Author Topic: திருமூலர் - திருமந்திரம்  (Read 43020 times)

Offline Anu

237 பதிகங்கள், 3000 பாடல்கள்:பத்தாம் திருமுறைம்

பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் ::
ஒன்று முதல் ஒன்பது தந்திரங்களில் முதல் தந்திரத்தின் 27 பதிகங்களின் விபரங்கள்.:

விநாயகர் வணக்கம் ..................................... பாடல்கள்: 01
பாயிரம் : பதிக வரலாறு: .............................பாடல்கள்: 39 ... 40
முதல் தந்திரம் - 27 பதிகங்கள்:  .........................................(40+293=333)


பதிகம்: 1. சிவபரத்துவம்.................:பதிக பாடல்கள்: 56.....96
பதிகம்: 2. வேதச் சிறப்பு....................:பதிக பாடல்கள் 06...102
பதிகம்: 3. ஆகமச் சிறப்பு:...................பதிக பாடல்கள் 10...112
பதிகம்: 4. உபதேசம்............................:பதிக பாடல்கள் 30....142
பதிகம்: 5. யாக்கை நிலையாமை....:பதிக பாடல்கள்: 25...167
பதிகம்: 6. செல்வம் நிலையாமை..:பதிக பாடல்கள்: 09....176
பதிகம்: 7. இளமை நிலையாமை...: பதிக பாடல்கள்: 10....186
பதிகம்: 8. உயிர் நிலையாமை....: பதிக பாடல்கள்: 10........196
பதிகம்: 9. கொல்லாமை..............: பதிக பாடல்கள்: 02........198
பதிகம்: 10. புலால் மறுத்தல்.......: பதிக பாடல்கள்: 01........199
பதிகம்: 11. பிறன்மனை நயவாமை...: பதிக பாடல்கள்:03..202
பதிகம்: 12. மகளிர் இழிவு...............: பதிக பாடல்கள்: 06........208
பதிகம்: 13. நல்குரவு...........................: பதிக பாடல்கள்: 05....213
பதிகம்: 14. அக்கினி காரியம்............: பதிக பாடல்கள்: 10....223
பதிகம்: 15. அந்தணர் ஒழுக்கம்........: பதிக பாடல்கள்: 14....237
பதிகம்: 16. அரசாட்சி முறை.............: பதிக பாடல்கள்: 10....247
பதிகம்: 17. வானச் சிறப்பு..................: பதிக பாடல்கள்: 02.....249
பதிகம்: 18. தானச் சிறப்பு....................: பதிக பாடல்கள்: 01....250
பதிகம்: 19. அறஞ்செய்வான் திறம்...: பதிக பாடல்கள்: 09...259
பதிகம்: 20. அறஞ்செயான் திறம்.......: பதிக பாடல்கள்: 10....269
பதிகம்: 21.அன்புடைமை....................: பதிக பாடல்கள்: 10....279
பதிகம்: 22.அன்பு செய்வாரை அறிவன் சிவன்:பாடல்கள்: 10-289
பதிகம்: 23. கல்வி........................: பதிக பாடல்கள்: 10...............299
பதிகம்: 24. கேள்வி கேட்டமைதல்....:பதிக பாடல்கள்:10....309
பதிகம்: 25. கல்லாமை.........................: பதிகபாடல்கள்: 10.....319
பதிகம்: 26. நடுவு நிலைமை...............: பதிகபாடல்கள்: 03....322
பதிகம்: 27. கள்ளுண்ணாமை............: பதிகபாடல்கள்: 11 ...333


*****************************************************************


விநாயகர் வணக்கம் ..................................... பாடல்கள்: 01


விநாயகர் வணக்கம்


பாடல் எண் : 1
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.


விளக்கவுரை :  ஐந்து கைகளையும், யானை முகத்தையும், சந்திரனது இளமை நிலையாகிய பிறைபோலும் தந்தத்தையும் உடையவரும், சிவபிரானுக்குப் புதல்வரும், ஞானத்தின் முடி நிலையாய் உள்ளவரும் ஆகிய விநாயகப் பெருமானை உள்ளத்தில் வைத்து, அவரது திருவடிகளைத் துதிக்கின்றேன்.
 
குறிப்புரை :  `இந்து` என்பது வடசொல்லாதலின் இன்பெறாது என்று, `இந்து விளம்பிறை` எனப்பாடம் ஓதுவாரும் உளர். `நந்தி` என்பது சிவபெருமானுக்கே பெயராதல் அறிக. திருமூலர் தமது நூலை ``ஒன்றவன்முன்`` எனத் தொடங்கினார் என்பது சேக்கிழார் திருமொழி யாதலின், இது, பிற்காலத்தில் இந்நூலை ஓதுவோர் தாம் முதற்கண் ஓதுதற்குச் செய்து கொண்டது என்க. திருமுறைகளுள் ஒன்றிலும் முதற்கண் விநாயகர் காப்பு இல்லாமையும், சாத்திரங்களிலும் உந்தி, களிறு முதலிய சிலவற்றில் இல்லாமையும் நோக்கத் தக்கன. ``ஒன்றவன்றான் என எடுத்து முன்னிய அப்பொருள் மாலைத் தமிழ் மூவாயிரம் சாத்தி`` என்பதே சேக்கிழார் திருமொழியாகலின், இந் நூலின் தொடக்கப்பாடல் ``ஒன்றவன்றானே`` என்னும் பாடலே என்பது இனிது விளங்கும்.

பகுதி -I. பத்தாம் திருமுறை

திருமூலர்

பத்தாந்திருமுறை : திருமந்திரம்

திருமூலதேவநாயனாரின் திருமந்திரமாலை, திருமந்திரம் என்ற பெயரால் வழங்கப்படும். இந்நூல் சைவத் திருமுறைகளுள் பத்தாவதாக இடம் பெற்றுள்ளது. தமிழ் மொழியில் பெருஞ்சிறப்புக்கு உரிய முதன்மையான நூல்களைத் தொகுத்து உரைக்கும் ஒரு பழம்பாடல் உள்ளது. அதில் திருமந்திரமும் இணைக்கப் பெற்றிருப்பது இதன் சிறப்பிற்குச் சான்று கூறி நிற்கிறது. சைவ ஆகமங்களின் சாரமாகத் திகழும் இந்நூலை, தமிழில் எழுந்த சைவசமயஞ் சார்ந்த ஒரு கலைக்களஞ்சியம் என்றே கூறலாம்.

திருமந்திரம் ஒன்பது உட்பிரிவுகளைக் கொண்டது. ஒவ்வொரு பிரிவும் ஒரு ‘தந்திரம்’ எனக் குறிக்கப்பட்டுள்ளது. இந்த ஒன்பது தந்திரங்களும், ஆகமங்கள் ஒன்பதின் சாரமாக அமைந்துள்ளன. ஆகமங்கள் 28, அவற்றுள் ஒன்பதின் சாரமாக 9 தந்திரங்கள் அமைந்துள்ளன. அந்த ஆகமங்கள் வருமாறு: காரணம், காமிகம், வீரம், சிந்தம், வாதுளம், வியாமளம், காலோத்தரம், சுப்பிரம், மகுடம் என்பன.

தந்திரம் ஒன்பது சார்வு மூவாயிரம்
சுந்தரன் ஆகமச் சொன்மொழிந் தானே
என்ற சிறப்புப் பாயிரப்பகுதி இதனை உறுதி செய்கிறது. இந்நூல் மூவாயிரம் பாடல்களைக் கொண்டுள்ளது.

திருமூலர் – வரலாறு:

திருமூலர் வரலாறு குறித்தும் பாயிரப் பகுதியில் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. திருமூலர் பெரியபுராண நாயன்மார் வரிசையிலும் இடம் பெற்றுள்ளார். இவர் வரலாற்றைப் பெரிய புராணமும் எடுத்துரைக்கிறது. வடநாட்டிலிருந்து தென்னாடு வந்த முனிவர் ஒருவர் மாடு மேய்க்கும் ஓர் இளைஞன் உடலில் கூடுவிட்டுக் கூடுபாய்ந்து மூலன் எனப் பெயர் பெற்றார். திருவாவடு துறையில் யோகத்தில் பலகாலம் இருந்து இத்திரு மந்திரமாலையை  உலகுக்கு வழங்கினார்.  திருமூலரே,

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே..(திருமந்திரம் : 81)  என்று குறிப்பிட்டிருப்பது கருதத்தக்கது. தமிழில் ஆகமங்களின் சாரங்களைத் தொகுத்தளிப்பதே அவர் வருகையின் நோக்கம் என்பது உறுதியாகிறது.

யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.... (திருமந்திரம் : 147)  என்ற அரிய தொடர் இப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

விநாயகர் காப்பு

திருமந்திரத்தின் முதல் தந்திரம் முதல் ஒன்பதாவது தந்திரம் வரையிலான ஒவ்வொரு தந்திரமும் ஒவ்வொரு சமய உண்மையை நுட்பமுற எடுத்துரைப் பனவாக அமைந்துள்ளன. முன்னதாக அமைந்துள்ள பாயிரத்தில் கடவுள் வாழ்த்து, வேத ஆகமங்களின் சிறப்பு, திருமூலர் வரலாறு முதலியன விரித்துரைக்கப் பெற்றுள்ளன. இந்நூல் விநாயகர் காப்பு ஒன்றுடன் தொடங்குகின்றது.

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்துஅடி போற்று கின்றேனே.....(திருமந்திரம் விநாயகர் காப்பு)

(இந்து = சந்திரன், எயிற்றன் = கொம்பினையுடையவன், நந்தி மகன் = விநாயகன், ஞானக்கொழுந்து = அறிவே வடிவானவன்) என்பது திருமந்திரத்தின் காப்புச் செய்யுள். கடவுள் வாழ்த்துப் பகுதியில் சிவபெருமானின் பெருமை பேசும் 50 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருள்அறி வார்இல்லை
சேயினும் நல்லன் அணியன்நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே.......(திருமந்திரம் :

(வெய்யன் = வெப்பம் மிக்கவன், தண்ணியன் = குளிர்ச்சியானவன். அணியன் =அடியவர்க்கு நெருக்கமானவன்) சிவனின் மேலான கருணைத் திறத்தைச் சுட்டிக்காட்டுகிறது. எனினும் மக்கள் அவன் கருணையை முழுவதும் உணர்ந்து வழிபட்டு வாழ்வு பெற்றிலர் என்ற திருமூலரின் மன வருத்தம் இப்பாடலில் பதிவாகியுள்ளது.
« Last Edit: May 28, 2012, 10:45:20 AM by Anu »


Offline Anu

பகுதி-II பத்தாம் திருமுறை

திருமூலர்
வேத ஆகமச் சிறப்பு:

வேதம், ஆகமம் என்ற இரண்டு நூல்களைப் பற்றியும் திருமூலர் குறிப்பிடுகிறார். இரண்டுமே இறைவனிடமிருந்து வந்தவை: வேதம் பொது; ஆகமம் சிறப்பு என்பதும் அவர் கருத்து. ஆகமம் என்ற சொல்லுக்கு ‘வந்தது’ என்பது பொருள். இச்சொல், சிவபெருமானிடமிருந்து இந்நூல்கள் வந்தன என்பதைக் குறிக்கிறது. ஆகமம் என்ற சொல்லை மற்றொரு விதமாகவும் பிரித்துப் பொருள் காண்கிறார்கள். ஆ என்பது பாசம்; க என்பது பசு; ம என்பது பதி. எனவே இம்மூன்றையும் ஆகமம் கூறுகிறது.


திருமந்திரம்; தந்திரங்களும் உள்ளீட்டுச் செய்திகளும்:

தந்திரங்களின் உள்ளீட்டுச் செய்திகள்
தந்திர வரிசை
உள்ளீடு
ஒன்று
உபதேசம்,  யாக்கை நிலையாமை, கொல்லாமை
கல்வி, கள்ளுண்ணாமை
இரண்டு
சிவனின் எட்டுவகை வீரச் செயல்கள்
ஐந்தொழில்கள்; சிவனையும், குருவையும்
நிந்திப்பதால் வரும் துன்பங்கள்
மூன்று
யோகக் கலைகள், அஷ்டமாசித்திகள்
நான்கு
திரு அம்பலச் சக்கரம், நவகுண்டம், வயிரவ மந்திரம்
ஐந்து
இறைவனை அடைவதற்கு உரிய நூல் நெறிகள்:
சரியை, கிரியை, யோகம், ஞானம், சத்தி நிபாதம்
ஆறு
குருதரிசனப் பயன், திருநீற்றின் சிறப்பு, துறவு நிலை
ஏழு
ஆறு ஆதாரங்கள், சிவபூசை, குருபூசை, சமாதி அமைத்து வழிபடும் முறை, உயிர் இலக்கணம்
எட்டு
பக்திநிலை, முக்திநிலை
ஒன்பது
நுண்பொருள் விளக்கம் (சூனியசம்பாஷணை)

திருமந்திரம் - அரிய தொடர்கள்:


திருமந்திரம் சைவ சமயத்திற்கு மட்டும் உரிய ஒரு சமய நூலாக அமையாது, உலக மக்களுக்கெல்லாம் அறத்தையும், ஆன்ம ஈடேற்றத்தையும், மருத்துவக் கூறுகளையும் எடுத்துரைக்கும் பொது நூலாக அமைந்துள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள அரிய பாடல் பகுதிகள் திருமந்திரத்தின் சிறப்புக்குக் கட்டியம் கூறி நிற்பன.

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்.... பாடல் -2104

சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை... பாடல்: 5

ஆர்க்கும் இடுமின்: அவர்இவர் என்னன்மின்....பாடல்: 250

ஈசன் அடியார் இதயம் கலங்கிடத்
தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும்...பாடல்: 534

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்....
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே...பாடல்: 724

குருவே சிவம்எனக் கூறினன் நந்தி...பாடல்: 1581
மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம்..பாடல்: 1726 
(நந்தி = இங்கே சிவபெருமானைக் குறிக்கும், ஆக்கை - உடல்)  இவைபோன்ற நூற்றுக்கணக்கான அரிய தொடர்கள் திருமந்திரத்துள் இடம்பெற்றுள்ளன.

அன்பே சிவம்:
 

திருமந்திரம் ஆகமத்தின் சாரமாக அமைந்திருந்தாலும் அனைவரும் உணரும் எளிமையும், இனிமையும் உடைய பாடல்கள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ‘அன்பே சிவம்’ என்ற தொடரைப் பலரும் அறிவர். மனிதர்கள் ஏனைய மனிதர்கள்பால் செலுத்தும் அன்பில்தான் உலகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. உலகத்தில் தோன்றிய கடவுள் சார்புடைய மதங்களும், கடவுள் மறுப்புச் சமயங்களும் கூட அன்பினைப் பெரிதும் போற்றியே உரைக்கின்றன. திருவள்ளுவர் முதலிய அறநூலாசிரியர்களும் அன்பின் சிறப்பையும், இன்றியமையாமையையும் எடுத்துரைத்துள்ளனர்.

சைவர்களின் இறைவன் சிவன். அவன் யார்? அவன் இயல்பு எத்தகையது என்ற வினாக்களுக்குத் திருமூலர் தரும் விடை ஆழ்ந்த பொருட்சிறப்புடையது. அன்புதான் எங்கள் சிவன். சிவம் வேறு அன்பு வேறு என்பார் அறியாமை மிக்கவர்கள். இரண்டும் ஒன்றே என்று உணரும் உணர்வில் இறைமைப் பேறு வாய்க்கும்.
அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே...(திருமந்திரம்: 270)
என்பது அன்பின் சிறப்புரைக்கும் அரிய பாடல்.

மரமும் யானையும்:


உலகம் வேறு, இறைவன் வேறானவன் என்று கருதும் கருத்து சமய நம்பிக்கை உடையவர்களிடமும் உள்ளது. குழந்தை மரத்தால் செய்யப்பட்ட யானை பொம்மையைக் கண்டு ‘யானை! யானை’ என்று அஞ்சித் தாயிடம் தஞ்சம் அடைகிறது. தாயோ இது யானை இல்லை மரம் என்று கூறிக் குழந்தையின் அச்சம் நீக்குகிறாள் என்றால் குழந்தை கண்டது யானையா? மரமா? என்ற ஐயம் எழுகிறது.

யானையாகக் கண்ட குழந்தைக்கு மரம் என்பது புலப்படவில்லை; மரம் என்ற தெளிவு பெற்ற தாய்க்கு யானை புலப்படவில்லை. இவற்றைப் போல் உலகத்தையும், உலகப் பொருள்களையும் இறைவனாகவே காண்பார்க்கு அவை புலப்படுவதில்லை. உலகமாகவே காண்பார்க்கு இறைமை புலனாவதில்லை. இவ்வழகிய உண்மையைத் திருமந்திரம் மிக அழகிய கவிதை ஒன்றில் வைத்து விளக்குகிறது.
மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதல் பூதமே...(திருமந்திரம்: 2290)

இக்கருத்தையொட்டியே நாயைக்கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம் என்ற பழமொழி எழுந்தது. எளிய இனிய எடுத்துக்காட்டுகளால் அமைந்துள்ள இத்தகு கவிதைகள் திருமந்திரத்தில் நிறைவாக இடம் பெற்றுள்ளன.


மனிதநேயப் பரிவு:
 

சைவம் மனித நேயத்தை வற்புறுத்தும் ஓர் அன்பு நெறி. சிற்றுயிர்கள் இடத்தும் கருணை காட்டவேண்டும் என்று அது வற்புறுத்துகின்றது. இறைவன் உலகத்தையும்,     நுகர் பொருள்களையும் உயிர்கள் பெற்று இன்புறுவதற்கே படைத்தளித்தான். உயிர்களிடமிருந்து இறைவன் அன்பு ஒன்றைத் தவிர வேறு யாது ஒன்றும் பெற விரும்புவதில்லை. ஆனால் சமயவாதிகள், சடங்கு நெறியில் பற்றுக் கொண்டு நின்று, மனிதனின் பசிக்கு உணவிட விரும்பாது இறைவனுக்குப் படையலிட்டு மகிழ்கின்றனர். இறைவன் மனிதன் அளிக்கும் உணவையும், படையலையும் உண்டு மகிழ்கின்றானா என்றால் இல்லை. இறைவன் கவனத்திலும் கணக்கிலும் அவனுக்குப் படைக்கப்படும் படையல் இடம் பெறுவதில்லை. அவன் கணக்கில் இடம்பெற விரும்பினால் பசித்திருப்போருக்கு உணவு அளியுங்கள். அதுவே அவனைச் சென்றடையும் அரிய பெருநெறி என்று காட்டுகிறார் திருமூலர்.
படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்குஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அதுஆமே...(திருமந்திரம்: 1857)

(படமாடக் கோயில் = இறைவன் உருவத்தை ஓவியமாக எழுதி வைத்துள்ள இடம், பகவன் = இறைவன், நடமாடக் கோயில் நம்பர் = நடமாடும் கோயிலாகிய மனிதர்கள், ஆமே = போய்ச் சேரும்) அது என்ன ‘நம்பர்க்கு’ என்று நீங்கள் முணுமுணுப்பது என் காதில் விழுகிறது; ‘நம்பர்’ என்ற சொல் ‘நம்மவர், எம்மைப்போன்ற மனிதர்கள்’ என்ற பொருள் தரும். மனிதரின் உள்ளத்தில் இறைவன் குடி கொண்டுள்ளான். எனவே மனிதர்கள் இறைவனின் நடமாடும் கோயில்கள், நடமாடும் கோயில்களாகிய நம் போன்ற மனிதர்க்கு ஒன்று கொடுப்பது இறைவனுக்குக் கொடுப்பதற்கு ஒப்பாகும்.
 
வாழ்வியல் உண்மைகள்:


இறைவனைச் சென்று அடைதற்கு உரிய எளிய வழி குருவை வழிபடுதலால் கிட்டும். பிறன் மனை நோக்காத பேராண்மையை ஆடவர் பெறல் வேண்டும். காக்கை தன் இனத்தைக் கூவி அழைத்துக் கலந்து உண்பது போல், சக மனிதர் களோடு கலந்து உண்ணல் வேண்டத்தக்கது. கற்றவர்களுக்கு மட்டுமே பேரின்பம் வாய்க்கும். கேள்விச் செல்வமே மனிதர்களுக்கு உற்றதுணை. மிகுந்த காமமும் கள்ளுண்டலும் கீழோர் என்று அடையாளம் காட்டும்.

விரும்பியவாறு ஆண் அல்லது பெண் குழந்தை பெற்றுக் கொள்வதற்குரிய மூச்சுப்பயிற்சி முறை, (வியப்பாக உள்ளதா? திருமந்திரம் பாடலில் இவ்விவரம் தரப்பட்டுள்ளது: பாடல் எண்-482) குழந்தைகள் குருடாய், ஊமையாய், முடமாய்ப் பிறப்பதற்குரிய காரண விளக்கம், திருக்கோயில் வழிபாட்டின் இன்றியமை யாமை முதலான பல அரிய செய்திகளை வழங்கும் களஞ்சியமாகத் திருமந்திரம் அமைந்துள்ளது.


Offline Anu

பாயிரம்: பாடல்கள் (11-25/39) பகுதி: II


பாடல் எண் : 11
எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையும்
செழுந்தண் நியமங்கள் செய்மின் என் றண்ணல்
கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே
அழுந்திய நால்வர்க் கருள்புரிந் தானே.

பொழிப்புரை :  தன்னைவிட்டு இமையளவும் பிரிய விரும்பாத நந்திகள் நால்வர்க்கும் சிவபெருமான் எதிர்ப்படத்தோன்றி, உலகம் அழிகின்ற ஊழிக் காலத்திலும் நீங்கள் நம்மை வழிபட்டிருப்பீராக என்று அருள்புரிந்தான்.
****************************************************
பாடல் எண் : 12
நந்தி இணையடி நான்தலை மேற்கொண்டு
புத்தியி னுள்ளே புகப்பெய்து போற்றிசெய்
நந்தி மதிபுனை அரனடி நாள்தொறுஞ்
சிந்தைசெய் தாகமம் செப்பலுற் றேனே.

பொழிப்புரை : என் ஆசிரியராகிய நந்தி பெருமானது இரு திருவடிகளையும் என் சென்னியிலும், சிந்தையிலும் கொண்டு, வாயினாலும் துதித்து, அவ்வாற்றானே சிவபெருமானது திருவருட் பெருமையை இடைவிடாது சிந்தித்து உணர்ந்து, அங்ஙனம் உணர்ந்த வாற்றால், சிவாகமப் பொருளைக் கூறத் தொடங்கினேன்.
****************************************************
பாடல் எண் : 13
செப்பும் சிவாகமம் என்னுமப் பேர்பெற்றும்
அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத்
தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்
ஒப்பில்ஒரு கோடி யுகமிருந் தேனே.

பொழிப்புரை : உயர்த்துச் சொல்லப்படுகின்ற `சிவாகமம் என்னும் பெயரையுடைய நூலைப் பெற்ற பின்பும், அவற்றின் பொருளை உள்ளவாறு உணர்த்துகின்ற நந்தி பெருமானது ஆணை வழி, அழிவில்லாத தில்லையம்பலத்தை அடைந்து அங்குச் சிவபெருமான் செய்யும் ஒப்பற்ற நடனத்தைக் கண்டு மீண்டபின், உடம்போடிருக்க உடன்படாத நிலையிலே பலகாலம் உடம்போடு இருந்தேன்.
****************************************************
பாடல் எண் : 14
இருந்தஅக் காரணம் கேள்இந் திரனே
பொருந்திய செல்வப் புவனா பதியாம்
அருந்தவச் செல்வியைச் சேவித் தடியேன்
பரிந்துடன் வந்தனன் பத்தியி னாலே.

