தமிழ்ப் பூங்கா > நாவல்கள்

~ரங்கநாயகியின் காதல ~

(1/3) > >>

MysteRy:
ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 1
தம்பலகாமம் கோட்டை சில நாட்களின் பின், அப்போதுதான் மீள உயிர் பெற்றதுபோல் செயற்படத் தொடங்கியிருந்தது. வழமை யான முறைக் காவல்கள் புதுவேகத்துடன் ஆரம்பமாகியிருந்தன.

போரிலே தளபதி காயப்பட்டுப் படுக்கையில் கிடந்த நாள் முதற்கொண்டு சோர்வாகிப் போனது கோட்டை அலுவல்கள்.
தொடர்ந்து அரசர் கலிங்கத்து (மாகன்)விஜயவாகு, தளபதியை காயங்கள் சுகமாகி உடம்பு தேறுதலாகி வரும்வரை ஓய்வில் அனுப்பத் தீர்மானித்த செய்தி கோட்டைக்குத் தெரியப்படுத்தப்பட்ட போது, ஒரு ஸ்தம்பித நிலையையே கோட்டை கண்டது.தளபதி கோட்டையை விட்டு வெளியேறிய நாளே அது சோகம் என்பதை முதலில் கண்ட நாளாக இருக்கவேண்டும். கண்கலங்காத வீரர்களில்லை. சமையல்கட்டு உதவியாளர் முதல் உபதளபதிகள் வரை அழுத கண்களுடன், கனத்த இதயத்துடன் அவரை மீண்டும் வரவேண்டும் என்ற அன்புக் கட்டளையுடன் அனுப்பிவைத்தனர். அவரும் அந்தக் கட்டளையை ஏற்றுக் கொண்டாலும் வருவேனா? என்ற சிந்தனையுடனேயே பிரிந்து சென்றார்.அவரைப் பொறுத்தவரை, அவர் தோளில் அரசர் சுமத்திய பணியை திருப்தியாகவே இதுவரை பூர்த்தி செய்திருக்கிறார். எதிரிகளின் அச்சுறுத்தல் திருகோணமலைப் பிராந்தியத்துக்கு ஒரு சகாப்தம் வரையிலாவது தலை தூக்காதபடிக்கு அவர் செய்து இருக்கிறார். அந்த வகையில் அரசருக்கு ஒரு நிம்மதியைத் தந்ததில் அவருக்குப் பெரும் ஆறுதல்.ஓய்வை அவர் நாடியதில்லை. ஆனாலும் மன்னர் அவரை விடுவதாயில்லை. அடுத்த தளபதியாக யாரை நியமிக்கலாம் என்று அவரிடமே ஆலோசனை கேட்டபோதுதான் மறுத்தாலும் மன்னரே நேரில் வந்து தூக்கிக்கொண்டு போனாலும்போவார் போலிருக்கிறது என்று தனக்குள் எண்ணி, மன்னர் தன்மேல் கொண்டுள்ள பாசம் குறித்துப் பெருமிதமும் கொண்டார்.தனக்குப் பின்னர் கோட்டைக்குரிய தளபதியை அவர் மன்னரிடம் சிபாரிசு செய்து செய்தி அனுப்பினார். அவரைப் பொறுத்த வரை அவன் ஒரு வீரன். சிறு வயதுக்குள்ளேயே களம் பல கண்ட அனுபவசாலி, மன்னருக்கும் உறவுமுறை. தனக்குப்பின்னர் அந்தப் பிராந்தியமும், அமைந்துள்ள கோட்டைகளும் பாதுகாக்கப்படுவதில் எந்தக் குறைபாடும் வராது என்பதில் அவருக்கு உறுதியிருந்தது. இதனாலேயே அவருக்குத் தான் திரும்பி வரவேண்டிய தேவை எழாது என்ற நிலைப்பாடும், வருவேனா? என்ற கேள்வியும் ஏற்பட்டது.தன் சொந்த மண்ணாக எண்ணிய தம்பலகாமம் பசுஞ்சோலைக் கிராமத்தையும், தம் வீரத்தால் உரமூட்டிய அந்த கோட்டையையும் விட்டு அவர் கனத்த இதயத்தோடுதான் நீங்கினார்.அதற்குப் பிறகு சோர்வு, இழப்பு, எதிர்பார்ப்பு, இப்படிப் பல உணர்வுப் போராட்டங்கள் மனதில் எழ, எந்திரம் போன்று கடமை பண்ணிய போர்வீரர்கள் இப்போது புத்தூக்கம் பெற்று செயற்படத் தொடங்கியிருந்தார்கள்.புதிய தளபதி வந்தார். ஒரு இளம் தளபதியாக இருந்தார். எளிமையும், கண்டிப்பும், உழைப்பும் அவனில் தெரிந்தது. கோட்டைப் பாதுகாப்பில் எடுத்த எடுப்பிலே செய்த சிறு சிறு மாற்றங்களைக் கண்டு ஆரம்பத்தில் அலட்டிக் கொள்ளாதவர்கள் நாளாக அதனால் கோட்டை பலம் பெற்றது போன்ற உணர்வைப் பெறவே புதியவனில் புது அக்கறை கொள்ளத் தலைப்பட்டனர்.கோட்டைக்குள் முறைக்காவல் உசாராக நடந்தது. காவல் பணி மாறும்போது எழும் கட்டளை ஒலிகளால் கோட்டை உயிர் கொண்டது. நாளாந்தப்பணிகள் உசாராக நடக்கத்தொடங்கின.உச்சிமீது நின்று நர்த்தனமாடிக் களைத்துப்போன சூரியன் ஓய்வெடுக்கவென்று மேற்கு நோக்கி நகரத்தொடங்கி சுமார் நான்கரை நாளிகையாகியிருந்தது.வங்கப்பெருங்கடலில் தவழ்ந்து சூட்டைத் தணித்துக்கொண்ட கொண்டல் காற்று தம்பலகாமத்தின் வடகிழக்கு மூலையால் ஊருக்குள் புகுந்து குளிர்மை பரவச்செய்துகொண்டு இருந்தது.மாலைப்பொழுதாவது குறித்து மகிழ்ந்தவைபோல பறவை இனங்கள் குடில்தேடி கிளம்பிக் கொண்டிருந்தன. அவைகளின் இனிய நாதத்தைக் கூட தாண்டி ஒரு இளம் குரல் குயிலோடு போட்டி போடக்கூடிய இனிமையோடு பாடும் குரல் கேட்டது. அந்த அந்திசாயும் வேளையில் தம்பலகாமம் தெற்கு
ஊர்களுக்கு அருகாக சலசலத்துப் பாயும் குடமுருட்டியாற்றின் வெண்மணல் பரப்பில் ஆற்றோரம் அமர்ந்திருந்து ஒரு யுவதி பாடிக்கொண்டிருந்தாள்.அவள் கைகளிரண்டையும் பின்னால் ஊன்றியிருந்தாள். கண்கள் மூடியிருந்தன. கால்கள் இரண்டும் ஆற்று நீரால் கணுக்கால் வரை நீராட்டப்பட்டுக்கொண்டிருந்தன. நிமிர்ந்திருந்த நெஞ்சத்து எழில்களின் திமிர்ப்பு அவளை சுமார் பதினேழு பதினெட்டு வயதினளாகக் காட்டியது. தன்னை மறந்து தான் மீட்டும் இராகம் சரிதானா என்று தானே எடைபோட்டுப் பார்ப்பவளாக அவள் தெரிந்தாள். அவளது இராக ஆலாபனையைக் கேட்டு எப்போதும்போல் அப்போதும் களிகொண்ட குடமுருட்டி ஆறு களுக் களுக் கென்று தனது பாராட்டைச் சொல்லி ஓடிக்கொண்டேயிருந்தது.


