Author Topic: அத்வைதம் - ஆதிசங்கரர்  (Read 2229 times)

Offline Anu

அத்வைதம் - ஆதிசங்கரர்
« on: March 22, 2012, 01:52:59 PM »
அத்வைதம் - ஆதிசங்கரர் உண்மை ஒன்று தான். அது இரண்டாவது இல்லாததாக ஒன்றேயாக இருக்கிறது என்று பிரும்மத்தைப் பற்றி பேசும் கொள்கைக்கு அத்வைதம் என்று பெயர். இந்த மதத்தின் ஆரம்ப கர்த்தா ஆதிசங்கரர் ஆவார். அத்வைதம் வேதத்தைச் சார்ந்ததே! உத்தர மீமாம்சை எனப்படும் ஞான காண்டமான உபநிடதப் பொருளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. கர்ம காண்டமான வேதப்பகுதி பூர்வமீமாம்சையை அனுசரித்து கடவுளை மறந்து பெரும்பாலான வேதியர்கள் இருந்த பொழுது ஆதி சங்கராச்சாரியார் அவதரித்து நிலை நிறுத்திய மதம் அத்வைதம்.

உலக வாழ்க்கை சுகங்களை அடைய உரிய கருமாக்களை, அதாவது வேதத்தில் சொல்லப்பட்ட யாக யக்ஞ சடங்குகளைச் செய்து வேதாந்தமான ஞானத்தை-கடவுளை-அவ்வளவு முக்கியமாகக் கருதாதவர் பெருகிய போது ஞான சூரியன் போலத் தோன்றி துறவறம் ஏற்று ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதாள் பிரும்ம கொள்கையை வலியுறுத்தி உலகத்தைப் பொய்யென்று வாதித்து உண்டாக்கிய மதம் அத்வைதம். சங்கரருக்கு முன் தோன்றிய புத்தர், கடவுளைப் பற்றி பேசாது, ஏறத்தாழ கடவுளை இல்லை என்னும் கொள்கையினர் போல், இறுதி நிலை சூன்யமே என்று வாதித்து, வேத சார்பற்ற மதமாக பௌத்தத்தைப் பரப்பியிருந்தார். ஆகவே உலக வாழ்க்கையையே பெரிதாக எண்ணி ஞானத்தையும், கடவுளையும் அவ்வளவாகக் கவனியாமல் இருந்த பூர்வ மீமாம்சகருக்காக உலகத்தைப் பொய்யென்று கூறியும், ஒன்றுமற்றுப் போகும் சூன்யமே உண்மை என்று வாதித்த பௌத்தருக்கும் சேர்த்து வேதத்தில் சொல்லப்பட்ட கடவுள் ஒன்றே உண்மை என்றும் போதித்தார் சங்கரர்.

ஏறத்தாழ உலகம் முழுவதையுமே பௌத்த மதம் விழுங்கிக் கொண்டு வந்த பொழுது வேதாந்தக் கொள்கையை நிலை நாட்ட வந்தவர் ஸ்ரீசங்கரர். ராமானுஜரும், மாத்வரும் தங்களுக்கு முன் பரவியிருந்த ஸ்ரீசங்கரின் வேதாந்தக் கொள்கையையே பயின்று மாற்றுக் கருத்துக்களைப் பரப்ப வேண்டியிருந்தது போல், சங்கரர் காலத்தில் அவருக்கும் முன்னிருந்த பௌத்தக் கருத்துக்களுக்கு மாற்றுக் கொள்கையைக் கண்டார். அது வேதத்தைச் சார்ந்த கடவுள் கொள்கையாக இருந்தது. அவரும் வேதாந்தத்தின் கருத்தாக தாம் கண்ட தரிசனமாகவே அத்வைதக் கொள்கையை உலகில் பரப்பினார். தம்முடைய கருத்தாக அத்வைதத்தை தனி மனித சிந்தனையில் உதித்த மதமாக கூறிக் கொள்ளவில்லை. என்றுமுள்ள வேதாந்த கருத்தாகவும், தமக்கு முன்னிருந்த பூர்வ ஞானியரின் கொள்கையாகவும் இருப்பது அத்வைதமே என்றே சாதித்தார். அதற்காகவே பிரும்ம சூத்திரம், பகவத்கீதை, பத்து உபநிஷத்துக்கள் சேர்ந்ததாகிய பிரஸ்தானத்திரயத்திற்கு பொருளும், விளக்க உரையும் அத்வைத கொள்கைக்கேற்ப எழுதி தமது மதத்தை வைதீக மதமாக நிறுவினார். ஆனாலும் இவர் உலகை பொய்யென்று கூறியதாலும், பௌத்தரைப் போலவே துறவறத்தை முக்கியமாக போதித்து தலையை முண்டனம் செய்து கொண்டதாலும் இவரை பிற வைதீகர்கள் பிரச்சன்ன பௌத்தர் என்றே கூறுவதுண்டு. இவர் நெற்றியிலும் எந்த மத சின்னமும் அணியாதவர் என்கிறார் வித்யாரண்யர். ஏனெனில், சகுண பிரும்மத்திற்கும் மேலாக நிர்குண நிராகார, நிராவயவ பிரும்மத்தை போதித்தார். அதுவே உண்மை என்றும், அதை தவிர்த்த உலகம் இல்லாதது என்றும் சாதித்தார். பிற்காலத்தில் அத்வைதிகள் மதச் சின்னங்களை அணியலாயினர். ஸ்ரீமத் சங்கரர் முக்தியை வழங்கக்கூடிய எல்லா தேவதைகளுக்கும் மேலான சகுண பிரும்மமாக ஸ்ரீமத் நாராயணனையே கருதி போதித்தார். அதையே தமது பகவத்கீதை உரையிலும், உபநிடந்தங்களின் உரையிலும் பிரும்ம சூத்திர உரையிலும், விஷ்ணு சகஸ்ரநாம உரையிலும் ஆணித்தரமாக எழுதியிருக்கிறார்.

அபேதசுருதி: ஆனால் அவரது அத்வைதக் கொள்கையில் சகுண பிரும்மனுக்கும் மேலாக நிர்குண பிரம்மன் ஒன்று உண்டு என்கிறார். பிரம்மனுக்கு எந்த குணமும் இல்லை என்கிறார். சத்தாகவும், சித்தாகவும், ஆனந்தமாகவும் மட்டும் இருப்பதே நிர்மண பிரமன் என்கிறார். இவ்வாறு அபேதக் கொள்கையை அதாவது பிரிவுகளை மறுக்கும் கருத்தையே தத்துவமாகப் போதித்தார். முப்பட்டைக் கண்ணாடி (பிரிசம்) போல ஒரே பிம்மம் சத், சித், ஆனந்தமானது என்றார். ஏகம் சத் விப்ர பகுதா வதந்தி என்கிறது சுருதி. இதன் பொருளாவது, உண்மை ஒன்றுதான்; அது பலவாகச் சொல்லப்படுகிறது என்பதுவே! இதுபோல பேதத்தை மறுக்கும் அபேத சுருதிகளை சாதகமாகக் கொண்டு பேதச் சுருதிகளைத் தள்ளி தமது மதத்திற்கேற்ப விளக்க நூல்களை எழுதினார். வேதம் சொல்கிறது என்றால் அப்படியே ஒப்புக்கொள்வது வைதீகர் வழக்கம். வேதம் சொல்லும் ஒரு கொள்கையை ஒப்புக் கொள்ளும் போது, அதைக் கொண்டே அக்கொள்கைக்கு நேர் எதிராக இன்னொரு கொள்கையை அதே வேதம் சொன்னால் கூட தள்ளி விடலாம் என்பது ஒரு நியாயம். இந்த நியாயப்படித்தான் சங்கராச்சாரியார் அதே சுருதிகளை வைத்து பேதச் சுருதிகளைத் தள்ளியதும் சரியாகிறது. ஆகவே, பிரும்மம் சத்தியம் : உலகம் மித்தை, எல்லாம் கற்பனை ஞானமே உண்மை! என்பதுவே சுருக்கமான அத்வைத விளக்கமாகும். இருக்கருத்தையே தமது எல்லா நூல்களிலும் அழுத்தமாக நிலை நாட்டியிருக்கிறார்.

