FTC Forum

தமிழ்ப் பூங்கா => வாழ்வியல் கருவூலங்கள் ( நூல் ) => Topic started by: MysteRy on February 08, 2013, 02:26:08 PM

Title: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 08, 2013, 02:26:08 PM
(http://friendstamilchat.org/forumfiles/2020/PURUNARU/1.jpg)

புறநானூறு, 1. (இறைவனின் திருவுள்ளம்)
பாடியவர்: பாரதம் பாடிய பெருந்தேவனார்.
பாடப்பட்டோன் : சிவபெருமான். (சிவபெருமானைப்பற்றி புறநானூற்றுப் புலவர்கள் பாடி இருப்பதிலிருந்து அக்காலத்து சிவ வழிபாடு இருந்ததாகவும் சிவனுக்குக் கோயில்கள் இருந்ததாகவும் தெரிகிறது).
=====================================

கண்ணி கார்நறுங் கொன்றை; காமர்
வண்ண மார்பின் தாருங் கொன்றை;
ஊர்தி வால்வெள் ளேறே; சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப;
கறைமிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை

மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே;
பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;
பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறை

பதினெண் கணனும் ஏத்தவும் படுமே;
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய,
நீரறவு அறியாக் கரகத்துத்,
தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே.

அருஞ்சொற் பொருள்:-

கண்ணி = தலையில் சூடப்படும் மாலை
கார் = கார் காலம்
நறுமை = மணம்
கொன்றை = கொன்றை மலர்
காமர் = அழகு
தார் = மாலை
ஊர்தி = வாகனம்
வால் = தூய
ஏறு = எருது
சீர் = அழகு
கெழு = பொருந்து
மிடறு = கழுத்து
நவிலுதல் = கற்றல்
நுவலுதல் = போற்றுதல்
திறன் = கூறுபாடு
கரக்கல் = மறைத்தல்
வண்ணம் = அழகு
ஏத்துதல் = புகழ்தல்
ஏமம் = காவல்
அறவு = அழிதல், குறைதல்
கரகம் = கமண்டலம்
பொலிந்த = சிறந்த
அருந்தவத்தோன் = அரிய தவம் செய்பவன் (இறைவன்).

இதன் பொருள்:-

கண்ணி=====> அணிந்தன்று

தலையில் அணிந்திருக்கும் மாலை கார்காலத்து மலரும் மணமுள்ள கொன்றை மலர்களால் புனையப்பட்டது. அவன் தன்னுடைய அழகிய நிறமுள்ள மார்பில் அணிந்திருப்பதும் கொன்றை மலர் மாலையே. அவன் ஏறிச் செல்லும் வாகனம் தூய வெண்ணிறமுள்ள காளை; அவனுடைய கொடியும் காளைக்கொடிதான். நஞ்சினது கருமை நிறம் சிவனது கழுத்தில் கறையாக இருந்து அழகு செய்கிறது.

அக்கறை=====> ஆகின்று

அந்தக் கறை, வேதம் ஓதும் அந்தணர்களால் போற்றப் படுகிறது. சிவனின் ஒருபக்கம் பெண்ணுருவம் உடையது. அப்பெண்ணுருவைத் தன்னுள் அடக்கி மறைத்துக் கொள்வதும் உண்டு. சிவபெருமான் நெற்றியில் அணிந்துள்ள பிறைநிலா அவன் நெற்றிக்கு அழகு செய்கிறது

அப்பிறை=====> அருந்தவத் தோற்கே

அப்பிறை பதினெட்டுக் கணங்களாலும் புகழவும் படும். எல்லா உயிகளுக்கும் பாதுகாப்பான நீர் வற்றாத கமண்டலத்தையும் தாழ்ந்த சடையையும் சிறந்த செய்தற்கரிய தவத்தையுமுடைய சிவபெருமானே!
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 08, 2013, 02:43:33 PM
(http://friendstamilchat.org/forumfiles/2020/PURUNARU/2.jpg)


புறநானூறு, 2. (போரும் சோறும்)
பாடியவர்: முரஞ்சியூர் முடிநாகராயர்.
பாடப்பட்டோன்: சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்.
திணை: பாடாண்.
துறை: செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆகும்.

செவியறிவுறூஉ = அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறைதவறாமல் செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்தல்.
வாழ்த்தியல் = தலைவனை வாழ்த்துதல்
======================================

மண் திணிந்த நிலனும்
நிலன் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்

தீ முரணிய நீரும், என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்
வலியும், தெறலும், அளியும், உடையோய்!
நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்

வெண்தலைப் புணரிக் குடகடல் குளிக்கும்
யாணர் வைப்பின் நன்னாட்டுப் பொருந!
வான வரம்பனை! நீயோ பெரும!
அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை

ஈரைம் பதின்மரும் பொருது களத்து ஒழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!
பாஅல் புளிப்பினும், பகல் இருளினும்
நாஅல் வேத நெறி திரியினும்
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி

நடுக்கின்றி நிலியரோ அத்தை; அடுக்கத்துச்
சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை
அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கில் துஞ்சும்
பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே.

அருஞ்சொற் பொருள்:-

திணிந்த = செறிந்த
விசும்பு = வானம்
தைவரல் = தடவுதல்
வளி = காற்று
முரணிய = மாறுபட்ட
போற்றார் = பகைவர
தெறல் = அழித்தல்
அளி = அருள்
புணரி = பொருந்தி
குட = மேற்கிலுள்ள
யாணர் = புது வருவாய்
வைப்பு = ஊர் நிலப் பகுதி
பொருநன் = அரசன்
பெருமன் = தலைவன்
அலங்கல் = அசைதல்
உளை = பிடரி மயிர்
தலைக்கொள்ளுதல் = கொடுத்தல்
பொலம் = பொன்
பொருதல் = போர் செய்தல்
பதம் = உணவு
வரையாது = குறையாது
சேண் = நெடுங்காலம்
நடுக்கு = சோர்வு
நிலியர் = நிற்பாயாக
அடுக்கம் = மலைச்சரிவு
நவ்வி = மான் கன்று
மா = மான்
பிணை = பெண்மான்
கோடு = மலை, மலைச்சிகரம்.

இதன் பொருள்:-

மண் திணிந்த=====> பெயர்த்தும் நின்

மண் செறிந்தது நிலம்; அந்நிலத்திற்கு மேல் உயர்ந்து இருப்பது வானம்; அவ்வானத்தைத் தடவி வருவது காற்று; அக்காற்றில் வளர்ந்து வருவது தீ; அத்தீயிலிருந்து மாறுபட்டது நீர். மண், வானம், காற்று, தீ, நீர் ஆகிய ஐந்தும் ஐம்பெரும் பூதங்கள் என்று சொல்லப்படுகின்றன. அவற்றுள் நிலத்தைப் போன்ற பொறுமையும், வானத்தைப் போன்ற அகன்ற ஆராய்ச்சியும், காற்றைப் போன்ற வலிமையும், தீயைப் போல் அழிக்கும் ஆற்றலும், நீரைப் போன்ற அருளும் உடையவனே!

வெண்தலை=====> விளங்கி

உன்னுடைய கிழக்குக் கடலில் எழுந்த கதிரவன் வெண்ணிற நுரையையுடைய உன்னுடைய மேற்குக் கடலில் மூழ்கும் புதுவருவாயோடு கூடிய நிலப்பகுதிகளுடைய நல்ல நாட்டுக்குத் தலைவனே! அரசே! நீ வானத்தை எல்லையாகக் கொண்டவன். அசைந்து ஆடும் பிடரி மயிரோடு கூடிய குதிரைகளையுடைய ஐவரோடு (பாண்டவர்களோடு) சினந்து அவர்களின் நிலத்தைத் தாம் கவர்ந்து கொண்ட, பொன்னாலான தும்பைப் பூவை அணிந்த நூற்றுவரும் (கௌவரவர்களும்) போர்க்களத்தில் இறக்கும் வரை பெருமளவில் அவர்களுக்குச் சோற்றை அளவில்லாமல் நீ கொடுத்தாய். பால் புளித்தாலும், பகல் இருண்டாலும், நான்கு வேதங்களில் கூறப்படும் ஒழுக்க நெறிகள் மாறினாலும் மாறாத சுற்றத்தாரோடு

நடுக்கின்றி=====> பொதியமும் போன்றே

மலைச்சரிவில் சிறிய தலையையுடைய மான் குட்டிகளோடு கூடிய பெரிய கண்களையுடைய பெண்மான்கள் மாலைநேரத்தில் அந்தணர்கள் தங்கள் கடமையாகக் கருதிச் செய்யும் அரிய வேள்விக்காக மூட்டிய முத்தீயில் உறங்கும் பொற்சிகரங்களையுடைய இமயமமும் பொதியமும் போல் நீண்ட நாள் புகழோடு விளங்கிச் சோர்வின்றி நிலைத்து வாழ்வாயாக
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 08, 2013, 03:57:14 PM
(http://friendstamilchat.org/forumfiles/2020/PURUNARU/3.jpg)


புறநானூறு, 3 (வன்மையும் வண்மையும்).
பாடியவர் : இரும்பிடர்த் தலையார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி.
திணை : பாடாண்.
துறை: செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆகும்.
=========================================

உவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை
நிலவுக்கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற
ஏம முரசம் இழுமென முழங்க
நேமி உய்த்த நேஎ நெஞ்சின்
தவிரா ஈகைக், கவுரியர் மருக!

செயிர்தீர் கற்பின் சேயிழை கணவ!
பொன் னோடைப் புகர் அணிநுதல்
துன்னருந்திறல் கமழ்கடா அத்து
எயிறு படையாக எயிற்கதவு இடாஅக்
கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கின்

பெருங்கை யானை இரும்பிடர்த் தலையிருந்து
மருந்தில் கூற்றத்து அருந்தொழில் சாயாக்
கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி!
நிலம் பெயரினும், நின்சொற் பெயரல்;
பொலங் கழற்காற் புலர்சாந்தின்

விலங்ககன்ற வியன்மார்ப!
ஊர்இல்ல, உயவுஅரிய,
நீர்இல்ல, நீள்இடைய,
பார்வல் இருக்கைக் கவிகண் நோக்கிற்
செந்தொடை பிழையா வன்கண் ஆடவர்

அம்புவிட வீழ்ந்தோர் வம்பப் பதுக்கைத்
திருந்துசிறை வளைவாய்ப் பருந்திருந்து உயவும்
உன்ன மரத்த துன்னருங் கவலை
நின்நசை வேட்கையின் இரவலர் வருவர்அது
முன்னம் முகத்தின் உணர்ந்தவர்
இன்மை தீர்த்தல் வன்மை யானே.

அருஞ்சொற்பொருள்:-
(எண்கள் வரிகளின் கணக்கை குறிக்கும்)

1. உவவு = முழு நிலா; ஓங்கல் = உயர்ந்த.
2. நிலவுதல் = நிலைத்திருத்தல்; வரைப்பு = எல்லை; நிழற்றுதல் = கருணை காட்டுதல்.
3. ஏமம் = காவல்; இழும் = ஓசை.
4. நேமி = ஆட்சிச் சக்கரம்; உய்த்தல் = செலுத்தல்; நேஎ நெஞ்சு = கருணையுள்ள மனம்.
5. கவுரியர் = பாண்டியன்; மருகன் = வழித்தோன்றல்.
6. செயிர் = குற்றம்; சேயிழை = சிறந்த ஆபரணங்களை அணிந்த பெண்.
7. ஓடை = நெற்றிப் பட்டம்; புகர் = புள்ளி; நுதல் = நெற்றி.
8. துன் = நெருங்கு; திறல் = வலிமை; கமழ்தல் = மணத்தல்; கடாஅம் = மதம்; கடாஅத்த = மதத்தையுடைய.
9. எயிறு = தந்தம்; எயில் = மதில்; இடுதல் = குத்துதல்.
10. மருங்கு = பக்கம்.
11. இரு = பெரிய; பிடர் = கழுத்தின் பின்புறம்.
12. மருந்து இல் = பரிகாரமில்லாத; சாயா = சளைக்காத.
13. கருங்கை = வலிய கை; வழுதி = பாண்டியன்.
15. பொலம் = பொன்; புலர்தல் = உலர்தல்.
16. விலங்குதல் = விலகல்; வியல் = பரந்த.
17. உயவு = வருத்தம்.
18. இடை = வழி.
19. பார்வல் = பகைவர் வரவைப் பார்த்திருக்கும் அரணுச்சி; கவிதல் = வளைதல்.
20. செம்மை = நன்மை, பெருமை, வளைவின்மை; தொடை = அம்பெய்தல்; வன்கண் = கொடுமை.
21. வம்பு = புதுமை; பதுக்கை = கற்குவியல்.
22. திருந்துதல் = அழகு படுதல் (அழகிய); சிறை = சிறகு; உயவும் = வருத்தும்.
23. உன்ன மரம் = இலவ மரம்; கவலை = பல தெருக்கள் கூடுமிடம், இரண்டாகப் பிரியும் பாதை.
24. நசை = ஆசை; வேட்கை = விருப்பம், அன்பு.
26. வன்மை = வல்ல தன்மை

இதன் பொருள்:-

உவவுமதி=====> மருக!

நிலைத்து நிற்கும் கடலை எல்லையாகக் கொண்ட நிலத்திற்கு நிழல் தரும் முழு மதி வடிவில் உள்ள உயர்ந்த வெண்கொற்றக் குடையோடும், பாதுகாப்பான முரசின் முழக்கத்தோடும் ஆட்சிச் சக்கரத்தைச் செலுத்திய, கருணையுள்ள மனமும் நீங்காத கொடையும் கொண்ட பாண்டியரின் வழித்தோன்றலே!


செயிர்தீர்=====> புலர்சாந்தின்

குற்றமற்ற கற்பும் சிறந்த அணிகலன்களும் உடையவளின் கணவனே! பொன்னாலாகிய பட்டத்தை அணிந்த புள்ளிகளுடைய நெற்றியும் எவரும் அணுகுதற்கரிய வலிமையும் மணம் கமழும் மதநீரும் கொண்டது உன் யானை. அந்த யானை தன் கொம்புகளைப் படைகருவிகளாகக் கொண்டு பகைவர் மதிலின் கதவுகளைக் குத்தி வீழ்த்தும். கயிற்றால் கட்டப்பட்ட கவிழ்ந்த மணிகள் உள்ள பக்கங்களையும் பெரிய தும்பிக்கையையும் உடைய அந்த யானையின் பெரிய கழுத்தின் மேலிருந்து, தனக்கு மாற்றில்லாத கூற்றுவனைப் போல் பொறுத்தற்கரிய கொலைத் தொழிலில் சளைக்காத, உன் வலிய கையில் ஒளி பொருந்திய வாளையுடைய பெரும்புகழ் வாய்ந்த பாண்டியனே! கால்களில் பொன்னாலான கழல்களும், உலர்ந்த சந்தனம் பூசிய பரந்து அகன்ற மார்பும் உடையவனே!

விலங்ககன்ற=====> வன்மை யானே.

உன்னைக் காண்பதற்கு வரும் வழியில் ஊர்கள் இல்லை; அது பொறுத்தற்கரிய வருத்ததைத் தரும் நீரில்லாத நீண்ட வழி; அவ்வழியே வருவோரை அரண்களின் உச்சியிலிருந்து கையை நெற்றியில் வளைத்து வைத்துக் கண்களால் பார்த்துக் குறி தவறாது அம்பு எய்யும் கள்வரின் அம்புகளால் அடிபட்டு இறந்தோரின் உடல்களை மூடியிருக்கும் கற்குவியல்கள் உள்ளன. அழகிய சிறகுகளும் வளைந்த வாயும் உடைய பருந்துகள் இறந்தோர் உடலைத் தின்ன முடியாமல் இலவ மரத்தில் இருந்து வருந்துகின்றன. இலவ மரங்கள் நிறைந்த கடத்தற்கரிய பல பிரிவுகளுடைய பாதைகள் வழியாக உன்னைக் காண்பதற்கு இரவலர் வருகின்றனர். இரவலர்களின் உள்ளக் குறிப்பை அவர்கள் முகத்தால் உணர்ந்து அவர்களின் வறுமையைத் தீர்க்கும் வல்லமை உனக்கு இருப்பதால்தான் அவர்கள் பல இன்னல்களையும் கடந்து உன்னைக் காண வருகிறார்கள். ஆகவே, நிலம் பெயர்ந்தாலும், நீ உன் சொல்லிலிருந்து மாறாமல் இருப்பாயாக.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 08, 2013, 04:24:42 PM
(http://friendstamilchat.org/forumfiles/2020/PURUNARU/4.jpg)


புறநானூறு, 4 (தாயற்ற குழந்தை).
பாடியவர் : பரணர்.
பாடப்பட்டோன் : சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி.
திணை : வஞ்சி.
துறை: கொற்ற வள்ளை.
=========================================

வாள்வலந்தர மறுப் பட்டன
செவ் வானத்து வனப்புப் போன்றன!
தாள் களங்கொளக் கழல் பறைந்தன
கொல் ஏற்றின் மருப்புப் போன்றன;

தோல் துவைத்து அம்பின் துளைதோன்றுவ
நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன;
மாவே எறிபதத்தான் இடம் காட்டக்
கறுழ் பொருத செவ்வாயான்
எருத்து வவ்விய புலி போன்றன;

களிறே கதவு எறியாச் சிவந்து உராஅய்
நுதி மழுங்கிய வெண் கோட்டான்
உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன;
நீயே, அலங்கு உளைப் பரீஇ இவுளிப்
பொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி

மாக் கடல் நிவந் தெழுதரும்
செஞ் ஞாயிற்றுக் கவினை மாதோ!
அனையை ஆகன் மாறே
தாய்இல் தூவாக் குழவி போல
ஓவாது கூஉம் நின் உடற்றியோர் நாடே.

அருஞ்சொற்பொருள்:-

1. வலம் = வெற்றி; மறு = கரை.
2. வனப்பு = நிறம் அழகு.
3. களங்கொள்ளல் = இருப்பிடமாக்கிக் கொள்ளுதல், வெல்லுதல்; பறைந்தன = தேய்ந்தன.
4. மருப்பு = கொம்பு.
5. தோல் = தோலால் செய்யப்பட்ட கேடகம்; துவைத்தல் = குத்துதல், ஒலித்தல்.
6. நிலைக்கு = நிலையில்; ஒராஅ = தப்பாத; இலக்கம் = குறி.
7. மா = குதிரை; எறிதல் = வெல்லுதல்; பதம் = பொழுது.
9. கறுழ் = கடிவாளம்; பொருதல் = தாக்குதல்.
10. எறியா = எறிந்து = வீசியடித்து; சிவந்து = கோபித்து; உராவல் = உலாவல்.
11. நுதி = நுனி; கோடு = கொம்பு.
13. அலங்குதல் = அசைதல்; உளை = பிடரி மயிர்; பரீஇ = விரைந்து; இவுளி = குதிரை.
14. பொலம் = பொன்; பொலிவு = அழகு.
15. மா = பெரிய; நிவத்தல் = உயர்தல் தோன்றுதல்.
16. கவின் = அழகு; மாது - ஒருஅசைச் சொல்.
17. ஆகன் மாறு = ஆகையால்.
18. தூவா = உண்ணாத; குழவி = குழந்தை.
19. ஓவாது = ஒழியாது; உடற்றல் = பகைத்தல்; கூ = கூப்பிடு.

இதன் பொருள்:-

வாள்வலந்தர=====> மருப்புப் போன்றன

போரில் வெற்றியைத் தரும் வகையில் பயன்படுத்தப்பட்டதால் வீரர்களின் வாள்கள் குருதிக்கறை படிந்து சிவந்த வானத்தைப் போல் அழகாக உள்ளன. வீரர்களின் கால்கள் போர்க்களத்தைத் தமது இருப்பிடமாகக் கொண்டதால் அவர்கள் கால்களில் அணிந்த கழல்கள் தேய்ந்து, கொல்லும் காளைகளின் கொம்புகள் போல் உள்ளன

தோல் துவைத்து=====> புலி போன்றன

கேடயங்கள் அம்புகளால் குத்தப்பட்டதால் அவற்றில் துளைகள் தோன்றி உள்ளன. அத்துளைகள், தவறாமல் அம்பு எய்வதற்கு ஏற்ற இலக்குகள் போல் காட்சி அளிக்கின்றன. குதிரைகள், பகைவரைப் போரில் வெல்லும் பொழுது, வாயின் இடப்புறமும் வலப்புறமும் கடிவாளத்தால் இழுக்கப்பட்டதால் சிவந்த வாய் உடையனவாய் உள்ளன. அக்குதிரைகளின் வாய்கள், மான் முதலிய விலங்குகளைக் கடித்துக் கவ்வியதால் குருதிக்கறை படிந்த புலியின் வாய் போல் உள்ளன.

களிறே கதவு=====> பொலிவு தோன்றி

யானைகள், மதிற்கதவுகளை வெகுண்டு மோதியதால் அவற்றின் வெண்ணிறமான தந்தங்கள் மழுங்கின. அந்த யானைகள் உயிரைக் கொல்லும் இயமனைப் போல் காட்சி அளிக்கின்றன. நீ அசையும் பிடரியுடன் விரைந்து ஓடும் குதிரைகள் பூட்டிய, பொன்னாலான தேர் மீது வருவது,

மாக் கடல்=====> உடற்றியோர் நாடே

பெரிய கடலிலிருந்து செஞ்ஞாயிறு எழுவதைப்போல் தோன்றுகிறது. நீ இத்தகைய வலிமையுடையவனாதலால், உன் பகைவர்கள் நாட்டு மக்கள் தாயில்லாத குழந்தைகள் போல் ஓயாது கூவி வருந்துகின்றனர்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 08, 2013, 04:31:03 PM
(http://friendstamilchat.org/forumfiles/2020/PURUNARU/5.jpg)


புறநானூறு, 5. (அருளும் அருமையும்)
பாடியவர்: நரிவெரூஉத் தலையார்.
பாடப்பட்டோன்: சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேரல்.
திணை: பாடாண்.
துறை: செவியறிவுறூஉ: பொருண் மொழிக் காஞ்சியும் ஆகும்.
====================================

எருமை அன்ன கருங்கல் இடைதோறு
ஆனிற் பரக்கும் யானைய முன்பின்
கானக நாடனை நீயோ பெரும!
நீயோர் ஆகலின் நின்ஒன்று மொழிவல்;
அருளும் அன்பும் நீக்கி நீங்கா
நிரயங் கொள்பவரொடு ஒன்றாது காவல்
குழவி கொள்பவரின் ஓம்புமதி;
அளிதோ தானேஅது பெறல்அருங் குரைத்தே.

அருஞ்சொற் பொருள்:-

இடை = இடம்
பரத்தல் = பரவுதல்
ஓர் = ஒப்பற்ற
நிரயம் = நரகம்
ஓம்பு = காப்பாற்றுவாயாக
மதி - அசைச் சொல்
அளிது = செய்யத் தக்கது

இதன் பொருள்:-

எருமை=====> மொழிவல்

எருமை போன்ற கருங்கற்கள் உள்ள இடங்களில் திரியும் பசுக்கூட்டம் போல யானைகள் திரியும் காடுகளுடைய நாட்டுக்குத் தலைவனே! நீயோ பெருமகன், நீ ஒப்பற்றவனாகையால் உனக்கு ஒன்று சொல்வேன்.

அருளும்=====> அருங் குரைத்தே

அருளையும் அன்பையும் நீக்கி, எப்பொழுதும் நரகத்தைத் தங்கள் இருப்பிடமாகக் கொள்ள விரும்புபவர்களோடு சேராமல், தாய் தன் குழந்தையைக் காப்பது போல் (அருளோடும் அன்போடும்) நீ உன் நாட்டைப் பாதுகாப்பாயாக. அதுவே செய்யத்தக்க செயல்; அத்தகைய செயல் செய்வதற்கான வாய்ப்பைப் பெறுவது அரிது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 08, 2013, 06:28:34 PM
புறநானூறு, 6. (தண்ணிலவும் வெங்கதிரும்)
பாடியவர்: காரிகிழார்.
பாடப்பட்டோன்: பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.
திணை: பாடாண்.
துறை: செவியறிவுறூஉ: வாழ்த்தியலும் ஆகும்.
=======================================

வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பொளவத்தின் குடக்கும்
கீழது முப்புணர் அடுக்கிய முறைமுதற் கட்டின்

நீர்நிலை நிவப்பின் கீழும் மேலது
ஆனிலை உலகத் தானும், ஆனாது
உருவும் புகழும் ஆகி விரிசீர்த்
தெரிகோல் ஞமன்ன் போல, ஒரு திறம்
பற்றல் இலியரோ நின்திறம் சிறக்க

செய்வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்துக்
கடற்படை குளிப்ப மண்டி, அடர்ப் புகர்ச்
சிறுகண் யானை செவ்விதின் ஏவிப்
பாசவற் படப்பை ஆர்எயில் பலதந்து
அவ்வெயில் கொண்ட செய்வுறு நன்கலம்

பரிசில் மாக்கட்கு வரிசையின் நல்கிப்
பணியியர் அத்தை நின் குடையே, முனிவர்
முக்கண் செல்வர் நகர்வலஞ் செயற்கே;
இறைஞ்சுக, பெருமநின் சென்னி, சிறந்த
நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே;

வாடுக, இறைவ நின் கண்ணி, ஒன்னார்
நாடுசுடு கமழ்புகை எறித்த லானே;
செலீஇயர் அத்தை, நின் வெகுளி, வால்இழை
மங்கையர் துனித்த வாள்முகத்து எதிரே;

ஆங்க, வென்றி எல்லாம் வென்றுஅகத்து அடக்கிய
தண்டா ஈகைத் தகைமாண் குடுமி!
தண்கதிர் மதியம் போலவும் தெறுசுடர்
ஒண்கதிர் ஞாயிறு போலவும்
மன்னிய, பெரும! நீ நிலமிசை யானே

அருஞ்சொற் பொருள்:-

வடாஅது = வடக்கின் கண்ணது
தெனாஅது = தெற்கின் கண்ணது
உரு = அச்சம்
கெழு = பொருந்திய
குணாஅது = கிழக்கின் கண்ணது
குடாஅது = மேற்கின் கண்ணது
தொன்று = பழமை
முதிர் = முதிர்ச்சி
பெளவம் = கடல்
குடக்கு = மேற்கு
புணர் = சேர்க்கை
முறை = ஒழுங்கு
கட்டு = வகுப்பு
நிவத்தல் = உயர்தல்
ஆனிலை உலகம் = பசுக்களின் உலகம் (சொர்கம்)
ஆனாது = அமையாது.
கோல் = துலாக்கோல்
ஞமன் = துலாக்கோலின் முள்முனை
திறம் = பக்கம், கூறுபாடு, வலிமை, குலம்
உறுதல் = நன்மையாதல், பயன்படல்
பணியியர் = தாழ்க
சென்னி = தலை
கண்ணி = தலையில் அணியும் மாலை
ஒன்னார் = பகைவர்
கமழ் = மணக்கும்
செலீஇயர் = செல்வதாக (தணிவதாக)
துனித்த = ஊடிய
வாள் = ஒளி
தண்டா = தணியாத (நீங்காத)
தகை = தகுதி
மாண் = மாட்சிமை பெற்ற
தண் = குளிர்ந்த
தெறு = சுடுகை
மன்னுதல் = நிலைபெறுதல்
மிசை = மேல்பக்கம்

இதன் பொருள்:-

வாடாஅது=====> சிறக்க

வடக்கே பனி நிலைபெற்றிருக்கும் நெடிய மலைக்கு (இமய மலைக்கு) வடக்கிலும், தெற்கே அச்சம் பொருந்திய குமரி ஆற்றுக்குத் தெற்கிலும், கிழக்கே கரையை முட்டும் ஆழமான (தோண்டப்பட்ட) கடலுக்கு கிழக்கிலும், மேற்கே மிகப் பழமையான கடலுக்கு மேற்கிலும், நிலம், ஆகாயம், சுவர்க்கம் என்று சேர்ந்துள்ள மூன்றில், நிலத்திற்குக் கீழும், சுவர்க்கத்திற்கு மேலேயும் அடங்காது உன்னைப்பற்றிய அச்சமும் உன் புகழும் பெருகி, பெரிய பொருள்களைச் சமமாக ஆராயும் துலாக்கோல் (தராசு) போல் ஒரு பக்கம் சாயாது இருப்பாயாக. உன் படை, குடி முதலியன சிறப்பதாக.

செய்வினைக்கு=====> வாள்முகத்து எதிரே

உன் செயலை எதிர்த்த உன் பகைவர் நாட்டில் கடல் புகுந்தது போல் பெருமளவில் உன் படையையும், சிறிய கண்களையுடைய யானைகளையும் செலுத்தி, அடர்ந்த பசுமையான விளைநிலம் மற்றும் ஊர்ப்புறங்களையும், பாதுகாக்கும் கடத்தற்கரிய அரண்களையும் அழித்து, அவற்றுள் அடங்கிய அழகுடன் செய்யப்பட்ட அணிகலன்களைப் பரிசிலர்க்கு அவர்கள் தகுதிக்கேற்ப அளிப்பாயாக. சடைமுடி தரித்த, மூன்று கண்களையுடைய சிவபெருமான் கோயிலை வலம்வரும் பொழுது மட்டும் உன் கொற்றக்குடை தாழட்டும். சிறந்த நான்கு வேதங்களைக் கற்ற அந்தணர்கள் தங்கள் கைகளை உயர்த்தி உன்னை வாழ்த்தும் பொழுது மட்டும் உன் தலை வணங்கட்டும். பகைவர்களின் நாட்டில் (உன்னால் போரில்) மூட்டப்பட்ட தீயினால் மட்டும் உன் தலையில் உள்ள மாலை வாடட்டும். தூய வேலைப்பாடுகள் நிறைந்த அணிகலன்கள் அணிந்த மகளிர் உன்னோடு ஊடும் பொழுது மட்டும் அவர்கள் எதிரில் உன் கோபம் தணியட்டும்.

ஆங்க, வென்றி=====> நிலமிசை யானே

அடையவேண்டிய வெற்றிகளை எல்லாம் அடைந்தும் மனத்தில் அடக்கத்தோடும் குறையாத ஈகைக் குணத்தோடும் உள்ள மாட்சிமை பொருந்திய குடுமி!தலைவா!, நீ குளிர்ந்த சுடருடைய திங்களைப் போலவும், வெப்பமான சுடருடைய கதிரவனைப் போலவும் இந்நிலத்தில் நிலைபெற்று வாழ்வாயாக
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 08, 2013, 06:30:13 PM
புறநானூறு, 7.
பாடியவர் : கருங்குழல் ஆதனார்.
பாடப்பட்டோன் : சோழன் கரிகாற் பெருவளத்தான்.
திணை : வஞ்சி.
துறை: கொற்ற
வள்ளை: மழபுல வஞ்சியும் ஆம்.
=======================================

களிறு கடைஇய தாள்,
கழல் உரீஇய திருந்துஅடிக்,
கணை பொருது கவிவண் கையால்,
கண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்து

மா மறுத்த மலர் மார்பின்,
தோல் பெயரிய எறுழ் முன்பின்,
எல்லையும் இரவும் எண்ணாய், பகைவர்
ஊர்சுடு விளக்கத்து அழுவிளிக் கம்பலைக்

கொள்ளை மேவலை; ஆகலின், நல்ல
இல்ல ஆகுபவால் இயல்தேர் வளவ!
தண்புனல் பரந்த பூசல் மண் மறுத்து
மீனின் செறுக்கும் யாணர்ப்
பயன்திகழ் வைப்பின், பிறர் அகன்றலை நாடே.

அருஞ்சொற்பொருள்:-

கடைஇ = செலுத்தி
கடைஇய = செலுத்திய
தாள் = கால்
உரீஇ = உருவி
திருந்துதல் = ஒழுங்குபடுதல், அழகுபடுதல்
பொருதல் = பொருந்தல்
பொருது = போர்செய்து
கவிதல் = வளைதல்
வண்மை = வள்ளல் தன்மை
கவின் = அழகிய
சாபம் = வில்.
மா = திருமகள், பெரிய, பரந்த
மறுத்த = நீக்கிய
தோல் = யானை
பெயர்த்தல் = நிலை மாறச் செய்தல்
எறுழ் = வலிமை
முன்பு = வலிமை
எல்லை = பகற்பொழுது
விளக்கம் = ஒளி
விளி = கூப்பிடு
கம்பலை = ஒலி
மேவல் = ஆசை
இயல் = இலக்கணம்
பூசல் = பெரிதொலித்தல், பலரறிய வெளிப்படுதல்
செறுத்தல் = அடக்குதல்
யாணர் = புது வருவாய்
வைப்பு = ஊர்
அகலல் = விரிதல்
தலை = இடம்.

இதன் பொருள்:-

களிறு=====> சாபத்து

யானையைச் செலுத்திய கால்களும் வீரக்கழல்கள் உராய்ந்த அடிகளும், அம்பு தொடுத்துக் குவிந்த கையும், கண்ணைக் கவரும் ஒளியுடன் கூடிய வில்லும்

மா மறுத்த=====> கம்பலைக்

திருமகள் விரும்பும் அகன்ற மார்பும், யானையை வெல்லும் வலிமையும் உடையவனே! இரவு பகல் என்று கருதாமல் பகவரின் ஊரைச் சுடும் தீயின் ஒளியில், அங்குள்ளவர்கள் கதறி அழுது ஒலி யெழுப்பமாறு

கொள்ளை=====> நாடே

அவர்கள் நாட்டைக் கொள்ளை அடிப்பதில் நீ விருப்பமுடையவன். ஆகவே, குளிர்ந்த நீர் பெருகியோடும் உடைப்புகளை மண்ணால் அடைக்காமல் மீனால் அடைக்கும் புதிய வருவாயினையுடைய பயனுள்ள ஊர்களையுடைய அகன்ற இடங்களுடன் கூடிய உன் பகவர்களின் நாட்டில் நல்ல பொருள்கள் இல்லாமல் போயின. நன்கு செய்யப்பட்ட தேர்களையுடைய வளவனே!
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 08, 2013, 06:31:58 PM
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-prn1/536189_535006583190924_1244239738_n.jpg)

புறநானூறு, 8.(கதிர்நிகர் ஆகாக் காவலன்)
பாடியவர் : கபிலர்.
பாடப்பட்டோன் : சேரமான் கடுங்கோ வாழியாதன்
திணை : பாடாண்.
துறை: இயன் மொழி; பூவை நிலையும் ஆகும்.
======================================

வையம் காவலர் வழிமொழிந்து ஒழுகப்
போகம் வேண்டிப் பொதுச்சொல் பொறாஅது
இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப
ஒடுங்கா உள்ளத்து ஓம்பா ஈகைக்
கடந்து அடு தானைச் சேரலாதனை
யாங்கனம் ஒத்தியோ, வீங்குசெலல் மண்டிலம்!
பொழுதுஎன வரைதி; புறக்கொடுத்து இறத்தி;
மாறி வருதி; மலைமறைந்து ஒளித்தி;
அகல்இரு விசும்பி னானும்
பகல்விளங் குதியால் பல்கதிர் விரித்தே.

அருஞ்சொற்பொருள்:-

காவலர் = அரசர்
வழிமொழிதல் = வழிபாடு கூறுதல்
போகம் = இன்பம்
துரப்புதல் = துரத்துதல், முடுக்குதல்
ஒடுங்கா = சுருங்காத
ஓம்புதல் = பாதுகாத்தல்
கடத்தல் = போர் செய்தல்
அடுதல் = கொல்லுதல்
வீங்கு = மிக்க
செலவு = பயணம்
மண்டிலம் = வட்டம்
வரைதல் = நிர்ணயித்தல்
இறத்தல் = நீங்குதல், கடத்தல்
அகல் = அகன்ற

இதன் பொருள்:-

பெரிய வட்டவடிவமான பாதையில் செல்லும் கதிரவனே! உலகைக் காக்கும் மன்னர்கள் பலரும் வழிபட்டு நடக்க, இன்பத்தை விரும்பி, இவ்வுலகு அனைவருக்கும் பொது என்ற சொல் பொறுக்காமல், தன் நாடு சிறியது என்ற எண்ணத்தால் துரத்தப்பட்டு, ஊக்கமுடைய உள்ளத்தையும், குறையாத ஈகையையும் பகைவரை வெல்லும் படையையும் உடையவன் சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன். உனக்குப் பகல் இரவு என்ற எல்லை உண்டு; பகல் முடிந்ததும் புறமுதுகிட்டு ஓடுவாய்; மாறி மாறி வருவாய்; மலைகளில் மறைந்து விடுவாய்; அகன்ற, பெரிய ஆகாயத்தில் பகலில் மட்டும் பல கதிர்களை விரித்து விளங்கும் நீ, எவ்வாறு சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனுக்கு நிகராவாய்?

பாடலின் பின்னணி

கதிரவனோடு சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனை ஒப்பிட்டு, கதிரவன் சேரமானுக்கு இணையானவன் இல்லை என்று இப்பாடலில் கபிலர் கூறுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 08, 2013, 06:33:24 PM
புறநானூறு, 9.
பாடியவர் : நெட்டிமையார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.
திணை : பாடாண்.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.
=========================================

ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்

எம்அம்பு கடிவிடுதும் நும்அரண் சேர்மின்என
அறத்துஆறு நுவலும் பூட்கை மறத்தின்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ வாழிய குடுமி; தங்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே.

அருஞ்சொற்பொருள்:-

ஆன் = பசு
இயல் = தன்மை
ஆனியல் (ஆன்+இயல்) = பசு போன்ற தன்மை.
பேணுதல் = பாதுகாத்தல்.
இறுத்தல் = செலுத்தல்.
கடி = விரைவு
அரண் = காவல்.
நுவல் = சொல்
பூட்கை = கொள்கை, மேற்கோள்.
மீ = மேலிடம், உயர்ச்சி
மீமிசை = மேலே.
செந்நீர் = சிவந்த தன்மையுடைய (சிவந்த)
பசும்பொன் = உயர்ந்த பொன்
வயிரியர் = கூத்தர்.
முந்நீர் = கடல்
விழவு = விழா
நெடியோன் = உயர்ந்தவன் (பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின் முன்னோர்களில் ஒருவன்)
பஃறுளி = பழந்தமிழ் நாட்டிலிருந்த ஓர் ஆற்றின் பெயர்

இதன் பொருள்:-

ஆவும்=====> தீரும்

பசுக்களும், பசுபோன்ற இயல்புடைய பார்ப்பன மக்களும், பெண்டிரும், பிணியுடையோரும், இறந்தவர்களுக்கு இறுதிக் கடன் செய்வதற்கு நல்ல புதல்வர்கள் இல்லாத ஆண்களும்.

எம்அம்பு=====> மணலினும் பலவே

பாதுகாவலான இடத்தைச் சென்றடையுங்கள். விரைவில் எங்கள் அம்புகளை ஏவப் போகிறோம்” என்று அறநெறி கூறும் கொள்கை உடையவனே! கொல்கின்ற வலிய யானையின் மேல் உள்ள உன் கொடி வானில் நிழல் பரவச் செய்கிறது. எங்கள் அரசே! குடுமி! நீ வாழ்க! செம்மையான உயர்ந்த பொன்னைக் கூத்தர்க்கு அளித்துக் கடல் விழா எடுத்த உன் முன்னோன் நெடியோனால் உண்டாக்கப்பட்ட பஃறுளி ஆற்று மணலினும் பல காலம் நீ வாழ்க!
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 08, 2013, 06:34:45 PM
(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash4/394791_535654419792807_1439236263_n.jpg)

புறநானூறு, 10.(குற்றமும் தண்டனையும்)
பாடியவர் : ஊன்பொதி பசுங்குடையார்.
பாடப்பட்டோன் : சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி.
திணை : பாடாண்.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.
=========================================

வழிபடு வோரை வல்லறி தீயே;
பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே;
நீமெய் கண்ட தீமை காணின்
ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி;
வந்து, அடி பொருந்தி முந்தை நிற்பின்
தண்டமும் தணிதிநீ பண்டையிற் பெரிதே;
அமிழ்துஅட்டு ஆனாக் கமழ்குய் அடிசில்
வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை
மகளிர் மலைத்தல் அல்லது மள்ளர்
மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப;
செய்து இரங்காவினைச் சேண்விளங் கும்புகழ்
நெய்தலங் கானல் நெடியோய்!
எய்த வந்தனம்யாம் ஏத்துகம் பலவே.

அருஞ்சொற் பொருள்:-

வல் = விரைவு
தேறல் = தெளிதல்.
ஒறுத்தல் = தண்டித்தல்.
அடுதல் = சமைத்தல்
ஆனாமை = தணியாமை
கமழ்தல் = மணத்தல்
குய் = தாளிதம்
அடிசில் = சோறு, உணவு.
வரை = அளவு
வரையா = குறையாத, அளவில்லாத
வசை = பழி.
மலைத்தல் = போர்செய்தல்
விரோதித்தல்
மள்ளர் = வலிமையுடையவர்.
சிலை = வானவில்
தார் = மாலை.
இரங்கல் = உள்ளம் உருகுதல் (வருந்துதல்)
சேண் = தூரம்.
நெடியோன் = பெரியோன்.
எய்துதல் = அணுகுதல், அடைதல்
ஏத்துதல் = புகழ்தல்.

இதன் பொருள்:-

உன்னை வழிபடுவோரை நீ விரைவில் அறிவாய். பிறர்மீது குற்றம் கூறுவோர் சொல்லை நீ ஏற்றுக் கொள்ள மாட்டாய். உண்மையிலே ஒருவன் செய்தது தவறு (தீமை) என்று நீ கண்டால் நீதி நூலுக்கு ஏற்ப ஆராய்ந்து தகுந்த முறையில் அவனைத் தண்டிப்பாய். தவறு செய்தவர்கள், உன் முன்னர் வந்து அடிபணிந்து நின்றால் நீ முன்பு அளித்த தண்டனையைப் பெரிதும் குறைப்பாய். அமிழ்தத்தைச் சேர்த்துச் சமைத்தது போல் உண்ணத் தெவிட்டாத மணம் கமழும் தாளிதத்தோடு கூடிய உணவை வருவோர்க்கு குறைவின்றி வழங்கும் பழியற்ற இல்வாழ்க்கை நடத்தும் உன் மகளிர் ஊடல் செய்வதன்றி, பகை வேந்தர் உன்னோடு போர் செய்வதில்லை. வானவில் போன்ற மாலையை அணிந்த மார்பையுடையவனே! வருந்தத்தக்க செயலைச் செய்யாத தன்மையும், பரந்த புகழும் உடையவனே! நெய்தலங்கானம் என்னும் ஊரைச் சார்ந்த பெரியோனே! யாம் உன்னை அணுகி வந்தோம். உன்னைப் பலவாறாகப் புகழ்கிறோம்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 08, 2013, 06:36:19 PM
(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-snc7/398591_536241273067455_210436324_n.jpg)

புறநானூறு, 11.(பெற்றனர்! பெற்றிலேன்!)
பாடியவர் : பேய்மகள் இளவெயினியார்.
பாடப்பட்டோன் : சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ.
திணை : பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் கடாநிலை. பரிசில் விரும்பிப் புரவலரிடம் சென்று தன் விருப்பத்தைக் கூறுதல்.
=========================================

அரி மயிர்த் திரள் முன்கை
வால் இழை, மட மங்கையர்
வரி மணற் புனைபாவைக்குக்
குலவுச் சினைப் பூக் கொய்து
தண் பொருநைப் புனல் பாயும்

விண் பொருபுகழ், விறல் வஞ்சிப்
பாடல் சான்ற விறல்வேந் தனும்மே
வெப் புடைய அரண் கடந்து
துப்புறுவர் புறம்பெற் றிசினே;
புறம் பெற்ற வய வேந்தன்,

மறம் பாடிய பாடினி யும்மே
ஏர் உடைய விழுக் கழஞ்சின்
சீர் உடைய இழை பெற்றிசினே;
இழை பெற்ற பாடி னிக்குக்
குரல் புணர்சீர்க் கொளைவல்பாண் மகனும்மே

என ஆங்கு,
ஒள்அழல் புரிந்த தாமரை
வெள்ளி நாரால் பூப்பெற் றிசினே.

அருஞ்சொற் பொருள்:-

அரி = மென்மை
திரள் = திரண்ட
வால் = தூய
இழை = அணிகலன்கள்
புனை = அலங்காரம்
குலவு = வளைவு
சினை = மரக்கிளை
பொருதல் = முட்டுதல்
விறல் = வெற்றி
வஞ்சி = கரூர், சேர நாடு
சான்ற = அமைந்த
வெப்பு = வெம்மை
கடந்து = அழித்து
துப்பு = பகை
உறுதல் = பொருந்துதல்
வயம் = வலிமை
ஏர் = தோற்றப் பொலிவு
விழு = சிறந்த
கழஞ்சு = பன்னிரண்டு பணவெடை அளவு
சீர் = அழகு
இழை = அணிகலன்கள்
குரல் = ஒலி, முதல் இடம்
சீர் = ஓழுங்கு
கொளை = இசை, தாளம் போடுதல்
வல் = திறமை
ஒள் = ஒளி
அழல் = நெருப்பு, வெப்பம்.

இதன் பொருள்:-

அரி மயிர்=====> புனல் பாயும்

மென்மையான மயிர்களுடைய திரண்ட முன்கையையும் தூய அணிகலன்களையும் உடைய இளம்பெண்கள் ஆற்றங்கரையில் இருந்த மணலால் செய்த பாவைக்கு வளைந்த கிளைகளிலிருந்து கொய்த மலர்களைச் சூடுகிறார்கள். குளிர்ந்த ஆன் பொருநை ஆற்றில் பாய்ந்து விளையாடுகிறார்கள்

விண் பொருபுகழ்=====> வேந்தன்

அத்தகைய, வானளாவிய புகழும் வெற்றியும் பொருந்திய வஞ்சி நகரத்தில், புலவர்களால் புகழ்ந்து பாடும், வெற்றியுடைய வேந்தன் சேரமான் பெருங்கடுங்கோ. அவன், பகைவர்களின் வலிய அரண்களை அழித்து அவர்களைப் புறங்காட்டி ஒடவைத்த வலிமை பொருந்திய வேந்தன்

மறம் பாடிய=====> பூப்பெற் றிசினே

அவன் வீரத்தைப் புகழ்ந்து பாடிய பெண், தோற்றப் பொலிவமைந்த சிறந்த பொன் அணிகலன்களைப் பரிசாகப் பெற்றாள். அவ்வணிகலன்களைப் பெற்ற பெண்ணின் பாடலுக்கு ஏற்ப இசையோடும் தாளத்தோடும் இணைந்து பாடிய பாணன் வெள்ளி நாரால் தொடுத்த ஒளி மிகுந்த பொன்னாலான தாமரை மலர்களைப் பரிசாகப் பெற்றான்.

சிறப்புக் குறிப்பு: பாடினியும் பாணனும் பரிசு பெற்றார்கள்; ஆனால் தனக்குப் பரிசுகள் ஏதும் கிடைக்கவில்லையே என்று இளவெயினியார் கூறாமல் கூறுவதுபோல் இப்பாடல் அமைந்துள்ளது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 08, 2013, 06:37:44 PM
(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-snc6/196839_536253789732870_141919088_n.jpg)

புறநானூறு, 12.(அறம் இதுதானோ?)
பாடியவர் : நெட்டிமையார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.
திணை : பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன்மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.
=========================================

பாணர் தாமரை மலையவும், புலவர்
பூநுதல் யானையோடு புனைதேர் பண்ணவும்
அறனோ மற்றிது விறல்மாண் குடுமி?
இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு
இனிய செய்தி நின் ஆர்வலர் முகத்தே.

அருஞ்சொற்பொருள்:-

மலைதல் = அணிதல்
பூ = பட்டம்
புனை = அலங்காரம்
பண்ணல் = செய்தல், அலங்கரித்தல்
விறல் = வெற்றி
மாண் = மாட்சி
இன்னா = துயருண்டாகுமாறு
ஆர்வலர் = பரிசிலர்
முகம் = இடம்

இதன் பொருள்:-

வெற்றியில் சிறந்த குடுமி! பகைவர்களுக்குக் கொடியவனாக இருந்து, அவர் நாட்டை வென்று, உன்னை விரும்புபர்களுக்கு இன்முகத்தோடு இனியன செய்கிறாயே! பாணர்களுக்குப் பொன்னாலான தாமரை மலர்களையும் புலவர்களுக்குப் பட்டம் சூட்டிய யானைகளையும் அலங்கரிக்கப்பட்ட தேர்களையும் வழங்குகிறாயே! இது அறமாகுமோ?

சிறப்புக் குறிப்பு: இப்பாடலில், நெட்டிமையார் பாண்டியனைப் பழிப்பதுபோல் புகழ்கிறார். அவன் அறத்தை இகழ்வது போல, அவன் வீரத்தையும், வள்ளன்மையும் புகழ்ந்தது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 08, 2013, 06:39:00 PM
புறநானூறு, 13.(நோயின்றிச் செல்க)
பாடியவர் : உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன் : சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி.
திணை : பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: வாழ்த்தியல். தலைவனை வாழ்த்துதல்
=========================================

தமிழர்களின் அறத்தை சிறப்பாகப் பாடும் ஒரு செய்யுள் இது.

[கருவூர் வேண்மாடத்திலிருந்து காலத்து, ஊர்ந்து வந்த யானை மதம் பட்டதினால் கருவூரிள் வந்தடைந்த சோழனைக் காட்டி, "இவன் யார்" எனச் சேரமான் கேட்பப், புலவர் கூறியது இச் செய்யுள்.]

"இவன்யார்" என்குவை ஆயின், இவனே
புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய
எய்கணை கிழித்த பகட்டுஎழில் மார்பின்
மறலி அன்ன களிற்றுமிசை யோனே;
களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும்
பன்மீன் நாப்பண் திங்கள் போலவும்
சுறவுஇனத்து அன்ன வாளோர் மொய்ப்ப
மரீஇயோர் அறியாது மைந்துபட் டன்றே;
நோயிலன் ஆகிப் பெயர்கதில் அம்ம,
பழன மஞ்ஞை உகுத்த பீலி
கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும்
கொழுமீன் விளைந்த கள்ளின்
விழுநீர் வேலி நாடுகிழ வோனே.

அருஞ்சொற்பொருள்:-

நிறம் = தோல்
கவசம் = போர் வீரன் அணியும் இரும்புச் சட்டை; பூம்பொறி = அழகிய தோலின் இணைப்பு
சிதைத்தல் = அழித்தல்
பகடு = வலிமை
எழில் = அழகு
மறலி = எமன்
மிசை = மேலே
முந்நீர் = கடல்
வழங்குதல் = செல்லுதல்
நாவாய் = மரக்கலம்
நாப்பண் = நடு (இடையே).
சுறவு = சுறா மீன்
மொய்த்தல் = சூழ்தல்
மரியவர் = பின்பற்றி நடப்பவர் (பாகர்)
மைந்து = பித்து (மதம்)
பெயர்தல் = திரும்புதல்
தில் = விழைவை உணர்த்தும் அசைச்சொல்
பழனம் = வயல்
மஞ்ஞை = மயில்
பீலி = மயிலிறகு
சூடு = நெற்கதிற்
கொழுமீன் = ஒருவகை மீன், கொழுத்த மீன்
விளைந்த = முதிர்ந்த
விழு = சிறந்த (மிகுந்த)
கிழவோன் = உரிமையுடையவன்

இதன் பொருள்:-

இவன்யார்=====> நாவாய் போலவும்

”இவன் யார்” என்று கேட்கிறாயா? இவன் அம்புகளால் துளைக்கப்பட்ட புள்ளிகளுடன் சிதைந்து காணப்படும் புலித்தோலாலாகிய கவசத்தைத் தன் வலிய அழகிய மார்பில் அணிந்து கூற்றுவன் போல் யானைமீது வருகிறான். அந்த யானை வருவது கடலில் ஒருமரக்கலம் வருவதைப்போலவும்

பன்மீன்=====> பெயர்கதில் அம்ம

பல விண்மீன்களுக்கு நடுவே விளங்கும் திங்களைப்போலவும் காட்சி அளிக்கிறது. அந்த யானையைச் சுற்றிலும் சுறாமீன்களின் கூட்டம் போல் வாளேந்திய வீரர்கள் சூழ்ந்துள்ளனர். அவர்களிடையே உள்ள பாகர்கள் அறியாமலேயே அந்த யானை மதம் கொண்டது.

பழன மஞ்ஞை=====> நாடுகிழ வோனே

இவன் நாட்டில் வயல்களில் மயில்கள் உதிர்த்த தோகையை உழவர்கள் நெற்கதிர்களோடு சேர்த்து அள்ளிச் செல்வார்கள். இவன் கொழுத்த மீனையும் முதிர்ந்த கள்ளையும், நீரை வேலியாகவும் உள்ள வளமான நாட்டுக்குத் தலைவன். இவன் இன்னலின்றித் திரும்பிச் செல்வானாக. (பகைவன் எனினும், அந் நிலையில் அவனைத் துன்பமின்றிச் செல்ல விடுமாறு, அறநெறியைக் கூறுகிறார் புலவர்)

சிறப்புக் குறிப்பு : தமிழர்கள் மரக்கலம்(கப்பல்) அமைத்து கடலில் பயணம் செய்துதுள்ளனர் என்பது பலப் புறநானூறு பாடல்களில் அறியலாம். அவற்றில் இந்தப் பாடலும் ஒன்று. வணிகம் மற்றும் போர் கப்பல் அன்றே தமிழர்கள் வைத்திருப்பது பெருமைக்குறியது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 08, 2013, 06:40:21 PM
புறநானூறு, 14.(மென்மையும்! வன்மையும்!)
பாடியவர் : கபிலர்.
பாடப்பட்டோன் : சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன்.
திணை : பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன்மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.
=========================================

[ஒருசமயம், சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் கபிலரின் கையைப் பிடித்தான். அவர் கை மிகவும் மென்மையாக இருப்பதைக் கண்ட அவன் மிகவும் வியப்படைந்தான். அவன் கபிலரைப் பார்த்து, “தங்கள் கைகள் ஏன் இவ்வளவு மென்மையாக இருக்கின்றன?” என்று கேட்டான். இப்பாடல் மூலம் சேரனின் கேள்விக்குக் கபிலர் விடை அளிக்கிறார்]

கடுங் கண்ண கொல் களிற்றான்
காப் புடைய எழு முருக்கிப்
பொன்இயல் புனை தோட்டியான்
முன்பு துரந்து, சமந் தாங்கவும்
பார் உடைத்த குண்டு அகழி

நீர் அழுவம் நிவப்புக் குறித்து
நிமிர் பரிய மா தாங்கவும்
ஆவம் சேர்ந்த புறத்தை தேர்மிசைச்
சாப நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும்
பரிசிலர்க்கு அருங்கலம் நல்கவும், குரிசில்!

வலிய ஆகும் நின் தாள்தோய் தடக்கை;
புலவு நாற்றத்த பைந்தடி
பூ நாற்றத்த புகை கொளீஇ ஊன்துவை
கறிசோறு உண்டு வருந்துதொழில் அல்லது
பிறிதுதொழில் அறியா ஆகலின் நன்றும்

மெல்லிய பெரும தாமே! நல்லவர்க்கு
ஆரணங்கு ஆகிய மார்பின் பொருநர்க்கு
இருநிலத்து அன்ன நோன்மைச்
செருமிகு சேஎய் நின் பாடுநர் கையே!

அருஞ்சொற்பொருள்:-

கடுங்கண்ண = கடும்+கண்ண = கொடிய கண்ணையுடைய
காப்பு = காவலான இடம்
எழு = தூண், கணைய மரம்
பொன் = இரும்பு
புனை = அழகு
தோட்டி = அங்குசம்
முன்பு = வலிமை
துரந்து = குத்தி
சமந்தாங்குதல் = வேண்டுமளவில் பிடித்து இழுத்தி நிறுத்துதல்
பார் = நிலம், பூமி
குண்டு = ஆழம்
அழுவம் = பரப்பு
நிவப்பு = உயர்ச்சி
நிமிர்தல் = ஓடல்
பரிதல் = ஓடுதல்
மா = குதிரை
ஆவம் = அம்புறாத்தூணி
சாவம் = வில்
நோன் = வலி
ஞாண் = கயிறு
வடு = தழும்பு
வழங்குதல் = செலுத்துதல்
குரிசில் = தலைவன்
தோய்ந்த = பொருந்திய
தட = பெரிய
புலவு = ஊன்
பை = வலிமை (கொழுத்த)
தடி = தசை
கொளீஇ = கொளுத்தி
துவை = துவையல்
நன்றும் = மிக
ஆரணங்கு = ஆற்றுதற்கு அரிய வருத்தம்
நல்லவர் = பெண்கள்
பொருநர் = பகைவர்
இரு = பெரிய
நோன்மை = வலிமை
செரு = போர்
சேய் = முருகன்

இதன் பொருள்:-

கடுங் கண்ண=====> குரிசில்!

கொடிய கண்களையுடைய, கொல்லும் யானைகளால், பாதுகாப்பிற்காகப் பகைவர்கள் வைத்திருந்த கணையமரங்களை முறித்து, இரும்பால் செய்யப்பட்ட அழகிய அங்குசத்தால் வலிமையாகக் குத்தி யானைகளைப் பிடித்து இழுத்து நிறுத்துகிறாய். நிலத்தைத் தோண்டி உருவாக்கப்பட்ட அகழிகளின் நீர்ப்பரப்புகளின் ஆழம் கருதி அவைகளின் மீது செல்லாமல் விரைவாக ஓடும் குதிரைகளைக் கடிவாளத்தைப் பிடித்து இழுத்து நிறுத்துகிறாய். அம்புறாத்தூணியை முதுகில் பொருத்தித் தேர் மேலிருந்து வில்லின் நாணால் கையில் வடு உண்டாகுமாறு அம்பைச் செலுத்துகிறாய். மற்றும், பரிசிலர்க்குப் பெறுதற்கரிய அணிகலன்களை அளிக்கிறாய், அரசே!

வலிய ஆகும்=====> பாடுநர் கையே!

இத்தகைய செயல்களால் உன் முழங்கால் வரை நீண்ட பெரிய கைகள் வலிமையாக உள்ளன. புலால் மணக்கும் கொழுத்த தசையைப் பூ மணமுள்ள புகையுடன் கூடிய தீயினால் கொளுத்திச் சமைத்த புலாலும், துவையலும், கறியும் சோறும் உண்ணுவதைத் தவிர, உன்னைப் பாடுபவர்கள் வேறு வலிய செயல்களைத் தங்கள் கைகளால் செய்யாததால், அவர்களின் கைகள் மிகவும் மென்மையானதாக உள்ளன. அரசே! பெண்டிர்க்கு வருத்ததைத் தரும் மார்பும், பகைவருடன் வலிய நிலம் போன்ற திண்மையோடு போர்புரியும் முருகனைப் போன்ற ஆற்றலும் உடையவனே!
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 08, 2013, 06:41:59 PM
(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-prn1/602772_539323676092548_1989361646_n.jpg)

புறநானூறு, 15.(எதனிற் சிறந்தாய்?)
பாடியவர் : நெட்டிமையார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.
திணை : பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன்மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.
=========================================

கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்
வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப்
பாழ்செய் தனை, அவர் நனந்தலை நல்லெயில்;
புள்ளினம் இமிழும் புகழ்சால் விளைவயல்
வெள்ளுளைக் கலிமான் கவிகுளம்பு உகளத்

தேர்வழங் கினைநின் தெவ்வர் தேஎத்துத்;
துளங்கு இயலாற், பணை எருத்தின்
பா வடியாற்,செறல் நோக்கின்
ஒளிறு மருப்பின் களிறு அவர
காப் புடைய கயம் படியினை;

அன்ன சீற்றத்து அனையை ஆகலின்
விளங்குபொன் எறிந்த நலங்கிளர் பலகையடு
நிழல்படு நெடுவேல் ஏந்தி ஒன்னார்
ஒண்படைக் கடுந்தார் முன்புதலைக் கொண்மார்
நசைதர வந்தோர் நசைபிறக்கு ஒழிய

வசைபட வாழ்ந்தோர் பலர்கொல்? புரையில்
நற்பனுவல் நால்வேதத்து
அருஞ்சீர்த்திப் பெருங்கண்ணுறை
நெய்ம் மலி ஆவுதி பொங்கப் பன்மாண்
வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி

யூபம் நட்ட வியன்களம் பலகொல்?
யாபல கொல்லோ? பெரும! வார் உற்று
விசிபிணிக் கொண்ட மண்கனை முழவின்
பாடினி பாடும் வஞ்சிக்கு
நாடல் சான்ற மைந்தினோய்! நினக்கே.

அருஞ்சொற்பொருள்:-

கடு = விரைவு
குழித்த = குழியாக்கிய
ஞெள்ளல் = தெரு
வெள் = வெளுத்த
புல்லினம் = புல்+இனம் = இழிந்த கூட்டம்
நனம் = அகற்சி (அகலம்)
தலை = இடம்
எயில் = அரண்
புள்ளினம் = பறவைகள்
இமிழும் = ஒலிக்கும்
உளை = பிடரிமயிர்
கலிமான் = குதிரை
உகளல் = தாவுதல்
தெவ்வர் = பகைவர்
துளங்கல் = அசைதல்
இயல் = தன்மை
பணை = பெருமை
எருத்து = கழுத்து
பா = பரந்த
செறுதல் = கோபித்தல்
மருப்பு = கொம்பு(தந்தம்)
கயம் = வற்றாத குளம்
கிளர் = மேலெழும்பு
எறிதல் = அடித்தல்
ஒன்னார் = பகைவர்
கடுந்தார் = விரைவாக செல்லும் படை
முன்பு = வலிமை
தலைக்கொள்ளுதல் = கெடுத்தல்
நசை = ஆசை
தருதல் = அழைத்தல்
பிறக்கு = முதுகு, பின்புறம்
பனுவல் = நூல்
சீர்த்தி = மிகுபுகழ்
கண்ணுறை = மேலே தூவுவது
மலிதல் = மிகுதல், நிறைதல்
ஆவுதி = ஆகுதி = ஓமத்தீயில் நெய்யிடுதல்
வீதல் = குறைதல்
யூபம் = தூண்
வியன் = அகன்ற
மிகுந்த
உற்று = பொருந்தி
விசி = கட்டு
கனை = நெருக்கம்
மண்கனை = ஒருவகை மண்ணால் ஆகிய சாந்து
முழவு = முரசு, பறை
வஞ்சி = பகைவர் மீது படையெடுப்பு
நாடல் = நாட்டம் (நோக்கம்)
மைந்து = வலிமை

இதன் பொருள்:-

விரைவாகச் செல்லும் தேர்களால் குழிகள் தோண்டப்பட்ட தெருக்களில், வெண்மையான வாயுள்ள கழுதைகளை ஏரில் பூட்டி, உன் பகைவர்களின் நல்ல அரண்கள் சூழ்ந்த அகன்ற இடங்களைப் பாழ் செய்தாய். பறவைகள் ஒலிக்கும் புகழ் மிகுந்த விளைவயல்களில் வெள்ளைப் பிடரி மயிருடைய குதிரைகளின் குவிந்த குளம்புகள் தாவுமாறு செய்து உன் பகைவர்களின் நாட்டில் தேர்களைச் செலுத்தினாய். பருத்த, அசையும் கழுத்தும், பெரிய காலடிகளும், சினத்துடன் கூடிய பார்வையும், ஒளிரும் தந்தங்களுமுடைய யானைகளை ஏவிப் பகைவர்களின் குளங்களைப் பாழ்செய்தாய். நீ அத்தகைய சீற்றம் உடையாய். ஆதலால், வலிய இரும்பால் செய்யப்பட்ட ஆணியும் பட்டமும் அறையப்பட்ட அழகிய பலகையோடு நிழல் உண்டாக்கும் நெடிய வேலை எடுத்து, உன் பகைவர், ஒளிரும் படைக்கலங்களுடன் கூடிய உன்னுடைய விரைந்து செல்லும் தூசிப்படையின் வலிமையை அழிக்க விரும்பி ஆசையோடு போருக்கு வந்தனர். பின்னர், அந்த ஆசை ஒழிந்து பழியுடன் வாழ்ந்தவர் பலரா? அல்லது குற்றமற்ற நல்ல நூலாகிய வேதத்தில் சொல்லியவாறு அரிய புகழுடைய சுள்ளியும், பொரியும், நெய்யும் இட்டுப் பலவிதமான மாட்சிமைகளும், கேடற்ற சிறப்பும் உடைய யாகங்கள் செய்து, நீ நிறுவிய தூண்கள் நடப்பட்ட அகன்ற வேள்விச்சாலைகளின் எண்ணிக்கை அதிகமா? வாரால் இறுகக் கட்டி, மார்ச்சுனை தடவிய முழவுடன் உன் படையெடுப்புகளைப் புகழ்ந்து பாடும் பாடினியின் பாட்டுக்கேற்ப ஆராய்ந்து அமைந்த வலிமை உடையோய்! இவற்றுள் எதன் எண்ணிக்கை அதிகம்?

சிறப்புக் குறிப்பு: போரில் முன்னணியில் செல்லும் படை தூசிப்படை. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின் முன்னணிப்படையிடம் பலரும் தோல்வியுற்றார்கள் என்று இப்பாடலில் நெட்டிமையார் கூறுவதிலிருந்து அவனுடைய முழுப்படையின் வலிமையை எதிர்த்துப் போரிடுவது மிகவும் கடினம்; அவனை எதிர்த்துப் போரில் வெற்றி பெறுபவர்கள் யாரும் இல்லை என்ற கருத்துகளும் இப்பாடலில் மறைந்திருப்பதைக் காணலாம்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 08, 2013, 06:43:18 PM
புறநானூறு, 16.(செவ்வானும் சுடுநெருப்பும்)
பாடியவர் : பாண்டரங் கண்ணனார்.
பாடப்பட்டோன் : சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி.
திணை : வஞ்சி. வஞ்சிப் பூவைத் தலையில் சூடிப் பகைவரின் நாட்டைக் கைக்கொள்ளக் கருதிச் செல்லுதல்.
துறை: மழபுல வஞ்சி. பகைவர் நாட்டைக் கொள்ளையிடுதல், எரித்தல் ஆகிய செயல்களைச் செய்து அழித்தலைப் பற்றிக் கூறுதல்.
========================================

வினைமாட்சிய விரைபுரவியொடு
மழையுருவின தோல்பரப்பி
முனைமுருங்கத் தலைச்சென்றவர்
விளைவயல் கவர்புஊட்டி
மனைமரம் விறகுஆகக்

கடிதுறைநீர்க் களிறுபடீஇ
எல்லுப்பட இட்ட சுடுதீ விளக்கம்
செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்றப்
புலம்கெட இறுக்கும் வரம்பில் தானைத்
துணைவேண்டாச் செருவென்றிப்

புலவுவாள் புலர்சாந்தின்
முருகன் சீற்றத்து உருகெழு குருசில்!
மயங்குவள்ளை மலர்ஆம்பல்,
பனிப்பகன்றைக் கனிப்பாகல்
கரும்புஅல்லது காடுஅறியாப்

பெருந்தண்பணை பாழ்ஆக
ஏமநன் னாடு ஒள்எரி ஊட்டினை;
நாம நல்லமர் செய்ய
ஓராங்கு மலைந்தன பெரும!நின் களிறே.

அருஞ்சொற்பொருள்:-

விரைவு = வேகம்
புரவி = குதிரை
மழை = மேகம்
உரு = நிறம்
தோல் = கேடயம்
முனை = போர்முனை
முருங்க = கலங்க
தலைச்சென்று = மேற்சென்று
கவர்பு = கொள்ளை
ஊட்டி = அடித்து (ஊட்டுதல் = புகட்டுதல், அனுபவிக்கச் செய்தல்)
கடி = காவல்
கடிதுறை = காவற் பொய்கை
படீஇ = படியச் செய்து
எல்லு = கதிரவன்
எல் = ஒளி
செக்கர் = சிவப்பு, செவ்வானம்
புலம் = இடம்
இறுத்தல் = செலுத்தல், தங்குதல்
செரு = போர்
உரு = அச்சம்
குரிசில் = அரசன், தலைவன்
மயங்குதல் = கலத்தல்
வள்ளை = ஒருகொடி
ஆம்பல் = அல்லி
பகன்றை = சீந்தில், சிவதை, கிலுகிலுப்பை (ஒருவகைக் கொடி)
பாகல் = ஒருவகைக் கொடி
காடு = புன்செய் நிலம்
பணை = மருத நிலம்
ஏமம் = காவல்
நாமம் = அச்சம்
ஓர் ஆங்கு = ஒன்றுசேர, ஒன்று போல், எண்ணியவாறு
ஆங்கு = அவ்வாறு
மலைத்தல் = பொருதல், போரிடுதல்

இதன் பொருள்:-

வினைமாட்சிய=====> செருவென்றி

போரில் தேர்ச்சி பெற்ற, விரைந்து செல்லும் குதிரைப்படையுடனும், மேகம் போல் பரப்பிய கேடயங்களுடனும், போர்க்களம் கலங்குமாறு மேற்சென்று பகைவர்களின் நெல்விளையும் வயல்களைக் கொள்ளையிட்டாய். அவர்களின் வீட்டிலுள்ள கதவு, தூண் போன்ற மரத்தால் செய்த பொருட்களை விறகாக்கி அவற்றை தீயில் எரித்தாய். யானையைப் படியச் செய்து காவல் உள்ள நீர்த்துறைகளைப் பாழ் செய்தாய். பகைவர்களின் நாட்டில் நீ மூட்டிய தீயிலிருந்து எழுந்த ஒளி, சுடருடன் கூடிய ஞாயிற்றின் சிவந்த நிறம் போலத் தோன்றியது. பெருமளவில் படையைப் பரப்பி, துணைப்படை தேவையில்லாமல் போரில் வெற்றிபெற்றாய்.

புலவுவாள்=====> நின் களிறே

புலவு நாற்றத்தையுடைய வாளும், பூசிய சந்தனம் உலர்ந்த மார்பும், முருகன் போன்ற சினமும், அச்சமும் பொருந்திய தலைவ! ஒன்றோடு ஒன்று சேர்ந்த வள்ளையும், மலர்ந்த ஆம்பலும், குளிர்ந்த பகன்றையும், பழுத்த பாகலையும் உடைய, கரும்பு அல்லாத பிற பயிர்கள் விளையாத புன்செய் நிலமும், பெரிய குளிர்ந்த மருத நிலமும் பாழாகுமாறு பகைவர்களின் காவலுடைய நல்ல நாட்டிற்குத் தீ மூட்டினாய். அரசே! அஞ்சத்தக்க நல்ல போரை நீ எண்ணியவாறு உன் யானைகள் செய்தன.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 08, 2013, 06:44:39 PM
புறநானூறு, 17.(யானையும் வேந்தனும்!)
பாடியவர் : குறுங்கோழியூர்கிழார்.
பாடப்பட்டோன் : சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.
திணை : வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.
=========================================

தென் குமரி, வட பெருங்கல்,
குண குட கடலா வெல்லை,
குன்று, மலை, காடு, நாடு
ஒன்று பட்டு வழி மொழியக்
கொடிது கடிந்து, கோல் திருத்திப்

படுவது உண்டு, பகல் ஆற்றி,
இனிது உருண்ட சுடர் நேமி
முழுது ஆண்டோர் வழி காவல!
குலை இறைஞ்சிய கோள் தாழை
அகல் வயல், மலை வேலி

நிலவு மணல் வியன் கானல்
தெண் கழிமிசைச் சுடர்ப் பூவின்
தண் தொண்டியோர் அடு பொருந!
மாப் பயம்பின் பொறை போற்றாது
நீடு குழி அகப் பட்ட

பீடு உடைய எறுழ் முன்பின்
கோடு முற்றிய கொல் களிறு
நிலை கலங்கக் குழி கொன்று
கிளை புகலத் தலைக் கூடியாங்கு
நீ பட்ட அரு முன்பின்

பெருந் தளர்ச்சி பலர் உவப்பப்
பிறிது சென்று மலர் தாயத்துப்
பலர் நாப்பண் மீக் கூறலின்
உண் டாகிய உயர் மண்ணும்
சென்று பட்ட விழுக் கலனும்

பெறல் கூடும் இவன்நெஞ்சு உறப்பெறின் எனவும்,
ஏந்து கொடி இறைப் புரிசை
வீங்கு சிறை வியல் அருப்பம்
இழந்து வைகுதும் இனிநாம் இவன்
உடன்று நோக்கினன் பெரிது எனவும்

வேற்று அரசு பணி தொடங்குநின்
ஆற்ற லொடு புகழ் ஏத்திக்
காண்கு வந்திசின் பெரும! ஈண்டிய
மழையென மருளும் பல்தோல் மலையெனத்
தேன் இறை கொள்ளும் இரும்பல் யானை

உடலுநர் உட்க வீங்கிக் கடலென
வான்நீர்க்கு ஊக்கும் தானை ஆனாது
கடுஒடுங்கு எயிற்ற அரவுத்தலை பனிப்ப
இடியென முழங்கு முரசின்
வரையா ஈகைக் குடவர் கோவே!

அருஞ்சொற்பொருள்:-

குணக்கு = கிழக்கு
குடக்கு = மேற்கு
கோல் = அரசாட்சி
படுவது = உரியது, அனுபவிப்பது
பகல் = நடுநிலை
நேமி = சக்கரம்
கோள் = கொள்ளத்தக்க
தாழை = தென்னை
கானல் = கடற்கரை, காடு
தெண் = தெளிந்த
கழி = கடலையடுத்த உப்பங்கழி
தொண்டி = தொண்டி என்னும் ஊர்
அடுதல் = வெல்லுதல்
பொருநன் = அரசன்
பயம்பு = பள்ளம்
பொறை= பூமி
எறுழ் = வலிமை
முன்பு = வலிமை
கோடு = கொம்பு
கிளை = உறவு
புகலுதல் = விரும்புதல்
தலைக்கூடுதல் = நிறைவேற்றுதல் (சேர்தல்)
அரு = காணமுடியாத (பொறுத்தற்கரிய)
தாயம் = சுற்றம்
நாப்பண் = நடுவே
உண்டு = தன்னிடத்தே இருந்த
உயர்மண் = உயர்ந்த நிலம்
உறல் = அணைதல், சார்தல், புணர்தல்
ஏந்தல் = உயர்ச்சி
இறை = உயர்ச்சி, தங்குதல்
புரிசை = மதில்
வீங்கு = மிக்க
சிறை = காவல்
வியல் = அகலம்
அருப்பம் = அரண், மதில்
வைகுதல் = இருத்தல்
உடன்று = வெகுண்டு
ஈண்டுதல் = திரளுதல்
தோல் = கேடயம்
தேன் = வண்டு
இரு = பெரிய
உடலுநர் = பகைவர்
உட்குதல் = அஞ்சுதல்
ஊக்கும் = முயலும்
ஆனாது = அமையாது
கடு = நஞ்சு
ஒடுங்குதல் = பதுங்கல், தங்குதல்
எயிறு = பல்
அரவு = பாம்பு
பனி = நடுக்கம்
வரையா = அளவில்லாத (குறையாத)
குடவர் = குட நாட்டவர்

இதன் பொருள்:-

தென் குமரி=====> நீடு குழி அகப் பட்ட

தெற்கே குமரியும், வடக்கே இமயமும், கிழக்கிலும் மேற்கிலும் கடலை எல்லையாகக்கொண்டு குன்று, மலை, காடு, நாடு ஆகியவற்றில் வாழ்வோர் ஒருங்கே வழிபாடு செய்ய, கொடுமைகளை நீக்கி, செங்கோல் செலுத்தி, உரிய வரியைத் திரட்டி நடுவு நிலைமையோடு உலகம் (தமிழ் நாடு) முழுவதையும் இனிமையாக நல்லாட்சி புரிந்தவர்களின் வழித்தோன்றலே!

குலைகள் தாழ்ந்து பறிப்பதற்கு ஏற்றதாக உள்ள தென்னை மரங்களையும், அகன்ற வயல்களையும், மலையையே வேலியாக உள்ள இடங்களையும், நிலவு போன்ற மணல் நிறைந்த கடற்கரையையும், தெள்ளிய கழியிடத்து நெருப்புப்போல் பூத்த சிவந்த ஒளிவிடும் பூக்களையும் உடைய குளிர்ந்த தொண்டி என்னும் ஊரில் வாழ்வோரின் வெற்றி வேந்தனே!

பெரிய குழியான இடம் இருப்பதை அறியாது, அந்த நெடிய குழியில் வீழ்ந்த

பீடு உடைய=====> இரும்பல் யானை

செருக்கும், மிகுந்த வலிமையும் உடைய, தந்தங்கள் முதிர்ந்த யானை அக்குழியைத் தூர்த்துத் தன்னை விரும்பும் சுற்றத்தோடு சென்று வாழ்ந்ததைப்போல் உன் அரிய வலிமையால் பகைவரிடம் நீ அடைந்த தளர்ச்சியினின்று நீங்கி, மீண்டும் அகன்ற உன் நாட்டிற்குச் சென்றது உன் சுற்றத்தார் நடுவே புகழ்ந்து பேசப்படுகிறது. நீ பாண்டியனால் தோற்கடிக்கப்பட்டு சிறையிலடைக்கப்படுவதற்கு முன்பு, உன்னால் தோற்கடிக்கப்பட்ட உன் பகைவர்கள், “இவன் மனமுவந்தால் நாம் இழந்த நம் நாட்டையும் இவனால் கொள்ளப்பட்ட அணிகலன்களையும் திரும்பப்பெறக்கூடும்” என்று எண்ணினார்கள். மற்றும், உன் வரவை எதிர்பாராத பகைவர்கள், தாங்கள் கவர்ந்து கொண்ட கொடி பறக்கும் உயர்ந்த மதில், மிகுந்த காடுகள், அகழி முதலியவைகளைக் காவலாக உடைய அரண்களை இழந்து வருந்த நேரிடும் என்று எண்ணினார்கள். இவ்வாறு எண்ணிய உன் பகைவர்கள் உனக்குப் பணிபுரிவதற்குக் காரணமாகிய உன் புகழை வாழ்த்தி உன்னைக் காண வந்தேன். உன் வீரர்கள் ஏந்தியிருக்கும் கேடயங்கள் திரண்ட மேகங்களைப்போல் காட்சி அளிக்கின்றன. உன் யானைகளைப் பெரிய மலை என்று எண்ணி தேனீக்களின் கூட்டம் அவைகளிடம் வந்து தங்குகின்றன.

உடலுநர்=====> குடவர் கோவே

பகைவர்கள் அஞ்சும் உன் படையைக் கடலென்று கருதி மேகங்கள் நீர் கொள்ள முயலுகின்றன. இத்துணை வலிமையும் பெருமையும் உடைய படைகள் மட்டுமல்லாமல், பல்லில் நஞ்சுடைய பாம்பு நடுங்குமாறு இடிபோல் முழங்கும் முரசும் உடையவனே! குறையாத கொடையுடைய குடநாட்டின் அரசே!
=========================================

பாடலின் பின்னணி

சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் சிறையிலிருந்து தப்பிச் சென்றதை இப்பாடலில் குறுங்கோழியூர் கிழார் புகழ்ந்து பாடுகிறார். அவன் சிறையிலிருந்து தப்பிச் சென்றதை, குழியில் அகப்பட்ட யானை, தன் வலிமையால் குழியைத் தூர்த்து வெளியேறிச் சென்று தன் இனத்தோடு வாழ்ந்ததற்கு ஒப்பிடுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 08, 2013, 06:46:07 PM
புறநானூறு, 18.(நீரும் நிலனும்)
பாடியவர் : குடபுலவியனார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை : பொதுவியல்.
துறை: முதுமொழிக் காஞ்சி; பொருண்மொழிக் காஞ்சி எனவும் பாடம்.
=========================================

முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்
பரந்து பட்ட வியன் ஞாலம்
தாளின் தந்து, தம்புகழ் நிறீஇ:
ஒருதாம் ஆகிய உரவோர் உம்பல்!
ஒன்றுபத்து அடுக்கிய கோடிகடை இரீஇய

பெருமைத்து ஆக நின் ஆயுள் தானே!
நீர்த் தாழ்ந்த குறுங் காஞ்சிப்
பூக் கதூஉம் இன வாளை,
நுண் ஆரல், பரு வரால்,
குரூஉக் கெடிற்ற, குண்டு அகழி;

வான் உட்கும் வடிநீண் மதில்;
மல்லல் மூதூர் வய வேந்தே!
செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்,
ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி,
ஒருநீ ஆகல் வேண்டினும், சிறந்த

நல்இசை நிறுத்தல் வேண்டினும், மற்றதன்
தகுதி கேள், இனி, மிகுதியாள!
நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே;
உண்டி முதற்றே உணவின் பிண்டம்;

உணவெனப் படுவது நிலத்தோடு நீரே;
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே;
வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன்
வைப்புற்று ஆயினும், நண்ணி ஆளும்

இறைவன் தாட்குஉத வாதே; அதனால்,
அடுபோர்ச் செழிய! இகழாது வல்லே
நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம, இவண்தட் டோரே;
தள்ளா தோர்இவண் தள்ளா தோரே.

அருஞ்சொற்பொருள்:-

முழங்குதல் = ஒலித்தல்
முந்நீர் = கடல்
வளைஇ = சூழப்பட்டு
தாள் = முயற்சி
தந்து = கொண்டு
உரம் = வலி
உம்பல் = வழித்தோன்றல்
இரீஇய = இருக்கச் செய்த
கதூஊம் = பற்றும் (கதுவுதல் = பற்றுதல்)
பரு = கனத்த
குரு = ஒளி
கெடிறு = கெளிற்று மீன்
உட்கும் = அஞ்சும்
வடிதல் = நீளுதல்
மல்லல் = வளமை
வயம் = வலி
முருக்கி = அழித்து
மிகுதியாள = பெரியோன்
பிண்டம் = உடல்
வித்தி = விதைத்து
வைப்பு = இடம்
நண்ணி = நெருங்கி (பொருந்தி)
தாள் = முயற்சி
வல்லே = விரைவாக
நெளிதல் = குழிதல், வளைதல்
தட்டல் = முட்டுப்பாடு
தட்டோர் = தடுத்தோர்
அம்ம - அசைச் சொல்
தள்ளோதார் = தடுக்காதவர்

இதன் பொருள்:-

முழங்கு=====> பிண்டம்

ஒலிக்கும் கடல் சூழ்ந்த பரந்து கிடக்கும் அகன்ற உலகத்தைத் தமது முயற்சியால் வென்று, தம்முடைய புகழை உலகத்தில் நிலைநிறுத்தித் தாமே ஆட்சி செய்த வலியவர்களின் வழித்தோன்றலே! ஒன்று, பத்து என்ற எண்களின் வரிசையில் கடைசி எண்ணாகக் கருதப்படும் கோடி என்ற பெருமையுடைய எண் அளவுக்கு நீ வாழ்க! நீரளவுக்குத் தாழ்ந்து இருக்கும் சிறிய காஞ்சிப்பூவைக் கவ்வும் வாளை மீன்களின் கூட்டமும், சிறிய ஆரல் மீன்களும், பருத்த வரால் மீன்களும், ஒளிறும் கெளிறு மீன்களும் நிறைந்துள்ள ஆழமான அகழியும், வானளாவிய நெடிய மதிலும் உடைய வளமான பழைய ஊரில் உள்ள வலிய வேந்தனே! நீ மரணத்திற்குப் பிறகு செல்ல இருக்கும் உலகத்தில் அனுபவிப்பதற்கேற்ற செல்வத்தை விரும்பினாலும், உலகத்தை காக்கும் மற்ற அரசர்களின் வலிமையை அழித்து நீ ஒருவனே தலைவனாக விரும்பினாலும், சிறந்த புகழை நிலைநாட்ட விரும்பினாலும், அதற்குரிய தகுதியை நான் கூறுகிறேன்; நீ அதைக் கேட்பாயாக! நீரில்லாமல் வாழ முடியாத இவ்வுடலுக்கு உணவு கொடுத்தவர்கள்தான் உயிர் கொடுத்தவர் ஆவர். உணவாலாகிய இவ்வுடலுக்கு உணவுதான் முதன்மையானது.

உணவெனப் படுவது=====> தள்ளா தோரே

ஆகவே, உணவு என்று சொல்லப்படுவது நிலத்தோடு கூடிய நீர். அந்நீரையும் நிலத்தையும் ஒன்று சேர்த்து உணவுப் பொருள்களை விளைவித்தவர்கள்தான் உயிரையும் உடலையும் வாழவைப்பவர் ஆவர். விதைகளை விதைத்துவிட்டு மழையை எதிர்பார்த்திருக்கும் புன்செய் நிலம் அகன்ற பரப்புடையதாக இருந்தாலும் அதனால் மன்னனுக்கு ஒருபயனுமில்லை. ஆகவே, கொல்லும் போரையுடைய பாண்டியனே! நான் கூறுவதை இகழாது கேள்! வளைந்து செல்லும் ஆழமான இடங்களில் விரைந்து நீர்நிலைகளை உருவாக்கியவர்கள்தான் இவ்வுலகில் தாம் விரும்பியவற்றைத் தடுத்து நிறுத்தி வைத்துக்கொண்டவராவர். அவ்வாறு செய்யாதவர்கள், இவ்வுலகில் தாம் விரும்பியவற்றை நிலை நிறுத்திக் கொள்ளாதவராவர்.

சிறப்புக் குறிப்பு.

”நீர் இன்று அமையாது உலகு” என்று வள்ளுவர் கூறுவது இங்கு ஒப்பு நோக்கத் தக்கது.

”நீர்நிலை பெருகத் தட்டோர் அம்ம இவண் தட்டோரே; தள்ளாதோர் இவன் தள்ளாதோரே” என்ற இந்த அடிகளில் நீர்நிலைகள் கட்டி நீரைத் தேக்கி வைத்தவர்கள், செல்வம், புகழ், ஆட்சி முதலியவற்றைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்ற கருத்தும் உலகுக்கு நீர் இன்றையமையாததால், நீர்நிலைகள் கட்டி, நீரைத் தேக்கி வைக்கத் தவறியவர்கள் செல்வம், புகழ், ஆட்சி முதலியவற்றை இழக்க நேரிடும் என்றும் குடபுலவியனார் கூறுவதாகக் கொள்ளலாம்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 08, 2013, 06:47:20 PM
புறநானூறு, 19.(எழுவரை வென்ற ஒருவன்)
பாடியவர் : குடபுலவியனார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை : வாகை.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.
=========================================

இமிழ்கடல் வளைஇய ஈண்டுஅகல் கிடக்கைத்
தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து
மன்உயிர்ப் பன்மையும் கூற்றத்து ஒருமையும்
நின்னொடு தூக்கிய வென்வேற் செழிய!
இரும்புலி வேட்டுவன் பொறிஅறிந்து மாட்டிய

பெருங்கல் அடாரும் போன்ம்என விரும்பி
முயங்கினேன் அல்லனோ யானே; மயங்கிக்
குன்றத்து இறுத்த குரீஇஇனம் போல
அம்புசென்று இறுத்த அரும்புண் யானைத்

தூம்புஉடைத் தடக்கை வாயடு துமிந்து
நாஞ்சில் ஒப்ப நிலமிசைப் புரள,
எறிந்துகளம் படுத்த ஏந்துவாள் வலத்தர்
எந்தையோடு கிடந்தோர் எம்புன் தலைப்புதல்வர்
இன்ன விறலும் உளகொல் நமக்குஎன,
மூதில் பெண்டிர் கசிந்துஅழ, நாணிக்

கூற்றுக்கண் ஓடிய வெருவரு பறந்தலை,
எழுவர் நல்வலங் கடந்தோய்நின்
கழூஉ விளங்கு ஆரம் கவைஇய மார்பே.

அருஞ்சொற்பொருள்:-

இமிழல் = ஒலித்தல்
கிடக்கை = உலகம்
ஈண்டுதல் = செறிதல்
தலை = இடம்
மயங்குதல் = கலத்தல், கூடுதல்
தூக்குதல் = ஆராய்தல், ஒப்பு நோக்குதல்
இரு = பெரிய
அடார் = விலங்குகளை அகப்படுத்தும் பொறி
போன்ம் = போலும்
முயங்குதல் = தழுவுதல்
மயங்கி = கலங்கி
இறுத்தல் = தங்குதல்
குரீஇ = குருவி
தூம்பு = இடுக்கு, துளை
தடக்கை = பெரிய கை, வளைந்த கை
துமித்தல் = அறுத்தல்
நாஞ்சில் = கலப்பை
எறிதல் = அறுத்தல்
படுத்தல் = வீழ்த்துதல்
வலம் = வெற்றி, வலி
எந்தை = எம்+தந்தை = எம் தலைவன்
விறல் = வெற்றி
மூதில் = மறக்குடி
கசிதல் = உருகுதல், நெகிழ்தல்
வெரு = அச்சம்; பறந்தலை = போர்க்களம்
கடத்தல் = வெல்லுதல்
கழூஉ = கழுவி
கவைஇய = அகத்திட்ட

இதன் பொருள்:-

ஒலிக்குங் கடலால் சூழப்பட்ட திரண்ட, அகன்ற உலகில் தமிழர்களின் படைகள் தலையாலங்கானத்தில் கைகலந்தன. அப்போரில், பல உயிர்களைத் தனியன் ஒருவனாகக் கொன்ற உனக்கு கூற்றுவன் ஒப்பானவனா என்று ஆராயத்தக்க அளவிற்கு உன் வெற்றிக்குக் காரணமான வேலையுடைய செழிய! வயல்களிலிருந்து தம் நிலை கலங்கி மலைக்குச் சென்று தங்கிய குருவிக் கூட்டம் போல் உடலெங்கும் அம்புகள் துளைத்துத் தங்கியதால் பொறுத்தற்கரிய புண்களைக் கொண்ட யானையின் துளையுடைய பெரிய தும்பிக்கை வாளால் வெட்டப்பட்டு நிலத்தில் கலப்பையைப்போல் புரளுகிறது. அவ்வாறு தும்பிக்கையை வாளால் வெட்டிய வீர இளைஞர்கள் தம் தந்தையரோடு போர்க்களத்தில் இறந்து கிடக்கின்றனர். அதைக் கண்ட மறக்குல மகளிர், இத்தகைய வெற்றியும் நமக்குக் கிடைத்ததோ என்று கண் கசிந்து அழுகின்றனர். அஞ்சத்தக்க போர்க்களத்தில் எழுவரின் நல்ல வலிமையை அழித்தாய். உன் அழிக்கும் ஆற்றலைக் கண்டு கூற்றுவன் வருந்தி நாணுகிறான்.

பெரிய புலியைப் பிடிக்கும் வேடன் மாட்டிய அடார் என்னும் கல்லைப் போன்ற மார்பினன் என்று எண்ணி, கழுவி விளங்கிய முத்தாரம் அணிந்த உன் மார்பை விரும்பித் தழுவினேன் அல்லனோ!
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 08, 2013, 06:48:27 PM
புறநானூறு, 20.(மண்ணும் உண்பர்)
பாடியவர் : குறுங்கோழியூர்கிழார்.
பாடப்பட்டோன் : சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை.
திணை : வாகை.
துறை: அரசவாகை.
=========================================

இருமுந்நீர்க் குட்டமும்
வியன்ஞாலத்து அகலமும்
வளிவழங்கு திசையும்
வறிது நிலைஇய காயமும் என்றாங்கு
அவைஅளந்து அறியினும் அளத்தற்கு அரியை;

அறிவும் ஈரமும் பெருங்க ணோட்டமும்
சோறுபடுக்கும் தீயொடு
செஞ்ஞாயிற்றுத் தெறல்அல்லது
பிறிதுதெறல் அறியார் நின்நிழல்வாழ் வோரே;
திருவில் அல்லது கொலைவில் அறியார்;

நாஞ்சில் அல்லது படையும் அறியார்;
திறனறி வயவரொடு தெவ்வர் தேயஅப்
பிறர்மண் உண்ணும் செம்மல் நின்நாட்டு
வயவுறு மகளிர் வேட்டுஉணின் அல்லது
பகைவர் உண்ணா அருமண் ணினையே!

அம்புதுஞ்சும் கடிஅரணால்
அறம்துஞ்சும் செங்கோலையே!
புதுப்புள் வரினும் பழம்புள் போகினும்
விதுப்புற அறியா ஏமக் காப்பினை
அனையை ஆகல் மாறே
மன்னுயிர் எல்லாம் நின்அஞ் சும்மே.

அருஞ்சொற்பொருள்:-

இரு = பெரிய
முந்நீர் = கடல்
குட்டம் = ஆழம்
காயம் = ஆகாயம்
வறிது = உள்ளீஈடற்றது
ஈரம் = அருள்
படுத்தல் = செய்தல்
தெறல் = வெம்மை
திருவில் = வானவில்
நாஞ்சில் = கலப்பை
திறன் = கூறுபாடு, வழி
வயவர் = வீரர்
செம்மல் = தலைவன்
வயவு = கருப்பம்
வேட்டல் = விருப்பம்
துஞ்சும் = தங்கும்
துஞ்சல் = நிலைத்தல்
ஏமம் = காவல்
விதுப்பு = நடுக்கம்
அனைய ஆகன் மாறு = அத்தன்மையை உடைமையால்

இதன் பொருள்:-

இருமுந்நீர்=====> கொலைவில் அறியார்

பெரிய கடலின் ஆழத்தையும், அகன்ற உலகத்தின் அகலத்தையும், காற்று செல்லும் திசையையும், ஆகாயத்தின் வெறுமையையும் அளந்து அறிய முடிந்தாலும், உன்னுடைய அறிவும், அருளும், கண்ணோட்டமும் அளப்பதற்கு அரிது. உன் நாட்டில், சோறு சமைப்பதற்காக மூட்டிய தீயின் வெப்பமும் சிவந்த ஞாயிற்றின் கதிர்களால் எழும் வெப்பமும்தான் உண்டு. இவற்றைத் தவிர வேறு வெப்பத்தை உன் ஆட்சியில் வாழ்வோர் அறிந்திலர். வானவில் அல்லது கொலைவில்லை அவர்கள் அறியமாட்டர்கள்.

நாஞ்சில்=====> நின்அஞ் சும்மே

கலப்பையைத் தவிர வேறு படையை அவர்கள் அறிந்திலர். போர்த்திறம் மிக்க வீரர்களோடு சென்று பகைவர்களின் நாட்டைக் கவரும் அரசே! உன் நாட்டில் கருவுற்ற பெண்கள் வேட்கையால் உன் நாட்டு மண்ணை உண்ணுவார்களே தவிர உன் பகைவர்களால் உன் நாட்டு மண்ணைக் கொள்ள முடியாது.

உன் நாட்டில் அம்புகளோடு கூடிய காவலுடைய இடங்கள் உள்ளன. அங்கே, நீ அறம் நிலைபெற்ற செங்கோல் செலுத்துகிறாய். புதிய பறவைகள் வருவது பழைய பறவைகள் தங்கள் இடத்தைவிட்டுச் செல்வது போன்ற நிமித்தங்களால் நீ கலங்காமல் வாழக்கூடிய காவலுடையவன். நீ அத்தகையவன் ஆதலால், உலகத்து உயிர்களெல்லாம் உன் நன்மையைக் கருதி அஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 09, 2013, 04:10:03 PM
புறநானூறு, 21
பாடியவர்: ஐயூர் மூலங்கிழார்.
பாடப்பட்டோன்: கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி.
திணை: வாகை.
துறை: அரச வாகை
======================================

"புலவரை யிறந்த புகழ்சாற் றோன்றல்
நிலவரை யிறந்த குண்டுகண் ணகழி
வான்றோய் வன்ன புரிசை விசும்பின்
மீன்புத் தன்ன வுருவ ஞாயிற்
கதிர்நுழை கல்லா மரம்பயிற் கடிமிளை
அருங்குறும் புடுத்த கானப் பேரெயில்
கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய
இரும்புண் நீரினும் மீட்டற் கரிதென
ஆடுகொளக் குழைந்த தும்பைப் புலவர்
பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே
இகழுந ரிசையொடு மாயப்
புகழொடு விளங்கிப் பூக்கநின் வேலே!"

இதன் பொருள்:-

புலவரை இறந்த=====> மரம்பயில் கடிமிளை;

புலவர், தம் பாடும் அளவிற்கும் மேம்பட்ட புகழுடையவனே,

பாதாள உலகத்தை எட்டும் அளவை உடைய ஆழமான அகழிகளையும்,
வானை முட்டுவது போன்ற உயரமான மதில்களையும்,
வானின்கண் விண்மீன் பூத்தது போல் ஆங்காங்கே ஒளி வீசிக்கொண்டிருக்கும் மதில் புறத்து ஏவறைகளையும்,
கதிரவனின் கதிர் நுழைய முடியாதபடிக்கு இருக்கும் காவற்காட்டினையும்,

அருக்குறும்பு====> பூக்கநின் வேலே

கொண்டு, சூழ முடியாதபடி அரிதாய் விளங்கிய "கானப்பேரெயில்", பல அரண்களை உடையதாயிருந்தது!

கரிய வலிமையான கைகளை உடைய கொல்லனின் உலைக் களத்தினில் காய்ச்சிய இரும்பு, அது உண்ட நீரைத், திரும்பப் பெறுவது இயலாது!
அதுபோல், உக்கிரப் பெருவழுதி கைக்கொண்ட எனது கானப்பேரெயிலை மீட்பது இயலாது என, அதை ஆண்ட மன்னன் வேங்கைமார்பன் வருந்தும்படியாக கானப்பேரெயிலை வெற்றிகொண்டாய்!
அது போன்றே, தும்பை அணிந்து நீ போர் புரிந்து பல மன்னர்களை வெற்றி கொண்டு, புலவர் பாடும் புறத்துறை அனைத்தையும் செயலில் செய்த வீரனே, உன் பகைவரின் புகழ் கெட, உன் கை வேல் புகழொடு விளங்குவதாக!

கானப்பேரெயில்- இது தற்போது, காளையார்கோவில் என்று வழங்கப்பெறுகிறது!
இந்தக் கானப்பேரெயிலை ஆண்ட வேங்கைமார்பனை வெற்றிகொண்ட உக்கிரப்பெருவழுதியை பாராட்டி, ஐயூர் மூலங்கிழாரால் பாடப்பெற்ற இப்பாடல், உவமை அழகு செறிந்தது!

அதற்குச் சான்று,
"கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய
இரும்புண் நீரினும் மீட்டற்கு அரிது"
என்னும் அடிகளே!

நெருப்பில் காய்ச்சிய இரும்பில் பட்ட நீரை, மறுபடியும் திரும்பப் பெறுவது எப்படி அரிதோ?!
அதேபோல், உக்கிரப்பெருவழுதி கொண்ட கானப்பேரெயிலை மீட்பது அரிது என்று அதை ஆண்ட வேங்கைமார்பன் எண்ணுவது உவமையின் சிறப்பு!

ஞாயில்= ஏவறை; மதில்புறத்து அமைந்த அம்பு ஏவும் அறை.
கடிமிளை= காவற்காடு; கணையம்.
வைகல்= நாள்.
இகழுநர்= பகைவர்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 09, 2013, 04:12:18 PM
புறநானூறு, 22.(ஈகையும் நாவும்!)
பாடியவர் : குறுங்கோழியூர்கிழார்.
பாடப்பட்டோன் : சேரமான் யானைக்கட் சேஎய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை.
திணை : வாகை.
துறை: அரசவாகை.
=========================================

தூங்குகையான் ஓங்குநடைய
உறழ்மணியான் உயர்மருப்பின
பிறைநுதலான் செறல்நோக்கின
பாவடியால் பணைஎருத்தின
தேன்சிதைந்த வரைபோல

மிஞிறுஆர்க்கும் கமழ்கடாஅத்து
அயறுசோரும் இருஞ்சென்னிய
மைந்துமலிந்த மழகளிறு
கந்துசேர்பு நிலைஇவழங்கப்
பாஅல்நின்று கதிர்சோரும்

வானஉறையும் மதிபோலும்
மாலைவெண் குடைநீழலான்
வாள்மருங்கிலோர் காப்புஉறங்க,
அலங்குசெந்நெல் கதிர்வேய்ந்த
ஆய்கரும்பின் கொடிக்கூரை

சாறுகொண்ட களம்போல
வேறுவேறு பொலிவுதோன்றக்
குற்றானா உலக்கையால்
கலிச்சும்மை வியல்ஆங்கண்
பொலம்தோட்டுப் பைந்தும்பை

மிசைஅலங்கு உளைய பனைப்போழ் செரிஇச்
சினமாந்தர் வெறிக்குரவை
ஓதநீரில் பெயர்புபொங்க;
வாய்காவாது பரந்துபட்ட
வியன்பாசறைக் காப்பாள!

வேந்துதந்த பணிதிறையாற்
சேர்ந்தவர் கடும்புஆர்த்தும்
ஓங்குகொல்லியோர் அடு பொருந!
வேழ நோக்கின் விறல்வெம் சேஎய்!
வாழிய பெரும! நின் வரம்பில் படைப்பே

நிற்பாடிய அலங்குசெந்நாப்
பிறர்இசை நுவலாமை
ஒம்பாது ஈயும் ஆற்றல் எங்கோ!
மாந்தரஞ் சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே
புத்தேள் உலகத்து அற்றுஎனக் கேட்டுவந்து

இனிது கண்டிசின்; பெரும! முனிவிலை
வேறுபுலத்து இறுக்கும் தானையொடு
சோறுபட நடத்திநீ துஞ்சாய் மாறே.

அருஞ்சொற்பொருள்:-

தூங்குதல் = அசைந்தாடுதல்
ஓங்கல் = உயர்ச்சி
உறழ்தல் = மாறுபடுதல்
மருப்பு = கொம்பு
செறல் = கோபித்தல்
பா = பரந்த
பணைத்தல் = பருத்தல்
எருத்து = கழுத்து
சிதைதல் = சிதறுதல்
வரை = மலை
மிஞிறு = தேனீ
ஆர்த்தல் = ஒலித்தல்
கமழ்தல் = மணத்தல்
கடாஅம் = மதம்
அயறு = புண்ணிலிருந்து வடியும் நீர்
சோர்தல் = விழுதல்
மைந்து = வலிமை
மலி = மிகுதி
மழ = இளமை
கந்து = தூண், யானை கட்டும் தறி
சேர்பு = பொருந்தி
சோர்தல் = விழுதல்
மருங்கு = பக்கம்
காப்பு = பாதுகாவல்
அலங்குதல் = அசைதல், ஒளி செய்தல்
ஆய் = மென்மை
கொடி = ஒழுங்கு
சாறு = திருவிழா
ஆனா = நீங்காத (அமையாத)
கலி = ஒலி, முழக்கம்
சும்மை = ஆரவாரம்
பொலம் = பொன், அழகு
தோடு = பூவிதழ்
மிசை = மேற்பக்கம்
அலங்குதல் = அசைதல்
உளை = தலை
பனைப்போழ் = பனந்தோடு
ஓதம் = கடல்
பெயர்பு = கிளர்ந்து
அயன் = அகன்ற
கடும்பு = சுற்றம்
ஆர்த்துதல் = கொடுத்தல், நிறைவித்தல்
விறல் = வெற்றி
வெம்மை = விருப்பம்
படைப்பு = செல்வம்
நுவலுதல் = சொல்லுதல்
ஓம்புதல் = பாதுகாத்தல்
அற்று = அத்தன்மையது
முனிவு = வெறுப்பு, கோபம்
படுத்தல் = செய்தல்
துஞ்சுதல் = சோம்புதல்

இதன் பொருள்:-

தூங்குகையான்=====> கொடிக்கூரை

அசையும் தும்பிக்கை, தலை நிமிர்ந்த நடை, மாறி மாறி ஒலிக்கும் மணிகள், உயர்ந்த கொம்புகள் (தந்தங்கள்), பிறை நிலா போன்ற நெற்றி, கோபம் மிகுந்த பார்வை, அகன்ற காலடிகள், பருத்த கழுத்து ஆகியவற்றுடன் வலிமை மிகுந்த இளம் யானை ஒன்று தான் கட்டப்பட்டிருக்கும் கம்பத்திலே நின்று அசைந்து கொண்டிருக்கிறது. அந்த யானையின் பெரிய தலையில் உள்ள புண்களிலிருந்து மணமுள்ள மதநீர் வடிகிறது. அந்த மதநீரை நுகர்வதற்கு, தேனீக்கள் யானையின் தலையில் ஒலியுடன் மொய்க்கின்றன, அந்த யானையின் தலை தேன்கூடு சிதைந்த மலைபோல் காட்சியளிக்கிறது. அந்த யானையின் பக்கத்தில், முத்து மாலைகளுடன் அலங்கரிக்கப்பட்டு, வானத்திலிருந்து ஒளிவிடும் திங்கள்போல் விளங்கும், வெண்கொற்றக் குடையின் பாதுகாவலில் வீரர்கள் வாள் அணியாமல் உறங்குகிறார்கள். அசையும் செந்நெல் கதிர்களால் வேயப்பட்டு, கரும்பால் ஒழுங்காகக் கட்டப்பட்ட கூரைவீடுகள்,

சாறுகொண்ட=====> வரம்பில் படைப்பே

வேறுவேறு அழகுடன் விழாக்கோலம் பூண்டதுபோல் காட்சி அளிக்கின்றன. அங்கே, பெண்கள் உலக்கையால் குத்தும் ஒலி கேட்டுக்கொண்டே இருக்கிறது. மிகுந்த ஆரவாரமுடைய அகன்ற இடத்தில், பொன்னாலான இதழ்களையுடைய, பசுமையான தும்பை மலர்களுடன், அசையும் பனையோலைகளைச் செருகிக்கொண்டு சினத்தோடு வீரர்கள் குரவை ஆடுகிறார்கள். அவர்களின் குரவைக் கூத்தின் ஒலி கடல் ஒலிபோல் ஆரவாரமாக உள்ளது. உன்னுடைய பெரிய படையைக்கண்டு பகைவர்கள் அஞ்சுகிறார்கள். அகன்ற பாசறையையுடையவனே!

பகைமன்னர்கள் கொண்டுவந்து தந்த திறைப்பொருளால் உன்னை அடைந்தவர்களின் சுற்றத்தாரை நீ வாழச் செய்கிறாய். உயர்ந்த கொல்லிமலையினரின் வெற்றி மிகுந்த தலைவனே! யானையின் பார்வை போன்ற கூர்மையான பார்வையை உடையவனே! வெற்றியை விரும்பும் சேஎய் என்று அழைக்கப் படுவோனே! தலைவ, நீ வாழ்க.

நிற்பாடிய=====> துஞ்சாய் மாறே.

உன் செல்வம் எல்லை இல்லாதது. உன்னப் பாடிய செவ்விய நாவால் பிறர் புகழைப் பாடவேண்டிய தேவை இல்லாதவாறு, குறையாது கொடுக்கும் ஆற்றல் மிகுந்த எம் அரசே! மாந்தரஞ் சேரல் இரும்பொறையால் பாதுகாக்கப்படும் நாடு தேவருலகத்தைப் போன்றது என்று பிறர் சொல்லக் கேட்டு வந்தேன். என் கண்ணுக்கு இனிமையாக உன்னைக் கண்டேன். தலைவ! நீ சோம்பல் இல்லாதவன்; முயற்சியில் வெறுப்பில்லாமல், வேற்று நாட்டில் சென்று தங்கும் படையுடன், உன் நாட்டில் வளம் பெருகுமாறு ஆட்சி செய்வாயாக.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 09, 2013, 04:16:45 PM
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash3/537262_542424189115830_1968484650_n.jpg)

புறநானூறு, 23.(நண்ணார் நாணுவர்!)
பாடியவர் : கல்லாடனார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை : வாகை.
துறை: அரச வாகை; நல்லிசை வஞ்சியும் ஆம்.
=========================================

வெளிறில் நோன்காழ்ப் பணைநிலை முனைஇக்
களிறுபடிந்து உண்டெனக் கலங்கிய துறையும்
கார்நறுங் கடம்பின் பாசிலைத் தெரியல்
சூர்நவை முருகன் சுற்றத்து அன்னநின்
கூர்நல் அம்பின் கொடுவில் கூளியர்

கொள்வது கொண்டு கொள்ளா மிச்சில்
கொள்பதம் ஒழிய வீசிய புலனும்
வடிநவில் நவியம் பாய்தலின் ஊர்தொறும்
கடிமரம் துளங்கிய காவும்; நெடுநகர்
வினைபுனை நல்லில் வெவ்வெரி இனைப்பக்

கனைஎரி உரறிய மருங்கு நோக்கி
நண்ணார் நாண நாள்தொறும் தலைச்சென்று
இன்னும் இன்னபல செய்குவன் யாவரும்
துன்னல் போகிய துணிவி னோன்என
ஞாலம் நெளிய ஈண்டிய வியன்படை

ஆலங் கானத்து அமர்கடந்து அட்ட
கால முன்பநின் கண்டனென் வருவல்;
அறுமருப்பு எழிற்கலை புலிப்பால் பட்டெனச்
சிறுமறி தழீஇய தெறிநடை மடப்பிணை
பூளை நீடிய வெருவரு பறந்தலை

வேளை வெண்பூக் கறிக்கும்
ஆளில் அத்தம் ஆகிய காடே.

அருஞ்சொற்பொருள்:-

வெளிறு = வெண்ணிறம்
நோன்மை = வலிமை
காழ் = வயிரம் (உறுதி)
காழ்த்தல் = முற்றுதல்
பணை = விலங்கின் படுக்கை, கூடம்
நிலை = நிற்றல்
முனை = வெறுப்பு
கார் = கார்காலம்
நறுமை = நன்மை
நவைதல் = கொல்லுதல்
கொடு = வளைந்த
கூளியர் = படைவீரர்
கூளி = உறவு, வலிமை
மிச்சில் = எஞ்சியது
பதம் = உணவு
வடித்தல் = கூராக்குதல்
நவிலுதல் = பழகுதல், கற்றல்
நவியம் = கோடரி
துளங்கல் = கலங்கல் (நிலை கலங்கல்)
கா = சோலை (காடு)
இனைப்ப = கெடுப்ப
கனை = மிகுதி
உரறுதல் = முழங்குதல்
மருங்கு = பக்கம்
நண்ணார் = பகைவர்
துன்னுதல் = நெருங்குதல்
நெளிதல் = சுருளுதல்
வியன் = மிகுதி (பெரிய)
அட்ட = அழித்த (கொன்ற)
காலன் = இயமன்
முன்பு = வலிமை
அறுதல் = இல்லாமற் போதல்
மருப்பு = கொம்பு
எழில் = உயர்ச்சி (பெரிய)
கலை = ஆண்மான்
மறி = மான் குட்டி
தெறித்தல் = பாய்தல் (துள்ளல்)
மடம் = மென்மை
பிணை = பெண்மான்
பூளை = ஒரு செடி
பறந்தலை = பாழிடம்
வேளை = ஒரு பூண்டு
கறித்தல் = கடித்துத் தின்னுதல்
அத்தம் = பாலை நிலம், வழி

இதன் பொருள்:-

வெளிறில்=====> கூளியர்

வலிய, முற்றிய மரத்தூண்களால் கட்டப்பட்ட கூடத்தில் இருப்பதை வெறுத்து, வெளியேறிய யானைகள் நீரை உண்டதால் நீர்த்துறைகள் கலங்கி உள்ளன. கார்காலத்தில், மணமுள்ள கடம்பமரத்தின் பசுமையான இலைகளுடன் கூடிய மாலைகளை அணிந்து, சூரபன்மனைக் கொன்ற முருகனின் படைவீரர்களைப் போன்ற உன் வீரர்கள் கூரிய நல்ல அம்புகளையும், வளைந்த வில்லையும் உடையவர்களாக உள்ளனர்.

கொள்வது கொண்டு=====> வெவ்வெரி இனைப்ப

அவர்கள் தமக்கு வேண்டிய உணவுப் பொருட்களை எடுத்துக்கொண்டு மிச்சமிருப்பதைப் பகைவர்கள் உணவுப் பொருளாகப் பயன்படுத்த முடியாதவாறு நிலத்தில் சிதறினார்கள். உன் வீரர்கள் கூர்மையான கோடரியைக்கொண்டு காவல் மரங்களை வெட்டியதால் காவற் காடுகள் நிலைகுலைந்தன. பெரிய நகரத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட நல்ல வீடுகளில் சமைப்பதற்காக மூட்டிய தீயை அவிக்கும் வகையில்

கனைஎரி=====> வியன்படை

பெரிய தீயைப் பல பக்கங்களிலும் உன் வீரர்கள் மூட்டியதைப் பார்த்த உன் பகைவர்கள் நாணுகிறார்கள். நீ, நாள்தோறும் தம்மிடம் வந்து இன்னும் இது போன்ற செயல்களைச் செய்வாயோ என்று எண்ணுகிறார்கள்; யாவரும் அணுகமுடியாத துணிவுடையவன் என்றும் எண்ணுகிறார்கள். நீ, பூமியால் சுமக்க முடியாத அளவுக்குப் பெரிய படையை உடையவன்;

ஆலங் கானத்து=====> காடே

தலையாலங்கானத்தில் பகைவரை இயமன்போல் எதிர்நின்று அழித்தவன். நீ மிகுந்த வலிமையுடையவன். தன் கொம்புகளை இழந்த பெரிய ஆண்மான் புலியிடம் சிக்கிக்கொண்டதால், அதன் துணையாகிய மெல்லிய பெண்மான் தன் சிறிய குட்டியை அணைத்துக்கொண்டு துள்ளிய நடையுடன், பூளைச்செடி வளர்ந்த அஞ்சத்தக்கப் பாழிடத்தில் வேளையின் வெண்ணிறப் பூக்களைத் தின்னும் ஆள் நடமாட்டம் இல்லாத, கடத்தற்கரிய காட்டு வழியாக உன்னைக் காணவந்தேன்.

சிறப்புக் குறிப்பு:-

கல்லாடனார் தான் காட்டு வழியாக வந்த பொழுது ஆண்மான் புலியிடம் சிக்கிக்கொண்டதையும் அம்மானின் துணையாகிய பெண்மான் தன் குட்டியுடன் அச்சத்தோடும் உண்ணுவதற்கு நல்ல உணவில்லாமல் வருந்ததத் தக்க நிலையில் இருப்பதைக் கண்டதாகவும் இப்பாடலில் கூறுகிறார். அவர் கூறுவது, படைவீரர்கள் இறந்த பிறகு அவர்களின் மனைவியரும் குழந்தைகளும் படும் துன்பத்தை மறைமுகமாகப் பாண்டியனுக்குச் சுட்டிக்காட்டுவதாகத் தோன்றுகிறது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 09, 2013, 04:24:22 PM
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash3/550733_542470312444551_1905803137_n.jpg)

புறநானூறு, 24.(வல்லுநர் வாழ்ந்தோர்!)
பாடியவர் : மாங்குடி கிழார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை : பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: பொருண்மொழிக் காஞ்சி . உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல்.
=========================================

நெல்அரியும் இருந்தொழுவர்
செஞ்ஞாயிற்று வெயில்முனையின்
தெண்கடல்திரை மிசைப்பாயுந்து,
திண்திமில் வன்பரதவர்
வெப்புடைய மட்டுண்டு,

தண்குரவைச் சீர்தூங்குந்து,
தூவற்கலித்த தேம்பாய்புன்னை
மெல்லிணர்க் கண்ணி மிலைந்த மைந்தர்
எல்வளை மகளிர்த் தலைக்கை தரூஉந்து,
வண்டுபட மலர்ந்த தண்ணறுங் கானல்

முண்டகக் கோதை ஒண்டொடி மகளிர்
இரும் பனையின் குரும்பை நீரும்,
பூங்கரும்பின் தீஞ்சாறும்,
ஓங்குமணற் குவவுத்தாழைத்
தீநீரோடு உடன்விராஅய்

முந்நீர்உண்டு முந்நீர்ப்பாயும்
தாங்கா உறையுள் நல்லூர் கெழீஇய
ஒம்பா ஈகை மாவேள் எவ்வி,
புனலம் புதவின் மிழலையொடு கழனிக்
கயலார் நாரை போர்வில் சேக்கும்,

பொன்னணி யானைத் தொன்முதிர் வேளிர்
குப்பை நெல்லின் முத்தூறு தந்த
கொற்ற நீள்குடைக் கொடித்தேர்ச் செழிய!
நின்று நிலைஇயர்நின் நாண்மீன்; நில்லாது
படாஅச் செலீஇயர் நின்பகைவர் மீனே;

நின்னொடு தொன்றுமூத்த உயிரினும் உயிரொடு
நின்று மூத்த யாக்கை யன்ன நின்
ஆடுகுடி மூத்த விழுத்திணைச் சிறந்த
வாளின் வாழ்நர் தாள்வலம் வாழ்த்த,
இரவன் மாக்கள் ஈகை நுவல,

ஒண்டொடி மகளிர் பொலங்கலத்து ஏந்திய
தண்கமழ் தேறல் மடுப்ப மகிழ்சிறந்து
ஆங்குஇனிது ஒழுகுமதி பெரும! ஆங்கது
வல்லுநர் வாழ்ந்தோர் என்ப தொல்லிசை
மலர்தலை உலகத்துத் தோன்றிப்

பலர்செலச் செல்லாது நின்றுவிளிந் தோரே.

அருஞ்சொற்பொருள்:-

அரித்தல் = அறுத்தல் (அறுவடை செய்தல்)
இரு = பெரிய
தொழுவர் = மருதநில மக்கள் (உழவர்)
திண் = வலி
திமில் = மரக்கலம், தோணி
பரதவர் = நெய்தல் நில மக்கள் (மீனவர்)
மட்டு = கள்
குரவை = கூத்து
சீர் = தாளவொத்து
தூங்கல் = ஆடல்
உந்துதல் = பொருந்துதல்
தூவல் = நீர்த்துளி
கலித்தல் = தழைத்தல்
பாய = பரப்பிய
இணர் = கொத்து
மிலைதல் = சூடுதல்
மைந்தர் = ஆடவர்
தலைக்கை தருதல் = கையால் தழுவி அன்பு காட்டுதல்.
கானல் = கடற்கரைச் சோலை
முண்டகம் = நீர் முள்ளி
கோதை = பூமாலை
குரும்பை = நுங்கு (தென்னை, பனை முதலியவற்றின் இளங்காய்)
பூ = பொலிவு, அழகு
குவவுதல் = குவிந்த
தாழை = தென்னை
விரவுதல் = கலத்தல்
உறையுள் = தங்குமிடம்
தாங்குதல் = ஆதரித்தல், நிறுத்துதல், தடுத்தல்
கெழீஇய = பொருந்திய
புதவு = நீர் பாயும் மடைவாய், மதகு, கதவு
மிழலை = மிழலைக் கூற்றம்
கழனி = வயல்
சேக்கை = விலங்கின் படுக்கை
குப்பை = தானியக் குவியல்
முத்தூறு = முத்தூற்றுக் கூற்றம்
கொற்றம் = வெற்றி
நாண்மீன் = நட்சத்திரம்
மூத்த = முதிர்ந்த
ஆடு = வெற்றி
விழு = சிறந்த
திணை = குடி
வலம் = வலிமை
தாள் = முயற்சி
இரவன் = இரக்கும் பரிசிலர்
தேறல் = மது
மடுத்தல் = உண்ணுதல், விழுங்குதல்
வல்லுநர் = வல்லவர்.

இதன் பொருள்:-

நெல்அரியும்=====> உடன்விராஅய்

நெல்லை அறுவடை செய்யும் உழவர்கள் கதிரவனின் வெயிலின் வெப்பத்தை வெறுத்து, தெளிந்த கடல் அலைகள் மீது பாய்வர். வலிய மரக்கலங்களை உடைய மீனவர்கள், புளித்த கள்ளை உண்டு

மெல்லிய குரவைக் கூத்தைத் தாளத்திற்கேற்ப ஆடுவர். கடல் நீர்த்துளிகளால் தழைத்து வளர்ந்த புன்னை மரங்களின் தேன்நிறைந்த மலர்களால் கட்டப்பட்ட மாலையை அணிந்த ஆடவர்கள், ஒளிவீசும் வளை அணிந்த கைகளையுடைய மகளிரைக் அன்புடன் கையால் தழுவி ஆடுவர். வண்டுகள் மொய்க்கும் மலர்கள் நிறைந்த, குளிர்ந்த, நறுமணம் பொருந்திய கடற்கரைச் சோலையில்

நீர்முள்ளிப் பூக்களால் தொடுக்கப்பட்ட மாலையணிந்த மகளிர், பெரிய பனை நுங்கின் நீர், அழகிய கரும்பின் இனிய சாறு, உயர்ந்த மணற் குவியலில் தழைத்த தென்னையின் இளநீர் ஆகிய மூன்றையும் கலந்து

முந்நீர்உண்டு=====> ஈகை நுவல

குடித்துக் கடலில் பாய்ந்து விளையாடுவர். இவ்வாறு பல்வேறு மக்களும் மகிழ்ச்சியாக வாழும் நல்ல ஊர்கள் அடங்கிய நாடு மிழலைக் கூற்றம். அந்நாட்டின் தலைவன், குறையாது கொடுக்கும் கொடைத்தன்மையையுடைய வேளிர் குலத்தைச் சார்ந்த எவ்வி என்பவன். மிழலைக் கூற்றத்தைப் போலவே, முத்தூற்றுக் கூற்றம் என்னும் நாடும் ஒருவளமான நாடு. அந்நாட்டில், நீர் பாயும் மதகுகள் உள்ளன. அங்கே, வயல்களில் உள்ல கயல் மீன்களை மேய்ந்த நாரை வைக்கோற்போரில் உறங்குகின்றன.

பொன்னாலான அணிகலன்களை அணிந்த யானைகள் உள்ளன; வயல்களில் விளைந்த நெல் குவியல் குவில்களாகக் கிடக்கின்றன. அந்த நாட்டை ஆள்பவனும் வேளிரின் குலத்தைச் சார்ந்தவன்தான்.
அத்தகைய மிழலைக் கூற்றத்தையும் முத்தூற்றுக் கூற்றத்தையும் வென்ற செழியனே! ஒளி பொருந்திய நீண்ட குடையையும், கொடிபறக்கும் தேரையையும் உடைய செழியனே! நீ நீண்ட நாட்கள் வாழ்க! உன் பகைவர்கள் நீண்ட நாட்கள் வாழாது ஒழிக! உயிருடன் கூடிய உடல் போன்று உன்னுடன் தொடர்புடைய உன் வெற்றி மிகுந்த வாட்படை வீரர்கள் உன் முயற்சியையும் வலிமையையும் வாழ்த்த, ஒளிபொருந்திய வளையல்களை அணிந்த மகளிர்,

ஒண்டொடி=====> நின்றுவிளிந் தோரே

பொன்னானாலான பாத்திரங்களில் கொண்டுவந்து தரும் குளிர்ந்த, மணமுள்ள மதுவைக் குடித்து, மகிழ்ச்சியோடு சிறந்து வாழ்வாயாக! தலைவ! இந்தகைய வாழ்க்கை வாழ்ந்தவர்கள்தான் உண்மையிலேயே வாழ்ந்தவர்களாகக் கருதப்படுவார்கள் என்று அறிஞர்கள் கூறுவர். அவ்வாறு இல்லாமல், இந்தப் பரந்த உலகத்தில் தோன்றிப் புகழ் பெருக வாழாமல் வாழ்ந்து முடித்தோர் பலர். அவர்கள் வாழ்ந்தாலும் இறந்ததாகவே கருதப்படுவர்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 09, 2013, 04:31:03 PM
(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash4/480270_542839869074262_872738058_n.jpg)

புறநானூறு, 25.(கூந்தலும் வேலும்!)
பாடியவர் : கல்லாடனார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை : வாகை.
துறை: அரசவாகை.
========================================

மீன்திகழ் விசும்பின் பாய்இருள் அகல
ஈண்டுசெலல் மரபின் தன் இயல் வழாஅது
உரவுச்சினம் திருகிய உருகெழு ஞாயிறு
நிலவுத்திகழ் மதியமொடு நிலஞ்சேர்ந் தாஅங்கு
உடலருந் துப்பின் ஒன்றுமொழி வேந்தரை

அணங்கரும் பறந்தலை உணங்கப் பண்ணிப்,
பிணியுறு முரசம் கொண்ட காலை
நிலைதிரிபு எறியத் திண்மடை கலங்கிச்
சிதைதல் உய்ந்தன்றோ நின்வேல்; செழிய!
முலைபொலி அகம் உருப்ப நூறி,

மெய்ம்மறந்து பட்ட வரையாப் பூசல்,
ஒள் நுதல் மகளிர் கைம்மை கூர,
அவிர்அறல் கடுக்கும் அம்மென்
குவைஇரும் கூந்தல் கொய்தல் கண்டே

அருஞ்சொற்பொருள்:-

விசும்பு = ஆகாயம்
பாய்தல் = பரவுதல்
ஈண்டு = விரைவு
உரவு = வலி
திருகிய = வளைந்த, முறுகிய
உரு = அச்சம்
உடலுதல் = பொருதல்
துப்பு = வலி
ஒன்றுமொழிதல் = வஞ்சினம் கூறுதல்
அணங்கு = வருத்தம்
பறந்தலை = போர்க்களம்
உணங்கல் = துன்பப்படல்
திரிபு = வேறுபாடு
எறிதல் = நீக்கல், வெல்லுதல்
திண் = வலி
மடை = ஆயுத மூட்டு
சிதைதல் = கெடுதல், அழிதல்
ஆகம் = மார்பு, நெஞ்சு
உருத்தல் = வெப்புமுறச் செய்தல்
நூறுதல் = அழித்தல், நசுக்குதல், இடித்தல்
படுத்தல் = செய்தல்
பூசல் = பெரிதொலித்தல்
கூர்த்தல் = மிகுத்தல்
கூர் = மிகுதி
அவிர்தல் = விளங்கல்
அறல் = கருமணல்
கடுக்கும் = ஒக்கும்
குவை = திரட்சி
இரு = கரிய
கொய்தல் = அறுத்தல்

இதன் பொருள்:-

மீன்திகழ்=====> வேந்தரை

விண்மீன்கள் திகழும் ஆகாயத்தில் பரவிய இருள் அகல, விரைந்து செல்லும் தன்மையிலிருந்து தவறாது, வலிய, வெப்பம் மிகுந்த, அச்சம் பொருந்திய கதிரவனும், நிலாவொளியைத் தரும் திங்களும் வந்து நிலத்தில் சேர்ந்தாற்போல விளங்கி, வஞ்சினம் கூறிய, வலிமையுடைய இரு வேந்தர்களும் (சேரனும் சோழனும்) அழியுமாறு நீ போர் செய்தாய்;

அணங்கரும்=====> கொய்தல் கண்டே

அவ்விருவரையும் கொடிய போர்க்களத்தில் நிலைகலங்கச் செய்தாய்; அவர்களிடமிருந்து, வாரால் பிணிக்கப்பட்ட போர்முரசுகளைக் கைப்பற்றினாய்; நின்ற நிலையிலே நின்று, உன்னைச் சூழ்ந்த பகைவர்களின் வீரர்களைப் பிடித்துத் தூக்கியெறிந்தாய். செழியனே! போரில் கணவனை இழந்த மகளிர், கருமணல் போன்று விளங்கும் தம் கூந்தலை அறுத்துக்கொண்டு, துயரத்துடன் தம் முலைகள் பொலிந்த மார்பகங்களை வெப்பம் உண்டாகுமாறு அடித்துக்கொண்டார்கள். அதைக் கண்டதும் நீ போரை நிறுத்தியதால், உன் வேல்கள் தொடர்ந்து பகைவர்ளைத் தாக்கப் பயன்படுத்தப்படவில்லை. ஆகவே, அவைகள் சேதமில்லாமல் தப்பின
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 09, 2013, 04:35:16 PM
(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash3/537167_542847622406820_354487927_n.jpg)

புறநானூறு, 26.(நோற்றார் நின் பகைவர்!)
பாடியவர் : மாங்குடி மருதனார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை : வாகை.
துறை: அரசவாகை.
=========================================

நளிகடல் இரும்குட்டத்து
வளிபுடைத்த கலம்போலக்
களிறுசென்று களன்அகற்றவும்,
களன்அகற்றிய வியல்ஆங்கண்
ஒளிறுஇலைய எஃகுஏந்தி

அரைசுபட அமர்உழக்கி,
உரைசெல முரசுவெளவி,
முடித்தலை அடுப்பாகப்
புனல்குருதி உலைக்கொளீஇத்
தொடித்தோள் துடுப்பின் துழந்த வல்சியின்

அடுகளம் வேட்ட அடுபோர்ச் செழிய!
ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை
நான்மறை முதல்வர் சுற்ற மாக,
மன்னர் ஏவல் செய்ய மன்னிய
வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே!

நோற்றோர் மன்ற நின் பகைவர் நின்னொடு
மாற்றார் என்னும் பெயர்பெற்று
ஆற்றார் ஆயினும் ஆண்டுவாழ் வோரே

அருஞ்சொற்பொருள்:-

நளி = பெருமை
இரு = பெரிய
குட்டம் = ஆழம்
வளி = காற்று
புடைத்தல் = குத்துதல், தட்டுதல்
கலம் = மரக்கலம் (கப்பல்)
வியல் = அகலம்
எஃகு = வேல், ஆயுதம்
அரைசு = அரசன்
அமர் = போர்
உழக்குதல் = கலக்குதல், வெல்லல்
உரை = புகழ்
புனல் = நீர்
துழத்தல் = கலத்தல்
வல்சி = உணவு
அடு களம் = போர்க்களம்
அடுதல் = கொல்லல்
ஆன்ற = மாட்சிமைப்பட்ட, நிறைந்த
கொள்கை = அறிவு, கோட்பாடு, நோன்பு
முதல்வர் = தலைவர்
மன்னுதல் = நிலைபெறுதல்
வாய் = சிறப்பு
முற்றிய = முடித்த
நோற்றல் = தவஞ் செய்தல், பொறுத்தல்
மன்ற – அசைச் சொல், மிக
மாற்றார் = பகைவர்
ஆண்டு = அவ்வுலகம்

இதன் பொருள்:-

நளிகடல்=====> துழந்த வல்சியின்

ஆழம் மிகுந்த பெரிய கடலில் காற்றால் தள்ளப்பட்டு ஓடும் மரக்கலம் நீரைக் கிழித்துக்கொண்டு செல்வதுபோல, உன் யானை போர்க்களத்தில் பகைவர்களின் படையை ஊடுருவிச் சென்றது. அந்த யானை சென்ற அகன்ற பாதையில் ஒளிவிடும் வேல்களை ஏந்தி உன்னை எதிர்த்து நின்ற வேந்தர்களை அழித்து அவர்களது புகழ் பொருந்திய முரசுகளை நீ கைப்பற்றினாய். அவ்வரசர்களின் முடியணிந்த தலைகளை அடுப்பாகவும், அவர்களின் குருதியை உலை நீராகவும், வீரவளை அணிந்த அவர்களின் கைகளைத் துடுப்பாகவும் கொண்டு துழாவிச்

அடுகளம் வேட்ட=====> வாய்வாள் வேந்தே!

சமைக்கப்பட்ட உணவால் போர் வேள்வி செய்த செழிய!
நிலைபெற்ற புகழுடைய வேள்விகளைச் செய்து முடித்த வேந்தே! நீ அவ்வேள்விகளைச் செய்த பொழுது, நிறைந்த கேள்வி, ஐம்புலன்களை அடக்கிய மனவலிமை, நான்கு வேதங்களையும் கற்றதால் பெற்ற அறிவு ஆகியவற்றையுடைய அந்தணர்களை உன்னைச் சூழ்ந்திருந்தார்கள்; பகை மன்னர்கள் உனக்கு ஏவல் செய்தார்கள்.

நோற்றோர்=====> வாழ் வோரே

உன்னோடு மாறுபட்டு உன்னை எதிர்த்த பகைவர்களும் ஒருவகையில் நோன்பு செய்தவர்கள்தான். அவர்கள் போரில் வீரமரணம் அடைந்ததால் விண்ணுலகம் சென்று வாழ்கிறார்கள்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 09, 2013, 04:38:28 PM
(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-snc7/582548_543040882387494_1419946375_n.jpg)

புறநானூறு, 27.(புலவர் பாடும் புகழ்!)
பாடியவர் : உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.
பாடப்பட்டோன் : சோழன் நலங்கிள்ளி.
திணை : பொதுவியல்.
துறை: முதுமொழிக் காஞ்சி. அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று உறுதிப் பொருட்களைப் பற்றிக் கூறுவது.
=========================================

சேற்றுவளர் தாமரை பயந்த ஒண்கேழ்
நூற்றிதழ் அலரின் நிறைகண்டு அன்ன
வேற்றுமை இல்லா விழுத்திணைப் பிறந்து
வீற்றிருந் தோரை எண்ணுங் காலை
உரையும் பாட்டும் உடையோர் சிலரே;

மரைஇலை போல மாய்ந்திசினோர் பலரே:
புலவர் பாடும் புகழுடையோர், விசும்பின்
வலவன் ஏவா வான ஊர்தி
எய்துப என்பதம் செய்வினை முடித்தெனக்
கேட்பல்; எந்தை! சேட்சென்னி! நலங்கிள்ளி!

தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும்
மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும்
அறியா தோரையும் அறியக் காட்டித்
திங்கட் புத்தேள் திரிதரும் உலகத்து
வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும்

வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி
அருள வல்லை ஆகுமதி; அருளிலர்
கொடா அமை வல்லர் ஆகுக;
கெடாத் துப்பின்நின் பகைஎதிர்ந் தோரே

அருஞ்சொற்பொருள்:-

பயத்தல் = கொடுத்தல், பிறப்பித்தல் (பூத்த)
கேழ் = நிறம்
அலரி = மலர் (பூவிற்குப் பொதுப் பெயர்)
நிரை = ஒழுங்கு, படைவகுப்பு (வரிசை)
விழு = சிறந்த
திணை = குடி
உரை = புகழ்
மரை = தாமரை
வலவன் = ஓட்டுபவன்
ஊர்தி = வாகனம்
எய்துதல் = அடைதல்
தேய்தல் = குறைதல்
பெருகல் = வளர்தல்
புத்தேள் = தெய்வம்
வல்லுநர் = அறிஞர்
மருங்கு = விலாப்பக்கம், இடை, வடிவு
துப்பு = வலிமை

இதன் பொருள்:-

சேற்றுவளர்=====> உடையோர் சிலரே

சேற்றிலே வளரும் தாமரைச் செடியில் பூத்த ஒளிபொருந்திய தாமரை மலரில் உள்ள பல இதழ்களின் வரிசைபோல், உயர்வு தாழ்வு இல்லாத சிறந்த குடியில் பிறந்த அரசர்களை எண்ணிப்பார்க்கும்பொழுது, புகழுக்கும், புலவர்களால் புகழ்ந்து பாடும் பாடல்களுக்கும் உரியவர்கள் சிலரே.

மரைஇலை=====> நலங்கிள்ளி!

தாமரையின் இலைபோலப் பயனின்றி மறைந்தவர் பலர். தாம் செய்ய வேண்டிய நல்வினைகளைச் செய்து முடித்தவர்கள் புலவர்களால் பாடப்படும் புகழுடையவர்களாவார்கள். மற்றும், அவர்கள் ஆகாயத்தில் ஒட்டுநர் தேவையில்லாமல் தானாகவே செல்லும் விமானங்களைப் பெறுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். என் தலைவ! சேட் சென்னி என்று அழைக்கப்படும் நலங்கிள்ளி!

தேய்தல்=====> வல்லுநர் ஆயினும்

தேய்தல், வளர்தல், மறைதல், இறந்தவர்கள் மீண்டும் பிறத்தல் போன்ற உண்மைகளை அறியாதவர்களுக்கு அறிவுறுத்தும் திங்கள் தெய்வம் உலாவும் இவ்வுலகத்தில், ஆற்றல் இல்லாதவர்களாக இருந்தாலும், அறிஞர்களாக இருந்தாலும்

வருந்தி=====> பகைஎதிர்ந் தோரே

உன்னிடம் வருந்தி வந்தவர்களின் நிலையைப் பார்த்து அவர்களுக்கு அருள் செய்வாயாக! குறைவற்ற வலிமையையுடைய உன் பகையை எதிர்கொண்டவர்கள் அருளில்லாதவர்களாகவும் ஈகைத்தன்மை அற்றவர்களாகவும் ஆவார்களாக.

சிறப்புக் குறிப்பு:-

நூறு என்ற சொல் ஒரு எண்ணைக் குறிக்காமல் பல என்ற பொருளில் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. ”நூற்றிதழ் தாமரைப்பூ” என்று (ஐங்குறுநூறு – 20) பிறரும் பாடியுள்ளனர்.

”உரை” என்ற சொல் எல்லோராலும் புகழப்படும் புகழையும், ”பாட்டு” என்பது புலவர்களால் பாடப்படும் புகழையும் குறிக்கும் என்று அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் தம் நூலில் குறிப்பிடுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 09, 2013, 04:41:35 PM
புறநானூறு, 28.(போற்றாமையும் ஆற்றாமையும்!)
பாடியவர் : உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.
பாடப்பட்டோன் : சோழன் நலங்கிள்ளி.
திணை : பொதுவியல்.
துறை: முதுமொழிக் காஞ்சி.
=========================================

சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும்
கூனும் குறளும் ஊமும் செவிடும்
மாவும் மருளும் உளப்பட வாழ்நர்க்கு
எண்பேர் எச்சம் என்றிவை எல்லாம்
பேதைமை அல்லது ஊதியம் இல்லென

முன்னும் அறிந்தோர் கூறினர்; இன்னும்,
அதன்திறம் அத்தையான் உரைக்க வந்தது
வட்ட வரிய செம்பொறிச் சேவல்
ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம்
கானத் தோர்நின் தெவ்வர்; நீயே

புறஞ்சிறை மாக்கட்கு அறங்குறித்து அகத்தோர்
புய்த்தெறி கரும்பின் விடுகழை தாமரைப்
பூம்போது சிதைய வீழ்ந்தெனக் கூத்தர்
ஆடுகளம் கடுக்கும் அகநாட் டையே;
அதனால் அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்

ஆற்றும் பெருமநின் செல்வம்
ஆற்றாமை நின் போற்றா மையே

அருஞ்சொற்பொருள்:-

சிதடு = குருடு
பிண்டம் = தசை
குறள் = குறுமை (ஈரடி உள்ள மனிதன்)
ஊம் = ஊமை
மா = விலங்கு
மருள் = மயக்கம் (அறிவு மயக்கம்)
உளப்பாடு = உள்ள தன்மை
எச்சம் = குறைபாடு
பேதைமை = பேதைத் தன்மையுடைய பிறப்பு
ஊதியம் = பயன்
திறம் = கூறுபாடு, தத்துவம்
வரி = கோடு
பொறி = புள்ளி
ஏனல் = தினைப்புனம்
புய்த்தல் = பிடுங்கல், பறித்தல்
கழை = கட்டை, கழி
போது = மலரும் பருவத்திலுள்ள அரும்பு
கடுக்கும் = ஒக்கும்
போற்றுதல் = பாதுகாத்தல்

இதன் பொருள்:-

சிறப்பில்=====> இல்லென

சிறப்பில்லாத குருடு, உருவமில்லாத தசைப் பிண்டம், கூன், குட்டை, ஊமை, செவிடு, விலங்கின் வடிவம், அறிவு மயக்கம், ஆகிய எட்டுவகைக் குறையுள்ள பிறவிகள் எல்லாம் பயனற்றவை

முன்னும்=====> தெவ்வர்; நீயே

என்று அறிஞர்கள் முன்னரே கூறினர். நான் சொல்ல வந்தது, ”எது பயனுள்ள பிறவி” என்பது. வட்ட வடிவமான வரிகளையும், சிவந்த புள்ளிகளையும் உடைய சேவல் கோழிகள் கூவித் தினைப்புனம் காப்பவர்களை எழுப்பும் காட்டில் உன் பகைவர்கள் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். நீயோ

புறஞ்சிறை=====> இன்பமும் மூன்றும்

வளமான நாட்டில் உள்ளாய். உன் நாட்டில், கரும்பு விளையும் வயல்களின் வேலிக்கு வெளியே இருப்பவர்கள் கரும்பு வேண்டும் என்று கேட்பதால், வேலிக்கு உள்ளே இருப்பவர்கள் கரும்புகளைப் பிடுங்கி வேலிக்கு வெளியே எறிகிறார்கள். அவர்கள் எறியும் கரும்புகளின் தண்டுகள், அருகில் உள்ள குளங்களிலுள்ள தாமரை அரும்புகளின் மீது விழுவதால் அவ்வரும்புகள் சிதறிக்கிடக்கின்றன. இந்தக் காட்சியைப் பார்த்தால், கழைக்கூத்தர்கள் ஆடும் களத்தில் பூக்கள் சிதறிக் கிடப்பதுபோல் உள்ளது. நீ இத்தகைய மருத நில வளமுடைய நாட்டை உடையவன். அதனால், உன் செல்வம் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும்

ஆற்றும்=====> போற்றா மையே

அடைவதற்குப் பயன்படட்டும். அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் அடைவதற்கு உன் செல்வத்தை நீ பயன்படுத்தாவிட்டால், நீ உன்னைப் பாதுகாத்துக்கொள்ளத் தவறியவனாவாய்.

சிறப்புக் குறிப்பு:-

இப்பிறவியில் செல்வத்தைப் நல்வழியில் பயன்படுத்தி, அறவழியில் நின்று, பொருள் ஈட்டி, இன்பம் துய்த்து வாழ்ந்தால், மறுபிறவில் குருடு, கூன், ஊமம், செவிடு போன்ற குறைகள் இல்லாமல் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளலாம் என்று மறைமுகமாகப் புலவர் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் சோழன் நலங்கிள்ளிக்கு அறிவுரை கூறுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 09, 2013, 04:44:53 PM
(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-ash4/487348_543487732342809_2087894256_n.jpg)

புறநானூறு, 29.(நண்பின் பண்பினன் ஆகுக!)
பாடியவர் : உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.
பாடப்பட்டோன் : சோழன் நலங்கிள்ளி.
திணை : பொதுவியல்.
துறை: முதுமொழிக் காஞ்சி.
=========================================

அழல்புரிந்த அடர்தாமரை
ஐதுஅடர்ந்த நூல்பெய்து
புனைவினைப் பொலிந்த பொலம்நறுந் தெரியல்
பாறுமயிர் இருந்தலை பொலியச் சூடிப்
பாண்முற் றுகநின் நாள்மகிழ் இருக்கை;

பாண்முற்று ஒழிந்த பின்றை மகளிர்
தோள்முற் றுகநின் சாந்துபுலர் அகலம்; ஆங்க,
முனிவில் முற்றத்து இனிதுமுரசு இயம்பக்
கொடியோர்த் தெறுதலும் செவ்வியோர்க்கு அளித்தலும்
ஒடியா முறையின் மடிவிலை யாகி

நல்லதன் நலனும் தீயதன் தீமையும்
இல்லை என்போர்க்கு இனன்ஆ கிலியர்;
நெல்விளை கழனிப் படுபுள் ஓப்புநர்
ஒழிமடல் விறகின் கழுமீன் சுட்டு
வெங்கள் தொலைச்சியும் அமையார், தெங்கின்

இளநீர் உதிர்க்கும் வளமிகு நன்னாடு
பெற்றனர் உவக்கும்நின் படைகொள் மாக்கள்
பற்றா மாக்களின் பரிவுமுந் துறுத்துக்
கூவை துற்ற நாற்கால் பந்தர்ச்
சிறுமனை வாழ்க்கையின் ஒரீஇ வருநர்க்கு

உதவி ஆற்றும் நண்பின் பண்புடை
ஊழிற்று ஆகநின் செய்கை; விழவின்
கோடியர் நீர்மை போல முறைமுறை
ஆடுநர் கழியும்இவ் உலகத்துக் கூடிய
நகைப்புறன் ஆகநின் சுற்றம்;

இசைப்புற னாக நீ ஓம்பிய பொருளே.

அருஞ்சொற்பொருள்:-

அழல் = நெருப்பு
அடர் = தகடு
ஐது = நுண்ணியது, நெருக்கம்
பொலன் = பொன்
தெரியல் = பூமாலை
நறுமை = நன்மை
பாறுதல் = பரந்து கிடத்தல்
இரு = கரிய
பாண் = பாணர்
முற்றுதல் = சூழ்தல்
இருக்கை = இருப்பிடம்
புலர்தல் = உலர்தல்
அகலம் = மார்பு
முனிவு = வெறுப்பு, கோபம்
தெறுதல் = அழித்தல்
ஒடியா = வளையாத, முறியாத
மடிவு = சோம்பல்
ஓப்புதல் = ஓட்டுதல்
ஒழிதல் = அழிதல்
மடல் = பனைமட்டை
விறகு = எரிகட்டை
கழி = கடலையடுத்த உப்பங்கழி (உப்பாறு)
வெங்கள் = விருப்பமான கள்
தொலைச்சிய = அழித்த
பற்றலர் = பகைவர்
கூவை = ஒருவகைச் செடி
துற்றல் = குவிதல், நெருங்கல்(வேய்தல்)
நண்பு = நட்பு
ஊழ் = முறை
விழவு = விழா
கோடியர் = கூத்தர்
நீர்மை = குணம், தன்மை
புறன் = இடம்.

இதன் பொருள்:-

அழல்புரிந்த=====> இருக்கை

பொன்னைத் தீயிலிட்டுத் தகடாக்கிச் செய்த தாமரை மலர்களை நெருக்கமாக நூலால் கோத்து அலங்கரித்துச் செய்யப்பட்ட நல்ல மாலையைக் கரிய முடியுள்ள தலையில் சூடிய பாணர்கள் பகல் நேரத்தில் உன் அரசவையில் உன்னைச் சூழ்ந்திருப்பார்களாக.

பாண்முற்று=====> மடிவிலை யாகி

பாணர்களோடு கூடியிருந்த பிறகு, மகளிர் உன்னுடைய சந்தனம் பூசிய மார்பைத் தழுவுவார்களாக. விரும்பத்தக்க உன் அரண்மனையின் முற்றத்தில் முரசு இனிதாய் முழங்குவதாக. தீயோரைத் தண்டித்தலும், நடுவுநிலைமை உடையவர்களுக்கு அருள் செய்வதும் சோம்பலின்றி இடையறாத முறையில் நடைபெறுவதாக.

நல்லதன்=====> அமையார், தெங்கின்

நல்வினைகளால் நன்மையும் தீவினைகளால் தீமையும் விளையும் என்பதை மறுப்பவர்களோடு நீ சேராதிருப்பாயாக. நெல் விளையும் வயல்களுக்கு வரும் பறவைகளை ஓட்டுபவர்கள், பனைமரங்களிலிருந்து கீழே விழுந்த பனைமட்டைகளை விறகாகக்கொண்டு உப்பங்கழியிலுள்ள மீன்களைச் சுட்டுத் தின்று, விருப்பமான கள்ளைக் குடித்து, நிறைவு பெறாதவர்களாகி,

இளநீர்=====> வருநர்க்கு

தென்னைமரங்களிலிருந்து இளந்தேங்காய்களை உதிர்த்து அவற்றிலிருந்து இளநீரையும் குடித்து மகிழும் வளமான நாட்டை உன்னுடைய படைவீரர்கள் பெற்றிருக்கிறார்கள். உன்னுடைய பகைவர்கள் உன்னிடம் இரக்கத்தை எதிர்பார்த்து வருவதுபோல், கூவை இலையால் வேயப்பட்ட நான்கு கால்களாலாகிய பந்தர் போன்ற வீடுகளில் வாவழ்பவர்கள் அங்கிருந்து விலகி உன் இரக்கத்தைப் எதிர்பார்த்து வரும்பொழுது,

உதவி=====> ஓம்பிய பொருளே

உன் செயல்கள் அவர்களிடம் நட்புடனும் பண்புடனும் உதவி செய்யும் வகையில் அமைவதாக. திருவிழாவில் கூத்தாடுபவர்கள் மாறி மாறி வேறு வேறு வேடம் தரித்து ஆடுவதுபோல், இவ்வுலகில் எல்லாம் முறை முறையே தோன்றி மறைவது இயற்கை. அத்தகைய இவ்வுலகில் உன் சுற்றம் மகிழ்வுடன் இருப்பதாக; நீ பாதுகாத்த செல்வம் உனக்குப் புகழ் அளிப்பதாக.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 09, 2013, 04:47:59 PM
(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-prn1/149575_543529755671940_1978042557_n.jpg)

புறநானூறு, 30.(எங்ஙனம் பாடுவர்?)
பாடியவர் : உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.
பாடப்பட்டோன் : சோழன் நலங்கிள்ளி.
திணை : பாடாண்.
துறை: இயன் மொழி.
=========================================

செஞ்ஞா யிற்றுச் செலவும், அஞ்ஞாயிற்றுப்
பரிப்பும், பரிப்புச் சூழ்ந்தமண் டிலமும்,
வளிதிரிதரு திசையும்,
வறிது நிலைஇய காயமும் என்றிவை
சென்றளந்து அறிந்தார் போல என்றும்

இனைத்துஎன் போரும் உளரே; அனைத்தும்
அறிவுஅறி வாகச் செறிவினை யாகிக்
களிறுகவுள் அடுத்த எறிகல் போல
ஒளித்த துப்பினை ஆதலின் வெளிப்பட
யாங்ஙனம் பாடுவர் புலவர்? கூம்பொடு

மீப்பாய் களையாது மிசைப்பரம் தோண்டாது
புகாஅர்ப் புகுந்த பெருங்கலம் தகாஅர்
இடைப்புலப் பெருவழிச் சொரியும்
கடல்பல் தாரத்த நாடுகிழ வோயே!

அருஞ்சொற்பொருள்:-

செலவு = வழி
பரிப்பு = இயக்கம்
மண்டிலம் = வட்டம்
வளி = காற்று
காயம் = ஆகாயம்
இனைத்து = இத்துணை அளவு
செறிவு = அடக்கம்
கவுள் = கன்னம்
அடுத்தல் = சேர்த்தல்
துப்பு = வலிமை
கூம்பு = பாய்மர
மீப்பாய் = மேற்பாய்
பரம் = பாரம்
தோண்டல் = அகழ்தல் (எடுத்தல்)
புகார் = ஆற்றுமுகம்
தகார் = தகுதி இல்லாதவர்
தாரம் = அரும்பண்டம்.

இதன் பொருள்:-

சிவந்த ஞாயிறு செல்லும் வழியும், அதன் இயக்கமும், அந்த இயக்கத்தைச் சூழ்ந்த வட்டமும், காற்று இயங்கும் திசையும், ஒரு ஆதாரமும் இல்லாமல் வெற்றிடமாகிய ஆகாயத்தின் இயங்கும் தன்மையையும் ஆங்காங்கே சென்று அளந்து அறிந்ததுபோல் சொல்லக்கூடிய அறிவும் கல்வியும் உடையவர்கள் உள்ளனர். அத்தகைய அறிஞர்களின் அறிவாலும் அறிய முடியாத அடக்கம் உடையவனாகி, யானை தன் கன்னத்தில் எறிவதற்காக மறைத்துவைத்திருக்கும் கல்லைப்போல் உன் வலிமை மறைவாக உள்ளது. ஆகவே, உன் வலிமையைப் புலவர்களால் எப்படிப் புகழ்ந்து பாட முடியும்?

ஆறு கடலில் கலக்கும் இடத்தில், கூம்புகளையும் பாய்களையும் அகற்றாது, பாரத்தைக் குறைக்காமல், புகுந்த பெரிய மரக்கலங்களில் உள்ள பொருட்களை, அம்மரக்கலங்களைச் செலுத்தும் தகுதி இல்லாத மீனவர்களும் நெய்தல் நில மக்களும் கொண்டு போகும்பொழுது அப்பொருட்கள் இடைவழியெல்லாம் சிதறிக் கிடக்கின்றன. உன் நாடு அத்தகைய வளமுடையது.

சிறப்புக் குறிப்பு:-

பெரிய மரக்கலங்கள் துறைமுகத்திற்குள் நுழையும் முன், கூம்பையும் பாய்மரங்களையும் களைவதும், பாரத்தைக் குறைப்பதும் முறையாகச் செய்ய வேண்டிய செயல்கள். காவிரி ஆறு கடலில் கலக்கும் பூம்புகார் துறைமுகத்தில், ஆற்றின் ஆழம் அதிகமாக இருப்பதால் அத்தகைய செயல்களைச் செய்ய வேண்டிய தேவையில்லை என்று தெரிகிறது. மற்றும், பெரிய மரக்கலங்களில் உள்ள பொருட்களின் மிகுதியால், அம்மரக்கலங்களைச் செலுத்துவோர் மட்டுமல்லாமல், அங்குள்ள மற்ற மக்களும் அம்மரக்கலங்களிலுள்ள பொருட்களை நாட்டுக்குள் கொண்டு செல்கிறார்கள். அவ்வாறு அவர்கள் கொண்டு செல்லும் பொழுது, பொருட்கள் வழியிலே சிதறிக் கிடக்கின்றன. பொருட்கள் கீழே சிதறிக் கிடப்பதைப் பற்றி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இந்தக் காட்சி, சோழன் நலன்கிள்ளியின் நாட்டின், நீர்வளத்தையும், பொருளாதார வளத்தையும் குறிப்பிடுவதாகத் தோன்றுகிறது.

பார்தீரா தமிழர்களின் வளமையை? இப்படியானது நமது பெருமை. தமிழன் என்று பெருமை கொண்டோர் அனைவரும் இந்தப் பாடலை பகிர வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. வாழ்க தமிழர் மறை.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 09, 2013, 04:52:02 PM
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-ash3/72529_543575825667333_178382026_n.jpg)

புறநானூறு, 31.(வடநாட்டார் தூங்கார்!)
பாடியவர் : கோவூர் கிழார்.
பாடப்பட்டோன் : சோழன் நலங்கிள்ளி.
திணை :வாகை.
துறை: அரசவாகை: மழபுல வஞ்சியும் ஆம்.
=========================================

சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்
அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல
இரு குடை பின்பட ஓங்கி ஒருகுடை
உருகெழு மதியின் நிவந்துசேண் விளங்க,
நல்லிசை வேட்டம் வேண்டி வெல்போர்ப்

பாசறை யல்லது நீயல் லாயே;
நுதிமுகம் மழுங்க மண்டி ஒன்னார்
கடிமதில் பாயும்நின் களிறுஅடங் கலவே;
போர்எனில் புகலும் புனைகழல் மறவர்
காடிடைக் கிடந்த நாடுநனி சேய;

செல்வேம் அல்லேம் என்னார்; கல்லென்
விழவுடை ஆங்கண் வேற்றுப்புலத்து இறுத்துக்
குணகடல் பின்ன தாகக் குடகடல்
வெண்தலைப் புணரிநின் மான்குளம்பு அலைப்ப
வலமுறை வருதலும் உண்டுஎன்று அலமந்து

நெஞ்சுநடுங்கு அவலம் பாயத்
துஞ்சாக் கண்ண வடபுலத்து அரசே

அருஞ்சொற்பொருள்:-

உரு = வடிவழகு, நிறம்
கெழு = பொருந்திய
நிவத்தல் = உயர்தல்
நிவந்து = ஓங்கி
சேண் = சேய்மை
வேட்டம் = விருப்பம், விரும்பிய பொருள்
ஒல்லுதல் = உடன்படுதல், இணங்குதல்
நுதி = நுனி
மண்டுதல் = நெருங்குதல் (குத்துதல்)
பாய்தல் = குத்துதல்
புகலுதல் = விரும்புதல்
புனைதல் = அணிதல்
நனி = மிகவும்
சேய = தொலைவாக
கல் - ஒலிக்குறிப்பு
விழவு = விழா
குண = கிழக்கு
குட = மேற்கு
புணரி = அலை
மான் = குதிரை
அலைப்ப = அடித்தல் (அலை அடித்தல்)
அலமந்து = சுழன்று
அவலம்= துன்பம், வருத்தம்
பாய்தல் = பரவுதல்
துஞ்சுதல் = உறங்குதல்.

இதன் பொருள்:-

சிறப்புடை=====> வெல்போர்ப்

அறத்தின் சிறப்பினால், பொருளும் இன்பமும் அறத்தின் பின்னதாகக் கருதப்படுவதுபோல், சேர பாண்டியருடைய கொற்றக்குடைகள் பின் வர உன் கொற்றக்குடை அழகிய திங்களைப்போல் வெகு தொலைவில் உயர்ந்து விளங்குகிறது. நல்ல புகழை விரும்பி, உன் தலைநகராகிய பூம்புகாரில் இல்லாமல், நீ வெற்றிதரும்

பாசறை=====> வடபுலத்து அரசே

போர்ப்பாசறையிலேயே உள்ளாய். உன் யானைகள், அவற்றின் தந்தங்களின் நுனிகள் மழுங்குமாறு பகைவர்களின் காவலுடைய மதில்களைக் குத்தித் தாக்கியும் அடங்காமல் உள்ளன. போர் என்று கேள்விப்பட்டவுடன் உன் படை வீரர்கள், வீரக்கழல்கள் அணிந்து, போருக்குப் புறப்படுகிறார்கள். பகைவர்களின் நாடு காட்டுக்கு நடுவே, மிகவும் தொலைவில் இருந்தாலும் அங்கே செல்லமாட்டோம் என்று அவர்கள் சொல்லமாட்டார்கள். பகைவர்களின் நாட்டில் ஆரவாரமாக வெற்றிவிழா கொண்டாடிக், கிழக்குக் கடற்கரையிலிருந்து கிளம்பிய உன் குதிரைகளின் குளம்புகளை மேற்குக் கடலின் வெண்ணிற அலைகள் அலம்ப, நீ நாடுகளை வலம் வருவாயோ என்று வடநாட்டு மன்னர்கள் வருந்தி, நெஞ்சம் நடுங்கி உறக்கமின்றி உள்ளனர்.

சிறப்புக் குறிப்பு:-

பகைவரை வென்று ஆரவாரிப்பதைப் பற்றி இப்பாடலில் கூறப்பட்டிருப்பதால், இப்பாடல் வாகைத் திணையில் அடங்கும். சோழன் நலங்கிள்ளி, போரை விரும்பிப் பாசறையில் இருப்பதாகக் கூறியது அவனது இயல்பைக் கூறியதாகும். ஆகவே, இப்பாடல் அரசவாகைத் துறையைச் சார்ந்தது என்று கருதப்படுகிறது. மற்றும், பகைவர்களின் மதில்களை நலங்கிள்ளியின் யானைகள் குத்தித் தாக்கியதையும், அவன் படை வீரர்கள் எப்பொழுதும் போரை விரும்புவதையும், வட நாட்டு மன்னர்கள் நலங்கிள்ளியின் வருகையை நினைத்து நடுங்கி உறக்கமின்றி இருப்பதையும் கூறியிருப்பது பகைவரின் நாட்டை அழிப்பதைக் குறிப்பதால், இப்பாடல் மழபுல வஞ்சித் துறையைச் சார்ந்ததாகவும் கருதப்படுகிறது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 09, 2013, 04:55:10 PM
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash4/207736_543583662333216_795515433_n.jpg)

புறநானூறு, 32.(பூவிலையும் மாடமதுரையும்!)
பாடியவர் : கோவூர் கிழார்.
பாடப்பட்டோன் : சோழன் நலங்கிள்ளி.
திணை :பாடாண்.
துறை: இயன் மொழி.
=========================================

கடும்பின் அடுகலம் நிறையாக நெடுங்கொடிப்
பூவா வஞ்சியும் தருகுவன் ஒன்றோ;
வண்ணம் நீவிய வணங்குஇறைப் பணைத்தோள்
ஒண்ணுதல் விறலியர் பூவிலை பெறுகஎன
மாட மதுரையும் தருகுவன்; எல்லாம்

பாடுகம் வம்மினோ பரிசில் மாக்கள்!
தொன்னிலக் கிழமை சுட்டின் நன்மதி
வேட்கோச் சிறாஅர் தேர்க்கால் வைத்த
பசுமண் குரூஉத்திரள் போலவவன்
கொண்ட குடுமித்து இத்தண்பணை நாடே

அருஞ்சொற்பொருள்:-

கடும்பு = சுற்றம்
அடுகலம் = சமையல் பாத்திரம்
வணக்கல் = வளைதல்
இறை = முன்கை
பணை = மூங்கில்
சுட்டுதல் = நினைத்தல்
வேட்கோ = குயவன்
தேர்க்கால் = தேர்ச்சக்கரம் (இங்கு குயவன் பயன்படுத்தும் சக்கரத்தைக் குறிக்கிறது)
குரு = கனம்
திரள் = உருண்டை
குடுமி = முடிவு
பணைநிலம் = மருதநிலம்

இதன் பொருள்:-

கடும்பின்=====> தருகுவன்; எல்லாம்

நம் சுற்றத்தாரின் சமையல் பாத்திரங்கள் நிறையுமாறு, நெடிய கொடியில் பூவாத வஞ்சி ஆகிய வஞ்சி மாநகரத்தையும் சோழன் நலங்கிள்ளி தருவான். வண்ணக் கலவை பூசிய வளைந்த முன்கையும், மூங்கில் போன்ற தோளும், ஒளிபொருந்திய நெற்றியுமுடைய விறலியர் விற்கும் பூவிற்கு விலையாக மாடங்கள் நிறைந்த மதுரையையும் தருவான்.

பாடுகம்=====> இத்தண்பணை நாடே

பரிசிலரே வாருங்கள்; நாம் அனைவரும் அவனைப் பாடுவோம். இந்த பழமையான நிலத்திற்கு உரிமையுடையவன் யார் என்று நினைத்துப் பார்த்தால், நல்ல தொழில் நுட்ப அறிவுள்ள குயக்குலச் சிறுவர் மண்பாண்டங்கள் செய்யும் சக்கரத்தில் வைத்த கனமான பசுமண் உருண்டை, குயவனின் கருத்துக்கேற்ப உருவெடுப்பதுபோல் சோழன் நலங்கிள்ளி எடுத்த முடிவுக்கேற்ப இந்தக் குளிர்ந்த மருத நிலத்தையுடைய நாடு அமைவது விளங்கும்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 09, 2013, 04:59:27 PM
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-snc6/734648_543781335646782_2002575384_n.jpg) (http://www.friendstamilchat.com)

புறநானூறு, 33.(புதுப்பூம் பள்ளி!)
பாடியவர் : கோவூர் கிழார்.
பாடப்பட்டோன் : சோழன் நலங்கிள்ளி.
திணை :வாகை.
துறை: அரசவாகை.
========================================

கானுறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன்
மான்தசை சொரிந்த வட்டியும், ஆய்மகள்
தயிர்கொடு வந்த தசும்பும் நிறைய
ஏரின் வாழ்நர் பேரில் அரிவையர்
குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல்

முகந்தனர் கொடுப்ப உகந்தனர் பெயரும்
தென்னம் பொருப்பன் நன்னாட்டு உள்ளும்
ஏழெயில் கதவம் எறிந்துகைக் கொண்டுநின்
பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை;
பாடுநர் வஞ்சி பாடப் படையோர்

தாதுஎரு மறுகின் பாசறை பொலியப்
புலராப் பச்சிலை இடையிடுபு தொடுத்த
மலரா மாலைப் பந்துகண் டன்ன
ஊன்சோற் றமலை பாண்கடும்பு அருத்தும்
செம்மற்று அம்மநின் வெம்முனை இருக்கை;

வல்லோன் தைஇய வரிவனப்பு உற்ற
அல்லிப் பாவை ஆடுவனப்பு ஏய்ப்பக்
காம இருவர் அல்லது யாமத்துத்
தனிமகன் வழங்காப் பனிமலர்க் காவின்
ஒதுக்குஇன் திணிமணல் புதுப்பூம் பள்ளி

வாயின் மாடந்தொறும் மைவிடை வீழ்ப்ப
நீஆங்குக் கொண்ட விழவினும் பலவே.

அருஞ்சொற்பொருள்:-

கான் = காடு
கதம் = சினம்
சொரிதல் = பொழிதல் = நிறைதல்
வட்டி = கூடை
ஆய் = இடையர்
தசும்பு = குடம்
அரிவை = பெண் (மகளிர்)
முகத்தல் = அளத்தல், மொள்ளல்
உகத்தல் = மகிழ்தல்
பொருப்பு = மலை
எயில் = கோட்டை
எறிதல் = முறித்தல்
பேழ் = பெருமை
பேழ்வாய் = பெரியவாய்
உழுவை = புலி
வஞ்சி பாடுதல் = பகைவருடைய நாட்டின் மீது படையெடுப்பதைப் பாடுதல்
தாதெரு = தாது+எரு; தாது = பூந்தாது
மறுகு = தெரு
இடையிடுபு = இடையிட்டு
அமலை = திரள்
கடும்பு = சுற்றம்
அருத்தல் = உண்பித்தல்
செம் = செம்மை
அற்று = அத்தன்மைத்து
செம்மற்று = செம்மையுடைத்து
இருக்கை = இருப்பிடம்
தைஇய = இழைத்த
வரி = எழுத்து
வனப்பு = அழகு
அல்லிப்பாவை = அல்லியக் கூத்தில் ஆடும் (பயன்படுத்தப்படும்) உருவம் (பொம்மை)
ஏய்தல் = ஒத்தல்
யாமம் = நள்ளிரவு
வழங்குதல் = நடத்தல்
கா = பூந்தோட்டம்
ஒதுக்குதல் = இயங்குதல்
திணிதல் = செறிதல்
பள்ளி = இடம் (சாலை)
மாடம் = மண்டபம்
மை = செம்மறியாடு

இதன் பொருள்:-

கானுறை=====> வெண்ணெல்

காட்டில் வாழும் சினக்கொண்ட நாய்களையுடைய வேட்டுவர் மான் தசைகளை விற்பதற்காக கூடைகளில் கொண்டு வருவர்; இடைச்சியர் தயிரை விற்பதற்காகக் குடங்களில் கொண்டு வருவர். ஏரைக்கொண்டு உழவுத்தொழில் செய்யும் உழவர்களின் பெரிய இல்லங்களில் வாழும் மகளிர், வேட்டுவர் கொண்டு வந்த தசைகளையும், இடைச்சியர் கொண்டு வந்த தயிரையும் பெற்றுக் கொண்டு, குளக்கரையில் உள்ள நிலத்தில் விளைந்த நெல்லை

முகந்தனர்=====> படையோர்

அள்ளிக் கொடுக்க, வேட்டுவரும் இடைச்சியரும் மகிழ்ச்சியுடன் அந்நெல்லைப் பெற்றுச் செல்கின்றனர். இத்தகைய வளமான நல்ல ஊர், தெற்கே பொதிகைமலை உள்ள பாண்டிய நாட்டில் உள்ளது. அங்கே, ஏழு கோட்டைகளின் கதவுகளை உடைத்து அவற்றைக் கைப்பற்றி உன்னுடைய சின்னமாகிய பெரிய புலிவாயைப் பொறிக்கும் ஆற்றல் உடையவன் நீ. நீ படையெடுத்துச் சென்றதைப் புலவர்கள் புகழ்ந்து பாடுகிறார்கள். உன் படைவீரர்கள்

தாதுஎரு=====> இருக்கை

பூக்களின் தாதுக்கள் நிறைந்த தெருக்களில் உள்ள பாசறைகளில் உலராத பச்சிலைகளை இடையிடையே வைத்துக் கட்டப்பட்ட அரும்புகள் அடங்கிய பூப்பந்தைப் போன்ற, தசைகளோடு கூடிய சோற்றுருண்டைகளைப் பாணர்களின் சுற்றத்தார்களுக்கு அளித்து அவர்களை உண்பிக்கிறார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்தது உன் போர்முனைகளின் இருப்பிடம்.

வல்லோன்=====> விழவினும் பலவே

அன்புடைய துணைவனும் துணைவியும், கலை வல்லுநர்களால் செய்யப்பட்ட அழகிய பாவைகள் அல்லியம் என்னும் கூத்தில் ஆடுவதைப்போல், சேர்ந்து செல்லும் குளிர்ந்த மலர்களையுடைய சோலையில், நள்ளிரவில் தனியே சென்றால் காம உணர்வு மிகும் என்ற காரணத்தால் எவரும் தனியே செல்வதில்லை. அந்தச் சோலைகளில், நடத்தற்கு இனிய, மணல் மிகுந்த, புதிய பூக்களையுடைய சாலைகளின் வாயில்களில் உள்ள மாடந்தோறும் செம்மறிக் கிடாவை வெட்டி நீ நடத்தும் விழாக்களைவிட உன் போர்முனைகளில் நீ அளிக்கும் விருந்துகள் பலவாகும்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 09, 2013, 05:02:24 PM
(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-frc1/64249_543785518979697_2145234445_n.jpg)

புறநானூறு, 34.(செய்தி கொன்றவர்க்கு உய்தி இல்லை!)
பாடியவர் : ஆலத்தூர் கிழார்.
பாடப்பட்டோன் : கிள்ளிவளவன்.
திணை : பாடாண்.
துறை: இயன் மொழி.
========================================

ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும்
மாண்இழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்
குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்
வழுவாய் மருங்கின் கழுவாயும் உளஎன
நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன்

செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்என
அறம் பாடிற்றே ஆயிழை கணவ;
காலை அந்தியும் மாலை அந்தியும்
புறவுக் கருவன்ன புன்புல வரகின்
பாற்பெய் புன்கம் தேனொடு மயக்கிக்

குறுமுயற் கொழுஞ்சூடு கிழித்த ஒக்கலொடு
இரத்தி நீடிய அகன்தலை மன்றத்துக்
கரப்பில் உள்ளமொடு வேண்டுமொழி பயிற்றி
அமலைக் கொழுஞ்சோறு ஆர்ந்த பாணர்க்கு
அகலாச் செல்வம் முழுவதும் செய்தோன்

எங்கோன் வளவன் வாழ்க என்றுநின்
பீடுகெழு நோன்தாள் பாடேன் ஆயின்
படுபுஅறி யலனே பல்கதிர்ச் செல்வன்;
யானோ தஞ்சம்; பெரும! இவ்வுலகத்துச்
சான்றோர் செய்த நன்றுண் டாயின்

இமையத்து ஈண்டி இன்குரல் பயிற்றிக்
கொண்டல் மாமழை பொழிந்த
நுண்பல் துளியினும் வாழிய பலவே!

