Author Topic: கும்ப ராசியும் வாழ்க்கை அமைப்பும்  (Read 1951 times)

Offline kanmani

கும்ப ராசியும் வாழ்க்கை அமைப்பும்
கும்பம்(அவிட்டம் 3,4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1,2,3 ம் பாதம்)

கும்ப ராசியின் ராசியாதிபதி சனி பகவானாவார். கால புருஷனின் அங்க அமைப்பில் இரண்டு கணுக்கால்களையும் குறிக்கும் கடைசி ஸ்திரராசியாகும். அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3 ம் பாதங்கள் போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் கும்ப ராசிக்காரர்களாக கருதப்படுவார்கள். கும்பராசி வாயு தத்துவத்தை கொண்ட ஒரு ஆண் ராசியாகும்.

உடலமைப்பு,

கும்ப ராசிக்காரர்கள் நீண்ட ஆயுளை பெற்றவர்கள். உருவ அமைப்பில் புருவங்கள் அழகாகவும், வளைந்து, நெற்றி நடுப்பக்கம் சாய்ந்து, உதடுகள் மூடியும், மூக்கு  அகன்றும் காணப்படும். எப்பொழுதும் முகத்தில் புண் சிரிப்போடு சரளமாக பேசும் குணமுடையவர்களாக இருப்பார்கள். கழுத்து சிறுத்தும், பற்கள் உறுதியற்றும் இருக்கும். விரல்கள் கூர்மையாகவும், கைகளுக்கேற்றவாறு அமைந்திருக்கும். இவர்கள் உடுக்கும் உடை, உண்ணும் உணவு எல்லாமே மற்றவர்களுக்கு வினோதமானதாக இருக்கும் என்றாலும் ஆத்ம பலமும் மனோதிடமும் கொண்டிருப்பார்கள்.

குண அமைப்பு,

அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்பராசிகாரர்கள் நியாய அநியாயங்கள் பயமின்றி எடுத்துரைப்பார்கள். சொன்ன சொல் தவறாத இவர்கள் முரட்டு பிடிவாதகாரர்கள். மனதை ஒரே நிலையில் கட்டுப்படுத்தக்கூடிய மனப் பக்குவம் கொண்டவர்கள். தனக்கு பிடித்தவர்களிடம் நெருங்கி பழகும் இவர்கள் பிடிக்காதவர்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள். எவ்வளவு பெரிய பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து இருந்தாலும் பிடிக்கவில்லை என்றால் துட்சமாக நினைத்து அவற்றை தூக்கி எறிவார்கள். உண்மை பேசுவதையே குறிக்கோளாக கொண்ட இவர்களின் பேச்சிற்கு எந்த இடத்திலும் மதிப்பிருக்கும் தவறு செய்பவர்களை தயவு தாட்சண்யம் பாராமல் கண்டிப்பார்கள். தன்னிடம் பழகுபவர்களை  துல்லியமாக எடை போடுவதில் சாமர்த்தியசாலிகள். பரந்த நோக்கம் கொண்டவர்களாதலால் தம்முடைய சொந்த பொருட்களையும் பிறருக்கும் தானமளிக்க தவறமாட்டார்கள். மற்றவர்களை எளிதில் திருத்த கூடிய ஆற்றல் மிக்கவர்கள். பிறர் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளில் தேவையின்றி தலையிடாத நியாயவாதிகளாக இருப்பார்கள். எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பார்கள்.

மண வாழ்க்கை

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு மணவாழ்க்கையப் பொறுத்தவரை வரக்கூடிய வாழ்க்கைத் துணையால் நல்ல உயர்வுகளைப் பெறுவார்கள். சொத்து சேர்க்கையும் உண்டாகும. என்னதான் சொத்துக்களும் வசதிகளும் ஏற்பட்டாலும் கணவன் மனைவிக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடுகளும், தேவையற்ற பூசல்களும் உண்டாகும். இருவருக்குமே விட்டுக் கொடுத்து செல்லும் மனப்பக்குவம் இருக்காது. இதனால் குடும்பத்தில் நிம்மதி என்பது குறைவாகவே இருக்கும். கும்ப ராசிக்காரர்கள் குடும்பத்தின் மீது பற்றற்றவர்களாகவே இருப்பார்கள். ஆனால் சமுதாயத்தைப் பெறுத்தவரை புகழ் பெருமையோடு வாழ்வார்கள்.

