ற படத்தை தந்த சாப்ளின் அது வெளியான பிறகு தனது மனைவி பிள்ளைகளுடன் விடுமுறைக்காக இங்கிலாந்து சென்றார் அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி சாப்ளின் இனி மீண்டும் அமெரிக்காவுக்கு நுழைய முடியாது என்று அறிவித்தது அமெரிக்க அரசாங்கம் 'Los Angeles walk of fame’ என்ற நட்சத்திர பட்டியலில் இருந்து சாப்ளினின் பெயர் நீக்கப்பட்டது. ஆனால் மனம் தளராத சாப்ளின் சுவிட்ஷர்லாந்தில் குடியேறி தொடர்ந்து படம் செய்ய ஆரம்பித்தார். 1964 ஆம் ஆண்டு தனது சுய சரிதையை வெளியிட்டார். 1967 ல் அவர் இயக்கிய கடைசிப்படம் வெளிவந்தது 1972 ஓர் அதிசயம் நிகழ்ந்தது திரைத்துறையில் பல உன்னத படைப்புகளை தந்தவர் என்பதையும் மறந்து எந்த தேசம் அவரை தனது எல்லைக்குள் மீண்டும் நுழைய கூடாது என்று கட்டளையிட்டதோ அதே அமெரிக்க தேசம் 20 ஆண்டுகள் கழித்து சாப்ளினை மீண்டும் திறந்த கைகளுடன் வரவேற்றது.



அதே ஆண்டில் அவருக்கு அமெரிக்காவில் அகாடமி விருது விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது அதோடு 'Los angeles walk of fame’ என்ற நட்சத்திர பட்டியலில் இருந்து சாப்ளினின் பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டது. 1974 ஆம் ஆண்டு தனது இரண்டாவது புத்தகத்தை வெளியிட்டார் சாப்ளின் அதற்கு அடுத்த ஆண்டு அவருக்கு 'சர்' பட்டம் வழங்கி கவுரவித்தார் எலிசபெத் ராணியார். 1977 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று தனது 88-ஆவது வயதில் காலமானார் சார்லி சாப்ளின். அதுவரை சார்லி சாப்ளினை பார்த்து சிரிக்க மட்டுமே கற்றுக் கொண்டிருந்த உலகம் அன்று அவரை பார்த்து முதன் முறையாக அழுதது.

"உண்மையாக சிரிக்க வேண்டுமென்றால் உங்கள் வலியை வைத்துக்கொண்டு நீங்கள் விளையாட வேண்டும், வலிக்கு உண்மையான நிவாரணமும் சரியான ஊட்ட மருந்தும் சிரிப்புதான்"

என்று கூறுகிறார் சாப்ளின். அதை கூறியது மட்டுமல்ல அதனை வாழ்ந்தும் காட்டினார். இன்று வாய்விட்டு சிரிக்க நினைக்கும் மில்லியன் கணக்கானோர் சார்லி சாப்ளினின் பழைய படங்களை பார்க்கின்றனர். இது ஒன்றே அந்த மாபெரும் கலைஞன் இந்த உலகிற்கு விட்டு சென்றிற்கும் மாபெரும் சொத்தாகும்.



'இடுக்கண் வருங்கால் நகுக'  என்ற திருக்குறளின் வரியை நாம் கேள்வி பட்டிருப்போம். ஒரு சோகமான குடும்ப பின்னணியில் உதித்தாலும் நகைச்சுவை எனும் ஆயுதத்தை கொண்டு பல்லாயிரக்கணக்கானோர் சோகங்களை விரட்டியடித்தவர் சார்லி சாப்ளின். குடும்ப பின்னனி சரியாக இல்லாவிட்டாலும் வானத்தை வசப்படுத்தலாம் என்பதை வாழ்ந்து காட்டியவர் சார்லி சாப்ளின். சார்லி சாப்ளினைப்போலவே நமது குடும்ப பின்னணி எதுவாக இருந்தாலும் மனம் தளராமலும் விடா முயற்சியோடும் கடுமையாக உழைத்தால் எந்த வானத்தையும் வசப்படுத்த முடியும்  என்பதுதான் சார்லி சாப்ளின் நமது காதோரம் சொல்லும் உண்மை.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218350
  • Total likes: 23050
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
இசை மேதை மோட்ஸார்ட் (Mozart) - வரலாற்று நாயகர்
 
எதற்கும் மயங்காத உள்ளம் இசைக்கு மயங்கும் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். உலகத்திற்கே பொதுவான ஒரு மொழி என்றால் அது இசையாகத்தான் இருக்க முடியும். மனிதனின் எந்த ஒரு மனோநிலைக்கும் உகந்த ஒரு மொழி இசை. அப்படிப்பட்ட இசையை பாமரனால்கூட ரசிக்க முடியும் ஆனால் ஒரு சிலரால்தான் அற்புதமான உயிரோட்டமுள்ள இசையை உருவாக்க முடியும். அந்த ஒருசிலரில் முக்கியமானவர் தன் வாழ்நாளில் இசைபட வாழ்ந்தவரும் உலகிற்கு ஆஸ்திரியா வழங்கிய இசைகொடையுமான இசைமேதை மோட்ஸார்ட்.

1756 ஆம் ஆண்டு ஜனவரி 27ந்தேதி ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க் நகரில் பிறந்தார் வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்ஸார்ட் (Wolfgang Amadeus Mozart). மோட்ஸார்ட் பிறவி மேதை என்பதற்கான அறிகுறிகள் ஆரம்பத்திலேயே தென்பட தொடங்கின. மோட்ஸார்ட்டின் தந்தை லேபோல்ட் மோட்ஸார்ட் ஒரு சிறந்த வயலின் இசைக்கலைஞர். மோட்ஸார்ட்டுக்கு அவர் இசை கற்பித்தார். மோட்ஸார்ட் இசைக்கருவியை வாசிக்க தொடங்கியபோது அவருக்கு வயது மூன்றுதான். நான்காவது வயதில் அவர் இசை நூல்களை படிக்கத் தொடங்கினார். ஐந்தாவது வயதில் அவரே பாடல்களை இயற்றி இசையமைக்கத் தொடங்கினார். ஏழு வயதில் சொனாட்டாக்களை எழுதத் தொடங்கிய அவர் தனது எட்டாவது வயதில் ஒரு சிம்ஃபொனியை எழுதி முடித்தார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா!!



மோட்ஸார்ட்டுக்கும் முன்பும் பின்பும் எத்தனையோ இசை மேதைகள் உதித்திருக்கிறார்கள் ஆனால் அவரைப்போல அந்த சிறிய வயதில் அவர்கள் அத்தனை சிகரங்களை தொட்டதில்லை. பத்து வயதுக்குள் அனைத்து இசைக்கருவிகளையும் வாசிக்கக் கற்றுக்கொண்ட மோட்ஸார்ட்டை இசை உலகம் அதிசயமாக பார்த்தது. இசை விற்பன்னர்கள் மோட்ஸார்ட்டை ஒரு தவப்புதல்வனாக பார்த்தனர். இசை கச்சேரிகள் நடத்தித் தருமாறு பல தேசங்கள் அவருக்கு அழைப்பு விடுத்தன. எனவே விளையாடித் திரிய வேண்டிய அந்த பிஞ்சுப் பருவத்தில் ஒவ்வொரு இடமாக பயணம் செய்து இசை கச்சேரிகளை நடத்தினார் மோட்ஸார்ட். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதுபோல் தனது இசையை கேட்டவர்களையெல்லாம் சொக்க வைத்தார் மோட்ஸார்ட். அதே நேரத்தில் அவர் இசைக்கும்போது ஒட்டுமொத்த அமைதியை எதிர்பார்ப்பார். எவராவது இருமினாலோ அல்லது தும்மினாலோகூட அவருக்கு கோபம் பொங்கிவருமாம் அந்தளவுக்கு தனது இசைக்கு மிக முக்கிய அந்தஸ்த்தை கொடுத்திருந்தார் மோட்ஸார்ட்.



மோட்ஸார்ட்டுக்கு பத்து வயதானபோது அவரது இசைத்திறனைப்பற்றி கேள்விபட்ட வியட்நா மகாராணி மோட்ஸார்ட்டை தனது அரண்மனைக்கு அழைத்து இசை மீட்டச் சொன்னார். அந்த பத்து வயது பாலகனின் இசை பிரபாகத்தை கேட்டு மெய் மறந்துபோன ராணியார் பாராட்ட வார்த்தையின்றி மோட்ஸார்ட்டை தனது மடியில் வைத்து முத்தமிட்டு மகிழ்ந்தார் என்று ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது. பனிரெண்டு வயதானபோது ஜெர்மன் மொழியில் ஒரு இசை கச்சேரியை நடத்தி முடித்தார் மோட்ஸார்ட். பதினான்கு வயதில் அவர் இயக்கி வழங்கிய  librettist Lorenzo Da Ponte என்ற ஆப்ரா இசைக்கச்சேரி முடிந்தபோது அனைவரும் எழுந்து நின்று அரங்கம் அதிர கைதட்டு வழங்கினர் அந்த வயதில்தான் தியோப்லஸ் என்ற தன் பெயரை அமதியுஸ் என்று மாற்றிக்கொண்டார் மோட்ஸார்ட். அமதியுஸ் என்ற பெயர் அழகாக இருப்பதாக அவர் நினைத்ததே அதற்கு காரணம். அன்றிலிருந்து அவர் வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்ஸார்ட் என்று அழைக்கப்பட்டார்.

மோட்ஸார்ட்டின் இசைத்திறமையை மெச்சிய சால்ஸ்பர்க் இளவரசன் தன் அரண்மனையில் இசைத் தலைவனாக இருக்குமாறு மோட்ஸார்ட்டுக்கு அழைப்பு விடுத்தார். அதில் அவருக்கு ஆர்வம் இல்லையென்றாலும் தனது தந்தையின் விருப்பத்திற்காக அந்த பொறுப்பை ஏற்று ஒன்பது ஆண்டுகள் அரண்மனையில் இருந்தார். ஆனால் இளவரசன் மோட்ஸார்ட்டை ஒரு வேலையாள் போல் நடத்தியதால் தனது 25 ஆவது வயதில் அரண்மனையை விட்டு வெளியேறினார். 26 ஆவது வயதில் மோட்ஸார்ட் கான்ஸ்டண்ட் என்ற பெண்ணை விரும்பி திருமணம் செய்துகொண்டார். இசை உலகில் கொடிகட்டி பறந்த அவரது குடும்ப வாழ்க்கையில் சோகத்திற்கு மேல் சோகம். மோட்ஸார்ட் தம்பதியினருக்கு பிறந்த ஆறு குழந்தைகளில் நான்கு குழந்தைகள் பிறந்து சில மணி நேரத்தில் இறந்தனர். இசையால் எவரையும் மசிய வைத்த அந்த மேதையை அந்த மரணங்கள் வெகுவாக பாதித்தன. அவரது கடைசிக் காலத்தில் கடன் தொல்லையால் அவதியுற்றார் என்று வரலாறு குறித்து வைத்திருக்கிறது.

இசையை கையாண்ட அளவுக்கு மோட்ஸார்ட்டுக்கு நிதியை திறமையாக கையாளத் தெரியவில்லை. இசையில் ஓயாத ஆராய்ட்சி, ஓய்வில்லாத இசை நிகழ்ச்சிகள், புதிய இசைக்கூறுகளை உருவாக்குதல் என்று ஒவ்வொரு மணித்துளியையும் இசைக்காகவே செலவிட்டார் மோட்ஸார்ட் அதனால் அவரது உடல்நிலைகூட பாதிக்கப்பட்டது. நோய்வாய்ப்பட்டு படுத்திருந்தபோதுகூட அவரது படுக்கையில் ஏதாவது ஒரு இசைக்கருவி இருந்துகொண்டே இருக்கும். கண்மூடியபடி அவர் அந்தக் கருவிகளை மீட்டிக்கொண்டிருப்பார். தன் மரணப்படுக்கையில்கூட அவர் ‘ரெக்யும் மாஸ்’ என்ற இசைக்கூறை எப்படி நிறைவு செய்ய வேண்டும் என்று தனது மாணவர்களுக்கு கூறிக்கொண்டிருந்தாராம். இயற்கையையே தனது இசையால் மசிய வைத்த அந்த இசை மேதையின் வாழ்நாளை பொருத்தமட்டில் இயற்கை பாரபட்சமாகவே நடந்துகொண்டிருக்கிறது.

