Author Topic: கல்கியின் பொன்னியின் செல்வன்  (Read 55585 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
கல்கியின் பொன்னியின் செல்வன்

முதல் பாகம் : புது வெள்ளம்

16. அருள்மொழிவர்மர்



இன்றைக்குச் சுமார் 980 ஆண்டுகளுக்கு முன்னால் (1950ல் எழுதப்பட்டது) கோ இராசகேசரி வர்மர் பராந்தக சுந்தர சோழ மன்னர் தென்னாட்டில் இணையில்லாத சக்கரவர்த்தியாக விளங்கிவந்தார். நம் கதை நடக்கும் காலத்துக்குப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர் சிங்காசனம் ஏறினார். சென்ற நூறாண்டுகளாகச் சோழர்களின் கை நாளுக்கு நாள் வலுத்து வந்தது. சோழ சாம்ராஜ்யம் நாலாத் திசைகளிலும் பரவி வந்தது. எனினும் சுந்தர சோழர் பட்டத்துக்கு வந்த சமயத்தில் தெற்கேயும் வடக்கேயும் விரோதிகள் வலுப் பெற்றிருந்தார்கள். சுந்தர சோழருக்கு முன்னால் அரசு புரிந்த கண்டராதித்தர் சிவபக்தியில் திளைத்துச் 'சிவஞான கண்டராதித்தர்' என்று புகழ் பெற்றவர். அவர் இராஜ்யத்தை விஸ்தரிப்பதில் அவ்வளவாகச் சிரத்தை கொள்ளவில்லை. கண்டராதித்தருக்குப் பிறகு பட்டத்துக்கு வந்த அவருடைய சகோதரர் அரிஞ்சயர் ஓர் ஆண்டு காலந்தான் சிம்மாசனத்தில் இருந்தார். அவர் தொண்டை நாட்டிலுள்ள 'ஆற்றூரில் துஞ்சிய' பின்னர், அவருடைய புதல்வர் பராந்தக சோழர் தஞ்சைச் சிம்மாசனம் ஏறினார்.

பேரரசர் ஒருவருக்கு இருக்க வேண்டிய எல்லாச் சிறந்த அம்சங்களும் சுந்தரசோழ சக்கரவர்த்தியிடம் பொருந்தியிருந்தன. போர் ஆற்றல் மிக்க சுந்தரசோழர் தம் ஆட்சியின் ஆரம்பத்திலேயே தென் திசைக்குப் படையெடுத்துச் சென்றார். சேவூர் என்னுமிடத்தில் சோழ சைன்யத்துக்கும் பாண்டிய சைன்யத்துக்கும் பெரும் போர் நடைபெற்றது. அச்சமயம் மதுரை மன்னனாயிருந்த வீரபாண்டியனுக்குத் துணை செய்வதற்காகச் சிங்கள நாட்டு அரசன் மகிந்தன் ஒரு பெரிய சேனையை அனுப்பியிருந்தான். சோழர்களின் மாபெரும் வீர சைன்யம் பாண்டியர்களுடைய சேனையையும் சிங்கள நாட்டுப் படையையும் சேவூரில் முறியடித்தது. வீரபாண்டியன் படையிழந்து, முடியிழந்து, துணையிழந்து, உயிரை மட்டும் காப்பாற்றிக் கொண்டு போர்க்களத்திலிருந்து ஓடித் தப்பித்தான். பாலை நிலப் பகுதியொன்றின் நடுவில் இருந்த மலைக்குகையில் ஒளிந்து கொண்டு காலங்கழிக்கலானான்.

சேவூர்ப் போரில் ஈழத்துப் படை அநேகமாக நிர்மூலமாகி விட்டது. எஞ்சிய வீரர்கள் சிலர் போர்க்களத்தில் புகழையும் வீரத்தையும் உதிர்த்துவிட்டு, உயிரை மட்டும் கைகொண்டு ஈழ நாட்டுக்கு ஓடிச் சென்றார்கள்.

இவ்விதம் பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் நடக்கும் போர்களில் சிங்கள மன்னர்கள் தலையிட்டுப் பாண்டியர்க்கு உதவிப் படை அனுப்புவது சில காலமாக வழக்கமாய்ப் போயிருந்தது. இந்த வழக்கத்தை அடியோடு ஒழித்து விடச் சுந்தரசோழ சக்கரவர்த்தி விரும்பினார். ஆகையினால் சோழ சைன்யம் ஒன்றை இலங்கைக்கு அனுப்பிச் சிங்கள மன்னர்களுக்குப் புத்தி கற்பிக்க எண்ணினார். கொடும்பாளூர்ச் சிற்றரசர் குடும்பத்தைச் சேர்ந்த பராந்தகன் சிறிய வேளான் என்னும் தளபதியின் தலைமையில் ஒரு பெரும் படையைச் சிங்களத்துக்கு அனுப்பினார். துரதிர்ஷ்டவசமாக சோழர் படை சிங்களத்துக்கு ஒரே தடவையில் போய்ச் சேரவில்லை. அதற்குத் தேவையான கப்பல் வசதிகள் இல்லை. முதல் தடவை சென்ற சேனை முன்யோசனையின்றித் துணிந்து முன்னேறத் தொடங்கியது. மகிந்தரராஜனுடைய தளபதி ஸேனா என்பவனின் தலைமையில் சிங்களப்படை எதிர்பாராத விதத்தில் வந்து சோழப் படையின் பகுதியை வளைத்துக் கொண்டது. பயங்கரமான பெரும் போர் நடந்தது. அதில் சோழ சேனாதிபதியான பராந்தகன் சிறிய வேளான் தன் வீரப்புகழை நிலைநிறுத்திவிட்டு இன்னுயிரைத் துறந்தான்! 'ஈழத்துப் பட்ட பராந்தகன் சிறிய வேளான்' என்று சரித்திரக் கல்வெட்டுக்களில் பெயர் பெற்றான்.

இந்தச் செய்தியானது பாலைவனத்தில் மலைக் குகையில் ஒளிந்து கொண்டிருந்த வீரபாண்டியனுக்கு எட்டியது அம் மன்னன் மீண்டும் துணிவு கொண்டு வெளிவந்தான். மறுபடியும் பெருஞ்சேனை திரட்டிப் போரிட்டான். இம்முறை பாண்டிய சேனை அதோகதி அடைந்ததுடன், வீரபாண்டியனும் உயிர் துறக்க நேர்ந்தது. இந்தப் போரில் சுந்தரசோழரின் முதற் குமாரர் ஆதித்த கரிகாலர் முன்னணியில் நின்று பராக்கிரமச் செயல்கள் புரிந்தார்; 'வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பரகேசரி' என்ற பட்டத்தையும் அடைந்தார்.

எனினும், சிங்கள மன்னன் மகிந்தனுக்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும் என்ற விருப்பம் சுந்தரசோழ சக்கரவர்த்திக்கு மட்டுமல்ல, சோழ நாட்டுத் தளபதிகள், சாமந்தகர்கள், சேனாவீரர்கள் எல்லாருடைய மனத்திலும் குடிக்கொண்டிருந்தது. படையெடுத்துச் செல்ல ஒரு பெரிய சைன்யமும் ஆயத்தமாயிற்று. அதற்குத் தலைமை வகித்துச் செல்வது யார் என்னும் கேள்வி எழுந்தது. சுந்தரசோழரின் மூத்த புதல்வர் - பட்டத்து இளவரசராகிய ஆதித்த கரிகாலர், அச்சமயம் வடதிசைக்குச் சென்றிருந்தார். திருமுனைப்பாடி நாட்டிலும் தொண்டை மண்டலத்திலும் சில நாளாக ஆதிக்கம் செலுத்தி வந்த இரட்டை மண்டலப் படைகளை (ராஷ்டிர கூடர்களை) முறியடித்து விரட்டி விட்டுப் புராதனமான காஞ்சி நகரைத் தமது வாசஸ்தலமாகச் செய்து கொண்டிருந்தார். மேலும் வடதிசையில் படையெடுத்துச் செல்லுவதற்கு ஆயத்தமும் செய்து கொண்டிருந்தார்.

இந்நிலைமையில், ஈழமண்டலப் படைக்குத் தலைமை வகித்துச் செல்லச் சோழநாட்டின் மற்றத் தளபதிகளுக்குள்ளே பெரும்போட்டி ஏற்பட்டது. போட்டியிலிருந்து பொறாமையும் புறங்கூறலும் எழுந்தன. பழந்தமிழ்நாட்டில் போருக்குப் போகாமல் தப்பித்துக் கொள்ள விரும்பியவரைக் காண்பது மிக அருமை. போர்க்களத்துக்குச் செல்வது யார் என்பதிலேதான் போட்டி உண்டாகும். அதிலிருந்து சில சமயம் பொறாமையும் விரோதமும் வளருவதுண்டு.

ஈழநாட்டுக்குச் சென்று மகிந்தனைப் பழிக்குப் பழி வாங்கிச் சோழரின் வீரப்புகழை நிலை நாட்டுவது யார் என்பது பற்றி இச்சமயம் சோழ நாட்டுத் தலைவர்களிடையிலே போட்டி மூண்டது. இந்தப் போட்டியை அடியோடு நீக்கி அனைவரையும் சமாதனப்படுத்தும்படியாகச் சுந்தர சோழ மன்னரின் இளம் புதல்வர் அருள்மொழிவர்மர் முன்வந்தார்.

"அப்பா! பழையாறை அரண்மனையில் அத்தைகளுக்கும் பாட்டிகளுக்குமிடையில் இத்தனை நாள் நான் செல்லப் பிள்ளையாக வளர்ந்தது போதும். ஈழப் போருக்குத் தலைமை வகித்து நடத்த நானே இலங்கை சென்று வருகிறேன்!" என்றார் இளங்கோ அருள்மொழிவர்மர்.

அருள்மொழிவர்மருக்கு அப்போது பிராயம் பத்தொன்பதுதான். அவர் சுந்தரசோழரின் கடைக்குட்டிச் செல்வப் புதல்வர்; பழையாறை அரண்மனைகளில் வாழ்ந்த ராணிமார்களுக்கெல்லாம் செல்லக் குழந்தை; சோழ நாட்டுக்கே அவர் செல்லப் பிள்ளை.

சுந்தர சோழ மன்னர் நல்ல அழகிய தோற்றம் வாய்ந்தவர். அவருடைய தந்தை அரிஞ்சயர், சோழ குலத்துக்கு எதிரிகளாக இருந்த வைதும்பராயர் வம்சத்துப் பெண்ணாகிய கலியாணியை அவளுடைய மேனி அழகைக் கண்டு மோகித்து மணந்து கொண்டார். அரிஞ்சயருக்கும் கலியாணிக்கும் பிறந்த சுந்தரசோழருக்குப் பெற்றோர்கள் வைத்த பெயர் பராந்தகர். அவருடைய தோற்றத்தின் வனப்பைப் கண்டு நாட்டாரும் நகரத்தாரும் "சுந்தரசோழர்" என்று அவரை அழைத்து வந்தார்கள். அதுவே அனைவரும் வழங்கும் பெயராயிற்று.

அத்தகையருக்குப் பிறந்த குழந்தைகள் எல்லோருமே அழகில் மிக்கவர்கள்தான். ஆனால் கடைசியில் பிறந்த அருள்மொழிவர்மர் அழகில் அனைவரையும் மிஞ்சி விட்டார். அவருடைய முகத்தில் பொலிந்த அழகு, மனித குலத்துக்கு உரியதாக மட்டும் இல்லை; தெய்வீகத்தன்மை பொருந்தியதாக இருந்தது. அவர் குழந்தையாக இருந்தபோது சோழ வம்சத்து ராணிமார்கள் அவரை முத்தமிட்டு முத்தமிட்டுக் கன்னம் கனியச் செய்து விடுவார்கள். எல்லாரிலும் அதிகமாக அவரிடம் வாஞ்சையுடனிருந்தவள் அவருடைய தமக்கையாகிய குந்தவை. அருள்மொழிக்கு இரண்டு பிராயந்தான் மூத்தவளான போதிலும் தம்பியை வளர்க்கும் பொறுப்பு தன் தலை மேலேயே சுமந்திருப்பதாகக் குந்தவைப் பிராட்டி எண்ணியிருந்தாள். குந்தவையிடம் அருள்மொழியும் அதற்கிணையான வாஞ்சை வைத்திருந்தார். தமக்கை இட்ட கோட்டைத் தம்பி தாண்டுவது கிடையாது. இளைய பிராட்டி ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் போதும்; அதற்கு மாறாகப் பிரம்மாவும் விஷ்ணுவும் சிவனும் சேர்ந்து வந்து சொன்னாலும் அருள்மொழிவர்மர் பொருட்படுத்த மாட்டார். தமக்கையின் வாக்கே தம்பிக்குத் தெய்வத்தின் வாக்காயிருந்தது.

தம்பியின் முகத்தைத் தமக்கை அடிக்கடி உற்று நோக்குவாள். விழித்துக்கொண்டிருக்கும்போது மட்டுமல்லாமல் அவர் தூங்கும் போது கூட நாழிகைக் கணக்கில் பார்த்துக் கொண்டிருப்பாள். "இந்தப் பிள்ளையிடம் ஏதோ தெய்வீக சக்தி இருக்கிறது! அதை வெளிப்படுத்திப் பிரகாசிக்கச் செய்ய வேண்டியது என் பொறுப்பு!" என்று எண்ணமிடுவாள். தம்பி தூங்கும்போது அவனுடைய உள்ளங் கைகளை அடிக்கடி எடுத்துப் பார்ப்பாள். அந்தக் கைகளில் உள்ள ரேகைகள் சங்கு சக்கர வடிவமாக அவளுக்குத் தோன்றும். "ஆகா! உலகத்தை ஒரு குடை நிழலில் புரந்திடப் பிறந்தவன் அல்லவோ இவன்!" என்று சிந்தனை செய்வாள். ஆனால், சோழ சிங்காதனத்தில் இவன் ஏறுவான் என்று எண்ணுவதற்கே இடமிருக்கவில்லை. இவனுக்கு மூத்தவர்கள் பட்டத்துக்கு உரியவர்கள் இரண்டு பேர் இருந்தார்கள். பின், இவனுக்கு எங்கிருந்து ராஜ்யம் வரப்போகிறது! எந்தச் சிம்மாசனத்தில் இவன் ஏறப்போகிறான்? கடவுள் சித்தம் எப்படியோ, யார் கண்டது? உலகம் மிக்க விசாலமானது. எத்தனையோ தேசங்கள், எத்தனையோ ராஜ்யங்கள் இந்நிலவுலகில் இருக்கின்றன. புஜபல பராக்கிரமத்தினால் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாடு சென்று சிங்காதனம் ஏறி ராஜ்யம் ஆண்டவர்களைப் பற்றிக் கவிதைகளிலும் காவியங்களிலும் நாம் கேட்டதில்லையா? கங்கை நதி பாயும் வங்க நாட்டிலிருந்து துரத்தி அடிக்கப்பட்ட இளவரசன் படகிலேறி இலங்கைக்குச் சென்று அரசு புரியவில்லையா? ஆயிரம் வருஷமாக அந்தச் சிங்கள ராஜ வம்சம் நிலைத்து நிற்கவில்லையா?

இவ்விதமாகக் குந்தவைப் பிராட்டி ஓயாது சிந்தித்து வந்தாள். கடைசியாக, இலங்கைக்கு அனுப்பும் சைன்யத்துக்கு யார் தளபதியாகப் போவது என்பது பற்றி விவாதம் எழுந்தபோது அதற்குரியவன் அருள்மொழிதான் என்ற முடிவுக்கு வந்தாள்.

"தம்பி, அருள்மொழி! உன்னை ஒரு கணம் பிரிந்திருப்பதென்றாலும் எனக்கு எத்தனையோ கஷ்டமாகத்தானிருக்கிறது. ஆயினும் நானே உன்னைப் போகச் சொல்ல வேண்டிய சமயம் வந்துவிட்டது. இலங்கைப் படையின் தலைவனாக நீதான் போக வேண்டும்!" என்றாள்.

இளவரசர் குதூகலத்துடன் இதற்குச் சம்மதித்தார். அரண்மனை வாழ்விலிருந்தும் அந்தப்புர மாதரசிகளின் அரவணைப்பிலிருந்தும் எப்போது தப்புவோம் என்று அருள்மொழிவர்மரின் உள்ளம் துடித்துக் கொண்டிருந்தது. அருமைத் தமக்கையே இப்போது போகச் சொல்லிவிட்டாள்! இனி என்ன தடை?

குந்தவை தேவி மனம் வைத்து விட்டால் சோழ சாம்ராஜ்யத்தில் நடவாத காரியம் ஒன்றுமே கிடையாது!

இளங்கோ அருள்மொழிவர்மர் தென் திசைச் சோழ சைன்யத்தின் மாதண்ட நாயகர் ஆனார். இலங்கைக்கும் போனார். அங்கே படைத் தலைமை வகித்துச் சில காலம் போர் நடத்தினார். ஆனால், போர் எளிதில் முடிகிறதாயில்லை. அவர் போர் நடத்திய முறைக்கும் மற்றவர்களின் போர் முறைக்கும் வித்தியாசம் இருந்தது. தாய் நாட்டிலிருந்து அவர் வேண்டியபடியெல்லாம் தளவாடங்களும் சாமக் கிரியைகளும் சரியாக வந்து சேரவில்லை. ஆகையால் இடையில் ஒரு தடவை தாய்நாட்டுக்கு வந்திருந்தார். தந்தையிடம் சொல்லித் தம் விருப்பத்தின்படி எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டார். மறுபடியும் ஈழத்துக்குச் செல்ல ஆயத்தமானார்.

அருமைத் தம்பியைப் போர் முகத்துக்கு அனுப்புவதற்குக் குந்தவை தேவி பழையாறையின் பிரதான மாளிகையில் மங்கள நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தாள். அருள்மொழித்தேவர் புறப்பட்ட போது அரண்மனை முற்றத்தில் வெற்றி முரசுகள் முழங்கின; சங்கங்கள் ஆர்ப்பரித்தன; சிறுபறைகள் ஒலித்தன; வாழ்த்து கோஷங்கள் வானை அளாவின.

சோழ குலத்துத் தாய்மார்கள் அனைவரும் அரண்மனையின் செல்லக் குழந்தைக்கு ஆசி கூறி, நெற்றியில் மந்திரித்த திருநீற்றை இட்டு, திருஷ்டி கழித்து வழி அனுப்பினார்கள்.

அரண்மனை வாசலின் முகப்பில், அருள்மொழிவர்மர் வீதி வாசற்படியில் இறங்கவேண்டிய இடத்தில், குந்தவை தேவியின் தோழிப் பெண்கள் கைகளில் தீபமேற்றிய தங்கத் தட்டுகளை ஏந்திக் கொண்டு நின்றார்கள். தோழிப் பெண்கள் என்றால், சாமான்யப்பட்டவர்களா? தென்னாட்டிலுள்ள புகழ் பெற்ற சிற்றரசர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். பழையாறை அரண்மனையில் செம்பியன் மாதேவிக்குப் பணிவிடை செய்வதையும் குந்தவை பிராட்டிக்குத் தோழியாக இருப்பதையும் பெறற்கரும் பாக்கியமாகக் கருதி வந்திருந்தவர்கள். அவர்களிலே கொடும்பாளூர்ச் சிறிய வேளானின் புதல்வி வானதியும் இருந்தாள். இளவரசர் சற்றுத் தூரத்தில் வருவதைப் பார்த்ததும், அந்தப் பெண்கள் எல்லோருமே மனக்கிளர்ச்சி அடைந்தார்கள். இளவரசர் அருகில் வந்ததும் கையில் ஏந்திய தட்டுகளைச் சுற்றி ஆலாத்தி எடுத்தார்கள். அப்போது வானதியின் மேனி முழுதும் திடீரென்று நடுங்கிற்று. கையிலிருந்த தட்டு தவறிக் கீழே விழுந்து 'டணார்' என்ற சத்தத்தை உண்டாக்கியது. "அடடா! இது என்ன அபசகுனம்!" என்ற எண்ணம் எல்லாருடைய மனத்திலும் உண்டாயிற்று. ஆனால் தட்டு கீழே விழுந்த பிறகும் திரி மட்டும் எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு அனைவரும் நிம்மதி அடைந்தார்கள். 'இது மிக நல்ல சகுனம்' என்றே முதியவர்கள் உறுதி கூறினார்கள்.

எவ்விதக் காரணமும் இன்றிப் பீதியும் கலக்கமும் அடைந்து தட்டை நழுவவிட்ட பெண்ணைப் பார்த்துப் புன்னகை புரிந்துவிட்டு இளங்கோ அருள்மொழிவர்மர் மேலே சென்றார். அவர் அப்பால் சென்றதும் வானதியும் மயக்கமடைந்து கீழே சுருண்டு விழுந்து விட்டாள். 'ஆகா! இப்பேர்ப்பட்ட தவறு செய்து விட்டோ மே' என்ற எண்ணமே வானதியை அவ்வாறு மூர்ச்சையடைந்து விழும்படிச் செய்து விட்டது. குந்தவையின் கட்டளையின் பேரில் அவளை மற்றப் பெண்கள் தூக்கிச் சென்று ஓர் அறையில் மேடையில் கிடத்தினார்கள். குந்தவைப் பிராட்டி தம் சகோதரர் புறப்படுவதைப் பார்ப்பதற்குக் கூட நில்லாமல் உள்ளே சென்று வானதிக்கு மூர்ச்சை தெளிவிக்க முயன்றாள். வாசலில் நின்றபடியே வானதி சுருண்டு விழுந்ததைப் பார்த்துவிட்ட அருள்மொழிவர்மர் தாம் குதிரை மீது ஏறுவதற்கு முன்னால், "விழுந்த பெண்ணுக்கு எப்படியிருக்கிறது? மயக்கம் தெளிந்ததா?" என்று விசாரித்துவர ஆள் அனுப்பினார். விசாரிக்க வந்தவனிடம் குந்தவை தேவி, "இளவரசரை இங்கே சிறிது வந்து பார்த்துவிட்டுப் போகச் சொல்லு!" என்று திருப்பிச் சொல்லி அனுப்பினாள். தமக்கையின் சொல்லை என்றும் தட்டியறியாத இளவரசர் அவ்விதமே மீண்டும் அரண்மனைக்குள் வந்தார். வானதியைத் தம் தமக்கை மார்பின் மீது சாத்திக்கொண்டு மூர்ச்சை தெளிவிக்க முயன்று கொண்டிருந்த காட்சி அவருடைய மனத்தை உருக்கியது.

"அக்கா! இந்தப் பெண் யார்? இவள் பெயர் என்ன?" என்று இளங்கோ கேட்டார்.

"கொடும்பாளூர்ச் சிறிய வேளாரின் மகள்; இவள் பெயர் வானதி. கொஞ்சம் பயந்த சுபாவமுடையவள்!" என்றாள் குந்தவை.

"ஆகா! இப்போது இவள் மூர்ச்சையாகி விழுந்ததின் காரணம் தெரிந்தது. இந்தப் பெண்ணின் தந்தைதானே இலங்கை சென்று மீண்டும் வராமல் போர்க்களத்தில் மாண்டார்? அதை நினைத்துக் கொண்டாள் போலிருக்கிறது!" என்றார் இளவரசர்.

"இருக்கலாம். ஆனால் இவளைப்பற்றி நீ கவலைப்பட வேண்டாம்! நான் பார்த்துக்கொள்கிறேன்! இலங்கை சென்று விரைவில் வெற்றி வீரனாகத் திரும்பி வா! அடிக்கடி எனக்குச் செய்தி அனுப்பிக் கொண்டிரு!" என்றாள் இளைய பிராட்டி.

"ஆகட்டும்; இங்கே ஏதாவது விஷயம் நிகழ்ந்தாலும் எனக்குச் செய்தி அனுப்புங்கள்!" என்றார் இளங்கோ.

இச்சமயத்தில், இளவரசரின் இனிய குரலின் மகிமையினால்தானோ என்னவோ, வானதிக்கு மூர்ச்சை தெளிந்து நினைவு வரத் தொடங்கியது அவளுடைய கண்கள் முதலில் இலேசாகத் திறந்தன. எதிரில் இளவரசரைப் பார்த்ததும் கண்கள் அகன்று விரிந்தன. பின்னர் முகமும் மலர்ந்தது. அவளது பவழச் செவ்வாயில் தோன்றிய புன்னகையினால் கன்னங்கள் குழிந்தன.

உணர்வு வந்ததும் நாணமும் கூட வந்தது. சட்டென்று எழுந்து உட்கார்ந்தாள். பின்னால் திருப்பிப் பார்த்தாள். தன்னை இளையபிராட்டி தாங்கிக் கொண்டிருப்பதைத் தெரிந்து கொண்டு வெட்கினாள். நடந்ததெல்லாம் ஒரு கணத்தில் நினைவு வந்தது.

"அக்கா! இந்த மாதிரி செய்துவிட்டேனே?" என்று கண்களில் நீர் மல்கக் கூறினாள்.

இதற்குக் குந்தவை மறுமொழி சொல்வதற்குள் இளவரசர், "அதற்காக நீ ஒன்றும் கவலைப்பட வேண்டாம். வானதி! தவறுவது யாருக்கும் நேரிடுகிறதுதான். மேலும் உனக்கு அவ்விதம் நேருவதற்கு முக்கியக் காரணமும் இருக்கிறது. அதைத்தான் இளைய பிராட்டியிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்!" என்றார்.

வானதிக்குத் தான் காண்பது உண்மையா, கேட்பது மெய்யா என்ற சந்தேகம் வந்துவிட்டது. பெண்களைச் சாதாரணமாக ஏறிட்டுப் பார்க்காமலே போகும் வழக்கமுடைய இளவரசரா என்னுடன் பேசுகிறார்? எனக்கு ஆறுதல்மொழி கூறித் தேற்றுகிறார்? என் பாக்கியத்தை என்னவென்று சொல்வது? ஆகா! உடம்பு புல்லரிக்கிறதே! மறுபடியும் மயக்கம் வந்துவிடும் போலிருக்கிறதே!...

இளவரசர், அக்கா! சேனைகள் காத்திருக்கின்றன. நான் போய் வருகிறேன். நீங்கள் எனக்குச் செய்தி அனுப்பும் போது இந்தப் பெண்ணுக்கு உடம்பு எப்படியிருக்கிறது என்றும் சொல்லி அனுப்புங்கள். தாய் தகப்பனில்லாத இப் பெண்ணை நன்றாய்ப் பார்த்துக் கொள்ளுங்கள்!" என்று சொல்லிவிட்டுக் கிளம்பிச் சென்றார்.

இவற்றையெல்லாம் குந்தவைதேவியின் மற்றத் தோழிப் பெண்கள் மேல் மாடங்களிலிருந்து பலகணிகளின் வழியாகப் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டுமிருந்தார்கள். அவர்களுடைய உள்ளங்களில் பொறாமைத் தீ கொழுந்துவிட ஆரம்பித்தது.

அன்றுமுதல் குந்தவைப் பிராட்டி வானதியிடம் தனி அன்பு காட்டத் தொடங்கினாள். இணைபிரியாமல் தன்னுடனேயே வைத்துக் கொண்டிருந்தாள். தான் கற்றிருந்த கல்வியையும் கலைகளையும் அவளுக்கும் கற்பித்தாள். எங்கே போனாலும் அவளைத் தவறாமல் கூட அழைத்துச் சென்றாள். அரண்மனை நந்தவனத்துக்கு வானதியை அடிக்கடி அழைத்துச் சென்று குந்தவைதேவி அவளிடம் அந்தரங்கம் பேசினாள். தன் இளைய சகோதரனுடைய வருங்கால மேன்மையைக் குறித்துத் தான் கண்டு வந்த கனவுகளையெல்லாம் அவளிடமும் சொன்னாள். அதையெல்லாம் வானதியும் சிரத்தையுடன் கேட்டாள்.

மேலே கூறிய நிகழ்ச்சிக்குப் பிறகு, வானதி இன்னும் நாலைந்து தடவை உணர்வு இழந்து மூர்ச்சையடைந்தாள். அப்போதெல்லாம் குந்தவைப் பிராட்டி அவளுக்குத் தக்க சிகிச்சை செய்து திரும்ப உணர்வு வருவித்தாள். மூர்ச்சை தெளியும்போது வானதி விம்மி விம்மி அழுது கொண்டே எழுந்திருப்பாள்.

"என்னடி, அசடே! எதற்காக இப்படி அழுகிறாய்!" என்று குந்தவை கேட்பாள்.

"தெரியவில்லையே, அக்கா! மன்னியுங்கள்!" என்பாள் வானதி.

குந்தவை அவளைக் கட்டிக்கொண்டு உச்சி முகந்து ஆறுதல் கூறுவாள்.

இவையெல்லாம் மற்றப் பெண்களுக்கு மேலும் மேலும் பொறாமையை வளர்த்துக் கொண்டிருந்தன.

எனவே, குந்தவையும், வானதியும் ரதம் ஏறிக் குடந்தை சோதிடரின் வீட்டுக்குப் போனபிறகு அப்பெண்கள் மேற்கூறியவாறெல்லாம் பேசிக் கொண்டது இயல்பேயல்லவா?



உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
கல்கியின் பொன்னியின் செல்வன்

முதல் பாகம் : புது வெள்ளம்

17. குதிரை பாய்ந்தது!


ஒப்புவமையில்லாத தன் சகோதரன் அருள்மொழிவர்மனுக்குத் தகுந்த மணமகள் வானதிதான் என்று குந்தவை தீர்மானித்திருந்தாள். ஆனால் வானதியிடம் ஒரே ஒரு குறை இருந்தது. அது அவளுடைய பயந்த சுபாவந்தான். வீராதி வீரனை மணக்கப் போகிறவள், உலகத்தை ஒரு குடை நிழலில் ஆளப் போகும் புதல்வனைப் பெறப் போகிறவள், இப்படி பயங்கொள்ளியாயிருக்கலாமா? அவளுடைய பயந்த சுபாவத்தை மாற்றி அவளைத் தீரமுள்ள வீர மங்கையாக்க வேண்டுமென்று குந்தவை விரும்பினாள். அதற்காகவே இந்தப் பொம்மை முதலை விளையாட்டை ஏற்படுத்தியிருந்தாள். ஆனால் அந்தச் சோதனையில் கொடும்பாளூர்க் குமாரி வெற்றியுடன் தேறிவிட்டாள்.

குடந்தை சோதிடர் வீட்டிலிருந்து குந்தவை தேவியும் வானதியும் திரும்பி வந்ததும் அன்னப் படகில் ஏறிக்கொண்டார்கள். படகு சிறிது தூரம் சென்றது. ஆற்றங்கரையில் இருபுறமும் மரமடர்ந்த ஓரிடத்தில் படகை நிறுத்திவிட்டு குந்தவையும் அவளுடைய தோழிகளும் நீரில் இறங்கி விளையாடுவது வழக்கம். அந்த இடத்துக்கே இன்றும் போய் அவர்கள் இறங்கினார்கள்.

எல்லாரும் இறங்கியானதும், அப் பெண்களில் ஒருத்தி, "ஐயோ! முதலை!" என்று கூவினாள். அவர்கள் எந்தப் பெரிய மரத்தின் அடியில் இறங்கினார்களோ, அந்த மரத்துக்கு மறுபக்கத்தை அப்பெண் சுட்டிக் காட்டிக்கொண்டே "முதலை! முதலை!" என்று அலறினாள். உடனே எல்லாப் பெண்களும் சேர்ந்து, "ஐயோ! முதலை! பயமாயிருக்கிறதே!" என்றெல்லாம் கூச்சலிட்டுக் கொண்டு ஓடினார்கள்.

ஆனால் பயந்த சுபாவமுள்ள வானதி மட்டும் அச்சமயம் சிறிதும் பயப்படவில்லை. திறந்த வாயுள்ள பயங்கர முதலையைத் திடீரென்று சமீபத்தில் கண்டும் அவள் பீதி அடைந்துவிடவில்லை. மற்றவர்கள் எல்லாரும் குந்தவை தேவி கூறியிருந்தபடி மிகவும் பயந்ததுபோல் பாசாங்கு செய்தும் வானதி பயப்படவில்லை. "அக்கா! முதலைக்குத் தண்ணீரில் இருக்கும்போதுதான் பலமெல்லாம்! கரையில் கிடக்கும்போது அதனால் ஒன்றும் செய்ய முடியாது. இவர்களைப் பயப்படாதிருக்கச் சொல்லுங்கள்!" என்றாள் கொடும்பாளூர்க் குமரி.

"அடி, பொல்லாத கள்ளி! 'இது நிஜ முதலையல்ல; பொம்மை முதலை' என்பது உனக்கு முன்னாலேயே தெரியும் போலிருக்கிறது! யாரோ உனக்குச் சொல்லியிருக்க வேண்டும்!" என்று மற்றப் பெண்கள் கூறினார்கள்.

"நிஜ முதலையாயிருந்தால்கூட எனக்குப் பயம் கிடையாது. பல்லி, கரப்பான் பூச்சிகளைக் கண்டால்தான் எனக்குப் பயம்!" என்றாள் வானதி.

இந்தச் சமயத்திலேதான் அப்பெண்களைப் பயங்கரமான முதலை வாயிலிருந்து காப்பாற்றுவதற்கு வந்தியத்தேவன் வந்து சேர்ந்தான். குதிரை மேலிருந்து ஒரே குதியாய்க் குதித்து ஓடி வந்து வேலையும் வீசினான்.

முதலைக்கு முன் புறத்தில் வந்து நின்று அந்தக் கம்பீரத் தோற்றமுடைய மங்கை பேசியதைக் கேட்ட வல்லவரையனுக்கு உடம்பு புல்லரித்தது. அவள் தன்னோடு பேசவில்லையே என்று குடந்தை சோதிடர் வீட்டில் அவனுக்கு ஏற்பட்ட மனக்குறை தீர்ந்தது. ஆனால், அந்த முதலை, அவள் பின்னால் கிடந்த திறந்த வாயுடைய பயங்கர முதலை, ஏனோ அது, அவனுக்கு மனச் சங்கடத்தை அளித்துக் கொண்டிருந்தது. முதலைக்கு முன்னால் இவள் வந்து நிற்கும் காரணம் என்ன? 'அதைப் பற்றிச் சிரமம் வேண்டாம்' என்று இவள் சொல்வதின் பொருள் என்ன? இவ்வளவு நேரமும் அம்முதலை கிடந்த இடத்திலேயே கிடப்பதன் காரணந்தான் என்ன?

அந்த யுவதி மேலும் பேசினாள்:- "ஐயா! குடந்தையில் நீங்கள் அவசரப்பட்டுச் சோதிடர் வீட்டுக்குள்ளே வந்ததற்காக வருத்தம் தெரிவித்தீர்கள். அதற்கு மறுமொழி சொல்லாமலே நாங்கள் வந்துவிட்டோ ம். இதிலிருந்து சோழநாட்டுப் பெண்களே மரியாதை அறியாதவர்கள் என்ற கருத்து உங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். அப்படி நீங்கள் எண்ணிக்கொள்ள வேண்டாம். என்னுடன் வந்த பெண்ணுக்கு திடீரென்று மயக்கம் வந்துவிட்டபடியால், என் மனம் சிறிது கலங்கியிருந்தது. ஆகையினால்தான் தங்களுக்கு மறுமொழி சொல்லவில்லை!..."

'அடாடா! இது என்ன இனிமையான குரல்! இவள் பேசும் மொழிகளைக் கேட்டு என் நெஞ்சு ஏன் இப்படிப் பொங்குகிறது? தொண்டை ஏன் விக்கிக்கொள்கிறது? குழலும் வீணையும் மத்தளமும் போர் முரசுங்கூட இப்படி என்னைக் களிவெறிக் கொள்ளச் செய்ததில்லையே? இப்படி என்னைக் குலுக்கிப் போட்டதில்லையே? இந்த மங்கையின் பேச்சில் குறுக்கிட்டு ஏதேனும் சொல்ல வேண்டும் என்று பார்த்தால், ஏன் என்னால் முடியவில்லை? ஏன் நாக்கு மேலண்ணத்தில் இப்படி ஒட்டிக் கொள்கிறது? ஏன் இப்படிக் காற்றோட்டம் அடியோடு நின்று போயிருக்கிறது? ஏன் இந்த அரிசிலாற்றின் வெள்ளம் ஓடாமல் நின்றிருக்கிறது? அப்புறம் இந்த முதலை!... இது ஏன் இப்படிச் சும்மாக் கிடக்கிறது?

வந்தியத்தேவனுடைய உள்ளம் இவ்வாறு தத்தளிக்கையில் அந்த மங்கையின் குரல் மேலும் கனவில் கேட்பதுபோலக் கேட்டது:- "இப்போது கூட அபலைப் பெண்ணாகிய எங்களைக் காப்பாற்றுவதாக எண்ணிக் கொண்டு தான் இந்தக் காரியம் செய்தீர்கள்! முதலையின்மேல் வேலை எறிந்தீர்கள். இவ்வளவு வேகமாகவும் குறி தவறாமலும் வேல் எறியக்கூடிய வீரர்களைக் காண்பது அரிது!..."

மரத்தடியில் ஒதுங்கி நின்று கேட்டுக்கொண்டிருந்த பெண்கள் இப்போது மறுபடியும் கலீர் என்று சிரித்தார்கள். அச்சிரிப்பினால் வந்தியத்தேவனுடைய மோகக் கனவு கலைந்தது. அந்த மங்கையின் பேச்சாகிய மாயமந்திரத் தளை படீர் என்று அறுபட்டது. முதலையை இன்னொரு தடவை உற்றுப் பார்த்தான். எதிரேயிருந்த பெண்ணைச் சற்றும் பொருட்படுத்தாமல் விலகிச் சென்று முதலையின் சமீபம் அடைந்தான். அதன் முதுகில் பாய்ந்திருந்த தன் வேலை அசைத்து எடுத்தான்! வேல் குத்தியிருந்த துவாரத்தின் வழியாக இரத்தம் பீறிட்டுக் கொண்டு வரவில்லை! பின், என்ன வந்தது! கொஞ்சம் வாழைநாரும் பஞ்சும் வெளிவந்தன!

மறுபடியும் அந்தத் துஷ்டப் பெண்கள் சிரித்தார்கள். இம்முறை கெக்கலிக் கொட்டிப் பலமாகச் சிரித்தார்கள்.

வல்லவரையனுடைய உள்ளமும் உடலும் குன்றிப்போயின. இம்மாதிரி அவமானத்தை இதற்குமுன் அவன் எக்காலத்திலும் அடைந்ததில்லை. இத்தனை பெண்களுக்கு முன்னால் இப்படிப்பட்ட பேரவமானமா? - இல்லை! இல்லை! இவர்கள் அரக்கிகள்! - இவர்கள் பக்கத்திலே நிற்கக் கூடாது! இவர்களுடைய முகத்தை ஏறிட்டும் பார்க்கக் கூடாது! சீச்சீ! என் அருமை வேலாயுதமே! உனக்கு இந்தக் கதியா நேர்ந்தது? இத்தகைய அவமானமா உனக்கு நேர்ந்தது? இதை எப்படி நிவர்த்தி செய்து உனக்கு நேர்ந்த மாசைத் துடைக்கப் போகிறேன்!...

இவ்வளவு எண்ணமும் சில கணநேரத்தில் வந்தியத்தேவனுடைய மனத்தில் ஊடுருவிச் சென்றன. அங்கு நின்று சிரித்தவர்கள் மட்டும் ஆண் மக்களாயிருந்திருந்தால், அங்கேயே ஒரு போர்க்களம் ஏற்பட்டிருக்கும்! சிரிக்கத் துணிந்தவர்கள் அக்கணமே உயிரே இழந்திருப்பார்கள்! அரிசிலாற்றின் செந்நீர்ப் பிரவாகத்துடன் அவர்களுடைய இரத்தமும் கலந்து ஓடியிருக்கும்! ஆனால் இவர்கள் பெண்கள்! இவர்களை என்ன செய்ய முடியும்? இவர்களை விட்டு ஓடிப்போவது ஒன்றுதான் செய்யக்கூடிய காரியம்!

