தமிழ்ப் பூங்கா > நாவல்கள்

எஸ். ராமகிருஷ்ணன்

<< < (2/6) > >>

Gayathri:
கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது
சிறுகதை

தான் ஒரு தலைப்புச் செய்தியாகப்போகிறோம் என்று கோகிலவாணி ஒருநாள்கூட நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டாள், ஆனால் அது நடந்தேறியது, அந்தச் செய்தி வெளியான நாள் செப்டம்பர் 20  ஞாயிற்றுகிழமை, 1998, அப்போது அவளுக்கு வயது இருபத்திமூன்று,

கோகிலவாணியை இப்போது யாருக்கும் நினைவிருக்காது, ஒருவேளை நீங்கள் தினசரி பேப்பரைத் தவறாமல் படிக்கின்றவராகயிருந்தால் உங்கள் நினைவின் ஏதாவது ஒரு மூலையில் அவள் பெயர் ஒட்டிக் கொண்டிருக்க கூடும், ஆனால் தினசரி செய்திகளை யார் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள், அவை சாலைவிபத்துக்களைக் கூட சுவாரஸ்யமான நிகழ்வாக மாற்றிவிடுகின்றன, ரத்தக்கறை படியாத நாளிதழ்களேயில்லை,

விபத்தில் இறந்த உடல்களின் புகைப்படங்களை ஏன் நாளிதழ்கள் இவ்வளவு பெரியதாக வெளியிடுகின்ற்ன, யார் அதைக் காண்பதற்கு ஆசைப்படுகின்றன மனிதன், ஒருவேளை வன்முறையின் களியாட்டத்தை நாம் உள்ளுற விரும்புகிறோமோ, கோகிலவாணியை தலைப்பு செய்தியாக்கியதற்கு நாம் காரணமில்லை என்று ஒதுங்கிக் கொள்ளமுடியாது, அவள் நம்மைக் குற்றம் சொல்லவில்லை, ஆனால் அவள் நம்மை கண்டு பயப்படுகிறாள், நம் யாவரையும் விட்டு விலகிப் போயிருக்கிறாள்,

இன்றைக்கும் அவளது கால்கள் சாலையில் நடப்பதற்கு பயப்படுகின்றன, கைகள் தன்னை அறியாமல் நடுங்கிக் கொண்டிருக்கின்றன, யாராவது அருகில் வருவதைக் கண்டால் கண்கள் காற்றிலாடும் அகல்விளக்கின் சுடரைப்போல தட்டளிகின்றன, இவ்வளவு ஏன்  அவளுக்கு உறக்கத்தில் கூட நிம்மதியில்லை, குரூரக்கனவுகளால் திடுக்கிட்டு அலறுகிறாள்,

அவள் சாகவாசமாகப் புழங்கி திரிந்த உலகம் ஒருநாளில் அவளிடமிருந்து பிடுங்கி எறியப்பட்டது, தோழிகள். குடும்பம். படிப்பு, வேலை அத்தனையும் அவளிடமிருந்து உதிர்ந்து போய்விட்டிருந்தது, களிம்பு மருந்துகளும் டஜன் கணக்கான மாத்திரைகளும் ரணசிகிட்சையும் அவளது அன்றாட உலகமாகியிருக்கிறது, அழுதழுது ஒய்ந்து ஒடுங்கிப் போயிருக்கிறாள், பலநேரங்களில் தன்னைக் கழிப்பறை மூலையில் வீசி எறியப்பட்ட பாதி எரிந்துபோன தீக்குச்சி ஒன்றை போலவே  உணர்ந்திருக்கிறாள்,

ஒரு சம்பவம் என்று எளிதாக நாளிதழ்களால் விவரிக்கப்பட்ட அந்த துயர நிகழ்வு இப்படியாகத் தான் செய்திதாளில் விவரிக்கபட்டிருந்தது

சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் கோகிலவாணி என்ற 23 வயது பெண் மீது துரை என்ற வாலிபர் ஆசிட் வீசினார். இது குறித்து கிண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விசாரணையில் துரை என்பவர் கோகிலவாணியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால், கோகிலவாணியோ மகேஷ் என்ற கல்லூரி மாணவனை காதலித்து வந்திருக்கிறார்

தனது காதலை ஏற்றுக் கொள்ளாவிட்டால் ஆசிட் ஊற்றிவிடுவேன் என்று கோகிலவாணியை துரை பலமுறை எச்சரித்திருக்கிறான், ஆனால் துரையின் காதலை அவள் ஏற்றுக் கொள்ளவேயில்லை, இதனால் ஆத்திரமான துரை தனது நண்பர்களான ஹரிகிருஷ்ணா, சஞ்சய் ஆகியோருடன் கூடிப் பேசி கோகிலவாணியின் முகத்தில் ஆசிட் வீச தம்புசெட்டி தெருவில் உள்ள ஒரு கடையில் `சல்பியூரிக்‘ ஆசிட்டை வாங்கியிருக்கிறான். மறுநாள் காலை கிண்டி ரயில்நிலையத்திற்கு செல்லும் வழியில் கோகிலவாணியை வழிமறித்து ஆசிட்டை ஊற்றிவிட்டுத் துரை தப்பியோடினான்.

இதனால் கோகிலவாணியின் முகம்  வெந்து போனது. சம்பவ இடத்தில் அலறியபடியே மயங்கி  விழுந்த அவளை பொதுமக்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். 60 சதவீத அளவுக்கு முகம்வெந்து போய் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். துரை மீது காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்,

**

பதினைந்து வயதிலே காதலிப்பதை பற்றிய கற்பனைகள் கோகிலவாணிக்குள் புகுந்துவிட்டன, பள்ளி நேரத்தில் அதைப்பற்றியே அவளும் தோழிகளும் ரகசியமாக பேசிக் கொண்டிருப்பார்கள், காதலைப்பற்றி பேசும்போதெல்லாம் பனிக்கட்டியை உள்ளங்கையில் வைத்துக் கொண்டிருப்பதை போல அவள் உடலில் கிளர்ச்சி உருவாவதை உணர்ந்திருக்கிறாள்,

சாலையில், பயணத்தில், பொதுஇடங்களில் தென்படும் பதின்வயது இளைஞர்களை காணும் போதெல்லாம் இதில் யார் தன்னைக் காதலிக்கப்போகிறவன் என்று குறுகுறுப்பாக இருக்கும், அவள் காதலிப்பதற்காக ஏங்கினாள், யாராலோ காதலிக்கபடுவதற்காக காத்துக் கொண்டேயிருந்தாள், அதைப்பற்றி தனது நோட்டில் நிறைய கிறுக்கி வைத்திருக்கிறாள், கவிதைகள் கூட எழுதியிருக்கிறாள்

அவளுக்கு திவாகர் என்ற பெயர் பிடித்துப் போயிருந்த்து, இவ்வளவிற்கும் அந்த பெயரில் ஒருவரையும் தெரியாது, ஆனால் ஏனோ அந்த பெயர் பிடித்திருந்த்து, அந்தப்பெயரிலே ஒருவனை காதலிக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று கூட தோன்றியது, ஆனால் அது நடக்குமா என்ன,

அந்த பெயரை தன் பெயரோடு சேர்த்து திவாகர் கோகிலவாணி என்று ரகசியமாக எழுதி பார்த்துக் கொண்டேயிருப்பாள், ஒரு நாள் தோழி இந்திரா அவளிடம் யாருடி அந்த திவாகர் என்று கேட்டதற்கு பக்கத்துவீட்டில் இருக்கின்ற பையன் அவனை நான் லவ் பண்ணுகிறேன் என்று பொய் சொன்னாள்,

அந்த பொய்யை இந்திரா நம்பிவிட்டதோடு அந்த காதல் எப்படி ஆரம்பித்த்து, எவ்வளவு நாளாக நடக்கிறது என்று கேட்கத்துவங்கிவிட்டாள், அவளுக்காகவே கோகிலவாணி நிறைய கற்பனை செய்து திவாகரை பற்றி கதைகதையாக சொல்லிக் கொண்டேயிருப்பாள்,

அதை கேட்டதில் இருந்து இந்திராவும் யாரையாவது காதலிக்க விருமபினாள், ஆனால் எப்படிக் காதலிப்பது என்று பயமாக இருந்த்து, அவர்கள் டியூசன் படிக்கப் போகின்ற வீட்டில் இருந்த முரளிடம் இந்திரா தயங்கி தயங்கி தான் அவளை காதலிப்பதாகச் சொன்னாள், அவன் தானும் அவளை காதலிப்பதாக சொல்லி மாடிஅறைக்கு வரச்சொல்லியிருந்தான்,

பயமும் ஆர்வமுமாக மாடிக்குப்போன இந்திரா கத்தி அலறியபடியே கிழே இறங்கி ஒடிவந்தாள், என்னடி ஆச்சு என்று கோகிலா கேட்ட போது இந்திரா பதில் சொல்லவேயில்லை, அழுது கொண்டேயிருந்தாள், வீடு திரும்பும் போது பேருந்தில் வைத்து லவ் பண்றேனு சொல்லிட்டு கிஸ் குடுத்து உதட்டை கடிச்சிட்டான்டி, அசிங்கமாக இருக்கு, என்று சொல்லியபடியே கண்ணீர் விட்டாள்,

கோகிலவாணிக்கு நல்லவேளை நாம் யாரையும் காதலிக்கவில்லை என்று தோன்றியது, மறுநாள் முழுவதும் இந்திரா லவ் பண்ணுவது தவறு என்று சொல்லிக் கொண்டேயிருந்தாள், உள்ளுற அதை ஒத்துக் கொள்ளாவிட்டாலும் இந்திராவிற்காக தானும் திவாகரை லவ் பண்ணுவதை விட்டுவிட்டதாக சொன்னாள் கோகிலவாணி, ஆனால் மனதிற்குள் பலவந்தமாக கிஸ் பண்ணாத  நல்லபையனாகப் பார்த்து லவ் பண்ண வேண்டும் என்ற ஆசை இருந்து கொண்டேயிருந்த்து

••

கோகிலவாணி எட்டாவது படிக்கும் போது ருதுவெய்தினாள், பத்தாம் வகுப்போடு படிப்பை முடித்துக் கொண்டு சில மாதங்கள் அருகாமையில் இருந்த எஸ்டிடி பூத்தில் வேலை செய்தாள், அங்கே வரும் இளைஞர்களில் ஒருவன் கூட அவளை கண்டுகொள்ளவேயில்லை, கருத்துப்போய் மெலிந்த உடலோடு இருப்பதால் தான் தன்னை எவருக்கும் பிடிக்கவில்லையோ என்று நினைத்துக் கொள்வாள், அவளிடம் இரண்டே இரண்டு நல்ல சுடிதார்கள் இருந்தன, அதையே மாற்றி மாற்றி போட்டுக் கொண்டு வேலைக்கு போவாள், சம்பளப்பணத்தில் மஞ்சளும் சந்தனமும் கலந்த டர்மெரிக் கிரிம் வாங்கி உடல்முழுவதும் பூசிப் பார்த்தாள், பேர் அண்ட் லவ்லியை வாங்கி ரகசியமாக உபயோகித்து பார்த்திருக்கிறாள், பாலில் குங்குமப்பூபோட்டு குடித்து அழகை மேம்படுத்த முயன்றிருக்கிறாள், அப்படியிருந்தும் அவள் மீது யாருக்கும் ஈர்ப்பு ஏற்படவேயில்லை.

எஸ்டிடி பூத் நடத்தும் சொக்கநாதன் தினசரி அவளை அனுப்பி சிகரெட் வாங்கி வரச்சொல்வான், அவள் ஒரு பெண் என்று கூடகவனிக்காமல் பச்சை பச்சையாக போனில் பேசிக் கொண்டிருப்பான், தன்னை ஒரு பெண்ணாக கூட அவன் மதிப்பதில்லையே என்ற ஆதங்கம் கோகிலவாணிக்கு நிறைய இருந்தது,

தன்னை கண்ணாடியில் பார்த்துக் கொள்ளும் போது தனக்கு மட்டும் ஏன் கழுத்து எலும்புகள் இப்படி தூக்கி கொண்டிருக்கின்றன, தாடை ஒடுங்கிப்போயிருக்கிறது என்று ஆத்திரமாக வரும், தன்னை எப்படியாவது அழகாக்கி கொண்டுவிட வேண்டும் என்று புதுசுபுதுசாக சோப்பு வாங்கி பார்த்தாள், தலைமயிரை சுருளவிட்டு பார்த்தாள், மூன்று மாதம் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்பிற்கு கூட போய்வந்தாள், ஆனாலும் யாரும் அவளைக் காதலிக்கவேயில்லை

ஒரு மாலைநேரம் போன் செய்யவந்த ஜீன்ஸ் மற்றும் வெள்ளைகோடு போட்ட சட்டை அணிந்த இளைஞன் அவளிடம் வேண்டும் என்றே சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்துவிட்டு அவளது பெயரை கேட்டு தெரிந்து கொண்டு போனான், அந்த நிமிசமே அவன் மீது காதல் உருவாக ஆரம்பித்தது,  அவன் மறுபடி எப்போது வருவான் என்று காத்துக் கொண்டேயிருந்தாள், பெயர் கூட தெரியாமல் அவனை மனதிற்குள் காதலித்து கொண்டிருந்தாள்

ஆனால் ஒருநாள் அந்த பையன் பைக்கில் ஒரு இளம்பெண்ணை பின்னால் உட்கார வைத்துக் கொண்டு சினிமா தியேட்டர் பக்கமாக போகையில் அவளை கையை காட்டி ஏதோ சொல்லிவிட்டு போவதை கண்டதும் அவன் மீது ஆத்திரமாக வந்தது,

காதலிக்க துவங்கும் முன்பே காதல் தோல்வியிடைந்துவிட்ட கோபத்தில் அவள் இரண்டு மூன்று நாட்கள் மதியச்சாப்பாடை சாப்பிடாமலே தூக்கி எறிந்தாள், ஆனால் பசியை அவள் காதலால் வெல்லமுடியவில்லை,

சில வேளைகளில் கடற்ரைக்கு போகையில் இவ்வளவு பேர் எப்படி காதலிக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கும், கடலை வேடிக்கை பார்ப்பதை விடவும் காதலர்களையே பார்த்துக் கொண்டிருப்பாள், அவளை விட சுமாராக உள்ள பெண்கள் கூட காதலிக்கிறார்கள், தன்னை ஏன் ஒருவரும் காதலிக்கவில்லை என்று ஆதங்கமாக இருக்கும், அதை நினைத்து நிறைய கவலைப்பட்டிருக்கிறாள், அதிகமாக சம்பளம் வாங்குகின்ற பெண்ணால் இருந்தால் காதலிப்பார்கள் என்று இந்திரா சொன்னதை கேட்டது தாங்கமுடியாத வருத்தமாக இருந்தது, காதல் மட்டும் தான் அவள் வாழ்க்கையின் ஒரே பற்றுக்கோல் போல நினைத்துக் கொண்டிருந்தாள்

மாம்பலத்தில் சொக்கநாதன் புதிதாக துவங்கியிருந்த ஜெராக்ஸ் கடைக்கு அவளை இடம் மாற்றிய போது தினசரி மின்சார ரயிலில் போய்வர வேண்டிய அவசியமானது, அப்படி தான் மகேஷை சந்தித்தாள், இரண்டுநாட்களில் பேசிப்பழகிவிட்டான்,

மகேஷ் அவளை விட ஒல்லியாக இருந்தான், பெரும்பாலும் நீலநிற பேண்ட் தான் அணிந்துவருவான், ஒரு ஒரியண்ட் சலூனில் வேலை செய்து கொண்டிருப்பதாக சொன்னான், மகேஷை அவளுக்கு பிடித்து போனது, தினமும் மகேஷ்  அவளுக்காக டிபன் பாக்ஸில் ஏதாவது ஒரு உணவு கொண்டுவருவான், ரயிலில் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டால்கூட அவன் கை அவள் மீது படாமல் பார்த்துக் கொள்வான், அவளது தண்ணீர்பாட்டிலை வாங்கி குடிக்கும் போது கூட அண்ணாந்து தான் குடிப்பான், அதை விடவும் அவள் புது உடையோ. பாசியோ. பொட்டோ. ஹேர்கிளிப்போ எது அணிந்து வந்தாலும் இது உன்க்கு ரொம்ப பொருத்தமாக இருக்கிறது என்று பாராட்டுவான், அதனாலே தான் ஒரு நல்லவனை காதலிப்பதாக பெருமை கொண்டாள் கோகிலவாணி

ஒருநாள் மாலை மகேஷ் வருவதற்காக மாம்பலம் ரயில் நிலையத்தின் அருகில் காத்திருந்த போது கால்வலிக்கிறது என்று ஒரு பைக்கில் சாய்ந்து நின்றிருந்தாள், எதிர் கடையில் இருந்து ஒருவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான், அவன் தன்னை பார்க்கிறான் என்று உணர்ந்த மறுநிமிசம் தனது துப்பட்டாவை சரிசெய்துவிட்டு தலையை குனிந்து கொண்டாள் கோகிலவாணி, அந்த இளைஞன் ஒரு சிகரெட்டை பற்றவைத்துவிட்டு அவளை பார்த்துக் கொண்டே புகையை ஊதிக் கெர்ண்டிருந்தான், மகேஷ் வருவதற்கு தாமதமாவது ஆத்திரமாக வந்தது, அவன் சிகரெட்டை அணைத்துவிட்டு அருகில் வந்து நின்று இது என் பைக், வேணும்னா ஏறி உட்காந்துகிடலாம் , இல்லை எங்கே போகணும்னு சொல்லுங்க நானே கொண்டுபோய்விடுறேன் என்று சொல்லி சிரித்தான்,

அதை பவ்வியமாக அவன் சொன்னவிதம் அவளுக்கு சிரிப்பாக வந்த்து, அதை கேட்ட அந்த இளைஞன் பைக்சாவியை எடுத்து நீங்களே வேணும்னாலும் ஒட்டிகிட்டு போகலாம் என்றான், கோகிலவாணி வேண்டாம் என்று மறுத்துவிட்டு சிரிப்போடு நகர்ந்து  நின்று கொண்டாள், அந்த இளைஞன் அவளிடம் வீடு எங்க என்று கேட்டான், அவள் பதில்சொல்லாமல் ஸ்டேஷனையே பார்த்துக் கொண்டிருந்தாள், அவன் தன் பாக்கெட்டில் இருந்து சீப்பை எடுத்து தலையை வாறிவிட்டபடியே ஒரு பபிள்கம்மை எடுத்து அவளிடம் நீட்டினான்,

