FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on July 08, 2018, 06:11:07 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 192
Post by: Forum on July 08, 2018, 06:11:07 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 192
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team  சார்பாக     வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(http://friendstamilchat.org/newfiles/OVIYAM UYIRAAGIRATHU/192.png)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 192
Post by: JeGaTisH on July 09, 2018, 12:28:26 AM
அமைதியான உலகம் இன்று ஆயுதங்களுடன் போராடுகிறது
மனிதனுக்கு மனிதன் விரோதமாய்விட்டான்.

இயற்கை எப்போதும் அழிவை விரும்புவதில்லை
ஆனால் ஒரு இடத்திற்காக  நாடுகளுக்குள்  சண்டை.

எந்த நாடு பலசாலி என்பதை நிலைனாட்டுவதற்குள்
பாவப்  பட்ட மக்களின் சடலமே மிகிதம்.

பிறந்தவர் ஒருநாள் இறக்க வேண்டும்  என்பது  விதி
எதுவும் செய்யாமல் பிறரை அடக்கி ஆழ  நினைப்பது சதி.

வானத்தில் வட்டமிட்ட பறவைகளுக்கு  பதில்
பெரிய பெரிய விமானங்கள் குண்டு போட்டபடி

திருவிளாவில்  பொம்மை துப்பாக்கி தூக்கிய கைகள்
தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கிறது  தன்னை காப்பாற்றிக்கொள்ள.

சிறுவன் அம்மாவைத்  தேடி ஓடுகிறான்
சீறிய தீ பிழம்பு  வானத்தில்  இருந்து வீழ்கிறது
அச் சிறுவனின் உடலை பதம் பார்த்துவிட்டது
அம்மா ...என  அவன் அழும்  அழுகை மட்டுமே கேட்கிறது

அம்மாவுக்கு  பிடித்தது குழந்தையின் மழலை அழுகை
அது பூமிக்கும் பிடித்திருகிறதோ என்னவோ ???

மனிதனே வாழ்கையை நேசி
வாழ்பவர்களை நேசி
ஒருவர் இறக்க நீ காரணமாகாதே
இனொருவர் வாழ நீ காரணமாய் இரு!




      அன்புடன் உங்கள் தம்பி ஜெகதீஸ்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 192
Post by: thamilan on July 09, 2018, 12:31:11 PM
அழகான உலகத்தைப் படைத்திட்ட இறைவன்
அதை அழகுபடுத்திட
இயற்கையை அள்ளித் தெளித்திட்டான்
அதில் ஆனந்தமாய் உலாவர
மிருகங்களையும் பறவைகளையும் படைத்தான்
இப்படி உலகை உருவாக்கிய இறைவன்
செய்த தவறு
மனித இனத்தைப் படைத்தது தான்
அந்த மனிதஇனத்துக்கு
அறிவையும் ஆற்றலையும் கொடுத்தது தான்

தான் படைத்த உலகை
தானே அழித்திட
படைத்த இனமே மனித இனம்

அறிவு முதிர்ந்து
ஆற்றல் பெருகி
தோள்களில் திணவெடுக்க
ஆசைகள் பேராசைகளாக மாற
மனிதனுக்குள் பலப்பல வெறிகள்
பணவெறி மதவெறி மனிதவெறி என
பலப்பல வெறிகள்

இந்த வெறிகளால்
பலப்பல யுத்தங்கள்
மண்ணுக்காக மதங்களுக்காக மண்ணெண்ணெய்க்காக
பலப்பல யுத்தங்கள்
அன்பையும் சகோதரத்தையும் சாந்தியையும்
போதித்த மதங்களின் பெயரால்
பலப்பல யுத்தங்கள்

விளைவு
நாடுகள் சுடுகாடாயின
சமாதானத்தை போதித்த புத்தனும்
அன்பை போதித்த கிறிஸ்துவும்
சகோதரத்தை போதித்த அல்லாஹ்வும்
மோதிக்கொண்டார்கள்
அழியத்தொடங்கியது மனித இனம்

மனிதனின்வெறிக்குப்  பலியாக
இயற்கை அழிந்தது
வெண்ணிற ஆறுகள் செந்நிறமாய் மாறின
சமாதான வெண்புறாவின்  இறக்கைகளில்
குண்டடிபட்டு செம்புராவாக மண்ணில் வீழ்ந்தது

