Author Topic: ஏழுமலையான்  (Read 4335 times)

Offline Anu

ஏழுமலையான்
« on: March 13, 2012, 11:26:52 AM »
ஏழுமலையான் பகுதி-1

பாரதத்தில் நைமிசாரண்யம் என்ற காடு இருக்கிறது. நமது தேசத்தின் கிழக்குப்பகுதியில் கோல்கட்டாவுக்கும், டேராடூனுக்கும் இடையில் உள்ளது இந்தக் காடு. தற்காலத்தில் பெருமாளின் 108 திவ்யதேசங்களுக்கு சென்று வருகின்றனர். அந்த தேசங்களில் இதுவும் ஒன்று. இந்த காட்டையே பெருமாளாக  கருதி வழிபடுகிறார்கள். திருமங்கையாழ்வார் இங்கே சென்றிருக்கிறார். இவ்வூர் பற்றி பாசுரம் பாடியுள்ளார். தற்போது இங்கே பெருமாளுக்கு கோயில் இருக்கிறது.இந்த வனத்துக்கு புராணங்களில் மிகுந்த முக்கியத்துவம் உண்டு. எவ்வித இடைஞ்சலும் இன்றி தவம் செய்ய சிறந்த இடம் எது என்று திருமாலிடம் முனிவர்கள் கேட்டனர். பெருமாள் தனது சக்கரத்தை உருட்டி விட்டு, இது எங்கே போய் நிற்கிறதோ அந்த இடமே சிறந்த இடம் என்றார். சக்கரத்துக்கு நேமி என்ற பெயர். ஆரண்யம் என்றால் காடு. அந்தச்சக்கரம் உருண்டு சென்று விழுந்த இடம் நேமிஆரண்யம் என்றானது. பின்னர் இதுவே நைமிசாரண்யம் ஆகி விட்டது.இந்தக் காட்டில் சூதர் என்ற முனிவர் வசித்தார். இவரே புராணங் களுக்கு மூலகர்த்தா. வியாசர் எழுதிய பதினெட்டு புராணங்களையும் மற்ற முனிவர்களுக்கு உபதேசித்தவர் இவர். இதுதவிர, எல்லா தெய்வங்களின் வரலாற்றையும் சொல்லியிருக்கிறார்.ஒருமுறை, நைமிசாரண்யத்து முனிவர்கள் சூதமுனிவரை அணுகி, சுவாமி! தாங்கள் எங்களுக்கு, வேங்கடம் என்னும் மலையில் குடிகொண்டுள்ள சீனிவாசனின் வரலாறை உரைக்க வேண்டும், என்றனர்.சூதருக்கு மிகுந்த மகிழ்ச்சி.சீனிவாசனின் கதையைக் கேட்டால் சகல பாவங்களும் நீங்கி விடும். நீங்கள் சரியானதொரு சந்தர்ப்பத்தை எனக்கும் தந்ததுடன், உங்களுக்கும் முக்தி கிடைக்கும். பக்தியுடனும், கவனமாகவும் யார் இதைக் கேட்கிறார் களோ, அவர்களுக்கு மறுபிறப்பில்லை. நீங்கள் முற்றும் துறந்த முனிவர்கள். உலகவாழ்வு பற்றிய கவலையில்லாதவர்கள். எனவே, உங்கள் கவனம் சிதற வாய்ப்பில்லை. இல்லறத்தில் இருப்பவர்களும் கூட, இந்தக் கதையைக் கவனமாக கேட்டால் போதும். அவர்களுக்கு செல்வவளம் சித்திக்கும், வாழ்வுக்குப் பின் ஆனந்தமயமான வைகுண்டத்துக்கும் செல்லும் பாக்கியம் பெறுவார்கள், என்று சொல்லி கதை சொல்ல ஆரம்பித்தார்.

இந்த உலகிற்கு சீனிவாசன் வருவதற்கு காரணமே நாரத முனிவர் தான். இவர் ஓரிடத்தில் இருக்கமாட்டார். நாரம் என்றால் தண்ணீர். ஆம்... பசியாலும், களைப்பாலும் மயக்கமடையும் ஒருவனுக்கு கொஞ்சம் தண்ணீர் கொடுத்தால் போதும். போகும் உயிர் திரும்பிவிடும். நாரதரும் அப்படியே. கலகங்கள் செய்தாவது உயிர்களுக்கு நன்மை தந்து விடுபவர். அதனால் தான் தண்ணீர் போல் உயிரூட்டுபவர் என்ற பெயரில் அவரது திருநாமம் அமைந்தது. தேவர்களின் நல்வாழ்வுக்காக, அசுரர்களிடையே கலகத்தை உருவாக்கி அல்லது அவர்களை இக்கட்டில் சிக்க வைக்கும் உபாயங்களை சமயோசிதமாகச் செய்யும் தைரியசாலியும் கூட. பிரம்மனின் புத்திரர் இவர். எந்நேரமும் நாராயண மந்திரத்தைச் சொல்பவர்.அவர் ஒருநாள் தன் தந்தையைக் காண பிரம்மலோகம் வந்தார். அப்போது, இந்திரனின் தலைமையில் தேவர்களும் தங்கள் குறைகளைச் சொல்ல அங்கு வந்திருந்தனர். ஆனால், சரஸ்வதியின் வீணாகானம் கேட்ட அவர்கள் மெய்மறந்து நின்றனர்.நாரதர் பிரம்மாவிடம், தந்தையே! திருமால் கிருஷ்ணாவதாரம் எடுத்த பிறகு பூமியில் மீண்டும் பிறக்கவில்லை. இதனால் பாவிகள் உலகத்தில் அதிகரித்து விட்டனர். இதற்கு மூல காரணம் செல்வம் சேர்க்கும் ஆசை. செல்வ ஆசை மண்ணாசையையும், பெண்ணாசையையும் தூண்டுகிறது. உலக மக்களில் நல்லவர்களைக் காப்பாற்றவும், பாவிகளைச் சீர்திருத்தவும் மீண்டும் அவர் அவதாரம் எடுத்தால் தான் பூலோகம் பிழைக்கும். எனவே, திருமாலை இவ்வுலகில் பிறக்கச் செய்வதற்குரிய கோரிக்கையை தாங்கள் தான் அவரிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். படைத்தவருக்கு, உயிர்களைப் பாதுகாப்பதிலும் பொறுப்பு இருக்கிறதல்லவா? என்றார். பிரம்மா நாரதரிடம், மகனே! நீ கலகக்காரன் என்பது ஊரறிந்த உண்மை. இன்று தந்தையிடமே கலகம் செய்ய வந்திருக்கிறாய் போலும்! நீ சகல லோகங்களிலும் சஞ்சரிப்பவன். சகல சக்திகளையும் தவத்தின் மூலம் பெற்றுள்ளாய். நீ நினைத்தாலே சகலமும் நடந்து முடிந்து விடும். நாராயணனின் திருப்பாற்கடல் முன்னால் நாங்கள் செல்ல முடியாது.

ஜெய, விஜயர்கள் தடுத்து விடுவார்கள். பகவானின் அனுமதி பெற்று கரையில் நின்றே அவரைத் தரிசிக்க முடியும். நீ அப்படியா? அவரது திருவடி தரிசனத்தை கடலில் நின்றே காண்பவன் நீ.மேலும், உன் வாயில் நாராயண நாமம் ஒலித்துக் கொண்டே இருக்கும். சக்திமிக்க உன்னாலேயே அது முடியுமே! நீயே போய் நாராயணனைப் பார், என்றார்.ஒருவரிடம் ஒரு விஷயத்தைச் சொல்லும் முன்பு, பிறர் சொன்னதை வைத்து சொல்லக்கூடாது. அதில் முன்பின்னாக விஷயங்கள் இருக்கும். நேரில் போய் பார்த்து கேட்டறிந்தால் சரியான தகவல்களைப் பெறலாம். நாராயணனிடம் புகார் சொல்லும் முன்பு, பூலோகத்தின் நிலைமையை நேரில் கண்டறியவும், நாராயணன் அங்கு பிறப்பதற்கு ஏற்ற இடத்தையும், அவரைப் பிறக்கப்போவதை முன்கூட்டியே முனிவர்களுக்கு அறிவிக்கவும் நாரதர் பூலோகம் வந்து சேர்ந்தார்.எத்தனையோ லோகங்கள் இருப்பதாக புராணங்களில் சொல்லப்பட்டாலும், இந்த உலகத்தின் பெயரில் தான் பூ இருக்கிறது. பூ மணக்கும் தன்மையும், வாடும் தன்மையும் உடையது. மலர்ந்த பூவைக் காணும் போது,  மனம் மகிழ்கிறது. இதுபோல், நல்லவர்கள் பலர் தங்கள் செயல்பாடுகளால் இவ்வுலகை மகிழச் செய்கிறார்கள். ஆனால், இதே உலகில் பிறந்த வேறுசிலரோ, தங்கள் செயல்பாடுகளால் உலகை வாடச் செய்கிறார்கள். கெட்டவர்கள் செய்யும் கைங் கர்யத்தால் உலகமே வாடத்தானே செய்கிறது! இதனால், இந்த உலகை பூலோகம் என்றார்கள்.இத்தகைய அருமை யான உலகத்தை வாழச்செய்ய வந்தார் நாரதர். மற்ற தேவர்கள் இங்கு வந்திருக்கலாமே. அவர்கள் பூமிக்கு வராமல் இவர் இங்கு வந்த காரணம் என்ன?


Offline Anu

Re: ஏழுமலையான்
« Reply #1 on: March 16, 2012, 10:47:09 AM »
ஏழுமலையான் பகுதி-2

ஒருவன் பசியால் மயக்கமடைந்து விட்டால், உடனே என்ன செய்வோம்? ஒரு உருண்டை சோறை எடுத்து அவன் வாயில் ஊட்டினால், அது தொண்டைக்குள் இறங்குமா? அதனால், முதலில் சிறிது தண்ணீரை அவன் முகத்தில் தெளிக்கிறோம். அவன் திடுக்கிட்டு கண் விழித்துப் பார்க்கிறான். உடனே சிறிது நீரை அவனுக்குப் புகட்டுகிறோம். இப்போது, அவன் பெருமூச்சு விடுகிறான். அதாவது, நிற்க இருந்த மூச்சு தண்ணீரின் தூண்டுதலால் மீண்டும் துளிர்த்தது. நாரம் என்றால் தண்ணீர். இந்தச் சொல்லில் இருந்தே நாரதர் என்ற வார்த்தை பிறந்தது. பாவம் செய் தவர்களின் ஆதிக்கத்தால், உலகம் தத்தளித்த போது உயிர் கொடுக்க வந்தவர் நாரதர்.அவர், கங்கைக்கரையில் வசித்த முனிவர்களில் தலை சிறந்தவரான காஷ்யபரைச் சந்தித்தார். அப்போது, காஷ்யபரின் தலைமையில் மிகப் பெரும் யாகம் நடந்து கொண்டிருந்தது. மிகப்பெரிய தபஸ்விகள் எல்லாம் இணைந்து, உலகத்தின் நலன் கருதி இந்த யாகத்தை நடத்திக் கொண்டிருந்தனர்.நாரதர் மிகுந்த ஆனந்தமடைந்தார்.காஷ்யபரே! தங்கள் தலைமையில் நடக்கும் இந்த யாகத்தின் நோக்கம் புனிதமானது. ஆனால், எனக்கொரு சந்தேகம், என்று தன் கலாட்டாவை ஆரம்பித்தார். நாரதர் பேச ஆரம்பித்தாலே கலகம் தானே!மகரிஷியே! தாங்கள் யாகம் நடத்துகிறீர்கள் சரி...இந்த யாகத்தின் பலனை எந்த தெய்வத்துக்கு கொடுத்தால், உலகம் ÷க்ஷமமடையும் என நினைக்கிறீர்கள்! யாராவது தேவருக்கு இதை அர்ப்பணிக்கப் போகிறீர்களா? அல்லது சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய முப்பெரும் தெய்வங்களில் யாருக்கேனும் தரப் போகிறீர்களா? உங்கள் யாகத்தின் குறிக்கோள் உலக அமைதி. அதைத் தரவல்லவர் யாரோ அவருக்கு இந்த யாகத்தின் பலனை அளித்தால் தானே சரியாக இருக்கும், என்றார்.

இந்தக் கேள்வியால், காஷ்யபரே சற்று மிரண்டு விட்டார் என்றால், மற்ற மகரிஷிகளின் நிலையைச் சொல்லவும் வேண்டுமோ?அவர்கள் பதில் சொல்லத் தெரியாமல் விழித்தனர்.முக்காலமும் அறிந்த முனிவரே! சர்வலோக சஞ்சாரியே! இந்தக் கேள்வியின் நாயகனான நீரே அதற்கும் பதிலும் சொல்லி விட்டால் நன்றாக இருக்கும், என்று அவர் தலையிலேயே பாரத்தைத் தூக்கி வைத்து விட்டார் காஷ்யப மகரிஷி.நாரதருக்கு சிண்டு முடிய சரியான சந்தர்ப்பம் கிடைத்து விட்டது.முனிவர்களே! கர்வம், கோபம், சாந்தம் என்ற மூன்று குணங்களில் சாந்தமே உயர்ந்தது. எவரொருவர் எந்தச் சூழ்நிலையிலும் கோபம் கொள்ளாமல், உணர்ச்சிவசப்படாமல் இருக்கிறாரோ, அவர் எந்தச் செயலிலும் வெற்றி வாகை சூடுவார். அவ்வகையில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகியோரில் யார் சாந்தகுணம் மிக்கவரோ அவருக்கே யாகத்தின் பலனைக் கொடுங்கள், என்றார்.முனிவர்கள் சிக்கிக் கொண்டனர்.அதெப்படி முனிவரே! மூன்று ரத்தினங்கள், முக்கனிகள்...இவை நம் கண் முன் தெரிந்தால் எதை வேண்டாமென்று ஒதுக்க முடியும். அனைவருமே சமவல்லமை உடையவர்கள் என்பதை பல சந்தர்ப்பங்களில் அறிந்திருக்கிறோம். அப்படியிருக்க, இதில் யார் சிறந்தவர் என்று சோதித்துப் பார்த்தால், அது நெருப்போடு விளையாண்ட கதையாக அல்லவா இருக்கும், என்றனர்.ஆமாம்...இது கஷ்டமான காரியம் தான்! ஆனாலும், உங்கள் யாகம் வெற்றி பெற வேண்டுமே! அதற்கு இந்த பரீட்சையை செய்து தானே ஆக வேண்டும். அப்படி செய்தால் தானே ஏதாவது ஒரு தெய்வம் இந்த பூமிக்கு வரும். முந்தைய யுகங்களில் தெய்வங்கள் பல அவதாரங்கள் எடுத்து பூமிக்கு வந்தனர். தர்மத்தை நிலைநிறுத்தினர். கலியுகத்தில் இறைவன் அர்ச்சாவதாரம் (கடவுள் மனிதனாகப் பிறத்தல்) செய்ய வேண்டுமென்றால், அதற்கு தகுந்தவர் யார் என்பதைத் தெரியாமல் யாகம் செய்து என்ன பலன்? என்றார்.நாரதரின் பேச்சு முனிவர் களைக் குழப்பினாலும், அவர் சொல்வதிலும் ஏதோ அர்த்தமிருப்பதாகப் பட்டது.உடனடியாக, அவர்கள் தங்களில் சிறந்த ஒரு முனிவரை இந்த சோதனைக்காக அனுப்புவது குறித்து விவாதித்தனர்.

