தமிழ்ப் பூங்கா > நாவல்கள்

எஸ். ராமகிருஷ்ணன்

<< < (5/6) > >>

Gayathri:
இல்மொழி
குறுங்கதை


சுப்பையாவிற்கு திருமணமாகிய நாட்களில் தான் இந்த பழக்கம் உருவானது. அப்போது சாலைத் தெருவில் குடியிருந்தார். ரெட்டை யானை முகப்பு போட்ட வீடு.  வீட்டில் அவர்களையும் சேர்த்து இருபத்தியொரு பேர் இருந்தார்கள். இரண்டு அண்ணன், அண்ணி, ஆச்சி, சித்தி சித்தப்பா என்று யாவரும் ஒன்றாக வாழ்ந்தார்கள். அதற்கிருந்த ஒரே காரணம் அவர்களது கோவில்கடைகள்.

கோவிலின் மண்டபத்தில் அவர்களுக்கு மூன்று கடைகளிருந்தன. ஒன்று படக்கடை , காலண்டர். சுவாமி படங்கள், குங்குமம் விபூதி விற்பது. இன்னொன்று வளையல் கடை மூன்றாவது இருந்த கடை கல்கண்டுபால் விற்பது. இதை மூன்றையும் நிர்வாகம் செய்வதற்காக ஆட்கள் தேவைப்பட்டார்கள். அதற்காகவே அவர்கள் ஒன்றாக இருந்தார்கள்.

சுப்பையாவுக்கு தாழையூத்தில் பெண் எடுத்தார்கள். கல்யாணம் ஆனது என்ற பெயர் தானே தவிர அவர்களால் பெண்டாட்டியோடு தனித்திருந்து பேச நேரம் கிடைப்பதேயில்லை. ஒரு வேளை பேசிக் கொண்டாலும் அடுத்தவர் காதிற்கு கேட்காமல் பேசுவது சாத்தியமேயில்லை.

சாப்பாடு பரிமாறும் போது வேணாம் போதும் என்று சொல்வது தான் அவர் உபயோகித்த அதிகமான வார்த்தைகள். சுப்பையா தான் படக்கடையை கவனித்து வந்தார். உண்மையில் அதில் கவனிப்பதற்கு என்று தனியே எதுவுமில்லை. சாமிக்கு பயந்தவர்கள் இருக்கும் வரை உறுதியான வியாபாரம். பொம்பளைகள் இருக்கும் வரை குங்குமம் மஞ்சள் விற்பனை. பிறகு என்ன?
கடையை திறந்து வைத்தவுடன் அவர் தினமணியை பிரித்து வைத்து படிக்க ஆரம்பித்தால் சாப்பிட வீடு வரும்போது தான் முடிப்பார். அப்படி ஒரு நாள் வீடு நோக்கி வந்து கொண்டிருக்கும் போது பாலத்தின் அருகில் தான் அந்த யோசனை உண்டானது.

இந்த சள்ளையை எத்தனை நாள் கொண்டு கழிக்கிறது. பேசாம நாமளா ஒரு பாஷையை உண்டாக்கினா என்ன? யோசித்தவுடன் பளிச்சென்றிருந்தது. வீடு வரும்வரை அந்த பாஷையை பற்றியே நினைத்து கொண்டிருந்தார். அன்றிரவு மனைவியிடம் அந்த யோசனைய சொன்னார். அவள் உங்க இஷ்டம் நாலும் யோசிச்சி செய்யுங்க என்றாள். இது வழக்கமாக அவர் எதை பற்றி கேட்கும் போது அவள் சொல்வது தான் என்பதால் மறுநாள் கடைக்கு போகும்வழியில்  கவனமாக சைக்கிளை லாலாகடை அருகில் நிறுத்தி செந்தில்விலாசில் எண்பது பக்க நோட்டு ஒன்றை வாங்கி கொண்டார்.

கடையில் போய் உட்கார்ந்தவுடன் கர்மசிரத்தையாக தான் உருவாக்க போகின்ற மொழியை பற்றி யோசிக்க துவங்கினார். முதலில் அதற்கு என்ன பேர் வைப்பது என்று யோசனை எழுந்தது. சாமி பெயரிலே இருக்கட்டும் என்று நெல்பா என்று அந்த பாஷைக்கு பெயரிட்டார்.

அதற்கு எழுத்து வடிவம் வேண்டுமே என்று முடிவு செய்து அவராக அ ஆவன்னா போல எழுத்தை உருவாக்கினார். அது போலவே அதற்கு என்று ஒலி குறிப்பு வேண்டும் என்று உச்சரிப்பும் உருவாக்கினார். கடையில் இருந்த நேரங்களில் எல்லாம் ஒவ்வொரு பொருளுக்கும் அவர் நெல்பாவில் எப்படி வரும் என்று நோட்டில் எழுத துவங்கினார். தினசரி அவர் கணக்கு நோட்டு போட்டு எழுதி வருவதை கண்ட மணியம்பிள்ளை சுப்பையாவின் தகப்பனாரிடம் உம்மபிள்ளை ரொம்ப கணக்காக வியாபாரம் பண்றான் என்று புகழ்ந்து தள்ளினார்.

ஒரு மாசத்திற்கு நோட்டு நிரம்பி போகும் அளவு வார்த்தைகள் அதிகமாகின. அந்த நோட்டை பர்வதத்திடம் தந்து மனப்பாடம் செய்துவிடும்படியாக சொன்னார். அவளுக்கு இந்த மனுசன் வேற கோட்டி புடிச்சி அலையுறானே என்று எரிச்சலாக வந்தது. ஆனாலும் வழியில்லாமல் அந்த பாஷையை பழகிவிட்டாள்.

அதை சோதித்து பார்ப்பதற்காக சாப்பாடும் போடும்போது நெல்பா பாஷையில் அவர் கேட்பார். அவளும் நெல்பாவில் பேசுவாள். இரவில் படுக்கையில் கொஞ்சுவது கூட நெல்பாவிற்கு மாறிப்போனது.  அதன்பிறகு அவர் பெரிய நோட்டாக வாங்கி நெல்பாவிற்கான சொற்களை சேகரிக்க துவங்கினார். ஒரு வருசத்திற்குள் அந்த பாஷை அவர்கள் ரெண்டு பேருக்கும் அத்துபடியாகியது.
வீட்டில் உள்ளவர்கள் மீது ஆத்திரமானால் கூட வெளிப்படையாக நெல்பாவில் பர்வதம் திட்டுவாள். யாருக்கும் அவள் என்ன சொல்கிறாள் என்று புரியாது. சுப்பையா மிகுந்த சந்தோஷமானார். உலகில் தங்கள் இருவருக்கும் மட்டுமே தெரிந்த மொழி இருக்கிறது என்பது பெரிய விஷயமில்லையா.

ஒரு நாள் கடை திறப்பதற்காக வந்த சுப்பையாவின் அப்பா கடையில் வைத்திருந்த நெல்பா நோட்டுகளை புரட்டி பார்த்துவிட்டு இந்த எழவை கூட்டுறதுக்காகவா கடைக்கு உன்னை வச்சிருந்தேன் என்று கோவித்து கொண்டு எல்லா நோட்டுகளையும் கடையின் முன்னால் போட்டு எரித்ததோடு எல்லோரிடமும் சொல்லியும் காட்டினார். சுப்பையாவிற்கு ஆத்திரமாக வந்தது. ஆனால் கடையை நம்பி பிழைப்பதால் மனதிற்குள்ளாக நெல்பாவில் திட்டிக் கொண்டார்.

இது நடந்த இரண்டாம் வருசம் சுப்பைவின் அப்பா இறந்து போகவே கடை பாகம் பிரிக்கபட்டது. சண்டை போட்டு படக்கடையை தன்வசமாக்கி கொண்டு சாந்தி நகரில் வேறு வீடு பார்த்து குடிபோய்விட்டார் சுப்பையா.
வீடு மாறியதும் செய்த முதல்வேலை இனிமேல் வீட்டில் நெல்மாவில் தான் பேச வேண்டும்  என்றார். அதன்பிறகு அவர் மட்டுமில்லாது அவரது பிள்ளைகள், பெண்கள் யாவரும் அதை கற்றுக் கொண்டார்கள். எப்போதாவது வீட்டில் சண்டை நடக்கும் போது அவர்கள் நெல்மாவில் கத்தி சண்டையிடுவார்கள். அருகாமை வீட்டில் ஒருவருக்கும் ஒன்றுமே புரியாது.

ஒரு முறை பங்குனி உத்திரத்திற்கு திருசெந்துர் போவதற்கு பர்வதம் கிளம்பிய போது சுப்பையா கடையில் வேலையிருப்பதாக போக கூடாது என்று தடுத்தவுடன் அவள் கோபத்தில் மடமடவென நெல்மாவில் கத்தினாள். ஆனால் அவள் பேசியதில் பாதி சொற்கள் என்ன வென்று அவர் அறிந்தேயிருக்கவில்லை அவளிடம் எப்படி போய் அர்த்தம் கேட்பது என்று யோசனையும் வலியுமாக கடைக்கு போனார். ஒரு உண்மை அவருக்கு புரிந்திருந்தது. அவள் தனக்காக மட்டும் அந்த மொழியில் சிறப்பு சொற்கள் நிறைய உருவாக்கி கொண்டுவிட்டாள் . இதை வளர விட்டால் தனக்கு தான் ஆபத்தாக முடியும் என்று நினைத்தார்.

அன்றிரவே வீட்டில் யாரும் இனிமேல் நெல்மாவில் பேசக்கூடாது என்று உத்தரவிட்டார். சில நாட்களுக்கு அவர்களுக்கு சங்கடமாக இருந்தது. ஆனால் சுப்பையாவின் கோபத்திற்கு பயந்து நெல்மாவை மறந்து போனார்கள். நல்லவேளை பிரச்சனை முடிந்தது என்று தன் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பியிருந்தார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு மதியம் தலைவலி அதிகமாகி அவர் வீடு திரும்பிய நேரம் பர்வதமும் அவரது மகனும் ஏதோவொரு பாஷையில் பேசிக் கொண்டிருந்தார்கள். என்ன பேசுகிறார்கள் என்று ஒருவரியும் புரியவில்லை, அவர்கள் சரளமாக பேசிக் கொண்டார்கள். சுப்பையா தன் சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடியே குடிக்க தண்ணீர் கேட்டார். உள்ளே மகள் சிரிப்போடு அதே புரியாத பாஷையில் தன் அண்ணனிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். சுப்பையாவிற்கு எரிச்சலாக வந்தது.

அந்த நிமிசம் அவர் தன் அப்பாவை நினைத்து கொண்டார். புத்தி கெட்டு போயி தெரிந்த பாஷையை என்ன எழவுக்கு மாத்தினோம் என்று அவர் மீதே அவருக்கு கோபம் கோபமாக வந்தது. ஆனால் அதை எந்த பாஷையில் சொல்வது என்று புரியாமல் திகைத்துபோயிருந்தார்.

Gayathri:
விசித்ரி
சிறுகதை


விசித்ரி என்று அழைக்கபடும் அந்தப் பெண்ணின் உண்மையான பெயர் சித்ரலேகா என்றும் அவள் தனது பனிரெண்டு வயதின் பின்மதியப் பொழுதிலிருந்து இப்படி நடந்து கொள்கிறாள் எனவும் சொன்னார்கள். அந்த மதிய பொழுதில் என்ன நடந்தது என்பதை பற்றி யாரும் இந்நாள் வரை அறிந்திருக்கவில்லை.

 அன்று கோடை வெயில் உக்கிரமேறியிருந்தது. வேம்பில் கூட காற்றில்லை. வீதியில் வெல்லத்தின் பிசுபிசுப்பு போல கையில் ஒட்டிக் கொள்ளுமளவு படிந்திருந்தது வெயில். வீட்டுக் கூரைகள், அலுமினிய பாத்திரங்கள் வெயிலேறி கத்திக் கொண்டிருந்தன. தெருவில் நடமாட்டமேயில்லை.


சித்ரலேகா தெருவில் நிர்வாணமாக ஒடிவந்ததையும் அவள் கேசத்தில் தூசியும் புழுதி படிந்து போயிருந்ததையும் முத்திருளன் வீட்டின் திண்ணையில்  திருகை அரைத்துக் கொண்டிருந்த வள்ளியம்மை கண்டதாக சொல்கிறார்கள். வள்ளியம்மை இறந்து போகும்வரை இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு நாளும் நினைவுபடுத்தியபடியே இருந்தாள்.

அப்படி நினைவுபடுத்தும் போது நிகழ்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து கொண்டே வந்து முடிவில் சித்ரலேகாவை யாரோ துரத்திக் கொண்டு வந்ததையும், உடல் முழுவதும் காயங்களுடன் அவள் அலறியபடியே ஒடி வந்ததையும் அவள் பின்னால் கறுத்த நாய் ஒன்று உளையிட்டபடியே வந்ததாகவும் சேர்ந்து கொண்டது. உண்மையில் என்ன நடந்தது என்பதைப் பற்றி சித்ரலேகா இன்று வரை  யாரிடமும் தெரிவிக்கவில்லை. இப்போது அவளுக்கு வயது நாற்பத்தி எட்டைக் கடந்திருக்கிறது.

ஒடிவந்த நாளில் இருந்து அவள் யாரோடும் பேசுவதும் பழகுவதும் குறைந்து போனது. அத்தோடு அன்றிலிருந்து தான் அவளது விநோதப் பழக்கம் துவங்கியது. அவளிடமிருந்த அத்தனை பாவடை சட்டைகளையும் அவள் ஒன்றின் மேல் ஒன்றாக அணிந்து கொள்ள ஆரம்பித்தாள். ஏதோ பயத்தில் அப்படி செய்கிறாள் என்று அப்படியே உறங்கவிட்டுவிட்டார்கள்.

ஆனால் மறுநாள் காலையில் அவள் அம்மாவின் பழம்புடவைகள், மற்றும் சகோதரிகளின் உடைகள் அத்தனையும் சேர்த்து அணிந்து கொள்ள துவங்கிய போது அவள் முகத்துக்கு நேராகவே சகோதிரிகள் திட்டினார்கள். சித்ரலேகா அதை கண்டு கொள்ளவேயில்லை. அவள் தன் உடலை எப்படியாவது மறைத்துக் கொண்டுவிட வேண்டும் என்று தீவிர முனைப்பு கொண்டவள் போல ஒரு உடைக்கு மேலாக மற்றொரு உடையை போட்டு இறுக்கிக் கொண்டிருந்தாள். இதனால் அவள் ஒரு துணிப்பொம்மை போன்ற தோற்றத்திற்கு வந்த போதும் கூட அதைப்பற்றி கவலைப்படவில்லை.

