Author Topic: நவராத்திரி வழிபாடு!  (Read 4620 times)

Offline Anu

நவராத்திரி வழிபாடு!
« on: October 19, 2012, 12:23:32 PM »
நவராத்திரியின் ஒன்பது சக்தி எவை தெரியுமா?

 நவராத்திரி என்ற வார்த்தையிலேயே நவ என்ற ஒன்பது இலக்கைக் கொண்டு வருகிறது. ஒன்பது நாளும் எதைக் கொண்டாடுகிறோம் பிறப்பின் பெருமையை, படைப்பின் பெருமையை! மரம், செடி முதல் ஊர்வன, பறப்பன முதற்கொண்டு விலங்குகள், மனிதர்கள், மகான்கள், அவதாரங்கள், மும்மூர்த்தி, முத்தேவிகள் என படைப்பின் அத்தனை அம்சங்களையும் கொண்டாடுகிறோம். அத்தனையுமாய் விரிந்து அன்னையானவள் சக்தி தேவியாய் கொலுவிருக்கிறாள் என்பதை! இதை ஒன்பது நாட்கள் கொண்டாடுகிறார்கள்.

பொதுவாக நவராத்திரி என்றால் கொலு வைப்பது, நைவேத்யம் செய்வது, சுற்றி உள்ள சுற்றத்தார், உறவினர், நண்பர்கள் எல்லோரையும் அழைப்பது (யதா சக்தி) பின் எது இயலுமோ அதைத் தாம்பூலமாக தருவது போன்றவை மட்டுமே நமக்குத் தெரியும். இவைகளால் என்ன நன்மை, எதற்குச் செய்ய வேண்டும் என்று யாரும் யோசிப்பதில்லை. நம் முன்னோர்கள் எல்லோரும் செய்வதால் நாமும் அதைச் செய்கிறோம். அப்படியே கடைபிடிக்கிறோம். பித்ரு பக்ஷத்தில் மனபாரத்தை (சுய மற்றும் வம்சாவழி பாபத்தை) ஆத்ம வழிபாடு மூலம் பாரத்தை இறக்கிவிட்டு உடல், மனம் சுத்தியாகி பின் அம்பிகை வழிபாட்டின் மூலம் உடலுக்குச் சக்தி சேர்க்கவே ஒன்பது நாள் வழிபாடாக அமைக்கப்பட்டது.

ஒன்பது சக்திகளை:

1. பர்வத ராஜ புத்ரி - அம்பிகையின் பிறப்பு (குண்டலினி செயல்பட ஆரம்பிக்கிறது)

2. பிரம்மசாரிணி - சிவனை மணக்க அம்பிகை மேற்கொண்ட தவம் (சுவாதிஷ்டானம்) (இங்கு துவைதம் அத்வைதமாக மாறும். ஜீவாத்மா பரமாத்மாவுடன் சேர-சக்தியாக தவம் இருப்பது.)

3. சந்திரகண்டா - மணிபூரக சக்ராதான் செயல்புரியும். மனம் புனிதத்தன்மை அடையும்.

4. கூஷ்மாண்டா - அனாஹத சக்கரத்தைப் பிரதிபலிக்கச் செய்யும். தைரியம் மேலிடும். நோய் நொடிகளிலிருந்து தேகம் காக்கப்படும்.

5. ஸ்கந்த மாதா - விசுக்தி சக்கரத்தை தியானிக்கச் செய்யும். தெய்வத்தை, தெய்வ நிலையை அடைய மார்க்கம் கிட்டும். ஒரு வித அமைதி பிறக்கும்.

6. காத்யாயணி - ஆக்ஞா சக்கிரத்தை எண்ணி தவம் செய்ய வேண்டும். இறைவனை உணர, அடைய மேற்கொள்ளும் தியான முறை.

7. காலராத்ரி - சகஸ்ரார சக்ரத்தினை மனதில் இருத்தி செய்யும் தியான நிலை. இத்தடத்திலிருந்து செய்யும் வழிபாடு, தவத்தினால் எல்லா சித்திகளையும் அடையலாம். பற்றுதல்கள் விலகும்.

8. மகா கவுரி - நவராத்ரியில் அஷ்டமி அன்று மேற்கொள்ளப்படும் வழிபாட்டு தினம். காளி அவதார நாள். முன் ஜென்ம வாசனை அறுபடும் நாள்.

9. சித்திராத்ரி - நவராத்திரியின் ஒன்பதாவது நாளான நவமியன்று எட்டு சித்திகளையும் பெறுவதாக சித்திராத்ரி என பெயர் பெற்ற இத்தேவியின் தினமாகக் கொண்டாடப்படுவது.

இவ்வாறாக உடலிலுள்ள சக்கரங்களை சித்தி செய்து பெறுவதற்கும், இறை வழிபாட்டில் அமைதி, மேன்மை அடையவும் உலகை வெல்லவும் அன்னையின் நவராத்திரி வழிபாடு கொண்டாடப்படுகிறது. மஹிஷ ரூபம் என்பது எருமைத் தலையுடன் ராட்சசனாக எங்கிருந்தோ வருவதல்ல. கோபம், த்வேஷம், விஷம், ஏமாற்றுதல், பொய் பேசுதல், அடுத்தவர்களை நோகடிப்பது போன்ற நம்முள் உள்ள ராட்சசர்களை வதம் செய்வதே இந்த நவராத்திரியின் அடிப்படை நோக்கம். இந்த வழிபாட்டின் மூலம் நம்முள் ஏற்படுத்திக் கொண்ட சக்தி, ஆத்ம பலத்தினைக் கொண்டு நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கு நிம்மதியான முறையில் அன்புடன் கடமை உணர்வுடன் சேவை செய்வதற்கே. மேலும் நம்மைச் சுற்றிஉள்ள சூழ்நிலையை சந்தோஷமாக மாற்றி நம் ஆன்மிக பலத்தை மெருகேற்றுவதற்காக கொண்டாடப்படுவதே நவராத்திரி வைபவம்.

அவரவர் இல்லத்தில் இந்த சிறப்பான தெய்வீகக் காலத்தில் என்னென்ன வழிபாடுகளை மேற்கொள்ளலாம்? இந்த நவராத்திரி புண்ய காலத்தில் தினமும் -

துர்கா ஸுக்தம், ஸ்ரீ ஸுக்தம், மேதா ஸுக்தம் படியுங்கள், கேளுங்கள்.

துர்கா, லக்ஷ்மி, ஸரஸ்வதி அஷ்டோத்ரங்கள் சொல்லி அர்சனை செய்யுங்கள். பஞ்சமுக குத்துவிளக்கு ஏற்றி வைத்து அதனையே அம்பாளாக பாவித்து அர்ச்சனை வழிபாடுகளைச் செய்யுங்கள். வழிபடுவோருக்கு (பூஜைகளை நியமத்துடன் செய்பவர்களுக்கு) குடும்ப உறுப்பினர்கள் தக்க வகையில் உதவுங்கள். வீட்டிற்கு வரும் யாரும் தண்ணீராவது அருந்தாமல் வெளியில் செல்லக் கூடாது. இல்லத்திற்கு வரும் முன்பின் அறிந்தவர், அறியாதவர் என யாரையும் விட்டுக் கொடுக்காமல் அதிதிக்கு விருந்தோம்பல் செய்யுங்கள். பெண்களுக்குத் தாம்பூலம் அளியுங்கள். தாம்பூலமாக அளிக்கும் பரிசுப் பொருட்கள் இயன்றவரை பொதுவில் எவரும் பயன்படுத்தும் வகையில் இருக்கட்டும்.

தினமும் காலை மாலை இரு வேளையும் தூப தீபம், அர்ச்சனை, நிவேதன வழிபாடுகள் செய்யுங்கள். நேரமில்லையே... என நினைக்காமல் ஒரு ஐந்து நிமிடம் வழிபாட்டிற்கு ஒதுக்குங்கள். ஏனெனில் முன்னரே சொன்னது போல், நம்மைச் சுற்றியுள்ள வெளியில் தெய்வீக எனர்ஜி முழுமையாக நிறைந்திருக்கும் காலமிது. அதை உள்வாங்கிக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு.

பெண்கள் எந்த ரூபத்தில் வந்தாலும் அம்பாளாகவே எண்ணி வழிபடுங்கள். பாலா, கன்யா, சுமங்கலி, கணவனை இழந்தோர் என எல்லோரையும் சம பாவனையுடன் பாருங்கள். அவரவர்கள் மனம் நோகாதபடிக்கு பக்குவமாக விருந்தளியுங்கள். வீட்டில் வேலை செய்யும் பணியாட்கள் உட்பட யாரையும் விட்டுக் கொடுக்காமல் எல்லோருக்கும் அம்பாளின் பிரசாதம் போய் சேரட்டும். அஷ்டமி தினத்தன்று தேவி மஹாத்மியம் அல்லது சப்தஸ்லோகி பாராயணம் செய்யுங்கள். துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி காயத்ரி மந்திரங்கள் ஜபிக்கலாம்.

ராஜ ராஜேஸ்வரி அஷ்டகம், நவரத்ன மாலா, நவாவர்ண கீர்த்தனை (முத்துஸ்வாமி தீக்ஷிதர் பாடியது) போன்றவற்றைக் கேளுங்கள். நவாவர்ண பூஜை முழுவதும் இந்த கீர்த்தனை வடிவில் உள்ளது. (இதனைக் கவனித்துக் கேட்பதும், தினமும் பாடுவதும், நவா வர்ண பூஜை செய்த பலனைத் தரும்). ஸ்ரீசக்கரத்தை தீபத்துடன் வைத்து அபிஷேகம் போன்றவற்றை சக்கரத்திற்கு செய்து அர்ச்சனையினை தீபத்துடன் சேர்த்துச் செய்யலாம். ஸ்ரீசக்ரம் வீட்டில் இருப்பதே சுபம் தான். அதனை ப்ராண பிரதிஷ்டை போன்றது செய்யாமலும் புனிதமாகக் கருதி வீட்டில், வண்டியில், அலுவலகத்தில், சட்டைப்பையில் என வைத்திருக்கலாம். அன்னையின் ஸ்வரூபமாக ஸ்ரீசக்ரம் கருதப்படுவதால் அன்னையை மனதார நினைத்தாலே உடனே அருள்தருபவள் என்பதால் அவள் விசேஷ ஆராதனைகளை எதிர்ப்பார்ப்பவள் அல்ல. அப்படிப்பட்ட நினைத்த நேரத்தில் கோட்டையாக வந்து காக்கும் அன்னையை முறையே வழிபட்டுப் பூரண பலன் பெறுவது மானிடர்களாகிய நம் கடமையாக எண்ணிச் செய்தல் வேண்டும்.


Offline Anu

Re: நவராத்திரி வழிபாடு!
« Reply #1 on: October 19, 2012, 12:25:28 PM »
லட்சுமி பிற வடிவமும் சிறப்பும்..

 
அஷ்டலட்சுமி: நவரத்ன மாலை: நவராத்திரி நாட்களில் அஷ்டலட்சுமியரும் மகாலட்சுமியுடன் இணைந்து நவ வடிவினராக தரிசனம் அளிப்பதாக ஓர் ஐதிகம் உண்டு. அந்த சமயத்தில் லட்சுமி தேவியை நவரத்னமாலை பாடித் துதிப்பது மங்களங்கள் யாவும் தரும். நவராத்திரி நாட்களில் நீங்கள் சொல்லி வழிபட எளிதான நவரத்னமாலை துதி ஒன்று இதோ...!

