Author Topic: நாடி சொல்லும் நட்சத்திரப் பலன்கள் - புரட்டாசி மாதம்  (Read 1724 times)

Offline kanmani

விஜய வருடம், புரட்டாசி மாதம், சுக்கில பட்ச திரயோதசி திதியும், அவிட்ட நட்சத்திரமும் சுக யோகமும் கொண்ட புண்ணிய காலத்தில் புனிதமான புரட்டாசி மாதம் பிறக்கிறது.

கிருத்திகை - உத்திரம் - உத்திராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு:

"எண்ணமெலாம் ஈடேற வித்திடுங்
காலமிதே - பொறுமை கொண்டே
நாவடக்கி நிற்பீர் - உபகாரஞ் செய்து
அபகாரம் பெற வேதுவாமிக்காலமாதலின்
தன்னை யடக்கி கரஞ்சுருக்கி காத்திருமினே
நன்றே மராமரமேழு யெய்தான் தாளடைந்து
தனித் திருப்பீரே."

-திருவேங்கடமுடையானை எண்ணி ஆராதித்து பொறுமையை கைக்கொண்டு பேச்சை குறைத்து, கோபத்தை விட்டு, அமைதி காப்பது இம்மாதத்தில் சிறப்பை தரும். யாருக்கு உபகாரம் செய்தாலும் அதனால் பெருமை கிடைக்காத காலம் இது. எந்த காரியத்திலும் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளாமல் சற்று ஒதுங்கி இருந்தால், பெரும் நன்மை உண்டு.

ரோகிணி - அஸ்தம் - திருவோணம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு:

"கரப் பொருள் தானே கரைந்து
நையுமாம் - கருத்தாய் நின்ற அதவு
வோடுமாம் - யுயர் பொறுப்பிருப்
பார் தம்மால் பின்னுயர்வு
உண்டாம் - காமத்தாலிடும்பை
யுண்டாம் - கடனுபாதை
தன்னைக் கூட்டி, சிரந்தாழ்த்தச்
செய்வான் மந்தன்: கருமந் தன்னை
யெண்ணியே துணிய யடுத்து மந்தனை
மந்த நாளிலாராதிக்க மகிமை சேரும்
பின்னிலே."

-கைப்பொருளை சிரத்தையுடன் காத்திடல் நன்று; உறவினருடன் பேச்சால்கூட மோதல் வராது கவனமாக நடக்கவும்; காதலில் சற்று பின்னடைவு ஏற்படும்; சனிபகவான் சற்று சங்கடத்தை ஏற்படுத்துவார்; சனிக்கிழமை சனிபகவானை சிரத்தையுடன் தொழுதுவர பிற்காலம் சுபிட்சம் ஏற்படும் என்கிறார் கொங்கணர்.

மிருகசீரிடம் - சித்திரை - அவிட்டம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு:

"குருதி விரயமாகுமன்றி சுகக் கேடு
உண்டாம் - வியாச்சியந் தன்னால்
அகஞ் சூடு காணுமே - வீண்
அபவாதமும், விரையமுந்தான் வந்தகல
பணியும் உறங்குமே, நட்பில்
விரிசல் தோன்றி மறையினும்
பைரவமூர்த்தி தமை தொழுதக்கால்
விக்கினமெலாம் விலகி விருத்தியடையலாம்
சகல சம்பத்துடனே."

-பைரவ மூர்த்தியை தொழுவதும் அவர்தம் ஸ்தோத்திரப் பாடல்களைப் பாடுவதும் சகல ஐஸ்வர்யங்களையும் பிற்காலத்தில் கூட்டித் தரும் என்பதாம். சாலை வழியில் சிறு காயங்கள் உண்டாகலாம்; சற்று கவனம் வேண்டும். சில வேண்டாத விவகாரங்களினால் மன அமைதி குறைந்து பிறகு மேம்பாடு பெறும். பிற்காலம் நற்காலம் என்பது மனதுக்குத் தெம்புட்டும்.

திருவாதிரை - சுவாதி - சதயம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு:

"வீணான விரையமதனை நுட்பமதி
கொண்டு தடுக்கலாகுமே - மேலோர்
நேரங்கிட்டுமே - தூர தேச சுபச்
சேதி பொருள் வரத்தை காட்டுமே
காலம்பல காத்திருந்த தேக்கமெலாம்
விடுதலை காண - மூதாதையராஸ்தி
தன்னால் முயன்றின்பங்கூடுமே-
சித்தர் தம் சேர்க்கை சேர முயல, பின்
செயமாமே, சுபமான காரியமது தாம் நடந்தேற
தேடாத் தனமது தன்சேரப் பாரீரே-     திருமுருகனை
ஆராதித்து வருவோருக்கு அபாயமேது ஓதுமினே."

-அவசரப்படாது எந்த காரியத்தையும் செய்து, வீண் விரயத்தையும், அலைச்சலையும் தடுக்கலாம். பலகாலமாக எதிர்பார்த்திருந்த காரியங்கள் இனி சாதகமான பலனை அள்ளித் தரும். சிலருக்கு சித்தர் பெருமக்கள் தரிசனம் கிடைக்கும். முருகக் கடவுளை சதாகாலமும் சிந்திப்பதும், தொழுவதும் மேன்மையைத்
தரும்.