தொடரும்......

MysteRy:
ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 2
அவளது இராக ஆலாபனையைக் கேட்டு எப்போதும்போல் அப்போதும் களிகொண்ட குடமுருட்டி ஆறு களுக் களுக் கென்று தனது பாராட்டைச் சொல்லி ஓடிக்கொண்டேயிருந்தது........

இனி...
ஆற்றுக்குச் சமாந்தரமாக அமைத்திருந்த பாதை அவளுக்குப் பின்புறமாக இருந்தது. அந்தப்பாதையிலே தம்பலகாமத்தின் கிழக்குப்பக்கத்தில் இருந்து மேற்கு நோக்கி ஒரு ஆஜானுபாகுவான வாலிபன் வெண்புரவி ஒன்றிலமர்ந்து வந்துகொண்டிருந்தான். புரவியை அவன் விரட்டாமல் தன்போக்கில் விட்டிருந்ததால் துள்ளல் நடைபோட்டு அது நகர்ந்து கொண்டிருந்தது.


அதன் எடை காரணமாகவோ, மணல் பகுதியான பாதை காரணமாகவோ தெரியவில்லை குளம்பொலி எழவேயில்லை. அதன் நடையின் துள்ளலை வெகுவாக அனுபவித்துக் கொண்டு, பக்கத்தில் சுழல் விட்டு ஓடும் குடமுருட்டியாற்றின் எழில் ஓட்டத்தையும் ஆற்றின் வடபுறத்தில் சோலையாகச் சொரிந்து நின்ற தென்னை, கமுகு, மா, பலா, வாழை, கரும்பு போன்ற பயன்தரு விருட்சங்களையும், தம்பலகாமம் தெற்கில் தொடர்சங்கிலி போன்றிருந்த திடல்கள் எனப்பட்ட ஊர்களின் இயற்கை அழகையும் ரசித்துக்கொண்டே சென்றுகொண்டிருந்தான்.

செம்மூக்கன் மாங்காய்கள் ஆற்று நீருக்குமேல் ஆற்றைத் தொட்டுவிடுவது போல குலை குலையாய்த் தொங்கி நிற்கும் அழகை அவன் வேறெங்கும் கண்டதில்லை. அதுமட்டுமல்ல தெற்கே கண்ணுக்கெட்டிய தூரம்வரை மரகதப் போர்வையால் போர்த்துவிட்ட காணி போன்று பசுமையாய்த் தோன்றிய நெல்வயல்களின் அழகு, அதைத் தொட்டுவரும் காற்று நாசியில் ஊட்டிவிடும் குடலைப்பருவத்து மணம், நாற்றுக்கள் காற்றில் அலை அலையாய் ஆடும் எழில்.... அந்த வயல் நடுவே குடில் ஒன்றைப் போட்டுக்கொண்டு ஆயுள் முழுவதும் தங்கிவிடலாம்போலத் தோன்றியது அந்த வாலிபனுக்கு.அவனைத் தாங்கியிருந்த புரவிகூட தன் எஜமானனின்உணர்வில் இரண்டறக் கலந்ததுபோல தலையை நிமிர்த்தி அந்தக் காற்றின் சுவையை அனுபவித்துக் கொண்டே நடையைத் தொடர்ந்து கொண்டிருந்தது. அந்தக் குதிரையின் அழகே தனியாக இருந்தது. சுலபமாகக் கிடைத்துவிடக் கூடிய குதிரையல்ல. தேர்ந்தெடுக்கப்பட்ட அரேபிய புரவி அது என்பதில் சந்தேகமேயில்லை.