ஆதி லட்சுமி

வெண்மஞ்சள் பட்டுடுத்தி, வெண்தாமரை ஆசனமாய்
வேண்டிய வரமருள வீற்றிருக்கும் ஸ்ரீதேவி!
பண்மலர் மாலையிலே பரிவுடனே மகிழ்ந்து
பலநலன்கள் நல்கிடப் பார்க்கும் விழியழகி!
தேனிருக்கும் மலரினை வண்டு தினம் தேடுதல்போல்
அருள் சுரக்கும் உனையே தினம் நாடி நான் வந்தேன்
மாணிக்க ஒளியே! ஒளிரும் பேரருள் மழையே!
மன்னு புகழ் நீ தருவாய் ஆதிலக்ஷ்மியே வணங்குகிறேன்!

சந்தான லட்சுமி

குழலினில் நறுமலர் குறுக்கினில் வெண்பட்டாடை
இதழோரம் குறுநகை இமையோரம் அருட்பார்வை
அழகிய மழலையைத் திருக்கரத்தால் பற்றி
மூவுலகின் தாயாக வீற்றிருக்கும் கொற்றவனே!
மழலைகள் இரண்டு என் மடியினில் தவழ
மறுக்காது நீயும் மங்கல வரமளிப்பாய்
பூமகளே... பொன்மகளே பூவில் உறை திருமகளே
புஷ்பராகமே.. சந்தானலக்ஷ்மியே... வணங்குகிறேன்!!

கஜ லட்சுமி

பொற்கலசம் ஏந்திப் பூரித்த ஐராவதங்கள்
பொன்மகளே.. உனக்கு இருபுறமும் வீற்றிருக்க,
நறுமணம் தாங்கும் கமல மலர் இரண்டினை
மலர் மகளே உனது மலர்க்கரம் பற்றியிருக்க
திருவேங்கடன்தன் தங்கத் திருமார்பில்
திருமகளே நீ மகிழ்வுடன் கொலுவிருக்க
வைடூர்ய ஒளியே! வற்றாத அருட்சுடரே
வயிரமனம் அருள்வாய் கஜலக்ஷ்மியே... வணங்குகிறேன்!!

தன லட்சுமி

அமுதகலசம் தனை வலக்கரம் தாங்கி
குமுத மலரிரண்டை இருகரமும் தாங்கி
பொன் ஆபரணங்கள் அங்கமெலாம் தாங்கி
வஸ்திராபரணம் இடையினில் தாங்கி
பொற்றாமரையில் வீற்றிருக்கும் தேவியே
பொன் முதலாம் சீர்தனங்கள் என்வாழ்வில்
கோடிகோடியாய் குவிய வரமருள்வாய்
கோமேதகமே! தனலக்ஷ்மியே... வணங்குகிறேன்!!

தான்ய லட்சுமி

ஆற்றோரதென்னை வாழைகம்பு கேழ்வரகு
பாக்கு மரமும் பாங்குடனே செழித்திருக்க
முற்றமெலாம் முத்துக்கள் எனும்படியாய்
முத்தான நவதான்யம் பல்கிப் பெருகிவர
குற்றமொன்றில்லாத உளங்களை நாடித்தேடி
கொற்ற வாழ்வு தனைக் குறையாமல் அருள
வீற்றிருக்கும் வடிவழகே! வேண்டும் வளம் பொழிபவளே
முத்தே! முத்தொளியே! தான்யலக்ஷ்மியே! வணங்குகிறேன்!!

வீர லட்சுமி

எண் கரங்களில் இலங்கிடும் வீர ஆயுதங்கள்
பண் மலர்களில் இளகிடும் நின் பொன்மனம்
சிம்ம வாகனத்தில் புறப்பட்டாய் பவனிவர
பக்தர் உளங்களில் புகுந்திட்டாய் வீரம் தர
வெற்றி மாலை அணிந்தவளே வெற்றி பல அருள்பவளே
போற்றி மாலை புனைந்திட்டேன் தேற்றி எனக்கே அருள்வாய்
கொற்ற வாழ்வு தனை பெற்றவளே தந்தருள்வாய்
நற்பவளக் கொடியே! வீரலக்ஷ்மியே! வணங்குகிறேன்.

விஜய லட்சுமி

அன்னம் அருகிருக்க அருளே வடிவெடுத்திருக்க
அங்கம் தங்கமாய் மின்ன அபயம் வலக்கரத்திருக்க
எண்கரங்களோடு கிரீட குண்டலம் மின்ன,
விண்ணுலகும் மண்ணுலகும் ஏத்தி ஏத்தித் தொழ,
அபயம் அபயம் எனப் பணிந்து தொழுவோர்க்கு
ஜெயம் ஜெயம் என அனைத்திலும் ஜெயிக்க வைப்பாய்
நீள் ஆயுள் நிறைசெல்வம் நிகரற்ற நற்குணமருள
நீல மணிச்சுடரே... விஜயலக்ஷ்மியே! வணங்குகிறேன்.

வித்யா லட்சுமி

பொற்கரத்தில் புத்தகம் எழுதுகோலுடன்
பூவினில் அமர்ந்து புவியெலாம் ஞானம் அருள
கற்போர் உளம் தனில் கலையாத கல்விதர
கமல மலர் ஆசனத்தில் களிப்புடனே அமர்ந்து
பாருலகில் பெருமைபெற ஆயகலைகள் மொத்தம்
அறுபத்து நான்கும் அடியேனுக்கு அருள
பேறுகள் பதினாறும் குறையாமல் பெறவேண்டி
மரகத ரத்தினமே வித்யாலக்ஷ்மியே! வணங்குகிறேன்.

மகா லட்சுமி

ஆயுள் ஆரோக்ய ஐஸ்வர்யங்கள் வேண்டி
ஆதி, சந்தான, கஜ, தன தான்ய லக்ஷ்மி
வீர விஜய வித்யா லக்ஷ்மி என
அஷ்ட லக்ஷ்மிகளை இஷ்டமுடன் பணிந்திட்டேன்.
கஷ்ட வாழ்வுதனைக் களைந்தகற்றி
இஷ்ட சுகங்களை எளிதில் பெற வைப்பாய்
வையகத்தில் வாழ்வாங்கு வாழ வகை செய
வைரமணிச் சுடரே! மஹாலக்ஷ்மியே வணங்குகிறேன்.


Offline Anu

Re: நவராத்திரி வழிபாடு!
« Reply #2 on: October 19, 2012, 12:26:34 PM »
சரஸ்வதியின் பிற வடிவமும் சிறப்பும்..

 
வளையல் அணியும் சரஸ்வதி: நாகை மாவட்டம் கடலங்குடி சிவாலயத்தில் சரஸ்வதி வளையல்கள், கொலுசுகள், முத்துச்சரங்கள், நெற்றிப்பட்டம், கிரீடம் ஆகியவற்றுடன் சகல ஆபரண பூஷணியாகக் காட்சியளிக்கிறாள்.

கலஞ்சன்: இந்தோனேஷியாவிலும், பாலித்தீவிலும் புத்தகங்களை அலங்கரித்து பூஜிக்கும் வழக்கம் இருக்கிறது. இப்பூஜைக்கு கலஞ்சன் என்று பெயர். விஜயதசமி நாளில் பாலித்தீவில் தம்பாத்ஸைரிம் என்னும் குளத்தில் நீராடி புத்தகங்களை வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம் என்று மக்கள் நம்புகிறார்கள்.

மாணவி வடிவில் சரஸ்வதி: சிருங்கேரியில் ஆதிசங்கரர் சாரதாம்பாளை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இங்கு தற்போதும் தேவி ஒரு மாணவியைப் போல் படிக்கின்ற கோலத்தில் அமர்ந்திருக்கிறாள். கைகளில் சுவடி, ஜபமாலை, கெண்டி, ஞானமுத்திரை கொண்டு சர்வ ஆபரணங்களுடன் பத்மாசனத்தில் காட்சி தருகிறார். இங்கு சாரதா நவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

லட்சுமியின் வாகனம் ஆந்தை: வங்க தேசத்தில் லட்சுமியின் வாகனமாக ஆந்தையைப் போற்றி வழிபடுகின்றனர். நவராத்திரி நாட்களில் தங்களது வீட்டு மேற்கூரையில் ஆந்தை அமர்வது அதிர்ஷ்டம் என்கின்றனர். ஆந்தை குரல் எழுப்பினால் சுபகாரியங்களுக்கு திருமகள் சம்மதம் தெரிவித்து விட்டதாக நம்புகின்றனர்.

ஒரு மணி நேரம் மட்டும் தாயாரைப் பிரியும் பெருமாள்: உப்பிலியப்பன் கோயிலில் பெருமாள் தாயாரை விட்டு எங்கும் பிரிவதில்லை. எல்லா விழாக்களிலும் சேர்ந்தே காட்சி தருவாராம். ஆனால் நவராத்திரி அம்பு போடும் வைபவத்தின்போது ஒரு மணி நேரம் மட்டும் தாயாரைப் பிரிந்து தனியே இருப்பாராம்.

ஞான சரஸ்வதி: வேதகாலத்து தெய்வங்களுள் சரஸ்வதி தேவியும் ஒருத்தி. ரிக்வேதம் தோன்றிய காலத்தில் அவள் நதி தேவதையாகத்தான் போற்றப்பட்டாள். வங்காளத்தில் கங்கை மற்றும் சரஸ்வதி நதியை தெய்வமாகக் கொண்டாடுகிறார்கள். பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவராலும் சரஸ்வதிக்கு சிறப்பு உண்டு. நதிகளுள் உயர்வானது சரஸ்வதி; தேவியருள் உயர்வானவள் சரஸ்வதி என்று போற்றுகிறது ரிக் வேதம். யாகங்கள் செய்யப்பட்டு வந்த போதெல்லாம் கூட சரஸ்வதி தேவி ஒரு முக்கிய தேவதையாகப் போற்றப்பட்டு வந்திருக்கிறாள். காலப்போக்கில்தான் சரஸ்வதி தேவியானவள் ஞான சரஸ்வதி -சொல்லின் செல்வி-வித்தைக்குரிய தேவதை என்றெல்லாம் பொறுப்புகளைப் பெற்றாள். வேதகாலத்தில் சரஸ்வதி இடா, பாரதி ஆகிய இரண்டு வாக் தேவியருடன் இணைத்து வணங்கப்பட்டு வந்திருக்கிறாள். கலையின் முப்பெரும் தேவிகள் என்று அம்மூவரையும் போற்றி வந்தார்கள். கந்தர்வர்களும், தேவர்களும்கூட பாடல்களைப் பாடி கலைவாணியின் அருளைப்பெற முனைந்தனர் என்பது புராணம். இவையெல்லாம் நதிதேவதையான சரஸ்வதி எவ்வாறு படிப்படியாக கலை மகளாக உருப்பெற்றாள் என்பதைக் காட்டுகிறது. வெள்ளாடை உடுத்தி, வெண் ஆபரணங்கள் தரித்து, வெண்தாமரையில் இவள் தோன்றுவதாகக் காட்டுவது, தூய்மைக்குக் குறியீடு. சரஸ்வதியின் வாகனம் அன்னப்பட்சி என்றாலும் சிங்கமும் இவளது வாகனமாக வடநாட்டுக் கோயில் சிற்பங்களில் வடிக்கப்பட்டுள்ளது. தென்னாட்டில் சரஸ்வதிக்கு மயிலையும் வாகனமாக அமைத்துள்ளனர். சந்தியா வந்தனம் செய்யும் போது காயத்ரி தேவியைக் காலையிலும், சாவித்ரியை மத்தியானத்திலும், சரஸ்வதியை சாயங்காலத்திலும் வணங்க வேண்டும் என்பது முறை. வாணி, வாக்தேவி என்றெல்லாம் குறிப்பிடப்படும் கலைமகளை வழிபடுவோர், கலையில்-வித்தையில்-ஞானத்தில்-மேம்பட்டு விளங்குவர்!


Offline Anu

Re: நவராத்திரி வழிபாடு!
« Reply #3 on: October 19, 2012, 12:28:11 PM »
துர்க்கையின் பிற வடிவமும் சிறப்பும்..!

