Author Topic: திருமூலர் - திருமந்திரம்  (Read 42998 times)

Offline Anu

இரண்டாம் தந்திரம்-பதிகஎண்:15. மூவகைச்சீவவர்க்கம்

(பாடல்கள்:6)

பாடல் எண் : 1
விஞ்ஞானர் நால்வரும் மெய்ப்பிரள யாகலத்
தஞ்ஞானர் மூவரும் தாங்கு சகலத்தின்
அஞ்ஞானர் மூவரு மாகும் பதின்மராம்
விஞ்ஞான ராதியர் வேற்றுமை தானே.

பொழிப்புரை :  எல்லா உயிர்களும் `விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர் என்னும் மூவகையுள் அடங்கி நிற்கும். அம்மூவகையினருள் விஞ்ஞானகலர் நான்கு வகையினர்; பிரளயாகலரும், சகலரும் தனித்தனி மும்மூன்று வகையினர்; ஆக அனைவரும் பத்து வகையினராவர்.
=================================================
பாடல் எண் : 2
விஞ்ஞானர் கேவலத் தாராது விட்டவர்
தஞ்ஞானர் அட்டவித் தேசுரம் சார்ந்துளோர்
எஞ்ஞானர் ஏழ்கோடி மந்திர நாயகர்
மெய்ஞ்ஞானர் ஆணவம் விட்டுநின் றாரே.

பொழிப்புரை :  மேற்கூறியோருள் விஞ்ஞானகலர் நால்வராவார், `ஆணவமலத்தில் அழுந்தாத அவ்வளவில் நிற்போரும், அட்ட வித்தியேசுரபதவி, சத்தகோடி மகாமந்திரங் கட்குத் தலைவராம் பதவி இவற்றைப் பெற்றோரும், ஞானம் முதிரப் பெற்றோரும், அம்முதிர்ச்சியால் ஆணவமலம் பெரிதும் நீங்கப்பெற்ற முத்தரும்` என இவராவர்.
=================================================
பாடல் எண் : 3
இரண்டா வதில்முத்தி எய்துவர் அத்தனை
இரண்டாவ துள்ளே இருமல பெத்தர்
இரண்டாகு நூற்றெட் டுருத்திரர் என்பர்
முரண்சேர் சகலத்தர் மும்மலத் தாரே.

பொழிப்புரை :  இனிப் பிரளயாகலர் மூவராவார், `அபக்குவரும், பக்குவரும்` என இருதிறப்படும் நிலையில் பக்குவர், `சுத்தவித்தையில் நின்று அசுத்தமாயா புவனங்களைக் காவல் செய்பவரும், குணதத்துவத்தில் நின்று பிரகிருதிமாயா புவனங்களைக் காவல் செய்பவரும், எனத் தனித்தனி நூற்றெண்மராம் உருத்திரர்களாவர். எனவே, இவ்விருவரோடு, பெத்தராகிய அபக்குவரும் கூடப் பிரளயாகலர் மூவராகின்றனர். இனிச் சகலராவார் ` ஆணவம், கன்மம், மாயை` என்னும் மும்மலமும் உடையவரே.
=================================================
பாடல் எண் : 4
பெத்தத்த சித்தொடு பேண்முத்தச் சித்தது
ஒத்திட் டிரண்டிடை யூடுற்றார் சித்துமாய்
மத்தத்து மும்மலம் வாட்டுகை மாட்டாதார்
சத்தத் தமிழ்ந்து சகலத்து ளாரே.

பொழிப்புரை :  சகலரும், `அபக்குவர், பக்குவர்` என இருதிறப் பட்ட நிலையில் பக்குவர், `சாதகரும், சீவன்முத்தரும்` என இரு வகையினர் ஆவர்.
=================================================
பாடல் எண் : 5
விஞ்ஞானர் ஆணவ கேவல மேவுவோர்
தஞ்ஞானர் மாயையில் தங்கும் இருமலர்
அஞ்ஞானர் அச்சக லத்தர் அகலராம்   
விஞ்ஞான ராதிகள் ஒன்பான்வே றுயிர்களே.

பொழிப்புரை :  இயற்கையில் அகலராய் நில்லாது, தவமாகிய செயற்கையால் அகலராய் நிற்பார் ஒன்பது வகைப்படுவர். அவரும், `விஞ்ஞானகலர், பிரளயாகலர்` என்னும் பெயரைப் பெறுவர். அவ்வொன்பதின்மராவர், விஞ்ஞானகலருள் அபக்குவர் ஒழிந்த நால்வரும், பிரளயாகலருள் அபக்குவர் ஒழிந்த, `உருத்திரர், மால், அயன், இந்திரன், பிறகடவுளர்` என்னும் ஐவருமாவர்.
=================================================
பாடல் எண் : 6
வெஞ்ஞான கன்மத்தால் மெய்யகங் கூடியே
தஞ்ஞான கன்மத்தி னால்சுவர் யோனிபுக்
கெஞ்ஞான மெய்தீண்டி யேயிடை யிட்டுப்போய்.
மெய்ஞ்ஞான ராகிச் சிவமேவல் உண்மையே.

பொழிப்புரை :  சகல வருக்கத்தினர் வெவ்விய ஞானமாகிய சீவபோதத்தால் செய்துகொண்ட வினைகளில் சில நல்வினை காரணமாக மக்களுடம்பைப் பெற்றுப் பூலோகத்தில் வாழ்ந்து, அங்கும் அந்தச் சீவபோதத்தால் செய்த கன்மங்களில் சில நல்வினை காரணமாகச் சுவர்க்கலோகத்தில் தேவராய் இன்பந்துய்த்துப் பின் எம் ஞானம் போல்வதாகிய மெய்ஞ்ஞானத்தைத் தலைப்பட்டு, அது முதிராமையால் இடையீடுபட்டுப் பதமுத்தி அபரமுத்திகளில் நின்று, முடிவில் மெய்ஞ்ஞானம் முதிரப்பெற்றுச் சிவத்தோடு இரண்டறக் கலத்தல் உள்ளதே.
=================================================
பாடல் எண் : 7
ஆணவந் துற்ற அவித்தா நனவற்றோர்
காணிய விந்துவாம் நாத சகலாதி
ஆணவ மாதி யடைந்தோர்க்க வரன்றே
சேணுயர் சத்தி சிவதத்வ மாமே

பொழிப்புரை :  ஆணவத்தால் மிகுவிக்கப்பட்ட அறியாமையில் நிகழும் சாக்கிரம் முதலிய அவத்தைகளைக் கடந்தவர்க்கே, நாதம், விந்து முதலிய எல்லாத் தத்துவங்களும் தெளிவாய் விளங்கும். ஏனெனில், ஆணவமும், அதுவழியாகக் கன்ம மாயைகளும் ஆகிய அவற்றுட் கட்டுண்டு நின்றவர் பொருட்டன்றோ அவ்விந்து நாதம் முதலிய தத்துவங்கள் தோன்றுகின்றன!
=================================================
பாடல் எண் : 8
சிவமாகி ஐவகைத் திண்மலஞ் செற்றோர்
அவமாகாச் சித்தர்முத் தாந்தத்து வாழ்வார்
பவமான தீர்வோர் பசுபாசம் அற்றோர்
நவமான தத்துவம் நாடிக்கண் டோரே.

பொழிப்புரை :  ஐவகை மலங்களையும் முற்றக் கெடுத்துச் சிவமானவரே முடிந்த பயனைப் பெற்ற வல்லுநர். அதனால், அவமே பரமுத்தியாகிய சிவசாயுச்சத்தைப் பெற்று என்றும் இன்புறுவர். இனி வியப்பைத் தருவனவாகிய தத்துவங்களின் இயல்பை ஆராய்ச்சியால் உணர்கின்றவர் பாசஞான பசுஞானங்களின் நீங்கினாராயினும், அதன் பின்னர் அவற்றைத் தெளிய உணருங்காலத்தே பதிஞானம் எய்தி வீடுபெறுவர்.
=================================================
இரண்டாம் தந்திரம்- பதிக எண்:16. பாத்திரம்(பாடல்கள்: 4)

பாடல் எண் : 1
திலமத் தனையே சிவஞானிக் கீந்தால்
பலமுத்தி சித்தி பரபோக முந்தரும்
நிலமத் தனைப்பொன்னை நின்மூடர்க் கீந்தால்
பலமுமற் றேபர போகமுங் குன்றுமே.

பொழிப்புரை :  கொடுக்கப்படுவது எள்ளளவு பொன்னேயாயினும் அதனைச் சிவஞானம் கைவரப்பெற்ற ஒருவர்க்குக் கொடுத்தால், அது தன்பயனாக எண்பெருஞ் சித்திகளையும், பதமுத்தி அபரமுத்திகளையும், பரமுத்தியையும் தரும். வேட மாத்திரத்தால் சிவஞானிகள் போல நின்று யாதும் அறியாத முழுமூடர்க்கு நிலமத்தனைப் பொன்னைக் கொடுப்பினும், அது யாதும் பயன் தாராமையேயன்றி, ஞானம் குறைதற்கு ஏதுவாயும் விடும்.
=================================================
பாடல் எண் : 2
கண்டிருந் தார்உயிர் உண்டிடுங் காலனைக்
கொண்டிருந் தார்உயிர் கொள்ளுங் குணத்தனை
நன்றுணர்ந் தார்க்கருள் செய்திடு நாதனைச்
சென்றுணர்ந் தார்சிலர் தேவரு மாமே.

பொழிப்புரை :  உலகத்தில் உணர்வுடையார் சிலரே உயிர்கள் அனைத்தையும் ஒவ்வொரு கால எல்லையில் கூற்றுவன் கொண்டு போதலை மனத்துட் கொண்டார்கள். பின்னும் தன்னை உட்கொண்டவரது உயிரைத் தான் தன்னுட்கொள்ளும் குணம் உடையவனும், நன்னெறியாகிய ஞானநெறியில் சென்றவர்மாட்டு அருள்மீக்கூர்கின்றவனும் ஆகிய சிவபெருமானை அந்நன்னெறியிலே சென்று உணர்ந்தார்கள். அவர் மேன்மக்களா தலன்றியும், `தேவர்` எனவும் போற்றப்படுதற்கு உரியராவர்.
=================================================
பாடல் எண் : 3
கைவிட்டி லேன்கரு வாகிய காலத்தும்
மெய்விட்டி லேன்விகிர் தன்னடி தேடுவன்
பொய்விட்டு நானே புரிசடை யானடி
நெய்விட் டிடாத இடிஞ்சிலு மாமே.

பொழிப்புரை :  நான் சிவபெருமானது திருவடியைக் கருவில் இருந்தபொழுதும் மறந்திலேன், பிறந்து வாழ்கின்ற இப்பொழுதும் அதனை மெய்யன்போடே நான் தேடுகின்றேன். அதனால், அத் திருவடி எனக்கு நெய்விட்டு ஏற்றாது இயல்பாகவே ஒளிவிடும் விளக்காகும்.
=================================================
பாடல் எண் : 4
ஆவன ஆவ அழிவ அழிவன
போவன போவ புகுவ புகுவன
காவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன்
ஏவின செய்யும் இலங்கிழை யோனே.

பொழிப்புரை :  விளங்குகின்ற மெய்ந்நூலை உணர்ந்தவன், `ஆகற்பாலன ஆகுமேயன்றி அழியா; அழியற்பாலன அழியுமேயன்றி அழியாதொழியா; நீங்குவன நீங்குமேயன்றி நில்லா; வருவன வருமேயன்றி நீங்கா` என்பதனை உணர்ந்து, ஒன்றையும் தானே காணாது, அவை அனைத்திற்குங் காரணனான சிவன் காட்டியதைக் கண்டு, அவன் அருளாணையால் ஏவிய செயல்களையே செய்திருப்பான்.
=================================================
இரண்டாம் தந்திரம்-பதிகஎண்:17. அபாத்திரம்  (பாடல்கள்:4)

பாடல் எண் : 1
கோல வறட்டைக் குனிந்து குளகிட்டுப்
பாலைக் கறந்து பருகுவ தேயொக்கும்
சீலமும் நோன்பும் இலாதவர்க் கீந்தது
காலங் கழிந்த பயிரது ஆகுமே.

பொழிப்புரை :  சிவநெறி ஒழுக்கமும், தவமும் இன்மையால் உயர்வு பெறாத மக்களை வேடமாத்திரத்தால் வழிபட்டுத் தானம் செய்வது, வறட்டுப் பசுவைப் பிறவி மாத்திரத்தால் வணங்கி உணவளித்துப் பாலைக் கறந்து பருக நினைத்தலோடு ஒக்கும். இனித் தானத்தை உயர்ந்தோரை அறிந்து செய்யாமல் எவரிடத்தும் செய்தல், ஒரு பயிரைக் காலம் அறிந்து செய்யாது, எக்காலத்திலும் செய்தலையும் ஒக்கும்.
=================================================
பாடல் எண் : 2
ஈவது யோக இயம நியமங்கள்
சார்வ தறிந்தன்பு தங்கு மவர்க்கன்றி
ஆவ தறிந்தன்பு தங்கா தவர்களுக்
கீவ பெரும்பிழை யென்றுகொ ளீரே.

பொழிப்புரை :  பொருளைத் தானம் செய்தல், யோக நெறியில் இயம நியமங்களாகச் சொல்லப்படும் தவிர்வன செய்வன அறிந்து அந் நிலைக்கண் உறைத்து நிற்கும் உரனுடையோர்க்கேயாம். அவ் வாறன்றி, அவ்வுரனிலார்க்குச் செய்தல் பெருங்குற்றமாம் என்பதை உணர்மின்கள்.
=================================================
பாடல் எண் : 3
ஆமா றறியான் அதிபஞ்ச பாதகன்
தோமாறும் ஈசர்க்குந் தூய குரவற்குங்
காமாதி விட்டோர்க்குந் தூடணம் கற்பிப்போன்
போமா நரகில் புகான்போதங் கற்கவே.

பொழிப்புரை :  குற்றம் நீங்குதற்கு நிமித்தனாய சிவபிரானுக்கும், சிவகுரவர்க்கும், சிவயோகியர்க்கும் குற்றம் கற்பித்து இகழ்பவன் பின்விளைவதை அறியான். அவன் பஞ்ச மாபாதகனிலும் பெரும் பாதகன். அதனால், அவன் பின்னர்ப் பெருநரகில் வீழ்வான். இகழ்ந்து நிற்கும் அவன் பின்னொரு ஞான்று நல்லறிவைப் பெற்று அவர்களைப் புகழ்ந்து வழிபடுவானாயின், முன் செய்த பாதகத்தினின்றும் நீங்கி நரகம் புகாதொழிவான்.
=================================================
பாடல் எண் : 4
மண்மலை யத்தனை மாதனம் ஈயினும்
அண்ணல் சிவனென்றே யஞ்சலி யத்தனாய்
எண்ணி இறைஞ்சாதாற் கீந்த இருவரும்
நண்ணுவர் ஏழாம் நரகக் குழியிலே.

பொழிப்புரை :  `தலைவனே, சிவபெருமானே` என்று அவனது நாமத்தைச் சொல்லிக் கைகூப்பி அவனை நினைத்து வணங்கித் தானம் வாங்க அறியாதவர்க்கு, நிலத்தளவும், மலையளவுமான பெரும் பொருளைத் தானமாகக் கொடுத்தாலும் அப்பொருளால் பயன் பெறாது, ஈந்தோனும் ஈயப்பட்டோனும் (ஏற்போனும்) ஆகிய இருவரும் மீளாத நரகக் குழியிலே வீழ்வர்.


Offline Anu

இரண்டாம் தந்திரம்–பதிகஎண்:18. தீர்த்த உண்மை

(பாடல்கள்:6)

பாடல் எண் : 1
உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்துநின் றாடார் வினைகெடப்
பள்ளமும் மேடும் பரந்து திரிவரே
கள்ள மனமுடைக் கல்வியி லோரே.

பொழிப்புரை :  உள்ளத்திற்றானே நற்புண்பகளாகிய பல தீர்த்தங்கள் உள்ளன. வினை நீங்குமாறு அவற்றில் மூழ்குதலை மெல்லப் பயிலாத வஞ்சமனம் உடைய அறிவிலிகள், புறத்தே பல தீர்த்தங்களைத் தேடிப் பள்ளமும், மேடும் கடந்து நடந்து இளைக்கின்றனர்.
=================================================
பாடல் எண் : 2
தளியறி வாளர்க்குத் தண்ணிதாய்த் தோன்றும்
குளியறி வாளர்க்குக் கூடவும் ஒண்ணான்
வளியறி வாளர்க்கு வாய்க்கினும் வாய்க்கும்
தெளியறி வாளர்தஞ் சிந்தையு ளானே.

பொழிப்புரை :  தெளிந்த ஞானிகளது உள்ளத்தில் வீற்றிருப்பவனாகிய சிவபெருமான், அன்பினால் கண்ணீர் துளிக்கத் தெரிந்தவர்க்குக் குளிர்ச்சி உடையனாய் விளங்குவான். யோக நெறியில் மூச்சை அடக்க அறிந்தவர்க்கும் அவன் ஒருகால் விளங்குதல் கூடும். ஆயினும், ஞானம், அன்பு, யோகம் என்ற இவற்றுள் ஒன்றும் இன்றித் தீர்த்தத்திலே மட்டும் சென்று முழுகத் தெரிந்தவர்க்கு அவன் அடைதற்கு அரியன்.
=================================================
பாடல் எண் : 3
உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனை
கள்ளத்தின் ஆருங் கலந்தறி வாரில்லை
வெள்ளத்தை நாடி விடும்அவர் தீவினைப்
பள்ளத்தில் இட்டதோர் பத்தல்;உள் ளானே.

பொழிப்புரை :  அகத்தே உயிர்க்குயிராக உணரப்படும் ஒருவனாகிய சிவபெருமானை அவ்வுள்ளத்துள் அன்பில்லாது ஆரவார மாத்திரையாகச் செய்யும் செயல்களால் ஒருவரும் அடைதல் இயலாது. ஆகவே, அன்புமிகும் வழியை நாடாமலே புறத்தில் தீர்த்தங்கள் பலவற்றை நாடிச்செல்பவர், தீவினையாகிய கிணற்றில் போடப்பட்ட பத்தலேயாவர். அதனால், அவருள்ளத்தில் அவன் விளங்குவனோ!
=================================================
பாடல் எண் : 4
அறிவார் அமரர்கள் ஆதிப் பிரானைச்
செறிவான் உறைபதஞ் சென்று வலங்கொள்
மறியார் வளைக்க வருபுனற் கங்கைப்
பொறியார் புனல் மூழ்கப் புண்ணியராமே.

பொழிப்புரை :  சிவபெருமானை அறிவால் அறிகின்றவரே அமரர் (இறப்பும், பிறப்பும் இல்லாதவர்) ஆவர். அவரே சிவலோகத்தில் சென்று வீறுபெற்று வாழ்ந்து, பின் மீளாநிலையைப் பெறுவர். ஆகவே, சிலர் அவனை அங்ஙனம் அறிவால் அறிதலைச் செய்யாமலே, தன்னிடத்து மூழ்குவாரை ஈர்த்துச் செல்ல வருகின்ற கங்கையாற்றில் மரக்கலம் செல்லத்தக்கவாறு ஆழ்ந்தும் அகன்றும் ஓடும் நீரில் முழுகிய துணையானே அறிவராய் விடுவரோ!
=================================================
பாடல் எண் : 5
கடலிற் கெடுத்துக் குளத்தினிற் காண்டல்
உடலுற்றுத் தேடுவார் தம்மையொப் பாரிலர்
திடமுற்ற நந்தி திருவரு ளாற்சென்
றுடலிற் புகுந்தமை ஒன்றறி யாரே.

பொழிப்புரை :  சிவபெருமானை, `எங்குளன்` என்று தீர்த்தங்களில் வருந்தி முழுகிக் காணச் செல்பவரது செயல், கடலில் போடப்பட்ட பொருளைக் குளத்தில் எடுக்கச் செல்பவரது செயல்போல்வதாம். அவரை ஒத்த அறிவிலிகள் பிறர் இலர். ஏனெனின், என்றும் ஒருபெற்றியனாகிய சிவபெருமான், தனது திருவருள் காரணமாக யாவர் உடலிலும் புகுந்து நிற்றலைச் சிறிதும் உணராமையால்.
=================================================
பாடல் எண் : 6
கலந்தது நீர துடம்பிற் கறுக்கும்
கலந்தது நீர துடம்பிற் சிவக்கும்
கலந்தது நீர துடம்பில் வெளுக்கும்
கலந்தது நீர்நிலங் காற்றது வாமே.

பொழிப்புரை :  நீர்தான், `நிலம், காற்று` என்பவற்றில் கலப்பினும் அது அதுவாம் இயல்புடையது. ஆதலின், அஃது எவ்வுடம்பிற் கலந்ததாயினும் அவ்வுடம்பின் தன்மைக்கு ஏற்பக் கறுத்தும், சிவத்தும், வெளுத்தும் நிற்பதாம்.
=================================================
இரண்டாம் தந்திரம்–பதிகஎண்:19. திருக்கோயிற் குற்றம்(பாடல்கள்:5)

பாடல் எண் : 1
தாவர லிங்கம் பறித்தொன்றில் தாபித்தால்
ஆவதன் முன்னே அரசு நிலைகெடும்
சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும்
காவலன் பேர்நந்தி கட்டுரைத் தானே.

பொழிப்புரை :  ஒரு திருக்கோயிலில் உள்ள அசையாத சிவக் குறியைப் பெயர்த் தெடுத்துக் கொண்டுபோய் வேறொரு திருக்கோயிலில் நிறுவினால், அச்செயல் முற்றுப்பெறுவதற்கு முன்பே அரசனது ஆட்சி நிலைகுலையும்; அச்செயலுக்கு உரியவன், தான் இறப்பதற்கு முன்பு தொழுநோய் கொண்டு துன்புற்று இறப்பான். இவ்வாறு எங்கள் தலைவராகிய நந்திபெருமான் எங்கட்கு உறுதிப்பட உரைத்தார்.
=================================================
பாடல் எண் : 2
கட்டுவித் தார்மதிற் கல்லொன்று வாங்கிடில்
வெட்டுவிக் கும்அபி டேகத் தரசரை
முட்டுவிக் கும்முனி வேதிய ராயினும்
வெட்டுவித் தேவிடும் விண்ணவன் ஆணையே.

பொழிப்புரை :  திருக்கோயிலில் மதிலைக்கட்டுவித்தவரே பின்பு பொருளாசை முதலிய காரணங்களால் அதினின்றும் ஒரு கல்லை எடுப்பினும், சாதாக்கிய தத்துவத்தில் இருந்துகொண்டு ஆகமங்களை அருளிச்செய்த சதாசிவ மூர்த்தியின் ஆணை அவரை அழிக்கும். அக்குற்றம் நிகழாவாறு காவாமைபற்றி, அப்பொழுது முடிசூடி ஆள்கின்ற அந்நாட்டு அரசரையும் அவ்வாணை இடருறச் செய்யும். அக்குற்றத்தைச் செய்தவர், `முனிவர்` என்று உயர்த்துச் சொல்லப்படுகின்ற அந்தணராயினும், அவ்வாணை அவரைக் கொலையுண்டு மடியவே செய்யும்.
=================================================
பாடல் எண் : 3
ஆற்றரு நோய்மிக் கவனி மழையின்றிப்
போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்
கூற்றுதைத் தான்திருக் கோயில்க ளானவை
சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே.

பொழிப்புரை :  சிவபெருமானது திருக்கோயில்களில் அன்றாட வழிபாடு, சிறப்புநாள் விழாக்கள் முதலியவை இல்லாதொழியினும், ஆகமங்களில் சொல்லப்பட்ட முறைதவறி நடப்பினும், நாட்டில் தீர்க்கலாகாத நோய்கள் பரவி, மழையும் பொய்த்துப்போக, சிற்றரசரால் வணங்கப்படுகின்ற பேரரசர்களும் பகைவரை வெல்லும் வலியிலராய்த் தம் நாட்டை இழப்பர்.
=================================================
பாடல் எண் : 4
முன்னவ னார்கோயில் பூசைகள் முட்டிடின்
மன்னர்க்குத் தீங்குள வாரி வளங்குன்றும்
கன்னங் களவு மிகுத்திடுங் காசினி
என்னரு நந்தி எடுத்துரைத் தானே.

பொழிப்புரை :  சிவபெருமானது திருக்கோயில்களில் மேற்கூறிய குறைகள் உளவாகுமாயின், அரசர்கள் வலிமை யிழத்தலேயன்றிப் பிற தீமைகளையும் அடைவர். நாட்டில் விளைவும், பிற வருவாய்களும் குறையும். மாளிகைகளில் கன்னம் இட்டுக் களவாடுதல், கொள்ளை முதலிய பிற களவுகள் மிகுதியாகும். எங்கள் அருளாசிரியராகிய நந்திபெருமான் எங்கட்கு இவ்வாறு எடுத்து அருளிச்செய்தார்.
=================================================
பாடல் எண் : 5
பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை
அர்ச்சித்தாற் போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்
பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாம்என்றே
சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே.

பொழிப்புரை :  பிறப்புப் பற்றிப் பலராலும் சொல்லப்படுகின்ற `பார்ப்பான்` என்னும் பெயரைமட்டும் பெற்றுச் சிவபிரானிடத்து அன்பும், சிவாகம அறிவும், ஒழுக்கமும் இல்லாத அந்தணன் திருக்கோயிலில் சிவபெருமானைப் பிறர் பொருட்டு வழிபடுவானாயின், அக்கோயிலை உடைய நாட்டில் உள்நாட்டுக் கலகங்களும், வெளி நாட்டுப் போர்களும் விளைதலோடு, அந்நாட்டில் கொடிய நோய்களும், வயல்கள் வன்னிலங்களாய் விளைவில்லாது பஞ்சமும் உளவாகும் என்று எங்கள் திருமரபின் முதல்வராம் சிறப்புப் பொருந்திய நந்திபெருமான் எங்கட்கு ஆகமங்களை ஆய்ந்துரைத் தருளினார்.
=================================================
இரண்டாம் தந்திரம்–பதிகஎண்:20. அதோமுக தரிசனம்(பாடல்கள்:6)

பாடல் எண் : 1
எம்பெரு மான்இறை வாமுறை யோஎன்று
வம்பவிழ் வானோர் அசுரன் வலிசொல்ல
அம்பவழ் மேனி அறுமுகன் போய்அவர்
தம்பகை கொல்லென்ற தற்பரன் தானே.

பொழிப்புரை :  பிரகிருதி புவனத்தில் நிலவுலகத்தில் வாழ்ந்த சூரபதுமனாகிய அசுரனால் விளைந்த துன்பத்தை இயற்கை மணம் கமழும் மேனியராகிய தேவர்கள் விண்ணப்பித்து, `எம் பெருமானே, இறைவனே, முறையோ` என்று சொல்லி முறையிட, `அழகிய பவழம் போலும் மேனியை உடைய அறுமுகன் சென்று அவர்தம் பகைவனை அழிக்க` என்று திருவுளம் பற்றிய பெருமான் சாதாக்கிய தத்துவத்தில் சதாசிவனாய் நிற்கும் அவனே.
=================================================
பாடல் எண் : 2
அண்டமொ டெண்டிசை தாங்கும் அதோமுகம்
கண்டங் கறுத்த கருத்தறி வாரில்லை
உண்டது நஞ்சென் றுரைப்பர் உணர்விலோர்
வெண்டலை மாலை விரிசடை யோற்கே.

பொழிப்புரை :  சிவபெருமானது அதோமுகமே நிலவுலகத்தைப் புரப்பது. அதற்கு அறிகுறியாகவே அது கறுத்த கண்டத்தையுடைய வடிவினதாய்த் தோன்றுதலை அறிபவர் ஒருவரும் இல்லை. அதனால், பலரும், `அது நஞ்சுண்டது` என்று மட்டுமே கூறி யொழிகின்றனர். இனி அவ்வடிவாகிய கறைமிடற்றண்ணலுக்கு மார்பில் அணியும் மாலையும் இறந்தாரது வெள்ளிய தலைகளால் ஆயதே. அதனது உண்மையையும் அறிவாறில்லை.
=================================================
பாடல் எண் : 3
செய்தான் அறியுஞ் செழுங்கடல் வட்டத்துப்
பொய்யே யுரைத்துப் புகழும் மனிதர்கள்
மெய்யே யுரைக்கில்அவ் விண்ணோர்தொழச் செய்வன்
மைதாழ்ந் திலங்கு மணிமிடற் றோனே.

