Author Topic: 18 சித்தர்  (Read 9147 times)

Offline Anu

Re: 18 சித்தர்
« Reply #15 on: March 29, 2012, 12:40:21 PM »
புலிப்பாணி

நான் எம்பெருமான் முருகனுக்கு சிலை செய்ய ஆசைப்படுகிறேன். உலோகங்களால் அவருக்கு பல இடங்களில் சிலைகள் உள்ளன. ஆனால், நான் ஆசைப்படுவது வேறு. இந்த முருகனைத் தரிசித்த மாத்திரத்திலேயே உடலிலுள்ள நோய்கள் அனைத்தும் விலகியோட வேண்டும். மன நோயும் விலக வேண்டும். எனவே, நான் மூலிகைகளைக் கொண்டு அவருக்கு சிலை செய்ய வேண்டும். நீ நோய் தீர்க்கும் மூலிகைகளைப் பறித்து வா, என்றார் குருவான போகர் சித்தர்.குருவின் கட்டளையை ஏற்ற புலிப்பாணி, ஏ புலியே கிளம்பு, என்றார்.புலி மீது சவாரி செய்பவர் யார் எனக் கேட்டால், நீங்கள் ஐயப்பன் என்று பதில் சொல்வீர்கள். அவர் தெய்வம். தர்ம சாஸ்தாவான அவர், புலியின்மீது பயணம் செய்வதில் ஆச்சரியமாக இல்லை. ஆனால், ஒரு சித்தர் புலியின் மீது பயணம் செய்கிறார் என்றால், அவர் எப்பேர்ப்பட்ட சக்தி மிக்கவராக இருக்க வேண்டும். விலங்குகளை வசியப்படுத்தி, தன் கட்டுக்குள் வைத்திருப்பவர் அவர். அந்தளவுக்கு அவருக்கு தவசக்தி அமைந்திருந்தது.புலிப்பாணி சித்தர் சீனாவில் பிறந்ததாக ஒரு தகவல் இருக்கிறது. பழநியில் வசித்த போகர் சித்தர் சீனாவுக்கு வான்வழியே யோக சாதனையைப் பயன்படுத்தி சென்றார். அவரது அருமை பெருமைகளைத் தெரிந்து கொண்ட புலிப்பாணி அவரது சீடரானார். அவரிடம் சகல யோக வித்தைகளையும், சித்து வேலைகளையும் கற்றுக் கொண்டார். பின்னர் இருவரும் பாரதத்துக்கு வந்து சேர்ந்தனர்.போகர் பழநியில் தங்கிய போது புலிப்பாணியும் உடன் தங்கினார். ஒருமுறை போகர் சித்தர் தாகத்துடன் ஒரு காட்டில் தவித்த போது, புலிப்பாணி தன் புலியின்மீது ஏறிச் சென்றார். தண்ணீரை பாணி என்றும் வேற்றுமொழியில் சொல்வதுண்டு. புலியில் ஏறிச்சென்று பாணி கொண்டு வந்ததால் புலிப்பாணி என்று இருமொ ழிகளையும் இணைத்து அவருக்கு பெயர் வந்ததாகவும், அவர் சீனாவில் பிறந்தவர் என்பதால் அவரது நிஜப்பெயர் தெரியவில்லை என்றும் சொல்லப்படுகிறது.புலிப்பாணி புலியில் ஏறி தண்ணீர் கொண்டு வந்ததை நிரூபிக்கும் பாடல் ஒன்றை போகரே எழுதியிருக்கிறார். அந்தப் பாடல் இதுதான்!