அருஞ்சொற்பொருள்:-

மாண் = மாட்சிமை
குரவர் = மூத்தோர் (பெற்றோர்)
தப்பல் = தவறு புரிதல்
வழுவாய் = தவறுதல்
மருங்கு = இடம், பக்கம்
கழுவாய் = பரிகாரம்
புடை = இடம்
செய்தி = செய்கை (செய்த நன்றி)
உய்தி = தப்பிப் பிழைத்தல்
ஆயிழை = தெரிந்தெடுத்த அணிகலன்களையுடையவள்
அந்தி = மாலைக்காலம், அதிகாலை
புறவு = புறா
புன்புலம் = புல்லிய இடம், தரிசு நிலம்
புன்கம் = உணவு, சோறு
சூடு = சுடப்பட்டது
ஒக்கல் = சுற்றம்
இரத்தி = இலந்தை
மன்றம் = பலர் கூடும் வெளி ( பொதுவிடம்)
கரப்பு = வஞ்சகம் (மறைத்தல்)
அமலை = திரளை, கட்டி
ஆர்ந்த = அருந்திய
பீடு = பெருமை
நோன்றாள் = நோன்+தாள் = வலிய தாள்
படுதல் = தோன்றுதல்
தஞ்சம் = எளிமை
ஈண்டுதல் = திரளுதல்
கொண்டல் = கீழ்க்காற்று
நுண்பஃறுளி = நுண்+பல்+துளி.

இதன் பொருள்:-

பசுவின் முலையை அறுத்த தீவினையாளர்களுக்கும், (சிறந்த அணிகலன்களை அணிந்த) மகளிரின் கருவை அழித்தவர்களுக்கும், பெற்றோர்களுக்குத் தவறிழைத்தவர்களுக்கும் அவர் செய்த கொடிய செயல்களை ஆராயுமிடத்து, அவர் செய்த பாவச் செயல்களின் விளைவுகளிலிருந்து நீங்குவதற்குப் பரிகாரம் உண்டு. ஆனால், உலகமே தலைகீழாகப் பெயர்ந்தாலும் ஒருவன் செய்த நற்செயல்களை அழித்தவர்களுக்கு அவற்றின் விளைவுகளிலிருந்து விடுதலை இல்லை என்று அறநூல்கள் கூறுகின்றன.

நன்கு ஆராய்ந்து எடுத்த ஆபரணங்களை அணிந்தவளின் கணவ! காலை வேளையிலும் மாலை வேளையிலும், புன்செய் நிலத்தில் விளைந்த புறாவின் முட்டை போன்ற வரகினது அரிசியைப் பாலிலிட்டு ஆக்கிய சோற்றில் தேனும், கொழுத்த முயலின் இறைச்சியும் கலந்த உணவை, இலந்தை மரத்தடியில் உள்ள பொதுவிடத்தில், வஞ்சமில்லாத உள்ளத்தோடு, வேண்டுவனெல்லாம் பேசி, பாணர்கள் உண்டு மகிழ்வார்கள். அப்பாணர்களுக்குத் தன்னுடைய பெருஞ்செல்வம் அனைத்தையும் அளித்த என் தலைவன் கிள்ளி வளவன் வாழ்க என்று பெருமை பொருந்திய உன்னை நான் பாடேனாயின், பல கதிர்களை உடைய கதிரவன் தோன்றமாட்டான். நான் எளியவன்; தலைவ! இவ்வுலகில் சான்றோர்கள் செய்த நல்ல செயல்கள் உண்டாயின், இமயமலையில் திரண்ட மேகங்கள் இனிய ஓசையுடன் பெய்த பெருமழையின் நுண்ணிய பல துளிகளைவிட அதிக நாட்கள் நீ வாழ்க.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 09, 2013, 05:06:27 PM
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-prn1/66465_543271355697780_517642619_n.png)

புறநானூறு, 35.(உழுபடையும் பொருபடையும்!)
பாடியவர் : வெள்ளைக்குடி நாகனார்.
பாடப்பட்டோன் : சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
திணை : பாடாண்.
துறை: செவியறிவுறூஉ. அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறைதவறாமல் செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்தல்.
=========================================

நளிஇரு முந்நீர் ஏணி யாக
வளிஇடை வழங்கா வானம் சூடிய
மண்திணி கிடக்கைத் தண்தமிழ்க் கிழவர்
முரசுமுழங்கு தானை மூவர் உள்ளும்
அரசுஎனப் படுவது நினதே பெரும!

அலங்குகதிர்க் கனலி நால்வயின் தோன்றினும்
இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
அந்தண் காவிரி வந்துகவர்பு ஊட்டத்
தோடுகொள் வேலின் தோற்றம் போல
ஆடுகண் கரும்பின் வெண்பூ நுடங்கும்

நாடுஎனப் படுவது நினதே அத்தை; ஆங்க,
நாடுகெழு செல்வத்துப் பீடுகெழு வேந்தே!
நினவ கூறுவல் எனவ கேண்மதி:
அறம்புரிந் தன்ன செங்கோல் நாட்டத்து
முறைவேண்டு பொழுதின் பதன்எளியோர் ஈண்டு

உறைவேண்டு பொழுதில் பெயல்பெற் றோறே;
ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்மூ
மாக விசும்பின் நடுவுநின் றாங்குக்
கண்பொர விளங்கும்நின் விண்பொரு வியன்குடை
வெயில்மறைக் கொண்டன்றோஅன்றே; வருந்திய

குடிமறைப் பதுவே கூர்வேல் வளவ!
வெளிற்றுப்பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்பக்
களிற்றுக் கணம் பொருத கண்ணகன் பறந்தலை
வருபடை தாங்கிப் பெயர்புறத் தார்த்துப்
பொருபடை தரூஉங் கொற்றமும் உழுபடை

ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே;
மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்
இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்
காவலர்ப் பழிக்கும்இக் கண்ணகன் ஞாலம்;
அதுநற்கு அறிந்தனை யாயின் நீயும்

நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது
பகடு புறந்தருநர் பாரம் ஓம்பிக்
குடிபுறம் தருகுவை யாயின்நின்
அடிபுறம் தருகுவர் அடங்கா தேரே.

அருஞ்சொற்பொருள்:-

நளி = செறிந்த
ஏணி = எல்லை
வளி = காற்று
திணிதல் = செறிதல்
கிடக்கை = பூமி
அலங்கு = விளங்கு
கனலி = ஞாயிறு
வயின் = இடம்
இலங்குதல் = ஒளிசெய்தல்
வெள்ளி = சுக்கிரன்
படர்தல் = செல்லுதல்
கவர்பு = வேறுபடல், பிரிதல்
தோடு = இலை
நுடங்குதல் = ஆடல்
அத்தை = அசைச் சொல்
கெழு = பொருந்திய
பீடு = பெருமை
நினவ = உன்னிடம்
எனவ = என்னுடைய
புரிதல் = செய்தல்
நாட்டம் = ஆராய்ச்சி
முறை = அரச நீதி (முறையீடு)
உறை= துளி
கோடு = பக்கம்
கொண்மூ = மேகம்
மாகம் = மேலிடம்
பொரு = முட்டிய
வெளிறு = இல்லாமை
துணி = துண்டு
வீற்று = வேறுபாடு
கணம் = திரட்சி (கூட்டம்)
கண்ணகன் = அகன்ற இடம்
பறந்தலை = போர்க்களம்
ஆர்த்தல் = பொருதல்
தரூஉம் = தரும்
கொற்றம் = வெற்றி
சால் = உழவு சால்
மருங்கு = பக்கம்
வாரி = விளைவு
நொதுமல் = அயல், விருப்பு வெறுப்பு இன்மை
பகடு = எருது
பாரம் =பெருங்குடும்பம்
ஓம்புதல் = பாதுகாத்தல்
புறந்தருதல் = ஓம்பல், தோற்றல், புகழ்தல்

இதன் பொருள்:-

நளிஇரு=====> அன்றே; வருந்திய

நீர் செறிந்த பெரிய கடல் எல்லையாக, காற்றால் ஊடுருவிச் செல்ல முடியாத, வானத்தால் சூழப்பட்ட, மண் செறிந்த இவ்வுலகில், குளிர்ந்த தமிழ் நாட்டிற்கு உரியவராகிய, முரசு முழங்கும் படையுடன் கூடிய சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்களுக்குள்ளும் அரசு என்று சிறப்பித்துக் கூறப்படுவது உன்னுடைய அரசுதான்.

ஒளியுடன் கூடிய கதிரவன் நான்கு திசைகளில் தோன்றினும், ஒளிறும் வெள்ளி தெற்கே சென்றாலும், அழகிய குளிர்ந்த நீரையுடைய காவிரி பல கிளைகளாகப் பிரிந்து நீர்வளம் அளிக்கிறது. அதனால், வேல்களின் தொகுப்பைப்போல் காட்சி அளிக்கும், அசையும் கணுக்களையுடைய கரும்பின் வெண்ணிறப் பூக்கள் காற்றில் ஆடுகின்றன.

உன்னுடைய நாடு அத்தகைய வளமுடையது. நாடு என்று சொல்லப்படுவது உன்னுடைய நாடுதான். அத்தகைய நாட்டையும் அதில் பொருந்திய செல்வத்தையுமுடைய, பெருமை பொருந்திய வேந்தே! உன்னிடம் சில செய்திகளைக் கூறுகிறேன்; நீ என் சொற்களைக் கேட்பாயாக.

அறமே (உருவெடுத்து) ஆட்சி செய்வதைப்போல் ஆட்சி புரிந்து, ஆராய்ச்சியுடன் செங்கோல் செலுத்தும் உன் ஆட்சியில் எளியோர் உன்னிடம் நீதி கேட்டால், மழைத்துளியை விரும்பியவர்களுக்குப் பெருமழை பெய்ததைப்போல் வேண்டிய நீதியைத் தக்க சமயத்தில் பெறுவர். கதிரவனைச் சுமந்து செல்லும் திரண்ட மேகங்கள் உயர்ந்த ஆகாயத்தின் நடுவே நின்று அதன் வெயிலை மறைப்பதுபோல் கணுக்கள் திரண்டு விளங்கி வானத்தை முட்டிப் பரந்து உயர்ந்து நிற்கும் உன் வெண்கொற்றக்குடை வெயிலை மறைப்பதற்காகப் பிடிக்கப்பட்டது அன்று.

குடிமறை=====> அடங்கா தேரே

கூரிய வேல்களை உடைய சோழனே! உன்குடை குடிமக்களின் வருத்தத்தைப் போக்குவதற்காகப் பிடிக்கப்பட்டது ஆகும். யானைகளின் தும்பிக்கைகள், துளையுள்ள பனைமரங்களின் துண்டுகள்போல் வேறுவேறு இடங்களில் வீழ்ந்து கிடக்கும் அகன்ற இடமுள்ள போர்க்களத்தில், உன் படையை எதிர்த்த உன் பகைவர்கள் புறமுதுகுகாட்டி ஓடினார்கள். உன் வீரர்கள் அதைக்கண்டு ஆரவாரித்தனர். பகைவர்களை எதிர்த்துப் போரிட்டு நீ பெறும் வெற்றி, உழவர்களின் கலப்பை நிலத்தில் ஊன்றி உழுவதால் விளைந்த நெல்லின் பயனே ஆகும். மழை பெய்யத் தவறினாலும், விளைவு குறைந்தாலும், இயற்கைக்கு மாறான நிகழ்ச்சிகள் மக்களின் செயல்களால் தோன்றினாலும் இந்தப் பரந்த உலகம் அரசர்களைத்தான் பழிக்கும். அதை நீ நன்கு அறிந்தனையாயின், அயலார் கூறும் பயனற்ற சொற்களைக் கேளாது, காளைகளை ஏர்ககளில் பூட்டி உழவுத் தொழில் செய்து பெருங்குடும்பங்களைப் பாதுகாப்பவர்களை நீ பாதுகாப்பாயானால், உன் பகைவர்களும் உன்னைப் புகழ்வர்.

சிறப்புக் குறிப்பு:-

செல்வமுடைய, பெருமை பொருந்திய வேந்தே! உன்னிடம் சில செய்திகளைக் கூறுகிறேன்; நீ என் சொற்களைக் கேட்பாயாக. நீ செங்கோல் செலுத்துகிறாய்; உன் ஆட்சி முறையாக நடைபெறுகிறது. அயலார் கூறும் பயனற்ற சொற்களைக் கேளாது, உன் குடிமக்களைப் பாதுகாப்பாயாக; நீ அவ்வாறு செய்தால் உன் பகைவர்களும் உன்னைப் புகழ்வர்” என்று அரசன் கேட்குமாறு அறிவுறுத்தியதால், இப்பாடல் செவியறிவுறூஉத் துறையை சார்ந்தது என்று கருதப்படுகிறது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 09, 2013, 05:09:56 PM
(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-ash4/185448_544372778920971_114659199_n.jpg)

புறநானூறு, 36.(நீயே அறிந்து செய்க!)
பாடியவர் : ஆலத்தூர் கிழார்.
பாடப்பட்டோன் : சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
திணை : வஞ்சி.
துறை: துணை வஞ்சி.
========================================

அடுநை யாயினும் விடுநை யாயினும்
நீஅளந் தறிதிநின் புரைமை வார்கோல்
செறியரிச் சிலம்பின் குறுந்தொடி மகளிர்
பொலஞ்செய் கழங்கின் தெற்றி யாடும்
தண்ணான் பொருநை வெண்மணல் சிதையக்

கருங்கைக் கொல்லன் அரஞ்செய் அவ்வாய்
நெடுங்கை நவியம் பாய்தலின் நிலையழிந்து
வீகமழ் நெடுஞ்சினை புலம்பக் காவுதொறும்
கடிமரம் தடியும் ஓசை தன்ஊர்
நெடுமதில் வரைப்பின் கடிமனை இயம்ப

ஆங்குஇனி திருந்த வேந்தனொடு ஈங்குநின்
சிலைத்தார் முரசம் கறங்க
மலைத்தனை எண்பது நாணுத்தகவு உடைத்தே.

அருஞ்சொற்பொருள்:-

அடுநை = அழிப்பாய்
விடுநை = அழிக்காமல் விடுவாய்
புரைமை = உயர்ச்சி (பெருமை)
வார் = நுண்மை
செறி = செறிந்த
அரி = சிலம்புப் பரல்
கழங்கு = கழற்சிக்காய்
தெற்றி = மேட்டிடம்
கருமை = வலிமை
நவியம் = கோடரி
வீ = பூ
சினை = மரக்கொம்பு
புலம்பு = தனிமை
காவு = காடு
கடி = காவல்
தடிதல் = வெட்டல்
வரை = எல்லை
இயம்பல் = ஒலித்தல்
சிலை = வில்
தார் = மாலை
கறங்கல் = ஒலித்தல்
மலைத்தல் = பொருதல்
தகவு = தகுதி

இதன் பொருள்:-

பரல்கள் செறிந்த சிலம்பையும், சித்திரவேலைப்பாடுகள் அமைந்த சிறிய வளையல்களையும் அணிந்த மகளிர், பொன்னால் செய்யபட்ட கழற்காய்களை வைத்து ஆன் பொருநை ஆற்றங்கரையில், திண்ணைபோல் உயர்ந்த மணல்மேடுகளில் இருந்து விளையாடி வெண்ணிறமான ஆற்று மணலைச் சிதைக்கிறார்கள். வலிய கைகளையுடைய கொல்லன், அரத்தால் கூர்மையாகச் செய்த, நெடிய காம்புடன் கூடிய கோடரியால் காவல் மரங்களை வெட்டுவதால், நின்ற நிலையிலிருந்து கலங்கிய பூமணம் கமழும் அந்த மரங்களின் நெடிய கிளைகள் துண்டாகுகின்றன. காடுகள் தோறும் காவல் மரங்களை வெட்டும் ஓசை தன் ஊரில் உள்ள நெடிய மதில்களை அரணாகக்கொண்ட அரண்மனையில் ஒலிக்க, அங்கே, அதைப்பற்றிக் கவலையின்றி சேரன் இனிதே இருக்கிறான். வானவில் போன்ற வண்ணங்கள் நிறைந்த மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட முரசு ஒலிக்க, அவனுடன் இங்கே போர்செய்வது வெட்கப்பட வேண்டிய செயல். ஆகவே, உன் பகைவனாகிய சேரனை, நீ கொன்றாலும், கொல்லாவிட்டாலும் உன் செயலால் உனக்கு வரும் பெருமையை நீயே ஆராய்ந்து அறிந்து கொள்.

சிறப்புக் குறிப்பு:-

பிறரை வெற்றி கொள்ள நிற்பவனை சமாதானப்படுத்தும் பாடல்கள் துணைவஞ்சி என்ற துறையில் அடங்கும். சேரனை வெல்ல நினைத்து அவனுடன் போர் புரியவிருக்கும் கிள்ளிவளவனுக்கு அறிவுரை கூறிப் போரை நிறுத்துமாறு ஆலத்தூர் கிழார் இப்பாடலில் கூறுவதால், இப்பாடல் துணை வஞ்சி என்ற துறையைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது.

இப்பாடலில், அரண்மனைக்கு அருகில் உள்ள காவல் மரங்களை வெட்டும் இடத்தில், சிறுமிகள் அச்சமின்றி விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், சேரன் அரண்மனையை விட்டு வெளிய வந்து போர் புரியவில்லை என்பது, அவன் வீரமற்றவன் என்பதை வலியுறுத்துவதற்காகக் கூறப்பட்டிருக்கிறது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 09, 2013, 05:12:38 PM
(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-snc7/314231_544843428873906_695822164_n.jpg)

புறநானூறு, 37.(புறவும் போரும்!)
பாடியவர் : மாறோக்கத்து நப்பசலையார்.
பாடப்பட்டோன் : சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
திணை : வாகை.
துறை: அரச வாகை; முதல் வஞ்சியும் ஆகும்.
=========================================

நஞ்சுடை வால்எயிற்று ஐந்தலை சுமந்த
வேக வெந்திறல் நாகம் புக்கென
விசும்புதீப் பிறப்பத் திருகிப் பசுங்கொடிப்
பெருமலை விடரகத்து உரும்எறிந் தாங்குப்
புள்ளுறு புன்கண் தீர்த்த வெள்வேல்

சினங்கெழு தானைச் செம்பியன் மருக!
கராஅம் கலித்த குண்டுகண் அகழி
இடம்கருங் குட்டத்து உடந்தொக்கு ஓடி
யாமம் கொள்பவர் சுடர்நிழல் கதூஉம்
கடுமுரண் முதலைய நெடுநீர் இலஞ்சிச்

செம்புஉறழ் புரிசைச் செம்மல் மூதூர்
வம்புஅணி யானை வேந்துஅகத் துண்மையின்
நல்ல என்னாது சிதைத்தல்
வல்லையால் நெடுந்தகை! செருவத் தானே!

அருஞ்சொற்பொருள்:-

வால் = வெண்மை
எயிறு = பல்
ஐ = அழகு
வெம்பல் = சினத்தல்
திறல் = வெற்றி, வலி
புக்கல் = புகுதல்
என = என்று
விசும்பு = ஆகாயம்
திருகி = முறுகி
முறுகல் = வேகங் கொள்ளுதல்
விடர் = மலைப்பிளப்பு, குகை
உரும் = இடி
புள் = பறவை
புன்கண் = துன்பம்
செம்பியன் = சோழன்
மருகன் = வழித்தோன்றல்
கராம் = ஆண் முதலை, முதலையுள் ஒரு வகை
கலித்த = தழைத்த (நிறைந்த)
குண்டு = ஆழம்
குட்டம் = ஆழம், மடு
யாமம் = நள்ளிரவு
கதூஉம் = கவ்வும், பற்றும்
கடு = விரைவு
முரண் = வலிமை
நெடு = மிகுதி
இலஞ்சி = நீர்நிலை, மடு
உறழ்வு = செறிவு
புரிசை = மதில்
செம்மல் = தலைமை
மூதூர் = பழைமையான ஊர்
வம்பு = கச்சு (முகபடாம்)
சிதைத்தல் = அழித்தல்
நெடுந்தகை = பெரியோன்
செரு = போர்.

இதன் பொருள்:-

புறாவிற்கு வந்த துன்பத்தைத் தீர்த்த, ஓளி பொருந்திய வேலையுடைய, சினங்கொண்ட படையையுடைய செம்பியன் வழித்தோன்றலே! நஞ்சுடைய வெண்ணிறமான பற்களும், அழகிய தலையும், வலிமையும், சினமுமுடைய பாம்பு ஒன்று மலையிலிருந்த குகையில் புகுந்தது. அச்சமயம், வானமே தீப்பிடித்ததுபோல், வேகத்துடன், பசுமையான கொடிகள் நிறைந்த அந்த மலைக்குகையின் மேல் இடிவிழுந்து அந்த நாகத்தை அழித்தது. அதுபோல், முதலைகள் நிரம்பிய ஆழமான அகழியின் இருண்ட இடங்களில், அங்கிருந்த முதலைகள் ஒன்றாகக் கூடி, நள்ளிரவில் காவல் புரிவோரின் நிழலைக் கவ்வும் அந்த அகழிக்கு அருகே உள்ள செம்பால் புனையப்பட்ட மதிலையுடைய, தலைமை பொருந்திய பழைய ஊரில் கச்சு அணிந்த யானைகளுடைய இடத்தில் அரசன் உள்ளான் என்ற காரணத்தால், அவ்விடத்தில் உள்ளவை எல்லாம் நல்லவை என்றுகூடக் கருதாது, நீ அவற்றைப் போரில் அழிக்கும் ஆற்றல் உடையவன்.

சிறப்புக் குறிப்பு:-

அரசனது இயல்பை எடுத்துரைப்பதால் இப்பாடல் ”அரச வாகை” என்ற துறையைச் சார்ந்தது. மற்றும், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனின் முன்னோர்களில் ஒருவனாகிய செம்பியனின் சிறப்பைக் கூறுவதால், இப்பாடல் ”முதல் வஞ்சி” என்ற துறையையும் சார்ந்ததாகக் கருதப்படுகிறது.

இப்பாடலில், பாம்பு குகைக்குள் இருப்பது பகை மன்னன் அரண்மனைக்குள் இருப்பதற்கும், இடியினால் பாம்பு அழிக்கப்படுவது கிள்ளிவளவனால் பகைமன்னன் அழிக்கப்படுவதற்கும் உவமையாகும்.

ஒரு பருந்தால் துரத்தப்பட்ட புறா ஒன்று செம்பியன் என்று அழைக்கப்பட்ட சிபி என்ற சோழ மன்னனிடம் தஞ்சம் புகுந்தது. அப்புறாவுக்குப் பதிலாக, அதன் எடைக்கு எடை ஈடாகத் தன் தசையை அளிப்பதாகவும் அந்தப் புறாவை இன்னலுக்குள்ளாக்க வேண்டாம் என்றும் அந்தப் பருந்தை சிபி வேண்டிக்கொண்டான். அந்தப் பருந்து அதற்கு சம்மதித்தது. புறாவைத் தராசின் ஒரு தட்டில் வைத்து அதற்கு எதிராக சிபி தன் உடலிலிருந்து தன் தசையை வெட்டிவைத்தான். சிபி, தன் தசைகளை எவ்வளவு வெட்டிவைத்தாலும் புறாவின் எடைக்கு சமனாகவில்லை. கடைசியாக, சிபி, தானே அந்தத் தராசில் புகுந்தான். பின்னர், அந்தப் புறாவும் அதைத் துரத்தி வந்த பருந்தும் தாங்கள் தேவர்கள் என்பதையும் அவர்கள் சிபியைச் சோதிப்பதற்காக அவ்வாறு வந்ததாகவும் கூறினர். இது ஒரு கதை. இந்தக் கதை தமிழ் நாட்டில் நெடுங்காலமாக நிலவி வந்திருக்கிறது. மாறோக்கத்து நப்பசலையார் புறநானூற்றுப் பாடல் 39-இல், “ புறவின் அல்லல் சொல்லிய” என்று மீண்டும் இந்தக் கதையை நினைவு கூர்கிறார். புலவர் தாமப்பல் கண்ணனார், பாடல் 43-இல், “தன்னகம் புக்க குறுநடைப் புறவின் தபுதி அஞ்சிச் சீரை புக்க வரையா ஈகை உரவோன் மருக” என்று சோழன் நலங்கிள்ளியின் தம்பி மாவளத்தானுக்கு அவனுடைய முன்னோர்களின் ஒருவனான சிபி, புறாவைக் காப்பாற்றியதை நினைவுபடுத்துகிறார். புறநானூற்றுப் பாடல் 46 –இல் கோவூர் கிழார் “புறாவின் அல்லல் அன்றியும், பிறவும் இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை!” என்று சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனிடம் கூறுவதையும் காண்க. மற்றும், சிலப்பதிகாரத்தில் கண்ணகி, பாண்டியன் நெடுஞ்செழியனிடம் சென்று வழக்குரைத்த போது, இப்பாடலில் உள்ள “புள்ளுறு புன்கண் தீர்த்தோன்” என்ற சொற்றடரை இளங்கோவடிகள் பயன்படுத்தியிருப்பதையும் காண்க.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 09, 2013, 06:42:37 PM
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-snc6/408442_545477478810501_347283384_n.jpg)

புறநானூறு, 38.(வேண்டியது விளைக்கும் வேந்தன்!)
பாடியவர் : ஆவூர் மூலங்கிழார்.
பாடப்பட்டோன் : சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
திணை : பாடாண்.
துறை: இயன் மொழி.
========================================

வரைபுரையும் மழகளிற்றின்மிசை
வான்துடைக்கும் வகையபோல
விரவுஉருவின கொடிநுடங்கும்
வியன்தானை விறல்வேந்தே!
நீ உடன்று நோக்கும்வாய் எரிதவழ

நீ நயந்து நோக்கும்வாய் பொன்பூப்பச்
செஞ்ஞாயிற்று நிலவுவேண்டினும்
வெண்திங்களுள் வெயில்வேண்டினும்
வேண்டியது விளைக்கும் ஆற்றலை ஆகலின்
நின்நிழல் பிறந்து நின்நிழல் வளர்ந்த

எம்அளவு எவனோ மற்றே? இன்நிலைப்
பொலம்பூங் காவின் நன்னாட் டோரும்
செய்வினை மருங்கின் எய்தல் அல்லதை
உடையோர் ஈதலும் இல்லோர் இரத்தலும்
கடவ தன்மையின் கையறவு உடைத்துஎன

ஆண்டுச்செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின்
நின்நாடு உள்ளுவர் பரிசிலர்
ஒன்னார் தேஎத்தும் நின்னுடைத் தெனவே

அருஞ்சொற்பொருள்:-

வரை = மலை, மலையுச்சி
புரைய = ஒரு உவமைச் சொல்
புரைதல் = ஒத்தல்
மழம் = இளமை
விரவு = கலப்பு
உருவு = வடிவம், உருவம்
நுடங்கும் = அசையும், ஆடும்
வியன் = பரந்த
விறல் = வெற்றி
உடன்று = வெகுண்டு
நயத்தல் = அன்பு செய்தல்
மற்று – அசைச் சொல்
கடவது = செய்ய வேண்டியது
கையறுதல் = செயலறுதல்
நுகர்ச்சி = அனுபவம்.

இதன் பொருள்:-

வரைபுரையும்=====> எரிதவழ

மலைபோன்ற இளம் யானைகளின்மேல், ஆகாயத்தைத் தடவுவதுபோல் பல நிறங்கள் கலந்த கொடிகள் அசைந்து ஆடுகின்றன. பெரிய படையையுடைய வெற்றி பொருந்திய வேந்தே! நீ சினந்து பார்த்தால் தீ பரவும்

நீ நயந்து=====> நின்னுடைத் தெனவே

அன்புடன் பார்த்தால் பொன் விளங்கும்; ஞாயிற்றில் நிலவை விரும்பினாலும், திங்களில் வெயிலை விரும்பினாலும் வேண்டியதை விளைவிக்கும் ஆற்றல் உடையவன். இனிய நிலையையுடைய, பொன்னாலான பூக்கள் நிறைந்த சோலைகள் உள்ள நல்ல நாடாகிய விண்ணுலகத்தில் உள்ளோர், தாம் செய்த நல்வினைக்கேற்ப இன்பம் அனுபவிக்க முடியுமே தவிர, அங்கே செல்வமுடையோர் இல்லாதோர்க்கு வழங்குவதும், வறியவர்கள் செல்வமுடையவர்களிடத்துச் சென்று இரத்தலும் செய்யக்கூடிய செயல்கள் அல்ல. விண்ணுலகில் அனுபவிக்கக் கூடிய இன்பம் மட்டுமல்லாமல் ஈகையினால் வரும் இன்பத்தையும் உன் நாட்டில் அனுபவிக்க முடியும் என்று கருதி, உன் பகைவர்களின் நாட்டில் இருந்தாலும் உன்னாடு உன்னை உடையதால் பரிசிலர் உன் நாட்டையே நினைப்பர். ஆதலால், உன் நிழலில் பிறந்து உன் நிழலில் வளர்ந்த எம் நினைவின் அளவைக் கூறவும் முடியுமோ?
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 09, 2013, 06:44:21 PM
(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-prn1/73338_545810482110534_407403896_n.jpg)

புறநானூறு, 39.(புகழினும் சிறந்த சிறப்பு!)
பாடியவர் : மாறோக்கத்து நப்பசலையார்.
பாடப்பட்டோன் : சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
திணை : பாடாண்.
துறை: இயன் மொழி.
=========================================

புறவின் அல்லல் சொல்லிய கறையடி
யானை வான்மருப் பெறிந்த வெண்கடைக்
கோல்நிறை துலாஅம் புக்கோன் மருக!
ஈதல்நின் புகழும் அன்றே; சார்தல்
ஒன்னார் உட்கும் துன்னரும் கடுந்திறல்

தூங்கெயில் எறிந்தநின் ஊங்கணோர் நினைப்பின்
அடுதல்நின் புகழும் அன்றே; கெடுவின்று
மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து
அறம்நின்று நிலையிற் றாகலின் அதனால்
முறைமைநின் புகழும் அன்றே; மறம்மிக்கு

எழுசமம் கடந்த எழுஉறழ் திணிதோள்
கண்ணார் கண்ணிக் கலிமான் வளவ!
யாங்கனம் மொழிகோ யானே? ஓங்கிய
வரையளந் தறியாப் பொன்படு நெடுங்கோட்டு
இமையம் சூட்டிய ஏம விற்பொறி

மாண்வினை நெடுந்தேர் வானவன் தொலைய
வாடா வஞ்சி வாட்டும்நின்
பீடுகெழு நோன்தாள் பாடுங் காலே.

அருஞ்சொற்பொருள்:-

சொல்லிய = “களைய”
கறை = உரல், கருங்காலி
வால் = வெண்மை
மருப்பு = கொம்பு
எறித்தல் = இட்டமைத்தல்
கோல் = துலாக்கோல்
நிறை = நிறுத்தல் அளவு
மருகன் = வழித்தோன்றல்
சார்தல் = சென்றடைதல் (நெருங்குதல்)
ஒன்னார் = பகைவர்
உட்குதல் = அஞ்சுதல்
துன்னுதல் = அணுகுதல்
தூங்கெயில் = ஆகாயக்கோட்டை
எறிந்த = அழித்த
ஊங்கணோர் = முன்னுள்ளோர்
அடுதல் = வெல்லுதல்
உறந்தை = உறையூர்
எழு = எழுந்த
சமம் = போர்
எழு = கணைய மரம்
திணி = செறிந்த
கலிமான் = குதிரை
பொன் = ஒளி
கோடு = சிகரம்
ஏமம் = காவல்
மாண் = சிறந்த
வினை = செயல் (வேலைப்பாடு)
வானவன் = சேரன்
தொலைய = அழிய
வாட்டுதல் = வருத்துதல், கெடுத்தல், அழித்தல்
பீடு = பெருமை
தாள் = முயற்சி, கால்

இதன் பொருள்:-

புறாவின் துன்பத்தைக் களைய வேண்டி, உரல் போன்ற பாதங்களையுடைய யானையின் வெண்ணிறமான தந்தத்தைக் கடைந்து செய்யப்பட்ட துலாக்கோலில் புகுந்து தன்னையே அளித்த செம்பியனின் வழித்தோன்றலே! அத்தகைய மரபில் வந்தவனாதலால், ஈதல் உனக்குப் புகழ் தருவது அன்று. பகைவர்கள் நெருங்குவதற்கு அஞ்சும், வான்தவழும் கோட்டைகளை அழித்த உன் முன்னோர்களை நினைத்துப் பார்த்தால், பகைவர்களை அழித்தல் உன் மரபினோருக்கு இயல்பான செயல். ஆதலால், அதுவும் உனக்கும் புகழ் தருவது அன்று. கேடின்றி, வீரம் பொருந்திய சோழனது உறையூரில் உள்ள அரசவையில் அறம் எப்பொழுதும் நிலைபெற்றுள்ளது. ஆகவே, முறைசெய்து நல்லாட்சி புரிவதும் உனக்குப் புகழ் தருவது அன்று. வீரம் மிகுந்து, எழுந்த போரை வென்ற, கணையமரம் போன்ற வலிய தோள்களையும், கண்ணைக் கவரும் மாலைகளையும், விரைந்து செல்லும் குதிரைகளையும் உடைய சோழ மன்னனே! உயரத்தை அளந்து அறிய முடியாத, பொன்போன்ற ஓளியுடன் மிளிறும் நெடிய சிகரங்களையுடைய இமயத்தில் தன் காவற் சின்னமாகிய வில்லைப் பொறித்தவனும், சிறப்பான வேலைப்பாடுகளுடன் கூடிய தேர்களையுடயவனுமாகிய சேரன் அழியுமாறு அவனுடைய வஞ்சி நகரத்தை அழித்த உன் பெருமைக்குரிய முயற்சியை நான் எப்படிப் பாடுவேன்?
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 09, 2013, 06:45:38 PM
(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-ash3/76948_546140998744149_1744419596_n.jpg)

புறநானூறு, 40.(ஒரு பிடியும் எழு களிரும்!)
பாடியவர் : ஆவூர் மூலங்கிழார்.
பாடப்பட்டோன் : சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
திணை : பாடாண்.
துறை: செவியறிவுறூஉ.
========================================

நீயே, பிறர்ஓம்புறு மறமன்னெயில்
ஓம்பாது கடந்தட்டுஅவர்
முடிபுனைந்த பசும்பொன்னின்
அடிபொலியக் கழல்தைஇய
வல்லாளனை வயவேந்தே!

யாமேநின், இகழ்பாடுவோர் எருத்தடங்கப்
புகழ்பாடுவோர் பொலிவுதோன்ற
இன்றுகண் டாங்குக் காண்குவம் என்றும்
இன்சொல்எண் பதத்தை ஆகுமதி; பெரும!
ஒருபிடி படியுஞ் சீறிடம்

எழுகளிறு புரக்கும் நாடுகிழ வோயே!


அருஞ்சொற்பொருள்:-

ஓம்பல் = பாதுகாத்தல்
எயில் = அரண்
கடந்து = எதிர் நின்று
அட்டு = அழித்து
தைஇய = இழைத்த
வயம் = வெற்றி
எருத்து = கழுத்து
பொலித்தல் = சிறத்தல்
பிடி = பெண் யானை.

இதன் பொருள்:-

நீயே=====> வயவேந்தே!

பகைவர்கள் பாதுகாத்த அரண்களை ஒருபொருட்டாக மதியாது, அவற்றை அழித்து, பகைவர்களின் முடியில் சூடிய பொன்னாலாகிய மகுடங்களை உருக்கி உன் கால்களில் வீரக் கழலாக அணிந்த வலிய ஆண்மையுடைய வேந்தே!

யாமேநின்=====> நாடுகிழ வோயே

ஒரு பெண்யானை படுக்கும் சிறிய இடத்தில் ஏழு யானைகளுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் விளையும் நாட்டுக்கு உரியவனே! தலைவா! நீ இன்சொல் உடையவனாகவும் காட்சிக்கு எளியவனாகவும் இருப்பாயாக. உன்னை இகழ்ந்து பாடுவோர் தலைகுனியவும், உன்னைப் புகழ்ந்து பாடுவோர் பெருமிதத்தால் தலை நிமிர்ந்து விளங்கவும், இன்று கண்டதுபோல் என்றும் காண்போமாக.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 10, 2013, 10:21:18 PM
(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-ash3/555294_546417138716535_1759504448_n.jpg)

புறநானூறு, 41.(காலனுக்கு மேலோன்!)
பாடியவர் : கோவூர் கிழார்.
பாடப்பட்டோன் : சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
திணை : வஞ்சி.
துறை: கொற்ற வள்ளை.
========================================

காலனும் காலம் பார்க்கும்; பாராது
வேல்ஈண்டு தானை விழுமியோர் தொலைய,
வேண்டிடத்து அடூஉம் வெல்போர் வேந்தே!
திசைஇரு நான்கும் உற்கம் உற்கவும்,
பெருமரத்து இலையில் நெடுங்கோடு வற்றல் பற்றவும்,

வெங்கதிர்க் கனலி துற்றவும், பிறவும்,
அஞ்சுவரத் தகுந புள்ளுக்குரல் இயம்பவும்,
எயிறுநிலத்து வீழவும், எண்ணெய் ஆடவும்,
களிறுமேல் கொள்ளவும், காழகம் நீப்பவும்,
வெள்ளி நோன்படை கட்டிலொடு கவிழவும்,

கனவின் அரியன காணா நனவின்
செருச்செய் முன்ப! நின் வருதிறன் நோக்கி,
மையல் கொண்ட ஏமம்இல் இருக்கையர்,
புதல்வர் பூங்கண் முத்தி, மனையோட்கு
எவ்வம் கரக்கும் பைதல் மாக்களடு

பெருங்கலக் குற்றன்றால் தானே; காற்றோடு
எரிநிகழ்ந் தன்ன செலவின்
செருமிகு வளவ! நிற் சினைஇயோர் நாடே

அருஞ்சொற்பொருள்:-

காலன் = இயமன்
ஈண்டுதல் = செறிதல், நிறைதல்
விழுமியோர் = சிறந்தோர்
அடுதல் = வெல்லுதல், கொல்லுதல்
உற்கம் = விண்வீழ் கொள்ளி
உற்கவும் = எரிந்து விழவும்
கனலி = கதிரவன்
துற்றவும் = நெருங்கவும்
புள் = பறவை
எயிறு = பல்
களிறு = ஆண் பன்றி, ஆண் யானை, விலங்கேற்றின் பொது
காழகம் = உடை
செரு = போர்
முன்பு = வலிமை
ஏமம் = பாதுகாவல்
எவ்வம் = துன்பம்
கரக்கும் = மறைக்கும்
பைதல் = துயரம்
செலவு = படையெடுப்ப
சினைஇயோர் = சினம் கொள்ளச் செய்தோர்

இதன் பொருள்:-

காலனும்=====> பற்றவும்

எமனும் உயிரைக் கொள்ள தக்க நேரம் வரை காத்திருக்கிறான். ஆனால், நீ நேரம் பார்க்காமல், வேல்களோடு கூடிய பகைவர்களின் படையை நீ விரும்பிய நேரத்தில் அழிப்பாய். போர்களில் வெற்றி பெரும் வேந்தே! . காற்றொடு தீ கலந்தாற்போல் படையெடுக்கும் வலிமை மிகுந்த சோழனே! உன்னைச் சினமூட்டியவர்களின் நாட்டில், எட்டுத் திசைகளிலும் வானத்திலிருந்து எரிகொள்ளிகள் எரிந்து விழுகின்றன; பெரிய மரத்தில் இலையில்லாத நெடிய கிளைகள் பட்டுப்போகின்றன.

வெங்கதிர்=====> கவிழவும்

கதிரவனின் கதிர்கள் சுட்டு எரிக்கின்றன; மற்றும், அச்சம் தரும் பறவைகள் ஒலிக்கின்றன. இவையெல்லாம், உன்னைச் சினமூட்டும் பகைவர்களின் நாடுகளில் உண்மையாகவே நடைபெறும் நிகழ்ச்சிகள். இவை மட்டுமல்லாமல், அங்குள்ளவர்கள் பல கெட்ட கனவுகளும் காண்கின்றனர். பற்கள் நிலத்தில் விழுவது போலவும், எண்ணெய் தேய்த்துக் குளிப்பது போலவும், பெண்பன்றி ஆண்பன்றி மேல் ஏறுவது போலவும், தங்கள் ஆடைகள் கழன்று கீழே விழுவது போலவும், ஓளி திகழும் படைக்கலங்கள் தாமிருந்த கட்டிலினின்று கவிழ்ந்து விழுவது போலவும்

கனவின்=====> சினைஇயோர் நாடே

கனவுகள் காண்கின்றனர். இதுபோல் நனவிலும் கனவிலும் காணத் தகாத நிகழ்ச்சிகளை உன் பகைவர்கள் காணுமாறு போர் செய்யும் வலியவனே! நீ படையெடுத்து வருவதைக் கண்டு, கலங்கிய பாதுகாவல் இல்லாத உன் பகைவர்கள், தம் குழந்தைகளின் பூப்போன்ற கண்களில் முத்தமிட்டு, தம் மனைவியரிடம் தம் துயரம் தெரியாதவாறு மறைத்துத் துன்பத்தோடு உள்ளனர்.

சிறப்புக் குறிப்பு:-

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனின் பகைவர்களை அழிக்கு ஆற்றல்களையும் வெற்றிகளையும் கூறுவதால் இப்பாடல் கொற்ற வள்ளை என்ற துறையைச் சார்ந்தது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 10, 2013, 11:01:35 PM
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-ash4/408444_546970718661177_1775349356_n.jpg)

புறநானூறு, 42.(ஈகையும் வாகையும்!)
பாடியவர் : இடைக்காடனார்.
பாடப்பட்டோன் : சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
திணை : வாகை.
துறை: அரசவாகை.
========================================

ஆனா ஈகை அடுபோர் அண்ணல்நின்
யானையும் மலையின் தோன்றும்; பெருமநின்
தானையும் கடலென முழங்கும்; கூர்நுனை
வேலும் மின்னின் விளங்கும் ; உலகத்து
அரைசுதலை பனிக்கும் ஆற்றலை யாதலின்,

புரைதீர்ந் தன்றுஅது புதுவதோ அன்றே;
தண்புனற் பூசல் அல்லது நொந்து
களைக வாழி வளவ! என்றுநின்
முனைதரு பூசல் கனவினும் அறியாது
புலிபுறங் காக்கும் குருளை போல

மெலிவில் செங்கோல் நீபுறங் காப்பப்
பெருவிறல் யாணர்த் தாகி அரிநர்
கீழ்மடைக் கொண்ட வாளையும் உழவர்
படைமிளிர்ந் திட்ட யாமையும் அறைநர்
கரும்பிற் கொண்ட தேனும் பெருந்துறை

நீர்தரு மகளிர் குற்ற குவளையும்
வன்புலக் கேளிர்க்கு வருவிருந்து அயரும்
மென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருந!
மலையின் இழிந்து மாக்கடல் நோக்கி
நிலவரை இழிதரும் பல்யாறு போலப்

புலவ ரெல்லாம் நின்நோக் கினரே;
நீயே, மருந்தில் கணிச்சி வருந்த வட்டித்துக்
கூற்றுவெகுண் டன்ன முன்பொடு
மாற்றுஇரு வேந்தர் மண்நோக் கினையே.

அருஞ்சொற்பொருள்:-

ஆனா = குறையாத
அண்ணல் = மன்னன், பெருமையிற் சிறந்தோன்
தானை = படை
அரைசு = அரசன், அரசாட்சி
பனிக்கும் = நடுங்கச் செய்யும்
புரை = குற்றம், பழுது (குறை)
பூசல் = பெரிதொலித்தல்
முனை = போர்முனை
குருளை = புலிக்குட்டி
மெலிவு = தளர்ச்சி
புறங்காத்தல் = பாதுகாத்தல்
விறல் = சிறப்பு
யாணர் = புது வருவாய்
அரித்தல் = அறுத்தல்
மடை = வாய்க்கால்
வாளை = வாளை மீன்
அறைதல் = துண்டித்தல்
குற்ற = பறித்த
வன்புலம் = குறிஞ்சி, முல்லை
மென்புலம் = மருதம், நெய்தல்
அயர்தல் = செய்தல்
வைப்பு = இடம், ஊர்
கணிச்சி = கோடரி
வட்டித்தல் = சுழலுதல் (சுழற்றுதல்).

இதன் பொருள்:-

ஆனா ஈகை=====> ஆற்றலை யாதலின்

குறையாது கொடுக்கும் ஈகையும் வெல்லும் போரும் உடைய தலைவனே! உன் யானை, மலை போலத் தோன்றும். பெருமானே! உன் படைகளோ கடல் போல் முழங்கும். உன்னுடைய கூர்மையான நுனியையுடைய வேல் மின்னலைப் போல ஒளியுடன் விளங்கும். நீ உலகத்து அரசர்களெல்லாம் நடுங்கச் செய்யும் ஆற்றல் உடையவன். ஆதலால்,

புரைதீர்=====> குருளை போல

உன் நாட்டில் குறையில்லாத ஆட்சி நிலவுகிறது. இது உனக்குப் புதியது அல்ல. குளிர்ந்த நீரோட்டத்தினால் எழும் ஒலியைத் தவிர, உன் வீரர்கள் வருந்தி, “ எம் துயரத்தைக் களைக, வளவனே” என்று போர்முனையில் ஒலி எழுப்புவதை, நீ கனவிலும் கேட்டதில்லை. புலி தன் குட்டிகளைப் பாதுகாப்பதைப் போல்

மெலிவில்=====> பெருந்துறை

செங்கோல் செலுத்தி நீ உன் நாட்டு மக்களைக் காப்பாற்றுகின்றாய். உன் நாடு மிகச்சிறந்த புதுவருவாயை உடையது. அங்கு, கடைமடையில் நெல் அறுப்போர் பிடித்த வாளைமீன், உழவர்களின் ஏர் முனையில் சிக்கிய ஆமை, கரும்பு அறுப்போர் கரும்பிலிருந்து எடுத்த இனிய கருப்பஞ் சாறு, பெரிய நீர்த்துறையிலிருந்து

நீர்தரு மகளிர்=====> பல்யாறு போலப்

நீர் கொண்டுவரும் மகளிர் பறித்த குவளை மலர்கள் ஆகியவற்றை, மலை மற்றும் காடு போன்ற வலிய நிலங்களிலிருந்து வருபவர்களுக்கு விருந்தாக அளிக்கும் மருத வளம் மிகுந்த நல்ல நாட்டின் தலைவனே! மலைகளிலிருந்து வரும் ஆறுகளெல்லாம் பெரிய கடலை நோக்கிச் செல்வது போல

புலவ ரெல்லாம்=====> மண்நோக் கினையே

புலவரெல்லாம் உன்னையே நோக்கி வருகின்றனர். நீ, ஒப்பற்ற கணிச்சி என்னும் ஆயுததைச் சுழற்றிச் சினந்து கொல்லும் கூற்றுவன் போன்ற வலிமையோடு மற்ற இரு வேந்தர்களின் நிலத்தை நோக்குகிறாய்.

சிறப்புக் குறிப்பு:-

இங்கு, மற்ற இரு வேந்தர்கள் என்பது சேர பாண்டிய மன்னர்களைக் குறிக்கும்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 10, 2013, 11:05:49 PM
(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-prn1/536962_547250231966559_1337099841_n.jpg)

புறநானூறு, 43.(பிறப்பும் சிறப்பும்!)
பாடியவர் : தாமற்பல் கண்ணனார்.
பாடப்பட்டோன் : சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான்.
திணை : வாகை.
துறை: அரசவாகை.
=======================================

நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்
தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக்
கால்உண வாகச் சுடரொடு கொட்கும்
அவிர்சடை முனிவரும் மருளக் கொடுஞ்சிறைக்
கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித் தொரீஇத்

தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
தபுதி யஞ்சிச் சீரை புக்க
வரையா ஈகை உரவோன் மருக!
நேரார்க் கடந்த முரண்மிகு திருவின்
தேர்வண் கிள்ளி தம்பி! வார்கோல்

கொடுமர மறவர் பெரும! கடுமான்
கைவண் தோன்றல்! ஐயம் உடையேன்:
ஆர்புனை தெரியல்நின் முன்னோர் எல்லாம்
பார்ப்பார் நோவன செய்யலர்: மற்றுஇது
நீர்த்தோ நினக்குஎன வெறுப்பக் கூறி

நின்யான் பிழைத்தது நோவாய் என்னினும்
நீபிழைத் தாய்போல் நனிநா ணினையே;
தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்குஞ் செம்மல்!
இக்குடிப் பிறந்தோர்க் கெண்மை காணும்எனக்
காண்டகு மொய்ம்ப! காட்டினை; ஆகலின்

யானே பிழைத்தனென்; சிறக்கநின் ஆயுள்;
மிக்குவரும் இன்னீர்க் காவிரி
எக்கர் இட்ட மணலினும் பலவே!

அருஞ்சொற்பொருள்:-

அலமரல் = வருந்தல், துன்பமுறல்
தெறு = சினம், அச்சம், துன்பம்
கனலி = கதிரவன்
கால் = காற்று
கொட்குதல் = சுழலல்
அவிர் = ஓளி
சிறை = சிறகு
உகிர் = நகம்
ஏறு = இடி
ஒரீஇ = நீக்கி (தப்பி)
தபுதி = அழிவு
சீரை = துலாத்தட்டு
உரம் = வலி
நேரார் = பகைவர்
முரண் = வலி
வண் = மிகுதி
வார் = நேர்மை
கோல் = அம்பு
கொடுமரம் = வில்
கடு = விரைவு
மான் = குதிரை
கைவண் = வண்கை = கொடைக்கை
வண்மை = ஈகை
தோன்றல் = அரசன்
ஆர் = ஆத்தி
தெரியல் = மாலை
நீர் = தன்மை
நீர்த்தோ = தன்மையான செயலோ (தகுமோ)
நனி = மிக
எண்மை = எளிமை
மொய்ம்பு = தோள்வலி
எக்கர் = மணற்குன்று

இதன் பொருள்:-

நிலமிசை=====> தொரீஇத்

உலகில் வாழ்வோரின் துன்பங்கள் தீர, சுடும் கதிரவனின் வெப்பத்தைத் தாம் பொறுத்து, காற்றை உணவாகக் கொண்டு, கதிரவனின் சுடர்போல் சுழன்று திரியும், விளங்கிய சடையையுடைய முனிவர்கள் திகைக்குமாறு, வளைந்த சிறகினையும் கூரிய நகங்களையுமுடைய பருந்தின் தாக்குதலுக்குத் தப்பி

தன்னகம்=====> வார்கோல்

தன்னிடத்தில் அடைக்கலம் புகுந்த, குறுகிய நடையையுடய புறாவின் அழிவுக்கு அஞ்சி, தராசில் புகுந்த, வரையாது வழங்கும் வள்ளலின் வழித்தோன்றலே! பகைவரை வென்ற, மிகுந்த செல்வத்தையுடைய, கிள்ளிவளவனின் தம்பியே! நீண்ட அம்பினையும்

கொடுமர=====> வெறுப்பக் கூறி

வளைந்த வில்லையுமுடைய மறவர்களுக்குத் தலைவ! விரைந்து செல்லும் குதிரைகளையும் வள்லல் தன்மையுமுடைய தலைவ! ”உன் குடிப்பிறப்பிலே எனக்கு ஐயம் எழுகிறது. ஆத்திமாலை சூடிய உன் முன்னோரெல்லாம் பார்ப்பனர்கள் நோவுமாறு எந்தச் செயலையும் செய்யமாட்டர்கள். நீ செய்த செயல் உன் தகுதிக்கு ஏற்றதோ?” என்று நீ வெறுக்குமாறு நான் கூறினேன்.

நின்யான்=====> மணலினும் பலவே!

இருப்பினும், என் பிழையைக் கண்டு வெறுக்காமல், நீ தவறு செய்ததைப்போல் வெட்கப்பட்டாய். தமக்குத் தவறிழைத்தவர்களைப் பொறுத்தருளும் தலைவ! தவறிழைத்தவர்களைப் பொறுக்கும் தகுதி உன் குலத்தில் பிறந்தார்க்கு எளிது என்று எனக்குக் காட்டிய வலியவனே! உன் செயலால் நான் பிழைத்தேன். பெருகி வரும் இனிய நீரையுடைய காவிரிக்கரையில் உள்ள மணல்மேடுகளிலுள்ள மணல்களைவிட நீ அதிக நாட்கள் வாழ்வாயாக!

சிறப்புக் குறிப்பு:-

இப்பாடலில், மாவளத்தான் தவறுகளைப் பொறுத்தருளும் இயல்பினன் என்று அவனைப் புகழ்ந்து பாடப்பட்டிருப்பதால் இப்பாடல் அரச வாகை என்னும் துறையைச் சார்ந்ததாகியது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 10, 2013, 11:10:09 PM
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-snc7/419726_547760738582175_1584692015_n.jpg)

புறநானூறு, 44.(அறமும் மறமும்!)
பாடியவர் : கோவூர் கிழார்.
பாடப்பட்டோன் : சோழன் நெடுங்கிள்ளி.
திணை : வாகை.
துறை: அரசவாகை.
=======================================

இரும்பிடித் தொழுதியடு பெருங்கயம் படியா
நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ
திருந்தரை நோன்வெளில் வருந்த ஒற்றி
நிலமிசைப் புரளும் கைய வெய்துயிர்த்து
அலமரல் யானை உருமென முழங்கவும்

பாலில் குழவி அலறவும் மகளிர்
பூவில் வறுந்தலை முடிப்பவும் நீரில்
வினைபுனை நல்லில் இனைகூஉக் கேட்பவும்
இன்னாது அம்ம ஈங்குஇனிது இருத்தல்;
துன்னரும் துப்பின் வயமான் தோன்றல்!

அறவை ஆயின் நினதுஎனத் திறத்தல்
மறவை ஆயின் போரொடு திறத்தல்
அறவையும் மறவையும் அல்லை ஆகத்
திறவாது அடைத்த திண்ணிலைக் கதவின்
நீள்மதில் ஒருசிறை ஒடுங்குதல்
நாணுத்தக உடைத்திது காணுங் காலே

அருஞ்சொற்பொருள்:-

இரு = கரிய
பிடி = பெண் யானை
தொழுதி = கூட்டம்
கயம் = குளம்
மிதி = மிதித்துத் திரட்டப்பட்ட கவளம்
திருந்திய = செவ்விய, திருந்துதல், ஒழுங்காதல்
அரை = மரத்தின் அடிப்பாகம்
நோன் = வலி
வெளில் = யானை கட்டும் கம்பம்
ஒற்றி = தள்ளி
வெய்து = வெம்மையுடையது
உயிர்த்தல் = பெருமூச்சு விடுதல்
அலமரல் = கலங்குதல்
உரும் = இடி
இனை = வருத்தம்
ஈங்கு = இவ்விடம்
துன்னுதல் = நெருங்குதல்
துப்பு = வலி
வயம் = வலிமை
மான் = குதிரை
தோன்றல் = அரசன்
அறவை = அற வழியில் நடப்பவன்
மறவை = வீர வழியில் நடப்பவன்
திண் = வலி
சிறை = பக்கம்

இதன் பொருள்:-

இரும்பிடி=====> முழங்கவும்

ஆண் யானைகள் பெண்யானைகளின் கூட்டத்தோடு சேர்ந்து குளங்களில் படியாமல் உள்ளன; நெய்யோடு சேர்த்து, மிதித்துத் திரட்டப்பட்ட உணவுக் கவளங்களை உண்ணாமல், செவ்விய பக்கங்களையும் வலிமையுமுடைய கம்பங்களைச் சாய்த்து, நிலத்தில் புரளும் தும்பிக்கைகளுடன் வெப்பமுடைய பெருமூச்சு விட்டுக் கலங்கி இடி இடிப்பதுபோல் பிளிறுகின்றன.

பாலில்=====> தோன்றல்

குழந்தைகள் பாலில்லாமல் அலறுகின்றனர். மகளிர் பூவில்லாத வெறுந்தலையை முடிந்துகொள்கிறார்கள். நல்ல வேலைப்படுகளுடன் கூடிய வீடுகளில் வாழும் மக்கள் நீரின்றி வருந்தும் ஒலி கேட்கிறது. இனியும் நீ இங்கே இருப்பது கொடிய செயல். பகைவர்கள் நெருங்குதற்கரிய வலிமையுடைய குதிரைகளையுடைய அரசே!

அறவை=====> காணுங் காலே

நீ அறவழியில் நடக்க விரும்பினால், உன் கோட்டையின் கதவுகளைத் திறந்து, இந்த நாடு உன்னுடையது என்று நலங்கிள்ளிக்கு அளித்துப் போரைத் தவிர்ப்பாயாக; வீர வழியில் நடப்பவனாக இருந்தால் கோட்டையின் கதவுகளைத் திறந்து நலங்கிள்ளியுடன் போருக்குப் போவாயாக.” அறவழியிலும் வீரவழியிலும் செயல் படாமல், திறவாமல் அடைக்கப்பட்ட நீண்ட வலிய கதவுகளையுடைய மதில்களின் ஒருபக்கத்தில் நீ ஒளிந்திருப்பது வெட்கத்திற்குரிய செயல்.

சிறப்புக் குறிப்பு:-

சங்க காலத்தில், மன்னர்கள் தவறு செய்தால், அவர்களைத் தட்டிக் கேட்டு, இடித்துரைத்து நல்வழிப்படுத்தும் அறிவும், ஆற்றலும் உடைய புலவர்கள் இருந்தார்கள் என்பதும், அரசர்கள் புலவர்களுக்கு அந்த உரிமையைக் கொடுத்திருந்தனர் என்பதும் தெரிகிறது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 10, 2013, 11:15:54 PM
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash3/555169_547977638560485_951555141_n.jpg)

புறநானூறு, 45.(தோற்பது நும் குடியே!)
பாடியவர் : கோவூர் கிழார்.
பாடப்பட்டோன் : சோழன் நலங்கிள்ளியும், நெடுங்கிள்ளியும்.
திணை : வஞ்சி.
துறை: துணை வஞ்சி.
========================================

இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்;
கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்;
நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே; நின்னொடு
பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே;
ஒருவீர் தோற்பினும் தோற்பதும் குடியே;

இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால்,
குடிப்பொருள் அன்றுநும் செய்தி; கொடித்தேர்
நும்மோர் அன்ன வேந்தர்க்கு
மெய்ம்மலி உவகை செய்யும்இவ் இகலே!

அருஞ்சொற்பொருள்:-

இரு = பெரிய
வெண் = வெண்மை
தோடு = இலை, ஓலை, பூவிதழ்
மலைதல் = அணிதல், சூடுதல்
சினை = மரக்கொம்பு
தெரியல் = மாலை
கண்ணி = மாலை
ஆர் = ஆத்தி
மிடைதல் = நிறைதல், செறிதல்
வேறல் = வெல்லுதல்
பொருள் = தன்மை (தகுதி)
செய்தி = செய்கை
மலி = நிறைதல், மிகுதல்
உவகை = மகிழ்ச்சி, களிப்பு
இகல் = பகை

இதன் பொருள்:-

இரும்பனை=====> தோற்பதும் குடியே

இங்கு போர் புரிபவர்களில் யாரும் கரிய பனையின் வெண்ணிறப் பூமாலை அணிந்தவன் அல்லன்; கரிய வேம்பின் மாலையை அணிந்தவனும் அல்லன். உன்னுடைய மாலை ஆத்திப் பூக்களால் தொடுக்கப்பட்டது. உன்னோடு போர் புரிபவனின் மாலையும் ஆத்திப் பூவால் தொடுக்கப்பட்டதுதான். உங்கள் இருவரில் ஒருவர் தோற்றாலும் தோற்பது சோழனின் குடிதான்.

இருவீர் வேறல்=====> இவ் இகலே

இப்போரில் நீங்கள் இருவரும் வெற்றி பெறுவது இயற்கையும் அல்ல. ஆதலால், உங்கள் செயல் உங்கள் குடிப்பெருமைக்குத் தகுந்ததன்று. தேர்களில் கொடியோடுகூடிய உம்போன்ற வேந்தர்கள், இந்தப் போரைப்பார்த்துத் தங்கள் உடலெல்லாம் மிகவும் பூரிக்கும் வகையில் ஏளனமாகச் சிர்ப்பார்கள்.

பாடலின் பின்னணி:-

தங்களுக்குள் இருந்த பகை காரணமாக சோழன் நலங்கிள்ளிக்கும் சோழன் நெடுங்கிள்ளிக்கும் இடையே போர் மூண்டது. சோழ குலத்தில் தோன்றிய இருவரும் ஒருவரோடு ஒருவர் போரிடுவது ஏளனத்துக்குரியது என்று அவர்களுக்கு எடுத்துரைத்து, அவர்களைச் சமாதானப் படுத்துவதற்குக் கோவூர் கிழார் மேற்கொண்ட முயற்சி இப்பாடலிலிருந்து தெரிகிறது.

சிறப்புக் குறிப்பு:-

பனந்தோட்டாலாகிய மாலை சேரர்களுக்குரியது; வேப்பம்பூ மாலை பாண்டியனுக்குரியது. இங்கு, போர்புரிபவர்கள் இருவருமே சோழர்கள் என்பதைக் குறிப்பிடுவதற்காக, கோவூர் கிழார், பனந்தோட்டு மலை அணிந்தவனோ வேப்பம்பூ மாலை அணிந்தவனோ இங்கு போர் புரியவைல்லை என்று கூறுகிறார்.

இப்பாடலும், முந்திய பாடலைப்போல், கோவூர் கிழார், அரசர்கள் தவறு செய்தால் அவர்களுக்கு அறிவுரை வழங்கும் ஆற்றல் உடையவராக இருந்தார் என்பதையும் அரசர்களிடத்து அவருக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது என்பதையும் உறுதிப்படுத்துகிறது.


Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 16, 2013, 11:55:15 PM
புறநானூறு, 46.(அருளும் பகையும்!)
பாடியவர் : கோவூர் கிழார்.
பாடப்பட்டோன் : சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
திணை : வஞ்சி.
துறை: துணை வஞ்சி.
========================================

நீயோ, புறவின் அல்லல் அன்றியும் பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை;
இவரே, புலனுழுது உண்மார் புன்கண் அஞ்சித்
தமதுபகுத்து உண்ணும் தண்ணிழல் வாழ்நர்
களிறுகண்டு அழூஉம் அழாஅல் மறந்த

புன்தலைச் சிறாஅர் மன்றுமருண்டு நோக்கி
விருந்திற் புன்கண்நோ வுடையர்
கேட்டனை யாயின்நீ வேட்டது செய்ம்மே.

அருஞ்சொற்பொருள்:-

அல்லல் = துன்பம்
இடுக்கண் = துன்பம்
மருகன் = வழித்தோன்றல்
புலன் = அறிவு
புன்கண் = துன்பம்
அழூஉம் அழாஅல் = அழுகின்ற அழுகை
மன்று = மன்றம்
மருளல் = வெருளுதல், அஞ்சுதல்
புன்தலைச் சிறாஅர் = சிறிய தலையையுடைய சிறுவர்கள்
விருந்து = புதிது
வேட்டது = விரும்பியது
செய்ம்மே = செய்வாயாக

இதன் பொருள்:-

நீயோ=====> மறந்த

நீயோ, புறாவும் துன்பம் மட்டுமல்லாது மற்ற உயிர்களின் துன்பத்தையும் நீக்கிய சிபியின் வழித்தோன்றல். இவர்களோ, அறிஞர்களின் வறுமைக்கு அஞ்சித், தம்மிடத்து உள்ளவற்றைப் பகிர்ந்து உண்ணும் இரக்க குணமுள்ளவர்களின் மரபினர். யானைகளைக் கண்டு அழாமல், இளமையால் மகிழ்பவர்கள்தான்

புன்தலை=====> செய்ம்மே

இந்தச் சிறிய தலையையுடைய சிறுவர்கள். கூடியிருப்போரைப் புதியவராகக்கண்டு வருந்தும் புதியதோர் வருத்தமும் உடையவர். நான் சொல்வதைக் கேள், ஆனால், பின் உன் விருப்பப்படியே செய்க.

பாடலின் பின்னணி:-

கிள்ளிவளவன், தன் பகைவனாகிய மலையமான் என்பவனின் மக்களை யானையின் காலின் கீழே இட்டுக் கொலை செய்ய முயன்றான். அதைக் கண்ட கோவூர் கிழார், சிறுவர்கள் கொலை செய்யப்படுவதைத் தடுக்க விரும்பி இப்பாடலை இயற்றினார். “நீ, ஒருபுறாவின் உயிரைக் காப்பாற்றுவதற்காகத் தன்னையே அளித்த சிபியின் வழித்தோன்றல். இவர்கள் புலவர்களுக்குப் பெருமளவில் ஆதரவளித்த மலையமானின் சிறுவர்கள்; இவர்களைத் துன்புறுத்தாமல் விட்டுவிடு. நான் கூற விரும்பியதைக் கூறினேன். நீ உன் விருபபப்ப்டி செய்.” என்று கிள்ளிவளவனிடம் கோவூர் கிழார் முறையிடுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

மலையமானின் சிறுவர்களைக் கொலை செய்யவிருக்கும் கிள்ளிவளவனிடம், அவ்வாறு செய்ய வேண்டாம் என்று கூறி கோவூர் கிழார் அவனைச் சமாதானப் படுத்துவதால், இப்பாடல் துணை வஞ்சி என்னும் துறையைச் சார்ந்ததாயிற்று.

“புலன் உழுது உண்மார்” என்பது அறிவையே தம் தொழிலாகக் கொண்டவர்கள் என்ற பொருளில் கூறப்பட்டுள்ளது.

”புல்” என்னும் சொல்லுக்குச், ”சிறுமை”, ”அற்பம்” என்று பொருள். இங்கு, “புன்தலைச் சிறாஅர்” என்பது அவர்கள் மிகவும் சிறியவர்கள் என்பதை வலியுறுத்துவதற்காகக் கூறப்பட்டுள்ளது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 16, 2013, 11:57:19 PM
(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash3/552611_548345578523691_627447421_n.jpg)

புறநானூறு, 47.(புலவரைக் காத்த புலவர்!)
பாடியவர் : கோவூர் கிழார்.
பாடப்பட்டோன் : சோழன் நெடுங்கிள்ளி.
திணை : வஞ்சி.
துறை: துணை வஞ்சி.
=======================================

வள்ளியோர்ப் படர்ந்து புள்ளின் போகி
நெடிய என்னாது சுரம்பல கடந்து
வடியா நாவின் வல்லாங்குப் பாடிப்
பெற்றது மகிழ்ந்தும் சுற்றம் அருத்தி
ஓம்பாது உண்டு கூம்பாது வீசி

வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கை
பிறர்க்குத் தீதறிந் தன்றோ? இன்றே, திறப்பட
நண்ணார் நாண அண்ணாந்து ஏகி
ஆங்குஇனிது ஒழுகின் அல்லது ஓங்குபுகழ்
மண்ணாள் செல்வம் எய்திய
நும்மோர் அன்ன செம்மலும் உடைத்தே

அருஞ்சொற்பொருள்:-

வள்ளியோர் = வரையாது கொடுப்போர்
படர்தல் = நினைத்தல்
புள் = பறவை
சுரம் = பாலைவழி
வடியா = தெளிவில்லாத
வடித்தல் = தெளித்தெடுத்தல்
அருத்தல் = உண்பித்தல்
ஓம்புதல் = பாதுகாத்தல்
கூம்பல் = ஊக்கங்குறைதல்
வீசுதல் = வரையாது கொடுத்தல்
வரிசை = சிறப்பு, மரியாதை, பாராட்டு
பரிசில் = கொடை, ஈகை
திறம் = திறமை (அறிவு)
திறப்படல் = கூறுபடல், தேறுதல், சீர்ப்படுதல்
நண்ணார் = பகைவர் (மாறுபட்ட கருத்துடைய மற்ற புலவர்கள்)
செம்மல் = தருக்கு (பெருமிதம்)

இதன் பொருள்:-

வள்ளியோர்=====> கூம்பாது வீசி

வரையாது கொடுக்கும் வள்ளல்களை நினைத்து, நெடிய வழி என்று எண்ணாமல், பாலைவழிகள் பலவற்றைக் கடந்து, பறவைகள் போல் சென்று, தமது தெளிவில்லாத நாவால் தம்மால் இயன்றதைப் பாடிப் பெற்ற பரிசிலைக் கண்டு மகிழ்ந்து, பிற்காலத்துக்கு வேண்டும் என்று எண்ணி, அவற்றைப் பாதுகவாமல் உண்டு, பிறர்க்கும் குறையாது கொடுத்துத் தம்மை ஆதரிப்பவர்கள் தமக்குச் செய்யும் சிறப்புக்காக வருந்துவதுதான் பரிசிலர் வாழ்க்கை.

வரிசைக்கு=====> உடைத்தே

இத்தகைய வாழ்க்கை வாழ்பவர்கள் பிறர்க்குத் தீமை செய்வதை அறிவார்களோ? அவர்கள் பிறர்க்குத் தீமை செய்யமாட்டர்கள். புலவர்கள், கல்வி கேள்விகளால் தம்மோடு மாறுபட்டவர்களைத் தம் புலமையால் நாணுமாறு செய்து அவர்களை வெற்றிகொண்டு தலை நிமிர்ந்து நடப்பவர்கள். அது மட்டுமல்லாமல், அவர்கள் உயர்ந்த புகழும் உலகாளும் செல்வமும் பெற்ற உன்னைப் போன்றவர்களைப்போல் பெருமிதம் உடையவர்கள்.

பாடலின் பின்னணி:-

சோழன் நலங்கிள்ளியிடமிருந்து இளந்தத்தன் என்னும் புலவன் உரையூருக்குச் சென்றான். உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த நெடுங்கிள்ளி, இளந்தத்தன் ஒருவொற்றன் என்று கருதி அவனைக் கொலை செய்ய முயன்றான். அதைக் கண்ட கோவூர் கிழார், இளந்ததத்தன் ஒற்றன் அல்லன் என்று நெடுங்கிள்ளிக்கு எடுத்துக் கூறி இளந்தத்தனைக் காப்பற்றினார். இப்பாடல் அச்சமயம் இயற்றப்பட்டது.

சிறப்புக் குறிப்பு:-

கோவூர் கிழார் இளந்தத்தனைக் காப்பாற்றுவதற்காக நெடுங்கிள்ளியைச் சமாதானப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதால், இப்பாடல் துணை வஞ்சித்துறையைச் சார்ந்ததாயிற்று.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 16, 2013, 11:59:01 PM
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash3/530807_548707541820828_257658595_n.jpg)

புறநானூறு, 48.("கண்டனம்" என நினை!)
பாடியவர் : பொய்கையார்.
பாடப்பட்டோன் : சேரமான் கோக்கோதை மார்பன்.
திணை : பாடாண்.
துறை: புலவர் ஆற்றுப்படை.
========================================

கோதை மார்பிற் கோதை யானும்
கோதையைப் புணர்ந்தோர் கோதை யானும்
மாக்கழி மலர்ந்த நெய்த லானும்
கள்நா றும்மே கானல்அம் தொண்டி;
அஃதுஎம் ஊரே; அவன்எம் இறைவன்;

அன்னோர் படர்தி ஆயின் நீயும்
எம்மும் உள்ளுமோ; முதுவாய் இரவல!
அமர்மேம் படூஉங் காலை நின்
புகழ்மேம் படுநனைக் கண்டனம் எனவே.

அருஞ்சொற்பொருள்:-

கோதை = சேரன், பூமாலை
மா = கரிய
கழி = உப்பங்கழி, கானல் (கடற்கரைச் சோலை)
கள் = மலர்த்தேன்
கானல் = கடற்கரைச் சோலை
படர்தல் = செல்லுதல்
முதுவாய் = முதிய வாய்மையுடைய
அமர் = போர்
மேம்படுதல் = உயர்தல்
மேம்படுநனை = மேம்படுத்துபவனை

இதன் பொருள்:-

கோதை=====> இறைவன்

சேரமான் மார்பில் விளங்கும் மாலையாலும், அந்த சேரமானை மணந்த மகளிர் சூடிய மாலைகளாலும், கரிய நிறமுடைய உப்பங்கழிகளில் மலர்ந்த நெய்தல் மலர்களாலும் தேன்மணம் கமழும் கடற்கரைச் சோலைகளை உடையது தொண்டி நகரம். அது என்னுடைய ஊர். அவ்வூரில் உள்ள சேரன் கோக்கோதை மார்பன் என் அரசன்

அன்னோர்=====> கண்டனம் எனவே

முதிய வாய்மையுடைய இரவலனே! அத்தன்மையுடைய தொண்டி நகரத்திற்கு நீ சென்றால், என்னை நினைவில் கொள்வாயா? ”நீ போரில் வெற்றி அடையும்பொழுது உன் புகழைப் பாராட்டிப் பாடுபவனைக் கண்டேன்” என்று சேரன் கோக்கோதை மார்பனிடம் கூறுவாயாக.

பாடலின் பின்னணி:-

சேரன் கோக்கோதை மார்பனைப் பாடிப் பரிசுபெற்ற புலவர் பொய்கையார், வேறொரு புலவரைச் சேரனிடம் ஆற்றுப்படுத்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

சிறப்புக் குறிப்பு:-

தலைவனின் இயல்பையும் ஊரையும் கூறி, “ முதுவாய் இரவல எம்முள் உள்ளும்” என்று தன் தலைமை தோன்றுமாறு கூறியதால், இப்பாடல் புலவர் ஆற்றுப்படை என்னும் துறையைச் சார்ந்ததாயிற்று.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 17, 2013, 12:00:37 AM
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-ash4/402184_549102621781320_1457241809_n.jpg)

புறநானூறு, 49.(யாங்கனம் மொழிகோ, ஓங்குவாள் கோதையை?)
பாடியவர் : பொய்கையார்.
பாடப்பட்டோன் : சேரமான் கோக்கோதை மார்பன்.
திணை : பாடாண்.
துறை: புலவர் ஆற்றுப்படை. இயல்பைக் கூறுவதால் இயன் மொழி எனவும் பாடம்.
========================================

நாடன் என்கோ? ஊரன் என்கோ?
பாடிமிழ் பனிக்கடற் சேர்ப்பன் என்கோ?
யாங்கனம் மொழிகோ, ஓங்குவாள் கோதையை?
புனவர் தட்டை புடைப்பின் அயலது
இறங்குகதிர் அலமரு கழனியும்
பிறங்குநீர்ச் சேர்ப்பினும் புள்ஒருங்கு எழுமே!

அருஞ்சொற்பொருள்:-

நாடு = குறிஞ்சி நிலப்பகுதி
நாடன் = குறிஞ்சி நிலத் தலைவன்
ஊர் = மருத நிலப்பகுதி
ஊரன் = மருதநிலத் தலைவன்
பாடு = ஓசை
இமிழ் = ஆரவாரம்
சேர்ப்பன் = நெய்தல் நிலத் தலைவன்
ஓங்கு = மேம்பட்ட
ஓங்குதல் = பெருமையுறல்
கோதை = சேரன்
புனவர் = குறிஞ்சி நில மக்கள்
தட்டை = கிளி ஓட்டுங்கருவி
இறங்கு கதிர் = வளைந்த கதிர்
அலமருதல் = சுழல்
பிறங்குதல் = ஒலித்தல், மிகுதி
சேர்ப்பு = கடற்கரை.

இதன் பொருள்:-

தினைப்புனங்காப்போர் தட்டை என்னும் பறையை அடித்துத் ஒலி எழுப்பினால், அப்புனத்திற்கு அருகே, வளைந்த கதிர்களையுடைய வயல்களிலிலும், நீர் மிகுந்த கடற்கரையிலும் உள்ள பறவைகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து எழுகின்றனவே. சேரன் கோக்கோதை மார்பனின் நாடு குறிஞ்சி நிலமுடையதால் அவனை நாடன் (குறிஞ்சி நிலத் தலைவன்) என்பேனா? அவன் நாடு மருத நிலமுடையதால் அவனை ஊரன் (மருத நிலத் தலைவன்) என்பேனா? அவன் நாடு ஒலிமிகுந்த குளிர்ந்த கடலை உடையதால் அவனைச் சேர்ப்பன் (நெய்தல் நிலத் தலைவன்) என்பேனா? உயர்ந்த வாளையுடைய கோதையை எப்படிக் கூறுவேன்?

பாடலின் பின்னணி:-

சேரன் கோக்கோதை மார்பனின் நாடு குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய நிலவளங்களெல்லாம் அடங்கியது. ஆகவே, அவன் நாடு எத்தகையது என்று எளிதில் கூற முடியாது என்ற கருத்தில் கோதையின் நாட்டைப் புலவர் பொய்கையார் இப்பாடலில் புகழ்ந்து பாடியுள்ளார்.

சிறப்புக் குறிப்பு:-

தினைப்புனங்கள் குறிஞ்சி நிலத்திலும், வயல்கள் மருத நிலத்திலும், கடல் சார்ந்த நிலம் நெய்தலிலும் உள்ளவை ஆகையால் கோக்கோதையின் நாடு குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய மூன்று நிலவளங்களும் உடையது என்று புலவர் பொய்கையார் கூறுவது இப்பாடலிலிருந்து தெரிகிறது. புனவர் தட்டை புடைத்தல் குறிஞ்சி நிலத்திலும் முல்லை நிலத்திலும் நிகழ்வதாகையால், நாடன் என்பது குறிஞ்சி மற்றும் முல்லை நிலத் தலைவனையும் குறிப்பதாகக் கொள்ளலாம் என்று அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை தம் நூலில் கூறுகிறார். ஆகவே, கோக்கோதையின் நாடு குறிஞ்சி, முல்லை, மருதம் மற்றும் நெய்தல் ஆகிய நானில வளமும் உடையது என்ற கருத்தில் புலவர் பொய்கையார் இப்பாடலில் குறிப்பிட்டிருக்கலாம் என்றும் தோன்றுகிறது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 17, 2013, 12:02:23 AM
(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-prn1/74192_549444435080472_790066545_n.jpg)

புறநானூறு, 50.(கவரி வீசிய காவலன்!)
பாடியவர் : மோசிகீரனார்.
பாடப்பட்டோன் : சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை.
திணை : பாடாண்.
துறை: இயன் மொழி.
=========================================

மாசற விசித்த வார்புஉறு வள்பின்
மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை
ஒலிநெடும் பீலி ஒண்பொறி மணித்தார்
பொலங்குழை உழிஞையடு பொலியச் சூட்டிக்
குருதி வேட்கை உருகெழு முரசம்

மண்ணி வாரா அளவை எண்ணெய்
நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை
அறியாது ஏறிய என்னைத் தெறுவர
இருபாற் படுக்குநின் வாள்வாய் ஒழித்ததை
அதூஉம் சாலும்நற் றமிழ்முழுது அறிதல்

அதனொடும் அமையாது அணுக வந்துநின்
மதனுடை முழவுத்தோள் ஓச்சித் தண்ணென
வீசி யோயே; வியலிடம் கமழ
இவண்இசை உடையோர்க்கு அல்லது அவணது
உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை

விளங்கக் கேட்ட மாறுகொல்
வலம்படு குருசில்நீ ஈங்குஇது செயலே

அருஞ்சொற்பொருள்:-

மாசு = குறை
விசித்தல் = இறுகக் கட்டுதல்
வார்பு = வார்
வள்பு = தோல்
மை = வயிரம்
மருங்குல் = நடுவிடம், பக்கம்
மஞ்ஞை = மயில்
ஒலித்தல் = தழைத்தல் (மிகுதல்)
பீலி = மயில் தோகை
மணி = நீலமணி
தார் = மாலை
பொலம் = பொன்
உழை = பூவிதழ்
உழிஞை = பொன்னிறமான ஒருவகைப் பூ
வேட்கை = விருப்பம்
உரு = அச்சம்
மண்ணுதல் = கழுவுதல்
அளவை = அளவு
சேக்கை = படுக்கை (தங்குமிடம்)
தெறு = சினம்
வாய் = வழி, மூலம்
சாலும் = சான்று
மதன் = வலிமை
முழவு = முரசம்
ஓச்சுதல் = ஓட்டுதல்
வியல் இடம் = அகன்ற இடம்
கமழ = பரக்க
மாறு = இயல்பு, தன்மை
வலம் = வெற்றி
குருசில் = குரிசில் = அரசன்

இதன் பொருள்:-

மாசற=====> முரசம்

குற்றமில்லாமல் வாரால் இறுக்கிக் கட்டப்பட்டு, வயிரங் கொண்ட கரிய மரத்தால் செய்யப்பட்டு, நடுவிடம் அழகாக விளங்குமாறு நெடிய மயில் இறகுகளால் அலங்கரிக்கப்பட்டு, நீலமணிகளும் பொன்னிறமான உழிஞைப் பூக்களும் அணிந்து, குருதிப்பலியை விரும்பும் அச்சம் தரும் முரசு, நீராட்டுவதற்காகக் கொண்டு செல்லப்பட்டிருந்தது.

மண்ணி வாரா=====> அறிதல்

அவ்வேளையில், எண்ணெய் நுரையை முகந்து வைத்ததுபோல் இருந்த மெல்லிய மலர்க் கட்டிலை முரசுக்கட்டில் என்று அறியாது நான் ஏறிப் படுத்தேன். என் செயலுக்காக என்னைச் சினந்து, இரு கூறாக வெட்டக்கூடிய உன் கூரிய வாளால் வெட்டாமல் விடுத்தாய். நீ தமிழை நன்கு அறிந்தவன் என்பதற்கு அதுவே சான்று.

அதனொடும்=====> இது செயலே

அத்தோடு அமையாமல், என்னை அணுகி, உன்னுடைய வலிய, முரசு போன்ற தோளை வீசிச் சாமரத்தால் குளிர்ச்சி தரும் வகையில் விசிறியவனே! வெற்றி பொருந்திய தலைவ! பரந்த இவ்வுலகத்தில் புகழோடு வாழ்ந்தவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு விண்ணுலகத்தில் வீடு பேறு இல்லை என்பதை நன்கு கேள்விப்பட்டிருந்ததால்தான் நீ இவ்விடத்து இச்செயலைச் செய்தாய் போலும்.

பாடலின் பின்னணி:-

ஒருகால், மோசி கீரனார் சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையைக் காணச் சென்றபோது களைப்பு மிகுதியால் அங்கிருந்த முரசுக் கட்டிலில் படுத்து உறங்கினார். அக்காலத்தில், முரசுக் கட்டில் புனிதமானதாகக் கருதப்பட்டது. அந்தக் கட்டிலில் யாராவது படுத்தால் அவர்களுக்குக் கடுந்தண்டனை வழங்குவது வழக்கம். அவர்கள் கொலையும் செய்யப்படலாம். ஆனால், புலவர் மோசி கீரனார் முரசுக் கட்டிலில் உறங்குவதைக் கண்ட சேர மன்னன், அவரை உறக்கத்திலிருந்து எழுப்பாமல் அவருக்குக் கவரி வீசினான். மன்னனின் செயலால் மிகவும் வியப்படைந்த புலவர் மோசி கீரனார் அவனைப் பாராட்டும் வகையில் இப்பாடலை இயற்றியுள்ளார்.

சிறப்புக் குறிப்பு:-

சங்க காலத்தில், அரசர்கள் புலவர்களைப் பாராட்டி அவர்களுக்குப் பொன்னும் பொருளும் பரிசாக அளித்தது மட்டுமல்லாமல் அவர்களைப் பெரிதும் மதிப்பிற்குரியவராகக் கருதினர் என்பதற்கு இப்பாடல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 17, 2013, 12:04:09 AM
(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-ash4/376337_550005211691061_1121996348_n.jpg) (http://www.friendstamilchat.com)

புறநானூறு, 51.(கொள்க எனக் கொடுத்த மன்னர் நடுக்கற்றனரே)
பாடியவர் : ஐயூர் முடவனார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி.
திணை : வாகை.
துறை: அரசவாகை.
=========================================

நீர்மிகின் சிறையும் இல்லை; தீமிகின்
மன்னுயிர் நிழற்றும் நிழலும் இல்லை;
வளிமிகின் வலியும் இல்லை; ஒளிமிக்கு
அவற்றோர் அன்ன சினப்போர் வழுதி,
தண்தமிழ் பொதுஎனப் பொறாஅன் போர்எதிர்ந்து

கொண்டி வேண்டுவன் ஆயின், கொள்கஎனக்
கொடுத்த மன்னர் நடுக்கற் றனரே;
அளியரோ அளியர்அவன் அளிஇழந் தோரே;
நுண்பல் சிதலை அரிதுமுயன்று எடுத்த
செம்புற்று ஈயல் போல
ஒருபகல் வாழ்க்கைக்கு உலமரு வோரே

அருஞ்சொற்பொருள்:-

சிறை = தடை, கட்டுப்பாடு
வளி = காற்று
ஓர் அன்ன = ஒப்ப
கொண்டி = பிறர் பொருள் கொள்ளுதல் (திறை)
அளி = இரக்கம்
அளியர் = இரங்கத் தக்கவர்
அளி இழந்தோர் = இரக்கத்தை இழந்தோர்
சிதலை = கறையான்
உலமறல் = சுழற்சி

இதன் பொருள்:-

நீர்மிகின்=====> போர்எதிர்ந்து

நீர் மிகுந்தால் அதைத் தடுக்கக்கூடிய அரணும் இல்லை; தீ அதிகமானால், உலகத்தில் நிலைபெற்ற உயிர்களைப் பாதுகாக்கக்கூடிய நிழலுமில்லை; காற்று மிகையானால் அதைத் தடுக்கும் வலிமை உடையது எதுவும் இல்லை; நீர், தீ மற்றும் காற்றைப் போல் வலிமைக்குப் புகழ் வாய்ந்த, சினத்தோடு போர் புரியும் வழுதி, தமிழ் நாடு மூவேந்தர்களுக்கும் பொது என்று கூறுவதைப் பொறுக்க மாட்டான். அவனை எதிர்த்தவர்களிடமிருந்து திறை வேண்டுவான்.

கொண்டி=====> உலமரு வோரே

அவன் வேண்டும் திறையைக் ”கொள்க” எனக் கொடுத்த மன்னர்கள் நடுக்கம் தீர்ந்தனர். அவன் அருளை இழந்தவர்கள், பல சிறிய கறையான்கள் கடினமாக உழைத்து உருவாக்கிய சிவந்த நிறமுடைய புற்றிலிருந்து புறப்பட்ட ஈயலைப்போல, ஒரு பகல் பொழுது வாழும் உயிர் வாழ்க்கைக்கு அலைவோராவர். ஆகவே, அவர்கள் மிகவும் இரங்கத் தக்கவர்கள்.

பாடலின் பின்னணி:-

பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி ஆட்சி புரிந்த காலத்தில், அவன் ஆணைக்குப் பணிந்து திறை செலுத்தி வாழாமல் அவனுடன் பகைமை கொண்டு போரிட்டவர்களின் வலிமையை அழித்து அவர்கள் நாட்டிலும் தன் ஆட்சியை நிலை நாட்டினான். அவன் வலிமையை இப்பாடலில் ஐயூர் முடவனார் பாராட்டுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 17, 2013, 12:05:44 AM
(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-snc7/601224_550301348328114_483630249_n.jpg)

புறநானூறு, 52.(ஊன் விரும்பிய புலி!)
பாடியவர் : மருதன் இளநாகனார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி.
திணை : வாகை.
துறை: அரசவாகை.
========================================

அணங்குஉடை நெடுங்கோட்டு அளையகம் முனைஇ
முணங்குநிமிர் வயமான் முழுவலி ஒருத்தல்
ஊன்நசை உள்ளம் துரப்ப, இரைகுறித்துத்
தான்வேண்டு மருங்கின் வேட்டுஎழுந் தாங்கு
வடபுல மன்னர் வாட அடல்குறித்து

இன்னா வெம்போர் இயல்தேர் வழுதி!
இதுநீ கண்ணியது ஆயின் இருநிலத்து
யார்கொல் அளியர் தாமே? ஊர்தொறும்
மீன்சுடு புகையின் புலவுநாறு நெடுங்கொடி
வயல்உழை மருதின் வாங்குசினை வலக்கும்

பெருநல் யாணரின் ஒரீஇ இனியே
கலிகெழு கடவுள் கந்தம் கைவிடப்
பலிகண் மாறிய பாழ்படு பொதியில்,
நரைமூ தாளர் நாயிடக் குழிந்த
வல்லின் நல்லகம் நிறையப் பல்பொறிக்

கான வாரணம் ஈனும்
காடாகி விளியும் நாடுடை யோரே

அருஞ்சொற்பொருள்:-

அணங்கு = தெய்வத்தன்மை (அச்சம்)
அளை = குகை
முனைஇ = வெறுத்து
முணங்குதல் = சோம்பல் முறித்தல்
ஒருத்தல் = ஆண் புலி (விலங்கேற்றின் பொது)
துரப்புதல் = தேடுதல்
அடல் = கொல்லுதல்
கண்ணுதல் = கருதல்
அளியர் = இரங்கத் தக்கவர்
உழை = இடம், பக்கம்
மருது = மருத மரம்
வாங்கு = வளைந்த
சினை = கிளை
வலக்கும் = சூழும்
யாணர் = புது வருவாய்
ஒரீஇ = நீங்கி, விலகி
இனி = இப்போது, இனிமேல்
கலி = ஆரவாரம் (முழவு ஒலித்தல்)
கந்தம் = தூண்
பொதியில் = அம்பலம் (மன்றம், சபை)
நாய் = சூதாடு கருவி
வல் = சூதாடுங் காய்
வல்லின் நல்லகம் = சூதாடும் இடம்
வாரணம் = காட்டுக் கோழி
விளிதல் = அழிதல்

இதன் பொருள்:-

அணங்குஉடை=====> அடல்குறித்து

அச்சம் தரும் நெடிய சிகரங்களையுடைய மலையிலுள்ள குகையில் இருப்பதை வெறுத்து, சோம்பல் முறித்து எழுந்த வலிமை நிரம்பிய ஆண்புலி, இரையை விரும்பும் உள்ளத்தால் உந்தப்பட்டு, அது வேண்டிய இடத்தே விரும்பிச் சென்றது போல, வட நாட்டு வேந்தரைக் கொல்லுவதை எண்ணி,

இன்னா=====> வலக்கும்

கொடிய போரைச் செய்வதற்கேற்ப நன்கு செய்யப்பட்ட தேரையுடைய வழுதி! நீ கருதியது போர் எனின் உன்னை எதிர்த்து நிற்பவர்கள் அனைவரும் இரங்கத் தக்கவர்கள். முன்பு, உன் பகைவர்களின் நாடுகளில், ஊர்தோறும் மீன் சுடுகின்ற புகையினது புலால் நாற்றம், வயல்களின் அருகே உள்ள மருதமரத்தின் வளைந்த கிளைகளைச் சூழ்ந்து இருக்கும்.

பெருநல்=====> நாடுடை யோரே

அத்தகைய நீர் வளமும், நிலவளமும், புதுவருவாயும் உள்ள ஊர்கள், இப்பொழுது அந்த வளமனைத்தும் இழந்து காணப்படுகின்றன. மற்றும், அந்நாடுகளில் ஆரவாரமான ஒலியுடன் விளங்கிய வழிபாட்டு இடங்களின் தூண்களிலிருந்து தெய்வங்கள் விலகியதால் வழிபாட்டு இடங்கள் இப்பொழுது பாழடைந்த ஊர்ப்பொது இடங்களாயின. அந்தப் பொதுவிடங்களில், நரையுடன் கூடிய முதியவர்கள் சூதாடும் காய்களை உருட்டிச் சூதாடியதால் தோன்றிய குழிகளில், புள்ளிகள் உள்ள காட்டுக் கோழிகள் முட்டையிடுகின்றன. உன் பகைவர்களின் நாடுகள் இவ்வாறு காடகி அழியும்.

சிறப்புக் குறிப்பு:-

வழிபாடு நடைபெறும் இடங்களிலுள்ள தூண்களில் கடவுள் தங்கி இருப்பதாக நம்பிக்கை நிலவியது. உதாரணமாக, “கடவுள் போகிய கருந்தாட் கந்தம்” என்று அகநானூற்றுப் பாடல் 307-இல் கூறப்பட்டிருப்பதைக் காண்க.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 17, 2013, 12:07:18 AM
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash3/19018_550678658290383_1208781733_n.jpg)

புறநானூறு, 53.(செந்நாவும் சேரன் புகழும்!)
பாடியவர் : பொருந்தில் இளங்கீரனார்.
பாடப்பட்டோன் : சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.
திணை : வாகை.
துறை: அரசவாகை.
=======================================

முதிர்வார் இப்பி முத்த வார்மணல்,
கதிர்விடு மணியின் கண்பொரு மாடத்து
இலங்குவளை மகளிர் தெற்றி ஆடும்
விளங்குசீர் விளங்கில் விழுமம் கொன்ற
களங்கொள் யானைக் கடுமான் பொறைய!

விரிப்பின் அகலும்; தொகுப்பின் எஞ்சும்;
மம்மர் நெஞ்சத்து எம்மனோர்க்கு ஒருதலை
கைம்முற் றலநின் புகழே என்றும்;
ஒளியோர் பிறந்தஇம் மலர்தலை உலகத்து
வாழேம் என்றலும் அரிதே; தாழாது

செறுத்த செய்யுள் செய்செந் நாவின்
வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்
இன்றுளன் ஆயின் நன்றுமன் என்றநின்
ஆடுகொள் வரிசைக்கு ஒப்பப்
பாடுவன் மன்னால் பகைவரைக் கடப்பே

அருஞ்சொற்பொருள்:-

வார் = நெடுமையாதல், ஒழுங்கு படுதல்
இப்பி = சிப்பி
பொருதல் = தாக்குதல் (கவருதல்)
இலங்குதல் = விளங்கல்
தெற்றி = திண்ணை
விளங்கில் = ஒரு ஊர்
விழுமம் = இடும்பை ( பகைவரால் வந்த இடும்பை)
மம்மர் = மயக்கம்
ஒருதலை = உறுதி
கைமுற்றுதல் = முடிவு பெறுதல்
தாழாது = விரைந்து
வெறுத்த = மிகுந்த
மன் – கழிவின் கண் வந்த அசைச் சொல்
ஆடு = வெற்றி
வரிசை = சிறப்பு
மன், ஆல் – அசைச் சொற்கள்
கடப்பு = கடத்தல் = வெல்லுதல்

இதன் பொருள்:-

முதிர்வார்=====> பொறைய

முதிர்ந்து நீண்ட சிப்பியில் உள்ள முத்துப் போல் பரவிக் கிடந்த மணலில் ஒளிவிடும் மணிகளால் கண்ணைப் பறிக்கின்ற மாடங்களில், விளங்கும் வளையல்களை அணிந்த மகளிர், திண்ணைகளில் விளையாடும் விளங்கில் என்னும் ஊர்க்குப் பகைவரால் வந்த துன்பங்களைத் தீர்ப்பதற்காகப் போர்க்களத்தைத் தனதாக்கிக் கொண்ட யானைப்படையையும் விரைந்து செல்லும் குதிரைப்படையையும் உடைய பொறைய!

விரிப்பின்=====> தாழாது

உன் புகழை விரித்துக் கூறினால் அது நீளும்; சுருக்கமாகத் தொகுத்துக் கூறினால் பல செய்திகள் விடுபட்டுப் போகும். ஆதலால், மயக்கமுறும் நெஞ்சத்தையுடைய எம் போன்றவர்களால் உன் புகழை உறுதியாகக் கூற முடியாது. அதனால், கல்வி கேள்விகளில் சிறந்த பெரியோர்கள் பிறந்த இப்பெரிய உலகத்து வாழ்க்கையை வெறுத்து வாழ மாட்டோம் என்று கூறுவதும் இயலாத செயல். ”விரைவாகப்

செறுத்த=====> கடப்பே

பல பொருள்களையும் அடக்கிய சிறந்த செய்யுட்களை இயற்றும் மிகுந்த கேள்வி அறிவுடைய , புகழ் மிக்க கபிலர் இன்று இருந்தால் நன்றாக இருக்கும்” என்று நீ கூறினாய். உன் வெற்றிச் சிறப்புக்குப் பொருந்தும் முறையில் என்னால் முடிந்தவரை உன் வெற்றியைப் புகழ்ந்து பாடுவேன்.

பாடலின் பின்னணி:-

இச்சேர மன்னனின் நாட்டில் இருந்த விளங்கில் என்னும் ஊரைப் பகைவர்கள் முற்றுகையிட்டு, அங்கிருந்த மக்களைத் துன்புறுத்தினர். இவன் யானைப்படையையும் குதிரைப்படையையும் கொண்டு சென்று பகவர்களை வென்று அவ்வூரில் இருந்த மக்களைக் காப்பாற்றினான். தன் வெற்றியைப் புகழந்து பாடப், பெரும் புலவர் கபிலர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று மாந்தரஞ்சேரல் இரும்பொறை கூறினான். அதைக் கேட்ட புலவர் பொருந்தில் இளங்கீரனார், தான் தம்மால் இயன்ற அளவில் அவனைப் புகழ்ந்து பாடுவதாகக் கூறி இப்பாடலை இயற்றியுள்ளார்.

சிறப்புக் குறிப்பு:-

“தெற்றி” என்ற சொல்லுக்குப் பெண்கள் கைகோத்து ஆடும் குரவை ஆட்டம் என்றும் பொருள் கொள்ளலாம்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 17, 2013, 12:08:40 AM
(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-prn1/62367_551308018227447_1589408996_n.jpg)

புறநானூறு, 54.(எளிதும் கடிதும்!)
பாடியவர் : கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார்.
பாடப்பட்டோன் : சேரமான் குட்டுவன் கோதை.
திணை : வாகை.
துறை: அரசவாகை.
=========================================

எங்கோன் இருந்த கம்பலை மூதூர்
உடையோர் போல இடையின்று குறுகிச்
செம்மல் நாளவை அண்ணாந்து புகுதல்
எம்அன வாழ்க்கை இரவலர்க்கு எளிதே;
இரவலர்க்கு எண்மை அல்லது; புரவுஎதிர்ந்து

வானம் நாண வரையாது சென்றோர்க்கு
ஆனாது ஈயும் கவிகை வண்மைக்
கடுமான் கோதை துப்பெதிர்ந்து எழுந்த
நெடுமொழி மன்னர் நினைக்குங் காலைப்
பாசிலைத் தொடுத்த உவலைக் கண்ணி

மாசுண் உடுக்கை மடிவாய் இடையன்
சிறுதலை ஆயமொடு குறுகல் செல்லாப்
புலிதுஞ்சு வியன்புலத்து அற்றே
வலிதுஞ்சு தடக்கை அவனுடை நாடே

அருஞ்சொற்பொருள்:-

கம்பலை = ஆரவாரம்
இடை = காலம் (சமயம்)
நாளவை = அரசன் வீற்றிருக்கும் அவை (அரசவை)
எண்மை = எளிமை
புரவு = கொடை, பாதுகாப்பு
எதிர்ந்து = ஏற்றுக்கொண்டு
ஆனாது = குறையாது
கடு = விரைவு
மான் = குதிரை
துப்பு = வலிமை
பாசிலை = பச்சிலை
உவலை = தழை
கண்ணி = மாலை
மடிவாய் = சீழ்க்கை ஒலி செய்வதற்கு மடக்கிய வாய்.
ஆயம் = ஆடுகளின் கூட்டம்
துஞ்சுதல் = தங்குதல்

இதன் பொருள்:-

எங்கோன்=====> புரவுஎதிர்ந்து

எமது அரசன் இருந்த ஆரவாரமான பழைய ஊரில், அவ்வூருக்கு உரியவர்கள் போல, காலம் பாராது நெருங்கி, அரசன் வீற்றிருக்கும் அரசவைக்குள் தலைநிமிர்ந்து செல்லுதல் எம் போன்ற இரவலர்க்கு எளிது. அது இரவலர்க்குத்தான் எளிதே அல்லாமல், அவனுடைய பகைவர்களுக்கு எளிதல்ல. கோதை தன் நாட்டின் பாதுகாவலை ஏற்றுக் கொண்டு,

வானம்=====> கண்ணி

மழை பொழியும் வானம் நாணும் வகையில் தன்னிடம் வந்தோர்க்குக் குறைவில்லாது கொடுக்கும் கவிந்த கைகளையுடைய வள்ளல். வலிமை மிகுந்த பெரிய கைகளையுடைய அவன் வலிமையை எதிர்த்து, அவன் நாட்டுக்குள் வந்த வஞ்சின வேந்தரை எண்ணும் பொழுது, அவர்களின் நிலை, பசிய இலைகளால் தொடுக்கப்பட்ட மாலையையும்

மாசுண்=====> நாடே

அழுக்குப் படிந்த உடையையும், சீழ்க்கை அடிக்கும் வாயையும் உடைய இடையன் ஒருவன் சிறிய ஆட்டுக்குட்டிகளுடன், நெருங்க முடியாத ஒருபுலி இருக்கும் பெரிய அகன்ற இடத்துக்குள் நுழைவதைப் போன்றது.

சிறப்புக் குறிப்பு:-

குட்டுவன் கோதையின் கொடைச் சிறப்பையும், ஆட்சிச் சிறப்பையும், அவன் காட்சிக்கு எளியவனாக இருந்ததையும் இப்பாடலில் புலவர் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் புகழ்ந்து பாடுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on March 11, 2013, 06:31:59 PM
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash3/581869_565825316775717_901849437_n.jpg)

புறநானூறு, 55.(அறநெறி முதற்றே அரசின் கொற்றம்)
பாடியவர் : மதுரை மருதன் இளநாகனார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.
திணை : பாடாண்.
துறை: செவியறிவுறூஉ.
======================================

ஓங்குமலைப் பெருவில் பாம்புஞாண் கொளீஇ
ஒருகணை கொண்டு மூவெயில் உடற்றிப்
பெருவிறல் அமரர்க்கு வெற்றி தந்த
கறைமிடற்று அண்ணல் காமர் சென்னிப்
பிறைநுதல் விளங்கும் ஒருகண் போல

வேந்து மேம்பட்ட பூந்தார் மாற,
கடுஞ்சினத்த கொல்களிறும் கதழ்பரிய கலிமாவும்
நெடுங்கொடிய நிமிர்தேரும் நெஞ்சுடைய புகல்மறவரும்என
நான்குடன் மாண்ட தாயினும் மாண்ட
அறநெறி முதற்றே அரசின் கொற்றம்;

அதனால், நமரெனக் கோல்கோ டாது,
பிறர்எனக் குணங் கொல்லாது,
ஞாயிற் றன்ன வெந்திறல் ஆண்மையும்,
திங்கள் அன்ன தண்பெருஞ் சாயலும்,
வானத்து அன்ன வண்மையும் மூன்றும்

உடையை ஆகி இல்லோர் கையற
நீநீடு வாழிய நெடுந்தகை! தாழ்நீர்
வெண் தலைப் புணரி அலைக்கும் செந்தில்
நெடுவேள் நிலைஇய காமர் வியன்துறைக்
கடுவளி தொகுப்ப ஈண்டிய
வடுஆழ் எக்கர் மணலினும் பலவே!

அருஞ்சொற்பொருள்:-

ஓங்கு = உயர்ந்த
ஞாண் = கயிறு
கொளீஇ = கொண்டு
கணை = அம்பு
எயில் = ஊர், புரம், மதில், அரண்
உடற்றுதல் = அழித்தல்
விறல் = வலிமை
அமரர் = தேவர்
மிடறு = கழுத்து
அண்ணல் = தலைவன், பெரியவன்
காமர் = அழகு
சென்னி = தலை, முடி
மாறன் = பாண்டியன்
கதழ்தல் = விரைதல்
பரிதல் = ஓடுதல்
கலி = செருக்கு
மா = குதிரை
நிமிர் = உயர்ந்த
நெஞ்சு = துணிவு
புகல் = விருப்பம் (போரை விரும்பும்)
மாண்டது = மாண்புடையது
கொற்றம் = அரசியல் (ஆட்சி)
நமர் = நம்முடையவர்
திறல் = வெற்றி, வலிமை
சாயல் = மென்மை
வண்மை = ஈகை
கையறுதல் = இல்லாமற் போதல்
நெடுந்தகை = பெரியோன்
தாழ்நீர் = ஆழமான நீர்
புணரி = அலைகடல்
கடு = விரைவு
வடு = கருமணல்
எக்கர் = மணற்குன்று

இதன் பொருள்:-

ஓங்குமலை=====> ஒருகண் போல

உயர்ந்த மலையைப் பெரிய வில்லாகவும் பாம்பை நாணாகவும் கொண்டு, ஒரே அம்பில் முப்புரங்களையும் (மூன்று அசுரர்களின் பறக்கும் கோட்டைகளையும்) அழித்து, பெரிய வலிமையுடைய தேவர்களுக்கு வெற்றியைக் கொடுத்த, கரிய நிறமுடைய கழுத்தையுடைய சிவபெருமானின் அழகிய திருமுடியின் பக்கத்தில் உள்ள பிறையணிந்த நெற்றியில் உள்ள கண்போல்

வேந்து=====> கொற்றம்

மூவேந்தர்களிலும் மேம்பட்ட மாலையணிந்த நன்மாறனே! கடிய சினத்தையுடைய கொல்லும் யானைப்படை, விரைந்து செல்லும் செருக்குடைய குதிரைப்படை, உயர்ந்த கொடிகளுடைய தேர்ப்படை, நெஞ்சில் வலிமையுடன் போரை விரும்பும் காலாட்படை ஆகிய நான்கு படைகளும் உன்னிடம் சிறப்பாக இருந்தாலும், பெருமைமிக்க அறநெறிதான் உன் ஆட்சியின் வெற்றிக்கு அடிப்படையாகும்.

அதனால்=====> மூன்றும்

அதனால், இவர் நம்மவர் என்று நடுவுநிலைமையிலிருந்து தவறாமல், இவர் நமக்கு அயலார் என்று அவர் நற்குணங்களை ஒதுக்கித் தள்ளாமல், கதிரவனைப் போன்ற வீரம், திங்களைப் போன்ற குளிர்ந்த மென்மை, மழையைப் போன்ற வண்மை ஆகிய மூன்றையும்

உடையை=====> பலவே

உடையவனாகி, இல்லை என்பார் இல்லை என்னும்படி நீ நெடுங்காலம் வாழ்க! பெருந்தகையே! ஆழமான நீரையுடைய கடலின் மேல் உள்ள வெண்ணிற அலைகள் மோதும் திருச்செந்தூரில் முருகக் கடவுள் நிலை பெற்றிருக்கும் அழகிய அகன்ற துறையில் பெருங்காற்றால் திரட்டப்பட்ட கருமணலினும், நீ பலகாலம் வாழ்வாயாக.

சிறப்புக் குறிப்பு:-

புலவர் மதுரை மருதன் இளநாகனார் பாண்டிய மன்னனுக்கு “நான்குடன் மாண்ட தாயினும் மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம்” என்றும் ஆண்மையும், மென்மையும், வண்மையும் உடையவனாக அவன் இருத்தல் வேண்டும் என்றும் அறிவுரை கூறுவதால் இப்பாடல் செவியறிவுறூஉத் துறையைச் சார்ந்ததாயிற்று.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on March 11, 2013, 06:33:42 PM
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash4/1827_570536022971313_1741532782_n.jpg)

புறநானூறு, 56.(கடவுளரும் காவலனும்!)
பாடியவர் : மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.
திணை : பாடாண்.
துறை: பூவை நிலை. மனிதரைத் தேவரோடு ஒப்பிட்டுக் கூறுதல் பூவை நிலை எனப்படும்.
========================================

ஏற்றுவலன் உயரிய எரிமருள் அவிர்சடை
மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனும்,
கடல்வளர் புரிவளை புரையும் மேனி
அடல்வெந் நாஞ்சில் பனைக்கொடி யோனும்,
மண்ணுறு திருமணி புரையும் மேனி

விண்ணுயர் புள்கொடி விறல்வெய் யோனும்
மணிமயில் உயரிய மாறா வென்றிப்
பிணிமுக ஊர்தி ஒண்செய் யோனும்என
ஞாலம் காக்கும் கால முன்பின்
தோலா நல்இசை நால்வர் உள்ளும்

கூற்றுஒத் தீயே மாற்றருஞ் சீற்றம்;
வலிஒத் தீயே வாலி யோனைப்;
புகழ்ஒத் தீயே இகழுநர் அடுநனை;
முருகுஒத் தீயே முன்னியது முடித்தலின்;
ஆங்குஆங்கு அவரவர் ஒத்தலின் யாங்கும்

அரியவும் உளவோ நினக்கே? அதனால்
இரவலர்க்கு அருங்கலம் அருகாது ஈயா
யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல்
பொன்செய் புனை கலத்து ஏந்தி நாளும்
ஒண்தொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்து

ஆங்கினிது ஒழுகுமதி, ஓங்குவாள் மாற!
அங்கண் விசும்பின் ஆரிருள் அகற்றும்
வெங்கதிர்ச் செல்வன் போலவும் குடதிசைத்
தண்கதிர் மதியம் போலவும்
நின்று நிலைஇயர் உலகமோடு உடனே

அருஞ்சொற்பொருள்:-

ஏறு = காளைமாடு
வலன் = வெற்றி
எரி = ஒளி,நெருப்பு
மருள் - உவமை உருபு
அவிர் = ஒளி
மாற்று = எதிர்
கணிச்சி = சிவனுடைய ஆயுதம்
மணி = நீலமணி
மிடறு = கழுத்து
புரி = முறுக்கு
வளை = சங்கு
புரைதல் = ஒத்தல்
அடல் = கொல்லுதல்
அடல் = கொல்லுதல்
நாஞ்சில் = கலப்பை
மண்ணுதல் = கழுவுதல்
விறல் = வெற்றி
வெய்யோன் = விருப்பம் உடையவன்
மணி = நீலமணி
மாறா = மாறாத
பிணிமுகம் = மயில்
முன்பு = வலிமை
தோலா = தோல்வி காணாத
கூற்று = எமன் (இங்கு சிவனைக் குறிக்கிறது)
வாலி = வெண்ணிறமுடையோன் (பலராமன்)
இகழுநர் = பகைவர்
முன்னுதல் = நினைத்தல்
அருகுதல் = குறைதல்
மடுத்தல் = உண்ணுதல் (ஊட்டுதல்)
குடதிசை = மேற்குத் திசை
நிலைஇயர் = நிலைபெறுவாயாக.

இதன் பொருள்:-

ஏற்றுவலன்=====> புரையும் மேனி

காளைக்கொடியை வெற்றியின் அடையாளமாக உயர்த்திப் பிடித்து, நெருப்புப் போல் ஒளிவிடும் சடையோடும், ஒப்பற்ற கணிச்சி என்னும் ஆயுதத்தோடும், நீலநிறக் கழுத்தோடும் காட்சி அளிப்பவன் சிவபெருமான். கடலில் வளரும் முறுக்கிய சங்கு போன்ற வெண்ணிற மேனியும், கொல்லுதலை விரும்பும் கலப்பையும், பனைக்கொடியும் உடையவன் பலராமன். கழுவப்பட்ட அழகிய நீலமணி போன்ற உடலும்

விண்ணுயர்=====> நால்வர் உள்ளும்

வானளாவ உயர்ந்த கருடக் கொடியும் கொண்டு வெற்றியை விரும்புபவன் திருமால். நீலமணி போன்ற நிறத்தையுடைய மயிற்கொடியும், உறுதியான வெற்றியும், மயிலை ஊர்தியாகவும் (வாகனமாகவும்) கொண்ட ஓளிபொருந்தியவன் முருகன். இந்நான்கு கடவுளரும் உலகம் காக்கும் வலிமையும் அழியாத புகழும் உடையவர்கள்

கூற்றுஒத் தீயே=====> ஒத்தலின் யாங்கும்

இந்த நால்வருள்ளும், உன்னுடைய நீங்காத சினத்தால் நீ அழிக்கும் கடவுளாகிய சிவனுக்கு ஒப்பானவன்; வலிமையில் பலராமனுக்கு ஒப்பானவன்; புகழில் பகைவரைக் கொல்லும் திருமாலுக்கு ஒப்பானவன்; நினைப்பதை முடிப்பதில் முருகனுக்கு ஒப்பானவன். இவ்வாறு ஆங்காங்கு அந்த அந்தக் கடவுளை ஒத்தவனாக இருப்பதால்

அரியவும்=====> மகிழ்சிறந்து

உன்னால் செய்ய முடியாத செயலும் உண்டோ? அதனால், இரப்போர்க்கு அரிய அணிகலன்களை வழங்கி, யவனர் நல்ல கலங்களில் கொண்டுவந்த, குளிர்ந்த மணமுள்ள மதுவைப் பொன்னால் செய்யப்பட்ட அழகிய கிண்ணங்களில் ஏந்தி வந்து, ஓளிபொருந்திய வளையல் அணிந்த மகளிர் உனக்கு நாள்தோறும் கொடுக்க, அதைக் குடித்து, மகிழ்ச்சியோடு

ஆங்கினிது=====> உலகமோடு உடனே

சிறப்பாக இனிது வாழ்வாயாக. ஓங்கிய வாளையுடைய பாண்டியன் நன்மாறனே! அழகிய ஆகாயத்தில் நிறைந்த இருளை அகற்றும் கதிரவனைப் போலவும் மேற்குத் திசையில் தோன்றும் குளிர்ந்த கதிர்களையுடைய திங்களைப் போலவும் இவ்வுலகத்தோடு நின்று நிலைபெற்று நீ வாழ்வாயாக.

சிறப்புக் குறிப்பு:-

இப்பாடலில், பாண்டியனை சிவன், பலராமன், திருமால் மற்றும் முருகன் ஆகிய கடவுளர்க்கு ஒப்பிடுவதால், இப்பாடல் பூவை நிலையைச் சார்ந்ததாயிற்று.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on March 11, 2013, 06:35:08 PM
(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-ash4/487454_571218242903091_1024736427_n.jpg)

புறநானூறு, 57.(காவன்மரமும் கட்டுத்தறியும்!)
பாடியவர் : காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.
திணை : வஞ்சி.
துறை: துணை வஞ்சி.
=========================================

வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும்
புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன
உரைசால் சிறப்பின் புகழ்சால் மாற!
நின்னொன்று கூறுவது உடையேன்; என்னெனின்
நீயே, பிறர்நாடு கொள்ளும் காலை அவர்நாட்டு

இறங்குகதிர் கழனிநின் இளையரும் கவர்க;
நனந்தலைப் பேரூர் எரியும் நக்க;
மின்னுநிமிர்ந் தன்னநின் ஒளிறுஇலங்கு நெடுவேல்
ஒன்னார்ச் செகுப்பினும் செகுக்க; என்னதூஉம்
கடிமரம் தடிதல் ஓம்புநின்
நெடுநல் யானைக்குக் கந்தாற் றாவே.

அருஞ்சொற்பொருள்:-

வல்லார் = திறமையற்றவர்
வல்லுநர் = திறமையுள்ளவர்
உரை = சொல்
சாலல் = மிகுதியாதல், மேன்மையுடைத்தாதல்
இறங்குதல் = வளைதல்
கழனி = மருதநிலம் (வயல்)
இளையர் = வேலைக்காரர், வீரர்
கவர்தல் = எடுத்தல் (கொள்ளையடித்தல்)
நனம் = அகற்சி
நக்க = சுடுக
இலங்கல் = விளங்குதல்
ஒன்னார் = பகைவர்
செகுத்தல் = அழித்தல்
என்னதூஉம் = சிறிதும்
கடிமரம் = பகைவர் அணுகாவண்ணம் வளர்த்துக் காக்கப்படும் காவல் மரம்
தடிதல் = வெட்டல்
ஓம்புதல் = தவிர்தல்
கந்து = யானை கட்டும் தறி
ஆற்றுதல் = கூடியதாதல்

இதன் பொருள்:-

வல்லார்=====> அவர்நாட்டு

திறமையற்றவர்களாக இருந்தாலும் திறமையுடையவர்களாக இருந்தாலும், உன்னைப் புகழ்வோர்க்கு அருள் புரிவதில் நீ திருமாலைப் போன்றவன். சொல்லுதற்கரிய புகழ் பொருந்திய மாறனே! நான் உன்னிடம் ஒன்று கூறுவேன். அது என்னவென்றால், நீ பிறர் நாட்டின் மீது படையெடுத்துச் செல்லும் பொழுது,

இறங்குகதிர்=====> கந்தாற் றாவே

அவர்களின் நாட்டில், வளைந்த கதிர்களையுடய வயல்களை உன்னுடய வீரர்களும் கொள்ளை கொள்ளட்டும்; அகன்ற பெரிய இடங்கள் உள்ள பெரிய ஊர்களைத் தீயால் வேண்டுமானால் எரிப்பாயாக; மின்னலைப் போல் ஒளியுடன் விளங்கும் உன்னுடைய நெடிய வேல், பகைவர்களை அழித்தாலும் அழிக்கட்டும்; அவர்களுடைய காவல் மரங்களை வெட்டுவதை மட்டும் தவிர்ப்பாயாக. ஏனெனில், உன் நெடிய யானைகளுக்கு அம்மரங்கள் கட்டுத் தறியாகும் தகுதி அற்றவை.

சிறப்புக் குறிப்பு:-

காவல் மரங்களை வெட்டினால் போர் முடிவுபெறும். ஆகவே, காவல் மரங்களை வெட்டாமல் இருந்தால், பகைவர்கள் பணிந்து திறை கட்டுவதற்கு உடன்படுவதற்கு வாய்ப்பு உண்டு. அதனால், புலவர், காவல்மரங்களை வெட்டுவதைத் தவிர்த்துப் பகைவர்களுடன் சமாதானமாகப் போவதற்கு வழிவகுக்குமாறு இப்பாடலில் பாண்டியனுக்கு அறிவுரை கூறுகிறார். இப்பாடலில், புலவர் சமாதானத்துக்கு வழிகாட்டுவதால், இப்பாடல் துணைவஞ்சி என்னும் துறையைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on March 11, 2013, 06:36:58 PM
(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-prn1/71929_572136202811295_1328634452_n.jpg)

புறநானூறு, 58.(புலியும் கயலும்!)
பாடியவர் : காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்.
பாடப்பட்டோன் : சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும்.
திணை : பாடாண்.
துறை: உடன் நிலை. ஒருங்கே இருக்கும் இருவரைப் பாடுவது உடன் நிலை எனப்படும்.
========================================

நீயே, தண்புனற் காவிரிக் கிழவனை; இவனே
முழுமுதல் தொலைந்த கோளி ஆலத்துக்
கொழுநிழல் நெடுஞ்சினை வீழ்பொறுத் தாங்குத்
தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது
நல்லிசை முதுகுடி நடுக்குஅறத் தழீஇ

இளையது ஆயினும் கிளைஅரா எறியும்
அருநரை உருமின் பெருநரைப் பொறாஅச்
செருமாண் பஞ்சவர் ஏறே; நீயே
அறந்துஞ்சு உறந்தைப் பொருநனை; இவனே,
நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளியவென

வரைய சாந்தமும் திரைய முத்தமும்
இமிழ்குரல் முரசம் மூன்றுடன் ஆளும்
தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே!
பால்நிற உருவின் பனைக்கொடி யோனும்
நீல்நிற உருவின் நேமி யோனும்என்று

இருபெருந் தெய்வமும் உடன் நின் றாஅங்கு
உருகெழு தோற்றமொடு உட்குவர விளங்கி
இந்நீர் ஆகலின் இனியவும் உளவோ?
இன்னும் கேண்மின்நும் இசைவா ழியவே;
ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர்; இருவீரும்

உடனிலை திரியீர் ஆயின் இமிழ்திரைப்
பெளவம் உடுத்தஇப் பயங்கெழு மாநிலம்
கையகப் படுவது பொய்யா காதே;
அதனால், நல்ல போலவும் நயவ போலவும்
தொல்லோர் சென்ற நெறியர் போலவும்

காதல் நெஞ்சின்நும் இடைபுகற்கு அலமரும்
ஏதில் மாக்கள் பொதுமொழி கொள்ளாது
இன்றே போல்கநும் புணர்ச்சி; வென்றுவென்று
அடுகளத்து உயர்கநும் வேலே; கொடுவரிக்
கோள்மாக் குயின்ற சேண்விளங்கு தொடுபொறி

நெடுநீர்க் கெண்டையொடு பொறித்த
குடுமிய ஆகபிறர் குன்றுகெழு நாடே

அருஞ்சொற்பொருள்:-

கிழவன் = உரியவன்
முழுமுதல் = அடிமரம்
கோளி = பூவாது காய்க்கும் மரம்
கொழு நிழல் = குளிர்ந்த நிழல்
சினை = கிளை
வீழ் = மரவிழுது
தொல்லோர் = முன்னோர்
துளங்கல் = கலங்கல்
முதுகுடி = பழங்குடி
நடுக்கு = நடுக்கம் = அச்சம்
தழீஇ = உள்ளடக்கிக் கொண்டு
அரா = பாம்பு
கிளை = மந்தை
அரு = பொறுத்தற்கரிய
உரும் = இடி
நரை = வெண்மை
செரு = போர்
பஞ்சவன் = பாண்டியன்
துஞ்சுதல் = தங்குதல்
உறைந்தை = உறையூர்
பொருநன் = அரசன்
வரை = மலை
சாந்தம் = சந்தனம்
திரை = கடல் அலை
இமிழல் = ஒலித்தல்
குரல் = ஒலி ஓசை
நேமி = கடல்
நேமியோன் = திருமால்
உரு = அச்சம், நடுக்கம்
உட்கு = அச்சம்
இந்நீர் = இத்தன்மை
இசை = புகழ்
ஆற்றுதல் = உதவுதல்
திரிதல் = மாறுதல்
பௌவம் = கடல்
நயத்தல் = அன்புசெய்தல், நட்பு கொள்ளுதல்
அலமரல் = வருந்தல்
கொடு = வளைவு
கோள் = வலி
மா = புலி
குயிற்றல் = பதித்தல்
தொடு = தோண்டப்பட்ட
பொறி = அடையாளம்
கொடுவரி = புலி
கெண்டை = கயல்
குடுமி = சிகரம், உச்சி

இதன் பொருள்:-

நீயே=====> தழீஇ

நீ குளிர்ந்த நீரையுடைய காவிரிக்குத் தலைவன்; இவனோ, பருத்த அடியுள்ள ஆலமரத்தின் அடிமரம் வெட்டப்பட்டு அழிந்தாலும், அதன் நெடிய நிழல் தரும் கிளைகளை விழுதுகள் தாங்குவதைப்போல், முன்னோர்கள் இறந்தாலும், தான் தளராது, நல்ல புகழுள்ள தன் பழங்குடியைத் தடுமாற்றமில்லாமல் காத்துத்,

இளையது=====> எளியவென

தான் சிறிதே ஆயினும் பாம்பைக் கூட்டத்தோடு அழிக்கும் வெண்ணிற இடிபோல் பகவரைக் காணப் பொறாமல் போரில் சிறந்த பாண்டியர்களில் சிங்கம் போன்றவன். நீயோ, அறம் நிலைபெற்ற உறையூரின் தலைவன். இவனோ நெல்லும் நீரும் அனைவருக்கும் எளிதில் கிடைப்பவை என்று கருதி

வரைய=====> நேமி யோனும்என்று

யாவர்க்கும் பெறுதற்கரிய மலையில் விளையும் சந்தனம், கடலில் விளையும் முத்து, முழங்கும் மும்முரசுகள் ஆகியவற்றுடன் தமிழ் பொருந்திய மதுரையில் செங்கோல் செலுத்தும் வேந்தன். பால போன்ற வெண்ணிற மேனியும் பனைக்கொடியும் உடைய பலராமனும் நீல நிற மேனியையுடைய திருமாலும் ஆகிய

இருபெருந் தெய்வமும்=====> இருவீரும்

இரண்டு கடவுளரும் ஒருங்கே கூடி இருந்தாற் போல் அச்சம் பொருந்திய காட்சியொடு நீங்கள் இருவரும் விளங்குவதைவிட இனிய காட்சியும் உண்டோ? உங்கள் புகழ் நெடுங்காலம் வாழ்வதாக! மேலும் கேட்பீராக!நீங்கள் ஒருவர்க்கு ஒருவர் உதவுவீர் ஆகுக. நீங்கள் இருவரும்

உடனிலை=====> நெறியர் போலவும்

கூடியிருக்கும் இந்நிலை மாறாதிருப்பின் கடல் சூழ்ந்த, பயனுள்ள இவ்வுலகம் உங்கள் கைவசமாவது உறுதி; ஆதலால், நல்லவர்களாகவும், நடுவுநிலைமை தவறாதவர்களாகவும், உங்கள் முன்னோர்கள் சென்ற நெறியைப் பின்பற்றி,

காதல்=====> குன்றுகெழு நாடே

அன்போடு இருந்து, உங்களைப் பிரிக்கத் தவிக்கும் பகைவர்களின் சொற்களைக் கேளாமல், இன்று போலவே என்றும் சேர்ந்திருங்கள். போர்க்களத்தில் மேலும் மேலும் வெற்றிகளைப் பெற்று உங்கள் வேல் உயர்வதாகுக; பிறருடைய நாடுகளிலுள்ள குன்றுகளில், வளைந்த கோடுகளையுடைய புலிச் சின்னமும், பெரிய நீரில் வாழும் கயல்மீன் சின்னமும் பொறிக்கப்படுவதாகுக.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on March 17, 2013, 06:44:09 PM
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash3/581736_572970416061207_2001356044_n.jpg)

புறநானூறு, 59.(பாவலரும் பகைவரும்!)
பாடியவர் : பெருந்தலைச் சாத்தனார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன்.
திணை : பாடாண்.
துறை: பூவை நிலை.
========================================

ஆரம் தாழ்ந்த அணிகிளர் மார்பின்
தாள்தோய் தடக்கைத் தகைமாண் வழுதி!
வல்லை மன்ற நீநயந் தளித்தல்!
தேற்றாய் பெரும! பொய்யே; என்றும்
காய்சினம் தவிராது கடல்ஊர்பு எழுதரும்
ஞாயிறு அனையை நின் பகைவர்க்குத்;
திங்கள் அனையை எம்ம னோர்க்கே.

அருஞ்சொற்பொருள்:-

ஆரம் = மாலை
அணி = அழகு
கிளர்தல் = மிகுதல்
தகை = தகுதி
வல்லை = வலிமை உடையவன்
மன்ற = நிச்சயமாக, தெளிவாக
நயந்து அளித்தல் = அருள் செய்தல்
தேற்றல் = அறிவித்தல் (சொல்லுதல்)
காய்தல் = சினத்தல், சுடுதல்
கடல் ஊர்பு = கடலிலிருந்து
அனைய = போன்றாய்

இதன் பொருள்:-

மாலை தவழும் அழகு மிகுந்த மார்பையும், முழங்காலைத் தொடுமளவுக்கு நீண்ட கையையும் உடைய மாட்சிமைக்குரிய வழுதி! நீ யாவரும் மகிழும்படி அவர்களுக்கு அருள் செய்வதில் உண்மையாகவே வல்லவன். நீ என்றும் பொய்யே கூறமாட்டாய். உன் பகைவர்க்கு, நீ என்றும் கடும் வெப்பம் நீங்காமல் கடலிடத்தே இருந்து கிளர்ந்து எழும் ஞாயிறைப் போன்றவன். எம்போன்றவர்களுக்கு, நீ குளிர்ந்த திங்களைப் போன்றவன்.

சிறப்புக் குறிப்பு:-

முழங்கால் அளவுக்குக் கைகள் நீண்டு இருப்பது ஆண்களுக்கு அழகு என்று கருதப்பட்டதால், புலவர், “தாள் தோய் தடக்கை” என்று குறிப்பிடுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on March 17, 2013, 06:46:11 PM
(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-prn1/544073_572972596060989_1714541251_n.jpg)

புறநானூறு, 60.(மதியும் குடையும்!)
பாடியவர் : உறையூர் மருத்துவன் தாமோதரனார்.
பாடப்பட்டோன் : சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்.
திணை : பாடாண்.
துறை: குடை மங்கலம்: அரசன் குடையைப் புகழ்ந்து பாடுவது குடை மங்கலம் எனப்படும்.
========================================

முந்நீர் நாப்பண் திமில்சுடர் போலச்
செம்மீன் இமைக்கும் மாக விசும்பின்
உச்சி நின்ற உவவுமதி கண்டு
கட்சி மஞ்ஞையின் சுரமுதல் சேர்ந்த
சில்வளை விறலியும் யானும் வல்விரைந்து

தொழுதனம் அல்லமோ பலவே; கானல்
கழிஉப்பு முகந்து கல்நாடு மடுக்கும்
ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும்
உரனுடை நோன்பகட்டு அன்ன எங்கோன்
வலன்இரங்கு முரசின் வாய்வாள் வளவன்

வெயில்மறைக் கொண்ட உருகெழு சிறப்பின்
மாலை வெண்குடை ஒக்குமால் எனவே.

அருஞ்சொற்பொருள்:-

நாப்பண் = நடுவே
திமில் = மரக்கலம்
செம்மீன் = செவ்வாய், திருவாதிரை
மாகம் = மேலிடம்
விசும்பு = ஆகாயம்
உவவு = முழுநிலா (பௌர்ணமி)
கட்சி = காடு
மஞ்ஞை = மயில்
சுரம் = வழி
முதல் = இடம்
வல் = விரைவு
கானல் = கடற்கரை
கழி = உப்பளம்
மடுத்தல் = சேர்த்தல்
ஆரை = ஆரக்கால்
சாகாடு = வண்டி
ஆழ்ச்சி = பதிவு அழுந்துவது
உரன் = வலிமை
நோன் = வலிமை
பகடு = எருது
வலன் = வெற்றி
இரங்கல் = ஒலி
வாய்வாள் = குறி தவறாத

இதன் பொருள்:-

முந்நீர்=====> வல்விரைந்து

கடலின் நடுவே உள்ள மரக்கலங்களிலுள்ள விளக்குப் போல, சிவந்த வீண்மீன் ஒளிறும் ஆகாயத்தின் உச்சியில் முழு நிலவு இருந்தது. அதைக் கண்டு அந்தச் சுரவழியில் வந்து கொண்டிருந்த, மயில் போன்ற, சில வளையல்களே அணிந்த விறலியும் நானும் விரைந்து

தொழுதனம்=====> ஒக்குமால் எனவே

பலமுறை தொழுதோம் அல்லவோ? அது ஏன் தெரியுமா? கடற்கரையிடத்து உப்பங்கழியில் விளைந்த உப்பைச் சுமந்துகொண்டு மலை நாட்டுக்குச் செல்லும் ஆரக்காலையுடைய வண்டியைக் குண்டு குழிகளின் வழியே இழுத்துச் செல்லும் வலிய காளையைப்போன்றவன் எம் தலைவன். அவன் வெற்றியுடன் முழங்கும் முரசையும், குறி தவறாத வாளையுமுடையவன். வெயிலை மறைப்பதற்காக அவன் கொண்ட அச்சம் பொருந்திய சிறந்த மாலை அணிந்த குடையைப் போன்றது அந்த முழு நிலா என்று நினைத்து அவ்வாறு தொழுதோம்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on March 17, 2013, 06:49:01 PM
(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash3/599014_574276762597239_1118725279_n.jpg) (http://www.friendstamilchat.com)

புறநானூறு, 61.(மலைந்தோரும் பணிந்தோரும்!)
பாடியவர் : கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார்.
பாடப்பட்டோன் : சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி.
திணை : வாகை.
துறை: அரசவாகை.
====================================

கொண்டைக் கூழைத் தண்தழைக் கடைசியர்
சிறுமாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும்
மலங்குமிளிர் செறுவின் தளம்புதடிந் திட்ட
பழன வாளைப் பரூஉக்கண் துணியல்
புதுநெல் வெண்சோற்றுக் கண்ணுறை ஆக

விலாப்புடை மருங்கு விசிப்ப மாந்தி
நீடுகதிர்க் கழனிச் சூடுதடு மாறும்
வன்கை வினைஞர் புன்தலைச் சிறாஅர்
தெங்குபடு வியன்பழம் முனையின், தந்தையர்
குறைக்கண் நெடும்போர் ஏறி விசைத்தெழுந்து

செழுங்கோள் பெண்ணைப் பழந்தொட முயலும்
வைகல் யாணர் நன்னாட்டுப் பொருநன்
எஃகுவிளங்கு தடக்கை இயல்தேர்ச் சென்னி
சிலைத்தார் அகலம் மலைக்குநர் உளர்எனில்
தாமறி குவர்தமக்கு உறுதி; யாம்அவன்

எழு திணிதோள் வழுவின்றி மலைந்தோர்
வாழக் கண்டன்றும் இலமே; தாழாது
திருந்துஅடி பொருந்த வல்லோர்
வருந்தக் காண்டல் அதனினும் இலமே!

அருஞ்சொற்பொருள்:-

கொண்டை = மயிர் முடிச்சு
கூழை = தலை மயிர்
தழை = பச்சிலை
கடைசியர் = உழத்தியர், மருத நிலப் பெண்கள்
நெய்தல் = வெள்ளாம்பல்
கட்கும் = களைந்து எறியும்
மலங்கு = ஒரு வகை மீன்
மிளிர்தல் = ஒளிசெய்தல்
செறு = வயல்
தளம்பு = சேற்றைக் குழப்பிக் கட்டிகளை உடைத்து செம்மைப் படுத்தும் கருவி
தடிதல் = அறுத்தல், வெட்டல்
பழனம் = வயல்
வாளை = வாளை மீன்
பரூஉ = பருமை
துணியல் = துண்டு (சதை)
கண்ணுறை = மேலே தூவுவது
விசித்தல் = விம்முதல், வீங்குதல்
மாந்தல் = உண்ணுதல், வருந்துதல்
சூடு = நெற்கதிர்க் கட்டு
வினைஞர் = மருத நில மக்கள் (உழவர்கள்)
தெங்கு = தென்னை
விசை = விரைவு
செழுமை = வளமை
கோள் = குலை
பெண்ணை = பனைமரம்
வைகல் = நாள்
யாணர் = புதிய வருவாய்
எஃகு = வேல்
தடக்கை = பெரிய கை
சென்னி = நலங்கிள்ளி சேட்சென்னி
சிலை = ஒளி
அகலம் = மார்பு
மலைத்தல் = போரிடுதல்
உறுதி = உறப்போவது (நேரப்போவது)
எழு = கணையமரம்
உறழ் = ஒத்தல்
திணி = வலிமை
வழு = தவறு
தாழாது = விரைந்து
திருந்துதல் = ஒழுங்குகாகுதல்.

இதன் பொருள்:-

கொண்டை=====> கண்ணுறை ஆக

கொண்டையாக முடிந்த முடியும், முடியில் செருகிய தழையும் உடைய மருதநிலப் பெண்கள், சிறிய வெள்ளாம்பலுடன் ஆம்பலையும் களைவர். வயல்களில் மலங்கு மீன்கள் ஒளிருகின்றன. அந்த வயல்களில் தளம்பைப் பயன்படுத்தியதால், பருத்த வாளை மீன்கள் துண்டிக்கப் படுகின்றன. புதுநெல்லைக் குத்தி ஆக்கிய வெண்மையான சோற்றின் மேல் அந்த வாளைமீன் துண்டுகளைத் தூவி,

விலாப்புடை=====> விசைத்தெழுந்து

விலாப் புடைக்க உண்ட மயக்கத்தால், நெடிய நெற்கதிர்களின் கட்டுகளை வைக்கும் இடம் தெரியாமல் உழவர்கள் தடுமாறுவர். வலிய கைகளையுடைய உழவர்களின் இளஞ்சிறுவர்கள் தென்னை மரங்கள் தரும் தேங்காய்களை வெறுத்துத், தம் தந்தையரின் குறுகிய இடங்களில் உள்ள நெடிய வைக்கோற் போரில் விரைந்து ஏறி

செழுங்கோள்=====> யாம்அவன்

பனம்பழத்தைப் பறிக்க முயல்வர். நாள்தோறும் புதிய வருவாயையுடைய நல்ல நாட்டிற்கு அரசனாகிய நலங்கிள்ளி சேட்சென்னி, வேல் ஒளிரும் பெரிய கையினையும் நன்கு செய்யப்பட்ட தேரையும் உடையவன். ஒளி நிறைந்த மலர் மாலைகளை அணிந்த மார்பையுடைய சேட்சென்னியுடன் போர்புரிபவர்கள் இருப்பார்களானால், அவர்களுக்கு நேரப் போவதை அவர்கள் மட்டுமே அறிவார்கள். நாங்கள்

எழு=====> இலமே

கணையமரம் போன்ற வலிய தோள்களையுடைய அவனோடு போரிட்டவர்கள் வாழக்கண்டதில்லை. விரைந்து சென்று அவனது நல்லடியை அடைய வல்லோர் வருந்தக் கண்டது அதனினும் இல்லை.

சிறப்புக் குறிப்பு:-

சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி, சோழன் நலங்கிள்ளியின் மகன் என்று கருதப்படுகிறான். இலவந்திகை என்றால் குளத்தருகே இருக்கும் சோலை என்று பொருள். குளத்தருகே இருந்த சோலை ஒன்றில் இருந்த பள்ளியில் (படுக்கை அறையில்) இறந்ததால், சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி என்று அழைக்கப்பட்டான்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on March 17, 2013, 06:50:47 PM
(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-ash3/544474_574351335923115_1149922825_n.jpg) (http://www.friendstamilchat.com)

புறநானூறு, 62.(போரும் சீரும்!)
பாடியவர் : சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்; சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி.
பாடப்பட்டோன் : சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி.
திணை : தும்பை.
துறை: தொகை நிலை.
====================================

வருதார் தாங்கி அமர்மிகல் யாவது?
பொருதுஆண்டு ஒழிந்த மைந்தர் புண்தொட்டுக்
குருதிச் செங்கைக் கூந்தல் தீட்டி
நிறம்கிளர் உருவின் பேஎய்ப் பெண்டிர்
எடுத்துஎறி அனந்தற் பறைச்சீர் தூங்கப்

பருந்து அருந்துற்ற தானையொடு செருமுனிந்து
அறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர்
தாம்மாய்ந் தனரே; குடைதுளங் கினவே;
உரைசால் சிறப்பின் முரசு ஒழிந்தனவே;
பன்னூறு அடுக்கிய வேறுபடு பைஞ்ஞிலம்

இடம்கெட ஈண்டிய வியன்கண் பாசறைக்
களங்கொளற்கு உரியோர் இன்றித், தெறுவர
உடன்வீழ்ந் தன்றால் அமரே; பெண்டிரும்
பாசடகு மிசையார் பனிநீர் மூழ்கார்
மார்பகம் பொருந்தி ஆங்கமைந் தனரே;

வாடாப் பூவின் இமையா நாட்டத்து
நாற்ற உணவி னோரும் ஆற்ற
அரும்பெறல் உலகம் நிறைய
விருந்துபெற் றனரால் பொலிகநும் புகழே!

அருஞ்சொற்பொருள்:-

வரு = வருகின்ற
தார் = தூசிப்படை, படை
அமர் = போர்
மிகல் = வெற்றி
யாவது = எது, எவ்விதம்
ஆண்டு = அங்கு
மைந்தர் = வீரர்
நிறம் = ஒளி
கிளர்தல் = மிகுதல்
அனந்தல் = மந்த ஓசை
பறைச் சீர் = பறைக்குரிய தாளம்
தூங்கல் = ஆடல்
உற்ற = பொருந்திய
செரு = போர்
முனிந்து = வெகுண்டு
மண்டல் = மிகுதல்
துளங்கல் = கலங்கல், அசைதல்
உரை = புகழ்
பைஞ்ஞிலம் = படைத்தொகுதி
தெறு = அச்சம்
பாசடகு = பாசு + அடகு
பாசு = பசுமை
அடகு = கீரைக்கறி
மிசைதல் = உண்ட
நாட்டம் = பார்வை
ஆற்ற = மிக
பொலிதல் = மிகுதல்

இதன் பொருள்:-

வருதார்=====> தூங்க

இனி, எதிர்த்து வரும் தூசிப்படையத் தடுத்துப் போரில் வெற்றி பெறுவது எப்படி? அப்போர்க்களத்தில் சண்டையிட்டு அங்கே புண்பட்ட வீரர்களின் புண்ணைத் தோண்டிக், குருதி தோய்ந்த சிவந்த கையால் தமது தலைமயிரைக் கோதிய, ஓளிமிக்க உருவத்தையுடைய பேய்ப்பெண்கள், மேன்மேலும் கொட்டுகின்ற மந்தமான தாளத்திற்க்கேற்ப ஆடுகின்றனர்.

பருந்து=====> பைஞ்ஞிலம்

இறந்த படைவீரர்களின் உடலைப் பருந்துகள் உண்ணுகின்றன. அத்தகைய படையோடு, சினந்து அறவழியில் போர்புரிந்த வீரமுடைய மன்னர்கள் இருவரும் இறந்தனர். அவரது குடைகள் தளர்ந்தன. அவர்களுடைய புகழ் மிகுந்த சிறப்புடைய முரசுகள் வீழ்ந்தன. நூற்றுக்கணக்கான படைவீரர்கள் அடங்கிய பலவகைப் படைகளும்

இடம்கெட=====> ஆங்கமைந் தனரே

இருக்க இடமில்லாதபடி நெருங்கி இருக்கும் அகன்ற பாசறைகளில், போர்க்களத்தைத் தம்முடையதாக்கிக் கொள்வோர் இல்லாமல், காண்போர்க்கு அச்சம் தரும் வகையில் போர் உடனே முடிந்தது. மன்னர்களின் மனைவியர் பசுமையான கீரைக்கறியை உண்டு, குளிர்ந்த நீரில் மூழ்கும் கைம்மை நோன்பை விரும்பாதவராய் தம் கணவரைத் தழுவி உடன் கிடந்தனர்

வாடா=====> நும் புகழே

வாடாத பூக்களையும், இமைகளைச் சிமிட்டாத பார்வையையும், நறுமணமுள்ள அவியாகிய உணவையும் உடைய தேவர்கள் பெறுதற்கரிய விருந்து பெற்றனர். உங்கள் புகழ் விளங்குவதாக.

சிறப்புக் குறிப்பு:-

இரு வேந்தர்களும் ஒருங்கே இறந்ததைக் கூறுவதால் இப்பாடல் தொகைநிலையைச் சார்ந்ததாயிற்று.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on March 19, 2013, 06:35:14 PM
(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash3/246575_575730499118532_1292129135_n.jpg)

புறநானூறு, 63.(என்னாவது கொல்?)
பாடியவர் : பரணர்.
பாடப்பட்டோன் : சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி; சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்.
திணை : தும்பை.
துறை: தொகை நிலை.
========================================

எனைப்பல் யானையும் அம்பொடு துளங்கி
விளைக்கும் வினையின்றிப் படைஒழிந் தனவே;
விறற்புகழ் மாண்ட புரவி எல்லாம்
மறத்தகை மைந்தரொடு ஆண்டுப்பட் டனவே;
தேர்தர வந்த சான்றோர் எல்லாம்

தோல்கண் மறைப்ப ஒருங்குமாய்ந் தனரே;
விசித்துவினை மாண்ட மயிர்க்கண் முரசம்
பொறுக்குநர் இன்மையின் இருந்துவிளிந் தனவே;
சாந்தமை மார்பின் நெடுவேல் பாய்ந்தென
வேந்தரும் பொருதுகளத்து ஒழிந்தனர்; இனியே

என்னா வதுகொல் தானே; கழனி
ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்
பாசவல் முக்கித் தண்புனல் பாயும்
யாணர் அறாஅ வைப்பின்
காமர் கிடக்கைஅவர் அகன்றலை நாடே?

அருஞ்சொற்பொருள்:-

எனை = எவ்வளவு
பல் = பல
துளங்கல் = கலங்கல்
விளைதல் = உண்டாதல்
விறல் = வெற்றி
மாண்ட = பெருமைக்குரிய
புரவி = குதிரை
மறம் = வலிமை
தகை = தகுதி, தன்மை
சான்றோர் = வீரர்
தோல் = கேடயம்
விசித்தல் = இறுகக் கட்டுதல்
பொறுக்கல் = தாங்குதல்
விளிதல் = அழிதல், கெடுதல்
கழனி = வயல்
வள்ளி = கொடி
தொடி = கைவளை
பாசவல்(பாசு + அவல்) பாசு = பசுமை(நல்ல)
முக்கி = உண்டு
யானர் = புதிய வருவாய்
அறா = குறயாத
அறல் = இல்லாமற் போதல் அறா என்பது அறல் என்பதின் எதிர்மறை
வைப்பு = நிலப்பகுதி (ஊர்)
காமர் = அழகு
கிடக்கை = குடியிருப்பு

இதன் பொருள்:-

எனைப்பல்=====> சான்றோர் எல்லாம்

எத்தனை யானைகள் அம்பால் தாக்கப்பட்டுத் தொழிலின்றி இறந்தன! வெற்றிப் புகழ் கொண்ட பெருமைக்குரிய குதிரைகள் எல்லாம் வலிமை வாய்ந்த படைவீரர்களுடன் போர்க்களத்தில் மாண்டன. தேரில் வந்த வீரர்கள் எல்லாம்

தோல்கண்=====> இனியே

தாம் பிடித்த கேடயம் தங்கள் கண்களை மறைக்க ஒருங்கே இறந்தனர். இறுகக்கட்டப்பட்ட, மயிருடன் கூடிய முரசுகள் அவற்றைத் தாங்குவோர் இல்லாமல் கிழே கிடந்தன. சந்தனம் பூசிய மார்பில் நெடிய வேல் பாய்ந்ததால் இரு வேந்தர்களும் போர்க்களத்தில் இறந்தனர்.

என்னா=====> நாடே?

வயலில் விளைந்த ஆம்பல் தண்டால் செய்த வளையலணிந்த கையினை உடைய மகளிர் பசிய (வளமான) அவலை உண்டு குளிர்ந்த நீரில் பாய்ந்து விளையாடும், புது வருவாய் குறையாத அழகிய குடியிருப்புகள் அடங்கிய அகன்ற இடங்களை உடைய நாடு இனி என்ன ஆகுமோ?

சிறப்புக் குறிப்பு:-

அறவழியில் போர் செய்யும் குணங்களை உடைய வீரர்களைச் “சான்றோர்” என்பது மரபு. தோலில் உள்ள மயிரை நீக்காமல் செய்யபட்ட முரசு “மயிர்க்கண் முரசு” என்று அழைக்கப்பட்டது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on March 19, 2013, 06:36:45 PM
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash3/599724_575743252450590_827794386_n.jpg)

புறநானூறு, 64.(புற்கை நீத்து வரலாம்!)
பாடியவர் : நெடும்பல்லியத்தனார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.
திணை : பாடாண்.
துறை: விறலியாற்றுப்படை.
======================================

நல்யாழ் ஆகுளி பதலையடு சுருக்கிச்
செல்லா மோதில் சில்வளை விறலி!
களிற்றுக்கணம் பொருத கண்ணகன் பறந்தலை
விசும்புஆடு எருவை பசுந்தடி தடுப்பப்
பகைப்புலம் மரீஇய தகைப்பெருஞ் சிறப்பின்
குடுமிக் கோமாற் கண்டு
நெடுநீர்ப் புற்கை நீத்தனம் வரற்கே?

அருஞ்சொற்பொருள்:-

ஆகுளி = சிறுபறை
பதலை = மாக்கிணைப்பறை
சுருக்குதல் = கட்டுதல்
தில் - விருப்பத்தை உணர்த்தும் அசைச்சொல்
கணம் = கூட்டம்
அகன் = அகன்ற
பறந்தலை = போர்க்களம்
கண் = இடம்
எருவை = பருந்து
தடி = ஊன்
மரீஇய = பொருந்திய
கோமான் = அரசன்
புற்கை = கஞ்சி, கூழ்
நீத்தல் = விட்டுவிடுதல்

இதன் பொருள்:-

சில வளையல்களை மட்டுமே அணிந்த விறலியே! யானைக் கூட்டங்கள் போரிட்ட அகன்ற இடங்கள் உள்ள போர்க்களத்தில், ஆகாயத்தில் பறக்கும் பருந்துகளைத் பசுமையான ஊன் துண்டங்கள் தடுக்கும் பகைவர் நாட்டில் பொருந்திய முதுகுடுமிப் பெருவழுதியைக் கண்டு, கஞ்சி குடிக்கும் வறுமையான வாழ்க்கையிலிருந்து விடுதலை பெறுவதற்கு, நல்ல யாழையும், சிறுபறையையும், ஒருதலை மாக்கிணையும் எடுத்துக் கட்டிக்கொண்டு செல்லுவோமா?

பாடலின் பின்னணி:-

இப்பாடலில், வறுமையில் வாடும் விறலி ஒருத்தியைப், பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியிடம் சென்றால் அவள் வறுமை தீரும் என்று சொல்லி, அவளைப் புலவர் நெடும்பல்லியத்தனார் பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதியிடம் ஆற்றுப்படுத்துகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on March 19, 2013, 06:38:19 PM
(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-ash4/295607_576144295743819_1126142407_n.jpg)

புறநானூறு, 65.(நாணமும் பாசமும்!)
பாடியவர் : கழாத்தலையார்.
பாடப்பட்டோன் : சேரமான் பெருஞ்சேரலாதன்.
திணை : பொதுவியல்.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல்.
=======================================

மண்முழா மறப்பப் பண்யாழ் மறப்ப
இருங்கண் குழிசி கவிழ்ந்துஇழுது மறப்பச்
சுரும்பூஆர் தேறல் சுற்றம் மறப்ப
உழவர் ஓதை மறப்ப விழவும்
அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப

உவவுத்தலை வந்த பெருநாள் அமையத்து
இருசுடர் தம்முள் நோக்கி ஒருசுடர்
புன்கண் மாலை மலைமறைந் தாங்குத்
தன்போல் வேந்தன் முன்புகுறித்து எறிந்த
புறப்புண் நாணி மறத்தகை மன்னன்

வாள்வடக்கு இருந்தனன் ஈங்கு
நாள்போல் கழியல ஞாயிற்றுப் பகலே!

அருஞ்சொற்பொருள்:-

மண் = முரசுக்குத் தடவப்படும் கருஞ்சாந்து
முழா = முழவு = முரசு
இரு = பெரிய
கண் = இடம்
குழிசி = பானை
இழுது = வெண்ணெய்
சுரும்பு = வண்டு
ஆர்த்தல் = ஒலித்தல்
தேறல் = மது
ஓதை = ஓசை
அகலுள் = தெரு, ஊர், நாடு
சீறூர் = மலை நாட்டுச் சிற்றூர்
உவவு = முழுநிலா
அமையம் = சமயம்
புன்கண் = பொலிவு இழத்தல்
தகை = தகுதி, தன்மை

இதன் பொருள்:-

மண்முழா=====> சீறூர் மறப்ப

முரசு முழங்கவில்லை. யாழ் இசையை மறந்தது. அகன்ற பால் வட்டில்கள் பாலின்றி வறண்டு கிடக்கின்றன. சுறுசுறுப்பான தேனீக்கள் திரட்டிய தேனை இப்போது தீண்டுவாரில்லை. உழவர் கழனிகளில் உழுதலைத் தவிர்த்தனர். ஊர்ப் புற வெளிகள் விழாவயரும் கூட்டங்கள் இன்றி வெறிச்சோடி கிடக்கின்றன

உவவுத்தலை=====> பகலே

முழுமதி தோன்றும் பெருநாளில், ஞாயிறும் திங்களும் ஆகிய இரண்டு சுடர்களும் ஒன்றையொன்று எதிர்நின்று பார்த்து, அவற்றுள் ஒருசுடர் ஒளி குறைந்து மாலைப்பொழுதில் மலையில் மறைந்தது போல், தன்னைப் போன்ற ஒருவேந்தன், மார்பைக் குறிவைத்து எறிந்த வேலால் முதுகில் உண்டாகிய புண்ணால் நாணமுற்று, வீரப்பண்புடைய சேரன் தன் வாளோடு வடக்கிருந்தான். அதனால், இங்கே. முன்பு இருந்ததுபோல் பகல் பொழுதுகள் கழிய மட்டா

சிறப்புக் குறிப்பு:-

”மண்முழா மறப்ப”, ”பண்யாழ் மறப்ப”, ”குழிசி கவிழ்ந்து இழுது மறப்ப” ”சுரும்பூஆர் தேறல் சுற்றம் மறப்ப”,” உழவர் ஓதை மறப்ப”, ”சீறூர் அகலுள் ஆங்கண் விழவும் மறப்ப” என்பவை முறையே, ”முரசு முழங்கவில்லை”, “ யாழ் வாசிக்கப்படவில்லை”, ”தயிர்ப்பானை கவிழ்த்து வைக்கப்பட்டு, வெண்ணெய் கடையாமல் உள்ளது”, ”வண்டுகள் மொய்க்கும் மதுவை சுற்றத்தார் அருந்தவில்லை”, ”உழவர் உழவுத் தொழிலைச் செய்யவில்லை”, ”சிறிய ஊர்களின் தெருக்களில் விழாக்கள் நடைபெறவில்லை” என்பவற்றைக் குறிக்கின்றன.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on March 19, 2013, 06:39:39 PM
புறநானூறு, 66.
பாடியவர்: வெண்ணிக் குயத்தியார்
பாடப்பட்டோன்: சோழன் கரிகாற் பெருவளத்தான்
திணை: வாகை
துறை : அரச வாகை

======================================

நளியிரு முந்நீர் நாவா யோட்டி
வளிதொழி லாண்ட வுரவோன் மருக
களியியல் யானைக் கரிகால் வளவ
சென்றமர்க் கடந்தநின் னாற்ற றோன்ற
வென்றோய் நின்னினு நல்ல னன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப்புக ழுலக மெய்திப்
புறப்புண் ணாணி வடக்கிருந் தோனே

இதன் பொருள்:-

நளியிரு=====> கடந்தநின் னாற்ற றோன்ற

நீர் செறிந்த பெரிய கடலில் மரக்கலம் (கப்பல்) செலுத்தியும், அது அசையாதபோது காற்றினை ஏவல் கொண்டு செலுத்தும் வலிமையுடையவனின் வலித்தோன்றலே! மதம் பொருந்திய யானையையுடைய கரிகாற் சோழனே! போருக்குச் சென்று எதிர் நின்று உன் ஆற்றல் தோன்ற வென்றவனே!

வென்றோய்=====> வடக்கிருந் தோனே

தழைத்தலைக் கொண்ட புது வருவாயுடைய வெண்ணியென்னும் ஊர்ப் புறத்துப் போர்க்களத்திற்பட்ட புறப்புண்ணுக்கு நாணி உலகத்திற்கு புகழ் மிகப் பெற்று வடக்கிருந்தோன் உன்னைவிட நல்லவனன்றே!
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on March 21, 2013, 10:44:48 AM
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-prn1/24639_576544015703847_1097237396_n.jpg)

புறநானூறு, 67. (அன்னச் சேவலே!)
பாடியவர்: பிசிராந்தையார்.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன்.
திணை: பாடாண்.
துறை : இயன் மொழி.

======================================

அன்னச் சேவல்! அன்னச் சேவல்!
ஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணல்
நாடுதலை அளிக்கும் ஒண்முகம் போலக்
கோடுகூடு மதியம் முகிழ்நிலா விளங்கும்
மையல் மாலையாம் கையறுபு இனையக்

குமரிஅம் பெருந்துறை அயிரை மாந்தி
வடமலைப் பெயர்குவை ஆயின் இடையது
சோழ நன்னாட்டுப் படினே கோழி
உயர்நிலை மாடத்துக், குறும்பறை அசைஇ
வாயில் விடாது கோயில் புக்கு எம்

பெருங்கோக் கிள்ளி கேட்க இரும்பிசிர்
ஆந்தை அடியுறை எனினே, மாண்ட நின்
இன்புறு பேடை அணியத்தன்
அன்புறு நன்கலம் நல்குவன் நினக்கே

அருஞ்சொற்பொருள்:-

ஆடு = கொல்லுதல், வெற்றி
அடுபோர் = வெல்லும் போர்
தலையளித்தல் = காத்தல், கருணையோடு நோக்குதல்
ஓள் = ஒளி
கோடு = பக்கம்
முகிழ் = குவியும்
மையல் = மயக்கம்
கையறுதல் = செயலற்றிருத்தல்
இனைதல் = வருந்தல்
மாந்துதல் = உண்ணுதல்
கோழி = உறையூர்
குறும்பறை = பேடை (பெண் பறவை)
அசைதல் = தங்குதல்
விடுதல் = நிறுத்துதல்
கிள்ளி = சோழன் (சோழ மன்னர்களின் சிறப்புப் பெயர்)
இரு = பெரிய
அடியுறை = அடியேன்
பேடை = பெட்டை

இதன் பொருள்:-

அன்னச் சேவல்=====> இனைய

அன்னச் சேவலே! போரில் வெற்றி பெற்று, நாட்டை அருள் செய்து காக்கும் நல்லோனின் ஒளிதிகழும் முகம் போல், இரண்டு பக்கங்களும் ஒன்று கூடி, முழுநிலா ஒளியுடன் விளங்கி மயக்கம் தரும் மாலைப் காலத்தில், நான் செய்வதறியாது வருந்துகிறேன்

குமரிஅம்=====> புக்கு எம்

நீ குமரி ஆற்றின் பெரிய துறையில் அயிரை மீன்களை உண்டு, வடதிசையில் உள்ள இமயத்தை நோக்கிச் சென்றாயாயின், இடையே சோழ நாடு உள்ளது. அங்கே, உறையூரில் உள்ள உயர்ந்த மாடத்தில் உனது பெட்டையோடு தங்கி, வாயில் காவலரைக் கடந்து, அரண்மனைக்குள் புகுந்து

பெருங்கோ=====> நினக்கே

கோப்பெருஞ்சோழனின் காதுகளில் கேட்குமாறு, “ நான் பெருமைக்குரிய பிசிராந்தையாரின் அடியேன்” என்று சொன்னால், பெருமைக்குரிய உன் இனிய பெட்டை அணிவதற்குத் தன்னுடைய நல்ல அணிகலன்களைக் கோப்பெருஞ்சோழன் தருவான். (நட்பின் செறிவால் கூறியது இது.)
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on March 26, 2013, 05:45:38 PM
(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-ash3/598759_577279162296999_1029446402_n.jpg) (http://www.friendstamilchat.com)

புறநானூறு, 68. (பிறன்கடை மறப்ப நல்குவன் செலினே!)
பாடியவர்: கோவூர் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி.
திணை: பாடாண்.
துறை : பாணாற்றுப்படை.
=======================================

உடும்புஉரித்து அன்ன என்புஎழு மருங்கின்
கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது
சில்செவித்து ஆகிய கேள்வி நொந்துநொந்து
ஈங்குஎவன் செய்தியோ? பாண! பூண்சுமந்து
அம்பகட்டு எழிலிய செம்பொறி ஆகத்து

மென்மையின் மகளிர்க்கு வணங்கி வன்மையின்
ஆடவர்ப் பிணிக்கும் பீடுகெழு நெடுந்தகை
புனிறுதீர் குழவிக்கு இலிற்றுமுலை போலச்
சுரந்த காவிரி மரங்கொல் மலிநீர்
மன்பதை புரக்கும் நன்னாட்டுப் பொருநன்

உட்பகை ஒருதிறம் பட்டெனப் புட்பகைக்கு
ஏவான் ஆகலின் சாவேம் யாம்என
நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்பத்
தணிபறை அறையும் அணிகொள் தேர்வழிக்
கடுங்கண் பருகுநர் நடுங்குகை உகுத்த

நறுஞ்சேறு ஆடிய வறுந்தலை யானை
நெடுநகர் வரைப்பின் படுமுழா ஓர்க்கும்
உறந்தை யோனே குருசில்
பிறன்கடை மறப்ப நல்குவன் செலினே

அருஞ்சொற்பொருள்:-

என்பு = எலும்பு
மருங்கு = பக்கம் (விலா)
கடும்பு = சுற்றம்
சில் = சில
பூண் = அணிகலன்
அம் = அழகிய
பகடு = பெரிய, பெருமை
எழில் = அழகு, இளமை
பொறி = புள்ளி
ஆகம் = மார்பு
பிணித்தல் = கட்டுதல், சிறைப்படுத்தல்
பீடு = பெருமை
புனிறு = ஈன்ற அணிமை
இலிற்றுதல் = சுரத்தல்
மலிதல் = மிகுதல்
மன்பதை = மக்கட் கூட்டம்
புரத்தல் = காத்தல்
திறம் = பகுதி
தணிபறை = தணிவதற்குக் காரணமாகிய பறை
கடுங்கள் = முதிர்ந்த கள்
உகுத்தல் = சிதறுதல்
வறுமை = வெறுமை
வறுந்தலை = பாகர் ஏறாத வெறுந்தலை
வரைப்பு = எல்லை
ஓர்த்தல் = கேட்டல்
குருசில் = குரிசில் = அரசன்

இதன் பொருள்:-

உடும்புஉரித்து=====> ஆகத்து

பாண! உடும்பை உரித்ததுபோல் எலும்புகள் எழும்பிய விலாப் பக்கங்களை உடைய சுற்றத்தின் மிகுந்த பசியைத் தீர்ப்பாரைக் காணாமல், உன் பாடல்களைக் கேட்பவர்கள் சிலரே என்று நொந்துகொண்டு இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறாய்? அணிகலன்களை அணிந்த, அழகிய, பெரிய, மார்பில்

மென்மையின்=====> பொருநன்

சிவந்த புள்ளிகளை (தேமல்) உடையவன் நலங்கிள்ளி. அவன் மென்மையான மகளிரிடம் பணிவாகவும், வலிமை மிகுந்த பகைவர்களைச் சிறைப்படுத்தும் பெருமையும் பொருந்தியவன். அவன், குழந்தை பிறந்தவுடன் பால் சுரக்கும் முலைபோல், நீர்ப் பெருகிய காவிரி, வெள்ளப் பெருக்கெடுத்து கரையிலுள்ள மரங்களை அழிக்கும் சோழ நாட்டுக்குத் தலைவன்

உட்பகை=====> உகுத்த

தன்னுடைய படையில் ஒரு பகுதியில் உட்பகை தோன்றினால், பறவைகளால் நிகழும் தீய நிமித்தங்கள் நடைபெறும் பொழுது, அப்படையைப் போருக்குச் செலுத்துவதை நிறுத்திவிடுவான். போருக்குச் செல்ல இயலாதலால், அந்தப் படைவீரர்கள், “ செத்து விடுவோம்” என்று கூறித் தங்கள் பருத்த தோளைத் தட்டுவர். அவர்கள் ஆத்திரம் தணிவதற்குத் தேரோடும் தெருக்களில், தாழ்ந்த ஒலியில் பறையை முழக்குவர். அவர்களில் சிலர், நன்கு முதிர்ந்த கள்ளைப் பருகியதால் நடுங்கும் கைகளால் அக்கள்ளைச் சிந்துவர்

நறுஞ்சேறு=====> செலினே

கள் சிந்தியதால், சேறாகிய தெருக்களில் பாகர்கள் இல்லாமல் திரியும் யானைகள் பெரிய நகரில் ஒலிக்கும் முரசொலியைக் காது கொடுத்துக் கேட்கும். அத்தகைய உறையூரில், சோழன் நலங்கிள்ளி உள்ளான். நீ அவனிடம் சென்றால், அதற்குப் பிறகு வேறு யாரிடத்தும் செல்வதை மறக்கும் அளவுக்கு பரிசளிப்பான்
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on March 26, 2013, 05:47:35 PM
(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-ash4/480455_578227175535531_1139038394_n.jpg)

புறநானூறு, 69. (பொற்றாமரை பெறுவாய்!)
பாடியவர்: ஆலத்தூர் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை: பாடாண்.
துறை : பாணாற்றுப்படை.
=======================================

கையது கடன்நிறை யாழே; மெய்யது
புரவலர் இன்மையின் பசியே; அரையது
வேற்றிழை நுழைந்த வேர்நனை சிதாஅர்
ஓம்பி உடுத்த உயவற் பாண!
பூட்கை இல்லோன் யாக்கை போலப்

பெரும்புல் என்ற இரும்பேர் ஒக்கலை;
வையகம் முழுதுடன் வளைஇப், பையென
என்னை வினவுதி ஆயின், மன்னர்
அடுகளிறு உயவும் கொடிகொள் பாசறைக்
குருதிப் பரப்பின் கோட்டுமா தொலைச்சிப்

புலாக்களம் செய்த கலாஅத் தானையன்
பிறங்குநிலை மாடத்து உறந்தை யோனே!
பொருநர்க்கு ஓக்கிய வேலன் ஒருநிலைப்
பகைப்புலம் படர்தலும் உரியன் தகைத்தார்
ஒள்ளெரி விரையும் உருகெழு பசும்பூண்

கிள்ளி வளவற் படர்குவை ஆயின்
நெடுங்கடை நிற்றலும் இலையே; கடும்பகல்
தேர்வீசு இருக்கை ஆர நோக்கி
நீஅவற் கண்ட பின்றைப் பூவின்

ஆடும்வண்டு இமிராத் தாமரை
சூடாய் ஆதல் அதனினும் இலையே.

அருஞ்சொற்பொருள்:-

கடன் = முறை
அரை = இடுப்பு
வேர் = வேர்வை
சிதாஅர் = சிதார் = கந்தை
ஓம்பி = பாதுகாத்து
உயவல் = வருத்தம்
பூட்கை = எழுச்சி, கொள்கை
புல் = அற்பம், இழிவு (பொலிவற்ற)
ஒக்கல் = சுற்றம்
பையென = மெல்ல
கோட்டுமா = யானை
தொலைச்சி = கொன்று
கலாம் = போர்
பிறங்கல் = உயற்சி
படர்தல் = செல்லுதல்
தகை = பெருமை, மேம்பாடு
உரு = நிறம்
புரை = ஒப்பு
பூண் = அணிகலன்
வீசுதல் = வரையாது கொடுத்தல்
இமிர்தல் = மொய்த்தல்

இதன் பொருள்:-

கையது=====> யாக்கை போலப்

பாணனே! கையில் இருப்பது முறைப்படி செய்த யாழ். உன் உடல், உதவுவோர் இல்லாமையால் பசியால் வாடுகிறது. உன் இடுப்பில் இருப்பது, வியர்வையால் நனைந்த, கிழிந்த கந்தைத் துணி. அந்தத் துணியில் உள்ள கிழிசல்கள் வேறுவேறு நிறமுடைய நூல்களால் தைக்கப்பட்டிருக்கின்றன. நீ அதைப் பாதுகாத்து உடுத்திக் கொண்டிருக்கிறாய். வருத்தத்தில் நீ எழுச்சி இல்லாதவனின் உடல்போலப்

பெரும்புல்=====> தொலைச்சிப்

பொலிவற்ற பெரிய சுற்றத்தாரை உடையவன். இந்த நிலையில், நீ உலகம் முழுவதும் சுற்றி வந்து, “ என் வறுமையைத் தீர்ப்பவர் யார்?” என்று என்னிடம் மெல்லக் கேட்கின்றாயாயின், நான் கூறுவதைக் கேள். கிள்ளிவளவனின் கொடி பறக்கும் பாசறையில், பகை வேந்தர்களது யானைகள் புண்பட்டு வருந்தும். அவன், குருதிப் பரப்பில் யானைகளைக் கொன்று

புலாக்களம்=====> பசும்பூண்

புலால் நாறும் போர்க்களத்தை ஏற்படுத்திய படையை உடையவன்; உயர்ந்த மாடங்களை உடைய உறையூரில் உள்ளான்; போரிடுவோரைத் தாக்குவதற்காக வேல் எடுத்தவன்; சில சமயங்களில் பகைவர் நாடுகளுக்கும் சென்று போர் புரிபவன்; பெருமைக்குரிய மாலையை உடையவன்; ஓலியுடன் கூடிய தீயைப் போன்ற நிறம் பொருந்திய பசும்பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்தவன்.

கிள்ளி வளவ=====> இலையே

அத்தகைய கிள்ளி வளவனிடம் சென்றாயானால், அவனுடைய நெடிய வாயிலில் நீ நெடுநேரம் காத்திருக்க மாட்டாய்; நண்பகல் நேரத்தில், அவன் பரிசிலர்க்குத் தேர்களை வழங்குவதை உன் கண்ணாரக் காண்பாய். நீ அவனைக் கண்ட பின்பு, பூக்களில் புகுந்து ஆடும் வண்டுகள் மொய்க்காத பொற்றாமரைப் பூவைச் சூடாது இருப்பது அதனினும் இல்லை. அதனால் அங்கு செல்வாயாக.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on March 29, 2013, 08:53:51 PM
(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-snc7/401982_579937002031215_480133740_n.jpg)

புறநானூறு, 70. (குளிர்நீரும் குறையாத சோறும்)
பாடியவர்: கோவூர் கிழார்.
பாடப்பட்டோன்: கிள்ளி வளவன்.
திணை: பாடாண்.
துறை : பாணாற்றுப்படை.
=======================================

தேஎம் தீந்தொடைச் சீறியாழ்ப் பாண!
கயத்து வாழ் யாமை காழ்கோத் தன்ன
நுண்கோல் தகைத்த தெண்கண் மாக்கிணை
இனிய காண்க; இவண் தணிக எனக் கூறி;
வினவல் ஆனா முதுவாய் இரவல!

தைத் திங்கள் தண்கயம் போலக்,
கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியனகர்,
அடுதீ அல்லது சுடுதீ அறியாது;
இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன்,
கிள்ளி வளவன் நல்லிசை யுள்ளி,

நாற்ற நாட்டத்து அறுகாற் பறவை
சிறுவெள் ளாம்பல் ஞாங்கர்,ஊதும்
கைவள் ஈகைப் பண்ணன் சிறுகுடிப்
பாதிரி கமழும் ஓதி, ஒண்ணுதல்,
இன்னகை விறலியடு மென்மெல இயலிச்

செல்வை ஆயின், செல்வை ஆகுவை;
விறகுஒய் மாக்கள் பொன்பெற் றன்னதோர்,
தலைப்பாடு அன்று, அவன் ஈகை;
நினைக்க வேண்டா; வாழ்க, அவன் தாளே!

அருஞ்சொற்பொருள்:-

தேம் = தேன்
தீ = இனிமை
தொடை = யாழின் நரம்பு
கயம் = குளம்
காழ் = வலிய கம்பி
தெண் = தெளிந்த
ஆனாமை = நீங்காமை
முதுவாய் = முதிய வாய்மையுடைய
கூழ் = உணவு
வியல் = அகலம்
ஆம்பல் = அல்லி
ஞாங்கர் = மேலே
பாதிரி = ஒரு மரம்
ஓதி = பெண்களின் கூந்தல்
இயலுதல் = நடத்தல்
ஓய்தல் = அழிந்து ஒழிதல் (வெட்டுதல்)
தலைப்பாடு = தற்செயல் நிகழ்ச்சி

இதன் பொருள்:-

தேஎம்=====> இரவல

தேன் போன்ற இனிய இசையை அளிக்கும் சிறிய யாழையுடைய பாண! குளத்தில் வாழும் ஆமையை வலிய கம்பியில் கோத்ததைப் போல் நூண்ணிய குச்சிகளால் பொருத்தப்பட்ட தெள்ளிய கண்ணையுடைய பெரிய கிணையைக் காட்டி “இதை இனிதே காண்க; இங்கே சற்று இருந்து செல்க” என்று கூறும் முதுமையும் வாய்மையும் உடைய இரவலனே!