பொழிப்புரை :  படைப்பவனாகிய பிரமதேவனது அண்டம் எனப்படும் நிலவட்டத்தின் கண் நின்றுகொண்டு அறியாமை காரணமாக வேறு வேறு தேவரை, `முதற்கடவுள்` என்று சொல்லிக் கொண்டாடுகின்ற மனிதர்கள், அறியாமை நீங்கிப் பரமசிவன் தமக்குக் கறைமிடற்றண்ணலாய் (சீகண்டனாய்) நின்று அருள் புரிதலை உணர்ந்து புகழவல்லாராயின், அவ்வண்ணல் அவர்களை முன்பு அவரால் புகழப்பட்ட தேவர்களே வந்து வணங்குமாறு உயர் நிலையில் வைத்தருளுவன்.
=================================================
பாடல் எண் : 4
நந்தி எழுந்து நடுவுற ஓங்கிய
செந்திக் கலந்துட் சிவனென நிற்கும்
உந்திக் கலந்தங் குலகம் வலம்வரும்
அந்தி இறைவன் அதோமுக மாமே.

பொழிப்புரை :  சிவபெருமானது அதோமுகம் வடதிசைத் தீ, (ஆகவநீயம் தென்றிசைத்தீ, (தக்கிணாக்கினி) என்னும் இரண்டற்கும் நடுவிலே இல்லத் தீ, (காருகபத்தியம்) எனப் பெயர்பெற்று வளர்ந்து எரிகின்ற தீயினுள் நின்று அதனைச் சிவாக்கினியாகச் செய்யும். இனி ஏனைய இரண்டு தீயினுள்ளும் சென்று கலந்து உலகம் முழுதும் பரவியும் நிற்கும்.
=================================================
பாடல் எண் : 5
அதோமுகங் கீழண்ட மான புராணன்
அதோமுகந் தன்னொடும் எங்கும் முயலும்
சதோமுகத் தொண்மலர்க் கண்ணிப் பிரானும்
சதோமுகன் ஊழித் தலைவனு மாமே.

பொழிப்புரை :  அதோ முகத்தால் அதோ மாயையாகிய அசுத்த மாயையின் காரியங்களாகிய அண்டங்களில் நிறைந்து நிற்கும் பழையோனாகிய சிவபெருமான், அவ்வதோ முகத்தோடே எங்கும் பொருந்தி நின்று செயலாற்றுவான். அதனால், தாமரை மலர் மாலையை அணிந்த பிரமதேவனும், பிரம கற்பத்திற்குத் தலைவனும் அவனேயாவன்.
=================================================
பாடல் எண் : 6
அதோமுக மாமல ராயது கேளும்
அதோமுகத் தாலொரு நூறாய் விரிந்து
அதோமுக மாகிய அந்தமில் சத்தி
அதோமுக மாகி அமர்ந்திருந் தானே.

பொழிப்புரை :  சிவபெருமானது அதோமுகம் பெரியதொரு தாமரை மலராய் நிற்கும் முறையினைக் கேண்மின்கள்; சுத்த மாயையினின்றும் கீழ்நோக்கி வருகின்ற அவனுடைய அளவில்லாத சத்திகள் அதோமுகமாகி நூறிதழ்களை உடையதாய் விரிந்து நிற்க, அம்மலரின் கண்ணே சிவபெருமான் அமர்ந்திருக்கின்றான்.


Offline Anu

இரண்டாம் தந்திரம்-

பதிகஎண்:21. சிவநிந்தை கூடாமை

(பாடல்கள்:4)

பாடல் எண் : 1
தெளிவுறு ஞானத்துச் சிந்தையின் உள்ளே
அளியுறு வார்அம ரர்பதி நாடி
எளியனென் றீசனை நீசர் இகழில்
கிளியொன்று பூசையின் கீழது வாமே.

பொழிப்புரை :  யாவர்க்கும் முதல்வனாகிய சிவபெருமானது திருக்கோலத்தின் உண்மைகளை நூல்களாலும், நாட்டில் அமைந்த திருக்கோயில்கள், அவற்றில் நிகழும் விழாவகைகள் முதலியவற்றாலும் ஓர்ந்துணர்ந்து, அதனால் தெளிவுபெற்ற ஞானத்தை உடையராய் உள்ளத்தில் அன்புமிகப் பெறுவோர் பின்னர்த் தேவராவர். அவ்வாறு ஓர்ந்துணரவும், தெளியவும் மாட்டாத கீழ்மக்கள் அப்பெருமானை, எலும்பு, தோல், சாம்பல், வெண்டலை முதலியவைகளை உடையவனாய்ச் சுடுகாட்டில் ஆடுதல், தலையோடு ஏந்தி இரத்தல் முதலியவைகளையே நோக்கிச் சிறுதெய்வமாகக் கருதி இகழ்வார்களாயின், அச்செயல், கிளி ஒன்று தானே பூனையின் அருகுசென்று அகப்பட்டு நின்றது போல்வதாய்விடும்.
=================================================
பாடல் எண் : 2
முளிந்தவர் வானவர் தானவர் எல்லாம்
விளிந்தவர் மெய்ந்நின்ற ஞானம் உணரார்
அளிந்தமு தூறிய ஆதிப் பிரானைத்
தளிர்ந்தவர்க் கல்லது தாங்கஒண் ணாதே.

பொழிப்புரை :  `தேவர்` எனவும், `அசுரர்` எனவும் சொல்லப்படுவோர் பேராற்றல் உடையவர்போலச் சொல்லப்படினும், அவரெல்லாம் வினைவெப்பத்தில் அகப்பட்டு உயர்கின்றவர்களும், அழிகின்றவர்களுமேயாவர். அதனால், அவர் திரிபின்றி நிலைபெறும் உணர்வை அடைந்திலர். ஆகவே, தன்னை உணர்வாரது உணர்வில் அமுதம் கசிந்து ஊறுவதுபோல ஊறி நின்று இன்பம் பயக்கும் சிவபெருமானை நினைந்து உள்ளம் குளிர்பவர்க்கல்லது உண்மை ஞானத்தைப் பெறுதல் இயலாது.
=================================================
பாடல் எண் : 3
அப்பகை யாலே அசுரருந் தேவரும்
நற்பகை செய்து நடுவே முடிந்தனர்
எப்பகை யாகிலும் எய்தார் இறைவனைப்
பொய்ப்பகை செய்யினும் பொன்றுப தாமே.

பொழிப்புரை :  அசுரரும், தேவரும் அறியாமையாகிய பகை தம் உணர்விலே நின்று கெடுத்தலால் தம்முள் மிக்க பகைகொண்டு தம் வாழ்நாள் முடிவதற்கு முன்பே அழிந்தனர். ஆகவே, சிவபெருமானை உண்மையில் இகழும் கருத்தினரல்லாதவரும், அவனை இகழ்வார்க்கு அஞ்சித் தாமும் இகழ்வார் போல நிற்பினும் அவர் அழிவே எய்துவர்.
=================================================
பாடல் எண் : 4
போகமும் மாதர் புலவி யதும்நினைந்
தாகமும் உள்கலந் தங்குள ராதலின்
வேதிய ராயும் விகிர்தனாம் என்கின்ற
நீதியுள் ஈசன் நினைப்பொழி வாரே.

பொழிப்புரை :  வேதத்தை ஓதும் உரிமை பெற்றமையால் `வேதியர்` எனப் பெயர் பெற்றிருந்தும் சிலர், மகளிர் இன்பத்தில் பற்று நீங்காமையால், சிவபெருமானை வழிபட நினையாமல், பிற தெய்வங்களை வழிபடுதலில் முனைந்து நிற்பர்.
=================================================
இரண்டாம் தந்திரம்-பதிகஎண்:22. குருநிந்தை கூடாமை(பாடல்கள்:5)
பாடல் எண் : 1
பெற்றிருந் தாரையும் பேணார் கயவர்கள்
உற்றிருந் தாரை உளைவன சொல்லுவர்
கற்றிருந் தார்வழி உற்றிருந் தாரவர்
பெற்றிருந் தாரன்றி யார்பெறும் பேறே.

ஓரெழுத் தொருபொருள் உணரக் கூறிய
சீரெழுத் தாளரைச் சிதையச் செப்பினோர்
ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்தங் கோருகம்
வாரிடைக் கிருமியாய் மாய்வர் மண்ணிலே.

பொழிப்புரை :  கீழ்மக்களாயுள்ளார் ஏனைப் பெரியோரைப் பேணிக் கொள்ளாமை யேயன்றித் தம்மைப் பெற்ற தாய் தந்தையரையும் பேணமாட்டார். மற்றும் உறவினராய் உள்ளவரையும் அவர் மனம் நோகத்தக்க சொற்களைச் சொல்லி இகழ்வர்; தாய் தந்தையரையும், உடன் பிறந்தார் முதலிய சுற்றத்தாரையும் தக்கவாற்றால் பேணுதல் ஆகிய சான்றோர் நெறியில் நிற்பவரன்றி நல்லன பலவும் வேறு யாவர் பெறும் பேறாகும்!
=================================================
பாடல் எண் : 2
பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்
சித்தங் கலங்கச் சிதைவுகள் செய்தவர்
அத்தமும் ஆவியும் ஆண்டொன்றில் மாண்டிடும்
சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே.

பொழிப்புரை :  கற்புடை மகளிர், சிவனடியார்கள் தத்துவ ஞானம் உடையவர்கள் இவர்களது மனம் வருந்தும்படி அவர்தம் நெறிக்கு அழிவு செய்தவரது செல்வமும், வாழ்நாளும் ஓராண்டுக்குள்ளே அழிந்தொழியும். இஃது, எங்கள் நந்தி பெருமான்மேல் ஆணையாக, உண்மை.
=================================================
பாடல் எண் : 3
மந்திரம் ஒன்றே உரைசெய்த மாதவர்
சிந்தையில் நொந்திடத் தீமைகள் செய்தவர்
பிந்திச் சுணங்காய்ப் பிறந்தொரு நூறுரு
வந்து புலையராய் மாய்வர்கள் மண்ணிலே.

பொழிப்புரை :  மந்திரமாவனவற்றுள் ஒன்றையே உபதேசித்தவராயினும், அவரது மனம் நோவத் தீமைகளைச் செய்தவர்கள், இம் மண்ணுலகில் யாவரும் இகழ்ந்து ஒதுக்குகின்ற நாயாய் நூறுமுறை பிறந்து, பின்பு மக்களாய்ப் பிறக்கினும் புலையராய்ப் பிறந்து, இம்மை மறுமைகளில் யாதொரு பயனையும் எய்தாது வாளா இறந்தொழிவர்.
=================================================
பாடல் எண் : 4
சன்மார்க்க சற்குரு சந்நிதி பொய்வரின்
நன்மார்க்க முங்குன்றி ஞானமுந் தங்காது
தொன்மார்க்க மாய துறையும் மறந்திட்டுப்
பன்மார்க்க முங்கெட்டுப் பஞ்சமு மாமே.

பொழிப்புரை :  ஞான நெறியை உணர்த்துகின்ற ஞானகுருவின் திருமுன்பில், `பொய், குறளை, கடுஞ்சொல், பயனில சொல்` என்னும் தீய சொற்கள் எவர் வாய்வழியாக நிகழினும் உலகில் நன்னெறி அழிந்து, மெய்யுணர்வும் இல்லாதொழியும். தொன்றுதொட்டு வரும் உலகியல் துறைகளும், மெய்ந்நெறித் துறைகளும் மக்களால் மறக்கப்பட்டுப் பல சமயங்களும் கெட, நாட்டில் பஞ்சமும் உண்டாகும்.
=================================================
பாடல் எண் : 5
கைப்பட்ட மாமணி தானிடை கைவிட்டு
வெய்ப்பட்ட கல்லைச் சுமப்போன் விதிபோன்றும்
நெய்ப்பட்ட பால்இள நீர்தயிர்தான் நிற்கக்
கைப்பிட்டுண் பான்போன்றும் கன்மிஞா னிக்கொப்பே.

பொழிப்புரை :   கன்மி ஞானிக்கு ஒப்பாதல் - அஃதாவது, ஞானிக்கு ஒப்பாகக் கருதி, ஞானகுரு இருக்கவும் அவனை விடுத்துக் கன்மியைக் குருவாகக் கொள்ளுதல், கையில் மாணிக்கம் கிடைத்திருக்கவும் அதனை எறிந்துவிட்டு, வெயிலால் வெதும்பிக் கிடக்கும் பரற்கல்லைக் கையில் எடுத்துச் சுமப்பவன் செயல்போலவும், கையில் நெய்யுள்ள பாலும், இளநீரும், தயிரும் இருக்க அவற்றை உண்ணாமல், பின்புதான் அழிதற்கு ஏதுவாகிய எட்டிப்பழத்தை முயன்று பெற்று உண்பவன் செயல் போலவும் ஆம்.
=================================================
இரண்டாம் தந்திரம்-பதிகஎண்:23.மாகேசுரநிந்தை கூடாமை (பாடல்கள்:4)
பாடல் எண் : 1
ஆண்டான் அடியவ ரார்க்கு விரோதிகள்
ஆண்டான் அடியவர் ஐயமேற் றுண்பவர்
ஆண்டான் அடியாரை வேண்டாது பேசினோர்
தாந்தாம் விழுவது தாழ்நர காகுமே.

பொழிப்புரை :  சிவனடியார் உலகில் உள்ளாரில் யார்க்கு என்ன தீங்கு செய்கின்றனர்! அவர்கள் அறவுள்ளம் உடையார், இடுகின்ற பிச்சையை ஏற்று உண்டு போகின்றார்கள். ஆதலின், அவரிடத்து வெறுப்புக் கொண்டு இகழ்ந்து பேசியவர் அடைவது மிகக் கீழான நரகமே.
=================================================
பாடல் எண் : 2
ஈசனடியார் இதயங் கலங்கிடத்
தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும்
வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும்
நாசம தாயிடும் நம்நந்தி யாணையே.

பொழிப்புரை :  சிவனடியாரது உள்ளம் எவ்வாற்றாலேனும் நோகுமாயின். அதற்குக் காரணமாய் உள்ள மண்ணுலக நாடும், அதன் சிறப்புக்களும் அழிதலேயன்றி விண்ணுலக வேந்தன் ஆட்சி பீடத் துடன் மண்ணுலக மன்னன் ஆட்சி பீடமும் அழிந்தொழியும். இஃது எங்கள் நந்திபெருமான்மேல் ஆணையாகச் சொல்லத்தக்க உண்மை.
=================================================
பாடல் எண் : 3
ஞானியை நிந்திப் பவனும் நலனென்றே
ஞானியை வந்திப் பவனுமே நல்வினை
யான கொடுவினை தீர்வா ரவன்வயம்
போன போழுதே புகுஞ்சிவ போகமே.

பொழிப்புரை :  `சிவஞானியை நிந்திப்பதே நலம்` என்று கருதி நிந்திப்பவனும், அவ்வாறன்றி, `வந்திப்பதே (வணங்குவதே) நலம்` என்று அறிந்து வந்திப்பவனும் முறையே நல்வினையின் நீங்கித் தீவினையை எய்துபவனும், தீவினையின் நீங்கி நல்வினையை எய்துபவனுமாவர். ஏனெனில், சிவஞானிகட்கு அடியவரான பின்பே எவர்க்கும் சிவபெருமானது திருவருள் கிடைப்பதாகலின்.
=================================================
பாடல் எண் : 4
ஞானம் விளைந்தவர் நம்பிட மன்னவர்
சேனை வளைந்து திசைதொறுங் கைதொழ
ஊனை விளைத்திடும் உம்பர்தம் ஆதியை
ஏனை விளைந்தருள் எட்டலு மாமே.

பொழிப்புரை : சிவஞானம் கிடைக்கப்பெற்ற சிவனடியார்களை விரும்பி வழிபட்டால், எவ்விடத்தும் அரசர்கள் தம் படையுடன் வந்து வணங்க, சிறுபயன்களைத் தருகின்ற தேவர்க்கெல்லாம் முதல்வ னாகிய சிவபெருமானை அவன் அருளால் அடைந்து பேரின்பம் எய்துதல் கூடும்.
=================================================
இரண்டாம் தந்திரம்-பதிக எண்:24. பொறையுடைமை(பாடல்கள்:2)
பாடல் எண் : 1
பற்றிநின் றார்நெஞ்சிற் பல்லிதான் ஒன்றுண்டு
முற்றிக் கிடந்தது மூக்கையும் நாவையும்
தெற்றிக் கிடந்து சிதைக்கின்ற சிந்தையுள்
வற்றா தொழிவது மாகமை யாமே.

பொழிப்புரை :  பற்றறாதவர் உள்ளத்தில் பல்லி ஒன்று உள்ளது; அஃது அவரது மூக்கையும், நாக்கையும் பற்றிக்கிடந்து, எந்த நேரமும், எவற்றையேனும் படபடவென்று சொல்லிக் கொண்டிருக்கின்றது. பற்றுக்களைத் துடைத்தவரது உள்ளத்திலோ பெரிய பொறுமை என்னும் நீர் வற்றாது நிறைந்து நிற்கின்றது.
=================================================
பாடல் எண் : 2
வல்வகையால்உம் மனையிலும் மன்றிலும்
பல்வகை யாலும் பயிற்றிப் பதஞ்செய்யும்
கொல்லையில் நின்று குதிகொள்ளுங் கூத்தனுக்
கெல்லையி லாத இலயமுண்டாமே.

பொழிப்புரை :  காட்டில் ஆடுகின்ற கூத்தனுக்கு அளவு கடந்த பொறுமையே பொருளாக அமைவது. அதனால், மாகேசுரர்களே, நீவிர் வாழும் இடத்திற்கு உள்ளும், புறம்பும் இயன்ற அளவில் பலவகையாலும் உள்ளத்தைப் பொறுமையோடு இருக்கப் பழக்கிப் பக்குவப்படுத்துங்கள்.
=================================================
இரண்டாம் தந்திரம்-பதிகஎண்:25. பெரியாரைத் துணைக்கோடல் (பாடல்கள்:6)
பாடல் எண் : 1
ஓடவல் லார்தம ரோடு நடாவுவன்
பாடவல் லாரொலி பார்மிசை வாழ்குவன்
தேடவல் லாரொலி பார்மிசை வாழ்குவன்
கூடவல் லாரடி கூடுவன் யானே.

பொழிப்புரை :  சிவபிரானை அடைய விரும்பிய யான், பத்தி காரணமாக, அவன் வெளிப்படும் இடங்கட்கெல்லாம் ஓடியும், அவனையே புகழ்ந்து பாடியும் இன்னோரன்னவற்றால் அவனை அடையவல்லாரது அடிநிழலைப் பிரியாது சேர்ந்திருப்பேன்.
=================================================
பாடல் எண் : 2
தாமிடர்ப் பட்டுத் தளிர்போல் தயங்கினும்
மாமனத் தங்கன்பு வைத்த திலையாகும்
நீயிடர்ப்பட்டிருந் தென்செய்வாய் நெஞ்சமே
போமிடத் தென்னொடும் போதுகண் டாயே.

பொழிப்புரை :  நெஞ்சே, நீ உன்னை அகப்படுத்துகின்ற துன்பத்தில் அகப்பட்டுத் தீயில் வீழ்ந்த தளிர்போல் வாட்டமுற்றாலும் சிவபெரு மானிடத்து அன்பு வைத்திலை. இவ்வாறு அத்துன்பத்திலே இருந்து நீ என்ன செய்யப் போகின்றாய்? நான் போகின்ற இடத்திற்கு நீயும் என்னோடு வா.
=================================================
பாடல் எண் : 3
அறிவார் அமரர் தலைவனை நாடிச்
செறிவார் பெறுவர் சிவதத் துவத்தை
நெறிதான் மிகமிக நின்றருள் செய்யும்
பெரியா ருடன் கூடல் பேரின்ப மாமே.

பொழிப்புரை :  அறிவுடைய பெரியோர், தேவர்க்குத் தலைவ னாகிய சிவபிரானை அடையும் வழிகளை யெல்லாம். ஆராய்ந்து; அவற்றானே அவனை அடைவர். பின்னர் அவனேயாய் நிற்பர், ஆதலின், தாமும் நன்னெறியில் உறைத்துநின்று, பிறரையும் அவ்வாறு நிற்கச்செய்து உலகிற்கு நயம்புரிகின்ற பெரியாருடன் கூடுதலே பேரின்பம் எய்துவதற்கு வழியாகும்.
=================================================
பாடல் எண் : 4
தாழ்சடை யான்றன் தமராய் உலகினிற்
போர்புக ழால்எந்தை பொன்னடி சேருவார்
வாயடையா உள்ளந் தேர்வார்க் கருள்செய்யுங்
கோவடைந் தந்நெறி கூடலு மாமே.

பொழிப்புரை :  நீண்ட சடையை உடைய சிவபெருமானுக்கு அடி யவராயினமையினால் உலகம் முழுதும் போர்த்த புகழை உடையவ ராய், அப்பெருமானது அழகிய திருவடியையன்றிப் பிறிதொன்றையும் அடைய விரும்பாதவராகிய அவரிடத்துச் சென்று சேர்ந்து உள்ளம் தெளிவடைபவரிடத்துச் சிவபெருமான் அருளுடையவனாவன். அதனால், அவன் அருள் புரியும் நெறி வாய்க்கப் பெற்று. அவனோடு ஒன்றுதலாகிய பேற்றினையும் பெறுதல் கூடும்.
=================================================
பாடல் எண் : 5
உடையான் அடியார் அடியா ருடன்போய்ப்
படையா ரழலான் பதிசென்று புக்கே
கடையார நின்றவர் கண்டறி விப்ப
உடையான் வருகென ஓலமென் றாரே.

பொழிப்புரை :  சிவபெருமான் அடியவர் யாவரும் தம்மைப் போலும் அடியாருடன் கூடியே சிவபுரத்தை அடைந்து அதன் வாயிலில் நின்றனர். அப்பொழுது அவ்வாயிலில் உள்ள கணங்கள் சிவபெருமானிடம் சென்று, `அடியவர் குழாமாக வந்துள்ளனர்` என்று விண்ணப்பிக்க, அப்பெருமான், `அவர்கள் உள்ளே வருவாராக` எனத் திருவாய் மலர்ந்தருள, அவ்வருளிப்பாட்டினை அக் கணங்களால் உணர்ந்து, `முறையோ` என்று ஓலமிட்டுச் சென்று தம் குறை தீர்ந்தனர்.
=================================================
பாடல் எண் : 6
அருமைவல் லான்கலை ஞானத்துள் தோன்றும்
பெருமைவல் லோன்பிற விச்சுழி நீந்தும்
உரிமைவல் லோன் உணர்ந் துழி யிருக்கும்
திருமைவல் லாரொடு சேர்ந்தனன் யானே.

பொழிப்புரை :  எல்லாம் வல்லவனாகிய சிவபெருமானை உணர்த்தும் நூலறிவினால் வருகின்ற பெருமையை உடைய கலைஞன், காலக் கழிவின்கண் பிறவிக் கடலைக் கடந்து சிவபெருமான் திருவடியை அடைவான். அந்நூலறிவைத் தனதாக்கிக் கொள்ளும் அனுபூதிமான், அப்பொழுதே சிவனைப் பெற்று, உலகம் உள்ளளவும் வாழ்வான். ஆகையால் சிவமே பெறும் திருநெறியொழுக்கம் வல்ல சிவானுபூதிச் செல்வரோடேயான் சேர்ந்திருக்கின்றேன் (தி.8 திருச்சதகம்).
இரண்டாம் தந்திரம் மூலமும் உரையும் முற்றிற்று.


Offline Anu

மூன்றாம் தந்திரம்

பதிகஎண்:1. அட்டாங்கயோகம்

(பாடல்கள்:4)

பாடல் எண் : 1
உரைத்தன வற்கரி ஒன்று முடிய
நிரைத்த இராசி நிரைமுறை எண்ணிப்
பிரச்சதம் எட்டும் முன்பேசிய நந்தி
நிரைத்த இயமம் நியமஞ்செய் தானே.
பொழிப்புரை : கணிநூலில் (சோதிட நூலில்) சொல்லப்பட்ட வரிசையான பன்னிரண்டு இராசிகளையும் யாடும் (மேடமும்), அரிமாவும் (சிங்கமும்) முதலாய் நிற்பத் தொடங்கி முடியும் வகைகளில் முறையானே எண்ணி யோக உறுப்புக்கள் எட்டனையும் முன்பு உணர்த்தியருளிய நந்திபெருமான், அவைகளில் முறையான விலக்கு விதிகளை அருளிச் செய்தார்.
=======================================
பாடல் எண் : 2
செய்த இயம நியமஞ் சமாதிசென்
றுய்யப் பராசத்தி உத்தர பூருவம்
எய்தக் கவச நியாசங்கள் முத்திரை
எய்த வுரைசெய்வன் இந்நிலை தானே.
பொழிப்புரை :  மேற்கூறியவாறு நந்திபெருமான் அருளிச்செய்த விலக்கு விதிகளால் சமாதி நிலையை அடைந்து யாவரும் உய்தற் பொருட்டு, ஞானம் இறுதித் தந்திரங்களில் வர நிறுத்தி, முன்னே உள்ள சில தந்திரங்களில் கிரியைகளாகிய கவசம், நியாசம், முத்திரை முதலியவைகளுடன் யோக நெறியையும் கூறுவேன். `இயம நியமத்தால்` என உருபு விரிக்க.
=======================================
பாடல் எண் : 3
அந்நெறி இந்நெறி என்னாதே அட்டாங்கந்
தன்னெறி சென்று சமாதியி லேநின்மின்
நன்னெறி செல்வார்க்கு ஞானத்தில் ஏகலாம்
புன்னெறி ஆகத்திற் போக்கில்லை யாகுமே.
பொழிப்புரை :  `நாம் கொண்ட நெறி நன்றோ, இது வல்லாத பிறிதொரு நெறி நன்றோ` என்று ஐயுற்று அலமராது, எந்நெறிக்கும் வேண்டப்படுவதாகிய அட்டாங்கத்தை உடைய யோக நெறியிலே சென்று, உம்மால் விரும்பப்படுகின்ற பொருளிலே உள்ளம் ஒடுங்குங்கள். இவ்வாறு ஒடுங்கும் நன்னெறியில் நிற்பவர்க்கு ஞானத்தை எளிதில் தலைப்படுதல் கூடும். பின்பு அந்த ஞானத்தின் பயனாகப் பிறவியாகிய இழி நெறியிற் செல்லுதல் இல்லையாம்.
=======================================
பாடல் எண் : 4
இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரம்
சயமிகு தாரணை தியானஞ் சமாதி
அயமுறும் அட்டாங்க மாவது மாமே.
பொழிப்புரை :  அட்டாங்கம் (யோகத்தின் எட்டுறுப்புக்கள்) ஆவன, `இயமம், நியமம், ஆதனம், பிரணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி` என்பன.
=======================================
மூன்றாம் தந்திரம்-பதிகஎண்:2. இமயம் (பாடல்:1)
பாடல் எண் : 1
கொல்லான்பொய் கூறான் களவிலான் எள்குணன்
நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய
வல்லான் பகுத்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லான் நியமத் திடையில்நின் றானே.
பொழிப்புரை :  கொல்லாமை, பொய்யாமை, விருப்பு வெறுப்புக்கள் இன்மை, கரவாமை, மாசின்மை, கள்ளுண்ணாமை, காமம் இன்மை, என்னும் பத்தனையும் முற்ற உடையவனே இயம யோகம் கைவரப் பெற்றவனாவான்.
=======================================
மூன்றாம் தந்திரம்-பதிகஎண்:3. நியமம் (பாடல்கள்:2)
பாடல் எண் : 1
ஆதியை வேதத்தின் அப்பொரு ளானைச்
சோதியை அங்கே சுடுகின்ற அங்கியைப்
பாதியுள் மன்னும் பராசத்தி யோடுடன்
நீதி யுணர்ந்து நியமத்த னாமே.

