தமிழ்ப் பூங்கா > நாவல்கள்

எஸ். ராமகிருஷ்ணன்

<< < (3/6) > >>

Gayathri:
வேனல்தெரு
சிறுகதை

பதினாலாம் நூற்றாண்டு யுத்தத்தில் தப்பிய குதிரை போல வேனல் தெரு வசீகரமாக வாலை ஆட்டி அழைத்துக்கொண்டிருந்தது. நீண்ட உருவங்களாகவும் தோற்றம் கலைவுற்றவர்களாகவும் குடிகாரர்கள் நடந்து கொண்டிருந்தனர். வேனல் தெருவின் இரு பக்கமும் நீண்ட வரிசையாக மதுக்கடைகளே நிறைந்திருந்தன. கண்ணாடிக் குடுவைகளில் தேங்கிய மது தன் நீள் தொடு கொம்புகளால் பார்ப்பவரின் கண்களைச் சுருட்டி அடைத்துக் கொண்டிருந்தது. நகரின் தொல் பழமையான இந்தத் தெருவின் இமைகள் இரவு பகல் பேதமின்றி சிமிட்டிக்கொண்டிருந்தன. வயதை மறந்த குடிகாரர்கள் தங்களை மீறி ஸ்நேகித்துக் கொண்டும், பரஸ்பரம் அன்பில் கட்டுப்பட்டவர்களாய் நேசம் மட்டுமே வழியும் மதுக் குடுவையுடன் விடாது பேசியபடியிருக்க, எரிந்து கொண்டிருக்கும் ஒன்றிரண்டு குண்டு பல்புகளுக்கு ஊடே பெண்களும் கூடி கபடின்றி சிரித்தபடி முக்காடு விலக்கிக் குடித்துப் போகின்றனர். போதை ததும்பியவென் கனவிலோ உருக்கொண்டது போல வியாபித்திருக்கிறது வேனல் தெரு. மனிதர்கள் மதுவுடன் தங்கள் ஆகிருதிகளைக் கரைத்துவிட்டு திரவம் போலாகி மதுப்புட்டியினுள் சேகரமாகிவிட முயன்று கொண்டிருந்தனர்.

நீண்ட தாடியும் கருத்த ரம் புட்டியுமாக நிற்கிறாரே… அதோ கட்டத்தின் கடைசியில் – அவரிடம் கேளுங்கள். தனது விநோத கனவுகளில் நூறு நடிகைகளைக் காதலித்துத் தோற்ற கதை அவரிடம் ஒரு சுருள் பூச்சியாய் ஆயிரம் கால்கொண்டு ஊர்ந்துகொண்டிருக்கிறது. என்றோ இறந்துபோய்விட்ட எல்.பி.வனமோகினிக்காகத்தான் அவர் இப்போது மது அருந்திக் கொண்டிருக்கிறார். இருபது வயதிற்குள் எண்ணற்ற நடிகர்களால் காதலிக்கப்பட்டு, எவரையும் வெறுக்கத் தெரியாமல் சுயமரணம் செய்து கொண்ட அந்த நடிகையின் சுருள் கூந்தல் இழையொன்று மதுவின் வழியே தன்மீது படர்வதாகவே அவர் நினைத்துக்கொள்கிறார். எல்.பி. வனமோகினியை அவர் நேரில் கண்டவரில்லை.

யாரோ தந்த சினிமா புகைப்படத்தாளில் சுழித்த உதடுடன் இருந்த அவள், நரி ஒன்றைத் தன்னோடு அணைத்துக் கொண்டிருந்தாள். நரியே அவளைக் காதலிக்கச் செய்தது. இந்த நூற்றாண்டின் இரண்டாம் பத்தில் இறந்து போனாள் வனமோகினி. என்றாலும் என்ன? அவளை உயிருடன் எழும்பும் மதுப்புட்டிகள் அவரிடம் இருந்தனவே. அவரின் மனதில் அன்பின் சிறு துவாரங்களின் வழியே தீர்க்க முடியாத துக்கம் சுரந்துகொண்டிருக்கிறது. அன்பே துக்கத்தின் துளிதானோ? உலகில் வனமோகினியின் காலம் இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு இருக்கும்? அவரிடமிருந்து தேவைப்படுமாயின் மதுவை நீங்களும் பெற்றுக் கொள்ளலாம். இன்று அவரிடமிருந்த மதுப்புட்டியைப் பிடுங்கிக்கொண்டு அவரை மிதித்துத் தள்ளியபடி நகர்கிறானே அந்த இளைஞன், அவன் பெயர் என்னவாகயிருக்கும்?

வேனல் தெருவிற்குள் வருபவர்கள் எவராகயிருப்பினும் பெயர் ஒன்றுதானே? இளைஞன் தன்னிடமிருந்த சில்லறைகளைத் தெருவெங்கும் வீசி இறைக்கிறான். எவனோ ஒரு கடைக்காரன் தன்னிடம் சில்லறையில்லை என எந்த ஊரிலோ மறுதலித்ததின் பதிலாக இங்கே சில்லறைகள் வீசுகிறான். புpன்பு மெதுவாகத் தன்னிடமிருந்த நூறு ரூபாய் தாளை சுருட்டி அதன் முனையில் நெருப்பிட்டுப் புகைக்கிறான். அவனைப் பார்த்து யாரோ சிரிக்கிறார்கள். ஏழாம் நம்பர் கடை மூலையில் இருக்கும் இருவர்தானே சிரித்தது. அவர்களில் ஒருவனுக்கு, பணத்தைப் புகைப்பவனிடமிருந்து ஒரேயொரு தம் அடிக்க ஆசை எழ, கால் பின்னிய நிலையில் எழுந்து வந்து அவனிடம் தம் கேட்கிறான். வந்தவன் உதட்டிலும் பணத்தின் நீல நிறம் ஒட்டிக்கொள்கிறது. இருவரும் புகைக்கிறார்கள். அவர்களுக்குள் ஏற்பட்ட புதிய நட்பிற்காக இருவரும் ஒரே மதுக்கோப்பையைப் பகிர்ந்துகொள்கிறார்கள். கோப்பை காலியானதும் இருவருக்குள் விரோதம் துவங்குகிறது. தனது பணத்தைப் பிடுங்கி சுருட்டிப் புகைத்துவிட்டான் என வந்தவனுக்கு எதிராகக் கூச்சலிடுகிறான் இளைஞன்.

 ஏழாம் கடையில் இருந்தவனோ தன்னுடன் இருந்த நண்பன் எவன் என அறியாது மற்றொருவன் தோளில் சாய்ந்துகொண்டு உறவை விளித்து மாப்ளே… மாப்ளே.. என செல்லமிடுகிறான். இத்தனை குடிகாரர்களுக்கும் நடுவில் சிதறிய நாணயங்களைக் குனிந்து அவசரமும் ஒடுக்கமுமாக பொறுக்கிக் கொண்டிருக்கிறாளே அந்த செங்கிழவி, அவளை விடவும் திருடக்கூடியவர் இந்த வேனல் தெருவில் எவரும் கிடையாது. நாணயங்களைக் குனிந்து சேகரித்தபடியே அவள் கால் செருப்புகளைத் திருடி ஒளிக்கின்றாள் பாருங்கள். அவள் உடைந்த குப்பிகளுக்குள் நாணயங்களைப் போட்டுக் குலுக்குகிறாள். அவைதான் எத்தனை இனிமையாகச் சப்தமிடுகின்றன. நாணயங்கள் நிரம்பிய மதுப்புட்டியுடன் வேனல் தெருவில் இருந்த இருள் சந்தில் போகிறாள். அங்கும் சிலர் குடித்துக் கொண்டுதானிருக்கிறார்கள். அவர்கள் நிலத்தோடு உரையாடிக்கொண்டிருப்பது போல முணுமுணுக்கின்றனர்.

விலை மலிந்த சாராய வீதி அந்த இருள் சந்து. தகரக் குவளைகளில் மஞ்சள் சாராயம் மினுக்கிறது. செங்கிழவி தன் மதுப்புட்டியை ஒரு தகரக் குவளையில் கொட்டுகிறாள். மிச்சமான சாராயத்தில் ஊறுகின்றன நாணயங்கள். தங்கத்தைப் போன்ற வசீகரமான அத்திரவத்தை அவள் உதடு தீண்ட விரிகின்றது. ஒரு வான்கோழியைப் போல சப்தமிட்டபடி அவள் குடித்துவிட்டுத் தகரக் குவளையைத் தருகிறாள். அவளுடைய வயது மெல்லக் கரைந்து மீண்டும் பால்யம் கண்டவள் போல தனது மார்புகளை சாராயக்காரனிடம் காட்டி இச்சை மொழியில் பேசுகிறாள். அவனோ கிழட்டு நாயே என ஏசியபடி மீண்டும் தகரக் குவளையில் சாராயம் தருகிறான். இனி இரவு முழுவதற்கும் வேறு கிடைக்காது என்பது தெரியும். நீண்ட கயிற்றால் காலி மதுப்புட்டியை இடுப்பில் சுற்றி நாணயம் தேடி அலையத் துவங்குவாள். வேனல் தெருவிற்கு எல்லா இரவும் மது வாங்க வரும் பக்கீர் வந்திருக்கக்கூடும்.

அவரது மிகப் பெரிய மோட்டார் சைக்கிள் ஓசையைக் கேட்டதும் கிழவி ஓடுகிறாள். பக்கீர் என்றைக்கும் போலவே இரண்டாம் கடை முன் நிற்கிறார். அவருக்கு உரியதைப் பெற்றுக்கொள்கிறார். இளம் பெண்ணைப் போல அவரை உரசிச் சிரிக்கிறாள் செங்கிழவி. அவர் வண்டியில் அமர்ந்தபடி எல்லா நாளையும் போலவே தனது இடது காலால் அவளை உதைத்துத் தள்ளிவிட்டு ஐந்து ரூபாயை எறிந்து புறப்படுகிறார். அதை எடுக்க மனம் அற்றவளாக அவரின் மனைவிகளைப் பற்றியவசைகளைப் பெருக்கியபடி நிற்கிறாள். அந்தப் பணம் இரவெல்லாம் எவராலும் எடுக்கபடாமல் அந்த இடத்தில் கிடக்கும். விடிந்த பின்பு அதை அவளே எடுத்துக்கொள்ளக் கூடும். ஆயினும் இரவில் அவள் அதன்மீது மூத்திரம் பெய்வதையோ, காறி உமிழ்வதையோ எவர் தடுக்க முடியும்? வழியற்ற ஒருவன் அப்பணத்தை எடுத்த நாள் ஒன்றில் கிழவி அவன் உடைகளை அவிழ்த்துவிட்டு ஆடையற்ற அவன் உறுப்பில் புட்டியால் அடித்திருக்கிறாள் என்கிறார்கள். எனினும் புறக்கணிக்கப்பட்ட பணம் வெறும் காகிதமாகஇருளில்வீழ்ந்துகிடக்கும்.

வேனல் தெருவிற்குப் புதிதாக வந்த அந்தப் பையனைப் பாருங்கள். இப்போதே மீசை அரும்பத் துவங்கியிருந்த அவன், எதிர் வீட்டில் குடியிருந்து வேறு ஊருக்கு மாற்றலாகிப் போன மாணவிக்காகவும் தன் முதல் காதலுக்காகவும் மதுப்புட்டியைத் திறக்கிறான். அவனிடம் சொல்லவொண்ணாத காதல் இருக்கிறது. தோற்றுப்போன தன் முதல் காதல் பற்றி யாரிடமும் பேச முடியாத தவிப்பில் அவன் கடைசியில் தன்னிடமே பேச முயலுகிறான். தன்னிடம் பேசுவதைவிடவும் வேறு எவர் கிடைக்கக்கூடும் நல்துணை. அவனுக்கு குடிக்கத் தெரியாமல் இருக்கக்கூடும். ஒருவேளை மது அவனை வீட்டிற்குத் திரும்பவிடாமல் ஏதோ ஒரு தெரு இருளில் விழச் செய்யக்கூடும். ஆனாலும் அவனுடன் பேசுவதற்குக் கற்றுத் தரக்கூடும். அவன் கறுப்புத் திரவம் ஒன்றை வாங்கியிருக்கிறான்.

அத்திரவம் அவன் உடலில் கண்ணாடி இதழ் போல நீர்தட்டானின் சிறகை விடவும் மெல்லியதாக இரு சிறகுகளைக் கிளைவிடச் செய்யும். இதை நினைத்தபடியே குடிக்கிறான். பனை விசிறியைப் போல வடிவம் கொண்ட அந்தச் சிறகு அருகில் குடித்துக் கொண்டிருப்பவன் கண்ணுக்;குக்கூடத் தெரிகிறது. அவனுள் மிதந்து கொண்டிருந்த திரவம், மாற்றலாகிப் போன பெண்ணின் சுவடுகளைப் பற்றிச் சென்று, தெரியாத ஊரில் உறங்கும் அவள் வெண்பாதங்களை முத்துகின்றன. அவன் இப்போது அந்தப் பெண்ணையே குடித்துக் கொண்டிருக்கிறான். புட்டியில் ஒரு துளி திரவமும் இல்லாமல் தீர்த்துவிட்டான். நீர்மை படர்ந்த கண்களுடன் தன் முதல் காதலைப்பற்றித் தன்னிடமே பேசிக்கொள்கிறான். விசும்பலும் ஏக்கமும் ஊர்கின்றன உடலெங்கும். சக குடிகாரன் ஒருவன் அவனை நோக்கித் தன் கைகளை விரிக்கிறான். கரங்களின் ஊடே நுழைந்த மாணவனை முத்தமிடுகின்றன பெரு உதடுகள். மாறி மாறி முத்தமிட்டுக்கொள்கிறார்கள்.

பின் இருவரும் தோளில் கைபோட்டபடி அடுத்த மதுக்கடைக்குப் போகிறார்கள். அவர்களை இடித்துக்கெர்ணடு போகும் நபர் பையனின் நல்லாசிரியராக இருக்கிறார். எனினும் என்ன? இரவின் ரகசிய படிக்கட்டுகளின் வழியே உலவும் குடிகாரர் அவரும்தானே. காலி மதுப்புட்டிகளில் விரல் நுழைத்து துழாவும் குருடன் செபாஸ்டியன் புட்டிகளில் மிஞ்சிய மதுவைத் துளிதுளியாக தன் சிரட்டையில் சேகரிக்கிறான் பாருங்கள். எவனோ குடித்து மீதம் வைத்துப்போன பாதி புட்டி ஒன்றால் சிரட்டையே நிரம்பி விடுகிறது. இனி அவனை விடவும் யோகமும் சந்தோஷமும் கொள்ளக்கூடிய மனிதன் எவனிருக்கிறான். வேனல் தெரு இடிந்த மூத்திரப் பிறையின் படிக்கட்டில் அமர்ந்தபடி அவன் இரவு உணவையும் சிரட்டை மதுவையும் ருசித்துக் குடிக்கிறான். பகல் முழுவதும் கூவிப் பெற்ற நாணயங்களையும் மனிதர்களையும் மறந்துவிட்டு, தான் கண் பார்த்து அறியாத வேனல் தெருவின் வாசனையை முகர்ந்தபடி களிப்புறுகிறான். சந்தோஷம் ஒரு சல்லாத்துணி போல உடல்மீது படர்கிறது.

 தன்னிடமிருந்த பீடியைப் புகைக்கத் துவங்கியதும் உலகம் ஏன் இத்தனை சந்தோஷமாகவும், இடைவிடாத களிப்பையும் கொண்டிருக்கிறது என எண்ணிக்கொண்டான். ஸ்திரீகளையும் வீட்டையும் மறந்த வேனல் தெரு மதுக்குடியர்களுக்குள் மட்டும் எப்படி வற்றாமல் களிப்பு பீறிடுகிறதோ என புரியவேயில்லை. கசப்பு முளைத்த நாவுடன் அவர்கள் உலகின் மொத்தக் களிப்பையும் திருடி வந்துவிட்டார்களாயென்ன. வேடிக்கையும் உல்லாசமும் நிரம்பிய அத்தெருவிற்குள் குற்றம் என எதைச் சொல்லிக்கொள்ளக் கூடும். திறந்த இரவினுள் குற்றங்கள் நிழலைப்போலசப்தமிடாதபடியேஉலவுகின்றன.

பண்டிகை நாள் தவிர வேறு காலங்களில் ஒப்பனையற்றுப் போன ஸ்திரீபார்ட்காரன் ஒருவன் மட்டும் குடியில் குரல் உயர்த்திப் பாடாமல் இருந்திருந்தால் உல்லாசத்தில் இந்த லயம் இருந்திருக்கக் கூடுமா? அவனுக்குப் பெண்களைவிடவும் அடர்ந்த கூந்தல். ஸ்திரீ முகம் கொண்ட அவன் வேனல் தெருவிற்குக் குடிப்பதற்கு ஒருபோதும் தனியே வருவதேயில்லை. ஒரு ஆட்டுக் குட்டியை மார்போடு அணைத்து எடுத்துக்கொண்டு வருவான். கற்பனையான உபவனத்தில் தோழியோடு அலையும் ராணியைப் போல நடக்கிறான்.

அவனுடைய தோளில் சரசரக்கும் தலைமயிர் குடிப்பவர்களுக்குள் சரசத்தின் மூச்சைக் கிளப்பிச் செல்கிறது. வேஷமிடாத போதும் அவனால் ஸ்திரீபார்டினின்னு தப்பிக்க முடியவில்லையே. பொய் மார்பகமும், உயர் கொண்டையும் அணியவில்லையே தவிர, அவன் முகத்தில் மஞ்சள் திட்டுகளும், கைகளில் வளையும் சப்தமிட வருகிறான். அவனுடைய ஆட்டுக்குட்டி துள்ளி குடிகாரர்களின் ஊடே அலைகிறது. ஆட்டின் கழுத்தில் புரளும் ஒற்றை மணி சப்தம் கேட்ட குடிகாரன் எவனோ தங்களுக்குக் குடிப்பதற்காக வாங்கிய புட்டியுடன் இருளில் மறைகிறான். ஆட்டின் கண்களில் பழகிய போதையின் சுகிப்பு தெரிகிறது. அவனும் ஆடுமாகக் குடிக்கிறார்கள். இருவரும் இரவெல்லாம் குடிக்கக்கூடும். குடித்த ஆடுகள் எப்போதும் இயல்பிலேயே புணர்ச்சிக்கு ஏங்குகின்றன. அவை மனித பேதமறியாது கால் தூக்கி நிற்கின்றன. நள்ளிரவு வரை அவர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஆடு வேனல் தெருவின்று கிளம்பி அவர்கள் மஞ்சள் அழியும் உலர்ந்த வீதிகளில் காகிதத்தை மென்றபடி அலையத் துவங்குகிறது. மூடிய வீடுகளுக்கு வெளியே முரட்டுக் குடிகாரனைப் போல ஆடு மணியசைத்துச் சுழல்கிறது. தடுக்க யார் இருக்கிறார்கள். உல்லாசம் தெருவில் தனியே நடனமிடுகிறது என்பதைத்தவிர.