மாயத்தோற்றம்: இந்த மையக்கருத்தை ஆதரிக்கவே தமது, மாயா கொள்கையை விரிவாகச் சொல்லியிருக்கிறார். இந்த உலகம் என்பது மாயை. அதாவது இருப்பதும் அதே சமயத்தில் இல்லாமலிருப்பதும் ஆகியது என்கிறார். வேறு வார்த்தையில் சொன்னால், இந்த உலகம் என்பது வெறும் தோற்றம் மாத்திரமே உண்மையில் இல்லை என்பதே கருத்து. இது பற்றி ஆதிசங்கரர் சொல்வது  இங்கு இரண்டாவது இல்லாமல் பிரும்மன் மாத்திரமே இருக்கிறது. அதை உணராமல்-அறியாமையால், ஒன்றை இன்னொன்றாக அறியும் அத்யாசத்தால் உலகமாகப் பார்க்கிறோம். அதனாலேயே துன்பம், சம்சார துக்கம் எல்லாம் உண்டாகிறது. உண்மையில் இருப்பது பிரும்மமே என்ற ஞானம் உண்டானால் சம்சாரத் துயரம் நீங்கி விடும் என்பது தத்துவ கருத்து. இதற்கு ஓர் உதாரணம் சொல்கிறார். கயிறு மாத்திரமே இருக்கிறது. அது பாம்பாகத் தெரிகிறது. காரணம் அறியாமை. ஒன்றை இன்னொன்றாகப் பார்க்கும் அத்யாசம், இருட்டால் உண்டாகிறது. அப்படி பாம்பு என்று நினைத்ததால் பயம், படபடப்பு, துக்கம் உண்டாகிறது. ஒளிவந்த பொழுது பார்த்தது பாம்பில்லை வெறும் கயிறுதான் என்று தெரிகிறது. அந்த நிலையில் எந்த துக்கமும் இருப்பதில்லை. அந்த கயிற்றில் ஒருபோதும் பாம்பு உண்மையில் இல்லை. கயிறாக இருந்தது பாம்பாக மாறி, பிறகு மீண்டும் கயிறாகவுமில்லை. கயிறு எப்போதும் கயிறாகத்தான் இருக்கிறது. அது பாம்பு என்கிற கருத்து பார்க்கிறவன் மனத்தில்தான் ஒரு தோற்றமாக உண்டாகிறது. அது பார்ப்போனின் கற்பனை. பாம்பு என்பது மித்தை. கயிறு மாத்திரமே உண்மை. அது கயிறுதான் என்கிற ஞானமே உண்மை என்பதே அத்வைத விளக்கம். இதை ஒட்டியே நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம் என்ற பழமொழி வந்தது. இதன் பொருள், ஒரு பளிங்கு கல்லினால் ஆன நாய் சிலை இருந்தது. அது கல்லைத் தவிர நாய் இல்லை. ஆனால் நாயின் வடிவாக செதுக்கப்பட்டிருப்பதால் நாயாகப் பார்க்கப்படுகிறது. அப்படி நாயாகப் பார்க்கப்படும் போது, அது பளிங்குக்கல் என்பது அறியப்படுவதில்லை. அதை நல்ல பளிங்கு கல்லாக பார்க்கும் போது நாயாக அறிவதில்லை. அங்கே கல்தான் நாயாகத் தோன்றுகிறது. நாய்தான் கல்லாக நிற்கிறது. ஒன்றாக பார்க்கையில் இன்னொன்றாக அறியப்படுவதில்லை. அதே நேரத்தில் ஒன்றுதான் இன்னொன்றாகத் தோன்றுகிறது.

இதேபோல திருமூலரின் திருமந்திரத்தில், மரத்தை மறைத்தது மாமர யானை என்று வருகிறது. மரத்தால் செய்யப்பட்ட யானை மரத்தையே மறைத்து விடுகிறது. ஒரு மர யானைப் பொம்மையை பலர் பலவிதமாகப் பார்க்கின்றனர். குழந்தை ஒன்று யானை பொம்மையாகப் பார்க்கிறது. அப்போது மரம் மறைந்து விடுகிறது. மர வியாபாரி ஒருவர் ஒருவகை மரமாக காணுகிறார். சிற்பி ஒருவன் நல்ல யானை சிற்பம் என்று கலையை மட்டும் அறிந்து ரசிக்கிறான். இது போலதான் கடவுள் ஒருவன்  மட்டும் இரண்டாவதாக எதுவும் இல்லாத பொழுது உலகமாக காணப்படுகிறார். இந்த கடவுளால் உண்டான உலகமே கடவுளை மறைத்து விடுகிறது. இதற்கு விளக்கமாக ஈசாவஸ்ய உபநிடத சாந்தி மந்திரம் ஒன்றின் பொருள் கூறப்படுகின்றது.

பூர்ண மிதம் பூர்ண மதம் பூர்ணா பூர்ணமு தச்யதே
பூர்ணஸ்ய பூர்ண மாதாய பூர்ண மேவா வஸிஷ்யதே
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி!

இதன் பொருள்: இதுவும் முழுமை, அதுவும் முழுமை. அந்த முழுமையிலிருந்து இந்த முழுமை வந்திருக்கிறது. மிஞ்சியிருப்பதும் முழுமையே! மூன்று வழியிலும் அமைதி உண்டாகுக!

பிரும்மம் முழுமையாக இருக்கிறது. அது முழுமையான இந்த உலகமாக தோன்றுகிறது. எப்படி எனில், கயிறு பாம்பாக தோன்றுவது போல், அப்போதும் முழு பிரும்மம் முழுமையான பிரும்மமாகயிருக்கிறது. ஏனெனில் ஒரு பொருள் இன்னொன்றாக தோன்றுகையில் அப்பொருள் அளவில் குறைந்துவிடுவது இல்லை. அதனால் இந்த உபநிடதக் கணக்கில் ஒன்றிலிருந்து ஒன்று வந்த போதிலும் மிஞ்சுவதும் ஒன்றாகவே இருக்கிறது. ஆகவே உலகில் படைப்பு என்பது தோற்றமுண்டாவதில் மட்டுமே உள்ளது; உண்மையில் இல்லை. படைப்பு இல்லாதபொழுது ஜீவாத்மா, பரமாத்மா என்பது தனித்தனியாக இல்லை. உலகம் என்பதும் இல்லை. இருக்கும் ஒரே பொருளான பிரும்மமே ஜீவனாகவும், உலகமாகவும் தோன்றுகிறது. இந்தத் தோற்றத்திற்கு காரணம் மாயை. இதுதான் இருப்பதாக தோன்றுவதும், உண்மையில் இல்லாமல் மறைவதும் ஆகும். தோற்றம் என்பது தோன்றி விடுவதால், சிறிது நேரம் இருப்பது போல் படுவதால் உள்ளது ஆகிறது.
உண்மையில் அதற்கு இருப்பு இல்லாததால் இல்லாததாகும்.

இதற்கு சில உதாரணங்களைப் பார்க்கலாம்

அத்யாசம் ஆன தோற்றத்திற்குக் காரணம் மாயை எனப்பட்டது அல்லவா, அப்போது அந்த மாயை பிரும்மத்தைத் தவிர இரண்டாவது பொருள் தானே? என்று எதிர் தரப்புக் கேள்வி எழுந்தது. இல்லை. மாயை என்பது பிரும்மத்தை விட்டுப் பிரிக்க முடியாதபடி ஒன்றாக இருப்பது! என சமாதானப் பதில் அத்வைதிகளால் கூறப்பட்டது. அப்படிக்கூட ஒன்று உண்டா? ஏன் இல்லாமல்? நாகப்பாம்பும் அதன் நஞ்சும் இரண்டாகப் பிரியாமல் ஒன்றாக இல்லையா? மாயை என்பது உண்மையில்லாதது எனக் கூறினீர்களே, அது பிரும்மத்துடன் ஒன்றாக இருந்தால் பிரும்மமும் பாதிக்கப்படாதா? உண்மையில்லாத பொருளாகி விடாதா? நல்ல பாம்புடன் இருக்கும் நஞ்சு பாம்பைப் பாதிப்பதில்லை. அதே போல் மாயை பிரும்மத்தைப் பொய்யாக்கி விடாது. அது சரி, உலகம் என்பது வெறும் மாயத்தோற்றம் என்கிறீர்களே, எப்படி? பாலைவனத்தில் கானல் நீர்த்தோற்றத்தைக் கண்டதில்லையா, அப்படித்தான். தொலைவிலிருந்து பார்க்கும் போது நீர் ஓடுவது போலவே இருக்கும். அருகில் சென்று பார்த்தால் நீர் இருக்காது. பிரும்மம் உண்மை என்கிறீர்கள். அந்த உண்மைப் பொருள் மீத போலித்தோற்றம் உண்டாக்க முடியுமா? ஏன் உண்டாகாது? உண்மையான பாலைவனத்தில் போலித் தோற்றமாக நீர் ஓடுவது போலத் தெரியவில்லையா? கடற்கரையில் முத்துச் சிப்பி வெள்ளி போலத் தோன்றவில்லையா? இருட்டில் கட்டை திருடன் போலவும், கயிறு, தரைப்பிளவு, ஜலம் சிந்திய வளைவு பூமாலை இவைகள் அசப்பில் பாம்பு போலத் தோன்றுவதில்லையா? தொலைவில் வரும் ஒருவரை இன்னொரு வராகப் பார்ப்பதில்லையா? அப்படித்தான் கடவுளை உலகமாக காண்கிறான் அஞ்ஞானி, ஞானியோ கடவுளைக் கடவுளாகவே காணுகிறான். அவனுக்கு உலகம் இல்லாமற்போய் விடுகிறது.

