FTC Forum

தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: KoDi on December 26, 2018, 08:18:45 PM

Title: தொடர்வண்டி தேவதை
Post by: KoDi on December 26, 2018, 08:18:45 PM
தொடர்வண்டி தேவதை

          ஐரோப்பாவின் கடுங்குளிர் காலம். ஒர் இரவு நேரம். கும்மிருட்டு. என் இரவு பணி  முடித்து தொடர்வண்டிக்காக காத்திருக்கிறேன்.   அது  இரவுநேர கடைசி தொடர்வண்டி. அது வரவில்லை என்றால் மறுநாள் அதிகாலை வரை  நான் குளிரில் நடுங்க வேண்டியதுதான். வேறு வழியில்லை.

          எங்கும் மயான அமைதி. சிறிது நேரத்தில் தொடர்வண்டி வரும் ஓசைகேட்டு  திரும்பி பார்க்கிறேன்.  தொலைவில் மின்விளக்குடன் அந்த கடைசி நேர தொடர்வண்டி என்னை நோக்கி வந்துகொண்டிருக்கிறது.  விரைவாக வந்து என்னை ஏற்றிக்கொள்ளாதா என நினைக்கவைக்கிறது கடும் குளிர். இந்நினைவு மனதைவிட்டு மறையும்முன்  என் கண்முன் முன் வந்து அதன் கதவுகளை திறந்து நான் ஏற காத்துநிற்கிறது தொடர்வண்டி.  குளிரிலிருந்து தப்பித்து மகிழ்வாக ஏறிக்கொள்கிறேன் அதனுள். பயணம் தொடர்கிறது.

          என் சட்டைப்பையில் பத்தாயிரம் யூரோக்களோடு  நான்மட்டும் தனியாக ஒரு பெட்டியில். துணைக்கு  யாரும் இல்லை.  அது கடைசி வண்டி என்பதால் கொள்ளையர்கள் அதில் ஏறி தனியாக பயணிக்கும் பயணியிடமிருந்து பொருட்களை பறித்துக்கொள்வார்கள் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.  அதனால் மனதில் ஒருவித பயம்.  உடல் குளிரிலும் மனம் பயத்திலும் நடுங்கிக்கொண்டிருக்கின்றன.   இந்த நேரத்தில்தான் நானிருக்கும் பெட்டியில்  யாரோ திடுதிப்பென்று   ஏறும் சத்தம் கேட்கிறது. ஏறியது  யாரென்று பார்க்கிறேன்.  என் பார்வையில் அகப்படவில்லை.

          சிறிது நேரத்தில் யாரோ  என்னை நோக்கி வரும் காலடி சத்தம் கேட்கிறது.  எனக்கோ என்னிடமிருக்கும் பணத்தை காப்பதிலேயே என்  முழு கவனமும் இருக்கிறது. என்னை  நெருங்கி வருபவரை பார்க்கும் தைரியம் எனக்கு இல்லை.  என் பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொள்கிறேன்.  என்னை நெருங்கிய அந்த காலடிச் சத்தம் என்னருகில் வந்து நிற்கிறது.  நான் தாக்கப்பட்டு என்னிடமிருக்கும் பணம் முழுவதும் சூறையாடப்படும் என்ற நினைவில் இதயம் படபடக்கிறது.

          என்ன ஆனாலும் சரி இனி நமது தாக்குதலை ஆரம்பித்து தப்பித்துவிடலாம் என்று முடிவுசெய்து என் முன் நிற்பது யாரென்று கண்களை உயர்த்திப் பார்க்கிறேன்.  ஆறு வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி கைகளை ஏந்தியவாறு என் கண்முன்னே நிற்கிறாள். அவளின் அப்பா பக்கத்து பெட்டியில் வேறொருவரிடம் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார்.  பசியில் வாடியிருந்த அச்சிறுமியின் முகம், ஏதாவது கிடைக்காதா என்ற ஏக்கத்தில் தவிக்கிறது.  அதை கண்டு மனம் பதைக்கிறேன்.  என் சட்டைப்பையினுள் கைவிட்டு அவளுக்கு கொடுக்க சில்லறைக்காசுகளை தேடுகிறேன்.

          இரண்டு யூரோ நாணயம் ஒன்று என் கையில் சிக்குகிறது. அதை எடுக்க முயற்சிக்கும் அக்கணத்தில்  என் மனதில் வேறொரு எண்ணம் எழுகிறது. இந்த சிறுமிக்கு இப்போது இதை நாம்  கொடுத்தால் அவள் பிச்சை எடுப்பதை நாமே ஊக்கப்படுத்துவதாக அமைந்துவிடாதா என்று என் அறிவு சொல்லுகிறது.   அறிவுக்கும் மனசுக்கும்  நடந்த அப்போராட்டத்தில் அறிவு வென்றுவிட,   என் கையில் சிக்கிய அந்த இரண்டு யூரோ  நாணயத்தை அப்படியே பையினுள் விட்டுவிட்டு,  அந்த சிறுமையை நோக்கி  "இப்படி சிறிய வயதில் பிச்சை எடுக்க கூடாது, உழைத்து சாப்பிடவேண்டும்"  என்று கூறி  அவளை  அங்கிருந்து போகச்  சொல்கிறேன். அவளும்  ஏதும் புரியாமல் குழம்பிய பார்வையோடு என்னை கடந்து அடுத்தப் பெட்டிக்கு செல்கிறாள்.

