Author Topic: திருமூலர் - திருமந்திரம்  (Read 42976 times)

Offline Anu

பதிகம் எண் :25.கல்லாமை

(10பாடல்கள்)

பாடல் எண் : 1
கல்லா தவருங் கருத்தறி காட்சியை
வல்லா ரெனில் அருட் கண்ணான் மதித்துளோர்
கல்லாதார் உண்மைபற் றாநிற்பர் கற்றோருங்
கல்லா தவர் இன்பங் காணகி லாரே.

பொழிப்புரை : `கல்வி இல்லாதோரும் அறிவினுள்ளே காணும் மெய்ப்பொருட் காட்சியை வல்லவராவர்` என்று கூறுவதாயின் `கற்று வல்லோரும் கல்லாதார் ஒழுகும் உண்மை நெறியைப் பற்றுதலும், கல்லாதார் பெறும் பேரின்பத்தைப் பெறுதலும் மாட்டாதாராவர்` எனவும் கூறுதல் வேண்டும். `கற்றவரே வல்லவராவர்` என்னும் நியதியின்மையின், அவர் மாட்டாராதலுங் கூடுமாகலின்.
*********************************************************************
பாடல் எண் : 2
வல்லார்கள் என்றும் வழியொன்றி வாழ்கின்றார்
அல்லா தவர்கள் அறிவு பலஎன்பார்
எல்லா இடத்தும் உளன்எங்கள் தம்இறை
கல்லா தவர்கள் கலப்பறி யாரே.

பொழிப்புரை :  கல்வி கேள்விகளில் வல்லவர்கள் மெய்ந்நெறியை ஒன்றாகத் துணிந்து அதன்கண் பொருந்தி உயர்வர். அவ்வன்மை இல்லாதவர்கள் மெய்ந்நெறியைப் பலவாகக்கண்டு தடுமாற்றம் எய்தி ஒன்றினும் நில்லாது தாழ்வார். அதனால் எங்கள் சிவபெருமான் எங்கும் நிறைந்து நிற்பினும்; கல்லாதவர் அவனை அடையும் நெறியை உணரமாட்டார்கள்.
*********************************************************************
பாடல் எண் : 3
நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து
நில்லாக் குரம்பை நிலையென் றுணர்வீர்காள்
எல்லா வுயிர்க்கும் இறைவனே யாயினும்
கல்லாதார் நெஞ்சத்துக் காணவொண் ணாதே.

பொழிப்புரை :  நிலைபெறாத இயல்பினை உடைய பொருள் களையே நிலைபெற்ற பொருள்களாக நெஞ்சில் நினைத்து, அதனானே, நிலைபெறாத உடம்பையும் நிலைபெற்றதாக நினைக் கின்ற புல்லறிவாளரே, எங்கள் சிவபெருமான் எல்லா உயிர்கட்கும் முதல்வன் என்பது உண்மையேயாயினும், உம்மைப் போலக் கல்லாத புல்லறிவாளர் நெஞ்சில் அவனைக் காண இயலாது.
*********************************************************************
பாடல் எண் : 4
கில்லேன் வினைதுய ரார்க்கும் அயலானேன்
கல்லேன் அரனெறி கல்லாத் தகைமையின்
வல்லேன் வழங்கும் பொருளே மனத்தின்உட்
கல்லேன் கழியநின் றாடவல் லேனே.

பொழிப்புரை :  நான் சிவன்நெறியைக் கல்லாதிருக்கும் தன்மையர் முன் கல்வி இல்லாதவனாய்த் தோன்றுகின்றேன். அதனால், அவர் போல வினையைச் செய்ய வல்லேனல்லேன்; உலகியலில் நின்று துன் புறுவார்க்கும் அயலாகினேன். கிடைத்த பொருளைப் பலர்க்கும் வழங்க வல்லனாயினேன்; அதனால், எதற்கும் மனத்தில் அச்சங் கொள்ளமாட்டேன்; இவற்றால் பற்றுக்கள் பலவும் நீங்கி நின்று களிநடம் புரிய வல்லேனாயினேன்.
*********************************************************************
பாடல் எண் : 5
நில்லாது சீவன்நிலையன் றெனவெண்ணி
வல்லார் அறத்தும் தவத்துளும் ஆயினார்
கல்லா மனித்தர் கயவர் உலகினில்
பொல்லா வினைத்துயர் போகஞ்செய் வாரே.

பொழிப்புரை :  கற்று வல்லார், இப்பிறப்பின் நிலையாமையை அறிந்து, `இல்லறம், துறவறம்` என்னும் இருவகை அறத்துள் தமக்கு இயைந்த தொன்றில் நிற்பர். இனிக் கல்லா மனிதர், கீழ்மக்கள் ஆதலின் தீவினையால் விளைகின்ற துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருப்பர்.
*********************************************************************
பாடல் எண் : 6
விண்ணினின் உள்ளே விளைந்த விளங்கனி
கண்ணினின் உள்ளே கலந்தங் கிருந்தது
மண்ணினின் உள்ளே மதித்து மதித்துநின்
றெண்ணி எழுதி இளைத்துவிட் டாரே.

பொழிப்புரை :  நன்கு கனிந்து இனிதாகிய விளாம்பழம், வானளாவ உயர்ந்த கிளையிலே உள்ளது. அதனைக் கண் உடையவர் கண்டு தக்க வாற்றாற் பெற்று உண்டு களிக்கின்றனர். கண் இல்லாதவர் அதனைச் சொல்லளவால் அறிந்து நிலத்திலே கிடப்பதாக நினைத்து, உதிர்ந்து கிடக்கின்ற கருக்காய், வெதும்பிக் காய்ந்த பிஞ்சு முதலியவைகளைக் கையால் தடவி எடுத்து, `இத்துணைய` என்று எண்ணித் தொகையை மனத்துட் பதித்து, உண்டு பார்க்கும்பொழுது இனித்தல் இன்றிக் கைத்தும், புளித்தும் நிற்றலைக் கண்டு துன்புற்றொழிகின்றனர்.
*********************************************************************
பாடல் எண் : 7
கணக்கறிந் தார்க்கன்றிக் காணவொண் ணாது
கணக்கறிந் தார்க்கன்றிக் கைகூடா காட்சி
கணக்கறிந் துண்மையைக் கண்டண்ட நிற்கும்
கணக்கறிந் தார்கல்வி கற்றறிந் தாரே.

பொழிப்புரை :  நூல்களைக் கற்றறிந்தவரே அந்நூலறிவால் மெய்ப்பொருளின் இயல்பை உணர்ந்து, பரவெளியில் கலந்து நிற்கும் முறையையும் உணர்கின்றனர். ஆதலின், நூல்களைக் கற்றறியாதவர்க்கு அவை கூடாவாம்.
*********************************************************************
பாடல் எண் : 8
கல்லாத மூடரைக் காணவும் ஆகாது
கல்லாத மூடர்சொல் கேட்கக் கடன் அன்று
கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்
கல்லாத மூடர் கருத்தறி யாரே.

பொழிப்புரை :  கல்வி இல்லாதவர் மூடரே ஆதலால், அவர் யாதோர் உறுதியினையும் அறியார். அதனால் அவரைக் காணுதலும், அவர் சொல்லைக் கேட்டலும் தகுதியாவன அல்ல. அவர்க்கும், அவர் போலும் கல்லாத மூடரே தக்கவராய்த் தோன்றுதலன்றிக் கற்ற அறிவினர் தக்கவராய்த் தோன்றார்.
*********************************************************************
பாடல் எண் : 9
கற்றுஞ் சிவஞானம் இல்லாக் கலதிகள்
சுற்றமும் வீடார் துரிசறார் மூடர்கள்
மற்றும் பலதிசை காணார் மதியிலோர்
கற்றன்பில் நிற்போர் கணக்கறிந் தார்களே.

பொழிப்புரை: சிவநூல்களைக் கற்றும், அவற்றை மனம் பற்றி ஒழுகாதவர், அடுத்தாரைக் கெடுக்கும் முகடிகளாவர். அவர் தாமேயும் புறப்பற்றும், அகப்பற்றும் விட அறியார்; அவ்விருவகைப் பற்றும் விட்ட அறிவர் பலர் பலவிடங்களில் இருத்தலைக் கண்டும் அவற்றை விட அறியார். அதனால் அவர் கற்றும் கல்லாத மூடரேயாவர். ஆதலின், கற்றவண்ணம் ஒழுகுபவரே கற்றறிவுடையோராவர்.
*********************************************************************
பாடல் எண் : 10
ஆதிப் பிரான்அம ரர்க்கும் பரஞ்சுடர்
சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம்
ஓதி உணரவல் லோம்என்பர் உள்நின்ற
சோதி நடத்துந் தொடர்வறி யாரே.
 
பொழிப்புரை : உயிர்க்கு உயிராய் அவற்றது அறிவினுள் நிற்கும் பேரறிவாகிய முதற்பொருள், பெத்தம், முத்தி இருநிலையினும் அவ்வாறு நின்று நடத்தும் அருள் தொடர்பினை அநுபவத்தால் அறிய மாட்டாதார், `யாம் முதல்வனது இயல்பு அனைத்தையும் கல்வி கேள்விகளானே முற்ற உணரவல்லோம்` என்று கூறுவர்.


Offline Anu

பதிகம் எண் :26.நடுவு நிலைமை

(03பாடல்கள்)

பாடல் எண் : 1
நடுவுநின் றார்க்கன்றி ஞானமும் இல்லை
நடுவுநின் றார்க்கு நரகமும் இல்லை
நடுவுநின் றார்நல்ல தேவரு மாவர்
நடுவுநின் றார்வழி நானும்நின் றேனே.

பொழிப்புரை : நடுவுநிலைமையிற் பிறழாதவர் ஒருபோதும் நரகம் புகார். தேவராய்த் துறக்கம் புகுதலும் செய்வர்; அதுவேயன்றி ஞானமும் பெற்று வீடெய்துவர். அதனால், நானும் அவர் வழியிலே நிற்கின்றேன்.
********************************************************************
பாடல் எண் : 2
நடுவுநின் றான்நல்ல கார்முகில் வண்ணன்
நடுவுநின் றான்நல்ல நான்மறை யோதி
நடுவுநின் றார்சிலர் ஞானிக ளாவார்
நடுவுநின் றார்நல்ல நம்பனு மாமே.
*****************************************
நடுவுநின் றார்சிலர் ஞானிக ளாவர்
நடுவுநின் றார்சிலர் தேவரு மாவர்
நடுவுநின் றார்சிலர் நம்பனு மாவர்
நடுவுநின் றாரொடு நானும்நின் றேனே.

பொழிப்புரை : நடுவுநிலைமை பிறழாதவர் மால் அயனாம் நிலைகளைப் பெறுதலேயன்றிச் சிவஞானிகளாய்ச் சிவமாந் தன்மையையும் பெறுவர்.

குறிப்புரை : ``ஓதி`` என்பது பெயர். ``கார்வண்ணன், மறையோதி`` என்னும் ஈரிடத்தும் `ஆவன்` என்பது எஞ்சி நின்று. அவற்றோடு இயைய, ``நடுவு நின்றான்`` என ஒருமையாற் கூறினாராயினும், ஏனையபோலப் பன்மையாற் கூறுதலே கருத்து என்க. இனி `கார் வண்ணன், மறையோதி` என்பவற்றை எழுவாயாக்கி, அவற்றை `நின்றான்` என்பவற்றோடு முடிப்பாரும் உளர். `நடுவுநின்றார்` என்று ஒழியாது, ``சிலர்`` என்றது, `நடுவுநிற்றல் அரிது` என்பது உணர்த்துதற்கு. `சிவமாதல் ஞானம் இன்றி அமையாது` என்றற்கு அதனை இடையே விதந்தோதினார்.  இவ்விரண்டு திருமந்திரங்களானும் நடுவுநிற்றலின் பயனே கூறப்பட்டது.  பதிப்புக்களில் இதன்பின் காணப்படும் பாடல் இடைச் செருகல்.
********************************************************************
பாடல் எண் : 3
தோன்றிய எல்லாந் துடைப்பன் அவன்அன்றி
ஏன்றுநின் றாரென்றும் ஈசன் இணையடி
மூன்றுநின் றார்முதல் வன்திரு நாமத்தை
நான்றுநின் றார்நடு வாகிநின் றாரே.

பொழிப்புரை : தோன்றிய பொருள்கள் அனைத்தையும் ஒடுக்குபவன் சிவபெருமானே. அதனால் `அயன், அரி, அரன்` என்னும் பிறர் மூவரும் என்றும் அவனது ஆணையை ஏற்று நிற்பவரே. ஆதலின், அம் மூவர்க்கும் முதல்வனாகிய சிவபெருமானது திருப்பெயராகிய திருவைந்தெழுத்து மந்திரத்தையே, `மற்றுப்பற்றின்றிப்` (தி.7 ப.48 பா.1) பற்றி நிற்பவரே உண்மையாக நடுவு நிற்பவராவர்.


Offline Anu

பதிகம் எண் :27.கள்ளுண்ணாமை

(11பாடல்கள்)
 
பாடல் எண் : 1
கழுநீர்ப் பசுப்பெறிற் கயந்தொறும் தேரா
கழுநீர் விடாய்த்துத்தங் காயஞ் சுருக்கும்
முழுநீர்க் கள்ளுண்போர் முறைமை அகன்றோர்
செழுநீர்ச் சிவன்றன் சிவானந்தத் தேறலே.

பொழிப்புரை : பசுக்கள், அரிசி கழுவிய நீரைப் பெற்று உண்டு பழகி விட்டால், பின்பு குளத்தில் உள்ள தூயநீரை நாடிச் செல்லா; அக்கழுநீர்க்கே விடாய்த்துக்கொண்டு உடல் மெலியும். அத்தன்மையவாய பசுக்கள் தம் இயல்பின் நீங்கினவாம். அதுபோல, கள்ளினைச் சுவையும், வலிமையும் நிறைந்த பருகுபொருளாக (பானமாக) நினைத்துக் கள்ளுண்பவர் மக்கள் இயல்பின் நீங்கினோராவர். மற்று, வளமையுடைய பருகு பொருள், சிவபெருமானது திருவடி இன்பமாகிய தேனே.
********************************************************************
பாடல் எண் : 2
சித்தம் உருக்கிச் சிவமாஞ் சமாதியில்
ஒத்த சிவானந்தத் தோவாத தேறலைச்
சுத்தமது வுண்ணச் சுவானந்தம் விட்டிடா
நித்தல் இருத்தல் கிடத்தல்கீழ்க் காலே.

பொழிப்புரை :  சித்த விருத்தியைக் கெடுத்துச் சிவமாய் நிற்கின்ற, அதீத நிலையில் விளைகின்ற சிவானந்தமாகிய தேனே தூய மதுவாம். அதனை உண்டால், இயற்கை இன்பம் நீங்காது நிற்கும். அஃதல்லாத பிற மதுக்களை நாள்தோறும் உண்டு மகிழ்தலும், செயலற்றுக் கிடத்தலும் பிறபொருட் கலப்பாலாகிய செயற்கை விளைவேயாம்.
********************************************************************
பாடல் எண் : 3
காமமும் கள்ளுங் கலதிகட் கேயாகும்
மாமல முஞ்சம யத்துள் மயலுறும்
போமதி யாகும் புனிதன் இணையடி
ஓமய ஆனந்தத் தேறல் உணர்வுண்டே.

பொழிப்புரை : காமக் களிப்பும், கள்ளுக் களிப்பும் கீழ்மக்கட்கே உரியனவாம். அதனால், அவற்றைச் சிறப்பித்துச் சொல்கின்ற, அறியாமையும் மயக்க உணர்வும் பொருந்திய சமயத்தில் நிற்பவர்க்கு அறிவு அழிவதேயாகும். தூயோனாகிய சிவபெருமானது திருவடியி னின்றும் உண்டாகின்ற, மாசற்ற, நிறைந்த இன்பத்தேனில், அறிவு நிலைபெற்று நிற்கும்.
********************************************************************
பாடல் எண் : 4
வாமத்தோர் தாமும் மதுவுண்டு மாள்பவர்
காமத்தோர் காமக்கள் ளுண்டே கலங்குவர்
ஓமத்தோர் உள்ளொளிக் குள்ளே உணர்வர்கள்
நாமத்தோர் அன்றே நணுகுவர் தாமே.

பொழிப்புரை : `சத்தியை வழிபடுகின்றோம்` என்று சொல்லிக் கொள்ளும் அவைதிகராகிய வாம மதத்தினரும், அக்கொள்கை இல்லாதே கள்ளுண்ணும் மடவோர் போலக் கள்ளுண்டு அறிவு அழிபவரேயன்றிச் சிறப்பு ஒன்றும் இலர். இனிக் காமத்தை மட்டும் விரும்புபவர் அறிவு அழியப்பெறாராயினும், மயக்கம் உடையவரே. (ஆகவே, கள், காமம் இரண்டையும் போற்றிக் கூறும் சமயங்களால் உய்தி கூடாது) அவ்விரண்டையும் வெறுத்தொதுக்கும் வைதிக சமயிகளே வழிமுறைக் காலத்தில் அறிவினுள் அறிவாய் நிற்கின்ற முதற் பொருளினுள் ஒடுங்கி அதன் இன்பத்தை நுகர்வர். சிவநாமத்தை உய்யும் வழியாகப் பற்றும் சித்தாந்த சைவர் அவ்வின்பத்தை இடையீடின்றி அப்பொழுதே பெறுவர்.
********************************************************************
பாடல் எண் : 5
உள்ளுண்மை ஓரார் உணரார் பசுபாசம்
வள்ளன்மை நாதன் அருளினின் வாழ்வுறார்
தெள்ளுண்மை ஞானச் சிவயோகஞ் சேர்வுறார்
கள்ளுண்ணும் மாந்தர் கருத்தறி யாரே.

பொழிப்புரை :  கள்ளினை உண்டு களிக்கும் அவைதிகராகிய வாம மார்க்கத்தவர் வேதாகமங்களின் கருத்துக்களை உணரமாட்டாமையின், `சுரௌதம்` எனப்படும் திவ்வியாகமங்களாகிய சிவாகமங்களில் சொல்லப்பட்ட `பதி, பசு, பாசம்` என்னும் மூன்று பொருள்கள் உண்மையை உணர்தலும், அவ்வுணர்வால் அவற்றுள் மேலானவனாகிய பதியின் அருளைப் பெற விழைதலும், அவ்விழைவால் சரியை கிரியா யோகங்களாகிய இறப்பில் தவத்தில் நின்று அதன் பயனாகத் தெளிந்த உண்மை ஞானமாகிய சிவ ஞானத்தைப் பெறுதலும், அச்சிவஞானத் தெளிவினால் சிவனோடு ஏகமாகிய இறைபணி நின்று இன்புறுதலும் இலராவர்.
********************************************************************
.பாடல் எண் : 6
மயக்குஞ் சமய மலமன்னும் மூடர்
மயக்கும் மதுவுண்ணும் மாமூடர் தேறார்
மயக்குறு மாமாயை மாயையின் வீடும்
மயக்கில் தெளியின் மயக்குறும் அன்றே.

பொழிப்புரை : மயக்கத்தைத் தருகின்ற மயக்க நோய், மயக்கம் இல்லாதாரையும் மயங்கச் செய்யும் மருந்தால் நீங்கும் எனக் கூறுவார் கூற்றைத் தெளிந்து அம்மருந்தை உண்ணின் உண்டாவது பெரு மயக்கமேயன்றி வேறுண்டோ! இல்லை. அதுபோல, `உலகப்பற்றாகிய மயக்கம், அறிவை மயக்குவதாகிய கள்ளினால் நீங்கும் எனக் கூறி மயக்குகின்ற அறியாமையையுடைய சமயத்தில் உறைத்து நிற்கும் அறிவிலிகள், அவ்வறியாமையால் அறிவை அழிக்கும் கள்ளை உண்டு மேலும் பேரறியாமையில் அழுந்துவர்; அவரைத் தெளிவித்தல் இயலாது.
********************************************************************
பாடல் எண் : 7
மயங்குந் தியங்குங்கள் வாய்மை அழிக்கும்
இயங்கும் மடவார்தம் இன்பமே எய்தி
முயங்கும் நடங்கொண்ட ஞானத்து முந்தார்
இயங்கும் இடையறா ஆனந்தம் எய்துமே.

பொழிப்புரை : தடுமாற்றத்திற்கும், அறியாமைக்கும் ஏதுவாகிய கள், வாய்மை முதலிய நல்லொழுக்கங்களைக் கெடுக்கும். அதனால் அதை உண்பவர் நாணம் இன்றித் தெருவில் திரிகின்ற பொதுமகளிர் இன்பத்தையே பெற்று, தாம் தம் இல்லாளொடு முயங்கிப் பெறும் இன்பத்தைத் தரும் அறிவைத் தலைப்படமாட்டார். அவர்க்கு என்றும் நீங்காத, இடையீடில்லாத இன்பம் உண்டாகுமோ!
********************************************************************
பாடல் எண் : 8
சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள்ளுண்பர்
சத்தி அழிந்தது தம்மை மறத்தலால்
சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டுச்
சத்திய ஞானஆ னந்தத்திற் சார்தலே.

பொழிப்புரை :  சத்தியின் அருளைப் பெறவேண்டிச் சத்தி மதத்தார் (வாம மதத்தவர்கள்) கள்ளுண்பார்கள். அதன் பயனாக அவர்கள் பெறுவது இயல்பாகத் தமக்கு அமைந்த சத்தியையும் (வலிமையையும்) இழத்தலேயாம். (ஆகவே, அவர்தம் கொள்கை அறியாமை வழிப்பட்டது என்பது தெளிவு. அஃது எவ்வாறு எனில், கள்ளுண்ட பின் அவர் நினைவிழந்து வீழ்ந்து செயலற்றுக் கிடத்தலால்) உண்மையில் `சத்தி` என்பது சிவபெருமானது அறிவு வடிவாகிய ஆற்றலே; அச்சத்தியால் பெறும் பயன், அதன்வழி நின்று, நிலைபேறும், தெளிவும் உடைய சிவானந்தத்தைப் பெறுதலே.
********************************************************************
பாடல் எண் : 9
சத்தன் அருள்தரிற் சத்தி அருளுண்டாம்
சத்தி அருள்தரிற் சத்தன் அருளுண்டாம்
சத்தி சிவமாம் இரண்டுந்தன் னுள்வைக்கச்
சத்தியம் எண்சித்தித் தன்மையு மாமே.

பொழிப்புரை : சத்திமானும், (சத்தியை உடையவனும்) சத்தியும் தன்மையால் இரண்டாதலல்லது, பொருளால் இரண்டாதல் யாண்டும் இல்லை. (இதனைத் தெரிவிக்கவே, `சிவன்` என்னாது சத்தன் என்றார்) ஆகவே, சிவமும், சத்தியும் தம்முள் வேறல்லர் என்பது வெளிப்படை. அதனால், முதற்பொருளை அடைய வேண்டுவார், `சத்தி, சிவம்` ஆகிய இரண்டனையும் ஒப்பக்கொள்ளல் வேண்டுமன்றி, அவற்றுள் ஒன்றனையே புகழ்ந்து கொள்ளுதலும், ஏனையதை இகழ்ந்து நீக்கலும் கூடாவாம். மேற்கூறியவாறு அவ்விரண்டனையும் ஒப்பக்கொண்ட வழியே எப்பயனும் கிடைத்தல் உறுதி.
********************************************************************
பாடல் எண் : 10
தத்துவம் நீக்கி மருள்நீக்கித் தானாக்கிப்
பொய்த்தவம் நீக்கிமெய்ப் போகத்துட் போக்கியே
மெய்த்த சுகமுண்டு விட்டுப் பரானந்தச்
சித்திய தாக்குஞ் சிவானந்தத் தேறலே.

பொழிப்புரை :  மேல் பலவிடத்தும் சொல்லிவந்த சிவானந்தமாகிய தேன், உயிர், நிலமுதல் நாதம் ஈறாகிய தத்துவங்களே தானாய்த் தன்னை அறியாது நிற்கும் நிலையே முதற்கண் நீக்கி, அதன்பின்னர், தன்னைச் சடமாகிய தத்துவங்களின் வேறாகக் கண்ட உயிர் `யான் சித்தாகிய பிரமமே` என மயங்கும் மயக்கத்தையும் போக்கிச் சிவமாகச் செய்து, காமியத் தவங்களைக் கைவிடப்பண்ணி, இன்பத்தைத் துய்ப்பதாகிய அவ்வுயிர் இன்பத்தைக் கொடுப்பதாகிய சிவத்தின்பால் சென்று அடங்கி இன்புறவைத்து உடம்பு உள்ள துணையும் நிற்பதாகிய இவ்வுலகத்தின் இன்ப துன்ப நுகர்ச்சியை உடல் ஊழாக நுகர்ந்து கழித்து, உடம்பு நீங்கிய பின்னர்ப் பேரா இன்பப் பெருவாழ்வாகிய பரமுத்தியைத் தலைப்படச் செய்யும்.
********************************************************************
பாடல் எண் : 11
யோகிகள் கால்கட்டி ஒண்மதி ஆனந்தப்
போத அமுதைப் பொசித்தவர் எண்சித்தி
மோகியர் கள்ளுண்டு மூடராய் மோகமுற்
றாகும் மதத்தால் அறிவழிந் தாரே.