தன் உள்ளத்தை நிலைகுலையச் செய்த மங்கையின் முகத்தைக் கூட ஏறிட்டுப் பார்க்காமல் வந்தியத்தேவன் பாய்ந்து ஓடி நதிக்கரைமீது ஏறினான். அங்கு நின்றிருந்த அவனுடைய குதிரை அச்சமயம் ஒரு கனைப்புக் கனைத்தது. குதிரையும்கூட அப்பெண்களுடன் சேர்ந்து தன்னைப் பார்த்துச் சிரிப்பதாகவே வந்தியத்தேவனுக்குத் தோன்றியது. எனவே தன் கோபத்தையெல்லாம் அக்குதிரையின் பேரில் காட்டினான். அதன்மேல் பாய்ந்து ஏறி உட்கார்ந்து தலைக் கயிற்றினால் 'சுளீர் சுளீர்' என்று இரண்டு அடி கொடுத்தான்! அந்த ரோஷமுள்ள குதிரை நதிக்கரைச் சாலையின் வழியாகப் பிய்த்துக்கொண்டு பாய்ந்தோடியது.

சிறிது நேரம் வரையில் குந்தவைப் பிராட்டி குதிரைபோன திசையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். குதிரை கிளப்பிய புழுதி அடங்கும் வரையில் பார்த்துக்கொண்டு நின்றாள்.

பின்னர், தோழிப் பெண்களைத் திரும்பிப் பார்த்து, "பெண்களா! உங்களுக்கு மட்டுமரியாதை இன்னும் தெரியவில்லை. நீங்கள் அப்படி சிரித்திருக்கக் கூடாது. நாம் தனியாயிருக்கும் போது, எப்படி வேண்டுமானாலும் நீங்கள் சிரித்துக் கொம்மாளம் அடிக்கலாம். அன்னிய புருஷன் வந்திருக்கும்போது அடக்கமாயிருக்க வேண்டாமா? சோழ நாட்டுப் பெண்களைப் பற்றி அந்த வாலிபன் என்ன எண்ணிக் கொண்டு போவான்?" என்று சொன்னாள்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
கல்கியின் பொன்னியின் செல்வன்

முதல் பாகம் : புது வெள்ளம்

18. இடும்பன்காரி

கொள்ளிடத்துப் பரிசில் துறையில் ஆழ்வார்க்கடியான் நம்பி என்னும் திருமலையப்பனை விட்டு விட்டு வந்துவிட்டோம். அந்த வீர வைஷ்ணவரை இப்போது கொஞ்சம் கவனிக்கலாம்.

வந்தியத்தேவன் குதிரை ஏறிக் குடந்தை நகர் நோக்கிச் சென்றதும், திருமலை அவன் போன திசையைப் பார்த்துக் கொண்டே தனக்குள் சொல்லிக் கொண்டான்: "இந்த வாலிபன் மிகப் பொல்லாதவனாயிருக்கிறான். நாம் தட்டியில் நுழைந்தால் இவன் கோலத்தில் நுழைகிறான். இவன் உண்மையில் யாருடைய ஆள், எதற்காக, எங்கே போகிறான் என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. கடம்பூர் மாளிகையில் நடந்த சதிக் கூட்டத்தில் இவன் கலந்துகொண்டானா என்றும் தெரியவில்லை. நல்ல வேளையாகக் குடந்தை சோதிடரைப்பற்றி இவனிடம் சொல்லி வைத்தோம். நம்மால் அறியமுடியாததைக் குடந்தை சோதிடராவது தெரிந்து கொள்ளுகிறாரா பார்க்கலாம்!...

"என்ன சுவாமி! அரசமரத்தோடு பேசறீங்களா? உங்களுக்கு நீங்களே பேசிக்கிறீர்களா?" என்ற குரலைக் கேட்டு ஆழ்வார்க்கடியான் திரும்பிப் பார்த்தான். கடம்பூரிலிருந்து வந்த வந்தியத்தேவனுக்குக் குதிரை பிடித்துக்கொண்டு வந்த பணியாள் பக்கத்தில் நின்றான்.

"அப்பனே! நீயா கேட்டாய்? நான் எனக்கு நானே பேசிக் கொள்ளவும் இல்லை; அரச மரத்தோடு பேசவும் இல்லை. இந்த மரத்தின் மேலே ஒரு வேதாளம் இருக்கிறது. அதனோடு சிறிது சல்லாபம் செய்தேன்!" என்றான் திருமலையப்பன்.

"ஓஹோ! அப்படிங்களா! அந்த வேதாளம் சைவமா? வைஷ்ணவமா?" என்றான் அந்த ஆள்.

"அதைத்தான் நானும் கேட்டுக்கொண்டிருந்தேன். அதற்குள்ளே நீ வந்து குறுக்கிட்டாய். வேதாளம் மறைந்துவிட்டது. போனால் போகட்டும்! உன் பெயர் என்ன அப்பனே?"

"எதற்காகக் கேட்கறீங்க, சுவாமி!"

"நடுக் கொள்ளிடத்தில் படகு கவிழாமல் காப்பாற்றினாயே! அப்படிப்பட்ட புண்ணியவானாகிய உன்னை நான் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டாமா?"

"என் பெயர்... என் பெயர்... இடும்பன்காரி, சுவாமி!" என்று இழுத்தாற்போல் சொன்னான்.

"ஓ! இடும்பன்காரியா? எப்போதோ கேட்ட ஞாபகமாயிருக்கிறதே!"

இடும்பன்காரி அப்போது ஒரு விசித்திரமான காரியம் செய்தான். தன்னுடைய விரித்த கைகள் இரண்டையும் ஒன்றின் மேல் ஒன்றைக் குப்புறுத்தி வைத்துக் கொண்டு, இரு ஓரத்துக் கட்டை விரல்களையும் ஆட்டினான். ஆட்டிக் கொண்டே திருமலையப்பனின் முகத்தைப் பார்த்தான்.

"அப்பனே! இது என்ன சமிக்ஞை? எனக்கு விளங்கவில்லையே?" என்றான் திருமலை.

அப்போது இடும்பன்காரியின் கரியமுகம் மேலும் சிறிது கருத்தது. கண் புருவங்கள் நெரிந்தன.

"நானா? நான் ஒன்றும் சமிக்ஞை செய்யவில்லையே?" என்றான்.

"செய்தாய், செய்தாய்! நான் தான் பார்த்தேனே? பரதநாட்டிய சாஸ்திரத்தில் திருமாலின் முதல் அவதாரத்துக்கு ஒரு அஸ்தம் பிடிப்பதுண்டு. அது மாதிரி செய்தாயே?"

"திருமாலின் முதல் அவதாரம் என்றால்? அது என்ன? எனக்குத் தெரியவில்லை சுவாமி!"

"விஷ்ணுவின் முதல் அவதாரம் தெரியாதா? மச்சாவதாரம்!"

"மீனைச் சொல்லுறீங்களா!"

"ஆமாம், அப்பனே, ஆமாம்!"

"நல்ல வேளை, சாமி! உங்கள் கண்ணே விசித்திரமான கண்ணாயிருக்கிறதே! வெறும் மரத்தின்மேலே வேதாளம் தெரிகிறது. என் வெறுங்கையிலே மச்சாவதாரம் தெரிகிறது! ஒரு வேளை மீன் பேரிலே சாமியாருக்குக் கொஞ்சம் ஆசை அதிகமோ?"

"சேச்சே! அந்த மாதிரியெல்லாம் சொல்லாதே, அப்பனே! அது போனால் போகட்டும். நம்மோடு படகிலே ஒரு வீர சைவர் வந்தாரே, அவர் எந்தப் பக்கம் போனார் பார்த்தாயா?"

"பார்க்காமலென்ன? பார்த்தேன். நான் குதிரை வாங்கப்போன பக்கந்தான் அவரும் வந்தார். உங்களைப் பற்றித் திட்டிக் கொண்டே வந்தார்."

"என்னவென்று என்னைத் திட்டினார்?"

"உங்களை மறுபடியும் அந்த வீர சைவர் பார்த்தால் உங்கள் முன் குடுமியைச் சிரைத்துத் தலையை மொட்டையடித்து..."

"ஓகோ! அந்த வேலைகூட அவருக்குத் தெரியுமா?"

"உங்கள் திருமேனியிலுள்ள நாமத்தையெல்லாம் அழித்து விட்டுத் திருநீற்றைப் பூசி விடுவாராம்!"

"அப்படியானால் அவரைக் கட்டாயம் நான் பார்த்தேயாக வேண்டும். அவருக்கு எந்த ஊர் உனக்குத் தெரியுமா?"

"அவருக்குப் புள்ளிருக்கும் வேளூர் என்று அவரே சொன்னாருங்க!"

"அந்த வீர சைவரைப் போய்ப் பார்த்துவிட்டுத்தான் மறுகாரியம். அப்பனே! நீ எங்கே போகப் போகிறாய்! ஒரு வேளை நீயும் அந்த வழி வரப்போகிறாயோ?"

"இல்லை, இல்லை. நான் எதற்காக அங்கே வருகிறேன்? திரும்பிக் கொள்ளிடத்தைத் தாண்டிக் கடம்பூருக்குத்தான் போகிறேன். இல்லாவிட்டால் எஜமானர் என் கண்ணைப் பிடுங்கிவிடமாட்டாரா?"

"அப்படியானால், உடனே திரும்பு. அதோ படகு புறப்படப் போகிறது!"

இடும்பன்காரி திரும்பிப் பார்த்தபோது, ஆழ்வார்க்கடியான் கூறியது உண்மை என்று தெரிந்தது. படகு புறப்படும் தருவாயில் இருந்தது.

"சரி, சாமியாரே! நான் போகிறேன்" என்று சொல்லிவிட்டுப் படகுத் துறையை நோக்கி விரைந்து சென்றான் இடும்பன்காரி.

பாதி வழியில் ஒரு தடவை திரும்பிப் பார்த்தான். அதற்குள் ஆழ்வார்க்கடியான் ஒரு விந்தையான காரியம் செய்திருந்தான். மளமளவென்று அந்த அரசமரத்தின்மீது பாய்ந்து ஏறிக் கிளைகள் அடர்ந்திருக்கும் இடத்துக்குப் போய் விட்டான். ஆகையால் இடும்பன்காரியின் கண்ணோட்டத்தில் அவன் விழவில்லை.

இடும்பன்காரி நதியின் பரிசில் துறையை அடைந்தான். படகோட்டிகளில் ஒருவன், "அக்கரைக்கு வருகிறாயா, அப்பா?" என்று கேட்டான்.

"இல்லை, அடுத்த படகில் வரப்போகிறேன், நீ போ!" என்றான் இடும்பன்காரி.

"அடே! இவ்வளவுதானா? நீ வருகிற வேகத்தைப் பார்த்து விட்டுப் படகை நிறுத்தினேன்!" என்று சொல்லி ஓடக்காரன் கோல் போட்டு ஓடத்தை நதியில் செலுத்தினான்.

இதற்குள் அரசமரத்தின் நடுமத்தி வரையில் ஏறி நன்றாக மறைந்து உட்கார்ந்து கொண்டே திருமலை, "ஓகோ! நான் நினைத்தது சரியாகப் போயிற்று. இவன் படகில் ஏறவில்லை. திரும்பித்தான் வரப்போகிறான். வந்த பிறகு எந்தப் பக்கம் போகிறான் என்று பார்க்கவேண்டும். இவனுடைய கைகள் மச்சஹஸ்த முத்திரை காட்டியதை நான் நன்றாகப் பார்த்தேன். அதன் பொருள் என்ன? மீன்! மீன்! மீன் சின்னம் எதைக் குறிக்கிறது? ஆ! மீன் பாண்டியனுடைய கொடியில் பொறித்ததல்லவா? ஒரு வேளை, ஆஹாஹா!... அப்படியும் இருக்குமோ! பார்க்கலாம்! சிறிது பொறுமையுடன் இருந்து பார்க்கலாம். பொறுத்தவர் பூமி ஆள்வார், பொங்கியவர் காடாள்வார்... ஆனால், இந்தக் காலத்தில் பூமி ஆள்வதைக் காட்டிலும் காடு ஆள்வதே மேலானது என்று தோன்றுகிறது! ஆனாலும் பொறுத்துப் பார்க்கலாம்!..." இவ்விதம் அரச மரத்திலிருந்த அருவமான வேதாளத்தினிடம் திருமலை சொல்லிக் கொண்டிருந்தான்.

விரைவில் அவன் எதிர்பார்த்தபடியே நடந்தது. படகு இடும்பன்காரியை ஏற்றிக் கொள்ளாமலே சென்றது. இடும்பன்காரி நதிக்கரையிலிருந்தபடி அரசமரத்தடியை உற்று உற்றுப் பார்த்தான். பிறகு நாலாத் திசைகளிலும் துளாவிப் பார்த்தான். ஆழ்வார்க்கடியான் எங்குமில்லையென்பதை நன்கு தெரிந்து கொண்டு திரும்பி அதே அரசமரத்தடிக்கு வந்து சேர்ந்தான். இன்னும் ஒரு தடவை சுற்றுமுற்றும் நன்றாய்ப் பார்த்துவிட்டு அந்த மரத்தடியிலேயே உட்கார்ந்து கொண்டான். எதையோ, அல்லது யாரையோ எதிர்ப்பார்ப்பவன் போல் அவனுடைய கண்கள் நாலாபுறமும் சுழன்று நோக்கிக் கொண்டிருந்தன. ஆனால், மரத்தின் மேலே மட்டும் அவன் அண்ணாந்து பார்க்கவில்லை. பார்த்திருந்தாலும் திருமலை நன்றாகத் தம் திருமேனியை மறைத்துக் கொண்டிருந்தபடியால் மரத்தின் மேல் அவன் உட்கார்ந்திருப்பது இடும்பன்காரிக்குத் தெரிந்திராது.

சுமார் ஒரு நாழிகை நேரம் இவ்விதம் சென்றது. திருமலைக்குக் கால்கள் மரத்துப்போகத் தொடங்கின. இனி வெகு நேரம் மரத்தின் மேல் இருக்க முடியாதென்று தோன்றியது. இடும்பனோ மரத்தடியிலிருந்து எழுந்திருக்கும் வழியாகத் தோன்றவில்லை. தப்பித்துப் போவது எப்படி! எவ்வளவு ஜாக்கிரதையாக மரத்தின் மறுபக்கத்தில் இறங்கினாலும் ஏதாவது சத்தம் கேளாமல் இராது! கேட்டால் இடும்பன்காரி உடனே பார்த்துவிடுவான். அவனோ இடுப்பில் ஒரு கூரிய கொடுவாளைச் செருகிக்கொண்டிருந்தான். அதைத் தன் பேரில் அவன் பிரயோகிக்க மாட்டான் என்பது என்ன நிச்சயம்?

வேறு என்னதான் செய்வது? பேய் பிசாசைப் போல் பயங்கரமாகச் சத்தமிட்டுக்கொண்டு இடும்பனின் மேலேயே குதிக்கலாமா? குதித்தால் தன்னை வேதாளம் என்று நினைத்துக் கொண்டு அவன் பயத்தினால் மூர்ச்சையடைந்து விழலாம் அல்லவா? அல்லது தப்பித்து ஓடப் பார்க்கலாம் அல்லவா? அச்சமயம் தானும் தப்பி ஓடிவிடலாம்!... இவ்விதம் திருமலை எண்ணிய சமயத்தில், அவனுடைய சோதனை முடிவடையும் எனத் தோன்றியது.

ஓர் ஆள் தென்மேற்கிலிருந்து, அதாவது குடந்தைச் சாலை வழியாக, வந்துகொண்டிருந்தான். அவனுக்காகத்தான் இடும்பன்காரி இத்தனை நேரமாய்க் காத்திருக்கிறான் என்று திருமலையின் உள்ளுணர்ச்சி கூறியது.

புது ஆள் வந்ததைப் பார்த்ததும் அரசமரத்தடியில் உட்கார்ந்திருந்த இடும்பன் எழுந்து நின்றான்.

வந்தவன், முன்னால் இடும்பன் செய்த சமிக்ஞையைச் செய்தான். அதாவது ஒரு விரித்த புறங்கையின்மேல் இன்னொரு விரித்த கையை வைத்து, இரண்டு கட்டை விரல்கள் ஆட்டி, மச்ச ஹஸ்தம் பிடித்துக் காட்டினான். அதைப் பார்த்த இடும்பனும் அதே மாதிரி செய்து காட்டினான்.

"உன் பெயர் என்ன?" என்று வந்தவன் கேட்டான்.

"என் பெயர் இடும்பன்காரி. உன் பெயர்?"

"சோமன் சாம்பவன்!"

"உன்னைத்தான் எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்தேன்."

"நானும் உன்னைத் தேடிக்கொண்டுதான் வந்தேன்."

"நாம் எந்தத் திசையில் போகவேண்டும்?"

"மேற்குத் திசையில்தான்!"

"எவ்விடத்துக்கு?"

"பகைவனின் பள்ளிப்படைக்கு!"

"திருப்புறம்பயம் அருகில்..."

"இரைந்து பேசாதே! யார் காதிலாவது விழப்போகிறது" என்று சொல்லிச் சோமன் சாம்பவன் நாலாப்பக்கமும் பார்த்தான்.

"இங்கே ஒருவரும் இல்லை. முன்னாலேயே நான் பார்த்துவிட்டேன்."

"பக்கத்தில் எங்கும் ஒளிந்திருக்கவும் இடமில்லையே?"

"கிடையவே கிடையாது!"

"அப்படியானால் புறப்படு. எனக்கு அவ்வளவு நன்றாக வழி தெரியாது. நீ முன்னால் போ! நான் சற்றுப் பின்னால் வருகிறேன். அடிக்கடி நின்று நான் பின்னால் வருகிறேனா என்று பார்த்துப் போ!"

"ஆகட்டும். வழி நல்ல வழியல்ல. காடும் மேடும் முள்ளும் கல்லுமாயிருக்கும் ஜாக்கிரதையாகப் பார்த்து நடந்து வர வேண்டும்!"

"சரி, சரி, நீ புறப்பட்டுப் போ! காட்டு வழியாயிருந்தாலும் யாராவது எதிர்ப்பட்டால் மறைந்து கொள்ளவேண்டும். தெரிந்ததா?"

"தெரிந்தது, தெரிந்தது!"

இடும்பன்காரி கொள்ளிடக் கரையோடு மேற்குத் திசையை நோக்கிப் போனான். அவனுக்குச் சற்றுப் பின்னால் சோமன் சாம்பவனும் தொடர்ந்து சென்றான்.

இருவரும் கண்ணுக்கு மறையும் வரையில் ஆழ்வார்க்கடியான் மரத்தின் மேலேயே இருந்தான். எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டும் கேட்டுக்கொண்டும் இருந்தான்.

"ஆஹா! காலம் பொல்லாத காலம்! எதிர்பாராத காரியங்கள் எல்லாம் நடைபெறுகின்றன. ஏதோ ஒரு பெரிய மர்மமான காரியத்தைத் தெரிந்துகொள்ளக் கடவுள் அருளால் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. இனி நம்முடைய சாமர்த்தியத்தைப் பொறுத்தது விஷயத்தை அறிவது. கடம்பூர் மாளிகையில் அறை குறையாகத்தான் தெரிந்து கொள்ள முடிந்தது. இங்கே அப்படி ஏமாந்து போகக்கூடாது. திருப்புறம்பயம் பள்ளிப்படையென்றால், கங்க மன்னன் பிரிதிவீபதியின் பள்ளிப் படையைத்தான் சொல்லியிருக்க வேண்டும். அந்தப் பள்ளிப் படையைக் கட்டி நூறு வருஷம் ஆகிறது. ஆகையால் பாழடைந்து கிடக்கிறது. சுற்றிலும் காடு மண்டிக் கிடக்கிறது. கிராமமோ சற்றுத் தூரத்தில் இருக்கிறது. அங்கே எதற்காக இவர்கள் போகிறார்கள்! இந்த இரண்டு பேரும் மட்டும் பேச வேண்டிய விஷயமாயிருந்தால், இங்கேயே பேசிக் கொள்ளுவார்கள். காட்டு வழியில் ஒரு காத தூரம் போக வேண்டியதில்லையே? ஆகையால், அங்கே இன்னும் சிலரும் வரப்போகிறார்கள் என்பது நிச்சயம். எதற்காக? பிரிதிவீபதியின் பள்ளிப் படையைப் 'பகைவனின் பள்ளிப்படை' யென்று இவர்களில் ஒருவன் சொல்வானேன்? பிரிதிவீபதி யாருக்குப் பகைவன்? ஆகா! நாம் நினைத்தது உண்மையாகும் போலிருக்கிறதே! எதற்கும் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இவர்கள் கொள்ளிடக் கரையோடு போகிறார்கள். நாம் மண்ணிக் கரையோடு போகலாம். மண்ணிக் கரையில் காடு அதிக அடர்த்தியாகயிருந்தாலும் பாதகமில்லை. காடும் மேடும் முள்ளும் கல்லும் நமக்கு என்ன இலட்சியம்? அவை தான் நம்மைக் கண்டு பயப்படவேண்டும்!...

இவ்வாறு எண்ணிக்கொண்டும், வாயோடு முணுமுணுத்துக் கொண்டும் திருமலை அரச மரத்திலிருந்து இறங்கிச் சற்றுத் தெற்கு நோக்கிப் போனான். மண்ணியாறு வந்தது. அதன் கரையோடு மேற்கு நோக்கி நடையைக் கட்டினான்.

ஜன சஞ்சாரமில்லாத அடர்ந்த காடுகளின் வழியாக ஆழ்வார்க்கடியான் புகுந்து சென்று சூரியன் அஸ்தமிக்கும் சமயத்தில் திருப்புறம்பயம் பள்ளிப்படைக் கோயிலை அடைந்தான்.



உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
கல்கியின் பொன்னியின் செல்வன்

முதல் பாகம் : புது வெள்ளம்

19. ரணகள அரண்யம்

பழந்தமிழ்நாட்டில் போர்க்களத்தில் உயிர்துறந்த மகாவீரர்களின் ஞாபகமாக வீரக் கல் நட்டுக் கோயில் எடுப்பது மரபு. வெறும் கல்மட்டும் ஞாபகார்த்தமாக நாட்டியிருந்தால் 'நடுகற்கோயில்' என்று வழங்குவார்கள். அத்துடன் ஏதேனும் ஒரு தெய்வத்தின் சிலையையும் ஸ்தாபித்து ஆலயமாக எழுப்பியிருந்தால் அது 'பள்ளிப்படை' என்று வழங்கப்படும்.

குடந்தை நகருக்கு அரைக்காதம் வடமேற்கில் மண்ணியாற்றுக்கு வடகரையில் திருப்புறம்பயம் என்னும் கிராமத்துக்கருகில் ஒரு பள்ளிப் படைக்கோயில் இருந்தது. இது அந்தப் பிரதேசத்தில் நடந்த ஒரு மாபெரும் போரில் உயிர்நீத்த கங்க மன்னன் பிரிதிவீபதியின் ஞாபகமாக எடுத்தது. உலக சரித்திரம் அறிந்தவர்கள் வாட்டர்லூச் சண்டை, பானிபெத் சண்டை, பிளாசிச் சண்டை போன்ற சில சண்டைகளின் மூலம் சரித்திரத்தின் போக்கே மாறியது என்பதை அறிவார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் திருப்புறம்பயம் சண்டை அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது. நமது கதை நடந்த காலத்துக்குச் சுமார் நூறு ஆண்டு காலத்துக்கு முன்னால் அச்சண்டை நடந்தது. அதன் வரலாறு தமிழ் மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கவேண்டியது அவசியம்.

கரிகால் வளவன், பெருநற்கிள்ளி, இளஞ்சேட் சென்னி, தொடித்தோட் செம்பியன் முதலிய பழைய சோழகுல மன்னர்கள் சீரும் சிறப்புமாக சோழ நாட்டை ஆண்டிருந்த காலத்துக்குப் பிறகு ஏறக்குறைய ஐந்நூறு அறுநூறு வருஷ காலம் சோழர் குலத்தின் கீர்த்தியை நீடித்த கிரகணம் பிடித்திருந்தது. தெற்கே பாண்டியர்களும், வடக்கே பல்லவர்களும் வலிமை மிக்கவர்களாகிச் சோழர்களை நெருக்கி வந்தார்கள். கடைசியாக, சோழ குலத்தார் பாண்டியர்களின் தொல்லையைப் பொறுக்க முடியாமல் அவர்களுடைய நெடுங்காலத் தலைநகரான உறையூரை விட்டு நகர வேண்டி வந்தது. அப்படி நகர்ந்தவர்கள் குடந்தைக்கு அருகில் இருந்த பழையாறை என்னும் நகருக்கு வந்து சேர்ந்தார்கள். ஆயினும், உறையூர் தங்கள் தலைநகரம் என்னும் உரிமையை விட்டு விடவில்லை. 'கோழி வேந்தர்' என்னும் பட்டத்தையும் விட்டு விடவில்லை.

பழையாறைச் சோழ மன்னர்களில் விஜயாலய சோழர் என்பவர் இணையில்லா வீரப்புகழ் பெற்றவர். இவர் பற்பல யுத்த களங்களில் முன்னணியில் நின்று போர் செய்து உடம்பில் தொண்ணூற்றாறு காயங்களை அடைந்தவர்.

"எண்கொண்ட தொண்ணூற்றின்
மேலுமிரு மூன்று
புண்கொண்ட வெற்றிப் புரவலன்..."

என்றும்,

"புண்ணூறு தன்றிருமேனியிற்
பூணாகத்
தொண்ணூறும் ஆறுஞ் சுமந்
தோனும்"

என்றெல்லாம் பிற்கால ஆஸ்தானப் புலவர்களால் பாடப் பெற்றவர்.

இவருடைய மகன் ஆதித்த சோழன் தந்தைக்கு இணையான பெருவீரனாக விளங்கினான். இவனும் பல போர்களில் கலந்து கொண்டு புகழ்பெற்றான்.

விஜயாலய சோழர் முதுமைப் பிராயத்தை அடைந்து மகனுக்குப் பட்டங்கட்டிவிட்டு ஓய்ந்திருந்தார். அச்சமயத்தில் பாண்டியர்களுக்கும் பல்லவர்களுக்கும் பகைமை முற்றி அடிக்கடி சண்டை நடந்துகொண்டிருந்தது. அந்தக் காலத்துப் பாண்டிய மன்னனுக்கு வரகுணவர்மன் என்று பெயர்; பல்லவ அரசனுக்கு அபராஜிதவர்மன் என்று பெயர். இந்த இரண்டு பேரரசர்களுக்குள் நடந்த சண்டைகள் பெரும்பாலும் சோழநாட்டில் நடைபெற்றன. யானையும் யானையும் மோதிச் சண்டையிடும்போது நடுவில் அகப்பட்டுக் கொள்ளும் சேவல் கோழியைப்போல் சோழ நாடு அவதிப்பட்டது. சோழநாட்டு மக்கள் துன்புற்றார்கள். எனினும் இப்போர்களை விஜயாலய சோழர் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். ஒவ்வொரு போரிலும் ஏதாவது ஒரு கட்சியில் தம்முடைய சிறிய படையுடன் போய்க் கலந்து கொண்டார். வெற்றி தோல்விகள் மாறி மாறி வந்தாலும் சோழநாட்டில் போர்க் குணம் மிகுந்து வந்தது.

காவேரி நதியிலிருந்து பல கிளை நதிகள் பிரிந்து சோழ நாட்டை வளப்படுத்துவதை யாவரும் அறிவார்கள். அக்கிளை நதிகள் யாவும் காவிரிக்குத் தெற்கே பிரிகின்றன. கொள்ளிடத்திலிருந்து பிரிந்து காவிரிக்கும் கொள்ளிடத்துக்கும் நடுவில் பாயும் நதி ஒன்றே ஒன்றுதான். அதற்கு மண்ணியாறு என்று பெயர்.

இந்த மண்ணியாற்றின் வடகரையில், திருப்புறம்பயம் கிராமத்துக்கு அருகில், பாண்டியர்களுக்கும், பல்லவர்களுக்கும் இறுதியான பலப்பரீட்சை நடந்தது. இரு தரப்பிலும் படைபலம் ஏறக்குறைய சமமாக இருந்தது. பல்லவ அபராஜிதவர்மனுக்குத் துணையாக கங்கநாட்டு பிரிதிவீபதி வந்திருந்தான். ஆதித்த சோழனும் அபராஜிதவர்மனுடைய கட்சியில் சேர்ந்திருந்தான்.

பாண்டிய சைன்யத்துடனும் பல்லவ சைன்யத்துடனும் ஒப்பிட்டால் சோழ சைன்யம் மிகச் சிறியதாகவே இருந்தது. எனினும், இம்முறை பாண்டியன் வெற்றிப் பெற்றால், சோழ வம்சம் அடியோடு நாசமாக நேரும் என்று ஆதித்தன் அறிந்திருந்தான். ஆகையால், பெரிய சமுத்திரத்தில் கலக்கும் காவேரி நதியைப் போல் பல்லவரின் மகா சைன்யத்தில் தன்னுடைய சிறு படையையும் சேர்த்திருந்தான்.

காத தூரத்துக்குக் காததூரம் ரணகளம் பரவியிருந்தது. ரத, கஜ, துரக, பதாதிகள் என்னும் நாலுவகைப் படைகளும் போரில் ஈடுபட்டிருந்தன. மலையோடு மலை முட்டுவதுபோல் யானைகள் ஒன்றையொன்று தாக்கியபோது நாலாத் திசைகளும் அதிர்ந்தன. புயலோடு புயல் மோதுவது போல் குதிரைகள் ஒன்றின்மீது ஒன்று பாய்ந்தபோது குதிரை வீரர்களின் கையிலிருந்த வேல்கள் மின்வெட்டுகளைப் போல் பிரகாசித்தன. ரதத்தோடு ரதம் மோதிச் சுக்குநூறாகித் திசையெல்லாம் பறந்தன. காலாள் வீரர்களின் வாள்களோடு வாள்களும், வேல்களோடு வேல்களும் உராய்ந்த போது எழுந்த ஜங்கார ஒலிகளினால் திக்குத் திகாந்தங்கள் எல்லாம் நடுநடுங்கின.

மூன்று நாள் இடைவிடாமல் சண்டை நடந்த பிறகு, ரணகளம் முழுவதும் ரத்தக் கடலாகக் காட்சியளித்தது. அந்தக் கடலில் செத்த யானைகளும் குதிரைகளும் திட்டுத் திட்டாகக் கிடந்தன. உடைந்த ரதங்களின் பகுதிகள் கடலில் கவிழ்ந்த கப்பலின் பலகைகளைப் போல் மிதந்தன. இரு தரப்பிலும் ஆயிரம் பதினாயிரம் வீரர்கள் உயிரிழந்து கிடந்தார்கள்.

மூன்று நாள் இவ்விதம் கோர யுத்தம் நடந்த பிறகு பல்லவர் சைன்யத்தில் ஒரு பகுதிதான் மிஞ்சியிருந்தது. மிஞ்சியவர்களும் மிகக் களைத்திருந்தார்கள். பாண்டிய நாட்டு வீர மறவர்களோ, களைப்பையே அறியாத வரம் வாங்கி வந்தவர்களைப்போல், மேலும் மேலும் வந்து தாக்கினார்கள். அபராஜிதவர்மனுடைய கூடாரத்தில் மந்திராலோசனை நடந்தது. அபராஜிதன், பிரிதிவீபதி, ஆதித்தன் ஆகிய மூன்று மன்னர்களுடன் படைத்தலைவர்களும் கலந்து ஆலோசித்தார்கள். இனி எதிர்த்து நிற்க முடியாது என்றும், பின்வாங்கிக் கொள்ளிடத்துக்கு வடகரைக்குச் சென்று விடுவதே உசிதம் என்றும் முடிவு செய்தார்கள்.

இப்படிப்பட்ட நிலைமையில் போர்க்களத்தில் ஓர் அதிசயம் நடந்தது. முதுமையினால் தளர்ந்தவனும், உடம்பில் தொண்ணூற்றாறு காயவடுக்கள் உள்ளவனும், கால்களில் பட்ட கொடிய காயத்தினால் எழுந்து நிற்கும் சக்தியை இழந்தவனுமான விஜயாலய சோழன் எப்படியோ யுத்த அரங்கத்துக்கு வந்து விட்டான். பல்லவ சைன்யம் பின்வாங்கிக் கொள்ளிடத்துக்கு வடக்கே போய்விட்டால், சோழநாடு மறுபடியும் நெடுங்காலம் தலையெடுக்க முடியாது என்பதை உணர்ந்திருந்த அந்தக் கிழச் சிங்கத்தின் கர்ஜனை, பல்லவர் கட்சியில் எஞ்சியிருந்த வீரர்களுக்குப் புத்துயிர் அளித்தது.

"ஒரு யானை! எனக்கு ஒரு யானை கொடுங்கள்!" என்றான்.

"நமது யானைப்படை முழுதும் அதமாகிவிட்டது; ஒன்றுகூடத் தப்பவில்லை" என்றார்கள்.

"ஒரு குதிரை! ஒரு குதிரையாவது கொண்டு வாருங்கள்!" என்று சொன்னான்.

"உயிருள்ள குதிரை ஒன்று கூட மிஞ்சவில்லை" என்று சொன்னார்கள்.

"சோழநாட்டுச் சுத்தவீரர்கள் இருவரேனும் மிஞ்சி உயிரோடு இருக்கிறார்களா? இருந்தால் வாருங்கள்!" என்று விஜயாலயன் அலறினான்.

இருவருக்குப் பதிலாக இருநூறுபேர் முன்னால் வந்தார்கள்.

"இரண்டு பேர் - தோளில் வலிவும் நெஞ்சில் உரமும் உள்ள இரண்டு பேர் - என்னைத் தோள் கொடுத்துத் தூக்கிக் கொள்ளுங்கள். மற்றவர்கள் இரண்டு இரண்டு பேராகப் பின்னால் வந்து கொண்டிருங்கள். என்னைச் சுமக்கும் இருவர் விழுந்தால், பின்னால் வரும் இருவர் என்னைத் தூக்கிக் கொள்ளுங்கள்!" என்றான் அந்த வீராதி வீரன்.

அப்படியே இரண்டு பீமசேனர்கள் முன்னால் வந்து விஜயாலயனைத் தோளில் தூக்கிக்கொண்டார்கள்.

"போங்கள்! போர் முனைக்குப் போங்கள்!" என்று கர்ஜித்தான்.

போர்க்களத்தில் ஓரிடத்தில் இன்னமும் சண்டை நடந்து கொண்டிருந்தது. தெற்கத்தி மறவர்கள் எஞ்சி நின்ற பல்லவ வீரர்களைத் தாக்கிப் பின்வாங்கச் செய்து கொண்டே வந்தார்கள்.

இருவருடைய தோள்களில் அமர்ந்த விஜயாலயன் அந்தப் போர் முனைக்குப் போனான். இரண்டு கைகளிலும் இரண்டு நீண்ட வாள்களை வைத்துக் கொண்டு திருமாலின் சக்ராயுதத்தைப் போல் சுழற்றிக்கொண்டு, எதிரிகளிடையே புகுந்தான். அவனைத் தடுக்க யாராலும் முடியவில்லை. அவன் புகுந்து சென்ற வழியெல்லாம் இருபுறமும் பகைவர்களின் உடல்கள் குவிந்து கொண்டேயிருந்தன.

ஆம்; இந்த அதிசயத்தைப் பார்ப்பதற்காகப் பின்வாங்கிய வீரர்கள் பலரும் முன்னால் வந்தார்கள். விஜயாலயனுடைய அமானுஷ்ய வீரத்தைக் கண்டு முதலில் சிறிது திகைத்து நின்றார்கள். பிறகு ஒருவரையொருவர் உற்சாகப்படுத்திக்கொண்டு தாங்களும் போர் முனையில் புகுந்தார்கள்.

அவ்வளவுதான்; தேவி ஜயலஷ்மியின் கருணாகடாட்சம் இந்தப் பக்கம் திரும்பிவிட்டது.

பல்லவர் படைத் தலைவர்கள் பின்வாங்கிக் கொள்ளிடத்துக்கு வடகரை போகும் யோசனையைக் கைவிட்டார்கள்.

மூன்று வேந்தர்களும் தமக்குரிய மூலபல வீரர்கள் புடைசூழப் போர் முனையில் புகுந்தார்கள். சிறிது நேரத்துக்கெல்லாம் பாண்டிய வீரர்கள் பின்வாங்கத் தொடங்கினார்கள். பிறகு அவர்கள் பாண்டிய நாட்டின் எல்லைக்குச் சென்றுதான் நின்றார்கள்.

கங்க மன்னன் பிரிதிவீபதி அன்றையப் போரில் செயற்கரும் செயல்கள் பல புரிந்த பிறகு தன் புகழுடம்பை அப்போர்க் களத்தில் நிலைநாட்டி விட்டு வீர சொர்க்கம் சென்றான்.

அத்தகைய வீரனுடைய ஞாபகார்த்தமாக அப்போர்க்களத்தில் வீரக்கல் நாட்டினார்கள். பிறகு பள்ளிப்படைக் கோயிலும் எடுத்தார்கள்.

அத்தகைய கொடூரமான பயங்கர யுத்தம் நடந்த ரணகளம் சில காலம் புல் பூண்டுகள் முளையாமல் கிடந்தது. அந்தப் பக்கம் மக்கள் போவதேயில்லை. சிறிது காலத்துக்குப் பிறகு அங்கே காடு மண்ட ஆரம்பித்தது. பள்ளிப்படைக் கோவிலைச் சுற்றிக் காடு அடர்ந்தது. புதர்களில் நரிகள் குடிபுகுந்தன. இருண்ட மரக்கிளைகளில் ஆந்தைகளும் கோட்டான்களும் வாசம் செய்தன. நாளடைவில் அப்பள்ளிப்படைக் கோயிலுக்கு யாரும் போவதை நிறுத்திவிட்டார்கள். எனவே, கோயிலும் நாளுக்கு நாள் தகர்ந்து போய் வந்தது. நமது கதை நடக்கும் காலத்தில் பாழடைந்து கிடந்தது.

இத்தகைய பாழடைந்த பள்ளிப்படைக் கோயிலுக்கு இருட்டுகிற நேரத்தில் ஆழ்வார்க்கடியான் வந்து சேர்ந்தான். அக் கோயிலின்மேல் மண்டப விளிம்பில் அமைந்த காவல் பூத கணங்கள் அவனைப் பயமுறுத்தப் பார்த்தன. ஆனால் அந்த வீரவைஷ்ணவ சிகாமணியா பயப்படுகிறவன்? பள்ளிப்படைக் கோயில் மண்டபத்தின் மீது தாவி ஏறினான். மண்டபத்தின்மீது கவிந்திருந்த மரக்கிளையின் மறைவில் உட்கார்ந்துகொண்டான். நாலாபுறமும் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய கண்கள் அடர்த்தியான இருளைக் கிழித்துக் கொண்டு பார்க்கும் சக்தியைப் பெற்றிருந்தன. அவனுடைய செவிகளும் அவ்வாறே மிக மெல்லிய ஓசையையும் கேட்கக்கூடிய கூர்மை பெற்றிருந்தன.

இருட்டி ஒரு நாழிகை; இரண்டு நாழிகை; மூன்று நாழிகையும் ஆயிற்று. சுற்றிலும் சூழ்ந்திருந்த அந்தகாரம் அவனை அடியோடு அமுக்கி, மூச்சுத் திணறச் செய்தது. அவ்வப்போது காட்டு மரங்களினிடையே சலசலவென்று ஏதோ சத்தம் கேட்டது. அதோ ஒரு மரநாய் மரத்தின்மேல் ஏறுகிறது! அதோ ஒரு ஆந்தை உறுமுகிறது! இந்தப் பக்கம் ஒரு கோட்டான் கூவுகிறது! மரநாய்க்குப் பயந்து ஒரு பறவை சடசடவென்று சிறகை அடித்துக்கொண்டு மேல் கிளைக்குப் பாய்கிறது. அதோ, நரிகள் ஊளையிடத் தொடங்கி விட்டன.