36 வயது நிறைவதற்கு இரண்டு மாதங்கள் இருந்தபோது 1791 ஆம் ஆண்டு டிசம்பர் 5ந்தேதி அவரது மூச்சு நின்றது. அப்போது இசை உலகம் ஒரு கணம் ஸ்தம்பித்துபோனது. மோட்ஸார்ட்டின் நல்லுடல் ஆராவாரமின்றி கிராமத்து இடுகாட்டில் புதைக்கப்பட்டது. இசைக்கு முகவரி தந்த அந்த மேதைக்கு இடுகாட்டில்கூட முகவரி இல்லை. ஏனெனில் அந்தக்கால வழக்கத்தின்படி கல்லறையில் பெயர் பொறிக்காமலேயே அவர் அடக்கம் செய்யப்பட்டார். தான் வாழ்ந்த 36 ஆண்டுகளில் இசையின் எல்லாப் பிரிவுகளிலும் அழியா முத்திரைப்பதித்தார் மோட்ஸார்ட்.  The Marriage of Figaro,  Don Giovanni, The Magic Flute ஆகிய மூன்று ஆப்ரா கச்சேரிகள் உலக இசை வரலாற்றில் ஆகச் சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. அவரது இசைத் திறமையை மெச்சி அப்போது போப்பாக இருந்த கிளமென்ஸ் மோட்ஸார்ட்டுக்கு “நைட் ஆப் த கோல்டன்ஸ்பர்” என்ற தேவாலயத்தின் செவ்வாலியே விருதை வழங்கி கவுரவித்தார்.



மோட்ஸார்ட் ஒரு பிறவி மேதைதானே அவருக்கு வானம் வசப்பட்டுதானே ஆக வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். அதில் ஓரளவுக்கு உண்மை இருந்தாலும் அவ்வளவு ஞானம் இருந்தும் மோட்ஸார்ட் இசையையே எல்லாவற்றுக்கும் மேலாக நேசித்தார். ஊண் உறக்கம் மறந்து அந்த இசையையே சுவாசித்தார். அப்படிப்பட்ட ஒரு முழுமையான ஈடுபாடுதான் அவரை இசை உலகின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. பிறவி மேதை என்பதெல்லாம் இரண்டாம்பட்சம்தான். நமக்கும் எதிலும் பிறவித்திறன் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. நாம் தேர்ந்தெடுக்கும் துறை, வேலை, வாழ்க்கை இப்படி எல்லாவற்றிலும் முழு ஈடுபாடு காட்டி முன்னேற்றம் நாடினால் நமக்கும் அந்த வானம் வசப்பட்டே ஆகவேண்டும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218350
  • Total likes: 23050
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
தொலைபேசி உருவான கதை (அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்) - வரலாற்று நாயகர்
 
நமது வாழ்க்கையில் ஒரு பொருள் எவ்வளவு அத்தியாவசியம் என்று தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் அந்த பொருள் இல்லாத உலகத்தை நாம் கற்பனை செய்து பார்த்தால் போதும். உதாரணத்திற்கு தொலைபேசி இல்லாத உலகை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா!! ஒவ்வொரு இல்லத்திலும் ஒவ்வொரு அலுவலக மேசையிலும் அதன் கண்டுபிடிப்பாளரின் நினைவுச்சின்னமாக வீற்றிருக்கின்றன தொலைபேசிகள். அந்த உன்னத கருவியை உலகுக்கு தந்தவர் அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்.

1847 ஆம் ஆண்டு மார்ச் 3ந்தேதி ஸ்காட்லாந்தின் எடின்பெர்க் நகரில் பிறந்தார் அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல். சிறுவயதிலிருந்தே கிரஹாம் பெல் கல்வியில் அதிக ஆர்வம் காட்டினார். கல்வியை முடித்தபிறகு அவர் காது கேளாதோருக்கும், வாய் பேச முடியாதோருக்கும் கற்பிப்பதில் அதிக கவணம் செலுத்தினார். 1870ல் கனடாவுக்குச் சென்ற பெல் அங்கும் காது கேளாதோருக்கும், பேச முடியாதோருக்கும் கற்பித்தார். பின்னர் அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்த பெல் அங்கு காது கேளாதோருக்காக சிறப்புப்பள்ளி ஒன்றை நிறுவினார். 1873ல் பாஸ்டன் பல்கலைக் கழகத்தில் பெல்லுக்கு பேராசிரியர் தகுதி கிடைத்தது. அறிவியல் ஆராய்ட்சிகளில் ஆர்வம் கொண்டிருந்த பெல் தனது ஓய்வு நேரங்களில் ஏதாவது சோதனை செய்துகொண்டே இருப்பார்.  காது கேளாதோருக்கும், வாய் பேச முடியாதோருக்கும் நிறைய செய்ய வேண்டும் என்ற அவரது உந்துதல்தான் தொலைபேசி என்ற உன்னத கருவியை கண்டுபிடிக்க அவருக்கு உறுதுணையாக இருந்திருக்கிறது.



ஒருவர் பேசுவதை மின்சக்தி மூலம் இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்ல முடியுமா என்று ஆராயத் தொடங்கினார். தனது உதவியாளர் வாட்சன் என்பவருடன் சேர்ந்து பெல் சோதனைகளில் ஈடுபட்டார். பெல் வீட்டின் மேல் அறையிலும் வாட்சன் கீழ் அறையிலும் இருந்து கொண்டு கம்பிவழி ஒருவர் இன்னொருவருடன் பேச முடியுமா என்று பல்வேறு முறைகளில் சோதனைகளை செய்து பார்த்தனர். அவர்களது முயற்சிகள் இரவும் பகலும் என்று நாள் கணக்கில் தொடர்ந்தன. 1876 ஆம் ஆண்டு மார்ச் 10ந்தேதி மதியவேளை கீழ் அறையிலிருந்த வாட்சன் காதில் கருவியை வைத்துக்கொண்டு கேட்டுக்கொண்டு இருந்தார். திடிரென்று அந்த கருவியிலிருந்து குரல் கேட்கத் தொடங்கியது. பெல்லின் குரல்தான் “திரு.வாட்சன் தயவுசெய்து இங்கு வாருங்கள் நான் உங்களைப் பார்க்க வேண்டும்” வாட்சனால் பெல் பேசியதை தெளிவாகக் கேட்க முடிந்தது. வியப்பை அடக்க முடியாத வாட்சன் கருவியை கீழே போட்டுவிட்டு ஒரு பள்ளிச் சிறுவனைப்போல் துள்ளிக்குதித்து மேல் மாடிக்கு ஓடி பெல்லிடம் விசயத்தை சொன்னார். பெல்லின் கனவு நனவானது.



அதே ஆண்டு பெலஃடால்பியாவில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் தனது கண்டுபிடிப்பை காட்சிக்கு வைத்திருந்தார் பெல். பெரும்பாலோனோர் அதனை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. ஆனால் பிரேசிலின் மன்னர் டான்.பெண்ட்ரோ கருவியை காதில் வைத்து சோதித்தார். மறுமுனையில் பெல் “To be or not To be" என்ற ஷேக்ஸ்பியரின் வரிகளை வாசித்தார். அதனை தெளிவாக கேட்டு அதிசயித்த மன்னர் "My God its Beats" என்று நம்ப முடியாமல் கூறினார். அதன்பிறகு அந்த கண்காட்சியில் பெல்லின் கண்டுபிடிப்பு பலரின் கவணத்தை ஈர்த்தது. அதே காலகட்டத்தில் வேறு சிலரும் தாங்கள்தான் தொலைபேசியை கண்டுபிடித்ததாக கூறிக்கொண்டனர். அதனால் பெல் பலமுறை நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியதாயிற்று. ஒவ்வொரு வழக்கிலும் பெல்லுக்கே வெற்றி கிடைத்தது. அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்தான் தொலைபேசியைக் கண்டுபிடித்தார் என்பது உறுதிபடுத்தப்பட்டது.



அதன்பின்னர் பெல் வேறு சில கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தினார். ஆனால் தொலைபேசிதான் அவரது பெயர் சொல்லும் கண்டுபிடிப்பாக இருந்தது. 1920ல் தான் பிறந்த எடின்பெர்க் நகருக்கு வந்தபோது அந்த நகரம் பெல்லை கவுரவித்தது. இரண்டு ஆண்டுகள் கழித்து 1922 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 2ந்தேதி தனது 75 ஆவது வயதில் பெல் கனடாவில் காலமானார். அவர் நிறைவாகத்தான் இறந்திருக்க வேண்டும். ஏனெனில் அவரது கடைசிக் காலத்தில் அவரது கண்டுபிடிப்பான தொலைபேசி உலகம் முழுவதும், பட்டித்தொட்டிகளிலெல்லாம் பயன்படுத்தப்பட்டதை காணும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஆனால் தான் கண்டுபிடித்த தொலைபேசியை அவரே வெறுத்ததுதான் ஆச்சரியமான செய்தி. ஆம் பெல்லின் இறுதிக் காலங்களில் கிராமத்து வீட்டில் அவர் சோதனைகளில் ஈடுபட்டபோது தொலைபேசியை தொல்லையாகக் கருதி அதை செயல்படாமல் ஆக்கியதாக ஒரு வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது.

அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்லை மிகச் சிறந்த மனிதராக வருணிக்கின்றனர் வரலாற்று ஆசிரியர்கள். உதவி தேவைப்பட்டோருக்கு எப்போதுமே மறுக்காமல் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்தார். காது கேளாதோர் மற்றும் பேச முடியாதோர் நலனில் அவர் அதிக அக்கறைக் காட்டினார். இன்னும் ஒரு ஆச்சரியமான விசயம் என்னவென்றால் பெல்  நேபல் ஹபர்ட் என்ற காது கேளாத பெண்ணை விரும்பி திருமணம் செய்து கொண்டார். தொலைபேசியின் தந்தை கிரஹாம் பெல் இறந்தபோது வட அமெரிக்கா முழுவதும் அவருக்கு வித்தியாசமான முறையில் அஞ்சலி செலுத்தினர். பெல்லின் இறுதிச் சடங்கின்போது வட அமெரிக்காவில் இருந்த அனைத்து தொலைபேசிகளையும் சில நிமிடங்களுக்கு பயன்படுத்தாமல் தங்கள் மரியாதையைச் செலுத்தினர் அமெரிக்கர்கள்.



தொலைபேசியை நமக்கு தந்ததன் மூலம் உலகை ஒரு குக்கிராமமாக சுருக்கிய பெருமை அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல்லையேச் சேரும். உலகின் மிகச் சிறந்த கண்டுபிடிப்புகள் என்று ஒரு பட்டியல் போட்டால் அதில் தொலைபேசிக்கும் நிச்சயம் இடம் உண்டு. உடல் குறை உள்ளவர்களுக்கு உதவ வேண்டும் என்ற பெல்லின் உயரிய எண்ணமே அந்த மாபெரும் கண்டுபிடிப்பை நிகழ்த்த அவருக்கு உதவியது. உயரிய எண்ணங்கள் நம்மை உயர்த்தும் என்பதும் அந்த உயர்வால் நாம் விரும்பும் வானமும் வசப்படும் என்பதுதான் அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் நம் காதுகளில் சொல்லும் செய்தியாக இருக்கும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218350
  • Total likes: 23050
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சாக்ரடீஸ் (தத்துவஞானிகளின் தந்தை) - வரலாற்று நாயகர்
 
மனித வாழ்க்கையை செம்மைப்படுத்துவதிலும், மனித நாகரிகத்தை வழிமொழிவதிலும் தத்துவஞானிகளின் பங்கு அளப்பறியது. வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில் பல தத்துவஞானிகள் உதித்திருக்கின்றனர். உலகின் சிந்தனையை பல்வேறு வழிகளில் செம்மைப்படுத்தியிருக்கின்றனர். அவர்களுள் தலையாயவர் தத்துவஞானிகளின் தந்தை என்று போற்றப்படுபவரும், கிரேக்கத்தின் புகழை உலகெல்லாம் பரவச்செய்தவருமான சாக்ரடீஸ். ஒரு சாதாரண குடும்பத்தில் கி.மு.469 ஆம் ஆண்டு பிறந்தார் சாக்ரடீஸ். ஏழ்மையில்தான் பிறந்தார் வறுமையில்தான் வாழ்ந்தார். இளவயதில் ராணுவ வீரராக இருந்து ஏதென்ஸுக்காக பல போர்களில் பங்கெடுத்தார்.

சாக்ரடீஸ் வாழ்க்கையைப்பற்றி அதிகமாக சிந்தித்தார், எதையுமே வித்தியாசமாகவும் சிந்தித்தார் அவரது சிந்தனைகள் அந்த காலகட்டத்தில் உண்மை என நம்பப்பட்டவைகளின் அஸ்திவாரங்களையே ஆட்டம் காணச்செய்தன. வாழ்வின் உண்மைகளை கண்டறிய வேண்டும் என்ற அதீத தாகம் சாக்ரடீஸுக்கு இருந்தது. தான் அறிந்த உண்மைகளை மக்களுக்கு சொல்ல அவர் கையாண்ட உத்தியே அலாதியானது அற்புதமானது. அவர் கிரேக்கத்தின் பகல்பொழுதில் கையில் விளக்கேத்திக்கொண்டு கூட்டமுள்ள இடத்தில் எதையோ குனிந்து தேடுவதுபோல் நடிப்பார். வேடிக்கை பார்க்க அங்கு கூட்டம் கூடும். என்ன தேடுகிறீர்கள் என்று எவராவது கேட்கும்போது மனிதர்களைத் தேடுகிறேன் என்று பதில் கூறுவார். மக்கள் புரியாது விழிக்கும்போது அவர்களிடம் விளக்கிப்பேசி தன் கருத்துக்களை அவர்களது மனங்களில் விதைப்பார்.