ஒரு பெரிய மனிதரைப் பார்க்க போக வேண்டுமென்றால், அவரைச் சென்று சந்திப்பவர் சகல ஞானங் களிலும் விபரம் அறிந்தவராக இருக்க வேண்டும். அந்தப் பெரிய மனிதர் ஏதாவது தவறாகச் சொன்னால் கூட, அவரை எதிர்த்து வாதிடும் திறமையும் இருக்க வேண்டும். மனிதனின் வாழ்வியலுக்கே இப்படியென்றால், மூன்று கடவுள்களைச் சந்திக்கச் செல்பவர் மகாதிறமைசாலியாக இருக்க வேண்டுமே! அதற்குத் தகுந்தவர் பிருகு என்னும் மாபெரும் தபஸ்வி என முடிவு செய்யப்பட்டது.பிருகு முனிவர் ஆனந்தமடைந்தார்.சில தபஸ்விகளுக்கே இத்தகைய யோகம் கிடைக்கும். தங்களைத் தரிசிக்க மகா தபஸ்விகளுக்கு இறைவன் அருளும் மாபெரும் பாக்கியம் அது.அதே நேரம், இந்த பிருகு முனிவர் எப்படிப்பட்டவர் தெரியுமா? மகா அகம்பாவி. யாரையும் மதிக்க மாட்டார். அவருடைய தவவலிமை உயர்ந்தது தான்! ஆனால், ஆணவம் இருக்குமிடத்தில் பக்திக்கு இடமில்லையே! அவருக்கு ஆணவம் ஏற்படக் காரணம் என்ன தெரியுமா? எல்லோருக்கும் முகத்தில் இரண்டு கண் இருக்கும். ஆனால், இவருக்கு காலில் ஒரு கண் இருந்தது. அது ஞானக்கண். பிறர் வாழ்வில் என்ன நடக்கப் போகிறது என்பதை முன் கூட்டியே உணர்த்தும் கண். இந்தக் கண்ணைப் பெற்றதால் அவருக்கு திமிர். எல்லார் வாழ்வும் தன் கையில் இருப்பது போன்ற ஒரு நினைப்பு.நாரதருக்கு பிருகு மீது மிகுந்த அன்புண்டு. மகாதபஸ்வியான இவர், ஆணவத்தால் அழிந்துவிடக் கூடாதே என்ற நல்லெண்ணத்தில், அவரது கர்வத்தை பங்கம் செய்யும் விதத்தில், பிருகு முனிவரே தெய்வலோகங்களுக்கு செல்லலாம் என ஒப்புக்கொண்டார். பின்னர், அங் கிருந்து விடை பெற்று, பிற லோகங் களுக்கு புறப்பட்டுச் சென்றார்.பிருகு முனிவரும் தெய்வலோகங்களுக்கு ஆனந்தமாகப் புறப்பட்டார்.


Offline Anu

Re: ஏழுமலையான்
« Reply #2 on: March 16, 2012, 10:48:28 AM »
ஏழுமலையான் பகுதி-3

பிருகு முனிவர் சத்யலோகம் சென்ற போது, அங்கே அன்னை சரஸ்வதியுடன் உரையாடிக் கொண்டிருந்தார் பிரம்மா. அனர்கள் வெள்ளை பொற்றாமரை சிம்மாசனத்தில் வீற்றிருந்தனர். அங்கே ஏராளமான மகரிஷிகள் அமர்ந்திருந்தனர். தேவரிஷிகள், பிரம்மரிஷிகளும் அவர்களில் அடக்கம். அனைவரும் வேதத்தின் பொருளை பிரம்மா மூலம் கேட்டுக் கொண்டிருந்தனர்.பிருகு முனிவர் சோதிக்க வந்த வரல்லவா! பிரம்மாவுக்கு கோபமூட்டினாலும், தன்னை வரவேற்கிறாரா அல்லது எடுத்தெறிந்து பேசுகிறாரா என பரீட்சை வைக்கும் பொருட்டு, பிரம்மாவுக்கும், சரஸ்வதிக்கும் சம்பிரதாயத்துக்காக வணக்கம் கூட தெரிவிக்காமல், அங்கிருந்த ஆசனத்தில் மிகவும் கர்வத்துடன் அமர்ந்து கால்மேல் கால் போட்டுக் கொண்டார்.பிரம்மாவுக்கு கோபம். இந்த பிருகு வந்தான், ஒரு வணக்கம் கூட சொல்லவில்லை, எனக்குத்தான் சொல்ல வேண்டும், இங்கே அவனை விட உயர்ந்த விஸ்வாமித்திரர், வசிஷ்டர் போன்ற பிரம்மரிஷிகளெல்லாம் வீற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு சொல்லியிருக்கலாம். இவனது வாய் பேசுவதற்கு காரணமான சரஸ்வதிக்கு சொல்லியிருக்கலாம். இவனை ஒரு கை பார்த்து விட வேண்டியது தான் என்றெண்ணியவராய், முகத்தில் கடும் கோபத்தைத் தேக்கி, ஏ பிருகு! என் வம்சத்தில் பிறந்த நீ, பிறருக்கு மரியாதை செய்வது என்ற சாதாரண தர்மத்தைக் கூட பின்பற்றவில்லை. இப்படிப்பட்ட, உன்னால் மற்ற உயர்ந்த தர்மங்களை எப்படி காப்பாற்ற முடியும்? இங்கே இருக்கும் விஸ்வாமித்திரர், வசிஷ்டர் போன்றவர்களெல்லாம் நாராயணனையே வழி நடத்தியவர்கள். இதோ இருக்கிறாரே! அத்திரி! அவர் மும்மூர்த்திகளையும் குழந்தையாக்கிய பெருமையை உடையவர். இதோ இருக்கிறாரே! ஜமதக்னி! அவருடைய மகனாக பெருமாளே அவதரித்தார்.

பரசுராமராக இருந்து இவரது உத்தரவுக்குக் கட்டுப்பட்டு, பெற்றவளையே வெட்டித்தள்ளினார். இதோ இங்கே பவ்யமாக அமர்ந் திருக்கிறாரே, கவுதமர்! அவரது மனைவியை இழிவுபடுத்திய காரணத்துக்காக இந்திரனுக்கே சாபமிட்டவர்... இப்படிப் பட்ட உயர்ந்தவர்கள் முன்னால், நீ கொசுவுக்கு சமமானவன். அப்படியிருந்தும் இந்த சபையை அவமதித்தாய், என்று சத்தமாகப் பேசினார்.பிருகுவுக்கு வந்த வேலை முடிந்து விட்டது.ஆனாலும், அவர் பிரம்மனுக்கு ஒரு சாபத்தைக் கொடுத்தார்.நான் முனிவனாயினும் மனிதன், நீயோ தெய்வம்.. அதிலும் படைப்பவன். உனக்கு பொறுமை இல்லை. நான் ஒரு தேர்வுக்காக இங்கு வந்தேன், அந்தத் தேர்வில் நீ தோற்றாய், வருகிறேன், என்று கிளம்பினார்.அடுத்து அவர், சிவலோகத்தை அடைந்தார்.அங்கே நந்தீஸ்வரர் வாசலில் நின்றார். சிவபெருமான் தன் மனைவி பார்வதியுடன் தனித்திருந்தார். வாசலில் பூதங்களும், துவார பாலர்களான காவலர்களும் பாதுகாத்து நின்றனர். நந்திதேவர் வாசலை மறித்துக் கொண்டிருந்தார். பிருகுவோ, இவர்கள் யாரையும் மதிக்கவில்லை. அங்கே நடந்த தியான வைபவத்தை பார்வையிட்டபடியே, அத்துமீறி புகுந்தார். நந்தியிடமோ, பிற காவலர்களிடமோ அனுமதி பெறவில்லை. சிவன் கோபத்தின் பிறப் பிடமல்லவா! தாங்கள் தனித்திருந்த போது, உள்ளே நுழைந்த பிருகுவிடம், நீ பிரம்ம வம்சத்தில் பிறந்திருந்தும் தர்மங்களை அறியாமல் உள்ளே வந்து விட்டாய். தம்பதியர் தனித்திருக்கும் போது, அங்கே செல்லக்கூடாது என்ற எளிய தர்மம் கூட புரியாத உனக்கு தபஸ்வி என்ற பட்டம் எதற்கு? இதோ! உன்னைக் கொன்று விடுகிறேன், என்றவராய் திரிசூலத்தை எடுத்தார்.ஆனால், அன்னை பார்வதி சிவனைத் தடுத்து விட்டார்.நாம் தனித்திருக்கும் வேளையில் நம் பிள்ளை தெரியாமல் வந்துவிட்டது.உலக உயிர்கள் அனைத்துமே நம் பிள்ளைகள் தானே! அதிலும், பிருகு தவத்தால் உயர்ந்தவன். எந்நேரமும் இறைநாமம் சொல்பவன். அவன் தெரியாமல் ஏதோ செய்துவிட்டான் என்பதற்காக இப்படி சூலத்தை ஓங்குகிறீர்களே என்று பிருகுவுக்கு சாதகமாகப் பேசினாள்.ஆனாலும், பிருகு இந்த சமாதானத்தைக் கண்டு கொள்ளவில்லை. அவர் வந்த வேலை முடிந்து விட்டது. கோபப்படுவது போல் நடித்து, அங்கிருந்து வைகுண்டம் சென்றார்.

ஹரி ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரம் எங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது. அன்னை மகாலட்சுமியின் கடாட்சத்தால் எங்கும் நவரத்தினங்களின் ஒளி வெள்ளம் பாய்ந்தது. அது ஒரு அருமையான நகரம். அந்த நகரத்தில் மாளிகைகளெல்லாம் தங்கத்தால் எழுப்பப் பட்டிருந்தன. வைகுண்டத்திலுள்ள ஒரு அரண்மனையில் மகாவிஷ்ணு துயிலில் இருந்தார். மகாலட்சுமி அவரது திருவடிகளைப் பிடித்துக் கொண்டிருந்தாள்.பிருகு வந்தது மகாவிஷ்ணுவுக்கு தெரியும். ஆனாலும், அவன் மாயவன் ஆயிற்றே! எந்த பரீட்சை வைத்தாலும் தேறி விடுவானே! படிக்கிற குழந்தைகள் மகாவிஷ்ணுவை தினமும் வணங்க வேண்டும். அவர் கல்வியின் அதிபதியான ஹயக்ரீவராகத் திகழ்கிறார்.ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மகே என்ற ஸ்லோகத்தை தினமும் சொன்ன பிறகு, கேசவா...கேசவா...கேசவா என ஏழு தடவைகள் தொடர்ச்சியாக சொன்ன பிறகு கல்விக்கூடத்துக்கு கிளம்பும் குழந்தைகள் மிகப்பெரிய தேர்ச்சி பெறுவார்கள்.பெருமாள் கோயிலுக்குப் போனால் முதலில் தாயாரை வணங்க வேண்டும். அப்படி அல்லாமல், நேராகப் பெருமாளை போய் வணங்கினால் கோரிக்கை அவ்வளவு எளிதில் நிறைவேறாது. பிருகுவோ மகாலட்சுமியைக் கண்டு கொள்ளவே இல்லை. அது மட்டுமல்ல!ஏ நாராயணா! பிரம்மலோகத் துக்கும், சிவலோகத்துக்கும் போய் அவமானப்பட்டு உன் லோகம் வந்தேன். நீயோ, எழக்கூட இல்லாமல் தூங்கிக் கொண்டிருக் கிறாய். பக்தனின் கோரிக்கைகளை கவனிக்காமல் இப்படி உறங்கினால் உலகம் என்னாவது? எழுந்திரு, என கத்தினார்.மகாவிஷ்ணு அது காதில் விழாதது போல் இருந்தார்.எல்லாரும் பகவானின் திருவடி தன் மீது படாதா என நினைப்பார்கள். இங்கே, பகவானோ பக்தனின் திருவடி தன் மீது படாதா என காத்திருந்தார். இதோ! அது பட்டுவிட்டது.


Offline Anu

Re: ஏழுமலையான்
« Reply #3 on: March 16, 2012, 10:49:39 AM »
ஏழுமலையான் பகுதி-4

ஆம்... பகவானின் மார்பில் எட்டி உதைத்தார் பிருகு. மகாலட்சுமி எங்கிருக்கிறாள்? பெருமாளின் மார்பிலே இருக்கிறாள். தந்தையை மிதித்தது கூட மன்னிக்கத் தகுந்த குற்றம், இங்கே தாயார் மிதி பட்டிருக்கிறாள். அவளை மிதித்தது கொடிய பாவம். தாயை அவமதிப்பவனுக்கு நிச்சயம் தண்டனை உண்டு. இங்கோ, அவளை மிதிக்கவே செய்திருக்கிறார் பிருகு. அவருக்கு கண் போய்விட்டது.ஐயையோ! அப்படியானால், எல்லாருமே கோபக்கார தெய்வங்கள் தானே! கண்ணைப் பறித்துக் கொண்டாரே பெருமாள், என எண்ணி விடாதீர்கள். பெருமாள் முகத்திலுள்ள கண்ணைப் பறிக்கவில்லை. பிருகுவுக்கு கால்களில் கண்கள் உண்டு. அது ஞானக்கண். அதன் மூலம், எதிர்காலத்தில் பிறருக்கு என்ன நடக்கப்போகிறது என்பதை அவர் கணித்துச் சொல்லி விடுவார். இதனால், எல்லார் ஜாதகமும் தன் கையில் என்ற மமதை தான் பிருகுவின் இந்த ஆர்ப்பாட்டங்களுக் கெல்லாம் காரணம். ஆனால், எல்லார் எதிர்காலத்தையும் தெரிந்து வைத்திருந்த அவர், தன்னைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் விட்டதுதான் இப்போது இந்த அவலத்துக்கு காரணம்.ஞானக்கண் இருப்பதால் தானே பிருகு ஆட்டம் போடுகிறான். பெற்ற தாய்க்கு சமமான, உலகத்துக்கே படியளக்கிற லட்சுமி தாயாரை எட்டி உதைத்தானே! இவனுக்கு எதற்கு ஞானக்கண்! மற்றவர்கள் சொன்னார் களே என்பதற்காக தெய்வங்களை இவன் சோதித்ததற்குப் பதிலாக, அவர்களில் எல்லாரையும் இறைஞ்சி, யார் முதலில் வருகிறாரோ, அவருக்கு யாகபலனைக் கொடுப்போம் என்று முடிவெடுத்திருந்தால் இவன் ஞானி! பதிலுக்கு, ஆணவத்தால் அறிவிழந்த இவனுக்கு இதுவே தக்க தண்டனை எனக்கருதி, பெருமாள், பிருகுவின் காலிலுள்ள கண்ணை அவர் அறியாமலேயே பறித்து விட்டார்.ஆனால், ஏதும் அறியாதவர் போல் சயனத்தில் இருந்படியே, முனிவரே! மன்னிக்க வேண்டும். தாங்கள் இங்கு வந்ததை நான் கவனிக்கவில்லை.

 ஐயோ! தங்கள் திருப்பாதங்கள் என்னை மிதித்த போது, என் மீதுள்ள ஆபரணங்களால் தங்கள் கால்களில் காயம் ஏதும் ஏற்பட்டதா? அமருங்கள், அமருங்கள், எனது மஞ்சத்தில் அமரும் தகுதி தங்களுக்குண்டு. தாங்கள் வந்த விபரம் பற்றி தெளிவாகச் சொல்லுங்கள். ஆவன செய்கிறேன், என்று ஆறுதல் மொழி சொன்னார்.பிருகுவுக்கே என்னவோ போல் ஆகிவிட்டது.ஆஹா... இவரல்லவோ பொறுமையின் திலகம். இவரை எட்டி உதைத்து விட்டோமே! பதிலுக்கு இவரை யாகபலனை வாங்க வரும்படி யாசித்திருக்கலாமே! என நினைத்த போது, கண்ணைப் பிடுங்கிய இடத்தில் வலிக்க ஆரம்பித்தது.அவர் அம்மா... அப்பா... எனக் கதறினார்.அதே நேரம், இறைவனை மிதித்ததற்காக தனக்கு இந்த தண்டனையும் தேவை தான் என்றபடியே, லட்சுமி நரசிம்மரை துதிக்க ஆரம்பித்தார். மனிதனுக்கு ஒரு கஷ்டம் வந்து விட்டால், உடனே லட்சுமி நரசிம்மரை  பிடித்துக் கொள்ள வேண்டும். அவரை நினைத்து லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே எனச் சொன்னால், கஷ்டம் பறந்தோடி விடும். தன் பக்தன், பிரகலாதானுக்கு ஒரு கஷ்டம் என்றவுடன், எங்கும் பரவிநின்ற அவர், அவன் குறிப்பிட்ட தூணில் இருந்து வெளிப்பட்டு பாதுகாத்தவர். அப்படிப்பட்ட கருணாமூர்த்தி தன் கண்ணெதிரில் சயனித்திருக்க, லட்சுமி நாராயணான அவரை லட்சுமி நரசிம்மராகக் கருதிய பிருகு, லட்சுமி நரசிம்மா! அறியாமல் செய்த தவறுக்கு என்னை மன்னிக்க வேண்டும், என்றார்.மகாவிஷ்ணு அவரிடம் சமாதானமாக, கவலை வேண்டாம் முனிவரே! பக்தனின் பாதம்பட நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். தங்கள் பிரச்னையைச் சொல்லுங்கள், என்றார்.பிருகுவும் யாகபலனை பெற பூலோகம் வரவேண்டும் என்று சொல்ல, அவ்வாறே ஆகட்டும் என பெருமாள் அருள்பாலித்தார். பிருகு புறப்பட்டார்.