வேனல் தெரு மதுக்கடைகள் மூடப்படுவதேயில்லை. கடைகளுக்குக் குடிக்க வருபவர்கள் மட்டுமல்ல, கடையில் இருக்கும் விற்பனை செய்யும் நபர்கள் கூட ஒரே முகச் சாயலில் தானிருக்கிறார்கள். அவர்களுள் நான்காம் கடை சிப்பந்தியின் கண்கள், புட்டிகளை வாங்கும் எல்லா மனித முகத்தையும் துளையிட்டு அறிந்துவிடுகின்றன. மதுக்கடைச் சிப்பந்திகள் சில்லறை தராமல் ஏமாற்றும்போதோ, கள் மதுவை விற்கும்போதோ கூட குடியர்கள் ஏன் எதிர்;ப்பதில்லை. வேனல்தெரு இரவு எப்போதும் அரை மயக்கநிலையே இருக்கிறது. பொருள் வழி அலையும் வியாபாரிகளும் பயணிகளும் இதனுள் நுழையாமல் செல்ல முடிவதேயில்லை. தனது குறிப்பேட்டில் யாரோ பயணியின் கைகள் தெருவின் ஞாபகத்தினை எழத் தாக்குகின்றன. பின் அவனும் களைத்துவிடுகிறான். நேற்றாக இருக்கலாம்.

குடிக்க வந்த இருவர், நெடும் காலத்தின் பின் சந்திப்பு கொண்டு நினைவைப் பரிமாறியபடி குடித்தனர். அவர்கள் பர்மாவிலிருந்து நடந்து வந்தவர்கள் எனத் தெரிகிறது. மதுப்புட்டிகள் காலியாகியபடி இருந்தன. பின் இருவரில் மூத்தவன் மதுப்புட்டியை உயர்த்தி அதனுள் பர்மா மூழ்கியிருப்பதாகக் கூறுகிறான். திரவம் மெல்ல படிய பர்மா நகரம் கண்ணாடி மீறி விரிகிறது. இருவரும் யுத்தத்திற்கு முந்திய மரவீடுகளின் சாலையில் நடக்கின்றனர். ஜப்பானிய விமானங்களின் குண்டு நகர் மீது சிதறுகிறது. தெருக்களுக்குள் ஓடுகிறார்கள். துப்பாக்கி ரவை எட்டாத வெளியில் பயணித்து நடந்தபோது ஒருவன் மற்றவனை நோக்கி துப்பாக்கி நீட்ட, தோட்டா பீறிட்டு முதுகில் பாய்கிறது. விழித்துக் கொண்டவனைப் போல குடிப்பவன் கண்ணாடி புட்டியைத் தூக்கி உடைக்கிறான். பர்மா சிதறுகிறது. சுட்டுக்கொண்டது யார் யாரை என்ற புதிர் விலகாமல் சொந்த துயரத்திற்காக மீண்டுமொரு மதுப்புட்டி வாங்க நடக்கின்றனர்.

இரவு நீள நீள மயங்கிச் சரிந்த சாயைகளின் நடமாட்டம் ஓய்ந்த பின்பும் வேனல் தெரு விழித்தபடிதானிக்கிறது. என்றோ இந்த நகரையாண்ட வெள்ளைப் பிரபுவின் குள்ளமான சிலையைப் பாருங்கள். அதன் கண்கள்கூட இந்தத் தெருவைப் பார்த்தபடிதானிருக்கின்றன. பிறந்த தேசம் விட்டு கனவுக் கப்பலில் மிதந்தபடி அந்தத் துரை இந்நகரை நன்றாக அறிந்திருந்தான். அந்தச் சிலையின் கீழே உளறுகிறானே ஒருவன் அவன் எதைத்தான் பேசுகிறான் – காதில் விழுகிறதா? என்றோ மழை வெறித்த நாள் ஒன்றில் சிவப்புக் குடையுடன் வந்த இரண்டு சட்டைக்காரப் பெண்கள் கண்ணீர் மல்க, அந்தச் சிலையின் முன்பாக மௌனித்து விட்டு ரோஜா மலர்களை அங்குவிட்டுச் சென்றனரே அன்றும் அவன் அங்கு குடித்துக்கொண்டிருந்தான்.

ரோஜா மலர்கள் வேனல் தெரு மதுக்குடியர்களைப் பேச்சற்றுப் போகச் செய்தது. மதுக் கடைக்காரர்களுக்கு அந்த ரோஜாக்களைப் போல குற்ற உணர்வை ஏற்படுத்தும் அந்தப் பொருளும் இதுவரை உலகில் இருந்ததாக நினைவில்லை. இருபத்தி எட்டு மதுக்கடை சிப்பந்திகளும் ரோஜாக்களை எவராவது எடுத்துப் போய்விட வேண்டும் என ஆசைப்பட்டார்களே அன்றி எவனும் கீழ் இறங்கி அந்த ரோஜாக்களை எடுத்து எறிய இயலவில்லை. பதினாலாம் கடைச் சிப்பந்தி ஒருவன் தன் ஆறு வயது மகள் ஞாபகம் பெரு மைல்களுக்கு அப்பால் உள்ள கிராமத்து வீட்டின் கதவுகளைத் தட்டி முகம் பார்க்க ஆசையுற்றுப் புலம்பினான்.

அவனாலும் இந்த ரோஜாக்களை எடுத்து விடமுடியவில்லைதானே. மூன்று நாட்கள் வரை அதே இடத்தில் காய்ந்து சருகாகிய நிலையில் ரோஜாக்கள் இருந்தன. பின் காற்று அதைத் தன்னோடு கூட்டிப் போனது. காற்றில் மறைந்து விட்ட ரோஜா ஏற்படுத்திய வெறுமை கடைச் சிப்பந்தி ஒருவனுக்குத் தாளாமல், அவன் வீதியின்று அழித்து ஓடி, நகரையே விட்டுப் புலம்பி ஓடுகிறானே அது எதற்காம்? விசித்திரம்தான் மனிதர்களாக உருக்கொண்டு இங்கு வருகின்றதாயென்ன?

மழிக்கப்படாத மயிர் படர்ந்த முகத்துடன் ஒருவன் எல்லா மதுக்கடைகளிலும் இரஞ்சும் குரலில் பணத்தை வைத்துக்கொண்டு கேட்டும், எவரும் இல்லையெனத் தலையாட்டுகிறார்களே தெரிகிறதா? அவனுக்கான மதுப்புட்டிகள் உலகில் இல்லாமல் தீர்ந்து விட்டனவா? அவன் குடிப்பதற்காக எதையும் கேட்பதாகத் தெரியவில்லை. அருகில் வந்து அவன் குரலைக் கேளுங்கள். வேறு எதோ ஒரு பொருளிற்காக மன்றாடுகிறான். படர்ந்த மீசையில் கண்ணீர் துளிர்த்து நிற்க அவன் வேதனையுடன் எதைத்தான் கேட்கிறான்? நேற்றுதானோ இல்லை ஒரு வருடத்தின் முன்பாகவோ எதோ ஒரு மதுக்கடையில் அவன் இறந்துபோன மனைவியின் மணநாள் பட்டுப் புடவையொன்றை விற்றுக் குடித்து போயிருக்கிறான். இன்று புடவையின் ஞாபகம் பீறிட, தேடி மீட்டுக் கொள்ள அலைகிறான். அந்தப் புடவையின் ஒரு முனை தீயில் எரிந்து போயிருக்கும் என்பதும் அதைச் செய்தவன் அவன் என்பதையும் யார் அறிவர்? எல்லா மதுக்கடைக்காரர்களும் அவனையறிவர். புடவை என்றில்லை. கடிகாரங்கள், நிலைக்கண்ணாடி என எத்தனையோ விற்றுக் குடித்துப் போயிருக்கிறான்.

அந்தப் புடவையை அடைந்தவன் எக்கடையின் சிப்பந்தி எனத்தான் தெரியவில்i. அவனது பரிதாபம் தாங்காது சக குடிகாரன் ஒருவன் விடாது பேசுகிறான். ஒரு சிப்பந்தி அவனைக் கூப்பிட்டு குடிகாரர்கள் விற்றுப்போன பொருட்களின் சேகர அறையைத் திறந்து காட்டுவதாகக் கூறுகிறான். அந்த அறையினுள் புடவைகள், மரக்கண்ணாடிகள், கடிகாரங்கள், மணல்குடுவைகள், பழம் துப்பாக்கி, இசைத்தட்டுகள், புகை பிடிக்கும் குழல், கோப்பைகள், தைல ஓவியம் எனக் குவிந்து கிடக்கின்றன. தன் மனைவியின் புடவையைத் தேடிச் சலிக்கிறான். என்றோ அடமானத்தில் வைக்கப்பட்டுப் போன சித்திரக்காரனின் இதயம் ஒன்று மிக மெதுவாகத் துடித்துக்கொண்டிருந்தது அறையில். அந்த அறையை விட்டு அகலாது ஆறு நாட்கள் புடவையைத் தேடிக் கொண்டிருந்தான். பின்னொரு நாள் வெளிறிய முகத்துடன் மனைவியின் புடவையை நெருப்பிட்டு எரித்து சாம்பலாக்கிக் குடித்தவன் நானே எனக்கூறி தெருக் கடந்து சென்றான். கடைச் சிப்பந்திகள் அறிந்திருக்கிறார்கள் – குடிகாரர்கள் எதையும் நினைவில் வைத்துக்கொள்வதேயில்லை என்பதை.

வேனல் தெரு என்பதே ஒரு கண்ணாடி கூண்டுதான் போலும். இங்கே வருபவர்கள் மதுவால் மட்டும் போதையாடுகிறார்கள் என எவராலும் தீர்க்கமாகச் சொல்ல முடியாது. விசித்திரம் ஒரு மோதிரமென இவர்கள் விரல் சுற்றிக்கொள்ள, உறக்கமற்று எதைத்தான் அழிந்துவிடக் குடிக்கிறார்கள். வாகனங்கள் ஊர்ந்து அலையும் நகர வீதியில் கூக்குரலிட்டு வெறியுடன் ஒருவன் நீட்டுகிற கத்தியின் பரப்பில் வேனல் தெரு உருக்கொண்டு விடுவதைப் பல கண்களும் அறிந்தே கடக்கின்றன. என்றாலும் நண்பர்களே, மதுக்கடைகள் மூடப்படுவதேயில்லை. மீன்கறிகளையும் மிஞ்சிய மதுவையும் குடித்துப் பெருத்த எலிகளின் கூட்டமொன்று தெருவை கருமி பூமியினுள் இழுத்துச் சென்றுவிட முயல்கின்றன. தன் தலைமயிர் நிலத்தில் வேர்விட நூற்றாண்டுகளாக ஒருவன் இத்தெரு நடுவில் வீழ்ந்து உறங்கிக் கொண்டேயிருக்கிறான். அந்த மனிதன் விடுபட்டுப் போன சீன யாத்ரீகர்களில் ஒருவன் எனச் சொன்னால் நம்புவீர்களா நீங்கள்?

காலச்சுவடு-இதழ்19,1997

Gayathri:
வழி
சிறுகதை

வக்கீல் குமாஸ்தா விருத்தாசலம்பிள்ளை என்றைக்கும் போல விடிகாலை ஐந்துமணிக்கு எழுந்து கொண்டார். நட்சத்திரங்கள் மறையாத வானம் ஜன்னலில் தெரிந்தது. சைக்கிளை அடுப்படி சந்தில் இருந்து வெளியே எடுத்துக் கொண்டு வந்தார். சோப் டப்பாவும் வலைதுண்டுமாக நந்தவனத்துக்கு குளிக்கப் புறப்பட்டபோது தெரு தூக்கத்தில் மூழ்கியிருந்தது. முப்பதுவருடத் தினப்பழக்கம் இது. சைக்கிள் அவர் யோசனைக்கு இடம் தந்தபடி தானே போய்க்கொண்டிருந்தது.

காலையில் கோர்டுக்கு வரப்போகும் சிங்கிகுளம் கொலைகேஸ் பற்றி யோசித்தார். ஒரு தெரு தாண்டும் முன்பு அது கலைந்து மூத்தவளுக்கு பார்த்த மாப்பிள்ளை பற்றிய யோசனையாக உருமாறியது. இருள் பம்மிய வீதியில் சைக்கிள் சென்றபடியிருந்தது. எல்லா வீடுகளும், தெருவும் மனிதர்களும் பார்த்து பழகின தொல்பொருள்களாகவே அவருக்குத் தெரிந்தன. மனது வாயு தொல்லைக்குரிய மருந்து, வீட்டு வாடகை, வரப்போகும் அம்மன் கொடை என உருமாறி சுழன்று கொண்டே வந்தது. கல் பரவின தெருக்களில் சைக்கிள் போகும்போது நாய்கள் விழித்துக்கொண்டன.

கடலைக்காரத் தெருவைக் கடந்து வலப்பக்கமாக திரும்பினார். நீண்ட தானாக்கார வீதி தெரிந்தது. குளிர்கால இரவென்பதால் ஜன்னல் மூடப்பட்ட வீடுகள் ஈரமேறியிருந்தன. தானாக்கார தெருவை கடக்கும் முன்பே அடுத்தது வாடியான் தெரு, அடுத்து ஒரே சந்து, பிறகு நந்தவனம் என மனம் முந்தியது. சைக்கிள் வாடியான் தெருவுக்குள் நுழைந்தது. மிகக்குறுகலான தெரு. அதன் முதல் வீடாகயிருந்தது பச்சைப் பெயிண்ட் அடித்த வீயெஸ்வி வீடு. தாண்டினால் வரிசையாக இருப்புறமும் வீடுகள். யோசித்தபடியே பரிச்சயமான அத்தெருவினுள் போய்க்கொண்டிருந்தார்.

தெருவின் கடைசி வீடு காரையார் வீடு. கம்பியிட்ட திண்ணையும் ஆறுபடிகளும் கொண்டது. வலப்புறமாகத் திரும்பினால் சுப்பையாக்கோனார் சந்து. அதன் முடிவில் திலாக்கிணறு உள்ள நந்தவனமிருந்தது. சைக்கிளில் காரையார் வீட்டை கடக்கும்போது பார்த்தார். விடிவெள்ளி எரிந்து கொண்டிருந்தது. எதையோ யோசித்தபடி வலப்பக்கம் சைக்கிளை திருப்பி மிதித்தார். சைக்கிள் வீயெஸ்வி வீட்டை கடந்து சென்றது.

ஒரு நிமிஷ நேரம் திகைத்தவராக சைக்கிளை மெதுவாக ஓட்டினார். சைக்கிள் வாடியான் தெருவுக்குள்தான் போய்க்கொண்டிருந்தது. இப்போதுதான் இதைக்கடந்து போனோம் எனத் தோணியது. ஒரு வேளை கடந்து போகவில்லையோ, எதோ யோசனைதான் கடந்ததாக நினைக்கச்செய்துவிட்டதோ என சுயசமாதானம் கொண்டவராக காரையார் வீட்டைக் கடந்தபோது அதே விடிவிளக்கு எரிந்து கொண்டிருந்தது. வலப்பக்கம் சைக்கிளை திருப்பி ஓட்ட வீயெஸ்வி வீட்டு முன்பு திரும்பி ஊர்ந்தது. வாடியாள் தெரு தாண்டினால் சுப்பையா கோனார் சந்தல்லவா வர வேண்டும் ?

இது எப்படி வாடியான் தெருவே திரும்பவும் வருகிறது. ஒரு வேளை தான் இன்னமும் தூக்கத்தில் கனவு கண்டு கொண்டிருக்கிறோமா ? இது கனவில்லை; விழித்துக்கொண்டுதானே இருக்கிறோம் என்று புரியும் போது பாதி தெரு வந்துவிட்டது. சைக்கிளை நிறுத்தி இறங்கி பின்னாடி பார்த்தார். வீயெஸ்வி வீட்டு வாழைமரம் காற்றில் ஆடிக்கொண்டிருந்தது. இது ஏதோ மனப்பிரமைதான் என்றபடி திரும்பவும் சைக்கிளை மிதித்தார். கடைசிவீட்டு விடிவிளக்குவரை வந்துவிட்ட்டு தயங்கியபடி வலப்பக்கம் திரும்பினார். நினைத்தபடி அது வீயெஸ்வி வீட்டு வாசலைக்கடந்தது. விருத்தாசலம் பிள்ளைக்கு எதுவுமே புரியவில்லை.

இது எப்படி சாத்தியம் ? தெரு மூடிக்கொண்டு விட்டதா என்ன ? தெருவின் முதல் வீடும், கடைசிவீடும் எப்படி அடுத்தடுத்த வீடாகயிருக்கும் ? திகைப்பும் பயமும் கவ்வ சைக்கிளை உருட்டிக்கொண்டு நடந்தார். தெரு தன்னைப் பூட்டிக்கொண்டுவிட்டதா ? அப்படியும் சாத்தியமா, இது நிஜமானால் இதில் இருந்து வெளியேறவே முடியாதா ? யோசிக்க யோசிக்க பயம் பூரான் போல ஆயிரம் கால்களால் ஊர்ந்து உடலெங்கும் ஏறியது. வேஷ்டியை இருக்கிக் கட்டிக்கொண்டு மூடிய வீடுகளைப் பார்த்தார். எல்லா கதவும் உறைந்திருந்தன. ஒரு வீட்டிற்கும் மறுவீட்டிற்கும் இடைவெளியேயில்லை. தப்பிக்க முடியாத பொறியில் அகப்பட்டுக் கொண்டுவிட்டதாகத் தோன்றியது உடலை நடுக்கமடையச் செய்தது.