மனிதனின் யுத்தவெறியால்
மனிதவளங்கள் அழிந்தன
மலர்த்தோட்டங்கள் அழிந்து
கல்லறை மலர்கள் மறந்தன
ஆனந்தக் குயிலோசை மறைந்து
கோட்டான்கள் அலறத் தொடங்கின

உலகை வளப்படுத்த நவீன உத்திகளை
கண்டு பிடித்த அதே மனிதன்
உலகை வசப்படுத்தவும்
நவீன ஆயுதங்களையும்  கண்டுபிடித்தான் - விளைவு
விளைநிலங்கள்  மண்மேடாயின
நாடுகள் சுடுகாடாகின
பஞ்சம் பசி நோய்கள்
மனித இனத்தை அழிக்கத் தொடங்கின
குடும்பத்தை இழந்த குழந்தைகள்
குழந்தைகளை இழந்த பெற்றோர்கள்
கை இழந்து கால் இழந்து கண்ணிழந்து
வாழ்வைத் தொலைத்திட்ட
அப்பாவி மனித இனம்

யாருக்காக எததற்காக
இந்த யுத்தங்கள்
ஒருசில அதிகார வெறிபிடித்த
அகங்கார மனம் படைத்த
பேராசை குணம் படைத்த தலைவர்களால்
அழகான அமைதியான இந்த உலகம்
அழிகின்றதே
இன்னும் எத்தனை
ஏசுவும் புத்தனும்  பிறந்தாலும்
அகங்காரம் ஆணவம் கொண்ட
மனிதஇனம்  இருக்கும்வரை 
உலகத்தை அழிவில் இருந்து காப்பாற்ற
இறைவனால் முடியாது
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 192
Post by: AshiNi on July 09, 2018, 12:40:26 PM
பச்சைப்பசேலென்ற பூமித்தளம்,
  இன்று இரத்தம் காணும் யுத்தக்களம்!
மாந்தர் உல்லாசமாய் உலவிய ஊர்,
  இன்று நித்தம் காண்கிறது கொடிய போர்!

நீர்கொண்ட அழகு கேணிகள்,
  குருதி கலந்து செந்நிறமாகின...
பொழியும் பனிமழைத் தூரல்கள்,
  அப்பாவிகளின் கண்ணீர்த் துளிகளாகின...

உயிர்களை மாய்க்க வெடிகுண்டுகள்...
  வீதிகள் எங்கிலும் உடற்துண்டுகள்...
ஒவ்வொரு நிமிடமும் செத்துப் பிழைக்கும் ஜனங்கள்...
  செல்களுக்கு இரையாகின பாவப்பட்டப் பிணங்கள்...

தினம் தினம் மயான வாசங்கள்...
  வாழ்வுக்கும் சாவுக்குமிடையை சுவாசங்கள்...
சிரிப்பொலிகள் எல்லாம் கதறல்கள்...
  கனவுகள் எல்லாம் இன்று சிதறல்கள்...

பகல் இரவு பாராது உயிர் காக்க
  பாடுபடும் இராணுவம் ஒருபுறம்!
அவர் முயற்சிகள் கடந்தும்
  உயிர்விடும் ஜீவன்கள் மறுபுறம்!

நெஞ்சை ஆழமாய் நெய்யும்
  கோர யுத்தங்கள் போதுமே...!
அரசியல் மனம் வைத்தால்
  முடிவுறும் யாவுமே...!

யுத்த விமானங்கள் பறக்கும் விசும்பில்
  சமாதான புறாக்கள் பறக்க வேண்டும்...
பகைமை கொண்ட உள்ளங்களில்
  கருணைப் புன்னகை தவழ வேண்டும்...

உயிர்களின் மதிப்பை
  ஆட்சிகள் உணர்ந்தால் போதும்...
யுத்தமே இல்லா அமைதி பீடமாய்
  நாளைய வையகம் மாறும்...!!!!!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 192
Post by: joker on July 10, 2018, 09:43:12 PM
இதோ கொடிய இரவின் மடியில்
எரிந்து கொண்டிருக்கிறது
என் உடன்பிறவா சகோதர சகோதரிகளின்
உடல்

ஆணவத்தில் ஆடும் ஒரு சில
அதிகாரவர்க்கத்தின் அட்டூழியம்
அடக்கத்தான் யாருமில்லை

பூக்கள் சூழ்ந்து மணம் வீசிக்கொண்டிருந்த
எங்கள் தோட்டம் இன்று பிணவாடையில்
குளித்துக்கொண்டிருக்கிறது