மகாலட்சுமிக்கோ கடும் கோபம்.இங்கே என்ன நடக்கிறது? இந்த முனிவர் என்னை எட்டி உதைக்கிறார்? நீங்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறீர்களே! (முனிவரின் கண்ணைப் பறித்தது லட்சுமிக்கு தெரியாது) இவரை இதற்குள் அழித்திருக்க வேண்டாமா? நம்பி வந்த மனைவியைக் காப்பாற்றுவது கணவனின் கடமை. இந்த தர்மத்தைக் கடைபிடிக்காத உங்களுடன் வாழ எனக்கு விருப்பமில்லை. நான் பூலோகம் செல்கிறேன். என்னை அங்கு வந்து பாருங்கள், என்று சொல்லி விட்டு, சயனத்தில் இருந்து எழுந்து வேகமாக எழுந்தாள் லட்சுமி தாயார். பகவான் அவளைச் சமாதானம் செய்தார்.லட்சுமி! பொறுமைக்கு இலக்கணமான பெண்களுக்கு கோபம் வரக்கூடாது. பிருகு யார்? நம் பக்தன்! பக்தர்கள் நமது குழந்தைகள். பல குழந்தைகளை பூமிக்கு அனுப்பினோம். சிலர் நம்மை வணங்குகிறார்கள், சிலர் தூஷிக்கிறார்கள். நம்மை தூஷிக்கிற குழந்தைகளுக்கு தான் நாம் ஏராளமான செல்வத்தைக் கொடுக்கிறோம், அவர்களையும் கருணையுடன் பார்க்கிறோம். காரணம் என்ன! அவன் தூஷணையை கைவிட்டு, நற்கதிக்கு திரும்ப வேண்டுமே என்பதற்காகத் தான்! பிருகு, ஒரு சோதனைக் காகவே இங்கு வந்தான். அந்த சோதனையில் வெற்றி பெற நான் அவனுக்கு உதவினேன். நீயும் அவனை ஆசிர்வதிக்காமல் விட்டுவிட்டாயே, என்றார்.லட்சுமி அவரிடம், தாங்கள் சொல்லும் சமாதானத்தை ஏற்க முடியாது. கணவனிடம் என்று பாதுகாப்பு கிடைக்கவில்லை என ஒரு பெண் உணர்கிறாளோ, அதன் பின் அவனை நம்பிப் பயனில்லை. நான் தங்களை விட்டுப் பிரிகிறேன். மேலும். நீர் சந்தர்ப்பவாதி. எந்த விஷயமாக இருந்தாலும் சமாதானம் கூறி, மாயம் செய்து தப்பித்து விடுவீர்! என்னை அவமதித்த பிருகுவைத் தண்டித்தே தீருவேன், என சொல்லிவிட்டு, அங்கிருந்து கிளம்பி விட்டாள்.பூலோகத்திலுள்ள ஒரு புண்ணியத்தலத்துக்கு வந்தாள். ஊரின் பெயரிலேயே பேரழகு.... ஆம்... அவ்வூரின் பெயரிலேயே ஜீவகாருண்யம் இருந்தது... அதுதான் கொல்லாபுரம்.


Offline Anu

Re: ஏழுமலையான்
« Reply #4 on: March 16, 2012, 10:50:41 AM »
ஏழுமலையான் பகுதி-5

லட்சுமி ஒரு இடத்தில் இருக்கும் வரை தான் யாருக்குமே மதிப்பு... நம் வீட்டிலேயே எடுத்துக் கொள்வோமே! வேலைக்கு போகும் வரை மனைவி கணவனை  கொண்டாடுவாள், பிள்ளைகள் ஒன்றாம் தேதியானால் சுற்றி சுற்றி வருவார்கள். வேலையில் இருந்து நின்ற பிறகு, பென்ஷன் வாங்கினால் ஏதோ கொஞ்சம் மதிப்பிருக்கும். ஒன்றுமில்லாவிட்டால்... கண்டு கொள்வார் யார்?லட்சுமி பிராட்டியார் பூலோகம் சென்று கொல்லாபுரத்தில் தங்கிவிட்டதால், வைகுண்டத்தின் செல்வச்செழிப்பு அகன்றது. ஸ்ரீதேவி சென்று விட்டதால், தரித்திர தேவி உள்ளே புகுந்தாள். தேவர்களெல்லாம் கலங்கினார்கள்.அவர்கள் திருமாலிடம், பெருமாளே! தாங்கள் லட்சுமி தாயார் எங்கிருந்தாலும் கண்டுபிடித்து, அவர்களைச் சமாதானம் செய்து மீண்டும் வைகுண்டம் அழைத்து வர வேண்டும். தேவலோகமே வறுமைக்கு ஆட் பட்டால், செல்வம் வேண்டி வணங்கும் நம் பக்தர்களுக்கு எப்படி வாரி வழங்குவது! உலக உயிர்களுக்கு படியளக்காவிட்டால், நமக்கு எப்படி மதிப்பிருக்கும்? என்றனர்.திருமாலும், அவர்கள் முன்னால் நாடகமாட ஆரம்பித்து விட்டார். ஆமாம்..ஆமாம்...லட்சுமி இங்கிருந்து செல்வதைத் தடுத்திருக்க வேண்டும். பிருகுவைக் கண்டித்திருந்தால், அவள் இங்கிருந்து சென்றிருப்பாளா? பின்விளைவுகளைப் பற்றி சிந்தியாமல் இருந்து விட்டேனே, என வருத்தப்படுவது போல நடித்தவர், பூலோக சஞ்சாரத்துக்குதயாராகி விட்டார்.லட்சுமி அங்கேயே இருந்திருந்தால், பூலோகத்தில் முனிவர்களின் கோரிக்கையை எப்படி நிறைவேற்ற முடியும்? கலியுகத்தில் நடக்கும் பாவங்களை எப்படி தடுக்க முடியும்? இந்தக் காரணத்தால், லட்சுமிக்கு கோபம் வரச் செய்த திருமால், அவளுக்கு பூலோகம் செல்லும் மனநிலையை உண்டாக்கி விட்டு, தானும் அங்கே செல்ல தயாரானார். தேவர்களே! லட்சுமி எங்கிருந் தாலும் நான் அழைத்து வருகிறேன். அதுவரை பொறுமை காக்க வேண்டும், என்றவர் அவள் மறைந்திருக்கும் இடத்தை தேடியலைவது போல் பல இடங்களிலும் சுற்றினார்.

சீதையைப் பிரிந்த ஸ்ரீராமன் காட்டில் எப்படியெல்லாம் தேடியலைந்தாரோ! செடி, கொடிகளிடம் எல்லாம் என் சீதையைப் பார்த்தீர் களா! என்று கேட்டு புலம்பினாரோ, அதுபோல திருமால், என்லட்சுமியைப் பார்த்தீர்களா! என்று செடி, கொடிகளிடமெல்லாம் கேட்டுக்கொண்டே நடந்தார்.எங்கு தேடியும் லட்சுமி கிடைக்காமல், ஏழு மலைகளை உள்ளடக்கிய திருமலை என்னும் மலைக்கு வந்தார். அப்பகுதியில் ஆதிவராஹர் குடியிருந்தார். திருமால் எடுத்த அவதாரங்களில் பன்றி முகம் கொண்ட வராஹ அவதாரமும் ஒன்று. வராஹமாக அவதாரமெடுத்து, பூமியைத் தோண்டி வேதங்களைக் கண்டெடுத்து பிரம்மாவிடம் ஒப்படைத்த பிறகு, அதே வடிவில் திருமலையில் அவர் குடியிருந்தார். ஆதியில் தோன்றியவர் என்பதால், அவர் ஆதிவராஹர் எனப்பட்டார். இதனால், திருமலையில் அவர் தங்கியிருந்த இடமும் ஆதிவராஹ ÷க்ஷத்ரம் எனப்பட்டது.இந்த தலத்தை ஆதிவராஹ நரசிம்ம ÷க்ஷத்ரம் என்றும் அழைப்பர். நரசிம்மரும் இதே மலையை ஒட்டிய அஹோபிலத்தில், தன்அவதார காலத்தை முடித்து விட்டு தங்கியிருந்தார்.திருப்பதி வெங்கடாசலபதியின் செல்வச்செழிப்புக்கு காரணமே இந்த நரசிம்மர் தான் என்ற கருத்தும் உண்டு.இங்கு வந்த திருமால், ஒரு புளியமரத்தில் இருந்த புற்றில் அமர்ந்து தவம் செய்ய ஆரம்பித்து விட்டார்.திருமால் ஒருபுறம், லட்சுமி ஒருபுறம் இருந்தால் உலக இயக்கம் என்னாகும்? இதை சரிசெய்ய எண்ணினார் கலக முனிவர் நாரதர். அவர், தன் தந்தையான பிரம்மாவிடம் சென்றார்.தந்தையே! பிருகு முனிவர் செய்த சோதனையால் கோபமடைந்த லட்சுமி தாயார் இப்போது கொல்லாபுரத்தில் இருக்கிறாள்.திருமாலோ, ஆதிவராஹ ÷க்ஷத்ரத்தில் தவத்தில் ஆழ்ந்து விட்டார். அவர் லட்சுமியைக் காணாமல் அன்னம் கூட புசிப்பதில்லை. இப்படியே போனால் என்ன செய்வது?முதலில் திருமாலுக்கு அன்னம் புகட்ட வேண்டும். அதற்கு தாங்கள் தான் ஏற்பாடு செய்ய வேண்டும், என்றார்.

பிரம்மா உடனடியாக சிவபெருமானிடம் சென்றார். நடந்த விஷயத்தைச் சொன்னார். மேலும், பெருமானே! நாம் இருவரும் பசு, கன்று வேடத்தில் செல்வோம்.அவருக்கு பால் புகட்டி வருவோம், என்று வேண்டுகோள் விடுத்தார்.மைத்துனருக்கு ஒரு பிரச்னை என்றால், சிவனுக்கு பொறுக்குமா? இப்போதும் கூட கிராமங்களில் மைத்துனன் இருந்தால் மலையேறி பிழைக்கலாம், என்பார்கள்.இதன் பொருள் தெரியுமா?மைத்துனரான திருமால் திருமலையில் இருக்கிறார். அவரது பசி போக்க கைலாயமலையில் இருக்கும் சிவன், திருமலையில் ஏறப்போகிறார். இதனிடையேநாரதர் பூலோகம் சென்று கொல்லாபுரத்தில் தவத்தில் இருந்த லட்சுமி தாயாரைச் சந்தித்தார்.நாராயணா என்ற திருநாமம் முழங்க வந்த அவரை லட்சுமி வரவேற்றாள்.தாயே! தாங்கள் சிறு பிரச்னைக்காக கோபித்துக் கொண்டு வந்து விட்டீர்கள். நீங்கள் இல்லாமல் திருமாலால் ஒரு கணமாவது வைகுண்டத்தில் இருக்க முடியுமா? அவர் உங்கள் மீது கொண்டுள்ள அன்பைக் குறைத்து மதிப்பிட்டு விட்டீர்களே! தாங்கள், அவரைப் பிரிந்த ஏக்கத்தால் அவர் மனம் பட்ட பாடு தெரியுமா? அவர் உங்களைத் தேடி காடுகள், மலைகள், குகைகளில் எல்லாம் அலைந்தார். எங்கும் கிடைக்காமல், இப்போது திருமலையிலுள்ள ஆதிவராஹ ÷க்ஷத்ரத்தில் தங்கியுள்ளார். தங்களை எண்ணி புலம்பி அலைந்த அவர், சாப்பாடு, உறக்கம் ஆகியவற்றை மறந்து, தாங்கள் கிடைக்க வேண்டுமென்பதற்காக ஒரு புளியமரப்பொந்தில் தவத்தில் ஆழ்ந்து விட்டார். தாங்கள் அவரைக் காப்பாற்ற உடனடியாக கிளம்ப வேண்டும், என்றார்.லட்சுமிக்கு பகீரென்றது.அவசரப்பட்டு விட்டோமே என வருந்திய அவள் திருமாலைக் காப்பாற்ற முயற்சி எடுத்தாள்.


Offline Anu

Re: ஏழுமலையான்
« Reply #5 on: March 16, 2012, 10:52:39 AM »
ஏழுமலையான் பகுதி-6

தன் கணவருக்கு ஏற்பட்ட கஷ்டத்தை போக்குவதற்காக லட்சுமி மகேஸ் வரனிடம் சென்றாள். தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடை அவரிடம் சொல்லி தனது அவசரம் காரணமாக திருமால் பூலோகம் சென்று ஒரு புளியமரத்தின்கீழ் அன்ன பானமின்றி தவமிருப்பது பற்றி எடுத்துச் சொன்னாள். மகேஸ்வரன் அவளது கஷ்டத்தை போக்குவதற்கு வாக்களித்தார். பிரம்மாவை வரவழைத்தார்.பிரம்மனே! நாம் இருவரும் பசு, கன்றுவாக மாறி, நாராயணனின் இருப்பிடத்திற்கு செல்ல வேண்டும். நம்மை லட்சுமி சந்திரகிரி நாட்டின் அரசன் சோளராஜனுக்கு விற்றுவிடுவாள். நாம் அந்த நாட்டில் தவம் செய்து கொண்டிருக்கும் நாராயணனை தேடிச்சென்று அவரது பசி போக்க பாலூட்டுவோம்,  என்றார். லட்சுமி மகிழ்ச்சி அடைந்தாள். இதன்பிறகு பிரம்மா பசுவின் வடிவையும், மகேஸ்வரன் கன்றுக் குட்டியின் வடிவையும் அடைந்தனர். லட்சுமிதேவி அவற்றை மேய்ப்பவள் போல வேடமணிந்தாள். பசு, கன்றுகளை ஓட்டிக்கொண்டு சந்திரகிரிக்கு வந்துசேர்ந்தாள். அந்த பசுவும் கன்றும் அந்நாட்டு மக்களை கவர்ந்தன. இதுபோன்ற உயர்ந்த ஜாதி பசுவை நாங்கள் இதுவரை கண்டதில்லை. இதன் மடு மிகவும் பெரிதாக இருக்கிறது. ஒருமுறை பால் கறந்தால் உலகத்திற்கே போதும் என்கிற அளவிற்கு பெரிதாக மடு கொண்ட பசுவை அதிசயப்பிறவி என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. இது எங்கள் தேசத்திற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம் என்றே கருதுகிறோம். இந்த மாட்டுக்கு சொந்தக்காரி பேரழகு பொருந்தியவளாக இருக்கிறாள். லட்சுமி கடாட்சம் இவள் முகத்தில் தாண்டவமாடுகிறது, என்று புகழ்ந்து பேசினர்.தங்கள் நாட்டிற்கு வந் திருக்கும் அதிசய பசு, கன்று பற்றிய தகவல் அரண்மனைக்கு சென்றது. மன்னன் சோளராஜன் அவற்றை பார்க்க விரும்பினான். இதை எதிர்பார்த்து காத்திருந்த லட்சுமி பிராட்டியார், பசுக்களை ஓட்டிக்கொண்டு அரண்மனைக்கு சென்றாள்.மன்னன் அந்த பசுக்களை பற்றி விசாரித்தான்.பெண்மணியே! உனது நாடு எது? எந்த நாட்டில் இதுபோன்ற உயர்ஜாதி பசுக்கள் இருக்கின்றன? இதன் சிறப்பம்சம் என்ன? தெளிவாகச் சொல், என கேட்டான்.

