FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on November 16, 2020, 06:50:11 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 249
Post by: Forum on November 16, 2020, 06:50:11 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 249
இந்த களத்தின்இந்த  நிழல் படம்  FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

(http://friendstamilchat.org/Forummedia/forumimages/OU/249.gif)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 249
Post by: MoGiNi on November 16, 2020, 08:31:53 PM
இந்த
மழை நாளின்
சில்லீர்ப்புகள்
ஏனோ
உன் நினைவுகளின்
ஈர்ப்பை எய்திருக்கவில்லை ..

ஏதிலியாய்
இரவுகளை
எந்திக் கழிக்கிறேன்
உன் நினைவு முகங்களில்
என் பொழுதுக்கான
புரிதல்களின் தேடல் ..

புன்னகைக்கிறாய்
புல்லரிக்கச் செய்கிறாய்
நம் புரிதல் பற்றி
பொழுதெல்லாம் பேசுகிறாய்
வெட்கம் நிரம்பி வழிகின்ற
வேட்கை குரல் ததும்பி
உன்
விரல் பிடித்து கூறுகிறேன்
நீ வேண்டும் எனக்கு ...

நாசி துவரதுள் புகும்
உன் நினைவு சுமந்த
தென்றல் காற்றும்
ஊசியாய் உள் புகுந்து
என் சுவாசப் பையை
சல்லடைகளாய் துளைத்து செல்கிறது

மெல்லிய தூறலென
உன் ஓரக் கண் பார்வைக்குள்
உறைந்து சிலிர்க்கிறது
என் வெட்கப் பதுமை
சிறு புன்னகை தவழ்ந்த
உன் உதட்டு சுழிப்பில்
அமிழ்ந்துகொண்டிருகிறேன் ..

இந்த இரவுகளை
உன் நினைவு முகங்களால்
நிரப்பி ...
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 249
Post by: thamilan on November 16, 2020, 09:48:31 PM
குடையோடு அவளும்
மழையோடு நானும்
வந்து கொண்டிருந்தோம்
கருணையாய் வந்த காற்று
பறித்துக் கொண்டது
நான் எதிர்பார்த்தது போல
அவள் குடையை

மழையில் அவள் நனைய
குளிரில் நடுங்கியது எனதுடம்பு
ஆனந்தமாக அவளை தழுவும்
மழையைக் கண்டு
உடம்பை சிலிர்த்தன
சாலையோர மரங்கள்

தலைகுனிந்து நடந்தவள்
சற்றே தலைதூக்கி
ஓரக்கண்ணால் பார்த்து
மெலிதாக சிரித்ததும்
மின்னல் வெட்டியது என்மனதில்
சில்லெண்டிருந்தது  அவள் பார்வையா- இல்லை
ஈரக்காற்றா   தெரியவில்லை  எனக்கு

அவள் அழகைக்கண்டு
மின்னல் கூட கண்சிமிட்டிச் சென்றது
இடித்த இடி கூட
அவள் நடையை கண்டு
கைதட்டி ஆரவாரம் செய்தது போலிருந்தது 

அவளைத்  தழுவிய மழைநீர்
ஆனந்தமாக துள்ளிக் குதித்தோடியது 
தரையில்- அதை கண்ட மரஇலைகள்
வெட்கத்தால் தலைகுனிந்தன

ஈரமண்ணில் கோலம் போடுவது
மழைத்துளிகளா இல்லை அவள் பாதங்களா
ஈரமண் தரையில் பதிந்த
அவள் காலடிச் சுவடுகள்
மழைநீர் பட்டு அழிந்தாலும்
இன்னும் அழியாமல் இருக்கிறது
அவள் நினைவுச்சுவடுகள்
என் மனதில்

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 249
Post by: AgNi on November 17, 2020, 08:29:00 AM

மழை கால மேகங்கள் எப்போதும்
மனதின் கோலங்களை கிளறி விட்டு போகும் !

அன்று ஒரு காலத்தில் ...

வெளியே கொட்டும் மழையை  வீட்டுக்குள்ளயே ரசித்தோம் !
அழகான சிறு துளிகள் பொட்டு பொட்டு  என்று
விழும் இடங்களில் பாத்திரங்களை வைத்து
ஜலதரங்கம் வாசிக்க கேட்டு மகிழ்ந்தோம் !

பள்ளி சாலைகளில் துள்ளி விளையாடியபோது
சில் என்ற சாரல்களில் சிலிர்த்து சிரித்தோம் !
அடைமழை காலத்திலும் அன்றாடம் பள்ளி முடிந்து
குடை சீலையில்  குளிர்ந்து வீடு வந்து  சேர்ந்தோம் !

சரசர என பெய்யும் கல்லூரி    வாசல்களில் ..
தர தர வென மைதானங்களில் மழை நனைந்து 
மண் வாசனை பிடித்து பூவாசனை அறிந்தோம் !காதல்
பெண் வாசனை பிடிக்கும்   காளையரை தள்ளி இருந்தோம் !