அவள் விடுவிடுவென ரயில்நிலையத்தின் உள்பகுதியை நோக்கி நடந்து போக துவங்கினாள், அவன் சிரிப்பது கேட்டது, மகேஷ் வந்து சேரும்வரை அவள் திரும்பி பார்க்க்கவேயில்லை, மகேஷிடம் அந்த இளைஞனை பற்றி சொல்லவா வேண்டாமா என்று தயக்கமாக இருந்த்து, ஆனால் சொல்லவேயில்லை,

இரண்டு நாட்களின் பின்பு அந்த பைக் இளைஞனை மறுபடியும் ரயிலில் பார்த்தாள், அவன் நெருங்கி அருகில் வந்து நின்று அவளையே பார்த்தபடியே வந்தான்,  கோகிலவாணி அவனை ஒரக்கண்ணால் பார்க்கும் போது அவன்  உதட்டை கடிப்பதும் உள்ளங்கையில் ஐ லவ்யூ, யுவர்ஸ் துரை என்று தன் பேனாவில் எழுதிக்காட்டுவதும், கள்ளசிரிப்புடன் கையசைப்பதுமாக இருந்தான்,

ஒருவாரத்தின் பிறகு ஒருநாள் காலையில் அவள் ரயிலை விட்டு இறங்கி நடக்கும்போது அருகில் வந்து உனக்காக தான் தினம் தாம்பரத்துல இருந்து இதே ரயில்ல வர்றேன் என்றான், , கோகிலவாணி  அவனிடம் பேசவேயில்லை

அவனோ நெடுநாள் பழகியவன் போல அருகில் வந்து படத்துக்குப் போவமா என்று கேட்டான், அவளுக்கு அதை கேட்ட போது பயமாக வந்த்து, அதைக்காட்டிக் கொள்ளாமல் எனக்கு இதெல்லாம் பிடிக்காது என்றாள்,

துரை சிரித்தபடியே அப்போ நீ என்னை லவ் பண்ணலையா என்று கேட்டான், கோகிலவாணி கோபத்துடன் நான் எதுக்கு உன்னை லவ் பண்ண்ணும் என்று கேட்டாள்,

அப்போ அன்னைக்கு மட்டும் சிரிச்சே, தினம்தினம் லுக்விட்டயே அது எதுக்கு என்றான் துரை,

நான் ஒண்ணும் உன்னை லவ் பண்ணலே, நான் மகேஷை லவ் பண்றேன், பிரச்சனை பண்ணாம போயிடு என்றாள்,

உடனே துரை பச்சை பச்சையாக அவளை திட்டியதோடு நீ என்னை லவ் பண்ணிதான் ஆகணும், நான் டிசைட் பண்ணிட்டேன் என்றான், அவனுக்கு பயந்து கொண்டு சில நாட்கள் பஸ்ஸில் வரத்துவங்கினாள்,

ஒருநாள் மகேஷிடம் ஒரு பையன் தன்னை பின்னாடியே துரத்துவதாக சொன்னாள், மகேஷ் சற்றே கலக்கத்துடன் நான் பேசிப்பாக்குறேன் என்று ஆறுதல் சொன்னான், அதன் இரண்டு நாட்களுக்கு பிறகு மகேஷ்ஷை பார்க்கவே முடியவேயில்லை, அவனை தேடி ஒரியண்ட் சலூனுக்கு போன போது மகேஷின் முகத்தில் அடிவாங்கிய  வீக்கமிருந்த்து,

மகேஷ் தலையை குனிந்தபடியே அந்த ரௌடிப்பய துரை என்னை அடிச்சிட்டான் கோகிலா, நாம ரெண்டு பேரையும் ஒண்ணா பாத்தா கொன்னுருவேன் சொல்றான், என்ன செய்றதுனு தெரியலை, சலூன் ஒனர்கிட்டே யோசனை கேட்டேன், லவ் எல்லாம் எனக்கு சரிப்படாதுனு சொல்றார், இப்போ என்ன செய்றதுனு தெரியலை ஒரே குழப்பமா இருக்கு என்றான், கோகிலவாணி அங்கேயே அழுதாள், மகேஷ் சலூன் ஒனரிடம் சொல்லிவிட்டு அவளை அழைத்துக் கொண்டு போய் அருகாமை தேநீர்கடையில் ராகிமால்ட் வாங்கி தந்து நிறைய அறிவுரைகள் சொல்லி அனுப்பி வைத்தான்.

அதன்பிறகு மகேஷ் அவளை பார்க்க வரவேயில்லை, ஆனால் கோகிலாவால் காதலைவிட முடியவில்லை, திரும்பவும் ஒருநாள் மகேஷை காண சலூனுக்கு போனாள், அப்போது சலூனில் யாருமேயில்லை, மகேஷ் மட்டும் தனியே அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தான், அவளை பார்த்தவுடன் சலூன் நாற்காலியில் உட்கார சொன்னான், எதிரில் உள்ள கண்ணாடியில் அவள் முகம் தெரிந்த்து, மகேஷ் சிரிப்போடு உனக்கு முடியை கொஞ்சம் ட்ரிம் பண்ணிவிடவா என்று கேட்டான்,

கோகிலவாணி ஆத்திரத்துடன் அவனை திட்டினாள், பிறகு ஆவேசமானவள் போல அவனை கட்டியணைத்து இறுக்கமாக முத்தம் கொடுத்தாள், அதன்பிறகு இருவரும் நெடுநேரம் பேசிக் கொண்டேயிருந்தார்கள், ஒன்றாக அன்று வீடு திரும்பினார்கள், கோகிலவாணி மறுபடியும் காதலிக்க துவங்கினாள்,

ஆனால் அவர்களை ஒன்றாக உதயம் தியேட்டரில் பார்த்த துரை நான் மட்டும் தான்டி உன்னை லவ் பண்ணுவேன், வேற யாரு உன்னை லவ் பண்ணினாலும் நீ செத்தே, உன் மேல ஆசிட் ஊத்திருவேன், பாத்துக்கோ என்று கடுமையாகத் திட்டினான், கோகிலவாணிக்கு அது உண்மையாகப் போகிறது என்று அப்போது தெரியாது,

அதன் இரண்டு நாட்களுக்கு பிறகு துரை நிறைய குடித்துவிட்டு அவளது ஜெராக்ஸ் கடைக்கு வந்து நீ என்னை லவ் பண்றயா இல்லையானு இப்பவே தெரியணும் சொல்லுடி,  என்று மிரட்டினான், கோகிலவாணி அவனிடம் பேசவேயில்லை, அவன் அசிங்கமாக கத்தினான், அவனுக்கு பயந்து சில நாட்கள் வேலைக்கு போகாமலும் இருந்தாள், ஆனால் அவன் விடவேயில்லை, வீட்டின் முன்பு வந்து நின்று கொண்டேயிருந்தான், குளியல் அறையை ஒட்டிய சந்தின் இடைவெளியில் வந்து நின்று கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருப்பான், அவளுக்கு பயமாகவும் நடுக்கமாகவும் இருந்தது

••

துரை அவள் மீது ஆசிட் ஊற்றுவதற்கு முந்திய நாள் காலையில் கோகிலவாணியின் அப்பாவிடம் யாரோ அவள் மகேஷை காதலிக்கிறாள் என்பதை பற்றி சொல்லியிருந்தார்கள், அதற்காக அப்பா தன் காலில் போட்டிருந்த செருப்பை கழட்டி அவள் முகத்தில் மாறிமாறி அறைந்ததோடு மகேஷின் ஜாதியை சொல்லி கேவலமாகத் திட்டியதோடு அவள் தன்னுடைய மகள் என்பதையும் மறந்து ஆபாசமான வசைகளை பொழிந்தார்,

அவர் கூடவே செல்வம் அண்ணனும் சேர்ந்து கொண்டு அவன் மட்டும் இல்லைப்பா, துரைனு இன்னொரு பையனும் இவ பின்னாடி சுத்துறான், ஒரே நேரத்தில ரெண்டு பையக கூட சுத்துறா என்று ஏற்றிவிட்டான்,

அப்பா அவள் தலைமயிரை பிடித்து இழுத்து சுவரோடு முட்டவைத்து ஒடுகாலி நாயி என்று மறுபடியும் ஏச ஆரம்பித்தார், அம்மா அவரது பலமான பிடியில் இருந்து கோகிலாவை விடுவித்து சோற்றுகரண்டியால் காலிலும் புட்டத்திலும் அடித்தாள், கோகிலவாணி காதலுக்காக தான் அடிபடுகிறோம் என்பதால் அழுது கத்தவேயில்லை

••

ஆசிட் ஊற்றப்பட போகின்ற நாளின் காலையில் துரை அவள் முன்னால் வந்து நின்றபோது எப்படியாவது அவனிடம் கெஞ்சிப்பேசி தான் மகேஷை காதலிப்பதை புரிய வைத்துவிட வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் கோகிலா,

ஆனால் துரை ஒருவார்த்தை கூட அவளிடம் பேசவும் இல்லை, பேசவிடவும் இல்லை, பேண்ட் பாக்கெட்டில் இருந்து சீப்பை எடுப்பது போல சிறிய பிளாஸ்டிக் பாட்டில் ஒன்றை வெளியே எடுத்தான், தொலைவில் மின்சார ரயில் வருவதற்காக ஒசை  கேட்டது, அவள் ரயில் நிலையத்தின் படியை நோக்கி நடப்பதற்கு அவள் முகத்தில் ஆசிட்டை ஊற்றினான்,

கொதிக்கும் நெருப்பினுள் முகத்தை நுழைத்துவிட்டது போல எரிய ஆரம்பித்த்து, காது முகம் நாசி கன்னம் என்று அத்தனையும் உருகியோடுவது போல தாங்கமுடியாத வலி பீறிட்டது, கோகிலவாணி அலறினான், கூட்டத்தை விலக்கி கொண்டு துரை ஒடுவது தெரிந்தது, அவள் முன்னிருந்த உலகம் மெல்ல புகைமூட்டம் கொண்டு மயங்க துவங்கியது,

••

கோகிலவாணி ஆறு வாரங்கள் மருத்துவமனையில் சிகிட்சை பெற்றாள், வலது பக்க முகம் முற்றிலும் எரிந்து போயிருந்த்து, காதின் நுனி சிதைந்து போனதால் பாதி காதே மிச்சமாக இருந்த்து, ஆசிட் முகத்தில் பட்டதோடு பின்னந்தலை வரை பரவியிருந்த காரணத்தால் அவளது தலைமயிரையும் பாதி கத்தரித்து இருந்தார்கள், அவளது தோற்றத்தை காண அவளாலே சகிக்கமுடியவில்லை

அவள் மருத்துவமனையில் இருந்த நாட்களில் அவளது அப்பாவும் அம்மாவும் உறவினர்களும் மாறிமாறி அவளை மோசமான வார்த்தைகளால் திட்டிக் கொண்டேயிருந்தார்கள்,

கோகிலவாணியின் எரிந்த முகத்தை கண்ட அப்பா  அப்படி என்னடி உனக்கு லவ்வு கேட்குது, செத்து போயிருந்தா சனியின் விட்டுச்சினு தலைமுழுகிட்டு போயிருப்பேன், இனிமே உன்னை எவன் கட்டிகிடுவான், உன்னை எங்கே கொண்டு போய் தள்ளுறது என்று தனது முகத்தில் மாறிமாறி அடித்துக் கொண்டு அழுதார்,

எதற்காக காதலிக்க ஆசைப்பட்டோம், காதல் என்பது இது தானா, ஏன் துரை இப்படி தன்முகத்தில் ஆசிட் ஊற்றினான், அவளுக்கு நினைக்க நினைக்க அழுகையும் ஆத்திரமும் பொங்கிக் கொண்டு வந்தது

அவள் கூட படித்த மாணவிகள், தெரிந்தவர்கள், தோழிகள் எவரும் அவளைப்பார்க்க வரவேயில்லை, ஆசிட் அடிக்கப்பட்டவளின் தோழி என்று யார் சொல்லிக் கொள்ள ஆசைப்படுவார்கள், மகேஷ் கூட அவளை பார்க்க வரவேயில்லை,

பெண் மருத்துவர் அவள் முகத்தை துடைத்தபடியே உனக்கு எத்தனை லவ்வர்டி என்று நக்கலாக கேட்பார், கோகிலவாணி பதில் சொல்வதேயில்லை,

மருந்தாளுனரும் அவள் முகத்தில் உள்ள காயத்தை துடைத்தபடியே இனிமே உன்னை ஒரு பையனும் திரும்பி பார்க்கமாட்டான், நீ எங்கே வேணும்னாலும் போகலாம், எந்த நேரம் வேணும்னாலும் வீட்டுக்கு வரலாம், உன்னை யாரு பாலோ பண்ண போறாங்க என்பார்,

கோகிலவாணிக்கு ஆத்திரமாக வரும் ஆனால் வாய் திறந்து பேசமாட்டாள் , இப்படி அவமானப்பட்டு வாழ்வதற்கு பதிலாக பேசாமல் அப்பா சொன்னது போல செத்துப்போயிருக்கலாம், எதற்காக பிழைத்துக் கொண்டோம், மிச்சமிருக்கும் வாழ்க்கையை எப்படி கடத்தப்போகிறோம், அந்த வலி ஆசிட்டின் கொதிப்பை விட அதிகமாக இருந்த்து

••

கோகிலவாணி அந்த வழக்கிற்காக இருபத்தியாறு முறை கோர்ட்டிற்கு சென்று வர நேர்ந்த்து, ஒவ்வொரு முறையும் அவளது காதலை யாராவது பரிகாசம் செய்வார்கள், எரிந்த முகத்தை காட்டி அவளது கதையை சொல்லிச் சிரிப்பார்கள், விசாரணைக்கு மகேஷ் வரமறுத்துவிட்டதுடன் தான் அவளை ஒருபோதும் காதலிக்கவேயில்லை என்று காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்புதல் வாக்குமூலம் தந்திருக்கிறான், துரையோ அவள் தன்னை பலமாதங்கள் காதலித்து ஏமாற்றிவிட்டதாக போலீஸில் வாக்குமூலம் தந்திருந்தான், கோகிலவாணி தான் யாரையும் காதலிக்கவில்லை, துரை தன்னை காதலிக்கும்படியாக மிரட்டினான் என்றே சொன்னாள், வழக்கறிஞர் அவள் யாரோடாவது பாலுறவு கொண்டிருக்கிறாளா, ஆண் நண்பர்க்ள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று துருவிதுருவி கேட்டார்,  கோகிலவாணி நீதிமன்றத்தில் நிறைய முறை அழுதிருக்கிறாள், ஆனால் யாரும் அவளை தேற்றவேயில்லை, முடிவில் துரை  தண்டிக்கப்பட்டான்

•••

பாதி எரிந்த முகத்துடன்  எலிவால்முடி போல கொஞசம் தலைமயிருடன் கோகிலவாணி வீட்டிற்குள்ளாகவே அடைந்து கிடந்தாள், டிவி பார்ப்பது கூட கிடையாது, தலையில் பூ வைத்துக்  கொள்வதோ, கண்ணாடி பார்த்து திருநீறு வைத்துக் கொள்வதோ கூட கிடையாது, ,இரண்டு முறை அவளுக்கு கல்யாணப்பேச்சு துவங்கியது, ஆனால் எவரும் அவளை கட்டிக் கொள்ள முன்வரவேயில்லை, கோகிலவாணி தனிமையை தாங்கிக் கொள்ள முடியாமல் வீட்டில் இருந்தபடியே காளான் வளர்த்துவிற்பனை செய்ய துவங்கினாள், தினமும் அம்மாவும் அப்பாவும் அவளை வாய்க்கு வாய் திட்டினார்கள், வீட்டின் எந்த விசேசத்திலும் அவள் கலந்து கொள்ள அனுமதிக்கபடவேயில்லை, சிரிப்பை மறந்தவளாக  கோகிலவாணி ஒரு நடைப்பிணம் போலவே வாழ்ந்து கொண்டிருந்தாள்

••

உபாசனா என்ற தன்னார்வ நிறுவனம் அவளை தஙகள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்துக் கொண்ட போது அவளுக்கு வயது முப்பத்திரெண்டை கடந்திருந்த்து, அது பார்வையற்றவர்களுக்காக சேவை செய்யும் நிறுவனம், பார்வைக்குறைபாடு கொண்டவர்களே அங்கு பெரும்பாலும் பணியாற்றிக் கெர்ண்டிருந்தனர், அதனால் யாரும் அவளை கேலி செய்வார்கள் என்ற பயமின்றி அவள் வேலைக்கு போய்வரத்துவங்கினாள், அங்குள்ள நூலகத்தில் இருந்து நிறைய புத்தகங்களை எடுத்து வந்து படித்துக் கொண்டேயிருப்பாள்,

சில சமயம் அவள் அறியாமல் உடலின்பம் பற்றி மனது நாட்டம் கொள்ள துவங்கும் அப்போது விரலால் முகத்தை தடவிக் கொள்வாள்,, மின்சாரத்தில் கைப்பட்டது போல மனது உடனே அந்த நினைவில் இருந்து தன்னை துண்டித்துக் கொள்ளும்

••

சென்றவருடத்தில் ஒரு நாள் கடற்கரையில் தற்செயலாக துரையை பார்த்தாள், அவனுக்கு திருமணமாகி பெண் குழந்தையிருந்த்து, இரண்டு வயதான அந்த குழந்தை ஒரு வண்ணபந்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்தது, மணலில் உட்கார்ந்தடிபயே துரையின் மனைவியை பார்த்துக் கொண்டிருந்தாள், நல்லநிறம், அரஞ்சு நிற புடவை கட்டியிருந்தாள், கையில் ஒரு ஹேண்ட்பேக், கழுத்தில் நிறைய நகை போட்டிருந்தாள், துரையும் முழுக்கை சட்டை அணிந்து தலையை படிய வாறியிருந்தான்,

ஏனோ துரையின் மனைவியிடம் போய் பேச வேண்டும் போலிருந்த்து, அந்த குழந்தையை ஒருமுறை கொஞ்சலாமா என்று கூட தோன்றியது, அவள் தங்களை பார்த்துக் கொண்டிருப்பதை துரை கவனித்தவுடன் மனைவியிடம் ஏதோ சொன்னான், அவர்கள் எழுந்து கொண்டார்கள்,

நாம் தானே துரை மீது கோபமும் வெறுப்பும் கொள்ள வேண்டும், அவன் ஏன் தன்னை பார்த்தவுடனே எழுந்து ஒடுகிறான், பயமா, கடந்தகாலத்தின் நினைவுகள் எதுவும் தன்முன்னால் வந்துநின்றுவிடக்கூடாது என்ற பதைபதைப்பா என்ற யோசனையுடன் அவர்கள் போவதையே கோகிலவாணி பார்த்துக் கொண்டேயிருந்தாள்.

