Author Topic: நறுந்தொகை  (Read 6240 times)

Offline RemO

Re: நறுந்தொகை
« Reply #15 on: October 23, 2011, 08:33:52 PM »
  71. தன்னா யுதமுந் தன்கையிற் பொருளும்
பிறன்கையிற் கொடுக்கும் பேதையும் பதரே. 

(பதவுரை)
தன் ஆயுதமும் - தனது தொழிற்குரிய கருவியையும், தன் கையில் பொருளும் - தனது கையிலுள்ள பொருளையும், பிறன் கையில் கொடுக்கும் - அயலான் கையில் கொடுத்திருக்கும், பேதையும் - அறிவிலானும், பதரே – பதரேயாவன்

(பொ-ரை)
தன் தொழிற் கருவியையும் தன் கைப்பொருளையும், பிறர் கையில் கொடுத்துவிட்டுச் சோம்பியிருக்கின்ற அறிவில்லாதவனும் பதரேயாவன்...
----------------------------------------------------------------------------------------

  72. வாய்ப்பறை யாகவும் நாக்கடிப் பாகவும்
சாற்றுவ தொன்றைப் போற்றிக் கேண்மின்.

(பதவுரை)
வாய் பறை ஆகவும் - வாயே பறையாகவும், நாகடிப்பு ஆகவும் - நாவே குறுந்தடியாகவும் (கொண்டு), சாற்றுவது ஒன்றை - (அறிவுடையோர்) சொல்வது ஒன்றை, போற்றி - (மனம் புறம் போகாமல்) பாதுகாத்து, கேண்மின் - கேளுங்கள்.

(பொ-ரை)
வாயே பறையாகவும் நாவே குறுந்தடியாகவுங் கொண்டு அறிவுடையோர், சாற்றுகின்ற உறுதிமொழியைக் குறிக்கொண்டு கேளுங்கள்.color]
----------------------------------------------------------------------------------------

   73. பொய்யுடை யொருவன் சொல்வன் மையினால்
  மெய்போ லும்மே மெய்போ லும்மே. 

(பதவுரை)
பொய் உடை ஒருவன் - பொய்ம்மையுடைய ஒருவன், சொல்வன்மையினால் - வாக்கு வன்மையால், மெய்போலும் மெய்போலும் - (அவன் கூறும் பொய்) மெய்யே போலும் மெய்யே போலும்

(பொ-ரை)
பொய்ம்மையுடைய ஒருவன் கூறும் பொய்ம் மொழி அவன் பேச்சு வன்மையால் உண்மைபோலவே தோன்றக்கூடும்.
----------------------------------------------------------------------------------------

    74. மெய்யுடை யொருவன் சொலமாட் டாமையாற்
 பொய்போ லும்மே பொய்போ லும்மே

(பதவுரை)
மெய் உடை ஒருவன் - மெய்ம்மையுடைய ஒருவன், சொலமாட்டாமையால் - (திறம்படச்) சொல்லமாட்டாமையால், பொய்போலும் பொய்போலும் - (அவன் கூறும் மெய்) பொய்யே போலும், பொய்யே போலும்.

(பொ-ரை)
உண்மையுடைய ஒருவன் கூறும் மெய்ம்மொழி அவனது சொல்வன்மை யின்மையால் பொய்போலத் தோற்றக் கூடும்.
----------------------------------------------------------------------------------------

    75. இருவர்தஞ் சொல்லையும் எழுதரங் கேட்டே
இருவரும் பொருந்த வுரையா ராயின்
 மனுமுறை நெறியின் வழக்கிழந் தவர்தாம்
 மனமுற மறுகிநின் றழுத கண்ணீர்
 முறையுறத் தேவர் மூவர் காக்கினும்
வழிவழி யீர்வதோர் வாளா கும்மே. 

(பதவுரை)
இருவர் தம் சொல்லையும் - (வாதி எதிரி யென்னும்) இருவருடைய சொற்களையும்; எழுதரம் கேட்டு - ஏழு முறை கேட்டு (உண்மையுணர்ந்து), மனுமுறை நெறியின் - மனு நீதி வழியால், இருவரும் பொருந்த - இருவரும் ஒத்துக்கொள்ள, உரையார் ஆயின் - (முடிவு) சொல்லாரானால், வழக்கு இழந்தவர் தாம் - (நீதியின்றி) வழக்கினை இழந்தவர், மனம் - மனமானது, உற மறுகி நின்று - மிகவும் கலங்கி நின்று, அழுத கண் நீர் - அழுத கண்ணீரானது, முறை உற - முறையாக, தேவர் மூவர் - மூன்று தேவர்களும், காக்கினும் - காத்தாலும், வழி வழி - (அவர்) சந்ததி முழுதையும், ஈர்வது - அறுப்பதாகிய, ஓர்வாள் ஆகும் - ஒரு வாட்படையாகும்

(பொ-ரை)
இரு திறத்தினர் சொல்லையும் ஏழு முறைகேட்டு ஆராய்ந்து உண்மையுணர்ந்து நீதி வழுவாது இருவரும் மனம் பொருந்தும்படி முடிவு சொல்லாராயின், அநீதியாக வழக்கிலே தோல்வியுற்றவர் மனங்கலங்கி நின்று அழுத கண்ணீரானது அயன் அரி அரன் என்னும் மும்மூர்த்தியும் முறையாகப் பாதுகாத்தாலும் முடிவு கூறியவரின் சந்ததி முழுதையும் அறுக்கின்ற வாளாகும்.
----------------------------------------------------------------------------------------

Offline RemO

Re: நறுந்தொகை
« Reply #16 on: October 23, 2011, 08:41:20 PM »
76. பழியா வருவது மொழியா தொழிவது. 

