Author Topic: இன்னா நாற்பது  (Read 3793 times)

Arya

  • Guest
இன்னா நாற்பது
« on: September 13, 2011, 09:37:48 AM »
பதினெண் கீழ்க்கணக்கு

இன்னா நாற்பது

முகவுரை
கபிலர் என்னும் புலவர் இயற்றியது இன்னா நாற்பது என்னும் நூல். நாற்பத்தொரு பாடல்களைக் கொண்ட இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படும் சங்கம் மருவிய காலத் தமிழ் நூற் தொகுதியுள் அடங்குவது. உலகத்தில் கூடாதவை என்னென்ன என்பது பற்றிக் கூறி நீதி உரைப்பது இந்நூல்.

நாற்பது என்னும் எண்தொகையால் குறிக்கப்பெறும் நான்கு நூல்கள் கீழ்க்கணக்கில் உள்ளன. அவற்றுள் கார்நாற்பதும், களவழி நாற்பதும் முறையே அகம், புறம் என்னும் பொருள் பற்றிப் பாடப்பெற்றவை. எஞ்சிய இன்னா நாற்பதும் இனியவை நாற்பதும் அறம் உரைப்பன. இவ் இரண்டும் முறையேதுன்பம் தரும் நிகழ்ச்சிகளும் இன்பம் தரும் செயல்களும் இன்னின்ன எனத் தொகுத்து உரைக்கின்றன.

இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. நூல்அமைப்பில் இனியவை நாற்பதினும் இது செவ்வியமுறையை மேற்கொண்டுள்ளது எனலாம். ஒவ்வொரு பாடலிலும் நந்நான்கு கருத்துகளைக்கொண்டு நான்மணிக்கடிகையைப் போன்று இந் நூல் அமைந்த போதிலும், ஒவ்வொன்றையும் 'இன்னா' என எடுத்துக் கூறுதலின், இது 'இன்னா நாற்பது' என்னும் சிறப்பைப் பெற்றுள்ளது. சிற்சில பொருள்களை இவ்வாசிரியர் மீண்டும் எடுத்துக் கூறுதல் அந்தஅறங்களை வற்புறுத்தி உணர்த்துதற் பொருட்டேயாதல் வேண்டும்.

இந் நூலை இயற்றியவர் கபில தேவர். தமிழுலகில் கபிலர் என்ற பெயருடையார் பலர் உள்ளனர். இவர்களில் முக்கியமாக ஐவரைக் குறிப்பிடலாம். முதலாமவராகக் கூறத்தக்கவர் சங்க காலத்தில் பாரிக்கு உற்ற நண்பராய் விளங்கிய அந்தணராகியகபிலர். இவருக்குப்பின் கூறத்தக்கவர் இன்னாநாற்பது செய்த பிற்சான்றோராகிய கபிலர். அடுத்து, பதினோராந் திருமுறையில் வரும் கபிலதேவ நாயனார்


Arya

  • Guest
Re: இன்னா நாற்பது
« Reply #1 on: September 13, 2011, 09:44:56 AM »
பாடல்-1
பந்தமில் லாத மனையின் வனப்பின்னா
தந்தையில் லாத புதல்வ னழகின்னா
அந்தண ரில்லிருந் தூணின்னா வாங்கின்னா
மந்திரம் வாயா விடின்.

பொருள்
சுற்றமில்லாத இல்வாழ்க்கையின் அழகானது துன்பமாம்.
தந்தையில்லாத பிள்ளையினது அழகானது துன்பமாம்
துறவோர் வீட்டிலிருந்து உண்ணுதல் துன்பமாம்
அவ்வாறே மறைமொழியாய மந்திரங்கள் பயனளிக்காவிடின் துன்பமாம்

----------------------------------------------------------------------------------------------------------

பாடல்-2
பார்ப்பாரிற் கோழியு நாயும் புகலின்னா
ஆர்த்த மனைவி யடங்காமை நன்கின்னா
பாத்தில் புடைவை யுடையின்னா வாங்கின்னா
காப்பாற்றா வேந்த னுலகு.

பொருள்

பார்ப்பாருடைய மனையில் கோழியும் நாயும்  நுழைதல் துன்பமாம்.
கலியாணஞ் செய்துகொண்ட மனைவி அடங்கி நடவாமை மிகவுந் துன்பமாம்.
பகுப்பு இல்லாத புடைவையை உடுத்தல் துன்பமாம்.
ஆங்கு அவ்வாறே நாடு இன்னா துன்பமாம்.

--------------------------------------------------------------------------------------------------------

பாடல்-3
கொடுங்கோல் மறமன்னர் கீழ்வாழ்த லின்னா
நெடுநீர் புணையின்றி நீந்துத லின்னா
கடுமொழி யாளர் தொடர்பின்னா வின்னா
தடுமாறி வாழ்த லுயிர்க்கு.

