Author Topic: இணையதளம் மூலம் தொந்தரவு!  (Read 2153 times)

Offline Yousuf

அனாமேதய அழைப்புகள் குறித்து கேள்விப்பட்டிருக்கிறோம். தற்போது இணையதளம் மூலம் இத் தொந்தரவு அதிகரித்து வருகிறது என்பது நடைமுறை உண்மை.

இணையதள சேவையில் மாணவ, மாணவிகள், இளைஞர்கள், யுவதிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற சேவை என்பது அரட்டை அரங்கமே (சாட்டிங்). இதில் பல்வேறு நாடுகள், மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் பல வகை மனிதர்கள், பல வகையான உரையாடல் வகைகள் என தனித்தனியாக பல்வேறு அறைகள் தரப்படுகின்றன. அதில் நமக்கு வேண்டிய ஊரை, நபரை, உரையாடலைத் தேர்ந்தெடுத்து யாருடனும் பேசலாம்.

எதிர்பாலர் ஆணா, பெண்ணா, எந்த வயதுடையவர், எங்கிருப்பவர் என்று எதுவும் தெரியாமல் நாள் முழுக்க சாட்டிங் செய்பவர்கள் உண்டு. மற்ற பொழுதுபோக்குகள் போல் தற்போதைய நாகரிக உலகின் பொழுதுபோக்குகளில் மிக முக்கியமானது சாட்டிங்.

சில பெற்றோர்கள் வெளிநாடுகளில் படிக்கும் தங்களது பிள்ளைகளுடன் பேசுவதற்கும், சில இல்லத்தரசிகள் வெளிநாடுகளில் பணியிலிருக்கும் தங்களது கணவருடன் பேசுவதற்கும் இவ் வசதியைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் தங்களுக்குள் உள்ள மிருகத்துக்கு ஏதாவது தீனி கிடைக்குமா என்று தேடுபவர்களும் இங்கு உலவுவதால் பிரச்னைகள் ஏற்படுகின்றன.

இப்படிப்பட்ட மர்ம நபர் ஒருவரால் நண்பரின் உறவினர் வீட்டில் நடந்த சம்பவம்: நண்பர் தனது உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த சமயம், அங்கிருந்தோர் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியிருந்தனர்.

பள்ளியில் படிக்கும் அவர்களது மகள் அழுது கொண்டிருந்தாள். அப்பெண்ணின் சகோதரி யாரோ ஒருவருடன் செல்ஃபோனில் பேசிக் கொண்டிருந்தார். பேசினார் என்பதைவிட திட்டிக் கொண்டிருந்தார்.

பிரச்னை என்ன என்று நண்பர் விசாரித்தபோது, தொடர்ந்து அறிமுகமில்லாத பலர் செல்ஃபோனில் அழைக்கிறார்கள். மாணவியின் பெயரைச் சொல்லி தவறாகப் பேசுகிறார்கள் என்றனர்.

அப்போது மீண்டும் வேறொரு அழைப்பு வந்தது. அந்த நபரிடம் பேசிய நண்பருக்கு கிடைத்த அதிர்ச்சித் தகவல் இதுதான்:

அழைத்தவர் சாட்டிங் செய்யும்போது, மாணவியின் பெயர் கொண்ட ஐ.டி. மூலம் ஒரு மர்ம நபர் பேசியுள்ளார் (எழுத்து மூல உரையாடல்). அந்த மர்ம நபர் மாணவியின் பெயரைச் சொல்லி தான் ஒரு விலை மாது என்றும், தன்னை இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் கூறியுள்ளார்.

இதையடுத்து தான் அழைத்ததாகவும், இது குறித்து வேறு எதுவும் தெரியாது என்றும், வேண்டுமானால், அந்த மர்ம நபரது ஐ.டி.யை தருகிறேன், கிரைம் பிராஞ்சில் புகார் செய்யுங்கள் என்றார்.

ஆனால் அந்த மாணவியின் பெற்றோருக்கோ இணையதளம் என்றும், சாட்டிங் என்றும் சொல்லுவது ஒன்றும் புரியவில்லை. மேலும் புகார் எதுவும் செய்ய வேண்டாம், பெண் பிள்ளை. அவளது எதிர்காலம் பாதிக்கப்படும்; வேண்டுமானால் தொடர்பு எண்ணை மாற்றிக் கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.

பின்னர் மாணவியிடம் விசாரித்தபோது, பள்ளியில் ஒரு மாணவனுடன் தகராறு ஏற்பட்டதாகவும், அவனுக்கு இந்த தொடர்பு எண் தெரியும் என்றும், அவன் வீட்டில் இணையதளம் உள்ளது என்றும், அவன் இச் செயலை செய்திருக்கலாம் எனவும் கூறினாள்.

அந்த மாணவனிடம் விசாரித்தபோது தெரியாமல் செய்து விட்டேன் என்கிறான். தான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்பதுகூட அவனுக்குத் தெரியவில்லை.

அவனது பெற்றோரிடம் கூறியபோது, அவன் இணையதளத்தில் விளையாடுகிறான் என்று நினைத்தோம். போலீஸில் புகார் செய்ய வேண்டாம் என்று கெஞ்சுகிறார்கள்.

இது போன்ற பிரச்னைகள் ஒவ்வொரு நாளும் பல மாவட்டங்களில் பெருகி வருகின்றன. சென்னையில் பன்மடங்கு பெருகியுள்ளது.

தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் இது போன்ற பிரச்னைகளை ஏற்படுத்துபவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க வகை செய்ய வேண்டியது அரசின் கடமை.