பொழிப்புரை :  இந்திரனே, உடன்பாடின்றியும் நான் அவ்வாறு நெடுநாள் உடம்போடிருந்த காரணத்தைக் கூறுகின்றேன்; கேள். எல்லா உலகங்கட்கும் தலைவியாம் அருந்தவ மாகிய செல்வியை அடியேன் அன்பினால் விரும்பி உடன் நின்று பணிந்து வந்தேன்.
****************************************************
பாடல் எண் : 15
சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்
மிதாசனி யாதிருந் தேன்நின்ற காலம்
இதாசனி யாதிருந் தேன்மனம் நீங்கி
உதாசனி யாதுட னேஉணர்ந் தோமால்.

பொழிப்புரை : இறப்புத் தோன்றாதவனாய் இருந்து வாழ்ந்த அக்காலம் முழுதும் உலகத்தில் விருப்பம் தோன்றாது மனஒடுக்கம் உடையவனாயே இருந்தேன். அவ்வாறிருக்கும் பொழுது, சிவபெருமானது ஐந்தொழில்நிலை, பொருட்பெற்றி, தமிழ்மொழி, வேதம் என்னும் இவைகளைப் புறக்கணியாது விருப்பத்துடன் கற்று உணர்ந்தேன்.
****************************************************
பாடல் எண் : 16
மாலாங்க னேஇங் கியான்வந்த காரணம்
நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு
மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்
சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே. 

பொழிப்புரை :  மாலாங்கனே, திருக்கயிலையை விட்டு இத்தமிழ்நாட்டிற்கு நான் வந்தகாரணம் கேள். சிவபெருமான் முதற்கண் உமை அம்மைக்கு முதல் நூலாகச் சொல்லிய சிவாகமத்தின் பொருளைச் சொல்லுதற்காகவே வந்தேன்.
****************************************************
பாடல் எண் : 17
நேரிழை யாவாள் நிரதி சயானந்தப்
பேருடை யாள்என் பிறப்பறுத் தாண்டவள்
சீருடை யாள்சிவன் ஆவடு தண்டுறை
சீருடை யாள்பதம் சேர்ந்திருந் தேனே.

பொழிப்புரை : `உமையம்மை` என்று சொல்லப்படுபவள் வரம்பில் இன்பமாகின்ற பெருமையை உடையவள். அவள் எனது பிறப்பை அறுத்து வீடு தந்து என்னை ஆட்கொண்டவள்; மிக்க புகழை உடையவள்; சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருவாவடுதுறையாகிய இச்சிறந்த திருத்தலத்தைத் தனதாக உடையவள். அவள் திருவடி நிழலில் இதுபொழுது இருக்கின்றேன்.
****************************************************
பாடல் எண் : 18
சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச்
சேர்ந்திருந் தேன்சிவன் ஆவடு தண்டுறை
சேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலில்
சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே.

பொழிப்புரை :  சீருடையாள் பதம் சேர்ந்தமையால் அவளை ஒருபாகத்தில் உடைய சிவனையும் சேர்ந்திருக்கின்றேன். இத் திருவாவடுதுறை அவளுடையது மட்டுமன்று; அவனுடையதுந்தான். இங்குச் சிவஞானத் திருவின்கீழ் அவனது திருப்பெயர் பலவற்றையும் ஓதித் துதித்துக் கொண்டிருக்கின்றேன்.
****************************************************
பாடல் எண் : 19
இருந்தேன்இக் காயத்தே எண்ணிலி கோடி
இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே
இருந்தேன்என் நந்தி இணையடிக் கீழே.

பொழிப்புரை :  இங்கும் இவ்வுடம்பிலே பல்லாண்டுகள் இருந்தேன். அங்ஙனம் இருந்த காலம் முழுவதும் சிவஞானப் பேரொளியில்தான் இருந்தேன். அது தேவராலும் வணங்கப்படும் எங்கள் நந்தி பெருமானது திருவடி நிழலேயன்றி வேறில்லை.
****************************************************
பாடல் எண் : 20
பின்னைநின் றென்னே பிறவி பெறுவது
முன்னைநன் றாக முயல்தவம் செய்திலர்
என்னைநன் றாக இறைவன் படைத்தனன்
தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே.

பொழிப்புரை :  முற்பிறப்பில் நன்கு முயல்கின்ற தவத்தைச் செய்யாதவர், பின்னை நற்பிறவியைப் பெறுதல் எவ்வாறு கூடும்! கூடாது. ஆகவே நான்செய்த தவம் காரணமாக இறைவன் என்னைத் தன்னைத் தமிழ்மொழியால் நன்றாகப் பாடும் வண்ணம் செவ்விய முறையால் படைத்தான்.
**************************************************

பாடல் எண் : 21
ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்கு
ஊனமில் ஒன்பது கோடி யுகந்தன்னுள்
ஞானப்பா லாட்டி நாதனை அர்ச்சித்து
நானும் இருந்தேன்நற் போதியின் கீழே.
பொழிப்புரை : பொழிப்புரை எழுதவில்லை
****************************************************
பாடல் எண் : 22
செல்கின்ற வாறறி சிவமுனி சித்தசன்
வெல்கின்ற ஞானத்து மிக்கோர் முனிவராய்ப்
பல்கின்ற தேவர் அசுரர் நரர்தம்பால்
ஒல்கின்ற வான்வழி யூடுவந் தேனே.

பொழிப்புரை : பொழிப்புரை எழுதவில்லை
****************************************************
பாடல் எண் : 23
சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்
உத்தம மாகவே ஓதிய வேதத்தின்
ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி
அத்தன் எனக்கிங் கருளால் அளித்ததே.

பொழிப்புரை : மக்களுடைய உள்ளத்தில் சிறந்து நிற்கின்ற நூல்கள் பலவற்றிலும் தலையானதாகச் சொல்லப்படுகின்ற வேதத்தைச் சொல்லுதற்கு ஏற்ற உடம்பையும், உள்ளக்கருத்தையும் எனக்கு இங்கு இறைவன் அளித்தது, தனது அருள் காரணமாகவாம்.
****************************************************
பாடல் எண் : 24
நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறும் மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.

பொழிப்புரை :  பரவெளியைப் பற்றிநிற்கின்ற வேதப்பொருளை உள்ளவாறு உணர்ந்து சொன்னால் அதுவே, `உடம்பைப் பற்றி நிற்கின்ற உயிருணர்வில் நிலைத்துநிற்கும் மந்திரம்` எனப்படும். அம்மந்திரத்தை இடையறாது உணர உணரப் பேரின்பம் கிடைப்பதாம். அவ்வாற்றால் நான்பெற்ற இன்பத்தை, இவ்வுலகமும் பெறுவதாக.
****************************************************
பாடல் எண் : 25
பிறப்பிலி நாதனைப் பேர்நந்தி தன்னைச்
சிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பி
மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை
உறைப்பொடுங் கூடிநின் றோதலு மாமே.

பொழிப்புரை : தேவர் பலரும், பிறப்பில்லாத முதல்வனும், `நந்தி` என்னும் பெயருடையவனும் ஆகிய சிவபெருமானைத் தூய்மையுடன் சென்று கைதொழுது இம் `மந்திரமாலை` நூலை மறவாது மனத்துட் கொள்வர். ஆகவே, நீவிரும் இதனை உறுதியாக நின்று ஓதுதல் வேண்டும்.


Offline Anu

பாயிரம்: பாடல்கள் (26-39/39) பகுதி: III


பாடல் எண் : 26
அங்கி மிகாமைவைத் தான்உடல் வைத்தான்
எங்கும் மிகாமைவைத் தான்உல கேழையும்
தங்கி மிகாமைவைத் தான்தமிழ்ச் சாத்திரம்
பொங்கி மிகாமைவைத் தான்பொருள் தானுமே. 

பொழிப்புரை :  உடம்பைப் படைத்த இறைவன், அதனுள் வேண்டும் அளவிற்கே நெருப்பை அமைத்துள்ளான். நிலவுலகைப் படைத்த அவன் அளவின்றி எங்கும் பரந்து கிடப்பப் படையாது, ஏழென்னும் அளவிற்படவே படைத்தான். அவ்வாறே தமிழ் நூல்களையும் கற்பாரின்றி வீணே கிடக்க வையாது, அளவாக வைத்தான். பொருளையும் அவற்றால் மிகைபடாது இன்றியமையாத அளவிலே புலப்பட வைத்தான்.
****************************************************
பாடல் எண் : 27
ஞேயத்தை ஞானத்தை ஞாதுரு வத்தினை
மாயத்தை மாமாயை தன்னில் வரும்பரை
ஆயத்தை அச்சிவன் றன்னை அகோசர
வீயத்தை முற்றும் விளக்கியிட் டேனே.

பொழிப்புரை :இம்மூவாயிரம் பாட்டுக்களிலே, `அறியப்படும் பொருள், அறிவு, அறிபவன், அசுத்தமாயா காரியம், சுத்தமாயா காரியம், அனைத்திற்கும் மேலான பரம்பொருளாகிய சிவன் என்று சொல்லப்படுகின்ற வாக்கு மனங்கட்கு எட்டாத முதல்கள் ஆகிய அனைத்தின் இயல்பையும் முற்றக் கூறுவேன்.
****************************************************
பாடல் எண் : 28
விளக்கிப் பரமாகும் மெய்ஞ்ஞானச் சோதி
அளப்பில் பெருமையன் ஆனந்த நந்தி
துளக்கறும் ஆனந்தக் கூத்தன்சொற் போந்து
வளப்பிற் கயிலை வழியில்வந் தேனே.

பொழிப்புரை :  இவை அனைத்தையும் விளக்கிச் சிவபெருமானது உபதேச முறையில் நின்று, `திருக்கயிலாய பரம்பரையில் வந்த ஆசிரியன்` என்னும் பேற்றைப் பெற்றவனாவேன்.
****************************************************
பாடல் எண் : 29
நந்தி அருளாலே மூலனை நாடிப்பின்
நந்தி அருளாலே சதாசிவ னாயினேன்
நந்தி அருளால்மெய்ஞ் ஞானத்துள் நண்ணினேன்
நந்தி அருளாலே நான்இருந் தேனே.

பொழிப்புரை :  சிவபெருமானது திருவருளால் மூலனது உடலைப் பற்றி நின்றபின், அவனது திருவருளாலே ஆகமத்தைப் பாடும் நிலையை அடைந்தேன். அந்நிலையில் அவன் அருளால் நிட்டையும் பெற்றுச் சீவன் முத்தி நிலையில் பல்லாண்டுகள் இருக்கின்றேன்.
****************************************************
பாடல் எண் : 30
இருக்கில் இருக்கும் எண்ணிலி கோடி
அருக்கிய மூலத்துள் அங்கே இருக்கும்
அருக்கனும் சோமனும் ஆரழல் வீச
உருக்கி யுரோமம் ஒளிவிடுந் தானே.

பொழிப்புரை :  பல்லாண்டுகள் ஓர் உடம்பிலே இருத்தல் கூடுமோ? உடம்பு தளர்ச்சியுற்று அழிந்தொழியாதோ எனில் மறைவிடமாகிய மூலாதாரத்துள், எழாது கிடக்கின்ற அரிய நெருப்பை, `சூரியகலை. சந்திரகலை` என்னும் இருகாற்றும் அடங்கி நின்று மூட்டி வளர்க்கும்படி இருந்தால், உடம்பு நெடுங்காலம் தளர்வின்றி இருக்கும்; உரோமமும் வெளிறாது கறுத்து அழகுற்று விளங்கும்.
***************************************************
பாடல் எண் : 31
பிதற்றுகின் றேன்என்றும் பேர்நந்தி தன்னை
இயற்றுவன் நெஞ்சத் திரவும் பகலும்
உயற்றுவன் ஓங்கொளி வண்ணன்எம் மானை
இயற்றிகழ் சோதி இறைவனும் ஆமே.


பொழிப்புரை :  இவ்வாறிருக்கின்ற நிலையில் நான் இரவும் பகலும் சிவபிரானது பெயரையே பிதற்றுவேன். நெஞ்சில் நினைப்பேன்; காயத்தால் அவனை வழிபடுவேன். அதனால், விளக்க விளங்குகின்ற என் அறிவும், இயல்பாய் விளங்குகின்ற சிவனது அறிவேயாய்த் திகழும்.


****************************************************
பாடல் எண் : 32
ஆர்அறி வார்எங்கள் அண்ணல் பெருமையை
ஆர்அறி வார்அவ் வகலமும் நீளமும்
பேர்அறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின்
வேர்அறி யாமை விளம்புகின் றேனே.

பொழிப்புரை : எங்கள் சிவபெருமானது திருவருளின் பெருமையை முற்ற உணர்வோர் யாவர்! அவனது பரப்பைத்தான் யாவர் உணரவல்லார்! சொல்லுக்கு அகப்படாத பேரறிவுப் பொருள் தன்னோடு ஒப்பது பிறிதொன்றில்லதாய் உளது. அதனது மெய்ந்நிலையை அறியாமலே நான் பலரும் அறியக்கூறத் தொடங்கினேன்.
****************************************************
பாடல் எண் : 33
பாடவல் லார்நெறி பாடஅறிகி லேன்
ஆடவல் லார்நெறி ஆடஅறிகி லேன்
நாடவல் லார்நெறி நாடஅறிகி லேன்
தேடவல் லார்நெறி தேடகில் லேனே..

பொழிப்புரை : இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழுள் ஒன்றையும் நெறிப்பட அறிகிலேன். அளவை நூல் முறையால் ஆராயவும் வல்லனல்லேன். பேரன்பினால் இறைவனையே தேடி அலையும் நிலைமையும் இல்லேன்.
****************************************************
பாடல் எண் : 34
மன்னிய வாய்மொழி யாலும் மதித்தவர்
இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனைப்
பின்னை உலகம் படைத்த பிரமனும்
உன்னும் அவனை உணரலும் ஆமே.

பொழிப்புரை :   தன்னை அறிகின்றவரது உள்ளத்தில் வீணையுள் இனிய இசை போல மெல்ல எழுகின்றவனும், உலகத்தைப் படைத்த பிரமனாலும் தியானிக்கப் படுகின்றவனும் ஆகிய இறைவனது பெருமையை, நிலைபெற்ற மெய்ந்நூல் வழியாகவும் சிறிது உணர்தல் கூடும்.
****************************************************
பாடல் எண் : 35
தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை
முத்திக் கிருந்த முனிவருந் தேவரும்
ஒத்துடன் வேறாய் இருந்து துதிசெயும்
பத்திமை யால்இப் பயன்அறி யாரே.

பொழிப்புரை :  மன்னிய வாய் மொழியாகிய சிவாகமங்கள், வீடு பேற்றை அடைவதற்கு விரும்பியிருந்த முனிவரும், தேவரும் கருத்தொருமை கொண்டு உலகப் பயன் விரும்பும் மக்களை விடுத்துத் தனி இடத்திலிருந்து வேண்டிக் கொண்ட அன்பு காரணமாக இறைவன் உண்மை ஞானத்தைக் கயிலைத் தாழ்வரைக்கண் இருந்து உணர்த்தியருளிய நூல்களாம். பக்குவம் இல்லாதோர் இவ்வுண்மையை அறிய மாட்டார்.
****************************************************
பாடல் எண் : 36
மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்
ஞாலம் அறியவே நந்தி அருளது
காலை எழுந்து கருத்தறிந் தோதிடின்
ஞாலத் தலைவனை நண்ணலும் ஆமே.. 

பொழிப்புரை : மூலன் பாடிய மூவாயிரம் பாடலையுடைய இத்தமிழ் நூல் நந்தி பெருமானது அருள் உணர்த்திய பொருளை உடையதே. அதனால், நாள்தோறும் இதனைப் பொருளுணர்ந்து ஓதுவோர் முதற் கடவுளாகிய சிவபெருமானை அடைவர்.
****************************************************
பாடல் எண் : 37
வைத்த பரிசே வகைவகை நன்னூலின்
முத்தி முடிவிது மூவா யிரத்திலே
புத்திசெய் பூர்வத்து மூவா யிரம்பொது
வைத்த சிறப்புத் தரும்இவை தானே..

பொழிப்புரை : பொழிப்புரை எழுதவில்லை. குறிப்புரை : இப்பாட்டுக்கள் பின்வந்தோர் செய்தவை. இவை முறையே `முத்தி சாதனமாகிய இந்நூற்கு முதற்கண் உள்ள இப் பாட்டுக்கள் பாயிரம்` என்பதும், `திருமூலரது முதல் மடத்தினின்றும் அவர் மாணாக்கர் எழுவரது கிளைமடங்கள் தோன்றின; அவை அனைத்திற்கும் நூல் இத்திருமந்திரம்; இஃது ஒன்பது தந்திரங்களையும் உடையது` என்பதும், `திருமூலர் மாணாக்கர் எழுவருள், `காலாக்கினி` என்பவரது மரபு, அகோரர், திருமாளிகைத் தேவர், நாதாந்தர், பரமானந்தர் போக தேவர், மூலர் என்னும் முறையில் தொடர்ந்து விளங்கிற்று` என்பதும் கூறுவன. இறுதிக்கண் சொல்லப்பட்ட `மூலர்` என்பவர்தம் மாணாக்கரே இப்பாட்டுக்களைச் செய்தார் போலும்! அல்லது முதல் இரண்டை முன்னவருள் சிலர் செய்திருத்தலும் கூடுவதே.
****************************************************
பாடல் எண் : 38
வந்த மடம்ஏழு மன்னும்சன் மார்க்கத்தின்
முந்தி உதிக்கின்ற மூலன் மடவரைத்
தந்திரம் ஒன்பது சார்வுமூ வாயிரம்
சுந்தர ஆகமச் சொல்மொழிந் தானே.

பொழிப்புரை : பொழிப்புரை எழுதவில்லை. குறிப்புரை : இப்பாட்டுக்கள் பின்வந்தோர் செய்தவை. இவை முறையே `முத்தி சாதனமாகிய இந்நூற்கு முதற்கண் உள்ள இப் பாட்டுக்கள் பாயிரம்` என்பதும், `திருமூலரது முதல் மடத்தினின்றும் அவர் மாணாக்கர் எழுவரது கிளைமடங்கள் தோன்றின; அவை அனைத்திற்கும் நூல் இத்திருமந்திரம்; இஃது ஒன்பது தந்திரங்களையும் உடையது` என்பதும், `திருமூலர் மாணாக்கர் எழுவருள், `காலாக்கினி` என்பவரது மரபு, அகோரர், திருமாளிகைத் தேவர், நாதாந்தர், பரமானந்தர் போக தேவர், மூலர் என்னும் முறையில் தொடர்ந்து விளங்கிற்று` என்பதும் கூறுவன. இறுதிக்கண் சொல்லப்பட்ட `மூலர்` என்பவர்தம் மாணாக்கரே இப்பாட்டுக்களைச் செய்தார் போலும்! அல்லது முதல் இரண்டை முன்னவருள் சிலர் செய்திருத்தலும் கூடுவதே.
****************************************************
பாடல் எண் : 39
கலந்தருள் காலாங்கர் தம்பால் அகோரர்
நலந்தரு மாளிகைத் தேவர்நா தாந்தர்
புலங்கொள் பரமானந் தர்போக தேவர்
நிலந்திகழ் மூலர் நிராமயத் தோரே.

பொழிப்புரை :   பொழிப்புரை எழுதவில்லை. குறிப்புரை : இப்பாட்டுக்கள் பின்வந்தோர் செய்தவை. இவை முறையே `முத்தி சாதனமாகிய இந்நூற்கு முதற்கண் உள்ள இப்பாட்டுக்கள் பாயிரம்` என்பதும், `திருமூலரது முதல் மடத்தினின்றும் அவர் மாணாக்கர் எழுவரது கிளைமடங்கள் தோன்றின; அவை அனைத்திற்கும் நூல் இத்திருமந்திரம்; இஃது ஒன்பது தந்திரங்களையும் உடையது` என்பதும், `திருமூலர் மாணாக்கர் எழுவருள், `காலாக்கினி` என்பவரது மரபு, அகோரர், திருமாளிகைத் தேவர், நாதாந்தர், பரமானந்தர் போகதேவர், மூலர் என்னும் முறையில் தொடர்ந்து விளங்கிற்று` என்பதும் கூறுவன. இறுதிக்கண் சொல்லப்பட்ட `மூலர்` என்பவர்தம் மாணாக்கரே இப்பாட்டுக்களைச் செய்தார் போலும்! அல்லது முதல் இரண்டை முன்னவருள் சிலர் செய்திருத்தலும் கூடுவதே.


Offline Anu

பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம்

முதல் தந்திரம்: 27-பதிகங்கள்:
பதிகம் 01. சிவபரத்துவம் (01-20/56) பகுதி-I


பாடல் எண் : 01
சிவனொடொக் குந்தெய்வந் தேடினும் இல்லை
அவனொடொப் பார்இங்கும் யாவரும் இல்லை
புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந்
தவனச் சடைமுடித் தாமரை யானே.

பொழிப்புரை :  தேவருள்ளும் ஒருவரும் சிவனோடு நிகர்ப்பவர் இல்லை; மக்களுள்ளும் அவனொடு ஒப்பவராவார் இல்லை; ஆதலின், இயல்பிலே உலகைக் கடந்து நின்று உணர்வுக் கதிரவனாய் (ஞான சூரியனாய்) விளங்கும் முதற்கடவுள் அச்சிவபெருமானே.
****************************************************
பாடல் எண் : 02
அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர்புகு மாறறி யேனே.

பொழிப்புரை : சிவபெருமானைத் தவிர இறவாதவர் பிறர் இல்லை; அவனை உணராது செய்யும் செயல் சிறந்த தவமாதல் இல்லை; அவனது அருளின்றி மும்மூர்த்திகளால் யாதொரு செயலும் நடவாது. அவனது அருளின்றி முத்திக்கு வழி இல்லை.
****************************************************
பாடல் எண் : 03
முன்னையொப் பாயுள்ள மூவர்க்கு மூத்தவன்
தன்னையொப் பாயொன்றும் இல்லாத் தலைமகன்
தன்னையப் பாஎனில் அப்பனு மாய்உளன்
பொன்னையொப் பாகின்ற போதகத் தானே.

பொழிப்புரை : பொன்போலும் மேனியையுடைய, யானைத்தோற் போர்வையாளனாகிய சிவபெருமானே! ஊழிகளுள் ஒன்றில் ஒருவர் மற்றிருவரையும், பிறிதொன்றில் மற்றொருவர் ஏனை இருவரையும் படைக்குமாற்றால் தம்முள், `முன்னோர், பின்னோர்` என்னும் வேறுபாடில்லாத மும்மூர்த்திகளுக்கும் என்றும் முன்னோன்; அத்தன்மை பிறருக்கு இன்மையால், தன்னை ஒப்பாகின்ற பொருள் பிறிதொன்றும் இல்லாத பெருந்தலைவன்; தன்னை, ``அப்பா`` என்று அழைப்பவர்க்கு அப்பனுமாய் இருக்கின்றான்; (உம்மையால்) ``அம்மே`` என்று அழைப்பவர்க்கு அம்மையாயும் இருக்கின்றான்.
****************************************************
பாடல் எண் : 04
தீயினும் வெய்யன் புனலினுந் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருளறி வார்இல்லை
சேயனு மல்லன் அணியன்நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே.