முன்னங்கால்களை அது மாறி மாறி ஊன்றும் போது, அதன் புஜங்களின் தசைகள் அசைந்த விதமும், பின்னங்கால்களின் உதைப்பின் போது அதன் தொடைகளில் ஏற்பட்ட தசை அசைவுகள், அதன் கால் உதைப்பு விசை எவ்வளவு உந்துதலைத் தரக்கூடும் என்பதை ஊகித்துக்கொள்ள உதவின. பிடரி மயிர்களும், வால் மயிர்களும் நீவிவிட்ட பொலிவுடன் இருந்தன. நாளாந்தம் அதன் உடல் நீவி விடப்படுவது தெளிவாக இருந்தது.

துள்ளல் நடைபோட்டு அந்தக் குதிரை ஒரு புதர் முடக்கினைக் கடந்ததும் ஆற்றை அண்டிய மணல்பரப்பிலே ஒரு இளம் பெண் தனியே அமர்ந்திருப்பது கண்டு வியப்படைந்தான். அவன் அவளுக்கு நேர் அருகாக வந்தபோதுதான், அவள் இராகம் ஒன்றை பாடிக்கொண்டிருப்பது தெரிந்தது. எனவே அந்த வாலிபன் சந்தடி செய்யாமல் குதிரையிலிருந்து இறங்கி, அதன் கழுத்தில் தட்டிக்கொடுத்து சத்தம் போடாதே, என்று வாயில் விரல் வைத்து சைகை காண்பித்து விட்டு அருகிலிருந்த செடிக் கிளையில் வெறுமனே அதன் கடிவாளத்தை ஒரு சுற்று சுற்றிவிட்டு மெதுவாக நடந்து சத்தமின்றி அவளை நெருங்கி நின்று, புடைத்து நிமிர்ந்து நின்ற தன் நெஞ்சுக்குக் குறுக்காக கைகளை மடித்துக் கட்டிக்கொண்டு அவள் பாடும் அழகைக் கேட்டு ரசித்துக் கொண்டு நின்றான்.

அவன் ஒரு சங்கீதப் பிரியன். அவனே ராகங்கள் சிலவற்றைச் சுமாராக உருப்போடக்கூடியவன். பாராட்டக் கூடியவகையில் பாடக்கூடியவன் என்று சொல்ல முடியும். இப்போது இந்தப் பெண் சாதகம் செய்யும் கரகரப்பிரியா ராகம் அவனுக்குப் பழக்கப்பட்ட தொன்றுதான். ஆனால் இவள் பாட்டில் ஒரு புதுமை தெரிந்தது. நளினம் தெரிந்தது. இவள் பாடும் விதம் கூட வித்தியாசமாகத் தோன்றியது. அவன் மனதை அது கவரவே செய்தது. சுருள் சுருளாக - பூவானம் சொரிவதுபோல் இராகத்தைக் கொஞ்சங் கொஞ்சமாய் உச்சஸ்தாயிக்கு அவள் கொண்டு செல்லும் லாவகம், பின்னர் மலையிலிருந்து நெளிந்து வளைந்து கீழிறங்கும் அருவிபோல அவள் குரலில் அந்த இராகம் கீழிறங்கிய பாவம், அவனை வெகுவாகத் தொட்டது. ஒரு கைதேர்ந்த வித்துவானின் பாணியில் அவள் ஆலாபணம் செய்து கொண்டிருந்தாள் என்றே அவனுக்குப் பட்டது.

இப்படி அவளை நெருங்கி நின்று அவன் பாட்டை ரசிப்பது உணர்ந்து, அவள் குழம்பி பாட்டை நிறுத்திவிடப் போகிறாளே என்ற அச்சம் கூட அவனுக்குள் தலைதூக்காமல் இல்லை. தனது எந்தவொரு அசைவும், அப்படியொரு நிகழ்வுக்கு இடம் வைத்துவிடக் கூடாது என்பது போல, சிலைபோன்று அசையாமல் நின்றான். ஏதோ அவன் சிலைபோல நின்று கொண்டிருந்தாலும், அவனது உள்ளமும் சிந்தனையும் அசைவாடவே செய்தன.

அவனது போதாத காலம், அவனது குதிரை அந்த நேரம் பார்த்துத்தானா கனைக்க வேண்டும்?

தொடரும்......

MysteRy:
ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 3
அவனது போதாத காலம், அவனது குதிரை அந்த நேரம் பார்த்துத்தானா கனைக்க வேண்டும்?

இனி...

தீடீரென்று பாடலை நிறுத்தியவள், வலக்கையை ஊன்றியவாறே திரும்பி ஒலிவந்த திசைநோக்கிப் பார்த்தாள். அவள் கண்கள் படபடவென அடித்துக்கொண்டன. முகத்தில் பூரணமாக வியப்பின் சாயல். அவள் கேட்டதோ குதிரையின் கனைப்பு, அருகில் காண்பதோ ஒரு கம்பீரமான காளை! அவள் பார்வை அவனினின்றும் விடுபட்டு குதிரைக்காகத் தேடியது. அவன் புரிந்து கொண்டான்.~~
மன்னிக்கவேண்டும். தங்கள் பாடலை இடையூறு செய்து குழப்பியது என் குதிரைதான். இதோ... என்றவன், சற்று நகர்ந்து பின்னால் புதரண்டை ஒன்றுமே அறியாததுபோல நின்று கொண்டிருந்த குதிரையைக் காட்டியபோது, அது தன் முன்காலொன்றால் நிலத்தைத் தட்டி தலையை மேலும் கீழும் ஒருமுறை ஆட்டியது.
குதிரையைக் கண்டுவிட்ட திருப்தியில் தன் பார்வையை அவனுக்காகத் திருப்பினாள். வசீகரமான முகம், ராஜகளை சொட்டும் தோற்றம், விஷமம் சொரியும் கண்கள், குறும்புப் பார்வை. அரும்பி மேலுதட்டின் மேலாக கோடிழுத்தது போல வளரும் மீசை - அகன்ற மார்பு, உரமேறிய தோள் தசைகள், அவன் மார்பின் குறுக்காக இருந்த கரங்களின் புடைப்பு அவனது பலத்தை எடுத்துக் காட்டின. நீண்ட கால்கள் மணல்பரப்பில் உறுதியாக நின்ற விதம் - எவ்வளவு நேரம் பார்த்தாலும் சலிக்காத ஆண்மையின் உருவாக அவன் இருந்தான். அவனை அணுஅணுவாக இரசிக்கும் தன் செயலை அவளால் தடுக்கமுடியவில்லை.

