Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 214  (Read 2117 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 214
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக   வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்


Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 506
  • Total likes: 977
  • Karma: +1/-0
  • Gender: Male
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
வேதனை

கர்வம் நிறைத்த புருவமும்
யாருக்கும் அஞ்சா பார்வையும்
கம்பிரம் கொண்ட பார்வையும்
என் பாரதிக்கே உரித்தானது

நங்கையர் நாம் நாதியற்று
நகைப்பவர் மத்தியில் வாழ்ந்த போது
உனக்கு விடுதலை கொடுக்க - நீ
யாருக்கும் அடிமை இல்லை என்றுரைத்தவன்

பாரத மண்ணே விழித்தெழு
வீறுகொண்டு தாயகம்
காக்க விரைந்து வா என்று
போராடிய வீரமகன்

மனிதனுக்கு மட்டும் அல்ல
சகல ஜீவராசிக்கும் இவ்வுலகில் வாழ
சம உரிமை உண்டு என
அன்பை புகட்டியவன்

வெறும் எழுத்து கவிதை என்ன செய்துவிடும்
என்றிருந்த எதிரிகளுக்கு - எழுதுகோல்
கொண்டு வீரம் புகட்டிய
வீரத்தமிழன்  அவன்

எண்ணற்றவற்றை  புகட்டிய பாரதி
இப்பொது வெறுமனே
நாம் அணியும் ஆடைகளிலும் அட்டை படங்களிலும்
முக புத்தகங்களிலும் 
மட்டுமே வாழ்வது தான் - வேதனை

புகட்டிய அறிவுரையை
மறந்துவிட்டு வெறும்
வெளிவேடத்திற்கு பாரதியை
பயன்படுத்துபவர்கள் தான்
நாம் மத்தியில் அதிகம்

« Last Edit: March 24, 2019, 12:52:29 AM by NiYa »

Offline KuYiL

சுட்டும் விழி சுடரே  கண்ணம்மா!

 “கட்டு பாடற்ற சுதந்திரம்”  –
கட்டு அவிழ்ந்த சமுதாயத்தில்
உன் காதல் கோட்டைகள்
மோக அலைகள் அடித்து செல்லும்
மணல் வீடுகள் !
மெல்லினம் நீ  - வல்லினம் ஆகும்
முயற்சியில் வக்கிரம் ஆகி விடாதே !

வசை பாடி, உறவுகள் பிழையாகி ,
மதுவுக்கு அடிமையாய்
மாதரையே சித்தரிக்கும் 
சுதந்திரமா – பெண் சுதந்திரம் ?
 சிறுமையாகி கொண்டிருக்கும் பெண்மை
இலக்கணம் கண்டபோது
“நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த
நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால் !”

களத்தில் கதிரடிக்கும் விவசாயி முதல்
காற்றை கிழித்து செல்லும் விமானி வரை
யாதுமாகி நீ  நிற்க- 
கனவு கண்ட போராளி நான் !
உன் சத்தியத்தை
விட்டுக்கொடுக்காத சரித்திரம்  படை !
“ஆணுக்கு பெண் இங்கே
இளைப்பில்லை காணென்று கும்மியடி!  “

பெண்மையின் இலக்கணத்தை
உடைக்காத  ஆண்மையின்
நட்புக்கு மட்டும் தலை வணங்கு !
சமுதாய நட்பை வளர்க்கும்
வலை தளங்கள் - உன் முற்போக்கு
எண்ணங்களின் வெளிப்பாட்டில்
பிறந்த மண்ணின் பெருமை
எதிரொலிக்கும் பசறைகளாய் விளங்கட்டும் !
ஒளி படைத்த கண்ணும் ,
உறுதி கொண்ட நெஞ்சும்
பெரிதினும் பெரிதாய் சாதிக்க
உனக்கு கிடைத்த பொக்கிஷங்கள் !
நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு   
வாளும்  நிறைந்த  சுடர்மணி பூண் நீ!

