Author Topic: சுபகாரியம் நடைபெற உள்ள நாளில் மரணம் நிகழ்ந்தால்?  (Read 2617 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்

ஒரு வீட்டில் சுபநிகழ்ச்சி நடத்துவதற்கு தேதி குறித்த பின்னர், அதற்கு ஓரிரு நாள் முன்பாகவோ அல்லது குறிப்பிட்ட தினத்திலோ அந்த வீட்டில் அல்லது அந்தக் குடும்ப உறுப்பினர்களுக்கு நெருக்கமானவரின் மரணம் நிகழ்ந்தால் என்ன செய்யலாம்?


பதில்: இதைப் பொறுத்தவரை இறந்தவருக்கும், சம்பந்தப்பட்ட குடும்பத்திற்கும் என்ன பந்தம் (இரத்த பந்தமா அல்லது நெருங்கிய சொந்தமா) என்பதைப் பார்க்க வேண்டும்.

இரத்த பந்தம், உடன்பிறப்பு வழியில் உள்ளவர் இறந்துவிட்டால், அடுத்த 30 நாட்களுக்கு எந்த சுப காரியமும் செய்யக் கூடாது. ஆனால், இரத்த பந்தத்திலேயே 70 வயதைக் கடந்தவர் உயிரிழந்தால், குறைந்தபட்சம் 3 நாட்களுக்குப் பின்னரும், அதிகபட்சம் 10 நாட்களுக்குப் பின்னரும் சுபகாரியம் செய்யலாம். அதில் தவறில்லை.

அதேபோல் விபத்து உள்ளிட்ட துர்மரணங்கள் ஏற்பட்டாலும் 30 நாட்களுக்குப் பின்னரே சுபகாரியங்களை செய்ய வேண்டும்.

சுபகாரியத்திற்கு தடையாக மரணம் நிகழ்ந்து விட்டதாக கருதுவதை முதலில் நிறுத்த வேண்டும். இதற்குக் காரணம், உயிரிழந்தவரின் கிரக அமைப்பு அந்தச் சூழலில் சிறப்பாக இருந்திருக்காது. அதற்காக சுபகாரியத்தை நிறுத்துவது சரியல்ல. சுப நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்ட குடும்பத்தில், ஒன்றுக்கும் மேற்பட்டவருக்கு ஏழரைச் சனி நடந்தாலும் இதுபோன்ற அசம்பாவித சம்பங்கள் நிகழும்.

ஒரு சில ஜாதகருக்கு அசுபம் நடந்த பின்னரே சுப நிகழ்ச்சி நடக்கும். சில வீடுகளில் சுப நிகழ்ச்சி நடந்த ஓரிரு நாளில் அசுப நிகழ்வு ஏற்படும். இதற்கும் கிரக அமைப்புகளே காரணம். உதாரணமாக ஒருவர் ஜாதகத்தில் சனியும், குருவும் ஒன்றாக இருந்தால் அவருக்கு சுபமும், அசுபமும் அடுத்தடுத்து நடக்கும் என்பது விதி. எனவே, அவற்றை தடங்கலாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

சுபகாரியத்திற்கு முன்பாக அசுபம் நிகழும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் புண்ணிய நதிகளில் நீராடி உரிய பரிகாரங்களைச் செய்துவிட்டு, அதன் பின்னர் சுபகாரியத்தை மேற்கொள்வதில் எந்தத் தீங்கும் ஏற்படாது.

எனக்கு தெரிந்தவரது மகனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நாளை காலை திருமணம் என்ற தருணத்தில் குடும்பத் தலைவர் அன்றிரவு இறந்து விட்டார். ஆனால் அவர் மருத்துவமனையில் இருப்பதாகக் கூறி அந்தத் திருமணத்தை மாப்பிள்ளை வீட்டார் நடத்தி முடித்தனர். இது சரியா?

பதில்: மாப்பிள்ளையின் தந்தை இறந்து விட்டதாக கூறியுள்ளீர்கள் அவருக்கு குறைந்தது 60 வயதிருக்கும். இயற்கை மரணமாக இருக்கும்பட்சத்தில் இதனை ஆசீர்வாதமாகவே எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர தடங்கலாகக் கருதக் கூடாது.

இதுபோன்ற நேரத்தில் சுபநிகழ்ச்சியை நடத்தி முடித்து விட்டு, அன்றைய தினம் மாலை அல்லது அதற்கு மறுநாள் இறந்தவருக்கான சடங்குகளை நடத்துவதில் தவறில்லை. குறிப்பாக சுப நிகழ்ச்சி நடப்பதற்கு முன்பே குடும்பத் தலைவர் இறந்தது தெரியவந்தால், அவரது குடும்பத்தினர் தலை முழுகுதல் உள்ளிட்ட சடங்குகளை முடித்துவிட்டு சுபகாரியத்தை செய்ய வேண்டும்.

உயிரிழந்தவரின் உடல் சுபகாரியம் நடைபெறும் இடத்தில் இருந்து குறைந்தது ஒரு கி.மீ தூரத்தில் இருப்பது நல்லது.

மேலும், ஒரு சில பிரிவில் குடும்பத் தலைவர் அல்லது தலைவி இறந்து விட்டால், ஓராண்டிற்குள் வாரிசுக்கு திருமணம் நடத்திவிட வேண்டும் என்று முடிவுடன் இருப்பார்கள். அப்போதுதான் இறந்தவர்களின் ஆசி அந்தத் தம்பதிகளுக்கு கிடைக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.