கடவுள் ஒருவரே உண்மை

அப்போது கடவுள் எனப்படும் பிரும்மம் மட்டும் தான் ஒரே உண்மையா? அதை மட்டும் உண்மை என்று ஒப்புக்கொள்வது எப்படி? சந்தேகமில்லாமல் கடவுள் ஒருவரே. ஒரே உண்மை தோற்றங்கள் ஏதாவதொரு உண்மையான பொருளை அடிப்படையாக வைத்துத்தான் உண்டாகின்றன. வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாய் தோற்றங்கள் என்று சொல்லிக்கொண்டே போக முடியாது. அதற்கு ஒரு முடிவும் வராமற்போகும். ஏதாவது ஒன்று ஆதாரமாக, முதற்பொருளாக இருக்கத்தான் வேண்டும். அந்த ஆதாரப்பொருளே கடவுள்-பிரும்மம் என்கிறது உபநிஷத்து. உதாரணமாக, கானல் நீருக்குப் பாலைவனமும், பாம்புத் தோற்றம் உண்டாகக் கயிறும் போல, உலகம் என்ற ஒரு தோற்றத்திற்குக் கடவுளே அடிப்படை உண்மைப் பொருள். பிரபஞ்சம் இருப்பது போல பிரமை உண்டாவதற்கு அடிப்படைப் பொருள் பிரும்மமே, அது உண்மைப் பொருளே என்பது உறுதியாயிற்று. இந்த உண்மைப் பொருள் தெரியாமல் மறைக்கப்படுவது. அதனுடைய மாயையாலேயே. மாயைக்கு தனக்கு ஆதாரமான உண்மைப் பொருளை மறைப்பதும் இயல்பு. மாயை மறைப்பதாலேயே கடவுள் யாருக்கும் தெரிவதில்லை.

பிரும்மம் முக்காலத்திலும் இருக்கிற பொருளாவதால் உண்மை ஆகிறது. தோற்றமான கானல் நீருக்கு ஆதாரமான பாலைவனம், கானல் நீர் தோன்றுவதற்கு முன்பும், தோன்றும் போதும், தோன்றி மறைந்த பின்பும் இருக்கிறது. அதேபோல உலகம் தோன்றாத படைப்பிற்கு முந்திய காலத்திலும், படைப்பில் உலகம் தோன்றிக் கொண்டிருக்கும் போதும், உலகம் அறிந்த பின்வரும் பிரளய காலத்திலும் பிரும்மம் இருக்கக்கூடியது. அதனால் பிரும்மம் என்பதே உண்மையான பொருள். இதனால் அனுமானப் பிரமாணம் பிரும்மத்தை உறுதி செய்கிறது. உண்மையான இருப்பு, ஒளி, ஆனந்தம் என்ற மூன்றும் பிரும்மத்தை விட்டு வேறுபடாததாக இருக்கிறது. இப்படி சத், சித், ஆனந்தமாக இந்த பிரும்மம் உண்மையாக இருக்கிறது. உண்மையாகவும் விஞ்ஞானமாகவும், ஆனந்தமாகவும் உள்ளது பிரும்மம். பிரும்மத்தைப் பற்றி வேதம் கூறுவதால் அதுவே பிரமாணம் மூச்சு போல் குற்றமற்றதாக வேதம் பிரும்மத்திலிருந்து வெளியே வருகிறது. இவை போன்ற பலப்பல சுருதிகளால் ஆகமப் பிரமாணத்தால் பிரும்மம் உண்மைப்பொருள் என்பது நிச்சயமாகிறது. பாம்பாக பிரமை பிடித்த நிலையிலும் பார்த்துக் கொண்டிருப்பது-கயிறைத்தான் என்பது போல, மாயை மறைக்கும் நிலையிலும் உலகமாகப் பார்த்துக் கொண்டிருப்பது பிரும்மத்தைத்தான் என்பதால் பிரத்யட்சப் பிரமாணத்தாலும் பிரும்மத்தை உண்மையென்று தீர்மானித்ததாகிறது. இவ்வாறு மூன்று பிரமாணங்களாலும் பிரும்மத்தை உண்மைப் பொருளாக உறுதி செய்ததாகிறது.

அத்வைதிகள் ஆறு பிரமாணங்களைக் கூறுகின்றனர். ஆனால் பிரத்யட்சம், அனுமானம், ஆகமம் என்ற மூன்றிலேயே மற்ற மூன்றும் அடங்கி விடுகின்றன. இந்த மூன்று பிரமாணப்படியும் நிரூபணமாகம் பிரம்மமே உண்மை. நிரூபணம் செய்யப்பட முடியாத பிரபஞ்சமே மித்வித-மாயை என்பத அத்வைத சித்தாந்தம். மண், உலகம், பொறிகள் என்ற படைப்பில் உள்ளவற்றைப் பற்றியெல்லாம் பல விதத்தில் சொல்வது இங்கே இருக்கும் பிரிவுகளை பல பொருள்களை அறிவிப்பதற்கல்ல; ஞானக் கண்ணால் அவற்றிற்கு அடிப்படையான ஒரே உண்மைப் பொருளை காணவே வழிகளாகச் சொல்லப்பட்டன. ஆகவே உற்பத்தி, இருப்பு, லயத்தைச் சொல்லும் அநேக வேத வாக்கியங்களும் பரமாத்மாவுடன் ஐக்கிய அறிவை உறுதிப்படுத்தவே வந்துள்ளன என்று அறிய வேண்டும். எல்லா உபநிஷத்துகளிலும், விஞ்ஞான ஆத்மாவும், பரமாத்மாவும் ஒன்றே என்ற அறிவே உரைக்கப்படுகிறது என்பது அத்வைதிகளின் வாதமாகும். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்று தனித்தனியே அறியப்படும் ஐந்து பூதங்களும் இந்த உலகின் அடிப்படை. பிரக்ருதி எனப்படும். இவற்றின் விகிதக் கலப்பால் பஞ்சீகரணத்தால் இந்த உலகம் ஆகியிருப்பதாகக் காணப்படுகிறது. இதில் அசைவன-அசையாதனவெல்லாம் தென்பட்ட போதிலும் உண்மையில் இல்லாதவையே! வெறும் தோற்றமே!

கயிற்றில் பாம்பு இருப்பதாகப் பிரமை உண்டாவது போல, பிரும்மத்தில் உலகம் இருப்பதாகப் பிரமை ஏற்படுகிறது. இதேபோல ஒரு பொருளில் முதல் பிரமை உண்டானதும் வேறு பொருளாக காணப்படுகுடறது. இப்படியே அந்தந்தப் பொருள்களிலெல்லாம் பிரமம் உண்டாகவே வேறு வேறு பொருள்களாக-பலவாக பிரம்மத்தின் மீதே தோற்றம் உண்டாகிறது. எனவே கடவுள் ஒருவரே உண்மை! ஆக, எல்லாவற்றின் அடிப்படைப் பொருளும் பிரும்மன் ஒன்றுதான். இதுவே எப்போதும் காணப்படுவது. ஆகவே அதுவே பரமார்த்த சத்தியம்!