செவ்வாய் தாண்டி பிரபஞ்ச பயணத்தில்
புதியதோர் உலகம் காண
மானுடத்தின் அசகாய முயற்சி
என் நிலவு தாண்டிய
கனவு சஞ்சாரத்தின் மணி மகுடம்
சூர்ய குடும்பத்தை தாண்டிய
நம் சாதனைகள் எங்கோ இருக்க
என் நிஜமாகிய நிதர்சனமே !
உன் கால் தடம் பாதிக்க எத்தனையோ
சாதனை ராஜ்ஜியங்கள் தவம் கிடைக்க
பெரிதினும் பெரிதாய் மாநிலம் போற்ற
பெண்ணின் பெருந்தக்க யாவுள!
நீ மனது வைத்தால்
முடியாது என்ற ஒன்று உண்டோ -
ஏனென்றால் .....யாதுமாதி நின்றவள் நீயே !



Offline thamilan

பாரதி நீ
நல்லவேளை பாதியிலே போய்ச் சேர்ந்தாய்
சாகாவரம் பெற்றின்னும் நீ
சிலகாலம் வாழ்ந்திருந்தால் ….

தமிழ்நாட்டின் பெரும்புலவன்
தற்கொலை புரிந்திட்டான் என
தாரணி சொல்லும் நிலை
தலைகுனிவை தந்திருக்கும்

ஆமாம் பாரதி
கட்டாயம் நடக்குமென
நீ கண்ட கனவெல்லாம்
கடல் நுரையாய் கரைந்திங்கு  போனதிங்கே
காவிரி தென்பெண்ணை பாலாறு - இங்கே
காய்ந்து கிடக்கிறது மணலாராய்
வையம் போற்றி நின்ற வையகமும் - இன்று
வாய்க்காலாய் ஒழுகி நின்றதுவே

காவிரித்தாயவள் கண்ணீரும் வற்றி
கர்நாடகத்திடம் கெஞ்சுகிறாள்
சிங்களத் தீவுக்கு பாலமமைத்து - அந்த
சிங்கத் தமிழர் தம் உறவு கேட்டாய் -இன்று
ஈழத்தமிழர்கள் ஈனத்த தமிழராய்
உயிர் மானமிழந்து வீழ்ந்தனரே

ஜாதிகள் இல்லையடி பாப்பா - என
பாப்பாவுக்கு பாடம்  புகட்டினாய் -இன்று
வீதிக்கொரு ஜாதி  என
வீணாய் போனதிந்த பாரத தேசம்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை என்று பாடிவைத்துவிட்டு
போய் விட்டாய்
வான் வீழ்ந்தாலும் பரவாயில்லை
வான் வழியே வீசப்படும்
செல்லுகளும் குண்டுகளும் வீழும் போது
நாம் அச்சமில்லாமல் எப்படி வாழ்வது


ஆலயம் செய்வோம் கல்விச் சாலைகள் செய்வோம்
என்பதனை அரைகுறையாக கேட்டு வைத்து
காசுகள் செய்திடுவோம் பல
மாசுகள்  செய்திடுவோம்  என
கல்வியையும் கடவுளையும் காசுக்கு விற்றுகின்றனரே

அடுத்தவனை ஏமாற்றி
அவன் வயிற்றில் அடிப்பது தான்
ஆனந்த  சுதந்திரமா
சொல் பாரதி சொல்

பாருக்குள்ளே நல்ல நாடு
பாரத நாடு என்றாய் - ஆம்
பார்கள் மலிந்திருக்கும் நாடு
நம் பாரத நாடு தான்
 
பாரதி நீ
மறுபடியும் மானிடனாய் 
பிறந்திட நினைத்திட்டால்
பரிதாபக்  கவிஞனாக
ஒரு போதும்  பிறந்திடாதே - நீ         
சுடுநெருப்பாய் சொல்லி வைத்த
சீர்த்திருத்தக் கருத்தெல்லாம்
நனவாக வேண்டுமெனில்
பாட்டுப் புத்தகங்களை
பரண்மேல் எறிந்துவிட்டு
கையில்  சாட்டையுடன்  மறுபடி பிறந்திடு
பாட்டுக்கு திருந்தாத நம் தவப்புதல்வர்கள்
சாட்டை சொடுக்குக்கு சந்தோசமாக பணிந்திடுவார்
« Last Edit: March 25, 2019, 07:44:06 AM by thamilan »

Offline JasHaa

  • Full Member
  • *
  • Posts: 103
  • Total likes: 446
  • Karma: +0/-0
  • நான் வீழ்வேனென்று நினைத்தையோ !!
பாரதி !
உனக்கு நான் கவிதை எழுதவா ?
என்னை பற்றி கவிதை எழுதவா ?
இதுகூடுமா ?
முண்டாசு கவியே … நெஞ்சு படபடக்குதே !
என்ன செய்வேன்?

