Author Topic: கடல் வெப்பமாவதால் ஒல்லியாகும் மீன்கள் : விஞ்ஞானிகள் பகீர் தகவல்  (Read 1777 times)

Offline kanmani

டொரன்டோ: பருவநிலை மாற்றத்தாலும் கடல் வெப்பம் அதிகரிப்பதாலும் மீன்களின் உடல் எடை குறைந்துகொண்டே வருகிறது என்கின்றனர்  ஆராய்ச்சியாளர்கள். 50 ஆண்டுகளில் மீன்களின் சைஸ் 20 சதவீதம் வரை குறைந்துவிடும் என்று கூறியுள்ளனர். கடல் வெப்பம் தொடர்பாக கனடாவின்  பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலையின் மீன்வள ஆய்வு மையம் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியது. உலகம் முழுவதும் பருவநிலை மாற்றம் மற்றும் கடல்  வெப்பம் அதிகரிப்பால் கடல் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி தீவிரமாக ஆராயப்பட்டது.

கம்ப்யூட்டர் உதவியுடன் 600-க்கும் மேற்பட்ட கடல் மீன் வகைகளின் மாதிரிகள் உருவாக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. இதில் தெரியவந்த தகவல்கள் பற்றி  ஆய்வு குழு தலைவர் பேராசிரியர் வில்லியம் சியூங் கூறியதாவது: சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் பருவநிலையில் பெருத்த மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. கடல் வெப்பமும் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால், மீன்களின் வாழ்க்கை முறை பாதிக்கப்படுவது தெரிந்ததே. கடல் வெப்பத்தால் மீன்களின் உடல் வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது என தற்போது தெரியவந்துள்ளது.

மிகச்சிறிய அளவில் தொடங்கி பல டன் வரை பல்வேறு சைஸ்களில் மீன்கள் இருக்கின்றன. கடல் வெப்பம் அதிகரிப்பால், மீன்களின் அதிகபட்ச  வளர்ச்சியானது குறைந்துகொண்டே போகிறது. 2000-ல் இருந்ததைவிட மீன்களின் எடை 2050-ல் 14 முதல் 20 சதவீதம் வரை குறையும் என்று தெரிகிறது.  பூமத்திய ரேகையை ஒட்டிய பகுதிகளில் உள்ள கடல்களில் (இந்திய பெருங்கடல், வங்கக்கடல், அரபிக்கடல் உள்பட) இந்த பாதிப்பு அதிகம் இருக்கிறது.  இவ்வாறு வில்லியம் சியூங் கூறினார்.

மீன்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி பிரிட்டிஷ் கொலம்பியாவின் மீன்வள ஆய்வு மையம் பல ஆண்டுகளாக ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. 30 ஆண்டுகளுக்கு  முன்பு டேனியல் பாலி என்ற ஆராய்ச்சியாளர் தலைமையில் இதுதொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. தண்ணீரில் உள்ள ஆக்சிஜனை எடுத்துக் கொண்டுதான்  மீன்கள் தொடர்ச்சியாக வளர்கின்றன. கடல் வெப்பம் அதிகரித்தால் போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் மீன்களின் உடல் வளர்ச்சி குறையும் என்று ஆய்வு  முடிவில் டேனியல் கூறியிருந்தார். அதன் அடிப்படையிலேயே தற்போதைய ஆய்வு நடத்தப்பட்டது.