பொழிப்புரை :   நீண்ட சடையை உடையவனாகிய சிவபெருமான், தேறுங்கால் நெருப்பினும் வெம்மை உடையன்; அருளுங்கால் நீரினும் தண்மையுடையவன்; ஆயினும், அத்தகைய அவனது ஆற்றலின் தன்மையை அறியும் உலகர் இல்லை. உலகர்க்கு இவ்வாறு அறியப்படாத சேய்மைக்கண் உளனாகிய அவன், மெய்யன்பர்க்கு அவ்வாறின்றி நன்கறியப்படும் அணிமைக்கண் உள்ளவனாய்த் தாயினும் மிக்க தயவுடையனாவான்.
****************************************************
பாடல் எண் : 05
பொன்னாற் புரிந்திட்ட பொற்சடை யென்னப்
பின்னாற் பிறங்க இருந்தவன் பேர்நந்தி
என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன்
தன்னால் தொழப்படு வாரில்லை தானே.

பொழிப்புரை : என்னால் வணங்கப்படுகின்ற எங்கள் சிவபெருமான், தனது பொற்சடை பொன்னால் செய்யப்பட்டனவே என்னும்படி பின்னலோடு விளங்குமாறு இருப்பவன். ``நந்தி`` என்னும் பெயர் உடையான். அவனால் வணங்கப்படுபவர் ஒருவரும் இல்லை.
****************************************************
பாடல் எண் : 06
அயலும் புடையும்எம் ஆதியை நோக்கில்
இயலும் பெருந்தெய்வம் யாதுமொன் றில்லை
முயலும் முயலின் முடிவும்மற் றாங்கே
பெயலும் மழைமுகிற் பேர்நந்தி தானே.

பொழிப்புரை : எங்கள் சிவபெருமானது பெருமையை நோக்குமிடத்து அவனோடொத்த பெருங்கடவுள் சேய்மையிலும் இல்லை; அண்மையிலும் இல்லை என்பது புலப்படும். உழவும், உழவின் பயனும், அவற்றிற்கு முதலாயுள்ள மழையும், அம் மழையைத் தருகின்ற மேகமும் ஆகிய எல்லாம், `நந்தி` என்னும் பெயருடைய அவனேயன்றிப் பிறர் இல்லை.
****************************************************
பாடல் எண் : 07
கண்ணுத லான்ஒரு காதலின் நிற்கவும்
எண்ணிலி தேவர் இறந்தார் எனப்பலர்
மண்ணுறு வார்களும் வானுறு வார்களும்
அண்ணல் இவன்என் றறியகி லார்களே.

பொழிப்புரை : சிவபெருமான் என்றும் ஒரு பெற்றியனாய் அழிவின்றி இருக்கவும், அளவற்ற தேவர்கள் அழிந்தனர் என்று புராணங்கள் முழங்கவும், மண்ணிலும், விண்ணிலும் உள்ள பலர் அப்பெருமானை, `இவனே முதல்வன்` எனத் துணியமாட்டாத வராகின்றனர்.

****************************************************
பாடல் எண் : 08
மண்ணளந் தான்மல ரோன்முதல் தேவர்கள்
எண்ணளந் தின்னம் நினைக்கிலார் ஈசனை
விண்ணளந் தான்தன்னை மேல்அளந் தாரில்லை
கண்ணளந் தெங்குங் கடந்துநின் றானே.

பொழிப்புரை : திருமால், பிரமன் முதலிய தேவர்களும் இன்னும் சிவபிரானது பெருமையை ஓர்ந்து தெளியவில்லை. ஆகவே, அண்டத்தின் அப்புறத்தும் உள்ள அவனது பரப்பை அளந்து கண்டவர் யார்? ஒருவரும் இல்லை. அவன் எவ்விடத்தையும் உள்அடக்கி அவை அனைத்தையும் கடந்து நிற்கின்றான்.
****************************************************
பாடல் எண் : 09
அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்
படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி
அடிகண் டிலேனென் றச்சுதன் சொல்ல
முடிகண்டே னென்றயன் பொய்மொழிந் தானே.

பொழிப்புரை :  `சிவபெருமானது பெருநிலை (வியாபகம்) ஒருவராலும் அளத்தற்கரிது` என்பதற்கு, அயன், மால் இருவரும் அப்பெருமானது அடிமுடி தேடிக் காணமாட்டாது அல்லற்பட்ட வரலாறே போதிய சான்றாகும்.

****************************************************

பாடல் எண் : 10
கடந்துநின் றான்கம லம்மல ராதி
கடந்துநின் றான்கடல் வண்ணன்அம் மாயன்
கடந்துநின் றான்அவர்க் கப்புறம் ஈசன்
கடந்துநின் றான்எங்கும் கண்டுநின் றானே.

பொழிப்புரை :   பிரமனும், திருமாலும் ஓரோர் எல்லையளவில் பெருநிலை (வியாபகம்) உடையவராயினும், அனைவரினும் மேம்பட்ட பெருநிலையுடையவன் சிவபெருமான். அவன் அத்தகையனாய்ப் புறத்து நிற்பினும், எப்பொருளிலும் நிறைந்து அவற்றை அறிந்து நிற்கின்றான்.

****************************************************
பாடல் எண் : 11
ஆதியு மாய்அர னாய்உட லுள்நின்ற
வேதியு மாய்விரிந் தார்ந்திருந் தான்அருட்
சோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள்
நீதியு மாய்நித்த மாகிநின் றானே.

பொழிப்புரை : அருளாகிய ஒளி உருவினனாயும், என்றும் குறைதல் இல்லாத அவ்வருள் காரணமாக அனைத்துயிர்க்கும் நடுவுநிலைமையனாயும், அழிவில்லாதவனாயும் உள்ள சிவ பெருமான், தானே உலகிற்கு முதலாகியும், முடிவாகியும், பல்வகை உடம்பிலும் காணப்படுகின்ற இன்ப துன்பங்களாகியும் பரந்து நிறைந்திருக்கின்றான்
****************************************************
பாடல் எண் : 12
கோது குலாவிய கொன்றைக் குழற்சடை
மாது குலாவிய வாள்நுதல் பாகனை
யாது குலாவி அமரருந் தேவரும்
கோது குலாவிக் குணம்பயில் வாரே.

பொழிப்புரை :   திருத்தி விளங்கிய, கொன்றை மாலையணிந்த குழல்போலும் சடையை உடைய, அழகு விளங்கும் மங்கையைப் பாதியில் உடைய சிவபெருமானை மும்ம்மூர்த்திகளும், தேவர்களும் எதனை விரும்பிக் குற்றத்தையே குணமாகக் கொண்டாடி வணங்குகின்றார்கள்?
****************************************************
பாடல் எண் : 13
காயம் இரண்டுங் கலந்து கொதிக்கினும்
மாயங் கத்தூரி யதுமிகும் அவ்வழி
தேசங் கலந்தொரு தேவனென் றெண்ணினும்
ஈசன் உறவுக் கெதிரில்லை தானே.

பொழிப்புரை :   ``காயம், கத்தூரி`` என்னும் இரண்டையும் கலந்து கொதிக்க வைத்தாலும் அவ்விடத்து வியப்புண்டாகுமாறு கத்தூரியின் மணம் காயத்தின் மணத்தை அடக்கி மேற்பட்டு விளங்கும்; அதுபோல, உலகத்தார் சிவபெருமானை ஏனைத் தேவர் பலரோடு ஒப்ப வைத்து எண்ணினாலும், சிவபெருமானது திருவருளுக்கு ஏனைத் தேவரது அருள் ஈடாகாது; சிவனருளே மேம்பட்டு விளங்கும்.
****************************************************
பாடல் எண் : 14
அதிபதி செய்து அளகையர் வேந்தனை
நிதிபதி செய்த நிறைதவம் நோக்கி
அதுபதி யாதரித் தாக்கம தாக்கின்
இதுபதி கொள்ளென்றான் எம்பெரு மானே.

பொழிப்புரை :   அளகை நகரில் உள்ள இயக்கர்க்குத் தலைவனாகிய குபேரனை அவன் செய்த மிக்க தவத்தைக் கண்டு அவனை அந்நகருக்குத் தலைவனாகச் செய்து, அந்த அளகை நகரத்தைச் சுட்டி, `இதுதான் உனது நகர்; இதனை நீ நன்கு அறிந்து, செல்வத்தைப் பெருக்குவதாயின் ஏற்றுக்கொள்` என்று எங்கள் சிவபிரானே வழங்கினான்.
*************************************************

பாடல் எண் : 15
இதுபதி ஏலங் கமழ்பொழில் ஏழும்
முதுபதி செய்தவன் மூதறி வாளன்
விதுபதி செய்தவன் மெய்த்தவம் நோக்கி
அதுபதி யாக அமருகின் றானே.

பொழிப்புரை :  சந்திரனைத் தரித்துள்ளவனாகிய சிவபெருமான், இவ்வுலகத்தில் ஏலம் முதலியவற்றின் மணங் கமழ்கின்ற சோலையின் பெயராகிய `பொழில்` என்பதனையே தமக்கும் பெயராகக் கொண்ட ஏழு தீவுகளையும், இவ்வுலகிற்கு மேலே ஒன்றைவிட ஒன்று நூறு கோடி யோசனை விரிவுடையனவாகிய பல உலகங்களையும் தோற்றுவித்தவன்; அவ்வளவையும் ஆக்கிக் காத்து அழிக்குமாற்றை அறிந்த பேரறிவுடையவன். அவன் தன்னை நோக்கிச் செய்யும் மெய்த்தவத்தைக் கண்டு அத்தவத்தையே தனக்கு இடமாக விரும்பி வீற்றிருக்கின்றான்.
****************************************************
பாடல் எண் : 16

முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த
அடிகள் உறையும் அறனெறி நாடில்
இடியும் முழக்கமும் ஈசர் உருவம்
கடிமலர்க் குன்றம் அலையது தானே

பொழிப்புரை : உயிர்கட்கு இறப்பையும், பிறப்பையும் பண்டே அமைத்து வைத்த தலைவன் நிலைபெற்று நிற்கின்ற தவநெறியைக் கூறும் நூல்கள் யாவை என ஆராயின், அவை இடிபோலவும், முரசு முதலிய பறைகள் போலவும் அனைவரும் அறிய முழங்கும்; அவனது திருவுருவம் மலைபோலவும், கடல் போலவும் நன்கு விளங்கித் தோன்றும்.
****************************************************
பாடல் எண் : 17
மனத்தில் எழுகின்ற மாயநன் னாடன்
நினைத்த தறிவ னெனில்தாம் நினைக்கிலர்
எனக்கிறை அன்பிலன் என்பர் இறைவன்
பிழைக்கநின் றார்பக்கம் பேணிநின் றானே

பொழிப்புரை : கண்ணிற்குப் புலப்படாது கருத்தினுள்ளே நிற்கின்ற கள்வனாகிய சிவன், யாவர் எதனை எண்ணினும் அதனை அறிவான் என்று உண்மை நூல்கள் கூறவும், உலகர் அவனை நினைத்து அவன் அருளைப் பெறுகின்றார்களில்லை. நினையாமலே ஒவ்வொருவரும் `சிவன் எங்களுக்கு அருள் பண்ணவில்லை` என்று நொந்து கொள்கின்றார்கள். உண்மையில் சிவன், பிறவற்றை நினையாது தன்னை நினைப்பவர் பக்கமே விரும்பி நிற்கின்றான்.
****************************************************
பாடல் எண் : 18
வல்லவன் வன்னிக் கிறையிடை வாரணம்
நில்லென நிற்பித்த நீதியுள் ஈசனை
இல்லென வேண்டா இறையவர் தம்முதல்
அல்லும் பகலும் அருளுகின் றானே..

பொழிப்புரை :  உலகீர், எல்லாம் வல்லவனாய், கடல் நீரை, `தீக்கடவுளாகிய வடவையிடத்து அடங்கிநிற்க` என மிகுந்து வாராமல் நிற்கச்செய்த அருளாணை உடையவனாகிய சிவபெருமானை, நுண்ணுணர்வின்றி, `இல்லை` எனக் கூறிப்பிணங்குதல் வேண்டா; அவன் அயன், மால் முதலிய கடவுளர்க்கு முதல்வனாய் நின்று, எப்பொழுதும் உயிர்கட்கு நலம் புரிந்து வருகின்றான்.
****************************************************
பாடல் எண் : 19
போற்றிசைத் தும்புகழ்ந் தும்புனி தன்னடி
தேற்றுமின் என்றுஞ் சிவனடிக் கேசெல்ல
மாற்றிய தென்று மயலுற்ற சிந்தையை
மாற்றிநின் றார்வழி மன்னிநின் றானே.

பொழிப்புரை : `நமது மனமே நம்மை நன்னெறியினின்று மாற்றி விட்டது` என்பதை உணர்ந்து, மயக்கம் பொருந்திய அம்மனத்தை மாற்றித் தெளிந்தவரது வழியிற்றான் சிவபெருமான் மறைவின்றி விளங்கி நிற்கின்றான். அதனால், உலகீர், அவனது திருவடி நிழலில் செல்வதற்குப் பன்முறை வணக்கம் கூறியும், பலவாற்றால் புகழ்ந்து பாடியும் அவனது திருவடிகளை என்றும் தெளிந்து நின்மின்கள்.
****************************************************
பாடல் எண் : 20
காணநில் லாயடி யேற்குற வாருளர்
நாணநில் லேன்உன்னை நான்தழு விக்கொளக்
கோணநில் லாத குணத்தடி யார்மனத்
தாணிய னாகி அமர்ந்து நின் றானே.

பொழிப்புரை : `இறைவனே! நீ முன்முன் தோன்றினால் உன்னைத் தழுவிக்கொள்ளுதற்கு நான் சிறிதும் நாணமாட்டேன்; எனக்கு உன்னையன்றி உறவாவார் யாருளர்! யான் காணும்படி வெளி நின்றருள்` என்று மாறுபாடின்றி இரக்கின்ற பண்புடைய அடியவர் உள்ளத்திலே சிவன் அறையப்பட்ட ஆணிபோல்பவனாய் வீற்றிருக்கின்றான்.


Offline Anu

முதல்தந்திரம்-பதிகம் எண்:01. சிவபரத்துவம்


(பாடல்கள்:21-40/096) பகுதி-II

பாடல் எண் : 21
பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்
இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே.

பொழிப்புரை :சிவபெருமான் பிறப்பில்லாதவன்; சடை முடி உடையவன்; மிக்க அருளுடையவன்; ஒருகாலத்தும் அழிவில்லாதவன்; யாவர்க்கும் வேறுபாடின்றி நன்மையையே செய்து, அவரை என்றும் விட்டு நீங்காதவன். அதனால் அவனை வணங்குங்கள். வணங்கினால் என்றும் மறவாத தன்மையாகிய மெய்யுணர்வு தோன்றுவதாகும்.

****************************************************
பாடல் எண் : 22
தொடர்ந்துநின் றானைத் தொழுமின் தொழுதால்
படர்ந்துநின் றான்பரி பாரக முற்றும்
கடந்துநின் றான்கம லம்மலர் மேலே
புணர்ந்திருந் தானடிப் புண்ணிய மாமே..

பொழிப்புரை : யாவர்க்கும் இன்பம் அருளி, அவரை விடாது தொடர்ந்து நிற்கின்ற சிவனை வணங்குங்கள்; வணங்கினால் அவனது திருவடி ஞானம் உங்கட்குக் கிடைக்கும்.
****************************************************
பாடல் எண் : 23
சந்தி எனத்தக்க தாமரை வாள்முகத்
தந்தமில் ஈசன் அருள்நமக் கேயென்று
நந்தியை நாளும் வணங்கப் படும்அவர்
புந்தியி னுள்ளே புகுந்துநின் றானே..


பொழிப்புரை :   `அந்திவானம் என்று சொல்லத் தக்க நிறத்தையுடைய தாமரை (செந்தாமரை) மலர்போலும் ஒளி பொருந்திய முகத்தை உடைய, அழிவில்லாத சிவபெருமானது திருவருள் நமக்கே உரியதாகும்` என்ற உறுதியுடன் அவனை நாள்தோறும் வணங்க உடன்படும் அவரது உள்ளத்துள்ளே அவன் குடிபுகுந்து நிற்கின்றான்.

****************************************************

பாடல் எண் : 24
இணங்கிநின் றான்எங்கு மாகிநின் றானும்
பிணங்கிநின் றான்பின்முன் னாகிநின் றானும்
உணங்கிநின் றான்அம ராபதி நாதன்
வணங்கிநின் றார்க்கே வழித்துணை யாமே

பொழிப்புரை :  மாயோனும் சிவபெருமானை வழிபட உடன்பட்டு நின்றதல்லது வழிபட்டுக் காணவில்லை. படைப்புக் கடவுளாகிய பிரமன் வழிபடுதற்கு உடன்படவேயில்லை. அவர்கட்குப் பின் இந்திரன் காண இயலாதவனாய் வாட்டமுற்று நின்றான். ஆகவே, சிவபெருமான் தன்னை வணங்கி நிற்பவர்க்கே செல்கதித் துணையாய் நிற்கின்றான்.

****************************************************
பாடல் எண் : 25
வானப் பெருங்கொண்டல் மாலயன் வானவர்
ஊனப் பிறவி ஒழிக்கும் ஒருவனைக்
கானக் களிறு கதறப் பிளந்தஎங்
கோனைப் புகழுமின் கூடலு மாமே.

பொழிப்புரை : மேகம் போலும் நிறத்தையுடைய திருமால், பிரமன், மற்றைய தேவர் ஆகியோர்க்கும் இழிவான பிறவித் துன்பத்தை நீக்குகின்ற ஒப்பற்றவனும், யானையை உரித்த எங்கள் தலைவனும் ஆகிய சிவபெருமானைத் துதியுங்கள்; அதனால் அவனை அடைதலாகிய அப் பெரும்பேறும் கிடைக்கும்.
****************************************************
பாடல் எண் : 26
வானின் றழைக்கும் மழைபோல் இறைவனும்
தானின் றழைக்குங்கொல் என்று தயங்குவார்
ஆனின் றழைக்கு மதுபோல்என் நந்தியை
நானின் றழைப்பது ஞானங் கருதியே.

பொழிப்புரை :    `வானத்தில் நின்று முழங்குகின்ற மேகம் போல இறைவன் மேலுலகத்தில் நின்று தன் அடியவரை `வருக` என்று அழைப்பான் என்று ஆன்றோர் கூறுதல் உண்மையாய் இருக்குமோ` என்று சிலர் ஐயுறுவர். `எங்கள் சிவபெருமான் தன்னைப் பிரிந்த கன்றைத் தாய்ப்பசு கதறி அழைப்பது போலத் தன் அடியவரைத் தன்பால் கூவி அழைப்பவனே; (இதில் ஐயமில்லை. அவனைப் பலர் துதித்து அவற்றிற்கு ஈடாகப் பல பயன்களைப் பெற்றனர். ஆயினும்,) நான் அவனைத் துதிப்பது ஞானத்தைப் பெறுதற்பொருட்டே.
****************************************************
பாடல் எண் : 27
மண்ணகத் தான்ஒக்கும் வானகத்தான் ஒக்கும்
விண்ணகத் தான்ஒக்கும் வேதகத் தான்ஒக்கும்
பண்ணகத் தின்னிசை பாடலுற் றானுக்கே
கண்ணகத் தேநின்று காதலித் தேனே.

பொழிப்புரை :   மக்கள்முன் தோன்றி அருள் புரிதலால் மண்ணுலகத்தில் உள்ளவனைப் போலவும், தேவர்களுள் ஒருவனாய் நிற்றலால் வானுலகத்தில் உள்ளவனைப் போலவும், முத்தர்களுக்கு வீட்டுலகத்தில் நின்று அருள்புரிதலால் வீட்டுலகத்தில் உள்ளவன் போலவும், யாவரையும் தன்மயமாகச் செய்தலால் இரத குளிகை போல்பவன் போலவும் தோன்றுபவனாய், பண்களில் பொருந்திய இசையிடத்துள்ள விருப்பத்தால் தானே வீணையை இசைக்கின்ற சிவபிரான் பொருட்டு அவனது அருள் நோக்கில் நின்றே அவனிடத்து நான் அன்புசெய்கின்றேன்.
****************************************************
பாடல் எண் : 28
தேவர் பிரான்நம் பிரான் திசை பத்தையும்
மேவு பிரான்விரி நீருல கேழையும்
தாவு பிரான்தன்மை தானறி வாரில்லை
பாவு பிரான்அருள் பாடலு மாமே.

பொழிப்புரை :   சிவபெருமான் தேவர் பலர்க்கும் தலைவன்; நமக்கும் தலைவன்; உலகமுழுதும் நிறைந்து நிற்கும் நிறைவினன்; அவ்வாறு நிற்பினும் அவற்றை அகப்படுத்து அப்பால் நிற்கும் பெரியோன்; ஆதலின் அவனது தன்மையை முற்றும் அறிந்து துதிப்பவர் ஒருவரும் இல்லை. ஆயினும் எங்கும் நிறைந்த அவனது அருட்டன்மைகளை உயிர்கள் தாம் தாம் அறிந்தவாற்றால் பாடித் துதித்தலும் அமைவுடையதே.
*************************************************
பாடல் எண் : 29
பதிபல வாயது பண்டிவ் வுலகம்
விதிபல செய்தொன்றும் மெய்ம்மை உணரார்
துதிபல தோத்திரஞ் சொல்லவல் லாரும்
மதியிலர் நெஞ்சினுள் வாடுகின் றாரே.

பொழிப்புரை :  பண்டுதொட்டு இவ்வுலகத்தில் `கடவுள்` என்ற ஒன்று, பலவாகக் கொள்ளப்படுகின்றது. அவற்றின்கண் பலரும் பல விதிமுறை வழிபாடுகளைச் செய்தும் மெய்ம்மையைச் சிறிதும் உணர்கின்றார்களில்லை. அக்கடவுளரைத் துதிக்கின்ற பல தோத்திரப் பாடல்களைத் தாங்களே ஆக்க வல்லவர்களும் மெய்யறிவில்லாதவர் களாய் மனத்தில் துன்புறுகின்றார்கள்.
****************************************************
பாடல் எண் : 30

சாந்து கமழுங் கவரியின் கந்தம்போல்
வேந்தன் அமரர்க் கருளிய மெய்ந்நெறி
ஆர்ந்த சுடரன்ன ஆயிர நாமமும்
போந்தும் இருந்தும் புகழுகின் றேனே.

பொழிப்புரை : சந்தனத்தில் நின்று கமழ்கின்ற கத்தூரி மானின் மதமணம்போலச் சிவபெருமான், முத்தியுலகத்தில் உள்ள சிலர்க்கு அறிவுறுத்திய நெறியே மெய்ந்நெறி. அந்நெறி நின்றே பகலவனது பல கதிர்கள் போன்ற அவனது பல திருப்பெயர்களை, நான் நடக்கும் பொழுதும், இருக்கும்பொழுதும் துதித்துக் கிடக்கின்றேன்.