தூய்மை அருளூண் சுருக்கம் பொறைசெவ்வை
வாய்மை நிலைமை வளர்த்தலே மற்றிவை
காமம் களவு கொலையெனக் காண்பவை
நேமியீ ரைந்து நியமத்த னாமே.
பொழிப்புரை :  சிவபெருமானைச் சத்தியோடு உடனாய் நிற்பவனாக உணர்பவனே நியமத்தில் நிற்க வல்லவனாவான்.
=======================================
பாடல் எண் : 2
தவம்செபம் சந்தோடம் ஆத்திகம் தானம்
சிவன்றன் விரதமே, சித்தாந்தக் கேள்வி,
மகம்சிவ பூசைஒண் மதிசொல் ஈரைந்து
நிவம்பல செய்யின் நியமத்த னாமே.
பொழிப்புரை :  தவம் முதலாக மதி ஈறாகச் சொல்லப்பட்ட பத்தினையும் நியமமாகக் கொண்டவன் நியம யோகியாவான்.
=======================================
மூன்றாம் தந்திரம்-பதிகஎண்:4. ஆதனம்(பாடல்கள்:6)
பாடல் எண் : 1
பங்கய மாதி பரந்தபல் ஆதனம்
அங்குள வாம்இரு நாலும் அவற்றினுள்
சொங்கில்லை யாகச் சுவத்தி யெனமிகத்
தங்க இருப்பத் தலைவனு மாமே.
பொழிப்புரை :  ``பதுமம்`` முதலியவற்றின் வடிவத்தால் அவ்வப் பெயரைப் பெற்று பரந்து நிற்கும் ஆதனங்கள் யோக முறையில் பல உள்ளன. அவற்றுள் எட்டு ஆதனங்கள் தாழ்வில்லாது உயர்ந்தனவாய் நிற்க, அவற்றுள்ளும், ``சுவத்தி`` ஆதனத்தில் ஒருவன் இருப்பனாயின் யோகத்தில் மிக்கவனாவான்.
=======================================
பாடல் எண் : 2
ஓரணை யப்பதம் ஊருவின் மேலேறிட்
டார வலித்ததன் மேல்வைத் தழகுறச்
சீர்திகழ் கைகள் அதனைத்தன் மேல்வைக்கப்
பார்திகழ் பத்மா சனமென லாகுமே.
பொழிப்புரை :  பாதங்கள் துடைகளின்மேல் ஒன்றாகப் பொருந்துமாறு ஏற்றி, பின் நன்றாக வலித்து இழுத்து அவை துடைகளின் புறம் நிற்குமாறு செய்து, அப்பாதங்களின்மேலே இரு கைகளையும் மலர வைப்பின், அந்நிலை தாமரை மலர் வடிவிற்றாய், ``பதுமாதனம்`` என்று சொல்லுதலைப் பெறும்.
=======================================
பாடல் எண் : 3
துரிசில் வலக்காலைத் தோன்றவே மேல்வைத்து
அரிய முழந்தாளில் அங்கையை நீட்டி
உருசி யொடும்உடல் செவ்வே யிருத்திப்
பரிசு பெறுமது பத்திரா சனமே.
பொழிப்புரை :  ``பதுமாதனத்தைச் சிறிது வேறுபடுக்கப் பத்திராதனமாம்`` என்கின்றார். பத்திரம் - வாள்.
பதுமாதனத்தினின்றும், வலக்காலை எடுத்து இடமுழந்தாள் மேலாக ஊன்றி, இரண்டு கைகளையும் அவ்வலக்கால் முழந்தாளின்மேல் நீட்டி, உடலை நேர் நிற்க நிறுத்தினால், அந்நிலை வாளின் வடிவிற்றாய், `பத்திராதனம்` என்னும் பெயரைப் பெறும்.
=======================================
பாடல் எண் : 4
ஒக்க அடியிணை யூருவில் ஏறிட்டு
முக்கி யுடலை முழங்கை தனில்ஏற்றித்
தொக்க அறிந்து துளங்கா திருந்திடிற்
குக்குட ஆசனங் கொள்ளலு மாமே.
பொழிப்புரை :  ``பதுமாதனத்தை வேறொரு வகையாக மாற்றக் குக்குடாதனமாம்`` என்கின்றார். குக்குடம் - கோழி.
பதுமாதனத்தில் மேல்வைக்கப்பட்ட கைகளை உள்ளே விடுத்து நிலத்தில் அழுந்த ஊன்றி, அவ்வாறே முயன்று முழங் கையளவாக மேலெழுந்து சுமைமுழுதும் கைகளில் நிற்றலை அறிந்து வீழாது நின்றால், அந்நிலை கோழி வடிவிற்றாய், ``குக்குடாதனம்`` எனக் கொள்ளத்தகுவதாம்.
=======================================
பாடல் எண் : 5
பாத முழந்தாளிற் பாணி களைநீட்டி
ஆதர வோடும்வாய் அங்காந் தழகுறக்
கோதில் நயனங் கொடிமூக்கி லேயுறச்
சீர்திகழ் சிங்கா தனமெனச் செப்புமே.
பொழிப்புரை :  `குக்குடாதனத்தை வேறுபடுக்கச் சிங்காதனமாம்` என்கின்றார்.
இருகைகளையும் இருமுழந்தாள்களின் இடையே புகச் செலுத்தி இருபாதங்களிலும் படுமாறு நீட்டி, வாயைத் திறந்து கொண்டு, இருகண்களும் மூக்கு நுனியை நோக்க இருக்கின், அவ் இருக்கை சிங்கவடிவிற்றாய், `சிங்காதனம்` என்று பெயர் சொல்லப் படும்.
=======================================
பாடல் எண் : 6
பத்திரங் கோமுகம் பங்கயம் கேசரி
சொத்திரம் வீரம் சுகாதனம் ஓரேழும்
உத்தம மாம்முது ஆசனம் எட்டெட்டுப்
பத்தொடு நூறு பலஆ சனமே.
பொழிப்புரை :  `பத்திரம், கோமுகம், பதுமம், சிங்கம், திரம், வீரம், சுகம்` எனப் பெயர் பெற்ற ஏழ் ஆதனங்களும் உத்தம ஆதனங்களாம். அவற்றொடு உத்தமோத்தம ஆதனமாக முதலிற் கூறப்பட்ட சுவத்திகாதனமும் கூடச் சிறப்புடைய ஆதனங்கள் எட்டாகும். ஆதனங்களை இவ்வாறு `எட்டு` என்பதேயன்றி, `பத்து` என்றும், `நூறு` என்றும், மற்றும் பலவாகவும் கூறுவர்.


Offline Anu

மூன்றாம் தந்திரம்-

பதிகஎண்:5. பிராணாயமம்

(பாடல்கள்:14)

பாடல் எண் : 1
ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்
உய்யக்கொண் டேறுங் குதிரைமற் றொன்றுண்டு
மெய்யர்க்குப் பற்றுக் கொடுக்கும் கொடாதுபோய்ப்
பொய்யரைத் துள்ளி விழுத்திடுந் தானே.

பொழிப்புரை : ஐவர் பணியாளர்க்குத் தலைவன் ஒருவன்; அவனே அவ்வூர்க்கும் தலைவன். அவன், தான் நலன் அடைதற் பொருட்டுத் தனதாகக் கொண்டு ஏறி உலாவுகின்ற குதிரை ஒன்று உண்டு. அது வல்லார்க்கு அடங்கிப் பணிசெய்யும்; மாட்டார்க்கு அடங்காது குதித்து அவரைக் கீழே தள்ளிவிட்டு ஓடிவிடும்.
=======================================
பாடல் எண் : 2
ஆரியன் அல்லன் குதிரை இரண்டுள
வீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை
கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படுந் தானே.

பொழிப்புரை : எல்லா மக்களிடத்தும் ``நல்லன்`` என்றும், ``அல்லன்`` என்றும் இரண்டு குதிரைகள் உள்ளன. அவைகளைக் கடிவாளம் இட்டு அடக்குதற்குரிய சூழ்ச்சியை அறிகின்றவர் அவருள் ஒருவரும் இல்லை. அறிவுத் தலைவனாகிய குருவின் அருளால் அச்சூழ்ச்சியை அறிந்து அதன்வழி அடக்கினால், அக்குதிரைகள் இரண்டும் அடங்குவனவாம்.
=======================================
பாடல் எண் : 3
புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டாற்;
கள்ளுண்ண வேண்டா; தானே களிதரும்;
துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் உணர்வுடை யோர்க்கே.

பொழிப்புரை :  பறவையினும் விரைய ஓடுகின்ற பிராணனாகிய அக்குதிரையின்மேல் ஏறிக்கொண்டால், களிப்பிற்கு வேறு கள்ளுண்ண வேண்டுவதில்லை; அது தானே மிக்கக் களிப்பைத் தரும். அக்களிப்பினாலே துள்ளி நடக்கச் செய்யும்; சோம்பலை நீக்கச் செய்யும்; இவ்வுண்மையை, நாம் சொல்லியவாறே உணரவல்ல வர்க்கே சொன்னோம்.
=======================================
பாடல் எண் : 4
பிராணன் மனத்தொடும் பேரா தடங்கிப்
பிராணன் இருக்கிற் பிறப்பிறப் பில்லை
பிராணன் மடைமாறிப் பேச்சறி வித்துப்
பிராணன் அடைபேறு பெற்றுண் டிரீரே.

பொழிப்புரை :  பிராண வாயுவால் கிளர்ச்சியுற்று ஓடும் இயல் புடைய மனத்தை உடன்கொண்டு, அப்பிராண வாயு வெளியே ஓடாது உள்ளே அடங்கி இருக்குமாயின், பிறப்பு இறப்புக்கள் இல்லா தொழியும். ஆகவே, அந்தப் பிராண வாயுவை அதன் வழியினின்றும் மாற்றி வேறு வழியில் செல்லச் செலுத்தி, அதனால் மோனநிலையை எய்தி, பிராண வாயுவால் அடையத்தக்க பயனை அடைந்து இன்புற்றிருங்கள்.
=======================================
பாடல் எண் : 5
ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பகம் அறுபத்து நால்அதில்
ஊறுதல் முப்பத் திரண்ட திரேசகம்
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே.

பொழிப்புரை :  இது முதல் பிராணாயாமம் செய்யும்முறை கூறுகின்றார்.
(பிரணாயாமம், ``பூரகம், கும்பகம், இரேசகம்`` என்னும் மூன்று வகையினை உடையது. அவற்றுள்,) `பூரகம்` என்பது வெளியே உள்ள தூயகாற்று உடலினுள் புகுதற்கு உரித்தாய செயல். (எனவே, உயிர்க்கிழவன் தனது முயற்சியால் அக்காற்றினை உள்ளாக இழுத்தலாம்) இதன் உயர்ந்த அளவு பதினாறு மாத்திரை. இஃது இடை நாடியால் இடமூக்கு வழியாகச் செய்யற்பாலது. ``கும்பகம்`` என்பது உள்ளே புகுந்த காற்று அங்கே அடங்கி நிற்றற்கு உரித்தாய செயல். (எனவே, அங்கே நில்லாது ஓடுகின்ற அதனை அங்ஙனம் ஓட வொட்டாது தடுத்து நிறுத்தலாம்) இதன் உயர்ந்த அளவு அறுபத்து நான்கு மாத்திரை. ``இரேசகம்`` என்பது, உள் நின்ற காற்று வெளிப் போதற்கு உரித்தாய செயல். (எனவே, உயிர்க்கிழவன் அதனை வெளிச் செல்ல உந்துதலாம்) இதன் உயர்ந்த அளவு முப்பத்திரண்டு மாத்திரை. இம்மூன்றும் ஒருமுறை இவ்வளவில் அமைவது ஒரு முழு நிலைப் பிராணாயாமமாகும். பூரகம் முதலிய மூன்றும் தம்முள் இவ்வாறு இவ்வளவில் ஒத்து நில்லாது ஒன்றில் மாறுபடுதலும், பிரணாயாமம் புரைபடுதற்கு ஏதுவாம்.
=======================================
பாடல் எண் : 6
வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்
பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்
தெளியக் குருவின் திருவருள் பெற்றால்
வளியனும் வெட்ட வெளியனு மாமே.

பொழிப்புரை :  ஒருவன் தன் பிராண வாயுவை வளைத்துத் தன்வயப்படுத்தி ஆள வல்லனாயின், ஆண்டுகள் பல செல்லினும் அவனது உடல் முதுமை எய்தாது, பளிங்குபோல அழகிதாய் இளமை யுற்று விளங்கும். அந்நிலையில் அவனது உணர்வு தெளிவு பெறுதற்கு ஞான குருவின் அருளைப் பெறுவானாயின், அவன் சாந்தி, சாந்தி யதீத கலைகளில் உள்ள புவனங்களை அடையும் அபர முத்தி நிலைகளை அடைவான்.
=======================================
பாடல் எண் : 7
எங்கே இருக்கினும் பூரி இடத்திலே
அங்கே அதுசெய்ய ஆக்கைக் கழிவில்லை
அங்கே பிடித்தது விட்டள வுஞ்செல்லச்
சங்கே குறிக்கத் தலைவனு மாமே.

பொழிப்புரை :  எந்த ஆசனத்தில் இருந்து பிராணாயாமம் செய்யினும், பூரகத்தைச் செய்தல் இடைநாடி வழியாகவே யாம். அவ்வாறு செய்தலால், உடலுக்கு ஊறு ஒன்றும் உண்டாகாது. அந்த ஆசனத்திலே பூரகம், கும்பகம், இரேசகம் என்பவற்றை மேற்கூறிய வாறு செய்யச் சங்கநாதம் முதலிய ஓசைகளை உள்ளே கேட்கும் நிலைமை உண்டாகும். அஃது உண்டாகப் பெற்றவன் பின்னர் யோகருள் தலைவனாய் விளங்குவான்.
=======================================
பாடல் எண் : 8
ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை யுதைக்குங் குறியது வாமே.

பொழிப்புரை :  பிராண வாயுவை இடை நாடியால் உட்புகுத்திப் பூரிக்கும் கணக்கையும், பிங்கலை நாடியால் இரேசிக்கும் கணக்கையும் அறிந்து, அதனானே கும்பிக்கும் கணக்கையும் நன்கு அறிகின்றவர் இல்லை. அக்கணக்குகளை ஆசிரியன் அறிவுறுக்கும் யோக நூல் வழியாக மேற்கூறியவாறாக நன்கு உணர்பவர்கட்குக் கூற்றுவனை வெல்லும் பயன் அம்முறையிற் பயிலுதலேயாய் முடியும்.
=======================================
பாடல் எண் : 9
மேல்கீழ் நடுப்பக்கம் மிக்குறப் பூரித்துப்
பாலாம் இரேசகத் தாலுட் பதிவித்து
மாலாகி உந்தியுட் கும்பித்து வாங்கவே
ஆலாலம் உண்டான் அருள்பெற லாமே.

பொழிப்புரை :  பிராண வாயுவை உடல் முழுதும் பரவுமாறு பூரகத்தையும், அந்த வாயுத் தூய்மையாயிருத்தற் பொருட்டு இரேசகத்தையும், நீண்ட வாழ்நாளையும், மிக்க ஆற்றலையும், பெறுதற் பொருட்டுக் கும்பகத்தையும் மேற்கூறிய முறையிற் செய்து பிராணவாயுவை வசப்படுத்தினால், இப்பிறப்பிற்றானே சிவபெரு மானது திருவருளைப் பெறலாம்.
=======================================
பாடல் எண் : 10
வாமத்தில் ஈரெட்டு மாத்திரை பூரித்தே
ஏமுற்ற முப்பத் திரண்டும் இரேசித்துக்
காமுற்ற பிங்கலைக் கண்ணாக இவ்விரண்
டோமத்தால் எட்டெட்டுக் கும்பிக்க உண்மையே.

பொழிப்புரை :  பூரக இரேசகங்களை முற்கூறியவாறு இடைகலை பிங்கலைகளால் செய்தலே முறையாம். கும்பகத்தை ஓமத்தானமாகிய உந்தித் தானத்திற் செய்தலே முறையாம்.
=======================================
பாடல் எண் : 11
இட்டதவ் வீடிள காதே யிரேசித்துப்
புட்டி படத்தச நாடியும் பூரித்துக்
கொட்டிப் பிராணன் அபானனுங் கும்பித்து
நட்டங் கிருக்க நமனில்லை தானே.

பொழிப்புரை :  இறைவன் உயிரைக் குடிவைத்ததாகிய அந்த இல்லம் (உடம்பு) தளர்வுறா வண்ணம் வீணே போக்கப் படுவதாகிய பிராணவாயுவை அங்ஙனம் போகாதவாறு பிராணாயாமத்தால் பயன்படச் செய்யின் இறப்பு இல்லையாகும். (நீண்ட நாள் வாழலாம் என்பதாம்)
=======================================
பாடல் எண் : 12
புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட உள்ளே நின்மல மாக்கில்
உறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே.

பொழிப்புரை :  வெளி வருவதும், உட்புகுவதுமாய்ப் பயனின்றி அலைகின்ற பிராண வாயு, மேற்கூறிய நெறிக்குட்பட்டு நிற்குமாற்றால் தூயதாகச் செய்யின், உடம்பு ஒளிவிட்டு விளங்கும்; தலை, முகம் முதலானவற்றில் உள்ள மயிர்கள் நரையாது கறுப்பனவாம். இவற்றினும் மேலாகச் சிவபெருமான் அத்தகைய யோகியின் உள்ளத்தை விட்டுப் புறம் போகான்.
=======================================
பாடல் எண் : 13
கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர்
ஓடுவர் மீளுவர் பன்னிரண் டங்குலம்
நீடுவர் எண்விரல் கண்டிப்பர் நால்விரல்
கூடிக் கொளிற்கோலம் அஞ்செழுத் தாமே.

பொழிப்புரை :  ஆடரங்கு ஒன்றை அமைத்து, அதனுள் ஆடப் புகுந்த மங்கையர் இருவர் தாங்கள் ஆடும்பொழுது பன்னிரண்டங்குல தூரம் முன்னோக்கிச் செல்கின்றனர்; ஆயினும், பின்னோக்கி வரும் பொழுது எட்டங்குல தூரமே வருகின்றனர். ஆகவே, அவர் ஒவ்வொரு முறையிலும் நாலங்குல தூரம் கூடத்தை விட்டு நீங்கு பவராகின்றனர். (இவ்வாறே அவர்களது ஆட்டம் நடைபெறு மாயின் எப்பொழுதாவது அவர்கள் அவ்வாடரங்கை முழுதும் விட்டு அப்பாற் போதலும், மீள அதன்கண் வாராமையும் உளவாதல் தப்பா தன்றோ!) ஆகையால், ஒவ்வொரு முறையும் அந்த நாலங்குல தூரமும் அவர்கள் மீண்டு வருவராயின், அக் கூடத்தின் அழகு என்றும் அழியா அழகாய் நிலைத்திருக்கும்.
=======================================
பாடல் எண் : 14
பன்னிரண் டானை பகல்இர வுள்ளது
பன்னிரண் டானையைப் பாகன் அறிகிலன்
பன்னிரண் டானையைப் பாகன் அறிந்தபின்
பன்னிரண்டா னைக்குப் பகல்இர வில்லையே.

பொழிப்புரை :  பன்னிரு முழ உயரமுள்ள யானை ஒன்று பகலும், இரவுமாய் மாறிவரும் காலச் சுழலில் அகப்பட்டுள்ளது. அஃது அவ்வாறிருத்தலை அதன் பாகன் தனது பேதைமையால் அறிந்தானில்லை. அதனை அவன் அறிவானாயின், அந்த யானை அச் சுழலைக் கடந்து நின்று, அவனுக்கு உதவுவதாகும்.


Offline Anu

மூன்றாம் தந்திரம்

பதிகஎண்:6. பிரத்தியாகாரம்

(பாடல்கள்:10)

பாடல் எண் : 1
கண்டுகண் டுள்ளே கருத்துற வாங்கிடிற்
கொண்டுகொண் டுள்ளே குணம்பல காணலாம்
பண்டுகந் தெங்கும் பழமறை தேடியை
இன்றுகண் டிங்கே இருக்கலு மாமே.

பொழிப்புரை :  மனத்தை அகநோக்கிலே காணத்தக்க ஆதார நிலைகளைக் கண்டு கண்டு நிற்குமாறு அடக்கினால், அங்குத்தானே களிப்புப் பெற்று பயன்கள் பலவற்றை அடையலாம். முடிவில் பழைய வேதங்கள் எல்லாம் காண விரும்பிப் பண்டுதொட்டு எங்கும் சென்று தேடியும் காணாத சிவனை இன்றே, இவ்விடத்தே கண்டு, அமைதியோடு இருத்தலும் கூடும்.
=======================================
பாடல் எண் : 2
நாவிக்குக் கீழே பன்னிரண் டங்குலந்
தாவிக்கும் மந்திரந் தன்னை அறிகிலர்
தாவிக்கும் மந்திரந் தன்னை அறிந்தபின்
கூவிக்கொண் டீசன் குடியிருந் தானே.

பொழிப்புரை :  உந்திக்குக் கீழ்ப்பன்னிரு விரற்கிடையளவில் உள்ள இடத்தில் மனத்தை நிலைபெறச் செய்வதாகிய இரகசிய முறையை உலகர் அறியார். அதனை அறிந்து மனத்தை அங்கே நிறுத்துவராயின், இறைவன் தானே வந்து அவர்களைத் தன்பால் வர அழைத்து, அங்கு வீற்றிருப்பான்.
=======================================
பாடல் எண் : 3
மூலத் திருவிரல் மேலுக்கு முன்நின்ற
பாலித்த யோனிக் கிருவிரற் கீழ்நின்ற
கோலித்த குண்டலி யுள்ளெழுஞ் செஞ்சுடர்
ஞாலத்து நாபிக்கு நால்விரற் கீழதே.

பொழிப்புரை :  எருவாய்க்கு இருவிரற்கிடைமேலாகவும், வெளியே தோன்றி நின்று கருவைப் பயக்கும் கருவாய்க்கு இருவிரற்கிடை கீழாகவும் நிற்கின்ற வட்ட வடிவான குண்டலி சத்தியுள் தோன்றுகின்ற செவ்வொளியின் இடம், உந்திக்கு நான்கு விரற்கிடை கீழே உள்ளது.
=======================================
பாடல் எண் : 4
நாசிக் கதோமுகம் பன்னிரண் டங்குலம்
நீசித்தம் வைத்து நினையவும் வல்லையேல்
மாசித்தி மாயோகம் வந்து தலைப்பெய்யும்
தேகத்துக் கென்றுஞ் சிதைவில்லை யாமே.

பொழிப்புரை :  மூக்கிற்குப் பன்னிரு விரற்கிடை கீழாக உள்ள இடத்தில் நீ மனத்தை நிறுத்தித் தியானிக்க வல்லையாயின், அட்டமா சித்திகளைத் தரும் சித்தியோகம் தானே வந்து உன்னை அடையும், உடம்பிற்கும் அழிவு இல்லையாகும்.
=======================================
பாடல் எண் : 5
சோதி இரேகைச் சுடரொளி தோன்றிடிற்
கோதில் பரானந்தம் என்றே குறிக்கொண்மின்
நேர்திகழ் கண்டத்தே நிலவொளி எய்தினால்
ஓதுவ தும்முடல் உன்மத்த மாமே.

பொழிப்புரை :  `சுவாதிட்டானத்தில் உள்ளது` என மேலே சொல்லப் பட்ட பேரொளி, உங்களுக்குக் கீற்றுப்போன்ற விளக்கொளியாகப் புலப்படுமாயின், `அப்பொழுதே பேரின்பம் கிடைத்து விட்டது` எனக்கொண்டு, அவ்வொளியை நோக்குதலையே குறியாகக் கொள்ளுங்கள். இருதயத்திற்கு அடுத்ததானமாய் விளங்குகின்ற கண்டத்தில் (மிடற்றில்) நிலைத்துள்ளதாகிய அவ்வொளியைத் தலைப்பட்டால், அதன் பயனாகச் சொல்லப்படுவது, அதுகாறும் கண்டறியாத ஒரு புதிய இன்ப அனுபவமாம்.
=======================================
பாடல் எண் : 6
மூலத் துவாரத்தை முக்கார மிட்டிரு
மேலைத் துவாரத்தின் மேல்மனம் வைத்திரு
வேலொத்த கண்ணை வெளியில் விழித்திரு
காலத்தை வெல்லுங் கருத்திது தானே.
 

பொழிப்புரை :  பிரத்தியாகாரத்தை மனப்பயிற்சி அளவில் செய்தால், கால வரையறை இடவரையறைகள் இன்றி, எல்லாவற்றையும் ஒருங்கே உணரத்தக்க யோகக் காட்சியைப் பெறுதலே அதற்குப் பயனாய் முடியும். அதனை அஞ்ஞான இருள் நீங்கி இறைவனை உணரும் கருத்தோடு செய்யின், தான் இறைவனை உணர்தலேயன்றிப் பிறரையும் உணரச் செய்கின்ற கடவுள் தன்மையையும் உடையவனாகலாம்.

பிராணாயாமத்தை அறியாத முன்னெல்லாம் சிறிதும் நின்று பயன் தராமல் வெளியே போய்விடுகின்ற பிராணவாயு, பிராணாயாமத்தில் பூரகத்தால் உள்ளே புகுதலும் அது முன்போலப் போய்விடாதவாறு யோகி கும்பகம் செய்தலில் உறுதி பெற்று நிற்றலால் அவ்வாயு உண்மையாக அவனோடு ஒத்து நிற்குமாயின், மனமும் அவனால் அடையப்பட்ட பொருளாய், அவன், வழிப்பட்டு நின்றதேயாம். அதனால், இறைவன் அவ்யோகியினது உள்ளத்தினின்றும் புறம்போகான்; (சிவனை மறக்கும் நிலை உண்டாகாது என்றபடி.)

மனத்தை ஒருக்குதலால், கருவி கரணங்களின் தொடக்கையும், ஆன்ம அறிவையும் வேறு பிரித்துக் காணுதலும், அவ்வாறு காணும் காட்சியையும் மெல்ல மெல்ல மறந்து, அறிவு வடிவாகிய இறைவனை உணர்தலும், அந்த உணர்வினால் அவனிடத்து அன்பு மிகப் பெறுதலும், அந்த அன்பினால் அவனிடத்தே அழுந்திக் கிடக்க முயலுதலும் ஆகிய இவையே பிரத்தியாகாரத்தால் அடையும் பெரும் பயன்களாம். சுவாதிட்டானத்தில் நின்று மூலாதாரத்திலும் ஊடுருவி விளங்குகின்ற பேரொளியைப் புருவ நடுவில் நின்று தியானிக்க வல்லவர்கட்கு, பிறப்பை நீக்குகின்ற ஞான மயனாகிய இறைவன் இரண்டற நின்று, அவரே தானாகி விளங்குவான்.

மாணவனே! பிரத்தியாகாரத்தில் நீ விசுத்திக்கு மேலும் செல்ல விரும்புவையாயின், கும்பகத்தால் நின்ற வாயு கீழே போகாமல்) எருவாய்ப் புழையை இறுக அடைத்து, (அவ் வாயு மேல் அண்ணத்தில் உள்ள துளை வழியாக மூக்குத் துளையை அடைந்து புறப்படுமாறு) மனத்தை அவ் அண்ணத்தின் துளையிடத்தே வைத்துப் புருவ நடுவில் நில் - அந்நிலையில் (அக்காற்று, கண் காதுகள் வழியாகவும் பரவிப் புறப்படும் ஆதலின்), கண்களை இமையும் கொட்டாமல் விழித்திரு. இதுவே நீ காலத்தை வெல்லும் முறை.
=======================================
பாடல் எண் : 7
எருவிடும் வாசற் கிருவிரல் மேலே
கருவிடும் வாசற் கிருவிரற் கீழே
உருவிடுஞ் சோதியை உள்கவல் லார்க்குக்
கருவிடுஞ் சோதி கலந்துநின் றானே.

பொழிப்புரை :  சுவாதிட்டானத்தில் நின்று மூலாதாரத்திலும் ஊடுருவி விளங்குகின்ற பேரொளியைப் புருவ நடுவில் நின்று தியானிக்க வல்லவர்கட்கு, பிறப்பை நீக்குகின்ற ஞான மயனாகிய இறைவன் இரண்டற நின்று, அவரே தானாகி விளங்குவான்.
=======================================
பாடல் எண் : 8
ஒருக்கால் உபாதியை ஒண்சோதி தன்னைப்
பிரித்துணர் வந்த உபாதிப் பிரிவைக்
கரைத்துணர் வுன்னல் கரைதல்உள் நோக்கல்
பிரத்தியா காரப் பெருமைய தாமே.

பொழிப்புரை :  மனத்தை ஒருக்குதலால், கருவி கரணங்களின் தொடக்கையும், ஆன்ம அறிவையும் வேறு பிரித்துக் காணுதலும், அவ்வாறு காணும் காட்சியையும் மெல்ல மெல்ல மறந்து, அறிவு வடிவாகிய இறைவனை உணர்தலும், அந்த உணர்வினால் அவனிடத்து அன்பு மிகப் பெறுதலும், அந்த அன்பினால் அவனிடத்தே அழுந்திக் கிடக்க முயலுதலும் ஆகிய இவையே பிரத்தியாகாரத்தால் அடையும் பெரும் பயன்களாம்.
=======================================
பாடல் எண் : 9
புறப்பட்ட வாயுப் புகவிடா வண்ணந்
திறப்பட்டு நிச்சயஞ் சேர்ந்துடன் நின்றால்
உறப்பட்டு நின்றதவ் வுள்ளமும் அங்கே
புறப்பட்டுப் போகான் பெருந்தகை யானே.