தலைக்கு மேலே ஏதோ சத்தம் கேட்டது. அண்ணாந்து பார்த்தான். அணிலோ, ஓணானோ, அல்லது அத்தகைய வேறொரு சிறிய பிராணியோ மரக்கிளைகளின் மீது தாவி ஏறிற்று.

மரக்கிளைகளின் இடுக்குகளின் வழியாக வானத்தில் ஒரு சிறு பகுதி தெரிந்தது. விண்மீன்கள் 'முணுக்' 'முணுக்' என்று மின்னிக்கொண்டு கீழே எட்டிப் பார்த்தன. அந்தத் தனிமை மிகுந்த கனாந்தகாரத்தினிடையே வானத்து நட்சத்திரங்கள் அவனுடன் நட்புரிமை கொண்டாடுவதுபோல் தோன்றின. எனவே, ஆழ்வார்க்கடியான் மரக்கிளைகளின் வழியாக எட்டிப் பார்த்த நட்சத்திரங்களைப் பார்த்து மெல்லிய குரலில் பேசினான்: "ஓ நட்சத்திரங்களே! உங்களை இன்றைக்குப் பார்த்தால் பூவுலக மக்களின் அறிவீனத்தைப் பார்த்துக் கேலி செய்து கண் சிமிட்டிச் சிரிப்பவர்களைப் போலத் தோன்றுகிறது. சிரிப்பதற்கு உங்களுக்கு வேண்டிய காரணம் உண்டு. நூறு வருஷத்துக்கு முன்னால் இதே இடத்தில் நடந்த பெரும் போரையும், போர் நடந்த பிறகு இங்கே வெகுநாள்வரை இரத்த வெள்ளம் பெருகிக் கிடந்ததையும் பார்த்திருக்கிறீர்கள். மனிதர்கள் எதற்காக இப்படி ஒருவரையொருவர் பகைக்க வேண்டும் என்று அதிசயிக்கிறீர்கள். எதற்காக இப்படி மனித இரத்தத்தைச் சிந்தி வெள்ளமாக ஓடச் செய்ய வேண்டும் என்று வியக்கிறீர்கள். இதற்கு பெயர் வீரமாம்."

"ஒரு மனிதன் இறந்து நூறு வருஷம் ஆகியும் அவனிடம் பகைமை பாராட்டுகிறார்கள்! இந்தப் பள்ளிப்படை பகைவனுடைய பள்ளிப்படையாம்! பகைவன் பள்ளிப்படைக்கு அருகில் கூடி யோசிக்கப் போகிறார்களாம். செத்துப் போனவர்களின் பெயரால் உயிரோடிருப்பவர்களை இம்சிப்பதற்கு! வானத்து விண்மீன்களே! நீங்கள் ஏன் சிரிக்க மாட்டீர்கள்? நன்றாய்ச் சிரியுங்கள்!"

"கடவுளே! இங்கு வந்தது வீண் தானா? இன்றிரவெல்லாம் இப்படியே கழியப்போகிறதா? எதிர்பார்த்த ஆட்கள் இங்கே வரப்போவதில்லையா? என் காதில் விழுந்தது தவறா? நான் சரியாகக் கவனிக்கவில்லையா? அல்லது அந்த மச்சஹஸ்த சமிக்ஞையாளர்கள் தங்கள் யோசனையை மாற்றிக்கொண்டு வேறிடத்துக்குப் போய்விட்டார்களா? என்ன ஏமாற்றம்? இன்றைக்கு மட்டும் நான் ஏமாந்து போனால் என்னை நான் ஒரு நாளும் மன்னித்துக்கொள்ள முடியாது! ...ஆ! அதோ சிறிய வெளிச்சம் தெரிகிறது! அது என்ன? வெளிச்சம் மறைகிறது; மறுபடி தெரிகிறது. சந்தேகமில்லை. அதோ, சுளுந்து கொளுத்திப் பிடித்துக்கொண்டு யாரோ ஒருவன் வருகிறான்! இல்லை இரண்டு பேர் வருகிறார்கள். காத்திருந்தது வீண் போகவில்லை!..."

வந்தவர்கள் இருவரும் பள்ளிப்படையைத் தாண்டிக் கொண்டு சிறிது அப்பால் போனார்கள். அடர்ந்த காட்டுக்கு மத்தியில் சிறிது இடைவெளி இருந்த இடத்தில் நின்றார்கள். ஒருவன் உட்கார்ந்து கொண்டான். கையில் சுளுந்து வைத்திருந்தவன் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டிருந்தான். யாருடைய வரவையோ அவன் எதிர்பார்த்தான் என்பதில் சந்தேகமில்லை. சற்று நேரத்துக்கெல்லாம் இன்னும் இரண்டு பேர் வந்தார்கள். அவர்கள் இதற்கு முன் இந்த இடத்துக்கு வந்தவர்களாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த இருளில், அடர்ந்த காட்டில், வழி கண்டுபிடித்துக் கொண்டு வரமுடியுமா?

முதலில் வந்தவர்களும் பின்னால் வந்தவர்களும் ஏதோ பேசிக் கொண்டார்கள். ஆனால் ஆழ்வார்க்கடியான் காதில் அது ஒன்றும் விழவில்லை. 'அடடா, இத்தனை கஷ்டப்பட்டு வந்தும் பிரயோஜனம் ஒண்ணும் இராது போலிருக்கிறதே! ஆட்களின் அடையாளம் கூடத் தெரியாது போலிருக்கிறதே!'

பிறகு இன்னும் இரண்டுபேர் வந்தார்கள். முன்னால் வந்தவர்களும் கடைசியில் வந்தவர்களும் ஒருவர்க்கொருவர் பேசிக் கொண்டார்கள். கடைசியாக வந்தவர்களில் ஒருவன் கையில் ஒரு பை கொண்டு வந்திருந்தான். அதை அவன் அவிழ்த்து அதனுள் இருந்தவற்றைக் கொட்டினான். சுளுந்து வெளிச்சத்தில் தங்க நாணயங்கள் பளபளவென்று ஒளிர்ந்தன.

கொட்டிய மனிதன் பைத்தியம் பிடித்தவனைப்போல் சிரித்து, "நண்பர்களே! சோழநாட்டுப் பொக்கிஷத்தைக் கொண்டே சோழ ராஜ்யத்துக்கு உலை வைக்கப் போகிறோம்! இது பெரிய வேடிக்கையல்லவா?" என்று சொல்லிவிட்டு மறுபடியும் கலகலவென்று சிரித்தான்.

"ரவிதாஸரே! இரைச்சல் போடவேண்டாம். கொஞ்சம் மெதுவாகப் பேசலாம்!" என்றான் ஒருவன்.

"ஆகா! இங்கு இப்படிப் பேசினால் என்ன? நரிகளும், மரநாய்களும், கூகைகளும் கோட்டான்களுந்தான் நம் பேச்சைக் கேட்கும்! நல்ல வேளையாக அவை யாரிடமும் போய்ச் சொல்லாது!" என்றான் ரவிதாஸன்.

"இருந்தாலும் கொஞ்சம் மெதுவாகப் பேசுவதே நல்லது அல்லவா?"

பிறகு அவர்கள் மெல்லப் பேசத் தொடங்கினார்கள். ஆழ்வார்க்கடியானுக்கு அவர்களுடைய பேச்சைக் கேட்டறியாமல் மண்டபத்தின் பேரில் உட்கார்ந்து இருப்பது வீண் என்று தோன்றியது. மண்டபத்திலிருந்து இறங்கிக் கூட்டம் நடக்கும் இடத்திற்கு அருகில் நின்று ஒட்டுக்கேட்டே தீரவேண்டும். அதனால் விளையும் அபாயத்தையும் சமாளித்துக் கொள்ள வேண்டும். இவ்விதம் எண்ணி ஆழ்வார்க்கடியான் மண்டபத்திலிருந்து இறங்க முயன்றபோது, மரக்கிளையில் அவன் உடம்பு உராய்ந்ததால் சலசலப்புச் சத்தம் உண்டாயிற்று.

பேசிக் கொண்டிருந்த மனிதர்களில் இருவர் சட்டென்று குதித்து எழுந்து, "யார் அங்கே?" என்று கர்ஜித்தார்கள்.

ஆழ்வார்க்கடியானுடைய இதயத் துடிப்பு சிறிது நேரம் நின்று போயிற்று. அவர்களிடம் அகப்பட்டுக் கொள்ளாமல் தப்பி ஓடுவதைத் தவிர வேறு வழியில்லை. ஓடினாலும் காட்டில் சலசலப்புச் சத்தம் கேட்கத்தானே செய்யும்! அவர்கள் வந்து தன்னைப் பிடித்து விடலாம் அல்லவா?

அச்சமயத்தில், கோட்டான் ஒன்று சப்பட்டையை விரித்து உயர்த்தி அடித்துக்கொண்டதுடன் "ஊம் ஊம்" என்று உறுமியது





உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
கல்கியின் பொன்னியின் செல்வன்

முதல் பாகம் : புது வெள்ளம்

20. "முதற் பகைவன்!"

தக்க சமயத்தில் ஆந்தை செய்த உதவியை ஆழ்வார்க்கடியான் மனத்திற்குள் பெரிதும் பாராட்டினான். ஏனெனில், காட்டின் மத்தியில் கூடியிருந்த சதிகாரர்கள், சிறகடித்துக் கொண்டு உறுமிய ஆந்தையைப் பார்த்து அதனால் ஏற்பட்ட சத்தந்தான் என்று எண்ணிக் கொண்டார்கள்.

"அடே! இந்தக் கோட்டான் நம்மைப் பயப்படுத்தி விட்டது! வெட்டுடா அதை!" என்றான் ஒருவன்.

"வேண்டாம் உங்கள் கத்திகளை வேறு முக்கியமான காரியங்களுக்குப் பத்திரபடுத்தி வையுங்கள்! நம் பகைவர்களைப் பூண்டோ டு ஒழிப்பதற்குக் கூராக்கி வையுங்கள்! ஆந்தையும் கோட்டானும் நம் பகைவர்களல்ல; அவை நம் சினேகிதர்கள்! மனிதர்கள் சாதாரணமாய் உறங்கும் சமயங்களில் நாம் கண் விழித்திருக்கிறோம். நம்மோடு ஆந்தைகளும் கூகைகளும் கண் விழித்திருக்கின்றன!" என்றான் ரவிதாஸன் என்பவன்.

அவனுடைய பேச்சைக் கேட்டுக் கொண்டே மெள்ள மெள்ள அடிமேல் அடியெடுத்து வைத்து நடந்து திருமலையப்பன் ஒரு பெரிய மருதமரத்தின் சமீபத்தை அடைந்தான். நூறு வயதான அந்த மரத்தின் பெரிய வேர்கள் நாலாபுறத்திலும் ஓடியிருந்தன. ஓர் ஆணிவேருக்கும் இன்னோர் ஆணிவேருக்கும் மத்தியில் தரையிலும் இடைவெளியிருந்தது; மரத்தின் அடிப்பக்கத்திலும் நல்ல குழிவு இருந்தது. அத்தகைய குழிவு ஒன்றில் மரத்தோடு மரமாகச் சாய்ந்துக் கொண்டு ஆழ்வார்க்கடியான் நின்றான்.

"தஞ்சாவூர் இராஜ்யத்தின் பொக்கிஷம் இருக்கும்வரையில் நமக்கு வேண்டிய பொருளுக்குக் குறைவு இல்லை. எடுத்த காரியத்தை முடிக்க வேண்டிய நெஞ்சுத் துணிவு வேண்டும். காரியம் முடிகிற வரையில் வெளியில் தெரியாதபடி இரகசியத்தைப் பேணும் சக்தி வேண்டும்! நமக்குள் இரண்டு பிரிவாகப் பிரிந்து கொள்ள வேண்டும். ஒரு பிரிவினர் உடனே இலங்கைக்கு போக வேண்டும். இன்னொரு பிரிவினர் தொண்டை மண்டலம் சென்று காரிய சித்திக்குத் தக்க சமயத்தை எதிர்பார்த்திருக்க வேண்டும். ஏறக்குறைய இரண்டு காரியங்களும் ஒரே சமயத்தில் முடிய வேண்டும். ஒரு பகைவனை முடித்த பிறகு அவகாசம் கொடுத்தால் இன்னொரு பகைவன் ஜாக்கிரதையாகிவிடுவான்! அதற்கு இடமே கொடுக்கக் கூடாது. தெரிகிறதா? உங்களில் இலங்கைக்குப் போக யார் யார் ஆயத்தமாயிருக்கிறீர்கள்?" என்றான் ரவிதாஸன்.

"நான் போகிறேன்!" "நான் தான் போவேன்!" என்று பல குரல்கள் ஒரே சமயத்தில் கேட்டன.

"யார் போகிறது என்பதை அடுத்த முறை கூடித் தீர்மானிக்கலாம்! அதுவரைக்கும் இங்கே செய்யவேண்டிய ஏற்பாடுகள் இன்னும் சில இருக்கின்றன!" என்றான் ரவிதாஸன்.

"ஈழத்துக்கு எந்த வழி போவது நல்லது?" என்று ஒருவன் கேட்டான்.

"கோடிக்கரை வழியாகப் போகலாம், கடலைக் கடப்பதற்கு அது நல்ல வழி. ஆனால் இங்கிருந்து கோடிக்கரை வரையில் செல்வது கடினம். நெடுகிலும் பகைவர்கள். ஆங்காங்கே ஒற்றர்கள். ஆகையால், சேதுவுக்குச் சென்று அங்கே கடலைத் தாண்டி மாதோட்டத்துக்கருகில் இறங்குவதுதான் நல்லது. இலங்கை போகிறவர்கள் சமயத்தில் படகு வலிக்கவும், கட்டுமரம் தள்ளவும், கடலில் நீந்தவும் தெரிந்தவர்களாயிருக்க வேண்டும். இங்கே யாருக்கு நீந்தத் தெரிய்ம்?"

"எனக்குத் தெரியும்," "எனக்கும் தெரியும்" என்ற குரல்கள் எழுந்தன.

"முதலில், இலங்கை மன்னன் மகிந்தனைக் கண்டு பேசிவிட்டுப் பிறகு காரியத்தில் இறங்க வேண்டும். ஆகையால் ஈழத்துக்குப் போகிறவர்களில் ஒருவருக்காவது சிங்கள மொழி தெரிந்திருக்கவேண்டும். ஆ! நமது சோமன் சாம்பவன் இன்னும் வந்து சேரவில்லையே? யாராவது அவனை இன்றைக்குப் பார்த்தீர்களா?"

"இதோ வந்துகொண்டிருக்கிறேன்!" என்று ஆழ்வார்க்கடியானுக்கு மிக்க சமீபத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. அடியான் மேலும் மரத்தோடு மரமாக ஒட்டிக் கொண்டான். அடாடா! இந்தப் பாழும் உடம்பு இப்படிப் பெருத்துவிட்டது எவ்வளவு சங்கடமாயிருக்கிறது!

புதிதாக இரண்டு பேர் அக்கூட்டத்தில் வந்து சேர்ந்து கொண்டார்கள்.

ஆழ்வார்க்கடியான் தன் முகத்தில் ஒரு சிறு பகுதியை மட்டும் மரத்துக்கு வெளியே நீட்டி எட்டிப் பார்த்தான். புதிதாக வந்தவர்கள் இருவரும் கொள்ளிடக் கரையில் அரச மரத்தடியில் சந்தித்துப் பேசியவர்கள் தான் என்று தெரிந்துகொண்டான்.

புது மனிதர்களைக் கண்டதும் ரவிதாஸன், "வாருங்கள்! வாருங்கள்! ஒரு வேளை ஏதாவது உங்களுக்கு ஆபத்து வந்து விட்டதோ, வராமலே இருந்து விடுவீர்களோ என்று பயந்தேன். எங்கிருந்து எந்த வழியாக வந்தீர்கள்?" என்றான்.

"கொள்ளிடக் கரையோடு வந்தோம். வழியில் ஒரு கூட்டம் நரிகள் வளைத்துக் கொண்டன. நரிகளிடம் சிக்காமல் தப்பித்து வருவதற்கு நேரம் ஆகிவிட்டது!" என்றான் சோமன் சாம்பவன்.

"புலிக்கும், சிங்கத்துக்கும் பயப்பட்டால் பொருள் உண்டு. நரிக்குப் பயப்படுகிறவர்களால் என்ன காரியத்தைச் சாதித்துவிட முடியும்?" என்றான் அந்தக் கூட்டத்துக்கு முன்னமே வந்திருந்தவர்களின் ஒருவன்.

"அப்படிச் சொல்லாதே, அப்பனே! சிங்கம், புலியைக் காட்டிலும் நரி பொல்லாதது! ஏனெனில், சிங்கமும் புலியும் தனித்தனியே பாய்ந்து வரும் விரோதிகள். அவற்றோடு சண்டையிட்டுச் சமாளிக்கலாம். ஆனால் நரிகளோ கூட்டங் கூட்டமாக வருகின்றன. ஆகையால், அவற்றுக்குப் பலம் அதிகம். சோழ நாட்டு நரிகள் பெருங்கூட்டமாக வந்ததினால்தானே நம் ஒப்பற்ற மன்னாதி மன்னன் தோற்கவும் உயிர் துறக்கவும் நேர்ந்தது. இல்லாவிட்டால் அவ்விதம் நேர்ந்திருக்குமா?"

"அந்த நரிக்குலத்தை அடியோடு அழிப்போம்! பூண்டோ டு நாசம் செய்வோம்!" என்று ஆங்காரத்துடன் கூவினான் சோமன் சாம்பவன்.

"இதோ அதற்கு வேண்டிய உபகரணங்கள்!" என்று ரவிதாஸன் பொன் நாணயங்களின் குவியலைச் சுட்டிக் காட்டினான்.

சோமன் சாம்பவன் நாணயங்கள் சிலவற்றைக் கையில் எடுத்துப் பார்த்துவிட்டு, ஆ! ஒரு பக்கம் புலி! இன்னொரு பக்கம் பனை!" என்று சொன்னான்.

"சோழனுடைய பொன்; பழுவேட்டரையனுடைய முத்திரை. நான் சொன்னது சொன்னபடி நிறைவேற்றிவிட்டேன். உங்களுடைய செய்தி என்ன? நமது இடும்பன்காரி ஏதாவது செய்தி கொண்டு வந்திருக்க வேண்டுமே?" என்றான் ரவிதாஸன்.

"ஆம்; கொண்டு வந்திருக்கிறார். கேளுங்கள்! அவரே சொல்லுவார்!"

இடும்பன்காரி சொல்லத் தொடங்கினான்: "தங்கள் கட்டளைப்படியே சம்புவரையர் மாளிகையில் பணியாளாக நான் அமர்ந்து வேலை பார்த்து வருகிறேன். அதனுடைய பலன் நேற்றிரவு தான் சித்தித்தது. நேற்று சம்புவரையர் மாளிகையில் ஒரு பெரிய விருந்து நடந்தது. பெரிய பழுவேட்டரையரும், வணங்காமுடி முனையரையர், மழபாடி மழுவரையர் முதலிய பலர் வந்திருந்தார்கள். குரவைக் கூத்தும் வேலனாட்டமும் நடைபெற்றன. வேலனாட்டம் ஆடிய தேவராளனுக்குச் சந்நதம் வந்து குறி சொன்னான். அவன் சொன்னது நம்முடைய நோக்கத்துக்கு அனுசரணையாகவே இருந்தது. பழுவேட்டரையருடன் வந்த மூடு பல்லக்கில் அவருடைய இளையராணி வந்திருப்பதாக எல்லாரும் எண்ணியிருந்தார்கள். சுந்தர சோழ மகாராஜாவுக்கு உடல்நலம் சரியாயில்லை யென்றும் அதிகநாள் உயிரோடிருக்க மாட்டாரென்றும் பழுவேட்டரையர் தெரிவித்தார். எல்லாருமாகச் சேர்ந்து அடுத்தபடி பட்டத்துக்கு வரவேண்டியவர் ஆதித்த கரிகாலர் அல்ல, மதுராந்தகத் தேவர் என்று முடிவு செய்தார்கள். ஆனால் மதுராந்தகத் தேவர் என்று முடிவு செய்தார்கள். ஆனால் மதுராந்தகத் தேவர் இதற்குச் சம்மதிப்பாரா என்று சிலர் கேட்டார்கள். 'அவர் வாயினாலேயே அதற்கு மறுமொழி கூறச் செய்கிறேன்' என்று சொல்லிப் பழுவேட்டரையர் மூடுபல்லக்கின் திரையைத் திறந்தார். அதற்குள்ளிருந்து மதுராந்தகத் தேவர் வெளிவந்தார்! பட்டம் கட்டிக் கொள்ளத் தமக்குச் சம்மதம் என்று அவர் தெரிவித்தார்..."

"இப்படிப் பெண் வேஷம் போடும் பராக்கிரமசாலிக்கு முடிசூட்டப் போகிறார்களாம்! நன்றாய்ச் சூட்டட்டும்; எல்லாம் நாம் எதிர்ப்பார்த்தபடியேதான் நடந்துவருகிறது. இம்மாதிரி சோழ நாட்டிலேயே ஒரு குழப்பம் ஏற்படுவது நம்முடைய நோக்கத்துக்கு மிக உகந்தது. எது நேர்ந்தாலும், என்ன நடந்தாலும், நம்மை யாரும் சந்தேகிக்க மாட்டார்கள் அல்லவா? இடும்பன்காரி! மிக முக்கியமான செய்தி கொண்டு வந்திருக்கிறீர். ஆனால் இதெல்லாம் எப்படித் தெரிந்துகொண்டீர்? இதற்குச் சந்தர்ப்பம் எப்படி வாய்ந்தது?" என்று கேட்டான் ரவிதாஸன்.

"நடு ராத்திரியில் அவர்கள் சபை கூடிய போது வேறு யாரும் அருகில் வராதபடி பார்த்துக்கொள்ள என்னைக் காவலுக்கு அமர்த்தியிருந்தார்கள். காவல் புரிந்துகொண்டே என் காதுகளையும் கண்களையும் உபயோகப்படுத்திக் கொண்டிருந்தேன்."

"அப்படி உபயோகப்படுத்தியதில் வேறு ஏதாவது தெரிந்ததா?"

"தெரிந்தது. அந்த நள்ளிரவுக் கூட்டத்தில் நடந்ததையெல்லாம் இன்னொரு வேற்று மனிதன் கோட்டை மதில் சுவர் மேலிருந்து கவனித்துக் கொண்டிருந்தான்!"

"ஆஹா! அவன் யார்?"

"முன் குடுமி வைத்திருந்த ஒரு வைஷ்ணவன்..."

"ஆகா! அவன் தானா? அவனை நீர் என்ன செய்தீர்? சம்புவரையரிடம் பிடித்துக்கொடுக்கவில்லையா?"

"இல்லை. ஒரு வேளை அவன் நம்மவனாயிருக்கலாம் என்று நினைத்துவிட்டேன். நீங்களே அனுப்பி வைத்தீர்களோ என்று எண்ணினேன்."

"பெரிய பிசகு செய்துவிட்டீர். அவன் நம்மவன் அல்ல. கட்டையாய்க் குட்டையாய் இருப்பான். சண்டைக்காரன். பெயர் திருமலையப்பன்; 'ஆழ்வார்க்கடியான்' என்று சொல்லிக் கொள்வான்."

"அவனே தான். நான் செய்த பிசகை இன்று மத்தியானம் நானே உணர்ந்து கொண்டேன். அவன் நம் ஆள் அல்லவென்று தெரிந்தது."

"அதை எப்படி அறிந்தீர்?"

"நேற்று இரவு கந்தன்மாறனின் பாலிய நண்பன் ஒருவனும் கடம்பூர் மாளிகைக்கு வந்திருந்தான். அவனுக்கும் பழுவேட்டரையர் கூட்டத்துக்கும் சம்பந்தம் ஒன்றுமில்லையென்று தெரிந்தது. அவன் அங்கேயே மூலையில் படுத்து, நிம்மதியாகத் தூங்கினான். இன்று காலையில் சின்ன எஜமானர் தம் சினேகிதனைக் கொண்டு விடக் கொள்ளிடக்கரை வரையில் வந்தார். அவர் வரப்போவதை அறிந்து அவர் முன்னால் அடிக்கடி நான் போய் நின்றேன். என்னையும் வரச்சொன்னார். அவர் கொள்ளிடத்தின் வட கரையோடு திரும்பிவிட்டார். என்னைத் தென்கரைக்கு வந்து அவ்வாலிபனுக்கு ஒரு குதிரை சம்பாதித்துக் கொடுத்துவிட்டுத் திரும்பும்படி சொன்னார். அங்கிருந்து குடந்தைக்குப் போய் என் அத்தையைப் பார்த்து விட்டு வருவதாகச் சொல்லிவிட்டு வந்தேன். அதனால் தான் சந்தேகத்துக்கு இடமின்றி இங்கே வர முடிந்தது."

"சரிதான், சரிதான்! அந்த வீர வைஷ்ணவனைப் பற்றி எவ்விதம் தெரிந்து கொண்டீர்?"

"கொள்ளிடத்தில் படகு புறப்படும் சமயத்துக்கு அந்த வீர வைஷ்ணவன் வந்து படகில் ஏறிக் கொண்டான். அவன் கந்தன்மாறனின் சினேகிதனோடு பேசிய சில காரமான வார்த்தைகளிலிருந்து எனக்குச் சிறிது சந்தேகம் உதித்தது. அவனும் நம்மைச் சேர்ந்தவனோ என்று. மேலும் கொள்ளிடத்தின் தென்கரையில் அவன் எனக்காகக் காத்துக் கொண்டிருந்ததாகத் தோன்றியது. நம்முடைய அந்தரங்க சமிக்ஞையைச் செய்து காட்டினேன். ஆனால் அவன் புரிந்துகொள்ளவில்லை. அதன் பேரில் அவன் நம்மவன் அல்ல என்று தீர்மானித்தேன்..."

"நீர் செய்தது பெரும் பிசகு! முன்பின் தெரியாதவர்களிடம் நம் சமிக்ஞையைச் செய்து காட்டக் கூடாது. நண்பர்களே இதைக் கேளுங்கள். நம்முடைய காரியம் காஞ்சிபுரத்தில் இருக்கிறது! இலங்கையிலும் இருக்கிறது. இந்த இரண்டு இடங்களிலும் நம்முடைய பரம விரோதிகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இரண்டு பேரையும் காட்டிலும் நம்முடைய கொடிய விரோதி, முதன்மையான விரோதி, ஆழ்வார்க்கடியான் என்று பொய்ப் பெயர் பூண்டு திரியும் திருமலையப்பன் தான். அவன் நம்மையும் நம் நோக்கத்தையும் அடியோடு நாசம் செய்யக் கூடியவன். நமக்கெல்லாம் இணையில்லாத் தலைவியாக உள்ள தேவியை அவன் கொண்டு போகப் பார்க்கிறவன். அடுத்தபடியாக அவனை உங்களில் யாராவது எங்கே கண்டாலும், எந்த நிலைமையில் சந்தித்தாலும், கையில் உள்ள ஆயுதத்தை உடனே அவன் மார்பில் பாய்ச்சிக் கொன்றுவிடுங்கள். ஆயுதம் ஒன்றுமில்லாவிட்டால் கையினால் அவனுடைய மென்னியைத் திருகிக் கொல்லுங்கள். அல்லது சூழ்ச்சியால் விஷத்தைக் கொடுத்துக் கொல்லுங்கள். அல்லது வெள்ளத்தில் தள்ளி முதலைப் பசிக்கு இரையாக்குங்கள். அல்லது ஏதாவது சாக்குச் சொல்லிப் பாறை உச்சிக்கு அழைத்துப் போய் அங்கிருந்து பிடித்துத் தள்ளிக் கொன்றுவிடுங்கள். தேள், நட்டுவாக்கிளி, பாம்பு முதலியவற்றைக் கண்டால் எப்படி இரக்கம் காட்டாமல் கொல்வீர்களோ, அப்படிக் கொன்றுவிடுங்கள்! துர்க்கா தேவிக்கோ, கண்ணகியம்மனுக்கோ பலி கொடுத்து விட்டால் இன்னும் விசேஷம். எப்படியும் அவன் உயிரோடிருக்கும் வரையில் நம்முடைய நோக்கத்துக்கு இடையூறாகவே இருப்பான்!..."

"ரவிதாஸரே! நீங்கள் இவ்வளவு தூரம் வற்புறுத்திச் சொல்வதற்கு அவன் பெரிய கைகாரனாயிருக்க வேண்டும். அப்படிப் பட்டவன் யார்?"

"யாரா? அவன் பயங்கர ஆற்றல் படைத்த ஒற்றன்!"

"யாருடைய ஒற்றன்?"

"எனக்கே அது வெகு காலம் சந்தேகமாகத்தானிருந்தது. சுந்தர சோழரின் ஒற்றனோ, ஆதித்த கரிகாலனின் ஒற்றனோ என்று சந்தேகப்பட்டேன்; இல்லையென்று கண்டேன். பழையாறையில் இருக்கிறாளே, ஒரு கிழப் பாதகி, அந்தப் பெரிய பிராட்டியின் ஒற்றனாயிருக்கலாம் என்று இப்போது சந்தேகிக்கிறேன்."

"ஆகா! அப்படியா? சிவபக்தியில் மூழ்கி, ஆலயத் திருப்பணி செய்து வரும் அந்தச் செம்பியன் தேவிக்கு ஒற்றன் எதற்கு?"

"அதெல்லாம் பொய். இந்த முன் குடுமிக்காரனின் வீர வைஷ்ணவம் எப்படி வெளி வேஷமோ, அப்படித்தான் அந்த முதிய ராணியின் சிவபக்தியும். பெற்ற பிள்ளைக்கே பெரும் சத்துருவாயிருக்கும் பிசாசு அல்லவா? அதனால்தானே, அவளுடைய சொந்தச் சகோதரனாகிய மழவரையன் கூட அவளுடன் சண்டை பிடித்துக் கொண்டு, பழுவேட்டரையன் கட்சியில் சேர்ந்திருக்கிறான்?"

"ரவிதாஸரே! அந்த முன் குடுமி வைஷ்ணவனைப் போல் இன்னும் யாராவது உண்டோ ?"

"குடந்தையில் ஒரு சோதிடன் இருக்கிறான். அவன் பேரிலும் எனக்குச் சந்தேகம் இருக்கிறது. வருகிறவர் போகிறவர்களுக்கு ஜோசியம் சொல்லுவதுபோல் சொல்லி வாயைப் பிடுங்கிப் பல விஷயங்களைத் தெரிந்து கொள்கிறான். அவனிடம் நீங்கள் யாரும் போகவே கூடாது. போனால் எப்படியும் நிச்சயமாக ஏமாந்து போவீர்கள்."

"அவன் யாருடைய ஒற்றன் என்று நினைக்கிறீர்கள்?"

"இன்னும் அதை நான் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருவேளை தற்போது இலங்கையில் இருக்கும் போலி இளவரசனுடைய ஒற்றனாக இருக்கலாம். ஆனால் ஜோசியனைப் பற்றி அவ்வளவு கவலை எனக்குக் கிடையாது. அவனால் பெரிய தீங்கு எதுவும் நேர்ந்து விடாது. வைஷ்ணவன் விஷயத்திலேதான் எனக்குப் பயம்! அவனைக் கண்ட இடத்திலே தேள், நட்டுவாக்களி, பாம்பை அடித்துக் கொல்வது போல் இரக்கமின்றிக் கொன்றுவிட வேண்டும்!"

இதையெல்லாம் மருத மரத்தின் மறைவிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த ஆழ்வார்க்கடியானுக்கு மெய் நடுங்கியது; உடம்பெல்லாம் வியர்த்தது. அந்த மரத்தடியிலிருந்து உயிரோடு தப்பித்துப் போகப் போகிறோமா என்றே அவனுக்குச் சந்தேகம் உண்டாகி விட்டது.

போதும் போதாதற்கு அந்தச் சமயம் பார்த்து அவனுக்குத் தும்மல் வந்தது. எவ்வளவோ அடக்கிக் கொள்ளப் பார்த்தும் முடியவில்லை. துணியை வாயில் வைத்து அடைத்துக்கொண்டு 'நச்' சென்று தும்மினான்.

அந்தச் சமயம் மேலக்காற்று நின்றிருந்தது. காட்டு மரங்களின் மர்மர சத்தமும் நின்று போயிருந்தது.

ஆகையால் திருமலையப்பனின் அடக்கிய தும்மல் சத்தம் பக்கத்தில் பேசிக்கொண்டிருந்த சதிகாரர்களுக்குச் சிறிது கேட்டு விட்டது.

"அந்த மருத மரத்துக்குப் பின்னால் ஏதோ சத்தம் கேட்கிறது. சுளுந்தைக் கொண்டு போய் என்னவென்று பார்" என்றான் ரவிதாஸன்.

சுளுந்து பிடித்தவன் மரத்தை நாடி வந்தான். அவன் அருகில் வர வர, வெளிச்சம் அதிகமாகி வந்தது. ஆச்சு! இதோ மரத்தின் முடுக்கில் அவன் திரும்பப் போகிறான். திரும்பிய உடனே சுளுந்து வெளிச்சம் தன் மேல் நன்றாய் விழப்போகிறது. அப்புறம் என்ன நடக்கும்? தப்பிப் பிழைத்தால் புனர் ஜன்மந்தான்!

திருமலையப்பனின் மார்பு படபட வென்று அடித்துக் கொண்டது? தப்புவதற்கு வழியுண்டா என்று சுற்று முற்றும் பார்த்தான். வழி காணவில்லை. அண்ணாந்து பார்த்தான். அங்கே மரத்திலிருந்து பிரிந்து சென்ற மரக்கிளையில் ஒரு ராட்சத வௌவால் தலைகீழாகத் தொங்கித் தவம் செய்துகொண்டிருந்தது! உடனே ஒரு யோசனை தோன்றியது. சட்டென்று கைகளை உயர நீட்டி அந்த வௌவாலைப் பிடித்துக் கையில் ஆயத்தமாக வைத்துக் கொண்டான்.

சுளுந்துக்காரன் மரத்தைத் தாண்டி வந்ததும், வௌவாலை அவன் முகத்தின் மீது எறிந்தான்.

சுளுந்து கீழே விழுந்து வெளிச்சம் மங்கியது. வௌவாலின் இறக்கையால் முகத்தில் அடிப்பட்டவன், "ஏ! ஏ! என்ன! என்ன?" என்று உளறினான். பலர் ஓடி வரும் சத்தம் கேட்டது. ஆழ்வார்க்கடியானும் ஓட்டம் பிடித்தான். அடுத்த கணம் அடர்ந்த காட்டுக்குள் புகுந்து மறைந்தான்.

பலர் சேர்ந்து, "என்ன? என்ன?" என்று கூச்சலிட்டார்கள். சுளுந்து ஏந்திய ஆள் வௌவால் தன்னைத் தாக்கியது பற்றி விவரம் கூறத் தொடங்கினான். இதெல்லாம் திருமலையப்பனின் காதில் கொஞ்ச தூரம் வரையில் கேட்டுக் கொண்டிருந்தது



உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
கல்கியின் பொன்னியின் செல்வன்

முதல் பாகம் : புது வெள்ளம்

21. திரை சலசலத்தது!



ஒரே சமயத்தில் ஒருவனுக்குள்ளே இரண்டு மனங்கள் இயங்க முடியுமா? முடியும் என்று அன்றைக்கு வந்தியத்தேவனுடைய அனுபவத்திலிருந்து தெரிய வந்தது.

சோழ வள நாட்டிற்குள்ளேயே வளம் மிகுந்த பிரதேசத்தின் வழியாக அவன் போய்க் கொண்டிருந்தான். நதிகளில் புதுப்புனல் பொங்கிப் பெருகிக் கொண்டிருந்த காலம். கணவாய்கள், மதகுகள் மடைகளின் வழியாக வாய்க்கால்களிலும் வயல்களிலும் குபுகுபுவென்று ஜலம் பாய்ந்துகொண்டிருந்தது. எங்கே பார்த்தாலும் தண்ணீர் மயமாயிருந்தது. சோழ தேசத்தை 'வளநாடு' என்றும் சோழ மன்னனை 'வளவன்' என்றும் கூறுவது எவ்வளவு பொருத்தமானது? - இப்படி எண்ணியவுடனே சோழ நாட்டுக்கும் சோழ மன்னனுக்கும் ஏற்பட்டிருந்த அபாயங்கள் அவன் நினைவுக்கு வந்தன. இந்த நிலைமையில் தன்னுடைய கடமை என்ன? இளவரசர் கரிகாலர் கொடுத்த ஓலையை மட்டும் சக்கரவர்த்தியிடம் சேர்ப்பித்து விட்டுத் தன் கடமை தீர்ந்தது என்று இருந்துவிடுவதா? இந்த இராஜகுலத் தாயாதிக் காய்ச்சலிலும் பூசலிலும் நாம் எதற்காகத் தலையிட்டுக்கொள்ள வேண்டும்? சோழ நாட்டுச் சிம்மாசனத்துக்கு யார் வந்தால் தான் நமக்கு என்ன? பார்க்கப் போனால், நம்முடைய குலத்தின் பூர்வீகப் பகைவர்கள் தானே இவர்கள்? சோழர்களும் கங்கர்களும் வைதும்பர்களும் சேர்ந்து கொண்டுதானே வாணகோப்பாடி ராஜ்யமே இல்லாதபடி செய்து விட்டார்கள்? இன்றைக்கு ஆதித்த கரிகாலர் நம்மிடம் அன்பாக இருந்ததினால் அந்த அநீதியெல்லாம் மறைந்து போய்விடுமா?... சேச்சே! அந்தப் பழைய சம்பவங்களை அநீதியென்றுதான் எப்படிச் சொல்ல முடியும்? அரசர்கள் என்றால், ஒருவருக்கொருவர் சண்டையிடுவது இயற்கை. அது போலவே வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருவதும் இயற்கை. வென்றவர்கள் மீது தோற்றவர்கள் கோபங்கொள்வதில் என்ன பயன்? நம்முடைய மூதாதைகள் நல்ல நிலைமையில் இருந்த போது அவர்களும் மற்ற அரசர்களைக் கதிகலங்கத்தானே அடித்தார்கள்? அடியோடு அழித்து விடத்தானே பார்த்தார்கள்? ஆ! அது என்ன பாடல்? இதோ ஞாபகம் வந்துவிட்டது!

"சேனை தழையாக்கிச் செங்குருதி நீர் தேக்கி
ஆனை மிதித்த அருஞ்சேற்றில் - மானபரன்
பாவேந்தர் தம்வேந்தன் வாணன் பறித்து நட்டான்
மூவேந்தர் தங்கள் முடி!"

இப்படியெல்லாம் போர்க்களத்தில் கொடூரமான காரியங்களை நம் முன்னோர்களும் செய்திருக்கிறார்கள். போர்க்களத்தில் தோற்றவர்களின் கதி எப்போதும் அதோ கதிதான். இராமரைப் போலவும் தர்ம புத்திரரைப் போலவும் எல்லா அரசர்களும் கருணை வள்ளல்களாக இருந்துவிட முடியுமா? அப்படி அவர்கள் இருந்தபடியினால் தான் காட்டுக்குப் போய்த் திண்டாடினார்கள்! வீர புருஷர்களாயிருந்தும், வீரர்களின் துணையிருந்தும் வெகுவாகக் கஷ்டப்பட்டார்கள். இராஜரீகத்தில் கருணை என்பதே கூடாது. பார்க்கப் போனால் சோழ குலத்தவர்கள் சிறிது கருணையுள்ளவர்கள் என்றே சொல்லவேண்டும். எதிரிகளையும் முடியுமானால் நண்பர்களாக்கிக் கொள்ளவே பார்க்கிறார்கள். அதற்காகக் குலம் விட்டுக் குலம் கலியாண சம்பந்தமும் செய்து கொள்கிறார்கள்! சுந்தர சோழரின் தந்தை அரிஞ்சய சோழர் வைதும்பராயன் மகளைத் திருமணம் செய்துகொள்ளவில்லையா? அழகுக்குப் பெயர்போன அந்தக் கலியாணியின் மகனாயிருப்பதினால் தானே சுந்தர சோழரும் அவருடைய மக்களும் கூட சௌந்தரியத்தில் சிறந்து விளங்குகிறார்கள்... ஆ! அழகி என்றதும் அந்தக் குடந்தை நகரத்து மங்கை... அரிசிலாற்றங்கரைப் பெண்மணியின் நினைவு வருகிறது. நினைவு புதிதாக எங்கிருந்தோ வந்து விடவில்லை. அவனுடைய உள்ளத்துக்குள்ளேயே கனிந்து கொண்டிருந்த நினைவுதான்.