ஒரு பெண் மீது ஆசிட் அடித்தவன் என்று அவனை பார்த்தால் யாராவது சொல்வார்களா என்ன? அவனுக்கு ஆசிட் வீசியது என்பது ஒரு சம்பவம், ஆனால் தனக்கு, கண்ணில் இருந்து துரை மறையும்வரை அவனையே பார்த்துக் கொண்டேயிருந்தாள்,

கடற்கரையெங்கும் காதலர்கள் நிரம்பியிருந்தார்கள், இவர்களில் ஏதோவொரு பெண் தன்னை போல முகம் எரிந்து போககூடும், அல்லது வன்கொலை செய்யப்படவும் கூடலாம், வசை. அடி. உதை, எரிப்பு, கொலை இவை தான் காதலின் சின்னங்களா, காதல் வன்முறையில் தான்   வேர் ஊன்றியிருக்கிறதா,

அவள் கடல் அலைகளை பார்த்துக் கொண்டேயிருந்தான், இருட்டும்வரை வீட்டிற்கு கிளம்ப வேண்டும் என்று தோனற்வேயில்லை

உலகம் தன்னை கைவிட்டு யாருமற்ற நிர்கதிக்கு உள்ளாக்கி வைத்திருப்பதை உணர்ந்து கொண்டவளை போல நீண்ட நேரத்தின் பிறகு ரயில் நிலையத்தை நோக்கி தனியே நடக்க ஆரம்பித்தாள்,

ரயிலுக்காக பிளாட்பாரத்தில் காத்திருந்த போது ஏனோ தனக்கு முப்பத்தியாறு வயது முடிந்துவிட்டது என்பது நினைவிற்கு வந்தது.

ரயில் செல்லும்போது வீசிய கடற்காற்று தழும்புகள் நிறைந்த முகத்தில் பட்டதும் மனது தானே காதலைப்பற்றி நினைத்துக் கொள்ள துவங்கியது, உடனே மனதிற்குள்ளிருந்து இத்தனை வருசங்களாகியும் மறையாத திராவகத்தின் எரி மணமும் திகுதிகுப்பும் பீறிட்டு கிளம்பியது, தன்னை மீறிய உள்ளார்ந்த வலியை அவளால் தாஙகிக் கொள்ள முடியவில்லை

கோகிலவாணி திரும்பி பார்த்தாள், எதிர்சீட்டில் ஒரு இளம்பெண் ஒரு இளைஞன் மடியில் சாய்ந்து கொண்டு ரகசியமான குரலில் பேசியபடியே காதலித்துக் கொண்டிருந்தாள்,

கோகிலவாணி அவர்களை பார்க்காமல் வெளியே இருந்த இருட்டையே பார்த்துக் கொண்டு வந்தாள், இருட்டில் பறந்த மின்மினி பூச்சி ஒன்று முகத்தை உரசிக் கொண்டு போனது,

காதல்ஜோடி பேசிச்சிரிப்பதைக் கேட்க கேட்க கோகிலவாணி தன்னை அறியாமல் விசும்பத் துவங்கினாள், தன் காதலை  உலகம் ஏன் ஏற்க  மறுத்தது, எதற்காக தனக்கு இவ்வளவு குரூரமான தண்டனை வழங்கபட்டது என்பதை நினைத்து அவள் அழுது கொண்டேயிருந்தாள், ரயிலின் கூடவே மின்மினிகள் பறந்து வந்து  கொண்டேயிருந்தன, அது இருட்டிற்கு கண்கள் முளைத்து அவள் அழுவதை பார்த்துக் கொண்டிருப்பதை போலவே இருந்தது

••

2011 ஆண்டு ஆனந்த விகடன் தீபாவளி மலரில் வெளியான கதை

Gayathri:
அந்தக் காலத்திலே....

லியோ டால்ஸ்டாயின் சிறுகதைகளில் எனக்கு மிகவும் விருப்பமான கதையிது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது, எளிய கதை போல வெளிப்படையாக தோன்றினாலும் அது சுட்டிக்காட்டும் உண்மை மிகவும் ஆழமானதுஅந்தக் காலத்திலே : லியோ டால்ஸ்டாய்

முன்பு ஒருநாள், பள்ளத்தாக்கு ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த சில குழந்தைகள் முட்டை போல் பெரியதாக உருண்டு திரண்டிருந்த பொருள் ஒன்றைக் கண்டெடுத்தனர்.

இதன் நடுவில் வடுப்போல் பள்ளமாயிருந்ததால், தானிய மணி போலிருந்தது. குழந்தைகளிடம் இதைக் கண்ட ஓர் வழிப்போக்கன் காசு கொடுத்து விலைக்கு வாங்கிப்போய், ஜார் மன்னனிடம் அரும் பொருளாக விற்றுவிட்டான்.

மன்னன், தனது சபையில் உள்ள அறிஞர்களை அழைப்பித்து, இது முட்டையா அல்லது தான்ய மணியா என்பதினைக் கண்டறிந்து சொல்லுமாறு ஏவினான்.

அறிஞர்கள் பலவிதங்களில் பரிசோதனை செய்து பார்த்தும், கண்டுபிடிக்க முடியவில்லை. இது பயனற்றது என்று கைவிட்டுவிட்டனர்,

ஒருநாள் அங்கு பறந்து வந்த பறவையொன்று அதை தனது அலகால் குத்தித் துளை பண்ணிவிட்டது. இப்போது, இது தானியமென்பது என்பது அறிஞர்களுக்குத் தெரிய வந்தது.

வியப்போடு தானியத்தை ஜார் மன்னனிடம் கொண்டு சேர்த்தனர் .

ஆச்சரியமடைந்த மன்னன், இது எங்கே, எப்பொழுது பயிரிடப்பட்டது என்று தெரிந்து சொல்லச் சொன்னான். அறிஞர் யோசித்தனர்; புத்தகங்களைப் புரட்டினர்; பயனில்லை. “எங்கள் புத்தகங்களில் இதைப் பற்றி ஒன்றுங்காணோம். எங்கட்குத் தெரியாது. விவசாயிகளிடம் வேண்டுமானால் விசாரித்துப் பார்க்கலாம். ஒருவேளை அவர்கள் மூதாதைகளிடமிருந்து யாராவது இதைப் பற்றித் தெரிந்திருக்கலாம். விசாரிக்க உத்தரவிடுங்கள்” என்றார்கள்

ஜார் மன்னன் கட்டளைப்படி, விவசாயிகளில் மிகவும் வயதான கிழவன் ஒருவன் அரசசபைக்கு கொண்டுவரப்பட்டான். இக்கிழவன், சோகை பிடித்துப் பல்லில்லாமலிருந்தான். இரண்டு கோல்களில் சாய்ந்த வண்ணம் வருந்தி நடந்தான்.

மணியைச் சரியாய்க் கூடப் பார்க்க முடியாதபடி கிழவனது பார்வை மங்கிப் போயிருந்தது. பாதி கண்ணாலும், பாதி கை உணர்ச்சியாலும் அவன் தடவிப் பார்த்தபிறகு, ஜார் அவனைப் பார்த்து,-

“பெரியவரே, இது எங்கே பயிரானது, தெரியுமா உனக்கு? உமது வயலில் இப்படி தானிய மணிகளை நீர் விதைத்த துண்டா? இல்லை, உமது காலத்தில் இவை போன்றவைகளை விலைக்கு வாங்கியதாவது உண்டா?”என்று கேட்டான்.

கிழவன் செவிடு. நிரம்பச் சிரமப்பட்டுத்தான் புரிந்து கொண்டான். பதிலும், தட்டுத் தடுமாறித்தான் சொன்னான்: “இந்த மாதிரித் தானியங்களை நான் விதைக்கவுமில்லை, அறுக்கவுமில்லை, வாங்கவுமில்லை. நாங்கள் வாங்குவது எல்லாம் சிறியதாய், மெருகோடிருக்கும். என் தகப்பனாரைக் கேட்டுப் பார்க்கலாம்; அவருக்கு ஒருவேளை தெரிந்திருக்கும்.”

அவனது தகப்பனை அனுப்பிவைக்கும்படி ஜார் பணித்ததும், தகப்பனும், ஒரு கோல் மட்டும் ஊன்றிக் கொண்டு வந்து சேர்ந்தான். இவனுக்குக் கண் நன்றாயிருந்ததால், நன்றாய்ப் பார்க்க முடிந்தது. இவனிடமும் முன்போல் கேட்டான் அரசன். இவன் காதும் மந்தந்தான். ஆனால், மகனைக் காட்டிலும் தெளிவாய்க் கேட்டது

“இந்த மாதிரி தானியமணிகளை நான் விதைத்ததுமில்லை, அறுத்ததுமில்லை, வாங்கினதுங்கூட இல்லை. ஏனென்றால், எங்கள் காலத்திலெல்லாம் பணம் புழங்கத் தொடங்கிவிடவில்லை. தனக்கு வேண்டிய ரொட்டிக்கான கோதுமையை மட்டும் தான் பயிரிட்டுக் கொண்டோம். மற்ற தேவைகட்கு ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து கொண்டோம். ஆகவே இது எங்கே பயிராகி இருக்கக் கூடுமென்பது எனக்குத் தெரியவில்லை. எங்கள் காலத்துக் கதிர் மணிகள் இப்போதையைக் காட்டிலும் பெரியவைதான். மாவு நிறையத் தரும். ஆனாலும், இதுமாதிரி நான் கண்டதில்லை. தமது காலத்தில் தானிய அறுவடை நல்லபடியாயிருக்குமென்று என் தகப்பனார் சொல்லிக் கொள்வார். அது இன்னும் பெரிதாம். நிறைய மாவு தருமாம். அவரைக் கூப்பிட்டுக் கேளுங்கள்”என்று இவன் கூறினான்.

அப்படியே, இவனுடைய அப்பன் அழைத்து வரப்பட்டான். கைக்கோல் எதுவும் இல்லாமலேயே அரசன்முன் சரளமாய் நடந்து வந்து சேர்ந்தான். கண்கள் இன்னும் ஒளி வீசின. பேச்சுத் தெளிவாயிருந்தது. அரசன் காட்டிய தான்யத்தைக் கிழவன் புரட்டிப், புரட்டிப் பார்த்தான்.

“இப்படி தானிய மணியை நான் பார்த்து நிரம்ப நாளாச்சே”என்று கூறிவிட்டு,தானிய மணியைச் சிறிது பல்லாற் கடித்துச் சுவைத்தான். அப்புறம், “அதேதான்!”என்று வியந்துரைத்தான்.

“எங்கே, எப்பொழுது இத்தகைய மணிகள் பயிராயின, பெரியவரே? நீர் உமது வயலில் இப்படி விதைப்பதுண்டோ? இல்லை, வேறு யாரிடமாவது விலைக்கு வாங்குவதுண்டோ?”என்று மன்னன் வினவினான். அதற்கு முதியவன் பதில் சொன்னான்: “என் காலத்திலே இந்த மாதிரி தான்யம் நாடெங்ககும் அறுவடையாயிற்று. இந்த தானியங்களைக்  சாப்பிட்டு தான் நாங்கள் பிழைத்து வந்தோம். இவற்றையே நான் விதைத்து, அறுவடை செய்து, அரைத்துமிருக்கிறேன்.”மீண்டும் மன்னன் கேட்டான் “இவற்றை நீர் எப்போதாவது, எங்காகிலும் விலைக்கு வாங்கும் வழக்கம் உண்டா? இல்லை, உமது சொந்த நிலத்திலே, எப்போதும் நீரே விதைப்பீரா?”

கிழவனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. “தான்யத்தை விற்பது வாங்குவது போன்ற பாபத்தைச் செய்ய எவனும் என்னுடைய காலத்தில் ஒருவனும் எண்ணமாட்டான். பணத்தைப் பற்றி நாங்கள் கேள்விபட்டதே கிடையாது. எல்லாரிடமும் வேண்டிய தானியமிருந்தது இல்லாதவர்களுக்கு எங்களுடையதை பகிர்ந்து தருவோம்”என்று பதில் கூறினான் கிழவன்.

ஜார் மன்னர் மறுபடியும் கேள்வி கிளப்பினார்

“நீர் விதைப்பு நட்ட இடமெங்கே? உமது வயல் இருப்பதுதான் எங்கே?”

கிழவன் சொன்னான்:

“என் வயல் கடவுள் அருளிய எங்களுர் மண்ணே . நான் உழுத இடமே எனது வயல்வெளி.  அப்போது பூமி செழிப்பானதாகயிருந்தது,  யாவரும் ஒன்று கூடி பாடுபட்டோம்,

“இன்னும் இரண்டே விஷயங்கள் நீர் எனக்குச் சோல்ல வேண்டும். முதலாவது, -முன்பு விளைந்தது போல இப்போது ஏன் பயிர்கள் விளைவதில்லை? இரண்டாவது உமது பேரன் இரு தடி தாங்கி நொண்டுகிறான்; உம்முடைய மகன் ஒரே கோலூன்றி நகர்கிறான்; நீரோ கோலெதுவுமின்றிச் சுலபமாய் நடக்கிறதோடு மட்டுமின்றி, உமது கண்களில் இன்னும் ஒளிவீசுகிறது; பற்கள் வலுவாயிருக்கின்றன; பேச்சும் தெளிவாய், அன்போடிருக்கிறது. இது ஏன்? இவை இரண்டுக்கும் காரணம் என்ன?”

முதுகிழவன் மொழிந்தவை:

“இவை இரண்டுக்கும் காரணம், மனிதர் தங்கள் உழைப்பால் மட்டும் வாழ்வதை நிறுத்திவிட்டுத், தம் அண்டையிலிருப்பவரது பொருட்களின் மீது ஆசைப்பட்டு குறுக்குவழியில் பிழைப்பதும், சத்தேயில்லாத உணவை உண்பதுமே காரணம் . அந்தக் காலத்தில் மக்கள் உண்மைக்கு பயந்து நடந்தனர், கடவுள் சொற்படி நடந்தனர். தமது உடைமைக்கு எஜமானராயிருந்தனர். பிறர்க்குச் சொந்தமானவற்றை இச்சிக்கவில்லை. அக்காலத்தில் ஒருவரும்  தனது சுயநலத்திற்காக இயற்கையை அழித்ததில்லை , நாங்கள் பூமியை நேசித்தோம், அது தான் காரணம் என்றார் ”

தமிழாக்கம்: சுப நாராயணன்

Gayathri:
புத்தனாவது சுலபம்
சிறுகதை

அருண் இரவிலும் வீட்டிற்கு வரவில்லை.

பின்னிரவில் பாத்ரூம் போவதற்காக எழுந்து வந்தபோது கூட வெளியே பார்த்தேன் அவனது பைக்கைக் காணவில்லை. எங்கே போயிருப்பான்.

மனைவியிடம் கேட்கலாமா என்று யோசித்தேன். நிச்சயம் அவளிடமும் சொல்லிக் கொண்டு போயிருக்க மாட்டான். கேட்டால் அவளாகவே அருண் எங்கே போயிருக்கக் கூடும் என்று ஒரு காரணத்தைச் சொல்வாள்.  அது உண்மையில்லை என்று எனக்கு நன்றாகத் தெரியும், பிறகு எதற்குக் கேட்டுக் கொள்ள வேண்டும்.

பலநாட்கள் அருண் பின்னிரவில் தான் வீடு திரும்பிவருகிறான். இப்போது அவனுக்கு இருபத்திநாலு வயதாகிறது. இன்ஜினியரிங் படிப்பை கடைசிவருசத்தில் படிக்காமல் விட்டுவிட்டான். இனிமேல் என்ன செய்யப்போகிறான் என்று கேட்டபோது பாக்கலாம் என்று பதில் சொன்னான்.

பாக்கலாம் என்றால் என்ன அர்த்தம் என்று கோபமாக்க் கேட்டேன்.

பதில் பேசாமல் வெறித்த கண்களுடன் உதட்டைக் கடித்துக் கொண்டே தன் அறைக்குள் போய்விட்டான்.

என்ன பதில் இது.

பாக்கலாம் என்றால் அதை எப்படி எடுத்துக் கொள்வது.

கடந்த ஐந்து வருசமாகவே அருண் வீட்டில் பேசுவதைக் குறைத்துக் கொண்டே வருவதை நான் அறிந்திருக்கிறேன். சில நாட்கள் ஒருவார்த்தை கூடப் பேசியிருக்க மாட்டான். அப்படி என்ன வீட்டின் மீது வெறுப்பு.

எனக்கு அருண் மீதான கோபத்தை விடவும் அவன் பைக் மீது தான் அதிக கோபமிருக்கிறது. அது தான் அவனது சகல காரியங்களுக்கும் முக்கியத் துணை. பைக் ஒட்டிப்போக வேண்டும் என்பதற்காகத் தானோ என்னவோ, தாம்பரத்தை அடுத்துள்ள பொறியியல் கல்லூரியில் படிக்க சேர்ந்து கொண்டான்.

சிலநாட்கள் என் அலுவலகம் செல்லும் நகரப்பேருந்தில் இருந்தபடியே அருண் பைக்கில் செல்வதைக் கண்டிருக்கிறேன். அப்போது அவன் என் பையனைப் போலவே இருப்பதில்லை.  அவன் அலட்சியமாக பைக்கை ஒட்டும் விதமும். தாடி வளர்த்த அவனது முகமும் காண்கையில் எனக்கு ஆத்திர ஆத்திரமாக இருக்கும்.

