தமிழ்ப் பூங்கா > அகராதி

இலக்கியம் பேசுவோம்...

(1/3) > >>

Maran:



    அருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்து

    பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,

    உரவோர் உரவோர் ஆக!

    மடவம் ஆக; மடந்தை நாமே!


நூல்: குறுந்தொகை (#20)

பாடியவர்: கோப்பெருஞ்சோழன்

திணை: பாலை

சூழல்: காதலன் சம்பாதிப்பதற்காகக் காதலியைப் பிரிந்து செல்கிறான். இந்தத் தகவலைக் காதலியிடம் சொல்கிறாள் தோழி. அதற்குக் காதலி சொல்லும் பதில் இந்தப் பாடல்

    என் காதலருக்கு என்மேல் அன்பும் இல்லை, அக்கறையும் இல்லை, காசு சம்பாதிப்பதற்காக என்னைப் பிரிந்து போய்விட்டார்.

    இப்படிப் பணத்துக்காகத் துணையைப் பிரிந்து போவதுதான் புத்திசாலித்தனம் என்றால், அவரே புத்திசாலியாக இருக்கட்டும், நான் முட்டாளாகவே இருந்துவிட்டுப்போகிறேன்!


Maran:



    ’நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை; அற்றே

    பதியின் பிழை அன்று பயந்து நமைப் புரத்தாள்

    மதியின் பிழை அன்று, மகன் பிழை அன்று மைந்த!

    விதியின் பிழை! நீ இதற்கு என்னை வெகுண்டது?’ என்றான்

நூல்: கம்ப ராமாயணம் (அயோத்தியாகாண்டம் / நகர்நீங்கு படலம் / பாடல் 129)

பாடியவர்: கம்பர்

சூழல்: கைகேயி தசரதனிடம் இரண்டு வரங்கள் பெறுகிறார். அதன்மூலம் பரதனுக்கு முடிசூட்டவும் ராமனைக் காட்டுக்கு அனுப்பவும் ஏற்பாடு செய்துவிடுகிறார். இதைக் கேள்விப்பட்ட லட்சுமணனுக்குக் கோபம். ராமன் அவனை அமைதிப்படுத்துகிற பாடல் இது

    தம்பி, ஒரு நதியில் தண்ணீர் இல்லாவிட்டால் அது அந்த நதியின் தவறு அல்ல (மலைமேல் மழை பெய்தால்தானே நதியில் நீர் வரும்?)

    இங்கே நடந்த விஷயமும் அப்படிதான் – வரம் கேட்ட தாய்(கைகேயி)மேலும் தப்பு இல்லை, வரம் கொடுத்த நம் தந்தைமேலும் தப்பு இல்லை, எனக்குப் பதில் முடிசூடப்போகும் பரதன்மேலும் தப்பு இல்லை, விதி செய்த குற்றம், இதற்கு ஏன் கோபப்படுகிறாய்?


Maran:



    வண்தமிழைத் தேர்ந்த வழுதி கலியாணத்து
    உண்ட பெருக்கம் உரைக்கக் கேள் – அண்டி
    நெருக்குண்டேன், தள்ளுண்டேன், நீள்பசியாலே
    சுருக்குண்டேன், சோறு(உ)ண்டி லேன்

நூல்: தனிப்பாடல்
பாடியவர்: ஔவையார்
சூழல்: கீழே காண்க

    பாண்டியன் வீட்டில் திருமணம். ஔவையாருக்கு அழைப்பு செல்கிறது. அவரும் புறப்பட்டு வருகிறார். ஆனால் கல்யாண வீட்டில் ஏகப்பட்ட கூட்டம். அந்தத் தள்ளுமுள்ளுக்கு நடுவே ஔவையாரால் சமாளிக்கமுடியவில்லை. சாப்பிடாமலே புறப்பட்டு வந்துவிடுகிறார்.

    களைப்போடு வரும் ஔவையாரைப் பார்த்து யாரோ கேட்கிறார்கள். ‘என்ன பாட்டி? கல்யாண வீட்டில் சாப்பாடு பலமோ?’

    ‘உண்மைதான்’ என்கிறார் ஔவையார். ‘வளமையான தமிழை நன்றாகப் படித்துத் தெரிந்துகொண்டவன் பாண்டியன் வழுதி, அவனுடைய வீட்டுக் கல்யாணத்தில் நான் உண்ட கதையைச் சொல்கிறேன், கேள்!’

    ’ராஜா வீட்டுக் கல்யாணம் அல்லவா? அங்கே ஏகப்பட்ட விருந்தினர்கள் வந்திருந்தார்கள். அவர்களுக்கு மத்தியில் நான் நெருக்குண்டேன், தள்ளுண்டேன் (நெருக்கித் தள்ளப்பட்டேன்), பசியால் சுருக்குண்டேன் (வயிறு சுருங்கினேன்), ஆனால் சோறுமட்டும் உண்ணவில்லை!’


