உன் பெயர்ச்சொல்லி புலம்பும்
தனிமைகள் இருக்குமட்டும்
உனை வெறுத்தல் சாத்தியமில்லை
விட்டகல முடியாதபடி உள்ளீர்த்துக்கொள்ளும்
அன்பீந்த உன்னை
வெறுத்தொதுக்கல்
சாத்தியமே இல்லை
நேசத்தின் பெருவெளிகளில்
நமக்கான ஒற்றை இடம்
எந்த நெருக்கடிகளையும் விளைவித்ததுமில்லை
உன்னிடம் வீழ்ந்து
தாழ்ந்து போவதில்
எந்த மனக்குறைகளும் இருந்ததுமில்லை...
இன்னொருமுறை இன்னொருமுறையென எனக்குள்
உனக்கான இடத்தை மெய்பிக்க
என் சுயமரியாதை தடைகள் சொல்வதுமில்லை
ஒரு தவறானபுரிதலுக்காய்
அகன்று செல்லுமளவில் வலுக்குறைந்ததுமில்லை
நம் நேசம்
வலுவிழந்து போகும்
ஒரு காற்றழுத்தத்தாழ்வு
மண்டலமுமில்லை
நம் காதல்
உன்னை நேசித்தல் என்பது
உன்னை இம்சிக்கும்
என் இயலா நிலையாகும்
என் இயல்பு நிலை
அத்தனைத் தாண்டியும்
நான் விலகி நிற்கவே விழைகிறேன்..
இயல்பிழந்து
இல்லாத்தகுதி அணிந்தேனும்
உன் நேசம்கொள்ளவே விளைந்தாலும்
இயல்பறியும் எதோ ஒரு கணத்தில்
நீ அகலுகையில்
கொள்ளும் காயம் தாங்கும் திராணியில்லை
நீயும் நானும் கொண்ட காதல்
ஜென்ம சாபமாகவே
தொடர்ந்திடட்டும்..
நீயும் நானும் என்பது
நீயும் நானும் மட்டுமே...
நாமாவதேயில்லை