உலகம் மித்தை: உலகத்தின் உண்மையில் இல்லாத தற்காலிகத் தோற்றமே. அதை மித்தை என்று சொல்லக் காரணம். எப்போதும் எனப்படும் மூன்று காலங்களிலும் காணப்படும் பொருளே உண்மையாகும். இந்த பிரபஞ்சமாகிய உலகம் அப்படி எப்போதும் அறியப்படவில்லை. அதனால் இது, பரமார்த்த சத்தியம் இல்லை. இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எல்லாப் பொருளுமே உற்பத்தி உடையதாக இருக்கின்றது. அழியக்கூடியதாகவும் உள்ளது. இந்த உற்பத்திக்கு முன்பும், அழிவிற்குப் பின்பும் உலகப்பொருள்கள் காணப்படுவன அல்ல, இடைப்பட்ட காலத்திலேயே காணப்படும்படி உள்ளன. ஆகவே, ஒரு காலத்தில் உண்டாகி, இடையில் இருந்து, ஒரு சமயத்தில் அழிந்துவிடும். சில காலமே தோற்றிக்கொண்டிருக்கும் பிரபஞ்சம், தற்காலிய வியவகாரங்களுக்கே உதவுவதால் விவகார சத்தா, வியவகாரம் நடக்கும் சமயத்தில் மட்டுமே உண்மை எனப்படுகின்றது.

இந்திர ஜாலம் போன்ற மாய வித்தையால் ஒரு மந்திரவாதி காட்டும் காட்சி போலத் தோன்றுவதே இந்தப் பிரபஞ்சமும் என முடிவு செய்யப்படுகிறது. மூன்றே முக்கால் நாழிகையில் மட்டுமே தெரியும் கண்கட்டு வித்தை சமாச்சாரம் போலத் தோன்றி மறைவதால் இது மாயையால் தோன்றுகிறது என்கிறார்கள். செத்த பாம்புத் தோலில் பாம்பையும், மாங்காயுடன் மாஞ்செடியையும் வரவழைத்து மந்திரவாதி காட்டி நம்மை மயக்குகிறான். இந்த மாயைச் சக்தியை உடையவன் ஒருவன் இருக்க வேண்டுமல்லவா! அவனே அதாவது மாயையால் உலகத்தைத் தோன்றச் செய்பவனே கடவுள்-பிரும்மம் எனப்படுகிறார். இதையே, வேத சுருதிகள் பரமாத்மா மாயையால் பல வடிவங்களுள்ளவனாகத் தெரிகிறான் என்றும், மாøயை உடையவன் ஒருவனால் இந்தப் பிரபஞ்சம் படைக்கப்படுகிறது என்றும் முழங்குகின்றன. அந்த ஒருவனே உண்மை பிரபஞ்சம் மித்தை. இந்த மாயைதான் பிரக்ருதி எனப்படுகிறது. சத்துவம், ராஜஸயம், தாமஸம் என்று மூன்று குணங்களாக உள்ளது. மூன்று காலங்கள் ஆகவும், பரந்த இடமாகவும் தோன்றுகின்றது.

ஆவரண சக்தி: இதனுடைய முதல் குணமே தனக்கு அடிப்படையான உண்மைப் பொருளை மறைப்பதுதான். இதை ஆவரண சக்தி என்பர். உண்மையாக இருக்கும் வெண்திரையில் இல்லாத நிகழ்ச்சிகள் திரைப்படமாக விழுந்தவுடனேயே முதல் காரியமாக அங்கே வெண்திரை மறைந்து போய்விடுகின்றது. அங்கே நிகழாத நிகழ்ச்சிகள், இல்லாத இடங்கள் இவற்றின் தோற்றம் தான் தோன்ற ஆதாரமான வெண்திரையைக் காண முடியாமல் செய்து விடுகின்றது. இதை அஞ்ஞானம் (அறியாமை), அவித்தை, மோஹம் என்றும் குறிப்பிடுவர். சிறிய மேகம் பெரிய சூரியனையே மறைத்து விடுகிறது போல, மாயை பிரும்மத்தை மறைத்து விடுகிறது. அதாவது சூரியனால் உறிஞ்சப்பட்ட கடல் நீர் மேகமாக உருவாகிறது. பிறகு தான் உருவாகக் காரணமான சூரியனையே மறைத்துவிடுகிறது. அதுபோல, பிரும்மத்தில் தோன்றும் மாயை தனக்கு ஆதாரமானதையே மறைத்து விடுகின்றது. அளவிருந்த துக்கங்கள் நிறைந்த சம்சாரத்தால் பாதிக்கப்படாத ஆத்மாவை, அறியும் தன்மையுள்ள புத்திக்கே இந்த மாயை மறைத்து விடுகின்றது. நெருப்பிலிருந்து உண்டாகும் புகை அல்லது நெருப்புடன் சேர்ந்து உண்டாகும் புகை நெருப்பைச் சூழ்ந்து மறைத்து விடுவது போன்றது இந்நிகழ்ச்சி. இதனால் தான் நான் செய்பவன், நான் அனுபவிப்பவன் என்று எண்ணம் உண்டாகி சுகத்தையும், துக்கத்தையும் அடையச் செய்து மோகம் என்கிற அறிவு குழப்பத்தையும் கொள்ள நேருகிறது. இதனாலேயே ஒன்றை இன்னொன்றாக நினைக்கும் அத்யாசமும் ஏற்படுகிறது.

வி÷க்ஷப சக்தி: வி÷க்ஷபம் என்றால் மாறுதலடைவது என்று பொருள். உதாரணமாக, தண்ணீரே குமிழ்களாகின்றன. நூலே துணியாக ஆகின்றது. வெறும் தங்கமே மோதிரமாகவும், சங்கிலியாகவும், கங்கணமாகவும் மாறுகின்றது. மண்ணே தட்டு, பானை, மடக்கு போன்ற பல பாண்டங்களாகிறது. சர்க்கரையே பலப்பல இனிப்பு தின்பண்டங்களாக மாறுகின்றது. இதெல்லாம் வி÷க்ஷபம் அடைந்த நிலையே. தண்ணீர், தங்கம், நூல், மண், சர்க்கரை-ஆகிய மூலப்பொருள்கள் எல்லாம் பற்பலப் பெயர்களில் பலவிதப் பொருள்களாக குறிப்பிடப்படும் காரணம், அந்தந்த மூலப்பொருளில் உண்டாகிய வடிவ அமைப்புகளே. இது மூலப்பொருளில் உண்டாகிய மாறுதலே. மற்றபடி மூலப்பொருளைத் தவிர உண்டாகிய பொருள்களில் ஒன்றுமில்லை. மூலப்பொருளுக்கு மாறுதலாக உண்டாகிய உருவங்களே பல பெயர்களையும் பெற்றுத் தந்தன. உதாரணமாக, ஒரு தங்க மோதிரத்தை எடுத்துக் கொள்வோம். அதில் மூலப்பொருளான தங்கத்தை தவிர வேறெதுவும் இல்லை. ஆனாலும் அதை தங்கம் என்று யாரும் குறிப்பிடுவதில்லை. மோதிரம் என்றே பெயரிட்டு வழங்குகின்றனர். இது ஏன் என்றால், மூலப்பொருளான தங்கத்திற்கு மோதிரம் என்று சொல்லதக்க ஒரு வடிவம் வந்திருப்பதனாலேயே! ஆனால் அது உண்மையில் மூலப்பொருளான தங்கமே, அதைத் தவிர வேறு இல்லை. அந்த தங்கத்திற்கு மோதிரம் என்ற மாறிய நிலை முதலிலும் இல்லை. பிறகும் மாறி விடக்கூடியதே இடையில் தற்காலிகமாக உண்டானதே.

