தமிழ்ப் பூங்கா > நாவல்கள்

எஸ். ராமகிருஷ்ணன்

<< < (6/6)

Gayathri:
பிழை திருத்துபவரின் மனைவி
சிறுகதை

அவளுக்கு அச்சடிக்கப்பட்ட காகிதங்களைப் பிடிக்காமல் போய் பலவருடங்களாகி விட்டது. குளியல் அறை சுவர்களில் ஒளிந்து திரியும் கரப்பான் பூச்சிகளை விடவும் காகிதங்கள் மிகுந்த அசூயை தருவதாகி விட்டன. சில வேளைகளில் அவள் தன் ஆத்திரம் அடங்குமட்டும் காகிதங்களை கிழித்துப் போடுவாள். காகிதங்கள் ஒரு போதும் எதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. கரப்பான் பூச்சி போல சிதறியோடவோ, மீசையைத் துண்டித்து கொண்டு தப்பிக் கொள்வதற்கோ காகிதங்கள் முயற்சிப்பதேயில்லை.

காகிதங்கள் கிழிக்கபடும்  போது மெல்லிய ஒசை தருகிறதேயன்றி வேறு எதிர்ப்பு குரல் எதையும் வெளிப்படுத்துதில்லை. அதைக் கூட அவளால் சகித்து கொள்ள முடிவதில்லை. இதற்காக அவள் காகிதங்களை நீரில் ஊற விட்டுவிடுவாள். அவள் வரையில் அது தான் காகிதங்களுக்குத் தரப்படும் மிக மோசமான தண்டனை. சமையல் செய்யும் போது இரும்பு வாளியில் உள்ள தண்ணீரில் காகிதத்தைப் போட்டுவிட்டால் மாலை பார்க்கும் போது அது கரைந்து துகள் துகளாக மிதந்து தண்ணீரில் கலந்து போயிருக்கும்.

காகிதங்களில் கரையும் போது அதில் அச்சடிக்கப்பட்ட வாசகங்கள் எங்கே போய்விடுகின்றன. அந்த வார்த்தைகள்  உப்புத் தண்ணீருக்குள்  கரைந்து போய்விடுவதை போல கண்ணுக்குத் தெரியாமல் கரைந்து போயிருக்குமா?  அவள் வாளித் தண்ணீரை வெறித்துப் பார்த்து கொண்டிருப்பாள். சில நேரம் யோசிக்கும் போது வியப்பாக இருக்கும்.

காகிதங்களுக்கும் வார்த்தைகளுக்குள் உள்ள உறவு எத்தகையது. காகிதங்கள் தன் மீது எழுதப்படும் வரிகளுக்கு சம்மதம் தருகிறதா என்ன? காகிதங்களுக்கும் அதில் பதிந்துள்ள சொற்களுக்கும் நடுவில் இடைவெளியிருக்கிறதா? இப்படி யோசிக்க துவங்கியதும் நான் ஏன் இது போன்ற வீண் யோசனைகளை வளர்த்து கொண்டு போகிறேன் என்று அவள் மீதே அவளுக்கு ஆத்திரமாக வரும்.

அவள் வீட்டில் அச்சடிக்கப்பட்ட காகிதங்கள் நிரம்பியிருக்கின்றன. அவள் தனது பதினேழாவது வயதில் மந்திர மூர்த்தியை திருமணம் செய்து கொண்டு சென்னைக்கு வரும் வரை பாடப்புத்தங்களைத் தவிர வேறு எதையும் கண்டதேயில்லை. அதுவும் அவளது ஊரில் பெண்கள்  உயர்நிலைப் பள்ளி  இல்லை என்பதால் ஐந்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்திக் கொண்டு விட்டாள்.

ஆறேழு வருடங்கள் அவள் தீப்பெட்டி ஒட்டும் வேலை, ரப்பர்கொட்டை உடைக்கும் வேலைக்கும் போய் கொண்டிருந்தாள். தீப்பெட்டி ஆபீஸில் ரேடியோ இருந்தது. அதில் ஒலிபரப்பாகும் சினிமாப் பாட்டுகள் அவளுக்கு ரொம்பவும் பிடிக்கும். அந்த நாட்களில் சீட்டு போட்டு ஒரு ரேடியோவைச் சொந்தமாக வாங்கி விடுவதற்கு அவள் ரொம்பவும் ஆசைப்பட்டாள். ஆனால் ஒவ்வொரு முறை சீட்டு எடுக்கும் போதும் ஏதாவது ஒரு செலவு வந்து சேர்ந்துவிடும். இதனால் அவள் திருமணத்தின் போது கட்டயாம் ஒரு ரேடியோ வாங்கித் தர வேண்டும் என்று வற்புறுத்தி வாங்கிக் கொண்டுவிட்டாள். ஆனால் மந்திரமூர்த்திக்கு ரேடியோ கேட்பது பிடிக்காது என்பதால் அது எப்போதுமே அணைத்து வைக்கபட்டேயிருந்தது.

திருமணமாகி சென்னைக்கு வந்த சமயத்தில் அவளுக்கு மந்திரமூர்த்தியைக் காணப் பயமாக இருக்கும். அவர் அப்போது ராயல் பதிப்பகத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அவரது பையில் ஒரு பென்சிலும் அழி ரப்பரும் எப்போதுமிருக்கும். சில நேரம் சிவப்பு மை பேனா வைத்திருப்பதை கூட கண்டிருக்கிறாள்.

அவளுக்குப் பிழை திருத்தம் செய்வது என்பதைப் பற்றி எதுவுமே தெரியாது. எப்போதாவது இரவில் மந்திரமூர்த்தி தரையில் தலையணை போட்டு படுத்தபடியே காகிதங்களில் பென்சிலால் சுழிக்கும் போது அவள் கவனமாக பார்த்து கொண்டேயிருப்பாள். அவர் தனக்குத் தானே பேசிக் கொண்டிருப்பது போலவே இருக்கும். சில நேரங்களில் அவர் சப்தமாகச் சிரிப்பது கூட கேட்கும். பின்னிரவு வரை அவர் பிழைத் திருத்தம் செய்து கொண்டிருப்பார். பிறகு எழுந்து பின்கதவைத் திறந்து கொண்டு வெளியே போய் மூத்திரம் பெய்து விட்டு உள்ளே வந்து படுத்துக் கொள்வார்

அவளது உடலில் அவரது விரல்கள் ஊரும் போது பிழை திருத்தம் செய்வது தேவையில்லாமல் நினைவிற்கு வரும். அவர் காமத்தில் பெரிய நாட்டம் கொண்டவரில்லை. அதை ஒரு சம்பிரதாயம் போல ஈடுபடுவதும், உடல் வியர்த்து போனதும் முகம் திருப்பிக் கொண்டு உறங்கி விடுவதும் அவளுக்கு எரிச்சல் ஊட்டுவதாகயிருக்கும். உறக்கத்தில் கூட சில நேரம் அவரது விரல்கள் அசைந்தபடி இருப்பதையும் முகம் இறுக்கமடைந்திருப்பதையும் அவள் கண்டிருக்கிறாள்.

மந்திரமூர்த்தி யாரோடும் பேசுவது கிடையாது. அவர் காலை ஆறுமணிக்கெல்லாம் பிழை திருத்தத் துவங்கிவிடுவார். திருத்திய காகிதங்களுடன் வீட்டை விட்டு அவர் வெளியேறி செல்லும் போது அவரது மஞ்சள் பையில் திருத்திய பிரதிகளும் மதிய உணவுமிருக்கும். அவரது அலுவலகம் ராயப்பேட்டைப் பகுதியில் இருந்தது.

அவருக்கென்று நண்பர்களோ தெரிந்தவர்களோ எவருமோயில்லை. வெளியிலும் அவர் போவது கிடையாது. அவருக்கு இருந்த ஒரே பழக்கம் வெற்றிலை போடுவது. அதற்காக சிறிய லெதர் பை ஒன்றை வைத்திருந்தார். அந்த பையில் இருந்து பத்து நிமிசத்திற்கு ஒரு முறை இரண்டுவெற்றிலைகளைக் கிள்ளி வாயில் போட்டுக் கொள்வார்.

ஒரு முறை அவளை தான் வேலை செய்யும் அச்சகத்தில் நடைபெற்ற விழாவிற்காக அழைத்துப் போயிருந்தார்.  அங்கே மிகப்பெரிய இயந்திரம் ஒன்றில் காகிதம் உருளையாக சுற்றப்பட்டிருப்பதையும் அந்தக் காகித உருளையிலிருந்து வெங்காயத்தில் தோல் உரிக்க உரிக்க வந்து கொண்டிருப்பது போல காகிதம் வழிந்து கொண்டேயிருப்பதையும் அவள் மிரட்சியோடு பார்த்து கொண்டிருந்தாள்.

அந்தக் காகித உருளை முழுவதும் அச்சடிக்கபட்டுவிடும். அத்தனையும் அவர் தான் பிழைத் திருத்தம் செய்ய வேண்டுமில்லையா? அவள் தன் கணவரிடம் அதைப்பற்றி கேட்டதும் அசட்டுதனமாக உளறாதே என்றபடியே அவர் பைண்டிங் செய்யும் பகுதிக்குச் சுற்றி காட்ட அழைத்து சென்றார்

அவள் வயதில் நாலைந்து பெண்கள் காகிதங்களை வரிசை வரிசையாக அடுக்கி ஒட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்று கேட்டாள். மந்திரமூர்த்தி பதில் சொல்லாமல் அது நமக்கு சரிப்படாது என்றார். அச்சகத்தின் கடைசில் இருந்த கழிப்பறைக்கு அவள் போகும் போது வழியில் தரையில் காகிதங்கள் சிதறி கிடந்தன. அதன் மீது யாவரும் மிதித்து நடந்து போய் கொண்டிருந்தார்கள்.

தென்பக்கமாக ஒரு சிறிய இரும்புக் கதவு திறந்து கிடப்பதைக் கண்டாள். உள்ளே எட்டிப்பார்த்த போது கழித்து போட்ட உபயோகமற்ற காகிதங்கள் ஒரு அறை முழுவதும் நிரம்பியிருந்தன. அவளுக்கு பயமாக இருந்தது. நீருற்று பொங்குவதை போல காகிதங்கள் பொங்கி வழிந்து கொண்டிருக்கிறதா? இந்த காகிதங்கள் எல்லாம் எங்கே போய்சேரும்?  அவள் கழிப்பறைக்கு போனபிறகும் அந்த யோசனையில் இருந்து விடுபட முடியாமலிருந்தாள்.

அந்த அச்சகத்தில் அவளது கணவன் ஒரு ஆள் மட்டுமே பிழை திருத்துபவராக இருந்தார் என்பது ஏன் என்று அவளுக்கு புரியவேயில்லை. ஒரு நாள் மந்திர மூர்த்தி பிழை திருத்தி வைத்திருந்த காகிதங்களை அவருக்குத் தெரியாமல் எடுத்துப் பார்த்தாள். அநேகமாக வரிக்கு வரி தவறுகள் அடையாளம் காணப்பட்டு அதைச் சுற்றி ஒரு வட்டம் போடப்பட்டும் அடித்து மாற்றியும் இருந்தன.

அவளுக்கு அந்தக் காகிதத்தை பார்க்கும் போது ஏதோ குழந்தை விளையாட்டு போலத் தோணியது. சில வேளைகளில் மந்திரமூர்த்தி எல்லா எழுத்தாளர்களை விடவும் மிகப்பெரிய அறிவாளி போன்று தோன்றினார். ஒரு வேளை தான் அவரைப் புரிந்துகொள்ளவில்லையோ என்று கூட அவளுக்கு தோணியது. அவள் பயத்தோடு அந்த காகிதத்தை அதே இடத்தில் வைத்துவிட்டு அவருக்கு சாப்பாடு வைத்தாள்.

மந்திரமூர்த்தியின் கண்களில் பிழைகள் எத்தனை சிறியதாக இருந்தாலும் எப்படியோ பட்டு விடுகிறது. இந்த குணம் அவருக்கு காகிதங்களோடு மட்டும் இருக்கிறதா இல்லை தன்னையும் அவர் இது போன்று நுணுக்கிப் பார்த்து கொண்டுதானிருக்கிறாரோ? ஆரம்ப நாட்களில் அவள் மாலை நேரங்களில் வீட்டு வாசல் படியில் வந்து உட்கார்ந்து கொண்டு தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பாள்.

வீடு திரும்பும் மந்திர மூர்த்தியின் முகம் அதைக் கண்டதுமே கடுமையடைவதை அவள் கண்டிருக்கிறாள். வீடு வந்து சேர்ந்ததும் அவர் தனது பிழைத் திருத்தும் காகிதங்களை எடுத்து வைத்துக் கொள்வார். அவள் தரும் காபியோ, காரத்தையோ அவர் எப்போது சாப்பிடுகிறார் என்று கூட தெரியாது. ஏன் அவர் இப்படி எழுத்துக்களுக்குள் தன்னை முடக்கிக் கொண்டுவிட்டார் என்று குழப்பமாக இருக்கும்.

மந்திரமூர்த்திக்கு உணவில் கூட அதிக கவனமிருப்பதில்லை. ஈர வேஷ்டியை கூட சில நேரங்களில் அணிந்து கொண்டு புறப்பட்டு போகின்றவராகயிருந்தார்.  எப்போதாது அவள் தயக்கத்துடன் அவர் வேறு வேலை ஏதாவது பார்க்க கூடாதா என்று கேட்கும் போது அவர் முறைத்தபடியே இந்த வேலையில் என்ன பிரச்சனை என்று கேட்பார். அவளால் விளக்கி சொல்ல முடியாது.

மந்திரமூர்த்தி அச்சகத்திற்கு செல்லாமல் ஒரு நாளும் இருந்ததே கிடையாது. அவள் உடல் நலமற்று கிடந்த நாட்களில் கூட கஞ்சி வைத்துக் கொடுத்துவிட்டு அவர் அச்சகத்திற்கு கிளம்பி போய்விடுவார். பாயில் கிடந்தபடியே அவள் பல்லைகடித்து கொண்டுகிடப்பாள். எதற்காக இதை போன்ற ஒருவரை தான் திருமணம் செய்து கொண்டோம். ஒரு எழுத்து மாறி போகின்றதைப் பற்றி கவலைப்படும் ஒரு நபர் தன்னை ஏன் கவனிக்க மறந்து போகிறார் என்று ஆத்திரமாக வரும்.

மந்திரமூர்த்தி அதைப் பற்றி யோசிப்பதேயில்லை. எப்போதாவது அவராக சினிமாவிற்கு போய்வரலாம் என்று சொல்வார். அது போன்ற நேரங்களில் அவள் அவசரமாக புடவையை மாற்றிக் கொண்டு வெளியே வருவாள். திரையரங்கத்தின் வாசலில் நின்றபடியே போஸ்டர்களில் உள்ள எழுத்துக்களை, வேர்கடைலை மடித்து தரும் காகிதங்களை கூட அவர் உன்னிப்பாகக் கவனிப்பதையும் அவரது உதடுகள் தவறுகளை முணுமுணுப்பதையும் அவளால் கேட்க முடிந்திருக்கிறது.

சினிமா தியேட்டரில் அவர் சிரித்து அவள் கண்டதேயில்லை. எப்போதும் தீராத யோசனையுடன் அவரது முகம் உறைந்து போயிருக்கும். சினிமா முடிந்த மறுநிமிசமே வீடு திரும்பிவிட வேண்டும் என்பதில் அவருக்கு  மிகுந்த பதட்டமாக இருக்கும். சினிமா பார்த்த வந்த இரவுகளில் அவர் அவளோடு உறவு கொள்வது கிடையாது என்பது ஏன் என அவளால் புரிந்து கொள்ளவே முடியவில்லை

அவர்களுக்கு திருமணமாகி பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டிருந்தது. இப்போது வரை குழந்தைகளில்லை. அவள் தனியாகவே வீட்டிலிருந்து பழகி விட்டிருந்தாள். எப்போதாவது அவளாக ஒரு எலுமிச்சைபழத்தை கையில் எடுத்துக் கொண்டு நடந்தே தட்சணாமூர்த்தியை தரிசிப்பதற்காகச் சென்று வருவாள்.

அது போன்ற நேரங்களில் அவள் கடவுளிடம் என்ன வேண்டுவது என்பது கூட  அவளுக்கு மறந்து போயிருந்தது. சில நேரங்களில் சன்னதியின் முன்பாக நின்று கொண்டு கடவுளை வெறித்துப் பார்த்து கொண்டிருப்பாள். ஆத்திரமாகும் நாட்களில் அச்சடிக்கப்பட்ட காகிதங்கள் யாவும் உலகிலிருந்து ஒழிந்து போய்விட வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்வாள். அவளது கோபம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்து பென்சில்களின் மீது. ரப்பரின் மீது என நீண்டு கொண்டே போனது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் பகலில் என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டில் இருந்த காகிதங்கள் ஒவ்வொன்றாக எடுத்துக் கிழித்தபடியே இருந்தாள். மாலையில் வீடு திரும்பிய மந்திர மூர்த்தி காகிதங்கள் இறைந்து கிடந்த அறையை  கண்டதும் சற்றே கோபமான குரலில் தங்கம்மா.. உனக்கு பேப்பரை கிழிக்க ஆசையிருந்தால் குப்பை தொட்டிக்கு போ .அங்கே நிறைய கிடக்கும். இன்னொரு தடவை இது போல செய்யாதே என்றபடியே அவர் தனது மேஜையில் உட்கார்ந்து கொண்டு பையில் இருந்த காகிதங்களை பிழை திருத்தம் செய்ய துவங்கினார்.

அவள் சப்தமாகக் கத்தி அழுதாள். அந்த சப்தம் அவருக்கு கேட்டதாகவே தெரியவில்லை. அவர் திருத்திய காகிதங்களைத் தனியாக எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். அன்றிரவு அவள் உறங்கவேயில்லை. அவளுக்குக் காகிதங்களில் இருந்து சொற்கள் உதிர்ந்து விழுவது போன்றும் அவளது கையில், கால்களில், உடல்களில் சொற்கள் ஒட்டிக் கொண்டு இருப்பது போன்றும் தோன்றியது.

அதன் பிறகு அவளை மருத்துவரிடம் அழைத்து போனார் மந்திரமூர்த்தி. அவள் கலக்கத்துடன் தனக்குப் பயமாக இருப்பதாகச் சொன்னாள். ஒருவார காலம் உறங்குவதற்கு மாத்திரைகள் தந்து அனுப்பினார் மருத்துவர். கண்களை அழுத்தும் உறக்கத்தின் ஊடாக கூட ஒரு நிழலைப் போல அவர் பிழைத் திருத்திக் கொண்டிருப்பது அவளுக்கு தெரியும். அழுவதற்கு கூட முடியாமல் அவள் உறங்கி போய்விடுவாள்.

ஒரு ஆண்டுகாலம் அவளைச் சொஸ்தப்படுத்துவதற்காக வாரம் தோறும் பொதுமருத்துவமனைக்கு அழைத்துப் போகும்படியான சூழ்நிலை உருவானது. அவள் மௌனமாகத் தெருவில் நடந்து வருவாள். மருத்துவமனை வரும் வரை அவர் எதுவும் பேசிக் கொள்ளவே மாட்டார். புறநோயாளிகள் பிரிவில் அவளை உட்கார வைத்துவிட்டு அவர் எதிரில் இருந்த வாகை மரத்தை வெறித்துப் பார்த்தபடியிருப்பார்.

வெள்ளை, மஞ்சள் நிற மாத்திரைகள் சகிதமாக அவர்கள் வீடு திரும்பிய மறுநிமிசம் அவர் தனது அச்சகத்திற்கு புறப்பட்டு போய்விடுவார். மாத்திரைகளில் கூட ஏதோ பெயர்கள் அச்சடிக்கபட்டிருக்கின்றன. அந்த பெயர்கள் பிழை திருத்தப்பட்டதா இல்லை திருத்தபடாததா என்ற உற்று பார்த்து கொண்டிருப்பாள். மாத்திரைகள் வயிற்றில் கரைந்து போகும் போது இந்த பெயர்களும் தனக்குள் கரைந்து போய்விடும் இல்லையா என்று யோசனை எழும். அவள் கண்களை மூடிக் கொண்டு மாத்திரையை விழுங்குவாள்.

காகிதங்கள் மெல்ல அவளுக்கு வெறுப்பையும் கோபத்தையும் வளர்த்து கொண்டேயிருந்தன.  உலகில் உள்ள எல்லா அச்சு எழுத்துக்களையும் அழித்துவிட விரும்பியது போல அவள் ஆவேசப்படத் துவங்கினாள். இதற்காக அவரோடு பேசுவதையும் அவள் தவிர்த்து வந்தாள். எப்போதாவது அவர் தண்ணீர் கேட்கும் போது கூட அவள் அந்த சொல்லைக் கேட்டதேயில்லை என்பது போல அவரைப் பார்த்தபடியே இருப்பாள். அவராக எழுந்து தண்ணீர் குடித்துவிட்டு வந்து உட்கார்ந்து கொள்வார்

இரவுகளில் உறங்க மனதற்கு அவள் பாயில் உட்கார்ந்துகொண்டேயிருப்பதை அவர் கவனித்த போது கூட தன் வேலையை நிறுத்த மாட்டார். ஒரு நாள் அவள் அவரது முதுகின் பின்னால் வந்து நின்றபடியே அவரது வேலையைக் கவனிக்க துவங்கினாள். ஆவேசமாக மிருகம் ஒன்று தனது இரையை வேட்டையாடுவதை போல அவர் சொற்களை தன் கையில் உள்ள பென்சிலால் அடித்தும் திருத்தியும் மாற்றிக் கொண்டேயிருந்தார்.

அவள் ஆத்திரத்துடன் கேட்டாள்

காகிதத்தில் அப்படி என்னதானிருக்கிறது ?

அவர் திரும்பி பார்க்காமலே எனக்குத் தெரியவில்லை என்றார். அவள் காகிதங்களை உற்றுப் பார்த்தபோது வார்த்தைகள் உடைந்தும் விலகியும் தனியே நடனமாடுவது போலிருந்தது. திடீரென அவரை கட்டிக் கொண்டு அழுத்துவங்கினாள். அவரது கையில் இருந்த பென்சில் தவறி கிழே விழுந்து முனை உடைந்தது.

அவர்  அவளது கைகளை விலக்கி விட்டுக் கிழே கிடந்த  பென்சிலை எடுத்து மிக கவனமாகச் சீவத் துவங்கினார். அவர் முன்பு ஆயிரம் பக்க புத்தகம் ஒன்று பிழைத் திருத்தத்திற்காக காத்துக் கொண்டிருந்தது. தங்கம்மாளின் அழுகை வீடெங்கும் கரைந்து ஒடிக்கொண்டிருந்தது.

***

-உயிர்மை இதழில் வெளியானது.

