Author Topic: அகிலன் - விமர்சனம்  (Read 2453 times)

Offline kanmani

அகிலன் - விமர்சனம்
« on: January 18, 2013, 04:31:42 AM »
நடிகர் : டாக்டர் சரவணன்
நடிகை : வித்யா, லீமா
இயக்குனர் : ஹென்றி ஜோசப்
இசை : கணேஷ் ராகவேந்திரா
ஓளிப்பதிவு : அருள்செல்வன்

மதுரை நகரில், அடிக்கடி பெண்கள் கடத்தப்படுகிறார்கள். கடத்தல்காரர்களை பிடிக்க முடியாமல் போலீஸ் திணறுகிறது. இதனால் பொதுமக்கள் மத்தியில் போலீசுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது.

அதைப்போக்குவதற்காக, உதவி கமிஷனர் ராஜ்கபூர் ஒரு நாடகம் போடுகிறார். அந்த நாடகத்தில், கடத்தல்காரராக சப்–இன்ஸ்பெக்டர் அகிலனை நடிக்க வைக்கிறார். கடத்தல்காரர் வேடம் போட்ட அகிலன், உதவி கமிஷனரின் மகள், கதாநாயகி வித்யா, ஒரு புதுமண ஜோடி உள்பட சிலரை கடத்தி வந்து பணயக்கைதியாக, திருமண மண்டபத்துக்குள் சிறை வைப்பதுபோல் நடிக்கிறார்.

அவருக்கும், உதவி கமிஷனருக்கும் ஆடு–புலி ஆட்டம் தொடங்குகிறது. நாடகத்தை ஆரம்பித்து வைத்த உதவி கமிஷனர், அதை முடிக்க முடியாததால், பதற்றமாகிறார். இந்த சூழ்நிலையில், உண்மையிலேயே ஒரு இளம் பெண்ணை கடத்தல்காரர்கள் கடத்தி செல்கிறார்கள். அவளை போலீசார் மீட்டார்களா, இல்லையா? என்பது மீதி கதை.

டாக்டர் பி.சரவணன், போலீஸ் வேடத்துக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். அவர் மெதுவாக வசனம் பேசுவதுதான், இடிக்கிறது. உதவி கமிஷனர் என்று தெரிந்த பிறகும், அவரிடம் டிரைவிங் லைசென்சை கேட்கும் இடத்திலும், ‘‘என் மீது உங்களுக்கு ஆத்திரம் இருக்கும். ஆனால் அது துப்பாக்கியால் சுடுகிற அளவுக்கு போகும் என்று எதிர்பார்க்கவில்லை’’ என்று ராஜ்கபூரிடம் சொல்கிற இடத்திலும், சரவணன் நடிப்புக்கு பாஸ் மார்க். கதாநாயகன் மீது காதல் பார்வை வீசுவதற்கும், டூயட் பாடுவதற்கும் மட்டுமே பயன்பட்டு இருக்கிறார், வித்யா.

உதவி கமிஷனராக ராஜ்கபூர். மீசையில்லாத தோற்றத்தில், அவர் முகத்தில் முரட்டுத்தனம் கூடுதலாகவே தெரிகிறது. காமெடிக்கு கஞ்சா கருப்பு, சிங்கம்புலி, மனோபாலா, போண்டா மணி, பாலாஜி, மயில்சாமி என நிறைய பேர் இருக்கிறார்கள்.

கணேஷ் ராகவேந்திரா இசையில், பாடல்கள் மோசமில்லை. பெண்கள் கடத்தல் கதையை அதன் போக்கில் சொல்லாமல், வித்தியாசமான ஒரு கற்பனையுடன் சொல்லியிருக்கிறார், டைரக்டர் ஹென்றி ஜோசப். கதை, திருமண மண்டபத்துக்குள் அடைபட்டபின், படத்தின் விறுவிறுப்பும் சேர்ந்து அடைபட்டு விடுகிறது.

கடைசியாக ஒரு பெண் கடத்தப்படுவதும், அவளை காப்பாற்றுவதற்கு ஜெயிலில் இருந்து சரவணன் மேற்கொள்ளும் முயற்சியும், நிமிர்ந்து உட்கார வைக்கிறது.