வந்தியத்தேவனுடைய வெளிமனம் சோழ நாட்டின் இயற்கை வளங்களைப் பற்றியும் இராஜரீகக் குழப்பங்களைப் பற்றியும் எண்ணிக் கொண்டிருக்கையில் அவனுடைய உள் மனம் அந்த மங்கையினிடத்திலேயே ஈடுபட்டிருந்தது. இப்போது உள் மனம், வெளி மனம் இரண்டும் ஒத்து அம்மங்கையைக் குறித்துப் பட்டவர்த்தனமாகச் சிந்திக்கத் தொடங்கின. பிறகு, வெளியில் எந்த அழகான இயற்கைப் பொருளைப் பார்த்தாலும் அந்த மங்கையின் அவயங்களுடன் ஒப்பிடத் தோன்றின. வழுவழுப்பான மூங்கிலைப் பார்த்ததும் அவளுடைய தோள்கள் நினைவு வந்தன. ஓடைகளில் மண்டிக்கிடந்த குவளை மலர்கள் அவளுடைய கண்களுக்கு உவமையாயின. பங்கஜ மலர்கள் அவளுடைய தங்க முகத்துக்கு இணைதானா என்ற ஐயம் தோன்றியது. நதியோர மரங்களில் குலுங்கிக் கொண்டிருந்த மலர்களில் வண்டுகள் செய்த ரீங்காரத்தை அவள் குரலின் ஒலிக்கு உவமை சொல்வது சரியாகுமா? இப்படியெல்லாம் கவிகள் கற்பித்திருக்கிறார்களே தவிர, உண்மையில் இவையெல்லாம் எங்கே? அந்த மங்கையின் சௌந்தரியம் எங்கே? அவளுடைய திருமுகத்தைப் பார்த்தபோது மெய் சிலிர்த்ததே! இப்போது நினைத்துப் பார்க்கும்போது கூட நெஞ்சு விம்முகிறதே! இந்தப் பூக்களையும் வண்டுகளையும் பார்த்தால் அத்தகைய மெய் சிலிர்ப்பு உண்டாகவில்லையே?...சேச்சே! முதியோர்கள் நமக்குச் செய்த உபதேசத்தையெல்லாம் மறந்து விட்டோ ம்! பெண்களின் மோகத்தைப் போல் உலக வாழ்க்கையில் பொல்லாத மாயை வேறொன்றுமில்லை.

வாழ்க்கையில் வெற்றி பெற விரும்புவோன் பெண்களின் மோக வலையில் விழவே கூடாது; விழுந்தால் அவன் ஒழிந்தான்! கோவலன் கதைதான் அந்த விஷயத்தை அபூர்வமாய் எடுத்துச் சொல்கிறதே! கோவலன் மட்டும் என்ன? இந்த நாளில் வீராதி வீரரும் சோழ நாட்டிலே இணையற்ற செல்வாக்கு உள்ளவருமான பெரிய பழுவேட்டரையரைப் பற்றி மக்கள் பரிகாசம் பேசுங்காரணமும் அதுதானே? ஆனால் மக்கள் உண்மை அறியாதவர்கள். மூடு பல்லக்கிலே வைத்துப் பழுவேட்டரையர் யாரைக் கொண்டு வருகிறார் என்று மக்களுக்குத் தெரியாது! ஆகையால் மூடத்தனமாகப் பேசுகிறார்கள். ஆனாலும், அந்த மதுராந்தகத் தேவர் தம்மை அவ்வளவு கேவலப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. சீச்சீ! மூடுபல்லக்கில் உட்கார்ந்து கொண்டு, பழுவேட்டரையரின் ராணியின் ஸ்தானத்தில் மறைந்து கொண்டு ஊர் ஊராய்ப் போவதா? இதுதான் ஆண்மைக்கு அழகா? இப்படியாவது இராஜ்யம் சம்பாதிக்க வேண்டுமா? இப்படிச் சம்பாதித்த இராஜ்யத்தைத்தான் அவரால் காப்பாற்றிக் கொள்ள முடியுமா? பழுவேட்டரையர் முதலியோரை நம்பி அவர்களுக்கு உட்பட்டுத்தானே இராஜ்ய பரிபாலனம் செய்ய வேண்டும்? இந்த விஷயத்தில் சுந்தர சோழ சக்கரவர்த்தி செய்து வருவதே அவ்வளவு சிலாக்கியமில்லைதான்! பழுவேட்டரையர் போன்றவர்களுக்கு இவ்வளவு அதிகாரமும் செல்வாக்கும் அவர் அளித்திருக்கக் கூடாது. அதிலும் மணி மணியாக இரண்டு அருமைப் புதல்வர்கள் இருக்கும் போது? நாடெல்லாம் அதிசயிக்கும் அறிவும் திறனும் உடைய புதல்வி ஒருத்தி இருக்கும் போது...? அந்த மங்கை, சோதிடர் வீட்டில் பார்த்தவள், ஆற்றங்கரையில் பேசியவள், - அவள் முகம் யாருடைய ஜாடையாயிருக்கிறது?... அப்படியும் இருக்கலாமோ? - பைத்தியக்காரத்தனம்! ஒரு நாளும் இருக்க முடியாது! - ஏன் இருக்க முடியாது? ஒரு வேளை அவ்விதம் இருந்தால், நம்மைப் போன்ற அறிவீனன் வேறு யாரும் இல்லை! நம்மைப் போன்ற துரதிர்ஷ்டசாலியும் இல்லை! இலங்கை முதல் விந்திய பர்வதம் வரையில் எந்தப் பெண்ணரசியின் புகழ் பரந்து விரிந்து பரவியிருக்கிறதோ, அவளிடம் நாம் எப்பேர்ப்பட்ட காட்டுமிராண்டியைப் போல் நடந்து கொண்டோ ம்! - நாளைக்கு அவளிடம் எப்படி இளவரசரின் ஓலையுடனே சென்று முகத்தைக் காட்ட முடியும்?

இப்படியாக என்னவெல்லாமோ வானத்தையும் பூமியையும் சேர்த்து எண்ணமிட்டுக்கொண்டு வந்தியத்தேவன் காவேரிக் கரையோடு வந்து திருவையாற்றை அடைந்தான். அந்த ஊரின் வளமும் அழகும் அவன் உள்ளத்தைக் கொள்ளைகொண்டன. அது திருவையாறுதானா என்று கேட்டுத் தெரிந்துகொண்டான். அந்த அற்புத க்ஷேத்திரத்தின் மகிமையைப் பற்றி அவன் கேள்விப்பட்டிருந்ததெல்லாம் உண்மைக்குக் கொஞ்சம் குறைவாகவே தோன்றியது. ஞானசம்பந்தர் தேவாரத்தில் உள்ள வர்ணனை இங்கே அப்படியே தத்ரூபமாய்க் காண்கிறது. முந்நூறு ஆண்டு காலத்தில் மாறுதல் ஒன்றுமேயில்லை. அதோ காவேரியின் கரையில் உள்ள மரங்கள் என்ன செழிப்பாய் வளர்ந்திருக்கின்றன! பலா மரங்களில் எவ்வளவு பெரிய பெரிய பலாக் காய்கள் தொங்குகின்றன. இந்த மாதிரி தொண்டை மண்டலத்தில் எங்கும் பார்க்கவே முடியாதுதான்! ஆகா! வளமான இடங்களுக்கென்று குரங்குகள் எங்கிருந்தோ வந்து விடுகின்றன. அவை கிளைக்குக் கிளை தாவுவது எவ்வளவு அழகாயிருக்கிறது? சம்மந்தப் பெருமான் என்ன சொல்லியிருக்கிறார்? இதோ ஞாபகம் வருகிறது! திருவையாற்று வீதி முனை அரங்கங்களில் பெண்கள் நடனம் ஆடுகிறார்கள். அந்த ஆடலுக்கேற்ற பாடலோடு மத்தளச் சத்தமும் முழங்குகிறது. அந்த முழக்கத்தைக் கேட்ட குரங்குகள் மேகங்களின் கர்ஜனை என்று எண்ணி உயர்ந்த மரங்களின் உச்சாணிக் கிளைகளில் ஏறி மழை வருமா என்று வானத்தைப் பார்க்கின்றன! அடடா! இன்றைக்கும் எவ்வளவு பொருத்தமாயிருக்கிறது! உயர்ந்த மரங்களில் உச்சாணிக் கிளைகளில் குரங்குகள் ஏறுகின்றன! அது மட்டுமா? ஆடல் பாடல்களுக்குரிய இனிய சத்தங்களும் ஊருக்குள்ளிருந்து வருகின்றன. யாழ், குழல், முழவு, தண்ணுமை முதலிய கருவிகளின் ஒலியுடன் சதங்கைச் சத்தமும் சேர்ந்து ஒலிக்கின்றன. இங்கே ஆடுகிறவர்கள் கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் ஆடியவர்களைப் போல் குரவைக் கூத்தர்கள் அல்ல. ஆகா! இங்கே கேட்பது பண்பட்ட இனிய கானம். கலைச் சிறப்பு வாய்ந்த பரத நாட்டியம் ஆடுவோரின் சதங்கை ஒலி. அதோ, ஆட்டிவைக்கும் நடன ஆசிரியர்கள் கையில் பிடித்த கோலின் சத்தம் கூடச் சேர்ந்து வருகிறதே!

"கோலோடக் கோல்வளையார் கூத்தாடக்
குவிமுகையார் முகத்தினின்று
சேலோடச் சிலை யாடச் சேயிழை
யார் நடமாடுந் திருவையாறே!"

ஆகா! சம்பந்த ஸ்வாமிகள் சிறந்த சிவபக்தர்; அதை காட்டிலும் சிறந்த ரஸிகர்! அவர் அன்றைக்கு வர்ணனை செய்தபடியே இன்றைக்கும் இந்தத் திருவையாறு விளங்குகிறதே! இப்படிப்பட்ட ஊரில் ஒருநாள் தங்கி ஆடல் பாடல் விநோதங்களைப் பார்த்துவிட்டு, ஐயாறப்பரையும் அறம் வளர்த்த நாயகி அம்மனையும் தரிசித்து விட்டுத்தான் போகவேண்டும்! அடாடா, காவேரியின் கரையில் எத்தனை பக்தர்கள் உட்கார்ந்து அனுஷ்டானம் செய்கிறார்கள்? பட்டை பட்டையாக அவர்கள் திருநீறு அணிந்திருப்பது எவ்வளவு களையாயிருக்கிறது? சில சமயம் ஆடல் பாடல் ஒலிகளை அமுக்கிக்கொண்டு, 'நமச்சிவாய' மந்திரத்தின் ஒலி கேட்கிறதே! அதோ சம்பந்தரின் தேவாரத்தையே யாரோ இனிய குரலில் அருமையாகப் பாடுகிறார்களே? இசைக்கும் கலைக்கும் என்றே இறைவன் பணித்த ஊர் இந்தத் திருவையாறு போலும்! இந்த ஊரில் கட்டாயம் ஒரு நாள் தங்கிப் பார்த்து விட்டுத்தான் போகவேண்டும்! தஞ்சாவூருக்கு அவசரமாகப் போய்த்தான் என்ன பயன்? கோட்டைக்குள் பிரவேசிக்க முடிகிறதோ என்னமோ? அப்படிப் பிரவேசித்தாலும் மகாராஜாவின் பேட்டி கிடைக்குமா? மகாராஜாவைத்தான் இரண்டு பழுவேட்டரையர்களுமாகச் சேர்ந்து சிறையில் வைத்திருப்பது போல் வைத்திருக்கிறார்களாமே...? காவேரியின் வடகரைக்குப் போக வேண்டியது தான்!

இந்த முடிவுக்கு வந்தியத்தேவன் வந்துவிட்ட தருணத்தில் ஒரு சம்பவம் நடந்தது. மேற்குத் திசையிலிருந்து காவேரிக் கரையோடு ஒரு பல்லக்கு வந்தது. பல்லக்குக்கு முன்னாலும் பின்னாலும் சில காவல் வீரர்களும் வந்தார்கள். வந்தியத்தேவனுக்கு ஏதோ ஒரு சந்தேகம் தோன்றியது. பல்லக்கு அருகில் வருகிற வரையில் அங்கேயே நின்று காத்துக் கொண்டிருந்தான். அவன் நினைத்தபடியே இருந்தது. பல்லக்கை மூடியிருந்த வெளித் திரையில் பனைமரத்தின் இலச்சினைச் சித்திரம் காணப்பட்டது! ஆஹா! கடம்பூரிலிருந்து வருகிற பல்லக்குத்தான் இது! நாம் குடந்தை வழியாக வர, இவர்கள் வேறொரு வழியில் வந்திருக்கிறார்கள்! ஆனால் பழுவேட்டரையரைக் காணோம்! அவர் வேறு எங்கேயாவது வழியில் தங்கிவிட்டார் போலும்.

பல்லக்கு தஞ்சாவூர் இருந்த தென் திசை நோக்கித் திரும்பியது. அவ்வளவுதான், வந்தியத்தேவன் திருவையாற்றில் தங்கும் எண்ணத்தை விட்டு விட்டான். அந்தப் பல்லக்கைப் பின் தொடர்ந்து செல்லத் தீர்மானித்தான். என்ன நோக்கத்துடன் அப்படித் தீர்மானித்தான் என்றால், அது அச்சமயம் அவனுக்கே தெரிந்திருக்கவில்லை. பல்லக்கில் வீற்றிருப்பது மதுராந்தகத் தேவர் என்று மட்டும் அவனுக்கு நிச்சயமாய்த் தெரிந்தது. அவர் மேல் ஏற்பட்டிருந்த அருவருப்பு மேலும் சிறிது வளர்ந்தது. ஆனாலும் பல்லக்கைப் பின் தொடர்ந்து கொஞ்சம் போனால், ஏதாவது ஒரு நல்ல சந்தர்ப்பம் ஏற்படலாம். பல்லக்கைச் சுமப்பவர்கள் அதைக் கீழே வைக்கலாம். ஏதேனும் ஒரு காரணத்துக்காக இளவரசர் மதுராந்தகர் வெளிப்பட்டு வரலாம். அச்சமயம் அவருடன் பழக்கம் செய்து கொள்ளலாம். அது தஞ்சாவூர்க் கோட்டைக்குள் பிரவேசிக்கவும், சக்கரவர்த்தியைப் பார்க்கவும் பயன்படலாம். அதற்குத் தகுந்தபடி ஏதாவது கொஞ்சம் பேசி வேஷம் போட்டால் போகிறது. தந்திர மந்திரங்களைக் கையாளாவிட்டால் எடுத்த காரியம் கைகூடாது அல்லவா? அதிலும் இராஜாங்கக் காரியங்களில்?

எனவே, பல்லக்கையும் பரிவாரங்களையும் முன்னால் போக விட்டுச் சற்றுப் பின்னாலேயே வந்தியத்தேவன் போய்க் கொண்டிருந்தான். ஆனால் அவன் எதிர்பார்த்த சந்தர்ப்பம் ஒன்றும் கிட்டவில்லை. காவேரிக்கும் தஞ்சாவூருக்கும் மத்தியிலிருந்த மற்றும் நாலு நதிகளைக் கடந்தாகி விட்டது. அப்படியும் பல்லக்கு கீழே வைக்கப்படவில்லை; ஒரே மூச்சாகப் போய்க்கொண்டிருந்தது. அதோ சற்றுத் தூரத்தில் தஞ்சாவூர்க் கோட்டை மதிலும் வாசலும் தெரியத் தொடங்கிவிட்டன. கோட்டைக்குள் பல்லக்குப் போய்விட்டால், அப்புறம் அவன் எண்ணம் கைகூடப் போவதில்லை. அதற்குள் தைரியமாகவும் துணிச்சலாகவும் ஏதேனும் ஒன்று செய்தாக வேண்டும். என்னதான் வந்துவிடும்? தலையா போய்விடும்? அப்படிப் போனால் தான் போகிறதே? - எடுத்த காரியத்தை முடிக்காமல் உயிரோடு திரும்பிப் போவதில் என்ன லாபம்? இதற்கெல்லாம் அடிப்படையில் மதுராந்தகத்தேவர் பேரில் வந்தியத்தேவனுக்கு கோபம் வேறு இருந்தது. பல்லக்கின் மூடுதிரையைக் கிழித்தெறிந்து உள்ளேயிருப்பது பெண்ணல்ல, மீசை முளைத்த ஆண்பிள்ளை என்பதை வெளிப்படுத்தவேண்டும் என்று அவன் கை ஊறியது; அவன் உள்ளம் துடிதுடித்தது.

இதற்கு என்ன வழி என்று அவன் தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கையில் பல்லக்கோடு சென்ற பரிவாரங்களில் ஒருவன், சற்றுப் பின் தங்கி வந்தியத்தேவனை உற்று நோக்கினான்.

"நீ யார் அப்பா! திருவையாற்றிலிருந்து எங்களை ஏன் தொடர்ந்து வருகிறாய்?" என்று கேட்டான்.

"நான் உங்களைத் தொடர்ந்து வரவில்லை ஐயா! தஞ்சாவூருக்குப் போகிறேன்! இந்தச் சாலைதானே தஞ்சாவூர் போகிறது!" என்றான் வந்தியத்தேவன்.

"இந்த சாலை தஞ்சாவூருக்குத்தான் போகிறது. ஆனால் இதில் முக்கியமானவர்கள் மட்டுமே போகலாம்; மற்றவர்களுக்கு வேறு சாலை இருக்கிறது!" என்றான் வீரன்.

"அப்படியா? ஆனால் நானும் ரொம்ப ரொம்ப முக்கியமான மனுஷன் தான்!" என்றான் வந்தியத்தேவன்.

அதைக் கேட்ட அவ்வீரன் புன்னகை செய்துவிட்டு, "தஞ்சைக்கு எதற்காகப் போகிறாய்?" என்றான்.

"என் சித்தப்பா தஞ்சையில் இருக்கிறார். அவருக்கு நோய் என்றறிந்து பார்க்கப் போகிறேன்" என்று கூறினான் வந்தியத்தேவன்.

"உன் சித்தப்பா தஞ்சையில் என்ன செய்கிறார்? அரண்மனையில் உத்தியோகம் பார்க்கிறாரா?"

"இல்லை, இல்லை; சத்திரத்தில் மணியக்காரராயிருக்கிறார்"

"ஓகோ! அப்படியா! சரி, எங்களுக்கு முன்னால் நீ போவதுதானே? ஏன் பின்னாலேயே வந்துகொண்டிருக்கிறாய்?"

"குதிரை களைத்துப் போயிருக்கிறது ஐயா! அதனால்தான்! இல்லாவிடில் உங்கள் முதுகைப் பார்த்துக் கொண்டே வருவதில் எனக்கு என்ன திருப்தி?"

இப்படிப் பேசிக்கொண்டே வந்தியத்தேவன் பல்லக்கின் அருகில் வந்துவிட்டான். உடனே அவன் மூளையை விரட்டிக் கண்டுபிடிக்க முயன்ற உபாயமும் புலப்பட்டுவிட்டது. குதிரையைக் கால்களால் அமுக்கி, முகக்கயிற்றை இழுத்து, பல்லக்கின் பின் தண்டைத் தூக்கியவர்களின் பேரில் விட்டித்தான். அவர்கள் பயத்துடன் திரும்பிப் பார்த்தார்கள். வந்தியத்தேவன் உடனே, "மஹாராஜா! மஹாராஜா! பல்லக்குத் தூக்கும் ஆள்கள் என் குதிரையை இடிக்கிறார்கள்! ஐயோ!" என்று கத்தினான். பல்லக்கை மூடியிருந்த திரை சலசலத்தது.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
கல்கியின் பொன்னியின் செல்வன்

முதல் பாகம் : புது வெள்ளம்

22. வேளக்காரப் படை


முதலில், பல்லக்கின் வெளிப்புறத்திரை - பனைமரச் சின்னம் உடைய துணித் திரை - விலகியது. பின்னர் உள்ளிருந்த பட்டுத் திரையும் நகரத் தொடங்கியது. முன்னொரு தடவை வல்லவரையன் பார்த்தது போன்ற பொன் வண்ணக் கையும் தெரிந்தது. வந்தியத்தேவன் இனி, தான் குதிரை மேலிருப்பது தகாது என்று எண்ணி ஒரு நொடியில் கீழே குதித்தான். சிவிகையின் அருகில் ஓடி வந்து, "இளவரசே! இளவரசே! பல்லக்குச் சுமக்கும் ஆட்கள்..." என்று சொல்லிக் கொண்டே அண்ணாந்து பார்த்தான். மீண்டும் உற்றுப் பார்த்தான்; கண்ணிமைகளை மூடித் திறந்து மேலும் பார்த்தான்; பார்த்த கண்கள் கூசின! பேசிய நாக் குழறியது. தொண்டையில் திடீரென்று ஈரம் வற்றியது. "இல்லை, இல்லை! தாங்கள்... பழுவூர் இளவரசி!... பழுவூர் இளவரசி... உங்கள் ஆட்களின் குதிரை என் பல்லக்கை இடித்தது!..." என்று உளறிக் கொட்டினான்.

இதெல்லாம் கண் மூடித் திறக்கும் நேரத்துக்குள் நடந்தது. பல்லக்கின் முன்னும் பின்னும் சென்ற வேல் வீரர்கள் ஓடி வந்து, வல்லவரையனைச் சூழ்ந்து கொண்டார்கள். அப்படி அவர்கள் சூழ்ந்து கொண்டார்கள் என்பது வல்லவரையனுக்கும் தெரிந்தது. அவனுடைய கையும் இயல்பாக உறைவாளிடம் சென்றது. ஆனால் கண்களை மட்டும் பல்லக்கின் பட்டுத் திரையின் மத்தியில் ஒளிர்ந்த மோகனாங்கியின் சந்திர பிம்ப வதனத்தினின்றும் அவனால் அகற்ற முடியவில்லை!

ஆம்; வல்லவரையன் எதிர்பார்த்ததற்கு மாறாக, இப்போது அப்பல்லக்கில் அவன் கண்டது ஒரு நிஜமான பெண்ணின் வடிவந்தான்! பெண் என்றாலும், எப்படிப்பட்ட பெண்! பார்த்தவர்களைப் பைத்தியமாக அடிக்கக் கூடிய இத்தகைய பெண்ணழகு இவ்வுலகில் இருக்கக்கூடும் என்று வந்தியத்தேவன் எண்ணியதே இல்லை!

நல்ல வேளையாக, அதே நிமிஷத்தில் வந்தியத்தேவனுடைய மூளை நரம்பு ஒன்று அசைந்தது. அதிசயமான ஓர் எண்ணம் அவன் உள்ளத்தில் உதயமாயிற்று. அதை உபயோகித்துக் கொள்ளத் தீர்மானித்தான்.

ஒரு பெருமுயற்சி செய்து, தொண்டையைக் கனைத்து, நாவிற்குப் பேசும் சக்தியை வரவழைத்துக் கொண்டு, "மன்னிக்க வேண்டும்! தாங்கள் பழுவூர் இளையராணிதானே! தங்களைப் பார்ப்பதற்காகத்தான் இத்தனை தூரம் வந்தேன்!" என்றான்.

பழுவூர் இளையராணியின் பால் வடியும் முகத்தில் இளநகை அரும்பியது. அதுகாறும் குவிந்திருந்த தாமரை மொட்டு சிறிது விரிந்து, உள்ளே பதித்திருந்த வெண்முத்து வரிசையை இலேசாகப் புலப்படுத்தியது. அந்தப் புன்முறுவலின் காந்தி நமது இளம் வீரனைத் திக்குமுக்காடித் திணறச் செய்தது.

அவனருகில் வந்து நின்ற வீரர்கள் தங்கள் எஜமானியின் கட்டளைக்கு எதிர்பார்த்துக் காத்திருந்ததாகத் தோன்றியது. அந்தப் பெண்ணரசி கையினால் ஒரு சமிக்ஞை செய்யவே, அவர்கள் உடனே அகன்று போய்ச் சற்றுத் தூரத்தில் விலகி நின்றார்கள். இரண்டு வீரர்கள் பல்லக்கின் மீது மோதிக் கொண்டு நின்ற குதிரையைப் பிடித்துக்கொண்டார்கள்.

பல்லக்கிலிருந்த பெண்ணரசி வந்தியத்தேவனை நோக்கினாள். வந்தியத்தேவனுடைய நெஞ்சில் இரண்டு கூரிய வேல் முனைகள் பாய்ந்தன!

"ஆமாம்; நான் பழுவூர் இளையராணிதான்!" என்றாள் அப்பெண்மணி. இவளுடைய குரலில் அத்தகைய போதை தரும் பொருள் என்ன கலந்திருக்க முடியும்? ஏன் இக் குரலைக் கேட்டு நமது தலை இவ்விதம் கிறுகிறுக்க வேண்டும்?

"சற்று முன்னால் நீ என்ன சொன்னாய்? ஏதோ முறையிட்டாயே? சிவிகை சுமக்கும் ஆட்களைப் பற்றி?"

காசிப்பட்டின் மென்மையும் கள்ளின் போதையும் காட்டுத் தேனின் இனிப்பும், கார்காலத்து மின்னலின் ஜொலிப்பும் ஒரு பெண் குரலில் கலந்திருக்க முடியுமா?... அவ்விதம் இதோ கலந்திருக்கின்றனவே!

"பல்லக்கைக் கொண்டு வந்து அவர்கள் உன் குதிரைமீது மோதினார்கள் என்றா சொன்னாய்?"...

பழுவூர் ராணியின் பவள இதழ்களில் தவழ்ந்த பரிகாசப் புன்னகை, அந்த வேடிக்கையை அவள் நன்கு ரசித்ததாகக் காட்டியது. இதனால் வந்தியத்தேவன் சிறிது துணிச்சல் அடைந்தான்.

"ஆம், மகாராணி! இவர்கள் அப்படித்தான் செய்தார்கள்! என் குதிரை மிரண்டுவிட்டது!" என்றான்.

"நீயும் மிரண்டு போய்த்தானிருக்கிறாய்! துர்க்கையம்மன் கோயில் பூசாரியிடம் போய் வேப்பிலை அடிக்கச் சொல்லு! பயம் தெளியட்டும்!"

இதற்குள் வந்தியத்தேவனுடைய பயம் நன்கு தெளிந்துவிட்டது. அவனுக்குச் சிரிப்பு கூட வந்துவிட்டது.

பழுவூர் ராணியின் முகபாவம் இப்போது மாறிவிட்டது. குறுநகையின் நிலவு கோபக் கனலாயிற்று.

"வேடிக்கை அப்புறம் இருக்கட்டும்; உண்மையைச் சொல்! எதற்காகப் பல்லக்கின் மேல் குதிரையைக் கொண்டு வந்து மோதி நிறுத்தினாய்?"

இதற்குத் தக்க மறுமொழி சொல்லித்தான் ஆகவேண்டும். சொல்லா விட்டால்...? நல்லவேளையாக, ஏற்கனவே அந்த மறுமொழி வந்தியத்தேவன் உள்ளத்தில் உதயமாயிருந்தது. சற்றுத் தணிந்த குரலில், பிறர் கேட்கக்கூடாது என்று வேண்டுமென்றே தனித்த அந்தரங்கம் பேசும் குரலில், "தேவி! நந்தினி தேவி! ஆழ்வார்க்கடியான்... அவன் தான், திருமலையப்பன்...தங்களைச் சந்திக்கும்படி சொன்னான். அதற்காகவே இந்தச் சூழ்ச்சி செய்தேன். மன்னிக்க வேண்டும்!" என்றான்.

இவ்விதம் சொல்லிக் கொண்டே பழுவூர் ராணியின் முகத்தை வந்தியத்தேவன் கூர்ந்து கவனித்தான். தன்னுடய மறுமொழியினால் என்ன பயன் விளையப் போகிறதோ என்னும் ஆவலுடன் பார்த்தான். கனி மரத்தின்மேல் கல் எரிவது போன்ற காரியந்தான். கனி விழுமா? காய் விழுமா? எறிந்த கல் திரும்பி விழுமா? அல்லது எதிர்பாராத இடி ஏதாவது விழுமா? பழுவூர் ராணியின் கரிய புருவங்கள் சிறிது மேலே சென்றன. கண்களில் வியப்பும் ஐயமும் தோன்றின. மறுகணத்தில் அந்தப் பெண்ணரசி ஒரு முடிவுக்கு வந்துவிட்டாள்.

"சரி; நடுச்சாலையில் நின்று பேசுவது உசிதம் அல்ல; நாளைக்கு நம் அரண்மனைக்கு வா! எல்லா விஷயமும் அங்கே விபரமாகச் சொல்லிக் கொள்ளலாம்" என்றாள்.

வந்தியத்தேவனுடைய உள்ளம் பூரித்தது. நினைத்த காரியம் வெற்றி பெற்றுவிடும்போலே காண்கிறது! ஆனால் முக்கால் கிணறு தாண்டி பயனில்லை. மற்றக் காற்பங்குக் கிணற்றையும் தாண்டியாக வேண்டும்.

"தேவி! தேவி! கோட்டைக்குள் என்னை விடமாட்டார்களே! அரண்மனைக்குள்ளும் விடமாட்டார்களே? என்ன செய்வது?" என்று பரபரப்புடன் சொன்னான்.

பழுவூர் ராணி உடனே பல்லக்கில் தன் அருகில் கிடந்த ஒரு பட்டுப் பையைத் திறந்து அதற்குள்ளிருந்து ஒரு தந்த மோதிரத்தை மோதிரத்தை எடுத்தாள்.

"இதைக் காட்டினால் கோட்டைக்குள்ளும் விடுவார்கள்; நம் அரண்மனைக்குள்ளும் விடுவார்கள்!" என்று சொல்லிக் கொண்டே கொடுத்தாள். வந்தியத்தேவன் அதை ஆவலுடன், வாங்கிக் கொண்டான். ஒருகணம் பனம் இலச்சினை பொறித்த அந்த தந்த மோதிரத்தைப் பார்த்தான். மறுபடி நிமிர்ந்து ராணிக்கு வந்தனம் கூற என்ணியபோது பல்லக்கின் திரைகள் மூடிக் கொண்டிருந்தன. ஆகா! பூரண சந்திரனை ராகு கவ்வும்போது சிறிது சிறிதாகக் கவ்வுகிறது. ஆனால் இந்தப் பல்லக்கின் திரைகள் அந்தப் பேசும் நிலா மதியத்தை ஒரு நொடியில் கபளீகரம் செய்து விட்டனவே!

"இனியாவது என்னைப் பின் தொடர்ந்து வராதே! அபாயம் நேரும். நின்று மெதுவாக வா!" என்று பல்லக்குத் திரைக்குள்ளிருந்து பட்டுப் போன்ற குரல் கேட்டது.

பிறகு பல்லக்கு நகர்ந்தது. வீரர்கள் முன்போலவே அதன் முன்னும் பின்னும் சென்றார்கள்.

வந்தியத்தேவன் குதிரையின் தலைக் கயிற்றைப் பிடித்துக் கொண்டு சாலையோரமாக ஒதுங்கி நின்றான். பழுவூர் ஆள்களில் தன்னை அணுகி வந்து பேசியவன் இரண்டு மூன்று தடவை திரும்பித் திரும்பிப் பார்த்ததை அவனுடைய கண்கள் கவனித்து உள்மனத்துக்குச் செய்தி அனுப்பின.

ஆம்; அவனுடைய வெளி மனம் பல்லக்கிலிருந்த பழுவூர் ராணியின் மோகன வடிவத்தைச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தது. இத்தனை நேரம் கண்டது, கேட்டது எல்லாம் உண்மை தானா? அல்லது ஒரு மாய மனோகரக் கனவா? இப்படியும் ஒரு அழகி, ஒரு சௌந்தரிய வடிவம், இந்தப் பூவுலகில் காண முடியுமா!

அரம்பை, ஊர்வசி, மேனகை என்றெல்லாம் தேவமாதர்கள் இருப்பதாகப் புராணங்களில் சொல்வதுண்டு. அவர்களுடைய அழகு, முற்றும் துறந்த முனிவர்களின் தவத்தையும் பங்கம் செய்ததாகக் கேட்டதுண்டு. ஆனால் இந்த உலகத்தில்... பெரிய பழுவேட்டரையர் இந்த மோகினியின் காலடியில் அடிமை பூண்டு கிடப்பதாக நாடு நகரங்களில் பேசுவதெல்லாம் உண்மையாகவே இருக்கலாம். இருந்தால், அதில் வியப்பு ஒன்றும் இராது! நரை திரை மூப்புக் கண்டவரும், தேகமெல்லாம் போர்க் காயங்களுடன் கடூரமான தோற்றங் கொண்டவருமான பழுவேட்டரையர் எங்கே? ஸுகுமாரியும் கட்டழகியுமான இந்த இளம் மங்கை எங்கே? இவளுடைய ஒரு புன்னகையைப் பெறுவதற்காக அந்தக் கிழவர் என்ன காரியந்தான் செய்ய மாட்டார்?...

வெகு நேரம் சாலை ஓரத்தில் நின்று இவ்விதம் சிந்தனைகளில் ஆழ்ந்திருந்த பிறகு வந்தியத்தேவன் குதிரைமேல் ஏறிக் கொண்டு மெள்ள மெள்ள அதைத் தஞ்சைக் கோட்டையை நோக்கிச் செலுத்தினான்.

சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் பிரதான கோட்டை வாசலை அடைந்தான். கோட்டைக்குச் சற்றுத் தூரத்திலேயே நகரம் ஆரம்பமாகியிருந்தது. விதவிதமான பண்டங்கள் விற்கும் கடை வீதிகளும், பலவகைத் தொழில்களில் ஈடுபட்ட மக்கள் வாழும் தெருக்களும், கோட்டையைச் சுற்றி அடுக்கடுக்காக அமைந்திருந்தன. வீதிகளில் போவோரும் வருவோரும் பண்டங்கள் வாங்குவோரும் விலை கூறுவோரும் மாடு பூட்டிய வண்டிகளும் குதிரை பூட்டிய ரதங்களும் நிறைந்து, எங்கும் ஒரே கலகலப்பாயிருந்தது. அந்த வீதிகளுக்குள்ளே புகுந்து சென்று சோழ நாட்டுப் புதிய தலைநகரத்தில் வாழும் மக்களையும், அவர்கள் வாழும் விதத்தையும் பார்க்க வந்தியத்தேவனுக்கு மிக்க ஆவலாயிருந்தது. ஆனால் அதற்கெல்லாம் இப்போது அவகாசம் இல்லை. வந்த காரியத்தை முதலில் பார்க்க வேண்டும். வேடிக்கை பார்ப்பதெல்லாம் பிற்பாடு வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த தீர்மானத்துடன் வந்தியத்தேவன் தஞ்சை நகரின் பிரதான வாசலை அணுகினான். கோட்டை வாசலில் பிரம்மாண்டமான கதவுகள் அச்சமயம் சாத்தியிருந்தன. வாசலில் நின்ற காவலர்கள் மக்களை ஒதுங்கச் செய்து வீதி ஓரங்களில் நிற்கும்படி செய்து கொண்டிருந்தார்கள். மக்களும் ஒதுங்கி நின்றார்கள். ஆம் அவரவர்கள் தங்கள் அலுவல்களைப் பார்த்துக்கொண்டு போவதற்குப் பதிலாக, ஏதோ ஊர்வலம் அல்லது பவனி பார்ப்பதற்காகக் காத்திருப்பவர்களைப் போல் நின்றார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள், வயோதிகர் எல்லாருமே ஆவலுடன் நின்றார்கள்.

கோட்டை வாசலுக்கு முன்னால் சிறிது தூரம் வரை வெறுமையாகவே இருந்தது. வாசலண்டை காவலர்கள் மட்டும் நின்றார்கள்.

விஷயம் என்னவென்று தெரிந்துகொள்ள வந்தியத்தேவன் ஆவல் கொண்டான். எல்லாரும் ஒதுங்கி நிற்கும்போது தான் மட்டும் கோட்டை வாசல் காப்பாளரிடம் சென்று முட்டிக் கொள்ள அவன் விரும்பவில்லை. அதிலிருந்து வீண் வாதமும் சண்டையும் மூளலாம். இப்போது தனக்குக் காரியம் முக்கியமே தவிர வீரியம் பெரிது அல்ல. வீண் சண்டைகளில் இறங்க இது தருணமல்ல.

எனவே, வந்தியத்தேவன் கோட்டை வாசலைக் கவனிக்கக் கூடிய இடத்தில் வீதி ஓரத்தில் ஒதுங்கி நின்றான். பக்கத்தில் கம்மென்று மலரின் மணம் வீசியது. திரும்பிப் பார்த்தான். ஒரு வாலிபன், திருநீறு ருத்திராட்சம் முதலிய சிவச் சின்னங்கள் தரித்தவன், இரண்டு கைகளிலும் இரண்டு பூக்கூடைகளுடன் நிற்பதைக் கண்டான்.

"தம்பி! எல்லாரும் எதற்காக வீதி ஓரம் ஒதுங்கி நிற்கிறார்கள்! ஏதாவது ஊர்வலம் கீர்வலம் வரப் போகிறதா?" என்று கேட்டான்.

"தாங்கள் இந்தப் பக்கத்து மனிதர் இல்லையா? ஐயா?"

"இல்லை, நான் தொண்டை நாட்டைச் சேர்ந்தவன்!"

"அதனால்தான் கேட்கிறீர்கள். நீங்களும் குதிரை மேலிருந்து இறங்கிக் கீழே நிற்பது நல்லது."

வாலிபனோடு பேசுவதற்குச் சௌகரியமாயிருக்கட்டும் என்று வந்தியத்தேவன் குதிரை மீதிருந்து குதித்தான்.

"தம்பி! எதற்காக என்னை இறங்கச் சொன்னாய்?" என்று கேட்டான்.

"இப்போது வேளக்காரப் படை அரசரைத் தரிசனம் செய்து விட்டுக் கோட்டைக்குள்ளிருந்து வரப்போகிறது. அதற்காகத்தான் இத்தனை ஜனங்களும் ஒதுங்கி நிற்கிறார்கள்."

"வேடிக்கை பார்க்கத்தானே?"

"ஆமாம்."

"நான் குதிரை மேல் உட்கார்ந்து கொண்டு பார்த்தால் என்ன?"

"பார்க்கலாம்; ஆனால் வேளக்காரப் படை வீரர்கள் உங்களைப் பார்த்துவிட்டால் ஆபத்து."

"என்ன ஆபத்து? குதிரையைக் கொண்டு போய் விடுவார்களா?"

"குதிரையையும் கொண்டு போவார்கள்; ஆள்களையே கொண்டு போய்விடுவார்கள். பொல்லாதவர்கள்."

"குதிரையையும் ஆளையும் கொண்டு போனால் சும்மா விட்டு விடுவார்களா?"

"விடாமல் என்ன செய்வது? வேளக்காரப் படையார் வைத்ததே இந்த நகரில் சட்டம். அவர்களைக் கேள்வி கேட்பார் கிடையாது. பழுவேட்டரையர்கள் கூட வேளக்காரப்படை விஷயத்தில் தலையிடுவது கிடையாது."

இச் சமயத்தில் கோட்டைக்கு உட்புறத்தில் பெரிய ஆர்ப்பாட்ட ஆரவாரங்கள் கேட்டன. நகரா முழங்கும் சத்தம், பறைகள் கொட்டும் சத்தம், கொம்புகள் ஊதும் சத்தம் இவற்றுடன் பல நூறு மனிதர் குரல்களிலிருந்து எழுந்த வாழ்த்தொலிகளும் கலந்து எதிரொலி செய்தன.