அத்தனை உடைகளுடன் அவள் உறங்கவும் நடமாடவும் பழகியிருந்தாள். குளிக்கும் நேரத்தில் கூட அவள் இந்த உடைகளில் ஒன்றையும் கழட்டுவதில்லை. ஈர உடைகளுடன் இருந்தால் உடம்பு நோவு கண்டுவிடும் என்று சகோதரிகள் திட்டி அவள் உடைகளை அவிழ்க்க முயன்ற போது ஆத்திரமாகி  இளைய சகோதரி கைகளில் கடித்து வைத்தாள் சித்ரலேகா.

வலி தாங்கமுடியாமல் அவள் அழுதபடியே அம்மாவிடம் சொன்ன போது அம்மாவும் சகோதரிகளும் சேர்ந்து அவளது ஈர உடைகளை அவிழ்க்க முயன்றார்கள். அவள் கூக்குரலிட்டு அழுததோடு அத்தனை பேரையும் அடித்து உதைக்க துவங்கினாள். அப்படியே இருந்து சாகட்டும் சனியன் என்று அம்மா திட்டியபடியே அவளை தனித்துவிட்டு சென்றாள். ஈர உடைகள் அவளுக்கு பழகிவிட்டன.

ஆனால் அம்மாவும் சகோதரிகளும் சேர்ந்து தன் உடைகளை அவிழ்த்துவிடுவார்களோ என்று பயந்த அவள் சணல் கயிற்றாலும் ஊக்காலும் ஆடைகளை அவிழ்க்க முடியாதபடி பிணைத்துக் கொண்டு உடலோடு கட்டிக் கொள்ள துவங்கினாள். அதன்பிறகு  உடைகளை யாரும் தொடுவதை கூட அவள் அனுமதிக்கவில்லை.

அதுவே கேலிப்பொருளாகி அவர்கள் வீட்டிற்கு வரும் ஒவ்வொருவரும் அவள் உடைகளை அவிழ்க்க போவதாக பொய்யாக பாவனை செய்த போது சித்ரலேகாவிடமிருந்து அலறல் குரல் பீறிடும். சித்ரலேகாவை சமாதானம் செய்வது எளிதானதில்லை. அவள் வீட்டிலிருந்து ஒடி தெருவில் வந்து உட்கார்ந்து கொள்வாள். சில நேரம் இரவில் தெருவிலே உறங்கிவிடுவதும் உண்டு.அப்போதும் அவள் கைகள் உடைகளை இறுகப்பற்றிக் கொண்டேயிருக்கும்.

சித்ரலேகாவின் உடை பழக்கம் தான் அவளுக்கு விசித்ரி என்ற பெயரை உண்டாக்கியிருக்க வேண்டும். அதன் பின்வந்த நாட்களில் எங்கே எந்த துணி கிடைத்தாலும் அதை எடுத்து உடுத்திக் கொள்ள துவங்கினாள். இதனால் அவள் தோற்றம் அச்சமூட்டுவதாக மாறத்துவங்கியிருந்தது. இருபது முப்பது பாவடைகள். அதன் மீது பத்து சேலைகள், அதன் மீது பழைய தாவணி அதன் மீது கிழிந்த துண்டு என்று அவள் உடலை போர்த்தியிருந்த ஆடைகளை கண்டு பெண்களே எரிச்சல் கொண்டனர்.

ஒருவகையில் அவள் ஊரிலிருந்த மற்ற பெண்களுக்கு தங்கள் உடல் குறித்த கவனத்தை தொடர்ந்து உண்டாக்கி கொண்டிருந்தாள். அவளை பார்க்கும் ஒவ்வொரு பெண்ணும் தன் உடலை ஒருமுறை கவனம் கொள்வதும் உடைகளை கவனமாக இழுத்து விட்டுக் கொள்வதும் நடந்தேறியது.
விசித்ரியின் இந்த பழக்கம் அறிந்தவர்கள் அவள் எவர் வீட்டிலிருந்து எந்த உடையை எடுத்துக் கொண்டு போன போனதும் அவளிடம் கோவம் கொள்வதேயில்லை. விசித்ரியின் ஆவேசம் பல வருசமாகியும் தணியவேயில்லை.

கோடையின் முற்றிய பகலில் அவள் வீட்டை விட்டு வெளியே வருவதேயில்லை. நத்தைகள் சுவரில் ஒட்டிக் கொண்டிருப்பதை போன்று வீட்டு சுவரில் சாய்ந்து ஒடுங்கிக் கொண்டிருப்பாள். சித்ரலேகாவின் மற்ற சகோதரிகள்  திருமணமாகி போன போதும் கூட அவள் வீட்டின் உள்ளேயே அடைபட்டு கிடந்தாள்.

சில வேளைகளில் அவள் மீது ஆதங்கம் கொண்ட அம்மா அருகில் சென்று உட்கார்ந்து சிறுமிகளை விசாரிப்பது போல தலையை தடவி விட்டுக் கொண்டு அன்னைக்கு என்னடி நடந்துச்சி என்று கேட்பாள். விசித்ரியிடமிருந்து பதில் வராது. அவள் கண்களை மூடிக் கொண்டுவிடுவாள். அல்லது நகத்தை கடிக்க துவங்கி ரத்தம் வரும்வரை கடித்துக் கொண்டேயிருப்பாள். அம்மாவிற்கு அவளை தான் சித்ரவதை செய்கிறோமோ என்ற குற்றவுணர்ச்சி வந்துவிடும். அப்படியே விலகி போய்விடுவாள்.

விசித்ரியை என்ன செய்வது என்று அவர்கள் குடும்பத்திற்கு இந்த நாள் வரை தெரியவேயில்லை.  வீட்டு பெண்கள் திருமணமாகி சென்று பிள்ளைகள் பெற்று அந்த பிள்ளைகளும் கூட இன்று திருணம வயதை அடைந்து விட்டார்கள். ஆனால் விசித்ரியின் மனதில் நேற்று மதியம் நடந்தது போலவே அந்த சம்பவம் அப்படியே உறைந்து போயிருந்தது. யார் அவள் மனதில் உள்ள அந்த சித்திரத்தை அழிப்பது. எந்த காட்சி அவள் மனதில் அப்படியொரு கறையை உருவாக்கியது என்று உலகம் அறிந்து கொள்ள முடியவேயில்லை.

என்ன நடந்திருக்க கூடும் என்பது குறித்து சில சாத்தியங்களை விசித்ரியின் அம்மா அறிந்திருந்தாள். அதில் அவள் நம்பிய ஒன்று. புளியந்தோப்பில் மதிய நேரங்களில் யாரும் இருக்க மாட்டார்கள். பெரும்பாலும் சீட்டாடும் நபர்கள் மட்டுமே ஒன்று கூடுவார்கள். அதுவும் சந்தை நடக்கும் நாட்களில் தான் அதிகம் மனிதர்களை காண முடியும். மற்ற நாட்களில் புளியந்தோப்பினுள் நடமாட்டமேயிருக்காது.

அங்கே ஒரு மனிதன் எப்போதுமே உதிர்ந்த புளியம்பழங்களை பொறுக்குவதற்காக  அலைந்து கொண்டிருப்பான். அவனுக்கு வயது முப்பது கடந்திருக்கும். சீனிக்கிழங்கு போல வளைந்து பருத்த முகம். குள்ளமாக இருப்பான். எப்போதுமே அழுக்கடைந்து போன வேஷ்டியொன்றை கட்டியிருப்பான்.மேல் சட்டை அணிந்திருப்பது கிடையாது. அவன் மார்பில் இருந்த நரைத்த ரோமங்கள் காய்ந்த கோரைகளை நினைவுபடுத்தியபடி இருந்தன. அவன் புளியந்தோப்பினுள் உள்ள கிணற்றடியில் படுத்துகிடப்பான். அல்லது புளியம்பழங்களை பொறுக்கி கொண்டிருப்பான்.

அவனுக்கு என்று குடும்பமோ, மனைவியோ இல்லை.  அருகாமையில் உள்ள ஊரை சேர்ந்தவன் என்பது மட்டுமே அவர்களுக்கு தெரியும். அவன் புளியந்தோப்பில் பெண்கள் யாராவது தனியே நடந்து செல்வது தெரிந்தால் நாய் பின்தொடர்வது போல பின்னாடியே வருவான். சிலநேரங்களில் நாயை போலவே புட்டத்தை ஆட்டிக் காட்டுவான். பெண்களில் எவராவது அப்படி செய்வதை கண்டு சிரித்துவிட்டால் உடனே தன் வேஷ்டியை விலக்கி ஆண்குறியை கையில் எடுத்து காட்டுவான். அதை கண்டு பெண்கள் பயந்து ஒடிவிடுவார்கள். அது அவனை மிகுந்த சிரிப்பிற்கு உள்ளாக்கும்.

அப்படியொரு முறை சித்ரலேகாவின் அம்மாவின் முன்னால் அவன் தன் ஆண்குறியை காட்டியிருக்கிறான். அவள் தன் இடுப்பில் சொருகி வைக்கபட்டிருந்த கதிர் அருவாளால் அவனை கொத்தப்போவதாக சொன்னாள். அவனோ இடுப்பை ஆட்டியபடியே தன் வேஷ்டியை உறிந்து எறிந்துவிட்டு அவள் முன்னால் ஆடினான். அவள் புளியதோப்பை விட்டு ஒடிவரும்வரை அவன் ஆடிக் கொண்டேயிருந்தான். வீட்டிற்கு வந்த போதும் அந்த காட்சி மனதிலிருந்து விலகி போகவேயில்லை. அன்று இரவெல்லாம் நரகலை மிதித்துவிட்டது போன்ற அசூயை அவளுக்கு தந்தபடியே இருந்தது.

அவன் சிறுமிகளிடமும் இப்படி நடந்து கொள்வான் என்பதை கேள்விபட்டிருக்கிறாள். ஒருவேளை அவன் தன்மகளிடம் ஆண்குறி காட்டி பயமுறுத்தியிருக்க கூடும். அவள் ஆத்திரமாகி கல்லால் அடித்துவிடவே அவள் பாவடையை உறித்து எறிந்துவிட்டு அவளை வன்புணர்ச்சி கொள்ள முயன்றிருக்க கூடும் என்று தோன்றியது. அதை பற்றி எப்படி சித்ரலேகாவிடம் கேட்பது என்று அம்மாவிற்கு புரியவில்லை.

இதற்காக ஒரேயொரு முறை சித்ரலேகாவை அழைத்து கொண்டு புளியந்தோப்பின் உள்ளேநடந்து சென்றாள். அப்போதும் அந்த மனிதன் புளியங்காய்களை பொறுக்கி கொண்டு அலைந்தான். அவர்களை பார்த்தவுடன் உடலை குறுக்கியபடிய கும்பிடுறேன் தாயி என்று சொன்னான். அம்மாவும் மகளும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டார்கள். விசித்ரி அவனை நேர் கொண்டு பார்த்த போதும் அவள் முகத்தில் மாற்றமேயில்லை. அம்மா அவனை நோக்கி காறி துப்பிவிட்டு பெண்ணை கூட்டிக் கொண்டு நடந்து போகத் துவங்கினாள்.

அவர்கள் தொலை தூரம் போன பிறகு அம்மா திரும்பி பார்த்தாள். அவன் வேஷ்டியை அவிழ்த்து கையில் பிடித்தபடியே நிர்வாணமான உடலை அவர்களை பார்த்து ஆட்டிக் கொண்டிருந்தான். அம்மா கிழே குனிந்து மண்ணை வாறி தூற்றினாள். அந்த மனிதன் உற்சாகமாக ஆடிக் கொண்டிருந்தான்.
ஒருவேளை அவனாக இல்லாமலும் இருக்ககூடும் என்று சித்ரலேகாவின் அம்மாவிற்கு ஏனோ தோன்றியது.

விசித்ரி  ஒரு இரவில் தன் உடலோடு சேர்த்து துணியை ஊசி நூலால் தைத்து கொள்ள முயற்சித்தாள். அதனால் ரத்தம் கசிந்து ஒடத்துவங்கியது. ஆனால் அவள் கத்தவேயில்லை. தற்செயலாக அவளை பார்த்த இளையவள்  பயந்து கத்தியபடியே அய்யாவை அழைத்து வந்த போது அவர் செவுளோடு அவளை அறைந்து கையிலிருந்த ஊசியை பிடுங்கினார். அவளோ வெறிநாய் போல ஊளையிட்டபடியே ஊசியை அவரிடமிருந்து மீட்க பார்த்தாள்.

அய்யாவும் ஆத்திரமாகி அவளை காலால் மாறிமாறி மிதித்தார். அவளது கையை முறுக்கிக் கொண்டு அடித்தார். அதில் அவளது வலது கை பிசிகியிருக்க கூடும். நாளைந்து நாட்களுக்கு வீக்கமாக இருந்தது. யாரும் அதை தொட அவள் அனுமதிக்கவில்லை. படுத்தே கிடந்தாள்.

அப்போது அவர்கள் வீட்டிற்கு வேலைக்கு வந்து கொண்டிருந்த கொண்டிச்சி சொன்னாள். ஊரில் புதிதாக வந்திருக்க தபால்காரனுக்கு பெண்மோகம் அதிகம் என்றும் கடிதம் கொடுப்பது போல அவன் பெண்களின் மார்பை பிடித்துவிடுகிறான் என்றும் ஒரு முறை அவள் தனியே இருந்த போது அவளிடம் தன்னோடு படுக்கமுடியுமா என வாய்விட்டு கேட்டுவிட்டதாகவும் செங்கல் சூளையில் வேலை செய்யும் செவஸ்தியாளை அவன் கீரைபாத்திகளில் தள்ளி உறவு கொண்டுவிட்டான் என்றும் சொன்னாள்.