****************************************************
பாடல் எண் : 31
ஆற்றுகி லாவழி யாகும் இறைவனைப்
போற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில்
மேற்றிசைக் குங்கிழக் குத்திசை எட்டொடும்
ஆற்றுவன் அப்படி ஆட்டலும் ஆமே.

பொழிப்புரை : பிறிதொரு நெறியும் ஒப்பாக மாட்டாதபடி உயர்ந்து நிற்பதாய சிவநெறியாற் பெறப்படுபவனாகிய சிவபெருமானுக்கு வணக்கம் கூறுங்கள்; கூறிப் பலவாற்றால் புகழுங்கள்; புகழ்ந்தால், மேலுலகத்தையும் கீழுலகமாகிய நிலவுலகம் முழுதையும் உமக்கு அவன் வழங்குவான்; அவ்வுலகங்களை நீங்கள் உங்கள் விருப்பப்படி ஆளலாம்.
****************************************************
பாடல் எண் : 32
அப்பனை நந்தியை ஆரா அமுதினை
ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை
எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால்
அப்பரி சீசன் அருள்பெற லாமே.

பொழிப்புரை : எவ்வுயிர்க்கும் தந்தையும், `நந்தி` என்னும் பெயருடையவனும், தெவிட்டாத அமுதமாய் இனிப்பவனும், வள்ளல் பிறர் ஒருவரும் ஒப்பாகமாட்டாத பெருவள்ளலும், ஊழிகள் பல வற்றிலும் உலகிற்குத் தலைவனாய் நிற்பவனும் ஆகிய சிவபெருமானை யாதொரு முறைமையிலானும் துதியுங்கள்; துதித்தால், அம்முறைக்குத்தக அவனது அருளைப் பெறலாம்.
****************************************************
பாடல் எண் : 33
நானும்நின் றேத்துவன் நாடொறும் நந்தியைத்
தானும்நின் றான்தழல் தானொக்கு மேனியன்
வானில் நின் றார்மதி போல்உடல் உள்ளுவந்
தூனில்நின் றாங்கே உயிர்க்கின்ற வாறே.

பொழிப்புரை :சிவபெருமானை நானும் நாள்தோறும் மேற் கொண்டு நின்று துதிக்கின்றேன்; அவனும் நாள்தோறும் வானத்தில் பொருந்தி வளராநின்ற வளர்பிறைச் சந்திரன் போல எனது உடலில் மகிழ்ந்து மேன்மேல் விளங்கி நிற்கின்றான். தூயனாகிய அவன் எனது புலால் உடம்பில் நின்று உயிர்ப்பாய் வெளிப்படுகின்றவாறு வியப்பு.
****************************************************
பாடல் எண் : 34
பிதற்றொழி யேன்பெரி யான்அரி யானைப்
பிதற்றொழி யேன்பிற வாஉரு வானைப்
பிதற்றொழி யேன்எங்கள் பேர்நந்தி தன்னைப்
பிதற்றொழி யேன்பெரு மைத்தவன் நானே.

பொழிப்புரை : யாவரினும் பெரியவனும், யாவர்க்கும் அரியவனும், நால்வகைத் தோற்றத்துள் ஒன்றாகாது தன் இச்சையாற் கொள்ளப் படுவனவாய அருட்டிருமேனிகளை உடையவனும் ஆகிய எங்கள் சிவபெருமானைப் பிதற்றுதல் ஒருகாலும் ஒழியேன்; அதனால், நானே பெருமையை உடைய தவத்தை உடையவன்.
****************************************************
பாடல் எண் : 35
வாழ்த்தவல் லார்மனத் துள்ளுறு சோதியைத்
தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை
ஏத்தியும் எம்பெரு மான்என் றிறைஞ்சியும்
ஆத்தஞ்செய் தீசன் அருள்பெற லாமே.

பொழிப்புரை : தன்னை வாழ்த்த வல்லவரது மனத்தின் கண் ஒளியாயும், தூய்மையாயும், இன்பமாயும் விளங்குகின்ற சிவபெரு மானைத் துதித்தும், `எம் தலைவன்` என்று வணங்கியும் உறவு கொண்டால், அவனது திருவருளைப் பெறலாம்.
****************************************************
பாடல் எண் : 36
குறைந்தடைந் தீசன் குரைகழல் நாடும்
நிறைந்தடை செம்பொனின் நேரொளி ஒக்கும்
மறைஞ்சடஞ் செய்யாது வாழ்த்தவல் லார்க்குப்
புறஞ்சடஞ் செய்யான் புகுந்துநின் றானே.

பொழிப்புரை : கரவு கொண்டு வன்மை செய்யாது தன்னை வாழ்த்த வல்லவர்க்குச் சிவபெருமான் அவர்களது உள்ளத்தைப் புறக் கணியாது புகுந்து நிற்பான்; அதனால் அவனது மாற்று நிறைந்து அடையப்பட்ட செம்பொன்னிடத்துப் பொருந்திய ஒளியை ஒத்த, ஒலிக் கின்ற கழல் அணிந்த திருவடியைக் குறைவேண்டி அடைந்து பற்றுங்கள்.
****************************************************
பாடல் எண் : 37
சினஞ்செய்த நஞ்சுண்ட தேவர் பிரானைப்
புனஞ்செய்த நெஞ்சிடை போற்றவல் லார்க்குக்
கனஞ்செய்த வார்குழல் பாகனும் அங்கே
இனஞ்செய்த மான்போல் இணங்கிநின் றானே.

பொழிப்புரை : சீறி எழுந்த நஞ்சினை உண்டு தேவரைக் காத்த சிவபெருமானை, காடு வெட்டித் திருத்திய புனம்போன்ற உள்ளத்தில் வைத்துத் துதிக்க வல்லவர்கட்கு, உமையை ஒரு பாகத்தில் உடைய அவன் அவ்வுள்ளத்திலேயே மான் இனத்தோடு ஒப்பச் செய்யப் பட்ட பார்வை விலங்கு போல்பவனாய் அச்சந் தோன்றாது அன்பு தோன்றத் தக்க வடிவத்துடன் பொருந்தி நிற்பான்.
****************************************************
பாடல் எண் : 38
போயரன் தன்னைப் புகழ்வார் பெறுவது
நாயக னான்முடி செய்தது வேநல்கும்
மாயகஞ் சூழ்ந்து வரவல்ல ராகிலும்
வேயன தோளிக்கு வேந்தொன்றுந் தானே

பொழிப்புரை :  சிவபெருமானை அடைந்து துதிப்பவர்கள் பெறத் தக்க பயன், அவன் `நான்` என்னும் பசுபோதத்தை ஒழித்துத் தரும் சிவபோதமேயாம். அதனை அவன் தானே விரும்பிக் கொடுப்பான். அதுவன்றி, நிலையில்லாத அப்பசு போதத்தால் சில வற்றை விரும்பி அடையினும் அவற்றையும் அவன் உடன்பட்டுக் கொடுப்பான்.
****************************************************
பாடல் எண் : 39
அரனடி சொல்லி அரற்றி அழுது
பரனடி நாடியே பாவிப்ப நாளும்
உரனடி செய்தங் கொதுங்கவல் லார்க்கு
நிரனடி செய்து நிறைந்துநின் றானே.

பொழிப்புரை : சிவபெருமானது திருவடியையே துதித்து, அலறி, அழுது, அவற்றையே விரும்பி நாள்தோறும் நினைக்க வல்லவர்க்கு, அவன் தனது திருவடியை உறு துணையாகக் கொடுத்து, பின் அதிலே அடங்கி நிற்க வல்லார்க்கு அதனை இனிது விளங்கத் தந்து, அவரது அறிவில் நிறைந்து நிற்கின்றான்.
****************************************************
பாடல் எண் : 40
போற்றிஎன் பார்அம ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்அசு ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்மனி தர்புனி தன்அடி
போற்றிஎன் அன்புள் பொலியவைத் தேனே.

பொழிப்புரை :   தேவர், அசுரர், மக்கள் ஆகிய அனைவரும் சிவ பெருமானது திருவடிக்கு வணக்கம் கூறித் துதிப்பர். அதனால் நானும் அவ்வாறே செய்து அதனை என் அன்பினுள் நின்று ஒளிரச் செய்தேன்.


Offline Anu

முதல்தந்திரம்-பதிகம் எண்:01. சிவபரத்துவம்

(பாடல்கள்:41-56/56) பகுதி-III

பாடல் எண் : 41
விதிவழி அல்லதிவ் வேலை உலகம்
விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை
துதிவழி நித்தலுஞ் சோதிப் பிரானும்
பதிவழி காட்டும் பகலவ னாமே.

பொழிப்புரை :   கடல் சூழ்ந்த இவ்வுலகம் வினைவழியல்லது நடத்தல் இல்லை. இங்கு இன்பச்சூழலும் வினைவழித் தோன்றுத லல்லது வேறோராற்றான் இல்லை. ஆயினும் ஒளிமயமாகிய சிவபெருமான் தன்னை நாள்தோறும் துதிப்பவர்க்கு அத்துதி வழியாக முத்திக்கு வழிகாட்டும் பகலவனாய் நிற்பான்.
****************************************************
பாடல் எண் : 42
அந்திவண் ணாஅர னேசிவ னேஎன்று
சிந்தைசெய் வண்ணந் திருந்தடி யார்தொழ
முந்திவண் ணாமுதல் வாபர னேஎன்று
வந்திவ்வண் ணம்எம் மனம்புகுந் தானே.

பொழிப்புரை :   `அந்தி வானம்போலும் நிறம் உடையவனே, அரனே, சிவனே` என்று சிவபெருமானது திருப்பெயர்கள் பலவற்றைச் சொல்லி, தியானத்திற்கு உரிய அவனது வடிவத்தைச் செம்மை பெற்ற அடியார்கள் வணங்கும்பொழுது நானும், `எவ்வுருவிற்கும் முதலாய திருவுருவத்தை உடையவனே, தலைவனே, மேலானவனே` என்று துதித்து வணங்கினேன்; அப்பொழுதே ஞானமயனாகிய அவன் இவ்வாறு என் உள்ளத்திற் புகுந்துவிட்டான்.
*************************************************
பாடல் எண் : 43
மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்
நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்
பனையுள் இருந்த பருந்தது போல
நினையாத வர்க்கில்லை நீள்இன்பந் தானே.

பொழிப்புரை :  சிவபெருமானை ஒரோவொரு பொழுதாயினும் நினைப்பின், இல்லறத்தில் நிற்பவரும் பெரிய தவத்தவரேயாவர். துறவராயினார் சிவத்தியானத்திலே நிற்பாராயின், ஞானத்தில் நிற்பவராவர். இல்லறத்தவராயினும் துறவறத் தவராயினும், பனை மரத்தின் மேலே வாழ்ந்தும் அப்பனையின் பயனை அறிந்து நுகர மாட்டாத பருந்துபோலச் சிவனது திருவருளில் நின்றும் அதனை யறிந்து அழுந்தமாட்டாதவர்க்குப் பேரின்பம் உண்டாதல் இல்லை.
****************************************************
பாடல் எண் : 44

அடியார் பரவும் அமரர் பிரானை
முடியால் வணங்கி முதல்வனை முன்னிப்
படியார் அருளும் பரம்பரன் எந்தை
விடியா விளக்கென்று மேவிநின் றேனே.

பொழிப்புரை : மெய்யுணர்ந்தோரால் துதிக்கப்படு கின்றவனும், தேவர்கட்குத் தலைவனும், எப்பொருட்கும் முதல்வனும், இவ்வுலகத் திற்றானே நிரம்ப அருளைப் புரிபவனும், மேலானவற்றிற்கெல்லாம் மேலானவனும், எமக்குத் தந்தையாய் நிற்பவனும் ஆகிய சிவபெரு மானை நான் அணையா விளக்காகக் கொண்டு தலையால் வணங்கி, மனத்தால் நினைந்து அன்பு செய்து நிற்கின்றேன்..

****************************************************
பாடல் எண் : 45
பரைபசு பாசத்து நாதனை உள்ளி
உரைபசு பாசத் தொருங்கவல் லார்க்குத்
திரைபசு பாவச் செழுங்கடல் நீந்திக்
கரைபசு பாசங் கடந்தெய்த லாமே.

பொழிப்புரை : தன்னின் வேறாகாத பரையாகிய சத்திக்கும், தன்னின் வேறாகிய பசு பாசங்கட்கும் தலைவனாகிய சிவபெருமானை நினைந்து, உயிர்க்குரிய உடலிடத்தே சொல்லும் அந்நெறிப்பட்டு நிற்க வல்லவர்கட்கு, கட்டுற்ற உயிர்கட்கு உரித்தாகிய அலைமோதும் பிறவிப் பெருங்கடலை நீந்தி, மும்மலங்களும் கழன்று, பரமுத்தி யாகிய கரையை அடைதல் கூடும்.
****************************************************
பாடல் எண் : 46
சூடுவன் நெஞ்சிடை வைப்பன் பிரான்என்று
பாடுவன் பன்மலர் தூவிப் பணிந்துநின்
றாடுவன் ஆடி அமரர்பி ரான்என்று
நாடுவன் நானின் றறிவது தானே.

பொழிப்புரை : சிவபெருமானையே என் தலைவன் என்று நினைந்து அவனது திருவடியாகிய மலர்களை நான் தலையில் சூடிக்கொள்வேன்; நெஞ்சில் இருத்திக்கொள்வேன்; பாடித் துதிப்பேன்; பலவாகிய மலர்களைத் தூவிப் பணிந்துநின்று கூத்தாடு வேன்; தேவர்க்குத் தேவன் என்று கொள்வேன்; திருவருள் பெற்ற இந்நிலையில் நான் அறிவது இவ்வளவே.
****************************************************
பாடல் எண் : 47
அளவில் இளமையும் அந்தமும் ஈறும்
அளவியல் காலமும் நாலும் உணரில்
தளர்விலன் சங்கரன் தன்னடி யார்சொல்
அளவில் பெருமை அரிஅயற் காமே.

பொழிப்புரை :என்றும் ஒழியாது செய்கின்ற படைப்பும், காப்பும், அழிப்பும், அருளும் என்ற நான்கனையும் ஆராயுமிடத்தும் அவை அனைத்தையும் சோர்வின்றிச் செய்பவன் சிவபெருமான் ஒருவனே. ஆயினும், மெய்யுணர்ந்தோராகிய அவன்றன் அடியார்கள் சொல் கின்ற அளவில்லாத அவன் பெருமைகள் `மால், அயன்` என்னும் இருவர்க்கும் ஏற்ற பெற்றி பொருந்துவனவாம்.
****************************************************
பாடல் எண் : 48
ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும்
ஆதிக் கமலத் தலர்மிசை யானும்
சோதிக்கில் மூன்றுந் தொடர்ச்சியில் ஒன்றெனார்
பேதித் துலகம் பிணங்குகின் றார்களே.

பொழிப்புரை : யாவர்க்கும் முதல்வனாகிய சிவனும், அழகிய மணிவண்ணனாகிய மாயோனும், முதற்றொழிலாகிய படைப்பினைச் செய்யும் பிரமனும் என்கின்ற வடிவங்களை ஆராயின், அம்மூன்று வடிவங்களும் தொழில் இயைபில் ஒன்றே என்று அறியாமல்,`வேறு வேறு` என்று சொல்லி உலகத்தார் இகலி நிற்கின்றார்கள்; இஃதோர் அறியாமை இருந்தவாறு!
****************************************************
பாடல் எண் : 49
ஈசன் இருக்கும் இருவினைக் கப்புறம்
பீசம் உலகிற் பெருந்தெய்வ மானது
ஈசன் அதுஇது என்பார் நினைப்பிலார்
தூசு பிடித்தவர் தூரறிந் தார்களே.

பொழிப்புரை : வினையின் நீங்கி நிற்பவன் சிவபெருமான் ஒருவனே. அதற்கு உலகில் திருக்கோயில்களில், காணாத அரு வினுக்கும் காண்கின்ற உருவினுக்கும் (தி.8 பெரியபுராணம். சாக்கிய. 8) முதலாயுள்ள அவனது இலிங்கத் திருமேனி நடுவிடத்தில் விளங்க, ஏனைத் தேவர் பலரும் அதனைச் சூழ்ந்து போற்றி நிற்றலும், அத்தேவர் நடுவிடத்தில் விளங்கும் கோட்டங்களில் அஃது அவ்வாறு நில்லாமையுமே சான்றாகும். காட்சியானே உணரப்படுகின்ற இதனையும் நோக்காது, முதற்கடவுள் `அது` என்றும் `இது` என்றும் பிற தெய்வங்களைச் சுட்டிச் சொல்லித் தம்முட் சிலர் கலாய்ப்பாராயின், அவர் பகுத்துணர்வில்லாதவரே யாவர். தூர்ப்புக்களையே பொருளென்று கண்டவர்கள் அத்தூர்ப்பைத்தான் அறிவார்கள்; அவற்றை அகற்றி உள்ளே உள்ள பொருளை அவர்கள் எவ்வாறு கண்டறிவார்கள்!
****************************************************
பாடல் எண் : 50
சிவன்முதல் மூவரோ டைவர் சிறந்த
அவைமுதல் ஆறிரண் டொன்றொடொன் றாகும்
அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச்
சவைமுதற் சங்கரன் தன்பெயர் தானே.

பொழிப்புரை :  `சிவன், சதாசிவன், மகேசுரன்` என மூன்றாகவும், `சதாசிவன், மகேசுரன், உருத்திரன், மால், அயன்` என ஐந்தாகவும், தொகுத்தும் வகுத்தும் சொல்லப்படுகின்றனர். நிலைகளே, `சிவம், சத்தி, நாதம், விந்து, சதாசிவன், மகேசுரன், மால், அயன்` என ஒன்பதாக விரித்துச் சொல்லப்படும். அந்நிலைகள் எல்லாம், முதல்களாகிய விந்து நாதங்களினின்றே தோன்றுதலால், யாவும் அத்தொகுதித் தலைவனாகிய சிவபெருமான் ஒருவனது நிலை வேறுபாடுகளேயன்றி, ஒவ்வொன்றும் ஒவ்வொரு கடவுளன்று.
****************************************************
பாடல் எண் : 51
பயன்அறிந் தவ்வழி எண்ணும் அளவில்
அயனொடு மால்நமக் கன்னியம் இல்லை
நயனங்கள் மூன்றுடை நந்தி தமராம்
வயனம் பெறுவீர்அவ் வானவ ராலே.


பொழிப்புரை : மேற்கூறிய நிலைகளால் உயிர்கட்கு விளையும் பயன்களை அறிந்து அவற்றை முறைப்படுத்தி எண்ணுங்கால் சீகண்டவுருத்திரர்க்குக் கீழ் நிற்கும் `அயன், மால்` என்பவர் தாமும் நமக்கு அயலாவாரல்லர்; அதனால் நீவிர் அக்கடவுளராலும் சிவனுக்கு அடியவராகும் வகையைப் பெற முயல்வீராக.
****************************************************
பாடல் எண் : 52
ஓலக்கஞ் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்
பாலொத்த மேனி பணிந்தடி யேன்தொழ
மாலுக்கும் ஆதிப் பிரமற்கும் ஒப்புநீ
ஞாலத்து நம்மடி நல்கிடென் றானே.

பொழிப்புரை :  எண்ணில்லாத தேவர்கள் திருவோலக்கத்தில் சூழ்ந்து பணிகின்ற சிவபிரானது திருமேனியை அடியேனும் பணிந்து கும்பிட, அவன், `நீ திருமாலையும், படைப்புக் கடவுளாகிய பிரமனையும் நிகர்த்தவன்; ஆதலின், நிலவுலகத்திற்கு நமது திருவருட் பெருமையை உணர்த்து` என ஆணை தந்தருளினான்.
****************************************************
பாடல் எண் : 53
வானவர் என்றும் மனிதர்இவர் என்றுந்
தேனமர் கொன்றைச் சிவனருள் அல்லது
தானமர்ந் தோருந் தனித்தெய்வம் மற்றில்லை
ஊனமர்ந் தோரை உணர்வது தானே.

பொழிப்புரை : உடம்போடு கூடி நிற்பவருள் சிலரை`இவர் தேவர்` என்றும், சிலரை, (இவர் மக்கள்) என்றும் உணர நிற்கும் நிலைமைகள் எல்லாம் சிவபெருமானது செயலால் அமைவனவன்றித் தானாகவே அவ்வாறு நிற்கும் தனித் தெய்வம் இல்லை..
****************************************************
பாடல் எண் : 54
சோதித்த பேரொளி மூன்றைந் தெனநின்ற
ஆதிக்கண் ஆவ தறிகிலர் ஆதர்கள்
நீதிக்கண் ஈசன் நெடுமால் அயன்என்று
பேதித் தவரைப் பிதற்றுகின் றாரே.

பொழிப்புரை :   சிவதன்ம நூலுள், `உருத்திரன், மால் அயன்` என்னும் மூவரும், மெய்யுணர்ந்தோர் ஆய்ந்துணர்ந்த பேரொளியாகிய அநாதிப்பொருள் ஒன்றே மூன்றாயும், ஐவந்தாயும் நின்ற முதனிலைகளில் அமைவனவாதலை அந்நூலை அறியாதார் அறிய மாட்டார். அதனால், அவர் உலகியல் நூலே பற்றி அவரை வேறுவேறு கடவுளாக்கி அவருள் ஒருவராகப் புகழ்ந்தும், ஏனையிருவரையும் இகழ்ந்தும் திரிகின்றனர்.
****************************************************
பாடல் எண் : 55
பரத்திலே ஒன்றாய்உள் ளாய்ப்புற மாக
வரத்தினுள் மாயவ னாய்அய னாகித்
தரத்தினுள் தான்பல தன்மைய னாகிக்
கரத்தினுள் நின்று கழிவுசெய் தானே.

பொழிப்புரை :   சிவபெருமான் ஒன்றோடும் ஒட்டாது தனித்து நிற்கும் மேல் நிலையில் ஒருவனேயாய், அந்நிலையினின்று வருதலாகிய பொதுநிலையில் எல்லாப் பொருட்கும் உள்ளும், புறம்பும் நிறைந்து நிற்பவனாய் மால், அயன் முதலிய ஒன்பது நிலைகளை உடையவனாகியும், உயிர்களின் தகுதி வேறுபாட்டிற்கேற் மற்றும் பல்வேறு நிலைகளையுடையனாகியும் இவ்வாறெல்லாம் தனது திருவருள் ஒன்றிலே நின்று உயிர்கட்குப் பாசத்தைப் போக்கியருளுகின்றான்.
****************************************************
பாடல் எண் : 56
தானொரு கூறு சதாசிவன் எம்இறை
வானொரு கூறு மருவியும் அங்குளான்
கோனொரு கூறுடல் உள்நின் றுயிர்க்கின்ற
தானொரு கூறு சலமய னாமே.