மழலையின் குரலாய் தித்திக்கும் ஒரு நாள் ..
குழலலாய் கூவிஇனிமை   பொழியும் ஒரு நாள் ...
புயலாய் பொங்கிகோபமாய்  குமுறும் ஒரு நாள் 
குமரியின் கண்ணீராய்  சீறி சீரழிக்கும்   ஒரு நாள் ...

வானுக்கும் மண்ணுக்கும் பிறந்த மழை குழந்தையால்
நூலுக்கும் சேலைக்கும் இருக்கும்   பந்தம் போல 
ஆற்றிலும் ஊற்றிலும்  பொங்கும் நீரை அணைகட்டி
நாற்றில் சேர்த்து நெல் வயலை பொன்வயலாக்குவோம் !

கருவறை முதல் கல்லறை வரை கூடவே வரும் நீரை
கனவிலும் போற்று கடைசிவரை காப்பாற்றும் !
அகிலம் முழுதும் வாழவைக்கும் மழைநீரே!
சகலமும் நீரே !சரண் அடைந்தோம் உம்மிடம் !


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 249
Post by: JsB on November 17, 2020, 12:59:51 PM
இயற்கையில் பிறந்த மழையே...
அடை மழையே...
நீ அடைத்த கதவு
திறக்காத மழையே...
காண மழையே...
என் கண்ணைக் கொள்ளைக் கொண்ட
பெரு துளி மழையே...

நிறம் இல்லாத மழையே...
வாசனை இல்லா மழையே...
வடிவம் கூட இல்லா மழையே...
நீ வந்தாலே...
நான் காதலிக்கும்
பூமிக்கு கொண்டாட்டமே...
உன்னால் மண் வாசனையை
முகர்ந்து பார்க்கிறேன்...

இனி நான் வாழும் இவ்வுலகம்
உன்னால் ஜலப் பிரயத்தில் அழிவதில்லை
என்பது தேவனின் வாக்குத்தத்தமே...
அதை நினைவுப் படுத்தவே 
வானத்தில் வானவில் வண்ணங்களால்
அலங்கரித்து செல்கிறது...

அழகுக்கே அழகு சேர்க்கும்
இயற்கை அன்னையின்
அழகிய மழையே...
உன்னை ரசிக்கின்ற
என் கண்களுக்கு மட்டும் ஏனோ...
இன்றுவரை ஓய்வில்லை...

நான் வாழும் பூமியில்
வெப்பம் தணிக்க
எனக்காக போர்வையாய் வந்தாயே...
உன்னை அள்ளி அனைத்துக் கொள்ள
துடிக்கிறது என் இதயம்

கொட்டுற மலையில்
நித்தமும் நனைய ஆசையே
ஒய்யாரமாய் சத்தமிட்டு அதட்டுற
இடியின் சத்தம்
என் செவிகளை தாக்கி செல்கிறது
மின்னல் ரகசியமாய் மின்னி 
என்னை படமெடுத்து செல்கிறது

சில்லென்று துளிப்பட...
காற்று மழை வீச...
மரம் செடி கொடி
அதற்கேற்றபடி நடனமாடுகிறது
விண்ணைப் பிளந்து மண்ணிற்கு உதயமாகும்
சொல்லமுடியாத இயற்கையின் அழகி நீ
உன்னை நினைத்து எழுதும்
கவிதை கூட சுகமானதே

உனக்காக தினம் தினம்
இரவு ஜாமத்தில் காத்திருக்கிறேன்...
உன்னை நினைத்து
கவிதை எழுதுவதற்காக அல்ல...
இழுத்து போர்த்தி உறங்குவதற்காக...
வருவாயா...என்னை உறங்க வைக்க
என் காதல் மழையே...
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 249
Post by: இணையத்தமிழன் on November 18, 2020, 08:03:51 PM
ஏர்பூட்டிய உழவனோ
ஏக்கமாய்த்தான் எதிர்பார்க்க
கண்கலங்கிட வான்மகளோ
விண்ணைவிட்டு மண்ணை சேர
ஏரியினை தூர்த்தவனோ
ஏக்கர்கணக்கில் ஏலமிட்டான்
அடுக்கடுக்காய் வீடுகட்டி
அண்ணார்ந்து இருந்தவனோ
மழையைத்தான் ரசித்தானே

மழைக்கும் வெயிலுக்கும்
மறைவாக நின்றவனை
மரம்நடத்தான் மன்றாட
மணிபிளான்ட்டை நட்டுவிட்டு
மார்தட்டி நின்றானே
கானகத்தை அழித்தவனோ
காகிதத்தில் அச்சடித்தான்
மரத்தை காப்போம் மழை பெறுவோமென்று

மாட்டிற்கும் மதமுண்டு 
மரத்திற்கு  யார் உண்டு
இன்றோ மண்குடிக்க நீரில்லை
மரம்வளர்க்க நாதியில்லை
மாசுற்கு இங்கு இடமுண்டு
மாஸ்க்கோடு வலம்வந்து
மாற்றான் முகம் மறந்து
மண்ணிலே வாழ்கிறோம்
மண்ணில் மூழ்கும்வரை

                 - இணையத்தமிழன்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 249
Post by: இளஞ்செழியன் on November 20, 2020, 05:15:22 PM
மறக்க முடியாத
ஓர் குரலோசைக்காக
காத்திருக்கையில்...!
ஓர் திடீர் அழைப்பினை ஏற்படுத்தி, மனம்விட்டுப் பேசி,
இன்பமளிக்க மாட்டார்களா?