துருவெறிய ஜன்னல் கம்பிகள், இருண்ட வானம் எல்லாமும் பீதி கொள்ள செய்தன. சைக்கிளை உருட்டிக்கொண்டு காரையார் வீடுவரை வந்தார். வலப்பக்கம் இருள் படர்ந்திருந்தது. மிக மெதுவாகத் திரும்பினார். அதே வீயெஸ்வி வீடு. பயம் முற்றாக அவரைப் பற்றிக்கொண்டது. மனைவி, மக்கள், கடன், கோர்ட், சிங்கிக்குளம்கொலைகேஸ், என எண்ணம் குடை ராட்டினம் போல சுழன்று அதிவேகமாகியது. தனக்குத் துளியும் பரிச்சயமில்லாத தெரு போல தென்பட்டது.

யாராவது வீட்டின் கதவைத் திறந்து வெளிப்படமாட்டார்களா எனக் காத்துக்கொண்டிருந்தார். எவரும் கதவு திறக்கவில்லை. தான் ஒரு வேளை அதிகாலை என நினைத்துக் கொண்டு நள்ளிரவில் புறப்பட்டு வந்து விட்டோமா, வீட்டுக் கடிகாரம் காட்டிய நேரம் சரியானதுதானா ? யோசிக்க யோசிக்க குழம்புகிறது. மனதைத் தேற்றிக்கொண்டபடி சைக்கிளை நிறுத்திவிட்டு ஓடிவிடலாமா என எண்ணம் வந்தது. அதுதான் சரியான வழி, சைக்கிளை பூட்டி நிறுத்தினார். ஆகாசத்தை ஏறிட்டுப் பார்த்தார். ஒரு நட்சத்திரம் கூட இல்லை. ஒளிந்து கொண்டு விட்டனவா ? கண்ணை மூடிக்கொண்டு ஓடுவதைத் தவிர வேறு மார்க்கமில்லை என்றபடி தெரு அதிர ஓடத் துவங்கினார். நினைத்ததுபோல ஓடுவது எளிதாகயிருக்கவில்லை. உடம்பு அதிர்ந்து மூச்சு வாங்கியது.

கரையார் வீடு திரும்பும்போது கண்ணை மூடிக்கொண்டு இருளில் புகுந்து ஓடினார். பெருமூச்சுடன் நின்று கண் திறந்த போது அது வாடியான் தெருவாகவேயிருந்தது. ஆத்திரமும் பயமும் கொண்டவராக தனியே உரக்க தெருவின் பிறப்பை கொச்சைப்படுத்தி வசையிட்டார். நிசப்தம் தெருவை அடர்ந்து ததும்பியது. செய்வதென்ன புரியாமல் தரையில் உட்கார்ந்தார்.

வீடுகளுக்குள் உறங்கும் மனிதர்கள் மீது கோபம் திரும்பியது. அவர்களையும் வசைத்தார். யார் வீட்டு கடிகார ஒலியோ கேட்டுக்கொண்டிருந்தது. கதவைத் தட்டி யாரையாவது எழுப்பி உதவி கேட்டால் ? நினைத்தவுடனே என்ன சொல்லி உதவி கேட்க என்ற யோசனையும் தோண மெளனமாகி கொண்டார். தன் வாழ்நாள் முடியப் போகிறதோ. ஸர்ப்பம் போல தெரு தன் வாலைத் தானே கவ்விக்கொண்டிருக்கிறதா. எழுந்து நடந்து தெருமுனைவரை சென்றார். சுப்பையாக் கோனார் சந்து புலப்படவில்லை. தெருவின் வட்டம் சுருங்கிக் கொண்டே வந்து நத்தைகூடு போல ஆகிவிடக்கூடுமோ, என்ன இழவு யோசனைகள் என விரல்களை இறூக்கிக்கொண்டார். பள்ளத்தை தாண்டி குதிப்பதுபோல இருளைத்தாண்டி குதித்தால் அடுத்த தெருவந்துவிடாதா. உடல்வலியுடன் வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டார். வேகமாக இருளில் தாவிக்குதித்தார்.

எதன் மீதோ மோதி அவர் கீழே விழும் சப்தம் அதிர்ந்தது. வீழ்ந்த இடத்தில் கை ஊன்றி தலை தூக்கிப் பார்த்தார். காரையார் வீட்டில் லைட்டைப் போட்டுக்கொண்டு யாரோ கதவு திறக்கும் சப்தம் கேட்டது. ஒரு பெண் கதவைத் திறந்து கொண்டு வாடியான் தெருவில் இறங்கி, கையில் இருந்த குப்பைக்கூடையுடன் வலப்பக்கம் மெதுவாக திரும்பி இருளில் நடந்து அவர் வீழ்ந்து கிடந்த இடத்தருகே வந்து குப்பைத்தொட்டியில் கொட்டிவிட்டு அவரைப் பார்க்காது திரும்பிப் போனாள். அவர் உடனே தெருவை ஏறிட்டுப் பார்த்தார். அங்கே சுப்பையாக்கோனார் சந்து என்ற பெயர் தெரிந்தது.

**

திண்ணை இணைய இதழில் வெளியானது

Gayathri:
மிருகத்தனம்
சிறுகதை

அன்று காலை பதினோறு மணிக்கு நாயை வைத்தியரிடம் அழைத்து போக வேண்டும் என்று முன்பதிவு செய்திருந்தாள் சியாமளா . உண்மையில் நாய் ஆரோக்கியமாகவே இருந்தது. ஆனால் அதன் சுபவாம் மாறியிருப்பதை தான் அவளால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

திருமணமாகி வரும்வரை அவள் நாய் வளர்த்ததில்லை. ஆனால் அவளது கணவன் ராஜனுக்கு நாய் வளர்ப்பதில் அதிக ஆர்வமிருந்தது. பெங்களுரில் பிரம்மசாரியாக தனியே வசித்த போது கூட இரண்டு நாய்கள் வளர்த்தாக சொல்லியிருக்கிறான்.

அவர்களது திருமணபரிசாக ஜோசப் தயாளன் தந்தது தான் அந்த ஜெர்மன் ஷெப்பர்ட். இரண்டு மாத குட்டியாக இருந்தது . அதற்கு நோவா என்று பெயர் வைத்தது கூட ராஜன் தான். தினசரி குளிக்க வைப்பது, இறைச்சி, பிஸ்கட் வாங்கி போடுவது. நடைபயிற்சிக்கு கூட்டி போவது என்று ராஜன் அதன் மீது மிகுந்த நெருக்கத்துடனிருந்தான். ஜெர்மன் ஷெப்பர்ட்டால் வெக்கை தாங்கமுடியாது. அதற்கு இரவில் குளிர்ச்சி தேவைப்பட்டது. அதற்காக அவர்கள் படுக்கை அறையின் ஒரத்திலே வந்து படுத்து கொள்ளும். அந்த அறையில் மட்டும் தான் குளிர்சாதன வசதியிருந்தது.

பலநேரங்களில் அவனோடு உடலுறவு கொள்ளும்போது நாய் அவளை பார்த்து கொண்டிருக்கிறதோ என்று சியாமளாவிற்கு தோன்றும். இருளில் நாய் சலனமில்லாமல் கிடப்பது தெரிந்த போது அந்த கூச்சம் மனதில் மூலையில் அகலாமலே இருந்தது. அதை ராஜன் கண்டு கொண்டதேயில்லை.

அதனால் தானோ என்னவோ அவளுக்கு நோவாவை பிடிக்காமலே இருந்தது. சில நேரங்களில் அலுவலகம் விட்டு அவனுக்கு முன்னால் சியாமளா வீடு வந்த போது நோவா வேகமாக வந்து அவள் மீது தாவி ஆசையோடு நக்க துவங்கும். அவள் எரிச்சல் அடைந்தபடியே அதை விலக்குவாள். கடுமையாக திட்டுவாள்.

அந்த நாய்க்கு ஆங்கிலம் பழகியிருந்தது. அவர்கள் வீட்டில் ஆங்கிலத்தில் தான் பேசிக் கொண்டார்கள். கோபம் அதிகமான நேரங்களில் மட்டுமே ராஜன் தமிழில் கத்துவான்.   எந்த மொழியில் பேசினாலும் நாய்களுக்கு ஏதாவது பிரச்சனை இருக்க போகிறதா என்ன? அந்த நாயின் மூதாதையர்கள் வேட்டைக்கு பிரசித்தி பெற்றவர்கள் என்றும், பனிபிரதேசங்களில் வாழ்ந்து பழகியவர் என்றும் ஜெர்மன் ஷெப்பர்ட் பற்றி ராஜன் நிறைய சொல்லியிருக்கிறான்.

ஏன் இப்படி தன்னைப் போல அதுவும் தன் பூர்வீகம் மறந்து இப்படி தங்கள் வீட்டில் வந்து அடைபட்டு கிடக்கிறது என்று தோன்றும் நிமிசங்களில் அதன் மேல் ஒரு பரிவு உண்டாகும். நாயை தடவி கொடுப்பாள்.

ராஜன் அலுவலகம் விட்டு வந்ததில் இருந்து அந்த நாயோடு சேர்ந்தே தானிருப்பான். அவன் டிவி பார்க்க துவங்கும் போது அது காலடியில் படுத்து கொள்ளும். அவன் உற்சாகமாக கைதட்டி விளையாட்டினை ரசிக்கும் போது அதன் முகத்திலும் அந்த உற்சாகம் தொற்றிக் கொண்டிருக்கும். ராஜன் அலுவல பயணமாக கிளம்பும் நாட்களில் நோவா பரிதவிக்க துவங்குவத கண்டிருக்கிறாள். அது தன்னை விடவும் அவன் மீது அதீத அக்கறையும் ஈடுபாடும் கொண்டிருக்கிறதோ என்று கூட தோணும்.  நாயோடு உளள் உறவை பொறுத்தவரையில் ராஜன் அருமையான மனிதன் தான். ஆனால் அவளால் தான் அவனோடு சேர்ந்து வாழ முடியாமல் போயிருந்தது.

அவர்கள் திருமணமாகி ஒன்றரை வருசத்திற்குள் பிரிந்து விட்டார்கள். அவன் அதே நகரில் வேறு அலுவலகத்திற்கு இடம்மாறி போய்விட்டான். எப்போதாவது அவளிடம் தொலைபேசியில் பேசுவதுண்டு.  அவர்கள் பிரியும் நாளில் அவள் தான் நோவா தன்னிடம் இருக்கட்டும் என்று வைத்துக் கொண்டாள். சில நாட்களிலே வேலை வீடு என்று தனித்து வாழ பழகிய அவளுக்கு நோவாவை கவனிப்பதும். அதோடு பேசுவது. அதை கட்டிக் கொண்டு உறங்குவது மட்டுமே இயல்புலமாக இருந்தது.

ஆனால் கடந்த சில வாரங்களாகவே நோவா குலைப்பதில்லை என்பதை அவள் ஒரு நாளில் கண்டுபிடித்தாள். கடைசியாக நோவா எப்போது குரைத்தது. யோசிக்கையில் மனதில் அப்படியொரு நாள் தென்படவேயில்லை. அறியாத மனிதர்கள் வரும்போது ஒடி அவர்களை வழிமறிக்கிறதே அன்றி அது கத்துவதேயில்லை. ஏன் இப்படியிருக்கிறது என்று அவள் கவனிக்க துவங்கினாள்.

 நோவா அந்நியர்களை கண்டுமட்டுமில்லை. எதற்குமே சப்தமிடுவதேயில்லை. அதன் முகத்தில் தீர்க்கமுடியாத துயரொன்று படர்ந்திருந்தது. அதை கலைப்பதற்காக அவள் புத்தகம் ஒன்றால் அதை அடித்து கூட பார்த்துவிட்டாள். அது சப்தமிடவேயில்லை. எதற்காக இந்த உக்கிரமௌனம். உலர்ந்த காயம் போல அதன்குரல் ஒடுங்கி போயிருக்கிறதா?.

நாயின் மௌனத்தை அவளால் தாங்க முடியவேயில்லை. சில நாட்கள் அவள் பாதி உறக்கத்தில்  விழித்து பார்த்த போது நோவா இருட்டிற்குள்  உட்கார்ந்திருப்பது தெரியும். எழுந்து அதை தன்னோடு இறுக்க கட்டிக் கொண்டு என்னடா வேணும் என்பாள். அதன் காதுகள் விடைத்து கொள்ளும். கண்களில் பரிவு கசியும். அவள் நாயின் ரோமங்களை நெற்றியை தடவி விட்டபடியே இருப்பாள். ஏன் இந்த நாய் தன் இயல்பை மறந்து இப்படியிருக்கிறது என்று யோசித்து கொண்டேயிருப்பாள்.

தெரிந்தவர்கள். நண்பர்கள் பலரிடமும் அதை எப்படி சரி  செய்வது என்று கேட்டாள். இதற்காகவே நோவாவை கடற்கரைக்கு அழைத்து போனாள். சில வேளைகளில் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள வீதிகளுக்கு கூட அதை கூட்டி சென்றாள். செடிக்கு தண்ணீர் பாய்ச்சும் குழாயை வைத்து அதன்மீது தண்ணீரை பாய்ச்சி விளையாடினாள். அது துள்ளியது. தாவியது. ஆனால் சப்தமிடவேயில்லை. குரைக்காத நாயாக இருப்பது அவளுக்கு குற்றவுணர்ச்சி தருவதாக இருந்தது.

இதற்காகவே ஒரு முறை மணவிலக்கு பெற்று பிரிந்த ராஜனை தேடி போய்  நோவாவை பற்றி பேசினாள். அவன் ஜெர்மன் ஷெப்பர்ட் வகை நாய்கள் விசித்திரமானவை. அதை கையாளுவது எளிதில்லை. உன்னால் அதை வளரக்க முடியாது. விற்றுவிடு என்று ஆலோசனை சொன்னான். அவள் அப்படியில்லை. உன்னை பிரிந்திருப்பது தான் காரணமாக இருக்க கூடும். சில நாட்கள் அதை உன்னோடு வைத்திருந்து பார் என்றாள். அவனும் பார்க்கலாம் என்றான்.  மறுநாள் அவளே ராஜன் தங்கியிருந்த குடியிருப்பில் நோவாவை கொண்டு போய்விட்டு வந்தாள்.

மூன்றாம் நாள் ராஜன் போன் செய்து நோவா ரொம்பவும் மாறிவிட்டது. அவள் சொன்னது போல அது கத்துவதேயில்லை. அது சுவரை வெறித்து பார்த்தபடியே இருக்கிறது. நாய்களை புரிந்து கொள்ள முடியாது. அதன் கண்களில் வெறுப்பு பீறிடுகிறது. நீயே வந்து கூட்டி போய்விடு என்றான்.

அன்றிரவு நோவாவை வீட்டிற்கு கூட்டி வந்து நெடுநேரம் அதோடு பேசிக் கொண்டிருந்தாள். அவள் ராஜனை காதலித்த கதையை அதற்கு சொல்லிக் கொண்டிருந்தாள். நோவா தலைகவிழ்ந்தபடியே இருந்தது. மறுபடி சொல்லும் போது யாருக்கோ நடந்த  கதை ஒன்றை போலிருந்தது. இவ்வளவிற்கும் அது என்றோ நடந்த விசயமில்லை. இரண்டு வருசங்களுக்குள் தானிருக்கும்.

அப்போது தான் சியாமளா அலுவலகத்திற்கு பெங்களுரில் இருந்து ராஜன் வந்திருந்தான். அனிருத்தாவின் பிறந்த நாள் பார்ட்டியின போது தான் அவர்கள்  நிறைய பேசிக் கொண்டார்கள். அதன்பிறகு சியாமளாக தான் அவனை பிடித்திருப்பதாக முதலில் தெரிவித்தாள்.

ஒரு வேளை  பதவி உயர்வில்  தான் அமெரிக்கா போவதாக இருந்தால் திருமணம் செய்து கொள்ள இரண்டு ஆண்டுகள் ஆகும் பரவாயில்லையா என்று ôஜன் கேட்டான். அவள் தானும் அமெரிக்கா வந்துவிடுவதாக சொன்னாள்.

அவர்கள் அதிகம் காதலிக்கவில்லை. இரண்டு முறை ஒன்றாக திரைப்படம் பார்த்தார்கள். ஒரு முறை ஒன்றாக உடன்வேலை செய்யும் திருமுருகனின் திருமணத்திற்காக பாபநாசம் சென்றார்கள்.  அன்று ராஜன் அருவியில் குளிக்கவில்லை. திரும்பி வரும்போது அவளோடு ரயிலில் சீட்டு விளையாடினான். பொதுவில் அவன் அதிகம் கலகலப்பில்லாதவன் என்று தான் அவளுக்கு தோன்றியது. ஆனால் அவளோடு நெருக்கமாகவும், வேடிக்கையாகவுமே ராஜன் பேசினான்.

சியாமளாவிற்கு முன்பாகவே அவளது தங்கை சித்ராவிற்கு திருமணமாகியிருந்தது. அவள் இரண்டு வருசங்கள் ஆஸ்திரேலியாவில் உயர்படிப்பு படிக்க போன காலத்தில் அது நடந்திருந்தது. அப்போது அது பெரிய விஷயமாக தெரியவில்லை. ஆனால் ஊர் திரும்பி வேலைக்கு போன போது சியாமளாவின் மனதிற்குள் தனக்கு முன்பாக சித்ரா திருமணம் செய்து கொண்டது பிடிக்காமல் தானிருந்தது.

ஒவ்வொரு முறை தங்கையை பார்க்கும் போது அவள் அப்போது தான் புணர்ச்சியிலிருந்து எழுந்து வந்திருக்கிறாள என்பது போல மனதில் தோன்றுவதை சியாமளாவால் கட்டுபடுத்தவே முடியவில்லை. அதற்காகவே சியாமளா வேகமாக திருமணம் செய்து கொண்டுவிட வேண்டும் என்று அவசரப்பட்டுக் கொண்டிருந்தாள்.

அவர்களாகவே திருமணத்திற்கான நாளை குறித்தார்கள். உடைகள், நகைகள் வாங்கினார்கள். திருமணத்திற்கு பிறகு குடியேற போகும் புதிய வீட்டை வாடகைக்கு பிடித்தார்கள். அவர்கள் எதிர்ப்பார்த்ததை விடவும் அதிகம் நண்பர்கள் திருமணத்திற்கு வந்திருந்தார்கள். ராஜன் அன்று மிகுந்த பதட்டத்துடன் இருந்தான் என்பது அவனது முகத்தில் துல்லியமாக தெரிந்தது.
முதலிரவிற்காக கடற்கரையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்தார்கள். உடற்கிளர்ச்சிகள் ஆவேசமாக துவங்கி அரைமணி நேரத்திற்குள் அடங்கிவிட்டிருந்தது. ராஜன் தனது லேப்டாப்பில் ஏதோ தேடிக் கொண்டிருந்தான். படுக்கையில் கிடந்தபடியே அவனையே பார்த்து கொண்டிருந்தாள். அவளது விரல்கள் அவன் கேசத்தை கோதின. அவன் விரல்களை விலக்கிவிட்டு டெலிபோனை எடுத்து தனக்கு பசிப்பதாக சொல்லி சான்ட்விட்ச் ஆர்டர் செய்வதாக சொன்னான்.