தைத் திங்கள்=====> நல்லிசை யுள்ளி

கிள்ளி வளவனின் நாடு, தை மாதத்தில் தெளிந்த குளிர்ந்த நீரையுடைய குளம் போல் கொள்ளக் கொள்ளக் குறையாத உணவுப் பொருட்களுடைய அகன்ற பெரிய நகரங்களுடையது. அந்நாடு, பகைவர்களால் தீக்கிறையாக்கப்பட்டதில்லை. அங்கு சமைப்பதற்குப் பயன்படுத்தப்படும் தீயை மட்டுமே காணமுடியும். கிள்ளி வளவன், பசிப்பணியை நீக்குவதற்குத் தேவையான நீர் வளமும் நில வளமும் மிகுந்த நல்ல நாட்டுக்கு அரசன். அவன் புகழை நினைவுகொள். நீ கிள்ளி வளவனை நோக்கிச் செல்லும் வழியில்

நாற்ற=====> அவன் தாளே

நறுமணத்தை விரும்பும் வண்டுகள் வெண்ணிற ஆம்பல் மலர்களின் மேலே ஒலிக்கும் சிறுகுடி என்ற ஊரில், வள்ளல் தன்மை உடைய கையையும் ஈகையில் சிறந்தவனுமான பண்ணன் என்ற ஒருவன் உள்ளான். பாதிரி மணம் கமழும் கூந்தலும் ஒளிபொருந்திய நெற்றியும் உடைய உன் விறலியுடன் மெல்ல மெல்ல நடந்து சிறுகுடிக்குச் செல்வாயானால், நீ செல்வந்தன் ஆவாய். பண்ணன் உனக்குப் பரிசுகளை அளிப்பான். பண்ணனின் ஈகை, விறகு வெட்டப் போனவனுக்குப் பொன்கிடைத்ததைப்போல் தற்செயலாக நடைபெறும் நிகழ்ச்சி அல்ல; நீ அவனிடம் பரிசு பெறுவது உறுதி. பரிசு கிடைக்குமா என்று நீ ஐயப்படத் தேவையில்லை. வாழ்க பண்ணனின் தாள்கள்!
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on April 04, 2013, 10:40:30 PM
(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-prn1/37037_582435548448027_908029256_n.jpg)

புறநானூறு, 71. (இவளையும் பிரிவேன்)
பாடியவர்: ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன். பூதப்பாண்டியன் என்ற பாண்டிய மன்னன்.
திணை: காஞ்சி.
துறை : வஞ்சினக் காஞ்சி.
======================================

மடங்கலின் சினைஇ, மடங்கா உள்ளத்து,
அடங்காத் தானை வேந்தர் உடங்கு இயைந்து
என்னொடு பொருதும் என்ப ; அவரை
ஆரமர் அலறத் தாக்கித் தேரொடு
அவர்ப்புறம் காணேன் ஆயின் - சிறந்த

பேரமர் உண்கண் இவளினும் பிரிக:
அறன்நிலை திரியா அன்பின் அவையத்துத்,
திறன்இல் ஒருவனை நாட்டி, முறை திரிந்து
மெலிகோல் செய்தேன் ஆகுக; மலி புகழ்
வையை சூழ்ந்த வளங்கெழு வைப்பின்

பொய்யா யாணர் மையற் கோமான்
மாவனும், மன்எயில் ஆந்தையும், உரைசால்
அந்துவஞ் சாத்தனும், ஆதன் அழிசியும்,
வெஞ்சின இயக்கனும், உளப்படப் பிறரும்,
கண்போல் நண்பிற் கேளிரொடு கலந்த

இன்களி மகிழ்நகை இழுக்கி யான் ஒன்றோ,
மன்பதை காக்கும் நீள்குடிச் சிறந்த
தென்புலம் காவலின் ஒரிஇப், பிறர்
வன்புலங் காவலின் மாறி யான் பிறக்கே!

அருஞ்சொற்பொருள்:-

மடங்கல் = சிங்கம்
மடங்குதல் = மீளுதல், வளைதல், செயலறுதல்
உடங்கு இயைந்து = ஒன்று கூடி
ஆர் = நிறைவு
அமர் = போர்
அமர்தல் = அமைதல், பொருந்துதல்
மெலிகோல் = கொடுங்கோல்
திறன் = தகுதி
களி = செருக்கு, மகிழ்ச்சி
மன்பதை = மக்கட் பரப்பு
வன்புலம் = வளமற்ற நிலம்

இதன் பொருள்:-

மடங்கலின்=====> சிறந்த

சிங்கத்தைப்போலச் சீறிவரும் சினத்தையும், உறுதியான உள்ளத்தையும், வலிமைமிக்க படையையுமுடைய வேந்தர் ஒன்று கூடி என்னோடு போரிடுவேமென்று கூறுகிறார்கள். நான் அவ்வேந்தரைப் பொறுத்தற்கரிய போரில் அவர்கள் அலறுமாறு போரிட்டு, அவர்களை அவர்களுடைய தேருடன் புறமுதுகு காட்டி ஓடுமாறு செய்யேனாயின், சிறந்த

பேரமர்=====> வைப்பின்

பெரிய மையணிந்த கண்களையுடைய இவளிடமிருந்து (என்னுடைய மனைவியிடமிருந்து) நீங்குவேனாக. அறநிலை மாறாத அன்போடு கூடிய என் அரசவையில் தகுதியற்ற ஒருவனை இருத்திக் கொடுங்கோல் புரியச் செய்தேனாக. மிக்க புகழுடைய வைகையாற்றால் சூழப்பட்ட வளம் பொருந்திய ஊர்களில்

பொய்யா=====> கலந்த

பொய்க்காத புதுவருவாயுடைய மையல் என்னும் பகுதிக்குத் தலைவனாகிய மாவன், நிலைபெற்ற அரண்களையுடைய ஆந்தை, புகழமைந்த அந்துவஞ் சாத்தன், ஆதன் அழிசி, சினமிக்க இயக்கன் ஆகியோர் உட்பட என் கண்போன்ற நட்பினையுடைய நண்பர்களோடு கூடிக்

இன்களி=====> பிறக்கே

களிக்கும் இனிய செருக்குடைய மகிழ்ச்சியை இழந்தவனாவேனாக. நான், மறு பிறவியில் மக்களைப் பாதுகாக்கும் பெருமைமிக்க பாண்டியர் குடியில் பிறக்காமல் வளமற்ற நிலம் காக்கும் குடியில் பிறப்பேனாக.

சிறப்புக் குறிப்பு:-

மனைவியைப் பிரியாமலிருப்பது, கொடுங்கோலன் என்று மக்களால் கருதப்படாமலிருப்பது, நண்பர்களின் நட்பு, மற்றும் பாண்டிய நாட்டை ஆளும் வாய்ப்பு ஆகிய இவையெல்லாவற்றையும் பூதப்பாண்டியன் மிகவும் மேன்மையானயவையாகவும் விருமபத்தக்கவையாகவும் கருதினான் என்பது இப்பாடலிலிருந்து தெரிகிறது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on April 04, 2013, 10:44:18 PM
புறநானூறு, 72. (இனியோனின் வஞ்சினம்!)
பாடியவர்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை: காஞ்சி.
துறை : வஞ்சினக் காஞ்சி.
======================================

நகுதக் கனரே, நாடு மீக் கூறுநர்;
இளையன் இவன் என உளையக் கூறிப்
படுமணி இரட்டும் பாவடிப் பணைத்தாள்
நெடுநல் யானையும், தேரும், மாவும்,
படைஅமை மறவரும், உடையம் யாம் என்று

உறுதுப்பு அஞ்சாது, உடல்சினம் செருக்கிச்
சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருஞ்சமஞ் சிதையத் தாக்கி, முரசமொடு
ஒருங்கு அகப் படேஎன் ஆயின்; பொருந்திய
என் நிழல் வாழ்நர் சென்னிழல் காணாது,

கொடியன்எம் இறை எனக் கண்ணீர் பரப்பிக்,
குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக!
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக,
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்

புலவர் பாடாது வரைக, என் நிலவரை;
புரப்போர் புன்கண் கூர,
இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே.

அருஞ்சொற்பொருள்:-

மீக்கூறல் = புகழ்தல்
உளைதல் = மிக வருந்துதல்
படு = பெரிய
இரட்டுதல் = மாறி மாறி ஒலித்தல்
பா = பரவுதல்
பணை = பருமை
உறு = மிக்க
துப்பு = வலிமை
செருக்குதல் = அகங்கரித்தல்
சமம் = போர்
அகப்படுத்தல் = சிக்கிக்கொள்ளுதல், பிடிக்கப்படுதல்
செல்நழல் = சென்றடையும் நிழல்
வரைதல் = நீக்கல்
புன்கண் = துயரம்
கூர்தல் = மிகுதல்

இதன் பொருள்:-

நகுதக் கனரே=====> யாம் என்று

“இந்த நாட்டைப் புகழ்ந்து கூறுபவர்கள் ஏளனத்துக்குரியவர்கள்; இவன் இளையவன்” என்று என் மனம் வருந்துமாறு கூறி, தங்களிடத்து மாறி மாறி ஒலிக்கும் மணிகளணிந்த பரந்த பெரிய பாதங்களையுடைய நெடிய நல்ல யானைகளும், தேர்களும், குதிரைகளும் படை வீரர்களும் இருப்பதை எண்ணி

உறுதுப்பு=====> காணாது

எனது வலிமையைக் கண்டு அஞ்சாது, என்னைப்பற்றி இழிவாகப் பேசும் சினத்தொடு கூடிய வேந்தரைப் பொறுத்தற்கரிய போரில் அழியுமாறு தாக்கி அவர்களையும் அவர்களது முரசுகளையும் கைக்கொள்வேன். நான் அவ்வாறு செய்யேனாயின், என் குடை நிழலில் வாழும் மக்கள் சென்றடைய வேறு இடமில்லாமல்

கொடியன்எம்=====> உறவே

“ எம் வேந்தன் கொடியவன்” என்று கண்ணீர் வடித்து அவர்களால் கொடுங்கோலன் என்று தூற்றப்படுவேனாக. மற்றும், மிகுந்த சிறப்பும் உயர்ந்த கேள்வியுமுடைய மாங்குடி மருதன் முதல்வனாக உலகத்தோடு நிலைபெற்ற பலரும் புகழும் புலவர்கள் என்னைப் பாடாது என் நாட்டைவிட்டு நீங்குக. என்னால் காப்பாற்றப்படுபவர் துயரம் மிகுந்து என்னிடம் இரக்கும் பொழுது அவர்கட்கு ஈகை செய்ய இயலாத வறுமையை நான் அடைவேனாக.

பாடலின் பின்னணி:-

தலையாலங்கானத்தில் பகைவர் எழுவரும் ஒன்று கூடிப் போரிட வந்தனர் என்பதை அறிந்த நெடுஞ்செழியன், “ நான் இளையவன் என்று நினைத்து என் வலிமையை அறியாமல் இவர்கள் என்னிடம் போரிட வந்திருக்கிறார்கள். நான் அவர்களைப் போரில் அழிப்பேன்; அங்ஙனம் நான் அவர்களை அழிக்காவிட்டால், என் குடிமக்கள் என்னைக் கொடுங்கோலன் என்று தூற்றட்டும்; புலவர்கள் என்னைப் பாடது என் நாட்டைவிட்டு நீங்கட்டும்; இரவலர்க்கு ஈயவொண்ணாத கொடிய வறுமையும் என்னை வந்து சேரட்டும்” என்று வஞ்சினம் கூறுகிறான். இவனது வரலாறு முன்பே நமது பக்கத்தில் பதிவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இணைப்பு :-

சிறப்புக் குறிப்பு:-

முந்திய பாடலில் பூதப்பாண்டியன் கூறியதைப்போல், இப்பாடலில் பாண்டியன் தலயாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும் மக்களால் கொடுங்கோலன் என்று கருதப்படுவது ஒரு பெரும்பழி என்று எண்ணுவதைக் காண்கிறோம். மற்றும் புலவர்களால் புகழ்ந்து பாடப்படுவது ஒரு தனிச் சிறப்பு என்பதும் அதை மன்னர்கள் பெரிதும் விரும்பினார்கள் என்பதும் இப்பாடலில் காண்கிறோம். தன்னிடம் இரப்பவர்க்கு ஈகை செய்யவியலாத அளவுக்கு வறுமையை அடைவது இறப்பதைவிடக் கொடுமையானது என்ற கருத்தை “ சாதலின் இன்னாதது இல்லை; இனிது அதூஉம் ஈதல் இயையாக் கடை” என்ற குறளில் (குறள் - 230) திருவள்ளுவர் கூறுகிறார். இக்குறளுக்கும் இப்பாடலில் இம்மன்னன் கூறும் கருத்துக்கும் உள்ள ஒற்றுமை சிந்திக்கத் தக்கது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on April 10, 2013, 08:03:31 PM
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash3/554873_583569371667978_1564607188_n.jpg)

புறநானூறு, 73. ( உயிரும் தருகுவன்!)
பாடியவர்: சோழன் நலங்கிள்ளி.
திணை: காஞ்சி.
துறை : வஞ்சினக் காஞ்சி.
====================================

மெல்ல வந்து, என் நல்லடி பொருந்தி
ஈயென இரக்குவர் ஆயின், சீருடை
முரசுகெழு தாயத்து அரசோ தஞ்சம்;
இன்னுயிர்ஆயினும்கொடுக்குவென், இந்நிலத்து
ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாதுஎன்


உள்ளம் எள்ளிய மடவோன், தெள்ளிதின்
துஞ்சு புலி இடறிய சிதடன் போல
உய்ந்தனன் பெயர்தலோ அரிதே; மைந்துடைக்
கழைதின் யானைக் கால்அகப் பட்ட
வன்றிணி நீண்முளை போலச், சென்றுஅவண்

வருந்தப் பொரேஎன் ஆயின், பொருந்திய
தீதுஇல் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப்
பல்லிருங் கூந்தல் மகளிர்
ஒல்லா முயக்கிடைக் குழைக, என்தாரே!

அருஞ்சொற்பொருள்:-

சீர் = புகழ், பெருமை
தாயம் = உரிமைச் சொத்து
தஞ்சம் = எளிமை
சிதடன் = குருடன்
மைந்து = வலிமை
வன்திணி = வலிய திண்ணிய
இரு = கரிய
ஒல்லா = பொருந்தாத
முயக்கு = தழுவல், புணர்தல்
குழைக = துவள்க, வாடுக

இதன் பொருள்:-

மெல்ல வந்து என் காலில் விழுந்து “கொடு” என்று என்னைக் கெஞ்சிக் கேட்டால் புகழுடைய முரசோடு கூடிய என்னுடைய உரிமைச் சொத்தாகிய இந்நாட்டை அடைவது எளிது. அது மட்டுமல்லாமல், என் இனிய உயிரைக்கூடக் கொடுப்பேன். ஆனால், வெட்ட வெளியில் படுத்துறங்கும் புலிமேல் தடுக்கி விழுந்த குருடன் போல் இந்நாட்டு மக்களின் ஆற்றலைப் போற்றாது போருக்கு வந்து என்னை ஏளனப்படுத்தும் அறிவிலி நெடுங்கிள்ளி இங்கிருந்து தப்பிப்போவது அரிது. மூங்கில் தின்பதற்கு வந்த வலிய யானையின் காலில் குத்திய வலிய பெரிய நீண்ட முள்போல் அவனைத் துன்புறுத்திப் போரிடேனாயின், தீதில்லாத நெஞ்சத்தோடு காதல் கொள்ளாத மிகுந்த கரிய கூந்தலையுடைய மகளிர் (விலை மகளிர்) என்னைத் தழுவுவதால் என் மாலை வாடட்டும்.

பாடலின் பின்னணி:-

சோழன் நெடுங்கிள்ளி சோழன் நலங்கிள்ளியை எதிர்த்துப் போரிட வருகிறான். “நெடுங்கிள்ளி ஏன் போருக்கு வருகிறான்? என்னுடைய நாடு வேண்டுமென்று என்னடி பணிந்து என்னைக் கேட்டால் என் நாட்டையும் தருவேன்; என் உயிரையும் தருவேன். ஆனால் என்னையும் என் ஆற்றலையும் மதிக்காமல் போரிட நினைத்தால் அவனுக்குப் பெருமளவில் துன்பந்தரும் வகையில் போரிடுவேன்” என்று சோழன் நலங்கிள்ளி வஞ்சினம் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

சிறப்புக் குறிப்பு:-

விலைமகளிரோடு தொடர்பு கொள்வது நல்லொழுக்கமில்லை என்பதை திருவள்ளுவர்,

அன்பின் விழையார்; பொருள் விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும். (குறள் - 911)

என்ற குறளில் கூறுவதை இமன்னனின் கூற்றோடு ஒப்பு நோக்குக.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on April 10, 2013, 08:05:46 PM
(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-prn1/30559_583575661667349_1716828429_n.png)

புறநானூறு, 74. (வேந்தனின் உள்ளம்)
பாடியவர்: சேரமான் கணைக்கால் இரும்பொறை.
திணை: பொதுவியல்.
துறை : முதுமொழிக் காஞ்சி .
====================================

குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
'ஆள் அன்று' என்று வாளின் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்ம ரோஇவ் வுலகத் தானே?

அருஞ்சொற்பொருள்:-

குழவி = குழந்தை
தடி = தசை
தொடர்ப்பாடு = பற்று
தொடர் = சங்கிலி
ஞமலி = நாய்
இடர்ப்பாடு = இடையூறு
இரீஇய = இருக்க
கேளல் கேளிர் = பகைவர், அயலார்
வேளாண் = கொடை (உபகாரம்)
சிறுபதம் = தண்ணீர் உணவு
மதுகை = வலிமை (மனவலிமை)
அளவை = அளவு
ஈனுதல் = பெறுதல்

இதன் பொருள்:-

எங்கள் குடியில் குழந்தை இறந்து பிறந்தாலும் (அல்லது பிறந்து இறந்தாலும்), உருவமற்ற தசைப் பிண்டமாகப் பிறந்தாலும் அது ஒரு ஆள் அல்ல என்று (புதைப்பதற்கு முன் மார்பில்) வாளால் வெட்டுவதிலிருந்து தவற மாட்டார்கள். ஆனால், யானோ அக்குடியில் பிறந்தவனாகவிருந்தாலும், (போரில் மார்பில் புண்பட்டு வீரனைப்போல் மரணமடையாமல்) சங்கிலியால் நாய்போலக் கட்டப்பட்டு, என் பசியைப் போக்குவதற்கு, என்னைத் துன்புறுத்திய பகைவர்களிடம் மன வலிமையின்றி உணவு வேண்டுமென்றுக் கேட்டதால் அவர்கள் எனக்கு அளித்த நீர்போன்ற உணவை உண்ணும் நிலையில் உள்ளேனே! இப்படி வாழ்வதற்காகவா இவ்வுலகில் என்னை என் பெற்றோர்கள் பெற்றனர்?

பாடலின் பின்னணி:-

சேரமான் கணைக்கால் இரும்பொறைக்கும் சோழன் செங்கணானுக்கும் பகை மூண்டது. அப்பகையின் காரணத்தால் அவர்களுக்கிடையே போர் தொடங்கியது. இருவரும் பெரும்படையுடன் கழுமலம் என்னுமிடத்தே போர் செய்யத் தொடங்கினர். போர் நிகழ்ந்தவிடம் குணவாயிற் கோட்டமெனத் தமிழ் நாவலர் சரிதையும், வெண்ணிப் பறந்தலை என்று நற்றிணை முன்னுரையும், திருப்போர்ப்புறம் என்று புறநானூற்றுக் குறிப்பும் கூறுவதாக ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள் தம் உரை நூலில் குறிப்பிடுகிறார்3. போரில் சேரன் கணைக்கால் இரும்பொறை தோல்வியுற்றுச் சோழனால் சிறைப்படுத்தப்பட்டான். ஒரு நாள், சேரமான் பசியின் கொடுமை தாங்காமல், சிறைக் காவலர்களிடம் உணவு அளிக்குமாறு கேட்டதாகவும், அவர்கள் காலம் தாழ்த்திச் சிற்றுணவை கொண்டு வந்ததாகவும். அதனால் வெட்கமும் வேதனையுமும் அடைந்த சேரமான் தன்னிரக்கத்தோடு இப்பாடலை எழுதிவைத்துவிட்டு உயிர் துறந்ததாகவும், புறநானூற்றில் இப்பாடலின் அடிக்குறிப்பு கூறுகிறது. ஆனால், வேறு சிலர், சேரமான் கணைக்கால் இரும்பொறை இப்பாடலை பொய்கையார் என்ற புலவருக்கு அனுப்பியதாகவும், அதைப் பெற்ற பொய்கையார் சோழனிடம் சென்று சேரமானைச் சிறையிலிருந்து விடுவிக்கச் செய்ததாகவும் கருதுகின்றனர். இப்பாடலின் பின்னணியைப் பற்றிய பல செய்திகள் ஆய்வுக்குரியன.

குழந்தை இறந்து பிறந்தாலும் (அல்லது பிறந்து இறந்தாலும்), உருவமற்ற தசைப் பிண்டமாகப் பிறந்தாலும், அதை மார்பில் வாளால் வெட்டிப் புதைப்பது மறக்குல மரபாகப் பழந்தமிழ் நாட்டில் இருந்ததாக இப்பாடலில் நாம் காண்கிறோம். குறிப்பாக, அரசர்களிடத்தில் இந்த வழக்கம் இருந்ததாகப் புறநானூற்றுப் பாடல் 93-இல் ஒளவையார் பாடியிருப்பதும் இப்பாடலுடன் ஒப்பு நோக்கத் தக்கது.

சிறப்புக் குறிப்பு:-

இப்பாடலில், மானத்தோடு வாழ்வதே ஒருவற்குப் பெருமை தரக் கூடியது என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது. திருவள்ளுவர், மானத்தோடு வாழ்வதே சிறந்தது என்ற கருத்தை பல குறட்பாக்களில் கூறுகிறார். மானம் என்பதின் பெருமையை உணர்த்துவதற்குத் திருக்குறளில் ஒரு அதிகாரமே (மானம் - அதிகாரம் 97) உள்ளது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on April 10, 2013, 08:11:23 PM
(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-ash3/11653_583793558312226_764969335_n.jpg)

புறநானூறு, 75. (அரச பாரம்!)
பாடியவர்: சோழன் நலங்கிள்ளி.
திணை: பொதுவியல்.
துறை : முதுமொழிக் காஞ்சி.
===============================

மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்
பால்தர வந்த பழவிறல் தாயம்
எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்புஎனக்
குடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச்
சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னே!

மண்டுஅமர்ப் பரிக்கும் மதனுடை நோன்தாள்
விழுமியோன் பெறுகுவன் ஆயின், ஆழ்நீர்
அறுகய மருங்கின் சிறுகோல் வெண்கிடை
என்றூழ் வாடுவறல் போல நன்றும்
நொய்தால் அம்ம தானே; மையற்று

விசும்புஉற ஓங்கிய வெண்குடை
முரசுகெழு வேந்தர் அரசுகெழு திருவே

அருஞ்சொற்பொருள்:-

கூற்றம் = இயமன், நாட்டின் பகுதி
உய்த்தல் = கொண்டுபோதல், அனுபவித்தல்
பால் = உரிமை
பழவிறல் = பழைய வெற்றி
தாயம் = உரிமைச் சொத்து
புரவு = இறை
கூர் = மிகுதி
மண்டுதல் = நெருங்குதல், அதிகமாதல், உக்கிரமாதல்
பரித்தல் = காத்தல், தாங்குதல்
மதன் = வலி, மாட்சிமை, செருக்கு (மனவெழுச்சி)
நோன்மை = வலிமை
தாள் = முயற்சி
விழுமியோன் = சிறந்தவன்
அறுதல் = இல்லாமற்போதல்
கயம் = குளம்
கிடை = நெட்டி
என்றூழ் = கதிரவன், கோடை, வெயில்
வறல் = சுள்ளி
நொய்மை = மென்மை, மிருது, எளிமை
மை = கறை, இருள், குற்றம்

இதன் பொருள்:-

மூத்தோர்=====> மன்னே

மூத்தோர் மூத்தோர்க்குரிய இடத்தை அடைந்ததால் (இறந்ததால்) முறைப்படி வந்த பழைய வெற்றிகளாலுண்டாகிய அரசுரிமயைப் பெற்றதால் பெரிய சிறப்பை அடைந்ததாக எண்ணித் தன் குடிமக்களிடம் (அதிகமாக) வரி கேட்கும் ஆண்மை மிகுதியாக இல்லாத சிறியோன் செயல் சிறந்ததல்ல.

மண்டுஅமர்=====> திருவே

குற்றமற்ற வானில் ஓங்கிய வெண்குடையையும் முரசையும் உடைய அரசாட்சி, துணிந்து போரிடும் மனவெழுச்சியும் வலிய முயற்சியும் உடையவன் பெற்றால், ஆட்சி செய்வது ஆழத்தில் நீர் வற்றிய குளத்தருகில் உள்ள சிறிய சுள்ளி போன்ற வெள்ளிய நெட்டி போல் மிகவும் சுமையற்றதாகும்.

சிறப்புக் குறிப்பு:-

தகுதியற்றவன் ஆட்சிக்கு வந்து மக்களிடம் அதிகமாக வரி கேட்டு அவர்களைத் துன்புறுத்தி ஆட்சி செய்வது அரசனுக்கு மட்டுமல்லாமல் குடிமக்களுக்கும் பெருஞ்சுமையாக இருக்கும். ஆனால், தகுதி உடையவன் ஆட்சிக்கு வந்தால், அவ்வாட்சி அவனுக்கும் அவன் குடிமக்களுக்கும் சுமை இல்லாததாக இருக்கும் என்பது இப்பாடலின் கருத்து.

"வேலொடு நின்றான் இடுவென்றது போலும்
கோலொடு நின்றான் இரவு" - (குறள் - 552)

அரசன் அதிகமாக வரி கேட்டு மக்களைத் துன்புறுத்துவது வேலொடு வந்து ஒருவன் கொள்ளை அடிப்பது போன்றதாகும் என்று திருவள்ளுவர் கூறுவது இங்கு ஒப்பு நோக்கத் தக்கது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on April 10, 2013, 08:15:59 PM
(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-ash3/553972_583797868311795_1465818765_n.jpg)

புறநானூறு, 76. (அதுதான் புதுமை!)
பாடியவர்: இடைக்குன்றூர் கிழார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை: வாகை.
துறை : அரசவாகை.
==================================

ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
புதுவது அன்று; இவ் உலகத்து இயற்கை;
இன்றின் ஊங்கோ கேளலம்; திரள்அரை
மன்ற வேம்பின் மாச்சினை ஒண்தளிர்
நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து,

செறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி
ஒலியல் மாலையொடு பொலியச் சூடிப்
பாடின் தெண்கிணை கறங்கக் காண்தக
நாடுகெழு திருவிற் பசும்பூட் செழியன்
பீடும் செம்மலும் அறியார் கூடிப்

பொருதும் என்று தன்தலை வந்த
புனைகழல் எழுவர் நல்வலம் அடங்க
ஒருதான் ஆகிப் பொருது களத்து அடலே!

அருஞ்சொற்பொருள்:-

அடுதல் = அழித்தல்
தொலைதல் = கெடுதல் (தோற்றல்)
ஊங்கு = முன்னர்
அரை = மரத்தின் அடிப்பக்கம்
மன்றம் = மரத்தடிப் பொதுவிடம்
சினை = மரக்கொம்பு
பவர் = நெருக்கம், அடர்ந்த கொடி
பாய்தல் = பரவுதல்
ஒலியல் = தழைத்தல் , வளைய மாலை
பாடு = ஓசை
கிணை = பறை
கறங்கல் = ஒலித்தல்

இதன் பொருள்:-

ஒருவனை ஒருவன் அழித்தலும் ஒருவனிடம் ஒருவன் தோற்பதும் புதியது அன்று; அது இவ்வுலகத்து இயற்கை. ஊர்ப்பொதுவில் உள்ள திரண்ட அடிப்பாகத்தை உடைய வேப்ப மரத்தின் பெரிய கிளையின் ஓளி பொருந்திய தளிரை நீண்ட உழிஞைக் கொடியுடன் கலந்து நெருக்கமாகத் தொடுத்த தேன் மிக்க மாலையை வளைய மாலையுடன் சிறப்பாகச் சூடி, இனிய போர்ப்பறை ஒலிக்கக் கண்ணுக்கு இனிய பசும்பொன்னாலான அணிகலன்களை அணிந்த நெடுஞ்செழியனின் செல்வம் பொருந்திய நாட்டையும் அவனுடைய பெருமையையும் அறியாமல், கூடிப் போர் செய்வோம் என்று தன்னிடத்தில் வந்த கழலணிந்த எழுவரின் நல்ல வலிமை அடங்குமாறு தான் ஒருவனாக நின்று போர்க்களத்தில் அவர்களை அழித்ததை இதற்கு முன் கேள்விப்பட்டதில்லை.

பாடலின் பின்னணி:-

தலையாலங்கானத்தில் இப்பாண்டிய மன்னன் வென்றதைப் புகழ்ந்து பாடிய புலவர் பலருள்ளும் இடைக்குன்றூர் கிழார் சிறந்தவர் என்பது மிகையாகாது. இவர், இப்போர் நிகழ்ந்த காலத்தில் போரைத் தாமே நேரில் பார்த்தது போல் எழுதியிருப்பதிலிருந்து இவர் போர் நிகழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர் என்று கருதுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on April 10, 2013, 08:19:44 PM
(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-prn1/155728_584379904920258_1679188385_n.jpg)

புறநானூறு, 77. (யார்? அவன் வாழ்க!)
பாடியவர்: இடைக்குன்றூர் கிழார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை: வாகை.
துறை : அரசவாகை.
==================================

கிண்கிணி களைந்த கால் ஓண் கழல்தொட்டுக்
குடுமி களைந்த நுதல்வேம்பின் ஒண்தளிர்
நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து
குறுந்தொடி கழித்தகைச் சாபம் பற்றி,
நெடுந்தேர்க் கொடிஞ்சி பொலிய நின்றோன்

யார்கொல்? வாழ்க அவன் கண்ணி! தார்பூண்டு
தாலி களைந்தன்றும் இலனே; பால்விட்டு
அயினியும் இன்றுஅயின் றனனே; வயின்வயின்
உடன்றுமேல் வந்த வம்ப மள்ளரை
வியந்தன்றும் இழிந்தன்றும் இலனே; அவரை

அழுந்தப்பற்றி அகல்விசும்பு ஆர்ப்புஎழக்
கவிழ்ந்துநிலம் சேர அட்டதை
மகிழ்ந்தன்றும் மலிந்தன்றும்அதனினும் இலனே

அருஞ்சொற்பொருள்:-

கிண்கிணி = சதங்கை (சலங்கை)
தொட்டு = செறிந்து (பொருந்தி)
பவர் = அடர்ந்த கொடி
மிலைதல் = சூடுதல்
சாபம் = வில்
கொடுஞ்சி,கொடிஞ்சி = தேர்முன் உள்ள அலங்காரவுறுப்பு
அயினி = சோறு
அயில்தல் = உண்ணுதல்
வயின் = முறை
உடன்று = வெகுண்டு
வம்பு = புதுமை
மள்ளர் = வீரர்
ஆர்ப்பு = பேரொலி
அட்டதை = அழித்ததை
மலிதல் = செருக்குதல்

இதன் பொருள்:-

கிண்கிணி=====> நின்றோன்

சலங்கை கழற்றப்பட்ட கால்களில் ஒளிபொருந்திய கழல்கள் அணிந்திருக்கிறான். தலைமுடி நெற்றியில் விழாமல் விலக்கிக் குடுமியாகக் கட்டப்பட்டத் தலையில் வேம்பின் ஒளிபொருந்திய தளிரை நீண்ட உழிஞைக் கொடியுடன் நெருக்கமாகத் தொடுத்துச் சூடியுள்ளான். சிறிய வளையல்களைக் கழற்றிய கைகளால் வில்லைப்பற்றிக்கொண்டு நெடுந்தேரின் முன் தளத்தில் அழகாக நிற்கின்றானே

யார்கொல்=====> இலனே

அவன் யார்? அவன் (அணிந்திருக்கும் மாலை) வாழ்க! அவன் மாலை அணிந்திருக்கிறான்; ஆனால் அவன் இன்னும் (சிறுவர்கள் அணியும்) தாலியைக் கழற்றியதாகத் தெரியவில்லையே! பாலுணவு உண்ணுவதை நிறுத்தி இன்றுதான் சோற்றுணவு உண்டவன் போலத் தோன்றுகிறானே! வரிசை வரிசையாக வெகுண்டு வந்த புதுப்புது வீரர்களைக் கண்டு அவன் வியக்கவும் இல்லை; அவர்களை இழிவு படுத்தவும் இல்லை. அவர்களை இறுகப் பிடித்து, அகன்ற ஆகாயத்தில் ஒலி எழுமாறு அவர்களது உடலைக் கவிழ்த்து நிலத்தில் படுமாறு வீழ்த்தி அழித்ததை நினைத்து மகிழவும் இல்லை; தன் செயலை நினைத்துப் பெருமிதமும் அடையவில்லையே!
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on April 10, 2013, 08:22:01 PM
(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash3/554939_584733144884934_1761287986_n.jpg)

புறநானூறு, 78. (அவர் ஊர் சென்று அழித்தவன்!)
பாடியவர்: இடைக்குன்றூர் கிழார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை: வாகை.
துறை : அரசவாகை.
======================================

வணங்குதொடைப் பொலிந்த வலிகெழு நோன்தாள்
அணங்குஅருங் கடுந்திறல் என்ஐ முணங்கு நிமிர்ந்து
அளைச்செறி உழுவை இரைக்குவந் தன்ன
மலைப்பரும் அகலம் மதியார், சிலைத்தெழுந்து
“விழுமியம், பெரியம், யாமே; நம்மிற்

பொருநனும் இளையன்; கொண்டியும் பெரிது” என,
எள்ளி வந்த வம்ப மள்ளர்
புல்லென் கண்ணர் புறத்திற் பெயர,
ஈண்டுஅவர் அடுதலும் ஒல்லான்; ஆண்டுஅவர்
மாண்இழை மகளிர் நாணினர் கழியத்

தந்தை தம்மூர் ஆங்கண்
தெண்கிணை கறங்கச்சென்று, ஆண்டு அட்டனனே.

அருஞ்சொற்பொருள்:-

வணக்கல் = வளைதல்
தொடை = தொடர்ச்சி
வணங்கு தொடை = வீரக் கழல்
பொலிதல் = சிறத்தல், அழகு
நோன்தாள் = வலிய கால்
நோனுதல் = நிலை நிறுத்தல்
அணங்கு = வருத்தம்
கடுத்தல் = மிகுதல்
திறல் = வலி
முணங்குதல் = சோம்பல் முறித்தல்
அளை = குகை
செறிதல் = பொருந்தல்
உழுவை = புலி
மலைத்தல் = பொருதல்
அகலம் = மார்பு
சிலைத்தல் = சினங்கொள்ளுதல், கிளர்தல்
விழுமியோர் = பெரியோர், சிறந்தோர்
கொண்டி = கொள்ளை
வம்பு = புதுமை, நிலையின்மை
மள்ளர் = வீரர் (பகைவர்)
புல் = புன்மை, பார்வை மங்கல்
ஒல்லுதல் = இசைதல்
கழிதல் = சாதல்
தெண் = தெளிந்த
கறங்கல் = ஒலித்தல்

இதன் பொருள்:-

வணங்குதொடை=====> நம்மிற்

வீரக் கழல்கள் அழகு செய்யும், வலிய, நிலை தளராத கால்களையுடைய, வருத்தற்கரிய மிக்க வலிமையுடயவன் என் இறைவன் பாண்டியன் நெடுஞ்செழியன். குகையிலிருந்த புலி இரை தேடுவதற்காக சோம்பல் முறித்து வெளியே வருவது போல் அவன் போருக்கு வருகிறான். அவனுடைய வலிமையை (பொருதற்கரிய அகண்ட மார்பை) மதிக்காமல், “நாங்கள் சிறந்தவர்கள்; பெரியவர்கள். நம்மோடு

பொருநனும்=====> அட்டனனே

போர் புரிய வந்திருப்பவன் இளைஞன்; இவனைப் போரில் வென்றால் நாம் கொள்ளை கொள்ளக் கூடிய பொருட்கள் இங்கு பெருமளவில் உள்ளன” என்று ஏளனத்தோடு கிளர்ந்து எழுந்து அணியணியாக வந்த ஒளியிழந்த கண்களையுடைய பகைவர்கள் புறமுதுகு காட்டி ஓட, அவர்களைத் தலையாலங்கானத்தில் கொல்ல விரும்பாமல், அவர்களைத் தொடர்ந்து சென்று, அவர்களின் மகளிர் நாணம் கொண்டு இறந்து படுமாறு, அவர்களின் சொந்தமான ஊர்களிலேயே தெளிந்த போர்ப்பறையொலிக்க அவர்களைக் கொன்றான்.

பாடலின் பின்னணி:-

முந்திய பாடலில் (புறம் - 77) பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் இளமையையும் அவன் பகைவரை வென்றதையும், அவ்வெற்றியினால் வியப்போ பெருமிதமோ அடையாதவனாக அவன் இருந்ததையும் பாராட்டிய புலவர் இடைக்குன்றூர் கிழார், இப்பாடலில் அவன் பகைவர்களைத் தொடர்ந்து சென்று அவர்களுடைய ஊரில் அவர்களை அழித்ததைப் புகழ்ந்து பாடுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

வம்பு என்னும் சொல் புதுமை அல்லது நிலையின்மை என்று பொருள்படும். போரிட வந்த வீரர்கள் கொல்லப் படுவதால் புதிய வீரர்கள் போருக்கு வருவதைக் குறிக்கும் வகையில் “வம்ப மள்ளர்’ என்ற சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on April 21, 2013, 09:06:09 PM
(http://sphotos-d.ak.fbcdn.net/hphotos-ak-frc1/554679_586274628064119_1960707612_n.jpg)

புறநானூறு, 79. (பகலோ சிறிது!)
பாடியவர்: இடைக்குன்றூர் கிழார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை: வாகை.
துறை : அரசவாகை.
======================================

மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி
மன்ற வேம்பின் ஒண்குழை மலைந்து
தெண்கிணை முன்னர்க் களிற்றின் இயலி
வெம்போர்ச் செழியனும் வந்தனன்; எதிர்ந்த
வம்ப மள்ளரோ பலரே;
எஞ்சுவர் கொல்லோ பகல்தவச் சிறிதே?

அருஞ்சொற்பொருள்:-

மண்ணுதல் = மூழ்குதல்
குழை = தளிர்
மலைதல் = அணிதல்
தெண் = தெளிவு
கிணை = பறை
இயலல் = அசைதல் (நடத்தல்)
வம்பு = புதுமை, நிலையின்மை
மள்ளர் = வீரர் (பகைவர்)
தவ = மிக

இதன் பொருள்:-

தனது பழைய நகரத்தின் வாயிற்புறத்தே உள்ள குளிர்ந்த நீருடைய குளத்தில் மூழ்கி, பொதுவிடத்தில் உள்ள வேப்பமரத்தின் ஒளிபொருந்திய தளிர்களை அணிந்து, தெளிந்த ஒலியுடைய பறை முன்னே ஒலித்துச் செல்ல, அதன் பின்னர் யானையைப்போல் பெருமிதத்தோடு நடந்து கடுமையான போர் செய்யப் பாண்டியன் நெடுஞ்செழியன் போர்க்களத்திற்கு வருகிறான். அவனை எதிர்த்துப் போர் புரிவதற்கு அணியணியாகப் புதுப்புது வீரர்கள் பலர் வருகிறார்களே! பகற்பொழுது மிகச் சிறிதே (எஞ்சி) உள்ளதால், சில பகைவர்கள் தப்பிவிடுவார்களோ?
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on April 21, 2013, 09:09:24 PM
(http://sphotos-c.ak.fbcdn.net/hphotos-ak-ash3/15067_588941541130761_638165973_n.jpg)

புறநானூறு, 80. (காணாய் இதனை!)
பாடியவர்: சாத்தந்தையார்.
பாடப்பட்டோன்: சோழன் போரவைக்கோப் பெருநற்கிள்ளி.
திணை: தும்பை.
துறை : எருமை மறம். படை வீரர் புறமுதுகிட்ட நிலையிலும், தன் பகைப்படையை அஞ்சாது ஒருவன் எதிரிட்டு நிற்றல்.
=======================================

இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்
மைந்துடை மல்லன் மதவலி முருக்கி
ஒருகால் மார்பொதுங் கின்றே; ஒருகால்
வருதார் தாங்கிப் பின்னொதுங் கின்றே;
நல்கினும் நல்கான் ஆயினும், வெல்போர்ப்

போர் அருந் தித்தன் காண்கதில் அம்ம
பசித்துப் பணைமுயலும் யானை போல
இருதலை ஒசிய எற்றிக்
களம்புகும் மல்லற் கடந்துஅடு நிலையே.

அருஞ்சொற்பொருள்:-

இன் = இனிய
கடுங்கள் = அழன்ற கள்
ஆங்கண் = அவ்விடத்து
மைந்து = வலிமை
மதன் = வலி
முருக்குதல் = அழித்தல், முறித்தல்
தார் = உபாயம்
நல்குதல் = விரும்பல்
பணை = மூங்கில்
தலை = இடம்
ஒசித்தல் = முறித்தல்
எற்றுதல் = மோதுதல்

இதன் பொருள்:-

இனிமையும் புளிப்பும் கூடிய (அழன்ற ) கள்ளையுடைய ஆமூரில் வலிமை பொருந்திய மற்போர் வீரன் ஒருவனின் மிக்க வலிமையை அழித்து, ஒரு கால் அவன் மார்பிலும், மற்றொரு கால் அவன் சூழ்ச்சியைத் தடுக்கும் வகையில் அவன் முதுகிலும் வைத்துப் பசியோடு மூங்கிலைத் தின்ன முயலும் யானையைப்போல் தலையும் காலும் ஆகிய இரண்டும் முறிய மோதிப் போரவையில் மற்போர் புரிய வந்த மல்லனை எதிர்த்து நின்று அவனைக் கொன்ற நிலையை வெல்லும் போரினையுடைய பொருதற்கரிய இவன் தந்தையாகிய தித்தன் விரும்பியோ அல்லது விரும்பாமலோ காண்பானாக.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on April 21, 2013, 09:12:05 PM
(http://sphotos-c.ak.fbcdn.net/hphotos-ak-ash4/302015_589398471085068_1606218105_n.jpg)

புறநானூறு, 81. (யார்கொல் அளியர்?)
பாடியவர்: சாத்தந்தையார்.
பாடப்பட்டோன்: சோழன் போரவைக்கோப் பெருநற்கிள்ளி.
திணை: வாகை.
துறை : அரசவாகை.
======================================

ஆர்ப்பு எழு கடலினும் பெரிது; அவன் களிறே
கார்ப்பெயல் உருமின் முழங்கல் ஆனாவே;
யார்கொல் அளியர் தாமே ஆர்நார்ச்
செறியத் தொடுத்த கண்ணிக்
கவிகை மள்ளன் கைப்பட் டோரே?

அருஞ்சொற்பொருள்:-

ஆர்ப்பு = பேரொலி
கார் = கார்காலம்
பெயல் = மழை
உரும் = இடி
அளி = இரக்கம்
ஆர் = ஆத்தி
செறிதல் = நெருங்குதல்
கண்ணி = மாலை
கவிகை = கொடுத்துக் கவிந்த கை
கவிதல் = வளைதல்
மள்ளன் = வீரன்

இதன் பொருள்:-

இவன் படையினரின் ஆரவாரம் ஏழு கடலினும் பெரிது. கார்காலத்து மழையோடு கூடிய இடியினும் அதிகமானது அவனது யானைகள். கோப்பெரு நற்கிள்ளி நாரால் நெருக்கமாகத் தொடுக்கப்பட்ட ஆத்தி மாலையையும் இரவலர்க்கு ஈகை செய்து கவிந்த கையும் உடைய வீரன். அவன் கையில் அகப்பட்டோரில் யார்தான் இரங்கத் தக்கவர்? அவன் யாருக்கும் இரக்கம் காட்டப்போவது இல்லை. அனைவரும் கொல்லப்படுவது உறுதி.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on April 21, 2013, 09:16:57 PM
(http://sphotos-e.ak.fbcdn.net/hphotos-ak-ash4/295748_589400491084866_1021012659_n.jpg)

புறநானூறு, 82. (ஊசி வேகமும் போர் வேகமும்!)
பாடியவர்: சாத்தந்தையார்.
பாடப்பட்டோன்: சோழன் போரவைக்கோப் பெருநற்கிள்ளி.
திணை: வாகை.
துறை : அரசவாகை.
======================================

சாறுதலைக் கொண்டெனப், பெண்ணீற்று
உற்றெனப் பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக்
கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ
ஊர்கொள வந்த பொருநனொடு
ஆர்புனை தெரியல் நெடுந்தகை போரே!

அருஞ்சொற்பொருள்:-

சாறு = விழா; தலைக்கொள்ளுதல் = கிட்டுதல்; ஈற்று = மகப்பேறு; உறுதல் = நேர்தல். 2. ஞான்றஞாயிறு = சாயுங்காலம். 3. நிணத்தல் = முடைதல், கட்டுதல்; இழிசினன் = புலைமகன். 4. போழ் = தோல் வார்; தூண்டு = முடுக்கு. மாது - அசைச் சொல். 6. ஆர் = ஆத்தி; தெரியல் = மாலை; நெடுந்தகை = பெரியோன்.

இதன் பொருள்:-

ஊரிலே விழா, அதற்குப் போகவேண்டும். மனைவிக்கோ குழந்தை பிறக்கும் நேரம். வீட்டிற்குச் சென்று அவளுக்குக் கைமாறு செய்தல் வேண்டும். மழை பெய்கிறது; கதிரவன் மறையும் சாயுங்காலமும் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கட்டிலைப் பின்னிக்கொண்டிருக்கும் தொழிலாளியின் கையிலுள்ள ஊசி எவ்வளவு வேகமாக (கட்டில் பின்னும்) தோல் வாரைச் செலுத்துமோ, அவ்வளவு விரைவாக, ஆத்தி மாலை சூடிய பெரியோன் கோப்பெரு நற்கிள்ளி ஊரைத் தன்வசமாக்கிக்கொள்ள வந்த மற்போர் வீரனுடன் போர் நடத்தினான்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on May 08, 2013, 09:07:12 PM
(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-ash3/166054_594527213905527_1183327973_n.jpg)

புறநானூறு, 83. (இருபாற்பட்ட ஊர்!)
பாடியவர்: பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார்.
பாடப்பட்டோன்: சோழன் போரவைக்கோப் பெருநற்கிள்ளி.
திணை: கைக்கிளை. ஒருதலைக் காதலைப்பற்றிய பாடல்கள் கைக்கிளை என்ற திணையில் அடங்கும்.
துறை : பழிச்சுதல். தலைவனைப் போற்றும் பாடல்கள் பழிச்சுதல் என்னும் துறையைச் சாரும்.
======================================

அடிபுனை தொடுகழல், மையணல் காளைக்குஎன்
தொடிகழித் திடுதல்யான் யாய்அஞ் சுவலே;
அடுதோள் முயங்கல் அவைநா ணுவலே;
என்போற் பெருவிதுப் புறுக; என்றும்
ஒருபால் படாஅது ஆகி
இருபாற் பட்ட இம் மையல் ஊரே!

அருஞ்சொற்பொருள்:-

புனைதல் = அணிதல்
தொடுதல் = அணிதல்
மை = கருநிறம்
அணல் = தாடி
தொடி = கைவளை
கழித்தல் = விலக்கல், நேக்கல்
யாய் = தாய்
அடுதல் = வெல்லுதல், வருத்துதல், போரிடுதல்
முயங்கல் = தழுவல்
விதுப்பு = நடுக்கம்
மையல் = மயக்கம்

இதன் பொருள்:-

கழல் அணிந்த கால்களையும் கருநிறத் தாடியையும் உடைய காளைபோன்ற நற்கிள்ளிமேல் நான் கொண்ட காதலால் என் கைவளைகள் கழல்கின்றன. ஆகவே, நான் காதல்கொண்ட செய்தி என் தாய்க்குத் தெரிந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன். அவன் வலிய தோள்களைத் தழுவவேண்டுமென்று என்ற எண்ணம் தோன்றுகிறது. ஆனால், அவையில் பலரும் இருப்பதால் அவனைத் தழுவுவதற்கு நாணுகிறேன். நான் என் காதலை வெளிப்படுத்தாமலேயே என் தாய்க்கு என் காதல் தெரிந்துவிடுமோ என்ற அச்சம் ஒரு பக்கம்; மற்றொரு பக்கம், நான் காதலை வெளிப்படுத்தினால் ஊர் மக்களுக்குத் தெரிந்துவிடுமோ என்ற நாணம். அச்சத்திற்கும் நாணத்திற்குமிடையே சிக்கிக்கொண்டு நான் நடுக்கமடைவதுபோல், நற்கிள்ளியை ஆதரிப்பதா அல்லது மல்லனை ஆதரிப்பதா என்று புரியாமல் மயங்கும் இவ்வூர் ஒரு கட்சியாக இல்லாமல் இரு கட்சியாய் இருந்து என்றும் என்போல் பெரிய நடுக்கம் உறுக.

பாடலின் பின்னணி:-

இப்பாடலின் பின்னனியைப் புரிந்து கொள்வதற்கு, இப்பாடலோடு அடுத்து வரும் இரண்டு பாடல்களையும் (பாடல்கள் 84, 85) ஒருங்கிணைத்துப் பார்க்க வேண்டும். சோழன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளிக்கும் ஓரு மல்லனுக்கும் இடையே ஆமூர் என்னும் ஊரில் மற்போர் நடைபெற்றது. நற்கிள்ளி ஆமூரைச் சார்ந்தவன் அல்லன். ஆனால் மல்லனோ ஆமூரைச் சார்ந்தவன். இருவருக்கும் இடையே நிகழ்ந்த மற்போரைப் பார்த்த மக்களில் ஒரு சாரார் நற்கிள்ளிக்கும் மற்றொரு சாரார் மல்லனுக்கும் ஆதரவு அளித்தனர். நற்கிள்ளி மல்லனை எதிர்த்து மற்போர் புரிந்த ஆற்றலையும், அவன் வலிமையும், அழகையும் கண்டு அவன் மீது நக்கண்ணையார் காதல் கொண்டார். இப்பாடலில், அவர் தன் காதலை மறைக்கவும் முடியாமல் வெளியில் காட்டிக்கொள்ளவும் முடியாமல் கலக்கமுற்று இருக்கும் நிலையைக் குறிப்பிடுகிறார். தான் என்ன செய்வது என்று தெரியாமல் இருவகையான எண்ணங்களோடு போராடுவதைப் போலவே ஆமுர் மக்களும் யாரை ஆதரிப்பது என்று முடிவு செய்ய முடியாமல் கலங்கட்டும் என்ற கருத்தை இப்பாடலில் நக்கண்ணையார் கூறுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on May 08, 2013, 09:10:28 PM
(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-frc1/417937_594529397238642_1938287225_n.jpg)

புறநானூறு, 84. (புற்கையும் பெருந்தோளும்!)
பாடியவர்: பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார்.
பாடப்பட்டோன்: சோழன் போரவைக்கோப் பெருநற்கிள்ளி.
திணை: கைக்கிளை.
துறை : பழிச்சுதல்
======================================

என்ஐ, புற்கை யுண்டும் பெருந்தோ ளன்னே;
யாமே, புறஞ்சிறை இருந்தும் பொன்னன் னம்மே
போரெதிர்ந்து என்ஐ போர்க்களம் புகினே,
கல்லென் பேரூர் விழவுடை ஆங்கண்
ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு
உமணர் வெரூஉம் துறையன் னன்னே!

அருஞ்சொற்பொருள்:-

ஐ = தலைவன்
புற்கை = கஞ்சி, கூழ்
புறஞ்சிறை = அருகில், வேலிப்புறம்
ஏம் = மயக்கம், செருக்கு
உமணர் = உப்பு விற்பவர்
வெருவுதல் = அஞ்சுதல்
துறை = வழி.

இதன் பொருள்:-

என் தலைவன், கூழ் போன்ற உணவை உண்டும் பெரிய தோளை உடையனாக உள்ளான். நான் அவன் இருக்கும் இடத்திற்கு அருகிலிருந்தும் (அவனோடு கூட முடியாமையால்) பசலையால் பொன்னிறமானேன். போரை ஏற்று என் தலைவன் போர்க்களத்தில் புகுந்தால், ஒலிமிக்க விழாக்கோலம் கொண்ட இவ்வூரில், செருக்குடன் போருக்கு வரும் வீரர்களின் நிலைமை, உப்பு விற்கப் போகும் உமணர்கள் தாங்கள் செல்லும் கடினமான வழியை நினைத்து அஞ்சுவார்களே, அதே நிலைமைதான்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on May 08, 2013, 09:14:06 PM
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-prn1/935432_594537857237796_99298043_n.png)

புறநானூறு, 85. (யான் கண்டனன்!)
பாடியவர்: பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார்.
பாடப்பட்டோன்: சோழன் போரவைக்கோப் பெருநற்கிள்ளி.
திணை: கைக்கிளை.
துறை : பழிச்சுதல்
======================================

என்ஐக்கு ஊர் இஃது அன்மை யானும்
என்ஐக்கு நாடு இஃது அன்மை யானும்
"ஆடுஆடு" என்ப, ஒருசா ரோரே;
"ஆடன்று" என்ப, ஒருசா ரோரே;
நல்ல பல்லோர் இருநன் மொழியே;

அஞ்சிலம்பு ஒலிப்ப ஓடி, எம்இல்
முழா அரைப் போந்தை பொருந்தி நின்று
யான்கண் டனன் அவன் ஆடா குதலே.

அருஞ்சொற்பொருள்:-

அம் = அழகு
முழா = முரசு
அரை = அடிமரம்
போந்தை = பனை
ஆடு = வெற்றி

இதன் பொருள்:-

என்ஐக்கு=====> மொழியே

என் தலைவன் இவ்வூரைச் சார்ந்தவன் அல்லன்; இந்த நாட்டைச் சார்ந்தவனும் அல்லன். ஆகவே, என் தலைவனுக்கும் மல்லனுக்கும் இடையே நடைபெறும் மற்போரைப் பார்ப்பவர்களில், ஒரு சாரார் நற்கிள்ளிக்கு “வெற்றி, வெற்றி” என்பர். மற்றொரு சாரார் அவனுக்கு வெற்றி இல்லை என்பர். நல்லவர்களாகிய பலரும் கூறும் இருவகையான கூற்றுக்களும் நன்றாகவே இருந்தன. (ஆனால், என்னால் அங்கே இருக்க முடியவில்லை.)

அஞ்சிலம்பு=====> ஆடா குதலே

நான் என் அழகிய சிலம்புகள் ஒலிக்க ஓடி வந்து என் வீட்டில் முரசு போல் அடிமரம் பருத்த பனைமரத்தில் சாய்ந்து நின்றவாறு அப்போரில் என் தலைவன் வெற்றி பெறுவதைக் கண்டேன்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on May 08, 2013, 09:17:17 PM
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash3/178961_505606036130979_1087337257_n.jpg)

புறநானூறு, 86.
பாடியவர்: காவற் பெண்டு காதற்பெண்டு எனவும் பாடம்.
பாடப்பட்டோன்:
திணை: வாகை
துறை: ஏறாண் முல்லை
=================================

"சிற்றில் நற்றூண் பற்றி, நின்மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன்; ஓரும்
புலி சேர்ந்து போகிய கல்அளை போல,
ஈன்ற வயிறோ இதுவே;
தோன்றுவன் மாதோ, போர்க்களத் தானே"

அருஞ்சொற்பொருள்:-

கல் = மலை
அளை = குகை
ஓரும் மற்றும் மாதோ என்பவை அசைச் சொற்கள்

இதன் பொருள் :-

சிறிய வீட்டின் நல்ல தூணைப் பிடித்துக்கொண்டு, “உன் மகன் எங்கே உள்ளான்” என்று கேட்கிறாய். என் மகன் எங்கே உள்ளான் என்பதை நான் அறியேன். புலி தங்கிச் சென்ற குகையைப் போல் அவனைப் பெற்ற வயிறு இது. அவன் போர்க்களத்தில் தோன்றுவான். அங்கு போய்ப் பார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on May 08, 2013, 09:19:50 PM
(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-ash4/430835_525913597433556_309091273_n.jpg)

புறநானூறு, 87.(எம்முளும் உளன்!)
பாடியவர்: ஔவையார்.
பாடப்பட்டோன் :அதியமான் நெடுமானஞ்சி.
திணை : தும்பை
துறை : தானை மறம்.
===============================

"களம் புகல் ஓம்புமின், தெவ்விர் போர் எதிர்ந்து
எம்முளும் உளன் ஒரு பொருநன் வைகல்
எண் தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால் அன்னோனே"

இதன் பொருள்:-

போர்களம் புகாதீர் பகைவர்களே. எங்களுள் ஒரு பெருவீரன் இருக்கிறான். அவன் எப்படிப்பட்டவன் தெரியுமா? ஒரு நாளைக்கு எட்டு தேர்களை செய்யவல்ல தச்சன், ஒரு மாதம் உழைத்து தேர் சக்கரம் ஒன்றை செய்தால் அது எத்தனை வலியதாய் இருக்குமோ, அத்தனை வலியவன் அவன்.

குறிப்பு : படைச்செருக்கு என்னும் அதிகாரத்தில் வள்ளுவரும் இதைச் சுட்டிச் செல்கிறார்.

என்னை முன் நில்லன்மின் தெவ்விர் பலர்என்னை
முன்நின்று கல்நின்றவர். (குறள் -771)

விளக்கம்.

பகைவர்களே, எம் தலைவனை எதிர்த்து அவன் முன்னே நிற்காதீர்கள். அவனை எதிர்த்து நின்றவர்களெல்லோரும் இப்போது நடுகல்லாக நிற்கிறார்கள் என்பதே.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on May 08, 2013, 09:23:45 PM
(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-ash4/302971_596566127034969_474569951_n.jpg)

புறநானூறு, 88. (எவருஞ் சொல்லாதீர்!)
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: தும்பை.
துறை : தானை மறம். இருபடைகளும் வலிமையுடயவை என்பதால் அழிவு மிகுதியாகும் என்பதைக் கருதிப் போரைத் தவிர்க்கலாம் என்ற கருத்தைக் கூறுவது.
=======================================

யாவிர் ஆயினும், கூழை தார்கொண்டு
யாம்பொருதும் என்றல் ஓம்புமின்; ஓங்குதிறல்
ஒளிறுஇலங்கு நெடுவேல் மழவர் பெருமகன்,
கதிர்விடு நுண்பூண் அம்பகட்டு மார்பின்
விழவுமேம் பட்ட நற்போர்
முழவுத்தோள் என்ஐயைக் காணா ஊங்கே.

அருஞ்சொற்பொருள்:-

கூழை = பிற்படை
தார் = முற்படை
ஓம்புதல் = தவிர்தல்
திறல் = வலி
இலங்கல் = விளங்கல்
மழவன் = வீரன்
பெருமகன் = அரசன்
அம் = அழகு
பகடு = பெரிய, அகன்ற
காணா ஊங்கு = காண்பதற்கு முன்\

இதன் பொருள் :-

அதியமான் ஓங்கிய வலிமையும் ஒளிவிட்டு விளங்கும் நீண்ட வேலையுமுடைய வீரர்களுக்குத் தலைவன். சுடர்விடும் நுண்ணிய வேலைப்பாடுகளுடைய அணிகலன்களை அணிந்த அழகிய அகன்ற மார்பும் போர்க்கள வெற்றி விழாக்களில் மேம்பட்ட நல்ல போர்முரசு போன்ற தோளையுமுடைய என் அரசனாகிய அவனைக் காண்பதற்கு முன்னே நீங்கள் எவராய் இருப்பினும் முற்படையும் பிற்படையும் கொண்டு யாம் போரிடுவோம் என்று கூறுவதைத் தவிருங்கள்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on June 13, 2013, 07:40:24 PM
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-prn1/946596_599772243381024_2049654937_n.jpg)

புறநானூறு, 89. (என்னையும் உளனே!)
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: தும்பை.
துறை : தானை மறம்.
=====================================

இழை யணிப் பொலிந்த ஏந்துகோட்டு அல்குல்
மடவரல் உண்கண் வாள்நுதல் விறலி!
பொருநரும் உளரோ, நும் அகன்றலை நாட்டு? என,
வினவல் ஆனாப் பொருபடை வேந்தே!
எறிகோல் அஞ்சா அரவின் அன்ன

சிறுவன் மள்ளரும் உளரே; அதாஅன்று
பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை
வளி பொரு தெண்கண் கேட்பின்,
அது போர்! என்னும் என்ஐயும் உளனே!

அருஞ்சொற்பொருள்:-

இழைத்தல் = செய்தல், பதித்துச் செய்தல்
ஏந்து கோடு = உயர்ந்த பக்கம்
மடவரல் = இளம்பெண்
உண்கண் = மை தீட்டிய கண்
வாள் = ஒளி
நுதல் = நெற்றி
விறலி = உள்ளக் குறிப்பு புறத்தில் வெளிப்பட ஆடுபவள் (நாட்டியம் ஆடும் பெண்)
தலை = இடம்
வன் = வலிய
விசி = கட்டு
தண்ணுமை = ஒருவகைப் பறை
வளி = காற்று
தெண் = தெளிந்த
கண் = முரசு முதலியவற்றில் அடிக்கும் இடம்.

இதன் பொருள் :-

“மணிகள் கோத்த அணிகள் விளங்கும் (உயர்ந்த பக்கங்களையுடைய) இடையும், மை தீட்டிய கண்களும் ஓளிபொருந்திய நெற்றியும் கொண்ட நாட்டியம் ஆடும் வெகுளிப் பெண்ணே! அகன்ற இடங்களுடைய உங்கள் நாட்டில் போரிடும் வீரர்களும் உளரோ?” என்று என்னைக் கேட்ட போர்ப்படையுடன் கூடிய அரசே! எங்கள் நாட்டில், அடிக்கும் கோலுக்கு அஞ்சாத பாம்பு போல் வெகுண்டு எழும் இளமையும் வலிமையுமுடைய வீரர்கள் உள்ளனர். அவர்கள் மட்டுமல்லாமல், ஊர்ப்பொதுவில் கட்டித் தொங்கும் தண்ணுமைப் பறைமேல் காற்று மோதுவதால் உண்டாகும் ஒலி கேட்டு, “அது போர்ப்பறையின் முழக்கம்!” என்று பொங்கி எழும் என் அரசனும் உளன்.

பாடலின் பின்னணி:-

ஒருகால், அதியமானின் பகைவருள் ஒருவன் அவ்வையாரைப் பார்த்து, “ உங்கள் நாட்டில் போர் வீரர்கள் உளரோ” என்று கேட்டதற்கு, அவ்வையார், “எங்கள் நாட்டில் எறியும் கோலுக்கு அஞ்சாமல் சீறும் பாம்பைப் போல் வெகுண்டு எழும் வீரரும், போர்ப்பறைமேல் காற்று மோதினால் அந்த ஒலி கேட்டு போர் வந்துவிட்டது என்று பொங்கி எழும் அரசனும் உளன்” என்று பதிலளிப்பதாக இப்பாடல் அமைந்துள்ளது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on June 13, 2013, 07:42:28 PM
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-frc1/480442_599775700047345_1191691522_n.jpg)

புறநானூறு, 90. (பொருநரும் உளரோ, நீ களம் புகினே?)
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: தும்பை.
துறை : தானை மறம்.
=====================================

உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள்
அடைமல்கு குளவியொடு கமழும் சாரல்
மறப்புலி உடலின், மான்கணம் உளவோ?
மருளின விசும்பின் மாதிரத்து ஈண்டிய
இருளும் உண்டோ, ஞாயிறு சினவின்?

அச்சொடு தாக்கிப் பாருற்று இயங்கிய
பண்டச் சாகாட்டு ஆழ்ச்சி சொலிய,
அரிமணல் ஞெமரக், கல்பக நடக்கும்
பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ?
எழுமரம் கடுக்கும் தாள்தோய் தடக்கை

வழுவில் வன்கை, மழவர் பெரும!
இருநில மண்கொண்டு சிலைக்கும்
பொருநரும் உளரோ, நீகளம் புகினே?

அருஞ்சொற்பொருள்:-

உடைதல் = தகர்தல், பிளத்தல்
வளை = வளையல்
கடுப்பு = ஒப்பு
அடை = இலை
மல்குதல் = நிறைதல், செழித்தல்
குளவி = காட்டு மல்லிகை
சாரல் = மலைப்பக்கம்
உடல்தல் = கோபங்கொள்ளுதல், பகைத்தல்
கணம் = கூட்டம்
மருளல் = மயங்குதல்
விசும்பு = ஆகாயம்
மாதிரம் = திசை
ஈண்டுதல் = நிறைதல் (சூழ்தல்)
பார் = நிலம்
இயங்கிய = புதைந்த
சாகாடு = வண்டி
ஆழ்ச்சி = தாழ்ச்சி, பதிவு, அழுந்துகை
சொலிய = நீங்க, பெயர
ஞெமிர்தல் = பரத்தல்
பக = பிரிய
பகடு = காளைமாடு
எழுமரம் = கணையமரம்
வழு = தவறு
மழவர் = வீரர்
இரு = பெரிய
சிலைத்தல் = ஒலித்தல், சினங்கொள்ளுதல்.

இதன் பொருள் :-

உடைந்த வளையல்களைப் போல் மலர்ந்த வெண்காந்தளும், இலைகள் நிறைந்த காட்டு மல்லிகையும் மணக்கும் மலைச்சரிவில் வலிய புலி தாக்கின் மான் கூட்டம் அங்கே எதிர்த்து நிற்குமோ? கதிரவன் சினந்தெழுந்தால், மயங்கிய ஆகாயத்திலும் மற்ற திசைகளிலும் இருள் சூழ்ந்து இருக்குமோ? பாரம் மிகுதியால் பண்டங்களைச் சுமந்து செல்லும் வண்டியின் அச்சு தரையில் இடித்துச் செல்லவும், நீரலைகளால் கொழிக்கப்பட்ட மணல் பரக்கவும் கல் பிளக்கவும் பெருமிதத்தோடு வண்டியை இழுத்துச் செல்ல வல்ல காளைக்குப் போக முடியாத வழியும் உண்டோ? முழந்தாள் வரை நீண்ட, கணையமரம் போன்ற, குற்றமற்ற வலிய கைகளையுடைய மழவர் தலைவனே! நீ போர்க்களம் புகுந்தால் உன் பெரிய நிலத்தை கவர்ந்து கொண்டு ஆரவாரம் செய்யக்கூடிய வீரரும் உளரோ?

பாடலின் பின்னணி:-

ஒரு சமயம், பகைவர்கள் தன்னோடு போர் புரியக் கருதுகின்றனர் என்று அதியமானுக்குத் தெரிய வந்தது. போரின் விளைவுகளை அவன் சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுது, அவ்வையார், “ புலி சினந்தால் மான்கள் உயிர் தப்ப முடியுமா? ஞாயிறு சினந்தால் இருளும் உண்டோ? மிகுந்த பாரத்தைப் பெருமிதத்தோடு இழுத்துச் செல்லும் காளை போக முடியாத வழியும் உண்டோ? அது போல், நீ களம் புகுந்தால் உன்னை எதிர்த்துப் போரிடக் கூடிய பகைவரும் உளரோ?” என்று கூறி அதியமானை ஊக்குவிக்கிறார்.

சிறப்புக் குறிப்பு:-

“வளையுடந் தன்ன வள்ளிதழ்க் காந்தள்” என்று வேறு நூல்களிலும் (மலைபடுகடாம், 519)குறிப்பிடப்படுவதால், சங்க காலத்தில் வளையல்கள் சங்கு அல்லது முத்து போன்ற வெண்ணிறமான பொருட்களால் செய்யப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on June 13, 2013, 07:52:00 PM
(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-prn1/936198_600261959998719_1648400286_n.jpg)

புறநானூறு, 91. (எமக்கு ஈத்தனையே!)
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பாடாண் திணை.
துறை : வாழ்த்தியல்.
=====================================

வலம்படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார்
களம்படக் கடந்த கழல்தொடித் தடக்கை
ஆர்கலி நறவின் அதியர் கோமான்
போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி
பால் புரை பிறைநுதல் பொலிந்த சென்னி

நீல மணிமிடற்று ஒருவன் போல
மன்னுக, பெரும! நீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது,
ஆதல் நின்னகத்து அடக்கிச்,
சாதல் நீங்க, எமக்கு ஈத்தனையே.

அருஞ்சொற்பொருள்:-

வலம் = வெற்றி
வாய் = மெய்ம்மை, கூர்மை
ஒன்னார் = பகைவர்
தொடி = வளையல்
கடத்தல் = வெல்லுதல்
தடக்கை = பெரிய கை
ஆர்கலி = மிகுந்த ஒலி, ஆரவாரம்
நறவு = கள்
பொலம் = பொன்
தார் = மாலை
புரை = போன்ற
சென்னி = தலை
நுதல்= நெற்றி
மிடறு = கழுத்து
ஒருவன் = கடவுள்
விடர் = மலைப்பிளப்பு, குகை
மிசை = உயர்ச்சி
குறியாது = கருதாது
ஆதல் = ஆவது.

இதன் பொருள் :-

வெற்றி மிகுந்த, குறி தவறாத வாளை எடுத்துப் பகைவர்களைப் போர்க்களத்தில் வென்ற கழலணிந்த காலும், வளையணிந்த பெரிய கையையும், அழன்ற கள்ளையும் உடைய அதியர் தலைவனே! பகைவர்களைப் போரில் வெல்வதால் பெறும் செல்வத்தையும் பொன் மாலையையும் உடைய அஞ்சியே! பழைய பெரிய மலைப்பிளவின்கண் அரிய உயரத்தில் இருந்த சிறிய இலையையுடைய நெல்லியின் இனிய கனியினால் விளையும் (சிறந்த) பயனைக் கூறாது தன்னுள் அடக்கிச் சாதல் நீங்க எனக்கு அளித்தாயே! நீ, பால் போன்ற பிறை நெற்றியிலே இருந்து அழகு செய்யும் தலையையும், நீலமணி போன்ற கறையுள்ள கழுத்தையும் உடைய கடவுள் (சிவன்) போல் நிலைபெற்று வாழ்க!
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on June 13, 2013, 07:53:52 PM
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash3/936935_600269196664662_220949326_n.jpg)

புறநானூறு, 92. (மழலையும் பெருமையும்!)
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பாடாண் திணை.
துறை : இயன் மொழி.
=====================================

யாழொடும் கொள்ளா; பொழுதொடும் புணரா;
பொருள்அறி வாரா; ஆயினும், தந்தையர்க்கு
அருள்வந் தனவால் புதல்வர்தம் மழலை;
என்வாய்ச் சொல்லும் அன்ன; ஒன்னார்
கடிமதில் அரண்பல கடந்த
நெடுமான் அஞ்சி! நீஅருளல் மாறே.

அருஞ்சொற்பொருள்:-

கொள்ளுதல் = ஏற்றுக் கொள்ளுதல்
புணர்தல் = பொருந்துதல்
அறிவரா = அறிய வாரா
கடி = காவல்
கடத்தல் = வெல்லுதல்
மாறு = ஆல்

இதன் பொருள் :-

குழந்தைகளின் மழலை யாழிசையோடும் ஒத்து வராது; தாளத்தோடும் பொருந்தாது; பொருள் அறிவதற்கும் முடியாது. அது அவ்வாறு இருப்பினும், தந்தையர்க்கு அம்மழலைச் சொற்கள் குழந்தைகள் மீது அன்பை வரவழைக்கின்றன. பகைவர்களுடைய காவல் மதில்களையும் பல அரண்களையும் வென்ற அதியமான் நெடுமான் அஞ்சியே! என் சொற்களைக் கேட்டு நீ என்னிடம் அன்பு காட்டுவதால், என் சொற்களும் குழந்தைகளின் மழலைச் சொற்கள் போன்றனவே.

பாடலின் பின்னணி:-

அதியமான் அவ்வையார்க்கு அரிய நெல்லிக்கனியை அளித்ததால், அவர் மனம் மகிழ்ந்து, நாக்குழறிப் பலவாறாக அவனைப் புகழ்கிறார். அவற்றை அதியமான் அன்போடு கேட்கிறான். அந்நிலையில், அவன் அன்பை வியந்து அவ்வையார் இப்பாடலை இயற்றுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

இப்பாடலில் அவ்வையார் மழலைச் சொற்களின் சிறப்பைக் கூறுவதைப்போல் திருவள்ளுவர்,

குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர். (குறள் - 66)

குறள் விளக்கம்:-

தன் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது, யாழின் இசை இனியது என்று கூறுவர்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on June 13, 2013, 07:57:18 PM
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash4/400695_600541403304108_835004182_n.jpg)

புறநானூறு, 93. (பெருந்தகை புண்பட்டாய்!)
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: வாகை.
துறை : அரச வாகை.
=====================================

திண்பிணி முரசம் இழுமென முழங்கச்
சென்றுஅமர் கடத்தல் யாவது? வந்தோர்
தார்தாங் குதலும் ஆற்றார் வெடிபட்டு
ஓடல் மரீஇய பீடுஇல் மன்னர்
நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக்

காதல் மறந்துஅவர் தீதுமருங் கறுமார்
அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்
திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி
மறம்கந்து ஆக நல்லமர் வீழ்ந்த
நீள்கழல் மறவர் செல்வுழிச் செல்கஎன

வாள்போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ
வரிஞிமிறு ஆர்க்கும் வாய்புகு கடாஅத்து
அண்ணல் யானை அடுகளத் தொழிய
அருஞ்சமம் ததைய நூறிநீ
பெருந் தகை விழுப்புண் பட்ட மாறே.

அருஞ்சொற்பொருள்:-

திண்மை = வலிமை
பிணி = கட்டு
இழும் - ஒலிக் குறிப்பு
அமர் = போர்
கடத்தல் = வெல்லுதல்
யாவது = எவ்வாறு
தார் = முற்படை
வெடிபடுதல் = சிதறுதல்
மரீஇய = மருவிய, தழுவிய
பீடு = பெருமை, வலிமை
விளித்தல் = இறத்தல்
யாக்கை = உடல்
தழீஇய = தழுவிய
மருங்கு = பக்கம், விலாப்பக்கம்
புரிதல் = விரும்பல்
திறம் = செவ்வை (செப்பம்), மேன்மை
கந்து = பற்றுக்கோடு
நீள் = உயரம், ஒளி
உழி = இடம்
போழ்தல் = பிளத்தல்
உய்ந்தனர் = தப்பினர்
மாதோ - அசைச் சொல்
ஞிமிறு = வண்டு, தேனீ
ஆர்க்கும் = ஒலிக்கும்
கடாம் = யானையின் மத நீர்
அடுகளம் = போர்க்களம்
சமம் = போர்
ததைதல் = நெருங்கல், சிதைதல்
நூறுதல் = வெட்டுதல், அழித்தல்
மாறு = ஆல்

இதன் பொருள் :-

திண்பிணி=====> தழீஇக்

பெருந்தகையே! உன்னை எதிர்த்து வந்த பெருமை இல்லாத மன்னர்கள் உன்னுடைய முற்படையையே தாங்கமுடியாமல் சிதறி ஓடினர். அம்மன்னர்கள் (அவ்வாறு ஓடியதால்), நோயுற்று இறந்தவர்களின் உடலைத் தழுவி,

காதல்=====> செல்கஎன

அவர்கள் மேல் உள்ள ஆசையை மறந்து, அவர்கள் போரில் வாளால் இறக்காத குற்றத்தை (இழிவை) அவர்களிடத்தினின்று நீக்க வேண்டி, நான்கு வேதங்களையும் நன்கு கற்றறிந்து அறத்தை விரும்பும் பார்ப்பனர், செம்மையான, விரும்பத்தக்க பசுமை நிறமுள்ள புல்லைப் (தருப்பையைப்) பரப்பி, அதில் அவர்களின் உடலைக் கிடத்தி, “தமது ஆண்மையில் பற்றுடன் போரில் மாய்ந்த வீரக்கழலணிந்த வீரர்கள் செல்லும் இடத்திற்குச் செல்க” என

வாள்போழ்ந்து=====> பட்ட மாறே

வாளால் பிளந்து அடக்கம் செய்யப்படும் இழிவிலிருந்து தப்பினர். வரிகளை உடைய வண்டுகள் ஒலித்து வாயில் புகுகின்ற மதம் கொண்ட யானைகளைப் போர்க்களத்தில் நெருங்கி அழித்து விழுப்புண் பட்டதால், இனி வலிய கட்டமைந்த முரசம் “இழும்” என்னும் ஒலியுடன் முழங்குமாறு போரில் வெல்வது எப்படி? பகைவர்கள் ஓடியதால் இனி, போர்கள் நிகழ வாய்ப்பில்லை; அதனால் போரில் வெல்லும் வாய்ப்பும் இல்லை என்பது பொருள்.

பாடலின் பின்னணி:-

ஒரு சமயம் நடைபெற்ற போரில், அதியமான் பகைவர்கள் அனைவரையும் வென்றான். வெற்றி பெற்றாலும், அவன் போரில் பகைவர்களின் படைக்கருவிகளால் தாக்கப்பட்டு மார்பிலும் முகத்திலும் புண்பட்டான். போரில் வெற்றி வாகை சூடி விழுப்புண்ணோடு இருக்கும் அதியமானைக் கண்ட அவ்வையார் பெருமகிழ்ச்சி அடைந்தார். இப்பாடலில், “பெரும, உன்னால் போரில் தோற்கடிக்கப்பட்டவர்கள் சிதறியோடினார்கள். அவர்கள் அவ்வாறு தோற்று ஓடியதால், விழுப்புண் படாமல் நோயுற்று வாளால் வெட்டப்பட்டு அடக்கம் செய்யப்படும் இழிவிலிருந்து தப்பினர். மற்றும், பகைவர்கள் ஓடியதால், இனி போர்கள் நடைபெற வாய்ப்பில்லை; ஆகவே, இனி நீ போர்களில் வெற்றி பெறுவது எப்படி சாத்தியமாகும்?” என்று கூறுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on June 13, 2013, 08:01:24 PM
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-prn1/936921_601406983217550_1584637342_n.jpg)

புறநானூறு, 94. (சிறுபிள்ளை பெருங்களிறு!)
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: வாகை.
துறை : அரச வாகை.
=====================================

ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்,
நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
இனியை பெரும எமக்கே; மற்றதன்
துன்னருங் கடாஅம் போல
இன்னாய் பெருமநின் ஒன்னா தோர்க்கே.

அருஞ்சொற்பொருள்:-

குறு மாக்கள் = சிறுபிள்ளைகள்
கோடு = கொம்பு (தந்தம்)
கழாஅல் = கழுவுதல்
படிதல் = அமருதல்
துன்னுதல் = நெருங்குதல்
கடாம் = யானையின் மத நீர்
இன்னாய் = இனிமை இல்லாதவன்
ஒன்னாதோர் = பகைவர்

இதன் பொருள் :-

ஊரில் உள்ள சிறுபிள்ளைகள் தனது வெண்மையான தந்தத்தைக் கழுவுவதற்கு நீர்த்துறையில் (பொறுமையாக) அமர்ந்து இருக்கும் பெரிய யானையைப் போல நீ எமக்கு இனிமையானவன். ஆனால், உன் பகைவர்க்கு, நீ நெருங்குதற்கு அரிய மதம் கொண்ட யானையைப் போல பொல்லாதவன்.

பாடலின் பின்னணி:-

அரசவையிலிருந்தாலும் போர்க்களத்திலிருந்தாலும் அவ்வையார்க்கும் அவர் போன்ற புலவர்களிடத்தும் அதியமான் இன்முகமும் இன்சொல்லும் உடையவனாக இருப்பதை வியந்து ” பெரும! நீ எமக்கு இனியவன்; ஆனால் உன் பகைவர்க்கு இன்னாதவன்” என்று அவ்வையார் இப்பாடலில் அதியமானைப் பாராட்டுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on June 13, 2013, 08:03:38 PM
(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-prn2/969872_601411019883813_566136323_n.jpg)

புறநானூறு, 95. (புதியதும் உடைந்ததும்!)
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பாடாண் திணை.
துறை : வாண் மங்கலம்.
=====================================

இவ்வே, பீலி அணிந்து மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய்அணிந்து
கடியுடை வியன்நக ரவ்வே; அவ்வே
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொல்துறைக் குற்றில மாதோ; என்றும்

உண்டாயின் பதம்கொடுத்து
இல்லாயின் உடன்உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்
அண்ணல்எம் கோமான் வைந்நுதி வேலே.

அருஞ்சொற்பொருள்:-

இவ்வே = இவையே
பீலி = மயில் தோகை
கண் = உடம்பு
திரள் = திரட்சி
நோன்மை = வலிமை
காழ் = காம்பு
திருத்துதல் = சீர்ப்படுத்துதல், அழகு செய்யப்படுதல்
கடி = காவல்
வியன் = அகன்ற
நகரம் = அரண்மனை
அவ்வே = அவையே
கோடு = பக்கம்
நுதி = நுனி
கொல் = கொல்லன்
துறை = இடம்
குற்றில் = கொட்டில் (சிறிய இடம்)
மாது - அசைச் சொல்
பதம் = உணவு
ஒக்கல் = சுற்றம்
வை = கூர்மை.

இதன் பொருள் :-

செல்வம் இருந்தால் மற்றவர்களுக்கு உணவளித்துப் பிறகு தான் உண்ணுவதும், செல்வம் இல்லையானால் (குறைந்தால்) தன் உணவைப் பிறரோடு பகிர்ந்து உண்ணும் பண்புடைய, வறிய சுற்றத்தார்களின் தலைவனாகிய பெருமைக்குரிய என் வேந்தன் அதியமானின் கூர்மையான வேல்கள், பகைவரைக் குத்தியதால் பக்கமும் நுனியும் முரிந்து கொல்லர்களின் சிறிய உலைக்களத்தில் எந்நாளும் உள்ளன. ஆனால், உன் படைக்கருவிகளான இவை, மயில் தோகை அணிவிக்கப்பட்டு, மாலை சூட்டப்பட்டு, வலிய திரண்ட பிடிகளை உடையதாய் நெய் பூசப்பட்டு, அழகு செய்யபட்டு காவல் மிக்க பெரிய இடத்தில் உள்ளன.

பாடலின் பின்னணி:-

தொண்டை நாட்டை ஆண்ட தொண்டைமான் அதியமான் மீது பகை கொண்டான். தன்னிடத்துப் படைவலிமை அதிகமாக இருப்பதாக எண்ணி மிகவும் செருக்கடைந்திருந்தான். தொண்டைமானின் செருக்கை அறிந்த அதியமான், தன் படை வலிமையையும் தொண்டைமான் தோல்வி அடைவது உறுதி என்பதையும் அவனுக்கு அறிவுறுத்துமாறு அவ்வையாரைத் தன் தூதுவராகத் தொண்டைமானிடம் அனுப்பினான். அவ்வையார் தொண்டைமானைக் காணச் சென்றார். தன் படைவலிமையை எண்ணிச் செருக்கொடு இருந்த தொண்டைமான், அவ்வையாரைத் தன் படைக்கலக் கொட்டிலுக்கு அழைத்துச் சென்று, தன் படைக்கருவிகளைப் பெருமையோடு காண்பித்தான். அவன் கருத்தை அறிந்த அவ்வையார், தொண்டைமானின் படைக்கலங்களைப் புகழ்வது போல் இகழ்ந்தும், அதியமானின் படைக்கலங்களை இகழ்வது போல் புகழ்ந்தும் இப்பாடலில் கூறுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

தூது என்ற அதிகாரத்தில், திருவள்ளுவர்,

கடனறிந்து காலம் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை. (குறள் - 687)

இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது. (குறள் - 690)

என்கிறார். அதாவது, தன் கடமையை அறிந்து காலத்தையும் இடத்தையும் ஆராய்ந்து சிந்தித்து உரைப்பவன் சிறந்த தூதன். மற்றும், தான் கூறும் செய்தியால் தான் உயிரிழக்க நேரினும், தன்னாலான எல்லா முயற்சிகளையும் குறையாது செய்து தன் அரசனுக்கு நன்மை உண்டாக்குபவனே சிறந்த தூதன். இந்த குறட்பாக்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அவ்வையாரின் சொல்வன்மையும் செயலும் இருப்பதை இப்பாடலின் மூலம் நாம் அறிய முடிகிறது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on June 13, 2013, 08:05:15 PM
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-prn2/971271_602534123104836_563687845_n.jpg)

புறநானூறு, 96. (அவன் செல்லும் ஊர்!)
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன் அதியமான் பொகுட்டெழினி.
திணை: பாடாண் திணை.
துறை : இயன் மொழி.
=====================================

அலர்பூந் தும்பை அம்பகட்டு மார்பின்
திரண்டுநீடு தடக்கை என்ஐ இளையோற்கு
இரண்டு எழுந்தனவால் பகையே; ஒன்றே,
பூப்போல் உண்கண் பசந்து தோள் நுணுகி
நோக்கிய மகளிர்ப் பிணித்தன்று; ஒன்றோ

‘விழவுஇன்று ஆயினும், படுபதம் பிழையாது
மைஊன் மொசித்த ஒக்கலொடு துறைநீர்க்
கைமான் கொள்ளுமோ?’ என
உறையுள் முனியும்அவன் செல்லும் ஊரே.

அருஞ்சொற்பொருள்:-

அலர்தல் = மலர்தல்
அம் = அழகு
பகடு = வலிமை, பெருமை (அகன்ற)
தடக்கை = பெரிய கை
நுணுகுதல் = மெலிதல்
படு - மிகுதிக் குறிப்பு
பதம் = உணவு
மை = செம்மறி ஆடு
ஊன் =தசை, புலால்
மொசித்தல் = உண்ணல்
ஒக்கல் = சுற்றம்
கைம்மான் = கைமான் = யானை
உறையுள் = இருப்பிடம்
முனிதல் = வெறுத்தல்

இதன் பொருள் :-

அலர்பூ=====> ஒன்றோ

மலர்ந்த தும்பைப் பூவாலான மாலையை அணிந்த அழகிய அகன்ற மார்பினையும், திரண்டு நீண்ட பெரிய கையையும் உடைய என் தலைவன் அதியமானின் மகனுக்கு இரண்டு பகைகள் தோன்றி உள்ளன. ஒன்று, பூப்போன்ற, மைதீட்டிய கண்கள் பசந்து, தோள்கள் மெலிந்த பெண்கள் காதல் நோயால் இவன் மீது கொண்ட சினம். மற்றொன்று,

விழவுஇன்று=====> ஊரே

விழா இல்லையாயினும், தவறாது மிகுந்த அளவில் ஆட்டுக்கறியை உண்ட சுற்றத்தினரோடு இவன் வேறு வேறு ஊர்களுக்குச் செல்லும் பொழுது அங்குள்ள மக்கள், இவன் யானைகள் அவர்களுடைய நீர்த்துறைகளில் இறங்கி அங்குள்ள நீரை எல்லாம் குடித்துவிடுமோ என்று அவர்கள் கொண்ட வெறுப்பு. இவை இரண்டும் இவனுக்குப் பகையாகும்.

பாடலின் பின்னணி:-

அவ்வையார் பொகுட்டெழினியிடம் மிகுந்த அன்பு உடையவர். அவன் அழகிலும் வலிமையிலும் சிறந்தவன். அவனுடைய அழகாலும் வலிமையாலும் அவனுக்குத் தீங்கு வரக்கூடும் என்ற கருத்தை இப்பாடலில் அவ்வையார் கூறுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

பொகுட்டெழினியின் அழகிலும் இளமையிலும் மயங்கிய பெண்கள் அவன் மீது காதல் கொண்டு தங்கள் காதல் நிறைவேராததால் அவன் மீது கோபம் கொள்கிறார்கள். மற்றும், அவன் தன் படையுடன் வேறு வேறு ஊர்களுக்குச் செல்லும் பொழுது அங்குள்ள மக்கள் அவன் யானைகள் தங்கள் குளங்களைப் பாழ் செய்துவிடுமோ என்று அவன் மீது வெறுப்படைகிறார்கள். இந்த இரண்டு காரணங்களால் அவனுக்குப் பெண்களும் அவன் செல்லும் ஊரில் உள்ள மக்களும் பகைவர்கள் என்று கூறி, அவ்வையார் பொகுட்டெழினியின் அழகையும் வெற்றிகளையும் பாராட்டுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on June 13, 2013, 08:07:13 PM
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-prn1/942403_602545059770409_1443558165_n.jpg)

புறநானூறு, 97. (இறுக்கல் வேண்டும் திறையே!)
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பாடாண் திணை.
துறை : இயன் மொழி.
=====================================

போர்க்குஉரைஇப் புகன்று கழித்தவாள்
உடன்றவர் காப்புடை மதில்அழித்தலின்
ஊனுற மூழ்கி உருவிழந் தனவே
வேலே, குறும்படைந்த அரண்கடந்தவர்
நறுங்கள்ளின் நாடுநைத்தலின்

சுரைதழீஇய இருங்காழொடு
மடைகலங்கி நிலைதிரிந்தனவே;
களிறே, எழூஉத் தாங்கிய கதவம்மலைத்துஅவர்
குழூஉக்களிற்றுக் குறும்புஉடைத்தலின்
பரூஉப்பிணிய தொடிகழிந்தனவே;

மாவே, பரந்துஒருங்கு மலைந்தமறவர்
பொலம்பைந்தார் கெடப்பரிதலின்
களன்உழந்து அசைஇய மறுக்குளம் பினவே;
அவன்தானும், நிலம்திரைக்கும் கடல்தானைப்
பொலந்தும்பைக் கழல்பாண்டில்

கணைபொருத துளைத்தோலன்னே
ஆயிடை, உடன்றோர் உய்தல் யாவது? தடம்தாள்
பிணிக்கதிர், நெல்லின் செம்மல் மூதூர்
நுமக்குஉரித்து ஆகல் வேண்டின், சென்றுஅவற்கு
இறுக்கல் வேண்டும் திறையே; மறுப்பின்

ஒல்வான் அல்லன் வெல்போ ரான்எனச்
சொல்லவும் தேறீர் ஆயின், மெல்லியல்
கழற்கனி வகுத்த துணைச்சில் ஓதிக்
குறுந்தொடி மகளிர் தோள்விடல்
இறும்பூது அன்றுஅஃது அறிந்துஆ டுமினே.

அருஞ்சொற்பொருள்:-

உரைஇ = உலாவி, சுழன்று, பரந்து
புகன்று = விரும்பி
கழிதல் = போக்குதல், நீக்குதல்
உடன்று = வெகுண்டு
உற = மிக
குறும்பு = குறும்பர், பகைவர், தீயோர்
நறுமை = மனம், நன்மை
நைத்தல் = கெடுத்தல்
சுரை = அம்புத் தலை (வேலின் தலைப் பாகம்)
தழீஇய = பொருந்திய
இரு = பெரிய
காழ் = காம்பு
மடை = ஆணி, ஆயுத மூட்டு
எழு = கணைய மரம்
மலைத்தல் = பொருதல், வருத்துதல், எதிர்த்தல்
குறும்பு = அரண்
பரூஉ = பருமை
தொடி = கிம்புரி (யானையின் தந்தங்களில் அணியப்படும் அணிகலன்)
பொலம் = பொன்
பைந்தார் = பசுமை
தார் = மாலை
பரிதல் = ஓடுதல்
உழத்தல் = வெல்லுதல், துவைத்தல், வருத்துதல்
அசைவு = வருத்தம்
மறு = கறை
திரைதல் = சுருங்குதல், திரளுதல்
கழல் = கழற்சிக் காய்
பாண்டில் = வட்டம்
தோல் = கேடயம்
ஆயிடை = அவ்விடத்து, அக்காலத்து
தடம் = பெரிய
இறுக்கல் = திறை கொடுத்தல்
ஒல்லுதல் = இணங்குதல்
கனி = காய்
ஓதி = பெண்களின் கூந்தல்
இறும்பூது = வியப்பு
ஆடுதல் = போர் செய்தல்.

இதன் பொருள் :-

போர்க்கு=====> நைத்தலின்

போர் புரிவதற்கு விரும்பி, உறையிலிருந்து எடுத்த வாள்கள் பகைவரின் காவலுடைய மதில்களை அழித்து அவர்களின் தசைக்குள் மிகவும் மூழ்கியதால் தங்கள் உருவத்தை இழந்தன. வேல்களோ, பகைவரின் அரண்களை வென்று அவர்களின் மணம் மிகுந்த கள்ளுடைய நாட்டை அழித்ததால்

சுரைதழீஇய=====> தொடிகழிந்தனவே

தலைப்பாகத்தோடு கூடிய வலிய காம்பும் ஆணியும் நிலை கெட்டன. யானைகளோ, கணையமரங்களால் தடுக்கப்பட்டக் கதவுகளைத் தாக்கி, பகைவரின் யானைகளோடு கூடிய அரண்களை அழித்ததால், தங்கள் தந்தங்களில் இறுகக் கட்டப்பட்ட பெரிய அணிகலன்களை (கிம்புரிகளை)இழந்தன.

மாவே=====> கழல்பாண்டில்

குதிரைகளோ, பரவலாக ஒன்று சேர்ந்து வந்து தாக்கிய பசும்பொன்னாலான அழகிய மாலைகளணிந்த பகைவர்களின் மார்புகளை உருவழியுமாறு வருத்தித் தாக்கிப் போர்க்களத்தில் அவர்களை அழித்ததால் தங்கள் குளம்புகளில் குருதிக் கறை கொண்டன. அதியமான், நிலத்தைத் தன்னுள் அடக்கிய கடல் போன்ற படையுடன், கழற்காய் வடிவாகவும், வட்ட வடிவான கிண்ணிகளுடைய

கணைபொருத=====> மறுப்பின்

கேடயத்தை ஏந்திப் பொன்னாலான தும்பை மாலையை அணிந்திருக்கிறான். அவ்விடத்து, அவனுடைய சினத்துக்கு ஆளானோர் எப்படி உயிர் தப்ப முடியும்?
பெரிய தாளினையும் பின்னிக் கிடக்கும் நெற்கதிர்களையும் உடைய தலைமையும் பழைமையும் கூடிய உங்கள் ஊர் உங்களுக்குச் சொந்தமாக இருக்க வேண்டுமானால், அவனுக்குச் செலுத்த வேண்டிய திறையை நீங்கள் செலுத்த வேண்டும். திறை செலுத்த மறுத்தால்

ஒல்வான்=====> ஆடுமினே

அவன் அதற்கு உடன்பட மாட்டன். அவன் உங்களை எதிர்த்துப் போரிடுவான். நான் இவ்வளவு சொல்லியும் நீங்கள் என் சொல்லைக் கேட்கவில்லையானால், மென்மையும் கழற்காயின் உதவியால் வகுத்து சுருட்டி முடியப்பட்ட கூந்தலும் சிறிய வளையல்களையும் அணிந்த உங்கள் உரிமை மகளிரின் தோள்களைத் தழுவமுடியாமல் அவர்களை விட்டு நீங்கள் பிரியப் போவதில் (இறக்கப் போவதில்) வியப்பில்லை. அதை அறிந்து போர் செய்க!

பாடலின் பின்னணி:-

அதியமான் நெடுமான் அஞ்சிக்குத் திறை செலுத்த வேண்டிய வேந்தர்களில் சிலர், அதனைச் செலுத்தாது அதியமானோடு போர் புரிவதற்குத் திட்டமிட்டனர். அதை அறிந்த அவ்வையார், “அதியமானின் வாட்படை, விற்படை, களிற்றுப் படை, குதிரைப் படை மற்றும் காலாட் படை எல்லாம் போர் செய்வதில் மிகுந்த தேர்ச்சி பெற்றவை; அவனை எதிர்த்தவர்கள் தப்ப முடியாது; உங்களுக்குச் சொந்தமான ஊர்கள் உங்களிடத்தில் இருக்க வேண்டுமானால், அவனுக்குச் செலுத்த வேண்டிய திறையைச் செலுத்துங்கள்; நீங்கள் திறை கொடுக்க மறுத்தால் அவன் அதற்கு உடன்பட மாட்டான்; நிச்சயமாக உங்களை எதிர்த்துப் போரிடுவான்; நான் சொல்லியும் நீங்கள் கேட்காமல் அவனோடு போருக்குச் சென்றால் உங்கள் மகளிரிடம் இருந்து நீங்கள் பிரியப் (இறக்கப்) போகிறீர்கள்; அது நிச்சயம்.” என்று எச்சரிக்கிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on June 13, 2013, 08:09:50 PM
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash4/250593_603528049672110_1677854626_n.jpg)

புறநானூறு, 98. (பகைவர்களின் வளநாடு கெடுமோ!)
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: வாகை.
துறை : அரச வாகை.
=====================================

முனைத்தெவ்வர் முரண்அவியப்
பொரக்குறுகிய நுதிமருப்பின்நின்
இனக்களிறு செலக்கண்டவர்
மதிற்கதவம் எழுச்செல்லவும்,
பிணன்அழுங்கக் களன்உழக்கிச்

செலவுஅசைஇய மறுக்குளம்பின்நின்
இனநன்மாச் செலக்கண்டவர்
கவைமுள்ளின் புழையடைப்பவும்,
மார்புறச் சேர்ந்துஒல்காத்
தோல்செறிப்பில்நின் வேல்கண்டவர்

தோல்கழியொடு பிடிசெறிப்பவும்,
வாள்வாய்த்த வடுப்பரந்தநின்
மறமைந்தர் மைந்துகண்டவர்
புண்படுகுருதி அம்புஒடுக்கவும்,
நீயே, ஐயவி புகைப்பவும் தாங்காது, ஒய்யென

உறுமுறை மரபின் புறம்நின்று உய்க்கும்
கூற்றத்து அனையை; ஆகலின்,போற்றார்
இரங்க விளிவது கொல்லோ; வரம்புஅணைந்து
இறங்குகதிர் அலம்வரு கழனிப்
பெரும்புனல் படப்பைஅவர் அகன்றலை நாடே

அருஞ்சொற்பொருள்:-

முனை = போர்முனை
தெவ்வர் = பகைவர்
முரண் = வலி, மாறுபாடு
அவிதல் = ஒடுங்குதல், கெடுதல் , தணிதல், அழிதல், குறைதல், அடங்குதல்
பொர = போர் செய்ததால்
நுதி = நுனி
மருப்பு = கொம்பு (யானைத் தந்தம்)
எழு = கணையமரம்
அழுங்குதல் = உருவழிதல்
உழக்குதல் = மிதித்தல், கலக்குதல்
மறு = கறை
நன்மை = சிறப்பு
மா = குதிரை
கவை = பிளப்பு
புழை = காட்டு வழி (வாயில்)
ஒல்குதல் = எதிர்கொள்ளுதல்
தோல் = தோலால் ஆகிய உறை
செறிப்பு = அடக்கம்
செறித்தல் = சேர்த்தல்
தோல் = கேடயம்\
வாய்த்தல் = கிடைத்தல்
மைந்து = வலிமை
ஐயவி = சிறு வெண்கடுகு
ஒய்யென = விரைவாக
உய்த்தல் = கொண்டுபோதல்
வரம்பு = வரப்பு
அலம் = அலமரல் = சுழலல்
கழனி = வயல்
படப்பை = தோட்டம் (நிலப்பகுதி)

இதன் பொருள் :-

முனைத்தெவ்வர்=====> உழக்கி

போர்முனையில் பகைவரது வலிமை அடங்குமாறு போர்புரிந்ததால் குறைந்த (உடைந்த) நுனியுடன் கூடிய கொம்புகளுடைய உனது யானைகள் கூட்டமாகச் செல்வதைக் கண்டவர்கள் மதிற்கதவுகளில் கணையமரங்களைப் பொருத்திக் கொள்கின்றனர். பிணங்கள் உருவழியுமாறு போர்க்களத்தில் அவற்றை மிதித்து,

செலவுஅசைஇய=====> வேல்கண்டவர்

தங்கள் கால்கள் வருந்துமாறு சென்றதால் குருதிக்கறைப் படிந்த குளம்புகளுடைய உன் சிறப்புக்குரிய குதிரைகள் கூட்டமாகச் செல்வதைக் கண்டவர்கள் காட்டுவாயில்களை கிளைகளாய் பிளவுபட்ட முட்களை வைத்து அடைக்கின்றனர். உறையில் இருந்து எடுத்த வேல்களை உன் வீரர்கள் பகைவர்களின் மீது எறிய அவை அவர்களை ஊடுருவிச் சென்றன. அதைக்கண்ட உன் பகைவர்கள் தங்கள்

தோல்கழியொடு=====> ஒய்யென

கேடயங்களின் காம்புகளோடு (புதிய) பிடிகளைப் பொருத்திக் கொள்கின்றனர். வாள் பாய்ந்ததால் உண்டாகிய தழும்புகளுடைய உன் வீரர்களின் வலிமையைக் கண்டவர் குருதிக்கறைப் படிந்த தங்கள் அம்புகளைத் தங்கள் அம்புறாத்தூணிகளில் அடக்கிக் கொள்கின்றனர். நீயோ, (தன்னை இயமனிடத்திலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக) சிறிய வெண்கடுகுகளைப் புகைத்தாலும் அதைப் பொருட்படுத்தாது விரைந்து

உறுமுறை=====> நாடே

வந்து சேர்ந்து முறைப்படி புறத்தே இருந்து உயிரைக் கொண்டுபோகும் இயல்புடைய இயமனைப் போன்றவன். ஆதலால், வரப்புகளைச் சார்ந்து வளைந்து ஆடும் நெற்கதிர்களுடைய வயலொடு மிக்க நீர்ப்பகுதிகளையுமுடைய உன் பகைவர்களின் அகன்ற இடங்களுடைய நாடு அவர்கள் வருந்துமாறு அழிந்துவிடுமோ?

பாடலின் பின்னணி:-

அதியமான் நெடுமான் அஞ்சிக்கும் கோவலூரிலிருந்து ஆட்சி புரிந்து வந்த மலாடர் வேந்தனுக்கும் பகை மூண்டது. அதியமான் தன்னுடைய வலிமையும் ஆற்றலும் மிக்க படையுடன் கோவலூரை நோக்கிச் சென்றான். கோவலூருக்குச் செல்லும் வழியிலிருந்த சிற்றரசர்கள் அதியமானின் படையைக் கண்டு அஞ்சிக் கலக்கமுற்றனர். இதனைக் கண்ட அவ்வையார், அதியமானுடன் போர் புரியும் மன்னர்களது நாடு என்னாகுமோ என்ற எண்ணத்தோடு இப்பாடலை இயற்றுகிறார். இப்பாடலில், “அரசே! உன் யானைப்படையைக் கண்டவர்கள் தம்முடைய மதில் வாயில் கதவுகளுக்குப் புதிய கணையமரங்களைப் பொருத்துகின்றனர். உன் குதிரைப்படையைக் கண்டவர்கள் காவற்காட்டின் வாயில்களை முட்களை வைத்து அடைக்கின்றார்கள். உன் வேற்படையைக் கண்டவர் தங்கள் கேடயங்களைப் பழுது பார்த்துக்கொள்கிறார்கள். உன் வீரர்களைக் கண்டவர்கள் தங்கள் அம்புறாத்தூணிகளில் அம்புகளை அடக்கிக் கொள்கிறார்கள். நீயோ, இயமனைப் போன்றவன். உன் பகைவர்களுடைய வளமான நாடு அவர்கள் வருந்துமாறு அழிந்து விடுமோ” என்று அதியமானின் படைவலிமையைப் பாராட்டிக் கூறுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

வீரர்கள் புண்பட்டு இறக்கும் தருவாயில் இருக்கும் பொழுது, வெண்கடுகைத் தீயிலிட்டுப் புகையை உண்டாக்கினால், இயமன் அவர்களின் உயிரைப் பறிக்க மாட்டான் என்ற நம்பிக்கை சங்க காலத்தில் இருந்ததாகத் தெரிகிறது. மற்றும், சங்க காலத்திற்குப் பிந்திய காலத்திலும், வெண்கடுகுப் புகை கடவுள் தன்மை வாய்ந்ததாகக் கருதப்பட்டது. உதாரணமாக பன்னிரண்டாம் திருமுறையில் உள்ள ஒரு பாடலில் இக்கருத்து காணப்படுகிறது.

ஐயவி யுடன்பல அமைத்தபுகை யாலும்
நெய்யகில் நறுங்குறை நிறைத்தபுகை யாலும்
வெய்யதழல் ஆகுதி விழுப்புகையி னாலும்
தெய்வமணம் நாறவரு செய்தொழில் வினைப்பர்.
(பன்னிரண்டாம் திருமுறை,
திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் புராணம், பாடல் 39)

பொருள்:-

வெண்கடுகு முதலானவற்றைச் சேர்த்து அமைத்த புகையினாலும், நெய்யுடன் நல்ல மணமுடைய அகில் துண்டுகளால் உண்டாக்கப்பட்ட புகையாலும், விருப்பம் அளிக்கும் வேள்வித் தீயின் புகையாலும் கடவுள் தன்மை கமழ்கின்ற செயலைச் செய்வார்கள்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on June 13, 2013, 08:14:51 PM
(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-ash3/581848_603534969671418_999220525_n.jpg)

புறநானூறு, 99. (பரணன் பாடினன்)
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: வாகை.
துறை : அரச வாகை.
=====================================

அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும்
அரும்பெறல் மரபின் கரும்புஇவண் தந்தும்
நீர்அக இருக்கை ஆழி சூட்டிய
தொன்னிலை மரபின்நின் முன்னோர் போல
ஈகைஅம் கழற்கால் இரும்பனம் புடையல்

பூவார் காவின் புனிற்றுப் புலால் நெடுவேல்
எழுபொறி நாட்டத்து எழா அத்தாயம்
வழுவின்று எய்தியும் அமையாய்; செருவேட்டு
இமிழ்குரல் முரசின் எழுவரொடு முரணிச்
சென்றுஅமர் கடந்துநின் ஆற்றல் தோற்றிய

அன்றும் பாடுநர்க்கு அரியை; இன்றும்
பரணன் பாடினன் மற்கொல், மற்றுநீ
முரண்மிகு கோவலூர் நூறிநின்
அரண்அடு திகிரி ஏந்திய தோளே

அருஞ்சொற்பொருள்:-

அமரர் = தேவர்; பேணுதல் = போற்றுதல்; ஆவுதி = வேள்வி; அருத்தல் = உண்பித்தல். 2. இவண் = இவ்விடம். 3. இருக்கை = குடியிருப்பு, ஊர்; ஆழி = சக்கரம், கட்டளை, ஆணை; சூட்டுதல் = நியமித்தல். 5. ஈகை = பொன்; புடையல் = மாலை; இரு = பெரிய. 6. ஆர் = நிறைவு; கா = சோலை; புனிறு = ஈன்ற அணிமை (புதுமை). 7. நாட்டம் = ஐயம்; தாயம் = அரசு உரிமை. 8. செரு = போர்; வேட்டு = விரும்பி. 9. இமிழ்தல் = ஒலித்தல்; குரல் = ஓசை; முரணி = பகைத்து. 12. கொல் என்பது ஐயத்தைக் குறிக்கிறது. மன் - அசைநிலை 13. முரண் = மாறுபாடு, வலிமை; நூறி = அழித்து. 14. அடுதல் = அழித்தல்; திகிரி = சக்கரம்

இதன் பொருள் :-

அமரர்=====> புடையல்

தேவர்களைப் போற்றி, அவர்களுக்கு வேள்வி நடத்தி, அதன் மூலம் உணவுப் பொருட்களை அவர்களுக்கு உண்பித்துப் பெறுதற்கரிய முறைமையுடைய கரும்பை இவ்வுலகத்திற்குக் கொண்டு வந்தது மட்டுமல்லாமல், கடலால் சூழப்பட்ட நிலத்தின்கண் தன் ஆணையை நிலைநாட்டிப் பழைய நிலைமை பொருந்திய மரபுடைய உன் முன்னோர் போல, காலில் பொன்னாலான அழகிய கழல்களும், கழுத்தில் பெரிய பனம்பூ மாலையும்,

பூவார்=====> தோற்றிய

பூக்கள் நிறைந்த சோலையும், பகைவரைக் குத்தியதால் ஈரத் தசைகளுடைய நெடிய வேலும், ஏழு சின்னங்களுடைய முத்திரையும் ஐயத்திற்கு இடமில்லாத அரசுரிமையும் தவறாமல் பெற்றிருந்தாலும், உன் மனம் நிறைவடையவில்லை. போரை விரும்பி, ஒலிக்கும் ஓசையுடன் கூடிய முரசோடு சென்று எழுவரையும் வென்ற பொழுது உன் ஆற்றல் வெளிப்பட

அன்றும்=====> தோளே

அன்றும் நீ பாடுவதற்கு அறியவனாக இருந்தாய். கோவலூரில் பகைவரின் மிகுந்த வலிமையையும் அவர்களது அரண்களையும் அழித்து ஆட்சிச் சக்கரத்தை ஏந்திய உன் வலிமையைப் (தோளைப்) பாடுவது இன்றும் அரிதே. பரணனால் தானே உன்னைப் பாட முடிந்தது!

சிறப்புக் குறிப்பு:-

எவராலும் பாடற்கரிய அதியமானைப் பரணரால்தான் பாடமுடிந்தது என்று அவ்வையார் கூறுவது பரணரின் பெருமையைக் குறிக்கிறது. பரணரைப் புகழ்வதால் அவ்வையாரும் பெருமைக்கு உரியவராகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on June 13, 2013, 08:16:05 PM
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-prn2/182927_603537296337852_1843201308_n.jpg)

புறநானூறு, 100. (சினமும் சேயும்!)
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: வாகை.
துறை : அரச வாகை.
=====================================

கையது வேலே; காலன புனைகழல்;
மெய்யது வியரே; மிடற்றது பசும்புண்;
வட்கர் போகிய வளரிளம் போந்தை
உச்சிக் கொண்ட ஊசி வெண்தோடு
வெட்சி மாமலர் வேங்கையடு விரைஇச்
சுரிஇரும் பித்தை பொலியச் சூடி

வரிவயம் பொருத வயக்களிறு போல,
இன்னும் மாறாது சினனே; அன்னோ!
உய்ந்தனர் அல்லர்இவன் உடற்றி யோரே;
செறுவர் நோக்கிய கண்தன்
சிறுவனை நோக்கியுஞ் சிவப்பு ஆனாவே.

அருஞ்சொற்பொருள்:-

புனை = அழகு. 2.வியர் = வியர்வை; மிடறு = கழுத்து; பசும்புண் = ஆறாத புண். 3. வட்கு = கேடு; வட்கர் = வட்கார் = பகைவர்; போகிய = ஒழிந்த, தொலைந்த; போந்தை = பனங்குருத்து. 5. வெட்சி = ஒரு செடி (பசு நிரை கவர்தல்); விரைஇ = கலந்து; வேங்கை = ஒரு வகை மரம். 6. சுரிதல் = சுருளுதல்; இரு = கரிய; பித்தை = முடி. 7. வரிவயம் = புலி; வயம் = வலி. 8. அன்னோ = ஐயோ. 9. உய்ந்தனர் = பிழைத்தவர்; உடல்தல் = சினத்தொடு போரிடுதல். 10. செறுவர் = பகைவர். 11. ஆனாமை = நீங்காமை, குறையாமை

இதன் பொருள்:-

கையது=====> சூடி

கையிலே வேல்; கால்களிலே அழகான கழல்கள்; உடலிலே வியர்வை; கழுத்திலே ஈரம் ஆறாத புண்; பகைவரை அழிப்பதற்காக, வளரும் இளம் பனங்குருத்தின் உச்சியில் உள்ள ஊசி போன்ற வெண்மையான தோட்டையும், வெட்சியின் பெரிய மலர்களோடு வேங்கைப் பூவும் கலந்து சுருண்ட, கரிய முடியில் அழகுறச் சூடி,

வரிவயம்=====> ஆனாவே

புலியோடு போரிட்ட வலிய யானையைப் போல இன்னும் நீங்காத சினத்துடன் அதியமான் உள்ளானே! இவனுடன் சினந்து போரிட்டவர்கள் பிழைக்கமாட்டார்கள். பகைவரைப் பார்த்த கண்கள் தன் புதல்வனைப் பார்த்தும் சிவப்பு நிறம் குறையாமல் இருக்கின்றனவே!

சிறப்புக் குறிப்பு:-

அதியமான் போர்க்கோலம் பூண்டு தன் மகனைக் காண வந்ததாகப் பாடலின் பின்னணியில் குறிப்பிடப்பட்ட கருத்து அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை அவர்களின் உரையில் காணப்படும் கருத்து. ஆனால், போர்க்களத்தில் பகைவரை அழித்த பிறகு, அரண்மனைக்குச் சென்று அதியமான் தன் மகனைக் காண்பது போன்ற காட்சியை அவ்வையார் இப்பாடலில் கூறுகிறார் என்றும் கருதுவதற்கும் இப்பாடல் இடமளிக்கிறது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on June 17, 2013, 07:24:40 PM
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-prn2/968887_605247909500124_1304031159_n.jpg)

புறநானூறு, 101. (பலநாளும் தலைநாளும்!)
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பாடாண்.
துறை : பரிசில் கடா நிலை. “உன்னைப் பாடிய யாவரும் பரிசில் பெற்றனர்” என்று கூறித் தனக்கும் பரிசில் வேண்டும் என்று புரவலரிடம் தனது விருப்பத்தை வெளிப்படுத்துவது.
=====================================

ஒருநாள் செல்லலம்; இருநாட் செல்லலம்;
பன்னாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ.
அணிபூண் அணிந்த யானை இயல்தேர்
அதியமான் பரிசில் பெறூஉங் காலம்

நீட்டினும் நீட்டா தாயினும் யானைதன்
கோட்டிடை வைத்த கவளம் போலக்
கையகத் ததுஅது பொய்ஆ காதே;
அருந்தஏ மாந்த நெஞ்சம்!
வருந்த வேண்டா வாழ்கவன் தாளே!

அருஞ்சொற்பொருள்:-

செல்லலம் = செல்லேம் (செல்லவில்லை)
பயின்று = தொடர்ந்து
தலைநாள் = முதல் நாள்
கோடு = கொம்பு
ஏமாத்தல் = அவாவுதல் (ஆசைப் படுதல்)
தாள் = கால்.

இதன் பொருள்:-

ஒருநாள்=====> காலம்

நாம் ஒரு நாள் அல்லது இருநாட்கள் செல்லவில்லை; பல நாட்கள் தொடர்ந்து பலரோடு நாம் (அதியமானிடம் பரிசில் பெறுவதற்குச்) சென்றாலும், அதியமான் முதல் நாள் போலவே நம்மிடம் விருப்பமுடையவனாக இருக்கிறான். அழகிய அணிகலன்கள் அணிந்த யானைகளையும் நன்கு செய்யப்பட்ட தேர்களையும் உடைய அதியமான் பரிசளிப்பதற்குக் காலம்

நீட்டினும்=====> தாளே

தாழ்த்தினாலும் தாழ்த்தாவிட்டாலும், யானை தன் கொம்புகளிடையே கொண்ட உணவுக் கவளத்தை உண்ணத் தவறாதது போல், அதியமானிடமிருந்து நாம் பெறப்போகும் பரிசில் நம் கையில் இருப்பதாகவே நாம் நம்பலாம். பரிசு பெறுவதற்கு ஆசைப்பட்ட நெஞ்சே! வருந்த வேண்டாம்! வாழ்க அவன் திருவடிகள்!

பாடலின் பின்னணி:-

ஒரு சமயம், அவ்வையார் அதியமானிடம் பரிசு பெற விரும்பிச் சென்றார். அதியமான் அவ்வையார்க்குப் பரிசளிப்பதற்குச் சிறிது காலம் தாழ்த்தினான். அது கண்ட அவ்வையார் வருத்தப்பட்டார். ஆயினும், அவர் அதியமானின் கொடைத் தன்மையை நன்கு அறிந்திருந்ததால், பரிசு பெறுவதற்குச் சற்று கால தாமதமாயினும், யானை தன் கொம்புகளிடையே வைத்திருக்கும் உணவுக் கவளத்தை உண்ணத் தவறாதது போல், அதியமான் கால தாமதமயினும் நிச்சயம் பரிசளிப்பான் என்று தனக்குத் தானே கூறிக்கொள்வது போல் இப்பாடல் அமைந்துள்ளது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on June 17, 2013, 07:26:45 PM
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-frc3/391387_605254319499483_1141959092_n.jpg)

புறநானூறு, 102. (சேம அச்சு!)
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன் பொகுட்டெழினி.
திணை: பாடாண்.
துறை : இயன் மொழி.
=======================================

எருதே இளைய நுகம்உண ராவே
சகடம் பண்டம் பெரிதுபெய் தன்றே
அவல்இழியினும் மிசைஏறினும்
அவணது அறியுநர் யார்என உமணர்

கீழ்மரத்து யாத்த சேமஅச்சு அன்ன
இசைவிளங்கு கவிகை நெடியோய்! திங்கள்
நாள்நிறை மதியத்து அனையைஇருள்
யாவண தோநின் நிழல்வாழ் வோர்க்கே?

அருஞ்சொற்பொருள்:-

நுகம் = நுகத்தடி
சகடம் = வண்டி
பெய்தல் = இடுதல்
அவல் = பள்ளம்
இழியல் = இறங்குதல்
மிசை = மேடு
உமணர் = உப்பு வணிகர்
யாத்த = கட்டிய
சேம அச்சு = பாதுகாப்பான பதில் அச்சு
இருள் = துன்பம்
யாவண் = எவ்விடம்

இதன் பொருள்:-

காளைகள் இளையவை; நுகத்தடியில் பூட்டப் படாதவை. வண்டியில் பண்டங்கள் அதிகமாக ஏற்றப்பட்டுள்ளன. (போகும் வழியில்) வண்டி பள்ளத்தில் இறங்க வேண்டியதாக இருக்கலாம்; மேட்டில் ஏற வேண்டியதாக இருக்கலாம்; வழி எப்படி இருக்கும் அன்பதை யார் அறிவர் என்று எண்ணி உப்பு வணிகர்கள் தங்கள் வண்டியின் அடியில் பாதுகாப்பாகக் கட்டிய சேம அச்சு போன்றவனே! விளங்கும் புகழும், கொடையளிக்கக் கவிழ்ந்த கையும் உடைய உயர்ந்தோனே! நீ முழுமதி போன்றவன். உன் நிழலில் வாழ்பவர்களுக்குத் துன்பம் எங்கே உள்ளது?

பாடலின் பின்னணி:-

அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன் பொகுட்டெழினி, தன் தந்தைக்குத் துணையாக ஆட்சி செய்து வந்தான். அவன் அவ்வாறு அதியமானுக்குத் துணையாக இருந்து மக்களுக்கு நன்மைகளைச் செய்து நல்லாட்சி புரிவதை அவ்வையார் இப்பாடலில் பாராட்டுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

அதியமானின் ஆட்சிக்குத் துணையாக பொகுட்டெழினி இருப்பது அதியமானுக்குப் பாதுகாவலாக உள்ளது என்பதை அவ்வையார் உமணர் எடுத்துச் செல்லும் சேம அச்சுக்கு ஒப்பிடுகிறார். மற்றும், முழு நிலவு போன்றவன் என்பது அவன் அருள் மிகுந்தவன் என்பதைக் குறிக்கிறது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on June 17, 2013, 07:29:03 PM
(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-prn2/166087_606207972737451_873348036_n.jpg)

புறநானூறு, 103. (புரத்தல் வல்லன்!)
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பாடாண்.
துறை : விறலியாற்றுப்படை.
======================================

ஒருதலைப் பதலை தூங்க, ஒருதலைத்
தூம்புஅகச் சிறுமுழாத் தூங்கத் தூக்கிக்
கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார்எனச்
சுரன்முதல் இருந்த சில்வளை விறலி!
செல்வை யாயின், சேணோன் அல்லன்;
முனைசுட எழுந்த மங்குல் மாப்புகை

மலைசூழ் மஞ்சின், மழகளிறு அணியும்
பகைப்புலத் தோனே பல்வேல் அஞ்சி
பொழுதுஇடைப் படாஅப் புலரா மண்டை
மெழுகுமெல் அடையிற் கொழுநிணம் பெருப்ப
அலத்தற் காலை யாயினும்
புரத்தல் வல்லன் வாழ்கஅவன் தாளே!

அருஞ்சொற்பொருள்:-

பதலை = ஒரு வகைப் பறை (ஒரு கண் பறை)
தூங்கல் = தணிதல், தாழ்தல், தொங்குதல்
தூம்பு = துளை
முழா = முழவு (மேளம் போன்ற ஒரு இசைக் கருவி)
மண்டை = இரப்போர் கலம்
மலர்த்தல் = நிமிரச் செய்தல், நிரம்பச் செய்தல்
சுரன் = பாலை நிலம்
முதல் = இடம் (ஏழாம் வேற்றுமை உருபு)
சேண் = தொலை, சேய்மை (தூரம்)
முனை = போர் முனை, போர்க்களம்
மங்குல் = இருள்,மேகம்
மா = கறுப்பு
மஞ்சு = மேகம்
மழ = இளமை
அணிதல் = பூணல், அலங்கரித்தல்
புலர்தல் = உலர்தல்
மெழுகு = மிருது
நிணம் = கொழுப்பு (கொழுப்பு உள்ள புலால்)
பெருப்ப = மிகுதல்
பெருப்பித்தல் = பெரிதாக்குதல்
அலத்தல் = வறுமைப் படுதல்
காலை = பொழுது (காலம்)
புரத்தல் = ஈதல், காத்தல்

இதன் பொருள்:-

ஒருதலைப்=====> மாப்புகை

காவடியில் ஒரு பக்கம் பதலையும் ஒரு பக்கம் உள்ளே துளை உள்ள சிறிய முழவும் தொங்குமாறு தூக்கிக்கொண்டு, ”என் கவிழ்ந்த பாத்திரத்தை நிரப்புபவர் யார்?” என்று கேட்டுக்கொண்டு பாலை நிலத்திடத்து இருந்த விறலியே! போர்க்களத்திலிருந்து எழுந்த இருள் போன்ற புகை,

மலைசூழ்=====> தாளே

மலையைச் சூழும் மேகங்களை போல இளைய யானைகளைச் சூழும் பகைவர் நாட்டில் பல வேற்படைகளையுடைய அதியமான் அஞ்சி உள்ளான். நீ அவனிடம் செல்வதாக இருந்தால், அவன் அருகில்தான் உள்ளான். அவன் ஒரு பொழுதும் தவறாமல் மிருதுவான மென்மையான அடைபோன்ற கொழுத்த புலால் உணவால் இரப்போரின் ஈரம் உலராத பாத்திரங்களை நிரப்புவான். வறுமைக் காலத்திலும் அவன் இரப்போர்க்கு அளிப்பதில் வல்லவன். வாழ்க அவன் திருவடிகள்!

பாடலின் பின்னணி:-

அதியமானிடம் பரிசில் பெற்றுச் சென்ற அவ்வையார், வழியில் பாலை நிலத்தில், தன் சுற்றத்தோடு இருந்த விறலி ஒருத்தியைக் கண்டார். அவள் தன் வறுமையை அவ்வையாரிடம் கூறி, “ என்னிடம் உள்ள பாத்திரத்தை நிரப்புவர் யார்?” என்று கேட்கிறாள். அதற்கு, அவ்வையார், ”விறலி! அதியமான் அருகில்தான் உள்ளான், அவனிடம் சென்றால் அவன் உனக்கு மிகுந்த அளவில் புலால் உணவு அளிப்பான்; நீ அவனிடம் செல்க” என்று விறலியை ஆற்றுப்படுத்துகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

இரப்போர் உண்டவுடன் அவர்களின் பாத்திரம் மீண்டும் மீண்டும் நிரப்பப்படுவதால், “புலரா மண்டை” என்று குறிபிடப்பட்டது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on June 17, 2013, 07:36:12 PM
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-prn1/936115_606213852736863_1996353340_n.jpg)

புறநானூறு, 104. (யானையும் முதலையும்!)
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: வாகை.
துறை : அரச வாகை.
======================================

போற்றுமின் மறவீர்! சாற்றுதும் நும்மை;
ஊர்க்குறு மாக்கள் ஆடக் கலங்கும்
தாள்படு சின்னீர் களிறு அட்டு வீழ்க்கும்
ஈர்ப்புடைக் கராஅத்து அன்ன என்ஐ
நுண்பல் கருமம் நினையாது
இளையன்என்று இகழின் பெறல்அரிது ஆடே.

அருஞ்சொற்பொருள்:-

போற்றுதல் = பாதுகாத்தல்
சாற்றுதல் = சொல்லுதல், விளம்பரப் படுத்துதல்
குறுமாக்கள் = சிறுவர்கள்
தாள் = கால்
சின்னீர் = சிறிது அளவு நீர்
அடுதல் = வெல்லுதல், கொல்லல்
ஈர்ப்பு = இழுப்பு
கராம் = முதலை
கருமம் = செயல்
ஆடு = வெற்றி

இதன் பொருள்:-

வீரர்களே! உங்களுக்கு நான் (ஒன்று) கூறுகிறேன்! ஊர்ச் சிறுவர் விளையாடுவதால் கலங்கும் அளவுக்கு நீர் குறைவாக, அவர்களின் கால் அளவே இருந்தாலும், அந்த நீரில், முதலை யானையை இழுத்து, வென்று வீழ்த்திவிடும். அந்த முதலை போன்றவன் என் தலைவன். அவனுடைய ஊராகிய தகடூரில் அவனை வெல்வது உங்களால் இயலாத செயல். அவனுடைய நுண்ணிய ஆற்றலையும் செயல்களையும் சிந்தித்துப் பார்க்காமல், அவன் இளையவன் என்று அவனை இகழ்ந்தால் உங்களால் வெற்றி பெற முடியாது. (இனியாவது) உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

பாடலின் பின்னணி:-

ஒரு சமயம், அதியமானைப் போரில் வெல்லும் பொருட்டு, அவன் ஊராகிய தகடூரை பகைமன்னர்கள் முற்றுகை இட்டனர். போர் மூண்டது. போரில் அதியமான் வெற்றி பெற்றான். அவ்வையார், பகைமன்னர்களிடம் சென்று, “ நீங்கள், அதியமான் இளையவன் என்று எண்ணி, அவன் இருந்த ஊரிலேயே அவனை வெல்ல நினைத்தீர்கள். சிறிதளவு நீர் இருந்தாலும், அந்த நீரில் முதலை யானையை எளிதாக வென்றுவிடும். அதுபோல், அதியமானை அவன் ஊரில் உங்களால் வெல்ல முடியவில்லை. வீரர்களே, நீங்கள் இனியாவது, உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.” என்று எச்சரிக்கிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on June 17, 2013, 07:38:22 PM
(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-ash4/419149_607958459229069_929204720_n.jpg)

புறநானூறு, 105. (சேயிழை பெறுகுவை வாள்நுதல் விறலி!)
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வேள் பாரி.
திணை: பாடாண்.
துறை : விறலியாற்றுப்படை.
======================================

சேயிழை பெறுகுவை வாள் நுதல் விறலி!
தடவுவாய்க் கலித்த மாஇதழ்க் குவளை
வண்டுபடு புதுமலர்த் தண்சிதர் கலாவப்
பெய்யினும் பெய்யா தாயினும் அருவி
கொள்ளுழு வியன்புலத்து உழைகால் ஆக
மால்புடை நெடுவரைக் கோடுதொறு இழிதரும்
நீரினும் இனிய சாயல்
பாரி வேள்பால் பாடினை செலினே.

அருஞ்சொற்பொருள்:-

சேயிழை = சிவந்த பொன்னாலான அணிகலன்
வாள் = ஒளி
தடம் = பெரிய
வாய் = இடம்
தடவுவாய் = நீர்ச்சுனை(நீர் நிலை) நீர்ச் சுனைக்கு ஆகு பெயர்
கலித்த = தழைத்த
மா = கரிய
தண் = குளிrந்த
சிதர் =மழைத்துளி
கலாவ = கலக்க
வியன் = பரந்த, அகன்ற
புலம் =நிலம்
உழைகால் = வாய்க்கால்
மால்பு = கண்ணேணி (கணுவில் புள் செருகிய ஏணி)
மால் = மேகம்
புடைத்தல் = குத்துதல், குட்டுதல், தட்டுதல்
வரை = மலையுச்சி
கோடு = மலை
இழி = இறங்கு
சாயல் = ஒப்பு (மிக).

இதன் பொருள்:-

ஒளி பொருந்திய நெற்றியையுடைய விறலி! பெரிய நீர்ச்சுனைகளில் தழைத்த கரிய இதழ்களுடைய குவளையின் வண்டுகள் மொய்க்கும் புது மலர்களில் குளிர்ந்த மழைத்துளிகள் கலக்குமாறு மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும், மேகங்கள் மோதுகின்ற நெடிய பறம்பு மலையின் சிகரங்களிலிருந்து வரும் அருவிகளின் நீர், கொள் விளைப்பதற்காக உழுத வயல்களில் வாய்க்காலாக ஓடி வருகிறது. அந்த நீரினும் மிகவும் இனிய தன்மை வாய்ந்தவன் வேள் பாரி. நீ அவனை பாடிச் சென்றால் சிவந்த பொன்னாலான அணிகலன்களைப் பெறுவாய்.

”மால்புடை நெடுவரைக் கோடுதொறும்” என்பதற்கு ”கண்ணேணியையுடைய நெடிய மலையினது சிகரங்கள் தோறும்” என்றும் பொருள் கொள்ளலாம்.

பாடலின் பின்னணி:-

ஒரு சமயம், வறுமையால் வாடும் விறலி ஒருத்தியைக் கபிலர் கண்டார். வேள் பாரியிடம் சென்று அவனைப் புகழ்ந்து பாடினால் அவள் பரிசில் பெறலாம் என்று அவளை ஆற்றுபடுத்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

சிறப்புக் குறிப்பு:-

மழை பெய்தாலும் மழை பெய்யாவிட்டாலும் பறம்பு மலையின் சிகரங்களிருந்து அருவிகள் வழியாக நீர் வந்துகொண்டே இருக்கும் என்பது பாரியின் பறம்பு நாட்டின் குன்றாத நீர் வளத்தைக் குறிக்கிறது. வருவாய் குன்றினும் வள்ளல் தன்மையில் குறையாதவன் பாரி என்ற கருத்தும் இப்பாடலில் தொக்கி நிற்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on June 17, 2013, 07:40:24 PM
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-frc1/944243_607971739227741_837430156_n.jpg)

புறநானூறு, 106. (கடவன் பாரி கைவண்மையே!)
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வேள் பாரி.
திணை: பாடாண்.
துறை : இயன் மொழி.
======================================

நல்லவும் தீயவும் அல்ல குவிஇணர்ப்
புல்லிலை எருக்கம் ஆயினும் உடையவை
கடவுள் பேணேம் என்னா ஆங்கு
மடவர் மெல்லியர் செல்லினும்
கடவன் பாரி கைவண் மையே.

அருஞ்சொற்பொருள்:-

குவிதல் = கூம்புதல்
இணர் = பூங்கொத்து
பேணல் = விரும்பல்
மடவர் = அறிவில்லாதவர்
மெல்லியர் = அற்ப குணம் உடையவர்

இதன் பொருள்:-

நல்லது தீயது என்ற இருவகையிலும் சேராத, சிறிய இலையையுடைய எருக்கம் செடியில் உள்ள மலராத பூங்கொத்தாயினும் அதுதான் தன்னிடம் உள்ளது என்று அதை ஒருவன் கடவுளுக்கு அளிப்பானானால், கடவுள் அதை விரும்ப மாட்டேன் என்று கூறுவதில்லை. அது போல், அறிவில்லாதவரோ அல்லது அற்ப குணமுடையவரோ பாரியிடம் சென்றாலும் அவர்களுக்கு கொடை வழங்குவதைத் தன் கடமையாகக் கருதுபவன் பாரி.

பாடலின் பின்னணி:-

இப்பாடலில், தன்னை நாடி வருவோர் அறிவில்லாதவரானாலும் அற்ப குணமுடையவராக இருந்தாலும் அவர்களுக்கு வேண்டுவன அளிப்பதைத் தன் கடமையாகக் கொண்டவன் வேள் பாரி என்று கபிலர் கூறுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

நறுமணம் இல்லாத காரணத்தால் எருக்கம் பூ நல்ல பூக்களின் வகையில் சேராதது. ஆனால், எருக்கம் பூ கடவுளுக்குச் சூட்டப்படும் பூக்களில் ஒன்று என்ற காரணத்தால் அது தீய பூக்களின் வகையிலும் சேராதது. ஆகவேதான், அதை “நல்லவும் தீயவும் அல்ல” என்று கபிலர் கூறுவதாக அவ்வை. சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் கூறுகிறார். மற்றும், பித்தரும் நாணத்தைத் துறந்து மடலேறுவோரும் எருக்கம் பூ அணிவது மரபு. ஆகவேதான், “எருக்கம் ஆயினும்” என்று இழிவுச்சிறப்பு உம்மையைக் கபிலர் இப்பாடலில் பயன்படுத்தி உள்ளாதாகவும் அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் தம் நூலில் குறிப்பிடுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on June 17, 2013, 08:14:19 PM
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash3/580449_608443512513897_68317595_n.jpg)

புறநானூறு, 107. (பாரியும் மாரியும்)
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வேள் பாரி.
திணை: பாடாண்.
துறை : இயன் மொழி.
======================================

பாரி பாரி என்றுபல ஏத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டு ஈண்டு உலகுபுரப் பதுவே.

அருஞ்சொற்பொருள்:-

ஏத்துதல் = உயர்த்திக் கூறுதல்
செந்நா = செம்மையான நா , நடுநிலை தவறாத நா
மாரி = மழை
ஈண்டு = இவ்விடம், இவ்வுலகம்
புரத்தல் = காத்தல்.

இதன் பொருள்:-

நடுநிலை தவறாத (நாவையுடைய) புலவர் பலரும் “பாரி, பாரி” என்று பாரி ஒருவனையே உயர்வாகப் புகழ்கிறார்கள். பாரி ஒருவன் மட்டும் (தன் கொடையால்) இவ்வுலகைக் காக்கவில்லை; இவ்வுலகைக் காப்பதற்கு மழையும் உண்டு.

பாடலின் பின்னணி:-

இப்பாடலில், “புலவர் பலரும் பாரி ஒருவனையே புகழ்கிறார்கள். ஆனால், இவ்வுலகைக் காப்பதற்கு பாரி மட்டுமல்லாமல் மாரியும் உண்டு” என்று வஞ்சப் புகழ்ச்சியணியால் பாரியைக் கபிலர் சிறப்பிக்கிறார்.

சிறப்புக் குறிப்பு:-

இப்பாடலில், கபிலர் பாரியை இகழ்வது போல் புகழ்கிறார். இது வஞ்சப் புகழ்ச்சி அணிக்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டு. சில சமயங்களில் மழை அதிகமாகப் பெய்து கேடு விளைவிக்கும் ஆற்றலையுடையது. ஆனால், பாரியின் கொடையால் அத்தகைய கேடுகள் விளையும் வாய்ப்பில்லை. ஆகவேதான், செந்நாப் புலவர் பாரி ஒருவனையே புகழ்ந்தார் என்ற கருத்தும் இப்பாடலில் காணப்படுகிறது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on June 17, 2013, 08:19:45 PM
புறநானூறு, 108. (பாரியும் மாரியும்)
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வேள் பாரி.
திணை: பாடாண்.
துறை : இயன் மொழி.
======================================

குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி
ஆரம் ஆதலின் அம்புகை அயலது
சாரல் வேங்கைப் பூஞ்சினைத் தவழும்
பறம்பு பாடினர் அதுவே; அறம்பூண்டு
பாரியும் பரிசிலர் இரப்பின்
‘வாரேன்’ என்னான் அவர்வரை யன்னே

அருஞ்சொற்பொருள்:-

குறத்தி = குறிஞ்சிப்பெண்
மாட்டுதல் = செருகுதல்
வறல் = வற்றல்
வறக்கடை= வறண்ட காலம்
கொள்ளி = கொள்ளிக் கட்டை
ஆரம் = சந்தனமரம்
அயல் = அருகில்
சாரல் = மலைச் சரிவு
வேங்கை = வேங்கை மரம்
சினை = கிளைவாரேன் = வரமாட்டேன்
வரை = எல்லை

இதன் பொருள்:-

குறிஞ்சிப்பெண் ஒருத்தி அடுப்பில் செருகிய வற்றிய கொள்ளிக்கட்டை சந்தனமாகையால், அதன் அழகிய புகை அருகில் உள்ள மலைச்சரிவில் இருக்கும் வேங்கை மரத்தின் பூக்களுடைய கிளைகளுக்கெல்லாம் பரவுகிறது. அத்தகையது பறம்பு நாடு. தன்னைப் பாடி வந்த பரிசிலர்க்குப் பாரி பறம்பு நாட்டையே பரிசாக அளித்ததால் அது இப்பொழுது அவர்க்கு உரியதாயிற்று. பரிசிலர் பாடி வந்து, “உன்னையே பரிசாக எமக்குத் தர வேண்டுமென்று” கேட்டால், அறத்தை மேற்கொண்டு, பாரி அவரிடம் வரமாட்டேன் என்று கூற மாட்டான்.

பாடலின் பின்னணி:-

தன்னைப் பாடி வந்த இரவலர்க்குப் பறம்பு நாட்டிலுள்ள முந்நூறு ஊர்களையும் பாரி பரிசாக அளித்துவிட்டான். இனி வருவோர், தன்னையே பரிசாகக் கேட்டாலும், பாரி தயங்காமல் தன்னை அவர்களுக்குப் பரிசாக அளிக்கும் கொடைத்தன்மையுடையவன் என்று கபிலர் பாரியின் கொடைத்தன்மையை இப்பாடலில் புகழ்ந்து பாடுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

சந்தன மரக்கட்டை எரிக்கப்படுவதால் எழும் புகையைத் தவிர பறம்பு நாட்டில் பகைவர் மூட்டிய தீயினால் எழும் புகை இல்லை என்ற கருத்தும் இப்பாடலில் காணப்படுகிறது.

அன்புடைமை என்னும் அதிகாரத்தில், “அன்பில்லாதவர் எல்லாவற்றையும் தமக்கே உரியதாகக் கொள்வர். ஆனால், அன்புடையவர் தன் எலும்பையும் (தன்னையே) வேண்டுமானாலும் பிறர்க்கு அளிப்பர்” என்பதை

அன்பிலார் எல்லாம் தமக்கு உரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு. (குறள் - 72)

என்ற குறளில் வள்ளுவர் கூறுகிறார். வள்ளுவரின் கருத்துக்கும் இப்பாடலில் கபிலர் கூறும் கருத்துக்கும் உள்ள ஒற்றுமை குறிப்பிடத் தக்கது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on June 17, 2013, 08:25:21 PM
(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-frc3/431929_609098752448373_282369490_n.png)

புறநானூறு, 109. (மூவேந்தர் முன் கபிலர்!)
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வேள் பாரி.
திணை: நொச்சி.
துறை : மகண் மறுத்தல். ஒரு தலைவன் அவனைவிட எளியவனின் மகளை வேண்ட, அவ்வெளியவன் தன் மகளை அத்தலைவனுக்கு மணம் செய்விக்க மறுத்துக் கூறுதல்.
==========================================

அளிதோ தானே, பாரியது பறம்பே;
நளிகொள் முரசின் மூவிரும் முற்றினும்
உழவர் உழாதன நான்குபயன் உடைத்தே;
ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே;
இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழம்ஊழ்க் கும்மே;
மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே;

நான்கே, அணிநிற ஒரி பாய்தலின் மீதுஅழிந்து
திணிநெடுங் குன்றம் தேன்சொரி யும்மே.
வான்கண் அற்றுஅவன் மலையே; வானத்து
மீன்கண் அற்றுஅதன் சுனையே; ஆங்கு
மரந்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும்
புலந்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும்

தாளிற் கொள்ளலிர்; வாளிற் றாரலன்;
யான்அறி குவன்அது கொள்ளு மாறே;
சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி,
விரையொலி கூந்தல்நும் விறலியர் பின்வர,
ஆடினிர் பாடினிர் செலினே
நாடும் குன்றும் ஒருங்குஈ யும்மே.

அருஞ்சொற்பொருள்:-

அளி = இரக்கம்
நளி = பெருமை
வெதிர் = மூங்கில்
ஊழ்த்தல் = முதிர்தல்
வீழ்க்கும் = தாழ இருக்கும் (நிலத்துள் ஆழச் சென்றிருக்கும்)
அணி =அழகு
ஓரி = குரங்கு
மீது = மேல்
கண் = இடம்
அற்று = அத்தன்மைத்து
கண் - அசை நிலை
புலம் = இடம்
தாள் = முயற்சி
சுகிர்தல் = வடித்தல்
புரி = முறுக்கு
சுகிர்புரி = தொய்வற்ற இறுக்கமான நரம்பு
விரை = மணம்
ஒலித்தல் = தழைத்தல்

இதன் பொருள்:-

அளிதோ=====> வீழ்க்கும்மே

பாரியின் பறம்பு மலை இரங்கத் தக்கது. பெருமையுடைய முரசுடன் நீங்கள் மூவரும் சேர்ந்து முற்றுகை இட்டாலும், உழவர் உழாமல் விளையும் பயனுள்ள நான்கு பொருள்கள் பறம்பு நாட்டில் உள்ளன. ஒன்று, சிறிய இலையையுடைய மூங்கிலில் நெல் விளையும். இரண்டு, இனிய சுளைகள் உள்ள பலாவில் பழுத்த பழங்கள் இருக்கும். மூன்று, வளமான வள்ளிக் கொடியிலிருந்து கிழங்குகள் கீழே தாழ்ந்து இருக்கும்

நான்கே=====> ஆயினும்

நான்கு, அழகிய நிறமுள்ள குரங்குகள் தாவுவதால் தேனடைகள் மிகவும் அழிந்து, கனத்த நெடிய மலையிலிருந்து தேன் சொரியும்.
பாரியின் பறம்பு மலை அகல, நீள, உயரத்தில் வானத்தைப் போன்றது. அதிலுள்ள நீர்ச்சுனைகள் விண்மீன்கள் போன்றன. அந்த மலையில், நீங்கள் மரங்கள் தோறும் யானைகளைக் கட்டினாலும், இடமெல்லாம் தேர்களை நிறுத்தினாலும்

தாளிற்=====> ஒருங்குஈ யும்மே

உங்கள் முயற்சியால் பறம்பு நாட்டைப் பெற முடியாது. நீங்கள் வாளால் போரிட்டாலும் அவன் தன் நாட்டை உங்களுக்குத் தரமாட்டன். அதை அடையும் வழியை நான் அறிவேன். தொய்வற்றதாகவும் இறுக்கமாகவும் முறுக்கப் பட்ட நரம்பினையுடைய சிறிய யாழைச் செய்து, அதை மீட்டி, மணமிக்க தழைத்த கூந்தலையுடைய உங்கள் விறலியர் பின் வர ஆடியும் பாடியும் சென்றால், பாரி பறம்பு நாட்டையும் பறம்பு மலையையும் ஒருங்கே உங்களுக்கு அளிப்பான்.

பாடலின் பின்னணி:-

சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பாரியின் மகளிரை மணக்க விரும்பினர். தன் மகளிரை மூவேந்தரில் எவருக்கும் மணம் செய்விக்கப் பாரி மறுத்தான். ஆகவே, மூவேந்தரும் ஒருவர் ஒருவராகப் பாரியோடு போரிட்டுத் தோல்வியுற்றனர். அது கண்ட கபிலர், "நீங்கள் பாணர்களைப் போல உங்கள் விறலியரோடு சென்று பாடலும் ஆடலும் செய்தால், பாரி தன் நாட்டையும் மலையையும் உங்களிக்கு அளிப்பான்” என்று இப்பாடலில் கூறுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

இங்கு “அளிதோ” என்பது வியப்பின் காரணத்தால் கூறப்பட்டது.

ஒரு நாட்டிற்கு அரண் எப்படி இருக்க வேண்டும் என்பதை வள்ளுவர்,

கொளற்கரியதாய் கொண்ட கூழ்த்தாகி, அகத்தார்
நிலைக்கெளிதாம் நீர தரண். (குறள் - 745)

என்ற குறளில் கூறுகிறார். அதாவது, அரண் என்பது பகைவரால் பற்றுதற்கு அரியதாய் உள்ளிருப்போர்க்கு வேண்டிய அளவு உணவு உடையதாய் உள்ளிருப்பவர்கள் தங்கிப் போர்செய்வதற்கு எளியதாய் இருக்க வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார். வள்ளுவரின் கருத்தும் இப்பாடலில் கபிலர் கூறும் கருத்தும் ஒத்திருப்பது சிந்திக்கத் தக்கது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on June 17, 2013, 09:38:13 PM
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-prn1/945871_609101909114724_253881825_n.jpg)

புறநானூறு, 110. (யாமும் பாரியும் உளமே!)
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வேள் பாரி.
திணை: நொச்சி.
துறை : மகண் மறுத்தல்.
====================================

கடந்துஅடு தானை மூவிரும் கூடி
உடன்றனிர் ஆயினும், பறம்புகொளற்கு அரிதே
முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நன்னாடு
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்
யாமும் பாரியும் உளமே;
குன்றும் உண்டுநீர் பாடினிர் செலினே.

அருஞ்சொற்பொருள்:-

கடந்து அடுதல் = வஞ்சியாது எதிர் நின்று போரிடுதல்
தானை = படை
உடன்றல் = போரிடுதல்
தண் = குளிர்ந்த

இதன் பொருள்:-

வஞ்சியாது எதிர்த்து நின்று போரிடும் படைகளையுடைய நீங்கள் மூவரும் ஒன்று கூடிப் போரிட்டாலும் பறம்பு நாடு பெறுதற்கு அரிது. குளிர்ந்த பறம்பு நன்னாடு முந்நூறு ஊர்களை உடையது. அங்குள்ள முந்நூறு ஊர்களையும் பரிசிலர் முன்னரே பெற்றனர். எஞ்சியிருப்பது, பாரியும் எம் போன்ற புலவர்களும்தான். நீங்கள் பரிசிலரைப் போல் பாடி வந்தால் பாரியையும், எம் போன்ற புலவர்களையும் பறம்பு மலையையும் பெறலாம்.

பாடலின் பின்னணி:-

சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தம் பெரும் படையுடன் பறம்பு மலையை முற்றுகை இட்டனர். அச்சமயம், “நீங்கள் உங்கள் பெரும்படையுடன் எதிர்த்து நின்று போரிட்டாலும் பறம்பு நாட்டைப் பெற முடியாது. பறம்பு நாட்டில் உள்ள முந்நூறு ஊர்களையும் பரிசிலர் பெற்றனர். இனி என்னைப் போன்ற புலவர்களும் பாரியும் மட்டுமே உள்ளோம்; நீங்களும் பரிசிலரைப் போல் வந்து பாடினால் எஞ்சி யுள்ள எங்களையும் பறம்பு மலையையும் பெறலாம்.” என்று இப்பாடலில் கூறுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

பாரி ஒரு கொடை வள்ளல் என்பது இப்பாடலும் ஒரு சான்று.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on June 17, 2013, 09:41:32 PM
(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-frc3/971081_609680365723545_518051782_n.jpg)

புறநானூறு, 111. (விறலிக்கு எளிது!)
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வேள் பாரி.
திணை: நொச்சி.
துறை : மகண் மறுத்தல்.
====================================

அளிதோ தானே, பேர்இருங் குன்றே;
வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே;
நீலத்து இணைமலர் புரையும் உண்கண்
கிணைமகட்கு எளிதால், பாடினள் வரினே.

அருஞ்சொற்பொருள்:-

அளிது = இரங்கத் தக்கது
இரு = பெரிய
வேறல் = வெல்லுத
இணை = இரண்டு
புரையும் = ஒத்த
உண்கண் = மை உண்ட கண் (மை தீட்டிய கண்)
கிணை = ஒரு வகைப் பறை

இதன் பொருள்:-

மிகப் பெரிய பறம்பு மலை இரங்கத் தக்கது. அதை வேற்படையால் வெல்லுதல் வேந்தர்களுக்கு அரிது. நீலமலர்களைப் போன்ற மை தீட்டிய கண்களையுடய பெண்கள் கிணைப் பறையோடு பாடி வந்தால் பறம்பு மலையைப் பெறுவது எளிது.

பாடலின் பின்னணி:-

”பறம்பு மலை இரங்கத் தக்கது; அது வேந்தர்களால் கைப்பற்ற முடியாதது. ஆனால், பறையுடன் பாடி வரும் பெண்களுக்கு எளிதில் பரிசாகக் கிடைக்கும்” என்று தன் வியப்பைக் கபிலர் கூறுவது போல் இப்பாடல் அமைந்துள்ளது.

சிறப்புக் குறிப்பு:-

அழகிய பெண்களாக இருந்தாலும் அவர்களும் பரிசிலராகப் பாடி வந்து கேட்டால்தான் பறம்பு மலையைப் பெறமுடியுமே ஒழிய, தன் அழகால் பாரியை மயக்கி அம்மலையைப் பெற முடியாது என்ற கருத்தும் இப்பாடலில் உள்ளது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on June 17, 2013, 09:45:38 PM
(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-prn2/968867_609687989056116_1264739687_n.jpg)

புறநானூறு, 112. (உடையேம் இலமே!)
பாடியவர்: பாரி மகளிர்.
திணை: பொதுவியல்.
துறை : கையறு நிலை.
====================================

அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்
எந்தையும் உடையேம்எம் குன்றும் பிறர்கொளார்;
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின்
வென்றுஎறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே!

அருஞ்சொற்பொருள்:-

அற்றை = அன்று
திங்கள் = மாதம்
எறிதல் = அடித்தல்
இலம் = இல்லாதவர்கள் ஆனோம்

இதன் பொருள்:-

ஒரு மாதத்திற்கு முன் வெண்நிலவு ஓளிவீசிக் கொண்டிருந்த பொழுது நாங்கள் எங்கள் தந்தையை உடையவர்களாக இருந்தோம்; எங்கள் (பறம்பு) மலையையும் பிறர் கொள்ளவில்லை. அதேபோல், இன்று வெண்நிலவு வீசுகிறது. ஆனால், வெற்றி முரசு கொட்டும் வேந்தர்கள் எங்கள் மலையைக் கொண்டனர்; நாங்கள் எங்கள் தந்தையை இழந்தோம்.

பாடலின் பின்னணி:-

பாரி இறந்த பின்னர், பாரியின் மகளிரைக் கபிலர் பாதுகாவலான இடத்தில் சேர்த்து அவர்களைக் காப்பாற்றி வந்தார். பாரி இறந்து ஒரு மாதம் ஆகிய பிறகு, ஒரு நாள் முழு நிலவில் அவர்களுக்குத் தங்கள் தந்தையின் நினைவும் நாட்டின் நினைவும் வந்து அவர்களை வாட்டியது. அவர்களின் மனவருத்தத்தை இப்பாடலில் வெளிப்படுத்துகிறார்கள்.

சிறப்புக் குறிப்பு:-

மூவேந்தர்களும் பாரியைப் போரில் வெல்ல முடியவில்லை. ஆனால், அவர்கள் அவனை சூழ்ச்சியால் வென்றனர். “வென்றெறி முரசின் வேந்தர்” என்பது மூவேந்தர்களும் தங்கள் வீரத்தால் பாரியை வெல்லவில்லை என்பதைச் சுட்டிக் காட்டும் இகழ்ச்சிக் குறிப்பு.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on June 17, 2013, 09:47:46 PM
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-prn2/9082_610450905646491_1765168491_n.jpg)

புறநானூறு, 113. (பறம்பு கண்டு புலம்பல்!)
பாடியவர்: கபிலர்.
திணை: பொதுவியல்.
துறை : கையறு நிலை.
====================================

மட்டுவாய் திறப்பவும், மைவிடை வீழ்ப்பவும்,
அட்டுஆன்று ஆனாக் கொழுந்துவை ஊன்சோறும்
பெட்டாங்கு ஈயும் பெருவளம் பழுனி
நட்டனை மன்னோ முன்னே; இனியே,
பாரி மாய்ந்தெனக், கலங்கிக் கையற்று

நீர்வார் கண்ணேம் தொழுதுநிற் பழிச்சிச்
சேறும் வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே;
கோல்திரள் முன்கைக் குறுந்தொடி மகளிர்
நாறுஇருங் கூந்தல் கிழவரைப் படர்ந்தே

அருஞ்சொற்பொருள்:-

மட்டு = கள்
வாய் = தாழியின் வாய்
மை = செம்மறியாடு
விடை = கடா
வீழ்ப்ப = வீழ்த்த
அடுதல் = சமைத்தல்
ஆன்று = நீங்கி
ஆனாமை = குறையாமை
பெட்டல் = மிக விரும்பல்
பழுனுதல் = முதிர்தல், முடிவடைதல்
நட்டல் = நட்பு செய்தல்
மன்னோ - அசைச்சொல்
இனி = இப்போது
கையற்று = செயலற்று
வார்தல் = வடிதல்
பழிச்சுதல் = வாழ்த்துதல்
சேறல் = செல்லல், நடத்தல்
வாழி, ஓ இவை இரண்டும் அசைச் சொற்கள்
பெயர் = புகழ்
கோல் = அழகு
திரள் = திரட்சி
நாறுதல் = மணத்தல்
இரு = கரிய
கிழவர் = உரியவர்
படர்தல் = நினைத்தல்

இதன் பொருள்:-

மட்டுவாய்=====> கையற்று

பறம்பு மலையே! முன்பு, உன்னிடத்துக் கள் நிறைந்த தாழியின் வாய் திறந்தே இருந்தது; ஆட்டுக் கிடாவை வெட்டிச் சமைத்த கறியுடன் கூடிய கொழுமையான துவையலும் சோறும் குறையாது விரும்பிய அளவு அளிக்கும் முதிர்ந்த வளமும் இருந்தது. அவை மட்டுமல்லாமல் எம்மோடு நட்பாகவும் இருந்தாய். பெரும் புகழ் பெற்ற பறம்பு மலையே! இப்பொழுது, பாரி இறந்துவிட்டதால் கலங்கிச் செயலற்று

நீர்வார்=====> படர்ந்தே

நீர் வடியும் கண்ணோடு உன்னைத் தொழுது வாழ்த்தி, அழகிய திரண்ட முன்கைகளில் சிறிய வலையல்களை அணிந்த பாரி மகளிரின் மணமுள்ள கரிய கூந்தலுக்கு உரிமையுடையவரை நினைத்துச் (தேடிச்)செல்கிறோம்.

பாடலின் பின்னணி:-

பாரி இறந்த பிறகு, பாரி மகளிருக்குத் திருமணம் செய்யும் பொறுப்பைக் கபிலர் ஏற்றார். அவர்களைப் பாதுகாவலாக ஒரு பார்ப்பனக் குடும்பத்தில் ஒப்புவித்து, அவர்களுக்கேற்ற கணவரை தேடுவதற்காக கபிலர் பறம்பு நாட்டைவிட்டு வெளியேறினார். அவர் பாரி மகளிரோடு பறம்பு நாட்டைவிட்டுச் செல்லும் பொழுது பெரும் வருத்தத்திற்கு உள்ளானார். அந்நிலையில் அவருடைய புலம்பலை இப்பாடலில் வெளிப்படுத்துகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

ஒரு பெண்ணின் கூந்தலைத் தீண்டும் உரிமை அவள் கணவனுக்கு மட்டுமே உள்ளது என்பது சங்க காலத்து மரபு. ஆகவே, கணவன் அவன் மனைவியின் கூந்தலுக்கு உரியவன் என்று கருதப்பட்டான். இக்கருத்து குறுந்தொகையில் உள்ள ஒரு பாடலிலும் காணப்படுகிறது.

………..... மென்சீர்க்
கலிமயிற் கலாவத் தன்ன இவள்
ஒலிமென் கூந்தல் உரியவா நினக்கே. (குறுந்தொகை - 225)

பொருள்: மெல்லிய சிறப்பை உடைய ஆரவாரிக்கும் மயிலினது பீலியைப் போன்ற தழைத்த மெல்லிய கூந்தல் உனக்கே உரிமை உடையதாகும் என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்.

இப்பாடலில், கூந்தல் கிழவரைத் தேடிச் செல்கிறோம் என்று கபிலர் கூறுவது பாரி மகளிரை மணப்பதற்கேற்ற கணவரைத் தேடிச் செல்கிறோம் என்பதைக் குறிக்கும்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on June 17, 2013, 09:51:13 PM
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-frc3/970660_610454625646119_2059230895_n.jpg)

புறநானூறு, 114. (நெடியோன் குன்று)
பாடியவர்: கபிலர்.
திணை: பொதுவியல்.
துறை : கையறு நிலை.
====================================

ஈண்டுநின் றோர்க்கும் தோன்றும்; சிறுவரை
சென்றுநின் றோர்க்கும் தோன்றும் மன்ற;
களிறுமென்று இட்ட கவளம் போல
நறவுப்பிழிந்து இட்ட கோதுஉடைச் சிதறல்
வார்அசும்பு ஒழுகு முன்றில்
தேர்வீசு இருக்கை நெடியோன் குன்றே

அருஞ்சொற்பொருள்:-

ஈண்டு = இங்கு
வரை = அளவு
மன்ற - அசைச் சொல் (தெளிவாக என்றும் பொருள் கொள்ளலாம்)
நறவு = கள், தேன்
கோது = சக்கை
வார்த்தல் = ஊற்றுதல்
அசும்பு = சேறு
முன்றில் = முற்றம்
வீசுதல் = வரையாது கொடுத்தல்

இதன் பொருள்:-

யானை மென்று துப்பிய கவளம் சிதறிக் கிடப்பதைப் போல், மதுவடித்த பிறகு ஒதுக்கப்பட்டுச் சிதறிக் கிடக்கும் சக்கையிலிருந்து மதுச் சேறு ஒழுகும் முற்றத்திலிருந்து தேர்களை வரையாது வழங்கும் இயல்புடைய உயர்ந்தோனாகிய பாரியின் குன்று இங்கு நின்றோர்க்கும் தெரியும்; இன்னும் சிறிதளவு தூரம் சென்று நின்றவர்களுக்கும் அது தெளிவாகத் தெரியும்.

பாடலின் பின்னணி:-

நீண்ட தூரம் சென்ற பிறகும் பறம்பு மலை கண்ணுக்குத் தெரிவதைக் கண்டு பாரி மகளிர் வியப்படைந்தனர். அது கண்ட கபிலர், பாரி உயிரோடிருந்த பொழுது அம்மலையின் நிலையையும் பாரியின் வள்ளல் தன்மையையும் இப்பாடலில் கூறுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

பாரி உயிரோடு இருந்த பொழுது பறம்பு மலை புகழ் மிக்கதாய் எங்கும் விளங்கிற்று. அதைக் கண்டிராதவர்களும் அதன் புகழை அறிந்திருந்தார்கள். அவன் இறந்த பிறகு, மற்ற மலைகளைப் போல் கண்ணுக்குப் புலப்படும் சாதரண மலையாகவே பறம்பு மலையும் உள்ளது என்ற குறிப்பும் இப்பாடலில் காணப்படுகிறது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on June 19, 2013, 07:21:47 PM
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash3/942309_611041112254137_353485426_n.jpg)

புறநானூறு, 115. (இன்னான் ஆகிய இனியோன் குன்று)
பாடியவர்: கபிலர்.
திணை: பொதுவியல்.
துறை : கையறு நிலை.
====================================

ஒருசார் அருவி ஆர்ப்ப, ஒருசார்
பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார்
வாக்க உக்க தேக்கள் தேறல்
கல்அலைத்து ஒழுகும் மன்னே; பல்வேல்
அண்ணல் யானை வேந்தர்க்கு
இன்னான் ஆகிய இனியோன் குன்றே!

அருஞ்சொற்பொருள்:-

சார் = பக்கம்
ஆர்த்தல் = ஒலித்தல்
மண்டை = இரப்போர் கலம்
ஆர் = நிறைவு
வாக்க = வார்க்க (வடிக்க)
உக்க = அழிந்த (சிந்திய)
தேக்கள் = இனிய கள்
தேறல் = கள், தேன்
மன் - அசைச் சொல் ( கழிவைக் குறிக்கும் அசைச் சொல்)

இடன் பொருள்:-

பல வேற்படைகளுக்குத் தலைமையும் யானைகளையுமுடைய வேந்தர்களுக்குக் கொடியவனாகவும் பரிசிலர்க்கு இனியவனாகவும் இருந்த பாரியின் குன்றில் ஒரு பக்கம் ஒலிக்கும் அருவி முழங்கும்; மற்றொரு பக்கம் இரப்போர் கலங்களில் வார்த்த இனிய கள் அவர்களின் கலங்கள் நிரம்பி வழிந்து ஒழுகி அருவி போல் மலையிலுள்ள கற்களை உருட்டிக்கொண்டு ஒழுகும்

சிறப்புக் குறிப்பு:-

இரப்போர் கலங்களில் இட்ட கள் நிரம்பி வழிந்து அருவி போல் ஓடியது என்று கபிலர் கூறுவது பாரியின் வரையாது கொடுக்கும் வள்ளல் தன்மையையும் பறம்பு நாட்டின் வளத்தையும் குறிக்கிறது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on June 19, 2013, 07:23:19 PM
(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-ash3/6579_612437468781168_988344235_n.jpg)

புறநானூறு, 116. (நோகோ யானே! தேய்கமா காலை!)
பாடியவர்: கபிலர்.
திணை: பொதுவியல்.
துறை : கையறு நிலை.
====================================

தீநீர்ப் பெருங்குண்டு சுனைப்பூத்த குவளைக்
கூம்பவிழ் முழுநெறி புரள்வரும் அல்குல்
ஏந்தெழில் மழைக்கண் இன்னகை மகளிர்
புல்மூசு கவலைய முள்மிடை வேலிப்
பஞ்சி முன்றில் சிற்றில் ஆங்கண்

பீரை நாறிய சுரைஇவர் மருங்கின்
ஈத்திலைக் குப்பை ஏறி உமணர்
உப்புஓய் ஒழுகை எண்ணுப மாதோ!
நோகோ யானே! தேய்கமா காலை!
பயில்பூஞ் சோலை மயிலெழுந்து ஆலவும்

பயில்இருஞ் சிலம்பிற் கலைபாய்ந்து உகளவும்
கலையுங் கொள்ளா வாகப் பலவும்
காலம் அன்றியும் மரம்பயம் பகரும்
யாணர் அறாஅ வியன்மலை அற்றே
அண்ணல் நெடுவரை ஏறித் தந்தை

பெரிய நறவின் கூர்வேற் பாரியது
அருமை அறியார் போர்எதிர்ந்து வந்த
வலம் படுதானை வேந்தர்
பொலம்படைக் கலிமா எண்ணு வோரே

அருஞ்சொற்பொருள்:-

தீ = இனிமை
குண்டு = ஆழம்
குவளை = செங்கழுநீர்
கூம்பு = அரும்பு
அவிழ்தல் = மலர்தல்
நெறித்தல் = முறித்தல், ஒடித்தல்
அல்குல் = இடை
ஏந்தெழில் = மிகுந்த அழகு
மழை = கருமை
மூசு = மொய்த்தல், சூழ்தல்
கவலை = பிரிவு பட்ட வழி, பல தெருக்கள் கூடும் இடம்
மிடைதல் = நெருங்கல், செறிதல்
முன்றில் = முற்றம்
சிற்றில் = சிறிய வீடு
நாறுதல் = முளைத்தல்
இவர்தல் = ஏறுதல்
மருங்கு = பக்கம்
ஈந்து = ஈச்ச மரம்
ஒய்தல் = செலுத்தல், போக்குதல், இழுத்தல்
ஒழுகை = வரிசை, வண்டி
நோகு = நோவேன்
ஓ - அசை
காலை = வாழ் நாள்
மா - அசை
பயில் = பழக்கம்
ஆலல் = ஆடல்
சிலம்பு = மலை
கலை = குரங்கு
உகளல் = தாவுதல்
பயம் = பயன்
பகர்தல் = கொடுத்தல்
யாணர் = புது வருவாய்
வியன் = அகன்ற, பெரிய
நறவு = கள், மது
வலம் = வலி
பொலம் = அழகு
படை = குதிரைச் சேணம்
கலிமா = செருக்குடைய குதிரை

இடன் பொருள்:-

தீநீர்=====> ஆங்கண்

இனிய நீருடைய ஆழமான சுனைகளில் பூத்த, புறவிதழ்கள் ஒடிக்கபடாத முழு செங்கழுநீர் மலர்களால் செய்த ஆடைகள் தங்கள் இடுப்பில் புரளுமாறு, மிகுந்த அழகும், கருமை நிறமுள்ள கண்களும், இனிய சிரித்த முகமும் உடைய பாரி மகளிர் அணிந்திருக்கிறர்கள். அவர்கள் இருக்கும் சிறிய வீடு பல தெருக்கள் கூடுமிடத்தில் புல் முளைத்த பாதைகளுடையதாகவும்

பீரை=====> ஆலவும்

முற்றத்தில் பஞ்சு பரந்தும் முள் செறிந்த வேலியால் அடைக்கப் பட்டதாகவும் உள்ளது. அங்கே பீர்க்கங்காய்களும் சுரைக்காய்களும் கொடிகளில் முளைத்திருக்கின்றன. அவற்றிற்குப் பக்கத்தில் ஈச்ச மரத்தின் இலைகள் நிறைந்த குப்பை மேடுகளில் ஏறிப் பாரி மகளிர் அவ்வழியே வரிசையாகச் செல்லும் உப்பு வண்டிகளை எண்ணுகிறார்கள். முன்பு, அவர்கள் வாழ்ந்த பறம்பு மலையில், அவர்களுக்குப் பழக்கமான பூஞ்சோலைகளில் மயில்கள் எழுந்து ஆடின

பயில்=====> தந்தை

மற்றும் குரங்குகள் தாவித் திரிந்தன; அக்குரங்களும் தின்னமுடியாத அளவுக்கு அங்குள்ள மரங்கள் பயனுள்ள பழங்களும் காய்களும் பருவமல்லாக் காலத்தும் கொடுத்தன. அத்தகைய வளம் மிகுந்த இடமாகப் பறம்பு மலை இருந்தது. குறையாது புதுவருவாயை அளிக்கும் அகன்ற மலையைப் போன்ற தலைமையுடைய பாரியின் நெடிய மலையின் உச்சியில் ஏறி

பெரிய=====> எண்ணு வோரே

மிகுந்த அளவில் கள்ளையும் கூரிய வேலினையும் உடைய தந்தை பாரியின் அருமையை அறியாது அவனை எதிர்த்துப் போர் புரிய வந்த வலிமைமிக்க படையுடைய வேந்தர்களின் அழகிய சேணங்களணிந்த செருக்குடைய குதிரைகளை எண்ணிய பாரி மகளிர் இப்பொழுது குப்பை மேட்டில் ஏறி உப்பு வண்டிகளை எண்ணுகிறார்களே! இதைக் காணும் பொழுது நான் வருந்துகிறேன். என் வாழ்நாள்கள் (இன்றோடு) முடியட்டும்.

