தமிழ்ப் பூங்கா > காலக்கண்ணாடி

~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~

(1/19) > >>

MysteRy:
லூயி பிரெய்ல் - வரலாற்று நாயகர்!

இரவும் பகலும், இருளும் ஒளியும் மாறி மாறி வருவது இயற்கையின் நியதி. துருவ பிரதேசங்களில்கூட ஆறுமாத இருளுக்குப்பின் ஆறுமாதம் ஒளி பிறக்கும். ஆனால் எப்போதுமே இருள் சூழ்ந்த ஒரு நிலையை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? நம் கற்பனைக்குகூட எட்டாத ஓர் இருள் சூழ்ந்த உலகம் இருக்கிறது அதுதான் கண்பார்வையற்றோரின் உலகம். ஐம்புலங்களில் ஆக விலைமதிக்க முடியாதது 'கண்'தான். கண் பார்வையிழந்தவர்கள் ஒன்றுமே செய்ய முடியாத முடங்கி கிடந்த காலம் உண்டு. அவர்களின் வாழ்வில் விடிவெள்ளியாய் உதித்து அவர்கள் எழுத, படிக்க ஓர் எளியமுறையை வகுத்துத்தந்த ஓர் அற்புத வரலாற்று மாந்தரைத்தான் சந்திக்கவிருக்கிறோம். அவர்தான் 'பிரெய்ல்' எனப்படும் எழுத்துமுறையை உருவாக்கித்தந்த லூயி பிரெய்ல் (Louis Braille).



1809-ஆம் ஆண்டு ஜனவரி 4-ஆம் தேதி குடும்பத்தில் நான்காவது பிள்ளையாக பிரான்சில் பிறந்தார் லூயி பிரெய்ல். அவரது தந்தை ஓர் தோல் வியாபாரி பலவித தோல்களை வெட்டி கைப்பைகள், பணப்பைகள், காலணிகள் போன்றவற்றை தைத்து விற்பனை செய்வார் அதுதான் அவர்களது குடும்பத்தொழில். சிறுவயதிலிருந்தே மிகவும் சுட்டியாகவும், துறுதுறுவென்றும் இருந்த பிரெயிலுக்கு தந்தையைப் பார்த்து அவரைப்போலவே தோலை வெட்டி தைத்து விளையாடுவதில் அலாதி பிரியம். அவருக்கு மூன்றே வயதானபோது ஒருநாள் அந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது. அப்பா இல்லாத சமயம் அவர் கத்தி ஊசியுடன் தோல் தைத்து விளையாடிக்கொண்டிருந்தார். திடீரென்று அலறல் சத்தம் சமயலறையிலிருந்து ஓடிவந்து பார்த்த அம்மாவின் இதயத்துடிப்பு சில வினாடிகள் அடங்கிப்போனது. ஒரு கண்ணில் இரத்தம் கொட்ட வலி தாங்க முடியாமல் துடித்துக்கதறினான் பிஞ்சு பாலகன் பிரெய்ல்.

தோலில் துளைபோட உதவும் கூர்மையான ஊசிபோன்ற கருவி அவன் கண்ணை பதம் பார்த்துவிட்டது என்பதை உணர்ந்த அந்த தாய் பதறியடித்துக்கொண்டு பிரெயிலை மருத்துவமணைக்கு கொண்டு சென்றார். பிரெயிலை பரிசோதித்த மருத்துவரைப் பார்த்துக்கொண்டே பிரார்த்தனையில் மூழ்கினார் அந்த தாய். பிரெய்ல் ஒரு கண்ணில் பார்வை இழக்கப்போகிறான் என்ற செய்தியை மருத்துவரின் கவலை தோய்ந்த கண்கள் அந்த தாய்க்கு உணர்த்தின. ஒரு கண்ணில் கட்டுப்போட்டு வீட்டுக்கு அனுப்பினார் மருத்துவர். பிரெயிலுக்கு இருள் என்றாலே பயம் இரவில் தூங்கும்போதுகூட மெழுகுவர்த்தி ஒளியில்தான் தூங்குவான். சில நாட்களுக்கு பிறகு ஒருமுறை "அம்மா இருட்டிவிட்டது ஏன் இன்னும் மெழுகுவர்த்தி ஏற்றவில்லை?" என்று கேட்டான் பிரெய்ல் தாயின் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது ஏனெனில் அப்போது பட்டப்பகல் நேரம்.

முதல் கண்ணில் ஏற்பட்ட காயத்தினால் இரண்டாம் கண்ணும் பாதிக்கப்பட்டு முழுமையாக பார்வையை இழந்துவிட்டான் பிரெய்ல் என்பதை அறிந்து உள்ளுக்குள்ளேயே அழுதது அந்த தாய் உள்ளம். அப்போது பிரெயிலுக்கு வயது நான்குதான். அன்று அந்த தாய் சிந்திய கண்ணீருக்கு ஒட்டுமொத்த பார்வையற்றோர் சமூகமே இன்று நன்றிக்கடன் பட்டிருக்கிறது. ஏனெனில் அந்த வயதில் ஏற்பட்ட இயலாமைதான் பார்வையற்றோரின் சரித்திர நாயகனாக பிரெயிலை பிற்காலத்தில் உயர்த்தியது. பார்வையிழந்தும்கூட இரண்டு ஆண்டுகள் வழக்கமாக பள்ளிக்கு சென்றார் பிரெய்ல். ஆனால் எழுதவும் படிக்கவும் முடியாது என்பதால் பள்ளியை தொடர முடியாமல் போனது.



பிரெயிலுக்கு பத்து வயதானபோது பாரீஸில் (paris) உள்ள ஒரு பார்வையற்றோர் பள்ளியில் சேர்த்தனர் பெற்றோர். அந்தப்பள்ளியில் வாசிக்கக் கற்றுத்தரப்பட்டது ஆனால் எழுத கற்றுத்தரப்படவில்லை. அவர்களுக்கான எழுத்துகள் தாள்களில் புடைத்திருக்கும் அதனை விரல்களால் தொட்டு உணர்ந்து ஒவ்வொன்றாக எழுத்துக்கூட்டி வாசிக்க வேண்டும் அது மிகவும் சிரமமான ஒன்று. ஒரு வாக்கியத்தை படித்து முடிக்கும் முன் ஆரம்ப எழுத்துகள் மறந்து போகும். தம்மைப்போன்றோர் வாசிப்பதற்கு இதைவிட ஒரு சிறந்த முறை இருக்க வேண்டுமே என்று சிந்திக்கத் தொடங்கினார் பிரெய்ல்.

ஒருமுறை அந்தப்பள்ளிக்கு Charles Barbier என்ற இராணுவ வீரர் வருகை தந்தார். இரவு நேரங்களில் பேசிக்கொள்ளாமல் இராணுவ வீரர்கள் செய்திகளை பறிமாறிகொள்ள ஒருமுறையை அவர் உருவாக்கியிருந்தார். பணிரெண்டு புள்ளிகளை கொண்ட அந்த முறையில் எளிய செய்திகளை பறிமாறிகொள்ளலாம் அதனை 'sonography' என்று அவர் அழைத்தார். ஆனால் அது சிரமமானது என்று கூறி அதனை நடைமுறைப்படுத்த இராணுவம் மறுத்துவிட்டது. பார்வையற்றோர் பள்ளிக்காவது அது பயன்படட்டும் என்று Charles தனது முறையை பிரெய்ல் படித்த அந்த பள்ளியில் விளக்கிக்காட்டினார். அதனை ஆராய்ந்த பிரெய்லுக்கு அதில் நிறைய விசயங்கள் அடங்கியிருப்பதாகபட்டது. அதனை கொஞ்சம் எளிமைப்படுத்தினால் ஒரு நல்ல முறையை உருவாக்கலாம் என்று நம்பிய அவர் அடுத்த சில மாதங்களுக்கு சொந்தமாகவே பல சோதனைகளை செய்து பார்த்தார். அதன்பலன் மூன்றே ஆண்டுகளில் அவருக்கு 15 வயதானபோது ஆறு புள்ளிகளை கொண்ட ஒரு எழுத்துமுறையை கண்டுப்பிடித்தார். அதுதான் அவரது பெயரிலேயே 'பிரெய்ல்' முறை என்று இப்போது அழைக்கப்படுகிறது.



