Author Topic: கீதை காட்டும் பாதை  (Read 29498 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: கீதை காட்டும் பாதை
« Reply #15 on: August 14, 2012, 02:45:05 AM »
கீதை காட்டும் பாதை 16


கர்மம்-விகர்மம்-அகர்மம்


ஞான யோகத்தில் அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்:


”செயல்கள் என்னைப் பாதிப்பதில்லை. அவற்றின் பலன்களிலும் எனக்குப் பற்றில்லை. இவ்விதம் என்னை யார் அறிகிறானோ அவன் என்றும் செயல்களால் கட்டுண்டிருப்பதில்லை.”


பலனில் பற்று வைக்காமல் செயல்களைச் செய்யச் சொன்னதன் காரணமே அந்த செயல்களால் நாம் கட்டுண்டு இருந்து விடக்கூடாது என்பதால் தான். அதை விரிவாகவே கர்மயோகத்தில் சொன்ன ஸ்ரீகிருஷ்ணர் அதற்கு எப்படி முன்னுதாரணமாகவும் இருக்கிறார் என்பதையும் நாம் பார்த்தோம். போதித்த படியே இருந்து காட்டிய அவர் செயல்களால் பாதிக்கப்படாமல் இருக்க அவர் வழியை அறிந்து உணர்ந்தவர்களும் செயல்களால் கட்டுண்டு இருப்பதில்லை என்கிறார்.


உடல், மனம், அறிவு என்ற அடையாளங்களுக்குள் புகுந்து கொண்டு விடும் போது தான் நாம் இன்ப துன்ப அலைகளில் அலைக்கழிக்கப்படுகிறோம். அளவில்லாத, அழிவில்லாத, எதனாலும் பாதிக்கப்படாத ஆன்மாவாக நாம் தெளிவு பெற்று நம்மைக் காண்கையில் எந்த நிலையும், எந்த செயலும் நம்மைப் பாதிப்பதில்லை.


தெளிவான நீரிலும், அழுக்கான நீரிலும், அலைபாயும் நீரிலும் சூரியன் பிரதிபலிக்கிறது என்றாலும், பிரதிபலிப்புகள் ஒரு போலவே இருப்பதில்லை. தெளிவான நீரில் தெளிவாகவே சூரியன் தெரிகிறது. சேற்று நீரிலோ சூரியன் பிம்பம் மங்கித் தெரிகிறது. அலைபாயும் நீரிலோ சூரியனும் அலைபாய்வது போலத் தெரிகிறது. ஆனால் இந்தப் பிரதிபலிப்புகள் நீரின் தன்மைக்கேற்ப மாறுகிறதே ஒழிய சூரியனின் தன்மை எந்த விதத்திலும் மாறுவதில்லை.
நீருக்கு சூரியனின் தன்மையை மாற்றுகிற சக்தி அணுவளவும் கிடையாது.


அதே போல ஆத்மாவும் குடிபுகும் மனிதர்களின் உடல், மனம், அறிவுக்கேற்ப வெளிப்படும் தன்மை மாறி மாறித் தெரிகிறதே ஒழிய அதன் உண்மைத் தன்மை எந்த விதத்திலும் மாறுவதில்லை. தன் உண்மைத் தன்மைக்கு எதனாலும், எப்போதும் எந்த மாற்றமும் இல்லை என்பதை என்னேரமும் நினைவில் வைத்திருக்கும் மனிதனை எது தான் கட்டுப்படுத்தவோ, பாதிக்கவோ முடியும்?


அடுத்ததாக கர்மயோகத்திலும் சொல்லாத கர்மயோகத்தின் மிகப்பெரிய சூட்சுமத்தை இந்த ஞான யோகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் ஆழமாக விளக்குகிறார். 


”எது கர்மம்? எது கர்மமல்ல? இதை அறிந்து கொள்வதில் அறிஞர்களும் குழப்பமடைந்து விடுகிறார்கள். அதனால் கர்மத்தை உனக்கு விளக்கப் போகிறேன். இதை அறிந்து விட்டால் நீ இந்தப் பிறவியின் தீமைகளில் இருந்து விடுபடுவாய்.


நீ உண்மையான கர்மத்தைப் பற்றி அறிய வேண்டும். அதே போல விகர்மத்தைப் பற்றியும், அகர்மத்தைப் பற்றியும் அறிய வேண்டும். ஏனென்றால் கர்ம மார்க்கம் ஆழமானது. அதை சரியாகப் புரிந்து கொள்வது சுலபமல்ல.


செயலில் செயலின்மையையும், செயலின்மையில் செயலையும் யார் காண்கிறானோ அவனே மனிதருள் ஞானி, அவனே யோகி. அவன் எதைச் செய்தாலும் அதை தவம் போல் செய்து முடிக்கிறான்.


யாருடைய ஒவ்வொரு கர்மமும் ஆசையிலிருந்தும் சுயநல நோக்கத்தில் இருந்தும் விடுபட்டிருக்கிறதோ, யார் தன் கர்மங்கள் அனைத்தையும் ஞானம் என்ற தீயில் எரித்து விட்டானோ, அத்தகைய ஒருவனைத் தான் பண்டிதன் என்று விவேகிகள் கூறுகிறார்கள்” .