பொழிப்புரை :  பிராணாயாமத்தை அறியாத முன்னெல்லாம் சிறிதும் நின்று பயன் தராமல் வெளியே போய்விடுகின்ற பிராணவாயு, பிராணாயாமத்தில் பூரகத்தால் உள்ளே புகுதலும் அது முன்போலப் போய்விடாதவாறு யோகி கும்பகம் செய்தலில் உறுதி பெற்று நிற்றலால் அவ்வாயு உண்மையாக அவனோடு ஒத்து நிற்குமாயின், மனமும் அவனால் அடையப்பட்ட பொருளாய், அவன், வழிப்பட்டு நின்றதே யாம். அதனால், இறைவன் அவ் யோகியினது உள்ளத்தினின்றும் புறம்போகான்; (சிவனை மறக்கும் நிலை உண்டாகாது என்றபடி.)
=======================================
பாடல் எண் : 10
குறிப்பினின் உள்ளே குவலயந் தோன்றும்
வெறுப்பிருள் நீங்கி விகிர்தனை நாடுஞ்
சிறப்புறு சிந்தையைச் சிக்கென் றுணரில்
அறிப்புறு காட்சி அமரனு மாமே.

பொழிப்புரை :  பிரத்தியாகாரத்தை மனப்பயிற்சி அளவில் செய்தால், கால வரையறை இடவரையறைகள் இன்றி, எல்லா வற்றையும் ஒருங்கே உணரத்தக்க யோகக் காட்சியைப் பெறுதலே அதற்குப் பயனாய் முடியும். அதனை அஞ்ஞான இருள் நீங்கி இறைவனை உணரும் கருத்தோடு செய்யின், தான் இறைவனை உணர்தலேயன்றிப் பிறரையும் உணரச் செய்கின்ற கடவுள் தன்மையையும் உடையவனாகலாம்.


Offline Anu

மூன்றாம் தந்திரம்

பதிகஎண்:7. தாரணை

(பாடல்கள்:9)

பாடல் எண் : 1
கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி
வீணாத்தண் டூடே வெளியுறத் தான்நோக்கிக்
காணாக்கண் கேளாச் செவியென் றிருப்பார்க்கு
வாணாள் அடைக்கும் வழியது வாமே.

பொழிப்புரை :  கோணுதல் (புலன்வழி ஓடுதல்) உடையதாய் இருந்த மனம், பிரத்தியாகாரத்தில் அதனை விடுத்து ஒருவழிப் பட, அதனை அவ்வழியில் முன்போல மீளாதவாறு குறிக் கொண்டு தடுத்து, சுழுமுனை வழியாக மேலே செல்கின்ற வாயுவே பற்றுக்கோடாக மேற்செலுத்தி, ஆஞ்ஞையை அடையு மாற்றால் அவ்விடத்திலே செய்யும் தியானத்தால் ஐம்பொறிகள் செயலற்றிருக்கும் நிலையை எய்தினவர்கட்கு, அந்நிலைதானே பிறவி வரும் வழியை அடைக்கின்ற உபாயமாகிவிடும்.
=======================================
பாடல் எண் : 2
மலையார் சிரத்திடை வானீர் அருவி
நிலையாரப் பாயும் நெடுநாடி யூடுபோய்ச்
சிலையார் பொதுவில் திருநட மாடும்
தொலையாத ஆனந்தச் சோதி கண் டேனே.

பொழிப்புரை :  மேருமலையின் உச்சியினின்றும் வானீர் அருவி எப்பொழுதும் வீழ்ந்துகொண்டிருக்கும். வில் வடிவாய் அமைந்த அம்பலத்தில் ஒளிவடிவாகிய சிவன், எல்லையில் இன்பத்தைத் தரும் ஆனந்தத் திருக்கூத்தினை எப்பொழுதும் ஆடிக் கொண்டே இருப்பான். இவ்விரண்டையும் நான் நீண்ட சுழுமுனை நாடி வழியாகச் சென்று கண்டேன்.
=======================================
பாடல் எண் : 3
மேலை நிலத்தினாள் வேதகப் பெண்பிள்ளை
மூல நிலத்தில் துயில்கின்ற மூர்த்தியை
ஏல எழுப்பி இவளுடன் சந்திக்கப்
பாலனும் ஆவான் பராநந்தி ஆணையே.

பொழிப்புரை :  கருவை ஏற்றுக் குழவியாக மாற்றித் தருகின்ற பெண், மேல் மாடத்தில் எதிர்நோக்கி இருக்கின்றாள். அவளுடன் சேர வேண்டிய ஆடவனோ அடித் தலத்தில் உறங்கிக் கொண்டிருக் கின்றான். அவனை நன்றாக விழித்தெழச் செய்து அப் பெண்டுடன் கூடப்பண்ணினால், நல்ல பாலகன் பிறப்பான்; இதற்கு என் குருவின்மேல் ஆணை.
=======================================
பாடல் எண் : 4
கடைவாச லைக்கட்டிக் காலை எழுப்பி
இடைவாசல் நோக்கி இனிதுள் இருத்தி
மடைவாயிற் கொக்குப் போல் வந்தித் திருப்பார்க்
குடையாமல் ஊழி இருக்கலு மாமே.

பொழிப்புரை :  பூரக இரேசகம் செய்து கும்பிக்கப்பட்ட பிராணவாயு கீழ்ப்போகாதவாறு எருவாயை அடைத்து அதனால் போகாது நின்ற வாயுவை மூலாதாரம், சுவாதிட்டானம் முதலாக மேல் நோக்கிப் போகச்செய்து, ஆஞ்ஞைக்குக் கீழ் உள்ள இடை ஆதாரங்கள் ஒவ்வொன்றிலும் மனத்தை நன்றாகப் பொருந்த வைத்து, நீர் மடையில் கொக்கு, தான் வேண்டுகின்ற மீன் வரும் வரையில் அதனையே குறிக்கொன்டு நோக்கிச் செயலின்றியிருத்தல் போல, அங்குக் கருதப்படுகின்ற கடவுளரால் அவ்வாதாரயோகம் கைவருமளவும் அவரை வழிபட்டிருப்பவர்கட்கு, யோகநிலை முற்றும் கைவரும் காலம் வரையில் இறவாமலே இருத்தலும் கூடும்.
=======================================
பாடல் எண் : 5
கலந்த உயிருடன் காலம் அறியில்
கலந்த உயிரது காலின் நெருக்கம்
கலந்த உயிரது காலது கட்டிற்
கலந்த உயிருடல் காலமும் நிற்குமே.

பொழிப்புரை :  காலத்தால் கலந்திடப்பட்ட உயிருடன் அக்காலம் கலந்து நிற்கும் இயல்பை ஆராய்ந்து அறியின், அது பிராண வாயுவின் திட்பமேயாம். ஆகவே, அந்த உயிர் பிராண வாயுவை அடக்கும் முறையை அறிந்துகொள்ளுமாயின், உயிர் நிற்பது போலவே அதனைக் கலந்து நிற்கின்ற காலமும் ஓடாது ஒரு நிலையாய் நிற்கும்.
=======================================
பாடல் எண் : 6
வாய்திற வாதார் மனத்திலோர் மாடுண்டு
வாய்திறப் பாரே வளியிட்டுப் பாய்ச்சுவர்
வாய்திற வாதார் மதியிட்டு மூட்டுவர்
கோய்திற வாவிடிற் கோழையு மாமே.

பொழிப்புரை :  யாவரிடத்திலும் உள்ளமாகிய கருவூலத்தில் ஒரு பெருஞ்செல்வம் உள்ளது. ஆயினும், அக்கருவூலத்திற்கு வாயிலாய் உள்ள சுழுமுனை வழியைத் திறக்க மாட்டாதவர் அச்செல்வத்தை எய்தப் பெறார். அவ்வழியைத் திறக்க விரும்புவோர் பிராண வாயுவை அங்குக் கும்பகம் செய்து திறந்து கும்பித்த அவ்வாயுவை உள்ளே பாய்ச்சுவர். அது செய்யாதோர் மேற்கூறிய செல்வத்தைப் பெறுதற்குத் தம் அறிவை அக்கருவூலத்தின் புறத்தே மோதவிட்டு அல்லற்படுவர். கருவூலத்தைத் திறவாமலே அதிலுள்ள செல்வத்தைப் பெற முயலுபவன் அதனைப் பெறாது பாழுக்கு உழைப்பவனாதலேயன்றி, `அறிவிலி` என அறிவுடையாரால் இகழவும் படுவான்.
=======================================
பாடல் எண் : 7
வாழலு மாம்பல காலம் மனத்திடைப்
போழ்கின்ற வாயு புறம் படாப் பாய்ச்சுறில்
ஏழுசா லேகம் இரண்டு பெருவாய்தற்
பாழி பெரியதோர் பள்ளி அறையே.

பொழிப்புரை :  சுழுமுனை வழியை ஊடறுத்துச் செல்ல வல்ல தாகிய பிராணவாயுவைப் புறத்துப் போகாதவாறு தடுத்து அச்சுழு முனை வழியுட் பாய்ச்சினால் ஏழு பலகணிகளையும், `தலைவாயில், கடைவாயில்` என்னும் இரண்டு பெரு வாயில்களையும் உடைய பாழ் வீடு இன்பமாகக் கிடந்து உறங்கத் தக்க நல்ல பள்ளியறை யாய்விடும். அப்பொழுது அதில் ஆதாரங்களாகிய கட்டிலிற் கிடந்து பல காலம் இன்புற்றிருக்கலாம்.
=======================================
பாடல் எண் : 8
நிரம்பிய ஈரைந்தில் ஐந்திவை போனால்
இரங்கி விழித்திருந் தென்செய்வை பேதாய்
வரம்பினைக் கோலி வழிசெய்கு வார்க்குக்
குரங்கினைக் கோட்டை பொதியலு மாமே.

முன்னம் வந்தனர் எல்லாம் முடிந்தனர்
பின்னை வந்தவர்க் கென்ன பிரமாணம்
முன்னுறு கோடி உறுகதி பேசிடில்
என்ன மாயம் இடிகரை நிற்குமே.

பொழிப்புரை :  ஒன்றும் அறியாத மாணவனே! உடம்பினுள் நிறைந்திருக்கின்ற பத்து வாயுக்களில் இயங்கும் வாயுக்கள் ஐந்து வீணாய்ப் போய்விட்டால், நீ விழித்திருந்தும் என் செய்ய மாட்டுவாய்! கழிந்ததற்கு இரங்கி நிற்பவனேயாவாய். ஆகையால், பிராணா யாமத்திற்குக் கூறிய முறையைக் கடைப்பிடித்துப் பிராண வாயு மேலேறுதற்கு வழியை உண்டாக்குபவர்கட்கு, மனமாகிய குரங்கை ஆதாரங்களாகிய கோட்டையை விட்டுப் புறத்தே குதித்து ஓடாதபடி நிற்கச் செய்தலும் கூடும்.
=======================================
பாடல் எண் : 9
அரித்த வுடலைஐம் பூதத்தில் வைத்துப்
பொருத்தஐம் பூதம்சத் தாதியிற் போந்து
தெரித்த மனாதிசித் தாதியிற் செல்லத்
தரித்தது தாரணை தற்பரத் தோடே.

பொழிப்புரை :  தாரணையை மேற்கூறிய பாவனையளவில் செய்யாது, தத்துவ ஞானத்தைப் பெற்று அதன் வழிச் செய்யின், அஃது இறைவனோடே ஒன்றி நிற்பதாகும்.


Offline Anu

மூன்றாம் தந்திரம்

பதிகஎண்:8. தியானம்

(பாடல்கள்:19)

பாடல் எண் : 1
வருமாதி யீரெட்டுள் வந்த தியானம்
பொருவாத புந்தி புலன்போக மேவல்
உருவாய சத்தி பரத்தியானம் உன்னும்
குருவார் சிவத்தியானம் யோகத்தின் கூறே.

பொழிப்புரை :  தாரணை இறுதிக்கண் சொல்லியவாறு, `பூதம் ஐந்து, தன்மாத்திரை ஐந்து, அந்தக்கரணம் நான்கு, பிரகிருதி ஒன்று` என்னும் பதினைந்துடன் புருடன் ஒன்று கூடப் பதினாறையும் தியான முறைப் படி அவ்வவ் வாதாரங்களில் வைத்துத் தியானித்தல், கருவி கரணங்களினின்று நீங்கிநிற்கும் சாதன யோகமாகவே முடியும். அதற்குமேல் ஒளி வடிவாகிய சத்தியையும், அதற்குமேல் அருவாய் நிற்கும் சிவத்தையும் தியானித்தலே சாத்திய யோகமாம். ஆகவே, தியான யோகம், சாதன சாத்திய வகையால் இங்ஙனம் இருகூறாய் நிற்கும் என்க.
=======================================
பாடல் எண் : 2
கண்ணாக்கு மூக்குச் செவிஞானக் கூட்டத்துட்
பண்ணாக்கி நின்ற பழம்பொருள் ஒன்றுண்டு
அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டிப்
பிண்ணாக்கி நம்மைப் பிழைப்பித்த வாறே.

பொழிப்புரை :  கண் முதலிய பொறியறிவின் சேர்க்கையால் நம்மைப் பண்படுத்தி நின்ற முதற்பொருள் ஒன்று உளது. அஃது, எல்லையற்ற பேரொளியாயினும், அதனை நாம் உள் நாக்கினை ஒட்டி உள்ள சிறிய துளை வழியில் சென்று காண்கின்ற ஒரு சிற்றொளியாகத் தரிசிக்கச் செய்தவாற்றால், `பாம்பு` எனப்படுகின்ற குண்டலி சத்தி நம்மை உய்வித்தது வியக்கத்தக்கது.
=======================================
பாடல் எண் : 3
ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளிதன்னைக்
கண்ணாரப் பார்த்துக் கலந்தங் கிருந்திடில்
விண்ணாறு வந்து வெளிகண் டிடவோடிப்
பண்ணாமல் நின்றது பார்க்கலு மாமே.

பொழிப்புரை :  புறத்தில் உள்ளவர்களால் பார்க்க இயலாத கண்ணில் (திறவாது மூடியிருக்கின்ற நெற்றிக் கண்ணில்) மின்னல் போலத் தோன்றிய ஒளியைப் பின் அக்கண் நிரம்பக் குறைவின்றிப் பார்த்து, அதனொடு உணர்வு ஒன்றியிருப்பின், பிற முயற்சிகளுள் யாதும் செய்யாமலே அந்த ஒளியை நன்கு தரிசித்திருக்கலாம்.
=======================================
பாடல் எண் : 4
ஒருபொழு துன்னார் உடலோ டுயிரை
ஒருபொழு துன்னார் உயிருட் சிவனை
ஒருபொழு துன்னார் சிவனுறை சிந்தையை
ஒருபொழு துன்னார் சந்திரப் பூவே.

பொழிப்புரை :  உலகர் பலரும் அழிபொருளாகிய உடம்பை உணர்கின்றார்களே யன்றி, அதனோடு வேறறக் கலந்து நிற்கின்ற அழிவில் பொருளாகிய உயிரை அறிதல் இல்லை. இனி, ஒரு சிலர் உயிரை அறியினும், அவ்வுயிர்க்கு உயிராய் நிற்கின்ற சிவனை அறிகின்றார்களில்லை. இனிச் சிலர், `உயிர்க்குயிராய்ச் சிவன் ஒருவன் இருக்கின்றான்` என்று உணரினும், `அவன், ஆஞ்ஞைத் தியானத்தால் காணத்தக்கவன்` என்று உணரமாட்டாதவராகின்றனர். இன்னும் ஒரு சிலரோ, `அவ்வாறு காணத் தக்கவன்` என்று உணர்ந்தும் ஒரு நொடி நேரமாயினும் அந்தத் தியானத்தைத் தலைப்பட எண்ணாமலே யிருந்தொழிவர்!
=======================================
பாடல் எண் : 5
மனத்து விளக்கினை மாண்பட ஏற்றிச்
சினத்து விளக்கினைச் செல்ல எருக்கி
அனைத்து விளக்குந் திரியொக்கத் தூண்ட
மனத்து விளக்கது மாயா விளக்கே.

பொழிப்புரை :  மேல் மாடத்தில் ஏற்ற வேண்டுவதாகிய விளக்கை நன்றாக ஏற்றிய பின்னும், மாளிகையை அழிக்க அதன் ஒரு பக்கத்தில் பற்றியுள்ள `சினம்` என்னும் நெருப்பை முற்ற அணைத்துவிட்டுக் கீழ் நிலையில் உள்ள மற்றைய விளக்குகளும் அணைந்து போகாதபடி எல்லாவற்றிலும் திரியை ஒரு சேரத் தூண்டி வைத்தால், முன்பு மேல் மாடத்தில் ஏற்றப்பட்ட விளக்கு உண்மையில் ஏற்றப்பட்டதாகும்.
=======================================
பாடல் எண் : 6
எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்
கண்ணார் அமுதனைக் கண்டறி வாரில்லை
உண்ணாடி உள்ளே ஒளிபெற நோக்கிடில்
கண்ணாடி போலக் கலந்துநின் றானே.

பொழிப்புரை :  நெடுங்காலம் யோகம் செய்யினும், மேற்கூறிய தியான நிலையை அடைய முயல்பவர் அரியர். அந்நிலையை அடைந்தால், சிவன், கண்ணாடியுள்ளே இருக்கின்ற பொருள் இனிது விளங்குதல்போல, உயிர்க்குயிராய் நிற்கின்ற நிலை இனிது விளங்கும்.
=======================================
பாடல் எண் : 7
நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
வாட்டமும் இல்லை மனைக்கும் அழிவில்லை
ஓட்டமும் இல்லை உணர்வில்லை தானில்லை
தேட்டமும் இல்லை சிவன்அவன் ஆமே.

பொழிப்புரை :  ஒருவன் ஆஞ்ஞைத் தியானம் செய்தால் துன்பம், இறப்பு, கவலை, ``எனது`` என்னும் பற்று, ``யான்`` என்னும் முனைப்பு, இவை காரணமாகச் சிலவற்றைத் தேட முயலும் முயற்சி ஆகிய அனைத்தும் அவனுக்கு இல்லாதொழியும். பின்பு அவன் சிவனேயாய் விடுவான்.
=======================================
பாடல் எண் : 8
நயனம் இரண்டையும் நாசிமேல் வைத்திட்
டுயர்வெழா வாயுவை உள்ளே அடக்கித்
துயரற நாடியே தூங்கவல் லார்க்குப்
பயனிது காயம் பயமில்லை தானே.

பொழிப்புரை :  ஆஞ்ஞைத் தியானத்தை முறைப்படி செய்து அதனால் இன்புற்றிருப்பவர்க்கு இவ்வுடம்பு தரும் பயன் இவ்வின்ப நிலையேயாம். ஆகவே, இப்பயனை இவ்வுடம்பு தாராதொழியின், அதனால் பயன் வேறில்லை.
=======================================.
பாடல் எண் : 9
மணிகடல் யாஅனை வார்குழல் மேகம்
அணிவண்டு தும்பி வளைபே ரிகையாழ்
தணிந்தெழு நாதங்கள் தாம்இவை பத்தும்
பணிந்தவர்க் கல்லது பார்க்கஒண் ணாதே.

(இதற்குப் பின் உள்ள ``கடலொடு மேகம்`` என்னும் பாடல் நாயனார் திருமொழியன்று.)

கடலொடு மேகங் களிறொடும் ஓசை
அடவெழும் வீணை அண்டரண் டத்துச்
சுடர்மன்னு வேணுச் சுரிசங்கின் ஓசை
திடமறி யோகிக்கல் லாற்றெரி யாதே.

பொழிப்புரை :  `மணி நா ஓசை, கடல் ஓசை, யானை பிளிறும் ஒலி, குழல் இசை, மேகத்தின் முழங்கு குரல், வண்டு, தும்பி இவற்றின் ஒலி, சங்கநாதம், முரசின் முழக்கம், யாழ் இை\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\u2970?` என்னும் ஒலிகள் போன்ற மெல்லிய ஒலிகள் பத்தினையும் ஆஞ்ஞைத் தியானத்தை அடைந்தவர் கட்கல்லது, மற்றையோர்களுக்குக் கேட்டல் கூடாததாகும்.
=======================================
பாடல் எண் : 10
ஈசன் இயல்பும் இமையவர் ஈட்டமும்
பாசம் இயங்கும் பரிந்துயி ராய்நிற்கும்
ஓசை அதன்மணம் போல விடுவதோர்
ஓசையாம் ஈசன் உணரவல் லார்க்கே.

பொழிப்புரை :  தியான யோகத்தால் இறைவனை உணரமாட்டா தவர்க்கு அவனது இயல்பும், தேவர் கூட்டம் முதலிய பிற எல்லாப் பொருள்களும், அவரது உணர்வைத் தம்பால் ஈர்த்து அடக்கி அவரது உணர்வேயாய் நிற்கின்ற, மேற்கூறிய, ``மணி கடல் யானை`` முதலிய ஓசைகளாகவே தோன்றும். அவ்யோகத்தால் அவனை உணர வல்லவர்க்கு அவ்வாறின்றி, ஈசன் இயல்பு முதலிய யாவும், ``அவ் வோசையின் வாசனை`` எனச் சொல்லத்தக்கவாறு, அவ்வோசை நீங்கிய பின்னும் நிலைபெறுவதொரு நுண்ணிய ஓசையாய் விளங்கும்.
=======================================
பாடல் எண் : 11
நாத முடிவிலே நல்லாள் இருப்பது
நாத முடிவில்நல் யோகம் இருப்பது
நாத முடிவிலே நாட்டம் இருப்பது
நாத முடிவிலே நஞ்சுண்ட கண்டனே.

பொழிப்புரை :  தத்துவ நிலையிலும் சத்தியும் சிவமும் இருப்பது நாத தத்துவத்திற்கு அப்பாலாகலின், தியான யோகத்தின் முடிவு நிலையும் மேற்கூறிய பத்து வகை ஓசைகள் அடங்கிய இடமேயாம். அதனால், யோகியரது நோக்கம் அவ்விடத்திற் செல்வதே.
=======================================
பாடல் எண் : 12
உதிக்கின்ற ஆறினும் உள்ளங்கி ஐந்தும்
துதிக்கின்ற தேசுடைத் தூங்கிருள் நீங்கி
அதிக்கின்ற ஐவருள் நாதம் ஒடுங்கக்
கதிக்கொன்றை ஈசன் கழல்சேர லாமே.

பொழிப்புரை :  ஆதார மூர்த்திகள் வெளிப்படும் இடமாகிய ஆறு ஆதாரங்களுள்ளும் உள்ளொளியாகிய பிரமன் முதலிய ஐவரையும் தியானிக்கும் தியானத்தால், புகழப்படுகின்ற ஒளியை உடைய, ஆயினும், சிவனைத் தலைப்பட ஒட்டாத - மயக்கம் நீங்க, அதன்பின், மேம்பட்டவராக மாயோனை முதலில் வைத்து இறுதிக்கண் நாதமூர்த்தியைக் கூட்டி எண்ணும் ஐவருள் நாதமூர்த்தியும் ஒடுங்கக் காணின், பரமசிவனது திருவடியை அடைதல் கூடும்.
=======================================
பாடல் எண் : 13
பள்ளி அறையில் பகலே இருளில்லை
கொள்ளி அறையிற் கொளுந்தாமற் காக்கலாம்
ஒள்ளி தறியில்ஓர் ஓசனை நீள்இது
வெள்ளி அறையில் விடிவில்லை தானே.

பொழிப்புரை :  மேற் (பா. 568-573) கூறிவந்த இடங்களுள் முடிவாகிய பள்ளியறையில் பகலன்றி இரவே இல்லை. இவ்வொளி யிடத்தை அடைய நினைத்தால் இஃது ஓரு யோசனை தூரத்தில் உள்ளது. இதனை அடைந்துவிட்டால், வீட்டை எக்காலத்தும் தீப்பற்றிக் கொள்ளாமலும் காப்பாற்றலாம். இப்பள்ளியில் சென்றவர் விழித்தெழுந்து வெளிப்போத வேண்டுவதில்லை.
=======================================
பாடல் எண் : 14
கொண்ட விரதம் குறையாமல் தான்ஒன்றித்
தண்டுடன் ஓடித் தலைப்பட்ட யோகிக்கு
மண்டலம் மூன்றினும் ஒக்க வளர்ந்தபின்
பிண்டமும் ஊழி பிரியா திருக்குமே.

பொழிப்புரை :  இயமம் முதலாகத் தான் மேற்கொண்ட நோன்புகள் சிறிதும் குறைவுறாதவாறு அவற்றில் உறைத்து நின்று, பிராணா யாமத்தால் சுழுமுனை நாடி வழியே சென்று ஆஞ்ஞையை அடைந்த யோகிக்கு, உடம்பு, `அக்கினி மண்டலம், சூரிய மண்டலம், சந்திர மண்டலம்` என்னும் மூன்று பகுதிகளிலும் செம்மையுற்று, நிற்க வேண்டிய முறையில் சிறிதும் பழுதின்றி நிற்கும் ஆதலால், அஃது ஊழிக் காலம் வரினும் நீங்காத தன்மையைப் பெற்றிருக்கும்.
=======================================
பாடல் எண் : 15
அவ்வவர் மண்டல மாம்பரி சொன்றுண்டு
அவ்வவர் மண்டலத் தவ்வவர் தேவராம்
அவ்வவர் மண்டலம் அவ்வவர்க் கேவரில்
அவ்வவர் மண்டலம் ஆயம்மற் றோர்க்கே.

பொழிப்புரை :  (அக்கினி மண்டலம் முதலாகக் கூறிய மண்டலங்கள் மூன்றுக்கும் சிவபெருமான் ஒருவனே முதல்வனாக அறிந்து, எவ்விடத்தும் அவனையே தியானித்து அவனாகின்ற யோகமே உண்மை யோகம்; அது சத்தி நிபாதர்க்கல்லது கூடாது. அது நிற்க.) அம் மூன்று மண்டலங்கட்கும் அக்கினி முதலிய மூவரையே முதல்வராகக் கருதி ஆங்காங்கு அவ்வவரைத் தியானித்து அவரா கின்ற பொது முறைமையும் உண்டு. (அது சத்திநிபாதரல்லாதார்க்கு உரியதாம். மூன்று மண்டலங்கட்கும் மூவர் முதல்வராகிவிடின், கலாம் விளையுமன்றோ எனின்,) மூவரையும் முதல்வராக எண்ணுவோர், ஒருவர் மற்றை இருவர்க்கும் தோழமை யுடையவராக, மூவரிடை இணக்கமே கொள்ளுதலின், கலாம் விளையாதாம்.
=======================================
பாடல் எண் : 16
இளைக்கின்ற நெஞ்சத் திருட்டறை உள்ளே
முளைக்கின்ற மண்டலம் மூன்றினும் ஒன்றித்
துளைப்பெரும் பாசம் துருவிடு மாகில்
இளைப்பின்றி மார்கழி ஏற்றம தாமே.

பொழிப்புரை :  ஒவ்வொரு பயனைத் தருபவர் ஒரோவொரு தேவராக நினைந்து அவர் அனைவரிடத்தும் ஓடி இளைக்கின்ற நெஞ்சத்தைத் தனது சரக்காக உடைய இருட்டறையாகிய உடலி னுள்ளே தனித்தனி முதன்மை பெற்றுத் தோன்றுகின்ற மண்டலங்கள் மூன்றிலும் பொருந்தி ஊடுருவிச் செல்வதாகிய பெரிய நூல் அவ்வாறு அவற்றை ஒன்றுபடக் கோத்துச் செல்லுமாயின், உயிர் மேற்கூறிய இளைப்பை அகன்று, மார்கழி நீராட்டுப்போல இன்ப வெள்ளத்தில் மூழ்கிச் சிறக்கும்.
=======================================
பாடல் எண் : 17
முக்குண மூடற வாயுவை மூலத்தே
சிக்கென மூடித் திரித்துப் பிடித்திட்டுத்
தக்க வலமிடம் நாழிகை சாதிக்க
வைக்கும் உயிர்நிலை வானவர் கோனே.

பொழிப்புரை :  பிராணாயாமம் முதலியவற்றை முறைப்படி பயில வல்லவர்க்கு அவற்றின் பயனைத் தருபவன், தேவ தேவனாகிய சிவபெருமானே; (அவன் வழி நிற்போராகிய ஏனைய தேவர் அது மாட்டார்.)
=======================================
பாடல் எண் : 18
நடலித்த நாபிக்கு நால்விரல் மேலே
மடலித்த வாணிக் கிருவிரல் உள்ளே
கடலித் திருந்து கருதவல் லார்கள்
சடலத் தலைவனைத் தாமறிந் தாரே.

பொழிப்புரை :  சிவயோகியரேயாயினும், அனாகதத்தளவிலே நிற்பவர் ஆன்ம நிலையையே உணர்வர்; சிவ நிலையை உணர மாட்டார்.
=======================================
பாடல் எண் : 19
அறிவாய் அசத்தென்னும் ஆறா றகன்று
செறிவான மாயை சிதைத்தரு ளாலே
பிறியாத பேரரு ளாயிடும் பெற்றி
நெறியான அன்பர் நிலையறிந் தாரே.