பாடலின் பின்னணி:-

பாரி மகளிரை ஒரு பார்ப்பனக் குடும்பத்தில் ஒப்படைத்த பிறகு, அவர்களுக்குத் திருமணம் செய்விப்பதற்காகக் கபிலர் பல குறுநிலமன்னர்களை காணச் சென்றார். ஒரு சமயம், அவர் மீண்டும் பாரி மகளிரைப் பார்க்க வந்தார். அப்பொழுது அவர்கள் ஒரு குப்பை மேட்டில் ஏறி நின்று அவ்வழியே செல்லும் உப்பு வண்டிகளை எண்ணிப் பொழுது போக்கிக்கொண்டிருந்தனர். அது கண்ட கபிலர், அம்மகளிர் தம் தந்தையொடு இருந்த பொழுது, தந்தையொடு போர் புரிய வந்த வேந்தர்களின் குதிரைகளை எண்ணிப் பொழுதுபோக்கியது நினைவு கூர்ந்து, அவர்களின் அவல நிலையை நினைத்து வருந்தித் தன் வாழ்நாள் முடியட்டும் என்று இப்பாடலில் கூறுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on June 19, 2013, 07:25:01 PM
(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-frc3/296119_612450888779826_1197342202_n.jpg)

புறநானூறு, 117. (தந்தை நாடு!)
பாடியவர்: கபிலர்.
திணை: பொதுவியல்.
துறை : கையறு நிலை.
====================================

மைம்மீன் புகையினும் தூமம் தோன்றினும்
தென்திசை மருங்கின் வெள்ளி ஓடினும்
வயல்அகம் நிறையப், புதற்பூ மலர
மனைத்தலை மகவை ஈன்ற அமர்க்கண்
ஆமா நெடு நிறை நன்புல் ஆரக்

கோஒல் செம்மையின் சான்றோர் பல்கிப்
பெயல் பிழைப்பு அறியாப் புன்புலத் ததுவே
பிள்ளை வெருகின் முள்எயிறு புரையப்
பாசிலை முல்லை முகைக்கும்
ஆய்தொடி அரிவையர் தந்தை நாடே

அருஞ்சொற்பொருள்:-

மை = கருநிறம்
மைம்மீன் = சனி
புகைதல் = மாறுபடுதல், சினங்கொள்ளுதல்
தூமம் = புகை (வால் நட்சத்திரம்)
மருங்கு = பக்கம்
வெள்ளி = சுக்கிரன்
அமர் = அமைதி, விருப்பம்
ஆமா = பால் கொடுக்கும் பசு
ஆர்தல் = புசித்தல்
பல்குதல் = மிகுதல்
பெயல் = மழை
புன்புலம் = புன்செய் நிலம்
வெருகு = பூனை
எயிறு = பல்
புரைய = போன்ற
முகை = மலரும் பருவத்தில் உள்ள அரும்பு
ஆய் = அழகு

இதன் பொருள்:-

மைம்மீன்=====> நன்புல் ஆர

சனி சில இராசிகளிலிருந்தாலும், வால் நட்சத்திரம் தோன்றினாலும், சுக்கிரன் தெற்கு நோக்கிச் சென்றாலும் உலகில் வறட்சியும் வறுமையும் மிகுந்து தீய செயல்கள் நிகழும் என்பது சோதிடர்களின் நம்பிக்கை. அத்தகைய நிகழ்ச்சிகள் நடைபெறும் காலத்திலும், பறம்பு நாட்டில் வயல்களில் விளைவு மிகுந்திருக்கும்; புதர்களில் பூக்கள் நிரம்ப மலர்ந்திருக்கும்; வீடுகளில் கன்றுகளை ஈன்ற பசுக்கள் தங்கள் கன்றுகளை விருப்பத்துடன் நோக்கும் கண்களோடு நல்ல புல்லை நிரம்பத் தின்னும்

கோஒல்=====> தந்தை நாடே

செம்மையான ஆட்சி நடைபெறுவதால் சான்றோர்கள் மிகுதியாக இருப்பர்; புன்செய் நிலங்களில்கூட மழை தவறாமல் பெய்யும். பூனைக்குட்டியின் முள்போன்ற பற்களை போன்றதும், பசுமையான முல்லை அரும்பு போன்றதும் ஆகிய பற்களை உடைய, அழகிய வளையல்களை அணிந்த பாரி மகளிரின் தந்தையின் நாடு அவன் ஆட்சிக் காலத்தில் வளம் குன்றாமல் இருந்தது. ஆனால், இன்று வளம் குன்றியது

சிறப்புக் குறிப்பு:-

சனி இடபம் (ரிஷபம்), சிம்மம், மீனம் ஆகிய மூன்று இராசிகளில் இருக்கும் பொழுது உலகில் வறட்சியும் வறுமையும் தீய செயல்களும் நிகழும் என்பது சோதிடர்களின் நம்பிக்கை. மற்றும், வானில் வால் வெள்ளி (வால் நட்சத்திரம்) தோன்றினாலும் சுக்கிரன் தெற்குத் திசையில் சென்றாலும் உலகுக்கு நல்லதல்ல என்ற கருத்தும் சோதிட நூல்களில் கூறப்படுகின்றன. இப்பாடலில் கபிலர் கூறும் கருத்துகள் சிலப்பதிகாரத்திலும் காணப்படுகின்றன.
கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும் (சிலப்பதிகாரம் 10: 102-103)
என்ற வரிகளுக்கு உரை கூறிய அடியார்க்கு நல்லார் “ கோள்களிற் சனிக்கோள் இடபம், சிம்மம் மீனமென்னும் இவற்றினோடு மாறுபடினும், ஆகாயத்தே தூமக்கோள் எழினும், விரிந்த கதிருடய வெள்ளிக்கோள் தென்றிசைக் கண்ணே பெயரினும்” என்று கூறுவது இங்கு ஒப்பு நோக்கத் தக்கது. இத்தகைய நிகழ்வுகள் நடைபெற்றாலும் காவிரி நீர்வளம் குன்றாது என்ற கருத்து சிலப்பதிகாரத்தில் கூறப்படுகிறது.

இப்பாடலில், பாரி செங்கோல் செலுத்தியதால் சான்றோர் பெருகி இருந்தனர்; மழை பொய்யாது பெய்தது என்று கபிலர் கூறுவதைப் போல், வள்ளுவரும் மன்னவன் செங்கோல் செலுத்தினால் மழை தவறாது பெய்யும் என்று கூறியிருப்பது ஒப்பு நோக்கத் தக்கது.

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு. (குறள் - 545)

பொருள்: முறைப்படி செங்கோலாட்சி செய்யும் அரசனது நாட்டில் பருவ மழையும் குன்றாத விளையுளும் ஒருங்கு திரண்டு இருக்கும்.

இதே கருத்தை மற்றொரு குறளில் சற்று வேறு விதமாக வள்ளுவர் கூறுகிறார்.

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல். (குறள் - 559)

பொருள்: மன்னவன் முறைதவறி ஆட்சி செய்வானாயின் அவன் நாட்டிற் பருவமழை தவறுவதால் வானம் பொழியாது
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on June 19, 2013, 07:26:26 PM
(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-prn2/181205_613717718653143_1318546430_n.jpg)

புறநானூறு, 118. (தேர்வண் பாரி தண்பறம்பு நாடே!)
பாடியவர்: கபிலர்.
திணை: பொதுவியல்.
துறை : கையறு நிலை.
====================================

அறையும் பொறையும் மணந்த தலைய
எண்நாள் திங்கள் அனைய கொடுங்கரைத்
தெண்ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ
கூர்வேல் குவைஇய மொய்ம்பின்
தேர்வண் பாரி தண்பறம்பு நாடே!

அருஞ்சொற்பொருள்:-

அறை = பாறை
பொறை = சிறுமலை
மணந்த = கூடிய
கீளுதல் = உடைதல், கிழிதல்
மாதோ - அசை
குவை = திரட்சி
மொய்ம்பு = தோள் வலிமை

இதன் பொருள்:-

பாறைகளும் சிறு குன்றுகளும் கூடிய இடத்தில் எட்டாம் பிறைத் திங்கள் போல் வளைந்த கரையைக்கொண்ட தெளிந்த நீருடைய சிறிய குளம் உடைந்திருப்பது போல், கூரிய வேலும் திரண்ட வலிய தோள்களும் தேர் வழங்கும் வள்ளல் தன்மையும் உடைய பாரியின் குளிர்ந்த பறம்பு நாடு அழிந்துவிடுமோ?

பாடலின் பின்னணி:-

பாரியால் பாதுகாக்கப்பட்ட பறம்பு நாடு, அவன் இறந்ததால் பாதுகாவலின்றி அழிவதைக் கண்டு கபிலர் வருந்துகிறார். ஒரு சிறு குளம் அதன் கரை உடைந்து அழிவதைக் கண்டவர் பறம்பு நாடும் இப்பாடித்தான் அழியுமோ என்று இப்பாடலில் தன் வருத்தத்தைக் கூறுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

பாறைகளையும் சிறுகுன்றுகளையும் கரைகளாகக் கொண்டு குளங்கள் அமைப்பது சங்க காலத்தில் வழக்கிலிருந்தது என்பது இப்பாடலிலிருந்து தெரிய வருகிறது. மற்றும் இது போன்ற குளங்களை நீர் நிரம்பும் காலத்துப் பாதுகாப்பது மரபு என்ற கருத்து அகநாநூற்றில் காணப்படுகிறது.

………….சிறுக்கோட்டுப்
பெருங்குளம் காவலன் போல
அருங்கடி அன்னையும் துயில் மறந்தனளே. (அகநானூறு - 252)

பொருள்: சிறிய கரையையுடைய பெரிய குளத்தைக் காவல் காப்பவனைப் போல் தன் உறக்கத்தையும் மறந்து என் தாய் என்னைக் காவல் காத்து வருகின்றனள் என்று தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள்.

இப்பாடலில், சிறுகுளம் பாழாகியதாகக் கபிலர் கூறுகிறார். அச் சிறுகுளம் பாதுகாவல் இல்லாத காரணத்தால் கரைகள் உடைந்து பாழாகியதைக் கண்ட கபிலர், அக்குளம் போல், பாரியின் பாதுகாவல் இல்லாததால் பறம்பு நாடும் பாழாகியது என்று குறிப்பிடுவதாகத் தோன்றுகிறது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on June 19, 2013, 07:30:33 PM
(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-frc3/971442_613721501986098_641166177_n.jpg)

புறநானூறு, 119. (இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே!)
பாடியவர்: கபிலர்.
திணை: பொதுவியல்.
துறை : கையறு நிலை.
====================================

கார்ப்பெயல் தலைஇய காண்புஇன் காலைக்
களிற்றுமுக வரியின் தெறுழ்வீ பூப்பச்
செம்புற்று ஈயலின் இன்அளைப் புளித்து
மென்தினை யாணர்த்து நந்துங் கொல்லோ;
நிழலில் நீளிடைத் தனிமரம் போலப்
பணைகெழு வேந்தரை இறந்தும்
இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே!

அருஞ்சொற்பொருள்:-

கார் = கார்காலம் (ஆவணி, புரட்டாசி)
பெயல் = மழை
தலைஇய = பெய்த
காண்பு = காட்சி
காலை = காலம், பொழுது
வரி = புள்ளி
தெறுழ் = ஒரு கொடி
வீ = பூ
ஈயல் = ஈசல்
அளை = மோர்
யாணர் = புதுவருவாய்
நந்துதல் = கெடுதல்
பணை = முரசு
கெழு = பொருந்திய(உடைய)
இறத்தல் = மிகுதல்

இதன் பொருள்:-

பாரி இருந்த பொழுது, கார்காலத்து மழை பெய்து ஓய்ந்த காட்சிக்கினிய நேரத்து, யானையின் முகத்தில் உள்ள புள்ளிகள் போல் தெறுழ்ப் பூக்கள் பூத்தன. செம்புற்றிலிருந்த வெளிவந்த ஈசலை இனிய மோரில் புளிக்கவைத்த கறி சமைக்கப்பட்டது. அத்தோடு மெல்லிய தினையாகிய புதுவருவாயையும் உடையதாக இருந்தது பறம்பு நாடு. நிழலில்லாத நெடிய வழியில் தனித்து நிற்கும் மரத்தைப் போல், முரசுடைய வேந்தர்களைவிட அதிகமாக இரவலர்க்கு வழங்கிய வள்ளல் பாரியின் நாடு இனி அழிந்துவிடுமோ?

சிறப்புக் குறிப்பு:-

இப்பாடலில் கபிலர் கூறியுள்ளதைப் போல், ஈசலைத் தயிர் அல்லது மோரோடு சேர்த்துச் சமைத்து உண்பது பண்டைக்காலத்தில் மரபாக இருந்தது என்பது பற்றிய குறிப்பு அகநானூற்றிலும் காணப்படுகிறது.

சிறுதலைத் துருவின் பழுப்புறு விளைதயிர்
இதைப்புன வரகின் அவைப்புமாண் அரிசியொடு
கார்வாய்த்து ஒழிந்த ஈர்வாய்ப் புற்றத்து
ஈயல்பெய்து அட்ட இன்புளி வெஞ்சோறு
சேதான் வெண்ணெய் வெம்புறத்து உருக
இளையர் அருந்த … (அகநானூறு - 394: 1- 7)

பொருள்: சிறிய தலையையுடைய செம்மறி ஆட்டினது பழுப்பு நிறம் அமைய முற்றிய தயிரிலே, கொல்லையில் விளைந்த வரகின் குத்துதலாலே மாட்சியுற்ற அரிசியொடு, கார் காலத்து மழைபெய்து நீங்கிய ஈரமான வாயிலையுடைய புற்றினிடத்திருந்து வெளிப்படுகின்ற ஈயலையும் பெய்து சமைத்த இனிதான சூடான புளியஞ்சோற்றினைச், செவலைப் பசுவின் வெண்ணெயானது அதன் வெப்பமான புறத்தே இட்டுக் கிடந்து உருகிக்கொண்டிருக்க, நின் ஏவலாளர் அருந்துவர்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on June 19, 2013, 07:32:13 PM
புறநானூறு, 120. (பெருவிறல் நாடு நந்துங் கொல்லோ?)
பாடியவர்: கபிலர்.
திணை: பொதுவியல்.
துறை : கையறு நிலை.
====================================

வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ்சுவல்
கார்ப்பெயல் கலித்த பெரும்பாட்டு ஈரத்துப்
பூழி மயங்கப் பலஉழுது வித்திப்
பல்லி ஆடிய பல்கிளைச் செவ்விக்
களை கால் கழாலின், தோடு ஒலிபு நந்தி

மென்மயிற் புனிற்றுப்பெடை கடுப்ப நீடிக்
கருந்தாள் போகி ஒருங்குபீள் விரிந்து
கீழும் மேலும் எஞ்சாமைப் பலகாய்த்து
வாலிதின் விளைந்த புதுவரகு அரியத்
தினைகொய்யக் கவ்வை கறுப்ப அவரைக்

கொழுங்கொடி விளர்க்காய் கோள்பதம் ஆக
நிலம்புதைப் பழுனிய மட்டின் தேறல்
புல்வேய்க் குரம்பைக் குடிதொறும் பகர்ந்து
நறுநெய்க் கடலை விசைப்பச் சோறுஅட்டுப்
பெருந்தோள் தாலம் பூசல் மேவர

வருந்தா யாணர்த்து நந்துங் கொல்லோ
இரும்பல் கூந்தல் மடந்தையர் தந்தை
ஆடுகழை நரலும் சேட்சிமைப் புலவர்
பாடி ஆனாப் பண்பிற் பகைவர்
ஓடுகழல் கம்பலை கண்ட

செருவெஞ் சேஎய் பெருவிறல் நாடே!

அருஞ்சொற்பொருள்:-

வெப்பு = வெப்பம்
சுவல் = மேட்டு நிலம்
கார் = கார் காலம் ( ஆவணி, புரட்டாசி)
கலித்த = மிகுந்த
பாடு = இடம்
பூழி = புழுதி
மயங்குதல் = கலத்தல்
பல்லியாடல் = நெருக்கமாக விளைந்த பயிர்களப் விலக்குவதற்கும் மற்றும் களையெடுப்பதற்கும் உழவர்கள் செய்யும் ஒரு பணி
செவ்வி = சமயம், நிலை
கழால் =கலைதல், களைதல்
தோடு = இலை
ஒலிதல் = தழைத்தல்
நந்தி = விளங்கி (பெருகி)
புனிற்ற = ஈன்றணிமை ( பிரசவித்தவுடன்)
பெடை = பறவையின் பெட்டை
கடுப்ப = ஒப்ப
நீடி = நீண்டு
தாள் = தண்டு
போகுதல் = நீளம்
பீள் = பயிரிளங்கதிர்
வாலிதின் = சீராக
கவ்வை = எள்ளிளங்காய்
கறுப்ப = கறுக்க
விளர்தல் = வெளுத்தல்
கோள் = ஏற்றுக் கொள்ளுதல்
பழுனுதல் = முதிர்தல்
மட்டு = கள்
குரம்பை = குடிசை
பகர்தல் = கொடுத்தல்
விசைத்தல் = வேகமுறல்(துள்ளல்)
தாலம் = கலம்
பூசல் = கழுவுதல்
மேவுதல் = உண்ணல்
யாணர் = புது வருவாய்
நந்துதல் = அழிதல்
இரும் = கரிய
கழை = மூங்கில்
நரலும் = ஒலிக்கும்
சேட்சிமை = உயர்ச்சி
ஆனா = குறையாத
கம்பலை = ஆரவாரம்
செரு = போர்
வெம்பல் = விரும்புதல்
விறல் = வலிமை, வெற்றி

பல்லியாடல்: “பல்லியாடுதல், தாளியடித்தல், ஊடடித்தல் என்பன ஒரு பொருளைக் குறிக்கும் பல சொற்கள். அது நெருங்கி முளைத்த பயிர்ளை விலக்குதற்கும், எளிதாகக் களை பிடுங்குவதற்கும் கீழ்நோக்கியுள்ள கூரிய பல முனைகளையுடைய பலகையின் இரண்டு பக்கத்திலும் மேற்புறத்திலுள்ள வளையங்களில் கட்டிய கயிறுகளைச் சேர்த்துப் பூட்டிய நுகத்தை வாய் கட்டப்பட்டுள்ள எருதுகளின் பிடரியில் வைத்துப் பூட்டி உழச்செய்தல்” - பழைய உரையாசிரியரின் குறிப்பு.

இதன் பொருள்:-

வெப்புள்=====> ஒலிபு நந்தி

வெப்பம் நிறைந்ததாகவும் வேங்கை மரங்களுடையதுமான சிவந்த மேட்டு நிலத்தில் கார்காலத்து மழைக்குப் பிறகு மிகுந்த ஈரமான பெரிய இடத்தில் புழுதி கலக்குமாறு உழவர்கள் பலமுறை உழுது பின்னர் விதைகளை விதைக்கின்றனர். அதன் பிறகு, பல்லியாடி நெருங்கி முளைத்தப் பயிர்களைப் பிரிப்பதோடு மட்டுமல்லாமல் களைகளையும் நீக்குகின்றனர். பல கிளைகளையுடைய வரகுப் பயிர்களிலிருந்து களைகள் அடியோடு நீக்கப்பட்டதால் அவை இலைகளுடன் தழைத்துப் பெருகி

மென்மயிற்=====> அவரைக்

கரிய தண்டுகள் நீண்டு, அண்மையில் முட்டையிட்ட மெல்லிய மயில்களின் நிறத்தோடு காட்சி அளிக்கின்றன. எல்லாக் கதிர்களும் விரிந்து, அடியிலும் மேல் பாகத்திலும் காய்த்து சீராக விளைந்த புதிய வரகை உழவர்கள் அறுவடை செய்கின்றனர். தினைகளைக் கொய்கின்றனர். எள்ளிளங்காய்கள் முற்றி இருக்கின்றன. அவரையின்

கொழுங்கொடி=====> மேவர

வெண்ணிறக்காய்கள் பறிப்பதற்கு ஏற்ற நிலையில் உள்ளன. நிலத்தில் புதைக்கப்பட்ட முதிர்ந்த கள்ளை புல்லைக் கூரையாகக்கொண்ட குடிசையில் உள்ள மக்கள் அனைவருக்கும் கொடுக்கின்றனர். மணம் வீசும் நெய்யில் கடலையை வறுத்து அதைச் சோறோடு சேர்த்துச் சமைத்து அனைவருக்கும் மகளிர் உணவளித்துப் பின்னர் பாத்திரங்களைக் கழுவுகின்றனர்.

வருந்தா=====> நாடே!

கரிய கூந்தலுடைய மகளிரின் தந்தையாகிய பாரி, அசையும் மூங்கில் ஒலிக்கும் உயர்ந்த மலை உச்சியையுடையவன். அவன் புலவரால் பாடப்படும் பெருமையில் குறைவற்றவன். பகைவர் புறமுதுகு காட்டி ஓடும் ஆரவாரத்தைக் கேட்டவன். அவன் போரை விரும்பிய முருகனைப் போன்ற பெரிய வெற்றியையுடையவன். அவன் நாடு, வருந்தாமல் கிடைக்கும் புது வருவாய் உள்ள நாடு. அந்நாடு அழிந்துவிடுமோ?

சிறப்புக் குறிப்பு:-

இப்பாடலில் கபிலர் கூறுவதைப் போல், பலமுறை உழுதால் பயிர்கள் நன்றாக விளையும் என்ற கருத்து திருக்குறளிலும் காணப்படுகிறது.

தொடிப்புழுதி கஃசா உணக்கிற் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும். (குறள் - 1037)

பொருள்: ஒரு நிலத்தை உழுதவன் ஒருபலப் புழுதி காற்பலம் ஆகும் வண்ணம் அவ்வுழவடிப் புழுதியைக் காயவிடுவானாயின் அந்நிலத்தில் விளையும் பயிர்கள் ஒரு பிடி எருவும் தேவையின்றிச் செழித்து வளரும்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on June 19, 2013, 07:35:03 PM
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-prn1/1017182_615791365112445_1481055248_n.jpg)

புறநானூறு, 121. (பொதுநோக்கு ஒழிமதி புலவர் மாட்டே!)
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி.
திணை: பொதுவியல்.
துறை : முதுமொழிக் காஞ்சி.
====================================

ஒருதிசை ஒருவனை உள்ளி நாற்றிசைப்
பலரும் வருவர் பரிசில் மாக்கள்
வரிசை அறிதலோ அரிதே; பெரிதும்
ஈதல் எளிதே மாவண் தோன்றல்
அதுநற்கு அறிந்தனை ஆயின்
பொதுநோக்கு ஒழிமதி புலவர் மாட்டே!

அருஞ்சொற்பொருள்:-

உள்ளி = நினைத்து
வரிசை = தகுதி
தோன்றல் = அரசன், தலைவன்
மதி - அசைச்சொல்

இதன் பொருள்:-

ஒரு திசையில் உள்ள வள்ளல் ஒருவனை நினைத்து, பல (நான்கு) திசைகளிலிருந்தும் பரிசுபெற விரும்பும் மக்கள் பலரும் வருவர். பெரிய வண்மையுடைய அரசே! (தகுதியை ஆராயாமல்) அவர்களுக்குப் பரிசுகள் அளிப்பது மிகவும் எளிது. அவர்களின் தகுதியை அறிந்து அவர்களுக்குப் பரிசுகள் அளிப்பது அரிய செயலாகும். அவர்களின் தகுதியை நீ நன்கு அறிந்தாயானால், புலவர்கள் அனைவரையும் ஒரே தரமாக (பொது நோக்காக) மதிப்பிடுவதைத் தவிர்ப்பாயாக.

பாடலின் பின்னணி:-

ஒரு சமயம், கபிலர் மலையமான் திருமுடிக்காரியைக் காணச் சென்றார். எல்லாப் புலவர்களுக்கும் சிறப்புச் செய்வதைப் போலவே காரி கபிலருக்கும் சிறப்புச் செய்தான். அது கண்ட கபிலர், புலவரின் தகுதி அறிந்து சிறப்புச் செய்தல் வேண்டும் என்று காரிக்கு இப்படலில் அறிவுரை கூறுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

பரிசளிப்பவர்கள் பரிசு பெறுபவர்களின் தகுதியை ஆராய்ந்து பரிசளிக்க வேண்டும் என்ற கருத்து திருக்குறளிலும் காணப்படுகிறது.

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர். (குறள் - 528)

பொருள்: அரசன் எல்லாரையும் ஒரே தன்மையராகப் பார்க்காமல், அவரவர் தகுதிக்கேற்ப வரிசைப்படுத்திப் பார்ப்பானானால், அச்சிறப்பை நோக்கி அவனை விடாது நெருங்கி வாழும் சுற்றத்தார் பலராவர்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on June 19, 2013, 07:36:41 PM
(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-frc1/999873_616365611721687_707025387_n.jpg)

புறநானூறு, 122. (பெருமிதம் ஏனோ!)
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி.
திணை: பாடாண்.
துறை : இயன் மொழி.
====================================

கடல்கொளப் படாஅது உடலுநர் ஊக்கார்
கழல்புனை திருந்துஅடிக் காரிநின் நாடே
அழல்புறம் தரூஉம் அந்தணர் அதுவே;
வீயாத் திருவின் விறல்கெழு தானை
மூவருள் ஒருவன் துப்பாகியர் என

ஏத்தினர் தரூஉங் கூழே நும்குடி
வாழ்த்தினர் வரூஉம் இரவலர் அதுவே;
வடமீன் புரையுங் கற்பின் மடமொழி
அரிவை தோள்அளவு அல்லதை
நினதுஎன இலைநீ பெருமிதத் தையே

அருஞ்சொற்பொருள்:-

உடலுநர் = பகைவர்
ஊக்கல் = முயலுதல்
திருந்துதல் = அழகு பெறுதல், செவ்விதாதல்
புறந்தருதல் = பாதுகாத்தல்
வீதல் = கெடுதல், சாதல்
விறல் = வலிமை, வெற்றி
கெழு = பொருந்திய
துப்பு = துணை, வலிமை
ஏத்துதல் = புகழ்தல்
கூழ் = பொன், பொருள், உணவு, செல்வம்
வடமீன் = அருந்ததி (கற்பில் சிறந்தவள்)
புரைதல் = ஒத்தல்
அரிவை = பெண் (மனைவி)

இதன் பொருள்:-

கடல்கொள=====> துப்பாகியர் என

வீரக்கழல் அணிந்த சிறந்த திருவடிகளுடைய திருமுடிக்காரி! உன் நாடு கடலால் கொள்ளப்படாதது; அதை கொள்ளுதற்குப் பகைவரும் முயற்சி செய்ய மாட்டார்கள். அது வேள்வித் தீயைப் பாதுகாக்கும் பார்ப்பனர்களுக்கு உரியது. குறையாத செல்வத்தையும் வெற்றி பொருந்திய படையையுமுடைய மூவேந்தருள் ஒருவன் தனக்குத் துணையாகப் போரிட வேண்டுமென்று

ஏத்தினர்=====> பெருமிதத் தையே

உன்னைப் புகழ்ந்து உனக்கு அளிக்கும் பொருள் உன் குடியை வாழ்த்தி வரும் பரிசிலர்க்கு உரியது. அருந்ததியைப் போல் கற்பில் சிறந்தவளும் மெல்லிய மொழியுமுடையவளாகிய உன் மனைவியின் தோள்கள் மட்டுமே உனக்கு உரியதாகவும், வெறொன்றும் இல்லாத பெருமிதம் உடையவன் நீ.

பாடலின் பின்னணி:-

இப்பாடலில் திருமுடிக்காரியின் வள்ளல் தன்மையை வியந்து, “திருமுடிக்காரி! உன் நாடு கடலால் கொள்ளப்படாதது; அதை அந்தணர்களுக்குக் கொடையாக அளித்துவிட்டாய். மூவேந்தர்களுக்கு நீ துணையாக இருப்பதற்கு அவர்கள் அளிக்கும் பொருளை இரவலர்களுக்கு அளிக்கிறாய். உனக்கு உரியது உன் மனையின் தோள்கள் மட்டுமன்றி வேறொன்றும் இல்லை. நீ அத்தகைய பெருமிதம் உடையவன்” என்று கூறுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on June 19, 2013, 07:38:02 PM
புறநானூறு, 123. (மயக்கமும் இயற்கையும்!)
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி.
திணை: பாடாண்.
துறை : இயன் மொழி.
====================================

நாட்கள் உண்டு நாள்மகிழ் மகிழின்
யார்க்கும் எளிதே தேர் ஈதல்லே
தொலையா நல்லிசை விளங்கு மலையன்
மகிழாது ஈத்த இழையணி நெடுந்தேர்
பயன்கெழு முள்ளூர் மீமிசைப்
பட்ட மாரி உறையினும் பலவே

அருஞ்சொற்பொருள்:-

நாள்மகிழ் = அரசன் நாட்பொழுதில் வீற்றிருக்கும் திருவோலக்கம் (அத்தாணி மண்டபம்)
தொலைதல் = கெடுதல், முடிதல்
மீமிசை = மேலுக்கு மேல்
உறை = துளி

இதன் பொருள்:-

பகல் பொழுதில் கள்ளுண்டு அரசவையில் மகிழ்ச்சியோடு இருக்கும் பொழுது தேர்களைப் பரிசாக அளிப்பது யாவர்க்கும் எளிது. ஆனால், குறையாத புகழுடன் விளங்கும் மலையமான் திருமுடிக்காரி அவ்வாறு கள்ளுண்டு மகிழாது தெளிவாக இருக்கும்பொழுது அளித்த வேலைப்பாடுகள் நிறைந்த நெடிய தேர்கள் பயனுள்ள முள்ளூர் மலைமேல் விழுந்த மழைத்துளிகளைவிட அதிகம்.

பாடலின் பின்னணி:-

ஓரு மன்னன் கள்ளுண்டு மகிழ்ந்து இருக்கும் பொழுது புலவர்களுக்குத் தேர்களைப் பரிசாக அளிப்பது எளிது. அவ்வாறு கள்ளுண்டு மகிழாது தெளிந்த அறிவோடு இருக்கும் பொழுது திருமுடிக்காரி புலவர்களுக்குப் பரிசாக அளித்த தேர்கள் முள்ளூர் மலைமேல் பெய்த மழைத்துளிகளைவிட அதிகம் என்று இப்பாடலில் கபிலர் காரியின் வள்ளல் தன்மையைப் புகழ்கிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on June 19, 2013, 08:00:12 PM
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-frc3/6507_617407328284182_1160241961_n.jpg)

புறநானூறு, 124. (வறிது திரும்பார்!)
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி.
திணை: பாடாண்.
துறை : இயன் மொழி.
====================================

நாளன்று போகிப் புள்ளிடைத் தட்பப்
பதனன்று புக்குத் திறனன்று மொழியினும்
வறிது பெயர்குநர் அல்லர்; நெறிகொளப்
பாடுஆன்று இரங்கும் அருவிப்
பீடுகெழு மலையற் பாடி யோரே

அருஞ்சொற்பொருள்:-

நாள் = நல்ல நாள்
புள் = பறவை
தட்ப = தடுக்க
பதன் = பக்குவம்
திறன் = தன்மை, வகை
நெறிகொள் = ஒழுங்கு பட
பாடு = ஒசை
ஆன்று = நிறைந்தது
இரங்கும் = ஒலிக்கும்
பீடு = பெருமை
கெழுதல் = பொருந்துதல்

இதன் பொருள்:-

நல்ல நாளன்று போகாவிட்டாலும், போகும் பொழுது கெட்ட சகுனங்களைக் குறிக்கும் பறவைகள் குறுக்கே வந்தாலும், மன்னனைச் சந்திக்கூடாத நேரத்தில் அவன் அவைக்குள் நுழைந்தாலும், தன்மையற்ற சொற்களைச் சொன்னாலும் இடைவிடாத ஓசை நிறைந்த அருவிகளுடைய பெருமை பொருந்திய மலையையுடைய திருமுடிக்காரியைப் பாடியோர் (பரிசு பெறாமல்) வெறுங்கையோடு திரும்ப மாட்டார்கள்.

சிறப்புக் குறிப்பு:-

திறன் அறிந்து பேச வேண்டும் என்ற கருத்தைத் திருவள்ளுவர் சொல்வன்மை என்ற அதிகாரத்தில் வலியுறுத்தியிருப்பது இங்கு ஒப்பு நோக்குதற்குரியது.

திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூங்கு இல். (குறள் - 644)

பொருள்: சொல்லும் சொல்லைத் தன்மை அறிந்து சொல்லுக; அப்படிச் சொல்வதைவிட மேலான அறமும் பொருளும் இல்லை. கேட்பவர்களின் தன்மையறிந்து அவர்கள் விரும்புமாறு பேசுவது அறம்; திறமான பேச்சால் தான் நினைத்த காரியத்தைச் சாதிக்க முடிவதால் பொருள் அல்லது இலாபம் கிடைப்பதற்கு வழியுமுண்டு.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on June 19, 2013, 08:02:20 PM
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash4/1002744_617415541616694_1771521178_n.jpg)

புறநானூறு, 125. (புகழால் ஒருவன்!)
பாடியவர்: வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனார்.
பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி.
திணை: வாகை.
துறை : அரசவாகை.
====================================

பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன
நெருப்புச் சினந்தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை
பரூஉக்கண் மண்டையொடு ஊழ்மாறு பெயர
உண்கும் எந்தைநிற் காண்குவந் திசினே!
நள்ளாதார் மிடல்சாய்ந்த

வல்லாளநின் மகிழிருக்கையே
உழுத நோன்பகடு அழிதின் றாங்கு
நல்லமிழ்து ஆகநீ நயந்துண்ணும் நறவே;
குன்றத் தன்ன களிறு பெயரக்
கடந்தட்டு வென்றோனும் நிற்கூ றும்மே;

வெலீஇயோன் இவன்எனக்
கழலணிப் பொலிந்த சேவடி நிலங்கவர்பு
விரைந்துவந்து சமந்தாங்கிய
வல்வேல் மலையன் அல்லன் ஆயின்
நல்லமர் கடத்தல் எளிதுமன், நமக்குஎனத்

தோற்றோன் தானும் நிற்கூ றும்மே
தொலைஇயோன் இவன்என
ஒருநீ ஆயினை பெரும பெருமழைக்கு
இருக்கை சான்ற உயர்மலைத்
திருத்தகு சேஎய்நிற் பெற்றிசி னோர்க்கே

அருஞ்சொற்பொருள்:-

பனுவல் = பஞ்சு
தயங்குதல் = நிலை தவறுதல்
குறை = உண்ணுவதற்குப் பக்குவப்படுத்தப்பட்ட தசை
பரூஉ = பருமை
மண்டை = இரப்போர் கலம்
ஊழ் = முறைமை
நள்ளாதார் = பகைவர்
மிடல் = வலிமை
சாய்த்தல் = கெடுத்தல், முறித்தல்
மகிழ் இருக்கை = மகிழ்ச்சியான இடம் (அரசவை)
பகடு = காளை மாடு
அழி = வைக்கோல்
நயத்தல் = விரும்புதல்
நறவு = மது
பெயர்தல் = சிதைவுறுதல்
கடந்து அடுதல் = எதிர் நின்று போரிடுதல்
வெலீஇயோன் = வெல்வித்தவன் (வெற்றிக்குக் காரணமாக இருந்தவன்)
கவர்பு = கவர்ந்து
சமம் = போர்
மன் - அசைச்சொல்
தொலைஇயோன் = தோல்விக்குக் காரணமாக இருந்தவன்
சேஎய் = முருகன்

இதன் பொருள்:-

அரசே! பகைவரின் வலிமையை அழித்த வலியவனே! பெண்கள் நூல் நூற்பதற்குப் பயன்படுத்தும் பஞ்சு போல் மென்மையானதாகவும், நெருப்பின் வெப்பத்தைத் தணிக்கும் வகையில் நன்கு சமைக்கப்பட்டதும் கொழுமை நிறைந்ததுமான ஊன் துண்டுகளையும், பெரிய பாத்திரங்களில் வார்த்த கள்ளையும் முறையாக மாறி மாறி உண்ணலாம் என்று உன் மகிழ்ச்சியான இடத்திற்கு உன்னைக் காண வந்தோம். உழுத வலிய காளை (நெல்லைத் தின்னாமல்) வைக்கோலைத் தின்பதுபோல் நீ விரும்பி உண்ணும் மது அமிழ்தம் ஆகட்டும்.

மலைபோன்ற யானை சிதைவுறுமாறு எதிர் நின்று போரிட்டு வென்றவனும் வெற்றிக்குக் காரணமாக இருந்தவன் நீதான் என்று கூறுவான். வீரக் கழலணிந்த, சிறந்த திருவடிகளால் போர்க்களத்தைக் கைக்கொள்ள விரும்பி, விரைந்து வந்து போரைத் தடுத்த வலிய வேலையுடைய மலையன் வராது இருந்திருந்தானானால், நல்ல போரை வெல்லுதல் நமக்கு எளிதாக இருந்திருக்கும் என்று போரில் தோற்றவனும் தம் தோல்விக்குக் காரணமாக இருந்தவன் நீதான் என்று கூறுவான். ஆகவே, அரசே! உன்னை நட்பாகவும் பகையாகவும் கொண்டவர்களுக்கு, நீ பெரிய மழைக்கு இருப்பிடமான உயர்ந்த மலையையுடைய சிறந்த முருகனைப் போல் ஒப்பற்ற ஒருவன் ஆனாய்.

பாடலின் பின்னணி:-

ஒரு சமயம் சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறைக்கும் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளிக்கும் இடையே போர்மூண்டது. அப்போரில், மலையமான் திருமுடிக்காரி, சோழனுக்குத் துணையாக சேரனை எதிர்த்துப் போர் புரிந்தான். அது கண்ட வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தானார், “போரில் வென்றவன் உன்னால்தான் வெற்றி பெற்றாதாகக் கூறுவான். போரில் தோற்றவன், நீ போரில் ஈடுபடாமல் இருந்திருந்தால் தோல்வி அடைந்திருக்க மாட்டோம் என்று கூறுவான்” என்று திருமுடிக்காரியின் வலிமையை இப்பாடலில் புகழ்கிறார்.

சிறப்புக் குறிப்பு:-

தனது முயற்சியால் வந்த பொருளெல்லாம் பிறர்க்கு அளித்து, எஞ்சியதைக் காரி உண்பது குறித்து, “உழுத நோன்பகடு அழிதின்றாங்கு நல்லமிழ்து ஆகநீ நயந்துண்ணும் நறவே” என்று வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனார் இப்பாடலில் கூறுவது போல் தோன்றுகிறது.

சூரபத்மன் என்ற அரக்கன் தேவர்களுக்கு இன்னல் விளைவித்தாகவும், தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, சிவபெருமான் முருகப் பெருமானை உருவாக்கி, அவரைத் தேவர்களுக்குத் துணையாக சூரபத்மனை எதிர்த்துப் போரிடுமாறு பணித்ததாகவும், அப்போரில் முருகப் பெருமான் சூரபத்மனைக் கொன்று வெற்றி பெற்றதாகவும், வெற்றி பெற்ற தேவர்களும் தோல்வியுற்ற அரக்கர்களும் முருகனின் வலிமையைப் புகழ்ந்ததாகவும் கந்த புராணம் கூறுகிறது. தேவர்களுக்குத் துணையாக முருகன் போர் செய்தது போல் காரி சோழனுக்குத் துணையாகப் போர்செய்ததால் இப்பாடலில் வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார் காரியை முருகனுக்கு ஒப்பிடுகிறார் என்று கருதப்படுகிறது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on June 27, 2013, 09:37:07 PM
(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-frc3/971643_618001608224754_2022718802_n.jpg)

புறநானூறு, 126. (கபிலனும் யாமும்!)
பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார்.
பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி.
திணை: பாடாண்.
துறை : பரிசில் துறை. புரவலன் முன் இரவலர் தாம் பெற விரும்பியது இது எனக் கூறுதல்.
====================================

ஒன்னார் யானை ஓடைப்பொன் கொண்டு
பாணர் சென்னி பொலியத் தைஇ
வாடாத் தாமரை சூட்டிய விழுச்சீர்
ஓடாப் பூட்கை உரவோன் மருக!
வல்லேம் அல்லேம் ஆயினும் வல்லே

நின்வயிற் கிளக்குவம் ஆயின் கங்குல்
துயில்மடிந் தன்ன தூங்கிருள் இறும்பின்
பறைஇசை அருவி முள்ளூர்ப் பொருந!
தெறலரு மரபின்நின் கிளையொடும் பொலிய
நிலமிசைப் பரந்த மக்கட்கு எல்லாம்

புலன்அழுக்கு அற்ற அந்த ணாளன்
இரந்துசென் மாக்கட்கு இனிஇடன் இன்றிப்
பரந்துஇசை நிற்கப் பாடினன்; அதற்கொண்டு
சினமிகு தானை வானவன் குடகடல்
பொலந்தரு நாவாய் ஓட்டிய அவ்வழிப்

பிறகலம் செல்கலாது அனையேம்; அத்தை;
இன்மை துரப்ப இசைதர வந்துநின்
வண்மையின் தொடுத்தனம் யாமே; முள்எயிற்று
அரவுஎறி உருமின் முரசெழுந்து இயம்ப
அண்ணல் யானையொடு வேந்துகளத்து ஒழிய

அருஞ்சமம் ததையத் தாக்கி நன்றும்
நண்ணாத் தெவ்வர்த் தாங்கும்
பெண்ணையம் படப்பை நாடுகிழ வோயே!

அருஞ்சொற்பொருள்:-

ஒன்னார் = பகைவர்
ஒடை = யானையின் நெற்றிப்பட்டம்
சென்னி = தலை
பொலிவு = அழகு
தைத்தல் = இடுதல், பொருத்துதல், அலங்கரித்தல்
விழு = சிறந்த
சீர் = தலைமை
ஒடா = புறமுதுகு காட்டி ஒடாத
பூட்கை = கொள்கை
உரம் = வலிமை
மருகன் = வழித்தோன்றல்
வல்லேம் = வலிமை (திறமை) இல்லாதவர்கள்
வல் = விரைவு
கிளத்தல் = கூறுதல்
கங்குல் = இரவு
துயில் = உறக்கம்
மடி = அடங்குதல்
தூங்கிருள் = மிகுந்த இருள்
இறும்பு = சிறு காடு
பொருநன் = அரசன்
தெறல் = சினத்தல், அழித்தல்
மரபு = பெருமை
பொலிதல் = சிறத்தல், விளங்குதல்
பரத்தல் = மிகுதல்
புலன் = அறிவு
அதற்கொண்டு = அக்காலந் தொடங்கி
வானவன் = சேரன்
குட = மேற்கு
பொலம் = பொன்
நாவாய் = மரக்கலம் (கப்பல்)
அத்தை - அசைச் சொல்
துரப்புதல் = துரத்துதல்
தொடுத்தல் = தொடங்குதல்
எயிறு = பல்
அரவு = பாம்பு
எறிதல் = ஊறு படுத்தல்
உரும் = இடி
இயம்பல் = ஒலித்தல்
சமம் = போர்
ததைதல் = சிதறுதல்
நன்று = பெரிது
நண்ணுதல் = நெருங்குதல் (பொருந்துதல்)
தெவ்வர் = பகைவர்
தாங்குதல் = தடுத்தல்
படப்பை = பக்கத்துள்ள இடம்

இதன் பொருள்:-

ஒன்னார்=====> வல்லே

பகைவர்களுடைய யானைகளின் நெற்றிப் பட்டத்தில் இருந்த பொன்னால் செய்த தாமரைப் பூ போன்ற அணிகலன்களைப் பாணர்களின் தலையில் அணிவித்து அழகு செய்த பெருமையும், சிறந்த தலைமையும், புறமுதுகு காட்டி ஓடாத கொள்கையும் உடைய வலியவர்களின் வழித்தோன்றலே! யாம் எதையும் திறம்படக் கூறும் ஆற்றல் இல்லாதவராக இருப்பினும்

நின்வயிற்=====> எல்லாம்

விரைவாக உன்னிடத்து வந்து உன் புகழைச் சொல்லுவேம் என்று இங்கு வந்துள்ளோம். இரவு ஓரிடத்தே அடங்கி உறங்குவது போன்ற அடர்ந்த இருளுடைய சிறுகாடுகளும் பறையொலி போலும் ஒலி பொருந்திய அருவியையுமுடைய முள்ளூர் வேந்தே! அழித்தற்கு அரிய பெருமையுடைய உன் சுற்றத்துடன் நீ விளங்குவாயாக. இவ்வுலக மக்கள் எல்லாரினும்

புலன்அழுக்கு=====> அவ்வழி

தூய அறிவுடைய அந்தணனாகிய கபிலன், இரந்து செல்லும் பரிசிலர்கள் சொல்வதற்கு இனி இடம் இல்லை என்று கூறுமளவுக்கு உன் பெருகிய புகழ் நிலைத்து நிற்குமாறு பாடிவிட்டான். சினமிக்க படையுடைய சேரன் மேற்குக் கடலில் பொன் கொண்டு வரும் கலத்தைச் செலுத்திய காலந் தொடங்கி

பிறகலம்=====> நாடுகிழ வோயே

அவ்விடத்துப் பிறர் கலம் செல்வதில்லை. அதுபோல், கபிலன் உன்னை புகழ்ந்து பாடிய பிறகு யாம் பாட முடியாத நிலையில் உள்ளேம். ஆயினும், வறுமையால் துரத்தப்பட்டு உன் புகழால் இழுக்கப்பட்டு உன் வள்ளல் தன்மையைப்பற்றி சில சொல்லத் தொடங்கினோம். முள்போன்ற பல்லையுடைய பாம்பை நடுங்க வைக்கும் இடிபோல் முரசு ஒலிக்க, யானையொடு அரசும் களத்தில் அழியுமாறு பொறுத்தற்கரிய போரைச் சிதறடித்துப் பொருந்தாப் பகைவரைத் தடுக்க வல்ல, பெண்ணையாற்றின் அழகிய பக்கங்களையுடைய நாட்டுக்குத் தலைவனே!

பாடலின் பின்னணி:-

இப்பாடலில் மாறோக்கத்து நப்பசலையார் மலையமான் திருமுடிக்காரியின் முன்னோர்களின் பெருமையையும் திருமுடிக்காரியின் பெருமையையும் புகழ்ந்து பாடுகிறார். சேர மன்னர்கள் மேற்குக் கடலில் கப்பலோட்டத் தொடங்கிய பிறகு மற்றவர்கள் அக்கடலில் தம் கப்பலை ஓட்டிச் செல்ல அஞ்சுவது போல், புலவர்களில் சிறந்தவரான கபிலர் மலையமானைப் புகழ்ந்து பாடிய பிறகு அது போல் யாராலும் இனி பாட முடியாது என்றாலும், தன் வறுமையின் காரணத்தால் தன்னால் முடிந்த அளவு மலையமானைப் புகழ்ந்து பாட வந்ததாக இப்பாடலில் மாறோக்கத்து நப்பசலையார் கூறுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on June 27, 2013, 09:39:34 PM
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-frc1/421796_618062118218703_1329869466_n.jpg)

புறநானூறு, 127. (உரைசால் புகழ்!)
பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: வேள் ஆய் அண்டிரன்.
திணை: பாடாண்.
துறை : கடைநிலை. அரண்மனை வாயிலில் நின்று பாடுதல் கடைநிலை எனப்படும்.
===================================

களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ்ப்
பாடுஇன் பனுவல் பாணர் உய்த்தெனக்
களிறில ஆகிய புல்அரை நெடுவெளிற்
கான மஞ்ஞை கணனொடு சேப்ப
ஈகை அரிய இழையணி மகளிரொடு

சாயின்று என்ப ஆஅய் கோயில்;
சுவைக்குஇனிது ஆகிய குய்யுடை அடிசில்
பிறர்க்கு ஈவுஇன்றித் தம்வயிறு அருத்தி
உரைசால் ஓங்குபுகழ் ஒரிஇய
முரைசுகெழு செல்வர் நகர்போ லாதே.

அருஞ்சொற்பொருள்:-

கோடு = தண்டு
சீறியாழ் = சிறிய யாழ்
பனுவல் = பாட்டு
உய்த்தல் = கொண்டு போதல்
அரை = அடியிடம்
வெளில் = யானை கட்டும் தறி
மஞ்ஞை = மயில்
கணம் = கூட்டம்
சேப்ப = தங்க
சாயின்று = தளர்ந்தது, குன்றியது
கோயில் = அரண்மனை
குய் = தாளிப்பு
அடிசில் = உணவு
ஈவு = கொடை
அருத்துதல் = புசிப்பு
ஒரீஇய = நீங்கிய
நகர் = அரண்மனை

இதன் பொருள்:-

களங்கனி=====> மகளிரொடு

களாப்பழம் போன்ற கரிய நிறத் தண்டினையுடைய சிறிய யாழுடன் இனிய பாட்டைப் பாடும் பாணர்கள், ஆய் பரிசாக அளித்த யானைகளை எல்லாம் பெற்றுக்கொண்டு போனதால் யானை கட்டும் நெடிய கட்டுத்தறிகள் வெறுமையாகக் காட்சி அளிக்கின்றன. அவ்விடத்து இப்பொழுது காட்டு மயில்கள் தம் கூட்டத்தோடு தங்கி இருக்கின்றன. பிறருக்கு அளிக்க இயலாத மங்கல அணிகலன்கள் மட்டுமே அணிந்த மகளிர்

சாயின்று=====> நகர்போ லாதே

ஆயின் அரண்மனையில் உள்ளனர். இவ்வாறு இருப்பதால், ஆயின் அரண்மனை தன் பெருமையில் குறைந்தது என்று கூறுவர். ஆனால், இனிய சுவையுடன் தாளித்த உணவை பிறர்க்கு அளிக்காமல் தாம் மட்டும் வயிறு நிரம்ப உண்டு, மிகுந்த புகழை இழந்த முரசுடைய செல்வர்களின் அரண்மனைகள் ஆயின் அரண்மனைக்கு ஒப்பாகாது.

சிறப்புக் குறிப்பு:-

பிறர்க்கு உதவி செய்வதால் தனக்கு ஒரு கேடு வருவதாக இருந்தாலும், தன்னை விற்றாவது உதவி செய்ய வேண்டும் என்ற கருத்தை,

ஒப்புர வினால்வருங் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து. (குறள் 220)

என்ற குறளில் வள்ளுவர் கூறுவதைப் போலவே, ஆய் தன் யானைகளை எல்லாம் பரிசிலர்க்கு அளித்து, தன் செல்வத்தையும் இழந்ததாக இப்பாடலில் ஏணிச்சேரி முடமோசியார் கூறுகிறார். வள்ளுவர் குறளும் ஆயின் செயலும் ஒப்பு நோக்கத் தக்கவையாகும்.

மற்றொரு குறளில்,

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ். (குறள் - 232)

என்று இரவலர்க்கு ஈகை செய்வதே ஒருவருடைய புகழுக்குக் காரணம் என்பதை வள்ளுவர் கூறுகிறார். ஆய் அண்டிரனின் புகழுக்கும் அவன் ஈகைதான் காரணம் என்று இப்பாடலிலிருந்து தெரிய வருகிறது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on June 27, 2013, 09:41:41 PM
(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-frc1/999319_620402634651318_317033511_n.jpg)

புறநானூறு, 128. (முழவு அடித்த மந்தி!)
பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண்.
துறை : இயன் மொழி.
===================================

மன்றப் பலவின் மாச்சினை மந்தி
இரவலர் நாற்றிய விசிகூடு முழவின்
பாடின் தெண்கண் கனிசெத்து அடிப்பின்
அன்னச் சேவல் மாறுஎழுந்து ஆலும்
கழல்தொடி ஆஅய் மழைதவழ் பொதியில்
ஆடுமகள் குறுகின் அல்லது
பீடுகெழு மன்னர் குறுகலோ அரிதே

அருஞ்சொற்பொருள்:
மன்றம் = ஊர்ப் பொதுவிடம்
மா = பெரிய
சினை = கிளை
மந்தி = குரங்கு
நாற்றுதல் = தூக்குதல்
விசி = கட்டு
பாடு = ஓசை
தெண்கண் = தெளிந்த இடம்
செத்து = கருதி
ஆலல் = ஒலித்தல், ஆடல்
கழல் = கழலும்
மழை = மேகம்
குறுகல் = நெருங்கல்
பீடு = பெருமை

இதன் பொருள்:-

ஊர்ப் பொதுவிடத்துப் பலாமரத்தின் பெரிய கிளையில் இருந்த குரங்கு, பரிசிலர் தூக்கிவைத்திருந்த இறுகக் கட்டிய முழவை பலாப்பழம் என்று எண்ணி, அதன் இனிய ஒசை பிறக்கும் தெளிந்த இடத்தில் அடித்தது. அதைக் கேட்ட ஆண் அன்னப் பறவைகள் அந்த ஒசைக்கு மாறாக ஒலித்தன. கழலும் வீரவளையல்களை அணிந்த ஆயின் மேகங்கள் தவழும் பொதிய மலை ஆடிவரும் மகளிரால் அணுக முடியுமே தவிர பெருமை பொருந்திய மன்னர்களால் அணுக முடியாது.

பாடலின் பின்னணி:-

ஆய் அண்டிரன் கொடைச் சிறப்பால் மிகுந்த புகழுடையவனாக இருந்தான். அவ்வாறு இருப்பினும், மற்ற வேந்தர்கள் பொறாமையால் அவனோடு போர் புரியாது இருப்பதற்குக் காரணம் அவனைப் போரில் வெல்வது அரிது என்று அவர்கள் அறிந்திருந்தார்கள் என்று கருத்தை இப்பாடலில் முடமோசியார் கூறுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

கபிலர் 111 - ஆவது பாடலில், பாரியிடமிருந்து பறம்பு மலையை வெல்லுவது வேந்தர்க்கு அரிது; ஆனால், “நீலத்து இணைமலர் புரையும் உண்கண் கிணைமகட்கு எளிதால் பாடினள் வரினே” என்று கூறியிருப்பது இங்கு ஒப்பு நோக்கத் தக்கது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on June 27, 2013, 09:43:22 PM
(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-prn1/1017220_620403444651237_1634779153_n.jpg)

புறநானூறு, 129. (வேங்கை முன்றில்!)
பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண்.
துறை : இயன் மொழி.
===================================

குறியிறைக் குரம்பைக் குறவர் மாக்கள்
வாங்குஅமைப் பழுனிய தேறல் மகிழ்ந்து
வேங்கை முன்றில் குரவை அயரும்
தீஞ்சுளைப் பலவின் மாமலைக் கிழவன்;
ஆஅய் அண்டிரன் அடுபோர் அண்ணல்;
இரவலர்க்கு ஈத்த யானையின் கரவின்று
வானம் மீன்பல பூப்பின் ஆனாது
ஒருவழிக் கருவழி யின்றிப்
பெருவெள் என்னில் பிழையாது மன்னே

அருஞ்சொற்பொருள்:-

குறி = குறுகிய
இறை = இறப்பு (சுவரைத் தாண்டி நிற்கும் கூரைப் பகுதி)
வாங்கு = வளைவு
அமை = மூங்கில்
பழுனுதல் = முதிர்தல்
தேறல் = மது
முன்றில் = முற்றம்
அயர்தல் = விளையாடுதல்
கரவு = மறைவு
ஆனாது = அளவிட முடியாது
கருவழி இன்றி = கரிய இடம் இல்லாமல்
மன் - அசைச் சொல்

இதன் பொருள்:-

குறுகிய இறப்பையுடைய சிறிய வீடுகளில் வாழும் குறவர்கள் வளைந்த மூங்கில் குழாயில் வார்த்திருந்து முதிர்ந்த மதுவை நுகர்ந்து மகிழ்ந்து, வேங்கை மரங்களுடைய முற்றத்தில் குரவைக் கூத்தாடும், இனிய சுளைகளையுடைய பலா மரங்கள் உள்ள பெரிய மலைக்கு உரிமையாளனாகிய ஆய் அண்டிரன் கொல்லும் போரைச் செய்யும் தலைவன். அவன் இரவலர்க்கு அளித்த யானைகளின் தொகை எண்ணிலடங்காது. மேகம் மறைக்காமல், வானத்தில் சிறிதளவும் கரிய இடமின்றி எல்லா இடத்திலும் விண்மீன்கள் தோன்றி, வானமே வெண்மையாகக் காட்சி அளித்தால் அவ்விண்மீன்களின் தொகை ஆய் இரவலர்க்கு அளித்த யானைகளின் தொகைக்கு நிகராகலாம்.

பாடலின் பின்னணி:-

ஆய் அண்டிரன் தன்னிடம் வரும் பரிசிலர்க்கு யானைகளை அளிப்பதைக் கண்ட முடமோசியார், வானம் முழுதும் விண்மீன்கள் பூத்து விளங்கினால் அவற்றின் தொகை ஆய் பரிசிலர்க்கு வழங்கும் யானைகளின் தொகைக்கு நிகராகலாம் என்று இப்பாடலில் கூறுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

இப்பாடலில், ஆய் இரவலர்க்கு அளித்த யானைகளின் தொகை வானத்தில் உள்ள விண்மீன்களைவிட அதிகம் என்று ஏணிச்சேரி முடமோசியார் கூறுவது போல், 123-ஆவது பாடலில் மலையமான் திருமுடிக்காரி இரவலர்க்கு அளித்த தேர்களின் எண்ணிக்கை முள்ளூர் மலைமீது பெய்த மழைத்துளிகளைவிட அதிகம் என்று கபிலர் கூறியிருப்பது ஒப்பு நோக்கத் தக்கது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on July 07, 2013, 05:57:23 PM
(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-prn1/1013415_620966344594947_1965602749_n.jpg)

புறநானூறு, 130. (சூல் பத்து ஈனுமோ?)
பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண்.
துறை : இயன் மொழி.
===================================

விளங்குமணிக் கொடும்பூண் ஆஅய்! நின்னாட்டு
இளம்பிடி ஒருசூல் பத்து ஈனும்மோ?
நின்னும்நின் மலையும் பாடி வருநர்க்கு
இன்முகம் கரவாது உவந்துநீ அளித்த
அண்ணல் யானை எண்ணின் கொங்கர்க்
குடகடல் ஓட்டிய ஞான்றைத்
தலைப்பெயர்த் திட்ட வேலினும் பலவே!

அருஞ்சொற்பொருள்:-

கொடு = வளைவு
பூண் = அணிகலன்
பிடி = பெண் யானை
சூல் = கருப்பம்
கரவு = மறைவு
ஞான்று = காலம்
தலை = இடம்
தலைப் பெயர்தல் = புறங்காட்டி ஓடுதல்

இதன் பொருள்:-

விளங்கும் மணிகளால் செய்யப்பட்ட வளைந்த அணிகலன்களை அணிந்த ஆய்! உன் நாட்டில், ஒரு இளம்பெண் யானை கருவுற்றால் பத்து குட்டிகளைப் பெறுமோ? உன்னையும் உன் மலையையும் பாடி வருபவர்களுக்கு இன்முகம் மறைக்காமல், மகிழ்ச்சியொடு நீ அளித்த உயர்ந்த யானைகளின் தொகையைக் கணக்கிட்டால், நீ கொங்கரை மேற்குக் கடற்கரைப் பக்கம் ஓட்டிய பொழுது அவர்கள் புறங்காட்டி ஓடிய சமயத்தில் விட்டுச் சென்ற வேல்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருக்குமே!

பாடலின் பின்னணி:-

ஆய் அண்டிரன் இரவலர்க்கு எண்ணற்ற யானைகளைப் பரிசாக வழங்குவதைக் கண்ட முடமோசியார், “ஆயே! நின்னையும் நின் மலையையும் பாடி வரும் பரிசிலர்க்கு நீ மிகுந்த யானைகளைப் பரிசாக அளிக்கிறாய். அவற்றின் தொகையை நோக்கின், நீ முன்பு கொங்கரொடு போரிட்ட காலத்தில் அவர்கள் உன்னிடம் தோற்று உயிர் தப்பி மேற்குக் கடற்கரைப் பக்கம் ஓடிய பொழுது அவர்கள் விட்டுச் சென்ற வேல்களினும் அதிகமாக உள்ளன. உன் நாட்டில் ஒவ்வொரு இளம்பெண் யானையும் கருவுற்றால் பத்து குட்டிகளை ஈனுமோ?” என்று தன் வியப்பை இப்பாடலில் கூறுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on July 07, 2013, 05:59:19 PM
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-prn1/1013083_620967601261488_878508835_n.jpg)

புறநானூறு, 131. (குன்றம் பாடின கொல்லோ?)
பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண்.
துறை : இயன் மொழி.
===================================

மழைக்கணம் சேக்கும் மாமலைக் கிழவன்
வழைப்பூங் கண்ணி வாய்வாள் அண்டிரன்
குன்றம் பாடின கொல்லோ;
களிறுமிக உடையஇக் கவின்பெறு காடே?

அருஞ்சொற்பொருள்:-

மழை = மேகம்
கணம் = கூட்டம்
சேக்கும் = தங்கும்
வழை = சுரபுன்னை
வாய் = தவறாத
கவின் = அழகு

இதன் பொருள்:-

மிகுந்த யானைகள் உள்ள அழகான காடுகள் இம்மலையில் உள்ளனவே! மேகங்கள் கூட்டமாகத் தங்கும் பெரிய இம்மலைக்கு உரிமையுடையவனும் சுரபுன்னைப் பூவாலான மாலையைத் தலையில் அணிந்தவனும் குறி தவறாத வாளையுடையவனுமாகிய ஆய் அண்டிரனை இம்மலை பாடிற்றோ?

பாடலின் பின்னணி:-

ஆயின் நாட்டில், மலைப்பகுதியில் இருந்த காடுகளில் மிகுந்த அளவில் யானைகள் இருப்பதை முடமோசியார் கண்டார். அந்த யானைகளைக் கண்டவுடன், இரவலர்க்கு எண்ணற்ற யானைகளைப் பரிசாக ஆய் அண்டிரன் அளிப்பதை நினைவு கூர்ந்தார். அந்நிலையில், “இம்மலையும் ஆய் அண்டிரனைப் புகழ்ந்து பாடியதால் அதிலுள்ள காடுகள் இத்தனை யானைகளைப் பரிசாகப் பெற்றதோ” என்று முடமோசியார் தனக்குள் வியப்பதுபோல் இப்பாடல் அமைந்துள்ளது.

சிறப்புக் குறிப்பு:-

களிறு என்ற சொல் ஆண் யானையைக் குறிக்கும் சொல். ஆனால், இப்பாடலில் களிறு என்ற சொல் பொதுவாக யானையைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on July 07, 2013, 06:00:47 PM
(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-frc3/970037_622332447791670_211871052_n.jpg)

புறநானூறு, 132. (முன் உள்ளுவோனைப் பின் உள்ளினேனே!)
பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண்.
துறை : இயன் மொழி.
===================================

முன்உள்ளு வோனைப் பின்உள்ளி னேனே!
ஆழ்கஎன் உள்ளம்; போழ்க என் நாவே!
பாழ்ஊர்க் கிணற்றின் தூர்கஎன் செவியே!
நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி
குவளைப் பைஞ்சுனை பருகி அயல

தகரத் தண்ணிழல் பிணையொடு வதியும்
வடதிசை அதுவே வான்தோய் இமயம்
தென்திசை ஆஅய்குடி இன்றாயின்
பிறழ்வது மன்னோஇம் மலர்தலை உலகே

அருஞ்சொற்பொருள்:-

ஆழ்தல் = அமிழ்தல்
போழ்தல் = அழிதல், பிளத்தல்
தூர்த்தல் = நிரப்புதல்
நரந்தை = நாரத்தை
கவரி = கவரிமா (ஒரு விலங்கு)
பை = பசுமை
சுனை = நீர் நிலை
அயல் = அருகிடம், பக்கம்
தகரம் = தகர மரம்
பிணை = பெண் மான்
வதிதல் = தங்குதல், துயிலுதல்
தோய்தல் = உறைதல், கலத்தல்
பிறழ்தல் = மாறுபாடுதல் (தலை கீழாக மாறுதல்)
மலர்தல் = விரிதல், பரத்தல்

இதன் பொருள்:-

முன்உள்ளு=====> அயல

ஆய் அண்டிரனை முன்னமேயே நினைக்காமல் காலந்தாழ்த்திப் பின்னர் நினைத்தேனே! என் உள்ளம் வருத்தத்தில் மூழ்கட்டும்; என் நாக்கு அழியட்டும்; பாழ் அடைந்த ஊரில் உள்ள கிணறுபோல் என் செவிகள் அடைபட்டுப் போகட்டும். நாரத்தம் பழங்களையும் மணமுடைய புல்லையும் தின்ற கவரிமா, குவளை மலர்களுடன் கூடிய பசுமையான நீர்நிலையில் உள்ள நீரைக் குடித்துவிட்டு அதனை அடுத்துள்ள

தகர=====> உலகே

தகர மரத்தின் குளிர்ந்த நிழலில் தன் பெண்ணினத் துணையோடு தங்கியிருக்கும் வானளாவிய இமயம் வடதிசையில் உள்ளது. தென் திசையில் ஆயின் குடி இல்லை எனின் இப்பரந்த உலகம் தலைகீழாக மாறிவிடும்.

பாடலின் பின்னணி:-

ஆய் அண்டிரனைக் கண்டு, அவனோடு பழகி, அவன் கொடைத் தன்மையை நேரில் கண்ட முடமோசியார், இத்துணை நாட்களும் ஆயை நினையாமல் மற்றவரை நினைத்தும், அவர் புகழ் பாடியும், அவர் புகழைக் கேட்டும் இருந்ததை எண்ணி வருந்துகிறார். தான் செய்த தவறுக்காகத் தன் உள்ளமும், நாவும், செவியும் அழியட்டும் என்று இப்பாடலில் கூறித் தன் வருத்ததைத் தெரிவிக்கிறார். மற்றும், வட திசையில் உள்ள புகழ் மிக்க இமயத்திற்கு ஈடாகத் தென்திசையில் புகழ் மிக்க ஆய்குடி இருக்கிறது. அது இல்லையாயின், இவ்வுலகம் தலைகீழாகப் பிறழும் என்றும் இப்பாடலில் கூறுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

ஆய் அண்டிரனை முன்பே நினைக்காதது தவறு. அத்தவற்றை எண்ணித் தன் உள்ளம் வருத்தத்தில் மூழ்கட்டும் என்றும், ஆயின் புகழைப் பாடாமால் பிறர் புகழைப் பாடியதால் தன் நாக்கு அழியட்டும் என்றும், ஆயின் புகழைக் கேளாமல் பிறர் புகழைக் கேட்டதால் தன் செவித் துளைகள் பாழூர்க் கிணறு போல் அடைபட்டுப் போகட்டும் என்றும் முடமோசியார் கூறுவது போல் இப்பாடல் அமைந்துள்ளது. மற்றும், புகழால் சிறந்த இமய மலைக்கு ஈடாக ஆய் வாழும் ஆய்குடியும் புகழ் மிக்கதாக இருப்பதால்தான் இப்பரந்த உலகம் நிலைபெற்றிருக்கிறது. ஆய்குடி இல்லை எனில், இவ்வுலகம் தலைகீழாக மாறி அழிந்துவிடும் என்றும் முடமோசியார் கருதுவதாகவும் தோன்றுகிறது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on July 07, 2013, 06:02:00 PM
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash3/17509_622335134458068_1102404733_n.jpg)

புறநானூறு, 133. (காணச் செல்க நீ!)
பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண்.
துறை : விறலியாற்றுப்படை.
===================================

மெல்லியல் விறலிநீ நல்லிசை செவியிற்
கேட்பின் அல்லது காண்புஅறி யலையே;
காண்டல் வேண்டினை ஆயின் மாண்டநின்
விரைவளர் கூந்தல் வரைவளி உளரக்
கலவ மஞ்ஞையின் காண்வர இயலி
மாரி யன்ன வண்மைத்
தேர்வேள் ஆயைக் காணிய சென்மே!

அருஞ்சொற்பொருள்:-

மாண்ட = பெருமைக்குரிய
விரை = மணம்
வரை = மலை
வளி = காற்று
உளர்தல் = தலை மயிராற்றுதல், அசைத்தல்
கலவம் = தோகை
மஞ்ஞை = மயில்

இதன் பொருள்:-

மெல்லிய இயல்புடைய விறலியே! நீ நல்ல புகழைப்பற்றிக் கேள்விப் பட்டிருப்பாய்; ஆனால், அத்தகைய புகழுடையவரைக் கண்டிருக்க மாட்டாய். அத்தகைய புகழுடையவரைக் காண விரும்பினால், உன் பெருமைக்குரிய மணம் வீசும் கூந்தல், மயில் தோகை போல் மலைக் காற்றில் அசையுமாறு காட்சி அளிக்கும் வகையில் நீ நடந்து, மழை போன்ற வள்ளல் தன்மையோடு தேர்களைப் பரிசாக வழங்கும் ஆயைக் காணச் செல்க.

பாடலின் பின்னணி:-

விறலி ஒருத்தி, ஆயின் புகழைக் கேட்டிருந்தாலும் அவனை நேரில் கண்டதில்லை. அவளை ஆய் அண்டிரனிடம் முடமோசியார் ஆற்றுப்படுத்தும் வகையில் இப்பாடல் அமைந்துள்ளது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on July 07, 2013, 06:03:11 PM
(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-ash3/1044895_622851714406410_1090931099_n.jpg)

புறநானூறு, 134. (அறவிலை வணிகன் ஆய் அலன்!)
பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண்.
துறை : இயன் மொழி.
===================================

இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்எனும்
அறவிலை வணிகன் ஆஅய்அலன் பிறரும்
சான்றோர் சென்ற நெறியென
ஆங்குப் பட்டன்று அவன்கைவண் மையே

அருஞ்சொற்பொருள்:-

ஆங்கு = அவ்வாறு, அவ்விடம்
பட்டன்று = பட்டது

இதன் பொருள்:-

இப்பிறப்பில் செய்யும் அறச்செயல்கள் மறுபிறப்பில் பயனளிக்கும் என்று கருதி, அறம் செய்வதை ஆய் ஒரு விலைபொருளாகக் கருதுபவன் அல்லன். அறம் செய்வதுதான் சான்றோர் கடைப்பிடித்த வழி என்று உலகத்தவர் கருதுகிறார்கள். ஆய் அண்டிரனின் கொடைச் செயல்களும் அவ்வழிப் பட்டவையே.

பாடலின் பின்னணி:-

ஆய் கொடைத் தன்மை மிகுந்தவன். தன்னிடம் உள்ள பொருளைப் பிறர்க்கு அளிப்பதால் மறுபிறவியில் நன்மைகளை அடையலாம் என்று எண்ணி அவன் கொடையை ஒரு வணிகமாகக் கருதுபவன் அல்லன். அறச் செயல்களைச் செய்வதுதான் சான்றோர் கடைப்பிடித்த நெறி என்று உணர்ந்து அவன் அறச் செயல்களைச் செய்கிறான் என்று இப்பாடலில் முடமோசியார் கூறுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

ஈகை என்ற அதிகாரத்தில்,

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து. (குறள் - 221)

என்று வள்ளுவர் கூறுகிறார். அதாவது, “வறுமையில் உள்ளவர்களுக்குக் கொடுத்து உதவுவதுதான் ஈகை. மற்றெல்லாம் ஒரு குறிப்பிட்ட பயனை எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மையதாகும்” என்று வள்ளுவர் கூறுகிறார். சான்றோர் கடைப்பிடிக்கும் நெறி என்ற கொள்கையோடு, ஆய் அண்டிரன் எதையும் எதிர்பார்க்காமல் ஈகை செய்வது வள்ளுவரின் குறளோடு ஒப்பு நோக்கத் தக்கது.

அடுத்து வரும் குறளில் (குறள் - 222), ”மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று” என்று வள்ளுவர் கூறுகிறார். ஈகையினால் மேலுலகத்திற்குச் செல்ல முடியாவிட்டாலும் ஈகை நல்ல செயல்தான் என்று வள்ளுவர் கூறியிருப்பதும் ஆய் அண்டிரனின் செயலோடு ஒப்பிடத் தக்கதாகும்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on July 07, 2013, 06:04:34 PM
(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-ash3/1016608_622851701073078_937195814_n.jpg)

புறநானூறு, 135. (காணவே வந்தேன்!)
பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண்.
துறை : பரிசில் துறை.
====================================

கொடுவரி வழங்கும் கோடுயர் நெடுவரை
அருவிடர்ச் சிறுநெறி ஏறலின் வருந்தித்
தடவரல் கொண்ட தகைமெல் ஒதுக்கின்
வளைக்கை விறலியென் பின்னள் ஆகப்
பொன்வார்ந் தன்ன புரிஅடங்கு நரம்பின்

வரிநவில் பனுவல் புலம்பெயர்ந்து இசைப்பப்
படுமலை நின்ற பயங்கெழு சீறியாழ்
ஒல்கல் உள்ளமொடு ஒருபுடைத் தழீஇப்
புகழ்சால் சிறப்பின்நின் நல்லிசை உள்ளி
வந்தெனன் எந்தை யானே: என்றும்

மன்றுபடு பரிசிலர்க் காணின் கன்றொடு
கறையடி யானை இரியல் போக்கும்
மலைகெழு நாடன் மாவேள் ஆஅய்!
களிறும் அன்றே; மாவும் அன்றே;
ஒளிறுபடைப் புரவிய தேரும் அன்றே;

பாணர் பாடுநர் பரிசிலர் ஆங்குஅவர்
தமதுஎனத் தொடுக்குவர் ஆயின் எமதுஎனப்
பற்றல் தேற்றாப் பயங்கெழு தாயமொடு
அன்ன வாகநின் ஊழி; நின்னைக்
காண்டல் வேண்டிய அளவை; வேண்டார்

உறுமுரண் கடந்த ஆற்றல்
பொதுமீக் கூற்றத்து நாடுகிழ வோயே!

அருஞ்சொற்பொருள்:-

கொடுவரி = புலி
கோடு = மலைச் சிகரம்
வரை = மலை
விடர் = பிளவு
தடவரல் = பெருந்துயர், வளைவு
தகை = தளர்வு, அழகு
ஒதுக்கு = நடை
புரி = முறுக்கு
வரி = இசைப்பாடல்
நவிலல் = கற்றல், பெரிது ஒலித்தல்
பனுவல் = பாட்டு
படுமலை = படுமலைப் பலை (ஒரு பண்)
ஒல்கல் = தளர்ச்சி
கறை = உரல்
இரியல் = விட்டுப் போதல், விரைந்து செல்கை
இரியல் போக்குதல் = திரளாகக் கொடுத்தல்
ஒளிறு = ஓளி விடும்
புரவி = குதிரை
தொடுத்தல் = சேர்த்தல், வளைத்துக் கொள்ளுதல்
தேற்றா = தெளியா
தாயம் = சுற்றம்
ஊழி = வாழ்நாள்
வேண்டார் = பகைவர்
உறு = மிக்க
முரண் = வலிமை, மாறுபாடு
பொது = அனைவரும்
மீக்கூறுதல் = புகழ்ந்து கூறுதல்

இதன் பொருள்:-

கொடுவரி=====> நரம்பின்

புலிகள் திரியும் உயர்ந்த சிகரத்தையுடைய நெடிய மலையின் கடத்தற்கரிய பிளவுகளுடைய சிறுவழியில் ஏறி வந்ததால் வருத்தத்தோடும், வளைந்த உடலோடும், நடையில் தளர்ச்சியோடும் வளையல்களை அணிந்த விறலி என் பின்னால் வர நான் மலைப்பாதையில் வந்தேன். நான் வரும் வழியில், பொன்னை உருக்கிக் கம்பியாகச் செய்ததைப் போன்ற முறுக்கிய நரம்புகளுடைய

வரிநவில்=====> என்றும்

என்னுடைய யாழ், இசையுடன் கூடிய பாடல்களை நிலத்திற்கேற்ப மாறி மாறி பெருமளவில் ஒலித்தது. என்னுடைய யாழ் படுமலைப் பண் அமைந்த பாடல்களைப் பாடுவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அத்தகைய சிறிய யாழைத் தளர்ந்த மனத்தோடு ஒரு பக்கம் தழுவிக்கொண்டு, புகழ்தற்கு அமைந்த சிறப்புடைய உன் நல்ல புகழை நினைத்து நான் என் தலைவனாகிய உன்னிடத்து வந்தேன். எந்நாளும்

மன்றுபடு=====> அன்றே

மன்றத்திற்கு வந்த பரிசிலரைக் கண்டால் உரல்போன்ற பருத்த அடிகளுடைய யானைகளையும் அவற்றின் கன்றுகளையும் திரளாக வழங்கும் மலை நாட்டினனே! பெருமைக்குரிய வேளிர் குலத்தவனே! நான் உன்னிடத்து வேண்டுவது யனையும் அன்று; குதிரையும் அன்று; ஒளிமிக்க படையுடன் குதிரைகள் பூட்டப்பட்ட தேரும் அன்று

பாணர்=====> நாடுகிழ வோயே!

பாணரும், புலவரும், பரிசிலரும் ஆகியோர் தமது என உன் பொருளை வளைத்துக் கொள்வாராயின், அதனை எம்முடையது என்று அவரிடமிருந்து மீண்டும் (கைக்கொள்வதை அறியாத) கைக்கொள்ளாத, பயனுள்ள சுற்றத்தோடு கூடியதாக உன் வாழ்நாட்கள் அமையட்டும். உன்னைக் காண வேண்டுமென்பதற்காகவே வந்தேன். பகைவருடைய மிகுந்த வலிமையை அழிக்க வல்ல ஆற்றலும், எவரும் புகழந்து கூறும் நாட்டையும் உடையவனே!

பாடலின் பின்னணி:-

முடமோசியார் ஆய் அண்டிரனைக் காணச் சென்றார். அவருடைய புலமையை நன்கு அறிந்திருந்த ஆய், அவருக்கு யானை, குதிரை, தேர் போன்றவற்றைப் பரிசாக அளிக்க முன்வந்தான். அவர் அவற்றை விரும்பவில்லை. ஆய் மகிழ்ச்சியோடு அளிக்கும் பரிசுகளை வேண்டம் என்று கூறினால் அவன் வருந்துவானோ என்று கருதி, ஒரு பாணன் ஆயைக் காணும் விருப்பம் மட்டுமே உள்ளத்தில் கொண்டு அவனக் காண வந்ததாகவும், அவன் தனக்கு யானை, குதிரை, தேர் போன்றவை வேண்டாம் என்று கூறி ஆயின் வலிமையையும் புகழையும் பாராட்டிப் பாடுவது போலும் இப்பாடலில் கூறித் தன் கருத்தை முடமோசியார் வெளிப்படுத்துகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on July 07, 2013, 06:06:36 PM
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash4/1002249_624582374233344_858588428_n.jpg)

புறநானூறு, 136. (வாழ்த்தி உண்போம்!)
பாடியவர்: துறையூர் ஓடை கிழார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண்.
துறை : பரிசில் கடாநிலை.
==================================

யாழ்ப்பத்தர்ப் புறம்கடுப்ப
இழைவலந்த பஃறுன்னத்து
இடைப்புரைபற்றிப் பிணிவிடாஅ
ஈர்க்குழாத்தொடு இறைகூர்ந்த
பேஎன்பகையென ஒன்றுஎன்கோ?

உண்ணாமையின் ஊன்வாடித்
தெண்ணீரின் கண்மல்கிக்
கசிவுற்றஎன் பல்கிளையொடு
பசிஅலைக்கும் பகைஒன்றுஎன்கோ?
அன்னதன்மையும் அறிந்துஈயார்

நின்னதுதாஎன நிலைதளர
மரம்பிறங்கிய நளிச்சிலம்பின்
குரங்குஅன்ன புன்குறுங்கூளியர்
பரந்தலைக்கும் பகைஒன்றுஎன்கோ?
ஆஅங்கு எனைப்பகையும் அறியுநன்ஆய்

எனக்கருதிப் பெயர்ஏத்தி
வாயாரநின் இசைநம்பிச்
சுடர்சுட்ட சுரத்துஏறி
இவண்வந்த பெருநசையேம்;
எமக்குஈவோர் பிறர்க்குஈவோர்

பிறர்க்குஈவோர் தமக்குஈபவென
அனைத்துஉரைத்தனன் யான்ஆக
நினக்குஒத்தது நீநாடி
நல்கினை விடுமதி பரிசில் அல்கலும்
தண்புனல் வாயில் துறையூர் முன்றுறை

நுண்பல மணலினும் ஏத்தி
உண்குவம் பெருமநீ நல்கிய வளனே

அருஞ்சொற்பொருள்:-

பத்தர் = குடுக்கை
கடுப்ப = ஒப்ப
இழை = நூற்கயிறு
வலந்த =சூழ்ந்த
துன்னம் = தையல்
புரை = இடுக்கு
குழாம் = கூட்டம்
இறை கூர்ந்த = தங்கிய
என - அசை
கசிவு = வருத்தம்
அலைத்தல் = வருத்துதல்
பிறங்குதல் = நிறைதல்
நளி = குளிர்ச்சி
சிலம்பு = மலை
புன்மை = இழிவு
கூளியர் = வழிப்பறி செய்வோர்
பரத்தல் = மிகுதல்
ஆஅங்கு - அசை
ஏத்துதல் = புகழ்தல்
நம்பி = விரும்பி
சுரம் = வழி
ஏறுதல் = கடத்தல்
நசை = விருப்பம்
நாடி = ஆராய்ந்து
அல்கல் = நாள்
அல்கலும் = நாள்தோறும்
ஏத்துதல் = வாழ்த்தல்
நல்குதல் = ஈதல்.

இதன் பொருள்:-

யாழ்ப்பத்தர்ப்=====> ஒன்றுஎன்கோ?

யாழின் பத்தர் என்னும் உறுப்பின் பின் பக்கத்தில் உள்ள பல தையல்களைப் போல், என் துணியின் தையல்களின் இடைவெளியில் உள்ள இடுக்குகளில் பற்றிப் பிடித்துக்கொண்டு அங்கே தங்கியிருக்கும் ஈர்களின் கூட்டத்தோடு கூடிய பேன்களை எனக்குரிய பகைகளில் ஒன்று என்பேனோ?

உண்ணாமையின்=====> அறிந்துஈயார்

உண்ணாததால் உடல் வாடி, கண்களில் நீர் பெருகி இருக்கும் என்னையும் என் சுற்றத்தாரையும் வருத்தும் பசியை எனக்குரிய பகைகளில் ஒன்று என்பேனோ? எங்கள் நிலையை அறிந்தும் எங்களுக்கு ஒன்றும் அளிக்காமல்,

நின்னது=====> அறியுநன்ஆய்

”உன்னிடத்து உள்ளதைத் தா” என்று கூறி எங்களை நிலை தடுமாறுமாறு வருத்தும், மரங்கள் நிறைந்த குளிர்ந்த மலையில் வாழும் குரங்குகள் போல் பரவி வந்து வழிப்பறி செய்யும் இழிந்த குணமுள்ள குள்ளரை எனக்குரிய பகைகளில் ஒன்று என்பேனோ? எனக்குரிய எல்லாப் பகைகளையும் அறிபவன் ஆய் அண்டிரன்

எனக்கருதிப்=====> பிறர்க்குஈவோர்

என்று எண்ணி, உன் பெயரைப் புகழ்ந்து, உன் புகழை வாயார வாழ்த்துவதை விரும்பி, வெயில் சுட்டெரிக்கும் வெப்பமான வழிகளைக் கடந்து பெரும் ஆசையோடு இங்கே வந்துள்ளோம். எங்களுக்குப் பரிசு அளிப்பவர்கள்தான் எதையும் எதிர்பார்க்காமல் உண்மையாகவே பிறருக்கு ஈகை செய்பவர்கள்.

பிறர்க்குஈவோர்=====> வளனே

மற்றவர்களுக்குப் பொருள் கொடுத்து உதவி செய்பவர்கள் (அவர்களிடத்திருந்து எதையாவது எதிர்பார்த்துக் கொடுப்பதால்) தமக்கே ஈகை செய்பவர்கள் என்றுதான் நான் கூறுவேன். ஆராய்ந்து, உனக்குத் தகுந்த முறையில் நீ எங்களுக்குப் பரிசளித்து எங்களை அனுப்புவாயாக. குளிர்ந்த நீரோடுகின்ற வாய்த்தலைகளையுடைய துறையூரில் உள்ள ஆற்று மணலினும் அதிக நாட்கள் நீ வாழ்க என நாள் தோறும் வாழ்த்தி, நீ கொடுக்கும் செல்வத்தை வைத்து நாங்கள் உண்போம்.

பாடலின் பின்னணி:-

ஒடை கிழார் மிகுந்த வறுமையில் இருந்த பொழுது, தன் நிலையைக் கூறி ஆய் அண்டிரனிடம் பரிசில் கேட்பதாக இப்பாடல் அமைந்துள்ளது.

சிறப்புக் குறிப்பு:-

ஈகை என்னும் அதிகாரத்தில் வறியவர்களுக்கு அளிப்பதுதான் ஈகை. மற்றவர்களுக்குக் கொடுப்பது கைமாறு கருதி (எதாவது ஒரு பயனை எதிர்பார்த்து) அளிப்பதாகும் என்று கூறுகிறார்.

வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து. (குறள் - 221)

இதே கருத்தை துறையூர் ஓடை கிழார் இப்பாடலில் குறிப்பிடுவது ஒப்பு நோக்கத்தக்கதாகும்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on July 07, 2013, 06:07:39 PM
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash3/945664_624585340899714_164595116_n.jpg)

புறநானூறு, 137. (நீ வாழ்க! நின்பெற்றோரும் வாழ்க!)
பாடியவர்: ஒருசிறைப் பெரியனார்.
பாடப்பட்டோன்: நாஞ்சில் வள்ளுவன்.
திணை: பாடாண்.
துறை : இயன் மொழி.
===================================

இரங்கு முரசின் இனம்சால் யானை
முந்நீர் ஏணி விறல்கெழு மூவரை
இன்னும் ஓர்யான் அவாஅறி யேனே;
நீயே, முன்யான் அறியு மோனே; துவன்றிய
கயத்திட்ட வித்து வறத்திற் சாவாது

கழைக்கரும்பின் ஒலிக்குந்து
கொண்டல் கொண்டநீர் கோடை காயினும்
கண்ணன்ன மலர்பூக்குந்து
கருங்கால் வேங்கை மலரின் நாளும்
பொன்னன்ன வீசுமந்து

மணியன்னநீர் கடற்படரும்;
செவ்வரைப் படப்பை நாஞ்சிற் பொருந!
சிறுவெள் அருவிப் பெருங்கல் நாடனை!
நீவா ழியர்நின் தந்தை
தாய்வா ழியர் நிற் பயந்திசி னோரே!

அருஞ்சொற்பொருள்:-

இரங்கல் = ஒலித்தல்
இனம் = கூட்டம்
சால் = மிகுதி, நிறைவு
முந்நீர் = கடல்
ஏணி = எல்லை
விறல் = வெற்றி
துவன்றல் = நிறைதல்
கயம் = நீர் உள்ள பள்ளம்
வறம் = வறட்சி
கழை = மூங்கில், கரும்பு, தண்டு
ஒலித்தல் = தழைத்தல்
ஒலிக்குந்து = தழைக்கும்
கொண்டல் = மேகம்
பூக்குந்து = பூக்கும்
வீ = மலர், மகரந்தம்
மணி = நீலமணி
படர்தல் = செல்லுதல்
அரை = அடியிடம்
படப்பை = கொல்லை, தோட்டம், பக்கத்துள்ள இடம், ஊர்ப்புறம், நாடு
பயத்தல் = பெறுதல் (பிறப்பித்தல்)

இதன் பொருள்:-

இரங்கு=====> சாவாது

ஒலிக்கும் முரசும், நிறைந்த யானைக் கூட்டமும், கடலை எல்லையாகவும் கொண்டு வெற்றியுடன் பொருந்திய மூவேந்தரைப் பாடுவதில் நான் ஒருவனே அவா இல்லாதவனாக இருக்கிறேன். முன்னரே இருந்து உன்னையே நான் அறிவேன். நீர் நிறைந்த பள்ளத்தில் விதைத்த வித்து வறட்சியால் சாவது இல்லை.

கழைக்கரும்பின்=====> வீசுமந்து

அது கரும்பைப் போல் தழைக்கும். கோடைக் காலத்தில் வெயில் காய்ந்தாலும், மேகம் முகந்த நீர் மழையாகப் பெய்வதால் மகளிரின் கண்கள் போன்ற மலர்கள் பூக்கும். கரிய அடியையுடைய வேங்கை மரத்தின் பொன்போன்ற மலர்களின் மகரந்தத் தூள்களைச் சுமந்து

மணியன்னநீர்=====> பயந்திசி னோரே!

நீலமணி போன்ற நீர் கடலுக்குச் செல்லும். செம்மையான மலைப் பக்கங்களையுடைய நாஞ்சில் நாட்டு அரசே! சிறிய வெண்ணிற அருவிகளும் பெரிய மலைகளும் உள்ள நாட்டை உடையவனே! நீ வாழ்க! உன்னைப் பெற்ற உன் தந்தையும் தாயும் வாழ்க!

பாடலின் பின்னணி:-

நாஞ்சில் வள்ளுவனைப் பாடுவதில் மட்டுமே ஒரு சிறைப் பெரியனார் ஆர்வம் உடையவராக இருந்தார். இப்பாடல் நாஞ்சில் நாட்டு வளத்தைப் பாராட்டுவதாகவும் நாஞ்சில் வள்ளுவனைப் புகழ்வதாகவும் அமைந்துள்ளது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on July 15, 2013, 11:25:27 AM
(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-ash4/1005426_625437534147828_451494970_n.jpg)

புறநானூறு, 138. (நின்னை அறிந்தவர் யாரோ?)
பாடியவர்: மருதன் இளநாகனார்.
பாடப்பட்டோன்: நாஞ்சில் வள்ளுவன்.
திணை: பாடாண்.
துறை : பாணாற்றுப்படை.
===================================

ஆனினம் கலித்த அதர்பல கடந்து
மானினம் கலித்த மலையின் ஒழிய
மீனினம் கலித்த துறைபல நீந்தி
உள்ளி வந்த வள்ளுயிர்ச் சீறியாழ்
சிதாஅர் உடுக்கை முதாஅரிப் பாண!

நீயே பேரெண் ணலையே; நின்இறை
மாறி வாஎன மொழியலன் மாதோ;
ஒலியிருங் கதுப்பின் ஆயிழை கணவன்
கிளிமரீஇய வியன்புனத்து
மரன்அணி பெருங்குரல் அனையன் ஆதலின்
நின்னை வருதல் அறிந்தனர் யாரே!

அருஞ்சொற்பொருள்:-

ஆ = பசு
இனம் = கூட்டம்
கலித்த = தழைத்த
அதர் = வழி
உயிர் = ஓசை (இசை)
சிதார் = கந்தை
முதாஅரி = மூத்த
எண்ணல் = எண்ணம்
மாதோ = அசை
ஒலித்தல் = தழைத்தல்
இரு = கரிய
கதுப்பு = மயிர்
ஆயிழை = தெரிந்தெடுத்த அணிகலன்களையுடையவள்
மரீஇய = மருவிய, தங்கிய
வியன் =மிகுதி, பெரிய
புனம் = காடு, கொல்லை
மரன் = மரம்
அணி = பொந்து
குரல் = கதிர்

இதன் பொருள்:-

ஆனினம்=====> பாண!

பசுக்களின் கூட்டம் மிகுந்த வழிகளைக் கடந்து, மான் கூட்டங்கள் நிறைந்த மலைகளைக் கடந்து, மீன்கள் மிகுந்த பல நீர்த்துறைகளை நீந்திப் பரிசு பெறலாம் என்ற எண்ணத்தோடு வளமான இசை எழுப்பும் சிறிய யாழுடன் கந்தைத் துணி உடுத்தி வந்த மூத்த பாணனே!

நீயே=====> யாரே!

நீ பெரிய எண்ணங்கள் உடையவன். உன் அரசன் (நாஞ்சில் வள்ளுவன்) ’மற்றொரு நாள் வா’ என்று கூறி உனக்குப் பரிசளிக்காமல் உன்னை அனுப்ப மாட்டான். தழைத்த, கரிய கூந்தலும் தேர்ந்தெடுத்த அணிகலன்களும் உடையவளின் கணவனாகிய நாஞ்சில் வள்ளுவன், கிளிகள் தங்கியிருக்கும் பெரிய தினைப்புனத்தில் உள்ள மரப் பொந்தில் வைக்கப்பட்ட பெரிய நெற்கதிரைப் போன்றவன். அங்கு, கிளிகள் வேண்டும் பொழுது சென்று அவற்றைத் தின்னலாம். அதுபோல் நாஞ்சில் வள்ளுவனிடத்துப் பரிசிலர் பலமுறை செல்லலாம். ஆகவே, நீ முன்னர் வந்ததை அறிந்தவர் யார்?

பாடலின் பின்னணி:-

நாஞ்சில் வள்ளுவனிடம் பரிசில் பெறுவதற்காகச் செல்லும் பாணன் ஒருவனை மருதன் இளநாகனார் கண்டார். அவனை நோக்கி, “மூத்த பாணனே! நீ பெரிய எண்ணங்களோடு நாஞ்சில் வள்ளுவனைக் காணச் செல்கிறாய். நீ அவனைக் கண்டால் அவன் உன்னை ’மற்றொரு நாள் வா’ என்று கூறாமல் உனக்கு வேண்டிய பரிசுகளை அளிப்பான் “ என்று கூறுகிறார். அதைக் கேட்ட பாணன், தான் முன்பு ஒருமுறை நாஞ்சில் வள்ளுவனிடம் பரிசு பெற்றதால் மீண்டும் அவனிடம் செல்லுவதற்குத் தயங்குவதாகக் கூறினான். அதற்கு மறுமொழியாக, மருதன் இளநாகனார், “ மரப்பொந்தில் உள்ள உணவுப் பொருளைக் கிளிகள் பலமுறை உண்ணுவதை நீ கண்டதில்லையா? நாஞ்சில் வள்ளுவனிடம் பரிசு பெறுவதும் அது போன்றதுதான். நீ முன்பு வந்து போனவன் என்று கூறுவார் அங்கு யாருமில்லை” என்று கூறிப் பாணனை மருதன் இளநாகனார் ஆற்றுப்படுத்துகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on July 15, 2013, 11:32:36 AM
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-prn2/971290_625440254147556_621218416_n.jpg)

புறநானூறு, 139. (சாதல் அஞ்சாய் நீயே!)
பாடியவர்: மருதன் இளநாகனார்.
பாடப்பட்டோன்: நாஞ்சில் வள்ளுவன்.
திணை: பாடாண்.
துறை : பரிசில் கடாநிலை.
===================================

சுவல்அழுந்தப் பலகாய
சில்லோதிப் பல்இளைஞருமே
அடிவருந்த நெடிதுஏறிய
கொடிமருங்குல் விறலியருமே
வாழ்தல் வேண்டிப்

பொய்கூறேன்; மெய்கூறுவல்;
ஓடாப் பூட்கை உரவோர் மருக!
உயர்சிமைய உழாஅ நாஞ்சில் பொருந!
மாயா உள்ளமொடு பரிசில் உன்னிக்
கனிபதம் பார்க்கும் காலை யன்றே;

ஈதல் ஆனான் வேந்தே; வேந்தற்குச்
சாதல் அஞ்சாய் நீயே; ஆயிடை
இருநிலம் மிளிர்ந்திசின் ஆஅங்கு ஒருநாள்
அருஞ்சமம் வருகுவ தாயின்
வருந்தலும் உண்டுஎன் பைதலம் கடும்பே

அருஞ்சொற்பொருள்:-

சுவல் = தோள்
காயம் = காழ்ப்பு, தழும்பு
ஓதி = கூந்தல்
மருங்குல் = இடை
ஓடா = புறமுதுகு காட்டி ஓடாத
பூட்கை = கொள்கை
உரவோர் = வலியோர்
மருகன் = வழித்தோன்றல்
சிமை = மலை உச்சி
மாயா = மறையாத (மறவாத)
உன்னல் = நினைக்கை
ஆயிடை = அவ்விடத்து
இரு = பெரிய
மிளிர்தல் = பிறழ்தல்
சமம் = போர்
பைதல் = துன்பம்
கடும்பு = சுற்றம்

இதன் பொருள்:-

சுவல்=====> வேண்டிப்

மூட்டைகளைத் தூக்கியதால் தோள்களில் பல தழும்புகளுடைய நானும், (குறைந்த அளவில் தலை முடியுடைய) இளஞர்களும், நீண்ட மலைவழியில் தங்கள் கால்கள் வருந்துமாறு ஏறி வந்த கொடி போன்ற இடையையுடைய விறலியரும் வாழ வேண்டும். ஆகவே,

பொய்கூறேன்=====> காலை யன்றே

பொய் கூற மாட்டேன்; நான் கூறுவது மெய்யே. புறமுதுகு காட்டி ஒடாத கொள்கையையுடைய வலியோரின் வழித்தோன்றலே! உயர்ந்த மலைச் சிகரஙளுடைய நாஞ்சில் நாட்டுக்கு அரசே! பரிசில் பெறும் எண்ணத்தை மறவாமல் நாங்கள் வந்துள்ளோம். உன்னைப் பார்ப்பதற்கேற்ற சரியான சமயத்தை எண்ணிப் பார்க்க இது ஏற்ற காலம் இல்லை

ஈதல்=====> கடும்பே

உன் வேந்தன் (சேரன்) உனக்கு வேண்டியதெல்லாம் வழங்குகிறான். அவனுக்காக உயிர் விடுவதற்குக் கூட நீ அஞ்சுவது இல்லை. இந்நிலையில் பெரிய நிலம் இரண்டு படுவது போன்ற போர் வந்தாலும் வரலாம். போர் வந்தால் நீ போருக்குப் போய் விடுவாய். அவ்வாறு, நீ போருக்குச் சென்று விட்டால், என் குடும்பமும் நானும் வறுமையால் வருந்துவோம். ஆகவே, இப்பொழுதே எங்களுக்குப் பரிசளிப்பாயாக.

பாடலின் பின்னணி:-

மருதன் இளநாகனார் நாஞ்சில் வள்ளுவனிடம் பரிசில் பெறச் செல்கிறார். தனக்குப் பரிசில் வேண்டும் என்று நேரிடையாகக் கூறாமல், பல இன்னல்களைக் கடந்து தன் குடும்பத்தோடு நாஞ்சில் வள்ளுவனிடம் பரிசில் பெற வந்த ஒரு பாணன் தனக்குப் பரிசில் வேண்டும் என்று கேட்பது போல் இப்பாடலில் தன் விருப்பத்தை மறைமுகமாக மருதன் இளநாகனார் வெளிப்படுத்துகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

நாஞ்சில் என்ற சொல்லுக்குக் கலப்பை என்று பொருள். அச்சொல் நாஞ்சில் நாட்டையும் குறிக்கும். இப்பாடலில், உழா நாஞ்சில் என்பது நாஞ்சில் நாட்டைக் குறிக்கிறது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on July 15, 2013, 11:34:03 AM
புறநானூறு, 140. (தேற்றா ஈகை!)
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: நாஞ்சில் வள்ளுவன்.
திணை: பாடாண்.
துறை : பரிசில் விடை.
===================================

தடவுநிலைப் பலவின் நாஞ்சில் பொருநன்
மடவன் மன்ற செந்நாப் புலவீர்!
வளைக்கை விறலியர் படப்பைக் கொய்த
அடகின் கண்ணுறை ஆக யாம்சில
அரிசி வேண்டினெம் ஆகத் தான்பிற

வரிசை அறிதலில் தன்னும் தூக்கி.
இருங்கடறு வளைஇய குன்றத்து அன்னதோர்
பெருங்களிறு நல்கியோனே; அன்னதோர்
தேற்றா ஈகையும் உளதுகொல்
போற்றார் அம்ம பெரியோர் தம் கடனே?

அருஞ்சொற்பொருள்:-

தடவு = பெருமை
மடவன் = மடையன்
மன்ற = உறுதியாக
செந்நா = செம்மையான(நடுநிலை தவறாத) நாக்கு
படப்பை = கொல்லை, தோட்டம்
அடகு = கீரை
கண்ணுறை = மேலே தூவுவது
பிற - அசை
வரிசை = தகுதி, தரம்
கடறு = காடு
இரு = பெரிய
தேற்ற = தெளியாத
போற்றுதல் = பாதுகாத்தல்
அம்ம - அசை

இதன் பொருள்:-

தடவுநிலை=====> தான்பிற

நடுவு நிலைமை தவறாத புலவர்களே! பெரிய பலா மரங்களையுடைய நாஞ்சில் நாட்டு அரசன் நிச்சயமாக ஒரு மடையன்! வளையல் அணிந்த விறலியர், தோட்டத்தில் பறித்த கீரையைச் சமைத்த பொழுது, அக்கீரையின் மேல் தூவுவதற்காக நாஞ்சில் வள்ளுவனிடம் கொஞ்சம் அரிசி கேட்டர்கள். தான் பரிசிலருக்கு

வரிசை=====> கடனே?

உதவும் முறையை அறிதலால் என் வறுமையைக் கருதாமல், தன் தகுதியை எண்ணி, பெரிய காடுகள் சூழ்ந்த மலைபோன்ற ஒரு யானையை அளித்தான். இப்படி ஆராயாது அளிக்கும் ஈகையும் உண்டோ? பெரியவர்கள் தங்கள் கடமையைச் சிந்தித்துச் (செய்யும் முறையைப் பாதுகாத்துச்) செய்ய மாட்டார்கள் போலும்!

பாடலின் பின்னணி:-

ஒரு சமயம், சில விறலியருடன் அவ்வையார் நாஞ்சில் வள்ளுவனைக் காணச் சென்றார். விறலியர் அங்குள்ள கீரையப் பறித்து, சமைக்க ஆரம்பித்தார்கள். அக்கீரைக் கறியின் மேலே தூவுவதற்காகக் கொஞ்சம் அரிசி வேண்டுமென்று நாஞ்சில் வள்ளுவனைக் கேட்டார்கள். அரிசி கேட்ட விறலியருக்கு, நாஞ்சில் வள்ளுவன் ஒரு யானையைப் பரிசாக அளித்தான். அதைக் கண்ட அவ்வையார், “அரிசி கேட்டதற்கு யானையையா கொடுப்பர்கள்?” என்று நாஞ்சில் வள்ளுவனின் கொடைத்தன்மையை வியக்கிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on July 15, 2013, 11:43:24 AM
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-ash4/1005080_629412673750314_425144483_n.jpg)

புறநானூறு, 141. (மறுமை நோக்கின்று!)
பாடியவர்: பரணர்.
பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன்.
திணை: பாடாண்.
துறை : பாணாற்று படை.
===================================

பாணன் சூடிய பசும்பொன் தாமரை
மாணிழை விறலி மாலையொடு விளங்கக்
கடும்பரி நெடுந்தேர் பூட்டுவிட்டு அசைஇ
ஊரீர் போலச் சுரத்திடை இருந்தனிர்
யாரீ ரோஎன வினவல் ஆனாக்

காரென் ஒக்கல் கடும் பசி இரவல!
வென்வேல் அண்ணல் காணா ஊங்கே
நின்னினும் புல்லியேம் மன்னே; இனியே
இன்னேம் ஆயினேம் மன்னே; என்றும்
உடாஅ போரா ஆகுதல் அறிந்தும்

படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம்கோ
கடாஅ யானைக் கலிமான் பேகன்
எத்துணை ஆயினும் ஈதல் நன்றுஎன
மறுமை நோக்கின்றோ அன்றே
பிறர், வறுமை நோக்கின்றுஅவன் கைவண்மையே

அருஞ்சொற்பொருள்:-

மாண் = மாட்சிமை, அழகு, பெருமை
கடு = விரைவு
பரி = குதிரை
அசைவு = இளைப்பு
சுரம் = வழி
கார் = கருமை
ஒக்கல் = சுற்றம்
ஊங்கு = முன்பு
புல்லியேம் = வறியேம்
இன்னேம் = இத்தகையேம்
உடாஅ = உடுத்தாதது
போரா = போர்த்தாதது
படாஅம் = படாம் = துணி (போர்வை)
மஞ்ஞை = மயில்
கடாம் = மத நீர்
கலிமான் = செருக்குடைய குதிரை

இதன் பொருள்:-

பாணன்=====> ஆனா

உங்களைப் பார்த்தால் பாணன் போல் இருக்கிறதே! நீங்கள் உயர்ந்த பொன்னாலான தாமரை மலரை அணிந்திருக்கிறீர்கள்; உங்கள் விறலியர் சிறப்பாகச் செய்யப்பட்ட மாலையோடு விளங்குகிறார்கள். விரைவாகச் செல்லும் குதிரைகளை உங்கள் தேரிலிருந்து அவிழ்த்துவிட்விட்டு, நீங்கள் உங்கள் சொந்த ஊரில் இருப்பதைப் போல் இந்த வழியில் இளைப்பாறுகிறீர்களே! நீங்கள் யார்? என்று கேட்கிறாயோ?

காரென்=====> அறிந்தும்

வாடிய தோற்றத்தோடு காணப்படும் சுற்றத்தாரோடும் கடும் பசியோடும் உள்ள இரவலனே! (பாணனே!) வெற்றியைத் தரும் வேல்களையுடைய தலைவன் பேகனைக் காண்பதற்கு முன் நாங்களும் உன்னைவிட வறியர்களாகத்தான் இருந்தோம். இப்பொழுது, அவ்வறுமை நீங்கி இந்த நிலையில் உள்ளோம். எப்பொழுதும் உடுத்தவோ அல்லது போர்த்தவோ பயன்படுத்தாது என்று தெரிந்தும்

படாஅம்=====> கைவண்மையே

தன் போர்வையை மயிலுக்கு அளித்த எங்கள் அரசன் பேகன் மதமிக்க யானைகளும் செருக்குடைய குதிரைகளும் உடையவன். மறுமையில் வரக்கூடிய நன்மைகளை எதிர்பார்க்காமல் எவ்வளவு ஆயினும் பிறர்க்கு அளிப்பது நன்று என்று எண்ணுபவன். அவன் வண்மை மறுமையை நோக்கியது அல்ல; அது பிறர் வறுமையை நோக்கியது.

பாடலின் பின்னணி:-

பேகன் மயிலுக்குப் போர்வை அளித்ததைக் கேள்வியுற்ற பரணர் அவனைக் காணச் சென்றார். பரணரின் தகுதிக்கேற்ப அவருக்குப் பரிசளித்து அவரைப் பேகன் சிறப்பித்தான். அவர் பரிசுகளைப் பெற்றுச் செல்லும் வழியில், வறுமையில் வாடிய பாணன் ஒருவனைச் சந்தித்தார். அப்பாணன், “நீவிர் யார்” என்று பரணரைக் கேட்டான். தான் மிகவும் வறுமையில் இருந்ததாகவும் பேகனைப் பாடி பரிசில் பெற்றதாகவும் பேகன் இம்மையில் ஈகை செய்தால் மறுமையில் நலம் பெறலாம் என்று எண்ணாமல் இரப்போர்க்கு ஈதல் செய்பவன் என்று கூறிப் பாணனைப் பேகனிடம் பரணர் ஆற்றுப்படுத்துகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on July 15, 2013, 11:49:01 AM
(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash4/1001302_629415563750025_175462890_n.jpg)

புறநானூறு, 142. (கொடைமடமும் படைமடமும்!)
பாடியவர்: பரணர்.
பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன்.
திணை: பாடாண்.
துறை : இயன் மொழி.
===================================

அறுகுளத்து உகுத்தும் அகல்வயல் பொழிந்தும்
உறுமிடத்து உதவாது உவர்நிலம் ஊட்டியும்
வரையா மரபின் மாரி போலக்
கடாஅ யானைக் கழற்கால் பேகன்
கொடைமடம் படுதல் அல்லது
படைமடம் படான் பிறர் படைமயக் குறினே

அருஞ்சொற்பொருள்:-

அறுதல் = இல்லாமற் போதல், அற்றுப் போதல்
உகுத்தல் = சொரிதல்
வரை = அளவு
கடாம் = மத நீர்
கொடை மடம் = காரணமின்றி (ஆராயாது)கொடுத்தல்
படைமடம் = அறப்போர் நெறியிலிருந்து மாறுபடுதல்
மயங்குதல் = கலத்தல், தாக்கப்படுதல்

இதன் பொருள்:-

நீரற்ற குளத்தில் நீர் சொரிந்தும், அகண்ட வயல்வெளிகளில் பொழிந்தும், தேவையான இடத்தில் பெய்யாது களர் நிலத்தும் அளவின்றி நீரை அளிக்கும் மழையினது இயல்பைப் போன்றது பேகனின் கொடைத்தன்மை. அவன் காரணமின்றி, ஆராயாது யாவர்க்கும் பொருள் கொடுத்தலால் கொடைமடம் கொண்டவன் என்று கருதப்படலாம். ஆனால், மதங்கொண்ட யானைகளும் வீரக் கழலணிந்த கால்களும் உடைய பேகன் பிறர் படை வந்து தாக்கிய பொழுதும் அறநெறியினின்று தவற மாட்டான். ஆகவே, அவன் கொடைமடம் கொண்டவனாக இருந்தாலும் படைமடம் கொண்டவன் அல்லன்.

பாடலின் பின்னணி:-

ஒரு சமயம், பேகனின் கொடை வண்மையைப்பற்றி சான்றோரிடையே ஒரு உரையாடல் நிகழ்ந்தது. சிலர், பேகன் மயிலுக்குப் போர்வை அளித்தது குறித்து அவன் கொடைமடம் மிகுந்தவன் என்று கூறினர். அதைக் கேட்ட பரணர், “ பேகன் கொடைமடம் உள்ளாவனாக இருந்தாலும் படைமடம் இல்லாதவன்” என்று பேகனைச் சிறப்பித்துக் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on July 21, 2013, 07:42:59 PM
புறநானூறு, 143. (யார்கொல் அளியள்!)
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன்.
திணை: பெருந்திணை.
துறை : குறுங்கலி. மனை ஒழுக்கம் தவறியவருக்கு அறிவுரை கூறி அவரை அவ்வொழுக்கத்தில் நிற்கச் செய்தல் குறுங்கலி எனப்படும்.
===================================

மலைவான் கொள்கஎன உயர்பலி தூஉய்
மாரி ஆன்று மழைமேக்கு உயர்கஎனக்
கடவுட் பேணிய குறவர் மாக்கள்
பெயல்கண் மாறிய உவகையர் சாரல்
புனத்தினை அயிலும் நாட! சினப்போர்க்

கைவள் ஈகைக் கலிமான் பேக,
யார்கொல் அளியள் தானே; நெருநல்
சுரன் உழந்து வருந்திய ஒக்கல் பசித்தெனக்
குணில்பாய் முரசின் இரங்கும் அருவி
நளிஇருஞ் சிலம்பின் சீறூர் ஆங்கண்

வாயில் தோன்றி வாழ்த்தி நின்று
நின்னும்நின் மலையும் பாட இன்னாது
இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள்
முலையகம் நனைப்ப விம்மிக்
குழல்இனை வதுபோல் அழுதனள் பெரிதே

அருஞ்சொற்பொருள்:-

வான் = மழை
பலி = அருச்சனைப் பூ
ஆன்று = அடங்கி, நீங்கி
மேக்கு = மேல்
பேணுதல் = போற்றுதல்
புனம் = வயல், கொல்லை
அயில்தல் = உண்ணுதல்
கைவள் = கைவண்மை
அளியள் = இரங்கத் தக்கவள்
நெருநல் = நேற்று
சுரன் = சுரம் = காடு
உழந்து = வருந்தல், புரளல் (நடத்தல்)
குணில் = ஒருவகைப் பறை, பறையடிக்குந் தடி
பாய்தல் = தாக்குதல்
நளி = அகலம், பெருமை
இரு = பெரிய
சிலம்பு = மலை
இன்னா = துன்பம்
இகுத்தல் = சொரிதல்
குழல் = புல்லாங்குழல்
இனைதல் = வருந்துதல்

இதன் பொருள்:-

மலைவான்=====> சினப்போர்

மலைகளை மேகங்கள் சூழ்ந்து மழை பெய்க எனவும், மழை அதிகமாகப் பெய்தால் மேகங்கள் மேலே செல்லட்டும் என்றும் கடவுளை வாழ்த்தி உயர்ந்த பூக்களைத் தூவி வழிபட்டு, மழை நின்றதால் மகிழ்ச்சி அடைந்து மலைச் சாரலில் விளையும் தினையை உண்ணும் குறவர்கள் வாழும் நாட்டை உடையவனே! சினத்தோடு செய்யும் போரையும்,

கைவள்=====> ஆங்கண்

கைவண்மையால் கொடுக்கும் கொடையையும், செருக்குடைய குதிரைகளையும் உடைய பேகனே! நேற்று காட்டில் நடந்து வருந்திய என் சுற்றத்தினர் பசியுற்றனர். தடியால் அடிக்கப்பட்ட முரசின் ஒலி போல் முழங்கும் அருவியையுடைய பெரிய உயர்ந்த மலைஇடத்து உள்ள சிறிய ஊரின்

வாயில்=====> பெரிதே

வாயிற்புறத்து வந்து உன்னையும் உன் மலையையும் வாழ்த்திப் பாடினோம். அப்பொழுது, தான் துன்பத்தோடு வடிக்கும் கண்ணீரை நிறுத்த முடியாமல், தன் மார்பகங்கள் விம்மிக் கண்ணீரால் நனையுமாறு புல்லாங்குழல் வருந்துவது போல் ஒரு பெண்மணி மிகவும் அழுதாள். அவள் இரங்கத் தக்கவள். அவள் யார்?

பாடலின் பின்னணி:-

பேகன் தன் மனைவியிடமிருந்து பிரிந்து பரத்தை ஒருத்தியோடு வாழ்வதைக் கேள்வியுற்ற கபிலர், இப்பாடலில், பேகன் மனைவியின் துயரத்தையும் அவளுக்குப் பேகன் அருள் செய்ய வேண்டுமென்று ஒரு பாணன் கூறுவது போல் இப்பாடலை இயற்றியுள்ளார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on July 21, 2013, 07:44:40 PM
(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-prn1/35554_630776846947230_1863041600_n.jpg)

புறநானூறு, 144. (அருளா யாகலோ கொடிதே!)
பாடியவர்: பரணர்.
பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன்.
திணை: பெருந்திணை.
துறை : குறுங்கலி.
===================================

அருளா யாகலோ கொடிதே; இருள்வரச்
சீறியாழ் செவ்வழி பண்ணி யாழநின்
கார்எதிர் கானம் பாடினே மாக
நீல்நறு நெய்தலிற் பொலிந்த உண்கண்
கலுழ்ந்துவார் அரிப்பனி பூண்அகம் நனைப்ப

இனைதல் ஆனா ளாக, ’இளையோய்
கிளையை மன்எம் கேள்வெய் யோற்கு’என
யாம்தன் தொழுதனம் வினவக் காந்தள்
முகைபுரை விரலில் கண்ணீர் துடையா
யாம்அவன் கிளைஞரேம் அல்லேம்; கேள்இனி;

எம்போல் ஒருத்தி நலன்நயந்து என்றும்
வரூஉம் என்ப வயங்குபுகழ்ப் பேகன்
ஒல்லென ஒலிக்கும் தேரொடு
முல்லை வேலி நல்லூ ரானே

அருஞ்சொற்பொருள்:-

சீறியாழ் = சிறிய யாழ்
செவ்வழி = மாலைப் பொழுதிற்குரிய பண்
யாழ - அசைச்சொல்
கார் = மழை
எதிர் = இலக்கு
கானம் = காடு
நெய்தல் = ஆம்பல் மலர்
உண்கண் = மை தீட்டிய கண்
கலுழ்தல் = அழுதல், கலங்கல்
அரி = இடைவிடுகை
பனி = துளி
பூண் = அணிகலன்
இனைதல் = வருந்துதல்
கிளை = உறவு, நட்பு
கேள் = நட்பு
வெய்யோன் = விரும்பத்தக்கவன்
முகை = மொட்டு
புரை = ஒத்த
கிளைஞர் = உறவோர்
நலன் = அழகு
நயந்து = விரும்பி
வயங்குதல் = ஒளி செய்தல், விளங்குதல்
ஒல் - ஒலிக் குறிப்பு

இதன் பொருள்:-

அருளா=====> நனைப்ப

மாலைநேரத்தில் இருள் வந்ததால் சிறிய யாழை இசைத்து உன் மழைவளம் மிகுந்த காட்டை செவ்வழிப் பண்ணில் பாடினோம். அப்பாட்டைக் கேட்டவுடன், நீல நிறமும் மணமும் உடைய ஆம்பல் மலர் போன்ற மை தீட்டிய கண்களுடைய பெண் ஒருத்தி கலங்கி விட்டுவிட்டு உகுத்த கண்ணீர்த்துளிகள் அவள் அணிகலன்களை நனைத்தன

இனைதல்=====> கேள்இனி

அவள் வருந்தி அழுதாள். ஆகவே, நாங்கள் “இளம்பெண்ணே! நீ எங்கள் நட்பை விரும்புபவனுக்கு (பேகனுக்கு) உறவினளோ?” என்று வணங்கிக் கேட்டோம். அவள் காந்தள் மொட்டுப் போன்ற தன் கை விரல்களால் கண்ணீரைத் துடைத்து, “ நான் அவனுடைய உறவினள் அல்ல; கேள்! இப்போழுது,

எம்போல்=====> நல்லூ ரானே

என் போன்ற ஒருத்தியின் அழகை விரும்பி, புகழ் மிக்க பேகன் ஒலிக்கும் தேரில் முல்லையை வேலியாக உடைய நல்லூருக்கு எந்நாளும் வருவதாகக் கூறுகிறார்கள்” என்று கூறினாள். அவளுக்கு நீ அருள் செய்யாதிருப்பது கொடிது.

பாடலின் பின்னணி:-

பேகன், தன் மனைவி கண்ணகியைப் பிரிந்து, பரத்தை ஒருத்தியோடு வாழ்வதைக் கேள்வியுற்ற பரணர், இப்பாடலில் பேகனுக்கு அறிவுரை கூறுகிறார். பாணன் ஒருவன் பாட்டிசைக்கக் கேட்ட கண்ணகி கண் கலங்குகிறாள். அதைக் கண்ட பாணன், “ அம்மையே, தாங்கள் என் தலைவன் பேகனுக்கு உறவினரோ?” என்று கேட்கிறான். அதற்குக் கண்ணகி, தான் பேகனுக்கு உறவினள் அல்லள் என்றும் தன்னைப் போல் ஒருத்தியின் அழகை விரும்பிப் பேகன் தினமும் அவள் இருக்கும் ஊராகிய நல்லூருக்குத் வருவதாகப் பலரும் கூறுகிறார்கள் என்றாள். பாணன் கண்ணகியோடு நடத்திய உரையாடலைப் பேகனுக்கு எடுத்துரைத்து அவளுக்கு பேகன் அருள் செய்யாதிருப்பது மிகவும் கொடிய செயல் என்று பரணர் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on July 21, 2013, 07:46:13 PM
புறநானூறு, 145. (அவள் இடர் களைவாய்!)
பாடியவர்: பரணர்.
பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன்.
திணை: பெருந்திணை.
துறை : குறுங்கலி.
===================================

மடத்தகை மாமயில் பனிக்கும்என்று அருளிப்
படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக்
கடாஅ யானைக் கலிமான் பேக,
பசித்தும் வாரோம்; பாரமும் இலமே ;
களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ்

நயம்புரிந் துறையுநர் நடுங்கப் பண்ணி
அறம்செய் தீமோ அருள்வெய் யோய்என
இஃதியாம் இரந்த பரிசில்அஃது இருளின்
இனமணி நெடுந்தேர் ஏறி
இன்னாது உறைவி அரும்படர் களைமே!

அருஞ்சொற்பொருள்:-

மடம் = மென்மை
தகை = தன்மை
மா = கருமை
பனித்தல் = நடுங்குதல்
படாஅம் = படாம் = போர்வை
கடாம் = மத நீர்
கலிமான் = செருக்குடைய குதிரை
கோடு = யாழ்த்தண்டு
நயம் புரிந்து உறையுநர் = இசை நயம் புரிந்து வாழ்பவர்
வெய்யோய் = விரும்புபவன்
இனம் = நிறை
படர் = துன்பம்

இதன் பொருள்:-

மடத்தகை=====> சீறியாழ்

மென்மையான இயல்பும் கருமை நிறமும் உடைய மயில் ஒன்று குளிரில் நடுங்குகிறது என்று எண்ணி அம்மயிலுக்குப் போர்வை அளித்தவனே! குறையாத புகழும் மதமுள்ள யானைகளும் செருக்குடைய குதிரைகளும் உடைய பேகனே! நான் பசியினால் வரவில்லை; எனக்குச் சுற்றத்தாரால் வரும் சுமையும் இல்லை. களாப்பழம் போன்ற கரிய தண்டையுடை ய சிறிய யாழுடன்,

நயம்புரி=====> களைமே

இசை நயம் தெரிந்தோர் தலையைசைத்துக் கேட்குமாறு “ அறம் செய்க; அருளை விரும்புபவனே” என்று பாடி உன்னிடம் பரிசிலாகக் கேட்பது என்னவென்றால் ”நீ இன்று இரவே நிறைந்த மணிகளுடைய உயர்ந்த தேரில் ஏறிப்போய் துயரத்துடன் வாழ்பவளின் (உன் மனைவி கண்ணகியின்) துன்பத்தைக் களைவாயாக” என்பதுதான்.

பாடலின் பின்னணி:-

பரணர் பாடியதைக் கேட்ட பேகன் அவருக்குப் பரிசில் அளிக்க முன்வந்தான். அதைக் கண்ட பரணர், “ மயிலுக்குப் போர்வை அளித்த பேகனே! நாங்கள் பசியால் இங்கு வரவில்லை; எமக்குச் சுற்றமும் இல்லை; நீ இன்றே புறப்பட்டு உன் மனைவியிடம் சென்று அவள் துன்பத்தைத் தீர்க்க வேண்டும்” என்று இப்பாடலில் கூறுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on July 21, 2013, 07:47:39 PM
புறநானூறு, 146. (தேர் பூண்க மாவே!)
பாடியவர்: அரிசில் கிழார்.
பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன்.
திணை: பெருந்திணை.
துறை : குறுங்கலி.
===================================

அன்ன வாக; நின் அருங்கல வெறுக்கை
அவை பெறல் வேண்டேம்; அடுபோர்ப் பேக!
சீறியாழ் செவ்வழி பண்ணிநின் வன்புல
நன்னாடு பாட, என்னை நயந்து
பரிசில் நல்குவை யாயின் குரிசில்நீ

நல்கா மையின் நைவரச் சாஅய்
அருந்துயர் உழக்கும்நின் திருந்திழை அரிவை
கலிமயிற் கலாவம் கால்குவித் தன்ன
ஒலிமென் கூந்தல் கமழ்புகை கொளீஇத்
தண்கமழ் கோதை புனைய
வண்பரி நெடுந்தேர் பூண்க, நின் மாவே!

அருஞ்சொற்பொருள்:-

வெறுக்கை = செல்வம்
செவ்வழி = மாலை நேரத்திற்குரிய பண்
நயந்து = விரும்பி
குரிசில் = அரசன், தலைவன்
நைவரல் = இரங்குதல்
சாய்தல் = தளர்தல்
உழத்தல் = வருந்துதல்
அரிவை = இருபத்து ஐந்து வயதுள்ள பெண் (பெண்)
கலித்தல் = தழைத்தல்
கலாவம் = தோகை
ஒலித்தல் = தழைத்தல்
கோதை = பூ மாலை
புனைதல் = சூடுதல்
வண் = மிகுதி
பரிதல் = ஓடுதல்
மா = குதிரை

இதன் பொருள்:-

அன்ன வாக=====> குரிசில்நீ

நீ எனக்கு அளிக்கும் அரிய அணிகலன்களும் செல்வமும் அப்படியே இருக்கட்டும். அவற்றை நான் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை. போர்களில் வெல்லும் பேகனே! சிறிய யாழை ஏந்தி, மலை நேரத்திற்குரிய செவ்வழிப் பண்ணில் பாட்டிசைத்து உன் வலிய நிலமாகிய நல்ல நாட்டை நான் பாடுவதால் நீ என்னை விரும்பி எனக்குப் பரிசில் அளிப்பதாக இருந்தால்,

நல்கா=====> நின் மாவே

தலைவனே! நீ அருள் செய்யாததால் அரிய துயரத்தால் மனம் வருந்தி உடல் தளர்ந்து அழகிய அணிகலன்களோடு உள்ள உன் மனைவியின் மயில் தோகை போல் காலளவு தழைத்த மெல்லிய கூந்தலில் நறுமணமுள்ள புகையூட்டி, குளிர்ந்த மணமுள்ள மாலை அணியுமாறு விரைந்தோடும் குதிரைகளை உன் நெடிய தேரில் பூட்டுவாயாக!

பாடலின் பின்னனி:-

வையாவிக் கோப்பெரும் பேகன் தன் மனைவி கண்ணகியைத் துறந்து வாழ்வதைக் கேள்வியுற்ற அரிசில் கிழார் அவனைக் காணச் சென்றார். பேகன் இவருக்குப் பெருமளவில் பரிசில் அளித்தான். இவர், “என்னைப் பாராட்டி எனக்குப் பரிசில் அளிக்க விரும்பினால், நான் விரும்பும் பரிசில் பொன்னும் பொருளும் அல்ல; நீ உன் மனைவியோடு சேர்ந்து வாழவேண்டும். அதுவே நான் வேண்டும் பரிசில்” என்று இப்பாடலில் பேகனுக்கு அறிவுரை கூறுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on July 21, 2013, 07:48:51 PM
புறநானூறு, 147. (எம் பரிசில்!)
பாடியவர்: பெருங்குன்றூர்க் கிழார்.
பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன்.
திணை: பெருந்திணை.
துறை : குறுங்கலி.
===================================

கல்முழை அருவிப் பன்மலை நீந்திச்
சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததைக்
கார்வான் இன்னுறை தமியள் கேளா
நெருநல் ஒருசிறைப் புலம்புகொண்டு உறையும்
அரிமதர் மழைக்கண், அம்மா அரிவை
நெய்யொடு துறந்த மையிருங் கூந்தல்
மண்ணுறு மணியின் மாசுஅற மண்ணிப்
புதுமலர் கஞல, இன்று பெயரின்
அதுமன், எம் பரிசில் ஆவியர் கோவே!

அருஞ்சொற்பொருள்:-

முழை = குகை
நீந்தி = கடந்து
செவ்வழி = மாலை நேரத்திற்குரிய பண்
கார் = கார் காலம் (ஆவணி, புரட்டாசி)
உறை = மழைத்துளி
தமி = தனிமை
சிறை = பக்கம்
புலம்பு = வருத்தம்
அரி = செவ்வரி (கண்வரி)
மதர் = செருக்கு
அம் = அழகு
மா = நிறம்
அரிவை = பெண்
மண்னுதல் = கழுவுதல்
கஞல = விளங்க
பெயரின் = செல்லின்

இதன் பொருள்:-

ஆவியர் கோவே! கற்குகைகளிலிருந்து விழும் அருவிகளுடைய பலமலைகளைக் கடந்து, வரும் வழியில் சிறிய யாழால் மாலை நேரத்திற்குரிய செவ்வழிப் பண்ணை இசைத்து வந்தோம். நேற்று நாங்கள் வந்த பொழுது, கார் காலத்தில் வானத்திலிருந்து விழும் இனிய மழைத்துளிகளின் ஓசையைத் தனித்திருந்து கேட்டு ஒரு பெண் ஒரு பக்கத்தில் இருந்து வருந்திக்கொண்டு இருந்தாள். (அவள் உன் மனைவி என்று தெரிந்து கொண்டோம்). அவள் கண்கள் செவ்வரியுடனும் செருக்குடனும் கண்ணீர் மல்கி இருந்தது. அழகிய நிறமுள்ள அப்பெண்னின் நெய் தடவப்படாத கரிய கூந்தலை கழுவப்பட்ட நீல மணி போல் மாசு இல்லாமல் கழுவிப் புதுமலர் பொலியச் செய்வதற்கு இன்றே நீ புறப்பட்டால், அதுவே எம் பரிசு.

பாடலின் பின்னணி:-

இப்பாடலை ஒரு பாணனின் கூற்று போல் பெருங்குன்றூர்க் கிழார் பாடியுள்ளார். பாணன் ஒருவன், “ நேற்று நாங்கள் செவ்வழிப் பண்னை இசைத்தோம். அதைக் கேட்டு ஒரு பெண் தனியளாக, கண்ணீரும் கம்பலையுமாக இருந்தாள். அவள் முடியில் பூச் சூடவில்லை. அவள் உன் மனைவி என்று தெரிந்து கொண்டோம். அவள் தன் கூந்தலில் பூச்சூடி மகிழுமாறு நீ அருளுதல் வேண்டும். ஆவியர் குடியில் தோன்றிய பேகனே! அதுவே நீ எமக்கு அளிக்கும் பரிசில்” என்று கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on July 21, 2013, 07:50:03 PM
புறநானூறு, 148. (என் சிறு செந்நா!)
பாடியவர்: வன்பரணர்.
பாடப்பட்டோன்: கண்டீரக் கோப் பெருநள்ளி.
திணை: பாடாண்.
துறை : பரிசில் துறை.
===================================

கறங்குமிசை அருவிய பிறங்குமலை நள்ளிநின்
அசைவுஇல் நோந்தாள் நசைவளன் ஏத்தி
நாடொறும் நன்கலம் களிற்றொடு கொணர்ந்து
கூடுவிளங்கு வியன்நகர்ப், பரிசில் முற்று அளிப்பப்
பீடில் மன்னர்ப் புகழ்ச்சி வேண்டிச்
செய்யா கூறிக் கிளத்தல்
எய்யா தாகின்று, எம் சிறு செந்நாவே

அருஞ்சொற்பொருள்:-

கறங்குதல் = ஒலித்தல்
மிசை = மேல்
பிறங்குதல் = ஒளி செய்தல்
அசைவு = மடி, இளைப்பு
நோன்மை = வலிமை
நோன்தாள் = வலிய முயற்சி
நசை = விருப்பம்
ஏத்தி = வாழ்த்தி
கூடு = நெற்கூடு
பீடு = பெருமை
கிளத்தல் = கூறுதல்
எய்யாது = அறியாதது

இதன் பொருள்:-

மலை மேலிருந்து ஒலியுடன் விழுந்து விளங்கும் அருவிகள் உள்ள மலை நாட்டு நள்ளி! உன்னுடைய தளராத வலிய முயற்சியால் திரட்டிய விரும்பத்தக்க செல்வத்தை வாழ்த்தி நாள்தோறும் நல்ல அணிகலன்களை யானைகளோடு கொண்டுவந்து, நெற்குதிர்கள் விளங்கும் பெரிய நகரங்களில் இருக்கும் பரிசிலர்களுக்கு அனைத்தையும் அளிக்கிறாய். ஆகவே, பெருமை இல்லாத மன்னர்களைப் புகழ்வதை விரும்பி அவர்கள் செய்யாதவற்றைக் செய்தது போல் கூறுவதை எம் சிறிய, நடுவு நிலைமை தவறாத நாக்கு அறியாததாயிற்று.

பாடலின் பின்னணி:-

வன்பரணர் நள்ளியிடம் சென்று அவன் அவன் வெற்றிச் சிறப்பையும் வண்மையையும் புகழ்ந்தார். அதனைக் கேட்ட நள்ளி, அப்புகழுரைகளுக்குத் தான் தகுதியுடையவனா என்பதில் தனக்கு ஐயம் உண்டு என்று கூறினான். அவன் கூற்றுக்கு மறுமொழியாக, “ உன் கொடையால் என் வறுமை மறைந்து விட்டது. ஆகவே, பெருமை இல்லாத மன்னர்களின் புகழ்ச்சியை விரும்பி அவர்கள் செய்யாதவற்றைச் செய்ததாகப் பொய்யாகக் கூற வேண்டிய வறிய நிலை என்னிடம் இல்லை. அதனால், என் நாக்கு ஒருவரையும் அவர் செய்யாததைக் கூறிப் பாராட்டாது” என்று கூறுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on July 21, 2013, 07:54:58 PM
புறநானூறு, 149. (வண்மையான் மறந்தனர்!)
பாடியவர்: வன்பரணர்.
பாடப்பட்டோன்: கண்டீரக் கோப் பெருநள்ளி.
திணை: பாடாண்.
துறை : இயன் மொழி.
===================================

நள்ளி வாழியோ; நள்ளி நள்ளென்
மாலை மருதம் பண்ணிக் காலைக்
கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி
வரவுஎமர் மறந்தனர் அதுநீ
புரவுக்கடன் பூண்ட வண்மை யானே

அருஞ்சொற்பொருள்:-

நள் = இரவு, இருள்,செறிவு
மருதம் = காலை நேரத்திற்குரிய பண்
கைவழி = பாணர்கள் எப்பொழுதும் கையில் வைத்துள்ள ஒரு வகை யாழ்
செவ்வழி = மாலை நேரத்திற்குரிய பண்
எமர் = எம்மவர்
புரவு = கொடை

இதன் பொருள்:-

நள்ளி! நீ வாழ்க! கொடுப்பதைக் கடமையாக மேற்கொண்டு நீ அளித்த கொடையால் ஏற்பட்ட வளத்தால், பாணர்கள் இசைக்குரிய வழிமுறைகளை மறந்து இருண்டு வரும் மாலைப் பொழுதில் மருதப் பண்ணையும் காலையில் கையிலுள்ள யாழால் செவ்வழிப் பண்ணையும் வாசிக்கிறார்கள்.

பாடலின் பின்னணி:-

ஒரு சமயம் வன்பரணர் கண்டீராக் கோப்பெரு நள்ளியுடன் இருந்தார். அப்பொழுது பாணர் சிலர் காலையில் பாட வேண்டிய மருதப் பண்ணை மாலையிலும், மாலையில் பாட வேண்டிய செவ்வழிப் பண்ணை காலையிலும் மாற்றிப் பாடினர். அவர்கள் ஏன் அவ்வாறு தவறாகப் பாடுகிறார்கள் என்று நள்ளி வன்பரணரைக் கேட்டான். அதற்கு, வன்பரணர், “ நள்ளி! காலையில் மருதப் பண்ணும் மாலையில் செவ்வழிப் பண்னும் பாடுவதுதான் முறை. நீ அவர்களுக்கு வறுமை தெரியாதவாறு வேண்டியவற்றை எல்லாம் நிரம்ப அளித்ததால் அவர்கள் அம்முறைமையை மறந்தனர்” என்று இப்பாடலில் விடை அளிக்கிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on July 21, 2013, 07:56:25 PM
புறநானூறு, 150. (நளி மலை நாடன்!)
பாடியவர்: வன்பரணர்.
பாடப்பட்டோன்: கண்டீரக் கோப் பெருநள்ளி.
திணை: பாடாண்.
துறை : இயன் மொழி.
===================================

கூதிர்ப் பருந்தின் இருஞ் சிறகு அன்ன
பாறிய சிதாரேன், பலவுமுதல் பொருந்தித்
தன்னும் உள்ளேன், பிறிதுபுலம் படர்ந்த என்
உயங்குபடர் வருத்தமும் உலைவும் நோக்கி
மான்கணம் தொலைச்சிய குருதியங் கழற்கால்

வான்கதிர்த் திருமணி விளங்கும் சென்னிச்
செல்வத் தோன்றல், ஓர் வல்வில் வேட்டுவன்
தொழுதனென் எழுவேற் கைகவித்து இரீஇ
இழுதின் அன்ன வால்நிணக் கொழுங்குறை
கான்அதர் மயங்கிய இளையர் வல்லே

தாம்வந்து எய்தா அளவை, ஒய்யெனத்
தான்ஞெலி தீயின் விரைவனன் சுட்டு, ‘நின்
இரும்பேர் ஒக்கலொடு தின்ம்’ எனத் தருதலின்
அமிழ்தின் மிசைந்து, காய்பசி நீங்கி
நல்மரன் நளிய நறுந்தண் சாரல்

கல்மிசை அருவி தண்ணெனப் பருகி
விடுத்தல் தொடங்கினேன் ஆக, வல்லே
“பெறுதற் கரிய வீறுசால் நன்கலம்
பிறிதொன்று இல்லை; காட்டு நாட்டோம்” என
மார்பிற் பூண்ட வயங்குகாழ் ஆரம்

மடைசெறி முன்கை கடகமொடு ஈத்தனன்
‘எந்நா டோ?’ என, நாடும் சொல்லான்;
‘யாரீ ரோ!’ எனப், பேரும் சொல்லான்:
பிறர்பிறர் கூற வழிக்கேட் டிசினே;
இரும்பு புனைந்து இயற்றாப் பெரும்பெயர்த் தோட்டி

அம்மலை காக்கும் அணிநெடுங் குன்றின்
பளிங்கு வகுத் தன்ன தீநீர்
நளிமலை நாடன் நள்ளிஅவன் எனவே

அருஞ்சொற்பொருள்:-

கூதிர் = குளிர்
கூதிர் காலம் = ஐப்பசி, கார்த்திகை
பாறுதல் = அழிதல், சிதறுதல்
சிதார் = கந்தை
புலம் = இடம்
படர்ந்த = சென்ற
உயக்கம் = வருத்தம்
உயங்குதல் = வருந்துதல், வாடுதல், துவளுதல்
உலைவு = இளைப்பு, ஊக்கக் குறைவு
கணம் = கூட்டம்
வான் = மழை, அழகு, சிறப்பு
சென்னி = தலை
இரீஇ = இருத்தி
இழுது = நெய்
கொழுங்குறை = ஊன் துண்டுகள்
கான் = காடு
அதர் = வழி
ஞெலிதல் = கடைதல், தீக் கடைதல்
மிசைதல் = அனுபவித்தல், உண்டல், நுகர்தல்
காய் = வருந்தல், பசி
நளிய = செறிந்த
வல் = விரைவு
வீறு = ஒளி, பெருமை
வயங்குதல் = விளங்குதல்
காழ் = முத்து வடம், மணி வடம்
மடை = ஆபரணக் கடைப் பூட்டு
நளி = பெரிய

இதன் பொருள்:-

கூதிர்=====> கழற்கால்

குளிர் காலத்தில் மழையில் நனைந்த பருந்தின் கரிய சிறகைப் போன்ற கிழிந்த கந்தைத் துணியை உடுத்திய நான் பலாமரத்தடியில் என்னையே மறந்து இருந்தேன். வேற்று நாட்டிலிருந்து அங்கே வந்துள்ள என்னுடைய வருத்ததையும் தளர்ச்சியையும் கண்டு, மான் கூட்டத்தைக் (வேட்டையாடிக்) கொன்று குருதி தோய்ந்த, அழகிய வீரக்கழலணிந்த காலும்,

வான்கதிர்=====> வல்லே

அழகிய நீலமணி ஒளிரும் தலையும் உடைய, செல்வச் செம்மல் போன்ற ஒரு வேட்டுவன் வலிய வில்லோடு அங்கே தோன்றினான். அவனைக் கண்டு நான் வணங்கி எழுந்திருப்பதைப் பார்த்த அவன், தன் கையை அசைத்து என்னை இருக்கச் செய்தான். காட்டு வழியில் சென்று வழிதவறிய இளைஞர்கள் விரைந்து வந்து சேர்வதற்கு முன்,

தாம்வந்து=====> சாரல்

நெய் விழுது போன்ற வெண்ணிறமுடைய புலால் துண்டுகளை தான் மூட்டிய தீயில் சமைத்து, “தங்கள் பெரிய சுற்றத்தோடு இதை உண்ணுக” என்று எனக்கு அளித்தான். அதனை நாங்கள் அமிழ்தத்தைப் போல் உண்டு எங்களை வருத்திய பசியைத் தீர்த்து, நல்ல மரங்கள் சூழ்ந்த மணமுள்ள குளிர்ந்த மலைச் சாரலில்

கல்மிசை=====> ஆரம்

மலை உச்சியிலிருந்து விழும் அருவியின் குளிர்ந்த நீரைப் பருகினோம். நான் அவனிடமிருந்து விடைபெற்றுக்கொள்ளத் தொடங்கினேன். அவன் விரைந்து வந்து, “ தாங்கள் பெறுதற்கரிய பெருமைக்குரிய அணிகலன்கள் வேறு எதுவும் எங்களிடம் இல்லை; நாங்கள் காட்டு நாட்டைச் சார்ந்தவர்கள்” என்று கூறித் தனது மார்பில் அணிந்திருந்த ஒளிபொருந்திய முத்து மாலையையும்

மடைசெறி=====> எனவே

முன் கையில் அணிந்திருந்த கடகத்தையும் கொடுத்தான். ”தங்களது நாடு எது?” என்று கேட்டேன். அவன் தன் நாடு எது என்று கூறவில்லை. “தாங்கள் யார்?” என்று கேட்டேன். அவன் தன் பெயரையும் கூறவில்லை. அவன், பெருமைக்குரிய தோட்டி என்னும் அழகிய மலையையும், பக்கத்திலுள்ள அழகிய பெரிய மலையையும் காப்பவன் என்றும் பளிங்கு போன்ற நிறமுடைய இனிய நீருடைய பெரிய மலை நாட்டு நள்ளி என்றும் வழியில் வந்த பிறர் சொல்லக் கேட்டேன்

சிறப்புக் குறிப்பு:-

தோட்டி என்னும் சொல்லுக்கு, யானைப்பாகன் யானையைக் கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுத்தும், ”அங்குசம்” என்று ஒரு பொருள். அது இரும்பால் செய்யப்பட்டது. ஆனால், இப்பாடலில் குறிப்பிடப்படும் தோட்டி என்னும் சொல் தோட்டி மலையைக் குறிக்கிறது. இப்பாடலை இயற்றிய புலவர், “இரும்பு புனைந்து இயற்றா” என்ற அடைமொழியால் “இரும்பால் செய்யாப்படாத தோட்டி” என்று தோட்டி மலையைக் குறிப்பிடுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on July 31, 2013, 07:43:50 PM
புறநானூறு, 151. (அடைத்த கதவினை!)
பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார்.
பாடப்பட்டோன்: இளவிச்சிக் கோ.
திணை: பாடாண்.
துறை : இயன் மொழி.
===================================

பண்டும் பண்டும் பாடுநர் உவப்ப
விண்தோய் சிமைய விறல்வரைக் கவாஅன்
கிழவன் சேட்புலம் படரின் இழைஅணிந்து
புன்தலை மடப்பிடி பரிசில் ஆகப்
பெண்டிரும் தம்பதம் கொடுக்கும் வண்புகழ்க்
கண்டீ ரக்கோன் ஆகலின் நன்றும்

முயங்கல் ஆன்றிசின் யானே பொலந்தேர்
நன்னன் மருகன் அன்றியும் நீயும்
முயங்கற்கு ஒத்தனை மன்னே வயங்குமொழிப்
பாடுநர்க்கு அடைத்த கதவின் ஆடுமழை
அணங்குசால் அடுக்கம் பொழியும்நும்
மணங்கமழ் மால்வரை வரைந்தனர் எமரே

அருஞ்சொற்பொருள்:-

பண்டு = பழமை
உவத்தல் = மகிழ்தல்
சிமையம் = உச்சி
விறல் = சிறந்த
வரை = மலை
கவா = மலைப் பக்கம்
சேண்புலம் = நெடுந்தூரம்
படர்தல் = செல்லல்
பிடி = பெண் யானை
தம்பதம் = தம் தகுதிக்கேற்ப
வண் = மிகுதி
முயங்கல் = தழுவல்
பொலம் = பொன்
வியங்குதல் = விளங்குதல்
ஆடுதல் = அசைதல்
அணங்கு = அச்சம்
சால் = மிகுதி, நிறைவு
அடுக்கம் = மலைப் பக்கம்
மால் = பெருமை
வரை = மலை
வரைதல் = நீக்கல்

இதன் பொருள்:-

பண்டும்=====> நன்றும்

வானளாவிய சிறந்த மலைச் சிகரங்களும், மலைப்பக்கங்களும் உடைய நாட்டிற்கு உரியவனாகிய இளங்கண்டீராக் கோ நெடுந்தூரம் சென்றிருந்தாலும், அவன் இல்லத்து மகளிர் தமக்குகந்த முறையில், பாடி வருபவர்கள் மகிழும் வகையில் நன்கு செய்யப்பட்ட அணிகலன்கள் அணிந்த சிறிய தலையையுடைய இளம்பெண் யானைகளைப் பரிசாக அளிக்கும் புகழ் மிகுந்ததாகப் பன்னெடுங்காலமாகவே அவன் நாடு உள்ளது. ஆகவே,

முயங்கல்=====> எமரே

நான் அவனை நன்றாகத் தழுவினேன். நீயும் தழுவுவதற்கு ஏற்றவன்தான். ஆனால், நீ பொன்னாலான தேரையுடைய (பெண் கொலை புரிந்த) நன்னனின் வழித்தோன்றல். அது மட்டுமல்லாமல், உன் நாட்டில், விளங்கும் மொழியில் பாடுவோர்க்கு வாயிற் கதவுகள் அடைக்கப் படுவதால், அச்சம் நிறைந்த மலைப் பக்கங்களில் தவழும் மேகம் பொழியும் மழையுடன் மணமும் உடைய பெருமைக்குரிய விச்சி மலையை எம் போன்றவர்கள் பாடுவதை நீக்கினார்கள். ஆகவே, நான் உன்னைத் தழுவவில்லை.

பாடலின் பின்னணி:-

கண்டீராக் கோப்பெரு நள்ளியின் இளவல் இளங்கண்டீராக் கோ என்று அழைக்கப்பட்டான். இளங்கண்டீராக் கோவும் இளவிச்சிக் கோவும் நெருங்கிய நண்பர்கள். ஒரு சமயம், அவர்கள் இருவரும் கூடியிருந்த இடத்திற்குப் புலவர் பெருந்தலைச் சாத்தனார் இளங்கண்டீராக் கோவைக் காண வந்தார். இளங்கண்டீராக் கோவைக் கண்டவுடன் அவனைத் தழுவினார். ஆனால், அவர் இளவிச்சிக் கோவைத் தழுவவில்லை. அதைக் கண்டு கலக்கமுற்ற இளவிச்சிக்கோ, பெருந்தலைச் சாத்தனார் ஏன் தன்னைத் தழுவவில்லை என்று கேட்டான். அவனுடைய கேள்விக்குப் பெருந்தலைச் சாத்தனார், “அரசே, இளங்கண்டீராக் கோ வண்மை மிக்கவன். அவன் வீட்டில் இல்லாவிட்டாலும் அவன் வீட்டுப் பெண்டிர் தம் தகுதிக்கேற்ப இரவலர்க்குப் பரிசளிப்பர். அதனால், இளங்கண்டீராக் கோவைத் தழுவினேன். உன் முன்னோருள் முதல்வன் நன்னன் என்பவன் ஒரு பெண்ணைக் கொலைச் செய்தவன். அது மட்டுமல்லாமல், உன் நாட்டில் பாடி வருபவர்களுக்குப் பரிசளிக்காமல் வீட்டுக் கதவை அடைக்கும் வழக்கம் உள்ளது. அதனால் என் போன்ற புலவர்கள் விச்சி மலையைப் பாடுவதில்லை. அதனால் அம்மலைக்குரிய உன்னைத் தழுவவில்லை” என்று இப்பாடலில் விடையளிக்கிறார்.

சிறப்புக் குறிப்பு:-

நன்னன் என்பவன் ஒரு சிற்றரசன். அவன் நாட்டில் இருந்த மா மரம் ஒன்றிலிருந்து விழுந்த காய் நீரில் மிதந்து சென்றது. அந்நீரில் குளிக்கச் சென்ற பெண் ஒருத்தி அந்த மாங்காயைத் தின்றாள். அதைக் கண்ட நன்னனின் வேலையாட்கள் அவனிடம் சென்று அந்தப் பெண் மாங்காயைத் தின்ற செய்தியைக் கூறினர். அதைக் கேள்வியுற்ற நன்னன், அந்தப் பெண்ணை அழைத்து வரச் சொன்னான். அப்பெண் செய்த தவற்றிற்காக அவள் தந்தை அப்பெண்ணின் எடைக்கு ஈடாக பொன்னால் செய்யப்பட்ட பாவை (பொம்மை) யையும், எண்பத்தொரு யானைகளையும் நன்னனுக்கு தண்டனையாக அளிப்பதாகக் கூறினான். நன்னன் அதை ஏற்க மறுத்து, அப்பெண்ணைக் கொலை செய்யுமாறு தன் வேலையாட்களைப் பணித்தான். அவர்களும் அவ்வறே செய்தனர். நன்னன் பெண்கொலை செய்தவன் என்று பலராலும் பழிக்கபட்டான். அவன் செயலால் அவனது குலத்தினரும் நீங்காத பழி உற்றனர். இச்செய்தி குறுந்தொகைப் பாடல் 292 -இல் காணப்படுகிறது.

மண்ணிய சென்ற வொண்ணுதல் அரிவை
புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்கு
ஒன்பதிற்று ஒன்பது களிற்றொடு அவள்நிறை
பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான்
பெண்கொலை புரிந்த நன்னன்
(குறுந்தொகை - 292: 1-5)
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on July 31, 2013, 07:45:51 PM
புறநானூறு, 152. (பெயர் கேட்க நாணினன்!)
பாடியவர்: வன்பரணர்.
பாடப்பட்டோன்: வல்வில் ஓரி. கடையேழு வள்ளல்களில் (அதியமான், ஆய் அண்டிரன், பாரி, காரி, ஓரி, நள்ளி, பேகன்) ஒருவன்.
திணை: பாடாண்.
துறை : பரிசில் விடை.
===================================

வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி
பேழ்வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇப்
புழல்தலை புகர்க்கலை உருட்டி உரல்தலைக்
கேழற் பன்றி வீழ அயலது
ஆழற் புற்றத்து உடும்பில் செற்றும்

வல்வில் வேட்டம் வலம்படுத்து இருந்தோன்
புகழ்சால் சிறப்பின் அம்புமிகத் திளைக்கும்
கொலைவன் யார்கொலோ? கொலைவன் மற்றுஇவன்
விலைவன் போலான் வெறுக்கைநன்கு உடையன்:
ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பின்

சாரல் அருவிப் பயமலைக் கிழவன்
ஓரி கொல்லோ? அல்லன் கொல்லோ?
பாடுவல் விறலி ஓர் வண்ணம்; நீரும்
மண்முழா அமைமின் ; பண்யாழ் நிறுமின் ;
கண்விடு தூம்பின் களிற்று உயிர் தொடுமின்:

எல்லரி தொடுமின் ; ஆகுளி தொடுமின்;
பதலை ஒருகண் பையென இயக்குமின்;
மதலை மாக்கோல் கைவலம் தமின்என்று
இறைவன் ஆகலின் சொல்லுபு குறுகி
மூவேழ் துறையும் ழுறையுளிக் கழிப்பிக்

கோவெனப் பெயரிய காலை ஆங்கு அது
தன்பெயர் ஆகலின் நாணி மற்றுயாம்
நாட்டிடன் நாட்டிடன் வருதும் ; ஈங்குஓர்
வேட்டுவர் இல்லை நின்ஒப் போர்என
வேட்டது மொழியவும் விடாஅன் வேட்டத்தில்

தான் உயிர் செகுத்த மான் நிணப் புழுக்கோடு
ஆன்உருக்கு அன்ன வேரியை நல்கித்
தன்மலைப் பிறந்த தாவில் நன்பொன்
பன்மணிக் குவையொடும் விரைஇக் கொண்ம்எனச்
சுரத்துஇடை நல்கி யோனே விடர்ச்சிமை

ஓங்குஇருங் கொல்லிப் பொருநன்
ஓம்பா ஈகை விறல்வெய் யோனே!

அருஞ்சொற்பொருள்:-

வேழம் = யானை
விழு = சிறந்த
தொடை = அம்பின் பின் தோகை, அம்பு
பகழி = அம்பு
பேழ் = பெரிய
உழுவை = புலி
பெரும்பிறிது = இறப்பு
உறீஇ = உறுவித்து
புழல் = துளையுள்ளது
புகர் = புள்ளி
கலை = ஆண்மான்
கேழற்பன்றி = ஆண்பன்றி
ஆழல் = ஆழமுடைத்தாதல்
செற்றுதல் = அழுந்துதல்
வேட்டம் = வேட்டை
வலம் = வெற்றி
திளைத்தல் = பொருதல், மகிழதல், விடாதுபயிலல்
வெறுக்கை = செல்வம்
ஆரம் = மாலை, சந்தனம்
வண்ணம் = இசையுடன் கூடிய பாட்டு
மண் = முழவுக்குத் தடவப்ப்டும் மார்ச்சனை (ஒரு வகைக் கருஞ்சாந்து)
நிறுத்துதல் = நிலைநாட்டுதல்
தூம்பு = ஒரு இசைக் கருவி
எல்லரி, ஆகுளி = இசைக் கருவிகள்
பதலை = ஒரு இசைக் கருவி
பை = இளமை (மென்மை)
மதலை = பற்று
மா = கரிய
வலம் = இடம்
தமின் = தம்மின் = கொணர்மின்
புழுக்கல் = அவித்தல்
ஆன் உருக்கு = நெய்
வேரி = கள்
தா = குற்றம்
குவை = கூட்டம், திரட்சி
சுரம் = வழி
விடர் = குகை, மலைப் பிளப்பு
வெய்யோய் = விரும்புபவன்

இதன் பொருள்:-

வேழம்=====> செற்றும்

சிறப்பாகத் தொடுக்கப்பட்ட அம்பு, யானையை வீழ்த்தி, பெரிய வாயையுடைய புலியைக் கொன்று, துளையுள்ள கொம்புகளையுடைய புள்ளி மானை உருட்டித் தள்ளி, உரல் போன்ற தலையையுடைய பன்றியை வீழ்த்தி, அருகில் ஆழமான பள்ளத்தில் இருந்த உடும்பின் உடம்பில் குத்தி நின்றது

வல்வில்=====> மார்பின்

வலிய வில்லோடு இவ்வாறு வேட்டையாடியவன் அம்பு எய்வதில் மிகவும் புகழுடையவனாகவும் வல்லவனாகவும் இருக்கின்றான். அவன் யாரோ? அவனைப் பார்த்தால் கொலைத்தொழில் புரிபவன் போல் தோன்றவில்லை. நல்ல செல்வந்தன் போல் உள்ளான்; முத்துமாலை தவழும் அழகிய அகன்ற மார்பினையுடைய

சாரல்=====> தொடுமின்

இவன் மலைச் சரிவில் விழும் அருவிகளையுடைய பயனுள்ள மலைக்குத் தலைவனாகிய ஓரியோ? அல்லது இவன் ஓரி அல்லனோ? விறலியரே! நான் இசையுடன் கூடிய பாடல்களைப் பாடப் போகிறேன். நீங்கள், முரசுகளில் மார்ச்சனையைப் பூசுங்கள்; யாழை மீட்டுங்கள்; யானையின் தும்பிக்கை போன்ற துளையுள்ள பெருவங்கியத்தை இசையுங்கள்;

எல்லரி=====> கழிப்பிக்

எல்லரியை வாசியுங்கள்; சிறுபறையை அறையுங்கள்; ஒருதலைப் பதலையைக் கொட்டுங்கள்; இசைப்புலமையை உணர்த்தும் சிறிய கரிய கோலை என் கையில் கொடுங்கள் என்று சொல்லி வேட்டுவனை அணுகி, அவன் அரசன் போலிருப்பதால் இருபத்தொரு பாடல் துறையும் முறையுடன் பாடி முடித்து,

கோவெனப்=====> வேட்டத்தில்

”கோ” என்று கூறினேன். ”கோ” என்று கூறியதைக் கேட்டவுடன் அது தன்னைக் குறிப்பதால் அவன் நாணினான். பின்னர், “நங்கள் நாடு நாடாகச் சென்று வருகிறோம். உன்னைப் போன்ற வேட்டுவன் யாரும் இல்லை” என்று நாங்கள் கூற விரும்பியதைக் கூறினோம்.

தான்=====> வெய் யோனே

அவன் என்னை மேற்கொண்டு பேசவிடாமல், தான் வேட்டையாடிக் கொன்ற மானின் தசையை வேகவைத்து, அதோடு நெய் போன்ற மதுவையும் கொடுத்தான். தன் மலையாகிய கொல்லி மலையில் பிறந்த குற்றமற்ற நல்ல பொன்னையும் பல மணிகளையும் கலந்து “இதை வாங்கிக்கொள்ளுங்கள்” என்று கொடுத்தான். குகைகளையும் சிகரங்களையும் உடைய உயர்ந்த பெரிய கொல்லிக்குத் தலைவன் வரையாத ஈகையுடையவன்; வெற்றியை விரும்புபவன்.

பாடலின் பின்னணி:-

வன்பரணர் கொல்லிமலையைச் சார்ந்த காட்டில் தன் சுற்றத்தாரோடு சென்று கொண்டிருக்கையில், வேட்டுவன் ஒருவன் வேட்டையாடியதைக் கண்டார். அவ்வேட்டுவன் எய்த அம்பு ஒன்று யானையின் உடலைத் துளைத்து, புலியின் வாய் வழியாகச் சென்று, ஒரு மானை உருட்டித் தள்ளி, ஒரு பன்றியின் உடலையும் துளைத்து உடும்பு ஒன்றின் உடலில் தைத்து நின்றது. அந்த வேட்டுவனின் ஆற்றலைக் கண்டு வன்பரணர் வியந்தார். அவன் தோற்றத்தைப் பார்த்தால் வேட்டுவன் போல் தோன்றவில்லை. அவன் ஓரு மன்னனைப் போல் இருந்தான். வன் பரணரும் அவர் சுற்றத்தாரும் பல இசைக்கருவிகளோடு பல பாடல்களைப் பாடி ஒரியைப் புகழ்ந்தார்கள். அவர்கள் உண்பதற்கு ஊனும் மதுவும் அளித்து கொல்லிமலையில் கிடைக்கும் பொன்னையும் கொடுத்து அவர்களை ஓரி சிறப்பித்தான். வன்பரணர் இச்செய்தியை இப்பாடலில் கூறுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on July 31, 2013, 07:47:43 PM
புறநானூறு, 153. (கூத்தச் சுற்றத்தினர்!)
பாடியவர்: வன்பரணர்.
பாடப்பட்டோன்: வல்வில் ஓரி.
திணை: பாடாண்.
துறை : இயன் மொழி.
===================================

மழையணி குன்றத்துக் கிழவன் நாளும்
இழையணி யானை இரப்போர்க்கு ஈயும்
சுடர்விடு பசும்பூண் சூர்ப்புஅமை முன்கை
அடுபோர் ஆனா ஆதன் ஓரி
மாரி வண்கொடை காணிய நன்றும்
சென்றது மன்எம் கண்ணுளம் கடும்பே;

பனிநீர்ப் பூவா மணிமிடை குவளை
வால்நார்த் தொடுத்த கண்ணியும் கலனும்
யானை இனத்தொடு பெற்றனர் நீங்கிப்
பசியார் ஆகல் மாறுகொல் விசிபிணிக்
கூடுகொள் இன்னியம் கறங்க
ஆடலும் ஒல்லார்தம் பாடலும் மறந்தே?

அருஞ்சொற்பொருள்:-

சூர்ப்பு = கடகம்
நன்று = பெருமை, சிறப்பு
கண்ணுள் = கூத்து
கடும்பு = சுற்றம்
மிடைதல் = கலத்தல்
கண்ணி = தலையில் அணியும் மாலை
ஆகன்மாறு = ஆகையால்
விசி = கட்டு
இயம் = இசைக் கருவிகள்
கறங்கல் = ஒலித்தல்
ஒல்லல் = இயலல்

இதன் பொருள்:-

மழையணி=====> கடும்பே

மேகங்கள் சூழ்ந்த கொல்லி மலைக்குத் தலைவனாகிய ஓரி நாள்தோறும் நன்கு செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்த யானைகளை இரப்போர்க்கு அளிப்பவன். அவன் ஒளிவிடும் பசும்பொன்னாலான வளைந்த கடகம் அணிந்த முன்கயையுடையவன். கொல்லும் போர்த்திறமையில் குறையாத ஆதன் ஓரியின் வளமை மிகுந்த கொடையைக் காண்பதற்கு என் கூத்தர்களாகிய சுற்றத்தார் சென்றனர்.

பனிநீர்=====> மறந்தே

அவர்கள் பொன்னாலாகிய (குளிர்ந்த நீரில் பூக்காத) குவளை மலர்களும் மணிகளும் கலந்து வெள்ளியால் ஆகிய நாரால் கட்டப்பட்ட மாலையையும் பிற அணிகலங்களையும் யானைகளையும் பரிசாகப் பெற்றனர். அவர்கள், தாம் பெற்ற கொடையால் தம் பசி நீங்கினார். ஆகையால், அவர்கள் வாரால் பிணித்துக் கட்டப்பட்ட பல இனிய இசைக்கருவிகள் ஒலிக்க ஆடுவதை விட்டனர்; பாடுவதையும் மறந்தனர்.

பாடலின் பின்னணி:-

வன்பரணரைத் தலைவராகக் கொண்ட பாணர் சுற்றம், தமக்குரிய ஆடலையும் பாடலையும் செய்யாது இருந்தனர். இதைக் கண்டவர்கள், “தங்கள் சுற்றத்தார் ஏன் ஆடலையும் பாடலையும் செய்யாது இருக்கின்றனர்?” என்று கேட்டனர். அதற்கு, வன்பரணர், “என் சுற்றத்தாரோடு நான் வல்வில் ஓரியைக் காணச் சென்றேன். எங்களுக்குப் பொன்னாலான மாலையையும் பிற அணிகலன்களையும் ஓரி அளித்தான். அவனிடமிருந்து நாங்கள் பெற்ற பெரு வளத்தால் என் சுற்றத்தார் பசி அறியாது இருக்கின்றனர். ஆகவேதான் அவர்கள் ஆடலையும் பாடலையும் மறந்தனர்.“ என்று இப்பாட்டில் குறிப்பிடுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on July 31, 2013, 07:50:14 PM
புறநானூறு, 154. (இரத்தல் அரிது! பாடல் எளிது!)
பாடியவர்: மோசிகீரனார்.
பாடப்பட்டோன்: கொண்கானங் கிழான்.
திணை: பாடாண்.
துறை : பரிசில் துறை.
===================================

திரைபொரு முந்நீர்க் கரைநணிச் செலினும்
அறியுநர்க் காணின் வேட்கை நீக்கும்
சின்னீர் வினவுவர் மாந்தர் அதுபோல்
அரசர் உழைய ராகவும் புரைதபு
வள்ளியோர்ப் படர்குவர் புலவர் அதனால்
யானும்,பெற்றது ஊதியம் பேறியாது என்னேன்

உற்றனென் ஆதலின் உள்ளிவந் தனனே
ஈயென இரத்தலோ அரிதே; நீஅது
நல்கினும் நல்காய் ஆயினும் வெல்போர்
எறிபடைக்கு ஓடா ஆண்மை அறுவைத்
தூவிரி கடுப்பத் துவன்றி மீமிசைத்
தண்பல இழிதரும் அருவிநின்
கொண்பெருங் கானம் பாடல்எனக்கு எளிதே

அருஞ்சொற்பொருள்:-

உழை = பக்கம், இடம்
புரை = குற்றம்
தபுதல் = கெடுதல்
புரைதபு = குற்றமற்ற
அறுவை = உடை, ஆடை
தூ = தூய
துவன்றல் = பொலிவு
கடுப்ப = ஒப்ப
மீமிசை = மேலுக்குமேல் (உச்சி)

இதன் பொருள்:-

திரைபொரு=====> என்னேன்

அலைகள் மோதும் கடற்கரை அருகில் சென்றாலும், தெரிந்தவர்களைக் கண்டால் தாகத்திற்கு நீர் வேண்டும் என்று கேட்பது உலக மக்களின் இயல்பு. அது போல், அரசரே பக்கத்தில் இருந்தாலும் குற்றமற்ற வள்ளல்களை நினைத்துப் புலவர் செல்வர். அதனால், நானும் பெற்றதைப் பயனுள்ளாதாகக்கொண்டு, பெற்ற பொருள் சிறிதாயினும், “இவன் அளித்தது என்ன?” என்று இகழ மாட்டேன்.

உற்றனென்=====> எளிதே

வறுமை உற்றதால் உன்னை நினைத்து வந்தேன். எனக்கு , “நீ பரிசில் ஈவாயாக” என்று இரப்பது கடினமான செயல். நீ பரிசில் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் போரில் உன்னை நோக்கி எறியப்பட்ட படைக்கலங்களுக்கு அஞ்சிப் புறமுதுகு காட்டி ஓடாத உன் ஆண்மையையும், தூய ஆடையை விரித்தது போன்ற பொலிவுடன் உச்சியிலிருந்து விழும் குளிர்ந்த அருவியையுடைய கொண்கான நாட்டையும் பாடுவது எனக்கு எளிது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on July 31, 2013, 07:53:43 PM
புறநானூறு, 155. (ஞாயிறு எதிர்ந்த நெருஞ்சி!)
பாடியவர்: மோசிகீரனார்.
பாடப்பட்டோன்: கொண்கானங் கிழான்.
திணை: பாடாண்.
துறை : பாணாற்று படை.
===================================

வணர்கோட்டுச் சீறியாழ் வாடுபுடைத் தழீஇ
உணர்வோர் யார்என் இடும்பை தீர்க்கஎனக்
கிளக்கும் பாண கேள்இனி நயத்தின்
பாழூர் நெருஞ்சிப் பசலை வான்பூ
ஏர்தரு சுடரின் எதிர்கொண்டு ஆஅங்கு
இலம்படு புலவர் மண்டை விளங்கு புகழ்க்
கொண்பெருங் கானத்துக் கிழவன்
தண்தார் அகலம் நோக்கின் மலர்ந்தே

அருஞ்சொற்பொருள்:-

வணர் = வளைவு
கோடு = யாழ்த் தண்டு
புடை = பக்கம்
தழீஇ = தழுவிய
கிளத்தல் = கூறுதல்
பசலை = பொன்னிறமாதல்
வான் = அழகு
ஏர்தல் = எழுதல்
இலம் = வறுமை
மண்டை = இரப்போர் பாத்திரம்
அகலம் = மார்பு

இதன் பொருள்:-

வளைந்த தண்டையுடைய சிறிய யாழைத் உனது வாடிய உடலின் ஒரு பக்கத்தில் தழுவிக்கொண்டு, உன்னுடைய துன்பத்தை உணர்ந்து அதைத் தீர்ப்பவர் யார் என்று கூறும் பாணனே! நான் சொல்வதை நீ நன்றாகக் கேட்பாயாக. பாழூரில் நெருஞ்சிச் செடியின் பொன்னிறமான அழகிய பூ எழுகின்ற கதிரவனை எதிர் நோக்கியிருப்பது போல், வறுமையுற்ற புலவர்களின் கலங்கள் (பாத்திரங்கள்) புகழ் விளங்கும் பெரும் கொண்கானம் கிழானது மார்பை நோக்கித் திறந்திருக்கும்.

பாடலின் பின்னணி:-

கொண்கானம் கிழானிடம் பரிசில் பெற்று மகிழ்ச்சியுற்ற மோசி கீரனார் ஒரு பாணனை கொண்கானம் கிழானிடம் ஆற்றுப்படுத்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on July 31, 2013, 08:04:08 PM
புறநானூறு, 156. (இரண்டு நன்கு உடைத்தே!)
பாடியவர்: மோசிகீரனார்.
பாடப்பட்டோன்: கொண்கானங் கிழான்.
திணை: பாடாண்.
துறை : இயன் மொழி.
===================================

ஒன்றுநன் குடைய பிறர்குன்றம் என்றும்
இரண்டுநன் குடைத்தே கொண்பெருங் கானம்;
நச்சிச் சென்ற இரவலர்ச் சுட்டித்
தொடுத்துணக் கிடப்பினும் கிடக்கும் அஃதான்று
நிறையருந் தானை வேந்தரைத்
திறைகொண்டு பெயர்க்குஞ் செம்மலும் உடைத்தே

அருஞ்சொற்பொருள்:-

நச்சி = விரும்பி
சுட்டி = குறித்து
தொடுத்து = சேர்த்து
நிறை = திண்மை
பெயர்தல் = திரும்பல்
செம்மல் = அரசன், தலைவன்

இதன் பொருள்:-

ஒரு நன்மை உடையதாக மற்றவர்களின் மலைகள் இருக்கும். ஆனால், கொண்கானம் எந்நாளும் இரண்டு நன்மைகளையுடையது. ஒன்று, பரிசில் பெற விரும்பிச் சென்ற இரவலர் தனது என்று குறிப்பிட்டுச் சேகரித்து உண்ணக் கூடிய உணவுப் பொருட்களை உடையதாக இருக்கும். அதுமட்டுமல்லாமல், நிறுத்தற்கரிய படையுடைய வேந்தர்களைத் திறை கொண்டுவந்து கொடுத்து திருப்பி அனுப்பும் தலைவனும்(கொண்கானங் கிழானும்) உடையது.

பாடலின் பின்னணி:-

இப்பாடலில் மோசிகீரனார் கொண்கான மலையின் வளத்தையும் கொண்கானங் கிழானின் வெற்றிகளையும் புகழ்ந்து பாடுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on July 31, 2013, 08:06:17 PM
புறநானூறு, 157. (ஏறைக்குத் தகுமே!)
பாடியவர்: குறமகள் இளவெயினி.
பாடப்பட்டோன்: ஏறைக் கோன்.
திணை: பாடாண்.
துறை : இயன் மொழி.
===================================

தமர்தன் தப்பின் அதுநோன் றல்லும்
பிறர்கை யறவு தான்நா ணுதலும்
படைப்பழி தாரா மைந்தினன் ஆகலும்
வேந்துடை அவையத்து ஓங்குபு நடத்தலும்
நும்மோர்க்குத் தகுவன அல்ல; எம்மோன்
சிலைசெல மலர்ந்த மார்பின் கொலைவேல்
கோடல் கண்ணிக் குறவர் பெருமகன்

ஆடுமழை தவிர்க்கும் பயங்கெழு மீமிசை
எற்படு பொழுதின் இனம்தலை மயங்கிக்
கட்சி காணாக் கடமான் நல்லேறு
மடமான் நாகுபிணை பயிரின் விடர்முழை
இரும்புலிப் புகர்ப்போத்து ஓர்க்கும்
பெருங்கல் நாடன்எம் ஏறைக்குத் தகுமே

அருஞ்சொற்பொருள்:-

தமர் = தமக்கு வேண்டியவர்
தப்பின் = தவறு செய்தால்
நோன்றல் = பொறுத்தல்
கையறவு = வறுமை, செயலற்ற நிலை
மைந்து = வலிமை
சிலை = வில்
மலர்ந்த = விரிந்த
கோடல் = செங்காந்தள் மலர்
ஆடுதல் = அசைதல், அலைதல்(தவழுதல்)
தவிர்த்தல் = தடுத்தல்
மீமிசை = மலையுச்சி
எல் = கதிரவன்
படுதல் = மறைதல்
தலைமயக்கம் = இடம் தடுமாற்றம்
கட்சி = சேக்கை
கடம் = காடு
மடம் = மென்மை
நாகு = இளமை
பிணை = பெண்மான்
பயிர்த்தல் = அழைத்தல், ஒலித்தல்
விடர் = மலைப்பிளப்பு
முழை = குகை
இரு = பெரிய
புகர் = கபில நிறம், கருமை கலந்த பொன்மை
போத்து = விலங்கு துயிலிடம்
ஓர்த்தல் = கேட்டல்

இதன் பொருள்:-

தமர்தன்=====> பெருமகன்

தமது சுற்றத்தார் தவறேதும் செய்தால் அதைப் பொறுத்தருள்வதும், பிறர் வறுமையைக் கண்டு தான் நாணுதலும், தன் படையைப் பழி கொடுக்க விடாத வலிமையுடைவனாக இருத்தலும், வேந்தர்கள் உள்ள அவையில் நிமிர்ந்து நடத்தலும் நும்மால் மதிக்கப்படும் தலைவர்களுக்குத் தகுந்த குணங்கள் அல்ல. எம் தலைவன், வில்லை வலித்தலால் அகன்ற மார்பினையும், கொல்லும் வேலினையும், செங்காந்தள் மலரான மாலையையும் கொண்ட குறவர்க்குத் தலைவன்.

ஆடுமழை=====> தகுமே

தவழும் மேகங்களைத் தடுக்கும் பயன் பொருந்திய உயர்ந்த மலையின் உச்சியில் கதிரவன் மறையும் பொழுது, தனது கூட்டத்தில் இருந்து பிரிந்து, தான் சேர வேண்டிய இடம் தெரியாமல் காட்டில் கலங்கிய ஆண்மான், தன் மெல்லிய இளம் பெண்மானை அழைக்கும் ஒலியை மலைப்பிளவில் இருந்து கபில நிறமான பெரிய புலி கேட்கும் பெரிய மலை நாடனாகிய எங்கள் ஏறைக் கோனுக்குத் அக்குணங்களெல்லாம் தகுந்தனவாகும்.