பல நாள் ஊண் உறக்கமின்றி
எங்கள் மண் மேலே,
சிறுக சிறுக சேமித்து ஆசையாய்
என் தந்தை எங்களுக்காய்
கட்டிய வீட்டினுள் வசிக்க முடியாமல்
மண் தோண்டி மண்ணுக்கடியில்
வாழ்ந்துகொண்டிருக்கிறோம்

இங்கு
குழந்தைகளுக்கு விளையாட
எரியாமல் போன உறவுகளின்
கை கால்கள் மட்டும் மிச்சம்

இது விஞ்ஞானத்தின் வளர்ச்சியா ?
மானங்கெட்ட சில மனிதர்களின்
சூழ்ச்சியா ?

இயற்கையை அழித்து
விவசாயத்தை அழித்து
மனிதர்களை அழித்து
பிணத்தையா தின்ன போகிறீர்கள் ?!

பச்சிளம் குழந்தையும்
போர் என கொள்ளும்
மிருகங்களே !?

என் உறவுகளில்
குண்டுகள் பாய்ந்தபோதும்
உன் குருதியின் வண்ணம்தனை
காணவில்லையோ ?

எப்பொழுதேனும் பறக்கும்
விமானத்தை அதிசயமாய்
அண்ணாந்து பார்த்த காலம்போய்

இன்று
அனுதினமும் வீட்டின்மேல்
பறக்கும் போர்விமானத்தை
அச்சத்துடன் பார்க்கிறோம்
என்று எங்கள் மேல் குண்டுகளை
பாய்ச்சுமோ என..

குமுறல்களை முறையிட
கோவிலுக்கு சென்றால்
சிலையை காணவில்லை
தேவாலயத்தில் இருந்தவரையும் 
சிலுவையில் அறைந்துவிட்டார்கள்
பள்ளிவாசலும் திறக்கப்படாமல் இருக்க
எங்குதான் செல்ல...

காண்போரிடம் எல்லாம்
பகிர்ந்து கொள்ள ரணங்கள்
மட்டும்நிரம்பிய  எங்கள் உள்ளம்

என் தாய்நாடு உயிரினும் பெரிதென்று
வேறெங்கும் ஓடாமல்
தாய்மண்ணின் ம(அ)டியில்
மரணம் தழுவும் வரை வாழுவோம்

உன் குருதி தாகம் தீருமாயின்
கொஞ்சம் எங்களையும்
வாழவிடு ...


****ஜோக்கர் ****
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 192
Post by: பொய்கை on July 11, 2018, 01:20:06 PM
கார்மேகம் சூழ்ந்த வானில்
போர்மேகம் காணுதல் நலமா ?
கார்மேகம் பொழிந்த நிலத்தில் - நீ
காலணியாய் மாறிடல் தகுமா?

பாரதப்போரில் ஜொலிக்கும் வஸ்திரம்
விட்டது எல்லாம் பிரம்ம அஸ்திரம்
பாரினை அழிக்க பலப்பல அஸ்திரம்
போரினை விதைக்கும் அறிவியல் விசித்திரம்

அணுவின் ஆற்றல்முன் நாம் எம்மாத்திரம்
போரால் அழியுமே எம்  மானுடசமுத்திரம்
கண்ணை மூடி திறக்கும்  மாத்திரம்
கண் முன்னே  ஒரு குருசோத்திரம்

மனிதனின்  கைகளில் துப்பாக்கி எந்திரம்
வியப்பில் ஆழ்த்துது இன்றைய  சித்திரம்
ஆளுமை கொண்ட அரசுகள் ஆத்திரம்
வீழுமே மண்ணில் போரால் சீக்கிரம்

மனிதம் மாய்ந்திடநேயமில்லா தந்திரம்
மானுடம் பிழைக்க ஏதுமில்லை மந்திரம்
போர்களை திணிக்கும் பேர்களை கொன்றிடு
இறுதி வரை நீயும்  இன்பமாய் வாழ்ந்திடு!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 192
Post by: SweeTie on July 11, 2018, 04:50:16 PM
டுமீல்....டுமீல்.....டுமீல்.....
சிங்கள அராஜகத்தின்  போர்விமானங்கள் 
சரமாரியாக பொழிகின்றன குண்டுகள்
ஐயோ..... அம்மா ....  ...என்று திக்கெட்டும் மரண ஓலம்
நாற்திசையும்  குருதிப்பெருக்கில் மிதக்கும்  சடலங்கள்
திக்கு தெரியாத நடுக்காட்டில் தத்தளிக்கும் மக்கள்.

