Author Topic: மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை  (Read 38462 times)

Offline Anu

உணவில் பரிசோதனைகள்

மேலும் மேலும் ஆழ்ந்து, நான் ஆன்ம பரிசோதனை செய்யச் செய்ய, எனது அகவாழ்விலும் புறவாழ்விலும் அதிக மாறுதல்களைச் செய்து கொள்ளச் வேண்டியது அவசியம் என்ற உணர்ச்சி என்னிடம் வளரலாயிற்று. என் செலவுகளிலும், வாழ்க்கை முறைகளிலும் மாறுதலைச் செய்ய ஆரம்பித்திருந்தேன். சைவ உணவின் முக்கியத்துவத்தை வெகு நுட்பமாகப் பரிசீலனை செய்திருந்ததைக் கண்டேன். இவ்விஷயத்தின் மத, விஞ்ஞான, அனுபவ, வைத்திய அம்சங்களையெல்லாம் அவர்கள் ஆராய்ந்திருந்தனர். தருமக் கோட்பாட்டின் ரீதியில் அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தனர். தாழ்வான உயிரினங்களிலும் மனிதன் உயிர் வாழ்வது என்பது அவ்வுயர்வின் நோக்கம் அல்ல. உயர்ந்த இனங்கள் தாழ்ந்த இனங்களைப் பாதுகாக்க வேண்டும். மனிதனுக்கு மனிதன் உதவிக் கொள்ளுவதைப் போல, அவ்விரு இனங்களும் தம்மிடையே பரஸ்பரம் உதவிக் கொள்ள வேண்டும் என்பது அந்நூலாசிரியர்கள் கண்ட முடிவு. மனிதன் உண்பது உயிர் வாழ்வதற்கேயன்றி, சுகானுபவத்திற்காக அல்ல என்பதையும் அவர்கள் தெளிவுபடுத்தியிருந்தார்கள். இதை அனுசரித்து அவர்களில் சிலர், புலால் உண்ணாமல் இருப்பதோடு முட்டை, பால் சாப்பிடுவதும் கூடாது என்று சொன்னார்கள். அதன் படி சாப்பிடாமலும் இருந்தார்கள். மற்றும் சிலர், விஞ்ஞான ரீதியில் வேறு ஒரு முடிவுக்கும் வந்தனர்.

மனிதனின் உடலமைப்பை ஆராய்ந்தால், அவன் உணவைச் சமைத்துத் தின்னப் படைக்கபட்டவன் அல்ல என்பதும் பச்சையாகத் தின்று வாழ வேண்டிய பிராணியே என்பதும் தெளிவாகின்றன என்றார்கள். மனிதன் ஆரம்பத்தில் தாய்ப்பாலை மட்டும் அருந்த வேண்டும், பிறகு பல் முளைத்ததும் கடினமான உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்றும் இவர்கள் கருதினர். வைத்திய சாத்திரத்தின்படி மசாலைகள், ஊறுகாய்களை விலக்கிவிட வேண்டும் என்றும் யோசனை கூறினர். அனுபவ, பொருளாதார விவாதத்தின் பிரகாரம் சைவ உணவு சாப்பிடுவதால் ஏற்படும் செலவே மிகக் குறைவு என்பதையும் அவர்கள் நிரூபித்திருந்தனர். இந்தக் காரணங்களையெல்லாம் என் மனத்தில் மாறுதலை உணவுவாதிகளையும் சைவ உணவு விடுதிகளில் சந்தித்தேன். இங்கிலாந்தில் சைவ உணவினர் சங்கமும் ஒன்று இருந்தது. அவர்கள் சொந்தமாக ஒரு வாரப் பத்திரிகையையும் நடத்தினார்கள். அப்பத்திரிகைக்கு நான் சந்தாதாரனானேன். அச்சங்கத்திலும் சேர்ந்து வெகு சீக்கிரத்திலேயே அதன் நிர்வாகக் குழுவிலும் உறுப்பினரானேன். சைவ உணவு பிரசார இயக்கத்தின் தூண்கள் என்று கருதப்பட்ட முக்கியஸ்தர்களுடன் இச்சங்கத்தில் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. உணவில் என் சொந்தச் சோதனைகளையும் செய்ய முற்பட்டேன்.

வீட்டிலிருந்து தருவித்திருந்த மிட்டாய்களையும், ஊறுகாய்களையும் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன். மனம் வேறு வழியில் திரும்பி விட்டதால், மசாலை மீதிருந்த மோகம் போய்விட்டது. மசாலையின்றிச் சமைத்த கீரை, அப்பொழுது ரிச்மண்டு ஹோட்டலில் சப்பென்று ருசியற்றிருந்தது. இப்பொழுதோ, சும்மா வேக வைத்த கீரையே எனக்கு ருசியாக இருந்தது. ருசியெல்லாம் எண்ணத்தில் தான் இருக்கிறதேயன்றி நாவில் இல்லை என்பதை இதுபோன்ற பல பரீட்சைகள் எனக்குப் போதித்தன.

சிக்கனத்தைக் கவனிக்க வேண்டும் என்பதும் எப்பொழுதும் என் நினைவில் இருந்து வந்தது. தேயிலை, காப்பி போன்ற பானங்கள் தீமை விளைவிப்பவை என்றும், கோக்கோ குடிப்பது நல்லதென்றும் கருதியவர்கள் அக்காலத்தில் அநேகர் உண்டு. உடலுக்கு நன்மையானவைகளை மாத்திரமே ஒருவர் சாப்பிட வேண்டும் என்று திடமாக நான் நம்பியிருந்ததால் தேயிலை, காப்பி போன்ற பானங்களைச் சாப்பிடுவதை விட்டுவிட்டு, அவற்றிக்குப் பதிலாகக் கோக்கோ சாப்பிடலானேன்.

நான் சாப்பிடப்போன உணவு விடுதிகளில் இரண்டு பிரிவுகள் உண்டு. அவற்றில் ஒரு பிரிவில் பல வகையான உணவுகள் பரிமாறப்படும். ஒருவர், அவற்றில் தாம் விரும்புவதைச் சாப்பிட்டு விட்டு அதற்குரிய பணத்தைக் கொடுக்க வேண்டும். இத்தகைய இரவு சாப்பாட்டுக்கு ஒன்றிலிருந்து இரண்டு ஷில்லிங் வரை செலவாகும். சுமாராகப் பணக்காரராக இருப்போர் இப்பிரிவுக்கே போவார்கள். மற்றொரு பிரிவிலோ, ஆறு பென்ஸுக்குச் சாப்பாடு கொடுப்பார்கள். அதில் ஒரு ரொட்டித் துண்டுடன் மூன்றுவகைப் பண்டங்கள் பரிமாறுவர். நான் அதிகச் சிக்கனமான வாழ்க்கையை நடத்தி வந்தபோது, இந்த இரண்டாவது பிரிவில்தான் சாப்பிடுவது வழக்கம்.

பிரதானமான உணவுப் பரிசோதனையோடு பல சிறு சோதனைகளையும் நடத்தி வந்தேன். உதாரணமாக, மாவுப் பண்டங்கள் எல்லாவற்றையும் ஒரு சமயம் விலக்கியிருந்தேன். மற்றொரு சமயத்திலோ, ரொட்டியும் பழமும் மாத்திரமே சாப்பிட்டு வந்தேன். ஒரு சமயம் பால்கட்டி, பால், முட்டைகள் மாத்திரம் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். இந்தக் கடைசிச் சோதனையைக் குறித்துக் கொஞ்சம் கவனிப்பது முக்கியம். இச்சோதனை இரு வாரங்கள் வரையிலும் கூட நீடிக்கவில்லை. மாவு கலந்த பண்டங்களைத் தின்னக்கூடாது என்று சொன்ன சீர்திருத்தக்காரர். முட்டைகளின் மேன்மையைக் குறித்துப் பிரமாதமாகச் சொன்னதோடு அவை மாமிசமாகா என்றும் கூறினார். முட்டையைத் தின்பதால் உயிருள்ள எதற்கும் துன்பம் விளைவித்து விடவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. இந்த வாதத்தில் மயங்கி என் விரதத்தையும் மறந்துவிட்டு, நான் முட்டை தின்ன ஆரம்பித்தேன். ஆனால், நான் இதில் செய்த தவறு தற்காலிகமானதே. நான் கொண்டிருந்த விரத்திற்குப் புதியதொரு வியாக்கி யானத்தையே நான் அனுசரிக்க வேண்டும். மாமிசம் என்பதைப் பற்றிய என் தாயாருடைய கருத்தில் முட்டையும் சேர்ந்ததே என்பதை நான் அறிவேன். இவ்விதம் விரதத்தின் உண்மை கருத்தை நான் கண்டு கொண்டதுமே, முட்டை சாப்பிடுவதையும், அப்பரீட்சையையும் ஒருமிக்க விட்டுவிட்டேன்.

இந்த வாதத்தில் அடங்கிய, கவனிக்கத்தக்க நுட்பமான விஷயம் ஒன்று உண்டு. இங்கிலாந்தில் புலால் என்பதற்கு மூன்று வகையான வியாக்கியானங்கள் கூறப்படுவதை அறியலானேன். இதில் முதல் வியாக்கினப்படி, மாமிசம் என்பது பறவைகள், மிருகங்களின் இறைச்சியே. இந்த வியாக்கியானத்தை ஒப்புக்கொள்ளும் சைவ உணவுவாதிகள், பட்சிகள், மிருகங்களின் மாமிசத்தை உண்ணமாட்டார்கள். ஆனால், மீன் சாப்பிடுவார்கள், முட்டைகளும் சாப்பிடுவார்கள் என்பதைச் சொல்லவே வேண்டியதில்லை. இரண்டாவது வியாக்கியானப்படி மாமிசம் என்றால், எலலா உயிர்ப் பிராணிகளின் புலாலுமேயாகும். ஆகையால், இக்கருத்துக் கொண்டவர்கள். மீன் சாப்பிட மாட்டார்களிடமிருந்து கிடைப்பவகைளும் மாமிசம் என்று முடிவு கட்டியிருந்தது. இதன்படி, பால், முட்டைகள் முதலியனவும் மாமிசம் ஆகிவிடுகின்றன. முதல் வியாக்கியானத்தை ஒப்புக் கொள்வதாயின், முட்டை சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல், மீனும் தின்னலாம். ஆனால், என் அன்னையாரின் வியாக்கியானம் ஒன்றே என்னைக் கட்டுப்படுத்தும் வியாக்கியானம் என்பதில் நான் நிச்சயமாயிருந்தேன். ஆகையால், நான் மேற்கொண்ட விரதத்தின்படி நான் முட்டைகள் தின்னலாகாது, அப்படியே செய்தேன். இதனால் ஒரு கஷ்டம் உண்டாயிற்று.

சைவ உணவு விடுதிகளில் கூடப் பல உணவு வகைகளிலும் முட்டை சேர்க்கிறார்கள் என்பது, விசாரித்ததில் தெரிய வந்ததுதான் அக்கஷ்டம். பலவகையான களிகள், கேக்குகள் ஆகியவைகளில் முட்டைக் கலப்பு உண்டு. எனவே இன்னதில் இன்னது இருக்கிறது. என்பது முன்னதாகவே தெரிந்திருந்தாலன்றி, ஒரு குறிப்பிட்ட உணவில் முட்டை கலந்திருக்கிறதா, இல்லையா என்பதைக் கேட்டுத் தெரிந்துக்கொள்ள வேண்டிய சங்கடமான முறையையும் நான் அனுசரிக்க வேண்டியதாயிற்று. என் கடமையை உணர்ந்ததன் காரணமாக எனக்கு இந்தச் சங்கடம் ஏற்பட்ட தெனினும், இது என் உணவை இன்னும் எளிதாக்கி விட்டது. இவ்விதம் எளிதானது எனக்கு இன்னுமொரு தொல்லையையும் உண்டாக்கியது. நான் ருசித்துச் சாப்பிடத் தொடங்கிய பல உணவு வகைகளையும் கைவிட நேர்ததே அத்தொல்லை. இந்தச் சங்கடங்களெல்லாம் சீக்கிரத்தில் மறைந்து விட்டன. ஏனெனில், விரதத்தைக் கண்டிப்பாக அனுசரித்து வருகிறோம். என்பது எனக்கு உள்ளூற ஒரு ருசியை உண்டாக்கியது. நாவின் ருசியைவிட உள்ளத்தின் இந்த ருசி, தெளிவாக அதிக இன்பத்தையும் சுகத்தையும் தந்ததோடு நிரந்தரமானதாகவும் இருந்தது. என்றாலும், உண்மையான அவதி இனிமேல்தான் எற்பட இருந்தது. மற்றொரு விரதத்தைப் பற்றியதே அது. கடவுளின் அருளைப் பெற்றோருக்கு யார்தான் தீங்கு இழைத்துவிட முடியும் ?

விரதங்கள் அல்லது பிரதிக்ஞைகளைக் குறித்து இங்கே சில விஷயங்களைக் கூறுவது பொருத்தமற்றதாகாது. பிரதிக்ஞைகளுக்கு வியாக்கியானம் கூறவதிலேயே உலகமெங்கும் சச்சரவுகள் உண்டாகின்றன். பிரதிக்ஞை என்னதான் தெளிவானதாக இருந்தாலும் சரி, தங்களுடைய காரியத்திற்கு ஏற்றவகையில் அதைப் புரட்டித்திரித்துக் கூறிவிடுகிறார்கள். அப்படிச் செய்கிறவர்களைப் பணக்காரர்களிலிருந்து ஏழைகள் வரையில், அரசர்களிலிருந்து உழவர் வரையில், சமூகத்தின் எல்லா வகுப்பினரிடையேயும் காணலாம். சுயநலம் அவர்களைக் குருடர்கள் ஆக்கிவிடுகிறது. தெளிவற்ற ஒரு மனோ பாவத்தினால் அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளுவதுடன் உலகத்தையும், கடவுளையும் கூட ஏமாற்றப் பார்க்கிறார்கள்.

ஒரு பிரதிக்ஞையை யோக்கியமாகக் கூறும் வியாக்கியானத்தை ஒப்புக்கொண்டு விடுவதுதான் இதில் சிறந்த வழியாகும். இரண்டு வகையான வியாக்கியானங்கள் சாத்தியமாகும் போது. பலவீனராயிருக்கும் கட்சியினர் கூறும் வியாக்கியானத்தை ஏற்றுக்கொள்ளுவது மற்றோர் சிறந்த வழி. இந்த இரண்டு விதிகளையும் நிராகரித்து விடும்போது அசத்தியத்தின் பலனாக சச்சரவுகளும் துன்பங்களும் எழுகின்றன. எவன் சத்தியத்தை நாடுகிறானோ அவன் ஒருவனே சரியான விதியைப் பின்பற்றுகிறான். வியாக்கியானத்திற்காக, அவன் படித்தவர்களின் ஆலோசனையை நாட வேண்டியதில்லை. மாமிசம் எது என்பதற்கு என் அன்னை கொண்ட வியாக்கியானமே சரியான வழியின் படி எனக்கு உண்மை வியாக்கியானம். இதுவன்றி, என்னுடைய அனுபவ முதிர்ச்சியோ, நான் அதிக அறிவு படைத்து விட்;டேன் என்ற அகம் பாவமோ, எனக்குப் போதித்திருக்க கூடிய வியாக்கியானம் உண்மையாகாது.

இங்கிலாந்தில் நான் செய்த உணவுச் சோதனைகளெல்லாம், சிக்கனத்தையும், தேகாரோக்கியத்தையுமே குறிக்கோளாகக் கொண்டு செய்யப்பட்டவை. உணவுப் பிரச்சினைக்கும் மதத்துக்கும் உள்ள சம்பந்தத்தைப்பற்றி நான் தென்னாப்பிரிக்காவுக்குப் போகும் வரையில் சிந்திக்கவே இல்லை. அங்கேதான் நான் கடுமையான சோதனைகளை மேற்கொண்டேன். அவற்றைக் குறித்துப் பின்னால் கூறுகிறேன். என்றாலும் இவைகளுக்கெல்லாம் இங்கிலாந்திலேயே விதை விதைக்கப்பட்டுவிட்டது.

ஒரு மதத்தில் பிறந்தவர்களைவிட அம்மதத்திற்குப் புதிதாக மாறியவர்களுக்கு அம்மதத்தினரிடம் அதிக அன்பு இருப்பது இயல்பு. சைவ உணவு என்பது அப்பொழுது இங்கிலாந்துக்கு ஒரு புதிய தருமம். எனக்கும் அப்படியே ஏனெனில் மாமிசம் சாப்பிட வேண்டியது அவசியம் என்பதில் திட நம்பிக்கையுள்ளவனாக நான் அங்கே சென்றேன். ஆனால், அறிவாராய்ச்சியின் மூலம் சைவ உணவே சிறந்தது என்ற கொள்கைக்குப் பிறகு மாறி விட்டேன் என்பதை முன்னால் கவனித்தோம். சைவ உணவு சம்பந்தமாகப் புதிதாக மதம் மாறியவனுக்கு இருக்கும் உற்சாகம் எனக்கும் இருந்ததால், நான் வசித்துவந்த பகுதியான பேஸ் வாட்டரில் ஒரு சைவ உணவு சங்கத்தை ஆரம்பிக்கத் தீர்மானித்தேன். ஸர் எட்வின் அர்னால்டு அங்கேதான் வசித்தார். சங்கத்திற்கு உபதலைவராக இருக்குமாறு அவரைக் கேட்டுக் கொண்டேன். வெஜிடேரியன் என்ற சைவ உணவுப் பத்திரிகைக்கு ஆசிரியரான டாக்டர் ஓல்டுபீல்டு சங்கத் தலைவரானார். நான் அதற்குச் செயலாளனானேன். கொஞ்ச காலம் சங்கம் சரிவர நடந்து வந்தது. ஆனால், சில மாதங்களில் எல்லாம் கலைந்து போய்விட்டது. அடிக்கடி ஓர் இடத்திலிருந்து வேறு ஒர் இடத்திற்கு மாறிவிடும் என் பழக்கப்படி அப்பகுதியிலிருந்து நான் குடி பெயர்ந்துவிட்டதே சங்கம் கலைந்து விட்டதற்குக் காரணம். என்றாலும் இந்தக் கொஞ்ச காலச் சாதாரணமான அனுபவமே, ஸ்தாபனங்களை உருவாக்கி நடத்துவதில் எனக்குச் சிறிது பயிற்சியை அளித்திருந்தது.


Offline Anu

கூச்சமே எனது பாதுகாப்பு

சைவ உணவாளர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழுவிற்கு நான் தேர்ந்தெடுக்கப் பெற்றேன். இக்குழுவின் வட்டம் ஒவ்வொன்றுக்கும் நான் தவறாமல் போய்க்கொண்டிருந்தேன். ஆனால், கூட்டங்களில் நான் பேசுவது மாத்திரம் இல்லை. டாக்டர் ஓல்டுபீல்டு என்னிடம் ஒரு சமயம் நீங்கள் என்னிடம் நன்றாகப் பேசிக் கொண்டிருக்கிறீர்களே * அப்படியிருக்க, கமிட்டிக் கூட்டங்களில் மாத்திரம் நீங்கள் ஏன் வாய் திறப்பதே இல்லை ? தேனீக்களில் நீங்கள் ஆண் ஈ போன்றிருக்கிறீர்கள் என்றார். அவர் இவ்விதம் என்னைக் கேலி செய்ததைப் பாராட்டினேன். தேனீக்கள் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கின்றன. ஆண் ஈயோ முற்றும் சோம்பேறியாக இருக்கிறது. இக்கூட்டங்களில் மற்றவர்களெல்லாம் தங்கள் கருத்துக்களை எடுத்துச் சொல்லும்போது நான் மாத்திரம் பேசாமல் சும்மா உட்கார்ந்திருப்பது பெரிய விசித்திரமே. பேசுவதற்கு எனக்கு ஆசை இல்லாமல் இல்லை. ஆனால், பேசத் தெரியாத குறைதான். மற்ற உறுப்பினர்கள் எல்லோரும் என்னைவிட விஷயங்களை நன்கு அறிந்தவர்கள் என்று எனக்குத் தோன்றிற்று. பிறகு வேறு ஒன்றும் நிகழ்ந்துவிடுவது உண்டு. தைரியப்படுத்திக் அந்த விஷயம் போய், ஒரு புது விஷயம் ஆலோசனைக்கு வந்துவிடும் இப்படியே நீண்ட காலம் நடந்துகொண்டு வந்தது.

இதற்கு மத்தியில் ஒரு முக்கியமான விஷயம் விவாதத்திற்கு வந்தது. கூட்டத்திற்குப் போகாமல் இருந்துவிடுவது தவறு என்று நினைத்தேன். எதுவும் பேசாமல், வோட்டுப் போட்டுவிட்டு மாத்திரம் வந்துவிடுவது கோழைத்தனம் என்றும் தோன்றிற்று. பின்வரும் ரீதியில் அந்த விவாதம் எழுந்தது, சங்கத்திற்கு ஸ்ரீ ஹில்ஸ் தலைவராக இருந்தார். அவர் தேம்ஸ் இரும்புத் தொழிற்சாலையின் சொந்தக்காரர். நல்லொழுக்க விஷயத்தில் அவர் கண்டிப்பான கொள்கையுடையவர். அவருடைய பொருளுதவியைக் கொண்டே சங்கம் நடந்து வந்தது என்றும் சொல்லவேண்டும். கமிட்டியின் உறுப்பினர்களில் பலர் அவருடைய ஆதரவில் வாழ்ந்து வருபவர்கள். சைவ உணவு இயக்கத்தில் பிரசித்தி பெற்றவரான டாக்டர் அல்லின்ஸனும் இக்கமிட்டியில் ஓர் உறுப்பினார். அச்சமயம் புதிதாகக் கிளம்பிய கர்ப்பத்தடை இயக்கத்தை ஆதரிப்பவர் இவர். கர்ப்பத்தடை முறைகளை அவர் தொழிலாளரிடையே பிரச்சாரம் செய்துவந்தார். இம்முறைகள் ஒழுக்கத்தின் வேரையே அறுப்பவையாகும் என்று ஸ்ரீ ஹில்ஸ் கருதினார். உணவுச் சீர்திருத்தத்தோடு ஒழுக்கச் சீர்திருத்தமும் சைவ உணவாளர் சங்கத்தின் நோக்கம் என்பது அவருடைய அபிப்ராயம். டாக்டர் அல்லின்ஸன் போன்ற ஒழுக்கத்திற்கு விரோதமான கருத்துள்ளவர்களைச் சங்கத்தில் இருக்க அனுமதிக்கக்கூடாது என்றும் அவர் எண்ணினார்.

ஆகவே, அவரை நீக்கிவிட ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இவ்விஷயம் என் கவனத்தை அதிகமாக் கவர்ந்தது. கர்ப்பத்தடைக்குச் செயற்கை முறைகளை அனுசரிப்பதைப் பற்றி டாக்டர் அல்லின்ஸன் கொண்டிருந்த கருத்து ஆபத்தானது என்றே நானும் கருதினேன். ஒழுக்க நெறியைக் கடைப்பிடிப்வர் என்ற வகையில் டாக்டர் அல்லின்ஸனை எதிர்க்க ஸ்ரீ ஸில்ஸுக்கு உரிமை உண்டு என்று நானும் கருதினேன். அதோடு ஸ்ரீ ஹில்ஸிடமும், அவருடைய உதார குணத்தினிடமும் எனக்கு அதிக மதிப்பு இருந்தது. ஆனால் ஒழுக்கக் கொள்கைகளும், சைவ உணவாளர் சங்கத்தின் நோக்கங்களில் ஒன்று என்று ஒப்புக்கொள்ள ஒருவர் மறுக்கிறார். என்பதற்காக, அவரை அச்சங்கத்திலிருந்து நீக்கிவிடுவதென்பது சரியானதல்ல என்றும் நான் எண்ணினேன். ஒழுக்கக் கொள்கைக்கு ஸ்ரீ ஹில்ஸின் கருத்து, அவருடைய சொந்த அபிப்பிராயமே. சங்கத்தின் தெளிவான கொள்கைக்கும் இதற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. சங்கத்தின் நோக்கம் சைவ உணவுக் கொள்கையைப் பரப்புவதேயன்றி எந்த ஒழுக்க முறையையும் பரப்புவதன்று. ஆகையால், மற்ற ஒழுக்கங்களைப் பொறுத்தவரையில் ஒருவர் என்ன கருத்துக் கொண்டிருந்தாலும், சைவ உணவு மாத்திரமே சாப்பிடும் யாரும் இச்சங்கத்தில் அங்கத்தினராக இருக்கலாம் என்று நான் அபிப்ராயப்பட்டேன்.

என்னைப் போன்ற அபிப்பிராயம் கொண்ட மற்றும் சிலரும் கமிட்டியில் இருந்தனர். ஆயினும் என் சொந்த அபிப்பிராயத்தைக் கூறிவிட வேண்டியது என்னைப் பொறுத்தவரையில் என் கடமை என்று உணர்ந்தேன். அதை எப்படிச் செய்வது என்பதுதான் பிரச்சனை. கூட்டத்தில் பேசும் தைரியம் எனக்கு இல்லை. ஆகையால் என் எண்ணங்களையெல்லாம் எழுதிவிடுவது என்று முடிவு செய்தேன். அவ்வாறே எழுதி, என் சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டு படிக்கும் துணிவுகூட எனக்கு வரவில்லை என்றே எனக்கு ஞாபகம். தலைவர் வேறொருவரைக் கொண்டு அதைக் வட்டத்தில் படிக்கச் செய்தார். முடிவில் இது போன்ற முதல் போராட்டத்திலேயே தோற்கும் கட்சியில் சேர்ந்தவனாக நான் இருந்ததைக் கண்டேன். என்றாலும் என் கட்சி நியாயமானது என்ற திருப்தி எனக்கு இருந்தது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அந்தக் கமிட்டியிலிருந்து நான் ராஜிநாமாச் செய்துவிட்டதாகவே எனக்கு அரைகுறையாக ஞாபகம் இருக்கிறது.

நான் இங்கிலாந்தில் இருந்த காலம் முழுவதிலும் எனக்கு இந்தக் கூச்சம் இருந்து வந்தது. சாதாரணமாக, நண்பர்களைப் பார்த்துவரச் செல்லும் இடங்களில்கூட, அங்கே ஐந்தாறு பேரோ அதற்கு அதிகமானவர்களோ இருந்துவிட்டால், நான் ஊமையாகப் போய்விடுவேன்.

ஒருநாள் ஸ்ரீ மஜ்முதாருடன் வெண்ட்னருக்குச் சென்றேன். அங்கே சைவ உணவுக் குடும்பம் ஒன்றுடன் தங்கினோம் உணவு முறையின் தருமம் என்ற நு}லின் ஆசிரியரான ஸ்ரீ ஹோவார்டும் அதே கடலோர ஊரில் தங்கியிருந்தார். நாங்கள் அவரைச் சந்தித்தோம். சைவ உணவைப் பரப்புவதற்காக நடந்த ஒரு கூட்டத்தில் பேசுமாறு அவர் எங்களை அழைத்தார். ஒருவர், தாம் வட்டத்தில் பேச வேண்டியதை எழுதிப் படிப்பது தவறாகக் கருதப்பட மாட்டாது என்பதை விசாரித்துத் தெரிந்து கொண்டேன். தாங்கள் கூற வேண்டியதை, முன்பின் பொருத்தமாகவும் சுருக்கமாகவும் சொல்லுவதற்காகப் பலர் இவ்விதம் எழுதிப் படிப்பது உண்டு என்பதையும் நான் அறிவேன். நினைவில் இருந்தபடியே பேசுவது என்பது என்னால் முடியாத காரியம். ஆகையால் நான் செய்ய வேண்டிய பிரசங்கத்தை முதலில் எழுதி வைத்துக்கொண்டேன். கூட்டத்தில் அதைப் படிப்பதற்கு எழுந்தேன், என்னால் முடியவில்லை. நான் எழுதி வைத்திருந்த பிரசங்கம் ஒரே தாளில் முடிந்துவிட்டது. என்றாலும் கண் மங்கலாகிவிட்டது. உடம்பெல்லாம் நடுங்கியது. எனக்காக ஸ்ரீ மஜ்முதார் அப்பிரசங்கத்தைப் படிக்க வேண்டியதாயிற்று. அவர் சொந்தமாகப் பேசியதோ அற்புதமாக இருந்தது. கேட்டவர்கள் கரகோஷம் செய்து குதூகலமாக வரவேற்றனர். என்னுடைய திறமையின்மைக்காக மனம் வருந்தியதோடு என்னைக் குறித்து நானே வெட்கப்பட்டுக் கொண்டேன்.