மீண்டும் அவன் கண்களுக்காக, பார்வையைக் கொண்டு சென்றபோதுதான், அவனது விஷமம் நிறைந்த பார்வை தன்னை அவதானிப்பதையும், தன்னை அங்கம் அங்கமாக அலசுவதையும் கண்டு நாணிப்போய், சரேலென எழுந்து நின்றுகொண்டு, வலது கால் பெருவிரலால் மணலில் கிளறிக் கொண்டிருந்தாள். அவளுக்குள் ஒரு அச்சம் எழவே செய்தது. தனித்த இந்த சூழலில்.. அவள் தலை கவிழ்ந்து நின்றது அவனுக்கு வசதியாகப் போய்விட்டது.இது பெண்ணா இல்லை தங்கச் சிலையா என்ற அவனது ஆராய்ச்சி தடையின்றித் தொடர்ந்தது. சங்குக் கழுத்திற்குக் கீழே அடங்காமல் திமிறிக் கொண்டிருந்த அவளது அழகு யாரையும் மயக்கிப் போடும் போல இருந்தது. அவளது கைகளின் மினுக்கம் மேனியெல்லாம் பரவிக் கிடந்தது. கடைந்தெடுத்த சிற்பம் போல அவள்......... நான் சவாரி கிளம்பிய வேளை நல்ல முகூர்த்தம் போலிருக்கிறது, என்று தனக்குள் மெச்சிக் கொண்டான். தனிமையிலிருக்கும் பெண்ணை இப்படி ரசிப்பது பண்பாகாது என்று
தனக்குத்தானே கட்டுப்பாட்டைக் கொண்டுவந்தபோதுதான்,அவள் பாடல் நின்றுவிட்ட வெறுமையை அவனால் உணரக்கூடியதாக இருந்தது.அவள் வாயினின்று புறப்பட்டுக் கொண்டிருந்த இனிய ராக ஆலாபணை திடீரென்று நின்று போனது, மகுடியின் ஓசையால் மயங்கி ஆடிக்கொண்டிருந்த நாகசர்ப்பம் திடீரென குழலோசை நின்றால் எப்படித்தவிக்குமோ, அப்படியொரு தவிப்பில் தன் உள்ளம் இருப்பதை உணர்ந்தான். இதற்கெல்லாம் இந்தப் புரவிதான் காரணம் என்று மனதிற்குள் திட்டிக் கொண்டவன்,
மன்னிக்கவும் உங்கள் பாட்டைக் குழப்பி விட்டமையைப் பொறுத்துக் கொள்ளவேண்டும். பாட்டைத் தொடருங்கள்... நிறுத்தி விட்டீர்களே பாடுங்கள்... எல்லாம் இந்தப் புரவியால் வந்தவினை அவன் அவளது பதற்றத்தை நீக்கமுயல்வது அவளுக்குத் தெரிந்தது.
அவன் காணாதபடி புன்னகைத்துக் கொண்டாள்.

பாடவே மாட்டீர்களா?................. சரி நான் நின்றால் பாட மாட்டீர்கள் போலிருக்கிறது. உங்களைக் குழப்பி விட்டேன் போலிருக்கிறது
அவன் குரலில் இருந்த ஏக்கம் அவளைத் தொட்டது. இல்லை என்று சொல்வது போல் தலையை வெட்டித் தூக்கினாள். மறுகணம் அவனது பார்வையை சந்திக்க வெட்கித் தலை குனிந்து கொண்டாள். அவளது மனவோட்டம் அவனுக்குப் புரிந்தது. திருப்தியாகவும் இருந்தது. அவளைச் சீண்டுமாப்போல,

சரி.. பார்க்கலாமே. நான் போன பிறகு பாடுங்கள். என்றபடி அஸ்வத்தை நோக்கிச் சென்று கடிவாளத்தை கையிலெடுத்துக் கொண்டு, பாய்ந்தேறினான். அவன் நகரத்தொடங்கியது அவளது உணர்வுக்குத் தெரிந்தது தலை நிமிர்ந்தாள்.
இன்றில்லாவிட்டாலும் மீண்டும் உங்கள் இனிய கானத்தை
கேட்கவே செய்வேன், வரட்டுமா? என்று அவளைப் பார்த்து கூறி
புன்னகைத்துவிட்டு அஸ்வத்தை மேற்குத் திசையால் செலுத்திச் சென்றான். அதுவும் அவன் உள்ளத்தின் துள்ளலுக்கு ஈடுகொடுத்துப் போய்க் கொண்டிருந்தது.
அவன் தன்பார்வையினின்றும், பாதையினின்றும் மறையும் வரை பார்த்துக் கொண்டு நின்றவள், வீட்டுக்குப் போக முனைந்தாள். அவன் பார்வைக்கு மறைந்தாலும், அவன் நினைவில் அகலமாட்டான் போலிருந்தது. அவனது எண்ணம் மனதுக்குள் எழுந்து அலையாடியது. யார் அந்த கம்பீரமான வாலிபன்...? ஊருக்குப் புதியவனாக தென்படுகின்றானே! யாராக இருக்கலாம். குதிரையில் போகும் மிடுக்கையும் ஆளின் தோற்றத்தையும் பார்த்தால், இவன்