இதேப் போலத்தான் தண்ணீரிலும் குமிழ் உண்டாகிறது. நூலும் ஒரு அமைப்பில் இருந்து துணியாகிறது. மண்ணும் இப்படியே பலப்பல வடிவங்களில் பல்வேறு பொருள்களாக காட்சியளிக்கின்றது. அதே போலவே சர்க்கரையே பல வடிவில் பல இனிப்புக்களாகின்றது. அங்கேயெல்லாம் மூலப்பொருளில் ஏற்படும் மாற்றத்தின் தோற்றமே பல பெயர்களில், பல பொருள்களை உண்டாக்கி இருக்கின்றது. இதைப் போலத்தான் பிரும்மத்திலும் அஞ்ஞானத்தின் வி÷க்ஷப சக்தி மூலப்பொருளான பிரும்மம் ஒன்றே இருக்கையில் அதை பலப்பல வடிவங்கள் உள்ள வேறுபட்ட பெருள்களாக காட்டுகின்றது. ஆனால் உண்மையில் பிரும்மத்தைத் தவிர இங்கே ஒன்றுமில்லை. மனத்தில் தோன்றும் தோற்றமே, மாறுதலே உலகமென்பது. இந்த பிரும்மம் உண்மையில் ஒரு காலத்தில் மாறாதது. பால் தயிராவது போல், பிரும்மம் உலகமாவது இல்லை. கள் பாலாக தோன்றுவது போல், பிரும்மம் உலகமாக தோன்றுவது மட்டுமே நிகழ்கின்றது. ஆகவே, உள்ள ஒரே பொருள் பிரும்மம் என்று உணர வேண்டும். இந்த வி÷க்ஷப சக்தியாலே ஆவாரண சக்தியால் உண்மையான சுயவடிவம் மறைக்கப்பட்ட பின் ஜீவனுக்கு பல நிலைகள் உண்மை போல் உண்டாகின்றன. அவை 1. தூக்கம், 2. கனவு, 3. விழிப்பு என்னும் பிரக்ஞை நிலைகளே! இந்த மூன்று நிலைகளிலும் ஒருவன் தினமும் பல அனுபவங்களை அடைகிறான்.

1. தூக்கம் : தூக்கத்தில் உலகம் இல்லாமல் போய் விடுகிறது. ஒருவன் தனது சமூக நிலையை இழந்து விடுகிறான். நான் என்கிற எண்ணமே இல்லாத நிலையில் சுக-துக்க அனுபவங்கள் ஒன்றுமின்றி மாறுதலற்ற ஆனந்தமான நிலையில் இருக்கிறான். அவன் அப்போது வெளியைப் பற்றிய விவரமின்றி உள் பற்றிய உணர்வு இன்றி இருக்கிறான். இங்கே உலகமே இல்லை. ஆனாலும் ஜீவனே பிரும்மம் என்ற ஞானமும் இல்லை. காரணம், அறியாமையின் ஆவர்ண சக்தி ஞானத்தை மறைத்து இருப்பதுதான். அங்கே வி÷க்ஷப சக்தி வேலை செய்யாததால் பல என்ற அறிவும் இல்லை. அதனால் மாறுதலின்றி ஆனந்தமாக மட்டும் இருக்கிறான்.

2. கனவு : இதில் ஜீவனுக்கு விசித்திரமான ஞானம் இருக்கிறது. தனக்குள்ளேயே ஓடுவதும், நிற்பதும், அழுவதும், சிரிப்பதும், தானே பலவாகியும் மங்கலமான பற்பல அனுபவங்களை அரையும் குறையுமாக அடைகிறான். இந்நிலையில் தூக்கத்திலிருந்த ஆத்ம சுகமும், இல்லை. விழிப்புணர்வில் அறியும் உலக வாழ்க்கையும் இல்லை. இரண்டிற்கும் இடைப்பட்ட பாதி சுகமும் பாதி விழிப்பைப் போன்ற அனுபவமும் உடையவனாக இருக்கிறான். விழித்தெழுந்ததும் கனவு பிரக்ஞையில் கண்டதெல்லாம் மாயம் என்கிற உணர்வடைகிறான்.

3. விழிப்பு நிலை : இந்நிலையில் ஐம்புலன்களின் மூலம் எல்லா நடவடிக்கையிலும் ஜீவன் ஈடுபடுகிறான். சுக துக்கத்தில் விழுகிறான். இந்நிலைக்கு வந்ததும் கனவில் கண்டவை மாயம் என்று அறிகிறான். தூக்க நிலையில் கனவு நிலை மாயமாக மறைந்து விடுவதை சிந்திக்கிறான். கனவு நிலையில் தூக்கம் தந்த சுகம் மாயமாகி விடுவதையும் அறிகிறான். இந்த மூன்றும் ஒரு நிலையில் மற்ற நிலை இல்லாமல் போவதை உணர்கிறான். ஆகவே இந்த விழிப்பு நிலையைத் தாண்டி ஒரு நிலை உண்டானால் இதுவும் மறைந்து விடும் என்று அறிவடைகிறான். தூக்கம் கனவிலும், கனவு விழிப்பிலும் காணாமல் போய்விடவது போல் நாலாவது நிலையில் மூன்றாவதான விழிப்பும் கலைந்து போகலாம் என்று அறிகிறான். ஆகவே இறுதியான நான்காவது தூய நிலையே உண்மை என்றும், மற்ற மூன்று நிலைகளும் உண்மையில்லாதவை என்றும் தீர்மானிக்கிறான். விழிப்பு நிலையில் புலன்கள் மூலம் இயங்குவதால் ஜீவன் வைஸ்வானரன் எனப்படுகிறான். உலகில் எல்லா உடல்களுமாக இருப்பவன் விராட் எனப்படுகிறார். கனவு நிலையில் ஜீவன் தன்னொளியில் உலகைக் காண்பதால் தைஜஸன் எனப்படுகிறான். ஒட்டு மொத்தமான அனைத்துயிர்களின் கனவு நிலையையும் காணும் சூத்ராத்மா ஹிரண்யகர்பர் எனப்படுகிறார். தூக்கத்தில் ஒன்றுமறியாமல் இருக்கும் ஜீவன் பிராக்ஞன் எனப்படுகிறான். ஒட்டுமொத்தமான அசையும், அசையாத பிரபஞ்ச உயிர்களை வெளிப்படாமல் அடக்கி, பிறகு விளங்க வைப்பவர் ஈஸ்வரன் எனப்படுகிறார். இப்படி பிரும்மமே வி÷க்ஷப சக்தியால் பல நிலைகளில், பல பெயர்களில் இதுவரை குறிப்பிட்டவர்களாகத் தோன்றுகிறார்கள்.

இதுவரை சொல்லப்பட்ட மாறுதல்கள் எல்லாம் உண்மை அல்ல; இதுவே மாயை. இதற்கு சில வேத சுருதிகள் அழிவு உண்டு என்கின்றன. ஆகவே இது எல்லா காலத்திலும் இருக்கும் பிரும்மம் போன்று ஸத் தும் இல்லை. அதே சமயத்தில் ஒரு காலத்திலும் இல்லாத முயல் கொம்பு, மலடி வயிற்று மகன் போன்ற அஸத் தும் இல்லை. முயல் கொம்பு என்ற பொருள், உலகில் எங்கும் எப்போதும் இல்லாதது. அதே போலவே பிள்ளையே பெறாதவள் தான் மலடி எனப்படுவதால், மலடி வயிற்று மகன் என்பதும் ஒருபோதும் இல்லாத ஒன்றே. ஆகவே, இவற்றைப் போன்று மாயை ஒரேயடியாய் இல்லாத பொருளும் இல்லை. பிரும்மத்தைப் போல முக்காலத்திலும் இருக்கும் பொருளும் இல்லை. பஞ்ச பூதங்களாக ஆக்கப்பட்டது உலகம். இறுதியில் மூலப்பொருளான பிரக்ருதி என்னும் மாயை என்ற காரணமாகிறது. அப்போது மாயா காரியமான இந்த பிரபஞ்சம் பொய்யாகப் போய்விடும். பலபலவாகத் தோன்றும் பொருள்கள் ஒன்றுமில்லை என்று சுருதிகளும் சொல்லுகின்றன. அனுபவமும், அனுமானமும் இதையே ஒத்திருப்பதால் இந்த பிரபஞ்சம் மித்தை எனப்படுகிறது. கோடையில் பாலைவனத்தில் சூரியக் கதிர்களால் தோன்றும் கானல் நீருக்கும், பிரும்மத்தில் தென்படும் பிரபஞ்சத்திற்கும் ஒற்றுமை உண்டு. இந்த பிரபஞ்சம் விவகாரிக உண்மையாகும். கானல் நீர், சிப்பியில் வெள்ளி, கயிறில் பாம்பு முதலியவற்றின் தோற்றம் பிராதிபாஸிக ஸத் என்பதாகும்.

