தமிழ்ப் பூங்கா > கதைகள்

சூதாட்டம்

(1/3) > >>

SweeTie:
அடிக்கடி கண்ணாடியில்  பார்த்து தன்  அலங்காரத்தை   சரிசெய்வதில் ஆர்வமாக  இருந்தாள்  நீலவேணி.   நீலவேணி என் அக்கா.  படித்து முடித்துவிட்டு  வேலை தேடி அலையாமல் அம்மாவுக்கு ஒத்தாசையாக வீட்டில் இருப்பவள்.  நீலவேணி  என்னைவிட  பத்து வயது மூத்தவள்  மிகவும் புத்திசாலி.   அவள் முகத்தில் சந்தோசத்தின்  எல்லையில்  நிற்பதுபோல் தெரிகிறது.  சுமாரான அழகுதான்.   டிவியில்  போய்க்கொண்டிருக்கும்   பாடலை  அவள் வாய் முணுமுணுப்பது தெரிகிறது.   யாரையோ எதிர்பார்ப்பதுபோல  வாசலுக்கும்  அறைக்கும்  நடுவில் நடை பயில்கிறாளா ?  அவளுடைய கைத்தொலைபேசியில்  யார்  செய்தி அனுப்புகிறார்கள்?   யாரோ வீட்டுக்கு வரப்போகிறார்கள் என்பது மட்டும் உறுதி எனக்கு.   ஏன் என்னிடம் யாரும் இது பற்றி பேசவில்லை.  அப்பா அம்மா கூட  யாரையோ எதிர்பார்பதுபோல   தெருவை எட்டி எட்டி பார்த்தபடி இருக்கிறார்கள்.   என்ன நடக்கிறது?   சரி  இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரியத்தான் போகிறது.  என் மனசை தே ற்றிக்கொண்டேன்.
சிறிது நேரத்தில் …..தெருவில்  ஒரு  வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்கிறது.   யன்னல் திரையை நீக்கி பார்க்கிறேன்.  வெள்ளை நிற ' ஹோண்டா '  தொடர்ந்து அப்பாவின் குரல்   

' மணி  இங்க ஓடி வா .. அக்காவை  ரெடியாக சொல்லு.. அவர்கள் வந்துவிட்டார்கள்;. அப்பா என்னை அவசரப்படுத்தினார்.
 
 ஓஹோ   இன்று பெண் பார்க்கும் படலம்  நடக்கப் போகிறதா?  என்னிடம் முதலே சொல்லாமல் விட்டார்களே என்று மனதில் ஒரு கோவம் இருந்தாலும்  ஓடிச் சென்று அக்காவிடம்  கூறிவிட்டு  தெருவுக்கு விரைந்தேன்.  வண்டியிலிருந்து  ஒருத்தர்  இறங்குகிறார்.  நாற்பது வயதை தண்டி இருப்பார் போல தெரிகிறார்.   கூடவே  ஆறு வயது மதிக்க கூடிய ஒரு பெண் பிள்ளையும்    ஒரு வயதாகிய பெண்மணியும்    இறங்குகிறார்கள்.   என் கண்கள்  மாப்பிள்ளையை தேடுகிறது.  அப்பாவும் அம்மாவும் அவர்களை அன்புடன்  உபசரித்து உள்ளே  அழைத்து செல்கிறார்கள்.  அப்படியென்றால்  இவர்தான் மாப்பிள்ளையோ?   எனக்கு தூக்கிவாரிப் போட்டது.

எனக்கு  அவர் என் அக்காவுக்கு மேட்ச்  இல்லை போல்தான் தெரிகிறது.    நீலவேணிக்கு  வயது  இருபத்தாறு  தான்.   எதற்கு இப்படி ஒருத்தரை  அவசரமாக திருமணம் செய்ய போகிறாள் ? இவளுக்கு  பைத்தியம்  பிடித்துவிட்டதா? இன்னும் காலம் இருக்கிறதே  என் மனதுக்குள்  ஒரே கேள்விகள்.
 