அருண் சிகரெட் பிடிக்கிறான். அருண் பியர் குடிக்கிறான். அருண் கடன்வாங்குகிறான். அருண் யாருடனோ சண்டையிட்டிருக்கிறான். அருண் அடுத்தவர் சட்டையைப் போட்டுக் கொண்டிருக்கிறான் . உறவினர் வீட்டு திருமணத்திற்கு அருண் வருவதில்லை. அருண் ஒரு பெண் பின்னால் சுற்றுகிறான்.  அருண் காதில் கடுக்கன் போட்டிருக்கிறான். கையில் பச்சை குத்தியிருக்கிறான். தலைமயிரை நிறம் மாற்றிக் கொண்டுவிட்டான். இப்படி அவனைப் பற்றி புகார் சொல்ல என்னிடம் நூறு விசயங்கள் இருக்கின்றன. எல்லாவற்றிற்கும் அவனது ஒரே பதில் மௌனம் மட்டுமே

என் வீட்டில் நான் பார்க்கவே வளர்ந்து, நான் பார்க்காத ஆளாக ஆகிக் கொண்டிருக்கிறான் அருண்.

அது தான் உண்மை.

அவனது பதினாறுவயது வரை அருணிற்கு என்ன பிடிக்கும். என்ன சாப்பிடுவான். எதற்குப் பயப்படுவான் என்று நன்றாகத் தெரியும். ஆனால் பதினேழில் இருந்து இன்றுவரை அவனைப்பற்றி கேள்விப்படும் ஒவ்வொன்றும் எனக்கு வியப்பாகவே இருக்கிறது. சிலவேளைகளில் பயமாகவும் இருக்கிறது.

நான் அனுமதிக்ககூடாது என்று தடுத்துவைத்திருந்த அத்தனையும் என் மகனுக்குப் புசிக்கத் தந்து உலகம் என்னை பரிகாசபபடுத்துகிறதோ.

சில வேளைகளில் குளித்துவிட்டு கண்ணாடி முன் நின்றபடியே நீண்ட நேரம் அருண் எதற்காக வெறித்து தன்னைத் தானே பார்த்துக் கொண்டிருக்கிறான். அந்தத் தருணங்களில் யாரோ அந்நியன் நம் வீட்டிற்குள் வந்துவிட்டது போல எனக்கு மட்டும் தான் தோன்றுகிறதா. சாப்பாட்டுத் தட்டின் முன்னால் உட்கார்ந்த வேகத்தில் பாதி இட்லியைப் பிய்த்து விழுங்கிவிட்டு எழுந்து போய்விடும் அவனது அவசரத்தின் பின்னால் என்னதானிருக்கிறது.

ஒருநாள்மாலையில் வீட்டின் முன்னால் உள்ள இரும்புக்கதவைப் பிடித்துக் கொண்டு இரண்டுமணிநேரம் யாருடனோ போனில் பேசிக் கொண்டேயிருப்பதை பார்த்தேன். எதற்காக இப்படி நின்று கொண்டே போனில் பேசுகிறான். இவன் மட்டுமில்லை. இவன் வயது பையன்கள் ஏன் நின்று கொண்டேயிருக்கிறார்கள். உட்கார்ந்து பேசவேண்டும் என்பது கூடவா தோன்றாது.

அருண் போனில் பேசும் சப்தம் மற்றவருக்குக் கேட்காது. வெறும் தலையசைப்பு. முணங்கல். ஒன்றிரண்டு ஆங்கிலச்சொற்கள் அவ்வளவு தான். எதற்காக போனில் ஆங்கிலத்திலே பேசிக் கொள்கிறார்கள். ரகசியம் பேசத் தமிழ் ஏற்ற மொழியில்லையா,

சில நேரம் இவ்வளவு நேரமாக யாருடன் பேசுகிறான் என்று கேட்கத் தோன்றும்.  இன்னொரு பக்கம், யாரோ ஒருவரோடு போனில் இரண்டுமணி நேரம் பேசமுடிகின்ற உன்னால் எங்களோடு ஏன் பத்து வார்த்தைகள் பேசமுடியவில்லை என்று ஆதங்கமாகவும் இருக்கும்,

உண்மையில் இந்த ஆதங்கங்கள், ஏமாற்றங்களை எங்களுக்கு உண்டாக்கிப் பார்த்து அருண் ரசிக்கிறான் என்று கூட நினைக்கிறேன்

பள்ளிவயதில் அருணைப்பற்றி எப்போதுமே அவனது அம்மா கவலைப்பட்டுக் கொண்டேயிருப்பாள். நான் அதிகம் கவலைப்பட்டதேயில்லை. ஆனால் அவன் படிப்பை முடித்த நாளில் இருந்து நான் கவலைப்பட்டுக் கொண்டேயிருக்கிறேன். அவனது அம்மா கவலைப்படுவதை நிறுத்திவிட்டாள்.

மிகுந்த ஸ்நேக பாவத்துடன், அவனது தரப்பு நியாயங்களுக்காக என்னோடு சண்டையிடுகின்றவளாக மாறிப்போய்விட்டாள். இது எல்லாம் எப்படி நடக்கிறது, இல்லை இது ஒரு நாடகமா.

ஒருவேளை நான் தான் தவறு செய்கிறேனா என்று எனக்குச் சந்தேகமாகவும் இருக்கிறது.

முந்தைய வருசங்களில் நான் அருணோடு மிகவும் ஸ்நேகமாக இருந்திருக்கிறேன். ஒன்றாக நாங்கள் புட்பால் ஆடியிருக்கிறோம். ஒன்றாகச் சினிமாவிற்குப் போயிருக்கிறோம். ஒன்றாக ஒரே படுக்கையில் கதைபேசி சிரித்து உறங்கியிருக்கிறோம்.

என் உதிரம் தானே அவனது உடல், பிறகு எப்படி இந்த இடைவெளி உருவானது.

வயதால் இரண்டு பேரின் உறவைத் துண்டித்துவிட முடியுமா என்ன?

என்ன காரணமாக இருக்கும் என்று ஏதேதோ யோசித்திருக்கிறேன்.

திடீரென ஒரு நாள் ஒரு உண்மை புரிந்தது.

உலகில் உள்ள எல்லா இருபது வயது பையன்களுக்கும் வரும் வியாதி தான் அருணையும் பிடித்திருக்கிறது. அதை நான் ஒருவன் சரிசெய்துவிட முடியாது .

அதை வியாதி என்று சொல்வது அவர்களுக்குக் கோபமூட்டும்.

அவர்கள் அதை  ஒரு உண்மை. ஒரு விடுதலை.  ஒரு ஆவேசம் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

ஏதோவொரு எழவு அவர்களைப் பிடித்து ஆட்டுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இந்தப் பிரச்சனையை பற்றி என்னைப்போலவே உடன் வேலை செய்யும் பிற ஊழியர்களும்  கவலைபடுகிறார்கள். சந்தானமூர்த்தி தனது கல்லூரியில் படிக்கும் மகன் கழிப்பறைக்குள் போனால் வெளியே வர இரண்டு மணி நேரமாகிறது. என்ன தான் செய்வான் எனத் தெரியவில்லை என்று புலம்புவதைக் கேட்கையில் எனக்கு உண்மையில் சற்று ஆறுதலாகவே இருக்கிறது,  என்னைப் போலவே பல தகப்பன்களும்  இதே மனக்குறையிலே தானிருக்கிறார்கள்.

நான் மற்றவர்களைப் போல எனது மனக்கவலையை அதிகம் வெளியே காட்டிக் கொள்கின்றவனில்லை. நானும் பிகாம் படித்திருக்கிறேன். கூட்டுறவு பயிற்சிக் கல்லூரியில் சிறப்பு பயிற்சி முடித்து பால்வளத்துறையில் வேலை செய்கிறேன்.  பதவி உயர்விற்காக தபாலில் தமிழ் எம்ஏ கூடப் படித்திருக்கிறேன். கடந்தபத்து வருசமாகவே வள்ளலாரின் திருச்சபையில் சேர்ந்து  தானதரும காரியங்களுக்கு உதவி செய்கிறேன். இந்த நற்குணங்களில் ஒன்றைக் கூட ஏன் அருண் கைக்கொள்ளவேயில்லை. ஒருவேளை இவை எல்லாம் அர்த்தமற்றவை தானா. நான் தான் அதைப் புரிந்து கொள்ளாமல் சுமந்து திரிகின்றேனா

நான் படிக்கின்ற காலத்தில் ஒன்றிரண்டு பேர் குடிப்பதும் ஊர்சுற்றுவதும் பெண்களை தேடிப்போவதுமாக இருந்தார்கள் என்பது உண்மை தான். அன்றைக்கு ஊருக்குப் பத்து பேர் அப்படியிருந்தார்கள். இன்று ஊரில் பத்து இளவட்டங்கள் ஒழுக்கமாக இருந்தால் அபூர்வம். இதெல்லாம் எனக்கு தோன்றுகின்றன புகார்களா அல்லது இது தான் உண்மையா,

இது போன்ற விசயங்களைத் தொடர்ச்சியாக யோசிக்க ஆரம்பித்தால் எனக்கு ரத்தக்கொதிப்பு வந்துவிடுகிறது. உண்மையில் இது என்னுடைய பிரச்சனை மட்டுமில்லை. ஆனால் என் பிரச்சனையாகவும் இருக்கிறது.

நான் படித்து முடித்தவுடனே திருமணம் செய்து  கொண்டுவிட்டேன். உண்மையை சொல்வதாக இருந்தால் எனது இருபத்திநாலாவது வயதில் அருண் பிறந்து ஒன்றரை வயதாகி விட்டான். ஆனால் அருண் இன்னமும் வேலைக்கே போகவில்லை.  ஏன் இவ்வளவு தாமதப்படுத்துகிறான்.  ஏன் இவ்வளவு மெதுவாக, வாழ்க்கையின் மீது பற்றே இல்லாமல் நடந்து கொள்கிறான். இது தான் இன்றைய இயல்பா.

ஒருவேளை நான் தான் அவர்களைப் புரிந்து கொள்ள முடியாமல் வண்டிவண்டியாக புகார்களோடு அலைந்து கொண்டேயிருக்கிறேனா.  அப்படியே இருந்தாலும் என் புகார்களில் உள்ள நியாயம் ஏன் மறுக்கபடுகிறது

இந்த இரவில் கூட படுக்கையில் படுத்தபடியே அருண் எங்கே போயிருக்ககூடும் என்று நானாக எதை எதையோ யூகித்துக் கொண்டிருக்கிறேன். அது என்னை உறங்கவிடாமல் செய்கிறது. கற்பனையான பயத்தை உருவாக்குகிறது. அதை ஏன் அருண் புரிந்து கொள்ள மறுக்கிறான்.

இந்த நேரம் அருண் என்ன செய்து கொண்டிருப்பான். நிச்சயம் என்னைப்பற்றிய நினைவே இன்றி எங்காவது உறங்கிக் கொண்டிருப்பான். யாரையும் பற்றி நினைக்காமல் எப்படி ஒரு ஆளால் வாழ முடிகிறது. அதுவும்  ஒரே வீட்டிற்குள் இருந்து கொண்டு மற்றவர்களைப் பற்றி எப்படி கவலைப்படாமல் இருக்க முடிகிறது.

அருண் எங்களோடு தானிருக்கிறான். ஆனால் எங்கள் வீட்டிற்குள் அவனுக்காக ஒரு தனித்தீவு ஒன்று இருப்பதை  போலவே நான் உணர்கிறேன். அங்கே அவனது உடைகள் மட்டுமே காயப்போடப்பட்டிருக்கின்றன. அவனது பைக் நிற்கிறது. அவனது லேப்டாப் ஒடிக் கொண்டிருக்கிறது. அவன் வாங்கி வளர்க்கும் ஒரு மீன்குஞ்சு மட்டுமேயிருக்கிறது. வேறு ஒரு மனிதருக்கு அந்த்த் தீவில் இடம் கிடையாது. டேபிள் வெயிட்டாக உள்ள கண்ணாடிக் கோளத்தினுள் உள்ள மரத்தை, எப்படி நாம் கண்ணால் மட்டுமே பார்க்க முடியும் கையால் தொட முடியாதோ அப்படியான ஒரு இடைவெளியை, நெருக்கம் கெர்ளளவே முடியாத சாத்தியமின்மையை அருண் உருவாக்கி வைத்திருக்கிறான்.

அப்படி இருப்பது எனக்கு ஏன் பிடிக்கவேயில்லை, நான் அவனை கண்காணிக்க விரும்புகிறேனா,

இது அருண் பற்றிய பிரச்சனை மட்டுமில்லை,

பைக் வைத்துள்ள எல்லா இளைஞர்களும் ஒன்று போலவே தானிருக்கிறார்கள்

அருணிற்கு பைக் ஒட்ட யார் கற்றுக் கொடுத்தது.

அவனாகவே கற்றுக் கொண்டான்.

பதினோறாம் வகுப்பு படிக்கும் போது ஒரு நாள் அவன் பைக்கில் போவதைக் கண்டேன். அவன் பின்னால் ஒரு பையன் உட்கார்ந்திருந்தான். ஒருகையை காற்றில் அசைத்தபடியே  அவன் மிக வேகமாக பைக் ஒட்டிப்போவதைப் பார்த்தேன். அன்று வீட்டில் பெரிய சண்டையே நடந்தது.

உனக்கு ஏது பைக். யாரு பைக் ஒட்டக் கற்றுக் கொடுத்தது. அது யாருடைய பைக் என்று கத்தினேன். அருண் அதற்குப் பதில் சொல்லவேயில்லை.  அவன் ஒரேயொரு கேள்விமட்டுமே கேட்டான்

பைக் ஒட்டுனா தப்பா

பைக் ஒட்டுவது தப்பா என்ற கேள்விக்கு இன்றைக்கும் என்னிடம் சரியான பதில் இல்லை.

ஆனால் எனது உள்மனது தப்பு என்று சொல்கிறது. காரணம் பைக் என்பது ஒரு வாகனமில்லை. அது ஒரு சுதந்திரம். அது ஒரு சாகசம்.  அப்பாவிற்கும் மகனுக்குமான இடைவெளியை அதிகப்படுத்தும் ஒரு சாதனம். அப்பாவைச் சீண்டி விளையாட மகன் கண்டுபிடித்த ஒரு தந்திரம்.

அந்த வாகனத்தை எனக்குப் பிடிக்கவேயில்லை. ராணுவத்தில் உள்ளவர்கள் பயன்படுத்துவதற்காக கண்டுபிடிக்கபட்டது தான் பைக் என்கிறார்கள். ஆனால் அது எப்படியோ பிரபலமாகி இன்று என் வீடு வரை பிரச்சனையாகியிருக்கிறது.

இந்த நகரில் பைக்கில் செல்லும் எல்லா இளைஞர்களும் ஒன்று போலவே நடந்து கொள்கிறார்கள்.  சாலையில் செல்வதை மகத்தான ஒரு சாகசம் என்றே நினைக்கிறார்கள். பலநேரங்களில் எனக்குத் தோன்றுகிறது பைக்கில் சாலையில் செல்லும் இளைஞனுக்கு அவனைத் தவிர வேறு மனிதர்கள், கண்ணில்படவே மாட்டார்கள். எந்த ஒசையும் கேட்காது. மொத்தச் சாலையும் வெறுமையாகி அவன் மட்டுமே செல்வது போன்று தோன்றும் போல.

அதிலும் பைக்கில் செல்லும் போதே செல்போனில் பேசிக் கொண்டு போகும் இளைஞர்களைக் காணும்போது என்னால் ஆத்திரத்தைக் கட்டுபடுத்தவே முடியவேயில்லை. அப்படி என்ன பேச்சு வேண்டியிருக்கிறது என்று மனம் பதைபதைக்கிறது. ஆனால் அவர்கள் முகத்தில் பதற்றத்தின் ஒரு துளி கூட இருக்காது. திடீரென அவர்களுக்குக் கூடுதலாக இரண்டு கைகள் முளைத்துவிட்டது போலவே நடந்து கொள்கிறார்கள்.

அருண் பைக் ஒட்டவே கூடாது என்று கண்டிப்பாக இருந்தேன்.

அப்படி நான் சொல்வதற்குக் காரணம் விபத்து குறித்த பயம் என்று ஒரு பொய்யை சொல்லி என் மனைவியை நம்ப வைத்தேன்.

உண்மையில் நான் பயந்த காரணம் ஒரு பைக் என்பது என் வீட்டிற்கும் இந்த பரந்த உலகிற்குமான இடைவெளியை குறைத்துவிடும். வீட்டிலிருந்து பையனை முடிவில்லாத உலகின் வசீகரத்தைக் காட்டி இழுத்துக் கொண்டுபோய்விடும் என்று பயந்தேன்

ஆனால் அருண் பைக் ஒட்டுவதை என்னால் தடுக்கவே முடியவில்லை.

ஒருவேளை நான் திட்டுவதையும் கண்டிப்பதையும் செய்யாமல் போயிருந்தால் பைக் ஒட்டுவதில் அக்கறை காட்டாமல்  போயிருப்பானோ என்னவோ

.இல்லை ,, இது  சுயசமாதானம் செய்து கொள்கிறேன்.  அது உண்மையில்லை.

பைக் என்பது  ஒரு விஷப்பாம்பு

அது எல்லா இளைஞர்களையும் அவர்களது இருபது வயதைத் தாண்டும் போது கடித்துவிடுகிறது. அதன் விஷம் பத்து ஆண்டுகளுக்காகவாவது உடலில் இருந்து கொண்டேதானிருக்கும். அந்த விஷமேறிய காலத்தில்  பைக் மட்டும் தான் அவர்களின் உலகம். அதைத் துடைப்பதும் கொஞ்சுவதும் பராமரிப்பதும் கோவித்துக் கொள்வதுமாகவே இருப்பார்கள்.

அருணிற்கும் அப்படிதான் நடந்தது.

அவன் பனிரெண்டாம் வகுப்பு முடித்த கோடை விடுமுறையில்  நாமக்கல்லில் உள்ள அவனது மாமா வீட்டிற்கு போய்விட்டு புதுபைக்கிலே சென்னைக்குத் திரும்பியிருந்தான். காலேஜ் போய்வருவதற்காக  மாமா புது பைக் வாங்கி தந்ததாக சொல்லியபடியே பைக்கை துடைத்துக் கொண்டிருந்தான்.

உனக்கு லைசன்ஸ் கிடையாது. நாமக்கல்லில் இருந்து ஏன் பைக்கில் வந்தே. வழியில் லாரியில் அடிபட்டு இருந்தா என்ன செய்வது என்று நான் கத்திக் கொண்டிருந்த போது அவன் மௌனமாக ஒரு குழந்தையின் காதைத் டர்க்கித்துண்டால் பதமாக துவட்டுவது போல மிருதுவாக பைக்கை துடைத்துக் கொண்டேயிருந்தான்.