ஆழ்ந்தவே காலங்கி கடாட்சத்தாலே அப்பனே வேங்கை தனில்  ஏறிக்கொண்டு தாழ்ந்திடவே ஜலம் திரவ்விப்புனிதவானும் சாங்கமுடன் தாரணியில் சுற்றி வந்தோன் என்ற பாடல் புலிப்பாணியையே குறிப்பதாகச் சொல்கிறார்கள். முருகன் சிலை செய்ய மூலிகைகளைக் கொண்டு வரச்சொல்வதின் நோக்கத்தை புலிப்பாணி புரிந்து கொண்டார். எவ்வளவு அருமையான யோசனை! என் குருநாதருக்கு தான் இந்த மக்கள் மீது எவ்வளவு கரிசனம் இருக்கிறது! ஆனால், குருநாதர் குறிப்பிடும் ஒன்பது வகை மூலிகைகளும் விஷத்தன்மை கொண்டவை ஆயிற்றே! விஷ மூலிகைகள் எப்படி மனிதனைக் குணப்படுத்தும்! மாறாக, அவை ஆளையல்லவா கொன்று விடும், என்ற சந்தேகமும் இருந்தது.தன் சந்தேகத்தை மிகுந்த பணிவுடன் கேட்டார் புலிப்பாணி. மக்கள் மீது புலிப்பாணிக்கு இருக்கும் அபிமானத்தை மனதுக்குள் பாராட்டிய போக சித்தர், புலிப்பாணி! கவலை கொள்ளாதே. நீ கொண்டு வரும் ஒன்பது மூலிகைகளையும் குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் கலந்தால் பவ பாஷாணம் என்னும் மருந்து கிடைக்கும். இந்த மருந்தை நேரடியாகச் சாப்பிட்டால் மரணம் சம்பவிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நவபாஷாணத்தை சிலையாக வடித்து, அதற்கு அபிஷேகம் செய்யும் பொருட்களைச் சாப்பிட்டால் அது விஷத்தன்மைக்கு பதிலாக மருத்துவத்தன்மை பெறும், மேலும், நவபாஷாணத்தின் வாசம் பட்டாலே போதும், மனிதன் புத்துணர்வு பெறுவான். இதோ! இந்த பழநி மலையின் உச்சியில் நவபாஷாண முருகன் சிலையை, கலியுகம் முடியும் வரையில்  மக்கள் வணங்கும் வகையில் பிரதிஷ்டை செய்வேன். அவன் அருளால் உலகம் செழிக்கும். எக்காலமும் வற்றாத மக்கள் வெள்ளம் இந்தக் கோயிலுக்கு வரும். பழநி முருகனின் ஆணையோடு தான் இந்தச் சிலையைச் செய்கிறேன். எனவே மக்களுக்கு எந்த ஆபத்தும் வராது, என்றார். புலிப்பாணி சித்தர் மகிழ்ச்சியடைந்தார். குருநாதர் சொன்னது போலவே புலியில் ஏறிச்சென்று ஒன்பது வகை மூலிகைகளையும் கொண்டு வந்து கொடுத்தார். பழநிக்குச் செல்பவர்கள், போகரை மட்டுமின்றி புலிப்பாணி சித்தரையும் நிச்சயமாக மனதில் நினைக்க வேண்டும். போகர், இவ்வூர் முருகன் சிலையைச் செய்யக் காரணமாக இருந்தவர் இவரே! போகர் நினைத்தபடி நவபாஷாண சிலை உருவாயிற்று.

ஒருநாள் புலிப்பாணியை அழைத்த போகர், புலிப்பாணி! நான் சீனதேசம் செல்கிறேன். இனி இங்கு எப்போது வருவேன் எனத்தெரியாது. நீயே இந்த முருகன் சிலைக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும், என சொன்னார். புலிப்பாணியும் அவரது கட்டளையை ஏற்று, சிலையின் காவலர் ஆனார்.ஒருமுறை. சீனதேசத்தில் இருந்து வந்த சிலர், உன் குருநாதர் போகர், பெண்ணின்பத்தில் சிக்கி, தவ வலிமையை இழந்து விட்டார், என்றனர். அதிர்ச்சிய டைந்த புலிப்பாணி தவ சிரேஷ்டராகிய தன் குருவைக் காப் பாற்ற சீனா சென்றார். அவரை அங்கிருந்து பழநிக்கு அழைத்து வந்து, மீண்டும் தவ வலிமை பெறுவதற்குரிய வழிகளைச் செய்தார். போகருக்கே ஞானம் வழங்கிய பெருமை புலிப்பாணிக்கு உண்டு. சில நாட்களில் போகர் இறந்து விடவே, அவரது சமாதிக்கு பூஜை செய்யும் பணியை அவர் கவனித்தார். சமாதிக்கு பூஜை செய்பவர், முருகனின் பாதுகாவலராக இருக்கக் கூடாது என சிலர் எதிர்ப்பு தெரிவிக்கவே, எங்கள் குருவுக்கு குரு முருகப்பெருமான், எனக்கு குரு போகர் சித்தர். நான் அவரது சமாதியையே பூஜிப்பதையே பெருமையாகக் கருதுகிறேன், என அவர்களிடம் தன் நன்றி உணர்ச்சியை வெளிப்படுத்தினார். தன் வாழ்நாளில் பலரை மூலிகை வைத்தியம் மூலம் காப்பாற்றிய பெருமை உண்டு. நோயுற்றவர்கள் புலிப்பாணி சித்தரை மனதார நினைத்தால், அவரே நேரில் வந்து மருந்து தருவதாக ஐதீகம். புலிப்பாணி சித்தரும் தன் குரு போகரைப் போலவே பழநியிலேயே சமாதியாகி விட்டதாக தகவல் உள்ளது.