பொழிப்புரை :  யோகத்தை முறைப்படி பயின்ற அடியவரே, அறிவில்லாத பொருளாகிய முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து அறிவுருவாய் நின்று, அதனால், வலிய மாயையின் மயக்கத்தையும் வென்று, இறைவனது திருவருளால், வேறு நில்லாது அவனது தன்மையையே தமது தன்மையாகப் பெற்று நிற்கின்ற ஞானத்தை நிலைபெற உணர்ந்தோராவர்.


Offline Anu

மூன்றாம் தந்திரம்

பதிகம் எண்:9. சமாதி

(பாடல்கள்:13)

பாடல் எண் : 1
சமாதி யமாதியிற் றான்செல்லக் கூடும்
சமாதி யமாதியிற் றானெட்டுச் சித்தி
சமாதி யமாதியிற் றங்கினோர்க் கன்றே
சமாதி யமாதி தலைப்படுந் தானே.

பொழிப்புரை :  ``சமாதி`` என்னும் முடிவுநிலை, இயமம் முதலிய ஏனை உறுப்புக்களில் வழுவாது நிற்றலாலே வாய்ப்பதாம். இச்சமாதி யேயன்றி அட்டமாசித்திகளும், இயமம் முதலிய அவ்வுறுப்புக்களால் விளையும். இத்துணைச் சிறப்புடைய இயமம் முதலியவற்றை முற்றிச் சமாதியில் நிலைபெற்றவர்க்கேயன்றோ யோகம் முற்றுப்பெறுவது!
=======================================
பாடல் எண் : 2
விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடிற்
சந்தியி லான சமாதியிற் கூடிடும்
அந்த மிலாத அறிவின் அரும்பொருட்
சுந்தரச் சோதியுந் தோன்றிடுந் தானே.

பொழிப்புரை :  கருவிற்கு வித்தாய வெண்பாலும் (சுக்கிலமும்) குண்டலி சத்தியும் ஆஞ்ஞைத் தானத்தில் சோர்வின்றி நிற்குமாயின், அவ்விடத்தில் ஆன்மா சமாதியைத் தலைப்படும். அத்தலைப்பாட்டில் ஏகதேச உணர்வு நீங்கிய வியாபக உணர்வு தோன்ற, அதன்கண் அடைதற்கரிய பொருளாகிய அழகிய சிவம் விளங்கும்.
=======================================
பாடல் எண் : 3
மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு
மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை
மன்மனத் துள்ளே மகிழ்ந்திருப் பார்க்கு
மன்மனத் துள்ளே மனோலய மாமே.

பொழிப்புரை :  புறப் பொருளிடத்தும், ஆன்மாவிடத்தும் நிற்கின்ற மனம் எப்பொழுது உண்டோ, அப்பொழுதெல்லாம் பிராண வாயுவின் இயக்கமும் உளதாகும்; அத்தன்மையான மனம் இல்லாத பொழுது, பிராணவாயுவின் இயக்கமும் இல்லையாம். மேற்கூறிய இரண்டையும் விடுத்து தேயப்பொருளில் (தியானிக்கப்படும் பொருளில்) நிலை பெற்ற மனத்தால் அல்லல் அற்று இன்புற்றிருப் பவர்க்கு, அத்தேயப் பொருளிடத்தே அவரது மனம் ஒடுங்கி நிற்கும்.
=======================================
பாடல் எண் : 4
விண்டலர் கூபமும் விந்தத் தடவியுங்
கண்டுணர் வாகக் கருதி யிருப்பர்கள்
செண்டு வெளியிற் செழுங்கிரி யத்திடை
கொண்டு குதிரை குசைசெறுத் தானே.

பொழிப்புரை :  சமாதி நிலை எய்தினவரைப் பிறர், மனத்தைப் புற விடயங்களில் ஓடவிட்டிருப்பவராகக் கருதிக் கொண்டிருப்பார்கள். ஆயினும், அவர்களோ தமது மனத்தைத் தேயப் பொருளில் ஒடுக்கி விட்டிருப்பர்.
=======================================
பாடல் எண் : 5
மண்டலம் ஐந்து வரைகளும் ஈராறு
கொண்டிட நிற்குங் குடிகளும் ஆறெண்மர்
கண்டிட நிற்குங் கருத்து நடுவாக
உண்டு நிலாவிடும் ஓடும் பதத்தையே.

பொழிப்புரை :  நாடு சுற்றும் ஒருவன் அங்ஙனம் சுற்றி வரும் நாடுகள் ஐந்து; அவற்றில் உள்ள மலைகள் பன்னிரண்டு; அங்கு வாழும் குடிகள் நாற்பத்தெட்டு வகையினர். அவைகளை எல்லாம் முழுதும் காணவேண்டும் என்று விரும்பிய அவனது மனம் இடையே ஒரு பெரு வெள்ளத்தைக் கண்டு அதில் அழுந்திவிட, அவன் அதனையே குடித்தும், அதனுள்ளே மூழ்கியும் இன்புற்றிருக்கின்றான்.
=======================================
பாடல் எண் : 6
பூட்டொத்து மெய்யிற் பொறிப்பட்ட வாயுவைத்
தேட்டற்ற அந்நிலஞ் சேரும் படிவைத்து
நாட்டத்தை மீட்டு நயனத் திருப்பார்க்குத்
தோட்டத்து மாம்பழந் தூங்கலு மாமே.

பொழிப்புரை :  கிணற்றில் உள்ள பூட்டைச் சுழல்போல, உடலில் முன்னும் பின்னுமாய் இயங்குதல் தன்மைபெற்று நிற்கும் பிராண வாயுவை, பிற பொருள்களைத் தேடித் திரியாது நிலைத்து நிற்கின்ற ஆஞ்ஞையில் சேர்ந்து அசையாதபடிநிறுத்தி, அதனாலே மனத்தையும் வெளிப்போகாதவாறு தடுத்துத் தியானப் பொருளில் நிலைத்து நிற்பவர்க்கு இன்பம் அங்குத் தானே கிடைக்கும்.
=======================================
பாடல் எண் : 7
உருவறி யும்பரி சொன்றுண்டு வானோர்
கருவரை பற்றிக் கடைந்தமு துண்டார்
அருவரை யேறி அமுதுண்ண மாட்டார்
திருவரை யாமனந் தீர்ந்தற்ற வாறே.

பொழிப்புரை :  அகத்தே ஆஞ்ஞையாகிய மலையின் உச்சியை அடைந்து அங்குள்ள அமுதத்தைத் தேவர்களும் உண்ண மாட்டாராய்ப் புறத்தே பெரிய மலையைப் பெயர்த்துக் கொணர்ந்து திருப்பாற் கடலைக் கடைந்து, அதினின்றும் தோன்றிய அமுதத்தையே உண்டார்கள். (ஆயினும், அதனால் அவர் இறவாதிருக்கின்றார் களில்லை; ஆகவே) இறவாமைக்குப் பொருளாக அறியும் வழி ஒன்றே உண்டு; அஃது ஐம்புல வேட்கையை முடிவின்றிக் கொள்ளும் மனம் முற்றும் ஒடுங்கிய நிலையேயாம்.
=======================================
பாடல் எண் : 8
நம்பனை ஆதியை நான்மறை ஓதியைச்
செம்பொனின் உள்ளே திகழ்கின்ற சோதியை
அன்பினை யாக்கி அருத்தி ஒடுக்கிப்போய்க்
கொம்பேறிக் கும்பிட்டுக் கூட்டமிட் டாரே.

பொழிப்புரை :  சிவனது பெருமையை உணர்ந்தோர் அவன்பால் அன்பு செய்து, அவ்வன்பினாலே பிற ஆசைகளை ஒழித்து, அவனையே நோக்கி ஆஞ்ஞையை அடைந்து அவனை வணங்கி, அவனோடு ஒன்றாய்க் கலந்தார்கள்.
=======================================
பாடல் எண் : 9
மூலத்து மேலது முற்சது ரத்தது
காலத் திசையிற் கலக்கின்ற சந்தினில்
மேலைப் பிறையினில் நெற்றிக்குநேர் நின்ற
கோலத்தின் கோலங்கள் வெவ்வேறு கொண்டதே.

பொழிப்புரை :  மூலாதாரத்திற்குமேல் முதற்கண் காணப்படுகின்ற நாற்கோண வடிவுள்ள இடத்தில் (சுவாதிட்டானத்தில்) நிற்பதாகிய பிராணவாயு அவ்விடத்தில் உள்நுழைகின்ற புழையின் (சுழுமுனை நாடிக்கு) மேலிடத்தில், வானத்தில் உள்ள பிறைபோன்ற புருவநடுவில் நிற்கின்ற பொருளின் வடிவங்கள் பலவாய்த் தோன்றும்.
=======================================
பாடல் எண் : 10
கற்பனை யற்றுக் கனல்வழி யேசென்று
சிற்பனை எல்லாஞ் சிருட்டித்த பேரொளிப்
பொற்பனை நாடிப் புணர்மதி யோடுற்றுத்
தற்பர மாகத் தகுந்தண் சமாதியே.

பொழிப்புரை :  மூலாதாரம் முதலிய ஆதாரங்களில் செய்யும் பாவனைகளை விடுத்து, அவ்வாதார யோகங்களால் மூண்டெழுந்த கனலைமட்டும் துணையாகப் பற்றி ஆஞ்ஞையிற் சென்று, அங்குச் சிவனது பேரொளித் தோற்றம் ஒன்றையே எதிர்நோக்கி அதனுள் ஒடுங்கும் அவா மிக்கிருந்து, அவ்வொளி தோன்றிய காலத்து அதனையே தனக்கு வியாபகமாகக் கொண்டு அதன்கண் புகுந்து ஒடுங்கி நிற்றலே சமாதியாகும்.
=======================================
பாடல் எண் : 11
தலைப்பட் டிருந்திடத் தத்துவங் கூடும்
வலைப்பட் டிருந்திடும் மாதுநல் லாளும்
குலைப்பட் டிருந்திடும் கோபம் அகலும்
துலைப்பட் டிருந்திடந் தூங்கவல் லார்க்கே.

பொழிப்புரை :  துலை நாப்போல உள்ள ஆஞ்ஞையில் அசை வற்றிருக்க வல்லவர்க்கு, மெய்ப்பொருளைத் தலைப்பட்டிருக்குமாறு, அது, தானே கிடைக்கும். ஆணவமாகிய வலையில் தானே சென்று நின்று, அந்நிலை காரணமாகச் சினங்கொண்டவள்போல இருந்த அருட் சத்தியும் சினந்தணிந்து, பிறவிக் கடலுக்குக் கரையாகி நிற்பாள்.
=======================================
பாடல் எண் : 12
சோதித் தனிச்சுட ராய்நின்ற தேவனும்
ஆதியும் உள்நின்ற சீவனு மாகுமால்
ஆதிப் பிரமன் பெருங்கடல் வண்ணனும்
ஆதி அடிபணிந் தன்புறு வாரே.

பொழிப்புரை :  சிவசமாதி கைவரப் பெற்ற நிலையில் சீவனும், சிவம் சத்திகளாய் நிற்கும். அதனால், அத்தகைய யோகீசுரனைப் பிரம விட்டுணுக்களும் வணங்குவர்.
=======================================
பாடல் எண் : 13
சமாதிசெய் வார்க்குத் தகும்பல யோகம்
சமாதிகள் வேண்டா இறையுட னேகில்
சமாதிதா னில்லை தானவ னாகில்
சமாதியில் எட்டெட்டுச் சித்தியும் எய்துமே.

பொழிப்புரை :  சமாதி யோகத்தைத் தலைப்பட்டவர்க்கு ``யோகம்`` எனப்படுவன பலவும் வாய்ப்புடையனவாய்ப் பயன் தரும். இனி, இறைவன் அருள்வழியே எச்செயலையும் செய்வார்க்கு இச் சமாதி யோகம் வேண்டுவதில்லை. சீவன் சிவமாய் நிற்கும் நிலையில் சமாதி என்னும் யோக நிலை இல்லை. (நிட்டை என்னும் ஞான நிலையே உளதாம்) சமாதி யோகத்தால் ஞானம் வருதலேயன்றி அறுபத்து நான்கு சித்திகளும் கிடைக்கும்.


Offline Anu

மூன்றாம் தந்திரம்

பதிகம் எண்:10. அட்டாங்க யோகப்பேறு

(பாடல்கள்:8 )


பாடல் எண் : 1
போதுகந் தேறும் புரிசடை யானடி
யாதுகந் தாரம ராபதிக் கேசெல்வர்
ஏதுகந் தானிவன் என்றருள் செய்திடும்
மாதுகந் தாடிடு மால்விடை யோனே.


பொழிப்புரை :  மலர்களை விரும்புதலால், அவை பொருந்தப் பெற்ற புரிந்த சடையினையுடைய சிவபெருமானது திருவடியை எத்துணைச் சிறிதளவு விரும்புவராயினும், அவர் சுவர்க்கத்தையே அடைவர்; நிரையம் புகார், இறைவியை ஒருபால் விரும்பிவைத்து நடனம் புரிகின்ற அப்பெருமான், தன்னை விரும்புபவன் எவனாயினும் அவனுக்கு `இவன் விரும்பியது யாது` என்று நினைந்து அதனை அருள்செய்பவன் ஆதலின்.
=======================================
பாடல் எண் : 2
பற்றிப் பதத்தன்பு வைத்துப் பரன்புகழ்
கற்றிருந் தாங்கே கருது மவர்கட்கு
முற்றெழுந் தாங்கே முனிவர் எதிர்வரத்
தெற்றுஞ் சிவபதம் சேரலு மாமே.




பொழிப்புரை :  சிவபிரானது திருவடியைத் துணையாகப் பற்றி அன்பு செய்து, அவனது புகழைக் கற்றும், கேட்டும் ஒரு பெற்றியே ஒழுகுவார்கட்கு, பின்னர், முனிவர் குழாம் முழுவதும் சுவர்க்க லோகத்தே முன்வந்து எதிர்கொள்ள ஒளிமயமாகிய அவ்வுலகத்தை அடைதல் கூடும்.
=======================================
பாடல் எண் : 3
வருந்தித் தவஞ்செய்து வானவர் கோவாய்த்
திருந்தம ராபதிச் செல்வன் இவனெனத்
தருந்தண் முழவங் குழலும் இயம்ப
இருந்தின்பம் எய்துவர் ஈசன் அருளே.




பொழிப்புரை :  மக்கள், மெய் வருத்தத்தைப் பெற்றுத் தவம் செய்தபின் சிவபெருமானது அருளால் விண்ணவர்க்குத் தலைவராய், `வானுலகச் செல்வத்திற்கு உரிமையுடையவர் இவரே` என்று பலரும் புகழும்படி, மத்தளம், குழல் முதலிய வாச்சியங்கள் ஒலிக்க வீற்றிருந்து, தலைவராம் இன்பத்தை அடைவர்.
=======================================
பாடல் எண் : 4
செம்பொற் சிவகதி சென்றெய்தும் காலத்துக்
கும்பத் தமரர் குழாம்வந் தெதிர்கொள்ள
எம்பொற் றலைவன் இவனா மெனச்சொல்ல
இன்பக் கலவி இருக்கலு மாமே.




பொழிப்புரை :  பிராண வாயுவைக் கும்பகம் செய்ததன் பயனாக மக்கள் செம்பொன் மயமான இன்ப உலகத்தில் சென்று சேரும் பொழுது, விண்ணவர் குழாம் வந்து எதிர்கொள்ள, விண்ணுலக மகளிர் தாம் தாம் `எமக்கு அரிதிற் கிடைத்த தலைவன் இவனே` என மைய லுற்றுச் சொல்லுமாறு கலவி இன்பம் மிகப்பெற்று இருத்தல் கூடும்.
=======================================
பாடல் எண் : 5
சேருறு காலந் திசைநின்ற தேவர்கள்
ஆரிவன் என்ன அரனாம் இவனென்ன
ஏருறு தேவர்கள் எல்லாம் எதிர்கொள்ளக்
காருறு கண்டனை மெய்கண்ட வாறே.




பொழிப்புரை :  இம்பருள்ளாரை விடுத்து, உம்பருள்ளாரைப் பாவனையால் அடைந்தோர், அதன் பயனாக அவரை உண்மை யாகவே அடையுங் காலத்து, அவ்விடத்துள்ளார், `மக்களுள் இவ்வுயர் நிலையை அடைந்தோன் யாவன்` என்று வியப்புற்று வினாவ, (ஒரு சாரார் ஓர்ந்துணராது வடிவம் ஒன்றே பற்றி) `இவன் சிவபெருமான் தான்` என்று மயங்கிக் கூற, இவ்வாறு அமரர் பலரும் ஒருங்குவந்து எதிர்கொள்ளத் திருநீலகண்டப் பெருமானைக் கண்ட முறைமையே எங்கும் நிகழ்வதாகும்.
=======================================
பாடல் எண் : 6
நல்வழி நாடி நமன்வழி மாற்றிடுஞ்
சொல்வழி யாளர் சுருங்காப் பெருங்கொடை
இல்வழி யாளர் இமையவர் எண்டிசைப்
பல்வழி எய்தினும் பார்வழி யாகுமே.




பொழிப்புரை :  மக்கள் நல்வழி ஒழுகுமாற்றை ஆராய்ந்து, அவரைத் தீவழியினின்றும் நீக்குகின்ற நிறைமொழி யுடையராகிய முனிவர், பின் விண்ணுலகில் எவ்விடத்துச் செல்லினும், அவ்விடம் மண்ணுலகில் மிக்க கொடையுடைய இல்லறத்தவர் வாழ்கின்ற இடம்போலவே எதிர்கொண்டு பேணும் இடமாம்.
=======================================
பாடல் எண் : 7
தூங்கவல் லார்க்கும் துணையேழ் புவனமும்
வாங்கவல் லார்க்கும் வலிசெய்து நின்றிடந்
தேங்கவல் லார்க்கும் திளைக்கும் அமுதம்முன்
தாங்கவல் லார்க்குந்தன் தன்இட மாமே.




பொழிப்புரை :  சமாதி, பிரத்தியாகாரம், தாரணை, தியானம் இவற்றில் நிற்பாற்கு அவரவரது தியானப் பொருளின் இடமே அடையுமிடமாகும்.
=======================================
பாடல் எண் : 8
காரிய மான உபாதியைத் தான்கடந்
தாரிய காரணம் ஏழுந்தன் பாலுற
வாரிய காரணம் மாயத் தவத்திடைத்
தாரியல் தற்பரஞ் சேர்தல் சமாதியே.

பொழிப்புரை :  தாத்துவிகங்களாகிய தனு, கரணம் புவனம், போகம் என்னும் அனைத்துப் பந்தங்களையும் கடந்தபின், அவற்றிற்கு நிரம்பிய காரணமாகிய தத்துவங்கள் ஏழனது இயல்பும் தன் அறிவிடத்தே இனிது விளங்கித் தோன்றவும், இடையறாது கிளைத்து வருகின்ற வினையாகிய காரணம் கெட்டொழியவும் அடைவுபடப் பயின்ற யோகத்தால் மறுமையில் தனது கடவுளோடு ஒப்ப இருத்தல், சமாதியாலே பெறத்தக்கதாம்.


Offline Anu

மூன்றாம் தந்திரம்

பதிகம் எண்:11. அட்டமாசித்தி

(பாடல்கள்:01-25/71)

பாகம்-I

பாடல் எண் : 1
பணிந்தெண் திசையும் பரமனை நாடித்
துணிந்தெண் திசையும் தொழுதெம் பிரானை
அணிந்தெண் திசையினும் அட்டமா சித்தி
தணிந்தெண் திசைசென்று தாபித்த வாறே.

பொழிப்புரை :  யாவரும் அட்டமா சித்திகளைப் பெற்று, அவற்றை எட்டுத் திக்கிலும் சென்று விளங்கக் காட்டிப் பெருமை பெற்றது, சிவபெருமானைப் பல்லாற்றானும் வழிபட்டேயாம்.
=======================================================
பாடல் எண் : 2
பரிசறி வானவர் பண்பன் அடியெனத்
துரிசற நாடியே தூவெளி கண்டேன்
அரிய தெனக்கில்லை அட்டமா சித்தி
பெரிதருள் செய்து பிறப்பறுத் தானே.

பொழிப்புரை :  ``யான் பெறும் பரிசாவது சிவபெருமானது திரு வடிப் பேறு ஒன்றே`` எனக் குற்றமற உணர்ந்து அவனை யான் அகத்தே தியானித்தேன். ஆகவே, எனக்குப் பெறற்கரிதாய பேறு யாதும் இல்லை; (எல்லாப்பேறும் எளியனவே) அதனால், பிறர் அரியனவாக உணர்கின்ற அட்டமாசித்திகளை அவன் எனக்கு நிரம்பக் கொடுத்துப் பெரும்பயனாகிய பிறவி நீக்கத்தையும் அளித்தருளினான்.

=======================================================
பாடல் எண் : 3
குரவன் அருளிற் குறிவழி மூலன்
பரையின் மணமிகு சங்கட்டம் பார்த்துத்
தெரிதரு சாம்பவி கேசரி சேரப்
பெரிய சிவகதி பேறெட்டாஞ் சித்தியே.

பொழிப்புரை :  யோக குருவின் அருளால் அவன் குறித்த முறைப் படியே மூலாதாரத்தை நோக்கி ஓடப் பார்க்கும் வாயு, அவ்வாறு ஓடாது சத்தித் தானமாகிய இலாடத்திற் சென்று சேரும் அரிய நேரத்தைப் பார்த்து, அவ்வாறு சேரும் வாயுவே துணையாகச் சாம்பவி யோகம் கேசரி யோகங்களைச் செய்வார்க்குப் பெரிய சிவகதி போலக் கிடைப்பது, எட்டாம் சித்தியாகிய வசித்துவமாம்.
=======================================================
பாடல் எண் : 4
காயாதி பூதங் கலைகால மாயையில்
ஆயா தகல அறிவொன் றனாதியே
ஓயாப் பதியதன் உண்மையைக் கூடினால்
வீயாப் பரகாயம் மேவலு மாமே.

பொழிப்புரை :  ஆகாயம் முதலிய பூதங்களையும், கலை காலம் முதலிய உள்ளந்தக் கரணங்களையும் பற்றி நின்று ஒரு பொருளைச் சுட்டி யறியாமல் வியாபகமாக அறியும் அறிவால், ஒன்றாய், அனாதியே தனக்கு அறிவைத் தருதலை ஒழியாத பதிப்பொருளின் உண்மையை அடைய விரும்பினால், என்றும் அழியாத பரவெளியிற் சேரலாம்.
=======================================================
பாடல் எண் : 5
இருபதி னாயிரத் தேழ்நூறு பேதம்
மருவிய கன்மமாம் மாபந்த யோகந்
தருமிவை காய உழைப்பாகும் தானே
அருமிகு நான்காய் அடங்குமா சித்திக்கே.

பொழிப்புரை :  கன்மத்தையே பொருந்தச் செய்கின்ற சித்தி காம யோகம், இருபதினாயிரத்து எழுநூறாய் விளங்கும். சித்திகளையே தருகின்ற இவை அனைத்தும் உடல் உழைப்பாவனவன்றி, உணர்வுப் பெருக்கமாதல் இல்லை. இவை இத்துணையாக விரிவன வாயினும், சித்திகளின் தொகை நோக்கி எட்டாய் அடங்கும்.
=======================================================
பாடல் எண் : 6
மதிதனில் ஈராறாய் மன்னுங் கலையின்
உதய மதுநா லொழியஓ ரெட்டுப்
பதியும்ஈ ராறாண்டு பற்றறப் பார்க்கில்
திதமான ஈராறு சித்திக ளாமே.

பொழிப்புரை :  பன்னிரு கலையுடைய சில அதிசய நிலவுகள் முற்றும் மறைந்து பின் தோன்றும்பொழுது அக்கலைகளில் நான்கு ஒழிந்தேபோக, எட்டே நிலைபெறுகின்றன. அவ்வொழிவு நீங்கி அனைத்துக் கலைகளும் நிலைபெறும் செயலைப் பன்னிரண் டாண்டுகள் அயராது செய்தால், அவ்வாண்டெல்லைக்குள் சித்திகள் கைகூடும்.
=======================================================
பாடல் எண் : 7
நாடும் பிணியாகும் நம்சனம் சூழ்ந்தக்கால்
நீடும் கலைகல்வி நீள்மேதை கூர்ஞானம்
பீடொன்றி னால்வாயா சித்திகள்பே தத்தின்
நீடுந் தூரங்கேட்டல் நீள்முடி வீராறே.

பொழிப்புரை :  சுற்றத் தொடர்பு யோகத்திற்குத் தடையாகும். யோகமின்றி, நூலறிவு, உலகியலறிவு, இயற்கை நுண்ணறிவு முதலியவற்றுள் ஒன்றினாலும் சித்திகள் கிடைக்கமாட்டா. அவை வேறு வேறாகக் கிடைத்தற்குச் செல்லும் தீர்ந்த யோக கால எல்லையாக நூல்களில் கேட்கப்படுவது, மேற்குறித்த பன்னிரண்டாண்டுகளாம்.
=======================================================
பாடல் எண் : 8
ஏழா னதிற்சண்ட வாயுவின் வேகியாம்
தாழா நடைபல யோசனை சார்ந்திடும்
சூழான ஓரெட்டில் தோன்றா நரைதிரை
தாழான ஒன்பதிற் றான்பர காயமே.

பொழிப்புரை :  யோகத்தைக் குறைவின்றிப் பயின்றால், ஏழாவ தாண்டில், பிறர் உடன் தொடர இயலாதவாறு காற்றைப் போலக் கடிதிற் செல்லும் நடை உளதாகும். அந்நடையது வேகம் எத்துணைக் காவதம் நடந்தாலும் குறையாது. எட்டாவது ஆண்டில், நரை திரை இருப்பினும் மறைந்து இளமைத் தோற்றம் காணப்படும். ஒன்பதாவது ஆண்டில் உடம்பு தேவ சரீரம்போல ஒளிவிடும்.
=======================================================
பாடல் எண் : 9
ஈரைந்திற் பூரித்துத் தியான உருத்திரன்
ஏரொன்றும் பன்னொன்றில் ஈறாகும் எண்சித்தி
சீரொன்று மேலேழு கீழேழ் புவிச்சென்றவ்
வோரொன்றில் வியாபியாய் நிற்றல்ஈ ராறே.

பொழிப்புரை :  யோகத்தில் பத்தாவதாண்டில் முன்பு இளைத்த உடம்பு பருத்துக் காணப்படும். பதினொன்றாவது ஆண்டில் நெருப்புப்போன்ற உருவினை உடைய உருத்திரனைப் போன்ற செம்மேனியும், எல்லாவற்றையும் வெல்லும் ஆற்றலும் உளவாகும். மேல், `எட்டாவது சித்தி` எனக்குறித்த அது, மேல் ஏழ் உலகம், கீழ் ஏழ் உலகம் இவைகளிற் சென்று அங்குள்ளாரையும் தன்வசப்படுத்தி நிற்றலாம். அது பன்னிரண்டாவது ஆண்டில் எய்தும்.
=======================================================
பாடல் எண் : 10
தானே அணுவும் சகத்துத்தன் நோன்மையும்
மானாக் கனமும் பரகாயத் தேகலும்
தானாவ தும்பர காயஞ்சேர் தன்மையும்
ஆனாத வுண்மையும் வியாபியு மாம்எட்டே.

பொழிப்புரை :  எட்டுச் சித்திகளாவன, யோகி ஒருவனே தான் வேண்டியவாறு எட்டுத் தன்மையனாக நிற்றல். அவை அணுவினுள்ளும் அணுவாய் நுழைதல், அண்டத்தினும் பெரியோனாய் அவற்றைக் கடந்து நிற்றல், காற்றினும் நொய்ம்மையனாய் வானத்தில் உலாவுதல், எத்துணை ஆடவர் கூடி எடுப்பினும் எடுக்கமாட்டாத வராம்படி மலை போலத் திண்மை யுடையனாயிருத்தல், நினைத்த இடத்தில் நினைத்த மாத்திரத்தில் செல்லுதல், நினைத்ததை அடைதல், எல்லோராலும் ஏற்றுப் போற்றப்படுதல், யாவரையும் தன்வழிப் படுத்தி நிற்றல் என்பனவாம்.
=======================================================
பாடல் எண் : 11
தாங்கிய தன்மையுந் தானணுப் பல்லுயிர்
வாங்கிய காலத்தும் மற்றோர் குறையில்லை
ஆங்கே எழுந்தோன் அவற்றுள் எழுந்துமிக்
கோங்கி வரமுத்தி முந்திய வாறே.

