நினைவுகளைச் செதுக்கிய
பழம்பெருமைகளோடான பாழடைந்த ஓர் வீடு
எப்போதும் என் நினைவுகளிலுண்டு
சிதிலமடையத்துவங்கிய பின்னரும்
மனதிற்கு நெருக்கமாகவே
நினைவுகளோடு சஞ்சரிக்கும் அவ்வீட்டின்
வாசற்கதவுகளின் தாழ் குறித்த
சஞ்சலம் மன அடுக்குகளில் அவ்வப்போதாய்
இப்போதும் எழுவதுண்டு
நிமிடத்திற்க்கொருமுறை எட்டிப்பார்த்த ஜன்னல்கள்
இப்போது துருவேறிய கம்பிகளோடு
திறந்தே இருக்கின்றன
தூசு படிந்திருக்கும் அதன் தரைகளில்
என் சுவடுகளை காலம்
மறைத்து வைத்திருப்பதாகவே
நம்பிக்கொள்கிறேன்
மனம் மகிழும் நல்ல கனவுகளில் எல்லாம்
இப்போதும் என் வீடாக
அந்த வீடே வந்து போகிறது
பலகாலங்கள் கழித்து சந்திக்கும்
நேசத்திர்க்குரிய யாரோ ஒருவர்
என் குறித்த நினைவுகளை அசைபோடுவதாய்
அவ்வீட்டைக் குறித்த நினைவொன்றை
தொட்டுச் செல்கிறார்
ஆன்மத் தொடர்புகளை
புரிய வைத்திடல் இயலாதது
காடு தொலைத்த ஒரு பறவையின் ஏக்கமாய்
ஆன்மா புலம்பத்துவங்கிருந்தது.....