இங்கிலாந்தில் பொதுக்கூட்டத்தில் பேச நான் கடைசியாக முயன்றது. அங்கிருந்து தாய்நாடு திரும்பிய சமயத்தில்தான். இத்தடவையும் நான் என்னைப் பிறரின் நகைப்புக்கு உரியவனாகச் செய்துகொள்ளுவதில்தான் வெற்றி பெற்றேன். எனது சைவ உணவு நண்பர்களை, முன்னால் நான் கூறியிருக்கும் ஹால்பாரன் ஹோட்டலுக்கு ஒரு விருந்துக்கு அழைத்தேன். சைவ உணவு விடுதிகளில் சைவ உணவு விருந்து வைக்க முடியும் என்பது சரி. ஆனால், மாமிசச் சாப்பாடு போடும் ஹோட்டலிலும் சைவ உணவு விருந்து ஏன் சாத்தியமாகாது போகும் ? என்று எனக்குள் நானே சொல்லிக் கொண்டேன். அதன் பேரில் ஹால்பார்ன் ஹோட்டலின் நிர்வாகியிடம் பேசி, சுத்த சைவ உணவு விருந்துக்கு ஏற்பாடு செய்வேன். இப்புதிய பரீட்சையை சைவக் சாப்பாட்டுக்காரர்கள் சந்தோஷமாகப் பாராட்டினார்கள். விருந்துகளெல்லாம் இன்பத்திற்காகவே வைக்கப்படுகின்றன. வளர்த்திருக்கிறார்கள். அங்கே விருந்துகள் ஆடம்பரமாகவும், சங்கீதம், பிரசங்கள் ஆகியவைகளுடைனும் நடத்தப்படுகின்றன. நான் நடத்திய அச்சிறிய விருந்திலும் இந்த ஆடம்பரங்கள் இல்லாதது போகவில்லை. ஆகையால், அதில் பிரசங்களும் இருந்தாக வேண்டியதாயிற்று. நான் பேசவேண்டிய சமயம் வந்தபோது பேசுவதற்கு எழுந்து நின்றேன். சில வாக்கியங்களை மாத்திரமே கொண்ட ஒரு சிறு பிரசங்கம் செய்வதென்று அதற்காக யோசித்தும் வைத்திருந்தேன். ஆனால், முதல் வாக்கியம் பேசிய பிறகு மேற்கொண்டு பேச்சு வரவே இல்லை. பார்லிமெண்டு காமன்ஸ் சபையில் அடிஸன் செய்ய முயன்ற முதல் பிரசங்கத்தைக் குறித்து நான் படித்திருக்கிறேன்.

நான் கருதுகிறேன் (I Conceive) என்று மும்முறை திரும்பத் திரும்ப அவர் சொன்னார். அதற்கு மேல் அவரால் பேச முடியவில்லை. அப்பொழுது ஒரு கேலிக்காரர் எழுந்து இக்கனவான் மும்முறை கருத்தரித்தார். ஆனால் எதுவுமே வெளியே வரவில்லை என்று சொன்னார். இந்த வரலாற்றை வைத்துக் கொண்டு தமாஷ் பிரசங்கம் ஒன்றைச் செய்துவிடுவது என்று யோசித்து வைத்திருந்தேன். ஆகையால், அக்கதையைச் சொல்ல ஆரம்பித்தேன். முதலியே தடைப்பட்டு என் பேச்சு நின்றுவிட்டது. எனக்கு ஞாபக சக்தி அடியோடு இல்லாது போய்விட்டது. தமாஷான பிரசங்கம் ஒன்று செய்ய முயன்று, என்னையே கேலிக்கு இடமாக ஆக்கிக்கொண்டேன். கனவான்களே என் அழைப்பிற்கு இணங்கி வந்ததற்காக உங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று மாத்திரம் சொல்லிவிட்டு உட்கார்ந்து விட்டேன்.

தென்னாப்ரிக்காவில்தான் இந்தக் கூச்சம் என்னை விட்டுப் போயிற்று, என்றாலும் அங்கும் அது முற்றும் போய்விடவில்லை. முன்னால் தயார் செய்து கொள்ளாமல் பிரசங்கம் செய்வதென்பதும் என்னால் முடியாது. முன்பின் தெரியாத ஒரு கூட்டத்தின் முன்னால் பேசுவதற்கு நான் தயங்கினேன். முடிந்தால் பிரசங்கம் செய்யாமலும் தப்பித்துக் கொண்டு விடுவேன். இன்றுகூட நண்பர்களின் கூட்டத்தில் வெறும் பேச்சுப் பேசிக்கொண்டிருக்க என்னால் முடியும் என்று நான் நினைக்கவில்லை, அப்படிச் செய்யவும் மாட்டேன்.

ஆனால், இன்னும் ஒன்றையும் நான் சொல்லவே வேண்டும். என் உடம்புடன் ஒட்டியதாயிருந்த கூச்சத்தினால் சில சமயங்களில் என்னைக் குறித்துப் பிறர் நகைப்பதற்கு இடம் வைத்துக் கொண்டேன் என்பதைத் தவிர அதனால் எனக்கு எவ்விதத்திலும் கெடுதி உண்டாகவில்லை. அதற்கு மாறாக, உண்மையில் அது எனக்கு நன்மையே செய்திருக்கிறது என்பதைக் காண்கிறேன். பேச்சில் எனக்கு இருந்த தயக்கம், ஒரு சமயம் கவலை தருவதாக இருந்திருந்தாலும், இப்பொழுது அது இன்பமானதாக இருக்கிறது. சொற்களைச் சிக்கனமாக உபயோகிக்க எனக்குத் கற்றுக் கொடுத்ததே அதனால் ஏற்பட்ட மிகப் பெரிய நன்மை. என்னுடைய எண்ணங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் பழக்கமும் இயற்கையாகவே எனக்கு உண்டாயிற்று. சரியாகச் சிந்திக்காத சொல் எதுவும் என் நாவிலிருந்தோ, பேனாவிலிருந்தோ வெளிவருவதோ இல்லை, இந்த விஷயத்தில் இப்பொழுது நானே எனக்கு நற்சாட்சிப் பத்திரம் அளித்துக் கொள்ள முடியும். நான் பேசியது அல்லது எழுதியது எதற்காகவும் நான் பின்னால் வருத்தப்பட நேர்ந்ததாக எனக்கு நினைவில்லை. இவ்விதம் பல தவறுகளிலிருந்தும் நான் தப்பினேன். வீண் கால விரயமும் எனக்கு நேராதிருந்தது. சத்தியத்தை நாடுகிறவர் அனுசரிக்க வேண்டிய ஆன்மிகக் கட்டுத்திட்டங்களில் மௌனமும் ஒரு பகுதி என்பதை அனுபவம் எனக்குப் போதித்திருக்கிறது.

உண்மையை அறிந்தோ அறியாமலோ மிகைப்படுத்தியும் மறைத்தும் திரித்தும் கூறுவது, மனிதனுக்கு இயற்கையாகவே இருக்கும் ஒரு குறைபாடு. அதனின்றும் தப்புவதற்கு மௌனம் அவசியமானது. அதிகமாகப் பேசாதவர், யோசியாமல் பேச வாய்ப்பு இருக்காது. ஒவ்வொரு சொல்லையும் அவர் நிறுத்தியே பேசுவார். பேச வேண்டும் என்று பெருத்த ஆசையுடன் இருப்போர் பலரைப் பார்க்கிறோம். தம்மையும் பேச அனுமதிக்க வேண்டும் என்று வற்புறத்தி வரும் பல சீட்டுக்களைப் பெறாத எந்தக் கூட்டத் தலைவரையும் காண முடியாது. பேச அனுமதி கொடுத்துவிட்டாலோ, தங்களுக்கு அளித்த நேரத்தையும் தாண்டி, இன்னும் அதிக நேரம் வேண்டும் எனக் கேட்டு அனுமதியின்றியும் இவர்கள் பேசிக்கொண்டே போகிறார்கள். இத்தகைய பேச்சுக்களினாலெல்லாம் உலகிற்கு வீணாக்குவதுதான் அது. உண்மையில் எனக்கு இருந்த கூச்சமே, எனக்குக் கேடயமாகவும், கவசமாகவும் ஆயிற்று. நான் வளர்ச்சியடைய அது அனுமதித்தது. சத்திய ஆராய்ச்சியில் அது எனக்கு உதவியையும் செய்தது. 
 


Offline Anu

பொய்ம்மை ரணம்

இக்காலத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் இங்கிலாந்தில் இந்திய மாணவர்கள் சொற்பமாகவே இருந்தனர். தங்களுக்கு மணமாகியிருந்தாலும் மணமாகதவர்கள்போல் நடித்து வருவது அவர்களிடம் இருந்த பழக்கம் படிப்புக்கு மண வாழ்க்கை ஏற்றதல்ல என்று அங்கே கருதப்படுகிறது ஆகையால், பள்ளிக்கூட அல்லது கல்லு}ரி மாணவர்கள் எல்லோரும் மணமாகாதவர்கள். நம் நாட்டில் சிறந்திருந்த பழங்காலத்திலும் இந்தப் பழக்கமே இருந்தது. அக்காலத்தில் மாணவர்கள் பிரம்மச்சாரிகள் என்றே சொல்லப்பட்டு வந்தனர். ஆனால் இன்றோ குழந்தைப் பருவத்திலேயே விவாகம் செய்து வைத்து விடும் வழக்கம் நம்மிடம் இருக்கிறது. இப்பழக்கம் இங்கிலாந்தில் இல்லவே இல்லை.

ஆகையால் தங்களுக்கு மணமாகிவிட்டது என்று ஒப்புக்கொள்ள இங்கிலாந்தில் இருந்த இந்திய இளைஞர்கள் வெட்கப்பட்டார்கள். இவ்விதம் இவர்கள் பாசாங்கு செய்து வந்ததற்கு மற்றொரு காரணமும் உண்டு. இவர்களுக்கு மணமாகிவிட்டது என்று தெரிந்துவிட்டால், இங்கிலாந்தில் இவர்கள் எந்தக் குடும்பத்தினருடனம் வசிக்கிறார்களோ அக்குடும்பங்களின் இளம்பெண்களுடன் வெளியே உலாவப் போவதும், சல்லாபம் செய்வதும் முடியாது போகும். சல்லாபம் அநேகமாகக் குற்றமற்றதேயாகும். பெற்றோர்களே இதற்கு ஆதரவளிக்கிறார்கள். அந்நாட்டில் ஒவ்வோர் இளைஞனும் தனது வாழ்க்கைத் துணைவியைத் தானே தேர்ந்துகொள்ள வேண்டியவனாகிறான். அப்படியிருப்பதால் வாலிபப் பையன்களும், வாலிபப் பெண்களும் அத்தகைய உறவு கொள்ளுவது அங்கே அவசியமாகக் கூட இருக்கலாம் ஆனால், ஆங்கில இளைஞர்களுக்கு முற்றும் இயற்கையானதாக இருக்கும் இத்தகைய உறவுகளில் இங்கிலாந்துக்கு வந்ததும் இந்திய இளைஞர்கள் ஈடுபட்டு விடுவார்களேயாயின், அதன் முடிவு ஆபத்தில் முடிந்துவிடக்கூடும். அப்படியே ஆகியும் விடுகிறது. நமது வாலிபர்கள், உணர்ச்சி வயப்பட்டுப் போய்ப் பெண்களுடன் தோழமை கொள்ளுவதற்காகக் பொய்யான வாழ்க்கை நடத்தி வருவதைக் கண்டேன்.

இத்தகைய தோழமை ஆங்கில இளைஞர்கள் விஷயத்தில் என்னதான் குற்ற மில்லாததாக இருந்தாலும், இவர்களுக்கு அது விரும்பத்தகாததே. இத்தொத்து நோய் என்னையும் பற்றிக் கொண்டது. எனக்கு மணமாகி, ஒரு குழந்தைக்கும் நான் தந்தையாக இருந்தபோதிலும், மணமாகாதவன் போல் நடித்து வர நானும் தயங்கவில்லை. ஆனால் பாசாங்கு செய்பவனாக இருந்தது எனக்கு இன்பமாயும் இல்லை. எனக்கு இருந்த கூச்சமும் அடக்கமுமே இவ்விஷயத்தில் இன்னும் அதிக தூரம் போய்விடாதவாறு என்னைத் தடுத்தன நான் வாய்திறந்து பேசவே இல்லை என்றால், என்னுடம் பேசவேண்டும் என்றோ, உலாவப் போகவேண்டும் என்றோ எந்தப் பெண்ணும் எண்ணுவதற்கில்லை.

கூச்சத்தோடு நான் ஒதுங்கியிருந்ததற்கு ஏற்றாற்போல் என்னிடம் கோழைத்தனம் இருந்தது. வெண்ட்னரில் ஒரு குடும்பத்தினருடன் நான் வசித்து வந்தேன். அத்தகைய குடும்பங்களில் வீட்டுக்கார அம்மாளின் மகள் விருந்தினரை உலாவ அழைத்துச் செல்லுவது வழக்கம். என் வீட்டு அம்மாளின் மகள், ஒரு நாள் என்னை வெண்ட்னரைச் சுற்றியுள்ளள அழகான மலைகளுக்கு அழைத்துச் சென்றாள். நானே வேகமாக நடப்பவன், அப்பெண்ணோ என்னையும்விட வேகமாக நடந்தாள். அவளுக்குப் பின்னால் என்னை இழுத்துக்கொண்டு போனாள் என்றே சொல்லலாம். வழியெல்லாம் ஏதோதோ பேசிக்கொண்டே போனாள். அவளுடைய ஓயாத பேச்சுக்குச் சில சமயம், ஆம் அல்லது இல்லை என்று மாத்திரம் மெல்லிய தொனியில் பதில் சொல்லுவேன். அதிகமாக நான் பேசினால், ஆம் எவ்வளவு அழகாயிருக்கிறது * என்பேன். அவள் பறவை போல் பறந்து கொண்டிருந்தாள். நானோ எப்பொழுது வீடு திரும்பப் போகிறோம் ? என்று திகைத்துக் கொண்டிருந்தேன்.

இவ்வாறு மலையின் உச்சிக்குப் போய்விட்டோம். திரும்ப எப்படிக் கீழே இறங்குவது என்பதே பிரச்சனை. குதி உயர்வான பூட்ஸ் போட்டிருந்தும், இருபத்தைந்து வயதுள்ள சுறுசுறுப்பான அப்பெண், அம்புபோலப் பாய்ந்து குன்றிலிருந்து இறங்கி விட்டாள். கீழே நின்றுகொண்டு சிரித்தாள், இறங்கி வரும்படி என்னை உற்சாகப்படுத்தினாள், வந்து இழுத்து வரட்டுமா ? என்றும் கேட்டாள். நான் அவ்வளவு கோழையாக இருப்பது எப்படி ? எவ்வளவோ கஷ்டத்துடன் சில சமயம் ஊர்ந்தும் கூட எப்படியோ கீழே போய்ச் சேர்ந்துவிட்டேன். சபாஷ் என்று அவள் உரக்கச் சிரித்தாள். அவளால் முடிந்தவரையில் நான் அதிக வெட்கப்படும்படி செய்துவிட்டாள்.

ஆனால் நான் தீங்குறாமல் எங்குமே தப்பிவிட முடியாது. ஏனெனில் புரையோடும் பொய்மைப் புண்ணிலிருந்து என்னைக் காக்க கடவுள் திருவுளம் கொண்டார். வெண்ட்னரைப் போல நீர் நிலையத்தை அடுத்த மற்றோர் ஊரான பிரைட்டனுக்குப் போயிருந்தேன். அது நான் வெண்ட்னருக்குப் போவதற்கு முன்னால் அங்கே ஒரு ஹோட்டலில் சாதாரண வசதிகளுடைய ஒரு கிழவிதவையைச் சந்தித்தேன். என் இங்கிலாந்து வாசத்தின் முதலாண்டில் நடந்தது இது. ஹோட்டலில் சாப்பாட்டுக்குப் பரிமாற இருக்கும் உணவு வகைகளைக் குறிக்கும் பட்டியல் பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டிருந்ததால் எனக்குப் புரியவில்லை.

அக்கிழவி உட்கார்ந்திருந்த மேiஜயிலேயே நானும் உட்கார்ந்திருந்தேன். நான் அந்த இடத்திற்குப் புதியவன். ஆகையால் விழிக்கிறேன் என்பதை அம்மூதாட்டி கண்டு கொண்டார். எனக்கு உதவி செய்யவும் முன் வந்தார். நீர் இவ்விடத்திற்குப் புதியவர் என்று தோன்றுகிறது இன்னது வேண்டும் என்று ஏன் கேட்காமல் இருக்கிறீர் ? என்று கேட்டார். அப்பட்டியலை எழுத்துக் கூட்டிப் படித்த, அதில் கண்டவைகளில் என்னென்ன சேர்க்கப்பட்டிருக்கின்றன என்று பரிசாரகரைக் கேட்டுத் தெரிந்து கொள்ள நான் தயார் ஆகிக் கொண்டிருந்த சமயத்தில் அந்த நல்ல மூதாட்டி, மேற்கண்டவாறு குறுக்கிட்டார். நான் அவருக்கு நன்றி செலுத்தினேன். எனக்கு இருந்த கஷ்டத்தையும் விளக்கினேன். பிரெஞ்சு மொழி எனக்குத் தெரியாததனால் பரிமாறப் படுவதில் எது மாமிசக் கலப்பில்லாதது என்று எனக்கு விளங்கவில்லை என்றேன்.

தான் உமக்கு உதவி செய்கிறேன். அப்பட்டியலை உமக்கு விளக்கிக் கூறி, நீர் எதைச் சாப்பிடலாம் என்பதையும் காட்டுகிறேன் என்றார். அம்மூதாட்டி வந்தனத்துடன் அவர் உதவியைப் பயன்படுத்திக் கொண்டேன். எங்களுக்குள் ஏற்பட்ட பழக்கத்தின் ஆரம்பம் இது. பின்னர் இது நட்பாக வளர்ந்து. நான் இங்கிலாந்தில் இருந்த வரையிலும், அதற்குப் பிறகு நீண்டகாலமும் கூட, இந்த நட்பு தொடர்ந்து இருந்து வந்தது. அவர் தமது லண்டன் விலாசத்தை எனக்குக் கொடுத்ததோடு ஒவ்;வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவில் தம் வீட்டுக்கு சாப்பிட வருமாறும் அழைத்தார். விசேஷ சந்தர்ப்பங்களிலும் அவர் என்னை அழைப்பார். என் கூச்சத்தைப் போக்கிக் கொள்ள உதவி செய்வார். இளம் பெண்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்து, அவர்களுடன் நான் பேசும்படியும் செய்வார். இவ்விதம் பேசுவதில் ஈடுபட்ட பெண்களில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியவள், அம் மூதாட்டியின் வீட்டிலேயே வசித்து வந்த ஒருத்தியாவாள். அடிக்கடி நாங்கள் இருவர் மட்டும் தனியாக இருக்கும்படியும் விடப் படுவோம்.

இவையெல்லாம் முதலில் எனக்கும் பெரும் சங்கடமாகவே இருந்தன. பேச்சை முதலில் தொடங்க என்னால் முடியாது. விகடமாகப் பேசி, நகைப்பை உண்டாக்கவும் என்னால் ஆகாது. ஆனால், அப்பெண் எனக்குக் கற்றுக் கொடுத்தாள். நானும் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். நாளாக ஆக, ஞாயிற்றுக்கிழமை எப்பொழுது வரும் ? என்று ஆவலுடன் எதிர் பார்க்கலானேன். அந்த இளம் பெண்ணுடன் பேசிக்கொண்டிருப்தையும் விரும்பத்தலைப் பட்டேன்.

அம்மூதாட்டி நாளுக்கு நாள் தமது வலையை விரிவாகப் பரப்பிக் கொண்டே போனார். எங்கள் சந்திப்பில் அவர் அதிகச் சிரத்தை கொள்ளலானார். எங்கள் இருவரைக் குறித்தும் அவருடைய சொந்தத் திட்டம் ஏதாவது இருந்திருக்க கூடும்.

என் நிலைமை அதிகச் சங்கடமானதாயிற்று. எனக்கு மணமாகி விட்டது என்பதை முன்னாலேயே அந்த நல்ல மூதாட்டிக்குத் தெரிவித்திருக்கக் கூடாதா ? என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். அப்பொழுது அவர், எங்கள் இருவருக்கும் விவாக நிச்சயம் செய்ய எண்ணியிருக்க மாட்டார். என் பிழையைத் திருத்திக்கொள்ள இன்னும் காலம் கடந்து போய்விடவில்லை. உண்மையைச் சொன்னால் இனிமேலாவது துயர்திற்கு உள்ளாகாமல் நான் காப்பாற்றப் பட்டு விடுவேன். என் மனத்தில் இத்தகைய எண்ணங்களுடன் அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அக்கடிதம் ஏறக்குறைய பின்வருமாறு இருந்தது.

நாம் பிரைட்டனில் சந்தித்ததிலிருந்து நீங்கள் என்னிடம் அன்புடன் இருந்திருக்கிறீர்கள். தாய், தனது மகனை கவனிப்பதுபோல என்னைக் கவனித்தும் வந்திருக்கிறீர்கள். எனக்கு மணம் ஆகிவிட வேண்டும் என்றும் நீங்கள் எண்ணுகிறீர்கள். அந்த நோக்கத்துடன் இளம் பெண்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தீர்கள். விஷயம் முற்றுவதற்கு முன்னால், உங்கள் அன்புக்குத் தகுதியற்றவனாக நான் இருந்திருக்கிறேன் எனப்தை நான் உங்களிடம் ஒப்புக் கொண்டுவிட வேண்டும். நான் உங்கள் வீடடுக்கு வர ஆரம்பித்தபோதே, எனக்கு மணம் ஆகிவிட்டது என்பதை நான் உங்களுக்குச் சொல்லியிருக்க வேண்டும். இங்கிலாந்தில் இருக்கும் இந்திய மாணவர்கள், தங்களுக்கு மணம் ஆகிவிட்டது என்ற உண்மையை மறைத்து விடுகிறார்கள் என்பதை நான் அறிவேன். நானும் அப்படியே செய்தேன்.

அப்படி நான் செய்திருக்கவே கூடாது என்பதை இப்பொழுது உணருகிறேன். இன்னும் ஒன்றையும் நான் கூறவேண்டும் சிறு பையனாக இருக்கும்போதே எனக்கு மணம் ஆகிவிட்டது. ஒரு பையனக்கு நான் தந்தை. இவ்வளவு காலமும் இதையெல்லாம் உங்களுக்குத் தெரியாமல் வைத்திருந்து விட்டதற்காக நான் மனம் நோகிறேன். ஆனால், உண்மையைச் சொல்லிவிடும் தைரியத்தை எனக்குக் கடவுள் இப்பொழுதாவது அளித்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன். என்னை நீங்கள் மன்னிப்பீர்களா ? நீங்கள் அன்போடு எனக்கு அறிமுகம் செய்து வைத்த பெண்ணிடம் எந்தவிதமான தகாத வழியிலும் நான் நடந்து கொண்டதில்லை. என்று உங்களுக்கு உறுதி கூறுகிறேன். நான் எவ்வளவு தூரம் போகலாம் என்பதை அறிவேன். நீங்களோ, எனக்கு மணம் ஆகிவிட்டது என்பதை அறியாமல் எங்களுக்குள் விவாகம் நிச்சயம் ஆவவேண்டும் என்று இயற்கையாகவே விரும்பினீர்கள். இப்பொழுதுள்ள கட்டத்திற்கு மேல் விஷயங்கள் போய்விடாமல் இருப்பதற்காக நான் உங்களிடம் உண்மையைக் சொல்லிவிட வேண்டும்.

இக்கடிதம் உங்களுக்குக் கிடைத்த பிறகு. நீங்கள் காட்டிய அன்புக்கு அருகதையற்றவனாக நான் இருந்திருக்கிறேன் என்று நீங்கள் உண்ர்ந்தால், அது தவறு என்று நான் எண்ண மாட்டேன் என்று உங்களுக்கு உறுதி கூறுகிறேன். உங்களுடைய அன்பினாலும் நீங்கள் என்னிடம் காட்டிய சிரத்தையினாலும் நிரந்தரமான நன்றியறிதலுக்குக் கடமைப்பட்டவனாக என்னைச் செய்திருக்கிறீர்கள். இக்கடிதத்திற்குப் பிறகும், நீங்கள் என்னை நிராகரித்து விடாமல், உங்களுடைய அன்பான வீட்டிற்கு வரத் தகுதியுடையவனாகவே என்னைக் கருதுகிறீர்கள் என்றால் அதற்கு உரியவனாவதற்குப் பாடுபட நான் தவறமாட்டேன், இயற்கையாகவே மகிழ்ச்சியடைவேன். அதை உங்கள் அன்பின் மற்றோர் அறிகுறியாகவும் கொள்ளுவேன்.

இத்தகைய கடிதத்தை ஒரே சமயத்தில் நான் எழுதியிருக்க முடியாது என்பதை வாசகர் அறியவேண்டும். அதை நான் நிச்சயமாகத் திரும்பத் திரும்பப் பன்முறை திருத்தி எழுதியிருக்க வேண்டும். ஆனால், அதை எழுதிய பிறகு, என் உள்ளத்தை அழுத்திக் கொண்டிருந்த பெருஞ்சுமை நீங்கியது. அநேகமாக அடுத்த தபாலிலேயே அம்மூதாட்டியிடமிருந்து எனக்குப் பதிலும் வந்தது.

அது ஏறக்குறையப் பின்வருமாறு.

ஏதையும் ஒளிக்காமல் நீங்கள் எழுதிய கடிதம் கிடைத்து. நாங்கள் இருவருமே மகிழ்ச்சியடைந்ததோடு சந்தோஷத்துடன் சிரித்து விட்டோம். நீங்கள் செய்துவிட்ட, உண்மையை மறைத்த குற்றம் என்று நீங்கள் கூறும் செயல், மன்னிகத்தக்கது. ஆனால் உண்மை நிலைமையை எங்களுக்கு நீங்கள் தெரிவித்துவிட்டது நல்லதே. என் அழைப்பு இன்னும் இருந்து வருகிறது. அடுத்த ஞாயிற்றுக்கிழமை உங்களை நிச்சயமாக எதிர் பார்க்கிறோம் அதோடு உங்கள் குழந்தைக் கல்யாணத்தைப் பற்றிய விவரங்களையெல்லாம் அறிந்து, உங்கள் சங்கடத்தில், நாங்கள் சிரித்து இன்புறுவதையும் எதிர் நோக்குகிறோம். இச்சம்பவத்தினால் நமது நட்பு, ஒரு சிறிதேனும் பாதிக்கப்படவில்லை என்று நான் உறுதி கூறவும் வேண்டுமா ?

இவ்வாறு நான் என்னிடமிருந்து, பொய்மையின் புரையோடிய புண்ணைப் போக்கிக்கொண்டேன். அதற்கு பிறகு, - அவசியமாகும் இடங்களிலெல்லாம் எனக்கு மணம் ஆகிவிட்டதைக் குறித்துப் பேச நான் தயங்கியதே இல்லை.