அதை அம்மாவால் நம்ப முடியவில்லை.  அவள் தபால்காரனை கண்டிருக்கிறாள். அவனுக்கு ஐம்பது வயதை நெருங்கியிருக்கும். மனைவியும் இரண்டு பையன்களும் மூன்று மகள்களும் இருந்தார்கள். அவர்களில் சிலர் சைக்கிளில் பள்ளிக்கு போய்வருவதை அவளே கண்டிருக்கிறாள்
எதற்காக அந்த மனிதன் பெண்களுக்கு அலைய வேண்டும் என்று கொண்டிச்சியிடம் கேட்ட போது அவன் ஆசை அடங்காதவன். சொன்னால் நம்பமாட்டீர்கள் அவன் மனைவியே இதை எல்லாம் தன்னிடம்  சொல்லி புலம்பினாள் என்றும் அவன் ஒருவனே பின்மதிய நேரங்களில் தனியே அலைந்து கொண்டிருப்பவன் என்றும் சொன்னாள்.

ஒருவேளை அதுவும் உண்மையாக இருக்க கூடும். சித்ரலேகாவின் அம்மா வயல்வேலை செய்து கொண்டிருந்த பகல்பொழுதில் அந்த மனிதன் புழுதி பறந்த சாலையில் தனியே போய்க் கொண்டிருப்பதை கண்டிருக்கிறாள். அது போலவே ஒரு நாள் அவள் மூத்திர சந்து ஒன்றில் நடந்து போய்க் கொண்டிருந்த போது அந்த மனிதன் அதற்குள் தனியே நின்று கொண்டிருந்தான். அங்கே என்ன செய்கிறான் என்று புரியாமல் அவள் அவசரமாக கடந்து போனாள். ஒருவேளை அவன் சித்ரலேகாவை ஏமாற்றி இது போன்ற மூத்திரசந்திற்கு அழைத்து போய் புணர்ச்சிக்கு மேற்கொண்டிருக்கவும் கூடும். ஆனால் இந்த சந்தேகம் ஒன்றால் மட்டும் எப்படி அந்த மனிதனிடம் போய் கேட்க முடியும்

சித்ரலேகாவின் அண்ணன் ஊரில் இருந்த ஜவுளிசெட்டி ஒருவன் மீது தனக்கு அதிக சந்தேகம் இருப்பதாக சொன்னான். அந்த ஜவுளி செட்டியின் வீடு மிகப்பெரியது. அதில் அவர்கள் அண்ணன் தம்பி இரண்டு பேர் மட்டுமே வசித்தார்கள். இருவரும் ரங்கூனிலிருந்து திரும்பியவர்கள். அவர்களது மனைவியும் குழந்தையும் பர்மாவில் விட்டுவந்துவிட்டதாக சொல்லிக் கொள்வார்கள். அவர்களே அடிக்கடி பர்மாவிற்கு போய்வருவதாக கிளம்பி சில மாதங்கள் ஆள் இருக்க மாட்டார்கள்.

அவர்கள் வீட்டின் எதிரில் இருந்த பெண்கள் அத்தனை பேருக்கும் ஜவுளி செட்டிக்கும் தொடர்பு இருக்கிறது, அந்தப் பெண்களில் பலரும் புதிது புதிதாக ரங்கூன் சேலைகள் கட்டிக் கொள்வது இதனால் தான் என்றும் அந்த செட்டிகள் அடிக்கடி மதுரைக்கு சென்றுவருவது வேசைகளுடன் படுத்து உறங்கி கழிப்பதற்காக மட்டுமே என்று சொன்னான் சித்ரலேகாவின் அண்ணன்.
ஒருவேளை அப்படி செட்டிகளில் ஒருவன் நீலமும் மஞ்சளும் கலந்த பட்டு துணி ஒன்றை தருவதாக சொல்லி சித்ரலேகாவை வீட்டில் தனித்து அழைத்து கட்டி தழுவியிருக்க கூடும். அவள் உடைகளை உருவி எடுத்திருக்க வேண்டும். அதில் பயந்து போய் தான் சித்ரலேகா ஒடிவந்திருப்பாள்.

அவள் ஒடிவந்த திசையில் இருந்த ஒரே வீடு ஜவுளி செட்டியின் வீடு மட்டுமே. அவர்கள் குற்றம் செய்யாதவர்களாக இருந்தால் எதற்காக பகலும் இரவும் அந்த வீட்டின் கதவுகள் ஜன்னல்கள் மூடப்பட்டேயிருக்கின்றன என்று கேட்டான் சித்ரலேகாவின் அண்ணன்.


இந்த வாதங்கள் சந்தேகங்கள் எதையும் விசித்ரி கண்டுகொள்ளவேயில்லை. அவள் மண்ணில் புதைத்து வைக்கபட்ட துணி பொம்மை போல முகம் வெதும்பி போய் கண்கள் ஒடுங்க துவங்கியிருந்தாள். அவள் உதட்டில் ஏதோ சில சொற்கள் தட்டி நின்று கொண்டிருந்தன. எதையோ நினைத்து பெருமூச்சு விடுவதும் பின்பு அவளாக கைகளை கூம்பி சாமி கும்பிட்டுக் கொள்வதையும் வீட்டார் கண்டிருக்கிறார்கள்.

ஒரு நாளில் விசித்ரி உறங்கிக் கொண்டிருந்தபோது யாரோ அவளிடம் வம்பு செய்வதற்காக அவள் கால்பாதங்களில் கரித்துண்டை வைத்து தேய்த்திருக்கிறார்கள். கூச்சத்தில் அவள் நெளிந்த போது அவள்  கால்கள் தானே உதறிக் கொண்டன. அவள் எழுந்து தன்பாதங்களை கண்டபோது அதில் கரியால் ஏதோ சித்திரம் போல வரையப்பட்டிருப்பதை கண்டு அலறி கத்தினாள். வீட்டிற்குள் ஒடிப்போய் காலில் தண்ணீர் ஊற்றிக் கழுவினாள். அப்படியும் அவள் மனது நிலை கொள்ளவில்லை. உடல் முழுவதும் தண்ணீர் ஊற்றிக் கொண்டாள். இரவு வரை கால்பாதங்களை துடைத்துக் கொண்டேயிருந்தாள்.

அன்றிரவு வீட்டில் இருந்த சகோதரிகளின் பழைய சேலைகளை கிழித்து தன் காலில் சுற்றிக் கொள்ள துவங்கினாள். அப்படி சுற்றி சுற்றி காலின் மீது பெரிய பொதி போல சேலைகள் இறுகியிருந்தன. அத்தோடு அவள் சேலையை சணலாலும் இறுக்கி கட்டிக் கொண்டாள். காலில் சேலைகள் கட்டியதிலிருந்து அவளால் எழுந்து நடப்பதற்கு சிரமமாக போயிருந்தது. ஆனால் அதைப்பற்றி அவள் கவலை கொள்ளவில்லை. மண்டியிட்டபடியே நடந்து போக ஆரம்பித்தாள். அது அவள் தோற்றத்தில் இன்னமும் பயத்தை உருவாக்கியது.

விசித்ரியை இப்படியாக்கியது கனகியாக கூட இருக்க கூடும் என்று சொன்னார் பெட்டிக்கடை வைத்திருக்கும் மகாலிங்கம். அதை சித்ரலேகாவின் அண்ணன்கள் நம்பிக் கொண்டிருந்தார்கள். கனகியை பற்றி அப்படியான சில கதைகள் ஊரிலிருந்தன. கனகியின் கணவன் ராணுவத்தில் இருந்தான். அவன் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே ஊர் திரும்பிவருவான். மற்ற காலங்களில் கனிகி தனித்திருந்தாள். அவளுக்கு வயது இருபத்தைந்து கடந்திருக்க கூடும். எப்போதும் கூந்தல் நிறைய பூவும் வெற்றிலை சாறுபடிந்த சிவப்பு உதடுகளுமாக இருப்பாள்.

தன்னை அலங்கரித்து கொள்வதில் அவளுக்கு நிகரான ஊரில் எவருமில்லை. முல்லைமொட்டுகளை அவளுக்காக மட்டுமே கொண்டு வந்து தரும் பூக்காரன் ஒருவன் இருந்தான். அவளது உடைகளும் கூட மினுக்கானவை. அவளோடு எப்போதுமே இரண்டு இளம்பெண்கள் இருப்பார்கள். அவர்களுடன் வாசல்படிகளில் உட்கார்ந்து அவள் பேசிக் கொண்டேயிருப்பாள். அப்போது அவர்கள் சிரிப்பு சப்தம் தெருவெங்கும் கேட்கும்.

அவளுக்கு பகல் உறக்கம் கொள்ளும் பழக்கம் இருந்தது. தனது தோழிகளான இரண்டு இளம்பெண்களுடன் அவள் வீட்டின் கதவை சாத்திக் கொள்வதை சித்ரலேகாவின் அண்ணன் கண்டிருக்கிறான். மாலையில் அந்த வீட்டு கதவு மறுபடி திறக்கும் போது காலையில் பார்த்ததை விடவும் அலங்காரியாக கனகி வாசல்படியில் வந்து உட்கார்ந்து கொள்வாள். பின்பு இரவு வரை அந்த பெண்கள் பேசிக் கொண்டிருப்பார்கள்.

கனகியின் மீது உள்ளுர் ஆண்கள் அத்தனை பேரும் மோகம் இருந்தது. ஆனால் ஒருவன் கூட அதை அவளிடம் வெளிப்படுத்தவேயில்லை. கனகி முன்பொரு நாள் சித்ரலேகாவோடு பேசிக் கொண்டிருந்ததை அவள் அண்ணன் கண்டிருக்கிறான். ஒருவேளை அவள் தன் தங்கையை மோகித்திருக்க கூடும் என்று அவன் மனது சொல்லியது. ஆனால் கனகியோடு எந்த ஆணுக்கும் தொடர்பில்லை என்பதை ஊரே  அறிந்திருந்தது.

அவள் கணவன் வரும் நாட்களில் அவர்கள் ஒன்றாக பைக்கில் சுற்றியலைவார்கள். அப்போது அவள் கணவன் கனகி பற்றிய கேலியை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வான்.

இப்படியாக சித்ரலேகாவை பயமுறுத்தியது நகருக்கு படிக்க சென்று வரும் ஸ்டீபன் சாரின் மகன் மைக்கேல் என்றும், நாவிதர்களில் ஒருவனான கருப்பையா கூட தனியே பெண்கள் கிடைத்தால் நோங்க கூடியவன் என்றும், பள்ளியின் கணித ஆசிரியராக உள்ள வையாளி கூட பெண்கள் விஷயத்தில் துணிந்தவர் எனவும், தண்ணீர் வண்டியோட்டும் ராயன், ரயில்வே தண்டவாள வேலை செய்ய போன சங்கு, நில அளவையாளர் கடிகைமுத்து. நூற்பு ஆலைக்கு வேலை செல்லும் மச்சேந்திரனோ அவனது தம்பியோ கூட காரணமாக இருக்க கூடும் என்றார்கள்.

இந்த சந்தேகம் ஊரில் இருந்த ஆண்கள் பெண்கள் மீது பட்டு தெறித்த போதெல்லாம் அது உடனே மௌனத்தில் புதையுண்டுவிடுவதாக இருந்தது. யாரும் இதை தொடர்ந்து சென்று உண்மையை அறிந்து கொள்ள முடியவில்லை.

விசித்ரியின் முப்பத்திரெண்டாவது வயதில் அவளை ஆறு நாட்கள் உப்பத்தூர் அருகில் உள்ள தர்க்கா ஒன்றில் சிகிட்சைக்காக கொண்டு போய்விட்டுவந்தார்கள். பிராத்தனையும் இரும்பு கம்பியால் போட்ட சூடும், குடம் குடமாக தலையில் தண்ணீர் கொட்டிய போதும் விசித்ரியிடம் ஒரு மாற்றமும் உருவாகவில்லை. அவளை மறுபடியும் ஊருக்கு அனுப்பி வைத்தார்கள். ஊர் வந்த சில நாட்களுக்கு அவள் பசி தாளாதவள் போல சாப்பிட்டுக் கொண்டேயிருந்தாள். அதன்பிறகு அவள் இயல்பாக மாறுவதற்கு ஒரு மாதகாலமானது. அவள் எப்போது போலவே முப்பது ஆடைகள் அணிந்தவளாக இருந்தாள்.

விசித்ரியின் வீடு அவள் இளமையிலிருந்தது போன்ற வளமையை இழந்து போகவே திசைக்கொரு சகோரர்களாக பிரித்து போக துவங்கினார்கள். வீட்டில் அவளும் வயதான அம்மையும் மட்டுமேயிருந்தார்கள். பண்டிக்கைக்கு  ஊருக்கு சகோதரிகள் வருவதும் கூட நின்று போய் நாலு வருசமாகி விட்டது. அவர்கள் வீடு இருந்த தெருவில் இருந்த மனிதர்கள் கூட இடம் பெயர்ந்து போய்விட்டார்கள். வாகை மரங்கள் வெட்டி சாய்க்கபட்டு அங்கே தண்ணீர் தொட்டி வைக்கபட்டுவிட்டது. தெருவில் இருந்த வயதானவர்கள் இறந்து அதே ஊரின் மண்ணில் புதையுண்டு அந்த இடங்களில் தும்பை முளைத்தும் விட்டது.

விசித்ரிக்கு போக்கிடம் இல்லை. அவள் எப்போதும் போலவே தன் உடலை சுற்றி முப்பது நாற்பது சேலைகளை சுற்றிக் கொண்டு கால் பெருவிரல் வரை துணியால் கட்டி முடிச்சிட்டு வீட்டிற்குள்ளாகவே இருக்கிறாள். சமையல் அறையின் புகைக்கூண்டை ஒட்டியே வாழ்ந்த பல்லி கருத்து பருத்து போய்  கண்கள் மட்டுமே பிதுங்க இருப்பது போன்று அவள் தோற்றம் மாறிப்போயிருந்தது. ஒருவேளை அவள் இறந்து போன அன்று கூட அப்படியே தான் அவளை புதைக்க கூடும் என்று அம்மா புலம்பிக் கொண்டிருந்தாள்

விசித்ரியின் பனிரெண்டாவது வயதின் கோடை பகலில் என்ன தான் நடந்தது. யார் அவள் உடலில் இருந்த உடைகளை உருவியது. எல்லோரும் உண்மையின் ஏதோவொரு பகுதியை அறிந்திருக்கிறார்கள். உண்மையை முழுமையாக அறிந்த விசித்ரி அதை விழுங்கி புதைத்துவிட்டாள்.