பொருள்

கொடுங்கோல் செலுத்தும் அரசரது ஆட்சியின் கீழ் வாழ்வது துன்பமாம்.
நெடுநீர் மிக்க நீரை  தெப்பமில்லாமல் கடந்து செல்லுதல் துன்பமாம்,
வன்சொல் கூறுவோரது நட்பு துன்பமாம்
மனத்தடுமாற்ற மடைந்து வாழ்வது துன்பமாம்.

-----------------------------------------------------------------------------------------------------

பாடல்-4
எருதி லுழவர்க்குப் போகீர மின்னா
கருவிகண் மாறிப் புறங்கொடுத்த லின்னா
திருவுடை யாரைச் செறலின்னா வின்னா
பெருவலியார்க் கின்னா செயல்.

பொருள்

எருது இல்லாத உழுதொழிலாளர்க்கு அருகிய ஈரம் துன்பமாம்.
படையின் தொகுதி நிலையழிந்து முதுகு காட்டுதல் துன்பந் தருவதாகும்.
மிக்க செல்வமுடையவர் பால் செற்றங் கொள்ளல் துன்பந் தருவதாகும்.
மிக்க திறலுடையார்க்கு  தீமை செய்தல் தருவதாகும்.

--------------------------------------------------------------------------------------------------------

பாடல்-5
சிறையில் கரும்பினைக் காத்தோம்ப லின்னா
உறைசேர் பழங்கூரை சேர்ந்தொழுக லின்னா
முறையின்றி யாளு மரசின்னா வின்னா
மறையின்றிச் செய்யும் வினை.

பொருள்
வேலியில்லாத கரும்புப்பயிரை பாதுகாத்தல் துன்பமாம்.
மழைத்துளி ஒழுகுதலையுடைய பழைய கூரையையுடைய மனையில் பொருந்தி வாழ்தல் துன்பமாம்.
நீதி யில்லாமல் ஆளும் அரசரது ஆட்சி துன்பமாம்.
சூழ்தலில்லாமல் செய்யுங் கருமம் துன்பந் தருவதாகும்

 
« Last Edit: September 14, 2011, 06:43:51 PM by Arya »

Arya

  • Guest
Re: இன்னா நாற்பது
« Reply #2 on: September 14, 2011, 04:02:16 PM »
பாடல்-6
அறமனத்தார் கூறுங் கடுமொழியு மின்னா
மறமனத்தார் ஞாட்பின் மடிந்தொழுக லின்னா
இடும்பை யுடையார் கொடையின்னா வின்னா
கொடும்பா டுடையார்வாய்ச் சொல்.b]

பொருள்
அறத்தை விரும்பும் நெஞ்சத்தினர் சொல்லுகின்ற கடுஞ் சொல்லும் துன்பமாம்
வீரத் தன்மையையுடைய நெஞ்சத்தினர் போரின்கண் சோம்பி இருத்தல் துன்பமாம்.
 வறுமை உடையாரது ஈகைத் தன்மை,துன்பமாம்.
கொடுமையுடையாரது வாய்ச்சொல் துன்பமாம்.

------------------------------------------------------------------------------------------------------

பாடல்-7
ஆற்ற லிலாதான் பிடித்த படையின்னா
நாற்ற மிலாத மலரி னழகின்னா
தேற்ற மிலாதான் றுணிவின்னா வாங்கின்னா
மாற்ற மறியா னுரை.

பொருள்

வலியில்லாதவன் கையிற்பிடித்த படைக்கலம் துன்பமாம்.
மணமில்லாத மலரின் அழகு துன்பமாம்.
தெளிவு இல்லாதவன், துணிவு  துன்பமாம்.
அவ்வாறே  சொல்லின் கூறுபாட்டினை அறியாதவனது சொல் துன்பமாம்.

-----------------------------------------------------------------------------------------------------

பாடல்-8
பகல்போலு நெஞ்சத்தார் பண்பின்மை யின்னா
நகையாய நண்பினார் நாரின்மை யின்னா
இகலி னெழுந்தவ ரோட்டின்னா வின்னா
நயமின் மனத்தவர் நட்பு.

பொருள்

ஞாயிறுபோலும் மனமுடையார் பண்பில்லாதிருத்தல்துன்பமாம்.
நகுதலையுடைய, நட்பாளர் அன்பில்லா திருத்தல் துன்பமாம்
போரின்கண் ஏற்றெழுந்தவர் புறங்காட்டியோடுதல் துன்பமாம்.
 நீதியில்லாத, நெஞ்சினையுடையாரது; நட்பு துன்பமாம்

-----------------------------------------------------------------------------------------------------------
பாடல்-9
கள்ளில்லா மூதூர் களிகட்கு நன்கின்னா
வள்ளல்க ளின்மை பரிசிலர்க்கு முன்னின்னா
வண்மை யிலாளர் வனப்பின்னா வாங்கின்னா
பண்ணில் புரவி பரிப்பு.