பிரெய்ல் முறையில் புள்ளிகள் தாளில் உயர்ந்து எழும்பி நிற்கும் தொடுவதன் மூலம் அந்த புள்ளிகளை உணரலாம். உதாரணத்திற்கு A என்ற எழுத்தைக்குறிக்க ஒரு புள்ளி, B என்ற எழுத்தைக்குறிக்க இரண்டு புள்ளிகள் இதேபோல் ஆறு புள்ளிகளை 64 விதமாக பயன்படுத்தும் முறைதான் 'பிரெய்ல்' முறை. அந்த முறையில் தொடர்ந்து மாற்றங்கள் செய்த பிரெய்ல் சில ஆண்டுகளில் கணிதத்திற்கும், இசைக்கும்கூட எழுத்து வடிவங்களை உருவாக்கினார். 1829-ஆம் ஆண்டில் தாம் உருவாக்கிய முறையை விளக்கும் புத்தகத்தை வெளியிட்டார். ஆரம்பத்தில் பிரெய்ல் முறையை அந்தப்பள்ளிக்கூடம் கண்டுகொள்ளவில்லை ஓர் ஆசிரியர் அதற்கு தடைகூட விதித்தார். ஆனால் நாளடைவில் அந்த முறையின் மகிமையை உலகம் உணரத் தொடங்கியது. குறிப்பாக பார்வையற்றவர்களின் உலகம் புத்துணர்ச்சி பெற்றது. அதுவரை எழுதவும் படிக்கவும் முடியாமல் இருந்தவர்களுக்கு 'பிரெய்ல்' முறை ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.

தாம் கற்ற பள்ளியிலேயே ஆசிரியராக பணியாற்றி அனைவரின் நன்மதிப்பையும் பெற்றார் பிரெய்ல். துரதிஷ்டமாக அவருக்கு காசநோய் ஏற்பட்டு 1852-ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் நாள் தனது 43-ஆவது வயதில் அவர் காலமானார். அவர் இறந்தபிறகுதான் அவரது கண்டுபிடிப்பை அங்கீகரித்தது பிரெஞ்சு அரசாங்கம். சரியாக நூறு ஆண்டுகள் கழித்து 1952-ஆம் ஆண்டு அவரது உடல் தோண்டியெடுக்கப்பட்டு தேசிய வீரர்களுக்காக கட்டப்பட்ட புகழ்பெற்ற 'Pantheon' அரங்கில் அடக்கம் செய்யப்பட்டது.



'எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்' என்றார் ஒளவையார் கொன்றை வேந்தனில். ஆனால் அந்த கண்களே இல்லாதவர்களுக்குகூட எண்ணையும், எழுத்தையும் கொண்டு சேர்த்திருக்கிறார் லூயி பிரெய்ல். அவர் தந்த வரத்தால்தான் பின்னாளில் John Milton, Helen Keller, sir arthur pearson போன்ற கண் பார்வையற்ற வரலாற்று நாயகர்களை உலகம் சந்திக்க முடிந்தது. பிரெய்ல் நான்கு வயதிலேயே பார்வையை இழந்தபோதும் எல்லாப் பாடங்களிலும் மிகச்சிறப்பாக தேறினார் என்பதும் Chello, Organ ஆகிய இரண்டு இசைக்கருவியையும் திறம்பட வாசிக்கக் கற்றுக்கொண்டார் என்பதும் நாம் வியக்க வேண்டிய் வரலாற்று உண்மைகள்.

தன்னம்பிக்கையும், விடாமுயற்சியுமே அவருக்கு இருகண்களாக செயல்பட்டன. நம்மில் பெரும்பாலோர் ஐம்புலங்களும் நன்றாக செயல்படும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம். ஆனால் ஐம்புலங்களில் ஆக முக்கியமான கண்ணை இழந்தபோதும்கூட தன்னம்பிக்கையை இழக்கவில்லை லூயி பிரெய்ல். ஓர் அபூர்வ கண்டுபிடிப்பால் தன்னைப் போன்றோரின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்தார் அவர். அந்த தன்னம்பிக்கை நமக்கு இருந்தால் நம் வாழ்விலும், பிறரது வாழ்விலும் ஓர் வித்தியாசத்தை ஏற்படுத்தலாம். தன்னம்பிக்கையோடு விடாமுயற்சியுடன் செயல்படுவோருக்கு வானம் வசப்பட்டே ஆக வேண்டும் என்பதுகூட இயற்கையின் நியதிதான்.

MysteRy:
மிக்கைல் கொர்பசோவ் - வரலாற்று நாயகர்!

இருபதாம் நூற்றாண்டில் உலக அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கிய ஒன்று அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே நிலவிய 'Clod War' எனப்படும் பனிப்போர். அந்த பனிப்போர் உருவானதற்கு அடிப்படை காரணம் ரஷ்யாவில் லெனினுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ஸ்டாலினும், அவருக்கு அடுத்து வரிசையாக வந்த சர்வாதிகாரிகளும் தங்கள் படை பலத்தை அசுர வேகத்தில் பெருக்கிக்கொண்டதொடு தாங்கள் நம்பிய கம்யூனிசத்தை உலக நாடுகளில் திணிக்க முற்பட்டதுதான். ரஷ்யாவின் அச்சுறுத்தலுக்கு மற்ற நாடுகள் வேண்டுமானால் அடிபணியலாம். ஆனால் கம்யூனிசத்தை வெறுத்த அமெரிக்காவோ ரஷ்யாவின் ஆயுத குவிப்பை எதிர்கொள்ள நேரடி ஆயுத போட்டா போட்டியில் இறங்கியது. அதன் விளைவுதான் 'Clod War' எனப்படும் பனிப்போர்.

பனிப்போர் உச்சகட்டத்தில் இருந்தபோது அணு ஆயுத போர் நீளுமோ? மூன்றாம் உலகப்போர் வெடிக்குமோ? என்று உலகம் அஞ்சிய நாட்கள் ஏராளம். ஆனால் 1917-ஆம் ஆண்டு உலகுக்கு முன்னுதாரணமான ஆட்சி வழங்கும் உறுதியோடு லெனின் மூலம் ரஷ்யாவில் வேருன்றிய கம்யூனிசம் 74 ஆண்டுகளுக்குப் பிறகு 1991-ஆம் ஆண்டில் அடியோடு வேருறந்து போகும் என்று எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது. ஆம் அந்த ஆண்டு சோவியத் யூனியன் சிதறுண்டது. கம்யூனிசம் சிதைந்து போனது பனிப்போரும் ஆவியாகி காற்றில் கரைந்து போனது. ஆயுத போட்டா போட்டியிலிருந்து விடுபட்ட உலகம் நிம்மதி பெருமூச்சு விட்டது. அதையெல்லாம் சாத்தியமாக்கியது தனி ஒரு மனிதனின் தெளிந்த பார்வையும், உள்நாட்டு பிரச்சினைகளுக்கு அடக்குமுறை மட்டுமே பதிலாகாது என்ற நம்பிக்கையும், உலகத்திற்கு தேவை பொருளாதார வளர்ச்சியே அன்றி ஆயுத வளர்ச்சி அல்ல என்ற தொலைநோக்கும்தான்.   