சிறப்புக் குறிப்பு:-

நெடுங்காலமாக நண்பராக இருக்கும் ஒருவர், தன்னைக் கேளாது, உரிமையோடு ஒரு செயலைச் செய்தால், அதை விரும்பி ஏற்றுக் கொள்வதுதான் நெடுங்கால நட்பின் அடையாளம் என்ற கருத்தைத் திருவள்ளுவர்,

விழைதகையான் வேண்டி யிருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின். (குறள் - 804)

என்ற குறளில் கூறுவது இங்கு ஒப்பிடத் தக்கதாகும்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on July 31, 2013, 08:10:04 PM
புறநானூறு, 158. (உள்ளி வந்தெனன் யானே!)
பாடியவர்: பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன்: குமணன்.
திணை: பாடாண்.
துறை : வாழ்த்தியல். பரிசில் கடாநிலையும் என்றும் கூறுவர்.
===================================

முரசுகடிப்பு இகுப்பவும் வால்வளை துவைப்பவும்
அரசுடன் பொருத அண்ணல் நெடுவரைக்
கறங்குவெள் அருவி கல் அலைத்து ஒழுகும்
பறம்பின் கோமான் பாரியும்; பிறங்கு மிசைக்
கொல்லி ஆண்ட வல்வில் ஓரியும்;

காரி ஊர்ந்து பேரமர்க் கடந்த
மாரி ஈகை மறப்போர் மலையனும்;
ஊராது ஏந்திய குதிரைக் கூர்வேல்
கூவிளங் கண்ணிக், கொடும்பூண் எழினியும்;
ஈர்ந்தண் சிலம்பின் இருள் தூங்கும் நளிமுழை

அருந்திறல் கடவுள் காக்கும் உயர்சிமைப்
பெருங்கல் நாடன் பேகனும்; திருந்து மொழி
மோசி பாடிய ஆயும்; ஆர்வமுற்று
உள்ளி வருநர் உலைவுநனி தீரத்
தள்ளாது ஈயும் தகைசால் வண்மைக்

கொள்ளார் ஓட்டிய நள்ளியும் எனஆங்கு
எழுவர் மாய்ந்த பின்றை அழிவரப்
பாடி வருநரும் பிறருங் கூடி
இரந்தோர் அற்றம் தீர்க்கென விரைந்துஇவண்
உள்ளி வந்தனென் யானே; விசும்புஉறக்

கழைவளர் சிலம்பின் வழையடு நீடி
ஆசினிக் கவினிய பலவின் ஆர்வுற்று
முட்புற முதுகனி பெற்ற கடுவன்
துய்த்தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும்
அதிரா யாணர் முதிரத்துக் கிழவ

இவண்விளங்கு சிறப்பின் இயல்தேர்க் குமண
இசைமேந் தோன்றிய வண்மையொடு
பகைமேம் படுக நீ ஏந்திய வேலே!

அருஞ்சொற்பொருள்:-

கடிப்பு = குறுந்தடி
இகுத்தல் = அறைதல், ஒலித்தல்
வால் = வெண்மை
வளை = சங்கு
துவைத்தல் = ஒலித்தல், முழங்கல்
கறங்கல் = ஒலித்தல்
வரை = மலையுச்சி
பிறங்குதல் = உயர்தல்
கடத்தல் = வெல்லுதல்
ஈர் = குளிர்ச்சி
சிலம்பு = மலை
நளிதல் = செறிதல்
திறல் = வலிமை
திருந்துதல் = ஒழுங்காதல், சிறப்புடையதாதல்
உலைவு = வறுமை
நனி = மிகுதியாக
கொள்ளார் = பகைவர்
அழி = இரக்கம்
அற்றம் = துன்பம்
விசும்பு = ஆகாயம்
கழை = மூங்கில்
சிலம்பு = மலை
வழை = சுரபுன்னை
ஆசினி = ஒரு வகை மரம்
கடுவன் = ஆண் குரங்கு
துய் = பஞ்சு மென்மை
கை இடூஉ = கையால் குறி செய்து
பயிர்தல் = அழைத்தல்
அதிர்தல் = தளர்தல்
யாணர் = புது வருவாய்

இதன் பொருள்:-

முரசுகடிப்பு=====> ஓரியும்

நெடிய மலையுச்சியிலிருந்து ஒலியுடன் கற்களில் மோதி ஓடி வரும் வெண்மையான அருவிகளுடைய பறம்பு மலைக்குத் தலைவன் பாரி. அவன், குறுந்தடிகளால் அறையப்பட்ட முரசுகள் ஒலிக்க வெண் சங்கு முழங்கத் தன்னுடன் போருக்கு வந்த மூவேந்தர்களுடன் போரிட்டவன். வலிய வில்லை உடைய ஓரி என்பவன், உயர்ந்த உச்சிகளையுடைய கொல்லி மலையை ஆண்டவன்.

காரி=====> நளிமுழை

காரி என்னும் குதிரையில் சென்று பெரும்போரில் வெற்றியும், மழை போன்ற வண்மையும், போர் புரிவதில் மிகுந்த வீரமும் உடையவன் மலையமான் திருமுடிக்காரி. எழினி என்று அழைக்கப்பட்ட அதியமான், உயர்ந்த (செலுத்தப் படாத) குதிரை என்னும் மலையையும், கூரிய வேலையும், கூவிள மாலையையும், வளைந்த அணிகலன்களையுமுடையவன். மிகக் குளிர்ந்த மலையின் இருள் செறிந்த குகையையும்,

அருந்திறல்=====> வண்மை

மிகுந்த வலிமையும், கடவுள் காக்கும் உயர்ந்த உச்சியையும் உடைய பெரிய மலை நாடன் வையாவிக் கோப்பெரும் பேகன். நற்றமிழால் மோசி (உறையூர் ஏணிச்சேறி முடமோசியார்) என்னும் புலவரால் பாடப்பட்டவன் ஆய் அண்டிரன். நள்ளி என்பவன் ஆர்வத்தோடு தன்னை நினைத்து வருவோர் வறுமை முற்றிலும் தீருமாறு குறையாது கொடுக்கும் பெருமைக்குரிய வண்மையும்

கொள்ளார்=====> விசும்புஉற

பகைவரைத் துரத்தி வெற்றி கண்ட வலிமையும் உடையவன். இவர் எழுவரும் மறைந்த பின்னர் இரக்கம் வரும் வகையில், பாடிவரும் பாணரும் மற்றவரும் படும் துன்பத்தை தீர்ப்பவன் நீ என்பதால் உன்னை நினைத்து நான் இங்கே விரைந்து வந்தேன். வானத்தைத் தொடுமளவிற்கு

கழைவளர்=====> வேலே

மூங்கில் வளரும் மலையிடத்து சுரபுன்னையோடு ஓங்கி, ஆசினி மரத்தோடு அழகாக வளர்ந்திருக்கும் பலாவின்மேல் ஆசைப்பட்டு, முள்ளைப் புறத்தேயுடைய முதிர்ந்த பலாப்பழத்தைப் பெற்ற ஆண்குரங்கு பஞ்சுபோல் மயிருடைய தலையையுடைய பெண் குரங்கைக் கையால் குறி செய்து அழைக்கும். இத்தகைய குறையாத புது வருவாயையுடைய முதிரமென்னும் மலைக்குத் தலைவ! இவ்வுலகத்து விளங்கும் சிறப்பும் நன்கு செய்யப்பட்ட தேர்களும் உடைய குமணனே! புகழ் மேம்பட்ட வண்மையுடன் பகைவரை வென்று உன் வேல் உயர்வதாக!

பாடலின் பின்னணி:-

கடையேழு வள்ளல்கள் இறந்த பிறகு, இரவலர்க்குப் பெருமளவில் பரிசளிப்பவன் குமணன் என்று கேள்விப்பட்டுப், பெருஞ்சித்திரனார் அவனிடம் பரிசில் பெறச் சென்றார். இப்பாடலில், கடையேழு வள்ளல்களையும் குமணனையும் பெருஞ்சித்திரனார் புகழ்ந்து பாடுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on July 31, 2013, 08:13:25 PM
புறநானூறு, 159. (கொள்ளேன்! கொள்வேன்!)
பாடியவர்: பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன்: குமணன்.
திணை: பாடாண்.
துறை : பரிசில் கடாநிலை.
===================================

வாழும் நாளோடு யாண்டுபல உண்மையின்
தீர்தல்செல் லாது, என் உயிர்எனப் பலபுலந்து
கோல்கால் ஆகக் குறும்பல ஒதுங்கி
நூல்விரித் தன்ன கதுப்பினள், கண் துயின்று
முன்றிற் போகா முதிர்வினள் யாயும்;

பசந்த மேனியொடு படர்அட வருந்தி
மருங்கில் கொண்ட பல்குறு மாக்கள்
பிசைந்துதின வாடிய முலையள் பெரிதுஅழிந்து
குப்பைக் கீரைக் கொய்கண் அகைத்த
முற்றா இளந்தளிர் கொய்துகொண்டு உப்பின்று

நீர்உலை யாக ஏற்றி மோரின்று
அவிழ்ப்பதம் மறந்து பாசடகு மிசைந்து
மாசொடு குறைந்த உடுக்கையள் அறம்பழியாத்
துவ்வாள் ஆகிய என்வெய் யோளும்
என்றாங்கு இருவர் நெஞ்சமும் உவப்பக் கானவர்

கரிபுனம் மயக்கிய அகன்கண் கொல்லை
ஐவனம் வித்தி மையுறக் கவினி
ஈனல் செல்லா ஏனற்கு இழுமெனக்
கருவி வானம் தலைஇ யாங்கும்
ஈத்த நின்புகழ் ஏத்தித் தொக்கஎன்

பசிதினத் திரங்கிய ஒக்கலும் உவப்ப
உயர்ந்துஏந்து மருப்பின் கொல்களிறு பெறினும்
தவிர்ந்துவிடு பரிசில் கொள்ளலென்; உவந்துநீ
இன்புற விடுதி யாயின் சிறிது
குன்றியும் கொள்வல் கூர்வேற் குமண!

அதற்பட அருளல் வேண்டுவல் விறற்புகழ்
வசையில் விழுத்திணைப் பிறந்த
இசைமேந் தோன்றல்நிற் பாடிய யானே

அருஞ்சொற்பொருள்:

தீர்தல் = முடிதல்
புலத்தல் = வெறுத்தல்
குறும்பல = குறுகிய பல
ஒதுங்குதல் = நடத்தல்
கதுப்பு = மயிர்
துயில்தல் = உறக்கம், சாவு
முன்றில் = முற்றம்
படர் = துன்பம், நோவு
அடல் = வருத்தம்
மருங்கு = பக்கம், இடுப்பு
அழிவு = வருத்தம்
அகைத்தல் = எழுதல், கிளைத்தல் (முளைத்தல்)
அவிழ் = சோறு
பதம் = உணவு
பாசடகு = பசிய இலை
மிசைதல் = உண்டல்
துவ்வல் = புசித்தல்
வெய்யோள் = விரும்புபவள்
கானவர் = வேடர்
புனம் = கொல்லை, வயல்
ஐவனம் = மலைநெல்
மை = பசுமை
கவின் = அழகு
ஈனல் = ஈனுதல்
ஏனல் = தினை
இழும் = துணையான ஓசை
கருவி = துணைக்கரணம்
தலைஇ = பெய்து
தொக்க = திரண்ட
திரங்குதல் = தளர்தல்
ஒக்கல் = சுற்றம்
மருப்பு = கொம்பு (தந்தம்)
தவிர்தல் = நீக்குதல்
குன்றி = குன்றி மணி (குண்டு மணி)
விறல் = வெற்றி
விழு = சிறந்த
திணை = குடி

இதன் பொருள்:-

வாழும்=====> யாயும்

தான் பல ஆண்டுகள் வாழ்ந்தும் இன்னும் தன் உயிர் போகவில்லையே என்று தன் வாழ் நாட்களைப் பலவாறாக வெறுத்து கோலைக் காலாகக் கொண்டு அடிமேல் அடிவைத்து நடப்பவளாய், வெள்ளை நூல் விரித்தது போன்ற முடியுடையவளாய், கண் பார்வை பழுதடைந்ததால் முற்றத்திற்குப் போக முடியாதவளாய் என் தாய் இருக்கிறாள்.

பசந்த=====> உப்பின்று

ஓளியிழந்த மேனியுடன் வறுமைத் துயரம் வருத்துவதால் வருந்தி இடுப்பில் பல சிறு குழந்தைகளுடன், குழந்தைகள் பிசைந்து பால் குடித்ததால் வாடிய மார்பகங்களுடன் பெருந்துயர் அடைந்து, குப்பையில் முளைத்த கீரைச் செடியில், முன்பு பறித்த இடத்திலேயே மீண்டும் முளைத்த, முற்றாத இளந்தளிரைக் கொய்து உப்பில்லாத

நீர்உலை=====> கானவர்

நீரில் வேகவைத்து மோரும் சோறும் இல்லாமல் வெறும் இலையை மட்டுமே உண்டு, அழுக்குப் படிந்த கிழிந்த ஆடையை உடுத்தி, இல்லற வாழ்வைப் பழித்து உண்ணாதவள் என்னை விருபும் என் மனைவி. என் தாயும் என் மனைவியும் மனம் மகிழ வேண்டும். வேடர்கள்

கரிபுனம்=====> தொக்கஎன்

மூட்டிய தீயால் எரிக்கப்பட்டு கருமை நிறமாகத் தோன்றும் அகன்ற நிலப்பகுதியை நன்கு உழுது மலை நெல்லை விதைத்ததால் பசுமையாக அழகுடன் தோன்றும் தினைப் பயிர்கள், மழை பெய்யாததால் கதிர்களை ஈனாமல் இருக்கும் பொழுது “இழும்” என்ற ஒசையுடன் மின்னல் இடி ஆகியவற்றோடு வானம் மழை பொழிந்தது போல் வறியோர்க்கு வழங்கும் உன் புகழைப் பாராட்டிப்

பசிதின=====> பாடிய யானே

பசியால் தளர்ந்த என் சுற்றத்தினரின் கூட்டம் மகிழவேண்டும். உயர்ந்த, பெருமைக்குரிய தந்தங்களையும் கொல்லும் வலிமையுமுடைய யானைகளைப் பெறுவதாக இருந்தாலும் நீ அன்பில்லாமல் அளிக்கும் பரிசிலை ஏற்றுக் கொள்ளமாட்டேன். நீ மகிழ்ச்சியோடு கொடுத்தால் சிறிய குன்றிமணி அளவே உள்ள பொருளாயினும் அதை நான் ஏற்றுக் கொள்வேன். கூறிய வேலையுடைய குமணனே, அவ்வாறு நீ மகிழ்ச்சியோடு அளிப்பதை வேண்டுகிறேன். வெற்றிப் புகழோடு, பழியில்லாத சிறந்த குடியில் பிறந்த புகழுடைய தலைவா! உன்னை நான் புகழ்ந்து பாடுகிறேன்.

பாடலின் பின்னணி:-

வறுமையால் வாடும் தாயும், மனைவியும், குழந்தைகளும், சுற்றத்தாரும் மகிழுமாறு பரிசளிக்க வேண்டுமென்று பெருஞ்சித்திரனார் குமணனிடம் வேண்டுகிறார். மற்றும், குமணன் மனமுவந்து அளிக்காத பரிசு பெரிய யானையாகவிருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றும், அவன் மனமுவந்து அளிக்கும் பரிசில் சிறிய குன்றிமணி அளவே இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்வேன் என்றும் இப்பாடலில் கூறுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on July 31, 2013, 08:16:01 PM
புறநானூறு, 160. (செல்லாச் செல்வம் மிகுத்தனை வல்லே !)
பாடியவர்: பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன்: குமணன்.
திணை: பாடாண்.
துறை : பரிசில் கடாநிலை.
===================================

உருகெழு ஞாயிற்று ஒண்கதிர் மிசைந்த
முளிபுல் கானம் குழைப்பக் கல்லென
அதிர்குரல் ஏறோடு துளிசொரிந் தாங்குப்
பசிதினத் திரங்கிய கசிவுடை யாக்கை
அவிழ்புகுவு அறியா தாகலின் வாடிய

நெறிகொள் வரிக்குடர் குளிப்பத் தண்எனக்
குய்கொள் கொழுந்துவை நெய்யுடை அடிசில்
மதிசேர் நாள்மீன் போல நவின்ற
சிறுபொன் நன்கலஞ் சுற்ற இரீஇக்
கேடின் றாக பாடுநர் கடும்புஎன

அரிதுபெறு பொலங்கலம் எளிதினின் வீசி
நட்டோர் நட்ட நல்லிசைக் குமணன்
மட்டார் மறுகின் முதிரத் தோனே
செல்குவை யாயின் நல்குவன் பெரிதுஎனப்
பல்புகழ் நுவலுநர் கூற வல்விரைந்து

உள்ளம் துரப்ப வந்தனென்; எள்ளுற்று
இல்லுணாத் துறத்தலின் இல்மறந்து உறையும்
புல்லுளைக் குடுமிப் புதல்வன் பன்மாண்
பாலில் வறுமுலை சுவைத்தனன் பெறாஅன்
கூழும் சோறும் கடைஇ ஊழின்

உள்ளில் வறுங்கலம் திறந்துஅழக் கண்டு
மறப்புலி உரைத்தும் மதியங் காட்டியும்
நொந்தனள் ஆகி நுந்தையை உள்ளிப்
பொடிந்தநின் செவ்வி காட்டுஎனப் பலவும்
வினவல் ஆனா ளாகி நனவின்

அல்லல் உழப்போள் மல்லல் சிறப்பச்
செல்லாச் செல்வம் மிகுத்தனை வல்லே
விடுதல் வேண்டுவல் அத்தை படுதிரை
நீர்சூழ் நிலவரை உயரநின்
சீர்கெழு விழுப்புகழ் ஏத்துகம் பலவே

அருஞ்சொற்பொருள்:-

உரு =அச்சம்
கெழு = பொருந்திய
மிசைதல் = தின்னல்
முளிதல் = உலர்தல்
குழைத்தல்= தளிர்த்தல்
ஏறு = இடி
திரங்குதல் = உலர்தல், தளர்தல்
கசிவு =வியர்வை
அவிழ் = சோறு
நெறிப்படுதல் = உள்ளடங்கல்
குய் = தாளிப்பு
அடிசில் = சோறு
நவில்தல் = செய்தல்
இரீஇ = இருத்தி
கடும்பு = சுற்றம்
பொலம் = பொன்
வீசுதல் = கொடுத்தல்
நட்டார் = நண்பர்கள்
மட்டார் = மது நிறைந்த
மறுகு = தெரு
நுவலுதல் = சொல்லுதல்
துரப்ப = துரத்துதல்
எள் = நிந்தை
எள்ளுற்று = இகழ்ந்து
உணா = உணவு
உளை = ஆண்மயிர்
மாண் = மடங்கு
கடைஇ = மொய்த்து
ஊழ் = முறை
உள்ளுதல் = நினைத்தல்
பொடிதல் = திட்டுதல், வெறுத்தல்
செவ்வி காட்டல் = அழகு காட்டல்
உழத்தல் = வருந்துதல்
மல்லல் = வளமை
அத்தை = அசை
ஏத்துதல் = வாழ்த்துதல்

இதன் பொருள்:-

உருகெழு=====> வாடிய

அச்சம் பொருந்திய ஞாயிற்றின் ஒளிக் கதிர்களால் சுட்டெரிக்கப்பட்ட காய்ந்த புல்லையுடைய காடுகள் தளிர்ப்ப, “கல்’ என்னும் ஒலியுடன் நடுக்கதைத் தரும் ஒசையையுடைய இடியுடன் மழைபொழிந்தது போல், பசியால் தின்னப்பட்ட தளர்ந்த வியர்வையுடைய உடல், சோறு உட்செல்லுவதை அறியாததால் வாடி,

நெறிகொள்=====> கடும்புஎன

உள்ளடங்கிய வரிகளுடைய குடல் நிரம்புமாறு குளிர்ந்ததும் தாளிப்பு உடையதுமான, வளமை மிகுந்த தசையும் நெய்யும் உடைய உணவைத் திங்களைச் சூழ்ந்த விண்மீன்கள் போன்ற பொன்னால் செய்யப்பட்ட சிறிய பாத்திரங்களைச் சூழ வைத்து, உண்ணச் செய்து, பாடும் பாணர்களின் சுற்றம் கேடின்றி வாழ்க என்று வாழ்த்திப்

அரிதுபெறு=====> வல்விரைந்து

பெறுதற்கரிய அணிகலன்களை எளிதில் அளித்து நண்பர்களைவிட அதிகமாக நட்பு கொண்டவன் குமணன். அவன் மது நிறைந்த தெருக்களுடைய முதிரமலைக்குத் தலைவன். அங்கே சென்றால். பெருமளவில் பரிசுகள் அளிப்பான் என்று கூறுபவர் கூற, விரைந்து வந்தேன்.

உள்ளம்=====> ஊழின்

உள்ளம் என்னைத் துரத்த வந்தேன். எனது இல்லத்தில் உணவு இல்லாததால், என் இல்லத்தை வெறுத்து, இல்லத்தை மறந்து திரிந்து கொண்டிருக்கும், குறைந்த அளவே முடியுள்ள என் புதல்வன், பல முறையும் பால் இல்லாத வற்றிய முலையைச் சுவைத்துப் பால் பெறாததால், கூழும் சோறும் இல்லாத பாத்திரங்களை ஒன்றன் பின் ஒன்றாகத் திறந்து பார்த்து அழுகிறான்.

உள்ளில்=====> நனவின்

அதைக் கண்ட என் மனைவி, “புலி வருகிறது” என்று அவனை அச்சுறுத்துகிறாள்; அவன் அழுகையை நிறுத்தவில்லை; திங்களைக் காட்டி சமாதானப் படுத்த முயல்கிறாள்; ஆனால், அவன் அழுகை ஓயாததால், வருந்தி, “உன் தந்தையை நினைத்து, வெறுத்து அழகு காட்டு” என்று பலமுறை கூறுகிறாள்.

அல்லல்=====> பலவே

அவள் நாளெல்லாம் வருந்துகிறாள். வளமை மிகுந்த குறையாத செல்வத்தை அதிக அளவில் எனக்கு விரைவில் கொடுத்து என்னை அனுப்புமாறு வேண்டுகிறேன். ஒலிக்கும் அலைகளுடைய நீரால் சூழப்பட்ட நில எல்லையில் உனது சிறப்பான புகழைப் பலவாகப் வாழ்த்துவோம்.

பாடலின் பின்னணி:-

வெய்யிலால் வாடும் பயிர்களுக்கு மழை போல இரவலர்க்கு உணவு அளித்து ஆதரிப்பவன் குமணன் என்று கேள்விப்பட்டு, பெருஞ்சித்திரனார் அவனிடம் பரிசில் பெற வந்தார். தன் இல்லத்தில் மனைவியும் குழந்தையும் உணவில்லாமல் வாடுகிறார்கள் என்றும் தனக்குப் பரிசிலை விரைவில் அளித்தருள்க என்றும் இப்பாடலில் பெருஞ்சித்திரனார் குமணனை வேண்டுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on July 31, 2013, 08:20:23 PM
புறநானூறு, 161. (வேந்தர் காணப் பெயர்வேன்!)
பாடியவர்: பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன்: குமணன்.
திணை: பாடாண்.
துறை : பரிசில் துறை.
===================================

நீண்டொலி அழுவம் குறைய முகந்துகொண்டு
ஈண்டுசெலல் கொண்மூ வேண்டுவயின் குழீஇப்
பெருமலை யன்ன தோன்றல சூல்முதிர்பு
உரும்உரறு கருவியொடு பெயல்கடன் இறுத்து
வளமழை மாறிய என்றூழ்க் காலை

மன்பதை யெல்லாம் சென்றுணக் கங்கைக்
கரைபொரு மலிநீர் நிறைந்து தோன்றியாங்கு
எமக்கும் பிறர்க்கும் செம்மலை யாகலின்
அன்பில் ஆடவர் கொன்றுஆறு கவரச்
சென்றுதலை வருந அல்ல அன்பின்று

வன்கலை தெவிட்டும் அருஞ்சுரம் இறந்தோர்க்கு
இற்றை நாளொடும் யாண்டுதலைப் பெயரஎனக்
கண்பொறி போகிய கசிவொடு உரன்அழிந்து
அருந்துயர் உழக்கும்என் பெருந்துன் புறுவிநின்
தாள்படு செல்வம் காண்டொறும் மருளப்

பனைமருள் தடக்கையொடு முத்துப்பட முற்றிய
உயர்மருப்பு ஏந்திய வரைமருள் நோன்பகடு
ஒளிதிகழ் ஓடை பொலிய மருங்கில்
படுமணி இரட்ட ஏறிச் செம்மாந்து
செலல்நசைஇ உற்றனென் விறல்மிகு குருசில்

இன்மை துரப்ப இசைதர வந்துநின்
வண்மையில் தொடுத்தஎன் நயந்தனை கேண்மதி!
வல்லினும் வல்லேன் ஆயினும் வல்லே
என்அளந்து அறிந்தனை நோக்காது சிறந்த
நின்அளந்து அறிமதி பெரும என்றும்

வேந்தர் நாணப் பெயர்வேன்; சாந்தருந்திப்
பல்பொறிக் கொண்ட ஏந்துஎழில் அகலம்
மாண்இழை மகளிர் புல்லுதொறும் புகல
நாள்முரசு இரங்கும் இடனுடை வரைப்பின்நின்
தாள்நிழல் வாழ்நர் நன்கலம் மிகுப்ப
வாள்அமர் உழந்தநின் தானையும்
சீர்மிகு செல்வமும் ஏத்துகம் பலவே

அருஞ்சொற்பொருள்:-

நீண்ட = நெடிய (பெரிய)
அழுவம் = கடல்
ஈண்டு = விரைவு
கொண்மூ = மேகம்
வயின் = இடம்
குழீஇ = திரண்டு
சூல் = கருப்பம்
உரும் = இடி
உரறு = ஒலி
கருவி = துணைக்கரணம் (இடி, மின்னல்)
இறுத்தல் = வடித்தல், தங்குதல் ( பெய்தல்)
என்றூஊழ் = கோடை
மன்பதை = எல்லா மக்களும்
உண = உண்ண
மலிதல் = நிறைதல்
கலை = ஆண்மான்
தெவிட்டல் = அசையிடுதல்
யாண்டு = ஆண்டு
பொறி = ஓளி
கசிவு = ஈரம் (இரக்கம்)
உரன் = வலிமை
உழத்தல் = வருந்துதல்
மருளல் = வியத்தல்
மருள் = (போன்ற)உவமை உருபு
தடக்கை = பெரிய கை (துதிக்கை)
மருப்பு = கொம்பு (தந்தம்)
வரை = மலை
மருள் = போன்ற
நோன் = வலிய
பகடு = ஆண் யானை
ஓடை = யானையின் நெற்றிப் பட்டம்
மருங்கு = பக்கம்
இரட்டல் = மாறி மாறி ஒலித்தல்
நசை = விருப்பம்
விறல் = வெற்றி, வலிமை
குருசில் = அரசன், தலைவன்
துரப்ப = துரத்த
தொடுத்தல் = கோத்தல், சேர்த்தல்
நயம் = அன்பு
பொறி = புள்ளி (தேமல்)
அகலம் = மார்பு
புல்லுதல் = தழுவுதல்
புகலுதல் = விரும்புதல்
உழத்தல் = பழகுதல், வெல்லுதல்

இதன் பொருள்:-

நீண்டொலி=====> காலை

நீளமாக ஒலிக்கும் கடல், அதிலுள்ள உள்ள நீர் குறையும் வகையில் அந்நீரை முகந்து கொண்டு, வேகமாகச் செல்லும் மேகங்கள் வேண்டிய இடத்துத் திரண்டு மாமலை போல் தோன்றி, கருவுற்று, இடி, மின்னல் ஆகியவற்றுடன் கூடி முறையாகப் பெய்து வளத்தைத் தரும் மழை இல்லாத கோடைக் காலத்தில்,

மன்பதை=====> அன்பின்று

உலகத்து உயிர்களெல்லாம் குடிப்பதற்காகக் கங்கை ஆறு கரை புரண்டு ஓடும் அளவிற்கு நீர் நிறைந்ததாக உள்ளது. எமக்கும் பிறர்க்கும் நீ அது (கோடையிலும் நீர் நிறைந்த கங்கையைப்) போன்ற தலைவன். அன்பில்லாத வழிப்பறிக் கள்வர், வழியில் செல்வோரைக் கொன்று, அவர்களின் பொருட்களைப் பறித்தலால், முடிவற்ற காட்டு வழி செல்லுவதற்கு எளிதானதல்ல. தம் உயிர் மீது அன்பில்லாமல்

வன்கலை=====> மருள

வலிய கலைமான்கள் (ஆண் மான்கள்) அசைபோட்டுத் திரியும் அரிய காட்டு வழியில் சென்றவர்க்கு, “இன்றோடு ஒரு ஆண்டு கழிந்தது” என்று எண்ணிக் கண்களில் ஒளியிழந்து, இரக்கத்தோடு உடல் வலிமையும் இழந்து, பொறுத்தற்கரிய துன்பமுற்று வறுமையில் என் மனைவி வாடுகிறாள். உன் முயற்சியால் வந்த செல்வத்தை அவள் காணுந்தோறும் வியக்கும் வகையில்,

பனைமருள்=====> குருசில்

பனை போன்ற துதிக்கையையும், முத்து உண்டாகுமாறு முதிர்ந்த தந்தங்களையும் உடைய மலை போன்ற, ஓளி திகழும் நெற்றிப் பட்டங்கள் அழகு செய்யும் யானையின் இரு பக்கங்களிலும் தொங்கும் மணிகள் மாறி மாறி ஒலிக்க அந்த யானை மீது ஏறிப் பெருமையுடன் செல்ல விரும்புகிறேன். வெற்றிப்புகழ் மிகுந்த தலைவனே!

இன்மை=====> என்றும்

எனது வறுமை துரத்த, உனது புகழ் என்னைக் கொண்டு வர நான் இங்கு வந்தேன். உனது கொடைத்திறத்தைப் பற்றிய சில செய்திகளை நான் பாடல்களாகத் தொடுத்ததை அன்போடு கேட்பாயாக. நான் அவற்றைச் சொல்வதில் வல்லவனாக இருந்தாலும் இல்லாவிட்டலும் என் அறிவை அளந்து ஆராயாமல், சிறந்த உன்னை அளந்து அறிவாயாக. பெரும! நீ எனக்கு அளிக்கும் பரிசிலைக் கண்டு

வேந்தர்=====> பலவே

மற்ற மன்னர்கள் எந்நாளும் நாணுமாறு நான் திரும்பிச் செல்வேன். சந்தனம் பூசியதும், பல அழகிய புள்ளிகள் (தேமல்கள்) நிறைந்ததுமான உன் அழகான மார்பைச் சிறப்புடை மகளிர் தழுவுந்தோறும் விரும்புபவர்களாகுக. நாளும் முரசு ஒலிக்கும் உன் நாட்டில், உன் நிழலில் வாழும் மக்கள் நல்ல அணிகலன்கள் மிகுந்தவர்களாக இருப்பார்களாக. வாட்போர் புரிவதில் பயிற்சி பெற்ற உன் படையையும், உன் சிறந்த செல்வத்தையும் பலவாக வாழ்த்துவோம்.

பாடலின் பின்னணி:-

இளவெளிமான் அளித்த பரிசிலை ஏற்க மறுத்து, பெருஞ்சித்திரனார் குமணிடம் பரிசில் பெறச் சென்றார். வறுமையில் வாடும் தன் மனைவியை நினைத்து வாடும் அவர் மனத்தை அறிந்த குமணன், அவருக்குப் பெருமளவில் பரிசளிக்க நினைத்தான். அந்நிலையில், பெருஞ்சித்திரனார் குமணன் முன் நின்று, “அரசே, நான் மலை போன்ற யானையின் மீது ஏறி என் ஊருக்குச் செல்ல விரும்புகிறேன். நான் யானை மீது வருவதைக் கண்டு என் மனைவி வியப்படைய வேண்டும். என் தகுதியை ஆராயாமல், உன் தகுதியை ஆராய்ந்து எனக்குப் பரிசு வழங்குக. எனக்குப் பரிசு கொடுக்காத மன்னர்கள், நான் உன்னிடம் பெறும் பரிசுகளைக் கண்டு நாணுமாறு எனக்கு நீ பரிசளிக்க வேண்டுகிறேன்.” என்று இப்பாடலில் கூறுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on July 31, 2013, 08:22:55 PM
புறநானூறு, 162. (இரவலர்அளித்த பரிசில்!)
பாடியவர்: பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன்: இளவெளிமான்.
திணை: பாடாண்.
துறை : பரிசில் விடை.
===================================

இரவலர் புரவலை நீயும் அல்லை;
புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்;
இரவலர் உண்மையும் காண்இனி; இரவலர்க்கு
ஈவோர் உண்மையும் காண் இனி; நின்ஊர்க்
கடிமரம் வருந்தத் தந்துயாம் பிணித்த
நெடுநல் யானைஎம் பரிசில்;
கடுமான் தோன்றல் செல்வல் யானே

அருஞ்சொற்பொருள்:-

புரவலர் = அரசன், கொடையாளன்
கடிமரம் = காவல் மரம்
கடுமான் = விரைவாகச் செல்லும் குதிரை
தோன்றல் = அரசன், தலைவன்

இதன் பொருள்:-

இரப்பவர்களுக்குக் கொடையாளன் நீ அல்லன். இரப்பவர்களுக்குப் பொருள் கொடுத்து உதவும் புரவலர்கள் இல்லாமலும் இல்லை. இரவலர்கள் உள்ளனர் என்பதையும் அவர்களுக்குப் பொருள் கொடுத்து உதவும் புரவலர்களும் உள்ளனர் என்பதையும் நீ அறிந்து கொள்வாயாக. உன் ஊரில் உள்ள காவல் மரம் வருந்துமாறு அதில் நான் கட்டிய பெரிய நல்ல யானை, நான் உனக்கு அளிக்கும் பரிசில். விரைவாகச் செல்லும் குதிரைகளையுடைய தலைவா! நான் செல்கிறேன்.

பாடலின் பின்னணி:-

இளவெளிமான் தன் தகுதி அறிந்து தனக்குப் பரிசளிக்கவில்லை என்று எண்ணி, அவன் அளித்த பரிசிலை ஏற்க மறுத்து,பெருஞ்சித்திரனார் குமணனிடம் பரிசு பெறச் சென்றார். குமணன், பெருஞ்சித்திரனாருக்குப் பெருமளவில் பரிசளித்தான். பரிசு பெற்ற பெருஞ்சித்திரனார், தன் ஊருக்குப் போகாமல், இளவெளிமான் ஊருக்குச் சென்று குமணன் அளித்த யானை ஒன்றை, இளவெளிமானின் காவல் மரத்தில் கட்டி, அதைத் தான் அவனுக்கு அளித்த பரிசு என்று கூறிச் சென்றார். மற்றும், இப்பாடலில் “இரப்போர்க்குப் பொருள் கொடுக்கும் புரவலன் நீ அல்லன்; ஆனால், பொருள் கொடுத்து உதவும் புரவலர்கள் இல்லாமலும் இல்லை. உலகில் இரவலர்களும் புரவலர்களும் உள்ளனர் என்பதை நீ அறிவாயாக” என்று அவனுக்கு அறிவுரை கூறுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on July 31, 2013, 08:31:16 PM
புறநானூறு, 163. (எல்லோர்க்கும் கொடுமதி மனை கிழவோயே!)
பாடியவர்: பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன்: பெருஞ்சித்திரனாரின் மனைவி.
திணை: பாடாண்.
துறை : பரிசில் துறை.
===================================

நின் நயந்து உறைநர்க்கும் நீ நயந்து உறைநர்க்கும்
பன்மாண் கற்பின்நின் கிளைமுத லோர்க்கும்
கடும்பின் கடும்பசி தீர யாழநின்
நெடுங்குறி எதிர்ப்பை நல்கி யோர்க்கும்
இன்னோர்க்கு என்னாது என்னோடும் சூழாது
வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும்
எல்லோர்க்கும் கொடுமதி மனைகிழ வோயே!
பழந்தூங்கு முதிரத்துக் கிழவன்
திருந்துவேல் குமணன் நல்கிய வளனே

அருஞ்சொற்பொருள்:-

நயந்து = விரும்பி
உறைதல் = வாழ்தல்
மாண் = மடங்கு
முதலோர் = மூத்தோர்
கடும்பு = சுற்றம்
யாழ - முன்னிலை அசைச் சொல்
குறி எதிர்ப்பு = எதிர் பார்ப்பு
சூழ்தல் = ஆராய்தல், கலந்து ஆலோசித்தல்
வல்லாங்கு = நல்ல முறையில் (சிறப்பாக)

இதன் பொருள்:-

உன்னை விரும்பி வாழ்பவர்க்கும், நீ விரும்பி வாழ்பவர்க்கும், பல வகைகளிலும் சிறந்த கற்புடைய உனது சுற்றத்தாருள் மூத்தோருக்கும், நமது சுற்றத்தாரின் கொடிய பசி நீங்குவதற்காக உனக்குக் கடன் கொடுத்தோர்க்கும், மற்றும் இன்னவர்களுக்கு என்னாமல், என்னையும் கலந்து ஆலாசிக்காமல், இப்பொருளை வைத்து நாம் நன்றாக வாழலாம் என்று எண்ணாது அதை எல்லோர்க்கும் கொடு, என் மனைவியே! பழங்கள் தொங்கும் மரங்கள் நிறைந்த முதிரமலைத் தலைவனும் செவ்விய வேலையுடையவனுமாகிய குமணன் கொடுத்த இந்தச் செல்வத்தை

பாடலின் பின்னணி:-

குமணனிடம் பரிசு பெற்ற பெருஞ்சித்திரனார், தன் இல்லத்திற்குச் சென்று, தான் குமணனிடமிருந்து பரிசாகப் பெற்ற செல்வத்தை எல்லோரோடும் பகிர்ந்து கொள்ளுமாறு தன் மனைவியிடம் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on July 31, 2013, 08:37:23 PM
புறநானூறு, 164. (வளைத்தாயினும் கொள்வேன்!)
பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார்.
பாடப்பட்டோன்: குமணன்.
திணை: பாடாண்.
துறை : பரிசில் கடாநிலை.
===================================

ஆடுநனி மறந்த கோடுஉயர் அடுப்பின்
ஆம்பி பூப்பத் தேம்புபசி உழவாப்
பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி
இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை
சுவைத்தொறும் அழூஉம்தன் மகத்துமுக நோக்கி
நீரொடு நிறைந்த ஈர்இதழ் மழைக்கண்என்

மனையோள் எவ்வம் நோக்கி நினைஇ
நிற்படர்ந் திசினே நற்போர்க் குமண!
என்நிலை அறிந்தனை யாயின் இந்நிலைத்
தொடுத்தும் கொள்ளாது அமையலென்; அடுக்கிய
பண்ணமை நரம்பின் பச்சை நல்யாழ்
மண்ணமை முழவின் வயிரியர்
இன்மை தீர்க்குங் குடிப்பிறந் தோயே

அருஞ்சொற்பொருள்:-

அடுதல் = சமைத்தல்
நனி = மிகவும்
கோடு = பக்கம்
ஆம்பி = காளான்
தேம்பல் = இளைத்தல், மெலிதல், வாடல்
உழத்தல் = வருந்துதல்
திரங்கி = தளர்ந்து
இல்லி = துளை
தூர்த்தல் = நிரப்புதல்
எவ்வம் = துன்பம், வெறுப்பு
படர்தல் = செல்லுதல்
தொடுத்தும் = வளைத்தும்
பச்சை = தோல்
மண் = மார்ச்சனை
வயிரியர் = கூத்தர்

இதன் பொருள்:-

ஆடுநனி=====> மழைக்கண்என்

சமைத்தலை முற்றிலும் மறந்த உயர்ந்த பக்கங்களையுடைய அடுப்பில் காளான் பூத்திருக்கிறது. உடல் மெலிந்து வருந்தி, பால் இல்லாததால் தோலோடு சுருங்கித் துளை மூடிய பயனில்லாத வற்றிய முலையச் சுவைத்து அழும் என் குழந்தையின் முகத்தை நோக்கி, நீர் மல்கிய ஈரம் படிந்த இமைகளைக்கொண்ட கண்களுடைய என்

மனையோள்=====> தோயே

மனைவியின் துன்பத்தை நினைத்து உன்னை நாடி வந்தேன். நல்ல முறையில் போரிடும் குமணா! என் நிலையை நீ அறிந்தாயாயின், இந்த நிலையில் உன்னை வளைத்துப் பிடித்துப் பரிசில் பெறாமல் விடமாட்டேன். பலவாக அடுக்கிய, இசையமைந்த நரம்புகளையுடைய, தோலால் போர்த்தப் பட்ட நல்ல யாழையும், மார்ச்சனை பூசிய மத்தளத்தையும் உடைய கூத்தர்களின் வறுமையைத் தீர்க்கும் குடியில் பிறந்தவனே!

பாடலின் பின்னணி:-

இப்பாடலில், தன் வறுமையையும் தன் மனைவி படும் துயரத்தையும் குமணனிடம் எடுத்துரைத்துத், தனக்குப் பரிசில் அளிக்குமாறு பெருந்தலைச் சாத்தனார் குமணனை வேண்டுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on July 31, 2013, 08:41:55 PM
புறநானூறு, 165. (எனக்குத் தலை ஈய வாள் தந்தனனே!)
பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார்.
பாடப்பட்டோன்: குமணன்.
திணை: பாடாண்.
துறை : பரிசில் விடை.
===================================

மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறீஇத் தாம்மாய்ந் தனரே;
துன்னரும் சிறப்பின் உயர்ந்த செல்வர்
இன்மையின் இரப்போர்க்கு ஈஇ யாமையில்
தொன்மை மாக்களின் தொடர்பு அறியலரே;

தாள்தாழ் படுமணி இரட்டும் பூனுதல்
ஆடியல் யானை பாடுநர்க்கு அருகாக்
கேடில் நல்லிசை வயமான் தோன்றலைப்
பாடி நின்றெனன் ஆகக் கொன்னே
பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தல்என்

நாடுஇழந் ததனினும் நனிஇன் னாதுஎன
வாள்தந் தனனே தலைஎனக்கு ஈயத்
தன்னிற் சிறந்தது பிறிதுஒன்று இன்மையின்
ஆடுமலி உவகையோடு வருவல்
ஓடாப் பூட்கைநின் கிழமையோன் கண்டே

அருஞ்சொற்பொருள்:-

மன்னா = நிலை இல்லாத
மன்னுதல் = நிலை பெறுதல்
நிறீஇ = நிலை நிறுத்தி
துன்னுதல் = அணுகுதல்
தொடர்பு = தொடர்ச்சி, ஒழுங்கு
படு = பெரிய
இரட்டல் = ஒலித்தல்
பூ = புள்ளி
நுதல் = நெற்றி
அருகா = குறையாத
வய = வலிய
மான் = குதிரை
தோன்றல் = அரசன், தலைவன்
கொன்னே = வறிதே
நனி = மிகவும்
ஆடு = வெற்றி
மலி = மிகுந்த
பூட்கை = கொள்கை
கிழமையோன் = உரிமையோன்

இதன் பொருள்:-

மன்னா=====> அறியலரே

நிலையில்லாத இவ்வுலகில் நிலைபெற நினைத்தவர்கள் தம் புகழை நிறுவித் தாம் இறந்தனர். அணுகுதற்கரிய சிறப்புடைய செல்வந்தர்கள் வறுமையால் இரப்பவர்களுக்கு ஒன்றும் ஈயாததால், முற்காலத்தில் வாழ்ந்த வள்ளல்களின் வரிசையில் சேராதவர்களாக உள்ளனர்.

தாள்தாழ்=====> பெயர்தல்என்

கால்வரைத் தாழ்ந்து ஒன்றோடு ஒன்று மாறி மாறி ஒலிக்கும் பெரிய மணிகளும், நெற்றியில் புள்ளிகளும், அசையும் இயல்பும் உடைய யானைகளை, பாடிவருபவர்க்குக் குறையாது கொடுக்கும் அழிவில்லாத நல்ல புகழையும், வலிய குதிரைகளையும் உடைய தலைவனாகிய குமணனைப் பாடி நின்றேன். பெருமை பெற்ற பரிசிலர் பரிசு பெறாமல் வறிதே செல்லுதல்,

நாடு=====> கண்டே

தான் நாடு இழந்ததைவிட மிகவும் கொடுமையானது என்று கூறித் தன் தலையை எனக்குப் பரிசாக அளிப்பதற்காக என்னிடம் வாளைக் கொடுத்தான். தன்னிடம் தன்னைவிடச் சிறந்த பொருள் யாதும் இல்லாமையால் அவன் அவ்வாறு செய்தான். போரில் புறம் காட்டி ஓடாத கொள்கையுடைய உன் தமையனைக் கண்டு வெற்றி மிகுந்த மகிழ்ச்சியோடு நான் உன்னிடம் வந்தேன்.

பாடலின் பின்னணி:-

கடையேழு வள்ளல்களின் காலத்திற்குப் பிறகு கொடையிற் சிறந்தவனாக விளங்கியவன் வள்ளல் குமணன். அவன் முதிர மலைப் பகுதியை ஆண்டு வந்தான். அவன் பெரும் புகழோடு நல்லாட்சி நடத்தியதைக் கண்டு பொறாமை அடைந்த அவன் இளவல் இளங்குமணன், குமணனோடு போரிட்டான். அப்போரில் தோற்ற குமணன், காட்டிற்குச் சென்று அங்கே வழ்ந்து வந்தான். அச்சமயம், பெருந்தலைச் சாத்தனார் குமணனைப் பாடிப் பரிசில் பெறச் சென்றார். அவன் அவருக்கு எதுவும் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். அவ்வாறு இருப்பினும், அவன் பெருந்தலைச் சாத்தனார் பரிசு ஒன்றுமில்லாமல் திரும்பிச் செல்வதை விரும்பவில்லை. ஆகவே, அவன் தன் தலையை வெட்டி, அதைக் கொண்டுபோய் இளங்குமணனிடம் கொடுத்தால் அவன் பெருமளவில் பரிசு கொடுப்பான் என்று கூறித் தன் வாளைப் பெருந்தலைச் சாத்தனாரிடம் கொடுத்தான். அவ்வாளைப் பெற்றுக் கொண்டு, பெருந்தலைச் சாத்தனார் குமணன் சொல்லியவாறு செய்யாமல், இளங்குமணனிடம் சென்று தான் குமணனைச் சந்தித்ததையும் அவன் வாள் கொடுத்ததையும் இப்பாடலில் கூறுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

உலகில் நிலைபெற்று இருப்பது புகழைத் தவிர வேறொன்றும் இல்லை என்று திருவள்ளுவர் கூறுவது இங்கு குறிப்பிடத் தக்கது.

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன்று இல். (குறள் - 233)

பிறர் வறுமையை அறிந்து அவர்களுக்கு உதவி செய்பவன் (ஒப்புரவு செய்பவன்) வருந்துவது அவனால் பிறருக்கு உதவி செய்ய முடியாத நிலையில்தான் என்ற கருத்தைத் திருவள்ளுவர்,

நயனுடையான் நல்கூர்ந்தான் ஆதல் செய்யும்நீர
செய்யாது அமைகலா வாறு. (குறள் - 219)

என்று ஒப்புரவு என்னும் அதிகாரத்தில் கூறுகிறார். திருவள்ளுவர் கருத்தும், இப்பாடலில் குமணன் தன்னால் பெருந்தலைச் சாத்தனாருக்குப் பரிசு கொடுக்க முடியவில்லையே என்று வருந்துவதும் ஒத்திருப்பது குறிப்பிடத் தக்கது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on July 31, 2013, 08:43:40 PM
புறநானூறு, 166. (யாமும் செல்வோம்!)
பாடியவர்: ஆவூர் மூலங் கிழார்.
பாடப்பட்டோன்: சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன்.
திணை: வாகை.
துறை : பார்ப்பன வாகை. கல்வி கேள்விகளால் சிறந்த பார்ப்பானின் வேள்விச் சிறப்பையும் வெற்றியையும் புகழ்ந்து பாடுவது.
===================================

நன்றாய்ந்த நீள்நிமிர்சடை
முதுமுதல்வன் வாய்போகாது
ஒன்றுபுரிந்த ஈரிரண்டின்
ஆறுணர்ந்த ஒருமுதுநூல்
இகல்கண்டோர் மிகல்சாய்மார்

மெய்அன்ன பொய்உணர்ந்து
பொய்ஓராது மெய்கொளீஇ
மூவேழ் துறையும் முட்டின்று போகிய
உரைசால் சிறப்பின் உரவோர் மருக!
வினைக்குவேண்டி நீபூண்ட

புலப்புல்வாய்க் கலைப்பச்சை
சுவல்பூண்ஞாண் மிசைப்பொலிய;
மறம்கடிந்த அருங்கற்பின்
அறம்புகழ்ந்த வலைசூடிச்
சிறுநுதல்பேர் அகல்அல்குல்

சில சொல்லின் பலகூந்தல் நின்
நிலைக்குஒத்தநின் துணைத்துணைவியர்
தமக்குஅமைந்த தொழில்கேட்பக்;
காடுஎன்றா நாடுஎன்றுஆங்கு
ஈரேழின் இடம்முட்டாது

நீர்நாண நெய்வழங்கியும்
எண்நாணப் பலவேட்டும்
மண்நாணப் புகழ்பரப்பியும்
அருங்கடிப் பெருங்காலை
விருந்துற்றநின் திருந்துஏந்துநிலை

என்றும் காண்கதில் அம்ம யாமே குடாஅது
பொன்படு நெடுவரைப் புயல்ஏறு சிலைப்பின்
பூவிரி புதுநீர்க் காவிரி புரக்கும்
தண்புனற் படப்பை எம்மூர் ஆங்கண்
உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம்

செல்வல் அத்தை யானே; செல்லாது
மழைஅண் ணாப்ப நீடிய நெடுவரைக்
கழைவளர் இமயம் போல
நிலீஇயர் அத்தைநீ நிலமிசை யானே

அருஞ்சொற்பொருள்:-

ஆய்தல் = நுணுகி அறிதல்
முது முதல்வன் = இறைவன் (சிவன்)
நிமிர் = மேன்மை
புரிதல் = செய்தல்
இகல் = மாறுபாடு
மிகல் = வெற்றி, செருக்கு
சாய்தல் = அழிதல்
ஆர்வு = விருப்பம்
ஓராது = ஆராயாது
கொளீஇ = கொண்டு
துறை = காரியம் ( வேள்வி)
முட்டு = குறைவு
உரவோர் = அறிஞர், முனிவர்
மருகன் = வழித்தோன்றல்
புலம் = வயல், இடம்
புல்வாய் = கலைமான்
சுவல் = தோள்மேல்
ஞாண் = கயிறு
மிசை = மேல்
மறம் = மிகுதி
கடிந்த = நீக்கிய
வலை = ஒரு வகை ஆடை
முட்டாது = குறையாது
கடி = வேள்வி
பெருகுதல் = நிறைதல்
தில், அம்ம - அசைச் சொல்
வரை = மலை
சிலைத்தல் = முழங்குதல்
புயல் = மேகம்
ஏறு = இடி
புரக்கும் = காக்கும்
படப்பை = தோட்டம், புழைக்கடை
அத்தை - அசைச் சொல்
அண்ணாத்தல் = தலை நிமிர்தல், தலையெடுத்தல்
கழை = மூங்கில்

இதன் பொருள்:-

நன்றாய்ந்த=====> மிகல்சாய்மார்

மேன்மை பொருந்திய நீண்ட சடையை உடைய, எல்லாவற்றையும் நன்கு நுணுகி அறிந்த, முழுமுதற் கடவுளாகிய சிவனின் வாக்கிலிருந்து நீங்காது அறம் ஒன்றையே அடிப்படையாகக் கொண்ட, நான்கு பிரிவுகளும் ஆறு உறுப்புகளும் உடைய பழைய நூலாகிய வேதத்திற்கு மாறுபாடுகளைக் கண்டோரின்

மெய்அன்ன=====> நீபூண்ட

செருக்கை அழிக்க விரும்பி, அவரது மெய் போன்ற பொய்யை உணர்ந்து, அப்பொய்யை மெய்யென்று கருதாமல், மெய்யைக் கொண்டு இருபத்தொரு வேள்வித் துறைகளையும் குறையின்றிச் செய்து முடித்த, சொல்லுதற்கரிய சிறப்புடைய முனிவர்களின் (அறிஞர்களின்) வழித்தோன்றலே! வேள்விக்காக, நீ

புலப்புல்வாய்க்=====> அல்குல்

காட்டு மானின் தோலை உன் பூணுலுக்கு மேல் அணிந்திருக்கிறாய். குற்றமற்ற, அரிய கற்பும், அற நூல்களில் புகழப்பட்ட வலை என்னும் ஆடையையும், சிறிய நெற்றியையும், அகன்ற இடையையும்

சில=====> முட்டாது

அதிகமாகப் பேசாத இயல்பையும், மிகுதியான கூந்தலையும் உடைய, உன் தகுதிக்கேற்ற துணைவியராகிய உன் மனைவியர் அவர்களுக்கு இடப்பட்ட பணிகளைச் செய்கின்றனர். காட்டிலும் நாட்டிலும் வாழ்ந்த பதினான்கு பசுக்களின் நெய்யை

நீர்நாண=====> ஏந்துநிலை

நீரைவிட அதிகமாக வழங்கி, எண்ணற்ற பல வேள்விகளைச் செய்து உலகெங்கும் புகழ் பரப்பிய, அரிய வேள்வி நிறைவு பெறும் வேளையில் விருந்தினரோடு கூடியிருக்கும் உன் மேன்மையான நிலையை

என்றும்=====> ஆடுகம்

இன்றுபோல் நாங்கள் என்றும் காண்போமாக; மேற்கில், பொன் மிகுதியாக உள்ள உயர்ந்த மலையில் மேகம் இடியோடு முழங்கியதால் மலர்ந்த பூக்களைச் சுமந்து வரும் காவிரியில் புது வெள்ளம் பெருகி வருவதால் குளிர்ந்த நீருடைய தோட்டங்களுடைய எங்கள் ஊரில், நாங்கள் உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடியும்

செல்வல்=====> யானே

மகிழ்வோம்; யான் செல்கிறேன். மேகங்கள் அகலாது மழை பொழியும் உயர்ந்த மலைகளையுடைய, மூங்கில் வளரும் இமயம் போல் நீ இவ்வுலகில் வாழ்வாயாக.

பாடலின் பின்னணி:-

ஒரு சமயம், சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன் ஒரு வேள்வி நடத்தினான். அவ்வேள்விக்கு ஆவூர் மூலங் கிழார் சென்றிருந்தார். அவ்வேள்வியின் சிறப்பையும் விண்ணந்தாயனின் வள்ளல் தன்மையையும் இப்பாடலில் ஆவூர் மூலங் கிழார் புகழ்ந்து பாடுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on July 31, 2013, 08:45:40 PM
புறநானூறு, 167. (நீயும் ஒன்று இனியை;அவரும் ஒன்று இனியர்!)
பாடியவர்: கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார்.
பாடப்பட்டோன்: ஏனாதி திருக்கிள்ளி.
திணை: வாகை.
துறை : அரசவாகை.
===================================

நீயே, அமர்காணின் அமர்கடந்துஅவர்
படைவிலக்கி எதிர்நிற்றலின்
வாஅள் வாய்த்த வடுவாழ் யாக்கையொடு
கேள்விக்கு இனியை கட்குஇன் னாயே;
அவரே, நிற்காணின் புறங்கொடுத்தலின்
ஊறுஅறியா மெய்யாக்கையொடு

கண்ணுக்கு இனியர் செவிக்கு இன்னாரே!
அதனால், நீயும்ஒன்று இனியை;அவரும்ஒன்று இனியர்;
ஒவ்வா யாவுள மற்றே? வெல்போர்க்
கழல்புனை திருந்தடிக் கடுமான் கிள்ளி!
நின்னை வியக்குமிவ் உலகம் அஃது
என்னோ பெரும உரைத்திசின் எமக்கே

அருஞ்சொற்பொருள்:-

அமர் = போர்
கடந்து = வென்று
வாய்த்தல் = கிடைத்தல், சேர்தல்
கட்கு = கண்ணுக்கு
ஊறு = காயம், தழும்பு
ஒவ்வுதல் = பொருந்துதல் (ஒத்திருத்தல்)
ஒவ்வா = பொருந்தாத (ஒப்பில்லாத)
கடு = விரைவு
உரைத்திசின் = உரைப்பாயாக

இதன் பொருள்:-

நீயே=====> மெய்யாக்கையொடு

நீ, போரைக் கண்டால், அப்போரில் வென்று, அப்பகைவர்களின் படையை எதிர்த்து நிற்கிறாய். அதனால், வாளால் உண்டாகிய தழும்புகளுடைய உடலோடு உள்ள உன் வீரச் செயல்களைக் கேட்பதற்கு இனியவனாய் உள்ளாய். ஆனால், நீ கண்ணுக்கு இனியவனாயக (அழகானவனாக) இல்லை. உன் பகைவர், உன்னைக் கண்டால் புறங்காட்டி ஓடுவதால் தழும்பில்லாத உடலோடு

கண்ணுக்கு=====> எமக்கே

பார்ப்பதற்கு இனிமையானவர்களாக (அழகானவர்களாக) இருக்கிறார்கள். ஆனால், அவர்களின் செயல்கள் கேட்பதற்கு இனிமையானவையாக இல்லை. அதனால், நீ ஒருவகையில் இனியவன்; அவர்களும் ஒரு வகையில் இனியவர்களாக உள்ளனர். உங்களுக்குள் வேறுபாடுகள் எவை? போரில் வெற்றியும், வீரக்கழல் அணிந்த திருவடிகளும், விரைவாகச் செல்லும் குதிரைகளும் உடைய உன்னைக் கண்டு இவ்வுலகம் வியக்கிறது. அதற்குக் காரணம் என்னவோ? தலைவா! அதை எனக்கு உரைப்பாயாக.

பாடலின் பின்னணி:-

ஏனாதியின் வீரத்தையும் வண்மையையும் கேள்விப்பட்டு, அவனைக் காணக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் சென்றவர். அவர் திருக்கிள்ளியின் உடலில் இருந்த வடுக்களைக் கண்டு வியந்து, இகழ்வதுபோல் புகழ்ந்து அவனை இப்பாடலில் சிறப்பிக்கிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on July 31, 2013, 08:47:31 PM
புறநானூறு, 168. (கேழல் உழுத புழுதி!)
பாடியவர்: கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார்.
பாடப்பட்டோன்: பிட்டங்கொற்றன்.
திணை: பாடாண் திணை.
துறை : பரிசில் துறை. இயன்மொழியும் அரச வாகையும் ஆம்.
===================================

அருவி ஆர்க்குங் கழைபயில் நனந்தலைக்
கறிவளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள்
கொழுங்கிழங்கு மிளிரக் கிண்டிக் கிளையொடு
கடுங்கண் கேழல் உழுத பூழி
நன்னாள் வருபதம் நோக்கிக் குறவர்

உழாஅது வித்திய பரூஉக்குரல் சிறுதினை;
முந்துவிளை யாணர் நாள்புதிது உண்மார்
மரையான் கறந்த நுரைகொள் தீம்பால்
மான்தடி புழுக்கிய புலவுநாறு குழிசி
வான்கேழ் இரும்புடை கழாஅது ஏற்றிச்

சாந்த விறகின் உவித்த புன்கம்;
கூதளம் கவினிய குளவி முன்றில்
செழுங்கோள் வாழை அகல்இலைப் பகுக்கும்
ஊராக் குதிரைக் கிழவ, கூர்வேல்
நறைநார்த் தொடுத்த வேங்கையங் கண்ணி
வடிநவில் அம்பின் வில்லோர் பெரும,

கைவள் ஈகைக் கடுமான் கொற்ற,
வையக வரைப்பில் தமிழகம் கேட்பப்
பொய்யாச் செந்நா நெளிய ஏத்திப்
பாடுப என்ப பரிசிலர் நாளும்
ஈயா மன்னர் நாண
வீயாது பரந்தநின் வசையில்வான் புகழே.

அருஞ்சொற்பொருள்:-

ஆர்த்தல் = ஒலித்தல்
பயிறல் = கூடுதல்
நனம் = அகற்சி
நனந்தலை = அகன்ற இடம்
கறி = மிளகு
அடுக்கம் = மலைப்பக்கம், மலைச் சாரல்
மிளிர்தல் = புரளுதல், மேலாதல்
கிளை = இனம், கூட்டம்
கடுங்கண் = குரூரம், கொடுமை
கேழல் = பன்றி
பூழி = புழுதி
பதம் = சமயம்
பரூஉ = பருமை
குரல் = கதிர், தினை
முந்து = பழைமையான (முன்னர்)
யாணர் = புது வருவாய்
மரையா = காட்டுப் பசு
தீ = இனிமை
தடி = தசை
புழுக்கல் = அவித்தல்
குழிசி = பானை
வான் = அழகு
கேழ் = நிறம்
புடை = பக்கம்
சாந்தம் = சந்தனம்
உவித்தல் = அவித்தல்
புன்கம் = சோறு, உணவு
கூதளம் = வெள்ளரி, கூதாளிச் செடி
குளவி = காட்டு மல்லிகை
முன்றில் = முற்றம்
கோள் = குலை
பகுத்தல் = ஈதல், பங்கிடுதல்
நறை = பச்சிலைக் கொடி
வடி = கூர்மை
நவிலல் = பழகுதல்
வள் = வளம்கடு = விரைவு
மான் = குதிரை
நெளிதல் = வருந்துதல்
வீதல் = கெடுதல்

இதன் பொருள்:-

அருவி=====> குறவர்

அருவிகள் சத்தமிடும், மூங்கில்கள் அடர்ந்த அகன்ற இடத்தில், மிளகுக் கொடி வளரும் மலைப்பக்கத்தில் காட்டுப் பன்றிகள் தன் இனத்தோடு, காந்தளின் வளமான கிழங்குகளைத் தோண்டியெடுப்பதற்காகக் கிளறிய நிலத்தில் தோன்றிய புழுதியில், நல்ல நாள் வந்த சமயம் பார்த்துக் குறவர்

உழாஅது=====> ஏற்றி

உழாமல் விதைத்து விளைந்த பெரிய கதிரையுடைய சிறுதினையப் புது வருவாயாகப் பெற்று அதைப் புது உணவாக உண்ணுவர். காட்டுப் பசுவிடம் கறந்த நுரையுடன் கூடிய இனிய பாலில் மான் தசையை வேகவைத்தப் புலால் மணமுள்ள அழகிய நிறமுள்ள பானையின் வெளிப்புறத்தைக் கழுவாமல் உலைவைத்து,

சாந்த=====> பெரும

சந்தன விறகால் சமைத்த சோற்றை வெள்ளரி சிறந்து விளங்கும், காட்டு மல்லிகை மணக்கும் முற்றத்தில் வளமான குலையையுடைய வாழையின் அகன்ற இலையில் இட்டுப் பலரோடும் பகிர்ந்து உண்னும், குதிரை மலைத் தலைவனே! கூர்மையான வேலையும், பச்சிலைக் கொடியுடன் தொடுத்த வேங்கை மலர் மாலையையும் அணிந்து கூரிய அம்பைச் செலுத்துவதில் பயிற்சி பெற்ற வீரர்களுக்குத் தலைவா!

கைவள்=====> புகழே

கையால் வழங்கும் ஈகையும் விரைந்து செல்லும் குதிரைகளையும் உடைய தலைவா! உலகத்து எல்லையுள், தமிழகம் முழுதும் கேட்க, இரவலர்க்குப் பரிசளிக்காத மன்னர்கள் நாள்தோறும் நாணுமாறு நன்கு பரவிய உன் பழியற்ற புகழைப் பொய் பேசாத, நடுவு நிலை தவறாத நாவுடையோர் தங்கள் நாவு வருந்துமாறு புகழ்ந்து உன்னை பாடுவர் என்று பரிசிலர் கூறுவர்.

பாட்டின் பின்னணி:-

தமிழகம் முழுதும் பிட்டங்கொற்றனின் புகழ் பேசப்படுவதைக் கண்ட புலவர் கருவூர்க் கதப்பிள்ளை அவனைக் காண வந்தார். இப்பாடல், அவ்வமயம் அவரால் இயற்றப்பட்டது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on August 06, 2013, 11:58:38 AM
புறநானூறு, 169. (நின் வலன் வாழியவே!)
பாடியவர்: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்.
பாடப்பட்டோன்: பிட்டங்கொற்றன்.
திணை: பாடாண் திணை.
துறை : பரிசில் கடாநிலை.
===================================

நும்படை செல்லுங் காலை அவர்படை
எடுத்தெறி தானை முன்னரை எனாஅ
அவர்படை வருஉம் காலை நும்படைக்
கூழை தாங்கிய அகல்யாற்றுக்
குன்றுவிலங்கு சிறையின் நின்றனை எனாஅ,
அரிதால் பெருமநின் செவ்வி என்றும்

பெரிதால் அத்தைஎன் கடும்பினது இடும்பை
இன்னே விடுமதி பரிசில் வென்வேல்
இளம்பல் கோசர் விளங்குபடை கன்மார்
இகலினர் எறிந்த அகல்இலை முருக்கின்
பெருமரக் கம்பம் போலப்
பொருநர்க்கு உலையாநின் வலன் வாழியவே

அருஞ்சொற்பொருள்:-

தானை = ஆயுதங்கள்
முன்னரை = முன்னர் நிற்பவன்
கூழை = படை வகுப்பு
விலங்கு = குறுக்கானது
சிறை = தடை
எனாஅ = ஆகலானும் (இடைச்சொல்)
செவ்வி = காலம்
ஆல், அத்தை - அசைச் சொற்கள்
கடும்பு = சுற்றம்
இடும்பை = துன்பம்
இன்னே = இப்பொழுதே
கோசர் = ஒரு வகை வீரர்கள்
கன்மார் = கற்பவர்கள்
இகல் = மாறுபாடு
உலைதல் = மனங்கலங்கல்
வலன் = வெற்றி

இதன் பொருள்:-

நும்படை=====> என்றும்

உம் படை பகைவரோடு போரிடப் போகும் பொழுது, வேல் முதலியவற்றை எடுத்து எறியும் பகைவரின் படைக்கு முன் நிற்பாய். பகவரின் படை உம் படையோடு போரிட வரும் பொழுது, உம் படையின் அணியைத் தாங்குவதற்காக, அகன்ற ஆற்றைத் தடுத்து நிறுத்தும் மலைபோல் அதனைத் தடுத்து நிற்பாய். அதனால், பெரும, உன்னைக் காண்பதற்கு ஏற்ற காலம்

பெரிதால்=====> வாழியவே

கிடைப்பது எந்நாளும் அரிது. என் சுற்றத்தாரின் துன்பம் பெரிதாகையால், இப்பொழுதே பரிசு அளித்து என்னை அனுப்புவாயாக. வெல்லும் வேலையுடைய இளம் கோசர்கள் பலரும் படைப் பயிற்சி செய்யும் பொழுது வேலெறிந்து பழகும் அகன்ற இலையுடைய முருக்க மரத்தூணால் ஆகிய இலக்கு போல் பகைவர்களைக் கண்டு மனங்கலங்காத உன் வெற்றி வாழ்க.

பாடலின் பின்னணி:-

காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பிட்டங்கொற்றனைக் காண விரும்பினார். ஆனால், அவர் பிட்டங்கொற்றனைக் காண முயன்ற பொழுதெல்லாம் அவன் போருக்குச் சென்றிருந்தான். ஒருமுறை, அவனை நேரில் காணும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அப்போது, அவன் மீண்டும் போருக்குப் போவதற்குமுன் தனக்குப் பரிசு கொடுத்து அருள வேண்டுமென்று அவர் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on August 06, 2013, 12:00:18 PM
புறநானூறு, 170. (உலைக்கல்லன்ன வல்லாளன்!)
பாடியவர்: உறையூர் மருத்துவன் தாமோதரனார்.
பாடப்பட்டோன்: பிட்டங்கொற்றன்.
திணை: வாகை.
துறை : வல்லாண் முல்லை: ஒரு வீரனுடைய வீட்டையும் ஊரையும் இயல்பினையும் சொல்லி அவன் ஆண்மைத் தன்மையை நன்மை பெருகச் சொல்லுதல்.
தானை மறமும் ஆம்: இரு படைகளும் தங்களுள் போரிட்டுச் சாகாதவாறு வீரன் ஒருவன் பாதுகாத்ததைக் கூறுவது.
===================================

மரைபிரித்து உண்ட நெல்லி வேலிப்
பரலுடை முன்றில் அங்குடிச் சீறூர்
எல்அடிப் படுத்த கல்லாக் காட்சி
வில்லுழுது உண்மார் நாப்பண் ஒல்லென
இழிபிறப் பாளன் கருங்கை சிவப்ப

வலிதுரந்து சிலைக்கும் வன்கண் கடுந்துடி
புலிதுஞ்சு நெடுவரைக் குடிஞையோடு இரட்டும்
மலைகெழு நாடன் கூர்வேல் பிட்டன்
குறுகல் ஓம்புமின் தெவ்விர்; அவனே
சிறுகண் யானை வெண்கோடு பயந்த
ஒளிதிகழ் முத்தம் விறலியர்க்கு ஈந்து

நார்பிழிக் கொண்ட வெம்கள் தேறல்
பண்அமை நல்யாழ்ப் பாண்கடும்பு அருத்தி
நசைவர்க்கு மென்மை அல்லது பகைவர்க்கு
இரும்புபயன் படுக்குங் கருங்கைக் கொல்லன்
விசைத்துஎறி கூடமொடு பொருஉம்
உலைக்கல் அன்ன வல்லா ளன்னே

அருஞ்சொற்பொருள்:-

மரை = காட்டுப்பசு
பரல் = விதை
முன்றில் = முற்றம்
எல் = பகல்
அடிப்படுதல் = அடிச்சுவடு படுதல்
காட்சி = அறிவு
நாப்பண் = நடுவே
கருமை = வலிமை
துரந்து = முயன்று
சிலைத்தல் = ஒலித்த
துடி = குறிஞ்சிப் பறை
குடிஞை = ஆந்தை
இரட்டல் = மாறி மாறி ஒலித்தல்
குறுகல் = அணுகல்
வெம்மை = விருப்பம்
தேறல் = கள்ளின் தெளிவு
கூடம் = சம்மட்டி
உலைக்கல் = பட்டடைக் கல் (பட்டறை)

இதன் பொருள்:-

மரைபிரித்து=====> சிவப்ப

காட்டுப் பசுக்கள் வீட்டு வேலியில் உள்ள நெல்லிமரத்தின் கனிகளின் விதைகளை நீக்கித் தின்றதால் அவ்விதைகள் வீடுகளின் முற்றங்களில் சிதறிக் கிடக்கும் அழகிய வீடுகளுடைய சிற்றூரில், பகற் பொழுதெல்லாம் வேட்டையாடித் திரிகின்ற, கல்வியில்லாத, வேற்பயிற்சியுள்ள வேட்டையாடி உண்ணும் வேடர்களின் நடுவே, “ஒல்” என்னும் ஓசையுடன் இழிந்த பிறப்பாளன் என்று கருதப்படும் பறை கொட்டுபவன் தன் வலிய கை சிவக்குமாறு

வலிதுரந்து=====> ஈந்து

விரைந்து அடிக்கும் வலிய கண்ணையுடைய, அச்சம் தரும் பறையின் ஒலி, புலி படுத்திருக்கும் மலையில் ஆந்தையின் அலரலோடு மாறி மாறி ஒலிக்கும். இத்தகைய மலையுள்ள நாட்டுக்குத் தலைவன் கூரிய வேலையுடைய பிட்டங்கொற்றன். பகைவர்களே! அவனை அணுகுவதைத் தவிர்க. அவன் சிறிய கண்களையுடைய யானைகளின் வெண்மையான தந்தங்களில் விளையும் ஒளி பொருந்திய முத்துகளை விறலியர்க்குக் கொடுப்பவன்.

நார்பிழி=====> வல்லா ளன்னே

நாரைப் பிழிந்து எடுத்த விரும்பத்தக்க கள்ளின் தெளிவை, யாழோடும் பண்ணோடும் பாடும் பாணர்களுக்குக் கொடுத்து அவர்களையும் அவர்களின் சுற்றத்தாரையும் உண்ண வைப்பவன். ஆனால், பகைவர்க்கு அவன் இரும்பைப் பயன்படுத்தும் வலிய கொல்லனின் உலைக்களத்தில் விரைந்து சம்மட்டியால் அடிக்கப்படும் பட்டடைக்கல் போன்ற வலிமையுடையவன்.

பாடலின் பின்னணி:-

ஒருகால், மருத்துவர் தாமோதரனார் பிட்டங்கொற்றனைக் காணச் சென்றார். அவ்வமயம், பிட்டங்கொற்றனின் பகைவர்கள் அவனோடு போர் புரிவதற்குத் திட்டமிட்டுக் கொண்டிருப்பதாக, பகைவர்களின் ஒற்றர்கள் மூலம் அறிந்தார். அவ்வொற்றர்கள் அறியுமாறு, அவர் பிட்டங்கொற்றனின் வலிமையைப் புகழ்ந்து பாடுவதாக, இச்செய்யுள் அமைந்துள்ளது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on August 06, 2013, 12:01:45 PM
புறநானூறு, 171. (அவன் தாள் வாழியவே!)
பாடியவர்: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்.
பாடப்பட்டோன்: பிட்டங்கொற்றன்.
திணை: பாடாண்.
துறை : இயன் மொழி.
===================================

இன்று செலினுந் தருமே சிறுவரை
நின்று செலினுந் தருமே; பின்னும்
முன்னே தந்தனென் என்னாது துன்னி
வைகலும் செலினும் பொய்யலன் ஆகி
யாம்வேண்டி யாங்குஎம் வறுங்கலம் நிறைப்போன்

தான்வேண்டி யாங்குத் தன்இறை உவப்ப
அருந்தொழில் முடியரோ திருந்துவேல் கொற்றன்
இனமலி கதச்சேக் களனொடு வேண்டினும்
களமலி நெல்லின் குப்பை வேண்டினும்
அருங்கலம் களிற்றொடு வேண்டினும் பெருந்தகை

பிறர்க்கும் அன்ன அறத்தகை யன்னே;
அன்னன் ஆகலின் எந்தை உள்ளடி
முள்ளும் நோவ உற்றாக தில்ல!
ஈவோர் அரியஇவ் உலகத்து
வாழ்வோர் வாழ அவன் தாள் வாழியவே!

அருஞ்சொற்பொருள்:-

வரை = காலம்
துன்னி = நெருங்கி (தொடர்ந்து)
வைகல் = நாள்
உவப்ப = மகிழ
மலிதல் = மிகுதல், நிறைதல்
கதம் = சினம்
சே = காளை
களன் = தொழுவம்
குப்பை = குவியல்
எந்தை = எம் தந்தை ( எம் தலைவன்)

இதன் பொருள்:-

இன்று=====> நிறைப்போன்

இன்று சென்றாலும் (பரிசுகள்) தருவான்; சில நாட்கள் கழித்துச் சென்றாலும் (பரிசுகள்) தருவான். அதுமட்டுமல்லாமல், தொடர்ந்து நாள்தோறும் சென்றாலும், “முன்பே தந்தேன்” என்று கூறாமல், யாம் வேண்டியவாறு தவறாமல் எங்கள் வறுங்கலங்களை நிரப்புவான்.

தான்வேண்டி=====> பெருந்தகை

தன் அரசன் விரும்பியவாறு, அவன் மகிழ , திருந்திய வேலையுடைய பிட்டங்கொற்றன் தன்னுடைய அரிய போர்த்தொழிலை முடிப்பானாக. பெரிய கூட்டமாக உள்ள, சினமுடைய காளைகளைத் தொழுவத்தோடு கேட்டாலும், களத்தில் மிகுதியாக இருக்கும் நெற்குவியலைக் கேட்டாலும், அரிய அணிகளை அணிந்த யானைகளைக் கேட்டாலும், பெருந்தன்மையுடைய பிட்டங்கொற்றன்

பிறர்க்கும்=====> வாழியவே!

எமக்கு மட்டுமல்லாமல் பிறர்க்கும் கொடுக்கும் தன்மை உடையவன். ஆகவே, எம் தந்தை போன்ற பிட்டங்கொற்றனின் காகல்களில் முள்கூடக் குத்தி வலி உண்டாக்காது இருக்க வேண்டும். ஈவோர் அரிதாக உள்ள இவ்வுலகில், வாழ்வோரை வாழவைக்கும் பிட்டங்கொற்றனின் முயற்சி வாழ்கவே.

பாடலின் பின்னணி:-

பிட்டங்கொற்றனைக் காண்பது அரிதாக இருப்பதாகக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியதை 169- ஆம் பாடலில் கண்டோம். அப்பாடலை இயற்றிய பிறகு, பிட்டங்கொற்றனை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனாருக்குக் கிடைத்தது. அவனும் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனாருக்குப் பெருமளவில் பரிசுகள் அளித்து அவரை மகிழ்வித்தான். பிட்டங்கொற்றனின் அன்பாலும் வண்மையாலும் பெருமகிழ்ச்சி அடைந்த காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார், அவன் தனக்கு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் வேண்டியது அளிக்கும் தன்மையவன் என்றும் அவன் எவ்வித துன்பமும் இல்லாமல் வாழ வேண்டுமென்றும் இப்பாடலில் வாழ்த்துகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

அதியமானிடம் எத்தனை நாள் சென்றாலும் அவன் முதல் நாள் பரிசளித்ததைப் போலவே தினமும் பரிசளித்து இரவலரை மகிழ்விப்பான் என்று 101 - ஆம் பாடலில் அவ்வையார் கூறுகிறார்.

ஒருநாள் செல்லலம்; இருநாட் செல்லலம்;
பன்னாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ. (புறம். 101; 1-3; அவ்வையார்)

வையாவிக் கோப்பெரும் பேகனிடம் சென்று பரிசு பெறுவதற்கு, நல்ல நாள் பார்த்துச் செல்லவேண்டியதில்லை; நிமித்தம் நல்லாதாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை; அவனைச் சந்திப்பதற்கு ஏற்ற சமயமாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை; திறமையாக செய்யுள் இயற்ற வேண்டிய அவசியமும் இல்லை; அவன் நிச்சயம் பரிசளிப்பான் என்று பேகனின் கொடைத் திறத்தைக் கபிலர் 124-ஆம் பாடலில் கபிலர் புகழ்ந்து கூறுகிறார்.

நாளன்று போகிப் புள்ளிடைத் தட்பப்
பதனன்று புக்குத் திறனன்று மொழியினும்
வறிது பெயர்குநர் அல்லர்; (புறம். 124; 1-3; கபிலர்)

அவ்வையார் அதியமானைப் பற்றிக் கூறியிருப்பதும், கபிலர் பேகனைப் பற்றிக் கூறியிருப்பதும் இப்பாடலில் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பிட்டங்கொற்றனின் கொடைத் தன்மையைப் புகழ்ந்து பாடுவதும் சங்ககாலத்து மன்னர்கள் புலவர்களையும் இரவலர்களையும் ஆதரிப்பதில் மிகுந்த ஆர்வமுடைவர்களாக இருந்தார்கள் என்பதைக் காட்டுகிறது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on August 06, 2013, 12:03:21 PM
புறநானூறு, 172. (பகைவரும் வாழ்க!)
பாடியவர்: வடம வண்ணக்கன் தாமோதரனார்.
பாடப்பட்டோன்: பிட்டங்கொற்றன்.
திணை: பாடாண்.
துறை : இயன் மொழி.
===================================

ஏற்றுக உலையே; ஆக்குக சோறே;
கள்ளும் குறைபடல் ஓம்புக; ஒள்ளிழைப்
பாடுவல் விறலியர் கோதையும் புனைக;
அன்னவை பிறவும் செய்க; என்னதூஉம்
பரியல் வேண்டா; வருபதம் நாடி;

ஐவனங் காவல் பெய்தீ நந்தின்
ஒளிதிகழ் திருந்துமணி நளியிருள் அகற்றும்
வன்புல நாடன் வயமான் பிட்டன்
ஆரமர் கடக்கும் வேலும், அவன்இறை
மாவள் ஈகைக் கோதையும்
மாறுகொள் மன்னரும் வாழியர் நெடிதே!

அருஞ்சொற்பொருள்:-

ஓம்புதல் = தவிர்தல்
கோதை = மாலை
புனைதல் = சூடுதல்
பரியல் = இரங்குதல், வருந்துதல்
பதம் = உணவு
நந்துதல் = கெடுதல்
ஆர் = கூர்மை
ஐவனம் = மலைநெல்
வன்புலம் = வலிய நிலம் (மலை நாடு)
வயமான் = வலிய குதிரை
கோதை = சேரமான் கோதை

இதன் பொருள்:-

ஏற்றுக=====> நாடி

உலையை ஏற்றுக; சோற்றை ஆக்குக; கள்ளையும் நிறைய உண்டாக்குக; அழகாக செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்த, பாடுவதில் சிறந்த, விறலியர் மாலைகளைச் சூடுக; அது போன்ற பிற செயல்களையும் செய்க. அடுத்து வரவேண்டிய உணவைப்பற்றி சிறிதும் வருந்த வேண்டாம்.

ஐவனங் காவல்=====> நெடிதே

வலிய குதிரைகளையுடைய பிட்டங்கொற்றன் மலைநாட்டுத் தலைவன். அவன் நாட்டில், மலைநெல்லைக் காப்பவர் காவலுக்காக மூட்டிய தீயின் ஒளி குறைந்தால், அவர்கள் அணிந்திருக்கும் ஓளி பொருந்திய அழகிய மணிகள், அடர்ந்த இருளை அகற்றும். அவன் அரிய போரில் வெல்லும் வேலும், அவன் தலைவனாகிய வள்ளல் தன்மை மிகுந்த (அரசன்) கோதையும் அவனோடு மாறுபட்டுப் போர் புரியும் மன்னர்களும் நெடுநாட்கள் வாழ்க.

பாடலின் பின்னணி:-

வடம வண்ணக்கன் தாமோதரனார் ஒரு சமயம் பிட்டங்கொற்றனைப் பாடித் தான் பெற்ற பெருஞ்செல்வத்தை பாணன் ஒருவன் தன் சுற்றத்தாருக்கு உரைக்கும் வகையாக இப்பாடல் அமைந்துள்ளது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on August 06, 2013, 12:05:28 PM
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-prn2/971424_640283315996583_921419057_n.jpg)

புறநானூறு, 173. (யான் வாழுநாளும் பண்ணன் வாழிய!)
பாடியவர்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
பாடப்பட்டோன்: சிறுகுடி கிழான் பண்ணன்.
திணை: பாடாண்.
துறை : இயன் மொழி.
===================================

யான்வாழும் நாளும் பண்ணன் வாழிய;
பாணர் ! காண்கிவன் கடும்பினது இடும்பை;
யாணர்ப் பழுமரம் புள்இமிழ்ந் தன்ன
ஊணொலி அரவந் தானும் கேட்கும்;
பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி
முட்டை கொண்டு வற்புலம் சேரும்
சிறுநுண் எறும்பின் சில்லொழுக்கு ஏய்ப்பச்

சோறுடைக் கையர் வீறுவீறு இயங்கும்
இருங்கிளைச் சிறாஅர்க் காண்டும் கண்டும்
மற்றும் மற்றும் வினவுதும் தெற்றெனப்
பசிப்பிணி மருத்துவன் இல்லம்
அணித்தோ? சேய்த்தோ? கூறுமின் எமக்கே!

அருஞ்சொற்பொருள்:-

காண்கிவன் = காண்க இவன்
கடும்பு = சுற்றம்
இமிழ்தல் = ஒலித்தல்
புள் = பறவை
தானும் - அசைச் சொல்
எழிலி = மேகம்
வற்புலம் =வன்+புலம் = மேட்டு நிலம்
ஒழுக்கு = வரிசை
ஏய்ப்ப = ஒப்ப
வீறு = பகுப்பு
வீறு வீறு = கூட்டம் கூட்டமாக
காண்டும் = காண்கிறோம்
மற்றும் = மீண்டும்
தெற்று = தெளிவு
அணித்து = அருகில்
சேய்த்து = தொலைவில்

இதன் பொருள்:-

யான்வாழும்=====> ஏய்ப்ப

யான் வாழும் நாளையும் சேர்த்து பண்ணன் வாழ்வானாக. பாணர்களே! இந்தப் பாணனின் சுற்றத்தாரின் துன்பத்தைப் பாருங்கள். புதிது புதிதாகப் பழங்கள் பழுத்திருக்கும் மரங்களில் பறவைகள் உண்ணுவதால் உண்டாகும் ஒலி கேட்கிறோம். காலம் தவறாது மழைபெய்யும் இடத்திலிருக்கும் எறும்புகள் தம் முட்டைகளைத் தூக்கிக்கொண்டு மேட்டு நிலத்திற்கு வரிசையாகச் செல்வதைப் போல்

சோறுடை=====> எமக்கே!

கையில் சோற்றுடன் கூட்டம் கூட்டமாகப் பெரிய சுற்றத்துடன் செல்லும் சிறுவர்களைக் காண்கிறோம். அதைக் கண்ட பிறகு, மீண்டும் மீண்டும் “ பசி என்னும் பிணியைத் தீர்க்கும் மருத்துவனின் (பண்ணனின்) இல்லம் அருகில் உள்ளதோ? தொலைவில் உள்ளதோ? எங்களுக்குக் கூறுங்கள் என்று கேட்கிறோம்

பாடலின் பின்னணி:-

சோழ வேந்தனாகிய குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் சிறுகுடி கிழான் பண்ணனிடம் மிகுந்த அன்பு கொண்டவன். அவன் இயற்றிய இப்பாடல், பண்ணனிடம் பரிசில் பெறச் செல்லும் பாணனின் கூற்று போல் அமைந்துள்ளது. இப்பாடலில், பரிசில் பெறப்போகும் பாணர்கள், சிறுகுடியை அணுகிய பொழுது, பண்ணனிடம் பரிசில் பெற்று வரும் பாணர்கள் சிலரைக் காண்கின்றனர். அவர்கள் பண்ணனை வாழ்த்திக்கொண்டு வருகின்றனர். பரிசில் பெறச் சென்ற பாணர்களில் ஒருவன், “ நான் வாழும் நாளையும் சேர்த்துப் பண்ணன் வாழ்க” என்று வாழ்த்தி, “ பரிசில் பெற்ற பாணர்களே! என்னோடு உள்ள பாணனின் சுற்றம் வருந்துவதைப் பாருங்கள். பசிப்பிணி மருத்துவன் பண்ணனின் இல்லம் அருகில் உள்ளதா, தொலைவில் உள்ளாதா?” என்று வினவுகிறான்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on August 06, 2013, 12:09:57 PM
புறநானூறு, 174. (அவலம் தீரத் தோன்றினாய்!)
பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார்.
பாடப்பட்டோன்: மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன்.
திணை: வாகை.
துறை : அரசவாகை.
===================================

அணங்குடை அவுணர் கணம்கொண்டு ஒளித்தெனச்
சேண்விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது
இருள்கண் கெடுத்த பருதி ஞாலத்து
இடும்பைகொள் பருவரல் தீரக் கடுந்திறல்
அஞ்சன உருவன் தந்து நிறுத்தாங்கு
அரசுஇழந்து இருந்த அல்லற் காலை

முரசுஎழுந்து இரங்கும் முற்றமொடு கரைபொருது
இரங்குபுனல் நெரிதரு மிகுபெருங் காவிரி
மல்லல் நன்னாட்டு அல்லல் தீரப்
பொய்யா நாவிற் கபிலன் பாடிய
மையணி நெடுவரை ஆங்கண் ஒய்யெனச்
செருப்புகல் மறவர் செல்புறம் கண்ட

எள்ளறு சிறப்பின் முள்ளூர் மீமிசை
அருவழி இருந்த பெருவிறல் வளவன்
மதிமருள் வெண்குடை காட்டி அக்குடை
புதுமையின் நிறுத்த புகழ்மேம் படுந!
விடர்ப்புலி பொறித்த கோட்டைச் சுடர்ப் பூண்
சுரும்பார் கண்ணிப் பெரும்பெயர் நும்முன்

ஈண்டுச்செய் நல்வினை யாண்டுச்சென்று உணீஇயர்
உயர்ந்தோர் உலகத்துப் பெயர்ந்தனன் ஆகலின்
ஆறுகொல் மருங்கின் மாதிரம் துழவும்
கவலை நெஞ்சத்து அவலந் தீர
நீதோன் றினையே நிரைத்தார் அண்ணல்!

கல்கண் பொடியக் கானம் வெம்ப
மல்குநீர் வரைப்பில் கயம்பல உணங்கக்
கோடை நீடிய பைதறு காலை
இருநிலம் நெளிய ஈண்டி
உரும்உரறு கருவிய மழைபொழிந் தாங்கே!

அருஞ்சொற்பொருள்:-

அணங்கு = அச்சம்
அவுணர் = அசுரர்
கணம் = கூட்டம்
பருதி = வட்டம்
பருவரல் = துன்பம்
திறல் = வலிமை
அஞ்சனம் = மை
அஞ்சன உருவன் = திருமால்
மல்லல் = வளமை
மை = மேகம்
ஓய்யென = விரைவாக
செரு = போர்
புகல் = விருப்பம்
எள் = இகழ்ச்சி
விறல் = வெற்றி
மருள் = போன்ற
விடர் = மலைப்பிளவு
சுரும்பு = வண்டு
மாதிரம் = திசை
நிரை = படை வகுப்பு, ஒழுங்கு
மல்குதல் = நிறைதல், பெருகுதல்
உணங்கல் = வற்றல்
பைது = பசுமை
உரும் = இடி
உரறு = ஒலி

இதன் பொருள்:-

அணங்குடை=====> காலை

தொலைவில் ஒளியுடன் விளங்கும் சிறப்புடைய ஞாயிற்றைப் பிறர்க்கு அச்சம் தரும் அசுரர்களின் கூட்டம் ஒளித்து வைத்தது. அதனால் சூழ்ந்த இருள், வட்ட வடிவமான இந்த உலகத்தில் வாழும் மக்களின் பார்வையைக் கெடுத்துத் துன்பத்தைக் கொடுத்தது. அத்துன்பம் தீர, மிகுந்த வலிமையும் கரிய உருவமும் உடைய திருமால், கதிரவனைக் கொண்டுவந்து நிறுத்தினான். அதுபோல், ஒரு சமயம் சோழ நாடு தன் அரசனை இழந்து துன்பப்பட்டது. அதைக் கண்ட உன் முன்னோர்களுள் ஒருவன்

முரசுஎழுந்து=====> கண்ட

முரசு முழங்கும் முற்றத்தோடு, கரையை மோதி உடைத்து ஒலிக்கும் நீர் மிகுந்த காவிரி ஓடும் வளம் மிகுந்த நல்ல (சோழ)நாட்டின் துன்பதைத் தீர்க்க நினைத்து, பொய்யாத நாவுடைய கபிலரால் பாடப்பட்ட , மேகங்கள் தவழும் பெரிய மலையிடத்து விரைந்து, போரை விரும்பி வந்த பகைவர்கள் புறங்காட்டி ஓடும்

எள்ளறு=====> நும்முன்

மிகுந்த சிறப்புடைய முள்ளூர் மலையுச்சியில், காண்பதற்கரிய இடத்தில் இருந்த வலிமையுடைய சோழனின் திங்கள் போன்ற வெண்குடையைத் தோற்றுவித்து அக்குடையை புதிதாக நிலை நிறுத்தினான். அவன் புகழ் மேம்படட்டும். மலைக்குகையில் வாழும் புலியின் சின்னம் பொறித்த கோட்டையையும், ஒளிரும் அணிகலன்களையும், வண்டுகள் மொய்க்கும் மாலையையும் பெரும்புகழையும் உடைய நின் முன்னோனாகிய மலையமான் திருமுடிக்காரி

ஈண்டுச்செய்=====> அண்ணல்!

இவ்வுலகில் செய்த நல்வினைப் பயனை நுகர்வதற்காக வானவர் உலகம் அடைந்தனன். அவனுக்குப் பிறகு, எல்லாத் திசைகளிலும் கவலையுற்றவர்களின் துயரம் நீங்க நீ தோன்றினாய்.

கல்கண்=====>பொழிந் தாங்கே!

வரிசையாக மாலைகள் அணிந்த தலைவனே! நீ தோன்றியது, மலைகள் பொடிபடவும், காடுகள் தீப்பற்றவும், மிகுந்த நீர் வளமுடைய குளங்கள் வற்றவும், கோடைக்காலம் நீண்டு பசுமையற்ற காலத்துப் பெரிய நிலம் தாங்காமல் வாடிய பொழுது, மேகங்கள் திரண்டு இடியுடன் மழைபொழிந்தது போல் இருந்தது.

பாடலின் பின்னணி:-

மலையமான் திருமுடிக்காரி இறந்த பிறகு, அவன் குடி மக்கள் வருந்திய பொழுது, மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன் பதவி ஏற்றான். அச்சமயம், மாறோக்கத்து நப்பசலையார் அவனைக் காண வந்தார். அவன் காரிக்குப் பிறகு அரசனாகி, நல்லாட்சி புரிவதை இப்பாடலில் புகழ்ந்து பாடுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on August 10, 2013, 01:55:49 PM
புறநானூறு, 175. (என் நெஞ்சில் நினைக் காண்பார்!)
பாடியவர்: கள்ளில் ஆத்திரையனார்.
பாடப்பட்டோன்: ஆதனுங்கன்.
திணை: பாடாண்.
துறை : இயன் மொழி.
===================================


எந்தை வாழி ஆத னுங்கஎன்
நெஞ்சம் திறப்போர் நிற்காண் குவரே;
நின்யான் மறப்பின் மறக்குங் காலை
என்உயிர் யாக்கையிற் பிரியும் பொழுதும்
என்யான் மறப்பின் மறக்குவென் வென்வேல்

விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர்
திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த
உலக இடைகழி அறைவாய் நிலைஇய
மலர்வாய் மண்டிலத் தன்ன நாளும்
பலர்புரவு எதிர்ந்த அறத்துறை நின்னே

அருஞ்சொற்பொருள்:-

எந்தை = எம்+தந்தை
மோரியர் = மௌரியர்
திண் = வலி
கதிர் = ஆரக்கால்
திகிரி = ஆட்சிச் சக்கரம்
திரிதர = இயங்குவதற்கு
குறைத்தல் = சுருங்குதல்
அறைவாய் = மலையை வெட்டி எடுக்கப்பட்ட இடம்
இடைகழி = வாயிலைச் சேர்ந்த உள்நடை (இரேழி)
மலர்தல் = விரிதல்
வாய் = இடம்
மண்டிலம் = வட்டம்
புரவு = பாதுகாப்பு
எதிர்ந்து = ஏற்றுக்கொண்டு

இதன் பொருள்:-

என் தந்தை போன்ற ஆதனுங்கனே! நீ வாழ்க. வெல்லும் வேலையும் விண்ணைத் தொடும் உயர்ந்த குடையையும், கொடி பறக்கும் தேரையும் உடைய மௌரியரின் வலிமை மிகுந்த ஆணைச் சக்கரம் இயங்குதற்கு அறுக்கப்பட்ட இடைகழி முடிவில் நிறுத்தப்பட்ட பரந்த கதிர் மண்டிலம் போல் நாளும் பலரையும் பாதுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு அறவழியில் நிற்கும் உன்னை நான் மறந்தால், அப்பொழுது, என் உயிர் என் உடலிலிருந்து நீங்கும்; மற்றும் என்னையே நான் மறப்பேன். என் நெஞ்சத்தைத் திறப்போர் அங்கே உன்னைக் காண்பர்.

பாடலின் பின்னணி:-

இப்பாடலில் ஆத்திரையனார் தனக்கு ஆதனுங்கன் மீதுள்ள அன்பைக் கூறுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

மௌரிய வம்சத்தைச் சார்ந்த பிந்துசாரா ( அசோகனின் தந்தை, சந்திரகுப்தனின் மகன்) என்ற மன்னன் கி. மு. 288 -இல் தமிழ் நாட்டின் மீது படையெடுத்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். இப்பாடலில், மௌரியர்கள் தமிழ் நாட்டின் மீது படையெடுத்த பொழுது மலையை வெட்டி வழி அமைத்ததாகக் குறிப்பிடப்படுவது பிந்துசாரனின் படையெடுப்பைப் பற்றிய செய்தியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. மற்றும், தமிழ் மன்னர்கள் ஒருங்கிணைந்து பிந்துசாரனின் படையெடுப்பைத் தடுத்து நிறுத்தினர் என்றும் வரலாறு கூறுகிறது. இப்பாடலில் பிந்துசாரனின் படையெடுப்பைக் கூறுவதை ஆதாரமாகக் கொண்டு ஆதனுங்கன் பிந்துசாரனின் காலத்தில் வாழ்ந்தவன் என்று கூற முடியாது. இப்பாடலில் குறிப்படப்பட்டிருப்பது ஒரு வரலாற்றுச் செய்தி என்றுதான் முடிவு செய்ய வேண்டும்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on August 10, 2013, 02:00:12 PM
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-frc3/988285_643177015707213_1993586019_n.jpg)

புறநானூறு, 176. (காணா வழிநாட்கு இரங்கும் என் நெஞ்சம்)
பாடியவர்: புறத்திணை நன்னாகனார்.
பாடப்பட்டோன்: ஓய்மான் நல்லியக் கோடன்.
திணை: பாடாண்.
துறை : இயன் மொழி.
===================================


ஓரை ஆயத்து ஒண்தொடி மகளிர்
கேழல் உழுத இருஞ்சேறு கிளைப்பின்
யாமை ஈன்ற புலவுநாறு முட்டையைத்
தேன்நாறு ஆம்பல் கிழங்கொடு பெறூஉம்
இழுமென ஒலிக்கும் புனலம் புதவின்
பெருமா விலங்கைத் தலைவன் சீறியாழ்

இல்லோர் சொன்மலை நல்லியக் கோடனை
உடையை வாழியெற் புணர்ந்த பாலே!
பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்
ஓரூர் உண்மையின் இகழ்ந்தோர் போலக்
காணாது கழிந்த வைகல் காணா
வழிநாட்கு இரங்குமென் நெஞ்சமவன்
கழிமென் சாயல் காண்தொறும் நினைந்தே

அருஞ்சொற்பொருள்:-

ஓரை = மகளிர் விளைட்டுகளில் ஒன்று
ஆயம் = கூட்டம்
கேழல் = பன்றி
இரு = கரிய
கிளைப்பு = கிண்டுகை
புனல் = நீர்
அம் - இடைச் சொல்
புதவு = மதகு
மலைத்தல் = சூடுதல்
பால் = ஊழ்
வைகல் = நாள்
கழி = மிகுதி

இதன் பொருள்:-

ஓரை=====> சீறியாழ்

ஒளிபொருந்திய வளையல்களை அணிந்து, ஓரை விளையாடும் மகளிர், பன்றிகள் கிளரிய கரிய சேற்றில், ஆமைகள் இட்ட புலால் மணக்கும் முட்டைகளையும், தேன் மணக்கும் ஆம்பல் கிழங்குகளையும் கிண்டி எடுப்பர். இழும் என்ற ஒலியுடன் மதகுகளின் வழியே நீரோடும் பெரிய மாவிலங்கை என்னும் ஊர்க்குத் தலைவன் நல்லியக் கோடன். அவன் சிறிய யாழையுடைய

இல்லோர்=====> நினைந்தே

வறியவர்கள் பாடும் புகழ்மாலைகளை அணிந்தவன். அத்தகைய நல்லியக் கோடனைத் துணையாக நான் பெற்றதற்குக் காரணம் என்னைச் சார்ந்த நல்வினைதான். வாழ்க என் நல்வினை! பாரியின் பறம்பு நாட்டில் குளிர்ந்த நீர்ச் சுனைகளில் தெளிந்த நீர் எப்பொழுதும் அருகேயே இருந்ததால் அந்நாட்டு மக்கள் அதைப் பெரிதாகக் கருதவில்லை. அதுபோல், அருகிலேயே இருந்தும், இதுவரை பல நாட்கள் நான் நல்லியக் கோடனைக் காணாது கழித்தேன். ஆனால் நல்லியக் கோடனின் மிகுந்த நற்குணங்களைக் காணும்பொழுது, இனிவரும் நாட்களில் அவனைக் காணாத நாட்கள் இருக்குமோ என்று நினைத்து என் நெஞ்சம் வருந்துகிறது.

பாடலின் பின்னணி:-

வேங்கடத்தின் அருகில் இருந்த கரும்பனூர் சென்று, கரும்பனூர் கிழானைப் பாடி, அவனிடம் மிகுந்த அளவில் பரிசுகள் பெற்றுப் பல நாட்கள் யாரிடமும் இரவாது தம் இல்லத்தே நன்னாகனார் இனிது வாழ்ந்துவந்தார். அவர், தற்பொழுது தன்னிடம் வந்ததைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்த நல்லியக் கோடன் அவருக்குப் பெருமளவில் பரிசுகள் அளித்து அவரைச் சிறப்பித்தான். அதனால் பெரு வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்த நன்னாகனார், இப்பாடலில் நல்லியக் கோடனைப் புகழ்ந்து பாடுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on August 10, 2013, 02:03:21 PM
(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-ash3/20498_643622048996043_978600470_n.jpg)

புறநானூறு, 177. (யானையும் பனங்குடையும்!)
பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்.
பாடப்பட்டோன்: மல்லி கிழான் காரியாதி.
திணை: பாடாண்.
துறை : இயன் மொழி.
===================================


ஒளிறுவாள் மன்னர் ஒண்சுடர் நெடுநகர்
வெளிறுகண் போகப் பன்னாள் திரங்கிப்
பாடிப் பெற்ற பொன்னணி யானை
தமர்எனின் யாவரும் புகுப; அமர்எனின்
திங்களும் நுழையா எந்திரப் படுபுழைக்
கண்மாறு நீட்ட நணிநணி இருந்த

குறும்பல் குறும்பின் ததும்ப வைகிப்
புளிச்சுவை வேட்ட செங்கண் ஆடவர்
தீம்புளிக் களாவொடு துடரி முனையின்
மட்டுஅறல் நல்யாற்று எக்கர் ஏறிக்
கருங்கனி நாவல் இருந்துகொய்து உண்ணும்
பெரும்பெயர் ஆதி பிணங்கரில் குடநாட்டு

எயினர் தந்த எய்ம்மான் எறிதசைப்
பைஞ்ஞிணம் பெருத்த பசுவெள் அமலை
வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய
இரும்பனங் குடையின் மிசையும்
பெரும்புலர் வைகறைச் சீர்சா லாதே

அருஞ்சொற்பொருள்:-

நகர் = அரண்மனை
வெளிறு = நிறக்கேடு
திரங்குதல் = உலர்தல்
புழை = சிறு வாயில்
நணிநணி = பக்கம் பக்கமாக
குறும்பு = அரணிருக்கை
வைகுதல் = தங்குதல்
களா = ஒரு வகைப் பழம்
துடரி = ஒரு வகைப் பழம்
முனை = வெறுப்பு
மட்டு =எல்லை
அறல் =அரித்தோடுகை
எக்கர் = மணற்குன்று
பிணக்கு = நெருக்கம்
அரில் = மூங்கில்
எயினர் = வேடுவர்
எய்ம்மான் = முள்ளம்பன்றி
எறிதல் = அறுத்தல்
பைஞ்ஞிணம் = வளமான தசை
அமலை = திரளை (உருண்டை)
சொரிதல் = பொழிதல், உதிர்தல்
பனங்குடை = பனை இலைகளால் செய்யப்பட்ட கிண்ணம் போன்ற பாத்திரம் (பனங்கூடை)
மிசையும் = உண்ணும்
சாலுதல் = ஒப்பாதல்

இதன் பொருள்:-

ஒளிறுவாள்=====> இருந்த

ஒளிபொருந்திய வாளையுடைய வேந்தர்கள் வாழும் ஒளியுடன் விளங்கும் பெரிய அரண்மனைகளுக்குச் சென்று, கண் ஒளி மழுங்குமாறு பலநாட்கள் வாடிக் காத்திருந்து பொன்னாலான அணிகலன்களை அணிந்த யானைகளைப் பரிசாகப் பெறலாம். அது வேந்தர்களிடம் பரிசு பெறும் முறை. ஆனால் மல்லி கிழான் காரியாதியிடம் பரிசு பெறுவாது அவ்வாறல்ல. மல்லி கிழான் காரியாதியின் அரண்மனைக்குள் அவனுக்கு வேண்டியவர்கள் எளிதில் புகலாம். ஆனால், போர் எனில், அந்த அரண்மனையில், திங்களின் கதிர்கள்கூட நுழைய முடியாதவாறு பல பொறிகள் பொருத்தப்பட்டுள்ளன. அங்கே, கள்ளை ஒருவருக்கொருவர் மாறி மாறிக் கொடுக்கும்

குறும்பல்=====> குடநாட்டு

வகையில் நெருங்கிய பாதுகாப்பான பல இடங்கள் உள்ளன. அங்கு, கள்ளை நிரம்ப உண்டு, பிறகு, புளிச்சுவையை விரும்பிய, சிவந்த கண்களை உடைய ஆடவர் இனிய புளிப்புடைய களாப் பழங்களையும் துடரிப் பழங்களையும் உண்பர். அப்பழங்களைத் தின்று சலிப்பு ஏற்பட்டால், காட்டாற்றின் கரையில் மரங்கள் உள்ள மணற்குன்றில் ஏறிக் கரிய நாவல் பழங்களைப் பறித்து உண்பர். பெரும்புகழ் வாய்ந்த காரியாதியின் மூங்கில் காடுகள் செறிந்த குடநாட்டில்,

எயினர்=====> லாதே

வேடர்கள் வேட்டையாடிக் கொண்டுவந்த முள்ளம்பன்றியின் கொழுமையான தசைத்துண்டுகளுடன் வெண் சோற்று உருண்டைகளை விருந்தாக வருபவர்க்கெல்லாம் காரியாதி கொடுப்பான். அவர்கள் அதைப் பெரிய பனங்குடையில் வாங்கி உண்பர். இவ்வாறு, மல்லி கிழான் காரியாதியின் அரண்மனையில், பொழுது புலரும் விடியற்காலை நேரத்தில் நடைபெறும் விருந்தின் சிறப்புக்கு வேந்தர்களின் யானைக்கொடை ஒப்பாகாது.

பாடலின் பின்னணி:-

ஒரு சமயம் ஆவூர் மூலங்கிழார், மல்லி கிழான் காரியாதியைக் காணச் சென்றார். மல்லி கிழான் தந்த கள்ளை, அவ்வூரில் பல அரண்களிலிருந்து ஆடவர் பலரும் குடித்து, களா, துடரி போன்ற பழங்களை உண்பதையும், பின்னர் காட்டாற்று மணற்குன்றின் மீது ஏறி நின்று நாவல் பழங்களைக் கொய்து தின்பதையும், பன்றிக் கறி உண்பதையும் கண்டார். அக்காட்சிகளைக் கண்ட ஆவூர் மூலங்கிழார், காரியாதி சோற்றையும் கள்ளையும் பலருக்கும் அளிப்பது மற்ற வேந்தர்கள் களிறுகளைப் பரிசாக அளிப்பதைவிட மிகச் சிறந்தது என்று இப்பாடலில் காரியாதியின் விருந்தோம்பலையும் வள்ளல் தன்மையையும் புகழ்ந்து பாடுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on August 10, 2013, 02:05:35 PM
புறநானூறு, 178. (இன்சாயலன் ஏமமாவான்!)
பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் கீரஞ்சாத்தன்.
திணை: வாகை.
துறை : வல்லாண் முல்லை.
===================================


கந்துமுனிந்து உயிர்க்கும் யானையொடு பணைமுனிந்து
கால்இயற் புரவி ஆலும் ஆங்கண்
மணல்மலி முற்றம் புக்க சான்றோர்
உண்ணார் ஆயினும் தன்னொடு சூளுற்று
உண்மென இரக்கும் பெரும்பெயர்ச் சாத்தன்

ஈண்டோ இன்சா யலனே ; வேண்டார்
எறிபடை மயங்கிய வெருவரு ஞாட்பின்
கள்ளுடைக் கலத்தர் உள்ளூர்க் கூறிய
நெடுமொழி மறந்த சிறுபே ராளர்
அஞ்சி நீங்கும் காலை
ஏம மாகத் தான்முந் துறுமே

அருஞ்சொற்பொருள்:-

கந்து = யானை கட்டும் தூண்; முனிதல் = வெறுத்தல்; உயிர்த்தல் = மூச்சு விடுதல்; பணை = குதிரை கட்டுமிடம். 2. காலியல் = கால்+இயல் = காற்றின் இயல்பு; புரவி = குதிரை; ஆலும் = ஒலிக்கும். 4. சூளுற்று = உறுதி மொழி கூறி. 6. ஈண்டு = இவ்விடத்தில். 7. ஞாட்பு = போர். 9. நெடுமொழி = வஞ்சினம்; சிறுபேராளர் = வீரம் மேம்பட்ட வார்த்தைகளைப் போரின்கண் மறந்த ஆண்மையற்றவர். 11. ஏமம் = பாதுகாப்பு

இதன் பொருள்:-

கந்துமுனிந்து=====> சாத்தன்

தூணில் கட்டப்பட்ட யானைகள் வெறுப்போடு பெருமூச்சு விடுகின்றன; அதுமட்டுமல்லாமல், காற்றைப்போல் விரைந்து செல்லும் குதிரைகள், கட்டப்பட்டுள்ள இடத்தில் இருந்து ஆரவாரிக்கின்றன; அவ்விடத்தில் மணல் மிகுந்த முற்றத்தில் நுழைந்த சான்றோர்கள் தாம் உண்ணமாட்டோம் என்று சொன்னாலும் அவர்களை வற்புறுத்தி உண்ணுமாறு பெரும்புகழ் வாய்ந்த பாண்டியன் கீரஞ்சாத்தன் வேண்டிக்கொள்வான்.

ஈண்டோ=====> முந்துறுமே

அவன் சான்றோர்களிடத்து மிகவும் இனிமையாகப் பழகுபவன். ஆனால், அச்சம் தரும் படைக்கலங்களைப் பகைவர்கள் எறியும் போர்க்களத்தில், பாண்டியன் கீரஞ்சாத்தனுடைய வீரர்கள், கள்ளின் மயக்கத்தால், ஊர் மக்களிடம் அவர்கள் கூறிய வீர வஞ்சின மொழிகளை மறந்து வீரமற்றவர்களாகப் புறங்காட்டி ஓடினால், அவன் அவர்களுக்குப் பாதுகாப்பாக முன் வந்து நிற்பான்.

பாடலின் பின்னணி:-

பாண்டியன் கீரஞ்சாத்தனை ஆவூர் மூலங்கிழார் காணச் சென்றார். அவன் சான்றோர்பால் காட்டிய அன்பு அவரை மிகவும் கவர்ந்தது. இப்பாடலில், பாண்டியன் கீரஞ்சாத்தன் சான்றோரிடத்துக் காட்டும் அன்பையும் அவன் போரில் காட்டும் வீரத்தையும் ஆவூர் மூலங்கிழார் புகழ்ந்து பாடுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on August 10, 2013, 02:10:44 PM
புறநானூறு, 179. (பருந்தின் பசி தீர்ப்பான்!)
பாடியவர்: வடநெடுந்தத்தனார்.
பாடப்பட்டோன்: நாலை கிழவன் நாகன்.
திணை: வாகை.
துறை : வல்லாண் முல்லை.
===================================


ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந்தென
ஏலாது கவிழ்ந்தஎன் இரவல் மண்டை
மலர்ப்போர் யார்என வினவலின் மலைந்தோர்
விசிபிணி முரசமொடு மண்பல தந்த
திருவீழ் நுண்பூண் பாண்டியன் மறவன்
படை வேண்டுவழி வாள்உதவியும்

வினை வேண்டுவழி அறிவுஉதவியும்
வேண்டுப வேண்டுப வேந்தன் தேஎத்து
அசைநுகம் படாஅ ஆண்தகை உள்ளத்துத்
தோலா நல்லிசை நாலை கிழவன்
பருந்துபசி தீர்க்கும் நற்போர்த்
திருந்துவேல் நாகற் கூறினர் பலரே

அருஞ்சொற்பொருள்:-

ஞாலம் = உலகம்
மீமிசை = மேல்
வள்ளியோர் = கொடையாளர்
ஏலல் = பிச்சையிடல்
மண்டை = இரப்போர் கலம்
மலைத்தல் = போரிடுதல்
விசி = வார், கட்டு
பிணி = கட்டு
திரு = திருமகள்
வீழ்தல் = விரும்புதல்
மறவன் = வீரன்
வினை = தந்திரம்
தோலா = தளராத

இதன் பொருள்:-

ஞாலம்=====> வாள்உதவியும்

”உலகில் வாழ்ந்த வள்ளல்கள் எல்லாம் இறந்தனர்; பிறரிடம் எதுவும் பெற முடியாத காரணத்தால் கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும் என் இரவல் கலத்தை நிரப்புபவர் யார்?”, என்று கேட்டேன். ”பாண்டியன், தனது பகைவர்களின் வலிமையாகக் கட்டப்பட்ட முரசோடு அவர்களது நாட்டையும் வென்று, திருமகள் விரும்பும், அழகிய அணிகலன்களை அணிந்தவன். அத்தகைய பாண்டியனின் வீரனாகிய நாலை கிழவன் நாகன், பாண்டியனுக்குப் படை வேண்டிய பொழுது வாட்படையையும்,

வினை=====> பலரே

அவன் அறிவுரை கேட்ட பொழுது அறிவுரைகளையும் வழங்குபவன். அவன், பாண்டியன் வேண்டுவன எல்லாம் வேண்டியவாறு கொடுத்து உதவுபவன். நுகத்தடியில் பூட்டப்பட்ட வண்டியை நேராக இழுத்துச் செல்லும் தளராத காளை போன்ற ஆண்மையும், சளைக்காத உள்ளமும், நல்ல புகழும் உடைய நாலை கிழவன் நாகன் பருந்துகளின் பசியைத் தீர்க்கும் நல்ல வேலை உடையவன்” என்று பலரும் கூறினர்.

பாடலின் பின்னணி:-

நாலை கிழாவன் நாகனைப் பற்றிப் பலரும் கூறிய செய்திகளை இப்பாடலில் கூறி அவனை வட நெடுந்தத்தனார் புகழ்ந்து பாடுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

பருந்துகளின் பசியைத் தீர்க்கும் நல்ல வேலை உடையவன் என்பது அவன் போரில் பகைவரைக் கொல்லும் ஆற்றல் உடையவன் என்பதைக் குறிக்கிறது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on August 27, 2013, 06:02:57 PM
புறநானூறு, 180. (நீயும் வம்மோ! முதுவாய் இரவல!)
பாடியவர்: கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார்.
பாடப்பட்டோன்: ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்.
திணை: வாகை.
துறை : வல்லாண் முல்லை.
===================================

நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே;
இல்லென மறுக்கும் சிறுமையும் இலனே;
இறையுறு விழுமம் தாங்கி அமர்அகத்து
இரும்புசுவைக் கொண்ட விழுப்புண் நோய்தீர்ந்து
மருந்துகொள் மரத்தின் வாள்வடு மயங்கி
வடுவின்றி வடிந்த யாக்கையன் கொடையெதிர்ந்து

ஈர்ந்தை யோனே பாண்பசிப் பகைஞன்
இன்மை தீர வேண்டின் எம்மொடு
நீயும் வம்மோ! முதுவாய் இரவல!
யாம்தன் இரக்கும் காலைத் தான்எம்
உண்ணா மருங்குல் காட்டித் தன்ஊர்க்
கருங்கைக் கொல்லனை இரக்கும்
திருந்திலை நெடுவேல் வடித்திசின் எனவே

அருஞ்சொற்பொருள்:-

நிரப்பு = வறுமை (இன்மை)
இறை = அரசன்
விழுமம் = துன்பம்
மயங்கி = கலந்து
வடு = குற்றம்
வடிவு = அழகு
மருங்குல் = வயிறு

இதன் பொருள்:-

நிரப்பாது=====> கொடையெதிர்ந்து

முதிய இரவலனே! ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன் இரப்பவர்களின் வறுமையைத் தீர்க்கும் அளவிற்குக் கொடுக்கும் செல்வம் உடையவன் அல்லன்; ஆனாலும், இல்லையென்று மறுத்துக் கூறும் சிறுமை இல்லாதவன். அவன், தன் அரசனுக்கு வந்த துன்பங்களைத் தான் தாங்கிக்கொண்டு, போர்க்களத்தில் படைக்கருவிகளால் உண்டாகும் விழுப்புண்களை ஏற்றுக் கொண்டவன். மருந்துக்காக பல இடங்களில் வெட்டப்பட்ட அடிமரம்போல் உடலெல்லாம் வடுக்கள் நிறைந்திருந்தாலும் அவன் குற்றமற்ற அழகிய உடலுடையவன்; இரவலரை எதிர்பார்த்திருப்பவன்

ஈர்ந்தை=====> எனவே

ஈர்ந்தூர் என்னும் ஊரைச் சார்ந்தவன்; பாணர்களின் பசிக்குப் பகைவன். உன்னுடைய வறுமை தீர வேண்டுமானால், நீ என்னோடு வருவாயாக. நாம் இரக்கும் பொழுது, நம்முடைய பசியால் வாடும் வயிற்றைத் தன் ஊரில் உள்ள வலிய கைகளுடைய கொல்லனிடம் காட்டிச் சிறந்த இலைவடிவில் அமைந்த நெடிய வேலை வடிப்பாயாக என்று கூறுவான்.

பாடலின் பின்னணி:-

இப்பாடல், ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறனிடம் பரிசில் பெற்ற பாணன் ஒருவன் பசியால் வாடும் பாணன் ஒருவனை ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ளது.

சிறப்புக் குறிப்பு:-

கொல்லனிடம் வேல் வடிப்பாயாக என்று கூறுவது, பகைவர்களோடு போருக்குச் சென்று, அவர்களை வென்று, பொருள் கொண்டுவந்து இரப்போர்க்கு அளிப்பதற்காக என்ற பொருளில் கூறப்பட்டிருக்கிறது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on August 27, 2013, 06:05:26 PM
புறநானூறு, 181. (இன்னே சென்மதி!)
பாடியவர்: சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந் தும்பியார்.
பாடப்பட்டோன்: வல்லார் கிழான் பண்ணன்.
திணை: வாகை.
துறை : வல்லாண் முல்லை.
===================================

மன்ற விளவின் மனைவீழ் வெள்ளில்
கருங்கண் எயிற்றி காதல் மகனொடு
கான இரும்பிடிக் கன்றுதலைக் கொள்ளும்
பெருங்குறும்பு உடுத்த வன்புல இருக்கைப்
புலாஅ அம்பில் போர்அருங் கடிமிளை

வலாஅ ரோனே வாய்வாள் பண்ணன்
உண்ணா வறுங்கடும்பு உய்தல் வேண்டின்
இன்னே சென்மதி நீயே சென்றுஅவன்
பகைப்புலம் படரா அளவைநின்
பசிப்பகைப் பரிசில் காட்டினை கொளற்கே

அருஞ்சொற்பொருள்:-

மன்றம் = ஊர் நடுவில் உள்ள பொதுவிடம்
விளவு = விளாமரம்
வெள்ளில் = விளாம்பழம்
எயிற்றி = வேடர் குலப் பெண்
இரு = கரிய
பிடி = பெண் யானை
குறும்பு = அரண்
உடுத்த = சூழ்ந்த
இருக்கை = இருப்பிடம்
கடி = காவல்
மிளை = காடு
வலார் = ஒருஊரின் பெயர்(வல்லார் என்பதின் திரிபு)
வாய் = சிறந்த
கடும்பு = சுற்றம்
இன்னே = இப்பொழுதே

இதன் பொருள்:-

மன்ற=====>கடிமிளை

ஊர்ப்பொதுவிடத்தில் உள்ள விளாமரத்திலிருந்த விளாம்பழம் அங்கிருந்த வீட்டின் முற்றத்தில் விழுந்தவுடன், கரிய கண்ணையுடைய மறக்குலப் பெண் ஒருத்தியின் அன்பிற்குரிய மகன் அதை எடுப்பதற்குச் செல்வான். காட்டில் வாழும் கரிய பெண்யானையின் கன்றும் அவனோடு அந்தப் பழத்தை எடுப்பதற்குச் செல்லும். இத்தகைய வளமான வல்லார் என்னும் ஊர்,

வலாஅ=====> கொளற்கே

புலால் நாற்றமுள்ள அம்புகளையும், போர் செய்வதற்கு அரிய பாதுகாப்பான காவற் காடுகளையுமுடைய, பெரிய அரண்கள் சூழ்ந்த வலிய நிலத்தின் இருப்பிடம். அங்கே, சிறந்த (குறி தவறாத) வாளையுடைய பண்ணன் வாழ்கிறான். பசியுடன் வாடும் வறுமையுற்ற உன் சுற்றம் பிழைக்க வேண்டுமானால், இப்பொழுதே சென்று, அவன் போருக்குப் போவதற்கு முன் உன் வறுமையைக் காட்டி, உங்கள் பசிக்குப் பகையாகிய (பசியைப் போக்கும்) பரிசிலைப் பெற்றுக் கொள்வாயாக.

பாடலின் பின்னணி:-

வறுமையில் வாடும் பாணன் ஒருவனை சிறுகருந்தும்பியார் வல்லார் கிழான் பண்ணனிடத்து ஆற்றுப்படுத்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on August 27, 2013, 06:07:08 PM
(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-prn1/935937_645501205474794_1532383017_n.jpg)

புறநானூறு, 182. (உண்டாலம்ம இவ்வுலகம்!)
பாடியவர்: கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: பொதுவியல்.
துறை : பொருண்மொழிக் காஞ்சி. உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல்.
=====================================

உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்;
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ்எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;
அன்ன மாட்சி அனைய ராகித்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே

அருஞ்சொற்பொருள்:-

தமியர் = தனித்தவர்
முனிதல் = வெறுத்தல்
துஞ்சல் = சோம்பல்
அயர்வு = சோர்வு
மாட்சி = பெருமை
நோன்மை = வலிமை
தாள் = முயற்சி

இதன் பொருள்:-

இந்திரனுக்குரிய அமிழ்தம் கிடைத்தாலும், அது இனிமையானது என்று தனித்து உண்ண மாட்டர்கள்; யாரையும் வெறுக்க மாட்டார்கள்; சோம்பலின்றிச் செயல்படுவார்கள்; பிறர் அஞ்சுவதற்குத் தாமும் அஞ்சுவார்கள்; புகழ்வரும் என்றால் தம் உயிரையே வேண்டுமானாலும் கொடுப்பர்; பழிவரும் என்றால் உலகம் முழுவதும் கிடைப்பதானாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்; மனம் தளர மாட்டார்கள். இத்தகைய சிறப்புடையவர்களாகித் தமக்காக உழைக்காமல், பிறர்க்காக வலிய முயற்சியுடன் உழைப்பவர்கள் இருப்பதால்தான் இவ்வுலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது.

பாடலின் பின்னணி:-

இப்பாடலில், கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி, மனித நேயத்தொடு “தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர்” உள்ளதால்தான் இவ்வுலகம் நிலைபெற்று இயங்கிக் கொண்டிருக்கிறது என்ற உயர்ந்த கருத்தைக் கூறுகிறான். இவன் பாண்டிய மன்னர் குலத்தைச் சார்ந்தவன். சங்க காலத்துத் தமிழ் மன்னர்கள், தங்கள் கடற்படையைக் கொண்டு கடாரம், சாவகம், ஈழம் போற நாடுகளுக்குச் சென்று போர்புரிந்து வெற்றி பெற்றவர்கள். அவர்களின் கடற்படை போருக்குச் செல்லும் பொழுது மன்னர்களும் தம் கடற்படையோடு செல்வது வழக்கம். அவ்வாறு கடற்படையோடு இளம்பெருவழுதி சென்ற பொழுது, அவன் சென்ற கப்பல் கவிழ்ந்ததால் அவன் கடலில் மூழ்கி இறந்தான். ஆகவே, “கடலுள் மாய்ந்த” என்ற அடைமொழி அவன் பெயரோடு சேர்க்கப்பட்டுள்ளது.

சிறப்புக் குறிப்பு:-

திருக்குறளில் பல அதிகாரங்களில் விளக்கமாகக் கூறப்பட்டிருக்கும் கருத்துகள் இப்பாடலில் சுருக்கமாகக் கூறப்படிருக்கின்றன. குறிப்பாக, விருந்தோம்மபல், அன்புடைமை, வெகுளாமை, அறிவுடைமை, மடியின்மை, தீவினையச்சம், ஊக்கமுடைமை, புகழ், ஈகை, ஒப்புரவு, பண்புடைமை ஆகிய அதிகாரங்களின் மையக்கருத்துகளை இப்பாடலில் காணலாம். கீழே கொடுக்கபட்டுள்ள நான்கு குறட்பாக்களின் கருத்துகளுக்கும் இப்பாடலில் குறிப்பிடப்பட்டிருக்கும் கருத்துகளுக்கும் மிகுந்த ஒற்றுமை இருப்பதைக் காண்க.

"விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று" (குறள் - 82)

பொருள்:-

விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவா மருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தது அன்று.

"அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்" (குறள் - 428)

பொருள்:-

அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும்; அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.

"பண்புடையார் பட்டுண்டு உலகம்; அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்" (குறள் - 996)

பொருள்:-

பண்புடையவர்கள் பொருந்தி இருத்தலால் இவ்வுலகம் உளதாயிருக்கின்றது; அவர்கள் இல்லையேல் அது மண்ணினுள்ளே புதைந்து மறைந்து போகும்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on August 27, 2013, 06:08:21 PM
புறநானூறு, 183. (கற்றல் நன்றே!)
பாடியவர்: ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: பொதுவியல்.
துறை : பொருண்மொழிக் காஞ்சி.
=====================================

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே;
பிறப்போ ரன்ன உடன்வயிற்று உள்ளும்
சிறப்பின் பாலால் தாயும்மனம் திரியும்
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்

மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடை யோன்ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே

அருஞ்சொற்பொருள்:-

உழி = இடம்
உற்றுழி = உற்ற இடத்து
உறு = மிக்க
பிற்றை = பிறகு
பிற்றை நிலை = வழிபாட்டு நிலை
முனியாது = வெறுப்பில்லாமல்

இதன் பொருள்:-

உற்றுழி=====> பல்லோ ருள்ளும்

தமக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்க்குத் தேவைப்படும் பொழுது உதவி செய்தும், மிகுந்த அளவு பொருள் கொடுத்தும், ஆசிரியரிடம் பணிவோடு, வெறுப்பின்றி கல்வி கற்றல் நன்று. ஒரே தாயின் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுள், அவர்களின் கல்விச் சிறப்புக்கேற்ப தாயின் மனநிலையும் மாறுபடும். ஒரே குடும்பத்தில் பிறந்த பலருள்ளும்

மூத்தோன்=====> கண் படுமே

“மூத்தவன் வருக” என்று கூறாமல் அறிவுடையவனையே அரசனும் தேடிச் செல்வான். வேறுபட்ட நான்கு குலத்தாருள்ளும் (பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று வருணாசிரமம் கூறும் நான்கு குலத்தினருள்ளும்) கீழ்க்குலத்தில் உள்ள ஒருவன் கல்வி கற்றவனாக இருந்தால், மேற்குலத்தில் உள்ள ஒருவன் அவனிடம் (கல்வி கற்கச்) செல்வான்.

பாடலின் பின்னணி:-

இப்பாடலில், பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் கல்வியின் சிறப்பை மிக அழகாக வலியுறுத்துகிறான்.

சிறப்புக் குறிப்பு:-

வருணாசிரம தருமம் சங்ககாலத்திலேயே வேரூன்றத் தொடங்கிவிட்டது என்பதற்கு இப்பாடல் ஒருசான்று.

இப்பாடலில், ஆசிரியரிடம் பணிவோடு கல்வி கற்க வேண்டும் என்று பாண்டியன் நெடுஞ்செழியன் கூறுவதைப் போல் திருவள்ளுவர், ”செல்வந்தரிடம் உதவி கோரும் எளியவர் பணிந்து நிற்பது போல் ஆசிரியரிடம் பணிந்து நின்று கல்வி கற்பவரே சிறந்தவர்; அவ்வாறு கல்லாதவர் இழிந்தவர்” என்ற கருத்தை கல்வி என்ற அதிகாரத்தில் குறிப்பிடுகிறார்.

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லா தவர். (குறள் - 395)
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on August 27, 2013, 06:09:34 PM
புறநானூறு, 184. (யானை புக்க புலம்!)
பாடியவர்: பிசிராந்தையார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் அறிவுடை நம்பி.
திணை: பாடாண்.
துறை : செவியறிவுறூஉ.
=====================================

காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே
மாநிறைவு இல்லதும் பன்னாட்கு ஆகும்;
நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே
வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே

கோடி யாத்து நாடுபெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்
யானை புக்க புலம்போலத்
தானும் உண்ணான் உலகமும் கெடுமே

அருஞ்சொற்பொருள்:-

காய் நெல் = விளைந்த நெல்
மா = ஒருநில அளவு (ஒருஏகரில் மூன்றில் ஒருபங்கு)
செறு = வயல்
தமித்து = தனித்து
புக்கு = புகுந்து
யாத்து = சேர்த்து
நந்தும் = தழைக்கும்
வரிசை = முறைமை
கல் - ஒலிக்குறிப்பு
பரிவு = அன்பு
தப = கெட
பிண்டம் = வரி
நச்சின் = விரும்பினால்

இதன் பொருள்:-

காய்நெல்=====> கொளினே

விளைந்த நெல்லை அறுத்து உணவுக் கவளங்களாக்கி யானைக்குக் கொடுத்தால், ஒருமா அளவுகூட இல்லாத நிலத்தில் விளைந்த நெல்கூட பல நாட்களுக்கு யானைக்கு உணவாகும். ஆனால், நூறு வயல்கள் இருந்தாலும், யானை தானே புகுந்து உண்ண ஆரம்பித்தால் , யானை தின்பதைவிட யானையின் கால்களால் மிதிபட்டு அழிந்த நெல்லின் அளவு அதிகமாகும். அறிவுடைய அரசன் வரி திரட்டும் முறை தெரிந்து மக்களிடமிருந்து வரி திரட்டினால்

கோடி=====> கெடுமே

நாடு கோடிக் கணக்கில் பொருள்களைப் பெற்றுத் தழைக்கும். அரசன் அறிவில் குறைந்தவனாகி, முறை அறியாத சுற்றத்தாரோடு ஆரவாரமாக அன்பு கெடுமாறு, நாள்தோறும் வரியைத் திரட்ட விரும்பினால், யானை புகுந்த நிலம் போலத் தானும் பயனடையாமல் உலகமும் (தன் நாடும்) கெடும்.

பாடலின் பின்னணி:-

பாண்டியன் அறிவுடை நம்பி தன் குடிமக்களைத் துன்புறுத்தி அவர்களிடம் வரி வாங்கினான். அவனிடம் சென்று அவன் தவறுகளை எடுத்துரைத்து அவனைத் திருத்த யாரும் முன்வரவில்லை. அந்நிலையில், அறிவுடை நம்பியிடம் சென்று அவனுக்கு அறிவுரை வழங்குமாறு அந்நாட்டு மக்கள் பிசிராந்தையாரை வேண்டினர். அவரும் குடிமக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, அறிவுடை நம்பியிடம் சென்று ஒருஅரசன் எவ்வாறு வரியைத் திரட்ட வேண்டும் என்று அறிவுரை கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on September 04, 2013, 11:59:30 AM
புறநானூறு, 185. (ஆறு இனிது படுமே!)
பாடியவர்: தொண்டைமான் இளந்திரையன்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: பொதுவியல்.
துறை : பொருண்மொழிக் காஞ்சி.
=====================================

கால்பார் கோத்து ஞாலத்து இயக்கும்
காவற் சாகாடு உகைப்போன் மாணின்
ஊறுஇன்றாகி ஆறுஇனிது படுமே;
உய்த்தல் தேற்றான் ஆயின் வைகலும்
பகைக்கூழ் அள்ளற் பட்டு
மிகப்பல் தீநோய் தலைத்தலைத் தருமே

அருஞ்சொற்பொருள்:-

கால் = வண்டிச் சக்கரம்
பார் = வண்டியின் அடிமரம் (அச்சு)
ஞாலம் = உலகம்
சாகாடு = வண்டி
உகைத்தல் = செலுத்துதல்
மாண் = மாட்சிமை
உய்த்தல் = செலுத்தல்
தேற்றான் = தெளியான்
வைகலும் = நாளும்
அள்ளல் = சேறு
கூழ் அள்ளல் = கலங்கிய சேறு
தலைத்தலை = மேன்மேல்

இதன் பொருள்:-

சக்கரத்தோடு அடிமரமும் சேர்ந்து இயங்கும் வண்டியைப் போன்றது இவ்வுலகம். வண்டியைச் செலுத்துபவன் திறமை உடையவனாக இருந்தால் வண்டி இடையூறு இல்லாமல் செல்லும். அவன் திறமை இல்லாதவனாக இருந்தால் வண்டி சேற்றில் சிக்கிக் கொள்ளும். அது போல், மன்னன் மாட்சிமை பொருந்தியவனாக இருந்தால் நாடு நலம் பெறும். மன்னன் தெளிவில்லாதவனாக இருந்தால், பகை என்னும் சேற்றில் நாடு மூழ்கி ஒவ்வொரு நாளும் பலவிதமான கொடிய துன்பங்கள் மேலும் மேலும் வந்து சேரும்.

பாடலின் பின்னணி:-

இப்பாடலில், “அரசன் ஆட்சி புரியும் ஆற்றல் உடையவனாக இருந்தால் நாடு நலம் பெறும்; அவன் ஆற்றல் அற்றவனாக இருந்தால் பலவகையான துன்பங்கள் வந்து சேரும்” என்று தன் கருத்தைத் தொண்டைமான் இளந்திரையன் கூறுகிறான்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on September 04, 2013, 12:00:40 PM
புறநானூறு, 186. (வேந்தர்க்குக் கடனே!)
பாடியவர்: மோசிகீரனார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: பொதுவியல்.
துறை : பொருண்மொழிக் காஞ்சி.
=====================================

நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே;
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;
அதனால், யான்உயிர் என்பது அறிகை
வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே.

அருஞ்சொற்பொருள்:-

உயிர்த்து = உயிரை உடையது
மலர்தல் = விரிதல்

இதன் பொருள்:-

இவ்வுலகுக்கு நெல்லும் நீரும் உயிரல்ல. இவ்வுலகம் மன்னனையே உயிராக உடையது. அதனால், தான் இந்தப் பரந்த உலகுக்கு உயிர் (போன்றவன்) என்பதை அறிந்து கொள்வது (மிகுந்த வேல்களுடன் கூடிய படைகளையுடைய) மன்னனுக்கு கடமையாகும்.

சிறப்புக் குறிப்பு:-

ஒருநாட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருந்தாலும், சிறப்பாக ஆட்சி புரியும் மன்னன் இல்லாவிட்டால், அந்த வளங்களால் பயனொன்றுமில்லை என்ற கருத்தைத் திருவள்ளுவர்,

ஆங்கமைவு எய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமைவு இல்லாத நாடு. (குறள் - 740)
என்ற குறளில் கூறுகிறார். மோசிகீரனாரின் கருத்தும் திருவள்ளுவர் கருத்தும் ஒப்பு நோக்கத்தக்கவை.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on September 04, 2013, 12:01:53 PM
புறநானூறு, 187. (ஆண்கள் உலகம்!)
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: பொதுவியல்.
துறை : பொருண்மொழிக் காஞ்சி.
=====================================

நாடா கொன்றோ ; காடா கொன்றோ;
அவலா கொன்றோ ; மிசையா கொன்றோ;
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை ; வாழிய நிலனே.

அருஞ்சொற்பொருள்:-

கொன்றோ - ஆக ஒன்றோ
அவல் = பள்ளம்
மிசை = மேடு

இதன் பொருள்:-

நிலமே! நீ நாடாகவோ, காடாகவோ, பள்ளமான இடமாகவோ அல்லது மேடான இடமாகவோ எப்படி இருந்தாலும், அங்கு வாழும் ஆண்கள் நல்லவர்களாக இருந்தால் நீயும் நல்ல நிலமாக இருப்பாய். நீ வாழ்க!

சிறப்புக் குறிப்பு:-

நாடு, காடு, அவல், மிசை என்பவை முறையே மருதம், முல்லை, நெய்தல், குறிஞ்சி நிலப்பகுதிகளைக் குறிக்கும். சங்காலத்தில் ஆண்களின் உழைப்பால் நிலம் செப்பனிடப்பட்டு வேளாண்மை நடைபெற்றது. ஆகவே, நிலத்தினது இயல்பு அங்கு வாழும் மக்களின் இயல்பைப் பொருத்ததாக இருந்தது. பாடுபட்டு உழைப்பவர்கள் இருந்தால் எல்லா நிலப்பகுதிகளுமே பயனளிப்பதாக இருக்கும். ஆகவே, இப்பாடலில், ”ஆடவர்” என்பதை “மக்கள்” என்றும் “நல்லவர்” என்பதை ”கடமை உணர்வோடு உழைப்பவர்” என்றும் பொதுவான முறையில் பொருள் கொள்வது சிறந்ததாகத் தோன்றுகிறது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on September 04, 2013, 12:03:00 PM
புறநானூறு, 188. (மக்களை இல்லோர்!)
பாடியவர்: பாண்டியன் அறிவுடை நம்பி.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: பொதுவியல்.
துறை : பொருண்மொழிக் காஞ்சி.
=====================================

படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம்வாழும் நாளே

அருஞ்சொற்பொருள்:-

படைப்பு = செல்வம்
படைத்தல் = பெற்றிருத்தல்
துழத்தல் = கலத்தல் (துழாவல்)
அடிசில் = சோறு
விதிர்த்தல் = சிதறல்
பயக்குறை = பயக்கு+உறை = பயன் அமைதல்

இதன் பொருள்:-

பலவகையான செல்வங்களையும் பெற்றுப் பலரோடு உண்ணும் பெருஞ்செல்வந்தராயினும், மெல்ல மெல்ல, குறுகிய அடிகளைவைத்து நடந்து, தன் சிறிய கையை நீட்டி, அதை உணவில் இட்டு, தொட்டு, வாயால் கவ்வி, கையால் துழாவி, நெய்யுடன் கலந்த சோற்றைத் தன் உடலில் பூசிப் பெற்றோரை இன்பத்தில் மயக்கும் குழந்தைகள் இல்லாதவர்களின் வாழ்நாள்கள் பயனற்றவையாகும்.

சிறப்புக் குறிப்பு:-

சிறுகுழந்தை நடக்கும் பொழுது, அது ஒருஅடி வைப்பதற்கும் அடுத்த அடி எடுத்து வைப்பதற்கும் சற்று கால தாமதாவதால், “இடைப்பட” என்று நயம்படக் கூறுகிறார் பாண்டியன் அறிவுடை நம்பி.

மக்கட்பேற்றால் வரும் இன்பத்தை பல குறட்பாக்களில் வள்ளுவர் கூறியிருப்பது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ். (குறள் - 64)

மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. (குறள் - 65)

குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர். (குறள் - 66)
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on September 04, 2013, 12:04:21 PM
(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash3/523455_509708419054074_89135862_n.jpg)

புறநானூறு, 189. (செல்வத்துப் பயனே ஈதல்!)
பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்.
பாடப்பட்டோன் : யாருமில்லை.
திணை : பொதுவியல்.
துறை : பொருண்மொழிக் காஞ்சி.
==================================

" தெண்கடல் வளாகம் பொதுமை ‘இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,
உண்பது நாழி ; உடுப்பவை இரண்டே;
பிறவும் எல்லாம் ஓரொக் குமே;
அதனால், செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே "

அருஞ்சொற்பொருள்:-

பொதுமை = பொதுத்தன்மை
வளாகம் = இடம் (வளைந்த இடம்)
யாமம் = நள்ளிரவு
துஞ்சல் = தூங்குதல்
கடு = விரைவு
மா = விலங்கு
நாழி = ஒருஅளவு (ஒருபடி)
ஓர் - அசை
துய்த்தல் = அனுபவித்தல்

இதன் பொருள்:-

தெளிந்த கடலால் சூழப்பட்ட இவ்வுலகம் மற்றவர்களுக்கும் பொதுவானது என்று எண்ணாமல், தானே ஆட்சி செய்யும் ஒருவர்க்கும், பகலும் இரவு தூங்காமல், விரைந்து ஓடும் விலங்குகளை வேட்டையாடுபவனுக்கும் உணவு ஒருபடி அளவுதான்; அவர்கள் உடுப்பது இரண்டு ஆடைகள் தான். அதுபோல், மற்ற தேவைகளிலும் இருவரும் ஒப்பானவரரே ஆவர். ஆகவே, எவ்வளவு செல்வம் இருந்தாலும் ஓரளவுக்கு மட்டுமே அதை அனுபவிக்க முடியும். அதனால், செல்வத்தினால் ஒருவன் பெறக்கூடிய பயன் அதைப் பிறர்க்கு அளித்தலேயாகும். அவ்வாறு பிறர்க்கு அளிக்காமல் தானே அனுபவிக்கலாம் என்று ஒருவன் எண்ணினால் அவன் செல்வத்தினால் வரும் பயன்கள் பலவற்றையும் இழந்தவனாவான்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on September 14, 2013, 09:21:23 PM
புறநானூறு, 190. (எலியும் புலியும்)
பாடியவர்: சோழன் நல்லுருத்திரன்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: பொதுவியல்.
துறை : பொருண்மொழிக் காஞ்சி.
=====================================

விளைபதச் சீறிடம் நோக்கி, வளைகதிர்
வல்சி கொண்டு, அளை மல்க வைக்கும்
எலிமுயன் றனைய ராகி, உள்ளதம்
வளன்வலி உறுக்கும் உளம் இலாளரோடு
இயைந்த கேண்மை இல்லா கியரோ;
கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென,

அன்று அவண் உண்ணா தாகி, வழிநாள்
பெருமலை விடரகம் புலம்ப, வேட்டெழுந்து
இருங்களிற்று ஒருத்தல் நல்வலம் படுக்கும்
புலிபசித் தன்ன மெலிவில் உள்ளத்து
உரனுடை யாளர் கேண்மையொடு
இயைந்த வைகல் உளவா கியரோ

அருஞ்சொற்பொருள்:-

பதம் = பருவம்
சீறிடம் = சிறிய இடம்
வல்சி = உணவு
அளை = வளை
மல்கல் = நிறைதல்
உறுத்தல் = இருத்தல்
கேண்மை = நட்பு
கேழல் = பன்றி
அவண் = அவ்விடம், அவ்விதம்
வழிநாள் = மறுநாள்
விடர் = குகை
புலம்பு = தனிமை
வேட்டு = விரும்பி
இரு = பெரிய
ஒருத்தல் =ஆண் விலங்குக்குப் பொதுப்பெயர்
மெலிவு = தளர்ச்சி
உரன் = வலிமை, அறிவு, ஊக்கம்
வைகல் = நாள்

இதன் பொருள்:-

விளைபத=====> வீழ்ந்தென

நெல் விளைந்த சமயத்தில், சிறிய இடத்தில், கதிர்களைக் கொண்டுவந்து உணவுப்பொருட்களைச் சேகரித்துவைக்கும் எலி போன்ற முயற்சி உடையவராகி, நல்ல உள்ளம் இல்லாமல், தம்முடைய செல்வத்தை இறுகப் பிடித்துக் கொள்பவர்களுடன் நட்பு கொள்வதைத் தவிர்க. கொடிய பார்வையையுடைய பன்றி, தன்னால் தாக்கப்பட்டவுடன் இடது பக்கமாக விழுந்தது என்பதால்

அன்று=====> உளவா கியரோ

அதை உண்ணாது, பெரிய குகையில் தனித்திருந்து, பின்னர் வேட்டையாட விரும்பி, எழுந்து, பெரிய யானையைத் தாக்கி வலப்பக்கம் வீழ்த்தி அதை உண்ணும் பசியுடைய புலிபோல் தளராத கொள்கையையுடைய வலியவர்களோடு நட்பு கொள்க.

சிறப்புக் குறிப்பு:-

தன்னால் தாக்கப்பட்ட விலங்கு இடப்பக்கமாக வீழ்ந்தால் அதைப் புலி உண்ணாது என்ற கருத்து சங்க காலத்தில் நிலவியது என்பதற்குச் சான்றாக அகநானூற்றிலும் ஒருபாடல் காணப்படுகிறது.

தொடங்குவினை தவிரா அசைவுஇல் நோன்தாள்
கிடந்துஉயிர் மறுகுவது ஆயினும் இடம்படின்
வீழ்களிறு மிசையாப் புலி…… (அகநானூறு, 29, 1-3)
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on September 14, 2013, 09:22:42 PM
புறநானூறு, 191. (நரையில ஆகுதல் யாங்கு ஆகியர்?)
பாடியவர்: பிசிராந்தையர்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: பொதுவியல்.
துறை : பொருண்மொழிக் காஞ்சி.
=============================

“யாண்டுபல வாக நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர்?” என வினவுதிர் ஆயின்,
மாண்டஎன் மனைவியோடு மக்களும் நிரம்பினர்;
யான்கண் டனையர்என் இளையரும்; வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும்; அதன்தலை,
ஆன்றுஅவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர்யான் வாழும் ஊரே

அருஞ்சொற்பொருள்:-

யாண்டு = ஆண்டு
யாங்கு = எவ்வாறு, எங்ஙனம்
மாண்ட = மாட்சிமைப் படுதல்
இளையர் = வேலையாட்கள்

இதன் பொருள்:-

“தங்களுக்கு இவ்வளவு வயதாகியும் தாங்கள் எப்படி நரையில்லாமல் இருக்கிறீர்கள்?” என்று கேட்பீர்களானால், சொல்கிறேன். “சிறப்பான என் மனைவியோடு, என்னுடைய மக்களும் அறிவு நிரம்பப் பெற்றவர்கள். நான் எண்ணுவது போலவே, என்னிடம் பணிபுரிபவர்களும் எண்ணிப் பணியாற்றுகிறார்கள். என் வேந்தன் முறையல்லாதவற்றைச் செய்யாமல் நாட்டை ஆட்சி செய்கிறான். நான் வாழும் ஊரில், மாட்சிமைக்குரிய நற்குணங்களும் நல்லொழுக்கங்களும் நிறைந்து ஐம்புலன்களையும் வென்று, பணிவோடும் சிறந்த கொள்கைகளோடும் வாழும் சான்றோர்கள் பலர் உள்ளனர்.”
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on September 14, 2013, 09:24:41 PM
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash3/598509_518637254827857_553669388_n.jpg)

புறநானூறு,192. (யாதும் ஊரே! யாவரும் கேளிர்!)
பாடியவர்: கணியன் பூங்குன்றன்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: பொதுவியல்.
துறை: பொருண்மொழிக் காஞ்சி.
=============================

யாதும் ஊரே, யாவரும் கேளிர்;
தீதும், நன்றும், பிறர் தர வாரா;
நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன;
சாதலும் புதுவது அன்றே! வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின்
இன்னாது என்றலும் இலமே! மின்னொடு
வானம் தண் துளி தலைஇ ஆனாது,
கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில்
பெரியோரை வியத்தலும் இலமே!
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!

அருஞ்சொற்பொருள்:-

கேளிர் = உறவினர்
நோதல் = வருந்துதல்
தணிதல் = குறைதல்
முனிவு = கோபம், வெறுப்பு
தலைஇ = பெய்து
ஆனாது = அமையாது
இரங்கல் = ஒலித்தல்
பொருதல் = அலைமோதல்
மல்லல் = மிகுதி, வளமை
புணை = தெப்பம்
திறம் = கூறுபாடு
திறவோர் = பகுத்தறிவாளர்
காட்சி = அறிவு
மாட்சி = பெருமை

இதன் பொருள் :-

எல்லா ஊரும் எம் ஊர்
எல்லா மக்களும் எம் உறவினரே
நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை
துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை
சாதல் புதுமை யில்லை; வாழ்தல்
இன்பமென்று மகிழ்ந்தது இல்லை
வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை
பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல
இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று
தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்
ஆதலினால்,பிறந்து வாழ்வோரில்
சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை
பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on September 14, 2013, 09:26:01 PM
புறநானூறு, 193. (ஒக்கல் வாழ்க்கை தட்கும்)
பாடியவர்: ஓரேருழவர்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: பொதுவியல்.
துறை : பொருண்மொழிக் காஞ்சி.
=============================

அதள்எறிந் தன்ன நெடுவெண் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல,
ஓடி உய்தலும் கூடும்மன்
ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே!

அருஞ்சொற்பொருள்:-

அதள் = தோல்
எறிதல் = நீக்கல்
களர் = களர் நிலம்
புல்வாய் = மான்
உய்தல் = தப்பிப் பிழைத்தல்
மன் - அசைச் சொல்
ஒக்கல் = சுற்றம்
தட்கும் = தடுக்கும்

இதன் பொருள்:-

தோலை உரித்துத் திருப்பிப் போட்டதுபோல் உள்ள வெண்மையான நெடிய நிலத்தில் வேட்டுவனிடமிருந்து தப்பியோடும் மான்போல் எங்கேயாவது தப்பியோடிப் பிழைத்துக்கொள்ளலாம் என்றால், அவ்வாறு தப்ப முடியாமல் சுற்றத்தாருடன் கூடிய இல்வாழ்க்கை காலைத் தடுத்து நிறுத்துகிறது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on September 17, 2013, 02:21:58 PM
புறநானூறு, 194. (படைத்தோன் பண்பிலாளன்!)
பாடியவர்: பக்குடுக்கை நன்கணியார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: பொதுவியல்.
துறை : பொருண்மொழிக் காஞ்சி.
=============================

ஓரில் நெய்தல் கறங்க, ஓரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்,
புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்;
படைத்தோன் மன்றஅப் பண்பி லாளன்;
இன்னாது அம்ம இவ் வுலகம்;
இனிய காண்கஇதன் இயல்புணர்ந் தோரே

அருஞ்சொற்பொருள்:-

நெய்தல் = இரங்கற் பறை (சாப்பறை)
கறங்கல் = ஒலித்தல்
ஈர் = இனிமை
தண் = அருள்
பாணி = (இனிய) ஓசை
பைதல் = துன்பம்
உண்கண் = மை தீட்டிய கண்
வார்ப்பு = வார்த்தல்
உறைத்தல் = சொரிதல், உதிர்த்தல்
மன்ற - அசைச் சொல்
அம்ம - அசைச் சொல்

இதன் பொருள்:-

ஒரு வீட்டில் சாவைக் குறிக்கும் பறை ஒலிக்கிறது. மற்றொரு வீட்டில், திருமணத்திற்குரிய இனிய ஓசை அன்புடன் ஒலிக்கிறது. தலைவனோடு கூடிய பெண்கள் பூவும் அணிலன்களும் அணிந்திருக்கிறார்கள். தலைவனைப் பிரிந்த மகளிர், தங்கள் மை தீட்டிய கண்களில் நீர் பெருகி வருந்துகின்றனர். இவ்வாறு இன்பமும் துன்பமும் கலந்திருக்குமாறு இவ்வுலகைப் படைத்தவன் பண்பில்லாதவன். இந்த உலகம் கொடியது. ஆகவே, இந்த உலகத்தின் தன்மையை உணர்ந்தவர்கள் இன்பம் தருவனவற்றைத் தேடிக் கண்டுகொள்க.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on September 25, 2013, 07:26:16 PM
புறநானூறு, 195. (நல்லாற்றுப் படும் நெறி)
பாடியவர்: நரிவெரூஉத் தலையார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: பொதுவியல்.
துறை : பொருண்மொழிக் காஞ்சி.
=============================

பல்சான் றீரே! பல்சான் றீரே!
கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள்
பயனில் மூப்பின் பல்சான் றீரே!
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்
பிணிக்கும் காலை இரங்குவிர் மாதோ!

நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான்
எல்லாரும் உவப்பது; அன்றியும்
நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே!

அருஞ்சொற்பொருள்:-

கயல் = கெண்டை மீன்
திரை = தோல் சுருக்கம்
கவுள் = கன்னம்
கணிச்சி = மழு
திறல் = வலிமை
இரங்குவீர் = வருந்துவீர்
மாதோ - அசைச் சொல்
ஓம்பல் = தவிர்த்தல்
உவப்பது = விரும்புவது
படூஉம் = செலுத்தும்
ஆர் = அழகு, நிறைவு
ஆர் - அசைச் சொல்

இதன் பொருள்:-

பல்சான்=====> மாதோ!

பல குணங்கள் அமையப் பெற்றவர்களே! பல குணங்கள் அமையப் பெற்றவர்களே! கெண்டை மீனின் முள் போன்ற நரைமுடியும், முதிர்ந்து சுருக்கம் விழுந்த கன்னங்களோடு, பயனற்ற முதுமையும் அடைந்த பல குணங்கள் அமையப் பெற்றவர்களே! கூர்மையான மழுவைக் கருவியாகக் கொண்ட பெரு வலிமையுடைய இயமன் வந்து உங்களைப் பற்றி இழுத்துச் செல்லும்பொழுது வருந்துவீர்கள்.

நல்லது=====> அதுவே

நல்ல செயல்களைச் செய்யாவிட்டாலும் தீய செயல்களைச் செய்வதைத் தவிர்க. அதுதான் எல்லாரும் விரும்புவது. அதுமட்டுமல்லாமல், அதுதான் உங்களை நல்ல நெறியில் செலுத்தும் வழியும் ஆகும்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on October 02, 2013, 02:30:45 PM
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-prn2/1377407_666333813391533_1744455257_n.jpg)

புறநானூறு, 196. (குறுமகள் உள்ளிச் செல்வல்)
பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.
திணை: பாடாண் திணை.
துறை : பரிசில் கடாநிலை.
=============================

ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும்
ஒல்லாது இல்லென மறுத்தலும் இரண்டும்
ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;
ஒல்லாது ஒல்லும் என்றலும் ஒல்லுவது
இல்லென மறுத்தலும் இரண்டும் வல்லே

இரப்போர் வாட்டல் அன்றியும் புரப்போர்
புகழ்குறை படூஉம் வாயில் அத்தை;
அனைத்தா கியர்இனி இதுவே எனைத்தும்
சேய்த்துக் காணாது கண்டனம் அதனான்
நோயிலர் ஆகநின் புதல்வர்; யானும்

வெயிலென முனியேன்; பனியென மடியேன்;
கல்குயின் றன்னஎன் நல்கூர் வளிமறை
நாணலது இல்லாக் கற்பின் வாள்நுதல்
மெல்லியல் குறுமகள் உள்ளிச்
செல்வல் அத்தை; சிறக்க நின்நாளே

அருஞ்சொற்பொருள்:-

ஒல்லுதல் = இயலுதல்
ஆள்வினை = முயற்சி
மருங்கு = பக்கம், கண்ணோட்டம்
கேண்மை = நட்பு, இயல்பு
வாயில் = வழி
அத்தை - அசை
முனிதல் = வெறுத்தல்
மடி = சோம்பல்
குயிறல் = செய்தல்
நல்கூர்தல் = வறுமைப்படுதல்
முனிவு = வெறுப்பு

இதன் பொருள்:-

ஒல்லுவது=====> வல்லே

தம்மால் கொடுக்க முடிந்ததைப் பிறர்க்கு அளித்தலும், தம்மால் கொடுக்க முடியாததைக் கொடுக்க மறுத்தலும் ஆகிய இரண்டும் முயற்சியும் கண்ணோட்டமும் உடையவர்களின் இயல்பு. தம்மால் கொடுக்க முடியாததை கொடுக்க முடியும் என்று கூறுவதும், கொடுக்க முடிந்ததை கொடுக்காமல் மறுப்பதும் ஆகிய இரண்டும்

இரப்போர்=====> யானும்

இரவலரை விரைவில் வருத்துவதோடு மட்டுமல்லாமல் புரவலர்களின் புகழையும் குறைக்கும் வழியாகும். இப்பொழுது என்னிடம் நீ நடந்துகொண்ட விதமும் அதுவே. இது போன்ற செயல்களை இதுவரை நான் கண்டதில்லை; இப்பொழுதுதான் கண்டேன். உன் புதல்வர்கள் நோயில்லாமல் வாழ்வராக! நான்

வெயிலென=====> நின்நாளே

வெயிலின் வெம்மையை வெறுக்காமலும், பனியின் குளிரைக் கண்டு சோம்பாமலும், கல்போன்று தங்கியிருக்கும் என் வறுமையுடன், காற்றைத் தடுக்கும் சுவர்கள் மட்டுமே உள்ள என் வீட்டிற்குச் செல்கிறேன். அங்கே, நாணத்தைத் தவிர வேறு அணிகலன்கள் அணியாத, கற்பிற் சிறந்தவளும் ஒளிபொருந்திய நெற்றியை உடைவளுமாகிய மெல்லியல்புகளுடைய என் மனைவியை நாடிச் செல்கிறேன். உன் வாழ்நாள்கள் பெருகட்டும்!

சிறப்புக் குறிப்பு:-

இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனின் செயலால் ஆவூர் மூலங் கிழார் மிகவும் மனவருத்தமும் கோபமும் கொண்டார். அவன் தீய செயலால் அவன் புதல்வர்கள் நோயுடன் வருந்துவதையும் அல்லது அவன் வாழ்நாள்கள் குறைவதையும் அவர் விரும்பினாலும் அதை நேரிடையாகக் கூறாது எதிர்மறைக் குறிப்பாகக் கூறுகிறார். இவ்வாறு எதிர்மறைக் குறிப்பாக மொழிவதைத் தொல்காப்பியம்,

எழுத்தொடும் சொல்லொடும் புணரா தாகிப்
பொருட் புறத்ததுவே குறிப்புமொழி யென்ப” (தொல்காப்பியம் - செய்யுளியல் 177)

என்று கூறுகிறது. இப்பாடலில் ஆவூர் மூலங் கிழாரின் கூற்று குறிப்புமொழிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

”வளிமறை” என்பது ஆவூர் மூலங்கிழாரின் வீட்டில் வெயில், மழை போன்றவற்றிலிருந்து அவரைக் காப்பாற்றுவதற்குத் தேவையான கூரை இல்லை என்பதைக் குறிக்கிறது.

“நாணலது” என்பது, மிகுந்த வறுமையின் காரணத்தால், ஆவூர் கிழாரின் மனைவி, அணிகலன்கள் எதுவும் இல்லாமல் நாணம் ஒன்றையே தன் அணிகலனாகக் கொண்டவள் என்பதைக் குறிக்கிறது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on October 02, 2013, 02:32:55 PM
புறநானூறு, 197. (நல்குரவு உள்ளுதும்)
பாடியவர்: கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்.
பாடப்பட்டோன்: சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்.
திணை: பாடாண் திணை.
துறை : பரிசில் கடாநிலை.
=============================

வளிநடந் தன்ன வாஅய்ச் செலல் இவுளியொடு
கொடிநுடங்கு மிசைய தேரினர் எனாஅக்
கடல்கண் டன்ன ஒண்படைத் தானையடு
மலைமாறு மலைக்குங் களிற்றினர் எனாஅ
உரும்உடன் றன்ன உட்குவரு முரசமொடு

செருமேம் படூஉம் வென்றியர் எனாஅ
மண்கெழு தானை ஒண்பூண் வேந்தர்
வெண்குடைச் செல்வம் வியத்தலோ இலமே;
எம்மால் வியக்கப் படூஉ மோரே
இடுமுள் படப்பை மறிமேய்ந்து ஒழிந்த

குறுநறு முஞ்ஞைக் கொழுங்கண் குற்றடகு
புன்புல வரகின் சொன்றியடு பெறூஉம்
சீறூர் மன்னர் ஆயினும் எம்வயின்
பாடறிந்து ஒழுகும் பண்பி னாரே;
மிகப்பேர் எவ்வம் உறினும் எனைத்தும்

உணர்ச்சி யில்லோர் உடைமை யுள்ளேம்;
நல்லறி வுடையோர் நல்குரவு
உள்ளுதும்; பெரும யாம் உவந்துநனி பெரிதே

அருஞ்சொற்பொருள்:-

வளி = காற்று
வாவுதல் = தாவுதல்
இவுளி = குதிரை
நுடங்குதல் = ஆடல், துவளல், முடங்குதல், தள்ளாடுதல், வளைதல்
எனா - இடைச்சொல்
உரும் = இடி
உட்கு = அச்சம்
செரு = போர்
படப்பை = தோட்டம்
மறி = ஆட்டுக்குட்டி
அடகு = கீரை
முஞ்ஞை = முன்னை
சொன்றி = சோறு
பாடறிந்து ஒழுகும் பண்பு = பண்பாடு
எவ்வம் = துன்பம்
நல்குரவு = வறுமை
நனி = மிகவும்

இதன் பொருள்:-

வளிநட=====> முரசமொடு

காற்றைப்போல் தாவிச்செல்லும் குதிரைகளும், கொடிகள் அசைந்தாடும் தேர்களும், கடல்போன்ற படையும், மலையையும் எதிர்த்துப் போர் புரியவல்ல களிறுகளும் உடையவர்கள் என்பதற்காகவோ, இடிபோல் ஒலிக்கும் அச்சம்தரும் முரசோடு

செருமேம்=====> ஒழிந்த

போரில் வெற்றி பெற்றவர்கள் என்பதற்காகவோ, பெருநிலமாளும், ஒளிபொருந்திய அணிகலன்கள் அணிந்த அரசர்களின் வெண்கொற்றக்குடையுடன் விளங்கும் செல்வத்தை நாங்கள் மதிப்பது இல்லை. முள்வேலியுடைய தோட்டத்தில் ஆடு மேய்ந்தது போக

குறுநறு=====> பெரிதே

மிஞ்சியுள்ள சிறிய இலையுள்ள, மணம் நிறைந்த முன்னைக் கீரையை புன்செய் நிலத்தில் விளைந்த வரகுச் சோற்றுடன் உண்ணும் மக்களுடைய சிறிய ஊர்க்கு அரசனாக இருந்தாலும் எம்மிடத்துப் பழகும் முறை அறிந்து நடக்கும் பண்பு உடையவர்களைத்தான் நாங்கள் மதிப்போம். மிகப்பெரிய துன்பமுற்றாலும், எங்களிடம் அன்பில்லாதவர்களின் செல்வத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். பெரும! நல்ல அறிவுடையவர்களின் வறுமையை மிகவும் மகிழ்வோடு பெருமையாகக் கருதுவோம்.

பாடலின் பின்னணி:-

கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனைக் காணச் சென்றார். அவன் இப்புலவர்க்குப் பரிசளிப்பதற்குக் கால தாமதமாக்கினான். அதனால் கோபமடைந்த கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார், “அரசே, அரசர்களிடம் தேர்களும் படைகளும் மிகுதியாக இருப்பதாலோ, பல போர்களில் அவர்கள் வெற்றி பெற்றார்கள் என்பதற்காகவோ நாங்கள் அவர்களை வியந்து பாராட்டுவதில்லை. சிறிய ஊரின் மன்னர்களாக இருந்தாலும் எங்கள் பெருமையை உணர்ந்தவர்களைத் தான் நாங்கள் பாராட்டுவோம். எத்துணைத் துன்பம் வந்தாலும் உண்மை உணர்வும் நல்லறிவும் இல்லாதவர்களின் செல்வத்தை விரும்பமாட்டோம். நல்லறிவு உடையவர்கள் வறுமையில் இருந்தாலும் அவர்களைப் பெரிதும் பாராட்டுவோம்” என்று இப்பாடலில் தன் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை. (குறள் - 657)
என்ற குறளில், பழியை மேற்கொண்டு செய்த செயல்களால் பெற்ற செல்வத்தைவிட, சான்றோர்களின் மிகுந்த வறுமையே சிறந்தது என்று திருவள்ளுவர் கூறுவது இப்பாடலில் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் கூறும் கருத்தோடு ஒத்திருப்பதைக் காண்க.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on October 02, 2013, 02:34:34 PM
புறநானூறு, 198. (மறவாது ஈமே)
பாடியவர்: வடமவண்ணக்கன் பேரி சாத்தனார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.
திணை: பாடாண் திணை.
துறை : பரிசில் கடாநிலை.
=============================

அருவி தாழ்ந்த பெருவரை போல
ஆரமொடு பொலிந்த மார்பின் தண்டாக்
கடவுள் சான்ற கற்பின் சேயிழை
மடவோள் பயந்த மணிமருள் அவ்வாய்க்
கிண்கிணிப் புதல்வர் பொலிகஎன்று ஏத்தித்

திண்தேர் அண்ணல்! நிற்பா ராட்டிக்
காதல் பெருமையின் கனவினும் அரற்றும்என்
காமர் நெஞ்சம் ஏமாந்து உவப்ப
ஆல்அமர் கடவுள் அன்னநின் செல்வம்
வேல்கெழு குருசில்! கண்டேன்; ஆதலின்,

விடுத்தனென்; வாழ்க நின் கண்ணி! தொடுத்த
தண்டமிழ் வரைப்புஅகம் கொண்டி யாகப்
பணித்துக்கூட் டுண்ணும் தணிப்பருங் கடுந்திறல்
நின்னோர் அன்னநின் புதல்வர் என்றும்
ஒன்னார் வாட அருங்கலம் தந்துநும்

பொன்னுடை நெடுநகர் நிறைய வைத்தநின்
முன்னோர் போல்க இவர் பெருங்கண் ணோட்டம்;
யாண்டும் நாளும் பெருகி ஈண்டுதிரைப்
பெருங்கடல் நீரினும் அக்கடல் மணலினும்
நீண்டுஉயர் வானத்து உறையினும் நன்றும்

இவர்பெறும் புதல்வர்க் காண்தொறும் நீயும்
புகன்ற செல்வமொடு புகழ்இனிது விளங்கி
நீடு வாழிய நெடுந்தகை! யானும்
கேளில் சேஎய் நாட்டின்எந் நாளும்
துளிநசைப் புள்ளின்நின் அளிநசைக்கு இரங்கிநின்

அடிநிழல் பழகிய வடியுறை;
கடுமான் மாற! மறவா தீமே

அருஞ்சொற்பொருள்:-

வரை = மலை
ஆரம் = மாலை (முத்து மாலை)
மணி = பவழ மணி
கிண்கிணி = காலணி
அரற்றுதல் = கதறுதல், அழுதல்
ஆல் = ஆல்மரம்
வரைப்பு = எல்லை
கொண்டி = கொள்ளை, பிறர் பொருள் கொள்ளுதல்
நெடுநகர் = பெரிய அரண்மணை

இதன் பொருள்:-

அருவி=====> ஏத்தி

அருவி வீழும் பெரிய மலைபோல் ஆரத்தோடு விளங்கும் மார்பையுடையவனே! கடவுள் தன்மை அமைந்த கற்புடைய உன் மனைவி உன் மீது குறையாத அன்புடையவள். அவள் பெற்ற உன் புதல்வர்கள் சிறப்புடன் வாழ்க என வாழ்த்துகிறேன்.

திண்தேர்=====> ஆதலின்

வலிய தேரையுடைய தலைவ! உன்னைப் பாராட்டுகிறேன். பரிசில் மீது மிகுந்த விருப்பம் உள்ளதால், கனவிலும் உன் புகழையே கூறிக்கொண்டிருக்கிறேன். வேலையுடய வேந்தே! அப்பரிசிலின் மீது எனக்குள்ள விருப்பத்தால் என் நெஞ்சம் இன்புற்று மகிழுமாறு, ஆலமரத்தில் அமர்ந்த கடவுள் போன்ற உன் பெருஞ்செல்வத்தைக் கண்டேன். ஆதலால்,

விடுத்தனென்=====> தந்துநும்

நான் விடைபெறுகிறேன். உன் தலையில் அணிந்துள்ள மாலை வாழ்க! நீ தமிழகம் முழுவதும் கொள்ளைகொண்டு உன் பகைவரை வென்று அவர் பொருள்களைக் கொள்ளை கொள்ளும் மிக்க வலிமையையுடையவன். உன் புதல்வரும் உன்னைப் போன்ற மிக்க வலிமை உடையவர்கள்.எந்நாளும் பகைவர்களை அழித்து அவர்களுடைய அரிய அணிகலன்களைக் கொண்டுவந்து

பொன்னுடை=====> நன்றும்

உன்னுடைய பொன்னாலான பொருள்கள் நிறைந்த பெரிய அரண்மனையில் உன் முன்னோர்கள் வைத்தார்கள். அந்த முன்னோர்களைப் போலவே உன் புதல்வரின் கருணை நிரம்பிய உள்ளமும் உள்ளது. (முன்னோர்க்கும் கண்ணோட்டம் இல்லை; உன் புதல்வருக்கும் கண்ணோட்டம் இல்லை). எப்பொழுதும் அலையுடன் கூடிய கடல் நீரினும், அக்கடல் மணலினும், மழைத்துளிகளினும் அதிக நாட்கள்

இவர்பெறும்=====> மறவா தீமே

உன் புதல்வரின் பிள்ளைகளோடும் நீ விரும்பிய செல்வத்தோடும் வாழ்க! பெருந்தகையே! நான் உறவினர் இல்லாத தொலைவில் உள்ள ஊரில் மழைத்துளிக்கு ஏங்கி இருக்கும் வானம்பாடிப் பறவையைப் போல் உனது பரிசிலை விரும்பி உன் நிழலில் வாழ்ந்து பழகிய அடியேனாகவே வாழ்வேன். விரைவாகச் செல்லும் இயல்புடைய குதிரைகளையுடைய பாண்டியனே! நீ செய்த செயலை மறவாதே!