பொருள்

கள் இல்லாத  பழைமையாகிய ஊர் கள்ளுண்டு களிப்பார்க்கு மிகவுந் துன்பமாம்.
வள்ளல்கள் இல்லா திருத்தல் இரவலர்க்கு மிகவுந் துன்பமாம்.
ஈகைக்குண மில்லாதவர்களுடைய, அழகு துன்பமாம்.
அவ்வாறே  கலனையில்லாத குதிரை தாங்குதல் துன்பமாம்.

---------------------------------------------------------------------------------------------------------

பாடல்-10
பொருளுணர்வா ரில்வழிப் பாட்டுரைத்த லின்னா
இருள்கூர் சிறுநெறி தாந்தனிப்போக் கின்னா
அருளில்லார் தங்கட் செலவின்னா வின்னா
பொருளில்லார் வண்மை புரிவு..

பொருள்
பாட்டின் பொருளை அறியும் அறிவுடையார் இல்லாத இடத்தில் செய்யுளியற்றிக் கூ.றுதல் துன்பமாம்.
இருள் மிகுந்த சிறிய வழியிலேதனியாகப் போகுதல் துன்பமாம்
அருள் இல்லார் தண்ணளியில்லாதவரிடத்தில் இரப்போர் செல்லுதல்  துன்பமாம்
பொருளில்லாதவர் ஈதலை விரும்புதல்  துன்பமாம்


« Last Edit: September 14, 2011, 06:46:53 PM by Arya »

Arya

  • Guest
Re: இன்னா நாற்பது
« Reply #3 on: September 14, 2011, 05:31:42 PM »
பாடல்-11
உடம்பா டில்லாத மனைவிதோ ளின்னா
இடனில் சிறியாரோ டியர்த்தநண் பின்னா
இடங்கழி யாளர் தொடர்பின்னா வின்னா
கடனுடையார் காணப் புகல்..

பொருள்
உளம் பொருந்துலில்லாத மனைவியின் தோளைச்சேர்தல் துன்பமாம்
விரிந்தவுள்ளமில்லாத சிறுமையுடையாருடன் பிணித்த நட்பு துன்பமாம்
மிக்க காமத்தினையுடையாரது  சேர்க்கை, துன்பமாம்.
கடன் கொடுத்தவர் பார்க்கமாற அவர்க்கெதிரே செல்லுதல் துன்பமாம்

--------------------------------------------------------------------------------------------------------

பாடல்-12
தலைதண்ட மாகச் சுரம்போத லின்னா
வலைசுமந் துண்பான் பெருமித மின்னா
புலையுள்ளி வாழ்த லுயிர்க்கின்னா வின்னா
முலையில்லாள் பெண்மை விழைவு..

பொருள்

தலை அறுபடும்படி காட்டின்கட் செல்லுதல் துன்பமாம்,
வலையைச் சுமந்து அதனால் உண்டு வாழ்வானது செருக்கு துன்பமாம்
புலால் உண்ணுதலை விரும்பி வாழ்தல் உயிர்க்கு துன்பமாம்.
முலையில்லாதவள் பெண்தன்மையை  விரும்புதல் துன்பமாம் b]

---------------------------------------------------------------------------------------------------------

பாடல்-13
மணியிலாக் குஞ்சரம் வேந்தூர்த லின்னா
துணிவில்லார் சொல்லுந் தறுகண்மை யின்னா
பணியாத மன்னர்ப் பணிவின்னா வின்னா
பிணியன்னார் வாழு மனை.

பொருள்

ஓசையினால் தன் வருகையைப் பிறர்க்கு அறிவிக்கும் மணியை அணியப்பெறாத யானையை அரசன் ஏறிச்செல்லுதல் துன்பமாம்;
பகையை வெல்லுந் துணிவில்லாதார் கூறும் வீரமொழிகள் துன்பமாம்,
வணங்கத்தகாத அரசரை வணங்குதல், துன்பமாம்;
கணவருக்குப் பிணிபோலும் மனைவியர் வாழும் மனை  துன்பமாம்.

----------------------------------------------------------------------------------------------------

பாடல்-14
வணரொலி யைம்பாலார் வஞ்சித்த லின்னா
துணர் தூங்கு மாவின் படுபழ மின்னா
புணர்பாவை யன்னார் பிரிவின்னா வின்னா
உணர்வா ருணராக் கடை. b]

பொருள்

குழற்சியையுடைய  தழைத்த கூந்தலையுடைய மகளிர் தம் கணவரை வஞ்சித் தொழுகுதல் துன்பமாம்;
தொங்குகின்ற மாவினத கனி துன்பமாம்
வேற்றுமையின்றிப் பொருந்திய பாவைபோலும் மகளிரது பிரிதல் துன்பமாம்;
அறியுந் தன்மையர் அறியாவிடத்து துன்பமாம்.