பனிப்போரை முடிவுக்கு கொண்டு வந்ததன் மூலம் உலகத்தின் பாதுகாப்பை பன்மடங்கு உயர்த்தி வரலாற்றிலும் உயர்ந்து நிற்கும் அந்த வித்தியாசமான அரசியல் தலைவரின் பெயர் மிக்கைல் கொர்பசோவ் (Mikhail Gorbachev). 1931-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2-ஆம் நாள் தெற்கு ரஷ்யாவின் Stavropol வட்டாரத்தில் உள்ள  Privolnoye எனும் கிராமத்தில் பிறந்தார் கொர்பசோவ். அவர் சிறுவயதாக இருந்தபோது ரஷ்யாவில் ஜோசப் ஸ்டாலினின் கொடுங்கோல் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. மிக மோசமான கொடுங்கோலர்களில் ஒருவர் என்று வரலாறு வருணிக்கும் ஸ்டாலினின் ஆட்சியில் ஒன்பது ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்தார் கொர்பச்சொவின் தாத்தா Andreyevich Gorbachev. ஸ்டாலினின் கொடுங்கோல் ஆட்சியை பார்த்து வளர்ந்தார் கொர்பசோவ்.



பள்ளியில் சிறந்து விளங்கிய அவர் தமது பதினைந்தாவது வயதிலேயே இளையர் கம்யூனிஷ்டு லீகில் சேர்ந்தார். 1950-ஆம் ஆண்டில் மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சட்டம் பயின்றார். பல்கலைக்கழக மாணவராக இருந்தபோதே கம்யூனிஷ்டு கட்சியில் உறுப்பினராக இருந்தார். பல்கலைக்கழகத்திலேயே தான் சந்தித்த  Raisa Titarenko என்ற பெண்ணை தான் பட்டம் பெற்ற 1953-ஆம் ஆண்டிலேயே மணந்து கொண்டார். சட்டத்தில் பட்டம் பெற்று தாம் பிறந்த Stavropol வட்டாரத்திற்கு திரும்பிய கொர்பசோவ் கம்யூனிஷ்டு கட்சியின் தலைமைத்துவத்தில் படிப்படியாக முன்னேறி பல பொறுப்புகளை வகுத்தார். 1970-ஆம் ஆண்டு கட்சியின் வட்டார செயலாளராக நியமிக்கப்பட்ட அவர் அடுத்த ஆண்டே மத்திய ஆளும் குழுவில் உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்பட்டார்.   

1980-ஆம் ஆண்டு சோவியத் ஆளும் குழுவின் முழு உறுப்பினராக அவர் பதவி உயர்வு பெற்றார். அந்தக்காலகட்டம் வரை சோவியத் யூனியனின் அதிபராக இருந்த  Fyodor Kulakov 1982-ஆம் ஆண்டு மறைந்தபோது  Andropov-வும், இரண்டு ஆண்டுகளில் அவர் மறைந்தபோது Chernenko-வும் அதிபர் பொறுப்பை ஏற்றனர். 1985-ஆம் ஆண்டு மார்ச் 11-ஆம் நாள்  Chernenko இறந்தபோது அடுத்த நாளே கட்சியின் பொது செயலாளர் பொறுப்பும், அதிபர் பொறுப்பும் கொர்பசொவின் கைகளுக்கு வந்தது. முந்தைய சோவியத் அதிபர்களைப்போல் அல்லாமல் மற்ற நாடுகளுக்கு நிறைய பயணங்களை மேற்கொண்டவர் கொர்பசோவ். அதனால் அவரது பார்வையும், அணுகுமுறையும் வேறுபட்டதாக இருந்தது. அவர் பதவியேற்றபோது மிகப்பெரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியிருந்தது சோவியத் யூனியன். ஆயுத போட்டா போட்டிக்கு அளவுக்கு அதிகமாக சொத்து செலவழிக்கப்பட்டது அதற்கு முக்கிய காரணம்.



பதவியேற்ற வேகத்திலேயே ஆயுத போட்டா போட்டியை முடிவுக்கு கொண்டு வர முடிவெடுத்தார் கொர்பசோவ். அப்போதைய அமெரிக்க அதிபர் Ronald Reagan-னின் அழைப்பை ஏற்று இருவரும் நான்கு உச்ச நிலை சந்திப்புகளை நடத்தினர். அதன் பயனாக 1987-ஆம் ஆண்டில் அணு ஆயுதங்களை குறைக்கும் ஒப்பந்தத்தில் இரு தலைவர்களும் கையெழுத்திட்டனர். அந்தக்கணமே சோவியத் யூனியனின் தலையெழுத்தும் மாறத்தொடங்கி விட்டது என்பதனை உலகம் அப்போது உணரவில்லை. அடுத்த ஆண்டே இன்னொரு முடிவையும் அறிவித்து உலகை அசத்தினார் கொர்பசோவ். ஒன்பது ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானை ஆக்ரமித்திருந்த சோவியத் படைகளை மீட்டுக்கொள்வதாக அவர் அறிவித்தார். முன்னைய தலைவர்கள் அவமானம் கருதி செய்ய மறுத்த செயல் அது. வெறும் வீம்புக்காக படைகளை அங்கே வைத்திருந்து இழப்பை அதிகமாக்கிக் கொள்வதை விட அங்கிருந்து வெளியேறி இழப்பை குறைத்துக்கொள்ள வேண்டும் என்ற அவரது விவேகத்தை உலகம் பாராட்டியது. 

அந்த இரண்டு வெளியுறவுக்கொள்கைகளுக்கும் தந்த அதே முக்கியத்துவத்தை நாட்டின் பொருளியலை சீர்படுத்துவதிலும் தந்தார் கொர்பசோவ். perestroika என்ற பொருளியல் சீர்திருத்தத்தை அவர் அறிவித்தார். அந்த சீர்திருத்தத்தால் கம்யூனிஸ்டு கட்சியின் இரும்புப்பிடி தளரத்தொடங்கியது. சில துறைகளில் தனியார்மயத்திற்கு அனுமதி வழங்கினார். 1986-ஆம் ஆண்டு Glasnost என்ற திறந்த கொள்கையை அறிவித்தார். அந்தக்கொள்கைதான் கம்யூனிசத்தின் அழிவிற்கு அடிகோலியது. சோவியத் யூனியனில் மூடியிருந்த பல கதவுகளை அது திறந்து விட்டது. தனிமனிதர்களும், பத்திரிக்கைகளும் அச்சமின்றி அரசியல் பேச அனுமதிக்கப்பட்டது. 1989-ஆம் ஆண்டு இன்னும் ஓர் அதிசயம் நிகழ்ந்தது முதன்முறையாக சோவியத் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடந்தது. 1917-ஆம் ஆண்டு லெனின் ஆட்சியை கைபற்றிய பிறகு ரஷ்யாவில் நடைபெற்ற முதல் சுதந்திர தேர்தல் அது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு பல்கேரியா, ருமேனியா, போலந்து, ஹங்கேரி, செக்கோஸ்லவாகியா, கிழக்கு ஜெர்மனி ஆகிய ஆறு நாடுகளில் சோவியத் யூனியனின் கம்யூனிஸ்டு கட்சி ஆதிக்கம் செலுத்தியது. அந்தக்கட்சிகள் அனைத்துமே மக்களால் வெறுக்கப்பட்டன. அந்த நாட்டின் கம்யூனிச தலைவர்கள் சோவியத் இராணுவத்தின் துணையுடனும், ரகசிய போலீஸ் துணையுடனும் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு இரும்புக்கரங்களுடன் கோலோச்சினர். ஆனால் 1989-90 ஆகிய இரண்டு ஆண்டுகளில் அந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் அதிசயித்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன. 1989-ஆம் ஆண்டில் கிழக்கு ஜெர்மனியில் கொந்தளிப்பு ஏற்பட்டது இரண்டு ஜெர்மனிகளையும் பிரித்த பெர்லின் சுவற்றை (Berlin Wall) தாண்டி மேற்கு ஜெர்மனிக்கு செல்ல மக்கள் முயன்றனர். அப்போது கிழக்கு ஜெர்மனியில் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவராக இருந்த Erich Honecker வழக்கம்போல் அடக்கு முறையை கையாள நினைத்த அந்த தருணத்தில் பெர்லினுக்கு அவசர வருகை மேற்கொண்டார் கொர்பசோவ்.