தம்பன் கோட்டை வீரர்களின் ஒருவனாக இருக்கலாம் என்று தெரிகிறது.. யாரும் புதிதாக வந்திருக்கலாம்.. என்று ஒரு முற்றுப்புள்ளி வைக்க முற்பட்டாலும், சிந்தனை அதற்கு இடம் தரவில்லை. ஆள் கவர்ச்சியானவன்தான். இளம் மங்கையர்களின் நெஞ்சங்களைக் கவர்ந்திழுக்கக் கூடிய சுந்தர புருஷன் என்பதில் ஐயமேயில்லை என்று, அவனது ஆனந்த நினைவை நெஞ்சில் சுமந்து கொண்டு நடையை எட்டிப் போட்டாள்.

 தொடரும்......

MysteRy:
ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 4
இளம் மங்கையர்களின் நெஞ்சங்களைக் கவர்ந்திழுக்கக் கூடிய சுந்தர புருஷன் என்பதில் ஐயமேயில்லை என்று, அவனது ஆனந்த நினைவை நெஞ்சில் சுமந்து கொண்டு நடையை எட்டிப் போட்டாள்.

இனி...
வைத்திலிங்கம்பிள்ளை வீட்டு முற்றத்தில் பார்த்துக்கொண்டு நின்றார். வழமையாக அவள் இவ்வளவு தாமதித்து வந்ததில்லை. அவளைப் பற்றி அவருக்குக் கலக்கம் கிடையவே கிடையாது. தாயில்லாப் பிள்ளை என்று அவளைப் பொத்தி வளர்த்து, அவள் பயந்தாங்கொள்ளியாகிவிடக்கூடாது, என்று, துணிச்சலாக உலகை எதிர்நோக்குமளவுக்கு வளர்த்து விட்டவர் அவர். ஆனாலும் ஊர் என்று ஒன்று இருக்கிறதே!
வேகமாக வந்தவள் தந்தை முற்றத்தில் நிற்கக் கண்டாள். தனக்காக அவர் பார்த்து நிற்பது புரிந்தது.என்னம்மா எங்கே போயிருந்தாய்? இன்னும் சற்றே பொழுது தாமதித்திருந்தால் உன்னைத்தேடி எங்கெல்லாம் அலைந்திருப் பேனோ? என்றார் பிள்ளை ஆதங்கத்துடன்.


என்னப்பாநீங்க! உங்களுக்கு என்னைப் பற்றிப் பயம் வரலாமா? இன்றைக்கு பாடிக்காட்டிய இராகத்தை தனிமையில் பாடிப் பழகிச், சரிபார்க்க நீங்கள் முன்னம் அழைத்துப் போய் காட்டியிருந்த குடமுருட்டியாறு மணல் பரப்புக்குத்தான் போயிருந்தேன். என்னை குடமுருட்டியாறு ஒன்றும் உருட்டிக் கொண்டு போய்விடாது அப்பா.