சாக்ரடீஸ் வாழ்ந்த காலகட்டம் கிறிஸ்துவம், இஸ்லாம், பெளத்தம், சமணம், சீக்கியம், போன்ற மதங்கள் தோன்றாத காலம். அபோது ஏதென்ஸ் மக்கள் நிலவையும், சூரியனையும், இதிகாச நாயகர்களையும் கடவுளாக வழிபட்டு வந்தனர். அதனை எதிர்த்து துணிந்து கேள்வி கேட்டார் சாக்ரடீஸ். துணிந்து கேள்வி கேட்டவர்களை எள்ளி நகையாடுவதும், அவர்கள் பணிந்து போக வேண்டும் என்று துன்புறுத்தி வற்புறுத்துவதும்தான் வரலாறு முழுவதும் காணப்படும் உண்மை. கேள்வி கேட்க கேட்க சாக்ரடீஸின் எதிரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே போனது. சாக்ரடீஸின் அறிவுப்பூர்வ பேச்சால் புரட்சி வெடிக்கலாம் என அஞ்சினர் ஆட்சியாளர்கள். சமுதாயத்தை சீர்திருத்த நினைத்தவர் மீது கிரேக்க இளையர்களிடம் தவறான கருத்துக்களை பரப்புகிறார் என்று குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. குற்றச்சாட்டுகளை ஆணித்தரமாகவும் அறிவுப்பூர்வமாகவும் மறுத்தாலும் தனது 70 ஆவது வயதில் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டார் சாக்ரடீஸ்.

என்னை நீதிமன்றத்தின்முன் நிறுத்திய என் எதிரிகளை நான் குறுக்குவிசாரணை செய்யவிரும்பவில்லை. என்னுடைய உண்மையான எதிரிகள் அநீதியும், அறிவின்மையும்தான். நான் கல்லையும், மண்ணையும் கடவுள் என்று ஒப்புக்கொள்ள மறுக்கிறேன். நான் கல்லுக்கும் மண்ணுக்குமல்ல ஒரு பெண்ணுக்குதான் பிறந்தேன். கடவுளைப்பற்றி ஆராய்ட்சி செய்வது நாத்திகம் என்றால் கடவுளை ஒப்புக்கொள்ள எங்கே மறுத்துவிடுவார்களோ என்று பயப்படுவது அதைவிட நாத்திகம். நீங்கள் என்னை மன்னித்து வெளியே அனுப்பினாலும் என் உயிருள்ளவரை தர்க்கவாதத்தைத் தொடர்வேன். உண்மையில் எனக்கு அறிவில்லை மற்றவர்களுக்கும் இல்லை. மற்றவர்கள் அதை உணரவில்லை நான் எனது அறிவீனத்தை உணர்ந்தேன் அவ்வளவுதான் வேற்றுமை. நான் மரணத்திற்கு அஞ்சவில்லை. அநீதிக்குதான் அஞ்சுகிறேன் எனக்கும் உங்களுக்கும் பொதுவான கடவுள் பெயரால் நீதி கேட்கிறேன். இவ்வாறு நீதிமன்றத்தில் பேசினார் சாக்ரடீஸ்.

சாக்ரடீஸுக்கு மரணமா, மன்னிப்பா என்று முடிவு செய்ய 501 நபர்கள் கொண்ட நீதிக்குழு வாக்களித்தனர் அதில் 220 பேர் மன்னிப்புக்கும் மீதி 281 பேர்கள் மரணத்திற்கும் வாக்களித்தனர். மரண தண்டனை உறுதியானது. ஆனால் அப்போதுகூட கலங்கவில்லை சாக்ரடீஸ் ஏனெனில் மரணத்தைப்பற்றி அவரே ஒருமுறை இவ்வாறு கூறியிருந்தார்  “மரணத்தைப் பற்றி கவலைப்படாதே நீ இருக்கும்வரை மரணம் வரப்போவதில்லை அது என்னவென்று உனக்கு தெரியாது அது வந்தபோது நீயே இருக்கப்போவதில்லை பிறகு ஏன் கவலை” . சாக்ரடீஸுக்கு விஷம் கொடுத்துக் கொல்ல முடிவு செய்யப்பட்டது. அப்போது ஏதென்ஸில் விழாக்காலமாக இருந்ததால் அவரது மரணம் மூன்று வாரங்களுக்கு தள்ளிப்போடப்பட்டது. கால்களில் சங்கிலியால் கட்டப்பட்டு சாக்ரடீஸ் சிறையில் அடைக்கப்பட்டார்.

சாக்ரடீஸை எப்படியாவது விடுவித்துவிட வேண்டுமென்று என்று துணிந்த சாக்ரடீஸ் நண்பரும், மாணவருமான கிரீட்டோ சிறைக்குள் புகுந்தார் தப்பி ஓடிவிடலாம் என சாக்ரடீஸை கெஞ்சினார். அதற்கு சாக்ரடீஸ் “என்னருமை கிரீட்டோ நான் நீதியை நேசித்தவன் நேர்மையானவன் என்ற நற்பெயரோடு இறந்துவிடுகிறேன் எவரும் கவலைப்பட வேண்டாம் என் உடலை எரிப்பதா, புதைப்பதா என்ற குழப்பமும் வேண்டாம் இறந்தபிறகு உடலில் நான் ஏது அது வெறும் உணர்வற்ற சடலம்தான் அதை எப்படி செய்தால் என்ன” கி.மு.399 ஆம் ஆண்டு சாக்ரடீஸின் மரணம் குறிக்கப்பட்ட நாள் வந்தபோது ஒரு விஷக்கோப்பையை சாக்ரடீஸுக்கு கொடுத்த சிறை அதிகாரி அறிவுத் தெளிவுடன் இருக்கும் தங்களுக்கு விஷம் கொடுக்க வேண்டும் என்ற நினைப்பே என்னை வருத்துகிறது என்று கூறிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டு அழுதார். புன்னகையுடன் விஷக்கோப்பையைப் பெற்று மறுமொழி சொல்லாமல் விஷத்தை அருந்தி உயிர் துறந்தார் சாக்ரடீஸ்.



வாழ்நாள் முழுவதும் கேள்வி கேட்ட சாக்ரடீஸ் தனது மரணத்தைப்பற்றி ஒரு கேள்விகூட கேட்கவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. சாக்ரடீஸின் இறுதி ஊர்வலத்தில் பேசிய அவரது மாணவரும் கிரேக்கம் தந்த இன்னொரு தத்துவ மேதையுமான பிளேட்டோ இவ்வாறு கூறினார் ஏதென்ஸ் நகர நண்பர்களே ஒரு நல்லவரை மாபெரும் அறிஞரை வீண்பழி சுமத்தி கொன்றுவிட்ட குறை மதிப்படைந்த நாடு என்ற தீராத பழிச்சொல்லை ஏதென்ஸ் சுமக்கப் போகிறது. சாக்ரடீஸின் உயிர் பிரிந்த சில நாட்களிலிலேயே தனது தவறை உணர்ந்தது ஏதென்ஸ். சாக்ரடீஸின்மீது பழி சுமத்தியவர்களில் சிலர் பிறகு குற்ற உணர்வால் தூக்கிலிட்டு கொன்றதாக வரலாறு கூறுகிறது.

“உன்னையே நீ அறிவாய்” என்பது சாக்ரடீஸின் புகழ்பெற்ற வாசகம். எதையும் அப்படியே நம்பிவிடாதே ஏன்? எதற்கு? என்று கேள்வி கேள் என்ற சிந்தனைதான் சாக்ரடீஸ் இந்த உலகிற்கு விட்டுச்சென்ற மாபெரும் சொத்து. “ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை” கவிஞர் வாலியின் இந்த பாடல் வரிகளை 2500 ஆண்டுகளுக்கு முன்னரே வாழ்ந்து காட்டியவர் சாக்ரடீஸ். ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தில் அந்த பாடல்வரி இடம்பெற்றிருந்தது. சளைக்காமல் ஏன்? எதற்கு? என்ற கேள்வி கேட்டதால் சாக்ரடீஸை ஆயிரத்தில் அல்ல ஆயிரம் கோடியில் ஒருவராக இன்று மதிக்கிறது உலகம்.

நம் முன்னோர்கள் பின்பற்றினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக நாமும் எல்லாவற்றையும் அப்படியே பின்பற்ற வேண்டுமா? என்ற கேள்வியை நாம் கேட்டுக்கொள்ளலாம். நமது வாழ்க்கையை முடக்கும் சில மூட நம்பிக்கையை களையெடுக்கலாம். ஏன்? எதற்கு? என்ற கேள்வி கேட்டால் சாக்ரடீஸைப்போல நமக்கும் தெளிவு பிறக்கும். தெளிவு பிறந்துவிட்டால் அந்த வானம் என்ன உலகமே வசப்படும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218350
  • Total likes: 23050
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சர் ரோஜர் பேனிஸ்டர் ( ' The Miracle Mile Man') - (வரலாற்று நாயகர்)
 
வாழ்க்கையில் வெற்றிபெற பல வழிகள் உண்டு. இதுவரை எட்டப்படாத ஓர்  இலக்கை தீர்மானித்து மற்றவர்கள் அந்த இலக்கை அடையுமுன் நாம் அந்த இலக்கை அடைவது அந்த வழிகளில் ஒன்று. எதையுமே முதலில் சாதிப்பவர்களுக்குதான் வரலாறும் முதல் மரியாதை தருகிறது. புதிய இலக்குகளை அடைவது என்பது விளையாட்டு உலகத்திற்கும் பொருந்தும் ஒன்று. ஒரு மைல் தொலைவை ஓடிக்கடக்க உங்களுக்கு எவ்வளவு நேரம் ஆகும்? சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்புவரை ஒரு மைல் ஓட்டத்திற்கு '4 மினிட் ஃபேரியர்' என்ற ஒரு இலக்கு இருந்தது. நான்கு நிமிடத்திற்குள் ஒரு மைல் தொலைவை ஓடிக்கடப்பது என்பது பகல் கனவாக இருந்த காலம் அது. தனது திறமையின்மீது அதீத நம்பிக்கை வைத்திருந்தவர்கள்கூட அதனை அடைய முடியாத ஓர் இலக்காக கருதினர்.

1954ல் ஒருவர் ஓடினார் '4 மினிட் ஃபேரியர்' என்ற சொற்றொடர் காற்றோடு கரைந்தது. அவர் பெயர் ரோஜர் பேனிஸ்டர். 1929 ஆம் ஆண்டு மார்ச் 23ந்தேதி இங்கிலாந்தின் ஹெரோ என்ற நகரில் பிறந்தார் பேனிஸ்டர். அவர் ஆரம்ப பள்ளியில் படிக்கும்போதே திடல் திட போட்டிகளில் அதிக ஆர்வம் காட்டினார். அவரது பெற்றோர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பல்கலைக்கழக படிப்புக்கு பெற்றோரால் உதவ முடியாது என்பது பேனிஸ்டருக்கு புரிந்தது. எனவே எப்படியாவது உபகாரச்சம்பளம் பெற்று மிகச்சிறந்த பல்கலைகழகத்தில் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவை சிறு வயதிலிருந்தே வளர்த்து வந்தார்.



இரண்டாம் உலகப்போர் தொடங்கியபோது பேனிஸ்டரின் குடும்பம் இங்கிலாந்தின் வரலாற்றுப் புகழ்மிக்க பாத் என்ற நகருக்கு குடி பெயர்ந்தது. அங்கு சென்ற பிறகு தினசரி பள்ளிக்கு ஓடிச்செல்வார் பேனிஸ்டர். பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு ஓடியே வருவார். படிப்பிலும் அவர் அதிக கவணம் செலுத்தியதால் ஆரம்பத்தில் சக மாணவர்களின் வெறுப்பை சம்பாதித்தார். ஆனால் ஓட்டப்பந்தயத்தில் அவருக்கு இருந்த திறமையைக்கண்டு அனைவருக்கும் அவர் மேல் நன்மதிப்பு ஏற்பட்டது. அவரது கடும் உழைப்பு அவர் கனவு கண்டதைப்போலவே உலகப்புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்க உபகாரச்சம்பளத்தை பெற்றுத்தந்தது. பல்கலைகழகத்திலும் அவர் திடல்திட போட்டிகளில் ஈடுபட்டார். 1500 மீட்டர் மற்றும் ஒரு மைல் ஓட்டத்தில் அவர் காட்டிய வேகம் பிரிட்டிஷ் பத்திரிக்கையாளர்களின் கவணத்தை அவர் பக்கம் ஈர்த்தது. ஒரு தேசமே பேனிஸ்டரை நம்பிக்கை நட்சத்திரமாக பார்த்தது.