நான் கற்ற தமிழ் என்னை கண்டு நகைக்குதடா
என் வரிக்கண்டு உன் நெஞ்சு பொறுக்குமோ
இருந்தும் முயற்சிக்கிறேன்
இறுமாப்பு அல்ல
என் பிள்ளை தமிழை சமர்ப்பிக்கும் வாய்ப்பாக !

நீ தொடாத உயரமேதடா ?
உன் உணர்ச்சியின்பால் விளைந்த முத்துக்கள்…
எத்தனை ரசனையடா உனக்கு ?
பிள்ளைத்தமிழ் கேட்ட குழந்தை  நான்!

மீசை வச்ச கவியே ! தமிழ் ஆசை வச்ச கவியே !
குயில்பாட்டு முதல் கண்ணன்பாட்டு வரை
பகவத்கீதை முதல் பாஞ்சாலிசபதம் வரை
நீ தொட்ட உயரம் இன்றும் தொட்டுவிட முடிவதில்லையே!

கண்ணம்மாவின் மீது நீ கொண்ட காதல்
இன்றளவும்  வாழ்கிறதே!
உன் கள்வெறி கொள்ளும் வரிகள் என்றும்
எங்களை உன்மத்தம் கொள்ளச்செய்கிறதே!

நிமிர்ந்த நன்னடையுடன் 
நேர்கொண்ட  பார்வையுடனும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளுடன் 
வாழ  சொன்னாய் நீ !
வாழ பிரயத்தனபடுகிறோம்...

பாரதி உன்னை நோக்கி  ஒரு கேள்வி  ?
நிமிர்த்த  நடை பெண்களின்  திமிரல்ல
தன்னம்பிக்கையென ! 
அவளது  நேர்கொண்ட பார்வை  கல்மிஷமல்ல 
கண்ணியமென்ன !
நெறிகளுடன் வாழ அவனின்  துணைவேணுமென
சொல்ல மறந்து சென்றாயோ  - இல்லை
மறுத்துசென்றாயோ ?

எங்களை பட்டங்கள் ஆள வைத்தாய்
எங்களை சட்டங்கள் செய்ய வைத்தாய்
அச்சம் இல்லை! அச்சம் இல்லை!
அச்சமென்பதில்லையே என முழங்க வைத்தாய்
வெற்றி எட்டு திக்கும் எட்ட கொட்டுகிறோம்..
முரசு கொட்டுகிறோம்.. முரசு கொட்டுகிறோம் !

பாரதி !
உனக்கு  நான் கவிதை எழுதவா
என்னை  பற்றி கவிதை எழுதவா
இதுகூடுமா ?
முண்டாசு கவியே … நெஞ்சு படபடக்குதே !
என்ன செய்வேன்?

« Last Edit: March 26, 2019, 07:13:31 PM by JasHaa »

Offline இளஞ்செழியன்



வாளோடும்
வேலோடும் வந்தவனுக்கிடையில்
எழுது கோலோடு போருக்கு வந்தவன் ...

வேட்டேறிந்தவனோடு
பாட்டெழுதியும்
தீவிரவாதி ஆனவன்
ஆம்
இருநூறாண்டு பகை தீர்க்க
இருநூற்று நாற்பத்தேழு
ஆயுதங்களோடு போராடியவன்

பாரத நாடு பற்றி
பாரதி எழுதிய
பழம்பெருமை பாட்டெல்லாம்
பரங்கியருக்கு புரிந்திருந்தால்
பாவம் செய்து விட்டோமென
பதறி அழுதிருப்பான்
பாதி மயக்கத்தில்
பாதளச்சிறையில் கிடந்த
பாரத மாதாவின்
பாவ விலங்கு களைந்தெறிந்து
பாத பூஜை செய்திருப்பான்