பொழிப்புரை :    எம் கடவுளாகிய சிவபெருமான் தானே ஒரு கூற்றில் சதாசிவ மூர்த்தியாய் `சாந்தியதீதை` என்னும் ஒரு கலையுள் நின்று அதனையே தன்னிடமாகக் கொண்டும் இருக்கின்றான். மற்றொரு கூற்றில் உயிர்க்குயிராய் நின்று உணர்த்து வதாகிய இலய சிவனாயும் நிற்கின்றான். பிறிதொரு கூற்றில் பாசங்களின் வழிநின்று நடத்தும் மறைப்பாற்றலாயும் உள்ளான். வேறொரு கூற்றில் பாசத்தை நீக்கித் தன்னைத் தரும் அருளாற்றலாயும் இருப்பன்.


Offline Anu

முதல்தந்திரம்-பதிகம்
எண்:02. வேதச் சிறப்பு (பாடல்கள்:6)

பாடல் எண் : 01
வேதத்தை விட்ட அறம்இல்லை வேதத்தின்
ஓதத் தகும்அறம் எல்லாம் உளதர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடுபெற் றார்களே.

பொழிப்புரை : அறவேட்கை உடையேம்` எனத் தம்மைப் பற்றிச் சொல்லிக்கொள்வார் சிலர், `வேதத்திற் சொல்லப்படாத அறமும் உண்டு` எனக் கூறுவராயினும், அஃது உண்மையன்று; வேதத்திற் சொல்லப்படாத அறம் யாதொன்றும் இல்லை. மக்கள் ஓதி உணர வேண்டுவனவாய எல்லா அறங்களும் வேதத்திலே உள்ளன. அதனால், அறிவுடையோர் பலரும் வேதத்தை மறுத்துச் செய்யும் சொற்போரை விடுத்து எல்லாச் சொல்வளமும், பொருள்வளமும் உடைய வேதத்தை ஓதியே வீடடையும் நெறியைப் பெற்றார்கள்.
****************************************************
பாடல் எண் : 02

வேதம் உரைத்தானும் வேதிய னாகிலன்
வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட
வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்கா
வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே.

பொழிப்புரை : வேதத்தை எப்பொழுதும் ஓதுபவனாகிய பிரமனும் வேதத்தைச் செய்தவனாயினானில்லை. ஏனெனில், வேதத்தைச் செய்தவன் அதனைச் செய்தது, அப்பிரமன் அதனை ஓதி அறிவு விளங்கப் பெறுதற் பொருட்டும், மற்றும் கன்மத்தில் விருப்பம் உடைய வர்க்கு வேள்விகளை உளவாக்குதற்பொருட்டும், மெய் யுணர்வு பெற விரும்புவோர்க்கு மெய்ப்பொருளை உணர்த்தற் பொருட்டுமாம்.


****************************************************
பாடல் எண் : 03
இருக்குரு வாம்எழில் வேதத்தி னுள்ளே
உருக்குணர் வாயுணர் வேதத்துள் ஓங்கி
வெருக்குரு வாகிய வேதியர் சொல்லுங்
கருக்குரு வாய்நின்ற கண்ணனு மாமே.

பொழிப்புரை : பூனையை ஒத்த புறத்தோற்றம் உடைய வேதியர்கள் சொல்கின்ற, பிறப்பை உடைய ஆசிரியனாகிய மாயோன் றானும், மந்திரவடிவாகிய எழுச்சியான ஓசையை உடைய கன்ம காண்டத்துள் உள்ளத்தை உருக்குகின்ற அன்புருவாயும், ஞான காண்டத்துள் கேள்வி, ஆய்வு முதலியவற்றால் துணியப்படும் மெய்ப் பொருளாயும் உயர்ந்து நிற்பவனாவனோ? ஆகான்.
****************************************************
பாடல் எண் : 04
திருநெறி யாவது சித்தசித் தன்றிப்
பெருநெறி யாய பிரானை நினைந்து
குருநெறி யாஞ்சிவ மாநெறி கூடும்
ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே.

பொழிப்புரை : வீட்டு நெறியாவது, ஞானாசிரியன்வழி உளதாவதாய், சித்தும், அசித்தமாய் இருதிறப்பட்டு நிற்கும் உலகத்தை நினையாமல், அவை அனைத்தையும் கடந்து நிற்கும் சிவபெருமான் ஒருவனையே நினைந்து அவனாந் தன்மையைப் பெறுகின்ற ஒரு நெறியே` என வேத முடிவு ஒருதலையாக அறுதியிட்டுக் கூறும்.
****************************************************
பாடல் எண் : 05
ஆறங்க மாய்வரு மம்மறை ஓதியைக்
கூறங்க மாகக் குணம்பயில் வாரில்லை
வேறங்க மாக விளைவுசெய் தப்புறம்
பேறங்க மாகப் பெருக்குகின் றாரே.

பொழிப்புரை : ஆறு அங்கங்களை உடையதாய், மேற்றொட்டு எழுதாக் கிளவியாய் வருகின்ற அவ்வேதத்தைச் செய்த சிவபெரு மானை அதன் முடிவில் விளங்குபவனாக உணர்ந்து அவனது அருட் குணங்களைப் போற்றுபவர் உலகருள் ஒருவரும் இல்லை; அவர் பலரும் வேறு எவ்வெவற்றையோ தங்கள் கடனாக நினைந்து, அவற் றால் சில பேறுகளை உளவாக்கிக் கொண்டு அவற்றால் கிடைக்கின்ற பயன் மேலும் மேலும் வரும் பிறப்பேயாக அவற்றைப் பெருக்கி உழல்கின்றார்கள்
****************************************************
பாடல் எண் : 06
பாட்டும் ஒலியும் பரகுங் கணிகையர்
ஆட்டும் அறாத அவனியின் மாட்டாதார்
வேட்டு விருப்பார் விரதமில் லாதவர்
ஈட்டும் இடஞ்சென் றிகலுற் றாரே.

பொழிப்புரை : இயலும், இசையும், நாடகமும் ஆகிய கலை களின் பயனை அறியாவிடினும் அவற்றை இடையறாது நிகழ்த்தி நிற்கின்ற இவ்வுலகில், வேதத்தை இடையறாது ஓதுகின்ற வேதியரும் அத் தன்மைரேயாய்ப் பொருள் பெறவிரும்பி, பொருளாசை நிறைந்த நெறி முறை இல்லாத அக்கலைவல்லுநர் பொருள் ஈட்டும் இடத்திற் சென்று அவரோடு மாறுகொண்டு நிற்கின்றனர்.


Offline Anu

முதல்தந்திரம்-பதிகம்

எண்:03. ஆகமச் சிறப்பு (பாடல்கள்:10)


பாடல் எண் : 01
அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன்
அஞ்சொ டிருபத்து மூன்றுள ஆகமம்
அஞ்சலி கூப்பி அறுபத் தறுவரும்
அஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்டதே.

பொழிப்புரை : சிவபெருமான் அருளிச்செய்த ஆகமங்கள் இருபத்தெட்டு உள்ளன. அவை, அறுபத்தாறுபேர் அப்பெருமானை வணங்கி அவனது மேன்முகமாகிய ஈசான முகத்தில் அரிய கருத்துக்களைக் கேட்டுணர்ந்தனவாம்.
*************************************************
பாடல் எண் : 02
அண்ணல் அருளால் அருளுஞ் சிவாகமம்
எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்
எண்ணிநின் றப்பொருள் ஏத்துவன் நானே.

பொழிப்புரை : சிவபெருமான் உயிர்கள்மேல் வைத்த அருள் காரணமாக அருளிச்செய்த ஆகமங்களை எண்ணாற்கூறின், `இருபத்தெட்டு` என்னும் அளவில் நில்லாமல், அளவின்றியுள்ளன. அவைகளால் மேற்கூறிய அறுபத்தறுவரும், பிறரும் சிவபெருமானது மேன்மையைத் தத்தமக்கியைந்தவாற்றால் விளங்க உரைத்தார்கள். அவ்வாறு உரைக்கப்பட்ட அளவிலே நானும் கேட்டுச் சிந்தித்துத் துதிக்கத் தொடங்கினேன்.
****************************************************
பாடல் எண் : 03
அண்ணல் அருளால் அருளுந்திவ் யாகமம்
விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரி
தெண்ணில் எழுபது கோடிநூ றாயிரம்
எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே.

பொழிப்புரை : சிவபெருமான் தனது திருவருள் காரணமாக அருளிச்செய்த மேலான ஆகமங்கள் வானத்தில் உள்ள தேவர்களாலும் அறிதற்கரிய பொருள்களை உடையன. அதனால், அவை அளவிறந்து கிடப்பினும், உயிர்கட்குப் பயன்படுதல் அரிது.
****************************************************
பாடல் எண் : 04
பரனாய்ப் பராபரங் காட்டி உலகில்
தரனாய்ச் சிவதன்மந் தானேசொல் காலத்
தரனாய் அமரர்கள் அற்சிக்கும் நந்தி
உரனாகி ஆகமம் ஓங்கிநின் றானே.

பொழிப்புரை : சிவலோகத்தில் மேலான சதாசிவ மூர்த்தியாய் இருந்து ஆகமங்களைப் பிரணவர் முதலியோர்க்கு உணர்த்தியருளிய சிவபெருமான், நிலவுலகிற்கு ஏற்ப அவற்றை உணர்த்தியருளும் பொழுது சீகண்ட பரமசிவனாய் இருந்து உணர்த்த, தேவர்களால் வணங்கப்படுகின்ற நந்தி பெருமான் மெய்யுணர்வுடையராய் அவை இனிது விளங்கப்பெற்றார்.
****************************************************
பாடல் எண் : 05
சிவமாம் பரத்தினிற் சத்தி சதாசிவம்
உவமா மகேசர் உருத்திர தேவர்
தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற
நவஆ கமம்எங்கள் நந்திபெற் றானே..

பொழிப்புரை : தடத்த நிலைகளுள் மேலானதாகிய சிவம் நாத தத்துவத்தில் நின்று, தன்னிடத்தினின்று வெளிப்பட்டு விந்து தத்து வத்தில் நிற்கும் சத்திக்கு உணர்த்த, அச்சத்தி தன்னினின்றும் தோன்றிய சதாசிவர்க்கு உணர்த்த, அவர் தம்மிடத்தினின்றுந் தோன்றிய சம்புபட்ச மகேசுரரோடு ஒத்த அணுபட்ச மகேசுரராகிய மந்திர மகேசுரர்க்கு உணர்த்த, அவர் உருத்திரதேவர்க்கும், அவர் தவத் திருமாலுக்கும், அவர் பிரமேசருக்கும் உணர்த்த இவ்வாறு சுத்தமாயையில் உள்ள தலைவர்கள் ஒருவரிடமிருந்து ஒருவராகப் பெற்றுப் பயனடைந்த ஆகமங்களில் சிறப்பாக ஒன்பதை எங்கள் ஆசிரியராகிய நந்தி பெருமான் மேற்குறித்தவாறு சீகண்ட பரமசிவன்பால் பெற்றார்.
****************************************************
பாடல் எண் : 06
பெற்றநல் ஆகமம் காரணம் காமிகம்
உற்றநல் வீரம் உயர்சிந்தம் வாதுளம்
மற்றவ் வியாமள மாகுங்கா லோத்தரம்
துற்றநற் சுப்பிரம் சொல்லும் மகுடமே.

பொழிப்புரை : மேற்கூறியவாறு நந்திபெருமான் சீகண்டரிடம் சிறப்பாகப்பெற்ற ஒன்பது ஆகமங்கள், `1. காரணம், 2. காமிகம், 3. வீரம், 4. சிந்தியம், 5. வாதுளம், 6 ... ... 7. ... ... 8 சுப்பிரபேதம், 9. மகுடம்` என்பன.
****************************************************
பாடல் எண் : 07
அண்ணல் அருளால் அருளுஞ் சிவாகமம்
எண்ணிலி கோடி தொகுத்திடு மாயினும்
அண்ணல் அறைந்த அறிவறி யாவிடில்
எண்ணிலி கோடியும் நீர்மேல் எழுத்தே.
 
பொழிப்புரை : சிவபெருமான் தனது திருவருள் காரணமாக அருளிச்செய்த ஆகமங்கள் அளவின்றி இருப்பினும், அவற்றில் சொல்லப்பட்ட பொருளை மக்கள் அறிய மாட்டாராயின், அவை அனைத்தும் அவர்கட்குப் பயனில்லாதனவேயாய் விடும்.
****************************************************
பாடல் எண் : 08
மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்
றேரியு நின்றங் கிளைக்கின்ற காலத்து
ஆரிய மும்தமி ழும்உட னேசொலிக்
காரிகை யார்க்குக் கருணைசெய் தானே.

பொழிப்புரை : பெருகற்காலத்தும், சிறுகற்காலத்தும் நிறைந்த மெய்யுணர்விருக்கவும் அதனை நோக்காது புலனுணர்வே மிகப்பெற்று மக்கள் மெலிவுறுகின்ற காலத்து அம்மெலிவு நீங்குமாறு சிவபெருமான் ஆரியம், தமிழ்` என்னும் இருமொழிகளை உமா தேவியார்க்கு ஒருங்கு சொல்லி உலகம் உய்யத் திருவருள் செய்தான்.
****************************************************
பாடல் எண் : 09
அவிழ்க்கின்ற வாறும் அதுகட்டு மாறுஞ்
சிமிழ்த்தலைப் பட்டுயிர் போகின்ற வாறும்
தமிழ்ச்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலு மாமே.

பொழிப்புரை : சிவபெருமான் உயிர்களைப் பாசத்தளையினின்றும் விடுவிக்கின்ற முறையையும், பின் அவற்றை அன்பு வாயிலாகத் தன்னிடத்தே நிலைபெறுவிக்கின்ற முறையையும், அங்ஙனம் நிலைபெறுவித்தற்கண் உயிர் தனது பண்டைப் பயிற்சி வயத்தால் பாசத்திலே பொருந்தி அலைவுறுகின்ற முறையையும், `தமிழ்மொழி, வடமொழி` என்னும் இருமொழியுமே ஒருபடித்தாக உணர்த்தும்; அதனால், அவற்றுள் யாதொன்றையாயினும் முறைப்படி உணர வல்லார்க்குத் தத்துவ ஞானத்தையேயன்றிச் சிவஞானத்தைப் பெறுதலுங் கூடுவதாம்.
****************************************************
பாடல் எண் : 10
பண்டித ராவார் பதினெட்டுப் பாடையும்
கண்டவர் கூறுங் கருத்தறி வார்என்க
பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடைருளி
அண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே. 

பொழிப்புரை : கற்றவர் போற்றுகின்ற பதினெண்மொழிகளும் சிவபிரான் தனது அறத்தைப் பொதுவாகவும், சிறப்பாகவும் உணர்த்தற்கு அமைத்த வாயிலே. அதனால், `கற்றவர்` எனப்படுவார், பல மொழிகளையும் உணர்ந்து, அவற்றில் சொல்லியுள்ள முடிந்த பொருளை உணர்ந்தவரே என அறிக.


Offline Anu

பதிகம் எண் :4. உபதேசம்(பாடல்கள்:01-15/30) பகுதி:I


பாடல் எண் : 01
விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின் றுருக்கியொ ரொப்பிலா ஆனந்தக்
கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே.

பொழிப்புரை : மேல், ``அண்ட முதலான்`` எனக் குறிக்கப்பட்ட, அனைத்துலகிற்கும் முதல்வனாகிய சிவபெருமான், முன்னாளில், மேல்நிலையினின்றும் இறங்கி, என் வினைக்கேற்ற வகைகளாகத் தனது உண்மை நிலையை மாற்றிக்கொண்டு, கீழ்நிலையில் நின்ற தனது சத்தியை எனக்குப் பெருங்காவலாக அமைத்து நடாத்தித் தனது ஒப்பற்ற தனிப் பேரின்பத்தைத் தரும் அருள் நோக்கத்தை இன்று எனக்கு அளித்து, என் உள்ளத்தில் நீங்காது நின்று, அதனை அன்பினால் கசிந்து கசிந்து உருகப்பண்ணி, எனது மலம் முழுவதையும் பற்றற நீக்கினான்.
****************************************************
பாடல் எண் : 02

களிம்பறுத் தான்எங்கள் கண்ணுதல் நந்தி
களிம்பறுத் தான்அருட் கண்விழிப் பித்துக்
களிம்பணு காத கதிரொளி காட்டிப்
பளிங்கிற் பவளம் பதித்தான் பதியே.

பொழிப்புரை : என் மலத்தைப் பற்றற நீக்கியவனாகிய எங்கள் சிவபெருமான் நந்தி தேவரே. அவர் மேற்கூறியவாறு அருட்கண்ணை எனக்குத் திறப்பித்து ஆணவ மலமாகிய களிம்பை அறுத்து, அக் களிம்பு அணுக ஒண்ணாத சிவமாகிய மாற்றொளி மிக்க பொன்னை உணர்வித்து, பளிங்கினிடத்துப் பவளத்தைப் பதித்தாற் போல்வதொரு செயலைச் செய்தார். அவர் பதிப்பொருளேயன்றி வேறல்லர்.

****************************************************
பாடல் எண் : 03
பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போற்பசு பாசம் அனாதி
பதியினைச் சென்றணு காபசு பாசம்
பதியணு கிற்பசு பாசம்நில் லாவே.

பொழிப்புரை : (பதி ஒன்றேயன்றோ என்றும் உள்ளது? ஏனைய பசு, பாசம் இரண்டும் எவ்வாறு தோன்றின? என்று ஐயுறும் மாணாக்கரைக் குறித்து,) `பதி, பசு, பாசம்` என்று சொல்லப்படுகின்ற மூன்று பொருள்களில் பதி தோற்றம் இன்றி என்றும் உள்ள பொருளாதல் போலவே, ஏனைப் பசுவும், பாசமும் தோற்றம் இன்றி என்றும் உள்ள பொருள்களாம். (இவ்வுண்மை அறியாதார் பலவாறு கூறி மலைவர் என்பது கருத்து) பாசங்கள் பசுவைப் பற்றுமேயன்றிப் பதியினிடத்து அணுகமாட்டா. பசு, பதியினிடத்து அணுகும்; அவ்வாறு அணுகும் பொழுது அதனைப் பற்றியுள்ள பாசங்கள் அதனைப் பற்றிநில்லாது விட்டு நீங்கும். (என்று அருளிச்செய்தார்)
****************************************************
பாடல் எண் : 04
வேயின் எழுங்கனல் போலேஇம் மெய்யெனுங்
கோயி லிருந்து குடிகொண்ட கோன்நந்தி
தாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னும்
தோயம தாய்எழுஞ் சூரிய னாமே.

பொழிப்புரை : கால வழிப்பட்டு, `குழவி, இளமை, முதுமை` என்னும் மாற்றங்களை உடையதாய் நிலையற்றதான இவ்வுடம்பு என்கின்ற கோயிலிலே நீங்காது குடிகொண்டு மறைந்திருக்கின்ற தலை வனாகிய சிவன், மூங்கிலில் மறைந்து நின்ற தீ, தான் வெளிப்படுங் காலத்து வெளிப்பட்டு விளங்குதல்போல, ஆன்மாவின் பக்குவ காலத்தில் மும்மல இருளை நீக்கி எழுகின்ற சூரியனாய் வெளிப்பட்டு விளங்குவான். அப்பொழுது அவன் தாயன்பினும் மிக்க பேரருளாகிய வெள்ளமாயும் நின்று பேரின்பத்தைத் தருவான்.
****************************************************
பாடல் எண் : 05
சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவ்வே
சூரிய காந்தமும் சூழ்பஞ்சைச் சுட்டிடா
சூரியன் சந்நிதி யிற்சுடு மாறுபோல்
ஆரியன் தோற்றமுன் அற்ற மலங்களே.

பொழிப்புரை : `பதியினைப்போல் அனாதியே` என மேல் விளக்கப்பட்ட பசுக்களும், பாசங்களும் முறையே சூரியகாந்தக் கற்களும், அவற்றை மூடியுள்ள பஞ்சும் போல்வனவாம். அவற்றுள், சூரிய காந்தக் கற்கள் தனியே நிற்கும் பொழுது தம்மை மூடியுள்ள பஞ்சுகளைச் சுடமாட்டா. அது போலப் பசுக்கள் தனியே நின்று தம்மைப் பிணித்துள்ள பாசங்களை நீக்கமாட்டா. ஆயினும், அச்சூரிய காந்தக் கற்கள் சூரியன் வந்தபொழுது அதன் கிரணத்தைப் பெற்றுத் தம்மை மூடியுள்ள பஞ்சுகளைச் சுட்டெரிக்குமாறுபோல, சிவன் ஞானாசிரியனாய் வந்த பொழுது பசுக்கள் அக்குருவின் அருளைப் பெற்றுத் தம்மைப் பிணித்துள்ள பாசங்களை அகன்றொழியச் செய்யும்.
****************************************************
பாடல் எண் : 06
மலங்களைந் தாமென மாற்றி அருளித்
தலங்களைந் தான்நற் சதாசிவ மான
புலங்களைந் தான்அப் பொதுவினுள் நந்தி
நலங்களைந் தான்உள் நயந்தான் அறிந்தே.

பொழிப்புரை : யாவரும் புகழும் அம்பலத்துள் ஆடுவோனாகிய சிவபெருமான், எனது பக்குவத்தை அறிந்து எனக்கு ஐந்து மலங்களையும் போக்கித் தன்னைத் தந்து, சுத்த தத்துவங்கள் ஐந்தினாலும் தான் ஐந்தொழில்புரிவோனாய் நிற்கும் கருத்தை என்னளவில் தவிர்த்தான். தவிர்த்து, நன்மையைத் தரும் திருவைந்தெழுத்தால் என் உள்ளத்தில் நீங்காது விரும்பி நின்றான்.
****************************************************
பாடல் எண் : 07
அறிவைம் புலனுட னேநான் றதாகி
நெறியறி யாதுற்ற நீராழம் போல
அறிவறி வுள்ளே அழிந்தது போலக்
குறியறி விப்பான் குருபரனாமே.

பொழிப்புரை : (பாசத்தில் அகப்பட்ட உயிரினது அறிவு தானே அதனின்றும் விடுபடமாட்டாதோ எனின், மாட்டாது. ஏன் எனின், ஆணவமாகிய இயற்கைப் பாசத்தின் வழிவந்து பற்றியுள்ள மாயையின் காரியமாகிய பொறி, புலன் முதலிய செயற்கைப் பாசத்தில் உயிரினது அறிவு கட்டுண்டு, நீரின் ஆழத்தில் அமிழ்ந்து கரை ஏற அறியாத நிலைமைபோல, அவற்றினின்றும் விடுபடும் நெறியை அறியாது இடர்ப்படும். ஆகவே, அதற்கு அந்நெறியை அறிவிப்போன் நீராழத்தினின்றும் எடுத்துக் கரையேற்ற வல்லவன் போல்பவனாய், ஆசிரியர்க்குள் மேலானவனாகிய ஞானாசிரியனே.
****************************************************
பாடல் எண் : 08
ஆமேவு பால்நீர் பிரிக்கின்ற அன்னம்போல்
தாமே தனிமன்றில் தன்னந் தனிநித்தம்
தீமேவு பல்கர ணங்களுள் உற்றன
தாமேழ் பிறப்பெரி சார்ந்தவித் தாமே.