அவள் சற்றே எரிச்சலுற்றபடியே தான் உடையை மாற்றிக் கொள்வதாக சொல்லி குளியலைறைக்குள் சென்றாள். அவன் தனது போனில் யாருக்கோ குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருந்தான்.  அவள்  கதவை திறந்து வெளியே வந்து கடற்காற்றை பார்த்தபடியே இருந்தாள். ராஜன் வெளியே வரவேயில்லை.
அலை இருளை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து கொண்டிருந்தது. அவள் சப்தமாக கடற்கரை மணலில் நிற்கலாமா என்று ராஜனிடம் கேட்டாள். அவன் அதெல்லாம் வேண்டாம் என்றபடியே கதவை திறந்து வைத்தால் ஏசி வீணாகிவிடும் என்று சொன்னான்.

அவள் தன் கன்னிமை இழந்த நாளின் இரவு வானத்தை பார்த்து கொண்டிருந்தாள். நிறைய நட்சத்திரங்கள் இருந்தன. அவள் நிறைய கற்பனை செய்திருந்தாள். அவை கால்சுவடுகளை அலை கரைத்து அழிப்பதை போல கண்முன்னே மறைந்து போய்விட்டன. இனி அந்த நிமிசங்கள் திரும்பிவராது.
அவள் நட்த்திரங்களை பார்த்தபடியே அவன் தன்னை முத்தமிட்டானா என்று யோசித்து கொண்டிருந்தாள். ஒரேயொரு முறை முத்தமிட்டான். ஆனால் அந்த முத்தம் உணவு பொட்டலத்தை சுற்றி கட்டப்பட்ட நூலை அவிழ்ப்பவனின் அவரசம் போன்றே இருந்தது. அவள் நிறைய முத்தங்களை அவனுக்கு தந்தாள். அவன் அந்த அளவு திரும்பி தரவில்லை. அவர்களை மீறி உடல்கள் ஒன்றையொன்று சேர்ந்து தங்கள் இச்சைகளை தீர்த்து கொண்டன. அவ்வளவுதானா என்பது போலிருந்தது. அன்று தான் திருமணவாழ்க்கை துவங்கியிருக்கிறது என்று அவள் சுயசமாதானம் கொண்டாள்.

ஆனால் நாட்களின் போக்கில் ராஜன் சாப்பாடு, பணம், அதிகாரம் இந்த மூன்றை தவிர வேறு எதிலும் நாட்டமில்லாமல் இருந்தான். வார விடுமுறை நாட்களை பியர் குடிப்பதற்கு மட்டுமேயானதாக கருதினான். உடைகளில் அவனுக்கு விருப்பமேயில்லை. ஏதாவது ஒரு உடையை அணிந்து கொண்டு அலுவலகம் வந்துவிடுவான். அவனுக்கு தன் வருமானத்தை போல இன்னொரு வருமானம் தேவையானதாக இருந்தது. அதற்காகவே அவளை திருமணம் செய்து கொண்டதாக வெளிப்படையாக சொன்னான்.

அவர்கள் சண்டையிட்டார்கள். விட்டுகொடுத்து சமாளித்துவிடலாம் என்று முயன்று பார்த்தாள். அந்த பிளவை சரிசெய்யவே முடியவில்லை. முடிவாக ராஜன்  தன் சேமிப்பில் இருந்து எதையும் அவள் எதிர்பார்க்காவிட்டால் அவர்கள் பிரிந்து விடலாம் என்று சொன்னான். அப்படியே ஆனது. அவள் அலுவலகம் அருகிலே இடம் மாறி போனாள். ஊருக்கு போவதோ. அப்பா தங்கைகளை காண்பதையோ குறைத்து கொண்டாள்.  பெரும்பான்மை நேரங்களில் உணவகங்களில் இருந்து வாங்கி சாப்பிட்டு பசியை கடந்து சென்றாள்.

 பின்னிரவில் உறக்கம் பிடிக்காமல் உடல் கிளர்ச்சியோடு எழுந்து உட்கார்ந்து இருளை பார்த்தபடி இருந்தாள். என்ன பிடிப்பில் தான் இப்படி நாட்களை கடந்து  கொண்டிருக்கிறோம் என்று தோன்றும். அது போன்ற நேரங்களில் அவளை விடவும் அந்த நாயின் மீது அவளுக்கு அதீதமான துக்கம் வந்து சேரும்
நாயின் வாழ்க்கையை பத்தோ,பனிரெண்டோ வருசங்கள் தான் அதற்குள் யாருக்கோ விசுவாசமாக இருந்து. யாரையோ அண்டி வாழ்ந்து. எங்கோ வழியில் கண்ட இன்னொரு நாயுடன் கலவி கொண்டு தன் இச்சைகளை தீர்த்துவிட்டு ஒவ்வொரு நாளும் தன் விசுவாசத்தை வீடெங்கும் வழிய விட்டு என்ன வாழ்க்கையிது.

 நாய்கள் ஏன் மனிதர்களோடு இவ்வளவு நெருக்கம் கொண்டிருக்கின்றன. தன் மூதாதையர்களை போல வேட்டையாடவோ. பனியில் தனித்து அலைந்து திரியவோ. அடிவானத்து சூரியனை பார்த்து குரைக்கவோ ஏன் இந்த நாய்கள் முயற்சிப்பதேயில்லை.

அதன் மனதில் அந்த நினைவுகள் துடைத்தெறியப்பட்டதை எப்படி இயல்பாக எடுத்து கொண்டன. இல்லை ஒருவேளை இன்றும் அதன் கனவில் பனிபொழியும் நிலமும், துரத்தியோடும் வேகமும் இருந்து கொண்டுதானிருக்குமா? தான் அலுவலகம் போன பிறகு நாள் எல்லாம் அந்த நாய் வீட்டின் சுவரை வெறித்தபடியே என்ன நினைத்து கொண்டிருக்கும். தன்னை ஏன் இப்படி நாய்கள் வருத்திக் கொள்கின்றன. அவள் அந்த நாய்க்காக வேதனை கொள்வாள். அப்போதும் கூட தன்னால் ஒரு போதும் அதன் நிஜமான உணர்ச்சிகளை புரிந்து கொள்ள முடியாது என்று தோன்றும்.


நாய்களின் மௌனம் இத்தனை வலிமையானது என்பது அவளை அப்போது தான் அறிந்து கொள்ள துவங்கினாள். தொண்டையை விட்டு கிழே இறங்காமல் எதை விழுங்கி கொண்டாய் என்று பார்த்தபடி இருப்பாள். நோவாவின் காதுகள் அசைந்து கொண்டேயிருக்கும். பற்களை தவிர நாய்களின் உடல் ரப்பரை போன்று மிருதுவானவை. அவை குழந்தைகளின் வெதுவெதுப்பை கொண்டிருக்கின்றன. அதன் நாக்கு தான் ஒய்வற்று துடித்து கொண்டிருக்கிறது. அந்த நாக்கு மொழியற்றது. எதையோ சொல்ல முயன்று வாழ்நாள் எல்லாம் தோற்று போய்க் கொண்டிருக்கிறது போலும்.

**
மருத்துவமனை மிக சுத்தமானதாக இருந்தது. மருத்துவர் அவளை விடவும் வயதில் இளையவராக இருந்தார். அவர் நோவையை பரிசோதனை செய்துவிட்டு அது ஆரோக்கியமாக இருப்பதாக சொல்லியபடி அவளது பிரச்சனை என்னவென்று விசாரித்தார். நோவா குரைப்பதேயில்லை என்றாள். அவர் சிரித்தபடியே நல்லது தானே என்றார்.

இல்லை அது திடீரென குரைப்பதை நிறுத்தி கொண்டுவிட்டது என்று சொன்னாள். அவர் நாயின் அருகில் சென்று அதன் குரல்வளையை தன் கைகளால் பிடித்து பார்த்தார். அது சப்தமிடவில்லை. சிறிய டார்ச் லைட்டால் அதன் வாயை பரிசோதனை செய்தார். பிறகு வியப்புடன் குரல்வளையில் எந்த பிரச்சனையுமில்லை. ஏன் அது கத்துவதில்லை என்று அவளிடமே திரும்ப கேட்டார். அவள் எப்போதிருந்து அது குலைக்கவில்லை என்று தனக்கு தெரியவில்லை என்றும் கடந்த சில வாரங்களாகவே அப்படிதானிருக்கிறது என்றாள்

மருத்துவர் அந்த நாயின் வயதை விசாரித்தார். இரண்டரை இருக்கும் என்றாள். அந்த நாய் இதுவரை ஏதாவது பெட்டைநாயோடு பழகியிருக்கிறதா என்று கேட்டார். இல்லை அது தன் வீட்டிற்குள்ளாகவே வளர்கிறது என்றாள் சியாமளா. ஒருவேளை பாலுணர்ச்சி காரணமாக நாய் கத்தாமல் இருக்க கூடும் என்றபடியே அதை முயற்சி செய்து பார்க்கலாமே என்றார். ஒரு பெட்டை நாயை எப்படி கண்டுபிடிப்பது. எப்படி அதை இதோடு பழக விடுவது என்று அவளுக்கு குழப்பமாக இருந்தது.

அவர் தன் மேஜை டிராயரில் இருந்து ஒரு விசிட்டிங் கார்டை எடுத்து இவர்களை பார்த்தால் இந்த நாய்க்கு பொருத்தமான பெண்நாயை ஏற்பாடு செய்து தருவார்கள் என்று சொன்னார். எப்போது அங்கே தான் போவது என்று மருத்துவரிடம் கேட்டபோது அதற்கும் முன்பதிவு செய்து கொள்வது நல்லது என்றார்

அங்கிருந்தபடியே அந்த எண்ணில் தொடர்பு கொண்டு மறுநாள் மதியம் மூன்று மணிக்கு அழைத்து வரும்படியாக முன்பதிவு செய்து கொண்டாள். அடுத்த நாள் நாயை வீட்டிலிருந்து கூட்டி போகும் போது அவளுக்கு  கூச்சமாக இருந்தது.  முதன்முறையாக நோவா ஒரு பெண்ணை அடைய போகிறது. அவளை நோவாவிற்கு பிடித்திருக்குமா. எளிதாக அதன் பாலுணர்ச்சியை தீர்த்து கொண்டுவிடுமா. அவன் குழப்பமான யோசனைகளுடன் நாயை அழைத்து கொண்டு சென்றாள்.

அது நாய்களுக்கான பிரத்யேக பொருள்விற்பனையகமாக இருந்தது. அந்த வீட்டில் நடுத்தர வயது மனிதர் ஒருவர் மட்டுமே இருந்தார். நோவாவிற்கு இணையாக போகிற பெண் நாய் இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடக்கூடும் என்றார். அவள் நோவாவோடு காத்து கொண்டிருந்தாள்.

நீல நிற சான்ட்ரோ கார் ஒன்றிலிருந்து இன்னொரு ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் இறங்கியது. அது தனது நோவாவை விடவும் பருத்திருந்தது. அந்த நாயை அழைத்து கொண்டு வந்த ஆள் நோவாவை பார்த்தபடியே நின்று கொண்டிருந்தான். நோவா அந்த பெண் நாயின் பக்கம் திரும்பவேயில்லை. இரண்டையும் ஒன்றாக விட்டபோதும் கூட அது விலகி விலகி வந்தது. பெண் நாயின் உரிமையாளன் தனக்கு தெரிந்த வழிகளை முயற்சித்து நோவை ஈர்க்க முயற்சித்தான். நோவா வாலை அசைத்தபடியே ஒடி அவள் அருகில் வந்து நின்று கொண்டது. அதற்கு பால்கிளர்ச்சிகளே இல்லை போலும்.

பெண் நாய் அதை கண்டு சப்தமிட்டது. ஆனால் நோவா சப்தமிடவேயில்லை. அரைமணி நேர போராட்டத்தின் பிறகு பெண் நாயை கூட்டிக் கொண்டு அந்த ஆள் கிளம்பி போனான். அவள் நோவாவை திரும்ப ஆட்டோவில் அழைத்து கொண்டு வந்தாள். ஆத்திரமாகவும் வருத்தமாகவும் இருந்தது. வீட்டில் அன்று அவளும் சாப்பிடவில்லை. நோவாவிற்கும் எதையும்  கொடுக்கவில்லை.
தான் நோவாவை விட்டு பிரிந்துவிடுவதை தவிர வேறு வழிகள் எதுவுமில்லை என்று அவளுக்கு தோன்றியது. அதை தன்னோடு வைத்து கொண்டிருந்தால் தன் இயல்பு மாறிவிடுவதோடு நடந்து போன திருமண முறிவு மனதில் ஆறாத ரணமாகி கொண்டிருப்பதை அவள் உணர துவங்கினாள். இரண்டு நாட்கள் அதை பற்றியே யோசித்து கொண்டிருந்து விட்டு முடிவில் ஒரு ஏஜென்சியிடம் சொல்லி அதை விற்பதற்கு ஏற்பாடு செய்தாள்.

அவள் அலுவலகத்தில் இருந்த நேரத்தில் ஒரு பேராசியர் போன் செய்து அதை தான் வாங்கி கொள்ள விரும்புவதாக சொன்னார்.  அவள் நோவாவை பற்றி எடுத்து சொன்ன போது அவர் தனக்கு எழுபது வயதாகிறது என்றும் அதுவும் தன்னை போல வாயை மூடிக்கொண்டிருப்பதில் தனக்கு ஒரு பிரச்சனையுமில்லை என்றார். அவள் ஞாயிற்றுகிழமை காலையில் வீட்டிற்கு வரும்படியாக சொன்னாள்.

அந்த ஞாயிற்றுகிழமை அவள் நோவை குளிக்க வைக்கும்போது அதை விற்று விட்டதை பற்றி அதனிடமே சொன்னாள். அது காதை ஆட்டிக் கொண்டேயிருந்தது. பதினோறு மணி அளவில் பேராசிரியர் வருகை தந்தார். அவருக்கு நோவாவை பிடித்திருந்தது. அதை தான் வாங்கி கொள்வதாக சொல்லி அதற்கான காசோலையை அவளிடம் நீட்டினார். அவள் அன்று ஒரு நாள் மட்டும் தன்னோடு அந்த நாய் இருக்கட்டும் என்றபடியே தானே காலையில் அவர் வீட்டில் கொண்டுவந்துவிடுவதாக சொன்னாள்.

அவர் கிளம்பி போன பிறகு சியமளா  வெளியில் போய் சாப்பிடலாம் என்று அதை அழைத்து கொண்டு போனாள்.  பகலெங்கும் நகரில் அலைந்து திரிந்தாள். இரவு வீடு திரும்பும் போது நோவா எப்போதும் போல இருளில் படுத்து கொண்டது. அவள் அதை பார்க்க மறுத்து புரண்டு படுத்திருந்தாள். நாயின் கண்கள் இருளிற்கும் ஒளிர்ந்து கொண்டிருந்தன. பிறகு தன்னை அறியாமல் விசும்பியபடியே எழுந்து அதை கட்டிக் கொண்டாள். நாயின் வெதுவெதுப்பு அவள் உடலெங்கும் நிரம்பியது.

என்னை நானே ஏமாத்திகிட்டு இருக்கேன். அது உனக்கு தெரியுதுடா. நான் நல்லவயில்லை.. செல்பிஷ் என்று அவள் ஆவேசத்துடன் புலம்பியபடி கட்டிக்  கொண்டாள். நாயின் நாக்கு  ஈரத்துடன் அவள் கைகளை தடவியது. அதன் பரிவை தாங்கமுடியாமல் அவள் உடைந்து அழுது கொண்டிருந்தாள். நோவா மௌனமாக காதுகளை அசைத்தபடியேயிருந்தது. இருவராலும் அவ்வளவு தான் செய்யமுடியும் என்பது  போலவே அவர்களை வெறித்து பார்த்து கொண்டிருந்தது அறையின் இருள்.

 ****

2009 தினமணி தீபாவளி சிறப்பிதழில் வெளியான சிறுகதை.

Gayathri:
புர்ரா
சிறுகதை

அந்த  வார்த்தையை சுகு யாரிடமிருந்து கற்றுக் கொண்டாள் என்று தெரியவில்லை. பள்ளியிலிருந்து வீடு வந்ததும் சப்தமாக சொல்லத் துவங்கினாள். அதை சொல்லும் போது அவளது முகத்தில் சந்தோஷம் கொப்பளித்து கொண்டிருந்தது. கைகளை விரித்தபடியே அவள் புர்ரா என்று கத்தும் போது அவளை காண்பதற்கே விசித்திரமாக இருந்தது. என்ன சொல் அது என்று புரியாமல் திரும்பி பார்த்தேன்.


சுகு உற்சாகமாக புர்ரா புர்ரா என்று கத்திக் கொண்டிருந்தாள். அவளது உற்சாகத்திற்காக ஒரு நிமிசம் அதை அனுமதித்த என்னால் திரும்ப திரும்ப கத்துவதை சகித்து கொள்ள முடியாமல் இருந்தது. கோபமான குரலில் என்னடி இது என்று கேட்டேன். அவள் அதற்கும் புர்ரா என்று கத்தினாள். உன்னை தான்டி கேட்குறேன். யார் கிட்டே இதை கத்துகிட்டே என்று கேட்டதும் அவள் உதட்டை கடித்தபடியே பேசாமல் இருந்தாள்.


அர்த்தமில்லாமல் உளறக்கூடாது புரிஞ்சதா என்று சொன்னதும் தலையாட்டிக் கொண்டு என் அறையிலிருந்து வெளியேறி போனாள். வாசலை கடந்த போது புர்ரா என்ற சப்தம் மறுபடி கேட்டது


தினமும் சுகு பள்ளியிலிருந்து எங்கள் இருவருக்கும் முன்பாக வீடு திரும்பி வந்துவிடுகிறாள். நான் வீடு வருவதற்கு ஐந்தரை மணியை கடந்து விடும். அதுவரை இரண்டு மணிநேரம் அவள் அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளியோடு பேசிக் கொண்டோ, தன்நிழலோடு விளையாடிக் கொண்டோ தானிருக்கிறாள். சில நேரங்களில் அதை காணும் போது குற்றவுணர்ச்சி மனதில் உருவாகிறது. அதை வளரவிடாமல் ஆளுக்கு ஒரு இடத்தில் வேலைக்கு போவதால்  இதை தவிர்க்க முடியாது என்று சுயசமாதானம் செய்து கொள்வேன்.


