Author Topic: கவிதை பேசும் மொழி - 1  (Read 762 times)

Offline Guest 2k

கவிதை பேசும் மொழி - 1
« on: November 25, 2018, 05:16:10 PM »
கவிதை பேசும் மொழி - 1

கலை ஒரு மனிதனுள் எத்தகைய தாக்கத்தை விட்டுச் செல்கின்றது? அது அவனின் வாழ்க்கையையே புரட்டிப் போடும் வல்லமை கொண்டது. அதே சமயம், மெல்லிய சாரலாய் மனதை வருடிச் செல்வதும் கூட. கலையின் ஒரு பரிணாமமான கவிதை மனித மனதின் அத்தனை அடுக்குகளையும் கலைத்துப் போட்டு அடுக்கி வைக்கும் ஆற்றல் கொண்டது. நான் இன்னிசை அளபெடை பகுதியில் கூறியது போல இன்புறுத்தும்/துன்புறுத்தும் பிரதிகளின் அழகான எடுத்துக்காட்டு கவிதை தான். ஒரு கவிதை ஒரு கணம் உங்கள் மனதை உலர வைக்கும், மறுகணம் ஈரச்சுவடுகளை விட்டுச் செல்லும்

சங்கப்பாடல்களாக ஆரம்பித்த கவிதை வடிவம் திணை(ஐந்திணையின் பண் வடிவங்கள்), யாப்பு(வெண்பா,  அகவற்பா, வஞ்சிப்பா) என ஆரம்பித்த கவிதை வடிவங்கள் காலத்திற்கேற்ப மரபுக் கவிதை, வசனக் கவிதை/உரைநடைக் கவிதை, ஹைக்கூ, சானட் என்று பல வேறுபாடுகள் கடந்து புதுக்கவிதையாக உருமாறி அதுவும் கூட இப்பொழுது நவீனக் கவிதையாகிவிட்டது. இப்பொழுது எழுதப்படும் நூற்றுக்கு தொண்ணூறு கவிதைகள் நவீனக் கவிதை தான்.

கவிதை எழுத என்ன தேவை? உண்மையில் கவிதை எழுத ஒன்றுமே தேவையில்லை ஒரு காகிதமும் எழுதுகோலும், சிறிது மனதை திறந்து வைத்தலும் போதுமானது. கவிதைக்கென்று அழகியல் நடை தேவையில்லை. மரபுக் கவிதையில் அது தேவையான ஒன்றாக இருக்கலாம் குறிப்பாக சந்தம் அமைத்து கவிதை எழுதுவது. ஆனால் நவீனக் கவிதைக்கு அத்தகைய அலங்காரங்கள் தேவையில்லை. அதே போல் கவிதை நான்கு வரிகளிலும் இருக்கலாம் நான்கு பக்கம் வரையிலும் கூட செல்லலாம்.
கவிதை எளிமையாகவும் இருக்கலாம் அடர்த்தியாகவும் இருக்கலாம்.
கவிதை எழுதும்பொழுது எந்தவித கட்டுப்பாடுகளும் வைத்துக் கொள்ளக் கூடாது.

இந்த பகுதியில் எனக்குப் பிடித்த கவிஞர்களையும்,   அவர்களுடைய கவிதை அமைப்பு, மற்றும் அக்கவிஞருடைய சில கவிதைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

அவரவர் கைமணல்

கல்யாண்ஜி @  வண்ணதாசன்

புதிதாக எழுத வருபவர்கள் வண்ணதாசனை படிக்க வேண்டும் என்று எழுத்தாளர் சுஜாதா ஒரு முறை கூறியிருக்கிறார். நம் வாழ்க்கையில் நடக்கும் மிக எளிமையான விஷயங்களை கூட அழகியல் நிறைந்த கவிதையாக கொடுக்க வண்ணதாசனால் மட்டும் முடியும்.

1. சைக்களில் வந்த

தக்காளி கூடை சரிந்து

முக்கால் சிவப்பில் உருண்டது

அனைத்து திசைகளிலும் பழங்கள்

தலைக்கு மேலே

வேலை இருப்பதாய்

கடந்தும் நடந்தும்

அனைவரும் போயினர்

பழங்களை விடவும்

நசுங்கி போனது

அடுத்த மனிதர்கள்

மீதான அக்கறை

வண்ணதாசனின் கவிதைகள் சக மனிதர்கள் மீதான நம்பிக்கை அவநம்பிக்கைகளை மிக எளிமையாக கூறும். அதன் சிறு சான்று தான் முதல் மற்றும் இரண்டாவது கவிதை. ஒரு கவிதை படிக்கும் பொழுது சிறு துளி நம்பிக்கை பிறக்குமா? அதனை சாத்தியப்படுத்தும் ஆற்றல் கவிதைக்கு இருக்கிறது.