Maran:

    கொடுப்பின் அசனம் கொடுக்க; விடுப்பின்

    உயிர் இடையீட்டை விடுக்க; எடுப்பின்

    கிளையுள் கழிந்தார் எடுக்க; கெடுப்பின்

    வெகுளி கெடுத்து விடல்

நூல்: நான்மணிக்கடிகை (#81)

பாடியவர்: விளம்பிநாகனார்

சூழல்: நான்மணிக்கடிகை என்பது 106 பாடல்களைக் கொண்ட சிறு நூல். ஒவ்வொரு பாடலிலும் நான்கே வரிகளில் நான்கு கருத்துகளைச் சுருக்கமாகவும் அழுத்தமாகவும் சொல்வதால் புகழ் பெற்றது. உதாரணமாக, 106 Slides கொண்ட ஒரு powerpoint presentationனைக் கற்பனை செய்துகொள்ளுங்கள், அந்த Slideகள் ஒவ்வொன்றிலும் சரியாக நான்கே நான்கு Bullet Points – அறிமுகம், விளக்கம் என்றெல்லாம் நீட்டி முழக்காமல் சட்டென்று விஷயத்துக்கு வந்து முடிந்துவிடும் அல்லவா? – அதுதான் நான்மணிக்கடிகை. இந்தப் பாடலில் கொடுப்பது, விடுவது, எடுப்பது, கெடுப்பது என்கிற நான்கு அம்சங்கள் இடம்பெறுகின்றன:


        * ஒருவருக்கு ஏதாவது ஒன்றைக் கொடுக்கவேண்டும் என்று விரும்புகிறீர்களா? சாப்பாடு கொடுங்கள்


        * உங்களுடைய பழக்கங்களில் ஏதாவது ஒன்றை விட்டுவிடவேண்டும் என்று விரும்புகிறீர்களா? உயிர்மீது ஆசை, பற்று வைத்திருக்கிறீர்கள் அல்லவா? அதை விட்டுவிடுங்கள்

        * யாரையாவது ஆதரவு அளித்துக் காப்பாற்றவேண்டும் என்று விரும்புகிறீர்களா? உங்களுடைய உறவினர்களிலேயே மிகவும் ஏழை யார் என்று பார்த்து அவர்களுக்கு உதவுங்கள்

        * எதையாவது கெடுக்கவேண்டும் என்று விரும்புகிறீர்களா? உங்களுடைய கோபத்தைக் கெடுத்துக்கொள்ளுங்கள்


Maran:



    இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்;

    கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்;

    நின்ன கண்ணியும் ஆர்மிடைந்தன்றே; நின்னொடு

    பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந்தன்றே;

    ஒருவோர் தோற்பினும், தோற்பது குடியே

    இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால்

    குடிப்பொருள் அன்று நும் செய்தி; கொடித்தேர்

    நும்மோர் அன்ன வேந்தர்க்கு

    மெய்ம்மலி உவகை செய்யும் இவ் இகலே!

நூல்: புறநானூறு (#45)

பாடியவர்: கோவூர் கிழார்

திணை: வஞ்சி

துறை: துணை வஞ்சி

சூழல்: நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி என்ற இரண்டு சோழ மன்னர்கள் ஒருவரோடு ஒருவர் போர் செய்யத் தீர்மானிக்கிறார்கள், அவர்களிடையே சமாதானம் செய்துவைப்பதற்காக இந்தப் பாடலைப் பாடுகிறார் கோவூர் கிழார்

    ’சுருக்’ விளக்கம்: நீங்க ரெண்டு பேருமே சோழர்கள், அப்புறம் எதுக்கு ஒருத்தரோட ஒருத்தர் சண்டை போடறீங்க? உங்கள்ல யார் தோத்தாலும் சோழர் குலத்துக்குதானே அவமானம்? ஊரே உங்களைப் பார்த்துச் சிரிக்குது, பேசாம சமாதானமாப் போயிடுங்க!

    முழு விளக்கம்:

    சோழ அரசனே, இந்தப் போர்க்களத்தில் உன்னை எதிர்த்து நிற்பது, பனம்பூ சூடிய சேரன் அல்ல, வேப்பம்பூ சூடிய பாண்டியனும் அல்ல, நீயும் ஆத்திப் பூ அணிந்திருக்கிறாய், உன்னை எதிர்த்து நிற்பவனும் ஆத்திப்பூதான் சூடியிருக்கிறான்!

    போரில் நீங்கள் இருவருமே ஜெயிக்கமுடியாது, யாராவது ஒருவர் தோற்றுதான் ஆகவேண்டும், அப்போது ’சோழன் தோற்றான்’ என்றுதான் உலகம் சொல்லிச் சிரிக்கும். அந்த அவமானம் தேவையா?

    இப்படியெல்லாம் உங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டு உங்களுடைய குலப்பெருமையைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள். மற்ற அரசர்கள் உங்களைப் பார்த்துக் கேலி செய்து சிரிக்கும்படி நடந்துகொள்ளாதீர்கள், இந்த வீண் சண்டையை உடனே நிறுத்திவிடுங்கள்.


Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version