ஆனால் கல்விக்கே முதலிடம் தந்த பேனிஸ்டர் 1948 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் இங்கிலாந்தை பிரதிநிதிக்கும் வாய்ப்பு கிடைத்தும் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? அதற்கான காரணத்தை கேட்டால் இன்னும் ஆச்சரியப்படுவீர்கள் பேனிஸ்டர் தனது மருத்துவ படிப்பில் முழு கவணம் செலுத்த விரும்பியது முதல் காரணம், இரண்டாவது காரணம் தன் தேசத்தை பிரதிநிதிக்கும் அளவுக்கு தனக்கு இன்னும் தகுதி இல்லை என்று அவர் நினைத்தது. வாழ்க்கையில் நாம் இதுபோன்ற எத்தனை விளையாட்டு வீரர்களை சந்திக்க முடியும்! அவர் அப்படி சொன்னாலும் ஆனால் அடுத்த மூன்றே ஆண்டுகளில் அதாவது 1951ல் ஒரு மைல் ஓட்டத்தில் இங்கிலாந்தின் ஆகச்சிறந்த வீரராக உருப்பெற்றார் பேனிஸ்டர். அடுத்த ஒலிம்பிக் போட்டிக்கு தான் தயார் என்று உணர்ந்தார்.

ஆனால் 1952 ஆம் ஆண்டில் ஹல்சிங்கி ஒலிம்பிக் போட்டிகளில் கடைசி நிமிட நேர மாற்றங்களால் போட்டிகளுக்கு இடையில் போதிய ஓய்வு இல்லாமல் ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் அவரால் 1500 மீட்டர் ஓட்டத்தில் நான்காவதாகத்தான் வர முடிந்தது. பிரிட்டிஷ் பத்திரிக்கைகள் அவரை எள்ளி நகையாடின. பாரம்பரிய பயிற்சி முறைகளை பேனிஸ்டர் ஒதுக்கியதால்தான் பேனிஸ்டர் தோற்றார் என்று காரணம் கற்பித்தன. ஆனால் மனம் தளராத பேனிஸ்டர் ஒரு மைல் தொலைவு ஓட்டத்தில் உலக சாதனை நிகழ்த்தி பத்திரிக்கையாளர்களின் வாயை அடைக்க விடா முயற்சியோடு செயல்பட்டார். மருத்துவ படிப்பு அதிக நேரத்தை எடுத்துக்கொண்டதால் அவரால் ஒரு நாளைக்கு 45 நிமிடத்தைதான் பயிற்சிக்கு ஒதுக்க முடிந்தது. ஆனாலும் தனது விடா முயற்சியில் நம்பிக்கை வைத்து படிப்பையும் பயிற்சியையும் தொடர்ந்தார்.



ஆண்டு 1954 மே திங்கள் 6 ந்தேதி வயது 25 ஆக்ஸ்பர்டில் நடைபெற்ற ஒரு போட்டியில் பிரிட்டிஷ் திடல்திட கழகத்தை பிரதிநிதித்து ஒரு மைல் பிரிவில் ஓடினார் பேனிஸ்டர். உலகச்சாதனையை நோக்கி விரைந்த அவரது கால்கள் 3 நிமிடம் 59.4 வினாடியில் கடிகாரத்தை உறைய வைத்தன. பேனிஸ்டருக்கு மூச்சு முட்டியது, விளையாட்டு உலகம் ஒரு கணம் மூக்கின்மேல் விரலை வைத்து மூச்சுவிட மறந்தது. 25 வயதில் வரலாற்றில் தடம் பதித்தார் பேனிஸ்டர். நான்கு நிமிடத்திற்குள் ஒரு மைல் தொலைவு ஓடுவது மனித உடலுக்கு அப்பாற்பட்டது என்பதுதான் அப்போதைய விளையாட்டு வீரர்களின் பயிற்றுவிப்பாளர்களின் எண்ணமாக இருந்தது. ஆனால் அது சாதிக்கக்கூடிய ஒன்று என்று நம்பினார் பேனிஸ்டர். தனது மருத்துவ படிப்பின் மூலம் உடல்கூறுகளை கூர்ந்துகற்ற அவர் ஓடுவதைப்பற்றி நிறைய ஆராய்ட்சிகள் செய்ததோடு மட்டுமல்லாமல் அறிவியல் அடிப்படையிலான புதிய பயிற்சி முறைகளை வகுத்துக்கொண்டார்.



நம்பிக்கையோடு அந்த முறைகளை கையாண்டு வெற்றியும் பெற்றார். பேனிஸ்டர் சாதித்த அடுத்த மாதமே ஆஸ்திரேலியாவின் ஜான் லேண்ட் பி என்ற வீரரும் நான்கு நிமிடத்திற்குள் ஒரு மைல் தொலைவை ஓடி முடித்தார். அப்போதுதான் தடை உடலுக்கு அல்ல உள்ளத்துக்குதான் என்பதை உலகம் உணர்ந்தது. மிகப்பெரும் சாதனையை செய்த அதே ஆண்டு திடல்திட போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று தனது மருத்துவ கல்வியை தொடர்ந்தார் பேனிஸ்டர். பின்னர் சிறப்பாக தேர்ச்சி பெற்று நரம்பியல் மருத்துவரானார். எப்படி ஒரு மைல் சாதனையை நிகழ்த்துனீர்கள் என்று ஒருமுறை அவரிடம் கேட்கப்பட்டபோது “உங்களுக்கு இருப்பதைக் காட்டிலும் அதிகமாக எடுத்துக்கொள்ளும் திறமைதான்" காரணம் என்று கூறினார் பேனிஸ்டர்.

ஒருமுறை அவரை எள்ளி நகையாடிய பத்திரிக்கைகள் “The man who ran the miracle mile" அதாவது அதிசய மைல் மனிதன் என்று இப்போது பாராட்டின. 1975 ஆம் ஆண்டு பேனிஸ்டருக்கு “சர்” பட்டம் வழங்கி கவுரவித்தது பிரிட்டிஷ் அரசாங்கம். கடந்த 50 ஆண்டுகளில் எத்தனையோ வீரர்கள் ஒரு மைல் தொலைவை நான்கு நிமிடத்திற்குள் ஓடி முடித்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே பேனிஸ்டரால் எட்டபட்ட இலக்கைதான் எட்டியிருக்கின்றனர். நான்கு நிமிட இலக்கை முதன்முதலாக முறியடித்ததால்தான் 50 ஆண்டுகள் கடந்தும் பேனிஸ்டரின் பெயரை பெருமையுடன் சுமந்து நிற்கிறது வரலாறு. ஒருவேளை இன்னொரு வீரர் மூன்று நிமிடத்திற்குள் ஒரு மைல் தொலைவை ஓடி முடித்தால் பேனிஸ்டரின் பெயர் மறக்கப்படலாம், ஆனால் முடியாது என்று கருதப்பட்டதை முடியும் என்று செய்து காட்டியதாலேயே மூன்று நிமிட இலக்கையும் ஏன் முறியடிக்க முடியாது!! என்ற சிந்தனையை பல வீரர்களின் உள்ளங்களில் உருவாக்கியிருக்கிறார் பேனிஸ்டர். இது ஒன்றே பேனிஸ்டரின் வெற்றியாகும்.



உங்கள் வாழ்வில் நீங்கள் வகுத்துக்கொள்ளும் இலக்கு எது? மற்றவர்களின் இலக்குப்போலவே சாதாரணமாக இருந்தால் வாழ்க்கையும் சாதாரணமாகத்தான் இருக்கும். ஆனால் பேனிஸ்டரைப்போல் உங்கள் இலக்கும் உயர்வாக இருந்து விடா முயற்சியோடு வியர்வை சிந்தி உழைத்தால் வாழ்க்கையும் உயரும் அதனால் நீங்கள் விரும்பும் வானமும் வசப்படும்.
« Last Edit: March 26, 2013, 06:14:51 PM by MysteRy »

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218350
  • Total likes: 23050
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
புரூஸ் லீ - தற்காப்புக்கலையின் முடிசூடா மன்னன் (வரலாற்று நாயகர்)
 
நாம் விரும்பும் இலக்கை அடைவதற்கு உடல் வலிமையை விட மனவலிமைதான் முக்கியம் என்று வாழ்ந்துகாட்டிய வரலாற்று மாந்தர்கள் பலர். உலகத்தின் உதாசீன பேச்சுக்களையும் ஏளன சிரிப்புகளையும், கேலி கிண்டல்களையும் தாண்டி ஒருவன் சாதனை படைக்க வேண்டுமென்றால் அதற்கு உடல் வலிமை மட்டும் போதாது. இரும்பு போன்ற மன வலிமையும் வேண்டும். நாம் தெரிந்துகொள்ளவிருக்கும் வரலாற்று நாயகருக்கு அப்படிப்பட்ட மன வலிமை இருந்தது இல்லையென்றால் பிறந்தபோதே ஆரோக்கியமின்றி ஒழுங்காக பள்ளிக்குக்கூட செல்லாமல் குண்டர் கும்பல்களில் சேர்ந்து எங்கெல்லாம் சண்டை நடக்குமோ அங்கெல்லாம் சண்டையில் ஈடுபட்ட ஓர் இளைஞனுக்கு தற்காப்பு கலையில் சாதனை செய்ய வேண்டும் என்ற கனவும், ஒரு சிறந்த நடிகனாக வரவேண்டும் என்ற ஆசையும் உதித்திருக்காது. பல இன்னல்களை கடந்து தனது கனவுகளை நனவாக்கவும் முடிந்திருக்காது.

1959 ஆம் ஆண்டு சராசரிக்கும் குறைவான உயரத்தோடும், ஒல்லியான தேகத்தோடும் அமெரிக்க மண்ணில் வந்திறங்கினான் அந்த 18 வயது இளைஞன். அப்போது ஜான் வேய்ங், ஜேம்ஸ் டீன், சார்ல்ஸ் அட்லஸ் போன்ற நடிகர்கள் புகழின் உச்சியில் இருந்தனர். ஆனால் பார்ப்பதற்கு சாதாரணமாக இருந்த அந்த இளைஞன் என்ன சொன்னான் தெரியுமா? அந்த ஆக்‌ஷன் கதாநாயகர்களுக்கெல்லாம் இனி நாந்தான் மாற்று என துணிந்து சொன்னான். அப்போது அமெரிக்கர்கள் மட்டுமல்ல அந்த இளைஞனின் சமூகம்கூட அவனை ஏளனமாக பார்த்தது. ஆனால் ஏளனங்களை ஏணிப்படிகளாக்கி அடுத்த 14 ஆண்டுகளில் வெற்றிக்கொடி நாட்டி சினிமா என்ற வாகனத்தின்மூலம் தற்காப்புக்கலைக்கு உலகலாவிய அங்கீகாரம் பெற்றுத்தந்தார் அந்த தற்காப்புக்கலை வல்லுநர் திரைப்பட நடிகர். அவரது பெயர் புரூஸ் லீ.



1940 ஆம் ஆண்டு நவம்பர் 27 ந்தேதி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மாநிலத்தில் பிறந்தார் புரூஸ் லீ. பிறந்தபோது அவருக்கு இடப்பட்ட பெயர் லீ ஜுன்பேன்'  அவரது தந்தை லீ கோய்ன் ஒரு சீனர், தாயார் கிரேஸ் ஐரோப்பியர். சிறுவயதில் ஹாங்காங்கில் வாழ்ந்தது புரூஸ் லீயின் குடும்பம். அங்கே பெரும்பாலான சிறுவர்கள் தெருக்களில்தான் பொழுதைக் கழிப்பார்கள். அப்படி நிறைய நேரத்தைக் கழித்த புரூஸ் லீக்கு சண்டை போடுவதில் இருந்த ஆர்வம் படிப்பில் இல்லை. மேலும் சுமார் 20 சீனப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றும் வாய்ப்பு புரூஸ் லீக்கு கிடைத்தது. சண்டையையும் சினிமாவையும் எடுத்துக்கொண்டு பள்ளியையும் பாடங்களையும் ஒதுக்கினார் புரூஸ் லீ. 

இயற்கையாகவே நன்றாக சண்டைபோடும் திறமை அவருக்கு இருந்ததால் ஒரு கும்பலுக்கு தலைவனாகவும் இருந்தார். புரூஸ் லீயின் தந்தையோ நன்கு படித்து தொழில்துறையில் ஈடுபட வேண்டும் என விரும்பினார் ஆனால் சண்டைபோட்டு எல்லோரையும் வெற்றிக்கொள்ள வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார் புரூஸ் லீ. சிலமுறை பெரிய குண்டர்களிடம் மோதி தோல்வியும் கண்டிருக்கிறார். அப்போதுதான் ஒரு நல்ல தற்காப்புக்கலையை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு எழுந்தது. தன் தந்தையிடமே குங்பூ என்ற பாரம்பரிய சீன தற்காப்புக்கலையைக் கற்றுக்கொண்டார். அடிக்கடி அடிதடிகளில் ஈடுபட்டதால் புரூஸ் லீயின் கொட்டத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாத பெற்றோர் அவரிடம் 100 டாலரைக் கொடுத்து அமெரிக்காவில் போய் எப்படியாவது பிழைத்துக்கொள் என்று கப்பலேற்றிவிட்டனர்.