Offline Anu

சமயங்களுடன் தொடர்பு

நான் இங்கிலாந்தில் இருந்த இரண்டாம் ஆண்டின் இறுதியில் பிரம்மஞான சங்கத்தைச் சேர்ந்த சகோதரர்களுடன் எனக்குப் பழக்கம் உண்டாயிற்று. அவர்கள் இருவரும் மணம் ஆகாதவர்கள். அவர்கள் கீதையைக் குறித்து என்னிடம் பேசினர். ஸர் எட்வின் அர்னால்டு மொழி பெயர்த்திருந்த கீதையை அவர்கள் படித்துக் கொண்டிருந்தனர். அசல் நுலைத் தங்களுடன் சேர்ந்த படிக்க வருமாறு என்னை அழைத்தார்கள். அத்தெய்வீக நுலைச் சமஸ்கிருதத்திலோ, குஜராத்தியிலோ நான் படித்ததில்லையாகையால் எனக்கு வெட்கமாகி விட்டது. நான் கீதையைப் படித்ததேயில்லை. ஆனால், அவர்களோடு சேர்ந்து மகிழச்சியுடன் அதைப் படிப்பேன் என்பதை நான் அவர்களிடம் சொல்லியாக வேண்டியதாயிற்று. சமஸ்கிருதத்தில் எனக்கு இருந்த ஞானம் சொற்பமேயாயினும், மொழிபெயர்ப்பு எந்த இடத்தில் அதன் பொருளைச் சரியாகக் கொண்டுவரத் தவறியிருக்கிறது என்பதைக் கூறும் அளவுக்கு மூலநு}ல் எனக்கு விளங்கும் என்றும் அவர்களிடம் சொன்னேன். அவர்களோடு சேர்ந்து கீதையைப் படிக்க ஆரம்பித்தேன். அதன் இரண்டாவது அத்தியாத்தில் காணும் சில சுலோகங்களின் கருத்து இது.

இந்திரிய விசயங்களைத் தியானிக்கிற மனிதனுக்கு
அவற்றினிடம் பற்றுதல் உண்டாகிறது.
பற்றுதலிலிருந்து ஆசை உண்டாகிறது,
ஆசையிலிருந்து குரோதம் வளர்கிறது
குரோதத்திலிருந்து மனக்குழப்பம் உண்டாகிறது,
குழப்பத்திலிருந்த நினைவின்மையும்
நினைவின்மையிலிருந்து புத்தி நாசமும் உண்டாகின்றன
புத்தி நாசத்தினால் மனிதன் அழிந்துபோகிறான்.

இந்தச் சுலோகங்கள் என் மனத்தில் ஆழப் பதிந்தன. அவை இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அந்நூல் விலை மதிப்பைக் கடந்த மாணிக்கமாக எனக்குத் தோன்றியது. அதிலிருந்து இந்தக் கருத்து எனக்கு வலுப்பட்டுக்கொண்டே வந்தது இதன் பலனாக, சத்தியமான ஞானத்தைப் போதிக்கம் மிகச் சிறந்த நூல் இது என்று நான் எண்ணி வருகிறேன். எனக்கு மனச் சஞ்சலங்கள் ஏறு;படும் சமயங்களில் இந்நூல் மதித்தற்கரிய உதவியாக இருந்திருக்கிறது. அநேகமாக கீதையின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் எல்லாவற்றையும் படித்திருக்கிறேன். அவற்றிற்கெல்லாம் ஸர் எட்வின் அர்னால்டின் மொழிபெயர்ப்பே மிகச் சிறந்து என்று நான் கருதுகிறேன். மூலத்தின் கருத்து ஒரு சிறிதும் மாறுபடாத வகையில் அவர் மொழி பெயர்த்திருக்கிறார். அது மொழிபெயர்ப்பாகவே தோன்றவில்லை. இந்த நண்பர்களடன் சேர்ந்து, அப்பொழுது கீதையை நான் படித்த போதிலும் அதைத் தீரக் கற்றேன் என்று நான் பாசாங்கு செய்வதற்கில்லை. சில ஆண்டுகள் சென்ற பின்னரே நான் தினந்தோறும் கீதையைப் படிக்கலானேன்.

ஸர் எட்வின் அர்னால்டு எழுதிய, ஆசியாவின் ஜோதி என்ற நூலையும் படிக்கும்படி அச்சகோதரர்கள் என்னிடம் கூறினார். பகவத் கீதையின் மொழிப்பெயர்ப்பாளர்கள் என்று மாத்திரமே ஸர் அர்னால்டை அதுவரையில் எனக்குத் தெரியும். பகவத் கீதையையும்விட இன்னும் அதிகக் கவனத்துடன் அந்நூலைப் படித்தேன். படிக்கக் கையில் எடுத்துவிட்டால் பிறகு அதைக் கீழே வைத்துவிட முடிவதில்லை. அச்சகோதரர்கள் ஒரு சமயம் என்னைப் பிளாட்வட்ஸ்கி விடுதிக்கு அழைத்து சென்று, பிளாவட்ஸ்கி அம்மையாரையும் ஸ்ரீமதி பெஸன்டையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தனர். ஸ்ரீமதி பெஸன்ட் அப்பொழுதுதான் பிரம்மஞான சங்கத்தில் சேர்ந்திருந்தார். அவர் இவ்விதம் மாறிவிட்டதைக் குறித்த நடந்து வாதப் பிரதிவாதங்களைச் சிரத்தையுடன் கவனித்து வந்தேன். இச்சங்கத்தில் சேரும்படி நண்பர்கள் எனக்கும் யோசனை கூறினர். என் மதத்தைப் பற்றியே நான் இன்னும் சரியாகத் தெரிந்து கொள்ளாமல் இருக்கும்போது மத சம்பந்தமான எந்த ஒரு ஸ்தாபனத்திலும் சேர நான் விரும்பவில்லை என்று மரியாதையுடன் கூறி மறுத்துவிட்டேன். அந்தச் சகோதரர்கள் சொன்னதன் பேரில் பிளாவட்ஸ்கி அம்மையார் எழுதிய, பிரம்மஞானத் திறவு கோல் என்னும் நூலை நான் படித்தாகவும் எனக்கு நினைவு இருக்கிறது. ஹிந்து சமயத்தைப் பற்றிய நூல்களைப் படிக்கும் ஆர்வத்தை இந்நூல் எனக்கு ஊட்டியது ஹிந்து சமயத்தில் மூடநம்பிக்கைகளே மலிந்து கிடக்கின்றன என்று பாதிரிகள் செய்த பிரச்சாரத்தினால் எனக்கு உண்டாகியிருந்த தவறான எண்ணத்தையும் இந்நூல் போக்கியது.

அதே சமயத்தில் மான்செஸ்டரிலிருந்து வந்த ஓர் உத்தமமான கிறிஸ்தவரை சைவ உணவு விடுதி ஒன்றில் நான் சந்தித்தேன். கிறிஸ்தவத்தைப் பற்றி அவர் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். ராஜ;கோட்டில் கிறிஸ்தவ் பாதிரிமார் நடத்தி வந்த பிரச்சாரத்தைக் குறித்த என்னுடைய பழைய நினைவுகளை அவரிடம் கூறினேன். அதைக் கேட்டு, அவர் மனவேதனை அடைந்தார் நான் சைவ உணவ மாத்திரமே சாப்பிடுபவன், மதுபானமும் அருந்துவதில்லை. கிறிஸ்தவர்கள்அநேகர் மாமிசம் சாப்பிடுகிறார்கள், குடிக்கிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் மது, மாமிசம் சாப்பிடும்படி எங்கள் வேதம் சொல்லவில்லை, தயவு செய்து பைபிளைப் படியுங்கள் என்றார். அவருடைய யோசனையை ஏற்றுக் கொண்டேன், அவர் எனக்குப் பைபிள் பிரதி ஒன்றும் வாங்கிக்கொடுத்தார். அவரே பைபிள் பிரதிகளை விற்று வந்ததாகவும், படங்கள், அரும்பத் அகராதி முதலிய விளக்கங்கள் அடங்கிய ஒரு பைபிள் பிரதியை அவரிடம் நான் வாங்கியதாகவும் எனக்குக் கொஞ்சம் நினைவிருக்கிறது அதைப் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் பழைய ஏற்பாட்டைப் படித்துக் புரிந்துகொள்ள என்னால் இயலவல்லை. ஆதி ஆகமத்தையும் அதையடுத்த அத்தியாயங்களையும் படிக்க ஆரம்பித்ததுமே எனக்குத் தூக்கம் வந்துவிடும். ஆனால், பைபிளைப் படித்திருக்கிறேன் என்று சொல்லிக்கொள்ள இயலவேண்டும் என்பதற்காகச் சிரமத்தோடேயே மற்றப் பகுதிகளையும் மேலெழுந்தவாரியாகப் படித்து முடித்தேன். அதில் எனக்கு கொஞ்சமும் சிரத்தை ஏற்படவில்லை, எனக்கு அது விளங்கவும் இல்லை. எண்ணாகமம் என்ற பகுதியைப் படிப்பதற்கே எனக்கு வெறுப்பாக இருந்தது.

ஆனால் புதிய ஏற்பாட்டைப் படித்தபோது எனக்கு முற்றும் மாறான உணர்ச்சி ஏற்பட்டது. முக்கியமாக மலைப்பிரசங்கம் நேரடியாகவே என் உள்ளத்தைக் கவர்ந்துவிட்டது. அதைக் கீதையுடன் ஒப்பிட்டுப் பார்த்தேன். தீமைக்குப் பதிலாகத் தீமையைச் செய்யாதே என்று உங்களுக்குக் கூறுகிறேன். உன்னை வலது கன்னத்தில் யாராவது அறைந்தால் மற்றொரு கன்னத்தையும் திரப்பிக் காட்டு. எவனாவது உன் சட்டையை எடுத்துக் கொண்டுவிட்டானாயின் உன் போர்வையையும் அவனுக்குக் கொடு என்பன போன்ற உபதேசங்கள் எனக்கு அளவு கடந்த ஆனந்தத்தை அளித்தன. உண்ணும் நீர் தந்த ஒருவனுக்குத் கைம்மாறாய் விண்ணமுதத்தைப் போல் அன்னம் விரும்பிப் படைத்திடுவாய் என்ற ஷாமல்பட்டின் பாடல் உடனே என் நினைவுக்கு வந்தது கீதை, ஆசிய ஜோதி மலைப்பிரசங்கம் ஆகிய மூன்றும் ஒன்றே என்று கருத என் இளம் மனம் முயன்றது. துறவே, சமயத்தின் தலைசிறந்த அம்சம் என்பது என் மனத்தை மிகவும் கவர்ந்தது.

இவைகளைப் படித்ததனால் மற்றச் சமயாசாரியர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் படிக்கவேண்டும் என்ற பசி எனக்கு உண்டாக்கிவிட்டது. கார்லைல் எழுதிய, வீரர்களும் வீரர் வழிபாடும் என்ற நூலைப் படிக்குமாறு ஒரு நண்பர் கூறினார். வீரனைத் தீர்க்கதரிசியாகக் கூறும் அத்தியாயத்தைப் படித்து, முகமது நபியின் பெருமையையும் வீரத்தையும் எளிய வாழ்க்கையையும் பற்றித் தெரிந்துகொண்டேன்.

பரீட்சைக்குப் படிக்க வேண்டியிருந்தது. மற்ற வெளி விஷயங்களைக் குறித்துப் படிக்க நேரம் கிடைப்பதே இல்லை. ஆகையால் சமயங்களைப் பற்றி இன்னும் அதிகமாக நான் தெரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், சமய நூல்களை இன்னும் அதிகமாகப் படிக்க வேண்டும் என்று என் மனத்திற்குள் முடிவு செய்து கொண்டேன்.

நாத்திக வாதத்தைக் குறித்து நான் ஒரு சிறிதும் தெரிந்து கொள்ளாமல் இருப்பது எப்படி ? பிராட்லாவின் பெயரையும் நாத்திகம் என்று கூறப்படும் அவர் வாதத்தையும் ஒவ்வோர் இந்தியரும் அறிவர் அதைக் குறித்து ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்தேன். அதன் பெயரை மறந்துவிட்டேன். அதற்கும் முன்னாலேயே நாத்திகம் என்ற பாலைவனத்தைக் கடந்து விட்டேனாகையால், அப்புத்தகம் என் மனத்தை மாற்றிவிடவில்லை. அச்சமயம் ஸ்ரீமதி பெஸண்டின் பெயர் எங்கும் பிரபலமாக இருந்தது. அவர் நாத்திகத்திலிருந்து ஆத்திகத்திற்குத் திரும்பிவிட்டார். நான் பிரம்மஞான சங்கத்தில் சேர்ந்தது ஏன் ? என்று அவர் எழுதியிருந்த நூலையும் படித்தேன்.

ஏறக்குறைய அந்தச் சமயத்தில்தான் பிராடலா காலமானார். அவர் சடலத்தை வோகிங் கல்லறையில் அடக்கம் செய்தனர். இச்சவ அடக்கச் சடங்கிற்கு நானும் போயிருந்தேன். லண்டனில் இருந்த இந்தியர் எல்லோருமே அதற்குச் சென்றிருந்தனர் என்று நம்புகிறேன். அவருக்குக் கடைசி மரியாதை செய்வதற்காகப் பாதிரிமார் சிலரும் வந்திருந்தனர். அச்சடங்கிலிருந்து திரும்பும்போது ரயிலுக்காக நிலையத்தில் நாங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. அப்பொழுது அக்கூட்டத்தில் இருந்த ஒரு தீவிர நாத்திகர், பாதிரிகளில் ஒருவரைக் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்.

சரி கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று நீங்கள் நம்புகிறீர்கள் அல்லவா ? என்று அவர் கேட்டார்.

ஆம் என்று அடக்கமான குரலில் அந்த நல்ல மனிதர் பதில் சொன்னார்.

இப்பூமியின் சுற்றளவு 28,000 மைல்கள் என்றும் நீங்கள் ஒப்புக் கொள்ளுகிறீர்கள் அல்லவா? என்று அந்த நாத்திகர் தன்னம்பிக்கையுடன் சிரித்துக்கொண்டே கேட்டார்.

ஆமாம் என்றார் பாதிரியார்.

அப்படியானால் உங்கள் கடவுளின் உருவம் என்ன, அவர் எங்கே இருப்பார் என்பதையும் தயவு செய்து சொல்லுங்கள்.

சரி நம்மால் அறிய மாத்திரம் முடிந்தால், அவர் நம் இருவர் உள்ளங்களிலும் வீற்றிருக்கிறார்.

இதோ பாருங்கள் என்னைக் குழந்தை என்று நினைத்துவிட வேண்டாம் என்றார், அத்தீவிரவாதி அதோடு வெற்றிப் பார்வையுடன் எங்களை நோக்கினார்.

பாதிரியாரோ, அடக்கத்துடன் மௌனமாக இருந்து விட்டார். இந்த வாக்குவாதம் நாத்திகத்திடம் எனக்கு இருந்த வெறுப்பை மேலும் அதிகமாக்கி விட்டது.


Offline Anu

திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை

ஹிந்து தருமத்தைக் குறித்தும் மற்ற உலக சமயங்களைப் பற்றியும் ஓரளவுக்குத் தெரிந்து கொண்டிருந்தேன். என்றாலும், எனக்கு ஏற்படும் சோதனைகளிலிருந்து என்னைக் காப்பாற்ற அவை போதா என்பதையும் நான் அறிந்திருக்க வேண்டும். சோதனைகளிலிருந்து ஒருவன் சமாளித்து நிற்கும்படி செய்வது எது என்பதை மனிதன் அறிவதில்லை. அதுவும் அச்சமயத்தில் அதைப்பற்றிய அறிவே இருப்பதில்லை, கடவுள் நம்பிக்கை இல்லாதவனாயின் தான் தற்செயலாகத் தப்பிவிட்டதாகக் சொல்லிக் கொள்ளுவான். கடவுள் நம்பிக்கை உள்ளனானால், கடவுளே தன்னைக் காத்தார் என்பான். தனக்கு இருந்த சமயஞானமோ, ஆன்மீகக் கட்டுப்பாடோதான், ஆண்டவன் தன்னிடம் கருணை காட்டியதற்குக் காரணம் என்ற முடிவுக்கு வருவான். அல்லது வரக்கூடும். ஆனால் அவன் ரட்சிக்கப்படும் சமயத்தில் தன்னைக் காத்தது தன்னுடைய ஆன்மீகக் கட்டுப்பாடுதானா, வேறு ஒன்றா என்பதை அவன் அறியான் தனக்கு ஆன்மீக பலம் அதிகம் இருக்கிறது என்று அகம் பாவம் கொண்டிருந்து, முடிவில் அது தூசாகிப் போனதைக் காணாதவர் யார் ? சமய ஞானம் சோதனை ஏற்படும் சமயங்கிளில் வெறும் உமியாகவே தோன்றுகிறது.

சமய ஞானத்தினால் மட்டும் பயனில்லை என்பதை இங்கிலாந்தில் தான் நான் முதன் முதலில் கண்டுகொண்டேன். இதற்கு முன்னால் நிகழ்ந்த சோதனைகளில் நான் எவ்வாறு காப்பாற்றப்பட்டேன் என்பதை என்னால் அவ்வளவாகக் கூற முடியாது. ஏனெனில், அப்பொழுது நான் மிகச் சிறியவன். ஆனால், இப்பொழுதோ எனக்குச் சிறிது அனுபவமும் ஏற்பட்டிருந்தது.

எனக்கு நினைவிருக்கும் அளவில், நான் இங்கிலாந்தில் இருந்த காலத்தில் கடைசி ஆண்டில் அதாவது 1890-இல் சைவ உணவாளர்கள் மகாநாடு ஒன்று போர்ட்ஸ்மவுத்தில் நடந்தது. அதற்கு ஓர் இந்திய நண்பரும். நானும் அழைக்கப்பட்டிருந்தோம். போர்ட்ஸ்மவுத் துறைமுகம், மாலுமித் தொழிலில் ஈடுபட்டவர்களையே பெரும்பாலும் கொண்ட பட்டணம் அங்கே தீய நடத்தையுள்ள பெண்களைக் கொண்ட வீடுகள் பல உண்டு. இப்பெண்கள் விபச்சாரத்தையே தொழிலாகக் கொண்டவர்கள் அல்ல. என்றாலும் தங்கள் கற்பு நெறியைக் குறித்து அவர்கள் அவ்வளவாகக் கவலைப்படாதவர்கள். இப்படிபட்ட வீடுகளில் ஒன்றில் நாங்கள் தங்கியிருந்தோம். இதைப்பற்றி வரவேற்புக் கமிட்டிக்கு எதுவுமே தெரியாது என்பதை குறித்து நான் சொல்லத் தேவையில்லை. போர்ட்ஸ்மவுத் போன்ற ஒரு பட்டணத்தில் தங்குவதற்கு நல்ல இடம் எது கெட்ட இடம் எது என்பதைக் கண்டுபிடிப்பது எங்களைப்போல் எப்பொழுதோ ஒரு சமயம் அங்கே போகிறவர்களுக்குக் கஷ்டமாகவே இருந்திருக்கும்.

மகாநாட்டிலிருந்து மாலையில் திரும்பினோம். இரவுச் சாப்பாட்டிற்குப் பிறகு ரப்பர் பிரிட்ஜ; என்ற ஒருவிதச் சீட்டாட்டம் ஆட உட்கார்ந்தோம். அவ்வீட்டுக்கார அம்மாளும் எங்களுடன் சீட்டாடினார். இப்படி வீட்டுக்கார அம்மாளும் சேர்ந்து சீட்டாடுவது. இங்கிலாந்தில் கௌரவான குடும்பங்களிலும் வழக்கம். ஆட்டத்தில் ஈடுபட்டிருப்பவர் ஒவ்வொருவரும் குற்றமற்ற வகையில் கேலியாகப் பேசுவது சாதாரணமானது. ஆனால், இங்கோ என் சகாக்களும் அவ்வீட்டு அம்மாளும் ஆபாசமான பேச்சுக்களைப் பேச ஆரம்பித்தார்கள. என் நண்பர், அக்கலையில் கைதேர்ந்தவர் என்பது எனக்குத் தெரியாது. அது என்னையும் பிடித்துக் கொண்டு விட்டது, நானும் அவ்விதப் பேச்சுக்களில் கலந்து கொண்டேன். சீட்டையும் சீட்டாட்டத்தையும் விட்டுவிட்டு. எல்லை மீறி நான் போய்விட இருந்த சமயத்தில் அந்த நல்ல சகாவின்மூலம் கடவுள் எனக்குத் தெய்வீகமான எச்சரிக்கையைச் செய்தார், தம்பி * உன்னுள் இந்த பிசாசு எங்கிருந்து வந்து புகுந்தது ? எழுந்து போய்விடு, சீக்கிரம் என்று அவர் சொன்னதே அந்த எச்சரிக்கை.

நான் வெட்கம் அடைந்தேன். எச்சரிக்கைப்படி நடந்தேன். நண்பருக்கும் என்னுள்ளே நன்றியறிதலைத் தெரிவித்துக் கொண்டேன் என் அன்னையின் முன்னிலையில் நான் மேற்கொண்டிருந்த விரதத்தை நினைவுபடுத்திக் கொண்டு, அவ்விடத்தில் இருந்து ஓடிவிட்டேன். தடுமாறிக்கொண்டே, நடுங்கிக் கொண்டே என் அறைக்குச் சென்றேன். துரத்திய வேடனிடம் இருந்து தப்பிய மிருகம் போல் என் இருதயம் துடிதுடித்தது.

என் மனைவியைத் தவிர வேறு ஒரு பெண், என் மனத்தில் காம இச்சையைத் தூண்டிவிட்டது இதுவே முதல் தடவை என்று நினைக்கிறேன். அன்று இரவெல்லாம் எனக்குத் தூக்கமே வரவில்லை. என்ன என்னவோ எண்ணங்களெல்லாம் எனக்கு உண்டாயின. அந்த வீட்டிலிருந்தே போய்விடுவதா ? அந்த இடத்தை விட்டே ஒடிவிடுவதா ? நான் செய்தது என்ன கொஞ்சம் புத்தி கெட்டுப் போயிருந்தால் என் கதி என்ன ஆகியிருக்கும் ? இனி மிகந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுவதென்ற முடிவைச்செய்து கொண்டேன். அவ்வீட்டைவிட்டுப் போய்விடும் மாத்திரம் அல்ல, எப்படியாவது அவ்வூரை விட்டே போய்விடுவது என்றும் தீர்மானித்தேன். மகாநாடு இரண்டு நாட்களே நடந்தது. அடுத்த நாள் மாலையே போர்ட்ஸ்மாவுத்திலிருந்து நான் புறப்பட்டுவிட்டதாக ஞாபகம். என் நண்பர் மாத்திரம் சில நாட்கள் அங்கே தங்கினார்.

சமயத்தின் சாரத்தைப்பற்றியோ, கடவுளைப்பற்றியோ, அவர் நம்முள் எப்படி வேலை செய்கிறார் என்பதைப் பற்றியோ எனக்கு அப்பொழுது தெரியாது. அச்சமயமே கடவுள் என்னைக் காப்பாற்றினார் என்பதை மாத்திரம் தெளிவற்ற முறையில் நான் அறிந்தேன். சோதனை நேர்ந்த சமயங்களிளெல்லாம் அவரே என்னைக் காத்தார். கடவுள் காப்பாற்றினார் என்ற சொற்றொடருக்கு நான் இன்று ஆழ்ந்த பொருள் கொள்ளுகிறேன் என்பதை அறிவேன். என்றாலும், அதன் முழுப்பொருளையும் நான் இன்னும் அறிந்து கொள்ளவில்லை. என்றே உணர்கிறேன் அதன் முழுப் பொருளையும் அறிந்த கொள்ளுவதற்கு மேலான அனுபவம் ஒன்றே உதவ முடியும். என்றாலும், ஆன்மீகத் துறையிலும், வக்கீலாக இருந்தபோதும், ஸ்தாபனங்களை நடத்தியபோதும், ராஜீய விஷயத்திலும் எனக்குச் சோதனைகள் நேர்ந்த சமயங்களிலெல்லாம் கடவுளே என்னைக் காப்பாற்றினார். என்று சொல்ல முடியும். நம்பிக்கைக்கே ஒரு சிறிதும் இடம் இல்லாதபோதும், உதவுவோர் உதவத் தவறித் தேற்றவாரும் ஓடிவிட்ட சமயத்திலும், எப்படியோ அந்த உதவி வந்துவிடுவதைக் காண்கிறேன். ஆனால் எங்கிருந்து அது வருகிறது என்பதை நான் அறியேன். இறைவனை வேண்டுவதும், பூசிப்பதும், பிரார்த்திப்பதும் மூட நம்பிக்கைகள் அல்ல. உண்பதும் பருகுவதும், அமர்வதும் , நடப்பதும் எவ்விதம் உண்மையான செல்களோ அவற்றைவிடவும் அதிக உண்மையான செயல்கள் அவை. அவை மட்டுமே உண்மையானவை, மற்றவை யாவும் பொய்யானவை என்று சொல்வதும் மிகையாகாது.

அத்தகைய வழிபாடு அல்லது பிரார்த்தனை, வாக்கு வன்மையைக் காட்டுவதற்கு உரியதன்று. உதட்டிலிருந்து எழும் வணக்கமும் அல்ல அது. இருதயத்திலிருந்து எழுவதே பிரார்த்தனை. ஆகையால், அன்பு ஒன்றைத் தவிர வேறு எதுவுமே அங்கே இல்லாதவாறு, உள்ளத் தூய்மையை நாம் அடைந்து விடுவோமாயின், தானே இனிய கீதம் எழுந்து, இறைவன் அருளைக் கூட்டுவிக்கும். பிரார்த்தனைக்குப் பேச்சுத் தேவையில்லை, உள்ளத்திலிருந்து காமக் குரோதாதிகளையெல்லாம் போக்கிப் புனிதமாக்கிக் கொள்ளுவதற்குத் தகுந்த சாதனை, பிரார்த்தனையே என்பதில் எனக்குச் சிறிதளவும் சந்தேகம் இல்லை. ஆனால், அத்துடன் முழுமையான அடக்கமும் கலந்திருக்க வேண்டும்.


Offline Anu

நாராயண ஹேமசந்திரர்

ஏறக்குறைய அச் சமயத்தில்தான் நாராயண ஹேமசந்திரர் இங்கிலாந்துக்கு வந்தார். அவர் எழுத்தாளர் என்று கேள்விப் பட்டிருந்தேன். தேசிய சங்கத்தைச் சேர்ந்த குமாரிமானிங் வீட்டில் நாங்கள் இருவரும் சந்தித்தோம். எல்லோருடனும் கலந்து பழகும் குணம் எனக்கு இல்லை என்பது குமாரி மானிங்குக்குத் தெரியும். நான் அவர் வீட்டுக்குப் போனால் வாய் பேசாமல் உட்கார்ந்திருப்பேன். என்னிடம் யாராவது பேசினால் மட்டும் அதற்கு பதில் சொல்வேன். நாராயண ஹேமச்சந்திரரை அப்பெண்மணி எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவருக்கோ ஆங்கிலம் தெரியாது. அவருடைய உடைகளும் விசித்திரமாக இருந்தன. அவருடைய கால்சட்டை விகாரமானது. பார்ஸி மோஸ்தரில் இருந்த அவருடைய பழுப்புநிறச் சட்டை, கசங்கிப்போய், அழுக்காக இருந்தது. கழுத்தில் "டையோ, காலரோ" இல்லை. குஞ்சம் வைத்த கம்பளித் தொப்பியைத் தலையில் வைத்திருந்தார். நீண்ட தாடியும் வளர்த்துக் கொண்டிருந்தார்.