அடக்கு முறையை பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரித்ததோடு சீர்திருத்தத்தை விரைவில் தொடங்குமாறு வலியுறுத்திய கொர்பசோவ் எந்த அடக்கு முறைக்கும் சோவியத் படைகள் பயன்படுத்தக்கூடாது என்றும் Honecker-ரிடம் கூறினார். அப்போது 380 ஆயிரம் ரஷ்யப்படைகள் கிழக்கு ஜெர்மனியில் இருந்தன. தக்க தருணத்தில் அவர் தலையிட்டதால் ரத்தக்களறி தவிர்க்கப்பட்டது இரண்டே வாரங்களில் Honecker பதவி துறக்க நேரிட்டது. அதே ஆண்டு நவம்பர் 9-ஆம் நாள் நம்ப முடியாத ஒன்று நடந்தது ஆம் பெரிலின் சுவர் திறந்து விடப்பட்டது. மில்லியன் கணக்கான கிழக்கு ஜெர்மானியர்கள் சுதந்திரமாக மேற்கு ஜெர்மனிக்குள் நுழைந்தனர். வரலாற்றில் ஒரு களங்கமாக இருந்த பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டது. அதன் எதிரொலி மற்ற கம்யூனிச நாடுகளிலும் கேட்கத் தொடங்கியது. பல்கேரியாவில் இரும்புக்கரத்தோடு ஆட்சி செய்து வந்த டோடொ ஜிப்கோப் நவம்பர் 10-ஆம் நாள் பதவி துறக்க நேரிட்டது. ஒரு வாரது கழித்து செக்கோஸ்லவாகியா தலைநகர் ஃப்ராகில் மிகப்பெரிய மக்கள் ஆர்பாட்டம் நடைபெற்றது.

ஹங்கேரியில் நவம்பர் 26-ஆம் நாள் சுதந்திர தேர்தல் நடைபெற்றது பெரும் வாக்கு வித்தியாசத்தில் கம்யூனிஸ்டு ஆட்சியாளர் தோல்வியைத் தழுவினர். போலந்திலும் கம்யூனிஸ்டு கட்சி தோற்கடிக்கப்பட்டு 1990-ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து அங்கு சந்தைப் பொருளியல் அறிமுகமானது. தன்னுடைய சகாக்கள் ஒவ்வொருவராக மண்ணைக் கவ்வுவதைப் பார்த்த போதும் ருமேனியாவின் சர்வாதிகாரி விடாப்பிடியாக ஆட்சியைத் தொடர்ந்தார். ஆனால் மக்களின் ஆவேசம் எந்த சர்வாதிகாரியையும் விட்டு வைக்காது என்பதற்கு இன்னும் ஓர் உதாரணமாக அமைந்தது டிசம்பர் 25-ஆம் நாள் நிகழ்ந்த அந்த சம்பவம். அன்றைய தினம் ஆட்சியிலிருந்து கவிழ்க்கப்பட்டு பின்னர் சிறை பிடிக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார் சர்வாதிகாரி Sakharov. அதோடு கிழக்கு ஐரோப்பாவின் கடைசி கம்யூனிஸ்டு சகாப்தமும் முடிவுக்கு வந்தது. இவற்றையெல்லாம் விரிந்த புருவங்களோடு பார்த்துக் கொண்டிருந்த சில சோவியத் குடியரசுகளும் சுதந்திர கோரிக்கை விடத் தொடங்கின.



1990-ஆம் ஆண்டு மார்ச் 11-ஆம் நாள் சோவியத் யூனியனிலிருந்து தான் சுதந்திரம் பெற்று விட்டதாக தையரியமாக அறிவித்தது  Lithuania. கொர்பசோவ் அதை விரும்பாவிட்டாலும் படைபலத்தை பயன்படுத்தவில்லை. அந்த ஆண்டு இறுதிக்குள் சோவியத் யூனியனில் இடம் பெற்றிருந்த 15 குடியரசுகளும் சுதந்திர பிரகடனம் செய்தன. சோவியத் யூனியனின் சிதைவை வைத்த கண் வாங்காமல் உலகம் பார்த்துக் கொண்டிருக்க கொதிப்படைந்த சில பழமைவாத கம்யூனிஸ்டுகளும், இராணுவத் தளபதிகளும் 1991-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆட்சிக்கவிழ்ப்பில் ஈடுபட்டு கொர்பசோவை கைது செய்தனர் ஆனால் சில தலைவர்களும் சோவியத் மக்களும் அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கவே அந்த முயற்சி பிசுபிசுத்து போனது. அதன் பிறகு ரஷ்யாவில் அசுர வேகத்தில் மாற்றங்கள் நிகழ்ந்தன. கம்யூனிஸ்டு ஆட்சி தடை செய்யப்பட்டது அதன் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த ஆண்டு இறுதிக்குள் அத்தனை சோவியத் குடியரசுகளும் தனித்தனியாக பிரிந்தன.

சோவியத் யூனியன் அதிகாரப்பூர்வமாக கலைந்தது. அதே ஆண்டு சொந்தமாகவே பதவி விலகினார் கொர்பசோவ் அவர் பதவியேற்று ஆறே ஆண்டுகளில் அத்தனையும் நடந்து முடிந்தது. இருபதாம் நூற்றாண்டை பாதுகாப்பற்றதாக மாற்றிய எத்தனையோ தலைவர்களுக்கு மத்தியில் தனி ஒரு மனிதனாக அதன் பாதுகாப்பை உறுதி செய்தவர் கொர்பசோவ். இன்று உலகில் ஓரளவுக்கு அமைதி நிலவுவதற்கு வித்திட்டு தேவையற்ற கொள்கைகளை தைரியமாக தூக்கியெறிந்தவர் அவர். கெளரவம் கருதி ஆயுதங்களை குவித்த தலைவர்களுக்கு மத்தியில் பொருளாதாரமும், உலக அமைதியும் கருதி ஆயுத போட்டா போட்டிக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் அவர். வரலாற்றில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வந்த அவரை வரலாறு என்றென்றும் நினைவில் வைத்திருக்கும். 'The only disability in life is a bad attitude' தவறான மனோபாவம்தான் வாழ்க்கையின் ஒரே குறைபாடு. 'Luck is a dividend of sweat. The more you sweat, the luckier you get' அதிர்ஷ்டம் என்பது நீங்கள் சிந்தும் வியர்வைக்கு கிடைக்கும் வட்டி, எவ்வுளவுக்கு எவ்வுளவு வியர்வை சிந்துகிறீர்களோ அவ்வுளவுக்கு அவ்வுளவு அதிர்ஷ்டம் கூடும். 

MysteRy:
வால்ட் டிஸ்னி - வரலாற்று நாயகர்!

உலகில் அதிகமானோரை சிரிக்க வைத்த ஒரு நபர் யாரென்று கேட்டால் சார்லி சாப்ளின் என்று வரலாறு சொல்லும். உயிரோடு உலா வந்து உலக மக்களை சிரிக்க வைத்தவர் அவர். ஆனால் உயிரற்ற ஒன்று சார்லி சாப்ளினுக்கு இணையாக உலகை சிரிக்க வைத்திருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? உங்களுக்கு தெரியாவிட்டாலும் உங்கள் பிள்ளைகளுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். சுமார் 85 ஆண்டுகளுக்கு முன்பு கேலிச்சித்திர உலகில் அடியெடுத்து வைத்து கற்பனை உலகை கொடி கட்டி பறக்க வைத்த அந்த கதாபாத்திரம் மிக்கி மவுஸ் (Mickey Mouse). பெரியவர்களைகூட குழந்தைகளாக மாற்றி சிரிக்க வைத்த அந்த மந்திர கதாபாத்திரத்தை உலகுக்கு தந்தவர் வால்ட் டிஸ்னி (Walt Disney). பொழுதுபோக்கு என்ற பரந்து விரிந்த வானம் அவருக்கு வசப்பட்ட கதையை தெரிந்துகொள்வோம்.