என் மனைவி ஆவடியில் உள்ள பன்னாட்டு வங்கி பிரிவில் வேலை செய்கிறாள். எனது அலுவலகமோ தரமணியில் உள்ளது. இரண்டுக்கும் நடுவில் மின்சார ரயில் வசதி உள்ள இடமாக வேண்டும் என்பதற்காக சில வருசங்கள் இருவரும் நுங்கம்பாக்கம் பகுதியில் வசித்து வந்தோம். அங்கே தான் சுகு பிறந்தாள். ஆரம்ப நாட்களின் சந்தோஷத்தை தாண்டி சுகு எங்கள் இருவருக்குமே எரிச்சலூட்டும் பொருளாக மாறியிருந்தாள்.


அவளை கவனிப்பதை இருவருமே தவிர்க்க முடியாத ஆனால் விருப்பமில்லாத வேலையை போலவே உணர துவங்கினோம். சில நாட்கள் இரவில் சுகு அழும்போது உறக்கத்தில் பாலுôட்டும் மனைவியின் முகத்தை பார்த்திருக்கிறேன். அதில் கருணையோ, அன்போ எதுவுமிருக்காது. எப்போது பால்குடித்து முடியும் என்று பொறுமையற்று காத்திருப்பவளின் சிடுசிடுப்பே நிரம்பியிருக்கும்.


அந்த சிடுசிடுப்பிற்கு இன்னொரு காணரம் இருந்தது. சுகுவின் அழுகையை மீறி நான் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தது. சுகு எனது குழந்தை என்றபோதும் உறக்கத்தில் அது அழுவதை என்னால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. சில நாட்கள் தலையணையை வைத்து முகத்தை பொத்திக் கொண்டுவிடுவேன்.
உடல்நலமற்று சுகு வீறிட்டு மருத்துவமனைக்கு கொண்டு போகும் இரவில் தூங்கமுடியாதபடி அவள் என்னை படுத்தி எடுப்பதாக மனதிற்குள் கடுமையாக திட்டியிருக்கிறேன்.

 குழந்தையை புரிந்து கொள்ள முடியாமல் நானும் மனைவியும் மாறிமாறி கத்தி சண்டையிட்டிருக்கிறோம். எதுக்காடி நீ பிறந்து என் உயிரை எடுக்குறே என்று ஒரு நாள் என் மனைவி சுவரில் தலையை முட்டிக் கொண்டு கத்தியபோது அவளை காண்பது எனக்கு பயமாக இருந்தது. குழந்தைகள் உண்மையில் விருப்பமானவர்கள் இல்லையா? தொல்லைகள் தானா?  எனக்கும் குழப்பமாக இருந்தது. அரிதான ஒன்றிரண்டு நிமிசங்களில் மட்டுமே சுகுவை காண்பது எனக்கு சந்தோஷமாக இருந்தது. சுகு எங்கள் ஆற்றாமையோடு தான் வளர்ந்தாள்.


அவளது பிறந்த தின கொண்டாட்டங்களில் கூட எங்கள் இருவர் முகத்திலும் மறைக்க முடியாதபடி விருப்பமின்மை படர்ந்திருந்ததை புகைப்படங்களில் காணமுடிகிறது. அதை மறைக்க நாங்கள் இருவருமே அதிகம் நடிக்க கற்று கொண்டோம். சுகுவை மாறிமாறி முத்தமிடுவதை இருவரும் செய்த போது நானும் என் மனைவியும் ஒருவரையொருவர் முத்தமிட்டு கொள்வதை நிறுத்தி பல மாதகாலம் ஆகியிருந்தது ஏனோ என் நினைவில் எழுந்து அடங்கியது.


திருமணமான சில மாதங்களிலே முத்தமிடுவது அபத்தமான செயல்போலாகியிருந்தது. அதை காபி குடிப்பதை போல எந்த சுவாரஸ்யமற்ற செயலாக நாங்கள் மாற்றியிருந்தோம். குறிப்பாக அவளது கேசங்கள் மீது ஏனோ எனக்கு அசூயை உருவாகிக் கொண்டேவந்தது. முகத்தில் வந்து விழும் அவளது கேசத்தை விலக்கும் போது அதை பிடுங்கி எறிந்துவிடலாம் போன்ற ஆத்திரம் உருவாகி எனக்குள்ளாகவே அடங்கிவிடும்.


சமீபமாகவே சுகுவை பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பதற்காகவே பழவந்தாங்கலுக்கு மாறியிருந்தோம். இதனால் என் மனைவி இரண்டு ரயில்கள் மாறி அலுவலகம் செல்ல வேண்டியிருக்கிறது. நான் அலுவலகத்திற்கு பைக்கில் சென்றுவிடுவதால் அதிக நேரம் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் வாரத்தில் மூன்று நாட்களாவது சுகுவின் காரணமாக நாங்கள் சண்டைபோட்டுக் கொள்வதுண்டு.

சுகுவிற்கு எங்கள் சண்டையும் கூச்சலும் பழகிப்போயிருந்தது.
நாங்கள் சண்டையிடும் நாட்களில் சுகு எளிதில் உறங்குவதில்லை என்பதை கண்டுபிடித்திருக்கிறேன். சுகு உறங்கினால் மட்டுமே நானும் மனைவியும் உடலுறவு கொள்ள முடியும். அதுவும் பின்னிரவாகிவிட்டால் மறுநாள் வேலைக்கு போவதில் சிக்கல் உருவாகிவிடும். எங்கள் இச்சை அவள் மீது கோபமாக பலஇரவுகள் மாறியிருக்கிறது.


போர்வையை அவளது முகத்தில் போட்டு உறங்குடி என்று அழுத்தியிருக்கிறோம். சில நிமிசங்கள் அவளது கண்கள் மூடிக் கொண்டிருக்கிறோம். பிறகு அவள் பாதி கண்ணை திறந்து வைத்தபடியே குளிர்சாதன இயந்திரத்தில் மினுங்கும் எண்களை முணுமுணுத்த குரலில் எண்ணிக் கொண்டிருப்பாள்.


சுகுவிற்காக நாங்கள் கண்டுபிடித்த வழி இரவு விளக்கில்லாமல் அறையை முழு இருட்டாகிவிடுவது என்று. சில நாட்கள் அது எங்களுக்குள்ளே விசித்திரமான அனுபவமாக இருந்தது. அது எங்கள் படுக்கை அறை என்பது மறந்து பூமியின் ஆழத்தில் இரண்டு புழுக்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து கொண்டிருப்பது போன்று தோன்றும்.


சுகு இருட்டிற்குள்ளும் விழித்துக்கொண்டிருக்க பழகியிருந்தாள். அவள் கண்கள் இருளை கடந்து பார்க்க பழகியிருந்தன. அவள் உதடுகள் உறங்க மறுத்து எதையோ சொல்லிக் கொண்டிருந்தன. நாங்கள் அவளது முணுமுணுப்பினை சட்டை செய்வதேயில்லை. அவள் குரல் தானே ஒயும்வரை விட்டுவிடுவோம்.


சுகு ஆரம்ப வகுப்புகளை கடற்கரையை ஒட்டியிருந்த ஆங்கிலப்பள்ளியில் படித்தாள். அந்த பள்ளியின் அருகில் கடல் இருந்தது.. பசுமையான மரங்கள் அடர்ந்த பள்ளிக்கூடம். சுவர்கள் ரோஸ் வண்ணம் தீட்டப்பட்டிருந்தன. கண்ணாடி கதவுகள், மீன்தொட்டிக்குள் நீந்தும் மீன்கள் போன்று இயல்பான துள்ளலுடன் நடந்து திரியும் சிறுமிகள். ஒரு அறை முழுவதும் குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள். பொம்மைகள். பள்ளியிலே மதிய உணவு தந்துவிடுவதால் சுகுவை கவனிப்பதற்கு நாங்கள் அதிகம் மெனக்கெடவில்லை

. ஒரு நாள் கூட அவள் வகுப்பறைக்குள் போய் நான் பார்த்ததேயில்லை. ஏன் அப்படியிருந்தேன் என்று இன்று வரை எனக்கு புரியவேயில்லை.
சுகு பள்ளிக்கு போவதற்கு தயக்கம் காட்டவேயில்லை. அவள் தன்னுடைய அம்மா  அலுவலகம் கிளம்புவது போன்று பரபரப்பாக பள்ளிக்கு கிளம்புவாள். தானே குளித்து உடைகளை மாற்றிக் கொண்டு அம்மாவை போலவே லேசாக ஈரம் படிந்த தலையுடன் முகத்திற்கு திட்டு திட்டாக பவுடர் அப்பிக் கொண்டு நின்றபடியே சாப்பிட பழகியிருந்தாள். அப்படி சுகுவை காண்பது தன்னை பரிகசிப்பது போல என் மனைவி உணர்ந்திருக்க வேண்டும். ஏன்டி நின்னுகிட்டு சாப்பிடுறே.. உட்காரு என்று அழுத்தி பிடித்து உட்கார வைப்பாள்.


சுகுவின் முகம் மாறிவிடும். நீ மட்டும் நின்னுகிட்டு சாப்பிடுறே. நான் சாப்பிட்டா என்னவென்று கேட்பாள். சனியன் ஏன்டி உயிரை வாங்குறே. உன்னோட சண்டை போட்டுட்டு இருந்தா. ஆபீஸ் அவ்வளவு தான் என்று அவசர அவசரமாக டிபன் பாக்ûஸ பைக்குள் திணித்து கொண்டிருப்பாள்.  சுகுவை பள்ளி பேருந்தில் ஏற்றி அனுப்பி வைப்பது எனது வேலை. அது வரும்வரை நானும் சுகுவும் மாடி ஜன்னலில் நின்றபடியே பார்த்துக் கொண்டிருப்போம்

சுகு சாலையில் செல்லும் வாகனங்களை எண்ணிக் கொண்டிருப்பாள். அவள் என் மகள் தானா என்று ஏனோ சந்தேகமாக தோன்றும். பள்ளி பேருந்தை கண்டதும் தாவியோடுவாள். பேருந்தில் ஏறியபிறகு கையசைப்பதோ, விடைபெறுவதையோ ஒரு நாளும் அவள்  செய்வதேயில்லை.


என் மனைவியும் அப்படிதானிருக்கிறாள். அவள் வீட்டின் படியை விட்டு வெளியேறியதும் என் உலகிலிருந்து அவள் துண்டித்து போய்விடுவதை கண்டிருக்கிறேன். ஒரு நாளிரவு மின்சார ரயிலில் தற்செயலாக அவள் தன் அலுவலக பெண்களுடன் சிரித்து பேசிக் கொண்டு வருவதை கண்டேன். யாரோ முன் அறியாத பெண்ணை போலிருந்தாள். அவள் கையில் ஒரு வேர்கடலை பொட்டலம் இருந்தது. அவள் வயதை ஒத்த இரண்டு பெண்கள் அருகில் உட்கார்ந்திருந்தார்கள். நான் அந்த ரயிலில் வருவேன் என்பதை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.


அதிகம் பரிச்சயமில்லாத ஒரு நபரை பார்த்து சிரிப்பதை போல மெலிதாக என்னை பார்த்து சிரித்துவிட்டு தோழிகளுடன் முன்போலவே  பேசிக் கொண்டிருந்தாள். அவளை பார்க்கையில் புதிதாக யாரோ ஒரு பெண்ணை பார்ப்பது போலிருந்தது. என்னோடு அவள் பேச முயற்சிக்கவோ, எனக்காக எழுந்து கொள்ள முயற்சிக்கவோ இல்லை. மாறாக அவளது உலகிற்குள் எனக்கு இடமில்லை என்பதை உணர செய்பவள் போல அந்த பெண்களுடன் விட்ட சிரிப்பை தொடர்ந்து கொண்டிருந்தாள்.


அந்த பெண்கள் இறங்க வேண்டிய ரயில் நிலையம் வந்ததும் எழுந்து கொண்டார்கள். அவளது அருகாமை இருக்கைகள் காலியாக இருந்தன. ஆனால் நான் உட்கார வில்லை. அவள் உட்காரும்படியாக சொல்லவும் இல்லை. வேண்டும் என்றே வேறு ஒரு இருக்கை தேடி உட்கார்ந்து கொண்டேன். அவள் ரயிலை விட்டு இறங்கும்வரை என்னோடு பேசவேயில்லை.


பிளாட்பாரத்தில் நடக்கும் போது காய்கறி வாங்கிக் கொண்டு போக வேண்டும் என்று என்னிடம் சொன்னாள். இருவருமாக நடந்து காய்கறி மார்க்கெட்டினுள் போனோம். மங்கிய மஞ்சள் வெளிச்சத்தில் எல்லா காய்கறிகளும் ஒரே நிறத்திலிருந்தன. அவள் ஒரு கேரட்டை ஒடித்து என்னிடம் தின்னும்படியாக தந்தாள். மாட்டிற்கு கேரட் போடுவது ஏனோ நினைவிற்கு வந்தது. அவளோடு சண்டையிடுவதற்கு அந்த ஒரு காரணம் போதுமானதாகயிருந்தது.


காய்கறி கடை என்பதை மீறி அவளோடு சண்டையிட்டேன். அவள் பொது இடம் என்பதை மறந்து அழ துவங்கினாள். அவள் அழுவது எனக்கு பிடித்திருந்தது. அதற்காக தான் நான் சண்டையிட்டேனோ என்று கூட தோன்றியது. மறுநிமிசம் நான் அவளை சமாதானம் செய்வது போல அவளது ஹேண்ட்பேக்கை என் கையில் எடுத்து கொண்டேன். விடுவிடுவென அவள் நடந்து முன்னால் செல்ல ஆரம்பித்தாள். நிச்சயம் அன்று இரவு சமையல் கிடையாது என்று எனக்கு தெரியும்.


வழியில் இருந்த உணவகத்தில் நான் அவளுக்கும் சுகுவிற்குமாக சேர்ந்து உணவு வாங்கி கொண்டேன். வீட்டை அடையும்  போது சுகு அடிவாங்கி கொண்டிருந்தாள். நான் அதை கண்டு கொள்ளாதது போல உணவை சமையற்கட்டில் வைத்துவிட்டு படுக்கை அறைக்கு திரும்பியிருந்தேன். சுகு அன்றிரவு முழுமையாக உறங்கவில்லை என்பதை மறுநாள் அவள் கண்கள் வீங்கியிருப்பதில் இருந்து கண்டு கொள்ள முடிந்தது.


சுகுவிற்காக தான் விடுமுறை எடுத்துக் கொள்ள போவதாக என் மனைவி சொன்னாள். மறுநாள் முழுவதும் தாயும் மகளும் உறங்கியிருந்தார்கள். மாலையில் நாங்கள் மூவரும் கடற்கரை சென்றோம். இனிமேல் சுகுவை கவனிப்பதற்காக நாங்கள் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை பற்றி உறுதிமொழிகள் எடுத்து கொண்டோம். கடற்கரை மணலில் சுகு விளையாடவேயில்லை. அவளுக்கு கடலின் சப்தத்தை கேட்பது மட்டுமே பிடித்திருந்தது.


என் மனைவி அப்போது தான் சுகுவை வேறு பள்ளிக்கு மாற்றிவிடவேண்டும் என்பதை பற்றி சொன்னாள். ஒன்றாம் வகுப்பிலிருந்து பள்ளி இறுதிவரை ஒரே பள்ளியில் படித்தாள் மட்டுமே அவளது அறிவு வளரும் என்று தன்னோடு வேலை செய்யும் கலைவாணி சொன்னாதாகவும் அவள் பிள்ளைகள் அப்படிதான் படிக்கின்றன என்றாள். எனக்கும் அது சரியென்றே தோன்றியது.

நாங்கள் சுகுவிடம் பள்ளிமாறுவதை பற்றி பேசவோ கேட்கவோயில்லை. எந்த பள்ளியில் சேர்ப்பது என்பதை முடிவு செய்து நாங்கள் இருவரும் அலைந்து திரிந்து வரிசையில் நின்று ஆள் பிடித்து பிரெஞ்சும் ஆங்கிலமும் போதிக்கும் அந்த புகழ்பெற்ற பள்ளியில் இடம் பிடித்து முதல்வகுப்பில் சேர்த்தோம்.
சுகு அந்த பள்ளிக்கு அழைத்து போன முதல்நாள்  வீட்டிலிருந்து கொண்டு போன மதியஉணவை சாப்பிடவேயில்லை. வகுப்பறையில் அவள் அர்த்தமில்லாத சொற்களை கத்திக் கொண்டிருக்கிறாள் என்று ஒரு முறை அவளது டயரியில் வகுப்பாரிசிரியை எழுதி அனுப்பியிருந்தாள்.

என்ன சொற்களை கத்துகிறாள் என்று கேட்காமலே அவளுக்கு அடி விழுந்தது.
அதன்சில நாட்களுக்கு பிறகு அவள் வீட்டில் முதன்முறையாக டியாங்கோ. டியாங்கோ என்று கத்துவதை என் மனைவி தான் கண்டுபிடித்தாள். இப்போ என்னமோ சொன்னயே அது என்னடி என்று சுகுவிடம் கேட்ட போது அவள் உற்சாகமாக டியாங்கோ டியாங்கோ என்று சொன்னாள். அப்படின்னா என்ன அர்த்தம் என்று கேட்டதற்கு டியாங்கோ என்று பதில் சொன்னாள். என்ன சொல் இது. என்ன பொருளாக இருக்கும் என்று புரியúயில்லை.


போதும் நிறுத்து உளறாதே என்று மனைவி அடக்கியதும் அந்த சொல் சுகுவிற்குள் அடக்கிவிட்டது. ஆனால் நாங்கள் எங்காவது அவளை வெளியே அழைத்து கொண்டு போகையில் சப்தமில்லாமல் அவள் இது போன்ற சொற்களை சொல்லிவிளையாடிக் கொண்டிருப்பதை கண்டிருக்கிறேன். அதை எங்கிருந்து கற்றுக் கொள்கிறாள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்று மட்டுமே எனக்கு தோன்றிக் கொண்டிருந்தது.