அதன்பிறகு அவனாக லைசன்ஸ் வாங்கிக் கொண்டான். நாளடைவில் அந்த பைக்கை தனது உடலின் இன்னொரு உறுப்பைப் போல மாற்றிக் கொண்டுவிட்டான்.

சிலநாட்கள் காலை ஆறுமணிக்கு அவசரமாக எழுந்து பைக்கில் வெளியே போய்விடுவான்.

எங்கே போகிறான். யார் இந்த நேரத்தில் அவனை வரவேற்க்க் கூடியவர்கள்.

பைக்கில் சாய்ந்து கொண்டுநின்றபடியே பேசுவதும், பைக்கில் ஏறி உட்கார்ந்து தேநீர் குடிப்பது என்று பைக்கில்லாமல் அவன் இருப்பதேயில்லை. அதற்கு எவ்வளவு பெட்ரோல் போடுகிறான். அதற்கு பணம் எப்படிக் கிடைக்கிறது. எதற்காக இப்படி பைக்கில் வெயிலேறச் சுற்றியலைய வேண்டும், எதற்கும் அவனிடமிருந்து பதில் கிடையாது.

அவனது அம்மாவிற்கு அருண் பைக் ஒட்டுவது பிடித்திருக்கிறது. அவள் பலநேரங்களில் அருண் பின்னால் ஏறி உட்கார்ந்துகொண்டு கோவிலுக்குப் போகிறாள். ஒயர்கூடை பின்னும் பொருள் வாங்கப் போகிறாள். அவர்கள் இருவரும் சிரித்துக் கொண்டே போகிறார்கள். ஆனால் என்னால் அப்படி பைக்கில் போக முடியாது. ஒருநாள் என்னை அலுவலகத்திற்கு பைக்கில் கொண்டுவந்து விட்டபோது கூட அவன் இயல்பாக பைக் ஒட்டவில்லை என்றே பட்டது.

அருண் உடலுக்குள் ஒரு கழுகு இருக்கிறது என்பதை ஒரு நாள் நான் கண்டுபிடித்தேன். அந்த கழுகு அவனுக்குள் மட்டுமில்லை. எல்லா இருபது வயதைக்கடந்த பையன்களுக்குள்ளும் இருக்கவே செய்கிறது. அது வீட்டை விட்டு வெளியேறி மிக உயரமான இடம் ஒன்றுக்குப் போய் உட்கார்ந்து கொண்டு, தனியாக உலகை வேடிக்கை பார்க்க விரும்புகிறது. தானும் மற்றவர்களும் ஒன்றில்லை என்று சொல்லத் துடிக்கிறது. தன்னால் மற்றவர்களால் செய்ய முடியாத ஒன்றை அடையமுடியும் என்று காட்ட முயற்சிக்கிறது.

வேட்டையை விடவும் கழுகுகள் உலகை வேடிக்கை பார்க்கத் தான் அதிகம் விரும்புகின்றன. அதிலும் தன் அகன்ற சிறகை அடித்துக் கொண்டு யாரும் தொடவே முடியாத உயரத்தில் ஏறி நின்று உலகைக் காண்பதில் ஆனந்தம் கொள்கின்றன. அதில் ஏதோ ஒரு இன்பமிருக்கிறது. ஏதோ ஒரு அலாதியிருக்கிறது போலும்.

அந்த கழுகின் ரெக்கைகள் அருணிற்குள்ளும் படபடப்பதை நான் அறியத் துவங்கினேன். அதன் சிறகடிப்பு ஒசை என் முகத்தில் படுவதை நன்றாகவே உணர்ந்தேன்.  எனக்குப் பயமாக இருந்தது. இந்தகழுகு அவனை  திசைதவறிக் கூட்டிக் கொண்டு போய் அலைக்கழிக்கும் என்று பயந்தேன். ஆனாலும் தடுக்க வழியில்லாமல் பார்த்துக் கொண்டேதானிருந்தேன்

உண்மையில் அந்தக் கழுகு தான் அவனது பைக்கின் வடிவம் கொண்டுவிட்டிருக்கிறது

சில சமயங்களில் ஒருவார காலம் அருண் வீட்டிலிருந்து வெளியே கிளம்பி போய்விடுவான். எங்கே போயிருக்கிறான் என்று கேட்டால் என் மனைவி பிரண்ட்ஸைப் பார்க்கப் போயிருப்பான் என்று சொல்வாள்.

பையன்களுக்காக பொய் சொல்வதை அம்மாக்கள் விரும்புகிறார்கள். அது ஒரு சதி. பையன்கள் வளர வளர வீட்டில் உள்ள அப்பா அம்மாவைப் பிரிக்கத் துவங்குகிறார்கள்.  அல்லது பிள்ளைகளின் பொருட்டு பெற்றவர்கள் சண்டையிட்டு மனக்கசப்பு கொண்டுவிடுகிறார்கள்.

பெரும்பான்மை நாட்கள் அருண் நள்ளிரவுக்குப் பிறகு வீடு வந்து சேர்ந்து வீட்டின் இரும்புக்கதவை தள்ளி திறக்கும் ஒசையை கேட்டிருக்கிறேன். எங்கே போய்விட்டுவருகிறான் கேட்டு சண்டைவந்தது தான்மிச்சம்.

எவ்வளவு முறை கேட்டாலும் பதில் சொல்லவும் மாட்டான். நேராக அவன் அறைக்குள் போய் உட்கார்ந்து கொண்டுவிடுவான். வீட்டில் இரவு சாப்பிடுவதும் இல்லை.

நள்ளிரவுக்கு பின்பு வந்தாலும் அவன் பாட்டுக்கேட்க மறப்பதேயில்லை. அதுவும் சப்தமாகவே பாட்டுகேட்கிறான். வீட்டில் நானோ அவனது அம்மாவோ, த்ஙகையோ இருப்பதை முழுமையாக மறந்துவிட்டவனைப்போலவே நடந்து கொள்கிறான்.

அருண் சப்தத்தை குறைச்சிவச்சிக்கோ என்று படுக்கையில் இருந்தபடியே அவன் அம்மா சொல்லுவாள். நான் சொன்னால் அதையும் கேட்கமாட்டான்

ஆனால் அம்மா சொல்வதற்காக சப்தத்தை குறைக்காமல் கதவை மூடிவைத்துக் கொள்ளுவான். அவனால் உரத்த சப்தமில்லாமல் பாடல்களைக் கேட்க முடியாது. அதுவும் அவனது பிரச்சனையில்லை.  எல்லா பதின்வயதுபையன்களும் இந்த விசயத்தில் ஒன்று போலதானிருக்கிறார்கள்.

அவர்கள் கேட்கும்பாடல்களில் ஒருவரி கூட என்னை ஈர்ப்பதில்லை. ஒரே காட்டுக்கத்தல்.

எனக்கு கர்நாடக ச்ங்கீதம் மற்றும் திரையிசைப்பாடல்களில் விருப்பம் உண்டு. படிக்கின்ற காலத்தில் ரிக்காடு பிளேயரில் நிறையக் கேட்டிருக்கிறேன். இப்போதும் கூட தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கறுப்பு வெள்ளைப் பாடல்களை விடாமல் கேட்கிறேன். ஆனால் அருண் உலகில் கறுப்பு வெள்ளைக்கு இடமே கிடையாது.

அவன் எட்டாம்வகுப்பு படிக்கையில் ஒருநாள் டிவியில் பாசவலை என்ற பழைய படம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. நான் மிக ஆர்வமாகப்  பார்த்துக்கொண்டிருந்தேன். என் அருகில் வந்து எப்படிப்பா இதை எல்லாம் பாக்குறீங்க என்று கேட்டான்.

நல்லா இருக்கும் அருண், கொஞ்ச நேரம் பாரு என்றேன்.

அவன் என்னை முறைத்தபடியே உங்களுக்கு டேஸ்டேயில்லைப்பா  என்று சொல்லிவிட்டு சைக்கிளை எடுத்து கொண்டு போனவன் இரவு வரை வீடு திரும்பவேயில்லை.

இப்போது அவ்வளவு நேரடியாக என்னிடம் பதில் சொல்வதில்லை. ஆனால்  என்னைப்பற்றி அதே அபிப்ராயத்தில் தானிருக்கிறான்.

அவன் கேட்கும்பாடல்களை விடவும் அந்த தலைவிரிகோலமான பாடகர்களை எனக்குப் பிடிப்பதேயில்லை. கறுப்பன் வெள்ளை என்று பேதமில்லாமல் அசிங்கமாக இருக்கிறார்கள். ஒருவன் கூட ஒழுங்கான உடை அணிந்திருப்பதில்லை. அடர்ந்து வளர்ந்த தலைமயிர். கோரையான தாடி, வெளிறிப்போன உதடுகள். கையில் ஒரு கிதார். அல்லது கீபோர்ட். உடலுக்கு பொருத்தமில்லாத உடைகள்.  போதையில் கிறங்கிப்போன கண்கள் .

ஒருவேளை இப்படி இருப்பதால் தான் அவர்களின் பாடல்களை இந்த பதின்வயது பையன்களுக்கு பிடிக்கிறதா, அதைப் பாடல் என்று சொல்வது கூட தவறு. கூச்சல். கட்டுப்பாடற்ற கூச்சல்.

அந்தக் கூச்சலின் உச்சத்தில் யாரோ யாரையோ கொல்வது போலிருக்கிறது. அல்லது காதலின் துயரத்தை தாங்கிக் கொள்ளவே முடியாதது போல ஒரு பொய்யான பாவனையில் ஒருவனோ ஒருத்தியோ கதறிகதறிப்பாடுகிறாள். அதைக் கையில் ஒரு சிகரெட்டுடன் கேட்டு அருணும் சேர்ந்து கண்ணீர்வடிக்கிறான்.

ஏன் அருண் இப்படியிருக்கிறான்  என்று  எரிச்சலாக இருக்கிறது. ஆனால் அதைப்பற்றி பேசினால் எனக்கு ரசனையில்லை என்பான்.

சில வேளைகளில் அவன் சொல்வது உண்மை என்றும் கூட தோன்றியிருக்கிறது. ஒரு நாள் அவன் அறையைக் கடந்து போகையில்  கசிந்துவந்த ஒரு பெண் குரல் பாடலே இல்லாமல் உன்மத்தம் பிடித்தவள் போல ஒரே வார்த்தையை ‘ஹம்பண்ணிக் கொண்டேயிருந்ததை கேட்டேன்

மொத்தமாக ஒரு நிமிசம் தான் கேட்டிருப்பேன். ஆனால் தேள்கொட்டியது போல ஒரு கடுகடுப்பு உருவானது. அடுத்த நிமிசத்தில் கடுமை உருமாறி எல்லையில்லாத ஆனந்தமாகி அந்த ஹம்மிங்கை மனதிற்குள்ளாகவே  வைத்துக் கொண்டேயிருந்தேன்.

பின்பு நாலைந்துநாட்களுக்கு அந்த ஹம்மிங்  என் மண்டைக்குள் ஒடிக்கொண்டேயிருந்தது. அந்த பெண் எதற்காக இவ்வளவு துயரத்தோடு பாடுகிறாள். அவளது அப்பா அம்மா யார். அவர்கள் இவளை எப்படிப் பாட அனுமதிக்கிறார்கள். தாடிவைத்த கஞ்சா புகைக்கும் இந்த இசைக்கலைஞர்களின் அப்பாக்களும் அவர்களுடன் என்னைப் போலவே சண்டை போட்டுக் கொண்டுதானிருப்பார்களா.

இந்த உலகில் காதலை தவிர வேறு எதற்காகவாவது பையன்கள் இப்படி உருகி உருகிக் கதறுவார்களா என்ன.  அப்படி என்ன இருக்கிறது காதலில்.

ஒரு பெண்ணின் தேவை என்பது உடற்பசியோடு சம்பந்தபட்ட ஒன்று தானே.

அதற்கு எதற்கு இத்தனை பொய்பூச்சுகள், பாவனைகள்.

இந்த உலகில்காதலைப்பற்றி மித மிஞ்சிய பொய்கள் நிரம்பியிருக்கின்றன. ஒவ்வொரு தலைமுறையும் அந்தப் பொய்களை வளர்த்தெடுப்பதில் தனது பெரும்பங்கை அளிக்கிறது. பெண்கள் எல்லாம் ஏதோ வேற்றுகிரகத்தில் இருந்து வந்தவர்கள் என்பது போல எதற்காக இவ்வளவு வியப்பு.  பிரமிப்பு,

இந்த பயல்களை ஒரு நாள் பிரசவ விடுதிக்குள் கொண்டுபோய்விட்டுவந்தால் இந்த மொத்த மயக்கமும் தெளிந்துபோய்விடும் என்று தோன்றுகிறது.

நான் இப்படி எல்லாம் யோசிப்பதற்கு வயதாகிவிட்டது தான் காரணம் என்று என் மனைவியே  சொல்கிறாள். எனக்கு மட்டும் தான் வயதாகிறதா என்ன. அவளுக்கும் வயதாகிறது.

நான் குடியிருக்கும் இந்த நகருக்கு வயதாகிறது.

நான் பேருந்தில் கடந்து போகிற கடலுக்கு வயதாகிறது.

ஏன் தலைக்கு மேலே இருக்கிற சூரியனுக்கும் நிலாவிற்கும் கூட தான் வயதாகிறது.

வயது அதிகமாக அதிகமாக நம்மைப் பற்றி  முதுக்குப் பின்னால் பலரும் கேலி செய்வது அதிகமாகிக் கொண்டே தான் போகிறது.

உண்மையில் எனக்கு அப்படி ஒன்றும் வயதாகிவிடவில்லை. ஐம்பத்தியொன்று தான் நடக்கிறது. ஒருநாள் பேப்பரில் படித்தேன். இத்தாலியில் ஒரு ஐம்பது வயது  ஆள் திடீரென மலையேறுவதில் ஆர்வம் வந்து ஒவ்வொரு மலையாக ஏறி இறங்கி முடிவில் தனது அறுபத்திரெண்டுவயதில் கிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறிவிட்டான் என்று.

நான் அந்தவகை ஆள்இல்லை. எனக்கு புதிதாக ஆசைகள் உருவாவதேயில்லை. இருக்கின்ற ஆசைகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.

வாழ்க்கை உண்மையில் சலிப்பாகவே இருக்கிறது. வாழ்ந்து நான் அடைந்த சலிப்பை அருண் ஏன் இருபத்திநாலு வயதில் அடைந்திருக்கிறான். எப்படி ஒருவனால் மௌனமாக லேப்டாப் முன்பாகவே பலமணிநேரங்கள்  இருக்க முடிகிறது. ஏன் அலுக்கவே மறுக்கிறது

எனக்கு அருணை நினைத்தால் பயமாக இருக்கிறது.  ஆனால் அவனது அம்மா அந்த பயத்திலிருந்து எளிதாக விடுபட்டுவிட்டாள்.  பெண்களால் நெருக்கடியை எளிதாக சந்தித்து கடந்து போய்விட முடிகிறது, எப்படி என்ன சூட்சும்ம் அது.

எனக்கு உறக்கம் வரவில்லை. விடிவதற்கு இன்னும் இரண்டு மணி நேரமிருக்கிறது. உலகின் இன்னொரு பகுதியில் இந்நேரம் விடிந்திருக்கும். யாரோ ஒரு பையன் வீட்டிலிருந்து பைக்கில் கிளம்பியிருப்பான். யாரோ ஒரு தகப்பன் அதைபற்றிய புகாரோடு வெறித்து பார்த்தபடியே நின்று கொண்டிருப்பான், அந்த்த் தகப்பனைப் பற்றி நினைத்தால் எனக்குத் தொண்டையில் வலி உண்டாகிறது.

என்னால் இனிமேல் உறங்க முடியாது.

விடியும் வரை என்ன செய்வது என்றும் தெரியவில்லை. எதற்காக நான் படுக்கையில் கிடக்க வேண்டும்.  இப்போதே எழுந்து சவரம் செய்து கொள்ளப் போகிறேன்

எனக்கு வயதாகிறது என்கிறார்கள். ஆமாம். கண்ணாடி அப்படித்தான் காட்டுகிறது.

முகத்தில் முளைத்துள்ள நரைமயிர்கள் என்னைப் பரிகசிக்கின்றன.

நான் ஒரு உண்மையை உங்களிடமிருந்து மறைக்கிறேன். நானும் இளைஞனாக இருந்த போது இதே குற்றசாட்டுகளை சந்தித்திருக்கிறேன், நானும் பதில் பேசாமல் வீட்டை விட்டு போயிருக்கிறேன், இன்றும் அதை நான் நன்றாகவே உணர்ந்திருக்கிறேன். எனக்குத் தோன்றுகிறது

இருபது வயதில் பையன்கள் இலவம்பஞ்சைப்போல எடையற்று போய்விடுகிறார்கள். காற்றில் மிதந்து திரிவது தான் சுபாவம் என்பது போலிருக்கிறது அவர்களின் செயல்கள்.

யாருக்காவும் எதற்காகவும் இல்லாத பறத்தல் அது.

அப்படி இருப்பது தான் இயல்பு என்பது போல அலைந்து திரிகிறார்கள்.

இலவம்பஞ்சு ஒரு போதும் பள்ளதாக்கைக் கண்டு பயப்படுவதில்லை.  பாறைகளைக் கண்டு ஒதுங்கிக் கொள்வதுமில்லை. அது மரத்திலிருந்து விடுபட்டு பறக்கிறது. அந்த விடுபடலை யாராலும் தடுக்கவே முடியாது. அது தான் உண்மை. எனக்குப் புரிகிறது. ஆனால் ஒரு தகப்பனாக அதை ஏற்றுக் கொள்ள முடியாது. நீங்கள் தகப்பன் ஆகும் நாளில் இதை உணர்வீர்கள்.

நான் நிறைய குழம்பிபோயிருக்கிறேன்.

எனது பயமும் குழப்பமும் முகமெங்கும் படிந்துபோயிருக்கிறது. தண்ணீரை வைத்துக் கழுவிக் கொள்வதால் பயமும் குழப்பமும் போய்விடாது என்று எனக்குத்தெரியும்

ஆனால் என்னால் இதைத்தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாதே.