பொழிப்புரை :  யோகி, அணிமாவால் தான் நினைத்த உயிருட் புகுந்தவிடத்தும் மகிமாவால் அவற்றைக் கடந்து நிற்கும் தன்மை குறைபடுதல் இல்லை. எவ்வாறெனில், மகிமா நிலையில் நின்ற அவனே அணிமாவால் அவ்வுயிர்களுள் செறிந்துவர, அவற்றைக் கடந்து நிற்கும் நிலை திரிபின்றி நிற்கும் ஆகலான்.
=======================================================
பாடல் எண் : 12
முந்திய முந்நூற் றறுபது காலமும்
வந்தது நாழிகை வான்முத லாயிடச்
சிந்தைசெய் மண்முதல் தேர்ந்தறி வாய்வலம்
உந்தியுள் நின்று வுதித்தெழு மாறே.

பொழிப்புரை : ``ஓர் ஆண்டு முந்நூற்றறுபது கூறுகளைக் கொண்டது`` எனத் தொன்றுதொட்டுக் கொள்ளப்பட்டு வருகின்ற அக்காலக் கூறு - அஃதாவது, ``ஒருநாள் என்பது, நாழிகைகளின் தொகுதியால் அமைந்தது. அந்த நாழிகைகளை ஐந்து கூறாகப் பகுத்து அப்பகுதி ஐந்தையும் ஐம்பூதங்கட்கும் உரிய பகுதிகளாகப் பாவனை செய்துகொள். பின்பு நிலம் முதலிய பூதங்களின் ஆற்றல் சுவாதிட்டானம் முதலாகத் தோன்றி நிலைபெறுவனவாகக் கொண்டு யோகம் செய்.
=======================================================
பாடல் எண் : 13
சித்தந் திரிந்து சிவமய மாகியே
முத்தந் தெரிந்துற்ற மோனர் சிவமுத்தர்
சுத்தம் பெறலாக ஐந்தில் தொடக்கற்றோர்
சித்தம் பரத்தின் திருநடத் தோரே.

பொழிப்புரை : (அட்டமா சித்திகளை அடைய விரும்பி அவற்றைப் பெறும் பவயோகம் செய்பவர் அதனிடையே மலபரி பாகம் காரணமாக) மனம் வேறுபட்டு, சிவனை அடையும் வேட்கை யராய் முத்திப்பேற்றிற்குரிய வழியை உணர்ந்து ஐம்புல ஆசையற்றுச் சிவஞான ஒழுக்கத்தில் நிற்கும் சிவயோகியராதலும் உண்டு. அவ் வாற்றால் தத்துவங்களின் நீங்கவேண்டி மேற்கூறிய ஐம்பூதங்களின் கட்டினின்றும் நீங்கினோர், உள்ளம் இறைவனது ஆனந்த நடனத்தில் ஒடுங்கப் பெறுவர்.
=======================================================
பாடல் எண் : 14
ஒத்தஇவ் வொன்பது வாயுவும் ஒத்தன
ஒத்தஇவ் வொன்பதின் மிக்க தனஞ்சயன்
ஒத்தஇவ் வொன்பதில் ஒக்க இருந்திட
ஒத்த உடலும் உயிரும் இருந்தவே.
பொழிப்புரை : சிறப்பால் தம்முள் ஒத்தனவாகிய, தனஞ்சயன் ஒழிந்த ஏனை வாயுக்கள் ஒன்பதும் வேறு வேறு நின்று செயற்படுவன. சிறப்பால் அவ்வொன்பதிலும் மேம்பட்டது `தனஞ்சயன்` என்னும் வாயு. அஃது ஏனை ஒன்பது வாயுக்களினும் ஒப்பக் கலந்து, அவற் றிற்கு வன்மையைத் தந்து நிற்கும். அஃது அவ்வாறு நிற்பதனாலே உயிரும், உடம்பும் இணங்கியிருக்கின்றன.
=======================================================
பாடல் எண் : 15
இருக்குந் தனஞ்சயன் ஒன்பது காலில்
இருக்கும் இருநூற் றிருபத்து நான்கின்
இருக்கு முடலி லிருந்தில தாகில்
இருக்கும் உடலது வீங்கி வெடித்ததே.

பொழிப்புரை : வாயுக்களுள் ஒன்றாய் இருக்கின்ற தனஞ்சயன், மேற்கூறியவாறு ஏனை ஒன்பது வாயுக்களிலும் கலந்திருக்கும். ``தனஞ்சயன்`` என்ற வாயு இல்லை என்றால், உடம்பே நிலைபெறாது பதங்கெட்டு அழியும்.
=======================================================
பாடல் எண் : 16
வீங்குங் கழலை சிரங்கொடு குட்டமும்
வீங்கும் வியாதிகள் சோகை பலவதாய்
வீங்கிய வாதமுங் கூனும் முடமுமாம்
வீங்கும் வியாதிகள் கண்ணில் மருவியே.

பொழிப்புரை :  பலவகை நோய்களும், உறுப்புக் குறைகளும் தனஞ்சய வாயு, அளவில் செம்மையுற்று இராமையால் உளவாவன.
=======================================================
பாடல் எண் : 17
கண்ணில் வியாதி உரோகந் தனஞ்செயன்
கண்ணிலிவ் வாணிகள் காச மவனல்லன்
கண்ணினிற் கூர்மன் கலந்தில னாதலாற்
கண்ணினிற் சோதி கலந்ததும் இல்லையே.

பொழிப்புரை :  (மேல், ``வீங்கும் வியாதிகள் கண்ணில் மருவியே`` என்றதனால், ``கண் அமைவதற்குத் தனஞ்சயனே காரணம் போலும்`` என மயங்கற்க.) கண்ணில் உளவாகும் நோய்கட்கு மட்டுமே தனஞ் சயனது செம்மையின்மை காரணமாகும். கண்ணில் பொருந்தியுள்ள நரம்புகளின் செயற்பாட்டிற்கும், அச் செயற்பாட்டினால் அமையும் கண்ணொளிக்கும் தனஞ்சயன் காரணமன்று; அவற்றிற்குக் ``கூர்மன்`` என்னும் வாயுவே காரணம்.
=======================================================
பாடல் எண் : 18
நாடியின் ஓசை நயனம் இருதயம்
தூடி யளவுஞ் சுடர்விடு சோதியைத்
தேவருள் ஈசன் திருமால் பிரமனும்
ஓவற நின்றங் குணர்ந்திருந் தாரே.

பொழிப்புரை :  கடவுளருள் சிறந்தோராகிய உருத்திரன், மால், அயன் என்னும் மூவருங்கூட யோகத்தில் பத்து நாடிகளிற் கேட்கப் படுவனவாக மேலே சொல்லிய பத்து ஓசைகளாகிய முழக்கத்தைக் (பா.593) கேட்டலை விடுத்து, கண்ணிலும், இருதயத்திலும் நிலைபெற்று நின்று உடம்பில் துடிப்புள்ளளவும் `துஞ்சும்போதும் சுடர்விடு சோதி` (தி.5 ப.93 பா. 8) யாகிய சிவனை அங்கே தியானம் செய்கின்றனர்.
=======================================================
பாடல் எண் : 19
ஒன்பது வாசல் உடையதோர் பிண்டத்துள்
ஒன்பது நாடி யுடையதோ ரோரிடம்
ஒன்பது நாடி ஒருங்கவல் லார்களுக்
கொன்பது வாசல் உலைநல மாமே.

பொழிப்புரை : ஒன்பது வாயில்களை உடைய ஒரு வீடாகிய உடம்பில், ஒன்பது நாடிகளும் சுழுமுனை நாடியில் ஒவ்வோரிடத்தில் ஒருங்கு கூடுவனவாம். அவ்விடங்களை அறிந்து அந்த நாடிகளைத் தம்வசப்படுத்த வல்லவர்க்கு ஒன்பது துருத்திகளை உடைய ஓர் உலைபோல்வதாகிய உடம்பு ஞானத்தைத் தருவதாய் அமையும்.
=======================================================
பாடல் எண் : 20
ஓங்கிய அங்கிக்கீழ் ஒண்சுழு னைச்செல்ல
வாங்கி இரவி மதிவழி ஓடிடத்
தாங்கி உலகங்கள் ஏழுந் தரித்திட
ஆங்கது சொன்னோம் அருள்வழி யோர்க்கே.

பொழிப்புரை :  மூலாதாரத்தில் உள்ள அக்கினியை எழுப்பிச் சுழு முனை நாடி வழியே தலையளவும் செல்லச் செலுத்துதல், பிங்கலை இடைகலை வழியாகப் பிராணனை முறையே வெளியே ஓடவிட்டும், உள்ளே செல்ல இழுத்தும் பயிலுதல், ஏழுலகங்களையும் சுமந்து நிற்றல் ஆகிய முறைகளை நாம் சொன்னது, சிவனது அருள்வழியில் நிற்க விரும்புபவரை நோக்கியேயாம்.
=======================================================
பாடல் எண் : 21
தலைப்பட்ட வாறண்ணல் தையலை நாடி
வலைப்பட்ட பாசத்து வன்பிணை மான்போல்
துலைப்பட்ட நாடியைத் தூவழி செய்தால்
விலைக்குண்ண வைத்ததோர் வித்தது வாமே.

பொழிப்புரை :  இடைகலை பிங்கலை நாடிகட்கு நடுவே துலை நாப்போல நிற்கும் சுழுமுனை நாடியையே நல்வழியாகக் கொண்டு இயங்கத் தெரிந்தால், வலையில் அகப்பட்ட பெண் மானை வந்து அடையும் ஆண்மான்போல, அந் நாடியின் முடிவில் விளங்கும் சத்தியைத் தேடிச் சிவனும் வந்து பொருந்துவான். இந்நடு நாடி வழி, விலைக்கு விற்க வைத்திருந்த வித்துத் தனக்கே பயன்படுதல் போல்வதொரு தன்மையுடையது.
=======================================================
பாடல் எண் : 22
ஓடிச் சென்றங்கே ஒருபொருள் கண்டவர்
நாடியி னுள்ளாக நாதம் எழுப்புவர்
தேடிச்சென் றங்கேயுந் தேனை முகந்துண்டு
பாடியுள் நின்ற பகைவரைக் கட்டுமே.

பொழிப்புரை :  பல இடங்களிலும் ஓடிச்சென்று அங்கெல்லாம் ஒவ்வொரு பொருளைக் கண்டவர், அக்காட்சியின் பயனாகப் பத்து நாடிகளிலும் வேறுபட்ட பத்து ஓசைகள் எழக் கேட்டு இன்புறுவர். நீவிர் அதனைச் செய்யாது, தேனை உண்ண விரும்பி அஃது இருக்கும் மலை உச்சியைத் தேடி அடைந்து அங்கே பொருந்தியுள்ள தேனை உண்டு களித்திருத்தலேயன்றி, உம்மை அழிக்கப் பாசறையில் தங்கிக் காலம் பார்த்திருக்கும் பகைவரைச் சிறைப்பிடித்தலையும் செய்யுங்கள்.
=======================================================
பாடல் எண் : 23
கட்டிட்ட தாமரை நாளத்தில் ஒன்பது
மட்டிட்ட கன்னியர் மாதுடன் சேர்ந்தனர்
தட்டிட்டு நின்று தளங்களி னூடுபோய்ப்
பொட்டிட்டு நின்றது பூரண மானதே.

பொழிப்புரை :  ஓர் இல்லத்தில் உள்ள பல கட்டுக்களை ஒத்த ஆதாரத் தாமரை மலர்களில் அதன் தண்டினைப் பற்றி அங்கங்கு நின்று சிறிது சிறிது தேனைத் தெளித்த ஒன்பது மகளிர், அவ்விடங்களை விட்டுத் தேனை நிரம்ப முகர்ந்து வார்க்கின்ற அவ் இல்லத் தலைவியோடு சேர்ந்து விட்டார்கள். அவ்விடங்களில் நின்ற அவர்கள் அவற்றை விட்டு நீங்கித் திலகம் இட்டு நின்றதே தலைவியுடன் ஒன்றாய் நின்ற நிறைவு நிலையாயிற்று.
=======================================================
பாடல் எண் : 24
பூரண சத்தி எழுமூன் றறையாக
ஏரணி கன்னியர் ஏழ்நூற்றஞ் சாக்கினர்
நாரணன் நான்முக னாதிய ஐவர்க்குங்
காரண மாகிக் கலந்து விரிந்ததே.

பொழிப்புரை :  பூரண சத்தியாகிய ஆதிசத்தி, `இச்சை, ஞானம், கிரியை` என மூன்றாகி, குண்டலியில், `அகாரம், உகாரம், மகாரம், அபரவிந்து, அபரநாதம், பரவிந்து, பரநாதம்` என்னும் ஏழு கலை களிலும் பொருந்தி இருபத்தொரு கூறாதலால், அவ் விருபத்தொரு கூறும் பிரமன் முதலிய ஐவரது தொழிற்கும் காரணமாய் அவரொடு பொருந்தி நிற்குமாறு ஏகதேச சத்திகள் அக் காரணப்பகுதிகளை (ஐ இருபத்தொன்று) நூற்றைந்தாக்கிக் கொண்டனர். (எனவே, அவை பிரம இச்சா அகாரம், பிரமஞான அகாரம், பிரமகிரியா அகாரம் என்றற்றொடக்கத்தனவாகப் பெயர்பெற்று நிற்பனவாம்.) இனி அந்த நூற்றைந்தையும் மூலாதாரம் முதலிய ஆறாதாரங்களோடும், ஆஞ்ஞைக்கு மேல் உள்ள நிராதாரத்தோடும் கூட்டி மூலாதாரப் பிரம இச்சா அகாரம், மூலாதாரப் பிரமஞான அகாரம், மூலாதாரப் பிரம கிரியா அகாரம் என்றற்றொடக்கத்தனவாக உறழ்ந்து கூற, ஏழடுக்கிய நூற்றைந்தாம் (ஏழு நூற்றைந்து - 7 x 105 = 735 ஆம்) ஆதலின், அங்ஙனமும் ஆக்கினர்.
=======================================================
பாடல் எண் : 25
விரிந்து குவிந்து விளைந்தஇம் மங்கை
கரந்துள் எழுந்து கரந்தங் கிருக்கிற்
பரந்து குவிந்தது பார்முதற் பூதம்
இரைந்தெழு வாயு விடத்தில் ஒடுங்கே.

பொழிப்புரை :  பல ஏகதேச சத்திகளாய் விரிந்தும் ஒன்றேயான பூரண சத்தியாய்க் குவிந்தும் சிவத்தினின்றும் புலப்பட்டுச் செயல் ஆற்றுகின்ற இவ் ஆதி சத்தி, சிவத்தில் ஒன்றாய் அடங்கியிருக்கும் நிலையினின்றும் வெளிப்பட்டுச் செயலாற்றினால் மண் முதலிய பூதங்கள் தூலமாய் வெளிப்பட்டு விரிந்தும், அவள் சிவத்தில் அடங்கி ஒன்றாய் இருப்பின், அவை (பூதங்கள்) சூக்குமமாய் ஒடுங்கியும் இருக்கும். (ஆகவே, எல்லாம் ஆதிசத்தியால் ஆவனவாகலின்) பூரக இரேசகங்களில் பாம்பு சீறினாற் போன்ற ஓசையை உடையதாய், கும்பகத்தில் சுழுமுனை நாடி வழியே மேல் நோக்கி எழுகின்ற பிராணவாயுவால் அவளிடத்தில் சென்று ஒடுங்குவாயாக.


Offline Anu

மூன்றாம் தந்திரம்

பதிகம் எண்:11. அட்டமாசித்தி

(பாடல்கள்:26-50/71)

பாகம்-II

பாடல் எண் : 26
இடையொடு பிங்கலை என்னும் இரண்டும்
அடைபடு வாயுவும் ஆறியே நிற்கும்
தடையவை ஆறெழுந் தண்சுட ருள்ளே
மிடைவளர் மின்கொடி தன்னில் ஒடுங்கே.

பொழிப்புரை :  யோகத்தில் இடநாடி, வலநாடி இரண்டும் அடை பட, நடுநாடி வழியே செல்லும் பிராணவாயு தன் முரண் அவிந்து உனக்குத் துணையாகியே நிற்கும். அதனைப் பற்றிக்கொண்டு சென்று, ஆறு ஆதாரங்களின்மேல் எழுகின்ற சந்திரனுள்ளே பொருந்தி வளர்கின்ற மின்னற்கொடி போன்ற பூரண சத்தியில் நீ ஒடுங்கிவிடு.
===================================================
பாடல் எண் : 27
ஒடுங்கி ஒருங்கி யுணர்ந்தங் கிருக்கின்
மடங்கி அடங்கிடும் வாயு அதனுள்
மடங்கி அடங்கிடும் மன்னுயி ருள்ளே
நடங்கொண்ட கூத்தனும் நாடுகின் றானே.

பொழிப்புரை :  சந்திரமண்டலத்தில் ஒடுக்கி, மனம் ஒருங்கித் திருவருளையே உணர்ந்திருந்தால், பிராணவாயுவும் மெத்தென இயங்குதலும் ஒழிந்து, அடங்கியிருக்கும். இவ்வாறு மனமும், வாயுவும் அடங்குதலால், அவற்றின் வழிப் புறஉணர்வும், தன் உணர்வும் அற்றிருக்கும் உயிரின் உள்ளத்தையே ஐந்தொழிற் கூத்து இயற்றும் இறைவனும் தனக்குரிய இடமாக விரும்புகின்றான்.
===================================================
பாடல் எண் : 28
நாடியின் உள்ளெழு நாதத் தொனியுடன்
தேடியுடன் சென்றத் திருவினைக் கைக்கொண்டு
பாடியுள் நின்ற பகைவரைக் கட்டிட்டு
மாடில் ஒருகை மணிவிளக் கானதே.

அணுமாதி சித்திக ளானவை கூறில்
அணுவில் அணுவின் பெருமையில் நேர்மை
இணுகாத வேகார் பரகாய மேவல்
அணுவத் தனையெங்குந் தானாத லென்றெட்டே.

பொழிப்புரை :  பத்து நாடிகளின் உள்ளே எழுகின்ற பத்து ஓசை களாகிய மங்கல முழக்கத்துடன் திருவருளாகிய நிதிக் குவியலைத் தேடிச் சென்று அடைந்து, அதனைக் கவர நினைக்கும் காமம் முதலிய குற்றங்களாகிய பகைவரைச் சிறைப்படுத்தி, அரண்மனையின் மேல் நிலமாகிய நிலாமுற்றத்தில் நந்தா மணிவிளக்கு (அணையாத இரத்தின தீபம்) ஆகிய சிவஞானத்தை ஏற்றிவைத்து இருத்தலே அதுவாம். (மேல், `ஒடுங்கி ஒருங்கி உணர்ந்து அங்கிருக்க` எனக் கூறிய சிவயோக சமாதியாம்.)
===================================================
பாடல் எண் : 29
எட்டா கியசித்தி யோரெட்டி யோகத்தாற்
கிட்டாப் பிராணனே செய்தாற் கிடைத்திடும்
மொட்டாம் நடுநாடி மூலத் தனல்பானு
விட்டால் மதியுண்ண வும்வரு மேலதே.

பொழிப்புரை :  வசப்படாத பிராணனை அட்டாங்க யோகத்தால் வசப்படுத்தினால் அட்டமாசித்தி உண்டாகும். இனி மூலாதாரத்தில் உள்ள அக்கினி, மொட்டுப்போல் மூடியுள்ள நடுநாடியைத் திறந்து கொண்டு சூரிய மண்டலத்தையும் கடந்து சென்று அப்பால் நின்ற சந்திர மண்டலத்தில் உள்ள அமுதை உண்ணுதலும் யோகத்தாலே உண்டாவ தாகும்.
===================================================
பாடல் எண் : 30
சித்திக ளெட்டன்றிச் சேரெட்டி யோகத்தாற்
புத்திக ளானவை எல்லாம் புலப்படும்
சித்திகள் எண்சித்தி தானாந் திரிபுரை
சத்தி அருள்தரத் தானுள வாகுமே.

பொழிப்புரை :  அட்டாங்க யோகத்தால் அட்டமாசித்திகளே யன்றித் தத்துவ ஞானங்கள் பலவும் விளங்குவனவாம். ``சித்திகள்`` என்பவற்றைத் தமக்கே பெயராக உடைய அட்டமாசித்திகளும், திருவருளேயாய் நிற்கின்ற அந்தச் சித்திகள், மும்மாயைகளினும் நின்று செயல் செய்யும் ஆதிசத்தி அருள் புரிதலால் உளவாகும்.
===================================================
பாடல் எண் : 31
எட்டிவை தன்னோ டெழிற்பரங் கைகூடப்
பட்டவர் சித்தர் பரலோகஞ் சேர்தலால்
இட்டம துள்ளே இறுக்கல் பரகாட்சி
எட்டு வரப்பும் இடந்தானின் றெட்டுமே.

பொழிப்புரை :  பர சித்தியாகிய இந்த அருட் சித்தி எட்டனையும் அடைந்து, இவற்றால் சிவப்பேறும் கைகூடப் பெற்றவரே பர லோகத்தை அடைவராதலால் அவரே ``சித்தர்`` (சித்திகளைப் பெற்றவர்) என்று சொல்லத் தக்கவர். அவர்கள் தங்கள் விருப்பம் எல்லாவற்றையும் சிவனது திருவருள் வியாபகத்துள் ஒடுக்கி அத்திரு வருளையே கண்டுகொண்டிருத்தலே உண்மை யோகக் காட்சியாம். மாயையைக் கடந்த இந்த அருட்சித்தியன்றி மாயைக்குட்பட்ட மருட்சித்திகள் அம்மாயைகளில் நின்று சிவத்தை அணுகுதல் கூடுமோ!
===================================================
பாடல் எண் : 32
மந்தரம் ஏறு மதிபானு வைமாற்றிக்
கந்தாய்க் குழியிற் கசடற வல்லார்க்குத்
தந்தின்று நற்கா மியலோகஞ் சார்வாகும்
அந்த வுலகம் அணிமாதி யாமே.

பொழிப்புரை :  ``மேரு`` எனப் பெயர் பெற்ற சுழுமுனை நாடியைச் சூழ்ந்து இயங்குகின்ற, `சந்திர கலை, சூரிய கலை` என்னும் பெயரை உடைய இடைநாடி பிங்கலை நாடிகளின்வழி இயங்கும் பிராண வாயுவை அடக்கிச் சுழுமுனை நாடியின் உள்ளே செல்லுமாறு மாற்றி யமைத்தபின், மூலாதாரம் முதலிய பள்ளங்களில் தறிபோல நில்லாது, அங்ஙனம் நிற்கும் குற்றத்தின் நீங்க வல்லவர்க்குப் பின் ஞானத்திற்கு ஏதுவாகிய விருப்பத்தைத் தரும் பரலோக இன்பம் இப்பொழுதே உண்டாகிப் பின்பு அவ்வுலகத்தைச் சார்தல் உண்டாகும். அத்தகை யோர்க்கு அந்த உலக இன்பங்களே அணிமாதி அட்டசித்திகளாம்.
===================================================
பாடல் எண் : 33
முடிந்திட்டு வைத்து முயங்கில்ஓ ராண்டில்
அணிந்த அணிமாகை தானாம் இவனும்
தணிந்தஅப் பஞ்சினுந் தான்நொய்ய தாகி
மெலிந்தங் கிருந்திடும் வெல்லவொண் ணாதே.

பொழிப்புரை :  கீழ் ஆதாரங்களில் இறங்காமல், ஆஞ்ஞையிலே தன்னைச் சத்தியுடன் ஓர் ஆண்டின் முடியிட்டு வைத்து, அவளுடன் நீக்கமின்றியிருந்தால், அச்சத்தி இவனுக்கு அணுவிலும் அணுவாகின்ற `அணிமா` என்னும் சித்தியாய் நிற்கும். அந்தச் சித்தியால் இவனும் அந்நிலையினனாவான். இந்த அருட்சித்தியைப் பெற்றவனை, மருட்சித்திகளால் வெல்ல இயலாது.
===================================================
பாடல் எண் : 34
ஆகின்ற அத்தனி நாயகி தன்னுடன்
கின்ற தத்துவம் எங்கும் புகலதாய்ச்
சாய்கின்ற காலங்கள் தன்வழி நின்றிடின்
மாய்கின்ற தையாண்டின் மாலகு வாகுமே.

பொழிப்புரை :  தான் காண்கின்ற எப்பொருளிலும், அணிமா வாகின்ற அந்த ஒப்பற்ற சத்தியுடனே சென்று, அச்சத்தியே தனக்கு நிலைக்களமாக, தனக்குக் கழிகின்ற காலம் முழுதும் அச்சத்திவழியே நிற்பானாயின், தற்போதங் கெடுதல் ஐந்தாண்டில் கூடும். அதுவே, பர லகிமாவாகும்.
===================================================
பாடல் எண் : 35
மாலகு வாகிய மாய்வினைக் கண்டபின்
சாலொளி யாகித் தழைத்தங் கிருந்திடும்
பாலொளி யாகிப் பரந்தெங்கும் நின்றது
மேலொளி யாகிய மெய்ப்பொருள் காணுமே.

பொழிப்புரை :  பர லகிமாவாகிய தற்போதம் கெடுதல் உளதாயின் ஏகதேச உணர்வாய்ப் பொருள்களைப் பற்றுதல் விடுதல்களைச் செய்து நின்ற உயிர், நிறைந்த பேரொளியாம் திருவருளேயாய் நிற்கும்; அதன் பயனாகப் பரம்பொருளாகிய சிவத்தை அறியும்.
===================================================
பாடல் எண் : 36
மெய்ப்பொருள் சொல்லிய மெல்லிய லாளுடன்
தற்பொரு ளாகிய தத்துவங் கூடிடக்
கைப்பொரு ளாகக் கலந்திடும் ஓராண்டின்
மைப்பொரு ளாகும் மகிமாவ தாகுமே.

பொழிப்புரை :  இலகிமா சித்திக்குப்பின் மெய்ப்பொருளாகிய சிவத்தைச் சத்தி உணர்த்தி நிற்பாள். அவ்வுணர்வினால் அதனை அடைதல் ஓராண்டில் கைப்பொருளாகக் கிடைக்கும். அதுவே, ஒன்றும் தோன்றாத சூனிய நிலையாகிய பர மகிமா வாகும்.
===================================================
பாடல் எண் : 37
ஆகின்ற காலொளி யாவது கண்டபின்
போகின்ற காலங்கள் போவது மில்லையாம்
மேனின்ற காலம் வெளியுற நின்றன
தானின்ற காலங்கள் தன்வழி யாகுமே.

பொழிப்புரை :  எல்லாவற்றிற்கும் அடிநிலை ஒளியாகிய சிவத்தைக் கண்டபின், காலக் கழிவும் அங்ஙனம் கண்டவனது உணர்வில் தோன்றாது. இனி, எல்லாப் பொருள்கட்கும் மேலான தாகிய காலம், தன்னியல்பில் பொருள்களைத் தன்வழிப்படுத்து நடத்தி நிற்குமாயி னும், அவனது காலங்கள் அவனைக் கட்டுப்படுத்தாது அவன் வழியவேயாம்.
===================================================
பாடல் எண் : 38
தன்வழி யாகத் தழைத்திடும் ஞானமும்
தன்வழி யாகத் தழைத்திடும் வையகம்
தன்வழி யாகத் தழைத்த பொருளெல்லாம்
தன்வழித் தன்னரு ளாகிநின் றானே.

பொழிப்புரை :  தற்போதம் இழந்து சிவத்தை உணர்ந்து நின்றால், ஞானம் மேன்மேல் பெருகும். அங்ஙனம் பெருகப் பெற்றவனால், உலகமும் நலம் பெறும். அங்ஙனம் நலம்பெற்ற உலகம் அவன் வழிப்படுமாயினும், அவன் அவற்றை ஆள நினையாது, சிவனது அருள்வழி நின்று அதுவேயாய் நிற்பன்.
===================================================
பாடல் எண் : 39
நின்றன தத்துவ நாயகி தன்னுடன்
கண்டன பூதப் படையவை யெல்லாங்
கொண்டவை ஓராண்டுக் கூட இருந்திடில்
விண்டது வேநல்ல பிராத்திய தாகுமே.

பொழிப்புரை :  தோன்றி நின்று தொழிற்படுவனவாகிய தத்துவங்கள் அனைத்திற்கும் தலைவியாகிய ஆதி சத்தியுடன் ஒற்றித்து நின்று கண்ட அத் தத்துவங்களை எல்லாம் யோகி தனக்குக் கீழ்ப்பட்ட வையாக உணர்ந்து ஓராண்டுக்காலம் அவற்றின் தொழிற்பாடுகளைத் தன்னின் வேறாகக் கண்டுகொண்டிருப்பானாயின், அத்தத்துவங் களால் உளவாகும் வாதனை ஒழிந்து அவ்வொழிவே அருட்சித்திப் பிராத்தியாகும்.
===================================================
பாடல் எண் : 40
ஆகின்ற மின்னொளி யாவது கண்டபின்
பாகின்ற பூவிற் பரப்பவை காணலாம்
மேகின்ற காலம் வெளியுற நின்றது
போகின்ற காலங்கள் போவது மில்லையே.