Gayathri:
வெறும் பிரார்த்தனை
சிறுகதை

அவர்கள் பழனிக்கு வந்து சேர்ந்த போது மணி மூன்றரையாகியிருந்தது,

வரும் வழியில் சாலையோர உணவகத்தில் பேருந்து நிறுத்தப்பட்ட போது அங்கேயே மதியசாப்பாட்டினை சாப்பிட்டு விடலாம் என்று அம்மா சொன்னாள்

ஆனால் அப்பா  பழனிக்கு போனதும் சாப்பிடுவோம் என்று மறுத்துவிட்டார்,

ரமா மட்டும் எனக்கு பசிக்கு, இன்னும் எவ்வளவு தூரம்மா இருக்கு என்று ஆதங்கத்துடன் கேட்டாள்,

“அரைமணி நேரத்தில் போயிருவோம், நீ வேணும்னா ஒரு கொய்யாபழம் வாஙகி தின்னு“ என்று சொன்னாள் அம்மா.

ரமாவால் பசி தாங்கமுடியாது, அவள் தினசரியும் பள்ளியில் மதியம் பனிரெண்டரை மணிக்கே சாப்பிட்டுவிடுகின்றவள், ஆனால் இன்றைக்கு லீவு போட்டு இருப்பதால் அந்த நேரமானவுடன் அவளுக்கு பசிக்க ஆரம்பித்திருக்க கூடும்,

அப்பா நேற்றிரவு திடீரென்று தான் சாமி கும்பிட பழனிக்கு போக வேண்டும் என்று சொன்னார், காதம்பரிக்கு தான் வேலை செய்யும் பார்மசியில் எப்படி லீவு கேட்பது என்பது தயக்கமாக இருந்தது, ஏற்கனவே இந்த மாசத்தில் இரண்டு நாள் லீவு போட்டுவிட்டாள், இதற்கு மேல் லீவு கேட்டால் பார்மசி ஒனர் சபாபதி கேவலமாகத் திட்டுவார், மீறி லீவு போட்டால் சம்பளத்தைப் பிடித்துக் கொண்டுவிடுவார், அவளது ஒருநாள் சம்பளம் நூற்றுபத்து ரூபாய், அதை எப்படி இழப்பது, தயக்கத்துடன் தான் கோவிலுக்கு வரவில்லை என்று காதம்பரி சொன்னாள்,

“நீ வேலைக்கு போயி சம்பாதிச்ச மசிரு போதும், காலையில நாம பழனிக்கு போறோம், நீ வர்றே, காலைல ஆறுமணி பஸ்ஸை பிடிச்சா தான் வெயில் ஏறுறதுக்குள்ளே கோவிலுக்கு போக முடியும், “ என்று அப்பா கோபத்துடன் சொன்னார்,

மறுத்து பேசினால் அப்பாவின் கோபம் உக்கிரமாகிவிடும், தன்னோடு வேலை செய்யும் விநோதினியைப் பார்த்து யாராவது உறவினர் செத்து போய்விட்டார்கள் என லீவு சொல்லிவிட வேண்டியது தான், என்று முடிவு செய்து கொண்டாள்,

எதற்காக இப்போது உடனே பழனி கோவிலுக்கு போக வேண்டும் என்று யாரும் கேட்டுக் கொள்ளவில்லை, அப்பாவின் குணமே அப்படித்தான், திடீரென்று தனக்கு மனசு சரியில்லை, எல்லோரும் உடனே கிளம்புங்க என்று அவர்களை திருப்பரங்குன்றத்திற்கோ, திருச்செந்தூருக்கோ கூட்டிக் கொண்டு போவார், அப்படி கோவிலுக்குப் போய்வருவதற்காக யாரிடமாவது ரெண்டாயிரம் கடன் வாங்குவார், பின்பு அதற்கு வட்டி கொடுக்கமுடியவில்லை என்று குடித்துவிட்டு வந்து அம்மாவை கண்டபடி ஏசுவார், கடன்தொல்லை கழுத்தை நெருக்கும் போது உடனே ஏதாவது ஒரு கோவிலுக்கு கிளம்பிவிடுவார், இன்றைக்கும் அப்படித்தான் நடந்தது,

விடிகாலை ஐந்து மணிக்கெல்லாம் அம்மா எழுந்து குளித்துவிட்டு காதம்பரியை எழுப்பி குளிக்கச் சொன்னாள், டீ போட்டுக் கொண்டு அப்பாவை எழுப்ப முயன்ற போது அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார், அம்மா அவரது முதுகை தொட்டு எழுப்ப முயன்ற போது கைகளை தள்ளிவிட்டு சும்மாபோடி நாயே என்று கத்தினார், ஒருவேளை கோவிலுக்குப் போக வேண்டும் என்பதே மறந்து போய்விட்டதோ,

அம்மா டீயை அவரது படுக்கையில் அருகில் வைத்துவிட்டு  பாயில் உருண்டுகிடந்த ரமாவை எழுப்பிவிட்டாள்,  காதம்பரியும் ரமாவும் ஜடை பின்னிமுடித்த போது காலை விடிந்து நல்ல வெளிச்சம் வந்திருந்த்து.

அப்பொழுதும் அப்பா போதையில் உறங்கிக் கொண்டுதானிருந்தார், அவரது முகத்தில் எச்சில் வழிந்து காய்ந்திருந்தது, மயிர் வளர்ந்த அவரது பருத்த தொப்பை சீரற்று ஏறி இறங்கிக் கொண்டிருந்தது, அப்பாவின் கைகளைப் பிடித்து இழுத்து எழுப்பினாள் ரமா

“யப்பா, கோவிலுக்கு நேரமாச்சி எந்திரிங்க“

ம், ம் என்று மட்டும் ஒலி வந்தது, அவர் எழுந்து கொள்ளவில்லை, அவள் சோர்ந்து போனவளா தண்ணி ஊத்தி எழுப்பிவிடவா என்று அம்மாவிடம்  கேட்டாள்,

“வேணாம், கத்துவாரு, அவரா எந்திரிக்கட்டும்“

என்றபடியே அம்மா சட்னி அரைப்பதற்கு தேங்காய் உடைக்க ஆரம்பித்தாள், காதம்பரி தனக்குப் பிடித்தமான ரோஸ்கலர் சுடிதாரை அணிந்து கொண்டு கண்ணாடியில் முகம் பார்த்துக் கொண்டாள், இந்த சுடிதார் எடுப்பாக இல்லை, லேஸ் வைத்து கறுப்பில் ஒரு சுடிதார் எடுக்க வேண்டும், எப்படியும் அதற்கு ஆயிரம் ரூபா வேணும் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாள், அம்மா சட்னி அரைத்து முடித்து அவர்கள் சாப்பிட்டுவிட்டு அப்பா எழுந்து கொள்வதற்காக காத்துக் கொண்டேயிருந்தார்கள், ரமா அலுப்பானவள் போல தான் பள்ளிக்கு கிளம்புவதாக சொன்னாள்.

“உங்கப்பா எந்திரிச்சா என்னை திட்டுவார்“ என்று அம்மா அவளை தடுத்துவிட்டாள்

அப்பா தூக்கத்தில் இருந்து எழுந்து கொண்ட போது மணி பத்தரையாகியிருந்த்து, அவர் எழுந்து தேநீர் குடித்துவிட்டு  அவர்களை விசித்திரமாக பார்த்தபடியே மெதுவாக குளித்து, டிபன்சாப்பிட்டுவிட்டு, சந்தன கலர் கோடு போட்ட சட்டையை போட்டுக் கொண்டார், அவர்கள் வீட்டுக்கதவை பூட்டிக் கொண்டு கிளம்பிய போது வெயில் ஏறியிருந்தது,

பேருந்து நிலையம் வரை ஆட்டோவில் போகலாம் என்றாள் ரமா, அப்பா அதை கேட்டுக் கொள்ளவேயில்லை, வீட்டிலிருந்து நடந்தே அவர்கள் பேருந்து நிலையத்திற்கு போனார்கள், ரமா முகம் சுண்டிப்போனவளாக, வெயிலின் அசதி மேலிட மெதுவாக நடந்து வந்தாள்,

பேருந்தில் கூட்டம் நிரம்பி வழிந்த்து, அப்பாவிற்கு தெரிந்த பஸ் டிரைவர் என்பதால் அப்பா டிரைவர் சீட்டுவழியாக ஏறி உள்ளே போய் சீட்டு பிடித்தார், மூன்று பேர் உட்காரும் சீட்டில் அவர்கள் நால்வரும் நெருக்கடித்து உட்கார்ந்து கொண்டார்கள், வெக்கையில் பேருந்தினுள் இருக்க முடியவில்லை, வியர்த்து வழிந்தது. அப்பா திடீரென ஏதோ யோசனை வந்தவரை போல கூட்டத்தை விலக்கி கொண்டு கிழே இறங்கிப் போனார்,

ஒரு வயதான பெண் நிற்கமுடியாமல் அப்பா உட்கார்ந்திருந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டாள், அப்பா அருகில் உள்ள பெட்டிகடையில் போய் ஒரு சிகரெட் வாங்கி பற்றவைத்து புகைக்க ஆரம்பித்திருந்தார், பேருந்து கிளம்புவதற்காக ஹார்ன் அடிக்கும்வரை அப்பா வரவில்லை, ரமா ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டி அப்பா , வாங்க, பஸ் கிளம்புது எனறு கத்தினாள்,

அப்பா சாவகாசமாக பேருந்தை நோக்கி வந்து மறுபடியும் டிரைவர் சீட் வழியாகவே உள்ளே வந்தார், அப்படி அவர் ஏறிவருவதை பேருந்தே பார்த்துக் கொண்டிருந்த்து, தனது சீட்டில் உட்கார்ந்திருந்த கிழவியை எழுந்து நிற்கும்படியாக அப்பா திட்டினார்

அந்த பெண் தனக்கு கால்வலி தாங்கமுடியலை என்றாள், கோபம் அம்மா மீது திரும்பியது

“அறிவு கெட்ட நாயி, மனுஷன் கூட்டத்தில முண்டி அடிச்சி சீட் பிடிச்சி குடுத்தா, கொழுப்பெடுத்து அதை ஏன்டி விட்டுக்கொடுத்தே,அப்போ நீ எந்திரிச்சி நில்லுடி, அப்போ தான் புத்தி வரும்“

என்று அம்மாவின் கையை பிடித்து இழுத்தார், அம்மா எழுந்து நின்று கொண்டாள், அவர்களின் சண்டைய கண்ட கிழவி முகம் சுருங்கிப்போனவளாக எழுந்து கொண்டு அம்மாவின் கையை பிடித்து உட்கார சொன்னாள்

“பரவாயில்லை நீங்களே உட்காருங்க்ம்மா“ என்றாள் அம்மா

“நான் புளியம்பட்டிவிலக்கில இறங்கிடுவேன், நீ உட்காரும்மா“ என்று அவள் அம்மாவை உட்கார வைத்தாள், அம்மா சீட்டின் நுனியில் உட்கார்ந்து கொண்டாள், பேருந்து கிளம்பியது, ரமா ஜன்னலுக்கு வெளியே ஒடும் மரங்களையும், மனிதர்களையும் பார்த்தபடியே வந்தாள், அப்பா அவளை சீட் மாறி உட்கார சொல்லிவிட்டு தான் ஜன்னலோரம் உட்கார்ந்து கொண்டார், ரமாவின் முகம் வாடிப்போனது, அதை உணர்ந்தவளை போல அம்மா அவளது கையை தன்னோடு சேர்த்து வருடத்துவங்கினாள்,

பேருந்து ரயில்வே கேட்டை கடப்பதற்குள் அப்பா உறங்கியிருந்தார், குறட்டை ஒலி பேருந்தையே திரும்பி பார்க்க வைத்த்து, பொது இடத்தில் எப்படி இப்படி குறட்டை விட்டு அவரால் உறங்கமுடிகிறது என்று காதம்பரிக்கு அவமானமாக இருந்தது ரமா ஏதாவது பேச முயற்சி செய்யும் போது அம்மா அப்பா தூங்குகிறார் என்பதால் பேச வேண்டாம் என்று சைகை காட்டினாள்,

சே, அம்மா ஏன் இப்படி எல்லாவற்றையும் சகித்துக் கொண்டிருக்கிறாள் என்று காதம்பரிக்கு ஆத்திர ஆத்திரமாக வந்த்து, எழுந்து வேறு சீட்டிற்கு போய் உட்கார்ந்து கொள்ளலாம் போலிருந்த்து, அப்படி செய்தால் அதற்கும் அம்மா தான் திட்டுவாங்க நேரிடும்,

அம்மா பழகிப்போய்விட்டிருந்தாள், சமையலறை உத்திரத்தில் வாழும் பல்லியை போல எங்கே அப்பா தன்னை துரத்திவிடுவாரோ என்ற பயத்திலே அம்மா வாழ்ந்து கொண்டிருக்கிறாள், இவ்வளவிற்கும் அவர்களுக்கு திருமணமாகி பத்தொன்பது வருஷங்கள் முடிந்துவிட்டன,

அப்பாவை திருமணம் செய்து கொண்ட நாளில் இருந்து அம்மா நிறைய அழுதிருக்கிறாள், ஆரம்ப நாட்களில் அவரை மாற்றமுயற்சித்து அடியும் வசவும் வாங்கியிருக்கிறாள், அவளது இடதுகையில் அப்பா தோசைகரண்டியால் போட்ட சூட்டு தழும்பு இப்போதுமிருக்கிறது,

சில சமயங்களில் மனக்கஷடத்தை தாங்கி கொள்ள முடியாத போது தலைவலி தைலத்தை தேய்த்துக் கொண்டு சப்தமேயில்லாமல் அழுவாள், அப்பா குடித்துவிட்டு வந்து ஆர்ப்பாட்டம் செய்யும் நாட்களில் காதம்பரிக்கு ஆத்திரமாக வரும், ஆனால்  ஏதாவது பேசினால் கையில் கிடைத்த் பொருளை வைத்து அடிப்பார் என்று அவளுக்கு தெரியும்,

அப்பாவின் போதை அதிகமாகிவிடும் நாளில் அம்மா, ரமாவையும் காதம்பரியையும் பக்கத்தில் உள்ள ராமச்சந்திரன் மாமா வீட்டிற்குள் உறங்குவதற்கு அனுப்பி விடுவாள், பாயை சுருட்டிக் கொண்டு போய் அவர்கள் வீட்டின் காலிங்பெல்லை அடிக்கும் போது கூச்சமாகவும் வேதனையாகவும் இருக்கும், உறக்க கலக்கத்தில் மாமா கதவை திறந்துவிட்டு ஒரமாக படுத்துக்கோங்க என்றபடியே உள்ளே போய்விடுவார், சைக்கிள் நிறுத்தும் இடத்தை ஒட்டி விரித்துக் கொண்டு அவளும் ரமாவும் உறங்குவார்கள், அது போன்ற நாட்களில் தூக்கமே வராது,

ஏன் இப்படி அடுத்தவீட்டில் வந்து உறங்குகிறோம், அப்பா ஏன் இப்படி குடித்துவிட்டு பிள்ளைகளிடமே மோசமாக நடந்து கொள்கிறார், என அழுது கொண்டேயிருப்பாள்,

ரமா ஒரு நாள் ஆற்றாமை தாளமுடியாமல் சொன்னாள்

அப்பா செத்து போனா தான்டி நமக்கு எல்லாம் விடிவுகாலம், அப்பா செத்த அன்னைக்கு தான் அம்மா நிம்மதியா தூங்குவா,  ஒருவேளை அதுக்கு முன்னாடி அம்மா செத்து போயிட்டா, நாம எல்லாம் தெருவில தான் நிக்கணும், அப்பா நம்மளை அடிச்சே கொன்னுருவார்

என்ன பதில் சொல்வது என தெரியாமல் காதம்பரி அவளை கட்டிக்கொண்டு அழுதாள், ரமாவும் கூட அழுதாள், இருவரது அழுகைச் சப்தம் உறங்கி கொண்டிருக்கும் ராமச்சந்திரமாமா வீட்டோருக்கு கேட்டுவிடக்கூடும் என்று நினைத்து வாயைப்பொத்திக் கொண்டு விம்மினார்கள், நீண்ட கேவலின் பின்பு காதம்பரி சொன்னாள்

“நான் இருக்கேன், நீ ஒண்ணும் பயப்படாதே“

அந்த நிமிசத்தில் தான் அவள் தன்னை முழுமையாக ஒரு அக்காவாக உணர்ந்தாள் அவர்கள் இருவரும் உறக்கமில்லாமல் ஒருவரையொருவர் கட்டிக் கொண்டு இரவெல்லாம் விழித்துக்கிடந்தனர், காதம்பரி அதற்காகவே பனிரெண்டாம் வகுப்பு படித்து முடித்தவுடனே தான் வேலைக்கு போகப்போவதாக சொன்னாள்,

எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்று மட்டும் தான் அப்பா கேட்டார்,  என்ன வேலைக்கு போகப்போகிறோம் என அன்று அவளுக்கு தெரியவில்லை,  ரெண்டாயிரம் கிடைக்கும் என்று மட்டும் சொன்னாள்,

நாலு வருசம் நீ சம்பாரிச்சா அதை சேத்து வச்சி உன்னை கட்டிகுடுத்திரலாம் என்று அப்பா சொன்னார்

தான் கல்யாணமே செய்து கொள்ளக்கூடாது என்று அந்த நிமிசம் மனதில் தோன்றியது, மீனாவின் அண்ணன் தான் அவளுக்காக பார்மசியில் வேலைக்கு ஏற்பாடு செய்தவன், தனக்கு தெரிந்த கடை என்பதால் ஒழுங்காக நடத்துவார்கள் என்று சொல்லி அவளை வேலைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தான்,

பேருந்து நிலையத்தின் வாசலில் அந்த மருந்துகடையிருந்தது, காலை எட்டு மணிக்கு போய்விட வேண்டும்,  இரவு ஒன்பது மணி வரை வேலை செய்ய வேண்டும், கடையில் அவளைப் போல இரண்டு பெண்களும், மூன்று பையன்களும் வேலை செய்தார்கள், மருந்துக்கடை என்பதால் நாள் முழுவதும் நின்று கொண்டேயிருக்க வேண்டும், மூத்திரம் பெய்வதற்கு பேருந்து நிலையத்திற்குள் உள்ள இலவச கழிப்பறைக்கு தான் போக வேண்டும், ஆனால் அதற்குள் கால்வைக்கமுடியாதபடி அசிங்கமாக இருக்கும் அதனாலே  மூத்திரத்தை அடக்கி அடக்கி அவளுக்கு பலநாள் அடிவயிற்றில் வலியாகியிருக்கிறது,

காதம்பரி வீட்டில் இருந்து சாப்பாடு கொண்டு போய்விடுவாள், மதியம் முக்கால் மணி நேரம் ஒய்வு, அந்த நேரத்தில் அவர்கள்  வெளியே போய்வருவார்கள், காதம்பரியும் விநோதினியும் தான் தோழிகள், அவர்கள் சாப்பிட்டுமுடித்தவுடன் ரோஸ்மில்க் குடிப்பதற்காக அருகாமையில் உள்ள பழரசக்கடைக்குப் போவார்கள், அந்த கடையின் சுவரில் மிகப்பெரிய டெலிவிஷன் ஒனறு மாட்டப்பட்டிருந்த்து, அதில் ஒளிபரப்பாகும் பாடலை பார்த்துக் கொண்டே ரோஸ்மில்க் குடிப்பார்கள், சிலநேரம் விநோதினி சாலையில் தென்படும் இளம்பையன்களைப் பற்றி கேலி பேசுவாள், அந்த அரைமணி நேரம் தான் அவளுக்கு விருப்பமான நிமிஷங்கள்,

நாள்முழுவதும் பார்மசி ஒனர் அவர்களை கடுமையாக திட்டுவார், அப்படியிருந்தும் இரவு கடையை விட்டு வெளியே போகும் போது  பத்திரமா போகணும் பாப்பா என்று சொல்லி ஒரு சாக்லெட்டை நீட்டுவார், தலையாட்டியபடியே அதை வாங்கிக் கொள்வாள், பிள்ளையார் கோவிலை தாண்டும் வரை அதை கையிலே வைத்திருப்பாள், கிட்டங்கி தெருவந்தவுடன் அந்த சாக்லெட்டை வாயிலிட்டு சுவைத்தபடியே நடக்க துவங்குவாள், அப்போது தான் வீடு வரை  சாக்லெட் கரையாமல் இருக்கும்,  ஒரு நாளின் மொத்த வலியையும் அந்த சாக்லெட் சுவை கரைத்துப் போகச்  செய்துவிடும்,

அப்பா இரவில்  தாமதமாகவே வீடு வந்து சேருவார், அவர் வருவதற்குள் பிள்ளைகள் சாப்பிட்டுவிட வேண்டும் என்பதில் அம்மா கவனமாக இருப்பாள், அப்பா தெருவில் செருப்பு தேயச்  சப்தமிட்டு நடந்து வருவார், அந்த ஒசை தெளிவாக கேட்கும்,

அப்பா வரும்வரை வாசலில் உள்ள லைட் எரிந்து கொண்டிருக்கும் சிலவேளை ,

ஏன்டி களவாணி முண்டை உங்க அப்பனா கரண்டுபில் கட்டுவான் என்று திட்டுவார், லைட்டை அணைத்துவிட்டிருந்தால் ஏன்டி உங்க அப்பன் கரண்டு பில் கட்டுறானா, எதுக்குடி லைட்டை ஆப் பண்ணினே ,இருட்டில தடுமாறி விழுந்து மண்டை உடைச்சி செத்து போகட்டும்னு நினைக்குறயா என்றும் கத்துவார், அம்மா அந்த விளக்கை அதற்காக அணைப்பதேயில்லை, அது எரிந்து கொண்டிருந்தால் இன்னமும்  அப்பா வீட்டிற்கு வந்து சேரவில்லை என்று அர்த்தம்

பலநாட்கள் அப்பா போதை அதிகமாகி அவளது பார்மசிக்கு வந்து ஒனரிடம் சண்டையிட்டு கடன்வாங்கிப் போவதுண்டு, அது போன்ற நேரங்களில் அவளுக்கு தாங்கமுடியாத துக்கமும் வலியும் தொண்டையை அடைக்கும், சில நாட்கள் அப்பா நள்ளிரவில் வீடு வந்து சேர்ந்து உறங்கிக் கொண்டிருந்த அவர்களை எழுப்பி முட்டை பரோட்டா சாப்பிடச் சொல்லி பார்சலை பிரித்து வைத்து வற்புறுத்துவார், அவர்கள் பாதி உறக்கத்துட்ன் பரோட்டா சாப்பிடுவார்கள், என் செல்லம், உங்களை விட்ட எனக்கு யாருடா இருக்கா என்று அப்பா அர்த்தமில்லாமல் புலம்புவார், மறுநாள் காலையிலோ ஆத்திரம் அதிகமாகி உங்களை எல்லாம் விஷம்வச்சி கொல்லாம விடமாட்டேன், களவாணிநாய்க என்றும் கத்துவார்.