பொழிப்புரை : உண்மை யோகிகள் ஆவார், பிராணவாயுவைத் தடுத்து அதனால் எழும் மூலக்கனலால் புருவநடுவில் உள்ள சந்திர மண்டலத்தில் ஊறும், அறிவை வளர்க்கின்ற, இனிய அமுதத்தை உண்பவரே. (அவ்வமுதம் சிவானந்தத் தேறலில் இச்சையுண்டாக்கும்) அந்நிலையைப் பெறாத சிலர் அணிமா முதலிய சித்திகளில் இச்சையுடையராய்க் கள்ளை உண்டு மயக்கம் உற்று, அம்மயக்கத்தால் எழும் உன்மத்தம் உடையராய் அறிவழிகின்றனர்.
முதல் தந்திரம் மூலமும் உரையும் முற்றிற்று.


Offline Anu

இரண்டாம் தந்திரம் -  பதிகம் எண்:1. அகத்தியம்

 (பாடல்கள்:2)

பாடல் எண் : 1
நடுவுநில் லாதிவ் வுலகஞ் சரிந்து
கெடுகின்ற தெம்பெரு மானென்ன ஈசன்
நடுவுள அங்கி அகத்திய நீபோய்
முடுகிய வையத்து முன்னிரென் றானே.

பொழிப்புரை : ஒருபொழுது நிலம் சமனாய் நின்று உயிர்களைத் தாங்காது, ஒருபாற் சாய்ந்து கீழ்மேலாகப் புரண்டு அழியும் நிலை உண்டாக, அதனை அறிந்த தேவர்கள் அச்சுற்றுச் சிவபெருமானிடம் விண்ணப்பித்து முறையிடுதலும், அப்பெருமான் அகத்திய முனிவரை அழைத்து, `இருதய வெளியுள் பரஞ்சுடரை எப்பொழுதும் இருத்தி நிற்றலால் அகத்தியன் (அகத் தீயன் - உள்ளொளியைப் பெற்றவன்) எனப்பெயர் பெற்ற முனிவனே, உலகத்தை நிலைநிறுத்த வல்லவன் நீ ஒருவனுமே ஆவை; ஆதலால், விரையக் கெடும் நிலை எய்திய நிலத்தில், மேல் எழுந்த இடத்தில் நீ சென்று அமர்ந்து சமன் செய்` என்று அருளிச் செய்தான்; அதனால், இவ்வுலகம் நிலை பெற்றது.
================================================
பாடல் எண் : 2
அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்
அங்கி உதயஞ்செய் மேல்பா லவனொடு
மங்கி உதய வடபால் தவமுனி
எங்கும் வளங்கொள் இலங்கொளி தானே.

பொழிப்புரை : `புறத்தும் அகத்தும் சுடர் விட்டுளன் எங்கள் சோதி` (தி.3 ப.54 பா.5) என்றபடி, புறத்தும், அகத்தும் தீயை உண்டாக்கி வளர்க்கின்ற, மேற்றிசைக்கண் ஞானாக்கினியாய் விளங்கிய அகத்திய முனிவர் தென்றிசையிலும், தவம் உடையவரே காணத்தக்காராக அரிதில் விளங்குகின்ற தவக் கோலத்தை உடைய முனிவனாகிய சிவபெருமான் வடதிசையிலும் வீற்றிருந்து உலகமுழுவதையும் விளக்குகின்ற ஒளியாய்த் திகழ்கின்றார்கள்.
================================================
தந்திரம் 02 பதிகம் எண் 02. பதிவலியில் வீரட்டம் எட்டு : பாடல்கள்: 8

பாடல் எண் : 1
கருத்துறை அந்தகன் றன்போல் அசுரன்
வரத்தின் உலகத் துயிர்களை எல்லாம்
வருத்தஞ்செய் தானென்று வானவர் வேண்டக்
குருத்துயர் சூலங்கைக் கொண்டுகொன் றானே.

பொழிப்புரை : அக இருளாகிய ஆணவமலத்தை ஒத்து, `அந்தகன்` எனப் பெயர் பெற்ற அசுரன் ஒருவன் தான் பெற்ற வரத்தினால் உலகத்து உயிர்களை எல்லாம் துன்புறுத்த, அது பற்றி வருந்தி முறையிட்ட தேவர்கள் பொருட்டுச் சிவபெருமான் சூலத்தின் நுனியில் அவனை ஏற்றித் துன்புறுத்தி அழித்தார்.
================================================
பாடல் எண் : 2
கொலையிற் பிழைத்த பிரசா பதியைத்
தலையைத் தடிந்திட்டுத் தான்அங்கி யிட்டு
நிலையுல குக்கிவன் வேண்டுமென் றெண்ணித்
தலையை யரிந்திட்டுச் சந்திசெய் தானே.

பொழிப்புரை : தக்கன் சிவபெருமானை இகழ்ந்து செய்த வேள்வியை அப்பெருமானது அருளாணையின்வழி வீரபத்திரக் கடவுள் சென்று அழித்தபொழுது, தக்கனது இகழ்ச்சியை மறாது உடன் பட்டிருந்த தேவர் பலரையும் பலவாறு ஒறுத்தலோடு ஒழித்து, அவ் இகழ்ச்சியைச் செய்தவனாகிய தக்கனது தலையை வெட்டித் தீக்கு இரையாக்கி, `சிவனை இகழ்ந்தவர் பெறும் இழிநிலைக்கு இவன் தக்க சான்றாகற்பாலனாகலின், அதன் பொருட்டு இவன் உலகிற்கு இன்றியமையாத ஒருவன்` எனக் கருதி அவனை அழித்தொழியாது ஆட்டுத் தலையைப் பொருத்தி உயிரோடு இருக்கச் செய்தார்.
================================================
பாடல் எண் : 3
எங்கும் பரந்தும் இருநிலந் தாங்கியும்
தங்கும் படித்தவன் தாளுணர் தேவர்கள்
பொங்கும் சினத்துள் அயன்தலை முன்னற
அங்கச் சுதனை உதிரங்கொண் டானே.

பொழிப்புரை : ஆகாயத்தினும் மேலாய்ப் பரந்து எல்லாப் பொருட் கும் இடங்கொடுத்தும், பூமியினும் கீழாய் நின்று அனைத்தையும் தாங்கியும் நிற்கும் தன்மைத்தாகிய சிவபெருமானது திருவடியின் பெருமையை மறவாது உணர்ந்து அடங்கி ஒழுகற் பாலராய தேவர்கள், தம் அதிகாரச் செருக்கால் ஓரோவழி அதனை மறந்து மாறுபடுகின்ற காலத்து அவர்தம் செருக்கைச் சிவபெருமான் அழித்து அவரைத் தெருட்டுதற்கு அறிகுறியாகப் பிரமன் செருக்குற்ற பொழுது அவன் தலையை, வைரவக் கடவுளை விடுத்து அரிந்து, அத்தலை ஓட்டில் தேவர் பலரது உதிரத்தையும் பிச்சையாக ஏற்பித்து, முடிவில் திரு மாலது உதிரத்தையும் கொள்வித்துச் செருக்கொழித் தருளினான்.
================================================
பாடல் எண் : 4
எங்கும் கலந்தும்என் உள்ளத் தெழுகின்ற
அங்க முதல்வன் அருமறை யோதிபாற்
பொங்குஞ் சலந்தரன் போர்செய்ய நீர்மையின்
அங்கு விரற்குறித் தாழிசெய் தானே.

பொழிப்புரை : எல்லா இடங்களிலும் நிறைந்து நிற்பினும், என் உள்ளத்தில் விளங்கி நிற்கின்றவனும், ஆறங்கம் அருமறைகளை அருளிச்செய்த முதல்வனும் ஆகிய சிவபெருமானிடம், மிக்க சினத்தை உடைய `சலந்தரன்` என்னும் அசுரன் போர் செய்யச் சென்றபொழுது, அப்பெருமான் அவனது வரத்தின் தன்மையை அறிந்து அதற்கு ஏற்பத் தமது காற்பெருவிரலால் நிலத்தில் ஒரு சக்கரத்தைக் கீறி அதனை அவனாலே எடுப்பித்து அதன்வழி அவன் தன்னாலே தான் அழியச் செய்தான்.
================================================
பாடல் எண் : 5
அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புர மாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யாரறி வாரே.

பொழிப்புரை : சிவபெருமான் திரிபுரம் எரித்த வரலாற்றைப் புராணங்கள் கூறக் கேட்கின்றுழி, அறிவிலாதார் அவ் வரலாற்றை மட்டுமே கேட்டு, அவ்வளவில் சிவபெருமானைப் புகழ்ந்தொழி கின்றனர். ஆயினும், அவ்வரலாற்றால் அறியத் தக்க உண்மையை அறிகின்றவர் எத்துணையர்! மிகச் சிலரே. அதனால், `இரும்பு, வெள்ளி, பொன்` என்பவற்றால் ஆகிய மூன்று கோட்டைகளும் முறையே `ஆணவம், மாயை, கன்மம்` என்னும் மும்மலக் கட்டினைக் குறிப்பனவாக, `சிவபெருமான் அக்கோட்டைகளை எரித்துச் சாம்பலாக் கினான்` என்பது, `அம்மும்மலங்களின் வலியை அழித்துக் கட்டறுத் தருளுவன்` என்னும் உண்மையையே சிறப்பாக உணர்த்தி நிற்கும்.
================================================
பாடல் எண் : 6
முத்தீக் கொளுவி முழங்கெரி வேள்வியுள்
அத்தி யுரிஅர னாவ தறிகிலர்
சத்தி கருதிய தாம்பல தேவரும்
அத்தீயி னுள்ளெழுந் தன்று கொலையே.

பொழிப்புரை : முனிவர் சிலர் செய்த வேள்வியுள் எழுந்த யானை உருவினனாகிய கயாசுரனால் தம் ஆற்றலையே பெரிதாகக் கருதி யிருந்த தேவர் பலரும் அன்று அங்குச் சென்று கொலையுண் டாரேயாகச் சிவபெருமான் ஒருவனே அவனை அழித்து அவனது தோலைப் போர்வையாகக் கொண்டான் என்பதைக் கேட்டும் அப்பெருமானது பெருமையைச் சிலர் அறியாது, ஏனைத் தேவருள் அவனையும் ஒருவனாக வைத்து எண்ணுகின்றனர்.
================================================
பாடல் எண் : 7
மூலத் துவாரத்து மூளும் ஒருவனை
மேலைத் துவாரத்து மேலுற நோக்கிமுற்
காலுற்றுக் காலனைக் காய்ந்தங் கியோகமாய்
ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே.

பொழிப்புரை : சிவபெருமான் நிலவுலகில் உள்ள திருக்கடவூரில் காலால் காலனை உதைத்துத் தள்ளி, ஒர் யோகி போல் இருத்தல் வியப்பைத் தருவது.
================================================
பாடல் எண் : 8
இருந்த மனத்தை இசைய இருத்திப்
பொருந்திய லிங்க வழியது போக்கித்
திருந்திய காமன் செயலழித் தங்கண்
அருந்தவ யோகங் கொறுக்கை அமர்ந்ததே.

பொழிப்புரை : சிவபெருமான் திருக்குறுக்கை வீரட்டத்தில் எழுந் தருளியுள்ள நிலை, தன்வழி நின்ற மனத்தை நம் வழிப் பொருந்துமாறு நிறுத்திப்பின் மகளிரோடு மெய்யுறுதலை அறவே விடுத்து, எத்தகை யோர்க்கும் காமத்தை விளைத்தலில் வல்ல காமவேளது குறும்பை அழித்து, அந்நிலைக்கண் நாம் அசையா திருக்கத்தக்க அரிய தவயோக நிலையேயாம்.
« Last Edit: May 24, 2012, 11:34:16 AM by Anu »


Offline Anu

இரண்டாம் தந்திரம்-பதிக எண்:3. இலிங்க புராணம்

(பாடல்கள்:6)

பாடல் எண் : 1
அடிசேர்வன் என்ன எம் ஆதியை நோக்கி
முடிசேர் மலைமக னார்மக ளாகித்
திடமார் தவஞ்செய்து தேவர் அறியப்
படியார அற்சித்துப் பத்திசெய் தாளே.

பொழிப்புரை : உமையம்மையும் மலையரையன்பால் மகளாய் வளர்ந்தபொழுது `சிவபெருமானது திருவடிக்குத் தொண்டு புரிவேன்` (அவனுக்கு மனைவியாவேன்) என்று கருதி அதன்பொருட்டு அப்பெருமானை நோக்கித் தவம் செய்து அப்பயனைப் பெற்றாள். பின் தேவரும் அறியும்படி இந்நிலவுலகில் அவனை அன்புடன் வழிபடுதலும் செய்தாள்.
=============================================
பாடல் எண் : 2
திரிகின்ற முப்புரஞ் செற்ற பிரானை
அரியனென் றெண்ணி அயர்வுற வேண்டா
புரிவுடை யாளர்க்குப் பொய்யலன் ஈசன்
பரிவொடு நின்று பரிசறி வானே.

பொழிப்புரை : `முப்புரத்தை எரித்த முதல்வனாகிய சிவபெருமான் உமையம்மை போன்றார்க்கன்றி நம்மனோர்க்குக் கிடைத்தற்கரியன்` என்று தளர்ச்சி எய்த வேண்டா. அன்புடையார் யாவராயினும் அவர்க்கு அவன் எளியனே. அன்புடையார்பால் அருளுடையவனாய் நின்று அவரவர்க்குத் தக்கவகையில் அவன் அருள் செய்வான்.
=============================================
பாடல் எண் : 3
ஆழி வலங்கொண் டயன்மால் இருவரும்
ஊழி வலஞ்செய்ய ஒண்சுட ராதியும்
ஆழி கொடுத்தனன் அச்சுதற் கவ்வழி
வாழி பிரமற்கும் வாள்கொடுத் தானே.

பொழிப்புரை : மிக்க வலிமை பொருந்தித் தம்மில் போர்செய்த பிரமன், திருமால் என்னும் இருவரும் தம்முன் தீப்பிழம்பாய்த் தோன்றிய சிவபெருமானைப் பின்பு இலிங்கத் திருமேனியில் நெடுங்காலம் வழிபட, அவர்கட்குச் சிவபெருமான் திருமாலுக்குச் சக்கரப் படையையும், பிரமனுக்குத் தண்டாயுதத்தையும் வழங்கி, முறையே, காத்தல் படைத்தல் களைச் செய்யுமாறு அருள்புரிந்தான்.
=============================================
பாடல் எண் : 4
தாங்கி இருபது தோளுந் தடவரை
ஓங்க எடுத்தவன் ஒப்பில் பெருவலி
ஆங்கு நெரித்தம ராவென் றழைத்தபின்
நீங்கா அருள்செய்தான் நின்மலன் தானே.

பொழிப்புரை : சிவபெருமான் தனது கயிலைப்பெருமலையைத் தூக்கி எறியக்கருதி இருபது தோள்களாலும் மேல் எழுமாறு தாங்கி எடுத்த இராவணனது நிகரில்லாத பேராற்றலைத் தனது கால் விரலால் விரைய ஊன்றி அவன், இறைவனே என்று அழைத்து அலறி முறையிட்டபின் அவனை விடுத்து, அழிவில்லாத வரத்தையும் கொடுத் தருளினான்.
=============================================
பாடல் எண் : 5
உறுவ தறிதண்டி ஒண்மணல் கூட்டி
அறுவகை ஆன்ஐந்தும் ஆட்டத்தன் தாதை
செறுவகை செய்து சிதைப்ப முனிந்து
மறுமழு வால்வெட்டி மாலைபெற் றானே.

பொழிப்புரை : `செய்யத்தக்க செயல் இது` என்பதை முற்பிறப்பிற் செய்த தவமுதிர்ச்சியால் தெளிந்த தண்டீசநாயனார் மணலால் இலிங்கம் அமைத்து, வினை கெடும்வகையில் பசுவின் பாலையே எல்லாத் திருமஞ்சனப் பொருளுமாகக் கருதி ஆட்டி வழிபட, அவரைப் பெற்ற தந்தை தன்மகன் வேள்விக்குரிய பாலை வீணாக்குவதாக நினைத்து வெகுண்டு ஒறுக்க வேண்டித் தண்டுகொண்டு அடித்து, அது பயன்படாமையால், இலிங்கத் திருமேனியைக் காலால் அழிக்க, நாயனார் சினந்து, தாம் ஆனிரை மேய்க்கும் கோலை எடுத்தபொழுது அதுவே மழுவாய் மறுவடிவங்கொள்ள, அதனாலே அவன் காலை வெட்டி, அதற்குப் பரிசிலாகச் சிவபெருமான் சண்டேசுர பதவியில் இருத்தித் தன் முடிமேல் இருந்து எடுத்துச் சூட்டிய கொன்றை மாலையைப் பெற்றார்.
=============================================
பாடல் எண் : 6
ஓடிவந் தெல்லாம் ஒருங்கிய தேவர்கள்
வாடி முகமும் வருத்தத்துத் தாஞ்சென்று
நாடி இறைவா நமஎன்று கும்பிட
ஈடில் புகழோன் எழுகவென் றானே.

பொழிப்புரை : தேவர் பலரும் பற்பல காலங்களில் பற்பல துன்பங்களை அடைந்து சிவபெருமானிடம் முறையிட்டு அத்துன்பம் நீங்குதல் வேண்டி அப்பெருமானை அவன் திருப்பெயர்கள் பலவற்றையும் சொல்லி மலர்தூவிப் போற்றிசெய்து வழிபட, சிவபெருமான் அவர்களை அத்துன்பங்களினின்றும் நீங்கச் செய்தான்.
=============================================
இரண்டாம் தந்திரம்–பதிக எண்:4. தக்கன் வேள்வி (பாடல்கள்-09)

பாடல் எண் : 1
தந்தைபி ரான்வெகுண் டான்தக்கன் வேள்வியை
வெந்தழல் ஊடே புறப்பட விண்ணவர்
முந்திய பூசை முடியார் முறைகெட்டுச்
சிந்தினர் அண்ணல் சினஞ்செய்த போதே.

பொழிப்புரை : தக்கனது வேள்விக் குண்டத்தில் தீ நன்கு வளர்க்கப் பட்டபொழுது அங்குக் கூடியிருந்த தேவர், யாவர்க்கும் தந்தையும், தலைவனுமாகிய சிவபிரானை இகழ்ந்த அத்தக்கனுக்கு, முதல் ஆகுதியைச் சிவபெருமானுக்குச் செய்யுமாறு அறிவு புகட்டி அவ்வாறு செய்வித்து அவ்வேள்வியை முடிக்க மாட்டாதவராய், அவனுக்கு அஞ்சி முறை திறம்பித் திருமாலுக்கு முதல் ஆகுதியைச் செய்ய இசைந்திருந்தமையால், பின் அப்பெருமான் சினந்து வீரபத்திரரை விடுத்தபொழுது அவரால் அனைவரும் அழிந்தனர்.
=============================================
பாடல் எண் : 2
சந்தி செயக்கண் டெழுகின் றரிதானும்
எந்தை யிவனல்லம் யாமே உலகினிற்
பந்தஞ்செய் பாதத்து வீழ்ந்து தவஞ்செய்ய
அந்தமி லானும் அருள்புரிந் தானே.

பொழிப்புரை : வீரபத்திரர் தன்மேற்கொண்ட சினந்தணிந்து நின்றதை அறிந்து அச்சம் நீங்கி எழுந்த மாயோன் `எம் தந்தையே; நாங்கள் இத்தக்கன்போலச் சிவநிந்தை செய்பவர் அல்லேம்; (ஆதலின், எங்களைத் துன்புறுத்தாதீர்)` என்று சொல்லி மண்ணில் பதிந்த அவரது பாதங்களில் வீழ்ந்து துதிக்க, சிவனேயாயுள்ள அவரும் அவன்மேல் இரக்கங்கொண்டு ஒறுத்தலை ஒழிந்தார்.
=============================================
பாடல் எண் : 3
அப்பரி சேஅய னார்பதி வேள்வியுள்
அப்பரி சேஅங்கி அதிசய மாகிலும்
அப்பரி சேஅது நீர்மையை யுள்கலந்
தப்பரி சேசிவன் ஆலிக்கின் றானே.

பொழிப்புரை : மாயோன் வீரபத்திரரிடம் கூறியவாறே சிவநிந்தை செய்பவனாகிய தக்கனது தலைமையான வேள்வியில் அக்கினி தேவன் ஏனையோர் வேள்வியிற் போலவே கிளர்ந்தெழுந்து தன் கடமையைச் செய்ய முற்பட்டது வியப்பு என்றாலும், தக்கனோடேயன்றி ஏனைத் தேவரோடும் மாறுபடுதற்கு அஞ்சிய அவனது நிலைமையைத் திருவுளத்தடைத்து அவனுக்கு அளித்திருந்த ஆற்றலை மாற்றாது சிவபெருமான் வாளா இருந்தான்.
=============================================
பாடல் எண் : 4
அப்பரி சேஅயன் மால்முதல் தேவர்கள்
அப்பரி சேயவ ராகிய காரணம்
அப்பரி சங்கி யுளநாளும் உள்ளிட்
டப்பரி சாகி அலர்ந்திருந் தானே.

பொழிப்புரை : மாயோன் வீரபத்திரரிடம் கூறியவாறே அயன், மால் முதலிய தேவர் பலரும் சிவனை நிந்தியாதொழியினும், நிந்தித்த தக்கனைத் திருத்தமாட்டதவராயினர். அன்னராயினும், தக்கனது வேள்வியில் அவர் ஒருங்கு கூடியிருந்து அவனுக்கு ஊக்கம் மிகச் செய்தமைக்குக் காரணம், தானும் அவர்போலவே அச்சங் கொண்டவனாகிய அக்கினி தேவன், ஏனை இடங்காலங்களிற் போலவே தன் கடமையுட்பட்டுத் தன் செயலைச் செய்யக் கிளர்ந்து நின்றமையேயாம்.
=============================================
பாடல் எண் : 5
அலர்ந்திருந் தானென் றமரர் துதிப்பக்
குலந்தருங் கீழங்கி கோளுற நோக்கிச்
சிவந்த பரமிது சென்று கதுவ
உவந்த பெருவழி யோடிவந் தானே.

பொழிப்புரை :: அக்கினிதேவன் கிளர்ந்தெழுந்தமைக்குத் தக்கன் முன்னிலையில் தேவர் பலரும் அவனைப் புகழத் தேவ கூட்டத்துள் கடைப்பட்டவனாகிய அக்கினிதேவன் முதற் குற்றவாளியாயினமையை அறிந்து சிவபெருமான் கொண்ட சினமாகிய மேலான தீ அவ்வேள்விச் சாலையிற் சென்று பற்ற, அக்கினிதேவன் தனக்குப் பொருந்தியதொரு பெரிய கள்ள வழியினால் வேள்விச் சாலையை விட்டு வெளியே ஓடி வந்து விட்டான்.
=============================================
பாடல் எண் : 6
அரிபிர மன்தக்கன் அற்க னுடனே
வருமதி வாலையும் வன்னிநல் இந்திரன்
சிரம்முகம் நாசி சிறந்தகை தோள்தாம்
அரனருள் இன்றி அழிந்தநல் லோரே.

பொழிப்புரை : சிவபெருமானது கருணையைப் பெறாமையால், தலை, முகம், கை, தோள் என்பவற்றை இழந்த குற்றவாளிகள் முறையே, `மால், அயன், தக்கன்` என்பவரும், சூரிய சந்திரர் கலைமகளும், அக்கினிதேவனும், அழகிய இந்திரனும் ஆவர்.
=============================================
பாடல் எண் : 7
செவிமந் திரஞ்சொல்லுஞ் செய்தவத் தேவர்
அவிமந் திரத்தின் அடுக்களை கோலிச்
சவிமந் திரஞ்செய்து தாமுற நோக்குங்
குவிமந் திரங்கொல் கொடியது வாமே.