என்ன! இராகத்தைப் பாடிச் சரிபார்த்தாயா...? அதற்காக, மணல் பரப்புக்கா போனாய்? ... இராகம் சரி வந்ததா? எங்கே பாடு பார்க்கலாம். என்றார் அவள் தந்தை.அவ்வளவுதான்! அடுத்த கணமே தனது குயில் குரலில் தந்தையின் நாதஸ்வர சுளிவு நெளிவுகளுடன் தனக்கேயுரிய லாவகத்துடன் கரகரப்பிரியா இராகத்தைப் பாட ஆரம்பித்து தொடர்ந்தாள். தாம் பாடிக்காட்டியதிலும் மேலாக மகள் படிப்படியாக இராகத்தை உச்சஸ்தாயியிக்கு ஏற்றிச் செல்வதையும், அதற்கு இசைவாக அவளின் இனிய குரல் தடங்கலின்றி இராக ஆலாபனைக்கு துணை போவதையும் கண்டு பெருமைப்பட்டார்.அதுமட்டுமல்லாது, அவளது இராக ஆலாபனையிலும், பல்லவி எடுப்பிலும், தான் நாதஸ்வரத்தில் கையாளும் பாணி மிளிர்வதையும் கண்டு குளிர்ந்துபோன பிரபல நாதஸ்வர வித்துவான் வைத்திலிங்கம் பிள்ளை, மீன் குஞ்சுக்கு நீந்தவும் கற்றுக் கொடுக்க வேண்டுமா என்று தனக்குள் மகிழ்ந்ததுடன் நில்லாது வாய்விட்டு, ஆகா ... அபூர்வம், அபூர்வம் என்று மகளைப் பாராட்டவும் செய்தார்.சிறு பராயத்திலே தகப்பனை இழந்துவிட்டார் வைத்திலிங்கம் பிள்ளை. அவர் தாய்மாமன் பரசுராமன் அவரை மதுரைக்கு அழைத்துச் சென்று நாதஸ்வர மாமேதை பொன்னுச்சாமி பிள்ளையிடம், பையனின் ஆதரவற்றநிலையைக் கூறி, குரு - சீடன் முறையில் நாதஸ்வரம் கற்க ஏற்பாடு செய்திருந்தார். வைத்திலிங்கம், பக்தியுடன் குருவுக்கும், அவர் பத்தினிக்கும் அவர்களது மனம்குளிர சிருஷைகள், தொண்டுகள் செய்து அவர்களின் பரிபூரண ஆசியுடன் நாதஸ்வரம் கற்று வித்துவானாக ஊர் திரும்பினார்.ஊர் திரும்பிய அவருக்கு அவரது திறமை, ஈழத்தின் தம்பலகாமத்தில் கோணேஸ்வரர் ஆலயத்தில் சேவகம் புரியும் வாய்ப்பைத் தேடித்தந்தது. நாளடைவில் அவருக்கு நாட்டு வைத்தியரின் அறிமுகம் கிட்டியது. அந்த நாட்களில் பெரும்பாலும் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கலைகளைக் கற்றுத் தேர்ந்திருப்பது என்பது சாதாரணம். வைத்தியரும் இதற்கு விதிவிலக்கில்லை. அவருக்கு கர்நாடக இசை கைவந்த கலை. நன்கு பாடுவார். அவரது திறமை வைத்திலிங்கத்தை கவர்ந்தது. அவர் வீட்டுக்குப் போய் இருவருமாக சங்கீதத்தை உருப்போடுவதை வழக்கமாக்கிக் கொண்டனர்.
வைத்தியருக்கு ஹம்சாம்பிகா என்றொரு மகள். வைத்திலிங்கம் பிள்ளையின் ஆற்றல்களால் கவரப்பட்டு, அவரைக் காதலித்து மணந்து கொண்டாள். ஊரெல்லாம் தம்பதியை மெச்சிப் போற்றுமளவுக்கு அவர்களது வாழ்க்கை இருந்தது. இதோ வள்ளுவனும் வாசுகியும் என்றே சொல்வது வழக்கமாக இருந்தது. தம்பலகாமம் கோணேஸ்வரர் ஆலயத்தில் ஆனி உத்திர தினத்தில் தொடங்கும் உற்சவ விழாக்களுக்கு உபயக்காரர்கள் போட்டி மனப்பான்மையுடன் இந்தியாவினின்றும், இலங்கையின் யாழ்ப்பாணம் போன்ற பல இடங்களிலிருந்தும் நாதஸ்வரம், பாட்டு, சங்கீதக் கச்சேரி என்று நிகழ்ச்சிகளை ஏற்பாடு பண்ணித் தூள் கிளப்பிவிடுவார்கள். சுவாமி எழுந்தருளலுக்கு முன் இரவு பதினொரு மணிக்கு அப்பாலும் நாதஸ்வரக் கச்சேரிகள் தொடரும். அவ்வாறான கச்சேரிகளில் கலந்து கொண்ட வித்துவான்கள் எவரிடமும் தோல்வி காணாத ஒரு வித்துவானாக வைத்திலிங்கம் பிள்ளை புகழ்பரப்பிக் கொண்டிருந்தார். என் வெற்றிக்கெல்லாம் என் கம்சாதான் காரணம் என்று மனைவியின் புகழ்பாடுவார் வைத்திலிங்கம்பிள்ளை.அவரது வாழ்க்கையின் எதிர்பாராத இழப்பு மின்னாமல் முழங்காமல் அவரைத் தேடிவந்தது. இரண்டொரு நாட்கள்தான் சோர்வாகக் காணப்பட்ட அவரது மனைவி, தந்தை கற்றுக் கொடுத்திருந்த அறிவைக் கொண்டு கசாயம் அது இது என்று குடித்துப் பார்த்து சமாளிக்க முயற்சித்தாள். ஒரு நாள் நெஞ்சடைப் பில் போயே விட்டாள். இடிந்து போனார் வைத்திலிங்கம் பிள்ளை. மனைவியின் பிரிவு அவரை பைத்தியமாக மாற்றியடித்துவிடும்போல் இருந்தது. அவரது நிலை கண்டு ஊரே கலங்கியது. நாதஸ்வரத்தை கிடப்பில் போட்டுவிட்டார். அவருக்குப் பைத்தியம் பிடிக்காமல் தவிர்த்தது அவரது கடைசி மகளான ரங்கநாயகிதான். தந்தைக்கு அப்படியேதும் அவல நிலை வராது தடுக்கும் ஆதாரமாக அவள் இருந்தாள். காலம் அவரை மாற்றும் என்று அவள் நம்பினாள். நாளானபோது அவர் கோயில் சேவையைச் செய்ய தனது மகன் கணபதிப்பிள்ளையை ஏற்பாடு பண்ணிக் கொடுத்துவிட்டு, கடைக்குட்டி ரங்கநாயகியுடன் ஒன்றிக் கொண்டார். நாதஸ்வரத்தை உயிரிலும் மேலாக மதித்தவர் அவர். இப்போதோவென்றால் அதை ஏறிட்டுப் பார்ப்பதே சிரமமாக இருந்தது.
தொடக்கத்தில் தன் தனிமையில் ஆறுதல் தேடிக்கொள்ள குடமுருட்டியாற்று மணல் பரப்புக்குப் போய்வருவார். பிறகு ஓரிரு சந்தர்ப்பங்களில் ரங்கநாயகியையும் அழைத்துச் சென்றிருக்கின்றார். இந்த பயணங்களின் போது மகளுக்கு இராகங்கள் பற்றி எதையாவது சொல்லிக்கொடுத்துக் கொண்டேயிருந்தார். அவளது கிரகிக்கும் சக்தி அவரையே அசத்தியது. படிப்படியாக அவளுக்கு இராகங்களைப் பாடிக்காட்டலானார். மனமும் தேறுதல் கண்டது. அவரது பயிற்சிகளால் ரங்கநாயகியும் இசைத்துறைக்குள் படிப்படியாக நுழைந்து கொண்டிருந்தாள்.