அப்போதுதான் 18 வயது இளைஞனாக அமெரிக்கா வந்து சேர்ந்தார் புரூஸ் லீ. சியாட்டலில் இருந்த ஒரு நண்பரின் சீன உணவக விடுதியில் தங்கிக்கொண்டு தற்காப்புக் கலையை கற்றுக்கொடுக்க தொடங்கினார். அந்த விடுதியில் வேலையும் பார்த்தார். அவரது எண்ணம், செயல் எல்லாம் குங்பூ என்ற தற்காப்புக்கலையைப் பற்றியே இருந்தது. மேற்கத்திய மல்யுத்தம், ஜீடோ, கராத்தே, குத்துச்சண்டை ஆகியவற்றையும் கற்றுக்கொண்டு சில புதியபாணி அசைவுகளையும் சேர்த்து அவர் சொந்தமாக ஒரு தற்காப்புக்கலையை உருவாக்கினார். அதற்கு ஜீட்குன்டோ என்று பெயரிட்டார். அவரிடம் தற்காப்புக்கலையை கற்றுக்கொள்ள வந்த லிண்டா என்ற பெண்ணை மணந்து கொண்டார் புரூஸ் லீ. 20 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த புரூஸ் லீக்கு ஹாலிவுட்டில் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. ஆனால் ஹாலிவுட் அவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. சோர்ந்துபோன புரூஸ் லீ ஹாங்காங் திரும்பினார்.



தி பிக் பாஸ், ஸ்பிட் ஆஃப் பியூரி என்ற இரண்டு படங்களில் புரூஸ் லீ நடித்தார் அதில் அவர் பம்பரம்போல் சுழன்று சுழன்று காட்டிய வித்தைகளும், சாகசங்களும் ஆசிய சினிமா பிரியர்களை அசத்தின. ஆனால் ஆசியாவை அசத்திய அந்தப்படங்கள் ஹாலிவுட்டின் கடைக்கண் பார்வையைக்கூட பெறத்தவறின. அதைப்பற்றி கவலைப்படாத புரூஸ் லீ 1972 ஆம் ஆண்டில் “தி ரிட்டன் ஆப் த டிராகன்” என்ற படத்தை சொந்தமாக தயாரித்தார். சினிமாவின் மந்திரங்களை ஓரளவுக்கு புரிந்துகொண்டிருந்த புரூஸ் லீ திரைக்கதையைத் தானே எழுதி திரைப்படத்தை இயக்கவும் செய்தார். பொதுவாக சண்டைக்காட்சிகளில் ஸ்டண்ட் நடிகர்களை வைத்துதான் படம் எடுப்பது வழக்கம் ஆனால் புரூஸ் லீயோ கேமரா வித்தைகள் இல்லாமல் அதிவேகமாக அதேநேரத்தில் தத்ரூபமாக சண்டைப் போடக்கூடிய திறமைசாலி என்பதை அந்தப்படம் அமெரிக்கர்களுக்கு உணர்த்தியது.



அதுவரை ஆசிய இளையர்கள் மட்டும் புரூஸ் லீயின் விசிறிகளாக இருந்தனர். “தி ரிட்டன் ஆஃப் த டிராகன்” படத்திற்கு பிறகு அமெரிக்க இளையர்களும் புரூஸ் லீயின் வெறித்தனமான விசிறிகளாயினர். அந்தப்படம் தந்த வெற்றிக்களிப்பில் “கேம் ஆப் டெத்” என்ற தனது அடுத்தப்படத்துக்கான வேலையை ஆரம்பித்தார் புரூஸ் லீ. அவரது பிரபலத்தையும் வசீகரத்தையும் உணர்ந்துகொண்ட ஹாலிவுட் தயாரிப்பாளர்கள் ஓடோடி வந்து தங்களுக்காக படம் எடுக்க வேண்டுமாறு புரூஸ் லீயைக் கேட்டுக்கொண்டனர். ஹாலிவுட்டில் நடிக்க வேண்டுமென்பதை தனது வாழ்நாள் லட்சியமாக கொண்டவராயிற்றே அவர். உடனே தனது சொந்த படத்தை தள்ளிப்போட்டுவிட்டு ஹாலிவுட்டுக்காக “என்டர் தி டிராகன்”  என்ற படத்தை எடுக்கத் தொடங்கினார். அசுர வேகத்தில் நடைபெற்ற படப்பிடிப்பு, ரீ ரெக்கார்டிங், எடிட்டிங் வேலைகள் அனைத்தும் இரண்டே மாதங்களில் முடிவடைந்தன.

“என்டர் தி டிராகன்” என்ற படம் திரைக்கு வர மூன்றே வாரங்கள் இருந்தபோது எதிர்பாரத ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தது. 1973 ஆம் ஆண்டு ஜீலை 20 ந்தேதி தன் மனைவி லிண்டாவிடம் விடைபெற்றுக்கொண்டு முடிக்கப்படாமல் இருந்த தனது சொந்தப்படமான “கேம் ஆப் டெத்” என்ற திரைப்படத்தைப்பற்றி விவாதிக்க வெளியில் சென்றார் புரூஸ் லீ. அன்று இரவே மர்மமான முறையில் இறந்துபோனார் புரூஸ் லீ. அப்போது அவருக்கு வயது 33 தான். அவர் இறந்தது பெடிட் டிங் பே என்ற ஒரு நடிகையின் வீட்டில் அதனால் புருஸ் லீயின் மரணம் குறித்து பல வதந்திகள் எழுந்தன. ஒருமுறை படப்பிடிப்பில் ஏற்பட்ட சண்டைக்காட்சியின் போது தலையில் விழுந்த அடியால் மூளை வீங்கி இறந்துபோனார் என்று மருத்துவர்கள் கூறினர். உண்மையைக் கண்டுபிடிக்க ஹாங்காங் அரசாங்கம் ஒரு விசாரணைக் குழுவை நியமித்தது. ஆனால் இன்றுவரை புரூஸ் லீ இறந்ததற்கான உண்மையான காரணம் தெரியவிலை.



புரூஸ் லீயின் மரணத்திற்கு பிறகு வெளிவந்த “என்டர் தி டிராகன்”  படம் சக்கைப்போடு போட்டு 200 மில்லியன் டாலர் வசூலை அள்ளிக்குவித்தது. உலகெங்கும் பல இளையர்கள் கராத்தே பைத்தியமானார்கள். மூளை முடுக்குகளிலெல்லாம் கராத்தே பள்ளிகள் தொடங்கப்பட்டன. இவ்வாறு உலக இளையர்களின் கவணத்தை தனி ஒரு மனிதனாக தற்காப்புக்கலைப்பக்கம் திருப்பிய பெருமை புரூஸ் லீயையே சேரும். வரலாற்றின் எந்த கால கட்டத்தையும்விட எழுபதுகளில்தான் மிக அதிகமான இளையர்கள் தற்காப்புக்கலை பள்ளிகளில் சேர்ந்து பயின்றனர் என்ற உண்மையே அதற்கு சான்று. தன் கனவை நனவாக்க அயராது பாடுபட்டவர் புரூஸ் லீ. உடல்தான் தனது மூலதனம் என்று நம்பிய அவர் அதை ஒரு கோவிலாகவே வழிபட்டார். தினசரி ஓடுவது,எடை தூக்குவது என்று தனது உடலை வலுப்படுத்திக்கொண்டதோடு வைட்டமின்கள், ஜின்செங், ராயல் ஜெல்லி போன்றவற்றையும் உட்கொண்டு உடலை திடமாக வைத்துக்கொண்டார்.



அகால மரணம் அவரது ஆயுளை குறைக்காமல் இருந்திருந்தால் சினிமாவிலும், தற்காப்புக்கலையிலும் இன்னும் மிகப்பெரிய வெற்றிகளை குவித்திருப்பார் புரூஸ் லீ. 33 ஆண்டுகளே வாழ்ந்தாலும் ஓர் அர்த்தமுள்ள வாழ்கையை வாழ்ந்திருக்கிறார். குண்டர் கும்பலில் இருந்தாலும், ஒழுங்காக படிக்காவிட்டாலும் தான் தேர்ந்தெடுத்த துறையில் அவர் செலுத்திய முழு கவணமும் காட்டிய ஆர்வமும் கொட்டிய உழைப்பும் சிந்திய வியர்வையும்தான் புரூஸ் லீக்கு அந்த இளம் வயதிலேயே வானத்தை வசப்படுத்தின. நாம் எந்தத் துறையை தேர்ந்தெடுக்கிறோம் என்பது முக்கியமல்ல தேர்ந்தெடுத்த பிறகு அந்த துறையில் முழு கவணம், ஆர்வம், உழைப்பு, வியர்வை, விடா முயற்சி ஆகியவற்றை செலுத்துகிறோமா என்பதுதான் முக்கியம். இவ்வாறு ஈடுபடுத்திக் கொண்டால் நமக்கும் எந்த வானம் வசப்படாமல் போகும்!!!

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218350
  • Total likes: 23050
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஹமில்டன் நாகி - மருத்துவ உலகில் ஒரு மாறுபட்ட மனிதரின் கதை!! (வரலாற்று நாயகர்)
 
1967 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ந்தேதி தென்னாப்பிரிக்காவின் கேப்டான் நகரில் எதிர்பாராத கோரவிபத்து ஒன்றினால் ஒரு காரால் மோதி தள்ளப்பட்டு உயிருக்கு ஊசலாடிய நிலையில் ஓர் இளம்பெண் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார்.அவரது உடலில் இதயம் மட்டும்தான் துடித்துக்கொண்டிருந்தது வேறு எந்த அசைவும் இல்லை. அறுவை சிகிச்சை மூலம் அந்தப் பெண்ணின் இதயத்தை அகற்ற வேண்டிய பொறுப்பு ஹமில்டனுக்கு ஆனால் அந்த நாட்டின் சட்டப்படி அவர் அந்தப் பெண்ணை தொடக்கூட முடியாது ஏனெனில் ஹமில்டன் கருப்பர் இனத்தைச் சேர்ந்தவர்.

உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்த இளம்பெண் டெனிஸ் டார்வால் வெள்ளை இனப்பெண். தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கல் உச்சகட்டத்தில் இருந்த அந்த சமயத்தில் வெள்ளையர்களின் அறுவை சிகிச்சை அறைக்குள் நுழையவோ மருத்துவமனையில் வெள்ளையர்களை தொடவோ அறுவை சிகிச்சை செய்யவோ கருப்பர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் ஹமில்டனுக்காக மட்டும் ரகசியமாக தனது குருட்டு சட்டங்களை மீற முடிவெடுத்தது அந்த மருத்துவமனை. அதற்கு காரணம் உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை செய்து அகற்றுவதில் ஹமில்டனுக்கு இருந்த அசாத்திய திறமைதான்.



அதுமட்டுமல்ல அன்றைய தினம் மருத்துவ உலகில் ஓர் வரலாற்று சிறப்பு வாய்ந்த தினம். ஆம் அன்றுதான் உலகின் முதல் இருதய மாற்று அறுவை சிகிச்சை புகழ்பெற்ற மருத்துவர் கிறிஸ்டியான் பெர்னாடின் தலைமையில் நடைபெற்றது. டெனிஸின் இருதயத்தை ஹமில்டன் லாவகமாக அறுத்து எடுக்க அதனை லூயிஸ் வஸ்கான்ஷி என்பவருக்கு பொருத்தினார் கிறிஸ்டியான் பெர்னாட். உலகின் முதல் இருதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது.



அந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த அறுவை சிகிச்சையில் பெயரும் புகழும் கிறிஸ்டியான் பெர்னாட்க்குப்போக அதில் ஹமில்டனின் பங்களிப்பு மறைக்கப்பட்டது மறுக்கப்பட்டது. உண்மையில் நீ ஒரு வெள்ளை இனத்தவரின் உடலை அறுக்கிறாய் என்பதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று உறுதிமொழி வாங்கிக்கொண்ட பின்னரே ஹமில்டனை அந்த அறுவை சிகிச்சை செய்ய அனுமதித்தாம் அந்த மருத்துவமணை நிர்வாகம். உலக பத்திரிக்கைகளின் பக்கங்களில் அந்த அறுவை சிகிச்சை சம்பந்தபட்ட படங்கள் பிரசுரமாயின. அதில் சில படங்களில் டாக்டர் பெர்னாடின் பின்புறம் புன்னகையோடு நின்றிருந்தார் ஹமில்டன், அவர் யார் என்று எழுந்த கேள்விகளுக்கு துப்புறவு ஊழியர் என்றும், பூங்கா காவலர் என்றும் பதில் கூறி சமாளித்தது மருத்துவமனை நிர்வாகம்.



இந்த சம்பவம் நடந்த பல ஆண்டுகளுக்கு பிறகு டாக்டர் கிறிஸ்டியான் பெர்னாட் இறப்பதற்கு முன்புதான் ஹமில்டன் பற்றிய உண்மைகள் வெளியாகத் தொடங்கின. தன் மரணத்திற்கு முன் ஹமில்டன் என்னைவிட சிறந்த அறுவை சிகிச்சை நிபுனர் என்று மனம் திறந்து புகழ்ந்தார் கிறிஸ்டியான் பெர்னாட் இத்தனைக்கும் உயர்நிலை கல்விகூட படிக்காதவர் ஹமில்டன் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா!! இதோ அவரது வாழ்க்கை பயணத்தின் பதிவு...