-----------------------------------------------------------------------------------------------------------

பாடல்-15
புல்லார் புரவி மணியின்றி யூர்வின்னா
கல்லா ருரைக்குங் கருமப் பொருளின்னா
இல்லாதார் நல்ல விருப்பின்னா  வாங்கின்னா
பல்லாரு ணாணப் படல்.

பொருள்
புல்லை உண்கின்ற குதிரையை மணியில்லாமல் ஏறிச் செலுத்துதல் துன்பமாம்;
கல்வியில்லாதார் கூறும் காரியத்தின் பயன் துன்பமாம்;
பொருளில்லாதவரது நல்லவற்றை விரும்பும் விருப்பம் துன்பமாம்
அவ்வாறே பலர் நடுவே நாணப்படுதல் துன்பமாம்



« Last Edit: September 14, 2011, 06:48:55 PM by Arya »

Arya

  • Guest
Re: இன்னா நாற்பது
« Reply #4 on: September 14, 2011, 05:47:57 PM »
பாடல்-16
உண்ணாது வைக்கும் பெரும்பொருள் வைப்பின்னா
நண்ணாப் பகைவர் புணர்ச்சி நனியின்னா
கண்ணி லொருவன் வனப்பின்னா வாங்கின்னா
எண்ணிலான் செய்யுங் கணக்கு.

பொருள்
நுகராது வைக்கும் பெரிய பொருளின் வைப்பானது துன்பமாம்;
உளம் பொருந்தாத பகைவரது சேர்க்கை மிகவுந் துன்பமாம்;
விழியில்லாத ஒருவனது அழகு துன்பமாம்;
அவ்வாறே எண்ணூல் பயிலாதவன் இயற்றும்கணக்கு துன்பமாம்

-----------------------------------------------------------------------------------------------------------

பாடல்-17
ஆன்றவிந்த சான்றோருட் பேதை புகலின்னா
மான்றிருண்ட போழ்தின் வழங்கல் பெரிதின்னா
நோன்றவிந்து வாழாதார் நோன்பின்னா வாங்கின்னா
ஈன்றாளை யோம்பா விடல்.

பொருள்

கல்வியால் நிறைந்து அடங்கிய பெரியோர் நடுவே அறிவில்லாதவன் செல்லுதல் துன்பமாம்;
மயங்கி இருண்டுள்ள காலத்தில் வழிச் செல்லுதல் மிகவுந் துன்பமாம்;
துன்பங்களைப் பொறுத்து மனம் அடங்கி வாழாமாட்டாதவர் நோற்றல் துன்பமாம்
அவ்வாறே பெற்ற தாயை காப்பாற்றாமல் விடுதல் துன்பமாம்b]

--------------------------------------------------------------------------------------------------------

பாடல்-18
உரனுடையா னுள்ள மடிந்திருத்த லின்னா
மறனுடை யாளுடையான் மார்பார்த்த லின்னா
சுரமரிய கானஞ் செலவின்னா வின்னா
மனவறி யாளர்  தொடர்பு.

பொருள்

திண்ணிய அறிவுடையவன்  மனமடித்திருத்தல் துன்பமாம்;
வீரமுடைய ஆட்களையுடையான் மார்பு தட்டுதல் துன்பமாம்
அருநெறியாகிய இயங்குதற்கரிய காட்டின் கண் செல்லுதல் துன்பமாம்
மன வறுமை யுடையாரது சேர்க்கை துன்பமாம்.

--------------------------------------------------------------------------------------------------------

பாடல்-19
குலத்துப் பிறந்தவன் கல்லாமை யின்னா
நிலத்திட்ட நல்வித்து நாறாமை யின்னா
நலத்தகையார் நாணாமை யின்னாவாங் கின்னா
கலத்தில் குலமில் வழி. b]

பொருள்

நற்குடியிற் பிறந்தவன் கல்லாதிருத்தல் துன்பமாம்
பூமியில் விதைத்த நல்ல விதைகள் முளையாமற் போதல் துன்பமாம்
அழகினையுடைய மகளிர் நாணின்றி யொழுகுதல் துன்பமாம்
அவ்வாறே ஒவ்வாத குலத்திலே மணஞ் செய்து கலத்தல் துன்பமாம்b]

------------------------------------------------------------------------------------------------------

பாடல்-20
மாரிநாட் கூவுங் குயிலின் குரலின்னா
வீர மிலாளர் கடுமொழிக் கூற்றின்னா
மாரி வளம்பொய்ப்பி னூர்க்கின்னா வாங்கின்னா
மூரி யெருத்தா லுழவு.