பொழிப்புரை : தீமை பொருந்திய பல கருவிகளுடன் ஒட்டிக் கிடக்கின்ற வினைகளைக் குருபரனது அருள் ஆவின்பாலில் கலந்து நின்ற நீரை அன்னப் பறவை பிரிப்பது போலப் பிரித்து அழித்தலால், பிறப்பிற்கு ஏதுவாகிய அவ்வினைகள் முழுதும் எரி சேர்ந்த வித்துப்போலக் கெட்டொழியும்.
****************************************************
பாடல் எண் : 09
வித்தைக் கெடுத்து வியாக்கிரத் தேமிகச்
சுத்தத் துரியம் பிறந்து துடக்கற
ஒத்துப் புலனுயிர் ஒன்றாய் உடம்பொடு
செத்திட் டிருப்பர் சிவயோகி யார்களே.

பொழிப்புரை : குருவருளால் சிவயோகம் கைவரப் பெற் றவர்கள், பிறவிக்கு வித்தாகிய கிடைவினையை (சஞ்சித கருமத்தை) முற்கூறியபடி அழித்து, குரு அருளிச்செய்த உபதேச மொழியிலே உறைத்து நின்று, சுத்த துரிய நிலை மிகவும் தோன்றப் பெற்று, ஐம்புலன்களை நுகர்கின்ற உணர்வு அவற்றால் கட்டுண்ணாமலே அவற்றோடு பொருந்தி நிற்கச் சிவத்தோடு ஒன்றாய் உடம்பு உள்ளபொழுதே செத்தார்போல உலகத்தை நோக்காது புருவ நடுவிலே நிற்பார்கள்.
****************************************************
பாடல் எண் : 10
சிவயோக மாவது சித்தசித் தென்று
தவயோகத் துள்புக்குத் தன்னொளி தானாய்
அவயோகஞ் சாரா தவன்பதி போக
நவயோகம் நந்தி நமக்களித் தானே

பொழிப்புரை :மேற்குறிக்கப்பட்ட சிவயோகமாவது, `சித்தாகிய (அறிவுடைப் பொருளாகிய) ஆன்மாவும், தானே அறியும் தன்மை இன்மையால் தானே அறிந்தும், அறிவித்தும் நிற்கின்ற சிவத்தை நோக்க அசித்தாம் (அறிவில்லாத பொருளேயாம்) என்றுணர்ந்து, ஏகமாந் தன்மையுள் மிகச்சென்று, சிவனது அருளொளியே தானாகப் பெற்று, பிற பொருள்களைச் சார்தலாகிய பயனில்லாத சேர்க்கையிற் செல்லாதபடி, மிகுகின்ற அன்பினால் விளைகின்ற சிவபோகத் தினைத் தருகின்ற புதியதோர் யோகம். அதனையே எங்களுக்கு நந்திதேவர் அளித்தருளினார்.
****************************************************
பாடல் எண் : 11
அளித்தான் உலகெங்குந் தானான உண்மை
அளித்தான் அமரர் அறியா உலகம்
அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள்
அளித்தான்பே ரின்பத் தருள்வெளி தானே.
 
பொழிப்புரை : மேற்கூறிய நவயோகத்தை எங்கட்கு அளித்தருளிய நந்தி தேவராகிய சிவபெருமான், அப்பொழுதே உலக முழுதும் தான் ஒழிவற நிறைந்து நிற்கும் மெய்ம்மையையும், மாயோன் முதலிய புத்தேளிராலும் அறியப்படாத தனது சிவலோக நிலையையும், திருமன்றுள் பேரின்ப நடனம் செய்தருளும் தனது எடுத்த திருவடியாகிய பற்றுக்கோட்டினையும், அப்பற்றுக் கோட்டினால் கிடைக்கின்ற அருளாகிய பேரின்ப வெளியையும் அளித்தருளினான்.
****************************************************
பாடல் எண் : 12
வெளியில் வெளிபோய் விரவிய வாறும்
அளியில் அளிபோய் அடங்கிய வாறும்
ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும்
தெளியும் அவரே சிவசித்தர் தாமே.

பொழிப்புரை : குருவருள் பெற்ற பின்னர் உயிரினது வியாபகம் சிவனது வியாபகத்துள் அடங்கி நிற்கும் முறைமையையும், உயிர் அவனிடத்துச் செய்யும் அன்பாகிய நெகிழ்ச்சி அவனது பேரருளாகிய நெகிழ்ச்சியினுள் அடங்கிநிற்கும் முறைமையையும், உயிரினது அறிவாகிய சிற்றொளி, சிவனது அறிவாகிய பேரொளியில் அடங்கி நிற்கும் முறைமையையும் அநுபவமாக உணர்கின்றவரே சிவனைப் பெற்றவராவர்.
****************************************************
பாடல் எண் : 13
சித்தர் சிவலோகம் இங்கே தெரிசித்தோர்
சத்தமுஞ் சத்த முடிவுந்தம் முள்கொண்டோர்
நித்தர் நிமலர் நிராமயர் நீள்பர
முத்தர்தம் முத்தி முதல்முப்பத் தாறே.

பொழிப்புரை : சிவனைப் பெற்றவர் எனப்படுவோர், சிவலோகத்தை இவ்வுலகிலே கண்டவரும், வாக்குகளையும், அவற்றிற்கு முதலாகிய குடிலையையும் தம்முள் அடங்கக் கண்டு நீங்கினவர்களும், அழிவில்லாதவர்களும், மலமாசு அகன்றவரும், மனக் கவலை மாற்றினவரும், எல்லையில் இன்பத்தில் நிற்பவரும் ஆகியவரே. அவர்கள் விடுதலை எய்தியது கருவிகள் முப்பத்தாறினின்றுமாம்.
****************************************************
பாடல் எண் : 14
முப்பதும் ஆறும் படிமுத்தி ஏணியா
ஒப்பிலா ஆனந்தத் துள்ளொளி புக்குச்
செப்ப அரிய சிவங்கண்டு தான்தெளிந்
தப்பரி சாக அமர்ந்திருந் தாரே.

பொழிப்புரை : சிவசித்தர்கள் முப்பத்தாறு தத்துவங்களும் முத்தி நிலைக்கு ஏணிப் படிகளாக நிற்க அவற்றில் ஒவ்வொன்றாக ஏறிக் கடந்து, இணையற்ற இன்பவடிவாம் உள்ளொளியாகிய அருளே உருவாய் நின்று, அவ்வருட்கு முதலாகிய சிவத்தையும் கண்டு, பின் அசைவின்றி அச்சிவமேயாய் இன்புற்றிருக்கின்றார்கள்.
****************************************************
பாடல் எண் :15
இருந்தார் சிவமாகி எங்குந் தாமாகி
இருந்தார் சிவன்செயல் யாவையும் நோக்கி
இருந்தார் முக்காலத் தியல்பைக் குறித்தங்
கிருந்தார் இழவுவந் தெய்திய சோம்பே.

பொழிப்புரை : சிவத்தைக் கண்டு அசைவற நின்று அப்பரிசாக அமர்ந்துநின்ற சிவசித்தர்கள் தம்மை அணுவாகச் செய்த மலம் நீங்கப் பெற்றமையால், அங்கு இங்கு என்னாது எங்குமாய், இறைநிறைவில் அழுந்தி நிற்பர். அந்நிலையில் அச்சிவன் உயிர்கள் பொருட்டுச் செய்கின்ற செயல்களையும், அச்செயல்கட்கு வாயிலாக அவன் தோற்றுவித்து நிறுத்தியுள்ள காலத்தின் தொழிற்பாட்டினையும் அறியும் ஆற்றலுடையவராய்த் தம்மை இழந்து நிற்றல் வந்தமையால் விளைந்த செயலறுதியிலே இருப்பர்.


Offline Anu

பதிகம் எண் :4. உபதேசம்

(பாடல்கள்:16-30/30)பகுதி:II


பாடல் எண் : 16
சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே
சோம்பர் கிடப்பதும் சுத்த வெளியிலே
சோம்பர் உணர்வு சுருதி முடிந்திடம்
சோம்பர்கண் டார்அச் சுருதிக்கண் தூக்கமே.

பொழிப்புரை :செயலறுதியில் நிற்கும் சிவசித்தர்கள் இருப்பதும் கிடப்பதும் மாசொடு படாததாய பரவெளியிலேயாம். ஆகவே, அவர்தம் உணர்வு நிற்கும் இடம், வேதம் எட்டமாட்டாது நின்றுவிட்ட இடமாம். அதனால், அவர்களும் அவ்வேதத்தை நோக்குதற்கண் மறதியே பெற்றார்.
****************************************************
பாடல் எண் :17
தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்நிலை சொல்வதெவ் வாறே.
 
பொழிப்புரை : சிவசித்தர் வேதம் முதலாகிய கலைகளை உணர் தலையும் மறந்து நின்றமையால், சிவலோகம் முதலிய பல உலகங்களையும், சிவமுதற் பொருளோடே தாம் என்றும் ஒன்றாய் நிற்கும் பெற்றியையும், அதனானே சிவானந்தம் தமக்கு வேறாய் வந்து விளை யாமல், தம் உள்ளே இருந்து ஊற்றெடுத்தலையும் தம் அறிவினுள்ளே விளங்கக் கண்டு வியந்தார்கள். ஆதலின், அவரது பெருமை சொலற்கரிதாம்.
****************************************************
பாடல் எண் : 18
எவ்வாறு காண்பான் அறிவு தனக்கெல்லை
அவ்வா றருள்செய்வன் ஆதி யரன்தானும்
ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடுஞ்
செவ்வானிற் செய்ய செழுஞ்சுடர் மாணிக்கம்.

பொழிப்புரை : அனாதியாய் நிற்கின்ற சிவன் ஆதியாய் நின்று ஆன்மாக்களது அறிவின் எல்லையை எவ் வெவ்வளவினவாகக் காண்கின்றானோ அவ் வவ்வளவிற்கேற்பவே அவைகட்குத் தானும் தனது திருவருளைத் தருவன், அவன், நிகரில்லாத அருள்வெளியில். தனது சத்தி துணையாய் நிற்கப் பல்வேறான பொதுச் செயல்களைப் புரிகின்ற, நடுவுநிலையாகிய வானத்தில் உள்ள ஞான சூரியனும், மாணிக்க மணியும் ஆகலின்.
****************************************************
பாடல் எண் : 19
மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய்
மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய்
ஆணிப்பொன் மன்றினில் ஆடுந் திருக்கூத்தைப்
பேணித் தொழுதென்ன பேறுபெற் றாரே
 
பொழிப்புரை : மாணிக்க மணிக்குள்தானே மரகத ஒளி வீசி னாற்போலவும், மாணிக்க மாளிகைக்குள்ளே மரகதநிலை காணப் பட்டாற்போலவும், மாற்றுயர்ந்த பொன்னாலாகிய அம்பலத்துள் நின்று அவன் ஆடுகின்ற திருக்கூத்தினை விரும்பி வணங்கினோர் பெற்ற பேற்றினை இவ்வளவினது என்று சொல்லுதல் கூடுமோ!
****************************************************
பாடல் எண் : 20
பெற்றார் உலகிற் பிரியாப் பெருநெறி
பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன்
பெற்றார்அம் மன்றிற் பிரியாப் பெரும்பேறு
பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே.
 
பொழிப்புரை :மேற்கூறிய ஆணிப்பொன் மன்றினில் ஆடுந் திருக்கூத்தினை அம்மன்றினின்றும் நீங்காது பேணித் தொழுகின்ற பேற்றினைப் பெற்றவர், இவ்வுடம்பு நீங்கியபின் சிவனோடு ஒன்றாகின்ற பெருநிலையையும், அதனால் விளையும் பிறவாமை யாகிய பெரும்பயனையும், அப்பயன் வடிவான திருக்கோயில் வழிபாட்டினை ஒழியாது செய்யும் பெரிய பேற்றினையும், அப்பேற்றினால் உலகத்தாரொடு பேசாது நிற்கும் பெருமையையும் பெற்றவராவர்.
****************************************************
பாடல் எண் : 21
பெருமை சிறுமை அறிந்தெம் பிரான்போல்
அருமை எளிமை அறிந்தறி வாரார்
ஒருமையுள் ஆமைபோல் உள்ளைந் தடக்கி
இருமையுங் கெட்டிருந் தார்புரை அற்றே.
 
பொழிப்புரை :  பிறரது பெருமை சிறுமைகளை அறிந்து அவற்றிற்கு ஏற்ப அரியனாயும், எளியனாயும் நிற்கின்ற முறைமையை எங்கள் சிவபெருமான் அறிவதுபோல அறிவார் பிறர் யார்? ஒருவரும் இல்லை. அதனால், மேற்குறித்த அவன் அன்பர் இவ்வொரு பிறப்பிலே, ஆமை தனது ஐந்துறுப்புக்களையும் தனக்குக் காவலாய் உள்ள ஓட்டிற்குள் அடக்குதல்போல, புலன் அவா ஐந்தனையும் தமக்கு அரணாய் உள்ள அவனது திருவருளினுள் அடக்கி, இம்மை யின்பம், மறுமையின்பம் இரண்டையும் உவர்த்துக் குற்றம் அற்று இருக்கின்றனர்.
****************************************************
பாடல் எண் :22

புரைஅற்ற பாலினுள் நெய்கலந் தாற்போல்
திரைஅற்ற சிந்தைநல் ஆரியன் செப்பும்
உரையற் றுணர்வோர் உடம்பிங் கொழிந்தாற்
கரையற்ற சோதி கலந்தசத் தாமே.

பொழிப்புரை : குற்றம் அற்ற பாலில் உள்ள நெய் அப்பாலினுள் வேற்றுமையின்றிக் கலந்து நிற்றல்போல, ஞானாசிரியன் அறிவுறுத்த சொல்லை அலைவற்ற உள்ளத்தில் வேற்றுமை அற்றுக் கலந்து நிற்குமாறு உணர்ந்து அப் பொருளில் அழுந்திநிற்பவர், தம் உடம்பு இங்கு வீழ்ந்த பின்னர் அவரது ஆன்மாத் தன் இயற்கை வியாபகத்தைப் பெற்று, என்றும் வேற்றுமையின்றிக் கலந்து நிற்கின்ற மெய்ப்பொருளேயாய் விடும்
****************************************************
பாடல் எண் : 23
சத்த முதல்ஐந்துந் தன்வழித் தான்சாரில்
சித்துக்குச் சித்தன்றிச் சேர்விடம் வேறுண்டோ
சுத்த வெளியிற் சுடரிற் சுடர்சேரும்
அத்தம் இதுகுறித் தாண்டுகொள் அப்பிலே.

பொழிப்புரை : சடமாகிய சத்தம் முதலிய தன்மாத்திரைகள் முதலாக உள்ள கருவிகள் யாவும், சடமாகிய தத்தம் காரணத்துள்ளே சென்று சேர்ந்துவிடுமாயின் அதன்பின் சித்தாகிய ஆன்மாவிற்குச் சித்தாகிய சிவத்தையன்றிச் சாருமிடம் வேறுண்டோ? இல்லை. அதனால் அந்நிலையில் அப் பயனைத் தரக் கருதியே குருவாய் வந்து ஆண்டுகொண்ட திருவருளாகிய வெள்ளத்தின் செயலால், தூய பரவெளியில் விளங்கும் சிவமென்னும் ஞாயிறாகிய பேரொளியிடத்து ஆன்மா என்னும் விண்மீனாகிய சிற்றொளி சென்று சேர்ந்து ஒன்றாய்விடும்.
****************************************************
பாடல் எண் : 24
அப்பினிற் கூர்மை ஆதித்தன் வெம்மையால்
உப்பெனப் பேர்பெற் றுருச்செய்த அவ்வுரு
அப்பினிற் கூடிய தொன்றாகு மாறுபோற்
செப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே.

பொழிப்புரை : கடல்நீரில் ஒன்றாய் நிற்கும் உவர்ப்புப் பின் ஞாயிற்றின் வெப்பத்தால் அந்நீரின் வேறாய் உருவெய்தி `உப்பு` எனப் பெயர்பெற்ற அப்பொருள், அந்நீரில் சேர்ந்தவழி அவ்வுரு வொழிந்து வேறுகாணப்படாது அந்நீரோடு ஒன்றாகும் முறைமை போல, உயிர் சிவத்தோடு என்றும் ஒன்றாயே இருத்தற் குரியதாயினும், ஆணவ மலத்தின் தடையால், அநாதியே வேறாய்ப் பசுத்தன்மை எய்திச் சீவன் எனப் பெயர்பெற்று மாயை கன்மங்களையும் உடையதாய் உழன்று, அத்தடை நீங்கப்பெற்ற பின்னர்ச் சிவத்தோடு சேர்ந்து வேறாய் நில்லாது ஒன்றாய்விடும்.
****************************************************
பாடல் எண் :25
அடங்குபே ரண்டத் தணுஅண்டஞ் சென்றங்
கிடங்கொண்ட தில்லை இதுவன்றி வேறுண்டோ
கடந்தொறும் நின்ற உயிர்கரை காணில்
திடம்பெற நின்றான் திருவடி தானே.
.
பொழிப்புரை : எல்லாப்பொருளும் அடங்கி நிற்கும் இடமாகிய `அண்டம்` என்னும் பேருருண்டையுள் அணு என்னும் சிறியதோர் உருண்டை அடங்கி நிற்பதல்லது, அதற்குப் புறம்பாய் வேறோ ரிடத்தில் நிற்றல் இல்லை. அதுபோலப் பலவகை உடம்புகளை எடுத்து அவற்றின் அளவாய் நிற்கின்ற சிற்றுயிர்களுக்குப் பிறவிக் கடலினின்றும் நீங்கி அலமராது நிலைத்து நிற்கும் கரையை அடைவதாயின் அக்கரை, என்றும் அலமரல் இல்லாது ஒருபெற்றியே நிற்பவனாகிய சிவபெருமானது திருவடியே. இதுவன்றி வேறு கரை உண்டோ?
****************************************************
பாடல் எண் : 26
திருவடி யேசிவ மாவது தேரில்
திருவடி யேசிவ லோகஞ்சிந் திக்கில்
திருவடி யேசெல் கதியது செப்பில்
திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே.
.
பொழிப்புரை :உண்மை நூல்களைத் தெரிந்தெடுத்து அவற்றில் சொல்லப்பட்ட பொருள்களைச் சிந்தித்து அறுதியிட்டுச் சொல்லுமிடத்து, மெய்ப்பொருளைத் தம் உள்ளத்தில் ஒருதலையாக உணர்ந்து பற்ற வேண்டுவோர்க்குச் சிவபெருமானது திருவடி ஒன்றே பரம்பொருளும், வீட்டுலகமும், துறக்க உலகங்களுமாகும். ஆதலின், அதனைத் தவிர உயிர்கட்குப் பற்றுக்கோடு வேறில்லை.
****************************************************
பாடல் எண் :27
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.
 
பொழிப்புரை :  `பெத்தநிலை நீங்கும் பருவத்துச் சிவன் குருவாய் வந்து தனது திருவடி ஞானத்தை வழங்குவான்` எனவும், `அத்திருவடி ஞானத்தைப் பெற்றபின் நிகழ்வன இவை` எனவும் முறைப்படக் கூறி முடித்தபின், அப்பேறு அனைத்தையும் வழங்கிய குருமூர்த்தியை மறத்தல் பெரிதும் உய்தியில்லதோர் குற்றமாம் ஆதலின், அக்குற்றத் திற்கு ஆளாகாது என்றும் அக்குருமூர்த்தியை மறவாது, `சிவம்` எனவே கண்டு வழிபடல் வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றார். ஞான குருவினது திருவுருவைச் சிவனது அருட்டிரு மேனியாகக் காணுதல், அவரது திருப்பெயரைச் சிவனது திருப்பெயராகிய திருவைந்தெழுத்தோடு ஒப்பதாகக் கொண்டு எப்பொழுதும் சொல்லுதல், அவர் இடும் கட்டளை மொழிகளைச் சிவனது அருளா ணையாகப் போற்றிக் கேட்டல், அவரது திருவுருவை உள்ளத்துள் உள்குதல் என்னும் இவைகளே உண்மை ஞானத்தைத் தருவனவாகும்.
****************************************************
பாடல் எண் : 28
தானே புலன்ஐந்துந் தன்வச மாயிடும்
தானே புலன்ஐந்துந் தன்வசம் போயிடும்
தானே புலன்ஐந்துந் தன்னில் மடைமாறும்
தானே தனித்தெம் பிரான்தனைச் சந்தித்தே.

பொழிப்புரை : ஒருவன், `நான்` என்னும் முனைப்பு இன்றி ஞானாசாரியரை அடுத்து நிற்பானாயின், அவனது ஐம்புல ஆசை தன்னியல்பில் உலகப் பொருள்கள் மேல் செல்லாது அவன் வழிப்பட்டுச் சிவனிடத்திற் செல்வதாய்ப் பள்ளமடையில் வீழ்ந்து பயனின்றிக் கழிந்துகொண்டிருந்த நீர் அம்மடை அடைக்கப்பட்ட வழித்தேங்கி நின்று மேட்டுமேடையிற் போய்ப் பாய்ந்து பயன்தருதல் போலத்தன் அறிவினிடத்தே மாறுவதாகும்.
****************************************************
பாடல் எண் : 29
சந்திப் பதுநந்தி தன்திருத் தாளிணை
சிந்திப் பதுநந்தி செய்ய திருமேனி
வந்திப் பதுநந்தி நாமம்என் வாய்மையால்
புந்திக்குள் நிற்பது நந்திபொற் போதமே.
 
பொழிப்புரை : நான் எப்பொழுதும் உடலால் பணிவது எனக்கு ஞானாசிரியராகிய நந்தி பெருமானது இரண்டு திருவடிகளையே. மனத்தால் நினைப்பது அவரது அருட்டிரு வுருவத்தையே. வாயாற் சொல்வது அவரது திருப்பெயரையே. என் அறிவினுள் நிலைத்து நிற்பது அவரது பொன்மொழியே.
****************************************************
பாடல் எண் : 30
போதந் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப்
போதந் தனில்வைத்துப் புண்ணிய ராயினார்
நாதன் நடத்தால் நயனங் களிகூர
வேதந் துதித்திடப் போயடைந்தார் விண்ணே.
 
பொழிப்புரை :உண்மை ஞானத்தை வழங்குகின்ற அருளுரு வினரான எங்கள் நந்தி பெருமானைத் தங்கள் நெஞ்சில் மறவாது நினைந்து ஞானம் முதிரப் பெற்றவர்களே இவ்வுலகில் சிவபெருமானது ஆனந்த நடனத்தால் கண்ணும் களிகூர வாழ்ந்து, இவ்வுடம்பு நீங்கியபின் வேதமும் போற்றுமாறு சென்று பரவெளியை அடைந்தார்கள்; ஏனையோர் மீளவும் பிறவிக்கு ஆளாயினர்.


Offline Anu

பதிகம் எண் :5. யாக்கை நிலையாமை

 (பாடல்கள்:01-12/25)பகுதி:I

பாடல் எண் : 01
மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம்
திண்ணென் றிருந்தது தீவினை சேர்ந்தது
விண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணானாற்போல்
எண்ணின்றி மாந்தர் இறக்கின்ற வாறே.