**

பாரம்பரியமிக்க கணையாழி இலக்கிய இதழ் மறுபடியும் துவங்கப்பட்டுள்ளது, தசரா அறக்கட்டளை சார்பில் டாக்டர் மா. ராஜேந்திரன் அவர்கள் ஆசிரியராக இருந்து நடத்துகிறார்,  கணையாழி ஏப்ரல் இதழில் இந்தக்கதை  வெளிவந்திருக்கிறது.

Gayathri:
சொந்தக்குரல்
அம்மா தனக்குத்தானே பேசிக் கொண்டிருக்கிறாள்

என்னுடன் பேசுவதாக நினைத்துக் கொண்டு தனியே பேசிக் கொண்டிருப்பது கேட்டது.

இல்லாத எதைஎதையோ பற்றிக் கொண்டு தான் முதுமையில் வாழவேண்டியிருக்கும் போலிருக்கிறது, இருட்டில் தடுமாறி விழுந்து அடிபட்டுவிட்ட அம்மாவை மூன்று நாட்களாக மருத்துவமனையில் அனுமதித்திருந்தோம்.. இரவில் அம்மாவோடு நான் துணைக்கு இருந்தேன். அம்மாவிற்கு வயது எழுபத்திமூன்றைக் கடந்துவிட்டிருக்கிறது.

சமீபமாக அம்மா மின்சார விளக்குகளைப் போட்டுக் கொள்ளாமல் இருட்டிலே நடக்கப் பழகியிருந்தாள். எவ்வளவோ முறை அப்படிச் செய்யாதே என்று நான் திட்டிய போதும். இருட்டு பழகிப்போச்சுடா சோமா. இருட்டை என்ன இன்னைக்கு நேத்தா பாக்குகிறேன். இருட்டு பழக ஆரம்பிச்சி எழுபது வருசம் போயிருச்சி. இன்னும் என்ன பயம் என்பாள்

இல்லைம்மா. பயத்திற்காக சொல்லவில்லை. நீ கிழே விழுந்து வைத்துவிட்டால் என்ன செய்வது என்று கேட்பேன்.

விழுந்தா, போய்ச் சேர வேண்டியது தான். என் மனசில இருக்கிற ப்ரகாசம் எல்லாம் அணைச்சி போய் பல வருசமாகிருச்சிடா. இப்போ நான் வெறும் உடம்பு தான் என்றபடியே இருட்டிற்குள் நடந்து போய்க் கொண்டிருப்பாள்.

அப்படி தான் விழுந்து அடிபட்டுக் கொண்டாள்

 கடந்த சில வருசங்களாகவே அம்மா இப்படிதானிருக்கிறாள். சில நேரங்களில்  வீட்டில் உள்ளவர்கள் பெயர்களே கூட மறந்து போய்விடுகிறது. டேய் இவனே. அல்லது இங்கே வாயேன் என்று தான் கூப்பிடுகிறாள்.  முதுமை அடையும் போது உடலின் எடை குறைந்து மெலிந்து போய்விட வேண்டும் இல்லாவிட்டால் யாரால் தூக்கி கொண்டுபோய் டாய்லெட்டில் உட்கார வைக்க முடியும் என்று அவளாகவே சொல்லிக் கொள்கிறாள். அதற்காக சாப்பாட்டை க் குறைத்துக் கொள்வதுடன் தன்னை வருத்திக் கொள்ளவும் ஆரம்பித்திருந்தாள்

இளவயதில் அம்மா நல்ல பருமனாக இருந்தாள். அதற்கு அவள் சொல்லும் காரணம் ,அப்பா,

அவர் எப்படிக் காரணம் என்று கேட்டால் நினைவுகளைக் கொட்டத் துவங்கிவிடுவாள்.

அவருக்கு வீட்ல சமைச்ச எதுவும் மிச்சம் ஆகிறக்கூடாது. வேற என்ன செய்றதுனு சமைச்ச  மிச்சத்தை எல்லாம் நானே கொட்டிகிட்டேன். அப்போ உடம்பு பெருத்துப்போகாமல் என்ன செய்யும். அத்தோட மாசத்துக்கு ஒருநாள் கோவிலுக்கும் தெரிஞ்சவங்க வீட்டுக்கும் போறதை தவிர வீட்டை விட்டு வெளியே போனதே கிடையாது. ஒரு தேங்காய்ச் சில்லு வாங்கிட்டு வர்றேன்னு சொன்னாக் கூட உங்கப்பா தான் போயிட்டு வருவார். கல்யாணமாகி எனக்கும் ஏழு பிள்ளைகள் பிறந்து அதுல ரெண்டு செத்தும் போச்சி. அத்தனை வருசத்துக்கு பிறகும் உங்கப்பாவுக்கு என்னைத் தனியா அனுப்புறதுன்னா பயம்.

கோடையில சிவசு மாமா வீட்டுக்குப் போயிட்டு வர்றதுக்கு ரயில் ஏத்திவிட வரும் போது ஸ்டேஷன்ல வச்சி ஒண்ணுக்கு பத்து தரம் அட்வைஸ் பண்ணுவார்.

அது பத்தாதுனு ரயில்க்குள்ளேயே ஏறி இவளைப் பத்திரமாக கொண்டு போய் விட்ருங்கன்னு பக்கத்து மனுசங்க கிட்டே வேற சொல்லிவிடுவார்.

ரொம்ப அவமானமா இருக்கும்.

அதே நேரம் நம்ம மேல இருக்கிற அக்கறையில் தான் இப்படி எல்லாம் செய்றாருனு சமாதானம் பண்ணிகிடுவேன். அப்போ உனக்கு வயது நாலோ அஞ்சோ இருக்கும். ஞாபகமிருக்குமோ என்னமோ.

அக்கறை காட்டுறதுக்காக நாம செய்ற காரியங்கள் அடுத்தவரை எவ்வளவு இம்சை பண்றதுனு  நாம புரிஞ்சிகிடுறதேயில்லை.  அதுக்கு உங்க அப்பா ஒரு ஆள் போதும்.

செத்துப் போன மனிதரைப் பற்றி இப்போ பேசி என்ன ஆகப்போறது.

ஆனாலும் மனுசன் செத்து போயிட்டாலும் அவன் படுத்தின பாடு. பண்ணின அக்ரமம் எல்லாம் கூடவே செத்து போயிடுறதில்ல. அது யார் மனசிலயாவது அழியாம இருந்துகிட்டே தான் இருக்கு.

இப்போ கூட கனவுல உங்கப்பா முகம் வந்துச்சின்னா திடுக்கிட்டு முழிச்சிகிடுறேன்.

உங்கப்பா வாழ்நாள் முழுவதும் யாரையாவது திட்டிகிட்டே இருந்தார்.

அவருக்குப் பிள்ளைகள் எல்லாமே ரெண்டாம் பட்சம் தான்.

அப்படியொரு மனசு.

ஒண்ணுக்குப் பத்துத் தடவை கேட்டா தான் எதுவும் கிடைக்கும்.

சோமா, உங்களை நினைச்சி நான் நிறைய நாட்கள் அழுதிருக்கேன்டா.

ஏன்டா சோமா, நீ, உன் தம்பி,  எல்லாம் எங்களுக்குப் பிள்ளையா வந்து பிறக்கணும்.

எப்பவாது யோசிச்சி பாத்திருக்கியா.

என் பிள்ளைகளை பற்றி நான் நிறைய யோசிச்சி பாத்திருக்கேன்.

இதுகள் எல்லாம் ஏன் என் வயிற்றுல வந்து ஜனிச்சிருக்கு. நான் என்ன கொடுப்பினை பண்ணினே அதுக்கு. சில நேரம் பாத்தா நீங்க எல்லாம் யாரோ எவரோங்கிற மாதிரியும் இருக்கு. குறத்தி பின்னாடி பிள்ளைகள் வேடிக்கை பாக்க கூடவே வருவாங்களே அப்படி தான் உங்களையும் தோணுது, நான் தான் அந்தக் குறத்தி.

சோமா, எனக்கு நீங்கள் எல்லாம் சின்ன வயசா இருந்த போது  ஒரு பயம் இருந்துகிட்டே இருந்துச்சி. அது என்னன்னா, யாராவது தொலைஞ்சி போயிடுவீங்களோனு.

எதுக்கு அப்படிப் பயந்தேனு தெரியலை.

ஆனா உள்ளுக்குள்ளே அந்தப் பயம் உலை கொதிக்கிற மாதிரி கொதிச்சிகிட்டே இருந்துச்சி.

தெருவில் பிள்ளைகள் விளையாடிக்கிட்டு இருக்கிறப்போ கூட அடிக்கடி வந்து இருக்காங்களானு எட்டிப் பாத்துகிடுவேன்.

ஸ்கூல் விட்டு லேட்டா வந்தா மனசு தாங்காது.  திடீர்னு மதிய நேரம் யாராவது வந்து கதவைத் தட்டினா அய்ய்ய்யோ பிள்ளை காணாமப் போயிருச்சினு தான் பயப்படுவேன். பதறி எழுந்து வந்து கதவைத் திறந்து பார்ப்பேன்.

உங்கப்பாவுக்கு அந்தப் பயமே கிடையாது.

அது எப்படிறா, பொண்டாட்டிக்கு இருக்கிற பயத்தில ஒண்ணு கூட புருஷனுக்கு இருக்கிறதில்லை.

உன் தங்கச்சி லட்சுமி இருக்காளே. அவ என்னை கிறுக்கா ஆக்கி வச்சா. ஒரு நாள், ஒரு பொழுது வீட்ல அடங்கிக் கிடக்க மாட்டா. இத்தனை ஆம்பளைப் பசங்க வீட்ல ஒடுங்கி இருந்தப்போ அவளுக்கு கால் ஒரு இடத்தில நிக்காது.

ஒட்டம். ஒட்டம். அடுத்த வீடு. அடுத்த வீதி. சத்திரம் சாவடி லைப்ரரினு ஒடிக்கிட்டே இருப்பா.  எங்கேயோ தொலைஞ்சி போகப்போறாளோ.னு பயமா இருக்கும்.  ஆனா அப்படி எதுவும் நடக்கலை.

ஒழுங்கா படிச்சி கல்யாணம் ஆகி புருஷனோட ஜாம்ஷெட்பூருக்குப் போயி வாழ்ந்து நாற்பத்தியெட்டு வயசில எனக்கு முன்னாடியே செத்தும் போயிட்டா.

அவசரம். எதுலபாரு அவசரம். ஆனா அவளும் ரொம்ப கஷ்டப்பட்டிருப்பா. அம்மா கிட்டே அதை எல்லாம் சொன்னதில்லை.

பிள்ளைகள் நிறைய விசயத்தை பெத்தவங்ககிட்டே சொல்றதேயில்லை. பாவம் அம்மா இதை நினைச்சி வருத்தப்படுவானு நினைச்சிருப்பா.

ஆனா சொல்லாம இருக்கிறது தான்டா ரொம்ப வலிக்குது. ஒரு நாள் அவள் என் கனவுல வந்து எதுவும் சொல்லாம அழுதா. அழுகைன்னா அவ்வளவு அழுகை. எனக்கு ஆறுதல் சொல்லக்கூட தோணலை. அழுதுமுடிச்சி கையைத் துடைச்சிகிட்டு அம்மா உனக்கு புரிஞ்சிருச்சானு கேட்குறா.

உடம்பு சிலிர்த்து போச்சி. கை கால் நடுக்கம் வந்து தூக்கத்தில இருந்து எழுந்து உட்கார்ந்துகிட்டேன். மனது துவண்டு போச்சுடா.  அவளைக் கனவுல ஏன் பார்த்தேன்.

என்னாலே ரெண்டு நாளுக்கு ஒரு வாய் சோறு சாப்பிட முடியலை. செத்துப் போயிட்டாளே இனிமே அவளுக்கு நான் என்ன உதவி பண்ண முடியும். ஆனாலும் செத்து போனபின்னாடியும் நினைப்போட வலி ஆறாதது தானா.  அதை நினைச்சி தூக்கம் வராம பலநாள் அழுதிருக்கேன்,

சோமா, உனக்கும் அழுகணும்னு ஆசையா இருந்தா இப்பவே அழுதுரு.

என்னாலே  உன்னைத் தேற்ற முடியாது. ஆனா உன் கஷ்டத்தை என்னால புரிஞ்சிகிட முடியும். ஏன்னா நீ என் பிள்ளை. பெத்தவங்களுக்குப் பிள்ளைங்க கஷ்டம் அவங்க சொல்லி தான் தெரியுறதுன்னா அதை விட கேவலம், அவமானம் வேற எதுவுமில்லை.

நீ உன் தங்கச்சி, உங்க தம்பி எல்லாம் என் உடம்புல கொஞ்சம் பிஞ்சி எடுத்துட்டு பிறந்தவங்க தானே. எனக்குக் கை கால் வலிக்குன்னா யாராவது வந்தா சொல்றாங்க. நானா தெரிஞ்சிகிடுறது இல்லை.. அப்படி தான் உங்க கஷ்டம் வலியும்.

நானாத் தெரிஞ்சிகிடுறேன். எனக்கு உங்க யாரு மேலயும் கோபம் இல்லைடா. ஆனா நிறைய வருத்தம் இருக்கு. ஆதங்கம் இருக்கு. அது என் சுபாவம். எனக்கு நடந்ததை நான் யார்கிட்டேயும் சொல்லாம புத்து மாதிரி எனக்குள்ளேயே வளர்த்துகிட்டேன். புத்து வளர்ந்து என்னையை மூடிகிடுச்சி. அதுக்கு வேற யாரும் பொறுப்பில்லை.

சோமா. எனக்கு ஒரேயொரு ஆசைடா. நான் ஒரு கதை எழுதணும். சொன்னா  உனக்கு ஆச்சரியமா இருக்கும். நான் ஒரு கதை எழுதி அது கலைமகள்ல 1952வது வருசம் வெளியாகி இருக்குடா. கதைக்கு தலைப்பு பிராப்தம். அதுக்குப் படம் போட்டது யார் தெரியுமா. ஒவியர் சங்கர். என்ன அருமையா வரைஞ்சிருப்பார் தெரியுமா. எதுக்கு அந்தக் கதையை எழுதுனேன்னு தெரியலை. ஆனா அப்போ தான் கல்யாணம் ஆகி உங்க அண்ணன் பிறந்து இருந்தான். உங்க அப்பா வத்தலகுண்டில தாசில்தார் ஆபீஸ்ல வேலையா இருந்தார்.

நாங்க குடியிருந்த வீட்டுக்கு பக்கத்தில் ஒரு லைப்ரரி. பகல்ல உங்க அப்பாவுக்கு தெரியாம அங்கே போயி காண்டேகர் எழுதுன புத்தகங்களை எடுத்துட்டு வந்து படிக்க ஆரம்பிச்சேன். என்னைப் பத்தியே எழுதியிருக்கிற மாதிரி இருந்துச்சி. அப்போ தான் மனசில ஒரு கதை தோணுச்சி. அதை காண்டேகர் கதை மாதிரியே பார்த்துப் பார்த்து எழுதினேன். கதையை எழுதி முடிச்சதுக்கு அப்புறம் என்ன பண்றதுன்னு தெரியலை.

அந்த லைப்ரரியன் கிட்டே கேட்டேன். அவர்தான் கலைமகளுக்கு அனுப்பி வைக்கச் சொல்லி முகவரி கொடுத்தார். அனுப்பி வச்சிட்டு மறந்துட்டேன். நாலு மாதம் கழிச்சி அது வெளியாகி இருந்துச்சி.  அச்சில என் கதையைப் பார்த்த சந்தோஷம் தாங்க முடியலை. உங்க அப்பா மதியச்சாப்பாட்டுக்கு வந்தப்போ அவர் கிட்டே பத்திரிக்கையை நீட்டினேன். நீ எழுதுனதானு கேட்டார். தலையாட்டினேன். சாப்பிட்டு முடிச்சிட்டு ஊஞ்சல் உட்கார்ந்து படிச்சார். பரிட்சை பேப்பர் திருத்திற வாத்தியார் முன்னாடி நிக்கிற பொண்ணு மாதிரி கையைக் கட்டிகிட்டு நின்னுகிட்டு இருந்தேன்.

உங்க அப்பா படிச்சி முடிச்சிட்டு ஒரு பெருமூச்சு விட்டார். பிறகு எழுந்து சமையற்கட்டுக்குள்ளே போனார் ஒரு தீக்குச்சியை எடுத்து அந்த கதையை கிழிச்சி அதுக்கு தீவச்சார். வேற ஒண்ணுமே பேசலை. அப்படியே போய் மாடில அவர் ரூம்ல போய் தூங்கப் போயிட்டார். எரிந்து கிடந்த காகிதத்தைப் பாத்துகிட்டே இருந்தேன். அழுகை முட்டிகிட்டு வருது. அவமானமா இருந்துச்சி, சாயங்காலம் அவர் வெளியே கிளம்பும் போது காபி கொண்டுவந்து வச்சிட்டு கதை பிடிக்கலையானு கேட்டேன்.

அவர் யாரைக் கேட்டுடி நீ கதை எழுதுனேனு கேட்டார்.

மனசுல தோணுச்சி எழுதுனேன்னு சொன்னேன்.

உனக்கு ஏதுடி பேனா. காகிதம், யாரு கொடுத்ததுனு கத்தினார் 

வீட்ல இருக்கிறதே உங்க பழைய பேனா. வெள்ளைக் காகிதம் நயினார் கடைல போயி வாங்கினேனு சொன்னேன்.

பகல்ல தனியா கடைக்கு வேற போயிட்டு வர ஆரம்பிச்சிருக்கியா, வேற என்ன திருட்டுதனம் பண்ணினே சொல்லு என்றபடியே உனக்கு இந்த கலைமகள்க்கு அனுப்பணும்னு ஐடியா  யார் சொன்னது என்று கேட்டார். நான் ஒளிக்காமல் எல்லாவற்றையும் அவரிடம் சொல்லிவிட்டேன்.

உங்கப்பா பல்லைக்கடித்துக் கொண்டு இப்பவே உங்க அப்பாவை வரச்சொல்லி தந்தி குடுக்குறேன்னு சொல்லி வெளியே கிளம்பி போயிட்டார். சொன்னது போலவே எங்க அப்பாவை தந்தி குடுத்து வரச் சொன்னார்.  எங்க அப்பா கோவில் கணக்குப்பிள்ளை, இயலாத மனுசன், அவரு மாப்பிள்ளை கோபமா இருக்காருனு தெரிஞ்சதும் என்ன செஞ்சார் தெரியுமா.