ஆனால் முற்றிய வெயில் காமம் உடையது என்பதையோ, அது  ஒரு மனிதனின் அடக்கப்பட்ட இச்சையை பீறிடச் செய்யக்கூடியது என்பதையும் பற்றி உள்ளுர்வாசிகள் அறிந்தே வைத்திருந்தார்கள். அல்லது வெயிலை காரணம்  சொல்லி தன் மனதின் விகாரத்தை வெளியே நடமாட அனுமதித்திருக்கிறார்கள். அதை வெயில் அறிந்திருக்கிறது. இல்லை இரண்டுமே புனைவாகவோ, இரண்டுமே அறிந்து வெளிப்படுத்தபடாத ரகசியமாகவோ இருக்க கூடும்.

எதுவாயினும் காமம் தனி நபர்களின் உணர்ச்சி வெளிப்பாடுடன் சம்பந்தமுடையது மட்டுமில்லை. அது ஒரு புதைசுழல். கோடையின் பின்மதியப் பொழுதுகள் எளிதாக கடந்து போய்விடக்கூடியவை அல்ல. அதனுள் மர்மம் பூத்திருக்கிறது. அதன் சுழிப்பில் யாரும் வீழ்ந்துவிடக்கூடும் என்பதையே விசித்ரி நினைவு படுத்திக் கொண்டிருக்கிறாள். அது தான் பயமாக இருக்கிறது.

Gayathri:
காட்சிக் கூண்டு
சிறுகதை

மாநகராட்சியின் பொதுப்பூங்காவில் அப்படியொரு கூண்டினை உருவாக்க வேண்டும் என்றொரு யோசனையை யார் முன்மொழிந்தது என்று தெரியவில்லை. ஆறுமாதங்களாகவே நகரின் முக்கிய பூங்காங்கள் யாவும் மறுசீரமைப்பு செய்யபட்டு வந்தன. செயற்கை நீருற்றுகள், சிறார்களுக்காக சறுக்கு விளையாட்டுகள், அலங்கார விளக்குள், ஆள் உயர காற்றடைக்கபட்ட பொம்மைகள்  நாளிதழ்கள் வாசிப்பதற்காக வாசகசாலை என்று பூங்காங்களின் தோற்றம் பொலிவு கண்டிருந்தது.

ஆனால் நகரின் வேறு எந்த பூங்காவிலும் இல்லாத தனிச்சிறப்பாக இரட்டை சாலைசந்திப்பின் அருகிலிருந்த ஔவை பூங்காவில் இரும்பு கூண்டு ஒன்றை உருவாக்கியிருந்தார்கள். ஆறடிக்கு பத்தடி அளவில் உருவாக்கபட்ட அந்த இரும்பு கூண்டு சர்க்கஸில் சிங்கம்  அடைத்து வைக்கபட்ட கூண்டினை விடவும் சற்றே பெரியதாக இருந்தது.

மின்சாரத்தால் இயங்கும் அந்த கூண்டில் விரும்புகின்ற யார் வேண்டுமானாரும் உள்ளே சென்று உட்கார்ந்து கொள்ளவோ, நின்று கொண்டு இருக்கலாம். கூண்டினில் ஆட்கள் சென்ற மறுநிமிசம் தானாக கதவு மூடிக் கொள்ளும்படியாக மின்சாரத்தால் உருவாக்கபட்டிருந்தது. சரியாக  ஐந்துநிமிசங்கள் கூண்டு மூடியிருக்கும். பிறகு கதவு தானே திறந்து கொண்டுவிடும்.

கூண்டில் ஆட்கள் ஏறி மூடிக் கொண்ட மறுநிமிசம் அதிலிருந்து மியமிங்மியமிங் என்று விசித்திரமானதொரு சப்தமிடும். அது பார்வையாளர்களை தன் பக்கம் இழுக்க கூடியதாகயிருந்தது. மற்ற நேரங்களில் கூண்டில் எந்த சலனமும் இருக்காது.

கூண்டினை பூங்காவில் பொருத்தபட்ட மூன்று தினங்களுக்கு அதில் எவரும் நுழையவேயில்லை. இவ்வளவிற்கும் கூண்டின் அருகாமையில் பெரியதாக விளம்பர பலகை வைக்கபட்டிருந்தது. முதன்முறையாக அந்த கூண்டில் நடைபயிற்சிக்காக தினமும் பூங்காவிற்கு வரும் ஒய்வு பெற்ற வங்கி அதிகாரி ஒருவர் உள்ளே நுழைந்தார். அவருக்கு கூண்டை பார்க்கும் போது அவரது அலுவலக அறை போன்று நினைவிற்கு வந்திருக்க கூடும்.

அவர் தரையில் இருந்து சற்று உயரமாக வைக்கபட்ட கூண்டிற்குள் போவதற்காக  இரண்டு படிகள்  ஏறி கூண்டின் கதவை திறந்து உள்ளே போன போது கதவு தானாக மூடிக் கொண்டது. மறுநிமிசம் மியமிங்மியமிங் என்ற சப்தம் உரத்து கேட்க துவங்கியது. நடை பயிற்சியில் இருந்தவர்கள், பூங்காவில் விளையாண்ட சிறுவர்களுக்கு திரும்பி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள். வங்கி அதிகாரி கூண்டிற்குள் இருந்தபடியே வெளியே பார்க்க ஆரம்பித்தார். அப்படி அவர் ஒரு நாளும் அந்த பூங்காவை கண்டதேயில்லை.

கூண்டிற்குள் இருப்பது ரொம்பவும் பாதுகாப்பாகவும் இயல்பாகவும் இருந்தது. அவர் கூண்டின் வலுவான இரும்புகம்பிகளை பிடித்தபடியே நின்று கொண்டிருந்தார். அவருக்கு தெரிந்த சிலர் நடைபயிற்சியின் ஊடாகவே அவரை பார்த்து சிரித்தபடியே போனார்கள். அவருக்கும் அவர்களை பார்த்து சிரிக்க வேண்டும்  போலிருந்தது. கம்பியில் முகம்பதித்து கொண்டு அவர்  வெளியே பார்த்து சிரித்தார். சிறார்கள் கூண்டின் அருகில் வந்து நின்றபடியே அவரை பார்த்து பரிகாசம்  செய்தார்கள்.

வங்கி அதிகாரி கூண்டிற்குள்ளாகவே அங்குமிங்கும் நடக்க துவங்கினார்.  அப்போது அவரது செல்போன் அடிக்க துவங்கியது. போனில் பேசியபடியே அவர் நடந்து கொண்டிருப்பதை கண்ட ஒரு இளம் பெண் வியப்போடு அவருக்கு கையசைத்தபடியே போனாள்.

தான் கூண்டிற்குள் இருப்பது எப்படியிருக்கும் என்று தனக்கு தெரியாதே என்பதால் அவருக்கு திடீர் யோசனை உருவானது. அந்த பெண்ணை கைதட்டி அழைத்து தன்னை ஒரு புகைப்படம் எடுத்து தரும்படியாக செல்போனை நீட்டினார். அந்தப் பெண் கூண்டிற்குள் அவர் நிற்பதை புகைப்படம் எடுத்து தந்தாள். அதை பார்க்கும் போது அவருக்கே சிரிப்பாக வந்தது. இரண்டு மூன்று நிமிசங்களுக்கு பிறகு அவரது கால்கள் வலிப்பது போல இருந்தன.

கூண்டிற்குள்ளாக உட்கார்ந்து கொள்ளலாமா என்று பார்த்தார்.இருக்கைகள் எதுவும் இல்லை. எப்படி உட்காருவது என்று யோசித்துக் கொண்டிருந்தார். கடந்த இருபது ஆண்டுகளில் அவர் ஒரு முறை கூட தரையில் உட்கார்ந்ததேயில்லை.  சரி உட்கார்ந்து பார்க்கலாமே  என்று கூண்டின் தரையில் அவர் உட்கார முயன்ற போது கால் முட்டிகளில் வலி உருவானது. மண்டியிட்டு காலை மடக்கி ஒருவழியாக உட்கார்ந்து தன்னை நிலைபடுத்திக் கொள்ளும் போது கூண்டின் இசை நின்று கதவு தானே திறந்து கொண்டது. அவ்வளவு தானா என்றபடியே அவர் கூண்டினை விட்டு வெளியே இறங்கி நடக்க துவங்கினார். அன்றைக்கு வேறு எவரும் கூண்டிற்குள் ஏறி தன்னை அடைத்துக் கொள்ளவில்லை.

ஆனால் மறுநாள் பூங்காவிற்கு வழக்கமாக வரும் காதலர்கள் இருவர் கூண்டிற்குள் தங்களை அடைத்து கொண்டார்கள். இருவருக்கும் அது வேடிக்கையாக இருந்தது.  அவர்களை தொடர்ந்து வணிகபிரதிநிதி ஒருவன், கிரிக்கெட் ஆடும் சிறுவர்கள் இரண்டு பேர் என்று பத்திற்கும் மேற்பட்டவர்கள் கூண்டிற்குள் அடைத்து கொண்டார்கள்.

ஞாயிற்றுகிழமை காலையில் முதன்முறையாக ஒரு குடும்பம் அந்த கூண்டிற்குள் ஏறி தன்னை அடைத்துக் கொண்டது. அது மிக வேடிக்கையானதாக இருந்தது. அந்த குடும்பத்தில் கணவன் மனைவி இரண்டு மகள்கள், ஒரு பையன் மற்றும்  மகளின் கணவன் மற்றும் கைக்குழந்தை யாவரும் ஒரே நேரத்தில் உள்ளே ஏறிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஏழாவது குறுக்குதெருவில் உள்ள அரசு குடியிருப்பில் இருப்பவர்கள் என்று பூங்காவின் காவலர் சொன்னார்.

நாற்பது வயதை கடந்த அந்த அந்த வீட்டின் பெண்மணி கூண்டினை தொட்டு தொட்டு பார்த்தபடியே நல்ல காற்றோட்டமாக இருக்கிறது. வெளிச்சம் கூட எப்படி சீராக விழுகிறது பாருங்கள் என்று கணவனிடம்  சொல்லிக் கொண்டிருந்தாள். அவளது கணவரோ வீட்டிலிருந்து ஏதாவது சமைத்து கொண்டுவந்திருந்தால் அதற்குள் உட்கார்ந்து சாப்பிடலாமே என்று ஆதங்கபட்டுக் கொண்டிருந்தாள்.

 கூண்டிற்குள் அடைக்கபட்ட இரண்டு இளம்பெண்களும் கம்பிகளை பிடித்தபடியே வெளியே நடந்து செல்லும் இளைஞர்களை பார்த்து சிரித்து கொண்டிருந்தார்கள். அதில் ஒருத்தி கூண்டில் ஒரு கண்ணாடி மாட்டி வைத்திருந்தால் முகம் பார்க்க உதவியாக இருக்கும் என்று சலித்து கொண்டாள்.

சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்திருந்தவர்கள் அந்த பெண்களை பார்த்து சிரித்தார்கள்.  சிறுவனோ கூண்டின் இசையோடு சேர்ந்து மியமிங்மியமிங் என்று கத்திக் கொண்டிருந்தான். ஆறுநிமிசங்களுக்கு பிறகு அவர்கள் வெளியே வந்தபோது குடும்பத்துடன் ஒருவரை கைகளை தட்டியபடி ஆரவாரமாக கத்தினார்கள்.

அன்றைக்கு  கூண்டிற்குள் தன்னை அடைத்து கொள்வதற்கு இருநூறு பேர்களுக்கும் மேலாக முன்வந்தார்கள். அது பூங்காவில் பெரிய வேடிக்கையாக இருந்தது. யார் எப்போது கூண்டிற்குள் போவார்கள்.  கதவு மூடப்பட்டவுடன் கூண்டிற்குள் என்ன செய்வார்கள் என்று வேடிக்கை பார்ப்பது சுவாரஸ்யமாக இருந்தது. இதற்காகவே பூங்காவிற்கு நிறைய கூட்டம் வரத்துவங்கியது.

கூண்டில் தங்களை தானே அடைத்துக் கொள்வதில் மக்கள் காட்டும் ஆர்வம் அதிகமானதை கண்டு அதை ஒழுங்குபடுத்தவதற்காக இரண்டு காவலர்கள் நியமிக்கபட்டிருந்தார்கள். அவர்கள் கூண்டிற்குள் போவதற்காக காத்திருப்பவர்களை வரிசையில் நிற்க செய்தார்கள். விடுமுறை நாட்களில் அந்த வரிசை பூங்காவை விட்டு வெளியே சாலை வரை நீண்டு போவதாக மாறியது.

முதன்முறையாக ஒரு வயதானவர் தன் வீட்டிலிருந்து மடக்கு நாற்காலி ஒன்றை கொண்டு வந்து கூண்டிற்குள் போட்டு உட்கார்ந்து கொண்டு நாளிதழ் படித்தார். தன் உடலை செம்மை படுத்துவதில் ஆர்வம் கொண்ட நடுத்தரவயது ஆண் ஒருவர் சில நாட்களுக்கு முன்பாக கூண்டிற்குள்ளாகவே யோகா செய்ய ஆரம்பித்தார்.

புதிதாக திருமணம் ஆன கணவன் மனைவி இருவரும் மதிய உணவிற்கு பிறகு கூண்டிற்குள் வந்து உட்கார்ந்து கொண்டு சீட்டாடினார்கள். அந்த பகுதியின் வார்டு கவுன்சிலர் தன்னுடைய விசுவாசிகள், நண்பர்கள்  என கூண்டில் இடமில்லாமல் நெருக்கடி ஏற்படும் அளவு நாற்பத்தி ஆறு பேர்களுடன் கூண்டினுள் தன்னை பூட்டிக் கொண்டார். அவரிடம் கூண்டிற்குள் குடிநீர் இணைப்பு குழாய் ஒன்று பொருத்தபட வேண்டும் என்பதற்கான புகார் மனு அளிக்கபட்டது. அடர்ந்த தாடி கொண்ட ஒரு இருபது வயதை கடந்த இளைஞன் கூண்டிற்குள் சென்றதும் சுருண்டு படுத்து நிம்மதியாக உறங்க துவங்கினான்.

வரலாற்று பேராசிரியர் ஒருவர் அது கடந்த கால நினைவுகளுக்குள் நம்மை அழைத்து செல்வதாகவும், குற்றவாளிக்கூண்டுகள் அமைப்பதை பற்றி மதுராந்தகத்தில் ஒரு சோழர்கால கல்வெட்டு இருப்பதாகவும் உடன் வந்த ஆய்வுமாணவர்களிடம் தெரிவித்தார்.

