Author Topic: 2018 - ஒரு குறிப்பு  (Read 1063 times)

Offline Guest 2k

2018 - ஒரு குறிப்பு
« on: December 31, 2018, 08:32:19 PM »
இப்படியாக ஒரு குறிப்பு எழுத வேண்டிய அவசியம் இப்பொழுது என்ன என்று பலமுறை யோசித்துப் பார்த்தால், இதை எழுதாமல் போனாலும் எதுவும் ஆகப்போவதில்லை என்பது தான் நிஜம். எதையாவது யாருக்காவது நிரூபித்துக்கொண்டு அலைவதிலேயே பெரும் நேரம் செலவழிக்கின்றோம். இது தான் என் வாழ்க்கை, இப்படியாக தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்கின்ற தன்னிலை விளக்கங்கள் பெரும் அயர்ச்சியைக் கொடுக்கிறது.

***
வருடத்தின் முதல் நாளிலிருந்தே எனக்கான பிரச்சனைகள் வரிசையாக அடுக்கப்பட்டிருக்கிறது. இப்படியான ஒரு வருட ஆரம்பத்தை எப்பொழுதும் நான் எதிர் கொண்டதே இல்லை. ஆனால் இது கண்டிப்பாக நினைவுகளை எப்பொழுதும் அசைத்துப் பார்க்க கூடிய அனுபவம். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நடந்த விஷயங்கள் வாழ்க்கையின் மீது எந்த அளவு பயத்தை ஏற்படுத்தி இருக்கிறதோ அதை விட அதிகமாக இந்த வாழ்க்கையின் மேலிருக்கும் பிடிப்பை அதிகப்படுத்தியிருக்கிறது. வாழ்வதை அதன் போக்கில் விட்டுக்கொண்டிருந்தவள் இப்பொழுது இதே வாழ்க்கையைக் கூர்ந்து நோக்கத் துவங்கியிருக்கிறேன்.

***
மனிதர்களை எப்பொழுதும் நான் அறிந்து வந்திருக்கிறேன், மிகச்சிறு வயதிலிருந்தே; இன்னமும். மனிதர்கள் பழக்கப்பட்டு விட்டார்கள். துரோகங்களிலும் வலிகளும் பழக்கப்பட்டுவிட்டது. மனிதர்களை அவர்கள் இருப்பது போலவே ஏற்றுக்கொள்ளப் பழகிவிட்டேன். என்னை அவர்களுள் திணித்துப் பார்ப்பது எவ்வளவு மோசமானது என்பதை புரிந்து கொண்டுள்ளேன். மனிதர்களின் சுயமும் சரி பிம்பங்களும் சரி இனி எப்பொழுதும் என்னை கலைத்துப்போட முடியாது.

***
நான் சாதாரணமானவள், ரொம்பவும். குழந்தைத்தனமானவள். வாழ்க்கையை அதன் போக்கில் விட்டு ஒவ்வொரு நொடியையும் நேசித்து வாழ நினைப்பவள். நிச்சயமில்லாத அடுத்த நொடியைப் பற்றி நான் யோசிப்பதேயில்லை. அதே அடுத்த நொடி வாழ்க்கையை புரட்டியே போட்டாலும் அதை தாண்டி செல்லக் கூடிய மனப்பக்குவமும் இருக்கிறது. வாழ்க்கை மிக எளிமையானது அதை நம் எண்ணங்கள் மட்டுமே சிக்கல் படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை நம்புகிறவள்.

***
யாரையுமே காயப்படுத்திவிடக் கூடாது என்பதில் எவ்வளவு கவனமாக இருந்தாலும் சூழ்நிலைகள் எப்படியாவது அதை நிகழ்த்திவிடுகிறது. கண்ணாடிக் குடுவையை போல இந்த உறவுகளை சுமந்து கொண்டு திரிவது பெரும் வாதையாக இருக்கிறது. எனக்கு எப்பொழுதும் 'எல்லாரும் வேண்டும்' . எல்லாருக்கும் பிடித்தமானவளாக இருப்பது அத்தனை சுலபமாக இல்லை. வெளிப்படையானவளாக இருக்கும் பட்சத்தில் எல்லாருக்கும் பிடித்தமானவளாக இருப்பது சாத்தியம் தானா ?. எல்லாருக்கும் ஒரு முகமூடி வேண்டும், அப்படியானதொரு முகமூடியை அணிந்து கொண்டு எல்லாருக்கும் பிடித்தமானவளாக இருக்க எனக்கு பிடிக்கவேயில்லை.

***
கடந்த மூன்று மாதங்கள் மட்டும் என் வாழ்க்கை உண்மையிலுமே பெரும் மாற்றங்களை சந்தித்திருக்கிறது. எதுவுமே நிரந்தரமல்ல என்கிற திண்மை இருந்தாலும் இந்த இடத்தை கடந்து வந்திருக்கிறோம் என்கிற உண்மை நினைவடுக்குகளில் என்றென்றைக்கும் நின்றிருக்கும். அந்த நினைவு திண்மையானது தானே? அந்த உண்மை இந்த நிமிடத்தை, நொடியை மகிழ்வுபடுத்துகிறது. புது உறவுகளும், புது பாதைகளும் நிறைந்திருக்கும் வழி கை நீட்டி அழைக்கிறது. இந்த பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சாத்தியங்களை காலம் தான் நிறுவி தர வேண்டும்.

***

ஏதோ ஒரு பூனை மட்டுமே காலை சுற்றி சுற்றி வந்து உரசிடும். எல்லாக் கோபங்களையும் தூக்கி எறிந்துவிட்டு ஒரு முறை தலையை தடவிக் கொடுத்தாலே உள்ளங்கைகளில் முகம் புதைத்து விடலாம். அன்பு ஒன்று தான் இந்த வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறது. பெறுவதற்கென்று ஒன்றுமே இல்லாவிட்டாலும் கொடுப்பதற்கு நிறையவே இருக்கிறது....பேரன்பு எல்லாருக்கும் !

அனைவருக்கும் மனம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
« Last Edit: December 31, 2018, 08:34:20 PM by ChikU »

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Offline PraveeN

Re: 2018 - ஒரு குறிப்பு
« Reply #1 on: January 06, 2019, 06:25:52 PM »
Hi Chiku friend..........


Greetings and Happy and Prosperous New Year 2019..........


The Life is always Happy and Sorrow Only, Everything is Count as Experience ......

So Don't feel Bad always Take it Easy As Yesterday Experience , Today Experiment and Tomorrow Expectation.

God bless You

Be Happy
Praveen