பாடலின் பின்னணி:-

ஒருசமயம், வடமவண்ணக்கன் பேரி சாத்தனார், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனிடம் பரிசில் பெறலாம் என்ற எண்ணத்தோடு அவனைக் காணச் சென்றார். அவன் பரிசில் அளிக்காமல் காலத்தைப் போக்கினான். அதனால் ஏமாற்றமடைந்த வடமவண்ணக்கன் பேரி சாத்தனார் அவனை வாழ்த்தி விடைபெறுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

பாண்டியன் செய்த தீய செயலால் அவனுக்குத் தீங்கு வரும் என்று உணர்ந்த பேரி சாத்தனார், அவனுக்கு அத்தகைய தீங்குகள் வராமல் இருக்க வேண்டுமென்று எண்ணி அவனை வாழ்த்தி விடைபெறுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on October 02, 2013, 02:36:42 PM
புறநானூறு, 199. (கலிகொள் புள்ளினன்)
பாடியவர்: பெரும்பதுமனார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: பாடாண் திணை.
துறை : பரிசில் கடாநிலை.
=============================

கடவுள் ஆலத்துத் தடவுச்சினைப் பல்பழம்
நெருநல் உண்டனம் என்னாது பின்னும்
செலவுஆ னாவே கலிகொள் புள்ளினம்;
அனையர் வாழியோ இரவலர்; அவரைப்
புரவுஎதிர் கொள்ளும் பெருஞ்செய் ஆடவர்
உடைமை ஆகும்அவர் உடைமை;
அவர் இன்மை ஆகும் அவர் இன்மையே

அருஞ்சொற்பொருள்:-

தடவு = பெரிய
சினை = மரக்கொம்பு
நெருநல் = நேற்று
ஆனா = அமையாது
கலி = ஒலி
வாழி, ஓ - அசைச் சொற்கள்
புரவு = பாதுகாப்பு
இன்மை = வறுமை

இதன் பொருள்:-

கடவுள் உறையும் ஆலமரத்தின் பெரிய கிளைகளில் இருந்த பழங்களை நேற்று உண்டோம் என்று நினைத்து ஆரவாரமாக ஒலிக்கும் பறவைகள் அம்மரத்தைவிட்டு விலகுவதில்லை. இரவலர்களும் அப்பறவைகள் போன்றவர்கள்தான். இரவலர்களை எதிர்பார்த்து அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் புரவலர்களின் செல்வம்தான் இரவலர்களின் செல்வம். புரவலர்கள் வறுமையுற்றால் இரவலர்களுக்கும் வறுமைதான்.

சிறப்புக் குறிப்பு:-

பறவைகள் ஆலமரத்தில் உள்ள பழங்களைத் தின்று, அப்பழங்களில் உள்ள விதைகளைத் தம் எச்சத்தின் மூலம் வெளிப்படுத்திப் பல்வேறு இடங்களில் புதிய ஆலமரங்கள் முளைத்துத் தழைக்க வழி செய்கின்றன. அதுபோல், இரவலர்கள் புரவலர்களிடம் பரிசுபெற்று, பல்வேறு ஊர்களுக்குச் சென்று பரிசளித்த இரவலர்களின் புகழைப் பரப்புவதால், ஆங்காங்கே, புதுப் புரவலர்கள் தோன்றக்கூடும். (அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை, புறநானூறு, பகுதி 1, பக்கம் 432-433)
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on October 02, 2013, 02:38:25 PM
(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-ash3/74250_523645127660403_1215935302_n.jpg)

புறநானூறு, 200. (கொடுப்பக் கொள்க!)
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: விச்சிக்கோ.
திணை: பாடாண்.
துறை: பரிசில் துறை.
====================================

பனிவரை நிவந்த பாசிலைப் பலவின்
கனிகவர்ந் துண்ட கருவிரற் கடுவன்
செம்முக மந்தியொடு சிறந்துசேண் விளங்கி
மழைமிசை யறியா மால்வரை யடுக்கத்துக்
கழைமிசைத் துஞ்சும் கல்லக வெற்ப!
நிணந்தின்று செருக்கிய நெருப்புத்தலை நெடுவேல்
களங்கொண்டு கனலும் கடுங்கண் யானை
விளங்குமணிக் கொடும்பூண் விச்சிக்கோவே!
இவரேபூத் தலைஅறாஅப் புனைகொடி முல்லை
நாத்தழும் பிருப்பப் பாடா தாயினும்
கறங்குமணி நெடுந்தேர் கொள்கவெனக் கொடுத்த
பரந்தோங்கு சிறப்பின் பாரி மகளிர்
யானே பரிசிலன் மன்னுமந் தணன்நீயே
வரிசையில் வணங்கும் வாள்மேம் படுநன்
நினக்குயான் கொடுப்பக் கொண்மதி சினப்போர்
அடங்கா மன்னரை அடக்கும்
மடங்கா விளையுள் நாடுகிழ வோனே!

இதன் பொருள்:-

பனிவரை நிவந்த=====> கல்லக வெற்ப
குளிர்ந்த மலையில் வளர்ந்த பச்சை இலைகளையுடைய, பலா மரத்தின் கனிகளைக் கவர்ந்து உண்ட, தடயங்களைக் கொண்ட கரிய விரல்களை உடைய ஆண் குரங்கு,
தன் இணையான பெண் குரங்கோடு, அன்போடு சிறந்து விளங்கி,
மேகத்தைக் கண்டறிய முடியாதபடிக்கு விளங்கும், அடர்ந்த மரங்களைக் கொண்ட மலை முகட்டினில் இருக்கும் மூங்கிலின் மேல் துயிலும்!
அத்தகைய வளமான மலையை உடைய வெற்பனே.....

நிணந்தின்று=====> விச்சிக்கோவே

பகைவரின் உடல்களை சுவைத்து களித்த, கொழுந்துவிட்டு எரியும் நெருப்பைப் போன்ற நெடுவேலையும்,
களத்தினில் பகைவரை சிதைக்கும் கடுங்கண் யானையும்,
பகையரசனின் தலையை அலங்கரித்து விளங்கிய மணிமகுடத்தை சிதைத்துச், செய்த கழலையும் உடைய விச்சிக்கோவே!

இவரே=====> பாரிமகளிர்

இவர்கள்,
படர்ந்து விரிந்த முல்லைக் கொடி ஒன்று,
எந்த ஒரு புகழ் மாலையும் பாடிப், பரிசில் கேளாத போழ்தும் அதற்கு,
அழகிய வேலைப்பாடுடைய தன் தேரை பரிசாகக் கொடுத்து மகிழ்ந்த பாரியின் பிள்ளைகள்...

யானே பரிசிலன்=====> நாடு கிழவோனே!

நானோ இப் பரிசினை வைத்திருப்பவன்! மேலும், நானொரு அந்தணன்!
நீயோ, பகைவரை அடக்கி அவர்கள் பொருள் கொடுத்து வணங்கும் வீரமுடையவன்!

மேலும், அடங்காத மன்னவரையும் அடக்கியவனே,
எப்பொழுதும் மடங்காத விளைச்சல் நிலங்களையும் உடையவனே,
இவர்களை நான் கொடுக்கிறேன்!
நீ கொள்வாயாக!

அருஞ்சொற் பொருள்:-

நிவந்த= வளர்ந்த
கடுவன்= ஆண்குரங்கு
மந்தி= பெண்குரங்கு
சேண்= உயர்ச்சி
கழை= மூங்கில்
கறங்குமணி= ஒலியெழுப்பும் பரல்
வரிசை= சீர்வகை
கிழவன்= உடையவன்
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on October 19, 2013, 09:32:40 PM
புறநானூறு, 201. (இவர் என் மகளிர்)
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: இருங்கோவேள்.
திணை: பாடாண்
துறை: பரிசில் துறை.
==========================

`இவர் யார்?` என்குவை ஆயின், இவரே
ஊருடன் இரவலர்க்கு அருளித் தேருடன்
முல்லைக்கு ஈத்த செல்லா நல்லிசை
படுமணி யானைப் பறம்பின் கோமான்
நெடுமாப் பாரி மகளிர்; யானே

தந்தை தோழன்; இவர்என் மகளிர்;
அந்தணன் புலவன் கொண்டுவந் தனனே;
நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச்
செம்புபுனைந்து இயற்றிய சேண்நெடும் புரிசை
உவரா ஈகைத் துவரை யாண்டு

நாற்பத்து ஒன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே! விறற்போர் அண்ணல்,
தாரணி யானைச் சேட்டிருங் கோவே!
ஆண்கடன் உடைமையின் பாண்கடன் ஆற்றிய
ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்

யான்தர இவரைக் கொண்மதி; வான்கவித்து
இருங்கடல் உடுத்தஇவ் வையகத்து அருந்திறல்
பொன்படு மால்வரைக் கிழவ, வென்வேல்
உடலுநர் உட்கும் தானைக்
கெடல்அருங் குரைய நாடுகிழ வோயே!

அருஞ்சொற்பொருள்:-

செல்லா = தொலையாத
படுதல் = ஒலித்தல்
மா = பெருமை
தடவு = ஓம குண்டம்
புரிசை = மதில்
சேண் = உயர்
உவர்த்தல் = வெறுத்தல்
வேள் = வேளிர் குலத்தைச் சார்ந்தவன்
சேடு = பெருமை
ஆண் = தலைமை
ஒலியல் = தழைக்கை
மால் = உயர்ந்த
உடலுநர் = பகைவர்
உட்கும் = அஞ்சும்
குரை = பெருமை

இதன் பொருள்:-

இவர் யார்?=====> யானே

”இவர்கள் யார்?” என்று கேட்பாயாயின் , இவர்கள் தன்னுடைய ஊர்களையெல்லாம் இரவலர்க்கு அளித்ததோடு மட்டுமல்லாமல், முல்லைகொடிக்குத் தன் தேரையும் அளித்ததால் பெற்ற அழியாப் புகழையும், ஒலிக்கும் மணிகளை அணிந்த யானைகளையும் உடைய பறம்பு நாட்டின் தலைவனாகிய உயர்ந்த பெருமையுடைய பாரியின் மகளிர். நான்

தந்தை=====> யாண்டு

இவர்களின் தந்தையின் தோழன். ஆகவே, இவர்கள் எனக்கு மகளிர் (போன்றவர்கள்). நான் ஒரு அந்தணன்; மற்றும் ஒருபுலவன். நான் இவர்களை அழைத்து வந்தேன். வடக்கே இருந்த முனிவன் ஒருவன், எல்லாப் பக்கங்களிலும் மலைகளால் சூழப்பட்ட “தடவு” என்று சொல்லப்படும் இடம் ஒன்றில் வாழ்ந்தான். உன் முன்னோர்கள் அந்தத் தடவிலிருந்து வந்தவர்கள். நீ அவர்கள் வழியினன்; நீ செம்பால் அலங்கரிக்கப்பட்ட நெடிய உயர்ந்த மதிற்சுவர்களைக் கொண்ட கோட்டைகளையுடையவன்; விரும்பத்தக்க ஈகைத் தன்மையுடையவன்; துவரை நகரத்தை ஆண்ட

நாற்பத்து ஒன்பது=====> மாஅல்

நாற்பத்தொன்பது வழிமுறை வந்த வேளிருள்களுக்குள் சிறந்த வேள். போர்களில் வெற்றிபெற்ற தலைவ! மாலையணிந்த யானையையுடைய பெருமைமிக்க இருங்கோவேளே! நீ தலைவனின் கடமையை அறிந்து பாணர்களுக்கு உதவுபவன். தழைத்த மாலையையுடைய புலிகடிமாலே!

யான்தர=====> நாடுகிழ வோயே!

வானத்தின் வளைவுக்குள் பெரிய கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் அரிய வலிமையுடைய, பொன் விளையும் பெரிய மலைக்குத் தலைவ! வெற்றி பொருந்திய வேலும், பகைவர்கள் அஞ்சும் படையும், அழியாத பெருமையும் உடைய நாட்டுக்கு உரியவனே! நான் இவர்களை உனக்கு அளிக்கிறேன்; நீ இவர்களை ஏற்றுக்கொள்.

பாடலின் பின்னணி:-

பாரி இறந்தபின், பாரி மகளிரைத் தகுந்தவர்க்கு மணமுடிக்க விரும்பி அவர்களைப் பல குறுநிலமன்னர்களிடம் கபிலர் அழைத்துச் சென்றார். இப்பாடலில், கபிலர் பாரி மகளிரை இருங்கோவேளிடம் அழைத்துச் சென்று, அவர்களை அறிமுகப்படுத்தி, அவர்களை மணந்துகொள்ளுமாறு கூறுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

பல தமிழறிஞர்கள் பல்வேறு கருத்துகளையும் கற்பனைக் கதைகளையும் இருங்கோவேளின் வரலாற்றுடன் இணைத்துக் கூறியிருப்பதால், இருங்கோவேளின் வரலாறு தெளிவாகத் தெரியவில்லை. இப்பாடலில், “ வடபால் முனிவன் தடவினுட் தோன்றி” என்று கபிலர் கூறியிருப்பதற்குப் பலரும் பலவிதமான விளக்கங்களை அளிக்கிறார்கள். விசுவபுராண சாரம் என்னும் தமிழ் நூலையும் தெய்வீக உலா என்னும் நூலையும் ஆதாரமாக வைத்து, இங்கு முனிவன் என்று குறிபிடப்பட்டது சம்புமுனிவனாக இருக்கலாம் என்று டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர் கூறுகிறார். இப்பாடலில் “துவரை” என்று குறிப்பிடப்பட்டிருப்பது இந்தியாவின் வடக்குப் பகுதியில் இருந்த நகரம் என்றும் அந்த நகரத்திலிருந்து அகத்தியர் வேளிர்களைத் தமிழ் நாட்டிற்கு அழைத்து வந்ததாகவும் நச்சினினார்க்கினியார் குறிப்பிடுகிறார்.

மைசூர் அருகே உள்ள துவரை என்னும் நகரத்திலிருந்து ஆட்சி செய்த ஹொய்சள மன்னர்களின் முன்னோன் ஒருவன் சளன் என்ற பெயருடையவன். ஒரு நாள் அவன் காட்டுக்கு வேட்டையாடச் சென்ற பொழுது முயல் ஒன்று புலியை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தது. அவன் அப்புலியைத் தொடர்ந்து சென்றான். அங்கே ஒருமுனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். புலியக் கண்ட அந்த முனிவர், சளனைக் கண்டவுடன், “சளனே, அப்புலியைக் கொல்க” எனக் கட்டளையிட்டார். சளன் தன் வாளை உருவிப் புலியைக் கொன்றான். புலியைக் கொன்றதால் அவன் ஹொய்சளன் என்று அழைக்கப்பட்டான். இப்பாடலில் குறிப்பிடப்பட்டிருக்கும் முனிவரை இந்த முனிவரோடு தொடர்புபடுத்தி, “புலிகடிமால்” என்பது “ஹொய்சளன்’ என்பதின் தமிழ்மொழிபெயர்ப்பு என்று கொண்டு இருங்கோவேளை ஹொய்சள வழியனன் என்று கூறுவாரும் உளர்.

மேலே குறிப்பிடப்பட்ட கற்பனைக் கதைகளைவிட, அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் “வடபால் முனிவன் தடவினுட் தோன்றி” என்பதற்கும் “புலிகடிமால்” என்பதற்கும் அளிக்கும் விளக்கம் பகுத்தறிவுக்கு ஏற்றதாகவும் வரலாற்றுச் சான்றுகளோடு பொருந்துவதாகவும் உள்ளது. அவர் அளிக்கும் விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எல்லாப் பக்ககங்களிலும் மலைகளால் சூழப்பட்ட இடத்திற்குத் “தடவு” என்று பெயர். தமிழகத்தின் வடமேற்குப்பகுதியில் (தற்போது கர்நாடக மாநிலத்தில்) இருந்த அத்தகைய தடவு ஒன்றில் முனிவன் ஒருவன் வாழ்ந்துவந்ததால் அந்தத் தடவுக்கு ”முனிவன் தடவு” என்ற பெயர் வழங்கப்பட்டிருக்கலாம். அந்த ”முனிவன் தடவு”ப் பகுதியை ஆண்ட குறுநிலமன்னன், புலிநாடென்று வழங்கப்பட்ட கன்னட நாட்டு வேந்தனை வென்றதால் “புலிகடிமால்” என்ற பட்டம் பெற்றிருக்கலாம். அல்லது, அந்தத் தடவுப் பகுதியை ஆண்ட குறுநில மன்னன் ஆந்திர சாதவாகன வேந்தருள் ஒருவனான புலிமாய் என்பவனை வென்றதால் “புலிகடிமால்” என்ற பட்டம் பெற்றிருக்கலாம். சாதவாகனர்களுடைய ஆட்சி கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே தொடங்கியது. அந்நாளில் துவராவதி நகரம் சாதவாகனர்களின் நாட்டில் இருந்தது. சாதவாகன மன்னனை வென்ற இருன்கோவேளின் முன்னோர்கள் துவராவதி என்னும் துவரை நகரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்ததை இப்பாடலில் “துவரை யாண்டு நாற்பத்து ஒன்பது வழிமுறை வந்த வேளிருள் வேள்” என்று குறிப்பிடுகிறார் என்பது பொருத்தமானதாகத் தோன்றுகிறது.

அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை அவர்களின் கருத்துப்படி, வேளிர் குலத்தினர் அக்காலத் தமிழகத்தின் வடமேற்குப் பகுதியில் தொடங்கி பிற்காலத்தில் தமிழகத்தில் பல இடங்களில் குறுநிலமன்னர்களாக ஆட்சி புரிந்துவந்தனர் என்பது தெரிய வருகிறது. அந்த வேளிர்குலத்தை சார்ந்தவன்தான் இப்பாடலில் குறிப்பிடப்பட்டிருக்கும் இருங்கோவேள்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on October 19, 2013, 09:39:26 PM
புறநானூறு, 202. (கைவண் பாரி மகளிர்)
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: இருங்கோவேள்.
திணை: பாடாண்
துறை: பரிசில் துறை.
==========================

வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்டக்
கட்சி காணாக் கடமா நல்லேறு
கடறுமணி கிளரச் சிதறுபொன் மிளிரக்
கடிய கதழும் நெடுவரைப் படப்பை
வென்றி நிலை இய விழுப்புகழ் ஒன்றி

இருபால் பெயரிய உருகெழு மூதூர்க்
கோடிபல அடுக்கிய பொருள்நுமக்கு உதவிய
நீடுநிலை அரையத்துக் கேடும் கேளினி
நுந்தை தாயம் நிறைவுற எய்திய
ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்

நும்போல் அறிவின் நுமருள் ஒருவன்
புகழ்ந்த செய்யுள் கழாஅத் தலையை
இகழ்ந்ததன் பயனே; இயல்தேர் அண்ணல்!
எவ்வி தொல்குடிப் படீஇயர், மற்றுஇவர்
கைவண் பாரி மகளிர் என்றஎன்

தேற்றாப் புன்சொல் நோற்றிசிற் பெரும!
விடுத்தனென்; வெலீஇயர்நின் வேலே; அடுக்கத்து
அரும்புஅற மலர்ந்த கருங்கால் வேங்கை
மாத்தகட்டு ஒள்வீ தாய துறுகல்
இரும்புலி வரிப்புறம் கடுக்கும்
பெருங்கல் வைப்பின் நாடுகிழ வோயே!

அருஞ்சொற்பொருள்:-

வெட்சி = ஒருசெடி
கானம் = காடு
கட்சி = புகலிடம்
கடமா = காட்டுப் பசு, மத யானை
கடறு = காடு
கிளர்தல் = எழுதல்
கடி = மிகுதி
கதழ்தல் = விரைதல்
படப்பை = தோட்டம், பயிர் நிலம், நாடு
உரு = அச்சம்
தாயம் = உரிமை
ஒலியல் = தழைக்கை
மா = கறுப்பு
அடுக்கம் = மலைச்சாரல்
மா = கரிய
தகடு = பூவின் புறவிதழ்
வீ = மலர்
துறுகல் = பாறை
கடுக்கும் = போலும்
கல் = மலை

இதன் பொருள்:-

வெட்சி=====> ஒன்றி

வெட்சிச் செடிகள் நிறைந்த காட்டில் வேடர்களால் விரட்டப்பட்ட மதங்கொண்ட யானை புகலிடம் இல்லாமல், காட்டில் மணியோசையை எழுப்பி, பொன்னின் தூள்கள் சிதறி மிளிருமாறு, வெகு விரைவாக ஓடும் நெடிய மலைப் பக்கத்தில் உள்ள நாட்டில் வெற்றி நிலைபெற்ற, சிறந்த புகழ் பொருந்திய

இருபால்=====> மாஅல்

சிற்றரையம், பேரரையம் என்று அஞ்சத்தக்க இரண்டு பழைய ஊர்கள் இருந்தன. கோடிக்கணக்கில் பொருள் கொடுத்து உன் முன்னோர்களுக்கு உதவி, உயர்ந்த நிலையில் இருந்த அந்த அரையம் ஏன் அழிந்தது என்று கூறுகிறேன்; கேட்பாயாக. உன் தந்தையாரிடமிருந்து உரிமையாகப் பெருமளவில் செல்வங்களைப் பெற்று, தழைத்த மாலையுடன் உள்ள புலிகடிமால்!

நும்போல்=====> என்றஎன்

உன்னைப்போன்ற அறிவுடைய உன் முன்னோருள் ஒருவன், புகழ் மிக்க செய்யுள் இயற்றும் கழாத்தலையாரை இகழ்ந்ததின் விளைவுதான் அரையத்தின் அழிவு. நன்கு செய்யப்பட்ட தேர்களை உடையவனே! ”இவர்கள் எவ்வி என்னும் பழங்குடியைச் சார்ந்தவர்கள்; வள்ளன்மை மிகுந்த பாரியின் மகளிர்”

தேற்றா=====> நாடுகிழ வோயே

என்ற என் தெளிவில்லாத சொற்களைப் பொறுத்துக்கொள்வாயாக! மலைச்சாரலில், அரும்புகள் அனைத்தும் மலர்ந்த, கரிய அடிமரத்தையுடைய வேங்கையின் கரிய புறவிதழ்களையுடைய ஒளிபொருந்திய பூக்கள் பரவிக் கிடக்கும் பாறை கரிய வரிகளையுடைய புலியின் முதுகைப்போல் உள்ளது. அத்தகைய பெரிய மலைகளுள்ள இடங்களில் ஊர்களையுடைய நாட்டுக்கு உரியவனே! நான் செல்கிறேன். உன் வேல் வெற்றி பெறட்டும்!

பாடலின் பின்னணி:-

பாரி மகளிரை மணந்துகொள்ளுமாறு கூறிய கபிலரின் வேண்டுகோளுக்கு இருங்கோவேள் இணங்க மறுத்தான். அதனால் கோபமடைந்த கபிலர், “வேளே! உன் நாட்டில் சிற்றரையம், பேரரையம் என்று இரண்டு சிறப்பான ஊர்கள் இருந்தன. இன்று அவ்வூர்கள் அழிந்துவிட்டன. உன் முன்னோர்களில் ஒருவன் கழாத்தலையார் என்னும் புலவரை இகழந்தான். அதனால்தான் அவ்வூர்கள் அழிந்தன. நான் இவர்களின் சிறப்பைக் கூறி இவர்களை மணந்துகொள்ளுமாறு உன்னை வேண்டினேன். நீ என் சொல்லை இகழ்ந்தாய்; நான் செல்கிறேன்; உன் வேல் வெற்றி பெறட்டும்” என்று இப்பாடலில் கூறுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

இப்பாடலில், கபிலர் பல கருத்துகளை மறைமுகமாகக் குறிப்பிடுகிறார். இருங்கோவேளின் முன்னோர்களில் ஒருவன் கழாத்தலையாரை இகழ்ந்ததால் அரையம் அழிந்தது என்பதைச் சுட்டிக்காட்டி, தன் சொல்லைக் கேளாமல் தன்னை இகழ்ந்ததால் இருங்கோவேளின் நாட்டுக்குக் கேடு வரும் என்று கூறாமல் கூறுகிறார். அடுத்து, அரையத்தின் அழிவைப் பற்றிக் கூறும்பொழுது, “நும்போல் அறிவின் நுமருள் ஒருவன்” என்று இருங்கோவேளின் முன்னோர்களின் ஒருவன் இருங்கோவேளைப்போல் அறிவில்லாதவன் என்று மறைமுகமாகக் குறிப்பிடுகிறார். ”நுந்தை தாயம் நிறைவுற எய்திய” என்று அவனுடைய நாடு மற்றும் செல்வம் அனைத்தும் அவன் தந்தையால் அவனுக்கு அளிக்கப்பட்டதே ஒழிய அவன் தன் சொந்த முயற்சியால் எதையும் பெறவில்லை என்று மறைமுகமாகக் கூறுகிறார். தன்னுடன் வந்த பெண்கள் பாரியின் மகளிர் என்பதால் அவர்களை மணந்தால் மூவேந்தருடன் பகை வரக்கூடும் என்ற அச்சத்தால் இருங்கோவேள் அவர்களை மணக்க மறுக்கிறான் என்று கபிலர் கருதுகிறார். அஞ்ச வேண்டாதவற்றை எண்ணி அவன் அஞ்சுகிறான் என்பதை, வேங்கைப் பூக்கள் பரவிக் கிடக்கும் பாறை, புலியின் முதுகுபோல் இருக்கிறது என்று மறைமுகமாக அவன் அச்சத்தைச் சுட்டிக் காட்டுகிறார். கடைசியாக, “வெலீயர் நின் வேல்” என்று கபிலர் கூறுவது, வாழ்த்துவதுபோல் இருந்தாலும், அது “கெடுக உன் வேல்” என்ற எதிர்மறைப் பொருளில் ”குறிப்பு மொழி”யாகக் கூறியதுபோல் (பாடல் 196-இல் குறிப்பு மொழி என்பதற்கு விளக்கம் இருப்பதைக் காண்க.) தோன்றுகிறது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on October 19, 2013, 09:41:51 PM
புறநானூறு, 203. (இரவலர்க்கு உதவுக)
பாடியவர்: ஊன்பொதி பசுங்குடையார்.
பாடப்பட்டோன்: சோழன் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி.
திணை: பாடாண்
துறை: பரிசில் துறை.
==========================

கழிந்தது பொழிந்ததென வான்கண் மாறினும்
தொல்லது விளைந்தென நிலம்வளம் கரப்பினும்
எல்லா உயிர்க்கும் இல்லால் வாழ்க்கை
இன்னும் தம்மென எம்மனோர் இரப்பின்
முன்னும் கொண்டிர்என நும்மனோர் மறுத்தல்
இன்னாது அம்ம; இயல்தேர் அண்ணல்!

இல்லது நிரப்பல் ஆற்றா தோரினும்
உள்ளி வருநர் நசையிழப் போரே
அனையையும் அல்லை நீயே, ஒன்னார்
ஆர்எயில் அவர்கட் டாகவும் நுமதுஎனப்
பாண்கடன் இறுக்கும் வள்ளியோய்!
பூண்கடன் எந்தை நீஇரவலர் புரவே

அருஞ்சொற்பொருள்:-

வான் = மேகம்
கரத்தல் = மறைத்தல், கொடாது இருத்தல்
ஆல் - அசைச் சொல்
தம் = தருக
அம்ம = கேளாய் (கேட்டற்பொருளைத் தழுவி வரும் இடைச்சொல்)
நசைதல் = விரும்ம்புதல், அன்பு செய்தல்
ஆர் = அரிய
எயில் = மதில்
இறுத்தல் = செலுத்துதல், கடமை ஆற்றுதல்
புரவு = பாதுகாப்பு

இதன் பொருள்:-

கழிந்தது=====> அண்ணல்!

கடந்த காலத்தில் பொழிந்தோம் என்று மேகங்கள் மழை பொழியாமல் இருந்தாலோ முற்காலத்தில் விளைச்சலை அளித்தோம் என்று எண்ணி நிலம் விளைச்சலை அளிக்காமல் இருந்தாலோ உயிர்களுக்கு எல்லாம் வாழ்க்கை இல்லை. அதுபோல், மீண்டும் எமக்குப் பரிசில் அளிக்குமாறு எங்களைப் போன்றவர்கள் கேட்டால், “நீங்கள் முன்பே பரிசில் பெற்றுக்கொண்டீர்கள்” என்று மறுத்தல் கொடியது. நான் சொல்வதைக் கேள்! நன்கு செய்யப்பட்ட தேர்களையுடைய தலைவா!

இல்லது=====> புரவே

தம்மிடத்துள்ள வறுமையினால் தம்மை நாடி வந்தவர்க்குப் பரிசளிக்க இயலாதவர்களைவிட, தம்மை நாடிவந்தவர்களுக்குப் பரிசளிக்கக் கூடிய செல்வம் இருந்தும் பரிசளிக்காதவர்கள், தம்மை நாடிவந்தவர்களால் விரும்பப்படுவதை இழந்தவர்களாவார்கள். ஆனால், நீ அத்தகையவன் அல்லன். நீ, பகைவருடைய அரண்கள் அவர்களிடம் இருக்கும்பொழுதே அவர்களின் பொருளைப் பாணர்களுக்கு கொடுப்பதைக் கடமையாகக்கொண்ட வள்ளன்மை உடையவன். எம் தலைவா! இரப்போரைப் பாதுகாத்தலை நீ கடமையாகக் கொள்வாயாக.

பாடலின் பின்னணி:-

ஊன்பொதி பசுங்குடையார் முன்பு ஒருமுறை சோழன் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னியைக் கண்டு பரிசில் பெற்றார். அவர் மீண்டும் அவனைக் காண வந்தார். இம்முறை, சோழன் அவருக்கும் மற்ற புலவர்களுக்கும் பரிசில் அளிக்கக் கால தாமதமாக்கினான். அதனால் அவனை நாடி வந்த புலவர்கள் வருத்தமடைந்தனர். இவ்வாறு பரிசில் அளிக்காமல் நீட்டிப்பது சோழன் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னியின் இயல்பு அல்ல என்பதை ஊன்பொதி பசுங்குடையார் அறிந்திருந்தார். “முன்பே மழை பொழிந்தோம் என்று நினைத்து மேகங்கள் மழை பொழியாமல் இருந்தாலோ அல்லது முன்பே விளைச்சலை அளித்தோம் என்று நிலம் மீண்டும் பயிர்களை விளைவிக்காமல் இருந்தாலோ உலகில் உயிர்களுக்கு வாழ்க்கை இல்லை. அதுபோல், முன்பே பரிசளித்ததால் இப்போது நீ பரிசளிக்காமல் இருப்பது முறையன்று . நீ இரவலர்க்குக் கொடுக்காமல் இருப்பவன் அல்லன். இரவலரைப் பாதுகாப்பது உன் கடமையாகும் “ என்று இப்பாடலில் சோழனுக்கு ஊன்பொதி பசுங்குடையார் அறிவுரை கூறுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on October 19, 2013, 09:47:34 PM
புறநானூறு, 204. (அதனினும் உயர்ந்தது)
பாடியவர்: கழைதின் யானையார்.
பாடப்பட்டோன்: வல்வில் ஓரி.
திணை: பாடாண்
துறை: பரிசில் துறை.
==========================

ஈஎன இரத்தல் இழிந்தன்று அதன்எதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதன்எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று;
தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணார் ஆகுப நீர்வேட் டோரே;
ஆவும் மாவும் சென்றுஉணக் கலங்கிச்

சேறொடு பட்ட சிறுமைத்து ஆயினும்
உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
உள்ளிச் சென்றோர் பழியலர்; அதனால்
புலவேன் வாழியர் ஓரி; விசும்பின்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய் நின்னே

அருஞ்சொற்பொருள்:-

இழிந்தன்று = இழிந்தது
உயர்ந்தன்று = உயர்ந்தது
இமிழ் = ஒலி
வேட்டல் = விரும்பல்
ஆ = பசு
மா = விலங்கு
அதர் = வழி
புள் = பறவை
புலத்தல் = வெறுத்தல்
கருவி வானம் = கரிய நிறமுடைய மேகம்

இதன் பொருள்:-

ஈஎன=====> கலங்கி

ஒருவனிடம் சென்று இரத்தல் இழிந்தது. அவ்வாறு ஒருவன் கேட்ட பிறகு, கொடுக்கமாட்டேன் என்று மறுப்பது அதைவிட இழிந்தது. ஒருவன் இரப்பதன்முன் இப்பொருளை எடுத்துக்கொள் என்று கொடுப்பது உயர்ந்தது. அப்படிக் கொடுத்த பிறகு அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறுவது அதைவிட உயர்ந்தது. நீர் வேட்கை (தாகம்) எடுத்தால் தெளிந்த நீர் பரப்பையுடைய கடல் நீரைக் குடிக்க முடியாது. பசுக்களும் மற்ற விலங்குகளும் உண்ணுவதால்

சேறொடு=====> நின்னே

சேறுடன் கலங்கிய நீர் சிறிதளவே இருந்தாலும் அதைத் தேடிப் பல வழிகளில் பலரும் செல்வர்.
உன்னைப் போன்றவர்களிடத்துப் பரிசில் பெறச் செல்பவர்கள் தமக்குப் பரிசில் கிடைக்காவிட்டால், தாம் புறப்பட்ட நேரத்தையும் சகுனத்தையும் பழிப்பார்களே அன்றி, உன்னைப்போல் வரையாது கொடுக்கும் வள்ளல்களைப் பழிக்க மாட்டார்கள். ஆகவே, நீ எனக்குப் பொருள் வழங்கவில்லை என்றாலும் நான் உன்னை வெறுக்க மாட்டேன். ஓரி, நீ வாழ்க! வானத்தில் உள்ள கரிய மேகம் மழைபொழிவதுபோல் குறையாது பரிசளிக்கும் வள்ளலே!

பாடலின் பின்னணி:-

வல்வில் ஓரி கொல்லிமலைப் பகுதியை ஆண்ட குறுநில மன்னன். அவன் கடையெழு வள்லல்களில் ஒருவன். அவனை வன்பரணர் என்ற புலவர் புகழ்ந்து பாடியதை பாடல்கள் 152 மற்றும் 153 ஆகியவற்றில் காணலாம். ஒருகால், கழைதின் யானையார் வல்வில் ஓரியைக் காணவந்தார். அச்சமயம் வல்வில் ஓரி அவருக்குப் பரிசு அளிக்கவில்லை. அவன் பரிசளிக்கவிட்டாலும் அவருக்கு அவன் மீது வெறுப்பில்லை என்பதை இப்பாடலில் கூறுகிறார். மற்றும், இரப்போர்க்கும் அளிப்போர்க்கும் உள்ள ஏற்றத் தாழ்வுகளையும் இப்பாடலில் குறிப்பிடுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on October 19, 2013, 09:51:28 PM
புறநானூறு, 205. (பெட்பின்றி ஈதல் வேண்டலம்)
பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார்.
பாடப்பட்டோன்: கடிய நெடுவேட்டுவன்.
திணை: பாடாண்
துறை: பரிசில் துறை.
==========================

முற்றிய திருவின் மூவர் ஆயினும்
பெட்பின்றி ஈதல் யாம்வேண் டலமே;
விறற்சினம் தணிந்த விரைபரிப் புரவி
உறுவர் செல்சார்வு ஆகிச் செறுவர்
தாளுளம் தபுத்த வாள்மிகு தானை

வெள்வீ வேலிக் கோடைப் பொருந
சிறியவும் பெரியவும் புழைகெட விலங்கிய
மான்கணம் தொலைச்சிய கடுவிசைக் கதநாய்
நோன்சிலை வேட்டுவ, நோயிலை யாகுக;
ஆர்கலி யாணர்த் தரீஇய கால்வீழ்த்துக்

கடல்வயிற் குழீஇய அண்ணலங் கொண்மூ
நீரின்று பெயரா ஆங்குத் தேரொடு
ஒளிறுமறுப்பு ஏந்திய செம்மற்
களிறின்று பெயரல பரிசிலர் கடும்பே

அருஞ்சொற்பொருள்:-

பெட்பு = அன்பு, விருப்பம்
விறல் = வெற்றி, வீரம்
பரிதல் = ஓடுதல்
புரவி = குதிரை
உறுவர் = பகைவர்
சார்வு = புகலிடம்
தாள் உளம் = முயற்சியுடய உள்ளம்
தபுதல் = கெடுதல்
வீ = மலர்
புழை = துளை, வழி
கதம் = சினம்
சிலை = வில்
ஆர்கலி = மிகுந்த ஒலி
தரீஇ = தந்து
குழீஇய = திரண்ட
கொண்மூ = மேகம்
கடும்பு = சுற்றம்

இதன் பொருள்:-

முற்றிய=====> தானை

நிறைந்த செல்வத்தை உடைய மூவேந்தராயினும், எங்கள் மீது விருப்பமில்லாது அவர்கள் அளிக்கும் பரிசுகளை நாங்கள் விரும்பமாட்டோம். வெற்றி பெறுவதற்காகக் கொண்ட சினம் தணிந்து, விரைந்து ஓடும் குதிரைகளையுடைய உன் பகைவர்கள் அஞ்சி வந்து உன்னை அடைந்தால் நீ அவர்களுக்குப் புகலிடமாய் விளங்குகிறாய். அவ்வாறன்றி, முயற்சியுடன் போர் புரிந்தவர்களின் உள்ளத்தின் வலிமையை அழித்த வாட்படையை உடையவன் நீ

வெள்வீ =====> வீழ்த்து

வெண்மையான பூக்களையுடைய முல்லையை வேலியாகக்கொண்ட கோடை என்னும் மலைக்குத் தலைவன் நீ. சிறியதாகவும் பெரியதாகவும் உள்ள வழிகளில் குறுக்கே வந்த மான்களின் கூட்டத்தை அழித்த விரைந்து செல்லும் சினம்கொண்ட நாய்களையும் வலிய வில்லையும் உடைய வேட்டுவனே! நீ துன்பமில்லாமல் வாழ்வாயாக! மிகுந்த ஒலியுடன் புதுமழையைத் தருவதற்காகக் காலூன்றிக்

கடல்=====> கடும்பே

கடலின்மேல் கூடிய மேகம் நீரைக் குடிக்காமல் போகாது. அதுபோல், தேர்களையும், வெண்மையான தந்தங்களையுடைய யானைகளையும் பரிசாகப் பெறாது பரிசிலர் சுற்றம் வெறிதே செல்லமாட்டார்கள்.

பாடலின் பின்னணி:-

ஒருசமயம், பெருந்தலைச் சாத்தனார் கடிய நெடுவேட்டுவனைக் காண வந்தார். எக்காரணத்தாலோ, அவன் அவருக்குப் பரிசில் அளிப்பதற்கு கால தாமதம் செய்தான். அதனால், வருத்தமுற்ற பெருந்தலைச் சாத்தனார், “பெரும் செல்வமுடைய மூவேந்தராயினும் , அவர்கள் விருப்பமின்றி அளிக்கும் கொடையை யாம் விரும்பமாட்டோம். உன்னிடம் வரும் பரிசிலர்கள், மேகங்கள் கடலிலிருந்து நீரைக் கொண்டு செல்வதுபோல் பரிசு பெறாமல் செல்வதில்லை. ஆனால், இப்பொழுது நீ எனக்குப் பரிசில் கொடுக்கக் கால தாமதம் செய்தாய்.” என்று கூறி விடை பெறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

சிறப்புக் குறிப்பு:-

பெருந்தலைச் சாத்தனார் பரிசு பெறாமல் கடிய நெடுவேட்டுவனிடமிருந்து விடை பெறுகிறார். அவனிடம் பரிசு பெறுவதற்காக வந்த இரவலர் கூட்டம் தேர்களையும் யானைகளையும் பெறாமல் செல்லமாட்டர்கள் என்று கூறித் தான் பரிசில்லாமல் செல்வதைச் சுட்டிக் காட்டுகிறார். மற்றும், அவர் “நோயிலை ஆகுக” என்று கூறுவது குறிப்பு மொழியால் அவனை இகழ்ந்ததுபோல் தோன்றுகிறது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on October 19, 2013, 09:59:13 PM
புறநானூறு, 206. (எத்திசைச் செலினும் சோறே)
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பாடாண்
துறை: பரிசில் துறை.
==========================

வாயி லோயே! வாயிலோயே!
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித்தாம்
உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து
வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கைப்
பரிசிலர்க்கு அடையா வாயி லோயே!

கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி
தன்அறி யலன்கோல்? என்னறி யலன்கொல்?
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென
வறுந்தலை உலகமும் அன்றே; அதனால்,
காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை;

மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத்து அற்றே
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே

அருஞ்சொற்பொருள்:-

வள்ளியோர் = வரையாது கொடுப்போர்
வயங்குதல் = விளங்குதல், மிகுதல்
உரன் = வலிமை (மன வலிமை)
வரிசை = தகுதி
கடு = விரைவு
மான் = குதிரை
தோன்றல் = அரசன்
வறுந்தலை = வெற்றிடம்
காவுதல் = சுமத்தல்
கலம் = யாழ்
கலப்பை = கலம் + பை = யாழ் மற்றும் பல பொருள்களையும் தூக்கிச் செல்வதற்குப் பயன்படும் பை
மழு = கோடரி

இதன் பொருள்:-

வாயி லோயே=====> வாயி லோயே

வாயிற் காவலனே! வாயிற் காவலனே! வரையாது கொடுக்கும் வள்ளல்களின் காதுகளில், விளங்கிய சொற்களை விதைத்துத் தாம் விரும்பிய பரிசிலை விளைவிக்கும் மனவலிமையோடு, தம் தகுதிக்கேற்பப் பரிசுபெற விழையும் பரிசிலர்க்குக் கதவுகளை மூடாத வாயிற் காவலனே!

கடுமான்=====> சோறே

விரைந்தோடும் குதிரைகளையுடைய அரசனாகிய அதியமான் நெடுமான் அஞ்சி தன்னை அறியாதவனா? அல்லது, என்னை அறியாதவனா? அறிவும் புகழுடையவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதனால் உலகம் வெற்றிடமாகிவிடவில்லை. ஆகவே, என் யாழையும், மூட்டை முடிச்சுகளையும் தூக்கிக்கொண்டு நான் செல்கிறேன். மரம் வெட்டும் தச்சனின் திறமை வாய்ந்த சிறுவர்கள் கோடரியுடன் செல்லும் காடு போன்றது இவ்வுலகம். நான் எங்கே சென்றாலும் அங்கே சோறு (பரிசில்) கிடைக்காமல் போகாது.

பாடலின் பின்னணி:-

அதியமான் கடையெழு வள்ளல்களுள் ஒருவன். அவனது கொடைப் புகழ் தமிழகமெங்கும் பரவியிருந்தத்து. பல ஊர்களிலிருந்தும் அவனைக் காணப் புலவர்களும், பாணர்களும், பரிசிலர்களும் வந்தவண்ணம் இருந்தனர். அதியமானின் புகழைக் கேள்விப்பட்ட அவ்வையார், பரிசிலர் பலரோடும் சேர்ந்து அதியமானைக் காண வந்தார். அவ்வையாரோடு வந்த பரிசிலர் அனைவரும் அதியமானிடம் பரிசு பெற்று விடைபெற்றுச் சென்றனர். அவ்வையாரின் புலமையையும் திறமையையும் கேள்விப்பட்ட அதியமான், அவரைத் தன்னுடன் சிலகாலம் தங்க வைக்க வேண்டும் என்று விரும்பினான். அவருக்குப் பரிசு அளித்தால் அவர் தன் அரண்மனையைவிட்டுச் சென்றுவிடுவார் என்று எண்ணி அவ்வையாருக்குப் பரிசளிக்காமலும் தன்னை காண்பதற்கு அவருக்கு வாய்ப்பு அளிக்காமலும் அதியமான் காலம் கடத்தினான். அதியமான் பரிசளிக்காமல் இருப்பது, தன்னைக் காணாது இருப்பது போன்ற செயல்களின் உள்நோக்கம் அவ்வையாருக்குப் புரியவில்லை. ஆகவே, அவர் தன்னை அதியமான் அவமதிப்பதாக எண்ணி, அதியமான் மீது கோபம் கொண்டார். ஒருநாள், அதியமானைச் சந்திப்பதற்கு அரன்மனைக்குச் சென்றார். ஆனால், வாயிற்காவலன் எப்பொழுதும்போல், அதியமானைக் காணவிடாமல்அவ்வையாரைத் தடுத்து நிறுத்தினான். ”நீ பரிசிலர்க்கு எப்பொழுதும் வாயிற்கதவை அடைப்பதில்லை; ஆனால், எனக்கு மட்டும் வாயிற் கதவை அடைக்கிறாய்; அதனால் எனக்கு அதியமானைக் காண வாய்ப்பில்லை; அதியமான் சொல்லித்தான் நீ இவ்வாறு செய்கிறாய்; உன் அரசனாகிய அதியமான் தன்னை அறியாதவனா? அல்லது என்னை அறியாதவனா? நான் சோற்றுக்காகவா இங்கே தங்கியிருக்கிறேன்? நான் இனிமேல் இங்கே இருக்கப் போவதில்லை. நான் என்னுடைய யாழையும் மூட்டை முடிச்சுகளையும் தூக்கிக்கொண்டு புறப்படப்போகிறேன். அறிவும் திறமையும் உடைவர்களுக்கு எங்கு சென்றாலும் சோறு கிடைக்கும்.” என்று வாயிற்காவலனிடம் கூறினார். இதை அறிந்த அதியமான், அவ்வையாருக்கு மிகுந்த அளவில் பரிசளித்துத் தன் அரசவைப் புலவராக நீண்டகாலம் தன்னுடனேயே இருக்கச்செய்தான்.

சிறப்புக் குறிப்பு:-

பரிசிலர்களுக்குச் சிறுவர்களும், கல்வி, திறமை ஆகியவற்றிற்கு கோடரியும், சோற்றிற்கு காட்டிலுள்ள மரமும் உவமை என்று கொள்க.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on October 19, 2013, 10:06:25 PM
புறநானூறு, 207. (வருகென வேண்டும்)
பாடியவர்: பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன்: இளவெளிமான்.
திணை: பாடாண்
துறை: பரிசில் துறை.
==========================

எழுஇனி நெஞ்சம்; செல்கம் யாரோ
பருகு அன்ன வேட்கை இல்வழி
அருகிற் கண்டும் அறியார் போல
அகம்நக வாரா முகன்அழி பரிசில்
தாள் இலாளர் வேளார் அல்லர்

வருகென வேண்டும் வரிசை யோர்க்கே
பெரிதே உலகம்; பேணுநர் பலரே;
மீளி முன்பின் ஆளி போல
உள்ளம் உள்அவிந்து அடங்காது வெள்ளென
நோவா தோன்வயின் திரங்கி
வாயா வன்கனிக்கு உலமரு வோரே

அருஞ்சொற்பொருள்:-

செல்கம் = செல்வோம்
பருகுதல் = குடித்தல்
பருகு அன்ன வேட்கை = நீர் வேட்கை உடையவன் நீரைக் கண்டவுடன் குடிப்பது போல், கண்டவுடன் மிகுந்த அன்பு காட்டும் பண்பு
நக = மகிழ
அழிதல் = நிலைகெடுதல்
தாள் = முயற்சி
வேளார் = விரும்ப மாட்டர்கள்
வரிசையோர் = பரிசிலர்
மீளி = வலிமை
முன்பு = வலிமை
ஆளி = சிங்கம்
வெள்ளென = கண்டோர் யாவருக்கும் தெரியுமாறு
வயின் = இடம்
திரங்குதல் = தளர்தல்
வாயா வன்கனி = நன்றாகப் பழுக்காமல் கன்றிய கனி
உலமரல் = திரிதல், சுழல்தல்

இதன் பொருள்:-

எழுஇனி=====> அல்லர்

மிகுந்த விருப்பமில்லாமல், கண்டும் காணாதுபோல் இருந்து, உள்ளத்தில் மகிழ்ச்சியில்லாமல், முகம் திரிந்து தரும் பரிசிலை முயற்சி இல்லாதவர்கள்தான் விரும்புவர்.

வருகென=====> உலமரு வோரே

வரும்பொழுது, “வருக, வருக” என்று எம்மை வரவேற்க வேண்டும். தகுதி உடையோர்க்கு இந்த உலகம் பெரியது; எங்களை விரும்புவோர் பலரும் உள்ளனர். வலிமை மிகுந்த சிங்கம்போல் ஊக்கம் குறையாது, என் நெஞ்சமே! இப்பொழுதே நீ எழுவாயாக; நாம் செல்வோம். கண்டோர் யாவருக்கும் தெரியுமாறு, எம்மைக் கண்டு இரக்கம் கொள்ளாதவரிடத்து வருந்திநின்று, கனியாத கனியை அடைய அலைபவர் யாரோ?

பாடலின் பின்னணி:-

புலவர் பெருஞ்சித்திரனார் மிகவும் வறுமையில் வாடியவர். தம் வறுமையைத் தீர்ப்பதற்காகக் கொடை வள்ளலாகிய வெளிமானைக் காணச் சென்றார். இவர் வெளிமானின் அரண்மனைக்குச் சென்ற சமயத்தில், வெளிமான் இறக்கும் தருவாயில் இருந்தான். அவன், தன் தம்பியாகிய இளவெளிமானிடம், பெருஞ்சித்திரனார்க்குத் தகுந்த பரிசில் அளிக்குமாறு கூறிய பின்னர் இறந்தான். ஆனால், இளவெளிமான் புலவர்களின் தகுதி அறிந்து பரிசு கொடுக்கும் ஆற்றல் இல்லாதவன். இளவெளிமான், பெருஞ்சித்திரனாரைக் காணும்போது காணாததுபோல் நடந்துகொண்டான். அவரைக் கண்டாலும், அவனிடத்தில் முகமலர்ச்சி இல்லை; அவரை முறையாக வரவேற்கவில்லை. இளவெளிமானின் இத்தகைய செயல்களால் வருத்தமடைந்த புலவர் பெருஞ்சித்திரனார், இப்பாடலில் தம் மனவருத்தத்தை வெளிப்படுத்துகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

திருவள்ளுவர் “பருகுவார் போலினும்” என்ற சொற்றொடரை

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது. (குறள் - 811)

என்னும் குறளில் ”அன்பின் மிகுதியால் கண்டவுடன் குடித்துவிடுவார் போல் “ என்ற பொருளில் பயன்படுத்தியிருப்பது காண்க.

உள்ளன்பில்லாமல், முக மலர்ச்சியில்லாமல் பெருஞ்சித்திரனாரின் நெஞ்சத்தைப் புண்படுத்திய இளவெளிமானின் செயல், வள்ளுவர் விருந்தோம்பல் என்னும் அதிகாரத்தில்,

மோப்பக் குழையும் அனிச்சம்; முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து. (குறள் - 90)

என்று கூறும் குறளுக்கு ஒர் எடுத்துக்காட்டு
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on October 19, 2013, 10:10:00 PM
புறநானூறு, 208. (வாணிகப் பரிசிலன் அல்லேன்)
பாடியவர்: பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பாடாண்
துறை: பரிசில் துறை.
==========================

குன்றும் மலையும் பலபின் ஒழிய
வந்தனென் பரிசில் கொண்டனென் செலற்குஎன
நின்ற என்நயந்து அருளி இதுகொண்டு
ஈங்கனம் செல்க தான்என என்னை
யாங்குஅறிந் தனனோ தாங்கரும் காவலன்?

காணாது ஈத்த இப்பொருட்கு யானோர்
வாணிகப் பரிசிலன் அல்லேன்; பேணித்
தினையனைத்து ஆயினும் இனிதுஅவர்
துணைஅளவு அறிந்து நல்கினர் விடினே

அருஞ்சொற்பொருள்:-

பின் ஒழிதல் = கடத்தல்
ஈங்கனம் = இங்ஙனம், இவ்வாறு
யாங்கு = எவ்வாறு
தாம்க்குதல் = தடுத்தல்
காவலன் = மன்னன்
பேணல் = விரும்பல்
துணை = அளவு

இதன் பொருள்:-

குன்றும்=====> காவலன்

நான் பல குன்றுகளையும் மலைகளையும் கடந்து பரிசில் கொண்டு செல்வதற்கு வந்தேன் என்று கூறிய என் மீது அன்புகொண்டு, “இப்பொருளைக் கொண்டு இவ்வாறு செல்க” என்று பகைவரால் தடுத்தற்கரிய அரசன் அதியமான் கூறுகின்றானே! என்னைப் பற்றி அவனுக்கு என்ன தெரியும்?

காணாது=====> விடினே

என்னைக் காணாமல் அவன் அளித்த பொருளை ஏற்றுக்கொள்வதற்கு நான் ஊதியம் மட்டுமே கருதும் வாணிகப் பரிசிலன் அல்லேன். என்னை விரும்பி, என் புலமை, கல்வி முதலியவற்றின் அளவை அறிந்து, திணை அளவே பரிசளித்தாலும் நான் அதை இனியதாகக் கருதுவேன்.

பாடலின் பின்னணி:-

அதியமான் நெடுமான் அஞ்சியைக் கண்டு பரிசில் பெறலாம் என்று பெருஞ்சித்திரனார் சென்றார். எக்காரணத்தினாலோ, அதியமான் அவரைக் காணாது, அவர் தகுதிக்கேற்ற பரிசிலை மற்றவர்களிடத்துக் கொடுத்துப் பெருஞ்சித்திரனாரிடம் கொடுக்குமாறு செய்தான். அதியமான் தன்னை காணாது அளித்த பரிசிலை பெருஞ்சித்திரனார் ஏற்றுக்கொள்ள மறுத்தார். “குன்றுகளையும் மலைகளையும் கடந்து நான் பரிசு பெறுவதற்காக மட்டும்தான் வந்தேன் என்று அதியமான் எண்ணினா? சரியான முறையில் என்னை அவன் வரவேற்றிருக்க வேண்டும். என்னைக் காணாமல் அவன் அளித்த பரிசிலை ஏற்றுக்கொள்வதற்கு, நான் ஒரு வாணிகப் பரிசிலன் அல்லேன். என்னை விரும்பி வரவேற்று, ”வருக” என்று எதிர்கொண்டு அழைத்து, என் புலமையைக் கண்டு, பாராட்டி, எனக்கு அளிக்கும் பரிசு மிகச்சிறியதானாலும் அதை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வேன்” என்று இப்பாடலில் கூறுகிறார். பெருஞ்சித்திரனார் இவ்வாறு பாடிய பிறகு, அதியமான் தன் பிழையை உணர்ந்து, அவரை நேரில் கண்டு தன் பிழையைப் பொறுத்தருளுமாறு வேண்டியதாகவும், அதன் பின்னர், பெருஞ்சித்திரனார் அதியமான் அளித்த பரிசிலை ஏற்றுக்கொண்டதாகவும் அவ்வை. சு. துரைசாமிப் பிள்ளை தம் நூலில் கூறுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on October 19, 2013, 10:14:19 PM
புறநானூறு, 209. (நல்நாட்டுப் பொருந!)
பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார்.
பாடப்பட்டோன்: மூவன்.
திணை: பாடாண்
துறை: பரிசில் கடாநிலை.
==========================

பொய்கை நாரை போர்வில் சேக்கும்
நெய்தல்அம் கழனி நெல்அரி தொழுவர்
கூம்புவிடு மென்பிணி அவிழ்ந்த ஆம்பல்
அகல் அடை அரியல் மாந்தித் தெண்கடல்
படுதிரை இன்சீர்ப் பாணி தூங்கும்

மென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருந!
பல்கனி நசைஇ அல்கு விசும்பு உகந்து
பெருமலை விடர்அகம் சிலம்ப முன்னிப்
பழனுடைப் பெருமரம் தீர்ந்தெனக் கையற்றுப்
பெறாது பெயரும் புள்ளினம் போல, நின்

நசைதர வந்து நின்இசை நுவல் பரிசிலேன்
வறுவியேன் பெயர்கோ? வாள்மேம் படுந!
ஈயாய் ஆயினும் இரங்குவென் அல்லேன்;
நோயிலை ஆகுமதி; பெரும, நம்முள்
குறுநணி காண்குவ தாக; நாளும்

நறும்பல் ஒலிவரும் கதுப்பின் தேமொழித்
தெரியிழை மகளிர் பாணி பார்க்கும்
பெருவரை அன்ன மார்பின்
செருவெம் சேஎய் நின் மகிழ்இருக்கையே

அருஞ்சொற்பொருள்:-

பொய்கை = குளம்
போர்வு = வைக்கோற் போர்
சேத்தல் = கிடத்தல், தங்கியிருத்தல்
கழனி = வயல்
தொழுவர் = உழவர்
பிணி = அரும்பு
ஆம்பல் = அல்லி
அடை = இலை
அரியல் = மது
மாந்துதல் = குடித்தல்
சீர் = தாளவொத்து
பாணி = இசை
பாணி தூங்குதல் = தாளத்திற்கேற்ப ஆடுதல்
மென்புலம் = மருதமும் நெய்தலும்
அல்கல் = தங்குதல்
விசும்பு = ஆகாயம்
உகந்து = உயர்ந்து
விடர் = மலைப்பிளவு, குகை
சிலம்பு = ஒலி
முன்னுதல் = முற்படுதல், எதிர்ப்படுதல்
கையறுதல் = செயலறுதல்
நசை = விருப்பம்
நுவலுதல் = கூறுதல்
வறுவியேன் = வறுமையுடையவன்
குறு நணி = மிகுந்த நெருக்கம்
பல் = பல
ஒலித்தல் = தழைத்தல்
கதுப்பு = பெண்களின் கூந்தல்
தெரியிழை = ஆராய்ந்த ஆபரணம் (ஆராய்ந்த ஆபரணங்களைத் தரித்த பெண்)
பாணி = காலம், சமயம்
வரை = மலை
சேய் = முருகன்
செரு = போர்
மகிழிருக்கை = அரசவை, நாள் ஓலக்கம் ( அரசன் நாட்பொழுதில் வீற்றிருந்து அரசாட்சி செய்யும் இடம்)

இதன் பொருள்:-

பொய்கை=====> தூங்கும்

குளத்தில் மேய்ந்த நாரை வைக்கோற் போரில் உறங்கும் நெய்தல் நிலத்தில் உள்ள வயல்களில் நெல்லை அறுவடை செய்யும் உழவர், நன்கு மலர்ந்த ஆம்பலின் அகன்ற இலைகளில் மதுவை உண்டு, தெளிந்த கடல் அலைகளின் இனிய சீரான ஒலிக்கேற்ப ஆடுகின்றனர்.

மென்புல=====> நின்

இத்தகைய வளமான நெய்தல் மற்றும் மருத நிலங்களையுடைய நல்ல நாட்டுக்குத் தலைவனே! பழங்களை விரும்பி, தாம் வாழும் ஆகாயத்தில் உயரப் பறந்து, பெரிய மலைக் குகையில் எதிரொலி முழங்கச் சென்று, பழமரத்தில் பழங்கள் இல்லாததால் வருந்தி மீளும் பறவைகளைப் போல், உன்

நசைதர=====> நாளும்

மீதுள்ள விருப்பத்தினால் உன் புகழைக் கூற வந்த நான் பரிசு பெறாமல் வெறுங்கையோடு செல்லப் போகிறேனா? வாட்போரில் சிறந்த வீரனே! நீ எனக்குப் பரிசளிக்காவிட்டாலும் நான் வருந்தமாட்டேன். நீ நோயில்லாமல் வாழ்வாயாக! தலைவ!

நறும்பல்=====> மகிழ்இருக்கையே

நாள்தோறும், மணமுடைய, நீண்ட, தழைத்த கூந்தலோடு, ஆராய்ந்த ஆபரணங்களை அணிந்து, தேன்போன்ற இனிய மொழி பேசும் பெண்கள் உன்னுடைய மலைபோன்ற மார்பைத் தழுவும் நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நீ போரை விரும்பும் முருகனுக்கு ஒப்பானவன். நான் பரிசு பெறாமல் செல்வது உன் அரசவையில் உன்னோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர்களுக்கு மட்டுமே தெரிந்ததாக இருக்கட்டும்.

பாடலின் பின்னணி:-

மூவன் கொடையில் சிறந்தவன் என்ற புகழோடு விளங்கினான். அதனால் பெருந்தலைச் சாத்தனார் அவனைக் காணச் சென்றார். மூவன், பெருந்தலைச் சாத்தனாருக்குப் பரிசளிக்காமல் காலம் தாழ்த்தினான். அவனிடமிருந்து பரிசு பெறலாம் என்ற நம்பிக்கையை இழந்த சாத்தனார், மூவன் தன்னை இகழந்ததாகக் கருதினார். “மலையிலிருந்த மரம் ஒன்று பழுத்த பழங்கள் உடையது என்று எண்ணிப் பறவைகள் அந்த மரத்தை நாடிச் சென்றன. ஆனால், பருவகாலம் மாறியதால் அம்மரத்தில் பழங்கள் இல்லை. பறவைகள் பழங்கள் இல்லாமல் திரும்பின. அப்பறவைகளைப்போல், நான் உன்னை நாடி வந்தேன்; நான் இப்பொழுது வெறுங்கையோடு செல்லவேண்டிய நிலையில் உள்ளேன். நீ எனக்குப் பரிசு அளிக்காவிட்டால், நான் அது குறித்து வருந்த மாட்டேன். நீ நோயில்லாமல் வாழ்வதையே நான் விரும்புகிறேன். ஆனால், நான் பரிசு இல்லாமல் திரும்பிச் செல்வது நமக்குள் இருக்கட்டும்.” என்று கூறிப் பெருந்தலைச் சாத்தனார் பரிசு பெறாமலேயே சென்றார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on October 19, 2013, 10:20:52 PM
புறநானூறு, 210. (நினையாதிருத்தல் அரிது)
பாடியவர்: பெருங்குன்றூர் கிழார்.
பாடப்பட்டோன்: சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை.
திணை: பாடாண்
துறை: பரிசில் கடாநிலை.
==========================

மன்பதை காக்கும்நின் புரைமை நோக்காது
அன்புகண் மாறிய அறனில் காட்சியொடு
நும்ம னோரும்மற்று இனையர் ஆயின்,
எம்மனோர் இவண் பிறவலர் மாதோ;
செயிர்தீர் கொள்கை எம்வெம் காதலி

உயிர்சிறிது உடையள் ஆயின், எம்வயின்
உள்ளாது இருத்தலோ அரிதே; அதனால்,
அறனில் கூற்றம் திறனின்று துணியப்
பிறனா யினன்கொல் இறீஇயர் என் உயிர்என
நுவல்வுறு சிறுமையள் பலபுலந்து உறையும்

இடுக்கண் மனையோள் தீரிய இந்நிலை
விடுத்தேன்; வாழியர் குருசில்! உதுக்காண்
அவல நெஞ்சமொடு செல்வல்; நிற் கறுத்தோர்
அருங்கடி முனையரண் போலப்
பெருங்கை யற்றஎன் புலம்புமுந் துறுத்தே

அருஞ்சொற்பொருள்:-

மன்பதை = மக்கள் கூட்டம்
புரைமை = உயர்வு
காட்சி = பார்வை
செயிர் = குற்றம்
வெம் = விருப்பம்
வயின் = இடம்
திறன் = காரணம்
இறீஇயர் = கெடுவதாக
சிறுமை = துன்பம்
புலந்து = வெறுத்து
தீரீஇய = தீர்க்க
உது - அருகிலிருப்பதைக் குறிக்கும் சொல் ”இது”; தொலைவில் இருப்பதைச் சுட்டிக் காட்டப் பயன்படுத்தப்படும் சொல் ”அது”; அருகிலும் இல்லாமல் தொலைவிலும் இல்லாமல் இடைப்பட்ட தூரத்தில் உள்ள பொருளைச் சுட்டிக்காட்டப் பயன்படும் சொல் ”உது”. ”உது” என்னும் சொல் தற்பொழுது வழக்கில் இல்லை
அவலம் = வரித்தம்
கறுத்தோர் = பகைவர்
முனை = போர்முனை
கையற்ற = செயலற்ற
புலம்பு = வறுமை
முந்துறுத்து = முன்னே போகவிட்டு

இதன் பொருள்:-

மன்பதை=====> காதலி

உலகத்து மக்களைக் காக்கும் உயர்ந்த நிலையில் உள்ள உன் போன்றவர்கள் தங்கள் நிலையைக் கருதாமல், அன்பில்லாமலும், அறத்தோடு பொருந்தாத பார்வையோடும் இருந்தால் என் போன்றவர்கள் இவ்வுலகத்தில் பிறவாமல் இருப்பார்களாக. என் மனைவி குற்றமற்ற கற்புடையவள்; என்னை விரும்புபவள்.

உயிர்சிறிது=====> உறையும்

அவள் உயிருடன் இருந்தால் என்னை நினையாது இருக்கமாட்டாள். அதனால், அறமற்ற கூற்றுவன் காரணமின்றி முடிவெடுத்ததால், நான் இறந்ததாக எண்ணித் தன் உயிர் ஒழியட்டும் என்று சொல்லி வருத்தத்துடனும் பலவகையிலும் வெறுப்போடும் வாழ்ந்துகொண்டிருக்கும் என்

இடுக்கண்=====> துறுத்தே

மனைவியின் துன்பம் தீர்க்க விரும்பி, இப்பொழுதே செல்கிறேன். இதோ பார்! நான் வருந்திய மனத்தோடு செல்கிறேன். உன்னால் தாக்கப்பட்ட உன் பகைவர்களின் அரண்கள் அழிவதைப்போல், என்னை நிலைகலங்கவைக்கும் என் வறுமையை முன்னே போகவிட்டு நான் பின்னே செல்கிறேன். அரசே, நீ வாழ்க!

பாடலின் பின்னணி:-

சேரன் குடக்கோச் சேரலிரும்பொறையின் கொடைப் புகழைக் கேள்வியுற்ற பெருங்குன்றூர் கிழார் அவனைக் காணச் சென்றார். சேரலிரும்பொறை பெருங்குன்றூர் கிழாருக்குப் பரிசளிக்கக் கால தாமதமாக்கினான். அதனால், பெருங்குன்றூர் கிழார் கோபமடைந்தார். “உன்னைப்போல் புலவர்களுக்கு ஆதரவு அளிக்காத வேந்தர்கள் இருந்தால் புலவர்களுக்கு வாழ்வே இல்லை. வறுமையோடு இருந்தாலும் என் மனைவி கற்புடையவள்; ஒருகால் அவள் உயிரிழந்திருக்கலாம்; இறவாது இருந்தால் என்னையே நினைத்துக் கொண்டிருப்பாள். அவளைப் பிரிந்து வாழும் நான் இறந்தேனோ என்று எண்ணித் தானும் சாக வேண்டும் என்று தன்னை வருத்திக்கொள்வாள். அவள் வருத்தத்தைத் தீர்த்தல் வேண்டி நான் அவளை நாடிச் செல்கிறேன்” என்று இப்பாடலில் பெருங்குன்றூர் கிழார் கூறுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on November 16, 2013, 09:04:56 PM
(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-frc3/1381776_680374888654092_1925597624_n.jpg)

புறநானூறு, 211. (நாணக் கூறினேன்!)
பாடியவர்: பெருங்குன்றூர் கிழார்.
பாடப்பட்டோன்: சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை.
திணை: பாடாண்
துறை: பரிசில் கடாநிலை.
==========================

அஞ்சுவரு மரபின் வெஞ்சினப் புயலேறு
அணங்குடை அரவின் அருந்தலை துமிய
நின்றுகாண் பன்ன நீள்மலை மிளிரக்
குன்றுதூவ எறியும் அரவம் போல
முரசு எழுந்து இரங்கும் தானையோடு தலைச்சென்று

அரைசுபடக் கடக்கும் உரைசால் தோன்றல்!நின்
உள்ளி வந்த ஓங்குநிலைப் பரிசிலென்
வள்ளியை ஆதலின் வணங்குவன் இவன்எனக்
கொள்ளா மாந்தர் கொடுமை கூறநின்
உள்ளியது முடிந்தோய் மன்ற; முன்னாள்

கையுள் ளதுபோல் காட்டி வழிநாள்
பொய்யொடு நின்ற புறநிலை வருத்தம்
நாணாய் ஆயினும் நாணக் கூறி என்
நுணங்கு செந்நா அணங்க ஏத்திப்
பாடப் பாடப் பாடுபுகழ் கொண்டநின்

ஆடுகொள் வியன்மார்பு தொழுதெனன் பழிச்சிச்
செல்வல் அத்தை யானே; வைகலும்
வல்சி இன்மையின், வயின்வயின் மாறி
இல்எலி மடிந்த தொல்சுவர் வரைப்பின்
பாஅல் இன்மையின் பல்பாடு சுவைத்து

முலைக்கோள் மறந்த புதல்வனொடு
மனைத்தொலைந் திருந்தவென் வாள்நுதற் படர்ந்தே

அருஞ்சொற்பொருள்:-

மரபு = இயல்பு
புயல் = மழை பெய்தல்
ஏறு = பெரிய இடி
அரவம் = பாம்பு, ஓசை
அணங்குதல் = அஞ்சுதல்
துமிதல் = வெட்டப்படுதல்
மிளிர்தல் = பிறழ்தல்
தூஎறியும் = தூவ எறியும்
தூவல் = சிந்தல், சிதறல்
தலைச் சென்று = மேற்சென்று
அரைசு = அரசு
உரை = புகழ்
சால் = மிகுதி, நிறைவு
தோன்றல் = அரசன்
உள்ளி = நினைத்து
கொள்ளா = ஏற்றூ கொள்ளாத
மன்ற = நிச்சயமாக
புறநிலை = வேறுபட்ட நிலை
நுணங்குதல் = நுண்மையாதல்
ஆடு = வெற்ற
வியன் = அகன்ற
பழிச்சுதல் = வாழ்த்துதல்
வைகல் = நாள்
வல்சி = உணவு
வயின் = இடம்
மடிதல் = சாதல்
வரைப்பு = எல்லை
வாள்நுதல் = ஒளிபொருந்திய நெற்றி
படர்ந்து = நினைத்து

இதன் பொருள்:-

அஞ்சுவரு=====> தலைச்சென்று

அச்சம் தரும் இயல்புடைய பெருமழை பெய்யும்பொழுது, இடியோசைக்கு அஞ்சும் பாம்பின் தலையைப் பிளக்கும் பெரிய இடிபோல் உன் முரசு ஒலிக்கிறது. மற்றும், உன் முரசின் ஒலியைக் கேட்டு, நிலத்தை நிமிர்ந்து நின்று பார்ப்பதுபோல் உயர்ந்து நிற்கும் நெடிய மலைகள் அதிர்கின்றன; சிறிய குன்றுகள் சிதறுகின்றன. அத்தகைய முரசின் முழக்கத்தோடு சென்று,

அரைசு=====> முன்னாள்

வேந்தர்கள் பலரையும் எதிர்நின்று கொல்லும் புகழமைந்த தலைவ! நீ வள்ளல் தன்மை உடையவனாதலால், என்னை வணங்கி, எனக்குத் தகுந்த பரிசு அளிப்பாய் என்று உன்னை நினைத்து வந்த உயர்ந்த பரிசிலன் நான். என் போன்ற புலவர்களை ஏற்றுக்கொண்டு, எமக்குப் பரிசளிக்காதவர்களின் கொடிய செயல்களைச் சொல்லக் கேட்டும், நீ நினைத்ததை நீ நிச்சயமாகச் செய்து முடித்தாய். முதல் நாள்,

கையுள் ளதுபோல்=====> கொண்டநின்

பரிசிலை எனக்குக் கொடுப்பதுபோல் காட்டிப் பின்னர் அது இல்லாதவாறு நீ செய்ததை நினைத்து நான் வருந்துவதற்கு நீ வெட்கப்படவில்லை. நீ வெட்கப்படும் வகையில், நான் நுணுக்கமாக ஆய்வுசெய்து, என் செவ்விய நாக்கு வருந்துமாறு, நாள்தோறும், உன்னைப் புகழ்ந்து பாடப்பாடக் கேட்டு மகிழ்ந்தாய்.

ஆடுகொள்=====> படர்ந்தே

வெற்றி பொருந்திய அகன்ற மார்பையுடைய உன்னை வாழ்த்துகிறேன். நாள்தோறும், உணவில்லாததால் என் வீட்டின் பழைய சுவர்களில் வேறுவேறு இடங்களில் மாறிமாறித் தோண்டிய எலிகள் அங்கேயே இறந்து கிடக்கின்றன. அத்தகைய பழைய சுவர்களையுடைய வீட்டில் என் மனைவி வாழ்கிறாள். பலமுறை சுவைத்தும் என் மனைவியின் முலைகளில் பால் இல்லாததால், என் மகன் பால் குடிப்பதையே மறந்துவிட்டான். அத்தகைய வறுமையில் வாடும் என் மனைவியின் ஒளிபொருந்திய நெற்றியை நினைத்து நான் செல்கிறேன்.

பாடலின் பின்னணி:-

சேரமான் குடக்கோச்சேரல் இரும்பொறையிடம் பரிசு பெற விரும்பிச் சென்ற பெருங்குன்றூர் கிழார் அவன் அரண்மனையில் சில நாட்கள் தங்கியிருந்தார். அவன் அவருக்குப் பரிசு அளிக்காமல் காலம் கடத்தினான். அவர், அவன் வெற்றிகளைப் புகழ்ந்து பாடினார். அவன் அவருடைய பாடல்களைக் கேட்டு மகிழ்ந்தான். அவன் பரிசு கொடுப்பதுபோல் சிலசெயல்களைச் செய்தான். இவ்வாறு சில நாட்கள் கழிந்தன. ஆனால், பரிசு கொடுக்காமல் அவன் தன்னை ஏமாற்றுவதை அவர் உணர்ந்தார். இனி, சேரமான் குடக்கோச்சேரல் இரும்பொறையிடம் பரிசு பெறுவதற்கு வாய்ப்பில்லை என்ற முடிவுக்குப் பெருங்குன்றூர் கிழார் வந்தார். ”உன்னிடம் பரிசில் பெறலாம் என்று எண்ணி வந்தேன்; உன்னைப் புகழ்ந்தேன். நான் பாடிய படல்களை நீ விரும்பிக் கேட்டாய். பரிசு கொடுக்காத பிறருடைய கொடிய செயல்களையும் கூறினேன். ஆனால், நீ பரிசு கொடுக்கக் கூடாது என்று முடிவு செய்துவிட்டாய். உண்ண உணவில்லாததால், என் வீட்டின் பழைய சுவர்களைப் பல இடங்களில் தோண்டிய எலிகள் அங்கேயே இறந்து கிடக்கின்றன. என் மனைவியின் முலைகளில் பால் இல்லாததால், என் புதல்வன் பால் குடிப்பதையே மறந்துவிட்டான். நான் என் மனைவியை நினைத்து அவளிடம் செல்கிறேன். நீ வாழ்க!” என்று கூறிப் பெருங்குன்றூர் கிழார், சேரமான் குடக்கோச்சேரல் இரும்பொறையிடம்இருந்து விடை பெற்றுச் சென்றதாக இப்பாடலில் காண்கிறோம்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on November 16, 2013, 09:07:45 PM
புறநானூறு, 212. (யாம் உம் கோமான்?)
பாடியவர்: பிசிராந்தையார்.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன்.
திணை: பாடாண்
துறை: இயன்மொழி.
==========================

நுங்கோ யார்என வினவின் எங்கோக்
களமர்க்கு அரித்த விளையல் வெம்கள்
யாமைப் புழுக்கில் காமம் வீடஆரா
ஆரற் கொழுஞ்சூடு அங்கவுள் அடாஅ
வைகுதொழில் மடியும் மடியா விழவின்

யாணர் நன்நாட் டுள்ளும் பாணர்
பைதல் சுற்றத்துப் பசிப்பகை யாகிக்
கோழி யோனே கோப்பெருஞ் சோழன்;
பொத்தில் நண்பின் பொத்தியொடு கெழீஇ,
வாயார் பெருநகை வைகலும் நக்கே

அருஞ்சொற்பொருள்:-

களமர் = உழவர்
அரித்த = வடித்த
வெம்மை = விருப்பம்
புழுக்கு = அவித்தது
ஆர்தல் = உண்டல்
காமம் = ஆசை
வீடல் = விடுதல்
ஆரல் = ஒருவகை மீன்
சூடு = சுடப்பட்டது
கவுள் = கன்னம்
வைகுதல் = இருத்தல்
மடிதல் = முயற்சி அற்றுப்போதல்
யாணர் = புது வருவாய்
பைதல் = துன்பம், வருத்தம்
கோழியூர் = உறையூர்
பொத்து = குற்றம், குறை
கெழீஇ = பொருந்தி
வாயார் = வாய்மை அமைந்த
நக்கு = மகிழ்ந்து

இதன் பொருள்:-

நுங்கோ=====> விழவின்

“உம் அரசன் யார்?” என்று என்னைக் கேட்பீராயின், எம் அரசன் கோப்பெருஞ்சோழன். உழவர்களுக்காக வடிக்கப்பட்ட, விரும்பத்தகுந்த கள்ளை ஆமையின் அவித்த இறைச்சியுடன் ஆசைதீர அவ்வுழவர்கள் உண்டு, வதக்கிய கொழுத்த ஆரல் மீனைத் தம் கன்னத்தில் அடக்கித் தம்முடைய தொழிலை மறந்து விழாக்கோலம் கொண்டதுபோல் சுற்றித் திரியும் வளமை மிகுந்தது சோழநாடு.

யாணர்=====> நக்கே

அத்தகைய புதுவருவாய் உடைய வளமான சோழநாட்டில், பாணர்களின் வருத்தமடைந்த சுற்றத்தாரின் பசியாகிய பகையைப் போக்குபவன் உறையூரில் வாழும் கோப்பெருஞ்சோழன். அவன் குறையற்ற நண்பர் பொத்தியாரோடு கூடி நாள்தோறும் உண்மையான பெருமகிழ்ச்சியோடு உள்ளான்.

பாடலின் பின்னணி:-

பாண்டிய நாட்டில் இருந்த பிசிராந்தையார், கோப்பெருஞ் சோழனிடம் மிகுந்த நட்புகொண்டவராக இருந்தார். அந்நட்பின் காரணமாகக் கோபெருஞ்சோழனைத் தன் வேந்தனாகவே கருதினார். “என் வேந்தன் கோப்பெருஞ்சோழன் உழவர்களை விருந்தோம்பல் செய்து ஆதரிப்பவன். அவன் உறையூரில் பொத்தியார் என்னும் பெரும் புலவருடன் மகிழ்ச்சியுடன் இருக்கிறான்” என்று இப்பாடலில் கூறுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on November 16, 2013, 09:09:51 PM
புறநானூறு, 213. (நினையும் காலை!)
பாடியவர்: புல்லாற்றூர் எயிற்றியனார்.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன்.
திணை: வஞ்சி.
துறை: துணை வஞ்சி.
==========================

மண்டுஅமர் அட்ட மதனுடை நோன்தாள்
வெண்குடை விளக்கும் விறல்கெழு வேந்தே!
பொங்குநீர் உடுத்தஇம் மலர்தலை உலகத்து
நின்தலை வந்த இருவரை நினைப்பின்
தொன்றுறை துப்பின்நின் பகைஞரும் அல்லர்

அமர்வெங் காட்சியொடு மாறுஎதிர்பு எழுந்தவர்
நினையுங் காலை நீயும் மற்றவர்க்கு
அனையை அல்லை; அடுமான் தோன்றல்!
பரந்துபடு நல்லிசை எய்தி மற்று நீ
உயர்ந்தோர் உலகம் எய்திப்; பின்னும்

ஒழித்த தாயம் அவர்க்குஉரித்து அன்றே;
அதனால் அன்னது ஆதலும் அறிவோய், நன்றும்
இன்னும் கேண்மதி இசைவெய் யோயே!
நின்ற துப்பொடு நின்குறித்து எழுந்த
எண்ணில் காட்சி இளையோர் தோற்பின்

நின்பெரும் செல்வம் யார்க்கும்எஞ் சுவையே?
அமர்வெஞ் செல்வ! நீஅவர்க்கு உலையின்
இகழுநர் உவப்பப் பழியெஞ் சுவையே;
அதனால், ஒழிகதில் அத்தைநின் மறனே! வல்விரைந்து
எழுமதி; வாழ்கநின் உள்ளம்! அழிந்தோர்க்கு

ஏமம் ஆகும்நின் தாள்நிழல் மயங்காது
செய்தல் வேண்டுமால் நன்றே வானோர்
அரும்பெறல் உலகத்து ஆன்றவர்
விதும்புறு விருப்பொடு விருந்தெதிர் கொளற்கே

அருஞ்சொற்பொருள்:-

மண்டு = மிகுதி, செறிவு
அமர் = போர்
அட்ட = வென்ற
மதன் = மிகுதி
நோன் = வலிமை
தாள் = முயற்சி
விறல் = வெற்றி
கெழு = பொருந்திய
உடுத்த = சூழ்ந்த
மலர்தல் = விரிதல்
துப்பு = வலிமை
அமர் = போர்
வெம்மை = விருப்பம்
அடுதல் = வெல்லுதல், கொல்லல்
மான் = விலங்கு (யானை)
தோன்றல் = அரசன்
மற்று = அசைச் சொல்
தாயம் = அரசுரிமை
வெய்யோய் = விரும்புபவன்
காட்சி = அறிவு
செல்வன் = அரசன்
உலைவு = தோல்வி
இகழுநர் = பகைவர்
அத்தை = அசை
மறன் = மறம் = வீரம், வெற்றி, போர்
தில் = விழைவுக் குறிக்கும் அசைச்சொல்
மதி = முன்னிலை அசைச்சொல்
ஏமம் = பாதுகாப்பு
ஆன்றவர் =அமரர்
விதும்பல் = ஆசைப்படுதல்

இதன் பொருள்:-

மண்டுஅமர்=====> அல்லர்

மிகுந்த வலிமையோடும் முயற்சியோடும் பகைவர்களைப் போரில் கொன்று, வெண்கொற்றக்குடையுடன் விளங்கும் வெற்றி பொருந்திய வேந்தே! கடல் சூழ்ந்த, பரந்த இவ்வுலகில், உன்னை எதிர்த்து வந்த இருவரையும் எண்ணிப்பார்த்தால், அவர்கள் நெடுங்காலமாக உன்னுடன் பகைகொண்ட வலிமையுடைய சேரரோ பாண்டியரோ அல்ல.

அமர்வெங்=====> பின்னும்

போரில் வெற்றிபெறும் நோக்கத்தோடு உன்னை எதிர்த்து வந்தவர்கள் சற்று சிந்தித்துப் பார்த்தால், நீ அவர்களுக்குப் பகைவன் அல்லன் என்பது அவர்களுக்குத் தெரியும். பகைவர்களைக் கொல்லும் யானைகளையுடைய தலைவ! பெரும்புகழை அடைந்து, நீ தேவருலகம் சென்ற பிறகு,

ஒழித்த=====> தோற்பின்

உன் நாட்டை ஆளும் அரசுரிமை அவர்களுக்கு உரியதுதானே? அவ்வாறு ஆதல் நீ அறிவாய். நான் சொல்வதை இன்னும் நன்றாகக் கேள். புகழை விரும்புபவனே! உன்னோடு போர்செய்யப் புறப்பட்டு வந்திருக்கும் ஆராயும் திறனும் அறிவும் இல்லாத உன் மக்கள் தோற்றால்,

நின்பெரும்=====> அழிந்தோர்க்கு

உனக்குப் பிறகு, உன் பெருஞ்செல்வத்தை யாருக்குக் கொடுக்கப் போகிறாய்? போரை விரும்பும் அரசே! நீ அவரிடம் தோற்றால் உன் பகைவர்கள் அதைக்கண்டு மகிழ்வார்கள். மற்றும், பழிதான் மிஞ்சும். அதனால், போரை விடுத்து விரைவில் புறப்படுவாயாக.

ஏமம்=====> கொளற்கே

அஞ்சுபவர்களுக்குப் பாதுகாப்பாக உனது நிழல் இருக்கட்டும். பெறுதற்கரிய விண்ணவர் உலகம் உன்னை விரும்பி வரவேற்று, விருந்தினனாக ஏற்றுக்கொள்வதை நீ விரும்பினால், நல்ல செயல்களை மனம் மயங்காமல் செய்ய வேண்டும். உன் உள்ளம் வாழ்வதாக.

பாடலின் பின்னணி:-

கோப்பெருஞ்சோழனுக்கும் அவனுடைய மகன்களுக்குமிடையே இருந்த பகையின் காரணமாகப் போர் மூண்டது. அச்சமயம், புல்லாற்றுர் எயிற்றியனார், ”உன்னோடு போருக்கு வந்திருப்போர் சேரனோ பாண்டியனோ அல்லர். நீ இறந்த பிறகு உன் நாட்டை ஆளும் உரிமை பெறப்போகிறவர்கள் இப்போது உன்னோடு போரிட வந்திருக்கும் உன் புதல்வர்கள்தானே? போரில் உன் புதல்வர்கள் தோற்றால் உன் பெருஞ்செல்வத்தை யாருக்குத் தரப்போகிறாய்? நீ போரில் தோற்றால் பெரும்பழிதானே நிலைத்து நிற்கும்? அதனால், போரைக் கைவிடுவதே சிறந்ததாகும்.” என்று அறிவுரை கூறிப் போரைத் தடுத்து நிறுத்த முயன்றதாக இப்பாடலில் காண்கிறோம்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on November 16, 2013, 09:11:51 PM
புறநானூறு, 214. (நல்வினையே செய்வோம்!)
பாடியவர்: கோப்பெருஞ் சோழன்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: பொதுவியல்.
துறை: பொருண்மொழிக் காஞ்சி.
==========================

செய்குவம் கொல்லோ நல்வினை எனவே
ஐயம் அறாஅர் கசடுஈண்டு காட்சி
நீங்கா நெஞ்சத்துத் துணிவுஇல் லோரே;
யானை வேட்டுவன் யானையும் பெறுமே;
குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே;

அதனால், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசி னோர்க்குச்
செய்வினை மருங்கின் எய்தல் உண்டெனில்,
தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்;
தொய்யா உலகத்து நுகர்ச்சி இல்லெனில்,
மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்;

மாறிப் பிறவார் ஆயினும் இமையத்துக்
கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத்
தீதில் யாக்கையொடு மாய்தல்தவத் தலையே

அருஞ்சொற்பொருள்:-

கொல் – ஐயப்பொருளில் வரும் இடைச்சொல்
கசடு = ஐயம்
மாசு = குற்றம்
ஈண்டுதல் = நிறைதல், செறிதல்
காட்சி = அறிவு
பூழ் = சிறு பறவை, காடை (ஒருவகைப் பறவை)
மருங்கு = கூறு
தொய்தல் = வினை செய்தல்
தொய்யா உலகம் = விண்ணுலகம்
கோடு = மலையின் உச்சி
இசை = புகழ்
யாக்கை = உடல்
மாய்தல் = இறத்தல்
தவ = மிக
தலை = பெருமை

இதன் பொருள்:-

செய்குவம்=====> வருமே;

மனத்தில் மாசுடன், தெளிந்த அறிவு இல்லாதவர்கள்தான் நல்ல செயல்களைச் செய்யலாமா வேண்டாமா என்ற ஐயம் நீங்காதவர்களாக இருப்பார்கள். யானையை வேட்டையாடச் சென்றவன் யானையைப் பெறலாம்; சிறுபறவையை வேட்டையாடச் சென்றவன் வெறுங்கையோடு திரும்பி வரலாம்.

அதனால்=====> தலையே

அதனால், உயுர்ந்தவற்றுள் விருப்பமுடையவர்களுக்கு அவர் செய்த நல்வினைக்குத் தகுந்த பயன் கிடைக்குமானால், விண்ணுலக இன்பம் கிடைக்கலாம். விண்ணுலக மட்டுமல்லாமல், மீண்டும் பிறவாமல் இருக்கும் நிலையையும் (வீடு பேறு) பெறலாம். பிறவாமை என்ற நிலை இல்லை என்றாலும், இவ்வுலகிலே இமயத்தின் சிகரம்போல் உயர்ந்த புகழை நிலைநாட்டிக், குறையற்ற உடலோடு இறப்பது மிகப் பெருமை வாய்ந்தது.

பாடலின் பின்னணி:-

பகையின் காரணத்தால் கோப்பெருஞ் சோழன் தன் மகன்களுடன் போர் செய்யத் தொடங்கினான். ஆனால், புல்லாற்றூர் எயிற்றியனார் போன்ற புலவர் பெருமக்களின் அறிவுரைக்கு இணங்கிப் போரை நிறுத்தினான். போரை நிறுத்தினாலும் அவன் மனவருத்தத்துடன் இருந்தான். அவ்வருத்ததால் அவன் வடக்கிருந்து உயிர் நீக்கத் துணிந்தான். அவ்வாறு செய்வதை ஒரு உயர்ந்த நற்செயல் என்று கருதினான். அவன் வடக்கிருந்த பொழுது, அவனுடன் இருந்த சான்றோர் சிலர் அவனுடைய செயலால் என்ன நன்மை அடையப் போகிறான் என்று பேசத் தொடங்கினர். அவர்கள் சொல்வதைக் கேள்வியுற்ற கோப்பெருஞ்சோழன், “ நல்வினைகள் செய்வதால் விண்ணுலகம் செல்லலாம்; விண்ணுலகத்தில் இன்பம் நுகர்வது மட்டுமல்லாமல், வீடு பேறும் பெறலாம்; அத்தகைய வீடு பேறு பெற்றால் மீண்டும் பிறவாமல் இருக்கும் நிலையை அடையலாம். பிறவாமை என்னும் நிலை ஒன்று இல்லாவிட்டாலும், நல்வினைகளைச் செய்பவர்கள் குறையற்ற உடலோடு வாழ்ந்து தம் புகழை நிறுவி இறக்கும் பெருமையை அடைவார்கள்” என்ற கருத்துகளை இப்பாடலில் கூறுகிறான்.

சிறப்புக் குறிப்பு:-

”தொய்தல்” என்றால் வினை செய்தல் என்று பொருள். இவ்வுலகில் வாழும்பொழுது, மனிதன் செய்யும் செயல்களில் சில நற்செயல்களாகவும் சில தீய செயல்களாகவும் அமைகின்றன. வாழ்நாளில் செய்த நற்செயல்களுக்கேற்ப, இறந்த பிறகு விண்ணுலகத்தில் மனிதன் இன்பத்தை நுகர்வான் என்பது மதவாதிகளின் நம்பிக்கை. மற்றும், விண்ணுலகத்தில் உள்ளவர்கள் இன்பம் நுகர்வதைத் தவிர வேறு எந்தத் தொழிலையும் செய்யாததால், விண்ணுலகத்தைத் “தொய்யா உலகம்” என்று இப்பாடலில் கோப்பெருஞ்சோழன் குறிப்பிடுகிறான்.

விண்ணுலகில் இன்பம் நுகர்ந்த பிறகு, மண்ணுலகில் மீண்டும் பிறக்கும் நிலை உண்டு என்பது சில மதங்களின் அடிப்படை நம்பிக்கை. அவரவர்களின் நல்வினை தீவினைகளுக்கேற்ப மனிதர்கள் மீண்டும் மீண்டும் பிறக்கிறார்கள். நல்வினையும் திவினையும் அற்ற நிலையில் பிறவாமை என்ற நிலையை அடையலாம். பிறவாமை என்ற நிலையை அடைந்தவர்கள் வீடுபேறு அடைந்ததாகக் கருதப்படுகிறார்கள். வீடுபேறு என்பதை “வானோர்க்கு உயர்ந்த உலகம்” என்று

யான்என தென்னும் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும். (குறள் – 346)

என்ற குறளில் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on November 16, 2013, 09:13:28 PM
புறநானூறு, 215. (அல்லற்காலை நில்லான்!)
பாடியவர்: கோப்பெருஞ் சோழன்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: பாடாண்.
துறை: இயன்மொழி.
==========================

கவைக் கதிர் வரகின் அவைப்புறு வாக்கல்
தாதெரு மறுகின் போதொடு பொதுளிய
வேளை வெண்பூ வெண்தயிர்க் கொளீஇ
ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை
அவரை கொய்யுநர் ஆர மாந்தும்

தென்னம் பொருப்பன் நன்னாட்டு உள்ளும்
பிசிரோன் என்ப என் உயிர்ஓம் புநனே;
செல்வக் காலை நிற்பினும்
அல்லற் காலை நில்லலன் மன்னே.

அருஞ்சொற்பொருள்:-

கவை = பிளப்பு
அவைப்பு = குற்றல்
ஆக்கல் = சமைத்தல்
தாதெரு = தாது+எரு = தாது எருவாக
மறுகு = தெரு
போது = பொழுது
பொதுளிய = தழைத்த
மிதவை = கூழ்
ஆர = நிரம்ப
மாந்தல் = உண்ணுதல்
பொருப்பு = மலை
பிசிர் – ஊர்ப்பெயர்
ஓம்புதல் = பாதுகாத்தல்
செல்வன் = அரசன்
அல்லல் = துன்பம்
மன் – அசைச்சொல்

இதன் பொருள்:-

கவைக் கதிர்=====> ஆர மாந்தும்

பிளவுபட்ட கதிர்களையுடைய வரகைக் குத்திச் சமைக்கப்பட்ட சோற்றையும், பூக்களின் தாதுகள் எருவாக உதிர்ந்த புழுதியையுடைய தெருவில் அரும்புகளோடு தழைத்த வேளைச்செடியின் வெண்ணிறப் பூக்களை வெள்ளை நிறமுள்ள தயிரில் இட்டு, இடைச்சியர் சமைத்த அழகிய புளிக்கூழையும், அவரையைக் கொய்பவர்கள் நிறைய உண்ணும்

தென்னம்=====> மன்னே

தென்திசையில் உள்ள பொதிகை மலையையுடைய பாண்டிய நன்னாட்டில் உள்ள பிசிர் என்னும் ஊரில் உள்ளவர் ஆந்தையார். அவர் என் உயிரைப் பாதுகாப்பவர்; நான் ஆட்சியிலிருந்த இருந்த காலத்தில் அவர் வந்து என்னைப் பார்க்காவிட்டாலும் நான் துன்பத்தில் இருக்கும் பொழுது என்னைப் பார்க்க வராமல் இருக்கமாட்டார்.

பாடலின் பின்னணி:-

கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த பொழுது, அவனைச் சூழ்ந்திருந்தவர்கள், பிசிராந்தையார் பாண்டிய நாட்டிலிருந்து சோழ நாட்டிற்கு வந்து வடக்கிருக்கும் கோப்பெருஞ்சோழனைக் காணவருவாரோ வரமாட்டாரோ என்று சந்தேகப்பட்டார்கள். அவர்கள் பேச்சைக் கேள்விப்பட்ட கோப்பெருஞ்சோழன், “பிசிராந்தையார் என் உயிரைப் பாதுகாப்பவர்; நான் ஆட்சியிலிருந்த இருந்த காலத்தில் அவர் வந்து என்னைப் பார்க்காவிட்டாலும், நான் துன்பத்திலிருக்கும் பொழுது அவர் கண்டிப்பாய் என்னைப் பார்க்க வருவார்” என்று கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on November 16, 2013, 09:15:12 PM
புறநானூறு, 216. (அவனுக்கும் இடம் செய்க!)
பாடியவர்: கோப்பெருஞ் சோழன்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: பாடாண்.
துறை: இயன்மொழி.
==========================

“கேட்டல் மாத்திரை அல்லது யாவதும்
காண்டல் இல்லாது யாண்டுபல கழிய
வழுவின்று பழகிய கிழமையர் ஆயினும்
அரிதே தோன்றல்! அதற்பட ஒழுக”லென்று
ஐயம் கொள்ளன்மின்; ஆரறி வாளிர்!
இகழ்விலன்; இனியன்; யாத்த நண்பினன்;

புகழ்கெட வரூஉம் பொய்வேண் டலனே;
தன்பெயர் கிளக்கும் காலை ‘என் பெயர்
பேதைச் சோழன்’ என்னும் சிறந்த
காதற் கிழமையும் உடையவன்; அதன் தலை
இன்னதோர் காலை நில்லலன்;
இன்னே வருகுவன்; ஒழிக்கஅவற்கு இடமே!

அருஞ்சொற்பொருள்:-

மாத்திரை = அளவு
யாவதும் = சிறுபொழுதும்
காண்டல் = காணுதல்
யாண்டு = ஆண்டு
வழு = தவறு
தோன்றல் = அரசன்
அதற்பட = அவ்வாறு
ஆர் = நிறைவு
யாத்தல் = பிணித்தல், கட்டல்
வரூஉம் = வரும்
கிளக்கும் = கூறும்
பேதை = களங்கமில்லாத் தன்மை
கிழமை = உரிமை
தலை = மேலே
இன்னே = இப்பொழுதே
ஒழிக்க = ஒதுக்குக

இதன் பொருள்:-

கேட்டல்=====> நண்பினன்;

” வேந்தே! பிசிராந்தையாரும் நீயும் ஒருவரைப் பற்றி ஒருவர் கேள்விப்பட்டிருக்கிறீர்களே தவிர நீங்கள் இருவரும் சிறுபொழுதுகூட ஒருவரை ஒருவர் நேரில் கண்டதில்லை. இவ்வாறு பல ஆண்டுகள் கழிந்தன. நன்கு பழகிய உரிமையுடைய நண்பராக இருப்பின், இந்நிலையில் அவர் உன்னுடன் இருப்பதுதான் முறை. ஆயினும் அவர் அம்முறைப்படி நடத்தல் அரிது.” என்று சந்தேகப்படாதீர்கள். அறிவு நிறைந்தவர்களே! என் நண்பன் பிசிராந்தையார் என்னை ஒருபொழுதும் இகழாதவன்; அவன் மிகவும் இனியவன்; நெருங்கிய நட்பு கொண்டவன்;

புகழ்கெட=====> இடமே!

புகழை அழிக்கும் போலித்தனங்களை (பொய்யை) விரும்பாதவன். அவன் பெயர் என்னவென்று கேட்டால் தன் பெயர் ’களங்கமில்லாத சோழன்’ என்று கூறும் சிறந்த அன்பும் உரிமையும் உடையவன். அதற்கும் மேலே, இத்தகைய நிலையில் அவன் வராமல் இருக்க மாட்டான்; அவன் இப்பொழுதே வருவான்; அவனுக்கு ஒரு இடம் ஒதுக்கி வையுங்கள்.

பாடலின் பின்னணி:-

பிசிராந்தையார் தன்னைக் காண வருவாரோ அல்லது வரமாட்டாரோ என்று தன் அருகில் இருக்கும் சான்றோர்கள் சந்தேகப்படுவதை உணர்ந்த கோப்பெருஞ்சோழன், ”அவர் நிச்சயமாக வருவார்; அவருக்கு ஒரு இடம் ஒதுக்கி வையுங்கள்” என்று இப்பாடலில் குறிப்பிடுகிறான்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on December 15, 2013, 10:33:34 PM
புறநானூறு, 217. (நெஞ்சம் மயங்கும்!)
பாடியவர்: பொத்தியார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: பொதுவியல்.
துறை: கையறு நிலை.
==========================

நினைக்கும் காலை மருட்கை உடைத்தே;
எனைப்பெரும் சிறப்பினோடு ஈங்கிது துணிதல்;
அதனினும் மருட்கை உடைத்தே, பிறன்நாட்டுத்
தோற்றம் சான்ற சான்றோன் போற்றி,
இசைமரபு ஆக நட்புக் கந்தாக
இனையதோர் காலை ஈங்கு வருதல்;

‘வருவன்’ என்ற கோனது பெருமையும்,
அதுபழுது இன்றி வந்தவன் அறிவும்
வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந் தன்றே;
அதனால், தன்கோல் இயங்காத் தேயத்து உறையும்
சான்றோன் நெஞ்சுறப் பெற்ற தொன்றிசை
அன்னோனை இழந்தஇவ் வுலகம்
என்னா வதுகொல்? அளியது தானே!

அருஞ்சொற்பொருள்:-

மருட்கை = திகைப்பு, மயக்கம், வியப்பு
துணிதல் = முடிவெடுத்தல்
சான்ற = அமைந்த
போற்றி = பாதுகாத்து
இசை = புகழ்
கந்து = பற்றுக்கோடு
இனைய = இத்தகைய
ஈங்கு = இங்கு
கோன் = கோப்பெருஞ்சோழன்
இறந்த = கடந்த
அன்னோன் = கோப்பெருஞ்சோழன்
அளியது = இரங்கத்தக்கது

இதன் பொருள்:-

நினைக்கும்=====> வருதல்

இத்துணைப் பெரிய சிறப்புடைய மன்னன் இவ்வாறு வடக்கிருப்பது என்று முடிவெடுத்ததை நினைத்தாலே வியப்பாக உள்ளது. வேறு நாட்டில் தோன்றிய சான்றோன் ஒருவன், புகழை மரபாகக்கொண்டு, நட்பைப் பற்றுக்கோடாகக் கொண்டு, இந்தகைய நேரத்தில் இங்கு வருவது அதைவிட வியப்பானது.

‘வருவன்’=====> அளியது தானே

அவன் வருவான் என்று கூறிய கோப்பெருஞ்சோழனின் பெருமையும், அவ்வாறு தவறாமல் வந்தவனின் அறிவும் வியக்குந்தோறும், வியப்பின் எல்லையைக் கடந்ததாக உள்ளது. தன் ஆட்சியில் இல்லாத நாட்டில் வாழும் சான்றோனின் நெஞ்சில் இடம் பெற்ற புகழ் மிக்க அரசனை இழந்த இந்நாடு என்னாகுமோ? இது இரங்கத்தக்கதுதான்.

பாடலின் பின்னணி:-

கோப்பெருஞ்சோழன் வடக்கிருப்பது என்று முடிவெடுத்ததையும், அவனுக்கும் பிசிராந்தையாருக்கும் இருந்த நட்பையும், பிசிராந்தையார் நிச்சயமாக வருவார் என்று சோழன் கூறியதையும், அவன் கூறியதுபோல் பிசிரந்தையார் வந்ததையும் நினைத்துப்பார்த்துப் பொத்தியார் மிகவும் வியப்படைகிறார். இப்பாடலில் தன் வியப்பை வெளிப்படுத்துகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on December 15, 2013, 10:35:21 PM
புறநானூறு, 218. (சான்றோர் சாலார் இயல்புகள்!)
பாடியவர்: கண்ணகனார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: பொதுவியல்.
துறை: கையறு நிலை.
==========================

பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய
மாமலை பயந்த காமரு மணியும்
இடைபடச் சேய ஆயினும் தொடைபுணர்ந்து
அருவிலை நன்கலம் அமைக்கும் காலை
ஒருவழித் தோன்றியாங்கு என்றும் சான்றோர்
சான்றோர் பாலர் ஆப;
சாலார் சாலார் பாலர் ஆகுபவே

அருஞ்சொற்பொருள்:-

துகிர் = பவளம்
மன்னிய = நிலைபெற்ற
பயந்த = தந்த
காமர் = விருப்பம்
தொடை = தொடுத்தல்
பால் = பக்கம்

இதன் பொருள்:-

பொன், பவளம், முத்து, நிலைபெற்றப் பெரிய மலையிலிருந்து பெற்ற விரும்பத்தக்க மாணிக்கம் ஆகியவை ஒன்றுக்கொன்று தொலைவான இடங்களில் தோன்றியவையானாலும் பெருமதிப்புடைய நல்ல அணிகலன்களில் தொடுக்கும் பொழுது, அவை ஒரே இடத்தில் சேர்ந்திருக்கின்றன. அதுபோல, எந்நாளும் சான்றோர்கள் சான்றோர்களையே சேர்ந்திருப்பர். அத்தகைய உயர்ந்த குணங்கள் இல்லாதவர், உயர்ந்த குணங்கள் இல்லாதவர்களையே சேர்ந்திருப்பர்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 24, 2014, 04:21:39 PM
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-ash3/t1/1525739_717663364925244_1065161969_n.jpg)

புறநானூறு, 219. (உணக்கும் மள்ளனே!)
பாடியவர்: கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார்.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ்சோழன்.
திணை: பொதுவியல்.
துறை: கையறு நிலை.
==============================

உள்ளாற்றுக் கவலைப் புள்ளி நீழல்
முழூஉ வள்ளுரம் உணக்கும் மள்ள!
புலவுதி மாதோ நீயே!
பலரால் அத்தை நின் குறிஇருந் தோரே

அருஞ்சொற்பொருள்:-

உள் ஆறு = ஆற்று உள்ளே (அரங்கம், ஆற்றின் நடுவே உள்ள இடம்.)
கவலை = பிரியும் வழி
புள்ளி நீழல் = புள்ளி புள்ளியாகத் தோன்றும் நிழல்
வள்ளுரம் = தசை
உணக்கும் = வாட்டும், வருத்தும்
மள்ளன் = வீரன்
புலத்தல் = வெறுத்தல்
மாதோ – அசைச் சொல்
குறி = இடம்

இதன் பொருள்:-

ஆற்றின் நடுவே இருக்கும் இடத்தில் (அரங்கத்தில்) உள்ள மர நிழலில், உடல் முழுதும் உள்ள தசைகள் அனைத்தையும் வாட்டும் வகையில் வடக்கிருந்த வீரனே! நீ வடக்கிருந்த பொழுது அதே இடத்தில் உன்னோடு பலரும் வடக்கிருந்தனர். அப்பொழுது நான் வராததால் என்னை நீ வெறுத்தாய் போலும்.

பாடலின் பின்னணி:-

கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த காலத்து இப்புலவர் மற்ற புலவர்களுடன் சேர்ந்து வடக்கிருக்க வர இயலவில்லை போலும். இவர் கோப்பெருஞ்சோழனைக் காணவந்த பொழுது அவன் இறந்து கிடந்தான். அதைக் கண்ட கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார், “ நீ வடக்கிருந்த பொழுது நான் வராததால் நீ என்னை வெறுத்தாயோ?” என்று இப்பாடலில் கூறுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 24, 2014, 04:23:34 PM
(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-ash4/t1/1459888_721213494570231_1512550654_n.jpg)

புறநானூறு, 220. (கலங்கினேன் அல்லனோ!)
பாடியவர்: பொத்தியார்.
பாடப்பட்டோன்: பொதுவாக.
திணை: பொதுவியல்.
துறை: கையறு நிலை.
==============================

பெருங்சோறு பயந்து பல்யாண்டு புரந்த
பெருங்களிறு இழந்த பைதற் பாகன்,
அதுசேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை
வெளில்பாழ் ஆகக் கண்டு கலுழ்ந்தாங்குக்
கலங்கினேன் அல்லனோ யானே, பொலந்தார்த்
தேர்வண் கிள்ளி போகிய
பேரிசை மூதூர் மன்றங் கண்டே?

அருஞ்சொற்பொருள்:-

பயந்து = தந்து
புரத்த = பாதுகாத்த
பைதல் = வருத்தம்
அல்கல் = தங்குதல்
அழுங்குதல் = வாய்விட்டு அழுதல்
ஆலை = யானைக் கூட்டம்
வெளில் = தறி, தூண்
கலுழ்தல் = அழுதல், கலங்கல்
கிள்ளி = சோழன்
மூதூர் = உறையூர்
மறம் = அவை
போகிய = சென்ற

இதன் பொருள்:-

பெருமளவில் சோற்றை அளித்துத் தன்னைப் பாதுகாத்துவந்த பெரிய யானையை இழந்த வருத்தம் மிகுந்த பாகன், அந்த யானை தங்கியிருந்த இடத்தில், தூண் வெறிதாய் இருப்பதைக் கண்டு அழுததைப்போல், பொன்மாலை அணிந்தவனும் தேர்களை வழங்குபவனும் ஆகிய சோழன் இல்லாத பெரும்புகழ்கொண்ட உறையூரின் அரசவையைக் கண்டு நானும் கலங்கினேன் அல்லனோ?

பாடலின் பின்னணி:-

கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த பொழுது பொத்தியாரும் அவனுடன் வடக்கிருக்க விரும்பினார். ஆனால், கோப்பெருஞ்சோழன், “உன் மனைவி கருவுற்றிருக்கிறாள். அவளுக்குக் குழந்தை பிறந்த பிறகு நீ என்னோடு வடக்கிருக்கலாம்” என்று கூறியதற்கேற்ப, பொத்தியார் வடக்கிருக்கும் எண்ணத்தைக் கைவிட்டார். அவர் மனைவிக்குக் குழந்தை பிறந்த பிறகு கோப்பெருஞ்சோழனோடு வடக்கிருக்க வந்தார். ஆனால், அதற்குள் கோப்பெருஞ்சோழன் இறந்துவிட்டான். அவனுக்கு நடுகல்லும் நட்டுவைக்கப்பட்டிருந்தது. அதைக் கண்ட பொத்தியார் மனம் கலங்கி அழுதார். தன்னுடைய செயலற்ற நிலையை, யானையை இழந்த ஒரு யானைப்பாகனோடு ஒப்பிட்டு இப்பாடலில் தன்னுடைய தாங்கமுடியாத வருத்தத்தைத் தெரிவிக்கிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 24, 2014, 04:25:07 PM
புறநானூறு, 221. (வைகம் வாரீர்!)
பாடியவர்: பொத்தியார்.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ்சோழன்.
திணை: பொதுவியல்.
துறை: கையறு நிலை.
==============================

பாடுநர்க்கு ஈத்த பல்புக ழன்னே;
ஆடுநர்க்கு ஈத்த பேரன் பினனே;
அறவோர் புகழ்ந்த ஆய்கோ லன்னே;
திறவோர் புகழ்ந்த திண்நண் பினனே;
மகளிர் சாயல்; மைந்தர்க்கு மைந்து;

துகளறு கேள்வி உயர்ந்தோர் புக்கில்;
அனையன் என்னாது அத்தக் கோனை
நினையாக் கூற்றம் இன்னுயிர் உய்த்தன்று;
பைதல் ஒக்கல் தழீஇ அதனை
வைகம் வம்மோ; வாய்மொழிப் புலவீர்!

நனந்தலை உலகம் அரந்தை தூங்கக்
கெடுவில் நல்லிசை சூடி
நடுகல் ஆயினன் புரவலன் எனவே

அருஞ்சொற்பொருள்:-

கோல் = செங்கோல்
திறவோர் = சான்றோர்
திண் = வலி
சாயல் = மென்மை
மைந்து = வலிமை
துகள் = குற்றம்
புக்கில் = புகலிடம்
பைதல் = துன்பம்
தழீஇ = உள்ளடக்கிக் கொண்டு
வைகம் = வைகுவோம்
வம்மோ = வாருங்கள்
நனந்தலை = அகன்ற இடம்
அரந்தை = துயர்
தூங்க = அடைய

இதன் பொருள்:-

பாடுநர்க்கு=====> மைந்து

வாய்மையே பேசும் புலவர்களே! பாடி வருபவர்களுக்கு வரையாது வழங்கிப் புகழ் பல கொண்டவன்; ஆடும் விறலியர்க்கும் கூத்தர்களுக்கும் பொருள் பல அளித்த மிகுந்த அன்புடையவன்; அறவோர் புகழ்ந்த செங்கோலன்; சான்றோர் புகழ்ந்த நெருங்கிய நட்புடையவன்; மகளிரடத்து மென்மையானவன்; வலியோர்க்கு வலியோன்;

துகளறு=====> எனவே

குற்றமற்ற கேள்வி அறிவுடையவர்களுக்குப் புகலிடமானவன்; அத்தகைய தன்மைகள் உடையவன் எனக் கருதாது, சிந்திக்கும் திறனற்ற கூற்றுவன், அவன் உயிரைக்கொண்டு சென்றான். அகன்ற இடமுள்ள இந்த உலகு துன்பம் அடைய, கேடில்லாத நல்ல புகழ்மாலையைச் சூடி, எம்மைப் பாதுகாத்தவன் நடுகல்லாகிவிட்டான் என்று வருந்தும் நம் சுற்றத்தாரோடு சேர்ந்து அக்கூற்றுவனை வைகுவம்; வாரீர்.

பாடலின் பின்னணி:-

வடக்கிருந்த கோப்பெருஞ்சோழன் இறந்ததும் அவன் திறமையையும், அறிவையும், பெருமையையும் கருதி அவனுக்கு ஒருநடுகல் நடப்பட்டது. அந்த நடுகல்லில், அவன் பெயரும், புகழும் குறிப்பிடப்பட்டிருந்தது. மற்றும், அந்த நடுகல் மயில் இறகு சூடப்பட்டு, மாலைகளுடன் அலங்கரிக்கப்பட்டிருந்தது, அதைக்கண்ட பொத்தியார், மனம் கலங்கி, இத்தகைய சிறந்த மன்னனின் உயிரைப் பறித்த கூற்றுவனை வைகுவோம் என்று அங்குள்ள மற்ற சான்றோர்களை அழைப்பதை இப்பாடலில் காண்கிறோம்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 24, 2014, 04:26:44 PM
புறநானூறு, 222. (என் இடம் யாது?)
பாடியவர்: பொத்தியார்.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ்சோழன்.
திணை: பொதுவியல்.
துறை: கையறு நிலை.
==============================

அழல்அவிர் வயங்கிழைப் பொலிந்த மேனி
நிழலினும் போகாநின் வெய்யோள் பயந்த
புகழ்சால் புதல்வன் பிறந்தபின் வாவென
என்இவண் ஒழித்த அன்பி லாள!
எண்ணாது இருக்குவை அல்லை;
என்னிடம் யாதுமற்று இசைவெய் யோயே!

அருஞ்சொற்பொருள்:-

அழல் = தீ
அவிர் = விளங்கும்
வயங்கிழை = விளங்கும் ஒளியுடைய அணிகலன்கள்
வெய்யோள் = விரும்பத்தக்கவள்
பயந்த = தந்த
யாது = எது
இசை வெய்யோய் = புகழை விரும்புபவனே

இதன் பொருள்:-

”தீயைப்போல் விளங்கும் பொன்னாலான அணிகலன்களை அணிந்த அழகிய வடிவுடையவளாய், உன் நிழலைக்கூட ஒருபொழுதும் நீங்காத, உன்னை மிகவும் விரும்பும் உன் மனைவி புகழ் நிறைந்த புதல்வனைப் பெற்றபின் வா” எனக் கூறி என்னை இங்கிருந்து போகச் சொன்ன அன்பில்லாதவனே! நம் நட்பினை நீ எண்ணிப் பார்க்காமல் இருந்திருக்கமாட்டாய். புகழை விரும்பும் மன்னா! நான் மீண்டும் வந்துள்ளேன்; எனக்குரிய இடம் எது என்று கூறுவாயாக.

பாடலின் பின்னணி:-

கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த பொழுது பொத்தியாரும் அவனுடன் வடக்கிருக்க விரும்பினார். ஆனால், கோப்பெருஞ்சோழன், “உன் மனைவி கருவுற்றிருக்கிறாள். அவளுக்குக் குழந்தை பிறந்த பிறகு நீ என்னோடு வடக்கிருக்கலாம்” என்று கூறியதற்கேற்ப, பொத்தியார் வடக்கிருக்கும் எண்ணத்தைக் கைவிட்டார். அவர் மனைவிக்குக் குழந்தை பிறந்த பிறகு கோப்பெருஞ்சோழனோடு வடக்கிருக்க வந்தார். ஆனால், அதற்குள் கோப்பெருஞ்சோழன் இறந்துவிட்டான். அவனுக்கு நடுகல்லும் நட்டுவைக்கப்பட்டிருந்தது. அதைக் கண்ட பொத்தியார், அவன் வாழ்ந்த காலத்தையும் அவன் நட்பையும் நினைவு கூர்ந்தார். “மன்னா! நான் வடக்கிருக்க வந்திருக்கிறேன். எனக்குரிய இடம் எது?” என்று இப்பாடலில் பொத்தியார் கேட்கிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 24, 2014, 04:33:30 PM
(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-prn1/t1/1601258_729926487032265_741537635_n.jpg)

புறநானூறு, 223. (நடுகல்லாகியும் இடங் கொடுத்தான்!)
பாடியவர்: பொத்தியார்.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ்சோழன்.
திணை: பொதுவியல்.
துறை: கையறு நிலை.
==============================

பலர்க்குநிழ லாகி உலகம்மீக் கூறித்
தலைப்போ கன்மையிற் சிறுவழி மடங்கி
நிலைபெறு நடுகல் ஆகியக் கண்ணும்
இடங்கொடுத்து அளிப்ப மன்ற உடம்போடு
இன்னுயிர் விரும்பும் கிழமைத்
தொன்னட் புடையார் தம்உழைச் செலினே!

அருஞ்சொற்பொருள்:-

நிழல் ஆதல் = அருள் செய்தல்
மீக்கூறல் = புகழ்தல், வியத்தல், மிகவும் சொல்லப்படுதல்
தலைப்போதல் = அழிதல், முடிதல்
சிறுவழி மடங்கி = சிறிய இடத்தின்கண் அடங்கியிருந்து
மன்ற = நிச்சயமாக
கிழமை = உரிமை
உழை = பக்கம்

இதன் பொருள்:-

பலருக்கும் அருள் செய்யும் நிழலாகி, உலகத்தாரால் மிகவும் பெருமையாகப் பேசப்படும் வகையில் அரசாளும் பணியை முற்றிலும் முடிக்காமல் ஒருசிறிய இடத்தில் அடங்கி நிலைபெறும் நடுகல் ஆனாய்; அவ்வாறு நீ நடுகல்லானாலும், உடம்பும் உயிரும் இணைந்தது போன்ற உரிமையுடைய, பழைய நட்பினர் உன்னிடம் வந்தால், நிச்சயமாக நீ அவருக்கு இடம் கொடுத்து உதவி செய்வாய் என்பதைத் தெரிந்துகொண்டேன்.

பாடலின் பின்னணி:-

முந்திய பாடலில், பொத்தியார் தனக்கு வடக்கிருப்பதற்குரிய இடம் எது என்று கோப்பெருஞ்சோழனின் நடுகல்லைப் பார்த்துக் கேட்கிறார். அச்சமயம், அவருக்குக் கோப்பெருஞ்சோழன் உயிருடன் வந்து அவர் வடக்கிருப்பதற்கு ஏற்ற இடத்தைச் சுட்டிக் காட்டியது போல் தோன்றியது. சோழன் காட்சி அளித்துத் தனக்கு இடம் காட்டியதை வியந்து, இப்பாடலில், பொத்தியார் அவனுடைய நட்பைப் புகழ்ந்து பாடுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

நெருங்கிய நட்புக்கு உதாரணமாக உடலுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பைத் திருவள்ளுவர்,

உடம்பொ டுயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொ டெம்மிடை நட்பு. (குறள் – 1122)

என்று கூறியிருப்பதை இங்கு ஒப்பு நோக்குக.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 24, 2014, 04:37:08 PM
புறநானூறு, 224. (இறந்தோன் அவனே!)
பாடியவர்: கருங்குளவாதனார்.
பாடப்பட்டோன்: சோழன் கரிகாற் பெருவளத்தான்.
திணை: பொதுவியல்.
துறை: கையறு நிலை.
==============================

அருப்பம் பேணாது அமர்கடந் ததூஉம்,
துணைபுணர் ஆயமொடு தசும்புடன் தொலைச்சி
இரும்பாண் ஒக்கல் கடும்பு புரந்ததூஉம்,
அறம்அறக் கண்ட நெறிமாண் அவையத்து
முறைநற்கு அறியுநர் முன்னுறப் புகழ்ந்த

தூவியற் கொள்கைத் துகளறு மகளிரொடு
பருதி உருவின் பல்படைப் புரிசை
எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண்
வேத வேள்வித் தொழில்முடித் ததூஉம்,
அறிந்தோன் மன்ற அறிவுடை யாளன்;

இறந்தோன் தானே; அளித்துஇவ் வுலகம்;
அருவி மாறி அஞ்சுவரக் கடுகிப்
பெருவறன் கூர்ந்த வேனிற் காலைப்
பசித்த ஆயத்துப் பயன்நிரை தருமார்
பூவாள் கோவலர் பூவுடன் உதிரக்

கொய்துகட்டு அழித்த வேங்கையின்
மெல்லியல் மகளிரும் இழைகளைந் தனரே

அருஞ்சொற்பொருள்:-

அருப்பம் = அரண்
அமர் = போர்
கடத்தல் = வெல்லுதல் (அழித்தல்)
புணர்தல் = சேர்தல்
ஆயம் = கூட்டம்
தசும்பு = குடம்
தொலைத்தல் = அழித்தல், முற்றுப்பெறச் செய்தல்
ஒக்கல் = சுற்றம்
கடும்பு = சுற்றம்
புரத்தல் = பாதுகாத்தல்
அற = முழுவதும்
நெறி = வழி
அறியுநர் = அறிந்தோர்
தூவியல் = தூ+இயல்; தூ = தூய்மை; துகள் = குற்றம்
பருதி = வட்டம்
எருவை = பருந்து
யூபம் = வேள்வி
அளித்து = இரங்கத்தக்கது
கடுகுதல் = குறைதல்
கடுகி = குறைந்து
மன்ற = நிச்சய்மாக
வறன் = வறம் = பஞ்சம், வறட்சி
கூர்தல் = மிகுதல்
ஆயம் = பசுக்களின் கூட்டம்
பூவாள் = ஒருவகை வாள்
கட்டு = கிளை
இழை = அணிகலன்

இதன் பொருள்:-

அருப்பம்=====> புகழ்ந்த

பகைவர்களின் அரண்களை மதியாது, அவற்றைப் போரில் அழித்தான்; துணையாகக் கூடிய இனத்துடன் சேர்ந்து, அவர்கள் குடிப்பதற்கு மதுவைக் குடம் குடமாக அளித்தான்; பாணர்களின் பெரிய சுற்றத்தைப் பாதுகாத்தான்; அறத்தை முழுமையாகக் கற்ற சான்றோர்களின் சிறந்த அவையில் வழிமுறைகளை நன்கு அறிந்தவர்கள் முன்னின்று பாராட்டிய

தூவியற்=====> அறிவுடை யாளன்

வட்டவடிவமான பல மதில்களால் சூழப்பட்ட வேள்விச் சாலையுள், பருந்து விழுங்குவதுபோல் செய்யப்பட்ட இடத்து, நாட்டிய வேள்வித் தூணாகிய நீண்ட கம்பத்து, தூய்மையான இயல்பும், கற்பொழுக்கமாகிய கொள்கையுமுடைய குற்றமற்ற குல மகளிரோடு வேதவேள்வியை முடித்தான். இத்தகைய செயல்களின் பயனை நிச்சயமாக அறிந்த அறிவுடையோன்

இறந்தோன்=====> களைந் தனரே

இறந்தான். ஆகவே இவ்வுலகம் இரங்கத் தக்கது. அருவியில் நீர் குறைந்து, உலகத்தார் அஞ்சும் வறட்சி மிகுந்த வேனிற்காலத்தில் பசியால் வாடும் பசுக்களின் கூட்டத்தைப் பாதுகாப்பதற்காக, கூர்மையான கொடுவாளால் இடையர்கள் இலைகளையும் பூக்களையும் உதிர்த்த பிறகு களையிழந்து காணப்படும் வேங்கை மரத்தைப்போல் கரிகாலனின் மெல்லிய இயல்புடைய மனைவியர் தங்கள் அணிகலன்களைக் களைந்து காட்சி அளித்தனர்.

சிறப்புக் குறிப்பு:-

கரிகால் வளவன் சிறுவனாக இருந்தபொழுது, ஒருவழக்கில் நீதி சொல்வதற்கு, நரைமுடி தரித்து முதியவர்போல் வந்து நீதிவழங்கியதாக ஒருகதை உள்ளது. இப்பாடலில், “முறைநற்கு அறியுநர் முன்னுறப் புகழ்ந்த” என்பதற்கு இச்செய்தியைப் பொருளாகக் கொள்வது சிறந்தது என்று அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை தம் நூலில் கூறுகிறார்.

பாடலின் பின்னணி:-

இப்பாடலில், புலவர் கருங்குளவாதனார் கரிகாலனின் பெருமைக்குரிய செயல்களையும் அவன் புகழையும் கூறுகிறார். மற்றும், அவன் இறந்த பிறகு, அவன் மனைவியர் தங்கள் அணிகலன்களை கழற்றிப் பொலிவின்றிருந்ததை இலைகளும் பூக்களும் இல்லாத வேங்கை மரத்திற்கு ஒப்பிடுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 24, 2014, 04:38:19 PM
புறநானூறு, 225. (வலம்புரி ஒலித்தது!)
பாடியவர்: ஆலத்தூர் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி.
திணை: பொதுவியல்.
துறை: கையறு நிலை.
==============================

தலையோர் நுங்கின் தீஞ்சோறு மிசைய
இடையோர் பழத்தின் பைங்கனி மாந்தக்
கடையோர் விடுவாய்ப் பிசிரொடு சுடுகிழங்கு நுகர
நிலமலர் வையத்து வலமுறை வளைஇ
வேந்துபீ டழித்த ஏந்துவேல் தானையொடு

ஆற்றல் என்பதன் தோற்றம் கேள்இனிக்
கள்ளி போகிய களரியம் பறந்தலை
முள்ளுடை வியன்காட் டதுவே நன்றும்
சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன் கொல்லென
இன்னிசைப் பறையொடு வென்றி நுவலத்

தூக்கணங் குரீஇத் தூங்குகூடு ஏய்ப்ப
ஒருசிறைக் கொளீஇய திரிவாய் வலம்புரி
ஞாலங் காவலர் கடைத்தலைக்
காலைத் தோன்றினும் நோகோ யானே

அருஞ்சொற்பொருள்:-

மிசைதல் = உண்ணுதல்
மாந்துதல் = உண்ணுதல்
பிசிர் = ஒட்டிய தோல்
நுகர்தல் = அனுபவித்தல், புசித்தல்
பீடு = பெருமை
களரி = பாழ்நிலம்
பறந்தலை = பாழிடம்
வியன் = அகன்ற, பெரிய
நுவலுதல் = சொல்லுதல்
ஏய்தல் = ஒத்தல்
குரீஇ = குருவி
சிறை = பக்கம்
கொளீஇய = கொள்ள வேண்டி
திரி = வளைந்த
ஞாலம் = உலகம்
கடைத்தலை = தலைவாயில்

இதன் பொருள்:-

தலையோர்=====> தானையொடு

முன்னே செல்லுகின்ற படையினர் நுங்கின் இனிய பதத்தினை உண்ணுவர்; படையின் இடைப்பகுதியில் உள்ளோர், பனம்பழத்தின் இனிய கனியை உண்ணுவர்; படையின் கடைப்பகுதியில் உள்ளோர் தோலுடன் கூடிய சுட்ட பனங்கிழங்கினை உண்பர். பரந்த நிலப்பரப்பையுடைய உலகத்தை வலமாகச் சுற்றிப் பகைமன்னர்களின் பெருமிதத்தை அழித்த வேல் ஏந்திய படையோடு கூடிய,

ஆற்றல்=====> நோகோ யானே

வலிமையின் விளைவை இப்பொழுது கேட்பாயாக. அவன் இறந்த பிறகு, அவன் நாடு கள்ளிச் செடிகள் வளர்ந்திருக்கும் களர் நிலமாகிய பாழிடத்து முள்ளுடைய பெரிய காடாகியது.

முன்பு, மற்ற வேந்தர்களின் அரண்மனைகளில் இருந்த வலம்புரிச் சங்குகளை முழங்கினால், அவர்கள் முரசுடன் பெற்ற வெற்றியைக் குறித்து முழங்குகிறார்கள் என்று நலங்கிள்ளி நினைப்பான் என்று அஞ்சி, தூக்கணங்குருவிக் கூடுகளைப்போல் ஒருபக்கம் தூங்கிய (தொங்கிக்கொண்டிருந்த) வலம்புரிச் சங்குகள் இப்பொழுது உலகாளும் மன்னர்களின் அரண்மனை வாயில்களில், அவர்களைத் துயில் எழுப்புவதற்காக ஒலித்தாலும் நான் அதனைக் கேட்டு, இன்னும் இறவாமல் இருக்கிறேனே என்று வருந்துகிறேன்.

பாடலின் பின்னணி:-

சோழன் நலங்கிள்ளி வாழ்ந்த காலத்தில், மற்ற மன்னர்கள் தம்மிடம் உள்ள வலம்புரிச் சங்கை முழங்குவதில்லை. சங்கை முழங்கினால் அவர்கள் தம் வெற்றியை அறிவிக்கச் சங்கை முழங்குவதாக எண்ணிச் சோழன் நலங்கிள்ளி படையெடுத்துப் போருக்கு வருவான் என்று மற்ற மன்னர்கள் அஞ்சியதால்தான் அவர்கள் தங்கள் சங்குகளை முழங்காமல் இருந்தனர். அவ்வளவு வலிமை உள்ளவன் இப்பொழுது இறந்துவிட்டான். இப்பொழுது அரசர்களைக் காலையில் துயில் எழுப்புவதற்காகச் சங்குகள் முழங்கப்படுகின்றன, அதைக் கேட்டு, புலவர் ஆலத்தூர் கிழார், சோழன் நலங்கிள்லியை நினைத்து வருந்துகிறார். இப்பாடலில், அவர் தன்னுடைய செயலற்ற நிலையை வெளிப்படுத்துகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 24, 2014, 05:38:41 PM
புறநானூறு, 226. (திண்தேர் வளவற் கொண்ட கூற்றே!)
பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை: பொதுவியல்.
துறை: கையறு நிலை.
==============================

செற்றன்று ஆயினும், செயிர்த்தன்று ஆயினும்,
உற்றன்று ஆயினும், உய்வின்று மாதோ;
பாடுநர் போலக் கைதொழுது ஏத்தி,
இரந்தன்று ஆகல் வேண்டும்; பொலந்தார்
மண்டமர் கடக்கும் தானைத்
திண்தேர் வளவற் கொண்ட கூற்றே!

அருஞ்சொற்பொருள்:-

செற்றம் = நெடுங்காலமாக உள்ள பகை, மனக்கறுவம்
செயிர்த்தல் = சினங்கொள்ளுதல்
உற்றன்று = உற்றது
உறுதல் = மெய்தீண்டல்
உய்வின்று = தப்பும் வழியில்லை
மாதோ – அசைச் சொல்
பொலம் = பொன்
தார் = மாலை
மண்டுதல் = உக்கிரமாதல்
உக்கிரம் = கொடுமை, கோபம்
கூற்று = இயமன்

இதன் பொருள்:-

பொன்மாலையையும், உக்கிரமாகப் போரில் பகைவரை அழிக்கும் படையையும், திண்மையான தேரையும் உடைய கிள்ளிவளவனின் உயிரைக் கொண்ட கூற்றுவனே! பகைமை உணர்வோடோ, சினங்கொண்டோ அல்லது நேரில் வந்து கிள்ளிவளவனிடம் போரிட்டோ அவன் உயிரைக் கொண்டு செல்ல முயன்றிருந்தால் நீ தப்பியிருக்க வழியில்லை. பாடுவோர் போல் வந்து தொழுது வணங்கி அவனை இரந்து கேட்டுத்தான் அவன் உயிரை நீ கொண்டு சென்றிருக்க வேண்டும்.

பாடலின் பின்னணி:-

சோழன் கிள்ளிவளவன் குளமுற்றம் என்னும் இடத்தில் இறந்தான். அவன் இறந்ததைக் கேள்வியுற்ற மாறோக்கத்து நப்பசலையாரால் அவன் இறந்தான் என்பதை நம்ப முடியவில்லை. “கிள்ளிவளவன் ஆண்மையும் வலிமையும் மிகுந்தவனாதலால், கூற்றுவன் கிள்ளிவளவனிடம் பகைமை காரணத்தாலோ, கோபத்தாலோ அல்லது நேரில் வந்தோ அவன் உயிரைக் கொண்டு சென்றிருக்க முடியாது. பாடுவோர் போல் வந்து தொழுது பாராட்டி வஞ்சகமாகத்தான் கிள்ளிவளவனின் உயிரைக் கொண்டு சென்றிருக்க முடியும்.” என்று இப்பாடலில் மாறோக்கத்து நப்பசலையார் கூறுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

செற்றும் செயிர்த்தும் உற்றும் கிள்ளிவளவனின் உயிரைக் கூற்றுவன் கொண்டு சென்றிருக்க முடியாது என்பது அவன் ஆண்மை மிகுதியைக் குறிக்கிறது. பாடுநர் போல வந்து கைதொழுது ஏத்தி இரந்துதான் கிள்ளிவளவனின் உயிரைக் கொண்டு சென்றிருக்க முடியும் என்பது அவன் வள்ளல் தன்மையைக் குறிக்கிறது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 24, 2014, 07:36:44 PM
புறநானூறு, 227. (நயனில் கூற்றம்!)
பாடியவர்: ஆடுதுறை மாசாத்தனார்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை: பொதுவியல்.
துறை: கையறு நிலை.
==============================

நனிபே தையே நயனில் கூற்றம்
விரகுஇன் மையின் வித்துஅட்டு உண்டனை;
இன்னுங் காண்குவை நன்வாய் ஆகுதல்
ஒளிறுவாள் மறவரும் களிறும் மாவும்
குருதியும் குரூஉப்புனற் பொருகளத் தொழிய

நாளும் ஆனான் கடந்துஅட்டு என்றுநின்
வாடுபசி அருந்திய பழிதீர் ஆற்றல்
நின்னோர் அன்ன பொன்னியற் பெரும்பூண்
வளவன் என்னும் வண்டுமூசு கண்ணி
இனையோற் கொண்டனை ஆயின்,
இனியார் மற்றுநின் பசிதீர்ப் போரே?

அருஞ்சொற்பொருள்:-

நனி = மிக
நயன் = நன்மை, நடுவு நிலைமை
விரகு = அறிவு (சாமர்த்தியம்)
அடுதல் = சமைத்தல்
வித்து அட்டு = விதையை உணவாகச் சமைத்து
நன்வாய் = சொல்லிய சொற்கள் நல்ல மெய்யாதல்
குரூஉ = ஒளி, நிறம்
ஆனான் = அளவு இல்லாதவன் (அடங்காதவன்)
கடத்தல் = வெல்லுதல்
நின்னோர் அன்ன = உனக்கு ஒப்பான
மூசல் = மொய்த்தல்
கண்ணி = மாலை
இனையோன் = இத்தன்மையானவன்

இதன் பொருள்:-

நனிபே=====> தொழிய

மிகவும் அறிவற்ற, நடுவு நிலைமையற்ற கூற்றமே! அறிவில்லாததால், நீ விளைச்சளைத் தரும் விதையைச் சமைத்து உண்டாய். இச்சொற்களின் உண்மையை நீ நன்கு அறிவாய். ஓளியுடைய வாளையுடைய வீரர்களும், யானைகளும், குதிரைகளும் போர்க்களத்தில் இரத்த வெள்ளத்தில் இறந்தன. அவ்வாறு இறந்தும்,

நாளும்=====> போரே

அமையாதவனாய், நாள்தோறும் பகைவர்களின் படைகளை வென்று அழித்து, உன்னை வாட்டும் பசியைத் தீர்க்கும் பழியற்ற ஆற்றல் உடையவனாகிய, உன்னைப்போல் பொன்னாலான பெரிய அணிகளை அணிந்த வளவன் என்னும் வண்டுகள் மொய்க்கும் மாலையணிந்த கிள்ளிவளவனின் உயிரைப் பறித்தாய். இனி உன் பசியைத் தீர்ப்பவர் யார்?

பாடலின் பின்னணி:-

கிள்ளிவளவன் இறந்ததை அறிந்த சாத்தனார் மிகவும் வருத்தம் அடைந்தார். ”கூற்றுவனே! நீ உன் அறிவின்மையின் காரணத்தால் கிள்ளிவளவனைக் கொன்றாய். உன் செயல், வறுமையில் வாடும் உழவன் விதைக்காக வைத்திருந்த நெல்லை உணவாக்கி உண்டது போன்ற செயல். நீ அவனைக் கொல்லாது இருந்திருப்பாயாயின், அவன், நாளும் போர்க்களத்தில் பகைவர்கள் பலரைக் கொன்று உன் பசியைத் தீர்த்திருப்பான். இப்பொழுது யார் உன் பசியைத் தீர்ப்பர்?” என்று இப்பாடலில் ஆடுதுறை மாசாத்தனார் நயம்படக் கூற்றுவனைச் சாடுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 24, 2014, 07:39:27 PM
புறநானூறு, 228. (ஒல்லுமோ நினக்கே!)
பாடியவர்: ஐயூர் முடவனார்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
திணை: பொதுவியல்.
துறை: ஆனந்தப்பையுள். கணவன் இறந்த போது மனைவி துன்புறுதலைக் கூறுதல் அல்லது இறந்தாரைக் கண்டு சுற்றத்தார் வருந்துதல் ஆகிய இரண்டும் ஆனந்தப்பையுள் என்ற துறையில் அடங்கும்.
==============================

கலஞ்செய் கோவே! கலங்செய் கோவே!
இருள்திணிந் தன்ன குரூஉத்திரள் பரூஉப்புகை
அகல்இரு விசும்பின் ஊன்றுஞ் சூளை
நனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவே!
அளியை நீயே; யாங்கா குவைகொல்?

நிலவரை சூட்டிய நீள்நெடுந் தானைப்
புலவர் புகழ்ந்த பொய்யா நல்இசை
விரிகதிர் ஞாயிறு விசும்புஇவர்ந் தன்ன
சேண்விளங்கு சிறப்பின் செம்பியர் மருகன்
கொடிநுடங்கு யானை நெடுமா வளவன்

தேவர் உலகம் எய்தினன்; ஆதலின்,
அன்னோர் கவிக்கும் கண்ணகன் தாழி,
வனைதல் வேட்டனை ஆயின், எனையதூஉம்
இருநிலம் திகிரியாப் பெருமலை
மண்ணா வனைதல் ஒல்லுமோ, நினக்கே?

அருஞ்சொற்பொருள்:-

கலம் = மண்கலம்
கோ = வேட்கோ = குயவன்
குரூ = நிறம் (கருமை நிறம்)
திரள் = உருண்டை
பரூஉ = பருமை
இரு = பெரிய
விசும்பு = ஆகாயம்
சூளை = மண்கலங்கலைச் சுடுமிடம்
நனந்தலை = அகன்ற இடம்
மூதூர் = பழமையான ஊர்
அளியை = இரங்கத் தக்கவன்
இவர்தல் = பரத்தல்
செம்பியர் மருகன் = சோழர்களின் வழித்தோன்றல்
நுடங்குதல் = அசைதல்
கவித்தல் = மூடுதல்
கண்ணகன் தாழி = இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் பெரிய மண் பாத்திரம்
வேட்டல் = விரும்பல்
எனையதூஉம் = எப்படியும்
திகிரி = சக்கரம்
பெருமலை = இமயமலை
ஒல்லுமோ = முடியுமோ
வனைதல் = செய்தல்

இதன் பொருள்:-

கலஞ்செய்=====> குவைகொல்?

மண்பாத்திரங்களைச் செய்யும் குயவனே! மண்பாத்திரங்களைச் செய்யும் குயவனே! அகன்ற பெரிய ஆகாயத்தில், இருள் திரண்டாற் போல் பெருமளவில் புகை தங்கும் சூளையையுடைய பழைய ஊரில் மண்கலங்கள் செய்யும் குயவனே! கிள்ளிவளவன்

நிலவரை=====> நெடுமா வளவன்

நிலமெல்லாம் பரப்பிய மிகப் பெரிய படையையுடையவன்; புலவர்களால் புகழப்பட்ட பொய்மை இல்லாத நல்ல புகழையுடையவன். விரிந்த கதிர்களையுடைய ஞாயிறு, தொலைதூரத்தில், வானில் விளங்குவதைப்போல் சிறந்த புகழையுடைய சோழர் குலத்தின் வழித்தோன்றலாகிய கிள்ளிவளவன் கொடி அசைந்தாடும் யானைகளையுடையவன்.

தேவர்=====> நினக்கே?

அவன் தேவருலகம் அடைந்தான். அவனை அடக்கம் செய்வதற்கேற்ற பெரிய தாழியைச் செய்ய விரும்பினாய் என்றால் எப்படிச் செய்வாய்? பெரிய நில உலகத்தைச் சக்கரமாகவும், இமயமலையை மண்ணாகவும் கொண்டு உன்னால் அந்தத் தாழியைச் செய்ய முடியுமா? அத்தகைய தாழியைச் செய்வதற்கு நீ என்ன பாடு படுவாயோ? நீ இரங்கத் தக்கவன்.

பாடலின் பின்னணி:-

கிள்ளிவளவன் இறந்ததை அறிந்து வருந்திய சான்றோர்களில் ஐயூர் முடவனாரும் ஒருவர். ”கிள்ளிவளவன் பூத உடலை அடக்கம் செய்வதற்கு உன்னால் தாழி செய்ய முடியும். ஆனால், அவன் புகழுடம்பு மிகப்பெரியது. அதை அடக்கம் செய்வதற்கு ஏற்ற பெரிய தாழியை உன்னால் செய்ய முடியுமா?” என்று குயவன் ஒருவனைப் பார்த்து ஐயூர் முடவனார் கேட்பதுபோல் இப்பாடல் அமைந்துள்ளது.

சிறப்புக் குறிப்பு:-

ஆனந்தம் என்ற சொல்லுக்கு ”சாக்காடு” என்றும் ஒரு பொருள். பையுள் என்ற சொல்லுக்கு “துன்பம்” என்று பொருள். ஆகவே, ஒருவனுடைய இறப்பினால் அவன் சுற்றத்தாரோ அல்லது அவன் மனைவியோ வருந்துவதைப் பற்றிய பாடல்கள் ஆனந்தப்பையுள் என்ற துறையில் அடங்கும் என்பது அறிஞர் கருத்து. இப்பாடலில், கிள்ளிவளவன் இறந்ததால் துன்பமுற்ற புலவர் ஐயூர் முடவனார் தம் வருத்தத்தை கூறுகிறார். அவர், அவனுடைய சுற்றத்தாருள் ஒருவர் என்பதற்கு ஏற்ற ஆதாரம் ஒன்றும் காணப்படாததால், இப்பாடல், கையறு நிலையைச் சார்ந்த மற்ற பாடல்களைப்போல், அரசன் இறந்ததால் புலவர் தம் வருத்தத்தைக் கூறும் ஒருபாடல். ஆகவே, இப்பாடலையும் கையறு நிலையைச் சார்ந்ததாகக் கருதலாம் என்று தோன்றுகிறது.

சங்க காலத்தில், இறந்தவர்களின் உடலைத் தாழியில் வைத்துப் புதைக்கும் வழக்கம் இருந்தது என்பது இப்பாடலிலிருந்து தெரிகிறது.

கிள்ளிவளவனின் பூத உடலை ஒரு தாழியில் வைத்துப் புதைத்தாலும், அவன் பெரும்புகழ் கொண்டவனாகையால், அவனுடைய புகழுடம்பை கொள்ளக்கூடிய அளவுக்குத் தேவையான பெரிய தாழி செய்ய முடியாது என்று கூறி, ஐயூர் முடவனார் கிள்ளிவளவனின் புகழை இப்பாடலில் பாராட்டுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 24, 2014, 07:43:06 PM
புறநானூறு, 229. (மறந்தனன் கொல்லோ?)
பாடியவர்: கூடலூர் கிழார்.
பாடப்பட்டோன்: கோச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.
திணை: பொதுவியல்.
துறை: கையறு நிலை.
================================

ஆடுஇயல் அழல்குட்டத்து
ஆர்இருள் அரைஇரவில்
முடப்பனையத்து வேர்முதலாக்
கடைக்குளத்துக் கயம்காயப்,
பங்குனிஉயர் அழுவத்துத்

தலைநாள்மீன் நிலைதிரிய,
நிலைநாள்மீன் அதன்எதிர் ஏர்தரத்,
தொல்நாள்மீன் துறைபடியப்,
பாசிச் செல்லாது ஊசி முன்னாது
அளக்கர்த்திணை விளக்காகக்

கனைஎரி பரப்பக் கால்எதிர்பு பொங்கி
ஒருமீன் விழுந்தன்றால் விசும்பினானே
அதுகண்டு, யாமும்,பிறரும் பல்வேறு இரவலர்
பறைஇசை அருவி நன்னாட்டுப் பொருநன்
நோயிலன் ஆயின் நன்றுமற்று இல்லென

அழிந்த நெஞ்சம் மடியுளம் பரப்ப
அஞ்சினம் எழுநாள் வந்தன்று இன்றே;
மைந்துடை யானை கைவைத் துஉறங்கவும்
திண்பிணி முரசும் கண்கிழிந்து உருளவும்
காவல் வெண்குடை கால்பரிந்து உலறவும்

கால்இயல் கலிமாக் கதிஇன்றி வைகவும்,
மேலோர் உலகம் எய்தினன் ஆகலின்
ஒண்தொடி மகளிர்க்கு உறுதுணை ஆகித்
தன்துணை ஆயம் மறந்தனன் கொல்லோ
பகைவர்ப் பிணிக்கும் ஆற்றல் நசைவர்க்கு

அளந்துகொடை அறியா ஈகை
மணிவரை அன்ன மாஅ யோனே?

அருஞ்சொற்பொருள்:-

ஆடு இயல் = ஆடு போன்ற உருவமுடைய மேட இராசி
அழல் = நெருப்பு, தீ
குட்டம் = கூட்டம்
அழல் குட்டம் = நெருப்புப் போன்ற நிறமுடைய ஆறு நட்சத்திரங்களின் கூட்டமாகிய கார்த்திகை என்னும் நட்சத்திரம்
ஆர் = நிறைந்த
அரை = பாதி
அரையிரவு = நடு இரவு
முடம் = நொண்டி
முடப்பனை = வளைந்த பனைமரம் போன்ற தோற்றமுடைய அனுடம் என்னும் நட்சத்திரம் (அனுடம் என்னும் நட்சத்திரம் ஆறு நட்சத்திரங்களின் கூட்டம்; ஒரு தனி நட்சத்திரம் அல்ல.)
முடப்பனையத்து வேர்முதல் = வளைந்த பனைமரம்போல் தோற்றமளிக்கும் அனுடம் என்னும் நட்சத்திரக் கூட்டத்தின் அடிப்பகுதிக்கு முந்திய நட்சத்திரம் (கேட்டை)
கடைக்குளத்துக் கயம் காய = கயம் குளத்து கடை காய = கயமாகிய குளத்தைப்போல் தோற்றமளிக்கும் புனர்பூச நட்சத்திரத்தின் முடிவிலே உள்ள நட்சத்திரமாகிய திருவாதிரை (புனர்பூசம் என்பது ஒரு சில நட்சத்திரங்களின் கூட்டம்) எல்லையாக உள்ள நட்சத்திரங்கள் எல்லாம் (திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்தரம், அத்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுடம், கேட்டை) விளங்கிக் காய
உயர் அழுவம் = முதல் பதினைந்து நாட்கள்
தலைநாள் மீன் = உத்தரம் என்னும் நட்சத்திரம்
நிலைநாள் மீன் = எட்டாம் மீன் (உத்தரம் என்னும் நட்சத்திரத்திலிருந்து நட்சத்திர வரிசையில் உள்ள எட்டாம் நட்சத்திரமாகிய மூலம்)
ஏர்தல் = எழுதல்
தொல்நாள் = உத்தரத்திற்கு முன்னதாக நட்சத்திர வரிசையில் உள்ள எட்டாம் நட்சத்திரமாகிய மிருகசீரிடம்
பாசி = கிழக்கு
தூசி = வடக்கு
முன்னுதல் = படர்ந்து செல்லுதல்
அளக்கர் = கடல்
திணை = பூமி
கனை = ஒலி
கால் = காற்று
எதிர்பு பொங்கி = கிளர்ந்து எழுந்து
மடிதல் = வாடுதல்
பரத்தல் = அலமருதல் (கலங்குதல்)
பரிதல் = ஒடிதல்
உலறுதல் = சிதைதல் (முறிதல்)
கதி = குதிரை நடை
வைகல் = தங்கல்
ஆயம் = கூட்டம்
பிணிதல் = சாதல்
மணி = நீலமணி
மாயோன் = திருமால்

இதன் பொருள்:-

ஆடுஇயல்=====> அழுவத்து

ஒரு பங்குனி மாதத்து முதற் பதினைந்து நாட்களுள், மேட இராசியில் உள்ள கார்த்திகை நட்சத்திரத்தில், இருள் நிறைந்த நடு இரவில், வளைந்த பனைமரம்போல் தோற்றமளிக்கும் அனுடம் என்னும் நட்சத்திரக் கூட்டத்தின் அடிப்பகுதிக்கு முந்திய நட்சத்திரமாகிய கேட்டை முதலாக, கயமாகிய குளத்தைப்போல் தோற்றமளிக்கும் புனர்பூச நட்சத்திரத்தின் முடிவிலே உள்ள நட்சத்திரமாகிய திருவாதிரை நட்சத்திரம் எல்லையாக உள்ள நட்சத்திரங்கள் பதின்மூன்றும் (கேட்டை, அனுடம், விசாகம், சுவாதி, சித்திரை, அத்தம், உத்தரம், பூரம், மகம், ஆயில்யம், பூசம், புனர்பூசம் திருவாதிரை) விளங்கிக் காய்ந்தன.

தலைநாள்மீன்=====> விளக்காக

அப்பொழுது உத்தரம் என்னும் நட்சத்திரம் உச்சத்தில் (வானின் நடுவில்) இருந்தது. அந்த உத்தர நட்சத்திரம் அவ்வுச்சியிலிருந்து சாய்ந்தது. அந்த உத்தர நட்சத்திரத்திற்கு எட்டாம் நட்சத்திரமாகிய மூலம் அதற்கு எதிராக எழுந்தது. அந்த உத்தரத்திற்கு எட்டாம் நட்சத்திரமாகிய மிருகசீரிடம் மேற்கே சாய்ந்து மறையும் நேரத்தில், கடல் சூழந்த உலகுக்கு விளக்குப்போல் வானில் ஒரு நட்சத்திரம் கிழக்கும் போகாமல், வடக்கும் போகாமல், வடகிழக்காக,

கனைஎரி=====> இல்லென

பெருமுழக்கத்தோடு காற்றில் கிளர்ந்து எழுந்து தீப்பரந்து சிதறி வீழ்ந்தது. அதைக் கண்டு, நாம் பலரும் பல்வேறு இரவலரும், “பறை ஓசைபோல் ஒலிக்கும் அருவிகள் நிறைந்த நல்ல மலைநாட்டின் தலைவனாகிய சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை நோயின்றி இருப்பது நல்லது”

அழிந்த=====> உலறவும்

என்று வருந்திய நெஞ்சத்துடன் வாடிக் கலங்கி அஞ்சினோம். அந்த நட்சத்திரம் விழுந்து இன்று ஏழாம் நாள். இன்று, வலிய யானை தன் தும்பிக்கையை நிலத்தில் வைத்து உறங்கியது. வாரால் பிணிக்கப்பட்ட முரசு கிழிந்து உருண்டது. காவலுக்கு அடையாளமாக இருக்கும் கொற்றக்குடையின் காம்பு ஒடிந்து சிதைந்தது.

கால்இயல்=====> மாஅ யோனே?

காற்றைப்போல் விரைந்து செல்லும் குதிரைகள் நிலைகலங்கி நின்றன. இந்நிலையில், பகைவரைக் கொல்லும் வலிமையும், தன்னை நாடி வந்தவர்களுக்கு அளவற்ற பொருட்களை அளித்த கொடைவள்ளலும், நீலநிறமுடைய திருமால் போன்றவனுமாகிய சேரன் விண்ணுலகம் அடைந்தான். தன் மனைவியர்க்கு உறுதுணையாக இருந்தவன் அவர்களை மறந்தனனோ?

பாடலின் பின்னணி:-

சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் இறுதி நாட்களில், பங்குனி மாதத்தில் வானிலிருந்து ஒரு விண்மீன் (நட்சத்திரம்) தீப்பிழம்புபோல் ஒளியுடன் எரிந்து விழுந்தது. பங்குனி மாதத்தில் விண்மீன் எரிந்து விழுந்தால் அரசனுக்கு கேடுவரும் என்பதை கூடலூர் கிழார் நன்கு அறிந்திருந்தார். அந்த விண்மீன் எரிந்து விழுந்ததையும், மற்றும் சில விண்மீன்களின் நிலையினையும் ஆராய்ந்த கூடலூர் கிழார், சேரன் இன்னும் ஏழு நாட்களில் இறப்பான் என்பதை உணர்ந்தார். அவர் எண்ணியதுபோல் ஏழாம் நாளில், சேரன் இறந்தான். அன்று, வேறு சில தீய நிமித்தங்களும் நிகழ்ந்தன. விண்மீன் எரிந்து விழுந்ததையும், மற்றும் அப்பொழுது நிகழ்ந்த தீய நிமித்தங்களையும், சேரன் இறந்ததையும் இப்பாடலில் கூடலூர் கிழார் வருத்தத்துடன் கூறுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 24, 2014, 07:45:22 PM
புறநானூறு, 230. (நீ இழந்தனையே கூற்றம்!)
பாடியவர்: அரிசில் கிழார்.
பாடப்பட்டோன்: அதியமான் தகடூர்ப் பொருது வீழ்ந்த எழினி.
திணை: பொதுவியல்.
துறை: கையறு நிலை.
================================

கன்றுஅமர் ஆயம் கானத்து அல்கவும்
வெங்கால் வம்பலர் வேண்டுபுலத்து உறையவும்
களம்மலி குப்பை காப்பில வைகவும்
விலங்குபகை கடிந்த கலங்காச் செங்கோல்
வையகம் புகழ்ந்த வயங்குவினை ஒள்வாள்

பொய்யா எழினி பொருதுகளம் சேர
ஈன்றோள் நீத்த குழவி போலத்
தன்அமர் சுற்றம் தலைத்தலை இனையக்
கடும்பசி கலக்கிய இடும்பைகூர் நெஞ்சமொடு
நோய்உழந்து வைகிய உலகிலும் மிகநனி

நீஇழந் தனையே அறனில் கூற்றம்!
வாழ்தலின் வரூஉம் வயல்வளன் அறியான்
வீழ்குடி உழவன் வித்துண் டாஅங்கு
ஒருவன் ஆருயிர் உண்ணாய் ஆயின்
நேரார் பல்லுயிர் பருகி
ஆர்குவை மன்னோஅவன் அமர்அடு களத்தே

அருஞ்சொற்பொருள்:-

அமர்தல் = பொருந்துதல்
ஆயம் = கூட்டம்
கானம் = காடு
அல்கல் = தங்குதல்
வம்பலர் = புதியவர்
புலம் =இடம்
மலிதல் = மிகுதல், பெருகல்
குப்பை = குவியல்
வைகல் = தங்கல்
விலங்கு பகை = தடுக்கும் பகை
கடிதல் = தடை செய்தல்
வயங்குதல் = விளங்கல்
அமர் = விருப்பம்
இடும்பை = துன்பம்
வீழ்குடி = வளமில்லாத குடி
நேரார் = பகைவர்
ஆர்கை = தின்னுதல்

இதன் பொருள்:-

கன்றுஅமர்=====> ஒள்வாள்

கன்றுகளுடன் கூடிய பசுக்களின் கூட்டம் காட்டிலே தங்கி இருக்கவும், வெப்பமிக்க வழியில் நடந்து வந்த வழிப்போக்கர்கள் தாம் விரும்பிய இடங்களில் அச்சமின்றித் தங்கவும், களத்தில் பெரிய நெற்குவியல்கள் காவலின்றிக் கிடக்கவும், எதிர்த்து வந்த பகையை அழித்து, நிலைகலங்காத செங்கோல் ஆட்சி புரிந்து, உலகம் புகழும் போரைச் செய்யும் ஒளி பொருந்திய வாளையுடைய,

பொய்யா=====> மிகநனி

பொய் கூறாத எழினி போர்க்களத்தில் இறந்தான். பெற்ற தாயால் கைவிடப்பட்ட குழந்தைபோல் தன்னை விரும்பும் சுற்றத்தார் வேறுவேறு இடங்களில் இருந்து வருந்த, மிக்க பசியால் கலக்கமடைந்த துன்பம் மிகுந்த நெஞ்சத்தோடு, அவனை இழந்து நாடு வருந்தியது.

நீஇழந் தனையே=====> களத்தே

அறமில்லாத கூற்றமே! நீ அதைவிட மிக அதிகமாக இழந்தாய். தன் வருங்கால வளமான வாழ்வுக்குத் தேவையான விளைச்சலைத் தரும் விதைகளைச் சமைத்து உண்ட வறுமையுற்ற குடியில் உள்ள உழவன்போல் இந்த ஒருவனது பெறுதற்கரிய உயிரை உண்ணாமல் இருந்திருப்பாயாயின், அவன் பகைவரைக் கொல்லும் போர்க்களத்தில் பல பகைவர்களுடைய உயிர்களை உண்டு நீ நிறைவடைந்திருப்பாய்.

பாடலின் பின்னணி:-

அரிசில் கிழார் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையைப் பாடியவர். அவர் அதியமானிடத்தும் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையிடத்தும் மிகுந்த அன்புடையவர். ஆகவே, அதியமான் இறந்ததற்காக, சேரனை இகழாமல், அது கூற்றுவன் செய்த தவறு என்று கூறி இப்பாடலில் தன் வருத்ததைத் தெரிவிக்கிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 24, 2014, 07:47:21 PM
புறநானூறு, 231. (புகழ் மாயலவே!)
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பொதுவியல்.
துறை: கையறு நிலை.
================================

எறிபுனக் குறவன் குறையல் அன்ன
கரிபுற விறகின் ஈம ஒள்அழல்,
குறுகினும் குறுகுக; குறுகாது சென்று
விசும்புறு நீளினும் நீள்க; பசுங்கதிர்த்
திங்கள் அன்ன வெண்குடை
ஒண்ஞாயிறு அன்னோன் புகழ்மா யலவே

அருஞ்சொற்பொருள்:-

எறிதல் = வெட்டல்
எறி = வெட்டிய
புனம் = கொல்லை
குறவன் = குறிஞ்சி நிலத்தில் வசிப்பவன்
குறையல் = மரத்துண்டு
ஈமம் = பிணத்தை எரிப்பதற்கு அடுக்கிய விறகுகளின் அடுக்கு
அழல் = தீக்கொழுந்து, நெருப்பு
மாய்தல் = அழிதல்

இதன் பொருள்:-

தினைப்புனத்தில், குறவன் ஒருவனால் வெட்டப்பட்ட அரைகுறையாக எரிந்த மரத்துண்டுகள் போல் கரிய நிறமுள்ள மரத்துண்டுகள் அதியமானின் உடலை எரிப்பதற்காக அடுக்கப்பட்டுத் தீ மூட்டப்பட்டுள்ளன. ஒளிநிறைந்த அந்த ஈமத்தீ அவன் உடலை நெருங்கினாலும் நெருங்கட்டும்; நெருங்காமல், வானளாவ நீண்டு பரவினாலும் பரவட்டும். குளிர்ந்த திங்களைப் போன்ற வெண்கொற்றக்குடையை உடையவனும், ஒளிபொருந்திய ஞாயிறு போன்றவனுமாகிய அதியமானின் புகழ் அழியாது.

பாடலின் பின்னணி:-

அதியமான் நெடுமான் அஞ்சி அவ்வையாரிடத்து மிகுந்த அன்பு கொண்டவனாக இருந்தான். அவனுடைய அவைக்களத்தில் புலவராக இருந்தது மட்டுமல்லாமல், அவ்வையார் அதியமானின் தூதுவராகவும் பணியாற்றினார். இருவரும் மிகுந்த நட்புடன் இருந்ததாகப் புறநானூற்றிலுள்ள பல பாடல்கள் கூறுகின்றன. அதியமான் இறந்த பிறகு அவன் உடலை தீயிலிட்டு எரித்தார்கள். அதைக் கண்ட அவ்வையார் துயரம் தாங்காமல், அதியமான் உடல் அழிந்தாலும் அவன் புகழ் எப்பொழுதும் அழியாது என்று இப்பாடலில் வருத்தத்துடன் கூறுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

பாடல் 228 – இல் இறந்தவர்களின் உடலைத் தாழியில் வைத்துப் புதைப்பதை பற்றிக் கூறப்பட்டது. இப்பாடலில், இறந்தவர்களின் உடலை எரிப்பதைப் பற்றிக் கூறபட்டுள்ளது. ஆகவே, சங்க காலத்தில், இறந்தவர்களின் உடலை எரிப்பதும் புதைப்பதும் ஆகிய இரண்டும் வழக்கில் இருந்ததாகத் தெரிகிறது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on March 22, 2014, 04:28:55 PM
புறநானூறு, 232. (கொள்வன் கொல்லோ!)
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பொதுவியல்.
துறை: கையறு நிலை.
================================

இல்லா கியரோ, காலை மாலை
அல்லா கியர்யான் வாழும் நாளே!
நடுகல் பீலி சூட்டி நார்அரி
சிறுகலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லொ
கோடு உயர் பிறங்குமலை கெழீஇய
நாடுடன் கொடுப்பவும் கொள்ளா தோனே

அருஞ்சொற்பொருள்:-

பீலி = மயில் இறகு
உகுத்தல் = வார்த்தல்
பிறங்குதல் = உயர்தல்

இதன் பொருள்:-

காலைப்பொழுதும் மாலைப்பொழுதும் இல்லாமல் போகட்டும். என் வாழ்நாட்களும் இல்லாமல் போகட்டும். ஓங்கிய சிகரத்தையுடைய உயர்ந்த மலையுடன் கூடிய நாட்டைப் பகைவர் கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ளாதவன், ஒரு நடுகல்லை நட்டு, அதற்கு மயில் தோகையைச் சூட்டி, ஒருசிறிய கலத்தில் நாரால் வடிக்கப்பட்ட மதுவைக் கொடுத்தால் அதை ஏற்றுக் கொள்வானோ?

பாடலின் பின்னணி:-

அதியமான் இறந்த பிறகு அவன் நினைவாக ஒருநடுகல் நடப்பட்டது. அந்த நடுகல்லில் அதியமான் பெயரைப் பொறித்து, மயில் தோகை சூட்டி, ஒரு சிறிய பாத்திரத்தில் மதுவை வைத்துப் படைத்து அந்த நடுகல்லை வழிபட்டனர். அதைக் கண்ட அவ்வையார், துயரம் மிகுந்தவராய், அவனை நினைவு கூர்ந்து தம் வருத்தத்தை இப்பாடலில் தெரிவிக்கிறார்.

சிறப்புக் குறிப்பு:-

இறந்தவர்களின் நினைவாக நடுகல் வைப்பதும், நடுகல்லுக்கு வழிபாடு நடத்துவதும் சங்கக காலத்தில் வழ்க்கில் இருந்தது என்பது இப்பாடலிலிருந்து தெரிகிறது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on March 22, 2014, 04:30:18 PM
புறநானூறு, 233. (பொய்யாய்ப் போக!)
பாடியவர்: வெள்ளெருக்கிலையார்.
பாடப்பட்டோன்: வேள் எவ்வி.
திணை: பொதுவியல்.
துறை: கையறு நிலை.
================================

பொய்யா கியரோ பொய்யா கியரோ
பாவடி யானை பரிசிலர்க்கு அருகாச்
சீர்கெழு நோன்றாள் அகுதைகண் தோன்றிய
பொன்புனை திகிரியின் பொய்யா கியரோ
இரும்பாண் ஒக்கல் தலைவன், பெரும்பூண்
போர்அடு தானை எவ்வி மார்பின்
எஃகுஉறு விழுப்புண் பலஎன
வைகுறு விடியல் இயம்பிய குரலே

அருஞ்சொற்பொருள்:-

பாவடி = பா + அடி = பரவிய அடி (யானையின் பரந்து அகன்ற பாதம்)
பொன் = இரும்பு
எஃகு = வேல்
வைகுறு = வைகறை (விடியற் காலம்)

இதன் பொருள்:-

பெரிய பாதங்களையுடைய யானைகளைப் பரிசிலருக்குக் குறையாது வழங்கிய சிறந்த, வலிய முயற்சியையுடைய அகுதையிடத்துச் சக்கரப்படை இருந்தது என்ற செய்தி பொய்யாகியதுபோல் , பெரிய பாண் சுற்றத்துக்கு முதல்வனும், மிகுந்த அனிகலன்களை அணிந்து, போரில் பகைவரை அழிக்கும் பெரிய படையையுடயவனுமாகிய வேள் எவ்வி, வேலால் மார்பில் பல விழுப்புண்கள் உற்றான் என்று இன்று அதிகாலையில் வந்த செய்தியும் பொய்யாகட்டும்.

பாடலின் பின்னணி:-

பண்டைக் காலத்தில் அகுதை என்று ஒருமன்னன் கூடல் என்ற கடல் சார்ந்த ஊருக்குத் தலைவனாக இருந்து ஆட்சி புரிந்துவந்தான். அவனிடத்துப் இரும்பினால் செய்யப்பட்ட சக்கரம் போன்ற ஆயுதம் தாங்கிய படை (சக்கரப்படை) ஒன்று இருப்பாதாகவும், அது மிகவும் ஆற்றல் வாய்ந்தது என்றும், அது அவனிடம் இருக்கும்வரை அவனை யாராலும் வெல்ல முடியாது என்றும் அனைவரும் நம்பினர். அந்தச் சக்கரப்படையைப் பற்றிய செய்தி நன்கு பரவி இருந்தது. அதனால் பகைவர் அனைவரும் அவனிடம் அஞ்சினர். முடிவில், ஒரு போரில் அகுதை கொல்லப்பட்டன். அவனிடம் ஆற்றல் மிகுந்த சக்கரப்படை இருந்தது என்ற செய்தி பொய்யாகியது.

போரில் வேள் எவ்வி மார்பில் புண்பட்டான் என்று புலவர் வெள்ளெருக்கிலையார் கேள்விப்பட்டார். அவன் மீது அவருக்கு இருந்த பேரன்பின் காரணத்தால் அவன் புண்பட்டான் என்ற செய்தி அகுதையிடம் சக்கரப்படை இருந்தது என்ற செய்தியைப்போல் பொய்யாகட்டும் என்று விரும்பினார். அவர் தம் கருத்தை இப்பாடலில் வெளிப்படுத்துகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on March 22, 2014, 04:31:36 PM
புறநானூறு, 234. (உண்டனன் கொல்?)
பாடியவர்: வெள்ளெருக்கிலையார்.
பாடப்பட்டோன்: வேள் எவ்வி.
திணை: பொதுவியல்.
துறை: கையறு நிலை.
================================

நோகோ யானே தேய்கமா காலை
பிடியடி அன்ன சிறுவழி மெழுகித்
தன்அமர் காதலி புன்மேல் வைத்த
இன்சிறு பிண்டம் யாங்குஉண் டனன்கொல்
உலகுபுகத் திறந்த வாயில்
பலரோடு உண்டல் மரீஇ யோனே

அருஞ்சொற்பொருள்:-

நோகோ = வருந்தக்கடவேன்
மா=பெரிய
காலை = வாழ்நாள்
பிடி = பெண் யானை
அமர் = விருப்பம்
புன் = புல்
பிண்டம் = இறந்தவர்களுக்குப் படைக்கப்படும் உணவு
மரீஇ = கூடி

இதன் பொருள்:-

உலகத்து மக்களெல்லம் புகுந்து உண்ணக்கூடிய பெரிய வாயிலை உடைய வேள் எவ்வி பலரோடும் சேர்ந்து உண்ணுபவன். அத்தகையவன், ஒரு பெண் யானையின் கால் அடி அளவே உள்ள சிறிய இடத்தை மெழுகி, அங்கிருந்த புல் மேல், அவனை விரும்பும் அவன் மனைவி படைத்த இனிய, சிறிதளவு உணவை எப்படி உண்பான்? இதைக் கண்டு நான் வருந்துகிறேன்; என் வாழ்நாட்கள் இன்றோடு ஒழியட்டும்.

பாடலின் பின்னணி:-

முந்திய பாடலில், வேள் எவ்வி விழுப்புண் பெற்றான் என்ற செய்தி பொய்யாகட்டும் என்று தாம் விரும்புவதாக வெள்ளெருக்கிலையார் கூறினார். ஆனால், அது உண்மையாகியது; அவன் இறந்தான். ஒரு நாள், வெள்ளெருக்கிலையார் வேள் எவ்வியின் வீட்டிற்குச் சென்றார். அங்கு, வேள் எவ்வியின் மனைவி, அவன் நினைவாக அவனுக்கு உணவு படைப்பதைக் கண்டார். அவர் மிகவும் வருத்தமுற்றார். அவர் புலம்பல் இப்பாடலாக அமைந்துள்ளது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on March 22, 2014, 04:33:07 PM
புறநானூறு, 235. (அருநிறத்து இயங்கிய வேல்!)
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பொதுவியல்.
துறை: கையறு நிலை.
================================

சிறியகட் பெறினே, எமக்கீயும் மன்னே;
பெரியகட் பெறினே
யாம்பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே;
சிறுசோற் றானும் நனிபல கலத்தன் மன்னே;
பெருஞ்சோற்றானும் நனிபல கலத்தன் மன்னே;

என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயும் மன்னே;
அம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தான்நிற்கும் மன்னே;
நரந்தம் நாறும் தன் கையால்
புலவு நாறும் என்தலை தைவரும் மன்னே;
அருந்தலை இரும்பாணர் அகன்மண்டைத் துளையுரீஇ

இரப்போர் கையுளும் போகிப்
புரப்போர் புன்கண் பாவை சோர
அஞ்சொல்நுண் தேர்ச்சிப் புலவர் நாவில்
சென்றுவீழ்ந் தன்றுஅவன்
அருநிறத்து இயங்கிய வேலே;

ஆசாகு எந்தை யாண்டுஉளன் கொல்லோ?
இனிப், பாடுநரும் இல்லை; பாடுநர்க்குஒன்று ஈகுநரும் இல்லை;
பனித்துறைப் பகன்றை நறைக்கொள் மாமலர்
சூடாது வைகியாங்குப் பிறர்க்குஒன்று
ஈயாது வீயும் உயிர்தவப் பலவே

அருஞ்சொற்பொருள்:-

மன் = இரங்கல் பொருளில் - அது போய்விட்டதே என்ற பொருளில் - பலமுறை கூறப்பட்டுள்ளது
நனி = மிக
தடி = தசை
நரந்தம் = நறுமணம்
புலவு = புலால்
தைவரல் = தடவல்
இரும் = பெரிய
மண்டை = இரப்போர் பாத்திரம்
உரீஇ = உருவி
பாவை = கருவிழி
புன்கண் = துன்பம்
நுண் தேர்ச்சி = நுண்ணிய ஆராய்ச்சி
நிறம் = மார்பு
இயங்கிய = துளைத்த
ஆசாகு = ஆசு ஆகு = பற்றுக்கோடு
பகன்றை = ஒரு செடி
பகன்றை மலர் = சூடுவதற்கு பயன்படுத்தாத ஒருமலர்
நறை = தேன்
தவ = மிக

இதன் பொருள்:-

சிறியகட்=====> மன்னே;

சிறிதளவு கள்ளைப் பெற்றால் எமக்குத் தருவான்; பெருமளவு கள்ளைப் பெற்றால் எமக்கு அளித்து நாம் பாட அதைக் கேட்டு மகிழ்ந்து அவனும் உண்பான்; சிறிதளவு சோறாக இருந்தாலும் அதை மிகப் பலரோடும் பகிர்ந்து உண்பான். பெருமளவு சோறு இருந்தால், அதையும் மிகப் பலரோடு கலந்து உண்பான்.