(பதவுரை)
பழியா வருவது - நிந்தையாக வருங் காரியம், மொழியாது ஒழிவது - பேசாது விடத்தகுவது.

(பொ-ரை)
பின் பழியுண்டாகுஞ் செய்தியைப் பேசாது விடவேண்டும்.
----------------------------------------------------------------------------------------

77. சுழியா வருபுன லிழியா தொழிவது.

(பதவுரை)
சுழியா - சுழித்து, வரு புனல் - வருகின்ற வெள்ளத்திலே, இழியாது ஒழிவது - இறங்காது தவிர்க.

(பொ-ரை)
சுழித்து வருகின்ற நீர்ப் பெருக்கிலே இறங்காது ஒழிக
----------------------------------------------------------------------------------------

78. துணையோ டல்லது நெடுவழி போகேல்.

(பதவுரை)
துணையோடு அல்லது - துணையினோடல்லாமல், நெடுவழி - தூர வழியில், போகேல் - செல்லாதே.

(பொ-ரை)
தூரமான இடத்திற்குத் துணையின்றிப் போகாதே.
----------------------------------------------------------------------------------------

79. புணைமீ தல்லது நெடும்புன லேகேல்.

(பதவுரை)
புணைமீது அல்லது - தெப்பத்தின்மேல் அல்லாமல், நெடும் புனல் - பெரிய வெள்ளத்தில், ஏகேல் – செல்லாதே

(பொ-ரை)
தெப்பமின்றிப் பருவெள்ளத்திற் செல்லாதே. பிறவியைக் கடக்கலுறுவார்க்குத் தக்க துணையும் பற்றுக்கோடும் வேண்டுமென்க..
----------------------------------------------------------------------------------------

80. எழிலார் முலைவரி விழியார் தந்திரம்
              இயலா தனகொடு முயல்வா காதே.

(பதவுரை)
உண்டிக்கு - உணவிற்கு, அழகு - அழகாவது, விருந்தோடு - விருந்தினருடன், உண்டல் - உண்ணுதல்.

(பொ-ரை)
இந்நூலிற் கூறிய இவையெல்லாம் உலகத்தார் நடத்தற்குரிய வழிகளாம்.
இந்நூலிற் சொல்லிவந்த நீதிகளெல்லாம் 'இவை' எனத் தொகுத்துச் சுட்டப்பட்டன. காண்: முன்னிலையசை..

----------------------------------------------------------------------------------------

Offline RemO

Re: நறுந்தொகை
« Reply #17 on: October 23, 2011, 08:49:06 PM »
81. வழியே யேகுக வழியே மீளுக.

(பதவுரை)
வழியே ஏகுக - (செவ்விய) வழியிலே செல்க, வழியே மீளுக - (செவ்விய) வழியிலே திரும்புக.

(பொ-ரை)
நேர்மையான வழியிலே செல்க, நேர்மையான வழியிலே திரும்புக.
----------------------------------------------------------------------------------------

82. இவைகா ணுலகிற் கியலா மாறே..

(பதவுரை)
இவை - கூறப்பட்ட இவை, உலகிற்கு - உலகிலுள்ளோர்க்கு, இயல் ஆம் - நடத்தற்குரிய, ஆறு நன்னெறிகளாம்.

(பொ-ரை)
இந்நூலிற் கூறிய இவையெல்லாம் உலகத்தார் நடத்தற்குரிய வழிகளாம்.
இந்நூலிற் சொல்லிவந்த நீதிகளெல்லாம் 'இவை' எனத் தொகுத்துச் சுட்டப்பட்டன. காண்: முன்னிலையசை.

----------------------------------------------------------------------------------------

Offline RemO

Re: நறுந்தொகை
« Reply #18 on: October 23, 2011, 08:53:22 PM »
வாழ்த்து

வாழிய நலனே வாழிய நலனே.

(பதவுரை)
நலன் - எல்லா நன்மைகளும், வாழிய - வாழ்க, நலன் - எல்லா நன்மைகளும், வாழிய - வாழ்க.

(பொ-ரை)
எல்லா நலங்களும் வாழவேண்டும்; எல்லா நலங்களும் வாழவேண்டும்.
----------------------------------------------------------------------------------------

நறுந்தொகை மூலமும் உரையும் முற்றிற்று.