1926 ஆம் ஆண்டு ஜூன் 26 ந்தேதி தென்னாப்பிரிக்காவின் ஹாக்-கேன் என்ற பகுதியில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார் ஹமில்டன் நாகி சிரமபட்டு தொடக்கப்பள்ளி கல்வியை முடிந்த ஹமில்டனை அதற்குமேல் அவரது குடும்பத்தால் படிக்க வைக்க முடியவில்லை. எனவே தனது 14 ஆவது வயதில் வேலை தேடி கேப்டான் நகருக்கு வந்தார். கேப்டான் பல்கலைக்கழகம் ஹமில்டனை தோட்ட ஊழியராக பணியில் சேர்த்துக்கொண்டது. அடுத்த பத்து ஆண்டுகள் அந்த பல்கலைகழகத்தின் தோட்ட வேலைகளையும் டென்னிஸ் மைதானத்தையும் பரமாரித்து வந்தார். துப்புறவு வேலை செய்தாலும் எப்போதுமே தூய்மையாக இருப்பார் ஹமில்டன்.



1954ல் தோட்ட வேலையையும் பார்த்துக்கொண்டு பல்கலைகழகத்தின் மருத்துவ ஆய்வு கூடத்தில் உதவுமாறு ஹமில்டனை கேட்டுக்கொண்டார் ராபர்ட் கோட்ஸ் என்ற மருத்துவதுறைத் தலைவர், ஹமில்டனும் அதற்கு இணங்கி அங்கு ஆய்வுக்காக வைக்கப்படிருந்த விலங்குகளை பராமரித்து வந்தார். ஒருமுறை ஓர் ஒட்டகசிவிங்கியை அறுத்து பரிசோதிக்கும்போது தனக்கு உதவுமாறு ஹமில்டனை கேட்டுக்கொண்டார் ராபர்ட் கோட்ஸ் அப்போது ஹமில்டனின் செய்ல்பாடுகளை கவணித்து வியந்த கோட்ஸ் தனது உதவியாளராக சேர்த்துக்கொண்டார். அந்த ஆய்வுகூடத்தில் எல்லாவிதமான விலங்கினங்களையும் அறுத்து மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

தொடக்கப்பள்ளியோடு கல்வியை முடித்துக்கொண்ட ஹமில்டன் அந்த பரிசோதனைக்கூடத்தில் கண்களால் பார்த்தே பலவற்றைக் கற்றுக்கொண்டார். விலங்கின் உறுப்புகளை லாவகமாக அறுத்து எடுப்பதில் ஹமில்டன் தனித்திறமை காட்டினார்.வெகுவிரைவில் மருத்துவதுறை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் அளவுக்கு ஹமில்டன் சிறந்து விளங்கினார்.அடுத்த நாற்பது ஆண்டுகளில் சுமார் 5000 மருத்துவ மாணவர்களுக்கு அவர் பயிற்சி அளித்தார். அவரிடம் பயிற்சி பெற்ற மாணவர்களில் பலர் பின்னாளில் மருத்துவதுறையில் சிறந்த நிபுனர்களாக உயர்ந்தனர் என்பது குறிப்பிடதக்கது.



ஆனால் அந்த நாற்பது ஆண்டுகளில் ஹமில்டனுக்கு ஒரு மருத்துவருக்கான ஊதியமோ, மரியாதையோ, கவுரமோ வழங்கப்படவில்லை. பல்கலைகழக பதிவேட்டில் ஹமில்டன் ஒரு துப்புறவு ஊழியர் என்றே குறிக்கப்பட்டிருந்தது. 1991 ஆம் ஆண்டு அவர் பணியிலிருந்து ஓய்வுபெற்றபோது அவருக்கு கிடைத்த மாதாந்திர ஓய்வூதியம் 760 ராண்ட் அதாவது 275 அமெரிக்க டாலர்தான். டிப்ளமோகூட படிக்காத ஒருவருக்கு அவ்வளவுதான் சம்பளம் கொடுக்க முடியும் என்றது பல்கலைக்கழக நிர்வாகம். பல அறுவை சிகிச்சை வல்லுநர்களை உருவாக்கிய ஹமில்டனால் தனது ஐந்து பிள்ளைகளை படிக்க வைக்க முடியவில்லை ஒரு பிள்ளையை மட்டும் உயர்நிலைப்பள்ளி கல்விவரை படிக்க வைத்தார். மிகவும் சிரமமான வாழ்க்கைக்கு பழக்கப்பட்டவர் ஹமில்டன்.

வரலாற்று சிறப்பு வாய்ந்த உலகின் முதல் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அன்றைய தினம்கூட டாக்டர் கிறிஸ்டியான் பெர்னாட் பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்துக் கொண்டிருக்க ஹமில்டன் அங்கிருந்து கிளம்பி தனது ஓரறை வீட்டிற்குதான் சென்றார். அந்த வீட்டில் அடிப்படை வசதியோ மின்சார வசதியோ கிடையாது. கிடைத்த சொற்ப சம்பளத்தில் பெரும்பகுதியை தனது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் அனுப்பிவிட்டு எந்த வசதியுமின்றி எளிமையாக வாழ்ந்தார் ஹமில்டன். கடவுள் பக்திகொண்ட அவர் பல்கலைகழகத்தில் இருந்த நாட்களில் மதிய உணவு நேரத்தில் பக்கத்திலிருந்த இடுகாட்டில் கூடும் வீடு அற்றவர்களுக்கு பைபிளை வாசித்துக்காட்டுவதிலும், மது மற்றும் போதைப் பொருட்களைப்பற்றி எச்சரிப்பதிலும் செலவிட்டார். 

ஓய்வுபெற்ற பிறகு சொற்ப சொத்தே இருந்தபோதும் ஹமில்டன் பழைய பஸ் ஒன்றை நடமாடும் மருந்தகமாக மாற்றி தான் பிறந்த ஊருக்கு மருத்துவ வசதியை ஏற்படுத்தித் தந்தார். இன ஒதுக்கல் கொள்கை முடிவுக்கு வந்த பிறகு டாக்டர் கிறிஸ்டியான் பெர்னாட் மூலம் ஹமில்டனின் மருத்துவ பங்களிப்பு உலகுக்கு தெரிய வந்தது. 2002 ஆம் ஆண்டு ஹமில்டனுக்கு National Orders. The Order of Mapungubwe எனப்படும் தென்னாப்பிரிக்காவின் ஆக உயரிய விருது வழங்கப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது கேப்டான் பல்கலைக்கழகம். வாழ்ந்த காலம் முழுவதும் அங்கீகாரம் பெறாத ஹமில்டன் சிறப்பான அந்த இரண்டு அங்கீகாரங்களைபெற்ற இரண்டு ஆண்டுகளில் அதாவது 2005 ஆம் ஆண்டு மே மாதம் 29ந்தேதி தனது 78 ஆவது வயதில் இயற்கை எய்தினார்.

இயற்கை ஹமில்டனுக்கு மிக உன்னதமான திறமையை கொடுத்திருந்தது. அந்த திறமையை மட்டும் விரும்பிய அந்த தேசத்தின் வெள்ளை இன சிறுபான்மையினர் அவரது தோலின் நிறத்தை வெறுத்தனர். கருப்பர் என்ற ஒரே காரணத்திற்காக ஹமில்டனுக்கு எல்லா உரிமைகளும் மறுக்கப்பட்டது. ஹமில்டன் நாகிக்கு வானம் என்ன வாழ்க்கைகூட வசப்படவில்லை என்பது உண்மைதான். ஆனாலும் அவர் போர்க்கொடி தூக்கவில்லை தனக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களுக்காக நீதிப்போராட்டம் நடத்தவில்லை தோலின் நிறத்தை அடையாளம் காட்டி உலகம் பாரபட்சம் காட்டினாலும் கடவுள் தனக்குத் தந்த திறமையை பாரபட்சமின்றி பிறர் நலனுக்காக பயன்படுத்திய ஒரு குணத்துக்காகவே ஹமில்டன் நாகி போற்றப்படவும் மதிக்கப்படவும் வேண்டியவர்.

ஹமில்டன் நாகியின் வாழ்க்கை வரலாறை படிக்கும்போது சமநீதியில் நம்பிக்கைகொண்ட எந்த வெள்ளை இனத்தவரும் கூனிக்குறுகி போகவும் அதன்மூலம் இதுபோன்ற அநியாங்கள் இனியும் தொடரக்கூடாது என எண்ணித்துணியவும் தயங்கமாட்டார்கள். இது ஒன்றே ஹமில்டன் நாகிக்கு வானம் வசப்பட்டதற்கு சமமாகும். கடவுள் தந்த திறமையை சுயநலமின்றி பிறர் நலனுக்காகப் பயன்படுத்தும் எவரும் வானத்தை வசப்படுத்தலாம் என்பதுதான், வாழும்போது மறக்கப்பட்ட ஆனால் மறைந்த பின்னும் நினைக்கப்படும் ஹமில்டன் நாகியின் வாழ்க்கை நமக்கு சொல்லும் உண்மையாகும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218350
  • Total likes: 23050
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கெளதம புத்தர் - வரலாற்று நாயகர்
 
செல்வ செழிப்பில் பிறந்து உலக பற்றை துறந்து போதி மரத்தடியில் ஞானம் பெற்று அன்பை போதிக்கும் உலகின் மாபெரும் சமயங்களில் ஒன்றான பெளத்த சமயத்தை நிறுவிய கெளதம புத்தரின் பிறந்த தினம்தான் விசாக தினம். இன்றைய நேபாள எல்லைக்குள் இருக்கும் லும்பினி  எனும் ஊரில் கி.மு 563 ஆம் ஆண்டு அதாவது சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தார் சித்தார்த்தர். அவர் பிறந்தது மே மாதத்தின் பெளர்னமி தினம். அவரது தந்தை கபிலவஸ்து என்ற நகரின் மன்னனாக இருந்தவர். சித்தார்த்தர் பிறந்த ஏழாவது நாளில் அவரது தாயார் மகாமயா இறந்து போனார். மகாமயாவின் சகோதரியான மகா கஜபதி சித்தார்த்தரை வளர்த்தெடுத்தார். 



தன் மகன் உலகை ஆளும் மன்னனாக வேண்டும் என்று விரும்பினார் தந்தை. ஆனால் ஒரு நோயாளி, ஒரு முதியவர், மரணமுற்றவர், ஒரு துறவி ஆகியோரை பார்க்க நேர்ந்தால் சித்தார்த்தர் துறவறம் பூண்டுவிடுவார் என்று அரச சோதிடர்கள் கணித்து சொல்லவே சித்தார்த்தரை அரண்மனையை விட்டு வெளியேறா வண்ணம் வளர்க்கத் தொடங்கினார் தந்தை. பல ஆண்டுகள் வெளி உலகம் தெரியாமல் எல்லா சுகபோகங்களையும் அனுபவித்து அரண்மனையிலேயே மகிழ்ச்சியாக வளர்ந்தார் சித்தார்த்தர். உலகத்தின் துன்பங்கள் அவர் கண்ணில் படாதவாறு அவர் பாதுகாத்து வளர்க்கப்பட்டார். 16 வயதிலேயே உறவுப் பெண்ணான யசோதாராவுடன் சித்தார்த்தருக்கு திருமணம் நடந்தது. இல்லற வாழ்விலும் மகிழ்ச்சியாக ஈடுபட்ட அவருக்கு ராகுலன் என்ற குழந்தையும் பிறந்தது.

அதன்பின்னர் கணிக்கப்பட்டது போலவே ஒரு முதியவர், ஒரு நோயாளி, மரணமுற்றவ்ர், ஒரு துறவி ஆகியோரை பார்க்கும் நிலை சித்தார்த்தருக்கு ஏற்பட்டது. அவற்றை கண்டு மனம் வேதனைப்பட்ட சித்தார்த்தர் உலகின் பிணிகளுக்கும், பிரச்சினைகளுக்கும் என்ன காரணம் என்று ஆழ்ந்து சித்திக்கத் தொடங்கினார். துறவறம் பூண்டு உண்மையை உணர விரும்பிய அவர் தனது 29 ஆவது வயதில் ஒருநாள் இரவில் மனைவியும் மகனும்  உறங்கிய பிறகு எவருக்கும் சொல்லாமல் அரண்மனையை விட்டு வெளியேறினார். காவி உடை அணிந்து காட்டில் அலைந்து திரிந்த அவர் சில முனிவர்களிடம் பாடம் கற்கச் சென்றார். தங்கள் உடலை வருத்தி கடுமையான தவம் புரிந்தால் மட்டுமே ஞானம் பெறலாம் என்று எல்லா முனிவர்களுமே கூறினர். அதனை கேட்டு பல ஆண்டுகள் தன் உடலை வருத்திக் கொண்டார் சித்தார்த்தர்.

உணவை படிப்படியாக குறைத்துக்கொண்டு கடைசியில் ஒரு நாளுக்கு ஒரு பருக்கை சோறு மட்டுமே உண்ணுமளவுக்கு வந்தார், உடல் எலும்பும் தோலுமானது. ஆனால் அதுபோன்ற கடுந்துறவால் உடல் சோர்ந்து மூளையும் சோர்வடைவதால் உண்மையை அறிய அதுவல்ல வழி என்று உணர்ந்தார். மீண்டும் உணவு உண்ணத் தொடங்கினார் அவர் வழக்கமாக உணவு உண்ணத் தொடங்கிதைப் பார்த்த அவரது ஐந்து சீடர்கள் அவர்மேல் நம்பிக்கை இழந்து அவரைவிட்டு விலகினர். ஆனால் தான் தேடிய உண்மைகளை கண்டறிய தனிமையில் கடும் சிந்தனையில் நீண்ட நேரங்களை செலவிடத் தொடங்கினார் சித்தார்த்தர்.