என்பொடு=====> துளையுரீஇ

எலும்போடு கூடிய தசை கிடைத்தால் அதை எமக்கு அளிப்பான். அம்புடன் வேல் தைக்கும் போர்க்களமானால் தானே சென்று நிற்பான். நறுமணமுள்ள தன் கையால் புலால் மணக்கும் என் தலையை அன்போடு தடவுவான். இவையெல்லாம் கழிந்தன. அவன் மார்பைத் துளைத்த வேல் பெரிய பாணர் கூட்டத்தினரின் அகன்ற பாத்திரங்களை ஊடுருவிச் சென்று,

இரப்போர்=====> வேலே;

இரப்போர் கைகளையும் துளைத்து, அவனால் பாதுகாக்கப்படும் சுற்றத்தாரின் துன்பம் மிகுந்த கண்களில் ஒளி மழுங்க, அழகிய சொல்லும் ஆராய்ந்த அறிவும் உடைய புலவர்களின் நாவிலும் சென்று வீழ்ந்தது.

ஆசாகு=====> பலவே

எமக்குப் பற்றுக்கோடாக இருந்தவன் இப்பொழுது எங்குள்ளானோ? இனிப் பாடுவோரும் இல்லை; பாடுவோருக்கு ஒன்று ஈவோரும் இல்லை. குளிர்ந்த நீர்த்துறையில் உள்ள தேனொழுகும் பெரிய பகன்றை மலரைச் சூடுவோர் இல்லாததுபோல் பிறர்க்கு ஒன்றும் கொடுக்காமல் வாழ்ந்து இறப்பவர் மிகப் பலர்.

பாடலின் பின்னணி:-

அதியமானின் வள்ளல் தன்மையை நன்கு அறிந்தவர் அவ்வையார். ”அதியமானின் நெஞ்சில் பாய்ந்த வேல் அவனைக் கொன்றது மட்டுமல்லாமல், இரவலர்களின் பாத்திரங்களைத் துளைத்து, அவர்களின் கைகளைத் துளைத்து, பாடும் பாணர்களின் நாவையும் துளைத்தது. இனி, நாட்டில் பாடுவோரும் இல்லை; பாடுவோர்க்கு ஈவோரும் இல்லை” என்று கூறி, அதியமான் இறந்ததால் தான் அடைந்த அளவற்ற துயரத்தை இப்பாடலில் அவ்வையார் வெளிப்படுத்துகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on March 22, 2014, 04:34:46 PM
புறநானூறு, 236. (கலந்த கேண்மைக்கு ஒவ்வாய்!)
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: பொதுவாக பாடியது.
திணை: பொதுவியல்.
துறை: கையறு நிலை.
================================

கலைஉணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம்
சிலைகெழு குறவர்க்கு அல்குமிசை ஆகும்
மலைகெழு நாட! மாவண் பாரி!
கலந்த கேண்மைக்கு ஒவ்வாய்; நீஎற்
புலந்தனை யாகுவை புரந்த யாண்டே;
பெருந்தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது

ஒருங்குவரல் விடாஅது ஒழிகெனக் கூறி
இனையை ஆதலின் நினக்கு மற்றுயான்
மேயினேன் அன்மை யானே; ஆயினும்
இம்மை போலக் காட்டி உம்மை
இடையில் காட்சி நின்னோடு
உடன்உறைவு ஆக்குக உயர்ந்த பாலே!

அருஞ்சொற்பொருள்:-

கலை = ஆண் குரங்கு
முழவு = முரசு
மருள் – உவமை உருபு
பெரும்பழம் = பலாப்பழம்
சிலை = வில்
கெழு = பொருந்திய
அல்குதல் = தங்குதல்
மிசை = உணவு
புலந்தனை = வெறுத்தாய்
புரத்தல் = பாதுகாத்தல்
ஒல்லாது = பொருந்தாமல்
இனையை = வருந்தச் செய்தாய்
மற்று = அசைச் சொல்
மேயினேன் = கூடினேன், பொருந்தினேன்
உம்மை = மறுபிறவி
பால் = வினை, விதி

இதன் பொருள்:-

கலை=====> ஒல்லாது

குரங்கு கிழித்து உண்ட, முரசுபோல காட்சி அளிக்கும் பெரிய பலாப்பழம் வில்லுடன் கூடிய குறவர்கள் சில நாட்கள் வைத்து உண்ணக்கூடிய உணவாகும். மலைகள் பொருந்திய நாட்டையுடைய, பெரிய வள்ளல் தன்மை வாய்ந்த பாரி! நீயும் நானும் கூடியிருந்த நட்பிற்குப் பொருத்தமில்லாத முறையில் நீ நடந்துகொண்டாய். பல ஆண்டுகள் நீ என்னைப் பாதுகாத்திருந்தாலும், நீ என்னை வெறுத்தாய் போலும். பெருமைக்குரிய, சிறந்த நட்பிற்குப் பொருத்தமில்லாத முறையில்,

ஒருங்குவரல்=====> பாலே

“இங்கே இருந்து வருக” எனக் கூறி என்னைவிட்டுப் பிரிந்து சென்று என்னை வருத்தினாய். ஆகவே, உனக்கு நான் ஏற்றவனாக இல்லாமல் போய்விட்டேன் என்று நினைக்கிறேன். ஆயினும், இப்பிறவிபோல் மறுபிறவிலும் நாம் இடைவிடாமல் சேர்ந்து இருப்பதற்கு வழி செய்யுமாறு உயர்ந்த நல்வினையை வேண்டுகிறேன்.

பாடலின் பின்னணி:-

பாரி இறந்த பிறகு, பாரி மகளிர் இருவரையும் தகுந்தவர்களுக்கு மணம் முடிப்பாதற்காகக் கபிலர் அரும்பாடு பட்டார். கபிலர், பாரியின் மகளிரைத் திருமணம் செய்துகொள்ளுமாறு விச்சிக்கோ, இருங்கோவேள் என்னும் இரு குறுநிலமன்னர்களை வேண்டினார். அவர்கள் இருவரும் பாரியின் மகளிரை மணந்துகொள்ள சம்மதிக்கவில்லை. அந்நிலையில், கபிலர், பாரி மகளிரை தனக்கு நன்கு தெரிந்த அந்தணர் குடும்பத்தில் ஒப்படைத்துவிட்டு தான் வடக்கிருந்து உயிர் துறந்ததாகக் கூறப்படுகிறது. கபிலர், பாரி மகளிரை அந்தணர் குடும்பத்தில் ஒப்படைக்காமல், அவ்வையாரிடம் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது. எவ்வாறாயினும், பாரி இறந்த பொழுது தானும் இறக்கவில்லையே என்று கபிலர் வருந்துகிறார். பாரி இறந்த பொழுது அவனுடன் தன்னையும் அழைத்து செல்லாததால் தான் அடைந்த வருத்தத்தை இப்பாடலில் வெளிப்படுத்துகிறார். மற்றும், இப்பிறவியில், பாரியும் தானும் உடலும் உயிரும் போல் நெருங்கிய நண்பர்களாக இருந்ததுபோல், அடுத்த பிறவியிலும் நண்பர்களாக இருக்க வேண்டும் என்று விதியை வேண்டுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on March 22, 2014, 04:37:10 PM
புறநானூறு, 237. (சோற்றுப் பானையிலே தீ!)
பாடியவர்: பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன்: இளவெளிமான்.
திணை: பொதுவியல்.
துறை: கையறு நிலை.
================================

நீடுவாழ்க என்றுயான் நெடுங்கடை குறுகிப்
பாடி நின்ற பசிநாள் கண்ணே
கோடைக் காலத்துக் கொழுநிழல் ஆகிப்
பொய்த்தல் அறியா உரவோன் செவிமுதல்
வித்திய பனுவல் விளைந்தன்று நன்றுஎன

நச்சி இருந்த நசைபழுது ஆக
அட்ட குழிசி அழற்பயந் தாஅங்கு
அளியர் தாமே ஆர்க என்னா
அறன்இல் கூற்றம் திறனின்று துணிய
ஊழின் உருப்ப எருக்கிய மகளிர்

வாழைப் பூவின் வளைமுறி சிதற
முதுவாய் ஒக்கல் பரிசிலர் இரங்கக்
கள்ளி போகிய களரியம் பறந்தலை
வெள்வேல் விடலை சென்றுமாய்ந் தனனே;
ஆங்குஅது நோயின் றாக ஓங்குவரைப்

புலிபார்த்து ஒற்றிய களிற்றுஇரை பிழைப்பின்
எலிபார்த்து ஒற்றா தாகும் மலிதிரைக்
கடல்மண்டு புனலின் இழுமெனச் சென்று
நனியுடைப் பரிசில் தருகம்
எழுமதி நெஞ்சே ! துணிபுமுந் துறுத்தே

அருஞ்சொற்பொருள்:-

நெடுங்கடை = நெடிய வாயில் (தலைவாயில்)
உரவு = அறிவு
பனுவல் = நூல்
நச்சி = விரும்பி
நசை = விருப்பம்
குழிசி = பானை
பயத்தல் = உண்டாதல், கிடைத்தல்
அளியர் = இரங்கத் தக்கவர்
ஆர்தல் = உண்ணுதல்
திறன் = காரணம், கூறுபாடு, வழி
உருப்ப = வெப்பமுண்டாக
எருக்குதல் = வருத்துதல்
முதுவாய் = முதிய வாக்கினையுடைய
ஒக்கல் = சுற்றம்
களரி = களர் நிலம்
பறந்தலை = பாழிடம்
அம் = (சார்ந்து வரும் இடைச் சொல்)
விடலை = வீரன்
ஒற்றுதல் = வீழ்த்துதல்
மண்டுதல் = விரைந்து செல்லுதல்
இழும் = (ஒலிக்குறிப்பு)
நனி = மிக
தருகம் = கொண்டு வருவோம்
மதி = (முன்னிலை அசைச் சொல்)
துணிபு = தெளிவு
முந்துறுத்துதல் = முதலாதல்
முன்னிட்டுக் கொள்ளுதல்

இதன் பொருள்:-

நீடுவாழ்க=====> நன்றுஎன

நீ நெடுங்காலம் வாழ்க என்று வெளிமானின் நெடிய வாயிலை அணுகிப் பசியுடன் பாடிய காலத்தில், வெளிமான் கோடைக்காலத்துக்கேற்ற குளிர்நிழல் போன்றவனாக இருந்தான். அவன் யாரிடத்தும் பொய் கூறாத அறிவுடையவன். அவன் செவிகளில் நல்லோர் விதைத்த கேள்வியாகிய பயிர் நன்கு விளைந்தது என்று நினைத்துப்,

வித்திய=====> மகளிர்

பரிசிலை விரும்பியிருந்த என் விருப்பம் பயனில்லாமல் போயிற்று. அது, சோற்றுப் பானையில் சோற்றை எதிர்பார்த்துக் கைவிட்ட பொழுது, அங்கு சோற்றுக்குப் பதிலாக நெருப்பு இருந்தது போல் ஆகியது. இரங்கத்தக்க இரவலர்கள் உண்ணட்டும் என்று எண்ணாத அறமற்ற கூற்றுவன், கொள்ளத்தகாத வெளிமானின் உயிரைக் காரணமின்றிக் கொல்லத் துணிந்தான். அதனால் வருந்திய அவன் மகளிர், முறைப்படி தம் மார்பில் வெப்பமுண்டாகுமாறு அடித்துக் கொண்டனர்.

வாழை=====> ஓங்குவரை

அவர்கள் கையில் அணிந்திருந்த வளையல்கள் வாழைப் பூப்போல் சிதறின. முதிய சுற்றத்தாரும் பரிசிலரும் வருந்தினர். கள்ளிச் செடிகள் விளையும் பாழிடங்களிலுள்ள சுடுகாட்டில், ஒளியுடைய வேலையுடைய வீரன் இறந்தான். கூற்றுவன் நோயின்றி இருப்பானாக!

புலிபார்த்து=====> துறுத்தே

உயர்ந்த மலையில், புலி தாக்கிய யானை தப்பிப் போனால், தனக்கு இரையாக புலி எலியைப் பிடிக்க விரும்பாது. அலைகள் மிகுந்த கடலில் விரைந்து சென்று சேரும் ஆற்று நீர்போல், நாமும் விரைந்து சென்று மிகுந்த பரிசிலைப் பெற்று வருவோம். நெஞ்சே! துணிவை முன்வைத்து சோர்வடையாமல் எழுவாயாக.

பாடலின் பின்னணி:-

பெருஞ்சித்திரனார், வெளிமான் என்னும் வள்ளலிடம் பரிசுபெறச் சென்றார். அச்சமயம், வெளிமான் இறக்கும் தறுவாயில் இருந்தான். அந்நிலையிலும், அவன் பெருஞ்சித்திரனாருக்குப் பரிசு அளிக்குமாறு தன் தம்பியாகிய இளவெளிமானிடம் கூறி இறந்தான். இளவெளிமான், பெருஞ்சித்திரனாரின் தகுதிக்கேற்ப பரிசளிக்கவில்லை. வெளிமானை நம்பித் தான் வந்ததையும், அவன் இறந்ததால் அவர் அடைந்த ஏமாற்றத்தையும், இளவெளிமான் தகுந்த பரிசளிக்காததால் அவர் கொண்ட சினத்தையும் இப்பாடலில் புலவர் பெருஞ்சித்திரனார் வெளிப்படுத்துகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

”பனுவல்” என்ற சொல் நல்லோர் கூறிய நல்லுரை என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

விடலை என்ற சொல்லுக்கு “வீரன்” என்று பொருள் கொள்ளலாம். ; அல்லது, ”பதினாறு வயதிலிருந்து முப்பது வயதிற்கு உட்பட்டவன்” என்றும் பொருள் கொள்ளலாம். ஆகவே, வெளிமான், முதுமை அடைவதற்கு முன்பே இறந்ததைச் சுட்டிக்காட்டுவதற்காகப் புலவர் பெருஞ்சித்திரனார் “வெள்வேல் விடலை” என்று கூறியதாகவும் பொருள் கொள்ளலாம்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on March 22, 2014, 04:39:32 PM
புறநானூறு, 238. (தகுதியும் அதுவே!)
பாடியவர்: பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன்: இளவெளிமான்.
திணை: பொதுவியல்.
துறை: கையறு நிலை.
================================

கவிசெந் தாழிக் குவிபுறத்து இருந்த
செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவா
வாய்வன் காக்கையும் கூகையும் கூடிப்
பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும்
காடுமுன் னினனே கட்கா முறுநன்;

தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடிப்
பாடுநர் கடும்பும் பையென் றனவே;
தோடுகொள் முரசும் கிழிந்தன கண்ணே;
ஆளில், வரைபோல் யானையும் மருப்பிழந் தனவே;
வெந்திறல் கூற்றம் பெரும்பேது உறுப்ப

எந்தை ஆகுதல் அதற்படல் அறியேன்;
அந்தோ! அளியேன் வந்தனென் மன்ற;
என்னா குவர்கொல் என்துன்னி யோரே?
மாரி இரவின் மரங்கவிழ் பொழுதின்
ஆரஞர் உற்ற நெஞ்சமொடு ஓராங்குக்
கண்இல் ஊமன் கடற்பட் டாங்கு

வரையளந்து அறியாத் திரையரு நீத்தத்து
அவல மறுசுழி மறுகலின்
தவலே நன்றுமன் தகுதியும் அதுவே

அருஞ்சொற்பொருள்:-

சேவல் = ஆண் கழுகு
பொகுவல் = பெண்கழுகு
வெரு = அச்சம்
கூகை = கோட்டான்
பெட்டாங்கு = விரும்பியவாறு
ஆயம் = கூட்டம்
முன்னுதல் = அடைதல்
தொடி = வளையல்
கவின் = அழகு
கடும்பு = சுற்றம்
பையெனல் - மந்தக் குறிப்பு
தோடு = தொகுதி
மருப்பு = கொம்பு
பேது = வருத்தம்
உறுப்ப = செய்ய
படல் = இரத்தல்
மன்ற – அசைச் சொல்
துன்னியோர் = நெருங்கியவர்கள் (சுற்ரத்தார்)
மாரி = மழை
மரம் = மரக்கலம்
ஆர் = நிறைவு
அஞர் = துன்பம்
ஆரஞர் = பெருந்துன்பம்
ஊமன் = ஊமை
நீத்தம் = கடல்
அவலம் = துன்பம்
மறு = தீமை
மறுகல் = சுழலல்
தவல் = இறப்பு

இதன் பொருள்:-

கவி=====> முறுநன்

பிணமிட்டுக் கவிழ்த்துப் புதைக்கப்பட்ட தாழியின் குவிந்த மேற்புறத்தில், சிவந்த காதுகளையுடைய ஆண்கழுகுகளும், பெண்கழுகுகளும், அச்சமில்லாத, வலிய வாயையுடைய காக்கையும், கோட்டானும் கூடி இருக்கின்றன. பேய்கள் விருப்பத்தோடு திரிகின்றன. கள்ளை விரும்பும் வெளிமான் அத்தகைய இடுகாட்டை அடைந்தான்.

தொடிகழி=====> உறுப்ப

அவனை இழந்த, வளையல்களை நீக்கிய அவன் மனைவியர் போல் முன்பிருந்த அழகு அழிந்து, பாணர்களின் சுற்றத்தினரும் கண்களில் ஒளி மழுங்க வருந்தினர். தொகுதியாக இருந்த முரசுகள் கிழிந்தன. பாகர்கள் இல்லாத, மலைபோன்ற யானைகள் தம் தந்தங்களை இழந்தன.

எந்தை=====> கடற்பட்டாங்கு

சினத்துடன் கூடிய, வலிய கூற்றுவனின் கொடிய செயலால் என் தலைவன் இறந்தான். ஐயகோ! அதை அறியாமல் நான் அவனைக் காண வந்தேன். என் சுற்றத்தார் என்ன ஆவர்? மழைபொழியும் இரவில், கவிழ்ந்த மரக்கலத்திலிருந்து கடலில் விழுந்த கண்ணில்லாத ஊமையன் பெருந்துயரம் அடைந்தது போல் ஆனேன்.

வரையளந்து=====> அதுவே

எல்லையைக் காணமுடியாததும் பெரிய அலைகளுடையதும் ஆகிய அக்கடலினும் கொடிய துன்பமாகிய சுழலில் சுழலுவதைவிட இறப்பதே நமக்குத் தகுந்த செயலாகும்.

பாடலின் பின்னணி:-

வெளிமானிடம் பரிசில் பெறுவதற்காகப் பெருஞ்சித்திரனார் வந்த நேரத்தில் வெளிமான் இறந்தான். அவருடைய ஏமாற்றத்தையும் இரங்கத்தக்க நிலையையும், கண்ணில்லாத ஊமை ஒருவன் மழைபெய்து கொண்டிருக்கும் பொழுது அவன் சென்ற மரக்கலம் கவிழ்ந்து கடலில் விழுந்ததற்கு இப்பாடலில் ஒப்பிடுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

கண்ணில்லாத ஊமன் கடலில் விழுந்ததோடு தன் நிலையை ஒப்பிடும் உவமை மிகவும் நயமுடையதாக உள்ளது.

“பாகர்கள் இல்லாததால் யானைகள் தந்தங்களை இழந்தன” என்பது யானைகளைக் கட்டுப்படுத்தி, அவற்றைப் பயிற்றுவிக்கும் பாகர்கள் இல்லாததால், யானைகள் பயனில்லாமல் போயின என்ற பொருளில் கூறப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on March 22, 2014, 04:41:17 PM
புறநானூறு, 239. (இடுக சுடுக எதுவும் செய்க!)
பாடியவர்: பேரெயில் முறுவலார்.
பாடப்பட்டோன்: நம்பி நெடுஞ்செழியன்.
திணை: பொதுவியல்.
துறை: கையறு நிலை.
================================

தொடியுடைய தோள்மணந்தனன்;
கடிகாவிற் பூச்சூடினன் ;
தண்கமழுஞ் சாந்துநீவினன் ;
செற்றோரை வழிதபுத்தனன் ;
நட்டோரை உயர்புகூறினன் ;

வலியரென வழிமொழியலன் ;
மெலியரென மீக்கூறலன்;
பிறரைத்தான் இரப்பறியலன் ;
இரந்தோர்க்கு மறுப்பறியலன் ;
வேந்துடை அவையத்து ஓங்குபுகழ் தோற்றினன்;

வருபடை எதிர்தாங்கினன் ;
பெயர்படை புறங்கண்டனன் ;
கடும்பரிய மாக்கடவினன் ;
நெடுந்தெருவில் தேர்வழங்கினன் ;
ஓங்குஇயற் களிறுஊர்ந்தனன்;

தீஞ்செறிதசும்பு தொலைச்சினன்;
பாண்உவப்பப் பசிதீர்த்தனன்;
மயக்குடைய மொழிவிடுத்தனன்; ஆங்குச்
செய்ப எல்லாம் செய்தனன்; ஆகலின்
இடுக ஒன்றோ, சுடுக ஒன்றோ,
படுவழிப் படுகஇப் புகழ்வெய்யோன் தலையே

அருஞ்சொற்பொருள்:-

தொடி = வளையல்
கடி = காவல்
கா = சோலை
நீவுதல் = தடவுதல்
செற்றோர் = பகைவர்
வழி = கிளை, சந்ததி
தபுத்தல் = அழித்தல்
நட்டோர் = நண்பர்
வழிமொழிதல் = பணிந்து கூறுதல், சொல்லியவற்றை ஏற்றுக் கொள்ளுதல்
மீக்கூறல் = புகழ்தல்
கடு = விரைவு
மா = குதிரை
பரிதல் = ஓடுதல்
கடவுதல் = செலுத்துதல்
தசும்பு = கள் உள்ள குடம்
தொலைத்தல் = முற்றுப்பெறச் செய்தல்
மயக்குதல் = ஏமாற்றுதல்
ஒன்றோ – அதிசய இரக்கச் சொல்
படுதல் = உண்டாதல், சம்மதித்தல்
வெய்யோன் = விரும்பத்தக்கவன்

இதன் பொருள்:-

தொடியுடைய=====> கூறினன்

நம்பி நெடுஞ்செழியன் வளையல்கள் அணிந்த மகளிரின் தோளைத் தழுவினான்; காவலுடைய சோலையிலுள்ள மரங்களிலுள்ள பூக்களைச் சூடினான்; குளிர்ந்த சந்தனம் பூசினான்; பகைவரைக் கிளையோடு அழித்தான்; நண்பர்களைப் புகழ்ந்து கூறினான்;

வலியரென=====> தோற்றினன்

வலிமையுடையவர்கள் என்பதால் ஒருவரிடம் பணிந்து பேசமாட்டான்; தம்மைவிட வலிமை குறைந்தவர்களிடம் தன்னைப் புகழ்ந்து பேசமாட்டான்; பிறரிடம் ஒன்றை ஈயென்று இரப்பதை அறியாதவன்; தன்னிடம் இரப்பவர்களுக்கு இல்லையென்று கொடுக்க மறுப்பதை அறியாதவன்; வேந்தர்களின் அவையில் தனது உயர்ந்த புகழ் தோன்றுமாறு செய்தான்;

வருபடை=====> ஊர்ந்தனன்

தன்னை எதிர்த்துவரும் படையை முன்நின்று தடுத்தான்; புறங்காட்டி ஓடும் படையைத் தொடர்ந்து பின் செல்லாமல் நின்றான்; விரைந்து செல்லும் குதிரையைச் செலுத்தினான்; நெடிய தெருக்களில் தேரில் சென்றான்; உயர்ந்த இயல்புடைய யானையைச் செலுத்தினான்;

தீஞ்செறிதசும்பு=====> தலையே

இனிமையான கள் நிரம்பிய குடங்களைப் பலரோடு பகிர்ந்து குடித்து முடித்தான்; பாணர்கள் மகிழுமாறு அவர்கள் பசியைத் தீர்த்தான்; பிறரை மயக்கும் சொற்களைக் கூறுவதைத் தவிர்த்தான்; இவ்வாறு, அவன் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்தான். ஆகவே, இப்புகழை விரும்புவோனது தலையைப் புதைத்தாலும் சரி; அல்லது எரித்தாலும் சரி. எது எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடக்கட்டும்.

பாடலின் பின்னணி:-

சங்க காலத்தில், வாழ்க்கையின் உறுதிப் பொருட்களாகக் கருதப்பட்ட அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றிலும் நம்பி நெடுஞ்செழியன் சிறப்புற்று விளங்கிப் புகழுடன் வாழ்ந்து இறந்தான். அவன் இறந்த செய்தி கேட்டு பலரும் அவன் அரண்மனையில் கூடினர். அவன் போரில் இறக்காததால், அவன் உடலை வாளால் பிளந்து, புதைக்க வேண்டும் என்று சிலர் கருதினர். வேறு சிலர், அவன் உடலை எரிப்பதுதான் முறையான செயல் என்று கருதினர். அப்பொழுது, பேரெயில் முறுவலார், ”நம்பி நெடுஞ்செழியன் பலதுறைகளிலும் சிறப்புற்று வாழ்ந்தவன். அவன் செய்யத் தக்கவற்றை எல்லாம் சிறப்பாகச் செய்தவன். ஆகவே, அவனைப் புதைத்தாலும் சரி, அல்லது எரித்தாலும் சரி; இரண்டுமே தவறில்லை.” என்று இப்பாடலில் கூறுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

“வேந்துடை அவையத்து ஓங்கு புகழ் தோற்றினான்” என்று புலவர் பேரெயில் முறுவலார் கூறுவதிலிருந்து, நம்பி நெடுஞ்செழியன் முடிசூடிய மூவேந்தர்களில் ஒருவன் அல்லன் என்பது தெரியவருகிறது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on March 22, 2014, 04:43:57 PM
புறநானூறு, 240. (பிறர் நாடுபடு செலவினர்!)
பாடியவர்: குட்டுவன் கீரனார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பொதுவியல்.
துறை: கையறு நிலை.
================================

ஆடுநடைப் புரவியும் களிறும் தேரும்
வாடா யாணர் நாடும் ஊரும்
பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன்,
கோடுஏந்து அல்குல் குறுந்தொடி மகளிரொடு
காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப

மேலோர் உலகம் எய்தினன்; எனாஅப்
பொத்த அறையுள் போழ்வாய்க் கூகை
‘சுட்டுக் குவி’எனச் செத்தோர்ப் பயிரும்
கள்ளியம் பறந்தலை ஒருசிறை அல்கி
ஒள்ளெரி நைப்ப உடம்பு மாய்ந்தது;

புல்லென் கண்ணர் புரவலர்க் காணாது,
கல்லென் சுற்றமொடு கையழிந்து புலவர்
வாடிய பசியர் ஆகிப்பிறர்
நாடுபடு செலவினர் ஆயினர் இனியே

அருஞ்சொற்பொருள்:-

ஆடு = வெற்றி
புரவி = குதிரை
வாடா = அழியாத
யாணர் = புது வருவாய்
அருகா = குறையாத
கோடு = பக்கம்
அல்குல் = இடை
தொடி = வளையல்
உய்ப்ப = கொண்டு போக
பொத்த = பொந்துள்ள
போழ் = பிளவு
கூகை = ஆந்தை
பயிர்தல் = அழைத்தல்
பறந்தலை = பாழிடம்
அல்கி = தங்கி
நைத்தல் = வருத்தல்
கல்லென் சுற்றம் = ஆரவாரமான சுற்றம்
கையழிந்து = செயலிழந்து
படு = புகு

இதன் பொருள்:-

ஆடுநடை=====> உய்ப்ப

வெற்றி நடைபோடும் குதிரையும், யானையும், தேரும், குறையாத வருவாய் உள்ள நாடும் ஊரும், பாடுபவர்களுக்குக் குறையாது வழங்குபவன் ஆய் அண்டிரன். பக்கங்கள் அகன்று, குறுகிய இடையையுடைய, சிறிய வளையல்களை அணிந்த மனைவியரோடு ஆய் அண்டிரன் காலன் என்று சொல்லப்படும் கருணை இல்லாத கூற்றுவனின் கொடிய செயலால்

மேலோர்=====> மாய்ந்தது;

விண்ணுலகம் அடைந்தான். பொந்தில் வாழும் பிளந்த வாயையுடைய ஆந்தை, “சுட்டுக் குவி” என்று செத்தவர்களை அழைப்பது போலக் கூவும் கள்ளியையுடைய பாழிடமாகிய காட்டில் ஒருபக்கத்தில் வைத்து அவனுடைய உடல் தீயால் எரிக்கப்பட்டது.

புல்லென்=====> இனியே

பொலிவிழந்த கண்களையுடையவர்களாய், தம்மைப் பாதுகாப்போனைக் காணாது, ஆரவாரிக்கும் சுற்றத்துடன் செயலிழந்து நிற்கும் புலவர்கள் இப்பொழுது தம் உடலை வாட்டும் பசியுடன் வேறு நாடுகளுக்குச் செல்கின்றனர்.

பாடலின் பின்னணி:-

ஆய் அண்டிரன் இறந்ததால் வருந்திய குட்டுவன் கீரனார், தம் வருத்தத்தை இப்பாடலில் வெளிப்படுத்துகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on March 22, 2014, 04:46:14 PM
புறநானூறு, 241. (விசும்பும் ஆர்த்தது!)
பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பொதுவியல்.
துறை: கையறு நிலை.
================================

திண்தேர் இரவலர்க்கு ஈத்த தண்தார்
அண்டிரன் வரூஉம் என்ன ஒண்தொடி
வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள்
போர்ப்புறு முரசும் கறங்க
ஆர்ப்புஎழுந் தன்றால் விசும்பி னானே

அருஞ்சொற்பொருள்:-

திண் = செறிந்த, வலிய
தண் =குளிர்ந்த
தார் = மாலை
ஒண் = ஒளி பொருந்திய
தொடி = வளையல்
வச்சிரம் = இந்திரனின் படைக்கருவி
தடக்கை = பெரிய கை
நெடியோன் = இந்திரன்
போர்ப்பு = போர்த்தல்
கறங்கல் = ஒலித்தல்
ஆர்த்தல் = ஒலித்தல்
விசும்பு = ஆகாயம்

இதன் பொருள்:-

வலிய தேர்களை இரவலர்க்கு அளித்த, குளிர்ந்த மாலையணிந்த ஆய் அண்டிரன் வருகிறான் என்று, ஒளி பொருந்திய வளையல்களையும், வச்சிரம் என்னும் ஆயுதத்தையும், பெரிய கையையும் உடைய இந்திரனின் கோயிலில், போர்த்தப்பட்ட முரசுகள் முழங்கப்பட்டன. அந்த ஒலி வானத்தில் ஒலித்தது.

பாடலின் பின்னணி:-

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் ஆய் அண்டிரனுடன் நெருங்கிய தொடர்புடையவராக இருந்தார். இவர், புறநானூற்றில் 12 பாடல்களில் ஆய் அண்டிரனைப் பாடியுள்ளார். ஆய் அண்டிரன் இறந்ததையும் அவனுடன் அவன் மனைவியரும் இறந்ததையும் கண்ட இவர், ஆய் அண்டிரன் மறு உலகம் அடைந்ததாகவும் அங்கு இந்திரன் அவனை வரவேற்பதாகவும் குறிப்பிடுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on March 22, 2014, 04:50:09 PM
புறநானூறு, 242. (முல்லையும் பூத்தியோ?)
பாடியவர்: குடவாயில் கீரத்தனார்.
பாடப்பட்டோன்: ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்.
திணை: பொதுவியல்.
துறை: கையறு நிலை.
================================

இளையோர் சூடார் ; வளையோர் கொய்யார் ;
நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான் ; பாடினி அணியாள் ;
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் நாட்டே?

அருஞ்சொற்பொருள்:-

மருப்பு = யாழின் தண்டு
கடந்த = வென்ற
மாய்ந்த = இறந்த
பின்றை = பிறகு

இதன் பொருள்:-

முல்லையே! தன்னுடைய வீரம் வெளிப்படுமாறு பகைவர்களின் வீரர்களைக் கொன்ற, வலிய வேலையுடைய சாத்தன் இறந்த பிறகு, ஒல்லையூர் நாட்டில் பூத்தாயோ? இனி, இளைய ஆடவர்கள் உன் பூக்களைச் சூடிக்கொள்ள மாட்டார்கள்; வளையல் அணிந்த மகளிரும் உன் பூக்களைப் பறிக்க மாட்டார்கள்; நல்ல யாழின் தண்டால் மெதுவாக வளைத்துப் பறித்து உன் பூக்களைப் பாணனும் சூடமாட்டன்; பாடினியும் சூடமாட்டாள்.

பாடலின் பின்னணி:-

ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் இறந்ததைக் கண்ட புலவர் குடவாயில் கீரத்தனார் மிகவும் வருந்தினார். தம் வருத்தத்தை வெளிப்படுத்தும் வகையில், ஒரு முல்லைக் கொடியைப் பார்த்து, “ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் இறந்ததால், அனைவரும் பெருந்துயரத்தில் உள்ளனர். இந்நேரத்தில் நீ பூத்திருக்கிறாயே? யார் உன் பூக்களைச் சூடப் போகிறார்கள்?” என்று இப்பாடலில் புலவர் குடவாயில் கீரத்தனார் கூறுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

”இயற்கையைப் பார்த்து கவிஞர் கேட்கும் இக்கேள்வி சாத்தன் பால் அவன் ஊர் மக்களும் அவன் புரந்த பாணரும் பாடினியரும் கவிஞரும் கொண்டிருந்த பேரன்பையும் அவன் ஊராரிடம் பெற்றிருந்த புகழையும் ஆறு வரிகளில் எடுத்துக்காட்டும் இச்சிறு பாடல் ஒரு பெருங்காவியம் செய்யும் வேலையைச் செய்துவிடுகிறது” என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் மிகுந்த புலமையுடைய அறிஞர் ப. மருதநாயகம், “புதுப்பார்வைகளில் புறநானூறு” என்ற தம்முடைய நூலில் கூறுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on March 22, 2014, 04:52:33 PM
புறநானூறு, 243. (யாண்டு உண்டுகொல்?)
பாடியவர்: தொடித்தலை விழுத்தண்டினார்.
பாடப்பட்டோன்: ஆய்வுக்குரியது.
திணை: பொதுவியல்.
துறை: கையறு நிலை.
================================

இனிநினைந்து இரக்கம் ஆகின்று; திணிமணல்
செய்வுறு பாவைக்கு கொய்பூத் தைஇத்
தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து
தழுவுவழித் தழீஇத், தூங்குவழித் தூங்கி
மறைஎனல் அறியா மாயமில் ஆயமொடு

உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து
நீர்நணிப் படிகோடு ஏறிச், சீர்மிகக்
கரையவர் மருளத், திரையகம் பிதிர
நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து
குளித்துமணற் கொண்ட கல்லா இளமை

அளிதோ தானே, யாண்டுண்டு கொல்லோ?
தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி நடுக்குற்று
இருமிடை மிடைந்த சிலசொல்
பெருமூ தாளரோம் ஆகிய எமக்கே

அருஞ்சொற்பொருள்:-

இனி = இப்பொழுது
திணிதல் = செறிதல்
பாவை = பொம்மை
தைஇ = சூடி
கயம் = குளம்
பிணைந்து= கோத்து
தழீஇ = தழுவி
தூங்கல் = ஆடல்
ஆயம் = கூட்டம்
சினை = கிளை
பிதிர் = திவலை (சிதறும் நீர்த்துளி)
குட்டம் = ஆழம்
விழு = சிறந்த
தண்டு = தடி, ஊன்றுகோல்
இரும் = இருமல்
மிடைதல் = கலத்தல்

இதன் பொருள்:-

இனிநினைந்து=====> ஆயமொடு

இப்பொழுது நினைத்தால் வருந்தத்தக்கதாக உள்ளது. மணலைத் திரட்டிச் செய்த பொம்மைக்கு, பறித்த பூவைச் சூடி, குளிர்ந்த குளத்தில் விளையாடும் பெண்களோடு கை கோத்து, அவர்கள் தழுவும் பொழுது தழுவி, அவர்கள் ஆடும் பொழுது ஆடி, ஒளிவு மறைவு இல்லாமல் வஞ்சனை இல்லாத இளையோர் கூட்டத்தோடு விளையாடினோம்.

உயர்சினை=====> இளமை

உயர்ந்த கிளைகளையுடைய மருதமரத்தின் நீர்த்துறையில் படிந்த கிளையைப் பற்றி ஏறி, அழகு மிகுந்த, கரைகளில் உள்ளோர் வியக்க, நீரலைகளிலிருந்து நீர்த்துளிகள் மேலே எழவும், நெடிய நீரையுடைய ஆழமான இடத்தில், “துடும்” எனக் குதித்து, மூழ்கி, மணலை வெளியில் கொண்டுவந்து காட்டிய அறியாமை மிகுந்த இளமை

அளிதோ=====> எமக்கே

இப்பொழுது எங்குள்ளதோ? பூண் சூட்டிய நுனியையுடைய வளைந்த ஊன்றுகோலை ஊன்றித் தளர்ந்து, இருமல்களுக்கு இடைஇடையே வந்த சில சொற்களைக் கூறும் பெரிய முதியவர்களாகிய எம்முடைய இந்த நிலை இரங்கத் தக்கது.

பாடலின் பின்னணி:-

தம் இளமையில் தாம் விளையாடிய விளையாட்டுகளையும், இன்பமான நிகழ்ச்சிகளையும் எண்ணிப் பார்த்து, அவையெல்லாம் கழிந்தனவே என்று தாம் வருந்துவதை, புலவர் தொடித்தலை விழுத்தண்டினார் இப்பாடலில் வெளிப்படுத்துகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

தன் இளமை கழிந்துபோனதை நினைத்துப் புலவர் தம் வருத்தத்தை வெளிப்படுத்துவதால், இப்பாடல் கையறுநிலையைச் சார்ந்ததாயிற்று.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on March 22, 2014, 04:56:45 PM
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-prn2/t1.0-9/1488866_771653969526183_330858464_n.jpg)

புறநானூறு, 244. (வண்டு ஊதா; தொடியிற் பொலியா!)
பாடியவர்: தெரியவில்லை.
பாடப்பட்டோன்: தெரியவில்லை.
திணை: தெரியவில்லை.
துறை: தெரியவில்லை.
================================

பாணர் சென்னியும் வண்டுசென்று ஊதா;
விறலியர் முன்கையும் தொடியிற் பொலியா;
இரவல் மாக்களும் .. .. .. .. .. .. .. .

அருஞ்சொற்பொருள்:-

சென்னி = தலை
தொடி = வலையல்
பொலிவுல் = அழகு

இதன் பொருள்:-

பாணர்களின் தலைகளில் உள்ள பூக்களிலிருந்து ஒழுகும் தேனைப் பருகுவதற்காக வண்டுகள் அங்கு சென்று ஒலிப்பது நின்றது. விறலியரின் முன்கைகளில் வளையல்கள் அழகு செய்யவில்லை. இரவலர்களும் …..

பாடலின் பின்னணி:-

இப்பாடலில் முதல் இரண்டு வரிகளும் மூன்றாவது வரியில் இரண்டு சொற்கள் மட்டுமே கிடைத்துள்ளன. கிடைத்துள்ள பகுதியை ஆய்ந்து பார்த்தால், யாரோ ஒரு புலவர், கையறு நிலையில் தாம் பெற்ற துயரத்தை வெளிப்படுத்துவது போல் தோன்றுகிறது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on March 22, 2014, 04:58:52 PM
புறநானூறு, 245. (என்னிதன் பண்பே?)
பாடியவர்: சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: பொதுவியல்.
துறை: கையறு நிலை.
================================

யாங்குப்பெரிது ஆயினும், நோய்அளவு எனைத்தே
உயிர்செகுக் கல்லா மதுகைத்து அன்மையின்
கள்ளி போகிய களரியம் பறந்தலை
வெள்ளிடைப் பொத்திய விளைவிறகு ஈமத்து
ஒள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி
ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை
இன்னும் வாழ்வல் என்இதன் பண்பே

அருஞ்சொற்பொருள்:-

யாங்கு = எவ்வளவு, எவ்வாறு
எனைத்து = எவ்வளவு
செகுத்தல் = அழித்தல்
மதுகை = வலிமை
களரி = களர் நிலம்
பறந்தலை = பாழிடம்
பொத்துதல் = தீ மூட்டுதல், மூடுதல்
ஈமம் = பிணத்தை எரிப்பதற்கு விறகு அடுக்கப்பட்ட படுக்கை
அழல் = தீக்கொழுந்து
பாயல் = உறங்குதல்
ஞாங்கர் = இடம் (மேலுலகம்)

இதன் பொருள்:-

காதலியைப் பிரிவதால் நான் உறும் துன்பம் எவ்வளவு பெரியதாயினும், அது என் உயிரை அழிக்கும் வலிமை இல்லாததால், அத்துன்பம் அவ்வளவு வலிமை உடையதன்று. கள்ளிச்செடிகள் வளர்ந்த களர் நிலமாகிய பாழிடத்தில், வெட்ட வெளியில், தீயை விளைவிக்கும் விறகுகளால் அடுக்கபட்ட, ஈமத் தீயின் ஒளிபொருந்திய படுக்கையில் படுக்கவைக்கப்பட்ட என் மனைவி மேலுலகம் சென்றாள். ஆனால், நான் இன்னும் வாழ்கின்றேனே! இந்த உலகத்தின் இயற்கைதான் என்ன?

பாடலின் பின்னணி:-

சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதையின் மனைவி இறந்தாள். அவள் உடல் ஈமத்தீயில் வைத்து எரிக்கப்பட்டது. அவள் உடல் தீக்கிரையாகியதைத் தன் கண்ணால் கண்ட மாக்கோதை, தாங்க முடியாத துயரம் அடைந்தான். அந்நிலையில், “காதலியின் பிரிவால் அடையும் துன்பம் எவ்வளவு பெரிதாகத் தோன்றினாலும் அது அத்துணை வலியது அன்று. என் மனைவியின் உடல் தீயில் எரிந்ததை நான் கண்ணால் கண்ட பிறகும் இன்னும் உயிரோடு உள்ளேனே.” என்று மாக்கோதை புலம்புவதை இப்பாடலில் காண்கிறோம்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on March 22, 2014, 05:01:04 PM
புறநானூறு, 246. (பொய்கையும் தீயும் ஒன்றே!)
பாடியவர்: பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: பொதுவியல்.
துறை: ஆனந்தப்பையுள். கணவன் இறந்த போது மனைவி துன்புறுதலைக் கூறுதல் அல்லது இறந்தாரைக் கண்டு சுற்றத்தார் வருந்துதல் ஆகிய இரண்டும் ஆனந்தப்பையுள் என்ற துறையில் அடங்கும்.
==================================

பல்சான் றீரே! பல்சான் றீரே!
செல்கெனச் சொல்லாது, ஒழிகென விலக்கும்
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே!
அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட
காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது

அடைஇடைக் கிடந்த கைபிழி பிண்டம்
வெள்எள் சாந்தொடு புளிப்பெய்து அட்ட
வேளை வெந்தை வல்சி ஆகப்
பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்
உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ;

பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்குஅரிது ஆகுக தில்ல; எமக்குஎம்
பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்புஅற
வள்இதழ் அவிழ்ந்த தாமரை
நள்இரும் பொய்கையும் தீயும்ஓர் அற்றே!

அருஞ்சொற்பொருள்:-

சூழ்ச்சி = ஆராய்ச்சி
கொடுங்காய் = வளைந்த காய்
போழ்ந்து = வெட்டி
காழ் = விதை
விளர் = வெண்ணிறம்
அடையிடை = பானையின் அடிப் பக்கத்தில்
பிண்டம் = சோற்ற உருண்டை
சாந்து = துவையல்
அட்ட = சமைத்த
வேளை = வேளைக் கீரை
வெந்தை = நீராவியில் வேகவைக்கட்டது
வல்சி = சோறு
பரல் = சிறிய கல்
வதிதல் = தூங்குதல்
உயவல் = வருத்தம்
மாதோ – அசைச் சொல்
பெருங்காடு = சுடுகாடு
கோடு = மரக் கொம்பு (விறகு)
தில்ல – விழைவின் கண் கூறப்பட்டது
நள் = செறிந்த

இதன் பொருள்:-

பல்சான் றீரே=====> தீண்டாது

பல குணங்களும் நிறைந்த பெரியோர்களே! பல குணங்களும் நிறைந்த பெரியோர்களே! ”உன் கணவனோடு நீ இறந்து போ” என்று கூறாது, நான் என் கணவரோடு ஈமத்தீயில் மூழ்கி இறப்பதைத் தவிர்க என்று கூறும் தீய வழிகளில் சிந்திக்கும் பெரியோர்களே! அணில்களின் மேலுள்ளது போன்ற வரிகளையுடைய வளைந்த வெள்ளரிக்காயை அரிவாளால் அரிந்தால் தோன்றும் விதைகளைப் போன்ற, வெள்ளை நிறமான, மணமுள்ள, நெய் கலவாத,

அடைஇடை=====> மாதோ

பானையின் அடிப்பகுதியில் நீருடன் கலந்த சோற்றைப் பிழிந்தெடுத்து, அத்துடன் வெள்ளை நிறமுள்ள எள்ளை அரைத்து ஆக்கிய துவையலுடன், புளியிட்டுச் சமைத்த வேளைக் கீரையை உணவாக உண்டு, சிறிய கற்களால் ஆன படுக்கையில் பாயில்லாமல் படுத்து வருந்தும் கைம்பெண்களில் நான் ஒருத்தி அல்லள்

பெருங்காட்டு=====> அற்றே

சுடுகாட்டில் கரிய கட்டைகளை அடுக்கிச் செய்யப்பட்ட பிணப்படுக்கை உங்களுக்குத் தாங்க முடியாதாதாக இருக்கலாம்; எனக்கு, பெரிய தோள்களையுடைய என் கணவர் இறந்ததால், அந்த ஈமத் தீயிலுள்ள பிணப்படுக்கையும் அரும்புகளே இல்லாமல், மலர்ந்த தாமரைகளை மட்டுமே உடைய நீர் செறிந்த பெரிய குளமும் ஒரே தன்மையது.

பாடலின் பின்னணி:-

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் இறந்தவுடன் அவன் உடல் சுடுகாட்டில் எரிக்கப்பட்டது. அவன் மனைவி, பெருங்கோப்பெண்டு, தானும் அந்த ஈமத்தீயில் மூழ்கி இறக்கத் துணிந்தாள். அங்கிருந்த சான்றோர் பலரும் அவளைத் தீயில் விழுந்து இறக்காமல் வாழுமாறு அறிவுரை கூறினார்கள். ஆனால், அவள் தன் கணவன் இறந்த பிறகு கைம்மை நோன்பை மேற்கொண்டு வாழ்வதைவிட இறப்பதையே தான் விரும்புவதாக இப்பாடலில் கூறுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on March 22, 2014, 07:01:06 PM
புறநானூறு, 247. (பேரஞர்க் கண்ணள்!)
பாடியவர்: மதுரைப் பேராலவாயர்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: பொதுவியல்.
துறை: ஆனந்தப்பையுள்.
==================================

யானை தந்த முளிமர விறகின்
கானவர் பொத்திய ஞெலிதீ விளக்கத்து
மடமான் பெருநிரை வைகுதுயில் எடுப்பி
மந்தி சீக்கும் அணங்குடை முன்றிலில்
நீர்வார் கூந்தல் இரும்புறம் தாழப்

பேரஞர்க் கண்ணள் பெருங்காடு நோக்கித்
தெருமரும் அம்ம தானேதன் கொழுநன்
முழவுகண் துயிலாக் கடியுடை வியனகர்ச்
சிறுநனி தமியள் ஆயினும்
இன்னுயிர் நடுங்குந்தன் இளமைபுறங் கொடுத்தே

அருஞ்சொற்பொருள்:-

முளித்தல் = காய்தல்
முளிமரம் = காய்ந்த மரம்
கானவர் = வேடர்
பொத்துதல் = தீ மூட்டுதல்
ஞெலிதல் = கடைதல்
ஞெலி தீ = கடைந்த தீ
விளக்கம் = ஒளி
வைகல் = தங்கல்
எடுப்பி = எழுப்பி
முன்றில் = முற்றம்
சீக்கல் = கீறிக் கிளறுதல்
அஞர் = வருத்தம்
பேரஞர் = பெரும் வருத்தம்
தெருமரல் = மனச் சுழற்சி
அம்ம – அசைச் சொல்
கடி = காவல்
வியன் = அகலம்
சிறுநனி = சிறிது நேரம்
தமியள் = தனித்திருப்பவள்
புறங்கொடுத்தல் = போகவிடுதல்

இதன் பொருள்:-

யானை=====> தாழ

பெண் தெய்வத்தின் கோயில் முற்றத்தில், யானைகொண்டுவந்து தந்த, காய்ந்த விறகால் வேடர்கள் மூட்டிய தீயின் ஒளியில் மடப்பம் பொருந்திய மான்களின் கூட்டம் தங்கி உறங்கிக்கொண்டிருந்தது. அங்கு குரங்குகள் தீயைக் கிளறி ஆர்ப்பரித்து அந்த மான்களை உறக்கத்திலிருந்து எழுப்பின. ஓயாது முரசு ஒலிக்கும், காவலுடைய பெரிய அரண்மனையிலிருந்து சிறுபொழுது தன் கணவனைவிட்டுப் பிரிந்து தனித்திருந்தாலும் உயிர் நடுங்கும் பெருங்கோப்பெண்டு, இப்பொழுது நீர் வடியும் தழைத்த கூந்தல் முதுகில் தாழ,

பேரஞர்=====> கொடுத்தே

தனியாளாக, துயரம் மிகுந்த கண்களோடு, பெண் தெய்வத்தின் கோயிலின் முற்றத்திலிருந்து, சுடுகாட்டில் மூட்டப்பட்ட தீயை நோக்கி மனத் துயரத்தோடு, தன் இளமையைத் துறந்து பெருங்கோப்பெண்டு சென்றாள்.

பாடலின் பின்னணி:-

பெருங்கோப்பெண்டு தன் கணவனுடைய ஈமத்தீயில் வீழ்ந்து உயிர் துறந்ததைக் கண்ட பேராலவாயர், தம் வருத்தத்தை இப்பாடலில் தெரிவிக்கிறார்.

சிறப்புக் குறிப்பு:-

“முழவுகண் துயிலா” என்பது “ஓயாது ஒலிக்கும் முரசு” என்ற பொருளில் கூறப்பட்டுள்ளது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on March 22, 2014, 07:02:20 PM
புறநானூறு, 248. (அளிய தாமே ஆம்பல்!)
பாடியவர்: ஒக்கூர் மாசாத்தனார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: பொதுவியல்.
துறை: தாபத நிலை. கணவன் இறந்ததால் மனைவி கைம்மை நோன்பை மேற்கொண்டிருத்தலை உரைத்தல்.
==================================

அளிய தாமே சிறுவெள் ளாம்பல்,
இளையம் ஆகத் தழையா யினவே, இனியே,
பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப் பொழுதுமறுத்து
இன்னா வைகல் உண்ணும்
அல்லிப் படுஉம் புல் ஆயினவே

அருஞ்சொற்பொருள்:-

ஆம்பல் = அல்லிப் பூ
இளையம் = சிறு வயதில்
பொழுது மறுத்து = கலம் கடந்து
இன்னாமை = துன்பம்
வைகல் = நாள்
படூஉம் = உண்டாகும்

இதன் பொருள்:-

இந்த சிறிய வெண்ணிறமான அல்லிப் பூக்கள் இரங்கத் தக்கன. சிறுவயதில் இந்த அல்லியின் இலைகள் எனக்கு உடையாக உதவின. இப்பொழுது, பெரிய செல்வமுடைய என் கணவன் இறந்ததால், உண்ணும் நேரத்தில் உண்ணாமல், காலம் தாழ்த்தித், துன்பத்தோடு, நாளும் உண்ணும் புல்லரிசியாக இந்த அல்லி பயன்படுகின்றது.

பாடலின் பின்னணி:-

தன் கணவனை இழந்த பெண் ஒருத்தி, கைம்மை நோன்பை மேற்கொண்டு வாழ்ந்தாள். அவள் தன் நிலைமையைக் நினைத்து வருந்துவதை இப்பாடலில் காண்கிறோம்.

சிறப்புக் குறிப்பு:-

இளம்பெண்கள் அல்லிப்பூவால் தொடுக்கப்பட்ட தழையுடையை அணிந்து தம்மை அழகு செய்வதுகொள்வது பழங்காலத்தில் வழக்கிலிருந்தது என்பது இப்பாடலிலிருந்து தெரிகிறது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on March 22, 2014, 07:03:47 PM
புறநானூறு, 249. (சுளகிற் சீறிடம்!)
பாடியவர்: தும்பைச் சொகினனார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: பொதுவியல்.
துறை: தாபத நிலை.
==================================

கதிர்மூக்கு ஆரல் கீழ்ச்சேற்று ஒளிப்பக்,
கணைக்கோட்டு வாளை மீநீர்ப் பிறழ,
எரிப்பூம் பழனம் நெரித்துஉடன் வலைஞர்
அரிக்குரல் தடாரியின் யாமை மிளிரச்
பனைநுகும்பு அன்ன சினைமுதிர் வராலொடு

உறழ்வேல் அன்ன ஒண்கயல் முகக்கும்,
அகல்நாட்டு அண்ணல் புகாவே, நெருநைப்
பகல்இடம் கண்ணிப் பலரொடும் கூடி,
ஒருவழிப் பட்டன்று மன்னே; இன்றே,
அடங்கிய கற்பின் ஆய்நுதல் மடந்தை

உயர்நிலை உலகம் அவன்புக வார
நீறாடு சுளகின் சீறிடம் நீக்கி
அழுதல் ஆனாக் கண்ணள்
மெழுகு ஆப்பிகண் கலுழ்நீ ரானே

அருஞ்சொற்பொருள்:-

கதிர் மூக்கு = கூர்மையான மூக்கு
ஆரல் = ஒரு வகை மீன்
ஒளிப்ப = மறைய
கணை = திரண்ட
கோடு - இங்கு, வாளை மீனின் மீசையைக் குறிக்கிறது
எரிப்பூ = நெருப்பைப் போல் சிவந்த செந்தாமரை
பூ = தாமரை
பழனம்= பொய்கை (குளம்)
நெரித்து = நெருங்கி
வலைஞர் = நெய்தல் நில மக்கள்
அரிக்குரல் = மெல்லிய ஒலி
தடாரி = சிறுபறை
யாமை = ஆமை
நுகும்பு = குருத்து
சினை = கரு
வரால் = ஒரு வகை மீன்
உறழ்தல் = எதிரிடுதல்
கயல் = கெண்டை மீன்
முகத்தல் = மொள்ளல்
புகா = உணவு
நெருநை = நேற்றை
பகல் = ஒளி
கண்ணி = கருதி, குறித்து, பொருந்தி
ஒருவழிப்படுதல் = ஒற்றுமைப் படுதல்
மன்னே – கழிந்தது என்ற இரங்கற் பொருளில் கூறப்பட்டது
ஆய் = அழகு
நுதல் = நெற்றி
புகவு = உணவு
நீறு = புழுதி
ஆடுதல் = பூசுதல்
சுளகு = முறம்
ஆனாமை = நீங்காமை
ஆப்பி = பசுவின் சாணி
கலுழ்தல் = அழுதல்

இதன் பொருள்:-

கதிர்மூக்கு=====> வராலொடு

கூர்மையான மூக்கையுடைய ஆரல் மீன் கீழேயுள்ள சேற்றில் மறைய, திரண்ட மீசையையுடைய வாளைமீன் நீர்மேல் பிறழ, நெருப்புப்போல் சிவந்த செந்தாமரை பூத்த பொய்கையை வலைஞர் அடைந்தவுடன், மெல்லிய ஓசையையுடைய தடாரி போன்ற ஆமை பிறழ, பனங்குருத்தைப் போன்ற கருமுதிர்ந்த வரால் மீன்களோடு,

உறழ்வேல்=====> மடந்தை

எதிரிடும் வேல் போன்ற கெண்டை மீன்களையும் முகந்து கொள்ளும் அகன்ற நாட்டின் தலைவன் உயிரோடு இருந்த பொழுது, ஒளி பொருந்திய இடத்தில், பலரோடு கூடி உண்டான். அது கழிந்தது. இப்பொழுது, அவன் மேலுலகம் அடைந்ததால், அழகிய நெற்றியும் கற்பும் உடைய அவன் மனைவி

உயர்நிலை=====> கலுழ்நீ ரானே

அவனுக்கு உணவு படைப்பதற்காக, புழுதி படிந்த முறமளவு உள்ள சிறிய இடத்தைத் தன்னுடைய கண்ணீரில் கலந்த பசுஞ்சாணத்தால் மெழுகுகிறாள்.

பாடலின் பின்னணி:-

பெரிய நாட்டுக்குத் தலைவனாக இருந்த ஒருவன் உயிரோடு இருந்த பொழுது, பலரோடும் கூடி உண்பவனாக இருந்தான். அவன் இறந்த பிறகு, அவன் மனைவி கைம்மை நோன்பை மேற்கொண்டாள். ஒருநாள், அவள் ஒரு சிறிய இடத்தை கண்ணிர் கலந்த சாணத்தோடு மெழுகுவதைக் கண்ட புலவர் சொகினனார் தம் வருத்தத்தை இப்படலில் வெளிப்படுத்துகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on March 22, 2014, 07:04:46 PM
புறநானூறு, 250. (மனையும் மனைவியும்!)
பாடியவர்: தாயங் கண்ணியார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: பொதுவியல்.
துறை: தாபத நிலை.
==================================

குய்குரல் மலிந்த கொழுந்துவை அடிசில்
இரவலர்த் தடுத்த வாயிற், புரவலர்
கண்ணீர்த் தடுத்த தண்ணறும் பந்தர்க்
கூந்தல் கொய்து, குறுந்தொடி நீக்கி
அல்லி உணவின் மனைவியொடு இனியே
புல்என் றனையால் வளங்கெழு திருநகர்
வான்சோறு கொண்டு தீம்பால் வேண்டும்
முனித்தலைப் புதல்வர் தந்தை
தனித்தலைப் பெருங்காடு முன்னிய பின்னே

அருஞ்சொற்பொருள்:-

குய் = தாளிப்பு
குரல் = ஒலி
மலிந்த = மிகுந்த
அடிசில் = உணவு
தடுத்த = நிறுத்திய
கொய்து = களைந்து
திருநகர் = அழகிய மாளிகை
வான் = சிறந்த
முனித்தலை = குடுமித்தலை
தனித்தலை = தனியே அமைந்த இடம்
முன்னுதல் = அடைதல்

இதன் பொருள்:-

அழகிய மாளிகையே! நன்கு தாளித்த, வளமான துவையலோடு கூடிய உணவை அளித்து இரவலர்களை வேறு எங்கும் செல்லாமல் தடுத்து நிறுத்திய வாயிலையும், தன்னிடம் ஆதரவு தேடி வந்தவர்களின் கண்ணீரைத் துடைக்கும் குளிர்ந்த நறுமணமுள்ள பந்தலையும் உடையதாக முன்பு நீ இருந்தாய். சுவையான சோற்றை உண்டு இனிய பாலை விரும்பும் குடுமித்தலையயுடைய புதல்வர்களின் தந்தை தனியிடமாகிய சுடுகாட்டை அடைந்த பின், அவன் மனைவி கூந்தலைக் களைந்து, வளையல்களை நீக்கி, அல்லி அரிசியை உணவாகக் கொள்கிறாள். இப்பொழுது நீ பொலிவிழந்து காணப்படுகிறாய்.

பாடலின் பின்னணி:-

தாயங் கண்ணியாருக்குத் தெரிந்த ஒருவன் செல்வத்தோடும் சிறப்போடும் வாழ்ந்தான். அவன் இறந்த பிறகு, அவன் மனைவி கைம்மை நோன்பை மேற்கொண்டாள். ஒருகால், தாயங் கண்ணியார், அவளைக் காணச் சென்றார். அவள் கைம்மை நோன்பை மேற்கொண்டு வருத்தத்தோடு வாழும் வாழ்க்கையைக் கண்டு மனம் நொந்து இப்பாடலை இயற்றியுள்ளார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on March 22, 2014, 07:06:46 PM
புறநானூறு, 251. (அவனும் இவனும்!)
பாடியவர்: மாரிப்பித்தியார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: வாகை.
துறை: தாபத வாகை.
==================================

ஓவத் தன்ன இடனுடை வரைப்பிற்
பாவை அன்ன குறுந்தொடி மகளிர்
இழைநிலை நெகிழ்ந்த மள்ளற் கண்டிகும்;
கழைக்கண் நெடுவரை அருவியாடிக்
கான யானை தந்த விறகின்
கடுந்தெறல் செந்தீ வேட்டுப்
புறம்தாழ் புரிசடை புலர்த்து வோனே

அருஞ்சொற்பொருள்:-

ஓவம் = ஓவியம்
வரைப்பு = மாளிகை
பாவை = பொம்மை
இழை = அணிகலன்
நெகிழ்ந்த = கழன்ற
மள்ளன் = இளைஞன்
கண்டிகும் = கண்டோம்
கழை = மூங்கில்
கானம் = காடு
கடுகுதல் = மிகுதல்
தெறல் = வெம்மை
வேட்டு = விரும்பி
புரிசடை = திரண்டு சுருண்ட சடை
புலர்தல் = உலர்தல்

இதன் பொருள்:-

ஓவியம் போல் அழகான இடங்களுடைய மாளிகையில், சிறிய வளயல்களை அணிந்த, பாவை போன்ற மகளிரின் அணிகலன்களை நெகிழவைத்த இளைஞனை முன்பு கண்டுள்ளோம். இப்பொழுது, மூங்கில் மிகுந்த நெடிய மலைகளிலிருந்து விழும் அருவிகளில் நீராடி, காட்டு யானைகள் கொண்டு வந்து தந்த விறகால் மூட்டிய மிகுந்த வெப்பமுள்ள தீயில், விருப்பத்துடன் தன் முதுகுவரை தாழ்ந்துள்ள திரண்டு சுருண்ட சடைமுடியை உலர்த்துபனும் அவனே.

பாடலின் பின்னணி:-

சிறப்பாக வாழ்ந்த தலைமகன் ஒருவன், துறவறம் பூண்டான். அவன் இல்வாழ்க்கையில் இருந்ததையும் தற்பொழுது துறவறம் மேற்கொண்டிருப்பதையும் நினைத்து இப்பாடலை மாரிப்பித்தியார் இயற்றியுள்ளார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on March 25, 2014, 07:48:06 PM
புறநானூறு, 252. (அவனே இவன்!)
பாடியவர்: மாரிப்பித்தியார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: வாகை.
துறை: தாபத வாகை.
==================================

கறங்குவெள் அருவி ஏற்றலின் நிறம்பெயர்ந்து
தில்லை அன்ன புல்லென் சடையோடு
அள்இலைத் தாளி கொய்யு மோனே
இல்வழங்கு மடமயில் பிணிக்கும்
சொல்வலை வேட்டுவன் ஆயினன் முன்னே

அருஞ்சொற்பொருள்:-

கறங்கல் = ஒலித்தல்
அள்ளு = செறிவு
தாளி = ஒருவகைக் கொடி
புல் = புல்லிய, மென்மையான
மடமயில் = இளம் மயில்

இதன் பொருள்:-

ஒலிக்கும் வெண்மையான அருவியில் நீராடுவதால், பழையநிறம் மாறி தில்லைமரத் தளிர் போன்ற வெளிறிய சடையோடு கூடி நின்று, செறிந்த இலைகளுடைய தாளியைப் பறிக்கும் இவன், முன்பு இல்வாழ்க்கையில் இருந்த பொழுது இளம் மயிலை ஒத்த தன் மனைவியை வயப்படுத்தும் சொற்களலாகிய வலையையுடைய வேட்டுவனாக இருந்தான்.

பாடலின் பின்னணி:-

முந்திய பாடலில் இளைஞன் ஒருவன் துறவறம் பூண்டொழுகுவதைக் கூறிய மாரிப்பித்தியார் அவன் இல்வாழ்க்கையில் இருந்த பொழுது மகளிரை இனிய சொல்லால் காதல் மொழிபேசி வயப்படுத்தும் வேட்டுவனாய் இருந்தான் என்று இப்பாடலில் கூறுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on March 25, 2014, 07:51:14 PM
புறநானூறு, 253. (கூறு நின் உரையே!)
பாடியவர்: குளம்பந்தாயனார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: பொதுவியல்.
துறை: முதுபாலை. காட்டில் தன் கணவனை இழந்த மனைவியின் தனிமை நிலையைக் கூறுதல்.
==================================

என்திறத்து அவலம் கொள்ளல் இனியே;
வல்வார் கண்ணி இளையர் திளைப்ப
நாகாஅல்என வந்த மாறே, எழாநெல்
பைங்கழை பொதிகளைந்து அன்ன விளர்ப்பின்
வளைஇல் வறுங்கை ஓச்சிக்
கிளையுள் ஒய்வலோ? கூறுநின் உரையே

அருஞ்சொற்பொருள்:-

திறம் = பக்கம்
திறத்து= பக்கத்து
அவலம் = வருத்தம்
வல் = வலிமை
கண்ணி = மாலை
திளைத்தல் = பொருதல் (போரிடுதல்)
நகாஅல் = மகிழேன்
மாறு = இறப்பு
கழை = மூங்கில்
பொதி = பட்டை
விளர்ப்பு = வெளுப்பு
கிளை = சுற்றம்
ஒய்தல் = செலுத்துதல், கொடுத்தல்

இதன் பொருள்:-

இனி, நீ எனக்காக வருத்தம் கொள்ள வேண்டா. வலிய வாரால் கட்டப்பட்ட மாலையணிந்த இளைஞர்கள் எல்லாம் மகிழ்ச்சியோடு போரிடும்பொழுது நீ அவர்களுடன் சேர்ந்து மகிழாதவாறு உனக்கு இறப்பு வந்தது. நெல் முளைக்காத பசிய மூங்கிலின் பட்டையை நீக்கியதைப்போல், வெளுத்த வளையல் நீங்கிய வெறுங்கையை தலைமேல் தூக்கி, உன் சுற்றத்தாரிடம் நீ இறந்த செய்தியைச் எப்படிக் கொண்டுபோய்ச் சேர்ப்பேன்? நீயே சொல்வாயாக.

பாடலின் பின்னணி:-

தலைமகன் ஒருவன் போருக்குச் சென்று போர்க்களத்தில் இறந்து கிடந்தான். அவன் மனைவி அங்குச் சென்று புலம்புவதை இப்பாடலில் குளம்பந்தாயனார் குறிப்பிடுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on March 25, 2014, 07:55:09 PM
புறநானூறு, 254. (ஆனாது புகழும் அன்னை!)
பாடியவர்: கயமனார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: பொதுவியல்.
துறை: முதுபாலை.
==================================

இளையரும் முதியரும் வேறுபுலம் படர
எடுப்ப எழாஅய்; மார்பமண் புல்ல
இடைச்சுரத்து இறுத்த மள்ள! விளர்த்த
வளையில் வறுங்கை ஓச்சிக் கிளையுள்
இன்னன் ஆயினன் இளையோன் என்று

நின்னுரை செல்லும் ஆயின், மற்று
முன்ஊர்ப் பழுனிய கோளி ஆலத்துப்
புள்ளார் யாணர்த் தற்றே என்மகன்
வளனும் செம்மலும் எமக்கென நாளும்
ஆனாது புகழும் அன்னை
யாங்கா குவள்கொல்? அளியள் தானே

அருஞ்சொற்பொருள்:-

புலம் = இடம்
எடுப்ப = எழுப்ப, தூக்க
புல்லுதல் = தழுவுதல்
சுரம் = வழி
இறுதல் = சாதல்
மள்ளன் = வீரன்
விளர்த்த = வெளுத்த
ஓச்சி= உயர்த்தி
கிலை = சுற்றம்
இன்னன் = இத்தன்மையவன்
மற்று – அசை நிலை
பழுனிய = பழுத்த
கோளி = ஆலமரம்
புள் = பறவை
ஆர் = நிறைவு
யாணர் = புதுவருவாய்
செம்மல் = பெருமை
ஆனாது = அமையாது (குறையாது)
அளியள் = இரங்கத்தக்கவள்

இதன் பொருள்:-

இளையரும்=====> என்று

இளையவர்களும் முதியவர்களும் போர்க்களத்திலிருந்து வேறு இடங்களுக்குச் சென்றனர். நான் எழுப்பினால் நீ எழுந்திருக்கவில்லை. உனது மார்பு நிலத்தில் படுமாறு, நீ இடைவழியில் இறந்துவிட்டாய். வீரனே! வளையலை நீக்கியதால் வெளுத்த வெறுங்கையைத் தூக்கி, உன் சுற்றத்தாரிடம், நீ இறந்துவிட்டாய் என்று

நின்னுரை=====> தானே

உன்னைப் பற்றிய செய்தியை நான் எடுத்துச் சென்றால், ” என் மகனின் செல்வமும் பெருமையும், ஊரின் முன்னே உள்ள, பழுத்த ஆலமரத்தில் பறவைகள் வருவதைப் போன்றது.” என்று நாள்தோறும் விடாமல் புகழ்ந்து பேசும் உன் தாய் என்ன ஆவாளோ? அவள் இரங்கத்தக்கவள்.

பாடலின் பின்னணி:-

போர் முடிந்ததால், போருக்குச் சென்ற பலரும் வேறுவேறு இடங்களுக்குச் சென்றனர். ஒருவீரனின் மனைவி தன் கணவன் திரும்பி வராததைக்கண்டு போர்க்களத்திற்குச் சென்றாள். அங்கே, அவள் கணவன், மார்பில் அம்புபட்டு இறந்து கிடப்பதைக் கண்டாள். தன் கணவன் இறந்ததால் அவள் புலம்புகிறாள். தான் இல்லத்திற்குச் சென்று தன் கணவன் இறந்த செய்தியைத் தன் கணவனின் தாய்க்கு எங்ஙனம் தெரிவிப்பது என்று எண்ணிக் கலங்குகிறாள். அவளுடைய கையறுநிலையை இப்பாடலில் கயமனார் சித்திரிக்கிறார்.

சிறப்புக் குறிப்பு:-

தன் கணவனை இழந்த பெண், தான் வருந்துவது மட்டுமல்லாமல், தன் கணவனின் தாயார் எப்படியெல்லாம் வருந்துவாளோ என்று எண்ணுவது, அவளின் பாராட்டத்தக்க உயர்ந்த நற்பண்பைக் காட்டுகிறது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on March 25, 2014, 08:00:13 PM
புறநானூறு, 255. (முன்கை பற்றி நடத்தி!)
பாடியவர்: வன்பரணர்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: பொதுவியல்.
துறை: முதுபாலை.
==================================

’ஐயோ!’ எனின்யான் புலிஅஞ் சுவலே;
அணைத்தனன் கொளினே அகன்மார்பு எடுக்கவல்லேன்;
என்போல் பெருவிதிர்ப்பு உறுக நின்னை
இன்னாது உற்ற அறனில் கூற்றே;
நிரைவளை முன்கை பற்றி
வரைநிழல் சேர்கம் நடந்திசின் சிறிதே

அருஞ்சொற்பொருள்:-

அகன் = அகன்ற
விதிர்ப்பு = நடுக்கம்
நிரை = வரிசை
இன்னாது = தீமை (சாக்காடு)
கூற்று = கூற்றுவன் (இயமன்)
வரை = மலை
சேர்கம் = சேர்வோம்
சின் – முன்னிலை அசைச் சொல்

இதன் பொருள்:-

”ஐயோ!’ என்று ஓலமிட்டு அழுதால் புலி வந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன். இங்கிருந்து உன்னை அணைத்துக்கொண்டு செல்லலாம் என்றால் உன் அகன்ற மார்புடைய உடலை என்னால் தூக்க முடியவில்லை. உன்னை இவ்வாறு அறமற்ற முறையில் கொன்ற கூற்றுவன் என்னைப்போல் பெரிய நடுக்கமுறுவானாகுக. என்னுடைய வளையல் அணிந்த முன்கையைப் பற்றிக்கொண்டு மெல்ல நடப்பாயானல் மலையின் நிழக்குச் சென்றுவிடலாம்.”

பாடலின் பின்னணி:-

தலைமகன் ஒருவன் போர்க்களத்திலிருந்து திரும்பி வராததால், அவன் மனைவி போர்க்களத்திற்குச் சென்றாள். அங்கு, அவன் இறந்து கிடப்பதைக் கண்டு அழுகிறாள். “ஐயோ! என்று ஓலமிட்டு ஒலியெழுப்பினால், புலி வருமோ என்று அஞ்சுகிறேன். உன்னைத் தூக்கிகொண்டு செல்லலாம் என்றால் உன் அகன்ற மார்பு பெரிதாகையால் அது என்னால் இயலாது. ஒரு தீங்கும் செய்யாத என்னை இப்பெருந்துயரத்தில் ஆழ்த்தி நடுக்கமுறச் செய்யும் கூற்றுவன் என்னைப் போல் பெருந்துயரம் உறுவதாகுக. நீ என் கைகளைப் பற்றிக்கொண்டு மெல்ல நடந்தால், மலையின் நிழலுக்குச் செல்லலாம்.“ என்று அப்பெண் கூறுவதைக் கண்ட புலவர் வன்பரணர் அவளுடைய அவல நிலையை இப்பாடலில் குறிப்பிடுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

கூற்றுவன் செய்த “இன்னாது” என்பதால், ”இன்னாது” இங்கு சாக்காட்டைக் குறிக்கிறது.

இறந்தவனால் நடக்க இயலாது என்று தெரிந்திருந்தும், அவனைச் “சிறிது தூரம் நட.” என்று அவள் கூறுவது, அவள் தெளிவான சிந்தனையற்ற நிலையில் உள்ளாள் என்பதை உணர்த்துகிறது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on April 04, 2014, 06:54:05 PM
புறநானூறு, 256. (அகலிதாக வனைமோ!)
பாடியவர்: பெயர் தெரிந்திலது.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: பொதுவியல்.
துறை: முதுபாலை.
==================================

கலம்செய் கோவே : கலம்செய் கோவே!
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறுவெண் பல்லி போலத் தன்னொடு
சுரம்பல வந்த எமக்கும் அருளி,
வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி
அகலிது ஆக வனைமோ
நனந்தலை மூதூர்க் கலம்செய் கோவே!

அருஞ்சொற்பொருள்:-

கோ = குயவன்
சாகாடு = வண்டி
ஆரம் = ஆர்க்கால்
சுரம் = வழி
வியன் = பெரிய
மலர்தல் = விரிதல்
பொழில் = நிலம்
வனைதல் = செய்தல்

இதன் பொருள்:-

மண்பாண்டங்கள் செய்யும் குயவனே! மண்பாண்டங்கள் செய்யும் குயவனே! இப்பெரிய நிலத்தில், பெரிய இடங்களையுடைய பழைய ஊரின்கண் மண்பாண்டங்கள் செய்யும் குயவனே! வண்டியின் அச்சுடன் பொருந்திய ஆர்க்காலைப் பற்றிக்கொண்டு வந்த பல்லிபோல், என் கணவனுடன் பலவழிகளையும் கடந்து வந்த எனக்கும் சேர்த்து, அருள் கூர்ந்து பெரிய தாழி ஒன்றைச் செய்வாயோ!

பாடலின் பின்னணி:-

ஒரு பெண் தன் கணவனுடன் சென்றுகொண்டிருந்தாள். அவர்கள் சென்றுகொண்டிருந்த வழியில், போரில் அவள் கணவன் இறந்தான். கணவனை இழந்த அப்பெண், இறந்தாரை அடக்கம் செய்யும் தாழி செய்யும் குயவனை நோக்கி, “தாழி செய்யும் குயவனே! நான் வண்டியின் உருளையில் உள்ள ஆர்க்காலைப் பற்றிக்கொண்டு வந்த பல்லிபோல் என் கணவனுடன் இங்கு வந்தேன். வந்த இவ்விடத்தில் அவன் போரில் இறந்தான். அவனை அடக்கம் செய்வதற்குத் தாழி ஒன்று தேவைப்படுகிறது. நீ அவனை அடக்கம் செய்வதற்குத் தாழி செய்யும் பொழுது, நானும் அவனுடன் உறையும் அளவுக்குப் பெரிய தாழியை எனக்காக அருள் கூர்ந்து செய்வாயாக” என்று அவள் வேண்டுவதாக இப்பாடலில் புலவர் கூறுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on April 04, 2014, 06:54:58 PM
புறநானூறு, 257. (செருப்பிடைச் சிறு பரல்!)
பாடியவர்: பெயர் தெரிந்திலது.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: வெட்சி.
துறை: உண்டாட்டு.
==================================

செருப்புஇடைச் சிறுபரல் அன்னன் கணைக்கால்
அவ்வயிற்று அகன்ற மார்பின் பைங்கண்
குச்சின் நிரைத்த குரூஉமயிர் மோவாய்ச்
செவிஇறந்து தாழ்தரும் கவுளன் வில்லொடு
யார்கொலோ அளியன் தானே? தேரின்
ஊர்பெரிது இகந்தன்றும் இலனே; அரண்எனக்
காடுகைக் கொண்டன்றும் இலனே; காலைப்

புல்லார் இனநிரை செல்புறம் நோக்கிக்
கையின் சுட்டிப் பைஎன எண்ணிச்
சிலையின் மாற்றி யோனே; அவைதாம்
மிகப்பல ஆயினும் என்னாம்? எனைத்தும்
வெண்கோள் தோன்றாக் குழிசியொடு
நாள்உறை மத்தொலி கேளா தோனே

அருஞ்சொற்பொருள்:-

பரல் = கல்
அன்னன் = அத்தன்மையவன்
கணைக்கால் = திரண்ட கால்
அவ்வயிறு = திரண்ட கால்
பைங்கண் = குளிர்ந்த கண்
குச்சி = குச்சிப் புல்
குரூஉ = நிறம்
மோவாய் = தாடி
கவுள் = மயிர்
தேர்தல் = ஆராய்தல்
இகத்தல் = நீங்குதல்
புல்லார் = பகைவர்
நிரை = பசுக்கூட்டம்
சிலை = வில்
மாற்றுதல் = அழித்தல் (வெல்லுதல்)
கோள் = பரிவேடம் (வட்டம்)
குழிசி = பானை
உறைதல் = இறுகுதல்

இதன் பொருள்:-

செருப்புஇடை=====> காலை

செருப்பிடையே நுழைந்த சிறியகல், அணிந்தோர்க்குத் துன்பம் தருவதைப்போல், நம் தலைவன் பகைவர்க்குத் துன்பம் தருபவன். திரண்ட கால்களையும், அழகிய வயிற்றையும், அகன்ற மார்பையும், குளிர்ந்த கண்களையும், குச்சுப்புல் திரண்டு நிறைந்தது போன்ற, நிறம் பொருந்திய தாடியும், காதளவு தாழ்ந்த முடியும் உடையவனாய் வில்லுடன் கூடிய நம் தலைவன் இரங்கத்தக்கவன். ஆராய்ந்து பார்த்தால், இவன் ஊரைவிட்டு அதிகம் எங்கும் போகாதவன். பாதுகாப்பிற்காக காட்டுக்குள் இருப்பவனும் அல்லன். இன்றுகாலை,

புல்லார்=====> தோனே

தன் கையாற் குறித்து மெல்ல எண்ணி, ஆநிரைகளை மீட்க வந்தவர்களை வில்லால் வென்றான். ஆயினும் என்ன பயன்? அவன் வீட்டில், பானைகளில் பாலில்லை; தயிர் கடையும் ஒலியும் கேட்கவில்லை.

பாடலின் பின்னணி:-

இரு தலைவர்களிடையே பகை இருந்தது. ஒருவன் பசுக்களை மற்றொருவன் கவர்ந்தான். பசுக்களை இழந்தவன் அவைகளை மீட்க வந்தான். பசுக்களை கவர்ந்தவன் மீட்க வந்தவனை வென்று வெருட்டினான். வெற்றிபெற்ற தலைவன் தனக்கு உதவி செய்தவர்களோடு சேர்ந்து கள்ளுண்டு மகிழ்ந்தான். இவ்வாறு மகிழ்ச்சியோடு இருக்கும் கூட்டத்தில் ஒருவன், “நம் தலைவன் செருப்பில் பரல் போன்றவன். அவன் திரண்ட காலும், அகன்ற மார்பும், நல்ல மீசையும், காதளவு உள்ள தலைமுடியும், உயர்ந்த வில்லும், உடையவன். அவன் மிகவும் இரங்கத் தக்கவன். அவன் ஊரைவிட்டு எங்கும் செல்வதில்லை. அவன் பகைவர்களுக்கு அஞ்சி காடுகளை அரணாகக் கொள்வதில்லை. இன்று பகைவர்களுடைய பசுக்கள் இருக்கும் இடத்தை அறிந்து, அவற்றைக் கவர்வதற்கு ஏற்ற சூழ்ச்சியைச் செய்து, அவற்றைக் கவர்ந்தான்.” என்று வியந்து கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

சிறப்புக் குறிப்பு:-

”அவன் வீட்டில் பானைகளில் பாலில்லை; தயிர் கடையும் ஒலியும் கேட்கவில்லை” என்பதிலிருந்து, அவன் பசுக்களை மற்றவர்களுக்குக் கொடுத்துவிட்டான் என்று புலவர் கூறுவதாகத் தோன்றுகிறது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on April 22, 2014, 07:06:50 PM
புறநானூறு, 258. (தொடுதல் ஓம்புமதி!)
பாடியவர்: உலோச்சனார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: வெட்சி.
துறை: உண்டாட்டு.
==================================

முட்கால் காரை முதுபழன் ஏய்ப்பத்
தெறிப்ப விளைந்த தீங்கந் தாரம்
நிறுத்த ஆயம் தலைச்சென்று உண்டு,
பச்சூன் தின்று, பைந்நிணப் பெருத்த
எச்சில் ஈர்ங்கை விற்புறம் திமிரிப்,

புலம்புக் கனனே, புல்அணற் காளை;
ஒருமுறை உண்ணா அளவைப், பெருநிரை
ஊர்ப்புறம் நிறையத் தருகுவன் ; யார்க்கும்
தொடுதல் ஓம்புமதி முதுகள் சாடி;
ஆதரக் கழுமிய துகளன்
காய்தலும் உண்டுஅக் கள்வெய் யோனே

அருஞ்சொற்பொருள்:-

காரை = முள்ளுடன் கூடிய ஒரு செடி
பழன் = பழம்
ஏய்ப்ப = ஒப்ப
தெறித்தல் = முற்றுதல்
தேம் = தேன்
பச்சூன் = பசுமையான (நல்ல) ஊன்
நிறுத்த ஆயம் = கொண்டுவந்து நிறுத்திய ஆநிரை
பைந்நிணம் = பசுமையான தசை
தலைச் செல்லல் = எதிர்த்துச் செல்லுதல்
திமிர்தல் = பூசுதல்
புலம் = இடம்
அணல் = தாடி
தொடுதல் = உண்ணுதல்
துகள் = தூசி
காய்தல் = உலர்தல்

இதன் பொருள்:-

முட்கால்=====> திமிரிப்

அடிபக்கத்தில் முள்ளுடைய காரைச் செடியின் முதிர்ந்த பழத்தைப் போன்று நன்கு முதிர்ந்த கள்ளையுடைய கந்தாரம் என்னும் இடத்திலிருந்து தான் கொண்டுவந்து நிறுத்திய ஆநிரைகளுக்கு ஈடாகக் கள்ளை வாங்கிப் பருகி, வளமான ஊனைத் தின்று தன் எச்சில் கையை வில்லின் நாணில் துடைத்துவிட்டு,

புலம்புக்=====> வெய் யோனே

சிறிய தாடியையுடைய காளை போன்ற அந்த இளைஞன் இப்பொழுது வேறொரு இடத்திற்குச் சென்றிருக்கிறான். இங்குள்ளவர்கள் அனைவரும் ஒருமுறை கள் குடிப்பதற்குள், அவன் ஆநிரைகளைக் கவர்ந்துகொண்டு வந்துவிடுவான். அவன் கள்ளை விரும்புபவன்; வரும்பொழுது மிகுந்த தாகத்தோடு வருவான். அதனால், முதிர்ந்த கள் உள்ள சாடியிலிருந்து அனைவருக்கும் கள் கொடுப்பதைத் தவிர்த்து, அக்கள்ளை பாதுகாப்பாயாக.

பாடலின் பின்னணி:-

ஒருகால், உலோச்சனார் ஒரு தலைவனுடைய ஊருக்குச் சென்றார். அவன் பகைவருடைய நாட்டிற்குச் சென்று ஆநிரைகளை மீட்டு வந்ததைக் குறித்து அங்கு உண்டாட்டு நிகழ்ந்து கொண்டிருந்தது. அவன் மீண்டும் ஆநிரைகளைக் கவர்வதற்காக வேறொரு ஊருக்குச் சென்றிருந்தான். உலோச்சனார், கள் வழங்குபவனை நோக்கி, “முன்பு தலைவன் கந்தார நாட்டிற்குள் சென்று ஆநிரைகளைக் கொண்டுவந்து அவற்றை கள்விலைக்கு ஈடாக வழங்கினான். இன்று, மீண்டும் ஆநிரைகளைக் கவர்வதற்குச் சென்றுள்ளான். அவன் வரும்பொழுது கள் குடிக்கும் விருப்பத்தோடு வருவான். முதிர்ந்த கள் உள்ள சாடிஒன்றை அவனுக்காகப் பாதுகாத்து வைப்பாயாக.” என்று இப்பாடலில் கூறுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on April 22, 2014, 07:08:29 PM
புறநானூறு, 259. (புனை கழலோயே!)
பாடியவர்: கோடை பாடிய பெரும்பூதனார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: கரந்தை.
துறை: செருமலைதல். பசுக்களைக் கவர்ந்து சென்ற பகைவரை நெருங்கி அவர்கள் அஞ்சுமாறு போர் செய்தல்.
பிள்ளைப்பெயர்ச்சி. பறவைகள் குறுக்கே வந்ததால் சகுனம் சரியில்லாமல் இருந்தும், அதற்கு அஞ்சாது சென்று போர் செய்த வீரனுக்கு அரசன் கொடை புரிதல்.
==================================

ஏறுடைப் பெருநிரை பெயர்தரப் பெயராது
இலைபுதை பெருங்காட்டுத் தலைகரந்து இருந்த
வல்வில் மறவர் ஒடுக்கம் காணாய்;
செல்லல்; செல்லல்; சிறக்கநின் உள்ளம்;
முருகுமெய்ப் பட்ட புலைத்தி போலத்
தாவுபு தெறிக்கும் ஆன்மேல்
புடையிலங்கு ஒள்வாள் புனைகழ லோயே

அருஞ்சொற்பொருள்:-

பெயர்தல் = போதல்
தலை கரந்து = தம்மை மறைத்துக்கொண்டு
ஒடுக்கம் = மறைந்திருத்தல்
செல்லல் = செல்லாதே
முருகு = தெய்வம், முருகன்
புலைத்தி = புலையனின் மனைவி
தாவுபு = தாவி
தெறித்தல் = பாய்தல்
ஆன் = பசு

இதன் பொருள்:-

இடுப்பில் விளங்கும் வாளையும், காலில் வீரக்கழலையும் அணிந்தவனே! பகைவர்கள் கவர்ந்த ஆநிரை, எருதுகளுடன் சென்றுகொண்டிருக்கின்றன. தெய்வத்தின் ஆற்றல் உடலில் புகுந்த புலைத்தியைப் போல் ஆநிரை துள்ளிக் குதித்துச் செல்கின்றன. அவற்றைக் கவர்ந்தவர்கள் அவற்றுடன் செல்லாது, இலைகளால் மூடப்பட்ட பெரிய காட்டுக்குள் ஒளிந்திருப்பதைக் காண்பாயாக. ஆகவே, இப்பொழுது அவற்றை மீட்கச் செல்லாதே. உன் முயற்சியில் நீ சிறப்பாக வெற்றி பெறுவாயாக.

பாடலின் பின்னணி:-

ஓரூரில், ஒரு தலைவனுடைய ஆநிரைகளை அவன் பகைவரின் வீரர்கள் கவர்ந்தனர். ஆநிரைகள் துள்ளிக் குதித்துச் செல்கின்றன. அவற்றைக் கவர்ந்த வீரர்கள் காட்டுக்குள் மறைந்திருக்கின்றனர். ஆநிரைகளை இழந்த தலைவன் அவற்றை மீட்பதற்கு ஆவலாக இருக்கிறான். அதைக் கண்ட புலவர் பெரும்பூதனார், “பகைவர்கள் காட்டுக்குள் மறைந்திருக்கின்றனர். ஆகவே, இப்பொழுது உன் ஆநிரைகளை மீட்கச் செல்ல வேண்டாம்.” என்று இப்பாடலில் அத்தலைவனுக்கு அறிவுறை கூறிகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on April 22, 2014, 07:10:37 PM
(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash4/t1.0-9/1981929_785948921430021_582156917334212387_n.jpg)

புறநானூறு, 260. (கேண்மதி பாண!)
பாடியவர்: வடமோதங்கிழார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: கரந்தை.
துறை: பாண்பாட்டு.
துறை: கையறு நிலை.
==================================

வளரத் தொடினும் வெளவுபு திரிந்து
விளரி உறுதரும் தீந்தொடை நினையாத்
தளரும் நெஞ்சம் தலைஇ மனையோள்
உளரும் கூந்தல் நோக்கிக் களர
கள்ளி நீழற் கடவுள் வாழ்த்திப்

பசிபடு மருங்குலை கசிபுகை தொழாஅக்
காணலென் கொல்என வினவினை வரூஉம்
பாண! கேண்மதி யாணரது நிலையே
புரவுத்தொடுத்து உண்குவை ஆயினும் இரவுஎழுந்து
எவ்வம் கொள்வை ஆயினும் இரண்டும்

கையுள போலும் கடிதுஅண் மையவே
முன்ஊர்ப் பூசலின் தோன்றித் தன்னூர்
நெடுநிரை தழீஇய மீளி யாளர்
விடுகணை நீத்தம் துடிபுணை யாக
வென்றி தந்து கொன்றுகோள் விடுத்து

வையகம் புலம்ப வளைஇய பாம்பின்
வைஎயிற்று உய்ந்த மதியின் மறவர்
கையகத்து உய்ந்த கன்றுடைப் பல்லான்
நிரையொடு வந்த உரைய னாகி
உரிகளை அரவ மானத் தானே

அரிதுசெல் உலகில் சென்றனன் உடம்பே
கானச் சிற்றியாற்று அருங்கரைக் கால்உற்றுக்
கம்பமொடு துளங்கிய இலக்கம் போல
அம்பொடு துளங்க ஆண்டுஒழிந் தன்றே;
உயர்இசை வெறுப்பத் தோன்றிய பெயரே

மடஞ்சால் மஞ்ஞை அணிமயிர் சூட்டி
இடம்பிறர் கொள்ளாச் சிறுவழிப்
படஞ்செய் பந்தர்க் கல்மிசை யதுவே

அருஞ்சொற்பொருள்:-

வௌவுதல் = பற்றிக்கொள்ளுதல்
விளரி = இரங்கற் பண்
தொடை = யாழின் நரம்பு
தலைஇ = மேற்கொள்ளுதல்
உளர்தல் = தலைமயிர் ஆற்றுதல்
பசிபடு மருங்குல் = பசியுடைய வயிறு
கசிபு = இரங்கி
யாணர் = புதிய வருவாய், வளமை, செல்வம்
புரவு = கொடை
தொடுத்தல் = வைத்தல்
எவ்வம் = வருத்தம்
கடி = மிகுதி
தழீஇய = சூழ்ந்த
மீளி = வீரர்
நீத்தம் = வெள்ளம்
துடி = வலிமை
புணை = தெப்பம்
கோள் = கொள்ளப்பட்ட (பசு)
வை = கூர்மை
எயிறு = பல்
உரை = புகழ்
உரி = தோல்
ஆனது = அன்னது
ஆன = போல
கால் = காற்று
கம்பம் = அசைவு
வெறுக்கை = மிகுதி
படம் = திரைச் சீலை
மிசை = மேல்

இதன் பொருள்:-

வளர=====> வாழ்த்தி

ஓசை அதிகரிக்குமாறு இசைத்தாலும், நரம்புகள் திரிந்து, இரங்கற் பண்ணாகிய விளரிப் பண்ணே யாழிலிருந்து வருகிறது என்பதை நினைத்தால் நெஞ்சம் வருத்தம் அடைகிறது. வரும் வழியில், பெண் ஒருத்தி கூந்தலை விரித்துப் போட்டுக்கொண்டு எதிரில் வந்தாள். இவை தீய சகுனம் என்று நினைத்துக் களர்நிலத்தில் விளைந்த கள்ளிமரத்தின் நிழலில் இருந்த கடவுளை வாழ்த்தி,

பசிபடு=====> இரண்டும்

பசியோடு கூடிய வயிற்றோடு வருந்தித் தொழுது, “நான் காண வந்த தலைவனைக் காண முடியாதோ?” என்று கேட்கும் பாண! இந்த நாட்டின் செல்வத்தின் நிலையை நான் கூறுகிறேன். கேள்! தலைவன் நமக்கு அளித்தவற்றை வைத்து நாம் உண்ணலாம். அல்லது அவன் இல்லையே என்று எண்ணி வருந்தி, உயிர் வாழ்வதற்காக வேறு இடங்களுக்குச் சென்று இரக்கலாம். இவை இரண்டும்

கையுள=====> விடுத்து

நீ செய்யக்கூடிய செயல்கள். மிக அருகில் உள்ள ஊரில் தோன்றிய பூசலால், தலைவனுடைய ஊரில் இருந்த ஆநிரைகளைப் பகைவர்கள் கவர்ந்தனர். அவற்றை மீட்பதற்கு நம் தலைவன் சென்றான். ஆநிரைகளைக் கவர்ந்த மறவர், நம் தலைவன் மீது எய்த அம்பு வெள்ளத்தை தன் வலிமையை மட்டுமே துணையாகக் கொண்டு பகைவரைக் கொன்று,

வையகம்=====> மானத் தானே

ஆநிரைகளை, உலகம் வருந்துமாறு, தன்னை விழுங்கிய கூர்மையான பற்களையுடைய பாம்பின் வாயிலிருந்து திங்கள் மீண்டது போல் ஆநிரைகளை மீட்டுப் பெரும்புகழ் பெற்றான். ஆனால், தோலை உரித்துவிட்டுச் செல்லும் பாம்பு போல் அவன் மேலுலகம் சென்றான்

அரிதுசெல்=====> கல்மிசை யதுவே

அவன் உடல் காட்டாற்றின் அரிய கரையில், காற்றால் மோதி, அசைவோடு சாய்ந்த அம்பு ஏவும் இலக்குப்போல் அம்புகளால் துளைக்கப்பட்டு அங்கே வீழ்ந்தது. உயர்ந்த புகழ்பெற்ற நம் தலைவனின் பெயர், மென்மையான, அழகிய மயிலிறகு சூட்டப்பட்டு பிறருக்கு கிடைக்காத அரிய சிறிய இடத்தில் திரைச் சீலைகளால் அலங்கரிக்கப்பட்ட அழகான பந்தரின் கீழ் நடப்பட்ட கல்லின் மேலே பொறிக்கப்பட்டிருக்கிறது.

பாடலின் பின்னணி:-

ஒரு தலைவனின் ஆநிரைகளைப் பகைவர்கள் கவர்ந்து சென்றனர். அத்தலைவன், பகைவர்களை வென்று ஆநிரைகளை மீட்டு வந்தான். ஆனால், மீட்டு வரும்பொழுது அவன் பகைவர்களின் அம்புகளால் தாக்கப்பட்டான். அவன் தன்னுடைய ஊருக்கு வந்தவுடன் இறந்தான். அத்தலைவனைக் காண ஒருபாணன் வந்தான். அவன் வரும் வழியில் பல தீய சகுனங்களைக் கண்டான். ஆகவே, அவன் தலைவனைக் காண முடியாதோ என்று வருந்தினான். அவன் வருத்தத்தைக் கண்ட மற்றோர் பாணன், தலைவனைக் காண வந்த பாணனை நோக்கி, “ தலைவன் இறந்துவிட்டான். உனக்குத் தலைவன் அளித்த பொருளை வைத்து நீ வாழ்க. அல்லது வேறு புரவலரிடம் சென்று பொருள் பெறும் வழியைக் காண்க. தலைவனின் பெயர் நடுகல்லில் பொறிக்கப்பட்டிருக்கிறது. அந்த நடுகல்லை வணங்கி வழிபட்டுச் செல்க.” என்று கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on April 22, 2014, 07:12:19 PM
(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-frc3/t1.0-9/10255107_785958521429061_3725511115591308533_n.jpg)

புறநானூறு, 261. (கழிகலம் மகடூஉப் போல!)
பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்.
பாடப்பட்டோன்: தெளிவாகத் தெரியவில்லை.
திணை: கரந்தை.
துறை: பாண்பாட்டு.
துறை: கையறு நிலை.
==================================

அந்தோ! எந்தை அடையாப் பேரில்
வண்டுபடு நறவின் தண்டா மண்டையொடு
வரையாப் பெருஞ்சோற்று முரிவாய் முற்றம்
வெற்றுயாற்று அம்பியின் எற்று? அற்றுஆகக்
கண்டனென் மன்ற சோர்கஎன் கண்ணே;

வையங் காவலர் வளம்கெழு திருநகர்
மையல் யானை அயாவுயிர்த் தன்ன
நெய்யுலை சொரிந்த மையூன் ஓசை
புதுக்கண் மாக்கள் செதுக்கண் ஆரப்
பயந்தனை மன்னால் முன்னே; இனியே

பல்லா தழீஇய கல்லா வல்வில்
உழைக்குரற் கூகை அழைப்ப ஆட்டி
நாகுமுலை அன்ன நறும்பூங் கரந்தை
விரகுஅறி யாளர் மரபிற் சூட்ட
நிரைஇவண் தந்து நடுகல் ஆகிய

வென்வேல் விடலை இன்மையின் புலம்பிக்
கொய்ம்மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய
கழிகல மகடூஉப் போல
புல்என் றனையால் பல்அணி இழந்தே

அருஞ்சொற்பொருள்:-

நறவு = மது
தண்டா = குறையாத
மண்டை = இரப்போர் பாத்திரம்
முரிவாய் = வளைவான இடம்
அம்பி = ஓடம்
எற்று = எத்தன்மைத்து
அற்று = அத்தன்மைத்து
திருநகர் = அழகிய அரண்மனை
மையல் = யானையின் மதம்
அயா உயிர்த்தல் = பெருமூச்சு விடுதல்
மை = ஆடு
ஓசை – ஓசையுடன் நெய்யில் வேகும் ஆட்டிறைச்சிக்கு அகுபெயராக வந்தது
புதுக்கண் = புதுமை (கண் – அசை)
செதுக்கு = வாடல்
செதுக்கண் = ஒளி மழுங்கிய கண்கள்
மன் – கழிவின்கண் வந்தது
ஆல் – அசை
பல்லா = பல்+ஆ = பல பசுக்கள்
தழீஇய = உள் அடக்கிக் கொண்டு
உழை = இடம்
கூகை = கோட்டான் (ஒரு வகை ஆந்தை)
ஆட்டி = அலைத்து
நாகு = இளம் பசுங் கன்று
விரகு = அறிவு
விடலை = தலைவன், வீரன்
மகடூஉ = மனைவி

இதன் பொருள்:-

அந்தோ=====> கண்ணே

ஐயோ! என் தலைவனின் பெரிய இல்லத்தின் கதவுகள் எப்பொழுதும் அடைக்கப்படாதவை. இரப்போரின் பாத்திரங்களில் வண்டுகள் மொய்க்கும் மது எப்பொழுதும் குறையாமல் இருக்கும். அங்குள்ள வளைந்த முற்றம், வந்தோர்க்குக் குறையாமல் அளிக்கும் அளவுக்கு மிகுந்த அளவில் சோறுடையதாக இருந்தது. எப்படி இருந்த அந்த இல்லம் இப்பொழுது நீரின்றி வற்றிய ஆற்றில் உள்ள ஓடம் போல் காட்சி அளிப்பதைக் கண்டேன். அதைக் கண்ட என் கண்கள் ஓளி இழக்கட்டும்.

வையங்=====> இனியே

முன்பு, உலகத்தைக் காக்கும் வேந்தருடைய செல்வம் மிக்க அழகிய அரண்மனையில் யானை பெருமூச்சு விடுவதைப் போன்ற ஓசையுடன் நெய்யில் வேகவைக்கப்பட்ட ஆட்டிறைச்சியை ஓளிமழுங்கிய கண்களுடன் வந்தவர்கள் எல்லாம் நிரம்ப உண்ணத் தந்தாய்; இப்பொழுது,

பல்லா=====> ஆகிய

பல பசுக்களின் கூட்டத்தை, வில்லைப் பயன்படுத்துவதை கற்கத் தேவையில்லாமல், இயற்கையாகவே வில்லைப் பயன்படுத்துவதில் வல்லவர்களான உன் பகைவர் கைக்கொண்டனர். அவர்கள், இறக்கப்போவதை அறிவிக்கும் வகையில் கூகைகள் தம் இனத்தைக் கூவி அழைத்தன. அவர்களை அழிப்பதற்கு இளம் பசுங் கன்றுகளின் முலை போன்ற தோற்றமுள்ள, மணமுள்ள கரந்தைப் பூவை, அறிவிற் சிறந்தோர் சூட்ட வேண்டிய முறைப்படி சூட்ட, பசுக்களைக் கவர்ந்தவர்களை அழித்தாய். இவ்வாறு, பசுக்களை மீட்டுவந்த தலைவன் இப்பொழுது இறந்து நடுகல்லாகிவிட்டதால்,

வென்வேல்=====> இழந்தே

அழுது, தலை மயிரைக் கொய்துகொண்டு, கைம்மை நோன்பை மேற்கொண்டு, வருத்தத்துடன், அணிகலன்களை இழந்த அவன் மனைவியைப் போல் அவன் அரண்மனை பொலிவிழந்து காணப்படுகிறது.

பாடலின் பின்னணி:-

ஒருகால், ஆவூர் மூலங் கிழார், ஒரு தலைவனைக் கண்டு பரிசில் பெற்றார். அவர், சிலகாலம் கழித்து மீண்டும் அவனைக் காணச் சென்றார். அவர் சென்ற பொழுது அவன் இறந்துவிட்டான். அவன் இல்லம் பொலிவிழந்து காணப்படுவதைக் கண்டு மனம் வருந்தி இப்பாடலை ஆவூர் மூலங் கிழார் இயற்றியுள்ளார்.

சிறப்புக் குறிப்பு:-

”கல்லா வல்வில்” என்பதில் ”வில்” என்பது வில்லேந்திய வீரரைக் குறிக்கிறது. ”கல்லா” என்பது, அவர்கள் வழிவழியாக வில்லைப் பயன்படுத்துவதில் திறமை மிகுந்தவர்களாகையால் அவர்கள் வில்லைப் பயன்படுத்துவதற்குப் பயிற்சி பெறத் தேவையில்லை என்பதைக் குறிக்கிறது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on May 30, 2014, 01:47:02 PM
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xaf1/t1.0-9/1962734_795092300515683_3651257062960582355_n.jpg)

புறநானூறு, 262. (தன்னினும் பெருஞ் சாயலரே!)
பாடியவர்: மதுரைப் பேராலவாயர்.
பாடப்பட்டோன்: தெளிவாகத் தெரியவில்லை.
திணை: வெட்சி.
துறை: உண்டாட்டு / தலைத் தோற்றம்.
==================================

நறவும் தொடுமின்; விடையும் வீழ்மின்;
பாசுவல் இட்ட புன்காற் பந்தர்ப்
புனல்தரும் இளமணல் நிறையப் பெய்ம்மின்;
ஒன்னார் முன்னிலை முருக்கிப் பின்நின்று
நிரையோடு வரூஉம் என்னைக்கு
உழையோர் தன்னினும் பெருஞ்சா யலரே.

அருஞ்சொற்பொருள்:-

நறவு = மது
தொடுதல் = இழிதல்
விடை = ஆடு
வீழ்த்தல் = விழச் செய்தல் (வெட்டுதல்)
பாசுவல் = பாசு+உவல்
பாசு = பசிய, உவல் = இலை
ஒன்னார் = பகைவர்
முருக்கி = முறித்து
என்னை = என்+ஐ= என் தலைவன்
உழையோர் = பக்கத்தில் உள்ளவர்கள்
சாயல் = இளைப்பு (சோர்வு)

இதன் பொருள்:-

மதுவைப் பிழியுங்கள்; ஆட்டை வெட்டுங்கள். பசிய இலைகளால் வேயப்பட்ட சிறிய கால்களுடைய பந்தரில் ஈரமுடைய புதுமணலைப் பரப்புங்கள்; பகைவரின் தூசிப்படையை அழித்துத் திரும்பிவரும் தனது படைக்குப் பின்னே நின்று, ஆநிரைகளுடன் வரும் என் தலைவனுக்குப் பக்கத்தில் துணையாக உள்ள மறவர்கள் அவனைவிட மிகவும் சோர்வுடன் இருப்பார்கள்.

பாடலின் பின்னணி:-

ஒருகால், மதுரைப் பேராலவாயர் தலைவன் ஒருவனைக் காணச் சென்றார். அப்பொழுது, அத்தலைவன் பகைவர் நாட்டிலிருந்து பசுக்களைக் கவர்ந்துவரச் சென்றிருந்தான். அவன் வரவுக்காக மதுரைப் பேராலவாயர் காத்திருந்தார். சிறிது நேரத்தில், தலைவன் தன் துணைமறவர்களுடனும், தான் கவர்ந்த பசுக்களுடனும் திரும்பி வந்தான். அங்குள்ள மக்கள் பெரும் ஆரவாரத்துடன் அவனை வரவேற்றனர். தலைவனின் வெற்றியைப் பாராட்டி அங்கே ஒரு உண்டாட்டு நடைபெற்றது. அந்த உண்டாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை, இப்பாடலில் மதுரைப் பேராலவாயர் கூறுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on May 30, 2014, 01:47:57 PM
புறநானூறு, 263. (களிற்றடி போன்ற பறை!)
பாடியவர்: தெரியவில்லை.
பாடப்பட்டோன்: தெரியவில்லை.
திணை: கரந்தை.
துறை: கையறு நிலை.
==================================

பெருங்களிற்று அடியின் தோன்றும் ஒருகண்
இரும்பறை இரவல! சேறி ஆயின்
தொழாதனை கழிதல் ஓம்புமதி; வழாது
வண்டுமேம் படூஉமிவ் வறநிலை ஆறே
பல்லாத் திரள்நிரை பெயர்தரப் பெயர்தந்து
கல்லா இளையர் நீங்க நீங்கான்
வில்லுமிழ் கடுங்கணை மூழ்கக்
கொல்புனல் சிறையின் விலங்கியோன் கல்லே

அருஞ்சொற்பொருள்:-

இரும் = பெரிய
சேறல் = செல்லல்
ஓம்புதல் = தவிர்த்தல்
வண்டர் = வீரர்
வறநிலை = வறண்ட தன்மை
கொல்புனல் = கரையை அரிக்கும் நீர்
விலங்குதல் = தடுத்தல்
கல் = நடுகல்

இதன் பொருள்:-

பெரிய யானையின் காலடி போலத் தோன்றும் ஒருகண்ணுடைய பறையையுடைய இரவலனே! நீ அந்த வழியாகச் சென்றால், அங்கே ஒரு நடுகல் இருக்கிறது. அதைத் தவறாமல் வழிபட்டுச் செல்க. அது “வண்டர்” என்னும் ஒருவகை வீரர்கள் மிகுதியாக உள்ள கொடிய வழி. அங்கே, பல ஆநிரைகளைக் கவர்வதற்கு வந்தவர் திரும்பி வந்து போரிட்டனர். போர்த்தொழிலைத் தவிர வேறு எதையும் கற்காத இளைய வீரர்கள் போரிலிருந்து நீங்கினார்கள். ஆனால், தலைவன், பகைவர்களின் வில்களிலிருந்து வந்த அம்புகள் அனைத்தையும், கரையை அரிக்கும் நீரைத் தடுக்கும் அணை போல் தடுத்தான். அவன் நடுகல் அங்கே உள்ளது.

பாடலின் பின்னணி:-

தலைவன் ஒருவன் ஆநிரைகளை மீட்டு வரும்வழியில் ஆநிரைகளைக் கவர்ந்தவர்களின் அம்புகளால் தாக்கப்பட்டு உயிர் துறந்தான். அவனுக்கு நடுகல் வைக்கப்பட்டிருக்கிறது. அவ்வழியே செல்லும் பாணன் ஒருவனை நோக்கி, “ நீ அந்த நடுகல்லை வழிபட்டுச் செல்வாயாக” என்று இப்பாடலில் புலவர் கூறுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on May 30, 2014, 01:48:41 PM
புறநானூறு, 264. (இன்றும் வருங்கொல்!)
பாடியவர்: உறையூர் இளம்பொன் வாணிகனார்.
பாடப்பட்டோன்: தெரியவில்லை..
திணை: கரந்தை.
துறை: கையறு நிலை.
==================================

பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி
மரல்வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொடு
அணிமயிற் பீலி சூட்டிப், பெயர்பொறித்து
இனிநட் டனரே! கல்லும்; கன்றொடு
கறவை தந்து பகைவர் ஓட்டிய
நெடுந்தகை கழிந்தமை அறியாது
இன்றும் வருங்கொல், பாணரது கடும்பே

அருஞ்சொற்பொருள்:-

பரல் = கல்
மருங்கு = பக்கம்
பதுக்கை = மேடு
மரல் = ஒருவகை நார் உள்ள மரம்
கண்ணி = மாலை
அணி = அழகு
பீலி = மயில் தோகை
இனி = இப்பொழுது
கறவை = பால் கொடுக்கும் பசு
நெடுந்தகை = பெரியோன் (தலைவன்)
கழிந்தமை = இறந்தது
கடும்பு சுற்றம்

இதன் பொருள்:-

கற்களுள்ள மேட்டுப்பக்கத்தின் அருகில், மரத்திலிருந்து பிரித்து எடுத்த நாரால் தொடுத்த சிவந்த பூக்களுடன் கூடிய மாலையையும் அழகிய மயில் தோகையையும் சூட்டி, அவன் பெயர் பொறித்துத் தலைவனுக்கு இப்பொழுது நடுகல் நட்டுவிட்டார்களே. கன்றுகளோடு பசுக்களையும் மீட்டு வந்த தலைவன் இறந்ததை அறியாது பாணர்கள் கூட்டம் இன்றும் அவனைக் காண வருமோ?

பாடலின் பின்னணி:-

ஒரு தலைவன், அவன் ஊரிலிருந்த பசுக்களைக் கவர்ந்து சென்ற பகைவர்களிடமிருந்து அவற்றை மீட்டு வரும்போது போரில் இறந்தான். அவன் பெயரையும் பெருமையையும் பொறித்த நடுகல்லை, மயில் தோகையையும் பூமாலையையும் சூட்டி அலங்கரித்தனர். அவன் உயிரோடிருந்த பொழுது, பாணர்களுக்குப் பெருமளவில் உதவி செய்தவன். “அவன் நடுகல்லாகியது பாணர்களுக்குத் தெரியுமோ? தெரியாதோ? அவன் இறந்த செய்தி தெரியாமல் பாணர் கூட்டம் இன்றும் அவனைக் காண வருமோ?” என்று இரங்கிப், புலவர் உறையூர் இளம்பொன் வாணிகனார் இப்பாடலை இயற்றியுள்ளார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on July 01, 2014, 08:49:34 PM
புறநானூறு, 265. (வென்றியும் நின்னோடு செலவே!)
பாடியவர்: சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்.
திணை: கரந்தை.
துறை: கையறு நிலை.
==================================

ஊர்நனி இறந்த பார்முதிர் பறந்தலை
ஓங்குநிலை வேங்கை ஒள்ளிணர் நறுவீப்
போந்தைஅம் தோட்டின் புனைந்தனர் தொடுத்துப்
பல்லான் கோவலர் படலை சூட்டக்
கல்ஆ யினையே கடுமான் தோன்றல்!

வான்ஏறு புரையும்நின் தாள்நிழல் வாழ்க்கைப்
பரிசிலர் செல்வம் அன்றியும் விரிதார்க்
கடும்பகட்டு யானை வேந்தர்
ஒடுங்க வென்றியும், நின்னொடு செலவே

அருஞ்சொற்பொருள்:-

நனி = மிக
இறந்த = கடந்த
பார் = நிலம், பாறை
முதிர்தல் = சூழ்தல்
பறந்தலை = பாலை நிலம், பாழிடம்
வேங்கை = வேங்கை மரம்
ஒள் = ஒளி
இணர் = பூங்கொத்து
நறுமை = மணம்
வீ = பூ
போந்தை = பனை
தோடு = இளம் குருத்து ஓலை
புனைதல் = அலங்கரித்தல், செய்தல்
பல்லான் = பல்+ஆன்
ஆன் = பசு
கோவலர் = இடையர்
படலை = மாலை
கல் = நடுகல்
கடு = விரைவு
மான் = குதிரை
தோன்றல் = தலைவன்
வான் = மழை, ஆகாயம்
ஏறு = இடி
புரை – ஓர் உவமை உருபு
தாள் = கால் அடி
தார் = மாலை
பகடு = வலிமை
கடு = விரைவு
வென்றி = வெற்றி
ஒடுங்கா வென்றி = குறையாத வெற்றி

இதன் பொருள்:-

ஊர்நனி=====> தோன்றல்

விரைந்து செல்லும் குதிரைகளையுடைய தலைவனே! ஊரிலிருந்து வெகு தொலைவில், பாறைகள் சூழ்ந்த பாழிடத்தில், ஓங்கி உயர்ந்த வேங்கை மரத்தின் ஒளிபொருந்திய பூங்கொத்துகளைப் பனங்குருத்துக்களோடு சேர்த்துத் தொடுத்த மாலையைப் பல பசுக்களையுடைய இடையர்கள் சூட்டி வழிபடும் நடுகல்லாயினாயே!

வான்ஏறு=====> செலவே

மழையுடன் தோன்றும் இடிபோன்ற வலிமையும், வண்மையும் உடைய உன் அடி நிழலில் வாழும் பரிசிலர்களின் செல்வம் மட்டுமல்லாமல் மலர்ந்த மலர்களாலாகிய மாலையணிந்த, விரைந்து செல்லும் வலிமையுடைய யானைகளையுடைய வேந்தர்களின் குறையாத வெற்றியும் உன் இறப்பால் உன்னுடன் மறைந்தனவே.

பாடலின் பின்னணி:-

தலைவன் ஒருவன் பரிசிலர்க்குப் பெருமளவில் உதவி செய்து அவர்களைப் பாதுகாத்துவந்தான். அவன், தன் வேந்தர்களுக்குத் துணையாகப் போர்புரிந்து அவர்களை வெற்றிபெறச் செய்தான். இவ்வாறு பரிசிலர்களைப் பாதுகாத்து, வேந்தர்களுக்கு உறுதுணையாக இருந்த, வண்மையும் வலிமையும் மிகுந்த தலைவன் இறந்து இப்பொழுது நடுகல்லாகிய நிலையைக் கண்டு மனங்கலங்கி சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார் இப்பாடலை இயற்றியுள்ளார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on July 01, 2014, 08:50:30 PM
புறநானூறு, 266. (அறிவுகெட நின்ற வறுமை!)
பாடியவர்: பெருங்குன்றூர் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி.
திணை: பாடாண்.
துறை: பரிசில் கடாநிலை.
==================================

பயங்கெழு மாமழை பெய்யாது மாறிக்
கயங்களி முளியும் கோடை ஆயினும்,
புழற்கால் ஆம்பல் அகலடை நீழல்
கதிர்கோட்டு நந்தின் சுரிமுக ஏற்றை
நாகுஇள வளையொடு பகல்மணம் புகூஉம்

நீர்திகழ் கழனி நாடுகெழு பெருவிறல்
வான்தோய் நீள்குடை, வயமான் சென்னி
சான்றோர் இருந்த அவையத்து உற்றோன்
ஆசாகு என்னும் பூசல்போல
வல்லே களைமதி அத்தை; உள்ளிய

விருந்துகண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கைப்
பொறிப்புணர் உடம்பில் தோன்றிஎன்
அறிவுகெட நின்ற நல்கூர் மையே

அருஞ்சொற்பொருள்:-

பயம் = பயன்
கெழு = பொருந்திய
மா = பெரிய
மழை = மேகம்
கயம் = குளம்
களி = குழைவு
முளிதல் = வேதல்
புழல் = துளை
அடை = இலை
கதிர் = ஒளிக்கதிர்
கோடு = கொம்பு
நத்து = நத்தை
சுரி = சுழற்சி (வளைவு)
ஏற்றை = ஏறு = ஆண் விலங்கு (ஆண் நத்தை)
நாகு = இளமை, பெண்மை
வளை = சங்கு
புகூஉம் = கூடும்
திகழ்தல் = விளங்குதல்
கழனி = வயல்
கெழு = பொருந்திய
விறல் = வெற்றி
வயம் = வலிமை
மான் = குதிரை
ஆசு = பற்றுக்கோடு
பூசல் = பலர் அறிகை
பெரிதொலித்தல்
வல் = விரைவு
மதி – அசை
அத்தை – அசை
உள்ளல் = நினைத்தல்
திருந்துதல் = ஒழுங்காதல்
புணர்தல் = சேர்தல்
நல்கூர்மை = வறுமை

இதன் பொருள்:-

பயங்கெழு=====> புகூஉம்

பயன் பொருந்திய பெரிய மேகம் மழை பெய்யாமல் இருப்பதால், குளங்களில் உள்ள குழம்பிய சேறு வெப்பமாய் இருக்கும் கோடைக் காலத்திலும் துளையுள்ள ஆம்பலின் அகன்ற இலையின் நிழலில் ஒளிக்கதிர் போன்ற கூர்மையான கொம்புகளையும் வளைந்த முகமும் உடைய ஆண் நத்தை இளம் பெண் சங்குடன் கூடும்

நீர்திகழ்=====> நல்கூர் மையே

நீர் விளங்கும் வயல்களுள்ள நாட்டையுடைய பெரிய வெற்றியுடையோய்! விண்ணைத் தொடும் நெடிய குடையும் வலிய குதிரையும் உடைய சென்னி! சான்றோர்கள் கூடியுள்ள அவையில் ஒருவன் சென்று, “ எனக்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும்” என்று ஆரவாரமாகக் கூறுவானாயின், அவர்கள் அவனுக்கு விரைந்து உதவி செய்வார்கள். அதைப் போல, என் வறுமையை நீ விரைவில் தீர்ப்பாயாக. என்னை நினைத்து வந்த விருந்தினரைக் கண்டதும் அவர்களுக்கு உதவ முடியாததால் ஒளிந்து வாழும் நன்மையில்லாத வாழ்க்கையையுடைய என் உடலில் ஐம்பொறிகளும் குறைவின்றி இருந்தாலும் என் வறுமை என் அறிவைக் கெடுக்கிறது.

பாடலின் பின்னணி:-

மிகவும் வறுமையில் வாடிய புலவர்களில் பெருங்குன்றூர் கிழாரும் ஒருவர். தன் வறுமைத் துன்பத்திலிருந்து விடுதலை பெற்று வளமான வாழ்க்கை வாழலாம் என்ற நோக்கத்தோடு அவர் சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியைக் காணச் சென்றார். அவன் பெருங்குன்றூர் கிழாரின் புலமையைப் பாராட்டித் தன்னுடன் அவரைச் சிலகாலம் தங்க வைத்தான். அவர், தன் வறுமையை அவனுக்குப் பலமுறை குறிப்பாகக் கூறினார். ஆனால், சோழன் அவருக்குப் பரிசளிக்கவில்லை. முடிவாக, ஒருநாள், “அரசே, சான்றோர் அவையில் ஒருவன் சென்று தன் வறுமையைக் கூறி ஆதரவு கேட்டால், அவர்கள் அவனுக்கு விரைந்து உதவி செய்வார்கள். எனக்கு வேறு ஒரு குறையும் இல்லாவிட்டாலும், வறுமை மட்டும் என்னை வருத்துகிறது. விருந்தினரைக் கண்டால் அவர்களுக்கு ஒன்றும் அளிக்க முடியாததால் ஒளிந்து கொள்கிறேன். என் அறிவும் தடுமாற்றம் அடைகிறது.” என்று கூறினார். அதைக் கேட்ட சோழன் அவருக்குப் பரிசளித்து அவரை மகிழ்வித்தான். இப்பாடலில், பெருங்குன்றூர் கிழார் தன் வறுமையை சோழனுக்கு எடுத்துரைத்துத் தனக்குப் பரிசில் அளிக்குமாறு வேண்டுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on October 01, 2014, 10:24:31 PM
புறநானூறு, 267/268 : கிடைக்கப்பெறவில்லை.

புறநானூறு, 269. (கருங்கை வாள் அதுவோ!)
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: வெட்சி. வீரர் அரசனுடைய ஆணையைப் பெற்றும், பெறாமலும், பகைவர்களின் பசுக்களைக் கவர்ந்து வருதல்.
துறை: உண்டாட்டு. வீரர் மதுவையுண்டு மனங்களித்தலைக் கூறுதல்.
==================================

குயில்வாய் அன்ன கூர்முகை அதிரல்
பயிலாது அல்கிய பல்காழ் மாலை
மையிரும் பித்தை பொலியச் சூட்டிப்
புத்தகல் கொண்ட புலிக்கண் வெப்பர்
ஒன்றுஇரு முறையிருந்து உண்ட பின்றை
உவலைக் கண்ணித் துடியன் வந்தெனப்

பிழிமகிழ் வல்சி வேண்ட மற்றது
கொள்ளாய் என்ப கள்ளின் வாழ்த்திக்
கரந்தை நீடிய அறிந்துமாறு செருவின்
பல்லான் இனநிரை தழீஇய வில்லோர்க்
கொடுஞ்சிறைக் குரூஉப்பருந்து ஆர்ப்பத்
தடிந்துமாறு பெயர்த்ததுஇக் கருங்கை வாளே

அருஞ்சொற்பொருள்:-

முகை = மலரும் பருவத்தரும்பு (மொட்டு)
அதிரல் = காட்டு மல்லிகைக் கொடி
பயில்தல் = நெருங்குதல்
அல்கிய = அமைந்த
காழ் = விதை
இரும் = பெரிய
மை = கரிய
பித்தை = குடுமி
புத்தகல் = புதிய அனன்ற கலம்
வெப்பர் = வெப்பமான மது (முதிர்ந்த மது)
பின்றை = பிறகு
உவலை = தழை
துடி = ஒரு வகைப் பறை
மகிழ் = மது
வல்சி = உணவு
கரந்தை = பசுக்களை மீட்டல்
பல்லான் = பல்+ஆன் = பல பசுக்கள்
தழீஇய = சூழ்ந்த
கொடுஞ்சிறை = வளைந்த சிறகு
குரூஉ = நிறம்
ஆர்த்தல் = ஒலித்தல்
தடிந்து = அழித்து
மை = வலிமை

இதன் பொருள்:-

குயில்வாய்=====> வந்தென

குயிலின் அலகு போன்ற கூர்மையான மொட்டுக்களையுடைய காட்டு மல்லிகைக் கொடியில் உள்ள பூக்களோடும், விதைகளோடும் நெருக்கமாகத் தொடுக்கப்படாத மாலையை கரிய பெரிய தலை முடியில் அழகுடன் சூடி, புதிய அகன்ற கலத்தில், புலியின் கண்போன்ற நிறத்தையுடைய மதுவை இரண்டுமுறை இங்கே இருந்து நீ உண்ட பின், பசிய இலைகளைக் கலந்து தொடுத்த மாலையை அணிந்த துடி கொட்டுபவன் அதைக் கொட்டி “போர் வந்தது” என்று அறிவித்தான். அதைக் கேட்டவுடன்

பிழிமகிழ்=====> வாளே

பிழிந்த மதுவாகிய உணவை உண்ணுமாறு உன்னை வேண்டியும், நீ அது வேண்டா என்று கூறி, மதுவை வாழ்த்தி, வாளை ஏந்திப், பசுக்களை மீட்பதற்கு வந்த வீரர்கள் மறைந்திருப்பதை அறிந்து, வளைந்த சிறகையும், ஒளிபொருந்திய நிறத்தையும் உடைய பருந்துகள் ஆரவாரிக்குமாறு அவர்களைக் கொன்றது வலிய உன் கையில் உள்ள இவ்வாள் தானே.

பாடலின் பின்னணி:-

ஒருதலைவன், பகைவருடைய ஆநிரைகளைக் கவர்வதற்குப் படை திரட்டினான். போருக்குப் போகுமுன் அங்கு ஒரு உண்டாட்டு நடைபெறுகிறது. அப்பொழுது, துடி என்னும் பறையை அடிப்பவன், அதை அடித்து, வீரர்களைப் போருக்குச் செல்லுமாறு அறிவிக்கிறான். வீரர்கள் அனைவர்க்கும் மீண்டும் மது வழங்கப்பட்டது. தலைவன் மது வேண்டாம் என்று கூறி, வாளைக் கொண்டு வருமாறு கூறினான். போரில் அவனை எதிர்த்தவர்களைக் கொன்று, தலைவன் ஆநிரைகளை வெற்றிகரமாகக் கவர்ந்து வந்தான். மீண்டும் உண்டாட்டு நடைபெற்றது. அதைக் கண்ட அவ்வையார், “முன்பு, நீ மது வேண்டா என்று கூறி வாளைக் கொண்டுவரச் சொல்லி, அந்த வாளோடு சென்று வெற்றி பெற்றாயே!” என்று அத்தலைவனை இப்பாடலில் பாராட்டுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on October 01, 2014, 10:29:49 PM
புறநானூறு, 270. (ஆண்மையோன் திறன்!)
பாடியவர்: கழாத்தலையார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: கரந்தை.
துறை: கையறு நிலை.

==================================

பன்மீன் இமைக்கும் மாக விசும்பின்
இரங்கு முரசின், இனம்சால் யானை
நிலந்தவ உருட்டிய நேமி யோரும்
சமங்கண் கூடித் தாம்வேட் பவ்வே
நறுவிரை துறந்த நாறா நரைத்தலைச்

சிறுவர் தாயே! பேரிற் பெண்டே!
நோகோ யானே; நோக்குமதி நீயே;
மறப்படை நுவலும் அரிக்குரல் தண்ணுமை
இன்னிசை கேட்ட துன்னரும் மறவர்
வென்றிதரு வேட்கையர், மன்றம் கொண்மார்

பேரமர் உழந்த வெருவரு பறந்தலை
விழுநவி பாய்ந்த மரத்தின்
வாண்மிசைக் கிடந்த ஆண்மையோன் திறத்தே

அருஞ்சொற்பொருள்:-

பன்மீன் = பல்+மீன்
மீன் = விண்மீன்
மாக = வானம், ஆகாயம், மேலிடம்
விசும்பு = ஆகாயம்
இமைக்கும் = ஒளிவிடும்
இரங்கல் = ஒலித்தல்
இனம் = கூட்டம்
சால் = நிறைவு, மிகுதி
தவ = மிக ( நீண்ட காலமாக)
நேமி = ஆட்சிச் சக்கரம்
சமம் = போர்
வேட்பு = விருப்பம்
நறுமை = நன்மை
விரை = மணம், மணமுள்ள பொருள்
ஓ, மதி – அசை நிலை
நுவலுதல் = சொல்லுதல்
துன்னுதல் = நெருங்குதல்
வெரு = அச்சம்
பறந்தலை = போர்க்களம்
நவி = கோடரி
மிசை = மேல்
திறம் = திறமை.

இதன் பொருள்:-

பன்மீன்=====> கொண்மார்

நறுமணப் பொருள்களைத் துறந்தமையால் நறுமணம் கமழாத, நரைத்த தலையையுடைய பெருங்குடிப் பெண்ணே! இளைய வீரனுக்குத் தாயே! பல விண்மீன்கள் ஒளிரும் உயர்ந்த வானத்தில் முழங்கும் முரசு கொட்டுவோரும், யானைக் கூட்டத்தைச் செலுத்துவோரும், நில உலகில் நெடுங்காலம் ஆட்சிச் சக்கரத்தைச் செலுத்தும் வேந்தரும் போர்க் களத்தில் ஒன்று கூடி அன்பால் வருந்தி நின்றனர். இங்கு நடந்ததை நினைத்து நான் வருந்துகிறேன். வீரர்களைப் போர்க்கழைக்கும் போர்ப்பறையின் இனிய ஓசையைக் கேட்ட, பகைவர்களால் நெருங்குதற்கரிய மறவர், வெற்றிபெறும் வேட்கையுடன் போர்க்களத்தைத் தமதாக்கிக் கொள்வதற்காகப்,

பேரமர்=====> திறத்தே

பெரும் போரைச் செய்த அச்சம்தரும் போர்க்களத்தில், பெரிய கோடரியால் வெட்டப்பட்டு விழுந்த மரம்போல் வாளின்மேல் விழுந்து கிடந்த, ஆண்மையுடைய உன் மகனின் ஆற்றலை நீயே பார்ப்பாயாக.

பாடலின் பின்னணி:-

ஓரூரில் இருந்த பசுக்களைப் பகைவர் கவர்ந்து சென்றனர். அதை மீட்பதற்கு அவ்வூர் வீரர்கள் கரந்தைப் பூச்சூடி போருக்குச் சென்றனர். அவ்வீரர்களில் ஒருவன் கோடரியால் வெட்டப்பட்டு வீழ்த்தப்பட்ட மரம் போல இறந்து விழுந்து கிடந்தான். அவன் விழுந்து கிடப்பதைச் சான்றோர் சூழ, வேந்தன் சென்று கண்டு வியந்து பாராட்டிக் கண்ணீர் வடித்தான். அதைக் கண்ட புலவர் கழாத்தலையார், அக்காட்சியை அவ்வீரனின் தாய்க்குக் கூறுவதுபோல் இப்பாடல் அமைந்துள்ளது.

சிறப்புக் குறிப்பு:-

படைச் செருக்கு என்னும் அதிகாரத்தில், வேந்தனின் கண்களில் நீர் பெருகுமாறு வருந்துமளவுக்கு வீரத்தோடு போர் புரிந்து அப்போரில் இறக்கும் வாய்ப்பு ஒரு வீரனுக்குக் கிடைக்குமானால் அது கெஞ்சிக் கேட்டும் பெற்றுக் கொள்ளத் தக்க பெருமையுடையது என்ற கருத்தை,

புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்க துடைத்து. (குறள் – 780)

என்ற குறளில் வள்ளுவர் கூறுகிறார். இப்பாடலில் குறிப்பிடப்பட்டிருக்கும் வீரன் இறந்த பிறகு, வேந்தனும் அன்புடன் வருந்தினான் என்று புலவர் கழாத்தலைவர் கூறுவது வள்ளுவர் கருத்தோடு ஒப்பு நோக்கத் தக்கது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on October 01, 2014, 10:31:53 PM
புறநானூறு, 271. (மைந்தன் மலைந்த மாறே!)
பாடியவர்: வெறிபாடிய காமக்காணியார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: நொச்சி.
துறை: செருவிடை வீழ்தல்.
==================================

நீரறவு அறியா நிலமுதற் கலந்த
கருங்குரல் நொச்சிக் கண்ணார் குரூஉத்தழை
மெல்இழை மகளிர் ஐதுஅகல் அல்குல்
தொடலை ஆகவும் கண்டனம்; இனியே
வெருவரு குருதியொடு மயங்கி உருவுகரந்து
ஒறுவாய்ப் பட்ட தெரியல் ஊன்செத்துப்
பருந்துகொண்டு உகப்பயாம் கண்டனம்,
மறம்புகல் மைந்தன் மலைந்த மாறே

அருஞ்சொற்பொருள்:-

அறவு = அறுதல், தொலைதல்
குரல் = கொத்து
நொச்சி = ஒரு செடி
ஆர் = நிறைவு
குரூஉ = நிறம்
இழை = அணிகலன்கள்
ஐது = அழகிய
அல்குல் = இடை
தொடலை = மாலை
இனி = இப்பொழுது
வெரு = அச்சம்
குருதி = இரத்தம்
மயங்கி = கலந்து
கரத்தல் = மறைத்தல்
ஒறுவாய்ப்பட்டு = துண்டிக்கப்பட்டு
தெரியல் = மாலை
செத்து = கருதி
உகத்தல் = உயரப் பறத்தல்
புகல் = விருப்பம்
மைந்தன் = வீரன், ஆண்மகன்
மலைதல் = அணிதல்

இதன் பொருள்:-

முன்பு, நீர் குறையாத நிலத்தோடு ஒன்றி நிற்கும் கரிய பூங்கொத்துக்களையுடைய, கண்ணுக்கு இனிய நிறமுடைய நொச்சியின் தழையை, மெல்லிய அணிகலன்கள் அணிந்த அழகிய, பெண்கள் தம் அகன்ற இடையில் உடையாக அணிவதைக் கண்டோம். இப்பொழுது, நொச்சி மாலையை அணிந்து, மதிலைக் காக்கும், வீரத்தை விரும்பும் ஆண்மகன் ஒருவன் வெட்டப்பட்டுக் கிடக்கிறான். அவன் அணிந்திருந்த நொச்சி மாலை துண்டிக்கப்பட்டு, அச்சம்தரும் குருதியில் கலந்து, உருமாறிக் கிடக்கிறது. அதை ஊன்துண்டு என்று கருதிப் பருந்து ஒன்று கவர்ந்துகொண்டு உயரப் பறந்து சென்றதை இப்பொழுது யாம் கண்டோம்.

பாடலின் பின்னணி:-

ஒருகால், இரு அரசர்களிடையே போர் மூண்டது. ஒருவன் மற்றொருவனுடைய அரண்மனையை முற்றுகையிட்டான். முற்றுகையிடப்பட்ட அரண்மனையின் மதிலிடத்தே நின்று, நொச்சிப் பூவைச் சூடி வீரர்கள் அம்மதிலைக் காத்தனர். அப்பொழுது, ஒரு வீரனைப் பகைவர் வாளால் வெட்டி வீழ்த்தினர். வெட்டப்பட்டு வீழ்ந்த பொழுது, அவன் அணிந்திருந்த நொச்சி மாலை துண்டிக்கப்பட்டு அவனுடைய குருதியில் கலந்து உருமாறிக் கீழே கிடந்தது. அதை ஊன்துண்டு என்று கருதிப், பருந்து ஒன்று எடுத்துக்கொண்டு உயரப் பறந்து சென்றதைப் புலவர் வெறிபாடிய காமக்காணியார் கண்டார். அந்தக் காட்சியைக் கண்டதும், முன்பு ஒருமுறை இளம்பெண்கள் நொச்சித் தழையாலான உடையைத் தங்கள் இடையில் அணிந்திருந்ததைப் பார்த்தது அவருக்கு நினைவுக்கு வந்தது. இப்பாடலில், அவ்விரண்டு நிகழ்ச்சிகளையும் அவர் குறிப்பிடுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on October 01, 2014, 10:34:58 PM
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/10616074_869588789732700_2010594966039882624_n.jpg?oh=4441b7ea76b82c73e9da5573ecdfc4c9&oe=54B2D2B9&__gda__=1418022501_209744cab8fcc27adeea0ecc57a2accb)

புறநானூறு, 272. (கிழமையும் நினதே!)
பாடியவர்: மோசி சாத்தனார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: நொச்சி.
துறை: செருவிடை வீழ்தல்.
==================================

மணிதுணர்ந் தன்ன மாக்குரல் நொச்சி,
போதுவிரி பன்மர னுள்ளும் சிறந்த
காதல் நன்மரம் நீமற் றிசினே;
கடியுடை வியன்நகர்க் காண்வரப் பொலிந்த
தொடியுடை மகளிர் அல்குலும் கிடத்தி;

காப்புடைப் புரிசை புக்குமாறு அழித்தலின்
ஊர்ப்புறம் கொடாஅ நெடுந்தகை
பீடுகெழு சென்னிக் கிழமையும் நினதே

அருஞ்சொற்பொருள்:-

துணர் = கொத்து
மா = கருமை
குரல் = கொத்து
போது = மலரும் பருவத்துள்ள அரும்பு
காதல் = அன்பு
கடி = காவல்
வியன்நகர் = பெரிய நகரம்
காண் = அழகு
தொடி = கைவளை,தோள்வலை
அல்குல் = இடை
புரிசை = மதில்
மாறு = பகை
பீடு = பெருமை
கெழு = பொருந்திய
சென்னி = தலை
கிழமை = உரிமை

இதன் பொருள்:-

மணிதுணர்=====> கிடத்தி

மணிகள் கொத்துக் கொத்தாய் அமைந்தாற் போன்ற கரிய பூங்கொத்துக்களையுடைய நொச்சியே! பூக்கள் மலரும் பலவிதமான மரங்களுள் நீதான் மிகுந்த அன்பிற்குரிய நல்ல மரம். காவலையுடைய பெரிய நகரில் அழகுடன் விளங்கிய வளையல் அணிந்த இளமகளிர் இடுப்பில் தழையுடையாக இருப்பாய்;

காப்புடை=====> நினதே

காவலுடைய மதிலில் நின்று பகைவர்களை அழிப்பதால், நகரைக் கைவிடாது காக்கும் வீரர்களின் பெருமைக்குரிய தலையில் மாலையாக அணியப்படும் உரிமையும் உன்னுடையதாகும்.

பாடலின் பின்னணி:-

பகைவர்களை எதிர்த்து, நொச்சிப் பூவைச் சூடிப் போரிட்ட வீரன் ஒருவன் அப்போரில் இறந்தான். அவன் அணிந்திருந்த நொச்சி மாலை அவனுடன் கிடந்தது. அதைக்கண்டு வருந்திய புலவர் சாத்தனார், நொச்சியின் தனிச் சிறப்பை நினைத்து இப்பாடலை இயற்றியுள்ளார்.

சிறப்புக் குறிப்பு:-

வீரர்களால் காக்கப்படுவது மட்டுமல்லாமல், வேறுபல பொறிகளும் காவலுக்காக மதில்களில் வைக்கப்பட்டிருப்பதைக் குறிப்பதற்காகப் புலவர் “காப்புடைப் புரிசை” என்று கூறுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on October 01, 2014, 10:39:00 PM
புறநானூறு, 273. (கூடல் பெருமரம்!)
பாடியவர்: எருமை வெளியனார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: தும்பை.
துறை: குதிரை மறம்.குதிரை வீரன் ஒருவனின் வீரத்தையோ அல்லது அவன் குதிரையின் வீரத்தையோ கூறுதல்.
==================================

மாவா ராதே; மாவா ராதே;
எல்லார் மாவும் வந்தன; எம்இல்
புல்லுளைக் குடுமிப் புதல்வற் றந்த
செல்வன் ஊரும் மாவா ராதே;

இருபேர் யாற்ற ஒருபெருங் கூடல்
விலங்கிடு பெருமரம் போல,
உலந்தன்று கொல்அவன் மலைந்த மாவே

அருஞ்சொற்பொருள்:-

மா = குதிரை
உளை = பிடரி மயிர்
புல் உளை = சிறிதளவே உள்ள பிடரி மயிர்
விலங்குதல் = குறுக்கிடுதல் (குறுக்கே நிற்றல்)
உலத்தல் = அழித்தல்
உலந்தன்று = அழிந்தது
மலைத்தல் = போரிடல்

இதன் பொருள்:-

மாவா ராதே=====> மாவா ராதே

குதிரை வரவில்லையே! குதிரை வரவில்லையே! மற்ற வீரர்கள் அனைவருடைய குதிரைகளும் வந்தன. எம் வீட்டில் உள்ள (சிறிதளவே குடுமியுள்ள) இளமகனைத் தந்த என் கணவன் ஊர்ந்து சென்ற குதிரை வரவில்லையே!

இருபேர்=====> மாவே

இரண்டு பெரிய ஆறுகள் கூடும் பெரிய இடத்தில் குறுக்கே நின்ற பெருமரம் போல், அவன் ஊர்ந்து சென்று போரிட்ட குதிரை சாய்ந்ததோ?

பாடலின் பின்னணி:-

ஒருகால், வீரன் ஒருவன் தும்பைப் பூவை அணிந்து பகைவருடன் போரிடுவதற்காகக், குதிரையில் சென்றான். அவனோடு போருக்குச் சென்ற வீரர்கள் அனைவரும் தங்கள் ஊருக்குத் திரும்பினர். ஆனால், அந்த வீரன் மட்டும் திரும்பி வரவில்லை. அதனால், கலக்கமுற்ற அந்த வீரனின் மனைவி, தன் கணவனின் குதிரை மட்டும் இன்னும் வரவில்லையே என்று புலம்புகிறாள். அதைக் கண்ட புலவர் எருமை வெளியனார் இப்பாடலை இயற்றியுள்ளார்.

சிறப்புக் குறிப்பு:-

“புல்லுளைக் குடுமி” என்பது இளம் சிறுவன் என்பதைக் குறிக்கிறது. பெற்றோர்க்கு, அவர்களின் புதல்வர் செல்வம் என்று கருதப்படுவதால், புதல்வனைப் பெற்ற தந்தையை, “புதல்வன் தந்த செல்வன்” என்று புலவர் குறிப்பிடுகிறார். இருபெரும் ஆறுகளின் இடையே நிற்கும் மரம் எவ்வளவு பெரிதாக இருந்தாலும், அது காலப்போக்கில் வேருடன் சாய்வது உறுதி. அதனால்தான், புலவர் “விலங்கிடு பெருமரம் போல” என்று கூறுவதாகத் தோன்றுகிறது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on October 01, 2014, 10:41:33 PM
புறநானூறு, 274. (நீலக் கச்சை!)
பாடியவர்: உலோச்சனார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: தும்பை.
துறை: எருமை மறம்.
==================================

நீலக் கச்சைப் பூவார் ஆடைப்
பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன்
மேல்வரும் களிற்றொடு வேல்துரந்து இனியே
தன்னும் துரக்குவன் போலும்; ஒன்னலர்
எஃகுடை வலத்தர் மாவொடு பரத்தரக்
கையின் வாங்கித் தழீஇ
மொய்ம்பின் ஊக்கி மெய்க்கொண் டனனே

அருஞ்சொற்பொருள்:-

கச்சை = இறுகக் கட்டிய இடுப்புடை
ஆர் = நிறைவு
பீலி = மயில் தோகை
கண்ணி = தலையில் அணியும் மாலை
துரந்து = செலுத்தி
இனி = இப்பொழுது
ஒன்னலர் = பகைவர்
பரத்தர = பரவிவர
மொய்ம்பு = வலிமை
ஊக்கல் = எழுப்பல்

இதன் பொருள்:-

நீல நிறமுடைய கச்சையையும், பூவேலைப்பாடுகள் நிறைந்த ஆடையையும், மயில் தோகையால் தொடுக்கப்பட்ட மாலையையும் உடைய பெரியோனாகிய வீரன், தன்னைக் கொல்ல வந்த யானையை நெற்றியில் வேலால் தாக்கினான். அவன், இப்பொழுது, தன் உயிரையும் கொடுத்துப் போரிடுவான் போல் தோன்றுகிறது. பகைவர் தங்கள் வலக்கரங்களில் வேலை ஏந்தி யானைகளுடன் பரவி வந்து அவன் மீது எறிந்த வேலைப் பிடுங்கி, பகைவரின் கூட்டத்தை அழித்து, அவர்களைத் தோளோடு தழுவித் தன்னுடைய உடல் வலிமையால் அவர்களை உயரத் தூக்கி, நிலத்தில் மோதி, உயிர் நீங்கிய அவர்களின் உடலைத் தூக்கிக்கொண்டு நிற்கின்றான்.

பாடலின் பின்னணி:-

இரு பெருவேந்தர்களுக்கிடையே போர் மூண்டது. அப்போரில், வீரன் ஒருவனை ஒரு யானை தாக்க வந்தது. அவ்வீரன், தன் வேலை யானையின் நெற்றியை நோக்கி எறிந்தான். அந்த யானை பின்நோக்கிச் சென்றது. பகைவரின் வீரர்கள் பலரும் அந்த வீரனை நோக்கி வந்தனர். அவர்கள் எறிந்த வேலைத் தடுத்து, அவர்களின் தோளைப்பற்றி நிலத்தில் மோதி, அவர்களை அந்த வீரன் கொன்றான். அவனுடைய வீரச் செயல்களைக் கண்ட புலவர் உலோச்சனார் இப்பாடலை இயற்றியுள்ளார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on October 01, 2014, 10:43:15 PM
புறநானூறு, 275. (தன் தோழற்கு வருமே!)
பாடியவர்: ஒரூஉத்தனார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: தும்பை.
துறை: எருமை மறம்.
==================================

கோட்டம் கண்ணியும் கொடுந்திரை ஆடையும்
வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும்
ஒத்தன்று மாதோ இவற்கே: செற்றிய
திணிநிலை அலறக் கூழை போழ்ந்து தன்
வடிமாண் எஃகம் கடிமுகத்து ஏந்தி

ஓம்புமின்; ஓம்புமின்; இவண்என ஓம்பாது
தொடர்கொள் யானையின் குடர்கால் தட்பக்
கன்றுஅமர் கறவை மான
முன்சமத்து எதிர்ந்ததன் தோழற்கு வருமே

அருஞ்சொற்பொருள்:-

கோட்டம் = வளைவு
கண்ணி = தலையில் அணியும் மாலை
கொடு = வளைவு
திரை = திரைச்சீலை
வேட்டது = விரும்பியது
ஒத்தன்று = ஒத்தது (பொருந்தியுள்ளது)
செற்றம் = மன வயிரம், சினம், கறுவு
திணி = திண்மை
திணிநிலை = போர்க்களத்தின் நடுவிடம்
கூழை = பின்னணிப் படை
போழ்தல் = பிளத்தல்
வடித்தல் = திருத்தமாகச் செய்தல்
எஃகம் = வேல், வாள், எறி படை
கடி = கூர்மை
ஓம்புதல் = பாதுகாத்தல்
தொடர் = சங்கிலி
குடர் = குடல்
தட்ப = தடுக்க
அமர் = விருப்பம்
மான – உவமைச் சொல்
முன்சமம் = முன்னணிப்படை

இதன் பொருள்:-

கோட்டம்=====> ஏந்தி

வளைந்த மாலையும், வளைத்துக் கட்டப்பட்ட ஆடையும், அரசன் விரும்புவதைக் கூறி அவனைத் தன் வசப்படுத்தும் இயல்பும் இவனிடம் பொருந்தியுள்ளன. மனவலிமையையுடன் போர்புரியும் படைவீரர்கள் அஞ்சி அலறப் படையைப் பிளந்துகொண்டு தான் செல்லும் திசையை நோக்கி, நன்கு செய்யப்பட்ட, சிறந்த, கூரிய வேலின் இலைமுகத்தை ஏந்திச் செல்கிறான்.

ஓம்புமின்=====> வருமே

“இவனை இங்கேயே தடுத்து நிறுத்துங்கள்.” என்று வீரர்கள் கூறித் தடுத்தாலும், அவர்கள் தடுப்பதைக் கடந்து, தளைபூட்டப்பட்ட யானைபோல், இறந்த வீரர்களின் குடல்கள் காலைத் தடுக்க, தன் கன்றை விரும்பும் பசுவைப் போல் பகைவரின் முன்னணிப் படையிரனால் சூழப்பட்டிருக்கும் தன் தோழனைக் காப்பாற்றச் செல்கிறான்.

பாடலின் பின்னணி:-

வீரன் ஒருவன், பகைவர்களால் சூழப்பட்ட தன்னுடைய தோழனுக்கு உதவுவதற்காகப் பகைவரை எதிர்த்து, விரைந்து சென்று அவனைக் காப்பற்றுவதைப் பாராட்டும் வகையில் இப்பாடலை ஒரூஉத்தனார் இயற்றியுள்ளார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on October 01, 2014, 10:44:46 PM
புறநானூறு, 276. (குடப்பால் சில்லுறை!)
பாடியவர்: மதுரைப் பூதன் இளநாகனார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: தும்பை.
துறை: தானை நிலை. இரு திறத்தாரும் தன் வீரத்தைப் புகழுமாறு ஒரு வீரன் போர்க்களத்தில் சிறப்பெய்துதல்.
=========================================

நறுவிரை துறந்த நரைவெண் கூந்தல்
இரங்காழ் அன்ன திரங்குகண் வறுமுலைச்
செம்முது பெண்டின் காதலஞ் சிறாஅன்
மடப்பால் ஆய்மகள் வள்உகிர்த் தெறித்த
குடப்பால் சில்லுறை போலப்
படைக்குநோய் எல்லாம் தான்ஆ யினனே

அருஞ்சொற்பொருள்:-

நறுமை = நன்மை
விரை = மணமுள்ள பொருள்
துறந்த = நீங்கிய
காழ் = விதை
இரங்காழ் = இரவ மரத்தின் விதை
திரங்குதல் = சுருங்குதல், உலர்தல்
வறு = வற்றிய
மடம் = இளமை
பால் = இயல்பு
ஆய் = இடையர்
வள் = வளம்
உகிர் = நகம்
உறை = பிரைமோர்
நோய் = துன்பம்

இதன் பொருள்:-

நல்ல மணமுள்ள பொருள்களைப் பயன்படுத்தாத, நரைத்த, வெண்மையான கூந்தலையும், இரவமரத்தின் விதைபோன்ற வற்றிய முலையையும் உடைய சிறந்த முதியவளுடைய அன்புச் சிறுவன், இளம் இடைக்குலப் பெண் ஒருத்தி ஒரு குடப்பாலில் தன் (சிறிய) நகத்தால் தெளித்த சிறிய உறைபோலப் பகைவரின் படைக்குத் தானே துன்பம் தருபவனாயினன்.

பாடலின் பின்னணி:-

ஒருகால், இரு வேந்தர்களிடையே போர் நடைபெற்றது. அப்போரில், ஒரு படைவீரன், பகைவருடைய படை முழுவதையும் கலக்கிப் போரில் வெற்றி பெற்றுக்கொண்டிருப்பதைக் கண்ட புலவர் மதுரைப் பூதன் இளநாகனார் இப்பாடலை இயற்றியுள்ளார்.

சிறப்புக் குறிப்பு:-

ஓரு குடம் பாலில் சிறிதளவே பிரைமோர் இட்டாலும், பால் தன் நிலையிலிருந்து மாறிவிடும். அதுபோல், இவ்வீரன், தனி ஒருவனாகவே, பகைவரின் படையை நிலைகலங்கச் செய்தான் என்று புலவர் கூறுவதாகத் தோன்றுகிறது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on October 01, 2014, 10:47:30 PM
புறநானூறு, 277. (ஈன்ற ஞான்றினும் பெரிதே!)
பாடியவர்: பூங்கண் உத்திரையார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: தும்பை.
துறை: உவகைக் கலுழ்ச்சி. வாளால் புண்பட்ட உடம்பையுடைய கணவனைக் கண்டு மனைவி மகிழ்ந்து கண்ணீர் வடித்தல்; மகன் புண்ணுற்று இறந்தது கண்டு தாய் மகிழ்தல்.
=========================================

மீன்உண் கொக்கின் தூவி அன்ன
வால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
களிறுஎறிந்து பட்டனன் என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே; கண்ணீர்,
நோன்கழை துயல்வரும் வெதிரத்து
வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே

அருஞ்சொற்பொருள்:-

தூவி = இறகு
வால் = வெண்மை
உவகை = மகிழ்ச்சி
ஞான்று = பொழுது, காலம்
நோன் = வலிய
கழை = மூங்கில்
துயல்வரும் = அசையும்
வெதிரம் = மூங்கிற் புதர்
வான் = மழை
தூங்கிய = தங்கிய
சிதர் = மழைத்துளி

இதன் பொருள்:-

மீன் உண்ணும் கொக்கின் இறகுபோன்ற வெண்மையான, நரைத்த கூந்தலையுடைய முதிய தாய், தன் சிறுவன் யானையை எதிர்த்துப் போரிட்டு இறந்தான் என்ற செய்தியைக் கேட்டவுடன் அடைந்த மகிழ்ச்சி, அவள் தன் மகனைப்பெற்ற பொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிகம். மகிழ்ச்சியால் அவள் வடித்த கண்ணீர்த் துளிகள், மூங்கிற் புதரில் உள்ள மூங்கிலில் தங்கியிருந்து கொட்டும் மழைத்துளிகளைவிட அதிகமானவை.

பாடலின் பின்னணி:-

ஒரு வீரன் அவனுடைய அரசனின் அழைப்பிணற்கு இணங்கிப் போருக்குச் சென்றான். அவன் போரில் யானையை எதிர்த்துப் போரிட்டு இறந்தான். அவன் இறந்த செய்தி அவனுடைய முதிய வயதினளாகிய தாய்க்குத் தெரியவந்தது. அவள் தன் மகன் யானையை எதிர்த்துப் போரிட்டு இறந்தான் என்ற செய்தியைக் கேட்டவுடன், அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சி அடைந்தாள். அவளுடைய செயல்களைக் கண்டு வியந்த புலவர் பூங்கண் உத்திரையார் இப்பாடலை இயற்றியுள்ளார்.

சிறப்புக் குறிப்பு:-

“சான்றோன்” என்ற சொல்லுக்கு “வீரன்” என்று ஒரு பொருளும் உண்டு. ஆகவே,

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய். (குறள் – 69)

என்ற திருக்குறள், இப்பாடலில் குறிப்பிடப்பட்டிருக்கும் கருத்துக்கும் ஒத்திருப்பதைக் காண்க.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on October 01, 2014, 10:51:15 PM
புறநானூறு, 278. (பெரிது உவந்தனளே!)
பாடியவர்: காக்கைபாடினியார் நச்செள்ளையார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: தும்பை.
துறை: உவகைக் கலுழ்ச்சி.
=========================================

நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள்
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
படைஅழிந்து மாறினன் என்றுபலர் கூற
மண்டமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்டஎன்
முலைஅறுத் திடுவென், யான்எனச் சினைஇக்

கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்
செங்களம் துழவுவோள் சிதைந்துவே றாகிய
படுமகன் கிடக்கை காணூஉ
ஈன்ற ஞான்றினும் பெரிதுஉவந் தனளே

அருஞ்சொற்பொருள்:-

உலறிய = வாடிய
நிரம்புதல் = மிகுதல்
முளரி = தாமரை
மருங்கு = விலாப்பக்கம்
அழிதல் = நிலைகெடுதல்
மாறுதல் = புறமுதுகிடுதல்
மண்டுதல் = நெருங்குதல்
அமர் = போர்
உடைதல் = தோற்றோடுதல்
சினைதல் = தோன்றுதல்
துழவுதல் = தேடிப்பார்த்தல்
காணூஉ = கண்டு

இதன் பொருள்:-

நரம்பு=====> சினை

நரம்புகள் தோன்றிய, வற்றிய மெலிந்த தோள்களையும், தாமரை இலை போன்ற வயிற்றையும் உடைய முதியவளிடம், அவள் மகன் பகைவரின் படையைக் கண்டு நிலைகுலைந்து, புறமுதுகு காட்டி இறந்தான் என்று பலரும் கூறினர். அதைக் கேட்ட அத்தாய், தீவிரமாக நடைபெற்ற போரைக்கண்டு அஞ்சி என் மகன் தோற்றோடி இறந்தது உண்மையானால், அவன் பால் உண்ட என் முலைகளை அறுத்திடுவேன் என்று,

கொண்ட=====> உவந்தனளே

அங்கே, குருதி தோய்ந்த போர்க்களத்தில், கீழே விழுந்து கிடந்த பிணங்களைப் புரட்டிப் புரட்டிப் பார்த்துத், தன் மகனின் உடலைத் தேடினாள். சிதைந்து பலதுண்டுகளாகிய விழுப்புண்பட்ட அவன் உடலைக் கண்டு, அவனைப் பெற்ற பொழுது அடைந்ததைவிட பெருமகிழ்ச்சி அடைந்தாள்.

பாடலின் பின்னணி:-

ஒருகால், வீரன் ஒருவன் போரில் பகைவர்களால் வாளால் வெட்டப்பட்டு இறந்தான். அவன் உடல் பல துண்டுகளாக வெட்டப்பட்டுக் கிடந்தது. அவன் எவ்வாறு இறந்தான் என்று அறியாத பலர், அவனுடைய தாயிடம் சென்று, “உன் மகன் பகைவர்க்குப் புறமுதுகு காட்டிப் போரில் இறந்தான்.” என்று பொய்யாகக் கூறினர். அவள் வயதானவளாக இருந்தாலும், தன் மகன் புறமுதுகு காட்டி இறந்திருப்பானானால் அது தன் மறக்குலத்திற்கு இழுக்கு என்று கருதி, “ என் மகன் புறமுதுகு காட்டி இறந்திருப்பானானால், அவன் பால் குடித்த என் முலைகளை அறுத்தெறிவேன்.” என்று வஞ்சினம் உரைத்தாள். அதைக் கேட்ட புலவர் காக்கைபாடினியார் நச்செள்ளையார் அவள் வீரத்தை இப்பாடலில் வியந்து பாடுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

முதுமையால் மேனி பசுமை குறைந்து, நரம்புகள் மேலெழுந்து தோன்றுவதால், “நரம்பெழுந்து உலறிய தோள்” என்று புலவர் குறிப்பிட்டதாகத் தோன்றுகிறது. பலரும் அவள் மகன் புறமுதுகுகாட்டி இறந்தான் என்று கூறினாலும், அத்தாய் அவர்கள் கூறியதை நம்பாமல், தானே போர்க்களத்திற்குச் செல்ல முடிவெடுத்தது அவள் தன் மகன் மீது வைத்த்திருந்த நம்பிக்கையைக் காட்டுகிறது.போர்க்களம் குருதி தோய்ந்திருந்ததால் “செங்களம்” என்று குறிப்பிடப்பட்டது. அவ்வீரன் விழுப்புண்பட்டு இறந்ததால் பெரும்புகழ் பெற்றதோடு மட்டுமல்லாமல் தன் குடியைப் பழியினின்று போக்கினான். அவன் தாய் பெருமகிழ்ச்சி அடைந்ததற்கு அதுவே காரணம் என்று தோன்றுகிறது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on October 01, 2014, 11:21:13 PM
புறநானூறு, 279. (செல்கென விடுமே!)
பாடியவர்: ஒக்கூர் மாசாத்தியார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: வாகை.
துறை: மூதின்முல்லை. வீரர்க் கல்லாமல் அம்மறக்குடியிற் பிறந்த மகளிர்க்கும் சினமுண்டாதலை மிகுத்துச் சொல்லுதல்.
=========================================

கெடுக சிந்தை; கடிதுஇவள் துணிவே;
மூதின் மகளிர் ஆதல் தகுமே;
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன்னை,
யானை எறிந்து களத்துஒழிந் தனனே;
நெருநல் உற்ற செருவிற்கு இவள்கொழுநன்,

பெருநிரை விலங்கி ஆண்டுப்பட் டனனே;
இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித்து உடீஇப்
பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி
ஒருமகன் அல்லது இல்லோள்
செருமுக நோக்கிச் செல்கஎன விடுமே

அருஞ்சொற்பொருள்:-

கடிது = கடுமையானது. 2. மூதில் = முதுமையான குடி. 3. செரு = போர். 6. விலங்குதல் = குறுக்கிடுதல். 7. செருப்பறை = போர்ப்பறை. 8. வெளிது = வெள்ளிய (வெண்மையான); உடீஇ = உடுத்தி. 9. பாறுதல் = ஒழுங்கறுதல், சிதறுதல்; பாறுமயிர் = உலர்ந்து விரிந்த மயிர்

இதன் பொருள்:-

கெடுக=====> இவள்கொழுநன்

இவளது சிந்தை கெடுக; இவளது துணிவு மிகவும் கடுமையானது. முதுமையான மறக்குலப் பெண் என்று சொன்னால் அதற்கு இவள் தகுதியானவள். முந்தாநாள், இவளுடைய தந்தை, யானையை எதிர்த்துப் போரிட்டு, அப்போரில் இறந்தான். நேற்று நடைபெற்ற போரில், இவள் கணவன்

பெருநிரை=====> விடுமே

ஆநிரைகளை பகைவர்களிடமிருந்து மீட்கும் போரில் இறந்தான். இன்று மீண்டும் போர்ப்பறை ஒலிக்கிறது. அதைக்கேட்டுப், போரில் வெற்றிபெற வேண்டும் என்ற விருப்பத்தால் அறிவு மயங்கித் தன்னுடைய ஒரே மகனாகிய சிறுவனை அழைத்து, அவனுக்கு வெண்ணிற ஆடையை உடுத்தி, அவனுடைய பரட்டைத் தலையில் எண்ணெய் தடவி, சீவி முடித்து, கையில் வேலைக் கொடுத்துப் “போர்க்களத்தை நோக்கிச் செல்க” என்று அனுப்பினாள்.

பாடலின் பின்னணி:-

ஒருகால், ஓரூரில் போர் நடைபெற்றது. அவ்வூரில் இருந்த முதிய வயதுடைய பெண்மணி ஒருத்தியின் கணவன், நேற்று நடைபெற்ற போரில், பகைவர்களால் கவரப்பட்ட ஆநிரைகளை மீட்கும்பொழுது இறந்தான். அதற்கும் முதல் நாள் நடைபெற்ற போரில், அவள் தந்தை, யானையை எதிர்த்துப் போரிட்டு இறந்தான். போர் தொடர்ந்து நடைபெறுகிறது. ஊரில் போர்ப்பறை ஒலிக்கிறது. அதைக் கேட்ட அப்பெண்மணி மகிழ்ச்சியுடன் தன் ஒரே மகனைப் போருக்கு அனுப்பத் துணிந்தாள். அவனோ மிகவும் சிறியவன்; தானாகத் தன் தலையைச் சீவி முடிந்துகொள்ளக்கூடத் தெரியாத சிறுவன். அவள் அவனை அழைத்து, அவனுக்கு ஆடையை உடுத்தி, தலையில் எண்ணெய் தடவிச் சீவி முடித்து, அவன் கையில் வேலைக் கொடுத்துப் போருக்கு அனுப்புகிறாள். இக்காட்சியைக் கண்ட புலவர் ஒக்கூர் மாசாத்தியார் அப்பெண்மணியின் வீரத்தை இப்பாடலில் வியந்து பாடுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

“கெடுக சிந்தை, கடிது இவள் துணிவு” என்று கூறியது இகழ்வதுபோல் புகழ்வது என்று ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் குறிபிடுகிறார். தந்தையையும், கணவனையும் போரில் இழந்தாலும், போரில் வெற்றிபெற வேண்டும் என்ற விருப்பத்தால், தன் ஒரே மகனை – மிகவும் சிறிய வயதுடைய ஒரே மகனை – போருக்கு அனுப்புவதால் அவள் “மூதில் மகள்” என்ற அடைமொழிக்குத் தகுதியானவள்தான் என்பதைப் புலவர் நன்கு எடுத்துரைக்கிறார்.

இப்பாடலில் குறிப்பிடப்பட்டிருப்பதைப் போன்ற வீரமுள்ள தமிழ்ப் பெண்டிர், சங்க காலத்தில் மட்டுமல்லாமல் தற்காலத்திலும் இருக்கிறார்கள் என்பதற்கு, அண்மையில் ஈழத்தில் நடந்த இனப்போரில் தம் தந்தை, உடன் பிறந்தோர் ஆகியோரையும், தம் பிள்ளைகளையும், பெண்களையும் இழந்து, தாங்களே போருக்குச் சென்ற பெண்களின் வீரச்செயல்கள் சான்றாகத் திகழ்கிறது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on October 01, 2014, 11:27:14 PM
புறநானூறு, 280. (வழிநினைந்து இருத்தல் அரிதே!)
பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: பொதுவியல்.
துறை: ஆனந்தப்பையுள்.
=========================================

என்னை மார்பிற் புண்ணும் வெய்ய;
நடுநாள் வந்து தும்பியும் துவைக்கும்;
நெடுநகர் வரைப்பின் விளக்கும் நில்லா;
துஞ்சாக் கண்ணே துயிலும் வேட்கும்;
அஞ்சுவரு குராஅல் குரலும் தூற்றும்;

நெல்நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும்
செம்முது பெண்டின் சொல்லும் நிரம்பா;
துடிய! பாண! பாடுவல் விறலி!
என்ஆ குவிர்கொல்? அளியிர்; நுமக்கும்
இவண்உறை வாழ்க்கையோ அரிதே; யானும்

மண்ணுறு மழித்தலைத் தெண்ணீர் வாரத்
தொன்றுதாம் உடுத்த அம்பகைத் தெரியல்
சிறுவெள் ஆம்பல் அல்லி உண்ணும்
கழிகல மகளிர் போல,
வழிநினைந்து இருத்தல் அதனினும் அரிதே

அருஞ்சொற்பொருள்:-

என்னை = என்+ஐ = என் தலைவன் (கணவன்)
வெய்ய = கொடியது
தும்பி = வண்டு
துவை = ஒலி
வரைப்பு = எல்லை
துஞ்சுதல் = உறங்கல்
வேட்கும் = விரும்பும்
குராஅல் = கூகை
தூற்றல் = பழிகூறல்
விரிச்சி = சகுனம்
ஓர்க்கும் = கேட்கும்
நிரம்பா = நிறைவில்லாத
அளியிர் = இரங்கத் தக்கவர்கள்
இவண் = இங்கே
மண்ணுதல் = கழுவுதல்
மழித்தல் = மொட்டையடித்தல்
தொன்று = பழைய நாள்
அல்லி = அல்லியரிசி
வழிநினைந்து = எதிர் காலத்தை நினைத்து வருந்தி

இதன் பொருள்:-

என்னை=====> தூற்றும்

என் கணவனின் மார்பில் உள்ள புண் மிகவும் கொடியது. நடுப்பகலில் வண்டுகள் வந்து ஒலிக்கின்றன; என்னுடைய பெரிய அரண்மனையில் ஏற்றிவைத்த விளக்குகள் நின்று நிலைத்து எரியாமல் அவிந்துவிடுகின்றன; என் கணவன் துன்பத்திலிருக்கும் பொழுது நான் உறங்க விரும்பாவிட்டாலும் என் கண்கள் உறக்கத்தை விரும்புகின்றன;

நெல்நீர்=====> யானும்

அச்சத்தைத் தரும் கூகை தன் குரலால் அலறுகிறது; நெல்லும் நீரும் சொரிந்து விரிச்சி கேட்கும் சிறந்த முதிய பெண்டிரின் சொற்களும் பொய்யாயின. துடியனே! பாணனே! பாடலில் சிறந்த விறலியே! நீங்கள் என்ன ஆவீர்களோ? நீங்கள் இரங்கத்தக்கவர்கள். இதுவரை இருந்ததுபோல் இனிமேல் இவ்விடத்து இருந்து வாழலாமென்பது உங்களுக்கு அரிது.

மண்ணுறு=====> அரிதே

நீராடிய பிறகு மொட்டைத் தலையில் இருந்து தெளிந்த நீர் ஒழுக, முன்பு இளமைக் காலத்தில் உடுத்திய அழகிய பசுமையான தழையாக உதவிய சிறிய வெள்ளாம்பலில் உண்டாகும் அல்லியரிசியை உண்டு, அணிகலன்கள் அணியாத கைம்பெண்கள் போலத் தலைவன் இறந்த பின்னர் வாழ்வதை நினைத்து வருந்தி இங்கு நான் உயிர் வாழ்வது அதனினும் அரிது.

சிறப்புக் குறிப்பு: கணவன் உறக்கமில்லாமல் வருந்தும் பொழுது மனைவி உறங்காள். அதனால்தான், அவள் கண்களைத் “துஞ்சாக் கண்” என்று புலவர் குறிப்பிடுவதாக ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் கூறுகிறார்.

ஒன்றைப் பெறுவதற்காகக் கடவுளை வேண்டி வழிபடும்பொழுது, அங்கு யாராவது நற்சொற்களைக் கூறினால் வேண்டியது நடைபெறும் என்றும் நம்பிக்கைதரும் சொற்களை யாரும் கூறாவிட்டால், நினைத்தது நடைபெறாது என்றும் சங்க காலத்தில் மக்கள் நம்பினர். இந்த நம்பிக்கைக்கு “விரிச்சி” அல்லது “விரிச்சி கேட்டல்” என்று பெயர்.

பாடலின் பின்னணி:-

ஒருகால், மாறோக்கத்து நப்பசலையார் ஒரு வீரனின் இல்லத்திற்குச் சென்றார். அங்கு, அவன் போர்ப்புண்பட்டு இறக்கும் நிலையில் இருந்தான். அவன் இறப்பது உறுதி என்று அவன் மனைவி கருதினாள். அவனுடைய ஆதரவில் வாழ்ந்துவந்த துடியன், பாணன், விறலி முதலியோர் வாழ்க்கை என்ன ஆகுமோ என்று அவள் வருந்தினாள். அவர்களை நோக்கி, “தலைவன் மார்பில் உண்டாகிய புண்கள் பெரிதாக உள்ளன. எல்லா அறிகுறிகளும் அவன் இறப்பது உறுதி என்பதைக் கூறுகின்றன. இனி உங்கள் நிலை என்ன ஆகுமோ: நான் அறியேன். இனி, நீங்கள் இங்கே வாழ்வது அரிது; நான் கைம்மை நோன்பை மேற்கொண்டு வாழ்வேன் என்று நினைப்பது அதைவிட அரிது.” என்று கூறுகிறாள். அம்மனையோளின் துயரம் தோய்ந்த சொற்களைக் கேட்ட புலவர் மாறோக்கத்து நப்பசலையார் இப்பாடலில் அவள் கூறியவற்றைத் தொகுத்துக் கூறுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on October 01, 2014, 11:39:10 PM
புறநானூறு, 281. (நெடுந்தகை புண்ணே!)
பாடியவர்: அரிசில் கிழார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: காஞ்சித்திணை.
துறை: தொடாக் காஞ்சி.
=========================================

தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ
வாங்குமருப் பியாழொடு பல்இயம் கறங்கக்
கைபயப் பெயர்த்து மைஇழுது இழுகி
ஐயவி சிதறி ஆம்பல் ஊதி
இசைமணி எறிந்து, காஞ்சி பாடி

நெடுநகர் வரைப்பின் கடிநறை புகைஇக்
காக்கம் வம்மோ காதலந் தோழி
வேந்துறு விழுமம் தாங்கிய
பூம்பொறிக் கழற்கால் நெடுந்தகை புண்ணே

அருஞ்சொற்பொருள்:-

தீ = இனிமை
இரவம் = ஒருமரம்
வேம்பு = வேப்ப மரம்
செரீஇ = செருகி
வாங்கு = வளைவு
மருப்பு = யாழ்க்கோடு (யாழின் தணு)
இயம் = இசைக் கருவி
கறங்க = ஒலிக்க
பயப்பய = பைய = மெல்ல
இழுது = நெய், வெண்ணெய், குழம்பு
இழுகுதல் = பூசுதல்
ஐயவி = சிறுவெண்கடுகு
காஞ்சி = நிலையாமையைக் குறிக்கும் பண்
எறிதல் = அடித்தல்
வரைப்பு = இடம்
கடி = மிகுதி
நறை = மணம்
விழுமம் = துன்பம்

இதன் பொருள்:-

தீங்கனி=====> காஞ்சி பாடி

அன்புடைய தோழிகளே வாருங்கள்! இனிய கனியைத் தரும் இரவமரத்தின் இலையையும் வேப்பிலையையும் சேர்த்து வீட்டில் செருகுவோம்; வளைந்த தண்டையுடைய யாழோடு பலவகை இசைக்கருவிகளும் ஒலிப்போம்; கையால் மெல்ல எடுத்து மைபோன்ற சாந்தைத் தலைவனின் புண்களில் மெழுகுவோம்; சிறுவெண்கடுகுகளைத் தூவி, ஆம்பல் தண்டை ஊதி, ஓசையைச் செய்யும் மணியை ஒலித்து, காஞ்சிப் பண்ணைப் பாடி,

நெடுநகர்=====> புண்ணே

நெடிய அரண்மனை முழுதும் நல்ல மணமுள்ள புகையை எழுப்புவோம். வேந்தனுக்கு உண்டாகிய துன்பத்தைத் தான் தாங்கிய, பூ வேலைப்பாடுகள் அமைந்த கழல் பூண்ட பெருந்தகையாகிய தலைவனுக்கு உண்டாகிய புண்களை ஆற்றி அவனைக் காப்போம்.