புனர்பூசம் - விசாகம் - பூரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு:

"குருதியால் தொல்லை கூடும்
உற்றாரால் உருவாகும் தனவிரயந்தாமே
சுபமான கர்மங்களுமீடேறுமே - நம்மை
உணர்ந்து நடப்பாரில்லை யென்றே
யேங்குமிக்காலமிது யேற்றமுடைத்து
பொருளால் மேன்மையுண்டு - கரைந்து
போன போகமும் பொன்னும் பின்னுஞ்
சேர துர்க்கை தன்னை தொழுதிட துயரிலை
யறிவீரே."

-ரத்த சம்பந்தப்பட்ட உறவினால் மனச்சஞ்சலம் உண்டாகும். பொருள் விரயம் காணும். சுபகாரிய செலவுகள் ஏற்படும். பொருள் சேர்க்கை ஏற்படும். பணவரத்து திருப்தி தரும். வீண் சங்கடங்களை விரட்டிட துர்க்கை பூசை புரிவது நன்மை என்று பொருள் தரும் பாடல் இது.

பூசம்- அனுஷம் - உத்திரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு:

"வருந்தனம் வருத்தமின்றி யோடும்
மேனிக்கு நலிக்கமுண்டு-
கல்வி மேன்மை பெறுவர் கல்வி
யாளரே - அன்னியரால்
கீர்த்தியும், தேச சஞ்சாரமுங் கிட்டும்.
நூதனப் பணி சேர்ந்தே பின் பெரு
மேன்மை தர வித்தாகுங் காலமிது
குபேரனை யாராதித்து பித்ரு சாந்தி
செய்து நிற்பார் நீடு வாழ்வர் சத்தியமே."

-கோலர் சித்தரின் இம்மொழி, வரக்கூடிய பணம் எல்லாம் ஏதோ ஒரு செலவுக்கு உதவும். புகழ் சேரும். அன்னிய தேசங்கள், வெளியூர் பிரயாணங்கள் ஏற்படும். எதிர்பாராத புதிய தொழில் எற்படும். வரும் காலம் சிறப்பானது என்ற நம்பிக்கையும் உற்சாகமும் சேரும் மாதமிது. குபேர பூசை சகல சம்பத்துக்களுக்கும் ஆதாரமாக அமையும் என்று விளக்குகிறது.

ஆயில்யம் - கேட்டை - ரேவதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு:

"அகச் சோர்வு அகலும் -
இறையனுகூலங் கிட்ட தீராப்
பீடை தீரும் - பிரிந்து நின்ற
உறவு வொட்டும் - மாடு கன்று மனை
யுடன் கூடும். கடனுபாதை கண்ட
போதும் முதலீடிதென்று குதூகலிப்பீரே-
கணநாதனை யருகிட்டு தொழுவீரே-
கருகிடுந் துயரென்றுணர்வீரே."

-பொய்யாமொழியார் வாக்கு இது. அறுகம்புல் படைத்து விநாயகரைத் தொழுதுவர எப்படிப்பட்ட சவால்களையும் வென்று வாகை சூடலாம். பிரிந்து சென்ற உறவு சேரும். மனை மாட்சிமை பெறும். சிறிது கடன் ஏற்படும் என்றாலும் முதலீடு பலமாக இருப்பது ஏமாற்றத்தை தராது.

அசுவினி - மகம் - மூலம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு:

"தொட்டது துலங்கும் - வைரியர்
வெம்ப வோங்குங் கீர்த்தியே
சற்றே மேனிக்கு வந்த ஆறு
விலகிட எண்ணாச் செல்வமது
எட்டிப் பிடிக்குங் காலமிது - மேலோர்
நேசஞ் சேருமே - வியாச்சியமு வெல்ல
வேதுவாமே - சப்த கன்னியர் தமை யராதிப்
பாருக்கு அல்லலிலை சொன்னோமே."

-கோரக்கர் வாக்கு இது. எண்ணிய கார்யம் எல்லாம் மனம் குளிர நடக்கும். எதிரிகள் ஓடி ஒழிவர். சற்று உடல் நிலை கோளாறு இருந்தாலும், அவற்றிலிருந்து விடுபட்டு, எதிர்பாராத தனப்பிராப்தியை பெற ஏதுவாகும் இக்காலமே. சப்த கன்னியர் பூசை புரிவது துன்பத்தை அறவே அகற்றும் என்பதாம்.

பரணி - பூரம் - பூராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு:

"பட்ட துயரெல்லாம் படுமினிப் பாரே
மேனிக்கு வந்த ஊறு வாட்டி
வழி யேகுமே - ஏவலுஞ் சூனியமு
மகலவே, வாழ்வினில் இனிமேன்மை
குறைவில்லை கண்டீர் - மேலோர்
வாசமது வாழ்வை செம்மை படுத்தவே
லிங்கோத்பவரை தியானித்து நிற்பாருக்கு
நவக்கோள் சகாயங் கிட்டினிதாகுமே."

லிங்கோத்பவரை தொழுது வருவது பெருமேன்மை தரும். -இதுவரை பட்ட கஷ்டமெல்லாம் விலகிப் போகும். இதுவரை இருந்து வாட்டிய உடல் உபாதை, மனஉளைச்சல், அகலும்; மாந்த்ரீக உபாதைகளிலிருந்து விடுதலை கிட்டும். மேலோர் நட்பால் வாழ்வு சிறப்படையும் என்ற பாடலால் நவக்கோளால் சகாயம் பெரும் யோகம் காணலாம்.

நாடி ஜோதிட நல்லுரைஞர் கே.சுப்பிரமணியம்