1901-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் நாள் அமெரிக்காவின் Illinois மாநிலத்தில் பிறந்தார் வால்ட் டிஸ்னி. அவருக்கு சிறு வயதிலிருந்தே ஓவியங்கள் வரைவதிலும், தீட்டுவதிலும் ஆர்வம் இருந்தது. ஏழு வயதானபோதே அவர் ஓவியங்கள் வரைந்து அண்டை வீட்டுக்காரர்களிடம் விற்பார். பள்ளிப்பாடங்களை படிப்பதற்கு பதில் அவர் எப்போதுமே இயற்கை காட்சிகளையும், விலங்குகளையும் வரைந்துகொண்டிருப்பார். தந்தைக்கு அது பிடிக்கவில்லையென்றாலும், பிடித்த துறையைத் தேர்ந்தெடுக்குமாறு வால்ட் டிஸ்னிக்கு தாயார் ஊக்கமூட்டினார்.



சிக்காக்கோவின் மெக்கின்லி ( McKinley High School) உயர்நிலைப்பள்ளியில் ஓவியம் மற்றும் புகைப்படத்துறையில் படித்தார் வால்ட் டிஸ்னி. ஒரு நுண்கலைக்கழகத்தில் சேர்ந்து தனது ஓவியத்திறமையை வளர்த்துக்கொண்டார். தனக்கு மிகவும் விருப்பமான திரைப்பட நாயகன் சார்லி சாப்ளினைப்போல் டிஸ்னி பள்ளியில் நடித்துக்காட்டுவார். ஆசிரியர்கள் அவரை கதை சொல்லுமாறு கேட்டுக்கொள்வார்கள் அவர் கரும்பலகையில் ஓவியங்களாக வரைந்துகொண்டே கதை சொல்லுவார். தந்தைக்குத் தெரியாமல் இரவு நேரங்களில் உள்ளூர் அரங்குகளில் நகைச்சுவை நாடகங்களில் நடித்த அனுபவமும் அவருக்கு உண்டு.

1922-ஆம் ஆண்டு 21 வயதானபோது வால்ட் டிஸ்னி Laugh-O-Grams என்ற தனது முதல் நிறுவனத்தை சகோதரர் Roy-யுடன் சேர்ந்து தொடங்கினார். தனது மாமாவிடம் 500 டாலர் கடனாக பெற்று அந்த நிறுவனத்தை ஆரம்பித்தார். கேலிச்சித்திர படங்களை உருவாக்குவதில் சோதனை செய்து பார்த்த அவர் Alice in Cartoon land என்ற கார்ட்டூன் படத்தை தயாரித்தார் அது தோல்வியைத் தழுவியது நிறுவனமும் நொடித்துப் போனது. ஆனால் அந்த முதல் தோல்வி அவரை வருத்தவில்லை. மனம் தளராத வால்ட் டிஸ்னி அடுத்து Oswald the Lucky Rabbit என்ற புதிய கேலிச்சித்திரத்தை உருவாக்கினார். அது ஓரளவுக்கு சிறப்பாக அமைந்தாலும் அதன் உரிமையை இன்னொருவர் வாங்கிக்கொண்டு டிஸ்னியை ஏமாற்றினார். அப்போதும் மனம் தளராத டிஸ்னி தன் சகோதரர் ராயுடன் இனிமேல் நாம் சொந்தமாக தொழில் செய்வோம் நமக்கு கைகொடுக்கப் போவது ஓர் எலி. அது நமக்கே சொந்தமாக இருக்கும் என்று கூறினார்.



அப்போது உலகுக்கு அறிமுகமான அந்த அதிசய எலிதான் 'Mickey Mouse' முகம் இரண்டு காதுகள் என வெறும் மூன்று வட்டங்களால் உருவானது Mickey Mouse. பிறந்த ஓரிரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே அது உலகப்புகழ் பெற்றது. வால்ட் டிஸ்னியின் பக்கம் ஹாலிவுட்டின் கவனம் திரும்பியது. மிக்கிக்கு உருவம் தந்த டிஸ்னிதான் அதற்கு குரலும் கொடுத்தார். அவர் அடுத்தடுத்து தயாரித்த Steamboat Willie, The Skeleton Dance போன்ற கேலிச்சித்திரங்களில் அந்த மிக்கி அடித்த லூட்டிகளையும் அதன் சேட்டைகளையும் இமை கொட்டாமல் மக்கள் பார்த்து ரசித்தனர், குழந்தைகள் கற்பனை வானில் சிறகடித்துப் பறந்தனர். பெரியவர்கள் மீண்டும் குழந்தைகளாகி தங்கள் கவலைகளை மறந்து சிரித்தனர்.

1932-ஆம் ஆண்டு டிஸ்னி உருவாக்கித்தந்த 'Flowers and Trees' என்ற திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. Mickey Mouse என்ற சுட்டி எலியை தந்த டிஸ்னி கேலிச்சித்திர உலகில் அடுத்து அறிமுகப்படுத்திய வெற்றி கதாபாத்திரம் 'Donald Duck' என்ற வாத்து. அந்த வாத்தும், எலியும் செய்த சேட்டைகளை எண்ணி இன்றும் தன்னை மறந்து சிரிப்பவர்கள் ஏராளம். 1937-ஆம் ஆண்டில் Snow White and the Seven Dwarfs என்ற முழுநீள கேலிச்சித்திரத்தை வழங்கினார் டிஸ்னி. அதற்கு அப்போது ஆன செலவு எவ்வுளவு தெரியுமா? ஒன்றரை மில்லியன் அமெரிக்க டாலர். அவ்வுளவு பொருட்செலவில் உருவான அந்தப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையை செய்தது.

அதன் பின்னர் Pinocchio, Fantasia, Dumbo, Bambi போன்ற புகழ்பெற்ற கேலிச்சித்திர படங்களை அவர் உருவாக்கினார். திரையில் மட்டுமே காட்ட முடிந்த கற்பனை உலகை நிஜமாக்கி காட்ட விரும்பிய டிஸ்னி 1955-ஆம் ஆண்டில் 17 மில்லியன் டாலர் செலவில் மிகப்பிரமாண்டமான 'Disneyland Park' என்ற பொழுதுபோக்குப் பூங்காவை அமெரிக்காவின் Oakland நகரில் உருவாக்கினார். Disneyland பூங்கா நிச்சயம் முதல் ஆண்டிலேயே நொடித்துப்போகும் என்று பலர் ஆரூடங்கள் கூறினர். ஆனால் பூங்காவை பார்க்க வந்தவர்களோ அதனை பூலோக சொர்க்கம் என்று வருணித்தனர். முதல் 25 ஆண்டுகளில் பல உலகத்தலைவர்கள் உட்பட 200 மில்லியன் பேர் கண்டு ரசித்தனர். தற்போது ஆண்டுக்கு சுமார் 15 மில்லியன் வருகையாளர்களை அது ஈர்க்கிறது.



ஒவ்வொரு குழந்தையும் சென்று பார்த்து வர விரும்பும் கனவுலகம் அது. டிஸ்னி சிறுவனாக இருந்த வயதில் பள்ளிக்குப் போகும் வழியில் ஒரு பூங்கா இருந்தது அதில் கட்டணம் செலுத்தினால்தான் விளையாட முடியும். டிஸ்னி அப்போது ஏழ்மையில் வாடியதால் ஒருமுறைகூட அவரால் அந்த பூங்காவில் விளையாட முடியவில்லை. அந்த ஏக்கம்தான் உலகின் மிகப்பெரிய விளையாட்டுப் பூங்காவை உருவாக்கும் எண்ணத்தை அவருக்குள் விதைத்திருக்க வேண்டும். இன்று கேலிச்சித்திரம் என்றால் நம் நினைவுக்கு வரும் முதல் பெயர் மிக்கி மவுஸ். அந்த அதிசய கதாபாத்திரம் எப்படி உருவானது? வால்ட் டிஸ்னியே ஒருமுறை அதைப்பற்றி கூறினார்....