பொழிப்புரை :  பிராத்தியில் குண்டலி சத்தியையும் தன் வழிப்படக் கண்ட பின்பு, சுத்த மாயையில் உள்ள சுத்த காலமும் அக்குண்டலிக் குள்ளே அடங்கிவிடும். அதனால், சுத்த தத்துவ நிகழ்ச்சிக்கு ஏதுவாக நிகழ் கின்ற சுத்த காலங்களும் நிகழா. ஆதலால், இந்நிலையில் பாகுபட்ட அனைத்துலகங்களில் உள்ள பொருள்களையும் தன் அறிவினுள்ளே காணுதல் கூடும்.
===================================================
பாடல் எண் : 41
போவதொன் றில்லை வருவது தானில்லை
சாவதொன் றில்லை தழைப்பது தானில்லை
தாமத மில்லை தமரகத் தின்னொளி
ஆவது மில்லை அறிந்துகொள் வார்க்கே.

பொழிப்புரை :  குண்டலி சத்தியை நன்கு காண வல்லவர்க்குப் பல்வேறு வகைப்பட்ட புவனங்களில் சித்திவழிப் போக்கு வரவு புரிதலும், எடுத்த உடம்பு இடையே வீழ்தலும், நுகர்ச்சிப் பொருள் களால் இன்புறுத்தலும், (மயக்கமுறுதலும்) துன்புறுதலும், யோகத்தில் நாடிகளில் பல இனிய ஓசைகளைக் கேட்டலும், மற்றும் ஆதாரக் காட்சிகளில் நிற்றலும், இவைபோல்வனவும் ஆகிய உலகியல்கள் சிறிதும் இல்லையாம்.
===================================================
பாடல் எண் : 42
அறிந்த பராசத்தி யுள்ளே அமரில்
பறிந்தது பூதப் படையவை யெல்லாம்
குவிந்தவை ஓராண்டுக் கூட இருக்கில்
விரிந்த பரகாயம் மேவலு மாமே.

பொழிப்புரை :  அணிமா முதலாகப் பல நிலைகளிலும் தன்னால் அறியப்பட்ட சிவசத்தி, பின் யோகியின் உள்ளத்தில் நீங்காதிருப்பின், தத்துவங்களின் குறும்புகள் முற்றிலும் நீங்கினவாம். அங்ஙனம் அவை நீங்கிய நிலையில் அந்தச் சத்தியுடன் அமைதியுற்று இருப்பின், ஓராண்டுக் காலத்தில் நாதத்திற்கு மேல் அளவின்றிக் கிடக்கின்ற அருள்வெளி வியாபகத்தை அவன் அடைதல் கூடுவதாம்.
===================================================
பாடல் எண் : 43
ஆன விளக்கொளி யாவ தறிகிலர்
மூல விளக்கொளி முன்னேயு டையவர்
கான விளக்கொளி கண்டுகொள் வார்கட்கு
மேலை விளக்கொளி வீடெளி தாம்நின்றே.

பொழிப்புரை :  எல்லா ஒளிகட்கும் மூல ஒளியாகிய திருவருளை அனாதியே தம்மிடத்து உடைய அனைவரும் அது தமக்கு நலம் செய்யும் ஒளியாயிருத்தலை அறிந்திலர். அதனைச் சிவயோகப் பயிற்சியால் காட்டுத் தீப்போன்ற பேரொளியாகக் கண்டு மகிழ்பவர் கட்குப் பரஞ்சோதியாகிய சிவ பரம்பொருளில் ஒன்றுபடுகின்ற முத்தி எளிய பொருளாய் நிலைபெற்று நிற்கும்.
===================================================
பாடல் எண் : 44
நின்ற சதாசிவ நாயகி தன்னுடன்
கண்டன பூதப் படையவை எல்லாம்
கொண்டவை ஓராண்டுக் கூடி யிருந்திடிற்
பண்டை அவ் வீசன் பரத்துவ மாகுமே.

பொழிப்புரை :  முன்னைச் சித்திகளில் பல்லாற்றானும் நீங்கிப் போன தத்துவங்களையெல்லாம் ஆஞ்ஞையில் யோகிக்குத் துணை யாய் நிற்கின்ற சிவசத்தி வழியவாகக் கொண்டு அவற்றோடு ஓராண்டுக் காலம் கூடியிருப்பானாயின், அவனுக்கு, எப்பொருட்கும் முன்னோனாகிய சிவனது இறைமைத் தன்மைகள் எல்லாம் கிடைப்பனவாகும்.
===================================================
பாடல் எண் : 45
ஆகின்ற சந்திரன் தன்னொளி யாயவன்
ஆகின்ற சந்திரன் தட்பமு மாயிடும்
ஆகின்ற சந்திரன் தன்கலை கூடிடில்
ஆகின்ற சந்திரன் தானவ னாமே.

பொழிப்புரை :  ஆஞ்ஞையாகிய சந்திர மண்டலத்தை அடைந்த யோகி அங்கு நின்றும் மீளாது நிற்குமிடத்து முதற்கண் அம் மண்டலத்தின் ஒளியைப் பெற்றுப் பின்னர் அதன் குளிர்ச்சியைப் பெறு வான். அதன்பின் அம்மண்டலத்தின் பகுதிகளை ஒவ்வொன்றாக அடைவானாயின், இறுதியில் அச்சந்திர மண்டலமே தானாய் விடுவான்.
===================================================
பாடல் எண் : 46
தானே படைத்திட வல்லவ னாயிடும்
தானே அளித்திட வல்லவ னாயிடும்
தானேசங் காரத் தலைவனு மாயிடும்
தானே சிவனெனுந் தன்மைய னாமே.

பொழிப்புரை :  ஈசத்துவத்தைப் பெற்ற யோகி இறைவன் செய்யும் செயலெல்லாம் தானே செய்ய வல்லவனாவான். இதனால், `சிவன் இவனே` என உலகத்தாரால் எண்ணப்படும் தன்மை உடையவனாய் இருப்பன்.
===================================================
பாடல் எண் : 47
தன்மைய தாகத் தழைத்த கலையினுள்
பன்மைய தாகப் பரந்தஐம் பூதத்தை
வன்மைய தாக மறித்திடில் ஓராண்டின்
மென்மைய தாகிய மெய்ப்பொருள் காணுமே.

பொழிப்புரை :  ஈசத்துவத்தை அடைந்தோன், பலவாகப் பரந்து விரிந்து கிடக்கின்ற தத்துவங்களை, சத்தியின் தன்மையால் அமைந்த நிவிர்த்தி முதலிய பஞ்ச கலைகளுள் அடங்கி நிற்பனவாக உணர்ந்து ஓராண்டு நிற்பானாயின், சூக்குமப் பொருளாகிய மெய்ப்பொருளைக் காண்பான்.
===================================================
பாடல் எண் : 48
மெய்ப்பொரு ளாக விளைந்தது வேதெனின்
நற்பொரு ளாகிய நல்ல வசித்துவம்
கைப்பொரு ளாகக் கலந்த உயிர்க்கெல்லாம்
தற்பொரு ளாகிய தன்மைய னாகுமே.

பொழிப்புரை :  ஈசத்துவத்தால் மெய்ப்பொருட் காட்சி கிடைத்த பின், அதனால் விளையும் பயன் யாது எனின், சித்திகள் எல்லா வற்றுள்ளும் சிறந்த `வசித்துவம்` என்னும் சித்தி பெறுதலேயாம். வசித்துவ சித்தியைப் பெற்றோன், இறைவனுடையவாய்ப் பொருந்தி யுள்ள எல்லா உயிர்கட்கும் தானே மெய்ப்பொருள் போலும் தன்மையை உடையவனாவான்.
===================================================
பாடல் எண் : 49
தன்மைய தாகத் தழைத்த பகலவன்
மென்மைய தாகிய மெய்ப்பொருள் கண்டிடின்
புன்மைய தாகிப் புலன்களும் போயிட
நன்மைய தாகிய நற்கொடி காணுமே.

பொழிப்புரை :  மேற்கூறியவாறு பல்லுயிர்கட்கும் மெய்ப் பொருள் தன்மையனாய்ப் பெருமை பெற்று நிற்கின்ற அருளொளிக் கதிர வனாகிய சிவயோகி மெய்ப்பொருளைக் கண்டவனாதலின், ஐம்புல ஆசைகள் அருவருக்கத்தக்க பொருள்களாய்த் தலைகாட்டா தொழிய, ஞானஉருவான திருவருளையே நோக்கி நிற்பான்.
===================================================
பாடல் எண் : 50
நற்கொடி யாகிய நாயகி தன்னுடன்
அக்கொடி ஆகம் அறிந்திடில் ஓராண்டுப்
பொற்கொடி யாய புவனங்கள் போய்வருங்
கற்கொடி யாகிய காமுக னாமே.

பொழிப்புரை :  ஞான உருவான திருவருளோடு கூடி, அதனது இன்பத்தை யோகி ஒருவன் அறிவானாயின், அதன் பின் ஓராண்டுக் காலத்தில் பொன்மயமான கொடிகளும், தருக்களும் நிறைந்த விண்ணுலகங்களில் சென்று மீள வல்லவனாவான். ஆயினும், அவன், மேருவை அடைந்து பொன்னிறத்தைப் பெற விரும்புகின்ற காக்கையினது ஆசைபோன்ற அவ்வாசையை உடையனாவனோ!


Offline Anu

மூன்றாம் தந்திரம்

பதிகம் எண்:11. அட்டமாசித்தி

(பாடல்கள்:51-71/71)

பாகம்-III

பாடல் எண் : 51
காமரு தத்துவ மானது கண்டபின்
பூமரு கந்தம் புவனம தாயிடும்
மாமரு வுன்னிடை மெய்த்திய மானனாம்
நாமரு வும்ஒளி நாயக மானதே.

பொழிப்புரை :  ஈசத்துவ சித்தியிற்றானே, விரும்பத் தக்க மெய்ப் பொருட்காட்சி கிடைத்து விடுதலால், அதன்பின் எல்லா உலகமும், பூவினுள் அடங்கித் தோன்றும் மணம்போல உன்னிடத்தே அடங்கித் தோன்றும். அதனால் அவ்வுலகங்கட்கெல்லாம் வியாபகமாம் தன்மையைப் பொருந்திய உன்னிடத்தில், அவற்றிற்கெல்லாம் நீயே உண்மைத் தலைவனாய்நிற்க, புகழ்பொருந்திய அருள் ஒளியே தலைமைபெற்று நிற்கும்.
===================================================
பாடல் எண் : 52
நாயக மாகிய நல்லொளி கண்டபின்
தாயக மாகத் தழைத்தங் கிருந்திடும்
போயக மான புவனங்கள் கண்டுபின்
பேயக மாகிய பேரொளி காணுமே.

பொழிப்புரை :  சிவயோகியானவன் எல்லாவற்றுக்கும் தலைமை யான நல்ல திருவருள் ஒளியைக் கண்டபின் அதனையே தனக்கு உறைவிடமாகக் கொண்டு அதனிடத்தே இருத்தலல்லது, அவரவரது புண்ணியங்கட்கு ஏற்ப அவரவருக்கு உரியவாய் உள்ள உலகங்களிலே சென்று, அவற்றைக் கண்டு, பின், அவைகளில், காவல் மிகுதியால் அச்சத்தைத் தரும் தலைமை இடத்தில் வீற்றிருக்கின்ற அவற்றின் தலைமைக் கடவுளரைக் காண்கின்ற அச்செயலை விரும்புவானோ! விரும்பான்.
===================================================
பாடல் எண் : 53
பேரொளி யாகிப் பெரியஅவ் வெட்டையும்
பாரொளி யாகப் பதைப்பறக் கண்டவன்
தாரொளி யாகத் தரணி முழுதுமாம்
ஓரொளி யாகிய காலொளி காணுமே.

பொழிப்புரை :  பவயோகியர்க்குப் பெரும் பேறாய்த் தோன்றி விரிந்து விளங்குகின்ற, மேற்சொல்லிய உலகங்கள் எட்டனையும் தான் இருக்கும் நிலவுலகத்தோடு ஒத்தனவாகவே உணர்ந்து, அவற்றின் மேல் மனம் செல்லாது அடங்கிய சிவயோகி, இந்நிலவுலகம் முழு தினும் பொருந்தியுள்ள ஒன்றான ஒளியாகிய பிராண வாயுவின்வழிக் காணத்தக்க குண்டலி ஒளியைப் படிமுறையில் பெருகக் காண்பான்.
===================================================
பாடல் எண் : 54
காலோ டுயிருங் கலக்கும் வகைசொல்லிற்
காலது வக்கொடி நாயகி தன்னுடன்
காலது ஐஞ்ஞூற் றொருபத்து மூன்றையும்
காலது வேமண்டிக் கண்டஇவ் வாறே.

பொழிப்புரை :  பிராணவாயுவும், உயிரும் தம்முள் இயைந்த வாற்றைக் கூறுமிடத்து, பிராணவாயு, உடம்பில் உள்ள நாடிகள் அனைத்திலும் நிறைந்து நிற்கின்ற சிவசத்தியுடன் முன்னர்ப் பொருந்திப் பின்னர், அஃது `ஐஞ்ஞூறு` என்றும், `பத்து` என்றும், `மூன்று` என்றும் சிறந்தெடுத்துக் கூறப்படுகின்ற நாடிகளில் நிறைந்து நிற்கும் வகையினாலேயாம்.
===================================================
பாடல் எண் : 55
ஆறது வாகும் அமிர்தத் தலையினுள்
ஆறது ஆயிரம் முந்நூற் றொடைஞ்சுள
ஆறது வாயிர மாகும் அருவழி
ஆறது வாக வளர்ப்ப திரண்டே.

பொழிப்புரை :  யாறு போல உண்டாகின்ற விந்துவாகிய அமுதத்தை உடைய ஆஞ்ஞையில் அந்த யாறு பாய்கின்ற வாய்க்கால்கள் ``ஆயிரமும், முந்நூறும், ஐந்தும்`` என்று கூறத்தக்க அளவில் உள்ளன. அந்த அரிய வழியிலே அந்த அமிர்த யாறு பெருகிப் பாயச் செய்து உடம்பை வளர்ப்பன இடை நாடி பிங்கலை நாடி என்னும் இருநாடிகளில் நிற்கும் இரு சத்திகளே யாகும்.
===================================================
பாடல் எண் : 56
இரண்டினின் மேலே சதாசிவ நாயகி
இரண்டது கால்கொண் டெழுவகை சொல்லில்
இரண்டது ஆயிரம் ஐம்பதொ டொன்றாய்த்
திரண்டது காலம் எடுத்தது அஞ்சே.

பொழிப்புரை :  இடைகலை பிங்கலைகளின்மேல் சுழுமுனைத் தலையில் நிற்கும் சத்தி, இடையும், பிங்கலையுமாகிய இரண்டன் வழியாகப் பிராணனை இயக்கிச் செயல் புரிகின்ற முறையைச் சொல்லுமிடத்து, இரண்டாகிய அந்தப் பிராணன் ஆயிர நாடிகளோடும், ஐம்பத்தோர் அக்கரங்களோடும் கூடியுள்ள ஆறு ஆதாரங்களில் பொருந்தி, ஐந்து காலத்தைக் கொண்டிருக்கும் வகையிலேயாம்.
===================================================
பாடல் எண் : 57
அஞ்சுடன் அஞ்சு முகமுள நாயகி
அஞ்சுடன் அஞ்சது வாயுத மாவது
அஞ்சது வன்றி இரண்டது வாயிரம்
அஞ்சது காலம் எடுத்துளும் ஒன்றே.

பொழிப்புரை :  சதாசிவ மூர்த்தியின் சத்தி, பத்துக் கைகளில் பத்து ஆயுதங்களை ஏந்தி இருப்பவளாகக் கிரியாவான்கள் கருதுவர். ஆயினும், யோகத்தில் அவளை இரண்டாயிரம் கைகளில் இரண்டா யிரம் ஆயுதங்களை ஏந்தி நிற்பவளாகக் கூறலாம். அவள் மேற்கூறிய ஐந்து காலங்களிலும் தங்கி நின்று அருளுதல், உயிர் ஒன்றையேயாம்.
===================================================
பாடல் எண் : 58
ஒன்றது வாகிய தத்துவ நாயகி
ஒன்றது கால்கொண்டு ஊர்வகை சொல்லிடில்
ஒன்றது வென்றிகொள் ஆயிரம் ஆயிரம்
ஒன்றது காலம் எடுத்துளும் முன்னே.

பொழிப்புரை :  தன்னோடு ஒப்பது ஒன்று இல்லாது, தானே தனிப்பொருளாய் நிற்கும் சத்தி, பொதுவில் இரு நாடிகள் இயக்கி நின்ற பிராணனை யோக நிலையில் நடுநாடியாகிய ஒன்றன்வழியே செலுத்தி மேல் ஏறுகின்ற தன்மையைச் சொல்லுமிடத்து, அவ்வொரு வெற்றிச் செயலே அளவற்ற வெற்றிச் செயலாய் அமையும்படி ஒரு காலத்துள்ளே உயிரை உயர்த்தி, அருளுதலைச் செய்வாள். ஆதலின், அவளையே நினை.
===================================================
பாடல் எண் : 59
முன்னெழும் அக்கலை நாயகி தன்னுடன்
முன்னுறு வாயு முடிவகை சொல்லிடில்
முன்னுறும் ஐம்பதொ டொன்றுடன் அஞ்சுமாய்
முன்னுறு வாயு முடிவகை யாமே.

பொழிப்புரை :  உயிரோடு உடல் தொடர்பு பட்டபொழுதே தான் எழுந்து இயங்குகின்ற இடைகலை பிங்கலைகளின் தலைவியாகிய சத்தியைப் பற்றி நின்று இயங்குகின்ற பிராணவாயு, பின் முடிவுபெறும் வகையைச் சொல்லுமிடத்து, ஐம்பத்தோர் அக்கரங்களில், பிருதிவி காலம் முதலிய ஐவகைக் காலத்திலும் இயங்கி முடியும் வகையேயாம்.
===================================================
பாடல் எண் : 60
ஆய்வரும் அத்தனி நாயகி தன்னுடன்
ஆய்வரு வாயு அளப்பது சொல்லிடில்
ஆய்வரும் ஐஞ்ஞூற்று முப்பத்தொன் றொன்பது
மாய்வரு வாயு வளப்புள் ளிருந்ததே.

பொழிப்புரை :  ஆய்ந்துணர்தற்கு அரியவாகிய மேற்சொல்லிய சிவசத்தி, தன்னுடனாய் இயங்கிவருகின்ற பிராண வாயுவை வரையறை செய்யும் வகையைக் கூறுமிடத்து, இயல்பாக இயக்குகின்ற மூச்சு (சுவாசக்) கணக்கிலிருந்து, ஆராயவருகின்ற ஐந்நூற்று நாற்பது மூச்சு அழிந்தொழிய எஞ்சியவை வலிமையுற்று உள்நிற்றலாம்.
===================================================
பாடல் எண் : 61
இருநிதி யாகிய எந்தை யிடத்து
இருநிதி வாயு இயங்கு நெறியில்
இருநூற்று முப்பத்து மூன்றுடன் அஞ்சாய்
இருநிதி வாயு இயங்கும் எழுந்தே.

பொழிப்புரை :  உயிர்களின் வாழ்நாளுக்கு முதலாய் உள்ள பிராண வாயு உயிர்கட்கு இருநிதி (சங்க நிதி, பதும நிதி) போல உதவுகின்ற இறைவனது திருவருளிடத்து இயங்கும் நிலை உண்டாயின், அஃது, `இருபத்தோராயிரத்து அறுநூறு` என்னும் கணக்கினை விட்டு, `இருநூற்று முப்பத்து எட்டு` என்னும் நிலையை அடையும்.
===================================================
பாடல் எண் : 62
எழுகின்ற சோதியுள் நாயகி தன்பால்
எழுகின்ற வாயு இடமது சொல்லில்
எழுநூற் றிருபத்தொன் பானது நாலாய்
எழுந்துடன் அங்கி இருந்ததிவ் வாறே.

பொழிப்புரை :  யோகக் காட்சியில் தோன்றுகின்ற ஒளியிடத்தில் அறியப்படும் சத்தியினது இடமாகிய ஆஞ்ஞையில் (சுழுமுனை வழியே) பிராணவாயு அடைவதனால் உளவாகும் நிலையைச் சொல் லுமிடத்து, மூலாதாரத்தில் உள்ள அக்கினி மேல் எழுந்து, எழுநூற் றிருபத்தொன்பது நாடிகள் இடையில் உள்ள நான்கு ஆதாரங்களிலும் தொடர்புபட்டு நிற்க, அவற்றின் வழி உடம்பெங்கும் பரவி நிற்கும்.
===================================================
பாடல் எண் : 63
ஆறது கால்கொண் டிரதம் விளைத்திடும்
ஏழது கால்கொண் டிரட்டி இறக்கிட
எட்டது கால்கொண் டிடவகை யொத்தபின்
ஒன்பது மாநிலம் ஒத்தது வாயுவே.

பொழிப்புரை :  ஆறு ஆதாரங்கட்குமேல் ஏழாவதான உச்சி யளவும் பிராணவாயுவை ஏற்றியும் இறக்கியும் பயின்றால், ஆறு ஆதாரங்களிலும் தாரையாய்ப் பாயும்படி திருவருள் அமுதத்தை விளைத்து நிற்கும். இனி எட்டாந்தானமாகச் சொல்லப்படுகின்ற தலைக்குமேல் பன்னிரண்டங்குலம் பிராண வாயுவை நீக்கி நிற்றலால் ஆதார வேற்றுமைகள் நீங்கியபின், சுழுமுனையோடு மற்றை ஒன்பது நாடிகளிலும் பிராண வாயு ஒருதன்மைத்தாய் நிற்பதாம்.
===================================================
பாடல் எண் : 64
சந்திரன் சூரியன் தற்பரன் தாணுவிற்
சந்திரன் தானுந் தலைப்படுந் தன்மையைச்
சந்தியி லேகண்டு தானாஞ் சகமுகத்
துந்திச் சமாதி யுடையொளி யோகியே.

பொழிப்புரை :  `சந்திரகலை` எனப்படுகின்ற இடநாடிக் காற்றும், `சூரியகலை` எனப்படுகின்ற வலநாடிக் காற்றும் சிவனது திருமுடியில் உள்ள சந்திரகலை எனப்படுகின்ற பரஞானமாகிய திருவருளும் ஒன்றாய் நிற்கின்ற தன்மையை, அனைத்து நாடிகளும் கூடுகின்ற இடமாகிய ஆஞ்ஞையிலே விளங்கக் கண்டு அத்திருவருளேயாகி நிற்பான், உலகியலை அறவே ஒதுக்கித் தள்ளிச் சிவசமாதி ஒன்றையே உடைய சிவ ஞான யோகியே.
===================================================
பாடல் எண் : 65
அணங்கற்ற மாதல் அருஞ்சனம் நீவல்
வணங்குற்ற கல்விமா ஞான மிகுதல்
சிணுங்குற்ற வாயர்தம் சித்தி தாம்கேட்டல்
நுணங்கற் றிருத்தல்கால் வேகத்து நுந்தலே.

பொழிப்புரை :  மனைவியைத் துறத்தல், மக்கள் முதலிய பிற சுற்றத்தையும் துறத்தல், சிவனை வழிபடுகின்ற நூல் அறிவு மிகுதல், வாய்வாளாதிருக்கும் சிவயோகிகள் அடைந்துள்ள பர சித்திகளை அவரிடம் கேட்டல், உலகியலின் தாக்குதலால் உள்ளம் திரிவுபடா திருத்தல், பிராணாயாமத்தை எளிதாகச் செய்தல்.
===================================================
பாடல் எண் : 66
மரணஞ் சரைவிடல் வண்பர காயம்
இரணஞ் சேர்பூமி இறந்தோர்க் களித்தல்
அரனன் திருவுரு வாதல்மூ வேழாங்
கரனுறு கேள்வி கணக்கறிந் தோனே.

பொழிப்புரை :  மூப்பு இறப்புக்கள் இன்மை, அருள் வெளியிற் கலந்திருத்தல், தன் முன்னோர்களைத் தனது நற்செய்கையால் நற்கதி பெறச் செய்தல், சிவனது திருவுருவைத் தான் பெறுதல் என்னும் பத்து இயல்புகளையும், கைப்பொருள் போன்ற கேள்வியால் யோகநூற் பொருளை நன்குணர்ந்தோன் பெறுவான்.
===================================================
பாடல் எண் : 67
ஓதம் ஒலிக்கும் உலகை வலம்வந்து
பாதங்கள் நோவ நடந்தும் பயனில்லை
காதலில் அண்ணலைக் காண இனியவர்
நாதன் இருந்த நகரறி வாரே.

பொழிப்புரை :  ஆர்வத்தால் சிவனைக் காணுதற்பொருட்டுக் கடல் சூழ்ந்த உலகம் முழுதும் கால்கள் நோவ நடந்து சுற்றி வரினும் பயன் இல்லை. அது நிற்க, சிவனுக்கு மிக இனியவராகிய சிவயோகியரே அவன் இருக்குமிடத்தை அறிந்து காண்பர்.
===================================================
பாடல் எண் : 68
மூல முதல்வேதா மாலரன் முன்னிற்கக்
கோலிய ஐம்முகன் கூறப் பரவிந்து
சாலப் பரநாதம் விந்துத் தனிநாதம்
பாலித்த சத்தி பரைபரன் பாதமே.

பொழிப்புரை :  மகேசுரனுக்குக் கீழ் அயன், மால், உருத்திரன் என்னும் மூவரும் மூலாதாரம் முதலிய மூன்று ஆதாரங்களிலும் முறையே நிற்க, மகேசுரனுக்குமேல், `விசுத்தி, ஆஞ்ஞை, நா அடி, உச்சி, தலைக்குமேல் பன்னிரண்டங்குலம்` என்னும் இடங்களில் சதாசிவன், விந்து, நாதம், பரவிந்து, பரநாதம் என்போர் முறையே நின்று பயன் தருமாறு உயிர்களுக்கு அளித்த சத்தி, `பரை` எனப்படும் சிவனது திருவருளே.
===================================================
பாடல் எண் : 69
ஆதார யோகத் ததிதே வொடுஞ்சென்று
மீதான தற்பரை மேவும் பரனொடு
மேதாதி யீரெண் கலைசெல்ல மீதொளி
ஓதா அசிந்தம்ஈ தானந்த யோகமே.

பொழிப்புரை :  மூலாதாரம் முதலாக ஆறு ஆதாரங்களையும் அவற்றில் உள்ள கடவுளரைத் தியான சமாதிகளால் வழிபட்டுப் பயன்பெறுமாற்றால் கடந்து, அவற்றிற்கு மேல் நிராதாரமாகிய உச்சிமுதற் பன்னிரண்டங்குலத்தை அடைந்து பரவிந்து பரநாதங் களின் அருள்பெற்று இவ்வாற்றால், மேதை முதலிய பிரணவகலை பதினாறும் கடக்கப்பட்டனவாய்விட, அதற்கு மேல், சொல்லவும், நினைக்கவும் வாராத மீதானமாகிய துவாதசாந்தத்தில் (பன்னிரண்டு அங்குலத்திற்கு அப்பால்) பரமசிவனை அடைந்து நிற்றலே ஆனந்த யோகமாகும்.
===================================================
பாடல் எண் : 70
மதியமும் ஞாயிறும் வந்துடன் கூடித்
துதிசெய் பவர்அவர் தொல்வா னவர்கள்
விதியது செய்கின்ற மெய்யடி யார்க்குப்
பதியது காட்டும் பரமன்நின் றானே.

பொழிப்புரை :  சந்திர கலையாகிய இட நாடிக் காற்றும், சூரிய கலையாகிய வல நாடிக் காற்றும் ஒடுங்கிச் சுழுமுனையில் வந்து பொருந்தச் செய்து, வாசி யோகத்தில் நின்று, ஆதாரங்களில் உள்ள கடவுளரைப் போற்றுகின்ற பொது யோகிகள் மேலுலகத்தில் அவ்வக் கடவுளராய் நின்று இன்பம் நுகர்வர். சிவனை உணர்தலாகிய முறைமையில் வழுவாது நின்று, அருள் யோகம் ஆனந்த யோகங் களைச் செய்கின்ற உண்மை யோகிகட்கே, நிலையான வீடுபேற்றைக் காட்டும் பரமசிவன் முன்னிற்பான்.
===================================================
பாடல் எண் : 71
கட்டவல் லார்கள் கரந்தெங்குந் தாமாவர்
மட்டவிழ் தாமரை யுள்ளே மணஞ்செய்து
பொட்டெழக் குத்திப் பொறியெழத் தண்டிட்டு
நட்டறி வார்க்கு நமனில்லை தானே.