பொழிப்புரை : தம் ஆசிரியர் தம் செவியிலே சொல்லக் கேட்ட மந்திரத்தை அவ்வாறே பொருளறியாது ஒப்புவிக்கின்ற அதனையே தவமாகக் கொண்ட நிலத்தேவர் (பூசுரர்) ஆகிய அந்தணர்கள் அந்நிலை பிறழ்ந்து தக்கன் ஆணைவழியே யாகசாலை அமைத்து, அதில் நெருப்புக் குண்டம் விளைத்து, சிவபெருமானைப் புகழ்ந்து கூறும் மந்திரங்களைப் பிறரைப் புகழ்ந்து கூறும் மந்திரங்களாக மாற்றும் முகத்தால் அப்பெருமானை இகழ்ந்து, தாங்கள் நலம் பெற நினைத்து மிகச் சொல்லிய மந்திரங்கள், அவரையே கொல்கின்ற மரண மந்திரங்களாய் விட்டன.
=============================================
பாடல் எண் : 8
நல்லார் நவகண்டம் ஒன்பதும் இன்புறப்
பல்லார் அமரர் பரிந்தருள் செய்கென
வில்லார் வரையை விளங்கெரி கோத்தனன்
பொல்லா அசுரர்கள் பொன்றும் படிக்கே.

பொழிப்புரை : நல்லோர்கள், நவகண்டமாகிய ஒன்பது கூறுபட்ட இடங்களிலும் துன்பம் நீங்கி இன்புற்று வாழ்தற் பொருட்டுத் தேவர் பலரும், `எமக்கு விரைந்து அருள்செய்க` என வேண்ட, மலையை வில்லாகக் கொண்ட சிவபெருமானே, தீய அசுரர்கள் அழியும்படி ஒளிவிடுகின்ற நெருப்பாகிய அம்பைத் தொடுத்தான்.
=============================================
பாடல் எண் : 9
நெளிந்தார் கலங்கினும் நீகலங் காதே
அளிந்தாங் கடைவதெம் ஆதிப் பிரானை
விளிந்தா னதுதக்கன் வேள்வியை வீயச்
சுளிந்தாங் கருள்செய்த தூய்மொழி யாளே.

பொழிப்புரை : சிவபெருமானை இகழ்ந்தமையால் அப்பொழுதே செத்தவனாகிய தக்கனது வேள்வியை அழியுமாறு வைதும், பின்னர் அழிந்த அனைவரையும் மீள எழுமாறு வாழ்த்தியும் அருளிச் செய்த வாய்மையை உடைய எங்கள் உமாதேவியே, யாவர் தங்கள் மனத் திட்பத்தை இழந்து நிலைகலங்கிப் பிறரைச் சார்ந்தபோதிலும், நீ நிலை கலங்காமலே நின்று அன்போடு அணைவது எங்கள் சிவபெருமானையே யன்றோ!


Offline Anu

இரண்டாம் தந்திரம்–பதிகம் எண்: 5. பிரளயம்

(பாடல்கள்-05)

பாடல் எண் : 1

கருவரை மூடிக் கலந்தெழும் வெள்ளத்
திருவருங் கோவென் றிகல இறைவன்
ஒருவனும் நீருற ஓங்கொளி யாகி
அருவரை யாய்நின் றருள்புரிந் தானே.

பொழிப்புரை :கரிய மலைகள் பலவற்றையும் உள்ளடக்கிக் கொண்டு மேல் எழுந்து பரந்த பிரளய வெள்ளத்திடையே மால், அயன் இருவரும் தாமே தலைவர் எனத் தனித்தனிக் கூறிப் போர்புரியச் சிவபெருமான் ஒருவனும் அந்நீர் வறப்பச் செய்து அவர்க்கிடையே ஓங்கிய ஒளியாகிய, அணுகுதற்கு அரிய நெருப்பு மலையாய் நின்று, பின்னர் அவர்கட்கு அருள் செய்தான்.

=============================================

பாடல் எண் : 2

அலைகடல் ஊடறுத் தண்டத்து வானோர்
தலைவன் எனும்பெயர் தான்தலை மேற்கொண்
டுலகார் அழற்கண் டுள்விழா தோடி
அலைவாயில் வீழாமல் அஞ்சலென் றானே.



பொழிப்புரை :சிவபெருமான் பிரளய வெள்ளத்தில் மேற்கூறியவாறு அனற்பிழம்பாய்த் தோன்றிய பொழுது அலைகின்ற கடலை ஊடறுத்துக் கீழ்ப்போகியும், வானத்தை ஊடறுத்து மேற்போகியும் அடி தலை தெரியாவகை நின்று, `தேவர்க்கும் முதல்வன்` என்னும் சிறப்பினைத் தான் உடையவனாய் இருத்தலின், உலகம் தான் கொண்ட தழல் வடிவைக் கண்டு வெருண்டு அதனுள் வீழ்ந்து ஒடுங்காதவாறும், அதனினின்றும் சேய்மையில் ஓடிப் பிரளய வெள்ளத்தில் வீழ்ந்து அழியாதவாறும் அவற்றிற்கு, ``அஞ்சல்`` என்று அபயந்தந்து காத்தருளினான்.

=============================================

பாடல் எண் : 3

தண்கடல் விட்ட தமரருந் தேவரும்
எண்கடல் சூழெம் பிரானென் றிறைஞ்சினர்
விண்கடல் செய்தவர் மேலெழுந் தப்புறங்
கண்கடல் செய்யுங் கருத்தறி யாரே.



பொழிப்புரை :தண்ணிய கடல் பொங்கி வந்து மலைகளை மூடிய நிலையின் நீங்கி அடங்கிற்று; எனவே, பிரளய வெள்ளம் வற்றிற்று. அதுபொழுது தேவர்கள், `ஏழ்கடலோடு பெரும்புறக் கடலும் தன்னைச் சூழ்ந்து நிற்கத் தான் ஓங்கிய அழலாய் நின்றவன் எங்கள் சிவபெருமானே` என அவனைப் பலவாற்றால் துதித்து வணங்கினர். அதன்பின்பு அவர்கள் விண்ணுலகத்தைக் கடல்போலப் பரக்க அமைத்துக்கொண்டு, அங்குச் சென்று குடி புகுந்தனர். அதன்பின்பு அவர்கள் தங்கள் சுவர்க்க இன்பத்தில் திளைக்கின்றனரேயன்றிச் சிவபெருமானை நினைந்து காதலாகிக் கசிந்து, கண்ணீரால் கடலை உண்டாக்கும் எண்ணமே இலராயினர்.

=============================================

பாடல் எண் : 4

சமைக்கவல் லானைச் சயம்புவென் றேத்தி
அமைக்கவல் லாரிவ் வுலகத்து ளாரே
திகைத்ததெண் ணீரிற் கடலொலி ஓசை
மிகைக்கொள அங்கி மிகாமைவைத் தானே.



பொழிப்புரை :சிவபெருமான் ஒளிப் பிழம்பாய்த் தோன்றிப் பிரம விட்டுணுக்களது மயக்கத்தை நீக்கித் தெளிவித்தபின், யாவரும் திசை தெரியாது திகைக்கும்படி எழுந்த பிரளய வெள்ளம் குறையச் செய்து, பின்பு கடல் ஒலிக்கின்ற ஓசை மிக, அதனைக் கேட்டு அக்கடல் அடங்கி என்றும் அளவுட்பட்டு நிற்குமாறு அதன் நடுவில் வடவைத் தீயை வைத்தான். இவ்வாறு ஒன்றோடு ஒன்று ஒத்தும், ஒவ்வாதும் நிற்கும் ஆற்றல்களை ஏற்குமாற்றாற் கூட்டி உலகம் நெறிப்பட்டு நடக்குமாறு ஆக்கிக் காத்து நடத்த வல்லவனும், அவ்வாறு தன்னை ஆக்குவார் ஒருவர் இன்றித் தானே என்றும் ஒருபெற்றியனாய் நிற்பவனும் ஆகிய அப்பெருமானை அத்தன்மையன் என்று அறிந்து துதித்து உளத்துள் இருத்த வல்லவர் இவ்வுலகத்து உளரோ! இல்லை.

=============================================

பாடல் எண் : 5

பண்பழி செய்வழி பாடுசென் றப்புறங்
கண்பழி யாத கமலத் திருக்கின்ற
நண்பழி யாளனை நாடிச்சென் றச்சிரம்
விண்பழி யாத விருத்திகொண் டானே.



பொழிப்புரை :சிவபெருமான் ஒளிவடிவாய்த் தோன்றித் தனது தலைமையைப் பலவாற்றானும் விளக்கியருளிய பொழுது, வேதங்கள் அவனை நல்ல இசைகளால் துதித்தன. அப்பால் அப்பெருமான் தாழ்வின்றிச் சிறந்து நிற்கின்ற இடமாகிய தாமரைப் பொகுட்டில் வீற்றிருக்கின்ற பிரமன் முன்னே செல்ல, அவன், `மகனே` என விளித்து இகழ்ந்ததனால் உண்டாகிய குற்றத்தை உடையவனாயினமை பற்றி அவன் மேற் சென்று கிள்ளிக்கொண்ட அவனது ஐந்து தலைகளில் தன்னை இகழ்ந்த நடுத்தலையில் ஏனைத் தேவரும் அவனைப் போலத் தன்னைப் பழித்துக் குற்றத்திற்கு ஆளாகாதவாறு அவரிடத்தெல்லாம் உஞ்ச விருத்தியை (பிச்சை ஏற்றலை) மேற்கொண்டான்.

=============================================

இரண்டாம் தந்திரம்-பதிகம் எண்:6. சக்கரப்பேறு(பாடல்கள்-04)



பாடல் எண் : 1

மால்போ தகனென்னும் வண்மைக்கிங் காங்காரங்
கால்போதங் கையினோ டந்தரச் சக்கரம்
மேல்போக வெள்ளி மலைஅம ரர்பதி
பார்போக மேழும் படைத்துடை யானே.



பொழிப்புரை :`திருமால் அறத்தை அறிவுறுத்தும் ஆசிரியன்` என்னும் சிறப்பு நிலைபெறுதற் பொருட்டு, இவ்வுலகில் கீழோர் தம் அகங்காரத்தை வெளிப்படச் செய்யும்பொழுது, அவனது கையோடே சக்கரப் படையும் அகங்கரித்தவர் மேற்சென்று அழித்து நிலை நிறுத்தும்படி, திருக்கயிலையில் வீற்றிருக்கின்ற தேவர் தலைவனாகிய சிவபெருமான் ஏழுலகத்து இன்பத்தையும் படைத்துள்ளான்.

=============================================

பாடல் எண் : 2

சக்கரம் பெற்றுநல் தாமோ தரன்தானும்
சக்கரந் தன்னைத் தரிக்கவொண் ணாமையால்
மிக்கரன் தன்னை விருப்புடன் அற்சிக்கத்
தக்கநற் சத்தியைத் தான்கூறு செய்ததே.



பொழிப்புரை :சக்கரத்தைப்பெற்ற திருமால் பின்பு அதனைத் தாங்கும் ஆற்றல் இல்லாமையால் மீளவும் சிவபெருமானை அன்புடன் வழிபட, அவர்க்கு அதனைத் தருதற்பொருட்டு அப்பெருமான் தனது சத்தியைத் கூறிட்டமை வியக்கத்தக்கது.

=============================================

பாடல் எண் : 3

கூறது வாகக் குறித்தநற் சக்கரம்
கூறது செய்து கொடுத்தனன் மாலுக்குக்
கூறது செய்து கொடுத்தனன் சத்திக்குக்
கூறது செய்து தரித்தனன் கோலமே.



பொழிப்புரை :சிவபெருமான், சலந்தராசுரன் உடலைப் பிளக்கக் கருதி உண்டாக்கிய சக்கரத்தைத் திருமாலுக்கு உரியதாகக் கொடுத்தான்; அதன்மேலும், அச் சக்கரத்தைத் தாங்குதற் பொருட்டுத் தனது சத்தியைக் கூறிட்டு அவனுக்குக் கொடுத்தான். அச் சத்திக்குத் தனது திருமேனியையே கூறிட்டுக் கொடுத்தான்.

=============================================

பாடல் எண் : 4

தக்கன்றன் வேள்வி தகர்த்தநல் வீரர்பால்
தக்கன்றன் வேள்வியில் தாமோ தரன்தானுஞ்
சக்கரந் தன்னைச் சசிமுடி மேல்விட
வக்கி உமிழ்ந்தது வாயுக் கிரத்திலே.



பொழிப்புரை :தக்கன் வேள்வியை அழித்த சிவகுமாரராகிய வீரபத்திரர்மேல் திருமால் போருக்குச் சென்று சந்திரனை அணிந்த அவரது தலையை அறுக்க என்று, முன்பு தான் சிவபெருமானிடம் பெற்ற சக்கரத்தை ஏவ, அஃது அவர் தமது வாயாற் செய்த உங்காரத்தாலே நாணி வலியிழந்தது.


=============================================

இரண்டாம் தந்திரம்-பதிகம் எண்:7. எலும்பும் கபாலமும்(பாடல்கள்-01)

பாடல் எண் : 1

எலும்புங் கபாலமும் ஏந்தி எழுந்த
வலம்பன் மணிமுடி வானவ ராதி
எலும்புங் கபாலமும் ஏந்தில னாகில்
எலும்புங் கபாலமும் இற்றுமண் ணாமே.

பொழிப்புரை :இறந்தாரது எலும்புகள் பலவற்றையும், தலைகள் பலவற்றையும் தாங்கி நிற்பவனாகிய சிவபெருமான், அவ்வாறு காட்சியளிக்கின்ற வெற்றிப்பாடு, அவன் தேவர் பலர்க்கும் முதல்வனாதலை விளக்கும். அதுவன்றியும், அவன் அவற்றைத் தாங்கா தொழிவனாயின், அவை உலகில் நிலைபெறாது அழிந்தொழியும்.


Offline Anu

இரண்டாம் தந்திரம் - 8. அடிமுடி தேடல்

(பாடல்கள்-10)

பாடல் எண் : 1
பிரமனும் மாலும் பிரானேநான் என்னப்
பிரமன்மால் தங்கள்தம் பேதைமை யாலே
பரமன் அனலாய்ப் பரந்துமுன் நிற்க
அரனடி தேடி அரற்றிநின் றாரே.

பொழிப்புரை :பிரமனும், திருமாலும் `நானே கடவுள், நானே கடவுள்` என்று சொல்லிப் போர் புரிய, அவர்களது பேதைமையை நீக்குதற் பொருட்டுச் சிவபெருமான் அனற் பிழம்பாய் ஒளிவீசி நிற்க, அவ்விருவரும் அவனது திருவடியைத் தேடிக் காணாமல் புலம்பினர்.
=============================================
பாடல் எண் : 2
அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்
படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி
அடிகண் டிலேன்என் றச்சுதன் சொல்ல
முடிகண்டேன் என்றயன் பொய்மொழிந் தானே.

பொழிப்புரை :மாலும் பிரமனும் முறையே சிவசோதியின் அடியையும், முடியையும் காண முயன்று அவற்றின் உருவத்தைக் காணமாட்டாதவராய் மீண்டும் முன்பு இருந்த இடத்தில் வந்து கூடிய பின்பு, திருமால், `நான் அடியைக் காணவில்லை` என்று உண்மையைச் சொல்ல, பிரமன், `நான் முடியைக் கண்டேன்` என்று பொய் சொன்னான்.
=============================================
பாடல் எண் : 3
ஆனே ழுலகுற நின்றஎம் அண்ணலுந்
தானே ழுலகில் தழற்பிழம் பாய்நிற்கும்
வானே ழுலகுறும் மாமணி கண்டனை
யானே அறிந்தேன் அவன்ஆண்மை யாலே.

பொழிப்புரை :விரிந்த பரந்த அனைத்துலகிலும் நுண்ணியனாய் நிறைந்து நிற்கின்ற சிவபெருமான், பிரம விட்டுணுக்களது போர் காரணமாக அவ்விடங்களிலெல்லாம் பெரிய அனற் பிழம்பாய் நின்றருளினான். நின்றும் அவனை அவ்விடங்களில் ஓரிடத்தும் ஒருவரும் கண்டிலர். ஆயினும், நான் அவனை எல்லா இடத்திலும் காண்கின்றேன்; அது நான் அவனுக்கு ஆட்செய்கின்ற முறைமையாலாம்.
=============================================
பாடல் எண் : 4
ஊனாய் உயிராய் உணர்வங்கி யாய்முன்னஞ்
சேணாய்வா னோங்குந் திருவுரு வேஅண்டத்
தாணுவும் ஞாயிறுந் தண்மதி யுங்கடந்
தாண்முழு தண்டமு மாகிநின் றானே.

பொழிப்புரை :இயல்பாகவே பல உடம்புகளாயும், அவ்வுடம்பில் உள்ள உயிர்களாயும், அவ்வுயிர்களினுள் அறிவொளியாயும் எல்லையற்ற தனது பேராற்றலால் நிறைந்து நின்ற வடிவமே, பிரம விட்டுணுக்களின்முன் அண்டத்தைத் தாங்குகின்ற தூண்போல்வதாய் நீண்டு, சூரியசந்திர மண்டலங்களைக் கடந்து, தன்னால் ஆளப் படுகின்ற அண்டம் முழுதும் ஊடுருவ நின்றான் அம் மணிகண்டன்.
=============================================
பாடல் எண் : 5
நின்றான் நிலமுழு தண்டத்துள் நீளியன்
அன்றே அவன்வடி வஞ்சின ராய்ந்தது
சென்றார் இருவர் திருமுடி மேற்செல
நன்றாங் கழலடி நாடவொண் ணாதே.

பொழிப்புரை :சிவபெருமான், மண்ணும், விண்ணும் ஆகிய உலகம் முழுதும் நின்றும் வளர்ந்தும் நிற்பவன் அல்லனோ! அதனால், அவனது திருவுருவத்தைக் கண்டு பிரம விட்டுணுக்கள் இருவரும் அஞ்சுதலும், அறியாமையால் அதனை அளந்தறியச் சென்றவழி எய்த்து வருந்துதலும் இயல்பே.
=============================================
பாடல் எண் : 6
சேவடி ஏத்துஞ் செறிவுடை வானவர்
மூவடி தாவென் றவனும் முனிவரும்
பாவடி யாலே பதஞ்செய் பிரமனும்
தாவடி யிட்டுத் தலைப்பெய்யு மாறே.

பொழிப்புரை :சிவபெருமானிடம் எஞ்ஞான்றும் குறையிரத்தற்குக் கூடுபவர்களாகிய தேவர்களுட் சிலராகிய, மாவலியை நேரே பொருது வெல்லமாட்டாது வஞ்சனையால் மூவடி மண் இரந்து வென்ற மாயோனும், தானே அறிந்து படைக்கமாட்டாது வேதப் பாக்களை உருச்செய்து அறிந்து உலகங்களைப் படைக்கின்ற பிரமனும், அவருட் சிலரை நோக்கித் தவம்செய்து சிலவற்றைப் பெறும் முனிவர்களும் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை எதிரிட்டுக் காண வல்லராவரோ!
=============================================
பாடல் எண் : 7
தானக் கமலத் திருந்த சதுமுகன்
மானக் கருங் கடல் வாழித் தலைவனும்
ஊனத்தின் உள்ளே உயிர்போல் உணர்கின்ற
தானப் பெரும்பொரு ளண்மைய தாமே.

பொழிப்புரை :தாமரை மலரை இடமாகக் கொண்டு இருக்கின்ற பிரமனும், பெரிய கடலில் நீங்காது, கிடக்கின்ற திருமாலும் எஞ்ஞான்றும் தங்கள் உடம்பினுள்ளே உள்ள உயிர் போலக் கருதி உள்கத்தக்க பெரும் பொருளாகிய சிவபெருமான், அவர்தம் புறக்கண்ணிற்கு அகப்படுவானோ!
=============================================
பாடல் எண் : 8
ஆலிங் கனஞ்செய் தெழுந்த பரஞ்சுடர்
மேலிங்ஙன் வைத்ததோர் மெய்ந்நெறி முன்னங்கண்
டோலிங் கனஞ்செய் துலகம் வலம்வருங்
கோலிங் கமைஞ்சருள் கூடலு மாமே.

பொழிப்புரை :அண்டங்கள் பலவற்றையும் பொருந்தி நின்ற சிவசோதி, அதன்பின் இவ்வாறு பிரம விட்டுணுக்களால் அடிமுடி அறியப்படாத நிலைமையைக் காட்டி நிலைபெறச் செய்த மேலான சிவநெறியை முன்னர் அறிந்து, உலகம் முழுதும் ஒருங்கே வழி படுகின்ற இலிங்க வடிவை வணங்கித் தம் குறையை எடுத்துக்கூறி முறையிட்டு, மக்கள் இவ்வுலகப் பயனையேயன்றி அவன் அருளைப் பெறுதலாகிய ஞானத்தையும் அடையலாம்.
=============================================
பாடல் எண் : 9
வாள்கொடுத் தானை வழிபட்ட தேவர்கள்
ஆள்கொடுத் தெம்போல் அரனை அறிகிலர்
கோள்கொடுத் தின்பங் கொடுத்துக்கோ ளாகத்தன்
தாள்கொடுத் தானடி சாரகி லாரே.
 

பொழிப்புரை :சிவபெருமான் திருமால் முதலிய தேவர்க்கும், இராவணன் முதலிய அரக்கர்க்கும் படைக்கலங்களை அளித் தருளிய செய்தியை அறிந்து அவ்வாறே தாமும் பலவற்றைப் பெற விரும்பி அவனை வழிபடுகின்ற தேவர்கள், எம்மைப் போல அவனுக்குத் தம்மை ஆளாகக் கொடுத்து அன்பினால் அவனை நினைப்பதில்லை. அதனால், தன் அடியார்களுக்கு முதலில் ஞானத்தைக் கொடுத்து, பின் பேரின்பத்தைத் தந்து, என்றும் புகலிடமாகத் தனது திருவடியை வழங்குகின்ற அவனது திருவடியை அத் தேவர்கள் காண்பதில்லை.
=============================================
பாடல் எண் : 10
ஊழி வலஞ்செய்தங் கோரும் ஒருவற்கு
வாழி சதுமுகன் வந்து வெளிப்படும்
வீழித் தலைநீர் விதித்தது காவெனும்
ஊழிக் கதிரோன் ஒளியைவென் றானே.

பொழிப்புரை : பிரளய வெள்ளத்தில் ஆலிலைமேல் மிதந்து எங்கும் திரிந்து, `இனி என்ன செய்வது` என்று ஆராய்கின்ற திருமாலுக்கு மகனாக நான்முகன் தோன்றுவான். அதன்பின், ஊழிக் காலத்தில் எரிகின்ற சூரியனது ஒளியையும் வென்ற திருமேனி யனாகிய சிவபெருமான், `அழிந்த இவ்வுலகத்தை நீவிர் மீளப் படைத்துக் காமின்` என்று பணித்தருளுவான். அவ்வாற்றால் பின்பு படைப்பு முதலிய தொழில்கள் நிகழும்.


Offline Anu

இரண்டாம் தந்திரம்-பதிகஎண்:9. சருவ சிருட்டி

(பாடல்கள்:01-15/30)

பாகம்-I

பாடல் எண் : 1
ஆதியோ டந்தம் இலாத பராபரம்
போதம தாகப் புணரும் பராபரை
சோதி யதனிற் பரந்தோன்றத் தோன்றுமாம்
தீதில் பரைஅதன் பால்திகழ் நாதமே.

பொழிப்புரை :இம்மந்திரத்தின் பொருளைக்கீழ்வரும் குறிப்புக்கள் பற்றி உரைத்துக் கொள்க.
குறிப்புரை : முதற்பொருளாகிய கடவுட்பொருள், பொருளால் ஒன்றேயாயினும், `சிவம், சத்தி` எனத் தன்மையால் இரண்டாய் இருக்கும். அஃது யாதொரு செயலையும் மேற்கொள்ளாது இயல்பாய் இருக்கும் நிலையில் `ஒன்றைத் தொடங்குவது` என்பதும், `முடிப்பது` என்பதும் இல்லையாகையால், அந்நிலை ஆதி அந்தம் இல்லாததாம். அந்நிலையில் நிற்கும் கடவுட்பொருளை, `பராபர சிவம்` என்னும் பெயரால் குறிப்பர்.
 