வேளக்கார வீரர் படைகளைப் பற்றி வந்தியத்தேவன் நன்கு அறிந்திருந்தான். பழந்தமிழ் நாட்டில், முக்கியமாகச் சோழ நாட்டில் இது முக்கிய ஸ்தாபனமாக இருந்து வந்தது. 'வேளக்காரர்' என்பவர் அவ்வப்போது அரசு புரிந்த மன்னர்களுக்கு மெய்க்காப்பாளர் போன்றவர். ஆனால் மற்ற சாதாரண மெய்க்காப்பாளருக்கும் இவர்களுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. 'இவர்கள் எங்கள் உயிரைக் கொடுத்தாவது அரசரின் உயிரைப் பாதுகாப்போம்' என்று சபதம் செய்தவர்கள். தங்கள் அஜாக்கிரதையினாலோ, தங்களை மீறியோ, அரசர் உயிருக்கு அபாயம் நேர்ந்துவிட்டால், துர்க்கையின் சந்நிதியில் தங்களுடைய தலையைத் தங்கள் கையினாலேயே வெட்டிக் கொண்டு பலியாவதாகச் சபதம் எடுத்துக் கொண்டவர்கள். அத்தகைய கடூர சபதம் எடுத்துக் கொண்ட வீரர்களுக்கு, மற்றவர்களுக்கு இல்லாத சில சலுகைகள் இருப்பது இயல்புதானே?

கோட்டை வாசலின் கதவுகள் இரண்டும் படார் படார் என்று திறந்துகொண்டன. முதலில் இரண்டு குதிரை வீரர்கள் வந்தார்கள். அவர்கள் தங்களது வலக்கையில் உயரப் பறந்த கொடி பிடித்துக் கொண்டிருந்தார்கள். அந்தக் கொடியின் தோற்றம் விசித்திரமாக இருந்தது. செந்நிறமான அக் கொடியின் மேலே புலியும், புலிக்கு அடியில் கிரீடமும் சித்தரிக்கப்பட்டிருந்தன. கிரீடத்துக்கு அடியில் ஒரு பலிபீடமும், கழுத்து அறுபட்ட ஒரு தலையும், ஒரு பெரிய பலிக் கத்தியும் காட்சி அளித்தன. கொடியைப் பார்க்கச் சிறிது பயங்கரமாகவே இருந்தது. கொடி தாங்கிய குதிரை வீரர்களுக்குப் பின்னால் ஒரு பெரிய ரிஷபம் இரண்டு பேரிகைகளைச் சுமந்துகொண்டு வந்தது. இரண்டு ஆட்கள் நின்று பேரிகைகளை முழங்கினார்கள்.

ரிஷபத்துக்குப் பின்னால் சுமார் ஐம்பது வீரர்கள் சிறுபறை, பெரும்பறை, தம்பட்டம் ஆகியவற்றை முழங்கிக் கொண்டு வந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து இன்னும் ஐம்பது பேர் நீண்டு வளைந்த கொம்புகளை 'பாம் பாம் பாம்' என்று ஊதிக்கொண்டு வந்தார்கள். அவர்களுக்கும் பின்னால் வந்த வீரர்கள் ஆயிரம் பேர் இருக்கலாம். அவர்களில் பெரும்பாலோர் பின்வரும் வாழ்த்தொலிகளை இடிமுழக்கக் குரலில் எழுப்பிக்கொண்டு வந்தார்கள்.

"பராந்தக சோழ பூமண்டல சக்கரவர்த்தி வாழ்க!"

"வாழ்க, வாழ்க!"

"சுந்தர சோழ மன்னர் வாழ்க!"

"வாழ்க! வாழ்க!"

"கோழி வேந்தர் வாழ்க!"

"வாழ்க! வாழ்க!"

"தஞ்சையர் கோன் வாழ்க!"

"வாழ்க! வாழ்க!"

"வீரபாண்டியனைச் சுரம் இறக்கிய பெருமான் வாழ்க!"

"வாழ்க! வாழ்க!"

"மதுரையும் ஈழமும் தொண்டை மண்டலமும் கொண்ட கோ இராஜகேசரி வாழ்க!"

"வாழ்க! வாழ்க!"

"கரிகால் வளவன் திருக்குலம் நீடூழி வாழ்க!"

"வாழ்க! வாழ்க!"

"துர்க்கை மாகாளி பராத்பரி பராசக்தி வெல்க"

"வெல்க! வெல்க!"

"வீரப் புலிக்கொடி பாரெல்லாம் பரந்து வெல்க!"

"வெல்க! வெல்க!"

"வெற்றிவேல்!"

"வீரவேல்!"

நூற்றுக்கணக்கான வலிவுள்ள குரல்களிலிருந்து எழுந்த மேற்படி கோஷங்கள் கேட்போரை மெய் சிலிர்க்கச் செய்தன. கோட்டை வாசலின் வழியாக வந்தபோது அந்தக் கோஷங்கள் உண்டாக்கிய பிரதித்வனிகளும் சேர்ந்து கொண்டன. வீதி ஓரங்களில் நின்ற மக்களில் பலரும் கோஷத்தில் கலந்து கொண்டார்கள்.

இவ்விதம், (தமிழ்நாட்டின் தெய்வமான முருகனுக்கு 'வேளக்காரன்' என்று ஒரு பெயர் உண்டு என்பதை வாசகர்கள் அறிந்திருக்கலாம்; 'பக்தர்களைக் காப்பாற்றுவதாகச் சபதம் பூண்ட தெய்வம்' என்பதால் முருகனுக்கு அப்பெயர் வந்தது என்று அறிஞர்கள் கருதுகிறார்கள்) வேளக்காரப் படை வீரர்கள் தஞ்சைக் கோட்டை வாசல் வழியாக வெளிவரத் தொடங்கி, வீதி வழியாகச் சென்று, தூரத்தில் மறையும் வரையில் ஒரே அல்லோலகல்லோலமாக இருந்தது.






உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
கல்கியின் பொன்னியின் செல்வன்

முதல் பாகம் : புது வெள்ளம்

23. அமுதனின் அன்னை

வேளக்கார வீரர் படை பெரிய கடைவீதியின் வழியாகப் போயிற்று. படையின் கடைசியில் சென்ற சில வீரர்கள் கடைத்தெருவில் சில திருவிளையாடல்களைப் புரிந்தார்கள். ஒருவன் ஒரு பட்சணக் கடையில் புகுந்து ஒரு கூடை நிறைய அதிரசத்தை எடுத்துக் கொண்டு வந்து மற்ற வீரர்களுக்கு விநியோகித்தான். பிறகு வெறும் கூடையைக் கடைக்காரனுடைய தலையிலே கவிழ்த்த போது, வீரர்களும் வீதியில் சென்றவர்களும் 'ஹஹ்ஹஹ்ஹா' என்று இரைந்து சிரித்தார்கள். இன்னொரு வீரன் வழியில் எதிர்ப்பட்ட ஒரு மூதாட்டியின் கையிலிருந்த பூக்கூடையைப் பிடுங்கினான். பூவையெல்லாம் வாரி இறைத்துக் கொண்டே "பூமாரி பொழிகிறதடா!" என்றான். அவன் வாரி வீசிய பூக்களைப் பிடிக்க முயன்ற வீரர்கள் குதித்தும் சிரித்தும் கொம்மாளமடித்தார்கள். எதிரில் வந்த ஒரு மாட்டுவண்டியை இன்னொரு வீரன் நிறுத்தி, மாட்டை வண்டியிலிருந்து பூட்டு அவிழ்த்து விரட்டி அடித்தான். மாடு மிரண்டு மக்கள் கூட்டத்திடையே புகுந்து சிலரைத் தள்ளிக் கொண்டு ஓடியது; மீண்டும் ஒரே கோலாகலச் சிரிப்புத்தான்!

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த வந்தியத்தேவன், "ஆகா! பழுவேட்டரையரின் வீரர்களைப் போல் இவர்களும் விளையாடுகிறார்கள். இவர்களுடைய விளையாட்டு மற்றவர்களுக்கு வினையாக இருக்கிறது. நல்ல வேளை, இவர்களுடைய பார்வை நம்மீது விழாமல் ஒதுங்கி நின்றோம். இல்லாவிடில் ஒரு சண்டை ஏற்பட்டிருக்கும். வந்த காரியம் கெட்டுப் போயிருக்கும்" என்று எண்ணிக் கொண்டான். ஆனால் ஒரே ஒரு வித்தியாசமும் அவனுக்குப் புலனாயிற்று. வேளக்காரப் படை வீரர்களின் விளையாடல்களை இங்குள்ள ஜனங்கள் அவ்வளவாக வெறுக்கவில்லை. அவர்களுடைய கொம்மாளத்தில் ஜனங்களும் சேர்ந்து சிரித்துக் குதூகலித்தார்கள்!

அதைப் பற்றி கேட்கலாம் என்று திரும்பிப் பார்த்தபோது பூக்குடலைகளுடன் நின்ற சிறுவனை வந்தியத்தேவன் காணவில்லை. கூட்டத்திலும் கோலாகலத்திலும் அந்த வாலிபன் எங்கேயோ போய்விட்டான். ஒருவேளை அவனுடைய வேலையைப் பார்க்கப் போயிருக்கக்கூடும்.

வேளக்காரப்படை மாலையில் கோட்டையிலிருந்து வெளியேறிய பிறகு மற்ற யாரையும் உள்ளே விடுவதில்லையென்று வந்தியத்தேவன் அறிந்து கொண்டான். இரவு பகல் எந்த நேரத்திலும் கோட்டைக்குள் பிரவேசிக்கும் உரிமை பெற்றவர்கள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், அமைச்சர்களும், தண்ட நாயகர்களுந்தான். பழுவேட்டரையரின் குடும்பத்தாருக்கும் அவ்வுரிமை உண்டு என்று வந்தியத்தேவன் தெரிந்துகொண்டான். எனவே, இராத்திரியே கோட்டைக்குள் போக வேண்டும் என்ற உத்தேசம் அவனுக்கு மாறிவிட்டது. தன்னிடமிருந்த இலச்சினை மோதிரத்தைக் காட்டிச் சோதனை செய்ய வந்தியத்தேவன் விரும்பவில்லை. அதைவிட இரவு கோட்டைக்கு வெளியிலேயே தங்கி நகரைச் சுற்றிப் பார்த்துவிட்டு நாளை உதயத்துக்குப் பிறகு கோட்டைக்குள் செல்வதே நல்லது. இராத்திரியில் அப்படியே கோட்டைக்குள் பிரவேசித்தாலும் அரசரைத் தரிசித்து ஓலை கொடுப்பது இயலாத காரியமே யல்லவா?

கோட்டை மதிலைச் சுற்றிலும் இருந்த வீதிகளின் வழியாக வந்தியத்தேவன் வேடிக்கை பார்த்துக் கொண்டே மெதுவாகச் சென்றான். அன்று பல காத தூரம் பிரயாணம் செய்திருந்த அவனுடைய குதிரை மிகக் களைத்திருந்தது. சீக்கிரத்தில் அதற்கு ஓய்வு கொடுக்க வேண்டியதுதான். இல்லாவிடில் நாளைக்கு அவசியம் ஏற்படும்போது இக் குதிரையினால் பயனில்லாமல் போய்விடும்! வசதியாகத் தங்குவதற்கு ஓரிடம் விரைவில் கண்டு பிடித்தாக வேண்டும்!

தஞ்சைபுரி அப்போது புதிதாகப் பல்கிப் பெருகிப் பரந்து வளர்ந்து கொண்டிருந்த நகரம். அதிலும் அப்போது மாலை நேரம். நூற்றுக்கணக்கான வீதி விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளிவீசத் தொடங்கியிருந்தன.

வீதிகளெல்லாம் ஜே ஜே என்று ஒரே ஜனக்கூட்டம். வெளியூர்களிலிருந்து பல அலுவல்களின் நிமித்தமாக வந்தவர்கள் அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தார்கள். அவர்களில் சோழ நாட்டுப் பட்டணங்களிலிருந்தும் கிராமங்களிலிருந்தும் வந்தவர்களும் இருந்தார்கள். புதிதாக சோழ சாம்ராஜ்யத்துக்கு உட்பட்டிருந்த நாடுகளிலிருந்து வந்தவர்களும் காணப்பட்டார்கள். பொருநை நதியிலிருந்து பாலாற்றங்கரை வரையிலும் கீழைக்கடற்கரையிலிருந்து மேற்குக் கடற்கரை வரையிலும் பரந்திருந்த தேசங்களிலிருந்து தலைநகருக்குப் பலர் வந்திருந்தார்கள். விந்திய மலைக்கு வடக்கேயிருந்து வந்தவர்களும் கடல் கடந்த நாடுகளிலிருந்து வந்தவர்களுங்கூடச் சிலர் அம் மாநகரின் வீதிகளில் ஆங்காங்கே தோன்றினார்கள்.

ஆப்பம், அதிரசம் முதலிய தின்பண்டங்கள் விற்ற கடைகளில் மக்கள் ஈ மொய்ப்பது போல் மொய்த்து அப்பண்டங்களை வாங்கிக் கொண்டிருந்தார்கள். வாழைப் பழங்களும் வேறு பலவிதக் கனிகளும் மலைமலையாகக் குவிந்து கிடந்தன. பூக்கடைகளைப் பற்றியோ சொல்ல வேண்டியதில்லை. முல்லையும் மல்லிகையும் திரு ஆத்தியும் செண்பகமும் புஷ்பக் குன்றுகளைப்போல் காட்சி தந்தன. அந்த மலர்க்குன்றுகளைச் சுற்றிப் பெண்மணிகள் வண்டுகளைப் போல் ரீங்காரம் செய்து கொண்டு மொய்த்தார்கள்.

புஷ்பக் கடைகளினருகில் சென்றதும் வந்தியத்தேவன் அந்தப் பூக்கார வாலிபனை நினைத்துக் கொண்டான். அவனை மறுபடியும் பார்க்கக் கூடுமானால் எவ்வளவு சௌகரியமாயிருக்கும்? இந்த நகரில் வசதியாக தங்குவதற்கு ஓரிடம் அவனைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமல்லவா?... இப்படி எண்ணியபோதே சற்றுத் தூரத்தில் அந்த வாலிபன் வந்த கொண்டிருப்பதை வந்தியத்தேவன் கண்டான். குதிரையிலிருந்து இறங்கி அவனை அணுகினான்.

"தம்பி! பூக்குடலைகளில் ஒன்றையும் காணோமே? பூவெல்லாம் எங்கே? விற்றாகிவிட்டதா?" என்றான்.

"விற்பதற்காக நான் பூ கொண்டுவரவில்லை. கோயில் பூஜைக்காகப் பூ கொண்டு வந்தேன். பூவைக் கொடுத்தாகி விட்டது வீட்டுக்குத் திரும்பிப் போகிறேன்."

"எந்தக் கோயிலுக்கு நீ இந்தப் புஷ்பக் கைங்கரியம் செய்கிறாய்?"

"தளிக்குளத்தார் ஆலயம் என்று கேட்டதுண்டா?"

"ஓகோ! தஞ்சைத் தளிக்குளத்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தக் கோவில்தான் போலிருக்கிறது. பெரிய கோவிலா அது?"

"இல்லை, சிறிய கோவில்தான். கொஞ்சகாலமாக இத்தஞ்சையில் துர்க்கையம்மன் கோவிலுக்குத் தான் மகிமை அதிகம். அங்கேதான் பூஜை, பொங்கல், பலி, திருவிழா ஆர்ப்பாட்டங்கள் அதிகம். அரச குடும்பத்தாரும் பழுவேட்டரையர்களும் துர்க்கை அம்மன் கோவிலுக்குத்தான் அதிகமாகப் போகிறார்கள். தளிக்குளத்தார் கோவிலுக்கு அவ்வளவு மகிமை இல்லை. தரிசனம் செய்ய ஜனங்கள் அவ்வளவாக வருவதில்லை..."

"நீ இந்தப் புஷ்பக் கைங்கரியம் செய்து வருகிறாயே இதற்காக ஏதேனும் சன்மானம் உண்டா?"

"எங்கள் குடும்பத்துக்கு இதற்காக மானியம் இருக்கிறது. என் பாட்டனார் காலத்திலிருந்து கண்டராதித்த சக்கரவர்த்தி விட்ட நிவந்தம் உண்டு. தற்சமயம் நானும் என் தாயாரும் இந்தக் கைங்கரியத்தை செய்து வருகிறோம்."

"தளிக்குளத்தார் கோயில் செங்கல் திருப்பணியா? அல்லது கருங்கல் பணி செய்திருக்கிறார்களா?" என்று வல்லவரையன் கேட்டான். அவன் வருகின்ற வழியில் பல செங்கல் கோயில்களுக்குக் கருங்கல் திருப்பணி நடந்து கொண்டிருப்பதைப் பார்த்திருந்தபடியால் இவ்விதம் கேட்டான்.

"இப்போது செங்கல் கோயில்தான். கருங்கல் திருப்பணி விரைவில் தொடங்கும் என்று கேள்வி. இந்தத் திருப்பணியை உடனே நடத்த வேண்டும் என்று பழையாறைப் பெரிய பிராட்டியார் விரும்புகிறாராம். ஆனால்..." என்று அந்த வாலிபன் தயங்கி நிறுத்தினான்.

"ஆனால் என்ன?..."

"பராபரியாகக் கேள்விப்பட்டதையெல்லாம் சொல்வதில் என்ன பயன்? பகலில் பக்கம் பார்த்துப் பேசு, இரவில் அதுவும் பேசாதே என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். இதுவோ நாற்சந்தியும் கூடும் இடம்; நம்மைச் சுற்றிலும் ஜனங்கள்..."

"இந்த மாதிரி இடத்திலே நின்று தான் தைரியமாக எந்த ரகசியமும் பேசலாம். இந்தப் பெருங்கூட்டத்திலும் இரைச்சலிலும் நம்முடைய பேச்சு யார் காதிலும் விழாது."

"பேசுவதற்கு இரகசியம் என்ன இருக்கிறது?" என்றான் அந்த வாலிபன், வந்தியத்தேவனைக் கொஞ்சம் சந்தேகத்துடன் பார்த்து.

ஆகா! இந்தப் பிள்ளை நல்ல புத்திசாலி! இவனுடன் சிநேகம் செய்து கொள்வதில் லாபம் உண்டு! பல விஷயங்களை அறியலாம்! ஆனால் இவன் மனத்தில் வீண் சந்தேகத்தை உண்டாக்கக் கூடாது - இவ்விதம் வந்தியத்தேவன் எண்ணி, "ஆமாம்; இரகசியம் என்ன இருக்கிறது? ஒன்றுமில்லைதான். போனால் போகட்டும், தம்பி! இரவு எங்கேயாவது நான் நிம்மதியாக தூங்க வேண்டும். வெகு தூரம் பிரயாணம் செய்து மிகவும் களைப்படைந்திருக்கிறேன். எங்கே தங்கலாம்? ஒரு நல்ல விடுதிக்கு வழிகாட்டி எனக்கு உதவி செய்ய முடியுமா?" என்று கேட்டான்.

"இந்த நகரில் தங்குவதற்கு இடங்களுக்கு என்ன குறைவு? சத்திரங்கள் எத்தனையோ இருக்கின்றன. அயல் நாடுகளிலிருந்து வருகிறவர்களுக்கென்று ஏற்பட்ட ராஜாங்க விடுதிகளும் இருக்கின்றன. ஆனால் உங்களுக்கு இஷ்டமாயிருந்தால்..."

"தம்பி! உன் பெயர் என்ன?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.

"அமுதன். சேந்தன் அமுதன்."

"அடடா! எவ்வளவு நல்ல பெயர்? கேட்கும்போதே என் நாவில் அமுது ஊறுகிறதே... எனக்கு இஷ்டமாயிருந்தால் உன்னுடைய வீட்டுக்கு வந்து தங்கலாம் என்று தானே நீ சொல்லத் தொடங்கினாய்?"

"ஆமாம், அது எப்படி உங்களுக்குத் தெரிந்தது?"

"என்னிடம் மந்திர வித்தை இருக்கிறது. அதனால் தெரிந்து கொண்டேன். உன் வீடு எங்கே இருக்கிறது?"

"நகர எல்லையைத் தாண்டிக் கூப்பிடு தூரத்தில் எங்கள் பூந்தோட்டம் இருக்கிறது. தோட்டத்துக்குள்ளே எங்கள் வீடும் இருக்கிறது" என்றான் அமுதன்

"ஆகா! அப்படியானால் உன் வீட்டுக்கு நான் வந்தே தீருவேன். இந்தப் பட்டணத்துச் சந்தடியில் என்னால் இன்றிரவைக் கழிக்க முடியாது. மேலும் உன்னைப் போன்ற உத்தமப் புதல்வனைப் பெற்ற உத்தமியைத் தரிசிக்க விரும்புகிறேன்."

"என்னைப் பெற்ற அன்னை உத்தமிதான்; ஆனால் துர்ப்பாக்கியசாலி..."

"அடாடா! ஏன் அவ்வாறு சொல்கிறாய்? ஒரு வேளை உன் தந்தை..."

"என் தந்தை இறந்துதான் போனார். ஆனால் அது மட்டுமில்லை. என் தாய் பிறவியிலேயே துர்ப்பாக்கியசாலி. பார்த்தால் தெரிந்து கொள்வீர்கள். வாருங்கள் போகலாம்."

அரை நாழிகை நேரம் நடந்து அவர்கள் நகர்ப்புறத்துக்கு அப்பாலிருந்த பூந்தோட்டத்துக்கு வந்து சேர்ந்தார்கள். இரவில் மலரும் பூக்களின் இனிய மணம் வந்தியத்தேவனுக்கு அபூர்வ சுக மயக்கத்தை உண்டாக்கியது. நகரத்தின் வீதிகளில் எழுந்த கோலாகல இரைச்சலும் சந்தடியும் அங்கே அவ்வளவாகக் கேட்கவில்லை.

பூந்தோட்டத்தின் மத்தியில் ஓட்டு வீடு ஒன்று இருந்தது. பக்கத்தில் இரு குடிசைகள் இருந்தன. தோட்ட வேலையில் உதவி செய்த இரு குடும்பத்தார் அக் குடிசைகளில் இருந்தார்கள். அவர்களில் ஒருவனை அமுதன் அழைத்து, வந்தியத்தேவனுடைய குதிரைக்குத் தீனி வைத்து மரத்தில் கட்டிவைக்கும்படிக் கூறினான்.

பிறகு, வீட்டுக்குள் அழைத்துச் சென்றான். அமுதனுடைய தாயாரைப் பார்த்ததும் வந்தியத்தேவனுக்கு அவளுடைய துர்ப்பாக்கியம் இத்தகையது என்று தெரிந்துவிட்டது. அந்த மூதாட்டி பேசும் சக்தியற்ற ஊமை, காதும் கேளாது என்று தெரிந்தது. ஆனால் அந்த மாதரசியின் முகத்தில் கருணையும் அன்பும் நிறைந்து ததும்பியதை வந்தியத்தேவன் கண்டான். கூரிய அறிவின் ஒளியும் அம்முகத்திலிருந்து வீசியது. பொதுவாக, ஏதாவது ஒரு அங்கத்தில் ஊனமுள்ளவர்கள் மற்றபடி சிறந்த அறிவுக் கூர்மையுள்ளவர்களாக விளங்குவது சிருஷ்டி விசித்திரங்களில் ஒன்று அல்லவா?

அமுதன் சில சமிக்ஞைகள் செய்ததும் அந்த மூதாட்டி வந்திருப்பவன் அயல் தேசத்திலிருந்து வந்த விருந்தாளி என்று தெரிந்து கொண்டாள். முகபாவத்தினாலேயே தன்னுடைய பரிவையும் வரவேற்பையும் தெரிவித்தாள்.

சற்று நேரத்துக்கெல்லாம் இலை போட்டு அந்த அம்மாள் உணவு பரிமாறினாள். முதலில் இடியாப்பமும் இனிப்பான தேங்காய்ப்பாலும் வந்தன. அந்த மாதிரி இனிய பலகாரத்தை வந்தியத்தேவன் தன் வாழ்நாளில் அருந்தியதில்லை. பத்துப் பன்னிரண்டு இடியாப்பமும், அரைப்படி தேங்காய்ப் பாலும் சாப்பிட்டான். பிறகு புளிக்கறியும் சோளமாப் பணியாரமும் வந்தன. அவற்றையும் ஒரு கை பார்த்தான். அப்படியும் அவன் பசி அடங்கவில்லை; கடைசியாக, காற்படி அரிசிச் சோறும் அரைப்படி தயிரும் நுங்கினான்! பிறகுதான் அவன் இலையிலிருந்து எழுந்தான்.

சாப்பிடும்போதே சில விஷயங்களை அமுதனிடம் கேட்டுத் தெரிந்துகொண்டான். தஞ்சைக் கோட்டைக்குள்ளே அப்போது சுந்தர சோழ சக்கரவர்த்தியையும் அவருடைய அரண்மனைப் பரிவாரங்களையும் தவிர, இன்னும் முக்கியமாக யார் யார் இருக்கிறார்கள் என்று விசாரித்தான்.

பெரிய பழுவேட்டரையர், சின்ன பழுவேட்டரையர் இவர்களின் மாளிகைகளும் பரிவாரங்களும் அங்கு இருந்தன. தன பொக்கிஷம், தானிய பண்டாரம் இரண்டும் கோட்டைக்குள் இருந்தபடியால் அவற்றைப் பரிபாலிக்கும் அதிகாரிகளும் கணக்கர்களும் இருந்தார்கள். சுந்தர சோழரின் அந்தரங்க நம்பிக்கைக்கும் அபிமானத்துக்கும் பாத்திரமான அநிருத்த பிரமராயர் என்னும் அமைச்சரும், திருமந்திர ஓலை நாயகரும் கோட்டைக்குள்ளே தான் வசித்தார்கள். மற்றும் சின்னப் பழுவேட்டரையரின் தலைமையில் தஞ்சைக் கோட்டையைக் காவல் புரிந்த வீரர்களும் அவர்களுடைய குடும்பத்தாரும் அங்கேயே தங்கியிருந்தார்கள். பொன், வெள்ளி நகை வியாபாரிகளும், நவரத்தின வியாபாரிகளும், பொன்னாசாரிகளும் கோட்டைக்குள் இடம் அளிக்கப்பட்டிருந்தார்கள். பெரிய பழுவேட்டரையரின் கீழ் வரி விதிக்கும் வேலை பார்த்த நூற்றுக்கணக்கான அலுவலர்கள் இருந்தனர். துர்க்கையம்மன் கோயில் கோட்டைக்குள்ளேதான் ஒரு மூலையில் இருந்தது. கோவில் பூசாரிகளும் பணிவிடையாளரும் கணிகையரும் கோவிலுக்கு அருகில் குடியிருந்தார்கள்.

இதையெல்லாம் தெரிந்துகொண்ட பிறகு, "அமைச்சர்கள் அனைவரும் தற்சமயம் கோட்டையில் இருக்கிறார்களா?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.

"எல்லாரும் எப்படி இருப்பார்கள்? பற்பல காரியமாக வெளியிலே போய்க் கொண்டும் வந்து கொண்டும்தான் இருப்பார்கள். அநிருத்த பிரமராயர் சில காலமாகவே நகரில் இல்லை. அவர் சேரநாடு சென்றிருப்பதாகக் கேள்வி. பெரிய பழுவேட்டரையர் நாலு தினங்களுக்கு முன்னால் வெளியே சென்றார். கொள்ளிடத்துக்கு வடக்கே நடுநாட்டுக்குச் சென்றதாகக் கேள்வி."

"போனவர் ஒரு வேளை திரும்பி வந்திருக்கலாம் அல்லவா? உனக்குத் தெரியாதாக்கும்!"

"இன்று சாயங்காலம் பழுவூர் இளையராணியின் பல்லக்கு வந்தது. கோட்டை வாசலில் நானே பார்த்தேன். ஆனால் பழுவேட்டரையர் வரவில்லை. ஒரு வேளை வழியில் எங்கேனும் தங்கி விட்டு நாளை வரக்கூடும்."

"தம்பி! இளவரசர் மதுராந்தகத்தேவரும் கோட்டைக்குள்ளே தானே தங்கியிருக்கிறார்?"

"ஆமாம்; பழுவேட்டரையர் அரண்மனைக்குப் பக்கத்தில் மதுராந்தகரின் மாளிகை இருக்கிறது. சின்னப் பழுவேட்டரையரின் திருமகளை மணம்புரிந்த மருமகர் அல்லவா?"

"ஓஹோ! அதுவும் அப்படியா? எனக்கு இது வரையில் தெரியாதே?"

"ரொம்பப் பேருக்குத் தெரியாதுதான். சக்கரவர்த்தியின் தேக அசௌகர்யத்தை முன்னிட்டுத் திருமணத்தைக் கோலாகலமாக நடத்தவில்லை."

"நல்லது; மதுராந்தகத்தேவர் இப்போது கோட்டைக்குள்ளே தானே இருக்கிறார்?"

"கோட்டைக்குள்ளேதான் இருக்கவேண்டும். ஆனால் மதுராந்தகத்தேவன் சாதாரணமாக வெளியில் வருவதில்லை. மக்கள் அவரைப் பார்க்க முடிகிறதும் இல்லை. சிவ பக்தியில் ஈடுபட்டுப் பெரும்பாலும் யோகத்திலும் தியானத்திலும் பூஜையிலும் காலங்கழிப்பதாகக் கேள்வி."

"ஆனாலும் இத்தனை நாளைக்குப் பிறகு கலியாணம் செய்து கொண்டிருக்கிறாரே?"

"ஆமாம்; அது கொஞ்சம் வியப்பான காரியந்தான். கலியாணத்துக்குப் பிறகு மாப்பிள்ளைத்தேவரின் மனமே மாறிப் போயிருப்பதாயும் சொல்கிறார்கள். நமக்கென்ன அதைப்பற்றி? பெரிய இடத்துப் பேச்சுப் பேசாமலிருப்பதே நல்லது..."

சேந்தன் அமுதனிடம் இன்னும் பல விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளும் ஆவல் வந்தியத்தேவனுக்கு இருந்தது. ஆனால் அதிகமாக ஏதேனும் கேட்டுச் சந்தேகத்தைக் கிளப்பிவிட அவன் விரும்பவில்லை. இத்தகைய சாதுப்பிள்ளையின் சிநேகம் தனக்குப் பேருதவியாயிருக்கும். தஞ்சையில் தங்க இம்மாதிரி ஒரு வீடு அகப்பட்டதும் தன்னுடைய அதிர்ஷ்டந்தான். அதையெல்லாம் கெடுத்துக் கொள்வானேன்? மேலும், நீண்ட பிரயாணக் களைப்புடன் முதல்நாள் இரவு கண் விழித்ததும் சேர்ந்துகொண்டது. கண்ணைச் சுழற்றிக் கொண்டு தூக்கம் வந்தது. சேந்தன் அமுதன் அவனுடைய நிலையை அறிந்து விரைவில் படுக்கை போட்டுக் கொடுத்தான்.

தூக்க மயக்கத்தில் கடைசியாக வந்தியத்தேவனுடைய மனத்தில் பழுவூர் இளைய ராணியின் திருமுகம் வந்தது. அப்பப்பா! என்ன அழகு! என்ன ஜொலிப்பு! அந்த மாயமோகன வடிவத்தைத் திடீரென்று அவன் பார்த்ததும் அடியோடு செயல் இழந்து கண் கொட்டாமல் திகைத்து நின்றது இன்னொரு அனுபவத்தை அவனுக்கு நினைவூட்டியது. சிறு பிராயத்தில் ஒரு சமயம் காட்டு வழியாய்ப் போய்க் கொண்டிருக்கையில் திடீரென்று படமெடுத்து ஆடிய பாம்பு ஒன்று அவன் முன் எதிர்ப்பட்டது. அதன் அழகே அழகு! கவர்ச்சியே கவர்ச்சி! வந்தியத்தேவனால் பாம்பின் படத்திலிருந்து கண்ணை அகற்றவே முடியவில்லை. கண் கொட்டவும் முடியவில்லை. பார்த்தது பார்த்தபடி நின்றான். பாம்பும் ஆடிக் கொண்டேயிருந்தது! பாம்பு ஆடிய போது அதற்கிணங்க, இவன் உடம்பும் ஆடியது - இதன் முடிவு என்ன ஆகியிருக்குமோ தெரியாது. திடீரென்று ஒரு கீரிப்பிள்ளை வந்து பாம்பின் மீது பாய்ந்தது. இரண்டும் துவந்த யுத்தம் தொடங்கின. அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு வந்தியத்தேவன் ஒரே ஓட்டமாக ஓடிவந்துவிட்டான்!...

சீச்சி! என்ன உதாரணம். இந்தப் புவன மோகினியான சுந்தராங்கியைப் படமெடுத்த பாம்புக்கா ஒப்பிடுவது? இவளுடைய பால்வடியும் முகத்தை ஒரு தடவை பார்த்தாலும் பசி தீர்ந்து விடுமே?... நாளைக்கு அவளை மறுபடி காணப் போகிறோமல்லவா! அவளுடைய குரலிலேதான் என்ன மதுரம்! இவள் ஒரு அபூர்வமான அழகிதான். ஆனால் குடந்தை சோதிடர் வீட்டிலும் அரிசிலாற்றங்கரையிலும் பார்த்த அந்த இன்னொரு பெண்?... அவளுடைய முகத்திலும் காந்தி ஒளி விட்டது! அழகு சுடர் விட்டு!... இரண்டு முகங்களும் சுந்தர முகங்களாயினும் அவற்றுக்குள் எத்தனை வேற்றுமை! அதில் கம்பீரமும் பெருந்தன்மையும்; இதில் மோகனமும் கவர்ச்சியும்! இப்படி அவன் உள்ளம் அந்த இரு மங்கையரின் முகங்களையும் ஒப்பிட்டுக் கொண்டிருந்த போது, மற்றொரு மங்கை வந்து குறுக்கிட்டாள். சர்வாதிகாரக் கொடுங்கோல் அரசியான நித்திராதேவி வந்தியத்தேவனைப் பரிபூரணமாக ஆட்கொண்டாள்.






உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
கல்கியின் பொன்னியின் செல்வன்

முதல் பாகம் : புது வெள்ளம்

24. காக்கையும் குயிலும்


இரவெல்லாம் கட்டையைப்போல் கிடந்து தூங்கிவிட்டுக் காலையில் சூரியன் உதித்த பிறகே வந்தியத்தேவன் துயிலெழுந்தான். விழித்துக் கொண்ட பிறகும் எழுந்திருக்க மனம் வராமல் படுத்திருந்தான். மேலக்காற்று விர்ரென்று வீச, மரஞ்செடிகளின் கிளைகளும் இலைகளும் ஒன்றோடொன்று உராய்ந்து 'சோ' என்ற சத்தத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தன. அந்தச் சுருதிக் கிணங்க, ஒரு இளம் பிள்ளையின் இனிய குரல் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தேவாரப் பாடலைப் பண்ணுடன் பாடியது.

"பொன்னார் மேனியனே புலித் தாலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே!"

இதைக் கேட்ட வந்தியத்தேவன் கண்ணை விழித்துப் பார்த்தான். அவனுக்கெதிரே பூந்தோட்டத்தில் கொன்றை மரங்கள் சரஞ்சரமாகப் பொன் மலர்களைத் தொங்கவிட்டுக் கொண்டு காட்சியளித்தன. சேந்தன் அமுதன் ஒரு கையில் குடலையும் இன்னொரு கையில் அலக்கும் வைத்துக் கொண்டு, வாயினால் பாடிக் கொண்டே, கொன்றை மலர்களைப் பறித்துக் கொண்டிருந்தான். அதிகாலையிலே எழுந்து ஸ்நானம் செய்து திருநீறு புனைந்திருந்த சேந்தன் அமுதன், சிவபக்தனாகிய மார்க்கண்டனைப் போல் தோன்றினான். இப்படி இனிமையாகவும் அழகாகவும் பாடும் பிள்ளையின் குரலைக் கேட்க அவனுடைய அன்னை கொடுத்து வைக்கவில்லையே என்ற எண்ணத்துடன் வந்தியத்தேவன் எழுந்தான். அமுதனைப் போல் தானும் பூந்தோட்டம் வளர்த்துச் சிவ கைங்கரியம் செய்து கொண்டு ஏன் ஆனந்தமாய்க் காலங் கழிக்கக் கூடாது? எதற்காகக் கையில் வாளும் வேலும் ஏந்திக் கொண்டு ஊர் ஊராக அலைய வேண்டும்? எந்த நேரமும் பிறரைக் கொல்லுவதற்கும் பிறரால் கொல்லப்படுவதற்கும் ஆயத்தமாக ஏன் திரிய வேண்டும்? - இத்தகைய என்ணங்கள் அவன் மனத்தில் உதித்தன. ஆனால் சிறிது நேரத்தில் மனம் மாறியது. சேந்தன் அமுதனைப் போல் உலகில் எல்லாருமே சிவ பக்தர்களாயிருந்து விடுவார்களா? திருடர்களும் கொள்ளைக்காரர்களும் வஞ்சகர்களும் எளியவர்களைத் துன்புறுத்துவதில் களிப்படைகிறவர்களும் இருக்கத்தான் இருப்பார்கள். இவர்களையெல்லாம் அடக்கி, நியாயத்தையும் தர்மத்தையும் நிலைநாட்ட அரசாங்கம் வேண்டும். அரசாங்கம் நடத்த அரசர்களும் அமைச்சர்களும் வேண்டும். இவர்களுக்கு ஆபத்து வராமல் பாதுகாக்க வேளக்காரப் படைகளும் வேண்டும். தன்னைப்போல் அரசர்களுக்கு ஓலை கொண்டுபோகவும் ஆட்கள் வேண்டும். ஆம்! இன்று சுந்தரசோழ சக்கரவர்த்தியைப் பார்த்தே தீரவேண்டும். பெரிய பழுவேட்டரையர் திரும்பி வருவதற்குள் சக்கரவர்த்தியைப் பார்த்தால்தான் பார்த்தது. அவர் வந்துவிட்டால் அது சாத்தியமில்லாமலே போகலாம்...

பூந்தோட்டத்துக்குப் பக்கத்திலேயே இருந்த தாமரைக் குளத்தில் குளித்துவிட்டு வந்து வல்லவரையன் ஆடை ஆபரணங்கள் அணிந்து தன்னை நன்றாக அலங்கரித்துக் கொண்டான். சக்கரவர்த்தியைத் தரிசனம் செய்யப் போகும்போது சாதாரணமாகப் போகலாமா? இதற்காகத்தான் அலங்கரித்துக் கொண்டானா, அல்லது பழுவூர் இளையராணியை அன்று மீண்டும் பார்க்கப் போகிறோம் என்கிற எண்ணமும் அவன் மனத்திற்குள் இருந்ததா என்று நாம் சொல்ல முடியாது.

காலை உணவுக்குப் பிறகு சேந்தன் அமுதன் உச்சிவேளைப் பூஜைக் கைங்கரியத்துக்காகப் பூக்குடலையுடன் கிளம்ப, வந்தியத்தேவன் சக்கரவர்த்தியின் தரிசனத்துக்காகப் புறப்பட்டான். இருவரும் நடந்தே சென்றார்கள்.

கோட்டைக்குள் குதிரையைக் கொண்டு போக வேண்டாம் என்று வல்லவரையன் முன்னமேயே தீர்மானித்திருந்தான். குதிரை நன்றாக இளைப்பாற அவகாசம் கொடுப்பது அவசியம். சீக்கிரத்தில் அக்குதிரையைத் தான் துரிதப் பிரயாணத்துக்கு உபயோகப்படுத்த வேண்டி வரலாம், யார் கண்டது? எப்படியானாலும், அது இங்கே இருப்பதுதான் நல்லது.

கோட்டை வாசல் போய்ச் சேரும் வரையில் அமுதனுடன் பேச்சுக் கொடுத்து இன்னும் சில விவரங்களைத் தெரிந்து கொண்டான்.