இந்த கர்மம், விகர்மம், அகர்மம் என்ற சொற்களில் மனிதனின் வாழ்க்கையே அடங்கி விடுகிறது. மிகச் சுருக்கமாகச் சொன்னால் செய்ய வேண்டிய செயல்கள் செய்வது கர்மம். செய்யக் கூடாத செயல்கள் செய்வது விகர்மம். செயலற்று இருப்பது அகர்மம். இதைப் புரிந்து கொள்வதில் சிரமம் என்ன இருக்கிறது, இதைப் புரிந்து கொள்வது சுலபமல்ல என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறக் காரணம் என்ன என்ற சந்தேகம் எழலாம்.


இந்த மூன்றையும் பார்வையால் அறிந்து கொள்வது கிட்டத்தட்ட முடியாத காரியமே. ஏனென்றால் பார்வைக்கு ஒன்று இன்னொன்றாகத் தெரிய வாய்ப்புகள் அதிகம். நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வேலை செய்பவனைப் பார்த்தால் அவன் செயல் புரிகிறான், அதனால் அது கர்மம் என்று தோன்றலாம். ஆனால் அவன் செய்வது அவனுக்குத் தேவையும் பயனும் அற்ற வேலையாக இருந்தால் அது உண்மையில் விகர்மம். அதனால் எந்த மாற்றமும் ஏற்படாமல் முன்னிருந்த நிலைமையே தொடர்ந்து இருக்குமானால் அது செயல் புரிந்ததே அல்ல என்பதால் அது அகர்மம்.


அதே போல் ஒருவன் அசையாமல் உட்கார்ந்து கொண்டு இருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். பார்வைக்கு அவன் ஒன்றுமே செய்யாமல் சும்மா இருக்கிறான், எனவே அது அகர்மம் என்று தோன்றலாம். ஆனால் அவன் மனதில் ஓராயிரம் எண்ணங்கள் ஓடுமானால் அது அகர்மம் அல்ல. மனதில் ஏற்படும் எண்ணங்கள் அவனை நல்வழிப்படுத்துவதாகவும், செய்ய வேண்டிய செயல்களைச் செய்யத் தூண்டுவதாகவும் இருக்குமானால் அது கர்மமே.  அந்த எண்ணங்கள் பயன் இல்லாதவையாகவும், அவனுக்குத்  தேவை இல்லாதவையாகவும் இருந்தால் அது விகர்மமே.


உடலால் நடக்கும் செயல்கள் மட்டுமே கண்ணுக்குத் தெரிகின்றன. மனதிலும், அறிவிலும் கர்மம் அல்லது விகர்மம் நடந்து கொண்டே இருக்கின்றது. எந்த அளவு மனிதன் கர்மத்தை சிரத்தையுடன் செய்து, விகர்மத்தை தவிர்க்கிறானோ அந்த அளவு நன்மை அடைகிறான். அதற்கு எதிர்மாறாக இருக்கும் போதோ தீமையை சம்பாதிக்கிறான்.


இதனைத் திருவள்ளுவர் ரத்தினச்சுருக்கமாகச் சொல்வார்:


செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமையானும் கெடும்
.


(ஒருவன் செய்யத்தகாத செயலைச் செய்தாலும் கெடுவான். செய்ய வேண்டிய செயலைச் செய்யா விட்டாலும் கெடுவான்.)


உண்மையில் செயலற்று இருக்கும் அகர்மம் எளிதில் சாத்தியமல்ல. சும்மா இருப்பது சுகம் என்று பலருக்கும் தோன்றினாலும் அது தான் மிகவும் கஷ்டமான காரியம். பலருக்கும் அசையாமல் இருப்பதே முடியாத காரியம். கை கால்களையாவது ஆட்டிக் கொண்டு இருப்பார்கள். அசையாமல் இருக்க முடிந்தாலும் மனதினுள் நடக்கும் செயல்களோ ஓராயிரம் கோடி. ஆழ்ந்த உறக்க நிலையில் தான் ஓரளவாவது அகர்மம் அவர்களுக்கு சாத்தியமாகிறது. முழுமையாக அகர்மம் சாத்தியமாவது என்பதோ மரணத்தில் தான்.


எனவே தோற்றத்தை வைத்து செயல் செயலின்மையை சாதாரணமாக யாரும் கண்டுபிடித்து விட முடியாது. செயலில் செயலின்மை இருக்கலாம், செயலின்மையில் செயலும் இருக்கலாம். அதைக் கண்டுபிடிக்க ஞானியாலேயே முடியும் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.


கரையிலிருந்து பார்க்கையில் தூரத்தில் கப்பல் சென்று கொண்டிருந்தாலும் அது அப்படியே நிற்பது போலத் தான் தோன்றும். இது செயல் செயலின்மையாகத் தெரிவது. அதே போல ஆழ்ந்த சிந்தனையில் ஒரு ஞானியோ, விஞ்ஞானியோ இருப்பது செயலற்ற நிலை போலத் தோன்றினாலும் அது வீரியமுள்ள செயல்நிலை என்றே சொல்ல வேண்டும். பின்னால் வரும் பல தலைமுறைகள் வாழ்க்கை முறைகள் அவர்கள் சிந்தனைகளால் மாறக்கூடும்.