"வாழ்க்கையில் என்ன செய்யப்போகிறோம்? என்று தெரியாமல், ஒரு பிடிப்பு இல்லாமல் எல்லாமே இழந்த நிலையில் ஒருமுறை Manhattan-லிருந்து Hollywood-டிற்கு இரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தேன். எப்போதும் போலவே அப்போதும் நான் கற்பனை உலகத்தில் சஞ்சரித்துக்கொண்டிருந்தேன். அப்போது என் ஓவிய நோட்டுப்புத்தகத்தில் நான் கிறுக்கிய கதாபாத்திரம்தான் மிக்கி மவுஸ்."

கற்பனை என்ற சொல்லுக்கு புது அர்த்தம் கொடுத்த வால்ட் டிஸ்னி நோய்வாய்ப்பட்டு 1966-ஆம் ஆண்டு டிசம்பர் 15-ஆம் நாள் தமது 65-ஆவது வயதில் காலமானார். இறப்பதற்கு முதல் நாள்கூட அவர் பல புதிய எண்ணங்களை நிறைவேற்ற திட்டம் தீட்டிக்கொண்டிருந்ததாக கூறுகிறார் அவரது சகோதரர் ராய். வால்ட் டிஸ்னியின் சரித்திர வெற்றிக்கு காரணங்கள் என்ன? அவரே கூறுகிறார் இவ்வாறு.....



மனிதனுக்கு எட்டாத உயரம் என்று எதுவுமே கிடையாது அதற்கு கனவை நனவாக்கும் ரகசியம் தெரிந்திருக்க வேண்டும். அந்த ரகசியம் நான்கு C எழுத்துகளில் அடங்கியிருக்கிறது. Curiosity, Confidence, Courage, Constancy அதாவது ஆர்வம், தன்னம்பிக்கை, தைரியம், நிலைப்பாடு இந்த நான்கிலும் ஆக முக்கியமானது தன்னம்பிக்கைதான். நீங்கள் ஒன்றை நம்பினால் அதனை உளப்பூர்வமாக எந்த கேள்விக்கும் இடம் தராமல் நம்புங்கள் அதுதான் வெற்றியின் ரகசியம். வால்ட் டிஸ்னிற்கு வெற்றியைத் தந்த அந்த நான்கு C மந்திரம் நிச்சயம் நமக்கும் பொருந்தும். டிஸ்னியைப்போல் ஆர்வம், தன்னம்பிக்கை, தைரியம், நிலைப்பாடு ஆகியவற்றுடன் விடாமுயற்சியோடு செயல்பட்டால் வால்ட் டிஸ்னிற்கு கற்பனை என்ற வானம் வசப்பட்டதைப்போல நமக்கும் நாம் விரும்பும் வானம் நிச்சயம் வசப்படும்.

MysteRy:
யூக்ளிட் (கணிதவியலின் தந்தை) - வரலாற்று நாயகர்!

கணினித்துறையில் இந்தியர்கள் சிறந்தவர்கள் என்பது பொதுவாகவே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் உண்மை. கணினிக்கு அடிப்படை கணிதம் என்பதால் கணிதத்திலும் இந்தியர்கள் சிறந்து விளங்குகின்றனர் என்பதில் ஆச்சரியமில்லைதான். கணித மேதை ராமானுஜம் போன்றவர்கள் அந்த துறையில் மேதைகளாக விளங்கினர். எனினும் உலகுக்கு கணிதத்தின் பல்வேறு கூறுகளை அறிந்து சொன்னவர்களும், விளக்கி கூறியவர்களும் கிரேக்கர்கள்தான் என்பது வரலாறு கூறும் உண்மை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சாக்ரடீஸ், அரிஸ்டாடில், பிளேட்டோ போன்ற தலைசிறந்த தத்துவமேதைகள் மட்டுமின்றி மிகச்சிறந்த சிந்தனையாளர்களும், பகுத்தறிவாளர்களும் உதித்தனர் கிரேக்க மண்ணில். அவர்கள் விட்டு சென்ற சொத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் பிறகும் மனுக்குலத்திற்கு மேன்மை தந்து கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட மிகச்சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவரைப் பற்றிதான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம்.

அவர் தொகுத்து தந்த எலிமென்ட்ஸ் (Elements) எனப்படும் கணிதத் தொகுப்புதான் உலகின் முதல் பாடப்புத்தகம் (Text Book) என்று புகழப்படுகிறது. 'கணிதத்தின் தந்தை' என வரலாறு போற்றும் அவரது பெயர் யூக்ளிட் (Euclid). கணிதத்தின் பல்வேறு கூறுகளை ஒருமுகப்படுத்தி தந்த யூக்ளிட் பற்றிய வாழ்க்கை குறிப்புகள் துல்லியமாகப் பதிந்து வைக்கப்படவில்லை. அவர் பிறந்த வருடம், இறந்த வருடமும்கூட சரிவரத் தெரியவில்லை. அநேகமாக அவர் கிமு.325-ஆம் ஆண்டில் பிறந்து கிமு.265-ஆம் ஆண்டில் அலெக்சாண்ட்ரியாவில் (Alexandria) இறந்திருக்க வேண்டும் என்று ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது. எந்த நகரத்தில் பிறந்தார் என்பதுகூட குறிக்கப்படவில்லை. அப்படியிருந்தும் கணிதத்தின் மிக முக்கிய கூறுகளில் ஒன்றான 'geometry' எனப்படும் 'வடிவியல்' கணிதத்தை உலகுக்குத் தந்ததால்தான் இன்றும் அவரது பெயர் வரலாற்றில் அழியா இடத்தைப் பெற்றிருக்கிறது.



யூக்ளிட் தன் அடிப்படைக் கல்வியை ஏதென்ஸ் நகரத்தில் பிளேட்டோவின் சீடர்களிடம் கற்றதாக நம்பப்படுகிறது. எகிப்தில் நைல் நதிப்படுகையின் மேற்குபகுதியிலுள்ள அலெக்சாண்ட்ரியா (Alexandria) என்ற நகரில் கிமு.300-ஆம் ஆண்டில் யூக்ளிட் கணிதம் போதித்து வந்தார் என்று ஒரு குறிப்பு கூறுகிறது. கிமு.332-ஆம் ஆண்டில் மாவீரன் அலெக்சாண்டரால் புதுப்பிக்கப்பட்டு புதுப்பெயர் பூண்டது அலெக்சாண்ட்ரியா (Alexandria). அலெக்சாண்டரைப் பற்றி வரலாறு அதிகமாகவே அக்கறைக் காட்டியிருப்பதால் அவரது காலக்கட்டத்தில் வாழ்ந்த யூக்ளிடைப் பற்றிய ஒருசில குறிப்புகளும் பதிவாகியிருக்கின்றன. யூக்ளிடுக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பே சில கணித மேதைகள் கிரேக்க மண்ணில் உதித்திருந்தனர். உதாரணத்திற்கு கிமு.585-ஆம் ஆண்டில் வாழ்ந்த Thales, Miletus ஆகிய கணித மேதைகளை குறிப்பிடலாம்.

அவர்களைப்போன்ற அறிஞர்கள் கணிதத்தின் பல்வேறு கூறுகளையும், 'Theorems' எனப்படும் தேற்றங்களையும், 'proofs' எனப்படும் மெய்ப்பிப்பு அல்லது ஆதாரங்களையும் ஏற்கனவே கண்டுபிடித்து உலகுக்குத் தந்திருந்தனர். ஆனால் வெவ்வேறாக சிதறிக் கிடந்த கணிதத்தின் அத்தனை கூறுகளையும் ஒழுங்குபடுத்தி எளிய உதாரணங்களால் விளக்கி செம்மையாக திட்டமிட்டு அவற்றை ஒரு நூலாக முறைப்படுத்தித் தந்தவர் யூக்ளிட்தான். அவ்வாறு அவர் முறைப்படுத்தி தந்ததுதான் 'Elements' எனப்படும் 'மூலக்கோட்பாடுகள்' என்ற நூல். அந்த நூல்தான் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக கணிதத்தின் சிறந்த பாடநூலாக பயன்பட்டு வருகிறது. இதுவரை எழுதப்பட்டுள்ள பாடப்புத்தகங்களில் அதுவே மிகச்சிறந்ததாகவும் கருதப்படுகிறது. இத்தனை ஆண்டுகளாக கணிதம் கற்பிப்பதற்கு அந்த நூல்தான் ஆதாரமாகவும் பயன்பட்டு வருகிறது.