பொழிப்புரை : இரண்டு பாண்டங்கள் ஒருவகை மண்ணாலே செய்யப்பட்டனவாயினும், அவற்றுள் ஒன்று தீயிலிட்டுச் சுடப்பட, மற்றொன்று அவ்வாறு சுடப்படாதிருப்பின் அவற்றின்மேல் வானத்தினின்றும் மழை விழும்போது, சுடப்பட்டது கேடின்றி நிற்க, சுடப்படாதது கெட்டு முன்போல மண்ணாகிவிடும். மக்கள் குறிக்கோள் இல்லாது வாழ்ந்து, பின் இறக்கின்றதும் இதுபோல்வதே.
****************************************************
பாடல் எண் : 02
பண்டம்பெய் கூரை பழகி விழுந்தக்கால்
உண்டஅப் பெண்டிரும் மக்களும் பின்செல்லார்
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
மண்டி அவருடன் வழிநட வாதே.

பொழிப்புரை : பல பண்டங்களை நிரப்பிவைத்துள்ள இல்லம் போல்வதாகிய உடம்பு, உழைத்துத் தளர்ந்து வீழ்ந்தொழியுமாயின், அவ்வுழைப்பால் பயன் கொண்ட மனைவியரும், மக்களும் அவ்வுடம் பினுள் நின்ற உயிராகிய இல்லத் தலைவரைப் பின் தொடர்ந்து செல்லும் வலியிலராவர். இனிச் சுற்றமும் பொருளும் முதலாயினதாம் அவருடன் செல்லுமோ எனின், அவர் மேற்கொண்டு செய்த தவமும், அதன் பயனாக உண்டாகிய ஞானமும் அல்லது பிறிதொன்றும் அவரோடு உடன் செல்லாது.
****************************************************
பாடல் எண் : 03
ஊரெலாங் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.

பொழிப்புரை :உடம்பு விழுந்தபின் இல்லத்தளவில் செயற்படுவோராகிய பெண்டிரும், மக்களுமேயன்றி, ஒருங்கு திரண்டு பலவற்றைச் செய்து முடிப்போராகிய ஊரவரேனும் பிரிந்தோருடன் செல்ல வல்லரோ எனின், அல்லர்; அவரும் அப்பெண்டிர் மக்களுடன் ஒருங்கு கூடி முன்னர்ப் பேரொலி உண்டாக அழுது, பின் அது காறும் அவர்க்குக் கூறி அழுத இயற்பெயர் சிறப்புப் பெயர்களை ஒழித்து, `பிணம்` என்னும் பெயரையே சொல்லி எடுத்துக் கொண்டு போய், `சூரை` என்னும் ஒருவகை முட்செடிகள் நிரம்பியுள்ள காட்டில் வைத்து எரித்து விட்டுத் தீட்டுப் போதற்கு நீரினுள் மூழ்கித் தூய்மை பெற்றாராய்ப் பின்பு அவரைப் பற்றிய நினைவும் இல்லாதவரே ஆவர்.
****************************************************
பாடல் எண் : 04
காலும் இரண்டு முகட்டலக் கொன்றுள
பாலுள் பருங்கழி முப்பத்தி ரண்டுள
மேலுள கூரை பிரியும் பிரிந்தால்முன்
போலுயிர் மீளப் புகஅறி யாதே.

பொழிப்புரை :  உடம்பாகிய இல்லத்திற்குத் தாங்கும் தூண்களும் (நடக்கின்ற கால்கள்) இரண்டு உள்ளன. மேட்டு உத்தரமும் (முது கெலும்பு) ஒன்று உண்டு. அவ்வுத்தரத்தின் இருபக்கங்களிலும் சார்த்தப் படுகின்ற பருத்த கழிகளும் (விலா எலும்புகளும் - பக்கத்திற்குப் பதினாறாக) முப்பத்திரண்டு உள்ளன. மேலே வேயப்பட்ட கூரை களும் (பலவகையான தோல்கள்) உள்ளன. இருப்பினும். உயிர் இந்த இல்லத்தில் நிலைத்திருப்பதில்லை; என்றாயினும் ஒரு நாள் புறப்பட்டுப் போய்விடும். போய்விட்டால் மீளவந்து முன்போல இதனுட் புகுதல் இல்லை.
****************************************************
பாடல் எண் :05
சீக்கை விளைந்தது செய்வினை மூட்டிற்ற
ஆக்கை பிரிந்த தலகு பழுத்தது
மூக்கினிற் கைவைத்து மூடிட்டுக் கொண்டுபோய்க்
காக்கைக்கு வுண்பலி காட்டிய வாறே.

பொழிப்புரை :  `சீக்கை என்னும் வாயொலி உண்டாயிற்று; செயற்படுகின்ற உறுப்புக்கள் மடிந்து கிடையாகி விட்டன. உடம்பு உயிர்த் தொடர்பை நீங்கிவிட்டது. எலும்புகள் வீங்கிவிட்டன` என்று பல அறிகுறிகளைச் சொல்லி, மூக்கில் கைவைத்துப் பார்த்து ஐயம் நீங்கி, மூடி எடுத்துக்கொண்டு போய் ஊரார் காக்கைக்குப் பலி ஊட்டிய அளவில் முடிவதாகும் உடம்பின் நிலைமை.
****************************************************
பாடல் எண் : 06
அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
இடப்பக்க மேஇறை நொந்ததிங் கென்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே.

பொழிப்புரை : உணவு சமைத்தற்கு வேண்டுவனவற்றை ஈட்டிக் கொணர்ந்து வைத்த தலைவர், சமைத்தாயின பின்பு அவ்வுணவை உண்டார்; பின் தம் இல்லக்கிழத்தியாரொடு தனிமையில் இருந்து சில வற்றை உசாவுதல் செய்தார்; அச்செயலுக்கிடையே, `உடம்பில் இடப்பக்கம் சிறிது நோகின்றது` என்று சொல்லி, அது நீங்குதற் பொருட்டு ஓய்வு கொள்ளுதற்குப் படுத்தார்; படுத்தவர் படுத்துவிட்டவரேயாயினார்; மீள எழுந்திருக்கவில்லை.
****************************************************
பாடல் எண் :07
மன்றத்தே நம்பிதன் மாடம் எடுத்தது
மன்றத்தே நம்பி சிவிகைபெற் றேறினான்
மன்றத்தே நம்பிமுக் கோடி வழங்கினான்
சென்றத்தா வென்னத் திரிந்திலன் தானே.

பொழிப்புரை :  நம்பி(சிறந்த ஆடவன்) ஒருவன் தன் முயற்சி யாலே பெரும் பொருள் ஈட்டிப் பலரும் வியக்கப் பல மேல் நிலைகளோடு கூடிய மாளிகையைக் கட்டினான். அவன் அதனைக் கட்டியதும் வெற்ற வெளியான இடத்திலேதான். பின் அவ்விடத்திற்றானே நான்குபேர் சுமக்கின்ற ஒரு பல்லக்கைப்பெற்று அதில் ஏறினான். அங்கு அப்பொழுது அவன் தன் மனைவிக்கும், மகனுக்கும், ஊர்த் தோட்டிக்கும் ஒவ்வொரு புத்தாடையை வழங்கினான். ஆயினும், பலர் நின்று, `தலைவனே` என்று கூப்பிட்டுக் கதறவும், திரும்பாமலே போய்விட்டான்.
****************************************************
பாடல் எண் :08
வாசந்தி பேசி மணம்புணர் தம்பதி
நேசந் தெவிட்டி நினைப்பொழி வார்பின்னை
ஆசந்தி மேல்வைத் தமைய அழுதிட்டுப்
பாசந்தீச் சுட்டுப் பலியட்டி னார்களே.
.
பொழிப்புரை : குருக்கத்திக் கொடியின் கீழ்க் களவிற்கலந்து, பின் கற்பு நெறியில் மணம் செய்துகொள்கின்ற தலைவனும், தலைவியும் தலைநாளில் இருந்த காதல், நாள்செல்லச் செல்லத் தெவிட்டுவதாய்விடப் பின்பு ஒருவரை ஒருவர் நினைப்பதையும் விட்டுவிடுவர். இறுதியில் பாடைமேல் வைத்துக் குறைவில்லாமல் அழுது, தங்கள் அன்போடு, அவரையும் நெருப்பினால் எரித்துப் போக்கிவிட்டுத் தெய்வமாக வைத்துப் படையல் இடுவார்கள்.
****************************************************
பாடல் எண் : 09
கைவிட்டு நாடிக் கருத்தழிந் தச்சற
நெய்யட்டிச் சோறுண்ணும் ஐவரும் போயினார்
மையிட்ட கண்ணாளும் மாடும் இருக்கவே
மெய்விட்டுப் போக விடைகொள்ளு மாறே.
 
பொழிப்புரை : உடல் நிலையை நாடியால் ஆய்ந்துணர்வோர் அவ்வாறு ஆய்ந்து கைவிட்டுவிட, அதன்பின் அறிவு அழிந்து, உடலாகிய தேர்க்கு அச்சாய் இருந்த உயிர் நீங்கிவிட, சோற்றை நெய்கலந்து சுவைபட உண்டு வாழ்பவனவாகிய ஐம்பூதக் கூறுகளும் அழிவன வாயின, அப்பொழுது, முன்பு, உடம்பால் தழுவப்பட்டிருந்த மனைவியும், செல்வமும் முன்போலவே இருக்கவும், அவ்வுடம்பு அவர்களை விட்டு வேறிடத்திற்குப் போக விடை பெறுவதுதான் கண்டது.
****************************************************
பாடல் எண் : 10
பந்தல் பிரிந்தது பண்டாரங் கட்டற்ற
ஒன்பது வாசலும் ஒக்க அடைத்தன
துன்புறு காலந் துரிசுற மேன்மேல்
அன்புடை யார்கள் அழுதகன் றார்களே.
 
பொழிப்புரை :மேற்கூறிய ஆணிப்பொன் மன்றினில் ஆடுந் திருக்கூத்தினை அம்மன்றினின்றும் நீங்காது பேணித் தொழுகின்ற பேற்றினைப் பெற்றவர், இவ்வுடம்பு நீங்கியபின் சிவனோடு ஒன்றாகின்ற பெருநிலையையும், அதனால் விளையும் பிறவாமை யாகிய பெரும்பயனையும், அப்பயன் வடிவான திருக்கோயில் வழிபாட்டினை ஒழியாது செய்யும் பெரிய பேற்றினையும், அப்பேற்றினால் உலகத்தாரொடு பேசாது நிற்கும் பெருமையையும் பெற்றவராவர்.தீய ஊழ்விரைய வந்தமையால், தங்க நிழல் தரும் பந்தல் போல்வதாகிய உடம்பு நிலை கெட்டு விட்டது. அதனால் அதற்குள் கருவூலம் போல இருந்த உயிர், காவலற்றுக் கொள்ளை போகும் நிலையை (யமதூதுவர் கொண்டு செல்லும் நிலையை) அடைந்து விட்டது. பந்தலில் ஒன்பது வாயில்கள் அமைக்கப் படிருந்தன; அவை அனைத்தும் அடைபட்டு விட்டன. அன்புடைய சுற்றத்தார் என் செயவல்லார்! தொடர்ந்து அழுததோடு போய்விட்டனர்.
****************************************************
பாடல் எண் : 11
நாட்டுக்கு நாயகன் நம்மூர்த் தலைமகன்
காட்டுச் சிவிகையொன் றேறிக் கடைமுறை
நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறைகொட்ட
நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே.
 
பொழிப்புரை :ஒருவன் நமது நாட்டிற்கே தலைவன் தான்; `அவன் நம் ஊரவன்` என்பதில் நமக்குப் பெருமைதான்; ஆயினும், நடை முறையில் நிகழ்வது, அவனும் காட்டுக்குப் போதற்குரிய ஒரு பல்லக்கின் மேல் ஏறி, நாட்டில் உள்ளோர் பலர் பின்னே நடந்து செல்ல, முன்னே பறைகள் பல கொட்டச் செல்லுகின்ற முறைமைதான்; வேறில்லை.
****************************************************
பாடல் எண் : 12
முப்பதும் முப்பதும் முப்பத் தறுவரும்
செப்ப மதிளுடைக் கோட்டையுள் வாழ்பவர்
செப்ப மதிளுடைக் கோட்டை சிதைந்தபின்
ஒப்ப அனைவரும் ஓட்டெடுத் தார்களே.
 
பொழிப்புரை: வினையாகிய மதிலால் சூழப்பட்ட உடம்பாகிய உட்கோட்டையில் வாழ்வன் தொண்ணூற்றாறு தத்துவ தாத்துவிகங்கள். அவை அனைத்தும் அம்மதில் சிதைந்தால் ஒருசேர விரைய நீங்கும்.


Offline Anu

பதிகம் எண் :5. யாக்கை நிலையாமை

(பாடல்கள்:13-25/25)பகுதி:II

பாடல் எண் : 13
மதுவூர் குழலியும் மாடும் மனையும்
இதுவூர் ஒழிய இதணம தேற்றிப்
பொதுவூர் புறஞ்சுடு காடது நோக்கி
மதுவூர வாங்கியே வைத்தகன் றார்களே.
 
பொழிப்புரை : எவன் ஒருவனையும் ஊரார் அவன் மனைவியும், செல்வமும், மாளிகையும் ஊரிலே நின்றுவிட, ஒரு நடைப்பரண்மேல் ஏற்றி, ஊர்க்குப் பொதுவாய்ப் புறத்தே உள்ள சுடுகாட்டை நோக்கிச் சுமந்து சென்று, உள்ளத்தில் அன்பு மேம்பட்டு எழ எடுத்து வைத்துவிட்டுப் போவதையே பார்க்கின்றோம்.
***************************************************
பாடல் எண் : 14
வைச்சகல் வுற்றது கண்டு மனிதர்கள்
அச்சக லாதென நாடும் அரும்பொருள்
பிச்சது வாய்ப்பின் தொடர்வுறும் மற்றவர்
எய்ச்சக லாநின் றிளைக்கின்ற வாறே

பொழிப்புரை : இறந்தவனது உடம்பை ஊரார் கொண்டுபோய்ப் புறங்காட்டில் வைத்து நீங்கியதைக் காணும் பொழுது, என்றும் அச்சுப் போல உடன் இருந்து உதவும் என்று அறிவுடையோர் அறிந்து விரும் புகின்ற அந்த அரிய பொருளாகிய இறைவன் ஒருவனே பேரருள் காரணமாக அவரைப் பின் தொடர்ந்து செல்வான். பிறர் யாவரும் ஒன்றும் செய்யமாட்டாது இளைத்து வருந்துகின்றவர்கள் தாம்.
****************************************************
பாடல் எண் : 15
ஆர்த்தெழு சுற்றமும் பெண்டிரும் மக்களும்
ஊர்த்துறைக் காலே ஒழிவர் ஒழிந்தபின்
வேர்த்தலை போக்கி விறகிட் டெரிமூட்டி
நீர்த்தலை மூழ்குவர் நீதியி லோரே.

பொழிப்புரை :கல்லென்று ஆரவாரித்து எழுகின்ற சுற்றத் தாரும், மனைவியரும், மக்களும் ஆகிய எல்லாரும் ஊர் எல்லையைக் கடந்து அப்பால் வரமாட்டாது அவ்வெல்லைக்குள்ளே நின்றொழிவார்கள். அதன்பின் பிறர், மரங்களை, வேரும் முனையும் போகத் தறித்துக் கொணர்ந்த விறகின் மேல் வைத்து நெருப்பை நன்றாக மூட்டி எரியப் பார்த்துவிட்டு, நீரிலே சென்று தலை முழுகுவார்கள்.
****************************************************
பாடல் எண் : 16
வளத்திடை முற்றத்தோர் மாநிலம் முற்றுங்
குளத்தின்மண் கொண்டு குயவன் வனைந்தான்
குடமுடைந் தால்அவை ஓடென்று வைப்பர்
உடலுடைந் தால்இறைப் போதும் வையாரே.

பொழிப்புரை :  உலகமெங்கும் குயவர்கள் குளத்திலிருந்து மண்கொணர்ந்து தங்கள் அகத்தினுள்ளே முற்றத்தின்கண் பல குடங்களைப் பண்ணுகின்றார்கள். அக்குடங்கள் ஆளப்பட்டு உடைந்து விடுமானால், வறுக்கும் ஓடாகப் பயன்படும் என்று அகத்திலே சேமித்து வைப்பார்கள். ஆனால் பண்ணப்படும் முறையால் அக் குடத்தோடு ஒப்பனவாகிய உடம்புகள் சிதைந்தால், நொடிநேரமும் மக்கள் வீட்டில் வைத்திருக்க ஒருப்படார்.
****************************************************
பாடல் எண் : 17
ஐந்து தலைப்பறி ஆறு கடையுள
சந்தவை முப்பது சார்வு பதினெட்டுப்
பந்தலும் ஒன்பது பந்தி பதினைந்து
வெந்து கிடந்தது மேலறி யோமே.

பொழிப்புரை :  தலைக்கூடைபோல உலகங்களைத் தாங்கி நடத்தும் சிவதத்துவங்கள் ஐந்து; அக்கூடையில் உள்ள பொருள்போல வித்தியா தத்துவம் ஏழும் பிரகிருதி ஒன்றும் ஞானேந்திரியம் ஐந்தும், கன்மேந்திரியம் ஐந்தும் ஆகிய பதினெட்டு: ஒரு வீட்டினுள் அமைந்த பல கட்டுக்கள் போல உடலில் ஆறு ஆதாரங்கள்; அக்கட்டுக்களில் அமைந்த அகன்ற முற்றம்போல வாயுக்கள் பத்தும்; நாடிகள் பத்தும், `காமம் குரோதம் முதலிய குற்றங்கள் ஆறும், நால்வகை வாக்கும் ஆகிய முப்பது; அம்முற்றத்தை மூடிய பந்தல் போல யோனி பேதத்தால் ஒன்பதாகிய மக்கள் உடம்பு, அப்பந்தலில் அமர்ந்து உண்ணும் பந்திபோலச் சத்தாதி ஐந்தும், வசனாதி ஐந்தும், குணம் மூன்றும், இன்ப துன்பங்களாகிய பயன் இரண்டும் ஆகிய பதினைந்து உளவாகி இயங்கின. ஆயினும், உடம்பு வெந்து கிடப்பதையே பார்க்கின்றோம். மற்றவை என்னாயின என்பதை அறியோம்.
****************************************************
பாடல் எண் : 18
அத்திப் பழமும் அறைக்கீரை நல்வித்துங்
கொத்தி உலைப்பெய்து கூழட்டு வைத்தனர்
அத்திப் பழத்தை அறைக்கீரை வித்துண்ணக்
கத்தி எடுத்தவர் காடுபுக் காரே.

பொழிப்புரை : அட்டில் தொழில் செய்வார் வறிய குடும்பத் தலைவன் ஒருவனுக்கு அத்திப் பழத்தையும், அறைக் கீரை விதையையுமே திருத்தி உலையில் இட்டு உணவும், கறியுமாக ஆக்கிவைத்தார்கள். அந்த உணவை அக்கறியோடு உண்பதற்கு, வேண்டப்படாத கூரிய கத்தியை எடுத்து அவாவுடன் புகுந்த அத்தலைவன், அதற்குள்ளே சுடுகாட்டை அடைந்தான்.
****************************************************
பாடல் எண் : 19 
மேலும் முகடில்லை கீழும் வடிம்பில்லை
காலும் இரண்டு முகட்டலக் கொன்றுண்டு
ஓலையான் மேய்ந்தவ ரூடு வரியாமை
வேலையான் மேய்ந்ததோர் வெள்ளித் தளியே.
 
பொழிப்புரை :  ஓலையால் வேய்ந்த வீட்டை, உடையவர் தாமே செய்யாமல், கூலியாளைக் கொண்டு செய்வித்தமையால் அவனால் செப்பமின்றி வேயப்பட்ட பொத்தற் குடில்போலும் உடம்பிற்கு மேலேயும் கவிப்பில்லை; கீழேயும் அடிநிலை இல்லை. ஒப்பிற்கு வைக்கப்பட்ட இரண்டு கால்களும், ஒரு நடு விட்டமுமே உண்டு.
****************************************************
பாடல் எண் : 20
கூடங் கிடந்தது கோலங்கள் இங்கில்லை
ஆடும் இலயமும் அற்ற தறுதலும்
பாடுகின் றார்சிலர் பண்ணில் அழுதிட்டுத்
தேடிய தீயினில் தீயவைத் தார்களே.
 
பொழிப்புரை :  கூடம் ஒன்று, முன்பு பல ஒப்பனைகளையும், கூத்துக்களையும் உடையதாய் இருந்தது. இப்பொழுதோ அக்கூடம் மட்டும் உள்ளது; அதில் இருந்த ஒப்பனைகளும், கூத்துக்களும் இல்லாது ஒழிந்தன; ஒழிந்தவுடன் மக்கள் திருப்பாடல்களைப் பண்ணோடு பாடுகின்றவர்களாயும், அழுகின்றவர்களாயும் நின்று, இறுதியில் அக்கூடத்தை, தேடிக்கொணர்ந்த விறகில் மூட்டப்பட்ட நெருப்பில் வேகவைத்துவிட்டார்கள்.
****************************************************
பாடல் எண் : 21
முட்டை பிறந்தது முந்நூறு நாளினில்
இட்டது தானிலை ஏதேனும் ஏழைகாள்
பட்டது பார்மணம் பன்னிரண் டாண்டினிற்
கெட்ட தெழுபதிற் கேடறி யீரே..
 
பொழிப்புரை :அறிவில்லாத மக்களே, தாய் வயிற்றில் முட்டையாய்த் தோற்றம் எடுத்த உடம்பு, முந்நூறு நாள் காலக் கணக்கில் அங்கே தங்கி வளர்ந்து பின்பு வெளிப்போந்தது. பின் பன்னிரண்டு ஆண்டுக் காலக்கணக்கில் அதற்கு மணவினை என்னும் பேச்சும் உலகத்தில் நிகழ்ந்தது; பின் எழுபது ஆண்டுக் காலக் கணக்கில் செயல் இழந்து கிடந்தது. இவ்வாறு அது ஒவ்வோர் இமையும் அழிவு நெறியிற் சென்று கொண்டிருத்தலை அறிந்திலீர். அதனால் உமக்குத் துணையாக நீவிர் தேடி வைத்துக் கொண்டது யாதும் இல்லை.
****************************************************
பாடல் எண் : 22
இடிஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டால்
முடிஞ்ச தறியார் முழங்குவர் மூடர்
விடிஞ்சிரு ளாவ தறியா உலகம்
படிஞ்சு கிடந்து பதைக்கின்ற வாறே.
 
பொழிப்புரை :அகல் இருப்பினும், இருளை ஓட்டிப் பொருள்களை விளக்குகின்ற சுடரை அணைத்து விட்டால், அவ்வகலுக்கு உள்ள வாழ்நாள் முடிந்ததாம். (அது போல்வதே உடம்பின் வாழ்நாளும், அஃதாவது, உயிர் உள்ள அளவே வாழ்வும், அது நீங்கிய பொழுதே கேடும் உடம்பிற்கு உளவாகும்.) இதனை அறியாமல் உடம்பையே பொருளாகக் கருதி அறிவில்லாதவர் ஆரவாரிப்பர். பொழுது விடிந்தும் இருளில் கிடத்தலோடு ஒப்ப வழியறியாது தடுமாறும் குருடரைப் போல, மேற்சொல்லிய உடம்பின் இயல்பு கண்கூடாக விளங்கிநிற்கவும் உலகம் அதனை அறியாது உடம்பைப்பற்றிய பற்றில் அழுந்திக் கிடந்து, அதற்கு மேற்குறித்த நிலை வரும்பொழுது துயருறுதல் இரங்கத்தக்கது.
****************************************************
பாடல் எண் : 23
மடல்விரி கொன்றையன் மாயன் படைத்த
உடலும் உயிரும் உருவம் தொழாமல்
இடர்படர்ந் தேழாம் நரகிற் கிடப்பர்
குடர்பட வெந்தமர் கூப்பிடு மாறே.
 