பூங்கா இரவு பதினோறு மணி இதற்காகவே திறந்து வைக்கபட்டிருந்தது. நகரின் பல்வேறு பகுதியில்  இருந்து கூண்டில் தன்னை அடைத்துக் கொள்வதற்காக மக்கள் பயணம் செய்து வந்து பூங்கா திறக்கும் முன்பாகவே காத்திருந்தார்கள்.

இரண்டு தினங்களுக்கு முன்பாக நூறடி சாலையில் உள்ள ஒரு உணவகத்தை நடத்துகின்றவர் அந்த கூண்டினை பார்வையிட்டு அதை உருவாக்குவதற்கு எவ்வளவு பணம் செலவிடப்பட்டது என்று விசாரித்து கொண்டிருந்தார். பூங்காவில் காவலர் தனக்கு தெரியவில்லை என்றபோது அந்த கூண்டின் அருகாமையில் தான் ஒரு துரித உணவகபிரிவை துவங்குவதற்கு யோசனையிருக்கிறது என்று சொன்னார்.  பூங்கா காவலனும் அது மிக அவசியமாக ஒன்று வரிசையில் நிற்பவர்கள் சில நேரம் மணிக்கணக்கில் காத்திருக்கிறார்கள் என்று சொன்னான்.

கூண்டின் பாதுகாப்பிற்காக வந்திருந்த சப்இன்ஸ்பெக்டர் ஒருவர் தன்னை ஒருமுறை கூண்டில் அடைத்துக் கொண்டார். அவருக்கு கூண்டு அவ்வளவு பெரியதாக இருப்பதில் உடன்பாடில்லாமல் இருந்தது. நடக்க இடமில்லாமல் தலைமுட்டும்படியாக அடைக்கபடும் போது தான் கூண்டின் முக்கியத்துவம் தெரியும் என்று அலுத்துக் கொண்டார்.

பல நேரங்களில் மக்கள் வரிசையில் நின்றும் கூண்டுகாலியாக கிடைக்காமல் போவதால்  கூண்டிற்குள் அடைக்கபடும் நேரத்தினை மூன்று நிமிசமாக மாற்றி உத்திரவிட்டது அரசு. அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். நடைபயிற்சியில் வரும் சில பணம்படைத்தவர்கள் தனியாக தங்களது வீடுகளில் அது போன்ற கூண்டுகளை தாங்களே வடிவமைப்பு செய்து உருவாக்கி கொண்டார்கள்.

காதலர்கள், கஞ்சாபுகைப்பவர்கள், குடுபத்தவர்கள், அரசியல்வாதிகள், சாதாரண மக்கள், அதிகாரிகள், சுற்றுலா பயணிகள் என்று அந்த கூண்டு ஒய்வில்லாமல் கத்திக் கொண்டேயிருந்தது.  அந்த கூண்டினை பற்றிய சிறப்பு கட்டுரையை நாளிதழ்கள் வெளியிட்டன .இரண்டு நாட்களின் முன்பாக அந்த கூண்டிற்குள் தொலைகாட்சி ஒன்றின் நேரடி நிகழ்ச்சி நடைபெற்றது. மக்கள் ஏன்  தங்களை கூண்டில் அடைத்துக் கொள்கிறார்கள் என்பதை பற்றி ஒவ்வொருவரும் ஒரு பதில் சொன்னார்கள்.

இப்படியாக காட்சிக்கூண்டு அதிமுக்கியத்துவம் அடைய துவங்கியதை கண்டு மாநகராட்சி நகரின் அத்தனை பூங்காங்களிலும் இது போன்ற கூண்டுகளை உருவாக்கும் புதிய திட்டம் ஒன்றை கொரிய அரசின் ஒத்துழைப்போடு உருவாக்க திட்டமிட்டது.

ஆறுமாதங்களில் நகரில் புதிது புதிதாக நூற்றுக்கும் மேற்பட்ட கூண்டுகள் திறக்கபட்டன. இந்த கூண்டுகளில் வெறுமனே ஒலிபரப்பாகும் இசைக்கு பதிலாக தங்களது விளம்பரங்களை ஒலிபரப்பலாமே என்று பன்னாட்டு குளிர்பான நிறுவனம் முன்வந்த பிறகு கூண்டுகளின் நிறம் மற்றும் வடிவம் புத்துருவாக்கம் கொள்ள துவங்கின.

மாநகரில் இப்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட காட்சிக் கூண்டுகள் இருப்பதாகவும் அதன் விளம்பர வருமானம் பதினெட்டு  கோடி என்றும் மாநகராட்சி பெருமையாக அறிவித்தது. ஆனால் இதுவரை ஒருவர் கூட கூண்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கவேயில்லை என்பதோடு யார் இந்த யோசனையை உருவாக்கியது என்பது குறித்தும் அறிந்து கொள்ளவேயில்லை.

மனவருத்தம் தீராத நாற்பது வயது மனிதன் ஒருவன் ஒரு இரவில் பூங்காவில் நுழைந்து அந்த கூண்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டான். அதன் காரணமாக நகரில் உள்ள அத்தனை கூண்டுகளுக்கும் உற்றுநோக்கும் கேமிரா பொருத்தபட்டது. அதை கண்காணிக்கும் அலுவலகம். அதற்கான பணியாளர்கள், பராமரிப்பாளர்கள், சோதனை அதிகாரிகள், என்று தனித்துறை உருவானது.
நாளடைவில் மக்களுக்கு சலித்து போக ஆரம்பித்தது. எவரும் கூண்டில் ஏறி தன்னை அடைத்துக் கொள்ளவில்லை. மெல்ல புறக்கணிப்பின் கரங்கள் அதை பற்றிக் கொள்ள மழை வெயிலில் துருவேறிய கூண்டு கவனிப்பாரற்று போக துவங்கியது.

ஆனால் அரசின் கூண்டு பராமரிப்பு துறையோ தன் உயர் அலுவலர், கண்காணிப்பாளர், பணியாளர்கள், பாதுகாவலர்கள் என்று ஆயிரக்கணக்கான ஆட்களுடன் இன்றைக்கும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. யாரும் அதை பற்றி சிறு குறை கூட தெரிவிக்கவில்லை என்பதே அதன் சிறப்பம்சம்

Gayathri:
அப்பா புகைக்கிறார்
சிறுகதை


தனது அலுவலகத்திலிருந்து ருக்மணி வெளியே வந்தாள். மணி ஆறு இருபது ஆகியிருந்தது. சாலையில் செல்லும் வாகனங்களின் மீது வெயில் பட்டு தெறித்துக் கொண்டிருந்தது. கோடைகாலம் என்பதால் மாலையிலும் வெயில் அடங்கவில்லை.  மின்சார ரயிலைப்பிடிப்பதற்காக செல்லும் வழியில் கடைக்கு போய் ஒரு சிகரெட் வாங்கலாமா என்று ருக்மணிக்கு தோணியது.

இப்படி சில தினங்கள் தோன்றுவதுண்டு. சில வேளைகளில் அவள் சிகரெட் வாங்குவதை பலரும் கவனிப்பார்களே என்று தன்னை அடக்கி கொண்டுபோயிருக்கிறாள். சில வேளைகளில் யாரையும் பற்றிய கவலையின்றி கடைக்கு போய் சிகரெட் வாங்கியிருக்கிறாள்.


அவளது அலுவலகத்திலிருந்து உடன் வரும் ஆண்களில் சிலர் பெட்டிக்கடைக்களில் நின்று புகைப்பதை கண்டிருக்கிறாள். அவர்கள் முன்னால் தானும் போய் சிகரெட் கேட்பது அவர்களை திகைப்படைய செய்யக்கூடும். ஆனால் அது அவளுடைய நோக்கமில்லை.

அவளுக்கு சிகரெட் ஒன்று வேண்டும். அது புகைப்பதற்காக அல்ல. அவள் ஒரு போதும் சிகரெட் புகைத்ததுமில்லை. ஆனால் அவளுக்கு  சிகரெட்டின் மணம் தெரியும், சிகரெட்டை  நசுங்காமல் எப்படி கையில் பிடித்துக்கொள்ள வேண்டும் என்று தெரியும். சிகரெட் புகையின் வளையங்கள் காற்றில் எப்படி கரைந்து போகும் என்பதைக் கூட அறிந்திருக்கிறாள்.

பேக்கரியை ஒட்டியிருந்த பெட்டிக்கடையினுள் அவள் நுழைந்தவுடன் கடைக்காரன் அவள் கேட்காமலே ஷாம்பு வேண்டுமா என்று கேட்டான். மாலையில் யார் ஷாம்பு வாங்க போகிறார்கள் என்று அவளாக நினைத்துக் கொண்டு இல்லை என்றாள். உடனே அவன் விக்ஸ் மிட்டாய், ரீபில், சேப்டி பின் வேண்டுமா என்று கேட்டான்.

அந்தக்கடையில் பெண்கள் வாங்கக்கூடிய பொருட்கள் என்று இந்த நான்கு மட்டும் தான் இருக்கிறது என்று முடிவு செய்திருப்பான் போலும். அவள் கண்ணாடி பாட்டில்களுக்கு பின்னால் வரிசை வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிகரெட் பெட்டிகளை பார்த்து கொண்டேயிருந்தாள்

யாரோ ஒரு ஆள் அவளைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்து பான்பராக் வாங்கி வாயில் போட்டுக்கொண்டு மீதி சில்லறையை அள்ளிக் கொண்டு போனான். சில நிமிச யோசனைக்கு பிறகு ருக்மணி ஐந்து ரூபாய் காசை அவன் முன்னால் நீட்டியபடியே ஒரு சிகரெட் கொடு என்றாள். கடைக்காரனின் முகம் மாறியதை அவள் காணமுடிந்தது. அவன் ஏளனம் செய்வது போன்ற குரலில் என்ன சிகரெட் என்று கேட்டான்.

கடைக்கு ஒரு நாளைக்கு நூறு ஆண்கள் சிகரெட் வாங்க வருகிறார்கள். அவர்களில் ஒருவரிடம் கூட இந்த ஏளனத்தை அவன் காட்டியிருக்க மாட்டான் என்று ஆத்திரமாக வந்தது. அவள் பில்டர் சிகரெட் என்று சொன்னாள். கடைக்காரன் முகத்தை கோணலாக வைத்துக் கொண்டு அதான் என்ன சிகரெட்டுனு கேட்கிறேன் என்றான்.

வில்ஸ்பில்டர் என்று சொன்னாள்.

கடைக்காரன் சிகரெட் பெட்டியை உருவி அதிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து தந்துவிட்டு சில்லறையை கண்ணாடி பாட்டில் மீது வைத்தான்.
அவள் சிகரெட்டை கையில் எடுத்து பார்த்த போது கடைக்காரன் அவனை முறைத்து பார்த்தபடியே இருப்பது தெரிந்தது. அவள் வேண்டும் என்றே இரண்டுவிரல்களுக்கும் நடுவில் சிகரெட்டை பிடித்துக் கொண்டு நின்று கொண்டேயிருந்தாள். கடைக்காரன் அவளை கேலி செய்வது போன்று தீப்பெட்டியை எடுத்து முன்னால் நீட்டினான். அவள் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு கடையிலிருந்து வெளியேறி நடந்தாள்.

கையில் ஒரு சிகரெட்டோடு நடந்து செல்லும் தன்னை பலரும் வேடிக்கை பார்க்கிறார்கள் என்பது அவளுக்கு தெரிந்தேயிருந்தது. அதைப்பற்றிய கவலையின்றி அவள் சிகரெட்டை கையில் பிடித்தபடியே ரயில் வருவதற்காக காத்திருந்தாள். அவளை கடந்து செல்லும் முகங்கள் சிகரெட்டினை கண்டு அதிர்ந்து போயின. அவள் சிகரெட்டை முகர்ந்து பார்த்தாள். அதே வாசனை. இன்னும் அப்படியே இருந்தது.

கடைக்கு போய் சிகரெட் வாங்குவது ருக்மணியின் பதினாலாவது வயது வரை அன்றாட வேலையாக இருந்தது. அவர்கள் வீடு இருந்த தெருவில் உள்ள எல்லா கடைகளிலும் அவள் சிகரெட் வாங்கியிருக்கிறாள்.

ருக்மணியின் அப்பா சிகரெட் பிடிக்க கூடியவர். அப்பா சிகரெட் புகைக்கிறார் என்ற சொற்கள் அவளை பொறுத்தவரை மறக்கமுடியாத ஒரு வடு. அந்த சொல்லைக் கேட்ட மாத்திரத்தில் தலையிலிருந்து கால் வரை குபுகுபுவென ரத்தம் உச்சம் கொள்வதை அவள் பலமுறை உணர்ந்திருக்கிறாள்.

எதற்காக தன்னை அப்பா கடைகடையாக போய் சிகரெட் வாங்க சொன்னார் என்று அவளுக்கு புரிந்ததேயில்லை. அந்த நாட்களில் தான் பெண்ணாக தானே இருந்தோம். பத்து வயதில் தவறாக இல்லாதசெயல் இருபது வயதில் ஏன் தவறாக கொள்ளப்படுகிறது. அப்போது தன்னை எவரும் ஒருமுறை கூட இப்படி வேடிக்கை பார்க்கவோ அல்லது கேலி செய்வதோ நடந்தது இல்லையே. அது ஏன் காரணம் சிகரெட் பிடிக்கின்றவர்கள் ஆண்கள். அது அவர்களுக்கு மட்டுமேயான ஆடுகளம்.

ருக்மணியின் அப்பா புள்ளியியல் துறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் அலுவலகத்தில் ஒருவரோடு கூட சண்டையே போட்டதில்லை. மிக அமைதியான ஊழியர் என்று சொல்லிக் கொண்டார்கள். வீட்டிலிருந்தே சாப்பாட்டை கொண்டு போய்விடுவார். தினமும் காலை மாலை இரண்டு நேரமும் கோவிலுக்கு போக கூடியவர். விடுமுறை நாட்களில் கூட அலுவலகம் சென்று வேலை செய்யக்கூடியவர்.

ஆனால் இதுஎல்லாம் வெளி உலகிற்கு. வீட்டில் அப்பா எப்போதும் கத்திக் கொண்டும் அம்மாவோடு சண்டை போட்டபடியும் தானிருந்தார். அம்மாவின் மீதான கசப்புணர்வு அவருக்குள் பீறிட்டுக் கொண்டேயிருந்தது. அவளை அடிக்காத நாட்களே இல்லை.  பத்து தடவைக்கும் மேலாக அம்மாவிற்கு மண்டை உடைந்து தையல் போட்டிருக்கிறார்கள். அத்தனையும் மறந்துவிட்டு தான் அம்மா அவருக்காக ஒடியோடி சாப்பாடு செய்து தருகிறாள்.  சில வேளைகளில் அம்மாவும் தன் மனதில் இருந்த அத்தனை கோபத்தையும் ஒன்று திரட்டி வசையிட்ட போதும் அவர்களுக்குள் இருந்த கசப்புணர்வு குறையவேயில்லை.