இதற்காகவே ஒரு நாள் அவளை பள்ளியிலிருந்து அழைத்து கொண்டு வரும்போது அவளிடம் யாரெல்லாம் அவளது வகுப்பு தோழிகள் என்று கேட்டேன். யாருமேயில்லை.  வகுப்பில் யாரோடும் பேசவே மாட்டேன் என்று சொன்னாள். எதற்காக என்று கேட்டபோது தனக்கு பிடிக்காது என்று சொல்லிவிட்டு அவள் தனக்கு தானே எதையோ சொல்லிக் கொள்வதை கேட்டேன்.


அன்றிரவு இதை பற்றி என் மனைவியிடம் சொன்ன போது அதற்கும் சுகுவிற்கு அடி விழுந்தது. ஏன்டி ஊமைக்குரங்கா இருக்கே. உடனே நீ பிரண்ட்ஸ் பிடிச்சாகணும் புரிஞ்சதா என்று மிரட்டினாள்


அம்மா சொல்வதை ஏற்றுக் கொள்வதை போல சுகு தலையாட்டினாள். அதன் பிறகும் அவள் இயல்பு மாறவேயில்லை. வீட்டில் அவளை யாரும் கவனிக்கவில்லை என்று தோன்றினால் அர்த்தமற்ற சொற்களை தன் முன்னால் குவித்து அவள் விளையாட துவங்கிவிடுவாள். அந்த சொற்கள் ஒன்றோடு ஒன்று மோதி சிதறி வெடித்து போவதை கண்டு அவளுக்கு சிரிப்பாக இருக்கும். இயந்திரத்தின் குரலில் அந்த சொற்களை அவள் பேசுவதை கூட சில வேளைகள் கேட்டிருக்கிறேன்.


அப்போது எனக்கு பயமாக இருக்கும். ஒருவேளை அவளது மனநலம் பாதிக்கபட்டு இருக்கிறதோ என்று பயப்படுவேன். ஏன் இப்படி அர்த்தமில்லாத சொல்லை உருட்டி விளையாடிக் கொண்டிருக்கிறாள் என்று கடுப்பாகி கத்துவேன். சுகு அடங்கிவிடுவாள். அந்த சொற்கள் வாயை திறக்காமலே அவளுக்குள் உருண்டு கொண்டிருக்க கூடும்.


இன்றைக்கும் அப்படியொரு சொல்லை தான் கத்தினாள். அதை இதன் முன்னால் எங்கேயோ கேட்டது போலவும் இருந்தது. சுகுவை அருகில் அழைத்து மறுபடியும் அதை சொல்ல சொன்னேன். தயங்கியபடியே புர்ர்ரா என்றாள்.  நீயா கண்டுபிடிச்சியா என்று கேட்டேன். ஆமாம் என்று சொன்னாள். அவளை போலவே நானும் புர்ரா என்று சொல்ல முயற்சித்தேன். அது அவளுக்கு சிரிப்பாக வந்தது.


அப்படியில்லைப்பா என்றபடியே புர்ரா என்று கத்தினாள். அந்த நிமிசம் அவளை எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. அவளை போலவே நானும் கத்த முயற்சித்தேன். ஏதோவொரு கூச்சம் அது போல கத்துவதற்கு எனக்கு வரவேயில்லை. நான் அவளது அர்த்தமற்ற சொல்லை ரசிப்பதை உணர்ந்து கொண்டவள் போல அவள் ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு காரில் போவது போல புர்ரா. புர்ரா என்று ஒடிக் கொண்டேயிருந்தாள். அந்த ஒரு சொல் எங்கள் வீடு முழுவதும் உதிர்ந்து கிடந்தது.


இரவில் என் மனைவி அலுவலகம் விட்டு வீடு வரும்வரை அந்த சொல் காற்றில் பறந்து அலையும் சோப்பு குமிழ்கள் போல அலைந்து கொண்டிருந்தன. ஆனால் அவள் வருகையின் போது அவை கரைந்து போய்விட்டன. சுகு ஒடிவந்து என்னிடம் ரகசியமான குரலில் இதை அம்மாகிட்டே சொல்லாதே. அடிப்பா என்றாள். எங்கள் இருவரையும் பார்த்த மனைவி என்ன திருட்டுதனம் பண்ணுறீங்க என்று கேட்டாள்.


நான் பதில் பேசவில்லை. எழுந்து போய் அவளை முத்தமிட விரும்பி அருகில் இழுத்தேன். சுகு இதை காண விரும்பாதவள் போல வேடிக்கையாக கைகளால் முகத்தை மூடிக் கொண்டாள். என் முகத்தை விலக்கியபடியே கடுகடுப்பான குரலில் நானே அலுத்து போய் வந்திருக்கேன். நீங்க வேற ஏன் உயிரை எடுக்குறீங்க என்று  சொன்னாள் மனைவி. என் முகம் சிடுசிடுப்பேறி மாறியது.
அவசரமாக குளியல் அறைக்குள் போய் கதவை பூட்டிக் கொண்டேன். ஆத்திரமாக வந்தது. ஏதாவது செய்ய வேண்டும் போலிருந்தது. கண்ணாடி முன்பாக நின்று கொண்டு புர்ரா..  என்று கத்தினேன்


கத்த கத்த  மனதில் இருந்த கோபம் வடிந்து போய்க் கொண்டிருந்தது.  எனக்கு சுகுவை அந்த நிமிசத்தில் ரொம்பவும் பிடித்திருந்தது. நானும் அதை போன்ற சொற்களை நிறைய கற்று கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன். மறுபடியும் கண்ணாடி முன்பாக புர்ரா என்று சப்தமிட்டேன்.


என் முகத்தை அப்படி காண்பது எனக்கே விசித்திரமானதாக இருந்தது.


***

Gayathri:
தரமணியில் கரப்பான்பூச்சிகள்
என்னை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். ஆனால் என் பெயரை மறந்து போயிருப்பீர்கள். அல்லது கேட்டிருக்கவே மாட்டீர்கள். காரணம் நான் பெயரோடு பெரும்பாலும் அறிமுகமாகிக் கொள்வதேயில்லை. என் அடையாளமாக இருப்பது கரப்பான்பூச்சிமருந்து விற்பவன். அதுவும் ஜெர்மனியின் புகழ்பெற்ற பூச்சிக் கொல்லி நிறுவனமான வில்ஹெம் ஒபேரின் விற்பனைப் பிரதிநிதி என்ற அடையாள அட்டையிருக்கிறது. ஆகவே அது உங்களுக்குப் போதுமானது. எனக்கே கூட என்னுடைய பெயர் தற்போது கொஞ்சம் அசௌகரியமாகவே இருக்கிறது.

பெயரைப் பொறுத்தவரை அது என்னோடு ஒட்டிக் கொள்ளவேயில்லை. வேலை மாறும்போது அதுவும் மாறிக் கொண்டேயிருக்கிறது. சிறுவயதிலே எனக்கு அந்தச் சந்தேகம் உண்டு. அடுத்தவர்களுக்காக ஏன் நான் ஒரு பெயரை வைத்துக் கொண்டிருக்கிறேன். என் பெயரால் எனக்கு என்ன நன்மை. அது தேவையற்ற ஆறாவது விரல் ஒன்றை போல ஏன் கூடவே ஒட்டிக் கொண்டிருக்கிறது என்று. உலகில் பெயரில்லாமல் எவ்வளவோ பொருட்கள் இருக்கின்றன. நம் கண்ணிலும் படுகின்றன. அதை நாம் ஒரு போதும் பெரிதாகக் கருதியதேயில்லை. அப்படி நானும் இருந்துவிட்டுப் போவதில் என்ன தவறிருக்ககூடும்.

என்றாலும் என்னைச் சுற்றியுள்ள மனிதர்களுக்குப் பெயர் வேண்டியிருக்கிறது. ஏதாவது ஒரு பெயர் போதும். அது ஒற்றை எழுத்தாகக் கூட இருந்தாலும் அங்கீகரித்துவிடுகிறார்கள். அதனால் ஒபேர் நிறுவனம் எனக்கு உருவாக்கிய கரப்பான்பூச்சி மருந்து விற்பவன் என்ற பெயரே போதுமானதாகயிருக்கிறது. அதை நான் ஆங்கிலத்தில் சொல்லும் போது தமிழை விடக் கூடுதலான ஒரு நெருக்கத்தை நீங்கள் அடைகிறீர்கள். கரப்பான்பூச்சிகளைக் கூட காக்ரோஷ் என்று தான் பெரும்பான்மை வீடுகளில் சொல்கிறார்கள். கரப்பான்பூச்சி அளவில் கூட தமிழ் ஒட்டிருப்பது மாநகரவாசிகளுக்குப் பிடிப்பதில்லை போலும்.

என்னைப் பற்றி அறிந்து கொள்வதில் உங்களுக்கு விருப்பம் எதுவும் இருக்கப்போவதில்லை. ஆனால் எனக்கு இரண்டு மணி நேரம் பணியிடை ஒய்வு இருக்கிறது. ஆகவே அதைப் போக்கி கொள்வதற்காகவே உங்களிடம் இதைச் சொல்கிறேன்.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நான் பயிற்சிப் பணியாளராக இருந்த போது நெசப்பாக்கம் பகுதியின் முன் உள்ள பெட்ரோல் பங்க் முன்னால் தினமும் காலையில் சந்தித்துக் கொள்வோம். எங்களுக்கு தலைவராக இருந்தவர் மணிநாராயணன். அவர் கரப்பான்பூச்சிமருந்து விற்பதில் தமிழகத்திலே மூன்றாவது ஆளாக சாதனை படைத்தவர்.

நாங்கள் ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு இருநூறு ஸ்பிரே விற்க வேண்டும் என்பதை அவர் இலக்காக வைத்திருந்தார். ஆகவே காலை ஏழு மணிக்கு குழு குழுவாகப் பிரித்து பணியிடத்திற்கு அனுப்பிவிடுவார். அவரிடம் கரப்பான்பூச்சிகள் காலை ஏழு மணிக்கு எழுந்து கொள்ளுமா அல்லது உறக்கத்தில் இருக்குமா என்ற சந்தேகத்தை நான் ஒரு போதும் கேட்க முடிந்ததேயில்லை.

அவர் தனது கறுப்பு சூட்கேஸில் மாநகரின் வரைபடத்தை நான்காக மடித்து வைத்திருக்கிறார். அந்த வரைபடத்தில் நகரின் ஒவ்வொரு பகுதியும் ஒரு வண்ணத்தில் தனித்துப் பிரிக்கபட்டிருக்கும். எந்தப் பகுதியில் கரப்பான்பூச்சிகள் அதிகமிருக்கும். அங்கே எத்தனை பேர் போக வேண்டும் என்று வட்டமிட்டிருப்பார்.

ஒரு நகரை கரப்பான்பூச்சிகளின் எண்ணிக்கையைக் கொண்டு தனித்தனியாக பிரித்திருப்பது எவ்வளவு பெரிய விந்தை. அதை மணி நாராயணன் உணர்ந்திருப்பாரா?

அவர் கறாரான முகத்துடன் பல்லைக் கடித்துக் கொண்டு பேசுவார். அது கூட வயதான ஒரு கரப்பான்பூச்சி பேசுவது போலதானிருக்கும். அவர் இளைஞராக இருந்த காலத்தில் சென்னையில் அதிக கரப்பான்பூச்சிகள் இருந்திருக்க கூடும். அதில் பெரும்பகுதியை ஒழித்து ஒரு இனத்தின் அடிவேரைப் பாதியாக அழிந்த பெருமை அவருக்கு உண்டு.

அன்று நெசப்பாக்கம் பகுதிக்குள் நாங்கள் ஆறு பேர் பிரித்து அனுப்பபட்டோம். புதிதாக வளர்ந்து வரும் பகுதி என்பதால் அது இன்னமும் ஒரு கிராமத்தின் சாயலை கொண்டிருந்தது. பால்மாடுகள், சாலையில் நின்று குளிப்பவர்கள், சிறிய ஒட்டுவீடுகள், முருங்கைமரங்கள், வறட்டி தட்டி விற்பவர்கள், மரப்பெஞ்சு போட்ட தேநீர்கடைகள், நகரப் பேருந்துகள் உள்ளே வராத சாலைகள், முட்டுச்சந்துகள், என்று கலவையாக இருந்தது. நான் அதன் தென்பகுதியில் உள்ள பனிரெண்டுவீதிகளை மதியத்திற்குள் முடித்துவர வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்கள்.

எந்த வீட்டின் கதவை முதலில் தட்டுவது என்று புரியாமல் நடந்து கொண்டேயிருந்தேன். எங்கள் பணியில் முதல் சத்ரு நாய்கள். அது தெருநாயாகவோ, வளர்ப்பு நாயாகவோ எதுவாக இருந்தாலும் அதற்கு எங்களைப் பிடிப்பதேயில்லை. எங்களைக் கண்டு வாய் ஒயாமல் குறைக்கின்றன. கடிக்கப் பாய்கின்றன. இதே நாய்கள் பெண் விற்பனையாளரைக் கண்டு மட்டும் குலைப்பதில்லை. வாலாட்டுகின்றன. அது என்ன பேதம் என்று தான் புரியவேயில்லை. நாய்கள் மனிதர்களுடன் பழகி அவர்கள் சுபாவத்தையேக் கொண்டிருக்கின்றன. ஒரு நாய் கூட நாய் போல நடந்து கொள்வதில்லை என்பது தான் நிஜம்.

இதனால் நான் நாய்களை வெறுக்க ஆரம்பித்தேன். சீனாவில் மாநகரங்களில் நாய்கள் வளர்க்கவோ. வீதியில் அலையவோ அனுமதிக்கபடுவதேயில்லை என்று ஒருநாள் காலைபேப்பரில் வாசித்தேன். அது தான் என் வாழ்நாளின் கனவும் கூட. ஆனால் நகரவாசிகள் நாய்களை நேசிக்கிறார்கள். எவரோ தெருநாய்களுக்கு கூட உணவளித்து அதன் வம்சவிருத்தியை அக்கறையோடு கவனித்து கொள்கிறார்கள். இந்த விசயத்தில் எனக்கு மக்களை புரிந்து கொள்ள முடியவேயில்லை.

விற்பனையாளராக நான் பணியில் சேர்ந்த போது ஒருவார காலம் ஐந்து நட்சத்திர விடுதியில் வைத்து எங்களுக்குச் சிறப்பு பயிற்சி கொடுக்கபட்டது. அதில் எத்தனை விதமான வண்டுகள், பூச்சிகள், எறும்புகள் வீட்டிற்குள் புகுந்துவிடுகின்றன என்று புகைப்படத்துடன் பெரிய கேட்லாக் ஒன்றை எங்களுக்கு தந்தார்கள்.

என்னால் நம்பவே முடியவில்லை. நானூற்று பதினாறு விதமான பூச்சிகள் நம்மோடு சேர்ந்து வாழ்கின்றன. கரப்பான்பூச்சிகளில் தான் எத்தனை விதம். நிறத்தில் வடிவத்தில் ஒன்றோடு ஒன்று மாறுபட்டவை. கண்ணில் பார்க்கும் போது நாம் அதை இவ்வளவு துல்லியமாக வேறுபடுத்தி அறிய முடியவில்லை. அத்தோடு கரப்பான்பூச்சிகளுக்கு தனியான பெயர்கள் இல்லை என்பதால் அதை நாம் பொதுவான ஒன்றாகவே கருதுகிறோம்.

அந்தப் பூச்சிகளின் புகைப்படங்களைப் பார்த்த போது நாமும் சிறு பூச்சிகள் போல தான் வாழ்ந்து கொண்டிருப்பதாகத் தெரிந்தது. அந்தப் புகைப்படத்தை உண்மையில் நான் நேசித்தேன். ஒவ்வொரு கரப்பான்பூச்சியையும் நேரில் பார்த்து அறிமுகம் செய்துகொண்டுவிட வேண்டும் என்பது போல ஆசைப்பட்டேன். ஆனால் அவர்கள் அதை எப்படிக் கொல்வது. எங்கே அவை ஒளிந்து கொண்டிருக்கும். எவ்வளவு நேரத்தில் ஒரு கரப்பான்பூச்சி செத்துப் போகும் என்பதிலே கவனமாக இருந்தார்கள்.

உண்மையில் கரப்பான்பூச்சிகளைக் கண்டு ஏன் மக்கள் பயப்படுகிறார்கள். அது கடித்தால் விஷமா என்று சக ஊழியரைக் கேட்டேன். அவர் அது ஒரு பொய். பல காலமாக இந்தப் பொய்யை நாம் வளர்த்துக் கொண்டே வந்துவிட்டோம். அந்தப் பொய்யில் தான் நமது சம்பாத்தியம் அடங்கியிருக்கிறது என்று சிரித்தபடியே சொன்னார்.

என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒரு சமூகம் ஏன் கரப்பான்பூச்சிகளை வெறுக்கிறது. கண்ணில் பட்டாலே அருவருப்புக் கொண்டுவிடுகிறது. என்ன பகையிது. ஏன் இவ்வளவு வெறுப்பும் அசூயையும் என்று ஐந்து நாளும் யோசித்தேன். அப்படியும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

எங்களது பயிற்சி வகுப்பை நடத்த கல்கத்தாவில் இருந்து வந்திருந்த மோகித்சென் வங்காள உச்சரிப்பிலான ஆங்கிலத்தில் நீங்கள் ஒவ்வொரு வீட்டின் கதவைத் தட்டியதும் சொல்ல வேண்டிய முதல் பொய் எது தெரியுமா என்று கேட்டார். நாங்கள் அமைதியாக இருந்தோம்.

அந்தப் பொய் அற்புதமானது. அது எந்த வீட்டையும் திறக்ககூடிய சாவியைப் போன்றது என்று கைகளை உயர்த்தி ஆர்ப்பாட்டமாகச் சொன்னார். அவரது பொய்யைக் கேட்க ஆவலாக இருந்தோம்.

உங்களது முதல் பொய் இது தான். உங்கள் அருகாமையில் விஷமான கரப்பான்பூச்சிகள் பெருகிவருவதாக அறியப்படுகிறது. அவை கடித்தால் விபரீதமாகிவிடும். அதிலிருந்து உங்களை காப்பாற்றிக்கொள்ள நீங்கள் ஏன் எங்கள் தயாரிப்பைப் பரிசோதித்து பார்க்க கூடாது என்பதே.