அவர் ஒல்லியாகவும் குள்ளமாகவும் இருப்பார். வட்டமான அவர் முகம் முழுவதிலும் அம்மைத் தழும்புகள். அவர் மூக்கு, கூரியதென்றோ சப்பையானதென்றோ சொல்ல முடியாது. எப்பொழுதும் தமது தாடியைக் கையினால் உருவிவிட்டுக் கொண்டே இருந்தார். நாகரிகமானவர்கள் கூடியுள்ள இடத்தில் இத்தகைய விசித்திரத் தோற்றத்தோடும், வேடிக்கையான உடையோடும் இருப்பவர் மீதே எல்லோருடைய கவனமும் செல்லும்.

உங்களை குறித்து நான் நிரம்பக் கேள்விப் பட்டிருக்கிறேன் என்று அவரிடம் சொன்னேன். நீங்கள் எழுதிய நூல்கள் சிலவற்றையும் படித்திருக்கிறேன். நான் இருக்கும் இடத்திற்கு அன்பு கூர்ந்து வருவீர்களாயின் மகிழ்ச்சியடைவேன் என்றேன்.  நாராயண ஹேமசந்திரரின் குரல், கொஞ்சம் கம்மலாக இருக்கும். சிரித்த முகத்துடன் அவர் ஞவருகிறேன். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் ? என்று கேட்டார். ஸ்டோர் வீதியில் என்றேன். அப்படியானால் நாம் பக்கத்தில்தான் இருக்கிறோம். நான் ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். எனக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா? என்னால் முடிந்த எதையும் கற்றுக் கொடுக்க எனக்கு மகிழ்ச்சியே. என்னால் முடிந்த வரை முயல்கிறேன். நீங்கள் விரும்பினால் உங்கள் இடத்திற்கே வருகிறேன்.

வேண்டியதில்லை. உங்கள் இடத்திற்கே நான் வருகிறேன். என்னுடன் மொழி பெயர்ப்புப் பயிற்சிப் புத்தகம் ஒன்றும் கொண்டு வருகிறேன். இவ்விதம் ஏற்பாடு செய்து கொண்டோம். சீக்கிரத்தில் நாங்கள் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டோம். நாராயண ஹேமசந்திரருக்கு இலக்கணம் என்பதே தெரியாது. குதிரை என்பது வினைச்சொல் என்பார். ஓடு- என்பது பெயர்ச்சொல் என்பார். இப்படிப்பட்ட வேடிக்கையான பல சம்பவங்கள் எனக்கு நினைவு இருக்கின்றன. ஆனால், தம்முடைய இத்தகைய அறியாமைக்காக அவர் கவலைப்படுவதே இல்லை. இலக்கணத்தில் எனக்கு இருந்த சிறிது அறிவும் அவர் விஷயத்தில் பயன்படவில்லை. இலக்கணத்தைக் குறித்துத் தமக்கிருந்த அறியாமை, வெட்கப்பட வேண்டியது என்று அவர் கருதியதே இல்லை என்பது நிச்சயம்.

அவர் கொஞ்சமேனும் கவலைப்படாமல் என்னிடம், உங்களைப் போல் நான் பள்ளிக் கூடத்திற்குப் போனதே இல்லை. என் கருத்துக்களை எடுத்துச் சொல்வதற்கு இலக்கணம் அவசியம் என்று நான் உணர்ந்ததும் இல்லை. அது சரி, உங்களுக்கு வங்காளி மொழி தெரியுமா ? எனக்கு அது தெரியும், நான் வங்காளத்தில் பிரயாணம் செய்திருக்கிறேன். மகரிஷி தேவேந்திரநாத தாகூரின் நூல்களைக் குஜராத்தி பேசும் உலகத்துக்கு அளித்தவனே நான்தான். மற்றும் பல மொழிகளில் இருக்கும் பொக்கிஷங்களை யெல்லாம் குஜராத்தியில் மொழிபெயர்க்க நான் விரும்புகிறேன். மூலத்திற்கு நேரான மொழிப்பெயர்ப்பை நான் செய்வதில்லை என்பது உங்களுக்கு தெரியும். மூலத்தின் கருத்தைக் கொண்டு வருவதோடு நான் திருப்தியடைந்து விடுகிறேன். என்னைவிட அறிவில் சிறந்தவர்கள் பிற்காலத்தில் இன்னும் அரிய வேலைகளைச் செய்யலாம். ஆனால், இலக்கணத்தின் உதவி இல்லாமலேயே நான் இதுவரை செய்திருப்பதில் திருப்தியடைகிறேன். எனக்கு மராத்தி, ஹிந்தி, வங்காளி ஆகிய மொழிகள் தெரியும் இப்பொழுது ஆங்கிலம் கற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறேன். ஏராளமான சொற்கள் தெரிந்திருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். என் ஆசை இதோடு முடிந்துவிட்டதென்று எண்ணுகிறீர்களா ? இல்லவே இல்லை. பிரான்ஸுக்குப் போய்ப் பிரெஞ்சு மொழி கற்க விரும்புகிறேன். அம்மொழியில் இலக்கியச் செல்வம் ஏராளம் என்று கேள்விப்படுகிறேன். சாத்தியமானால் ஜெர்மனிக்குப் போய் ஜெர்மன் மொழியையும் கற்பேன் என்று சொன்னார்.

இவ்விதம் அவர் விடாமல் பேசிக்கொண்டே போவார். பிற மொழிகளைக் கற்பதிலும், வெளிநாடுகளில் சுற்றுப் பிரயாணம் செய்வதிலும் அவருக்கு இருந்த ஆசைக்கு எல்லையே இல்லை. அப்படியானால் நீங்கள் அமெரிக்காவுக்கும் போவீர்கள் அல்லவா?

நிச்சயமாகப் போவேன். புதிய உலகத்தைப் பார்க்காமல் நான் எப்படி இந்தியாவுக்குத் திரும்பிவிட முடியும்? ஆனால், இதற்கெல்லாம் பணத்திற்கு என்ன செய்வீர்கள்? எனக்குப் பணம் எதற்காக ? உங்களைப்போல நான் நாசூக்கானவன் அல்ல. எனக்குக் குறைந்த அளவு சாப்பாடும், குறைந்த அளவு உடையும் போதும். என் புத்தகங்களின் விற்பனையிலிருந்தும் என் நண்பர்களிடம் இருந்தும் கிடைப்பதே இதற்குப் போதுமானது. நான் எப்பொழுதும் மூன்றாம் வகுப்பு வண்டியிலேயே பிரயாணம் செய்கிறேன். அமெரிக்காவுக்குப் போகும் போதும் கப்பலில் கடைசி வகுப்பிலேயே நான் போவேன்.

நாராயண ஹேமசந்திரரின் எளிய வாழ்க்கை அவருக்கே உரியது. அந்த எளிய வாழ்க்கைக்கு ஏற்றாற் போல் இருந்தது அவருடைய கபடமற்ற தன்மையும். கர்வம் என்பதே அவரிடம் கொஞ்சமேனும் இல்லை. ஆனால், நூலாசிரியர் என்பதில் மாத்திரம் தம்முடைய திறமையைப்பற்றிக் கொஞ்சம் அதிகப்படியாகவே அவர் எண்ணிக்கொண்டிருந்தார். நாங்கள் தினந்தோறும் சந்திப்போம். எங்கள் இருவருடைய எண்ணங்களும். செயல்களும் அநேக விஷயங்களில் ஒரேமாதிரி இருந்தன. நாங்கள் இருவரும் சேர்ந்து, மத்தியான வேளைகளில் சாப்பிடுவோம். வாரத்திற்கு 17 ஷில்லிங் செலவில் வாழ்ந்து நானே சமைத்துக்கொண்ட சமயம் அது. சில சமயங்களில் அவர் இருந்த இடத்திற்கு நான் போவேன். சில சமயங்களில் அவர் நான் இருந்த இடத்திற்கு வருவார். ஆங்கில தோரணையில் நான் சமையல் செய்துவந்தேன். இந்திய முறைச் சமையல் தவிர வேறு எதுவுமே அவருக்குப் பிடிக்காது. பருப்பு இல்லாமல் அவருக்குச் சரிப்படாது. காரட் முதலியவைகளைக் கொண்டு நான் சூப் தயாரிப்பேன். எனக்கு இப்படியும் ருசி கெட்டுப் போய்விட்டதே என்று அவர் பரிதாபப்படுவார். ஒருநாள் இந்தியக் காராமணியை எங்கோ தேடிப்பிடித்துச் சமைத்து அதைக் கொண்டு வந்தார். நான் மகிழ்ச்சியுடன் அதைச் சாப்பிட்டேன். அதிலிருந்து ஒருவருக்கொருவர் கொடுப்பதும் வாங்கிக் கொள்ளுவதுமான முறை ஆரம்பமாயிற்று. நான் சமைத்ததை அவருக்குக் கொண்டு போய் கொடுப்பேன், அவர் சமைத்ததை எனக்குக் கொண்டு வந்து கொடுப்பார்.

அச்சமயத்தில் கார்டினல் மானிங்கின் பெயர் எங்கும் பிரசித்தமாக இருந்தது. ஜான் பர்ன்ஸ், கார்டினல் மானிங் ஆகிய இருவரின் முயற்சியினால் துறைமுகத் தொழிலாளர் வேலை நிறுத்தம் சீக்கிரத்தில் முடிவுற்றது. கார்டினலின் எளிய வாழ்க்கையைக் குறித்து டிஸ்ரேலி பாராட்டிக் கூறியிருக்கிறார் என்று நாராயண ஹேமசந்திரரிடம் சொன்னேன். ஞஅப்படியானால் அந்த முனிவரை நான் பார்க்க வேண்டும் என்றார்ஞ அவர். அவரோ மிகப் பெரிய மனிதர். அப்படியிருக்க அவரை எப்படிப் பார்க்க முடியும் என்று எதிர் பார்க்கிறீர்கள் ? என்றேன்.

ஏன் பார்க்க முடியாது ? எப்படிப் பார்ப்பது என்பது எனக்குத் தெரியும். எனக்காக என் பெயரில் அவருக்கு நீங்கள் எழுத வேண்டும். நான் ஒரு நூலாசிரியர் என்றும், அவருடைய ஜீவகாருண்ய சேவைகளுக்காக அவரை நேரில் கண்டு வாழ்த்துக்கூற விரும்புகிறேன் என்று எழுதுங்கள். எனக்கு ஆங்கிலம் தெரியாததனால் எனக்கு மொழிபெயர்ப்பாளராக உங்களையும் உடன் அழைத்து வரவேண்டியிருக்கிறது என்றும் எழுதுங்கள் என்றார்.

அப்படியே நான் கடிதம் எழுதினேன். இரண்டு மூன்று நாட்களில் நாங்கள் சந்திப்பதற்கு நேரத்தைக் குறிப்பிட்டு, கார்டினல் மானிங்கிடமிருந்து கடிதம் வந்தது. ஆகவே, நாங்கள் இருவரும் கார்டினலிடம் போனோம். யாரையாவது பார்க்கப் போகும்போது உடுத்துக் கொள்ளும் சம்பிரதாய உடையை அணிந்துகொண்டு நான் போனேன். ஆனால், நாராயண ஹேமசந்திரரோ, எப்பொழுதும்போல் அதே சட்டையையும் கால் சட்டையையும் போட்டுக் கொண்டே வந்தார். இதை குறித்து நான் கேலிசெய்த போது அவர் கூறியதாவது.

நாகரிகம் படைத்த நீங்கள் எல்லாம் கோழைகள் மகான்கள், ஒருவருடைய வெளித்தோற்றத்தைக் கண்டு மதிப்பதே இல்லை அவருடைய உள்ளத்தைப்பற்றியே அவர்கள் நினைக்கிறார்கள். கார்டினலின் மாளிகைக்குள் சென்றோம். நாங்கள் போய் உட்கார்ந்ததும், மெலிந்த உயரமான கிழக் கனவான் ஒருவர் வந்து எங்களுடன் கை குலுக்கினார். நாராயண ஹேமசந்திரர் பின் வருமாறு தமது வாழ்த்தைத் கூறினார். உங்கள் நேரத்தை அதிகம் வீணாக்க நான் விரும்பவில்லை. உங்கள் பெருமையைக் குறித்து நான் எவ்வளவோ கேள்விப்பட்டிருக்கிறேன். வேலை நிறுத்தம் செய்திருந்தவர்களுக்கு நீங்கள் செய்த சிறந்த சேவைக்காக உங்களிடம் வந்து, நன்றி தெரிவிக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. உலகத்திலுள்ள மகான்களையெல்லாம் தரிசிப்பது என் வழக்கம். இதனாலேயே தங்களுக்கு நான் இந்தத் தொந்தரவைக் கொடுத்துவிட்டேன்.

குஜராத்தியில் அவர் சொன்னதை நான் மேற்கண்டவாறு மொழிபெயர்த்துச் சொன்னேன். ஞநீங்கள் வந்ததற்காக நான் அதிக மகிழ்ச்சி அடைகிறேன். லண்டன் வாழ்க்கை உங்களுக்கு ஒத்துக்கொள்ளும் என்றும், இங்குள்ள மக்களுடன் நீங்கள் பழகுவீர்கள் என்றும் நம்புகிறேன். ஆண்டவன் உங்களுக்கு அருள் புரிவானாகஞ என்றார் கார்டினல். இவ்வாறு கூறிவிட்டுக் கார்டினல் எழுந்து நின்று எங்களுக்கு விடையளித்தார். ஒரு நாள் நாராயண ஹேமசந்திரர் வேட்டி கட்டி, ஒரு சட்டையை மாத்திரம் அணிந்து கொண்டு, என் இருப்பிடத்திற்கு வந்தார். அச்சமயம் இருந்த வீட்டு அம்மாள் புதியவர். நாராயண ஹேமசந்திரரை அவருக்குத் தெரியாது. இந்த நிலையில் அவர்தான் ஹேமசந்திரருக்குக் கதவைத் திறந்து விட்டார். அவர் பயந்து போய், என்னிடம் ஓடோடி வந்து, ஞபைத்தியம்போல் இருக்கும் ஒருவர் உங்களைப் பார்க்க விரும்புகிறார் * என்றார். நான் கதவண்டை போனேன். நாராயண ஹேமசந்திரரைப் பார்த்து, வியப்படைந்தேன். அவருடைய கோலத்தைக் கண்டு திடுக்கிட்டும் போனேன். ஆனால் அவருடைய முகத்திலோ வழக்கமாக இருக்கும் புன்னகையைத் தவிர வேறு எதுவுமே இல்லை.

தெருவிலுள்ள சிறுவர்கள் உங்களைத் தொடர்ந்து வந்து உங்கள் துணிகளைக் கிழிக்க முற்படவில்லையா ? என்று அவரைக் கேட்டேன். ஆம் குழந்தைகள் என் பின்னால் ஓடி வந்தனர். அவர்களை நான் பொருட்படுத்தவில்லை. பிறகு சும்மா இருந்துவிட்டார்கள் என்றார். நாராயண ஹேமசந்திரர், லண்டனில் சில மாதங்கள் தங்கியிருந்துவிட்டுப் பிறகு பாரிஸூக்குச் சென்றார். பிரெஞ்சு மொழி படிக்கவும், பிரெஞ்சு நூல்களை மொழி பெயர்க்கவும் ஆரம்பித்தார். அவருடைய மொழி பெயர்ப்பைத் திருத்துவதற்குப் போதுமான அளவுக்கு எனக்குப் பிரெஞ்சு மொழி தெரியும். ஆகவே, அதைப் படித்துப் பார்க்க அவர் என்னிடம் கொடுத்தார். அது சாராம்சமேயன்றி மொழிபெயர்ப்பன்று.

கடைசியாக அமெரிக்கா போவது என்ற தமது உறுதியையும் அவர் நிறைவேற்றி விட்டார். அதிகக் கஷ்டப்பட்டே கப்பலில் மூன்றாம் வகுப்பு டிக்கெட் அவருக்குக் கிடைத்தது. அமெரிக்காவில் இருந்தபோது, ஒரு நாள் வேட்டியும் உள் சட்டையும் மாத்திரம் அணிந்து கொண்டு, அவர் வெளியே வந்து விடவே, ஆபாசமான உடை அணிந்திருந்த குற்றத்திற்காக அவரைக் கைது செய்து வழக்குத் தொடுத்தனர். விசாரணைக்குப் பிறகு அவர் விடுதலையடைந்தார் என்றே எனக்கு ஞாபகம்.


Offline Anu

மகத்தான கண்காட்சி

1899-இல் பாரிஸில் மகத்தான கண்காட்சி ஒன்று நடந்தது. அதற்காகச் செய்யப்பட்டு வந்த விமரிசையான ஏற்பாடுகளைக் குறித்துப் பத்திரிகையில் படித்திருந்தேன். எனக்குப் பாரிஸைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருந்தது. ஆகையால், இச்சமயத்தில் அங்கே போனால் இரண்டையுமே பார்த்ததாகும் என்று எண்ணினேன். கண்காட்சியில் முக்கியமாகப் பார்க்க வேண்டி இருந்தது, எப்பீல் கோபுரம். அது முழுக்க முழுக்க இரும்பினால் கட்டப்பட்டது. சுமார் ஆயிரம் அடி உயரம் இருக்கும். கவர்ச்சியான மற்றும் பல பொருள்களும் காட்சியில் இருந்தன. ஆனால், எல்லாவற்றிலும் மிக முக்கியமானதாக இருந்தது அந்தக் கோபுரமே. ஏனெனில் அவ்வளவு உயரமான ஒரு கட்டுக்கோப்பு, விழுந்து விடாமல் எப்போதும் நிற்க முடியாது என்று அதுவரையில் கருதப்பட்டு வந்தது.

பாரிஸில் சைவ உணவு விடுதி ஒன்று உண்டு என்று கேள்விப் பட்டிருந்தேன். அங்கே ஓர் அறையை அமர்த்திக் கொண்டு, ஏழு நாட்கள் தங்கினேன். பாரிஸூக்குப் பிரயாணம் செய்ததிலும் அதைச் சுற்றிப் பார்த்ததிலும் மிகச் சிக்கனமாகவே செலவழித்துச் சமாளித்துக் கொண்டேன். பாரிஸின் அமைப்புப் படத்தையும் கண்காட்சியின் விவரங்களும் படமும் அடங்கிய புத்தகத்தையும் வைத்துக் கொண்டு, அவற்றின் உதவியால் பெரும்பாலும் நடந்தே சென்று, எல்லாவற்றையும் பார்த்தேன். முக்கியமான தெருக்களுக்கும், பார்க்க வேண்டிய இடங்களுக்கும் வழி தெரிய அவைகளே போதுமானவை.

கண்காட்சி மிகப் பெரியது. பலவகையான பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன என்பதைத் தவிர வேறு எதுவும் எனக்கு இப்பொழுது நினைவு இல்லை. எப்பீல் கோபுரத்தில் இரண்டு. மூன்று தடவை நான் ஏறியதால் அதுமாத்திரம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அதன் முதல் அடுக்கில் ஒரு சாப்பாட்டு விடுதி இருந்தது. வெகு உயரத்தில் நான் மத்தியானச் சாப்பாடு உண்டேன் என்று சொல்லிக் கொள்ளுவது சாத்தியமாக வேண்டும் என்ற திருப்திக்காக மாத்திரம் எழு ஷில்லிங்கை அங்கே தொலைத்தேன்.

பாரிஸிலுள்ள புராதனமான கிறிஸ்தவாலயங்கள் இன்னும் என் நினைவில் இருக்கின்றன. அவற்றின் கம்பீரமான தோற்றமும் அங்கிருந்த அமைதியும் என்றும் மறக்க முடியாதவை. நோத்ரதாம் கோயிலின் அற்புதமான அமைப்பும், உள்ளே செய்யப்பட்டிருக்கும் விமரிசையான சித்திர வேலைகளும் அழகான சிலைகளும் என்றும் மறக்க முடியாதவை. இத்தகைய தெய்வீகமான கோயில்களைக் கோடிக்கணக்கில் செலவிட்டுக் கட்டியவர்களின் உள்ளங்களில் நிச்சயமாகக் கடவுள் பக்தி இருந்திருக்கவே வேண்டும் என்று எண்ணினேன்.

பாரிஸ் நகரின் நாகரிக வாழ்க்கையைக் குறித்தும், களியாட்டங்களைப் பற்றியும் நான் நிரம்பப் படித்திருந்தேன். அவற்றிற்கான அறிகுறிகள் ஒவ்வொரு தெருவிலும் தென்பட்டன. ஆனால், இக் காட்சிகளுக்கெல்லாம் புறம்பானவைகளாகவே கிறிஸ்தவாலயங்கள் இருந்தன. இக்கோயில்கள் ஒன்றினுள் ஒருவன் போய் விடுவானாயின், வெளியிலுள்ள சப்தங்களையும் சந்தடிகளையும் அவன் மறந்தே போவான். உடனே அவனுடைய தன்மையே மாறிவிடும் கன்னி மேரியின் சிலை முன்பு மண்டியிட்டுத் தொழும் ஒருவனை கடந்து சென்றதுமே அவன் கண்ணியமாகவும் பக்தியோடும் நடந்து கொண்டு விடுவான். இவ்விதம் முழந்தாள் இடுவதும், பிரார்த்தனை செய்வதும் வெறும் மூட நம்பிக்கைகளாக இருக்க முடியாது. கன்னி மேரியின் முன் பயபக்தியுடன் மண்டியிட்டுக் கொண்டு வணங்கியவர்கள் வெறும் சலவைக்கல்லை மாத்திரம் வணங்கியவர்களாக இருக்க முடியாது என்று அப்பொழுது எனக்கு ஏற்பட்ட உணர்ச்சி, அது முதலே என்னுள் வளர்ந்து கொண்டு வந்தது. அவர்கள் கல்லை வணங்கவில்லை, உண்மையான பக்தியால் பரவசம் அடைந்து, அக்கல் எதற்கு அறிகுறியாக நின்றதோ அந்தத் தெய்வீக சக்தியையே அவர்கள் வணங்கினார்கள். இத்தகைய பிரார்த்தனைகளினால் அவர்கள் கடவுளின் மகிமையை வளர்த்தார்களேயல்லாமல் குறைத்து விடவில்லை என்றும் அப்பொழுது எனக்குத தேன்றியதாக நினைவிருக்கிறது.

எப்பீல் கோபுரத்தைப்பற்றியும் இங்கே ஒரு வார்த்தை கூற வேண்டும். அந்தக் கோபுரம் இன்று எவ்விதம் பயன்படுகிறது என்பது தெரியாது. ஆனால், அதைக் குறித்துப் பலர் குறை கூறினர் என்றும், மற்றும் பலர் போற்றினர் என்றும் அப்பொழுது அறிந்தேன். அதைக் குறை கூறியவர்களில் முக்கியமானவர் டால்ஸ்டாய். எப்பீல் கோபுரம் மனிதன் செய்யும் தவறுக்கு ஒரு சின்னமேயன்றி அவனுடைய அறிவுக்குச் சின்னம் அல்ல என்று அவர் கூறினார். போதை தரும் பொருள்களிலெல்லாம் மிக மோசமானது புகையிலை என்று டால்ஸ்டாய் கூறினார். புகையிலைப் பழக்கம் உள்ளவனை, குடிகாரன் கூடச் செய்யத் துணியாத குற்றங்களைச் செய்துவிடும்படி புகையிலை தூண்டிவிடுகிறது என்றார். மதுபானம் ஒருவனைப் பித்தன் ஆக்கி விடுகிறது, புகையிலையோ, அவன் புத்தியை மயக்கி, ஆகாயக் கேட்டை கட்டும்படி செய்கிறது என்றார். அத்தகைய மதிமயக்கத்தில் மனிதன் சிருஷ்டிப்பவைகளில் ஒன்றே எப்பீல் கோபுரம் என்றும் டால்ஸ்டாய் கூறினார். எப்பீல் கோபுரத்தில் கலைத்திறன் எதுவும் இல்லை. கண்காட்சியின் உண்மையான அழகை இது எந்த விதத்திலும் அதிகரித்ததாகவும் சொல்லுவதற்கில்லை. இதைப் பார்ப்பதற்கு ஏராளமான மனிதர்கள் கூடினார்கள். அது புதுமையாகவும், இணையற்ற வகையில் பெரிதாகவும் இருந்ததால், மனிதர்கள் அதில் ஏறியும் பார்த்தனர். கண்காட்சியில் அதை ஒரு விளையாட்டுப் பொம்மை என்றே சொல்லலாம். நாம் குழந்தைகளாக இருந்து கொண்டிருக்கும் வரையில், பொம்மைகள் நமக்குக் கவர்ச்சியாகவே இருக்கும். விளையாட்டு பொருட்களைக்கண்டு மயங்கும் குழந்தைகளே நாம் எல்லோரும் என்ற உண்மையை அக்கோபுரம் நன்றாக எடுத்துக் காட்டுவதாக இருந்தது. அதுவே எப்பீல் கோபுரத்தினால் ஏற்பட்ட பயன் என்றும் சொல்லிக் கொள்ளலாம்.


Offline Anu

பாரிஸ்டரானேன், ஆனால் பிறகு.. .?

பாரிஸ்டர் ஆவதற்காகவே நான் இங்கிலாந்துக்குச் சென்றேன். ஆனால், அதைப்பற்றி இதுவரை ஒன்றும் சொல்லாமலேயே தள்ளிவைத்து வந்திருக்கிறேன். அதைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்ல வேண்டிய சமயம் வந்துவிட்டது.

ஒரு மாணவன், பாரிஸ்டர் ஆவதற்குப் பூர்த்தி செய்ய வேண்டிய நிபந்தனைகள் இரண்டு உண்டு. இதில் ஒன்று, முறையை அனுசரிப்பது. இத்தகைய பன்னிரெண்டு முறைகள் சமார் மூன்று ஆண்டுகளுக்குச் சமம். மற்றொன்று, பரீட்சைகளில் தேறுவது. முறையை அனுசரிப்பது என்றால், முறைப்படி தின்பது, அதாவது ஒரு கால அளவில் நடக்கும் சுமார் இருபத்து நான்கு விருந்துகளில் குறைந்தது ஆறு விருந்துகளுக்காவது போக வேண்டும். விருந்தில் கலந்து கொள்ளுவதென்றால் சாப்பிட்டாக வேண்டும் என்பது அல்ல. குறிப்பிட்ட நேரத்தில் வந்துவிட்டதாக அறிவித்துக்கொண்டு, விருந்து முடியும்வரை அங்கேயே இருக்க வேண்டும். உண்மையில் ஒவ்வொருவரும் சாப்பிட்டார்கள், குடித்தார்கள், நல்ல உணவு வகைகளும், உயர்ந்த மதுபானங்களும் அங்கே வழங்கப்படும். ஒரு சாப்பாட்டுக்கு இரண்டரை ஷில்லிங்கிலிருந்து மூன்றரை ஷில்லிங் வரையில் ஆகும், அதாவது இரண்டு, மூன்று ரூபாய் ஆகும். ஒருவர் ஹோட்டலில் சாப்பிட்டால் மதுபானத்திற்கு மாத்திரம் அவ்வளவு தொகை கொடுக்க வேண்டி வரும். ஆகையால், இது மிதமானது என்றே கருதப்பட்டது. சாப்பாட்டின் விலையை விட மதுபானச் செலவு அதிகமாவது என்பது இந்தியாவிலுள்ள நமக்கு நாம் நாகரிகம் அடையாதவர்களாக இருந்தால் - ஆச்சரியமாக இருக்கும். முதன் முதலாக எனக்கு இந்த விவரம் தெரிந்தபோது நான் திடுக்கிட்டே போனேன். குடியில் இவ்வளவு பணத்தை வாரி இறைத்துவிட அவர்களுக்கு எப்படித்தான் மனசு வருகிறது என்று ஆச்சரியப்பட்டேன். பிறகு நான் இதைப் புரிந்து கொண்டேன். இந்த விருந்துகளில் அநேகமாக நான் எதுவும் சாப்பிடுவதில்லை. ஏனென்றால், நான் சாப்பிடக் கூடியவை ரொட்டியும் வேக வைத்த உருளைக் கிழங்கும், முட்டைக் கோஸூமே. இவையும் எனக்குப் பிடிப்பதில்லையாகையால் ஆரம்பத்தில் இவைகளையும் நான் சாப்பிடுவதில்லை. பின்னால் இவை எனக்கு ருசியாயிருக்க ஆரம்பித்ததும், வேறு பண்டங்களும் வேண்டும் என்று கேட்கும் துணிச்சலும் எனக்கு உண்டாயிற்று.

மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட விருந்தைவிட, நீதிபதிகளுக்கு அளிக்கும் விருந்து மிகவும் உயர்ந்ததாக இருக்கும். என்னைப் போல ஒரு பார்ஸி மாணவரும் மாமிசம் சாப்பிடாதவர். நீதிபதிகளுக்குப் பறிமாறும் சைவ உணவு வகைகளை எங்களுக்கும் பரிமாற வேண்டும் என்று நாங்கள் இருவரும் மனுச் செய்து கொண்டோம். எங்கள் மனு அங்கீகரிக்கப் பெற்றது. நீதிபதிகளின் மேஜைகளிலிருந்து பழங்களும் மற்றக் கறிகாய்களும் எங்களுக்குக் கிடைக்கத் தொடங்கின.

நான்கு பேர் அடங்கிய ஒரு குழுவிற்கு, இரண்டு பாட்டில் ஒயின் என்ற வகையில் மதுபானம் கொடுத்தனர். நான் அதைத் தொடுவதே இல்லை. ஆகையால், என்னுடன் இருக்கும் மற்ற மூவருக்கும் இரண்டு ஒயின் பாட்டில்களைக் காலி செய்ய வசதி இருந்தது. இதற்காக என்னைத் தத்தம் குழுவில் சேர்த்துக் கொள்ளுவதற்குப் பலர் விரும்பியதால், எனக்கு எப்பொழுதும் கிராக்கி இருந்து வந்தது. ஒவ்வொரு காலப் பகுதியிலும் இந்த நிகழ்ச்சியில் பெரிய விருந்து என்று ஒன்று நடக்கும். போர்ட், ஷெர்ரி ஒயின்களும் அதிகமாக, ஷாம்பேன் போன்ற ஒயின்களும் கொடுக்கப்படும். ஆகையால், அதற்கு வருமாறு எனக்கு விசேஷக் கோரிக்கைகள் வரும். அந்தப் பெரிய விருந்து நாட்களில் எனக்கு கிராக்கி வெகு அதிகம் இருக்கும்.

இத்தகைய விருந்துகள், பாரிஸ்டராவதற்கு மாணவர்களை எவ்விதம் தகுதியுடையவர்கள் ஆக்குகின்றன என்பதை நான் அப்பொழுதும் உணரவில்லை. அதற்குப் பின்னரும் உணரவில்லை. மிகச் சில மாணவரே இத்தகைய விருந்துகளில் கலந்து கொள்ளும் காலம் ஒன்று இருந்தது. அப்பொழுது அம்மாணவர்களும் நீதிபதிகளும் கலந்து பேசுவதற்குச் சந்தர்ப்பங்கள் இருந்தன, பிரசங்கங்களும் நடந்தன. இத்தகைய சந்தர்ப்பங்களினால் அவர்களுக்கு உலக ஞானத்துடன், ஒருவகையான மெருகும் வளர்த்துக் கொள்ள முடியும். என் காலத்திலோ, நீதிபதிகளுக்கு என்று தனியாகவே விருந்து மேஜைகள் போடப்பட்டிருந்ததால் அத்தகைய வாய்ப்பு என்றுமே எனக்குக் கிடைக்கவில்லை. இந்த வழக்கத்திற்கு நாளா வட்டத்தில் பொருள் இல்லாமலே போயிற்று. என்றாலும் பழைமையில் பற்றுக் கொண்ட இங்கிலாந்து, அதை விடாமல் வைத்துக் கொண்டிருந்தது.

பரீட்சைக்கு உரிய பாடங்கள் மிகச் சுலபமானவை. பாரிஸ்டர்களை, விருந்து பாரிஸ்டர்கள் என்றும் வேடிக்கையாக அழைப்பது உண்டு. உண்மையில் பரீட்சைகள் ஒரு பயனும் இல்லாதவை என்பது எல்லோருக்கும் தெரியும். என் காலத்தில் ரோமன் சட்டப் பரீட்சை, பொதுச் சட்டப் பரீட்சை என்று இரு பரீட்சைகள் உண்டு. இவற்றிற்கு இன்னவை பாடப் புத்தகங்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தன. தனித்தனிப் பகுதிகளுக்கும் பரீட்சை எழுதலாம். அப்பாடப் புத்தகங்களை யாரும் அநேகமாக படிப்பதே இல்லை. இரண்டே வாரங்களில் ரோமன் சட்டத்திற்குப் போட்டிருக்கும் குறிப்புக்களை மாத்திரம் மேலெழுந்த வாரியாகப் பார்த்துவிட்டு, ரோமன் சட்டப் பரீட்சையில் பலர் தேறிவிட்டதை நான் அறிவேன். அதே போலப் பொதுச் சட்டத்திற்குள்ள குறிப்புகளை மாத்திரம் இரண்டு மூன்று மாதங்களில் படித்துவிட்டு, அப்பரீட்சையிலும் தேறி விடுவார்கள். கேள்விகள் சுலபமானவை, மாணவர்கள் அளிக்கும் பதில்களுக்கு மார்க் கொடுப்பவர்களும் தாராளமாக நடந்து கொண்டார்கள் ரோமன் சட்டப் பரீட்சைக்குச் செல்பவர்களில் 100-க்கு 95 முதல் 99 வரையில் தேறிவிடுவர். முடிவான பரீட்சையிலும் 100-க்கு 75 அல்லது அதற்கு அதிகமானவர்கள் கூடத் தேறி விடுவார்கள். ஆகையால் பரீட்சையில் தேறாமல் போய்விடுவோமோ என்ற பயமே இல்லை. பரீட்சைகளும் ஆண்டுக்கு ஒரு முறை அல்ல, நான்கு முறைகள் நடந்தன * இதில் கஷ்டம் இருப்பதாகவே யாரும் நினைப்பதற்கில்லை.

ஆனால், நான் மாத்திரம் அவற்றைச் சிரமமானவையாகச் செய்துகொண்டு விட்டேன். பாடப் புத்தகங்கள் எல்லாவற்றையும் படிக்க வேண்டும் என்று கருதினேன். அவைகளைப் படிக்காமல் இருந்து விடுவது ஒரு மோசடி என்று எண்ணினேன். அவைகளை வாங்குவதில் அதிகப் பணமும் செலவிட்டேன். ரோமன் சட்டத்தை லத்தீன் மொழியிலேயே படிப்பது என்று தீர்மானித்தேன். லண்டன் மெட்ரிகுலேஷன் பரீட்சைக்காக நான் லத்தீன் படித்தது எனக்கு உதவியாக இருந்தது. நான் இவ்விதம் படித்ததெல்லாம் தென்னாப்பரிக்காவில் ரோமன் டச்சு பொதுச் சட்டமாக இருந்ததால் அந்நாட்டில் இருந்தபோது, எனக்கு நன்மையை அளித்தது, ஜஸ்டினியனைப் படித்தது, தென்னாப்பிரிக்காவின் சட்டங்களைப் புரிந்து கொள்ளுவதில் எனக்கு அதிக உதவியாக இருந்தது.

இங்கிலாந்தின் பொதுச் சட்டங்களை நான் கஷ்டப்பட்டுப் படித்து முடிக்க ஒன்பது மாத காலம் ஆயிற்று. புரூம் எபதிய பொதுச் சட்டம் என்ற நூல் பெரியதாயினும் சுவராஸ்யமானது அதைப் படித்து முடிக்க அதிகக் காலம் ஆகிவிட்டது. ஸ்னெல் எழுதிய ஈக்விடி என்ற நூல் சிறந்த விஷயங்களைக் கொண்டது. ஆனால், புரிந்து கொள்ளுவதுதான் சிரமம். ஓயிட்டும் டூடரும் எழுதிய, முக்கியமான வழக்குகள் என்ற நூலில் சில வழக்குகள் பாடங்கள். இவை கவர்ச்சியானவைகள் ஆகவும், விஷய ஞானத்தைப் போதிப்பவைகள் ஆகவும் இருந்தன. வில்லியமும் எட்வர்டும் எழுதிய உண்மையான சொத்து குடவேயின் சொந்தச் சொத்து ஆகிய நூல்களையும் படித்தேன். வில்லியத்தின் பத்தகத்தைப் படிப்பது கதை படிப்பது போல் இருந்தது. நான் இந்தியாவுக்குத் திரும்பியதும் அதேபோல், குறையாத சிரத்தையுடன் நான் படித்த ஒரே புத்தகம் மேய்னே எழுதிய ஹிந்துச் சட்டம் என்பதாக எனக்கு ஞாபகம். இந்தியச் சட்டப் புத்தகங்களைப் பற்றிச் சொல்ல இது இடமன்று.

பரீட்சைகளில் தேறினேன். 1891, ஜூன், 10-ஆம் தேதி என்னைப் பாரிஸ்டர் ஜாபிதாவில் சேர்த்துக் கொண்டனர். ஜூன், 11-ஆம் தேதி, ஹைக்கோர்ட்டில் பாரிஸ்டராகப் பதிவு செய்து கொண்டேன். 12-ஆம் தேதி இந்தியாவுக்குக் கப்பல் ஏறினேன்.

நான் என்னதான் படித்திருந்தேனாயினும் எனக்குள் இருந்த பயத்திற்கும், சக்தியற்றிருக்கிறேன் என்ற உணர்ச்சிக்கும் முடிவே இல்லை. வக்கீல் தொழிலை நடத்துவதற்குத் தகுதி பெற்றுவிட்டதாக நான் உணரவே இல்லை. எனது இந்தச் சக்தியின்மையைப் பற்றி விவரிக்க ஒரு தனி அத்தியாயமே வேண்டும்.


Offline Anu

எனது சக்தியின்மை

பாரிஸ்டர் ஆகிவடுவது எளிதாகவே இருந்தது. ஆனால், பாரிஸ்டர் தொழிலை நடத்துவதுதான் மிகக் கஷ்டமாக இருந்தது. நான் சட்டங்களைப் படித்திருந்தேன். ஆனால், சட்டவாதம் செய்யும் முறையைக் கற்றுக்கொள்ளவில்லை. சட்டக் கோட்பாடுகளையெல்லாம் சிரத்தையுடன் படித்திருந்தேன். அவற்றை என் தொழிலில் எப்படிப் பயன்படுத்திக்கொள்ளுவது என்பது மட்டும் எனக்குத் தெரியவில்லை. மற்றவர்களின் சொத்துக்களுக்குக் கெடுதல் ஏற்படாத வகையில் உன் சொத்தைப் பயன்படுத்திக்கொள் என்பது அத்தகைய கோட்பாடுகளில் ஒன்று. ஆனால், ஒரு கட்சிக்காரரின் நலனுக்கு ஏற்றவாறு இந்தக் கோட்பாட்டை எப்படிப் பயன்படுத்துவது என்பது எனக்குத் தெரியவில்லை. இந்தக் கோட்பாட்டின் மேல் எழுந்த முக்கியமான பெரிய வழக்குகளின் விவரங்களையெல்லாம் படித்துப் பார்த்தேன். என்றாலும் வழக்குகளில் அதை அனுசரிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்படவில்லை.

இதுவல்லாமல், இந்தியச் சட்டத்தைக் குறித்து நான் எதுவுமே கற்றுக்கொள்ளவில்லை. ஹிந்து, முகமதியச் சட்டங்களைப் பற்றியோ எனக்கு ஒன்றுமே தெரியாது. ஒரு பிராதைத் தயாரிப்பது எப்படி என்பதையும் நான் தெரிந்து கொள்ளவில்லை. எனவே, திக்குத்திசை தெரியாமல் தவித்தேன். ஸர் பிரோஸ்ஷா மேத்தா, கோர்ட்டுகளில் சிங்கம் போல் கர்ஜிப்பவர் என்று கேள்விப்பட்டிருந்தேன். அந்த வித்தையை இங்கிலாந்தில் அவர் எப்படிக் கற்றுக் கொண்டிருக்க முடியும் என்று ஆச்சரியப்பட்டேன். அவருடைய சட்டஞானத்தை, நான் என்றாவது அடைய முடியும் என்பதற்கே இடமில்லை. ஆனால், இந்தத் தொழில் என் ஜிவனத்திற்கு வேண்டியதாவது கிடைக்குமா என்பதே எனக்குச் சந்தேகமாக இருந்தது.

நான் சட்டம் படித்துக் கொண்டிருந்தபோது இந்தச் சந்தேகங்களும் கவலைகளுமே என்னைப் பிய்த்துக் கொண்டு இருந்தன. என்னுடைய இக்கஷ்டங்களை நண்பர்கள் சிலரிடம் கூறினேன். தாதாபாய் நௌரோஜியிடம் போய். அவர் யோசனையைக் கேட்க வேண்டும் என்று ஒரு நண்பர். எனக்குக் கூறினார். நான் இங்கிலாந்துக்கு சென்றபோது தாதா பாய்க்கும் ஓர் அறிமுகக் கடிதம் வைத்திருந்தேன் என்பதை முன்பே கூறியிருக்கிறேன். அதை வெகுகாலம் கழித்தே நான் பயன்படுத்திக் கொண்டேன். பேட்டி காண வேண்டும் என்று அத்தகைய பெரியவரைக் கஷ்டப்படுத்துவதற்கு எனக்கு எந்தவித உரிமையும் இல்லை என்று எண்ணினேன். அவர் எங்காவது பேசப் போகிறார் என்று அறிவிக்கப்பட்டால், அக்கூட்டங்களக்கு நான் போவேன். மண்டபத்தின் ஒரு மூலையில் இருந்து கொண்டு, அவர் பிரசங்கத்தைக் கேட்டுவிட்டு என் கண்களுக்கும் காதுகளுக்கும் கிடைத்த அவ்விருந்தோடு வீடு திரும்புவேன். மாணவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொள்ளுவதற்காக அவர் ஒரு சங்கத்தை ஆரம்பித்தார். அதன் கூட்டங்களுக்கு நான் போவேன். மாணவர்கள் விஷயத்தில் தாதாபாய் கொண்டிருந்த சிரத்தையையும் அவர்கள் அவரிடம் கொண்டிருந்த மரியாதையும் கண்டு மகிழ்ந்தேன். நாளாவட்டத்தில் தைரியப்படுத்திக் கொண்டு என்னிடம் இருந்த அறிமுகக் கடிதத்தை அவரிடம் சமர்ப்பித்தேன்.

நீர் எப்பொழுது வேண்டுமானாலும் வந்து என் புத்திமதியைக் கேட்கலாம் என்று அவர் கூறினார். ஆனால், அவர் இவ்விதம் கூறியதைப் பயன்படுத்திக் கொண்டு, நான் ஒரு தரமும் அவரிடம் போகவில்லை. மிக முக்கியமான அவசியம் இருந்தாலன்றி அவருக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது என்று நினைத்தேன். ஆகையால், எனக்குள்ள கஷ்டங்களைக் குறித்துத் தாதா பாயிடம் கூறுவது என்ற என் நண்பனின் யோசனையை ஏற்றுக் கொள்ள அச்சமயம் நான் துணியவில்லை. ஸ்ரீ பிரடரிக் பின்கட்டைச் சந்திக்குமாறு எனக்கு யோசனை சொன்னது இதே நண்பர்தானா, வேறு ஒருவரா என்பது எனக்கு நினைவு இல்லை. ஸ்ரீ பின்கட், கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்தவர். ஆனால் இந்திய மாணவர்களிடம் அவர் கொண்டிருந்த அன்போ புனிதமானது. சுய நலமற்றது. பல மாணவர்கள் அவருடைய ஆலோசனையை நாடுவார்கள். உத்தியயோகங்களுக்கும் அவரிடம் மனுச் செய்து கொள்ளுவார்கள். அவரும் வேண்டியதைச் செய்வார். நான் அவரைச் சந்தித்துப் பேசியதை என்றுமே மறக்க மடியாது. ஒரு நண்பனாகவே என்னை அவர் வரவேற்று முகமன் கூறினார். எனக்க இருந்த நம்பிக்கைகளை நான் சொல்லக் கேட்டதும் அவர் சிரித்து விட்டார். ஒவ்வொருவரும் பிரோஸ்ஷா மேத்தாவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீரா? பிரோஸ்ஷாக்களும் பத்ருதூன்களும் அபூர்வமாகவே இருப்பார்கள். சாதாரண வக்கீலாக இருப்பதற்கு அசாதாரண ஆற்றல் எதுவும் அவசியமில்லை என்பதை நிச்சயமாக நம்பும். பொதுவான யோக்கியப் பொறுப்பும் இருந்தால், ஒருவர் தம்முடைய ஜிவனத்திற்குச் சம்பாதித்துக் கொள்ள அவையே போதும் வழக்குகள் எல்லாமே சிக்கலானவை அல்ல. பொது அறிவை வளர்த்துக் கொள்ளுவதற்கு எந்த அளவு படித்திருக்கிறீர் ? அதைச் சொல்லும், பார்ப்போம் என்றார்.

என்னுடைய சொற்பமான படிப்பை நான் அவருக்குத் தெரிவித்ததும் அவர் ஏமாற்றம் அடைந்தார் என்பதைக் கண்டேன். ஆனால், அந்த ஏமாற்றம் அவருக்குக் கணத்தில் மாறிவிட்டது. உடனே அவர் முகத்தில் அழகிய புன்னகை மலர்ந்தது. அவர் கூறியதாவது, உமக்குள்ள கஷ்டத்தை நான் அறிகிறேன். உமது பொது அறிவுப் படிப்பு மிகக் கொஞ்சம். ஓரு வக்கீலுக்கு இன்றியமையாததான உலக ஞானம் உமக்கு இல்லை. இந்தியாவின் சரித்திரத்தைக் கூட நீர் இன்னும் படிக்கவில்லை. மனித சுபாவத்தையும் ஒரு வக்கீல் அறிந்திருக்க வேண்டும். முகத்தைப் பார்த்தே ஒருவன் எப்படிப்பட்டன் என்பதைத் தெரிந்துகொள்ள அவரால் முடியவேண்டும். ஒவ்வோர் இந்தியரும் இந்திய சரித்திரத்தை அறிந்திருக்க வேண்டும். வக்கீல் தொழிலுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. என்றாலும், இதை நீர் அறிந்திருப்பது அவசியம். 1857 சிப்பாய்க் கலகத்தைக்குறித்துக் கேபியும் மாலிஸனும் எழுதியிருக்கும் சரித்திரத்தைக்கூட நீர் படித்ததில்லை எனக் காண்கிறேன். அதை உடன் படிப்பதோடு, மனித சுபாவத்தை புரிந்து கொள்ளுவதற்கு மற்ற இரு புத்தகங்களையும் படியும் லவேட்டரும் ஷெம்மல் பென்னிக்கும் முகபாவங்களைக் குறித்து எழுதியிருக்கும் புத்தகங்களே அவை இரண்டும்.

மதிப்பிற்குரிய இந் நண்பரிடம் நான் மிகுந்த நன்றியறிதல் உள்ளவனானேன். அவர் முன்னிலையில் எனக்கு இருந்த பயமெல்லாம் பறந்து ஓடிவிட்டதைக் கண்டேன். ஆனால், அவரை விட்டு வந்ததுமே திரும்பக் கவலைப்பட ஆரம்பித்து விட்டேன். வீட்டுக்குத் திரும்புகையில் அவ்விரு புத்தகங்களைப்பற்றி நான் எண்ணியபோது, ஒருவனுடைய முகத்தைக்கொண்டே அவனுடைய குணங்களை அறிவது எப்படி ? என்பதே என் மனத்தைச் சதா அலைத்துக் கொண்டிருந்தது. மறுநாள் லவேட்டரின் புத்தகத்தை வாங்கினேன். ஷெம்மல் பென்னிக்கின் புத்தகம் கடையில் கிடைக்கவில்லை.. லவேட்டரின் புத்தகத்தைப் படித்தேன். ஈக்விடியைப் பற்றி ஸ்னெல்லின் புத்தகத்தையும் விட இது அதிக கஷ்டமானதாக இருந்ததோடு படிப்பதற்கும் ரசமாக இல்லை. ஷேக்ஸ்பிரியரின் முக பாவத்தைப் பற்றியும் படித்தேன்.

ஆனால், லண்டன் தெருக்களில் அங்கும் இங்குமாக நடந்தகொண்டிருக்கும் ஷேக்ஸ்பியர்களின் முகபாவத்தைக் கொண்டு அவர்களைப் புரிந்துகொண்டுவிடும் ஆற்றல் எனக்கு ஏற்படவில்லை.

லவேட்டரின் புத்தகம் எனக்குப் புதிய அறிவு எதையும் புகட்டிவிடவில்லை. ஸ்ரீ பின்கட்டின் புத்திமதிகள் எனக்கு நேரடியான உதவி எதையும் அளித்துவிடவில்லை. ஆனால், அவருடைய அன்பு எனக்குத் தைரியத்தை ஊட்டியது. அவரது புன்னகை பூத்த கபடமற்ற முகம், என் நினைவில் பதிந்துவிட்டது. வெற்றிகரமான ஒரு வக்கீல் ஆவதற்கப் பிரோஸ்ஷா மேத்தாவுக்குள்ள அறிவுக்கூர்மையும், ஞாபக சக்தியும் ஆற்றலும் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, யோக்கியப் பொறுப்பும் உழைப்பும் போதும் என்று அவர் கூறிய புத்திமதியில் எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. கடைசியில் கூறப்பட்ட இவ்விரு குணங்களும் என்னிடம் ஓரளவுக்கு இருந்ததால் நான் ஒருவாறு தைரியம் கொண்டேன்.

கேயியும் மாலிஸனும் சிப்பாய் கலகத்தைக் குறித்து எழுதிய புத்தகத்தை இங்கிலாந்தில் இருந்தபோது நான் படிக்க மடியவில்லை. ஆனால், கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே படித்து விட வேண்டும் என்று எண்ணியிருந்ததால் அவற்றைத் தென்னாப்பிரிக்காவில் படித்தேன்.

இவ்விதமான மனச்சோர்வுடனும், அற்ப சொற்பமான நம்பிக்கையுடனும், எஸ்.எஸ். அஸ்ஸாம் என்ற கப்பலில் நான் பம்பாய் வந்து இறங்கினேன். துறைமுகத்தில் கடல் கொந்தளிப்பாக இருந்தது. ஒரு நீராவிப் படகும் மூலமே கப்பலிருந்து கரைசேர்ந்தேன்


Offline Anu

இரண்டாம் பாகம்

ராய்ச்சந்திர பாய்

பம்பாய் துறைமுகத்தில் கடல் கொந்தளிப்பாக இருந்தது என்று முந்திய அத்தியாயத்தில் கூறினேன். ஜூன், ஜூலை மாதங்களில் அரபுக் கடலில் இவ்விதம் இருப்பது சகஜம். ஏடனிலிருந்து நெடுகவுமே அலை அதிகமாகவே இருந்தது. அநேகமாக எல்லாப் பிரயாணிகளுக்கும் மயக்கமும் வாந்தியுந்தான். நான் ஒருவனே எதுவும் இல்லாமல் சுகமாக இருந்தேன். கப்பலின் மேல் தளத்தில் இருந்து கொண்டு, காற்றின் ஆவேசத்தையும் அலைகள் வேகமாகக் கப்பலில் வந்து மோதுவதையும் பார்த்து ஆனந்தித்துக் கொண்டிருந்தேன். என்னைத் தவிர இரண்டொருவரே காலை ஆகாரம் சாப்பிட வருவார்கள். ஓட்ஸ் கஞ்சித் தட்டை மிக எச்சரிக்கையுடன் மடியில் வைத்துக்கொண்டு சாப்பிடுவேன். கொஞ்சம் உஷாராக இல்லாது போனால் மடியிலெல்லாம் கஞ்சி கொட்டிவிடும்.

வெளிப்புயல், என் அகப்புயலுக்குப் ஒரு சின்னமாகவே இருந்தது. வெளிப்புயல் எவ்விதம் என்னைக் கலங்கச் செய்யவில்லையோ அதைப்போலவே அகப்புயலைக் குறித்தும் நான் கலங்கவில்லை என்று சொல்லலாம் என்றே நினைக்கிறேன். சாதிக்கட்டுப்பாட்டுத் தொல்லை வேறு, என்னை எதிர்நோக்கி நின்றது. பாரிஸ்டர் தொழிலைத் தொடங்குவது சம்பந்தமாக எனக்கு இருந்து வந்த அதைரியங்களை முன்பே சொல்லியிருக்கிறேன். மேலும், நான் சீர்திருத்தக்காரன். எனவே சில சீர்திருத்தங்களை எவ்விதம் ஆரம்பிக்கலாம் என்பதைக் குறித்தும் சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஆனால், நான் எதிர்பார்த்ததையெல்லாம் விட இன்னும் அதிகக் கஷ்டங்கள் எனக்குக் காத்துக் கொண்டிருந்தன.

என் மூத்த சகோதரர் என்னைச் சந்திப்பதற்காகத் துறைமுகத்திற்கு வந்திருந்தார். அவர் , இதற்கு முன்பே டாக்டர் மேத்தாவுடனும் அவருடைய மூத்த சகோதரருடனும் பழக்கமாகிவிட்டார். தமது வீட்டிலேயே நான் தங்க வேண்டும் என்று டாக்டர் மேத்தா வற்புறத்தியதன் பேரில் நாங்கள் அங்கே சென்றோம். இவ்விதம் இங்கிலாந்தில் ஏற்பட்ட பழக்கம் இந்தியாவிலும் தொடர்ந்து இரு குடும்பங்களுக்கும் இடையே நிரந்தரமான நட்பாக வளர்ந்து விட்டது.

என் தாயரைப் பார்க்கவேண்டும் என்று என் உள்ளம் துடித்துக் கொண்டிருந்தது. என்னைத் திரும்ப வரவேற்று, மார்புடன் தழுவி மகிழ, அவர் தமது பூதவுடலுடன் அப்பொழுது இல்லை என்பது எனக்குத் தெரியாது. அவர் காலமாகிவிட்டார் என்ற துக்கச் செய்தி எனக்கு அறிவிக்கப்பட்டது. அதன் பேரில் செய்யவேண்டிய கிரியைகளைச் செய்து முடித்தேன். நான் இங்கிலாந்தில் இருந்தபோதே, என் அன்னை இறந்துவிட்டார். இதை என் சகோதரர் எனக்கு தெரிவிக்கவில்லை. வெளிநாட்டில் இப்பெரும் துக்கத்தின் வேதனை எனக்கு ஏற்பட வேண்டாம் என்று அவர் நினைத்திருக்கிறார். என்றாலும் இப்பொழுது அச்செய்தி எனக்குக் கடுமையான அதிர்ச்சியையே உண்டாக்கியது. ஆனால், அதைக் குறித்து நான் அதிகமாக விவரித்துக் கொண்டு போகக் கூடாது. என் தந்தையார் இறந்தபோது எனக்கு இருந்த துக்கத்தைவிட இது இன்னும் அதிகத் துக்கம் என் உள்ளத்தில் ஆசையோடு வைத்திருந்த நம்பிக்கையெல்லாம் சிதறுண்டு போயின. ஆனால், அழுது புலம்பி என் துக்கத்தை நான் வெளிக்காட்டவில்லை என்பது எனக்கு ஞாபகம் இருக்கிறது. கண்ணீர் பெருகுவதையும் என்னால் தடுத்துவிட முடிந்தது. எதுவுமே நிகழாதது போலவே என் காரியங்களைக் கவனித்து வந்தேன்.