பொருள்
மழைக்காலத்தில் கூவுகின்ற குயிலினது குரலோசை துன்பமாம்
அன்பில்லாதவரது கடுமொழி துன்பமாம்
மழை வளம் பொய்க்குமாயின் உலகிற்கு துன்பமாம்
அவ்வாறே மூரியாகிய எருதால் உழுதல் துன்பமாம்


« Last Edit: September 14, 2011, 06:22:52 PM by Global Angel »

Arya

  • Guest
Re: இன்னா நாற்பது
« Reply #5 on: September 14, 2011, 06:05:49 PM »
பாடல்-21
ஈத்த வகையா னுவவாதார்க் கீப்பின்னா
பாத்துண லில்லா ருழைச்சென் றுணலின்னா
மூத்த விடத்துப் பிணியின்னா வாங்கின்னா
ஓத்திலாப் பார்ப்பா னுரை.

பொருள்
கொடுத்த அளவினால் மகிழாதவர்க்கு கொடுத்தல் துன்பமாம்
பகுத்து உண்ணுதல் இல்லாதவரிடத்தில் சென்று உண்ணுதல் துன்பமாம்
முதுமையுற்ற பொழுதில் நோய் உண்டாதல் துன்பமாம்
அவ்வாறே வேதத்தை ஓதுதல் இல்லாத பார்ப்பானுடைய சொல் துன்பமாம்

-------------------------------------------------------------------------------------------------------

பாடல்-22
யானையின் மன்னரைக் காண்ட னனியின்னா
ஊனைத்தின் றூனைப் பெருக்குதல் முன்னின்னா
தேனெய் புளிப்பிற் சுவையின்னா வாங்கின்னா
கான்யா றிடையிட்ட வூர்..

பொருள்

யானைப்படையில்லாத அரசரை பார்த்தல் மிகவுந் துன்பமாம்
ஊனைத் தின்று தன் ஊனை வளர்த்தல் மிகவுந் துன்பமாம்
தேனும் நெய்யும் புளித்துவிட்டால் அவற்றின் சுவை துன்பமாம்
அவ்வாறே, காட்டாறு இடையிலே உளதாகிய ஊரானது துன்பமாம்

---------------------------------------------------------------------------------------------------------

பாடல்-23
சிறையில்லாத மூதூரின் வாயில்காப் பின்னா
துறையிருந் தாடை கழுவுத லின்னா
அறைபறை யன்னவர் சொல்லின்னா வின்னா
நிறையில்லான் கொண்ட தவம்..

பொருள்

மதில் இல்லாத பழைமையாகிய ஊரினது வாயிலைக் காத்தல் துன்பமாம்
நீர்த்துறையிலிருந்து ஆடைதோய்த்து மாசுபோக்குதல் துன்பமாம்
ஒலிக்கின்ற பறைபோன்றாரது சொல்லானது துன்பமாம்
பொறிகளைத் தடுத்து நிறுத்துந் தன்மையில்லாதவன் மேற்கொண்ட தவம் துன்பமாம்.

-------------------------------------------------------------------------------------------------------

பாடல்-24
ஏமமில் மூதூ ரிருத்தன் மிகவின்னா
தீமை யுடையா ரயலிருத்த னன்கின்னா
காமமுதிரி னுயிர்க்கின்னா வாங்கின்னா
யாமென் பவரொடு நட்பு.b]

பொருள்

காவல் இல்லாத பழைய ஊரிலே வாழ்தல் மிகவுந் துன்பமாம்
தீச்செய்கையுடையவரது பக்கத்திலேயிருத்தல் மிகவும் துன்பமாம்
காமநோய் முற்றினால்உயிர்க்குத் துன்பமாம்
அவ்வாறே யாமென்று தருக்கியிருப்பவரோடு செய்யும் நட்பானது துன்பமாம்.

---------------------------------------------------------------------------------------------

பாடல்-25
நட்டா ரிடுக்கண்கள் காண்டல் நனியின்னா
ஒட்டார் பெருமிதங் காண்டல் பெரிதின்னா
கட்டில்லா மூதூ ருறையின்னா வாங்கின்னா
நட்ட கவற்றினாற் சூது.

பொருள்
நட்புக் கொண்டவருடைய துன்பங்களை பார்த்தல் மிகவுந் துன்பமாம்
பகைவரது செருக்கை பார்த்தல் மிகவுந் துன்பமாம்
சுற்றமாகிய கட்டு இல்லாத பழையவூரிலே வாழ்தல் துன்பமாம்
அவ்வாறே நட்பாகக் கொள்ளப்பட்ட கவற்றைக்கொண்டு சூதாட்டம் துன்பமாம்



« Last Edit: September 14, 2011, 06:23:52 PM by Global Angel »

Arya

  • Guest
Re: இன்னா நாற்பது
« Reply #6 on: September 14, 2011, 06:16:59 PM »
பாடல்-26
பெரியாரோ டியாத்த தொடர்விடுத லின்னா
அரியவை செய்து மெனவுரைத்த லின்னா
பரியார்க்குத் தாமுற்ற கூற்றின்னா வின்னா
பெரியோர்க்குத் தீய செயல்..