(தியானத்தின் போது யோகிகளும், ஆராய்ச்சிகளின் போது ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகளும் வேகம் குறைந்த, அதிக செயல்பாடுகள் இல்லாத ஆல்ஃபா மன அலைகளில் இருப்பதை ஆழ்மனதின் அற்புத சக்திகள் தொடரில் படித்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.)


ரயிலில் பயணம் செய்கையில் பார்க்கின்ற மரம், செடி, கொடி எல்லாம் வேகமாக நம்மைக் கடந்து செல்வது போலத் தோன்றும். ஆனால் அவை எல்லாம் அதனதன் இடத்தில் அப்படியே தானே இருக்கின்றன. இது தான் செயலின்மை செயலாகத் தெரிவது. அதே போல சில மனிதர்களின் சுறுசுறுப்பும் இருப்பதைப் பார்க்கலாம். அவர்கள் ஒன்றை செய்து அதற்கு எதிர்மாறாக இன்னொன்றை செய்து விளைவைப் பூஜ்ஜியமாக்கி விடுவார்கள். பார்வைக்கு நிறைய செயல்கள் நடப்பது போலத் தோன்றினாலும் அத்தனையும் வீண் தான்.


எனவே தான் எதையும் பார்வைக்குத் தெரிகிற மாதிரி எடுத்துக் கொள்ளாமல் ஒரு ஞானியின் பார்வையில் காணச் சொல்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.


நாமும் நிறைய செயல்கள் புரிகிறோம். அப்படி செயல்புரிந்து பல சந்தர்ப்பங்களில் களைத்தும் போகிறோம். அவையெல்லாம் பெரிய விஷயங்கள் என்று எடுத்துக் கொள்வதற்கு முன்பாக ஸ்ரீகிருஷ்ணரின் இந்த வகைப்படுத்தலில் எந்த வகையில் வருகிறது என்பதை நாம் சிந்தித்து அறிய வேண்டும். ஒவ்வொரு மனிதனும் செய்து கொள்ள வேண்டிய சுயபரிசோதனை இது. அப்படி செய்தால் தான் சரியான பாதையில் தான் நம் வாழ்க்கை முன்னோக்கிப் போகிறதா என்பதை நம்மால் உணர முடியும்.  அவ்வப்போது இப்படிப் பார்க்கா விட்டால் பாதை மாறி நாம் சற்றும் நினைத்திராத, நம் இலக்கில்லாத வேறு ஏதோ ஒரு இடத்திற்குப் போய் சேர வேண்டி இருக்கும்.
மறுபடியும் நம் இலக்கை அடைய திரும்பவும் அதே அளவு தூரத்தைக் கடக்க வேண்டும் என்பதால் அவ்வப்போது நம் செயல்களை சோதித்துப் பார்ப்பது தேவையில்லாத அலைச்சலையும், அதனுடன் சேர்ந்து வரும் பிரச்சினைகளையும் தவிர்க்கும்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: கீதை காட்டும் பாதை
« Reply #16 on: August 14, 2012, 02:48:20 AM »
கீதை காட்டும் பாதை 17


கர்மத்தில் இருந்து ஞானத்திற்கு!


செயலாற்ற வேண்டிய நேரத்தில் செயலற்றுப் போன அர்ஜுனனிற்கு செயல்பட வேண்டிய அவசியத்தையும், சிறப்பாக செயல்புரிய வேண்டிய முறையையும் விளக்குகையில் எது உண்மையான செயல் என்பதை கர்மம், விகர்மம், அகர்மம் என்ற மூன்றையும் விவரித்து விளக்கிய ஸ்ரீகிருஷ்ணர், கர்மத்தில் இருந்து ஞானத்தையும், மன சாந்தியையும் பெறும் வழியை விளக்க ஆரம்பிக்கிறார்.


”கர்மபலனில் ஆசையைத் துறந்தவனும், எப்போதும் மனத்திருப்தியுடன் இருப்பவனும், எதையும் சார்ந்திராமல் சுதந்திரமாய் இருப்பவனும், கர்மத்திலேயே ஆழ்ந்திருந்தாலும் செயலினால் அவன் கட்டுப்படுவதில்லை.


ஆசையற்றவனாய், மனத்தை வேறு விஷயத்தில் செல்லாமல் தடுத்து தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளாமல், சரீர யாத்திரைக்குத் தேவையான கர்மங்களை மட்டும் செய்து கொண்டிருப்பவன் தன் செயல்களினால் ஸம்ஸாரத்தை அடைய மாட்டான்.


தானாக வந்ததில் திருப்தி அடைந்தவனும், சுகம்-துக்கம், விருப்பு-வெறுப்பு, போன்ற இருநிலைகளைக் கடந்தவனும், பொறாமையை நீக்கி வெற்றி தோல்விகளை ஒரே விதமாக எடுத்துக் கொள்பவனும் செயல் புரிந்தாலும் பந்தத்திற்கு உள்ளாவதில்லை”.