ஒருநாள் ஒரு பெரிய அத்தி மரத்தடியில் ஆழ்ந்த தியானத்தில் இருந்தபோது தான் தேடிய கேள்விகளுக்கு விடை கிடைத்து விட்டதாக உணர்ந்தார் சித்தார்த்தர். அவ்வாறு ஞானம் பெற்றபோது அவருக்கு வயது 35. அதற்கு பிறகுதான் அவர் 'புத்தர்' என்று அழைக்கப்பட்டார். அவர் ஞானம் பெற்ற இடம் பீஹாரில் போத்ஹையா என்று அழைக்கப்படுகிறது. அடுத்த 45 ஆண்டுகள் வட இந்தியா முழுவதும் பயணம் செய்து தான் உணர்ந்த உண்மைகளை போதித்தார் புத்தர். அவரது போதனைகளை நான்கு உயர் உண்மைகள் என்று அழைக்கின்றனர் பெளத்தர்கள்.
முதலாவது உண்மை மனித வாழ்க்கை இயல்பாகவே துன்பம் நிறைந்தது.
இரண்டாவது உண்மை அந்த துன்பத்திற்கு காரணம் தனனலமும், ஆசையும்.
மூன்றாவது உண்மை மனிதனால் தன்னலத்தையும் ஆசையையும் அடக்க முடியும்.
நான்காவது உண்மை மனிதன் தன்னலம், ஆசை ஆகியவற்றிலிருந்து தப்பிக்க எட்டு வகை பாதை உண்டு.
நேர்மையான கருத்து, நேர்மையான எண்ணம், நேர்மையான பேச்சு, நேர்மையான செயல், நேர்மையான வாழ்க்கை, நேர்மையான முயற்சி, நேர்மையான சித்தம், நேர்மையான தியானம் ஆகியவையே அந்த எட்டுப்பாதைகளாகும்.


புத்தர் தனது முதல் போதனையை வரனாசிக்கு அருகில் உள்ள சரனாத் என்ற பகுதியில் நிகழ்த்தினார். அவரது போதனைகள் அவர் வாழ்ந்த காலத்திலும் எழுதப்படவில்லை. அவர் மறைந்து பல நூற்றாண்டுகள் வரையும் எழுதப்படவில்லை. புத்த மதத்தில் சில கிளைகள் ஏற்பட்டதற்கு அது முக்கிய காரணம். தற்போது பெளத்த மதத்தில் இரண்டு முக்கிய பிரிவுகள் உண்டு ஒன்று தேரபதா பிரிவு அது தென்கிழக்கு ஆசியாவில் தழைத்தோங்கியது. மற்றொன்று மகாயானம் இந்த பிரிவு திபெத், சீனா, வடஆசியா ஆகியவற்றில் செழித்தோங்கியது.

ஆசையே துன்பத்திற்கு காரணம், அறியாமையும் சாதிப் பிரிவுகளுமே துன்பம் அனைத்திற்கும் காரணம் என்பதுதான் புத்தரின் அடிப்படை போதனை. பண்பால் ஒரு மனிதன் மதிப்பிடப்பட வேண்டுமே அன்றி பிறப்பால் அல்ல பிறக்கும் போதே எவரும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பிறப்பதில்லை அவனவன் செய்கையாலயே அது நிர்ணயிக்கப்பட வேண்டும் என புத்தர் வலியுறுத்தினார். கிட்டதட்ட 80 ஆண்டுகள் வாழ்ந்து பல அறிய போதனைகளை தந்த புத்தர் கி.மு 483 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேசத்தில் உள்ள குஸி நகர் என்ற இடத்தில் காலமானார்.

புத்தர் பிறந்தது, ஞானம் அடைந்தது, இவ்வுலக வாழ்வை நீத்தது அனைத்துமே ஒரே தினத்தில்தான். அதாவது மே மாதத்தின் பெளர்னமி தினத்தில்தான் என்று வரலாற்றுக்குறிப்புகள் கூறுகின்றன. அதனால்தான் விசாக தினத்தை பெளத்தர்கள் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

எல்லா மதங்களும், சமயங்களும் புத்தம் சொன்ன அன்பைதான் போதிக்கின்றன. அன்பு என்பதே தெய்வமானது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றன. இன்றைய அவசர உலகில் அன்பு செலுத்த மறவாதோருக்கும், அன்பை போற்றி வளர்ப்போருக்கும் வானம் வசப்படும் என்பதுதான் எல்லா மதங்களும் கூறும் அடிப்படை உண்மையாக இருக்கும்.எனவே நாமும் எல்லா உயிர்களிடமும் தொடர்ந்து அன்பு செலுத்துவோம் அதன்மூலம் நாம் விரும்பும் வானத்தையும் வசப்படுத்துவோம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218350
  • Total likes: 23050
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
நோபல் பரிசு உருவான கதை - ஆல்ஃப்ரெட் நோபல் (வரலாற்று நாயகர்)
 
ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு துறைக்கும் உயரிய விருது அல்லது அங்கீகாரம் என்று ஒன்று இருக்கும். தேசத்திற்கு தேசம் அது மாறுபடும். ஆனால் ஒட்டுமொத்த உலகுக்குமே ஓர் உயரிய விருது அல்லது அங்கீகாரம் பொருந்துமென்றால் அது நோபல் பரிசாகத்தான் இருக்க முடியும். நோபல் பரிசு ஒன்றுதான் தேச மொழி எல்லைகளை கடந்து ஆறு வெவ்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பினை செய்தவர்களை ஆண்டுதோறும் கவுரவுக்கிறது. நோபல் பரிசை மிஞ்சும் அளவுக்கு வேறு எந்த பரிசும் கிடையாது என்று சொல்லுமளவுக்கு கடந்த 100 ஆண்டுகளில் அது நிலைபெற்றிருக்கிறது.

இன்று பலரை ஆக்க வழியில் சிந்திக்க தூண்டும் அந்த நோபல் பரிசு உருவானதற்கு ஓர் அழிவுசக்தி காரணமாக இருந்தது என்பது உங்களுக்கு தெரியுமா? அழிவுசக்தியை உருவாக்கி அதனால் மனம் நொந்துபோன ஒரு விஞ்ஞானி தனக்கு ஏற்படப்போகும் களங்கத்தை துடைத்துக்கொள்ள உருவாக்கியதுதான் நோபல் பரிசு. அந்த அழிவுசக்தி டைனமைட் எனப்படும் வெடிமருந்து, அந்த விஞ்ஞானி ஆல்ஃப்ரெட் நோபல்.



1833 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ந்தேதி ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்கொமில் பிறந்தார் ஆல்ஃப்ரெட் நோபல், நோபலின் தந்தை மேனுவல் நோபல் ஒரு புகழ்பெற்ற பொறியாளராகவும் கண்டுபிடிப்பாளராகவும் இருந்தவர் கட்டடங்கள் பாலங்கள் கட்டுவதிலும் வெவ்வேறு வழிகளை கற்களை வெடித்து உடைப்பதிலும் அவர் வல்லவர். ஆனால் ஆல்பர்ட் நோபல் பிறந்த சமயம் தந்தையின் நிறுவனம் நொடித்துப்போனது. பின்னர் ரஷ்யாவுக்கு சென்று தொழில் செய்து பணம் சேர்த்தார் தந்தை, தனது குடும்பத்தையும் அங்கு அழைத்துக்கொண்டார். தனது நான்கு பிள்ளைகளுக்கும் சிறந்த கல்வி கிடைக்க வேண்டுமென்பதற்காக அவர்களுக்கு தனியாக பாடங்கள் சொல்லிக்கொடுக்க ஏற்பாடு செய்தார். 

ஆல்ஃப்ரெட் நோபலுக்கு 17 வயதானபோது ஸ்விடிஸ், ரஷ்யன், ப்ரெஞ்சு, ஜெர்மன் மற்றும் ஆங்கிலத்தில் எழுத படிக்க தெரியும். நோபலை வேதியல் பொறியாளராக ஆக்க வேண்டும் என விரும்பிய தந்தை அவரை மேல்படிப்புக்காக பாரிஸ்க்கு அனுப்பி வைத்தார் பாரிஸில் நோபலுடன் படித்த அஸ்ட்ரானியோ ஸ்ப்ராரோ என்ற இத்தாலியர் நைட்ரோ கிளிசரின் என்ற ரசாயனத்தை கண்டுபிடித்திருந்தார். அது வெடிக்கும் தன்மை கொண்டதாலும் ஆபத்தானது என்பதாலும் அதை அப்படியே விட்டுவிட்டார். ஆனால் நோபல் அதைப்பற்றி மேலும் ஆராய விரும்பினார். படிப்பு முடிந்து ரஷ்யா திரும்பியதும் தன் தந்தையுடன் இணைந்து எப்படி நைட்ரோ கிளிசரினை கட்டுமான துறைக்கு பயன்படுத்தலாம் என ஆராயத் தொடங்கினார்.



கிரைனியன் போர் காரணமாக அவர்களது தொழில் மீண்டும் நொடித்துப்போனது எனவே அவர்கள் மீண்டும் ஸ்விடனுக்கு திரும்பினர். ஸ்வீடன் வந்த பிறகு நைட்ரோ கிளிசரினை வெடி மருந்தாக உருவாக்குவதில் ஆராய்ட்சி செய்தார் நோபல் அது அபாயமான பொருள் என்று தெரிந்தும் அதனை பாதுகாப்பானதாக ஆக்கினால் நல்ல காரியங்களுக்காக பயன்படுத்த முடியும் என்று நம்பினார். ஆனால் அதற்கு அவர் செலுத்திய விலை அதிகமாக இருந்தது. அவரது சோதனைகளின் பொது சிலமுறை பயங்கர வெடிப்புகள் ஏற்பட்டு அவரது தொழிற்சாலைகள் தரைமட்டமாயின. பணியாளர்கள் சிலர் உயிரழந்தனர். அவர்களுள் ஒருவர் நோபலின் இளைய சகோதரர் இமில். உயிர் பலிக்கு பிறகும் ஆராட்சிகளை தொடர்ந்தார் நோபல். ஆனால் ஸ்வீடன் அரசாங்கம் அதற்கு தடை விதித்தது.

மனம் தளராத நோபல் நைட்ரோ கிளிசரினுடன் பல்வேறு பொருட்களை கலந்து சோதனை செய்து பார்த்தார். கிஸல்கள் என்ற ஒரு வகை களிமண்ணுடன் சேர்த்து பிசைந்தால் பாதுகாப்பான வெடிமருந்து கிடைக்கும் என்பதனை கண்டுபிடித்தார். அந்த தனது கண்டுபிடிப்புக்கு டைனமைட் என்று பெயரிட்டார்.டைனமைட் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 1866. கிரேக்க மொழியில் டைனமைட் என்றால் சக்தி என்று பொருள். அவரது அந்த கண்டுபிடிப்பு பல தொழில்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. உதாரணத்திற்கு காடு மேடுகளை அழிக்கவும், நிலத்தை சமப்படுத்தவும், மலைகளை குடைந்து பாதைகள் அமைக்கவும், பழைய கட்டடங்களை சில நிமிடங்கில் தகர்க்கவும் முடிந்தது.



ஆல்ப்ஸ் மலையை குடைந்து செயின்ட் கடாட் குகைப்பாதை அமைக்க நோபலின் டைனமைட்தான் பேருதவி புரிந்தது. அவரது கண்டுபிடிப்புக்கு அமோக வரவேற்பு கிடைத்ததால் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் அவர் 90 டைனமைட் தொழிற்சாலைகளை உருவாக்கினார் பெருமளவில் செல்வம் சேரத்தொடங்கியது. ஆனால் ஆக்கசக்தியாக தான் உருவாக்கியதை அழிவுசக்தியாக சிலர் பயன்படுத்தத் தொடங்கியதை கண்டு மனம் பதைத்தார் நோபல். 1888 ஆம் ஆண்டு நோபலின் சகோதரர் லுட்விக் காலமானார். ஆனால் நோபல்தான் இறந்துவிட்டார் என நினைத்த பத்திரிகைகள் அழிவுசக்தியை உருவாக்கி கோடிஸ்வரரான ஆல்ஃப்ரெட் நோபல் காலமானார் என்று செய்தி வெளியிட்டன. அதனை படித்து அதிர்ந்து போன நோபல் தனது உண்மையான மரணத்துக்குபின் உலகம் தன்னை பழிக்கப்போகிறது என்று கலங்கினார்.