லட்சுமி பிராட்டி அவனிடம், மன்னனே! இந்த பசுக்களுக்கு உணவிட சாதாரண மனிதர்களால் முடியாது. இவை மிக அதிகமாக சாப்பிடும். ஆனால் உணவிற்கேற்ற பாலை இந்த ஊருக்கே தரும். நீ அரண்மனைவாசி. உன்னால் இதை வளர்க்கமுடியும். இந்த பசுக்களுக்கு தேவையான உணவை கொடுத்து வா. உன் நாடே வளமாகும், என தெரிவித்தாள். சோளராஜனுக்கும், அவனது மனைவிக்கும் அந்த பசுக்களை மிகவும் பிடித்துவிட்டது.உலகத்திற்கே படியளக்கும் லட்சுமி பிராட்டிக்கு பணம் கொடுத்து அந்த பசுக்களை வாங்கிக்கொண்டனர். அரண்மனை கொட்டிலில் அந்த பசுக்கள் அமைதியாக நின்றன. அவற்றை கட்டிப்போட வேண்டும் என்ற அவசியம் வரவில்லை. எந்தப் பிரச்னையும் செய்யாமல் சாப்பிட்டன. அதுவரை அப்படிப் பட்ட பசுக்களை பார்க்காத பராமரிப்பு ஊழியர்கள் ஆச்சர்யமும் ஆனந்தமும் கொண்டனர்.சோளராஜன் தலைமை பசு பராமரிப்பாளரை அழைத்து, சேவகனே! இந்த பசு கறக்கும் பாலை மட்டும் அரண்மனையில் ஒப்படைத்துவிட வேண்டும். இதன் பால் தெய்வாம்சம் மிக்கது என இதை என்னிடம் விற்ற பெண்மணி சொல்லியிருக்கிறாள். இவற்றை வேங்கடாசல மலைக்கு அழைத்து சென்று மேயவிடு. மிகவும் கவனமாக பார்த்துக்கொள், என சொல்லி அனுப்பினான். பராமரிப்பாளர்கள் அந்த பசுக்களை வேங்கடாசல மலைக்கு ஓட்டிச் சென்றனர். சேவகர்கள் மதியவேளையில் ஓய்வெடுக்கும் நேரத்தில் அந்த பசுக்கள் மந்தையைவிட்டு பிரிந்து மலையிலிருந்த புளியமரத்தின் அருகில் சென்றன. புற்றுக்குள் ஸ்ரீமந் நாராயணன் தவத்தில் இருந்தார். அவர்மீது அந்த பசு பாலை சொரிந்தது. திடுக்கிட்டு விழித்த நாராயணன், மேல்நோக்கி பார்த்தார். பால் வழிந்துகொண்டிருந்தது. வாய் திறந்து அந்த பாலை பருகினார். இப்படியாக தினமும் அந்த பசுக்கள் புற்றுக்கு சென்று அதனுள் அமர்ந்திருந்த ஹரிக்கு பாலை சொரிந்துவிட்டு வந்தன.

மிகுந்த எதிர்பார்ப்புடன் வாங்கப்பட்ட பசு, பால் கொடுக்காததால் அரண்மனையில் பிரச்னை ஏற்பட்டது. இவற்றை விற்கவந்த பெண்மணி அரசனையே ஏமாற்றிவிட்டாளோ என்று பேசிக்கொண்டனர்.மகாராணி பராமரிப்பாளனை அழைத்து, இந்த மாடு பால் கொடுக்கிறதா? இல்லையா? ஒரு வேளை நீயே இந்த பாலை குடித்துவிடுகிறாயா? உண்மையை சொல்லாவிட்டால் உன் தலையை எடுத்துவிடுவேன், என எச்சரித்தாள். அவன் பதறிப்போனான்.மகாராணி! எல்லா பசுக்களையும் போல இதையும் திருவேங்கடமலைக்கு ஓட்டிச் செல்கிறேன். எங்கள் பார்வையில்தான் இந்த பசுக்கள் மேய்கின்றன. மடு மிகவும் பெரிதாக இருக்கிறது. ஆனால் கறந்தால் பால் வருவதில்லை. இது என்ன அதிசயம் என்று எங்களுக்கு புரியவில்லை. மாயப்பசுக்களாக இவை உள்ளன, என்று சொல்லி அவளது காலில் விழுந்தான்.மகாராணிக்கு அவனது பேச்சில் நம்பிக்கை வரவில்லை.பொய்யனே! உன் பேச்சை நான் நம்பமாட்டேன். மிகச்சிறிய கன்றை ஈன்றுள்ள இந்த பசுவிற்கு எப்படி பால் இல்லாமல் போகும்? இன்று ஒருநாள் அவகாசம் தருகிறேன். நாளை முதல் எப்படியும் இந்த பசுவின்பால் அரண்மனைக்கு வந்தாக வேண்டும். இல்லாவிட்டால் உன்னை கொன்றுவிடுவேன், என மிரட்டி அனுப்பினாள்.என்ன செய்வதென அறியாத பராமரிப்பாளன் மறுநாள் அந்த பசுவின் மீது ஒருகண் வைக்க ஆரம்பித்தான். மதிய வேளையில் அவன் ஓய்வெடுக்கவில்லை. பசுக்கள் புற்றை நோக்கி சென்றன. பராமரிப்பாளன் பின்தொடர்ந்தான். புற்றின் அருகே சென்ற பசு, பால் சொரிய ஆரம்பித்தது. அவன் அதிர்ச்சியடைந்தான். கடும் கோபம் ஏற்பட்டது. தனது கையில் இருந்த தடியுடன் பசுவை அடிக்க பாய்ந்தான்.


Offline Anu

Re: ஏழுமலையான்
« Reply #6 on: March 16, 2012, 10:53:51 AM »
ஏழுமலையான் பகுதி-7

பசு மேய்ப்பவன், அதை அடிக்கப் பாயவும், மரப் பொந்துக்குள் இருந்த ஸ்ரீமன் நாராயணன் அதைக் கவனித்து விட்டார். துள்ளி எழுந்தார்.ஏ கோபாலா! பசுவை அடிக்காதே, என்று துள்ளிக் குதிக்கவும், பசு அங்கிருந்து நகர்ந்தது. பசுவை நோக்கிப் பாய்ந்த தடியடி, நாராயணனின் தலையில் விழுந்தது. ரத்தம் கொப்பளித்து சிதறி, பசுவின் மீதும் பட்டது.பசு பராமரிப்பாளனான கோபாலன் நடுநடுங்கி விட்டான்.சுவாமி! தாங்கள் யார்? இந்த பொந்துக்குள் தாங்கள் தவமிருப் பது தெரியாமல் தங்களை அடித்து விட்டேனே! பசு வீணாக பாலைச் சொரிகிறதோ என நினைத்து, அறியாமல் செய்த என் தவறை மன்னித்தருள வேண்டும், என்று அவர் பாதங்களில் விழுந்து கெஞ்சியவன், அதிர்ச்சியில் அப்படியே மயக்கமடைந்து விட்டான். இதற்குள் பசு சோழராஜனின் அரண்மனைக்குள் புகுந்தது. அதன் உடலில் ரத்தக்கறையாக இருந்தது. அனைவரும் பசுவுக்கு என்னாயிற்றோ என கலங்கினர். அந்தப்பசு யாரையும் சட்டை செய்யாமல் சோழராஜனின் முன்னால் வந்து நின்றது.ராஜனும், அவன் தேவியும் கலங்கி விட்டார்கள். தங்கள் அன்புக்குரிய பசு, எங்காவது விழுந்து அடிபட்டு விட்டதோ! ஒருவேளை, பால் கொடுக்காத ஆத்திரத்தில் பசு மேய்க்கும் கோபாலன் அதை அடித்ததில் ரத்தம் வழிகிறதோ! இப்படி, பல்வேறு விதமான சிந்தனைகளுடன் பசுவின் உடலை அவர்களே கழுவினர். அது ரத்தக்கறை என்பதும், பசுவின் உடலில் இருந்து வழியவில்லை என்பதும் புரிந்தது. இருப்பினும், குழப்பம் தீராத அவர்கள், பசு மேய்ந்த இடத்துக்கே அவசரமாகத் தேரில் சென்றனர்.அங்கே, கோபாலன் மயங்கிக் கிடந்ததையும், திருநாமம் அணிந்த தபஸ்வி ஒருவர் ரத்தம் வழிய, வலி தாங்காமல் அரற்றிக் கொண்டிருந்ததையும் கண்டனர்.சுவாமி! நான் இந்நாட்டின் மன்னன் சோழராஜன். தாங்கள் யார்? தங்களுக்கு ஏன் இந்த அவலம் ஏற்பட்டது? எனக் கேட்க, ஸ்ரீமன் நாராயணன் கோபமாகப் பேசினார்.

மன்னா! உன் நாட்டில் பசுக்கள் பராமரிக்கப்படும் லட்சணம் இதுதானா? எந்த நாட்டில் பசுக்கள், பால் தந்தாலும், தராவிட்டாலும் புறக்கணிக்கப்படுகின்றனவோ அந்த நாட்டில் மழையே பெய்யாது. அங்கே வறுமை தாண்டவமாடும். சண்டையும் சச்சரவும் மிகுந்து உயிர்ப்பலி அதிகமாகும். எதிரிகள் அந்த நாட்டை வேட்டையாடுவார்கள். உன் நாட்டிலும், பசுக்களுக்கு பாதுகாப்பில்லை. இதோ! நான் தவமிருந்த இந்தப் புற்றுக்கு தினமும் வந்த ஒரு பசு, எனக்கு பாலைச் சொரிந்தது. ஒரு பசு ஒருவனுக்கு பால் கொடுப்பது உன் நாட்டில் பெரும் குற்றமா? அதற்காக, இந்த கோபாலன் அந்த மாட்டை அடிக்கப் பாய்ந்தானே? பசுக்களை அடிப்பது எவ்வளவு பெரிய பாவம்? பசுக்களை அடிக்கத் துணிபவன், அவற்றை மேய்ப்பதற்கே தகுதியற்றவ ஆயிற்றே! என்று கடிந்து கொண்டார். சோழராஜன், கோபாலன் செய்த தவறுக்காக அவரது பாதங்களில் விழுந்தான்.முட்டாளே! ஒரு வேலையில் தவறு நடந்தால் அதைச் செய்யும் சேவகனை விட, அவனை வேலைக்கு நியமித்தவனே பொறுப்பேற்க வேண்டும். அதிலும், பசுக்களை பராமரிக்க பொறுமை நிறைந்த ஒரு வேலைக்காரனைத் தேர்ந்தெடுக்காத நீ பிசாசாக மாறக் கடவாய், என சாபமிட்டார்.சோழராஜன் நடுநடுங்கி, சுவாமி! என் தவறுக்கு நானே பொறுப்பேற்கிறேன். இருப்பினும், அறியாமல் நடந்து விட்ட இந்த தவறை மன்னித்து சாபத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டுகிறேன், என மன்றாடினான்.அப்போது ஸ்ரீஹரி அவன் முன் சுயரூபம் காட்டி தரிசனம் தந்தார்.சோழராஜா! காரண காரியங் களுடனேயே எல்லாச் செயல்களும் நடக்கிறது. பசுக்களை பராமரிப்பதன் முக்கியத்துவத்தை உலகுக்கு எடுத்துக்காட்டவே, நான் இந்த லீலையை நிகழ்த்தினேன். என் சாபத்தை விலக்கிக் கொள்ள இயலாது. நீ சில காலம் பிசாசாக திரிந்து, அடுத்த பிறவியில் ஆகாசராஜன் என்ற பெயரில் பிறப்பாய். அப்பிறவியிலும் நீ மன்னனாகவே இருப்பாய். என் தேவி லட்சுமி, பத்மாவதி என்ற பெயரில் உனக்கு மகளாகக் கிடைப்பாள். அவளை எனக்கு மணம் முடித்து வைப்பாய், என்று அருள்பாலித்தார்.

ஸ்ரீமன் நாராயணா! பத்மநாபா! புண்டரீகாக்ஷõ! மதுசூதனா! கோபாலா! உன் தரிசனம் கிடைத்ததே போதும், இனி பேயாய் அலைந்தாலும் உன் நினைவுடனேயே திரிவேன், என்ற சோழராஜன் பேய் வடிவம் அடைந்து அங்கிருந்து அகன்றான்.இதன் பிறகு, மயக்கமடைந்து கிடந்த கோபாலன் எழுந்தான். அவன் தன் முன்னால் நாராயணன் நிற்பதைக் கண்டு ஆனந்தம் கொண்டு, ஹரிஹரி... ஹரி ஹரி... என்று சொல்லி வணங்கினான்.தெய்வமே! நான் செய்த மாபெரும் தவறுக்காக என்னை நரகத்துக்கு அனுப்பினாலும் அந்த தண்டனையை உளமாற ஏற்கிறேன். நாங்கள் அறிவொன்றும் இல்லாத ஆயர் குலத்தினர். படிப்பு எங்களுக்கு இல்லை. ராணியார் கொடுத்த நெருக்கடியால், இந்தத் தவறைச் செய்யும்படி ஆயிற்று. இருப்பினும், பசு ஏன் பாலைச் சொரிகிறது என்று நான் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். நீ தரும் தண்டனையை நான் ஏற்கிறேன், என்றான்.நாராயணன் சிரித்தார்.கோபாலா! இந்த பூலோகத்துக்கு நான் வந்து, இந்த மரப்புற்றில் தங்கினேன். எல்லோரும் என்னை பல்வேறு விதங்களில் வழிபடுவார்கள். நீ அடித்து வழிபட்டாய். பசு மேய்ப்பவர்கள் எனது பக்தர்கள். ராணியின் நிர்ப்பந்தம் காரணமாகவே நீ பசுவை அடிக்கப் பாய்ந்தாய். அதனால், தவறு உன் மீதல்ல. மேலும், பூலோகம் வந்த என்னை முதன்முதலாகத் தரிசித்தவனும் நீ தான்!எனவே, ஒரு சிறப்பான வாய்ப்பைத் தரப்போகிறேன். நான் இந்த வேங்கடமலையில் ஸ்ரீனிவாசன் என்ற பெயரில் தங்குவேன். என் கோயில் திறந்ததும், முதல் தரிசனம் உனது வம்சத்தவர்களுக்கே தருவேன், என்று அருள் செய்து மறைந்தார்.இப்போதும், திருப்பதி கோயிலில் கோபாலனின் வம்சத்தினரே, அதிகாலையில் முதல் தரிசனம் பெறுகிறார்கள். அடுத்து, ஸ்ரீனிவாசன் மானிட வடிவில், தான் அந்த மலையில் தங்குவதற்குரிய வேறு இடத்தைத் தேடி புறப்பட்டார்.


Offline Anu

Re: ஏழுமலையான்
« Reply #7 on: March 16, 2012, 10:55:05 AM »
ஏழுமலையான் பகுதி-8

தலையில் ரத்தம் தொடர்ந்து வழிந்து கொண்டிருந்தது. காயம் அதிகமாக வலித்தது. அதை சகித்துக் கொண்டு, சீனிவாசன் நீண்ட தூரம் அந்தக் காட்டுக்குள் நடந்தார். அப்போது, தேவகுருவான பிரகஸ்பதி அங்கே வந்தார்.சீனிவாசனை வணங்கினார்.நாராயணா! கலியுகத்தில் மக்களைப் பாதுகாக்க தாங்கள் பூலோகம் வந்தீர்கள்! ஆனால், அந்தக் கலி, கடவுளாகிய உங்களையே விட்டு வைக்கவில்லையே! தங்கள் தலையில் ரத்தம் வழிவதைக் காண சகிக்காமல், தேவலோகத்தில் இருந்து ஓடோடி வந்தேன். எருக்கு இலையில் ஆலமரத்து பாலைக் கட்டி புண்ணிருக்கும் இடத்தில் வைத்துக் கட்டுங்கள். விரைவில் இந்தக்காயம் குணமாகி விடும், என்று சொல்லிவிட்டு விடை பெற்றார். பாருங்களேன்! கலியுகத்தில் பரமாத்மாவே அடிவாங்கி கஷ்டப் பட்டிருக்கிறார் என்றால், சாதாரண ஜனங்களான நமக்கு ஏற்படும் கஷ்டத்தைப் பற்றி ஆச்சரியப்பட என்ன இருக்கிறது!சீனிவாசன் நடையைத் தொடர்ந்தார்.காட்டில் ஓரிடத்தில் ஹரே கிருஷ்ணா! ஹரே கிருஷ்ணா! ஹரே கிருஷ்ணா என்று பாடும் குரல் கேட்டது. அது ஒரு பெண்ணின் குரல். சீனிவாசன், தன்னை யாரோ நினைத்துப் பாடுகிறார்களே என்று மகிழ்ச்சியுடன் குரல் வந்த திசை நோக்கி நடந்தார். ஒரு குடிசையில் விளக்கொன்று எரிந்து கொண்டிருக்க, நடுத்தர வயது பெண் ஒருத்தி, கிருஷ்ணகானம் இசைத்துக் கொண்டிருந்தாள்.தன்னை நினைத்துப் பாடும் அந்த பக்தை யாரென்று அந்த பரமாத்மாவுக்கு தெரியாமலா இருக்கும்!ஆனால், மானிட அவதாரம் எடுத்து வந்து விட்டாரே! அதற்கேற்ற வகையில் தன் இயல்பை மாற்றிக்கொண்ட அவர், தன்னிலை மறந்து ஏதும் அறியாதவராய், அம்மா, அம்மா என்று அழைத்தார்.இந்தக் குரலைக் கேட்டதும், உள்ளிருந்த அந்தப் பெண்மணிக்கு இதயத்தைப் பிசைவது போல் இருந்தது.ஆ... இது என் குழந்தையின் குரல் அல்லவா! துவாபராயுகத்தில் இவன் என் வயிற்றில் பிறக்காத பிள்ளையாக என் வீட்டில் வளர்ந்தானே! இவனைப் பெற்றவளை விட, என்னைத்தானே அந்த யுகத்திலும், இந்தக் கலியிலும் உலகம் கொண்டாடுகிறது! ஆ...அப்படியானால் அவன் தான் இவனா? அவள் வெளியே ஓடிவந்து பார்த்தாள்.