செயல் புரிபவன் பொதுவாக விளைவு என்ற சங்கிலியால் பிணைக்கப்படுகிறான். மிகச் சிறப்பாகச் செயலும் புரிய வேண்டும், அதன் விளைவுகளிலும் மாட்டிக் கொள்ளக் கூடாது, அதே நேரத்தில் மன அமைதியையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அது  முரண்பாடுகள் கொண்டதாகவும், ஒருசேர சாத்தியப்படாத  காரியமாகவும் நமக்குத் தோன்றலாம். ஆனால் அது சாத்தியம் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.


மனிதனுடைய மிக முக்கியப் பிரச்சினை அவனுடைய ’ஈகோ’ தான். எது உண்மையான ’நான்’ அல்லவோ அதை உண்மை என்று நம்பி அந்த தவறான, பொய்யான மையத்தில் இயங்குவது தான். அந்தப் பொய்யான, கற்பனை மையத்தைத் தான் இக்காலத்தில் ’ஈகோ’ என்கிறோம். அந்தப் பொய்யான மையத்திலிருந்து கொண்டு மனிதன் எதைச் செய்தாலும் அது குறைபாடானதாகவும், பிரச்சினைகளை அதிகப்படுத்துவதாகவுமே இருக்கும். அந்தப் பொய்யான மையத்தை உண்மையாக எண்ணி உணர்வது எதுவுமே அவனை அமைதியடைய விடாது.


வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்கிற வேகம், தோல்வி வந்து விடுமோ என்கிற பயம், அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்கிற கவலை, என்ன நேர்ந்தாலும் அதிருப்தி, அடுத்தவர்கள் நிலை பார்த்து பொறாமை முதலான தன்மைகள் ‘ஈகோ’வினால் உருவாக்கப்படுபவை. உண்மையான சாதனைகளை விடப் பொய்யான தோற்றங்களை உருவாக்கவும், தக்க வைத்துக் கொள்ளவும் தான் ‘ஈகோ’விற்கு அதிக சிரத்தை இருக்கும். யாரையும் விடக் குறைந்து விடக் கூடாது, அடுத்தவர் பார்வையில் தாழ்ந்து விடக் கூடாது என்பது போன்ற எண்ணங்களே பிரதானமாக இருக்கும். யாராவது அதிகம் உயர்ந்து விட்டாலோ அதைப் பார்த்து பொறாமைப்படத் தோன்றும். எப்போதும் மற்றவர்களுடன் ஒப்பு நோக்கத் தோன்றும். செயல்படக் கிடைக்கும் இந்தக் கணத்தில் கடந்ததை எண்ணி துக்கமும், வரப்போவதை எண்ணி கவலையும் அடைந்து இந்தக் கணத்தை வீணாக்கி விடும். இத்தனையும் ஒருவருடைய செயல்திறனை மங்க வைக்கும் அம்சங்கள் மட்டுமல்ல, துக்கத்திற்கும் மூலகாரணிகள்.


ஒரு செயல் செய்யும் போது அதில் நூறு சதவீதம் மனம் லயிக்க வேண்டும். அந்த செயலாகவே மாறி விட வேண்டும். அப்போது தான் அந்த செயல் குறைபாடில்லாத மேன்மையான தரம் வாய்ந்ததாக இருக்கும். விளைவைப் பற்றிய எண்ணம் கூட அந்த செயலிற்கு இடைஞ்சல் தான். விளைவு எப்படி இருக்கும், அதை அடுத்தவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்ற வகையில் எண்ணங்கள் ஓடுமானால் செயலில் நூறு சதவீதம் இல்லை என்று 
பொருள். செயலிற்கு வேண்டிய நூறு சதவீதத்தில் இருந்து  எடுக்கப்பட்டு சில சதவீதங்கள் செயலிற்கு உதவாத எண்ணங்களில் வீணாகின்றன என்று அர்த்தம்.




ப்ரூஸ் லீ கூட கிட்டத்தட்ட இதே கருத்தை அடிக்கடி கூறுவதுண்டு. “செயல்பட வேண்டிய நேரத்தில் முழு விழிப்புணர்வோடு இரு. கருத்துக்களாலும், வழக்கங்களாலும் சிறைப்பட்டு விடாமல் சுதந்திரமாக இரு. எதையும் எதிர்பாராதே. விளைவைப் பற்றிய கவலை கொள்ளாதே. விருப்பு வெறுப்பு இல்லாமல் இரு. இயல்பாக, எளிமையாக, தெளிவாக, முழுமையாக இரு. அப்போது தான்  உள்ளது உள்ளபடி தெளிவாகப் புரியும். பின் செய்ய வேண்டியதை கச்சிதமாகச் செய்வது மிக சுலபமாகும்”. (இந்தக் கருத்தைச் சொன்னது ஒரு துறவியோ, தத்துவ ஞானியோ அல்ல. வாழ்ந்த குறுகிய காலத்தில் தற்காப்புக் கலைகளில் தன்னிகரில்லா நிபுணராக விளங்கிய ஒரு செயல்வீரனின் கருத்து இது என்பதை நினைவில் கொண்டால் ஸ்ரீகிருஷ்ணரின் போதனைகளின் நடைமுறைச் சிறப்பு விளங்கும்.)