பட்டினியால் வாடும் பிஞ்சுகளின் கதறல்
விழுந்து  எழுந்து   தடுமாறி ஓடும் முதியவர்கள்
பாட்டாளி மக்கள் உடமைகளை  பறிகொடுத்து
உடுக்க உடையின்றி  உண்ண  உணவின்றி குடிக்க நீரின்றி
காடுகளும் மணற்குழிகளுமே தஞ்சமென புகலிடமா ய் 
விஷ ஜெந்துக்களுடன் வாழ்ந்த நாட்களை  மறக்க முடியுமா??
அனுபவித்த சித்ரவதைகளை மறக்கத்தான் முடியுமா??

இரும்பு தொப்பியுடன்  இரவு பகல் ராணுவ  நடமாட்டம்
செத்தவனை தூக்கி செல்ல நாதியில்லை  நாட்டினிலே
சுற்றி எங்கும் பிணவாடையுடன்    விடியாத பொழுதுகள்
பிணம் தின்னும் கழுகுகளும்   பிரம்ம  ராட்சதரும் 
கணப்பொழுதும்  அங்கு விட்டு அசையவில்லை   
கத்தும் உயிரினங்கள்   கதறியதும்  கேக்கவில்லை
தலைமறைவில்  கழித்த நாட்கள்  நெஞ்சைவிட்டு போகவில்லை

வல்லரசு நாடுகளின்  மாண்புமிகு  போட்டிகளில்
நுண்ணறிவியல்  நுட்பத்தின்  கருவிகளை  பரீட்சிக்க 
போர்க்களத்தில் பகடைக்காய்களாகும்   சில்லறை நாடுகள்
எலும்புக்காக ஏங்கி  வாலாட்டும்   தெரு நாய்கள்;
இருந்தென்ன??  மடிந்தென்ன??  இது அவர்கள் அகராதி
எறும்புகள்  போல்  தினமும்   இறந்து மடியும் மனித உயிர்கள்
மாறாது  என்றும் இந்த நிலை மனிதன் உலகில் வாழும் வரை 

 புத்தனும்  யேசுவும்   உயிர்கள்  சமன் என்றார்
உயிர்களைக்  கொல்லுதல்  பாவம் என்றார் நபி அவர்கள்
மதம் கொண்ட மனிதரோ மதங்களை மறந்துவிட்டார்
சீர்கெட்ட சமுதாயம்  சீரழிந்து போகிறது
செல்வந்த நாடுகளோ  வேடிக்கை பார்க்கிறது
மார்தட்டி நின்றோம்  நம் மண்ணில் அன்றொரு நாள்
போர்செய்த  கோலம் இன்று  புலம்பெயர்ந்து வாழுகிறோம்.




 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 192
Post by: சாக்ரடீஸ் on July 12, 2018, 03:31:19 PM


போர்க்களம் போர்க்களம்
எங்கும் போர்க்களம்
போராட்டத்தை
போர்க்களமாக மாற்றிய
சதிகாரர்களுக்கு எச்சரிக்கையே
இந்த கிறுக்கல்

சதிகாரர்களே
நீங்கள் கொன்றது
எங்களின் உடல் மட்டுமே
எங்கள் உணர்வுகளை அல்ல

சதிகாரர்களே
நீங்கள் பறித்தது
எங்களின் சுவாசமே
எங்களின் உரிமையின் உயிர்மூச்சை அல்ல

சதிகாரர்களே
உங்களின் தோட்டா
எங்களின் உடலில் மட்டுமே நுழைந்தது
எங்களின்  கொள்கைகளில் அல்ல

சதிகாரர்களே
பெண்களின்
கதறல்களில் இனிமை கண்ட
நீங்கள்
எங்கள் குழந்தைகளின்
கர்ச்சனைக்கு பதில்  சொல்லும்
காலம் வெகுதூரம் இல்லை

உரிமை என்னும்
வேரை சாய்க்கமுடியாமல்
உயிர்களை கொன்று
குவித்த சதிகாரனே
எச்சரிக்கிறேன்
எங்கள் உடலை நிலத்திற்கு உரமாக்கி
எங்கள் ரத்தத்தை பயிருக்கு நீராய்  மாற்றி
வீறுகொண்டு  எழுந்து
உங்கள் சதிகளை முறியடித்து
உரிமையை மீட்டெடுப்போம்

நிலம் எங்கள் உரிமை !!!