பிரபலமான நாதஸ்வர வித்துவானாகப் புகழ் பெற்ற மனிதர் அவர். நாதஸ்வரத்தை அவர் கையிலெடுக்காவிட்டாலென்ன அவரைத் தேடிக்கொண்டு சந்திக்க எப்போதும் ஆட்கள் வந்து கொண்டே இருப்பார்கள். தந்தையிடம் கற்றதை உருப்போட்டுப் பார்க்கத் தனிமையான சூழல் இல்லா நிலையில் அவளாகத் தேடிக் கொண்ட மேடைதான் குடமுருட்டியாறு வெண்மணல் பரப்பு. அப்படி போயிருந்த வேளையில்தான் ரங்கநாயகி அந்த புரவி வாலிபனைக் கண்டாள்.


தகப்பன் ஆகா... ஆகா... அபூர்வம் என்று பாராட்டியபோது அவளுக்கு ஏனோ குதிரை மீது கம்பீரமாக சென்ற வாலிபனது எண்ணம் தோன்றியது. அந்த வாலிபன் இந்த இராகத்தைப் பாடச் சொல்லிக் கெஞ்சியது நினைவில் தோன்றி உடல்முழுவதும் ஒரு இன்பக் கிளர்ச்சியை ஓடவிட்டது. முன் பின் தெரியாத ஒருவன் கேட்டால் நான் எப்படிப் பாடுவதாம்? தனக்குள் பதிலொன்றை உருப்போட்டுப் பார்த்துக் கொண்டாள் ரங்கநாயகி.

தொடரும்......

MysteRy:
ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் பகுதி 5
முன் பின் தெரியாத ஒருவன் கேட்டால் நான் எப்படிப் பாடுவதாம்? தனக்குள் பதிலொன்றை உருப்போட்டுப் பார்த்துக் கொண்டாள் ரங்கநாயகி.


இனி...
ரங்கநாயகிக்கு ஏனோ குடமுருட்டியாற்று வெண்மணல் பரப்புக்குப் போகவேண்டும் என்று ஆசையாக இருந்தது. நிச்சயமாக பாடிப்பழக மட்டும்தான் என்பதல்ல ஒரே காரணம் என்று அவளுக்குத் தெரிந்தது. அதனால் அவள் போனாள். அந்த குதிரை வாலிபனைச் சந்தித்த இடத்தினின்று சுற்றும் முற்றும் பார்த்தாள். யாரும் தென்படவில்லை. ஆற்றோரமாகச் செல்லும் சாலையை நோக்கி அவளது பார்வையைக் கண்கள் இழுத்துச் சென்றன, ஏமாற்றமாக இருந்தது.
பாடுவதற்கு மனம் வராத நிலையில் மெல்ல மெல்ல ஆற்றில் இறங்கினாள். பாவாடையைச் சற்று உயர்த்தி நனையாமல் பார்த்துக் கொண்டாள். திடீரென்று நீர்மட்டம் கூடுவதுபோல் தோன்றியது. உடனே ஊரில் கூறப்படும் காரணம் நினைவுக்கு வரவே கரைக்கு ஓடி வந்துவிட்டாள். திரும்பவும் ஆற்றைப்பார்த்தாள் நீர் மட்டம் கூடியதாகத் தெரியவில்லை. வீண் பிரமை என்றவாறு, ஊர்க் கதையை நினைத்துப்பார்த்தாள். அந்த ஆற்றுக்கு குடமுருட்டியாறு என்று பெயர் வந்த கதையது.காலை வேளையில் ஊர்ப்பெண்கள் தண்ணீர் அள்ளக் குடங்களுடன் ஆற்றுக்கு வந்து கரையில் குடங்களை வைத்து விட்டுப் பல்துலக்கிக் கொண்டும், பராக்குப் பார்த்துக் கொண்டும், ஊர்க்கதைகளை அலசிக் கொண்டும் நிற்கின்றபோது, வினாடிக்கு வினாடி நீர்மட்டம் கூடிக் குறைந்து ஓடும் அந்த ஆறு, அருகிலிருக்கும் குடங்களையும் உருட்டிக்கொண்டோடுமாம். இதனால்தான் குடமுருட்டியாறு என்று பெயர் வந்தது என்று ஊரில் பெரியவர்கள் சொல்வார்கள்.அந்தக்காலகட்டத்தில் பெரிய வாழைத்தோட்டம் இங்கே இருந்திருக்கின்றது. இப்போது வாழைகள் அங்கு இல்லை ஆனாலும் அது வாழைத்தோட்டம் என்றே அழைக்கப்படுகின்றது. இந்த இடத்தில் குடமுருட்டியாறு வடதிசை திரும்பி பால் துறைக்கடலை நோக்கிப் பாய்கிறது. இந்த ஆற்றுப் பிரதேசம் பதிவான தரைப்பிரதேசமாக இருப்பதால் மாரிவெள்ளம் மணலை வார்த்துச் சென்றுள்ளது.

( தற்போது குடமுருட்டியாறு, மழைக்காலங்களில் நீர்பாயும்
ஓடையாகத் தூர்ந்துபோய் இருக்கிறது.)