தூரமாய் ஒதுங்கி மறைந்து,
ஏக்கச் சிறைக்குள்
தள்ளிவிட்டுச் சென்றவர்கள்...!
ஏதேனும் ஓர் தருணத்தில்
மனமாற்றம் பெற்று,
வந்தடைந்து
சேர்ந்து கொள்ள மாட்டார்களா?

சிறு சிறு தவறுக்கெல்லாம் வெறுத்தொதுக்கி நடப்பவர்கள்...! கொஞ்சமேனும்
இயல்புகளை புரிந்து,
அருகாமை உணர்த்த மாட்டார்களா?

என்றோ ரணங்களோடு
விட்டுச் சென்ற உறவொன்று...!
இப்போது ஏற்கத் தயாராக இருக்கையில்,
மீண்டும் வந்து
ஒட்டிக் கொள்ளமாட்டாதா?

என்ற...!
பெருமூச்சோடு,
யாரோ ஒருவருக்கான...!
ஏக்கங்களும், காத்திருப்புக்களும், இவ்வகிலத்தில் இன்னும்
பலர் மனதில்,
எஞ்சிக் கிடக்கத்தான் செய்கிறது.

மழை வேண்டி நிற்கையில்,
சோவெனக் கொட்டித் தீர்த்தல்,
அலாதியாய் மகிழ்ச்சியளிக்குமெனில்...! வேண்டி வேண்டி உருகி
சலித்துப் போய் நிற்கையில்,
அடர்த்தியாய்...!
திடீரென மழை இறங்குகையில்
மட்டற்ற சிலிர்ப்பு கிடைப்பதை, உணர்ந்திருப்போமல்லவா?

அதே காலத்தின் நியதிகள்
என்றேனும் ஓர் நாள்...!
இந்த அப்பிக் கிடக்கும்
ஏக்கங்களுக்கு,
நிவாரணம் வழங்கக் கூடும்.
மனதின் குமுறலை
கேட்கத் தகுதியான,
யாரோ ஒருவரை...!
என்றாவது காண நேரிடலாம்.

அதுவரை...!
மிகப் பிடித்தவராய்
யாரையும் நாம் உணரப் போவதில்லை.
அந்த ஓர் அதிசயம்
நிகழ்த்தப் போகும்...!
ஆசிர்வதிக்கப்பட்ட
உறவுக்கான_வருகையை,
காலம் எப்படியும்
தனக்குள் ஒளித்து வைத்திருக்கும்.

எந்த மழைத்துளி...!
எக்கடலுக்கான
தாகம் தீர்க்கும் காதலி என?
யாருக்குத் தெரியும்?

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 249
Post by: SweeTie on November 21, 2020, 09:48:44 PM
சின்ன சின்ன மழைத்துளிகள்   
சிந்துகின்ற மிருதங்க   ஒலிகள்
அன்னையின்  அணைப்பிலுள்ள
குழந்தையின்  சிரிப்பொலிபோல்
கேட்டுக்கொண்டே இருக்கின்றன.

பூமி தன்னை இருளால்  மூடிகொள்கிறது
அசுரவேக  மின்னல் கீற்றுகள்     
யானையின் பிளிறல் போன்ற  இடியோசை
மிருகங்களை    ஓட  ஓட  விரட்டுகின்றன
பறவைகள் திக்குத்தெரியாமல் பறக்கின்றன

அந்த சாலையோர  மரங்கள்  மட்டும்
ஆனந்தமாக   சிலிர்த்து  நிற்கின்றன .
இலைகளிலிருந்து  வீழும்   மழைத்துளிகள்
ஓரு காதலியின்  சிணுங்கல்  போன்று. 
ஜலதரங்கம்  இசைக்கின்றன.

வற்றிய  குட்டைகள் மீளவும்  நிரம்புகின்றன
குட்டைகளில்   வாழும் தவளைகள்
ஆனந்த மிகுதியால்  நாதஸ்வரம்  வாசிக்கின்றன
மீன்கள்   இசைக்கேற்ப  அபிநயம் புரிகின்றன
இசைக்கச்சேரி  அங்கே களைகட்டுகிறது

பூமியில்  வீழும்  நீர்க்கற்றைகள் ஒன்றுகூடி
சலசலப்புடன்   நதியை  நோக்கி   ஓடுகிறன்றன
 தாயைத் தேடி  ஓடும் குழந்தைகள்போல   
நதி  எங்கே  ஓடுகிறது??   கடலைத் தேடியா?   
முடிவில்லாத  ஓட்டம்   ... நம் வாழ்க்கையைப்போன்று !!!