"உன் அன்னையைத் தவிர உனக்கு உற்றார் உறவினர் யாரும் கிடையாதா?" என்று வல்லவரையன் கேட்டதற்கு அமுதன் கூறியதாவது:- "இருக்கிறார்கள் என் அன்னையுடன் கூடப் பிறந்த ஒரு தமக்கையும் தமையனும் உண்டு. தமக்கை காலமாகி விட்டாள். தமையனார் கோடிக்கரைக் குழகர் கோயிலில் புஷ்ப கைங்கரியம் செய்கிறார். அத்துடன் இரவு நேரங்களில் கலங்கரை விளக்கத்தில் தீபமேற்றிப் பாதுகாக்கும் பணியும் செய்து வருகிறார்... அவருக்கு ஒரு புதல்வனும் புதல்வியும் உண்டு. புதல்வி..." என்று நிறுத்தினான்.

"புதல்விக்கு என்ன?"

"ஒன்றுமில்லை. எங்கள் குடும்பத்திலேயே ஒரு விசித்திரம். சிலர் ஊமையாகப் பிறப்பார்கள்; மற்றவர்கள் இனிய குரல் படைத்திருப்பார்கள்; நன்றாய்ப் பாடுவார்கள்..."

"உன் மாமனின் மகள் ஊமை இல்லையே?" என்றான் வந்தியத்தேவன்.

"இல்லை, இல்லை!"

"அப்படியானால் நன்றாய்ப் பாடக் கூடியவள் என்று சொல்லு. உன்னைக் காட்டிலும் நன்றாய்ப் பாடுவாளா?"

"அழகாயிருக்கிறது உங்கள் கேள்வி. 'குயில், காக்கையை விட நன்றாய்ப் பாடுமா?' என்று கேட்பது போலிருக்கிறது. பூங்குழலி பாடினால், சமுத்திர ராஜா அலை எறிந்து ஓசை செய்வதை நிறுத்திவிட்டு அமைதியாகக் கேட்பார். ஆடு மாடுகளும் காட்டு மிருகங்களும் மெய்மறந்து நிற்கும்..."

"உன் மாமன் மகளின் பெயர் பூங்குழலியா? அழகான பெயர்!"

"பெயர் மட்டும்தானா அழகு?"

"அவளும் அழகியாகத்தான் இருக்கவேண்டும். இல்லாவிட்டால், நீ இவ்வளவு பரவசமடைவாயா?"

"மானும் மயிலும் அவளிடம் அழகுக்குப் பிச்சை கேட்க வேண்டும். ரதியும் இந்திராணியும் அவளைப்போல் அழகியாவதற்குப் பல ஜன்மங்கள் தவம் செய்யவேண்டும்."

சேந்தன் அமுதனுடைய உள்ளம் சிவபக்தியிலேயே பூரணமாக ஈடுபடவில்லையென்பதை வல்லவரையன் கண்டு கொண்டான்.

"அப்படியானால் உனக்குத் தகுந்த மணப்பெண் என்று சொல்லு. மாமன் மகளாகையால் முறைப் பெண்ணுங்கூடத் தானே? கல்யாணம் எப்போது?" என்று கேட்டான் வந்தியத்தேவன்.

"எனக்குத் தகுந்தவள் என்று ஒரு நாளும் சொல்லமாட்டேன். நான் அவளுக்கு எவ்விதத்திலும் தகுதியில்லாதவன். பழைய நாட்களிலே போல பூங்குழலிக்குச் சுயம்வரம் வைத்தால் ஐம்பத்தாறு தேசத்து ராஜாக்களும் வந்து போட்டி போடுவார்கள்! தமயந்தியை மணந்துகொள்வதற்கு வானுலகத்திலிருந்து தேவர்கள் வந்ததுபோல் வந்தாலும் வருவார்கள். ஆனால் இந்தக் கலியுகத்தில் அவ்விதமெல்லாம் ஒருவேளை நடவாது..."

"அப்படியானால் உன்னை மணந்துகொள்ள அவள் விரும்பினாலும் நீ மறுத்து விடுவாய் என்று சொல்லு!"

"நன்றாயிருக்கிறது. இறைவன் என் முன்னால் தோன்றி, 'நீ சுந்தரமூர்த்தியைப் போல் இந்த உடம்போடு கைலாஸத்துக்கு வருகிறாயா? அல்லது பூலோகத்திலிருந்து பூங்குழலியுடன் வாழ்கிறாயா?' என்று கேட்டால் 'பூங்குழலியுடன் வாழ்கிறேன்' என்று தான் சொல்லுவேன். ஆனால் நான் சொல்லி என்ன பயன்?"

"ஏன் பயன் இல்லை? உனக்குச் சம்மதமாயிருக்கும்போது அநேகமாகக் கல்யாணம் ஆனது போலத்தானே? எல்லாரும் பெண்களைக் கேட்டுக் கொண்டுதானா கலியாணம் செய்கிறார்கள்? உதாரணத்துக்கு, பெரிய பழுவேட்டரையர் அறுபத்தைந்து வயதுக்கு மேல் கலியாணம் செய்து கொண்டிருக்கிறாரே! அந்த ராணியின் சம்மதத்தின் பேரிலா திருமணம் நடந்திருக்கும்!..."

"அண்ணா! அது பெரிய இடத்துச் சமாசாரம், நாம் ஏன் அதைப் பற்றிப் பேசவேண்டும்? முக்கியமாக, உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறேன். நீங்கள் கோட்டைக்குள் போகிறீர்கள். கோட்டைக்குள் பழுவேட்டரையர்களைப் பற்றி எதுவும் பேச வேண்டாம். பேசினால் ஆபத்து வரும்!..."

"ஏது தம்பி, ஒரேயடியாகப் பயமுறுத்துகிறாயே?"

"உண்மையைத்தான் சொல்கிறேன். மெய்யாக, இரண்டு பழுவேட்டரையர்களுந்தான் இப்போது சோழ சாம்ராஜ்யத்தையே ஆளுகிறார்கள். அவர்களுடைய அதிகாரத்துக்கு மிஞ்சிய அதிகாரம் வேறு கிடையாது."

"சக்கரவர்த்திக்குக் கூடவா அவர்களைவிட அதிகாரம் இல்லை?"

"சக்கரவர்த்தி நோய்வாய்ப்பட்டுக் கிடக்கிறார். பழுவூர்க்காரர்கள் போட்ட கோட்டை அவர் தாண்டுவதில்லை என்று ஜனங்கள் சொல்லுகிறார்கள். அவருடைய சொந்தப் புதல்வர்களுடைய பேச்சு கூடக் காதில் ஏறுவதில்லை என்கிறார்கள்."

"அப்படியா சமாசாரம்! பழுவேட்டரையர்களுடைய செல்வாக்கு அபாரமாய்த்தான் இருக்க வேண்டும். இரண்டு வருஷத்துக்கு முன்னால் அவர்களுக்கு இத்தனை செல்வாக்கு இல்லை அல்லவா?"

"இல்லை; அதிலும் சக்கரவர்த்தி தஞ்சைக்கு வந்த பிறகு பழுவேட்டரையர்களுடைய அதிகாரம் எல்லையில்லாமல் போய் விட்டது. அவர்களைத் தட்டிப் பேசுவதற்கே யாரும் கிடையாது. அநிருத்த பிரமராயர் கூட வெறுப்படைந்துதான் பாண்டிய நாட்டுக்குப் போய்விட்டார் என்று கேள்வி."

"பழையாறையிலிருந்து சக்கரவர்த்தி தஞ்சாவூருக்கு எதற்காக வந்தார்? உனக்குத் தெரியுமா, தம்பி!"

"நான் கேள்விப்பட்டதைச் சொல்லுகிறேன். மூன்று வருஷத்துக்கு முந்தி வீர பாண்டியன் போரில் மாண்டான். அச்சமயம் சோழர் படைகள் பாண்டியன் நாட்டில் சில கொடூரங்களைச் செய்ததாகக் கேள்வி. யுத்த மென்றால் அப்படித்தானே? மதுரை சோழ ராஜ்யத்துக்கு உட்பட்டுவிட்டது. ஆனால் வீர பாண்டியனுக்கு அந்தரங்கமான சிலர், எப்படியாவது பழிக்குப் பழி வாங்குவதென்று சபதம் எடுத்துக்கொண்டு சதி செய்கிறார்களாம். பழையாறையில் மன்னர் இருந்தால் அவரைப் பாதுகாக்க முடியாது என்று தான் அவரைப் பழுவேட்டரையர்கள் தஞ்சைக்கு அழைந்து வந்து விட்டார்கள். இங்கே கோட்டையும் வலிவுள்ளது. கட்டுக் காவலும் அதிகம். அதோடு சக்கரவர்த்தியின் உடம்பு நலத்துக்கு பழையாறையைக் காட்டிலும் தஞ்சாவூர் நல்லது என்று வைத்தியர்கள் சொன்னார்கள்."

"சுந்தர சோழரின் உடம்பைப் பற்றி எல்லாரும் சொல்லுகிறார்கள். ஆனால் என்ன நோய் என்று மட்டும் யாருக்கும் தெரிவதில்லை."

"தெரியாமல் என்ன? சக்கரவர்த்திக்குப் பக்கவாதம் வந்து இரண்டு கால்களும் சுவாதீனம் இல்லாமல் போய் விட்டன."

"அடடா! அதனால் அவரால் நடக்கவே முடிவதில்லையோ?"

"நடக்க முடியாது; யானை அல்லது குதிரை மீது ஏறவும் முடியாது. படுத்த படுக்கைதான். பல்லக்கில் ஏற்றி இடத்துக்கு இடம் கொண்டு போனால்தான் போகலாம். அதிலும் வேதனை அதிகம். ஆகையால் சக்கரவர்த்தி அரண்மனையை விட்டு வெளிக் கிளம்புவதே இல்லை. சில காலமாகச் சித்தம் அவ்வளவு சுவாதீனத்தில் இல்லையென்றும் சொல்கிறார்கள்."

"ஆஹா! என்ன பரிதாபம்!"

"பரிதாபம் என்று கூடச் சொல்லக் கூடாது, அண்ணா! அதுவும் ராஜ நிந்தனை என்று சொல்லிப் பழுவேட்டரையர்கள் தண்டனை விதிப்பார்கள்."

பழுவேட்டரையர்! பழுவேட்டரையர்! - எங்கே, யாரிடம் பேசினாலும் பழுவேட்டரையர்களைப் பற்றியே பேச்சு! அவர்கள் எவ்வளவு பராக்கிரமசாலிகளாய் இருந்தால்தான் என்ன? தனபொக்கிஷம், தானியக் களஞ்சியம், தஞ்சை நகர்க் காவல், ஒற்றர்படை எல்லாம் அவர்களுடைய வசத்தில் இருக்கும்படி சக்கரவர்த்தி விட்டிருக்கக் கூடாது. இவ்வளவு அதிகாரத்தையும் அவர்களிடம் விட்டதனால் அல்லவா சக்கரவர்த்திக்கு விரோதமாகச் சதி செய்யத் தொடங்கி விட்டார்கள்? இவர்களுடைய சதி எவ்வளவு தூரம் பலிக்குமோ? அது பலிக்காமல் போக நம்மால் இயன்ற பிரயத்தனம் செய்யவேண்டும். சந்தர்ப்பம் கிடைத்தால் சக்கரவர்த்திக்கும் எச்சரிக்கை செய்து வைக்கவேண்டும்!...

இதற்குள் கோட்டை வாசல் வந்துவிட்டது. சேந்தன் அமுதன் தனது புதிய நண்பனைப் பிரிந்து தளிக்குளத்தார் ஆலயத்தை நோக்கிச் சென்றான்.

வந்தியத்தேவனோ எத்தனையோ மனக்கோட்டைகளுடன் அந்தக் கோட்டை வாசலை நெருங்கினான்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
கல்கியின் பொன்னியின் செல்வன்

முதல் பாகம் : புது வெள்ளம்

25. கோட்டைக்குள்ளே



பனை இலச்சினை தாங்கிய மோதிரம் கதைகளில் வரும் மாய மோதிரத்தைப் போல் அபாரமான மந்திர சக்தி வாய்ந்ததாயிருந்தது. காலை நேரத்தில் பால், தயிர் விற்பவர்கள், பூக்கூடைக்காரர்கள், கறிகாய் விற்பவர்கள், பழக் கடைக்காரர்கள், மற்றும் பல தொழில்களையும் செய்வோர், கணக்கர்கள்; உத்தியோகஸ்தர்கள் முதலியோர் ஏகக் கூட்டமாகக் கோட்டைக்குள் பிரவேசிக்க முயன்று கொண்டிருந்தார்கள். கோட்டைக் கதவின் திட்டி வாசலைத் திறந்து அவர்களை ஒவ்வொருவராக உள்ளே விடுவதிலே கோட்டை வாசற் காவலர்கள் தங்கள் படாடோப அதிகாரத்தைக் காண்பித்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் நம் இளம் வீரன் பனை இலச்சினை பொறித்த மோதிரத்தைக் காட்டியதுதான் தாமதம், காவலர்கள் மிக்க மரியாதை காட்டி, கோட்டைக் கதவுகளில் ஒன்றைத் திறந்து விட்டார்கள். வந்தியத்தேவனும் கோட்டைக்குள் பிரவேசித்தான்.

ஆகா! தஞ்சைபுரிக் கோட்டைக்குள் அவன் கால் வைத்த வேளை என்ன வேளையோ தெரியாது! அதிலிருந்து எத்தனை எத்தனை முக்கிய நிகழ்ச்சிகள் தொடர்ந்து வந்தன! சோழ சாம்ராஜ்யத்தின் சரித்திரத்திலேயே அது ஒரு முக்கிய சம்பவமாகவல்லவா ஏற்பட்டது!

கோட்டைக்குள் பிரவேசித்துச் சிறிது நேரம் வரை வந்தியத்தேவன் ஒரே பிரமிப்பில் ஆழ்ந்திருந்தான்.

காஞ்சி பழைய பல்லவ சாம்ராஜ்யத்தின் தலைநகரம். பல தடவை பகைவர்களின் தாக்குதல்களுக்கு உட்பட்டது. அங்கிருந்த மாளிகைகளும் மண்டபங்களும் மற்ற கட்டிடங்களும் பழமையடைந்து சிதிலமாகிப் பூஞ்சக் காளான் பூத்திருந்தன. அழகிய சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த கட்டிடங்கள்தான்; ஆனாலும் பல பகுதிகள் இடிந்தும் சிதைந்தும் கிடந்தன. ஆதித்த கரிகாலர் வந்த பிறகு புதுப்பித்துக் கட்டிய சில மாளிகைகள் மட்டும், பட்டமரத்தில் ஒவ்வோரிடத்தில் தளிர்த்திருக்கும் மலர்களைப்போல் விளங்கி, நகரத்தின் பாழடைந்த தோற்றத்தை மிகைப்படுத்திக் காட்டின.

இந்தத் தஞ்சையின் தோற்றமோ நேர்மாறாக இருந்தது. எல்லாம் புதிய மாளிகைகள்; புதிய மண்டபங்கள். வெண் சுண்ண மாளிகைகளுக்கு மத்தியில் செம்மண்ணில் சுட்ட செங்கற்களினால் கட்டிய சிற்சில கட்டிடங்கள் வைரங்களுக்கும் முத்துக்களுக்கும் இடையிலே இரத்தினங்களைப் பதித்ததுபோல் ஒளி வீசித் திகழ்ந்தன. ஆங்காங்கு அரண்மனைத் தோட்டங்களில் வளர்ந்திருந்த விருட்சங்கள் செம்மண் பூமியின் சத்தை உண்டு, கொழுகொழுவென்று செழித்து ஓங்கியிருந்தன. புன்னை, தென்னை, அசோகம், அரசு, ஆல், பலா, வேம்பு முதலிய மரங்களில் அடர்ந்து தழைத்திருந்த இலைகள் மரகதப் பச்சையின் பல சாயல்களுடன் கண்ணுக்கு இனிமையையும் மனத்துக்கு உற்சாகத்தையும் அளித்தன. அதிசய சக்தி வாய்ந்த மந்திரவாதியான மயன் புதிதாக நிர்மாணித்த நகரம் இது. இந்தப் புதிய நகருக்குள் பிரவேசிக்கும் போதே ஒரு புதிய உற்சாகம் பிறந்தது; உள்ளம் பூரித்துப் பொங்கியது; காரணம் தெரியாத கர்வம் நிறைந்தது.

கோட்டையின் கட்டுக்காவலையும் கோட்டைக்குள் பிரவேசிப்பதில் உள்ள நிர்ப்பந்தங்களையும் கவனித்திருந்த வந்தியத்தேவன், உள்ளே அதிக ஜன நடமாட்டமே இல்லாமல் வெறிச் சென்று இருக்கும் என்று எண்ணியிருந்தான். ஆனால் அதற்கு நேர்மாறாக, தெருக்களெல்லாம் 'ஜே ஜே' என்று கூட்டமாயிருந்தது. குதிரைகளும், குதிரை பூட்டிய ரதங்களும் பூமி அதிரும்படி சத்தமிட்டுக் கொண்டு சென்றன. கரிய குன்றுகள் அசைந்து வருவது போல் நிதானமாகவும் கம்பீரமாகவும் நடந்து வந்து யானைகளின் மணி ஓசை நாலாபுறங்களிலும் கேட்டது! பூ, கறிகாய், பழம், பால், தயிர், விற்போரின் கூச்சல்கள் செவிகளைத் தொளைத்தன. அவ்வப்போது காலத்தை அறிவிக்கும் ஆலாட்சி மணிகளின் ஓசையுடன் பேரிகையின் முழக்கமும் கலந்தது. இசைக் கருவிகள் எழுப்பிய இன்னிசைகளுடன் மங்கையர் பாடிய மதுர கீதங்கள் கலந்தன. எல்லாம் ஒரே திருவிழாக் கோலாகலமாகவே இருந்தது.

நகரம் என்றால் இதுவல்லவோ நகரம்! நாளுக்கு நாள் பரந்து வரும் ஒரு சாம்ராஜ்யத்தின் தலைநகரம் இப்படித்தான் இருக்கும் போலும்!

தான் இத்தகைய நகரத்துக்கு முற்றிலும் புதியவன் என்று காட்டிக் கொள்ள வந்தியத்தேவன் விரும்பவில்லை. யாரையாவது வழி கேட்டால் தன்னை ஏற இறங்கப் பார்த்து, "நீ இந்த ஊருக்குப் புதியவனா?" என்று அலட்சியமாகப் பேசுவார்கள். அரண்மனைக்கு வழி கேட்கிறவனை வெளியூரிலிருந்து வந்த பட்டிக்காட்டான் என்று கூட நினைத்துவிடுவார்கள். ஆகையால், யாரையும் வழி கேட்காமலேயே சக்கரவர்த்தியின் அரண்மனையைக் கண்டுபிடித்துப் போய்விடவேண்டும். அது அப்படியொன்றும் முடியாத காரியமாயிராது...

எந்தப் பக்கம் நோக்கினாலும் மாடமாளிகைகளின் மீது மகர தோரணங்களும் கொடிகளும் தோன்றின. வேகத்துடன் வீசிய மேலக்காற்றுடன் அவை துவந்த யுத்தம் செய்து சடசட படபட வென்ற சத்தம் செய்துகொண்டு பறந்தன. புலிக் கொடிகளும் பனைக்கொடிகளுமே அதிகமாகக் காணப்பட்டன. மற்ற எல்லாக் கொடிகளையும் தாழ்த்திக் கொண்டு மேக மண்டலத்தை அளாவிக் கம்பீரமாக ஒரு பெரிய புலிக்கொடி பறந்தது. அதுவே சக்கரவர்த்தி தங்கும் அரண்மனையாக இருக்கவேண்டும் என்று வல்லவரையன் ஊகித்துக்கொண்டு, அக்கொடி பறந்த திக்கை நோக்கித் தான் மேலே செய்யவேண்டிய காரியத்தைப்பற்றிச் சிந்தித்துக்கொண்டு நடந்தான்.

சக்கரவர்த்தியை நேரில் சந்தித்து ஓலையைக் கொடுப்பது முதற்காரியம். அதோடு ஆதித்த கரிகாலர் நேரில் வாய்மொழியாகத் தெரிவிக்கச் சொன்னதையும் சொல்ல வேண்டும். சின்னப் பழுவேட்டரையரின் அனுமதியின்றிச் சக்கரவர்த்தியை பார்க்க முடியாது. அவருடைய அனுமதியை எப்படிப் பெறுவது? கோட்டைக்குள் பிரவேசிப்பதற்குத் தெய்வம் துணை செய்தது. ஆனால் முழுதும் தெய்வம் வழிகாட்டும் என்றே இருந்துவிடலாமா? சக்கரவர்த்தியைப் பார்ப்பதற்கு நாமேதான் யுக்தி கண்டுபிடித்தாக வேண்டும்! அது என்ன யுக்தி! வாணர் குலத்தில் வழி வழியாக வந்த மூளையே! கொஞ்சம் வேலை செய், பார்க்கலாம்! சிறிது உன் கற்பனா சக்தியைத் தட்டிவிடு! காவியம், கவிதை எழுதுவோருக்கு மட்டும் கற்பனா சக்தி தேவை என்பதில்லை. உன்னைப் போல் இராஜாங்க காரியங்களில் ஈடுபட்டவர்களுக்கும் கற்பனா சக்தி வேண்டும். எங்கே, உன் கைவரிசையைக் காட்டு, பார்க்கலாம்!...

பெரிய பழுவேட்டரையர் இன்னும் கோட்டைக்கு வந்து சேரவில்லை என்பதை வந்தியத்தேவன் உறுதிப்படுத்திக் கொண்டான்.

கோட்டை வாசலைத் தாண்டி உள்ளே வந்ததும், அங்கே உள்புறத்தில் நின்ற காவலன் ஒருவனிடம், "ஏன் அப்பா! பழுவேட்டரையர் திரும்பி வந்து விட்டாரா?" என்று கேட்டான்.

"யாரைக் கேட்கிறாய், தம்பி! சின்னவர் அரண்மனையில்தான் இருக்கிறார்."

"அது எனக்குத் தெரியாதா? நடு நாட்டுக்குச் சென்றிருந்த பெரியவரைப் பற்றித்தான் கேட்கிறேன்."

"ஓ! பெரியவர் நடு நாட்டுக்கா சென்றிருந்தார்? அது எனக்குத் தெரியாது. நேற்று மாலை இளைய ராணியின் பல்லக்குத் திரும்பி வந்தது. பெரிய அரசர் இன்னும் வரவில்லை. இன்று இரவு திரும்பக் கூடும் என்று செய்தி வந்திருக்கிறது!" என்றான் காவலன்.

இது நல்ல செய்திதான். பெரிய பழுவேட்டரையர் திரும்பி வருவதற்குள்ளே எப்படியும் சக்கரவர்த்தியைப் பார்த்து ஓலையைக் கொடுத்தாக வேண்டும். அதற்கு என்ன வழி?... வந்தியத்தேவனுடைய மூளையில் ஒரு யோசனை உதயமாகிவிட்டது! அந்தக் கணமே அவன் முகத்தில் கவலைக்குறி மறைந்தது; குறும்புப் புன்னகையும் குதூகல மலர்ச்சியும் தோன்றின.

சக்கரவர்த்தியின் அரண்மனையை அணுகுவதற்கு அவன் அதிகமாக அலைந்து திரிய வேண்டியிருக்கவில்லை. பெரிய புலிக்கொடியை பார்த்துக்கொண்டே போனான். விரைவிலேயே அரண்மனை முகப்பை அடைந்துவிட்டான். ஆகா! இது எத்தகைய அரண்மனை! தேவலோகத்தில் தேவேந்திரனுடைய அரண்மனையையும் உஜ்ஜயினி நகரத்து விக்ரமாதித்யனுடையை அரண்மனையையும் போல அல்லவா இருக்கிறது? அந்த முன் வாசல் மண்டபத்துத் தூண்களில் செய்திருக்கும் சிற்ப வேலைகளின் அற்புதந்தான் என்ன! ஒவ்வொரு தூணிலும் செதுக்கியிருக்கும் குதிரை, முன்கால்களைத் தூக்கிக்கொண்டு அப்படியே பாய்வது போல இருக்கிறதே!

அரண்மனையை அடைவதற்குப் பல பாதைகள் நாலா திசைகளிலிருந்தும் வந்தன. ஒவ்வொரு பாதை முடிவிலும் இரண்டு குதிரை வீரர்களும் சில காலாள் வீரர்களும் நின்றார்கள். அவர்களண்டை நெருங்கி வராமலே அவ்வீதிகளில் நடமாடிய ஜனங்களில் பலர் திரும்பிப் போய் விட்டார்கள். ஒரு சிலர் அவர்கள் கிட்ட வந்து சற்றே நின்று அரண்மனை முகப்பை எட்டிப் பார்த்துவிட்டும், புலிக்கொடியை அண்ணாந்து பார்த்துவிட்டும் போனார்கள். அதிக நேரம் நின்று கூட்டம் சேரும் போலிருந்தால் காவலர்கள் கையினால் சமிக்ஞை செய்து அவர்களைப் போகும்படி செய்தார்கள். கூட்டங்கூடி நின்றவர்கள் இரைந்து பேசாமல் காதோடு மெள்ளப் பேசிக்கொண்டார்கள்.

வந்தியத்தேவன் மற்றவர்களைப்போல் சிறிதும் தயங்கி நிற்கவில்லை. வேகமாகவும் மிடுக்காகவும் நடந்து சென்று அரண்மனைப் பாதைக் காவலர்களை நெருங்கினான். உடனே இரு குதிரைகளும் முகத்தோடு முகம் உராயும்படி வழிமறித்து நின்றன. குதிரை மேலிருந்தவர்கள், கீழே நின்றவர்கள், அனைவருடைய வேல்களும் முனையோடு முனை பொருந்தி வழியை அடைத்தன.

வந்தியத்தேவன் தன்னுடைய மந்திர மோதிரத்தை நீட்டினான். அவ்வளவுதான்; அதைப் பார்த்தவுடனே அவ்வீரர்களின் முடுக்கும் பெருமிதமும் அடங்கின. ஒருவர் பின் ஒருவராக மூன்று பேர் மோதிரத்தை உற்றுப் பார்த்தார்கள். "சரி; வழி விடுங்கள்!" என்று ஒருவன் சொன்னான். இரண்டு வேல்கள் உடனே அகன்று நின்று வழிவிட்டன. வந்தியத்தேவன் மிடுக்குடன் நடந்து சென்றான்.

ஆயினும், என்ன? இன்னும் எத்தனை காவல்கள் இப்படி உண்டோ ? சின்னப் பழுவேட்டரையர் எங்கே இருக்கிறாரோ? எப்படி விசாரிப்பது? யாரிடம் கேட்பது? சின்ன பழுவேட்டரையரின் அனுமதியின்றிச் சக்கரவர்த்தியைப் பார்க்க முடியாது; இந்தப் பெரிய விஸ்தாரமான அரண்மனையில் நோயாளியான சக்கரவர்த்தி எந்த இடத்தில் இருக்கிறாரோ? அதைத்தான் எவ்விதம் தெரிந்துகொள்வது?

தனக்குப் பின்னால் சிலர் கூட்டமாக வருவதை அறிந்து வந்தியத்தேவன் திரும்பிப் பார்த்தான். ஆம்; பத்துப் பதினைந்து பேர் கும்பலாக வந்து, காவலர்களருகில் நின்றார்கள். அவர்கள் உயர்ந்த பட்டுப் பீதாம்பரங்கள் தரித்திருந்தார்கள். முத்துமாலைகள், மகர கண்டிகள், காதில் குண்டலங்கள் அணிந்திருந்தார்கள். சிலர் நெற்றியில் திருநீறும் மற்றவர்கள் சந்தனம், குங்குமம், சவ்வாதுப் பொட்டும் இட்டிருந்தார்கள்! ஆ! இவர்களைப் பார்த்தால் புலவர்களைப் போல அல்லவா இருக்கிறது!... ஆம், புலவர்களின் கூட்டந்தான் என்று மறுகணமே தெரிந்துவிட்டது.

காவலர்களில் ஒருவன், - அவர்களுடைய தலைவனாயிருக்க வேண்டும்,- "கவிராயர்கள் வந்திருக்கிறார்கள்! வழி விடுங்கள்!" என்று சொன்னதுடன் ஒரு வீரனைப் பார்த்து, "சின்னப் பழுவேட்டரையர் ஆஸ்தான மண்டபத்தில் இருக்கிறார். அவரிடம் கொண்டு போய்விடு!" என்றான்.

"புலவர்களே! ஏதாவது பரிசு கிடைத்தால் போகும்போது இந்த வழியாகவே திரும்பிச் செல்லுங்கள்! பரிசு கிடைக்காவிட்டால் வேறு வழியாகப் போய்விடுங்கள்!" என்று மேலும் அவன் சொன்னதைக் கேட்டு மற்றவர்கள் சிரித்தார்கள்!

சற்று நின்று இந்தச் சம்பாஷணையைக் கேட்டுக்கொண்டிருந்த வந்தியத்தேவன், "பழம் நழுவிப் பாலில் விழுந்தது!" என்று எண்ணிக் கொண்டான். இந்தப் புலவர்களுடனே போனால் சின்னப் பழுவேட்டரையர் இருக்குமிடம் போய்ச் சேரலாம். யாரையும் வழி விசாரிக்க வேண்டியதில்லை. பிறகு, நமது சாமர்த்தியம் இருக்கிறது; அதிர்ஷ்டமும் இருக்கிறது! இவ்வாறு எண்ணியபடியே புலவர் கூட்டத்துடன் சென்றான்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
கல்கியின் பொன்னியின் செல்வன்

முதல் பாகம் : புது வெள்ளம்

26. "அபாயம்! அபாயம்!"

ஆஸ்தான மண்டபத்தில் புலவர்களூக்கு முன்னதாகவே வந்தியத்தேவன் பிரவேசித்தான். அங்கே ஓர் உயர்ந்த சிம்மாசனத்தில் கம்பீரமாக வீற்றிருப்பவர் தான் சின்னப் பழுவேட்டரையராயிருக்க வேண்டும் என்று ஊகித்துக் கொண்டான். அவரைச் சுற்றிலும் பலர் கைகட்டி வாய் புதைத்து நின்றார்கள். அன்று வந்த ஓலைகள் பலவற்றை வைத்துக்கொண்டு ஒருவர் நின்றார். கணக்காயர் கணக்குச் சொல்வதற்குக் காத்திருந்தார். காவல் படைத் தலைவர்கள் சின்னப் பழுவேட்டரையருடைய அன்றாடக் கட்டளைகளை எதிர்பார்த்து நின்றார்கள். ஏவிய வேலைகளைச் செய்வதற்குப் பணியாளர்கள் காத்திருந்தார்கள். சிம்மாசனத்துக்குப் பின்னால் நின்று சில ஏவலாளர் வெண்சாமரம் வீசிக் கொண்டிருந்தார்கள். கையில் வெற்றிலைப் பெட்டியுடன் ஒருவன் ஆயத்தமாயிருந்தான்.

மிடுக்கிலும் பெருமிதத்திலும் யாருக்கும் பின்வாங்காதவனான வந்தியத்தேவன் கூடச் சிறிது அடக்க ஒடுக்கத்துடனேதான் சின்ன பழுவேட்டரையரிடம் அணுகினான்.

பெரியவரைக் காட்டிலும் சின்னவர் வீர கம்பீரத்தில் இன்னும் ஒரு படி உயர்ந்தவராகவே காணப்பட்டார்.

நமது வீரனைப் பார்த்ததும் அவர் முக மலர்ச்சியுடன், "யார், தம்பி, நீ! எங்கிருந்து வருகிறாய்?" என்று கேட்டார்.

வீர வாலிபர்களைக் கண்டால் சின்னப் பழுவேட்டரையரின் கடுகடுத்த முகம் மலர்ந்துவிடும். நாடெங்கும் உள்ள வாலிப வீரர்களைத் தம்முடைய காவல் படையில் சேர்த்துக் கொள்வதில் அவருக்கு மிக்க ஆர்வம்.

"தளபதி! நான் காஞ்சிபுரத்திலிருந்து வந்தேன்! இளவரசர் ஓலை கொடுத்து அனுப்பினார்!" என்று பணிவான குரலில் வந்தியத்தேவன் மறுமொழி சொன்னான்.

காஞ்சிபுரம் என்றதும் சின்னப் பழுவேட்டரையரின் முகம் கடுத்தது.

"என்ன? என்ன சொன்னாய்?" என்று மீண்டும் கேட்டார்.

"காஞ்சிபுரத்திலிருந்து இளவரசர் கொடுத்த ஓலையுடன் வந்தேன்!"

"எங்கே இப்படிக் கொடு!" என்று அலட்சியமாய்க் கேட்ட போதிலும் அவருடைய குரலில் சிறிது பரபரப்புத் தொனித்தது.

வல்லவரையன் அடக்க ஒடுக்கத்துடன் ஓலைச் சுருளை எடுத்துக் கொண்டே "தளபதி! ஓலை சக்கரவர்த்திக்கு!" என்றான்.

அதைப் பொருட்படுத்தாமல் சின்னப் பழுவேட்டரையர் ஓலையை வாங்கி ஆவலுடன் பார்த்தார். பக்கத்தில் நின்றவனிடம் கொடுத்து அதைப் படிக்க சொன்னார். கேட்டுவிட்டு, "புதிய விஷயம் ஒன்றுமில்லை!" என்று தமக்குத் தாமே முணுமுணுத்துக் கொண்டார்.

"தளபதி! நான் கொண்டு வந்த ஓலை..." என்றான் வந்தியத்தேவன்.

"ஓலைக்கு என்ன? நான் கொடுத்து விடுகிறேன் சக்கரவர்த்தியிடம்!"

"இல்லை; என்னையே நேரில் சக்கரவர்த்தியின் கையில் கொடுக்கும்படி..."

"ஓகோ! என்னிடம் நம்பிக்கை இல்லையா? இளவரசர் அப்படி உன்னிடம் சொல்லி அனுப்பினாரோ?" என்ற போது, தஞ்சைக் கோட்டைத் தளபதியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன.

"இளவரசர் அவ்வாறு சொல்லவில்லை; தங்கள் தமையனார் தான் அவ்விதம் கட்டளையிட்டார்!"

"என்ன? என்ன? பெரியவரை நீ எங்கே பார்த்தாய்?"

"வழியில் கடம்பூர் சம்புவரையர் வீட்டில் ஒருநாள் இரவு தங்கியிருந்தேன். அங்கேதான் பார்க்க நேர்ந்தது. இந்த மோதிரத்தையும் அவர்தான் கொடுத்தனுப்பினார்..."

"ஆகா இதை நீ ஏன் முன்னமே சொல்லவில்லை? கடம்பூரில் இரவு நீ தங்கியிருந்தாயா? இன்னும் யார் யார் வந்திருந்தார்கள்?"

"மழநாடு, நடுநாடு, திருமுனைப்பாடி நாடுகளிலிருந்து பல பிரமுகர்கள் வந்திருந்தார்கள்..."

"இரு இரு! பிறகு சாவகாசமாகக் கேட்டுக் கொள்கிறேன். முதலில் நீயே இந்த ஓலையைச் சக்கரவர்த்தியிடம் கொடுத்து விட்டு வா! அப்புறம் தமிழ்ப் புலவர்கள் வந்துவிடுவார்கள். வளவளவென்று பேசிக்கொண்டிருப்பார்கள்... இந்தப் பிள்ளையைச் சக்கரவர்த்தியிடம் அழைத்துப் போ!" என்று அருகில் நின்ற வீரன் ஒருவனுக்குச் சின்ன பழுவேட்டரையர் கட்டளையிட்டார்.

அந்த வீரனைத் தொடர்ந்து வந்தியத்தேவன் மேலும் அரண்மனையின் உட்புறத்தை நோக்கிச் சென்றான்.

மூன்று பக்கங்களில் அலைகடல் முழக்கம் கேட்கும்படியாகப் பரந்திருந்த சோழ சாம்ராஜ்யத்தின் சிங்காசனம் சில காலமாக நோய்ப் படுக்கையாக மாறியிருந்தது? அந்தச் சிம்மாசனத்தில் பராந்தக சுந்தர சோழ சக்கரவர்த்தி சாய்ந்து படுத்திருந்தார். இராஜ்யாதிகாரங்களையெல்லாம் மற்றவர்களிடம் ஒப்படைத்து விட்டு மருத்துவச் சிகிச்சை செய்துகொண்டிருந்தாராயினும் சிற்சில முக்கியமான சந்தர்ப்பங்களில் முக்கியமான மனிதர்களுக்கு அவர் தரிசனம் அளித்தே தீரவேண்டியிருந்தது. அமைச்சர்களும் தளபதிகளும் வேளக்காரப் படைவீரர்களும், அவரைத் தினந்தோறும் வந்து தரிசித்துவிட்டுப் போவது இராஜ்யத்தின் நன்மைக்கு அவசியமாயிருந்தது.

எத்தனையோ போர் முனைகளில் செயற்கரும் வீரச் செயல்கள் புரிந்த அசகாய சூரர் என்று பெயர் பெற்றவரும், நாடு நகரமெல்லாம் 'சுந்தர சோழர்' என்று அழைக்கப்பட்டவரும், அழகில் மன்மதனுக்கு ஒப்பானவர் என்று புகழ் பெற்றவருமான சக்கரவர்த்தியின் நோய்ப்பட்டு மெலிந்த தோற்றத்தைக் கண்டதும் வந்தியத்தேவனால் பேசவே முடியாமற் போய்விட்டது. அவனுடைய கண்களில் நீர் ததும்பியது. அருகில் சென்று அடிபணிந்து வணங்கிப் பயபக்தியுடன் ஓலையை நீட்டினான்.

சக்கரவர்த்தி ஓலையை வாங்கிக்கொண்டே, "எங்கிருந்து வந்தாய்? யாருடைய ஓலை?" என்று ஈனஸ்வரத்தில் கேட்டார்.

"பிரபு காஞ்சியிலிருந்து வந்தேன். இளவரசர் ஆதித்தர் தந்த ஓலை!" என்று வந்தியத்தேவன் நாத் தழுதழுக்கக் கூறினான்.

சக்கரவர்த்தியின் முகம் உடனே பிரகாசம் அடைந்தது. அவர் அருகில் திருக்கோவலூர் மலையமான் புதல்வியான சக்கரவர்த்தினி வானமாதேவி வீற்றிருந்தாள். அவளைப் பார்த்து, "தேவி! உன் புதல்வனிடமிருந்து ஓலை வந்திருக்கிறது!" என்று சொல்லிவிட்டுப் படித்தார்.

"ஆகா! இளவரசன் காஞ்சியில் பொன் மாளிகை கட்டியிருக்கிறானாம். நீயும் நானும் அங்கு வந்து சில நாள் தங்கியிருக்க வேண்டுமாம்!" என்று சொல்லியபோதே, சக்கரவர்த்தியின் முகம் முன்னைவிடச் சுருங்கியது.

"தேவி! உன் புதல்வன் செய்கையைப் பார்த்தாயா? என் பாட்டனார், உலகமெல்லாம் புகழ்பெற்ற பராந்தக சக்கரவர்த்தி, அரண்மனையில் சேர்ந்திருந்த தங்கத்தையெல்லாம் அளித்துத் தில்லை அம்பலத்துக்குப் பொன் கூரை வேய்ந்து, பொன்னம்பலம் ஆக்கினார். நம்முடைய குலத்தில் தோன்றிய பெரியவர்கள் யாரும் தாங்கள் வசிக்கும் அரண்மனையைப் பொன்னால் கட்டியதில்லை. அரண்மனை கட்டுவதைக் காட்டிலும் ஆலயம் எடுப்பதையே முக்கியமாகக் கருதினார்கள். ஆனால் ஆதித்த கரிகாலன் இப்படிச் செய்திருக்கிறான்! ஆகா! இந்தத் தெய்வ நிந்தனைக்கு என்ன பரிகாரம் செய்வது?" என்றார்.

மகனிடமிருந்து ஓலை வந்தது என்பதைக் கேட்டுச் சிறிது மலர்ச்சியடைந்த தேவியின் முகம் மறுபடி முன்னைக் காட்டிலும் அதிகமாக வாடியது. மறுமொழி ஒன்றும் அவளால் சொல்ல முடியவில்லை.