அதற்காக தான் அப்பா புகைபிடிக்க துவங்கினாரோ என்னவோ, அம்மாவோடு சண்டையிட்ட பிறகு அப்பா ஆவேசத்துடன் சிகரெட் பிடிக்க ஆரம்பிப்பார். தொடர்ச்சியாக ஏழு எட்டு சிகரெட்களை கூட பிடித்திருக்கிறார். சிகரெட் பிடிக்கும் போது அவர் முகம் இறுக்கமடைந்து போயிருக்கும். பதற்றமும் எரிச்சலுமாகவே அவர் புகைபிடிப்பார். ஏதோவொன்றை அடக்கி ஆள்வது போன்ற ஆவேசம் அவருக்கு இருக்கும்.

அப்பா பலவருசமாக புகைபிடித்துக் கொண்டுதானிருந்தார். ஆனால் ஒருநாளும் அவர் கடையில் போய் அவருக்காக சிகரெட் வாங்கிக் கொண்டதேயில்லை. காலையில் ஒரு முறையும் மாலையில் இருமுறையும் ருக்மணி தான் கடைக்கு போய் அவருக்காக சிகரெட் வாங்கி வருவாள். சிகரெட் வாங்க கொடுத்த காசில் மீதமிருந்த சில்லறைகளை கூட  அவர் கவனமாக கேட்டு வாங்கிக் கொண்டு விடுவார். அவர் வழக்கமாக பிடிக்கும் சிகரெட் இல்லையென்றால் எங்கேயாவது போய் தேடி வாங்கி வரவேண்டும் இல்லாவிட்டால் அவளுக்கும் அடிவிழும்.

ஒவ்வொரு நாளும் கடைக்கு போய் சிகரெட் வாங்கும் போது அதை ருக்மணி முகர்ந்து பார்ப்பாள். புகையிலையின் மணமது. சிகரெட் பெட்டிகள் இல்லாமல் போன நாட்களில் நாலைந்துசிகரெட்டுகளை ஒன்றாக கையில் பொத்தி கொண்டுவருவாள். அப்போது சிகரெட்டுகள் நழுவி விழந்துவிடுமோ என்று பயமாக இருக்கும்.  சிகரெட் உதிர்ந்து போயிருந்தால் அதற்கும் வசவு விழும்.

இரவில் எத்தனை மணி ஆனாலும் அவளை கடைக்கு அனுப்பி சிகரெட் வாங்கிவர செய்வார் அப்பா. இருள் படிந்த தெருவில் பயமும் நடுக்கமாக கண்ணை மூடிக் கொண்டு ஒடிப்போய் பலமுறை வாங்கி வந்திருக்கிறாள்.
அப்பா சிகரெட் புகையை வீடு முழுவதும் நிரப்ப வேண்டும் என்று விரும்புகின்றவரை போல இந்தபக்கமும் அந்தப்பக்கமும் தலையை திருப்பி கொண்டு புகைவிடுவார்.

யார்மீதுள்ள கோபத்தையோ தணித்துக் கொள்வதற்கா புகைபிடிக்கிறார் என்பது போலவே அவரது முகபாவம் இருக்கும். சிகரெட்டின் சாம்பலை தட்டுவதற்காக அவர் கையில் கிடைக்கும் சில்வர் டம்ளர், தட்டு, பவுடர் டப்பாமூடி என எதையும் எடுத்துக் கொள்வார்.

ஒருமுறை அவர் அம்மாவின் உள்ளங்கையை நீட்ட சொல்லி அதில் கூட சிகரெட் சாம்பலை தட்டியிருக்கிறார். காரணம் இந்த வீட்டில் உள்ள எல்லாமும் தான் வாங்கி வந்தவை தானே இதில் எதில் சிகரெட்டின் சாம்பலை தட்டினால் என்ன குறைந்துவிடப்போகிறது என்ற எண்ணமே.

அது போலவே சிகரெட்டை அணைத்து வீட்டிற்குள்ளாகவே தூக்கி எறிவார். அவர் புகைக்கும் இடத்தின் அருகில் தான் ஜன்னல் இருந்தது. ஆனால் ஒரு போதும் அவர் ஜன்னலுக்கு வெளியே சிகரெட்டை எறிந்ததேயில்லை.
அம்மா கவனமாக அவர் வீசி எறிந்த சிகரெட் துண்டை பொறுக்கி எடுத்து வெளியே போடுவாள். அப்பா சிகரெட் பிடிப்பதற்காக வைத்துள்ள தீப்பெட்டியை அவர்கள் அடுப்பு மூட்ட ஒரு போதும் உபயோகிக்க கூடாது. அது அவர் உறங்கும்போது கூட தலையணியின் அருகாமையிலே இருக்கும்.

நள்ளிரவில் கூட எழுந்து பாயில் உட்கார்ந்து கொண்டு அப்பா புகைத்துக் கொண்டிருப்பார். அந்த வாடை நாசியில் ஏறி யாராவது செருமினால் கூட அவருக்கு ஆத்திரம் அதிகமாகி விடும். வேண்டும் என்றே முகத்தின் அருகாமையில் ஊதுவார்.

அவர்கள் மீது அவருக்கு உள்ள உரிமையை நிலை நிறுத்துவதற்கு இருந்த ஒரே அடையாளமாக சிகரெட் இருந்தது.

ஒருநாள் அம்மா அவர் சட்டை பையில் வைத்திருந்த சிகரெட்டை துணி துவைக்கும் போது கவனமாக  எடுத்து வைக்க மறந்து துவைத்துவிட்டாள் என்பதற்காக அவளது வலது கையில் சூடு போட்டார் அப்பா. அன்றிரவு அம்மா வீட்டிற்கு உறங்குவதற்கு வரவேயில்லை. அருகாமையில் உள்ள வரலட்சுமி வீட்டில் போய் படுத்துக் கொண்டாள்.

அவளை வீட்டிற்கு கூட்டி வரும்படியாக அப்பா ருக்மணியை அனுப்பி வைத்தார். ருக்மணிக்கு ஆத்திரமாக வந்தது. அவள் வரலட்சுமியின் வீட்டு வாசலில் போய் நின்றபடியே வாம்மா வீட்டுக்கு வாம்மா வீட்டுக்கு என்று கூப்பிட்டுக் கொண்டேஇருந்தாள். ஆனால் அம்மாவின் காதில் அந்தக்குரல் விழவேயில்லை. தானும் அங்கேயே படுத்துக் கொள்ள வேண்டியது தான் என்பது போல அவளும் சுருண்டு படுத்துக் கொண்டாள்.

சில நிமிசங்களில் வரலட்சுமி வீட்டு வாசலில் அப்பாவின் குரல் கேட்டது. அவர் ஆவேசத்துடன் கத்திக் கொண்டு நின்றிருந்தார். அவரது ஆபாசமான பேச்சை தாள முடியாமல் வரலட்சுமியக்கா அம்மாவை வீட்டிற்கு போகும்படியாக அனுப்பி வைத்தாள். ருக்மணி பயத்துடன் கூடவே நடந்து வந்தாள். அப்பா தன் கையில் இருந்த பத்து ரூபாயை தந்து சிகரெட் வாங்கிக் கொண்டுவரும்படியாக சொல்லிவிட்டு அம்மாவை வீட்டிற்கு இழுத்துக் கொண்டு சென்றார்

ருக்மணி இருட்டில் அப்பாவை திட்டியபடியே நடந்து போனாள்.

இருட்டிற்குள்ளாக ஒரு ரிக்ஷாகாரன் அமர்ந்து பீடி புகைத்து கொண்டிருந்தான். பகலும் இரவும் எண்ணிக்கையற்ற ஆண்கள் சிகரெட் பிடித்துக் கொண்டேயிருக்கிறார்கள். உலகம் முழுவதும் அந்த புகை பெண்களை நோக்கியே திரும்புகிறது என்று நினைத்தபடியே அவள் நடந்தாள். கடைகள் யாவும் சாத்தியிருந்தன. எங்கே போய் சிகரெட் வாங்குவது என்று தெரியவில்லை.

அவள் மீன்மார்க்கெட் வரை நடந்து போய் பார்த்தாள். அநேகமாக கடைகள் யாவும் மூடப்பட்டிருந்தன. சிகரெட் இல்லாமல் வீட்டிற்கு போனால் அப்பா தன்னை அடிக்க கூடும் என்ற பயமாக இருந்தது. அவள் சினிமா தியேட்டர் முன்பாக சிகரெட் கடையிருக்க கூடும் என்று நடந்தாள். இரண்டாவது காட்சி துவங்குவதற்காக பாடல் கேட்டுக் கொண்டிருந்தது.

ருக்மணி சிகரெட் வாங்கிக் கொண்டு திரும்பும் போது சைக்கிளில் வந்த ஒருவன் பாதி புகைத்த சிகரெட்டை அப்படியே தூக்கி எறிந்துவிட்டு தியேட்டர் உள்ளே செல்வது தெரிந்தது. ஒடிப்போய் அந்த சிகரெட்டை எடுத்து பார்த்தாள். பாதி சிகரெட் புகைந்து கொண்டிருந்தது. சுற்றிலும் யாராவது தன்னை கவனிக்கிறார்களா என்று பார்த்துவிட்டு அந்த சிகரெட்டை அவள் ஒரு முறை இழுத்து பார்த்தாள். நெஞ்சினுள் அந்த புகை சென்றதும் புறை ஏறிக் கொண்டு இருமல் வந்தது. சிகரெட்டை வீசி எறிந்துவிட்டு இருமினாள்.

அடங்கவேயில்லை. அடிவயிறு பிடித்துக் கொண்டுவிடும் போலிருந்தது. பயத்துடன் கண்ணீர் முட்ட தன்னுடைய தலையில் தானே தட்டிக் கொண்டாள். வீட்டிற்கு வந்து சேர்ந்த போது  அப்பா வாசலில் ஈஸி சேரை போட்டு உட்கார்ந்திருந்தார்.

அவள் சிகரெட்டை அவரிடம் தந்துவிட்டு உள்ளே போய் அம்மா அருகில் படுத்துக் கொண்டாள். சிகரெட்டின் சுவை நாக்கில் அப்படியே இருந்தது. அம்மா அந்த மணத்தை உணர்ந்திருக்க கூடும். அவள் பக்கம் திரும்பி முகர்ந்து பார்த்தாள். பிறகு ஆவேசம் ஆனவள் போல சிகரெட் பிடிச்சயாடி. சிகரெட் பிடிச்சயா என்று மாறிமாறி முகத்தில் அறைய துவங்கினாள். ருக்மணி என்னை மன்னிச்சிரும்மா என்னை மன்னிச்சிரும்மா என்று கத்தினாள். ஆனால் அடி நிற்கவேயில்லை.

அப்பா அதை கவனித்தபடியே சாய்ந்து புகைபிடித்துக் கொண்டிருந்தார். அம்மா கை ஒயும்வரை அடித்துவிட்டு அவளை கட்டிக் கொண்டு அழுதாள். பிறகு இவரும் ஒன்றாக படுத்துக் கொண்டார்கள். அதன்பிறகு சிகரெட் வாங்க போகும்போது அந்த வாசனை தன் மீது படிந்து விடக்கூடாது என்று கையை தனியே நீட்டியபடியே போவாள் ருக்மணி.

அவளை போலவே சிகரெட் வாங்க வரும் சிறுவர்கள் சிறுமிகள் நிறைய இருந்தார்கள். எதற்காக ஆண்கள் மட்டுமே சிகரெட் பிடிக்கிறார்கள் என்று அம்மாவிடம் கேட்டாள். அவரு சம்பாதிக்கிறாரு சிகரெட் பிடிக்கிறாரு அதனாலே என்ன என்று சொன்னாள் அம்மா.

ஆறாம்வகுப்பு படிக்கும் போது ஒரு முறை ருக்மணியின் பள்ளிக்கு அப்பாவை அழைத்து வரும்படியாக சொல்லியிருந்தார்கள். அவர்கள் வகுப்பிலிருந்து இரண்டு மாணவிகள் தேர்வுசெய்யப்பட்டு டெல்லியில் நடைபெறும் கலச்சார விழாவில் கலந்து கொள்ள செய்யப்பட்ட ஏற்பாடு அது. அப்பாவை வீட்டிலிருந்து அழைத்துக் கொண்டு போகும்வழியே தயங்கி தயங்கி ருக்மணி சொன்னாள்.

ஸ்கூல்ல வந்து நீங்க சிகரெட் பிடிக்க கூடாதுப்பா

அப்பா அதை கவனித்தது போலவே தெரியவில்லை. பிரேயர் முடிந்தபிறகு பிரின்ஸ்பலை  சந்திக்கும்படியாக சொல்லிய வகுப்பு ஆசிரியை  அப்பாவை வெளியே காத்திருக்க சொன்னாள்.

அப்பா அதற்குள் புகைக்க துவங்கியிருந்தார். அவ்வளவு மாணவிகளுக்கு நடுவில் நின்றபடியே ருக்மணி கண்ணை மூடி  பிரார்த்தனை செய்ய துவங்கியிருந்த போதும் காற்றில் சிகரெட் புகை கரைந்து வந்து கொண்டேயிருந்தது. பிரேயர் முடியும்வரை யாரும் எதுவும் சொல்லவேயில்லை. அப்பாவாக அதற்குள் பிரின்ஸ்பல் அறையை கண்டுபிடித்து உள்ளே சென்றிருந்தார். பிரின்ஸ்பல் அறைக்குள் நின்றபடியும் அவர் புகைத்துக் கொண்டுதானிருந்தார்.

பிரின்ஸ்பல் தன் அறையில் புகை பிடிக்க அனுமதியில்லை என்று கடுமையான குரலில் சொன்ன போது அது தன்னுடைய தனிப்பட்ட விஷயம். அதில் தலையிட பள்ளிக்கு அருகதையில்லை என்று சொல்லியபடியே இன்னொரு சிகரெட்டை எடுத்து புகைக்க துவங்கினார்.