பொழிப்புரை :  பிராண வாயுவைத் தம்வழியில் இயக்குமளவே வல்லராய்ப் பவயோகம் கைவந்தவர் மருட் சித்திகளையே பெறுவர். ஆஞ்ஞையில் அருள் இன்பத்தைத் தருகின்ற அருள் யோகத்தைத் தலைப்பட்டு, பின் சுழுமுனைத் தலையை அடைந்த பிராண வாயுவால் அவ்விடத்தில் வடு உண்டாகத் தாக்கிப் பின்பு, அவ்வாயுவை மண்டை ஓட்டில் தீப்பொறி உண்டாகுமாறு மோதி, உணர்வை அசையாது நிறுத்திச் சிவனை அறியும் ஆனந்த யோகத்தில் நின்று சிவயோகம் கைவந்தவர்க்கு இறப்பு உண்டாகாது. (எடுத்த பிறப்பிலே வீடு உண்டாகும் என்பதாம்)


Offline Anu

மூன்றாம் தந்திரம்

பதிகம் எண்:12. கலைநிலை

(பாடல்கள்:12 )

பாடல் எண் : 1
காதல் வழிசெய்த கண்ணுதல் அண்ணலைக்
காதல் வழிசெய்து கண்ணுற நோக்கிடிற்
காதல் வழிசெய்து கங்கை வழிதரும்
காதல் வழிசெய்து காக்கலு மாமே.

பொழிப்புரை :  தன்னை அடைவதற்கு அன்பு ஒன்றையே வழியாக அமைத்துள்ள முக்கட் கடவுளாகிய சிவபெருமானை, அவ் அன்பைத் தரும் வழியாகிய அறிவை உண்டாக்கி, அவ் அறிவு பொருந்த அவனை நோக்கினால், அன்பு பெருகி, அது வழியாக இன்ப வெள்ளம் பெருகும். அது பெருகியபின், அந்த அன்பையே பின்னும் துணையாகப் பற்றி, அந்த இன்ப வெள்ளம் வற்றிப் போகாதவாறு பாதுகாத்துக் கொள்ளுதலும் கூடும்.
=======================================
பாடல் எண் : 2
காக்கலு மாகுங் கரணங்கள் நான்கையும்
காக்கலு மாகுங் கலைபதி னாறையும்
காக்கலு மாகுங் கலந்தநல் வாயுவும்
காக்கலு மாகுங் கருத்துற நில்லே

பொழிப்புரை :  மாணாக்கனே!; நீ பிரணவ கலைகளில் அறிவு பொருந்த நில், அங்ஙனம் நிற்பாயாகில், பிராண வாயுவையும், அக்கலைகள் பதினாறனையும், அவற்றின் வழி இயங்குகின்ற மனம் முதலிய அந்தக்கரணங்களையும் மருள் நெறியிற் செல்லாது தடுத்து, அருள் நெறியில் நிறுத்துதல் கூடும்.
=======================================
பாடல் எண் : 3
நிலைபெற நின்றது நேர்தரு வாயு
சிலைபெற நின்றது தீபமும் ஒத்துக்
கலைவழி நின்ற கலப்பை அறியில்
மலைவற வாகும் வழியது வாமே.

பொழிப்புரை :  வலமும், இடமும் செல்லாமல், நடுநாடி வழிச் செல்கின்ற பிராண வாயு. அத்தகைய செலவிற் பிறழாது நிற்றலே அசை வில்லாது நிற்கும் பிராணாயாம நிலையாம். அந்நிலையால் அறிவும், பிரணவ கலைகளில் நிலைபெற்று நின்று, முதல்வனது திருவருள் அக்கலைகளில் பல்வேறு வகையாய்க் கலந்து நிற்கின்ற கலப்பினை அறியுமாயின், அவ்வாறு அறிந்து நிற்கின்ற அந்நிலையே, அவ்வறிவு பின் பலதலைப்படாது ஒரு தலைப்படும் வழியாம்.
=======================================
பாடல் எண் : 4
புடையொன்றி நின்றிடும் பூதப் பிரானை
மடையொன்றி நின்றிட வாய்த்த வழியில்
சடையொன்றி நின்றஅச் சங்கர நாதன்
விடையொன்றி லேறியே வீற்றிருந் தானே.

பொழிப்புரை :  எஞ்ஞான்றும் உடனாய் நீங்காது நிற்கின்ற சிவபெருமானைச் சாரமாட்டாது புறத்தே ஓடிய உணர்வு, அவ்வாறு ஓடாது மடங்கி அவனைச் சார்ந்து நிற்றற்குப் பொருந்திய பிராசாத யோக நெறிக்கண் அவன் இனிது விளங்கி நிற்கின்றான்.
=======================================
பாடல் எண் : 5
இருக்கின்ற காலங்கள் ஏதும் அறியார்
பெருக்கின்ற காலப் பெருமையை நோக்கி
ஒலிக்கின்ற வாயு ஒளிபெற நிற்கத்
தருக்கொன்றி நின்றிடும் சாதக னாமே.

பொழிப்புரை :  தாம் வாழும் நாளின் எல்லை இவ்வளவினது என்பதை அறியாதவர் அது நீட்டித்தற்பொருட்டு ஒரு வழிப்படுத்து கின்ற பிராணவாயு, அவ்வாறு கால நீட்டிப்பிற்கு மட்டும் ஏதுவா யொழியாது, மெய்யுணர்வைப் பெறுதற்கு ஏதுவாகுமாயின், அத்தகைய சாதனத்தைப் புரிந்த சாதகன், பின்னர்ப் பேரின்பத்தில் திளைத்து மகிழ்ந்திருப்பான்.
=======================================
பாடல் எண் : 6
சாதக மானஅத் தன்மையை நோக்கியே
மாதவ மான வழிபாடு செய்திடும்
போதக மாகப் புகலுறப் பாய்ச்சினால்
வேதக மாக விளைந்து கிடக்குமே.

பொழிப்புரை :  `ஒருக்கின்ற வாயு ஒளிபெற நிற்குமாறு நிறுத்துதல்` என மேற்கூறிய செயலே சாதகன் சாதிக்கத்தக்க முறையாதலை உணர்ந்து, பெருந்தவமாகிய அவ்வழி பாட்டினை ஒருவன் செய்யும் பொழுது, பிரணவ கலைகளின் உள்ளீடாய திருவருளிலே தனது உணர்வு செல்லுமாறு செலுத்துவானாயின், அச்செயலே, அவனது புலன் உணர்வாகிய இரும்பினை மெய்யுணர்வாகிய பொன்னாக மாற்றுகின்ற இரச குளிகையாய் அமைந்து பயனைத் தந்துவிடும்.
=======================================
பாடல் எண் : 7
கிடந்தது தானே கிளர்பயன் மூன்று
நடந்தது தானேஉள் நாடியுள் நோக்கிப்
படர்ந்தது தானே அப் பங்கய மாகத்
தொடர்ந்தது தானே அச் சோதியுள் நின்றே.

பொழிப்புரை :  மேல், ``வேதகமாக விளைந்து கிடக்கும்`` எனப் பட்ட அச்சாதனைதான், மிகத் தருகின்ற பயன் மூன்றாகும். இனி, இயல்பாக இயங்கும் பிராண வாயுவின்வழி எப்பொழுதும் புறத்தே ஓடிய உணர்வுதானே, சாதனையால் சுழுமுனைவழிச் செலுத்தப்பட்ட வாயுவின்வழியே உள்நோக்கிப் படர்ந்து, பின்னும் உச்சிக் கண்ணதாகிய பெரிய தாமரை மலரிடத்து அவ்வாயுவின் வழியே படிமுறையாற் புக, அவ்விடத்து நன்கு விளங்கும் பேரொளியாகிய திருவருள், முன்பு கீழுள்ள ஆதாரங்களினின்று அவ்வுணர்விற்கு விடயமாய்த் தொடர்ந்து விளங்கிவருவதாம்.
=======================================
பாடல் எண் : 8
தானே எழுந்தஅத் தத்துவ நாயகி
ஊனே வழிசெய்தெம் உள்ளே யிருந்திடும்
வானோர் உலகீன்ற அம்மை மதித்திடத்
தேனே பருகச் சிவாலய மாகுமே.

பொழிப்புரை :  உயிர் தனது முயற்சியால் அடையலா காமையின், தானாகவே அதற்குப் புலப்பட்டு நிற்கின்ற மெய்ப் பொருளாகிய தலைவி தன்னை நாம் அடைவதற்கு இவ்வுடம்பையே வழியாக அமைத்து நம்முள் இருக்கின்றாள். அவளையே பொருளாக நாம் கொள்ளின், இவ்வுடம்பு சிவானந்தமாகிய தேனைப் பருகி இன்புறுகின்ற இடமாய்விடும்.
=======================================
பாடல் எண் : 9
திகழும் படியே செறிதரு வாயு
அழியும் படியை அறிகிலர் ஆரும்
அழியும் படியை அறிந்தபின் நந்தி
திகழ்கின்ற ஆயுவைச் சேர்தலு மாமே.

பொழிப்புரை :  உடம்பு ஒளி பெற்று நெடுநாள் விளங்குதற் பொருட்டுப் பொருந்தியுள்ள பிராணவாயு, ஒவ்வொரு மூச்சிலும் சிறிது சிறிதாக அழிந்துகொண்டு வருதலை யாரும் அறிந்து கவலைப் படுதல் இல்லை, அதனை அறிந்து கவலைப்பட்டு, அவ்வாயுவை அழியாமற் காப்பார் உளராயின், அவர்க்கு, எடுத்த பிறப்பிலே சிவனை அடைதற்கு ஏதுவான நீண்ட ஆயுளைப் பெறுதல் கூடும்.
=======================================
பாடல் எண் : 10
சோதனை தன்னில் துரிசறக் காணலாம்
நாதனும் நாயகி தன்னிற் பிரியும்நாள்
சாதன மாகுங் குருவை வழிபட்டு
மாதன மாக மதித்துக்கொ ளீரே.

பொழிப்புரை :  `சிவன், உடலைக் காக்கின்ற சத்தியினின்றும் பிரிகின்ற நாள் இது` என்பதைக் குறிகள் சிலவற்றால் ஐயமற உணரலாகும். `அக் குறிகள் இவை` என்பதை யோக குருவை வழிபட்டே பெற்று, அங்ஙனம் பெற்ற அறிவைப் பெரிய செல்வம் போல மதித்துப் போற்றிக்கொள்ளுங்கள்.
=======================================
பாடல் எண் : 11
ஈராறு கால்கொண் டெழுந்த புரவியைப்
பேராமற் கட்டிப் பெரிதுண்ண வல்லிரேல்
நீரா யிரமும் நிலமாயிரத் தாண்டும்
பேராது காயம் பிரான்நந்தி ஆணையே.

பொழிப்புரை :  பிராணாயாம வன்மையால் தலையில் உள்ள அமுதத்தைப் பெற்று மிகவும் நுகர வல்லீராயின், உமக்கு உடம்பாய் அமைந்த, நிலம், நீர் முதலிய தத்துவங்கள் பலவும் அவை யவை ஒடுங்கும் முறையில், வலிமை கெட்டு ஒடுங்குதற்குத் தனித்தனிப் பல்லாண்டுக் காலம் செல்லும்; அங்ஙனம் செல்லவே, உடம்பு கெட் டொழியாது, நெடுநாள் நிலைத்து நிற்கும்; இஃது எங்கள் அருளாசிரி யரான நந்தி தேவர்மேல் ஆணையாக நான் சொல்லும் உண்மை.
=======================================
பாடல் எண் : 12
ஓசையில் ஏழும் ஒளியின்கண் ஐந்தும்
நாசி யினில்மூன்றும் நாவில் இரண்டும்
தேசியும் தேசனுந் தம்மிற் பிரியுநாள்
மாசறு சோதி வகுத்துவைத் தானே.

பொழிப்புரை :  மேற்கூறியவாறு சத்தி சிவங்கள் தம்மிற் பிரிந்து நீங்குகின்ற நாளின் எல்லையை, `சத்தம், உருவம் கந்தம், சுவை, பரிசம்` என்னும் புலன்களில் முறையே, `ஏழு, ஐந்து, மூன்று, இரண்டு, ஒன்று` என இவ்வாறாகப் பொது வகையில், இருளை அறுக்கும் ஒளியாகிய இறைவன் வகுத்து வைத்துள்ளான்.


Offline Anu

மூன்றாம் தந்திரம்

பதிகம்எண்: 13. காரியசித்தி

(பாடல்கள்:16 )

பாடல் எண் : 1
உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பபை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.

பொழிப்புரை : உடம்பு அழியுமாயின், அதனைப் பெற்றுள்ள உயிரும் அழிந்ததுபோலச் செயலன்றி நிற்பதாம். ஆகவே, உடம்பு அழிந்தபின், அவ்வுடம்பைத் துணைக்கொண்டு இயங்கிய உயிர், தவமாகிய துணையைப் பெறவும், பின் அதனால் இறையுணர்வை அடையவும் இயலாததாய்விடும். இதுபற்றி, உடம்பை நிலைபெறுவிக்கும் வழியை அறிந்து அவ்வழியில் அதனை நிலைபெறுவித்த யான், உயிரை நலம் பெறச் செய்தவனே ஆயினேன்.
=======================================
பாடல் எண் : 2
உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்
றுடம்பினை யானிருந் தோம்புகின் றேனே.

பொழிப்புரை :  சிவ நூல் கேட்பதற்கு முன்பெல்லாம் உடம்பை அழுக்கு ஒன்றையே உடையதாகக் கருதி இகழ்ந்திருந்தேன். சிவநூல் கேட்ட பின்னர், அதற்குள்தானே பயனை அடைதற்குரிய வழிகள் பலவும் இருத்தலை அறிந்தேன். அதனால், அவ்வறிவின் வழியே, உடம்பிற்குள் தானே இறைவன் தனக்கு இடம் அமைத்துக் கொண்டிருக்கின்றான் என்பதையும் அறிந்து, இப்பொழுது நான் உடம்பைக் கேடுறாதவாறு குறிக்கொண்டு காக்கின்றேன்.
=======================================
பாடல் எண் : 3
சுழற்றிக் கொடுக்கவே சுற்றிக் கழியும்
கழற்றி மலத்தைக் கமலத்தைப் பூரித்
துழற்றிக் கொடுக்கும் உபாயம் அறிவார்க்
கழற்றித் தவிர்ந்துடல் அஞ்சன மாமே.

பொழிப்புரை :  பிராண வாயுவை வாங்கியும், விட்டும் சுழலும்படி செய்ய, உடம்பில் உள்ள மாசுகளும் அதனோடே சுழன்று நீங்கும். அவ்வாற்றால் மாசுகளைப் போக்கித் தூய்தான பிராணவாயுவை ஆதாரத் தாமரைகளில் நிரப்பி, அவை வழியாக உடம்பில் உள்ள எல்லா நாடியினுள்ளும் அவ்வாயுச் சென்று உலவும்படி செய்து, அதன் ஆற்றலை அந்நாடிகட்குத் தருகின்ற இவ்வுபாயத்தை முறையறிந்து செய்ய வல்லவர்க்கு, உடம்பு நெருப்பிலிட்டுச் சுடப்படுதலினின்றும் நீங்கி, உயிரினுள் ஒளிந்து நிற்கும் கள்வனாகிய இறைவனைப் புலப்படக் காட்டும் மந்திரமையாய் அமையும்.
=======================================
பாடல் எண் : 4
அஞ்சனம் போலுடல் ஐஅறும் அந்தியில்
வஞ்சக வாதம் அறும்மத்தி யானத்தில்
செஞ்சிறு காலையிற் செய்திடில் பித்தறும்
நஞ்சறச் சொன்னோம் நரைதிரை நாசமே.

பொழிப்புரை :  மந்திரமைபோல நின்று பயன்தரத் தக்கதாகிய உடலை. அன்ன தாகாத வாறு, `ஐ, வளி, பித்து` என்னும் மூன்றானும் தோன்றிக் கெடுக்கின்ற நோய்கள், முறையே, `மாலை, நண்பகல், காலை` என்னும் பொழுதுகளில் செய்யும் பிராணாயாமத்தால் நீங்கும். அதுவேயன்றி, முப்பொழுதும் செய்யும் பிராணாயாமத்தாலும் நரை திரைகள் வாரா தொழியும். இவ்வுபாயத்தை இங்கு, உடலைக் கொல்லும் நஞ்சுபோன்ற தீமைகள் நீங்குதல் நோக்கிக் கூறினோம்.
=======================================
பாடல் எண் : 5
மூன்று மடக்குடைப் பாம்பிரண் டெட்டுள
ஏன்ற இயந்திரம் பன்னிரண் டங்குலம்
நான்றஇம் மூட்டை யிரண்டையுங் கட்டியிட்
டூன்றி யிருக்க உடம்பழி யாதே.

பொழிப்புரை :  மூன்று வளைவை யுடையதாகிய பாம்பு, பதினாறு அங்குல அளவின வாகிய கயிறுகளைக் கொண்ட பூட்டையில் அழுந்தப் பொருந்தி யிருக்குமாயின், உடம்பு அழியாது நிலை பெற்றிருக்கும். அப்பாம்பு அங்ஙனம் பொருந்தி நிற்றற்கு, மேற்கூறிய பூட்டையில், அவிழ்ந்து கிடக்கும் நிலையினவாய்ப் பன்னிரண்டங்குல நீளம் தொங்கு கின்ற இரண்டு மூட்டைகள், அவிழ்ந்து வீழாதவாறு கட்டப்படல் வேண்டும்.
=======================================
பாடல் எண் : 6
நூறும் அறுபதும் ஆறும் வலம்வர
நூறும் அறுபதும் ஆறும் இடம்வர
நூறும் அறுபதும் ஆறும் எதிரிட
நூறும் அறுபதும் ஆறும் புகுவரே.

பொழிப்புரை :  நூறு மாத்திரை காலமேயாயினும், அறுபது மாத்திரை காலமேயாயினும், ஆறு மாத்திரை காலமேயாயினும் பிராண வாயு சுழுமுனை நாடியை வலமாகச் சூழ்ந்தும் இடமாகக் சூழ்ந்தும், அதன் உட்புகுந்து மேலேறியும் வருமாயின், அத்துணை ஆண்டுக்கால வாழ்நாளினை மக்கள் எய்துவர்.
=======================================
பாடல் எண் : 7
சத்தியார் கோயில் இடம்வலம் சாதித்தால்
மத்தியா னத்திலே வாத்தியங் கேட்கலாம்
தித்தித்த கூத்தும் சிவனும் வெளிப்படும்
சத்தியம் சொன்னோம் சதாநந்தி ஆணையே.

பொழிப்புரை :  மூன்று மடக்குடைப் பாம்புபோல உடம்பில் உள்ள குண்டலி சத்தி, மேற் கூறியவாறு ஊன்றியிருக்கும் இடமாகிய நடுநாடியைப் பிராண வாயு வலமும் இடமுமாகச் சுற்றிவருகின்ற சாதனையைப் புரிந்தால், உலக நோக்கில் இருக்கும் பொழுதே உடலில் உள்ள பத்து நாடிகளில் உண்டாவனவாக மேல் (பா.593) கூறிய ``மணி, கடல், யானை`` முதலியவற்றின் ஓசைபோலும் ஒலிகளைக் கேட்டல் கூடும். இனிச் சிவ பெருமான். தாள அறுதிக்கு இயைய ஆடும் ஆட்டத்தின் ஓசையும் கேட்கப்பட்டுப் பின் அப்பெருமானே விளங்கித் தோன்றுவான். மெய்யான இன்பமே வடிவமான எங்கள் ஆசிரியர் மேல் ஆணையாக, இவ்வாறு நாம் உண்மையையே உங்கட்குச் சொன்னோம்.
=======================================
பாடல் எண் : 8
திறத்திறம் விந்து திகழும் அகாரம்
உறப்பெற வேநினைந் தோதும் சகாரம்
மறிப்பது மந்திரம் மன்னிய நாதம்
அறப்பெறல் யோகிக் கறநெறி யாமே.

பொழிப்புரை :  நாதத்தை முற்றப் பெறக் கருதிச் சொல்லப்படுகின்ற, முறையே மகர மெய்யையும் புள்ளி வடிவினதாய எழுத்தையும் உடன் கொண்டு விளங்கும் அகரமும், சகரமுமே பிராணவாயுவைத் தடுத்தற்குரிய மந்திரமாம்; ஏனெனில், நாதத்தை முற்றும் உணரப் பெறுதலே யோகம் கைவந்தவனுக்குரிய தன்மையாதலின்.
=======================================
பாடல் எண் : 9
உந்திச் சுழியி னுடனேர் பிராணனைச்
சிந்தித் தெழுப்பிச் சிவமந் திரத்தினால்
முந்தி முகட்டின் நிறுத்தி அபானனைச்
சிந்தித் தெழுப்பச் சிவனவ னாமே.

பொழிப்புரை :  பூரக ரேசகங்களை மேற்கூறியவாறு அம்ஸ மந்திரத்தாற் செய்தபின் கும்பகம் செய்யும் பொழுது `ஹாம்` என்னும் வித்தெழுத்தாலே (பீஜாட்சரத்தாலே) பிராணனைச் சுழுமுனை நாடி வழியே கண்டத்தளவும் செலுத்திப் பின், `ஹௌம்` என்னும் வித்தெழுத்தால் ஆஞ்ஞையை அடைவித்து, அங்கே மலவெழுத்துக்கள் நீங்கிய திருவைந்தெழுத்து, `தத்துவமசி` மகாவாக்கியப் பொருளையும், `சோஹம்` என்பதன் பொருளையும் தருமாற்றை உபதேச முறையான் உணர்ந்து அதனானே அவ்வாயுவை அசையாது நிறுத்திப்பின் அபானவாயு எழத் தொடங்குமாயின், அதனைப் பிரணவத்தால் அடக்கிப் பிராணனை முன்போலவே மேலெழச் செய்யின், அவ்வாறு செய்பவன் சிவமாந் தன்மையை அடைவான்.
=======================================
பாடல் எண் : 10
மாறா மலக்குதந் தன்மேல் இருவிரல்
கூறா இலிங்கத்தின் கீழே குறிக்கொண்மின்
ஆறா உடம்பிடை அண்ணலும் அங்குளன்
கூறா உபதேசங் கொண்டது காணுமே.

பொழிப்புரை :  அசுத்தத் தன்மை நீங்காதே எருவாய்க்கு இரண்டு விரற்கிடைமேலேயும், தன் சொல்லாற் சொல்லப்படாத குறிக்குக் கீழேயுமாய் உள்ள இடத்தில் தியானியுங்கள் `யாரை` எனின், உடம்பின் கண் ஆறு வகையில் உள்ள இறைவன் அங்கும் உளன். எனவே, அவனையே தியானியுங்கள் என்பதாம். அங்குத் தியானிக்குமிடத்து, ``ஊமை எழுத்து`` எனப்படும் பிரணவத்தால் தியானியுங்கள்.
=======================================
பாடல் எண் : 11
நீல நிறமுடை நேரிழை யாளொடுஞ்
சாலவும் புல்லிச் சதமென் றிருப்பார்க்கு
ஞாலம் அறிய நரைதிரை மாறிடும்
பாலனு மாவர் பராநந்தி ஆணையே.

பொழிப்புரை :  பிராணனை முந்தி முகட்டில் நிறுத்திய பின், அதற்கு மேலே உள்ள ஏழாந் தானமாகிய உச்சியில் திருவருளோடு நேரே கூடி, ``இத்திருவருளல்லது பிறிதொன்றும் நிலையுடையதன்று`` என்பதை எவரேனும் உணர்ந்திருப்பார்களாயின், அவர்கள் ஆன்ம லாபத்தைப் பெறுதலேயன்றி, நரைதிரை அணுகாது, என்றும் இளமையோடு இருக்கும் நன்மையையும் அடைவர். இஃது எங்கள் ஆசிரியர் ஆணையாகச் சொல்லப்படும் உண்மை.
=======================================
பாடல் எண் : 12
அண்டஞ் சுருங்கில் அதற்கோ ரழிவில்லை
பிண்டஞ் சுருங்கிற் பிராணன் நிலைபெறும்
உண்டி சுருங்கில் உபாயம் பலவுள
கண்டங் கறுத்த கபாலியு மாமே.

பொழிப்புரை :  உணவுக் குறைவால் முகத்தில் தசை ஒட்டிக் கண் குழியுமாயினும், அதனால், உடலுக்கு அழிவு வந்துவிடாது. மாறாக, உடம்பு இளைத்தால் பிராணவாயு வசப்பட்டு காய சித்தி கைகூடும். ஆகவே, உணவு குறையின், உயிர், நலம் பெறுதற்குரிய வழிகள் பலவும் அமையும். அதனால், உண்டி சுருக்கியவன், இறவாமையாலும், இன்ப நிறைவாலும் சிவனோடொத்து நிற்பான்.
=======================================
பாடல் எண் : 13
பிண்டத்துள் உற்ற பிழைக்கடை வாசலை
அண்டத்துள் உற்ற தடுத்தடைத் தேவிடின்
வண்டிச்சிக் கும்மம் மலர்க்குழல் மாதரார்
கண்டிச்சிக் கும்மந்நற் காயமு மாமே.

பொழிப்புரை :  உடலில் பொருந்தியுள்ள, தவ ஓழுக்கத்திற்கு இழுக்குத் தருகின்ற கடைப்பட்ட வழியை. உச்சியில் விளங்குவதாகிய திருவருளைத் தலைப்படுமாற்றால் அடைத்தே விடின், உடம்பு, மகளிர் கண்ட உடன் விரும்பத் தக்க அழகைப் பெற்று விளங்கும் பயனையும் அடையலாகும்.
=======================================
பாடல் எண் : 14
சுழலும் பெருங்கூற்றுத் தொல்லைமுன் சீறி
அழலும் இரதத்துள் அங்கியுள் ஈசன்
கழல்கொள் திருவடி காண்குறில் ஆங்கே
நிழலுளுந் தெற்றுளும் நிற்றலும் மாமே.

பொழிப்புரை :  சிவபெருமான், எவ்வுயிரையும் அதன் உடலினின்றும் பிரித்துக் கொண்டு போதற்குச் சுற்றிக் கொண்டிருக் கின்ற கூற்றுவனைத் தொன்றுதொட்டே சினந்து, முக்கோண வடிவான மூலாதாரத்தில் உள்ள அக்கினியில் காய்ந்து கொண்டு இருக்கின்றான்; ஆகையால், அவ்விடத்தில் அவனது கழல் அணிந்த திருவடியைக் காணப்பெற்றால், பின்னர் நிழலில் நிற்பினும், வெயிலில் நிற்பினும் ஒன்றே; அஃதாவது, அவற்றால் வரும் கேடு ஒன்றுமில்லையாம்.
=======================================
பாடல் எண் : 15
நான்கண்ட வன்னியும் நாலு கலையேழுந்
தான்கண்ட வாயுச் சரீர முழுதொடும்
ஊன்கண்டு கொண்ட உணர்வு மருந்தாக
மான்கன்று நின்று வளர்கின்ற வாறே.

பொழிப்புரை :  ஈசன் இருத்தலை மேல் நான் தெரிந்து சொல்லிய மூலாக்கினி, `அகார கலை, உகார கலை, மகார கலை, விந்துகலை` என்னும் நான்கு கலைகள், மூலாதாரம் முதல் பிரமரந்திரம் ஈறாக உள்ள ஏழு ஆதாரங்களைப் பொருந்திய பிராணவாயு, உடம்பு முழுதும் உள்ள ஊன் ஆகிய இவைகளையே தன் பசிப்பிணிக்கு மருந்தாக உண்டு, ஒரு மான் கன்று வளர்கின்றவாறு வியப்புடைத்து!
=======================================
பாடல் எண் : 16
ஆகுஞ் சனவேத சத்தியை அன்புற
நீகொள்ளின் நெல்லின் வளர்கின்ற நேர்மையைப்
பாகு படுத்திப்பல் கோடி களத்தினால்
ஊழ்கொண்ட மந்திரந் தன்னால் ஒடுங்கே.

பொழிப்புரை :  மேன்மேல் வளரத்தக்கதாகிய காயசித்தி ஆற்றலைப்பெற நீ விரும்புவை யாயின், அச்சத்தி ஒவ்வொரு நெல்லின் அளவாக மெல்ல மெல்ல வளர்கின்ற நுட்பத்தை உடலில் அளவற்ற இடங்களில் பாகுபடுத்திக் கண்டு. அவ்விடங்களில் எல்லாம், மேற்பல வகையாலும் முறைப்படச் சொல்லிய மந்திரங்களின் வழி அதனுள் ஒடுங்குவாயாக.