 
சிவலிங்க வடிவில் துர்க்கை: விஜயவாடாவில் உள்ள குன்று ஒன்றிலுள்ள கனகதுர்க்கைக்கு ஆதிசங்கரர் சக்கரம் பிரதிஷ்டை செய்து சாந்த துர்க்கையாக்கினார். மங்களூரிலிருந்து 25 மைல் தூரத்தில் நந்தினி நதிக்கரையில் உள்ளது கடில்நகர். பண்டாசுரனை வதம் செய்த இந்தத் தலத்தில் துர்க்கை சிவலிங்கவடிவில் பக்தர்களுக்குக் காட்சி தந்து கொண்டிருக்கிறாள். ஹரியானா மாநிலத்தின் தலைநகரான சண்டிகர் அருகிலுள்ள ஒரு குன்றில் சண்டி தேவி இருக்கின்றாள். அவள் பெயரால்தான் சண்டிகார் ஏற்பட்டதாம். நந்தப் பிரயாகையில் மிகப் பழமையான சண்டிகா கோயில் உள்ளது. ரிஷிகேஷத்தில் ஒரு குன்றில் சண்டியும் மற்றொரு குன்றில் மானசாதேவியும் கோயில் கொண்டுள்ளனர். இமயத்தில் அலகநந்தா நதிக்கரையில் கிருஷ்ணபரகின்மாயா, சக்தாயகம்மர்த்தினி கோயில் உள்ளது. இங்கு துர்க்கைக்கு சிலை ஏதுமில்லை. ஒரு குண்டத்தை துர்க்கையாகப் பாவித்து, பூஜை செய்கின்றனர்.

தடைகளை தகர்க்கும் துர்க்கை: துர்க்கம் என்றால் அரண் என்று அர்த்தம். பக்தர்களுக்கு அரணாக இருந்து அரவணைத்துக் காப்பவளே துர்க்கை அன்னை. நீரில், நிலத்தில், வானில், கானில், தீயில், எதிரிகளுக்கு மத்தியில் என எங்கே இருந்து வேண்டினாலும் அங்கே உடன் தோன்றிக் கவசமாய்க் காப்பவள் அவளே என்கின்றன புராணங்கள். தூய மனதோடு வணங்குவோரை ஓடிவந்து காத்திடும் அந்த துர்க்கை அன்னையின் திருவடிவங்களை நவராத்திரி நாட்களில் தரிசிப்பதே பெரும் பாக்கியம் என்பர். கருணை மழை பொழியும் துர்காதேவியை தரிசனம் செய்தால் உங்கள் வாழ்வில் தடை யாவும் விலகும்.

சாந்தமான துர்க்காதேவி: தஞ்சை கும்பகோணம் பேருந்து சாலையில் உள்ள பட்டீஸ்வரத்தில் உள்ளது தேனுபுரீஸ்வரர் ஆலயம். இந்த ஆலய கர்ப்ப கிரகத்தின் வடக்குப் பகுதியில் வடக்கு திசை நோக்கி எழுந்தருளியுள்ளாள் துர்க்கா தேவி. எட்டுக் கரங்கள் கொண்டு இங்கு துர்க்கை சாந்த சொரூபிணியாக அருள்பாலிக்கிறாள். இந்த துர்க்கையின் திருமேனியைப் போன்ற தோற்றமும், பொலிவு மிக்க தெய்வீக அம்சமும் உடைய வேறு துர்க்கையை வேறு எங்கும் காண இயலாது என பக்தர்கள் கூறுகின்றனர்.

உய்யக்கொண்டான் விஷ்ணு துர்க்கை: திருச்சியை அடுத்த உய்யக்கொண்டான் திருமலையில் உள்ளது ஆளுடையார் கோயில். இங்கு இறைவனின் தேவ கோட்டத்தில் வடக்கு திசையில் அருள்பாலிக்கிறாள் விஷ்ணு துர்க்கை. திருமணம் நடக்க வேண்டியும் குழந்தை வரம் வேண்டியும் துர்க்கையை வேண்டும் பெண்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் அன்னைக்கு எலுமிச்சைப் பழ மாலை அணிவித்து மகிழத் தவறுவதில்லை.

பணிவை உணர்த்தும் விஷ்ணு துர்க்கை: கும்பகோணம் மணல்மேடு பேருந்து தடத்தில் உள்ள மரத்துறையில் உள்ள ஹரிஹரபுத்ர சுவாமி ஆலயத்தில் அருள்பாலிக்கிறாள் விஷ்ணு துர்க்கை. பொதுவாக தேவ கோட்டத்தின் வடபுறத்தில் அருள்பாலிக்கும் துர்க்கை இங்கு கோயிலின் நுழை வாயிலிலேயே வடக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். அன்னைக்கு இங்கு தனி மண்டபம் உள்ளது. இங்கு அன்னையை வணங்குவோர் சற்றே குனிந்து பார்த்தால்தான் துர்க்கையின் முழு உருவத்தையும் தரிசிக்க முடியும். பணிவு தேவை என்பதை இங்கே சொல்லாமல் உணர்த்துகிறாள் இந்த விஷ்ணு துர்க்கை.

அஷ்டபுஜ துர்க்கை: கோவை உக்கடம் அருகே உள்ளது. உஜ்ஜைனி மகா காளியம்மன் ஆலயம். இங்கு பிராகாரத்தின் மேற்குப் பகுதியில் அருள்பாலிக்கிறாள் அஷ்டபுஜ துர்க்கை. இந்த துர்க்கை எட்டுக் கரங்களுடன் மகிஷாசுரன் மேல் சூலம் குத்திய நிலையில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். இந்த துர்க்கையின் தலையில் சிவ பெருமானின் திருஉருவம் உள்ளது சிறப்பம்சம். இந்த ஆலயத்தில் துர்க்கையே பிரதானம். செவ்வாய் மற்றும் வெள்ளி நாட்களில் இந்த துர்க்கைக்கு நடைபெறும் ராகு கால பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். திருமணத் தடை நீங்கவும், குழந்தைப் பேறு வேண்டியும் இந்த பூஜையில் கலந்து கொள்ளும் பெண்கள் நல்ல பலனை அடைகின்றனர். தங்கள் நன்றிக் கடனை நிறைவேற்ற பெண்கள் அன்னைக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபட்டு மகிழ்வது இங்கு வழக்கமாக உள்ளது.

பீமநகர் விஷ்ணு துர்க்கை: திருச்சி பீம நகரில் உள்ளது வேணுகோபால் கிருஷ்ணன் ஆலயம். இந்த ஆலயத்தின் மகாமண்டபத்தின் வலது புறம் தனி சன்னதியில் விஷ்ணு துர்க்கை அருள்பாலிக்கிறாள். துர்க்கையின் முன் சிங்கத்தின் திருமேனியும் பலிபீடமும் உள்ளன. துர்க்கை எட்டுக் கரங்களுடன் சூலம் ஏந்தி சிம்ம வாகனத்தில் காட்சி தருகிறாள். இந்த துர்க்கைக்கு வெள்ளிக்கிழமை ராகு கால நேரத்தில் எலுமிச்சை விளக்கிட்டு வேண்டிக் கொள்வதால் தடைப்பட்ட திருமணம் நடந்தேறுவதுடன் கன்னிப் பெண்கள் விரும்பிய மணாளனை கைபிடிப்பது நிஜம் என்கின்றனர் பக்தர்கள்.

மெட்டி அணிந்த  துர்க்கையம்மன்: கும்பகோணத்திலிருந்து கிழக்கே 15 கி.மீ. தொலைவில் உள்ளது கீழச் சூரிய மூலை என்ற தலம். இங்குள்ள சூரிய கோடீஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கிறாள் துர்க்கையம்மன். இந்த துர்க்கையின் ஒரு பாதத்தில் மெட்டி உள்ளது. தனது ஒரு காலை சற்றே முன் நகர்த்திய கோலத்தில் அருள்பாலிக்கிறாள் இந்த துர்க்கை. தன்னை தரிசிக்க வரும் பக்தர்களை அன்னை நடந்து வந்து வரவேற்கிறாள் என்று இதற்கு பொருள் கூறுகின்றனர் பக்தர்கள்.

துயர் துடைக்கும் துர்க்கையம்மன்: கும்பகோணம் அணைக்கரை நெடுஞ்சாலையில் அணைக்கரையிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது கோடாலி கருப்பூர் என்ற தலம். இங்குள்ள அங்காள பரமேஸ்வரி ஆலயத்தின் பிராகாரத்தில் கீழ்த் திசையில் அருள்பாலிக்கிறாள் துர்க்கையம்மன். மங்கையர் துயர் துடைக்கும் இந்த துர்க்கையம்மன் இந்தப் பகுதி பெண்களின் கண்கண்ட தெய்வம் என்பதில் சந்தேகமே இல்லை.

திருச்சி பாலக்கரை துர்க்கை: திருச்சி பாலக்கரையில் துர்க்கை அம்மனுக்கு தனி ஆலயம் உள்ளது. 500 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில் அன்னைக்கு நான்கு கரங்கள். அன்னை தன் மேல் இடது கரத்தில் சங்கையும், வலது மேல் கரத்தில் சக்கரத்தையும், கீழ் வலது கரத்தில் சூலத்தையும், கீழ் இடது கரத்தில் பாச முத்திரையுடன் மகிஷனின் சிரத்தின் மேல் நின்ற கோலத்தில் இள நகை தவழ காட்சி அளிக்கிறாள். இறைவியின் விமானத்தில் உள்ள சுதை வேலைகள் மிகவும் சிறப்பாக உள்ளன. விமானத்தைச் சுற்றிலும் அஷ்டலட்சுமிகளின் திருமேனிகள் அலங்கரிப்பதுடன் நடு நாயகமாய் மூன்று திசைகளில் கிருஷ்ணனின் திருமேனியும் ஒரு புறம் வக்கிர காளியின் திருமேனியும் காணப்படுகிறது. இங்கு ஏழு வாரங்கள் ராகு கால பூஜையில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு விரைந்து திருமணம் நடப்பது உறுதி என்கின்றனர் பக்தர்கள்.

தனிக்கோயிலில் வனதுர்க்கை: நவதுர்க்கையில் ஒன்றான வனதுர்க்கைக்கு கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் தனி ஆலயம் இருப்பது குறிப்பிடத்தக்கது. கல்வியில் சிறந்த கம்பர் இந்த அன்னையின்பால் விசேஷ பக்தி கொண்டவர். இவளை வழிபடாமல் எந்தச் செயலையும் அவர் துவங்குவது இல்லை. ஒருநாள் மழைக் காலத்தில் கம்பர் வீட்டுக் கூரை சிதைந்தது. கம்பர் அம்பாளை நினைத்து மனமுருகி அம்மா உன் அருள் மழை என்றும் என்னைக் காக்கும் எனக் கூறி படுத்து உறங்கிவிட்டார். காலை விழித்தெழுந்து பார்த்தபோது அவர் வீடு நெற்கதிர்களால் கூரை வேயப்பட்டு இருந்ததைக் கண்டு மனமுருகி கதிர்தேவி கதிர்வேய்ந்த மங்கள நாயகி எனப் பாடிப் பரவசமானார். இதுதான் நாளடைவில் கதிராமங்கலம் என மருவி உள்ளது. வனதுர்க்கா பரமேஸ்வரிக்கும் காசி விசாலாட்சி அன்னபூரணி ஆகியோருக்கும் தொடர்பு உண்டு. அம்பாள் தினமும் காசி போய் வருவதாக ஐதிகம் உண்டு. இதற்கு ஏற்ப இன்றும் அம்பாளின் கோபுர விமானத்தில் அம்பாளுக்கு நேர் எதிரே ஒரு சாண் சதுர அளவில் ஒரு துவாரம் உள்ளது. இதனால் இவளை ஆகாச துர்க்கை என்றும் சொல்வர். பொதுவாக ராகுவுக்கு அதிதேவதை துர்க்கை. அதுபோலவே அம்பாளின் திருஉருவமும் உள்ளது. முன்பக்கத் தோற்றம் அம்பாள் தோற்றமும் பின்பக்கம் பாம்பு படம் எடுத்ததுபோல் உள்ளது.