டாக்டர் மேத்தா, பல நண்பர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர்களில் அவருடைய சகோதரரான ஸ்ரீ ரேவா சங்கர் ஜகஜகவனும் ஒருவர். அவருக்கும் எனக்கும் இடையே வாழ்நாள் முழுவதும் நீடித்த நட்பு வளர்ந்தது. ஆனால் எனக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர்களில் ராய்ச்சந்திர் - ராஜ்சந்திரர் என்ற கவி முக்கியமானவர் என்பதை நான் குறிப்பிட வேண்டும். அவர் டாக்டர் மேத்தாவின் ஒரு மூத்த சகோதரரின் மாப்பிள்ளை ரேவாசங்கர் ஜகஜகவனி என்ற பெயரில் நடந்து வந்த நகை வியாபாரத்தில் அவர் ஒரு பங்குதாரர். அவருக்கு அப்பொழுது வயது இருப்பத்தைந்துக்கு மேல் இராது. ஆனால் அவரை முதன் முதல் பார்த்ததுமே அவர் சிறந்த ஒழுக்கமும் புலமையும் உள்ளவர் என்ற உறுதி எனக்கு ஏற்பட்டுவிட்டது. அவர் சதாவதானி என்றும் பெயர் பெற்றிருந்தார். ( ஏககாலத்தில் நூறு விஷயங்களை நினைவில் வைத்திருக்கும் அல்லது கவனிக்கும் பேராற்றல் படைத்தவர்).

அவர் தமது அபாரமான ஞாபக சக்தியால் செய்யும் சில அருஞ்செயல்களைப் பார்க்கும்படியும் டாக்டர் மேத்தா என்னிடம் கூறினார். ஐரோப்பிய மொழிகளில் எனக்கு எத்தனை சொற்கள் தெரியுமோ அவ்வளவையும் சொல்லி அவற்றைத் திரும்ப ஒப்பிக்கும்படி அவரிடம் கேட்டேன். நான் அந்தச் சொற்களை எந்த வரிசைக் கிரமத்தில் சொன்னேனோ அந்த வரிசைக் கிரமம் ஒரு சிறிதும் தவறாமல் அவர் ஒப்பித்துவிட்டார். அவருடைய அபார சக்தியில் நான் மயங்கிப் போய்விடவில்லையாயினும். அந்த ஆற்றல் எனக்கு இல்லையே என்று பொறாமைப்பட்டேன். ஆனால் அவரைக் குறித்து எனக்குப் பின்னால் தெரியவந்த சில விஷயங்கள் என்னை மயக்கியே விட்டன. சமய நூல்களில் அவருக்கு இருந்த அபார ஞானமும் அப்பழுக்கற்ற அவரது ஒழுக்கமும் ஆத்மானுபூதியை அடைய வேண்டும் என்பதில் அவருக்கு இருந்த தீவிர ஆர்வமுமே என்னை மயக்கியவை. ஆத்மானுபூதியை அடையவேண்டும் என்ற ஒன்றிற்காகவே அவர் வாழ்ந்து வந்தார் என்பதையும் பிறகு கண்டேன். முக்கானந்தரின் பாடல் ஒன்றை அவர் சதா உச்சரித்துக் கொண்டே இருப்பார். அது அவர் உள்ளத்தில் பதிக்கப்பட்டிருந்தது என்றே சொல்ல வேண்டும்.

ராய்ச்சந்திர பாயின் வியாபாரம் பல லட்சக்கணக்கில் மூலதனம் கொண்டது. முத்து, வைரங்களைச் சோதித்துப் பார்ப்பதில் அவர் கைதேர்ந்தவர். எவ்வளவுதான் சிக்கலான பிரச்னையாக இருந்தாலும், அது அவருக்குக் கஷ்டமானதே அல்ல. ஆனால், அவருடைய வாழ்க்கையில் இவைகளெல்லாம் முக்கியமானவை அன்று. அவரது வாழ்க்கையில் மிகக் கேந்திரமாக இருந்தது கடவுளை நேருக்கு நேராகக் காணவேண்டும் என்ற ஆர்வம் தான். அவருடைய வியாபார மேடிஜ மீதிருக்கும் பல நூல்களுள், சில மத நூல்களும், அவருடைய தினகுறிப்பும் இருக்கும். வர்த்தக வேலை முடிந்ததுமே மத நூல்களையோ தினக்குறிப்பையோ பிரித்து விடுவார். அவர் எழுதிப் பிரசுரமாகியிருக்கும் பல நூல்கள் இந்தத் தினக் குறிப்பிலிருந்து எடுக்கப்பட்டவையே. பலமான வர்த்தக பேரங்களையெல்லாம் பேசிக் முடித்தவுடனேயே, ஆன்மாவில் பொதிந்து கிடக்கும் ரகசியங்களை எழுத ஆரம்பித்துவிடுகிறார் என்றால், அவர் உண்மையில் சத்தியத்தை நாடுபவராக இருக்க வேண்டுமே அல்லாமல் வியாபாரியாக இருக்க முடியாது என்பது தெளிவானது. ஒரு தடவை இரண்டு தடவையன்று, அநேகமாக எப்பொழுதுமே தேடும் முயற்சியில் இவ்விதம் ஆழ்ந்திருந்ததைக் கண்டேன். சாந்தி நிலையிலிருந்து அவர் மனம் மாறுப்பட்டதாகவே நான் கண்டதில்லை.

எந்த ஒரு வியாபாரமும், சுயநலமும் என்னை அவருடன் பிணைக்கவில்லை என்றாலும், அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டு இன்புற்றேன். அப்பொழுது நான் வழக்கே இல்லாத வெறும் பாரிஸ்டர் என்றாலும் என்னைப் பார்க்கும் போதெல்லாம், சமய சம்பந்தமான முக்கியமான விஷயங்களைக் குறித்து என்னிடம் அவர் பேசுவார். அச்சமயம் நான் எதிலும் தெளிவில்லாது, இருளில் வழி தெரியாமல் தடவிக் கொண்டிருப்பவனாகவே இருந்தேன். சமய சம்பந்தமான விவாதங்களில் எனக்கு அதிகச் சிரத்தை இருந்ததாகச் சொல்ல முடியாது. என்றாலும் அவர் பேச்சு எனக்குக் கவர்ச்சி அளிப்பதாக இருந்ததைக் கண்டேன். அதற்குப் பிறகு மதத் தலைவர்கள் பலரையும் மத குருக்களையும் நான் சந்தித்திருக்கிறேன். பல மதங்களின் தலைவர்களைச் சந்திக்க முயன்றும் இருக்கிறேன். ராய்ச்சந்திரரைப் போல அவர்களில் யாருமே என் மனத்தைக் கவர்ந்ததில்லை என்பதை நான் சொல்ல வேண்டும். அவருடைய சொற்கள், என் உள்ளத்தில் நேரே சென்று பதிந்தன. ஒழுக்க சீலத்தில் அவர் கொண்டிருந்த ஆர்வத்தைப் போலவே அவருடைய அறிவாற்றலும் அவரிடம் நான் பெருமதிப்பு வைக்கும்படி செய்தது. அவர் விரும்பி என்னைத் தவறான வழியில் செலுத்திவிட மாட்டார். தமது அகநோக்கு எண்ணங்களை எல்லாம் என்னிடம் எப்பொழுதும் அவர் கூறுவார் என்ற உறுதியும் எனக்குப் புலப்பட்டது. ஆகையால், ஆன்மீகத் துறையில் எனக்கு சிக்கல் ஏற்பட்ட சமயங்களிலெல்லாம் அவரே எனக்குப் புகலிடமாக விளங்கினார்.

எனக்கு அவரிடம் எவ்வளவோ மதிப்பு இருந்தும், என் குருநாதராக எனது இதயபீடத்தில் அவரை நான் அமர்த்திக் கொள்ளவில்லை. அந்தச் சிம்மாசனம் இன்னும் காலியாகவே இருக்கிறது. அதில் அமர்வதற்கு ஏற்றவரை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன். குருவைக் குறித்தும், ஆன்ம ஞானத்தை அடையும் விஷயத்தில் குருவின் அவசியத்தைப் பற்றியும் கூறும் ஹிந்து தத்துவத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு. குருவின்றி உண்மையான ஞானம் ஏற்பட முடியாது என்ற தத்துவத்திலும் அதிக உண்மை உண்டு என்றே நினைக்கிறேன். உலக விவகாரங்களில் அரைகுறையான ஆசானைச் சகித்துக் கொள்ள முடியலாம். ஆனால், ஆன்மீக காரியங்களில் சகிக்க முடியாது. பூரணத்துவம் உள்ள ஒரு ஞானியே குருபீடத்தில் அமர அருகதை உடையவர். ஆகையால் அந்தப் பூரணத்துவத்தை நாடுவதில் இடைவிடாது பாடுபடவேண்டும். ஏனெனில் அவனவனுக்கு ஏற்ற குருவையே அவனவன் அடைகிறான். பூரணத்துவத்தை அடைய இடைவிடாது பாடுபடுவது ஒருவரின் உரிமை. அதுவே அதனால் அடையும் பலனும் ஆகும். மற்றவை எல்லாம் கடவுளின் சித்தத்தைப் பொறுத்தவை.

இவ்விதம் ராய்ச்சந்திர பாயை என் உள்ளத்தின் சிங்காதனத்தில் குருவாக அமர்த்திக் கொள்ள என்னால் இயலாவிட்டாலும் அவர் அநேக சந்தர்ப்பங்களில் எவ்விதம் எனக்கு வழிகாட்டியாகவும் உதவி செய்பவராகவும் இருந்திருக்கிறார் என்பதை போகப் போகப் பார்ப்போம். இக்காலத்தவர்களில் என் உள்ளத்தைக் கவர்ந்து என் வாழ்க்கையில் ஆழ்ந்த சுவட்டை விட்டுச் சென்றோர் மூவர் ஆவர். ராய்ச்சந்திரர் தமது ஜீவியத் தொடர்பினாலும், டால்ஸ்டாய், ஆண்டவன் ராஜ்யம் உன்னுள்ளேயே என்ற தமது நூலினாலும் ரஸ்கின்;, "கடையனுக்கும் கதிமோட்சம்" என்ற நூலினாலும் அவ்வாறு செய்தனர். இவர்களைப் பற்றி உரிய இடங்களில் விரிவாகக் கூறுகிறேன்.


Offline Anu

வாழ்க்கையைத் தொடங்கிய விதம்!

என் மூத்த சகோதரர் என்னைப் பற்றி எவ்வளவோ அதிக நம்பிக்கைகளையெல்லாம் வைத்திருந்தார். பணம், பெயர், புகழ் ஆகியவைகளில் அவருக்கு ஆசை அதிகம். அவர் விசாலமான உள்ளம் படைத்தவர். அளவுக்கு மிஞ்சிய தாராள குணமும் உள்ளவர். அதோடு, அவர் கபடமற்ற சுபாவமும் உடையவர் ஆதலின் அவருக்குப் பல நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் மூலம் என்னிடம் அதிக கட்சிக்காரர்கள் வரும்படி செய்யலாம் என்று அவர் நம்பினார். அத்துடன் என் வக்கீல் தொழில் பிரமாதமான வருவாய் உள்ளதாக இருக்கப் போகிறது என்றும் எண்ணிக் கொண்டார். அந்த எண்ணத்தில் வீட்டுச் செலவு மிதமிஞ்சிப் போகவும் அனுமதித்து விட்டார். நான் தொழில் நடத்தவதற்குச் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகளில் எதையும் அவர் பாக்கி வைக்கவில்லை.

நான் வெளிநாட்டுப் பிரயாணம் செய்ததைக் குறித்து, என் சாதியாரிடையே எழுந்த புயல், இன்னும் இருந்துகொண்டே இருந்தது. அது, சாதியை இரண்டு கட்சிகள் ஆக்கிவிட்டது. இதில் ஒரு கட்சியினர் என்னை உடனேயே சாதியில் சேர்த்துக் கொண்டு விட்டனர். மற்றக் கட்சியாரோ, எனக்கு விதித்திருந்த சாதிக் கட்டுப்பாட்டை நீக்குவதில்லை என்று உறுதி கொண்டிருந்தனர். முதல் கட்சியாருக்குத் திருப்தி அளிக்க வேண்டும் என்பதற்காக என் சகோதரர் ராஜ்கோட்டுக்குப் போகும் முன்பு என்னை நாசிக் அழைத்துச் சென்றார். அங்கே புண்ணிய நதியில் என்னை நீராடச் செய்தார். பிறகு ராஜ்கோட்டிற்குப் போனதும், சாதியாருக்கு ஒரு விருந்தும் வைத்தார். இதெல்லாம் எனக்குப் பிடிக்கவே இல்லை. ஆனால், என்னிடம் என் சகோதரருக்கு இருந்த அன்போ எல்லையற்றது. அதே போல் அவரிடமும் எனக்குப் பக்தி உண்டு. ஆகையால், அவர் சொன்னதே சட்டம் என்று மதித்து, அவர் விரும்பியபடியெல்லாம் யந்திரம் போலச் செய்து வந்தேன். இவ்விதம் திரும்பவும் சாதியில் சேர்த்துக் கொள்ளுவதைப் பற்றிய தொல்லை ஒருவாறு தீர்ந்தது.

என்னைச் சாதியில் சேர்த்துக் கொள்ள மறுத்த கட்சியினரிடம் என்னைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக நான் முயலவே இல்லை. அக்கட்சியின் தலைவர்களிடம் எனக்கு வெறுப்புத் தோன்றவும் இல்லை. அவர்களில் சிலர் என்னை வெறுத்தனர். ஆனாலும் அவர்கள் மனம் புண்படும் காரியம் எதையும் செய்து விடக்கூடாது என்பதில் எச்சரிக்கையுடன் நடந்து கொண்டேன். சாதிக்கட்டுப்பாடு சம்பந்தமான விதி முறைகளையெல்லாம் மதித்து நடந்துகொண்டேன். அந்தக் கட்டுப்பாடுகளின் படி என் மாமனார். மாமியார், தமக்கை, மைத்துனர் உட்பட என் உறவினர் யாருமே எனக்குச் சாப்பாடு போடக்கூடாது. ஆகையால், அவர்களில் யார் வீட்டிலும் நான் தண்ணீர் குடிப்பதுகூட இல்லை. இந்தக் கட்டுப்பாட்டை ரகசியமாக மீறிவிட அவர்கள் தயாராக இருந்தனர். பகிரங்கமாகச் செய்யாததை ரகசியமாகச் செய்வது என்பது என் இயல்புக்கே நேர் விரோதமானது.

இவ்விதம் என்மீது குறை கூறுவதற்கே கொஞ்சமும் இடம் வைக்காமல் நான் நடந்து கொண்டதன் பலனாக, எனக்குச் சாதித் தொல்லை ஏற்படுவதற்கே சந்தர்ப்பம் இல்லாது போயிற்று. அது மாத்திரம் அல்ல. என்னைச் சாதியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவனாக இன்னும் கருதிக் கொண்டிருந்தவர்களில் பெரும்பாலோர் என்னிடம் அன்போடும் தாராளமாகவும் நடந்து கொண்டார்கள். சாதிக்காக நான் ஏதாவது செய்தாக வேண்டும் என்று எதிர்பாராமலேயே என் தொழிலிலும் அவர்கள் எனக்கு உதவி செய்தார்கள். இந்த நல்ல காரியங்களெல்லாம் என்னுடைய எதிர்ப்பின்மையின் பலனே என்பது எனது திடநம்பிக்கை. சாதியில் என்னைச் சேர்த்துக் கொண்டாக வேண்டும் என்று நான் கிளர்ச்சி செய்திருந்தால், சாதியை இன்னும் பல கட்சிகளாகப் பிரித்துவிட நான் முயன்றிருந்தால், சாதியாருக்கு நான் ஆத்திரத்தை மூட்டியிருப்பின் அவர்களும் நிச்சயம் எதிர்த்துப் பதிலுக்குப் பதில் செய்திருப்பார்கள். இங்கிலாந்திலிருந்த நான் திரும்பயதும் புயலிலிருந்து ஒதுங்கிவிடுவதற்குப் பதிலாக, நான் கிளர்ச்சிச் சுழலில் சிக்குண்டு, பொய் நடிப்பை மேற்;கொள்ளுவதற்கு உடந்தையாகவும் இருந்திருப்பேன்.

என் மனைவியுடன் எனக்கு இருந்த உறவு, இன்னும் நான் விரும்பிய வகையில் அமையவில்லை. எனக்கு இருந்த சந்தேகக் குணத்தை என் இங்கிலாந்து வாசமும் போக்கக் காணோம். சின்ன விஷயத்திற்கெல்லாம் கூட, என் மனைவி மீது முன்போல் சந்தேகப்பட்டு எரிந்து விழுந்து கொண்டிருந்தேன். ஆகையால் நான் கொண்டிருந்த ஆசைகளெல்லாம் நிறைவேறாமலே இருந்தன. என் மனைவி எழுதப் படிக்கத் கற்றுக்கொண்டாக வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன். அவளுடைய படிப்புக்கு நான் உதவி செய்ய வேண்டும் என்றும் தீர்மானித்தேன். ஆனால், இதில் என் காமம் வந்து குறுக்கிட்டது. என்னுடைய குறைபாடுகளுக்காக அவள் கஷ்டப்பட வேண்டியதாயிற்று. ஒரு சமயம் அவளை அவளுடைய தந்தையார் வீட்டிற்கு அனுப்பிவிடும் அளவுக்குக்கூட போய்விட்டேன். அவளைக் கொடிய மனத் துயரத்திற்கு ஆளாக்கிய பிறகே, திரும்ப அழைத்துக் கொள்ளச் சம்மதித்தேன். இவையெல்லாம் என்னுடைய பெருந்தவறுகள் என்பதை பின்னால் உணர்ந்தேன்.

குழந்தைகளுக்குக் கல்வி போதிக்கும் விஷயத்தில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று திட்டம் போட்டிருந்தேன். என் அண்ணனுக்குக் குழந்தைகள் உண்டு. நான் இங்கிலாந்து சென்ற போது, வீட்டில் விட்டுச் சென்ற என் பையனுக்கும் இப்போது நான்கு வயது. அச்சிறு குழந்தைகளுக்குத் தேகாப்பியாசம் சொல்லிக் கொடுத்து, அவர்கள் உடல் வலுப்பெறச் செய்ய வேண்டும் என்பது என் ஆவல். என்னுடைய நேரான மேற்பார்வையில் அக்குழந்தைகளை வளர்க்கவேண்டும் என்றும் நினைத்தேன். இதில் என் சகோதரரின் ஆதரவும் எனக்கு இருந்ததால் என் முயற்சியில் அநேகமாக வெற்றியும் பெற்றேன். குழந்தைகளுடன் கூடியிருப்பதில் எனக்கு அதிகப் பிரியம். அவர்களுடன் விளையாடி, வேடிக்கை செய்து கொண்டிருக்கும் வழக்கம், இன்றைக்கும் என்னிடம் அப்படியே இருந்து வருகிறது. குழந்தைகளுக்கு நான் நல்ல உபாத்தியாயராக இருப்பேன் என்ற எண்ணம் அப்பொழுது முதல் எனக்கு இருந்து வருகிறது.

உணவுச் சீர்திருத்தம் அவசியமானது என்பது தெளிவு. ஏற்கனவே வீட்டில் தேநீரும் காப்பியும் புகுந்துவிட்டன. நான் இங்கிலாந்து திரும்பியதும், ஒருவிதமான ஆங்கிலச் சூழ்நிலை வீட்டில் இருக்கும்படி செய்வதே சரி என்று என் சகோதரர் நினைத்துவிட்டார். அதனால், எப்பொழுதோ விஷேட சமயங்களில் மட்டும் உபயோகிப்பதற்கென்று வைத்திருந்த பீங்கான் சாமான்கள் முதலியன தினசரி உபயோகத்திற்கே வந்துவிட்டன. என்னுடைய சீர்திருத்தங்கள் அதை பூர்த்தி செய்தன. தேநீருக்கும் காப்பிக்கும் பதிலாக, ஓட்ஸ் கஞ்சியையும் கோக்கோவையும் புகுத்தினேன். உண்மையில் தேநீருடனும் காப்பியுடனும் இவை அதிகப்படியாகவே சேர்ந்துவிட்டன. ஐரோப்பிய உடையையும் புகுத்தி, ஐரோப்பிய மயமாக்குவதைப் பூர்த்தி செய்தேன்.

இவ்வாறு செலவுகள் அதிகமாகிக்கொண்டே போயின ஒவ்வொரு நாளும் புதிய சமான்கள் சேர்க்கப்பட்டு வந்தன யானையைக் கட்டித் தீனிபோடும் கதை ஆகிவிட்டது. இந்தச் செலவுகளுக்கெல்லாம் வேண்டிய பணத்திற்கு எங்கே போவது ? ராஜ்கோட்டில் நான் பாரிஸ்டர் தொழிலை ஆரம்பிப்பதென்றால் அது கேலிக்கு இடமானதாகும். தகுதி பெற்ற ஒரு வக்கீலுக்குத் தெரிந்தது கூட எனக்குத் தெரியாது. என்றாலும், அவருக்குக் கொடுப்பதை விட எனக்குப் பத்துமடங்கு அதிகக் கட்டணம் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன் * அப்படி என்னை வக்கீலாக வைத்துக் கொள்ள, எந்தக் கட்சிகாரரும் முட்டாள் அல்ல. அப்படிப்பட்ட ஒருவர் கிடைத்துவிடுகிறார் என்றே வைத்துக் கொண்டாலும் என்னுடைய அறியாமையுடன் அகம்பாவத்தையும் மோசடியையும் புதிதாகச் சேர்த்து உலகிற்கு நான் பட்டிருக்கும் கடனை இன்னும் அதிகமாக்கிக் கொள்ளுவதா ?

ஹைகோர்ட்டு அனுபவத்தைப் பெறுவதற்கும், இந்திய சட்டத்தைப் படித்துக் கொள்ளுவதற்கும், முடிந்தவரையில் வழக்குகள் கிடைக்கும் படி செய்து கொள்ளுவதற்கும் நான் பம்பாய் போவது நல்லது என்று நண்பர்கள் யோசனை கூறினர். இந்த யோசனையை ஏற்றுக் கொண்டு, அப்படியே பம்பாய்க்குப் போனேன். பம்பாயில் என்னைப் போன்றே தகுதியற்றவரான ஒரு சமையற்காரரை வைத்துக் கொண்டு, குடித்தனத்தை ஆரம்பித்தேன் அவர் ஒரு பிராமணர். அவரை வேலைக்காரராகப் பாவித்து நடத்தாமல், குடும்பத்தைச் சேர்ந்த ஒருவராகவே நடத்தினேன். அவர், மேலே தண்ணீரை ஊற்றிக்கொள்ளுவாரேயன்றித் தேய்த்துச் குளிக்கமாட்டார். அவருடைய வேட்டி ஒரே அழுக்காயிருக்கும் பூணூலும் அப்படித்தான். சாத்திரங்களைப் பற்றியே அவருக்கு ஒன்றுமே தெரியாது. அவரை விட நல்ல சமையற்காரர் எனக்குக் கிடைப்பது எப்படி ?

ரவிசங்கர் என்பது அவர் பெயர். ரவிசங்கர், உமக்குச் சமையல் தெரியாமல் இருக்கலாம். ஆனால் உமக்குச் சந்தியா வந்தன மந்திரம் முதலியன தெரிந்தே இருக்கவேண்டுமே ? என்று கேட்டேன். அதற்கு அவர், சத்தியாவந்தன மந்திரமா, ஐயா கலப்பையே எங்கள் சந்தியாவந்தனம், மண்வெட்டியே எங்கள் அன்றாட அனுஷ்டானம். அந்த வகையைச் சேர்ந்த பிராமணன் நான். உங்கள் கிருபையைக் கொண்டு நான் வாழவேண்டியவன். இல்லாவிட்டால் எனக்கு விவசாயம் இருக்கவே இருக்கிறது என்றார்.

ஆகவே, ரவிசங்கருக்கும் நான் ஆசானாக இருக்க வேண்டியதாயிற்று. எனக்கோ வேண்டிய அவகாசம் இருந்தது. சமையல் வேலையில் பாதியை நானே செய்ய ஆரம்பித்தேன். கறிகாய்ச் சமையலில் ஆங்கிலப் பரிசோதனையெல்லாம் புகுத்தினேன். ஓர் எண்ணெய் அடுப்பு வாங்கினேன். ரவிசங்கருடன் அடுப்பாங்கரை வேலைகளைக் கவனிக்கத் தலைப்பட்டேன். பிறருடன் ஒரே பந்தியில் உட்கார்ந்து கொண்டு சாப்பிடுவதில் எனக்கு ஆட்சேபம் இல்லை. ரவிசங்கருக்கும் அது கிடையாது. ஆகவே, இருவரும் சேர்ந்து சுகமாகவே வாழ்க்கை நடத்தி வந்தோம். ஆனால் ஒன்றே ஒன்றுதான் குறுக்கே நின்றது. அதாவது அழுக்காகவே இருப்பது, உணவையும் சுத்தமில்லாமல் வைப்பது என்று ரவிசங்கர் விரதம் கொண்டிருந்தார்.

செலவு அதிகரித்துக் கொண்டே போயிற்று. அதைச் சரிக்கட்டிக்கொள்ளுவதற்கு வருமானமே இல்லை. ஆகையால், பம்பாயில் நான்கு, ஐந்து மாதங்களுக்குமேல் காலம் தள்ள என்னால் முடியவில்லை. இப்படித்தான் நான் என் வாழ்க்கையை ஆரம்பித்தேன். பாரிஸ்டர் தொழில், கொஞ்ச அறிவும் அதிக ஆடம்பரமும் உடைய மோசமான தொழில் என்று எனக்குத் தோன்றியது. எனக்கு இருந்த பொறுப்பை எண்ணி, பெரிதும் கவலைக்கு உள்ளானேன்


Offline Anu

முதல் வழக்கு

பம்பாயில் இருந்தபோது, ஒரு புறம் இந்தியச் சட்டத்தைப் படிக்கலானேன், மற்றொரு புறமோ, உணவைப் பற்றிய என் ஆராய்ச்சிகள். இதில் வீரசந்திர காந்தி என்ற ஒரு நண்பரும் என்னுடன் சேர்ந்து கொண்டார். என் சகோதரரோ, எனக்குக் கட்சிக்காரர்களைப் பிடிப்பதற்காக அவரளவில் தம்மால் ஆனதையெல்லாம் செய்து கொண்டிருந்தார்.

இந்தியச் சட்டங்களைப் படிப்பது சங்கடமான வேலையாக இருந்தது. சிவில் நடைமுறைச் சட்டத்தைப் படிக்க என்னால் முடியவே இல்லை. ஆனாலும் ஙசாட்சிகள் சட்டங விஷயம் அப்படி இல்லை. வீரசந்திர காந்தி சொலிஸிட்டர் பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்தார். பாரிஸ்டர்களையும் வக்கீல்களையும் குறித்து எல்லாவிதமான கதைகளையும் அவர் எனக்குச் சொல்வார். ஸர் பிரோஸ்ஷாவின் ஆற்றலுக்குக் காரணமே, சட்டத்தில் அவருக்கு இருக்கும் அபாரமான ஞானம்தான். ஙசாட்சிகள் சட்டம்ங அவருக்கு மனப்பாடமாகத் தெரியும். அதன் முப்பத்தி ரெண்டாவது பிரிவு சம்பந்தப்பட்ட வழக்குகள் எல்லாவற்றையும் அவர் அறிவார். பத்ருதீன் தயாப்ஜீயின் அற்புதமான விவாத சக்தி, நீதிபதிகளை ஆச்சரியத்தில் மூழ்கும்படி செய்துவிடுகிறது என்பார். பெரிய வக்கீல்களைப் பற்றிய இத்தகைய கதைகளெல்லாம் என்னுடைய மனச்சோர்வை அதிகமாக்கிவிட்டன.

