Author Topic: பாவ மன்னிப்பு!!!  (Read 1696 times)

Offline Yousuf

பாவ மன்னிப்பு!!!
« on: July 19, 2011, 04:00:02 PM »
அல்லாஹ்வின் ஏவல் விலக்குகள் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் பின்பற்றவேண்டும். பிறந்ததிலிருந்து இன்று வரை நாம் சின்னதும் பெரியதுமாக பெரும் பாவங்களையும் தவறுகளையும் செய்துள்ளோம். இதற்கெல்லாம் இறைவனிடத்தில் நாமெல்லாம் கணக்கு தீர்க்கவேண்டி உள்ளது. மரணமடைவதற்கு முன்னால் கணாக்கு தீர்க்க வேண்டாமா? படைத்த இறைவனிடத்தில் பாவ மன்னிப்பு கேட்க வேண்டாமா?

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேளுங்கள்; அவன் பால் திரும்புங்கள்; என்னைப் பாருங்கள்! நான் ஒரு நாளைக்கு நூறு தடவை பாவ மன்னிப்பு கோரி இறைஞ்சுகிறேன். அறிவிப்பவர்: அகர் பின் யஸார்(ரலி) நூல்: முஸ்லிம்

    ஒரு மனிதர் தலையில் கனமான சுமை ஒன்றை நெடுந்தூரம் கொண்டு செல்கிறார் என்று நினைத்துக்கொள்ளுங்கள். அந்த கனமான சுமையை அந்த மனிதர் கீழறக்கி வைக்கும் போது அவருக்கு கிடைக்கும் ஆனந்தம், மன சமாதானம், மகிழ்ச்சி இவற்றை வார்த்தைகளால் கூற முடியாது. நம்மைப் படைத்த இறைவனிடத்தில் பாவங்களுக்காக தவறுகளுக்காகப் பாவ மன்னிப்பு கேட்காமல் அலட்சியமாய் இருக்கின்றோம்.

        நாம் வாழ்க்கையில் நம் தவறுகளுக்காக படைத்த இறைவனிடத்தில் திரும்பி கண்ணீர் விட்டு அடிமனதில் இருந்து எழும் கவலையோடு படைத்த இறைவனிடத்தில் பாவமன்னிப்புக் கேட்கிறோமா? இல்லை நாளை மறுமை வாழ்க்கையை எண்ணி கண்ணீர் விட்டு அழுதிருக்கிறோமா? இல்லை அந்த கப்ரின்(மண்ணறையின்) நிலையை எண்ணி கவலைப்பட்டு கண்ணீர் விட்டிருக்கிறோமா?

    ஆனால் நாம் கண்ணீர் விட்டது உண்மையாக எதற்கென்றால் நம் குடும்பத்தில் சகோதரனோ, குடும்பத்தினரோ வெளிநாடு செல்ல வேண்டும். அப்போதுதான் கண்ணீர் விடுவோம்; உள்ளம் குமுறுவோம். ஆனால் நம் பாவங்களுக்காக கண்ணீர் விட்டு உள்ளம் குமுறி இருக்கிறோமா? இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால்) இனியாவது கண்ணீர் விட்டுக் கொண்டே பாவமன்னிப்பு கேட்போமா?

    வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும் எல்லா நிமிடங்களிலும் தவறு செய்பவர்கள் நாம்; நம்மை அறிந்தோ அறியாமலோ செய்த தவறுக்கு பரிகாரம் என்ன? நம் உடம்பில் தூசியோ சேறோ ஒட்டிக்கொண்டால் உடன் சுத்தப்படுத்துகிறோமே, அதே மாதிரி எந்த நிமிடம் தவறு செய்து விட்டோம் என்ற எண்ணம் நமக்கு வந்து விட்டதோ, அந்த நிமிடமே படைத்த இறைவனிடத்தில் அழுது பாவ மன்னிப்பு கேட்க திரும்பவேண்டும்.

    ஆதம்(அலை) ஹவ்வா(அலை) பாவமன்னிப்பு கோரியதை பாருங்கள்.

    அதற்கு எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்து விட்டோம்; நீ எங்களை மன்னித்து கிருபை செய்யாவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தோர்களாகி விடுவோம் என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 7:23)

    நபி ஆதம்(அலை), ஹவ்வா(அலை) பாவமன்னிப்பை இரவன் ஏற்றுக்கொண்டான். அவர்களிலிருந்தும் தாம் செய்தது பாவம் என்று தெரிந்ததும், அல்லாஹ் கற்றுத் தந்தபடி பாவமன்னிப்பு கோறினார்கள். அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்தான். (அல்குர்ஆன் 2:37)

     பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளை கற்றுக்கொண்டார் (இன்னும் அவற்றின் மூலமாக இறைவனிடம் மன்னிப்பு கோரினார்) எனவே இறைவன் அவரை மன்னித்தான். நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும், கருணையுடையோனும் ஆவான். (அல்குர்ஆன் 2:37)

    இன்னும் சிலர் இது நாள் வரை தொழாமலும் பாவ மன்னிப்பு கேட்காமலும் இருந்து விட்டேன். இப்படியே இருந்து விட்டு போகிறேன் என்று இறைவனிடத்தில் நம்பிக்கையிழந்து விடுவதையும் பார்க்கிறோம். ஆனால் அல்லாஹ் கூறுவதைப் பார்ப்போம்.

    என் அடியாளர்களே! எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்து கொண்டபோதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் நம்பிக்கை இழந்து விடவேண்டாம். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன், மிக்க கருணையுடைவன் என்று நபியே நீர் கூறுவீராக. (அல்குர்ஆன் 39:53)

    முச்சு தடுமாறுவதற்கு முன்பு வரை மனிதனின் பாவமன்னிப்பு கோரலை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல்: திர்மிதி

    நிச்சயமாக அல்லாஹ் தன் அடியாளர்களிடமிருந்து தவ்பாவை – மன்னிப்பு கோருதலை ஒப்புக் கொள்கிறான் என்பதையும், தர்மங்களை அங்கீகரிக்கிறான் என்பதையும் அவர்கள் அறியவில்லையா? மெய்யாகவே அல்லாஹ் தவ்பாவை(பாவமன்னிப்பு கோரலை) ஏற்று அருள் புரிபவன்.
(அல்குர்ஆன் 9:104)


    அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு தேடாமல் இது நாள் வரை இருந்தவர்கள் இனியாவது அவர்கள் செய்த தவறுகளுக்காக மனம் வருந்தி திருந்தி வாழ முற்படவேண்டும்.

    எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும் அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன், காஃபிரான(இறை நிராகரிப்பு) கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக! (அல்குர்ஆன் 2:286)