பொழிப்புரை :விடிந்தும் இருளாவது போலப் பெரிதும் அறியாமையில் கிடப்பவர், சிவபெருமான் படைத்த உடம்பும், உயிரும் கூடிவாழுங்காலத்தில் அவன் படைத்த குறிப்பின்படி அவனது திரு மேனியை வழிபடாமல், வேறு பலவற்றையே செய்திருந்து, அவை பிரியுங்காலத்து, அச்சத்தால் குடர் குழம்பும்படி யமதூதர் வந்து இரைந்து அழைத்துப் பிடித்துச் செல்லும் வழியிலே மிக்க துயரத்துடன் சென்று, ஏழாகச் சொல்லப்படும் நரகங்களில் அழுந்துவர்.
****************************************************
பாடல் எண் : 24
குடையுங் குதிரையுங் கொற்றவா ளுங்கொண்
டிடையுமக் காலம் இருந்து நடுவே
புடையு மனிதரார் போகும்அப் போதே
அடையும் இடம்வலம் ஆருயி ராமே.

பொழிப்புரை: வாழ்நாளின் இடையாய காலத்தில் அமைச்சர் முதலிய மாந்தர் புடைசூழ, நடுவே வெண்கொற்றக் குடையும். பட்டத்துக் குதிரையும், வெற்றி வாளும் கொண்டு வீற்றிருந்து, அவர்களை விட்டுப் போகும் கடைமுறைக் காலத்தில் உயிர் சென்று அடையும் இடமே அதற்கு வலிமையைத் தருவது.
****************************************************
பாடல் எண் : 25
காக்கை கவரிலென் கண்டார் பழிக்கிலென்
பாற்றுளி பெய்யிலென் பல்லோர் பழிச்சிலென்
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டுங்
கூத்தன் புறப்பட்டுப் போனஇக் கூட்டையே. 

பொழிப்புரை:  தோற்பை போன்றதாகிய இவ்வுடம்புள் இருந்து பல தொழில்களையும் செய்து இதனை உண்பிக்கின்ற கூத்தனாகிய உயிர் புறப்பட்டுப் போனபின் வெறுங்கூடு போல்வதாகிய இவ்வுடம் பினைப் பிறர் வாளாதே புறத்தில் எறிந்தமையால் காக்கைகள் கொத்தித் தின்னலும், கண்ணிற் கண்டவர் அருவருத்து இகழ்ந்து பேசு தலும் நிகழ்ந்தால் அதனால் இழக்கப்படுவதுதான் யாது! சுற்றத்தார் ஈமக் கடனை நன்கு முடித்துப் பால் தெளித்து அடக்கம் பண்ணப் பலரும் புகழ்ந்து போற்றினாலும் அதனால் பெறப்படுவதுதான் யாது!


Offline Anu

பதிகம் எண் :06. செல்வம் நிலையாமை

(பாடல்கள்:09)


பாடல் எண் : 01
அருளும் அரசனும் ஆனையுந் தேரும்
பொருளும் பிறர்கொள்ளப் போவதன் முன்னந்
தெருளும் உயிரொடுஞ் செல்வனைச் சேரின்
மருளும் பினைஅறன் மாதவ மன்றே.

பொழிப்புரை :  குடிகளிடத்து இரக்கங்கொள்ளும் நல்ல அரசனாயினும், யானை தேர் முதலிய படைகளையும் செல்வத்தையும் பகையரசர் கொள்ள அவை அவர்பாற் செல்வதற்கு முன்னே வாழ்நாள் உள்ளபொழுதே சிவபெருமானை அடைவானாயின் துன்பம் இலனாவன். இல்லையேல், அவற்றை அவர் கொண்ட பின்னர் துன்பக் கடலில் வீழ்ந்து கரைகாணமாட்டாது அலமருவன், அவன் செய்த அறம் தன் வாழ்நாள் முழுதும் அரசனேயாய் வாழ்தற்கு ஏற்ற பேரறம் என்பது ஒரு தலையன்றாகலின்.
****************************************************
பாடல் எண் : 02
இயக்குறு திங்கள் இருட்பிழம் பொக்கும்
துயக்குறு செல்வத்தைச் சொல்லவும் வேண்டா
மயக்கற நாடுமின் வானவர் கோனைப்
பெயற்கொண்டல் போலப் பெருஞ்செல்வ மாமே.

பொழிப்புரை :  வானத்தில் இயங்குதலைப் பொருந்திய நிலவு நிலைத்து நில்லாமல் இருட்பிழம்பு போல்வதாகி விடுகின்ற துன்ப நிலையையே உடையது செல்வம் என்பதைச் சொல்ல வேண்டுவதில்லை. (நேற்று அரசனாய் இருந்தவன் இன்று அடியனாயினமை கண்கூடாகப் பலராலும் அறியப்பட்டதே.) ஆதலின், செல்வச் செருக்கில் ஆழ்தலை விடுத்து, துறக்கச் செல்வத்தினரான தேவர்கட்கும் அச்செல்வத்தை அவர்பால் வைத்தலும், வாங்குதலும் உடைய தலைவனாகிய சிவபெருமானை நினையுங்கள்; அவன் தன்னை நினைப்பவர்க்குக் கார்காலத்து மேகம் போலப் பெருஞ் செல்வத்தை ஒழியாமல் தருபவனாகின்றான்.
****************************************************
பாடல் எண் : 03
தன்னது சாயை தனக்குத வாதுகண்
டென்னது மாடென் றிருப்பர்கள் ஏழைகள்
உன்னுயிர் போம்உடல் ஒக்கப் பிறந்தது
கண்ணது காணொளி கண்டுகொ ளீரே.

பொழிப்புரை :   தமது நிழல் தம் வெயில் வெப்பத்தைத் தணித்துக் கொள்ளுதற்கு உதவாமையைக் கண்டுவைத்தும், அறிவிலார், தமது செல்வம் தம் துன்பத்தைப் போக்கிக் கொள்ளுதற்கு உதவும் என்று இறுமாந்திருக்கின்றனர். கருதி உணரப்படுகின்ற உயிர் காணப்படும் உடம்போடே ஒன்றாய்ப் பிறந்தது. ஆயினும், அதுவே உடம்பில் என்றும் நின்று அதனைக்காவாது இடையே விட்டொழிகின்றது. (அங்ஙனமாக வேறாய் இடையே வந்த செல்வமோ நம்மோடு நிலைத்து நின்று நலம் செய்யும்!) பொருள்களைக் காணும் ஆற்றல் உங்கள்கண்ணில் உள்ளது. அதனைக்கொண்டு நீங்கள் இவற்றை நேரே கண்டுகொள்ளுங்கள்.
****************************************************
பாடல் எண் : 04
ஈட்டிய தேன்பூ மணங்கண் டிரதமும்
கூட்டிக் கொணர்ந்தொரு கொம்பிடை வைத்திடும்
ஓட்டித் துரந்திட் டதுவலி யார்கொளக்
காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே.

பொழிப்புரை :    ஈக்கள் தேனைச் சேர்த்தற்குப் பூக்களின் மணங்களை அறிந்து அதன் வழியே பூக்களை அணுகித் தேனைச் சேர்த்துக் கொணர்ந்து ஒரு மரக்கிளையில் வைக்குமேயன்றி, அத்தேனைத் தாமும் உண்ணா; பிறர்க்கும் கொடா. ஆயினும், வலிமையுடைய வேடர் அவ் ஈக்களை அப்புறப்படுத்தி மீள வரவொட்டாது துரத்தி விட்டுத் தேனைக் கொள்ள, அவையாதும் செய்யமாட்டாது அத்தேனை அவர்கட்கு உரியதாக்கித் தாம் கைவிட்டுச் செல்வது போன்றதே, தாமும் உண்ணாது, பிறர்க்கும் கொடாது செல்வத்தை ஈட்டிச் சேமித்து வைப்போரது தன்மையும்.
****************************************************
பாடல் எண் : 05
தேற்றத் தெளிமின் தெளிந்தீர் கலங்கன்மின்
ஆற்றுப் பெருக்கிற் கலக்கி மலக்காதே
மாற்றிக் களைவீர் மறுத்துங்கள் செல்வத்தைக்
கூற்றன் வருங்கால் குதிக்கலு மாமே.

பொழிப்புரை :  அறிவுடையீர், செல்வத்தைத் துணைக்கொண்டு கூற்றுவனை வெல்லுதல் கூடுமோ! கூடாது என்பதனை நன்கு தெளியுங்கள். கலக்கம் அடையாதீர்கள். உங்களிடத்தில் உள்ள செல்வம் உங்கள் உள்ளத்தையும் உடலையும், ஆற்றுவெள்ளம் தன்னுள் அகப்பட்டவரது உள்ளத்தைக் கலக்கி, உடலைப் புரட்டி ஈர்த்தல்போலச் செய்யாதவாறு அதனைத் தடுத்து நிறுத்தி நீக்குங்கள்.
****************************************************
பாடல் எண் : 06
மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே
கவிழ்கின்ற நீர்மிசைச் செல்லுங் கலம்போல்
அவிழ்கின்ற ஆக்கைக்கோர் வீடு பேறாகச்
சிமிழொன்று வைத்தமை தேர்ந்தறி யாரே.

பொழிப்புரை :   மகிழ்ச்சிக்கு ஏதுவாகிய பல நுகர்ச்சிப் பொருள்களும், கைப்பொருளும் எந்த நேரத்திலும் கவிழத்தக்கதாய் நீரின்மேல் மிதந்து செல்லுகின்ற மரக்கலம் திடீரென ஒருகால் கவிழ்ந்தொழிதலைப் போல விழுந்தொழிகின்ற உடம்பிற்கு ஒரு பேரின்பப் பேறுபோலக் காட்டி, உண்மையில் பெரியதொரு பிணிப்பாக வினையால் கூட்டுவிக்கப் பட்டிருத்தலை உலகர் அறிந்திலர்.
****************************************************
பாடல் எண் : 07 
வாழும் மனைவியும் மக்கள் உடன்பிறந்
தாரு மளவே தெமக்கென்பர் ஒண்பொருள்
மேவு மதனை விரிவுசெய் வார்கட்குக்
கூவுந் துணையொன்று கூடலு மாமே.

பொழிப்புரை :   ஒத்து வாழ்கின்ற, `மனைவி, மக்கள், உடன் பிறந்தார்` என்போரும் தம் தலைவரால் தங்கட்குக் கிடைக்கும் பொருள் எவ்வளவிற்று என்றே நோக்கி நிற்பர். அவரால் விரும்பப்படுகின்ற அப்பொருளை மிக ஈட்டுதல் ஒன்றையே செய்து வாழ்நாள் போக்குவார்க்கு இறுதிக்கண், `அந்தோ! எம்மைக் காக்க எம்முடன் வருக` என்று அழைத்துச் செல்லும் துணை ஒன்றைப் பெறுதலும் கூடுமோ!
****************************************************
பாடல் எண் : 08
வேட்கை மிகுத்தது மெய்கொள்வார் இங்கிலை
பூட்டுந் தறியொன்று போம்வழி ஒன்பது
நாட்டிய தாய்தமர் வந்து வணங்கிப்பின்
காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே.

பொழிப்புரை :   உயிராகிய பசுவைக் கட்டி வைத்துள்ள தறி ஒன்றே. அது கட்டவிழ்த்துக் கொள்ளுமாயின், ஓடிப்போவதற்கு ஒன்பது வழிகள் உள்ளன. அப்பொழுது செல்வத்தைத் தேடி அதனால் புறந்தரப்பட்ட தாயரும், பிற சுற்றத்தாரும் உடலைச் சூழ்ந்து நின்று, சென்ற உயிரைத் தெய்வமாக வணங்கிப் பின் தம்மைப் புறந்தந்தவர் பால் ஆசைமிக்குளதே ஆயினும், அவர் உடம்பைச் சுடுகாட்டிற்குக் கொண்டு செல்வோரிடம் காட்டிக் கொடுத்துக் கைவிட்ட நிலை உளதாவதன்றி, அவ்வுடம்பைத் தன்னிடமே வைத்துக் கொள்கின்றவர் இவ்வுலகில் ஒருவரும் இல்லை.
****************************************************
பாடல் எண் : 09
உடம்பொ டுயிரிடை விட்டோடும் போது
அடும்பரி சொன்றில்லை அண்ணலை எண்ணும்
விடும்பரி சாய்நின்ற மெய்நமன் தூதர்
சுடும்பரி சத்தையுஞ் சூழகி லாரே.

பொழிப்புரை :   உடம்பொடு கூடிநின்ற உயிர், அவற்றிடையே நின்ற தொடர்பை விடுத்து நீங்கும்பொழுது, அதனோடு உடன் செல்லும் பொருள் ஒன்றேனும் இல்லை. அவ்வுயிரை விட்டுத் தனித்து நிற்கும் உடம்பு பின் சுட்டெரிக்கப்படும் பொருளாய்விடும், யமதூதர் அதனையும் உடன்கொண்டுபோக நினைத்தல் இல்லையாதலால். ஆகவே, எல்லாவற்றையும் விடுத்துச் சிவபெருமானை நினையுங்கள்.


Offline Anu

பதிகம் எண் :07. இளமை நிலையாமை

(பாடல்கள்:10)


பாடல் எண் : 01
கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே
விழக்கண்டுந் தேறார் விழியிலா மாந்தர்
குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில்
விழக்கண்டுந் தேறார் வியனுல கோரே.

பொழிப்புரை : நாள்தோறும், கிழக்கில் அழகிதாய்த் தோன்றிப் பின் வானில் செல்லுகின்ற பேரொளியும் வெப்பமும் உடையதாய ஞாயிறு, பின்பு மேற்கில் வெப்பமும், ஒளியும் குறைந்து சாய்தலைக் கண்ணொளியில்லாத மக்கள் ஒளியில்லாத அக்கண்ணால் கண்டும் காணாதவராகின்றனர். அதுபோல, அகன்ற உலகில் அறிவில்லா திருக்கும் மக்கள், குழவியாய்ப் பிறந்த பசுக்கன்று அப்பொழுது துள்ளி ஆடிப் பின்பு சில நாளில் வளர்ந்து எருதாகி நன்கு உழுது, பின்னும் சில நாள்களுக்குப் பிறகு கிழமாய் எழமாட்டாது விழுதலைக் கண்ணாற் கண்டும், பிறந்த உடம்புகள் யாவும் இவ்வாறே இளமை நீங்கி முதுமை யுற்று விழும் என்பதை அறியாதவராகின்றனர்.
****************************************************
பாடல் எண் : 02
ஆண்டு பலவுங் கழிந்தன அப்பனைப்
பூண்டுகொண் டாரும் புகுந்தறி வார்இல்லை
நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினுந்
தூண்டு விளக்கின் சுடரறி யாரே.

பொழிப்புரை : மக்கள் பிறந்தபின் சில ஆண்டன்றிப் பல ஆண்டுகள் கழியினும், சிவபெருமானை அறிதலைக் கடனாகக் கொண்டு முயன்று அறிகின்றவர் யாரும் இல்லை. அவ்வாற்றால் இதுகாறும் நீடுசென்ற காலங்கள் இனியும் நீடுசெல்லுமாயினும், அவர் அவனை அறியமுயல்வாரல்லர்.
****************************************************
பாடல் எண் : 03
தேய்ந்தற் றொழிந்த இளமை கடைமுறை
ஆய்ந்தற்ற பின்னை அரிய கருமங்கள்
பாய்ந்தற்ற கங்கைப் படர்சடை நந்தியை
ஓர்ந்துற்றுக் கொள்ளும் உயிருள்ள போதே.

பொழிப்புரை :சிறிது சிறிதாகத் தேய்ந்து முடிகின்ற இளமைப் பருவம், கடைசியில் மிக நுணுகி முடிந்துவிட்ட பின்பு செயல்கள் யாவும் செய்தற்கரியனவாய் ஒழியும். (யாதொன்றும் செய்ய இயலாது என்பதாம்.) ஆதலால், நன்கு இயங்கத்தக்க இளமை உள்ளபொழுதே சிவபெருமானது பெருமையை ஆய்ந்துணர்ந்து உள்ளத்திற் கொள்ளுங்கள்.
****************************************************
பாடல் எண் : 04
விரும்புவர் முன்னென்னை மெல்லியல் மாதர்
கரும்பு தகர்த்துக் கடைக்கொண்ட நீர்போல்
அரும்பொத்த மென்முலை ஆயிழை யார்க்குக்
கரும்பொத்துக் காஞ்சிரங் காயும்ஒத் தேனே.

பொழிப்புரை : முன்னெல்லாம் என்னை இளமங்கையர் கரும்பைப் பிழிந்து பயனாகக் கொண்ட அதன் சாறுபோலப் பெரிதும் விரும்புவர். இப்பொழுதோ அவர்கட்குக் கரும்புபோல் நின்ற யானே காஞ்சிரங்காய் போல (எட்டிக்காய்போல) நிற்கின்ற நிலையையும் காண்கின்றேன்.
****************************************************
பாடல் எண் :05
பாலன் இளையன் விருத்தன் எனநின்ற
காலங் கழிவன கண்டும் அறிகிலார்
ஞாலங் கடந்தண்டம் ஊடறுத் தானடி
மேலுங் கிடந்து விரும்புவன் நானே.

பொழிப்புரை :ஒன்றாய் நின்ற வாழ்க்கைக் காலம், `குழவி, இளமை, முதுமை` என்னும் பருவ வேறுபாட்டால் முத்திறப்பட்டு ஒவ்வொன்றாய் பலவும் கடந்தொழிதலைக் காட்சியிற் கண்டு வைத்தும், உலகர் அவற்றை நினைகின்றிலர். (எனக்கோ அக்காலக் கழிவினால் பேரச்சம் உண்டாகின்றது.) அதனால், நான் இந்நிலவுலகையே அன்றி இதற்குமேல் உள்ள அண்டங்கள் பலவற்றையும் ஊடறுத்துக் கடந்து அப்பால் நிற்கின்ற சிவபெருமானது திருவடி என்னைத் தன்கீழ் வைத்திருந்தும், பிறிதொன்றை விரும்பாமல் அதனையே விரும்புவேன்.
****************************************************
பாடல் எண் : 06
காலை எழுந்தவர் நித்தலும் நித்தலும்
மாலை படுவதும் வாழ்நாள் கழிவதும்
சாலும்அவ் வீசன் சலவிய னாகிலும்
ஏல நினைப்பவர்க் கின்பஞ்செய் தானே.

பொழிப்புரை :நாள்தோறும் காலையில் துயில்விட்டு எழுந்த மக்கள், மீண்டும் நாள்தோறும் மாலையில் துயிலுதலும், இவ்வாறே அவர்தம் வாழ்நாள் ஒவ்வொன்றாகக் கழிந்து முடிதலும் போதும். (இனியும் இவை நிகழ வேண்டுவது என்னோ!) சிவபெருமான் இவ்வாறு அவர்களை இவ்விரண்டனுட் படுத்துத் துன்புறுத்துகின்ற முனிவினனாயினும், தன்னை மிக நினைத்த பலர்க்கு இன்பத்தைத் தந்துள்ளான்.
****************************************************
பாடல் எண் :07
பருவூசி ஐந்துமோர் பையினுள் வாழும்
பருவூசி ஐந்தும் பறக்கும் விருகம்
பருவூசி ஐந்தும் பனித்தலைப் பட்டால்
பருவூசிப் பையும் பறக்கின்ற வாறே.

பொழிப்புரை :நூலால் தைக்கும் நுண்ணூசிபோலாது, சணற்புரியால் தைக்கின்ற பருவூசிகள் ஐந்தும் ஒரு சணற்பைக்குள் இருக்கின்றன. அவை பருவூசியாயினும் பறக்கும் தன்மை வாய்ந்த யானைகளாம். அத்தன்மையவான அவை மெலிவடையு மாயின், அவை தங்கியுள்ள பையும் பறக்கின்ற தன்மையை உடையதாகிவிடும்.
****************************************************
பாடல் எண் : 08
கண்ணனுங் காய்கதி ரோனும் உலகினை
உண்ணின் றளக்கின்ற தொன்றும் அறிகிலார்
விண்ணுறுவா ரையும் வினையுறு வாரையும்
எண்ணுறும் முப்பதில் ஈர்ந்தொழிந் தாரே.

பொழிப்புரை :திருமாலும், பகலவனும் உலகத்தை அதன் உள்ளி ருந்தே அளக்கின்றதை உலகர் சிறிதும் நினைக்கின்றிலர். நினைப் பாராயின், அவ்விருவரும் வீடுபேற்றிற்கு உரியவரையும், பிறப்பிற்கு உரியவரையும் முறையே முப்பதுயாண்டு அகவையிலும், அறுபதுயாண்டு அகவையிலும் இவ்வுலகத்தினின்றும் பிரிக்கின்றவராவார்.
****************************************************
பாடல் எண் : 09
ஒன்றிய ஈரெண் கலையும் உடனுற
நின்றது கண்டும் நினைக்கிலர் நீசர்கள்
கன்றிய காலன் கருங்குழி வைத்தபின்
சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே.

பொழிப்புரை :பதினாறு கலைகளும் ஒருசேர வந்து நிரம்பப் பெற்ற நிறைமதி, பின்பு சிறிது சிறிதாகத் தேய்ந்து மறைவதைப் பார்த்திருந்தும், `இளமை நிலையாது` என்பதைக் கீழ்மக்கள் நினைக்கின்றார்கள் இல்லை. (அதன் பயனாக அவர்கள் இளமையுள்ள பொழுதே உயிர்க்கு உறுதி தேடிக் கொள்ளாமையால்) அவர்களது தீவினை பற்றிச் சினங் கொள்கின்ற கூற்றுவன் அவர்களை நரகக் குழியில் தள்ளிய பின்பு அதில் சென்று வீழ்ந்து துன்புறுதலைத் தவிர, அத்துன்பத்தினின்றும் நீங்கும் வழியை அவர் அறியமாட்டுவாரல்லர்.
****************************************************
பாடல் எண் : 10
எய்திய நாளில் இளமை கழியாமை
எய்திய நாளில் இசையினால் ஏத்துமின்
எய்திய நாளில் எறிவ தறியாமல்
எய்திய நாளில் இருந்துகண் டேனே.

பொழிப்புரை :மக்களுக்கென்று பொருந்திய நூற்றியாண்டின் எல்லைக்கு இடையே கூற்றுவன் வந்து அதனை அறுத்துச் செல்லுதலைப் பலர் அறியாது வாழ்ந்து, அக்கூற்றுவன் வந்தபொழுது துயருற்றமையை நான் எனது வாழ்நாளில் பன்முறை கண்டிருக்கின்றேன்; ஆதலால், வாழ்தல் பொருந்திய நாளில் இளமை நீங்கும் முன்பே அது பொருந்தி நிற்கின்ற நாட்களில் சிவபெருமானைப் பண்ணினால் பாடித் துதியுங்கள்.