`பராத்பரம்` என்பது மருவி, `பராபரம்` என வழங்கும். பராத்பரம் - மேலானவற்றுக்கும் மேலானது; (தனக்குமேல் ஒன்று இல்லாதது) சிவம் பராபரமாய் நிற்கும்பொழுது அதன் சத்தி `பராபரை` எனப்படும். பராபரமாய் நிற்பதே சிவத்தின் சொரூபநிலை; அஃதாவது அதன் இயற்கைத் தன்மை. பராபரையாய் நிற்பதே சத்தியின் சொரூப நிலை; இயற்கைத் தன்மை. `பராபரை` என்னும் இயற்கை நிலையில் சத்தி, அறிவேயாய் (ஞானமேயாய்) நிற்கும். ஆகவே, `ஞானமே சத்தியின் சொரூபம்` என்பது விளங்கும். இதனையே சிவஞானசித்தி, (சூ. 1.62) ``சத்தியின் வடிவே தென்னில் தடையிலா ஞானமாகும்`` என்றது. இதுவே இங்கு, ``போதம தாகிப் புணரும்`` எனப்பட்டது. போதம் - அறிவு; ஞானம்.
 
இவ்வாறு இயற்கை நிலையில் உள்ள பராபர சிவம் `உயிர்களை உய்விக்க வேண்டும்` என்னும் விருப்பத்தால் உலகத்தை உண்டாக்க நினைக்கும். அந்நிலை உலகத் தோற்றத்திற்குத் தொடக்க நிலையாதலால், அந்நிலையில் நிற்கும் சிவம் `ஆதி சிவன்` என்றும், அதன் சத்தி `ஆதி சத்தி` என்றும் சொல்லப்படும். ஆதி சிவனே `பரசிவன்` என்னும் பெயர்க்கும், ஆதி சத்தியே `பராசத்தி` என்னும் பெயர்க்கும் உரியவராதல் இந்நூலில் பெறப்படுவது. சிவஞானசித்தி முதலிய சாத்திரங்கள் இங்குக் கூறிய பராபர சிவனையே, `பரசிவன்` என்றும், பராபரை என்னும் சத்தியையே `பராசத்தி` என்றும் கூறி, ஆதி சிவனையும், ஆதி சத்தியையும் அப் பெயராலேயே கூறும். இந்நிலையில் சிவம் சத்திகள் இவ்வாறு, `ஆதி சிவன், ஆதி சத்தி` எனப்படுதலால், பராபர சிவனும், பராபர சத்தியும் முறையே அநாதி சிவன், அநாதி சத்தியாதல் விளங்கும். இவ்வாறாகவே ``சோதியதனில் பரம் தோன்றத் தீதில் பரை தோன்றும்`` என்றார். ``சோதி`` என்றது பராபர சிவத்தை. வாளா, ``தோன்றும்`` என்றாராயினும், `பராபர சத்தியினின்றும் தோன்றும்` என்பது ஆற்றலால் இனிது விளங்கிற்று. எனவே, இத்தோற்ற முறை பின்வருமாறு அமைதல் அறியப்படும்.
 
பராபரசிவம் (அநாதிசிவன்) பராபரசத்தி (அநாதிசத்தி):  ß ß பரசிவம் (ஆதிசிவன்) பராசத்தி (ஆதிசத்தி) ஆதி சத்தியே, `திரோதான சத்தி, திரோதாயி` என்றெல்லாம் சொல்லப்படும். அளவிலா ஆற்றலுடைய கடவுட் பொருள் உலகத்தை ஆக்குதற்கு அதன் ஆற்றலுள் ஒருசிறுகூறே போதும் ஆதலின், `பராபர சிவத்தில் ஆயிரத்தில் ஒருகூறே பரசிவன்` (ஆதிசிவன்) என்றும் `பராபர சத்தியில் ஆயிரத்தில் ஒருகூறே பராசத்தி` (ஆதிசத்தி) என்றும் ஆகமங்கள் அளவிட்டுரைக்கும். `பரசிவம், பராசத்தி` (ஆதிசிவன், ஆதிசத்தி) என்னும் வேறுபாடுகள் முதல்வன் தன்னில்தான் கொண்டுள்ள வேறுபாடுகளேயன்றி மற்றொரு பொருளினால் கொள்ளும் வேறுபாடுகள் அல்ல. பராபரசிவன் ஆதி சிவனாய் நின்று உலகைச் செயற் படுத்துமிடத்துத் தனது ஆற்றலாகிய ஆதி சத்தியாலே எல்லா வற்றையும் செய்தலின், அச்சத்தி செயற்படுமாற்றிற்கு ஏற்பவே தான் அதனோடு கூடியிருப்பான்.
 
இயற்கை நிலையில் ஞானமாத்திரமாய் இருக்கும் சத்தி, பின் உலகைத் தொழிற்படுத்த விரும்பும் நிலையில் அவ்விருப்பமாகிய இச்சையும், அத்தொழில் முறையை அறியும் ஞானமும், அறிந்தவாறே செய்யும் கிரியையும் என மூன்றாகி நிற்கும். ஆகவே `இச்சா சத்தி, ஞானசத்தி, கிரியாசத்தி` என ஆதி சத்தி ஒன்றே மூன்றாகும். இம்மூன்று சத்திகளுள் இச்சா சத்தி, ஏறுதல், குறைதல், ஒடுங்கல் என்பன இன்றி, எப்பொழுதும் ஒரு நிலையிலே நிற்கும். ஏனைய ஞானம் கிரியை இரண்டும் `ஏறுதல், குறைதல், ஒடுங்கல்` என்னும் வேறுபாடுகளை உடையனவாகும். அவ்விடத்து ஆதி சிவன் தனது ஆதிசத்தியின் வழி முதற்கண் எழுத்தோசையைத் தோற்றுவிக்க விரும்பி அதனைத் தோற்றுவிக்குமாற்றை ஞான சத்தியால் பொதுவாக அறிவான். அதனால், அவனே அந்நிலையில், `நாதம்` எனப் பெயர் பெறுவான். இறைவனை, `நாதன்` எனக் கூறுதல் இதுபற்றியே என்பர். இவ்வாறு `நாதம்` என்னும் நிலையில் நின்ற சிவன் எழுத்தோசையின் பொது நிலையாகிய நாதத்தைத் தோற்றுவித்தற்பொருட்டு அதன் தோற்றத்திற்கு நிலைக்களமாகிய நாத தத்துவத்தைச் சுத்தமாயை யினின்றும் தோற்றுவித்து, அதன்கண் நிற்பான். நாதனாகிய சிவன் ஆதி சத்தியின் வழித் தோன்றுதலின், ``அதன்பால் திகழ் நாதம் தோன்றும்`` என்றார். `தோன்றும்` என்பது சொல்லெச்சம். இதனால் இத்தோற்றம் பின்வருமாறு அமைதல் அறியலாம்.
பராபரசிவன் (அநாதிசிவன்) பராபரசத்தி (அநாதிசத்தி)
ß ß ஆதிசிவன் ஆதிசத்தி சுத்த மாயை
ß ß நாதம் நாத தத்துவம்.
`பராபரம் பராபரையைப் புணரும்` எனவும் `பராபரை பராபரத்தைப் புணரும்` எனவும் இருவகையாகவும் இயைத்துக் கொள்ளவைத்தார். அவை இருவேறு பொருள்கள் அல்ல என்பது விளங்குதற்கு.
இதனால், படைப்புத் தொடக்கம் கூறப்பட்டது.
=============================================
பாடல் எண் : 2
நாதத்தில் விந்துவும் நாதவிந் துக்களில்
தீதற் றகம்வந்த சிவன்சத்தி என்னவே
பேதித்து ஞானங் கிரியை பிறத்தலால்
வாதித்த இச்சையில் வந்தெழும் விந்துவே.

பொழிப்புரை :இதன் பொருளையும் கீழ்வரும் குறிப்புரை பற்றி உரைத்துக்கொள்க.
குறிப்புரை : மேற்கூறிய `நாதன்` என்னும் சிவன், பொதுவாய் நாத மாத்திரமாய்த் தோன்றிய எழுத்தோசையைச் சிறப்பாகத் தோற்றுவிக்க விரும்பிக் கிரியா சத்தியால் பொதுவாக முயல்வான். அவ்வாறு அவன் பால் எழும் முயற்சியே `விந்து` என்னும் சத்தியாவாள். அவள், மேற் குறித்த நாத தத்துவத்திலிருந்து `விந்து` என்னும் தத்துவத்தைத் தோற்று வித்து, அதன்கண் நிற்பாள். அதனால் ``நாதத்தில் விந்துவும்`` என்றார். பின்னர் ``நாத விந்துக்களின்`` என்றதில் இன் சாரியையின்பின் `கீழ்` எனப் பொருள் தரும் கண்ணுருபு விரிக்கப்படும்.
 
``ஞானம், கிரியை`` என்றது சிவன் சத்திகளுக்கு நிரல் நிறை. ``சிவன் சத்தி என்ன`` என்றது, `சிவன் என்றும், சத்தி என்றும் இருவர் தோன்றுவர்` என்றவாறு. `பேதித்து ஞானம் கிரியை பிறத்தலால்` என்றது, `ஆதி சத்தி தானே, ஞானம், கிரியை என்னும் வேறு பாட்டோடு தோன்றுதலால்` என்றவாறு. எனவே, `முதல்வன் ஞான சத்தியால் சிறப்பாக அறியும் நிலையிலே சிவன் என நிற்பான்` என்பதும், `அவன் கிரியாசத்தியால் சிறப்பாக முயலும் நிலையே சத்தி என்னும் நிலை` என்பதும் விளங்கும். `சிவன்` எனப் பெயர் பெற்று நின்ற சிவன் மேற்கூறிய விந்து தத்துவத்திலிருந்து `சிவம்` என்னும் தத்துவத்தைத் தோற்றுவித்து அதனை இடமாகக் கொண்டு நிற்பான். `சத்தி` எனப் பெயர்பெற்று நின்ற சத்தி, `சிவம்` என்னும் தத்துவத்திலிருந்து `சத்தி` என்னும் தத்துவத்தைத் தோற்றுவித்து அதனை இடமாகக் கொண்டு நிற்பாள். இவ்வாற்றால் இத்தோற்றம் பின்வருமாறு அமையும்.
ஆதிசத்தி சுத்தமாயை
ß ß (1) நாதன் நாதம்
ß ß (2) விந்து விந்து
ß ß (3) சிவன் சிவம்
ß ß (4) சத்தி சத்தி
இவற்றுள் சிவன் சத்திகட்கு உள்ள பெயர்களே, அவர்களால் தோற்று விக்கப்பட்டுத் தமக்கு இடமாகக் கொள்ளப்படுகின்ற தத்துவங்கட்கும் பெயராதல் விளங்கும்.
இங்கு இந்நாயனார் கூறிய இம்முறை சில ஆகமங்களுட் கூறியவாறாகும். வேறு சில ஆகமங்கள் இங்கு, `நாதம், விந்து` என்றவற்றை, `சிவம், சத்தி` என்றும், இங்கு, `சிவன், சத்தி` என்ற வற்றை, `நாதம் விந்து` என்றும் மாற்றிக் கூறும். அம்முறை பற்றியே சிவஞானசித்தி (சூ. 2-74),
``சிவம் சத்தி நாதம் விந்து ... ... ... ...
ஒன்றின் ஒன்றாய்ப் பவந்தரும்``

என்று கூறிற்று. எவ்வாறாயினும், `இந்நான்கும் முதல்வனது அருவத்திருமேனிகள்` என்பதில் மாறுபாடில்லை. இனி முன் இரண்டு நிலைகளை முறையே `பரநாதம், பரவிந்து` என்றும், பின் இரண்டு நிலைகளை `அபரநாதம், அபரவிந்து` என்றும் கூறுதல் எல்லா ஆகமங் களுக்கும் ஒப்ப முடிந்தது.

``வாதித்த இச்சையில் வந்தெழும் விந்துவே`` என்றது `சிவம் சத்திகள் தம்மில் தாம் வேறுபட்ட விருப்பம் காரணமாகச் சுத்த மாயை வேறு வேறு நிலைகளாக விருத்திப்பட்டு நிற்கும்` என்றவாறு. இச்சையில் - இச்சையின்படி.

``விந்து`` (பிந்து) என்பது `சுத்தமாயை, அதன் ஒருவகை நிலை, அதனை இடமாகக் கொள்ளும் சத்தி` என்னும் மூன்றற்கும் பெயராகும். அவற்றுள் ஒன்றைக் கொள்ளவேண்டிய இடத்தில் மற்றொன்றைக் கொள்ளலாகாது. இவ்வாறே, `நாதம்` என்பதும், சிவனது நிலைகளில் ஒன்றற்கும், அவன் இடமாகக் கொள்ளுகின்ற தத்துவத்திற்கும் பெயராய் நிற்கும். நாயனார் சொற்சுருக்கம் கருதி ஏற்ற பெற்றியால் பொருள் கொள்ள ஓதினார். எனவே, முன் மந்திரத்தில் ``அதன் பால் திகழ் நாதமே`` என்றதற்கு நேர்பொருளாக, `ஆதி சத்தியினிடமாக நாதம் என்னும் சிவன் தோன்றுவன்` எனவும், ஒற்றுமைப் பொருளாக, `அச்சிவனால் நாத தத்துவம் தோன்றும்` எனவும் கொள்ளப்படும். அவ்வாறே இம் மந்திரத்தில் ``நாதத்தில் விந்துவும்`` என்றதற்கு, நேர் பொருளாக, `நாதம் என்னும் சிவனிடத்து விந்து என்னும் சத்தி தோன்றுவாள்` எனவும், ஒற்றுமைப் பொருளாக, `அவளால் நாத தத்துவத்திலிருந்து விந்து என்னும் தத்துவம் தோன்றும்` எனவும், ``நாத விந்துக்களில் சிவன், சத்தி தோன்றும்`` என்றதற்கு நேர்பொருளாக, `நாத விந்துக்களின் கீழ் விந்து` என்னும் சத்தியினின்றும் சிவன் என்னும் சிவன் தோன்றுவான்; அவனிட மிருந்து சத்தி என்னும் சத்தி தோன்றுவாள்` எனவும், ஒற்றுமைப் பொருளாக, `விந்து என்னும் தத்துவத்திலிருந்து சிவம் என்னும் தத்துவமும், சிவம் என்னும் தத்துவத்திலிருந்து சத்தி என்னும் தத்துவ மும் தோன்றும்` எனவும் கொள்ளப்படும் என்க.

`மாயை` என்பது, குடத்திற்கு மண்போல, உலகமாகிய காரியப் பொருட்கு முதற்காரணமாவது, அது பல்வேறு வகைப்பட்ட சட (அறிவில்லாத) ஆற்றல்களின் தொகுதி (சத்திகளின் சமூகம்). அதனைச் சிவபெருமான் தனது இச்சைப்படி ஞானக் கிரியா சத்திகளால் தொழிற்படுத்துவான். அந்த மாயைதான் ஆணவ மலத்தின் தர தம நிலைகளோடு கலந்து தூய்மை இழந்தும் கலவாது தூய்மையாயும் இரு பகுதிப்பட்டு நிற்கும். தூய பகுதியே, `சுத்த மாயை` என்றும், தூய்மை இழந்த பகுதியே `அசுத்த மாயை` என்றும் சொல்லப்படும். `மாயை` என்றால் `மயக்குவது` எனக் கருதப் படுவதால், சுத்த மாயையை ஆகமங்கள் `மாயை` என்று குறிப்பதே இல்லை. `விந்து, குடிலை, குண்டலினி` என்றாற்போலவே குறிப் பிடும். மாயை எனக் கூறவேண்டின், `மகாமாயை` என்றும், `ஊர்த்துவ மாயை` என்றும் குறிப்பிடும். மகத்து - பெரிது. ஊர்த்துவம் - மேல் உள்ளது; வியாபகம் - எனவே, ``மாயை`` என வாளா கூறுமிடத் தெல்லாம், ``அசுத்த மாயை`` என்றே கொள்ளுதல் வேண்டும். சுத்த மாயையை ஆகமங்கள் ``விந்து`` எனக் கூறுதல்போல, அசுத்த மாயையை ``மோகினி`` என்று கூறும். மோகினி - மயக்கற் கருவி. எனவே, ``அசுத்த மாயையே மயக்கத்தைத் தரும்`` என்பதும், ``சுத்த மாயை மயக்கத்தைத் தராது`` என்பதும் அறிந்துகொள்ளப்படும். மயக்கமாவது, ஐம்புல இன்பங்களையே பெரியனவாகக் கருதி, அவற்றால் விளையும் துன்பங்களை அறியாதிருத்தல்.

இறைவன் உலகைத் தோற்றுவித்து நடத்தக் கருதும்பொழுது ``அருவம், அருவுருவம், உருவம்`` என்னும் மூவகைத் திரு மேனிகளைக் கொண்டு விளங்குவன். அங்ஙனம் விளங்குமிடத்துச் சுத்தமாயையினின்று தோற்றுவிக்கப்படுகின்ற தத்துவங்களையே தான் இடமாகக் கொண்டிருப்பன். அதனால் அத்தத்துவங்கள் அசுத்த மாயா தத்துவங்களைப் பெற்று நிற்கும் உயிர்களுக்கு உடம்பாய் வந்து பொருந்துதல் இல்லை.
 
முதற்காரணப்பொருள் காரியப்படும் முறைகள் பல. அவற்றுள் சிவாகமங்களிற் கொள்ளப்படுவன, `விருத்தி, பரிணாமம்` என்னும் இரண்டுமேயாம். அவற்றுள் விருத்தியாவது சுருங்கிக் கிடப்பது விரிவடைந்து நிற்றல். இதற்கு, `படம்குடிலானாற்போல` என உவமை கூறுவர். அஃதாவது கட்டிச்சுருட்டி ஒடுக்கி வைக்கப் பட்டிருந்த துணி, பின், விரித்து அமைக்கும்பொழுது பெரிய கூடாரமாகக் காட்சியளிப்பது போல்வதாம். பரிணாமமாவது ஒரு பொருள் மற்றொரு பொருளாய் உருமாறி நிற்பது. மண் குடமாவதும், பால் தயிராவதும் போல்வன இதற்கு உதாரணமாகும். பரிணாமமும், `முழுவதும் பரிணமித்தல், ஒரு கூற்றிற் பரிணமித்தல்` என இருவகைப் படும். பால் தயிராவது முழுவதும் பரிணமித்தல். வெண்ணெயில் புழுத் தோன்றுதல் ஒருகூற்றிற் பரிணமித்தல். இவ்விரண்டனுள்ளும் சிவாகமங்களில் கொள்ளப்படும் பரிணாமம் ஒரு கூற்றிற் பரிண மித்தலே. ``விருத்தி, பரிணாமம்`` இரண்டனுள், சுத்தமாயை காரியப் படுவதெல்லாம் விருத்தி முறையிலாம். அசுத்தமாயை காரியப் படுவதெல்லாம் பரிணாம முறையிலாம். `பரிணாமம் ஒரு கூற்றிற் பரிணமித்தலே` என்பதை மறக்கலாகாது.
 
முதல்வன் உலகத்தைக் கருதாது பராபர சத்தியோடு கூடிப் பராபரனாய்த் தன்னியல்பில் நிற்கும் நிலையே இயற்கை நிலை. அதுவே ``சொரூபம்`` எனப்படும். பிறவெல்லாம் உலகத்தைக் கருதி அதற்கேற்ப வேறுபட்டு நிற்கும் நிலையாதலின், அவையெல்லாம் செயற்கை நிலையே. இவை `தடத்தம்` எனப்படும். தடத்தம் - சார்பு பற்றியது. ``சொரூபம், உண்மை; தன்னிலை`` என்பன ஒருபொருட் சொற்கள். முதல்வனை, சொரூப நிலையில் வைத்துக் கூறும் பொழுது, ``சொரூப சிவன்`` என்றும், தடத்த நிலையில் வைத்துக் கூறும்பொழுது ``தடத்த சிவன்`` என்றும் கூறுவர். சொரூப சிவனுக்கு உருவம், பெயர், தொழில், ஒன்றும் இல்லை; தடத்த சிவனுக்கு அளவற்ற உருவம், பெயர் தொழில்கள் உள்ளன என்க. உருவம், பெயர், தொழில் ஒன்றும் இல்லாதவன், அவைகளை மேற்கொள்வது உயிர்களை உய்விக்கவேண்டும் என்னும் கருணையினாலேயாம். அதனால், அவ்வுருவம், பெயர், தொழில் யாவும் அருள்மயமானவையே; நம்மனோரது உருவம் முதலியன போல மாயாமயம் ஆனவை அல்ல; அருள் அவனது சத்தியே யாதலால், எல்லாம் வல்ல அச்சத்தியால் தனது இச்சைப் படியான உருவம் முதலியவற்றை அவன் தானே கொள்வன்; அதனால், அவைகளை அவனுக்குப் படைத்துத்தர வேறொருவர் வேண்டுவ தில்லை.  இதனால், படைப்புத் தொடர்ச்சி சிறிது வகுத்துக் கூறப் பட்டது.
=============================================
பாடல் எண் : 3
இல்லது சத்தி இடந்தனில் உண்டாகிக்
கல்லொளி போலக் கலந்துள் ளிருந்திடும்
வல்லது ஆக வழிசெய்த அப்பொருள்
சொல்லது சொல்லிடில் தூராதி தூரமே.

பொழிப்புரை :சிவத்தை விட்டுத் தனியாய் இல்லாத சத்தி, உலகம் செயற்படுதற்பொருட்டு இவ்வாறு அச்சிவத்தினிடமாகத் தோன்றி வேறு நிற்பது போலச் சொல்லப்பட்டாலும், சத்தி எஞ்ஞான்றும், மணியில் ஒளிபோலச் சிவத்தோடு ஒன்றி நிற்றலன்றித் தனித்து நிற்றல் இல்லை சிவமும் சத்தியைவிட்டுத் தனித்து நிற்றல் இல்லை. எனவே, `சிவபேதம், சத்திபேதம்` எனப் பிரித்து வழங்குதல், அறிவு, செயல் (ஞானம், கிரியை) என்னும் வேறுபாடுபற்றிக் கொள்ளப்படும் உருவு, பெயர், தொழில் என்பன பற்றியேயாம் என்பதாயிற்று. இவ்வாறு தன்னின் வேறாகாத சத்தியை அதுதானே எல்லாம் செய்யவல்லதாக வேறு நிறுத்தி உலகம் செயற்படுதற்கு வழியை உண்டாக்கிய அந்தப் பெரும்பொருளை (முதல்வனை) `இப்படியன், இந்நிறத்தன், இவ்வண்ணத்தன்` (தி. 6 ப.97 பா.10) என்று சொல்லாற் சொல்லி விளக்கப்புகின், அஃது ஒருவாற்றானும் இயலாது. ஏனெனில், சொற்கும், அப்பொருட்கும் இடையேயுள்ள வெளி மிக மிக நீண்டது.  இதனால், உலகிற்கு முதலாய் நிற்கும் சிவம் சத்திகள் இரு பொருளாகாமையும், மேல் சிவமும், சத்தியும் வேறுவேறுபோலக் கூறியது தடத்தநிலை பற்றி என்பது விளங்குதற் பொருட்டுச் சொரூப நிலையினது பெருமையும் கூறி, அவை மேற்கூறியவாற்றால் இருபொருள்போலும் என எழும் ஐயம் அகற்றப்பட்டது.  இதனால், உலகிற்கு முதலாய் நிற்கும் சிவம் சத்திகள் இரு பொருளாகாமையும், மேல் சிவமும், சத்தியும் வேறுவேறுபோலக் கூறியது தடத்தநிலை பற்றி என்பது விளங்குதற் பொருட்டுச் சொரூப நிலையினது பெருமையும் கூறி, அவை மேற்கூறியவாற்றால் இருபொருள்போலும் என எழும் ஐயம் அகற்றப்பட்டது.
=============================================
பாடல் எண் : 4
தூரத்திற் சோதி தொடர்ந்தொரு சத்தியாய்
ஆர்வத்து நாதம் அணைந்தொரு விந்துவாய்ப்
பாரச் சதாசிவம் பார்முதல் ஐந்துக்கும்
சார்வத்துச் சத்திஓர் சார்த்துமா னாமே.

பொழிப்புரை :சொல்லுக்கு எட்டாது நின்ற முதல்வனோடு நின்ற பராபரை அவனைத் தொடர்ந்து நின்றே `ஆதி` என்னும் பெயருடைய சத்தியாய்ப் பின்பு, நாதமாய் நின்ற அச்சிவனை அன்போடு கூடி, `விந்து` எனத் தோன்றி, பின் அச்சிவன்தானே சதாசிவன் முதலிய ஐவராய் நின்று நில முதலிய ஐந்து தத்துவங்கட்கும் தலைவனான பொழுது அவனது அந்நிலைகள் ஐந்தினும் உடன் கொள்ளப்படும் துணைவியாய் நிற்பாள்.
=============================================
பாடல் எண் : 5
மானின்கண் வானாகி வாயு வளர்ந்திடும்
கானின்கண் நீருங் கலந்து கடினமாய்த்
தேனின்கண் ஐந்துஞ் செறிந்தைந்து பூதமாய்ப்
பூவின்கண் நின்று பொருந்தும் புவனமே.