சாஷ்டாங்கமா உங்க அப்பா கால்ல விழுந்து கெட்டியாப் பிடிச்சிகிட்டு என் பொண்ணு செஞ்ச தப்பை மன்னிருச்சி ஏத்துக்கோங்கன்னு அழுதார்.

உங்க அப்பாவுக்கு அது போதலை. என்னாலே உங்க மக செஞ்ச தப்பை மன்னிக்க முடியாது. அவளை உங்க வீட்டுக்கு கூட்டுட்டு போயிருங்கன்னு சொல்லி என் புடவை பெட்டி எல்லாம் தூக்கி வெளியே வீசி எறிஞ்சார்.

அய்யோ அப்படி சொல்லாதீங்கனு எங்க அப்பா கோபத்தில் என்னை நாலு அறை அறைஞ்சி மாப்ளே கிட்டே மன்னிப்பு கேளுடி. இனிமே கதை எழுதுனே உன்கையை ஒடிச்சி மொண்டி ஆக்கிடுவேன்னு சொன்னாரு.

நானும் உங்க அப்பா கிட்டே மன்னிப்பு கேட்டு சத்தியம் பண்ணிக்குடுத்தேன, உங்க அப்பா என்னை ஏத்துகிட்டார். ஆனா எப்பவாவது கோபம் வந்தா நீ திமிர் பிடிச்சிப்போயி கதை எழுதுறவ ஆச்சே. இதையும் எழுதுடி என்று சொல்லிக்காட்டுவார்.

அதுல இருந்து வாரப் பத்திரிக்கை படிக்கிறதை எல்லாம் விட்டுட்டேன்.

ஆனா உங்க அப்பாவுக்கு தெரியாம மனசுக்குள்ளயே ஒரு கதையை எழுதிகிட்டு வர ஆரம்பிச்சேன். அந்த கதைக்கு தலைப்பு எல்லாம் கூட வச்சிருக்கேன். தலைப்பு என்ன தெரியுமா. பரமபதம்.  அதுல வர்ற பொண்ணு பேரு சரஸ்வதி. அது என்னோட கூட படிச்ச  ஒரு பொண்ணோட பேரு. அவளை ஸ்கூல்ல படிச்சதுக்கு அப்புறம் திரும்ப பார்க்கவேயில்லை.  ஆனா அவ முகம் மறக்கவே முடியலை. அதனாலே அந்தப் பெயரை வச்சிகிட்டேன்.

சும்மா இருக்கிற நேரம் எல்லாம் அந்தக் கதையை மனசுக்குள்ளே கொஞ்சம் கொஞ்சமா எழுதிகிட்டே இருப்பேன். எங்கே மனசில இருக்கிற கதையை உங்கப்பா கண்டுபிடிச்சிருவாரோனு கூட பயமா இருக்கும். ஆனா அவர் கடைசி வரைக்கும் கண்டுபிடிக்கவேயில்லை.

உங்க அப்பா எனக்கு நிறைய நகை வாங்கி குடுத்து இருக்கார். என் பேர்ல ஒரு வீடு வாங்கி குடுத்தார். வருசத்துக்கு ஒரு பட்டுபுடவை.. இஷ்டப்பட்ட கோவில்குளம் எல்லாம் கூட்டிட்டு போய் வந்திருக்கார். ஆனா அவருக்கு நான் ஒரு துணையாள். அவர் அதிகாரத்துக்கு கட்டுபடுற நல்ல வேலையாள். அவ்வளவு தான்.

நீ சென்னைக்கு போயிட்டே உன் தம்பிகள் அவனவன் பாட்டை பாத்து ஆளுக்கு ஒரு திக்கு போயாச்சி, வீட்ல நானும் உங்க அப்பாவும் ரெண்டே ஆளு, பிள்ளைகள் இல்லாம வீட்ல தனியா இருக்கிறது கொடுமைடா, கிறுக்கச்சி மாதிரி நீங்க விளையாண்ட் சுவரை தொட்டு பாக்குறதும் படுத்த படுக்கையை தடவி பாக்குறதுமா இருப்பேன்,

ஏன்டி வீட்லயே இருக்கே,, வெளியே  எங்காவது கோவில் குளம்னு போயிட்டு வர்றதுன்னா போயிட்டு வானு உங்க அப்பா சொல்லிகிட்டே இருந்தார். வயசானதுக்கு அப்புறம் அவரு தப்பை உணர்ந்துகிட்டாருனு நினைக்கிறேன்.

எனக்குத் தான் வெளியே போகப் பிடிக்கலை.

செக்குமாட்டை அவுத்துவிட்டா அது எங்கே போகும். உங்க அப்பா இறந்து போனபின்னாலும்  என் கூடவே அவர் இருக்கிற மாதிரியே தான் இருக்கு.  என்  ரெண்டாவது கதையை எழுதி வெளியிடுறதுக்கு துணிச்சலே வரலை.

இனிமே நான் கதை எழுதி என்ன செய்யப்போறேன். ஆனாலும் மனசு கேட்க மாட்டேங்குது. உங்கப்பாவுக்கு நான் எழுத மாட்டேனு சத்தியம் பண்ணி குடுத்திருக்கேன். அதை அவர் இல்லேங்கிறதுக்காக என்னாலே மீற முடியாது. அதனாலே சோமா உன்கிட்டே அந்தக் கதையை சொல்றேன்.

நீ எழுதி கலைமகளுக்கே அனுப்பி வச்சிரு. ஆனா உன் பேரு போட்டுக்கோ. ஏன்னா ஆம்பளைப்பசங்க கதை எழுதினா உங்கப்பா ஒண்ணும் சொல்ல மாட்டார்.  அந்தக் கதை  என் மனசில இருந்து ரொம்ப ரணப்படுத்துடா. ஒரு வேளை அதை சொல்லாமலே நான் செத்து போயிட்டா ஒரு கதை அநியாயமா என்னோடவே புதைஞ்சிபோயிரும்டா. அந்தப் பாவத்தை என்னாலே தாங்க முடியாது.

சோமா,  அந்தக் கதையை உன்கிட்டே சொல்லட்டும்மா. கவனமா கேட்டுகிடுறயா. நான் சொல்றதுல எதையும் மாத்திராதே.

பேருக்கு தான் அது கதை. ஆனா நடந்தது எல்லாம் நிஜம்.

கதைன்னாலே அப்படித் தானே.  கிட்டே வா. உங்கப்பா பக்கத்தில் இருந்து கேட்டுகிட்டு இருக்கப்போறார். என்றபடியே அம்மா தனக்கு தானே முணுமுணுத்துக் கொண்டிருந்தார்

 மருத்துவமனையில் ஒடும் மின்விசிறியின் சப்தம் மட்டும் சீரற்று கேட்டுக் கொண்டிருந்தது, அம்மா மௌனமாகிவிட்டிருந்தார்

அம்மாவினை எழுப்பி என்னம்மா கதை கிதைனு ஏதோ சொல்லிகிட்டு இருந்தியே என்னது அது என்று கேட்டேன்

கலக்கத்துடன கண்விழித்தபடியே தெரியலைடா மறந்துபோச்சி. ஞாபகம் வந்தா சொல்றேன் என்றாள்,

பிறகு அந்தக் கதையை அம்மா நினைவு கொள்ளவேயில்லை தான் இறக்கும்வரை   

•••

பெமினா ஆங்கில இதழின் புதிய தமிழ்பதிப்பு வெளியாகி உள்ளது, அதன் முதல் இதழில் வெளியான சிறுகதை.

Gayathri:
கடவுளின் குரலில் பேசி
சிறுகதை


ஜான் வீடு திரும்பும் வழியில் விசாரணைக்காரர்களால் விசாரிக்கப்பட்டான். அவர்கள் கேள்விகள் எல்லாவற்றிற்கும் ஜானிடம் பதிலிருந்தது. அவர்கள் அந்த நாடகத்தைப் பற்றியே திரும்பத்திரும்ப கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு மாலையும் அந்த நாடகம் சதுக்கத்தில் நடைபெறுகிறது. தினமும் அதில் நடிக்கும் நடிகர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது. முதல் நாள் அன்று ஜான் ஒருவன் மட்டும் அந்த சதுக்கத்தில் சிறு மேஜையைப் போட்டு, ஏராளமான காகிதங்களை வைத்து எழுதிக்கொண்டிருந்தான். பொது இடத்தில் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருந்தான்.

பொது இடத்தில் உட்கார்ந்து எழுதும் அவனை மக்கள் வேடிக்கை பார்த்துப் போனார்கள். கேட்கும் சிலரிடம் இது தனிநபர் நடிக்கும் நாடகம் என்றான். நாடகத்தின் ஒரே பாத்திரம் ஜான். நாடக ஆசிரியன் பலகாலமாக முயன்று நாடகம் எழுதமுடியாமல் தோற்றுக்கொண்டிருக்கிறான். நாடகம் எழுதுவதற்கான காகிதங்கள் குரோட்டோவெஸ்கி நாடக அரங்கு பற்றிய புத்தகம், வில்ஸ் பாக்கெட், மை பேனாக்கள், சிவப்புநிற சிகரெட் லைட்டர், அவன் லைட்டரை கொளுத்துவதும் சிகரெட்டை எடுக்க முனைவதும், பின் விட்டுவிடுவதும் கண்டு மாபெரும் அபத்த நாடகம் என மக்கள் சிரித்தார்கள்.

ஜான் நாடகம் எழுத பேப்பர்களை வேகமாக எடுப்பான். மக்கள் கூட்டம் சிரிக்கும். பின் அவன் நாடகப் பாத்திரங்கள் பெயரை வரிசையாக எழுதுவான். அவற்றை வாய்விட்டுப் படிப்பான். இப்படியாக தனி ஆளாக நடந்த ஜானின் நாடகத்தின் இரண்டாம் பாத்திரம் இரண்டாம் நாள் கிடைத்தது. இரண்டாவது பாத்திரமாக ஒருவன் மாலைப்பேப்பரை வாங்கிக் கொண்டு வந்து ஜானுக்குப் பக்கமாக உட்கார்ந்து தினமும் படித்தான். சுவாரஸ்யமான அரசியல் தலைப்புச் செய்திகள். நடிகைகளின் ரகசிய உறவுகள், குரங்குகுசலா, சிந்துபாத்தின் கன்னித் தீவு இப்படி. ஜான் நாடகம் எழுதுவதை நிறுத்தி விட்டுப் பேப்பர் படிப்பவனோடு சிறிது நேரம் சேர்ந்து படிப்பான். அவர்கள் அரசியல் சர்ச்சை செய்து கொள்வார்கள்.

இப்படியாக ஜானின் நாடகத்தில் இப்போது நாற்பது பாத்திரங்கள் சேர்ந்துவிட்டன. அவர்கள் வருவார்கள். பேசிக்கொள்வார்கள். ஜான் சொல்வது போலக் கேட்பார்கள், அல்லது தங்கள் வேலைகளைச் செய்வார்கள். ஜான் பாத்திரங்களை ஒழுங்குபடுத்துவதில்லை. பாத்திரங்கள் தங்கள் வசனங்களைத் தாங்களே பேசினார்கள். ஒருவர் கணக்கிட்ட படியிருந்தார். இன்னும் சிலர் பாடம் நடத்தினார்கள். தினமும் புதுப் புதுப் பாத்திரங்கள் வந்து சேர்ந்து கொண்டிருந்தன. பாத்திரங்கள் அதிகமான ஒரு நாளில் இரண்டு காவலர்கள் வந்த ஜானிடம் விசாரித்தார்கள்.

“என்ன நடக்கிறது இங்கே”

‘நாடகம்’

‘யார் எழுதியது’

‘யாரும் எழுதவில்லை’

‘பின்னே’

“அவர்களாக வருகிறார்கள், நடிக்கிறார்கள். சொல்லப் போனால் நீங்கள் இருவரும்கூட இரண்டு பாத்திரங்கள்” தான்.

“நாங்கள் விசாரிக்க வந்திருக்கிறோம்”

விசாரிக்கும் இரண்டு பாத்திரங்கள்”

‘நாங்கள் நினைத்தால் உன்னை எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம், கைது செய்யக் கூட முடியும்’

‘நாடகம் எப்படி வேண்டுமானாலும் மாறலாம்’

அவர்கள் அவர்களுக்குள்ளாகப் பேசிக் கொண்டார்கள். சில பாத்திரங்கள் தங்கள் வேலைகளை விட்டு இதை வேடிக்கை பார்த்தன. காவலர்கள் பேசாமல் திரும்பிப் போய் விட்டார்கள். மறுநாள் மாலையிலும் வந்தார்கள். வந்து நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நாடகத்தில் புதிதாக வந்து சேர்ந்திருந்த ஒரு பாத்திரம் ஓடியபடியிருந்தது. இரண்டு அரசியல்வாதிகள் பேசிக் கொண்டார்கள். ஜானிடம் காவலர்கள் வந்து நின்றார்கள். அவர்கள் முகம் வெளுத்துப் போயிருந்தது.

‘இது நாடகமில்லை. நீங்கள் எதிர்ப்பாளர்கள்’

‘தெரியவில்லை எனக்கு’

‘நீ என்ன செய்கிறாய்’

‘நாடகம் எழுதுபவன்’

‘இதன் முன்பு என்ன நாடகம் எழுதியிருக்கிறாய்.

‘சவரக் குறிப்புகள்’

அவர்கள் சிரித்துவிட்டார்கள். ஜான் திரும்பிப் பார்த்த போது சதுக்கம் எங்கும் ஆட்கள் ஏதாவது ஒன்றைச் செய்து கொண்டிருந்தார்கள். சிலர் குடைகளை விரித்த படி முன்னும் பின்னும் நடந்தார்கள். ஜான் காவலர்களிடம் திரும்பினான். அவனுக்கு அவர்கள் நாடகப் பாத்திரங்கள் போலவே தோன்றின. நாடகப்பாத்திரங்கள் சொல்லும் வசனத்தைத்தான் குறித்துக்கொள்ள வேண்டுமென முயற்சி செய்தான். காவலர்கள் விசாரித்ததை அவன் பேப்பரால் குறித்துக் கொண்டதை காவலர்கள் கண்டார்கள். காவலர்கள் அந்தப் பேப்பரை பிடுங்கிக் கொண்டார்கள். பின் அவனிடம் கேட்டார்கள்.

‘எங்கே அந்த நாடகப் பிரதி’

‘வீட்டில் இருக்கிறது’

‘வா, போகலாம்…’

‘நாடகம் இன்னமும் முடியவில்லை.’

காவலர்கள் சதுக்கத்தில் இருந்த சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டார்கள். சதுக்கம் எங்கும் வெளிச்சம் பரவியது. நேரமாகிக் கொண்டே போனது. சோடியம் விளக்கு எரிய துவங்கியது. அவரவர்களாக கலைந்து போகத் தொடங்கினார்கள். வெகு நேரம் வரை பேப்பர் வாசிப்பவர்களும் ஜானும் மட்டுமே இருந்தார்கள். கடைசியாக அவன் பேப்பரைச் சுருட்டி கையிடுக்கில் வைத்துக்கொண்டு ஜானிடம் சொன்னான்.

“எவ்வளவோ நடக்கிறது வெளியே”

ஜான் அவனுக்கு பதில் சொல்லவில்லை. காவலர்களைக் கடந்து போகும் போது அவன் மாலை பேப்பரை ஆட்டி வணக்கம் வைத்துப் போனான். ஜான் மேஜையைத் திருப்பி ஒரு பழைய கட்டிடத்தின் உள் கொண்டு போய் போட்டு வைத்தான். காவலர்கள் அவனோடு வெளியே வந்தார்கள். ஜான் சிகரெட் பிடித்தான். அவர்கள் ஜானிடமிருந்து சிகரெட்டு வாங்கிக் கொண்டார்கள். பின் அவர்களில் ஒருவன் கேட்டான்.

“நாங்களும் இந்த நாடகத்தில் நடிப்பவர்கள் என்கிறாயா?”

“இருக்கலாம்”

“எனக்கு அப்படித்தான் படுகிறது”

மற்றொரு காவலர் முறைத்தார். உடனடியாகப் பதில் சொன்னார்.

நாம் எல்லா விபரங்களையும் சேகரித்து அனுப்ப வந்திருக்கிறோம். பாத்திரங்கள் அல்ல

“அப்படியானால் அங்கே நடந்தது நாடகல்ல.”

“பின் என்ன அது”

அவரவர் காரியங்களை அவரவர் செய்கிறார்கள். அதைப் பார்க்கும்போது நமக்கு அலுப்பும் எரிச்சலும் வருகிறது. குறிப்பாக அந்தடைப்பிஸ்ட் கணக்குப் பார்ப்பவன், வாத்தியார், கேஷியர்.. சே..

நீ அவர்களோடு சேர்ந்து பேசுகிறாய்.

காவலர் என்பதும் பாத்திரம்தான்…

“உளறாதே, நீ அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட ஆள். ஊழியன்

ஜான் அவர்கள் பேசுவதைக் கேட்டபடி வந்தான். பின் அவர்களிடம் திரும்பிச் சொன்னான்.

“பாத்திரங்கள் பேசிக் கொள்வதுபோல நிஜ வாழ்க்கையில் கூட எவரும் பேசிக் கொள்வதில்லை… அற்புதம் மிக அற்புதம்.

“உளறாதே.. இது நிஜவாழ்க்கை.. உன் நாடகம் அல்ல. அத்தோடு நாங்கள் நடிகருமல்ல”

“நடிகர்கள் எப்போதும் நடிகர்களாகவே இருப்பதில்லை. அவர்களும் வீடு திரும்பி விடுகிறார்களே”

“எங்களைக் குழப்பி… நீ எங்களை உன் நாடகத்தில் நடிக்க வைக்க பார்கிறாய்.. அப்படித்தானே உன் வீடு எங்கே”?

ஜான் அவர்களிடம் பேசவேயில்லை. மூவரும் நடந்தார்கள். இருட்டடைந்த சந்துகள்; வெங்காய வாடைவீசும் தெருக்கள். நிழல்கள் சரிகின்றன. வெளிச்சம் மங்கி நிற்கும் வீடுகள். காரைகள்பெயர்ந்த குடியிருப்புகள். மரங்கள் கூட இலைகள் உதிர்ந்து நின்றன. நாய்கள் குரைக்காது பின்தொடர்கின்றன. தெருவை அடைத்தபடி கிடக்கும் கோவில்மாடுகள். யார் வீட்டிலோ கேட்கும் பாட்டுச்சத்தம். பிள்ளைகள் பாடம் வாசிக்கும் சப்தம். காவலர்கள் மீண்டும் பேசிக் கொள்ளத் தொடங்கினார்கள்.