அப்பாவிற்குள் ஒரு பாம்பு வாழ்ந்து கொண்டிருக்கிறது, அது நினைத்தாற் போல படமெடுத்து சீறுகிறது, அதற்கு இரைபோட ஆட்கள் தேவை, அதற்கு தான் குடும்பம்,

கொத்தி கொத்தி பாம்பின் விஷம் மெல்ல அவர்கள் உடலில் கலந்து விட்டிருக்கிறது, அவரை விலக்கவே முடியாது, தனியாக வேறு எங்கும் போய் வாழவும் முடியாது, பேசாமல் அம்மாவும் அவர்களும் மட்டும் எங்காவது வட இந்தியாவிற்கு ஒடிப்போய் பிழைத்துக் கொண்டால் என்ன, அம்மா வரமாட்டாள், அவளால் அப்பாவை கைவிட முடியாது,

•••

இப்படி காதம்பரி ஏதேதோ யோசனைகளுட்ன் பயணம் செய்து கொண்டிருந்தாள். பேருந்து ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சாலையோர உணவகத்தில் நின்றது, அப்பா இறங்கி போய் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார், அம்மா கொண்டு வந்திருந்த தண்ணீர்பாட்டிலை திறந்து ஒரு மடக்கு குடித்துவிட்டு அவளிடம் நீட்டினாள், காத்ம்பரி தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த போது ரமா ரகசியமான குரலில்  கேட்டாள்

“இறங்கி போயி கோன் ஐஸ் வாங்கிட்டு வருவமா“

காதம்பரி வேண்டாம் என்று மறுத்தாள், பேருந்து கிளம்பிய போது அப்பா பஸ்ஸில் ஏறி ஒரு ரோஜாப்பூவை அவர்களிட்ம் நீட்டினார், அம்மா கையில் வாங்கிக் கொண்ட போது சொன்னார்

“சில்லறை மாத்துறதுக்காக வாங்கினேன், தலையில வச்சிக்கோ“

ரோஜா வாடிப்போயிருந்தது, அம்மா காதம்பரியிடம் நீட்டினாள், அவள் வேண்டாம் என மறுத்தபோதும் அம்மா அவளது கூந்தலில் ரோஜாவை சொருகிவிட்டாள்,

யாராவது இப்படி பசிநேரத்தில் காசு கொடுத்து ரோஜாப்பூ வாங்குவார்களா என்று காதம்பரிக்கு எரிச்சலாக வந்த்து, இதற்கு ஒரு இளநீர்வாங்கிவந்தால் கூட வெக்கை தணிய குடித்திருக்கலாம், அப்பா பான்பராக் பாக்கெட் ஒன்றினை பிரித்து வாயிலிட்டபடியே டிரைவருடன் அரசியல் பேச ஆரம்பித்தார், பசியால் ஏற்பட்ட கிறக்கம் அவர்களை சோர்வடைய செய்திருந்தது, அப்பா உற்சாகமாக நாட்டுநலன் குறித்த கவலையுடன் பேசிக்கொண்டே வந்தார்

••

பழனி பேருந்து நிலையத்தின் தென்பகுதியில் அந்த உணவகமிருந்த்து, அப்பா அதன் வாசலில் அவர்களை நிற்க சொல்லிவிட்டு சாப்பாடு எவ்வளவு ரூபாய் என்று விலை கேட்பதற்காக உள்ளே போயிருந்தார், அம்மாவும்  காதம்பரியும் பெட்டிகடை ஒரமாக நின்று கொண்டார்கள், ரமா அப்பா கூடவே உணவகத்திற்குள் போனாள், சாப்பாடு முடிந்துவிட்டது என்றும் சப்பாத்தி, தோசை இரண்டு மட்டுமே இருப்பதாக கல்லாவில் இருந்த ஆள் சொன்னார்,

பரவாயில்லை அதையாவது சாப்பிடலாம் என்று ரமா சொன்னாள்,  டாக்சி ஸ்டாண்ட் அருகே வேறு ஒரு ஹோட்டல் இருக்கிறது என்று சொல்லிய அப்பா தான் அங்கே போய் பார்த்துவருவதாக சொல்லி அவர்களை நிற்க வைத்து போனார்,

காதம்பரியும் ரமாவும் கோவிலுக்கு காவடி எடுத்துக் கொண்டு போகிறவர்களை பார்த்துக் கொண்டேயிருந்தார்கள், அம்மா ஹோட்டல் வளாகத்தினுள் இருந்த வேப்பமரத்தடியில் போய் உட்கார்ந்து கொண்டாள், ரமா தனக்குப் பசிக்கிறது என்று திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டேயிருந்தாள்

ஹோட்டலைத் தேடிப்போன அப்பா மணி ஐந்தாகியும் வந்து சேரவேயில்லை, அம்மா போன் பண்ணி கேளுடி என்று காதம்பரியிடம் சொன்னாள், அப்பாவின் செல்நம்பருக்கு போன் செய்தாள் காதம்பரி, ரிங் போய்க் கொண்டேயிருந்த்து, அப்பா போனை எடுக்கவேயில்லை, எங்கே போய் தொலைந்தார் என்று ஆத்திர ஆத்திரமாக வந்த்து, பசி வேறு அவளுக்கு தலைவலியை உண்டுபண்ணியிருந்த்து,

அவர்களை வேப்பமரத்தடி நிழலில் உட்கார சொல்லிவிட்டு அம்மா தான் தேடிப்போய்  பார்த்து வருவதாக சொன்னாள்,

“நீ ஒண்ணும் அலைய வேண்டாம், நான் போயி பாத்துட்டு வர்றேன்“

என்று காதம்பரி சாலையை கடந்து நடக்க ஆரம்பித்தாள், எந்தப் பக்கம் போவது என்று தெரியவில்லை,  நீண்டு செல்லும் பஜாரில் ஆட்கள் முண்டியத்து போய்க் கொண்டிருந்தார்கள், சாலையோரம் மஞ்சள் சேலை கட்டிய இரண்டு பெண்கள் கையில் வேலுடன் உட்கார்ந்திருந்தார்கள், ஒருவன் குரங்கை வைத்து வித்தை காட்டிக் கொண்டிருந்தான்,

குதிரை வண்டிகள் நின்றிருந்த இடத்தை கடந்து அவள் மேற்குபக்கமாக நீளும் பஜாரினுள் நடந்து போக துவங்கினாள், அருகருகே இரண்டு மூன்று சைவ உணவகங்கள் இருந்தன, இதை விட்டுவிட்டு அப்பா எங்கே போய் தொலைந்தார் என்று எரிச்சலாக வந்தது, ஒரு ஹோட்டலின் உள்ளே போய் அப்பா இருக்கிறாரா என்று தேடிப்பார்த்துவந்தாள், அப்பாவைக்காணவில்லை

காய்கறிகடைகள், வெற்றிலை கடைகள், சந்தனம் பூமாலை விற்கும் கடைகளை தாண்டி பஜார் விரிந்து கொண்டேயிருந்த்து, சிக்னல்வரை நடந்துவிட்டு மறுபடி அப்பாவிற்கு போன் செய்தாள், இப்போது போன் அணைக்கபட்டிருந்த்து,

துப்பட்டாவை தலையில் போட்டபடியே அவள் கிழக்கு நோக்கி நடக்க ஆரம்பித்தாள், பேருந்துகள், ஆட்டோக்களை கடந்து காதம்பரி நடந்து வந்த போது ஒரு டுரிஸ்ட் பஸ் வந்து நின்று ஆட்கள் சோம்பலுடன் இறங்கி போய்க் கொண்டிருந்தார்கள், அங்குமிங்குமாக சுற்றியலைந்து தேடிய போதும் அப்பாவை காணமுடியவில்லை,

ஒருவேளை தான் தேடிச்சென்ற போது அப்பா வந்து சேர்ந்திருந்தால் என தோன்றியது, அவசரமாக அம்மாவும் ரமாவும் உட்கார்ந்திருந்த இடத்திற்கு போனாள், அங்கே அவர்கள் இருவரையும் காணவில்லை,  காதம்பரிக்கு திகைப்பாக இருந்தது, எங்கே போய் விட்டார்கள் என்ற ஆத்திரத்துடன் சுற்றிலும் திரும்பி பார்த்தாள்,

சாலையின் இடது பக்கமிருந்த சினிமா போஸ்டர் அருகே ரமா மட்டும் தனியே நிற்பது தெரிந்தது, ஆனால் அம்மாவைக் காணவில்லை, காதம்பரி அவளை நோக்கி நேராக நடந்து போய் எரிச்சலான குரலில் கேட்டாள்

“அம்மா எங்கடி போனா“

“அப்பா எங்கயாவது குடிச்சிட்டு விழுந்துகிடப்பாரு, போயி கூட்டிகிட்டு வர்றேனு அப்பவே கிளம்பி போயிட்டா, ஒத்தையில தனியா உட்கார்ந்திருக்க பயமா இருந்துச்சி, அதான் இங்கே வந்துட்டேன்“

அம்மா எந்த மதுபானக்கடையில் போய் அப்பாவைத் தேடுகிறாளோ, ஒரேயொரு முறை காதம்பரி அப்பாவை தேடி டாஸ்மார்க்  கடைக்குள் போயிருக்கிறாள், அப்பா ஒரு பிளாஸ்டிக் ஸ்டுலில் உட்கார்ந்து குடித்துக் கொண்டிருந்தார், அவளைக்கண்டதும் நீ எதுக்குடி இங்கே வந்தே என்று சப்தம் போட்டார், அம்மா குடிபோதையில் கிடக்கும் அப்பாவை பலமுறை தூக்கி கொண்டு வந்திருக்கிறாள், இன்றைக்கும் அப்பா அப்படி எங்காவது குடித்துவிட்டு கிடக்ககூடும், அம்மாவை நினைக்கையில் வருத்தம் கவ்வியது,

“சாப்பிட்டயாடி“ என்று ரமாவிடம் கேட்டாள் காதம்பரி

“நீ போனதும் அம்மா என்கிட்ட இருபது ரூபா குடுத்து சாப்பிட்டு வரச்சொன்னா, நான் தனியா போயி ஒரு தோசை சாப்பிட்டு வந்துட்டேன்“ என்றாள்,

காதம்பரிக்கு அலைந்து திரிந்த அயர்ச்சியில் பசியடங்கி போயிருந்த்து, உடம்பெல்லாம் கசகசப்பும் வியர்வையும் அதிகமாகியிருந்தது, எங்காவது கொஞ்சநேரம் காலை நீட்டி படுத்தால் தேவலை என்பது போல தோணியது, ரமாவை இழுத்துக் கொண்டு மறுபடியும் அதே வேப்பமரத்தடிக்கு வந்து சேர்ந்தாள், சிவப்பு நிற டீசர்ட் அணிந்த ஒருவன் காதம்பரியை வெறித்து பார்த்து உதட்டை கடித்துக்  கொண்டிருந்தான், இவன் ஒருவன் நேரம்காலம் தெரியாமல் காதலித்துக் கொண்டிருக்கிறான் என்று ஆத்திரமாக வந்தது. அவர்கள் இருவரும் சாலையை வெறித்து பார்த்தபடியே உட்கார்ந்திருந்தார்கள்,

வெயில் மங்கி மழை வரப்போவதைப் போல மேகம் இருட்டிக் கொண்டுவந்தது, , உனக்கு ஒரு டீ வாங்கிட்டு வரட்டுமாக்கா என்று கேட்டாள் ரமா,

வேண்டாம் என்றபடியே நெற்றியை பிடித்தபடியே உட்கார்ந்திருந்தாள் காதம்பரி, சாலையில் செல்லும் யானையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் ரமா,

நீண்ட நேரத்தின் பிறகு ஒரு ஆட்டோ வேப்பமரத்தடியின் அருகில் வந்து நின்றது, அதன் உள்ளிருந்து அம்மா இறங்கினாள், ஆட்டோவின் உள்ளே அப்பா போதை அதிகமாகி முகம் கோணி சரிந்து கிடந்தார்,  வாந்தி எடுத்திருக்க கூடும், சட்டை ஈரமாக தெரிந்த்து, அம்மா இறங்கிவந்து காதம்பரியிடம் சொன்னாள்

“உங்கப்பா புல்லா குடிச்சிருக்காரு, அவர் தூங்கி எந்திரிச்சா தான் நாம கோவிலுக்கு போக முடியும், எங்காவது ஒரு ரூம்போட்டு தங்கியிருக்க வேண்டியது தான், தேவஸ்தான விடுதியில் ரூம் வாங்கி தர்றேனு ஆட்டோகாரர் செர்ல்லியிருக்கார், வந்து ஏறுங்க,“

ஆட்டோவிற்குள் ரமாவும் காதம்பரியும் ஏறிக் கொண்டார்கள், அம்மா ஒண்டிக் கொண்டு உட்கார்ந்து கொண்டாள், அப்பாவின் வாயிலிருந்து பீறிடும் மதுவின் வாசனை முகத்தில் அடித்த்து

அவர்கள் தேவஸ்தான விடுதியில் ரூம் போட்டபோது காதம்பரி தான் கையெழுத்து போட்டாள், அப்பாவை கைத்தாங்கலாக அம்மாவே பிடித்துக் கொண்டு அறைக்குள் கொண்டு போனாள், அவரது கால்கள் துவண்டுபோய் நடக்க மறுத்தன, அவர் தன்னை அறியாமல் எதையோ உளறிக் கொண்டுவந்தார், அறையில் இருந்த மின்விசிறியைப் போட்டு அப்பாவை படுக்க வைத்தாள் அம்மா, அவரது சட்டை பையில் இருந்த பணம் ரசீதுகள் செல்போன் யாவும் கிழே விழுந்தன, அதை எடுத்து அம்மா தனது கூடையில் வைத்துக் கொண்டாள்,

ரமாவும் காதம்பரியும் விடுதியின் வராந்தாவில் கிடந்த மரபெஞ்சில் உட்கார்ந்து கொண்டார்கள், அங்கிருந்து பார்த்தால் மலை நன்றாக தெரிந்த்து, அம்மா அறையின் கதவை ஒரமாக சாத்திவிட்டு வெளியே வந்தாள்,

அம்மா எப்படி அப்பாவை கண்டுபிடித்தாள் என்று தெரியவில்லை, அவள் அசதியோடு சேலையில் முகத்தை துடைத்துக் கொண்டு சாப்பிட்டயா என்று காதம்பரியை கேட்டாள்,

இல்லைம்மா என்றாள் காதம்பரி

“நீயும் இவளும் போயி சாப்பிட்டு எனக்கு ஒரு கப் காபி வாங்கிட்டு வாங்க,  கிறுகிறுனு வருது“ என்று நூறு ரூபாய் பணத்தையும் சிறிய சில்வர் தூக்குவாளியையும் நீட்டினாள்

அவர்கள் இருவரும் அருகில் இருந்த சிற்றுண்டி நிலையத்திற்கு போனார்கள், சூடாக பூரி போட்டுக் கொண்டிருந்தார்கள், இருவரும் சாப்பிட்டுவிட்டு அம்மாவிற்கு பூரியும் காபியும வாங்கிக் கொண்டு திரும்பி வந்தார்கள்,

அம்மா மரப்பெஞ்சில் களைத்து போய் படுத்துகிடந்தாள், அவளை எழுப்பி சாப்பிடச்சொன்ன போது  பசிவேகத்தில் அவரசரமாக பூரியை இரண்டு மூன்றாக பிய்த்து சாப்பிட்டுவிட்டு காபியை சூட்டோடு குடித்தாள்

தூக்கத்திலே அப்பா பிதற்றும் சப்தம் கேட்டது

அம்மா காபி வாங்கிய தூக்குவாளியை அருகில் இருந்த திருக்கு குழாயில் கழுவிவிட்டு அவர்களிடம் சொன்னாள்

“நீங்க வேணும்னா, மலை ஏறிப்போய் சாமி கும்பிட்டு வர்றீங்களா“

இருவரும் ஒரே நேரத்தில் வேணாம்மா என்றார்கள், அம்மா அவர்களை கட்டாயப்படுத்தவில்லை, அம்மா அறைக்குள் போய் வெறுந்தரையில் படுத்துக் கொண்டாள்,

இரவாகும்வரை ரமாவும் காதம்பரியும் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள், அருகாமை அறை ஒன்றில் இருந்த மூன்று வயது சிறுமி  பலூனை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள்,  மலையின் மீது பிரகாசமாக விளக்குகள் எரியத்துவங்கின, படி வழியாக ஏறிப்போகின்றவர்கள் கடந்து போவது தெரிந்த்து, மனம் கனத்து போய்  வேதனையோடு அப்பா உறங்கிக்  கொண்டிருந்த அறையை பார்த்துக் கொண்டிருந்தாள் காதம்பரி,

ஒரு மனிதரால் எத்தனை பேருக்கு துயரம், அப்பா ஏன் இதை புரிந்து கொள்ளவே மாட்டேன் என்கிறார்,

நினைக்க நினைக்க துயரம் பீறிட்டுக் கொண்டிருந்த்து, அம்மா உறக்கம் கலைந்து  எழுந்து முகம்கழுவிட்டு வாசற்படியில் உட்கார்ந்து கொண்டுவிட்டாள், யாரோடும் ஒரு வார்த்தை பேசவில்லை, அவளது கண்களின் அப்பியிருந்த சோகமும் வேதனையும்  காதம்பரியை ரணமாக்கியது

அப்பா இரவு மணி பத்தாகியும் எழுந்து கொள்ளவில்லை, அம்மா அருகில் உள்ள கடையில் போய்  அப்பாவிற்காக நாலு இட்லி வாங்கி வந்து படுக்கை அருகே வைத்துவிட்டு அவளும் படுத்துக் கொண்டாள்,

மீதமிருந்த ஒரு போர்வையை விரித்து காதம்பரியும் ரமாவும் சுவரை ஒட்டி படுத்துக் கொண்டார்கள், இருவருக்கும் உறக்கம் கூடவேயில்லை, பேசாமல் இப்படியே செத்துபோய்விட்டால் என்னவென்று காதம்பரிக்கு தோன்றியது, ரமா அவள் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்,

திடீரென  வெளியே மழைக்காற்றும் மின்னல்வெட்டுமாக இருந்த்து.  அம்மா எழுந்து ஜன்னல்களை மூடிவைத்தாள், சட்டென மின்சாரம் துண்டிக்கபட்டது, இருட்டில் அந்த அறை ஒரு சவப்பெட்டி போலவே இருந்தது, அப்பா மின்சாரமில்லாத புழுக்கத்தை உணர்ந்தவரைப் போல எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தார்.

எப்போது உறங்கினாள் என்று காதம்பரிக்கு தெரியவில்லை, அவள் விழித்து கொண்ட போது வாசற்கதவு திறந்து கிடந்தது, மணி ஆறுக்கும் மேலாக இருக்ககூடும், இன்றைக்கு லீவு சொல்லவில்லை, நிச்சயம் பார்மசி ஒனர் தன்னைத் திட்டி தீர்க்கப்போகிறார், ரமா உருண்டு கட்டிலின் அடியில் போய் கிடந்தாள், படுக்கையில் இருந்த அப்பாவை காணவில்லை, அம்மா எங்கே போனாள என தேடினாள், அவளையும் காணவில்லை, வராந்தாவிற்கு வந்து பார்த்த போது அம்மா தூக்குவாளியில் காபி வாங்கி கொண்டு அவசரமாக நடந்து வருவது தெரிந்த்து,

காதம்பரி அம்மாவை முறைத்தபடி இருந்தாள், அறைக்கதவை திறந்து உள்ளே பார்த்த அம்மா உங்க அப்பா எங்கடி என்று கேட்டாள்

“நான் பாக்கலே“ என்றாள் காதம்பரி

“காபி வாங்கிட்டு வர்றதுக்குள்ளே எங்க போயி தொலைஞ்சார்“ என அம்மா அலுத்துக் கொண்டாள்

இந்த மனுஷனுக்காக எதற்கு அம்மா இப்படி ஒடியோடி உழைக்கிறாள் என்று ஆத்திரமாக வந்தது, அப்பாவைத் தேடி அம்மா வராந்தாவின் கடைசிவரை நடந்த போது காதம்பரி அம்மாவை திட்டினாள்

“நீ இரும்மா, அவரு தானா வருவார், இல்லே அப்படியே போய் தொலையட்டும்“

அம்மா திரும்பிவந்து மரப்பெஞ்சில் உட்கார்ந்து கொண்டாள்

காலை எட்டு மணி இருக்கும் போது அப்பா தலையை மொட்டை அடித்து சந்தனம் பூசி கழுத்தில் ஒரு மாலை போட்டுக் கொண்டு நெற்றி நிறைய திருநீறுடன் விடுதியின் உள்ளே நடந்து வந்து கொண்டிருந்தார்,

ரமாவும் காதம்பரியும் அந்த விசித்திர கோலத்தை முறைத்து பார்த்தபடியே இருந்தார்கள்

“சரஸ்வதி, சாமி கும்பிட்டாச்சி, இப்போ தான் மனசு நிம்மதியா இருக்கு, நாம ஊருக்கு கிளம்பலாம்லே“ என்றார் அப்பா

அம்மா சரியென தலையாட்டினார், அவர்கள் நடந்து பேருந்து நிலையத்தை நோக்கி போகையில் அப்பா திடீரென ஏதோ யோசனை வந்தவரை போல பாக்கெட்டில் இருந்த திருநீறு பொட்டலத்தை பிரித்து பூசிக்கோங்க என்றார், அவர்கள் மௌனமாக திருநீற்றை எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டார்கள்

அப்பா யாருடனோ செல்போனில் பேசிக் கொண்டே நடந்தார்

“பேமிலியோட பழனிக்கு வந்து சாமி கும்பிட்டு இப்போ தான் பஸ் ஏறப்போறேன், மதியம் வந்துருவேன், நல்ல தரிசனம், இனிமே எல்லாம் நல்லதா தான் நடக்கும் “

அவர்கள் பேருந்து நிலையத்தினுள் உள்ளே போன போது அப்பா சொன்னார்

“பஸ்ல போற வழியில ஒட்டன்சத்திரத்துகிட்டே டிபன் சாப்பிட்டுகிடுவோம், இங்கே வேணாம் “

அம்மா அதற்கும் சரியென்றே தலையாட்டினாள், அதைக்கேட்டு ரமா கேலியாக காதம்பரியிடம் கண்ஜாடை காட்டினாள், அவளால் சிரிக்கமுடியவில்லை, முட்டிக் கொண்டுவரும் அழுகையை விழுங்கிக் கொண்டு தலைகுனிந்தபடியே தனியே நடந்து கொண்டிருந்தாள் காதம்பரி.

அவர்கள் ஒரு குடும்பமாக போய்க் கொண்டிருந்தார்கள்,

•••

தினகரன் மலரில் வெளியானது.