இந்தப் பொய்யை நீங்கள் உணர்ச்சிவசப்படமால், கண்களில் மிகுந்த அன்பும் வாஞ்சையோடும் சொல்லிச் சொல்லி பழகவேண்டும். காரணம் புதிய மனிதர்களை எதிர்கொள்ளும் போது அவர்கள் கண்களைத் தான் மக்கள் கவனிக்கிறார்கள். என்றார்

அதைக் கேட்ட போது எனக்கு எரிச்சலாக வந்தது. எந்த மனிதனும் அடுத்தவனின் உதடை ஏன் கவனிப்பதில்லை. கண்கள் ஒரு போதும் பொய் சொல்வதில்லை. உதடுகள் தான் பொய் சொல்கின்றன. ஆனால் அதை மக்கள் ஏன் இவ்வளவு அலட்சியமாக விட்டுவிடுகிறார்கள். எனக்கு என்னவோ அடுத்தவரின் பொய்கள் மீது நாம் உள்ளுற ஆசை கொண்டிருக்கிறோமோ என்று தான் தோன்றுகிறது.

அன்று எங்கள் பயிற்சி வகுப்பில் நாங்கள் நாற்பத்தி ரெண்டு பேரும் ஒருவரையொருவர் பார்த்து கண்களில் அன்பு ஒழுக உங்கள் வீட்டின் அருகாமையில் விஷமுள்ள கரப்பான்பூச்சிகள் பெருகிவிட்டன .எங்கள் தெளிப்பானை உபயோகித்து அவற்றைக் கொல்லுங்கள் என்று நேசத்துடன் சொல்லிப் பழகினோம்.

மிக அபத்தமான நாடகம்ஒன்றில் பாத்திரமாகிவிட்டதைப் போல இருந்தது. ஆச்சரியமான உண்மை என்னவென்றால் நான் பதினைந்து நிமிசங்களிலே அந்த வேஷத்திற்கு கச்சிதமாக பொருந்தி போய்விட்டது. நான் அதைச் சொல்லும் போது அந்த வீட்டில் கரப்பான்பூச்சிகள் ஒடுவது என் கண்ணில் நிஜமாக தெரிவது போல இருக்கிறது என்று மோகித் சென் பாராட்டினார்.

பொய்கள் எளிதாகப் பழகிவிடுகின்றன. உண்மையைச் சொல்வதற்கு தான் நிறைய நடிக்க வேண்டியிருக்கிது. அந்தப் பயிற்சிகாலத்தில் மக்களைப் பயமுறுத்த வேண்டியதே நாங்கள் திரும்பத் திரும்ப செய்ய வேண்டிய வேலை என்று அறிவுறுத்தபட்டது.

அது எளிதான ஒன்றில்லை. மக்கள் எப்போது எதைக் கண்டு பயப்படுவார்கள் என்பது மாபெரும் புதிர். ஆனால் கரப்பான்பூச்சிகளைச் சொல்லி பெண்களை எளிதாக பயமுறுத்திவிடலாம். ஆகவே ஆண்கள் வீட்டில் இல்லாத நேரங்களில் தான் நாங்கள் கதவைத் தட்ட வேண்டியிருந்தது.

பெண்கள் கரப்பான்பூச்சி குறித்து விதவிதமான கற்பனையை கொண்டிருக்கிறார்கள் என்பதை என் பணி அனுபவத்தில் முழுமையாக உணர்ந்திருக்கிறேன். வேறு எந்தப் பூச்சியை விடவும் கரப்பான் அந்த அளவில் துரதிருஷ்டசாலி . அதைப் பெண்கள் வெறுக்கிறார்கள். அழித்து ஒழிக்க பணம் செலவழிக்கிறார்கள். பெண்களால் வெறுக்கபடுவது அழிந்து போவது இயற்கை தானே.

நான் பெண்களிடம் கரப்பான்பூச்சி பற்றி விதவிதமாக பொய் சொல்லப் பழகியிருந்தேன். குறிப்பாக அவர்கள் குளியல் அறையில் வந்து ஒளிந்து கொள்ளும் கரப்பான்பூச்சிகள் ஒருவிதமான பச்சை நிறத் திரவத்தை உமிழ்கின்றன என்றும் அது உடலில் பட்டால் உடனே தோலில் புள்ளிபுள்ளியாக உருவாக துவங்கிவிடும் என்றும் மிரட்டினேன். அதை அவர்கள் அலட்சியப்படுத்தினால் ஒரு மாத காலத்தில் உடலெங்கும் நோய் பரவி அகோரமாகிவிடுவார்கள் என்றும் சொல்வேன்.

இந்தப் பொய் ஒரு பிரம்மாஸ்திரம் போன்றது. அதிலிருந்து எந்தப் பெண்ணும் தப்பவே முடியாது. ஒரு பெண் இந்தப் பொய்யைக் கேட்டு கண்ணீர் விட்டு அழுதாள். அப்படி அவள் உண்மையில் கரப்பான்பூச்சிகளால் கடிபட்டிருக்கிறாள் என்றும் அந்த சந்தேகத்தை நான் உறுதி செய்துவிட்டதாகச் சொல்லி உடனடியாக எனது தெளிப்பானை வாங்கி கொண்டதுடன் இதற்கு என்னவிதமான சிகிட்சைகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அக்கறையோடு கேட்டாள்.

இதற்காக நான் கூடுதலாக கொஞ்சம் அழகுக்கலை குறிப்புகளை வாசிக்க வேண்டிய அவசியமிருந்தது. அதற்கு நான் பெரிய சிரமம் ஒன்றும் எடுக்கவில்லை. பழைய பேப்பர் கடைகளில் உள்ள ஐந்தாறு வருச பழைய பெமினா, ஈவ்ஸ் வீக்லி போன்ற இதழ்களைப் புரட்டி அதில் வெளியான அழகுகுறிப்புகளை மனதில் நிறுத்தி வைத்துக் கொள்வேன்.

உண்மையில் ஒரு கரப்பான்பூச்சி கொல்லி விற்பவன் எவ்வளவு நுட்பமாக பணியாற்ற வேண்டியிருக்கிறது என்பதை நீங்களே நினைத்து பாருங்கள். அந்தப் பெண் நான் சொன்ன அழகுகுறிப்பை நிச்சயம் பயன்படுத்தத் துவங்கியிருப்பாள். எல்லா அழகு குறிப்புகளும் பயத்திலிருந்து உருவானவை தானே.

கரப்பான்பூச்சி பற்றிய பொய்களை மக்கள் சந்தேகம் கொள்வதேயில்லை. பூச்சிகள் கொல்லப்படும் போது மக்கள் நிம்மதி அடைகிறார்கள். கரப்பான்பூச்சிகள் எவ்வளவு காலம் உயிர்வாழ கூடியவை. அதில் ஆண் பெண் என்று வேறுபாடு இருக்கிறாதா? வயதாகி செத்த கரப்பான்பூச்சி என்று ஒன்றாவது உலகத்தில் இருக்குமா என்று எவரும் என்னிடம் கேட்டதேயில்லை

நான் இந்தப் பணியில் ஆரம்ப நாட்களில் வீட்டின் காலிங்பெல்லை அடிக்க கூச்சப்பட்டிருக்கிறேன். காலிங்பெல் மீது கை வைத்தவுடனே எனது இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்துவிடும். வீட்டிலிருந்து எந்த வயதில் யார் வெளியே வருவார்கள் என்று மனதில் ஒரு கற்பனை உருவம் தோன்ற ஆரம்பிக்கும். பெரும்பாலும் என் கற்பனை பொய்யாகிவிடும். அரிதாக ஒன்றிரண்டு முறை நான் நினைத்தது போலவே மெலிந்த உடலும் நெளிகூந்தலும் தூக்கம் படிந்த முகத்தோடு பெண்கள் வந்திருக்கிறார்கள்.

நான் பயிற்றுவிக்கபட்ட கிளி போல சொல்வதை அவர்கள் காதுகள் கேட்டுக் கொள்வதில்லை. சலிப்புடன் வேண்டாம் என்றோ, ஏன் காலிங்பெல்லை அடித்தேன் என்று கோபபட்டோ கதவை மூடிவிடுவார்கள். மூடிய கதவிற்கு வெளியில் சில நிமிசங்கள் நின்று கொண்டிருப்பேன். அப்போது மனதில் சில விபரீதமான எண்ணங்கள் தோன்ற துவங்கும். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, என்று கரும்புகை சுழல்வதை போல தீவினைகள் என் மனதில் புகைய ஆரம்பிக்கும். பிறகு அது தானே அடங்கி ஒடுங்கியதும் இறங்கிப் போய்விடுவேன். பூச்சிமருந்து விற்பவன் வேறு என்ன செய்ய முடியும்.

விற்பனைப் பிரதிநிதி என்பவன் பொதுவெளியில் அலையும் ஒரு நடிகன். நாடகக் கதாபாத்திரம் ஒன்று தான் எப்போது மேடையில் நுழைவோம் என்று திரையின் பின்னால் நின்றபடியே காத்துக் கொண்டிருப்பது போன்ற மனநிலை தான் தினமும் எனக்கு நேர்கிறது.

ஒவ்வொரு நாளும் பூச்சிமருந்துகளுடன் தெருவில் நடந்து போகத் துவங்கியதும் எந்த வீட்டின் கதவை முதலில் தட்டுவது என்று குழப்பமாக இருக்கும். எனது சக ஊழியர்கள் ஒவ்வொருவரும் இதற்கான தனியான வழிமுறை ஒன்றை வைத்திருந்தார்கள்.

மூத்த விற்பனையாளரான சங்கரன் எப்போதுமே வலதுபக்கம் உள்ள வீட்டைத் தான் முதலில் தட்டுவார். எல். கோவிந்துவிற்கு ஒன்பது ராசியான எண் என்பதால் எட்டுவீடுகளை தவிர்த்துவிட்டு ஒன்பதாவது வீட்டில் யாரும் இல்லாமல் போயிருந்தால் கூட அதைத் தான் முதலில் தட்டுவார். நான் இப்படி எந்த பழக்கத்தையும் உருவாக்கி கொள்ளவில்லை. மாறாக நான் நடக்க துவங்குவேன். சில நேரம் வீதியின் கடைசி வரை கூட நடந்து கொண்டேயிருப்பேன். மனதில் நடிக்கத் துவங்கு என்ற குரல் கேட்க ஆரம்பிக்கும். அது உச்சத்திற்கு எட்டியதும் சட்டென ஏதாவது ஒரு வீட்டு கதவை தட்டிவிடுவேன்.

பகல்நேரங்களில் திறக்கபடும் வீடுகளை கவனிக்கிறேன். எல்லா வீடுகளும் அலங்கோலமாகவே இருக்கின்றன. ஒழுங்கின்மை, கவனமின்மை பீடித்திருக்கிறது. தேவையற்ற பொருட்கள் குவிந்துகிடக்கின்றன. பயத்தோடு தான் கதவைத் திறக்கிறார்கள். சில வீடுகளில் கதவை திறப்பதேயில்லை. ஆனால் குரல் மட்டும் வெளியே கேட்கிறது. அப்படித் திறக்கப்படாத கதவுகளை பொய் சொல்லி திறக்க வைப்பதே எங்களது சாமர்த்தியம்.

ஆகவே கதவின் முன்னே நின்றபடியே நான் சுகாதாரத் துறையில் இருந்து வந்திருப்பதாக பொய் சொல்லுவேன். உடனே கதவு திறந்துவிடும். மக்கள் அரசாங்கத்திற்கு பயப்படுகிறார்கள். எவ்வளவு மேன்மையான குணமது. அவர்களிடம் சுகாதாரத் துறை இந்தப் பகுதியில் கரப்பான்பூச்சிகள் பெருகிவிட்டதாக அடையாளம் கண்டுள்ளது என்று கறாரான குரலில் சொல்வேன். அவர்கள் கலக்கத்துடன் அது தன்னுடைய தவறில்லை என்பதுபோலவே கேட்டுக் கொள்வார்கள். என்னிடம் உள்ள குறிப்பு நோட்டில் அந்த வீட்டோர் பற்றிய விபரங்களை கேட்டறிந்து மறுநாள் எனது சகாக்களில் ஒருவனை அங்கே அனுப்பி தெளிப்பானை விற்பது வழக்கம்.

மக்கள் தங்களை விட சிறிய உயிரினங்கள் எல்லாவற்றையும் வெறுக்கிறார்கள். கொன்றுவிட துடிக்கிறார்கள். அதில் குழந்தைகள் கூட விதிவிலக்கில்லை. எந்தக் குழந்தையும் ஒரு எறும்பைக் கூட நேசிக்கவில்லை. எறும்பை தலைவேறு உடல்வேறாக பிய்த்து கொல்வதில் எவ்வளவு ஆனந்தம் கொள்கின்றன. இவ்வளவு ஏன், அழகிகளாக நாம் கொண்டாடும் பெண்கள் வன்மத்துடன் பூச்சிகளை கட்டையால் அடித்துக் கொல்வதை நீங்கள் அருகில் இருந்து பார்க்க வேண்டும். எவ்வளவு ஆவேசம். எவ்வளவு ஆத்திரம்.

ஆண்கள் பூச்சிகளுடன் வாழ்வதில் அதிக பேதம் காட்டுவதில்லை. எப்போதாவது அதைக் கண்டு சலித்து கொள்கிறார்கள். சில வேளைகளில் அதைக் கட்டுபடுத்த முடியாத தனது ஆண்மையை நினைத்து கோபம் கொள்கிறார்கள். ஒன்றிரண்டு மெல்லிதயம் படைத்த ஆண்கள் மட்டுமே பூச்சிகொல்லிகளை உபயோகிக்கிறார்கள். இது பொது உண்மையில்லை எனது கண்டுபிடிப்பு.

கரப்பான்பூச்சி மருந்து விற்பவர்கள் இப்படி நிறைய கண்டுபிடிப்புகளைக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு உதாரணம் சொல்கிறேன். கரப்பான்பூச்சியைக் கொன்ற பிறகு பெரும்பான்மை மக்கள் அதன் மீசையைப் பிடித்து மட்டுமே தூக்கி வெளியே எறிகிறார்கள். காரணம் மீசையின் மீதுள்ள தாங்கமுடியாத வெறுப்பு. மனிதர்கள் எவராவது இப்படி மீசையைப் பிடித்து தூக்கி எறியப்பட்டிருக்கிறார்களா?

பெரும்பான்மை வீட்டுப் பெண்களின் கவலை எல்லாம் எனது தெளிப்பானை எவ்வளவு மலிவாக வாங்கிவிட முடியும் என்பதே. நாங்களே அந்தத் தந்திரத்தை நுகர்வோருக்கு அளித்திருந்தோம். எங்கள் பூச்சி மருந்து தெளிப்பானின் விலை பனிரெண்டு ரூபாய் முப்பது காசுகள். அதை நாங்கள் இருநூற்று ஐம்பது ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். வீடு தேடி வரும் சலுகை என்று அதை ஐம்பது ரூபாய் குறைத்து இருநூற்றுக்கு விற்பனை செய்கிறோம். அதை அடித்துபேசி விலை குறைக்கும் பெண்களிடம் உங்களுக்காக மட்டும் நூற்று ஐம்பது என்று விற்பனை செய்வோம். அப்படி வாங்கிய பெண் அளவில்லாத சந்தோஷம் கொள்வதை என்னால் காண முடிந்திருக்கிறது. ஒரு கரப்பான்பூச்சி மருந்தை விலை குறைத்து வாங்கிவிட்டது எளிய செயலா என்ன?

ஒரேயொரு முறை ஒரு பெண் என்னிடம் எனது தெளிப்பானால் எவ்வளவு கரப்பான்பூச்சிகளை கொல்ல முடியும் என்று கேட்டாள். எங்கள் பயிற்சிகாலத்தில் இந்தக்கேள்வியை நான் கேட்டிருந்தால் நிச்சயம் கைதட்டு கிடைத்திருக்கும். மொகித்சென் அதற்கான விடையை உடனே சொல்லியிருப்பார். ஆனால் அன்று அந்தபெண் கேட்டதற்கு என்னிடம் பதில் இல்லை. உடனடியாகப் பொய் சொல்லவும் முடியவில்லை.

நான் சமயோசிதமாக உங்கள் வீட்டில் உள்ள அத்தனை கரப்பான்பூச்சிகளையும் கொல்ல முடியும் என்று மட்டுமே சொன்னேன். உடனே அந்த பெண் எறும்புகளை இதனால் கொல்ல முடியுமா என்று கேட்டாள். எறும்புகள் ஈக்கள், பொறிவண்டுகள், விளக்குபூச்சிகள் என அத்தனையும் கொல்ல முடியும் என்று சொன்னேன். அவள் பல்லியைக் கொல்ல முடியுமா என்று மறுபடியும் கேட்டாள். பல்லியைக் கொல்வது பாவம் என்று மட்டுமே சொன்னேன். அவளும் அதை உணர்ந்து கொண்டவளை போல தலையாட்டிவிட்டு பணத்தை எண்ணித் தந்தாள். அந்த பணத்தில் ஒரு கிழிந்து போன ஐம்பது ரூபாய் இருந்தது. அதை என்னிடம் தந்திரமாக தள்ளிவிட்ட திருப்தி அவளுக்கு இருந்திருக்கும். ஒருவேளை அதற்காகவே இந்த தெளிப்பானை அவள் வாங்கியிருக்கவும் கூடும்.

மனிதர்கள் மிகவும் விசித்திரமானவர்கள் என்பதே என் அனுபவம். அவர்கள் அடுத்தவரை ஏமாற்றுவதில் அலாதியான ஆனந்தம் அடைகிறார்கள். அதை வளர்த்து கொள்ள விரும்புகிறார்கள். அடுத்த தலைமுறைக்கு கற்று தருகிறார்கள். ஏமாற்றியதை பற்றி பெருமை பேசுகிறார்கள்.