அந்த முழுமையான நிலையில் செய்யப்படும் எதுவும் சோடை போகாது. எல்லா தனித்தன்மை வாய்ந்த, காலம் கடந்தும் சிறப்பு குறையாமல் இருக்கும் கலைப்படைப்புகளும் அப்படி உருவாக்கப்பட்டவையே. அங்கு ஈகோ இல்லை. முன்பு ஓரிடத்தில் குறிப்பிட்டது போல அஜந்தா ஓவியங்களையும், எல்லோரா சிற்பங்களையும்,  ஒப்புயர்வில்லா உபநிடதங்களையும்  உருவாக்கியவர்கள் தங்கள் பெயர்களைக் கூட அவற்றில் விட்டுச் செல்லவில்லை. வரலாற்றுப் பக்கங்களில் தங்கள் பெயர் பிரகாசிக்க வேண்டும் என்ற ஆசை கூட அவர்களிடமில்லை.


அப்படிப்பட்ட உன்னதமான உயர்வான உள்ளத்தோடு செய்யப்படும் செயல்கள் எதுவும் செய்பவர்களை பிணைப்பதில்லை. செய்பவன் அதன் விளைவுகளில் இருந்து விடுபட்டவனாகவே இருக்கிறான் என்று கூறும் ஸ்ரீகிருஷ்ணர் கடைசியாக ஞான யோகத்தை இப்படி சொல்லி முடிக்கிறார்.


”அர்ஜுனா! நன்றாக வளர்ந்த நெருப்பானது எப்படி விறகுகளை எரித்து சாம்பலாக்கி விடுமோ, அப்படியே ஞானம் என்ற அக்னியானது எல்லா கர்மங்களையும் சாம்பலாக்கி விடும்.


ஞானத்தைப் பெறுவதனையே நோக்கமாகக் கொண்டு புலன்களை அடக்கி சிரத்தையுடன் முயற்சி செய்பவன் ஞானத்தை அடைகிறான். ஞானத்தை அடைந்த பிறகு விரைவிலேயே மகோன்னத சாந்தி பெறுகிறான்.


ஞானமும், நம்பிக்கையும் இல்லாத சந்தேகவாதி நாசம் அடைகிறான். சந்தேகக் காரனுக்கு இந்த உலகமும் இல்லை, மேலுலகமும் இல்லை, சுகமும் இல்லை.


இந்த யோகத்தால் கர்மங்களை விட்டொழித்தவனும், ஆத்ம ஞானத்தால் சந்தேகத்தை விட்டொழித்தவனும், தன் சுய நிலையில் நிலைத்திருப்பவனுமான ஒருவனை கர்மங்கள் கட்டுப்படுத்த முடியாது.


பரதபுத்திரனே! எனவே அறியாமையால் உதித்து உன் மனதில் குடிபுகுந்துள்ள உன் சந்தேகத்தை ஆத்மஞானம் என்ற கத்தியால் துண்டித்து விட்டு கர்மயோகத்தை கடைப்பிடிப்பாயாக. எழுந்திரு!”

உண்மையான ’நான்’ என்பது அழிவில்லாத, தனிப்பட்ட அடையாளங்களுக்குள் அடங்கி விடாத ஆன்மா என்பதை அறிவதே ஞானம். அந்த ஞானம் அறிவுக்கு எட்டுவது பெரிய விஷயமல்ல. ஆழமாக ஒருவருக்குள் அந்த எண்ணம் வேரூன்றுவதே மிக முக்கியம். அது புலனடக்கம், சிரத்தையுடன் முயற்சி, ஞானத்தைத் தவிர வேறொரு நோக்கமும் இல்லாமை போன்ற உறுதியான அணுகுமுறைகளில் மட்டுமே சாத்தியப்படும். அந்த ஞானத்தை அடைந்த பின் கிடைக்கும் மன சாந்தி மிக மிக உயர்வானது. அந்த பரிபூரண மனசாந்தி வேறு விதங்களில் கிடைப்பது சாத்தியமல்ல. கட்டுப்படுத்தாத கர்மங்களும், களங்கமில்லாத மனநிம்மதியும் தர முடிந்த ஞானத்தை விட பெறத்தக்க மேன்மை வேறென்ன இருக்க முடியும்?


முழுமையான ஞானம் பெறுகிற வரை அடிக்கடி எழுந்து நம்மை அடி சறுக்க வைக்கும் விரோதியைப் பற்றி ஸ்ரீகிருஷ்ணர் கடுமையான வார்த்தைகளில் கடைசியில் எச்சரிக்கிறார். அது தான் சந்தேகம். எத்தனையோ அறிஞர்களுக்கே கூட வழுக்குப் பாறையாக இருக்கும் சந்தேகத்தால் நாசமே விளையும் என்கிறார். சந்தேகக்காரர்களுக்கு இந்த உலகமுமில்லை, மேலுலகமுமில்லை, சுகமுமில்லை என்று சொல்லும் அவர் சந்தேகத்தை அழிக்க ஆத்மஞானம் ஒன்று தான் வழி என்றும் சொல்கிறார்.