பொழிப்புரை :`மகத்து` எனப்படும் தத்துவத்தினின்றே ஐம் பூதங்கள் தோன்றுவனவாம். அவை தோன்றுமிடத்து, அவற்றின் சாரம் எனத் தக்கனவாய், `சூக்கும பூதம்` எனப் பெயர்பெற்று நிற்கும் தன்மாத்திரைகளினின்றே தோன்றும். அவை தோன்றுதல், `வானம், காற்று, தீ, நீர்,நிலம்` என்னும் முறையிலாம். தன்மாத்திரை ஒவ்வொன்றிலும் இருந்தே மேற்கூறிய வானம் முதலிய ஒவ்வொரு பூதமும் தோன்றும். பூதங்கட்கு அவ்வவற்றிற்குரிய தன் மாத்திரைகளே காரணமல்லது, ஒரு பூதத்திற்கு மற்றொரு பூதம் காரணம் அல்ல. அதனால் ஒரு பூதத்திலிருந்து மற்றொரு பூதம் தோன்றுவதில்லை. ஒரு தன்மாத்திரையிலிருந்து ஒரு பூதம் தோன்றியபின், மற்றொரு தன்மாத்திரை யிலிருந்து மற்றொரு பூதந்தோன்றும். இவ்வாறே ஐந்து தன்மாத்திரைகளினின்றும் ஐந்து மாபூதங்களும் மேற்கூறிய அம்முறையிலே தோன்றுவனவாம். அவற்றுள் இறுதியில் உள்ள நிலம் என்னும் பூதத்துட்பட்டனவே நாம் காணும் இவ்வுலகம்.
=============================================
பாடல் எண் : 6
புவனம் படைப்பார் ஒருவன் ஒருத்தி
புவனம் படைப்பார்க்குப் புத்திரர் ஐவர்
புவனம் படைப்பானும் பூமிசை யானாய்ப்
புவனம் படைப்பான்அப் புண்ணியத் தானே.

பொழிப்புரை :உலகத்தைப் படைப்பவர் ஒருவனும், (சிவனும்) ஒருத்தியும் (சத்தியும்). அவர்கட்குப் புதல்வர் ஐவர். (சதாசிவன், மகேசுவரன், உருத்திரன், மால், அயன். எனவே, அவரைக்கொண்டு, அருளல் முதலியவற்றைச் செய்விப்பவன் என்றதாம்) ஐவருள் படைப்புத் தொழிலுக்குத்தான் செய்த புண்ணியத்தால் உரிமை பெற்றவன் தாமரை மலரில் என்றும் இருந்து அத்தொழிலைச் செய்வான்.
=============================================
பாடல் எண் : 7
புண்ணியன் நந்தி பொருந்தி உலகெங்கும்
தண்ணிய மானை வளர்த்திடும் சத்தியுங்
கண்ணியல் பாகக் கலவி முழுதுமாய்
மண்ணியல் பாக மலர்ந்தெழும் பூவிலே.

பொழிப்புரை :  புண்ணியனாகிய சிவபெருமான் உலகெங்கும் நிறைந்து, எளிய உயிர்களை வளர்ப்பான். அவ்வாறே சத்தியும் சிவனது சங்கற்பரூபமாய் அவனோடு பூவில் மணம் போலப் பொருந்தி எங்கும் நின்று, அவன் கருதும் செயல்களை யெல்லாம் செய்வாள்.
=============================================
பாடல் எண் : 8
நீரகத் தின்பம் பிறக்கும் நெருப்பிடை
காய்கதிர்ச் சோதி பிறக்கும்அக் காற்றிடை
ஓர்வுடை நல்லுயிர் பாதம் ஒலிசத்தி
நீரிடை மண்ணின் நிலைப்பிறப் பாமே.

பொழிப்புரை :சத்தி நீரின்கண் `சுவை` என்னும் பண்பாயும், நெருப்பின்கண் எரிகின்ற `ஒளி` என்னும் பண்பாயும், காற்றின்கண் `ஊறு` என்னும் பண்பாயும், வானின்கண் `ஒலி` என்னும் பண்பாயும் விளங்குவாள். நீரால் சூழப்பட்ட `மண்` என்னும் பூதத்தில்தான் பல்வேறு நிலைகளையுடைய உயிர்கள் தோன்றி வளரும்.
=============================================
பாடல் எண் : 9
உண்டுல கேழும் உமிழ்ந்தான் உடனாகி
அண்டத் தமரர் தலைவனாம் ஆதியும்
கண்டச் சதுமுகக் காரணன் தன்னொடும்
பண்டிவ் வுலகம் படைக்கும் பொருளே.

பொழிப்புரை :உலகம் முழுதுடையான் சிவபெருமானே யாயினும், `அயன், அரி, அரன்` என்னும் மூவர்தாமும் உலகிற்குக் காரணக் கடவுளராய் நின்று ஓரோவொரு தொழிலைச் செய்தல், தத்தம் புண்ணிய மிகுதிக்கு ஏற்ப அப்பெருமானால் தரப்பெற்று நடத்துதல் பற்றியேயாம்.
=============================================
பாடல் எண் : 10
ஓங்கு பெருங்கடல் உள்ளுறு வானொடும்
பாங்கார் கயிலைப் பராபரன் தானும்
வீங்குங் கமல மலர்மிசை மேலயன்
ஆங்குயிர் வைக்கும் அதுவுணர்ந் தானே.

பொழிப்புரை :சிவபெருமான் தனது தொழில்களுள் ஒவ்வொன்றைத் திருமாலும், பிரமனும் ஏற்றுச் செய்யுமாறு திருவுளம் பற்றினான்.
=============================================
பாடல் எண் : 11
காரணன் அன்பிற் கலந்தெங்கும் நின்றவன்
நாரணன் என்றும் நடுவுட லாய்நிற்கும்
பாரணல் அன்பிற் பதஞ்செய்யும் நான்முகன்
ஆரண மாய்உல காயமர்ந் தானே.

பொழிப்புரை :சிவபெருமான் ஒருவனே தனது பேரருளால் எங்கும் நிறைந்து எல்லாவற்றையும் அறிந்தும், செய்தும் நிற்பவன். திருமால், ``தூல சரீரம், சூக்கும சரீரம், குண சரீரம், கஞ்சுக சரீரம், காரண சரீரம்`` என்னும் ஐவகை உடம்புள் முதல் உடம்பாகிய தூலசரீரம் முதல் நடுவுடம்பாகிய குண சரீரங்காறும் நிறைந்து நின்று செயலாற்றுவன். பிரமன், முதல் உடம்பாகிய தூல சரீரத்துள்ளும் பிருதிவி தத்துவத்தளவிலே நிறைந்து சென்று செயலாற்றுவன். பிரமனை, `வேத முதல்வன், உலகத் தந்தை` என்றெல்லாம் சொல்வது இந்த அளவில்தான்.
=============================================
பாடல் எண் : 12
பயன்எளி தாம்பரு மாமணி செய்ய
நயன்எளி தாகிய நம்பஒன் றுண்டு
வயன்ஒளி யாயிருந் தங்கே படைக்கும்
வயனெளி தாம்வய ணந்தெளிந் தேனே.
பொழிப்புரை :பிரம தேவன் அறிவுடையவனாய் இருந்து, படைத் தல் தொழிலை வெற்றிபெறச் செய்கின்ற காரணத்தை நான் நன்கு அறிந்தேன். அஃது என்றும் நிலையாயுள்ள இன்பம் எளிதாகக் கிடைத்தற் பொருட்டுத் தன்னை விரும்பினால், அப்பயனை அவ் வாறே எளிதில் தருகின்ற பருத்த இரத்தினம் ஒன்று அவனிடம் உள்ளது என்பதே.
=============================================
பாடல் எண் : 13
போக்கும் வரவும் புனிதன் அருள்புரிந்
தாக்கமுஞ் சிந்தைய வாகின்ற காலத்து
மேக்கு மிகநின்ற எட்டுத் திசையொடுந்
தாக்குங் கலக்குந் தயாபரன் தானே.

பொழிப்புரை :சிவபெருமான் உயிர்கள்மாட்டு அருள் கூர்தலால், உலகம் ஒடுங்கல், தோன்றல், நிற்றல் என்னும் செயல்கள் அவனது திருவுள்ளத்தில் எழுந்தபொழுது, எல்லையின்றிப் பரந்து நிற்கின்ற மாயையைத் தனது சிற்சத்தி வழியாகப் பொருந்தி அதனைக் காரியப்படுத்துபவன் அவனே.
=============================================
பாடல் எண் : 14
நின்றுயி ராக்கும் நிமலன்என் னாருயிர்
ஒன்றுயி ராக்கும் அளவை உடலுற
முன்றுய ராக்கும் உடற்குந் துணையதா
நன்றுயிர்ப் பானே நடுவுநின் றானே.

பொழிப்புரை :சிவன் முதல்வனாய் நின்று, உடலோடு கூடிய உயிர்களைப் படைக்கும்பொழுது, முதலில் அவைகட்கு வினைகளை வரையறுத்துக் கூட்டுவான். பின் அவற்றை அவை நுகர்தற்கு உடலுக்கும் துணையாய் நின்று அதனை இயக்குவான். ஏனெனில், அவன் அவரவர் செய்திக்குத் தக்க பயனை அவரவர்க்குத் தப்பாமல் ஊட்டுவித்து நிற்கும் நடுவுநிலைமையனாதலின்.
=============================================
பாடல் எண் : 15
ஆகின்ற தன்மைஇல் அக்கணி கொன்றையன்
வேகின்ற செம்பொனின் மேலணி மேனியன்
போகின்ற சீவன் புகுந்துட லாய்உளன்
ஆகின்ற தன்மைசெய் ஆண்டகை யானே.

பொழிப்புரை :பிறக்கும் தன்மை இல்லாத சிவபெருமான், உயிர் ஓர் உடலை எடுக்கின்ற காலத்து அதற்கு அதனைக் கொடுக்கின்ற தலைவனும், பின்பு அவ்வுயிர் அவ்வுடலை விட்டு நீங்குகின்ற காலத்தில் பின்னர்ச் சென்று புகும் மற்றோர் உடலையும் அதற்குக் கொடுத்து, அங்கும் அதற்குத் துணையாய் நிற்பவனுமாவன்.


Offline Anu

இரண்டாம் தந்திரம்-பதிகஎண்:9. சருவ சிருட்டி

(பாடல்கள்:16-30/30)

பாகம்-II

பாடல் எண் : 16
ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார்
இருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும்
பருவங்கள் தோறும் பயன்பல வான
திருவொன்றிற் செய்கை செகமுற்று மாமே.

பொழிப்புரை : ஒருவனும் ஒருத்தியுமான இருவர் (சிவனும், சத்தியும்) விளையாடலை மேற்கொண்டுள்ளார்கள். அவ் விளை யாடல் அவர்கட்குப் பொழுது போக்காகாது, எண்ணிலா உயிர்கட்கு எண்ணிலாப் பயனை விளைப்பது. அப்பயனும் உயிர்களின் பக்குவ நிலைதோறும் அதற்கேற்ப வேறு வேறாய் விளைவனவாம். உயிர்கள் வீடுபெறின், அவ்வொருவன் ஒருத்தியரது உலகத்தின் தொழிற்பாடு முற்றுப்பெறும்.
=============================================
பாடல் எண் : 17
புகுந்தறி வான்புவ னாபதி அண்ணல்
புகுந்தறி வான்புரி சக்கரத் தண்ணல்
புகுந்தறி வான்மலர் மேலுறை புத்தேள்
புகுந்தறி யும்முடிக் காகிநின் றாரே.

பொழிப்புரை : `உருத்திரன், மால், அயன்` என்னும் மூவரும் தம்தம் எல்லை யளவும் உயிர்க்குயிராய் நிறைந்து நின்று அங்குள்ள நிலைகளையெல்லாம் நன்குணர்வர். ஆயினும், அவரெல்லாம் எங்கும் அவ்வாறு நின்று உணரும் சிவபெருமானாகிய தலைவனுக்கு உரிய அடியரேயாவர்.
=============================================
பாடல் எண் : 18
ஆணவச் சத்தியுள் ஆம்அதில் ஐவருங்
காணியர் காரண ஈசர் கடைமுறை
பேணிய ஐந்தொழி லால்விந்து விற்பிறந்
தாணவம் நீங்கா தவரென லாகுமே.

பொழிப்புரை : ஆணவ மலத்தொடக்கினுள் அகப்பட்டு நிற்கின்ற அந்நிலையில், அசுத்த மாயை பிரகிருதி மாயைகளில் நிற்கின்ற அயன், மால், உருத்திரன், சீகண்டர், அனந்தர் என்னும் ஐவரும் பிறரால் கண்காணிக்கப்படும் காரியக் கடவுளரே. இனிக் காரணக் கடவுளராவார், மேற்சொல்லிய அந்நிலைக்குப் பின்னர் தாம் முன்னர் மேற்கொண்டிருந்த அத்தொழில்களாலே பக்குவம் முதிரப்பெற்று ஆணவம் நீங்கி அதன் வாதனை மாத்திரம் உடையராய்ச் சுத்த மாயையில் உடம்பு முதலியவற்றைப் பெற்று நிற்பவர்களே.
=============================================
பாடல் எண் : 19
உற்றமுப் பாலொன்று மாயாள் உதயமாம்
மற்றைய மூன்றும்மா மாயோ தயம்விந்து
பெற்றவந் நாதம் பரையிற் பிறத்தலால்
துற்ற பரசிவன் தொல்விளை யாட்டிதே.

பொழிப்புரை : நிலமுதல் மாயை ஈறாக உள்ள முப்பத்தொரு தத்துவங்களும் அசுத்த மாயையின் காரியங்கள். அதற்கு மேல் உள்ள ``சுத்த வித்தை, ஈசுரம், சாதாக்கியம்`` என்னும் மூன்றும் `மகாமாயை` எனப்படும் சுத்த மாயையின் காரியங்கள். சாதாக்கியத்திற்குமேல் உள்ளது விந்து. அவ்விந்துவைப் பெற்ற அந் `நாதம்` என்னும் தத்துவம், பரவிந்துவிற் பிறத்தலால், யாவும், எல்லாத் தத்துவங் களையும் தனது உடைமையாக உடைய பராசத்தியோடு கூடிய பரம சிவனது பழைய திருவிளையாடலேயாம்.
=============================================
பாடல் எண் : 20
ஆகாய மாதி சதாசிவ ராதியென்
போகாத சத்தியுட் போந்துடன் போந்தனர்
மாகாய ஈசன் அரன்மால் பிரமனாம்
ஆகாயம் பூமிமுன் காண அளித்தலே.

பொழிப்புரை : `வானம், காற்று, தீ, நீர், நிலம்` என்னும் பூதங்கள் ஐந்தற்கும் முறையே, `சதாசிவன், மகேசுரன், உருத்திரன், மால், அயன்` என்னும் ஐவரும் தலைவராவர் என்று உணர். இவர் அனைவரும், யாதொரு பொருளையும் விட்டு நீங்காது நிறைந்து நிற்கும் சிவசத்தி பதிய ஒருங்குதோன்றியவரே. இவருள் மகேசுரன் முதலிய நால்வரும் உருவம் உடையவர். (சதாசிவன் அருவுருவினன்) இவர் ஐவர் தொழிலும், மேற்கூறிய ஆகாயம் முதல் பூமி ஈறான பூதங்களைக் காரியப்படுத்தலாம்.
=============================================
பாடல் எண் : 21
அளியார் முக்கோண வயிந்தவந் தன்னில்
அளியார் திரிபுரை யாம் அவள் தானே
அளியார் சதாசிவ மாகி அமைவாள்
அளியார் கருமங்கள் ஐந்தும்செய் வாளே.

பொழிப்புரை : சுத்தமாயையின் காரியமாகிய பரவிந்து, அபரநாதம், அபரவிந்து என்னும் மூன்று நிலைக்களமாகத் தோன்றும் சாதாக்கிய தத்துவத்தினைத் தோற்றுவிக்கும். அருள் காரணமாக, `திரிபுரை` என்னும் சத்தி தோன்றுவாள். அவளே அத்தத்துவத்தின் தலைவனாகிய சதாசிவனோடு ஒற்றுமைப்பட்டு நின்று, அருளல் முதலிய ஐந்தொழிலையும் செய்வாள்.
=============================================
பாடல் எண் : 22
வாரணி கொங்கை மனோன்மனி மங்கலை
காரணி காரிய மாகக் கலந்தவள்
வாரணி ஆரணி வானவர் மோகினி
பூரணி போதாதி போதமு மாமே.

பொழிப்புரை : அத்திரிபுரையே `மனோன்மனி` எனப்படுவாள். அவள் நித்திய சுமங்கலை. எல்லாவற்றிற்கும் காரணி. அதுவேயன்றிக் காரியப்பட்ட பொருள்களிலும் கலந்து நிற்பாள். `உமை, வாணி, திருமகள், மகேசுவரி` என்றும் பாகுபட்டு நிற்பாள். உயிர்கட்குச் சுட்டறிவையும், சுட்டிறந்த வியாபக அறிவையும் தருவாள்.
=============================================
பாடல் எண் : 23
நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்
சென்றங் கியங்கும் அரன்திரு மாலவன்
மன்றது செய்யும் மலர்மிசை மேலயன்
என்றிவ ராக இசைந்திருந் தானே.

பொழிப்புரை : மகேசுவரி முதலாகப் பாகுபட்ட அச்சத்தியே தானாய் நிறைந்த மகேசுரனே, உருத்திரன், திருமால், அயன் என்பவரிடத்தும் சென்று உலாவி அவர்களேயாயிருந்து அவர்களது தொழில்களை இயற்றுவிப்பன்.
=============================================
பாடல் எண் : 24
ஒருவனு மேஉல கேழும் படைத்தான்
ஒருவனு மேஉல கேழும் அளித்தான்
ஒருவனு மேஉல கேழும் துடைத்தான்
ஒருவனு மேஉல கோடுயிர் தானே.

பொழிப்புரை : முன்னை மந்திரத்திற் கூறியவாற்றால், எல்லா உலகங்களையும் படைத்துக் காத்து அழிப்பவனும், அறிவில் பொருள், அறிவுடைப் பொருள் ஆகிய அனைத்திலும் நீக்கமற நிறைந்து இருப்பவனும் ஆகிய முதற்கடவுள் ஒருவனே என்பது தெற்றென விளங்கும்.
=============================================
பாடல் எண் : 25
செந்தா மரைவண்ணன் தீவண்ணன் எம்இறை
மைந்தார் முகில்வண்ணன் மாயஞ்செய் பாசத்தும்
கொந்தார் குழலியர்க் கூடிய கூட்டத்தும்
ஐந்தார் பிறவி அறுத்துநின் றானே.

பொழிப்புரை : எங்கள் இறைவனாகிய சிவபெருமானே செந்தாமரை மலரில் உள்ள அழகிய பிரமதேவனும், மேகம் போலும் நிறத்தையுடைய திருமாலும், நெருப்புப் போலும் நிறத்தையுடைய உருத்திரனுமாவான். ஆதலின், அவனே மாயை என்னும் முதற் காரணத்தினாலும், மகளிரை ஆடவர் கூடும் கூட்டமாகிய துணைக் காரணத்தினாலும் ஐந்து கூறாய்ப் பொருந்தும் உடம்புகளைத் தோற்று வித்து நிற்கின்றான்.
=============================================
பாடல் எண் : 26
தேடுந் திசைஎட்டுஞ் சீவன் உடல்உயிர்
கூடும் பிறவி குணஞ்செய்த மாநந்தி
ஊடும் அவர்தம துள்ளத்துள் ளேநின்று
நாடும் வழக்கமும் நான் அறிந் தேனே.

பொழிப்புரை : பல்கோடி அண்டங்களிலும் தனக்காவதொரு புக்கிலை (நிலையான வீட்டைத்) தேடி அலைகின்ற சீவான்மாவின் பொருட்டு, உடலும், உயிரும் கன்மத்தால் தொடர்பு கொள்கின்ற பல பிறவிகளை அவ்வவ்வுயிர்க்கு ஏற்றவாறு மேற்கூறியவற்றால் மாயையினின்றும் தோற்றுவிக்கின்ற பரமான்மாவாகிய சிவபெருமான், தான் தனது திவ்வியாகமங்களுள் கூறியுள்ள அப்படைப்பு முறைகளைத் தெளியமாட்டாது அவற்றொடு மாறுபடுகின்றவரது உள்ளத்துள்ளே நின்று, அவரது அறிவோடே ஒத்துக் கூறிய பல சமயக் கொள்கைகளையும் யான் அறிவேன்.
=============================================
பாடல் எண் : 27
ஓராய மேஉல கேழும் படைப்பதும்
ஓராய மேஉல கேழும் அளிப்பதும்
ஓராய மேஉல கேழும் துடைப்பதும்
ஓராய மேஉல கோடுயிர் தானே.

பொழிப்புரை : `படைத்தல், காத்தல், அழித்தல்` என்னும் தொழில்களை இயற்றுவோரும், அறிவுடைப் பொருள், அறிவில் பொருள் என்பவற்றில் தங்கிநின்று அவற்றை இயற்றுவோரும் பல்கோடி தேவர்களாகச் சொல்லப்படினும், அவர் யாவரும் சிவபெருமான் ஒருவனது ஆணையைத் தாங்கி அவன் குறிப்பின்வழி நின்று இயங்கும் ஒரு குழாத்தினரே யாவர்.
=============================================
பாடல் எண் : 28
நாதன் ஒருவனும் நல்ல இருவரும்
கோது குலத்தொடுங் கூட்டிக் குழைத்தனர்
ஏது பணியென் றிசையும் இருவருக்
காதி இவனே அருளுகின் றானே.

பொழிப்புரை : தலைவனாகிய சிவபெருமான் ஒருவனும், அவனது அருட்கு உரியராயினமையின் நல்லோராகிய `மால், அயன்` என்னும் இருவரும் ஆக மூவரும் தீயது, நல்லதுமாகிய முக்குணங்களைக் கூட்டிக் குழைத்து உலகை ஆக்குகின்றனர். எனினும், ``அடியேங்கட்கு இடும் பணி யாது`` என்று விண்ணப்பித்து அவற்றைச் செய்ய இசைந்து நிற்கும் நல்ல இருவருக்கு நாதனாகிய சிவபெருமானே அவர் செய்யத் தக்க பணியை அருளிச் செய்கின்றான்.
=============================================
பாடல் எண் : 29
அப்பரி செண்பத்து நான்குநூ றாயிரம்
மெய்ப்பரி செய்தி விரிந்துயி ராய்நிற்கும்
பொய்ப்பரி செய்திப் புகலும் மனிதர்கட்
கிப்பரி சேஇருள் மூடிநின் றானே.
பொழிப்புரை : `எண்பத்துநான்கு நூறாயிரம்` எனச் சொல்லப் படும் வேறுபாடுகளை உடைய பிறவிகள் பலவும் மேற்கூறிய முறையிலே உடம்புகளாய் உருவெடுத்து வளர்ந்து, அவைதாமே உயிர் போல இயங்கிநிற்கும். அதனை அறியாது பொய்ச்சமயங்களைப் பொருந்தி நின்று உலகத் தோற்றத்தை மேற்காட்டியவாறு பலபடத் தம்முள் முரணிக் கூறுவோர்க்குச் சிவபெருமான் அவரது அறிவை இன்று உள்ளவாறே அறியாமையால் மூடிவைப்பவனாகின்றான்.
=============================================
பாடல் எண் : 30
ஆதித்தன் சந்திரன் அங்கிஎண் பாலர்கள்
போதித்த வானொளி பொங்கிய நீர்புவி
வாதித்த சத்தாதி வாக்கு மனாதிகள்
ஓதுற்ற மாயையின் விந்துவின் உற்றதே.

பொழிப்புரை :அசுத்த மாயையில் உளவாகின்ற தத்துவ தாத்துவிகங்களோடு ஒத்த தத்துவ தாத்துவிகங்களும், பிறப்பு வகைகளும் சுத்த மாயையின்கண்ணும் உளவாவனவாம்.


Offline Anu

இரண்டாம் தந்திரம்-பதிகஎண்-10.  திதி

(பாடல்கள்: 09)

பாடல் எண் : 1
புகுந்துநின் றான்வெளி யாய்இரு ளாகிப்
புகுந்துநின் றான்புகழ் வாய்இகழ் வாகிப்
புகுந்துநின் றான்உட லாய்உயி ராகிப்
புகுந்துநின் றான்புந்தி மன்னிநின் றானே.