Offline Anu

Re: நவராத்திரி வழிபாடு!
« Reply #4 on: October 19, 2012, 12:31:27 PM »
நவராத்திரியின் பிற சிறப்புகள்!
 
அசையாப் பொருள் பரம்பொருள் என்றும், அசைவுடைய செயல் சக்தி என்றும் கூறப்படுகிறது. பொதுவாக சிவராத்திரி, கிருஷ்ண ஜெயந்தி, ராமநவமி போன்ற விழாக்கள் ஒருநாள் விசேஷமாகக் கொண்டாடப்படும். ஆனால் சக்தி வழிபாடு மட்டும் நவராத்திரி என்ற பெயரில் ஒன்பது நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது. வருடத்தில் நான்கு நவராத்திரிகள் வருவதுண்டு. ஆனி மாத அமாவாசைக்குப் பின்னர் வருவது ஆஷாட நவராத்திரி. புரட்டாசி மாத அமாவாசைக்குப் பின்னர் வருவது மகா நவராத்திரி. தைமாத அமாவாசைக்குப் பின்னர் வருவது மாக நவராத்திரி. பங்குனி மாத அமாவாசைக்குப் பின் வருவது வசந்த நவராத்திரி. புரட்டாசி மாதமும் பங்குனி மாதமும் காலதேவனுடைய கோரைப் பற்கள் என்று புராணங்கள் கூறும். ஜீவராசிகள் யாவும் துன்பமின்றி நலமோடு வாழ இவ்விரு மாதங்களில் வருகின்ற நவராத்திரி காலத்தில் விரதம் மேற்கொள்வார்கள். நவம் என்றால் புதியது என்றும், ஒன்பது என்றும் இரு பொருள் தரக்கூடிய சொல்லாகும். பழமையோடும் புதுமை கலந்தும் பரிணமிக்க வழிகாட்டும் விழா என்றும் கொள்ளலாம். புரட்டாசி அமாவாசை நாளுக்குப்பின் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது நவராத்திரி. நவராத்திரியின்போது ஒன்பது நாளும் ஒன்பது வகையில் மலர் வழிபாடு செய்வார்கள். கொலுவிருக்கும் தேவியரை ஒன்பது ராகங்களில் துதித்து, ஒன்பது வகைப் பழங்கள், பிரசாதங்கள் படைத்து அன்னையின் மனம் மகிழ்வுறச் செய்வார்கள். படைத்தல், காத்தல், அழித்தல் எனும் மூன்று சக்திகளைக் கொண்ட அன்னையின் அருள் வேண்டி பூஜை செய்தலே நவராத்திரி வழிபாடாகும்.

துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என மூவகையாக மும்மூன்று நாட்கள் விழாக் கொண்டாடுவதும், இறுதியில் பத்தாம் நாள் அம்மனை சிம்ம வாகனத்தில் ஊர்வலமாகக் கொண்டு சென்று சூரனை வதம் செய்த நிகழ்ச்சியாக பாரிவேட்டையும் நடைபெறும். புரட்டாசி மாதத்தில் நவராத்திரி விழாவில் கொலு வைத்தல் பரம்பரையாகச் செயல்பட்டுவரும் பக்தி நிகழ்ச்சியாகும். நல்லோரின் நட்பை ஏற்றுப் போற்றுதலும் பக்தியைப் பெருகச் செய்வதும் கொலுவின் முக்கிய நோக்கமாக அமைகிறது. பிரதமை முதல் திரிதியை வரையில் கிரியா சக்தியாகிய துர்க்கா தேவியையும்; சதுர்த்தி முதல் சஷ்டி வரையில் இச்சா சக்தியாகிய மகாலட்சுமியையும்; சப்தமி முதல் நவமி வரையில் ஞான சக்தியாகிய சரஸ்வதியையும் வழிபாடு செய்து தசமியில் நவராத்திரியை நிறைவு செய்வது வழக்கம். மகேஸ்வரி, கவுமாரி, வராஹி, மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்மி, சாமுண்டீஸ்வரி போன்ற தேவியரின் மந்திரங்களை ஒன்பது நாளும் சொல்லி, பூஜை செய்வது நலமாகும். ஒன்பது நாளும் விரதமிருந்து அன்னையை வழிபடும் கன்னிப் பெண்களுக்கு திருமணம் கைகூடும். குடும்பத்தில் அன்பும் ஒற்றுமையும் ஓங்கும். இளம் பெண்கள் கல்வி, இசை போன்றவற்றில் சிறப்படைவார்கள். இல்லத்தில் செல்வம் சேரும்.

காசியின் கருணைத்தாய்: சக்திபீடங்களில் மணிகர்ணிகா பீடமாகத் திகழ்வது காசி. தட்ச யாகத்தின் போது, கோபமடைந்த சிவன் அம்பாளின் உடலைத் தூக்கி ஆடும் போது, மணிகர்ணிகை என்னும் அம்பிகையின் குண்டலம் விழுந்த தலம் இது. கங்கைக்கு நிகரான நதியும் இல்லை. காசிக்கு நிகரான பதியும்(ஊர்) இல்லை என்பது சொல்வழக்கு. வாழ்வில் ஒருமுறையாவது காசிக்குச் சென்று கங்கையில் நீராடவேண்டும் என்பது லட்சியமாக இருக்கிறது. மோட்சத் தலங்கள் ஏழில் காசியே முதன்மையானது. உயிர்களின் பாவத்தைப் போக்கி பிறவி என்னும் பெருங்கடலைக் கடக்கும் தோணியாக விஸ்வநாதரும், விசாலாட்சியும் இங்கு வீற்றிருக்கின்றனர். காசியில் மரணம் அடையும் உயிர்களை விசாலாட்சியே தன் மடியில் கிடத்தி முந்தானையால் வீசி விடுவதாகவும், விஸ்வநாதர் அவர்களின் காதில் ராமநாமத்தை ஓதி முக்தி அளிப்பதாகவும் ஐதீகம். விசாலாட்சி என்பதற்கு  விசாலமான கண்களைக் கொண்டவள் என்பது பொருள். தன் அகன்ற கண்களால் பக்தர்களின் மீது அருள்மழையை விசாலாட்சி பொழிகிறாள். பாசபந்தங்களைப் போக்கி முக்திவாசலைத் திறந்து விடுகிறாள். காசியில் வாரணம், அசி என்னும் ஆறுகள் வடக்கிலும் தெற்கிலுமாக ஓடுவதால் வாரணாசி என்ற பெயரும் உண்டு. கிரகங்களில் ஒருவரான புதன், காசி விஸ்வநாதரையும், விசாலாட்சியையும் வழிபட்டு கிரகபதவி அடைந்தார். இதனால் இங்கு வழிபட்டவர்களுக்கு கல்வி வளர்ச்சி, ஞானம் கிடைக்கும். இங்கு விமரிசையாக நடக்கும் விழாக்களில் நவராத்திரி முக்கியமானது.

மங்கல தீபம் ஏற்றுவோம்: நவராத்திரி காலத்தில் விடிய விடிய  விளக்கு எரிவது வீட்டிற்கு செல்வ வளத்தை தரும்.  தீபத்தை குறித்த  அரிய தகவல்களை இதோ! படியுங்க!

*விளக்கில் இருக்கும் ஐந்து முகங்கள் அன்பு, மனஉறுதி, நிதானம், சமயோசிதம், சகிப்புத்தன்மை ஆகிய நற்பண்புகளும் பெண்களுக்கு அவசியம் என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளன.
*தரையில் விளக்கேற்றி வைக்கக்கூடாது. மரப்பலகையில் கோலமிட்டு, அதன் மேல் விளக்கு இருக்க வேண்டும். விளக்கிற்கு மலர் சூடுவது மிகநல்லது.
*தீபலட்சுமியாகப் போற்றப்படும் திருவிளக்கிற்கு சந்தனம், குங்குமம் இடுவது அவசியம். தீபலட்சுமியே! எங்கள் வீட்டில் எப்போதும் நிலைத்திருப்பாயாக! என்று சொல்லிக்கொண்டே விளக்கேற்ற வேண்டும்.
*அம்மன் கோயில்களில் மாவிளக்கு வழிபாடு செய்வது சிறப்பானது. உடல் ஆரோக்கியம் பெற செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நேர்த்திக்கடனாக மாவிளக்கேற்றி வழிபடுவது வழக்கம்.
*நாயன்மார்களில் நமிநந்தியடிகள், கணம்புல்லர், கலியநாயனார் ஆகியோர் விளக்கு வழிபாட்டினால் சிவன் அருளைப் பெற்றவர்கள். வேதாரண்யம் வேதபுரீஸ்வரர் கோயிலில் அணைய இருந்த விளக்கைத் தூண்டிய எலி மறுபிறவியில் மகாபலிச்சக்கரவர்த்தியாகப் பிறந்தது.
*விளக்கேற்ற எக்காலமும் உகந்தது பஞ்சுத்திரி. விழா நாட்களில் தாமரைத்தண்டுத்திரியால் விளக்கேற்ற முன்வினைப்பாவம் தீரும். எருக்கம்
பட்டைத்திரியால் விளக்கேற்ற செல்வம் சேரும்.
*விளக்கை ஒருமுகம் ஏற்ற ஓரளவு பலனும், இரண்டுமுகம் ஏற்ற குடும்ப ஒற்றுமையும், மூன்றுமுகம் ஏற்ற புத்திரபாக்கியமும், நான்குமுகம் ஏற்ற செல்வவளமும், ஐந்து முகம் ஏற்ற சகலசவு பாக்கியமும் உண்டாகும்.
*கிழமைகளில் செவ்வாய், வெள்ளியும், திதிகளில் அமாவாசை, பவுர்ணமியும், நட்சத்திரத்தில் கார்த்திகையும், பிரதோஷமும், தமிழ் மாதப்பிறப்பு நாளும் கோயில்களில் திருவிளக்கு பூஜை நடத்த உகந்தவை.
*கிழக்குநோக்கி விளக்கேற்ற துன்பம் நீங்கும். மேற்கு நோக்கி ஏற்றுவதால் கடன்தொல்லை
அகலும். வடக்குநோக்கி ஏற்ற செல்வவளம் பெருகும். தெற்கு நோக்கி ஏற்றுவது கூடாது.
*நதிகளில் ஏற்றி வைக்கும் தீபத்தை ஜலதீபம் என்பர். காசியில் தினமும் மாலையில் ஜலதீபங்களை ஏற்றி கங்கைநதியை வழிபடுவது காண்போரை பரவசத்தில் ஆழ்த்தும்.
*திருவிளக்குபூஜை நடத்துவது புண்ணியம் மிக்கதாகும். பலர் கூடி ஒரே மனதுடன் பூஜையில் கலந்து கொள்ளும்போது, யாகம் செய்வதற்கு ஈடானதாக ஆகிறது. கூட்டுப் பிரார்த்தனையானயால் இறையருளை எளிதாகப் பெற முடியும்.