எதையும் ஆராயாமல் நம்புவது முட்டாள்தனம். ஆனால் ஆராய்ந்து தெளிந்த பின்னும் சந்தேகம் வருமானால் அதற்கு இரண்டு காரணங்கள் தான் இருக்க முடியும். ஒன்று, தெளிந்த விதம் சரியில்லை. இன்னொன்று தெளிந்த மனிதன் சரியில்லை. குறை இந்த இரண்டில் ஒன்றில் தான் இருக்க முடியும். இரண்டுமே பிரச்சினை தான். திருவள்ளுவர் கூறியது போல


“தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்”



அறிவு இறைவன் மனிதனுக்குத் தந்த மிகப்பெரிய பொக்கிஷம். அதை முழுமையாகப் பயன்படுத்தி முன்னேறுவதும், பலனடைவதும் மிக முக்கியம். ஆனால் அறிவும் கூட ஒரு கட்டத்தில் நின்று விடுகிறது. அதற்கும் மீறிய ஒன்றின் துணையுடன் தான் மனிதன் பிறவிப் பெருங்கடலைத் தாண்ட முடியும். ஞானத்தை அடைந்தவன் தான் அந்த ஒன்றைப் பெற முடியும். அது தான் அசைக்க முடியாத நம்பிக்கை. ஆதாரங்களைத் தேடிப் பிடித்து அறிந்து பெறுவதல்ல அந்த நம்பிக்கை. அது ஆத்மார்த்தமாக மட்டுமே அவன் உணரக் கூடியது. அந்த நம்பிக்கை இல்லாத சந்தேகவாதிக்கு ஆயிரம் புனித நூல்கள், ஞானிகளின் விளக்கங்கள் கேட்டாலும் கூட தெளிவு பிறக்காது. படிப்பதிலும் கேட்டதிலும் உள்ள முரண்பாடுகள் எல்லாம் பெரிதாகத் தெரியும். மேலும் மேலும் குழப்பம் அதிகம் தான் ஆகும். ஆனால் அந்த நம்பிக்கை உள்ளவனுக்கு வெளியே இருந்து கிடைக்கும் ஒரு சொல் கூட அதிகம் தான்.


ஆத்மபூர்வமாக அறிந்தவனுக்கு அடுத்தவனிடமிருந்து ஆதாரம் எதற்கு?


இத்துடன் நான்காம் அத்தியாயமான ஞான யோகம் நிறைவு பெறுகிறது
.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: கீதை காட்டும் பாதை
« Reply #17 on: August 14, 2012, 02:51:31 AM »
கீதை காட்டும் பாதை 18


உண்மையான துறவி யார்?


கர்ம யோகத்தைப் பற்றி விவரித்த ஸ்ரீகிருஷ்ணர் கர்மத்தைத் துறந்த ஞானத்தைப் பற்றியும் பெருமையாகவும், உயர்வாகவும் சொல்லக் கேட்ட அர்ஜுனனின் இந்தக் கேள்வியோடு பகவத் கீதையின் ஐந்தாவது அத்தியாயமான கர்மசன்னியாச யோகம் ஆரம்பிக்கிறது.


”கிருஷ்ணா! கர்மங்களைத் துறந்து விடு என்கிறாய். அதோடு கர்மயோகத்தைப் பற்றியும் சொல்கிறாய். இந்த இரண்டில் எது உயர்ந்தது என்று முடிவாக, சந்தேகத்திற்கிடமில்லாமல் எனக்கு சொல்”


உண்மைக்குப் பல பரிமாணங்கள் உள்ளன என்பதை நம்ப பலருக்கு முடிவதில்லை. ஏதாவது ஒன்று சரி என்றால் அதற்கு மாறுபட்ட மற்றதெல்லாம் சரியாக இருக்க முடியாது என்று எண்ணுவது சாதாரண மனித இயல்பாக இருக்கிறது. செயல் சிறந்தது என்றால் செயலைத் துறந்த ஞானம் சிறந்ததாக இருக்க முடியுமா என்ற சந்தேகம் அர்ஜுனனிற்கு இயற்கையாக வர இரண்டில் எது உயர்ந்தது என்று முடிவாகச் சொல்லுமாறு பொறுமை இழந்து ஸ்ரீகிருஷ்ணரைக் கேட்கிறான்.


பகவத்கீதை குருக்‌ஷேத்திரத்தில் அர்ஜுனனிற்கு மட்டும் சொல்லப்பட்ட வாழ்க்கைத் தத்துவம் அல்ல. தனக்குள்ளே ஒரு குருக்‌ஷேத்திரத்தை அவ்வப்போது சந்தித்து குழப்பம் அடையும் ஒவ்வொரு மனிதனுக்கும் சொல்லப்பட்டது. அதனாலேயே உண்மையின் பல பரிமாணங்களை அறிவுபூர்வமாக ஸ்ரீகிருஷ்ணர் விளக்கும் சிரமத்தை மேற்கொள்கிறார். இரண்டில் ஒன்றை மட்டும் சொல் என்று அர்ஜுனன் கேட்டதற்கு இரண்டுமே மோட்ச நிலைக்கு மனிதனைக் கொண்டு செல்வன என்றாலும் இரண்டில் கர்மயோகமே சிறந்தது என்று சொன்னதோடு இரண்டையுமே விளக்கவும் முற்படுகிறார்.