முன்பிருந்த கணிதக் கோட்பாடுகளை முறைப்படுத்தித் தந்ததோடு மட்டுமல்லாமல் 'geometry' எனப்படும் 'வடிவியல்' கணிதத்திலும், 'arithmetic' எனப்படும் 'எண்கணித'த்திலும் விரிவான ஆராய்ச்சிகள் செய்து தனது முடிவுகளை அந்த புத்தகத்தில் கூறியிருக்கிறார் யூக்ளிட். ஒரு தெளிந்த கணித மேதைக்கான இயல்போடு மிக உன்னதமாக அந்த நூலை யூக்ளிட் வடிவமைத்திருந்ததால் அதற்கு முன் எழுதப்பட்ட வடிவியல் பாடநூல்கள் அனைத்தும் வழக்கொழிந்து போயின. யூக்ளிட் கிரேக்கத்தில் எழுதிய மூலக்கோட்பாடுகள் எனும் நூல் பல நூற்றாண்டுகள் கையெழுத்துப் பிரதியாகவே இருந்தது. ஜொஹேன்ஸ் குட்டன்பெர்க் உலகுக்கு அச்சு இயந்திரத்தைத் தந்த முப்பது ஆண்டுகளில் அதாவது 1482-ஆம் ஆண்டு அந்த புத்தகம் முதன் முதலாக அச்சிடப்பட்டு வெளி வந்தது. அதன் பின்னர் அது பல மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டது.

கடந்த 500 ஆண்டுகளில் அந்த நூலின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிப்புகள் வெளியாகியிருக்கின்றன. உலகின் மிகப்பெரிய விஞ்ஞானிகளில் ஒருவராகக் கருதப்படும் சர்.ஐசக் நியூட்டனின் 'Principia' என்ற புகழ் பெற்ற புத்தகமும் யூக்ளிடின் வடிவியல் கணித முறையைப் பின்பற்றிதான் எழுதப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. எனவே யூக்ளிடின் தாக்கம் தற்கால விஞ்ஞானிகளையும் விட்டு வைக்கவில்லை என்பதில் ஆச்சரியமில்லைதான் ஏனெனில் அறிவியலின் மொழியே கணிதம்தானே எந்தவொரு விஞ்ஞானியும், ஆராய்ச்சியாளரும் தங்கள் முடிவுகளை உணர்வதற்கும், அவற்றை மெய்பிப்பதற்கும் கணிதத்தின் துணையையே நாட வேண்டும். எனவே கணிதத்தின் தந்தையான யூக்ளிடை 'அறிவியலின் தந்தை' என்று போற்றினாலும் தகும்.



கணிதம் தவிர வேறு பல துறைகளிலும் ஆராய்ந்து மொத்தம் 13 நூல்களை யூக்ளிட் எழுதியிருப்பதாக ஒரு குறிப்பு கூறுகிறது. அவற்றில் மூன்றைத் தவிர வேறு எந்த நூலும் பாதுகாக்கப்படவில்லை. யூக்ளிட் அலெக்சாண்ட்ரியாவில் ஒரு பள்ளியை நிறுவி கணிதம் போதித்து வந்தபோது ஒரு மாணவன் அவரிடம் இதையெல்லாம் படித்து எனக்கு என்ன லாபம் கிடைக்கப்போகிறது? என்று கேட்டானாம். உடனே யூக்ளிட் தனது பணியாளரை அழைத்து இவன் லாபத்தை எதிர்பார்த்து கற்க வந்திருக்கிறான் இவனுக்கு சிறிது பொருளை கொடுத்து வெளியே அனுப்பி விடுமாறு கூறினாராம். பின்னர் தம் மற்ற மாணவர்களைப் பார்த்து கல்வி என்பதே நமக்குப் பெரிய லாபம்தான் புதியனவற்றைக் கற்றுக்கொள்வதும், தெரியாதவற்றை அறிந்துகொள்வதுமே மிகப்பெரிய பலன்தான் என்றாராம். இன்றைக்கும்கூட பொருந்தும் உண்மையல்லவா! அது.

கிரேக்கத்தை ஆண்ட 'Ptolemy' என்ற மன்னனுக்கும் கணிதம் கற்பித்து வந்தார் யூக்ளிட். சிரமப்பட்டு கணிதத்தை கற்க விரும்பாத அந்த மன்னன் யூக்ளிடைப் பார்த்து கணிதத்தைக் கற்க வேறு சுலபமான மார்க்கம் ஏதாவது உண்டா? என்று கேட்டாராம். அதற்கு யூக்ளிட் கணிதத்தைக் கற்க உழைப்பைத் தவிர வேறு வழியே கிடையாது. மன்னாரானாலும் மற்றவர்களைப் போலவே சிரமப்பட்டு, வியர்வை சிந்தியே கற்க வேண்டும் என்றாராம். அந்த உண்மையும் இன்றைக்கும் பொருந்துமல்லவா! எனவே கணிதத்தின் தந்தை என்று போற்றப்படும் யூக்ளிடின் வாழ்க்கை நமக்கு கூறும் எளிய உண்மைகள் இரண்டுதான். ஒன்று எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்க வேண்டும், இரண்டாவதாக உழைப்புக்கு நிகராண பண்பு வேறு எதுவும் கிடையாது என்பதுதான் அந்த உண்மைகளாகும். யூக்ளிட் கூறியதுபோல் கல்வியும், உழைப்பும் இணையும் போது நீங்கள் விரும்பும் வானமும் வசப்படும்.

MysteRy:
கிறிஸ்டோபர் கொலம்பஸ் (1451 - 1506) - வரலாற்று நாயகர்!

ஏழு கண்டங்களையும், ஏழு கடல்களையும் கொண்டதுதான் உலகம் என்பது இப்போது நமக்குத் தெரிந்த உண்மை. ஆனால் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்த உண்மை கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த உண்மைகளை கண்டு சொன்னவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறது வரலாறு. ஏனெனில் ஒரு புதிய பொருளை கண்டுபிடிப்பதில் எவ்வுளவு சிரமமோ அதைவிட சிரமமானது புதிய கண்டங்களையும், புதிய நாடுகளையும் கண்டுபிடிப்பது. அதனை துணிந்து செய்த ஒரு சிலரில் முக்கியமானவர் இந்தியாவைக் கண்டுபிடிக்க கனவு கண்டு கடைசியில் அமெரிக்காவைக் கண்டுபிடித்த கிறிஸ்டோபர் கொலம்பஸ்.