பொருளாதார நிலை,

பண வரவுகள் கும்ப ராசிகாரர்களுக்கு போதுமென்ற  அளவிற்கு தாராளமாக கிடைக்கும். பண பற்றாக்குறை  ஏற்படாது என்றாலும்  சேமிக்கும் அளவிற்கு இருக்காது. யாருடைய பணமாவது இவர்களது கையில் புழங்கி கொண்டுதான் இருக்கும் வரவுக்கு மீறிய செலவுகளோ, ஆடம்பரமான செலவுகளோ செய்யமாட்டார்கள். சுப நிகழ்ச்சிகளுக்காகவும், குடும்பத் தேவைகளுக்காகவும் நியாயமான செலவுகளையே செய்வார்கள். தன்னுடைய சொந்த முயற்சியால்  பணத்தை பாடுபட்டு சேர்த்திடுவார்கள். இளம் வயதில் கஷ்டங்களை சந்தித்திருந்தாலும் ஆடம்பரமாக வாழ்வதற்கு வீடு, மனை வசதிகளையும், நவீன வண்டி, வாகனங்களையும் தங்களது வசதிக்கேற்றவாறு அமைத்து கொள்வார்கள். இவற்றிற்காக ஏற்படும் செலவுகளைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள். வாழ்க்கையில் சுக துக்கங்கள் மாறி மாறி வந்தாலும் அவற்றை பற்றி பெரிய அளவில் காட்டி கொள்ளாமல் வாழ்வார்கள்.

புத்திர பாக்கியம்,

கும்பராசியில் பிறந்தவர்கள் புத்திர பாக்கியம் குறைவு, அப்படியிருந்தாலும் பெண்குழந்தைகளாகத் தான் இருப்பார்கள். இவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளால் இவர்கள் மேம்மையும் புகழும் அடைவார்களே தவிர பிள்ளைகளால் எந்தவித பிரச்சினையும் ஏற்படாது. பூர்வீக சொத்துகளால் வம்பு, வழக்குகள் உண்டாகும் என்றாலும் அச்சொத்துக்களால் இவர்களின் பிள்ளைகளுக்கு நற்பலன்கள் அமையும். கும்பராசிக்காரர்கள் எளிதில் உணர்ச்சி வசப்பட கூடியவரென்பதால் தம்மை பற்றி பிள்ளைகள் நல்லபடி நினைக்க வேண்டுமென்று  எதிலும் நிதானமாக நடந்து கொள்வார்கள்.

தொழில்,

கும்ப ராசியில் பிறந்தவர்கள் உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். கடினமான வேலைகளையும் எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டு. என்றாலும் இருந்த இடத்திலேயே நிலையான தொழிலை அமைத்துக் கொள்ளும் திறமை கொண்டவர்கள். மின்சாரம் இலாகா, தீ அணைக்கும் படை, போலீஸ்துறை போன்றவற்றில் நல்ல பதவிகளை வகிப்பார்கள். அதுபோல இரும்பு, எஃகு  சம்பந்தப்பட்ட தொழில், புதைபொருள் ஆராய்ச்சி போன்றவற்றிலும் அக்கறையாக செயல்படுவார்கள். இவர்கள் எவ்வளவுதான் பாடுபட்டாலும் உழைப்பிற்கேற்ற ஊதியத்தை பெறமுடியாது என்றே சொல்லலாம். ஆரம்ப கால வாழ்க்கை எவ்வளவு கஷ்டமானதாக இருந்தாலும் பிற்கால வாழ்க்கையில் பல வளங்களைப்  பெற்று சிறப்போடு வாழ்வார்கள். இவர்களிடம் உள்ள குறை  என்னவென்றால் எவ்வளவு பெரிய பதவியும், பொறுப்பும் இருந்தாலும் தனக்கு பிடிக்கவில்லை என்றால் அவற்றை  துச்சமாக நினைத்து தூக்கி எறிந்து விடுவார்கள். இந்த முன்கோபத்தினால் பல இழப்புகளையும் சந்திப்பார்கள்.

உணவு வகைகள்,

கும்ப ராசியில் பிறந்தவர்கள் தங்களை நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வாழைத் தண்டு வாழைப் பழங்கள், பார்லி கீரை, வகைகள், காலிப்ளவர், கேரட், தக்காளி, பப்பாளி போன்றவற்றை உண்பதும், அதிக நீர் அருந்துவதும் நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை,

எண் - 5,6,8,14,15,17

கிழமை - வெள்ளி, சனி

திசை -மேற்கு

நிறம் - வெள்ளை, நீலம்

கல் - நீலக்கல்

தெய்வம் - ஐயப்பன்