 உள்ளே ஓடிச் சென்று  ' அக்கா  மாப்பிள்ளை வந்துட்ட்டர்’.  என்றேன்.  அவள் முகத்தில்  ஆயிரம் வோல்ட்ஸ்  சூரியா  பல்பு   ஒளிர்வது தெரிந்தது.   'அக்காவிடம் சொல்லிவிடலாமா  அவருக்கு  வயது ரொம்ப அதிகம் போல இருக்கிறது .  அதுமட்டுமில்லாம  ஒரு பிள்ளை  வேறு இருக்கிறது என்று .  மனதில் எழுந்த கேள்வி மனசுடனேயே நின்றுவிட்டது.  அவள் முகத்தில் தெரியும்  சந்தோசத்தை நான் கெடுக்க விரும்பவில்லை.   எனது மனம் என்னை உறுத்திக்கொண்டே இருந்தது.  எனக்கு அவரை பிடிக்கவே இல்லை. 
 
அம்மா அவசரமாக அறையில் நுழைந்து  ‘நீலவேணி  தேநீர் எடுத்துட்டு  சீக்ரம் வாமா.   மாப்பிள்ளை வீட்டார் வந்துட்டாங்க ‘  என்றார். 

 அக்காவும்  அப்படியே தேநீர் தட்டுடன்  குனிந்த தலையுடன்  வரவேட்ப்பாறையை வந்து சேர்ந்தாள் .    என் மனமோ திக் திக் என்று அடித்துக்கொண்டிருந்தது. என்ன நடக்கப்போகிறது என்று  பார்க்க நானும் எல்லாரும் போலவே  அவர்கள் கூடவே இருந்தேன்.தேநீர் உபசாரம் மிக சிறப்பாக நடந்து கொண்டிருந்தது.   அந்த சிறு பெண்ணும் அக்காவை எற இறங்க  பார்த்துக்கொண்டிருந்தது.  மாப்பிள்ளை  அந்த பிள்ளையின் காதில் எதோ குசுகுசுத்தார்.  அந்த பிள்ளை என் அக்காவின் பக்கத்தில் வந்து ஒட்டிக்கொண்டதை    பார்த்ததும் எனக்கு  திக் என்றாகிவிட்டது.    எல்லோரும் சர்வ சாதாரணமாக பேசி கொண்டிருந்தார்கள்.   ஏன் எனக்கு மட்டும்  ,மனம் பேதலிக்கிறது என்று புரியவில்லை?  என் மனதில் ஆயிரம் கேள்விகள் ஓடிக்கொண்டிருந்தன ....

 கடைசியில் அப்பா அக்காவிடம்  ஒரேயொரு கேள்வி கேடடார்.
  ‘நீலவேணி உனக்கு மாப்பிள்ளையை பிடித்திருக்கிறதா?’   அவளும்  ஆம் என தலையசைத்தாள்.    அவர்களும் மிகுந்த சந்தோசத்துடன்  புறப்பட்டார்கள்.   அப்பாவும் அம்மாவும் சென்று வழி அனுப்பு வைத்தார்கள்.

அம்மாவும் அப்பாவும் அவர்களை அனுப்பிவிட்டு  வெறிச்சோடிய முகத்துடன் உள்ளே திரும்பினார்கள்.   எனக்கு அதுவும் புரியவில்லை.   இருவரும் ஆளை ஆள் திட்டிக்கொண்டார்கள்.

 ஓன்று மட்டும் தெரிந்தது.  அவர்களுக்கும் மாப்பிள்ளையை பிடிக்கவில்லை போலும்.  அப்படியாயின் எதற்கு  இந்த பெண் பார்க்கும் படலம் ?   என்ன நடக்கிறது   தலையை பிய்த்துக்கொள்ளலாம் போல இருக்கிறதே.   இனியும் தாமதிக்க கூடாது.  கண்டிப்பாக அக்காவிடம் இதை கேட்டுவிடவேண்டும் என்று நினைத்தேன்.   இரவு படுக்கைக்கு போகும் நேரம்.  அக்காவும் நானும் ஒரே அறையில்  தூங்குவோம்.    நெஞ்சில் துணிவை அழைத்துக்கொண்டு அக்காவிடம்  கேள்வி கேட்க துணிந்துவிட்டேன்.