நவராத்திரியில் காளி வேடம் போடும் ஆண்கள்: திருமீயச்சூர் லலிதாம்பிகையின் நெய்க்குள தரிசனம் மிகப் பிரபலமானது. விஜயதசமி அன்று அம்பாள் கருவறை முன் 15 அடி நீளத்திற்கு வாழை இலை போட்டு, அதில் 4 அடி அகலம், 1 1/2 அடி உயரத்திற்கு சர்க்கரைப் பொங்கலைப் பரப்புவர். அதன் நடுவே குளம்போல் அமைத்து அதனை நெய்யினால் நிரப்புவர். அதன் பின்னரே கருவறையின் திரையை விலக்குவர். அலங்கரிக்கப்பட்ட அன்னையின் திருவுருவம் நெய்க்குளத்தில் அதிஅற்புதமாகப் பிரதிபலிக்கும். இந்த நெய்க்குள தரிசனத்தினைக் காண்போருக்கு மறுபிறவியே இல்லை என்பது நம்பிக்கை. முத்தாரம்மன் சமேத ஞான மூர்த்தீஸ்வரர் ஆலய தசரா, கிராமியக் கலை விழாவாகப் புகழ்பெற்றது. குலசையில் தசரா விழா பன்னிரண்டு நாட்கள் கோலாகலமாக நடக்கும். பக்தர்கள் சுமார் ஒருமண்டலம் விரதமிருந்து ஏதேனும் ஒரு தெய்வம்போல் வேடம் அணிந்து சுவாமி ஊர்வலம் வரும்போது கூடவே வருவார்கள். காளி வேடத்தை ஆண்கள் மட்டுமே புனைவார்கள். ஊர்வலத்தில் கரகாட்டம், மயிலாட்டம், மேளம், தாளம், தாரை, தப்பட்டை, ஒயிலாட்டம் என கிராமியக் கலைகளும் இடம்பெறும். ஒவ்வொரு வருடமும் இவ்விழா கலை நயத்தோடும் மிகுந்த பக்தியுடனும் சிறப்பாக நடைபெறும்.

இமயமலையில் அமைந்துள்ள குலுமணாலியில் இவ்விழா 10 நாட்கள் நடக்கும். இத்தலத்தில் அருள்புரியும் ரகுநாத் ஜீ தெய்வத்தை ஸ்ரீராமனே தன் கட்டை விரல் அளவில் செய்து கொடுத்திருப்பதாக தல வரலாறு சொல்கிறது. நவராத்திரி சமயத்தில், குலு பள்ளத்தாக்கிலுள்ள முந்நூறுக்கும் மேற்பட்ட மலை தெய்வங்கள் பக்தர்கள் புடைசூழ ஊர்வலமாக வந்து ரகுநாத் ஜீக்கு மரியாதை செய்வார்கள். விதவிதமான கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். பதினோராம் நாள் அனைவரும் வீடு திரும்புவார்கள். சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ளது ஜகதல்பூர். இத்தல நாயகி தண்டேஸ்வரி. இங்கே ஒரு நாள் அல்ல இருநாள் அல்ல எழுபத்தைந்து நாட்கள் தசரா விழாவைக் கொண்டாடுவார்கள். இப்பகுதி பழங்குடியினர் அவரவர் பிரிவுக்கு உட்பட்ட ஆலய தெய்வச் சிலைகளை அலங்கரித்து தண்டேஸ்வரி ஆலயத்திற்கு ஊர்வலமாக எடுத்து வருவார்கள். பின் தண்டேஸ்வரி முன் வைத்து பூஜித்து, மரியாதை செய்வர். அதன்பின் தினமும் கலை நிகழ்ச்சிகள் நடத்துவார்கள். இந்த எழுபத்தைந்து நாட்களும் யாரும் வீட்டில் இருக்க மாட்டார்கள். தண்டேஸ்வரி ஆலய சுற்றுப்புறத்திலேயே தங்கி சமைத்து சாப்பிட்டு கலைநிகழ்ச்சி நடத்தி தூங்கி வெட்ட வெளியிலேயே இருப்பர். எழுபத்தாறாம் நாள்தான் அவரவர் தெய்வங்களுடன் இல்லம் திரும்புவர்.

கோவை பொள்ளாச்சி சாலையில் உள்ள மகாலட்சுமி மந்திர் என்னும் அழகிய ஆலயத்தில் சரஸ்வதி, துர்கா, மகாலட்சுமி ஆகிய மூன்று தேவிகளும் கருவறையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இந்த ஆலயத்தில் நவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கும். மிகப் பெரிய அளவில் இங்கு கொலு வைக்கப்படுவதுண்டு. தினசரி இந்த கொலுவைக் காண நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். விஜயதசமி அன்று புதிதாக பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் பெற்றோருடன் இங்கு கூடுகின்றனர். அன்று அவர்களுக்கு சரஸ்வதி தேவியின் முன்பாக எழுதத் தொடங்கி வைக்கின்றனர். அன்னையின் முன்புள்ள பளிங்கு மண்டபத்தில் நூற்றுக் கணக்கான குழந்தைகள் இப்படி அமர்ந்து எழுதத் தொடங்குவது நம்மை சிலிர்க்க வைக்கும் காட்சியாகும். பொதுவாக, விஜயதசமி பல நல்ல செயல்களைத் தொடங்கவும் வியாபாரங்களைத் தொடங்கவும் நல்ல நாள். எனவே அன்னையை இந்த நவராத்திரியின் போது பல உருவங்களில் நாம் வழிபடுவதுடன் விஜயதசமியன்றும் வழிபட்டு, பாவம் தொலைத்து நலனும் அருளும் பெறுவோமாக !

வைணவ திருத்தலங்களுள் முதன்மையானதாகப் போற்றப்படும் திருவரங்கத்தில் அரங்க நாயகியாக அருள்பாலிக்கும் தாயார், நவராத்திரி நாட்களில் தினமும் மாலையில் புறப்பாடு கண்டருள்வார். புறப்பாடு ஆகும் முன் சங்கநாதம் ஒலிக்கும். பிராகாரங்களை ஒருமுறை வலம் வந்தபின் கொலு மண்டபத்தில் வீற்றிருந்து பின்னர் இரவு 8.30 மணிவாக்கில் மூலஸ்தானம் எழுந்தருள்வார். அதுவரை நாதஸ்வரக் கச்சேரிகள் நடக்கும். மூலஸ்தானத்துக்கு முன்மண்டபத்தில் அன்னை எழுந்தருளும்போது கோயில் யானை துதிக்கையை உயர்த்தி நமஸ்கரிக்கும். மௌத்ஆர்கனை வாயில் வைத்து ஒலி எழுப்பும். பின்னர் பேஷ்கார் எனப்படும் கோயில் அதிகாரிக்கு தாம்பூலம் கொடுக்கும். இதை வேடிக்கை பார்ப்பதற்காகவே குழந்தைகள், பெரியவர்கள் என்று கூட்டம் வரும். நவராத்திரி ஏழாம் நாள் தாயாரின் திருவடிகள் வெளியில் தெரியும்படி அலங்காரம் செய்யப்பட்டு புறப்பாடு ஆகும். இந்தத் திருவடி சேவையைக் காண பக்தர்கள் ஆலயத்தில் குவிந்துவிடுவார்கள். அந்த ஒரு நாள்தான் தாயாரின் திருவடிகள் தரிசனம் கிடைக்கும்.

ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள திருக்கூடலையாற்றூரில் நர்தன வல்லபேஸ்வரர் கோயிலில் இரண்டு அம்மன் சன்னதிகள் உள்ளன. இவற்றுள் ஞானசக்தி அம்மன் சன்னதியில் குங்குமமும்; பராசக்தி அம்மன் சன்னதியில் விபூதியும் பிரசாதமாகத் தரப்படுவது வித்தியாசமானது.

இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி, ஆதி சக்தி, பராசக்தி, குடிலா சக்தி என ஆறு அம்சங்களையும் ஒருங்கே கொண்டு தேவி அருள்பாலிக்கும் தலங்கள் ஒன்பது. அவை காஞ்சி காமாட்சி, ஸ்ரீசைலம் பிரமராம்பாள் தேவி, கோல்ஹாப்பூர் மகாலக்ஷ்மி, உஜ்ஜயினி காளிகாதேவி, கயா மங்களாதேவி, அலகாபாத் அலோபிதேவி, உத்தரப்பிரதேசம் விந்தியவாசினி, நேபாளம் குஹ்யகேஸ்வரி, வாரணாசி விசாலாட்சி.

சக்கரப்பள்ளி, அரிமங்கை, சூலமங்கலம், நந்தி மங்கலம், பசுபதிமங்கலம், தாழை மங்கலம், புள்ளமங்கலம் ஆகிய ஏழு ஊர்களையும் சப்தமங்கலத் தலங்கள் என்று கூறுவர். இத்தலங்களில் முறையே பிராமி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டியாக அம்பிகை பூஜை செய்ததாகக் கூறுகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் இருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் சாலையில் சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது காட்டுச் செல்லூர் என்னும் கிராமம். இங்கே உள்ள வேம்பி அம்மன் கோயிலில் சுமார் 1200 ஆண்டுகள் பழைமைவாய்ந்த துர்க்கை அம்மனின் திருமேனி உள்ளது. நின்ற கோலத்தில் காட்சி அளிக்கும் இந்த துர்க்கை அம்மன் சிற்பம் நான்கு திருக்கரங்களுடன் காணப்படுகிறது. மேல் இருகரங்களில் பிரயோகச் சக்கரமும், சங்கும், கீழ் வலக்கரத்தில் ஞான முத்திரையும் திகழ, கீழ் இடக்கரத்தை இடுப்பில் வைத்து அற்புத தரிசனம் தருகிறாள். இக்கரத்தில் கிளி ஒன்று ஏறிச் செல்வது போல் அமைந்திருப்பது சிறப்பாகும். விஜயதசமி அன்று அம்பு போடும் திருவிழா இங்கு மிக விசேஷம்.

ஒரு வருடம் கெடாத தேங்காய்: நவராத்திரி சமயத்தில் நெமிலி திரிபுரசுந்தரி கோயிலில் கலசத்தில் வைக்கப்படும் தேங்காய் அடுத்த வருடம் வரை கெடாமலிருக்கும். அந்தத் தேங்காயை மறுவருட நவராத்திரியின்போது உடைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கின்றனர்.

அம்பிகையின் வாகனத்திற்கு தேங்காய் நீர்: மும்பை மும்பாதேவி ஆலயத்தில் ரிஷப வாகனத்தில் அமர்ந்து காட்சி தருகிறாள் அம்பிகை. இங்கே நவராத்திரி ஒன்பது நாட்களும் தேங்காய் உடைத்து அதன் நீரை அம்பிகையின் வாகனத்தில் ஊற்றி விடுகின்றனர். நவராத்திரி நாட்களில் வளர்க்கப்படும் ஹோமத்தின் சாம்பலை புருவத்தில் பூசிக் கொள்கின்றனர்.

ஆண்டுக்கு இருமுறை நவராத்திரி கொண்டாடவேண்டும்: ஆண்டுக்கு இருமுறை நவராத்திரி கொண்டாடவேண்டும் என்று தேவி புராணம் கூறுகிறது. சித்திரையில் வரும் நவராத்திரிக்கு வசந்த நவராத்திரி என்றும், புரட்டாசியில் வரும் நவராத்திரிக்கு சாரதா நவராத்திரிஎன்றும் பெயர்.இவ்விரு காலங்களும் எமனுடைய கோரைப்பற்களுக்குச் சமமாகும். கோடை, குளிர் என பருவகாலம் மாறும்போது நோய்நொடிகள் பரவும். இந்த ஆபத்திலிருந்து மக்களைக் காக்கும்படி தேவியைப் பூஜிக்கவேண்டும் என்பதால் இவ்விழாவை நடத்தினர். ஆனால், கோடையில் நடந்த சித்திரை நவராத்திரி காலப்போக்கில் மறைந்து விட்டது. புரட்டாசி சாரதா நவராத்திரியே இப்போது வழக்கத்தில் உள்ளது.