Gayathri:
காந்தியோடு பேசுவேன்
சிறுகதை

காலையில் தான் வார்தாவிற்கு வந்து இறங்கியிருந்தேன், நான் வார்தாவில் உள்ள காந்தி ஆசிரமத்திற்கு வருவது இதுவே முதன்முறை, ஆனால் அதைப்பற்றி நிறைய வாசித்திருக்கிறேன், புகைப்படங்களிலும் பார்த்திருக்கிறேன், ஆனால் நேரில் காணும்போது அதன் பெருமைகள் எதுவும் கண்ணில்படவில்லை, சுமாரான பராமரிப்பில் நடைபெறும் ஒரு முதியோர் விடுதி ஒன்றைப்போலவே இருந்தது

ராகேல், காந்தியின் குடிலை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தாள், இந்த அறையில் தான் காந்தி தங்கியிருந்திருக்கிறார், கூரை வேய்ந்த எளிமையான அறை, காந்தியின் கைத்தடி மற்றும் காலணிகள், எழுதும்பொருள்கள், பாதுகாப்பாக வைக்கபட்டிருந்தன, ஒரு அரிக்கேன் விளக்கு படுக்கையின் அருகில் இருந்த்து,

காந்தி இந்த ஆசிரமத்தில் மின்சாரத்தை பயன்படுத்தினாரா என்று ராகேல் என்னிடம் கேட்டாள்

இல்லை என்றே நினைக்கிறேன், ஆனால் மின்சாரத்தின் வருகை இந்திய கிராமங்களின் இயல்பை மாற்றிய முக்கியமான அம்சம் என்பதை காந்தி நிச்சயம் உணர்ந்திருப்பார்  என்றேன்

காந்தியின் அறையில், மூங்கிலால் செய்யப்பட்ட ஒரு அலமாரி, பித்தளை செம்புகள், முக்காலி, இருந்தன, அருகில் ஒரு பழைய மரக்கட்டில், மிகச்சிறிய ஜன்னல்,

தனது தேவைகளை ஒரு மனிதன் எப்படி முடிவு செய்து கொள்கிறான் என்பதில் தான் அவனது வாழ்க்கை துவங்குகிறது, காந்தி தனது தேவைகள் குறித்து மிகவும் கவனம் கொண்ட மனிதராகவே தோன்றுகிறார்,

தேவைகளை உருவாக்கி கொள்வது எளிது, விட்டுவிடுவது கடினம் என்பதை நான் இப்போது தான் உணர்ந்து வருகிறேன், ஒருவகையில் காந்தியின் மீதான எனது ஈர்ப்பிற்கு அதுவும் ஒரு முக்கியமான காரணம் என்றே சொல்வேன்

காந்தி வாழ்ந்த  காலத்தில் அந்த அறைக்குள் வந்து நிற்பது பலருக்கும் நெகிழ்வான சம்பவமாக இருந்திருக்கும், ஒரு நிமிசம் மனக்கண்ணில் அந்த காட்சி தோன்றி மறைந்த்து, காந்தி இந்த இடத்தில் தான் உட்கார்ந்து கொண்டிருப்பார், காந்தி வெறுமனாக உட்கார்ந்திருப்பார் என்று நினைக்கவே முடியாது, ஏதாவது ஒரு வேலையை பரபரப்பாக செய்து கொண்டேயிருந்திருப்பார், ஏன் அவருக்குள் இத்தனை பரபரப்பு, வேகம், ஒய்வு என்பதை ஏன் அந்த மனிதன் பலவீனமாக கருதுகிறார் என்றெல்லாம் எனக்கு தோன்றியது

காந்தி நிமிசங்களை எண்ணி வாழ்ந்திருக்கிறார்,  நான் அப்படியில்லை, சோம்பலும் எதிலும் திருப்தியின்மையும், தேவையற்ற பயமும் கவலையுமே என்னை உருவாக்கின, நான் கல்வியின் வழியே என் வாழ்வினை உருவாக்கி கொண்டவன், காந்தி படிப்பை கைவிட்டு தனது வாழ்க்கையை முன்னெடுத்து சென்றவர், வாழ்வின் முடிவில் ஒரு எளிய இந்திய விவசாயியை போல தான் அவர் இருந்தார், அதிகமான நம்பிக்கை, அதிகமான ஏமாற்றம் இரண்டும் அவருக்கு பரிசாக கிடைத்தன,

காந்தியை அறிந்து கொள்ள வாசிப்பு உதவி செய்யாது என்றே நான் நம்புகிறேன், வாசிப்பின் வழியே காந்தி கருத்துருவமாக மட்டுமே பதிவாகிறார், அவரது செயல்பாடுகளின் பின்னுள்ள வலியை, எளிமையை, நேரடித்தன்மையை வாழ்ந்து பார்க்க வேண்டும், அப்போது தான் காந்தி , மணல்கடிகாரத்தில் ஒவ்வொரு துளி மணலாக விழுந்து நிரம்புவதைப்  போல கொஞ்சம் கொஞ்சமாக நமக்குள் விழுந்து நிறைவார்,

எனக்கு காந்தியை அறிமுகப்படுத்தியது என்னுடைய அம்மா, என் பனிரெண்டு வயதில் காந்தியை பென்சிலில் படம் வரைந்து முதல் பரிசு வாங்கி வந்ததை கண்டு சந்தோஷப்பட்டபடியே தத்ரூபமா வரைஞ்சிருக்கே, நான் காந்தியை நேர்ல பாத்து இருக்கேன் என்று அம்மா சொன்னார்

என்னால் அதை நம்ப முடியவில்லை, அம்மா எப்படி காந்தியை நேரடியாக பார்த்திருப்பாள், ஒரு வேளை காந்தி அவளது பாட்டைகுளம் கிராமத்திற்கு வந்திருந்தாரா எனக்கேட்டேன்,

என் ஊருக்கு காந்தி வரவில்லை, ஆனா நான்  காந்தியை  அவரது வார்தா ஆசிரமத்திற்கே தேடிப்போய் பார்த்திருக்கேன்  என்றாள்

நிஜமா எனக்கேட்டபோது, அது ஒரு பெரிய கதை, அப்போ நீ எல்லாம் பொறக்கவேயில்லை,  என்றபடியே தனது இடதுகையை நீட்டி காட்டினாள், அம்மாவின் இடதுகை சற்று வளைந்து துருத்திக் கொண்டது போலதானிருந்தது,

இந்த கை காந்திக்காக உடைப்பட்டது, யார் உடைச்சா தெரியும்லே உங்கப்பா, காந்தியை பாக்கப் போனதுக்கு கிடைத்த தண்டனை, உங்கப்பாவுக்கு காந்தியை சுத்தமா பிடிக்காது, உங்கப்பா என்ன பெரும்பான்மை ஆம்பளைகளுக்கு காந்தியை பிடிக்காது, அதிகாரம் பண்ண ஆசைப்படுற ஆம்பளை காந்தியை வெறுக்கதானே செய்வாங்க, ஆனா பெண்களாலே காந்தியை ஆழமாக புரிந்துகொள்ள முடியும்,

வார்தாவுக்கு போயி காந்தி முன்னாடி நின்னுகிட்டு இருந்தப்போ அவரை ஒரு ஆணாக வேறுபடுத்தி பாக்க என்னாலே முடியலை, பேச்சு வராமல் நாக்கு தடிச்சி போனது மாதிரி ஆகிருச்சி, என்னை மீறி அழுதுட்டேன், பாபுஜி கருணையான கண்களோட சிரிச்சிகிட்டே என் கிட்டே வந்து ஏதோ சொன்னார், எனக்கு அப்போ ஒரு வார்த்தை இங்கிலீஷ் தெரியாது, ஹிந்தியும் தெரியாது, ஆனா பாபுஜி எனக்கு ஆறுதல் சொல்றாருனு மட்டும் புரிஞ்சது,

அங்கேயே பாபுஜியோட ஆசிரமத்திலே வாழ்நாள் பூரா இருந்திர மாட்டமானு ஏக்கமா இருந்துச்சி, அதுக்கு கொடுத்து வைக்கலே, திடீர்னு ஒரு நாள் உங்கப்பா வந்து இழுத்துட்டு வந்துட்டார்,  ஆசிரமத்தை விட்டு போகமாட்டேனு பிடிவாதம் பண்ணினேன், பாபுஜி என் தலையை தடவி ஊருக்கு போயிட்டு வரச்சொல்லி அனுப்பி வச்சார், அவர் சொல்லுக்கு கட்டுபட்டு தான் உங்கப்பாவோட இத்தனை வருஷம் வாழ்ந்திருக்கேன் , என்றார்

நீ எதுக்காக அம்மா காந்தியை தேடிப்போனே என்று கேட்டேன்,

அம்மா பதில் சொல்லவில்லை, மௌனமாக இருந்தாள், பிறகு லேசாக தலையை ஆட்டியபடியே அதை பத்தி உனக்கு சொன்னா புரியாது, சொல்றதுல எனக்கும் விருப்பம் இல்லே என்று பேச்சை துண்டித்துவிட்டாள்

அதன்பிறகு ஒன்றிரண்டு முறை காந்தியை பற்றி பேச்சு வரும்போது அம்மா வார்தாவிற்கு ஒடிப்போன கதையின் ஒரு சில நிகழ்வுகளை கேட்டிருக்கறேன், அப்பா ஒரு முறை கோபத்தில் உங்கம்மா ஒரு ஒடுகாலி முண்ட, வேற ஆம்பளையா இருந்தா இந்தநேரம் அவளை வெட்டி கொன்னு புதைச்சிருப்பான் என்று கத்தினார்,

அதை தான் எப்பவோ செய்துட்டீங்களே என்று அம்மா அமைதியாக சொன்னாள், அப்பா அம்மாவை முறைத்தபடியே வெளியேறிப் போய்விட்டார்

பொம்பளைங்க அரசியல் பேசினா உங்கப்பாவுக்கு பிடிக்காது,  அதுவும் படிக்கிற பொம்பளைன்னா அவருக்கு எட்டிக்காய், இதுல காந்திகட்சியில வேற சேந்துகிட்டா, அதான் உங்கப்பாவுக்கு அம்மாவுக்குமான பிரச்சனை என்று ஒரு முறை வெங்கடரத்னம் மாமா என்னிடம் சொன்னார்

அந்த வயதில் இதை வெறும் கணவன் மனைவி சண்டை  என்று மட்டும் தான் நினைத்திருந்தேன், ஆனால் இது குடும்ப சண்டையில்லை, வெறுப்பிற்கும் அன்பிற்குமான ஊசலாட்டம் என்பதை பின்னாளில் தான் புரிந்து கொண்டேன், அம்மாவை குடும்ப வாழ்க்கை இருட்டிற்குள் பிடித்துத் தள்ளிய போது அதிலிருந்து காந்தி தான் அவளை மீட்டிருக்கிறார், தனது உண்மையான செயல்களின் வழியே மற்றவர்களின் ஏளனத்தை கடந்து செல்ல முடியும் என்பதை நிருபணம் செய்திருக்கிறார், தனது மனசாட்சியின் குரலுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதை கற்றுதந்திருக்கிறார், எல்லாவற்றையும் விட அடுத்தவர் பொருட்டு வாழ்வது எப்போதும் வலிமிக்கதே, ஆனால் அதில் கிடைக்கும் மனசாந்தி பெரியது என்பதை காந்தியே உணர்த்தியிருக்கிறார்

இதைப்பற்றி பேசுகையில் ராகேல் சொன்னாள்

லட்ஸ், உண்மையில் கடவுள் கைவிட்டு போன உலகை காந்தி நிரப்பியிருக்கிறார், அது தான் உன் அம்மா விஷயத்தில் நடந்திருக்கிறது, இரண்டு முறை கர்ப்பசிதைவு, அடுத்தடுத்து குழந்தைகள், வறுமை, கூட்டு குடும்பத்தின் அவமானம் இத்தனையும் உனது அம்மாவை மூச்சு திணற அமுக்கும் போது காந்தி மட்டும் தான் அவளுக்கான நம்பிக்கை வெளிச்சமாக இருந்திருக்கிறார், காந்தி என்ற சமூகபோராட்டக்காரனை விட காந்தி என்ற இந்த எளிய நம்பிக்கை அதிகம் வலிமையுடையது, அதை உணர்ந்தவர்கள் காந்தியை எப்போதும் நேசித்து கொண்டுதானிருக்கிறார்கள்

ராகேல் சொல்வது உண்மை, இந்திய பெண்கள் காந்தியை சமூகசேவகர் என்ற தளத்தில் புரிந்து கொள்ளவில்லை, பெரும்பான்மை மக்கள் சகலவிதமான அடிப்படை அறங்களையும் கைவிட்டு தீமையும் பொய்மையும் தனதாக்கி கொண்ட சூழலில் அறத்தின் பொருட்டு தன்னை ஒப்படைத்துக் கொண்டு  சுயபரிசோதனை கொண்ட வாழ்வை மேற்கொண்ட எளிய மனிதர் என்றே புரிந்து கொண்டிருக்கிறார்கள்

ராகேலுக்கு வன்முறையின் கொடூரம்  தெரியும்,  அவள் யூதப்பெண், எனது மாணவியாக அறிமுகமாகி என்னை திருமணம் செய்து கொண்டவள், அவளுக்கு என்னை விடவும் என் குடும்பத்தை சேர்ந்த பெண்களிடம் அதிகம் ஒட்டுதல், அந்த பெண்கள் நித்யமான வதைமுகாமில் வாழ்பவர்கள் என்று ஒருமுறை ராகேல் என்னிடம் சொன்னது நிஜமான உண்மை

நான் லண்டனுக்கு பொருளாதாரம் படிக்க போய் அங்கேயே வேலை பார்க்க துவங்கிய போது அம்மா ஒரு முறை போனில் கேட்டாள்

ஒரேயொரு தரம் லண்டனுக்கு வரணும்னு ஆசையா இருக்கு லட்சுமா,

அம்மா ஒருத்தி தான் லட்சுமணன் என்ற என் பெயரை லட்சுமா என்று அழைப்பவள், லண்டன்வாசிகள் என்னை லட்ஸ் என்கிறார்கள், அப்பாவிற்கும் மற்ற நண்பர்களுக்கும் மணா, ஆனால் அம்மா என்னை லட்சுமா என்று அழைக்கையில் அது பெண் பெயர் போலவே இருக்கிறது, அம்மா அப்படி அழைக்கையில் அதில் ஒரு தனியான பிரியம் கலந்திருக்கும்,

அடுத்த முறை ஊருக்கு வரும்போது உன்னையும் லண்டனுக்கு அழைச்சிட்டு வர்றேன்மா என்றேன்

இல்லைடா, நானா.  தனியா லண்டனுக்கு வரணும்னு ஆசை, அதுவும் கப்பல் போகணும்னு ஆசை என்றாள் அம்மா

எனக்கு புரிந்துவிட்டது, இந்த ஆசையின் அடிநாதமாக இருப்பதும் காந்தியின் மீதான பற்றுதல், பத்தொன்பது வயதில் மொழி தெரியாமல் லண்டனுக்கு படிக்க போன காந்தியின் மனதை தானும் அனுபவித்து பார்க்க விரும்புகிறாள், அப்படி என்ன காந்தியின் மீது கிறுக்குதனம்,

நான் சிரித்தபடியே இப்போ கப்பல் பயணம் கிடையாதும்மா, நீ பிளைட்ல தனியா வரலாம் என்றேன்

அப்படித்தான் அம்மா தனி ஆளாக லண்டனுக்கு பயணம் செய்து வந்திறங்கினாள், முற்றிய முதுமை அவளுக்கு தனியான சோபையை தந்திருந்த்து, ஆரஞ்சு நிற சால்வை ஒன்றினை போர்த்தியபடி வெளிர்சிவப்பு வண்ண சேலையை அழகாக உடுத்தியபடியே கொக்கின் வெண்மை போன்ற தலைமுடியுடன், சோகை படிந்த முகத்துடன் அம்மா இறங்கி மெதுவாக கண்ணாடி கதவுகளை தாண்டி நடந்துவந்தாள்,

அவளது கண்களில் ஒரு துளி பயமில்லை, கடந்து செல்லும் பயணிகள் யாரையும் அவள் ஏறிட்டு கூட பார்க்கவில்லை, நிதானமாக, மெதுவாக அவள் வெளியேறும் வாசலை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்த காட்சி என் மனதில் அப்படியே பதிவாகியிருக்கிறது

இமிகிரேஷனில் ஏதாவது கேட்டார்களா என்று இறுக்கமான குரலில் கேட்டேன்

எதற்காக இந்த பயணம் என்று கேட்டார்கள், நான் சும்மா என்று சொன்னேன், இமிகிரேஷன் அதிகாரி  சிரித்தபடியே சும்மா லண்டனுக்கு வருகின்றவர்கள் இதை விட்டு ஒரு போதும் திரும்பி போக மாட்டார்கள், நீங்களும் அப்படி ஆகப்போகிறீர்கள் பாருங்கள் என்றார்

எனது நினைவுகள் என்னை வெளியூரில் தங்கவிடாது என்று சொன்னேன், அவர் வியப்புடன் கையை உயர்த்தி நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை என்றார், அவ்வளவு தான் நடந்தது என்றபடியே காரின் கண்ணாடி வழியாக தெரியும் பரபரப்பான லண்டன் வீதிகளை பார்த்தபடியே வந்தார்,

அப்பா இறந்து போன கடந்த பத்து வருஷங்களாக அம்மா நாள் முழுவதும் படித்துக் கொண்டேயிருக்கிறாள், தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் மாறிமாறி படிக்கிறாள், சில இரவுகளில் அவள் படிப்பதை காணும் போது ஏதோ பரிட்சைக்கு படிப்பது போல இருக்கும், சில சமயம் நாற்காலியில் சாய்ந்து கொண்டு மடியில் புத்தகத்தை வைத்து கொண்டு தனக்கு தானே பேசிக் கொண்டிருப்பாள், அம்மாவிற்கென தனியான உலகம் ஒன்றிருக்கிறது, அவள் தன்னை சுற்றி தானே ஒரு அரூபவலையை பின்னிக் கொண்டுவிட்டாள்

லண்டனில் அம்மா என்னுடன் இரண்டரை மாதம் தங்கியிருந்தாள், தனியாக அவளாக டியூப் ரயிலில் பயணம் செய்து காந்தி படித்த யூனிவர்சிட்டி காலேஜ், காந்தி நடந்த வீதிகள், காந்தி உறுப்பினராக இருந்த வெஜிடேரியன் சங்கம் என்று ஒவ்வொன்றாக தேடி பார்த்துக் கொண்டிருந்தாள், அதைப்பற்றி என்னிடம் அதிகம் பேசிக் கொண்டது கிடையாது, சிலவேளைகளில் எனது மனைவி ராகேலிடம் காந்தியை பற்றி பேசியிருக்க்கூடும்,

ராகேலும் அம்மாவும் பேசிக் கொள்வது வேடிக்கையாக இருக்கும், அம்மா ராகேலை ஒரு பள்ளிசிறுமியை நடத்துவது போலவே நடத்தினாள்,

ஒரு நாள் ராகேல் என்னிடம் கேட்டாள்

பொதுவாக இந்தியப்பெண்கள் அதிகம் தலையை ஆட்டுவார்கள், உன் அம்மா பேசும்போது அப்படியில்லையே அது ஏன்

நான்  அப்போது தான் அப்படி ஒரு விஷயமிருப்பதை கவனித்தேன்,  என்ன சொல்வது எனப் புரியாமல் சிரித்தபடியே பெண்கள் எந்த ஒன்றையும் உன்னிப்பாக கவனிக்கிறீர்கள், உன் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை என்றேன்

ராகேல் சொன்னான்

உன் அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கும் போது பலநேரங்களில் பயமாக இருக்கிறது, அவரது கண்களில் சொல்லப்படாத விஷயங்கள் புதையுண்டுகிடக்கின்றன,  அவர் ஒரு விசித்திரமான  பறவை.

அம்மா ஒரு விசித்திரமான பறவை என்று ராகேல் சொன்னது எனக்கு பிடித்திருந்தது, நானும் அப்படி உணர்ந்திருக்கிறேன், வெறும் பறவை இல்லை, காந்தியைத் தேடும் பறவை,

அம்மா காந்தி வழியாக என்ன தேடுகிறாள் என்று தெரிந்து கொள்வதற்காக ஒரு நாள் அவளுடன் நானும் வருவதாக சொன்னேன், அம்மா மறுக்கவில்லை, இருவரும் ஒன்றாக ரயில் பிடித்துப் போய் டோவர் வீதியில் உள்ள உணவகம் ஒன்றில் காபி அருந்திவிட்டு அம்மா வழக்கமாக செல்லும் பழைய நூலகம் ஒன்றிற்கு சென்றோம்,

அம்மா பாதியில் விட்டுவந்த ஒரு புத்தகத்தை எடுத்துவந்து மௌனமாக வாசிக்க துவங்கினாள், அம்மா உட்கார்ந்திருந்த ஜன்னலில் இருந்து லண்டன் நகரம் ஒளிர்வது தெரிந்த்து, படிப்பதற்காக அந்த இடத்தை அம்மா தேர்வு செய்திருக்கவில்லை, அவள் லண்டன் நகரின் இயக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக அவதானிக்கிறாள்,

இந்த நகருக்கு என்றே ஒளிரும் மஞ்சள் வெளிச்சத்தை, ஈரம் படிந்த காற்றை அவள் தனக்குள் நிரப்பிக் கொள்கிறாள், அம்மா நீண்ட நேரம் மௌனமாக இருந்துவிட்டு சொன்னாள்

“காந்தி லண்டனுக்கு வந்த போது தனது தாயை விட்டு விலகி வந்திருப்பதை அதிகம் உணர்ந்திருப்பார், இந்த நகரம் பிரிவை அதிகமாக உணரவைக்கிறது “

நிஜம் நானும் அப்படி உணர்ந்திருக்கிறேன், பல்கலைகழகத்தில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது திடீரென ஒரு பனிக்கட்டி உடைவது போல மனதிற்குள் ஏதோவொரு கடந்தகால சம்பவம் உடைபட்டு பிரிந்து போன உறவுகளை பற்றிய நினைவுகள் பீறிடத்துவங்கிவிடும், அந்த மனநிலை ஒன்றிரண்டு நாட்களுக்கு தீவிரமாக இருந்து பின்பு வடிந்து போய்விடும்,

அதைப்பற்றி ராகேல் சொல்வாள்

இந்தியர்கள் அதிகம் கடந்த காலத்தை பற்றி  நினைக்கிறார்கள், வருத்தபடுகிறார்கள், அது தான் அவர்களின் பலமும் பலவீனமும்,

அவள் சொல்வது உண்மை, ஆனால் அது வெறும் வருத்தமில்லை, ஆழமான தன்னுணர்வு, ஒரு தோழமை, சொல்லால் பகிர்ந்து கொள்ளமுடியாத ஒரு நிலை,  அது போன்ற நாட்களில் ராகேலுடன் நான் ஒரு வார்த்தை கூட பேசமாட்டேன்,

அவள் அதை புரிந்து கொண்டிருப்பாள், அவளைப்போன்ற யூதப்பெண்களுக்கு ஆண்களின் பேச்சை விட மௌனம் அதிகமாக பிடிக்கிறது, எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது

அம்மா  நூலகத்தில் வைத்து என்னிடம் சொன்னாள்

காந்தி தனது தந்தையை பற்றி அதிகம் நினைவுகள் இல்லாதவர், தந்தையின் நிழலில் இருந்து முற்றிலும் விடுபட்டவராக தன்னை உணர்ந்தவர், அவரும் ஒரு நல்ல தந்தையில்லை. ஆனால் தாயோடு நெருக்கமாக இருந்திருக்கிறார், தன்னை ஒரு பெண்ணாக உணர்ந்த மனிதராகவே அவரையும் புத்தரையும் பார்க்கிறேன், இருவரிடமும் நிறைய ஒப்புமைகள் இருக்கின்றன, காந்தியிடம் இந்திய பெண்களின் அகமே உள்ளது, அது வலிமையானது, எளிதில் வீழ்ந்துவிடாதது, உண்ணாவிரதம் இருப்பதை ஆயுதமாக பயன்படுத்துகிறார் என்றாலே அது பெண்மை உருவாக்கிய எதிர்ப்பு வடிவம் தானே என்றாள்