“நாம் வீடு திரும்ப வெகு நேரமாகிவிடும்.”

அவர்களின் சலிப்புத் தாங்கமுடியாததாகியிருந்தது. ஜான் சிறிய ஓட்டுவீட்டில் இருந்தான் ஜானின் மனைவி உறங்கியிருந்தான். கதவைத் தட்டியதும் திறந்து வந்தாள். அவள் காவலர்களைப் பார்த்துவிட்டு உள்ளே வந்து லைட்டைப் போட்டுக் கேட்டாள்.

“இப்போதுதான் நாடகம் முடிந்ததா…”

“இன்னும் முடியவில்லை”

அவர்கள் யார்.. நடிப்பவர்களா…

நாடகப்பிரதிவேண்டி வந்திருக்கிறார்கள்..

அவள் மூலையிலிருந்த பானையிலிருந்து தண்ணீர் குடித்துவந்தாள். பின் அவனைப்பார்த்துச் சொன்னாள்.

“உறக்கம் வருகிறது எனக்கு. சீக்கிரமாக அவர்களை அனுப்பு”

அவர்கள் வீட்டை சுற்றிப் பார்த்தார்கள். மரமேஜை கிடந்தது. பெரிய கிதார் ஒன்று. சில நாடகப் பொருட்கள், பேப்பர்கள், பூஜாடி, மீன் தொட்டி, காலி சிகரெட்பெட்டிகள், வர்ணக்காகிதங்கள். அவர்கள் இருவரும் ஸ்டூலில் உட்கார்ந்தார்கள். ஜான் பழைய பெட்டியில் தேடி நாடகப்பிரதியை எடுத்துவந்தான். பழுத்துப்போன காகிதத்தில் கறுப்பு மசியில் எழுதப்பட்ட நாடகம். அவர்கள் அந்தக்காகிதத்தை எடுத்துப்படித்துப்பார்த்தார்கள். பின் சுருட்டிக் கொண்டார்கள். ஜான் அவர்களுக்கு அந்த நாடகத்தைப் பற்றி விளக்கி பேசினான்.

‘மூன்று பாத்திரம் மட்டும்தான். ஒன்று கடவுள், மற்ற ஒன்று சவரக்காரன். மூன்றாவது நபர் காத்திருப்பவன்… நாடகம் கடவுளுக்கும் சவரம் செய்பவனுக்கும் நடக்கும் உரையாடல். உங்களுக்கே தெரியும் தானே… முகத்தில் மயிர் இருப்பது எந்தக் கடவுளுக்குத் தான் பிடிக்கும் சொல்லுங்கள். மழிக்கப்பட்ட கடவுள் முகம்தான் எல்லாருக்கும் வேண்டும்… இங்கே கூட அப்படித்தான். உங்களுக்குத் தெரியும்தான்’

அவர்கள் அவளிடம் உரக்கப் பேசினார்கள்.

நாங்கள் இதை நாடகம் போடக் கேட்கவில்லை… விசாரணைக்காகக் கேட்கிறோம்.. இதன் பிரதிகள் பல இடங்களுக்கும் அனுப்பப்படும்… நிச்சயம் உனக்குத் தண்டனை கிடைக்கும்.

இதை நானாக எழுதவில்லை. சவரம் செய்யும் இடத்தில் பேசிக்கொண்டவை. இவை நாவிதனின் வசனங்கள் நான் அவற்றைக் குறித்து வந்தேன்… அவ்வளவு தான்.

அவர்கள் திரும்ப ஒரு முறை பிரதியைச் சரிபார்த்துக் கொண்டார்கள். பின் அவர்கள் கிளம்பிப் போனார்கள். நள்ளிரவாதலால் தெருவில் ஜன நடமாட்டமில்லை. வெறிச்சோடிய தெரு. காவலர்களில் ஒருவன் பேசினான்.

“அந்த ஆளை என்ன செய்யப்போகிறது அரசாங்கம்.”

“நமக்கு சம்பந்தமில்லாதது”

“நாளையும் நாம் சதுக்கத்திற்கு வரவேண்டுமா?”

“தினமும் நம் வேலை அதுதான்…”

ஞாயிற்றுக் கிழமையன்று ஜானின் நாடகத்தில் நூறு பேர்கள் நடித்தார்கள். இடைவிடாத சப்தம், கூக்குரல், நிறைய பெண்கள், பெண் பாத்திரங்களில் சில ஜானிடம் வந்து நின்று ஏங்கி கேட்டன.

காதல் நாடகம் எழுதேன் ஜான்.

எனக்குத் தெரியாதது அது.

ஜான் காதல் இல்லாத நாடகம் வேண்டாம்… இளம் உள்ளங்களை வதைக்கும் காதல் நாடகம் போடு ஜான்

மிகச் சிறந்த நடிகையாக இருக்கிறாய் நீ…

அந்தப் பெண் வெட்கப்பட்டாள் ஜானிடம் ஒருவயதான நபர் வந்து நின்று பேசினார்.

ஜான் என் கண்ணே… நான்தான் அப்பா…

யாருடைய அப்பா…

நாடகத்தில் வரும் அப்பா… நான். நீ நாடகங்களே பார்த்ததில்லையா..

இருக்கலாம்.

அப்பா பாத்திரம் ஜானை விட்டு விலகிப்போனதும் ஜான் காகிதங்களைப் புரட்டினான். கோழிமயிர்சொருகி, வைக்கோல் தொப்பி வைத்த பாத்திரம் ஒன்று மஞ்சள் சட்டையிட்டு கறுப்புப் பேண்ட்டை கால்வரை மடித்துவிட்டு, பழையகால பூட்ஸ்போட்டு, கிடாரோடு வந்து நின்று சிரித்தது. அவன் கிடாரிலிருந்து சப்தம் விநோதமாக வந்தது. அவன் ஜானிடம் மண்டியிட்டுக்கேட்டான். ஜான் என்பிரிய நண்பனே, நான் தான் சாகசக்காரன். கோமாளி, என் பாத்திரம் என்ன சொல் ஜான். அவனைப் பார்த்ததும் ஜானுக்குச் சிரிப்பு வந்தது.

உனக்கு எதற்குப் பாத்திரம். உன் சாகஸங்களை நீ காட்டுவது தானே உன் இயல்பு. உன்னை நான் பழைய நாடகங்களில் பார்த்திருக்கிறேனே என்றான். கிடாரிலிருந்து இனிய சப்தம் வர அவன் பேசினான். என் தாத்தாவின் தாத்தாவின் தாத்தா கப்பில் நாடகம் நடித்தவர். ஷேக்ஸ்பியர் நாடகங்கள் எல்லாம் அவர் தான் நடித்தார். அவரிடம் ஹாம்லெட்டின் கத்தி இருந்தது. ஒத்தல்லோவின் கர்சீப் இருக்கிறது. நீண்ட கால் கொண்ட மதுக் கோப்பைகள் இருந்தன. ஒத்தல்லோவின் கர்சீப்பை தான் என் தாத்தா தலையில் கட்டிக்கொண்டு வருவார் ஒத்தல்லோ என்று கறுப்பனின் இசைப்பாடல் இதோ. படுவேகமாக வாசித்தான். கூட்டம் சிரித்தது. அவன் தன் வைக்கோல் தொப்பியை எடுத்துச் சுழற்றி வீசினான்.

ஜானின் பேனா பலவாறாக முயன்று புதிய நாடகம் எழுதப்பார்த்தது. யாருடைய கதையை நாடகமாக்குவது என யோசித்தான். சிறையில் இறந்து போன நாடகக் காரனைப்பற்றிய நாடகத்தை எழுதலாம் என நினத்தான். அவனுக்கு நாடகத்தில் கோரஸ்பாடுவது பிடித்திருந்தது. ஜானுக்கு கோரஸ் பாடல்கள் பிடித்திருந்தன. கோரஸ்காரர்கள் சுழன்று சுழன்று பாடும் நாடகம் எழுத விரும்பினான். சதுக்கத்தில் வெயில் மிஞ்சியிருந்தது. இன்றைக்கு நிறைய பாத்திரங்கள் நடிக்கிறார்கள் என நினைத்துக் கொண்டான். கடற்கரையில் உலவும் யானை என ஒருவன் அவனாக நினைத்துக் கொண்டு கைகளை உயரே தூக்கி பிளிறிக்காட்டி நடித்துக்கொண்டிருந்தான். அன்றைக்கு வேடிக்கைப் பார்க்க குழந்தைகள் நிறைய வந்திருந்தன. அவை ஜான், ஜான் எனக் கூச்சலிட்டன. சிறு கண்ணாடி கொண்டு ஜான் மீது வெயிலைப் பாய்ச்சி கண்களைக் கூச வைத்தன.

ஜான் சதுக்கமெங்கும் அலைந்தான். அவ்வளவு பெரிய நகரத்தில் மக்கள் கூட்டம் நிறையவேயிருந்தது. எல்லாவற்றையும் ஆட்கள் விசாரித்தார்கள். ஜானிடம் அப்பா பாத்திரம் வந்தது.

ஜான்… ஆசிர்வதிக்கப்பட்ட மகனே… என்னை என்ன செய்யப் போகிறது… வயதான அப்பாவிற்கு தனிமை தானா.

நீங்கள் பேசுவது எனக்குப் புரியவில்லை..

நீ நாடகம் எழுதுபவன், ஜான். நான் பாத்திரம்…. பலரின் நாடகத்திலும் வந்த பாத்திரம்…

நீங்கள் மட்டுமா…

நான் மட்டுமில்லை. அம்மா, அக்கா, காதலி, காதலன், நீதிபதி, அச்சுகா; பாலி எல்லாம் பாத்திரங்கள் என் ஜானே… நான்லியர்… எனக்கு மூன்றுபெண்கள் உண்டு.

நான் என்ன செய்ய வேண்டும்..

அப்பாவை எதிர்க்கும் மகன் நாடகம் எழுதாதே ஜான், அப்பா வயதானவர், நோயாளி சிடுசிடுப்பானவர். இப்படிவசனம் எழுதாதே ஜான்… அப்பா நல்லவர், , ஜான்.

போய்விடுங்கள் இப்போது நான் நாடகம் எழுத வில்லை.

ஜான் என்னை மறக்காதே.. ஜான்.. ஜான்.. பலகுரல்கள் கேட்டன. ஜான் மேஜைமீது அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்க்கும் கூட்டத்தின் பக்கம் திரும்பிப் பார்த்தான். அவனைப் பார்த்ததும் சிலர் கேலி செய்தார்கள். ஜான் சிகரெட் பற்றவைத்துக் கொண்டான். நாயை வைத்துக் கொண்டு உலவும் ஒருவயதானவன் கூட இன்றைய நாடகத்தில் இருந்தான். ஜானிடம் ஒருவன் கேட்டான்.

இந்த நாடகத்தின் பெயரென்ன..

கூட்டம்

பேப்பர் வாசிக்கும் ஜான் பக்கம் திரும்பிக் கேட்டான்.

எங்கே நடக்கிறது கூட்டம். யார் பேசுகிறார்கள்?

தெரியவில்லை.

மாலைப்பேப்பரில் செய்திவரவில்லையே… இரண்டு காணாமல் போன பையன்கள் படம்தான் வைத்திருக்கிறது.

ஜான் காவலர்கள் வந்து கொண்டிருப்பதை பார்த்தான். உடன் வேறு ஒரு ஆள் வேறு வந்தான். அவன் உயர மானவனாக இருந்தான். அவர்கள் சதுக்கத்தின்பக்கம் வந்து நின்று கேட்டார்கள்.

ஜான் உன் நாடகத்தை நிறுத்து.

நான் எந்த நாடகமும் நடத்தவில்லை.

உன் கூட்டத்தை நிறுத்து.

அது என் வேலையில்லை… உங்களுடையது.

காவலர்கள் உரக்கக்கத்தினார்கள். சதுக்கம் விரைவில் காலியானது. உயரமான நபரின் கையில் நாடகப்பிரதி இருப்பதை ஜான் பார்த்தான். உயரமான நபர் மீசை மழிக்கப்பட்டு பெரியகண்களோடு இருந்தார். அவர் ஜானைப் பார்த்துக் கேட்டார்.

இது உன்னுடைய நாடகம்தானே.

இல்லை .. குறிப்பு…

சவரக்குறிப்பு… இதை நிகழ்த்திக்காட்டு… எதுவுமே புரியவில்லை வாசிக்க.

என்னிடம் நடிகர்கள் இல்லை.

எங்கே போனார்கள்.

நான் நடிகர்களைத் தேடுவதுமில்லை… அவர்கள் என்னுடன் நடிப்பதுமில்லை.

இப்போது என்ன செய்வது.

நீங்கள் நினைத்தால் நாம் மூவரும் நடிக்கலாம்… மூன்று பாத்திரங்கள்… நீங்கள் கடவுள் நான் நாவிதன்.. மூன்றாம் ஆள் காத்திருப்பவன்.

சதுக்கத்தில் பலர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஜான் தன்னுடைய சட்டையை கழட்டிவைத்துவிட்டு தரையில் உட்கார்ந்தான். அவன் எதிரில் இரண்டு கல்லை தூக்கிப்போட்டு அதிகாரியை உட்காரச்சொன்னான். மற்றொரு ஆள் தள்ளி நின்றான்.

ஜான் பாக்கெட்டிலிருந்து சிறிய கத்தியை எடுத்து வைத்துக் கொண்டான். அதிகாரியின் சட்டையும் கழட்டப்பட்டது. ஜான் அவருடைய முகத்தைக் கைகளால் தடவிவிட்டுக் கேட்டான்.

கடவுளே உங்கள் முகம்தான் எவ்வளவு வழவழப்பானது… நீங்கள்தானே எல்லாவற்றிற்கும் அதிகாரி.. ஜானின் நாடகத்தில் கடவுளுக்கு வசனம் இல்லை. கடவுளின் மொழி பற்றி யோசிக்க யோசிக்க யோசிக்க ஜானுக்குக் குழப்பமே மிஞ்சியது. அதனால் கடவுள் தலையை மட்டும் ஆட்டினார். காத்திருப்பவன்தான் அதிகம் பேசினான். காத்திருப்பவன் ஒரு கைதியைப்போல, குடும்பஸ்தனைப்போல கல்லூரி மாணவனைப்போல பல குரலிலும் பேசினான். ஜானின் கத்தி கடவுளின் கன்னங்களில் உரசியது ஜான் இப்போது நாவிதனாகவே மாறிப் போயிருந்தான். அவன் குரல் உயர்ந்து கேட்டது.

நீசத்தனமானவனே… உன் பெயர் கடவுளா… முட்டாள்.. சவரக்கத்தியின் முனையால் எந்த சரித்திரத்தையும் மாற்ற முடியும் ததெரியுமா.. உன் பெயர் என்ன? கர்னலா… சக்கரவர்த்தியா, எண்ணெய் வயலுக்கு சொந்தக் காரனா, உளவாளியா யாராயிருந்தாலும் சவரக்கத்தியின் நுனியில் உன் தலை எப்போதும் இருக்கிறது தெரியுமா…

காத்திருப்பவன் அவசரப்படுத்தினான்.

இன்னுமா சவரம் செய்கிறாய். நேரமாகிறது… சினிமா போகவேண்டும். காதலியைச் சந்திக்கவேண்டும்.. தப்பிக்கவேண்டும்.. வேகம்..

கடவுளகாக இருந்த அதிகாரியின் முகம் வெளுத்துக் கொண்டு வந்தது. சதுக்கத்தில் ஆட்கள் குறைந்து கொண்டிருந்தார்கள். சோடியம் விளக்கு வெளிச்சத்தில் ஜானின் கண்கள் மின்னின. அதில் இனம் புரியாத குரூரம் தோன்றுவதைக் கண்ட அதிகாரி சப்தமிட்டான். ஜான்… நாடகம் போதும்.. நிறுத்து

கடவுளுக்குப் பேச உண்மையில்லை.. இன்னமும் சவரம் பாக்கியிருக்கிறது. காத்திருப்பவன் ஜானின் முதுகில் அறைந்து பேசினான்.

கிழப்பிணமே.. அவசரமாக சிரைத்துவிடு.. அவசரம் ஜானின் கத்தி அதிகாரியின் தொண்டையின் கீழே போனது. ஜானின் கண்களை அவர் பார்த்தபடியிருந்தார். ஜான் சரால் என ஒரு இழு இழுத்தான். ரத்தம் பெருகியது காவலர்கள் தன்னிலை பெற்றார்கள்.

ஜான் .. டேய்… என்ன செய்கிறாய்.

அதிகாரி ஜானை எட்டி உதைத்தார். ஜான் தள்ளிப் போய் விழுந்தான். அவர்கள் ஜானை பிடித்துக் கொண்டார்கள். அதிகாரி  கர்சீப்பால் கழுத்தை ஒத்திக்கொண்டார். ஜான் முகத்தை உலுக்கிக் கேட்டார். ஜான் தலையை திருப்பாது சொன்னான்.

நாடகம் அது.

என்ன நாடகம்… மடையனே.. உன்விரல் நகங்களை பிடுங்கினால் தான் உனக்கு சொரனை வரும்.

அவர்கள் ஜானைத் தள்ளிக் கொண்டுபோனார்கள். ஜானின் மேஜை, பேப்பர் அப்படியே கிடந்தது. ஜான் தெருவில் நடக்கும் போது கூட நாடகத்தில் நடிப்பது போலவே அவனுக்குத்தோன்றியது உடன்வரும் மூன்று பாத்திரங்களுடன் தான் போவது போலவேயிருந்தது. ஒருவன் கையில் நாடகப்பிரதியிருந்தது. ஜான் முடிவடையாத தன் நாடகத்தை நினைத்துக்கொண்டே போனான். ரத்தம் வழிந்த இடத்தில் தீயாக எரிந்தது அதிகாரி புலம்பினான் , ஜானோ ஒரு நாடகப் பாத்திரம் போலவே மெதுவாக உடன் நடந்து போனான்.

••

(ஏப்ரல் 1993 வெளியான இந்த சிறுகதை மலையாளம் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது )

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Go to full version