இதற்குள் வகுப்பு ஆசிரியை ருக்மணியை அழைத்துக் கொண்டு வந்திருந்தாள். அப்பா நிதானமாக புகை பிடித்துக் கொண்டு தன்மகளை வெளியே அனுப்ப தனக்கு இஷ்டமில்லை பொம்பளை பிள்ளையை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும் என்றார். அந்த அறையில் புகை நிரம்பிக் கொண்டிருந்தது. வகுப்பு ஆசிரியையும் பிரின்ஸ்பலும் தனியே பேசிக் கொண்டிருந்தார்கள்.

 சில நிமிசங்களில் ருக்மணியை அழைத்து அப்பாவை  வெளியே அழைத்து செல்லும்படியாக சொன்னார்கள். அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வந்த போதும் அவர் புகைத்துக் கொண்டே வந்தார். பள்ளியின் வாசலை தாண்டுவதற்குள் நிச்சயம் தன்னை டெல்லிக்கு அனுப்பமாட்டார்கள் என்று ருக்மணிக்கு தெரிந்துவிட்டிருந்தது.

அப்பாவின் மீது ஆத்திரமாக வந்தது. அப்பா அவர்களது ஆத்திரம் கோபம் வசை எதைப்பற்றியும் ஒரு போதும் கருத்தில் கொண்டதேயில்லை. சிகரெட் பிடிப்பதை தவிர வேறு ஒரு கெட்டபழக்கமும் உங்க அப்பாவுக்கு கிடையாது. சம்பாதிக்கிற பணத்தை ஒழுங்கா வீட்டில் கொண்டுவந்து கொடுத்துவிடுகிறார். ஆபீஸ் விட்டா நேராக வீட்டிற்கு வந்துவிடுகிறார் என்று அம்மாவே பல நாட்கள் அவரை பாராட்டியும் இருக்கிறார்

ஆனால் அவளுக்கு அப்பாவை பிடிக்காமலே ஆகிப்போனது. அவள் மனதில் எப்போதும் அப்பா புகைக்கிறார் என்ற படிமம் உறைந்து போயிருந்தது. அதனால் தானோ என்னவோ சிகரெட் பிடிக்கின்றவர்களை கண்டாலே அவளுக்கு ஆத்திரமாக வரத்துவங்கியது.

அவள் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நாட்களில் அப்பா புகைப்பது மிக அதிகமாகி போயிருந்தது. அதற்கு காரணம் ஒய்வில்லாத சண்டை. ஒவ்வொரு நாளும் அவள் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் போதும் பயமாக இருக்கும் காரணம் அப்பா அம்மாவை திட்டிக் கொண்டிருப்பாள். அல்லது அடித்துக் கொண்டிருப்பார். அதன் சில நிமிசங்களில் அவள் சிகரெட் வாங்க போக வேண்டியதிருக்கும். பேசாமல் பள்ளிக்கூடம் விட்டு திரும்பி வரும்போதே கடையில் நாலைந்து சிகரெட்டுகள் வாங்கிக் கொண்டு வந்துவிடலாமா என்று கூட யோசித்துக் கொண்டிருப்பாள்

அப்படியொரு நாள் வீடு திரும்பும் போது வீட்டில் நிறைய ஆட்கள் திரண்டிருந்தார்கள். அம்மா சுவர் ஒரமாக சாய்ந்து கிடந்தாள். அவள் உடல் தலை கலைந்து கிடந்தது. சேலை கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தது. அவளை சுற்றிலும் உட்கார்ந்திருந்த பெண்கள் புலம்பிக் கொண்டிருந்தார்கள். அப்பா சலனமில்லாமல் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். அவரிடம் அருகாமை வீட்டு ஆண்களில் சிலர் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

வீட்டிற்குள் ருக்மணி வருவதைக்கண்டதும் அங்கிருந்த பெண்களில் ஒருத்தி உரத்த குரலில் அழுதபடியே இப்படியொரு பொம்பளை பிள்ளையை தனியா தவிக்க விட்டுட்டு சாகப்போறதுக்கு உனக்கு எப்படி மனசு வந்தது என்று அம்மாவை உலுக்கினாள்.

அம்மா அவள் பக்கம் திரும்பவேயில்லை. அம்மா தற்கொலை செய்வதற்கு முயன்றிருக்கிறாள். பக்கத்துவீட்டு பெண்கள் பார்த்து காப்பாற்றியிருக்கிறார்கள். இல்லாவிட்டால் இந்த நேரம் செத்துப்போயிருப்பாள் என்று சொல்லிக் கொண்டார்கள்.

அதை கேட்டவுடன் ருக்மணிக்கு கால்கள் நடுங்க துவங்கியது. அவள் அம்மாவின் அருகில்போய் உட்கார்ந்து கொண்டாள்.  அம்மாவின் கையை எடுத்து தன்னோடு சேர்த்து வைத்துக் கொள்ள முயன்ற போது அவள் தள்ளிவிட்டபடியே போ.. போயி உங்கப்பாவுக்கு சிகரெட் வாங்கிட்டு வந்து குடு என்றாள். ருக்மணிக்கு பேசாமல் தான் செத்துப்போய்விடலாம் என்பது போலிருந்தது.

அவள் யூனிபார்மை கூட கழட்டாமல் அப்படியே உட்கார்ந்திருந்தாள். அன்றிரவு எட்டரை மணி வரை அவர்கள் வீட்டில் நிறைய ஆட்கள் இருந்தார்கள். பிறகு அப்பா அவளிடம் பசிக்கிறதா என்று கேட்டார். அவள் இல்லை என்று பொய் சொன்னாள். அப்பா தன் சட்டை பையிலிருந்து ஐம்பது ரூபாயை எடுத்து தந்து அவளுக்கு தேவையான இட்லியும் அவருக்கு சிகரெட்டும் வாங்கிக் கொண்டு வரும்படியாக சொன்னார்.

அவள் எழுந்து பணத்தை கையில் வாங்கிக் கொண்டாள். வாசல்படியை விட்டு இறங்கும் போது அப்பா அழைப்பது போலிருந்தது. அவள் திரும்பி பார்த்த போது அப்பா செருப்பை மாட்டிக் கொண்டு அவளை நிறுத்திவிட்டு தானே கடைக்கு போய்வருவதாக சொன்னார். அவளால் நம்ப முடியவில்லை. தானும் கூடவரவா என்று கேட்டாள். அப்பா வேண்டாம் என்றபடியே கிழே இறங்கி நடக்க துவங்கினார்

இரவு பதினோறு மணி வரை அப்பா வீடு திரும்பி வரவேயில்லை. அம்மா அவளை தேடிப்பார்த்து வரும்படியாக சொன்னாள். ருக்மணி ஒவ்வொரு கடையாக போய் எங்கப்பா சிகரெட் வாங்க வந்தாரா என்று கேட்டுக் கொண்டேயிருந்தாள். அப்பா எங்கேயும் வரவில்லை. இந்த இரவில் எங்கே போயிருக்க கூடும். வீட்டிற்கு வந்து அம்மாவிடம் சொன்னபோது அவள் அவிழ்ந்து கிடந்த கூந்தலை சொருகிக்கொண்டு அவளையும் இழுத்துக் கொண்டு சினிமா தியேட்டர் வரை சென்று பார்த்தாள். ஆனால் அங்கேயும் அப்பா இல்லை.

 நள்ளிரவில் அம்மா தெருவில் நின்றபடியே சப்தமாக  அழுதாள். மாலையில் அவள் வீட்டில் திரண்டிருந்தவர்கள் எவரும் ஆறுதல்படுத்த வரவில்லை. அவளும் அம்மாவும் மட்டும் அழுதார்கள்

அடுத்த நாள் அம்மாவும் அவளும் அப்பாவின் அலுவலகத்திற்கு தேடிப்போய் பார்த்தார்கள். அப்பா அங்கேயும் வரவில்லை. அப்பாவிற்கு தெரிந்த ஒவ்வொருவர் வீடாக போய் அவர்கள் விசாரித்தார்கள். அப்பா எங்கேயும் வரவேயில்லை. அம்மாவின் கோபம் அவள் மீது திரும்பியது.

ஒரு சிகரெட் வாங்கிட்டு வந்து குடுக்கிறதுல உனக்குஎன்னடி கௌரவம் குறைஞ்சி போச்சி. உங்கப்பா அதுனாலே தானே அன்னைக்கு கோவிச்சிகிட்டு போயிட்டார் என்று அவளை திட்டத்துவங்கினாள்.

அப்பா காணமல்போய் இன்றைக்கு பதினேழு வருடங்கள் ஆகின்றது. ஆனால் அப்பா ஏன் அவளை கடைசியாக சிகரெட்வாங்க அனுமதிக்கவில்லை என்று அவளால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

அப்பா என்னவாகியிருப்பார். எங்காவது சாலை விபத்தில் அடிபட்டு இறந்து போயிருப்பாரா? அல்லது ஏதாவது ஒரு ஊரில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்மு தன்னை போலவே வேறு ஒரு சிறுமிக்கு தகப்பனாகி அவளையும் சிகரெட் வாங்க வைத்துக் கொண்டிருப்பாரா? இல்லை பிச்சைகாரர்களில் ஒருவரை போல அலைந்து திரிவாரா? என்று பலநாட்கள் யோசித்திருக்கிறாள்

சாலைகளில் பேருந்து நிறுத்தங்களில் புகைபிடிக்கும் ஆண்கள் அவளது அப்பாவை நினைவுபடுத்திக் கொண்டேயிருந்தார்கள். அப்பா ஏன் அவ்வளவு மூர்க்கமாக புகைபிடித்தார். அவருக்கு ஏதாவது வேதனை இருந்திருக்குமா. என்ன வேதனை அது.

அப்பா காணாமல் போன சில வருசங்களில் அம்மா தானே உடல் நலிந்து போனாள். அவளை மாமா வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு ஹாஸ்டலில் தங்கி படிக்க துவங்கினாள் ருக்மணி. இப்போது வேலை கிடைத்து சம்பாதிக்க துவங்கிய பிறகும் அவளுக்கு ஹாஸ்டல் அறை மட்டுமே ஆறுதல் தருவதாக இருந்தது.

ஆனால் சிகரெட்டின் புகையும் மணமும் அவளுக்குள் அப்பாவின் பிம்பத்தை நாளுக்கு நாள் வலுப்படுத்திக் கொண்டேயிருந்தது. சில வேளைகளில் அதிலிருந்து மீள்வதற்காக அவள் சிகரெட்டை வாங்கிகொண்டு வந்து அறையில் இருந்த மேஜையில் போட்டு வைக்க துவங்கினாள். என்றைக்காவது அப்பா திரும்பி வந்தால் அவருக்கு இந்த சிகரெட்டுகளை புகைக்க தரலாம் இல்லையா?

அன்றைக்கும் அவள் ரயிலில் சிகரெட்டை கையில் வைத்தபடியே வந்ததை பலரும் வேடிக்கை பார்த்தார்கள். ஒவ்வொரு நாளும் இத்தனை ஆயிரம் பேர் பயணம் செய்யும் ரயிலில் ஒரு பெண் கூட சிகரெட் புகைத்து அவள் பார்த்ததேயில்லை. ஏன் புகைக்க கூடாது என்று ஏதாவது சத்தியம் செய்திருக்கிறார்களா அல்லது தடை செய்யப்பட்டிருக்கிறதா?

பொது இடங்களில் நின்றபடியே மூத்திரம் பெய்யும் ஆண்கள், பொது இடங்களில் எச்சில் துப்பும் ஆண்கள், சாலையோர கடைகளில் நின்றபடியே பஜ்ஜி தின்னும் ஆண்கள், பான்பராக் போடும் ஆண்கள், டாஸ்மார்க் கடைகளில் கூட்டம் கூட்டமாக மது அருந்தும் ஆண்கள், வாந்தியெடுத்து குப்பையில் விழுந்து கிடந்து உறங்கும் ஆண்கள், பிக்பாக்கெட் அடிக்கும் ஆண்கள், பொதுவெளியில் பெண்களை உரசி பாலின்பம் காணும் ஆண்கள் என அவள் காணும் உலகம் முழுவதும் ஆண்கள் விகாரம் வழிந்து கொண்டிருந்தது. அத்தனை ஆண்களும் புகைக்கிறார்கள். அந்த புகைகள் அடுத்த இருக்கையில் உள்ள பெண்கள் மீது, உடன்வசிக்கும் மனைவி மீது, காதலிக்கும் பெண்ணின் உதட்டிற்குள்,  அருகில் உறங்கும் குழந்தைகளின் சுவாச கோளங்களில் சென்று நிரம்புகிறது.

ஆண்கள் புகைக்கிறார்கள். அது வெறும் செயல் அல்ல, அது அவளை போன்ற துயரின் வடுமறையாத சிறுவர் சிறுமிகளை உருவாக்கும் வன்முறை. தன்னை ஆண் என்று காட்டிக் கொள்ள வைக்கும் சாதனம். சிகரெட்டை தூக்கி எறிவதை போல, எவ்விதமான எதிர்ப்பும்இன்றி அணைத்து நசுக்குவதை போல தங்களையும் நடத்த முடியும் என்ற எச்சரிக்கை.

ருக்மணி இப்படியான ஏதேதோ யோசனைகளுடன் அறைக்கு திரும்பி மேஜை டிராயரை திறந்து உள்ளே சிகரெட்டை போட்டாள். நாற்பது ஐம்பது சிகரெட்டுகளுக்கும் மேலாக இருந்தது. அதை பார்த்த போது அப்பா ஏன் கடைசியாக தன்னை சிகரெட் வாங்கிவர சொல்லவில்லை என்ற கேள்வி அவளுக்குள்  இன்றும் தீராமல் இருந்து கொண்டேயிருந்தது.

அப்பா காணாமல்  போனது முதல் அவர் முகம் அவள் நினைவிலிருந்து அழிந்து போக துவங்கியிருந்தது. இப்போது அவரது நினைவாக  மிச்சமிருப்பது சிகரெட் மட்டுமே. தன் கடந்த காலத்தின் நினைவாக மிஞ்சியிருப்பது அந்த சிகரெட்டுகள் மட்டுமே தானே என்று தோணியது.

பின்னிரவில் அவள் படுக்கையில் கிடந்தபடியே முகட்டைவெறித்து பார்த்துக் கொண்டிருந்தபோது அறையெங்கும் சிகரெட் புகை நிரம்பியிருப்பது போல தோன்றியது. அந்த மணத்தை அவள் நாசி உணர்ந்து கொண்டிருந்தது. திகைத்து போய் விழித்து  பார்த்தாள். அறையில் அவளை தவிர யாருமேயில்லை.

