Author Topic: ஹரிதாஸ் - விமர்சனம்  (Read 2512 times)

Offline kanmani

ஹரிதாஸ் - விமர்சனம்
« on: March 26, 2013, 12:29:23 PM »



நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி படங்களை இயக்கிய ஜி.என்.ஆர் குமரவேலனின் மூன்றாவது படம். முதலிரண்டுப் படங்கள் எவ்வித ஆச்சரியத்தையும் அளிக்காதவை. அதிலும் யுவன் யுவதி எஸ்.ராமகிருஷ்ணனின் கதை, வசனத்தில் ரசிகர்களை நிறையவே சோதித்தது. ஹரிதாஸ் போரடிக்காத படமாக இருந்தாலே அதிகம் என்ற எண்ணம்தான் பலருக்கும்.


இந்தப் படத்தின் முக்கிய அம்சமாக மூன்று விஷயங்களை சொல்லலாம்.

தமிழில் பேய் படம் எடுப்பதென்றாலும் காதல் என்ற கச்சாப் பொருள் இல்லாமல் எடுக்க முடியாது. ஏதாவது ஒருவழியில் இந்த காதல் உள்ளே நுழைந்துவிடும். தாங்க் காட்... ஹரிதாஸில் அந்த கச்சாப் பொருள் இல்லை. காதலின் வாடையில்லாமல் ஒரு படத்தை எடுக்க முடியும் என்பதற்கு ஹரிதாஸ் மீண்டுமொரு உதாரணம்.

தமிழ் சினிமா கேன்சர் முதல் bipolar disorder வரை எத்தனையோ நோய்களை, குறைபாடுகளை கையாண்டிருக்கிறது. எல்லா நோய்களும் பொதுப்புத்தியில் இருப்பதை காட்சிப்படுத்துவதாகவே இருக்கும். அதாவது கேன்சர் என்றால் ரத்த வாந்தி எடுப்பது. இதில் ஆட்டிசஸம் என்ற குறைபாடை நேர்த்தியாக காட்டியிருக்கிறார் இயக்குனர்.

தந்தை மகன் பாசத்தை அடிப்படையாகக் கொண்ட படங்கள் உலக அளவிலேயே குறைவுதான். தமிழில் மிகக் குறைவு. இயக்குனர்கள் பொதுவாக கண்டு கொள்ளாத இந்த உறவை இப்படம் பிரதானப்படுத்தியிருக்கிறது.

இந்த மூன்று விஷயங்களுக்காகவே இந்தப் படத்தை பார்க்கலாம்.

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டான கிஷோரின் மகன் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவன். அவனின் தேவை என்ன என்பதே அவருக்கு தெரியவில்லை. மகனுக்காக வேலையைப் பொருட்படுத்தாமல் அவன்கூடவே இருக்கிறார். பள்ளியிலும் அவனை பிரிவதில்லை. மகனின் உலகம் எது என்பதை அவர் கண்டு பிடிப்பதும் அதில் அவனை ஆளாக்குவதும் ஒரு கதை. அதனுடன் அவரின் தொழில்ரீதியான மோதல் பின்னிப் பிணைந்து வருகிறது.

அப்பா, மகன் பாசம், ஆட்டிசம் குறைபாடுள்ள சிறுவன் என்று மட்டும் தந்திருந்தால் ரசிகர்களை ஈர்க்க முடியாது என்பதை உணர்ந்து கிஷோரின் தொழில்ரீதியான நெருக்கடிகளை, சவாலை இணைத்திருப்பது திரைக்கதையின் பெரிய பலம்.

ஆசிரியராக வரும் சினேகா கிஷோருடன் பழகுவது பிடிக்காமல் அவரது அம்மா கோபம் கொள்ளும் பகுதி படத்தின் சிறப்பான இடங்களில் ஒன்று. யாருடைய குழந்தையோ நல்லா இருக்கணும்னு அவ நினைக்கிறப்போ, என் பொண்ணு நல்லா இருக்கணும்னு நான் நிகைககிறதுல என்ன தப்பு என்று கேட்பது இயல்பான யதார்த்தம். இதுபோன்று உதிரி கதாபாத்திரங்களுக்கு அளித்திருக்கும் முக்கியத்துவம் படத்தை செழுமைப்படுத்துகிறது.

FILE
ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட சிறுவன் போலவே மாறியிருக்கிறான் ஹரிதாஸ் வேடத்தில் நடித்திருக்கும் பிருத்விரஜ். அவனது நடிப்பு மட்டும் சறுக்கியிருந்தால் மொத்தப் படமே சரிந்திருக்கும். கிஷோரின் மிடுக்கும், அவர் காட்டியிருக்கும் அண்டர்ப்ளே நடிப்பும் இவரை இன்னும் தமிழ் சினிமா சரியாகப் பயன்படுத்தவில்லை என்ற எண்ணத்தை தருகிறது. தனது ஸ்டூடண்ட் மீது சினேகா காட்டும் பரிவு கொஞ்சம் அதிகபடியாக தெரிந்தாலும், கிஷோரின் முன்னிலையில் பாடம் நடத்த முடியாமல் தடுமாறுவது போன்ற நுட்பமான உடல் மொழியில் குறைகளை மறக்க செய்கிறார்.

யூகிசேது கதாபாத்திரம் வழியாக ஆட்டிஸ குறைப்பாடை சுவாரஸியமாக சொல்லியிருப்பதும், கோச் ஹரிதாஸுக்கு பயிற்சி தர முடியாது என்று காரணம் அடுக்குவதை யூகிசேது கதாபாத்திரம் மூலம் கவுண்டர் செய்வதும் திரைக்கதையாசிரியரின் திறமையைச் சொல்லும் இடங்கள்.

சீரியஸான கதைக்கு சூரி கதாபாத்திரம் தேவைதான் என்றாலும் அவர் எதற்கெடுத்தாலும் தனியாகப் பேசிக் கொள்வது சலிப்பை தருகிறது. மாரத்தான் செலக்ஷன் கமிட்டியிடம் கிஷோர் பேசும் காட்சியிலும் கத்திரி போட்டிருக்கலாம். நீளம் அதிகம்.

படத்தின் இன்னொரு ஹீரோ ரத்னவேலுவின் ஒளிப்பதிவு. நெருடாத கேமரா கோணங்கள், கதைக்கேற்ற லைட்டிங் என்று கதைக்கு நியாயம் செய்திருக்கிறார். பின்னணி இசையும் அப்படியே. நெகிழ்ச்சியான தருணங்களில் சோக ஹம்மிங் இசைப்பதற்குப் பதில் வேறு ஏதாவது செய்ய முடியுமா என்பதை இசையமைப்பாளர்கள் கூடி முடிவெடுத்தால் நல்லது. சீரான வேகத்தில் படம் நகர்வது எடிட்டரின் திறமை.

ஸ்டீரியோ டைப்பில் என்கவுண்டரை தமிழ் சினிமா மீண்டும் மீண்டும் நியாயப்படுத்துவது இந்தப் படத்திலும் பிரதிபலிப்பது துரதிர்ஷ்டம்.

காதல், அடிதடி என்ற அளுத்துப்போன அம்சங்களை வைத்து மட்டும் படங்கள் வரும் சூழலில் ஹரிதாஸ் நம்பிக்கையும், புத்துணர்ச்சியும் தரும் முயற்சி. நம்பிப் பார்க்கலாம்.