2. தானாய் முளைத்த

செடி என்கிறார்கள்

யாரோ வீசிய

விதையிலிருந்து தானே…

நுகர்வுமயமாக்கப்பட்ட உலகில் எல்லாவற்றையும் நமக்கேற்றாற் போல அமைத்துக் கொள்ளும் ஒரு அதிகாரத் தன்மை நம்முள் அமர்ந்துவிட்டது. அந்த அதிகாரம் மனிதர்களுக்கு மத்தியில் தான் செல்லுபடியாகும் இயற்கையிடம் அல்ல என்பதை உணர்த்தகின்றன கீழிருக்கும் கவிதைகள்,

3. நீ இருக்கும்

திசைக்கு முகம்காட்டி

உன் சதுரமான

எதிர்பார்ப்பின் மேல்

பூக்காது

தொட்டிப் பூ

பூப்பூத்தல் அது இஷ்டம்

போய்ப்பார்த்தல் உன் இஷ்டம்

°

4.சூரியனை

ஆற்றங்கரை மணலை

தொட்டாற்சுருங்கிச் செடியை

பாசஞ்சர் ரயிலின்

அற்புத இரைச்சலை
 
பட்டாம் பூச்சியைத்

தொலைத்து விட்டு
 
நாற்காலிக் கால்களில்

நசுங்கிக் கிடக்கிறது

சோற்றுக்கலையும் வாழ்க்கை

°

5. காக்காய் கத்தி

இவ்வளவு நேரம் ஆகிவிட்டது.

காதில் விழவே காணோம்

உப்பு விற்கிறவரின் குரல்,

கோலப்பொடி விற்கிறவரின் குரல்.

என்னவோ ஆகத்தான் போகிறது

இந்த உலகத்துக்கு

இன்றைக்கு.


சமூகத்தின் மீதான கோவங்களையும், தன் நிலைப்பாடுகள் மீதான கோவங்களையும், இயலாமைகளைக் கூட கவிஞர் சில வரிகளிலேயே ஆழமாக முகத்தில் அறையும் விதமாக கூறிச் செல்கிறார்.


6. இருந்து …

என்ன ஆகப் போகிறது ?

செத்துத் தொலையலாம்.

செத்து….என்ன ஆகப் போகிறது?

இருந்தே தொலையலாம்.

மனிதர்களின் அக புற வாழ்வை, அவர்களின் நேசத்தை, ஒரு பறவை பறப்பதை, ஒரு பூ பூப்பதை, ஒரு பிரிவை, சோகத்தை, தனிமையை, கருணையை, ஒரு ஆசுவாசத்தை, ஒரு அரவணைப்பை ஒரு கவிதையில் விட்டுச் செல்பவர் தான் வண்ணதாசன் எனும் எளிய கவி.

7.முழுதாக இருக்கும்போது

கவனத்தில் விழவில்லை

இடிந்து கிடக்கும்போது

இம்சை படுத்துகிறது

யாருடையதாகவோ

இருந்த வீடு


வண்ணதாசன் மிக எளிமையான மனிதர் அவரைப் போலவே அவரின் கவிதைகளும் எளிமைக்கும் பேரன்புக்கும் சான்றாகும். வண்ணதாசனின் பல கவிதைகள் படிக்க கிடைக்கிறது. கண்டிப்பாக படித்துப் பாருங்கள்.

‘இலக்கியமோ, கலையோ, தத்துவமோ, மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். எந்த நுட்பத்தை முன்னிறுத்தியும் இறுகக் கட்டிய மாலையிலிருந்து அது பூவை உருவக் கூடாது. காற்றும் நீரும் வெற்றிடங்களை நிரப்பி விடுகின்றன. நல்ல வாழ்வும் அதைத்தான் செய்யும். நான் உணர்வதைத்தானே நான் எழுதவும் வேண்டும். மனத்தில் தோன்றியதை எழுதிவிட்டேன். சேறுமில்லை, சந்தனமுமில்லை. அவரவர் கை மணல் இது.’ - வண்ணதாசன்

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ஒரு கவிதை உங்களை என்ன செய்துவிடும்?
குறைந்தபட்சம் இதயத் துடிப்பை
ஒரு நொடி
நிறுத்தி துடிக்க வைக்கும்..

ChikU

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்