அம்மா ஆழ்ந்து பேசுகிறாள், புத்தகங்கள் அவளுக்கு நிறைய கற்றுதந்திருக்கின்றன, எது எனக்கு வெறும் தகவலாக இருக்கிறதோ, அது அவளுக்கு அனுபவமாக மாறியிருக்கிறது என்று மட்டும் புரிந்த்து,

மற்றபடி காந்தி என்னை பெரிதாக வசீகரிக்கவில்லை

அதன்பிறகு ஒரு நாள் அம்மாவும் நானும் நடந்தே விக்டோரியா பார்க்கிற்கு போனோம், அம்மா அன்று தான் வார்தாவிற்கு தான் ஒடிப்போன கதையை முழுமையாக சொன்னாள்

••

அப்போது அம்மாவிற்கு வயது பத்தொன்பது வயது நடந்து கொண்டிருந்தது. பதினாலு வயதில் அவளுக்கு திருமணம் நடந்துவிட்டது, திருமணத்திற்கு பிறகு ஆறுமாதம் அவள் அம்மாவீட்டிலே இருந்தாள், அந்த நாட்களில் அப்பா சால்ட் இன்ஸ்பெக்டராக மரக்காணத்தில் வேலையில் இருந்தார்,

முற்றிய கோடைகாலத்தில் அம்மாவை அழைத்துக் கொண்டு அப்பா கடற்கரையில் தனக்கு ஒதுக்கபட்ட வீட்டிற்கு புதுக்குடித்தனம் போயிருந்தார், ஆள் அரவமற்ற அந்த வீடு, மினுக்கும் உப்பளங்கள், உப்பு காய்ந்து உருகும் மணம், கடற்காகங்களின் பீதியூட்டும் குரல், கொதிக்கும் வெயில் எல்லாமும் ஒன்று சேர்ந்து இரண்டுவாரத்திலே அம்மாவின் உடல்நிலையை மோசமாக்கியது, இருமலும் காய்ச்சலும் ஒன்று சேர்ந்து வாட்டின, உறங்க முடியாமல் இரவெல்லாம் இருமிக் கொண்டே கிடந்தாள், இதை சகித்துக் கொள்ள முடியாமல் அப்பா அவரது அத்தைவீடான கொல்லத்தில் கொண்டு போய் அம்மாவை விட்டுவந்தார்,

அங்கே இருக்கும் போது தான் முதன்முறையாக அம்மா சுதந்திர போராட்ட ஊர்வலங்களை காணத்துவங்கியிருந்தாள், அவளும் நாராயணி என்ற பெண்ணுமாக சாலையில் கொடிபிடித்தபடியே செல்லும் காங்கிரஸ் காரர்களுக்கு வாழ்த்து சொல்வார்கள், ஒரு நாள் இருவரும் பகவதி கோவிலில் போய் காங்கிரஸ் ஜெயிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்கள், அதன்பிறகு தான் அம்மா  காந்தியை பற்றி கேள்விபடத்துவங்கினாள், அதுவும் நீலம்மை வழியாக தான் கேட்டறிந்தாள்,

நீலம்மை ஒரு பணிப்பெண், அவள் காந்தியை பற்றி சொல்லும் போது வியப்புடன் சொன்னாள்

சுசிலா கேட்டியோ, அந்த மனுசன் ஆம்பளைக யாரும் கள்ளுக்குடிக்க கூடாதுனு சொல்றார், அது ஒண்ணு போதும் அவர் நல்லவர்ங்கிறதுக்கு, போலீஸ்கிட்ட அடிவாங்கி ஜெயிலுக்கு போயிருக்கிறார், தான் துணியை தானே துவைச்சிகிடுறார், கழிப்பறையை கூட தானே சுத்தப்படுத்துறதா தளியத் முதலாளி சொன்னார், அப்படி ஒரு மனுஷன் நடந்துகிடுறார்னா, அவர் தானே உண்மையான தலைவர்,

நீலம்மை வழியாக காந்தியை பற்றி கேட்டு அறிந்த இரண்டுநாட்களுக்கு பிறகு உள்ளுரில் நடந்த காங்கிரஸ் கூட்டத்திற்கு ரகசியமாக ஒளிந்து போய் கேட்டாள், அதில் தான் காந்தியை பற்றிய பாடலை முதன்முறையாக கேட்டாள், உருக்கமான பாடலது, அந்த பாடல் காந்தியின் பற்றிய ஒரு பிம்பத்தை அவள் மனதிற்குள் உருவாக்கியது,

காந்தி என்பவர் ஒரு மீட்பர், வெள்ளைகாரர்களிடம் இருந்து இந்திய ஜனங்களை மீட்பதற்காக பாடுபடுகின்றவர், எளிமையான மனிதர், ஒயாத போராட்டக்காரர்,  அன்றைய கூட்டத்தில் கூட காந்தியை பற்றி பலரும் புகழ்ந்து, வியந்து பேசினார்கள், கேட்க கேட்க காந்தியை உடனே பார்க்க வேண்டும் போலிருந்தது

கொல்லத்தில் இருந்த போது அம்மா முதல்முறையாக கர்ப்பிணியானாள், உடனே அவளை சில மாதங்கள் அவளது தாய்வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள், அங்கே அவள் சீனுவாச மாமாவிடம் இருந்து காந்தியை பற்றி பிரசுரம் ஒன்றினை வாங்கிவந்து படிக்க துவங்கினாள், படிக்க படிக்க அவளுக்குள் காந்தி என்ற மனிதன் வேர்விட்டு வளரத்துவங்கினார், காந்தியை பற்றி  அவளுக்குள் ஏதேதோ கேள்விகள், எழுந்தன, அவற்றை யாரிடம் கேட்டு விளக்கம் பெறுவது என்றே தெரியவில்லை,

இதற்குள் அவளை மறுபடியும் மரக்காணம் அழைத்துப் போனார், அப்பா, இடமாற்றம், அப்பாவின் தீராத காமஇச்சை இரண்டும் அவளை மிகவும் சோர்வடைய செய்தன, தூரத்து கடற்கரையின் ஒயாத சப்தம், உக்கிரமான வெயில் இரண்டும் அவளுக்கு தலைவலியை அதிகமாக்குவதாக இருந்தது, வெறுமையான பகல்கள், அர்த்தமில்லாத பொழுதுகள் என்று நீண்டன நாட்கள், இதற்கிடையில்  அவளது கர்ப்பம் கலைந்து போனதுடன் அதிக ரத்தம் போக்கும் ஏற்பட்டு அவள் நலிவுறத் துவங்கினாள், அப்பா அவளை போன்ற ஒரு உதவாக்கரையை கட்டிக் கொண்டு தான் அவதிப்படுவதாக மாமனாருக்கு தந்தி அனுப்பி உடனே கூட்டிப்போக செய்தார்

ஒன்றரை வருஷம் அவள் ஊரிலே வாழவெட்டியாக இருந்தாள், அந்த நாட்களில் அவளை மனச்சோர்வில் இருந்து காப்பாற்றியவர் காந்தி, அவள் சதா காந்தியை பற்றிய செய்திகளை கேட்டறிந்து கொண்டும் ராட்டை நூற்றுக்கொண்டுமிருந்தாள், இடையில் ஒருமுறை மரக்காணத்தில் இருந்து அப்பா வந்து சமாதானம் பேசி அவளை அழைத்துக் கொண்டுபோனார், அவர்கள் மதுரை ரயில்கெடி போவதற்குள் வழியில் சண்டை வந்து அப்பா ரோட்டிலே அம்மாவை அடித்து வளையல்களை உடைத்து போட்டதுடன் அவளை அங்கேயே தனியே விட்டுவிட்டு தனி ஆளாக மரக்காணத்திற்கு கிளம்பி போய்விட்டார்

அப்பாவின் கெடுபிடியும் கோபமும் ஆத்திரமும் அம்மாவின் மனநிலையை ஒடுக்க துவங்கின, மனநலம் பாதிக்கபட்டவரை போல அப்பாவின் பெயரை சொன்னாலே நடுங்க துவங்கினாள், அந்த நாட்களில் சீனுமாமா அவளை நூலகத்திற்கு அழைத்துப்போய் புத்தகம் எடுத்துவர உதவி செய்தார், அது தான் அம்மாவின் சகல மாற்றங்களுக்குமான முதற்படி,  வள்ளல் ரத்னம் செட்டியார் நூலகத்திற்கு போய் வரத்துவங்கியது அவளுக்கு ஆசுவாசம் தருவதாக இருந்தது

காந்தியை காண வேண்டும் என்ற ஆசை அவளுக்குள் புகைந்து கொண்டிருந்த போது அப்பா இடமாற்றம் ஏற்பட்டு தூத்துக்குடி வந்து சேர்ந்தார், தனிமையும் பதவி உயர்வும் அவருக்குள் சில மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தன, மறுபடி அம்மா கர்ப்பிணி ஆனாள், இந்த முறை பெண் குழந்தை இறந்தே பிறந்த்து, அதை அப்பா ஏறிட்டு கூட பார்க்கவில்லை, அப்படியே புதைத்துவிடும்படியாக சொன்னார், அம்மா தனது குழந்தையை நினைத்து பல நாள் அழுதபடியே கிடந்தாள், அந்த நாட்களில் படுக்கை சுகம் தவிர வேறு எதற்கும் அப்பா அவளை நாடவில்லை,

மறுமுறை கர்ப்பிணியானதும் வீட்டில் பாட்டு கேட்பதற்கு கிராமபோன் பெட்டி ஒன்றினை வாங்கி வைத்தார், அம்மாவிற்கு புத்தகம் மேலிருந்த விருப்பம் இசையின் மீது கூடவில்லை, அவள் புத்தகம் படிக்க மட்டுமே ஆசைப்பட்டாள், அப்பா அதை அனுமதிக்கவேயில்லை, பருப்பு, கடுகு சீரகம், புளி வாங்கி வரும் காகிதங்களை தவிர வேறு காகிதங்கள் அந்த வீட்டில் கிடையாது, அப்பா உள்ளுர் நூலகத்திற்கு  போய் வருவதற்குள் அவளை அனுமதிக்க வில்லை, அப்போது தான் பெரிய அண்ணன் பிறந்தான், அவன் கைக்குழந்தையாக இருந்த போது  அண்டை வீட்டிற்கு வந்த ஜெபமேரியின் ஸ்நேகிதம் கிடைத்தது, அவளுக்காக ஜெபமேரி புத்தகங்ளை வாங்கிவருவாள், அவற்றை அவளது வீட்டில் வைத்தே படிக்க வேண்டிய கட்டாயம் இருந்த்து, ஒரு நாள் ஜெபமேரி தனது சகோதரன் நாக்பூரில் இருப்பதாகவும் அவனை பார்த்தால் காந்தியை பார்க்க வார்தா ஆசிரமத்திற்கு அழைத்துப்போய் காட்டுவான், அதில் ஒரு பிரச்சனையும் இருக்காது என்றாள்

அப்பா வேதாரண்யத்திற்கு அலுவலக கேம்பிற்காக கிளம்பிய போது அம்மா மனதில் வார்தாவிற்கு போய்விட வேண்டும் என்ற எண்ணம் முளைவிட துவங்கியிருக்க வேண்டும், அப்பா போன மறுநாள் தனது கைக்குழந்தையை ஜெபமேரியிடம் ஒப்படைத்துவிட்டு கோவிலுக்கு போய்வருவதாக கிளம்பினாள்

அதன்பிறகு எப்படி பஸ் பிடித்து மதுரை வந்து அங்கிருந்து ரயிலேறி சென்னை வந்து இன்னொரு ரயில் பிடித்து நாக்பூருக்கு போய் ஜெபமேரியின் சகோதரன் தாவீது வீட்டிற்கு போய் சேர்ந்தாள் என்பது அவளுக்கு நினைவில்லை, ஒரு விசை, கட்டுபடுத்தமுடியாத வேகம், அவளை இழுத்துக் கொண்டு போய்விட்டிருக்கிறது,

தாவீது அவளை இரவு தனது வீட்டில் தங்க சொல்லிய போது கூட தான் காந்தியை சந்திக்காமல் எங்கும் தங்க மாட்டேன் என்று பிடிவாதம் செய்திருக்கிறாள், இரவிலே அவர்கள் கிளம்பி வார்தாவிற்கு போய்விட்டார்கள், ஆனால் ஆசிரமத்தில் அனைவரும் ஒன்பது மணிக்கு உறங்க போய்விடுவார்கள் என்பதால் அது அமைதியாக இருந்த்து,

எளிய குடில்களுடன் இருந்த அந்த கிராமப்புற இடத்தை அம்மா திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள், இந்த இருட்டிற்குள் தான் காந்தி வசிக்கிறாரா, வார்தா ஆசிரமம் என்பது இவ்வளவு ஒதுக்குபுறமான ஒன்று தானா, அவர்கள் ஆசிரமவாசியாக இருந்த சியாம்லாலை சந்தித்தார்கள், அவர் விடிகாலையில் பிரார்த்தனையின் போது பாபுஜியை சந்திக்கலாம் என்று சொன்னார்

அன்று தான் பாபுஜி என்ற சொல்லை அவள் முதன்முறையாக கேள்விபடுகிறாள், அவளுக்கு அன்றிரவு தூக்கமில்லை, தனது அருகாமையில் உள்ள ஏதோவொரு குடிலில் காந்தி உறங்கிக் கொண்டிருக்கிறார், பொழுதுவிடிந்தவுடன் அவன் முன்னால் போய் கைகூப்பி வணங்கி தொழு வேண்டும் என்று தோணியது

விடிகாலை நான்கரை மணிக்கு ஆசிரமவாசிகள் எழுந்துவிடுவார்கள்,  நாலே முக்காலிற்கு காலை பிரார்த்தனை துவங்கிவிடும், அதற்குள் குளிர்ந்த தண்ணீரில் குளித்துவிட்டு நடுங்கிய உடலுடன் அம்மா பாபுஜியை பார்ப்பதற்காக காத்துக் கொண்டிருந்தாள்

அந்த ஆசிரமத்தில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் இருந்தார்கள், அதில் ஒரு வெள்ளைகாரப்பெண் தெரிந்தார், அவள் எப்படி காந்தியோடு இணைந்து வேலை செய்கிறாள் என்று அம்மாவிற்கு வியப்பாக இருந்த்து, அவளை போலவே காந்தியை பார்ப்பதற்காக இரண்டு தொழுநோயாளிகள் நின்றிருந்தார்கள், அவர்களை யாரும் வெறுப்புடன் விலக்கவில்லை, அன்பாகவே நடத்தினார்கள், பர்ச்சூரி குடிலில் இன்னமும் வைத்திய சிகிட்சைகள் துவக்கபடவில்லை, மனோகர்ஜி திவான் அங்கே இலவச சிகிட்சைகள் செய்து கொண்டிருந்தார்

மகாதேவ் குடில் என்றொரு சிறிய குடில் காந்தியின் குடிலுக்கு அருகில் இருந்த்து, அதில் தான் மகாதேவ் தேசாய் தங்கியிருந்தார், அவர் காந்தியின் உதவியாளர், தீவிர பற்றாளர்

இன்னமும் முழுமையாக விடியாத அந்த இளங்காலையில் பாபுஜி பிரார்த்தனைக்காக எழுந்து வந்திருந்தார்,  முதுமையின் அழகுடன் கூடிய அவர் முகத்தில் உறக்கத்தின் சுவடேயில்லை, அதே மாறாத புன்னகை, குழந்தையின் துறுதுறுப்பு, அவருடன் ரஹீம் என்ற சேவாகிரகவாசி உடன் வந்து கொண்டிருந்தார், காந்தி தனது ஆசிரமவாசிகளை அக்கறையுடன் விசாரித்தபடியே நடந்து வந்த போது தாவீது, அம்மாவை அறிமுகப்படுத்தி உங்க்ளை பார்ப்பதற்காக வீட்டை விட்டு ஒடிவந்திருக்கிறாள் என்று ஹிந்தியில் சொன்னார்

பாபுஜி வியப்புடன் கேட்டார்

உனக்கு திருமணம் ஆகிவிட்டதா

அம்மா பதில் பேசாமல் நின்று கொண்டிருந்தாள், தாவீது  சொன்னார்

திருமணமாகி குழந்தையும் இருக்கிறது, அவளுக்கு உங்களை காண வேண்டும் என்ற ஆசை.

என்னிடம் என்ன இருக்கிறது நான் ஒரு சேவகன், பணியாளன், என்றபடியே அம்மாவை அருகில் அழைத்து ஆறுதலாக தலையை தொட்டிருக்கிறார்

அம்மாவிற்கு அந்த ஸ்பரிசம் அவளது மனவேதனையை உடைத்துக் கொண்டு கண்ணீரை பெருகச்செய்தது, அந்த கண்ணீரின் வெதுமையை காந்தி புரிந்திருக்க கூடும், அவர் மெதுவான குரலில் சொன்னார்

உன்னை போல ஆயிரமாயிரம் இந்திய பெண்கள் சொல்லமுடியாத வேதனைகளில் அழுது கொண்டிருக்கிறார்கள், அம்மா உங்களை போன்றவர்களுக்கு அந்த கடவுளால் மட்டுமே ஆறுதல் தர முடியும், ஒன்று மட்டும் சொல்வேன், எனது மனஉறுதியும், போராட்ட குணமும் பெண்களிடம் இருந்து நான் கற்றுக் கொண்டது, உன்னை என் மகளை போலவே நினைக்கிறேன், இது நம் அனைவருக்குமான வீடு, உன் விருப்பமான நாள் வரை நீ இங்கே இருக்கலாம், ஆனால் சொகுசாக இங்கே வாழமுடியாது, வேலை செய்ய வேண்டும், சமூக சேவை செய்ய வேண்டும், நோயாளிகளுக்கு மருந்திட வேண்டும், உன்னால் முடியுமா

பாபுஜியின் ஒரு சொல்கூட அம்மாவிற்கு புரியவில்லை, ஆனால் அவள் அத்தனைக்கும் சம்மதம் தெரிவித்து தலை அசைத்தாள், பாபுஜி சிரித்தபடியே வா மகளை பிரார்த்தனையுடன் நாளை துவங்குவோம் என்று அழைத்துக் கொண்டு போனார்

அப்படிதான் அம்மா வார்தா ஆசிரமத்திற்குள் நுழைந்தாள், அம்மா எங்கே போனாள் என்று அப்பா தேடவேயில்லை, அவ்வளவு கோபம், ஒடுகாலி நாய் என்று திட்டியபடியே அவர் குழந்தையை வளர்ப்பதற்காக தனது சகோதரி வீட்டில் ஒப்படைத்துவிட்டு அம்மாவை மறந்தே போனார்,

இரண்டரை மாதகாலம் அம்மா காந்தி ஆசிரமத்தில் வாழ்ந்திருக்கிறாள், காந்தியின் அருகாமை அவளுக்கு நிறைய கற்றுதந்திருக்கிறது, அவளது செயல்களில் பேச்சில், பார்வையில் காந்தியின் மென்மை கலந்துவிட்டிருக்கிறது, அம்மா தொழுநோயாளிகளுக்கு சிகிட்சை தரும் செவிலியாக வேலை செய்திருக்கிறாள், மீராபென் அம்மாவிற்கு ஆங்கிலம் கற்றுதந்திருக்கிறாள், ஒருநாள் அம்மாவும் மீரா பென்னும் கோல்வாடா என்ற ஊரில் உள்ள தேவாலயத்திற்கு போன போது மீரா பென் அங்கிருந்த பியானோவில் பீதோவனின் உன்னத சங்கீதம் ஒன்றினை வாசித்து கேட்கையில் அம்மா அழுதிருக்கிறாள், மீரா பென் அம்மாவின் கைகளை பற்றிக் கொண்டு பீதோவன் இசையின் கடவுள்,  காந்தி சேவையின் கடவுள் என்று சொல்லியிருக்கிறாள், அம்மா அங்கிருந்த இரண்டரை மாதங்களில் ராட்டை நூற்கவும்  ஆசிரம நடைமுறைக்கும் பழகிவிட்டிருந்தாள்

ஆசிரமத்தில்  நாலரை மணிக்கு எழுந்து கொள்ள வேண்டும், நாலேமுக்காலுக்கு பிரார்த்தனை, ஐந்தே கால் மணி முதல் ஒரு மணி நேரம் படிப்பு, அதன் பிறகு ஆறரை முதல் ஏழரை வரை சமையற்பணிகள், பாத்திரங்களை துலக்குவது, எட்டு மணிக்குள் காலை உணவு, அதன்பிறகு தோட்டவேலை, மருத்துவ சேவை பனிரெண்டு மணிக்கு மதிய உணவு, சாப்பிட்ட பாத்திரங்களை தானே கழுவி வைக்க வேண்டும், அதன்பிறகு ஒய்வு,  பின்பு இரண்டரை முதல் ராட்டை நூற்பது, மீண்டும் படிப்பு, கூட்டுவிவாதம், சில சமயங்களில் சொற்பொழிவு நடைபெறும், மாலை ஐந்தரை மணிக்குள் இரவு உணவு முடிந்துவிடும், சூரியன் அஸ்தமனம் ஆனதும் இரவு பிரார்த்தனை துவங்கிவிடும், பிறகு பரஸ்பரம் பேசிக் கொள்வது, சில வேளைகளில் இசை கேட்பது நடக்கும், ஒன்பது மணிக்கு உறங்கிவிடுவார்கள்

இந்த ஒழுங்கும் எளிமையும் அம்மாவின் மனதை முற்றிலும் மாற்றியிருந்தன, அம்மா தனக்கு கடந்த காலமென ஒன்று இருந்ததை மறந்து போயிருந்தாள், ஒரு நாள் அம்மா காந்தியின் அறைக்குள் தேசாய் கொடுத்து அனுப்பி கடிதம் ஒன்றினை கொடுக்க சென்ற போது பார்த்தாள், காந்தி இரண்டு கிளிஞ்சல்களை  தனது மேஜையில் காகிதம் பறந்து போகாமல் வைத்திருந்தார்,

பாபுஜி இந்த கிளிஞ்சல்கள் அழகாக இருக்கின்றன என்று சொன்னாள்

அதற்கு அவர் இவை போர்பந்தரில் உள்ள கடற்கரையை  சேர்ந்தவை, சிறுவயதில் இருந்தே இந்த கிளிஞ்சல்களை  கூட வைத்திருக்கிறேன், இந்த கிளிஞ்சல்களை  என்னோடு லண்டனுக்கு கொண்டு சென்றிருந்தேன், இவை தான் எனது துணை, இன்றுவரை இவை என் ஊரை, அதன் நினைவுகளை என்னோடு மௌனமாக பகிர்ந்து கெர்ண்டிருக்கின்றன, ஒவ்வொரு மனிதனும் தனது கடந்தகாலத்தினை நினைவுபடுத்தும் ஒரு பொருளை தன்னோடு எப்போதும் வைத்துக் கொண்டிருக்கிறான், அதன் மகத்துவம் மற்றவர்களுக்கு புரியாது என்று சொல்லி சிரித்தார்

பின்பு ஒரு நாள் அப்பா, சீனுவாச மாமாவுடன் வார்தா ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்திருந்தார், அவர்களுடன் ஊருக்கு போக மறுத்த அம்மாவை பிடிவாதமாக அப்பாவும் சீனுவாச மாமாவும் அழைத்துக் கொண்டு போனார்கள், அம்மா ஆசிவாங்குவதற்காக பாபுஜியிட்ம் போனாள்