          அவள்  சென்ற பிறகு  என் மனதுக்குள் ஆயிரம் கேள்விகள். பசியில் வாடியிருக்கும்  அவ்விளங்குருத்தின் பசியைப் போக்காமல்  அவளிடம் தத்துவம் பேசி அனுப்பிவிட்டோமே, அவளுக்கு அறிவுரைகூறும் நேரமா இது  என்று என்னையே  நான் நொந்துக்கொள்கிறேன்.   மனதால்  அணுகவேண்டியதை அறிவால் அணுகிவிட்டோமே என்று எண்ணி  வருந்துகிறேன். இப்போது, என் பையிலிருந்த பணத்தின் கனத்தைவிட  என் இதயம் அதிகமாக கனப்பதை உணர்கிறேன்.  எப்படியாவது அச்சிறுமியைக் கண்டுபிடித்து என்னிடமிருக்கும் அந்த  இரண்டு ஈரோ நாணயத்தை அவளிடம் கொடுத்து ஏதாவது வாங்கிச் சாப்பிடச்சொல்லவேண்டுமென்று  முடிவுசெய்கிறேன்.

          தொடர்வண்டி அதன் இயல்பான வேகத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறது. என் மனமோ அதைவிட வேகமாக பயணிக்கிறது.   சிறுமியை எங்கே   கண்டுபிடிப்பது? அச்சிறுமி அடுத்த நிறுத்தத்தில் இறங்கி சென்றுவிட்டால் என்னாவது? அல்லது நான் அவளை கண்டுபிடிக்க முடியாமலே போய்விட்டால் என்ன செய்வது? என  என்னுள் பலகேள்விகள்.

          அடுத்த நிறுத்தம் வருவதற்குள் அவளைக் கண்டுபிடிக்கவேண்டும் என்று முடிவுசெய்து அவளை தேட ஆரம்பிக்கிறேன். யாரை என்னை விட்டு போகச் சொன்னேனோ அவளை தேடி இப்போது நான். என்னைவிட அச்சிறும்மி நல்லவள் போலும். அவள் எனக்கு அதிக வேலைவைக்கவில்லை.  சில நிமிடத் தேடலிலேயே அவளை கண்டுப்பிடிக்கிறேன்.   கடைசிப் பெட்டியில் கையேந்திக்கொண்டிருக்கிறாள்.

          அவளை நோக்கி கையசைத்து ஓடுகிறேன். அப்போதும் அவள் ஏதும் புரியாமல் நான் ஓடிவருவதை  குழப்பத்தோடு பார்த்துக்கொண்டிருக்கிறாள்.  வேகத்தில் என்  கால்கள் இடறி விழ  அவளின் பிஞ்சுக் கைகள் என்னை தூக்கிவிட முயற்சிசெய்கின்றன.   என் கண்களில் கடலாகக் கண்ணீர்.  இதயத்தில் அன்பு சுமந்து, என்னிடமிருக்கும் அந்த  இரண்டு ஈரோ நாணயத்தை அவளின் கைகளுக்கு இடம் மாற்றுகிறேன். சில நிமிடங்களுக்குமுன் அவளுக்கு கிடைக்காமல் போன அந்த நாணயம் மீண்டும் கிடைப்பதில் அவளுக்கு மகிழ்ச்சி.  என் பாரங்கள் அனைத்தும் குறைந்துவிட்ட  திருப்தி  என் மனதில்.  அவளின் அறிவுக்கண்களை திறக்க எண்ணிய என்னின்  மனக்கண்களை திறந்த அழகிய தேவதை  அவள். 

          நான் அவளிடம் கொடுத்தது வெறும் இரண்டு யூரோ நாணயம் அல்ல,  அது  மனிதர்கள் மீது அவள் வைத்திழந்திருந்த  நம்பிக்கை.   அந்த நம்பிக்கையை அவளுக்கு திரும்பக் கொடுத்துவிட்ட மனநிறைவில் தொடர்வண்டியிலிருந்து இறங்கி என் இல்லம் நோக்கி நடக்கிறேன் தனியொருவனாய்.
Title: Re: தொடர்வண்டி தேவதை
Post by: MaSha on December 26, 2018, 08:33:08 PM
It wonderfully describes how the narrator feels in each and every second! Very nice & beautiful story Kodi!
It's meaningful and makes us to reflect of kids like this little girl :) Thank you!
Some might see this as a story for Christmas-times.... but in fact we should realize this each and everyday, be thankful for what we got and know that we can learn also from babies!
spread love all over! :)