மூன்றுவித உண்மை : அத்வைதிகள், நாங்கள் உலகை பொய்யென்று கூறவில்லை என்றும் சொல்லுவார்கள். காரணம், எல்லாவற்றையும் ஒவ்வொருவித உண்மையாகச் சொல்வது தான். உண்மை எனப்படுவது ஸத் எனப்படும். அது மூன்று வகைப்படும். அவை: 1. ப்ராதிபாஸிகம், 2. விவகாரிகம், 3. பரமார்த்திகம் எனப்படும்.

1. ப்ராதிபாஸிக ஸத் : பிரும்மம் தவிர வேறு பொருள்களில் இது உண்டாகும். அதாவது பாலைவனம், சிப்பி, கட்டை, கயிறு முதலியவற்றில் உண்டாவது. பாலைவனத்தில் தான் கானல் நீர் தோற்றம் உண்டாகிறது. சிப்பியில் தான் வெள்ளி என்ற பிரமை உண்டாகிறது. கட்டையில் தான் திருடன் என்ற எண்ணம் உண்டாகிறது. கயிற்றில் தான் பாம்பு என்ற மயக்கம் ஏற்படுகிறது. நேரடியாக பிரும்மத்தில் இந்த பிரமை உண்டாவதில்லை. அதனால் அது பாலைவனம் தான். அங்கே நீர் இல்லை என்ற உண்மை தெரிந்தவுடன் மேற்படி பிரமை நீங்கிவிடுகிறது. அதைப் பால, தொலைவிலிருந்து பார்க்கும்போது சிப்பி வெள்ளி போல் தெரிகிறது. அருகில் சென்று கவனித்தவுடன் அது வெறும் சிப்பிதான் என்று தெரிந்தவுடன் வெள்ளி என்ற மயக்கம் நீங்கிவிடுகிறது. இருட்டில் கயிறைப் பார்த்து விட்டு பாம்பு என்று நினைத்ததும் இப்படித்தான். கயிறு என்ற உண்மை புலப்பட்டவுடன் மயக்கம் நீங்கி விடுகிறது. இதற்கு ப்ராதிபாஸிக ஸத் என்று சொல்வார்கள். அதாவது பலன்களை வழித்ததும், அறிவில் மயக்கம் உண்டாவது இப்படிக் கூறப்படுகின்றது. பிரம்ம தத்துவ அறிவைத் தவிர வேறு ஞானத்தால் இல்லாமல் போவதாகும்.

2. விவகாரிக ஸத் : பிரும்ம ஸ்வரூபத்தில் தோன்றுவது, ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், நிலம் ஆகிய ஐம்பூதப் பிரபஞ்சம் ஆகும். பிரும்ம சொரூபம் மறைந்து இவை தோன்றுகிறது. காரணம் அஞ்ஞானம். இந்த அறியாமை பிரும்மத்தின் உண்மையான ஞானம் உண்டான பிறகே நீங்குகின்றது. பிறகுதான் இரண்டாவதற்ற பிரும்மம் நேரடி அனுபவமாக உடனடியாக அபரோட்க்ஷ அனுபூதியாக உணரப்படுகிறது. ஆகவே பிரும்மத்தின் தத்துவ அறிவினால் மட்டும் இல்லாமல் போவது விவகாரி கஸத் எனப்படும்.

3. மரமாத்திக ஸத் : இது எதனுடைய ஞானத்தினாலும் இல்லாமல் போகாது. அதாவது இவை அழிக்க எவ்வித ஞானமும் இல்லை. இவ்வுண்மை நேற்று, இன்று, நாளை என்று முப்போதும் எப்போதும் முடிவில்லாமல் இருந்து கொண்டு இருக்கிறது. இதன் ஞானத்தால் மற்றதெல்லாம் மறந்து, மறைந்து போகும். இதுதான் குணமில்லாத, வடிவ கல்வெட்டுப் போல பல இடங்களில் அறிவுறுத்தி உள்ளார். மோட்ச பலனும் இவரே தரத் தக்கவர். சின்ன சின்ன தேவதைகளாக இருந்து அவற்றை பூஜிப்பவர்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ப மற்ற உலகாயதப் பலன்களையும் அளிப்பவர் இவரே என்றும் கீதை முதலிய விளக்க நூல்களில் குறிப்பிட்டுள்ளார். ஆகவே அத்வைதப் படியும் இறுதியான மோட்சம் நல்கும் சகுணப் பிரும்மம் ஸ்ரீமந் நாராயணனே ஆகிறார்.

ஜீவன்: ஸத்வம் குறைந்த மாயையானதில் பிரும்மம் பிரதிபலிப்பதால் ஜீவனாகத் தோன்றுகிறது. இதற்கு அடிப்படையான அவித்தையான அந்தக்கரணம் சத்வகுணத்தின் குறைவால் ஞானமும், சக்தியும் கொஞ்சமாக இருப்பவனாக ஜீவன் தோன்றுகிறான். இதனாலேயே கட்டுப்படாத பிரும்மம் கட்டுப்பட்ட ஜீவனாகத் தோன்றுவதும் ஆகும். அந்தகரணங்களின் விகாரங்களே மாயையின் பரிமாண மாறுதல்கள் தான். அவை இச்சை, முயற்சி, வெறுப்பு, சுகம்-துக்கம் முதலியவைகளாம். இவை தோன்றுவதால் ஜீவன், நான் அனுபவிப்பவன், நான் செய்பவன், அதிருஷ்டிக்காரன், துர்ப்பாக்கியவான் என்றெல்லாம் சொல்லும்படி விவகாரங்கள் நிகழுகின்றன. நீரில் தோன்றும் நிலவும், நீர் அசைகையில் அசைவது போலத் தோன்றும். பார்ப்பவரும் நிலா அசைகிறது என்று சொல்லக்கூடும். அதே போல, அந்தகரணத்தில் உண்டாகும் பிரதி பிம்பம் சலனப்படுவதாக, விகாரப்படுவதாக சொல்லும்படி இருக்கிறது. இதனாலேயே ஜீவன் உலகில் சஞ்சாரம் செய்வதாகவும் சொல்கின்றனர். உலகிலிருந்து இறப்பதாகவும், பிறப்பதாகவும், சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் அலைவதாகவும், தேவையானம், பித்ருயானம் என்ற ஒளி மிகுந்த வழியிலும், இருளடைந்த வழியிலும் போவதாகவும், வருவதாகவும் சொல்கிறார்கள். இவ்வாறு ஜீவன் இந்த உலகத்திலும், மற்றைய உலகங்களிலும் சஞ்சாரம் செய்கிறான் என்னும்படி காரியங்கள் நடக்கின்றன. ஜீவனுக்கு அறிவும், திறமையும் குறைவாகக் காணப்படுகிறது. அதனால் விருப்பு, வெறுப்புக்கள் ஏற்படும்பொழுது விரும்பியதை அடையமுடியாமலும், வெறுப்பதை ஒதுக்க முடியாமலும் துக்கப்படுகிறான். அப்போது தன் இச்சை நிறைவேற இறைவனை ஆராதிக்கிறான். பலவாறு பூஜித்துத் தொழுகிறான். இறைவனின் கருணையால் தொழில், செல்வம், புகழ், மனைவி, மக்கள் இன்னபிற உலக வாழ்க்கை நலன்களையும் அடைந்து சுகமாக வாழ்கிறான். மற்றும் இம்மைப் பயனுடன் மறுமை நலமான சொர்க்க வாழ்வையும் கூட அடைகிறான். இது சம்சாரிக பயன்களாகும். எந்த பயனையும் எதிர்பாராமல் ஆசையற்றவனாய் இறைவனை தியானித்தால் அவருடைய கருணைக் கொடையால் மனத் தூய்மைப் பெற்று குருவிடம் வேதாந்த கல்வி கேள்விக்கு தகுதி உடையவனாகிறான்.