ஆம்!அதே முகம்! அதே நீல வண்ணம், இவன் தான்! நான் வளர்த்த கண்ணன் என்னும் செல்லப்பிள்ளை தான் இவன். எனக்கு அந்தப் பிறவியில் நடந்தது இவனைப் பார்த்ததும் முழுமையாக நினைவுக்கு வந்து விட்டது.கடந்த துவாபரயுகத்தில் இவன் மதுராபுரியில் பிறந்தான். இவனது தந்தை இவனைக் கூடையில் சுமந்து கொண்டு, யமுனை நதியை கடந்து மறுகரையில் இருந்த ஆயர்பாடியில் வசித்த என்னிடம் ஒப்படடைத்தார். இவன் நாராயணனின் அவதாரமென்று சொன்னார். இவன் நீல வண்ணத்தில் இருந்ததால், இவனுக்கு கிருஷ்ணா என்று பெயர் சூட்டினேன்.கிருஷ் என்றால் நீலமேகம் என்று பொருள். அந்த கிருஷ்ணனின் குழந்தைப் பருவ லீலைகளை நான் சுகித்தேன், என்று நினைத்தவள் அவரை உள்ளே அழைத்தாள். மகனே வா! உன்னைத் தாலாட்டி எத்தனை நாளாகிறது? பல்லாயிரம் ஆண்டுகள் கழிந்து இப்போது உன்னைப் பார்க்கிறேன். நான் யார் என உனக்குத் தெரிகிறதா? ஐயோ! இது என்ன ரத்தம்? என அலறினாள்.சீனிவாசனாகிய நாராயணன் சகலமும் அறிந்தவர் என்றாலும், மானிடப்பிறப்பாக வந்து விட்டதாலும், பக்தர்களுக்கு சோதனை தருவதில் இன்பம் கொண்டவன் என்பதாலும் ஏதுமே தெரியாதவர் போல் நடித்தார்.அம்மா! தாங்கள் யார்? நான் ஒரு வழிப்போக்கன். இந்தக் காட்டிலுள்ள புளியமரப் பொந்தில் தங்கி தவமிருந்தேன். இந்நாட்டு மன்னனின் பணியாள் என்னை அடித்து விட்டான். நான் இருப்பதை அவன் அறியவில்லை. அதனால் அவன் மீது தவறில்லை, என்றவர் நடந்த விபரங்களையும், பிரகஸ்பதி சொன்ன மருத்துவம் பற்றியும் சொன்னார்.சற்று நேரத்தில் அந்தப் பெண் எருக்கிலை பறித்து வந்து, ஆலம்பால் எடுத்து இலைக்குள் வைத்து, அதை சீனிவாசனின் நெற்றியில் கட்டினாள்.

ரத்தம் வழிவது குறைந்தது.அவரைத் தன் மடியில் படுக்க வைத்து, மகனே! நீ ஸ்ரீமன் நாராயணனாகவே என் கண்ணுக்குத் தெரிகிறாய். மேலும், கிருஷ்ணாவதாரம் எடுத்த போது, நான் யசோதை என்ற பெயரில் உன் தாயாக இருந்ததை அறிவாய் அல்லவா? என்றார்.சீனிவாசனை நெற்றியிலுள்ள காயம் வேதனைப்படுத்தினாலும், அவள் சொன்ன கதையை சுவாரஸ்யமாகக் கேட்பது போல நடித்த சீனிவாசன், வலி குறைந்து விட்டது போல் பாவனை காட்டினார்.மகனே! நான் அன்று கேட்ட வரத்தைக் கொடுக்கத்தானே இன்று வந்திருக்கிறாயா? என்றாள் அந்தப் பெண்.அம்மா! என் பெயர் சீனிவாசன். நான் யாரென்று எனக்கே புரியவில்லை. தாங்களோ துவாபரயுகத்தில் நடந்த ஏதோ ஒன்றைப் பற்றி பேசுகிறீர்கள்! தாங்கள் சொல்வது ஏதும் எனக்கு புரியவில்லையே! ஒருவேளை தலையில் அடிபட்டதில் நான் தங்களை யார் என்று மறந்திருப் பேனோ, என்று இன்னும் நடிப்புக்காட்டிய மகாவிஷ்ணுவான சீனிவாசன், அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு அவள் என்ன சொல்லப்போகிறாள் எனக் கேட்கத் தயாரானார்.ஸ்ரீனிவாசன் என்று சொன்னால் என்ன! கிருஷ்ணன் என்றால் தான் என்ன! எல்லாம் ஒன்று தான். நீ லட்சுமி உன் மார்பில் இருக்க இடம் கொடுத்தவன். அதனால் தானே ஸ்ரீனிவாசன் என்ற பெயரே உனக்கு ஏற்பட்டது. ஸ்ரீ என்பது லட்சுமியைத் தானே குறிக்கும், என்றதும், ஸ்ரீனிவாசனின் முகம் வாடியது.அம்மா! இப்போது எல்லாம் என் நினைவுக்கு வந்து விட்டது. ஆனால், நீங்கள் நினைப்பது போல், நான் ஸ்ரீனிவாசன் என்ற பெயருக்கு அருகதை இல்லாதவன் ஆகிவிட்டேன். என் மனைவி லட்சுமி என்னை விட்டுப் பிரிந்து சென்று விட்டாள், என்றார்.என்ன! லட்சுமி உன்னைப் பிரிந்தாளா? அப்படியானால், நீ எனக்கு கொடுத்த வரம் என்னாவது? அவள் பதறினாள்.


Offline Anu

Re: ஏழுமலையான்
« Reply #8 on: March 16, 2012, 10:56:20 AM »
ஏழுமலையான் பகுதி-9

அந்தப் பெண் இப்படி பதறிப் போவதற்கு காரணம் இருக்கிறது. ஏனெனில். கடந்த யுகத்தில் அவளே ஆயர்குலத்தில் யசோதையாக அவதரித்து, கண்ணனை வளர்க்கும் பாக்கியத்தைப் பெற்றவள். அவனைப் பெற்ற தாய் தேவகிக்கு கூட அவனது பாலப் பருவத்தைக் கண்டு ரசிக்க கொடுத்து வைக்காமல் சிறையில் அடைபட்டுத் தவித்தாள். ஆனால், வளர்த்தவளுக்கு அத்தகைய கிருபையைச் செய்தார் நாராயணன். அவள் தான் இந்தப் பிறவியில் இந்தத் தாயாகப் பிறந்திருக்கிறாள். இவளது பெயர் வகுளாதேவி.இவன் கோகுலத்தில் யசோதையிடம் வளரும் போது, செய்யாத சேஷ்டைகள் இல்லை. தெருவில் போகும் சண்டையை வீட்டுக்குள் இழுத்து வந்து விடுவான். கோபியரிடம் வம்பு செய்வான். பல பெண்களைத் திருமணம் செய்து கொண்டான். ஆனால், பால பருவத்தைக் கண்டுகளிக்கும் வாய்ப்பு கிடைத்த யசோதைக்கு அந்த திருமணங்களில் ஒன்றைக் கூட பார்க்கின்ற வாய்ப்பு கிடைக்கவில்லை.ஒருநாள், கண்ணனைப் பார்க்கின்ற வாய்ப்பு யசோதைக்கு கிடைத்தது.கண்ணா! சிறுவயதில் நீ என் வீட்டில் வளர்ந்தாய். அதன்பின் மதுராபுரி, துவாரகை, அஸ்தினாபுரம், இந்திரப்பிரஸ்தம் என சுற்றிக் கொண்டிருக்கிறாய். உன் பால பருவ லீலையைப் பார்த்த எனக்கு, பல கல்யாணங்கள் செய்தும் அதைப் பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. ஒரு திருமணத்தையாவது காணும் பாக்கியத்தைத் தரமாட்டாயா? எனக்கேட்டாள்.பகவான் கேட்காமல் என்ன வேண்டுமானாலும் தருவான். எதை எப்போது தர வேண்டும் என்பது அவனுக்குத் தெரியும், ஆனால், எதிர்பார்த்து சென்றால் அவ்வளவு எளிதில் எதுவும் கிடைப்பதில்லை. அதற்காக, சில யுகங்கள் வரை கூட காக்க வைத்து விடுகிறான். அந்த நிலை யசோதைக்கே வந்திருக்கிறது என்றால், சாதாரண பிறவிகளான நம் நிலையைக் கேட்கவா வேண்டும்? பெற்ற தாயான தேவகிக்கும், தந்தை வசுதேவருக்குமே தனது குழந்தைப் பருவ லீலைகளைக் காட்ட மறுத்த மாயாவி ஆயிற்றே அவன்.

இப்போது தன் திருமணத்தை தன் தாய்க்கு காட்டுவதற்கான நேரம் வந்திருக்கிறது. லட்சுமியை கோபப்பட வைத்து, அவளை பூலோகத்துக்கு அனுப்பிவிட்டு, அறியாப்பிள்ளை போல அவரும் பின்னால் வந்து விட்டார். ஆண்டவனிடம் நாம் வைக்கும் கோரிக்கைகள் வீண்போவதில்லை. பெரும் தாமதமாகுமே தவிர, நிச்சயம் கேட்டதைத் தருவான். நமது பொறுமையின் அளவு எவ்வளவு என்பதைச் சோதித்துப் பார்ப்பதில் அவனுக்கு அப்படி ஒரு ஆனந்தம்! பொறுமை பெருமை தரும் என்பது இதனால் தான்!பின்னர் வகுளாதேவி, சீனிவாசனை அழைத்து கொண்டு, அந்த மலையின் அதிபதியான வராஹ சுவாமியிடம் சென்றாள். அவரது ஆஸ்ரமத்தில் தான் வகுளாதேவி சேவை செய்து கொண்டிருந்தாள். இவர் யார் என்பது ஒரு கதை.பெருமாள் தசாவதாரம் எடுத்தாரே! அதில் பன்றியின் முகம் கொண்ட வராஹ அவ தாரமும் ஒன்று. பன்றியை வராஹம் என்பர். அவர் இந்த அவதாரம் எடுக்க என்ன காரணம் தெரியுமா?ஜெயவிஜயர் என்னும் வைகுண்டத்தின் பாதுகாவலர்கள் சனக, சனகாதி முனிவர்கள் வைகுண்டம் வந்த போது அவர்களைத் தடுத்து பின் னோக்கி தள்ளினர். தங்கள் தவவலிமையை மதிக்காத அவர்களை ராட்சஷர்களாக பிறக்கும்படி முனிவர்கள் சபித்தனர். அவர்கள் தங்களை மன்னிக்குமாறு வேண்டவே, மூன்று பிறவிகள் மட்டும் மகாவிஷ்ணுவுக்கு எதிரிகளாக இருந்து மீண்டும் வைகுண்டம் சேர வரமளித்தனர். அதன்படி அவர்கள் இரண்யகசிபுவாகவும், இரண்யாட்சனாகவும் பூலோகத் தில் ஒரு பிறவியை எடுத்தனர். இரணியன், மகாவிஷ்ணுவின் நரசிம்ம வடிவத்தால் மரணமடைந்தான். இரண்யாட்சன், பூமியைப் பாய்போல் சுருட்டி பாதாளத்துக்குள் ஒளித்து வைத்தான்.

தேவர்கள் இதுபற்றி மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர்.அவர் வராஹ அவதாரமெடுத்து, பூமியைத் தோண்டி உள்ளே சென்று இரண்யாட்சனை அழித்தார். பூமியை மீட்டு வந்தார். இதனால் தேவர்கள் அவரை பூவராஹசுவாமி எனப் புகழ்ந்தனர். அவர் தன் அவதாரத்துக்குப் பிறகு, திருமலையில் தங்கி விட்டார். (திருப்பதியில்வெங்கடாசலபதி கோயில்புஷ்கரணி (தெப்பக்குளம்) கரையில் அவரது கோயில் உள்ளது குறிப்பிடத்தக்கது).சீனிவாசனைப் பார்த்ததும், வராஹசுவாமி தன்னிலை மறக்காமல், அவரும் தானும் ஒன்றே என்பதை அறிந்தார். இருப்பினும், அதை பூலோகத்தார் கண் களுக்கு காட்டாமல், ஏதும் அறியாதவர் போல், அவர் யார், என்ன விபரமென விசாரித்தார்.சீனிவாசன் அவரிடம்,ஐயனே! நான் இத்தலத்தில் வசிக்க வேண்டும் என வந்திருக்கிறேன். தாங்கள் இடம் கொடுத்தால் இங்கேயே கோயில் கொள்வேன், என்றார்.அதற்கு வராஹசுவாமி, சீனிவாசா! உனக்கு என்ஆஸ்ரமத்தின் அருகிலுள்ள இடத்தையே தருகிறேன். ஆனால், நீ அதற்கு வாடகை தர வேண்டும், என்றார்.சீனிவாசன் அவரிடம், சுவாமி! என் கதையைக் கேளுங்கள். என் மனைவி லட்சுமி என்னிடம் இருந்த வரை நான் செல்வந்தன். இப்போது அவள் என்னை விட்டுப் பிரிந்து விட்டாள். பணம் நிலையாதது என்பது தாங்கள் அறியாததல்ல. இந்த நிமிடம் வரை பணத்தில் புரள்பவன், ஏதோ ஒரு அதிர்ச்சி தகவலால் மறுநிமிடமே ஒன்றுமில்லாதவனாகி விடுகிறான். பணத்தின் தன்மை அத்தகையது. லட்சுமி என்னிடம் இல்லாததால், என்னிடம் அறவே பணமில்லை. என்னால் வாடகையோ, இடத்திற்கு விலையோ தர இயலாது. ஆனால், ஒரு சகாயம் மட்டும் என்னால் செய்ய இயலும், என்றார்.அது என்ன? என்று கேட்டார் வராஹசுவாமி.


Offline Anu

Re: ஏழுமலையான்
« Reply #9 on: March 16, 2012, 10:57:42 AM »
ஏழுமலையான் பகுதி-10

சுவாமி! நான் கலியுகத்தில் மக்கள் படும் கஷ்டங்களை  துடைப்பதற்காக பூமிக்கு வந்தவன். நானும் நீங்களும் ஒன்றே. நாராயணனான நாம், மக்களின் நன்மை கருதி, பல்வேறு அவதாரங்கள் எடுத்தோம். தாங்கள் அவதாரம் முந்தைய யுகங்களைச் சார்ந்தது. அன்று மக்களிடம் ஒழுக்கம் இருந்தது. கலியுகத்தில், பாவம் செய்வோரே அதிகமாக இருப்பர். ஒழுக்கமாக இருக்க வேண்டும் என நினைப்போர் கூட சந்தர்ப்ப சூழ்நிலையால் பாவம் செய்வர். மகான்கள் அவர்களுக்கு நல்வழி காட்டினாலும் ஏளனமாகவே பேசுவர். இறைவழிபாடு பற்றி பேசுபவர்களை பைத்தியக்காரர்கள் போல் பார்ப்பார்கள். எனவே, அவர்களது பாவங்களைக் கழுவுவது எனது பணி. அதற்காகவே, நான் இங்கு அவதாரம் எடுத்து வந்துள்ளேன். இந்த அளப்பரிய பணியைச் செய்வதால், தாங்கள் இலவசமாகவே எனக்கு இடம் தந்து உதவ வேண்டும். அதற்குப்பதிலாக என்னை வணங்க வருவோர், தங்களை முதலில் வணங்கியபிறகே என்னை வணங்க வேண்டும் என்ற விதிமுறையை உருவாக்குகிறேன், என்றார்.வராஹசுவாமியும் லோகநன்மை கருதி இதற்கு சம்மதித்தார். பின்னர் சீனிவாசன், வராஹசுவாமி தங்கிய இடத்தின் அருகிலேயே கோயில் கொண்டார். இதனிடையே சீனிவாசன்திருமலையில் குடிகொண்டிருப்பதை அறிந்த லட்சுமி பிராட்டியார் அவரை அடைய வேண்டிய ஏற்பாடுகளை செய்தார். பூமியில் மானிட அவதாரம் எடுத்துள்ள சுவாமியை தானும் மானிட வடிவெடுத்தே அடைய முடியும் என்பதால் தாயாரும் அவ்வாறான வடிவமே எடுக்க முடிவெடுத்தாள். அவள் அவ்வாறு மானிடப்பிறப் பெடுக்க காரணமும் இருந்தது. ஒரு காலத்தில் பத்மமகாராஜன் என்ற மன்னன் தன் நாட்டை ஆண்டு கொண்டிருந்த போது குழந்தை இல்லாத காரணத்தால், தன் மனைவியோடு இணைந்து வரலட்சுமி விரதம் அனுஷ்டித்தான். இந்த விரதத்தின் பலனாக அவனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தாள். அவளுக்கு மாசுலுங்கி என்று பெயர் வைத்தான். இதற்கு களங்கமில்லாதவள் எனப்பொருள். அவள் வளர்ந்தாள். கல்யாணப் பருவத்தின் வாசலில் நின்றாள். அந்தப் பெண்ணின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