பொருள்
பெரியவருடன் கொண்ட தொடர்ச்சியை விடுவது துன்பமாம்
செய்தற்கரிய காரியங்களை செய்து முடிப்போம் என்று சொல்லுதல் துன்பமாம்
தம்மிடத்தில் அன்பு கொள்ளாதவர்க்கு தாம் அடைந்த துன்பங்களைக் கூறும் சொல் துன்பமாம்
பெருமையுடையார்க்கு தீயனவற்றைச் செய்தல் துன்பமாம்

--------------------------------------------------------------------------------------------------

பாடல்-27
பெருமை யுடையாரைப் பீடழித்த லின்னா
கிழமை யுடையார்க் களைந்திடுத லின்னா
வளமை யிலாளர் வனப்பின்னா வின்னா
இளமையுண் மூப்புப் புகல்.

பொருள்

பெருமையுடையவரை பெருமை யழியக் கூறல் துன்பமாம்
உரிமை உடையவரை நீக்கி விடுதல் துன்பமாம்
செல்வ மில்லாதவருடைய அழகு துன்பமாம்
இளமைப் பருவத்தில் மூதுமைக்குரிய தன்மைகள் உண்டாதல் துன்பந் தருவதாகும்

-----------------------------------------------------------------------------------------------------

பாடல்-28
கல்லாதா னூருங் கலிமாப் பரிப்பின்னா
வல்லாதான் சொல்லு முரையின் பயனின்னா
இல்லார்வாய்ச் சொல்லி னயமின்னா வாங்கின்னா
கல்லாதான் கோட்டி கொளல்.

பொருள்

நடத்த வேண்டிய முறையைக் கல்லாதவன் ஏறிச் செலுத்தும் மனஞ்செருக்கிய குதிரை அவனைச் சுமந்து செல்லுதல் துன்பமாம்
கல்வி யில்லாதவன் சொல்லுகின்ற சொல்லின் பொருள் துன்பமாம்
செல்வ மில்லாதவருடைய வாயிலிருந்து வரும் சொல்லினது நயமானது துன்பமாம்
அவ்வாறே, கல்வியில்லாதவன் கற்றவ ரவையில் ஒன்றைக் கூறுதல் துன்பமாம்.

------------------------------------------------------------------------------------------------------

பாடல்-29
குறியறியான் மாநாக  மாட்டுவித்த லின்னா
தறியறியா  னீரின்கட் பாய்ந்தாட லின்னா
அறிவறியா மக்கட் பெறலின்னா வின்னா
செறிவிலான் கேட்ட மறை. .

பொருள்

பாம்பாட்டுதற்குரிய மந்திர முதலியவற்றின் முறைகளை அறியாதவன் பெரிய பாம்பினை ஆடச்செய்தல் துன்பமாம்
உள்ளிருக்கும் குற்றியை யறியாமல் நீரில் பாய்ந்து குதித்து விளையாடுதல் துன்பமாம்.
அறிய வேண்டுவனவற்றை அறியமாட்டாத பிள்ளைகளை பெறுதல் துன்பமாம்
அடக்கம் இல்லாதவன் கேட்ட இரகசியம் துன்பமாம்.

----------------------------------------------------------------------------------------

பாடல்-30
நெடுமர நீள்கோட் டுயர்பாய்த லின்னா
கடுஞ்சின வேழத் தெதிர்சேற லின்னா
ஒடுங்கி யரவுறையு மில்லின்னா வின்னா
கடும்புலி வாழு மதர்.

பொருள்
நெடிய மரத்தினது நீண்ட கிளையின் உயரத்திலிருந்து கீழே குதித்தல்  துன்பமாம்
மிக்க கோபத்தினையுடைய யானையின் எதிரே செல்லுதல் துன்பமாம்
பாம்பு மறைந்து வசிக்கின்ற வீடானது துன்பமாம்
கொடிய புலிகள் வாழ்கின்ற வழியானது துன்பமாம்



« Last Edit: September 14, 2011, 06:24:59 PM by Global Angel »

Arya

  • Guest
Re: இன்னா நாற்பது
« Reply #7 on: September 14, 2011, 06:28:37 PM »
பாடல்-31
பண்ணமையா யாழின்கீழ்ப் பாடல் பெரிதின்னா
எண்ணறியா மாந்தர்  ஒழுக்குநாட் கூற்றின்னா
மண்ணின் முழவி னொலியின்னா வாங்கின்னா
தண்மை யிலாளர் பக.