1451-ஆம் ஆண்டு இத்தாலியில் ஜெனோவா( Republic of Genoa) நகரில் பிறந்தார் கொலம்பஸ். நம்மில் சிறுவயதில் எத்தனையோ கனவுகள் இருக்கும் ஆனால் கொலம்பஸ் கண்ட கனவு என்ன தெரியுமா? கடல்களை கடந்து புதிய தேசங்களை கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் அந்தக் கனவு தந்த உந்துதலின் பேரில் பதினான்காவது வயதிலேயே மாலுமியானார் கொலம்பஸ். கடல்வழி மார்க்கம் என்பதே இல்லாத அந்தக்கால கட்டத்தில் பண்டமாற்றும், வணிகமும் தரை வழியாகத்தான் நடந்தன. அப்போது ஆசியாவின் வர்த்தக மையமாக மலேசியா இருந்தது என்று வரலாறு கூறுகிறது. இந்தியா, சீனா, இந்தோனோசியா மற்றும் மத்தியத் தரைக்கடல் நாடுகளை சேர்ந்த அரேபியர்கள் அங்கு கூடுவார்கள். தாங்கள் கொண்டு வந்த பேரிச்சைம்பழம், கலை நயமிக்க தரை விரிப்புகள், அரேபிய குதிரைகள் ஆகியவற்றைக் கொடுத்து விட்டு அவற்றுக்கு ஈடாக பருத்தி மற்றும் பட்டு ஆடைகள், மிளகு, கிராம்பு போன்ற நறுமணப் பொருட்கள், பவளம் கோமிதகம் போன்ற விலையுயர்ந்த கற்கள் போன்றவற்றை வாங்கிக்கொள்வார்கள். அவற்றை ஒட்டகங்களின் முதுகில் ஏற்றிக்கொண்டு தரைவழிமார்க்கமாக சீனா, ஐரோப்பாவை கடந்து இத்தாலியின் வெனிஸ் நகருக்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். ஐரோப்பியர்கள் தங்கம் கொடுத்து அவற்றை வாங்குவார்கள்.

ஐரோப்பாவில் குறிப்பாக மிளகு, கிராம்பு போன்ற நறுமணப் பொருள்களுக்கு அப்போது அதிக கிராக்கி இருக்கும். ஏனெனில் குளிர் காலங்களில் மாமிசங்களை பதப்படுத்தி வைப்பதற்கு அவை உதவின. அந்த நறுமணப் பொருள்கள் அத்தியாவசிய தேவை என்று உணர்ந்த ஐரோப்பியர்களுக்கு அவை இந்தியாவிலிருந்து வருகின்றன என்று தெரியும். ஆனால் இந்தியா எங்கிருக்கிறது என்பது தெரியாது. எவ்வுளவு காலம்தான் அரேபிய இடைத்தரகர்களுக்கு தங்கத்தை கொடுப்பது என்று எண்ணிய அவர்கள் இந்தியாவிற்கு கடல்வழி மார்க்கம் கண்டுபிடித்தால் அந்தப் பொருள்களை நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம் என்று நினைத்தனர். அப்படி நினைத்தவர்களில் ஒருவர்தான் கொலம்பஸ். 1476-ஆம் ஆண்டு கொலம்பஸ் கடல் வழியாக ஐஸ்லாந்திற்கும், இங்கிலாந்திற்கும் சென்றார். ஆனால் ஆசியாவுக்கு கடல்வழி மார்க்கத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் அவரது தனியாத ஆர்வமாக இருந்தது.

தனது முயற்சிக்கு உதவுமாறு அவர் இங்கிலாந்து மற்றும் போர்ச்சுக்கல் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டார் ஆனால் அது வீண்முயற்சி என்று நினைத்ததாலோ என்னவோ அந்த இரு அரசாங்களும் உதவ மறுத்தன. இறுதியில் அவருக்கு கைகொடுத்தவர் ஸ்பெயின் தேசத்தின் ராணி இசபெல்லா. கொலம்பஸுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ததோடு அவர் கண்டுபிடிக்கும் அனைத்து புதிய நிலங்களுக்கும் அவரையே ஆளுநராக நியமிப்பதாகவும் உறுதி கூறினார் ராணி இசபெல்லா. அதுமட்டுமல்ல புதிய தேசங்களிலிருந்து கொலம்பஸ் கொண்டு வரும் சொத்துகளில் பத்தில் ஒரு பங்கை அவருக்கே கொடுப்பதாகவும் உறுதியளித்து அனுப்பி வைத்தார்.



1492-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3-ஆம் நாள் தமது 41-ஆவது வயதில் தனது கனவை நோக்கி புறப்பட்டார் கொலம்பஸ். சாண்டா மரியா, நின்யா, பின்டா ஆகிய மூன்று கப்பல்களில் நூறு ஊழியர்கள் அவருடன் பயணித்தனர். சுமார் இரண்டு மாதங்கள் நிலப்பரப்பையே காணாமல் கடலில் அலைந்த கொலம்பஸுக்கு அக்டோபர் 12-ஆம் நாள் நிலம் கண்ணில் பட்டது. இந்தியாவையே கனவு கண்டு கொண்டிருந்ததால் தாம் இந்தியாவை அடைந்து விட்டதாக எண்ணி புளங்காகிதம் அடைந்தார் கொலம்பஸ். ஆனால் அவர்கள் நங்கூரமிட்டது இந்தியா அல்ல வடஅமெரிக்காவின் 'பகாமஸ் தீவு' என்பது அவருக்கு அப்போதும் மட்டுமல்ல இறந்தபோதும் தெரியாது என்பதுதான் விசித்திரமான உண்மை. அதன்பிறகு அவர் மேலும் சில கடல் பயணம் மேற்கொண்டு கெனேரித் தீவுகள் பனாமா போன்ற நாடுகளையும், பல சிறிய தீவுகளையும் கண்டுபிடித்தார்.

அவர் மேற்கொண்ட ஆராய்ச்சி பயணங்களால்தான் ஐரோப்பாவுக்கும், வடஅமெரிக்காவுக்கும் இடையிலான கடல்வழி வர்த்தகத்திற்கு வழி பிறந்தது. பல தேசங்களைக் கண்டுபிடித்த களிப்பிலும், களைப்பிலும் ஸ்பெயின் திரும்பிய கொலம்பஸ் 1506-ஆம் ஆண்டு மே மாதம் 20-ஆம் நாள் தனது 55-ஆவது வயதில் காலமானார். தனது கடைசி மூச்சுவரை இந்தியாவைக் கண்டுபிடித்து விட்டதாகவே நம்பியிருந்தார் கொலம்பஸ். ஐரோப்பியர்கள் இந்தியாவைத் தேடி புறப்பட்டதால்தான் உலகின் ஆழ அகலத்தை மனுகுலம் உணர முடிந்தது. கியூபா, பகாமஸ், மேற்க்கிந்திய தீவுகள், சிலி, பிலிப்பின்ஸ், பசுபிக் பெருங்கடல் என்று பல புதிய நாடுகளையும், சமுத்திரங்களையும், கடல்வழித் தளங்களையும் கண்டுபிடித்தனர்.



பூமியின் பல பிரதேசங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர உதவிய இந்தியா கடைசியாக 1498-ஆம் ஆண்டு வாஸ்கோடகாமாவால் கண்டுபிடிக்கப்பட்டது. கொலம்பஸ் மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் கனவு காண தயங்ககூடாது என்பதுதான். உலக வரலாற்றின் எந்த பக்கத்தைப் புரட்டினாலும் ஓர் உண்மை மட்டும் மாறாதிருக்கும். அந்தப் பக்கங்களை அலங்கரிப்பவர்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் கனவு கண்டவர்கள் என்பதுதான் அந்த உண்மை. கனவு காணத் துணிந்தவர்களால்தான் சாதித்தும் காட்ட முடிகிறது. உங்கள் கனவு உங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்.

கொலம்பஸ் இந்தியாவைக் கண்டுபிடிக்க கனவு கண்டபோது எத்தனை பேர் அதனை பகல்கனவு என்று எள்ளி நகையாடியிருப்பார்கள். உங்கள் கனவுகளையும் பகல்கனவு என்று சொல்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அது இயற்கையின் நியதி உங்களால் மாற்ற முடியாது. ஆனால் கனவு காண்பதோடு அதனை நனவாக்கும் நடவடிக்கைகளில் நீங்கள் தொய்வில்லாமல் தொடர்ந்து விடாமுயற்சியுடன் செயல்பட்டால் கொலம்பஸுக்கு அமெரிக்கா வசப்பட்டதைப்போல உங்களுக்கு உங்கள் கனவும் அதன் மூலம் நீங்கள் விரும்பும் வானமும் வசப்படும்.

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version