அழகு என்றால் சாதாரண அழகல்ல. பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகு படைத்தவள். கவிஞர்கள் அவளை வர்ணிக்க ஆரம்பித்தால் உலகிலுள்ள ஏடுகள் போதாது. பரந்தாமன் பள்ளிகொண்டிருக்கும் உலகின் மிகப்பெரிய பாற்கடலை திரைச்சீலையாக விரித்து எழுதினால் கூட அதில் அடங்கிவிடுமா என்பதே சந்தேகம். அழகு தான் அப்படிப்பட்டதென்றால் குணம் தங்கம். பக்தி சிரத்தை மிக்கவள். எம்பெருமான் நாராயணனை மனதில் எண்ணி அவன் நாமத்தையே உச்சரித்தவள். ஒரு கட்டத்தில் மணந்தால் அந்த நாராயணனையே மணப்பது என்று முடிவெடுத்து விட்டாள்.மன்னன் பத்மராஜன் மகளைப் பார்த்து சிரித்தான்.அட பைத்தியமே! மானிட ஜென்மம் எடுத்தவள், நாராயணனை எப்படி பர்த்தாவாக அடையமுடியும்?தந்தையின் கேலியை அவள் பொருட்படுத்தவில்லை. அவளது பக்தி ஆழமானது. தன்னை மணம் முடிக்க அந்த நாராயணன் வந்தே தீருவான் என்பதில் உறுதியாக இருந்தாள். மாசுலுங்கியின் பேரழகு பற்றி கேள்விப்பட்ட மன்னர்கள் பெரும் பொருள் கொடுத்தேனும் அவளை திருமணம் செய்து கொள்வதென போட்டியிட்டனர். அவளை யார் மணம் முடிக்க முயன்றாலும், அவனை வென்றோ கொன்றோ நாம் மணம் புரிந்து விட வேண்டும் என்று மன்னர்களுக்குள் போட்டி ஏற்பட்டது. மகளை இன்னும் வீட்டில் வைத்திருப்பது நல்லதல்ல, அவளுக்கு உடனடியாக தகுந்த கணவனைத் தேர்வு செய்ய வேண்டும் என்று மன்னன்முடிவெடுத்தான்.இருப்பினும், தன் முடிவை விட மகளின் முடிவே அவளுக்கு பிரச்னையின்றி இருக்கும் என்பதால், தனக்குப் பிடித்த மணாளனை அவளே தேர்ந்தெடுக்கட்டுமென சுயம்வரத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டான். மன்னாதி மன்னர்களெல்லாம் குவிந்தனர். இலங்கை பேரரசன் ராவணன் அவளைப் பற்றி கேள்விப்பட்டு, அப்படிப் பட்ட பேரழகு பெட்டழகம் தன் அரண்மனையை மட்டுமே அலங்கரிக்க வேண்டும். நம்மை எதிர்ப்பாரும் பூமியில் உண்டோ என்ற ரீதியில் வானமார்க்கமாக இலங்கையில் இருந்து வந்து சேர்ந்தான்.

ராவணன் வந்திருக்கிறான் என்று தெரிந்ததுமே பல தேசங்களில் இருந்தும் வந்திருந்த மன்னர்கள் எல்லாரும், உயிர் பிழைத்தால் போதுமடா சாமி! இவனை எதிர்க்க யாருக்குத் துணிவுண்டு. ம்... அவன் கொடுத்து வைத்தவன். மாசுலுங்கியை மனைவியாக அடையும் பெரும் பாக்கியத்தைப் பெற்றுவிட்டான் என்றவர்களாய், சுயம்வர மண்டபத்தில் இருந்து ஓடிவிட்டனர்.ராவணன் மாசுலுங்கியிடமும் அவளது தந்தையிடமும் சென்று, பார்த்தீர்களா! பராக்கிரமம் என்றால் இதுவல்லவோ பராக்கிரமம். என்னை கண்டதும் உலகிலுள்ள அத்தனை அரசர்களும் ஓடிவிட்டார்கள் என்றால் என்னிலும் வலிமையானவன் உண்டோ! இந்த வீரத்துக்கு மதிப்பளித்து, மாசுலுங்கி எனக்கே சொந்தமாக வேண்டும். பத்மராஜா! உன் மகளை எனக்குத் திருமணம் செய்து வை, என்று அதிகார தோரணையுடன் கூறினான்.மாசுலுங்கியோ மறுத்து விட்டாள்.சீ ராட்சஷனே! உன்னை மட்டுமல்ல! இங்கு வந்திருந்த எந்த அரசனின் கழுத்திலும் நான் மாலை போட்டிருக்கமாட்டேன். அப்படியானால், ஏன் சுயம்வர மண்டபத்துக்கு வந்தாய் என நீ கேட்கலாம். ஸ்ரீமன் நாராயணன் எங்கும் இருப்பவர். என் பக்தியை பாராட்டி நிச்சயம் அவர் இங்கு வருவார் என்ற நம்பிக்கையுடனேயே இந்த மண்டபத்தில் கால் எடுத்து வைத்தேன். உன்னைப் போன்ற பெண் பித்தர் களுக்கு வாழ்க்கைப்பட மாட்டேன். மரியாதையாக ஓடிவிடு, என்றாள். ராவணனை தன் மகளுக்கு பிடிக்கவில்லை என்பதால், அவனை அவையில் இருந்து வெளியேறும் படி பத்மமகாராஜனும் கேட்டுக் கொண்டான். ஆனால், கொடிய ராவணன் விடுவானா! மாசுலுங்கியை பலவந்தமாக தூக்கிச் செல்ல அருகில் நெருங்கினான். பத்மராஜன், மகளை  காப்பாற்றும் நோக்கத்தில் ராவணனைத் தடுக்க வரவே, தன் வாளை உருவிய ராவணன் பத்மராஜனை வெட்டினான். பத்மராஜனின் தலை உருண்டது.அப்பா! மாசுலுங்கியின் அலறல் அரண்மனையையே நடுங்கச் செய்தது. மணவீட்டை பிணவீடாக்கிய கொலைகார ராவணன் அதைப் பொருட்படுத்தாமல், அவளை அடைய விரும்பி நெருங்கினான்.


Offline Anu

Re: ஏழுமலையான்
« Reply #10 on: March 16, 2012, 10:59:03 AM »
ஏழுமலையான் பகுதி-11

மாசுலுங்கி அவனது பிடியில் இருந்து தப்பி ஓடினாள். நமக்கு ஆபத்து வரும் காலத்தில் ஹரி ஹரி ஹரி ஹரி என்று விடாமல் சொல்லிக் கொண்டே இருந்தால் அந்த ஆபத்தில் இருந்து தப்பிவிடலாம். அதையே மாசுலுங்கியும் செய்தாள். ஹரிநாமத்தை சொல்லியபடியே அவள் ஓடிச்சென்று, முனிவர்கள் வேதம் ஓதிக் கொண்டிருந்த ஒரு இடத்தை அடைந்தாள். அவர்கள் முன்னால் மயங்கி விழுந்தாள். அவள் யார் என்றும், பெயர், ஊரும் தெரியாதததால் முனிவர்களுக்கு அவளை என்ன சொல்லி அழைப்பதென தெரியவில்லை. தாங்கள் வேதம் ஓதும்போது அவர்கள் முன் வந்ததால்வேதவதி என பெயர் சூட்டினர். பின்னர் அவளுக்கு மயக்கம் தெளிவித்தனர். அவள் அவர்கள் இருந்த இடத்திலேயே தங்கி, தவம் செய்ய ஆரம்பித்தாள். சிலநாட்கள் அவள் இருந்த இடம் தெரியாமல் இருந்த ராவணன், வானமார்க்கத்தில் மிதந்து அவள் தவம் செய்து கொண்டிருந்ததைப் பார்த்து விட்டான். அவள் ஹரிநாமத்தை உச்சரித்தபடியே தியானம் செய்து கொண்டிருந்தாள். அவள் முன்னால் வந்த ராவணன் ஆசையுடன் அவளது கன்னத்தைத் தொட்டான். கண்களை மூடியிருந்தததால் அவன் வந்ததை அறியாத வேதவதி, தன் கன்னத்தில் ஏற் பட்ட ஸ்பரிசத்தை உணர்ந்து திடுக்கிட்டு விழித்தாள். அடியே! அங்கிருந்து ஓடிவந்து இந்த முனிவர்களின் பாதுகாப்பில் தங்கியிருக்கிறாயே! பலவீனர்களான இவர்கள் உன்னைக் காப்பாற்றுவார்கள் என நம்பி வந்தாயா? அது மட்டுமல்ல! இந்த ராவணனை எதிர்க்க எவரும் பூமியில் இல்லை என்பதை அறிந்துமா இப்படி செய்தாய்? என்று ஆணவத்தோடு அவனது பத்து வாய்களும் பேசின.நான் ஹரி பக்தை. அந்த ஹரி என்னைப் பாதுகாப்பார், என்று ஆணித்தரமாக பேசினாள் வேதவதி.

ராவணன் அதைப் பொருட்படுத்தாமல் அவளை அடைய முயன்ற போது,துஷ்டனே நில்! எவன் ஒருவன் பெண்களைத் துன்புறுத்துகிறானோ அவன் நன்றாக வாழ முடியாது. நீசனே! உன் நிலையும் அப்படித்தான் ஆகப்போகிறது. உன்னிடம் சிக்கிக்கொள்ள நான் விரும்பவில்லை. இதோ, முனிவர்கள் வளர்த்த ஹோமகுண்டத்தில் தீ எரிந்து கொண்டிருக்கிறது. அதில் விழுந்து உயிர்விடுவேனே தவிர, உன் இச்சைக்கு அடி பணியமாட்டேன். ஆனால், ஒன்றை நினைவில் வைத்துக் கொள், பெண்ணாசை பிடித்த உன்னுடைய அரசாங்கம் ஒரு பெண்ணால் வீழும் என்று சாபம் விடுக்கிறேன். இது சத்தியம், என்றபடியே அக்னி குண்டத்தில் குதித்தாள். அக்னிதேவன் அவளை ஏற்றுக் கொண்டு, பெண்ணே! என்னுள் விழுந்த நீ உலகத்தார் கண்களுக்கு மட்டுமே சாம்பலாகத் தெரிவாய். நீ உன் உடலுடன் தான் இருப்பாய். மகாவிஷ்ணு பக்தையான உனக்கு அவருக்கு சேவை செய்யும் காலம் வரை இப்படியே இரு. அவர் விரைவில் ராமாவதாரம் எடுக்கப்போகிறார். லட்சுமிதேவி சீதையாக பிறக்கிறாள். உன் சாபப்படி, ராவணனின் அழிவு நிகழும், என்றார். அது எப்படி அக்னிதேவா? என்றாள் வேதவதி. பெண்ணே! சீதையைக் கடத்த ராவணன் வருவான். அப்போது, நிஜமான சீதையை நான் என் பத்தினி ஸ்வாஹா தேவியிடம் ஒப்படைத்து விடுவேன். நீ சீதையைப் போல் உருமாறி, ஒரு குடிசையில் தங்கியிருப்பாய். உன்னை நிஜ சீதையென நினைத்து ராவணன் கடத்திச் செல்வான். மகாவிஷ்ணு ராமனாய் தோன்றி, உன்னை மீட்டுச் செல்வார், என்றதும், அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.அக்னிபகவான் சொன்னபடியே ராமாவதார காலத்தில் அனைத்தும் நடந்தேறின. சீதை வேடத்தில் இருந்த வேதவதியை ராமபிரான் மீட்டு, ராவணனை அழித்தார்.  அவரிடம் வேதவதி, ஸ்ரீராமா! உலகம் என்னை இப்போது தங்கள் மனைவியாகத் தான் அங்கீகரித்துள்ளது. தாங்கள் தயவுசெய்து என்னை மணம் செய்து கொள்ள வேண்டும். க்ஷத்தியர்கள் (அரசர்கள்) பல திருமணங்கள் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்ட ஒன்றுதானே! என்றாள்.

அவளிடம் ஸ்ரீராமர்,பெண்ணே! நான் இந்த அவதாரம் எடுத்ததன் நோக்கமே ஏகபத்தினி விரதத்தை நிறைவேற்றத்தான். இந்தப்பிறவியில், நான் இன்னொரு பெண்ணை ஏறெடுத்தும் பார்க்கமாட்டேன். கலியுகத்தில் நான் சீனிவாசனாக அவதாரம் செய்வேன். அப்போது நீ வேங்கடமலை பகுதியை ஆளும் ஆகாசராஜ மன்னனின் புதல்வியாகப் பிறப்பாய். அப்போது, உன்னை மணந்து கொள்கிறேன், என்றார். திருப்பதியில் இருந்து இருபது கல் (முப்பது கி.மீ.,) தொலைவில் நாராயணவனம் என்ற ஊர் இருந்தது. இப்போது அவ்வூர் நாராயணபுரம் என அழைக்கப்படுகிறது. அக்காலத்தில் அது மிகப்பெரிய நகரமாக இருந்தது. அவ்வூரை தலைநகராகக் கொண்டு, சுதர்மன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். மகாவிஷ்ணு பூமிக்கு வந்து புளியமரப் புற்றில் இருந்தபோது, பசு பால் கறந்ததன் காரணமாக சபிக்கப்பட்ட சோளராஜ மன்னன், விஷ்ணுவின் சாபத்தால் பேயாக அலைந்தான் அல்லவா? அவன் தனது சாபகாலம் நீங்கி, சுதர்மனுக்கு குழந்தையாகப் பிறந்தான். அந்தக் குழந்தைக்கு ஆகாசராஜன் என்று பெயர் வைத்தனர். ஒருநாள் சுதர்மன் திருவேங்கடமலையிலுள்ள கபில தீர்த்தத்தில் நீராடிக் கொண்டிருந்தான். அப்போது, நாகலோகத்தில் இருந்து ஒரு கன்னிகை அங்கு வந்தாள்.பேரழகு பெட்டகமான அவளைப் பார்த்தவுடனேயே சுதர்மனுக்கு அவள் மீது காதல் ஏற்பட்டது.தீர்த்தக்கரையிலேயே தன் காதலை அவளிடம் வெளிப்படுத்தி விட்டான். சுதர்மனும் நல்ல அழகன் என்பதால், அந்தப் பெண்ணும் அவனது காதலை ஏற்றாள். அவர்கள் கந்தர்வமணம் புரிந்து கொண்டனர். அவர்களுக்கு தொண்டைமான் என்ற மகன் பிறந்தான்


Offline Anu

Re: ஏழுமலையான்
« Reply #11 on: March 16, 2012, 11:00:19 AM »
ஏழுமலையான் பகுதி-12

ஒரு கட்டத்தில், நாககன்னிகை குழந்தையை சுதர்மனிடம் ஒப்படைத்து விட்டு தனது லோகத்துக்கு போய்விட்டாள். குழந்தை தொண்டைமானை அழைத்துக் கொண்டு சுதர்மன் அரண்மனை வந்து சேர்ந்தான். சுதர்மனின் இறுதிக்காலம் வந்தது. தொண்டைமானை ஆகாசராஜனிடம் ஒப்படைத்து, தன் உடன்பிறந்த தம்பியாக நடத்தும் படி கேட்டுக் கொண்டான். ஆகாசராஜனுக்கு முடி சூட்டப்பட்டது. பின்னர், ஆகாசராஜனுக்கு திருமணம் நடந்தது. தரணிதேவி என்ற மாதரசி, அவனது இல்லத் தரசியானாள். நாட்டின் மகாராணியானாள். அவள் மிகுந்த அன்புடையவள். நாட்டு மக்களை அவர்கள் தங்கள் குழந்தைகள் போல நடத்தினர். செங்கோலாட்சி செய்தனர். மக்களை தங்கள் குழந்தைகள் போல பாவித்த அந்த நல்லவர்களது வீட்டில் மழலைக் குரல் ஒலிக்கவில்லை. ஆகாசராஜன் பெருமாளிடம் தனக்கு குழந்தை வரம் கேட்டு தினமும் பக்திப்பூர்வமாக வணங்கி வந்தான். ஆகாசராஜனின் குல குருவே சுகப்பிரம்ம முனிவர். சுகம் என்றால் கிளி. அந்த முனிவர் கிளி முகம் கொண்டவர். வியாசரின் புத்திரர் அவர். அந்த மகாமுனிவர் ஒருநாள் அரண்மனைக்கு வந்தார். அவரை வரவேற்ற ஆகாசராஜன் தம்பதியர் தங்கள் மனக்குறையை அவரிடம் தெரிவித்தனர். சுகப்பிரம்மர் அவர்களிடம்,  அன்புச் செல்வங்களே! உங்கள் வீட்டில் மழலைச் செல்வம் தவழ்ந்து விளையாட, நீங்கள் புத்திர காமேஷ்டி யாகம் செய்ய வேண்டும். முன்னொரு காலத்தில் ஜனகமகாராஜா குழந்தை யில்லாமல் இருந்த வேளையில் இந்த யாகத்தைச் செய்து சீதாதேவியை மகளாக அடைந்தார். நீங்களும் அந்த யாகத்தை செய்தால் ஸ்ரீலட்சுமி நரசிம்மரின் அருளால் உங்களுக்கு புத்திர பாக்கியம் கிடைப்பது நிச்சயம், என்றார்.