பொருள்
இசை கூடாத யாழின் கீழிருந்து பாடுதல் மிகவுந்துன்பமாம்
குறி நூல் (சோதிடம்) அறியாத மாக்கள் ஒழுகுதற்குரிய நாள் கூறுதல் துன்பமாம்
மார்ச்சனையில்லாத மத்தளத்தினது ஓசை துன்பமாம்
அவ்வாறே தண்ணிய குணம் இல்லாதவரது பகையானது துன்பமாம்

------------------------------------------------------------------------------------------------------

பாடல்-32
தன்னைத்தான் போற்றா தொழுகுத னன்கின்னா
முன்னை யுரையார் புறமொழிக் கூற்றின்னா
நன்மை யிலாளர் தொடர்பின்னா வாங்கின்னா
தொன்மை யுடையார் கெடல்.

பொருள்

ஒருவன் தன்னைத்தானே காத்துக்கொள்ளாது நடத்தல் மிகவுந் துன்பமாம்
முன்னே சொல்லாமல் புறத்தே பழித்துரைக்கும் புறங்கூற்று துன்பமாம்
 நற்குணமில்லாதவரது நட்பு துன்பமாம்
அவ்வாறே பழைமையுடையவர் கெடுதல் துன்பமாம்

----------------------------------------------------------------------------------------------------------

பாடல்-33
கள்ளுண்பான் கூறுங் கருமப் பொருளின்னா
முள்ளுடைக் காட்டி னடத்த னனியின்னா
வெள்ளம் படுமாக் கொலையின்னா வாங்கின்னா
கள்ள மனத்தார் தொடர்பு.

பொருள்

கட்குடிப்பவன் சொல்லுகின்ற காரியத்தின் பயன் துன்பமாம்
முட்களையுடைய காட்டில் நடத்தலானது மிகவுந் துன்பமாம்
வெள்ளத் திலகப்பட்ட விலங்கு கொலையுண்டல் துன்பமாம்
அவ்வாறே வஞ்சமனத்தினை யுடையாரது நட்பு துன்பமாம்.

------------------------------------------------------------------------------------------------------------

பாடல்-34
ஒழுக்க மிலாளார்க் குறவுரைத்த  லின்னா
விழுத்தகு நூலும் விழையாதார்க் கின்னா
இழித்த தொழிலவர் நட்பின்னா வின்னா
கழிப்புவாய் மண்டிலங் கொட்பு.

பொருள்

நல்லொழுக்கம் இல்லாதவரிடத்தே தமக்கு உறவுளதாகக் கூறுதல்  துன்பமாம்
சீரிய நூலும் விரும்பிக் கல்லாதார்க்கு துன்பமாம்
இழிக்கப்பட்ட தொழிலை யுடையாரது நட்பு துன்பமாம்
நல்லாரால் கழிக்கப்பட்ட இடமாகிய நாட்டிலே திரிதல் துன்பமாம்.

--------------------------------------------------------------------------------------------------

பாடல்-35
எழிலி யுறைநீங்கி னீண்டையார்க் கின்னா
குழலி னினிய மரத் தோசைநன் கின்னா
குழவிக ளுற்ற பிணியின்னா வின்னா
அழகுடையான் பேதை யெனல்.

பொருள்
மேகமானது நீரைச் சொரியாதாயின் இவ்வுலகத்திலுள்ளவர்களுக்கு துன்பமாம்
புல்லாங் குழலைப்போலும் இனிய மரத்தினது ஓசை நன்கு துன்பமாம்
குழந்தைகள் அடைந்த நோயானது துன்பமாம்
அழகினையுடையவன் அறிவில்லாதவன் என்று சொல்லப்படுதல் துன்பமாம்



« Last Edit: September 14, 2011, 06:33:25 PM by Global Angel »

Arya

  • Guest
Re: இன்னா நாற்பது
« Reply #8 on: September 14, 2011, 06:38:41 PM »
பாடல்-36
பொருளிலான் வேளாண்மை காமுறுத லின்னா
நெடுமாட நீணகர்க் கைத்தின்மை யின்னா
வருமனை பார்த்திருந் தூணின்னா வின்னா
கெடுமிடங் கைவிடுவார் நட்பு

பொருள்
செல்வ மில்லாதவன் பிறர்க்கு உதவி புரிதலை விரும்புதல் துன்பமாம்
நெடிய மாடங்களையுடைய பெரிய நகரத்திலே பொருளின்றியிருத்தல்  துன்பமாம்
வரப்பட்ட மனையிலுள்ளாரை எதிர்நோக்கியிருந்து ஊண் உண்ணுதல்  துன்பமாம்
வறுமையுள்ள இடத்தில் கைவிட்டு நீங்குவாரது நட்பு துன்பமாம்

--------------------------------------------------------------------------------------------------------

பாடல்-37
நறிய மலர்பெரிது நாறாமை யின்னா
துறையறியா னீரிழிந்து  போகுத லின்னா
அறியான் வினாப்படுத லின்னாவாங் கின்னா
சிறியார்மேற் செற்றங் கொளல்.