ஒரு நாள் ஸ்ரீனிவாசா திரையரங்கு அருகாமையில் உள்ள வீட்டின் கதவை தட்டினேன். மதியமிருக்க கூடும். பெரும்பான்மையினர் மதியத்தில் உறங்கிவிடுகிறார்கள். மனிதர்கள் உறங்கும் போது உலகம் அமைதி அடைகிறது என்று காலண்டர் தாளில் ஒரு வாசகம் படித்தேன். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அதனால் நாங்கள் மதியம் இரண்டு முதல் நான்கு வரை வேலை செய்வதில்லை. எங்காவது ஆசுவாசப்படுத்திக் கொள்வோம். அன்று நான்கு மணிக்கு சற்று முன்பாக அந்த வீட்டின் கதவை தட்டியிருந்தேன். வயதான ஒருவர் கதவைத் திறந்தார். அவரிடம் நான் பூச்சிமருந்து விற்பனையாளன் என்று சொன்னதும் அவர் உள்ளே வரச்சொன்னார். அந்த வீடு அழுக்கடைந்து போயிருந்தது. சுவெரங்கும் மழைநீர் இறங்கிய கறை. மூடிக்கிடந்த ஜன்னல். அதில் ஒரே போல நாலைந்து உபயோகமற்ற பல்துலக்கிகள். அறையெங்கும் பழைய நாளிதழ்கள். வார மாத இதழ்கள், புத்தகங்கள். குப்பை போல குவிந்து கிடந்தன. அவர் அதற்கு ஊடாகவே ஒரு சாய்வு நாற்காலியை போட்டிருந்தார். அருகாமையில் துருப்பிடித்து போன ஒரு கட்டில் அதன் மீது முழுவதும் வெவ்வேறு விதமான புத்தகங்கள், அடியிலும் கட்டுகட்டாக பழைய நாளிதழ்கள். கயிற்றுகொடியில் பழுப்பேறிய வேஷ்டி பனியன்கள் காய்ந்து கொண்டிருந்தன. நிச்சயம் அவரிடம் எளிதாக ஒரு தெளிப்பானை என்னால் விற்றுவிட முடியும் என்று தோன்றியது.

நான் தூசியால் ஏற்பட்ட அசௌகரியத்தை பொருட்படுத்தாமல் நின்று கொண்டிருந்தேன். அவர் ஒரு நாளிதழ் கட்டைக் காட்டி அதில் ஏறி என்னை உட்காரச் சொன்னார். நான் அதில் உள்ள தூசியை கையால் தட்டியபோது நாசியில் காரமேறித் தும்மல் வந்தது. எனது தெளிப்பானை வெளியே எடுத்து விளக்கம் சொல்ல ஆரம்பித்தேன்.

அவர் அதைப் பிறகு பார்த்து கொள்ளலாம். தான் நிச்சயம் ஒன்றை வாங்கி கொள்கிறேன் என்றபடியே எனக்கு திருமணமாகிவிட்டதா என்று கேட்டார். இல்லை என்று சொன்னேன். குடிக்கிற பழக்கமிருக்கிறதா என்று கேட்டார். இல்லை என்று அவசரமாக மறுத்தேன். அவர் தலையாட்டிக் கொண்டு கேலியான தொனியில் இதுவரை எவ்வளவு கரப்பான்பூச்சிகளை கொல்ல உதவியிருக்கிறாய் என்று ஆங்கிலத்தில் கேட்டார். அது என்னை குத்திபார்ப்பது போல இருந்தது.

அது உபயோகமில்லாதவை அழிக்கபட வேண்டியவை தானே என்று கறாராக சொன்னேன். அவர் தலையாட்டிக் கொண்டார். பிறகு என் அருகில் இருந்த ஒரு பேப்பர்கட்டை காட்டி அதை பிரிக்கும்படியாக சொன்னார். நான் குனிந்து எடுத்து அதை பிரித்தபோது 1978 வருசம் நவம்பர் 7ம் தேதி பேப்பரை எடுக்கும்படியாக சொன்னார். எதற்காக இவற்றை எல்லாம் சேகரித்து வைத்திருக்கிறார் என்று புரியவில்லை.

பளுப்பேறி எழுத்து மங்கிப் போயிருந்த ஒரு பேப்பரை எடுத்து நீட்டினேன். அதன் ஆறாம்பக்கத்தை உரக்க படி என்று சொன்னார். பிரித்து பார்த்த போது அதில் ஒரு கரப்பான்பூச்சி படமிருந்தது. சப்தமாக படித்தேன். மடகாஸ்கரில் காணப்பட்ட ராட்சச கரப்பான்பூச்சியது. அது ஐந்து அங்குல நீளமுடையது. முப்பது கிராம் எடை கொண்டது அதை கரப்பான்பூச்சிகளின் டைனோசர் என்று குறிப்பிட்டிருந்தார்கள். அவர் அதை கவனமாக கேட்டு கொண்டிருந்துவிட்டு இது போல ஒன்றை நீ பார்த்திருக்கிறாயா என்று கேட்டார். இல்லை என்றேன்.

இது நம் ஊரில் இருந்து அழிக்கபட்ட இனம். நான் பார்த்திருக்கிறேன். நான் இதை பற்றி மறுப்பு எழுதி அனுப்பினேன். அது பத்திரிக்கையில் வரவேயில்லை என்று சொன்னார். நான் அமைதியாக இருந்தேன். அவர் விஞ்ஞானம், வானவியல், ஜோசியம், ஜன்ஸ்டீன் குவான்டம் தியரி, ரிச்சர்ட் டாவ்கின்ஸ் என்று ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார். எனக்கு நிறைய வேலையிருக்கிறது என்று எழுந்து கொள்ள முயன்றேன்.

அவர் தனது பர்சில் இருந்து இருநூறு பணத்தை எடுத்துத் தந்து தெளிப்பான் எனக்கு வேண்டாம். நீயே உபயோகபடுத்தி கொள். உனக்கு நேரமிருந்தால் என்னோடு வந்து பேசிக் கொண்டிரு. ஒவ்வொரு முறையும் இப்படி ஒரு தெளிப்பானை வாங்கி கொள்கிறேன். காரணம் நானே ஒரு கரப்பான்பூச்சி போல தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனக்கு இப்போது வயது எழுபத்தியாறு. பனிரெண்டு வருசமாக இந்த அறையை விட்டு வெளியே போவதே கிடையாது. பிள்ளைகள் அமெரிக்க போய்விட்டார்கள். யாரும் என்னைத் தேடி வருவது கிடையாது.

நான் முப்பது வருசம் அறிவியல் ஆய்வுதுறையில் வேலை செய்திருக்கிறேன். பதவி, சம்பாத்தியம், உறவு, பெயர் புகழ் எல்லாம் பொய். மயக்கம். எதுவும் நமக்கு கை கொடுக்கபோவதில்லை. முதுமை ஒரு நீண்ட பகலை போலிருக்கிறது.

பழைய நாளிதழ்களை திரும்ப திரும்ப படிப்பதில் எனக்கு ஆனந்தமாக இருக்கிறது. இந்த செய்திகள் யாவும் நடந்து முடிந்துவிட்டவை தானே. ஆனால் அவற்றை பற்றி கற்பனை செய்து கொள்ளும்போது ஏனோ மிக சந்தோஷமாக இருக்கிறது. உனக்கு நேரமிருந்தால் என் வீட்டு கதவை நீ எப்போதும் தட்டலாம், ஒரு வேளை நீ வரும்போது நான் செத்துகிடந்தால் இந்த புத்தகத்தின் உள்ளே கொஞ்சம் பணமிருக்கிறது. எடுத்து செலவுசெய்து எரித்துவிடு. என்று சொன்னார்.

நான் உண்மையில் பயந்து போய்விட்டேன். அவர் தந்த பணத்தை என்ன செய்வது என்று தெரியவில்லை. அவரைச் சந்தித்த பிறகு நான் சென்ற வீடுகளில் எதிலும் ஒரு தெளிப்பானை கூட விற்பனை செய்ய முடியவில்லை. மனதில் அவரது குரல் என்னை வதைக்க துவங்கியது. அவர் என்னை மிகவும் பாதித்திருந்தார். இதற்காக அன்றிரவு நானும் செல்வரத்தினமும் குடிப்பதற்காக சென்றோம்.

ஒயின்ஷாப்பின் மதுக்கூடங்களில் அதிக கரப்பான்பூச்சிகள் வளர்க்கபடுகின்றன. அவற்றை குடிகாரர்கள் நேசிக்கிறார்கள். போதையில் பேச ஆள்கிடைக்காத போது கரப்பான்பூச்சிகளோடு பேசுகிறார்கள். சேர்த்து குடிக்கிறார்கள். நான் போதையேறி செல்வரத்தினத்திடம் நமது மேலாளராக உள்ள மணிநாராயணைக் கொல்ல வேண்டும். அவன் ஒரு பெருச்சாளி போல நம் உழைப்பை தின்று ஊதிக் கொண்டு வருகிறான் என்று கத்தினேன். அவன் கட்டுபடுத்த முடியாமல் அழுதான். விற்பனை பிரதிகள் அழுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அதை நானும் அறிவேன். ஆகவே அவனோடு சேர்ந்து அழுவதற்கு முற்பட்டேன். என்னால் அப்படி பொது இடத்தில் அழ முடியவில்லை. செல்வரத்தினம் அழுவதை கண்ட ஒரு குடிகாரன் அவன் மீது அன்பாகி தனது மதுவை பகிர்ந்து கொண்டான்.

அப்போது எனது இருக்கையின் அருகில் உள்ள செங்கல் சுவரில் ஒரு கரப்பான்பூச்சி நின்றபடியே என்னை பார்த்து கொண்டிருந்தது. அது என்னோடு பேச விரும்புகிறதோ எனும்படியாக அதன் பார்வையிருந்தது. நான் என்ன பேசுவது என்று புரியாமல் அதை தவிர்க்க துவங்கினேன். என்றாவது இப்படியொரு இக்கட்டு உருவாக கூடும் என்று எனக்கு தெரியும். ஆனால் அதை இந்த நிலையில் என்னால் எதிர்கொள்ளமுடியவில்லை. ஆகவே நான் கோபத்துடன் கரப்பான்பூச்சிகளை விரட்டியடிங்கள் என்று கத்தினேன்.

அங்கிருந்த பணியாளர்கள் எவரும் அதைக் கேட்டுக் கொள்ளவேயில்லை. அந்த பூச்சி திமிரோடு என்னை பார்த்து கொண்டிருந்தது. எனக்கு குற்றவுணர்ச்சியானது. நான் உடனே அந்த இடத்திலிருந்து வெளியேறி தனியே நடக்க ஆரம்பித்தேன்.

குற்றவுணர்ச்சி என்பது ஒரு மோசமான வியாதி. அதை ஒரு போதும் வளர விடவே கூடாது. இல்லாவிட்டால் அது நம்மை வாழவிடாமல்செய்துவிடும். நீண்டநேரம் கடற்கரை சாலையில் சுற்றியலைந்துவிட்டு அறைக்கு திரும்பினேன். உறக்கம் கூடவேயில்லை. சுழல்விசிறியை பார்த்தபடியே படுத்துகிடந்தேன். நான் படித்திருக்கிறேன் என்பது தான் பொது இடங்களில் அழமுடியாமல் என்னை தடுக்கிறது என்பதே அன்றிரவே கண்டுபிடித்தேன்.

அந்த வயதானவரை திரும்பச் சந்தித்துவிடக்கூடாது என்பதற்காகவே அதன்பிறகு நான் தரமணி பகுதிக்கு வேலையை மாற்றம் செய்து கொண்டுவிட்டேன். அது வசதியானவர்கள், மென்பொருள்துறை சார்ந்த அலுவலகங்கள், அதிகாரிகளின் வீடுகள் உள்ள பகுதி. ஆகவே எளிதாக விற்பனையில் சாதனை படைத்து பதவிஉயர்வு பெற்றுவிடலாம். தரமணியில் பூச்சிமருந்துவிற்பதற்கு பெரிய போட்டியே இருந்தது.

நான் காய்களை நகர்த்தி அந்த இடத்தை பிடித்து கொண்டுவிட்டேன். மற்ற பகுதிகளோடு ஒப்பிடுகையில் தரமணியில் பொருட்கள் விற்பது எளிதாகவே இருந்தது. தரமணியில் கரப்பான்பூச்சிகள் கூட ஆங்கிலம் பேசுகின்றன. அவை மற்ற பகுதியில் காணப்படுவது போல பயந்து ஒடுவதில்லை. மெதுவாகவே செல்கின்றன. அங்கே எளிய இதயம் கொண்டவர்கள் அதிகமிருக்கிறார்கள். ஆகவே நான் ஒரு நாளில் ஐநூறு தெளிப்பான்கள் வரை கூட விற்க முடிந்தது. அத்துடன் தெளிப்பான்கள் அறிமுகத்திற்கு என்று தொலைபேசியில் நேரம் குறித்துவிட்டு விற்க போகலாம். கரப்பான்பூச்சி பற்றி பேசுவதை ரசித்து கேட்கிறார்கள்.

அப்படியொரு நாள் சீவியூ டவர்ஸ் உள்ளே ஒரு வீட்டிற்கு தெளிப்பான் அறிமுகம் செய்ய போய்விட்டு திரும்ப வெளியே வந்த போது குடியிருப்பின் காவலாளி என்னைப் பிடித்து கொண்டுவிட்டான். பதிவுபுத்தகத்தில் நான் கையெழுத்து இடவில்லை என்பதைக் காரணம் காட்டி என்னைத் திருடன் என்று அவன் சந்தேகபட துவங்கினான்.

நான் அடையாள அட்டைகள், தெளிப்பான்களை காட்டிய போதும் நம்பிக்கை கொள்ளவேயில்லை. என்னைப் பிடித்து போலீஸில் ஒப்ப்படைப்பதன் வழியே தனது வேலையில் முன்னேற்றம் காண அவன் விரும்புகிறான் என்று புரிந்தது. நான் அதற்கு என்னை ஒப்பு கொடுத்தேன். நன்ழ்ஸ்ண்ஸ்ஹப் ர்ச் ற்ட்ங் ச்ண்ற்ற்ங்ள்ற். எவ்வளவு அழகான வாசகம்.

அருகாமையில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று என்னை ஒப்படைத்தான். நான் ஏதாவது திருட முற்பட்டேனா என்று காவலர்கள் அவனிடம் விசாரித்தார்கள். அவன் நீண்ட விளக்கம் தந்து கொண்டிருந்தான். மாலை வரை என்னை காவல்நிலையத்தில் உட்கார வைத்திருந்தார்கள். காவல்நிலையத்திற்குத் தேவைப்படுகிறது என்று இரண்டு தெளிப்பான்களை இலவசமாக வாங்கி கொண்டு என்னை இரவில் வெளியே அனுப்பிவைத்தார்கள். அன்று இந்த வேலையை விட்டுவிடலாம் என்று முடிவு செய்தேன். ஆனால் அடுத்து என்ன செய்வது என்ற குழப்பம் உண்டானது.

யாரிடமாவது ஆலோசனை கேட்கலாம் என்று நினைத்தேன். மணிநாரயணன் நினைவு வந்தது. அவரிடமே கேட்டால் என்னவென்று இரவோடு அவர் வீட்டிற்கு போய் நின்றேன். அவர் வீட்டின் வரவேற்பரையில் உட்கார வைத்து குடிப்பதற்கு பில்டர் காபி தந்தார். சுவரில் மிகப்பெரிய தொலைக்காட்சியிருந்தது. அதி நவீனமான சோபா, அலங்காரமான சுவர் ஒவியங்கள். மீன்தொட்டிகள். கரப்பான்பூச்சிகள் அவரை சுகபோகமாக வாழவைத்து கொண்டிருக்கின்றன.

மணிநாராயணன் என் பிரச்சனைகளைக் கேட்டு சிரித்தபடியே நீ ஏன் குற்றவுணர்ச்சி கொள்கிறாய். நீயா கரப்பான்பூச்சிகளை கொல்கிறாய். அது ஜெர்மன் நிறுவனத்தின் வேலை. நாம் வெறும் அம்புகள். கர்த்தா அவனே என்று பகவத்கீதை போன்ற நீண்ட உரையை வழங்கினார். நான் அவரிடம் உங்களைப் போல நான் ஆக வேண்டும் அதற்கு என்ன செய்வது என்று நேரடியாக கேட்டேன்.

அவர் சிரித்தபடியே மனிதர்களுக்கு எதிர்காலத்தை பற்றிய பயம் எப்போதும் அதிகம். அதன் ஒரு அடையாளம் தான் கரப்பான்பூச்சி. அது ஒருவேளை நம்மை கடித்துவிட்டால் என்னசெய்வது என்ற பயமிருக்கிற வரை நாம் சந்தோஷமாக இருக்கலாம். ஆகவே எந்த வீட்டின் கதவை தட்டும்போதும் உன்னை ஒரு தேவதூதனைப் போல நினைத்துக் கொள். அவர்களை மீட்பதற்காகவே நீ வந்திருப்பதாக நம்பு. இரண்டு மாசத்தில் நீ மேலே போய்விடுவாய் என்றார்.

எவ்வளவு ஆறுதலான வார்த்தைகள். மறுநாளே இதை நடைமுறைபடுத்த துவங்கினேன். என் பேச்சில் கண்களில் புதிய நம்பிக்கை பீறிட்டது. என் சொற்களை நகரவாசிகள் நம்பினார்கள். ஒரு ஆள் ஒரே நேரம் மூன்று தெளிப்பான்களை வாங்கினான். அந்த அளவு நான் பேசி மயக்க தெரிந்து கொண்டுவிட்டேன். ஆங்கிலம் ஒரு வசதியான மொழி. அதில் தான் எவ்வளவு லாவகம், எவ்வளவு சூட்சுமம்.

மணிநாராயணன் சொன்னது உண்மை. நான் இலக்கை மீறி விற்றுச் சாதனை செய்திருந்தேன். அலுவலகமே விடுமுறை தந்து ஒய்விற்காக ஒரு வார காலம் கோவாவிற்கு அனுப்பி வைத்தது. கூடுதல் சம்பளம். வாகன வசதிகள். அத்தோடு இப்போது எனக்குக் கிழே ஆறு பேர் வேலை பார்க்கிறார்கள். நான் மணிநாராயணன் இடத்தை ஒரு வருசத்தில் அடைந்துவிடுவேன். இயற்கை மனிதர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது என்கிறார்கள். அது நிஜம்.

உங்கள் வீடுகளிலும், அலுவலகங்களிலும் கரப்பான்பூச்சிகள் இருக்ககூடும். அவற்றை அலட்சியமாக பார்க்காதீர்கள். அவை ஒழிக்கபட வேண்டியவை. என்னை அறிந்து கொண்ட உங்களுக்காக நாற்பது சதவீத சிறப்புசலுகை விலையில் தெளிப்பான்களை தருகிறேன். விருப்பம் இருந்தால் நீங்கள் என்னை எப்போதும் அழைக்கலாம். வீடு தேடி வந்து இலவசமாக விளக்கம் தர தயாராக இருக்கிறேன்.

**

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Go to full version