பந்த மோட்ச வழி: அந்தகரணத்தில் பிரும்மம் பிரதிபலித்ததால் உண்டான ஜீவாத்மா உண்மையில் மாறாத ஸாட்சாத் பிரும்மமே ஆகும். ஒரு நிறமற்ற படிக மணியின் அருகில் வைக்கப்பட்ட பூவின் செந்நிறம் அந்த மணிக்குள் இருப்பது போல் தோன்றும். பிரதிபலனத்தால் ஜீவன் உண்டாக ஆதாரமான அதாவது ஜீவனுக்கு உபாதியான அந்தகரணத்தின் விகாரமே விருப்பும், வெறுப்பும் ஆகும். அவை ஜீவனிடத்தில் தோன்றுகின்றன. இந்த பிராந்திதான் ஜீவனுக்கு சம்சாரமாகும். இம்மாதிரி வந்த பந்தமாகிய சம்சாரம் நீங்குவதற்கு வழிகள் உண்டு. அவை தானம், ஹோமம், வேள்வி போன்ற வேதத்தில் சொல்லப்பட்ட கருமங்களாகும். இவற்றுடன் ஜீவாத்மாவானவன் இறைவனை போற்றி தொழுதால் இறைவனின் கருணையால் மனத்தூய்மை உண்டாகிறது. அதன் பிறகு முக்தியில் இச்சைப் பிறக்கிறது. இந்த காரணத்திற்காக வேதாந்தம் கேட்பதிலும் ஈடுபடுகிறான். அப்புறம் குருவினுடைய உபதேசத்தால், அபேதத்தைச் சொல்லும் வாக்கியங்களின் பொருளறிவு உண்டாகிறது.

ஜீவனும் பிரும்மமும் ஒன்றே!

தத்த்வமஸி என்ற சாம வேத மகா வாக்கியத்தின் பொருளறிவு பிறக்கிறது. தத் என்கிற சொல்லுக்கு இந்த வாக்கியத்தில் ஸத்சித் ஆனந்த வடிவமாய் ஒரு மாறுதலும் இல்லாத தாய், இரண்டாக இல்லாத பிரும்மம் என்றே பொருள்! தவம் என்ற  சொல்லுக்கு, இயற்கையாக இல்லாமல் இடையில் உண்டான உடல், புலன்கள் முதலியவற்றோ சேர்ந்திருக்கும் ஜீவாத்மாவே விவேகத்தால் வேறுபடுத்திக் கண்ட தூய ஆத்ம வடிவம் என்று பொருள். இந்த இரண்டிற்கும் பேதமில்லை என்பதே தத்த்வமஸி வாக்கியத்தின் பொருள் ஆகும். இதை குருவிடம் உபதேசமாகக் கேட்டு அறிவதால் ப்ரோக்ஷ்ஞானம் உண்டாகிறது. ஐம்புலன்களில் ஏதேனும் ஒன்றால் அல்லது எல்லாவற்றாலும் நம்மால் ஒரு செய்தியை அறியமுடியும் போது உண்டாவதற்கு பிரத்யட்க்ஷ ஞானம் என்று பெயர்.  அல்லது அபரோட்க்ஷ ஞானம் என்பர். அனுமானம் அல்லது சாத்திரத்தில் ஏற்படுவதற்கு பரோட்க்ஷ ஞானம் என்று பெயர். இங்கே குருவிடமிருந்து கேள்விப்பட்டு அறியும் ஞானமாதலால் பரோட்க்ஷஞானம் எனப்பட்டது. இது ஒருவித குணமும், தருமமும் அற்ற பிரும்மாத்ம ஐக்கிய அறிவு ஆகும். ஜீவனே பிரும்மம். அதுவும் குணம் குறி எதுவுமில்லாத பிரும்மம் என்று சீடர் குருவிடம் கேட்டுத் தெரிந்து கொண்டான் என்று பொருள். இப்படிக் கேட்டறிந்ததை சிரவணம் என்பர். பிறகு அதை இடைவிடாமல் மனத்திலேயே உருட்டிக் கொண்டிருக்கும் அதாவது நன்கு நினைவில் பதித்துக் கொள்ளும் மனனம் செய்ய வேண்டியதாகிறது. அதற்குப் பின் கேட்டதை கேட்டபடி பொருளோடு இடைவிடாமல் பாவனை புண்ணுதல் என்னும் நிதித்யாசனம் வருகிறது. இதன் மூலம் தத்த்வமஸி வாக்கியப் பொருள் அறிவாக ஞானம் உண்டாகிறது. அதன் பின் எல்லா பிரமையும் ஒழிந்து அதற்குக் காரணமான அவித்தையும் அழிந்து அபரோபக்ஷ் அனுபூதி எனும் பிரும்ம சாட்சாத்கார ஞானம் சீடனுக்கு ஏற்படுகிறது. அவனும் ஞானகுரு ஆகிவிடுகிறான். உடனடியாக அப்போதே ஜீவன் முக்தியடைந்த நிலை வாய்க்கிறது. ஆனாலும் சக்கரத்தை சுழற்றி விட்டுவிட்டு கையை எடுத்துவிட்டாலும் சிறிது சுற்றி விட்டே சக்கரம் நிற்பது போல், அந்த ஜீவன் முக்தனின் உடலும் சில காலம் வாழ்ந்துவிட்டே ஓயும். வேகமாக செலுத்தப்பட்டு வந்த வண்டி நிறுத்தப்பட்டு விட்ட போதும் சிறிது தொலைவு ஓடிவிட்டு நிற்பது போன்றதாகும். இன்னும் ஓர் உதாரணமும், பஞ்சதஸியிலே வித்யாரண்ய ஸ்வாமிகள் கூறுகிறார். அடிபட்ட இடத்தில் காண்பது போல ஜீவன் முக்தனின் உடல் மட்டும் வாழும் என்கிறார்.

விவேக சூடாமணியில் ஸ்ரீ சங்கராச்சாரியார் பழுத்து காய்ந்த இலை காற்றில் அங்கும் இங்கும் அலைவது போல, ஜீவன் முக்தனும் உடல் மட்டுமாய் அலைவர் என்கிறார். ஜீவன் முக்தி அடைந்து விட்ட போதும் உடலில் சில காலம் தங்கியிருக்கிறார். இது பழுத்து காய்ந்து விட்ட இலை மரத்தில் சிறிது காலம் ஒட்டிக் கொண்டிருப்பது போன்றது. இவ்வாறு கருமத்தால் ஆரம்பிக்கப்பட்ட உடல் மாத்திரம் சில காலம் தரிக்கப்படுகிறது. இது பிராரப்த கருமம் எனப்படும் விளைவைத் தரத் தொடங்கிய முன் செய்த புண்ணிய பாவங்கள். தீர்ந்து போனதும், உடலும் விழுந்து விடுகிறது. இந்நிலைக்கு கைவல்யம், விதேக முக்தி என்று பெயர். இதுவே மோட்சம், அதாவது மாயை தன் ஆவரண, விட்ஷேப சக்திகளுடன் நீங்கி விட்ட நிலை. முழு ஆனந்த அதுவரை மறைந்திருந்த பிரும்மம் உணரப்படுகின்றது. இத்தகைய விடுதலை அடைவதற்கு ஜீவன் எங்கும் போய் வர வேண்டியதில்லை. இருந்த இடத்திலேயே கிடைத்து விடுகிறது. இது கொடியிலேயே வெள்ளரி பழுத்து காம்பு விடுபட்டும் கொடியிலேயே இருப்பது போல இருந்த இடத்திலேயே மோட்சம் அடைந்ததாகும். இதை வெள்ளரிப்பழ மோட்சம் என்பர். இந்த அத்வைதப் பிரகரணத்தில் பிரும்மம் மட்டுமே உண்மையானது. மற்ற ஒன்றும் உண்மையில்லை. ஜீவனும், பிரம்மமும் இரண்டில்லை; ஒன்றே என்று கூறுகிறபடியால் இதற்கு இரண்டில்லாதது என்ற பொருளில் அத்வைதம் என்று பெயர் வைக்கப்பட்டது. இங்கே அத்வைத தத்துவத்தின் பொருள் முடிகிறது.

அத்வைதச் செய்யுள்

இந்த தத்துவத்தை கீழே உள்ள செய்யுள் விளக்குகிறது.