பொழிப்புரை : என்றும் உள்ளவனாய், எனது உள்ளத்தில் புகுந்து நீங்காது நிற்கின்ற சிவபெருமான், `ஒளி, இருள் - புகழ், இகழ் - உடல், உயிர்` முதலிய மறுதலைப் பொருள்களிலும் அவை அவையாய்த் தொடர்ந்து நீங்காது நிற்கின்றான்.
=============================================
பாடல் எண் : 2
தானே திசையொடு தேவரு மாய்நிற்கும்
தானே உடலுயிர் தத்துவ மாய்நிற்கும்
தானே கடல்மலை யாதியு மாய்நிற்கும்
தானே உலகில் தலைவனு மாமே.

பொழிப்புரை : சிவபெருமான் தான் ஒருவனே பல பொருள் களினும் நிறைந்து நின்று அவற்றை நிலைப்பித்தலுடன், அவற்றைத் தன் இச்சைவழி நடத்துபவனுமாகின்றான்.
=============================================
பாடல் எண் : 3
உடலாய் உயிராய் உலகம தாகிக்
கடலாய்க் கார்முகில் நீர்பொழி வானாய்
இடையாய் உலப்பிலி எங்குந்தா னாகி
அடையாப் பெருவெளி அண்ணல்நின் றானே.

பொழிப்புரை : சிவபெருமான் இவ்வாறு எல்லாப்பொருளிலும் நிறைந்து நிற்றல், அவன் பிறபொருள்களால் அடைக்கப்படாத பெருவெளியாய் நிற்றலினாலாம்.
=============================================
பாடல் எண் : 4
தானொரு காலந் தனிச்சுட ராய்நிற்கும்
தானொரு கால்சண்ட மாருத மாய்நிற்கும்
தானொரு காலந் தளிமழை யாய்நிற்கும்
தானொரு காலந்தண் மாயனு மாமே.

பொழிப்புரை : சிவபெருமான் உயிர்களது அறிவு நிலைக்கு ஏற்பக் கதிர்க்கடவுள், வளிக்கடவுள், மழைக்கடவுள், (இந்திரன்) முதலிய பல்வேறு கடவுளராய்த் தோன்றுவான். ஆதலின், அவன் திருமாலாய்த் தோன்றுதலில் வியப்பில்லை.
=============================================
பாடல் எண் : 5
அன்பும் அறிவும் அடக்கமு மாய்நிற்கும்
இன்பமும் இன்பக் கலவியு மாய்நிற்கும்
முன்புறு காலமும் ஊழியு மாய்நிற்கும்
அன்புற ஐந்தில் அமர்ந்துநின் றானே.

பொழிப்புரை : திருவருளால் ஐம்பூதங்களிலும் நிற்கும் சிவ பெருமானே, குணங்கள் மூன்றாயும், காலங்கள் மூன்றாயும் நிற்பான்.
=============================================
பாடல் எண் : 6
உற்று வனைவான் அவனே உலகினைப்
பெற்று வனைவான் அவனே பிறவியைச்
சுற்றிய சாலும் குடமுஞ் சிறுதூதை
மற்றும் அவனே வனையவல் லானே.

பொழிப்புரை : முதற்கண் உலகுயிர்களை அவற்றிற்கு அம்மை அப்பனாய் நின்று படைப்பவனும் சிவபெருமானே. பின்பு அவற்றைத் தன் மக்களாகக் கொண்டு புரப்பவனும் அவனே. இவை `தேவர், மக்கள்` என்னும் சிறப்புடைப் பிறப்பினர்க்கு மட்டுமன்று; `விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம்` என்னும் சின்னஞ்சிறிய பிறவிகட்குமாம்.
=============================================
பாடல் எண் : 7
உள்ளுயிர்ப் பாயுட லாகிநின் றான்நந்தி
வெள்ளுயி ராகும் வெளியாய் விளங்கொளி
உள்ளுயிர்க் கும்உணர் வேயுட லுட்பரம்
தள்ளுயி ராம்வண்ணந் தாங்கிநின் றானே.

பொழிப்புரை : `தூய உயிர்` எனப்படும் பரமான்மாவாகிய பெருவெளியாய், தூய்மையின்றி மாசுண்டு கிடக்கும் சீவான்மாவாகிய உயிரினுள் அறிவு தோன்றுதற்கு ஏதுவாய் நிற்பதாய இயற்கை அறிவே உயிரின் உடலையும் இடமாகக்கொண்டு நிற்கும் `பரம்பொருள்` எனப்படுவது. அதனை இழந்துநிற்கும் உயிர் அதுவாம் வண்ணம், அதன் உடலாயும், அவ்வுடல் வாழ்வுறுதற்கு அதனுள் நிற்கும் உயிர்ப் பாயும் உள்ள சிவபெருமானே அதனைக் காத்து நிற்கின்றான்.
=============================================
பாடல் எண் : 8
தாங்கருந் தன்மையும் தானவை பல்லுயிர்
வாங்கிய காலத்தும் மாற்றோர் பிறிதில்லை
ஓங்கி எழுமைக்கும் யோகாந்தம் அவ்வழி
தாங்கிநின் றானும்அத் தாரணி தானே.

பொழிப்புரை : சிவபெருமான் பல உயிர்களையும் அவற்றது உடலில் நிறுத்திக் காக்கின்ற காலத்தில் அக் காத்தல் தொழிலை அரிதாகுமாறு செய்பவரும், அவைகளை அவற்றது உடம்பினின்றும் பிரிக்கின்ற காலத்தில் அப்பிரித்தல் தொழிலை அரிதாகுமாறு செய்பவருமாக அவனுக்கு எதிராவார் பிறர் இல்லை. இனி விடாது வந்த எழுவகைப் பிறப்பிற்கும் முடிவாவது ஞானமே. அந்நெறியில் அவ்வுயிர்களைப் பிறழாது நிற்பிப்பவனும் அச் சிவபெருமானே.
=============================================
பாடல் எண் : 9
அணுகினுஞ் சேயவன் அங்கியிற் கூடி
நணுகினும் ஞானக் கொழுந்தொன்றும் நல்கும்
பணிகினும் பார்மிசைப் பல்லுயி ராகித்
தணிகினும் மன்னுடல் அண்ணல்செய் வானே.

பொழிப்புரை : அண்ணலாகிய சிவபெருமான், உயிர்களோடு உடனாய் நிற்பினும், அவற்றால் அறிதற்கரியனே. யோக முறையால் பிராண வாயுவை அடக்கி மூலாதாரத்தினின்றும் எழுப்பப்படும் அங்கியின்வழி மேல்நிலமாகிய புருவ நடுவை அடைந்து தியான சமாதிகளால் அவனை உணரினும், உண்மையில் ஞான முதிர்ச்சி ஒன்றுமே அவனைப் பெறுவிக்கும். அதனால், சரியை முதலிய மூன்றால் அவனை வழிபடும் தவநெறியில் நிற்பினும், அதனில் செல்லாது உலகரோடு கூடி அவநெறியில் தாழினும் அவன் பிறவியை அறுத்தல் இன்றி அதனைக் கூட்டவே செய்வான்.


Offline Anu

இரண்டாம் தந்திரம்- பதிகஎண்:11. சங்காரம்

(பாடல்கள்:10)

பாடல் எண் : 1
அங்கிசெய் தீசன் அகலிடஞ் சுட்டதவ்
வங்கிசெய் தீசன் அலைகடற் சுட்டதவ்
வங்கிசெய் தீசன் அசுரரைச் சுட்டதவ்
வங்கிஅவ் வீசற்குக் கைஅம்பு தானே.

பொழிப்புரை :  சிவபெருமான் உலகம் முழுவதையும் அழித்ததும், கடல்நீரை மிக்கு வாராதவாறு அடங்கியிருக்கச் செய்ததும், முப்புரத் தவர் முதலிய அசுரர்களை அழித்ததும் நெருப்பை உண்டாக்கியே யாம். அதனால், நெருப்பே அவன் கையம்பாய் விளங்குகின்றது.
=============================================
பாடல் எண் : 2
இலயங்கள் மூன்றினுள் ஒன்றுகற் பாந்தம்
நிலையன் றழிந்தமை நின்றுணர்ந்தேனால்
உலைதந்த மெல்லரி போலும் உலகம்
மலைதந்த மாநிலந் தான்வெந் ததுவே.

பொழிப்புரை :  மூவகைச் சங்காரங்களுள் `கற்ப சங்காரம்` என்பதும் ஒன்று. அதில் எல்லாப் பொருளும் சங்கரிக்கப் பட்டொழிந் தமையை ஏனைய இரண்டு சங்காரங்களில் நிற்குமாற்றால் நான் கருதியுணர்ந்துகொண்டேன். கால வயப்பட்டுநிற்கும் உலகம் உலை யில் இடப்பட்ட அரிசிபோல்வதாம். ஆகவே, என்றும் அழியாதன போல மலைவைத் தந்து நிற்கும் இப்பெரு நிலம் முடிவில் அழிந் தொழிந்தது.
=============================================
பாடல் எண் : 3
பதஞ்செய்யும் பாரும் பனிவரை எட்டும்
உதஞ்செய்யும் ஏழ்கடல் ஓதம் முதலாங்
குதஞ்செய்யும் அங்கி கொளுவி ஆகாச
விதஞ்செய்யும் நெஞ்சின் வியப்பில்லை தானே.

பொழிப்புரை :  பல உயிர்கட்கு இடம் அளிக்கின்ற அகன்ற நிலமும், குளிர்ந்த எட்டு உயர்மலைகளும், நீரை மிகத் தருகின்ற எழுகடல் நீர்ப்பரப்பும் முதலாக அனைத்துப் பொருள்களையும் சிவபெருமான் தனது நினைவு மாத்திரத்தால் காய்தலைச் செய்யும் நெருப்பை வைத்து அழித்து உருவில்லனவாகச் செய்துவிடுவான். இதில் வியப்பில்லை.
=============================================
பாடல் எண் : 4
கொண்டல் வரைநின் றிழிந்த குலக்கொடி
அண்டத்துள் ஊறி யிருந்தெண் டிரையாகி
ஒன்றின் பதஞ்செய்ய ஓம்என்ற அப்புறக்
குண்டத்தின் மேல்அங்கி கோலிக்கொண் டானே.

பொழிப்புரை :  மேகங்கள் மலைக்கண் தங்குதலால் நிலத்தில் இறங்கிய நீராகிய குலமகள் உலகத்தில் தங்கியும், கடலாகியும் நின்று இனிய உணவுகளை உண்டாக்கிக் கொண்டிருக்கும் பொழுதே இறைவன் `நாதம்` என்னும் அவ்விடத்ததாகிய குண்டத்தில் விளங்கும் மேலான நெருப்பை வளர்த்துவிட்டான். அஃதாவது, `அழித்தல் தொழிலை மேற்கொண்டான்` என்பதாம்.
=============================================
பாடல் எண் : 5
நித்தசங் காரம் உறக்கத்து நீள்மூடம்
வைத்தசங் காரமுஞ் சாக்கிரா தீதமாம்
சுத்தசங் காரந் தொழிலற்ற கேவலம்
உய்த்தசங் காரம் பரன்அருள் உண்மையே.

பொழிப்புரை :  மூவகைச் சங்காரத்துள் நித்திய சங்காரமாவது அன்றாடம் கீழாலவத்தையில் அறிவிழந்திருத்தல். பிறவி எடுத்த எல்லா உயிர்கட்கும் பொதுவாக வைக்கப்பட்ட ஆயுட் சங்காரமாவது விழித்தல் இல்லாத உறக்கமாகிய இறப்பாகும். சருவ சங்காரமாவது ஆன்மா செயலற்று ஆணவத்திலே அழுந்திச் சடம்போலக் கிடத்தல். அதனால், உயிரை நீங்கா இன்பத்தில் செலுத்துதலாகிய திருவருட் சங்காரமாகிய அருளலே இறைவனது உண்மை நிலையைப் பெறுதலாகும்.
=============================================
பாடல் எண் : 6
நித்தசங் காரம் இரண்டுடல் நீவுதல்
வைத்தசங் காரமும் மாயாசங் காரமாம்
சுத்தசங் காரம் மனாதீதந் தோய்வுறல்
உய்த்தசங் காரஞ் சிவன்அருள் உண்மையே.

பொழிப்புரை :  இன்னும் வேறொருவகையாற் கூறுமிடத்து, `நித்திய சங்காரம், தூலம், சூக்குமம்` என்னும் இரண்டு உடம்புகள் உள்ளபொழுதும் அவற்றோடு ஒட்டாது நீங்கி நிற்றல்` எனவும், `ஆயுட் சங்காரம் தூல உடம்பு அழிந்தொழிதல்` எனவும், `சருவ சங்காரம் சூக்கும உடல் நீங்குதல்` எனவும் கூறுதற்குரியன. எனவே, திருவருட் சங்காரமாகிய அருளலே சிவப்பேறாகும்.
=============================================
பாடல் எண் : 7
நித்தசங் காரங் கருவிடர் நீக்கினால்
ஒத்தசங் காரம் உடலுயிர் நீவுதல்
சுத்தசங் காரம் அதீதத்துள் தோய்வுறல்
உய்த்தசங் காரம் பரனருள் உண்மையே.

பொழிப்புரை :  இனி, நித்திய சங்காரம் தூல உடம்பொடு நிற்கும் பொழுதே அதனொடு கூடாதிருக்கச் செய்வதென்றால், ஆயுட் சங்காரம் அதனை அடியோடு விடச் செய்வதாகும். சருவ சங்காரம் சூக்கும உடம்பையும் விடப்பண்ணுவது. ஆகவே, திருவருட் சங்கார மாகிய அருளலே சிவனை அடைதல் என்பது கடைப்பிடித்து உணரத்தக்கது.
=============================================
பாடல் எண் : 8
நித்தசங் காரமும் நீடிளைப் பாற்றலின்
வைத்தசங் காரமும் மன்னும் அனாதியில்
சுத்தசங் காரமுந் தோயாப் பரன்அருள்
உய்த்தசங் காரமுன் நாலாம் உதிக்கிலே.

பொழிப்புரை :  நித்திய சங்காரம், அன்று உழைத்த உழைப்பினால் உண்டாகிய இளைப்பினை ஆற்றக் காண்டலால், ஆயுட் சங்காரமும் அப்பிறப்பில் உண்டான இளைப்பை ஆற்றுதற்பொருட்டு என்றும் உளதாய்நிற்கும். `சருவ சங்காரத்தில் எல்லாக் கருவிகளும் முற்ற அழிந் தொழிவதால், அதுவே சிவப்பேறு போலும்` எனின், அன்று; திருவருட் சங்காரம் உண்டாய வழியே `பிறத்தல், வாழ்தல், இறத்தல்` என்னும் மூன்றும் அற்ற நான்காம் நிலையாகி `வீடுபேறு` எனப்படும் சிவப்பேறாம்.
=============================================
பாடல் எண் : 9
பாழே முதலா எழும்பயிர் அப்பயிர்
பாழாய் அடங்கினும் பண்டைப்பாழ் பாழாகா
வாழாச்சங் காரத்தின் மாலயன் செய்தியாம்
பாழாம் பயிராய் அடங்கும்அப் பாழிலே.

பொழிப்புரை :  மாயை வித்தாக, அதனினின்றும் முளைக்கின்ற பயிராய் உலகம் தோன்றும். பின்பு அப்பயிராகிய உலகம் வித்தாகிய அம்மாயையினிடத்தே ஒடுங்குவதாம். அவ்வாறு ஒடுங்கினும், என்றும் உளதாகிய மாயை ஒன்றிலும் ஒடுங்குதல் இல்லை. உலகம் மாயையின் ஒடுங்குதலாகிய சருவ சங்காரமின்றிப் பிரகிருதிகாறும் அழிவதாகிய அந்தச் சங்காரகாலத்திற்கு உட்பட்டே மால் அயன் செய்திகளாகிய காத்தல் படைத்தல்கள் நிகழும். ஆகவே, தத்தம் கால எல்லையில் மடிந்து போகின்ற பயிர்போல, உலகம் முழுவதும் ஒடுங்குவது மாயையிலல்லது பிரகிருதியில் அன்று.
=============================================
பாடல் எண் : 10
தீயவைத் தார்மின்கள் சேரும் வினைதனை
மாயவைத் தான்வைத்த வன்பதி ஒன்றுண்டு
காயம்வைத் தான்கலந் தெங்கும் நினைப்பதோர்
ஆயம்வைத் தாய்உணர் வாரவைத் தானே.

பொழிப்புரை :  நிலையில்லாததாகிய உலகத்தை உண்டாக்கி நிறுத்திய சிவன், அதனையே உயிர்களுக்கு என்றும் வாழிடமாக வையாது அழிய வைத்து, அழிவின்றி வைத்த வாழிடம் ஒன்று உள்ளது. அதனை அறிந்து அடைதற் பொருட்டே உடம்பையும், பல உட்கருவிகளையும், நூல்களையும் தந்தருளினான். அவற்றைக் கொண்டு, தற்போதத்தால் ஈண்டும் வினைகளை ஈண்டாதபடி அழித்து, அந்த வாழிடத்தை அடைந்து இன்பத்தை நுகர்மின்கள்.


Offline Anu

இரண்டாம் தந்திரம்-பதிகஎண்:12. திரோபவம்

(பாடல்கள்:09)

பாடல் எண் : 1
உள்ளத் தொருவனை உள்ளுறு சோதியை
உள்ளம்விட் டோரடி நீங்கா ஒருவனை
உள்ளமுந் தானும் உடனே இருக்கினும்
உள்ளம் அவனை உருவறி யாதே.

பொழிப்புரை :  சிவன், ஆன்ம அறிவேயாயும், அவ்வறிவுக்கு அறிவாயும், அதனில் சிறிதும் பிரிவின்றியும் அதனோடு யாண்டும் உடனாயே நிற்பினும் அவ்வறிவு மல மறைப்பால் அவனது இருப்பை அறியமாட்டது.
=============================================
பாடல் எண் : 2
இன்பப் பிறவி படைத்த இறைவனுந்
துன்பஞ்செய் பாசத் துயருள் அடைத்தனன்
என்பிற் கொழுவி இசைந்துறு தோல்தசை
முன்பிற் கொளுவி முடிகுவ தாமே.

பொழிப்புரை :  பின்னர் இன்பத்தைப் பெறுதற்குக் கருவியாம் பிறப்பை உயிர்கட்குக் கொடுத்த சிவன், அப்பிறப்பினுள் நிற்கும் பொழுது துன்பமயமான வினையால் விளையும் துயருள் அழுந்தவே வைத்துள்ளான். பிறவியால் வரும் மாசுடம்புகள் முன்னே சில காலம் துன்பத்தைத் தந்து, பின்பு ஓழிவனவாகும்.
=============================================
பாடல் எண் : 3
இறையவன் மாதவன் இன்பம் படைத்த
மறையவன் மூவரும் வந்துடன் கூடி
இறையவன் செய்த இரும்பொறி யாக்கை
மறையவன் வைத்த பரிசறி யாரே.

பொழிப்புரை :  `உருத்திரன், மால், அயன்` என்னும் காரணக் கடவுளர்தாமும், மேல் உள்ள சீகண்ட உருத்திரரால் தமக்குத் தரப்பட்ட சிறந்த இயந்திரமாகிய உடம்புகள் கிடைக்கப் பெற்றுப் பொருந்தி நின்று உள்ளத்துள் ஒளிந்து நிற்கும் கள்வனாகிய சிவன் தம்மாட்டு வைத்த மறைப்பினை அறிய மாட்டார்கள்.
=============================================
பாடல் எண் : 4
காண்கின்ற கண்ணொளி காதல்செய் தீசனை
ஆண்பெண் அலியுரு வாய்நின்ற ஆதியை
ஊண்படு நாவுடை நெஞ்சம் உணர்ந்திட்டுச்
சேண்படு பொய்கை செயலணை யாரே.

பொழிப்புரை :  சிவபெருமானைப் பொருள்களைக் காண்கின்ற கண்ணினது ஒளியைக் காதலிப்பதுபோலக் காதலித்து, சுவையற்ற நாவினை உடைய மனத்தால் நினைந்து, நெடுங்காலமாக வருகின்ற பிறப்பு இறப்புக்களை விட்டொழிதற்கு ஏதுவான தவத்தில் தலைப்படுகின்றிலர் உலகர்.
=============================================
பாடல் எண் : 5
தெருளும் உலகிற்குந் தேவர்க்கும் இன்பம்
அருளும் வகைசெய்யும் ஆதிப் பிரானும்
சுருளுஞ் சுடருறு தூவெண் சுடரும்
இருளும் அறநின் றிருட்டறை யாமே.

பொழிப்புரை :  ஆதிப் பிரானகிய சிவபெருமான், பரிபாகம் பெற்ற உயிர்கட்கும், பரிபாகத்தால் ஞானத்தை எய்தினோர்க்கும் தனது திருவருள் நன்கு புலப்படும் வகையில் விளக்கத்தைத் தருவான். ஏனையோர்க்குப் பகலவனும், நிலாவும் பகலிலும், இரவிலும் இருள் நீங்க எரிப்பினும் இருள் பொதிந்து நிற்கும் அறைபோல நின்று மறைத்தலையே செய்வன்.
=============================================
பாடல் எண் : 6
அரைக்கின் றருள்தரும் அங்கங்கள் ஓசை
உரைக்கின்ற ஆசையும் ஒன்றொடொன் றொவ்வாப்
பரக்கும் உருவமும் பாரகந் தானாய்க்
கரக்கின் றவைசெய்த காண்டகை யானே.

பொழிப்புரை :  தான் ஒருவனே, நிலமுதல் நாதம் ஈறாய கருவிகள், நால்வகை வாக்குக்கள், நான்காகவும் எட்டாகவும் பத்தாகவும் மற்றும் பலவாகவும் சொல்லப்படுகின்ற திசைகள், ஒன்றோடு ஒன்று ஒவ்வாது பல்வேறு வகையினவாய் நிற்கின்ற உடம்புகளும் பிறவுமாகிய உருவங்கள், நிலவுலகம் முதலிய உலகங்கள் இவை அனைத்துமாய் நின்று, மெய்யுணர்வைத் தடுக்கின்ற அப்பொருள்களை ஆக்கிய, எல்லா உயிர்களாலும் அறிந்து அடையத்தக்க இறைவனே அத் தடையை நிகழ்விக்கின்ற மறக்கருணையைச் செய்கின்றான்.
=============================================
பாடல் எண் : 7
ஒளித்துவைத் தேனுள் ளுறவுணர்ந் தீசனை
வெளிப்பட்டு நின்றருள் செய்திடு மீண்டே
களிப்பொடுங் காதன்மை என்னும் பெருமை
வெளிப்பட்டிறைஞ்சின்நும் வேட்சியுமாமே.

பொழிப்புரை :  மறைத்தலைச் செய்கின்ற அவனை அவன் என்னேடு உடனாய் நிற்கின்ற அருட்டொடர்பை உணர்ந்து பிறர் அறி யாதவாறு என் உள்ளத்திலே மறைத்து வைத்தேன். அதனால், இனி அவன் எனக்கு வெளிப்படையாகத் தோன்றி அருள்புரிதல் திண்ணம். நீவிரும் என்னைப்போலவே அவனது அருட்டொடர்பை உணர்ந்து, அவ்வுணர்வினால் எழுகின்ற இன்பத்தோடு கூடிய `பேரன்பு` என்னும் சிறப்புத் தன்மை வெளிப்பட, அவனை அகத்தும், புறத்தும் வழிபடுவீர்களாயின், `அவன் எமக்கு எப்பொழுது வெளிநிற்பான்` என்று ஏக்கமுற்றிருக்கின்ற உங்கள் வேட்கை நிரம்புவதாகும்.
=============================================
பாடல் எண் : 8
ஒருங்கிய பாசத்துள் உத்தம சித்தன்
இருங்கரை மேலிருந் தின்புற நாடி
வருங்கரை ஓரா வகையினிற் கங்கை
அருங்கரை பேணில் அழுக்கது வாமே.

பொழிப்புரை :  கடலில் அகப்பட்டவன் அதன் கரையை அடைந்து இன்புறவேண்டி நீந்தும்பொழுது அக்கரை அருகில் வருவதை அறியாதிருத்தல் போலவும், கங்கைக்கரையில் நிற்பவன் அதனுள் மூழ்காமல் கரையிலே நிற்றல்போலவும் மேலான சித்தாகிய ஆன்மா, கீழான மலத்துள் நின்று மாசும் துன்பமும் உடையதாகின்றது.
=============================================
பாடல் எண் : 9
மண்ணொன்று தான்பல நற்கல மாயிடும்
உண்ணின்ற யோனிகட் கெல்லாம் ஒருவனே
கண்ணொன்று தான்பல காணுந் தனைக்காணா
அண்ணலும் இவ்வண்ண மாகிநின்றானே.