“எவனொருவன் வெறுப்பு, விருப்பு இரண்டையும் மேற்கொள்ளவில்லையோ அவனே என்றும் துறவி என்றறிய வேண்டும். தோள் வலிமை படைத்தவனே! அத்தகையவன் இரட்டை நிலைகளை நீக்கியவனாக இருப்பதால் எல்லாத் தளைகளில் இருந்தும் சுகமாக விடுபட்டவனாக இருக்கிறான்.


ஞானம் வேறு, (கர்ம) யோகம் வேறு என்று அறியாதவர்கள் சொல்வார்கள். நன்றாக அறிந்தவர்கள் அவ்வாறு சொல்ல மாட்டார்கள். இரண்டு வழிகளில் எதாவது ஒன்றை ஒழுங்காகக் கடைபிடித்தாலும் இவ்விரண்டின் பலனையும் அடையலாம்.


புஜபலமிக்கவனே! கர்ம யோகமில்லாமல் சன்னியாசத்தை அடைவது மிகவும் கஷ்டமானது. கர்ம யோகத்துடன் ஞானத்தை நாடும் முனிவன் உடனடியாக பிரம்மத்தை அடைகிறான்”



இன்று துறவிகள் என்ற பெயரில் உலகில் பலர் மலிந்து கிடக்கிறார்கள். துறவுக் கோலம் பூண்டு ஆசிரமம் அமைத்துக் கொண்டு வாழ்பவர்கள் எல்லாம் துறவிகள் என்று நம்பும் அவலம் அதிகமாகி விட்டது. துறவுத் தோற்றமும், சுய அறிவிப்பும், புனித நூல்களை அறிந்து வைத்திருப்பதும், பக்த கோடிகளைச் சேர்த்துக் கொள்வதும் ஒருவரைத் துறவியாக்கி விட முடியாது. துறவு என்பது மனதில் உண்மையாக நிகழ வேண்டும். அப்படி நிகழாத வரை அந்தத் துறவுத் தோற்றம் கேலிக் கூத்தாகவே இருக்கும்.


திருவள்ளுவர் மிக அழகாகச் சொல்கிறார்.
”வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்”



(வஞ்சனை பொருந்திய மனத்தைக் கொண்டவனது பொய் ஒழுக்கத்தைக் கண்டு அவனுள்ளே இருக்கின்ற ஐந்து பூதங்களும் தமக்குள்ளே ஏளனமாக சிரித்துக் கொள்ளும்).


விருப்பு-வெறுப்பு, சுகம்-துக்கம், புகழ்-இகழ், பெருமை-சிறுமை, வெற்றி-தோல்வி முதலிய இரட்டை நிலைகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்து அதில் சிக்கித் தவிக்காமல் நீங்கி இருப்பதே உண்மையான துறவு என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். இரண்டில் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுத்து கடைசி வரை அதை அனுபவித்து விட முடியும் என்று சாதாரண மனிதன் ஆசைப்பட்டு கடைசி வரை ஏமாறுகிறான். ஆனால் அது முடியாத விஷயம் என்பதை புத்தியுள்ளவன் சீக்கிரமே கண்டு பிடித்து விட முடியும். விருப்பு என்று ஒன்றை வைத்துக் கொண்டால் அது கிடைக்காத போதோ, அதற்கு எதிர்மாறானது கிடைக்கின்ற போதோ வெறுப்பு வந்தே தீரும். ஒரு விஷயம் சுகமானது என்று சந்தோஷப்பட்டுக் கொண்டு அதில் மூழ்கினால் அதை இழக்கிற போது துக்கம் ஏற்படாமல் இருக்க முடியாது. புகழால் பெருமிதம் அடைந்து திளைத்தால் இகழ்ச்சி வரும் போது அவமானப்படாமல் இருக்க முடியாது.


இப்படி இந்த இரட்டை நிலைகள் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை. ஒன்றிலிருந்து இன்னொன்று பிரிக்க முடியாதது. ஒன்றை மட்டுமே எடுத்துக் கொண்டு சுகம் காண ஆசைப்படுவது இயற்கைக்கு எதிர்மாறான ஒன்று. இதை உணர்ந்து கொண்டு அந்த இரட்டைச் சங்கிலிகளின் பிணைப்பில் இருந்து வெளியே வந்து அமைதியடைவது தான் உண்மையான துறவு. இது புறத்தோற்றம் அல்ல. ஒரு அழகான அகநிலை.  துறவு அடுத்தவர்களுக்கு அறிவிப்பது அல்ல. தானாக உணர்ந்து தெளியும் சுகானுபவம். இதில் புறத் தோற்றத்தை மட்டும் உருவாக்கி உள்ளுக்குள் எதிர்மாறாக இருப்பவர்கள் உண்மையில் அடுத்தவர்களை ஏமாற்றுவதை விட அதிகமாகத் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள். திருவள்ளுவர் கூறுவது போல அவர்களுக்கு உள்ளே ஆட்சி செய்யும் ஐம்புலன்களும் “நீ எங்களுக்கு அடிமை” என்று எள்ளி நகையாடும் பரிதாப நிலையில் தங்கி இருந்து விடுகிறார்கள்.