அந்த களங்கத்தை அகற்ற ஒரே வழி தனது செல்வத்தை எல்லாம் உலக நன்மைக்காகவும் மனுகுல மேன்மைக்காகவும் பாடுபடுபவர்களுக்கு பரிசாக வழங்குவதுதான் என்று முடிவு செய்தார். உலகம் முழுவதிலும் இருந்த 90 க்கும் மேற்பட்ட டைனமைட் தொழிற்சாலைகளிலிருந்தும், ரஷ்யாவில் எண்ணெய் கிணறு அபிவிருத்தியிலிருந்தும் கிடைத்த பெரும் செல்வத்தைகொண்டு ஓர் அறக்கட்டளையை நிறுவினார். 1890 ஆம் ஆண்டு தான் எழுதிய உயிலில் 9 மில்லியன் டாலரை நோபல் அறக்கட்டளைக்கு எழுதி வைத்தார். அந்தத்தொகையிலிருந்து கிடைக்கும் வட்டியைக்கொண்டு ஆண்டுதோறும் 5 வெவ்வேறு மிகச்சிறந்த மனுகுல சேவை ஆற்றுவோருக்கு பரிசு வழங்க முடிவு செய்தார். இறுதிவரை திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்த ஆல்ஃப்ரெட் நோபல் 1896 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ந்தேதி தனது 63 ஆவது வயதில் இத்தாலியில் காலமானார்.



ஆல்ஃப்ரெட் நோபல் மறைந்த ஐந்து ஆண்டுகளுக்குப்பிறகு அதாவது 1901 ஆம் ஆண்டு முதல் அவர் விருப்பப்படியே நோபல் பரிசுகள் வழங்கப்பட தொடங்கின. ஐந்து துறைகளுக்கு கொடுக்கப்பட்டு வந்த நோபல் பரிசு 1969 ஆண்டிலிருந்து பொருளாதாரம் என்ற புதிய பிரிவையும் சேர்த்துக்கொண்டது. இன்றுவரை 770 பேர் நோபல் பரிசை வென்றிருக்கின்றனர். தன்னை அழிவுசக்தியை கண்டுபிடித்த நோபல் என்றில்லாமல் அறிவாளிகளை கவுரவிக்கும் நோபல் என்று உலகம் நினைவில் வைத்திருக்க வேண்டும் என விரும்பினார் ஆல்ஃப்ரெட் நோபல். அவரது எண்ணம் வீண்போகவில்லை



ஆண்டுதோறும் நோபல் பரிசின் பெயர் உச்சரிக்கப்படும் போதேல்லாம் அந்த உன்னத மனிதனைத்தான் உலகம் நினைவு கூறுகிறது.உண்மையில் அவர் அழிவுசக்தியை கண்டுபிடிக்கவில்லை.ஆக்கசக்தியாக நோபல் கண்டுபிடித்ததை உலகம்தான் அழிவுசக்திக்கு பயன்படுத்தியது இன்றும் பயன்படுத்துகிறது. இருப்பினும் டைனமைட்டை கண்டுபிடித்ததிலும் பின்னர் நோபல் பரிசை அறிமுகம் செய்ததிலும் ஆல்ஃப்ரெட் நோபலின் நோக்கமும் சிந்தனையும் உயரியதாக இருந்தன. அதனால்தான் இன்றும் அவரது பெயர் வானம் வரை உயர்ந்து நிற்கிறது. 

ஆல்ஃப்ரெட் நோபலுக்கு வசப்பட்ட வானம் நமக்கும் வசப்படும், நமது நோக்கமும் சிந்தனையும் உயரியதாக இருந்தால்..!!i

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218350
  • Total likes: 23050
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
அலெக்ஸாண்டர் ப்ளெமிங் - வரலாற்று நாயகர்
 
நாம் நோய்வாய்ப்பட்டால் உடனே மருத்துவரைப்பார்த்து ஆன்டிபயாடிக் எனப்படும் கிருமிக்கொல்லி மருந்தை உட்கொண்டு குணமடைகிறோம். ஆனால் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்புவரை ஆன்டிபயாடிக் மருந்துகள் இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா? முதலாம் உலகப்போரில் காயமடைந்த கிட்டதட்ட ஏழு மில்லியன் வீரர்கள் சரியான நோய்க்கொல்லி மருந்து இல்லாததால் மடிந்துபோனார்கள் என்பது வரலாற்று உண்மை. நாம் தெரிந்துகொள்ளவிருக்கும் மருத்துவமேதை கொஞ்சம் முன்னதாகவே பிறந்திருந்தால் அந்த எழு மில்லியன் வீரர்களின் உயிர்கள் காப்பாற்றப் பட்டிருக்ககூடும். அவர் வேறு யாருமல்ல பெனிசிலின் என்ற அற்புத மருந்தை உலகிற்கு தந்ததன் மூலம் மருத்துவ உலகின் தலையெழுத்தையே மாற்றி அமைத்த அலெக்ஸாண்டர் ப்ளெமிங்.



1881 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ந்தேதி ஸ்காட்லந்தில் லாக்ஃபில் எனும் நகரில் ஓர் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தார் அலெக்ஸாண்டர் ப்ளெமிங். அவர் விவசாயத்தில் ஈடுபடுவார் என குடும்பத்தினர் எதிர்பார்த்தனர். ஆனால் ப்ளெமிங் விவசாயத்திலும் ஈடுபடாமல் படிப்பையும் மேற்கொள்ளாமல் ஓர் நிறுவனத்தில் சுமார் 4 ஆண்டுகள் எழுத்தராக பணி புரிந்தார். தமது 20 ஆவது வயதில் அவருக்கு கொஞ்சம் பணம் சேர்ந்ததால் லண்டனில் செயின் மேரி மருத்துவ பள்ளியில் சேர்ந்து மருத்துவம் பயின்றார். 



டைபாய்டு காய்ச்சலுக்கு மருந்து கண்டுபிடித்த சர் ஆம்ராத் எட்வர்ட் ரைட் என்பவர்தான் ப்ளெமிங்கிற்கு பேராசிரியராக இருந்தார். 1906 ஆம் ஆண்டு மருத்துவத்தில் சிறப்பு தேர்ச்சிபெற்று அந்த பேராரசிரியரிடமே உதவியாளராக சேர்ந்தார் ப்ளெமிங். தனது பேராசிரியரைப்போலவே தானும் மனுகுலத்துக்கு உதவும் ஏதாவது ஒரு மருந்தை கண்டுபிடிக்க வேண்டும் என்ற கனவு அவரிடம் இருந்தது. பாக்டீரியா கிருமிகளைப்பற்றி ஆராயத்தொடங்கினார். முதல் உலகப்போரில் அவர் இராணுவ மருத்துவ குழுவில் ஒரு கேப்டனாக இருந்தபோது சரியான மருந்து இல்லாமல் மடிந்துபோன போர் வீரர்களின் நிலை அவரை சிந்திக்க வைத்தது.

அந்தக்கால கட்டத்தில் கார்பாலிக் அமிலந்தான் கிருமிக்கொல்லியாக பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் அந்த அமிலம் கிருமிகளை கொல்லும் அதே வேளையில் இரத்தத்தில் உள்ள வெள்ளை அனுக்களையும் சில சமயம் அழித்துவிடுகிறது. முதலாம் உலகப்போரில் சுமார் 7 மில்லியன் வீரர்கள் காயம்பட்டு இறந்தனர். அதன்பிறகுதான் கார்பாலிக் அமிலம் சரியான மருந்து அல்ல என்பதை ப்ளெமிங்கும் அவரது பேராசிரியரும் உலகுக்கு அறிவித்தனர். அதோடு நின்றுவிட்டால் போதுமா? சரியான மருந்தை கண்டுபிடிக்க வேண்டாமா? உலகபோர் முடிந்த கையோடு மீண்டும் தன் ஆராய்ட்சிக்கூடத்திற்கு திரும்பினார் ப்ளெமிங். கிருமிகளை கொல்லும் மருந்து வேண்டுமென்றால் முதலில் கிருமிகளின் தன்மைகளைபற்றி தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா?



எனவே தனக்கு கிருமி தொற்றக்கூடும் என்ற அச்சம் கொஞ்சம்கூட இல்லாமல் பலவகை கிருமிகளை வளர்த்து அவற்றின் மீது சோதனை செய்தார் ப்ளெமிங். 1928 ஆம் ஆண்டு லண்டனில் இலையுதிர் காலத்தில் அந்த சம்பவம் நிகழ்ந்தது. இரண்டுவாரம் விடுமுறைக்காக சென்றிருந்தார் ப்ளெமிங். விடுமுறைக்கு செல்லும் முன் அவர் ஓரு ஆய்வுக்கூட வட்டில் ஸ்டெபிலோ காக்கஸ் என்ற கிருமியை சேமித்து வைத்துவிட்டு சென்றார். அந்த கிருமிதான் நிம்மோனியா முதல் பல்வேறு நோய்களை ஏற்படுத்தும் கிருமி. இரண்டு வாரம் விடுமுறை கழித்து வந்து பார்த்தபோது அந்த வட்டில் பூசனம் பூத்திருப்பதை பார்த்தார். பூதக்கண்ணாடி வைத்து பார்த்தபோது அந்த பூசனம் படர்ந்திருந்த இடங்களில் கிருமிகள் கொல்லப்பட்டிருப்பதை அவர் கண்டறிந்தார். உடனே ஒரு முக்கியமான பொருளை கண்டுபிடித்துவிட்ட உணர்வு அவருக்கு ஏற்பட்டது.



அந்த பூசனம் பெனிசிலியம் என்ற ஒருவித காளான் என்பது அவருக்கு புரிந்தது. அந்தக் காளானைக் கொண்டு பல்வேறு ஆராய்ட்சிகள் செய்தார் அதன் விளைவாக நமக்கு கிடைத்த அருமருந்துதான் பெனிசிலின். மனுகுலத்துக்கு உயிர்காக்கும் மாமருந்தை தந்த ப்ளெமிங்கை உலகம் அப்போது பாராட்டவில்லை. இருப்பினும் பெனிசிலின் அருமை உலகம் முழுவதும் பரவியது. இரண்டாம் உலகப்போரின்போது அதிக அளவில் பெனிசிலின் உற்பத்தி செய்யப்பட்டு காயமடைந்த போர் வீரர்களுக்கு பயன்படுத்தப்பட்டது. அதன் பயனாக மில்லியன் கணக்கான உயிர்கள் காக்கப்பட்டன. நோய் தொற்று அபாயம் ஏற்படுமே என்று அதுவரை அறுவை சிகிச்சை செய்ய தயங்கிய மருத்துவ உலகம் பெனிசிலின் வரவுக்கு பிறகு தைரியமாக அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டது.



அதுவரை தீர்க்கப்படாத முடியாதவை என்று கருதப்பட்ட நோய்களுக்கு திடீரென்று சிகிச்சை அளிக்க முடியும் என்பதை உலகம் கண்டுகொண்டது. பெனிசிலினுக்குப் பிறகு எத்தனையோ வேறுவித ஆன்டிபயாடிக் மருந்துகள் உற்பத்தி செய்யப்பட்டன. ஆனால் அவை அனைத்துக்கும் அஸ்திவாரம் போட்டு தந்தது பெனிசிலின்தான். மனுகுலத்துக்கு பெனிசிலின் என்ற மாமருந்தை தந்த ப்ளெமிங் அதனால் எந்த பொருளியல் லாபமும் அடையவில்லை அந்த மருந்துக்கு காப்புரிமை பெறச்சொல்லி எத்தனையோ நண்பர்கள் வற்புறுத்தியும் அதை அவர் செய்யவில்லை செய்திருந்தால் அவர் கோடீஸ்வரராகியிருப்பார். இருந்தாலும் அந்த உயிர்காக்கும் கண்டுபிடிப்புக்காக 1945 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசை தந்து தனது நன்றியை தெரிவித்துக்கொண்டது உலகம்.



ஒரு மனிதனின் விடாமுயற்சியால் கடந்த ஒரு நூற்றாண்டில் மட்டும் எண்ணிலடங்கா உயிர்கள் காப்பாற்றப் பட்டிருக்கின்றன. இன்னும் எத்தனையோ உயிர்கள் காப்பாற்றப்படப் போகின்றன. உயிர் விலை மதிக்க முடியாதது என்றால் அந்த உயிரை காக்கும் எந்த கண்டுபிடிப்பும் அதைவிட விலை மதிக்க முடியாதது அல்லவா? அந்த விலைமதிக்க முடியாத மருந்தை உலகுக்கு தந்த ப்ளெமிங் 1955 ஆம் ஆண்டு மார்ச் 11 ந்தேதி லண்டனில் காலமானார். அடுத்தமுறை நீங்கள் ஆன்டிபயாடிக் மருந்தை உட்கொள்ளும்போது ப்ளெமிங்கிற்கு நன்றி சொல்லுங்கள். அவர் பொருள் சம்பாதிப்பதற்காக அந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தவில்லை.



உண்மையில் மனுகுலத்திற்கு பயனுள்ள ஒரு பொருளை தரவேண்டும் என்பதுதான் அவரது நோக்கமாக இருந்தது.நோக்கம் உயரியதாக இருந்ததால் ப்ளெமிங்கிற்கு பெனிசிலினும் அதனால் வானமும் வசப்பட்டது. உங்கள் வாழ்க்கையிலும் எண்ணமும் நோக்கம் உயரியதாக இருந்தால் வானம் வசப்படாமலா போகும்..!!