மகான்களின் வாக்கு தவறுவதில்லை. அதிலும் தெய்வமுனிவரான சுகப்பிரம்மர் ஒன்றைச் சொல்லி அது மாறுமா என்ன! அவர் என்ன சாதாரணமானவரா! தவ வலிமை மிக்கவர் அல்லவா! குலகுருவின் யோசனையை கட்டளையாக ஏற்ற ஆகாசராஜனும், தரணி தேவியும் யாக ஏற்பாடுகளை  செய்தனர். யாகத்திற்குரிய நிலம் தேர்வு செய்யப் பட்டது. யாகம் செய்யும் இடத்தில் நிலத்தை சமப்படுத்து வதற்காக, ஆகாசராஜன் தங்கக்கலப்பை கொண்டு உழுதான். சரியாக சென்று கொண்டிருந்த கலப்பை ஒரு இடத்தில் டங் என்ற சப்தத்துடன் நின்றது. ஏதோ ஒரு பொருள் நிலத்துக்குள் இருக்கிறது என்பதை  தெரிந்து கொண்ட ஆகாசராஜன், அந்த இடத்தைத் தோண்டும்படி உத்தரவிட்டான். ஏவலர்கள் அதைத் தோண்டி, உள்ளிருந்து ஒரு பெட்டியை எடுத்தனர். ஆகாசராஜன் அதைத் திறந்து பார்த்தான். அந்தப் பெட்டியில் இருந்து பிரகாசம் கிளம்பியது, பெட்டியில் இருந்து மட்டுமல்ல! ஆகாசராஜன் தம்பதியரின் முகத்திலும் ஒளி வெள்ளம்! மகிழ்ச்சியில் அவர்கள் பூரித்துப் போனார்கள். அந்தப் பெட்டிக்குள் ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூ இருந்தது. அதன் நடுவில் இருந்த ஒரு பெண் குழந்தை இவர்களைப் பார்த்து சிரித்தது. ஆஹா! பூமியில் இருந்து ஒரு பொக்கிஷத்தை யாகம் நடத்தும் முன்பே ஆண்டவன் தந்துவிட்டான், என்று அவர்கள் மனம் மகிழ்ந்து கூறினார்கள். சுகப்பிரம்மர், மற்ற முனிவர்கள் எல்லார் முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவமாடியது. தெய்வப்பிறவியல்லவா இந்த பெண்மகள், என்று அவர்கள் குழந்தையைக் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில், ஆகாசவாணி (அசரிரீ என்னும் ஆகாயத்தில் இருந்து எழும் குரல். வானில் மிதந்தபடி ஒலி அலைகளை சுமந்து வருவதால் தான் நமது இந்திய வானொலிக்கு ஆகாசவாணி என்று பெயர் வைத்தனர்) ஒலித்தது. ஆகாசராஜா! நீ கொடுத்து வைத்தவன். உன் முன்ஜென்ம புண்ணியத்தின் காரணமாக நீ இந்தப் பெண்ணை மகளாகப் பெற்றாய். இந்தக் குழந்தையால் உன் வம்சமே புகழ்பெறபோகிறது, என்று சொல்லி மறைந்தது.

ஆகாசராஜன் மகிழ்வுடன் குழந்தையைக் கையில் எடுத்து உச்சி மோந்தான். பத்து மாதம் சுமக்காமல் பெற்ற பிள்ளையாயினும், தெய்வக்குழந்தையை வளர்க்கும் பாக்கியத்தைப் பெற்றேனே என தரணிதேவியும் ஆனந்தம் கொண்டாள். யாகம் ஆரம்பிக்கும் முன்பே குழந்தை பிறந்துவிட்டாலும் கூட, துவங்கிய யாகத்தை நிறுத்தக்கூடாது என அதையும் சிறப்பாக செய்து முடித்தனர். ன்னர் ஆகாசராஜன் சுகப்பிரம்மரிடம், குருவே! எங்கள் செல்லக் குழந்தைக்கு தாங்கள் தான் பெயர் சூட்டியருள வேண்டும், என்றான்.இந்தக் குழந்தை தாமரையில் இருந்து வந்தவள். தாமரையை பத்மம் என்பர். பத்மத்தில் இருந்து தோன்றிய இவள் பத்மாவதி எனப்பட்டால் பொருத்தமாக இருக்கும், என்றார் சுகப்பிரம்மர். அந்தக் கருத்தை சிரமேல் ஏற்ற ஆகாசராஜன் அந்தப் பெயரையே குழந்தைக்கு சூட்டினர். இருப்பினும், யாகத்தின்  பலனும் தரணிதேவிக்கு கிடைத்தது. சில காலம் கழித்து அவள் கர்ப்பமானாள். ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு வசுதானன் என்று பெயரிட்டனர். பெண் குழந்தையும், ஆண் குழந்தையும் ஒரே நேரத்தில் கிடைக்க, பிள்ளையில்லாமல் இருந்த அந்த தம்பதிகள் ஆனந்தமாய் அவர்களை வளர்த்து வந்தனர். பதினைந்து ஆண்டுகள் உருண்டோடி விட்டன. செல்வச்சீமாட்டியாக வளர்ந்தாள் பத்மாவதி. பிறகென்ன! லட்சுமி புகுந்த வீட்டிலேயே செல்வம் செழிக்குமென்றால், லட்சுமி பிறந்த வீட்டில் செல்வ வளத்துக்கு என்ன குறை இருக்கும்! அவள் பட்டிலும், படாடோபத்திலும் புரண்டாள். அவளுக்கும் சுகப்பிரம்ம மகரிஷியே குருவாக இருந்து சகல கலைகளையும் கற்றுத்தந்தார். பதினைந்து வயது பருவமங்கை! அவளது அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.ஒருநாள் வெள்ளிக்கிழமை. புனிதமான ஆன்மிக நாள். அன்று பூஜைகளை முடித்த பிறகு, அரண்மனையின் அந்தப்புரத்தில் தன் தோழிகளுடன் பத்மாவதி விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது, கலகக்காரரான நாரத மகரிஷி அரண்மனைக்கு வந்து சேர்ந்தார்
.


Offline Anu

Re: ஏழுமலையான்
« Reply #12 on: March 16, 2012, 11:02:16 AM »
ஏழுமலையான் பகுதி-13

நாரத முனிவரைப் பணிவுடன் வரவேற்றாள் பத்மாவதி.அப்போது அவளுக்கு பதினைந்து வயது. பருவத்துக்கு வந்துவிட்ட மங்கை. நம் வீட்டுக்கு வரும் அழகான மருமகளை எங்கவீட்டு மகாலட்சுமி என்று பெருமையுடன் சொல்வோம். ஆகாசராஜனின் மகளாக மகாலட்சுமியே வந்திருக்கிறாள். பிறகென்ன! கேட்கவா வேண்டும்! அழகு ரதமாகத் திகழ்ந்தாள் அவள். அவளைப் பார்ப்பவர்கள் அப்படியே மெய் மறந்து போவார்கள். அந்த பேரழகு பெட்டகத்துக்கு திருமணத்துக்குரிய நேரம் வந்துவிட்டது. அதைச் சொல்லத்தானே நாரதர் வந்திருக்கிறார். வழக்கமாக அவர் கலகம் செய்வார். தந்தையைக் கூட கலக்கி விடுவார். ஆனால், தன் தாயான மகாலட்சுமிக்கு அவர் திருக்கல்யாணம் நடத்திப் பார்க்க வந்திருக்கிறார். ஆனாலும், அதை வெளிக் காட்டாமல், குழந்தை பத்மாவதி! சீக்கிரமேவ கல்யாண பிராப்திரஸ்து, என்றார். பத்மாவதியின் தாமரைக் கன்னங்களில் செம்பருத்தியை பிழிந்து விட்டது போல அப்படி ஒரு சிவப்பு... வெட்கத்தில் குனிந்து நின்றாள். கால்கள் கோலமிட்டன. அவளை அருகில் அமர்த்தி, பத்மா! உன் இடது கையைக் கொடு, என்றார். பத்மாவதி பணிவுடன் கைகளை நீட்டினாள். ஆஹா.. இவ்வுலகில் உன் ஒருத்திக்கு மட்டுமே இப்படி ஒரு ரேகை! உன் கையிலுள்ள த்வஜ ரேகையும் மத்ஸ்ய ரேகையுமே சொல்லிவிட்டன! நீ அரண்மனையில் வாழப் பிறந்தவள் என்று! பத்மரேகையோ நீ செல்வவளமிக்கவள் என்பதையும், தன தான்ய பிராப்திமிக்கவள் என்பதையும் சொல்கின்றன. உன் ரேகைகளின் அடிப்படையைப் பார்த்தால், நீ எம்பெருமான் நாராயணனுக்கு மனைவியாகப் போகிறாய் என்பது தெளிவாகத் தெரிகிறது. சந்தோஷம் தானே, என்றார் புன்னகைத்தபடியே! பத்மாவதிக்கு வெட்கம் பிடுங்கித்தின்றாலும், அந்த நாராயணன் எனக்கு மணாளனாகப் போகிறாரா...ஆஹா.. நான் கொடுத்து வைத்தவள் என்ற எண்ண மேலீடு பரவசத்தையும் தந்தது.நாரதர் அவளை ஆசிர்வாதம் செய்து புறப்பட்டார்.

இதனிடையே, வகுளாதேவியின் பொறுப்பில் இருந்த சீனிவாசன், சுட்டிப்பிள்ளையாகத் திகழ்ந்தார். ஒரு பொழுதும் சும்மா இருப்பதில்லை. சேஷ்டை என்றால் சாதாரண சேஷ்டை இல்லை! காட்டுக்குப் போக வேண்டும், வேட்டையாட வேண்டும், இன்னும் பல சாகசங்கள் செய்ய வேண்டும் என்ற விருப்பம் வேறு! நல்ல பிள்ளைகள் தாயை மதித்தே நடப்பார்கள். தாயிடம் கெஞ்சிக் கூத்தாடியாவது தங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளவும் செய்வார்கள். சீனிவாசனும் அதையே செய்தார். இருபது வயது மதிக்கத்தக்க கட்டிளங்காளை அவர்! கட்டு மஸ்தான உடம்பு. நீலவண்ண மேக நிறம். உதடுகளில் சாயம் பூசி சிவப்பாக்கிக் கொண்டார். அங்கவஸ்திரத்துடன் அம்மா வகுளாதேவி முன் வந்து நின்றார். அம்மா,...பேச்சில் கடும் குழைவு. ஏதாவது, கோரிக்கை வைக்க வேண்டுமென்றால், நம் வீட்டுக்குழந்தைகள் அம்மாவிடம் குழைவார்களே! அதே குழையல்! என்னடா, நான் இன்றைக்கு காட்டுக்குப் வேட்டைக்குப் போக வேண்டும். மாலையே வந்து விடுகிறேன் அம்மா! இந்தக் காட்டில் நான் சுற்றாத இடமில்லை. எந்த இடமும் எனக்கு அத்துப்படி! போய் வருகிறேனே! என்றார் நளினமாக. என்ன! காட்டுக்கா... அதுவும் மிருக வேட்டைக்கா! வேண்டாமடா மகனே! நீ சுகுமாரன் அல்லவா! உனக்கு அது சரிப்பட்டு வருமா, என்றாள். சுகுமாரன் என்றால் சாந்த குணமுள்ளவன் என்று பொருள். காட்டுக்குப் போக வேண்டுமானால் பயப்படவே கூடாது, திடமனது வேண்டும், சாதுக்களுக்கு அங்கே வேலையில்லை. சீனிவாசன் இளைஞன். அவன் சேஷ்டைகள் செய்வான் என்றாலும், அதை ஊருக்குள் நிறுத்திக் கொள்வான்.

கிருஷ்ணாவதார காலத்தில் கோகுலத் திலுள்ள கோபியரை  கொஞ்சமாகவா படுத்தினான்!  இப்போது காட்டுக்குள் போக வேண்டும் என்கிறானே இந்த இளசு! இளங்கன்று பயமறியாது என்று சொன்னது சரியாகத்தான் போய்விட்டது போலும்! என்று எண்ணினாள் வகுளாதேவி. அம்மாவிடம் மீண்டும் கெஞ்சினார் சீனிவாசன். மனிதனாகப் பிறந்து விட்டால் பகவானுக்கே சோதனை வந்து விடுகிறது. காட்டுக்கும் நாட்டுக்கும் வீட்டுக்கும் அனைத்துக்கும் அவனே அதிபதியானாலும் கூட, ஒரு சின்ன விஷயத்துக்காக அம்மாவிடம் கெஞ்சுகிறான் அந்த பரந்தாமன்! அதாவது, தன்னை விட தன் பக்தனே உயர்ந்தவன் என்பதை இப்படிப்பட்ட நிகழ்வுகள் மூலம் எடுத்துக்காட்டுகிறான். பிள்ளைகள் கெஞ்சினால் பெற்றவளுக்கு பொறுக்குமா? இவள் பெறாத தாய் என்றாலும் கூட, அவளுக்கு தான் அவன் மீது கொள்ளைப் பிரியமாயிற்றே! சரி..சரி...போய் வா! மகனே! காட்டுக்குள் விலங்குகளிடம் கவனமாக நடந்து கொள். பத்திரமாக போய் வா! மாலையே வந்து விட வேண்டும்! இல்லாவிட்டால், நான் அங்கே வந்துவிடுவேன், என்று அன்பும் கண்டிப்பும் கலந்து சொன்னாள். சீனிவாசனுக்கு ஏக சந்தோஷம். அம்மாவிடம் ஆசி பெற்று புறப்பட்டார். மாணவர்கள் பள்ளி கல்லூரிக்கோ, நேர்முகத்தேர்வுக்கோ, பிற வகை பணிகளுக்கோ, வெளியூருக்குப் புறப்படும் போதோ, அம்மாவின் பாதத்தைத் தொட்டு நமஸ்கரித்து புறப்பட வேண்டும். அப்படி செல்லும் பணி நிச்சயம் வெற்றியடையும். கடமைக்காகவோ, பிறர் தன்னைப் பாராட்ட வேண்டுமே என்பதற்காகவோ, ஒரு சடங்காகக் கருதியோ மாத்ரு நமஸ்காரம் செய்பவர்களுக்கு வெற்றி கிடைக்காது. மனதார செய்ய வேண்டும். சீனிவாசனும் வேட்டையில் வெற்றி பெற புறப்பட்டார். காட்டுக்குச் சென்ற அவருக்கு புள்ளிமான் மட்டுமல்ல! அவர் மனதைக் கொள்ளை இன்னொரு மானும் ஒன்றும் கிடைத்தது.