அம்மன் விரும்பும் நவராத்திரி: நவராத்திரி அம்பாளுக்கு மிகவும் விருப்பமான பண்டிகை. பகலும், இரவுமாக ஒன்பது நாட்கள் பூஜை செய்வது நவராத்திரி விரதம். ஆண்டுக்கு நான்குமுறை நவராத்திரி வந்தாலும் புரட்டாசி அமாவாசைக்குப் பின் வரும் சாரதா நவராத்திரியைத்தான் இமயம் முதல் குமரி வரை கொண்டாடுகிறார்கள். நவராத்திரி விழாவை தமிழகத்தில் பொம்மைக் கொலு என்றும்; வங்கத்தில் துர்க்கா பூஜை எனவும்; வடக்கே ராம் லீலா உற்சவமாகவும், கர்நாடகா, குலசேகரப்பட்டினம், குலுமணாலி, ஜகதல்பூர் தண்டேஸ்வரி ஆலயம் போன்ற இடங்களில் தசரா பண்டிகையாகவும் கொண்டாடுகின்றனர். இவ்விழாக் கொண்டாட்டத்தில் பெண் குழந்தைகளுக்குத்தான் ஏக குஷி. ஏனெனில் அவர்களை தினம் ஒரு வேடமிட்டு தெரிந்தவர்கள் வீடுகளுக்கு கொலு பார்க்க வாருங்கள் என அழைப்பு விடுக்க அனுப்புவார்கள். நவராத்திரி கொண்டாடுவதில் குடும்பத்தில் பெரியவர் முதல் சின்னஞ்சிறுவர்கள் வரை அனைவர் பங்கும் உண்டு. இதனால் ஒற்றுமை, மரியாதை, பக்தி உணர்வு அதிகமாகும். கலைத்திறன், கற்பனைத்திறன், பொறுமை, சுறுசுறுப்பு, கைவேலைத்திறன், பாட்டு, நடனத் திறன்களும் வெளிப்படும். நிவேதனப் பொருட்கள் விதம் விதமாய் செய்வதால் சமையல் கலை போற்றப்படுகிறது. விதவிதமான வேடங்கள் போடும்போது ஒப்பனைத்திறன் ஒளிர்கிறது. இவை அனைத்தினாலும் மன மகிழ்ச்சியும், பாராட்டும் கிடைக்கும். பூஜை மகிமையால் மனை சிறக்கும்; மகாசக்தி அருளால் மங்களம் பெருகும்; நினைத்தது நிறைவேறும். எனவே தான் நவராத்திரி சுபராத்திரி எனப்படுகிறது.

நவராத்திரி பூஜையை தெய்வங்களும், தேவர்களும்கூட செய்து பலன் பெற்றுள்ளனர். நாரதர் அறிவுரைப்படி ராமர் கடைப்பிடித்து ராவணனை அழித்து சீதையை மீட்டு வந்தார். கண்ணபிரான், சியமந்தக மணி காரணமாக அடைந்த அபவாதம் இப்பூஜை செய்ததால் நீங்கியது. பஞ்சபாண்டவர்கள் பாரதப் போரில் வென்றதும் இந்த பூஜை செய்ததால்தான். தீய சக்தி மேலோங்கும்போது காத்திட வேண்டினால் அம்பாள் சண்டிகையாக ஒன்பது கோடி வடிவங்கள் எடுத்து தீமையை அழித்து நன்மை செய்வாள் என தேவி மகாத்மியம் கூறுகிறது. நவராத்திரியில் 9 நாட்களும் பூஜை விரதம் அனுஷ்டிக்க வேண்டும். இயலாதவர்கள் அஷ்டமி நாளில் மட்டுமாவது விரதம் இருந்து பூஜை செய்யலாம். விஜயதசமி தினத்தில் அம்பிகை அசுரர்களை அழித்து வெற்றிவாகை சூடினாள். ஆணவம் - சக்தியாலும், வறுமை-செல்வத்தினாலும், அறியாமை-ஞானத்தினாலும் வெற்றி கொள்ளப்பட்ட தினம் என்பதால் வீரம், செல்வம், கல்விக்கு உரிய தேவியரான துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என முப்பெரும் தேவியர்க்கும் உரியதாக இதை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். அன்றைய தினம் புதிதாகத் தொடங்கும் எல்லாக் காரியங்களும் எளிதாக வசமாகும் என்பது ஐதீகம். அன்று அபிராமி அந்தாதியினைப் படிப்பது மிகச் சிறந்த பலன் தரும்.

மூன்று சக்தியை ஒன்றாக வழிபடும் நவராத்திரி: நவராத்திரி நாட்களில் அம்பிகையை வெவ்வேறு வடிவங்களில் அலங்கரித்து வழிபடுவர். அம்பிகையை முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும்; அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியின் அம்சமாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் முப்பெரும் சக்தியரை வழிபடுவார்கள். நவராத்திரியின் முதல் நாள் தேவியான மகேஸ்வரி பாலா, மது கைடபர் அழிவுக்குக் காரணமான தேவி. இரண்டாம் நாள் வழிபடப்படும் கவுமாரி, குமாரியாகப் போற்றப்படுகிறாள். அவளே ராஜ ராஜேஸ்வரியாகவும் ஆராதிக்கப்படுகிறாள். மூன்றாவது நாளுக்கு உரியவாராகி, கன்யா கல்யாணி என்று அழைக்கப்படுகிறாள். நான்காம் நாளில் அருள்பவள், மகாலட்சுமி. இவள் ரோகிணி என்று அழைக்கப்படுகிறாள். ஐந்தாம் நாள் வைஷ்ணவியாகவும் மோகினியாகவும் அலங்கரிப்பர். ஆறாவது நாளுக்குரிய தேவிவடிவம். இந்திராணி. அன்று சர்ப ராஜ ஆசனத்தில் தேவி அமர்ந்திருக்கும் கோலத்தில் பூஜை செய்வது வழக்கம். ஏழாம் நாள், தேவி மகாசரஸ்வதி, சுமங்கலி என அழைக்கப்படுகிறாள். எட்டாவது நாள் தேவியானவள் நரசிம்மிதருமி. நரசிம்மி வடிவின் சினம் தணிந்த கோலம் இது. அன்று அன்னை அன்பே உருவாக அருள்பாலிக்கிறாள். ஒன்பதாம் நாள் அம்பிகை, சாமுண்டி மாதா, அம்பு, அங்குசம் தரித்த லலிதா பரமேஸ்வரியாக அன்னையை வழிபடுவது வழக்கம்.பத்தாம் நாள் அசுரர்களை அழித்து அம்பிகை பெற்ற வெற்றியைக் குறிக்கும் விஜயதசமி. அன்று அன்னை வெற்றித் திருமகளாக அலங்கரிக்கப்பட்டு ஆராதிக்கப்படுகிறாள். இந்த வடிவங்களில் தேவியைத் தரிசித்து வழிபடுவதால் நவநிதிகளும் பெற்று, நீடுழி வாழ்வர் என்பது ஐதிகம்.


Offline Anu

Re: நவராத்திரி வழிபாடு!
« Reply #5 on: October 19, 2012, 12:33:15 PM »
நவராத்திரியில் பாட வேண்டிய பாடல்!

 
நவராத்திரி நேரத்தில் அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் எனச் சொல்ல நேரமில்லாதவர்கள் இந்த சிறிய நாமாவளிகளைச் சொல்லலாம். மூன்று தேவியருக்கும் தனித்தனியாக உள்ள இந்த பதினெட்டு நாமாவளிகளும் மிகுந்த சக்தி வாய்ந்தவை.

துர்க்கா தேவி

ஓம் துர்க்காயை நம
ஓம் மகா காள்யை நம
ஓம் மங்களாயை நம
ஓம் அம்பிகாயை நம
ஓம் ஈஸ்வர்யை நம
ஓம் சிவாயை நம
ஓம் க்ஷமாயை நம
ஓம் கௌமார்யை நம
ஓம் உமாயை நம
ஓம் மகாகௌர்யை நம
ஓம் வைஷ்ணவ்யை நம
ஓம் தயாயை நம
ஓம் ஸ்கந்த மாத்ரே நம
ஓம் ஜகன் மாத்ரே நம
ஓம் மகிஷ மர்தின்யை நம
ஓம் சிம்ஹ வாஹின்யை நம
ஓம் மாகேஸ்வர்யை நம
ஓம் திரிபுவனேஸ்வர்யை நம

லெட்சுமி ஸ்ரீதேவி

ஓம் மகாலக்ஷ்ம்யை நம
ஓம் வரலெக்ஷ்ம்யை நம
ஓம் இந்த்ராயை நம
ஓம் சந்த்ரவதனாயை நம
ஓம் சுந்தர்யை நம
ஓம் சுபாயை நம
ஓம் ரமாயை நம
ஓம் ப்ரபாயை நம
ஓம் பத்மாயை நம
ஓம் பத்மப்ரியாயை நம
ஓம் பத்மநாபப் ப்ரியாயை நம
ஓம் சர்வ மங்களாயை நம
ஓம் பீதாம்பரதாரிண்யை நம
ஓம் அம்ருதாயை நம
ஓம் ஹரிண்யை நம
ஓம் ஹேமமாலின்யை நம
ஓம் சுபப்ரதாயை நம
ஓம் நாராயணப் பிரியாயை நம

சரஸ்வதி தேவி

ஓம் சரஸ்வத்யை நம
ஓம் சாவித்ர்யை நம
ஓம் சாஸ்த்ர ரூபிண்யை நம
ஓம் ஸ்வேதா நநாயை நம
ஓம் ஸுரவந்திதாயை நம
ஓம் வரப்ரதாயை நம
ஓம் வாக்தேவ்யை நம
ஓம் விமலாயை நம
ஓம் வித்யாயை நம
ஓம் ஹம்ஸ வாகனாயை நம
ஓம் மகா பலாயை நம
ஓம் புஸ்தகப்ருதே நம
ஓம் பாஷா ரூபிண்யை நம
ஓம் அக்ஷர ரூபிண்யை நம
ஓம் கலாதராயை நம
ஓம் சித்ரகந்தாயை நம
ஓம் பாரத்யை நம
ஓம் ஞானமுத்ராயை நம

நவராத்திரி ஸ்லோகம்

கிராõஹுர் தேவீம் த்ருஹிண க்ருஹிணீ மாகமவிதோ
ஹரே: பத்நீம் பத்மாம் ஹரஸ ஹசரீ மத்ரித நயாம்!
துரீயா காபி த்வம் துரதிகம் நிஸ்ஸீம மஹிமா
மஹாமாயா விச்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம மஹிஷி!!
பொருள்: இறைவனோடு இணைந்திருக்கும் சக்தியே! வேதங்களின் உட்பொருளை உணர்ந்தவர்கள் உன்னை சரஸ்வதி என்றும்,
லட்சுமி என்றும், சிவனின் பத்தினியாகிய பார்வதி என்றும் பலவிதமாகக் கூறுகிறார்கள். மனதிற்கும் வாக்கிற்கும் அப்பாற்பட்டவளே! எல்லையற்ற மகிமை கொண்டவளே! மகாமாயாவாக இருந்து
உலகை இயக்கச் செய்து பிரமிக்க வைப்பவளே! அருள்புரிவாயாக.

துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி வழிபாடு

அம்பாள் (துர்க்கை)

காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி
காசி விசாலாட்சி கருணாம்பிகையே!
தருணம் இதுவே தயை புரிவாயம்மா!
பொன் பொருள் எல்லாம்
வழங்கி எம்மை வாழ்த்திடுவாயம்மா!
ஏன் என்று கேட்டு என் பசி தீர்ப்பாய்
என் அன்னை நீயே அம்மா!
மங்களம் வழங்கிடும் மகாசக்தியே!
மங்கலத் தாயே நீ வருவாயே!
என்னுயிர் தேவியே! எங்கும் நிறைந்தவளே!
எங்கள் குலவிளக்கே! நீ வருவாயே!
பயிர்களில் உள்ள பசுமையில்
கண்டேன் பரமேஸ்வரி உனையே!
சரண் உனை அடைந்தேன்
சங்கரி தாயே, சக்தி தேவி நீயே!
அரண் எனக் காப்பாய்
அருகினில் வருவாய் அகிலாண்டேஸ்வரியே!