பொழிப்புரை :  மண் ஓன்றே கலங்கள் (பாத்திரங்கள்) பலவற்றிலும் பொருந்தி நிற்கின்றது. அதுபோலச் சிவபெருமான் ஒருவனே உயிர் கள் அனைத்தினுள்ளும் நிற்பான். ஆயினும், கண் பிற பொருளைக் காணுமாயினும், தன்னையும், தன்னொடு பொருந்தியுள்ள உயிரையும் காணாததுபோல, உயிர்கள் பிறவற்றை அறியுமாயினும், தம்மையும், தம்மோடு உடனாய் நிற்கின்ற சிவனையும் அறிதல் இல்லை.


Offline Anu

இரண்டாம் தந்திரம்-பதிகஎண்:13. அனுக்கிரகம்

(பாடல்கள்:09)

பாடல் எண் : 1
எட்டுத் திசையும் எறிகின்ற காற்றொடு
வட்டத் திரையனல் மாநிலம் ஆகாயம்
ஒட்டி உயிர்நிலை என்னும்இக் காயப்பை
கட்டி அவிழ்ப்பன் கண்ணுதல் காணுமே.

பொழிப்புரை :  `காற்று, நீர், நெருப்பு, நிலம், வானம்` என்னும் ஐம்பெரும் பூதங்களும் ஒருங்கியைத்துப் பின்னிய `உயிருக்கு இடம்` எனச் சொல்லப்படுகின்ற இந்த உடம்பாகிய பைக்குள் உயிர்களை முன்பு அடைத்துக் கட்டிவைத்துப் பின்பு அவிழ்த்து வெளிவிடுகின் றான் சிவபெருமான்.
=============================================
பாடல் எண் : 2
உச்சியில் ஓங்கி ஒளிதிகழ் நாதத்தை
நச்சியே இன்பங்கொள் வார்க்கு நமன்இல்லை
விச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்குத்
தச்சு மவனே சமைக்கவல் லானே.

பொழிப்புரை :  தம் தலைக்குப் பன்னிரண்டங்குலத்திற்கு மேலாய் ஓங்கி, அறிவு வடிவாய் ஒலிக்கின்ற சிவபெருமானது திருவடிச் சிலம்பொலியையே விரும்பிக் கேட்டு அதனால், இன்பம் அடை பவர்கட்கு இறப்பு இல்லை. உலகமாகிய தேர்க்கு உறுப்புக்களாகிய நிலம் முதலிய பூதங்களும், முச்சுடர்களும் ஆகிய பொருள்களையும் படைத்து, அவற்றால் அத்தேரினைப் பண்ணி இயங்க விடுகின்ற தச்சராகிய வினைஞர்களைப் படைப்பவனும் அவனேயாகலின்.
=============================================
பாடல் எண் : 3
குசவன் திரிகையில் ஏற்றிய மண்ணைக்
குசவன் மனத்துற்ற தெல்லாம் வனைவன்
குசவனைப் போல்எங்கள் கோன்நந்தி வேண்டில்
அசைவில் உலகம் அதுஇது வாமே.

பொழிப்புரை :  மட்கலத்தை வனைகின்ற குயவன் மண்ணைக் கொண்டு ஒருவகைக் கலத்தையே வனையாது, குடம் சால் கரகம் முதலாகப் பல்வேறு வகைப்பட வனைவன். அதுபோலவே, எங்கள் சிவபெருமானது இச்சையால் தளர்வில்லாத உலகம் பல்வேறு வகைப்படத் தோன்றும்.
=============================================
பாடல் எண் : 4
விடையுடை யான்விகிர் தன்மிகு பூதப்
படையுடை யான்பரி சேஉல காக்கும்
கொடையுடை யான்குணம் எண்குண மாகும்
சடையுடை யான்சிந்தை சார்ந்துநின் றானே.

பொழிப்புரை :  நன்மையே (மங்கலமே) வடிவாய் உள்ள சிவ பெருமான் உலகியிலின் வேறுபட்டவன்; அஃது அவன் இடபத்தையே ஊர்தியாகவும், பூதங்களையே உறுதிச் சுற்றமாகவும் கொண்டிருத்த லால் விளங்கும். அதனால், உயிர்களின் வினைகட்குத் தக்க பரிசாக உலகத்தைப் படைத்துக் கொடுக்கும் கொடையாளனும், கொடுத்து அவ்வுயிர்களின் அறிவிற்கறிவாய் நின்று வினைப் பயனைத் துய்ப்பித்து அவை செவ்வி முதிர்ந்த காலத்தில் வீடுபெறச் செய்கின்றவனும் அவனே.
=============================================
பாடல் எண் : 5
உகந்துநின் றேபடைத் தான்உல கேழும்
உகந்துநின் றேபடைத் தான்பல ஊழி
உகந்துநின் றேபடைத் தான்ஐந்து பூதம்
உகந்துநின் றேஉயிர் ஊன்படைத் தானே.

பொழிப்புரை :  சிவபெருமான் `சுத்தம், மிச்சிரம், அசுத்தம்` என்பனவாக உலகங்களை முத்திறத்துப் பல்வேறு வகைப்படப் படைத்ததும், `நல்லூழி, தீயூழி, பொதுவூழி` என்பனவாகக் காலங்களை முத்திறத்துப் பல்வேறு வகைப்படப் படைத்ததும், `நிலம், நீர், தீ, வளி, வான்` எனப் பூதங்களை ஐந்தாகப் படைத்ததும், உடம்புகளை, தேவ உடம்பு, மக்கள் உடம்பு முதலாக ஏழு வகையாகப் பலவேறு வகைப்படப் படைத்ததும் எல்லாம் உயிர்கள் உய்ய வேண்டும் என்று விரும்பியேதான்.
=============================================
பாடல் எண் : 6
படைத்துடை யான்பண் டுலகங்கள் ஏழும்
படைத்துடை யான்பல தேவரை முன்னே
படைத்துடை யான்பல சீவரை முன்னே
படைத்துடை யான்பர மாகிநின் றானே.

பொழிப்புரை :  சிவபெருமான் மேற்கூறியவாறு பலவற்றையும் படைத்து, அவற்றுள் சித்துப்பொருளை அடிமைகளாகவும், சடப் பொருளை உடைமைகளாகவும் கொண்டு, தான் தலைவனாய் நின்று, அவையனைத்தையும் ஆள்கின்றான்.
=============================================
பாடல் எண் : 7
ஆதி படைத்தனன் ஐம்பெரும் பூதம்
ஆதி படைத்தனன் ஆசில்பல் ஊழி
ஆதி படைத்தனன் எண்ணிலி தேவரை
ஆதி படைத்தவை தாங்கிநின் றானே.

பொழிப்புரை :  மேற்கூறிய பலவற்றையும் படைத்த சிவபெருமான், படைத்ததனோடு ஒழியாது, அவற்றைக் காத்தும் நிற்கின்றான். அதனால், அருளலும் அவனது கடன்` என்பது குறிப்பெச்சம். முதல் மூன்று அடிகள் அனுவாதம்.   இதனால், ஏதுக்காட்டி மேலது வலியுறுத்தப்பட்டது.
=============================================
பாடல் எண் : 8
உண்ணின்ற சோதி உறநின்ற ஓருடல்
விண்ணின் றமரர் விரும்பும் விழுப்பொருள்
மண்ணின்ற வானோர் புகழ்திரு மேனியன்
கண்ணின்ற மாமணி மாபோதமாமே.

பொழிப்புரை :  ஆன்ம அறிவினுள் நிற்கின்ற அறிவாயும், ஆன்ம அறிவின்வழி உடலை இயக்குதலின் உடலாயும், தேவர்களும் விரும்பி அடையும் இன்பப் பொருளாயும், `மண்ணுலகத்தேவர்` (பூசுரர்) என்று சொல்லப்படுகின்ற அந்தணர்கள் வேதம் முதலிய வற்றால் புகழ்கின்ற அருட்கோலத்தை உடையவனாயும் உள்ள சிவபெருமானே, கண்ணில் உள்ள கருமணி, உடல் செல்லுதற்குரிய நன்னெறியைக் காட்டுதல்போல, உயிர் செல்லுதற்குரிய ஞான நெறியைக் காட்டுகின்ற பேராசிரியனாய் வருவன்.
=============================================
பாடல் எண் : 9
ஆரும் அறியாத அண்டத் திருவுருப்
பார்முத லாகப் பயிலுங் கடத்திலே
நீரினிற் பால்போல நிற்கின்ற நேர்மையைச்
சோராமற் காணுஞ் சுகம்அறிந் தேனே.

பொழிப்புரை :  ஒருவராலும் அறியப்படாத சிதாகாசத் திருமேனியனாகிய சிவபெருமான், மண் முதலிய பூதக் கூட்டுறவாலாகிய மானுட உடம்பிலே நிற்கின்ற உயிரின்கண், நீரிற் கலந்த பால்போல வேறற நின்று, செவ்விபெற்ற உயிர்கட்கு அருள் புரிகின்ற செம்மையை அறியாமையால் மறந்தொழியாது, அறிவால் அறிந்து நின்று, அதனால் விளைகின்ற இன்பத்தையும் நான் பெற்றேன்.


Offline Anu

இரண்டாம் தந்திரம் –பதிக எண்:14. கர்ப்பக் கிரியை

(பாடல்கள்: 01-20/40)


பகுதி-I

பாடல் எண் : 1
ஆக்குகின் றான்முன் பிரிந்த இருபத்தஞ்
சாக்குகின் றானவன் ஆதிஎம் ஆருயிர்
ஆக்குகின் றான்கர்ப்பக் கோளகை யுள்ளிருந்
தாக்குகின் றான்அவன் ஆவ தறிந்தே. 

பொழிப்புரை :  ஓர் உயிரைக் கருப்பையுள் தோற்றுவிக்கின்ற சிவ பெருமான் அதன் முன்னைத் தூல உடம்போடு ஒழிந்த ஐந்து ஞானேந் திரியம், ஐந்து கன்மேந்திரியம், ஐந்து பூதம், சத்தாதி ஐந்து விடயம், வச னாதி ஐந்து விடயம் என்னும் இருபத்தைந்தையும் மீள அதன் சூக்கும உடம்பினின்றும் தோற்றுவிப்பான். அங்ஙனம் தோற்றுவித்தல், அக் கருப்பையுள் அத்தோற்றத்திற்குத் தடையாகவரும் ஊறுபாடு களையறிந்து அவற்றை நீக்குதற்பொருட்டு அவ்விடத் திருந்தேயாம்.
=================================================
பாடல் எண் : 2
அறிகின்ற மூலத்தின் மேல்அங்கி அப்புச்
செறிகின்ற தானத்துச் செந்தாள் கொளுவிப்
பொறைநின்ற இன்னுயிர் போந்துற நாடிப்
பறிகின்ற பத்தெனும் பாரஞ்செய் தானே. 

பொழிப்புரை :  ஆறு ஆதாரங்களினும் முதலாவதாக அறியப் படுகின்ற மூலதாராத்திற்குமேல் உதராக்கினியும், உணவாக உண்ணப் படும் நீரும் நிறைந்திருக்கின்ற சுவாதிட்டானத் தானத்தில், `பூதசார சரீரம், யாதனா சரீரம்` என்பவற்றிற்கேனும், அவை இரண்டுமின்றித் தனக்கேனும் (சிவனுக்கேனும்) சுமையாய் நின்ற உயிர் வந்து பொருந்துமாற்றை எண்ணி, முதற்கண் செந்நீராகிய நிலைக்களத்தை நிற்பித்து, அந்நிலையை அக்கரு வெளிப்போதுதற்குப் `பத்துத் திங்கள்` என்னும் சுமைக் காலத்தையும் சிவபிரான் ஆக்குகின்றான்.
=================================================
பாடல் எண் : 3
இன்புறு காலத் திருவர்முன்பூறிய
துன்புறு பாசத் துயர்மனை வானுளன்
பண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையும்
அன்புறு காலத் தமைத்தொழிந் தானே. 

பொழிப்புரை :  முதற்கண் தந்தை தாயர் இன்பம் நுகர்கின்ற காலத்து அவர்தம் உடம்பினின்றும் வெளிப்படும் வெண்டுளி செந்துளிகளால் அமைந்த இல்லமாவது உடம்பு துன்பத்தைத் தருகின்ற வினையின்வழி அதனை நுகரும் அவ்வில்லமாகிய உடம்பின்கண் அதன் தலைவ னாகிய உயிர்க்கிழவன் பலவகைப் பண்புகள் பெற்று வாழும் காலத்தையும், அக் காலத்து அவனுக்கு உளவாகின்ற வாழ்க்கை முறைகளையும் கருவைத் தோற்றுவித்து வளர்க்கத் திருவுளம்பற்றிய அப்பொழுதே அதன்கண் அமையுமாறு சிவபெருமான் அமைத்து விடுகின்றான்.
=================================================
பாடல் எண் : 4
கருவை ஒழிந்தவர் கண்டநால் மூவேழ்
புருடன் உடலில் பொருந்தும்மற் றோரார்
திருவின் கருக்குழி தேடிப் புகுந்த
துருவம் இரண்டாக ஓடி விழுந்ததே.

பொழிப்புரை :  மெய்யுணர்வால் பிறப்பின் நீங்கிய அறிவர் கண்ட, நில முதல் புருடன் ஈறாக உள்ள இருபத்தைந்து கருவிகளும் (தத்துவங்களும்) தந்தை உடலிலே பொருந்தியிருந்து, பின் தாயது கருப்பைக்குள்ளே, ஆண், பெண் இரண்டில் யாதேனும் ஓர் உருவமாமாறு புகும். இதனை மெய்யுணர்வில்லார் அறியார்.
=================================================
பாடல் எண் : 5
விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி
ஒழிந்த முதல்ஐந்தும் ஈரைந்தொ டேறிப்
பொழிந்த புனல்பூதம் போற்றுங் கரணம்
ஒழிந்த நுதல்உச்சி உள்ளே ஒளித்ததே.

பொழிப்புரை :  தந்தையது உடலில் பொருந்தியிருந்த இருபத்தைந்து கருவிகளும் தாயின் கருவில் புகுதற்கு அவ்விருவரது கூட்டம் நிகழும். அப்பொழுது ஞானேந்திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து, பூதம் ஐந்து ஆகிய பதினைந்து கருவிகளால் பருவுடம்பு வளருமாறு தந்தை உடம்பினின்றும் வெண்பால் (சுக்கிலம்) பொழியும். அதன்பின் பருவுடம்பு வளர ஏனைத் தன்மாத்திரைகளும், அந்தக்கரணங்களும் அவ்வுடம்பினுள் புருவ நடுவிலும், தலையிலும் பொருந்தி நிற்கும்.
=================================================
பாடல் எண் : 6
பூவின் மணத்தைப் பொருந்திய வாயுவும்
தாவி உலகில் தரிப்பித்த வாறுபோல்
மேவிய சீவனில் மெல்லநீள் வாயுவுங்
கூவி அழும்தான் குறிக்கொண்ட போதே.

பொழிப்புரை :  பூவின் மணத்தைக் காற்றே உலகிடை எங்கும் பரவச்செய்தல்போல, நுண்ணுடம்பின் செயல்களைத் தச வாயுக்களே பருவுடம்பில் கூவி அழுதல் முதலிய தொழில்களாக நிகழச் செய்யும், அவ்வாறு செய்விக்கச் சிவபெருமான் நினைந்தபொழுது.
=================================================
பாடல் எண் : 7
போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்
மூழ்கின்ற முத்தனும் ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டுடன் நாலு புரவியும்
பாகன் விடானெனிற் பன்றியு மாமே.

பொழிப்புரை :  குண்டலியும், `பன்னிரண்டு அங்குலம்` என்னும் அளவு சொல்லப்படுகின்ற பிராணவாயுவும் ஆகிய இவற்றைத் தலைவனாகிய சிவன் தூண்டாதுவிடுவானாயின், `தூலம், சூக்குமம், பரம்` என்னும் சரீரங்களும் அவற்றிற் பொருந்தியுள்ள தத்துவ தாத்துவிகங்களும் சிறிதும் பயன்படாதொழியும்.
=================================================
பாடல் எண் : 8
ஏற எதிர்க்கில் இறையவன் றானாகும்
மாற எதிர்க்கில் அரியவன் றானாகும்
நேரொக்க வைக்கின் நிகர்போதத் தானாகும்
பேரொத்த மைந்தனும் பேரரசாளுமே. 

பொழிப்புரை :  தந்தையும் தாயும் கூடுங்காலத்துக் காமம் மிக்கிருப்பின், பிறக்கும் மகன் தாமத குணம் மிக்கிருப்பான். காமம் குறைந்திருப்பின், மகன் சத்துவகுணம் மிக்கிருப்பான். காமம் மிகுதலும் குறைதலும் இன்றி அளவிற்பட்டதாக இருப்பின், மகன் இராசதகுணம் மிக்கிருப்பான். இம்முத்திறத்து மைந்தருள் சத்துவ குணம் மிக்கவன் அரசனாதற்கும் உரியவனாவான்.
=================================================
பாடல் எண் : 9
ஏயங் கலந்த இருவர்தஞ் சாயற்றுப்
பாயுங் கருவும் உருவா மெனப்பல
காயங் கலந்தது காணப் பதிந்தபின்
மாயங் கலந்த மனோலய மானதே.

பொழிப்புரை :  காமம் பொருந்திய ஒருவனும் ஒருத்தியுமே பற்றுக் கோடாக நின்று அவரின் நீங்கிப் பாய்கின்ற கருமுதற் பொருள்கள், பின்பு கருப்பதிந்து உருவாதற் பொருட்டுப் பதிவிற்கு முன்பே அப்பொருள்களில் அவர் உடம்புகளிலே பல கூட்டுப்பொருள்கள் வந்துசேர, கருப் பதிந்தபின் அக்கருவிற்குக் குணங்கள் மேற்கூறிய முறையில் அமையும்.
=================================================
பாடல் எண் : 10
கற்பத்துக் கேவலம் மாயாள் கிளைகூட்ட
நிற்குந் துரியமும்பே தித்து நினைவெழ
வற்புறு காமியம் எட்டாதல் மாயேயம்
சொற்புறு தூய்மறை வாக்கினாஞ் சொல்லே.

பொழிப்புரை :  கருப்பையுள் முதற்கண் அதீத நிலையில் உள்ள குழவிக்குப் பின் `மாயை` (அசுத்த மாயை) என்பவள் தனது சுற்றமாகிய வித்தியா தத்துவங்களைச் சேர்ப்பிக்கத் துரிய நிலையைப் பெறும். பின்பு அத் துரிய நிலையும் நீக்கிச் சுழுத்தி சொப்பன சாக்கிரங்களாகிய நிலைகள் கூடுமாறு வலிமை மிக்க வினைப் பயன்களாகிய `தன்மம், ஞானம், வைராக்கியம், ஐசுவரியம், அதன்மம், அஞ்ஞானம், அவைராக்கியம், அநைசுவரியம்` என்னும் பாவங்கள் எட்டும் மாயேயமாய்ப் பொருந்தும். அதனால், குழவி தனது வினை நுகர்ச்சிக்குரிய தன்மைகள் யாவும் நிரம்பப் பெறும்.
=================================================
பாடல் எண் : 11
என்பால் மிடைந்து நரம்பு வரிக்கட்டிச்
செம்பால் இறைச்சி திருந்த மனைசெய்து
இன்பால் உயிர்நிலை செய்த இறையோங்கும்
நன்பால் ஒருவனை நாடுகின் றேனே. 

பொழிப்புரை :  எலும்புகளைக் கழிகளாகவும், நரம்புகளைக் கயிறுகளாகவும், குருதியாகிய நீராற் பிசைந்த இறைச்சியாகிய மண்ணைச் சுவர்களாகவும் பொருந்த அமைத்து, உயிர் இன்புற்று வாழ்தற் பொருட்டு இல்லம் ஒன்றை ஆக்கி, அளித்த, நீதி மிக்கவனாம் நல்லவனாகிய ஒருவனை (சிவபெருமானை) நான் நினைக்கின்றேன்.
=================================================
பாடல் எண் : 12
பதஞ்செய்யும் பால்வண்ணன் மேனி பகலோன்
இதஞ்செய்யும் ஒத்துடல் எங்கும் புகுந்து
குதஞ்செய்யும் அங்கியின் கோபந் தணிப்பான்
விதஞ்செய்யு மாறே விதித்தொழிந் தானே. 

பொழிப்புரை :  கருவிற்குத் தூலதேகம் அமைந்த பின்னர் தாயது சந்திரகலையாகிய மூச்சுக் காற்றுச் சூரிய கலையொடு மாறு கொள்ளாமல் இயங்கிக் குழவியது தூலதேகம் முழுதும் பரவிக் குளிர்ச்சியைத் தந்து வளரப்பண்ணும். அவளது சூரிய கலையாகிய மூச்சுக் காற்றும் அவ்வாறே சென்று குழவியின் உடலில் வெப்பத்தை உண்டாக்கி அதனை அழியாதிருக்கச் செய்யும். இவ்வாறு அவ்விரு வகைக் காற்றினையும் சிவபெருமான் தாயது மூலத்தின்கண் உள்ள வெப்பம் மிக்கெழாது அளவில் நிற்குமாறு அமைக்கின்றான்.
=================================================

பாடல் எண் : 13
ஒழிபல செய்யும்வினையுற்ற நாளே
வழிபல நீராட்டி வைத்தழு வாங்கிப்
பழிபல செய்கின்ற பாசக் கருவைச்
சுழிபல வாங்கிச் சுடாமல்வைத் தானே. 

பொழிப்புரை :  :  கருவினுள் வீழ்ந்த உயிர் அவ்விடத்தே இறக்கும் ஊழ் உளதாயின், பதிந்த கருவைச் சிவபெருமான் பலநிலைகளில் பல்லாற்றான் அழிந்தொழியச் செய்வான். அவ்வாறின்றிப் பிறந்து வாழும் ஊழ் உளதாயின், இடையூறுகள் பலவற்றால் தாக்கப்படுகின்ற வினைக்கட்டுடைய அக்கருவைச் சிவபெருமான் அது பிறப்பதற்கு முன்னுள்ள இடைக்காலத்தில் சுழிகளில் அகப்படாது ஆற்றில் நீராட்டுதல் போலவும் எரிகின்ற வைக்கோற் குவையிலிருந்து வாங்கிச் சுடாது வைத்தல் போலவும் தாயது வயிற்றில் உள்ள நீராலும், நெருப்பாலும் அழியாது காப்பான்.
=================================================
பாடல் எண் : 14
சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்
அக்கிர மத்தேதோன் றும்மவ்வி யோனியும்
புக்கிடும் எண்விரல் புறப்பட்டு நால்விரல்
அக்கரம் எட்டும்எண் சாணது வாகுமே. 

பொழிப்புரை :  தந்தையது வெண்டுளி தோன்றும் நரம்பு வழியாகப் போந்த வெண்டுளியும், அவ்வாறே தாயது செந்துளி தோன்றும் நரம்பு வழியாகப் போந்த செந்துளியும் கலந்து, பன்னிரண்டு அங்குலமாகிய தாயது மூச்சுக்காற்றில் நான்கு அங்குலம் புறத்தே போந்தொழிய, எட்டங்குலமே உட்புகுதலால், அக்கரு தனது கையால் எண்சாண் அளவினதாய் வளரும்.
=================================================
பாடல் எண் : 15
போகத்துள் ஆங்கே புகுந்த புனிதனும்
கோசத்துள் ஆகங் கொணர்ந்த கொடைத்தொழில்
ஏகத்துள் ஆங்கே இரண்டெட்டும் மூன்றைந்தும்
மோகத்துள் ஆங்கொரு முட்டைசெய் தானே. 