ப்ரஹ்மைகம் பரமார்த்த ஸத் ததிதரன் மாயா மயத்வான் ம்ருஷா
ப்ரஹ்மைவைக முபாதி பிம்பித மதோ ஜுவேச பாவம் கதம்
ப்ராந்நிஸ் ஸம்ஸ்ருதி ரஸ்ய தத் ப்ரசமனம் முக்திஸ் தத ப்யாத்மநோ
ப்ரஹ்மைக்யா வகமாத் க்ருதி ச்ரவண ஜாத் இத்யாஹி ரத்வைதிந:

பொருள் : பிரும்மம் எனப்படும் ஆத்மப் பொருள் ஒன்றே. இது எக்காலத்திலும் மேலானதாக இருக்கும் உண்மைப் பொருள். இந்த ஆத்மப் பொருளுக்கு இரண்டாவதாக எதுவும் கிடையாது. அதாவது ஸஜாதியமாக, இந்த ஆத்மாவைப் போலவே இன்னொரு ஆத்மாவும் இல்லை. விஜாதியமாக, இந்த ஆத்மாவைக் காட்டிலும் வேறு விதமான பொருள் ஒன்றும் இல்லை. இதன் மூலம் இதைத் தவிர இன்னொரு ஆத்மா இல்லையென்றும், இந்த ஆத்மாவைத் தவிர வேறுவிதமாகக் கூட இன்னொரு பொருள் இல்லையென்றும் இந்த ஆத்மாவிலேயே கூட ஒரு தருமம் இல்லையென்று தெளிவாக சொல்லலாகிறது. இங்கே விவகாரிக ஸத், பிரதிபாஸிஹ ஸத் என்று இரண்டு விதம் தோன்றுவதால் உண்மையான ஆத்மப் பொருளை வேறுபடுத்திக் காட்ட பரமார்த்த ஸத் என்று இது சொல்லப்படுகிறது. பிரம்மத்தைக் காட்டிலும் வேறாக இருக்கும் மாயையின் செயல் எல்லாம் பொய். ஒரே ஆத்மாவே இடையில் உண்டாகும் மாயைத் தோற்றமான அவித்தை. அந்த கரணங்களால் பிரதிபலிக்கப்பட்டதாய் ஜீவனாகவும் ஒன்றுக்கொன்று வேறுபட்ட பலவாகவும், இறைவனாகவும் தோன்றுகிறது. ஜீவாத்மாவுக்கு நான் செய்பவன், நான் அனுபவிப்பவன், நான் அறிபவன் முதலிய பிரமைதான் சம்சார துக்கம். அபேத வாக்கிய தத் த்வமஸி போன்ற ஞானத்தால் மயக்க அறிவு நீங்குதலே மோட்சம். இவ்வாறு அத்வைதிகளின் தத்துவம் உள்ளது.

தத் த்வமஸி விளக்கம் : அதற்கான குருவின் உபதேசமாக, ஆருணி, சுவேத, கேதுவான தம் பிள்ளைக்கே தத் த்வமஸி என்று உபதேசித்த வேத மகா வாக்கியமுள்ளது. பிருஹதாரண்ய உபநிடதத்தில் இறைவனைச் சொல்ல ஆரம்பித்து, எல்லாம் இவன் வசத்திலுள்ளது. அனைத்திற்கும் இவன் இறைவன். இவனுக்குள் பூதங்கள் எல்லாம் அடக்கம். அவற்றைக் காப்பாற்றுகிறவன் என்று அநேக குணங்களைச் சொல்லிப் பிறகு இந்த ஆத்மா அப்படியெல்லாம் இல்லை. இவனிடத்தில் ஒன்றும் தங்குவதில்லை என்று முன்னால் சொன்ன நல்ல தருமங்களையே கழித்துவிடுவதால் ஒரு குணம்-தருமம் கூட இல்லாத சுத்த சைதன்யம் ஒன்றே பரமார்த்தம் என்று நிற்கிறது. அங்கு ஈஸ்வர ஸ்ரூபம் வேறுபடுத்தப்படுகிறது. ஜீவன் விழிப்பு-கனவு-தூக்கம் என்ற மூன்று நிலைகளை மாறிமாறி அடைபவன். விழிப்பில், வெளி உலகம் அனுபவிக்கப்படுகிறது. கனவில், விழிப்பில், கண்ட உலக அனுபவத்தால் ஏற்பட்ட வாசனைப் பதிவை யதார்ந்தங்களாக அனுபவித்தல், இம்மூன்று நிலைகளிலும் இருப்பது சைதன்யமே. வெளி உலகமும் சொப்பன உலகமும் உண்மையில்லாதவை. ஏனெனில், எப்போதும் இருப்பதில்லை. தூக்கத்தில் அந்தக் கரணம் அழிந்து போய் அறியாமை மட்டுமே உள்ளது. சமாதியில் இந்த அறியாமையும் மறைந்து விடுகிறது. துரியத்தில் சைதன்யமே உண்மை என்று வாய்க்கிறது. அந்த சைதன்யத்திற்கே அஞ்ஞானத் தொடர்புள்ளதால் அஞ்ஞானமே அந்தக்கரணமாகவும், அந்த அந்தக்கரணமே கனவில் உள்ளுலகமாகவும், நினைவில் வெளி உலகமாகவும் மாறுகிறது. ஆகவே, அஞ்ஞான முதலான உலகம் வரை உள்ளதெல்லாம் சைதன்யத்தைத் தவிர மித்தையாகி விடுகின்றன. இப்படி ஜீவன் என்று குறிப்பிடப்படுபவனிடத்தில் உள்ளதை எல்லாம் கழித்தால் சைதன்யமே மிஞ்சுவது. இப்படிப் பகுத்து என்றுமுள்ள ஒன்றை மட்டுமே உணர வேண்டும்.

தத் என்ற சொல்லிற்கு சுத்த சைதன்யமே பொருள். த்வம் என்ற சொல்லிற்கு ஜீவாத்மாவிலுள்ள மித்தையான சமாச்சார்ங்களைக் கழித்த பின்னர் மிஞ்சும் சுத்த சைதன்யமே பொருள். ஆகவே, தத், த்வம் ஆகிய இரண்டு சொற்களுக்கும் பொருள் சுத்த சைதன்யமே. நேரடி புலனனுபவத்தால் இவ்வுண்மை அறிய முடியாதாகையினால் தெரியாததை தந்தை பிள்ளைக்குப் போதிப்பதாக பிரும்மாத்ம-ஐக்யத்தைச் சொல்லவே வருவதாக, தத் த்வமஸி எனும் வாக்கியம் வருகின்றது. தூய ஜீவ-சைதன்யத்திற்கும், தூய பிரும்ம சைதன்யத்திற்கும் பிரிவில்லை-அபேதம் என்பதே இந்த தத் த்வமஸி வாக்கியப் பொருள் எனச் சொல்லுவதால் இவர்களின் தத்துவத்திற்கு சுத்தாத்வைத சித்தாந்தம் எனப் பெயரிடப்பட்டது. அதாவது ஜீவனாக உள்ளவனுக்கும், பிரும்மத்திற்கும் வேறுபாடு இல்லை. ஜீவனே பிரும்மம் இதைத் தவிர, மற்றவை இருப்பது போலத் தோன்றும் மாயையின் காரியங்கள் இல்லாமல் போய்விடுவன என்பதே அத்வைதம்.

அத்வைதக் கருத்துக்கள் சில: கொள்ளிக்கட்டையைச் சுழற்றுவதால் இல்லாத நெருப்பு வட்டம் ஒன்று இருப்பது போல உண்டாகிறது. இதே போலத்தான் இருக்கும், பிரும்மத்தை வைத்து இல்லாத உலகம் தோன்றுகிறது. பானைக்குள்ளிருக்கும் ஆகாயத்திற்கும், வெளியிலிருக்கும் ஆகாயத்திற்கும் பிரிவு உள்ளது போலத் தோன்றுகிறது. ஆனால் பானையினாலேயே அப்படிப்படுகிறது. பானை உடைந்துவிட்டால் ஆகாயம் பழையபடி ஒன்றாகவே இருக்கும் உண்மை புலப்படுகின்றது. அதேபோல ஜீவனாகவும், பிரும்மமாகவும் பிரிந்துள்ளது போலத் தோன்றுகிறது. இது மாயையால் மாயை நீங்கி ஞான நிலையில் இரண்டும் வேறில்லை என்ற அத்வைத உண்மை புரியும். ஏகத் தத்வமே அத்வைதம். அதைப் போலவோ, அதைவிட வேறாகவோ, அதனிடத்திலேயே மாறுதல்களோ, தருமமோ, பகுதிகளோகூட இல்லாததால் இரண்டாவது இல்லாதது பிரும்மம்.