காந்தி அமைதியான குரலில் சொன்னார்

குடும்ப அமைப்பிற்குள் உள்ள வன்முறையை என்னால் மாற்றவே முடியவில்லை,  தோற்றுப்போன மனிதனாகவே என்னை உணருகிறேன், பெண்களின் முழுமையான பங்களிப்பும் ஆதரவும் இல்லாமல் இந்தியாவில் எந்த பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்திவிட முடியாது என்பதை உணர்கிறேன், ஒரு தாய் மகளிடம் சொல்வதை போலவே சொல்கிறேன், நெருக்கடிக்குள் வாழ்வது ஒரு சவால், அதை எதிர்கொண்டே ஆக வேண்டியிருக்கிறது, இந்த சேவகனிடம் உன்னை போன்ற தூய உள்ளம் கொண்ட பெண்ணுக்கு தருவதற்கு வேறு எந்த ஆலோசனையும் இல்லை, ஆனால் நீயும் மற்றவர்களும் எனது செயல்பாடுகளின் மீது உருவாக்கி வைத்துள்ள நம்பிக்கையில் நான் என்றும் உறுதியாக இருப்பேன், இந்த நம்பிக்கையை ஏற்படுத்தி தந்தவர்களில் நீயும் ஒருத்தி  என்பதால்  உனக்கு நன்றி கூறுகிறேன்,

அம்மா அழுதாள், முதல்நாள் பாபுஜியை பார்த்தபோது அழுததை விடவும் பலமாக அழுதாள், பாபுஜி அமைதியாக அவளை பார்த்துக் கொண்டிருந்தார், அம்மாவை அப்பா இழுத்துக் கொண்டு ஊருக்கு ரயிலேறிய இரவில் அப்பா ஒரு வார்த்தை கூட பேசவில்லை, ஊருக்கு வந்தபிறகு காந்தியை தேடி ஒடியதற்காக, அம்மாவின் கையை முறித்தது அப்பா  தந்த தண்டனையாக இருந்த்து

••

நடந்த எல்லாவற்றையும் சொல்லிவிட்டு முடிவில் அம்மா சொன்னாள்

லட்சுமா, ஏதோ நான் ஒருத்திக்கு இது அதியசமாக நடந்த சம்பவம் என்று நினைக்காதே, இதே அனுபவத்திற்கு உள்ளான பலநூறு பெண்கள் இருக்கிறார்கள், அவர்கள் காந்தியை மறக்கவேயில்லை, அவர்களுக்குள் காந்தி எப்போதும் ஒளிர்ந்து  கொண்டேதானிருக்கிறார்,

வீடு திரும்பி வரும்வரை அம்மா காந்தியை நோக்கி போனதை விடவும் அப்பா அம்மாவை மிக மோசமாக நடத்தியது என்னை உறுத்திக் கொண்டேயிருந்த்து, இதற்கு நான் மன்னிப்பு கேட்கலாமா என்று நினைத்தேன், இறந்து போன ஒருவர் மீதான கசப்புணர்வை எப்படி போக்கிக் கொள்வது என்று எனக்கு தெரியவில்லை,

அம்மாவும் ராகேலும் அன்றிரவு ஒன்றாக டிவியில் ஏதோவொரு தமிழ்படம் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள், அந்த அந்நியோன்யம் ஏனோ எனக்கு மிகவும் பிடித்திருந்தது,

அன்றிரவு படுக்கையில் ராகேலிடம் கேட்டேன்

உனக்கு காந்தியை பிடிக்குமா

இந்தியர்கள் காந்தியை காரணம் இல்லாமலே வெறுக்கிறீர்கள், அது ஒரு சிண்ட்ரோம், காந்தியை பலநேரங்களில் ஒரு டஸ்ட்பின் போல உபயோகிக்கிறீர்கள், அது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது என்றாள்

ஏன் அப்படி சொல்றே என்று கேட்டேன்

ராகேல் சொன்னாள்

நான் காந்தியை அதிகம் வாசித்ததில்லை, ஆனால் காந்தியின் புகைப்படத்தை பார்க்கும் போது ஏதோவொரு ஈடுபாடு உண்டாகிறது , களங்கமில்லாத காந்தியின் சிரிப்பை பாருங்கள், இப்படி சிரிக்க முடிந்த ஒரு மனிதன் நிச்சயம் உயர்வான வாழ்வையே வாழ்ந்திருப்பான் என்று உறுதியாக சொல்வேன், அவரைப்பற்றி நான் கேள்விப்பட்ட ஒன்றிரண்டு தகவல்களே அவரை என் விருப்பத்திற்குள்ளாக போதுமானதாக இருந்தது, ஒருவரைப்பற்றி நிறைய தெரிந்து கொள்ளும்போது அவரை உள்ளுற நமக்கு பிடிக்காமல் போய்விடுகிறது என்பது தான் உண்மை, காந்தி என்வரையில் ஒரு தூரத்து நட்சத்திரம் போல, அதன் ஒளி தான் என்னை வசீகரிக்கிறது, நெருங்கிச் சென்று அதை ஆராய்ச்சி செய்ய எனக்கு விருப்பமில்லை,

நான் ராகேலை கட்டிக் கொண்டேன்

பெண்கள் காந்தியை வேறுவிதத்தில்  அணுகுகிறார்கள், ஆழமாக புரிந்து கொள்கிறார்கள் என்பது மறுபடியும் நிருபணம் ஆனது போலிருந்த்து

மறுநாள் அம்மாவிடம் நான் காந்தியின் சுயசரிதை படிக்க விரும்புகிறேன் நூலகத்தில் இருந்து எடுத்து வாருங்கள் என்று சொன்னேன்

அம்மா சிரித்தபடியே சொன்னாள்

வேகமாக காந்தியை நோக்கி வருகிறவர்கள், வேகமாக வெளியேறி போய்விடுவார்கள்

நானும் சிரித்தேன், அம்மா காந்தியின் சத்திய சோதனையை நூலகத்தில் இருந்து கொண்டுவரவில்லை, லண்டனுக்கு வந்து இருந்து திரும்பிய ஆறேழு மாதங்களுக்கு பிறகு ஒருநாள் போனில் பேசும் போது அம்மாவிடம் சொன்னேன்

வார்தாவிற்கு ஒரு முறை போய்வர வேண்டும் நீயும் எங்களுடன் வரவேண்டும் என்று தோன்றுகிறது

உதிர்ந்த சிறகு பறவையோடு மீண்டும் ஒட்டுவதில்லை என்ற கவிதை வரி நினைவிற்கு வருகிறது என்றாள்,

காந்தி இல்லாத ஆசிரமத்திற்கு வருவதற்கு தயக்கமாக இருக்கிறதா என்று மறுபடி கேட்டேன்

முறிந்த எனது கை ஒவ்வொரு நாளும் காந்தியை நினைவுபடுத்திக் கொண்டுதானிருக்கிறது, வார்தாவிற்கு போய் நினைவுகளை புதுப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்றாள் அம்மா

அம்மா பேசி சம்மதிக்க வைக்க முடியாது என்பதால் அந்த திட்டத்தை கைவிட்டேன், ஆனால் அம்மா இறந்து போன பிறகு ராகேல் அதை மறுபடியும் நினைவூட்டினாள்

லட்ஸ், உன் அம்மாவிற்காக நாம் ஒருமுறை வார்தாவிற்கு போய்வருவோம், கடந்த காலத்தை நினைவுபடுத்த ஏதாவது ஒன்று தேவையாக தானே இருக்கிறது

அப்படித்தான் நானும் ராகேலும் வார்தாவிற்கு வந்து இறங்கினோம், இங்கே வந்து இறங்கிய நிமிசம் முதல் அவள் பரபரப்பாக புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்தாள்,

இது தான் வார்தா ஆசிரமம் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை, காந்தி ஆசிரமத்தை ஏன் இப்படி கைவிடப்பவர்களுக்கான ஆசிரமம் போல வைத்திருக்கிறார்கள், இங்கே உற்சாகமான செயல்பாடுகள் எதையும் காணமுடியவில்லையே,

அங்கே தங்கியருப்பவர்கள், வந்து போகிறவர்கள் ஒருவரிடமும் காந்தியின் மீதான ஈர்ப்பு துளியுமில்லை, அது ஒரு புகலிடம் போலவே இருந்தது

மாலை வரை நானும் ராகேலும் வார்தாவில் இருந்தோம், ,இரவு புறப்படும் போது ராகேல் சொன்னாள்

உண்மையில் இந்தியர்கள் விசித்திரமானவர்கள், அவர்கள் எதை நேசிக்க விரும்புகிறார்களோ, அதற்கு எதிராகவே செயல்படுகிறார்கள், இந்தியர்களின் பிரச்சனை காந்தியை அவர்களால் இன்னமும் புரிந்து கொள்ளமுடியவில்லை என்பதே, அவர்களுக்கு இப்படி ஒரு அதிசயம் எப்படி சாத்தியமானது என்று வியப்பாக இருக்கிறது, உண்மையில் காந்தியின் செயல்பாடுகள், எண்ணங்கள் நமது பலவீனங்களை., குறைபாடுகளை, மனசாட்சியை கேள்விகேட்கிறதே என்று பலருக்கும் கோபமாக இருக்கிறது, இன்றைய இளைஞர்களுக்கு காந்தி ஒரு விளையாட்டு பொம்மை, அவர்கள் உதைத்து விளையாட விரும்பும் ஒரு கால்பந்து, அவர்களுக்கு புதிராக இருப்பது எவ்வளவு உதைத்தாலும் இந்த பந்து திரும்ப திரும்ப அதன் இயல்பிற்கு வந்துவிடுகிறதே என்பது தான்,

இளம் இந்தியன் ஒவ்வொருவனும் தன் மனதிற்குள் காந்தியை கொல்ல விரும்புகிறான், ஆனால் அது எளிதான ஒன்றில்லை, அந்த தோல்வி அவனை கசப்பிற்குள்ளாக்குகிறது, அவரை கடந்து செல்ல ஒருவழி தானிருக்கிறது, அவரை புனிதமாக்கிவிடுவது, அவரை அதிமனிதாக்கிவிடுவது, அதை வெற்றிகரமாகவே செய்திருக்கிருக்கிறீர்கள்,, காந்தி இன்று வெறும் பிம்பமாக, சிலையாக மட்டுமே இருக்கிறார், அவரது  குரலை இந்த தலைமுறையினர் கேட்டதில்லை, ஒருமுறை அவரது குரலை கேட்டுபாருங்கள், எப்படி சொல்வது, தற்செயலாக ஒரு நாள் இணையத்தில் அவரது குரல்பதிவு ஒன்றினை கேட்டேன், என்னால் முழுமையாக கேட்கமுடியவில்லை, கண்ணீர் பெருக்கெடுத்துவிட்டது  ஹி இஸ் இம்பாசிபிள்,  எப்படி சொல்வது என்று தெரியவில், ஹி இஸ் ப்யூர்,  ஹி டச் அவர் ஹார்ட்,

அந்த மனிதர் என்ன சொல்கிறார் என்பது முக்கியமில்லை அவர் எதைச் சொல்லும் போதும் அதில் வெளிப்படும் பரிவும் தன்னமல்லமற்ற தூய்மையான எண்ணமும் தான் அவரை பிடிக்க செய்கிறது, சிலவேளைகளில் அவர் எனது தந்தையை போல இருக்கிறார், சில வேளைகளில் அவர் நாளை பிறக்க போகிற எனது பிள்ளையை போல இருக்கிறார்,  இதற்கு மேல் என்னால் சொல்லமுடியவில்லை

என்று அமைதி அடைந்தாள், ஆனால் அவளிடம் ஆழமான பெருமூச்சு வெளிப்பட்டது,

அந்த நிமிசம் நான் ராகேலிடமிருந்து எனக்கான காந்தியை உருவாக்கி கொள்ள துவங்கினேன், காந்தியை உதைத்து விளையாட விரும்புகிறவர்களில் நானும் ஒருவனாகவே இருந்தேன், காந்தியை வெறுத்தேன் என்று சொல்ல முடியாது, ஆனால் காரணம் இல்லாமல் காந்தியை விலக்குகின்ற பல்லாயிரம் மனிதர்களில் ஒருவராக இருந்தேன், காந்தியை நெருங்கிச் செல்வதற்கு தான் ஈடுபாடு தேவை, வெறுப்பதற்கு எவ்வளவோ காரணங்கள் முன்னதாக உருவாக்கி வைக்கபட்டிருக்கின்றன,

இந்தியாவில் இவ்வளவு மோசமான வசைகள், அவதூறுகள், தூஷணைகளை சந்தித்த மனிதர் வேறு யாராவது இருக்க கூடுமா என்ன, அப்படியிருந்தும் காந்தியின் வசீகரம் குறையவேயில்லை, ஒருவேளை காந்தியை வெறுப்பது என்பது  அவரை நேசிக்க செல்வதற்காக ஒரு பயிற்சி தானோ என்னவோ,

அந்தரங்கமாக ஒருவன் தனது மனதினுள் ஆழ்ந்து போனால் அவன் காந்தியின் நெருக்கத்தை உணரவே செய்வான், அவனால் காந்தியை வெறுக்கமுடியாது, அப்படி வெறுப்பதாக நடிப்பதற்கு தனக்குள்ளாக மன்னிப்பு கேட்டுக் கொள்வான், ஆனால் வெளியுலகிற்கு காந்தியை வெறுப்பவர்கள் தேவைப்படுகிறார்கள், அது காந்தியின் காலத்தில் இருந்தே தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது,

காந்தி ஒரு தூய்மையான காற்று, அது எப்போது உக்கிரம் கொள்ளும், எப்போது தணிவு கொள்ளும் என்று தெரியாது, ஆனால் அதன் வேகத்தில் தூசிகள், குப்பைகள் அடித்து கொண்டு போகப்படும் என்பது உண்மை தானே,

ஏதேதோ யோசனைகளுடன் நான் வாங்கியிருந்த சத்தியசோதனை நூலை பயணத்தில் வாசிக்க துவங்கியிருந்தேன், அதன் பிறகு இரண்டுவாரங்கள், மதுரை காந்தி ம்யூசியம், போர்பந்தர், சபர்மதி, டெல்லி என்று சுற்றிவிட்டு மீண்டும் லண்டன் திரும்பியிருந்தேன்

திடீரென காந்திய நூல்களாக எனது வீட்டில் நிரம்பத் துவங்கின, காந்தியைப்பற்றி பலரிடம் நான் பேசவும் விவாதிக்கவும் துவங்கினேன், ஒருநாள் ராகேல் என்னிடம் சொன்னாள்

லட்ஸ் நீ காந்தியை வழிபட ஆரம்பித்திருக்கிறாய், வழிபடுதல் பரிசோதனைக்கான முறையில்லை, அவரை புரிந்து கொள்ளவும் அது போல வாழவும் முயற்சி செய், உன் அம்மாவை போல,

காந்தி தனது புத்தகத்திற்கு  The Story of My Experiments with Truth என்று பெயரிட்டிருக்கிறார்,    Experiment என்பது வெறும் சொல் கிடையாது, அது ஒரு, செயல்பாடு, அறிவியல்பூர்வமான வேலை, காந்தி என்ற மனிதனுக்குள் ஒரு விஞ்ஞானியிருக்கிறார், அவர் தொடர்ந்து மனிதனை ஆராய்ந்து கொண்டேயிருக்கிறார், இந்தியர்கள் பொதுவில் உடலை மர்மபடுத்தவே விரும்புகிறார்கள், , அப்படி நடந்து கொள்ளாத முதல் இந்தியனாக காந்தியை மட்டுமே கருதுகிறேன்,

காந்தி கைத்தடியை ஊன்றி நடப்பதில்லை, கையில் அதை துணையாக தான் வைத்திருக்கிறார், அவருக்கு கைத்தடி என்பது வேகத்தை அதிகப்படுத்தும் ஒரு கருவி

லட்ஸ் இருப்பை விட இன்மை தான் அதிகம் நினைவுகளை தூண்டிவிடுகிறது, காந்தி விஷயத்தில் அது தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது என்று சொல்லி சிரித்தாள்

அந்த சிரிப்பின் ஊடாக அம்மாவின் புன்னகையும் சேர்ந்து வெளிப்படுவதாகவே எனக்குத் தோன்றியது ,அவளை இறுக்கி கட்டிக் கொண்டேன்

••••

உயிர்மை இதழில் வெளியானது

Gayathri:
அஸ்தபோவில் இருவர்
சிறுகதை

உடல் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது, டால்ஸ்டாய் ரயிலினுள் ஒடுங்கி உட்கார்ந்திருந்தார், அவரது மகள் சாஷாவும் மருத்துவர் துஷானும் அருகில் சோர்ந்து போய் உட்கார்ந்திருந்தார்கள்,

தளர்ந்து போன அவரது உடலை குளிர்காற்று ஊசிமுனை போல குத்திக் கொண்டிருந்த்து, அவரது கால்முட்டிகளில் கடுமையாக வலி, உதடுகள் வெடித்து சிவந்து, கண்கள் சோர்ந்து அயர்ந்து போயிருந்தன,

நுரையீரலில் புகைபடிந்தது போல மூச்சுவிடுவதற்கே கனமாகிக் கொண்டிருந்தது. அவராக கழுத்தடியில் தொட்டு பார்த்துக் கொண்டார், உள்ளுற காய்ச்சல் அடிப்பது போலவே தோன்றியது, நாக்கில் கசப்புணர்வு படிவதை முன்தினமே உணர்ந்திருந்தார், அடிவயிற்றை புரட்டிக் கொண்டு குமட்டுவது போல ஒரு உணர்ச்சி நாள்முழுவதும் இருந்து கொண்டேயிருந்தது, அத்துடன் யாரோ முதுகில் கைவைத்து அழுத்திபிடித்துக் கொண்டிருப்பது போல ஒரு இறுக்கமும் பீடித்திருந்த்து, எண்பத்திரெண்டு வயதில் எதற்காக இப்படி வீட்டை விட்டு விலகி தனியாக ஒடிக் கொண்டிருக்கிறோம் என்று தன்மீதே எரிச்சலாக வந்தது,

எப்படியானாலும் இனி ஒரு போதும் வீடு திரும்பக்கூடாது, போதும், ஒரு மனிதன் குடும்பத்தை அமைத்துக் கொள்வதைப் போலவே குடும்பத்தில் இருந்து வெளியேறி தனியனாக போவதும் விரும்பி மேற்கொள்ள வேண்டிய செயலே, வயதான பலரையும் போல தன்னை வீடு வெளியே துரத்திவிடவில்லை, நாமாகத் தானே வெளியேறி வந்தோம், விரும்பி எடுத்த முடிவினை எக்காரணம் கொண்டும் கைவிட்டுவிடக்கூடாது என்று சோர்ந்திருந்த தன் மனதை தேற்றிக் கொண்டார்

கடந்த சில ஆண்டுகளாகவே அவரது அன்றாட வாழ்க்கை மிகுந்த சலிப்பாகிக் கொண்டு வந்தது,  வீடு. மனைவி, பிள்ளைகள், எழுத்து, பதிப்பாளர்கள் என்று  ஒரு மீளமுடியாத ஒரு சுழலுக்குள் சிக்கிக் கொண்டது போல ஆயாசமளித்தது, மீதமிருக்கும் நாட்களை ஒரு நாடோடியை போல எங்காவது ஆள் அரவமற்ற இடத்தில் தங்கிக் கொண்டு கழித்துவிட வேண்டும் என்ற ஏக்கம் தீவிரமாக உருவாகியிருந்த்து, வீட்டில் இருந்து எப்படி விடுபடுவது என்று மட்டுமே யோசித்துக் கொண்டிருந்தார்

ஒரு மனிதன் தனது அடையாளத்தை உருவாக்கி கொள்வதை போல அதை அழித்துக் கொள்வதும் ஒரு சவால் தான், அதிலும் தான் வெற்றிபெற வேண்டும் என்று டால்ஸ்டாய்க்கு தோன்றியது,

இது சாவை தேடிப்போகிற பயணம், அவசரம் காட்டாதே என்று  மனம் உள்ளுற சொல்லி கொண்டிருந்தது, நிஜம் தான், மனிதனைத் தேடி சாவு வருவதை விட சாவைத் தேடி மனிதன் செல்வது துணிச்சலானது தானே, வாழ்க்கையில் எத்தனையோ சவால்களை கடந்து வந்த அவருக்கு சாவை நேர் கொண்டு காண புறப்பட்டதும் ஒரு சவாலாகவே தோன்றியது,

இளைஞனாக இருந்த காலத்தில் சூதாடி குடும்ப சொத்துகள் முழுவதையும் இழந்தார் அப்போது வீட்டினை விட்டு வெளியேறி கண்காணாத இடம் நோக்கி போய்விட வேண்டும் என்ற எண்ணம் முதன்முறையாகத் தோன்றியது, ஆனால் வாழ்க்கை தன் பிடிமானத்தை விடமால் அவரை இழுத்து வைத்துக் கொண்டது, பின்பு பலமுறை மனைவி சோபியாவோடு சண்டையிட்ட நாட்களில் வீட்டை துறந்து போவதை பற்றி யோசித்திருக்கிறார், வெளியேறி சென்றுமிருக்கிறார், ஆனால் வீடு தனது அரூபமான கரங்களால் அவரை திரும்ப இழுத்துக் கொண்டது,

இந்த முறை ஒரு கனி பழுத்து மரத்தை விட்டு தானே கிழே விழுவதை போல வெளியேறிவிட்டார், உதிர்ந்த கனிகள் ஒரு போதும் திரும்ப மரத்தில் ஒட்டுவதில்லை என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டார்

புகைரயிலின் வேகம் அதிகமில்லை என்ற போதும் ரயிலின் ஜன்னலுக்குள் பனிப்புகை ஊடுருவி குபுகுபுவென வந்து கொண்டிருந்த்து, அவரது கண்கள் மங்கிப்போனதை போல வெளியே கடந்து செல்லும் நிலக் காட்சிகள் தெளிவற்று தெரியத்துவங்கின,

வாழ்வில் எதன்மீதெல்லாம் தான் பற்றுக் கொண்டிருந்தோம் என்று யோசிக்க துவங்கினார், குடி, பெண்கள், யுத்தம் இவையே ஒரு வயதில் பற்றுமிக்கதாக இருந்தன, உண்மையில் தான் ஒரு சுயநலவாதி, தனது சுகங்களை பிரதானப்படுத்தி மட்டுமே வாழ்ந்திருக்கிறோம் என்று பட்டது,   சட்டம் பயின்ற நாட்களில் வேசைகளுடன் குடித்து நடனமிட்டு உல்லாசமாக இருந்த போது உலகம் எடையற்று இலவம்பஞ்சு மிதப்பது போலிருந்தது, அன்று எவரது உறவும் தேவையற்றதாக தோன்றியது,