அச்சமயத்தில் வந்தியத்தேவன் தைரியமும், துணிவும் வரவழைத்துக் கொண்டு, "பிரபு தங்கள் திருக்குமாரர் செய்தது அப்படியொன்றும் தவறில்லையே? உசிதமான காரியத்தையே செய்திருக்கிறார். மகனுக்குத் தாயும் தந்தையுமே முதன்மையான தெய்வங்கள் அல்லவா? ஆகையால் தாங்களும், தேவியும் வசிப்பதற்காகத் தங்கள் புதல்வர் பொன்மாளிகை கட்டியது முறைதானே?" என்றான்.

சுந்தர சோழர் புன்னகை பூத்து, "தம்பி! நீ யாரோ தெரியவில்லை. மிக்க அறிவாளியாயிருக்கிறாய்; சாதுர்யமாகப் பேசுகிறாய். ஆனால் மகனுக்குத் தாய் தந்தை தெய்வமே என்றாலும், மற்றவர்களுக்கு இல்லைதானே? எல்லாரும் வழிபடும் தெய்வத்துக்கு அல்லவா பொன் கோயில் எடுக்க வேண்டும்!" என்றார்.

"பிரபு! மகனுக்குத் தந்தை தெய்வம்; மக்களுக்கெல்லாம் அரசர் தெய்வம். அரசர்கள் திருமாலின் அம்சம் பெற்றவர்கள் என்று வேத புராணங்கள் சொல்லுகின்றன. ஆகையால் அந்த வகையிலும் தங்களுக்குப் பொன் மாளிகை எடுத்தது பொருத்தமானதே!" என்றான் நம் வீரன்.

சுந்தர சோழர் மறுபடியும் மலையமான் திருமகளை நோக்கி, "தேவி! இந்தப் பிள்ளை எவ்வளவு புத்திசாலி, பார்த்தாயா? நம்முடைய ஆதித்தனுக்கு இவனையொத்தவர்களின் உதவியிருந்தால், அவனைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. அவனுடைய அஜாக்கிரதை சுபாவத்தைப் பற்றியும் விசாரப்பட வேண்டியதில்லை!" என்றார்.

பிறகு, வந்தியத்தேவனைப் பார்த்து, "தம்பி! பொன் மாளிகை கட்டியது உசிதமானாலும் உசிதமில்லா விட்டாலும் நான் காஞ்சிக்கு வருவது சாத்தியமில்லை. நீதான் பார்க்கிறாயே! எப்போதும் படுத்த படுக்கையாக இருந்து வருகிறேன். நெடுந்தூரப் பிரயாணத்தை மேற்கொள்ளுதல் இயலாத காரியம். ஆதித்தன் தான் என்னைப் பார்ப்பதற்கு இங்கே வந்தாக வேண்டும். அவனைக் காண்பதற்கு எங்களுக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது. நாளைக்கு மீண்டும் வா! மறு ஓலை எழுதி வைக்கும்படி சொல்லுகிறேன்!" என்றார்.

இச்சமயத்தில், கூட்டமாகப் பலர் தரிசன மண்டபத்தை நெருங்கி வருவதை வந்தியத்தேவன் அறிந்தான். ஆகா! அந்தப் புலவர் கூட்டம் வருகிறது போலும்! அவர்களுடன் ஒருவேளை சின்னப் பழுவேட்டரையரும் வருவார். அப்புறம் தான் சொல்ல வேண்டியதைச் சொல்ல முடியாமலே போய்விடலாம்! நாலு வார்த்தையில் சுருக்கமாக சொல்லிவிட வேண்டியது தான்! - இவ்விதம் சில விநாடிப்பொழுதில் சிந்தித்து முடிவு செய்து, "சக்கரவர்த்தி! தயவு செய்யுங்கள்! கருணை கூர்ந்து என் விண்ணப்பத்தைக் கேளுங்கள். தாங்கள் அவசியம் இந்தத் தஞ்சையிலிருந்து கிளம்பிவிட வேண்டும். இங்கே தங்களை அபாயம் சூழ்ந்திருக்கிறது! அபாயம்! அபாயம்!..." என்றான்.

அவன் இவ்விதம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே சின்னப் பழுவேட்டரையர் தரிசன மண்டபத்துக்குள் பிரவேசித்தார். அவரைத் தொடர்ந்து புலவர்கள் வந்தார்கள்.

வந்தியத்தேவன் கடைசியாகக் கூறிய வார்த்தைகள் கோட்டைத் தளபதியின் காதில் விழுந்தன. அவருடைய முகத்தில் கோபக் கனல் ஜ்வாலை விட்டது!


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
கல்கியின் பொன்னியின் செல்வன்

முதல் பாகம் : புது வெள்ளம்

27. ஆஸ்தானப் புலவர்கள்


பராக்! பராக்! இதோ வருகிறார்கள் புலவர் பெருமக்கள்! கவிஞர் சிகாமணிகள்! தமிழ்ப் பெருங்கடலின் கரை கண்டவர்கள்! அகத்தியனாரின் வழி வந்தவர்கள்! தொல்காப்பியம் முதலிய சங்க நூல்களைக் கரைத்துக் குடித்தவர்கள்! சிலப்பதிகாரம் முதலிய ஐம்பெருங் காவியங்களைத் தலைகீழாகப் படித்தவர்கள்! தெய்வத் தமிழ் மறையான திருக்குறளையும் ஒரு கை பார்த்தவர்கள்! இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் அறிந்தவர்கள்! இலக்கணம் கூறியதற்கு இலக்கியம் தெரிந்தவர்கள்! தாங்களே சுயமாகவும் கவி பாட வல்லவர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் எழுதிய கவிகள் அடங்கிய ஏட்டுச் சுவடிகள் கோடானு கோடி கரையான்களுக்குப் பல்லாண்டு உயிர் வாழ்வதற்கு உணவாகும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!

புலவர் பெருமக்கள் அவ்வளவு பேரும் கும்பலாகச் சுந்தர சோழ சக்கரவர்த்தியின் சந்நிதானத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.

"வாழ்க! வாழ்க! ஏழுலகமும் ஒரு குடையின் கீழ் ஆளும் சுந்தர சோழ மகா சக்கரவர்த்தி வாழ்க! பாண்டியனைச் சுரம் இறக்கின பெருமான் வாழ்க! புலவர்களைப் புரக்கும் பெருமான் வாழ்க! கவிஞர்களின் கதியான கருணை வள்ளல் வாழ்க! பண்டித வத்ஸலராகிய பராந்தக சக்கரவர்த்தியின் திருப் பேரர் நீடூழி வாழ்க!" என்று வாழ்த்தினார்கள்.

இந்தக் கோஷங்களையும் கூச்சல்களையும் சுந்தர சோழர் அவ்வளவாக விரும்பவில்லை. எனினும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், தமது நோயையும் மறந்து, வந்தவர்களை வரவேற்பதற்காக எழுந்திருக்க முயன்றார். உடனே, சின்னப் பழுவேட்டரையர் முன் வந்து "பிரபு, புலவர்கள் தங்களைத் தரிசித்து மரியாதை செலுத்திவிட்டுப் போக வந்திருக்கிறார்களேயன்றித் தங்களுக்குச் சிரமம் கொடுக்க வரவில்லை. ஆகையால் தயவு செய்து தங்களைச் சிரமப்படுத்திக் கொள்ளக்கூடாது!" என்றார்.

"ஆம், ஆம்! அரசர்க்கரசே! சக்கரவர்த்திப் பெருமானே! தங்களுக்குச் சிறிதும் சிரமம் கொடுக்க நாங்கள் வந்தோமில்லை!" என்றார் புலவர்களின் தலைவராகிய நல்லன் சாத்தனார்.

"உங்களையெல்லாம் நெடுநாளைக்குப் பிறகு பார்ப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அனைவரும் அமரவேண்டும். சில பாடல்கள் சொல்லிவிட்டுப் போகவேண்டும்!" என்றார் தமிழன்பரான சக்கரவர்த்தி.

தரையில் விரித்திருந்த ரத்தின ஜமக்காளத்தில் எல்லோரும் உட்கார்ந்தார்கள். அதுதான் சமயமென்று நமது வீரன் வல்லவரையனும் புலவர் கூட்டத்துடன் கலந்து உட்கார்ந்து கொண்டான். தான் சொல்ல விரும்பியதை முழுதும் சக்கரவர்த்தியிடம் சொல்லாமல் போக அவனுக்கு மனம் இல்லை. சந்தர்ப்பம் ஒரு வேளை கிடைத்தால் சொல்லிவிட்டுப் போகலாம் என்று எண்ணி உட்கார்ந்தான்.

இதைச் சின்னப்பழுவேட்டரையர் கவனித்தார். அவருடைய மீசை துடித்தது. முதலில் அவனை வெளியில் அனுப்பிவிடலாமா என்று நினைத்தார். பிறகு, அவன் அங்கே தம்முடைய கண்காணிப்பில் இருப்பதே நலம் என்று தீர்மானித்தார். எனவே, அவனைப் பார்த்ததும் பார்க்காதது போல் இருந்தார். இந்தப் புலவர்கள் சென்றபிறகு அவனை வெளியே அழைத்துச் சென்று அவன் மகாராஜாவிடத்தில் சொன்ன செய்தி என்னவென்பதை நன்கு தெரிந்துகொள்ள விரும்பினார். "அபாயம்! அபாயம்!" என்ற அவனுடைய குரல் அவர் காதில் இன்னும் ஒலித்துக் கொண்டே இருந்தது.

"புலவர்களே! தமிழ்ப் பாடல்கள் கேட்டு அதிக காலமாயிற்று. என் செவிகள் தமிழ்ப் பாடலுக்குப் பசித்திருக்கின்றன. உங்களில் எவரேனும் புதிய பாடல் ஏதேனும் கொண்டு வந்திருக்கிறீர்களா?" என்று சக்கரவர்த்தி சுந்தர சோழர் கேட்டார்.

உடனே ஒரு புலவர் சிகாமணி எழுந்து நின்று, "பிரபு! உலகபுரத்தில் தங்கள் திருப்பெயரால் விளங்கும் சுந்தர சோழப் பெரும்பள்ளியிலிருந்து அடியேன் வந்தேன். சிவநேசச் செல்வராகிய தாங்கள் பௌத்த மடாலயத்துக்கு நிவந்தம் அளித்து உதவியதை இந்தத் தமிழகமெங்கும் உள்ள பௌத்தர்கள் பாராட்டிப் போற்றுகிறார்கள். தாங்கள் உடல் நோயுற்றிருப்பது அறிந்தது முதல், பிக்ஷுக்கள் மிக்க கவலை கொண்டு தங்கள் உடல் நலத்துக்காகப் பிரார்த்தனை நடத்தி வருகிறார்கள். அந்தப் பிரார்த்தனைப் பாடலை இவ்விடம் சொல்ல அருள் கூர்ந்து அனுமதி தரவேண்டும்!" என்றார்.

"அப்படியே சொல்லவேணும்; கேட்கக் காத்துக் கொண்டிருக்கிறேன்" என்றார் சக்கரவர்த்தி.

புலவரும் பின்வரும் பாடலை இசையுடன் பாடினார்.

"போதியந் திருநிழல் புனித! நிற் பரவுதும்
மேதகு நந்திபுரி* மன்னர் சுந்தரச்
சோழர் வண்மையும் வனப்பும்
திண்மையும் உலகிற் சிறந்துவாழ் கெனவே!"

(*அந்நாளில் பழையாறை நகருக்கு நந்திபுரி என்னும் பெயரும் உண்டு. சில காலத்துக்கு முன்பு சோழ மண்டலம் பல்லவர் ஆட்சியின் கீழ் இருந்த போது நந்திபுரி என்னும் பெயர் பிரபலமாய் விளங்கியது. ஆகையினாலேயே இந்தப் பழம் பாடலில் நந்திபுரி மன்னர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது)

பாடலைக் கேட்டதும் புலவர்கள் அத்தனை பேரும் "நன்று! நன்று!" என்று கூறித் தங்கள் பாராட்டுதலைத் தெரிவித்தார்கள்.

"புத்தர்கள் இவ்வளவு நன்றியுடையவர்களாயிருப்பது வியப்பு, வியப்பு!" என்றார் ஒரு வீர சைவக் கவிராயர்.

"ஆம்; அது வியப்பான காரியந்தான். உலகபுரம் புத்தமடத்துக்கு நான் செய்த சேவை மிக அற்பம். அதற்கு இவ்வளவு பாராட்டு வேண்டுமா?" என்றார் மன்னர்.

"சக்கரவர்த்தியின் வண்மைத் திறத்தை அனுபவித்தவர் யார் தான் என்றென்றைக்கும் நன்றி செலுத்திப் பாராட்டாதிருக்க முடியும்? இந்திரனும் சூரியனும் சிவபெருமானும் கூடத் தங்களுடைய வண்மையின் பயனை அனுபவித்திருக்கிறார்கள்!" என்றார் மற்றோர் புலவர் சிரோமணி.

சுந்தர சோழர் முகத்தில் புன்னகை தவழ, "அது என்ன? இந்திரனும் சூரியனும் சிவபெருமானும் கூடவா? அவர்கள் எதற்காக என்னிடம் நன்றி செலுத்த வேண்டுமாம்?" என்று கேட்டார்.

"ஒரு பாடல் சொல்ல அனுமதி தரவேண்டும்!" என்றார் அப்புலவர்.

"அப்படியே நடக்கட்டும்!" என்றார் மன்னர்.

புலவர் கையில் கொண்டு வந்திருந்த ஓலையைப் பிரித்துப் படிக்கலுற்றார்;

"இந்திரன் ஏறக் கரி அளித்தார்
பரிஏ ழளித்தார்
செந்திரு மேனித் தினகரற்கு
சிவனார் மணத்துப்
பைந்துகி லேறப் பல்லக்களித்தார்,
பழையாறை நகர்ச்
சுந்தரச்சோழரை யாவரொப்பார்கள் இத்
தொன்னிலத்தே!"

பாடலைப் புலவர் படித்து முடித்ததும் சபையிலிருந்த மற்ற புலவர்கள் எல்லாரும் சிரக்கம்ப கரக்கம்பம் செய்தும், 'ஆஹாகாரம்' செய்தும், "நன்று! நன்று!" என்று கூறியும் தங்கள் குதூகலத்தை வெளியிட்டார்கள்.

சுந்தரசோழர் முக மலர்ச்சியுடன், "இந்தப் பாடலின் பொருள் இன்னதென்பதை யாராவது விளக்கிச் சொல்ல முடியுமா?" என்றார்.

ஒரே சமயத்தில் பலர் எழுந்து நின்றார்கள். பிறகு நல்லன் சாத்தனாரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் உட்கார்ந்தார்கள். நல்லன் சாத்தனார் பாடலுக்குப் பொருள் கூறினார்.

"ஒரு சமயம் தேவேந்திரனுக்கும் விருத்திராசுரனுக்கும் போர் நடந்தது. அதில் இந்திரனாருடைய ஐராவதம் இறந்து போய் விட்டது. அதற்கு இணையான வேறொரு யானை எங்கே கிடைக்கும் என்று இந்திரன் பார்த்துக் கொண்டிருந்தான். கடைசியில் பழையாறை நகரில் வாழ்ந்த சுந்தரசோழ சக்கரவர்த்தியிடம் அவன் வந்து 'ஐராவதத்துக்கு நிகரான ஒரு யானை வேண்டும்' என்று யாசித்தான். 'ஐராவதத்துக்கு நிகரான யானை என்னிடம் இல்லை. அதைவிடச் சிறந்த யானைகள் தான் இருக்கின்றன!" என்று கூறி, இந்திரனைத் தமது யானைக் கொட்டாரத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கே குன்றங்களைப் போல் நின்ற ஆயிரக்கணக்கான யானைகளைத் தேவேந்திரன் பார்த்துவிட்டு, 'எதைக் கேட்பது?' என்று தெரியாமல் திகைத்து நின்றான். அவனுடைய திகைப்பைக் கண்ட சுந்தர சோழர், தாமே ஒரு யானையைப் பொறுக்கி இந்திரனுக்கு அளித்தார். 'அந்த யானையை எப்படி அடக்கி ஆளப்போகிறோம்? நம் வஜ்ராயுதத்தினால் கூட முடியாதே!' என்ற பீதி இந்திரனுக்கு உண்டாகி விட்டதைக் கவனித்து வஜ்ராயுதத்தைவிட வலிமை வாய்ந்த ஓர் அங்குசத்தையும் அளித்தார்..."

"பின்னர் ஒரு காலத்தில், செங்கதிர் பரப்பி உலகுக்கெல்லாம் ஒளி தரும் சூரிய பகவானுக்கும் ராகு என்னும் அரக்கனுக்கும் பெரும் போர் மூண்டது. ராகு, தினகரனை விழுங்கப் பார்த்தான் முடியவில்லை! தினகரனுடைய ஒளி அவ்விதம் ராகுவைத் தகித்துவிட்டது. ஆனால் சூரியனுடைய தேரில் பூட்டிய குதிரைகள் ஏழும் ராகுவின் காலகோடி விஷத்தினால் தாக்கப்பட்டு இறந்தன. சூரியன் தன் பிரயாணத்தை எப்படித் தொடங்குவது என்று திகைத்து நிற்கையில், அவனுடைய திக்கற்ற நிலையைக் கண்ட சுந்தரசோழர் ஏழு புதிய குதிரைகளுடன் சூரிய பகவானை அணுகி, 'ரதத்தில் இந்த குதிரைகளைப் பூட்டிக்கொண்டு சென்று உலகத்தை உய்விக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். தன் குலத்தில் வந்த ஒரு சோழ சக்கரவர்த்தி இவ்விதம் சமயத்தில் செய்த உதவியைச் சூரியனும் மிக மெச்சினான்."

"பின்னர் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் கைலையங்கிரியில் திருமணம் நடந்தது. பெண் வீட்டார் கலியாணச் சீர்வரிசைகளுடன் வந்திருந்தார்கள். ஆனால் பல்லக்குக் கொண்டு வரத் தவறிவிட்டார்கள். ஊர்வலம் நடத்துவதற்கு எருது மாட்டைத் தவிர வேறு வாகனம் இல்லையே என்று கவலையுடன் பேசிக் கொண்டார்கள். இதை அறிந்த சுந்தர சோழ சக்கரவர்த்தி, உடனே, பழையாறை அரண்மனையிலிருந்து தமது முத்துப் பல்லக்கைக் கொண்டுவரச் சொன்னார். பயபக்தியுடன் சிவபெருமான் திருமணத்துக்குத் தம் காணிக்கையாக அப்பல்லக்கை அளித்தார். அப்படிப்பட்ட சுந்தர சோழ சக்கரவர்த்திக்கு உவமை சொல்லக் கூடியவர்கள் இந்த விரிந்து பரந்த, அலைகடல் சூழ்ந்த பெரிய உலகத்தில் வேறு யார் இருக்கிறார்கள்?..."

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சுந்தர சோழ சக்கரவர்த்தி 'கலீர்' என்று சிரித்தார். நோயின் வேதனையினால் நெடுநாள் சிரித்தறியாத சக்கரவர்த்தியின் சிரிப்பு அவருடைய இணைபிரியாப் பத்தினியான மலையமான் மகள் வானவன்மாதேவிக்கும் தாதியர்களுக்கும் அரண்மனை வைத்தியருக்கும் கூடச் சிறிது உற்சாகத்தை அளித்தது.

கோட்டைத் தளபதி சின்னப் பழுவேட்டரையர் இத்தனை நேரமும் நின்று கொண்டேயிருந்தவர், சக்கரவர்த்தியைக் கைக் கூப்பி வணங்கி, "பிரபு! நான் பெரிய தவறு செய்து விட்டேன்; பிழை பொறுத்து மன்னிக்க வேண்டும்!" என்றார்.

"ஆ! தளபதியா பேசுகிறது? நீர் என்ன பிழை செய்தீர்? எதற்காக மன்னிப்பு? ஒரு வேளை இந்திரனுக்கு நான் அளித்த வெள்ளை யானையையும் சூரியனுக்கு அளித்த குதிரைகளையும் திரும்பப் பறித்துக் கொண்டு வந்து விட்டீரோ? சிவபெருமானிடமிருந்து சிவிகையையும் பிடுங்கிக்கொண்டு வந்து விட்டீரோ? செய்யக் கூடியவர் தான் நீர்!" என்று சுந்தர சோழர் சொல்லி மீண்டும் சிரித்ததும், சக்கரவர்த்தியுடன் சேர்ந்து புலவர்களும் சிரித்தார்கள். எல்லாரையும் காட்டிலும் அதிகமாக வந்தியத்தேவன் சிரித்தான். அதைச் சின்ன பழுவேட்டரையர் கவனித்து அவனை நோக்கிக் கடுமையாக ஒரு பார்வை பார்த்தார். உடனே, சக்கரவர்த்தியின் பக்கம் திரும்பிப் பார்த்துக் கூறினார்:

"அரசர்க்கரசே! நான் செய்த பிழை இதுதான். இத்தனை காலமும் நான் இவர்களைப் போன்ற புலவர் சிகாமணிகளைத் தங்களிடம் வரவொட்டாமல் தடை செய்து வைத்திருந்தேன். அரண்மனை மருத்துவர் சொற்படி செய்தேன். ஆனால் இப்போது அது பிழை என்று உணர்கிறேன். இந்தப் புலவர்களின் வரவினால் தங்கள் முகம் மலர்ந்தது. இவர்களுடைய பேச்சைக் கேட்டுத் தங்கள் முகம் மலர்ந்தது. இவர்களுடைய பேச்சைக் கேட்டுத் தாங்கள் வாய் விட்டுச் சிரித்தீர்கள். அந்தக் குதூகலச் சிரிப்பின் ஒலியைக் கேட்டு உடைய பிராட்டியின் (பட்டத்து அரசியை 'உடைய பிராட்டி' என்று குறிப்பிடுவது அக்காலத்து மரபு) முகமும் தாதியரின் முகங்களும் மலர்ந்தன. நானும் மகிழ்ந்தேன். இவ்வளவு குதூகலம் தங்களுக்கு அளிக்கக் கூடியவர்களை இத்தனை நாள் தங்கள் சந்நிதானத்துக்கு வரவொட்டாமல் தடுத்தது என்னுடைய பெரும் பிழைதானே?..." என்றார்.

"நன்று சொன்னீர், தளபதி! இப்போதாவது இதை நீர் உணர்ந்தீர், அல்லவா? 'வைத்தியர் சொல்வதைக் கேட்க வேண்டாம்; புலவர்கள் வருவதைத் தடுக்க வேண்டாம்' என்று உமக்கு நான் அடிக்கடி சொன்னதின் காரணம் தெரிகிறது அல்லவா?" என்றார் சக்கரவர்த்தி.

அரண்மனை வைத்தியர் எழுந்து கைகட்டி வாய் புதைத்து ஏதோ சொல்லத் தொடங்கினார். அதைச் சுந்தர சோழர் சட்டை செய்யாமல் புலவர்களைப் பார்த்து "இந்த அருமையான பாடலைப் பாடிய புலவர் யார் என்று உங்களில் யாருக்காவது தெரியுமா? தெரிந்தால் சொல்ல வேணும்!" என்றார்.

நல்லன் சாத்தனார், "அரசர்க்கரசே! அதுதான் தெரியவில்லை! நாங்களும் அதைக் கண்டுபிடிக்க முயன்று கொண்டுதானிருக்கிறோம். கண்டுபிடித்து அந்த மாபெரும் புலவருக்குக் 'கவிச் சக்கரவர்த்தி' என்று பட்டம் சூட்டவும் சிவிகையில் ஏற்றி அவரை நாங்கள் சுமந்து செல்லவும் சித்தமாயிருக்கிறோம். இதுகாறும் எங்கள் முயற்சி பலன் அளிக்கவில்லை" என்று சொன்னார்.

"அதில் வியப்பு ஒன்றுமில்லை. நாலுவரி கொண்ட பாடலில் இவ்வளவு பெரும் பொய்களை அடக்கக்கூடிய மகாகவிஞர் தமது பெயரை வெளிப்படுத்திக் கொண்டு முன் வர விரும்பமாட்டார் தானே?" என்று மகாராஜா கூறியதும், புலவர்களின் திருமுகங்களைப் பார்க்க வேண்டுமே! ஒருவர் முகத்திலாவது ஈ ஆடவில்லை. என்ன மறுமொழி சொல்லுவது என்றும் அவர்களுக்குத் தெரியவில்லை.

இந்த நிலைமையில் நமது வந்தியத்தேவன் துணிச்சலாக எழுந்து, "பிரபு! அப்படி ஒரே அடியாகப் பொய் என்று தள்ளி விடக் கூடாது. இல்லாத விஷயத்தைச் சாதாரண பாமர மக்கள் சொன்னால் அது பொய்; இராஜாங்க நிர்வாகத்தில் ஈடுபட்டவர்கள் அவ்விதம் சொன்னால், அது இராஜதந்திர சாணக்கியம்; கவிகள் அவ்வாறு கூறினால் அது கற்பனை, அணி அலங்காரம், இல் பொருள் உவமை..." என்றான்.

புலவர்கள் அத்தனைபேரும் அவன் பக்கமாகப் பார்த்து "நன்று! நன்று!" என்று உற்சாகத்துடன் ஆர்ப்பரித்தார்கள்.

சக்கரவர்த்தியும் வந்தியத்தேவனை உற்று நோக்கி, "ஓ! நீ காஞ்சியிலிருந்து ஓலை கொண்டு வந்தவன் அல்லவா? கெட்டிக்காரப் பிள்ளை! நன்றாக என்னை மடக்கிவிட்டாய்!" என்றார். பிறகு சபையைப் பார்த்து, "புலவர்களே! பாடல் மிக அருமையான பாடலாக இருந்தாலும், அதைப் பாடியவரைக் கண்டுபிடிக்க வேண்டிய சிரமமும், அவருக்குக் கவிச் சக்கரவர்த்தி என்னும் பட்டம் சூட்டவேண்டிய அவசியமும் இல்லை. இதைப் பாடிய புலவரை எனக்குத் தெரியும். ஏற்கனவே அவருடைய சிரஸின் பேரில் தூக்க முடியாத கனமுடைய சோழ சாம்ராஜ்ய மணிமகுடம் உட்கார்ந்து அழுத்திக்கொண்டிருக்கிறது. 'புவிச் சக்கரவர்த்தி', 'திரிபுவன சக்கரவர்த்தி', 'ஏழுலகச் சக்கரவர்த்தி', என்னும் பட்டங்களையும் அந்தக் கவிராயர் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டிருக்கிறார்!" என்றார் சுந்தர சோழர்.

இதைக் கேட்ட புலவர்கள் அத்தனைபேரும் ஆச்சரியக் கடலில் முழுகித் தத்தளித்தார்கள் என்று கூறினால், அதை வாசகர்கள் பொய் என்று தள்ளி விடக் கூடாது! ஆசிரியரின் கற்பனை, அணி அலங்காரம், இல்பொருள் உவமை, - என்று இவ்விதம் ஏதாவது ஒரு வகை இலக்கணம் கூறி ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும்!


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
கல்கியின் பொன்னியின் செல்வன்

முதல் பாகம் : புது வெள்ளம்

28. இரும்புப் பிடி


திடீரென்று பொங்கிய புதுவெள்ளம் போன்ற ஆச்சரியத்தின் வேகம் சிறிது குறைந்ததும், புலவர் தலைவரான நல்லன் சாத்தனார் "பிரபு! அப்படியானால், இந்தப் பாடலை இயற்றிய கவி..." என்று தயங்கினார்.

"உங்கள் முன்னால், கால்களின் சுவாதீனத்தை இழந்து நோய்ப் படுக்கையில் படுத்திருக்கும் புவிச் சக்கரவர்த்திதான்!" என்றார் சுந்தர சோழர்.

புலவர்களிடையே பலவித வியப்பொலிகளும் ஆஹாகாரமும் எழுந்தன. சிலர் தங்களுடைய மனோ நிலையை எவ்விதம் வெளியிடுவது என்று தெரியாமல் தலையையும் உடம்பையும் அசைத்துக் கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் தங்களுடைய மனோநிலை இன்னதென்று தங்களுக்கே தெரியாமல் கல்லாய்ச் சமைந்திருந்தார்கள்!

சுந்தர சோழர் கூறினார்: - "புலவர் பெருமக்களே! ஒரு சமயம் பழையாறையில் புலவர்களும் கவிஞர்களும் என்னைப் பார்க்க வந்தார்கள். அந்தக் கூட்டத்தில் உங்களில் சிலரும் இருந்திருக்கலாம். ஒவ்வொருவரும் சோழ குலத்தின் வள்ளல் தன்மையைக் குறித்து ஒவ்வொரு பாடல் சொன்னார்கள். என்னைப் பற்றியும் பாடினார்கள். நான் 'இவருக்கு அதைக் கொடுத்தேன்', 'அவருக்கு இதை அளித்தேன்', என்றெல்லாம் பாடினார்கள். அச்சமயம் இளையபிராட்டி குந்தவையும் என் அருகில் இருந்தாள். புலவர்கள் பரிசில்கள் பெற்றுச் சென்று பிறகு அவர்கள் பாடிய பாடல்களை அரசிளங்குமரி புகழ்ந்து பாராட்டினாள். குந்தவையிடம் நான் 'புல்வர்களையெல்லாம் விட என்னால் நன்றாகப் பாட முடியும்' என்று சபதம் கூறினேன். பிறகு தான் வேடிக்கையாக இந்தப் பாடலைப் பாடினேன். 'எனக்குப் பரிசு கொடு!" என்று கேட்டேன். குழந்தை என் முதுகின்மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு 'இந்தாருங்கள் பரிசு!' என்று கன்னத்துக்கு இரண்டு அறை கொடுத்தாள்! அது நேற்று நடந்தது போல் எனக்கு ஞாபகம் இருக்கிறது. ஆனால் ஆண்டு எட்டுக்கு மேல் ஆகிறது!..." என்றார்.

"விந்தை! விந்தை!" என்றும், "அற்புதம்! அற்புதம்!" என்றும் புலவர்கள் கூறி மகிழ்ந்தார்கள்.

குந்தவை என்ற பெயரைக் கேட்டதுமே வந்தியத்தேவனுக்கு மெய்சிலிர்த்தது. சோழகுலத்தில் பிறந்த அந்த இணையில்லாப் பெண்ணரசியின் எழிலையும் புலமையையும் அறிவுத்திறனையும் பற்றி அவன் எவ்வளவோ கேள்விப்பட்டதுண்டு. அத்தகைய அதிசய அரசகுமாரியைப் பெற்றெடுத்த பாக்கியசாலியான தந்தை இவர்; தாய் அதோ பக்கத்தில் அமர்ந்திருக்கும் மூதாட்டி. சுந்தரசோழர் தம் செல்வப் புதல்வியைக் குறித்துப் பேசும் போது எவ்வளவு பெருமிதத்துடன் பேசுகிறார்? அவர் குரல் எப்படித் தழுதழுத்து உருக்கம் பெறுகிறது?...

வந்தியத்தேவனுடைய வலக்கரம் அவனுடைய இடையைச் சுற்றிக் கட்டியிருந்த பட்டுத் துணிச் சுருளைத் தடவிப் பார்த்தது. ஏனெனில் குந்தவைப் பிராட்டிக்கு அவன் கொண்டு வந்திருந்த ஓலை அச் சுருளுக்குள் இருந்தது. தடவி பார்த்த கை திகைப்படைந்து செயலிழந்து நின்றது; அவனுடைய உள்ளம் திக்பிரமை கொண்டது. "ஐயோ! இது என்ன? ஓலையைக் காணோமே! எங்கே போயிற்று? எங்கேயாவது விழுந்து விட்டதோ? சக்கரவர்த்தியின் ஓலையை எடுத்தபோது அதுவும் தவறி விழுந்திருக்குமோ? எங்கே விழுந்திருக்கும்? ஒருவேளை ஆஸ்தான மண்டபத்தில் விழுந்திருக்குமோ? அப்படியானால் சின்னப் பழுவேட்டரையரின் கையில் சிக்கி விடுமோ? சிக்கிவிட்டால் அதிலிருந்து ஏதேனும் அபாயம் முளைக்குமோ? அடடா? என்ன பிசகு! எத்தனை பெரிய தவறுதல்! இதிலிருந்து எப்படிச் சமாளிப்பது?..."

குந்தவை தேவிக்குக் கொணர்ந்த ஓலை தவறிவிட்டது என்று அறிந்த பிறகு வந்தியத்தேவனுக்கு அங்கு இருப்புக் கொள்ளவில்லை. மேலே நடந்த பேச்சுவார்த்தைகளும் அவன் காதில் சரியாக விழவில்லை; விழுந்ததும் மனத்தில் நன்கு பதியவில்லை.

சுந்தர சோழர் வியப்புக் கடலில் மூழ்கியிருந்த புலவர் கூட்டத்தைப் பார்த்து மேலும் கூறினார்:- "நான் விளையாட்டாகச் செய்த பாடலைக் குந்தவை யாரிடமாவது சொல்லியிருக்க வேண்டும். ஒருவேளை பழையாறை திருமேற்றளி ஆலயத்தின் ஈசான்ய பட்டாச்சாரியாரிடம் சொல்லியிருக்கலாம். அவர் இப் பாடலை நாடெங்கும் பரவும்படி செய்து என்னை உலகம் பரிகசிப்பதற்கு வழி செய்துவிட்டார்!..."

"பிரபு தாங்களே பாடியிருந்தால் என்ன? பாடல் அற்புதமான பாடல்தான்! சந்தேகமே யில்லை. தாங்கள் 'புவிச் சக்கரவர்த்தி' யாயிருப்பதோடு 'கவிச் சக்கரவர்த்தி'யும் ஆவீர்கள்!" என்றார் நல்லன் சாத்தனார்.

"ஆயினும், இச்சமயம் அதே பாடலை நான் பாடியிருந்தால் இன்னொரு கொடையையும் சேர்த்திருப்பேன். இந்திரனுக்கு யானையும், சூரியனுக்குக் குதிரையும், சிவனாருக்குப் பல்லக்கும் கொடுத்ததோடு நிறுத்தியிருக்க மாட்டேன். மார்க்கண்டனுக்காக மறலியைச் சிவபெருமான் உதைத்தார் அல்லவா? அந்த உதைக்கு யமன் தப்பித்துக் கொண்டான். ஆனால் அவனுடைய எருமைக் கடா வாகனம் சிவபெருமான் கோபத்தைத் தாங்காமல் அங்கேயே விழுந்து செத்துவிட்டது. வாகனமில்லாமல் யமன் திண்டாடிக் கொண்டிருந்ததையறிந்து பழையாறைச் சுந்தர சோழர் யமனுக்கு எருமைக்கடா வாகனம் ஒன்றை அனுப்பினார்!... இப்படி ஒரு கற்பனையும் சேர்த்திருப்பேன். அந்த எருமைக் கடாவின் பேரில் ஏறிக்கொண்டு தான் யமன் இப்போது ஜாம் ஜாம் என்று என்னைத் தேடி வந்து கொண்டிருக்கிறான். நமது தஞ்சைக் கோட்டைத் தளபதி சின்னப் பழுவேட்டரையரால்கூட யமதர்ம ராஜனையும், அவனுடைய எருமைக்கடா வாகனத்தையும் தடுத்து நிறுத்திவிட முடியாது அல்லவா?"

இப்படிச் சுந்தரசோழர் சொன்னபோது அவர் அருகில் வீற்றிருந்த உடைய பிராட்டி வானவன் மாதேவியின் கண்களில் நீர் அருவி பெருகிற்று. அங்கிருந்த புலவர்கள் பலர் விம்மி அழத் தொடங்கிவிட்டார்கள்.

சின்னப் பழுவேட்டரையர் மட்டுமே மனோதிடத்துடன் இருந்தார்.

"பிரபு! தங்களுடைய சேவையில் யமனுடன் போர் தொடுக்கவும் நான் சித்தமாயிருப்பேன்!" என்றார்.

"அதற்கு ஐயமில்லை, தளபதி! ஆயினும் யமனுடன் போர் தொடுக்கும் சக்தி மானிடர் யாருக்கும் இல்லை. யமனைக் கண்டு அஞ்சாமலிருக்கத்தான் நாம் இறைவனைப் பிரார்த்திக்க வேண்டும். புலவர்களே! 'நமனை அஞ்சோம்' என்று தமிழகத்தின் தவப்புதல்வர் ஒருவர் பாடினார் அல்லவா?" என்றார் சக்கரவர்த்தி.

ஒரு புலவர் எழுந்து அப்பாடலைப் பாடினார்:-

"நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோ ம் நடலையல்லோம்
எமாப்போம் பிணியறியோம்..."

சக்கரவர்த்தி இந்த இடத்தில் குறுக்கிட்டு, "ஆஹா! இறைவனைப் பிரத்யட்சமாகத் தரிசித்த மகானைத் தவிர வேறு யாரால் இவ்வளவு துணிச்சலாகப் பாட முடியும்? அப்பர் சுவாமிகளுக்குக் கொடிய சூலை நோய் இருந்தது; இறைவன் அருளால் நோய் நீங்கிற்று. எனவே 'பிணியறியோம்' என்று பாடியிருக்கிறார்! புலவர்களே! என்னைப் பற்றியும் என் கொடைகளைப் பற்றியும் பாடுவதை நிறுத்திவிட்டு, இனி இத்தகைய அருள் வாக்கைப் பாடுங்கள்! அப்பரும், சம்பந்தரும், சுந்தர மூர்த்தியும் இதுபோல் ஆயிரக்கணக்கான பக்திமயமான தீந்தமிழ்ப் பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். அப் பாடல்கள் எல்லாவறையும் ஒருங்கு சேர்த்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்? படித்தும் பாடியும் பரவசம் அடைவதற்கு ஓர் ஆயுட்காலம் போதாது அல்லவா?" என்றார்.

"அரசர்க்கரசே! தாங்கள் அனுமதித்தால் அந்தத் திருப்பணியை இப்போதே தொடங்குகிறோம்!"

"இல்லை; என்னுடைய காலத்தில் நடக்கக்கூடிய திருப்பணி அல்ல அது. எனக்குப் பின்னால்..." இவ்விதம் கூறித் தயங்கி நின்ற சுந்தர சோழர் சிந்தனையில் ஆழ்ந்தார்.

அரண்மனை மருத்துவர், சின்னப் பழுவேட்டரையரின் அருகில் வந்து அவர் காதில் ஏதோ சொன்னார்.

அதைக் கவனித்த சுந்தரசோழர் தூக்கிவாரிப் போட்டவரைப் போல் கண்ணை நன்கு விழித்துச் சபையோரைப் பார்த்தார். வேறொரு உலகத்திலிருந்து, மரணத்தின் வாசலிலிருந்து, யமனுலகக் காட்சியிலிருந்து, திடீரென்று திரும்பி வந்தவரைப் போல் சக்கரவர்த்தி தோன்றினார்.

"பிரபு! சங்கப் பாடல் ஒன்றைக் கேட்கவெண்டும் என்று தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தீர்கள். அதை மட்டும் சொல்லி விட்டு இவர்கள் போகலாமல்லவா?" என்றார் சின்னப் பழுவேட்டரையர்.

"ஆம், ஆம்; மறந்துவிட்டேன். என்னுடைய உடல் மட்டும் அல்ல; உள்ளமும் சுவாதீனத்தை இழந்துவருகிறது. எங்கே? சங்கப் பாடலைச் சொல்லட்டும்!" என்றார் மன்னர்.

சின்னப் பழுவேட்டரையர் நல்லன் சாத்தானாருக்குச் சமிக்ஞை செய்தார். புலவர் தலைவர் எழுந்து கூறினார்:- "அரசே! தங்களுடைய முன்னோர்களில் மிகப் பிரபலமானவர் கரிகால் பெருவளத்தார். இமயமலையில் புலிக்கொடியைப் பொறித்த மாவீரர். அவருடைய ஆட்சிக் காலத்தில் பூம்புகார் - காவேரிப்பட்டினம் - சோழ மகாராஜ்யத்தின் தலைநகரமாயிருந்தது. பற்பல வெளிநாடுகளிலிருந்தும் பற்பல பொருள்கள் மரக்கலங்களில் வந்து இறங்கிய வண்ணமிருந்தன. பூம்புகாரின் செல்வப் பெருக்கையும் வளத்தையும் வர்ணிக்கும் சங்கப் புலவர் ஒருவர் இன்னின்ன நாட்டிலிருந்து இன்னின்ன பொருள்கள் வந்தன என்பதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். அந்தப் பாடல் பகுதி இது:-

வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த வாரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்து உணவும் காழகத் தாக்கமும்..."