ரங்கநாயகி இந்த நினைவினின்றும் விடுபட்டுத் தான் நின்று கொண்டிருக்கும் மணல்பரப்பில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பயிராகி வளர்ந்து நின்ற மருத மரங்களை கவனித்தாள். நான்கு திசைகளிலும் கிளைபரப்பி விதானம்போல் ஆகாயத்தை மறைத் திருந்ததால் இயற்கை அன்னை சிருஷ்டித்த தூண்களாலான மண்டபம் போலத்தெரிந்தது. ~ஊர் மக்கள் பொழுதுபோக்க எவ்வளவு அழகான இடம்.... அமைதியான இடம் இது என்று நினைத்துக் கொண்டாள்.உண்மைதான்! இந்த இடத்தை ஒரு உல்லாசமான பொழுது போக்கு இடமாக ஊரவர்கள் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் ஏனோ அதில் கவனம் செலுத்துவதில்லை. மாறாக தம்பலகாமம் தெற்கு நெற் செய்கையாளர்கள்தான் அந்த இடத்தை உணவு உட்கொள்ளும் இடமாகத் தண்ணீர், நிழல் ஆகியவற்றை முன்வைத்து பயன்படுத்துவதுண்டு. அறுவடையான பிறகு அந்தப்பயன்பாடும் இல்லை. அதனால்தான் இந்த இடம் ஏகாந்தமாக மனித சஞ்சாரமில்லாது இருக்கிறது. ஏதோ இதுகூட நமக்கு அனுகூலம்தான்.ரங்கநாயகி சிந்தனைகளில் இருந்து விடுபட்டாள். அவளுக்கு இந்த இடம் ஒரு சொர்க்கம் போல மனதில் பட்டது. தந்தையோடு வந்த முதல் நாளே அவளுக்கு இந்த இடம் பிடித்துப்போய் விட்டது. அந்த மணல் சோலையைக் கண்டதும் என்ன அழகான இடம் என்று அவள் பரவசப்பட்டவள் அல்லவா? அவளுக்கு பாடல்களைத் தனிமையில் பாடிப்பழக இதைவிடச் சிறந்த இடம் இருக்குமா?திடீரென்று கேட்ட குதிரைக் குழம்பொலி அவளைத் திடுக்கிடப் பண்ணியது. சாலையை நோக்கிய கண்கள் மகிழ்ச்சியால் விரிந்தன. ஒரு கணம்தான்! தனது அவசரம் குறித்துத் தன்னைக் கடிந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தவளாகத் திரும்பி ஆற்றை நோக்கினாள்.


அந்த வாலிபன் அருகில் வந்து என்ன இன்றைக்குப் பாடவில்லையா? என்று கேட்கும் வரை அவள் திரும்பவில்லை.


அவள் புன்னகைத்தாள்.


நான் உங்கள் ரசிகன்..... நம்புங்கள்

அவள் சிரித்தாள்.

ஏன்? சிரிக்கிறீர்கள்

ஒரு நாள் ரசிகனா?

ஏன் இனி நீங்கள் பாடமாட்டீர்களா?

மனம் சொன்னால் பாடுவேன்

நான் சொன்னால் பாடமாட்டீர்களாக்கும்

முன்பின் தெரியாதவர் சொல்லப்பாடுவது எங்கள்
ஊர்பழக்கமில்லை

அப்பா! பெரிய பழக்கம்தான்

இப்படியாக அந்த வாழைத்தோட்டம் அவர்களது சந்திப்புக்கான தளமாக அமைந்துவிட்டது. நாளாக ஆக ரங்கநாயகியின் மனதில் இருந்த அச்சமும் தயக்கமும் அகன்று விட்டது. அவன் தனக்கொரு பாதுகாவலன் என்பதாக உணரத் தலைப்பட்டாள்.அவன் அருகில் வந்து பாடச்சொல்லிக் கெஞ்சுவான். அப்படிக் கெஞ்ச வைப்பதில் அவளுக்கொரு ஆனந்தம். அவனது உயர்வான பண்புகளும், நல்ல நடத்தைகளும் அவளை அவன் நம்பத்தகுந்தவன் என்று எண்ணவைத்தன. அவன் வரத் தாமதமாகிவிட்டாலோ என்னவோ? ஏதோ? வென்ற பதைப்பு எழுந்து, என்ன காரணம்? என்று தேடிக் குழம்பியது அவள் உள்ளம்.அவனும் அவள், தான் கேட்டுக் கொண்டபோது பாடாதது கண்டு சினக்கவில்லை. அவளை விளங்கிக் கொண்டான்.


அந்நியனான நான் அப்படிக்கேட்டதே தவறு என்று சமாதானம் சொல்லிக் கொண்டான். இந்த நிலை கொஞ்ச நாட்களுக்குத்தான் நீடித்தது. இப்போதெல்லாம் அவள் அவனை ஏமாற்றவும், சீண்டவும் விரும்பவில்லை. இசைமீது அவனுக்கிருந்த ஆவலை அவன் சொல்லிக்கேட்டு ஏற்றுக்கொண்டு பாடலானாள். அவனும் அவளது இராக ஆலாபனைகளை எத்தனையோ ஆகாக்கள் போட்டு ரசிக்கலானான்.ஒரு நாள் அவனே சொன்னான். நான் தம்பன் கோட்டை வீரர்களில் ஒருவன். பெயர் குமரன். என்னைக் கண்டு அஞ்சத்தேவையில்லை.நான் ஊருக்குப் புதியவன்தான் என்று அவள் கேளாமலே தன்னை வெளிப்படுத்தத் தொடங்கினான்.முதல் நாள் ஊகம் ஊர்ஜிதமானது. தன் கணிப்பு சரியாக அமைந்தது அவளுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. இருந்தாலும் அவன் தோரணை எல்லாம் அவன் சாதாரண வீரனல்ல என்ற எச்சரிக்கை உணர்வை அவளுக்கு கொடுக்காமலில்லை. அப்படித் தான் இருந்தாலும் அவ்வாறான ஒருவன் தன்னோடு சமனாகப் பழகி, பேசி, ஏன்? பாடச் சொல்லிக்கேட்டு ... ஒரு பக்கம் எண்ணும்போது பெருமையாகவும் இருந்தது. வேடிக்கை என்னவென்றால் இதுநாள் வரையிலும் அவன் அவள் பெயரைக் கேட்டதேயில்லை.

தொடரும்......

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version