பொருள்

நல்ல மலரானது மிகவும் மணம் வீசாதிருத்தல் துன்பமாம்
துறையை அறியாதவன் நீரில் இறங்கிச் செல்லுதல் துன்பமாம்
நூற்பொருள் அறியாதவன் அறிவுடையோரால் வினாப்படுதல் துன்பமாம்
அவ்வாறே சிறியவர்மீது சினங் கொள்ளுதல் துன்பமாம்

-----------------------------------------------------------------------------------------------------

பாடல்-38
பிறன்மனையாள் பின்னோக்கும் பேதைமை யின்னா
மறமிலா மன்னர் செருப்புகுத லின்னா
வெறும்புறம் வெம்புரவி யேற்றின்னா வின்னா
திறனிலான் செய்யும் வினை.

பொருள்

பிறன் மனைவியைக் காமுற்றுப் பின் றொடரக் கருதும் அறிவின்மை  துன்பமாம்
வீரமில்லாத அரசர் போர்க்களத்திற் செல்லுதல் துன்பமாம்
விரைந்த செலவினையுடைய குதிரையினது கல்லணையில்லாத முதுகில் ஏறுதல் துன்பமாம்
செய்யுங் கூறுபாடறியாதவன் செய்யுங் காரியம் துன்பமாம்.

------------------------------------------------------------------------------------------------------

பாடல்-39
கொடுக்கும் பொருளில்லான் வள்ளன்மை யின்னா
கடித்தமைந்த பாக்கினுட் கற்படுத லின்னா
கொடுத்து விடாமை கவிக்கின்னா வின்னா
மடுத்துழிப் பாடா விடல்.

பொருள்

கொடுத்தற்குரிய பொருளில்லாதவனுடைய ஈகைத் தன்மை துன்பமாம்
கடித்தற்கு அமைந்த பாக்கில் கல் இருத்தல் துன்பமாம்
புலவனுக்கு பரிசில் கொடுத்துனுப்பாமை துன்பமாம்
தடைப்பட்ட விடத்து பாடாது விடுதல் பாடும் புலவனுக்குத் துன்பமாம்.

--------------------------------------------------------------------------------------------------------

பாடல்-40
அடக்க முடையவன் மீளிமை யின்னா
துடக்க மிலாதவன் றற்செருக் கின்னா
அடைக்கலம் வவ்வுத லின்னாவாங் கின்னா
அடக்க வடங்காதார் சொல்.

பொருள்
ஐம்பொறிகளை அடக்குதலுடையவனது தறுகண்மை துன்பமாம்
முயற்சியில்லாதவன் தன்னையே மதிக்கும் மதிப்பு துன்பமாம்
பிறர் அடைக்காமாக வைத்த பொருளை கவர்ந்து கொள்ளுதல் துன்பமாம்
அவ்வாறே அறிவுடையோர் அடக்கவும் அடங்கு தலில்லாதவர்க்குக் கூறும் துன்பமாம்



« Last Edit: September 14, 2011, 06:45:37 PM by Global Angel »

Offline !~Bharathy~!

Re: இன்னா நாற்பது
« Reply #9 on: January 25, 2012, 02:45:40 AM »
ஆர்யா,இப்பதிவுக்காக பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்.



பாடல்-8 இல்...

”ஞாயிறுபோலும் மனமுடையார் பண்பில்லாதிருத்தல்துன்பமாம்.,,,,, ”
இதன் பொருள் என்ன?ஞாயிறுபோலும் மனமுடையார் என்றால் என்ன?
« Last Edit: January 25, 2012, 09:02:22 PM by !~Bharathy~! »


The Purpose of Life is a Llife of Purpose!!

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இன்னா நாற்பது
« Reply #10 on: January 25, 2012, 03:10:18 AM »
ஞாயிறு  என்றால் சூரியன் என்றும் பொருள் உண்டு ... எனவே சூரியனை போல எலாருக்கும் நன்மை செய்யகூடிய மனது உள்ளவர்கள்  அடிபடையான நல்ல குணங்களை கொண்டு இராது இருப்பது  துன்பம் என்று பொருள் கொள்ளலாம் .
                    

Offline !~Bharathy~!

Re: இன்னா நாற்பது
« Reply #11 on: January 25, 2012, 03:31:59 AM »
ஏஞ்சல்,
 நன்றி தங்கள் பொருள் விளக்த்திற்கு!
« Last Edit: January 25, 2012, 09:03:07 PM by !~Bharathy~! »


The Purpose of Life is a Llife of Purpose!!