‘அக்கா  நெஜமாவே உனக்கு அந்த மாப்பிள்ளை பிடிச்சிருக்கா?   எதுக்காக உன் வாழ்க்கையை அழித்துக்க போகிறாய்.   அவர் உனக்கு ‘மேட்ச் ‘ஆகவே   இல்ல.  அவருக்கு ஒரு பிள்ளை கூட இருக்கு.  எதுக்கு  நீ இரண்டாம் தாரமாக போகவேணும்.  அவருக்கு ரொம்ப வயசு போல் தெரியுது.  வேணாம் அக்கா  விட்டுவிடு ..  உனக்கென்ன  உன் அழகுக்குக்கும் படிப்புக்கும்  மாப்பிள்ளை கிடைக்காமலா  போகும்.’   என்றேன்.   அக்கா சிரித்தாள்.

  ‘ மணி  உனக்கு இப்போ இதெல்லாம் புரியாது.  நீ சின்ன பிள்ளை.   என் வயது வரும்போது உனக்கு புரியும் ‘என்றாள் 
   
‘இதற்கு எதுக்கு வயது ‘

  ‘மணி  சில விஷயங்கள் நாம் வாழ்க்கையில்அனுபவிக்கும்போதுதான் புரியும்.   உனக்கும் காலம் வரும்  நீயும் புரிஞ்சுக்குவா.’

‘ அக்கா கண்டிப்பா நன் இப்பிடி ஒருத்தர  கட்ட மாட்டேன்.’  என்றேன் உறுதியுடன்.  அக்கா திரும்பவும் சிரித்தாள்.

‘இதுக்கு வயசு வேற வரணுமா அக்கா’ என்றேன். 
   
‘மணி இந்த உலகத்துல யாரையும் நம்ப முடியாது.  நல்ல பையன்  அழகா இருக்கிறான்.  வயசு பொருந்தி இருக்கிறது என்று எல்லா பொருத்தமும் பார்த்து ,மணம் முடித்து எத்தனை   பெண்கள் திருமணம் ஆகியும்  தினமும் நரக  வேதனையில் இருக்கிறார்கள் தெரியுமா

’பிடிக்கல்லன்னாதான்  விவாகரத்து  பண்ணலாமே ... எதுக்கு பழைய காலம் போல  கஷ்டப்படணும்?’

‘மணி  விவாகரத்து செய்றதுகூட  இலேசான விஷயம் இல்ல.   அத்தோட  அது  ஒரு   மானசீகமான  வலி எத்தனை  பேர்  அந்த வலியை தாங்கிக்கொண்டு   நீதிமன்ற  வாசல் ல  வருடம் வருடமா காத்திருக்கிறாங்க  தெரியுமா? ‘

அப்படின்னா  இவர்  ரொம்ப நல்லவர் என்று எப்படி  சொல்லமுடியும்? 
‘மணி வாழ்க்கையே ஒரு  சூதாட்டம்  தான்.   யார் ஜெயிப்பாங்க  யார் தோற்பாங்கனு  யாருக்கும் தெரியாது. வாழ்ந்து  பார்த்துதான்  தெரிந்து கொள்ளணும்.’

அக்காவின் வழமையான  தத்துவம்.,   எனக்கு எதுவுமே புரியவில்லை.
 
‘  அக்கா அவரை உனக்கு முதலே தெரியுமா ‘...