பாடலில் இந்த இடம் வந்தபோது சுந்தரசோழர் கையினால் சமிக்ஞை செய்யவே, புலவர் நிறுத்தினார்.

"தளபதி! கரிகால் வளவர் காலத்தில் ஈழநாட்டிலிருந்து தமிழகத்துக்கு உணவுப் பொருள் வந்து கொண்டிருந்தது என்று இப்பாடல் சொல்கிறது. அதை நான் அறிவதற்காகத்தானே இப்புலவர்களை அழைத்து வந்தீர்?"

"ஆம், அரசே!" என்று கோட்டைத் தளபதி கூறியது சிறிது ஈனஸ்வரத்தில் கேட்டது.

"அறிந்து கொண்டேன். இனி இப்புலவர்களைப் பரிசில்கள் கொடுத்து அனுப்பிவிடலாம்!" என்றார் மன்னர்.

"புலவர்களே! நீங்கள் இப்போது விடைபெற்றுக் கொள்ளலாம்!" என்றார் கோட்டை தளபதி.

புலவர்கள், மன்னருக்கு "வாழி!" கூறிக் கோஷித்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள்.

குந்தவை தேவிக்குக் கொண்டுவந்த ஓலையைக் காணாததால் மனக்கலக்கம் அடைந்திருந்த வல்லவரையன், அப்புலவர்களுடனே தானும் நழுவி விடலாம் என்று எண்ணி எழுந்து கூட்டத்தின் நடுவில் நடந்து சென்றான்.

ஆனால், அவன் எண்ணம் நிறைவேறவில்லை. வாசற்படியை நெருங்கியபோது ஒரு வலிய இரும்புக் கை அவனுடைய கையின் மணிக்கட்டை இறுகப் பிடித்தது. வல்லவரையன் நல்ல பலசாலிதான்! ஆயினும் அந்த வஜ்ரப் பிடியின் வேகம் அவன் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரையில் ஒரு குலுக்குக் குலுக்கி அவனைச் செயலிழந்து நிற்கும்படி செய்துவிட்டது.

அவ்விதம் பிடித்த இரும்புக்கரம் சின்னப் பழுவேட்டரையரின் கரந்தான் என்பதை நிமிர்ந்து பார்த்துத் தெரிந்துகொண்டான்.

புலவர்கள் தரிசன மண்டபத்திலிருந்து வெளியேறினார்கள்



உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
கல்கியின் பொன்னியின் செல்வன்

முதல் பாகம் : புது வெள்ளம்

30. சித்திர மண்டபம்


சின்னப் பழுவேட்டரையர் வந்தியத்தேவனைத் தம்முடன் ஆஸ்தான மண்டபத்துக்கு, அழைத்துப் போனார். சக்கரவர்த்தியிடம் அவன் கூறியது என்ன என்பதைப் பற்றி அவன் சொன்ன சமாதானம் அவருக்கு அவ்வளவாகப் பூரண திருப்தி அளிக்கவில்லை. சக்கரவர்த்தியைத் தனியாகப் போய்ப் பார்க்கும்படி அவனுக்கு அனுமதி அளித்தது ஒருவேளை தவறோ என்றும் தோன்றியது. ஆதித்த கரிகாலரிடமிருந்து வந்தவனாதலால், அவனைப் பற்றிச் சந்தேகிக்க வேண்டியது முறை. ஆனால் தமையனார் முத்திரை மோதிரத்துடன் அனுப்பியுள்ளபடியால் சந்தேகிக்க இடமில்லை. ஆகா! இம்மாதிரி காரியங்களில் பெரியவருக்கு வேறொருவர் ஜாக்கிரதை சொல்லித்தர வேண்டுமா, என்ன? ஆனாலும், தாம் திடீரென்று தரிசன மண்டபத்துக்குள் சென்ற பொழுது அவ்வாலிபன் தயங்கி நின்று பயந்தவன் போல் விழித்தது அவர் கண் முன்னால் தோன்றியது. 'அபாயம்! அபாயம்!' என்று அவன் கூவியது நன்றாகக் காதில் விழுந்ததாக ஞாபகம் வந்தது. "அபயம்" என்று சொல்லியிருந்தால், அது தம் காதில் "அபாயம்" என்று விழுந்திருக்கக் கூடியது சாத்தியமா? எல்லாவற்றுக்கும் இவனை உடனே திருப்பி அனுப்பாமலிருப்பது நல்லது. தமையனார் வந்த பிறகு இவனைப் பற்றி நன்றாய்த் தெரிந்து கொண்டு பிறகு உசிதமானதைச் செய்யலாம். இம்மாதிரி தீரனாகிய வாலிபனை நாம் நம்முடைய அந்தரங்கக் காவற்படையில் சேர்த்துக் கொள்ளப் பார்க்க வேண்டும். சமயத்தில் உபயோகமாயிருப்பான். ஏன்? இவனுக்கு இவனுடைய முன்னோர்களின் பழைய அரசில் ஒரு பகுதியை வாங்கிக் கொடுத்தாலும் கொடுக்கலாம். இம்மாதிரி பிள்ளைகளுக்கு ஒரு முறை உதவி செய்துவிட்டால், அப்புறம் என்றைக்கும் நமக்குக் கட்டுப்பட்டு நன்றியுடனிருப்பார்கள். ஒருவேளை, இவன் உறுதியான விரோதி என்று ஏற்பட்டு விட்டால், அதற்குத் தக்க ஏற்பாடு செய்ய வேண்டும். எதற்கும் தமையனார் வந்து சேரட்டும் பார்க்கலாம்.

ஆஸ்தான மண்டபம் சென்றதும் வந்தியத்தேவன் அப்புறமும் இப்புறமும் ஆவலுடன் பார்க்கத் தொடங்கினான். தளபதியிடம் தான் ஓலையை எடுத்துக் கொடுத்த இடத்தில் உற்று உற்று நன்றாகப் பார்த்தான். தப்பித் தவறி இன்னொரு ஓலை - அந்த முக்கியமான ஓலை - கிடக்கிறதா என்றுதான். அதை மட்டும் கண்டுபிடிக்க முடியாவிட்டால், தன்னைப் போன்ற மூடன் வேறு யாரும் இருக்க முடியாது! உலகமே புகழும் சோழ குலத்து அரசிளங்குமரியைத் தான் பார்க்க முடியாமலே போய்விடும். ஆதித்த கரிகாலர் தன்னிடம் ஒப்புவித்த பணியில் சரிபாதியைச் செய்ய முடியாமலே போய்விடும்.

சின்னப் பழுவேட்டரையர் அங்கிருந்த ஏவலாளர்களில் ஒருவனைப் பார்த்து, "இந்தப் பிள்ளையை நமது அரண்மனைக்கு அழைத்துக் கொண்டு போ! விருந்தாளி விடுதியில் வைத்து வேண்டிய வசதிகள் செய்து கொடுத்துப் பார்த்துக் கொள்! நான் வரும் வரையில் அங்கேயே இரு!" என்றார்.

வந்தியத்தேவனும் ஏவலாளனும் வெளியே சென்ற உடன், இன்னொருவன் தளபதியிடம் பயபக்தியுடன் நெருங்கி, ஒரு ஓலைச் சுருளை நீட்டினான். "இங்கிருந்து தரிசன மண்டபத்துக்குப் போகும் வழியில் இது கிடந்தது. இப்போது சென்ற அந்தப் பையனுடைய மடியிலிருந்து விழுந்திருக்கக் கூடும்!" என்று சொன்னான்.

தளபதி அதை ஆர்வத்துடன் வாங்கிப் பிரித்துப் பார்த்தார். அவருடைய புருவங்கள் நெற்றியின் சரிபாதி வரையில் உயர்ந்து நெரிந்தன. அவருடைய முகத்தில் கொடூரமான மாறுதல் ஒன்று உண்டாயிற்று.

"ஆஹா! இளைய பிராட்டிக்கு ஆதித்த கரிகாலர் எழுதிய ஓலை. 'அந்தரங்கமான காரியங்களுக்கு உண்மையான வீரன் ஒருவன் - நினைத்த காரியத்தை முடிக்கக் கூடிய தீரன், - வேண்டும் என்று கேட்டிருந்தாயல்லவா? அதற்காக இவனை அனுப்பியிருக்கிறேன். இவனைப் பூரணமாக நம்பி எந்த முக்கியமான காரியத்தையும் ஒப்புவிக்கலாம்" என்று இளவரசர் தம் கைப்பட எழுதியிருக்கிறார். ஆ! இதில் ஏதோ மர்மம் இருக்கிறது. இந்த ஓலையைப் பற்றிப் பெரியவருக்குத் தெரியுமோ, என்னவோ? இவன் விஷயத்தில் இன்னும் அதிக ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்!" என்று கோட்டைத் தளபதி தமக்குள்ளே சொல்லிக் கொண்டார். ஓலையைப் பொறுக்கிக் கொண்டு வந்தவனை அழைத்துக் காதோடு சில விஷயங்களைக் கூறினார். அவனும் உடனே புறப்பட்டுச் சென்றான்.

சின்னப் பழுவேட்டரையரின் மாளிகையில் வந்தியத்தேவனுக்கு ஆசார உபசாரங்கள் பலமாக நடந்தன. அவனைக் குளிக்கச் செய்து, புதிய உடைகள் அணிந்து கொள்ளக் கொடுத்தார்கள். நல்ல உடைகளை அணிந்து கொள்வதில் பிரியமுள்ள வந்தியத்தேவனும் குதூகலத்தில் ஆழ்ந்தான். காணாமற் போன ஓலையைப் பற்றிய கவலையைக் கூட மறந்துவிட்டான். புது உடை உடுத்திய பின்னர் இராஜபோகமான அறுசுவைச் சிற்றுண்டிகளை அளித்தார்கள். பசித்திருந்த வந்தியத்தேவன் அவற்றை ஒரு கை பார்த்தான். பின்னர், அவனைச் சின்னப் பழுவேட்டரையர் மாளிகையின் சித்திர மண்டபத்துக்கு அழைத்துச் சென்றார்கள். 'தளபதி வருகிற வரையில் இந்த மண்டபத்திலுள்ள அபூர்வ சித்திரங்களைப் பார்த்துக் கொண்டிருக்கலாம்!' என்றார்கள். இவ்விதம் சொல்லிவிட்டு, காவலர்கள் மூன்று பேர் மண்டபத்தின் வெளியில் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டே சொக்கட்டான் ஆடத் தொடங்கினார்கள்.

சோழ குலத்தின் புதிய தலைநகரமான தஞ்சைபுரி அந்த நாளில் சிற்ப சித்திரக் கலைக்குப் பெயர் பெற்றதாயிருந்தது. திருவையாற்றில் இசைக் கலையும் நடனக் கலையும் வளர்ந்தது போல் தஞ்சையில் சிற்ப சித்திரக் கலைகள் வளர்ந்து வந்தன.

முக்கியமாக, சின்னப் பழுவேட்டரையர் மாளிகையில் இருந்த சித்திர மண்டபம் மிகப் பிரசித்தி அடைந்திருந்தது. அந்த மண்டபத்துக்குள் இப்போது வந்தியத்தேவன் பிரவேசித்தான். சுவர்களில் பல அழகிய வர்ணங்களில் தீட்டியிருந்த அற்புதமான சித்திரங்களைப் பார்த்துப் பார்த்துப் புளகாங்கிதம் அடைந்தான். அந்த ஆனந்தத்தில் தன்னை மறந்தான்; தான் வந்த முக்கியமான காரியத்தையும் கூட மறந்தான்.

சோழ வம்சத்தின் பூர்வீக அரசர்களையும் அவர்களுடைய வாழ்க்கைச் சம்பவங்களையும் சித்தரிக்கும் காட்சிகள் அவனுடைய கவனத்தைக் கவர்ந்து பரவசமடையச் செய்தன. முக்கியமாக, சென்ற நூறு வருஷத்துச் சோழர்களின் சரித்திரம் அந்தச் சித்திர மண்டபத்தின் பெரும் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. வந்தியத்தேவனுக்கு அதிகமான ஆர்வத்தை உண்டாக்கிய சித்திரங்களும் அவைதாம்.

இந்தக் கட்டத்தில், சென்ற நூறு வருஷமாகப் பழையாறையிலும் தஞ்சையிலும் இருந்து அரசு புரிந்த சோழ மன்னர்களின் வம்ச பரம்பரையை வாசகர்களுக்குச் சுருக்கமாக ஞாபகப்படுத்த விரும்புகிறோம். இனி இந்தக் கதையில், மேலே வரும் நிகழ்ச்சிகளை அறிந்து கொள்வதற்கு, இதைத் தெரிந்து கொள்வது மிக்க உபயோகமாயிருக்கும்.

தொண்ணூற்றாறு போர் காயங்களைத் தன் திருமேனியில் ஆபரணங்களாகப் பூண்ட விஜயாலய சோழனைப் பற்றி முன்னமே கூறியிருக்கிறோம்.

சோழ மன்னர்கள் பரகேசரி, இராஜகேசரி என்னும் பட்டங்களை மாறி மாறிப் புனைந்து கொள்வது வழக்கம். பரகேசரி விஜயாலயனுக்குப் பிறகு அவனுடைய புதல்வன் ராஜகேசரி ஆதித்த சோழன் பட்டத்துக்கு வந்தான். அவன் தந்தைக்குத் தகுந்த தனயனாக விளங்கினான். முதலில் அவன் பல்லவர் கட்சியில் நின்று பாண்டியனைத் தோற்கடித்துச் சோழ ராஜ்யத்தை நிலைபடுத்திக் கொண்டான். பிறகு, பல்லவன் அபராஜிதவர்மனோடு போர்தொடுத்தான். யானை மீது அம்பாரியில் இருந்து போர் புரிந்த அபராஜிதவர்மன் மீது ஆதித்த சோழன் தாவிப் பாய்ந்து அவனைக் கொன்று தொண்டை மண்டலத்தை வசப்படுத்தினான். பிறகு கொங்கு மண்டலமும் இவன் ஆட்சிக்குள் வந்தது. ஆதித்தன் சிறந்த சிவபக்தன். காவிரி ஆறு உற்பத்தியாகும் சஹஸ்ய மலையிலிருந்து அப் புண்ணிய நதி கடலில் கலக்கும் இடம் வரையில் ஆதித்த சோழன் பல சிவாலயங்களை எடுப்பித்தான்.

இராஜகேசரி ஆதித்த சோழனுக்குப் பிறகு பரகேசரி பராந்தகன் பட்டத்துக்கு வந்தான். நாற்பத்தாறு ஆண்டு காலம் அரசு புரிந்தான். இமயத்தில் புலிச் சின்னம் பொறித்த கரிகால் பெருவளத்தானுக்குப் பின்னர் சோழ வம்சத்தில் மாபெரும் மன்னன் பராந்தகன்தான். வீர நாராயணன், பண்டித வத்சலன், குஞ்சர மல்லன், சூரசிகாமணி என்பன போன்ற பல பட்டப் பெயர்கள் அவனுக்கு உண்டு. "மதுரையும் ஈழமும் கொண்டவன்" என்ற பட்டமும் உண்டு. இந்த முதற் பராந்தகன் காலத்திலேயே சோழ சாம்ராஜ்யம் கன்யாகுமரியிலிருந்து கிருஷ்ணா நதி வரையில் பரவியத். ஈழ நாட்டிலும் சிறிது காலம் புலிக்கொடி பறந்தது. தில்லைச் சிற்றம்பலத்துக்குப் பொன் கூரை வேய்ந்து புகழ் பெற்ற பராந்தகனும் இவனேதான். இவனுடைய ஆட்சியின் இறுதி நாட்களில் சோழ சாம்ராஜ்யத்துக்குச் சில பேரபாயங்கள் வந்தன. அந்த நாளில் வடக்கே பெருவலி படைத்திருந்த இராஷ்டிரகூடர்கள் சோழர்களுடைய பெருகி வந்த பலத்தை ஒடுக்க முனைந்தார்கள். சோழ சாம்ராஜ்யத்தின் மீது படை எடுத்து வந்து ஓரளவு வெற்றியும் அடைந்தார்கள்.

பராந்தகச் சக்கரவர்த்திக்கு மூன்று புதல்வர்கள் உண்டு. இவர்களில் வீராதி வீரனாக விளங்கியவன் மூத்த புதல்வனாகிய இராஜாதித்யன் என்பவன். வடநாட்டுப் படையெடுப்பை எதிர்பார்த்து இராஜாதித்யன் திருமுனைப்பாடி நாட்டில் பெரும் சைன்யத்துடன் பல காலம் தங்கியிருந்தான். தன் தந்தையின் பெயர் விளங்கும்படி வீரநாராயண ஏரி எடுத்தான்.

அரக்கோணத்துக்கு அருகில் தக்கோலம் என்னுமிடத்தில் சோழ சைன்யத்துக்கும் இராஷ்டிரகூடப் படைகளுக்கும் பயங்கரமான பெரும்போர் நடந்தது. இந்தப் போரில் எதிரிப்படைகளை அதாஹதம் செய்து தன் வீரப் புகழை நிலைநாட்டிய பிறகு, இராஜாதித்யன் போர்க்களத்தில் உயிர் துறந்து வீர சொர்க்கம் அடைந்தான். இவனும் பல்லவ அபராஜிதவர்மனைப் போல் யானை மீதிருந்து போர் புரிந்து யானை மேலிருந்தபடியே இறந்தபடியால், இவனை 'ஆனைமேல் துஞ்சிய தேவன்' என்று கல்வெட்டுச் சாஸனங்கள் போற்றிப் புகழ்கின்றன.

இராஜாதித்யன் மட்டும் இறந்திராவிட்டால் அவனே பராந்தக சக்கரவர்த்திக்குப் பிறகு சோழ சிம்மானம் ஏறியிருக்க வேண்டும். இவனுடைய சந்ததிகளே இவனுக்குப் பின்னர் முறையாகப் பட்டத்துக்கு வந்திருக்க வேண்டும்.

ஆனால் இளவரசன் இராஜாதித்யன் பட்டத்துக்கு வராமலும் சந்ததியில்லாமலும் இறந்துவிடவே, இவனுடைய இளைய சகோதரர் கண்டராதித்த தேவர் தந்தையின் விருப்பத்தின்படி இராஜகேசரி பட்டத்துடன் சிங்காதனம் ஏறினார்.

இவர் தமது தந்தையையும் பாட்டனையும் போலவே சிவபக்தி மிகுந்தவர். அத்துடன் தமிழன்பு மிக்கவர். உண்மையில் இவருக்கு இராஜ்யம் ஆளுவதில் அவ்வளவு சிரத்தையே இருக்கவில்லை. ஆலய வழிபாட்டிலும் தமிழ் இன்பத்திலும் அதிகமாக ஈடுபட்டிருந்தார். மகான்களாகிய நாயன்மார்களைப் பின்பற்றிச் சிவபெருமான் மீது துதிப்பாடல்கள் பாடினார். 'திருவிசைப்பா' என்று வழங்கும் இப்பாடல்களில் கடைசிப் பாட்டில் இவர் தம்மைப் பற்றியே பின்வருமாறு சொல்லிக் கொண்டிருக்கிறார்:

"சீரான்மல்கு தில்லைச் செம்பொன் அம்பலத்தாடி தன்னைக்
காரார் சோலைக்கோழி வேந்தன் தஞ்சையர்கோன் கலந்த
ஆராவின் சொற் கண்டராதித்தன் அருந்தமிழ் மாலை வல்லவர்
பேரா உலகிற் பெருமை யோடும் பேரின்ப மெய்துவரே!"

விஜயாலனுக்குப் பிற்பட்ட சோழ மன்னர்கள் பழையாறையிலும் தஞ்சையிலும் வசித்த போதிலும் பூர்வீகச் சோழத் தலைநகர் உறையூர் என்னும் பாத்தியதையை விட்டுவிடவில்லை. உறையூருக்கு இன்னொரு பெயர் கோழி என்பதாகும். ஆகையால் சோழ மன்னர்கள் தங்களைக் 'கோழி வேந்தர்' என்று சொல்லிக் கொண்டார்கள்.

கண்டராதித்த தேவர் சிம்மாசனத்திலிருந்து பெயரளவில் அரசு புரிந்த போதிலும், உண்மையில் அவருடைய இளைய சகோதரனாகிய அரிஞ்சயன் தான் இராஜ்ய விவகாரங்களைக் கவனித்து வந்தான். இராஜாதித்யனுக்குத் துணையாக அரிஞ்சயன் திருநாவலூர் முதலிய இடங்களில் சைன்யங்களுடன் தங்கியிருந்தான். இராஷ்டிரகூடர்களுடன் வீரப் போர் நடத்தினான். தக்கோலத்தில் சோழ சைன்யத்துக்கு நேர்ந்த பெருந் தோல்வியை விரைவிலேயே வெற்றியாக மாற்றிக் கொண்டான். இராஷ்டிரகூடர் படையெடுப்பைத் தென்பெண்ணைக்கு அப்பாலே தடுத்து நிறுத்தினான்.

எனவே, இராஜகேசரி கண்டராதித்த சோழர் தம் தம்பி அரிஞ்சயனுக்கு யுவராஜ பட்டம் சூட்டி அவனே தமக்குப் பின் சோழ சிங்காதனத்துக்கு உரியவன் என்றும் நாடறியத் தெரிவித்து விட்டார்.

இவ்விதம் கண்டராதித்தர் முடிவு செய்வதற்கு இன்னொரு முக்கிய காரணமும் இருந்தது. இவருடைய மூத்த மனைவி இவர் பட்டத்துக்கு வருவதற்கு முன்பே காலமாகிவிட்டாள். பிறகு வெகு காலம் கண்டராதித்தர் மணம் புரிந்து கொள்ளவில்லை.

ஆனால் இவருடைய தம்பி அரிஞ்சயனுக்கோ அழகிலும் அறிவிலும் ஆற்றலிலும் சிறந்த புதல்வன் இருந்தான். பாட்டனாரின் பராந்தகன் என்னும் பெயரையும், மக்கள் அளித்த சுந்தர சோழன் என்னும் காரணப் பெயரையும் சூட்டிக் கொண்டிருந்தான்.

எனவே, தமக்குப் பிறகு தமது சகோதரன் அரிஞ்சயனும் அரிஞ்சயனுக்குப் பிறகு அவனுடைய புதல்வன் சுந்தரசோழனும் பட்டத்துக்கு வரவேண்டும் என்று கண்டராதித்தர் திருவுளங் கொண்டார். இந்த ஏற்பாட்டிற்குச் சாமந்த கணத்தினர், தண்ட நாயகர்கள், பொதுஜனப் பிரதிநிதிகள் எல்லாருடைய சம்மதத்தையும் ஒருமனதாகப் பெற்றுப் பகிரங்கமாக உலகறியத் தெரிவித்தும் விட்டார்.

இந்த ஏற்பாடுகள் எல்லாம் நடந்து முடிந்த பிறகு கண்டராதித்தரின் வாழ்க்கையில் ஓர் அதிசய சம்பவம் நடந்தது. மழவரையன் என்னும் சிற்றரசன் திருமகளை அவர் சந்திக்கும்படி நேர்ந்தது. அந்த மங்கையர் திலகத்தின் அழகும் அடக்கமும் சீலமும் சிவபக்தியும் அவர் உள்ளத்தைக் கவர்ந்தன. முதிர்ந்த பிராயத்தில் அந்தப் பெண்மணியை மணந்து கொண்டார். இந்தத் திருமணத்தின் விளைவாக உரிய காலத்தில் ஒரு குழந்தையும் உதித்தது. அதற்கு மதுராந்தகன் என்று பெயரிட்டுப் பாராட்டிச் சீராட்டி வளர்த்தார்கள். ஆனால் அரசர், அரசி இருவருமே இராஜ்யம் சம்பந்தமாக முன்னம் செய்திருந்த ஏற்பாட்டை மாற்ற விரும்பவில்லை. தம்பதிகள் இருவரும் சிவபக்தியிலும், விரக்தி மார்க்கத்திலும் ஈடுபட்டவர்களாதலால் தங்கள் அருமைப் புதல்வனையும் அந்த மார்க்கத்திலேயே வளர்க்க விரும்பினார்கள். கேவலம் இந்த உலக சாம்ராஜ்யத்தைக் காட்டிலும் சிவலோக சாம்ராஜ்யம் எவ்வளவோ மேலானது என்று நம்பியவர்களாதலால், அந்தச் சிவலோக சாம்ராஜ்யத்துக்கு உரியவனாக மதுராந்தகனை வளர்க்க ஆசைப்பட்டார்கள். ஆகையால் கண்டராதித்தர் தமக்குப் பிறகு தம் சகோதரன் அரிஞ்சயனும் அவனுடைய சந்ததிகளுமே சோழ சாம்ராஜ்யத்துக்கு உரியவர்கள் என்ற தமது விருப்பத்தைப் பகிரங்கப் படுத்தி நிலை நாட்டினார்.

எனவே, இராஜாதித்தன், கண்டராதித்தர் என்னும் இரு உரிமையாளர் வம்சத்தைத் தாண்டி அரிஞ்சயன் வம்சத்தாருக்குச் சோழ சிங்காதனம் உரிமையாயிற்று.

கண்டராதித்தருக்குப் பிறகு அதிக காலம் பரகேசரி அரிஞ்சயன் ஜீவிய வந்தனாக இருக்கவில்லை. ஒரு வருஷத்திலேயே தமையனாரைப் பின் தொடர்ந்து தம்பியும் கைலாச பதவிக்குச் சென்றுவிட்டான்.

பின்னர், இளவரசர் சுந்தர சோழருக்கு நாட்டாரும் சிற்றரசர்களும் பிற அரசாங்க அதிகாரிகளும் சேர்ந்து முடிசூட்டி மகிழ்ந்தார்கள். இராஜகேசரி சுந்தர சோழரும் அதிர்ஷ்ட வசத்தினால் தமக்குக் கிடைத்த மகத்தான பதவியைத் திறம்படச் சிறப்பாக வகித்தார். ஆட்சியின் ஆரம்ப காலத்தில் பல வீரப் போர்கள் புரிந்து பாண்டிய நாட்டையும் தொண்டை மண்டலத்தையும் மீண்டும் வென்றார். இராஷ்டிரகூடப் படைகளைத் தென்பெண்ணைக் கரையிலிருந்து விரட்டி அடித்தார்.

சுந்தர சோழ சக்கரவர்த்தியின் புதல்வர்களான ஆதித்த கரிகாலரும் அருள்மொழிவர்மரும் தந்தையை மிஞ்சக் கூடிய இணையற்ற வீரர்களாயிருந்தார்கள். அவர்கள் இருவரும் தந்தைக்குப் பரிபூரண உதவி செய்தார்கள். அவர்கள் மிகச் சிறு பிராயத்திலேயே போருக்குச் சென்று முன்னணியில் நின்று போர் புரிந்தார்கள். அவர்கள் சென்ற போர் முனைகளிளெல்லாம் விஜயலக்ஷ்மி சோழர்களின் பக்கமே நிலைநின்று வந்தாள்


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
கல்கியின் பொன்னியின் செல்வன்

முதல் பாகம் : புது வெள்ளம்

31. "திருடர்! திருடர்!"


விஜயாலய சோழர் முதல், இரண்டாம் பராந்தகராகிய சுந்தரசோழர் வரையில் சோழ மன்னர்களின் உயிர்ச் சித்திரங்களை நம் வீரன் வந்தியத்தேவன் பார்த்து மகிழ்ந்தான். ஆஹா! இவர்களில் ஒவ்வொருவரும் எப்பேர்ப்பட்டவர்கள்? எத்தகைய மஹா வீரர்கள்! உயிரைத் திரணமாக மதித்து எவ்வளவு அரும்பெரும் செயல்களை இயற்றியிருக்கிறார்கள்! கதைகளிலும் காவியங்களிலும் கூட இப்படிக் கேட்டதில்லையே? இத்தகைய மன்னர் பரம்பரையைப் பெற்ற சோழ நாடு பாக்கியம் செய்த நாடு; இன்று அவர்களுடைய ஆட்சியின் கீழ் உள்ள நாடுகள் எல்லாம் பாக்கியம் செய்த நாடுகள்தாம்.

மேற்கூறிய சோழ மன்னர்களின் சரித்திரங்களைச் சித்தரித்த காட்சிகளில் இன்னொரு முக்கியமான அம்சத்தை வந்தியத்தேவன் கவனித்தான். ஒவ்வொரு சோழ அரசருக்கும் பழுவூர்ச் சிற்றரசர் வம்சத்தினர் தலைசிறந்த உதவிகள் செய்திருக்கிறார்கள்; வீரத் தொண்டுகள் பல புரிந்து வந்திருக்கிறார்கள்.

முத்தரையர் வசத்திலிருந்த தஞ்சைக் கோட்டையை முற்றுகையிட்டு முதலில் அந்நகரில் பிரவேசித்தவர் ஒரு பழுவேட்டரையர். இரு கால்களும் இழந்த விஜயாலய சோழன் திருப்புறம்பியம் போர்க்களத்தில் புகுந்து அதிபராக்கிரமச் செயல்களைப் புரிந்த போது அவனுக்குத் தோள் கொடுத்துத் தூக்கிச் சென்றவர் ஒரு பழுவேட்டரையர். ஆதித்த சோழன் தலையில் கிரீடத்தை வைத்துப் பட்டாபிஷேகம் செய்வித்தவர் ஒரு பழுவேட்டரையர். ஆதித்த சோழன் யானைமீது பாய்ந்து வல்லப அபராஜிதவர்மனைக் கொன்ற போது ஆதித்தன் பாய்வதற்கு வசதியாக முதுகும் தோளும் கொடுத்தவர் ஒரு பழுவேட்டரையர். பராந்தக சக்கரவர்த்தி நடத்திய பல போர்களில் முன்னணியில் புலிக்கொடியை எடுத்துச் சென்றவர்கள் பழுவேட்டரையர்கள். இராஜாதித்யன் போர்க்களத்தில் காயம்பட்டு விழும்போது அவனை ஒரு பழுவேட்டரையர் தம் மடியின் மீது போட்டுக்கொண்டு, "இராஷ்டிரகூடப் படைகள் தோற்று ஓடுகின்றன!" என்ற செய்தியைத் தெரிவித்தார். அவ்விதமே அரிஞ்சயருக்கும் சுந்தர சோழருக்கும் வீரத் தொண்டுகள் புரிந்து உதவியவர்கள் பழுவேட்டரையர்கள்தான்.

இதையெல்லாம் சித்திரக் காட்சிகளில் பிரத்யட்சமாகப் பார்த்த வல்லவரையன் சொல்ல முடியாத வியப்பில் ஆழ்ந்தான். அண்ணன் தம்பிகளான பழுவேட்டரையர்கள் இன்று சோழ நாட்டில் இவ்வளவு ஆதிக்கம் வகிப்பதற்குக் காரணம் இல்லாமற் போகவில்லை. சுந்தரசோழர் எது விஷயத்திற்கும் அவர்களுடைய யோசனையைக் கேட்டு நடப்பதிலும் வியப்பில்லை.

ஆனால், தான் இப்போது பெரிய சங்கடத்தில் அகப்பட்டுக் கொண்டிருப்பது என்னமோ நிச்சயம். சின்னப் பழுவேட்டரையருக்குத் தன் பேரில் ஏதோ சந்தேகம் ஜனித்துவிட்டது. பெரியவர் வந்துவிட்டால் அந்தச் சந்தேகம் ஊர்ஜிதமாகிவிடும். முத்திரை மோதிரத்தின் குட்டு வெளியாகிவிடும். பிறகு தன்னுடைய கதி அதோகதிதான்! சின்னப் பழுவேட்டரையரின் நிர்வாகத்திலுள்ள தஞ்சாவூர்ப் பாதாளச் சிறையைப் பற்றி வல்லவரையன் கேள்விப் பட்டிருந்தான். அதில் ஒருவேளை தன்னை அடைத்துவிடக்கூடும். பாதாளச் சிறையில் ஒருவனை ஒரு தடவை அடைத்து விட்டால், பிறகு திரும்பி வெளியேறுவது அநேகமாக நடவாத காரியம். அப்படி வெளியேறினாலும், எலும்பும் தோலுமாய், அறிவை அடியோடு இழந்து, வெறும் பித்துக்குளியாகத் தான் வெளியேற முடியும்!

ஆகா! இத்தகைய பேரபாயத்திலிருந்து தப்புவது எப்படி? ஏதாவது யுக்தி செய்து பெரியவர் வருவதற்குள்ளே கோட்டையை விட்டு வெளியேறி விடவேண்டும். பழுவூர் இளைய ராணியைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை கூட நம் வீரனுக்கு இப்போது போய்விட்டது. உயிர் பிழைத்து, பாதாளச் சிறைக்குத் தப்பி, வெளியேறிவிட்டால் போதும்! ஓலையில்லா விட்டாலும் குந்தவைப் பிராட்டியை நேரில் பார்த்துச் செய்தியைச் சொல்லி விடலாம். நம்பினால் நம்பட்டும்; நம்பாவிட்டால் போகட்டும்; ஆனால் தஞ்சைக் கோட்டையை விட்டு வெளியேறுவதற்கு என்ன வழி?

தான் உடுத்திருந்த பழைய ஆடைகள் என்ன ஆயின என்ற சந்தேகம் திடீரென்று வந்தியத்தேவன் மனத்தில் உதயமாயிற்று. தன்னுடைய உடைகளைப் பரிசீலனை செய்து பார்ப்பதற்காகவே தனக்கு இவ்வளவு உபசாரம் செய்து புது ஆடைகளும் கொடுத்திருக்கிறார்கள்! குந்தவை தேவியின் ஓலை தளபதியிடம் அகப்பட்டிருக்க வேண்டும்; சந்தேகமில்லை. தான் புலவர்களுடன் திருப்பிப் போய்விடா வண்ணம் தன் கையை இரும்புப் பிடியாக அவர் பிடித்ததின் காரணமும் இப்போது தெரிந்தது. ஒரு ஆளுக்கு மூன்று ஆளாய்த் தன்னுடன் அனுப்பிய காரணமும் தெரிந்தது. ஆகா! ஒரு யுக்தி! உடனே ஒரு யுக்தி கண்டு பிடிக்க வேண்டும்! - இதோ தோன்றிவிட்டது ஒரு யுக்தி! பார்க்கவேண்டியதுதான் ஒரு கை! வீரவேல்! வெற்றிவேல்!

வந்தியத்தேவன் சித்திர மண்டபத்தின் பலகணி வழியாக வெளியே பார்த்தான். சின்னப் பழுவேட்டரையர் பரிவாரங்கள் புடை சூழக் குதிரை மேல் வந்து கொண்டிருந்தார். ஆகா! இது தான் சமயம்! இனி ஒரு கணமும் தாமதிக்கக் கூடாது.

வாசற்படிக்குப் பக்கத்தில் உட்கார்ந்து சொக்கட்டான் ஆடிய ஏவலாளர்கள் மூவரும் ஆட்டத்தை நிறுத்திவிட்டு எழுந்தார்கள். மாளிகை வாசலில் சின்னப் பழுவேட்டரையர் வரும் சத்தம் அவர்களுடைய காதிலும் விழுந்தது.

வந்தியத்தேவன் அவர்கள் அருகில் நெருங்கி, "அண்ணன் மார்களே! நான் தரித்திருந்த உடைகள் எங்கே?" என்று கேட்டான்.

"அந்த அழுக்குத் துணிகள் இப்போது என்னத்துக்கு? எஜமான் உத்தரவுப்படி புதிய பட்டுப் பீதாம்பரங்கள் உனக்குக் கொடுத்திருக்கிறோமே!" என்றான் ஒருவன்.

"எனக்குப் புதிய உடைகள் தேவையில்லை; என்னுடைய பழைய துணிகளே போதும். அவற்றைச் சீக்கிரம் கொண்டு வாருங்கள்!"

"அவை சலவைக்குப் போயிருக்கின்றன. வந்த உடனே தருகிறோம்!"

"அதெல்லாம் முடியாது! நீங்கள் திருடர்கள், என்னுடைய பழைய உடையில் பணம் வைத்திருந்தேன். அதைத் திருடிக் கொள்வதற்காக எடுத்திருக்கிறீர்கள். உடனே கொண்டு வாருங்கள். இல்லாவிட்டால்..."

"இல்லாவிட்டால் என்ன செய்துவிடுவாய், தம்பி! எங்கள் தலையை வெட்டித் தஞ்சாவூருக்கு அனுப்பிவிடுவாயோ! ஆனால் இதுதான் தஞ்சாவூர்! ஞாபகம் இருக்கட்டும்!"

"அடே! என் துணிகளை உடனே கொண்டு வருகிறாயா? இல்லையா?"

"இருந்தால்தானே தம்பி, கொண்டு வருவேன்! அந்த அழுக்குத் துணிகளை வெட்டாற்று முதலைகளுக்குப் போட்டு விட்டோ ம்! முதலை வயிற்றில் போனது திரும்பி வருமா?"

"திருட்டுப் பயல்களே! என்னுடன் விளையாடுகிறீர்களா! இதோ உங்கள் எஜமானரிடம் சென்று சொல்கிறேன். பாருங்கள்!" என்ற வந்தியத்தேவன் வாசற்படியைத் தாண்டத் தொடங்கினான். மூவரில் ஒருவன் அவனைத் தடுப்பதற்காக நெருங்கினான். வந்தியத்தேவன் அவனுடைய மூக்கை நோக்கிப் பலமாக ஒரு குத்துவிட்டான். அவ்வளவுதான்; அந்த ஆள் மல்லாந்து கீழே விழுந்தான். அவன் மூக்கிலிருந்து இரத்தம் சொட்டத் தொடங்கியது.

இன்னொருவன் வந்தியத்தேவனுடன் மல்யுத்தம் செய்ய வருகிறவனைப் போல் இரண்டு கைகளையும் முன்னால் நீட்டிக் கொண்டுவந்தான். நீட்டிய கைகளை வந்தியத்தேவன் பற்றிக் கொண்டு, தன் கால்களில் ஒன்றை எதிராளியின் கால்களின் மத்தியில் விட்டு ஒரு முறுக்கு முறுக்கினான். அவ்வளவுதான்; அந்த மனிதன் 'அம்மாடி' என்று அலறிக்கொண்டு கீழே உட்கார்ந்து விட்டான். இதற்குள் மூன்றாவது ஆளும் நெருங்கி வரவே, வந்தியத்தேவன் தன் கால்களை எடுத்துக் கொண்டு ஒரு காலால் எதிரியின் முழங்கால் மூட்டைப் பார்த்து ஒரு உதை விட்டான். அவனும் அலறிக் கொண்டு கீழே விழுந்தான்.

மூன்று பேரும் சட் புட்டென்று எழுந்து மறுபடியும் வந்தியத்தேவனைத் தாக்குவதற்கு வளைத்துக்கொண்டு வந்தார்கள். வெகு ஜாக்கிரதையாகவே வந்தார்கள்.

இதற்குள் மாளிகை வாசலில் குதிரை வந்து நின்ற சத்தம் கேட்டது.

வந்தியத்தேவன் தன் குரலின் சக்தியையெல்லாம் உபயோகித்துத் "திருடர்கள்! திருடர்கள்!" என்று சத்தமிட்டுக் கொண்டே அவர்கள் மீது பாய்ந்தான். மூன்று பேரும் அவனைப் பிடித்து நிறுத்தப் பார்த்தார்கள். மறுபடியும் "திருட்டுப் பயல்கள்! திருட்டுப் பயல்கள்!" என்று பெருங்குரலில் கூச்சலிட்டான் வந்தியத்தேவன்.

அச்சமயம் சின்னப் பழுவேட்டரையர், "இங்கே என்ன ரகளை?" என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தார்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்