பெற்றோர்கள் இல்லாமல் உறவினர்களால் வளர்க்கபட்ட காரணத்தால்  வீடு திரும்பமாலே மாஸ்கோவிலும் பீட்டர்ஸ்பெர்கிலும் சுற்றிக் கொண்டிருந்தார் யஸ்னயா போல்யனா பண்ணைக்கு போவது கசப்பான பால்யகாலத்திற்கு திரும்பி போவதை போன்று வலி தருவதாகவே இருந்த்து, அதனால்  வீடு என்பது பலவீனமானவர்களின் புகலிடம் என்று நண்பர்களிடம் கேலி பேசினார்

ஆனால் எல்லாவற்றையும் மாற்றி அமைத்துவிட்டவள் சோபியா, அவளை காதலிக்க துவங்கிய பிறகே வீட்டினை  நேசிக்க துவங்கினார், ஒரு மனிதன் பெண்ணை நேசிக்க துவங்கும் போது தான் வீடு அவனுக்குள் முளைவிடத்துவங்குகிறது, காதல் வளர வளர வீடு அவனுக்கு முக்கியமானதாகிப் போகிறது, உண்மையில் அது ஒரு வலைப்பின்னல், பெண்களும் வீடும் ஒன்று தான் போலும், எப்போது இடம் தந்து அணைத்துக் கொள்ளும், எப்போதும் விலக்கி வெளியே அனுப்பும் என்று புதிராகவே இருந்தது

உண்மையில் அவர் சோபியாவை தேடிப்போய் காதலித்தார், அப்போது அவள் சிற்றிளம் பெண், தனது அக்காவை காதலிப்பதற்காக வீடு தேடி வரும் மனிதன் என்றே அவரை நினைத்துக் கொண்டிருந்தாள், தன்னை ஏன் அவர் தேர்வு செய்தார் என்று சோபியாவிற்கு கூட வியப்பாகவே இருந்த்து, அவளது அன்பிற்காக காத்திருப்பதாக மன்றாடினார், அவளை திருமணம் செய்து கொண்டு வந்த பிறகு யாஸ்னயா போல்யனா வீடு உருமாறத்துவங்கியது,

பணியாளர்கள் முகங்களில் சந்தோஷம் பீறிடுவதை கண்டார்,  விருந்தும் நண்பர்களின் சந்திப்பும், குழந்தைகளும் அவருக்கு வீட்டின் மேல் தீவிரமான பற்று உருவாக காரணமாக இருந்தது, பதிமூன்று பிள்ளைகளை சோபியா பெற்றிருந்தாள், இதில் நால்வர் பிறந்த சிலமாதங்களிலே இறந்து போய்விட்டார்கள்

இறந்து போன குழந்தைகளைப் பற்றி கூட பலநேரம் அவர் யோசித்திருக்கிறார், அவர்கள் எதற்காக தன் பிள்ளையாக பிறந்தார்கள், கடவுள் தன்னிடம் ஏதோவொன்றை சொல்ல விரும்பி அவர்களை அனுப்பி வைத்தாரோ, என்ன செய்தியது ஏன் அது தனக்கு புரியவேயில்லை என்று குழம்பியிருக்கிறார்,

தன்னை சுற்றிய உலகம், அதன் மனிதர்கள், அவர்களின் அன்றாடப்பிரச்சனைகள் எதையும் விட எழுத்தும் அதில் உருவான மனிதர்களும், தீவிர வாசகர்களும், சக எழுத்தாளர்களும், எழுத்தின் மீதான விமர்சனங்களும் அவரது உலகை முழுமையாக ஆக்ரமிக்க துவங்கின, பலநேரங்களில் தான் எழுதுவதற்காக மட்டுமே உயிர்வாழ்கிறோம் என்று கூட அவருக்கு தோன்றியது,

சோபியா அதை புரிந்து கொண்டிருந்தாள், இல்லாவிட்டால் அவரது நாவலின் கையெழுத்துபிரதிகளை அவள் ஏன் அத்தனை கவனமாக பிரதி எடுத்தி எழுதி தந்தாள், ஆயிரக்கணக்கான பக்கங்களை கையால் பிரதி எடுத்து எழுதுவது எளிதானதில்லை தானே,

சோபியா அவருடன் கதைகளை பற்றி ஒரு போதும் வாதம் செய்தவளில்லை, சில வேளைகளில் அவரது கதாபாத்திரங்கள் நிஜமான மனிதர்களை போலவே இருக்கிறார்கள் என்று அவள் சுட்டிக்காட்டியதுண்டு, எழுதி எழுதி சோர்வுற்ற நேரங்களில் அவருக்கு பிடித்தமான இசைத்தட்டுகளை ஒடவிட்டு அவரை கட்டாயப்படுத்தி ஒய்வெடுக்க சொன்னதுண்டு,  அப்போது எல்லாம் சோபியாவின் அன்பை நினைத்து உருகியிருக்கிறார்

பிள்ளைகள் வளரதுவங்கும் போது பெற்றோர்கள் ஒருவரையொருவர் குற்றம்சாட்டத் துவங்குகிறார்கள், பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகி சம்பாதிக்க துவங்கியதும் பெற்றோர்கள் தானாகப் பிரிக்கபடுவார்கள், முதுமையை ஆணா. பெண்ணோ தனியாக சந்திக்கவே விரும்புகிறார்கள், அதற்கு மேல் எந்த உறவையும் ஒட்டி வைக்க முடியாது அது தான் உலக இயல்பு என்று சொல்வாள் அத்தை தாத்ரியானா

அது தான் அவரது விஷயத்திலும் நடந்தேறியது, பிள்ளைகள் வளர்ந்து தனித்து போக ஆரம்பித்துவிட்டார்கள், வீடு பிரச்சனைகளின் கூடராமாகிவிட்டது, ஒவ்வொரு நாளும் சோபியா அவருடன் சண்டையிட்டாள், சிறிய விஷயங்களில் கூட இருவரும் கோவித்துக் கொண்டார்கள், உணவு மேஜையில் அவர் தனித்து சாப்பிட்டார், சோபியாவின் கோபம் பணியாளர்களையும் விட்டுவைக்கவில்லை, டால்ஸ்டாய் மனச்சோர்வும் ஏமாற்றமும் கொண்டவராகியிருந்தார்,

வீட்டில் இருந்து வெளியேறுவதற்கு அவருக்கு தடையாக இருந்தது அவரது மகள் சாஷா மட்டுமே, அவள் மீதான அதீதமான பாசம் ஒன்றே வீட்டோடு அவரை ஒட்ட வைத்திருந்த்து, முடிவில் அவளிடமே தனது ஆற்றாமையை கொட்டி தீர்த்து விட்டார், அவள் தான் அவரை வழியனுப்பி வைத்தாள்

அந்த இரவு மறக்கமுடியாதது. வழக்கமான நாட்களை போலவே அன்றிரவும் அவர் படுக்கைக்குச் சென்றார், எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்திகளை மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தார், அசையும் சுடர்கள் அவரிடம் இனியும் என்ன தாமதம் என்று  கேட்பது போலவே இருந்தது

அந்த படுக்கை அறையில் அவர் அழுதிருக்கிறார், தன்னை மறந்து உடற்சுகத்தில் கிறங்கி கிடந்திருக்கிறார்,  எழுத வேண்டிய கதைகளை நினைத்துக்கொண்டு புலம்பியிருக்கிறார், காரணமே இல்லாமல் துக்கப்பட்டுக்  கொண்டு தன்னை வருத்திக் கொண்டிருந்திருக்கிறார், இப்படியாக அப் படுக்கை அறை ஒரு பிரார்த்தனை கூடம் போலவே தோன்றியது, அந்த கட்டிலின் கீழே அவரது கனவுகள் உதிர்ந்து கிடப்பதாகவே நினைத்தார்,

அவரது உடல்நலத்தை கருதி இரவில் படுக்கை அறையின் கதவுகளுக்கு தாழ்பாள் போடக்கூடாது என்று சோபியா கட்டளையிட்டிருந்தாள், அதனால் கதவு பாதி திறந்தேயிருந்த்து,

சோபியா அன்றிரவு நெடுநேரம் படித்துக் கொண்டிருந்துவிட்டு தாமதமாகவே படுக்கைக்கு வந்தாள், படுக்கையில் அயர்ந்துகிடந்தவரை காணும் போது அவளுக்கு வருத்தமாக வந்த்து, அவரது கைகளை மென்மையாக தொட்டு பார்த்தாள், அது வெதுவெதுப்பாக இருந்தது, அன்றிரவு அவள் ஆழ்ந்த உறக்கத்திற்கு போவதற்காக அவர் காத்துக் கொண்டிருந்தார்,

பின்னரவில் எழுந்து கொண்டு அறையை விட்டு வெளியே வந்தார், சாஷாவை எழுப்பி தான் வீட்டை விட்டு வெளியேறிப்போவதை பற்றி சொன்னார், அவள் அதை முன்னதாகவே எதிர்ப்பார்த்திருந்தவளை போல இப்போதா என்று மட்டும் கேட்டாள்,

வீட்டிலே தங்கி அவருக்காக மருத்துவம் பார்த்து வந்த டாக்டர் துஷான் எழுந்து வந்து அவரது ரத்தவோட்டத்தை பரிசோதனை செய்து பார்த்துவிட்டு ரத்தஅழுத்தம் சற்று அதிகமாக இருப்பதாக கவலையுட்ன் தெரிவித்தார்,

அது தனது பதற்றத்தின் அடையாளம் என்றபடியே அவசரமாக தனது உடைகளை எடுத்துக் கொண்டு சோபியாவிற்கு ஒரு கடிதம் எழுத துவங்கினார்,

ஏற்கனவே அந்த கடிதம் மனதில் முழுமையாக எழுதி முடிக்கபட்டிருந்தது, பலநாட்கள் அந்த கடித்ததில் எந்த வரிகள் எப்படி எழுதப்பட வேண்டும் என்று மனதில் ஒத்திகை பார்த்திருந்தார் ஆகவே வேகமாக அக் கடிதத்தை எழுதி சாஷாவிடம் ஒப்படைத்தார், குதிரைவண்டிக்காரனை எழுப்பி பயணத்திற்கு தயார் செய்யும்படி உத்தரவிட்டார்

சாஷா அவரது தொப்பியையும் குளிரங்கியையும் எடுத்து வந்து தந்தாள், சாஷாவை முத்தமிட்டு வருத்தமான குரலில் சொன்னார்

உனது அம்மாவை கவனித்துக் கொள்,

அவள் கலஙகிய கண்களுடன் உங்கள் உடல்நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள் அப்பா என்றாள்,

தெற்கு நோக்கி பயணிப்பது என்ற ஒரு எண்ணம் மட்டுமே அவர் மனதில் இருந்த்து, எங்கே போவது என்பதை ரயில் நிலையத்தில் போய் முடிவு செய்து கொள்ளலாம் என்று நினைத்தார்

குதிரை வண்டி தனது பண்ணையை விட்டு கிராமசாலையில் செல்ல துவங்கிய போது ஆழ்ந்த பெருமூச்சுவிட்டார், விரிந்து பரந்த அந்த பண்ணை நிலமும், பிரம்மாண்டமான வீடும், நூற்றுக்கணக்கான எளிய விவசாயிகளும், நீர் நிறைந்த குளமும், மரங்களும் குளிர்கால காற்றும் இனி ஒரு போதும் தனக்கானதில்லை, தான் இனி வெறும் ஆள், தான் ஒரு துறவியோ, பிச்சைக்காரனோயில்லை, துரத்தப்பட்ட மனிதன், வீட்டை துரத்து வெளியேறும் ஒரு முதியவன், அவ்வளவு மட்டுமே

ரயில் நிலையத்திற்கு வந்தபோது காலியாக இருந்தது, பின்னரவில் ரயில்கள் இல்லை என்பதால் காத்திருக்க வேண்டியதாகி இருந்தது, பயணிகள் ஒய்வறையில் அவர் சாய்ந்து உட்கார்ந்து கொண்டார்,

துறவியர்மடத்தில் வசிக்கும் தனது தங்கை மரியாவை தேடிப்போய் சந்திக்கலாமே என்று தோன்றியது, உண்மையில் அது வெறும் சாக்கு, மரியா வசிக்குமிடத்தை ஒட்டிய வனப்பகுதியில் ஏதாவது ஒரு குடிசை கிடைத்தால் போதும் அங்கேயே தங்கிவிடலாம் என்று உள்ளுற நினைத்துக் கொண்டார்

பயணியர் ஒய்வறையில் ஒரு மாணவன் அவரை அடையாளம் கண்டு கொண்டுவிட்டான், அவன் உற்சாகமான முகத்துடன் அவரை நெருங்கிவந்து வணங்கியபடியே சொன்னான்

உங்களது படைப்புகளால் நான் பெரிதும் ஈர்க்கபட்டிருக்கிறேன், டால்ஸ்டாய் பண்ணை ஒன்றை எனது கிராமத்தில் ஆரம்பிக்க விரும்புகிறேன், உங்கள் எழுத்துகள் எனக்கு வழிகாட்டுகின்றன, உண்மையில் நீங்கள் ஒரு தீர்க்கதரிசி, இப்போது புதிதாக என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டான்

அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் டால்ஸ்டாய் சொன்னார்

இத்தனை காலம் உலகின் துயரங்களை நான்  கதைகளாக மாற்றிவந்தேன் , ஆனால் இன்றோ எனது வாழ்க்கை உலகிற்கு வெறும் கதையாக மட்டுமே மிஞ்சியிருக்கிறது , நான் தோற்றுப்போனவன், ஒருவருக்கும் பயனற்ற ஒரு கிழட்டு குதிரை,

அந்த இளைஞனுக்கு அவர் ஏன் அப்படி பேசுகிறார் என்று புரியவில்லை, குளிர்தாளமுடியாமல் டால்ஸ்டாய் தனது கைகளை உரசிக் கொண்டார், அந்த இளைஞன் தனது தலையை  சாய்த்து வணங்கி உங்கள் உடல்நலத்தை கவனித்து கொள்ளுங்கள், நன்றாக ஒய்வெடுங்கள் என்று கூறிவிட்டு கடந்து போய்விட்டான்

ஷமார்டினோ மடாலயத்திற்கு போவதற்கான ரயில் எப்போது வந்துசேரும் எனத் தெரியவில்லை, மனதில் திடீரென காகசஸ் பகுதிக்குப் போனால் என்னவென்று தோன்றியது, அங்கே அவரது சிஷ்யர்கள் பலர் ஒன்று கூடி ஒரு பண்ணையொன்றை உருவாக்கியிருக்கிறார்கள், நிம்மதியாக அங்கே போய் தங்கிவிடலாமே என்ற யோசனை உருவாகத்துவங்கியது,

அங்கே போவதற்கு முன்பு கடைசியாக ஒருமுறை அவர் தனது தங்கை மரியாவை காண விரும்பினார், அவளை சந்திப்பது  இறந்து போன தாயை மறுமுறை சந்திப்பதை போன்றது, முகம் அறியாத தாயின் மறுவடிவம் போலவே மரியா இருந்தாள், பெண்கள் வயதாக துவங்கியதும் தாயின் சாயலை அடைந்துவிடுகிறார்கள், ஆனால் பையன்கள் தந்தையை போல ஒரு போதும் ஆவதில்லை, அது என்ன புதிர், தாயிடம் நன்றி சொல்லி விடைபெற்றுவிட்டால் போதும் பிறகு எங்கும் தங்கி வாழ்ந்துவிடலாம் என்று அவருக்கு தோன்றியது,,

நீண்ட பல வருஷங்களுக்கு பிறகு நேற்று அவர் தனது தங்கையை மடாலயத்திற்கு சென்று சந்தித்தார், அவள் கணவனை இழந்தவள், கொடுந்தனிமையை தாங்கிக் கொள்ளமுடியாமல் தேவாலய சேவையில் தன்னை ஒப்புக கொடுத்திருந்தாள

இருவரும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை, தேவாலயத்திற்குள் சென்று மண்டியிட்டு பிரார்த்தனை செய்தார்கள், பிறகு பசுமையான மரஙகளின் ஊடே இருவரும் நடந்து போனார்கள் வீழ்ந்துகிடந்த மரம் ஒன்றில் இருவரும் உட்கார்ந்து கொண்டார்கள்

மரியா சொன்னாள்

லியோ. உனது செயல்களால் எப்போதுமே அடுத்தவரை வருத்தப்படுத்திக் கொண்டேயிருக்கிறாய், உனது பிரச்சனை வீடில்லை,  நீ தான், தேவையில்லாமல் உன்னை அலைக்கழித்துக் கொள்ளாதே, சுற்றியது போதும், உன்னை முழுமையாக கடவுளிடம் ஒப்புக்கொடுத்துவிட்டு ஒரு துறவியை போல சாந்தம் கொண்டுவிடு, உலகம் நீ அப்படி இருக்க வேண்டும் என்றே விரும்புகிறது

இல்லை மரியா, என்னால் ஒரு போதும் துறவியாக முடியாது, துறவிகள் தன்னை வருத்திக் கொள்பவர்கள், நான் என்னை கொண்டாட நினைப்பவன், என் மீது எனக்கு அதீதமான நம்பிக்கைகளும், பிடிப்பும் உள்ளன, இதை உன்னால் புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன் என்றார்

லியோ, நீ ஒரு குழப்பவாதி, எல்லா பிரச்சனைகளையும் நீயே உருவாக்கி கொண்டு அதில் இருந்து தப்பிக்க போரிடுகிறாய், உன்னை ஏன் இப்படி வருத்திக் கொள்கிறாய், தெளிவற்ற உனது கண்களில் காணும் குழப்பங்கள் என்க்கு கவலை அளிக்கின்றன என்றாள் மரியா

இந்த உலகம் தூய்மையானதாகயில்லை, கசடுகளும் வெறுப்பும், துவேசமும், அதிகாரவெறியும் கொண்டதாகயிருக்கிறது, அதிகாரம் என்னை ஒரு அற்ப புழுவைப் போல நடத்துகிறது,  உலகின் சகல கசடுகளையும் நானும அள்ளிக்குடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது, நான் தவறு செய்யாத மனிதனில்லை, ஆனால் சந்தர்ப்பவாதியாக, என்னை நானே ஏமாற்றிக் கொள்பவனாக ஒரு போதும் நடந்து கொள்ள மாட்டேன், என்றார் டால்ஸ்டாய்

நீ உன்னை சுற்றிய எல்லோரிடமும் குறைகள் காண்கிறாய், அதை பெரிது படுத்தி சண்டையிடுகிறாய், உனது கோபம் உனது விருப்ப்படி பிள்ளைகளும் மனைவியும் நடந்துகொள்வதில்லை என்பது தானே, உண்மையில் நீ விரும்புவது போல உனது நிழலை கூட நடந்து கொள்ளாது,  பிறகு எப்படி வீட்டோர் நடந்து கொள்வார்கள், வீடு என்பது சவுக்கடிக்கு பயந்து புலி முக்காலியில் ஏறும் சர்க்கஸ கூடாரமில்லை லியோ என்றாள்,

டால்ஸ்டாய்க்கு ஆத்திரமாக வந்த்து, மரியாவிட்ம் கடுமையான குரலில் சொன்னார்

எனது ஆசைகளை நான் ஒரு போதும் அவர்கள் மீது திணிக்கவில்லை, எனது கோபமெல்லாம் அவர்கள் ஏன் தங்களுக்கு என்ன வேண்டும் என்று கூட தெரியாமல் இருக்கிறார்கள், அற்பத்தனங்களை ஆசையோடு அரவணைத்து கொள்கிறார்கள், வீண்பேராசைகள் கொண்டிருக்கிறார்கள் என்பதையே, சுருக்கமான சொல்வதாயின் நான் அவர்களை சுயபரிசீலனை செய்து கொள்ள சொல்கிறேன், அது அவர்களுக்கு குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துகிறது, அதை மறைத்துக் கொள்ள என்னை கோவிக்கிறார்கள்,

இரும்பை நெருப்பில் போடுவது அதை தண்டிப்பதற்காக இல்லை மரியா, அதை இளக்கி புதிய வடிவம் கொடுப்பதற்கு, நிச்சயம் அது சூடுபடவே செய்யும், ஆனால் நெருப்பை தவிர வேறு எதனால் இரும்பை இளக்க முடியும் சொல்லு என்றார் அவர்

துயரமான குடும்பங்கள் எதுவும் ஒன்று போல இருப்பதில்லை என்று நீயே தான் எழுதியிருக்கிறாய், லியோ, இந்த உலகம் உன்னை புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறாய் அது தவறு, நீ தான் இன்னமும் இந்த உலகை புரிந்து கொள்ளவில்லை,  என்றாள் மரியா

நான் ஒரு முட்டாள் என்று தானே சொல்கிறாய்  எனக்கேட்டார் டால்ஸ்டாய்

அப்படியில்லை, நீ உன்னை முட்டாளாக்கி கொள்கிறாய் என்றாள் மரியா

அதோ, அந்த மரங்களுக்கு இடையில் உள்ள விவசாயி வீட்டினைப் பார், அவனுக்கு இந்த உலகில் உணவும் உடையும் இருப்பிடமும் மட்டுமே தேவையாக இருக்கிறது, அதுவே போதும் என்ற மனம் கொண்டிருக்கிறான், அவன் தனது உணவிற்காக ஒவ்வொரு பொழுதும் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறான், பேராசையின் நிழல் கூட அவன் மீது படவில்லை, நான் அப்படி ஒரு மனிதனாக வாழவே ஆசைப்படுகிறேன், எனது செல்வம் தான் எனது சத்ரு, நான் அவற்றை இழந்துவிடும்போது என்னை சுற்றிய பகட்டு உலகம் தானே விலகி போய்விடும் எனறு நம்புகிறேன் என்றார்  டால்ஸ்டாய்

அது உண்மையில்லை லியோ, நீ அப்படி நினைத்துக்  கொண்டிருக்கிறாய்,  அது தவறு, பெரும்பான்மை மனிதர்களை இப்படி முடக்கி வைத்திருப்பது அவர்களின் இயலாமை, அது ஒரு அற்ப காரணம் என்றே சொல்வேன், அவர்கள் இயலாமையை காரணம் சொல்லி ஒதுங்கி கொண்டுவிடுகிறார்கள், அதை கடந்து செல்ல முயன்றவர்கள் மட்டுமே வாழ்க்கையில் விரும்பியதை ஜெயித்திருக்கிறார்கள், என்றாள் மரியா

மரியா எனக்கு போதனைகளை கேட்டு கேட்டு சலித்துப் போய்விட்டது  என்றார் டால்ஸ்டாய்

தவறு போதனைகளிடம் இல்லை, அதை கேட்கும் மனதை நீ இழந்துவிட்டாய் என்பதே பிரச்சனை என்றாள் மரியா

எனது தவறுகளை நான் அறிந்து கொண்டுவிட்டேன், அதை பகிரங்கமாக ஒப்பு கொள்கிறேன், அது தான் எனது பிரச்சனை, என்றார் டால்ஸ்டாய்

சரியாக சொன்னாய், உனது தவறுகளை நீ அடையாளம் காண துவங்கும் போது அதற்கு மற்றவர்களே காரணமாக இருக்கிறார்கள் என்பதை நீ உணர்ந்து கொண்டிருக்கிறாய், அவர்களை வெறுக்க துவங்குகிறாய், எல்லா பிரச்சனைகளும் அங்கிருந்தே துவஙகுகின்றன என்றாள் மரியா