உண்மையான துறவிக்கு பணம், புகழ், பெருமை, அங்கீகாரம் முதலான எதுவுமே தேவை இல்லை. அப்படித் தேவை இருக்குமானால் அந்த நபர் உண்மையான துறவி இல்லை. போலிகளது புறத்தோற்றம் கண்டு ஏமாறும் மனிதர்களும் கீதை, திருக்குறள் போன்ற உயர் நூல்களின் வரையறைகளை வைத்து அந்தத் துறவிகளை உரைத்துப் பார்க்கத் தவறி விடுவது தான் ஏமாற்றத்திற்குக் காரணமாகி விடுகிறது.


அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர் கூறுவது போல செயல்படாமல், செயல்களால் பரீட்சிக்கப்படாமல் யாரும் ஞானத்தை அடைந்து விட முடியாது. மேலும்
கர்மமும், ஞானமும் மேம்போக்காகப் பார்க்கும் போது வேறு வேறு போலத் தோன்றினாலும் ஆழமாகப் பார்த்தால் வேறுபட்டவை அல்ல. உண்மையான ஞானி செயல் பட வேண்டிய நேரத்தில் செயல்படாமல் இருக்க முடியாது. அதே போல ஒரு கர்மயோகி ஞானத்தை அடையாமலும் இருக்க முடியாது.


29 வயது வரை அரச வாழ்க்கை வாழ்ந்த சித்தார்த்தர் இல்லற வாழ்வைத் துறந்து ஆறு வருட ஞானத் தேடலின் முடிவில் தன் 35 வயதில் ஞானோதயம் பெற்றார். அவர் தனக்குக் கிட்டிய ஞானத்தில் அமைதியடைந்து அந்த உயர் உணர்வு நிலையில் அமைதியாக மீதி வாழ்க்கையைக் கழித்திருக்க முடியும். ஆனால் தான் அடைந்த ஞானத்தை, வாழ்க்கையின் பிரச்சினைகளுக்குத் தான் கண்ட விடையை, மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளத் துடித்தது அவர் கருணை உள்ளம். அரசர்கள், பிரபுக்கள் போன்றோருக்கு மட்டுமல்லாமல் பிச்சைக்காரர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், கொலைகாரர்கள், காட்டுமிராண்டிகள் போன்றவர்களுக்கும் கூட உபதேசித்து அவர்களுக்கு உயர் வழியைக் காட்டினார். உடலை விட்டுப் பிரிந்த 80ஆவது வயது வரை தன் போதனைகளைத் தொடர்ந்து உலகிற்குத் தந்து கர்மயோகியாகவே அவர் வாழ்ந்தார்.


அதே போல ஞானத்தைத் தேடி திருவண்ணாமலைக்கு இளமையிலேயே வந்த ரமண மகரிஷி கடைசி வரை ஞான நிலையிலேயே தான் அதிகம் இருந்தார் என்றாலும் அவரால் ஈர்க்கப்பட்டு ஞான வேட்கையால் தேடி வந்த பக்தர்களை அவரது நிர்விகல்ப சமாதிக்குத் தொந்திரவாக எண்ணி துரத்தி விடவோ, அங்கிருந்து ஓடி விடவோ இல்லை.  பலருக்கு ஞான விளக்காக இருந்து வாழ்ந்து மறைந்தார். ஞான உபதேசம் தந்தது மட்டுமல்லாமல் ரமணாஸ்ரமத்தில் காய்கறிகள் நறுக்கும் வேலைகளைக் கூட தானே ஏற்றுக் கொண்டு செய்யும் கர்மயோகியாக அவர் வாழ்ந்தார்.


இவர்கள் தங்களைக் கடவுள் என்று சொல்லிக் கொள்ளவில்லை. தாங்கள் பெற்ற ஞானத்தை விலை பேசி மக்களிடம் விற்கவில்லை. பகட்டு வாழ்க்கை வாழவில்லை. ஞானமடைந்து விட்டதால் தாங்கள் உயர்ந்தவர்கள் என்றும் இனி எந்த வேலையும் செய்யத் தேவையற்றவர்கள் என்றும் காட்டிக் கொள்ளவில்லை. செயல்படும் அவசியத்தை உணர்ந்த போது அதிலிருந்து தப்பிக்க முனையவில்லை.


அதே போல ஜனகர் போன்ற கர்மயோகிகளும் உலக வாழ்க்கையில் தங்கள் சுதர்மத்தை முறையாகச் சிறப்பாகச் செய்தார்கள். ஆனால் மனதளவில் தாமரை இலையில் தண்ணீர் போல பற்றறவர்களாகவே வாழ்ந்தார்கள். கொடுக்கப்பட்ட பாத்திரத்தை குறையில்லாமல் நிறைவாகச் செய்வதும் தன் பகுதி முடிவடையும் போது எந்த வித வருத்தமுமில்லாமல் மேடையில் இருந்து விலகத் தயாராக இருக்கும் விஷயத்தில் ஞானிகளாகவே இருந்தார்கள்.


இதைத் தான் ஸ்ரீகிருஷ்ணர் கர்மம், ஞானம் இரண்டில் ஒன்றை ஒழுங்காகக் கடைபிடித்தாலும் மற்றதன் பலனையும் சேர்ந்து அடைய முடியும் என்று கூறுகிறார். அதே போல இரண்டின் சேர்க்கையால் உடனடியாக ஒருவர் பிரம்மத்தை அடைய முடியும் என்றும் கூறுகிறார்
.