‘ஆமா மணி   எனக்கு  அவரை ஏற்கனவே தெரியும்.  நங்கள் இருவரும்   முகநூலில்  தான்    அறிமுகமானோம்.  எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் என்னிடம் எல்லாம் சொல்லிவிட்டார்.  .  அதுவே எனக்கு அவர்மேல் ஒரு தனி மரியாதை கொடுத்தது.  இந்த காலத்தில் எத்தனை ஆண்கள்  பெண்களை ஏமாற்றுகிறார்கள் தெரியுமா...  திருமணமாகியும்  திருமணமாகாததுபோல்  நடிக்கிறார்கள்.   இவர் அப்படியல்ல.  அவருடைய மனைவி  இறந்த பிறகு  பிள்ளையை  நல்ல முறையில் வளர்க்க  விரும்புகிறார்.  அவர் பிள்ளையை எனது பிள்ளையாக வளர்க்கப்போகிறேன். தாய் இல்லாத ஒரு குழந்தைக்கு  தாயாக  இருப்பதில்  என்ன இருக்கிறது? பெற்றால்தான் பிள்ளையா?   பத்து மாதம்  மடியில் சுமப்பதை விட காலம் முழுவதும் மார்பில் சுமப்பது   பிடித்திருக்கிறது.    எனக்கு திருமணமாகி  பிள்ளை பிறக்கும் என்று எப்படி சொல்ல முடியும்?  ஒருவேளை  பிறக்காவிட்டால்.....   இதை எல்லாம் யோசித் தேன்.   அப்போது எனக்கு அவர் நல்லவராக தெரிந்தார்.  அதனால்தான்  அவரையே திருமணம் செய்ய துணிந்துவிட்டேன்’ என்றாள்

அடேங்கப்பா.....  இவளவு விஷயம் வாழ்க்கைல இருக்கா  னு எனக்கு  தூக்கி வாரிப்போட்டது

நிம்மதியுடன் தூங்க சென்றேன்.
 
தொடர்ந்து எங்கள் வீட்டில்  கல்யாண களை கட்டியது.    சில மாதங்களில் நீலவேணியின் கல்யாணம் மிகவும்  சிக்கனமாக   நடந்தேறியது.     அக்காவும் மாப்பிள்ளையும் அவர்கள் வீட்டுக்கு சென்று விட்டார்கள்.   காலம் ஓடிக்கொண்டிருந்தது.   அக்கா  தனக்கு இரண்டாவது  குழந்தை பிறக்க இருப்பதாக அறிவித்திருந்தாள்;   நீலவேணியின்  பெருந்தன்மையை   மனதுக்குள் வியந்துகொண்டேன். 
 
நாளை அக்காவுக்கு சீமந்தம் ... அம்மா  பரக்க பரக்க  பலகார வகைகள் செய்துகொண்டிருக்கிறாள்.   

என் அக்கா தாயாகப்போகிறாள்.   என் மனதில் இருந்த  குற்ற உணற்சிகள்  எல்லாமே மறைந்துவிட்டன.     யாரா இருந்தால் என்ன.?   என் அக்கா சந்தோஷமாக  இருக்கிறாள்.   அவள் குடும்பம் சந்தோஷமாக இருக்கிறதுஇதைவிட வேறு  என்ன வேண்டும்?

                                (சுபம்)
 

JeGaTisH:
;D ;D ;D  கதை அருமை ஸ்வீடி மா

அக்கா தம்பி....எனக்கு இந்த இரண்டு கதாபாத்திரங்களும் நெருக்கம் ஆனதாவே இருக்கு.

வாழ்த்துகள் ஸ்வீடி மா....தொடந்து எழுதுங்கள்...

KoDi:
புதிய சிந்தனை, எளிய எழுத்து நடை... கதை அருமை.  நன்றாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.  நிறைய எழுதுங்கள். நன்றி

joker:
மனம் கனக்கும் கதை ,அழகான எழுத்து நடை

வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பயணம்

AshiNi:
Arumaiyaana sirukadhai
Muyatchigal thodarattum sis

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version