அத்தனை வருசங்களுக்கு அப்பாலும் அப்பாவின் சிகரெட் புகை அவளுக்குள் கரையாமல் புகைந்து கொண்டேயிருக்கிறது என்பது வருத்தம் தருவதாக இருந்தது. என்ன செய்வது என்று புரியாமல் அவள் கொஞ்ச நேரம் அழுது கொண்டிருந்தாள். பிறகு தனக்கு தானே பேசிக் கொள்ள துவங்கினாள். அப்போது சட்டென அவளும் தன்னுடைய அம்மா போலவே நடந்து கொள்வதாக தோணியது. அதை தான் அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

Gayathri:
இயல்பு
குமுதம் தீபாவளி மலரில் வெளியான குறுங்கதை.


அழைப்பு மணியின் சப்தம் கேட்டு கதவைத் திறந்தேன். வாசலில் ஒரு மனிதக்குரங்கு நின்றிருந்தது. நீல நிறத்தில் கோடு போட்ட சட்டை, தோளில் ஒரு லெதர் பேக், மெல்லிய பிரேம் உள்ள கண்ணாடி. ஒட்ட வெட்டப்பட்ட தலை. அகலமான கைகள். காலில் நைக்  ஷீ. உள்ளடங்கிய புன்னகை. சற்றே குழப்பமான நிலையில் என்ன வேண்டும் என்று கேட்டேன்.

அந்தக் குரங்கு இனிமையான குரலில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டது. தான் ஒரு விற்பனை பிரதிநிதி என்றும், கொரியத் தயாரிப்பான அதிநவீன செல்போன் விற்பதற்காகத் தான் வந்துள்ளதாக சொல்லி தயாராக கையில் வைத்திருந்த விளம்பர அறிக்கை ஒன்றை என் முன்நீட்டியது.நான் வியப்புடன் மனிதக்குரங்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அமெரிக்க உச்சரிப்புடன் கூடிய ஆங்கிலத்தில் மிக நளினமாக அது தன் விற்பனை பொருளின் மேன்மைகளைப் பற்றி எடுத்து சொல்லிக் கொண்டிருந்தது.

என் மனதிலே அது மனிதக் குரங்கு, மனிதக் குரங்கு என்ற ஒரு ஒற்றைக்குரல் ஒயாமல் எதிரொலித்தபடியே இருந்தது. என் குழப்பத்தைப் புரிந்து கொண்டது போல மெல்லிய வெட்கத்துடன் இதன் முன்பு என்னைப் போன்ற பிரதிநதிகளை நீங்கள் கண்டதில்லையா என்று ஆங்கிலத்தில் கேட்டது.

இல்லை என்று தடுமாறியபடியே சொன்னேன். விஞ்ஞான வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு நாம் நகர்ந்துவிட்டோம் என்ற உண்மையை நீங்களும் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். செயற்கை அறிவு கொண்ட ரோபேக்களை விடவும் எங்களைப் பார்த்து தான் அதிகம் பேர் வியப்படைகிறார்கள். அது ஏன் என்றே புரியவில்லை என்றது.

அப்படியெல்லாம் இல்லை. இது என்னுடைய தவறு தான் என்று தயங்கியபடியே சொன்னேன்.

தான் ஹோமேசெபியன் வகை குரங்கு என்றும் தனது மூதாதையர்களான நியான்டர்தால், குரோமகனான் பற்றி நிச்சயம் நான் அறிந்திருப்பேன் என்றபடியே தனது குடும்பம் முப்பது வருசங்களுக்கு முன்பாகவே அடர்ந்த வனத்திலிருந்து இடம்பெயர்ந்து நகரம் நோக்கி வந்துவிட்டதாகவும் தான் முறையாக பள்ளி கல்வி கற்று, நான்கு மொழிகளில் பயிற்சி பெற்றுள்ளதோடு, டெல்லி பல்கலைகழகத்திலிருந்த விற்பனையுத்திகள் குறித்த சான்றிதழ் பட்டயமும் பெற்றிருப்பதாக சொல்லியது.

நான் தயக்கத்துடன் இப்படி ஒருவரை நான் முன்பு சந்தித்ததேயில்லை என்று சொன்னேன். அது தலையசைத்தபடியே இந்த நகரில் என்னைப் போன்றவர்கள் அதிகமில்லை. ஆனால் என் நண்பர்களில் பலர் வெளிநாடுகளில் முக்கியப் பொறுப்புகளை வகிக்கிறார்கள். பேராசிரியர்களாக, விமானியாக, ஏன் ஊடக விற்பன்னர்களாக கூட பணியாற்றுகிறார்கள். அங்கே அவர்களை எவரும் பேதமாக நடத்துவதில்லை, கேலி செய்வதில்லை என்றது.

அது சரி தான் என்றபடியே அதன் கைகளை பார்த்து கொண்டிருந்தேன். அகலமான கைகள். விரல்நகங்கள் கவனமாக வெட்டப்பட்டிருந்தன. மனிதக் குரங்கு என் வீட்டில் அலங்காரத்திற்கு வைக்கப்பட்ட பொருள்களை பார்வையிட்டபடியே உங்கள் ப்ரிட்ஜில் முட்டையொன்று உடைந்து போயிருக்கிறது என்றது. அவசரமாக குளிர்சாதன பெட்டியின் கதவைத் திறந்து பார்த்தேன். நிஜம் ஒரு முட்டை உடைந்து வழிந்து போயிருந்தது,

அதை எடுத்து வெளியே வைத்தபடியே எப்படி அதற்கு தெரிந்தது என்று கேட்டேன.

மனிதக் குரங்கு சிரித்தபடியே தலைமுறை தலைமுறையாக காட்டில் தான் வாழ்ந்தோம். வாசனையை எங்கிருந்து கசிந்தாலும் அறிந்துவிட முடியும் என்றது.

என்னால் சமையலறையில் இருந்து வரும் வாசனையை கூட எது என்னவென்று பிரித்து அறிய முடியவில்லை என்றேன்.

குரங்கு சிரித்தபடியே வாசனை, சிறு சப்தம், பயம் யாவும் அடிமனதில் அப்படியே தானிருக்கிறது. இன்னும் மறையவில்லை என்றபடியே உங்கள் வீடு இருக்குமிடம் ஒரு காலத்தில் பெரிய ஏரியாக இருந்தது என்றும் அதில் எண்ணிக்கையற்ற வாத்துகள் நீந்திக் கொண்டிருந்தது என்று வாசித்திருக்கிறேன். நீங்கள் எப்போதாவது ஒரு ஏரியின் மீது உறங்குவதை போல உணர்ந்திருக்கிறீர்களா என்று கேட்டது
அந்த மனிதக் குரங்கு சொல்வது உண்மை. இந்த இடத்தில் நாற்பது வருசங்களுக்கு முன்பு வரை பெரிய ஏரியிருந்தது. அதை மூடி அந்த இடத்தில் தான் புதிய கட்டிடங்கள் கட்டினார்கள். இன்றைக்கும் இதன் நிலப்பதிவுகளில் அந்த ஏரியின் பெயர் குறிப்பிடப்படுகிறது என்று சுட்டிகாட்டினேன்.

மனிதக்குரங்கு சிரித்தபடியே மனிதர்களால் ஆகாசத்தையும் மேகங்களையும் மட்டும் தான் விலைக்கு வாங்க முடியவில்லை. நகரங்கள் அலுப்பூட்டுகின்றன. இங்கே இலைகள் உதிரும் ஒசை கேட்பதில்லை. வண்டின் சிறகொலியோ, பறவைகளின் ரெக்கையடிப்போ, தவளைகளின் புலம்பல்களோ கேட்பதேயில்லை. ஒரே வாகன இரைச்சல். உலகிலே தண்ணீரை விலைக்கு வாங்கும் ஒரே உயிரினம் மனிதர்கள் தான் என்றபடியே தனது பையில் இருந்த மாதிரி செல்போன் ஒன்றை எடுத்து பிரித்தது.

அதற்கு திருமணமாகி விட்டதா என்று கேட்டேன்.

குரங்கு சிரித்தபடியே தன்னைக் காதலிக்க இளம் பெண்கள் எவருக்கும் விருப்பமில்லை என்பதால் உறவினர்களிலே ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுவிட்டதாக சொல்லி தனது பர்ஸ திறந்து அதிலிருந்த பெண்குரங்கு ஒன்றின் புகைப்படத்தைக் காட்டியது. எனக்கு அந்த புகைப்படத்தை விடவும் பர்ஸில் வைத்திருந்த இரண்டு கிரிடிட் கார்டுகள் மற்றும் பிரபலமான கிளப் ஒன்றின் உறுப்பினர் கார்டு , வானகம் ஒட்டும் சைலன்ஸ் யாவும் கண்ணில் பட்டது.

நான் அந்த திகைப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமலே ஏன் அது விற்பனை பிரதி வேலையை த்தேர்வு செய்தது என்று கேட்டேன். இது தான் சவாலாக இருக்கிறது, ஒவ்வொரு நாளும் வாழ்க்கை எதிர்பாரமல் இருக்க வேண்டும். புதிய மனிதர்கள். புதிய சவால்கள் இல்லாத வாழ்க்கையை நினைத்து கூட என்னால் பார்க்க முடியவில்லை. மனிதர்கள் அலுப்பூட்டும் வேலைகளில் தங்கள் வாழ்க்கை முழுவதையும் அர்பணித்து கொள்கிறார்கள். அது என்னால் ஒரு போதும் இயலாது. அந்தந்த நிமிசத்தில் வாழ வேண்டும் அப்படி நம்மால் இயலாமல் போவதற்கு காரணம் நம் நினைவுகள் தான் என்கிறார் ஜே. கிருஷ்ணமூர்த்தி. அது சரியென்றே தோன்றுகிறது என்றது.

நான் திகைப்போடு ஜே.கிருஷ்ணமூர்த்தி படித்திருக்கிறதா என்று கேட்டேன். தனக்கு கிருஷ்ணமூர்த்தியை பிடிக்கும் என்றதோடு டேவிட் போம் என்ற இயற்பியல் அறிஞருடன் ஜேகே காலத்தின் முடிவின்மை பற்றி நிகழ்த்திய உரையாடல் அற்புதமானது என்று சொல்லி வியந்தபடியே தனக்கு குடிப்பதற்கு கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா என்று மிக அன்புடன் கேட்டது.

நான் பிரிட்ஜில் இருந்த குளிர்ந்த தண்ணீரை எடுத்து வந்து தந்த போது உதட்டிலிருந்து ஒரு சொட்டு தண்ணீர் வெளியே சிந்திவிடாமல் அது கவனமாக குடித்துவிட்டு தன்னுடைய பேண்ட் பாக்கெட்டில் இருந்து வெண்ணிற கைக்குட்டையை எடுத்து உதட்டை துடைத்து கொண்டது. பிறகு தன்னியல்பாக புதியரக செல்போன்களின் சாத்தியபாடுகளை விளக்கி சொல்ல துவங்கியது.

அரை மணிநேர பேச்சிற்கு பிறகு நான் அதனிடமிருந்து ஒரு புதிய போனை வாங்கிக் கொள்வது என்று முடிவானது. தன் தோளில் தொங்கிக் கொண்டிருந்த லெதர் பையை எடுத்து அதிலிருந்த பில் புத்தகத்தில் என் பெயர் விலாசம் மற்றும் சுயவிபரக்குறிப்புகளை எழுதிக் கொண்டிருந்தது.

நான் அந்த தோள்பையினுள் பார்த்து கொண்டிருந்தேன். ஒரு புத்தகம், இசைகேட்பதற்கான சிறிய ஐபேடு. ஒரு பிஸ்கட் பாக்கெட் மற்றும் சிறிய வாசனை திரவியப்புட்டி காணப்பட்டது.

அழகான கையெழுத்துடன் சுயவிபரங்களை பூர்த்தி செய்து கொண்டிருந்த குரங்கு பையிலிருந்த புத்தகத்தை நான் கவனிப்பதை அறிந்து அதை எடுத்து என்னிடம் நீட்டியபடியே இது நீட்சே.. மிக முக்கியமான சிந்தனாவாதி. சோர்வுறும் போது அடிக்கடி இதை வாசிப்பேன்என்று சொல்லி சிரித்தபடியே படிவத்தில் என்னிடம் கையெழுத்து கேட்டது.
நான் கையொப்பமிட்டபடியே காசோலை ஒன்றினை தந்தேன். மிகுந்த அன்புடன் நன்றிதெரிவித்துவிட்டு தங்கள் கம்பெனி எனக்குரிய புதிய செல்போனை தபாலில் அனுப்பி வைக்கும் என்றபடியே என்னிடமிருந்து விடைபெற்று போனது.

மனிதர்களிடம் கூட காணமுடியாத ஒழுங்கும் அன்பும் மிருதுவான பேச்சும் கொண்டிருந்த அந்த குரங்கை வியந்தபடியே இருந்தேன்.

மின்சாரம் தடைபட்டு இருந்ததால் லிப்ட் வேலை செய்யவில்லை போலும் எரிச்சலும் அலுப்புமாக மனிதகுரங்கு லிப்டின்பொத்தான்களை  அமுக்கியபடியே நின்றிருப்பது தெரிந்தது. நான் ஜன்னல் வழியாக பார்த்து கொண்டிருந்தேன். மனித குரங்கு லிப்டை வெறித்து பார்த்தபடியே ஆத்திரத்துடன் முணுமுணுத்தது. 

மசிரானுங்க. இவங்க ஒவ்வொருத்தரையும் உருவி உருவி செல்போன் விற்கிறதுக்குல்லே நாக்கு தள்ளி போயிருது. இதுல கரண்ட் மசிரு வேற வேலை செய்யலை என்று ஆத்திரத்துடன் சொல்லியபடியே லிப்டிலிருந்து விலகி நடந்து அங்குமிங்கும் பார்த்தது,
எவரும் தன்னை கவனிக்கவில்லை என்று உணர்ந்த மறுநிமிசம் எனது வீடிருந்த பனிரெண்டாவது தளத்திலிருந்து ஒரே தாவாக வெளியில் தாவி பூமியை நோக்கி குதித்து எதுவும் நடக்காதது போல தன் பைக்கை எடுத்துக் கொண்டு சாலையை நோக்கி போய்க் கொண்டிருந்தது.

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Go to full version