பொழிப்புரை :  ஒருவன், ஒருத்தி ஆகிய இருவரது இன்பநுகர்ச்சிக் காலத்தில் கருவைத் தோற்றுவிக்கப் புகுந்த சிவபெருமான், அவ்வொருத்தியது கருப் பையினுள் ஓர் உடம்பைக் கொணர்ந்து வைத்த கொடைத் தொழிலாலே வெள்ளிய துளிகள் பலவற்றுள் ஒரு துளியின்கண்ணே முப்பத்தொரு கருவிகள் ஆகிய மாயா காரியங்கள் சேர, அவற்றால் முதற்கண் ஒரு பிண்டத்தை அமைக்கின்றான்.
=================================================
பாடல் எண் : 16
பிண்டத்தி னுள்ளுறு பேதைப் புலன்ஐந்தும்
பிண்டத்தி னூடே பிறந்து மரித்தன
அண்டத்தி னுள்ளுறு சீவனும் அவ்வகை
அண்டத்து நாதத் தமர்ந்திடுந் தானே.
பொழிப்புரை :  உடம்பிலே பொருந்தியுள்ள மயக்கத்தை உடைய ஐம்பொறிகளும் அவ்வுடம்பையே என்றும் பற்றுக்கோடாகக் கொள்கின்றன. அதுபோலவே முட்டை வடிவாகத் தோன்றும் கருவைப் பற்றியுள்ள உயிரும் அக்கருவையே பற்றுக்கோடாகக் கொண்டு தாயின் கருப்பைக்குள் இருக்கும்.
=================================================
பாடல் எண் : 17
இலைப்பொறி யேற்றி யெனதுடல் ஈசன்
அலைப்பொறி யிற்கரு ஐந்துடல் நாட்டி
நிலைப்பொறி முப்பதும் நீர்மை கொளுவி
உலைப்பொறி ஒன்பதில் ஒன்றுசெய் தானே. 

பொழிப்புரை :  எனது உடலில் நிற்கின்ற சிவபெருமான் ஒவ்வோர் உயிர்க்கும் கருவில் அதன் விதியாகிய எழுத்தோலையைத் தலையிலே வைத்து, தானே இயங்குதல் உடைய யந்திரம் போன்ற ஐந்து உடல்களை நிலைபெறச் செய்தளித்து, அவ் ஐந்துடல்களில் வேறு பட்ட, நிலையான முப்பது கருவிகளை அமைத்து, ஒன்பது வாய்களை உடைய ஒரு துருத்தியைச் செய்து தருகின்றான்.
=================================================
பாடல் எண் : 18
இன்புற் றிருவர் இசைவித்து வைத்தமண்
துன்பக் கலசம் வனைவான் ஒருவனே
ஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு
வெந்தது சூளை விளைந்தது தானே. 

பொழிப்புரை :  :  ஒருவனும், ஒருத்தியும் ஆகிய இருவர் இன்பம் நுகர்தற்கண் பொருந்த வைக்கும் மண்ணால் துன்பத்திற்கு ஏதுவான கலங்கள் பலவற்றையும் செய்பவன் ஒருவனே. அப் பலகலங்கள் ஆவன, நீர்ச்சால்கள் ஒன்பதும், அவற்றில் நீரை முகந்து ஆள்கின்ற கலயங்கள் பதினெட்டுமாம். இவ்வாறு குயவனது சூளை கலங்களை உருவாக்கிற்று. அதனாலே கலங்கள் உளவாயின.
=================================================
பாடல் எண் : 19
அறியீ ருடம்பினில் ஆகிய ஆறும்
பிறியீரதனில் பெருகுங் குணங்கள்
செறியீர் அவற்றினுட் சித்திகள் இட்ட
தறிவீர் ஈரைந்தினு ளானது பிண்டமே. 

பொழிப்புரை :  உலகீர், வாழ்க்கையில் வரும் நிகழ்ச்சிகளாகிய ஆறும் கருவிலே அமைக்கப்பட்டன என்பதை அறியமாட்டீர். அதனால், அவற்றில் அழுந்துதலின்றி நீங்கமாட்டீர். அவ்வுடம் பிற்றானே நல்லன பல பெருகுமாற்றையும், சிவபெருமான் அந்நல்லனவற்றால் பல பயன்கள் விளைய வைத்திருத்தலையும் உணர்ந்து அடையமாட்டீர்; ஆயினும், நீவிர் அனைவீரும் பிண்டமாகிய உங்கள் உடம்புகள் தாயர்தம் வயிற்றில் பத்துமாதம் தங்கி வளர்ந்து வந்ததை அறிவீர்கள்.
=================================================
பாடல் எண் : 20
உடல்வைத்த வாறும் உயிர்வைத்த வாறும்
மடைவைத்த ஒன்பது வாய்தலும் வைத்துத்
திடம்வைத்த தாமரைச் சென்னியுள் அங்கிக்
கடைவைத்த ஈசனைக் கைகலந் தேனே.

பொழிப்புரை :  சிவபெருமான், உடலை அமைத்து, அதில் உயிரைக் கூட்டிய குறிப்பை உணர்ந்து, அவ்வுடல் நிலை பெறுதற் பொருட்டு அதில் நீர்மடைபோல் உள்ள ஒன்பான் துளைகளையும் அமைத்து, உறுதிப்பாடுள்ள நெஞ்சத் தாமரையின் மேல் தனது உருவத்தைத் தீயின் முனைபோல வைத்துள்ள அவனையே கூடி நான் இன்புறுகின்றேன்.


Offline Anu

இரண்டாம் தந்திரம் –பதிக எண்:14. கர்ப்பக் கிரியை

(பாடல்கள்: 21-40/40)


பகுதி-II

பாடல் எண் : 21
கேட்டுநின் றேன்எங்குங் கேடில் பெருஞ்சுடர்
மூட்டுகின் றான்முதல் யோனி மயனவன்
கூட்டுகின் றான்குழம் பின்கரு வைஉரு
நீட்டிநின் றாகத்து நேர்பட்ட வாறே.
 
பொழிப்புரை :  நான்கு வேத சிவாகமங்கள் அனைத்திலும் கேட்டு நின்றது, `என்றும் அழிவில்லாத பேரொளியாகிய சிவபெருமானே உலகனைத்திற்கும் முதற்காரண வடிவாய் நின்று அவற்றைக் கோக்கின்றான்` என்பது. எனவே, தாயது வயிற்றில் நெகிழ்ந்துபட்ட கருவை உறுதிப்படுத்தி உருவாக அமைப்பவன் அவனே. ஆதலின், தந்தை தாயாரது உடற்கூட்டம் அவனது செய்கைக்கு ஒரு கருவியாய் அமையும் அளவேயாம்.
==============================================
பாடல் எண் : 22
பூவுடன் மொட்டுப் பொருந்த அலர்ந்தபின்
காவுடைத் தீபங் கலந்து பிறந்திடும்
நீரிடை நின்ற குமிழி நிழலதாய்ப்
பாருடல் எங்கும் பரந்தெட்டும் பற்றுமே. 

பொழிப்புரை :  தாய் தந்தையரது கூட்ட உறுப்புக்கள் தம்மிற் கூடிய காலத்து முன்பு தந்தையுடலில் நின்ற கரு, தாயது கருப்பையுட் சென்று கலந்து முட்டை (பிண்டம்) ஆகும். அம்முட்டையினுள் நீர்க்குமிழியில் நிழல்போல நுண்ணுடம்புக் கருவிகள் எட்டும் பருவுடல் எங்கும் பரந்து அதனைத் தாங்கி நிற்கும்.
==============================================
பாடல் எண் : 23
எட்டினுள் ஐந்தாகும் இந்திரி யங்களும்
கட்டிய மூன்று கரணமு மாய்விடும்
ஒட்டிய பாச உணர்வென்னுங் காயப்பைக்
கட்டி அவிழ்த்திடுங் கண்ணுதல் காணுமே.
 
பொழிப்புரை :  நுண்ணுடம்புக் கருவிகள் எட்டனுள் தன் மாத் திரைகள் ஐந்தனையும் புலன்களாகக் கொள்கின்ற ஞானேந்திரியங்கள் ஐந்தும், அப்புலன்களைத் தம்பால் பற்றிக் கொள்கின்ற, எஞ்சிய `மனம், அகங்காரம், புத்தி` என்கின்ற அந்தக்கரணங்கள் மூன்றும் கூடிய உடம்பென்னும் பையினுள் உயிர் என்கின்ற சரக்கைச் சிவபெருமான் முன்னர்க் கட்டிவைத்துப் பின்னர் அவிழ்த்து விடுவான்.
==============================================
பாடல் எண் : 24
கண்ணுதல் நாமங் கலந்துடம் பாயிடப்
பண்ணுதல் செய்து பசுபாசம் நீக்கிட
எண்ணிய வேதம் இசைந்த பரப்பினை
மண்முத லாகவகுத்துவைத் தானே.
 
பொழிப்புரை :  உயிர்கள் தூலமும், சூக்குமமும் ஆய உடம்புகளையே உடம்பாகப் பற்றிநில்லாது, சிவபெருமானது திருப்பெயராகிய திருவைந்தெழுத்தே தம்முள் ஒன்றித் தமக்கு உடம்பாகுமாறு அதனை மொழிதல் (வாசகம்), முணுமுணுத்தல் (உபாஞ்சு), கருதல் (மானதம்), உணர்தல் (சுத்தமானதம்) என்னும் முறைகளில் கணித்து (செபித்து)ப் பாசங்களினின்றும் நீங்குமாறு வேதம் முதலாகப் பொருந்திய பரந்த நூல்களை மண்ணுலகம் முதலிய எல்லா உலகங்களிலும் வகுத்து வைத்துள்ளான்.
==============================================
பாடல் எண் : 25
அருளல்ல தில்லை அரன்அவன் அன்றி
அருளில்லை யாதலின் அவ்வோர் உயிரைத்
தருகின்ற போதிரு கைத்தாயர் தம்பால்
வருகின்ற நண்பு வகுத்திடுந் தானே.
 
பொழிப்புரை :  அருளின்றிச் சிவன் இல்லை. சிவனின்றி அருள் இல்லை. ஆகவே, என்றும் அருளோடே நிற்கின்ற அவன், கருவில் வீழ்கின்ற அந்த ஒர் உயிரை வளர்க்கத் தருகின்ற பொழுது திரோதான சத்தி, அதனை வளர்க்கின்ற செவிலித் தாய் என்னும் இரு தாயாரிடத்து அன்பை உண்டாக்கித் தருவான்.
==============================================
பாடல் எண் : 26
வகுத்த பிறவியை மாதுநல் லாளும்
தொகுத்திருள் நீக்கிய சோதி யவனும்
பகுத்துணர் வாகிய பல்லுயிர் எல்லாம்
வகுத்துள்ளும் நின்றதோர் மாண்பது வாமே.
 
பொழிப்புரை :  பாசஞானத்தைத் தருகின்ற உடம்பை வளர்க்கின்ற அம்மையும், நூல்களை மிக உணர்த்திப் பாச ஞானத்தைப் போக்கிப் பசுஞான பதிஞானங்களைத் தருகின்ற அப்பனும் செய்யும் செயல்களாவன முறையே, ஐம்புலன்களைப் பகுத்துணரும் வகையில் உயிர்கட்குப் பலவகைப் பிறப்புக்களைத் தருதலும், அவற்றின் அறிவுக்கறிவாய் நிற்றலைப் புலப்படுத்துதலும் ஆகும்.
==============================================
பாடல் எண் : 27
மாண்பது வாக வளர்கின்ற வன்னியும்
காண்பது ஆண்பெண் அலியென்னுங் கற்பனை
பூண்பது மாதா பிதாவழி போலவே
ஆம்பதி செய்தான்அச் சோதிதன் ஆண்மையே.
 
பொழிப்புரை :  மாட்சிமையோடு கருப்பையுள் வளர்கின்ற கருவைச் சிவபெருமான் செய்வது, `ஆண், பெண், அலி` என்னும் மூவகை அச்சாக. அவ்வச்சுக்கள் அமைவது, மாதா பிதாக்களின் உடற் கூறாகிய காரணப்பொருட்கு ஏற்பவாம். அவற்றிற்கெல்லாம் தக்கவாறே அப்பெருமான் தனது ஆற்றற் பதிவைச் செய்கின்றான்.
==============================================
பாடல் எண் : 28
ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகிற் பெண்ணாகும்
பூணிரண் டொத்துப் பொருந்தில் அலியாகும்
தாண்மிகு மாகில் தரணி முழுதாளும்;
பாணவ மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே.
 
பொழிப்புரை :  கலவியால் கருப்பையுள் கலக்கும் பொருள்களில் ஆண்மகனது வெண்டுளி மிகுந்திருக்குமாயின் பிறக்கும் குழவி ஆணாகும். பெண்மகளது செந்துளி மிகுந்திருக்குமாயின் பிறக்கும் குழவி பெண்ணாகும். இரண்டும் சமமாய் இருக்கின் பிறக்கும் குழவி அலியாகும். அதுவன்றி, மிகுந்துள்ள வெண்டுளியில் உயிராற்றல் மிக்கிருக்குமாயின் பிறக்கும் மகன் ஆற்றல் மிக்கவனாய் அரசாளுதற்கும் உரியவனாவான். அவ்வாறன்றி மிகுந்திருக்கும் செந்துளியில் அழிக்கும் ஆற்றல் மிக்கிருக்குமாயின் பதிந்த கருப்பயனின்றி அழிந்தொழியும்.
==============================================
பாடல் எண் : 29
பாய்ந்தபின் அஞ்சோடில் ஆயுளும் நூறாகும்
பாய்ந்தபின் நாலோடில் பாரினில் எண்பதாம்
பாய்ந்திடும் வாயுப் பகுத்தறிந் திவ்வகை
பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலு மாமே.
பொழிப்புரை :  துணையர் (தம்பதிகள்) கூட்டத்தில் வெண்டுளி கருப்பையினுள் சென்றபின்பும் ஆடவனுக்கு ஐந்து மூச்சு நிகழுங் காறும் இருவரும் பிரியாது முன்போலவே புல்லிக் கிடப்பாராயின், பிறக்கின்ற குழவியது வாழ்நாள் நூறாண்டாக அமையும். நான்கு மூச்சு நிகழுங்காலும் பிரியாதிருப்பாராயின் அஃது எண்பது ஆண்டாக அமையும். இவ்வாறே ஒரு மூச்சிற்கு இருபது ஆண்டாகக் கணக்கிட்டு அறியலாம். ஆயினும், மூச்சுக்களின் கணக்கை உண்மையாக அறிவதோ, மூச்சினை நெறிப்படுத்தி இயக்குதலோ பொதுமக்களுக்கு இயலாது. யோகிகளாயின் அக்கணக்கினை அறியவும், அதன்படி மூச்சினை நெறிப்படுத்து இயக்கவும் வல்லராவர்.
==============================================
பாடல் எண் : 30
பாய்கின்ற வாயுக் குறையிற் குறளாகும்
பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும்
பாய்கின்ற வாயு நடுப்படிற் கூனாகும்
பாய்கின்ற வாயுமா தர்க்கில்லைப் பார்க்கிலே.
பொழிப்புரை :  முன்னை மந்திரத்துள், `அஞ்சு, நாலு` எனக் குறிக்கப்பட்ட மூச்சுக்காற்று அங்ஙனம் இயங்கும்பொழுது இயல்பாக இயங்கும் அளவில் சிறிதே குறையுமாயின், குழவி குறளாய் (வளராது குட்டையாய்க் கிடப்பதாகப்) பிறக்கும். மிகக் குறையுமாயின் குழவி கைகால்கள் முடமாகப் பிறக்கும். இஃது ஆடவரது மூச்சுக் கணக்கேயன்றி மகளிரது மூச்சுக் கணக்கன்று.
==============================================
பாடல் எண் : 31
மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே.
பொழிப்புரை :  கலவிக் காலத்தில், தாயது வயிற்றில், நீங்கற் பாலதாகிய மலம் நீங்காது தங்கியிருக்குமாயின், அவள் வயிற்றில் தந்தையிடமிருந்து வந்து கருவாய்ப் பொருந்திய குழவி, மந்த புத்தி உடையதாய் இருக்கும். நீங்கற் பாலதாகிய நீர் நீங்காது அவள் வயிற்றில் தங்கியிருக்குமாயின், குழவி ஊமையாகும். மலம், நீர் இரண்டுமே நீங்கற்பாலன நீங்காது தங்கியிருக்கின், குழவி குருடாகும்.
==============================================
பாடல் எண் : 32
குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்
குழவி இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவி அலியாகும் கொண்டகால் ஒக்கிலே.
பொழிப்புரை :  கலவிக் காலத்தில் கணவனுக்கு மூச்சுக்காற்று வலமூக்கின் வழி இயங்கிக் கொண்டிருப்பின், குழவி ஆணாய் அமையும். இடமூக்கின் வழி இயங்கிக் கொண்டிருப்பின், குழவி பெண்ணாய் அமையும். இருவழியிலும் மாறி மாறி இயங்கிக் கொண்டிருப்பின் குழவி அலியாய் அமையும். இவை நிற்க, கருத் தங்கும் காலத்தில் தாய் வயிற்றில் கீழ்ப்போகும் காற்றுப் போக்கப் படாமல் தடுக்கப்பட்டு மேலெழுந்து பாயுமாயின், இரண்டு கரு தங்கும்.
==============================================
பாடல் எண் : 33
கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தெழில்
கொண்ட குழவியுங் கோமள மாயிடும்
கொண்டநல் வாயுஇரு வர்க்குங் குழறிடில்
கொண்டதும் இல்லையாம் கோல்வளை யாட்கே.
பொழிப்புரை :  கலவிக் காலத்தில் மூச்சுக் காற்று இருவர்க்கும் வலம், இடம் என்னும் வகையில் ஒருவகையிலே, ஓரளவிலே இயங்குமாயின், தங்கிய கருச் சிதையாது மேற்கூறியவாறு குழவி ஆணும், பெண்ணுமாய் நிலைபெறுதலோடு, அழகாயும் இருக்கும். அவ்வாறின்றி அவர்க்கு மாறி மாறி இயங்கின், தங்கிய கரு பின் நிலைபெறாது அழியும்.
==============================================
பாடல் எண் : 34
கோல்வளை உந்தியிற் கொண்ட குழவியும்
தால்வளை யுள்ளே தயங்கிய சோதியாம்
பால்வளர்ந் துள்ளே பகலவன் பொன்னுருப்
போல்வளர்ந் துள்ளே பொருந்துரு வாமே. 
பொழிப்புரை :  தாய் தனது கருப்பையில் ஏற்றுக்கொண்ட குழவி, முதற்கண் தந்தையது நடுநாடியில் தீயின் கூறாக விளங்கி முதிர்ந்து, பின் தாயது கருப்பையினுள்ளே ஞாயிற்றின் நிறம்போலும் செந்நிறத்தை உடையதாய் முற்றி, அதன்பின்னர், வகைபடத் தோன்றுகின்ற உறுப்புக்களை உடையதாகும்.
==============================================
பாடல் எண் : 35
உருவம் வளர்ந்திடும் ஒண்டிங்கள் பத்தில்
பருவம தாகவே பாரினில் வந்திடும்
மருவி வளர்ந்திடு மாயையி னாலே
அருவம தாவதிங் காரறி வாரே.
பொழிப்புரை :  தங்கிய கருவின் உருவம் பத்துத் திங்கள்காறும் கருப்பையிலே வளரும். பத்தாந்திங்களே பிறக்கும் பருவமாக, அப்பொழுது நிலத்தில் வந்து சேரும். வந்தபின் தாய் தந்தையரைப் புறந்தருபவராகப் பொருந்தி வளரும். அவ்வளர்ச்சி, சுவரெடுத்தல், ஆடைநெய்தல், மாலைதொடுத்தல் முதலியவற்றிற்போலக் கட்புலனாகாது, மாயையினாலே கணந்தோறும் நிகழ்தலை ஒருவரும் காணவல்லரல்லர்.
==============================================
பாடல் எண் : 36
இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள்
தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்திலன்
பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்
கெட்டேன் இம்மாயையின் கீழ்மைஎவ் வாறே!
பொழிப்புரை :  கருவை இட்டவனாகிய தந்தையும் அதனை இட்டமை இடாமைகளை அறிந்தானில்லை. ஏற்றவளாகிய தாயும் அதனை ஏற்றமை ஏலாமைகளை அறிந்தாளில்லை. அக்கருவாகிய பொன்னைக் குழவியாகிய அணியாக்குகின்ற பொற்கொல்லனாகிய பிரமன் அவற்றை அறிந்திருந்தும் அவருள் ஒருவர்க்கும் சொல்லிற்றிலன். வினை நிகழ்ச்சி இருந்தவாறே அப்பொற் கொல்லனுக்குப் பணிக்கின்ற தலைவனாகிய சிவனும் அவ்விருவரோடே இருக்கின்றான்; அவனும் அவர்க்கு அவ் வினையியல்பையே உரைத்திலன். அந்தோ! இம்மாயையின் வஞ்சனை எவ்வகையினதாய் உள்ளது!
==============================================
பாடல் எண் : 37
இன்புற நாடி இருவருஞ் சந்தித்துத்
துன்புறு பாசத்தில் தோன்றி வளர்ந்தபின்
முன்புற நாடி நிலத்தின்முன் தோன்றிய
தொண்புற நாடிநின் றோதலு மாமே 
 
பொழிப்புரை :  ஒருவன், ஒருத்தி ஆகிய இருவர் தம்முள் இன்பம் நுகரவே விரும்பிக் கூட, துன்பத்திற்குக் காரணமான அவ்விருப் பத்தால் ஓர் உயிர் பிறந்து வளர்ந்தபின், அவ்வுயிர், தான் நிலத்தில் வந்து சேர்தற்கு முன்பு கருப்பையினுள் உள்ள துன்பத்தால் `விரைவில் வெளிப்படல் வேண்டும்` என்று விரும்பிப் பெரிதும் முயன்று வெளிப்பட்டுப் பிறந்த செய்தியைப் பின் அறிவுடையோர் அவ்வுயிரும் தம்போல அறிவைப் பெறுமாறு அதற்குச் சொல்லுதல் கூடுமோ!
==============================================
பாடல் எண் : 38
குயிற்குஞ்சு முட்டையைக் காக்கைக்கூட் டிட்டால்
அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின் றதுபோல்
இயக்கில்லை போக்கில்லை ஏனென்ப தில்லை
மயக்கத்தால் யாக்கை வளர்க்கின்ற வாறே.
 
பொழிப்புரை :  குயிற்குஞ்சாகத் தக்க முட்டையை அவ்வாறாதற் பொருட்டு அதன் தாய் காக்கையினது கூட்டில் இட, காக்கை அதனைச் சிறிதும் வேறாக நினையாது தன் முட்டை என்றே கருதி அடை காத்தல்போல, சிவன் தனது மகவாகிய உயிர், உடல் பெற்றுச் செயற்படுதற் பொருட்டுக் கருவிலே இட, தாய் அதனைச் சிறிதும் வேறாக நினையாது, உடல் வருந்தத் தொழில் செய்யாமலும், அதனைப் போக்கிவிட நினையாமலும், `ஏன் வந்தது` என்று மனம் வருந்தாமலும் பேணிக் காத்தல் மயக்கத்தாலாவதே.
==============================================
பாடல் எண் : 39
முதற்கிழங் காய்முளை யாய்அம் முளைப்பின்
அதர்ப்புத லாய்ப்பல மாய்நின் றளிக்கும்
அதற்கது வாய்இன்ப மாவது போல
அதற்கது வாய்நிற்கும் ஆதிப் பிரானே.
பொழிப்புரை :  மரவகைகளுள் சில, கிழங்காய் நின்றே பயன்படும்; சில, முளையானபின் பயன்படும்; சில, முளைக்குப் பின் புதலாய் நின்று பயன்படும்; சில, காய்த்துப் பழமாய்ப் பயன்படும். அந்த அந்த மரவகைக்கு அந்த அந்தப் பொருளே உளதாகிப் பயன் தருதல்போலச் சிவபெருமான் மக்கள் உயிர்க்கேயன்றிப் பிற உயிர்கட்கும் அவ்வவற்றின் தோற்றத்திற்கு ஏற்ப அத்தோற்றப் பொருள்களாய் நின்று அவற்றைத் தோற்றுவிப்பன்.
==============================================
பாடல் எண் : 40
பரத்திற் கரைந்து பதிந்தநற் காயம்
உருத்தரித் திவ்வுடல் ஓங்கிட வேண்டின்
திரைக்கடல் உப்புத் திரண்டது போலத்
திரித்துப் பிறக்குந் திருவரு ளாலே.

பொழிப்புரை :  உலகம் ஒடுங்குங் காலத்து உடம்பும் பல தத்துவங்களாய் ஒடுங்கி, முடிவில் எல்லாவற்றுடனும் மாயையில் ஒடுங்கும். ஒடுங்கிய உடல் மீளவும் முன்போலத் தோன்றுதல் வேண்டும் எனச் சிவபெருமான் திருவுளம் கொள்ளின், கடல் நீரில் தோன்றாது நின்ற உவர்ப்புச் சுவை பின் தோன்றி நிற்கும் உப்பாகத் திரண்டு உருவெடுத்தல்போல, அவனது திருவருட் செயலாலே மீளவும் முன்போலத் தோன்றும்.