அவர் மேலும் கூறுவார். ஒரு பாரிஸ்டர் ஐந்து அல்லது ஏழு ஆண்டுகளுக்கு வருவாய் இல்லாமல் காத்திருக்க நேருவது அசாதாரணம் அன்று. அதனால்தான் நான் சொலிஸிட்டர் பரீட்சைக்குப் போகிறேன். மூன்று ஆண்டுகளில் உம் வாழ்க்கைப் படகை நீரே செலுத்திக்கொள்ள உம்மால் முடிந்து விட்டால், உம்மை நீர் அதிர்ஷ்டசாலி என்று கருதிக் கொள்ள வேண்டும்.

மாதத்திற்கு மாதம் செலவு அதிகரித்துக் கொண்டே போயிற்று. உள்ளுக்குள் பாரிஸ்டர் தொழிலுக்குத் தயாராகிக் கொண்டுவரும் போதே, பாரிஸ்டர் என்ற விளம்பரப் பலகையை வெளியில் தொங்கவிடுவது என் மனதுக்குச் சமாதானம் தராத ஒரு விஷயம். இதனால் என் படிப்பில் நான் முழுக் கவனத்தையும் செலுத்த இயலவில்லை. சாட்சியத்தைப் பற்றிய சட்டத்தைப் படிப்பதில் ஓரளவுக்கு எனக்கு விருப்பம் பிறந்தது. மேய்னே என்பவர் எழுதிய ஹிந்து சட்ட புத்தகத்தை ஆழ்ந்த சிரத்தையுடன் படித்தேன். ஆனாலும், ஒரு வழக்கை நடத்துவதற்கான துணிவு எனக்கு இல்லை. சொல்லால் கூறமுடியாத அளவுக்கு நான் அதைரியம் கொண்டிருந்தேன். மாமனார் வீட்டுக்குப் புதிதாக வந்த மருமகளைப் போலத் தவித்தேன்.

அந்தச் சமயத்தில், மமிபாய் என்ற ஒருவரின் வழக்கை நடத்துவதற்கு எடுத்துக் கொண்டேன். அது, ஸ்மால்காஸ் வழக்கு அந்த வழக்கைக் கொண்டுவந்து கொடுத்த தரகருக்கு ஏதாவது கொஞ்சம் தரகுப் பணம் தர வேண்டும் என்று சொன்னார்கள். அப்படிக் கொடுப்பதற்கு நான் கண்டிப்பாக மறுத்துவிட்டேன். மாதம் மூவாயிரம், நாலாயிரம் சம்பாதிக்கும் பெரிய கிரிமினல் வக்கீலான இன்னார் கூடத் தரகு கொடுக்கிறாரே! என்றார்கள்.

அவரை நான் பின்பற்ற வேண்டியதில்லை என்றேன். எனக்கு மாதம் ரூ. 300 கிடைத்தாலே போதும். என் தந்தை அதற்கு மேல் சம்பாதிக்கவில்லை என்றும் கூறினேன். அந்தக் காலமெல்லாம் மலையேறிவிட்டது. இப்பொழுது பம்பாயில், பயப்பட வேண்டிய அளவுக்குச் செலவுகள் கூடி விட்டன. ஆகையால், நீர் சாமர்த்தியமாக நடந்து கொள்ள வேண்டும் என்றார்கள். நான் பிடிவாதமாக இருந்து விட்டேன். தரகுப் பணம் கொடுக்கவில்லை என்றாலும் மமிபாயின் வழக்கு என்னிடம் வந்தது. அது மிகவும் சுலபமான வழக்கு, எனக்கு ரூபாய் 30 கட்டணம் கொடுக்க வேண்டும் என்றேன். கோர்ட்டில் அந்த வழக்கு ஒரு நாளுக்கு மேல் நடக்கும் என்று தோன்றவில்லை.

ஸ்மால்காஸ் கோர்ட்டில் நான் ஆஜராவது அதுவே முதல் தடவை. நான் பிரதிவாதிக்காக ஆஜரானதால் வாதியின் சாட்சிகளை நான் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும். அதற்காக எழுந்தேன் ஆனால் என் தைரியமெல்லாம் போய், தலை சுற்ற ஆரம்பித்து விட்டது. கோர்ட்டு முழுவதுமே சுழலுவதாக எனக்குத் தோன்றிற்று குறுக்கு விசாரணை செய்ய ஒரு கேள்விகூட என் சிந்தனையில் எழவில்லை. நீதிபதி சிரித்திருப்பார், வக்கீல்களும் அக்காட்சியை ரசித்திருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், நானோ இதில் எதையும காணும் நிலையில் இல்லை. பேசாமல் உட்கார்ந்துவிட்டேன். ஙஇந்த வழக்கை நடத்த என்னால் முடியாது பட்டேலை அமர்த்திக்கொள்ளலாம். எனக்குக் கொடுத்த கட்டணத்தையும் திருப்பித் தந்து விடுகிறேன்ங என்று ஏஜெண்டிடம் சொன்னேன். ரூ. 51 கட்டணம் கொடுப்பதெனப் பேசி, ஸ்ரீ பட்டேல் வக்கீலாக அமர்த்தப்பட்டார் அவருக்கோ இந்த வழக்கு குழந்தை விளையாட்டுப் போன்றதாகும்.

என் கட்சிக்காரர் வெற்றி பெற்றாரா, தோற்றாரா என்பது கூட எனக்குத் தெரியாது. கோர்ட்டை விட்டு அவசரமாகக் கிளம்பினேன். ஆனால் என்னைக் குறித்து எனக்கே வெட்கமாக இருந்தது. வழக்கை நடத்தும் தைரியம் எனக்கு ஏற்படும்வரையில், திரும்பவும் கோர்ட்டுக்குப் போகவே இல்லை. நான் செய்து கொண்ட தீர்மானத்தில் பாராட்டக் கூடியது எதுவும் இல்லை. அவசியத்தை முன்னிட்டு, வேறு வழி இல்லாமலேயே நான் அந்த முடிவுக்கு வந்தேன். தோற்றுப் போவதற்கு என்று வழக்கை என்னிடம் கொண்டு வந்து ஒப்படைக்க யாரும் அவ்வளவு முட்டாளாக இருக்க மாட்டார்கள்.

ஆயினும் பம்பாயில் இன்னும் ஒரு வழக்கு என்னிடம் வரக்காத்திருந்தது. ஒரு விண்ணப்பத்தைத் தயாரிக்க வேண்டி இருந்ததே அது. ஓர் ஏழை முஸ்லீமின் நிலத்தைப் போர்பந்தரில் பறிமுதல் செய்து விட்டார்கள். பெரிய மனிதரான என் தந்தைக்கு ஏற்ற மகனாக நான் இருப்பேன் என்று எண்ணி, அவர் என்னிடம் வந்தார். அவருடைய கட்சியில் பலம் இல்லை என்றே தோன்றிற்று. என்றாலும், விண்ணப்பத்தை அச்சிடும் செலவை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி, விண்ணப்பம் தயாரிக்க ஒப்புக் கொண்டேன். அதைத் தயாரித்து, நண்பர்களுக்குப் படித்துக் காட்டினேன். அவர்களும் அதை அங்கீகரித்தார்கள். விண்ணப்பம் தயாரிப்பதிலாவது எனக்குத் தகுதியிருக்கிறது என்ற அளவுக்கு அது எனக்கு நம்பிக்கை ஏற்படும்படி செய்தது. உண்மையிலேயே அந்த ஆற்றல் எனக்கு இருந்தது.

கட்டணம் எதுவுமே வாங்கிக் கொள்ளாமல் நான் விண்ணப்பங்கள் தயாரித்துக் கொடுப்பதாக இருந்தால் என் தொழில் நன்றாக நடக்கும். ஆனால், சாப்பாட்டுக்கு வழி வேண்டுமே ? உபாத்தியாயர் தொழிலுக்குப் போய்விடலாமா என்று எண்ணினேன். எனக்கு ஆங்கில ஞானமும் நன்றாக இருந்தது. ஏதாவது ஒரு பள்ளிக்கூடத்தில் மெட்ரிகுலேஷன் மாணவருக்கு ஆங்கிலம் போதிக்கும் வேலை, எனக்குப் பிரியமாக இருந்திருக்கும் இந்த வகையில் என் செலவில் ஒரு பகுதியையாவது சமாளித்தவனாவேன். பத்திரிக்கைகளில் ஒரு விளம்பரத்தைப் பார்த்தேன், தினம் ஒரு மணி நேரம் போதிப்பதற்கு ஓர் ஆங்கில ஆசிரியர் தேவை. சம்பளம் ரூ. 75 என்று அந்த விளம்பரத்தில் இருந்தது. ஒரு பிரபலமான உயர்நிலைப் பள்ளியின் விளம்பரமே அது. அந்த உத்தியோகத்திற்கு மனுப் போட்டேன். நேரில் சந்தித்துப் பேச அழைப்பும் வந்தது. அதிக உற்சாகத்தோடு அங்கே போனேன். நான் பி.ஏ. பட்டதாரி அல்ல என்பதை அப் பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியர் கண்டுகொண்டதும், என்னை நியமிக்க வருத்தத்துடன் மறுத்துவிட்டார்.

ஆனால், லத்தீனை இரண்டாவது மொழியாகக் கொண்டு நான் லண்டன் மெட்ரிகுலேஷன் பரீட்சையில் தேறியிருக்கிறேனே என்றேன். உண்மை ஆனால் எங்களுக்கு பி.ஏ. பட்டதாரியே வேண்டும் என்று அவர் சொல்லிவிட்டார். ஆகவே, வேறு வழியில்லை. மனம் சோர்ந்து போய்க் கைகளைப் பிசைந்து கொண்டேன். என் சகோதரரும் அதிகக் கவலைப்பட்டார். பம்பாயில் மேற்கொண்டும் காலத்தை வீணாக்கிக் கொண்டிருப்பதில் பயனில்லை என்ற முடிவுக்கு இருவரும் வந்துவிட்டோம். எனது சகோதரர், ராஜ்கோட்டில் ஒரு சின்ன வக்கீல் நானும் அங்கே போய்விடுவது என்று முடிவாயிற்று. மனுக்கள், விண்ணப்பங்கள் தயாரிப்பதில் கொஞ்சம் வேலையை அவர் எனக்குக் கொடுக்கலாம். மேலும் இப்பொழுதே ராஜ்கோட்டில் ஒரு குடித்தனம் இருப்பதால் பம்பாயில் இருக்கும் குடித்தனத்தை எடுத்துவிடுவதால் பணமும் நிரம்ப மிச்சமாகும். இந்த யோசனை எனக்குப் பிடித்தது. இவ்விதம் பம்பாயில் ஆறு மாதங்கள் தங்கி இருந்த பிறகு அங்கே இருந்த என் சிறு குடித்தனத்தை கலைத்து விட்டோம்.

நான் பம்பாயில் இருந்தபோது, தினமும் ஹைகோர்ட்டுக்குப் போவேன். ஆனால் அங்கே ஏதாவது கற்றுக் கொண்டதாக நான் கூறுவதற்கில்லை. அதிகமாகக் கற்றுக் கொள்ளுவதற்கு வேண்டிய சட்ட ஞானம் எனக்கு இல்லை. வழக்குகளின் நடைமுறை எனக்குப் பிடிபடுவதில்லை. ஆகையால், அங்கே தூங்கிவிட்டுத் திரும்புவேன். இதில் எனக்கு கூட்டாளிகள் பலர் இருந்தனர். ஆகவே நான் அவ்வளவாக வெட்கப்படுவதில்லை. கொஞ்ச நாட்களுக்குப் பிறகு ஹைகோர்ட்டில் தூங்குவதே ஒரு நாகரிகம் என்று எண்ணக் கற்றுக்கொண்டுவிட்டதும், இருந்த வெட்க உணர்ச்சியும் கூட என்னை விட்டுப் போய்விட்டது.

பம்பாயில் நான் இருந்ததைப் போல் இந்தத் தலைமுறையிலும் கட்சிக்காரரே இல்லாத பாரிஸ்டர்கள் யாராவது இருப்பார்களானால் வாழ்க்கை நடத்துவதைப் பற்றிச் சில அனுபவ யோசனைகளை அவர்களுக்குக் கூற விரும்புகிறேன். கீர்காமில் நான் குடியிருந்த போதிலும் வண்டியிலோ, டிராம் வண்டியிலோ போவதே இல்லை. தினமும் ஹைகோர்ட்டுக்கு நடந்தே போவது என்பதை ஒரு விதியாக வைத்துக் கொண்டேன். அங்கே போய்ச் சேர எனக்கு நாற்பத்தைந்து நிமிடங்கள் ஆகும்.

வீட்டுக்குத் திரும்பும் போதும் அநேகமாக நடந்தே வருவேன். வெயிலில் நடந்து நடந்து அந்தச் சூடும் என்னை எதுவும் செய்வதில்லை. கோர்ட்டுக்கு நடந்து போய் வந்து கொண்டிருந்ததால் அதிகப் பணம் மிச்சமாயிற்று. மேலும் பம்பாயில் என் நண்பர்களில் பலர், வழக்கமாக நோயுற்று வந்தபோது, நான் ஒரு தடவையேனும் நோய்வாய்ப்பட்டதில்லை. நான் பணம் சம்பாதிக்க ஆரமபித்துவிட்ட பிறகும் கூட, காரியாலயத்திற்கு நடந்தே போய்த் திரும்பும் வழக்கத்தை மாத்திரம் விடவே இல்லை. அப்பழக்கத்தின் நன்மைகளை நான் இன்னும் அனுபவித்து வருகிறேன்.


Offline Anu

முதல் அதிர்ச்சி

ஏமாற்றத்துடன் பம்பாயிலிருந்து புறப்பட்டேன். ராஜ்கோட்டிற்குப் போய் அங்கே என் அலுவலகத்தை அமைத்துக் கொண்டேன். அங்கே என் தொழில் கொஞ்சம் நன்றாகவே நடந்து வந்தது. மனுக்களும், விண்ணப்பங்களும் தயாரித்துக் கொடுப்பதில் சராசரி மாதத்திற்கு ரூ. 300 எனக்குக் கிடைத்து வந்தது. இதற்கு என் சொந்தத் திறமையைவிட என் சகோதரரின் செல்வாக்குத்தான் முக்கியமான காரணம். அவருடைய கூட்டாளியான வக்கீலுக்குத் தொழில் நன்றாக நடந்து வந்தது. உண்மையில் முக்கியமானவையாக இருக்கும், அல்லது முக்கியமானவை என்று அவருக்குத் தோன்றும் மனுக்களைத் தயாரிக்கும் வேலையை, அவர், பெரிய பாரிஸ்டர்களிடம் கொடுத்துவிடுவார். அவரிடம் வரும் ஏழைக் கட்சிக்காரர்களுக்காகத் தயாரிக்க வேண்டிய விண்ணப்பங்களே என் பங்கில் விழுந்தன.

வழக்குப் பிடித்துத் தருகிறவர்களுக்குத் தரகுப் பணம் கொடுப்பதில்லை என்ற கொள்கையைப் பம்பாயில் நான் கண்டிப்பாகக் கடைப்பிடித்து வந்தேன். ஆனால், அந்தக் கொள்கையை இப்போது நான் விட்டுக் கொடுக்க வேண்டியதாயிற்று என்பதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும். இந்த இரண்டு நிலைமைகளுக்கும் வித்தியாசம் உண்டு என்றார்கள். பம்பாயில் தரகுப் பணம், வழக்குத் தரகர்களுக்குக் கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால் இங்கோ, நம்மை அமர்த்தும் வக்கீலுக்குக் கொடுக்க வேண்டும். அதோடு பம்பாயைப் போன்றே, இங்கும் ஒருவர் கூடப் பாக்கியில்லாமல் எல்லாப் பாரிஸ்டர்களும் தரகு கொடுக்கிறார்கள் என்றும் எனக்குச் சொன்னார்கள்.

என் சகோதரர் கூறிய வாதத்திற்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. அவர் சொன்னார் நான் மற்றொரு வக்கீலுடன் கூட்டாளியாக இருக்கிறேன். உன்னால் செய்ய முடியும் வேலைகள் எல்லாவற்றையும் உனக்கே கொடுத்துவிட வேண்டும் என்றுதான் நான் விரும்புவேன். அப்படியிருக்க, என் கூட்டாளிக்குத் தரகுத் தொகை கொடுக்க நீ மறுத்துவிட்டால், நிச்சயமாக என் நிலைமை சங்கடமான தாகிவிடும். நீயும் நானும் ஒரே குடும்பமாக இருக்கிறோம். ஆகையால், உனக்குக் கிடைக்கும். ஊதியம் நம் பொது வருமானத்தில் சேர்ந்துவிடுகிறது. எனவே, அதில் எனக்கு ஒரு பங்கு, தானே கிடைத்துவிடுகிறது. ஆனால், என் கூட்டாளியின் நிலைமை என்ன ? உனக்குக் கொடுக்கும் அதே வேலையை, அவர் வேறொரு பாரிஸ்டரிடம் கொடுக்கிறார். என்று வைத்துக் கொள்ளுவோம். அப்பொழுது இவருக்கு அவரிடமிருந்து நிச்சயமாகத் தரகுப் பணம் கிடைத்துவிடும் இந்த வாதம் என்னை மாற்றிவிட்டது. நான் பாரிஸ்டர் தொழிலை நடத்த வேண்டுமானால் இத்தகைய வேலைகளுக்குத் தரகு கொடுப்பதில் என் கொள்கையை வற்புறுத்தமுடியாது என்பதை உணர்ந்தேன். இப்படித் தான் எனக்குள்ளேயே நான் விவாதித்துக் கொண்டேன், உண்மையைச் சொன்னால் என்னை நானே ஏமாற்றிக்கொண்டேன். என்றாலும் இன்னும் ஒன்றும் கூறுவேன். இங்கே கொடுத்ததைத் தவிர வேறு எந்த வழக்குச் சம்பந்தமாகவும் நான் தரகு கொடுத்ததாக நினைவு இல்லை.

இவ்விதம் என் வாழ்க்கைச் செலவுக்குப் போதுமானதை நான் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டேன். என்றாலும் இச்சமயத்தில்தான், என் வாழ்க்கையிலே முதல் அதிர்ச்சியும் எனக்கு உண்டாயிற்று. ஒரு பிரிட்டிஷ் அதிகாரி என்றால் அவர் எப்படியெல்லாம் இருப்பார் என்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், அச் சமயம் வரையில் அப்படிப்பட்ட ஒருவரை நான் நேருக்கு நேராகப் பார்த்ததில்லை.

போர்பந்தரின் காலஞ்சென்ற ராணா சாகிப் பட்டத்திற்கு வருவதற்க முன்னால், என் சகோதரர் அவருக்க காரியதரிசியாகவும் ஆலோசகராகவும் இருந்தார். என் சகோதரர் அந்த உத்தியோகத்தில் இருந்தபோது ராணாவுக்குத் தவறான ஆலோசனைகளைக் கூறிவிட்டார் என்ற ஒரு குற்றச்சாட்டை என் சகோதரரின் தலை மீது இப்பொழுது சுமத்தியிருந்தார்கள். விஷயம் ராஜீய ஏஜெண்டிடம் போய்விட்டது. அவரோ, என் சகோதரர் மீது கெட்ட அபிப்ராயம் கொண்டிருந்தார். நான் இங்கிலாந்தில் இருந்தபோது, இந்த அதிகாரியை அறிவேன். ஓர் அளவுக்கு அவர் எனக்கு நண்பராகவும் இருந்தார் என்று சொல்லலாம். அந்தச் சிநேகிதத்தைப் பயன்படுத்திக் கொண்டு, ராஜீய ஏஜெண்டிடம் தம்மைப்பற்றி நான் பேசி, அவருக்கு இருந்த தவறான அபிப்ராயத்தை நான் போக்க வேண்டும் என்று என் சகோதரர் விரும்பினார்.

இந்த யோசனை எனக்கு கொஞ்சமும் பிடிக்கவே இல்லை. இங்கிலாந்தில் ஏற்பட்ட சொற்ப நட்பை நான் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கக்கூடாது என்று எண்ணினேன். என் சகோதரர் செய்தது தவறாகவே இருக்கு மாயின், என் சிபாரிசினால் என்ன பயன் ? அவர் குற்றமற்றவர் என்றால் முறைப்படி விண்ணப்பத்தை அனுப்பிவிட்டுத் தாம் நிரபராதி என்ற தைரியத்துடன் முடிவை எதிர் நோக்குவதே சரியானது. ஆனால் நான் கூறிய இந்த யோசனை என் சகோதரருக்குப் பிடிக்கவில்லை. அவர் சொன்னதாவது, உனக்குக் கத்தியவாரைப் பற்றி ஒன்றுமே தெரியாது. உலக அனுபவமும் உனக்கு போதவில்லை. செல்வாக்கு ஒன்றுதான் இங்கே முக்கியம். உனக்குத் தெரிந்தவரான ஓர் அதிகாரியிடம் என்னைக் குறித்து நீ ஒரு நல்ல வார்த்தை சொல்ல நிச்சயம் முடியும் என்று இருக்கும்போது சகோதரனாகிய நீ, உன் கடமையைத் தட்டிக் கழிப்பது சரியல்ல.

அவருக்கு நான் மறுத்துக் கூற முடியாது. அதனால், என் விருப்பத்திற்கு மாறாகவே அந்த அதிகாரியிடம் போனேன். அவரிடம் போவதற்கு எனக்கு எந்தவிதமான உரிமையும் இல்லை என்பதை அறிவேன். என்னுடைய சுயமதிப்பையும் விட்டுத்தான் நான் அவரிடம் போகிறேன் என்பதையும் நான் நன்றாக அறிந்தே இருந்தேன். ஆயினும் பார்க்கவேண்டும் என்று கோரி, அனுமதியும் பெற்றேன். எங்களுக்குள் இருந்த பழைய பழக்கத்தையும் அவருக்கு நினைவூட்டினேன். ஆனால், இங்கிலாந்திற்கும் கத்தியவாருக்கும் வித்தியாசம் அதிகம் என்பதை உடனே கண்டேன், ஓர் அதிகாரி ஓய்வு பெற்றிருக்கும்போது ஒரு மனிதராகவும் உத்தியோகத்தில் அமர்ந்திருக்கும்போது வேறு மனிதராகவும் ஆகிவிடுகிறார் என்பதையும் அறிந்தேன். என்னைத் தமக்குத் தெரியும் என்பதை நினைவூட்டியதால் அவருடைய கடுகடுப்பு அதிகமானதாகவே தெரிந்தது. அந்த பழக்கத்தை தவறான வழியில் உபயோகித்துக் கொள்வதற்காக நீர் இங்கே வரவில்லையல்லவா ? என்பதே அவருடைய கடுகடுப்புக்குப் பொருள்போல் தோன்றியது. அது அவர் முகத்திலும் பிரதிபலித்தது. என்றாலும், நான் வந்த காரியத்தை அவரிடம் சொல்ல ஆரம்பித்தேன். அதற்குள் துரை பொறுமையை இழந்துவிட்டார்.

உமது சகோதரர் சூழ்ச்சிக்காரர். அவரைப் பற்றி உம்மிடமிருந்து எதையும் கேட்க நான் விரும்பவில்லை. எனக்கு நேரமும் கிடையாது. ஏதாவது சொல்லிக்கொள்ள வேண்டும் என்று உம் சகோதரர் விரும்பினால் முறைப்படி அதை மனுச் செய்து கொள்ளட்டும் என்றார். இந்தப் பதில் போதுமானது. இப்படிப்பட்ட பதிலே எனக்குச் சரியான தாகவும் இருக்கலாம். ஆனால், சுயநலம் ஒருவனைக் குருடாக்கி விடுகிறது. நான், என் கதையை சொல்லிக்கொண்டே போனேன். துரை எழுந்து இப்பொழுது நீர் போய்விட வேண்டும் என்றார்.

தயவு செய்து நான் சொல்லுவதை முழுவதும் கேளுங்கள் என்றேன். இப்படிச் சொன்னதும் அவருக்குக் கோபம் அதிகமாகி விட்டது. அவர் தமது சேவகனைக் கூப்பிட்டு என்னை வெளியே அனுப்பும் படி சொன்னார். அப்பொழுதும் நான் தயங்கிக் கொண்டே நின்றேன். சேவகன் உள்ளே வந்து, என் தோளில் கைபோட்டு என்னை வெளியே தள்ளிவிட்டான். துரையும் சேவகனும் போய்விட்டனர். நானும் புறப்பட்டேன். கோபமும் ஆத்திரமும் என் மனத்தில் பொங்கிக் கொண்டிருந்தன. உடனே ஒரு குறிப்பு எழுதி, அதை அவருக்கு அனுப்பினேன். அக்குறிப்பில், நீங்கள் என்னை அவமானப்படுத்தி விட்டீர்கள். உங்கள் சேவகனைக் கொண்டு என்னைத் தாக்கிவிட்டீர்கள். இதற்குத் தக்க பரிகாரம் செய்யாவிட்டால், நான் உங்கள் மீது வழக்குத் தொடர நேரும் என்று எழுதியிருந்தேன்.

உடனே அவருடைய சிப்பாயின் மூலம் எனக்கு பின் கண்டபதிலும் கிடைத்தது. நீர் என்னிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டீர். போய்விடுமாறு நான் உம்மிடம் கூறியும், நீர் போகவில்லை. உம்மை வெளியே அனுப்புமாறு என் சேவகனுக்கு உத்தரவிடுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. வெளியே போகுமாறு அவன் சொன்னதற்கும் நீர் போக மறுத்தீர். ஆகவே, உம்மை வெளியே அனுப்புவதற்குப் போதுமான பலாத்காரத்தை அவன் உபயோகிக்க வேண்டியதாயிற்று. உமது விருப்பம் போல் எந்த நடவடிக்கையை வேண்டுமானாலும் நீர் எடுத்துக் கொள்ளலாம.

இந்தப் பதிலை என் சட்டைப் பையில் வைத்துக் கொண்டு இடிந்து போய் வீடு திரும்பினேன். நடந்ததையெல்லாம் என் அண்ணனிடம் சொன்னேன், அவரும் வருத்தப்பட்டார். ஆனால் என்னைத் தேற்றுவது எப்படி என்பது அவருக்குத் தெரியவில்லை. துரைமீது எப்படி வழக்குத் தொடருவது என்பது எனக்குத் தெரியாது போகவே, அவர் தமது வக்கீல் நண்பர்களிடம் இதைக் குறித்துக் கலந்து ஆலோசித்தார் அச் சமயத்தில் ஸர் பிரோஸ்ஷா மேத்தா ராஜ்கோட்டில் இருந்தார். ஏதோ ஒரு வழக்குக்காக அவர்அங்கே வந்திருந்தார். ஆனால், என்னைப் போன்ற ஒரு சின்ன பாரிஸ்டர் அவரைப் போய்ப் பார்க்க எவ்வாறு துணிய முடியும் ? அவரை அங்கே ஒரு வழக்கிற்கு அமர்த்தியிருந்த ஒரு வக்கீலின் மூலம் என் வழக்குச் சம்பந்தமான தஸ்தாவேஜூக்களை அனுப்பி, அவருடைய ஆலோசனையைக் கோரினேன். அவற்றைப் பார்த்துவிட்டு, அவர் பின்வருமாறு கூறினாராம். அநேக வக்கீல்களுக்கும் பாரிஸ்டர்களுக்கும் இது சாதாரணமான அனுபவம் என்று காந்தியிடம் கூறுங்கள். அவர் இங்கே ஏதோ கொஞ்சம் சம்பாதித்துச் சௌக்கியமாக வாழ விரும்பினால், அக் குறிப்பைக் கிழித்தெறித்து விட்டு, அவமானத்தையும் சகித்துக் கொள்ளட்டும். துரை மீது வழக்குத் தொடுத்து அவர் அடையப் போவது எதுவும் இல்லை. அதற்கு மாறாக, தம்மையே நாசப்படுத்திக் கொண்டதாகவும் அது ஆகலாம். வாழ்க்கையைப்பற்றி அவர் இன்னும் நிறையத் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது என்பதையும் அவருக்கு சொல்லுங்கள்.