Offline Anu

Re: ஏழுமலையான்
« Reply #13 on: March 16, 2012, 11:03:40 AM »
ஏழுமலையான் பகுதி-14

சீனிவாசன் காட்டுக்குள் சென்று சிங்கம், புலி முதலானவற்றைக் கொன்று குவித்தார். யானைகளை விரட்டியடித்தார். முள்ளம்பன்றிகள் அவரது முழக்கம் கேட்டு மூலைக்கொன்றாக சிதறி ஓடின. அப்போது ஒரு யானை அவரை போக்கு காட்டி காட்டுக்குள் இழுத்துச் சென்றது. எவ்வளவு வேகமாகச் சென்றாலும், அந்த யானையைப் பிடிக்கவோ, அம்பு விடவோ சீனிவாசனால் முடியவில்லை. அது வெள்ளை நிறத்தில் இருந்தது. அதைப் பிடித்தே தீருவதென கங்கணம் கட்டிய சீனிவாசன், பிரம்மாவை நினைத்தார். பிரம்மா பணிவுடன் அவர் முன் வந்து நின்றார். அவரது தேவையை அறிந்து பறக்கும் வெள்ளைக்குதிரை ஒன்றைக் கொடுத்தார். அதன் மீதேறிச் சென்ற சீனிவாசன் யானையை கணநேரத்தில் மடக்கி விட்டார். அந்த யானை இந்திரனுக் குரியது. அதன் பெயர் ஐராவதம். சீனிவாசனின் தரிசனம் தனக்கு வேண்டும், அதுவும் நீண்ட நேரம் வேண்டும் என நினைத்த அந்த யானை அவரை இவ்வாறு போக்கு காட்டி இழுத்தடித்தது. அது தன் முன்னால் வந்து நின்ற சீனிவாசனை மண்டியிட்டு வணங்கியது. அதற்கு அருள் செய்தார் சீனிவாசன். பின்னர் அந்த யானை மறைந்து விட்டது. அது மட்டுமல்ல! அந்த யானை காரணத்துடன் தான் அங்கே அவரை இழுத்து வந்தது. தான் ஏறி வந்த குதிரைக்கு அருகில் இருந்த ஒரு குளத்தில் தண்ணீர் காட்டிய சீனிவாசன், தானும் தாகம் தணித்து மர நிழலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, எங்கிருந்தோ இனிய கானம் ஒன்று கேட்டது. அது ஒரு பெண்ணின் குரல். ஆஹா...குரலே இப்படியென்றால், அந்தப் பெண் அதிரூப லாவண்யத்துடன் இருப்பாளோ! அவளைப் பார்த்தாக வேண்டுமே, என தனக்குள் சொல்லியபடியே குரல் வந்த திசை நோக்கி கவனித்தார் சீனிவாசன். அவள் பாடும் போது, இன்னும் பல பெண்கள் சிரிப்பை சிதறவிட்டபடியே அவளுடன் பேசுவது தெரிந்தது. நேரமாக ஆக, அவர்களின் குரல் அவர் தங்கியிருந்த அரசமரத்தை நெருங்கியது.

ஆனால், பல பேரழகுப் பெண்கள் புடைசூழ நடுவிலே தேவலோகத்து ரம்பை ஊர்வசி, திலோத்துமை இவர்களின் ஒட்டுமொத்த அழகையும் ஒன்றாகக் கோர்த்தது போன்ற பிரகாச முகத்துடன் ஒரு பெண் பாடிய படியே வந்து கொண்டிருந்தாள். சீனிவாசன் அசந்து விட்டார். அழகென்ற சொல்லே இல்லாதவர்களிடையே கூட கண்டதும் காதல் உருவாகி விடுகிறது. இவளோ பேரழகு பெட்டகம். சீனிவாசன் அவள் மீது காதல் கொண்டு விட்டார். அவர் தைரியமாக அவர்கள் முன் சென்றார். அவரைப் பத்மாவதியும் தோழிகளும் கவனித்து விட்டனர். யாருமே நுழைய முடியாத, என் தந்தை ஆகாசராஜனால் தடை விதிக்கப்பட்ட காட்டுப்பகுதிக்குள் வந்துள்ள இவர் யார் என்று விசாரித்து வாருங்கள், என தோழிகளுக்கு உத்தரவிட்டாள். அந்த சொப்பன சுந்தரிகள் அனைவரும் சீனிவாசனை நோக்கி வந்தனர். ஏ நீ யார்? இங்கே எதற்காக வந்தாய்? இது எங்களைத் தவிர பிறர் நுழைய தடை செய்யப் பட்ட இடமாக எங்கள் மகாராஜாவால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. உம்மைப் பற்றி விசாரிக்கச் சொல்லி அதோ! அங்கே நிற்கும் எங்கள் இளவரசியாரின் உத்தரவு! உம்...பதில் சொல்லும், என மிரட்டும் தொனியில் கேட்டனர். லோகநாயகனை மனிதர்கள் புரிந்து கொள்வதே இல்லை! கடவுளா, அப்படியென்றால் யார்? என்று தான் இன்றுவரை கேட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆண்டவன் அதுபற்றி கவலைப் படுவதில்லை. தன்னைப் பற்றிய ஆராய்ச்சி தொடர்கிறதே! அப்போதாவது, மனிதன் நம்மை நினைக்கிறானே என்று சொல்லிக் கொள்கிறான். கடவுள் என்றாலும் மானிட வடிவில் வந்துள்ளவனை அந்தச் சாதாரணப் பெண்கள் புரிந்துகொள்ளாமல் கேட்டார்கள். சீனிவாசன் பதில் சொன்னார். நான் யார் என்று எனக்குத் தெரியாது. நான் ஒரு தனி ஆள். எனக்கு தாயும் இல்லை, தந்தையும் இல்லை. இருப்பிடம் மட்டும் தெரியும்! நான் சேஷாசலத்தில் குடியிருக்கிறேன், என்று பதிலளித்தார் சீனிவாசன்.பத்மாவதியின் காதில் இந்தப் பதில் விழுந்தது.

அவள் மகாலட்சுமியின் அவதாரமல்லவா! அவர் மீது அவள் இரக்கம் கொண்டாள். அவள் சீனிவாசனின் அருகில் வந்தாள். சீனிவாசன் மிகுந்த ஆவலுடன் அவளைப் பார்த்தாள். பத்மாவதி அதைப் பொருட்படுத்தாமல், மகாபுருஷரே! உமக்கு பெற்றவர்கள் இல்லை என்கிறீர்! இங்கே யாரும் வரக்கூடாது என்ற உத்தரவு இருக்கிறது. நீர் இங்கிருப்பது என் தந்தை ஆகாசராஜனுக்கும், தாய் தரணீதேவிக்கும் தெரிந்தால் உம்மைத் தண்டித்து விடுவார்கள். இங்கிருந்து போய்விடும், என எச்சரித்தாள். சீனிவாசன் அதைக் காது கொடுத்தே கேட்கவில்லை. அந்த அழகு சிற்பத்தை அங்குலம் அங்குலமாக ரசித்த அவர்,பெண்ணே! அதெல்லாம் இருக்கட்டும்! நான் சொல்வதைக் கேள்! உன் கானம் என்னை ஈர்த்தது. அப்போதே நான் உன்னை அதிரூப சுந்தரி என நினைத்தேன். அதுவே நிஜமும் ஆயிற்று. உன் குரல் கேட்டவுடன் உன் மீது அன்பு பிறந்தது. உன் உருவம் கண்டதும் அது காதலாகி விட்டது. உன்னை விட்டுச் செல்ல எனக்கு மனமே வரவில்லை. உன்னை இனிபிரியவும் மாட்டேன். உன்னை மனதார காதலிக்கிறேன். இனி வாழ்ந்தால் பத்மாவதியான உன்னோடு தான், என்றபடியே குறும்பு சிரிப்பு சிரித்தார் அந்த மாயவன். பத்மாவதிக்கு கடுமையான கோபம். பின்னே இருக்காதா... முன்பின் தெரியாதவன். எளிய தோற்றத்தில் இருக்கிறான். வேடனைப் போல் வில் அம்புடன் வந்துள்ளான். ஒரு வேடன் தன்னைக் காதலிப்பதாவது! அவளது கண்களில் அனல் கொப்பளித்தது. அது வார்த்தைகளாக வெடித்தது.ஏ முரடனே! நான் இந்நாட்டின் இளவரசி எனத் தெரிந்தும் இப்படி பேசினாயா? உடனே ஓடி விடு. என் தந்தைக்கு இது தெரிந்தால் உன் உயிரைப் பறித்து விடுவார். பறவைகளையும், மிருகங்களையும் வேட்டையாடும் உனக்கு அவற்றின் புத்தி அப்படியே ஒட்டிக்கொண்டது போலும்! வேடனும் ராஜகுமாரியும் எங்காவது ஒன்று சேரமுடியுமா! புத்தி கெட்டவனே ஓடிவிடு, என கூச்சலிட்டாள்.


Offline Anu

Re: ஏழுமலையான்
« Reply #14 on: March 16, 2012, 11:05:04 AM »
ஏழுமலையான் பகுதி-15

சீனிவாசன் அவளது பேச்சைக் கண்டுகொள்ளவே இல்லை. சற்றும் தயங்காமல் அவளை நெருங்கி காதல் மொழி பேசினார். சுந்தரியே! இனி என் சொப்பனத்தில் உன்னைத் தவிர வேறு எந்தப் பெண்ணும் இடம்பெற துணியமாட்டாள். மனதின் நினைவுகளே சொப்பனமாக வெளிப்படும். என் மனதின் ஆழத்திற்குள் சென்று விட்ட நீயே என் கண்களில் நிழலாடுவாய். உன்னிலும் உயர்ந்த அழகி இனி உலகில் பிறக்க முடியாது. நீயே எனக்கு மணவாட்டி. நான் அதை உறுதி செய்துவிட்டேன், என்றார். அவள் விலக விலக அவர் நெருங்கி நின்றே பதில் சொன்னார். அவரை விலக்குவதற்கு தோழிகள் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. அவரிடமிருந்து தப்பிக்க நினைத்த பத்மாவதி தன் தோழிகளிடம் ஜாடை காட்ட, அதைப் புரிந்து கொண்ட அவர்கள் கற்களை எடுத்து சீனிவாசன் மீதும் அவர் வந்த குதிரையின் மீதும் வீசினர். அந்தக் குதிரை வலி தாங்காமல் தன் ஜீவனை விட்டது. சீனிவாசனின் நெற்றியிலிருந்தும், உடலில் இருந்தும் ரத்தம் கொட்டியது. அதனால் ஏற்பட்ட வலி அதிகமாக இருந்தாலும், காதலின் முன்னால் அதன் துன்பம் தெரியவில்லை. அதற்கு மேலும் அங்கு நிற்காமல் அவர் அங்கிருந்து வீட்டுக்குச் சென்று விட்டார். காயமடைந்து வீடு திரும்பிய மகனைக் கண்டு வகுளாதேவி கலங்கினாள். சீனிவாசா! இதென்ன கோலம்! ஏன் நடந்தே வருகிறாய்! குதிரையை எங்கே? வேட்டைக்கு  போன இடத்தில் விலங்குகள் அதனைக் கொன்று விட்டனவா! உனக்கும் விலங்குகளால் தீங்கு ஏற்பட்டதா? விலங்குகள் உன்னைத் தாக்கியிருந்தால் உடலில் சிராய்ப்புக் காயங்கள் இருக்க வேண்டுமே! இவை ஆழமாக ஏதோ குத்தியதால் ஏற்பட்ட காயங்களாக உள்ளதே! என்னாயிற்று, என்றாள்.

சீனிவாசன் நடந்ததைச் சொன்னார். அம்மா! மன்னர் ஆகாசராஜரின் மகள் பத்மாவதியைக் காட்டில் சந்தித்தேன். அவளை பார்த்தவுடனேயே பூர்வஜென்ம நினைவு எனக்குள் வந்தது. ராமாவதாரம் எடுத்த போது, நான் சீதையுடன் காட்டுக்குச் சென்றேன். ராவண வதத்துக்காக, சீதையைப் போலவே மற்றொரு மாயசீதையைஉருவாக்கினார் அக்கினி பகவான். நிஜ சீதையை தன் மனைவி ஸ்வாகாதேவியின் பொறுப்பில் ஒப்படைத்து விட்டு, மாய சீதையான வேதவதியை ராவணன் கடத்திப் போகுமாறு செய்தார். ராவண வதம் முடிந்ததும் அவர் அவளை என்னிடம் அழைத்து வந்து, அவளைத் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டார். நான் அந்த அவதாரத்தில் ஏகபத்தினி விரதம் ஏற்றிருந்ததால் அவளை சீனிவாசனாக அவதாரம் செய்யும் காலத்தில் மணப்பதாக உறுதி கொடுத்தேன். அந்த மாய சீதையே இப்போது பத்மாவதியாக வந்திருக்கிறாள். அவளை மணப்பதாக அளித்த உறுதிமொழியை நிறைவேற்றியாக வேண்டும், என்றார். வகுளாதேவி அவரிடம், மகனே! அவ்வாறே இருந்தாலும் கூட, மன்னன் மகளாகப் பிறந்து விட்ட அவளை நீ எப்படி சொந்தமாக்கிக் கொள்ள முடியும். ஏணியில் ஏறி வானத்தின் உச்சியைத் தொட நினைப்பது போல் அறியாமையில் மூழ்கிக் கிடக்கிறாயே! ஏழையான உன்னை ஆகாசராஜன் மனைவியாக ஏற்கவும் மாட்டான், பத்மாவதி ஒதுக்கத்தான் செய்வாள், என்று சொல்லி, அந்தக் காதலை மறந்து விடும்படி புத்திமதியும் சொன்னாள். இதனிடையே அரண்மனை திரும்பிய பத்மாவதியின் மனம் ஏனோ நிலையில்லாமல் தவித்தது. பாவம், அந்த இளைஞன்! அவன் அப்படியென்ன தவறு செய்துவிட்டான்! தன் காதலை என்னிடம் வெளிப்படுத்தினான், வேடனாயினும் அவன் அழகன். என் மனம் அவனிடம் சென்றுவிட்டது போல் தோன்றுகிறது. விலங்குகளை வேட்டையாட வந்தானா! அல்லது என் உள்ளத்தை வேட்டையாடிச் சென்றானா! அவனைச் சுற்றியே மனம் ஓடுகிறதே! அவனது குதிரையைக் கொன்று, அவனையும் கல்லால் அடித்தேன்! ரத்தம் சொட்டச் சொட்ட அவன் இல்லத்துக்குச் சென்றான். ஐயோ! வலிதாங்காமல் அழுவானோ! அவனது குடும்பத்தினர் என்னை நிந்திப்பார்களே! ஏன் என் மனம் அவனைச் சுற்றுகிறது! நிச்சயமாக, நான் அவனது காதல் வலையில் சிக்கிவிட்டேன் என்றே கருதுகிறேன், என்றவள் மனதுக்குள் அவனை நினைத்தபடியே குமைந்தாள்.

அவளுக்கு தூக்கம் போனது. உணவுண்ண மனமில்லை. கண்கள் எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன. அப்பாவிடமும், அம்மாவிடமும் காதலைச் சொல்ல பயம்! போயும் போயும் ஒரு வேடனைக் காதலிக்கிறேன் என்றா சொல்கிறாய், என்று பெற்றவர்கள் திட்டுவார்களே! இளைஞனே! நீ என் மனதைக் கொள்ளையடித்துப் போய் விட்டாயே! நீ எங்கிருக்கிறாயோ! உன் நினைவு என்னை வாட்டுகிறதே, என ஏக்கத்துடன் புலம்பினாள். அவளது உடல் மெலிந்தது. உணவு, உறக்கமின்றி தவித்த மகளைக் கண்டு பெற்றோர் கலங்கினர். அரண்மனை வைத்தி யர்கள் பத்மாவதியை சோதித்தனர். பல மருந்துகளும் கொடுத்தாயிற்று. ஆனால், பத்மாவதி எழவில்லை. காட்டில் காத்து கருப்பைக் கண்டு பயந்திருப்பாளோ! உடனடியாக மந்திரவாதிகள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் செய்த முயற்சிகளும் வீணாயின. தாய் தரணீதேவி மகளின் நிலை கண்டு கண்ணீர் வடித்தாள்.  எல்லா கோயில்களிலும் மகள் குணமாக வேண்டி சிறப்பு பூஜை செய்தாள். ஊஹூம்...பத்மாவதி எழவே இல்லை.உலகிலேயே தீர்க்க முடியாத வியாதி ஒன்று இருக்கிறதென்றால் அது காதல் வியாதி தான். பொல்லாத அந்த வியாதியின் பிடியில் சிக்கிய யார் தான் மீள முடியும்?இதே நிலை தான் வராக வனத்தில் தங்கியிருந்த சீனிவாசனுக்கும் ஏற்பட்டது.அவரும் படுக்கையில் புரண்டார்.தவறு செய்து விட்டோமே! வேடனின் வேடத்தில் சென்றால் எந்தப் பெண் தான் விரும்புவாள்! நாம் நம் சுயரூபத்தில் சென்றிருந்தால், அவள் நம்மை விரும்பியிருக்கக் கூடும். உம்... தப்பு செய்து விட்டோமே,  என புலம்பினார். மகனின் நிலை கண்ட தாய், சீனிவாசா! கவலைப்படாதே, நான் ஆகாசராஜனிடம் செல்கிறேன். பத்மாவதியை பெண் கேட்கிறேன். இருவருக்கும் நிச்சயம் திருமணமாகும். அமைதியாக இரு, என்று சொல்லி அரண்மனை நோக்கி புறப்பட்டாள்.