Author Topic: சற்றே தொலைதல் நன்று  (Read 369 times)

Offline Guest

சற்றே தொலைதல் நன்று
« on: September 23, 2018, 02:06:49 AM »
சற்றே தொலைதல் நன்று
மற்றோர் தேடிப்பின்
கண்டறியட்டுமாய்
உன் இருப்பின் நிஜம்....
.
பேசிப்பேசி தீர்ந்துவிடும்
உன் பிரபஞ்சப்பிறவி - கொஞ்சம்
பேசாமலிருத்தலழகு
கெஞ்சும் நிலை காண்பாய்
உன்பால் ஒரு துளி வார்த்தைக்காய்...
.
உன் இருப்பின் அடையாளம்
உடல் மட்டுமாய் இருத்தலும்
உன் செயல்களின் கூற்று
நிஜத்தை தெரிவித்தலுமாய்
சற்றே தொலைதல் நன்று...
.
மூச்சுக்காற்றில் வெளியேறும்
உஷ்ணம் உன் சினத்தின்
அடையாளமெனில் உன்
பார்வைகளில் வீசும்
நெருப்பின் வெப்பம் அநியாயத்தை
விழுங்குவதாய் அமையட்டும்...

இயலாது போனதாய் உன்னில்
எதுவெல்லாம் நிலைகொண்டுள்ளதோ
அவைகள் இயன்றவருக்காய்
பகிர்ந்தளித்தல் நலம்
நீ சிறு சமூகத்தவனாவாய்...
.
ஒரு கவளம் சோறு வேண்டும்
ஒரு வேளை பசியாற்ற - ஒற்றை
பருக்கையில் உயிர்வாழும்
காக்கைகளன் அவ்வேளை போல்
சிக்கனம் கொள்வதாய்
சற்றே தொலைதல் நன்று...
.
காற்றை கிழித்துச்செல்லும்
காகித விமானங்கள் போலல்ல
மயிற்கூச்செறியும் ஒற்றை
பனித்துளியின் தீண்டல்போல்
நீ மற்றவரை உணர்த்துபவனாய்
இருத்தல் நலம்....
.
காலச்சுவடுகளில் உன்
பாதச்சுவடுகளின் பதியமிட்டு
உன் இருப்பை காலாகாலம்
உறுதிப்படுத்தி
சற்றே தொலைதல் நன்று...
.
என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