இந்தப் புத்திமதி, விஷம்போல எனக்குக் கசப்பாகவே இருந்தது என்றாலும் இதை நான் விழுங்கியே ஆக வேண்டியதாயிற்று. அவமானத்தைச் சகித்துக் கொண்டேன். அதனால் பலனையும் அடைந்தேன். இனி ஒருக்காலும் இத்தகைய சங்கடமான நிலைக்கு என்னை உட்படுத்திக்கொள்ள முயலமாட்டேன் என்று எனக்குள் நானே சொல்லிக் கொண்டேன். அதன்பின் இந்த உறுதியிலிருந்து மாறும் குற்றத்தை நான் செய்ததே இல்லை. இந்த அதிர்ச்சி என் வாழ்க்கையின் போக்கையே மாற்றிவிட்டது.


Offline Anu

ஆப்பிரிக்கா செல்ல ஏற்பாடு

அந்த அதிகாரியிடம் நான் போனதே தவறு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவர் காட்டிய பொறுமையின்மையும் அளவு கடந்த கோபமும், என் தப்புக்கு மிகவும் அதிகப் படியானவையே. வெளியில் பிடித்துத் தள்ள வேண்டியதற்கான தப்பை நான் செய்துவிடவில்லை. அவருடைய நேரத்தில், நான் சொன்னதைக் கேட்க ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆகியிராது. ஆனால், நான் பேசியதே அவருக்குப் பொறுக்கவில்லை. போய்விடும்படி அவர் மரியாதையாக எனக்குச் சொல்லியிருக்கலாம். ஆனால், அவருக்கு அளவுக்கு மீறி அதிகார போதை இருந்தது. பொறுமை என்ற குணத்திற்கும் இந்த அதிகாரிக்கும் வெகு தூரம் என்பது எனக்குப் பின்னால் தெரிந்தது. தம்மைப் பார்க்க வருகிறவர்களை அவமதிப்பதே அவருக்குப் பழக்கமாம். அவருடைய விருப்பத்திற்கு மாறாக ஏதேனும் அற்பக் காரியம் நடந்துவிட்டாலும் அவருக்குக் கோபாவேசம் வந்துவிடுமாம்.

இப்பொழுதே என் வேலைகளில் பெரும்பாலும் அவருடைய நீதிமன்றத்தில் நடந்தாக வேண்டியவை. அவரைச் சமாதானப் படுத்துவது என்பதும் என்னால் ஆகாதது. எப்படியாவது அவருடைய தயவைத் தேடிக்கொள்ள வேண்டும் என்ற விருப்பமும் எனக்கு இல்லை. உண்மையில் அவர் மீது வழக்குத் தொடருவதாக நான் ஒரு முறை அவரைப் பயமுறுத்திவிட்ட பிறகு சும்மா இருந்துவிட நான் விரும்பவில்லை.

இதற்கு மத்தியில் நாட்டின் சில்லரை ராஜிய விஷயங்களைக் குறித்தும் கொஞ்சம் தெரிந்து கொண்டேன். கத்தியவார் அநேக சிறு சிறு சமஸ்தானங்களைக் கொண்டபகுதியாகையால், ராஜியவாதிகள் ஏராளமாக முளைத்துக் கொண்டிருந்தனர். சமஸ்தானங்கள் ஒன்றுக்கொன்று சூழ்ச்சிகளில் ஈடுபடுவதும் அதிகாரத்திற்கு அதிகாரிகள். சூழ்ச்சிகளில் இறங்குவதும் அங்கே சர்வ சாதாரணம். சமஸ்தானாதிபதிகளோ, எப்பொழுதுமே பிறரை நம்பியிருக்க வேண்டியவர்களாக இருந்தனர். ஆகவே, இச்சகம் பேசுகிறவர்கள் சொல்லுவனவற்றிற்கெல்லாம் சமஸ்தானா திபதிகள் செவி சாய்த்து வந்தனர். துரையின் சேவகனைக் கூடச் சரிகட்டி வைத்துக் கொள்ள வேண்டியிருந்தது. துரையின் சிரஸ்தாரே துரைக்குக் கண்களாகவும், காதுகளாகவும், மொழிபெயர்த்துச் சொல்லுபவராகவும் இருந்ததால், அவர், தம் எஜமானனைவிட ஒருபடி மேலானவராகவே இருந்தார். சிரஸ்தார் வைத்தது தான் சட்டம். அவருடைய வருமானம் துரையின் வருமானத்திற்கும் அதிகம் என்பது பிரபலமான விஷயம். இது ஒரு வேளை மிகைப்படுத்திக் கூறப்பட்டதாகவும் இருக்கலாம். என்றாலும் அவர், தமது சம்பளத்திற்கு மிஞ்சிய ஆடம்பர வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார்.

இந்தச் சூழ்நிலை, விஷமமானது என்று எனக்குத் தோன்றிற்று. இதனால் பாதிக்கப்படாமல் அங்கே எப்படி இருப்பது என்பதே எனக்குத் தீராப் பிரச்சினையாயிற்று.

நான் முற்றும் மனச் சோர்வை அடைந்துவிட்டேன். இதை என் சகோதரர் தெளிவாக அறிந்து கொண்டார். எனக்கு ஏதாவது ஓர் உத்தியோகம் கிடைத்துவிட்டால், இந்தச் சூழ்ச்சிச் சூழ்நிலையிலிருந்து நான் விடுதலை பெற்றுவிடுவேன் என்பதை நாங்கள் இருவருமே உணர்ந்தோம். ஆனால், சூழ்ச்சியையும் தந்திரத்தையும் கையாளாமல் ஒரு மந்திரி வேலையோ, நீதிபதி உத்தியோகமோ கிடைப்பது முடியாத காரியம். துரையுடன் ஏற்பட்ட சச்சரவு, எனது தொழிலை நடத்திக் கொண்டு போவதற்கே இடையூறாக நின்றது.

அச்சமயம் போர்பந்தர், பிரிட்டிஷ் அரசாங்கம் நியமித்த அதிகாரி ஒருவரின் நிர்வாகத்தில் இருந்தது. மன்னருக்கு அதிக அதிகாரங்கள் கிடைக்கும்படி செய்வது சம்பந்தமாக அங்கே எனக்குக் கொஞ்சம் வேலை இருந்தது. விவசாயிகளிடமிருந்து நிலத் தீர்வை அதிகப்படியாக வசூலிக்கப்பட்டு வந்தது சம்பந்தமாகவும் நான் அந்த நிர்வாக அதிகாரியைப் பார்க்க வேண்டியிருந்தது. அந்த அதிகாரி ஓர் இந்தியராக இருந்த போதிலும் அகம்பாவத்தில் துரையையும் மிஞ்சியவராக இருக்கக் கண்டேன். அவர் திறமைசாலியே. ஆனால் அவருடைய திறமையினால் விவசாயிகள் எந்த நன்மையையும் அடைந்துவிட்டதாகத் தெரியவில்லை. ராணா மேற்கொண்டு சில அதிகாரங்களைப் பெறும்படி செய்வதில் நான் வெற்றி பெற்றேன். ஆனால் விவசாயிகளுக்கோ எவ்விதமான கஷ்ட நிவாரணமும் ஏற்படவில்லை. அவர்கள் விஷயம் இன்னது என்பதைக்கூட அந்த அதிகாரி சரிவரக் கவனிக்கவில்லை என்றே எனக்குத் தோன்றியது.

எனவே, இந்த வேலையிலும் நான் ஏமாற்றத்தையே அடைந்தேன் என்று சொல்ல வேண்டும். என் கட்சிக்காரர்களுக்கு நியாயம் வழங்கப்படவில்லை. என்று எண்ணினேன். ஆனால் அவர்கள் நியாயத்தை அடையும்படி செய்வதற்கான சக்தி என்னிடம் இல்லை. நான் மேற்கொண்டு ஏதாவது செய்வதென்றால் ராஜிய ஏஜெண்டிடமோ, கவர்னரிடமோ முறையிட்டுக்கொள்ளலாம். ஆனால், அவர்களோ, ஙஇதில் நாங்கள் தலையிடுவதற்கில்லை என்று என் அப்பீலை நிராகரித்து விடுவார்கள். இத்தகைய முடிவுகள் சம்பந்தமாக அனுசரிக்க விதிமுறை ஏதாவது இருந்தால், அதைக் கொண்டாவது ஏதாவது செய்ய பார்க்கலாம். ஆனால், இங்கோ, துரையின் இஷ்டமே சட்டம் என்று இருக்கிறது. இதனால் எனக்கு உண்டான ஆத்திரத்தைச் சொல்லி முடியாது.

இதற்கு மத்தியில் போர்பந்தரைச் சேர்ந்த ஒரு மேமன் வியாபாரக் கம்பெனியார், எனக்கு அறிவித்திருந்ததாவது, தென்னாப்பிரிக்காவில் எங்களுக்கு வியாபாரம் இருக்கிறது. எங்களுடையது பெரிய வியாபாரக் கம்பெனி. எங்களுடைய பெரிய வழக்கு ஒன்று, அங்கே கோர்ட்டில் நடக்கிறது. 4,, பவுன் வர வேண்டும் என்பது எங்கள் தாவா இந்த வழக்கு நீண்ட காலமாக நடந்து கொண்டு வருகிறத. பெரிய வக்கீல்களையும் பாரிஸ்டர்களையும் அமர்த்தியிருக்கிறோம். உங்கள் சகோதரரை அங்கே அனுப்புவீர்களானால் எங்களுக்கும் உதவியாக இருக்கும், அவருக்கும் உதவியாக இருக்கும். வக்கீல்களுக்கு விஷயங்களை எடுத்துக்கூற, எங்களைவிட அவரால் நன்கு முடியும். அதோடு, உலகத்தில் புதியதொரு பகுதியைப் பார்க்கும் வாய்ப்பு ஏற்படுவதோடு புதிதாக பலருடன் பழகும் சந்தர்ப்பமும் அவருக்கு கிடைக்கும்.

இந்த யோசனையைக் குறித்து, என் சகோதரர் என்னுடன் விவாதித்தார். வக்கீல்களுக்கு நான் விஷயங்களை எடுத்துச் சொல்ல மாத்திரம் வேண்டியிருக்குமா, கோர்ட்டிலும் ஆஜராக வேண்டியிருக்குமா என்பது எனக்குத் தெளிவாகவில்லை.மேலே சொன்ன தாதா அப்துல்லா கம்பெனியின் ஒரு கூட்டாளியான காலஞ்சென்ற சேத் அப்துல் கரீம் ஜவேரியை, என் சகோதரர் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். இந்த வேலை கஷ்டமானதாக இராது என்று சேத் எனக்கு உறுதி கூறினார். பெரிய வெள்ளைக்காரர்களெல்லாம் எங்கள் நண்பர்கள். அவர்களுடன் நீங்கள் பழக்கம் செய்து கொள்ளலாம். எங்கள் கடைக்கும் நீங்கள் பயன்படுவீர்கள். எங்கள் கடிதப் போக்குவரத்தெல்லாம் பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான். அதிலும் நீங்கள் எங்களுக்கு உதவி செய்யலாம். நீங்கள் எங்கள் விருந்தினரே. ஆகையால், உங்களுக்கு எந்தவிதமான செலவும் இராது என்றார்.

என் சேவை உங்களுக்கு எவ்வளவு காலத்திற்குத் தேவை நீங்கள் அதற்கு என்ன கொடுப்பீர்கள் ? என்று கேட்டேன். ஓர் ஆண்டுக்கு மேல் தேவைப்படாது. உங்களுக்குப் போகவர முதல் வகுப்புக் கப்பல் கட்டணமும், மற்ற எல்லாச் செலவும் போக 105 பவுனும் தருகிறோம் என்றார். நான் அங்கே போவது, பாரிஸ்டர் என்ற முறையிலேயே அன்று அந்தக் கம்பெனியின் ஊழியன் என்ற வகையிலேயே போகிறேன். ஆனால், எப்படியாவது இந்தியாவிலிருந்து போய் விட வேண்டும் என்று விரும்பினேன். அதோடு புதிய நாட்டைப் பார்க்கலாம். புதிய அனுபவங்களைப் பெறலாம் என்ற ஆசையும் இருந்தது. மேலும் 105 பவுனையும் என் சகோதரருக்கு அனுப்பி, குடும்பச் செலவுக்கு உதவி செய்யலாம். எந்தவிதமான பேரமும் பேசாமல் ஒப்புக் கொண்டு, தென்னாப்பிரிக்காவுக்குப் புறப்படுவதற்குத் தயாரானேன்.


Offline Anu

நேட்டால் சேர்ந்தேன்

இங்கிலாந்திற்குப் புறப்பட்டபோது பிரிவாற்றாமையால் என்ன மனக்கஷ்டம் இருந்ததோ, அத்தகைய உணர்ச்சியெல்லாம் இப்பொழுது தென்னாப்பிரிக்காவுக்குப் புறப்பட்ட போது இல்லை என் தாயாரோ காலமாகிவிட்டார். எனக்குக் கொஞ்சம் உலக அனுபவமும் ஏற்பட்டுவிட்டது. ராஜ் கோட்டிலிருந்து பம்பாய்க்குப் போவதும் இப்பொழுது மிகச் சாதாரணமாகவே இருந்தது.

இத்தடவை, மனைவியை விட்டுப் பிரிந்து போகிறோமே என்பதைப்பற்றி மாத்திரமே எனக்கு மனக்கஷ்டம் இருந்தது. நான் இங்கிலாந்திலிருந்து திரும்பிய பின்னர். எங்களுக்கு மற்றும் ஒரு குழந்தை பிறந்தது. எங்கள் இருவருக்கும் இடையே இருந்த அன்பு காமக் கலப்பு இல்லாதது என்று இன்னும் சொல்லிவிடுவதற்கு இல்லை. என்றாலும், அது நாளுக்கு நாள் தூய்மையாகி வந்தது. ஐரோப்பாவிலிருந்து நான் திரும்பி வந்த பிறகு, நாங்கள் இருவரும் சொற்பகாலமே சேர்ந்து வாழ்ந்திருக்கிறோம். அவ்வளவு அதிக சிரத்தையுடன் இல்லை என்றாலும் நான் அப்பொழுது அவளுக்கு ஆசிரியன் ஆகியிருந்தேன். சில சீர்திருத்தங்களை அடைவதற்கும் அவளுக்கு உதவி செய்து வந்தேன். அந்த சீர்திருத்தங்களைத் தொடர்ந்து அடைவதென்றால், நாங்கள் இருவரும் அதிகமாகக் சேர்ந்து வாழ்ந்து வரவேண்டியது அவசியம் என்பதை இருவருமே உணர்ந்தோம் ஆனால், தென்னாப்பிரிக்கா செல்வதில் ஏற்பட்ட கவர்ச்சி, பிரிந்து வாழ்வதையும் சகிக்கக் கூடியதாக்கியது. அவளுக்கு ஆறுதலாக இருப்பதற்காக நாம் எப்படியும் ஓர் ஆண்டில் மீண்டும் சந்திப்போம் என்று கூறிவிட்டுப் பம்பாய் செல்ல ராஜ;கோட்டிலிருந்து புறப்பட்டேன்.

தாதா அப்துல்லா கம்பெனியின் காரியஸ்தர் மூலமாகவே கப்பல் டிக்கெட் கிடைக்க வேண்டியிருந்தது. ஆனால், கப்பலிலோ இடமில்லை. அப்பொழுது நான் கப்பல் ஏறவில்லையென்றால் பம்பாயிலேயே தங்கிவிட வேண்டிவரும். கப்பலில் முதல் வகுப்பில் இடம் பெறுவதற்காக எங்களால் ஆன முயற்சிகளையெல்லாம் செய்து பார்த்துவிட்டோம். பயனில்லை. மூன்றாம் வகுப்பில் போக நீங்கள் தயாராக இருந்தாலன்றி வேறு வழியில்லை. உங்கள் சாப்பாட்டுக்கு வேண்டுமானால் முதல் வகுப்பில் ஏற்பாடு செய்து விடலாம் என்றார், அக்காரியஸ்தர். நான் முதல் வகுப்பிலேயே பிரயாணம் செய்துவந்த காலம் அது. ஒரு பாரிஸ்டர் , மூன்றாம் வகுப்பில் எவ்விதம் பிரயாணம் செய்ய முடியும் ? ஆகவே, அவர் கூறிய யோசனையை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டேன். முதல் வகுப்பில் இடம் கிடைக்கவில்லை என்பதை நான் நம்பவில்லை. காரியஸ்தரின் நேர்மையில் சந்தேகம் கொண்டேன். அவருடைய சம்மதத்தின் பேரில் கப்பலுக்கே போனேன். அதன் பிரதம அதிகாரியையும் கண்டு பேசினேன். அவர் உள்ளதைச் சொல்லிவிட்டார். வழக்கமாக எங்கள் கப்பலில் இப்படி இட நெருக்கடி ஏற்படுவதில்லை. ஆனால், மொஸாம்பிக் கவர்னர் ஜெனரல் அக்கப்பலில் வருகிறார். ஆகையால், இடத்தையெல்லாம் அமர்த்திக் கொண்டு விட்டனர் என்றார்.

என்னையும் எப்படியாவது உள்ளே நுழைந்துவிட உங்களால் முடியாதா? என்று கேட்டேன். அவர் உச்சியிலிருந்து உள்ளங்கால்கரை என்னை ஒரு முறை பார்த்துவிட்டு புன்னகை புரிந்;தார். பிறகு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. என் அறையில் அதிகப்படியாக ஓர் இடம் இருக்கிறது. சாதாரணமாக அதைப் பிரயாணிகளுக்குக் கொடுப்பதில்லை. ஆனால், அதை உங்களுக்கு கொடுக்க நான் தயாராக இருக்கிறேன் என்றார், கப்பலின் பிரதம அதிகாரி. அவருக்கு நன்றி கூறிவிட்டு, அதற்கு வேண்டிய டிக்கெட்டைக் காரியஸ்தரைக் கொண்டு வாங்கச் செய்தேன். ஆகவே, தென்னாப்ரிக்காவில் என்னுடைய அதிர்ஷ்டத்தைச் சோதிப்பதென்ற முழு உற்சாகத்துடன் 1893, ஏப்ரலில் புறப்பட்டேன்.

எங்கள் கப்பல் அடைந்த முதல் துறைமுகம் லாமு என்பது. சுமார் பதின்மூன்று நாட்களில் அங்கே போய்ச் சேர்ந்தோம். இதற்குள் கப்பல் காப்டனும் நானும் சிறந்த நண்பர்கள் ஆகிவிட்டோம். சதுரங்கம் ஆடுவதில் அவருக்கு அதிகப் பிரியம். ஆனால் , அந்த ஆட்டம் அவருக்கு புதியது. ஆகையால், தம்மிலும் அதிகக் கற்றுக் குட்டியாக இருப்பவரையே தம்முடன் விளையாடுவதற்குச் சகாவாக அவர் விரும்பினார். எனவே சதுரங்கம் ஆட என்னை அழைத்தார். அவ்விளையாட்டைக் குறித்து எவ்வளவோ கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால், நான் விளையாடியது மாத்திரம் இல்லை. அதை விளையாடினால் அறிவுக்கு அதிகப் பயிற்சி உண்டு என்று விளையாடத் தெரிந்தவர்கள் சொல்லுவார்கள். அதில் எனக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க காப்டன் முன் வந்தார். அவருக்கு எல்லையற்ற பொறுமை உண்டு. ஆகையால், நான் நல்ல மாணவன் எனக்கண்டார். ஒவ்வொரு சமயமும் தோற்பவன் நானே. இது எனக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதில் அவருக்கு இன்னும் அதிக ஆர்வத்தை உண்டாக்கியது. சதுரங்கம் விளையாடுவது, எனக்கும் பிடித்திருந்தது. ஆனால், அவ்விருப்பத்தை அக்கப்பலோடு விட்டுவிட்டேன். அந்த ஆட்டத்தைப்பற்றி எனக்கு இருந்த ஞானம், காய்களை நகர்த்தி வைப்பதற்கு மேலே போனதே இல்லை.

லாமுவில் கப்பல் மூன்று, நான்கு மணிநேரம் நின்றது. துறைமுகத்தைப் பார்ப்பதற்காக இறங்கினேன். காப்டனும் இறங்கிப் போனார். ஆனால், அத்துறைமுகம் அபாயகரமானது என்றும், முன்னாலேயே திரும்பி வந்துவிட வேண்டும் என்றும் அவர் எனக்கு எச்சரிக்கை செய்திருந்தார். லாமு மிகச் சிறிய ஊர், துறைமுகக் காரியாலயததிற்குச் சென்றேன். அங்கே இந்திய குமாஸ்தர்கள் இருந்ததைக் கண்டு மகிழ்ச்சியடைந்தேன். அவர்களுடன் பேசினேன். ஆப்பிரிக்காக்காரர்களையும் அங்கே பார்த்தேன். அவர்களது வாழ்க்கை முறையை அறிந்து கொள்ளுவதில் எனக்கு அதிகச் சிரத்தை உண்டாயிற்று, அதை அறிந்து கொள்ளவும் முயன்றேன். இதில் கொஞ்சம் நேரமாயிற்று.

அக்கப்பலின் மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளில் சிலருடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டிருந்தது. தரைக்குப் போய்ச் சமைத்து அமைதியாகச் சாப்பிட்டுவிட்டு வரவேண்டும் என்பதற்காக அவர்களும் இறங்கியிருந்தனர். அவர்கள் கப்பலுக்குத் திரும்பிவிடத் தயாராக இருந்ததைக் கண்டது எல்லோரும் ஒரே படகில் ஏறிப் புறப்பட்டோம். துறைமுகத்தில் அலை, பலமாக இருந்தது. படகிலோ இருக்க வேண்டியதற்கு அதிகமான பளு இருந்தது. அலைகள் வேகமாக அடித்துக் கொண்டிருந்ததால், கப்பலின் ஏணிக்கு அருகில் படகை நிறுத்துவது என்பது முடியாததாகிவிட்டது. படகு ஏணியைத் தொடும், உடனே ஒரு பலமான அலை வந்து, படகை தூரத்திற்குக் கொண்டு போய்விடும். கப்பல் புறப்படுவதற்கு, முதல் சங்கும் ஊதியாயிற்று. நான் அதிகச் சஞ்சலம் அடைந்து விட்டேன் காப்டன் எங்களுடைய தவிப்பையெல்லாம், மேல்தளத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார். கப்பல், மேற்கொண்டும், ஐந்து நிமிட நேரம் காத்திருக்க உத்தரவிட்டார். கப்பலுக்கு அருகே மற்றொரு படகு இருந்தது. அதை எனக்காக ஒரு நண்பர், பத்து ரூபாய்க்கு அமர்த்தினார். அதிகப் பளு ஏற்றப்பட்டிருந்த படகிலிருந்து என்னை இப்படகு ஏற்றிக்கொண்டது. ஏணியையோ இதற்குள் உயர்த்தி விட்டார்கள். ஆகையால் என்னைக் கயிறு கொண்டு மேலே தூக்கினார்கள். உடனே கப்பலும் கிளம்பிவிட்டது. மற்ற பிரயாணிகள் ஏற முடியவில்லை. காப்டன் செய்த எச்சரிக்கை, அப்பொழுதுதான் எனக்குப் புரிந்தது.

லாமுக்கு அடுத்த துறைமுகம், மொம்பாஸா. அதன் பிறகு ஜான்ஸிபார் போய்ச் சேர்ந்தோம். அங்கே அதிக காலம் - எட்டு அல்லது பத்து நாள் வரை - தங்கினோம். பிறகு மற்றொரு கப்பலில் ஏறினோம். கப்பல் காப்டன் என்னிடம் அதிகப்பிரியம் கொண்டு விட்டார், ஆனால், அந்தப் பிரியம் விபரீதமான முடிவில் கொண்டு போய்விட்டது. உல்லாசமாகப் போய் வரலாம் என்று என்னையும் ஓர் ஆங்கில நண்பரையும் அவர் அழைத்தார். அவருடைய படகிலேயே நாங்கள் கரைக்குப் போனோம். உல்லாசமாகப் போய் வரலாம் என்றால் இன்னது என்பதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இத்தகைய விஷயங்களில் நான் எவ்வளவு அனுபவம் இல்லாதவன் என்பதும் காப்டனுக்குத் தெரியாது. ஒரு தரகன் எங்களை நீக்கிரோப் பெண்களின் வீட்டிற்கு அழைத்து சென்றான். அங்கே எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒர் அறையைக் காட்டி, உள்ளே போகச் சொன்னான். நான் உள்ளே போனதும் வெட்கத்தால் வாய் பேசாமல் அப்படியே நின்றேன். என்னைப் பற்றி அப்பெண் என்ன நினைத்திருப்பாள் என்பது ஆண்டவனுக்கே தெரியும். காப்டன் அழைத்ததும் நான் போனபடியே வெளியே வந்துவிட்டேன். ஒரு பாவமும் செய்யாத என் நிலையை அவர் தெரிந்து கொண்டார். எனக்கு முதலில் அவமானமாக இருந்தது. ஆனால் அக்காரியத்தை நினைப்பதும் எனக்குப் பயமாக இருந்ததால் அவமான உணர்ச்சி மறைந்தது. அப்பெண்ணைப் பார்த்ததும் என் புத்தி தடுமாறிவிடாமல் இருந்ததைக் குறித்து கடவுளுக்கு நன்றி செலுத்தினேன். எனக்கு இருந்த பலவீனத்திற்காக என்னை நானே வெறுத்தேன். அறைக்குள் போக மறுத்துவிடும் துணிச்சல் எனக்கு இல்லாது போனதைக் குறித்து எனக்கு நானே பரிதாப்பட்டுக் கொண்டேன்.

என்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட இது போன்ற சோதனைகளில் இது மூன்றாவதாகும். இளைஞர்களில் பலர் ஆரம்பத்தில் ஒரு பாவமும் அறியாதவர்களாக இருந்தும், அவமானம் என்று தவறாக ஏற்பட்டுவிடும் உணர்ச்சியின் காரணமாகப் பாவத்திற்கு இழுக்கப்பட்டு விடுகின்றனர். இதில் தவறிவிடாமல் வெளிவந்து விட்டதற்கு நான் பெருமைப்பட்டுக்கொள்ளக் காரணம் எதுவுமே இல்லை. அறைக்குள் போக நான் மறுத்திருந்தால் அது எனக்குப் பெருமையாக இருந்திருக்கும் என்னைக் காத்தருளியதற்கு கருணைக் கடலான ஆண்டவனுக்கே நான் நன்றி செலுத்த வேண்டும். இச்சம்பவம் கடவுள் மீதுள்ள என் நம்பிக்கையை அதிகமாக்கியது. அவமானம் என்ற தவறான உணர்ச்சியை ஓரளவுக்கு விட்டொழிக்கவும் இச் சம்பவம் எனக்குப் போதித்தது.

இத்துறைமுகத்தில் நாங்கள் ஒரு வாரம் தங்க வேண்டியிருந்ததால் பட்டணத்தில் வசிக்க ஓர் அறையை அமர்த்திக் கொண்டேன். சுற்றுப்புறங்களையெல்லாம் நன்றாகச் சுற்றிப் பார்த்தேன். ஜான்ஸி பார் செடி கொடிகள் நிறைந்து, இயற்கை வளத்தில், மலையாளத்தைப் போல் இருந்தது எனலாம். பிரமாண்டமான மரங்களையும், மிகப் பெரிய பழங்களையும் பார்த்துப் பிரமித்துப் போனேன். எங்கள் கப்பல் நின்ற அடுத்த துறைமுகம் மொஸாம்பிக். பிறகு மே மாதக் கடைசியில் நேட்டால் போய்ச் சேர்ந்தோம்.