கவிதையும் பாட்டும்
கண்கானாக் கடவுளர்க்கும்
காது தடவும் கன்னியர்க்கும்
காடண்ட முனிவர்க்கும்
நாடண்ட மன்னர்க்கும்
மட்டுமல்ல
பாட்டாளி மக்களுக்கும்
பாவப்பட்ட மனிதர்களுக்கும்
பாடப்பட வேண்டுமென
பா அதிர பாடினான்
நா அதிர முழங்கினான்

இயற்கை பற்றிய
இவன் பாட்டுக்கெல்லாம்
இன்றுவரை நிகரில்லை
இவன் பாடா பொருளென்று
இந்த உலகில் எதுவுமில்லை

மண்ணின் உயிர்கள் சமமென்றான்
மலரும் மழையும் வரமென்றான்
பறவையும் விலங்கும் உயர்திணையென்றான்
கடலும் மலையும் உயிர்த்துணையென்றான்

மண் விடுதலை பேசியவன்
பெண் விடுதலையும் பேசினான்
பெண்ணை சமூக புண்ணெனக் கருதுவோர்
கண்ணிலெல்லாம்
பண்ணெனும் மண்ணெடுத்து வீசினான்
சொல்லெனும் சுண்ணமெடுத்துப் பூசினான்

சோற்றுக்கு வழியில்லா போதும்
மாற்றுக்கு துணியில்லா போதும்
சோகப்பாட்டு பாடவில்லை
சொரணைகெட்டு வாழவில்லை
சொர்க்கத்தை கனவு கண்டான்
சொந்த காசில் உணவு கொண்டான்

பாரதி நினைத்திருந்தால்
பல்லக்கிலும் பட்டு மெத்தையிலும்
மல்லாக்க படுத்துக்கொள்ளும்
மாண்புமிகு பதவிகளும்
மானமிகு பட்டங்களும்
வாழ்வின் கடைசிவரை
வரமென கிடைத்திருக்கும்
வளமென வாய்த்திருக்கும்

நாட்டை கவர்ந்தவனிடம்
மாட்டை போல் பணிசெய்தல்
நாணம் என்றுரைத்து
வானம் செல்லும்வரை
கானம் பாடி நின்றான்
மானம் சூடி வென்றான்

மகாகவி மாண்டுவிட்டானென்று
மரணச்செய்தி வாசிப்போருக்கு
மனமாரக் கூறுகிறேன்
மரணமென்பது பாரதியின்
உடற்கூட்டிற்க்கு தானே தவிர
சுடர்ப்பாட்டுக்கல்ல

எட்டுத்திக்கும் உள்ளவரை
எங்கள் தமிழ் தேருக்கு
ஏற்றதொரு சாரதி
எங்கள் கவி பாரதி    - இளஞ்செழியன்



பிழைகளோடு ஆனவன்...

Offline SweeTie

தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா 
கவியே நீ கூறிச்சென்றாய்  ஆனால்
தமிழை பேச வெட்கப்படுகிறான்
இன்றய நாகரீக தமிழன்

ஓடிவிளையாடு பாப்பா 
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா   இன்று
ஓடிவிளையாட இடமில்லை 
கணினியும்  கையுமாய்    வீட்டினுள்
ஒய்ந்திருக்கும் குழைந்தைகள்

பெண்விடுதலை  வேண்டும்
 பெரிய  கடவுள் காக்கவேண்டும்
காயமுறும் பெண்கள் தான் இன்று
நிம்மதி இல்லாத வாழ்க்கையில்
நித்தம் நித்தம் தவிக்கிறோம்

ஆண்களோடு  பெண்களும்  சரிநிகர்
சமானமாக  வாழ்வோம் இந்த நாட்டிலே
சமானமாக கூடவேண்டாம்
மனித  பிறவியாக வாழவிடு என
கண்ணீரில்  கரையும் பெண் வர்க்கம்
 
கங்கை நதிபுரத்து கோதுமைப்பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்
கங்கையும் காவிரியும்  வற்றிவிட்டன
கோதுமையும்  அரிசியும்   வேண்டி 
வேற்றுநாட்டிடம்  கையேந்துகிறோம்

முன்டாசுகவியே  நீயோ சென்றுவிட்டாய்
உன் கனவுகளை விதைத்து  சென்றாய்
கனவுகளை நனவாக்க  முடியவில்லை
எங்கள் சுமைகளை இறக்கி வைக்க
திரும்பவும் ஒருமுறை பிறந்துவிடு