Author Topic: என் வீட்டுத் தோட்டத்தில் - 1  (Read 805 times)

Offline Guest 2k


என் வீட்டுத் தோட்டத்தில் - 1

பெட்யூனியா


வணக்கம் நண்பர்களே,

இயற்கை நமக்களித்த பெரும்கொடை மரம், செடி, கொடிகள் தான். செடி கொடிகளை கண்டாலே பேருவகை கொள்ளும் மனம் எனக்கு. செடிகொடிகளின் சிறு தலையசைப்பிற்கு கூட கிளர்ச்சியடையும் நான் தோட்டக்கலையில் ஒரு கற்றுக்குட்டி தான். இப்பொழுது தான் சிறிய பூச்செடிகளை வளர்க்க ஆரம்பித்து இருக்கிறேன். என்னுடைய சிறு தோட்டத்தில் இருக்கும் சிறு மலர் செடிகளை, அவற்றின் இயல்புகளை, அவற்றை வளர்க்கும் முறைகளை ஒவ்வொரு பகுதியாக உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்

ஒரு Amateurஆக எனக்குத் தெரிந்த வரை செடிகளை வளர்ப்பதற்கு முன் ஒவ்வொரு செடியின் பண்பு, அதற்கேற்ற மண், செடி வளர்வதற்கு தேவையான இடவமைப்பு, வெப்பநிலை, தேவையான சூரிய ஒளி, தண்ணீர் அளவுகோல், பூக்கள் பூக்கும் பருவம்(வசந்த காலம்/இலையுதர் காலம்), செடிகளை தாக்கக் கூடிய நோய்கள், மருந்து தெளிப்பான்கள் போன்றவற்றைப் பற்றி தெரிந்து கொள்வது அத்தியாவசியமானது.

பொதுவாகவே, செடி வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் சிறு க்ரோட்டன்கள், பூக்கள் பூக்கும் தாவரங்கள்,  Cactus/Succulents வகைத் தாவரங்களை தேர்ந்தெடுத்து வளர்ப்பது எளிமையானது. சில பூவகைகளைத் தவிர்த்து மேலே குறிப்பிட்ட தாவர வகைகளை பூச்சிகள்/நோய்கள் எளிதில் தாக்காது. க்ரோட்டன்கள், Cactus, succulentகளை பராமரிப்பதும் எளிதானது.

முதல் பகுதியாக எளிமையாக வளர்க்க கூடிய பெட்யூனியா செடியிலிருந்து துவங்குகிறேன். பெட்டுனியா சோலனேசி(கத்தரிக் குடும்பம்) குடும்பத்தைச் சார்த்த பலநிற பூக்களை தரக் கூடிய தாவர வகை. இச்செடியின் பூக்கள் பார்ப்பதற்கு  சிறிய பூசணிப் பூவை போலவே இருக்கும். பெட்யூனியாவில் பன்னிரெண்டுக்கும் அதிக நிற வகை பூக்கள் உண்டு. இப்பூக்கள் அதிக நாட்கள் வாடாமல் இருக்கும்.

என்னுடைய பெட்யூனியா செடி Light rose நிற பூக்கள் பூக்கும் செடி. இந்த பெட்யூனியா செடிகள் நர்சரிகளில் எளிதில் கிடைக்கும். அளவைப் பொறுத்து 30ரூபாய் விலையிலிருந்து கிடைக்கும். இச் செடியை வளர்ப்பதற்கு நடுத்தர அளவு கொண்ட பூத்தொட்டி போதும். தரையில் வளர்க்க விரும்புபவர்களுக்கு அழகான மலர் படுக்கை கிடைப்பது உறுதி.  தொங்கும் பூத்தொட்டிகளில் வளர்த்தாலும் செடி பரந்து பூக்கள் வெளியில் தொங்கும் பொழுது அழகாக இருக்கும். பெட்யூனியாவை விதைகளாக வாங்குவதை விட சிறிய அளவுசெடிகளாக வாங்குவதே சிறந்தது. ஏனெனில் விதைகள் சிறிய அளவில் இருப்பதால் நீர்விடும் பொழுது விதைகள் மேல் எழும்பாமல் போவதற்கான சாத்தியங்கள் உண்டு.
விதைகளாக விதைக்கும்பொழுது மண் தளர்வாக இருக்க வேண்டியது அவசியம்.
விதைத்து இரண்டு அல்லது மூன்று நாட்களில் புது தளிர் முளைக்கும். அதுவரை அளவான நீர்விடல் மட்டுமே இருக்க வேண்டும்.

25டிகிரி C வெப்பநிலை வளரக் கூடிய பெட்யூனியா செடி மே மாதம் முதல் இலையுதிர்கால இறுதி வரை கண்கவர் பூக்களை அளிக்கும். மிதமான அளவு மட்டுமே இச்செடிக்கு நீர் விட வேண்டும்
ஈரப்பதம் அதிகமானால் இலைகள் எளிதில் அழுகிவிடும் வாய்ப்பு உண்டு.

நோய்கள்: சிலந்தி மயிட் நோய் பாதிக்க வாய்ப்புள்ள செடி பெட்யூனியா. மெல்லிய சிலந்தி வலை பாவும் நோய் இலைகளை வலுவிழுக்க செய்து பின் தண்டுகளை சேதப்படுத்தும்.

அவ்வாறு சிலந்தி மயிட்டால் பாதிக்கப்பட்ட செடிகளில் அழுகிய/காய்ந்த இலைகளை அகற்றிவிட்டு. Handwash/Sanitizerஐ நீருடன் கலந்து நீர் தெளிப்பான் உதவியுடன் செடிகளில் தெளித்து மெதுவாக கழுவிவிடலாம். கூகுளில் தேடினால் இன்னும் சில நோய் தடுப்பு தீர்வுகள் இருக்கும்.

பெட்யூனியா மலர்படுக்கை ஒருவர் வளர்க்க கற்றுக் கொண்டாலே எந்தவித மலர் செடிகளையும் வளர்க்கலாம்.
இன்று காலை என்னுடைய சிறிய பெட்யூனியா செடியில், அழகான ரோஸ் வர்ணத்தில் பூத்த இந்த பெட்யூனியா பூ FTC நண்பர்களுக்கு சமர்ப்பணம்





*
ஒவ்வொரு முறை
ஒரு பூ பூக்கும் பொழுதும்
ஒரு குழந்தை தவழ்கிறது
ஒரு தேவதூதன் சிரிக்கிறான்
ஒரு பாலை கடலாகிறது
ஒரு மனம் நிறைகிறது
*
« Last Edit: November 08, 2018, 04:10:32 PM by ChikU »

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்