இனி நான் என்னை ஆராய்ந்து கொண்டிருக்கப்போவதில்லை, ஒரு புல்லை போல இயற்கையிட்ம் முற்றாக என்னை ஒப்புக் கொடுக்கப்போகிறேன், என் விதியை இயற்கை தீர்மானிக்கட்டும் போதுமா என்றார்

கடவுளின் ஆசி உன்னோடு இருப்பதாக என்றபடியே மரியா எழுந்து நடக்க துவங்கினாள்,

அவள் மடாலயம் நோக்கி போவதை அவர் பார்த்துக்  கொண்டேயிருந்தார், மரியா அவரிடமிருந்து நிரந்தரமாக விடைபெற்றுக் கொண்டுவிட்டாள், எவரிடமிருந்தும் ஒருவர் விடைபெறுதல் எளிதானதில்லை, பிரிவு எப்போதுமே வலிமிக்கதே, இனி அவள் நினைவில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருப்பாள், மரியா அவரை தனித்து விட்டுச்சென்ற பிறகு அவர் நீண்ட நேரம் அதே இடத்தில் அமர்ந்தபடியே தூரத்து மரங்களை பார்த்துக் கொண்டிருந்தார்,

ஒவ்வொரு மனிதனும் தனியாக தான் வாழ வேண்டும், அது தான் விதி, அது தான் இயற்கையின் தேர்வு, மனிதர்கள் தனக்கான துணையை தேடிக் கொண்டது அவர்களின் விருப்பம், இயற்கையே முடிவில் வெல்கிறது, முதுமையில் மனிதன் தனிமைப்படுத்தபடுகிறான், இயற்கை அவனது ஆசைகளை கைதட்டி பரிகசித்து மீண்டும் அவனை தனதாக்கி கொள்கிறது,  அது தான் நிதர்சனம் என்று தோன்றியது,

யோசிக்க யோசிக்க மீளமுடியாதவொரு மனச்சோர்வு கூடியது, அன்றிரவு அவருக்கு உறக்கம் கூடவில்லை, என்றோ பாரீஸ் நகரில் கண்ட காட்சி கனவாக வந்த்து, ஒரு குற்றவாளியை பொது இடத்தில் தலையை துண்டிக்கும் தண்டனையை அவர் நேரில் பார்த்திருந்தார், அந்த மனிதனின் கண்கள் அவரையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தன, அதில் தனது வாழ்க்கைய ஏன் மற்றவர்கள் தீர்மானிக்கிறார்கள் என்ற கேள்வி ஊசலாடிக் கொண்டிருந்த்து,

மனிதன் தனது சுகங்களை பாதுகாத்து கொள்ளவே சட்டங்களை உருவாக்கி வைத்திருக்கிறான் என்று தோன்றியது, அந்த மனிதன் அன்று கனவில் தோன்றி உலகம் கருணையற்றது என்ற சொல்லை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டேயிருந்தான், அவர் திடுக்கிட்டு விழித்து எழுந்து கொண்டார்,  அந்த இரவு முழுவதும் அவர் படுக்கையில் உட்கார்ந்தே இருந்தார், விடிந்தால் போதும் என்று திணறலாக இருந்தது

அந்த இரவில் வீசிய குளிரும் பனிப்பொழிவும் அவர் உடலை அதிகம் நடுங்க வைத்தன, உறக்கமற்ற காரணத்தால் அவரது முகம் ஒடுங்கிப்போனது, அதன் மறுநாள்  மகள் சாஷா அவரை காண வந்து சேர்ந்திருந்தாள், இருவருமாக தெற்கு நோக்கி செல்ல ரயில் ஏறினார்கள்,

அந்த பயணம் அவர் நினைத்தது போல எளிதாகயில்லை, மனமும் உடலும் நலிந்து கொண்டே வந்தன, தனக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்து வந்த சாஷாவிடம் அடுத்து ரயில் எங்கே நிற்கும் என்று கேட்டார்

அஸ்தபோவ் என்று சொன்னார் டாக்டர் துஷான்

அங்கே இறங்கி ஒய்வெடுக்க வேண்டும், ஒருவேளை தொடர்ந்து பயணம் செய்ய நேர்ந்தால் நிச்சயம் மயங்கிவிழுந்துவிடுவோம் , எங்காவது கதகதப்பான அறை ஒன்றில் சற்று நேரம் அயர்ந்து கண் உறங்க வேண்டும், என்று தோன்றியது,

சாஷா அவரிடம் சொன்னாள்

அப்பா இறங்கி ஒய்வெடுத்து கொள்ளுங்கள், உடல் நலம் சரியானதும் மீண்டும் பயணம் செய்யலாம்

டால்ஸ்டாய் அதை ஏற்றுக் கொண்டவரைப் போல தலையாட்டினார்

ரயில் அஸதபோவிற்கு வந்த போது மாலையாகி இருந்தது, அவர்கள் இறங்கி மெதுவாக பிளாட்பாரத்தில் நடந்தார்கள், அஸ்தபோவ் மிகச்சிறிய ரயில் நிலையம், பயணிகளுக்கான தங்குமிடம் என எதையும் காணமுடியவில்லை, அருகில் தங்கும் விடுதிகளோ, ஒய்விடங்களோ எதுவும் தென்படவில்லை,

எங்கே போய் தங்குவது என்ற யோசனையுடன் ரயில் நிலையத்தின் இரும்பு பெஞ்சில் உட்கார்ந்து கொண்டார், சாஷாவும் டாக்டரும் ரயில் நிலைய அதிகாரியிடம் கேட்டால் ஒய்வறை கிடைக்க கூடும் என்று அவரை காண சென்றிருந்தார்கள்

அவர் சாய்ந்து உட்கார்ந்து கண்களை மூடிக் கொண்டார், யாரோ உறுதியான மனிதர் ஒருவர் நடந்து வருவது போன்ற சப்தம் கேட்டது, கையில் ஒரு துணிமூட்டை ஒன்றுடன் அழுக்கடைந்த கோட் ஒன்றினை அணிந்து கொண்டு ஒரு வயதான மனிதன் நடந்து வந்து அவரது பெஞ்சின் ஒரு பக்கம் உட்கார்ந்து கொண்டான், அவன்து தாடி நரைத்துகோரையாக இருந்தது, பளுப்போடிய கண்கள், அவன் தனது துணிமூட்டையில் இருந்து ஒரு புட்டியை திறந்து எதையோ குடித்துக் கொண்டான், பிறகு அவரை உற்று நோக்கியபடியே கனவானே குடிப்பதறகு வோட்கா வேண்டுமா என்று கேட்டான்

டால்ஸ்டாய் வேண்டாம் என்று மறுதலித்தார்,

அவன் தனது வோட்கா புட்டியை துணிமூட்டையில் திணித்துவிட்டு கருணையே இல்லாத சாத்தான்கள் என்று யாரையோ திட்டினான்

அவன் யாரை அப்படி சொல்கிறான் என்று அவர் கேட்டுக் கொள்ளவில்லை, அந்த மனிதன் தானாக அவரிடம் சொன்னான்

டிக்கெட் இல்லாத பயணி என்று என்னை வழியில் இறக்கிவிட்டார்கள், நான் ஒரு விவசாயி, எனது தோட்டத்தில் விளைந்த முட்டைகோஸகளை எவ்வளவோ முறை பிச்சைகாரர்களுக்கு இலவசமாக தந்திருக்கிறேன், கோச்விக் மடாலயத்திற்கு ஒரு முறை இருபது மூடை தானியங்கள் இலவசமாக தந்தேன், அதை எல்லாம் மறந்துவிட்டு  என்னை ஒடும் ரயிலில் இருந்து தூக்கி எறிந்துவிட்டார்கள்,

நான் எதற்காக பயணம் போகிறேன் என்று ஒருவரும் கேட்டுக் கொள்ளவில்லை, சட்டம் பேசுகிறார்கள் சாத்தான்கள், நான் ஒன்றை உறுதியாக சொல்வேன், படித்தவர்கள் எல்லாவற்றையும் தவறாகவே புரிந்து கொள்கிறார்கள்,

நான் படிக்காதவன், கையில் ஒரு ரூபிள் கூட பணமில்லாதவன், நான் எதற்காக போகிறேன் என்பதை நீங்களாவது கேட்டுக் கொள்ளுங்கள், எனது மனைவியின் கல்லறையை பார்ப்பதற்காக போய்க் கொண்டிருக்கிறேன், அது நீவா கிராமத்திலிருக்கிறது, அங்கு தான் அவள் இறந்து போனாள், அந்த கல்லறையை ஆண்டிற்கு ஒரு முறை சுத்தம் செய்து அவளை நினைத்து பிரார்த்தனை செய்து வருவேன்,

அவள் என்னை விட்டு இன்னொருவனுடன் ஒடிப்போனவள், அதனால் என்ன, அது அவளது விருப்பம், என் மனைவியாக வாழ்ந்த நாட்களில் என்னை சந்தோஷப்படுத்தியிருக்கிறாள் தானே, அதற்கு கைமாறு செய்ய வேண்டியது என கடமை தானே என்றான்

நீங்கள் எந்த பகுதியை சேர்ந்தவர் என்று டால்ஸடாய் அந்த மனிதரிடம் கேட்டார்

லெப்தவோ, துலா பகுதி என்றார்

நானும துலா பகுதியை சேர்ந்தவன் தான் என்றார் டால்ஸ்டாய்

நீங்கள் விவசாயியா என்று கேட்டான் அந்த மனிதன்

ஆமாம், எனது பண்ணை அங்கேயிருக்கிறது , யஸ்னயா போல்யனா என்றார் டால்ஸ்டாய்

கவுண்ட் நிக்கோலாயின் பண்ணையது, நீங்கள் அவரது உறவினரா என்று கேட்டான் அந்த மனிதன்

நான் தான் கவுண்ட் நிக்கோலாய் தால்ஸ்தோய் என்றார்

நீங்கள் ஒரு எழுத்தாளர் என்று கேள்விபட்டிருக்கிறேன், என்றான் அந்த மனிதன்

உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்டார் டால்ஸ்டாய்

எனது மனைவியின் சகோதரன் ஒரு பாதிரியார், அவன் புத்தகம் படிக்க் கூடியவன், அவன் அடிக்கடி உங்களை பற்றி சொல்லிக் கொண்டிருப்பான், உங்களை பார்த்தால் வீட்டை விட்டு துரத்தப்பட்ட மனிதரைப் போலிருக்கிறீர்கள், பிள்ளைகளுடன் சண்டையா என்று கேட்டான் அந்த மனிதன்

யாரும் என்னை துரத்தவில்லை, நானாக வெளியேறி விட்டேன், வீடு என்னை மூச்சு திணறச் செய்கிறது, முதுமையில் ஒரு மனிதன் வேண்டும் அமைதி மட்டுமே என்றார்

உங்கள் மனைவி நீங்கள் வெளியேறியதை  தடுக்கவில்லையா என்று கேட்டான் அந்த மனிதன்

அவள் ஒரு முன்கோபி, அவளது பிடிவாதம் தாங்கமுடியாமல் தான், நான் வெளியேறினேன், ஒரு வளர்ப்பு பிராணி போல அவள் கட்டுபாட்டிற்குள் நானிருக்க வேண்டும் என்று நினைக்கிறாள் என்றார்

அந்த மனிதன்  வெளிறிய மேகங்களை ஏறிட்டு பார்த்தபடியே சொன்னான்

நீங்கள் ஒரு விவசாயி இருந்திருந்தால் நிச்சயம் வீட்டை விட்டு  வெளியேறி இருக்க மாட்டீர்கள், எழுத்தாளன் இல்லையா, அதனால் தான் கற்பனையான பயத்தை உருவாக்கி கொண்டிருக்கிறீர்கள்

டால்ஸ்டாய்க்கு அந்த மனிதன் மீது கோபம் வந்த்து

நான் அறுவடை காலங்களில் விவசாயிகளுடன் ஒன்றாக பாடுபட்டவன், உழைப்பின் வலியை அறிந்தவன், ஒரு போதும் நான் சுகவாசியாக இருந்தவனில்லை, என்றார்

அப்படி தோன்றவில்லை, விவசாயி தன்னை மற்றவர்கள் அவமதிக்கிறார்கள் என்பதற்காக வருத்தபடுகின்றவனில்லை, அவன் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்கிறவன், நிலம் அதை தான் அவனுக்கு கற்று தந்திருக்கிறது, காத்திருந்தல் தான் விவசாயின் முதல்பாடம் என்றான் அந்த மனிதன்

இத்தனை காலம் நானும் அப்படித்தான் இருந்தேன், ஆனாலும் என்னை வீடு புரிந்து கொள்ளவேயில்லை,   என்றார் டால்ஸ்டாய்

நீங்கள் உங்களையே முதன்மைபடுத்தியே பேசுகிறீர்கள், எப்போதில் இருந்து உங்களுக்கு நீங்கள் முக்கியமாக ஆனீர்கள் என்று கேட்டான் அந்த மனிதன்,

அந்த கேள்வி அவருக்கு வியப்பாக இருந்த்து, அது உண்மை தானே, எப்போதுமே தன்னை பற்றியே தானே நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்று பட்டது, ஆனாலும் அவன் கேலியாக அதை கேட்கவில்லை என்பதை புரிந்து கொண்டவரைப் போல கேட்டார்

ஒருவன் தன்னை பற்றி ஆராயாமல் தனது சரி தவறுகளை எப்படி அடையாளம் கண்டு கொள்வது

சரி தவறுகள் எல்லாம் மனிதர்கள் உருவாக்கி கொண்ட வரையறைகள், விவசாயிகள் தன்னை சுற்றிய உலகை, மனிதர்களை பற்றியே யோசிக்கிறார்கள், அதற்காகவே வருந்துகிறார்கள், தன்னை நம்பிய குடும்பத்திற்காக பாடுபடுகிறார்கள், தான் நம்புகிற நிலத்தின் மீது தீராத விசுவாசம் கொண்டிருக்கிறார்கள், விவசாயம் என்பதே தன்னை முதன்மைபடுத்தாமல் செய்யும் சேவைதானில்லையா என்றான்

அந்த மனிதன் ஒரு பாதிரியை போல பேசுவது எரிச்சலாக இருந்த்து, அவனோடு எதற்காக வாதம் செய்கிறோம் என்று தலையை வேறுபக்கம் திருப்பிக் கொண்டார் டால்ஸ்டாய்

அந்த மனிதன் சொன்னான்

நான் ஒரு அதிகபிரசங்கி, இங்கிதம் தெரியாமல் நிறைய உளறிக் கொண்டு தானிருப்பேன், கனவானே உங்களை போல மனதில் தோன்றும் எண்ணங்களை மறைத்து பேச எனக்கு தெரியாது,

அவனோடு பேசியது போதும் என அவர் தலைகவிழ்ந்து உட்கார்ந்து கொண்டார், அந்த மனிதன் முணுமுணுப்பான குரலில் சொன்னான்

முதுமையில் பெண்களுக்கு கடவுள் தேவைப்படுவதில்லை, ஆண்களுக்கு முதுமையில் தான் கடவுள் தேவைப்படுகிறார்,

டால்ஸ்டாய் வியப்புடன் அந்த மனிதனின் சொற்கள் வீர்யமிக்கதாக இருப்பதை உணர்ந்தபடியே அவனை ஏறிட்டு பார்த்தார்,

அந்த மனிதன்  உற்சாகத்துடன்  அவரது முகத்தை பார்த்து மீண்டும் பேச ஆரம்பித்தான்

நான் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நிலத்துடன் போராடி வாழ்ந்துவருகிறேன், நிலம் என்னை தாங்கியிருக்கிறது, என்னை ஏமாற்றியிருக்கிறது, என்னை வாழ வைத்திருக்கிறது, நிலம் மிகவும் புதிரானது, அதை எந்த மனிதனாலும் முழுமையாக தன்வசமாக்கிவிட முடியாது, முழுவதும் உரிமை கொண்டாட முடியாது, , அது ஒரு புதிரான உறவு,

கனவானே  உங்கள் கதைகளில் வரும் மனிதர்களை போல உலகமும் உங்கள் கட்டுபாட்டில் இருக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள்,

வீடு என்பது ஒய்விடமில்லை, அது ஒரு விசித்திரமான தாவரம், தன் விருப்பபடி தான் அது வளரும், அதன் விதி ரகசியமானது, கடந்த காலத்தை மறந்தவர்களால் மட்டுமே வீட்டை விட்டு வெளியேற முடியும்,

வயது தான் மனிதர்களின் ஒரே பலவீனம், காலம் வளர வளர இயற்கையின் அங்கமான தாவரங்கள், பாறைகள், என அனைத்தும் உறுதியாகின்றன, வலிமை கொள்கின்றன, மனிதனோ வயதானதும் பலவீனமாகிவிடுகிறான்,

இருபது வயதில் அவனால் சகித்துக் கொள்ள முடிந்த எதையும் எழுபது வயதில் சகித்துக் கொள்ள முடியவில்லை, வயது அவனை அழுத்துகிறது, திணறடிக்கிறது, வயது அவனை மண்டியிடவும் அழவும் வைக்கிறது,

முதுமையில் வசிப்பதற்கு என ஒரு மனிதனுக்கு ஒரு வீடு தேவைப்படுகிறது, அது நத்தையின் முதுகில் உள்ளதை போல ஒரேயொரு ஆள் மட்டுமே வசிக்க கூடிய வீடு, உண்மை நானும் கூட அப்படியொரு வீட்டினை தான் தேடிக் கொண்டிருக்கிறேன்,

எனக்கு எவர் மீதும் புகார் இல்லை, ஒருவேளை நான் மற்றவர்களின் தவறுகளை மட்டுமே எண்ணிக் கொண்டிருந்தால் என் வாழ்க்கையை நானே நரகமாக்கி கொள்வதாக நம்புகிறேன், தன்னை பற்றிய மிதமிஞ்சிய எண்ணங்களே எல்லா பிரச்சனைகளுக்கும் விதையாக இருக்கின்றன, உங்களை நீங்கள் பகிர்ந்து கொடுங்கள், தண்ணீரை போல நிறையும் பாத்திரங்களின் வடிவம் கொள்ளுங்கள், காற்றை போல எடையற்று இருங்கள் என்றான்

டால்ஸ்டாய் அந்த மனிதன் தனது அனுபவத்தின் சாரத்திலிருந்து பேசுகிறான் என்பதை புரிந்து கொண்டவரை போல தனக்கு குடிப்பதற்கு கொஞ்சம் வோட்கா வேண்டும் என்று கேட்டார்

அந்த மனிதன் தனது புட்டியை எடுத்து நீட்டியபடியே சொன்னான்

அஸ்தபோவ் ரயில் நிலையத்திற்கு வந்து இறங்குவோம் என்று என்றாவது உங்கள் வாழ்க்கையில் நினைத்த்துண்டா என்று கேட்டான்

இல்லை என்றார்

என்னை சந்தித்து இந்த ஒரு மடக்கு வோட்கா அருந்துவோம் என்று யோசித்திருக்கிறீர்களா எனக்கேட்டான்

ஒருபோதுமில்ல என்றார் டால்ஸ்டாய்

எதிர்பாராமை தான் நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது, நமது திட்டங்களை மீறி வாழ்க்கை நம்மை இழுத்துப் போகிறது, நம்மை முழுமையாக அதற்கு ஒப்படைப்பதை தவிர வேறு வழியேயில்லை என்றான்

வோட்கா புட்டியை திறந்து ஒரு மிடறு குடித்தார், உடலில் சூடு பரவ துவங்கியது

அந்த மனிதன் சொன்னான்

உங்களால் நடந்து வர முடியும் என்றால் அருகாமையில் ஒரு துறவியர் மடம் இருக்கிறது, அங்கே போய் தங்கி கொள்ளலாம்

இல்லை என்னால் நடக்க இயலாது, இங்கேயே நான் தங்கிக் கொள்ளப்போகிறேன் என்றார்

உங்களை போல உங்கள் மனைவி வீட்டை துறந்து வெளியேறிப் போயிருந்தால் நீங்கள் புலம்பி தள்ளியிருப்பீர்கள், அவமானத்தில் துடித்திருப்பீர்கள், அப்படி துடித்தவன் நான், ஆனால் நான் ஒன்றை புரிந்து கொண்டேன், அன்பு தான் வீட்டின் அடிப்படை, அதை ஒரு போதும் சந்தேகிக்காதீர்கள், குறை சொல்லாதீர்கள், எவரது அன்பையும் புறக்கணிக்காதீர்கள்,

என்றபடியே அந்த மனிதன் தனது துணிமூட்டையுடன் எழுந்து மேற்கு நோக்கி நடக்க ஆரம்பித்தான்,

சாஷா அவரை ரயில்வே நிலைய அதிகாரி வீட்டின் ஒரு அறையிலே தங்கி கொள்ளலாம் எனறு அழைத்துப் போனாள்,

சிறிய படுக்கை அறையாக இருந்த்து, அவர் தலையணையில் சாய்ந்து படுத்துக் கொண்டார்

சாஷா அவரிடம் கேட்டாள்

வேறு ஏதாவது தேவையா அப்பா,

உன் அம்மாவிற்கு ஒரு தந்தி கொடுக்க வேண்டும் என்றார் டால்ஸ்டாய்

மனைவி சோபியா வந்து சேரும்வரை அவர் அஸ்தபோவ் ரயில்நிலைய ஊழியரின் வீட்டு படுக்கையில் நிமோனியா காய்ச்சலுடன் படுத்துகிடந்தார், அவருக்கு தெரியும் தன்னை தேடி மனைவி கோபத்துடன் வந்திருப்பாள் என்று, தான் எழுதிய கடித்த்தை அவள் படித்திருப்பாள், அதற்கான தனது தரப்பு நியாயங்களை சொல்வதற்கு அவள் காத்திருப்பாள், அவளை எப்படி முகம் கொடுத்து பார்ப்பது என யோசனையாக இருந்த்து

ஒரே நாளில் உடல் நலிவுற்று பூஞ்சை போலாகியிருந்தது, மூச்சுவிடுவதற்கே அதிகம் சிரமப்பட வேண்டியிருந்தது, ரயில்வே நிலையத்தை சுற்றிலும் பத்திரிக்கையாளர்கள், புகைப்படக்கலைஞர்கள் என பலரும் வந்து நிரம்பியிருந்தார்கள், வாழ்வின் கடைசிபடிக்கட்டில் வந்து நிற்கிறோம் என்று அவருக்குப்புரிந்த்து

தன்னை காண்பதற்காக வந்து காத்திருந்த மனைவியிடம் தன்னை மன்னித்துவிடும்படியாக கதறி அழ விரும்பினார், ஆனால் சாஷாவிடம் தனக்கு சோபியாவை பார்க்கவிருப்பமில்லை, அவளை உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று உறுதியான குரலில் சொன்னார்

வெளியே சோபியா அழும் குரல் கேட்டது,

என்னை போல ஒருவனை சகித்துக்கொண்டு அன்பு செலுத்தியதற்கு நன்றி சோபியா என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டார்,

அதன் பிறகு அவர் இறக்கும்வரை சோபியாவிடம் ஒருவார்த்தை கூட பேசிக் கொள்ளவேயில்லை

••••

( உயிர்மை 2013 ஜுலை இதழில் வெளியானது)

Navigation

[0] Message Index

[*] Previous page

Go to full version