லட்சுமி

செல்வத் திருமகளே! மோகனவல்லியே!
எல்லாரும் கொண்டாடும் வேதவல்லியே!
எண் கரங்களில் சங்கு சக்கரம்
வில்லும் அம்பும் தாமரை
மின்னும் கரங்களில் நிறைகுடம்
தளிர்த் தாம்பூலம் அணி சியாமளையே!
வரத முத்திரை காட்டியே
பொருள் வழங்கும் அன்னையே!
சிரத்தினில் மணி மகுடம்
தாங்கிடும் சிந்தாமணியே!
பல வரம் வழங்கிடும் ரமாமணியே!
வரதராஜ சிகாமணியே!
தாயே! தனலட்சுமியே!
சகல வளமும் தந்திடுவாய்

சரஸ்வதி

கலைவாணி நின் கருணை தேன்மழையே
விளையாடும் என் நாவில் செந்தமிழே
அலங்கார தேவதையே வனிதாமணி
இசைக்கலை யாவும் தந்தருள்வாய் கலைமாமணி!
மரகத வளைக்கரங்கள் மாணிக்க வீணை தாங்கும்
அருள் ஞானக்கரம் ஒன்றில் ஜெபமாலை விளங்கும்
ஸ்ருதியோடு லயபாவ ஸ்வரராக ஞானம்
சரஸ்வதி மாதா உன் வீணையில் எழும் நாதம்!
வீணையில் எழும் நாதம் தேவி உன் சுப்ரபாதம்
வேணுவில் வரும் நாதம் வாணி உன் சக்ரபாதம்
வானகம் வையகம் உன் புகழ் பாடும்.

நவராத்திரி பாடல்

மங்கள ரூபிணி மதியொளி சூலினி மன்மத பாணியளே
சங்கடம் நீங்கிட சடுதியில் வந்திடும் சங்கரி சவுந்தரியே
கங்கண பாணியன் கனிமுகம் கண்டநல் கற்பகக் காமினியே
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்கநிவாரணி காமாட்சி
கான் உறுமலர் எனக் கதிர் ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாள்
தான்உறு தவஒளி தார்ஒளிமதி ஒளி தாங்கியே வீசிடுவாள்
மான்உறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
சங்கரி சவுந்தரி சதுர்முகன் போற்றிட சபையினில் வந்தவளே
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே
எம்குலம் தழைத்திட எழில் வடிவுடனே எழுந்த நல் துர்க்கையளே
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
தணதண தந்தண நவில்ஒளி முழங்கிட தண்மதி நீ வருவாய்
கணகண கங்கண கதிர்ஒளி வீசிட கண்மணி நீ வருவாய்
பணபண பம்பண பறைஒலி கூவிட பண்மணி நீ வருவாய்
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே
கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனைக் கொடுத்த நல் குமரியளே
சங்கடம் தீர்த்திட சமர் அது செய்த நல் சக்தி எனும் மாயே
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
எண்ணியபடி நீ அருளிட வருவாய் எம் குலதேவியளே
பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய்
கண்ணொளி அதனால் கருணையே காட்டி கவலைகள் தீர்ப்பவளே
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
இடர் தருதொல்லை இனிமேல் இல்லை என்று நீ சொல்லிடுவாய்
சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுவாய்
படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
ஜெய ஜெய பாலா சாமுண்டேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய துர்க்கா ஸ்ரீபரமேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி.


Offline Anu

Re: நவராத்திரி வழிபாடு!
« Reply #6 on: October 19, 2012, 12:34:31 PM »
நவராத்திரியில் கொலு வைப்பது ஏன்?

 
கொலு வைப்பவர்கள் புரட்டாசி அமாவாசை நாளில் (மகாளய அமாவாசை) கொலு வைத்து விட வேண்டும். கொலு என்றால் அழகு. கொலு வைக்கும் முன் வீட்டை சுத்தமாக்கி, அழகிய கோலங்கள் போடவேண்டும். ரங்கோலி இட்டால் எடுப்பாக இருக்கும். மேடை அமைத்து பொம்மைகளை வரிசைப்படுத்த வேண்டும்.

கொலு பொம்மை தத்துவம் மனிதன், குடும்ப வாழ்விலும், ஆன்மிக வாழ்விலும் படிப்படியாக முன்னேறவேண்டும் என்பதை நவராத்திரியின் கொலு படி தத்துவம் உணர்த்துகிறது. கொலுவில் ஒன்பது படிகள் அமைப்பது சிறப்பு. முதல் படியில் புல், செடி, கொடி ஆகிய தாவர பொம்மைகளை வைக்க வேண்டும். இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கையை இது குறிக்கிறது. இரண்டாம் படியில் சங்கால் செய்த பொம்மைகளை வைக்கலாம். நத்தை பொம்மை வைப்பது நலம் பயக்கும். நத்தை போல மெதுவாக நிதானமாக சென்று உயர் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று உறுதி கொள்வதே இதன் பொருள். மூன்றாம் படியில் எறும்பு, கரையான் புற்று பொம்மைகளை வைக்க வேண்டும். எறும்பைப் போல சுறுசுறுப்பு, எத்தனை முறை தகர்த்தாலும் கரையான் திரும்பத் திரும்ப புற்றைக் கட்டுவது போன்ற திட மனப்பான்மை வேண்டி இந்த பொம்மைகளை அடுக்க வேண்டும். நான்காம் படியில் நண்டு, வண்டு பொம்மைகள்  இடம்பெற வேண்டும். இவற்றின் குணம் ஆழமாக ஊடுருவி பார்ப்பது. எந்த விஷயத்தையும் ஆழமாக சிந்தித்து செயலாற்றுவதை இந்த பொம்மைகள் குறிக்கும்.

ஐந்தாம் படியில் மிருகம், பறவை பொம்மைகள் வைக்க வேண்டும். மிருக குணத்தை விட வேண்டும். பறவை போல் கூடி வாழ வேண்டும் என்பதே இதன் பொருள். ஆறாம்படியில் மனித பொம்மை வைக்க வேண்டும். வாழ்க்கையில் மேற்கண்ட ஐந்து படிகளில் உள்ளது போன்ற குணங்களை கடைபிடித்தால் முழு மனிதன் என்ற அந்தஸ்தைப் பெறலாம். ஏழாம்படியில் முனிவர்கள், மகான்கள் பொம்மை வைக்க வேண்டும். மனிதன் உயரிய பக்தி மார்க்கத்தை கடைபிடித்தால் மகான்கள் ஆகலாம் என்பதே இதன் பொருள். எட்டாம்படியில் தேவர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், நவக்கிரகங்களின் பொம்மைகளை வைக்க வேண்டும். மகான் நிலையை அடையும் மனிதன் தேவர் நிலைக்கு உயர்வதை இது காட்டுகிறது. ஒன்பதாம் படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் தங்கள் தேவியரான சரஸ்வதி, லட்சுமி, பார்வதியுடன் இருக்க வேண்டும். ஆதி பராசக்தி சிலையை நடுவில் பெரிய அளவில் வைக்க வேண்டும். உயிர்கள் தங்கள் நிலையை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி, தெய்வமாக வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்தவே கொலு உருவானது. நம் வீட்டு குழந்தைகளிடம் கொலு பொம்மைகளை காட்டி மகிழ்ச்சிப்படுத்துவதுடன், அவர்களின் வயதுக்கேற்ற முறையில், இந்த தத்துவார்த்தங்களையும் எளிதில் புரியுமளவு கற்றுத்தர வேண்டும்.

கொலுமேடைக்கு பூஜை செய்யும் முறை: நூல் சுற்றிய கும்பத்தில் (குடம்) பச்சரிசி, மஞ்சள் கிழங்கு, குங்குமம், ஒரு ரூபாய் காசு, வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை ஆகியவற்றை போட வேண்டும். குடுமியுடன் கூடிய மஞ்சள் தடவிய தேங்காயில் சந்தனம், குங்குமம் வைத்து, மாலை சூட்டி அதன் மீது வைக்க வேண்டும். சுற்றிலும் மாவிலைகளை அடுக்க வேண்டும். கொலுமேடை முன்பு மேஜையிட்டு அதில் கும்பத்தை வைக்க வேண்டும். அதை அம்பாளாக நினைத்து, தினமும் காலை, மாலையில் பூஜை செய்ய வேண்டும்.


Offline Anu

Re: நவராத்திரி வழிபாடு!
« Reply #7 on: October 19, 2012, 12:35:26 PM »
நவராத்திரி கொண்டாடுவது எப்படி?

 
நவராத்திரி விரதம் முழுக்க முழுக்க பெண்மைக்கு உரியது. "நவம் என்ற சொல்லுக்கு "ஒன்பது என்றும், "புதியது என்றும் பொருள் உண்டு. மீண்டும் மீண்டும் புதிது புதிதாக இந்த விழா ஆண்டுதோறும் மாற்றங்களுடன் கொண்டாடப்படும். இதை அனுசரித்தே முன்னோர்கள் நவராத்திரி என்று பெயர் சூட்டியுள்ளனர்.  ஒருநாளில், பகல் பாதி சிவபிரானின் அம்சம். இரவு பாதி அம்பாளின் அம்சம். பகலும் இரவும் இணையாவிட்டால் நாள் என்பது இல்லை. இதில் தேவியைக் கொண்டாடுவதற்கு ஏற்ற நேரம் இரவு. பகலில் உயிர்த்தெழுந்த உயிர்களை, இரவு வடிவான தேவி அமைதியில் ஆழ்த்தி, (உறங்கச்செய்து) தாலாட்டுகிறாள். உயிர்கள் அனைத்தும் உறங்கும் காலத்தில், தான் உறங்காமல் இருந்து அவற்றைக் காப்பாற்றுகிறாள். வேதத்தில், "சகல பூதங்களையும் பெற்றவளே! பகவதியே! கருமையானவளே! இரவானவளே! உன்னை வணங்குகின்றேன் என அம்பாளைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. வேதங்கள் காட்டிய வழியில் நாமும் இரவு காலத்தில் அவளைக் கொண்டாடுகிறோம்.
 
*நவராத்திரி நாட்களில் குடும்பத்தினர் அனைவரும் அதிகாலையிலேயே நீராடி கூட்டுபிரார்த்தனை செய்யுங்கள். * பூஜையறையைச் சுத்தம் செய்து, கொலு மேடை, பூஜையறையில் "லட்சுமித்தாயே! உன்னருளால் உலக உயிர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்று  பிரார்த்தித்து ஐந்துமுகம் விளக்கேற்றி, சாம்பிராணி, பத்தி ஏற்றி வையுங்கள். இதனால் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கும்.
*  குழந்தைகளுக்கு தெய்வீக விஷயங்களைக் கற்றுக் கொடுங்கள். அபிராமி அந்தாதியில் ஒரு பாடலை மனப்பாடம் செய்யச் சொல்லுங்கள்.
* கொலு பார்க்க வரும் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், மலர்ச்சரம் கொடுத்து வழியனுப்புங்கள். . இதனால் நம் இல்லம் செழிக்கும்.
*  பசுவிற்கு அருகம்புல், அகத்திக்கீரை கொடுத்து, மும்முறை வலம் வந்து வழிபட்டால் மூன்று தேவியை வழிபட்ட பலன்.
*  ஆதரவற்ற குழந்தைகளுக்கு, முதியோர்களுக்கு உதவி செய்யுங்கள். இதனால் அம்மன் மனம் குளிர்ந்து வேண்ம் வரம் தருவாள்.
* அம்மன் கோயில்களில் விளக்கேற்றுங்கள். மாலையில் விளக்குபூஜை நடத்துங்கள்.  கன்னிப் பெண்கள் துர்க்கை சந்நிதியில் விளக்கேற்றி வழிபட்டால் விரைவில் திருமணம்.