சிறப்புக் குறிப்பு:-

போரில் புண்பட்டவர்களுக்கு மருத்துவம் செய்வோர், புண்பட்டோர் இருக்கும் வீடுகளைத் தூய்மையாக வைத்துக் கொள்வதும், இனிய இசை பாடுவதும், நறுமணமுள்ள பொருட்களைத் தீயிலிட்டுப் புகையை எழுப்புவதும் பழங்காலத்தில் வழக்கிலிருந்ததாக இப்பாடலிலிருந்து தெரியவருகிறது.

பாடலின் பின்னணி:-

ஒருகால், அரிசில் கிழார், போரில் புண்பட்ட தலைவன் ஒருவனைக் காணச் சென்றார். அங்கே, அத்தலைவனின் மனைவி, அவனுடைய புண்களை ஆற்றுவதற்கு பல செயல்களைச் செய்கிறாள். மற்றும், தலைவனின் புண்களை ஆற்றுவதற்குத் துணைபுரியுமாறு அவள் தன் தோழிகளைத் அழைக்கிறாள். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிகளை அரிசில் கிழார் இப்பாடலில் தொகுத்துக் கூறுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on November 12, 2014, 08:13:22 PM
புறநானூறு, 282. (புலவர் வாயுளானே!)
பாடியவர்: சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: தெரியவில்லை.
துறை: தெரியவில்லை.
(இப்பாடலில், சில பகுதிகள் கிடைக்கவில்லை.)
===========================================

எஃகுஉளம் கழிய இருநில மருங்கின்
அருங்கடன் இறுத்த பெருஞ்செய் ஆளனை
யாண்டுள னோவென வினவுதி ஆயின்
. . . . . . . . . . . .
வருபடை தாங்கிக் கிளர்தார் அகலம்
அருங்கடன் இறுமார் வயவர் எறிய
உடம்பும் தோன்றா உயிர்கெட் டன்றே;
மலையுநர் மடங்கி மாறுஎதிர் கழியத்
. . . . . . . . . . . . . . . .

அலகை போகிச் சிதைந்து வேறாகிய
பலகை அல்லது களத்து ஒழியாதே;
சேண்விளங்கு நல்லிசை நிறீஇ
நாநவில் புலவர் வாய் உளானே

அருஞ்சொற்பொருள்:-

எஃகு = வேல், வாள்
உளம் = உள்ளம் = நெஞ்சு, மார்பு
இரு = பெரிய
மருங்கு = பக்கம்
கடன் = கடமை
இறுத்தல் = முடித்தல்
பெருஞ்செய்யாளன் = செய்தற்கரிய செயல் செய்தவன்
ஆய்தல் = நுணுகி அறிதல் (ஆராய்தல்)
கிளர் = மேலெழும்பு
தார் = மாலை
அகலம் = மார்பு
வயவர் = படைவீரர்
எறிதல் = வெட்டல், ஊறுபடுத்தல், வெல்லுதல்
மலைதல் = போர் செய்தல்
மடங்குதல் = திரும்புதல்
மாறு = பகை
அலகை = அளவு
பலகை = கேடயம்
சேண் = தொலை தூரம், நெடுங்காலம்
இசை = புகழ்
நிறீஇ = நிறுவி
நவிலல் = சொல்லுதல், கற்றல்

இதன் பொருள்:-

மார்பை வேல் ஊடுருவிச் செல்ல, இப்பெரிய உலகில் செய்தற்கரிய கடமைகளைச் செய்த வீரன் எவ்விடத்து உள்ளான் என்று கேட்கின்றீர். ஆராயுமிடத்து,…..
தம் அரிய கடமைகளை நிறைவேற்றும் வகையில் பகைவர்கள் போரிட்டதால், தன்னைக் குறிபார்த்து வரும் பகைவர்களின் படையை எதிர்த்து நின்று தடுத்த, மாலை அணிந்த மார்புடன் கூடிய அவனுடல் அடையாளம் தெரியாமல் அழிந்தது; உயிரும் நீங்கியது. போரிடும் பகைவர் புறமுதுகு காட்டி ஓடினார்கள். உருத்தெரியாமல் அளவின்றிச் சிதைந்து பலவேறு துண்டுகளாகிய அவனுடைய கேடயம் போல் போர்க்களத்தில் அழியாமல், அவன் நெடுங்காலம் நிலைபெறும் நல்ல புகழை நிறுவி, நல்லுரைகளைக் கூறும் நாக்குடைய புலவர்களின் வாயில் உள்ளான்.

சிறப்புக் குறிப்பு:-

எஃகு என்பது ஆகுபெயராகி, வேலையும் வாளையும் குறிக்கிறது.

பாடலின் பின்னணி:-

போர்புரியும் ஆற்றலில் சிறந்து விளங்கிய வீரன் ஒருவன் போரில் புண்பட்டு இறந்தான். அவனைக் காணச் சான்றோர் ஒருவர் சென்றார். அச்சான்றோர் அவ்வூரில் இருந்தவர்களிடம் அவன் எங்கே உள்ளான் என்று கேட்டார். அவ்வூரில் உள்ளவர்கள், “அவ்வீரன் போரில் செய்தற்கரிய சாதனைகளைச் செய்தவன். மார்பில் வேல்கள் ஊடுருவினாலும் அவன் தொடர்ந்து போர்செய்தான். அவன் செய்த செயற்கரிய செயல்களால் அவன் பெரும்புகழடைந்தான். அவன் எங்கு உள்ளான் என்று நீங்கள் கேட்கிறீர்கள். அவன் புலவர்களின் வாயில் உள்ளான்” என்று பதிலளித்தார்கள். இக்காட்சியைப் புலவர் பாலைபாடிய பெருங்கடுங்கோ இப்பாடலில் கூறுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 08, 2015, 06:42:34 AM
புறநானூறு, 283. (அழும்பிலன் அடங்கான்!)
பாடியவர்: அண்டர் நடுங்கல்லினார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: தும்பை.
துறை: பாண்பாட்டு.
(இப்பாடலில், சில பகுதிகள் கிடைக்கவில்லை.)
===========================================

ஒண்செங் குரலித் தண்கயம் கலங்கி
வாளை நீர்நாய் நாள்இரை பெறூஉப்
பெறாஅ உறையரா வராஅலின் மயங்கி
மாறுகொள் முதலையொடு ஊழ்மாறு பெயரும்
அழும்பிலன் அடங்கான் தகையும் என்னும்

வலம்புரி கோசர் அவைக்களத் தானும்
மன்றுள் என்பது கெட …...தானே பாங்கற்கு
ஆர்சூழ் குறட்டின் வேல்நிறத்து இங்க
உயிர்புறப் படாஅ அளவைத் தெறுவரத்
தெற்றிப் பாவை திணிமணல் அயரும்

மென்தோள் மகளிர் நன்று புரப்ப
இமிழ்ப்புறம் நீண்ட பாசிலைக்
கமழ்பூந் தும்பை நுதலசைத் தோனே

அருஞ்சொற்பொருள்:-

குரலி = நீரில் உள்ள ஒருவகைச் செடி
தண்கயம் = குளிர்ந்த நீர்நிலை
வாளை = வாளைமீன்
அரா = பாம்பு
வராஅல் = வரால்மீன்
ஊழ் = முறை
மாறு = பகை
அழும்பிலன் = அழும்பில் என்னும் ஊரின் தலைவன்
தகைத்தல் = தடுத்தல்
வலம் = வெற்றி
புரிதல் = விரும்புதல்
பாங்கன் = தோழன்
ஆர் = ஆரக்கால்
குறடு = மரத்துண்டு. அச்சுக் கோகும் இடம் ( வண்டிச் சக்கரத்தின் குடம்)
நிறம் = மார்பு
இங்கல் = ஊடுருவுதல், நுழைதல்
அளவை = அளவு
தெறு = சினம்
தெற்றி = திண்ணை
பாவை = பதுமை (பொம்மை)
அயர்தல் = விளையாடுதல்
புரப்ப = பாதுகாக்க (காக்க)
இமிழ்தல் = தழைத்தல், மிகுதல்
பாசிலை = பசிய இலை
நுதல் = நெற்றி
அசைத்தல் = கட்டுதல்

இதன் பொருள்:-

ஒண்செங்======> என்னும்

ஒளிபொருந்திய செங்குரலிக்கொடி நிறைந்த குளிர்ந்த நீர்நிலை கலங்க, வாளைமீனை நீர்நாய் தனக்கு அன்றைய உணவாகப் பெற்றுக்கொண்டு, உணவு இல்லாமல் அங்கே வாழும் பாம்புகளை வரால்மீன் எனக்கருதி மயங்கி முதலைகளோடு மாறிமாறி முறையாக நீர்நாய்களும் முதலைகளும் போரிடும் அழும்பில் என்னும் ஊருக்குத் தலைவன், அடங்காதவனாக எதிர்நின்று போரிடக்கருதி எழுந்தான்.

வலம்புரி=====> அயரும்

வெற்றியை விரும்பும் கோசருடைய அவைக்களமும் போர்க்களத்தின் நடுவிடமும் இல்லையாக … அவன் தோழனின் மார்பில் பகைவரின் அம்புகள் செருகி இருந்தன. அவை வண்டியின் குடத்தில் ஆரக்கால்கள் அமைந்திருப்பதுபோல் இருந்தன. தோழனின் உயிர் உடலிலிருந்து நீங்காமல் ஊசலாடிக்கொண்டிருந்தது. திண்ணையில் வைத்து விளையாட வேண்டிய மண்பாவைகளைத் திணிந்த மணலில் வைத்து விளையாடும்

மென்தோள்=====> நுதலசைத் தோனே

சிறுமிகள் அவன் புண்களை ஆற்றி அவனை நன்கு காத்துவந்தனர். இந்தக் காட்சியைக் கண்ட தலைவன், சினந்து, ஒளியுடன் விளங்கும் நீண்ட பசிய இலைகளையுடைய மணங்கமழும் தும்பைப் பூவால் தொடுக்கப்பட்ட மாலையை நெற்றியில் கட்டிக்கொண்டு போருக்குப் புறப்பட்டான்.

பாடலின் பின்னணி:-

பகைவர்கள் எய்த அம்புகள் ஒரு வீரனின் உடலில், வண்டியின் குடத்தில் ஆரக்கால்கள் செருகி இருப்பதைப் போல் செருகி இருந்தன. அவனைச் சில சிறுமிகள் பாதுகாத்துவந்தனர். அவ்வீரனைக் காணவந்த நண்பன் ஒருவன், வீரனின் நிலையைக் கண்டு, சினத்துடன் போருக்குப் புறப்பட்டான். இப்பாடலின் சில பகுதிகள் கிடைக்கவில்லை. பாடல் சிதைந்துள்ளதால், தெளிவான பொருள் காண்பது அரிதாக உள்ளது.

சிறப்புக் குறிப்பு:-

ஒரு நீர்நாய் ஒரு முதலையுடன் போரிட்டுத் தோற்றால், மற்றொரு நீர்நாய் வென்ற முதலையோடு போரிடும்; போரில் ஒரு முதலை தோற்றால் மற்றொரு முதலை வென்ற நீர்நாயோடு போர்புரியும். இவ்வாறு மாறிமாறி முறையாகப் போரிடுவதைத்தான் “ஊழ்மாறு பெயரும்” என்று புலவர் குறிப்பிடுவதாக ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் கூறுகிறார்.

பெரும்போர் செய்து இறந்த வீரனுக்கு சாப்பண்னைப் பாடிப் பாணர் தம் கடன் கழித்தலைக் கூறும் பாடல்கள் பாண்பட்டு என்னும் துறையைச் சார்ந்தவையாகும்.

இப்பாடலில் பாணர்கள் சாப்பண்ணைப் பாடி வீரன் ஒருவனின் சாவைக் குறித்து வருத்தம் தெரிவிப்பதாகக் குறிப்பிடப்படவில்லை. ஆகவே, இப்பாடல் பாண்பாட்டு என்ற துறையைச் சார்ந்ததாகத் தெரியவில்லை. இப்பாடலில், வீரன் ஒருவனின் செயலைப் புலவர் புகழ்ந்து கூறியிருப்பதால், இப்பாடல் பாடாண் பாட்டு என்னும் துறையைச் சார்ந்தது என்று முடிவு செய்வதுதான் பொருத்தமாகத் தோன்றுகிறது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on February 08, 2015, 06:43:33 AM
புறநானூறு, 284. (பெயர்புற நகுமே!)
பாடியவர்: ஓரம்போகியார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: தும்பை.
துறை: பாண்பாட்டு.
===========================================

வருகதில் வல்லே வருகதில் வல்என
வேந்துவிடு விழுத்தூது ஆங்காங்கு இசைப்ப
நூலரி மாலை சூடிக் காலின்
தமியன் வந்த மூதி லாளன்
அருஞ்சமம் தாங்கி முன்நின்று எறிந்த
ஒருகை இரும்பிணத்து எயிறு மிறையாகத்
திரிந்த வாய்வாள் திருத்தாத்
தனக்குஇரிந் தானைப் பெயர்புறம் நகுமே

அருஞ்சொற்பொருள்:-

தில் = விழைவைக் குறிக்கும் அசைச்சொல்
வல் = விரைவு
விழு = சிறந்த
அரி = அறுத்தல்
சமம் = போர்
ஒருகை = யானை
மிறை = வளைவு
வாய்வாள் = குறிதவறாத வாள்
இரிதல் = ஓடுதல்

இதன் பொருள்:-

“விரைந்து வருக, விரைந்து வருக” என்று வேந்தனின் சிறந்த தூதுவர் ஆங்காங்கு சென்று தெரிவிக்க, நூலால் தொடுக்கப்பட்ட மாலையைச் சூடிக்கொண்டு, காலால் நடந்து தனியனாய் வந்த மறக்குடி மறவன், கடுமையான போரில் பகைவரை மேலே செல்லாதவாறு தடுத்துப் பகைவரின் யானையொன்றை வெட்டி வீழ்த்தினான். தான் வெட்டி வீழ்த்திய யானையின் தந்தத்தில் தனது வளைந்த வாளைத் தீட்டிக்கொண்டிருந்தான். அப்பொழுது பகைவரின் வீரன் ஒருவன் அவனைக்கண்டு புறமுதுகுகாட்டி ஒடினான். அதைக்கண்டு இவ்வீரன் சிரித்தான்.

பாடலின் பின்னணி:-

ஒருகால், ஒருவேந்தன் வீரர்கள் பலரையும் போருக்கு வருமாறு அழைத்தான். அப்போரில், வீரன் ஒருவன் சிறப்பாகப் போர் புரிந்தான். அவனுடைய வீரச் செயல்களைப் புலவர் ஓரம்போகியார் கண்டார். அவ்வீரன் ஓர் யானையைக் கொன்று வீழ்த்தினான். அவன் யானையுடன் போரிட்டதால் அவனுடைய வாள் கோணியது. அந்த வாளை இறந்த யானையின் தந்தத்தில் தீட்டிக்கொண்டிருந்தான். அதைப்பார்த்த பகைவரின் வீரன் ஒருவன் புறமுதுகுகாட்டி ஒடினான். அதைக் கண்ட அவ்வீரன் சிரித்தான். இக்காட்சியை இப்பாடலில் புலவர் ஓரம்போகியார் குறிப்பிடுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

இறந்த வீரனுக்குத் தம் கடன் ஆற்றுவதற்காகப் பாணர்கள் சாப்பண்ணில் யாழிசைப்பது பாண்பாட்டு. இப்பாடல், வீரன் யானையைக் கொன்று வீழ்த்தியதைப்பற்றிக் கூறுகிறது. ஆனால் இப்பாடலில் வீரன் இறந்ததாகக் குறிப்பிடப்படவில்லை. ஆகவே, இப்பாடல் பாண்பாட்டு என்னும் துறையைச் சார்ந்ததா என்பது ஆய்வுக்குரியது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on May 23, 2015, 10:26:02 PM
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/11130242_991923134165931_5651683771311518720_n.jpg?oh=7d9c5054d155d81ea90db8e2e827fce2&oe=55BF52B5&__gda__=1443196941_d4dc8e5ee6f9e5909e804af93d091e4f)

புறநானூறு, 285. (தலைபணிந்து இறைஞ்சியோன்!)
பாடியவர்: அரிசில் கிழார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: வாகை.
துறை: சால்பு முல்லை.
===========================================

பாசறை யீரே! பாசறை யீரே!
துடியன் கையது வேலே; அடிபுணர்
வாங்குஇரு மருப்பின் தீந்தொடைச் சீறியாழ்ப்
பாணன் கையது தோலே; காண்வரக்
கடுந்தெற்று மூடையின் ………..

வாடிய மாலை மலைந்த சென்னியன்
வேந்துதொழில் அயரும் அருந்தலைச் சுற்றமொடு
நெடுநகர் வந்தென விடுகணை மொசித்த
மூரி வெண்டோள் ……..
சேறுபடு குருதிச் செம்மலுக் கோஒ!

மாறுசெறு நெடுவேல் மார்புளம் போக
நிணம்பொதி கழலொடு நிலஞ்சேர்ந் தனனே.
அதுகண்டு, பரந்தோர் எல்லாம் புகழத் தலைபணிந்து
இறைஞ்சி யோனே குருசில் பிணங்குகதிர்
அலமரும் கழனித் தண்ணடை ஒழிய
இலம்பாடு ஒக்கல் தலைவற்குஓர்
கரம்பைச் சீறூர் நல்கினன் எனவே

(பாடலில் சில பகுதிகள் கிடைக்கவில்லை)

அருஞ்சொற்பொருள்:-

பாசறை = படை தங்குமிடம்
துடியன் = துடி என்னும் பறையை அடிப்பவன்
புணர் = சேர்த்த
வாங்கு = வளைவு
இரு = கரிய
மருப்பு = யாழின் தண்டு
தொடை = யாழின் நரம்பு
தோல் = கேடயம்
கடுதல் = மிகுதல்
தெற்று = அடைப்பு
மூடை = மூட்டை
மலைதல் = அணிதல்
சென்னி = தலை
அயர்தல் = செய்தல்
மொசித்தல் = மொய்த்தல்
மூரி = வலிமை
உகு = சொரி, உதிர்
செறுதல் = சினங்கொள்ளுதல்
பரந்தோர் = பரந்த அறிவுடைய சான்றோர்
இறைஞ்சுதல் = தாழ்தல், வணங்குதல், கவிழ்தல்
குருசில் = குரிசில் = தலைவன்
பிணங்குதல் = பின்னுதல்
அலமரல் = அசைதல்
தண்ணடை = மருத நிலத்தூர்
இலம்பாடு = வறுமை
ஒக்கல் = சுற்றம்
கரம்பை = சாகுபடி செய்யக்கூடிய நிலம்
நல்குதல் = அளித்தல்

இதன் பொருள்:-

பாசறை=====> மூடையின் ………

பாசறையில் உள்ளவர்களே! பாசறையில் உள்ளவர்களே! தலைவனின் வேல் துடியனின் கையில் உள்ளது; அவன் கேடயம், யாழின் அடியில் இணைக்கப்பட்ட வளைந்த கரிய தண்டோடு, இனிய இசையை எழுப்பும் நரம்புகளுடன் கூடிய சிறிய யாழையுடைய பாணனின் கையில் உள்ளது. மிகவும் நெருக்கமாக அடுக்கிய மூட்டைகள் போல ….....

வாடிய=====> செம்மலுக் கோஒ!

வாடிய மாலை அணிந்த தலைவன், வேந்தனுக்கு வேண்டிய செயல்களைச் செய்யும் அரிய சுற்றத்தாரோடு நெடிய அரண்மனைக்கு வந்தான். பகைவர்கள் எய்த அம்புகள் மொய்த்த வலிய தோள்…. நிலத்தைச் சேறாக்கும் குருதி சொரிந்தான்.

மாறுசெறு=====> எனவே

ஐயோ! பகைவர்கள் சினத்துடன் எறிந்த நெடிய வேல் அவன் மார்பை ஊடுருவிப் புதைந்து நின்றது. பிணங்களிடையே நின்று போர்புரிதலால், மாமிசம் படிந்த கழலுடன் நிலத்தில் வீழ்ந்தான். அவன் வீழ்ந்ததைக் கண்டு, அங்கிருந்த சான்றோரெல்லாம், “கதிர்கள் தம்முள் பின்னிக்கொண்டு அசையும் நெற்கழனிகளையுடைய மருதநிலத்தூர்களை முன்னே இரவலர்க்குக் கொடுத்தான். இரவலராகிய சுற்றத்தின் தலைவனுக்கு எஞ்சியிருந்த, சாகுபடி செய்யக்கூடிய நிலத்தைப் பரிசாகக் கொடுத்தான்.” என்று புகழ்ந்தார்கள். அதைக் கேட்ட தலைவன் நாணித் தலைகுனிந்தான்.

பாடலின் பின்னணி:-

ஒருகால், ஒரு தலைவனுக்கும் அவன் பகைவர்களுக்கும் இடையே போர் நடைபெற்றுக்கொண்டிருந்தது. பகைவர் எறிந்த வேல் அவன் மார்பில் பாய்ந்தது. தலைவனின் நிலைமையை வீரன் ஒருவன் பாசறைக்குத் தெரிவித்தான். அவ்வீரன் அச்செய்தியைத் தெரிவிக்கும் பொழுது, “பாசறையில் உள்ளவர்களே! நம் தலைவனின் வேல் துடியனின் கையில் உள்ளது. அவன் கேடயம் பாணனின் கையில் உள்ளது. பகைவர் எறிந்த வேல் அவன் மார்பை ஊடுருவியது; அவன் நிலத்தில் வீழ்ந்தான். சான்றோர் பலரும் அவனைச் சூழ்ந்து நின்று தலைவனைப் பாராட்டினர். அவர்களின் பாராட்டுக்களைக் கேட்டு அவன் நாணித் தலைகுனிந்தான்.” என்று அறிவித்தான். இதைக் கேட்ட அரிசில் கிழார் இப்பாடலை இயற்றியுள்ளார். இப்பாடலில் சில பகுதிகள் கிடைக்கவில்லை.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on May 23, 2015, 10:27:05 PM
புறநானூறு, 286. (பலர்மீது நீட்டிய மண்டை!)
பாடியவர்: ஔவையார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: கரந்தை.
துறை: வேத்தியல்.
===========================================

வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போலத்
தன்னோர் அன்ன இளையர் இருப்பப்
பலர்மீது நீட்டிய மண்டைஎன் சிறுவனைக்
கால்கழி கட்டிலிற் கிடப்பித்
தூவெள் அறுவை போர்ப்பித் திலதே!

அருஞ்சொற்பொருள்:-

செச்சை = கடா (கிடாய்)
மண்டை = இரப்போர் கலம் (மண்டை என்ற சொல் கள் குடிக்கும் பாத்திரத்தையும் குறிக்கும். இது கள்ளுக்கு ஆகுபெயராக வந்துள்ளது)
கால்கழி கட்டில் = காலில்லாத கட்டில் (பாடை)
அறுவை = சீலை, ஆடை

இதன் பொருள்:-

வெண்மையான நிறத்தையுடைய வெள்ளாட்டுக் கிடாய்கள் போலத் தன்னைப் போன்ற இளைஞர்கள் பலர் இருக்கவும், அவர்களுக்கு மேலாக என் மகனுக்குத் தரப்பட்ட கள், என் மகனைப் பாடையில் இருக்கச் செய்து தூய வெண்ணிறப் போர்வையால் போர்த்தும் நிலையைத் தரவில்லையே.

பாடலின் பின்னணி:-

ஒரு அரசன் பகைவரோடு போரிட்டுக் கொண்டிருந்தான். அவனுடைய படையில் இருந்த வீரர்கள் பலர் இறந்தனர். ஒரு வீரனின் தாய், அரசனுக்குத் துணையாகப் போரிட்டு இறக்கும் பேறு தன் மகனுக்குக் கிடைக்கவில்லையே என்று தன் ஏமாற்றத்தைத் தெரிவிப்பதுபோல் இப்பாடல் அமைந்துள்ளது.

சிறப்புக் குறிப்பு:-

ஆடுகள் ஒன்றை ஒன்றுத் தொடர்ந்து பின் செல்வது போல், வேந்தனைப் பின் தொடர்ந்து செல்லும் வீரர்களின் ஒற்றுமையை ஒளவையார், “வெள்ளை வெள்யாட்டுச் செச்சை” என்று குறிப்பிடுகிறார். அரசனுக்காகப் போராடிப், போர்க்களத்தில் விழுப்புண்பட்டு இறப்பதுதான் வீரனுக்குப் புகழ்தரும் செயல் என்பதை இப்பாடல் மறைமுகமாகக் கூறுகிறது. மகன் இறக்காததால் தாய் ஏமாற்றமடைந்தாள் என்று நேரிடையாகப் பொருள் கொள்வது சிறந்ததன்று.

இப்பாடல் கரந்தைத் திணையையும் வேத்தியல் துறையையும் சார்ந்ததாக நூல்கள் கூறுகின்றன. ஆனால், இப்பாடலின் பொருளை ஆராய்ந்து பார்த்தால், இப்பாடல் கரந்தைத் திணையையும் வேத்தியல் துறையையும் சார்ந்ததாகக் கருதுவதற்குத் தகுந்த காரணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on May 23, 2015, 10:28:09 PM
புறநானூறு, 287. (காண்டிரோ வரவே!)
பாடியவர்: சாத்தந்தையார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: கரந்தை.
துறை: நீண்மொழி.
===========================================

துடி எறியும் புலைய!
எறிகோல் கொள்ளும் இழிசின!
கால மாரியின் அம்பு தைப்பினும்
வயல் கெண்டையின் வேல் பிறழினும்
பொலம்புனை ஓடை அண்ணல் யானை

இலங்குவால் மருப்பின் நுதிமடுத்து ஊன்றினும்
ஓடல் செல்லாப் பீடுடை யாளர்
நெடுநீர்ப் பொய்கைப் பிறழிய வாளை
நெல்லுடை நெடுநகர்க் கூட்டுமுதல் புரளும்
தண்ணடை பெறுதல் யாவது? படினே,

மாசில் மகளிர் மன்றல் நன்றும்
உயர்நிலை உலகத்து நுகர்ப; அதனால்
வம்ப வேந்தன் தானை
இம்பர் நின்றும் காண்டிரோ வரவே

அருஞ்சொற்பொருள்:-

துடி = ஒருவகைப் பறை
எறிதல் = அடித்தல்
புலையன் = பறை அடிப்பவன்
எறிகோல் = பறையடிக்கும் குறுந்தொடி
இழிசினன் = பறையடிப்பவன்
மாரி = மழை
பிறழ்தல் = துள்ளுதல்
பொலம் = பொன்
புனைதல் = அணிதல், அலங்கரித்தல்
ஓடை = யானையின் நெற்றிப் பட்டம்
அண்ணல் = தலைமை
இலங்குதல் = விளங்குதல்
வால் = வெண்மை
மருப்பு = விலங்கின் கொம்பு (யானையின் தந்தம்)
நுதி = நுனி
மடுத்தல் = குத்துதல்
பீடு = பெருமை
வியன் = மிகுதி
கூடு = நெற்கூடு
தண்ணடை = மருத நிலத்தூர்
யாவது = எது (என்ன பயன்?)
படுதல் = இறத்தல்
மாசு = குற்றம்
மன்றல் = திருமணம்
நுகர்தல் = அனுபவித்தல்
வம்பு = குறும்பு
இம்பர் = இவ்விடம்
காண்டீரோ = காண்பீராக

இதன் பொருள்:-

துடி=====> யானை

துடிப் பறையை அடிக்கும் பறையனே! குறுந்தடியால் பறையடிக்கும் பறையனே! கார்காலத்து மழைபோல் அம்புகள் உடம்பில் தைக்குமாயினும், வயல்களில் பிறழும் கெண்டை மீன்கள் போல வேற்படைவந்து பாயினும், பொன்னாலான நெற்றிப்பட்டம் அணிந்த பெருமை பொருந்திய யானைகள்

இலங்குவால்=====> படினே,

விளங்குகின்ற, வெண்மையான தந்தங்களின் நுனியால் குத்தினாலும், அஞ்சிப் புறமுதுகுகாட்டி ஓடாத பெருமைபொருந்திய வீரர்கள் ஆழ்ந்த நீருடைய பொய்கையிலிருந்து கிளர்ந்தெழுந்த வாளைமீன் நெல்வளமிக்க வீட்டின் புறத்தே நிறுத்தப்பட்ட நெற்கூட்டில் புரளும் மருதநிலத்தூர்களைப் பெறுவதால் என்ன பயன்? வீரர்கள் போரில் இறந்தால்,

மாசில்=====> வரவே

அவர்கள் மேலுலகத்தில் குற்றமற்ற மகளிரை மணந்து நன்கு இன்பம் அனுபவிப்பார்கள். அதனால், குறும்பு செய்யும் பகைவேந்தனுடைய படைவருவதை இங்கிருந்தே காண்பீராக.

சிறப்புக் குறிப்பு:-

”போரில் இறந்தவர்கள் மேலுலக்த்திற்குச் செல்வார்கள். அங்குச் சென்று அங்குள்ள மகளிரை மணம்புரிந்து இன்பம் அனுபவிப்பார்கள்.’ என்ற நம்பிக்கை சங்க காலத்தில் இருந்ததாக இப்பாடலிலிருந்து தெரிகிறது.

பாடலின் பின்னணி:-

சோழன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளி என்பவன் தன் தந்தையோடு கொண்டிருந்த கருத்து வேறுபாட்டின் காரணமாக, தந்தையோடு வாழாமல் ஆமூரில் வாழ்ந்துவந்தான். அவன் ஆமூரை ஆண்ட மன்னனுக்குத் தானைத் தலைவனாகப் பணிபுரிந்தான். ஒருகால், பகை அரசனின் வீரர்கள் ஆமூரிலிருந்த ஆநிரைகளைக் கவர்ந்து சென்றனர். அவற்றை மீட்கும் பொறுப்பு கோப்பெரு நற்கிள்ளிக்கு உரியதாயிற்று. அவன் தன் வீரர்களுடன் கரந்தைப் போருக்குச் சென்றபொழுது, வீரர்களை ஊக்குவிப்பதற்காகக் கூறியவற்றை சாத்தந்தையார் இப்பாடலில் குறிப்பிடுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on May 23, 2015, 10:29:02 PM
புறநானூறு, 288. (மொய்த்தன பருந்தே!)
பாடியவர்: கழாத்தலையார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: தும்பை.
துறை: மூதின் முல்லை.
===========================================

மண்கொள வரிந்த வைந்நுதி மருப்பின்
அண்ணல் நல்ஏறு இரண்டுடன் மடுத்து
வென்றதன் பச்சை சீவாது போர்த்த
திண்பிணி முரசம் இடைப்புலத்து இரங்க
ஆர்அமர் மயங்கிய ஞாட்பின் தெறுவர

நெடுவேல் பாய்ந்த நாணுடை நெஞ்சத்து
அருகுகை .. .. .. .. .. .. மன்ற
குருதியொடு துயல்வரும் மார்பின்
முயக்கிடை ஈயாது மொய்த்தன பருந்தே.

(பாடலில் சில பகுதிகள் கிடைக்கவில்லை)

அருஞ்சொற்பொருள்:-

வரிந்த = வரி அமைந்த
வை = கூர்மை
நுதி = நுனி
மருப்பு = விலங்கின் கொம்பு
அண்ணல் = பெருமை, தலைமை
மடுத்தல் = குத்துதல்
பச்சை = தோல்
திண்பிணி = திண்ணியதாய்க் கட்டப்பட்ட
புலம் = இடம்
இடைப்புலம் = போர்க்களத்தின் நடுவிடம்
இரங்கல் = ஒலித்தல்
ஆர் = அருமை
அமர் = போர்
ஞாட்பு = போர்
தெறு = சினம்
மன்ற = நிச்சயமாக
துயல்வரும் = அசையும்
முயக்கு = முயங்கல் = தழுவல்
இடை = இடம்

இதன் பொருள்:-

மண்கொள=====> தெறுவர

மண்ணைக் குத்தியதால் வரிவரியாகக் கோடுகள் உள்ள கூரிய கொம்பினையுடைய பெருமைபொருந்திய நல்ல ஏறுகள் இரண்டைப் போரிடச் செய்து, வெற்றிபெற்ற ஏற்றின் தோலை உரித்து, மயிர் சீவாத அத்தோலால் போர்த்தப்பட்ட முரசு போர்க்களத்தின் நடுவே ஒலித்தது. தடுத்தற்கரிய போர் நடந்த அப்போர்க்களத்தில் சினம் தோன்ற

நெடுவேல்=====> பருந்தே

பகைவர் எறிந்த நெடியவேல் வந்து பாய்ந்ததால் ஒரு வீரன் நாணமுற்றான். குருதியோடு துடிக்கும் அவனது மார்பைத் தழுவவந்த அவன் மனைவியைத் தழுவவிடாமல் பருந்துகள் அவன் உடலை மொய்த்தன.

பாடலின் பின்னணி:-

ஒருகால், பெரும்போர் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போரில் வீரன் ஒருவனின் மார்பில் வேல் பாய்ந்தது. வேல் பாய்ந்த மார்புடன் அவன் நிலத்தில் வீழ்ந்தான். அவன் மனைவி அவனைத் தழுவும் நோக்கத்தோடு அவன் அருகில் வந்தாள். அவளைத் தழுவவிடாமல் அவன் உடலைப் பருந்துகள் மொய்த்தன. இக்காட்சியைப் புலவர் கழாத்தலையார் இப்பாடலில் குறிப்பிடுகிறார்.

கழாத்தலையார் 62-ஆம் பாடலில் சேரன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளிக்கும் இடையே நடந்த போரில் அவ்விருவரும் இறந்ததைப் பாடியுள்ளார். இப்பாடலில் இவர் கூறும் வீரனைப் பற்றிய செய்திகளை அப்போரோடு சிலர் தொடர்புபடுத்துகிறார்கள். இப்பாடலில் குறிப்பிடப்படும் போருக்கும் பாடல் 62-இல் குறிப்படப்படும் போருக்கும் தொடர்பு இருப்பதற்கான சான்றுகள் எதுவும் இப்பாடலில் காணப்படவில்லை.

இப்பாடலில் சில பகுதிகள் கிடைக்கவில்லை.

சிறப்புக் குறிப்பு:-

கேடயம் கையிலிருந்தும், தன்னை நோக்கிவந்த வேலைத் தடுத்துத் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளாததால், “நாணுடை நெஞ்சத்து” என்று புலவர் கழாத்தலையார் குறிப்பிடுகிறார் போலும்.

போர் முரசு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் தோல், வீரம் மிகுந்த ஏற்றினின்று எடுக்கப்பட்டதாக இருக்கவேண்டும் என்பது பழங்கால மரபு என்று இப்பாடலிலிருந்தும், “கொல்லேற்றுப் பைந்தோல் சீவாது போர்த்த, மாக்கண் முரசம்” என்ற மதுரைக் காஞ்சியின் வரிகளிலிருந்தும் (752-3) தெரியவருகிறது. ஏற்றின் தோல் மயிர் சீவாது பயன்படுத்தப்பட்டிருப்பதும் தெரியவருகிறது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on July 24, 2015, 11:43:05 AM
புறநானூறு, 289. (ஆயும் உழவன்!)
பாடியவர்: கழாத்தலையார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: தெரியவில்லை.
துறை: தெரியவில்லை.
===========================================

ஈரச் செவ்வி உதவின ஆயினும்
பல்எருத் துள்ளும் நல்லெருது நோக்கி
வீறுவீறு ஆயும் உழவன் போலப்
பீடுபெறு தொல்குடிப் பாடுபல தாங்கிய
மூதி லாளர் உள்ளும் காதலின்

தனக்கு முகந்து ஏந்திய பசும்பொன் மண்டை
இவற்குஈக என்னும் அதுவும்அன் றிசினே;
கேட்டியோ வாழி பாண! பாசறைப்
பூக்கோள் இன்றென்று அறையும்
மடிவாய்த் தண்ணுமை இழிசினன் குரலே

அருஞ்சொற்பொருள்:-

செவ்வி = பருவம் (தக்க சமயம்)
வீறு = தனிமை, பகுதி
வீறுவீறு = வேறுவேறு
பீடு = பெருமை
பாடு = கடமை
காதலின் = அன்பினால்
முகத்தல் = மொள்ளல்
மண்டை = கள்குடிக்கும் பாத்திரம்
அன்றுதல் = மறுத்தல்
சின் - முன்னிலை அசை
மடிவாய் = தோல் மடித்துக் கட்டப்பட்ட வாய்
இழிசினன் = பறையடிப்பவன்

இதன் பொருள்:-

ஈரச் செவ்வி=====> காதலின்

ஈரமுள்ள பருவம் மாறுவதற்குமுன், முன்பு உழுவதற்கு உதவிய ஏறுகளில் சிறந்த ஏறுகளை உழவர்கள் வேறுவேறு விதமாய் ஆராய்ந்து தேர்ந்தெடுப்பது வழக்கம். அதுபோல், பெருமைபெற்ற பழமையான குடியில் பிறந்த, வழிவழியாகத் தங்கள் கடமைகளை நன்கு ஆற்றிய சிறந்த வீரர்களுள் ஒருவீரனுக்கு

தனக்கு=====> குரலே

தனக்காக முகந்து எடுத்துப் பொற்கலத்தில் தந்த கள்ளை “இவனுக்கு ஈக” என்று அரசன் அன்போடு கொடுத்துச் சிறப்பிப்பதைக் கண்டு வியப்பதை விடு; பாணனே, இன்று போர்க்குரிய பூக்கள் வழங்கப்படுகின்றன என்று இழிசினன் எழுப்பும் தண்ணுமைப் பறையின் ஓசையைக் கேட்பாயாக

பாடலின் பின்னணி:-

ஒருகால், ஒருவேந்தன் வெட்சிப்போர் நடத்துவதற்காகப் ( மற்றொரு நாட்டிலுள்ள பசுக்களைக் கவர்வதற்காகப்) போர்ப்பறை ஒலித்தது. அந்நாட்டிலுள்ள வீரர்கள் பலரும் வந்து கூடினர். வேந்தன் வீரர்களுடன் கூடி விருந்துண்டான். அப்போது, வீரர்களுக்குக் கள் வழங்கப்பட்டது. மறக்குடியில் தோன்றி வீரச் செயல்களைச் செய்த வீரர்களை அவரவர் தகுதிக்கேற்ப அரசன் புகழ்ந்தான். அங்கு, வீரர்கள் மட்டுமல்லாமல் சான்றோர் பலரும் இருந்தனர். வேந்தன் தனக்குப் பொற்கலத்தில் வழங்கப்பட்ட கள்ளை சிறப்புடைய வீரன் ஒருவனுக்கு அளித்து அவனைச் சிறப்பித்தான். இந்தக் காட்சியைக் கண்டு பாணன் ஒருவன் வியந்தான். கழாத்தலையார், அப்பாணனை நோக்கி, “பாணனே, வேந்தன் செய்யும் சிறப்பைக் கண்டு வியத்தலை விட்டுவிட்டு, போர்க்குரிய பூவைப் பெற்றுக்கொள்ளுமாறு புலையன் தண்ணுமைப் பறையை அடிக்கின்றான். அதைக் கேட்பாயாக.” என்று கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on July 24, 2015, 11:44:00 AM
புறநானூறு, 290. (மறப்புகழ் நிறைந்தோன்!)
பாடியவர்: ஔவையார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: கரந்தை.
துறை: குடிநிலை உரைத்தல்.
===========================================

இவற்குஈத்து உண்மதி கள்ளே; சினப்போர்
இனக்களிற்று யானை இயல்தேர்க் குருசில்!
நுந்தை தந்தைக்கு இவன்தந்தை
எடுத்துஎறி ஞாட்பின் இமையான் தச்சன்
அடுத்துஎறி குறட்டின் நின்று மாய்ந் தனனே:
மறப்புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும்
உறைப்புழி ஓலை போல
மறைக்குவன் பெருமநிற் குறித்துவரு வேலே

அருஞ்சொற்பொருள்:-

இவற்கு = இவனுக்கு
ஈத்து = கொடுத்து
மதி – அசை
இனம் = கூட்டம்
இயற்றல் = புதிதாகச் செய்தல்
குருசில் = குரிசில் = தலைவன், அரசன்
நுந்தை = உன் தந்தை
ஞாட்பு = போர், போர்க்களம்
குறடு = வண்டிச்சக்கரத்தின் நடுப்பகுதி
மறம் = வீரம்
மைந்து = வலிமை
உறை = மழை
உறைப்புழி = மழை பெய்யும்பொழுது
ஓலை = ஓலைக்குடை

இதன் பொருள்:-

”அரசே, முதலில் கள்ளை இவனுக்கு அளித்து பின்னர் நீ உண்பாயாக; சினத்துடன் செய்யும் போரையும், யானைகளையும், நன்கு செய்யப்பட்ட தேர்களையுமுடைய தலைவனே! உன் பாட்டனை நோக்கிப் பகைவர்கள் எறிந்த வேல்களைக் கண்ணிமைக்காமல் இவன் பாட்டன் தாங்கிக்கொண்டான்; தச்சனால் வண்டியின் குடத்தில் செருகப்பட்ட ஆரக்கால்கள்போல் அவன் காட்சி அளித்து இறந்தான். வீரத்துடன் போர்செய்து புகழ்பெற்ற வலிமையுடைய இவன், மழை பெய்யும்பொழுது நம்மை அதனின்று காக்கும் பனையோலையால் செய்யப்பட்ட குடைபோல் உன்னை நோக்கி வரும் வேல்களைத் தாங்கி உன்னைக் காப்பான்.”

பாடலின் பின்னணி:-

ஒருஅரசனின் ஆநிரைகளை மற்றொரு அரசனின் வீரர்கள் கவர்ந்தனர். ஆநிரைகளை இழந்த அரசன் அவற்றை மீட்பதற்காகக் கரந்தைப் போர் நடத்த விரும்பினான். அவன் தன்நாட்டிலுள்ள வீரர்களைப் போருக்கு வருமாறு அழைத்தான். அரசனின் அழைப்பிற்கிணங்கி, வீரர்கள் பலரும் ஒன்று கூடினர். போருக்குப் போகுமுன் அரசன் வீரர்களுக்கு விருந்தளித்து, அவர்களின் வீரச் செயல்களைப் புகழ்வது வழக்கம். அவ்விருந்தில், ஒளவையாரும் கலந்துகொண்டார். வீரர்களைப் புகழும் பணியை ஒளவையார் மேற்கொண்டார். ஒரு வீரனின் குடிப்பெருமையைக் கூற விரும்பிய ஒளவையார், “அரசே, இவன் பாட்டன் உன் பாட்டனின் உயிரைக் காப்பதற்காக, வண்டியின் குடத்தில் ஆரக்கால்கள்போல் தன் உடல் முழுதும் வேல்கள் பாய்ந்து இறந்தான். இவனும், தன் பாட்டனைப்போல், உன்னை மழையிலிருந்து காக்கும் பனையோலைக் குடைபோலக் காப்பான்.”
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on November 25, 2015, 07:07:56 PM
புறநானூறு, 291. (மாலை மலைந்தனனே!)
பாடியவர்: நெடுங்களத்துப் பரணர்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: கரந்தை.
துறை: வேத்தியல்.
===========================================

சிறாஅஅர்! துடியர்! பாடுவன் மகாஅஅர்
தூவெள் அறுவை மாயோற் குறுகி
இரும்புள் பூசல் ஓம்புமின்; யானும்
விளரிக் கொட்பின் வெண்ணரி கடிகுவென்;
என்போற் பெருவிதுப்பு உறுக வேந்தே;
கொன்னும் சாதல் வெய்யோற்குத் தன்தலை
மணிமருள் மாலை சூட்டி அவன்தலை
ஒருகாழ் மாலை தான்மலைந் தனனே.

அருஞ்சொற்பொருள்:-

சிறாஅஅர் = சிறுவர்
துடியர் = துடி என்னும் பறயை அடிப்பவர்
மகாஅஅர் = மக்கள்
தூ = தூய்மை
வெள் = வெண்மையான
அறுவை = ஆடை
மாயோன் = பெரியவன் (கரியவன்)
இரு = பெரிய
இரும்புள் = பெரிய பறவை
பூசல் = ஆரவாரம்
ஓம்புதல் = தவிர்தல், நீக்கல்
விளரி = ஒரு பண்
கொட்பு = சுழற்சி
கடிதல் = ஓட்டுதல்
விதுப்பு = நடுக்கம்
கொன் = பயனின்மை (எதுவும் இல்லாமல் இருத்தல்)
மருள் = மயக்கம் (கலத்தல்)
காழ் = மணிவடம்
மலைதல் = அணிதல்

இதன் பொருள்:-

சிறுவர்களே! துடி அடிப்பவர்களே! பாடும் வல்லமைபெற்ற பாணர்களே! தூய வெள்ளாடை உடுத்திய கரிய நிறமுடைய என் கணவனை நெருங்கியுள்ள பெரிய பறவைக் கூட்டத்தின் ஆரவாரத்தை நீக்குவீர்களாக; நானும் விளரிப் பண்ணைப் பாடிச் சுற்றிவந்து, வெள்ளை நிறமுள்ள நரிகள் அவனுடலை நெருங்கவிடாமல் ஓட்டுவேன். வேந்தனுக்காக எந்தக் காரணமுமின்றித் தன் உயிரைத் தர விரும்பும் என் தலைவனுக்கு, அவ்வேந்தன் தன் மார்பில் இருந்த பலமணிகள் கலந்த மாலையை அணிவித்து என் கணவன் அணிந்திருந்த ஒற்றைவட மாலையைத் தான் அணிந்துகொண்டான். என் தலைவன் இறந்ததால் நான் வருத்தத்தோடு நடுங்குவதைப்போல் அவ்வேந்தனும் வருந்தி நடுங்கட்டும்.

பாடலின் பின்னணி:-

ஒருகால், அரசன் ஒருவன் தன் பகைவர்கள் கவர்ந்து சென்ற ஆநிரைகளை மீட்பதற்குப் படை திரட்டினான். அரசன் ஆணைப்படி வீரர்கள் பலரும் கரந்தைப் போருக்குப் புறப்பட்டனர். வீரர்கள் போருக்குப் போகுமுன், அவர்களுள் சிறப்புடைய வீரன் ஒருவன் அணிந்திருந்த ஒற்றைவட மாலையைத் தான் அணிந்துகொண்டு தான் அணிந்திருந்த பலவடங்களுடைய மாலையை அவ்வீரனுக்கு அரசன் அணிவித்தான். அதைக்கண்டவர்கள் அவ்வீரனின் மனைவியிடம் அரசன் அவள் கணவனுக்குத் தன் மாலையை அணிவித்ததைத் தெரிவித்தனர். பின்னர், அவ்வீரன் போரில் இறந்தான். அவன் மனைவி அவனைக் காணப் போர்க்களத்திற்குச் சென்றாள். அரசன் அணிவித்த மாலையை அவள் கணவன் அணிந்திருப்பதைக் கண்டாள். தன் கணவன் இறந்ததால் தான் வருந்துவதைப் போலவே அரசனும் வருந்துவானாக என்று அவள் கூறுவதாக இப்பாடலில் நெடுங்களத்துப் பரணர் கூறுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

போருக்குச் செல்லும் வீரர்கள் வெண்ணிற ஆடை அணிந்து செல்வது மரபு என்பது இப்பாடலிலிருந்தும், ”வெளிது விரித்து உடீஇ” என்று ஒக்கூர் மாசாத்தியார் பாடல் 279-இல் கூறியிருப்பதிலிருந்தும் தெரியவருகிறது.

-- ஆசிரியர் பக்கம் -- — with அவளதிகாரம், தாமரை-பாடல் ஆசிரியர் and அழகோவியம்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on November 25, 2015, 07:09:20 PM
புறநானூறு, 292. (சினவல் ஓம்புமின்!)
பாடியவர்: விரிச்சியூர் நன்னாகனார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: வஞ்சி.
துறை: பெருஞ்சோற்று நிலை.
===========================================

வேந்தற்கு ஏந்திய தீந்தண் நறவம்
யாம்தனக்கு உறுமுறை வளாவ விலக்கி
வாய்வாள் பற்றி நின்றனென் என்று
சினவல் ஓம்புமின்; சிறுபுல் லாளர்!
ஈண்டே போல வேண்டுவன் ஆயின்
”என்முறை வருக” என்னான்; கம்மென
எழுதரு பெரும்படை விலக்கி
ஆண்டு நிற்கும் ஆண்தகை யன்னே.

அருஞ்சொற்பொருள்:-

ஏந்திய = எடுத்த
தீ = இனிமை
தண் = குளிர்ந்த
நறவம் = மது
முறை = வரிசை, ஒழுங்கு
வளாவல் = கலத்தல்
வாய்வாள் = தப்பாமல் வெட்டும் வாள்
ஓம்புதல் = தவிர்தல்
புல்லாளர் = குறைந்த ஆண்மையுடைவர்கள் ( வீரம் குறைந்தவர்கள்)
ஈண்டு = இவ்விடம்
கம் – விரைவுக் குறிப்பு

இதன் பொருள்:-

”அரசனுக்குக் கொடுப்பதற்காக முகந்து எடுத்த இனிய குளிர்ந்த கள்ளை நாங்கள் முறைப்படிக் கலந்து கொடுத்தோம். இவன், அதை மறுத்துத், தன் குறிதவறாத வாளைக் கையில் எடுத்துக்கொண்டு நின்றான்” என்று அவன் மீது சினம் கொள்ளாதீர்கள். வீரத்தில் அவனைவிடக் குறைந்தவர்களே! இங்கே எவ்வாறு வீரத்தோடு அவன் வாளைப் பற்றினானோ அதுபோல் போர்க்களத்திலும் செய்வான்; ”எனக்குரிய முறை வரட்டும்.” என்று காத்திருக்காமல், விரைந்து முன்னே எழுகின்ற பெரிய படையைத் தடுத்து விலக்கி அங்கே நிற்கும் வீரம் (ஆண்மை)உடையவன் அவன் என்பதை அறிவீர்களாக.

பாடலின் பின்னணி:-

ஒருகால், உண்டாட்டு ஒன்று நடைபெற்றது. அவ்விடத்து, வீரன் ஒருவன் முறை தவறி, அரசனுக்குக் கொடுத்த கள்ளைத் தனக்குக் கொடுக்கவேண்டுமென்று கூறி வாளைக் கையில் எடுத்துக்கொண்டு நின்றான். அவன் செயலால், அங்கிருந்தவர்கள் சினமுற்றனர். அதைக் கண்ட புலவர் விரிச்சியூர் நன்னாகனார், “அவ்வீரன் கள் குடிப்பதில் மட்டும் முந்திக் கொள்பவன் அல்லன்; அவன் போரிலும் அப்படித்தான். ஆகவே, அவன் மீது சினம் கொள்ள வேண்டா.” என்று அங்கிருந்தவர்களுக்கு அறிவுரை கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

சிறப்புக் குறிப்பு:-

“அரசனுக்கு முன்னதாக, எனக்குக் கள்ளைத் தருக.” என்று கூறியவன் வலிமையிலும் வீரத்திலும் சிறந்தவன். அவன் போர்க்களத்தில் விரைந்து சென்று எதிர்த்துவரும் பெரும்படையை விலக்கிப் போரிடும் பேராண்மையுடையவன். அவன் சிறப்பை அறியாமல் அவன் மீது சினம் கொண்டவர்களின் அறியாமையைக் கருதி, அவர்களைச் ”சிறுபுல்லாளர்” என்று புலவர் குறிப்பிடுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on November 25, 2015, 07:12:14 PM
புறநானூறு, 293. (பூவிலைப் பெண்டு!)
பாடியவர்: நொச்சிநியமங்கிழார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: காஞ்சி.
துறை: பூக்கோள் காஞ்சி.
===========================================

நிறப்படைக்கு ஒல்கா யானை மேலோன்
குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை
நாண்உடை மாக்கட்கு இரங்கும் ஆயின்
எம்மினும் பேர்எழில் இழந்து வினைஎனப்
பிறர்மனை புகுவள் கொல்லோ?
அளியள் தானே பூவிலைப் பெண்டே!

அருஞ்சொற்பொருள்:-

நிறப்படை = குத்துக்கோல் (அங்குசம்)
ஒல்கா = தளராத
குறும்பு = அரண்
குறும்பர் = அரணுக்குப் புறத்தே நின்று போர் செய்யும் பகைவர்
ஏவல் = கட்டளை
தண்ணுமை = ஒருவகைப் பறை
இரங்கல் = ஒலித்தல்
எழில் = தோற்றப் பொலிவு
வினை = போர்
அளியள் = இரங்கத் தக்கவள்

இதன் பொருள்:-

குத்துக்கோலுக்கும் அடங்காத யானையின் மேலே இருந்து தண்ணுமை என்னும் பறையை அறைவோன், அரணுக்கு வெளியே இருந்து போர் செய்யும் பகைவரை எதிர்த்துப் போரிடுவதற்கு வருமாறு, போருக்கு அஞ்சி நாணி இருக்கும் ஆண்களுக்கு கட்டளையிடும் பறையின் முழக்கம் கேட்கிறது. ஆகவே, இங்குள்ள ஆண்கள் அனைவரும் போருக்குப் போகப்போகிறார்கள். இனி இங்குள்ள என்னைப் போன்ற மறக்குலப் பெண்கள் பூச் சூட மாட்டார்கள். இந்தப் பூ விற்கும் பெண், எங்களைவிட அதிகமாகத் தோற்றப் பொலிவிழந்து காணப்படுகிறாள். அவள் பூவை விற்பதற்கு, போருக்குப் போகாதவர்கள் இருக்கும் வீடுகளுக்குப் போவாள் போலும்; அவள் இரங்கத் தக்கவள்.

பாடலின் பின்னணி:-

ஓரூரில் இருந்த அரசனின் அரண்களைப் பகை அரசன் ஒருவன் முற்றுகையிட்டான். அதனால் போர் தொடங்கியது. வீரர்கள் அனைவரையும் போருக்கு வருமாறு பறை சாற்றப்படுகிறது. வீரர்கள் பலரும் ஏற்கனவே போருக்குச் சென்றுவிட்டார்கள். போருக்கு அஞ்சி இன்னும் தங்கள் வீடுகளிலேயே இருக்கும் ஆண்கள் வெட்கப்படும்படி அந்தப் பறை ஒலிக்கிறது. வீரர்கள் போருக்குச் சென்றால், அவர்களின் மனைவியர் அவர்களைப் பிரிந்திருக்கும் நாட்களில் தங்கள் தலையில் பூ அணியாமல் இருப்பது மரபு. போருக்குச் சென்ற வீரர்களின் வீடுகள் உள்ள இடத்தில் பெண் ஒருத்தி பூ விற்க வந்தாள். அங்குள்ள மறக்குலப் பெண் ஒருத்தி, ”இங்கு யாரும் பூச் சூட மாட்டர்களே. இவளிடத்தில் பூ வாங்குவார் எவரும் இல்லையே; இவள் நிலைமை மிகவும் இரங்கத்தக்கது.” என்று கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

சிறப்புக் குறிப்பு:-

தன் கணவன் போருக்குச் சென்றால் அவன் திரும்பி வரும்வரை மனைவி தன் தலையில் பூச்சூடாமல் இருப்பது மரபு என்பது இப்பாடலிலிருந்து தெரியவருகிறது.

பார்ப்பனர், நோய்வாய்ப்பட்டோர், ஆண்பிள்ளைகள் இல்லாதோர் ஆகிய ஒரு சில ஆண்கள் மட்டுமே போருக்குச் செல்லமாட்டார்கள். ஆனால், அத்தகையவர் வெகு சிலரே. ஆகவே, பூ விற்கும் பெண் அத்தகையவர்கள் இருக்குமிடத்திற்குச் சென்றுதான் பூ விற்க வேண்டும். அதனால்தான், அவள் மிகவும் இரங்கத் தக்கவள் என்று மறக்குலப் பெண் கருதுவதாகப் புலவர் குறிப்பிடுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on November 25, 2015, 07:15:12 PM
புறநானூறு, 294. (வம்மின் ஈங்கு!)
பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: தும்பை.
துறை: தானை மறம்.
===========================================

வெண்குடை மதியம் மேல்நிலாத் திகழ்தரக்
கண்கூடு இறுத்த கடல்மருள் பாசறைக்
குமரிப்படை தழீஇய கூற்றுவினை ஆடவர்
தமர்பிறர் அறியா அமர்மயங்கு அழுவத்து
இறையும் பெயரும் தோற்றி நுமருள்
நாள்முறை தபுத்தீர் வம்மின் ஈங்குஎனப்
போர்மலைந்து ஒருசிறை நிற்ப யாவரும்
அரவுஉமிழ் மணியின் குறுகார்;
நிரைதார் மார்பின்நின் கேள்வனைப் பிறரே

அருஞ்சொற்பொருள்:-

மதியம் = மதி
கண்கூடு = கண்குழி (கண்)
இறுத்தல் = தங்குதல்
கண்கூடு இறுத்த = கண்களை மூடுவதற்காக (உறங்குவதற்காக)
மருள் - உவமை உருபு
தழீஇ = உள்ளடக்கிக்கொண்டு
கூற்று = இயமன்
அழுவம் = போர், போர்க்களம்
இறை = இறைவன் = அரசன்
பெயர் = புகழ்
நுமர் = உங்களவர் (உம்மவர்)
நாண்முறை = வாழ்நாள்
தபுத்தல் = கெடுத்தல்
சிறை = பக்கம்
அரவு = பாம்பு
மணி = இரத்தினம்
நிரை = ஒழுங்கு (வரிசை)
தார் = மாலை
கேள்வன் = கணவன்

இதன் பொருள்:-

வெண்மையான குடைபோலத் திகழும் திங்கள் வானத்தின் மேலிருந்து ஒளி வீசிக் கொண்டிருந்தது. வீரர்கள் உறங்குவதற்காகக் கட்டப்பட்ட கடல்போன்ற பாசறையில் புதிதாகச் செய்யப்பட்ட படைக்கருவிகளுடன் கொலைத் தொழிலைச் செய்யும் வீரர்கள் கூடியிருந்தனர். நம்மவர் அயலவர் என்று வேறுபாடு காணமுடியாத அளவுக்குக் கடுமையாகப் போர் நடைபெற்றது. அப்போர்க்களத்தில், உன் கணவன், “உங்கள் அரசனின் பெருமையையும் உங்கள் புகழையும் கூறி, உங்களுக்குள் யாருக்கெல்லாம் வாழ்நாள் முடியப் போகிறதோ அவர்கள் என்னோடு போரிட வாருங்கள்.” என்று கூறி, போரிட வந்தவர்களையெல்லாம் வென்று ஒரு பக்கம் நின்றான். பாம்பு உமிழ்ந்த மணியை (நாகரத்தினத்தை) எடுக்க எவரும் நெருங்காததைப்போல், வரிசையாக மாலையணிந்த மார்பையுடைய உன் கணவனை எவரும் நெருங்கவில்லை.

பாடலின் பின்னணி:-

ஒருகால், ஓரூரில் கடும்போர் நிகழ்ந்தது. தம்மவர் என்றும், அயலார் என்றும் வேறுபாடு அறியாமல் வீரர்கள் போர் செய்தனர். அப்போரில், தானைத் தலைவன் ஒருவன் மிகுந்த வீரத்தோடு போர் செய்தான். அத்தலைவன், பகைவர்களை நோக்கி, “உங்கள் அரசனின் பெருமையையும் உங்கள் புகழையும் சொல்லிக்கொண்டு வந்து என்னோடு போரிடுங்கள்” என்று கூறி எதிர்த்து வந்தவர்களையெல்லாம் வென்றான். பின்னர், பகைவர்களைப் பார்த்து, “ உங்களில் யாருக்கு வாழ்நாட்களின் எல்லை முடிந்ததோ அவர்கள் என்னோடு போரிட வருக.” என்று பகைவர்களை போருக்கு அழைத்து ஒரு பக்கம் நின்றான். அவனை நெருங்குவதற்கு பகைவர் அஞ்சினர். இந்தக் காட்சியைக் கண்ட புலவர் பெருந்தலைச் சாத்தனார், அத்தலைவனின் மனைவியிடம் அதைக் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

சிறப்புக் குறிப்பு:-

இங்கு வெண்குடை என்று குறிப்பிடப்பட்டது அரசனின் வெண்கொற்றக்குடையாகும். திங்களை அரசனின் வெண்கொற்றக்குடைக்கு ஒப்பிட்டதால், அரசனின் குடை திங்ககளைவிடச் சிறப்பானதாகப் புலவர் கருதுவதாகத் தெரிகிறது.

உயிரை உடம்பினின்று நீக்குவது கூற்றின் (இயமனின்) செயல். அச்செயலைப் படைவீரர்களும் செய்வதால், அவர்களைக் “கூற்று வினை ஆடவர்” என்று புலவர் குறிப்பிடுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on November 25, 2015, 07:16:41 PM
புறநானூறு, 295. (ஊறிச் சுரந்தது!)
பாடியவர்: ஔவையார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: வாகை.
துறை: உவகைக் கலுழ்ச்சி.
===========================================

கடல்கிளர்ந் தன்ன கட்டூர் நாப்பண்
வெந்துவாய் வடித்த வேல்தலைப் பெயரித்
தோடுஉகைத்து எழுதரூஉ துரந்துஎறி ஞாட்பின்
வருபடை போழ்ந்து வாய்ப்பட விலங்கி
இடைப்படை அழுவத்துச் சிதைந்து வேறாகிய
சிறப்புடை யாளன் மாண்புகண்டு அருளி
வாடுமுலை ஊறிச் சுரந்தன
ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே

அருஞ்சொற்பொருள்:-

கிளர்தல் = எழுதல்
கட்டூர் = கட்டப்பட்ட ஊர் (பாசறை)
நாப்பண் = இடையே
வடித்த = கூர்மையாக்கிய
தோடு = தொகுதி (கூட்டம்)
உகைத்தல் = செலுத்துதல்
துரந்து = சென்று
ஞாட்பு = போர், போர்க்களம்
போழ்தல் = பிளத்தல்
வாய் = இடம்
அழுவம் = போர், போர்க்களம்
பூட்கை = கொள்கை
விடலை = வீரன்

இதன் பொருள்:-

கடல் எழுந்தாற்போல் அமைந்துள்ள பெரிய பாசறையோடு கூடிய போர்க்களத்தின் நடுவில், தீயால் சூடாக்கிக் கூர்மையாகத் தீட்டிய வேலைப் பகைவர்பால் திருப்பி, தன் படையை ஏவித் தானும் எழுந்து சென்று, அம்பும் வேலும் செலுத்திப் பகைவரைக் கொல்லும் போரில் எதிர்த்து வரும் பகைவர் படையைப் பிளந்து தான் போர் செய்வதற்கு இடமுண்டாகுமாறு குறுக்கிட்டுத் தடுத்த வீரன் ஒருவன் படைகளின் நடுவில் துண்டுபட்டு வேறு வேறாகக் கிடந்தான். புறமுதுகு காட்டி ஓடாத கொள்கையையுடைய அவ்வீரனின் தாய்க்குத் தன் மகன் வீரமரணம் அடைந்ததைக் கண்டதால், அன்பு மிகுந்தது. அவளுடைய வற்றிய முலைகள் மீண்டும் பாலூறிச் சுரந்தன.

பாடலின் பின்னணி:-

ஒருகால், இரு அரசர்களிடையே பெரும்போர் நடைபெற்றது. அப்போரில், வீரன் ஒருவன் சிறப்பாகப் போரிட்டான். அவன் உடல் பல துண்டுகளாகப் பகைவர்களால் வெட்டப்பட்டது. அவன் இறந்த செய்தி அவன் தாய்க்குத் தெரியவந்ததது. அவன் தாய், தன் மகனின் உடலைக் காணப் போர்க்களத்திற்குச் சென்றாள். போர்க்களத்தில், அவன் வீரமரணம் அடைந்ததைப் பார்த்த அத்தாய் பெருமகிழ்ச்சி அடைந்தாள். உனர்ச்சிப் பெருக்கால் அவள் முலைகளினின்று பால் சுரந்தது. இச்செய்தியை ஒளவையார் இப்பாடலில் கூறுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

போர்வீரர்கள் தங்குவதற்காகப் புதிதாகக் கட்டப்படும் பாசறை கட்டூர் என்று அழைக்கப்பட்டது. போர்க்களத்தில் கொல்லரும் உடனிருந்து வேல் போன்ற படைக் கருவிகளைச் செம்மைப் படுத்திக் கொடுத்தனர் என்பது இப்பாடலிலிருந்து தெரியவருகிறது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on November 25, 2015, 07:17:40 PM
புறநானூறு, 296. (நெடிது வந்தன்றால்!)
பாடியவர்: வெள்ளை மாறனார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: வாகை.
துறை: ஏறாண் முல்லை.
===========================================

வேம்புசினை ஒடிப்பவும் காஞ்சி பாடவும்
நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும்
எல்லா மனையும் கல்லென் றவ்வே
வெந்துஉடன்று எறிவான் கொல்லோ?
நெடிதுவந் தன்றால் நெடுந்தகை தேரே?

அருஞ்சொற்பொருள்:-

வேம்பு = வேப்ப மரம்
சினை = கிளை
காஞ்சி = ஒரு பண்
ஐயவி = வெண்கடுகு
கல் – ஆரவாரக் குறிப்பு
உடன்றல் = சிதைத்தல், பொருதல், சினக் குறிப்பு
எறிதல் = வெட்டுதல், வெல்லுதல்
நெடுந்தகை = பெரியோன்

இதன் பொருள்:-

வேப்ப மரத்தின் கிளைகளை ஒடிப்பதும், காஞ்சிப் பண் பாடுவதும், நெய்யுடைய கைய்யோடு வெண்கடுகைப் புகைப்பதும் ஆகிய நிகழ்ச்சிகள் எல்லா வீடுகளிலும் ஆரவாரமாக நடைபெறுகின்றன. பகை வேந்தனைச் சினந்து அவனை வீழ்த்தாமல் மீளேன் என்று இவன் போர் புரிகிறான் போலும். அதனால்தான் இப்பெரியோனின் தேர் காலம் தாழ்த்தி வருகிறது போலும்.

பாடலின் பின்னணி:-

ஒருகால், ஓரூரில் போர் நடைபெற்றது. அப்போர் முடியும் தருவாய் நெருங்கியது. அச்சமயம், போருக்குச் சென்ற வீரர்கள் பலரும் அவரவர் வீடுகளுக்குத் திரும்பினர். அவர்களின் வீடுகளில், பெண்டிர் வேப்பிலகளை வீட்டின் கூரையில் செருகினர்; காஞ்சிப் பண் பாடல்களைப் பாடினர்; கடுகுகளைப் புகைத்தனர். இவ்வாறு, எல்லா வீடுகளிலும் ஆரவாரம் மிகுதியாக இருந்தது. ஒரு வீட்டில் மட்டும், போருக்குச் சென்ற ஆண்மகன் இன்னும் திரும்பி வரவில்லை. அவன் பகைவேந்தனைக் கொன்றுவிட்டுத்தான் திரும்புவான் போலும் என்று அவன் தாய் நினைக்கிறாள். இக்காட்சியை, புலவர் வெள்ளை மாறனார் இப்பாடலாக இயற்றியுள்ளார்.

சிறப்புக் குறிப்பு:-

வீடுகளில் வேப்பிலையைச் செருகுவதும், காஞ்சிப் பண்ணைப் பாடுவதும், ஐயவி புகைப்பதும், போரில் காயமடைந்தவர்களின் புண்களை ஆற்றுவதற்காக நடைபெறும் செயல்களாகும்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on November 25, 2015, 07:18:44 PM
புறநானூறு, 297. (தண்ணடை பெறுதல்!)
பாடியவர்: தெரியவில்லை.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: வெட்சி.
துறை: உண்டாட்டு.
===========================================

பெருநீர் மேவல் தண்ணடை எருமை
இருமருப்பு உறழும் நெடுமாண் நெற்றின்
பைம்பயறு உதிர்த்த கோதின் கோல்அணைக்
கன்றுடை மரையாத் துஞ்சும் சீறூர்க்
கோள்இவண் வேண்டேம் புரவே; நார்அரி

நனைமுதிர் சாடி நறவின் வாழ்த்தித்
துறைநணி கெழீஇக் கம்புள் ஈனும்
தண்ணடை பெறுதலும் உரித்தே வைந்நுதி
நெடுவேல் பாய்ந்த மார்பின்
மடல்வன் போந்தையின் நிற்கு மோர்க்கே

அருஞ்சொற்பொருள்:-

மேவல் = விரும்பல்
தண்ணடை = மெதுவான நடை
இரு = பெரிய
மருப்பு = கொம்பு
உறழ்தல் = ஒத்தல்
பை = பசிய
கோது = தோடு, சக்கை
கோல் = திரட்சி
அணை = படுக்கை
மரையா = காட்டுப்பசு
துஞ்சும் = தூங்கும்
சீறூர் = சிற்றூர்
கோள் = கொள்ளுதல்
இவண் = இங்கே (இவ்விடத்து)
புரவு = கொடை
நனை = பூ
நறவு = கள்
துறை = நீர்த்துறை
நணி = அணிமையான இடம்
கெழீஇ = பொருந்தி
கம்புள் = சம்பங்கழி (காட்டுக் கோழி)
தண்ணடை = மருதநிலத்தூர்
உரித்து = உரியது
வை = கூர்மை
நுதி = நுனி
வன் = வலிய
போந்தை = பனை

இதன் பொருள்:-

பெருநீர்=====> நார்அரி

மிகுந்த நீரில் இருக்க விரும்பும் மெல்லிய நடையையுடைய எருமையின் பெரிய கொம்பு போன்ற நெடிய முற்றுகளையுடைய பசிய பயற்றின் தோட்டைப் படுக்கையாகக் கொண்டு கன்றுடன் கூடிய காட்டுப்பசு உறங்கும் சிறிய ஊர்களைக் கொடையாகக் கொள்வதை விரும்பமாட்டோம். நாரால் வடிக்கப்பட்டு

நனைமுதிர்=====> மோர்க்கே

பூக்களையிட்டு முதிரவைத்த சாடியிலுள்ள கள்ளை வாழ்த்தி, நீரின் பக்கத்தே பொருந்தி காட்டுக்கோழிகள் முட்டையிடும் மருதநிலத்தூர்களைப் பெறுவதும், கூர்மையான நுனியையுடைய நீண்ட வேல் தைத்து மார்புடன் மடல் நிறைந்த வலிய பனைமரம்போல் நிற்கும் வீரர்க்கு உரியதாகும்.

பாடலின் பின்னணி:-

பகை அரசன் ஒருவன் மற்றொரு அரசனின் நாட்டிலுள்ள பசுக்களைக் கவர்வதற்காகத் (வெட்சிப் போர் புரிவதற்காகத்) தன் படைவீரர்களைத் திரட்டினான்; அவர்களுக்கு உண்டாட்டு நடத்தினான். அவ்வமயம், போரில் வெற்றி பெற்றால் அரசனிடமிருந்து எதைப் பரிசாகப் பெறுவது சிறந்தது என்று வீரர்களுக்கிடையே உரையாடல் நிகழ்ந்தது. அங்கிருந்து அதைக் கேட்ட புலவர் ஒருவர் வீரர்களுக்கிடையே நடைபெற்ற அந்த உரையாடலை இப்பாடலில் கூறுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

ஒரு வீரன் தனக்கு அளிக்கப்படும் பொருளை ”வேண்டா” என்று மறுக்கும் பொழுது கள்ளை வாழ்த்துவது மரபு என்று ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் குறிப்பிடுகிறார்.

”கள்ளை வாழ்த்தி, சிறிய ஊர்கள் வேண்டா என்று கூறி, மருதநிலத்தூர்களைப் பெறுவதும் வீரர்க்கு உரியது” என்று கூறியதால், மருதநிலத்தூர்களைப் பெறாமாலும் இருக்கலாம் என்ற கருத்தும் தோன்றுகிறது. அதனால், வீரர்கள் எப்பொழுதும் வீரத்தோடு போர்புரிவதால் வரும் புகழையே தமக்கு உரியதாகக் கருதினார்கள் என்ற கருத்தும் இப்பாடலில் காணப்படுகிறது. (ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை, புறநானூறு, பகுதி 2, பக்கம் 194)
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on November 25, 2015, 07:19:54 PM
புறநானூறு, 298. (கலங்கல் தருமே!)
பாடியவர்: ஆவியார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: நொச்சி.
துறை: குதிரை மறம்.
===========================================

எமக்கே கலங்கல் தருமே; தானே
தேறல் உண்ணும் மன்னே; நன்றும்
இன்னான் மன்ற வேந்தே; இனியே
நேரார் ஆரெயில் முற்றி
வாய்மடித்து உரறிநீ முந்துஎன் னானே

அருஞ்சொற்பொருள்:-

கலங்கல் = கலங்கிய கள்
தேறல் = தெளிந்த கள்
நன்று = பெரிது
இன்னான் = அன்பில்லாதவன்
நேரார் = பகைவர்
ஆர் = அரிய
எயில் = அரண்
முற்றி = சூழ்ந்து
உரறுதல் = ஒலியெழுப்புதல்
வாய்மடித்து உரறி = சீழ்க்கையடித்து

இதன் பொருள்:-

முன்பெல்லாம் எமக்குக் களிப்பை மிகுதியாகத் தரும் கலங்கிய கள்ளைக் கொடுத்துவிட்டுத் தான் களிப்பைக் குறைவாக அளிக்கும் தெளிந்தகள்ளை அரசன் உண்பான். அத்தகையவன், பகைவருடைய கொள்ளற்கரிய அரணைச் சூழ்ந்து போரிடும் இந்நேரத்தில், வாயை மடித்துச் சீழ்க்கையடித்து ஒலியெழுப்பி “நீ முந்து” என்று எங்களை ஏவுவதில்லை. ஆகவே, இப்பொழுது எம் அரசன் பெரிதும் அன்பில்லாதவனாகிவிட்டான்.

பாடலின் பின்னணி:-

அரசன் ஒருவன் தன் படைவீரர்களுடன் போருக்குப் புறப்படுகிறான். அவ்வேளையில், வீரர்களுக்குக் களிப்பை அதிகமாகத் தரும் கலங்கிய கள்ளைக் கொடுத்துத் தான் களிப்பை குறைவாக அளிக்கும் தெளிந்த கள்ளை உண்ணும் தன் அரசன், இப்பொழுது, போரில், “ நீங்கள் முதலிற் போங்கள்” என்று வீரர்களுக்குக் கட்டளையிடாமல் தானே முதலில் செல்லும் வீரமுடையடையவனாக இருக்கின்கிறானே என்று வீரன் ஒருவன் வியப்பதை, இப்படலில் ஆவியார் குறிப்பிடுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

மிகுந்த களிப்பைத் தரும் தெளிந்த கள்ளைத் வீரர்களுக்குத் தருவது மன்னன் வீரர்கள் மீது கொண்ட அன்பைக் காட்டுகிறது. வீரர்களை முதலில் போருக்கு அனுப்பாமல் மன்னன் தானே முதலில் போவது அவன் வீரத்தைக் குறிக்கிறது. ஆகவே, மன்னன் அன்பிலும் வீரத்திலும் சிறந்தவன் என்பதை வீரன் புகழ்கிறான்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on November 25, 2015, 07:21:15 PM
புறநானூறு, 299. (கலம் தொடா மகளிர்!)
பாடியவர்: பொன்முடியார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: நொச்சி.
துறை: குதிரை மறம்.
===========================================

பருத்தி வேலிச் சீறூர் மன்னன்
உழுத்துஅதர் உண்ட ஓய்நடைப் புரவி
கடல்மண்டு தோணியின் படைமுகம் போழ
நெய்ம்மிதி அருந்திய கொய்சுவல் எருத்தின்
தண்ணடை மன்னர் தாருடைப் புரவி
அணங்குஉடை முருகன் கோட்டத்துக்
கலம்தொடா மகளிரின் இகழ்ந்துநின் றவ்வே

அருஞ்சொற்பொருள்:-

சீறூர் = சிற்றூர்
உழுத்ததர் = உழுந்தின் தோலோடு கூடிய சிறுதுகள்கள்
ஓய்தல் = தளர்தல்
புரவி = குதிரை
மண்டுதல் = விரைந்து செல்லுதல்
படைமுகம் = போர்முகம்
போழ்தல் = பிளத்தல்
நெய்ம்மிதி = நெய்ச்சோறு
கொய்தல் = அறுத்தல்
சுவல் = குதிரையின் கழுத்து மயிர் (பிடரி)
எருத்து = கழுத்து
தண்ணடை = மருதநிலத்தூர்
தார் = மாலை
அணங்கு = தெய்வத்தன்மை, வருத்தம்
கோட்டம் = கோயில்
கலம் = பாத்திரம்
இகழ்தல் = சோர்தல்
நின்றவ்வே = நின்றன

இதன் பொருள்:-

பருத்தியை வேலியாகக் கொண்ட சிறிய ஊரின் மன்னனுடைய குதிரைகள், உழுந்தின் சிறுதுகள்களைத் தின்று வளர்ந்த தளர்ந்த நடையையுடையனவாக இருந்தன. அவை, கடல்நீரைப் பிளந்துகொண்டு விரைந்து செல்லும் தோணியைப் போலப் பகைவரின் படையைப் பிளந்துகொண்டு சென்று போர் செய்தன. நெய்யுடன் கூடிய உணவை உண்டு, ஒழுங்காகக் கத்திரிக்கப்பட்ட பிடரியையுடைய, மருதநிலத்தூர்களையுடைய பெருவேந்தனின் மாலைகள் அணிந்த குதிரைகள் தெய்வத்தன்மை வாய்ந்த முருகன் கோட்டத்தில், கலன்களைத் தொடாத விலக்குடைய மகளிரைப்போல சோர்ந்து ஒதுங்கி ஒளிந்து நின்றன.

பாடலின் பின்னணி:-

ஒருகால், சிற்றரசன் ஒருவனுக்கும் பெருவேந்தன் ஒருவனுக்கும் போர் நடந்தது. அப்போரில், சிற்றரசனின் குதிரைகள் சிறப்பாகப் போர்புரிந்ததாகவும் பெருவேந்தனின் குதிரைகள் போருக்கு அஞ்சி ஓடி ஒளிந்தன என்றும் இப்பாடலில் பொன்முடியார் குறிப்பிடுகிறார்.

சிறப்புக் குறிப்பு:=

நல்ல வளமான உணவு உண்ணாததால் சிற்றூர் மன்னனின் குதிரைகள் தளர்ந்த நடையையையுடையனவாக இருந்தன என்ற கருத்தை “ஓய்நடைப் புரவி” என்பது குறிக்கிறது.

காதலனைப் பிரிந்து வாடும் பெண், உடல் மெலிந்து, பொலிவிழந்து காணப்படும் பொழுது, அவள் தாய் அவளை முருகன் வருத்துவதாகக் கருதி, வெறியாட்டு நடத்தி முருகனை வழிபடுவது சங்க கால மரபு. அம்மரபுக்கேற்ப, அணங்கு என்ற சொல்லுக்கு வருத்தம் என்று ஒருபொருள் இருப்பதால், ”அணங்குடை முருகன் கோட்டம்” என்பதற்கு, ”பெண்களை வருத்தும் முருகனின் கோயில்” என்றும் பொருள் கொள்ளலாம்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on November 25, 2015, 07:22:17 PM
புறநானூறு, 300. (எல்லை எறிந்தோன் தம்பி!)
பாடியவர்: அரிசில் கிழார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: தும்பை.
துறை: தானை மறம்.
===========================================

தோல்தா தோல்தா என்றி ; தோலொடு
துறுகல் மறையினும் உய்குவை போலாய்;
நெருநல் எல்லைநீ எறிந்தோன் தம்பி
அகல்பெய் குன்றியின் சுழலும் கண்ணன்
பேரூர் அட்ட கள்ளிற்கு
ஓர்இல் கோயின் தேருமால் நின்னே

அருஞ்சொற்பொருள்:-

தோல் = கேடயம்
என்றி = என்றாய்
துறுகல் = பாறை
உய்குதல் = தப்பித்தல்
நெருநல் = நேற்று
எல்லை = பகல்வேளை
எறிதல் = கொல்லுதல்
குன்றி = குன்றிமணி
அட்ட = காய்ச்சிய
கோய் = கட்குடம்
தேரும் = தேடும்

இதன் பொருள்:-

“கேடயம் தா; கேடயம் தா” என்று கேட்கிறாயே! கேடயம் மட்டுமல்லாமல் பெரும்பாறையையும் வைத்து உன்னை நீ மறைத்துக் கொண்டாலும் நீ தப்ப மாட்டாய். நேற்று, பகற்பொழுதில் நீ கொன்றவனின் தம்பி, அகலிலிட்ட குன்றிமணிபோல் சுழலும் கண்களோடு, பெரிய ஊரில், காய்ச்சிய கள்ளைப் பெறுவதற்கு, வீட்டில் புகுந்து, கள்ளை முகக்கும் கலயத்தைத் தேடுவதுபோல் உன்னைத் தேடுகிறான்.”

பாடலின் பின்னணி:-

ஒருகால், ஓரூரில் போர் நடைபெற்றது. அப்போரில், வீரன் ஒருவனைப் பகைவரின் படைவீரன் ஒருவன் கொன்றான். பகைவரின் படை வீரன், தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்காகக் “கேடயத்தைக் கொடு” என்று தன்னுடன் இருந்தவர்களைக் கேட்கிறான். அவர்களில் ஒருவன், “கேடயம் மட்டுமல்ல; பெரிய பாறாங்கல்லை வைத்து உன்னை நீ மறைத்துக்கொண்டாலும் உன்னால் தப்ப முடியாது. நேற்று நீ கொன்றாயே, அவன் தம்பி உன்னைத் தேடி வருகிறான்” என்று அவனை எச்சரிக்கிறான். இந்தக் காட்சியைக் கண்ட புலவர் அரிசில் கிழார் அதை இப்பாடலாக அமைத்துள்ளார்.

சிறப்புக் குறிப்பு:-

குன்றிமணிபோல் சுழலும் கண்களையுடையவன் என்பது சிறப்பான உவமை. விளக்கிலிட்ட குன்றிமணிபோல் கண்கள் சுழல்வது மட்டுமல்லாமல், சினத்தால் கண்கள் குன்றிமணியைப்போல் சிவந்திருப்பதையும் அவ்வுவமை குறிப்பிடுகிறது என்று ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் சுட்டிக் காட்டுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on November 25, 2015, 07:32:26 PM
புறநானூறு, 301. (அறிந்தோர் யார்?)
பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: தும்பை.
துறை: தானை மறம்.
===========================================

பல் சான்றீரே! பல் சான்றீரே!
குமரி மகளிர் கூந்தல் புரைய
அமரின் இட்ட அருமுள் வேலிக்
கல்லென் பாசறைப் பல்சான் றீரே!
முரசுமுழங்கு தானைநும் அரசும் ஓம்புமின்;
ஒளிறுஏந்து மருப்பின்நும் களிறும் போற்றுமின்;

எனைநாள் தங்கும்நும் போரே; அனைநாள்
எறியார் எறிதல் யாவணது? எறிந்தோர்
எதிர்சென்று எறிதலும் செல்லான்; அதனால்
அறிந்தோர் யாரவன் கண்ணிய பொருளே
பலம்என்று இகழ்தல் ஓம்புமின்; உதுக்காண்

நிலன்அளப் பன்ன நில்லாக் குறுநெறி
வண்பரிப் புரவிப் பண்புபா ராட்டி
எல்லிடைப் படர்தந் தோனே; கல்லென
வேந்தூர் யானைக்கு அல்லது
ஏந்துவன் போலான்தன் இலங்கிலை வேலே

அருஞ்சொற்பொருள்:-

சான்றோர் = அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்தவர்
புரைய = போல
அமர் = போர்
ஓம்புதல் = பாதுகாத்தல்
மருப்பு = கொம்பு
யாவண் = எவ்விடம்
கண்ணிய = கருதிய
பலம் = படை
உது – சுட்டுச் சொல்
உதுக்காண் – இதோ பாருங்கள்
வண் = மிகுதி
பரிதல் = ஓடுதல்
புரவி = குதிரை
எல் = இரவு
கல் = ஆரவாரக் குறிப்பு
இலங்குதல் = விளங்குதல்
இலைவேல் = இலை வடிவில் அமைந்த வேல்

இதன் பொருள்:-

பல் சான்றீரே=====> போற்றுமின்

பல சான்றோர்களே! பல சான்றோர்களே! மணமாகாத பெண்ணின் கூந்தல் போல, போர் கருதி நடப்பட்ட கடத்தற்கரிய முள்வேலி சூழ்ந்த ஆரவாரம் மிகுந்த பாசறையில் உள்ள பல சான்றோர்களே! முரசு முழங்கும் படையையுடைய உங்கள் அரசனையும் , விளங்குகின்ற கொம்புகளையுடைய உங்கள் யானைகளையும் நன்கு பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

எனைநாள்=====> உதுக்காண்

எத்தனை நாட்கள் உங்கள் போர் இங்கே நடைபெறுமோ அத்தனை நாட்களும் தன்மேல் படையெடுத்துப் போரிடாதவரை போரிடுவது எங்கே உண்டு? தன்மேல் படையெடுத்துப் போரிட்டவர் தகுதியில்லாதவராக இருந்தால் எங்கள் எதிர்சென்று போர்செய்ய மாட்டான். அதனால், அவன் கருதியதை அறிந்தவர் உங்களுள் யார்? உங்கள் படையில் பலர் இருப்பதாக எண்ணிச் செருக்குடன் இகழ்வதைத் தவிர்க. இதோ பாருங்கள்!

நிலன்=====> வேலே

நிலத்தை அடியிட்டு அளப்பதைப்போல குறுகிய நீண்ட வழியிலும் நில்லாது மிக விரைவாக ஒடும் குதிரையின் பண்புகளைப் பாராட்டி, இரவுப்பொழுது வந்ததால், தன் பாசறைக்குச் சென்றிருக்கிறான். உங்கள் வேந்தன் ஏறிவரும் யானையைத் தாக்குவதற்கு அல்லாமல் தன்னுடைய விளங்குகின்ற, இலைவடிவில் அமைந்த வேலை எங்கள் அரசன் தன் கையில் எடுக்க மாட்டான்.

பாடலின் பின்னணி:-

இருவேந்தர்களுக்கிடையே போர் மூண்டது. அப்போரில், பகைவேந்தன் பாசறை அமைத்து மிகுந்த பாதுகாவலோடு இருக்கிறான். ஆனால், அவன் போர்க்களத்திற்குச் சென்று போர்புரியவில்லை. அதைக்கண்ட மற்றொரு வேந்தனின் படைவீரர்கள், பகையரசனின் பாசறையோரைப் பார்த்து, “வீரர்களே! நீங்கள் உங்கள் பாசறையை முள்வேலியிட்டு அதனுள் அரசனையையும் யானைகளையும் நன்கு பாதுகாக்கிறீர்கள். எத்தனை நாட்கள் இவ்வாறு தங்குவதாக இருக்கிறீர்கள்? நீங்கள் எத்தனை நாட்கள் தங்கினாலும், நீங்கள் போர்புரியாவிட்டால் உங்களை நாங்கள் தாக்க மாட்டோம். தனக்கு நிகரற்றவர்களுடன் எங்கள் அரசன் போரிட மாட்டான். எங்கள் அரசனின் கருத்தை அறிந்தவர் உங்களில் உளரோ? எங்கள் அரசனின் கருத்தை அறியாது, உங்கள் படை பெரியது என்று இறுமாப்புடன் இருக்காதீர்கள். எங்கள் அரசன் தன் பாசறைக்குச் சென்றிருக்கிறான். அவன் வேலை எடுத்தால், உங்கள் அரசன் ஊர்ந்து வரும் யானையை நோக்கித்தான் எறிவான்” என்று கூறினான். அவன் கூறியதை இப்பாடலாகப் புலவர் ஆவூர் மூலங்கிழார் இயற்றியுள்ளார்.

சிறப்புக் குறிப்பு:-

“குமரி மகளிர் கூந்தல் புரைய அமரின் இட்ட அருமுள்வேலி” என்பது பிறரால் தீண்டப்படாத குமரிப் பெண்ணின் கூந்தலைப்போல் எவராலும் தாண்டப்படாத அரிய முள்வேலி என்ற கருத்தில் கூறப்பட்டிருக்கிறது. பெண்களின் கூந்தலைத் தொடும் உரிமை அவர்களின் கணவருக்கு மட்டுமே உண்டு என்பது சங்க காலத்தில் நிலவிய கருத்து என்பது புறநானூற்றுப் பாடல் 113- லும், குறுந்தொகைப் பாடல் 225-லும் காணப்படுகிறது.

”அரசும் ஓம்புமின்; களிறும் போற்றுமின்” என்றது போருக்கு வந்த மன்னன் போரிடாமல் பாசறையிலேயே உள்ளான் என்பதை இகழ்ச்சியாகச் சுட்டிக் காட்டுகிறது. போரிட வந்த அரசன்தான் போரைத் துவக்க வேண்டும் என்பது சங்க காலத்துப் போர் மரபு என்பதும் இப்பாடலிலிருந்து தெரிகிறது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on November 25, 2015, 07:34:35 PM
புறநானூறு, 302. (வேலின் அட்ட களிறு?)
பாடியவர்: வெறிபாடிய காமக்காணியார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: தும்பை.
துறை: குதிரை மறம்.
===========================================

வெடிவேய் கொள்வது போல ஓடித்
தாவுபு உகளும் மாவே; பூவே
விளங்கிழை மகளிர் கூந்தற் கொண்ட;
நரந்தப் பல்காழ்க் கோதை சுற்றிய
ஐதுஅமை பாணி வணர்கோட்டுச் சீறியாழ்க்

கைவார் நரம்பின் பாணர்க்கு ஓக்கிய
நிரம்பா இயவின் கரம்பைச் சீறூர்;
நோக்கினர்ச் செகுக்கும் காளை ஊக்கி
வேலின் அட்ட களிறுபெயர்த்து எண்ணின்
விண்ணிவர் விசும்பின் மீனும்
தண்பெயல் உறையும் உறையாற் றாவே

அருஞ்சொற்பொருள்:-

வேய் = மூங்கில்
தாவுபு = தாவும்
மா = குதிரை
உகளுதல் = திரிதல்
விளங்குதல் = ஒளிர்தல்
நரந்தம் = மணம், நரந்தப் பூ
காழ் = முத்துவடம் (வடம்)
கோதை = கூந்தல்
ஐது = மெல்லிது
பாணி = தாளம்
வணர் = வளைவு
கோடு = யாழின் தண்டு
சீறீயாழ் = சிறிய யாழ்
வார்தல் = யாழில் சுட்டு விரலால் செய்யும் தொழில்
ஓக்குதல் = தருதல்
நிரம்பு = மிகுதியாக
இயவு = வழி
நிரம்பா இயவு = குறுகிய வழி
கரம்பை =சாகுபடி செய்யக்கூடிய நிலம்
செகுத்தல் = அழித்தல், கொல்லுதல்
அட்ட = கொன்ற
இவர்தல் = செல்லுதல், உலாவுவுதல்
விசும்பு = ஆகாயம்
தண் = குளிர்ச்சி
பெயல் = மழை
உறை = மழைத்துளி
உறையாற்ற = அளவிட முடியாத

இதன் பொருள்:-

வெடிவேய்=====> சீறியாழ்

வளைத்த மூங்கில் விடுபட்டதும் கிளர்ந்து எழுவது போலக் குதிரைகள் தாவி ஒடித் திரிந்தன. ஒளிரும் அணிகலன்களை அணிந்த விறலியரின் கூந்தலில் நரந்தம் பூவால் பலவடங்களாகத் தொடுக்கப்பட்ட மாலை சுற்றப்பட்டிருந்தது. அந்தக் கூந்தலில் பொன்னாலான பூக்கள் இடம் பெற்றன. மெல்லிய தாளத்திற்கேற்ப தம் கையால் யாழின் வளைந்த தண்டில் உள்ள

கைவார்=====> உறையாற் றாவே

நரம்புகளை மீட்டி இசையெழுப்பும் பாணர்களுக்குக் குறுகிய வழிகளையுடைய, சாகுபடி செய்யக் கூடிய நிலங்கள் உள்ள சிற்றூர்கள் வழங்கப்பட்டன. தன்னைப் பகைத்துப் பார்த்த பகைவரைக் கொல்லும் காளை போன்ற வீரன் ஒருவன் ஊக்கத்தோடு தன் வேலால் கொன்ற களிறுகளை ஒவ்வொன்றாக எண்ணிப் பார்த்தால், மேகங்கள் பரந்து உலவும் ஆகாயத்திலுள்ள விண்மீன்களும் குளிர்ந்த மழைத்துளிகளும் அவற்றை அளவிடற்கு ஆகா. அதாவது, அவன் கொன்ற களிறுகளின் எண்ணிக்கை வானத்தில் உள்ள விண்மீன்களையும் குளிர்ந்த மழைத்துளிகளையும்விட அதிகம்.

பாடலின் பின்னணி:-

குதிரையில் விரைந்து சென்று பகைவர்களையும் அவர்களுடைய யானைகளையும் அழிக்கும் வீரன் ஒருவனின் மறச்செயல்களை, இப்பாடலில் வெறிபாடிய காமக்காணியார் வியந்து பாடுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on November 25, 2015, 07:39:56 PM
புறநானூறு, 303. (மடப்பிடி புலம்ப எறிந்தான்!)
பாடியவர்: எருமை வெளியனார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: தும்பை.
துறை: குதிரை மறம்.
===========================================

நிலம்பிறக் கிடுவது போற்குளம்பு கடையூஉ
உள்ளம் அழிக்கும் கொட்பின் மான்மேல்
எள்ளுநர்ச் செகுக்கும் காளை கூர்த்த
வெந்திறல் எஃகம் நெஞ்சுவடு விளைப்ப
ஆட்டிக் காணிய வருமே; நெருநை,

உரைசால் சிறப்பின் வேந்தர் முன்னர்க்
கரைபொரு முந்நீர்த் திமிலின் போழ்ந்தவர்
கயந்தலை மடப்பிடி புலம்ப
இலங்கு மருப்பு யானை எறிந்த எற்கே

அருஞ்சொற்பொருள்:-

பிறக்கிடுதல் = பின்வாங்குதல் (பின்னிடுதல்)
குளம்பு = விலங்குகளின் பாதம்
கடையூஉ = ஊன்றி
கொட்பு = சுழற்சி
மான் = குதிரை
எள்ளுதல் = இகழ்தல்
செகுத்தல் = அழித்தல்
கூர்த்த = கூரிய
வெப்பு = கொடுமை
திறல் = வலி
எஃகம் = வேல்
வடு = புண்
காணிய = காண்பதற்கு
நெருநை = நேற்று
உரை = புகழ்
சால் = நிறைவு (மிகுதி)
முந்நீர் = கடல்
திமில் = படகு (தோணி)
போழ்தல் = பிளத்தல்
கயம் = பெருமை
இலங்குதல் = விளங்குதல்
மருப்பு = கொம்பு (தந்தம்)
எற்கு = எனக்கு

இதன் பொருள்:-

நேற்று, புகழ் மிக்க வேந்தர்கள் கண்முன்னே, கரையை மோதும் கடலைப் பிளந்துகொண்டு செல்லும் படகைப்போல் பகைவர் படையைப் பிளந்து அவர்களுடைய பெரிய தலையையுடைய இளம் பெண்யானைகள் தனிமையுற்று வருந்துமாறு, விளங்கும் கொம்புகளையுடைய களிறுகளை (ஆண்யானைகளை) நான் கொன்றேன். நிலம் பின்னோக்கிப் போவது போலக் குளம்பை ஊன்றிக் காண்போரைக் கலங்கவைக்கும் குதிரைமேல் வரும் வீரன் தன்னை இகழும் பகைவரைக் கொல்லும் காளை போன்றவன். அவன் கூரிய, கொடிய, வலிய வேலால் எதிர்த்தவர்களின் மார்பைக் குத்திப் புண்படுத்தி அதிரச் செய்பவன். அவன் என்னை நோக்கி வருகின்றான்.

பாடலின் பின்னணி:-

போர்க்களத்தில் வீரன் ஒருவனின் மறச் செயல்களைக் கண்ட புலவர் எருமை வெளியனார், இப்பாடலில் தாம் கண்ட காட்சியைக் குறிப்பிடுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

குதிரை வேகமாகச் செல்லும் பொழுது நிலம் பின்னோக்கிச் செல்வதுபோல் தோன்றுவதை ”நிலம் பிறக்கிடுதல்” என்று புலவர் குறிப்பிடுகிறார்.

“உரை” என்பது புலவரால் பாடப்படும் புகழைக் குறிக்கும் சொல்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on November 25, 2015, 07:45:19 PM
புறநானூறு, 304. (எம்முன் தப்பியோன்!)
பாடியவர்: அரிசில் கிழார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: தும்பை.
துறை: குதிரை மறம்.
===========================================

கொடுங்குழை மகளிர் கோதை சூட்டி
நடுங்குபனிக் களைஇயர் நாரரி பருகி
வளிதொழில் ஒழிக்கும் வண்பரிப் புரவி
பண்ணற்கு விரைதி நீயே; நெருநை
எம்முன் தப்பியோன் தம்பியொடு ஒராங்கு

நாளைச் செய்குவென் அமரெனக் கூறிப்
புன்வயிறு அருத்தலும் செல்லான் பன்மான்
கடவும் என்ப பெரிதே; அதுகேட்டு,
வலம்படு முரசின் வெல்போர் வேந்தன்
இலங்கிரும் பாசறை நடுங்கின்று
இரண்டுஆ காதுஅவன் கூறியது எனவே

அருஞ்சொற்பொருள்:-

கொடு = வளைவு
குழை = காதணி
கொடுங்குழை = வளைந்த காதணி
கோதை = மாலை
பனி = குளிர்
களைதல் = போக்குதல்
நாரரி = நார்+அரி = நாரால் வடிகட்டப்பட்ட
வளி = காற்று
ஒழிக்கும் = குறைக்கும்
வண் = மிகுதி
பரிதல் = ஓடுதல்
புரவி = குதிரை
நெருநை = நேற்று
தப்பியோன் = கொன்றவன்
அருத்தல் = உண்பித்தல்
மான் = குதிரை
கடவும் = செலுத்தும்
வலம் = வெற்றி
இலங்குதல் = விளங்குதல்
இரு = பெரிய
நடுங்கின்று = நடுக்கம் கொண்டது

இதன் பொருள்:-

கொடுங்குழை=====> ஒராங்கு

வளைந்த காதணிகளை அணிந்த மகளிர் மலை சூட்டி உன்னை மகிழ்விக்க, நடுங்கவைக்கும் குளிரைப் போக்குவதற்காக நாரால் வடிகட்டப்பட்ட மதுவை உண்டு, காற்றைவிட விரைவாகச் செல்லும் குதிரைகளைப் போருக்குத் தகுந்தவையாகச் (தயார்) செய்வதற்கு நீ விரைந்து சென்றுகொண்டிருக்கிறாய். ”நேற்று, என் தமையனைக் கொன்றவனோடும் அவன் தம்பியோடும்

நாளை=====> எனவே

நாளை ஒருசேரப் போர்புரிவேன்” என்று கூறி நீ சிறிதளவும் உணவு உண்ணாமல் பல குதிரைகளைப் பெரிதும் ஆராய்கின்றாய் என்று கேள்விப்பட்டு, வெற்றியை உண்டாக்கும் முரசையும் வெல்லும் போரையும் உடைய பகைவேந்தனின் விளங்கும் பெரிய பாசறையில் உள்ளவர்கள் உன் சொல்லும் செயலும் வேறு வேறல்ல என்பதை எண்ணி நடுங்குகின்றார்கள்.

பாடலின் பின்னணி:-

வீரன் ஒருவனின் தமையனைப் பகையரசனின் வீரன் ஒருவன் கொன்றான். கொல்லப்பட்டவனின் தம்பி, கொன்றவனோடும் அவன் தம்பியோடும் போரிடுவதற்காக வருகிறான் என்ற செய்தியைக் கேட்டுப் பகையரசனின் பாசறையில் உள்ளவர்கள் நடுங்குகிறார்கள். இக்காட்சியை, இப்பாடலில் அரிசில் கிழார் குறிப்பிடுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

“செய்குவன் அமர்” என்றது போரில் கொல்வேன் என்ற கருத்தில் கூறப்பட்டுள்ளது. “புன்வயிறு அருத்தல்” என்பதில் உள்ள “புன்” என்ற சொல் ”சிறிதளவு” என்ற பொருளில் வயிற்றைக் குறிக்காமல் உணவைக் குறிக்கிறது. பகை வேந்தனை “வலம்படு முரசின் வெல்போர் வேந்தன்” என்றது இகழ்ச்சிக் குறிப்பு என்று ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் கூறுகிறார். “இரண்டு ஆகாது அவன் கூறியது” என்றது அவனுடைய சொல்லும் செயலும் இரண்டாக வேறுபட்டில்லாமல், அவன் சொன்னதைச் செய்வான் என்ற பொருளில் கூறப்பட்டுள்ளது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on November 25, 2015, 07:50:29 PM
புறநானூறு, 305. (சொல்லோ சிலவே!)
பாடியவர்: மதுரை வேளாசான்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: வாகை.
துறை: பார்ப்பன வாகை.
===========================================

வயலைக் கொடியின் வாடிய மருங்குல்
உயவல் ஊர்திப் பயலைப் பார்ப்பான்
எல்லி வந்து நில்லாது புக்குச்
சொல்லிய சொல்லோ சிலவே; அதற்கே
ஏணியும் சீப்பும் மாற்றி
மாண்வினை யானையும் மணிகளைந் தனவே

அருஞ்சொற்பொருள்:-

வயலை = பசலை
மருங்குல் = இடை
உயவல் = வருத்தம், தளர்வு
பயலை = இளமை
எல்லி = இரவு
சீப்பு = மதில் கதவுக்கு வலியாக உள்வாயிற்படியில் நிலத்தே வீழ விடும் மரம்
மாண் = மாட்சிமையுடைய

இதன் பொருள்:-

பசலைக் கொடி போன்ற இடையையும் தளர்ந்த நடையையும் உடை ய இளம் பார்ப்பனன் ஒருவன் தடையின்றி, இரவில் வந்து அரசனிடம் சொல்லிய சொற்கள் சிலவே. அதன் விளைவாக, மதில்மேல் சாத்திய ஏணியும், கதவுக்கு வலிமை சேர்ப்பதற்காக வைத்திருந்த சீப்பும், சிறப்பாகப் போர்புரியும் யானைகள் அணிந்திருந்த மணிகளும் களையப்பட்டன. அதாவது, பார்ப்பனன் கூறிய சொற்களைக் கேட்டுப் போர் கைவிடப்பட்டது.

பாடலின் பின்னணி:-

இளம் பார்ப்பனன் ஒருவன் ஒருவேந்தனிடம் சென்று ஒரு சில சொற்களே சொல்லி, நடக்கவிருக்கும் போரை நிறுத்தியதை இப்பாடலில் புலவர் மதுரை வேளாசான் கூறுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

“சொல்லிய சொல்லோ சிலவே” என்பது போருக்கான ஏற்பாடுகள் அதிகமாகச் செய்யப்பட்டிருந்தன என்பதையும், அவன் சொல்லிய சொற்கள் சிலவாக இருந்தாலும் அதனால் பெற்ற பயன் அதிகம் என்ற பொருளிலும் கூறப்பட்டுள்ளது. மதில் மீது ஏறுவதற்கு ஏணியும், மதிற் கதவுகளை வலிமைப் படுத்துவதற்கு சீப்பும் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. மணியணிந்த யானை என்பது அரசன் ஏறிச் செல்லும் யானையைக் குறிக்கிறது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on November 25, 2015, 07:52:22 PM
புறநானூறு, 306. (ஒண்ணுதல் அரிவை!)
பாடியவர்: அள்ளூர் நன்முல்லையார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: வாகை.
துறை: மூதின் முல்லை.
===========================================

களிறுபொரக் கலங்கு கழல்முள் வேலி
அரிதுஉண் கூவல் அங்குடிச் சீறூர்
ஒலிமென் கூந்தல் ஒண்ணுதல் அரிவை
நடுகல் கைதொழுது பரவும் ஒடியாது;
விருந்து எதிர் பெறுகதில் யானே; என்ஐயும்

ஒ .. .. .. .. .. .. வேந்தனொடு
நாடுதரு விழுப்பகை எய்துக எனவே

(இப்பாடலில் சில சொற்கள் கிடைக்கவில்லை)

அருஞ்சொற்பொருள்:-

கூவல் = பள்ளம், கிணறு (சிறிதளவே நீருள்ள நீர்த்துறை)
அம்குடி = அழகிய குடி
ஒலித்தல் = தழைத்தல்
பரவல் = வணங்கல், வாழ்த்துதல்
ஒடியாது = இடைவிடாமல், நாள்தோறும்
விழுப்பகை = சிறந்த பகை

இதன் பொருள்:-

யானைகள் படிந்ததால் கலங்கிச் சேறாகி, உண்ணும் நீர் சிறிதளவே உள்ள நீர்த்துறையையும், முள்ளையுடைய கழற்கொடிகளாலாகிய வேலி சூழ்ந்த அழகிய சிறுகுடிகளையுமுடைய சிற்றூரில் வாழும், தழைத்த மெல்லிய கூந்தலையும் ஒளி பொருந்திய நெற்றியையும் உடைய பெண் ஒருத்தி, நாளும் தவறாமல் தன் முன்னோர்களின் நடுகல்லைத் தொழுது, ”நாள்தோறும் விருந்தினர் என் இல்லத்திற்கு வர வேண்டும்; என் கணவனும் …..

அவன் தலைவனாகிய வேந்தனும் பிற நாடுகளை வென்று பொருள் பெற உதவும் பெரும்பகையை அடைவானாகுக” என்று அவள் நடுகல்லை வழிபட்டாள்.

பாடலின் பின்னணி:-

மறக்குலப் பெண் ஒருத்தி நாள்தோறும் தன் முன்னோர்களின் நடுகல்லுக்குச் சென்று, தம் கணவன் போரில் வெற்றி பெறவேண்டும் என்றும், தன் இல்லத்திற்கு நாள் தோறும் விருந்தினர்கள் வரவேண்டும் என்றும், தன் அரசன் போர்புரிவதற்கு பகைவர்கள் இருக்க வேண்டும் என்றும் வழிபட்டாள். அவள் வழிபடுவதைக் கண்ட புலவர் நன்முல்லையார், தான் கண்ட காட்சியை இப்பாடலில் குறிப்பிடுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

தன் இல்லத்திற்கு நாள் தோறும் விருந்தினர் வரவேண்டும் என்று இப்பாடலில் ஒருபெண் வேண்டுவது, விருந்தோம்பல் மிகவும் சிறந்த நற்பண்பாகவும், இல்லற வாழ்க்கையைப் பின்பற்றுபவர்களுக்கு விருந்தோம்பல் இன்றியமையாத ஒழுக்கமாகவும் சங்க காலத்தில் கருதப்பட்டது என்பதைக் காட்டுகிறது. நடுகல்லைத் தொழுதலும் நமது மரபு என்பதற்குச் சான்றும் இப்பாடல் தருகிறது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on November 25, 2015, 07:53:21 PM
புறநானூறு, 307. (யாண்டுளன் கொல்லோ!)
பாடியவர்: தெரியவில்லை.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: தும்பை.
துறை: களிற்றுடனிலை. தன்னால் கொல்லப்பட்ட யானையோடு ஒருவீரன் தானும் வீழ்ந்து மடிதலைக் கூறுதல்.
===========================================

ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ?
குன்றத்து அன்ன களிற்றொடு பட்டோன்
வம்பலன் போலத் தோன்றும் உதுக்காண்
வேனல் வரி அணில் வாலத்து அன்ன
கான ஊகின் கழன்றுகு முதுவீ

அரியல் வான்குழல் சுரியல் தங்க
நீரும் புல்லும் ஈயாது உமணர்
யாரும்இல் ஒருசிறை முடத்தொடு துறந்த
வாழா வான்பகடு ஏய்ப்பத் தெறுவர்
பேருயிர் கொள்ளும் மாதோ அதுகண்டு

வெஞ்சின யானை வேந்தனும் இக்களத்து
எஞ்சலின் சிறந்தது பிறிதொன்று இல்லெனப்
பண்கொளற்கு அருமை நோக்கி
நெஞ்சற வீழ்ந்த புரைமை யோனே

அருஞ்சொற்பொருள்:-

ஆசு = பற்று
யாண்டு = எங்கு, எப்பொழுது
வம்பலன் = புதியவன்
உது = அது (சேய்மைக்கும் அண்மைக்கும் நடுவிலுள்ளதைக் குறிக்கும் ஒரு சுட்டுப் பெயர்)
வேனல் = வேனிற்காலம்
வாலம் = வால்
கானம் = காடு
ஊகம் = ஒருவகைப் புல்
உகுதல் = உதிர்த்தல்
வீ = பூ
அரியல் = அறுத்த வைத்த வரிசை
வான் = பெருமை
சுரியல் = சுருண்ட தலைமயிர்
சிறை = பக்கம்
முடம் = நொண்டி
பகடு = எருது
ஏய்ப்ப = போல
தெறுவர் = பகைவர்
எஞ்சல் = இறத்தல்
பண் = புலவர் பாடும் பாடல்
விழ்தல் = விரும்புதல்
புரைமை = உயர்வு

இதன் பொருள்:-

ஆசாகு=====> அதுகண்டு

வேனிற் காலத்தில் வரிகளையுடைய அணிலின் வாலைப்போல், காட்டு ஊகம் புல்லிலிருந்து உதிர்ந்த பழைய பூக்கள் வரிவரியாகப் பெரிய சுருண்ட தலைமயிரில் தங்குவதால், அவன் அயலான் போலத் தோன்றுகிறான் ( அவனைப் பார்த்தால் அடையாளம் தெரியவில்லை.). அங்கே அவனைப் பார்! மலை போன்ர யானையைக் கொன்று அதனோடு அவனும் இறந்தான். முடமாகியதால் உமணர்களால், நீரும் புல்லும் இல்லாமல் கைவிடப்பட்ட, வாழும் திறனில்லாத எருது தன்னருகே உள்ளதை எல்லாம் தின்று முடிப்பதைப்போல், அவ்வீரன், பகைவர்களின் உயிர்களை எல்லாம் கொன்று அவனும் இறந்தான். அதைக் கண்ட,

வெஞ்சின=====> யோனே

மிகுந்த சினம் கொண்ட யானையையுடைய வேந்தன், இக்களத்தில் இறப்பதைவிடச் சிறந்த செயல் வேறு யாதும் இல்லை என்று கருதியும், புலவர் பாடும் பாடல் பெறுவதர்குரிய அருமையை நினைத்தும், உயிர்மேல் ஆசையின்றிப், போர் செய்து இறக்க விரும்பினான். எமக்குப் பற்றாகிய எம் தலைவன் எங்கு உளணோ?

பாடலின் பின்னணி:-

போர்க்களத்தில் வீரன் ஒருவன் சிறப்பாகப் போர் புரிந்து தன்னைத் தாக்க வந்த களிற்றைக் கொன்று தானும் இறந்தான். அதைக் கண்ட அவனுடைய மன்னன் தானும் அவ்வாறு போர் செய்து இறப்பதே சிறந்தது என்று முடிவு செய்தான். அந்தக் காட்சியை இப்பாடலில் புலவர் கூறுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on November 25, 2015, 07:54:52 PM
புறநானூறு, 308. (நாணின மடப்பிடி!)
பாடியவர்: கோவூர் கிழார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: வாகை.
துறை: மூதின் முல்லை.
===========================================

பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின்
மின்நேர் பச்சை மிஞிற்றுக்குரற் சீறியாழ்
நன்மை நிறைந்த நயவரு பாண!
சீறூர் மன்னன் சிறியிலை எஃகம்
வேந்துஊர் யானை ஏந்துமுகத் ததுவே

வேந்துஉடன்று எறிந்த வேலே என்னை
சாந்தார் அகலம் உளம்கழிந் தன்றே;
உளங்கழி சுடர்ப்படை ஏந்திநம் பெருவிறல்
ஓச்சினன் துரந்த காலை மற்றவன்
புன்தலை மடப்பிடி நாணக்
குஞ்சரம் எல்லாம் புறக்கொடுத் தனவே

அருஞ்சொற்பொருள்:-

வார்த்தல் = ஊற்றுதல்
புரி = முறுக்கு
பச்சை = தோல்
மிஞிறு = வண்டு
குரல் = ஓசை
சீறீயாழ் = சிறிய யாழ்
நயவரு = விரும்பத்தக்க
எஃகம் = வேல், வாள் முதலிய படைக் கருவிகள்
சாந்து = சந்தனம்
தார் = மாலை
அகலம் = மார்பு
விறல் = வலிமை
ஓச்சுதல் = எறிதல்
துரத்தல் = எய்தல்
காலை = பொழுது
புன்தலை = சிறிய தலை
மடம் = இளமை
பிடி = பெண்யானை
குஞ்சரம் = யானை

இதன் பொருள்:-

பொன்வார்ந் தன்ன=====> ஏந்துமுகத் ததுவே

பொன்னால் செய்த கம்பிகளைப்போல் முறுக்கமைந்த நரம்புகளையும் மின்னலைப் போன்ற தோலையும், வண்டிசை போன்ற இசையையுமுடைய சிறிய யாழை இசைத்து, கேட்பவர்களின் நெஞ்சில் விருப்பத்தை எழுப்பும் புலமை நிறைந்த பாணனே! சிற்றூர் மன்னனின் சிறிய இலைகளையுடைய வேல், பெருவேந்தன் ஊர்ந்துவந்த யானையின் உயர்ந்த நெற்றியில் பாய்ந்து தங்கியது.

வேந்துஉடன்று=====> புறக்கொடுத் தனவே

பெருவேந்தன் சினத்துடன் எறிந்த வேல் என் கணவனுடைய சந்தனம் பூசிய, மாலைகள் அணிந்த மார்பை ஊடுருவியது. மார்பிலே பதிந்த ஒளியுடன் கூடிய விளங்கும் வேலைப் பிடுங்கிக் கையில் ஏந்தி மிக்க வலிமையுடைய நம் தலைவன் எறிந்தான். அதைக் கண்ட சிறிய தலையையுடைய இளம் பெண்யானைகள் நாணுமாறு பகைவனாகிய பெருவேந்தனின் களிறுகளெல்லாம் புறங்கொடுத்து ஓடின.

பாடலின் பின்னணி:-

ஒருகால் ஒருசிற்றூர் மன்னனுக்கும் பெருவேந்தனுக்கும் இடையே போர் மூண்டது. அப்போரில், சிற்றூர் மன்னன் மிகவும் வீரத்தோடு போர் புரிந்ததைப் புலவர் கோவூர் கிழார், சிற்றூர் வீரனின் மனைவியின் கூற்றாக இப்பாடலை இயற்றியுள்ளார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on November 25, 2015, 07:56:17 PM
புறநானூறு, 309. (என்னைகண் அதுவே!)
பாடியவர்: மதுரை இளங்கண்ணிக் கோசிகனார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: தும்பை.
துறை: நூழிலாட்டு.
===========================================

இரும்புமுகம் சிதைய நூறி ஒன்னார்
இருஞ்சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதே;
நல்அரா உறையும் புற்றம் போலவும்
கொல்ஏறு திரிதரு மன்றம் போலவும்
மாற்றருந் துப்பின் மாற்றோர் பாசறை
உளன்என வெரூஉம் ஓர்ஒளி
வலன்உயர் நெடுவேல் என்னைகண் ணதுவே

அருஞ்சொற்பொருள்:-

இரும்பு = படைக்கலம்
முகம் = நுனி
நூறி = அழித்து
ஒன்னார் = பகைவர்
இரு = பெரிய
சமம் = போர்
கடத்தல் = வெல்லுதல்
ஏனோர் = மற்றவர்
அரா = பாம்பு
மாற்று = ஒழிக்கை
மாற்றுதல் = அழித்தல்
துப்பு = வலிமை
மாற்றார் = பகைவர்
வெருஉ = வெருவு = அச்சம்
ஓர் = ஒப்பற்ற
ஒளி = புகழ்
வலன் = வெற்றி
என்னை = என்+ஐ = என் தலைவன்
கண் = இடம்

இதன் பொருள்:-

இரும்பாலாகிய வேல், வாள் முதலிய படைக்கருவிகளின் நுனி மழுங்கி, ஒடியுமாறு பகைவரைக் கொன்று அவர்களைப் போரில் வெல்லுதல் எல்லா வீரர்களுக்கும் எளிதாகும். நல்லபாம்பு வாழும் புற்றுப் போலவும், கண்டாரைக் கொல்லும் காளை திரியும் பொதுவிடம் போலவும், வெல்லுதற்கு அரிய வலிமையுடைய பகைவர், இவன் பாசறையில் உள்ளான் எனக் கேட்டு நெஞ்சம் நடுங்கும்படியான சிறந்த புகழ், வெற்றி மிக்க நெடிய வேலினையுடைய நம் தலைவனிடம் மட்டுமே உள்ளது.

பாடலின் பின்னணி:-

ஒருவீரன் போரில் பகைவர் பலரையும், களிறுகள் பலவற்றையும் கொன்று குவிப்பது ஒரு அரிய செயல் அன்று. அது வீரர் பலருக்கும் பொதுவான செயலே. தன் பெயரைக் கேட்டவுடன் பகைவர்கள் உள்ளத்தில் அச்சத்தை உண்டாக்குபவன்தான் சிறந்த வீரன் என்ற கருத்தைப் புலவர் கோசிகனார் இப்பாடலில் கூறுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

இரும்பு என்றது ஆகுபெயராகி, இரும்பால் செய்யப்பட்ட வேல், வாள் முதலிய படைக்கருவிகளைக் குறிக்கின்றது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on November 25, 2015, 07:57:50 PM
புறநானூறு, 310. (உரவோர் மகனே!)
பாடியவர்: பொன்முடியார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: தும்பை.
துறை: நூழிலாட்டு.
===========================================

பால்கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின்
செறாஅது ஓச்சிய சிறுகோல் அஞ்சியொடு
உயவொடு வருந்தும் மனனே! இனியே
புகர்நிறங் கொண்ட களிறட்டு ஆனான்,
முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே;
உன்னிலன் என்னும் புண்ஒன்று அம்பு
மான்உளை அன்ன குடுமித்
தோல்மிசைக் கிடந்த புல்அண லோனே

அருஞ்சொற்பொருள்:-

மடுத்தல் = ஊட்டல்
செறுதல் = சினத்தல்
ஓச்சுதல் = ஓங்குதல்
அஞ்சி = அஞ்சியவன்
உயவு = கவலை
மனனே = மனமே
புகர் = புள்ளி
நிறம் = தோல்
ஆனான் = அமையான்
உன்னிலென் = அறியேன், நினையேன்
மான் = குதிரை
உளை = பிடரிமயிர்
தோல் = கேடகம்
அணல் = தாடி

இதன் பொருள்:-

இளையோனாக இருந்தபொழுது பாலை ஊட்டினால் இவன் உண்ணமாட்டன். அதனால், சினம் கொள்ளாமல் சினம் கொண்டதுபோல் நடித்து ஓங்கிய சிறுகோலுக்கு அஞ்சிப் பால் உண்டவன் பொருட்டு வருந்தும் மனமே! இவன் முன்னாள் போரில் இறந்த வீரனின் மகன் என்பதற்கேற்ப, புள்ளிகள் பொருந்திய நெற்றியையுடைய யானைகளைக் கொன்றும் அவ்வளவில் நில்லாதவனாக, மார்பில் புண்படுத்தி ஊன்றி நிற்கும் அம்பைச் சுட்டிக் காட்டியபொழுது, ‘அதை நான் அறியேன்’ என்று கூறினான். அவன் இப்பொழுது குதிரையின் பிடரிமயிர் போன்ற குடுமியுடன், குறுந்தாடியுடன் கேடயத்தின்மேல் விழுந்து கிடக்கிறான்.

பாடலின் பின்னணி:-

இரு வேந்தர்களிடையே போர் மூண்டது. அப்போரில், முன்னாள் கடுமையாகப் போர்புரிந்து இறந்த வீரன் ஒருவனுடய மகன் பகைவர்களின் யானைகள் பலவற்றைக் கொன்றான். அப்போது, பகைவர் எறிந்த அம்பு ஒன்று அவன் மார்பில் பாய்ந்து தங்கியது. ஆனால், அவன் அதைப் பொருட்படுத்தாது போரைத் தொடர்ந்து நடத்தி இறந்தான். அதைக் கண்ட அவன் தாய், அவன் சிறுவனாக இருந்த போது பால் குடிக்க மறுத்ததையும் அதற்காக அவள் ஒரு கோலை எடுத்து அவனை வெருட்டியதற்கு அவன் அஞ்சியதையும் இப்போது நெஞ்சில் அம்பு தைத்தாலும் அஞ்சாமல் போர் புரிந்ததையும் எண்ணிப் பார்த்து வியப்பதை பொன்முடியார் இப்பாடலில் கூறுகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on November 25, 2015, 07:59:05 PM
புறநானூறு, 311. (சால்பு உடையோனே!)
பாடியவர்: ஔவையார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: தும்பை.
துறை: பாண்பாட்டு.
===========================================

களர்ப்படு கூவல் தோண்டி நாளும்
புலைத்தி கழீஇய தூவெள் அறுவை
தாதுஎரு மறுகின் மாசுண இருந்து
பலர்குறை செய்த மலர்தார் அண்ணற்கு
ஒருவரும் இல்லை மாதோ செருவத்துச்
சிறப்புடைச் செங்கண் புகைய வோர்
தோல்கொண்டு மறைக்கும் சால்புடை யோனே

அருஞ்சொற்பொருள்:-

களர் = களர்நிலம்
கூவல் = கிணறு, கேணி
புலைத்தி = வண்ணாத்தி
கழீஇய = வெளுத்த
தூ = தூய்மை
அறுவை = ஆடை
மறுகு = தெரு
மாசுண = மாசு+உண = அழுக்குப் பற்ற
குறை = இன்றியமையாப் பொருள்
தார் = மாலை
மாது, ஓ – அசைச் சொற்கள்
செரு = போர்
தோல் = கேடகம்
சால்பு = நிறைவு

இதன் பொருள்:-

களர்நிலத்தில் உள்ள கிணற்றைத் தோண்டி, நாள்தோறும் வண்ணாத்தி துவைத்து வெளுத்த தூய ஆடை பூக்களின் தாதுக்கள் நிறைந்த தெருவில் எழும் அழுக்குப் படிய இருந்து, பலர்க்கும் இன்றியமையாத செயல்களைச் செய்து உதவிய, மலர்மாலை அணிந்த தலைவனுக்குத் துணையாகப் போர்க்களத்தில் ஒருவரும் இல்லை. அவன் தன்னுடைய சிறப்பு மிகுந்த கண்கள் சிவந்து புகையெழ நோக்கி, ஒரு கேடகத்தைக் கொண்டே பகைவர் எறியும் படைக்கருவிகளைத் தடுக்கும் வலிமை நிறைந்தவனாக உள்ளான்.

பாடலின் பின்னணி:-

பலர்க்கும் பலவகையிலும் உதவியாக இருந்த வீரன் ஒருவன் பகைவர்கள் எறிந்த படைகள் அனைத்தையும் தன் ஒரு கேடகத்தையே கொண்டு தடுத்து வென்றான். அவன் போர் புரியும் ஆற்றலைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்த ஒளவையார் இப்பாடலில் அவனைப் புகழ்கிறார்.

சிறப்புக் குறிப்பு:-

போரில் இறந்த வீரர்க்குப் பாணர் சாப்பண் பாடித் தம் கடன் கழித்தலைப் பற்றிக் கூறும் பாடல்கள் பாண்பாட்டு என்னும் துறையில் அடங்கும். இப்பாடலில் கூறப்படும் வீரன் இறந்ததாகத் தெரியவில்லை. ஆகவே, இப்பாடல் பாண்பாட்டு என்னும் துறையைச் சார்ந்ததா என்பது ஆய்வுக்கு உரியது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on November 25, 2015, 08:00:34 PM
புறநானூறு, 312. (காளைக்குக் கடனே!)
பாடியவர்: பொன்முடியார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: வாகை.
துறை: மூதின் முல்லை.
===========================================

ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே

அருஞ்சொற்பொருள்:-

புறந்தருதல் = பாதுகாத்தல்
கடன் = கடமை
தலை = இடம், முதன்மை
சான்றோன் = அறிஞன், வீரன்
வடித்தல் = உருவாக்கல்
நன்மை = மிகுதி
நடை = செல்வம், ஒழுக்கம், நடத்தை
நல்கல் = அளித்தல்
ஒளிறுதல் = விளங்குதல்
சமம் = போர்
முருக்குதல் = அழித்தல், முறித்தல்
எறிதல் = வெல்லுதல்
பெயர்தல் = மீளல்

இதன் பொருள்:-

மகனைப் பெற்று வளர்த்துப் பாதுகாத்தல் என் (தாயின்) தலையாய கடமை. அவனை நற்பண்புகள் நிறையப் பெற்றவனாக்குதல் அவன் தந்தையின் கடமை. அவனுக்குத் தேவையான வேலை (படைக் கருவிகளை) உருவாக்கிக் கொடுத்தல் கொல்லரின் கடமை. அவனுக்கு நல்லொழுக்கத்தைக் கற்பிப்பது அரசனின் கடமை. ஒளியுடன் விளங்கும் வாளைக் கையில் ஏந்திப் போர்க்களத்தில் பகைவரின் யானைகளைக் கொன்று வெற்றியுடன் மீள்வது அம்மகனின் கடமை.

பாடலின் பின்னணி:-

இப்பாடலில், பொன்முடியார் ஒரு ஆண்மகனின் கடமையையும், அவனுடைய தாய், தந்தை, கொல்லர், அரசன் ஆகியோரின் கடமைகளையும் குறிப்பிடுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

’சான்றோன்’ என்ற சொல்லுக்கு ‘வீரன்’ என்றும் பொருள் கொள்ளலாம். ஆகவே, தன் மகனை வீரனாக்குவது தந்தையின் கடமை என்றும் பொன்முடியார் கூறுவதுபோல் தோன்றுகிறது. அவனுக்கு வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லரின் கடமை. போருக்குச் சென்று பகைவர்களின் யானைகளைக் கொன்று வெற்றியுடன் திரும்பி வருதல் அவ்விளைஞனின் கடமையாகும். ‘நடை’ என்ற சொல்லுக்கு ‘செல்வம்’ என்றும் பொருள் கொள்ளலாம். ஆகவே, யானைகளைக் கொன்ற இளைஞனுக்குப் பரிசாகச் செல்வம் அளிப்பது வேந்தனின் கடமை என்றும் பொருள் கூறலாம். ‘நன்னடை’ என்பதின் பாடபேதமாக “தண்ணடை” என்று சிலநூல்களில் காணப்படுகிறது. ‘தண்ணடை’ என்பதற்கு ‘மருத நிலத்து ஊர்’ என்று பொருள். சிறப்பாகப் போர் புரிந்த வீரர்களுக்கு அரசர்கள் ’தண்ணடை’ அளித்ததாக பாடல் 297-இல் காணலாம்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on November 25, 2015, 08:02:49 PM
புறநானூறு, 313. (வேண்டினும் கடவன்!)
பாடியவர்: மாங்குடி கிழார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: வாகை.
துறை: வல்லாண் முல்லை.
===========================================

அத்தம் நண்ணிய நாடுகெழு பெருவிறல்
கைப்பொருள் யாதொன்றும் இலனே; நச்சிக்
காணிய சென்ற இரவன் மாக்கள்
களிறொடு நெடுந்தேர் வேண்டினும் கடவன்;
உப்பொய் சாகாட்டு உமணர் காட்ட
கழிமுரி குன்றத்து அற்றே
எள்ளமைவு இன்றவன் உள்ளிய பொருளே

அருஞ்சொற்பொருள்:-

அத்தம் = வழி
நண்ணுதல் = நெருங்குதல்
கெழு = பொருந்திய
விறல் = வலிமை
நச்சி = விரும்பி
கடவன் = கடப்பாடுடையவன்
ஒய்தல் = இழுத்தல், செலுத்துதல்
சாகாடு = வண்டி
உமணர் = உப்பு வணிகர்
முரிதல் = சூழ்தல்
கழிமுரி = கழிநீர் மோதும்
எள்ளுதல் = இகழ்தல்
எள்ளமைவு = இகழும் தன்மை

இதன் பொருள்:-

எங்கள் தலைவன் பல வழிகள் உள்ள நாட்டையுடைய பெரிய வலிமை மிக்கவன். அவன் கையில் பொருள் யாதொன்றும் இல்லை. ஆனால், பொருளை விரும்பி அவனைக் காணச் சென்ற இரவலர், யானைகளையும் தேர்களையும் விரும்பிக் கேட்டாலும் அவன் தரும் கடப்பாடுடையவன். உப்பை வண்டிகளில் சுமந்து செல்லும் உப்பு வணிகர்களின் செல்வம் உப்பளங்களில் குன்று போல் குவிந்திருக்கும் உப்புதான். அது உப்பங்கழியிலுள்ள நீரால் சூழப்பட்டுள்ளது. குன்றுபோல் குவிந்திருந்தாலும், உப்பு வணிகர்கள் அதை வண்டிகளில் சுமந்து செல்லச் செல்ல அது குறையும் தன்மை உடையது; கழி நீரால் கரைக்கவும் படலாம். உப்பளங்கள் கடலால் சூழப்பட்டிருப்பதால் உமணர்கள் மீண்டும் உப்பை விளைவிக்க முடியும். இத்தானைத் தலைவனின் செல்வமும் அத்தகையதுதான். செல்வமிருந்தால் இரவலர்க்கு அளிப்பதால் அவன் செல்வம் குறையும் தன்மையது. செல்வம் குறைந்தால், பகைவருடன் போரிட்டு மீண்டும் பொருள் சேகரித்து, அவன் இரவலர்க்கு அளிப்பவன். ஆகவே, உமணர்களின் செல்வமாகிய குன்றுபோல் குவிந்து கிடக்கும் உப்பும் இத்தானைத் தலைவனின் செல்வமும் ஒரே தன்மையதுதான். அதனால், அவனுடைய செல்வம் இகழ்ச்சிக்கு உரியது அல்ல.

பாடலின் பின்னணி:-

தானைத்தலைவன் ஒருவன் மிகுந்த செல்வம் இல்லாதவனாக இருந்தாலும் தன்னை நாடி வந்தோர்க்கெல்லாம் களிறுகளையும் தேர்களையும் வழங்கினான். அவனைப் பற்றி வீரர்கள் சிலர் உரையாடிக் கொண்டிருந்ததைக் கேட்ட புலவர் மாங்குடி கிழார் இப்பாடலை இயற்றியுள்ளார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on November 25, 2015, 08:04:32 PM
புறநானூறு, 314. (மனைக்கு விளக்கு!)
பாடியவர்: ஐயூர் முடவனார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: வாகை.
துறை: வல்லாண் முல்லை.
===========================================

மனைக்கு விளக்காகிய வாள்நுதல் கணவன்
முனைக்கு வரம்பாகிய வென்வேல் நெடுந்தகை
நடுகல் பிறங்கிய உவல்இடு பறந்தலைப்
புன்காழ் நெல்லி வன்புலச் சீறூர்க்
குடியும் மன்னுந் தானே; கொடியெடுத்து
நிறையழிந்து எழுதரு தானைக்குச்
சிறையும் தானேதன் இறைவிழு முறினே

அருஞ்சொற்பொருள்:-

வாள் = ஒளி
நுதல் = நெற்றி
முனை = போர்க்களம்
வரம்பு = எல்லை, ஒழுங்கு
பிறங்குதல் = நிறைதல்
உவல் = தழை
பறந்தலை = பாழிடம்
காழ் = விதை
வன்புலம் = புன்செய் நிலம்
மன்னும் – அசைநிலை
நிறை = கட்டு
சிறை = அணை
விழும் = விழுமம் (துன்பம்)

இதன் பொருள்:-

எம் தலைவன், இல்லத்திற்கு விளக்குபோல் விளங்கும் ஒளி பொருந்திய நெற்றியையுடைய பெண்ணின் கணவன். அவன், போரில் தன் படைக்கு எல்லையாக நின்று காக்கும் வெற்றி பொருந்திய வேலையுடைய நெடுந்தகை. நடுகற்களும் தழைகளும் நிறைந்த பாழிடங்களும், சிறிய கொட்டைகளையுடைய நெல்லி மரங்கள் உள்ள சிறிய ஊரில் வாழும் குடிமக்களில் அவனும் ஒருவன். தனது அரசனுக்குத் துன்பம் வந்தால், தானே கொடியை உயர்த்திக் கட்டுக்கடங்காது வரும் படையை அணைபோலத் தடுத்து நிறுத்துபவனும் அவனே.

பாடலின் பின்னணி:-

போரில் பல வெற்றிகளைப் பெற்ற தலைவன் ஒருவனைப் பற்றி அவனுடைய வீரர்கள் உரையாடிக் கொண்டிருந்ததைக் கேட்ட ஐயூர் முடவனார் இப்பாடலில் தாம் கேட்ட செய்திகளைத் தொகுத்து வழங்குகிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on November 25, 2015, 08:05:36 PM
புறநானூறு, 315. (இல்லிறைச் செரீஇய ஞெலிகோல்!)
பாடியவர்: ஔவையார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: வாகை.
துறை: வல்லாண் முல்லை.
===========================================

உடையன் ஆயின் உண்ணவும் வல்லன்;
கடவர் மீதும் இரப்போர்க்கு ஈயும்;
மடவர் மகிழ்துணை நெடுமான் அஞ்சி;
இல்லிறைச் செரீஇய ஞெலிகோல் போலத்
தோன்றாது இருக்கவும் வல்லன்; மற்றதன்
கான்றுபடு கனைஎரி போலத்
தோன்றவும் வல்லன்தான் தோன்றுங் காலே

அருஞ்சொற்பொருள்:-

கடவர் = தரக் கடன்பட்டவர்
மடவர் = அறிவு முற்றாத இளைஞர்
செரீஇய= செருகிய
ஞெலிகோல் = தீக்கடை கோல்
கான்றல் = வெளிப்படுத்துதல்
சுனை = நீரூற்று
சுனைஎரி = பற்றி எரியும் தீ

இதன் பொருள்:-

அதியமான் நெடுமான் அஞ்சி மிகுதியாக உண்வு உடையவனாயின் பரிசிலர்க்குக் கொடுத்து எஞ்சியதை உண்ணுபவன். (உணவு குறைவாக இருப்பின் உள்ளதைப் பரிசிலர்க்கு அளித்துத் தான் உண்ணாமலும் இருப்பான்.) தான் யாருக்கெல்லாம் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறனோ அவர்களுக்குக் கொடுப்பதைவிட இரவலர்க்கு அதிகமாகக் கொடுப்பான். அறியாச் சிறுவரோடும் மகிழ்ந்து அவர்களுக்குத் துணையாக இருப்பான். அவன் வீட்டு இறைப்பில் செருகப்பட்ட தீக்கடை கோல் போல் தன் ஆற்றல் வெளியே தோன்றாது ஒடுங்கி இருப்பான்; தன் ஆற்றல் வெளிப்படத் தோன்ற வேண்டுமிடத்து, தீக்கடை கோலால் கடையப்பட்ட சுடர்த்தீப் போல வெளிப்படத் தோன்றவும் செய்வான்.

பாடலின் பின்னணி:-

அதியமான் நெடுமான் அஞ்சியின் அவைக்களப் புலவராகிய ஒளவையார், இப்பாடலில் அதியமானின் குண நலன்களை எடுத்துரைக்கிறார்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on November 25, 2015, 08:06:43 PM
புறநானூறு, 316. (சீறியாழ் பணையம்!)
பாடியவர்: மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: வாகை.
துறை: வல்லாண் முல்லை.
===========================================

கள்ளின் வாழ்த்திக் கள்ளின் வாழ்த்திக்
காட்டொடு மிடைந்த சீயா முன்றில்
நாட்செருக்கு அனந்தர்த் துஞ்சு வோனே!
அவன்எம் இறைவன்; யாம்அவன் பாணர்;
நெருநை வந்த விருந்திற்கு மற்றுத்தன்

இரும்புடைப் பழவாள் வைத்தனன்; இன்றுஇக்
கருங்கோட்டுச் சீறியாழ் பணையம்; இதுகொண்டு
ஈவது இலாளன் என்னாது நீயும்
வள்ளி மருங்குல் வயங்குஇழை அணியக்
கள்ளுடைக் கலத்தேம் யாம்மகிழ் தூங்கச்

சென்றுவாய் சிவந்துமேல் வருக
சிறுகண் யானை வேந்து விழுமுறவே

அருஞ்சொற்பொருள்:-

காட்டு = செத்தை, சருகு
மிடைதல் = செறிதல், கலத்தல்
சீத்தல் = தூய்மை ஆக்குதல்
சீயா = தூய்மை செய்யப்படாத
முன்றில் = முற்றம்
செருக்கு = மயக்கம்
அனந்தர் = மயங்கிய நிலை
துஞ்சுதல் = தூங்குதல்
நெருநை = நெருநல் = நேற்று
இரு = பெரிய
புடை = பக்கம்
பணையம் = பந்தயப் பொருள் (பணயம்)
வள்ளி = ஒரு கொடி
மருங்குல் = இடை
வயங்கல் = ஒளி செய்தல்
இழை = அணிகலன்
விழுமுறுதல் = துன்புறுதல்

இதன் பொருள்:-

கள்ளின்=====> மற்றுத்தன்

சிறிய கண்களையுடைய யானையையுடைய பகைவேந்தன் போரில் விழுந்து இறந்தான். அதனால், கள்ளை வாழ்த்தி, செத்தைகள் நிறைந்த , தூய்மை செய்யப்படாத முற்றத்தில் விடியற் காலத்தில் உண்ட கள்ளின் மயக்கத்தால் உறங்குகின்றானே அவன் எம் இறைவன் (அரசன்). நாங்கள் அவனுடைய பாணர்கள். நேற்று, தன்னிடம் வந்த விருந்தினரைப் பேணுதற்கு

இரும்புடை=====> விழுமுறவே

தன் பெரிய பழமையன வாளை ஈடு வைத்தான். இது உண்மை என்பதற்காக , நாங்கள் எங்களுடைய கரிய தண்டையுடைய சிறிய யாழைப் பணையமாகக் வைக்கின்றோம். அவன் ஒன்றும் இல்லாதவன் என்று எண்ணாமல், நீயும் கொடிபோன்ற இடையையுடைய உன் பாடினியும் அவனிடம் சென்று அவன் அளிக்கும் விளங்கும் அணிகலன்களை அணிந்து வாய் சிவக்குமாறு விருந்து உண்டு வருக. கள்ளையுடைய கலங்களையுடைய நாங்கள் மகிழ்ச்சி கொள்வோம்.

பாடலின் பின்னணி:-

ஒருகால், ஓரூரில் ஒர் அரசன் மற்றொரு அரசனுடன் போரிட்டான். போரில் பகையரசன் இறந்தான். வெற்றிபெற்ற அரசன் விடியற்காலைவரை கள்ளுண்டு மயங்கிக் கிடந்தான். அவனிடம் பரிசில் பெற்றுவரும் பாணர்களின் தலைவன், அவன் வரும்வழியில் வேறு சில பாணர்களைக் கண்டான். அப்பாணர் தலைவன் வழியில் வந்த பாணர்களைக் கள்ளுண்டு மயங்கிக் கிடக்கும் அரசனிடம் ஆற்றுப்படுத்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on November 25, 2015, 08:08:32 PM
புறநானூறு, 317. (யாதுண்டாயினும் கொடுமின்!)
பாடியவர்: வேம்பற்றூர்க் குமரனார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: வாகை.
துறை: வல்லாண் முல்லை.
===========================================

வென்வேல் .. .. .. .. .. .. நது
முன்றில் கிடந்த பெருங்களி யாளற்கு
அதளுண் டாயினும் பாய்உண்டு ஆயினும்
யாதுண்டு ஆயினும் கொடுமின் வல்லே;
வேட்கை மீளப .. .. .. .. .. ..
.. .. .. .. கும், எமக்கும், பிறர்க்கும்,
யார்க்கும் ஈய்ந்து துயில்ஏற் பினனே

**(பாடலின் சில பகுதிகள் கிடைக்கப்பெறவில்லை)

அருஞ்சொற்பொருள்:-

வென்வேல் = வெற்றி பயக்கும் வேல்
முன்றில் = முற்றம்
களியாளன் = களிப்பேறியவன்
அதள் = தோல்
பாய் = ஓலையால் செய்யப்பட்ட பாய்
வல் = விரைவு
துயில் = தூக்கம்

இதன் பொருள்:-

வெற்றி பயக்கும் வேலோடு வந்து, முற்றத்தில் மிகுந்த களிப்புடன் கிடக்கும் இவனுக்கு, படுப்பதற்குத் தோல், பாய் அல்லது வேறு எது இருந்தாலும் விரைந்து கொடுப்பீர்களாக. இவன் எங்களுக்கும், மற்றவர்களுக்கும், யாவருக்கும் கொடை புரிந்த பின்னர் உறக்கத்தை மேற்கொள்பவன். இவன் வெறுந்தரையில் கிடக்கிறானே!

பாடலின் பின்னணி:-

போரில் வெற்றி பெற்ற தலைவன் ஒருவனின் வள்ளல் தன்மையை இப்பாடலில் புலவர் வேம்பற்றுர்க் குமரனார் குறிப்பிடுகிறார். இப்பாடலில் சில வரிகள் சிதைந்துள்ளன.

சிறப்புக் குறிப்பு:-

தலைவன் பாணர்களுக்கும், இரவலர்களுக்கும், மற்றவர்களுக்கும் பொருளும் உணவும் பெருமளவில் அளித்து அவர்களை மகிழ்வித்து, அவர்கள் உறங்கிய பின்னர் உறங்கும் குணமுடையவன் என்பதையும் அத்தகையவன் முற்றத்தில் வெறுந்தரையில் மயங்கிக் கிடப்பதைக் கண்ட பாணர் (அல்லது இரவலர்கள்) வருந்துவதையும் இப்பாடலில் காண்கிறோம்.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on November 25, 2015, 08:09:32 PM
புறநானூறு, 318. (பசித்தன்று அம்ம பெருந்தகை ஊரே!)
பாடியவர்: பெருங்குன்றூர் கிழார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: வாகை.
துறை: வல்லாண் முல்லை.
===========================================

கொய்யடகு வாடத், தருவிறகு உணங்க
மயில் அஞ்சாயல் மாஅ யோளொடு
பசித்தன்று அம்ம பெருந்தகை ஊரே;
மனையுறை குரீஇக் கறையணற் சேவல்
பாணர் நரம்பின் சுகிரொடு வயமான்

குரல்செய் பீலியின் இழைத்த குடம்பைப்
பெருஞ்செய் நெல்லின் அரிசி ஆர்ந்துதன்
புன்புறப் பெடையடு வதியும்
யாணர்த்து ஆகும் வேந்துவிழு முறினே

அருஞ்சொற்பொருள்:-

கொய்தல் = பறித்தல்
அடகு = கீரை
உணங்கல் = காய்தல்
சாயல் = அழகு
மாயோள் = மாமை நிறமுடையவள் (கரிய நிறமுடையவள்)
பசித்தன்று = பசித்தது
அம்ம – அசைச் சொல்
உறைதல் = வசித்தல்
குரீஇ = குருவி
கறை = கறுப்பு நிறம்
அணல் = கழுத்து
கறைஅணல் = கரிய கழுத்து
சுகிர்தல் = கிழித்தல், வடித்தல், வகிர்தல்
வயமான் = சிங்கம்
குரல் செய்தல் = இறுமாத்தல்
பீலி = மயிர்
குடம்பை = கூடு
செய் = வயல்
ஆர்தல் = உண்ணுதல்
பெடை = பெண்பறவை
வதித்தல் = தங்குதல், வாழ்தல்
யாணர் = புதுவருவாய், செல்வம்
விழுமுறுதல் = துன்புறுதல்

இதன் பொருள்:-

கொய்யடகு=====> வயமான்

வேந்தனுக்குத் துன்பம் வந்தால், இவ்வூர்த் தலைவனின் வீட்டில், பறித்த கீரை சமைக்கப் படாமல் வாடி வதங்கும்; கொண்டு வந்த விறகு உலர்ந்து கெடும்; அவனுடைய மயில் போன்ற சாயலும், கரிய நிறமும் உடைய மனைவி பசியால் வாடுவாள். அவள் மட்டுமல்லாமல், இப்பெருந்தகையின் ஊரே பசியால் வாடும். வேந்தனுக்குத் துன்பம் இல்லையானால், இவ்வூர் புதுவருவாய்உடையதாக இருக்கும். இந்த வளமான ஊரில், வீடுகளின் இறைப்பில் உள்ள பெண்குருவியின் துணையாகிய கரிய கழுத்தையுடைய ஆண்குருவி, பாணர்களுடைய யாழ் நரம்பின் துண்டுகளுடன், வலிமிக்க, இறுமாப்புடைய சிங்கத்தின்

குரல்செய்=====> முறினே

உதிர்ந்த பிடரி மயிரும் சேர்த்துச் செய்த கூட்டில், பெரிய வயலில் விளைந்த நெல்லின் அரிசியைக் கொண்டுவந்து தின்று தன் சிறிய முதுகுடைய பெட்டையோடு வாழும்.

பாடலின் பின்னணி:-

குடக்கோ இளஞ்சேரல், உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி ஆகியோரைப் பாடிப் பெருஞ்செல்வம் பெற்ற சிறப்பிற்குரியவர் புலவர் பெருங்குன்றூர் கிழார். வையாவிக் கோப்பெரும் பேகன் அவன் மனைவியைத் துறந்து மற்றொருத்தியோடு வாழ்ந்த பொழுது, இவர்அவனை அவன் மனைவியுடன் வாழுமாறு அறிவுரை கூறியவர். ஒருநாள், தன் வேந்தன் பொருட்டுப் பெரும்போர் புரிந்து அதில் வெற்றி பெற்ற தலைவன் ஒருவனை இவர் கண்டார். ’அவ்வேந்தன், போரில் துன்புற்றிருப்பானாயின், இத்தலைவனுக்கு வேந்தனிடம் இருந்து செல்வம் கிடைத்திருக்காது. இத்தலைவனுடைய ஊர் பசியால் வாடும்.’ என்ற கருத்தை இப்பாடலில் புலவர் பெருங்குன்றூர் கிழார் குறிப்பிடுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

சிங்கம் காட்டில் வாழும் விலங்காகையால், முல்லை நில வளம் குறிப்பிடப்பட்டது. நெல்விளையும் பெரிய வயல்கள் உள்ளதால் அவ்வூரின் மருதநில வளம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண்குருவி பாணர்களின் யாழின் நரம்புத் துண்டுகளோடு சிங்கத்தின் பிடரி மயிரையும் சேர்த்துக் கூடுகட்டி, அருகில் உள்ள பெரிய வயலில் விளைந்த நெல்லைத் தின்று தன் பெட்டையோடு வாழும் என்பதிலிருந்து, அவ்வூர் முல்லை நில வளமும், மருதநில வளமும் நிறைந்த ஊர் என்பது புலனாகிறது. வேத்தனுக்குத் துன்பம் இல்லையென்றால், இந்த வளமான ஊரில் ஆண்குருவியும் பெண்குருவியும் இன்பமாக வாழ்வது போல் தலைவனும், அவன் மனைவியும், மற்றவர்களும் இனிது வாழ்வார்கள் என்ற கருத்து இப்பாடலில் தொக்கி நிற்கிறது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on November 25, 2015, 08:10:30 PM
புறநானூறு, 319. (முயல் சுட்டவாயினும் தருவேம்!)
பாடியவர்: ஆலங்குடி வங்கனார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: வாகை.
துறை: வல்லாண் முல்லை.
===========================================

பூவற் படுவிற் கூவல் தொடீஇய
செங்கண் சின்னீர் பெய்த சீறில்
முன்றில் இருந்த முதுவாய்ச் சாடி
யாங்கஃடு உண்டென அறிதும்; மாசின்று;
படலை முன்றிற் சிறுதினை உணங்கல்

புறவும் இதலும் அறவும் உண்கெனப்
பெய்தற்கு எல்லின்று பொழுதே; அதனால்,
முயல்சுட்ட வாயினும் தருகுவேம்; புகுதந்து
ஈங்குஇருந் தீமோ முதுவாய்ப் பாண!
கொடுங்கோட்டு ஆமான் நடுங்குதலைக் குழவி

புன்றலைச் சிறாஅர் கன்றெனப் பூட்டும்
சீறூர் மன்னன் நெருநை ஞாங்கர்,
வேந்துவிடு தொழிலொடு சென்றனன்; வந்துநின்
பாடினி மாலை யணிய
வாடாத் தாமரை சூட்டுவன் நினக்கே

அருஞ்சொற்பொருள்:-

பூவல் = செம்மண்
படு = குளம்
கூவல் = பள்ளம்
தொடீஇ = தோண்டி
செங்கண் = சிவந்த இடம்
சின்னீர் = சிறிதளவு நீர்
சீறில் = சிறிய வீடு
முன்றில் = முற்றம்
முதுமை = பழமை
ஆங்கு – அசை நிலை
அஃடு = அகடு (அடிப்பகுதி)
உணங்கல் = உலர்தல்

புற = புறா
இதல் = காடை, கெளதாரி
அறவும் = முற்றிலும்
பெய்தல் = இடுதல், கொடுத்தல்
எல் = மாலை வெளிச்சம்
புகு தந்து = புகுந்து
முது = பேரறிவு
வாய் = மொழி, வாக்கு
கொடுங்கோடு = வளைந்த கொம்பு
ஆமான் = ஆமா = காட்டுப் பசு
குழவி = கன்று

புந்தலை = இளந்தலை
சீறூர் = சிறிய ஊர்
நெருநை = நெருநல் = நேற்று
ஞாங்கர் = முன்
வாடாத் தாமரை = பொற்றாமரை

இதன் பொருள்:-

பூவற் படு=====> உணங்கல்

செம்மண் நிலத்தில், பள்ளத்திலே இருக்கும் குளத்திலே தோண்டி எடுத்த சிவந்த நிறமுடைய நீர், எங்கள் சிறிய வீட்டின் முற்றத்தில் உள்ள பழைய சாடியின் அடியில் கொஞ்சம் கிடக்கிறது. அது குடிப்பதற்கேற்ற, குற்றமற்ற நல்ல நீர். படல் வேலியோடு கூடிய முற்றத்தில், உலர்ந்த தினையை வீசி,

புறவும்=====> குழவி

அதை உண்ண வரும் புறா, காடை, கெளதாரி போன்ற பறைவைகளைப் பிடித்துச் சமைத்து உங்களுக்கு உணவு அளிக்கலாம் என்றால், இப்போது மாலை நேரம் கழிந்து இரவு வந்துவிட்டது. அதனால், முயலைச் சுட்டுச் சமைத்த கறியைத் தருகிறோம். அறிவிற் சிறந்த பாணரே! எம் இல்லத்திற்குள் வந்து அதை உண்ணுங்கள்; இங்கே தங்குக. எங்கள் ஊரில், வளைந்த கொம்புகளையுடைய காட்டுப் பசுவின், அசையும் தலையையுடைய இளம் கன்றுகளைச்

புன்றலை=====> நினக்கே

சிறுவர்கள் தம்முடைய சிறுதேர்களில் பூட்டி விளையாடுவார்கள். என் கணவன் அத்தகைய சிற்றூருக்குத் தலைவன். நேற்றைக்கு முதல்நாள், வேந்தனின் கட்டளைப்படி அவன் போருக்குச் சென்றான். அவன் நாளை வந்துவிடுவான். அவன் வந்ததும், உன் மனைவிக்குப் பொன்மாலை அணிவிப்பான்; உனக்குப் பொற்றாமரைப் பூவைச் சூட்டுவான்.

பாடலின் பின்னணி:-

தலைவன் ஒருவன் போருக்குப் போயிருக்கிறான். அவனுடைய மனைவி வீட்டில் தனியாக இருக்கிறாள். ஒருநாள் இரவு நேரத்தில் பாணன் ஒருவன் தன் மனைவியோடு அத்தலைவனின் வீட்டிற்கு வருகிறான். இரவு நேரமாகையால் புறா, காடை, கெளதாரி போன்ற பறவைகளைப் பிடித்துச் சமைப்பதற்கு நேரமில்லை. அதனால், முன்பே சமைத்து வைத்திருந்த முயல்கறியை உண்டு, தங்கியிருந்து, தலைவன் வந்தவுடன் பரிசு பெற்றுச் செல்லுமாறு தலைவனின் மனைவி பாணனிடம் கூறுகிறாள்.

சிறப்புக் குறிப்பு:-

சிறுவர்கள் காட்டுப் பசுக்களின் கன்றுகளைத் தங்கள் தேர்களில் பூட்டி விளையாடுகிறார்கள் என்பது அச்சிறுவர்களின் அச்சமின்மையையும் வீரத்தையும் குறிக்கிறது. தலைவன் வீட்டில் இல்லாத பொழுதும், தலைவனின் மனைவி விருந்தோம்பலில் சிறந்தவளாகத் திகழ்ந்தாள் என்பதும், தலைவன் வள்ளல் தன்மையில் சிறந்தவனாக இருந்தான் என்பதும் இப்பாடலிலிருந்து தெரிகிறது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on November 25, 2015, 08:11:19 PM
புறநானூறு, 320. (இன்புறு புணர்நிலை கண்ட மனையோள்!)
பாடியவர்: வீரை வெளியனார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: வாகை.
துறை: வல்லாண் முல்லை.
===========================================

முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பிப்
பந்தர் வேண்டாப் பலாத்தூங்கு நீழல்
கைம்மான் வேட்டுவன் கனைதுயில் மடிந்தெனப்
பார்வை மடப்பிணை தழீஇப் பிறிதோர்
தீர்தொழில் தனிக்கலை திளைத்துவிளை யாட

இன்புறு புணர்நிலை கண்ட மனையோள்
கணவன் எழுதலும் அஞ்சிக், கலையே
பிணைவயின் தீர்தலும் அஞ்சி, யாவதும்
இல்வழங் காமையின் கல்லென ஒலித்து
மான்அதள் பெய்த உணங்குதினை வல்சி

கானக் கோழியொடு இதல்கவர்ந்து உண்டென
ஆர நெருப்பின் ஆரல் நாறத்
தடிவார்ந்து இட்ட முழுவள் ளூரம்
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குஇனிது அருந்தித்
தங்கினை சென்மோ, பாண! தங்காது

வேந்துதரு விழுக்கூழ் பரிசிலர்க்கு என்றும்
அருகாது ஈயும் வண்மை
உரைசால் நெடுந்தகை ஓம்பும் ஊரே

அருஞ்சொற்பொருள்:-

முன்றில் = முற்றம்
முஞ்ஞை = முன்னைக் கொடி
முசுண்டை = ஒருவகைக் கொடி
பம்புதல் = செறிதல் (அடர்த்தியாக இருத்தல்)
பந்தர் = பந்தல்
தூங்கல் = தாழ்தல், தணிதல்
கைம்மான் = யானை
கனை = மிகுதி
மடிதல் = தலைசாய்தல், வாடுதல்
பார்வை = கவனம், மயக்கு
மடம் = இளமை
பிணை = பெண்மான்
மடப்பிணை = இளம் பெண்மான்
தழீஇ = தழுவி
தீர்தல் = ஒழிதல், நீங்கல்
கலை = ஆண்மான்
திளைத்தல் = மகிழ்தல், அனுபவித்தல்
தீர்தல் = விலகி ஓடிவிடல்
கல் – ஒலிக் குறிப்பு
அதள் = தோல்
உணங்க = உலர்ந்த
வல்சி = அரிசி
கானம் = காடு
இதல் = காடை, கெளதாரி
ஆரம் = சந்தன மரம்
ஆரல் = ஒருவகை மீன்
தடி = வெட்டு
வள்ளூரம் = தசை
இரு = பெரிய
ஒக்கல் = சுற்றம்
தங்காது = குறையாது
விழு = சிறந்த
கூழ் = பொன்
அருகாது = குறையாது
உரை = புகழ்
சால் = நிறைவு
ஓம்புதல் = பாதுகாத்தல்

இதன் பொருள்:-

முன்றில்=====> திளைத்துவிளை யாட

யானையை வேட்டையாடும் வேட்டுவன் ஒருவனின் வீட்டு முற்றத்தில் முன்னைக் கொடியும் முசுண்டைக் கொடியும் அடர்த்தியாகப் படர்ந்து இருந்ததால் அங்குப் பந்தல் தேவையில்லாமல் நிழல் மிகுதியாக இருந்தது. பலாமரத்திலிருந்து பலாப்பழங்கள் அங்கே தொங்கிக்கொண்டிருந்தன. அந்த முற்றத்தில், அவன் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான். மான்களைப் பிடிப்பதற்காகப் பயிற்சி அளிக்கப்பட்ட இளம்பெண்மான் (பார்வை மான்) ஒன்றை, வேறு தொழில் எதுவும் இல்லாத ஆண்மான் ஒன்று தழுவிப் புணர்ந்து மகிழ்ச்சியோடு விளையாடிக்கொண்டிருந்தது.

இன்புறு=====> வல்சி

கணவனைக் காண வந்த வேட்டுவனின் மனைவி, மான்கள் புணர்ச்சி இன்பத்தை அனுபவிப்பதையும், கணவன் மெய்மறந்து உறங்குவதையும் கண்டாள். தான் ஏதாவது ஒலியெழுப்பினால், கணவன் விழித்துக்கொள்வான் என்றும் மான்களின் புணர்ச்சி இன்பம் தடைப்பட்டு ஆண்மான் பெண்மானை விட்டு விலகி ஓடிவிடும் என்றும் எண்ணி அஞ்சி, வீட்டில் நடமாடாமல் ஒரு பக்கமாக, ஒலி யாதும் எழுப்பாமல் ஒதுங்கி இருந்தாள். அங்கு, பாணன் ஒருவன் தன் சுற்றத்துடன் வந்தான். முற்றத்தில் மான்தோலில் உலர்ந்துகொண்டிருந்த தினை அரிசியை

கானக் கோழியொடு=====> ஊரே

காட்டுக் கோழி, காடை, கெளதாரி போன்ற பறவைகள் ஆரவாரத்துடன், கவர்ந்து தின்று கொண்டிருந்தன. அவ்வேட்டுவனின் மனைவி, அவற்றைப் பிடித்து, சந்தனக் கட்டையால் மூட்டிய தீயில் சுட்டுத், துண்டு துண்டாக்கி, அறுத்த இறைச்சியை ஆரல் மீனின் மணம் கமழச் சமைத்தாள். பின்னர், பாணனை நோக்கி, “இவ்வூரைப் பாதுக்காக்கும் எம் தலைவன், வேந்தன் தனக்குத் தரும் சிறப்பான பெருஞ்செல்வத்தை என்றும் தன்பால் வரும் பரிசிலர்க்குக் குறையாமல் கொடுக்கும் வள்ளல் தன்மையையும் புகழையும் உடையவன். பாணனே! தாங்கள் இங்கே உங்கள் பெரிய சுற்றத்துடன் நான் சமைத்த உணவை இனிதே உண்டு, தங்கிச் செல்க” என்று கூறுகிறாள்.

பாடலின் பின்னணி:-

இப்பாடலில், ஒரு வேட்டுவனின் இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றையும், அவ்வேட்டுவனின் மனைவியின் விருந்தோம்பும் திறத்தையும் புலவர் வீரை வெளியனார் வெகு அழகாகச் சித்திரிக்கிறார்.

சிறப்புக் குறிப்பு:-

இப்பாடலில், வேட்டுவனின் மனைவியின் விருந்தோம்பலையும், வேந்தனின் வள்ளல் தன்மையையும், அவ்வூர்த் தலைவனின் வள்ளல் தன்மையையும் மிகவும் நயம்படப் புலவர் வீரை வெளியனார் கூறியிருப்பது பாராட்டுக்குரியது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on December 11, 2015, 05:49:13 PM
புறநானூறு, 321. (வன்புல வைப்பினது!)
பாடியவர்: உறையூர் மருத்துவன் தாமோதரனார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: வாகை.
துறை: வல்லாண் முல்லை.
===========================================

பொறிப்புறப் பூழின் போர்வல் சேவல்
மேந்தோல் களைந்த தீங்கொள் வெள்ளெள்
சுளகிடை உணங்கல் செவ்வி கொண்டுஉடன்
வேனிற் கோங்கின் பூம்பொகுட் டன்ன
குடந்தைஅம் செவிய கோட்டெலி யாட்டக்
கலிஆர் வரகின் பிறங்குபீள் ஒளிக்கும்,

வன்புல வைப்பி னதுவே சென்று
தின்பழம் பசீஇ.. .. .. ..ன்னோ, பாண!
வாள்வடு விளங்கிய சென்னிச்
செருவெங் குருசில் ஓம்பும் ஊரே

அருஞ்சொற்பொருள்:-

பொறி = புள்ளி
பூழ் = ஒருவகைக் கோழி
சேவல் = ஆண்கோழி
தீ = இனிமை
சுளகு = முறம்
உணங்கல் = உலர்தல்
செவ்வி = தக்க சமயம்
உடன் = உடனே
கோங்கு = ஒரு மரம்
பொகுட்டு = கொட்டை
குடந்தை = வளைவு
அம் = அழகு
கோடு = வரம்பு
ஆட்டல் = அலைத்தல்
கலித்தல் = தழைத்தல்
ஆர் = நிறைவு
பிறங்குதல் = விளங்குதல்
பீள் = கதிர்
ஓளிக்கும் = மறையும்
வன்புலம் = வலிய நிலம் (குறிஞ்சி நிலம், முல்லை நிலம்)
வைப்பு = ஊர்
சென்னி = தலை
வெம்பல் = விரும்புதல்
குருசில் = தலைவன்
ஓம்பும் = பாதுகாக்கும்

இதன் பொருள்:-

பொறிப்புறப்=====> ஒளிக்கும்

புறத்தே புள்ளிகளையுடைய பெண்பறவையின் சேவல் சிறப்பாகப் போர்புரியும் ஆற்றலுடையது. அச்சேவல், முறத்தில் வைத்து உலர்த்தப்பட்ட, மேலுள்ள தோல் நீக்கிய, இனிமை பொருந்திய வெண்ணிறமான எள்ளைத் தக்க சமயம் பார்த்துக் கவர்ந்து உண்டு, வேனிற்காலத்தில் பூத்த கோங்குப் பூவின் கொட்டை போன்ற வளைந்த காதுகளையுடைய, வரப்பில் வாழும் எலியை அலைப்பதால், அவ்வெலி தழைத்து விளங்கும் வரகின் கதிர்களில் மறைந்துகொள்கிறது.

வன்புல=====> ஊரே

பாணனே! அத்தகைய புன்செய் வளமுடைய இவ்வூர், வாளால் வெட்டப்பட்டு வடுவுடன் விளங்கும் தலையையுடைய, போரை விரும்பும் தலைவனால் பாதுகாக்கப்படுகிறது.

பாடலின் பின்னணி:-

தலைவன் ஒருவனின் புன்செய் நிலவளம் மிக்க ஊர் ஒன்றை இப்பாடலில் புலவர் உறையூர் மருத்துவன் தாமோதரனார் புகழ்ந்து பாடுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

‘போர்வல் சேவல்’ என்பது போரில் வெற்றிபெறும் வல்லமை பெற்ற சேவல் என்ற பொருளில் கூறப்பட்டிருக்கிறது. இக்காலத்தில், சேவற்கோழிகளுக்குப் போர்ப்பயிற்சி அளித்து, அவை போர் செய்வதைக் கண்டு களிக்கும் வழக்கம் இருப்பதுபோல், சங்க காலத்திலும் சேவல், காடை, கெளதாரி (குறும்பூழ்) ஆகிய பறவைகளுக்குப் போர்ப்பயிற்சி அளித்து அவற்றைப் போரில் ஈடுபடுத்துவது வழக்கில் இருந்தது என்பது இப்பாடலிலிருந்து தெரிகிறது.
Title: Re: ~ புறநானூறு ~
Post by: MysteRy on September 12, 2020, 08:08:27 PM
(http://friendstamilchat.org/forumfiles/2020/PURUNARU/322.jpg)


புறநானூறு, 322. (கண்படை ஈயான்!)
பாடியவர்: ஆவூர்கிழார். (ஆவூர் என்னும் ஊரைச் சார்ந்த வேளாண் மரபினராக இருந்ததால், இவர் ஆவூர் கிழார் என்று அழைக்கப்பட்டார். ஆவூர் என்ற பெயருடைய ஊர்கள் தஞ்சை மாவட்டத்திலும், வட ஆர்க்காடு மாவட்டத்திலும் இருப்பதாக ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் கூறுகிறார். புறநானூற்றில் உள்ள 322- ஆம் பாடலைத் தவிர, சங்க இலக்கியத்தில் இவருடைய பாடல்கள் வேறு எதுவும் காணப்படவில்லை.)
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: வாகை.
துறை: வல்லாண் முல்லை.
===========================================

உழுதூர் காளை ஊழ்கோடு அன்ன
கவைமுள் கள்ளிப் பொரிஅரைப் பொருந்திப்
புதுவரகு அரிகால் கருப்பை பார்க்கும்
புன்தலைச் சிறாஅர் வில்லெடுத்து ஆர்ப்பின்
பெருங்கண் குறுமுயல் கருங்கலன் உடைய

மன்றிற் பாயும் வன்புலத் ததுவே;
கரும்பின் எந்திரம் சிலைப்பின் அயலது
இருஞ்சுவல் வாளை பிறழும் ஆங்கண்
தண்பணை ஆளும் வேந்தர்க்குக்
கண்படை ஈயா வேலோன் ஊரே

அருஞ்சொற்பொருள்:-

ஊர்தல் = ஓய்ந்து நடத்தல்
ஊழ்த்தல் = தோன்றுதல் (மலர்தல்)
கோடு = கொம்பு
கவை = பிளவு
பொரித்தல் = தீய்தல், வெடித்தல்
அரை = அடிப்பாகம்
அரிகால் = அரிந்துவிட்ட தாள்
கருப்பை = எலி
புன்தலை = இளந்தலை
ஆர்ப்பு = ஆரவாரம்
மன்று = வாயில் முற்றம்
எந்திரம் = கரும்பு ஆலை
சிலைத்தல் = ஒலித்தல்
சுவல் = பிடர் (கழுத்து)
வாளை = ஒரு வகை மீன்
பிறழ்தல் = துள்ளுதல்
தண்பணை = மருத நிலம்
கண்படை = உறக்கம், மனிதர்களின் படுக்கை

இதன் பொருள்:-

உழுதூர்=====> கருங்கலன் உடைய

நிலத்தை உழுது களைப்படைந்து ஓய்ந்த நடையோடு செல்லும் காளையின் தலையில் முளைத்த கொம்பு போல், பிளவுபட்டு, முட்களும் வெடிப்புகளும் உடைய கள்ளிச் செடியின் பொரிந்த அடிப்பகுதியில் இருந்துகொண்டு, புதிதாக அறுத்த வரகின் அடித்தாளில் மேயும் எலியைப் பிடிப்பதற்குத் தக்க சமயம் பார்க்கும் சிறுவர்கள் தங்கள் கையில் வில்லை எடுத்துக்கொண்டு ஆரவாரம் செய்வர். அந்த ஒலியைக் கேட்ட, பெரிய கண்களையுடைய சிறிய முயல், அடுப்பில் ஏற்றிக் கரிபிடித்த பாத்திரங்கள் உடையுமாறு உருட்டித் தள்ளிவிட்டு

மன்றிற் பாயும்=====> வேலோன் ஊரே

வீட்டு முற்றத்தில் பாயும். எங்கள் தலைவனுடைய ஊர் அத்தகைய வலிய நிலம். இவ்வூரில் உள்ள எங்கள் தலைவன், கரும்பை ஆட்டும் ஆலைகளின் ஒலியால் அருகே உள்ள நீர்நிலைகளில், பெரிய கழுத்தையுடைய வாளைமீன்கள் துள்ளிப் பாயும் வளமான மருதநிலத்து ஊர்களை ஆட்சி செய்யும் அரசர்களுக்குக் கண்ணுறக்கம் இல்லாமல் செய்யும் வேலை உடையவன்.

பாடலின் பின்னணி:-

வீரன் ஒருவன் போர்புரிவதில் மிகவும் ஆற்றலுடையவனாக இருக்கிறான். அவனை நினைக்குந் தோறும், பகைவேந்தர்கள் அச்சம் மிகுந்து உறக்கமின்றி உள்ளனர். அவ்வீரன் வாழும் ஊர் முல்லை நிலத்தில் உள்ள ஒருசிற்றூர். அவ்வூரில் நடைபெறும் ஒருநிகழ்வை இப்பாடலில் புலவர் ஆவூர் கிழார் குறிப்பிடுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

இப்பாடலில் கூறப்படும் தலைவன் வாழும் ஊர் வலிய நிலத்தில் உள்ள ஒருசிற்றூர் என்ற கருத்தும், அவன் வலிய நிலத்திலுள்ள சிற்றூருக்குத் தலைவனாக இருந்தாலும் வளமான மருதநிலங்களையுடைய வேந்தர்கள் அவனுடைய போர்புரியும் ஆற்றலை எண்ணி அஞ்சி உறக்கமின்றி வருந்துகின்றனர் என்ற கருத்தும் இப்பாடலில் காணப்படுகிறது.