ஒரு நாள் கும்பிட்டா...ஒன்பது நாள் கும்பிட்ட பலன்: நவராத்திரி ஒன்பது நாட்களிலும் பூஜை நடத்த இயலாவிட்டால் அஷ்டமி திதிவரும் தினத்தன்று மட்டுமாவது அவசியம் பூஜிக்க வேண்டும். ஏனென்றால் தட்சனின் யாகத்தை அழித்த பத்ரகாளியானவள் அநேககோடி யோகினிகளோடு தோன்றிய தினமாகையால் அன்று பூஜைகளை விசேஷமாகச் செய்ய வேண்டும். அதே அஷ்டமி தினத்தன்றுதான் மகாமாயையான துர்க்கை நந்தகோபன் இல்லத்தில் அவதரித்தாள். ஆகவே துர்க்காஷ்டமி மிகுந்த விசேஷமுடையது.

சுண்டல் நிவேதனம்: நவராத்திரியில், அம்பாளுக்கு  விதவிதமான சுண்டல், பாயாச வகைகள் நிவேதனம் செய்யப்படுகிறது. அறிவியல் ரீதியாகவும் இதற்கு காரணம் உண்டு.. தேவர்களுக்கு சிவன், விஷ்ணு அமிர்தம் தந்து, அவர்களை காத்தது போல, பூமி உயிர்வாழ "மழை என்னும் அமிர்தத்தைத் தருகிறார்கள். இதனால் பூமி "சக்தி பெறுகிறது. அந்த சக்தி எனும் பெண்ணுக்கு, பூமியில் விளைந்த விதவிதமான தானியங்கள் பக்குவப்படுத்தப்பட்டு நிவேதனம் செய்யப்பட்டது. அதில் சுண்டல் பிரதான இடம் பெற்றது. நவராத்திரி காலமான புரட்டாசி, ஐப்பசியில் அடைமழை ஏற்படும். இதனால் தோல்நோய் போன்றவை அதிகமாகும். இதைப் போக்கும் சக்தி சுண்டலுக்கு உண்டு.


Offline Anu

Re: நவராத்திரி வழிபாடு!
« Reply #8 on: October 19, 2012, 12:36:40 PM »
நவராத்திரி முதல் நாள்: வழிபடும் முறை!!

 
நவராத்திரியின் முதல் நாளில் (அக்.16ல்) அம்பாளுக்கு "மகேஸ்வரி பாலா என்று திருநாமம் சூட்டி வணங்க வேண்டும். மது, கைடபர் ஆகிய அசுரர்களின் அழிவுக்கு காரணமானவள் இவள். சாமுண்டியாக அலங்காரம் செய்ய வேண்டும். மதுரை மீனாட்சி நாளை ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சி தருகிறாள். அண்டசராசரத்துக்கும் அவள் தலைவி. இதை அண்டம்+ சரம்+அசரம் என்று பிரிக்க வேண்டும். "அண்டம் என்றால் "உலகம். "சரம் என்றால் "அசைகின்ற பொருட்கள். "அசரம் என்றால் "அசையாத பொருட்கள். ஆம்...அன்னை ராஜ ராஜேஸ்வரி, இந்த உலகிலுள்ள அசைகின்ற, அசையாப் பொருட்களுக்கெல்லாம் அனைத்துக்கும் அதிபதியாக இருந்து அருளாட்சி நடத்துவதைக் குறிக்கும் வகையில் இந்த அலங்காரம் செய்யப்படுகிறது.

நாளைய நைவேத்யம்: சர்க்கரைப் பொங்கல்
தூவ வேண்டிய மலர்கள்: மல்லிகை, வில்வம்

சொல்ல வேண்டிய ஸ்லோகம்:

அம்பா சாம்பவி சந்திரமவுலிரமலா அபர்ணா உமா பார்வதீ
காளீ ஹமவதீ சிவா த்ரிநயனீ காத்யாயினீ பைரவீ!
ஸாவித்ரீ நயௌவனா சுபகரீ ஸாம்ராஜ்ய லக்ஷ்மீப்ரதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ!


Offline Anu

Re: நவராத்திரி வழிபாடு!
« Reply #9 on: October 19, 2012, 12:37:40 PM »
நவராத்திரி இரண்டாம் நாள்: வழிபடும் முறை!

அம்பிகையை நாளை(அக்.17ல்) மயில் வாகனம், சேவல் கொடியுடன் அலங்கரிக்க வேண்டும். இவளை "கவுமாரி என்றும், "குமார கண நாதம்பா என்றும் அழைப்பர். பக்தர்களின் பாவங்களைப் போக்கி, தைரியத்தை அருள்பவள் இவள். நாளை மதுரை மீனாட்சி முருகனுக்கு வேல் வழங்குதல் கோலத்தில் காட்சி தருகிறாள். சூரபத்மன் தேவர்களுக்கு பல கொடுமைகளைச் செய்தான். அவர்கள், சிவபெருமானின் உதவியை நாடினர். அவருடைய நெற்றிக்கண்களில் ஆறுதீப்பொறிகள் தோன்றின. அவை சரவணப்பொய்கையில் ஆறுதாமரைப் பூக்களில், ஆறுகுழந்தைகளாக மாறியது. கார்த்திகைப்பெண்கள் அவர்களை வளர்த்தனர். பார்வதி அறுவரையும் ஒருவராக்கி "கந்தன் என்று பெயரிட்டாள். ஜகன்மாதாவான பராசக்தி தன் சக்தி அனைத்தையும் ஒன்று திரட்டி வேல் ஆக்கினாள். "வேல் என்றால் "வெற்றி . அந்த சக்திவேலாயுதத்தை முருகனுக்கு வழங்கினாள். முருகனுக்குரிய அடையாளமாகத் திகழும் வெற்றிவேலை, அன் னை மீனாட்சி வழங்குவதைக் கண்டால் வாழ்வில் வெற்றி வந்து சேரும்.

நாளைய நைவேத்யம்: தயிர்சாதம்
தூவவேண்டிய மலர்: முல்லை

பாட வேண்டிய பாடல்:

இல்லாமை சொல்லி ஒருவர் தம் பால்சென்று இழிவுபட்டு நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர் தம் பால் ஒரு காலத்திலும் செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.


Offline Anu

Re: நவராத்திரி வழிபாடு!
« Reply #10 on: October 19, 2012, 12:38:41 PM »
நவராத்திரி மூன்றாம் நாள்: எவ்வாறு வழிபட வேண்டும்?

 
நவராத்திரி மூன்றாம் நாளில் (அக்.18ல்) அம்பிகையை வராஹியாக அலங்கரிக்க வேண்டும். பன்றிமுகத்துடன் கூடியவளாக விளங்கும் இவளை வழிபட்டால் பகைவர் பயம் நீங்கும். மதுரை மீனாட்சியம்மன் நாளை தட்சிணாமூர்த்தி கோலத்தில் காட்சியளிக்கிறாள். தென்முகக்கடவுளான தட்சிணாமூர்த்தி சிவன்கோயில்களில், கல்லால மரத்தின் கீழ் இருப்பார். இவர் முன்னால் சனகர்,சனந்தனர், சனதானர், சனத்குமாரர் என்னும் நான்கு சீடர்கள் இருப்பர். அவர்களுக்கு உபதேசம் செய்கிறார் தட்சிணாமூர்த்தி.

இவருடைய வலக்கை சின்முத்திரை காட்டியபடி இருக்கும். வலக்கைப் பெருவிரல் பரமாத்மாவாகிய கடவுளையும், ஆள்காட்டிவிரல் ஜீவாத்மாவாகிய உயிரையும் குறிக்கும். மற்ற விரல்களான நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல் ஆகியவை ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றைக் குறிக்கும். ஆணவம் என்பது அகங்காரம். கன்மம் என்பது உயிர்கள் செய்யும் நல்வினை, தீவினைப்பயன்கள். மாயை என்பது இவ்வுலக வாழ்வு உண்மை என எண்ணும் நிலை. இம்மூன்றையும் விட்டு, ஒருவன் நீங்கினால் மட்டுமே கடவுளோடு ஐக்கியமாக முடியும் என்பதே சின்முத்திரை தத்துவம். அம்பாளைத் தட்சிணாமூர்த்தியாக உபதேசிக்கும் கோலத்தை காண்பவர்களுக்கு அஞ்ஞானம் அகலும். கடவுளின் திருவடியே நிலையானது என்ற மெய்ஞானம் உண்டாகும்.

நாளைய நைவேத்யம்: எலுமிச்சை சாதம்
தூவவேண்டிய மலர்கள்: மல்லிகை, செவ்வந்தி.

பாட வேண்டிய பாடல்:

என்குறை தீர நின்று ஏத்துகின்றேன், இனியான் பிறக்கின்
நின்குறை யேயன்றி யார்குறை காண்! இருநீள் விசும்பின்
மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியளாய்
தன்குறை தீரஎங் கோன்சடை மேல் வைத்த தாமரையே.


Offline Anu

Re: நவராத்திரி வழிபாடு!
« Reply #11 on: October 19, 2012, 12:39:28 PM »
நவராத்திரி மூன்றாம் நாள்: எவ்வாறு வழிபட வேண்டும்?

 
நவராத்திரி மூன்றாம் நாளில் (அக்.18ல்) அம்பிகையை வராஹியாக அலங்கரிக்க வேண்டும். பன்றிமுகத்துடன் கூடியவளாக விளங்கும் இவளை வழிபட்டால் பகைவர் பயம் நீங்கும். மதுரை மீனாட்சியம்மன் நாளை தட்சிணாமூர்த்தி கோலத்தில் காட்சியளிக்கிறாள். தென்முகக்கடவுளான தட்சிணாமூர்த்தி சிவன்கோயில்களில், கல்லால மரத்தின் கீழ் இருப்பார். இவர் முன்னால் சனகர்,சனந்தனர், சனதானர், சனத்குமாரர் என்னும் நான்கு சீடர்கள் இருப்பர். அவர்களுக்கு உபதேசம் செய்கிறார் தட்சிணாமூர்த்தி.

இவருடைய வலக்கை சின்முத்திரை காட்டியபடி இருக்கும். வலக்கைப் பெருவிரல் பரமாத்மாவாகிய கடவுளையும், ஆள்காட்டிவிரல் ஜீவாத்மாவாகிய உயிரையும் குறிக்கும். மற்ற விரல்களான நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல் ஆகியவை ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றைக் குறிக்கும். ஆணவம் என்பது அகங்காரம். கன்மம் என்பது உயிர்கள் செய்யும் நல்வினை, தீவினைப்பயன்கள். மாயை என்பது இவ்வுலக வாழ்வு உண்மை என எண்ணும் நிலை. இம்மூன்றையும் விட்டு, ஒருவன் நீங்கினால் மட்டுமே கடவுளோடு ஐக்கியமாக முடியும் என்பதே சின்முத்திரை தத்துவம். அம்பாளைத் தட்சிணாமூர்த்தியாக உபதேசிக்கும் கோலத்தை காண்பவர்களுக்கு அஞ்ஞானம் அகலும். கடவுளின் திருவடியே நிலையானது என்ற மெய்ஞானம் உண்டாகும்.

நாளைய நைவேத்யம்: எலுமிச்சை சாதம்
தூவவேண்டிய மலர்கள்: மல்லிகை, செவ்வந்தி.

பாட வேண்டிய பாடல்:

என்குறை தீர நின்று ஏத்துகின்றேன், இனியான் பிறக்கின்
நின்குறை யேயன்றி யார்குறை காண்! இருநீள் விசும்பின்
மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியளாய்
தன்குறை தீரஎங் கோன்சடை மேல் வைத்த தாமரையே.