Offline Anu

Re: 18 சித்தர்
« Reply #16 on: March 29, 2012, 12:41:31 PM »
குதம்பை சித்தர்

அம்மா! உடலைக் கட்டுப்படுத்தி வைக்க வெண்காயம் (பால் காயம்) இருக்கிறது. மிளகு இருக்கிறது, சுக்கு இருக்கிறது. இவற்றைக் கலந்து மருந்தாக்கி உட்கொண்டால், ஒரு பெண்ணின் காயம் (உடல்) நமக்கு எதற்கு தேவைப்படப் போகிறது? பெண் இன்பத்தால் சித்திக்காத மன இன்பம் இந்த மருந்தால் சித்திக்காதோ, என்று கேட்டார் குதம்பைச் சித்தர். குதம்பை என்றால் என்ன? காதிலே அணியும் ஒரு வகை தொங்கட்டான் போன்ற அணிகலன். இவர் தஞ்சாவூர் பக்கம் பிறந்திருக்க வேண்டும். பிறந்த ஊர் சரியாகத் தெரியவில்லை. ஆனால், இவர் யாதவர் வகுப்பைச் சேர்ந்தவர் என்றும்,  பசுக்களை மேய்க்கும் தொழில் செய்து வந்த தம்பதியருக்கு பிறந்தவர் என்பதும் சில நூல்கள் மூலம் தெரிய வருகிறது. இவரது அன்னைக்கு தன் குழந்தை மீது மிகுந்த பாசம். ஆண்குழந்தையாக இருந்தாலும், பெண் குழந்தை போல் அதிக அழகு. அந்த அழகை மிகைப்படுத்த குழந்தையின் காதிலே ஒரு தொங்கட்டான் அணிவித்தாள் அந்த புண்ணியவதி. அது ஆடும் அழகைப் பார்த்து குழந்தையிடம் மனதைப் பறி கொடுப்பாள். அந்த அணிகலனின் பெயரால் குதம்பை என்றே மகனை அழைக்க ஆரம்பித்து விட்டாள். அவரது பெயரே அவருக்கு நிலைத்து விட்டது. கணநேரம் கூட குழந்தையைப் பிரியமாட்டாள். அப்படி ஒரு பேரன்பு! மகனுக்கு 16 வயதானது. அதுவரை அம்மா பிள்ளையாகத்தான் இருந்தார் குதம்பையார். ஒருநாள், ஒரு சித்தரை அவர் சந்தித்தார். குழந்தாய் குதம்பை! நீ சாதிக்கப் பிறந்தவன். உனக்கு உன் தாய் திருமணம் முடிக்க இருக்கிறாள். ஆனால், அது நடக்காது. காரணம், நீ கடந்த பிறவியில் ஒரு காட்டில் இறை தரிசனம் வேண்டி தவமிருந்து வந்தாய். ஆனால், இறைவனைக் காணமுடியாத படி விதி தடுத்து விட்டது. உன் ஆயுளுக்கு குறிக்கப்பட்ட நேரத்தில், நீ எந்த காட்டில் தங்கியிருந்தாயோ, அங்கே ஒருநாள் பெரும் புயலடித்தது. ஒரு மரத்தின் அடியில் தவநிலையில் இருந்தபடியே நீ உயிர் விட்டாய். விட்ட தவத்தை தொடரவே, நீ பிறந்திருக்கிறாய். தவம் என்றால் என்ன தெரியுமா? என்றவர், தவத்தின் மேன்மை, யோக சாதனைகள் பற்றி குதம்பையாருக்கு எடுத்துச் சொன்னார்.

குதம்பையார் மிகுந்த பணிவுடன் அவற்றையெல்லாம் கேட்டு, தன்னை ஆசிர்வதித்து, இப்பிறவியிலும் தவம் தொடர ஆசி வேண்டினார். அந்த சித்தர் அவருக்கு ஆசியளித்து மறைந்தார். அவரையே தன் குருவாக ஏற்ற குதம்பையார், அவர் சென்ற திசையை நோக்கி வணங்கி விட்டு தாயாரிடம் சென்றார். அம்மா அவருக்கு பல இடங்களில் பெண் பார்த்து வைத்திருந்தார். மகனே! அவள் அழகில் ரம்பை, இவள் ஊர்வசி, இவள் அடக்கத்தில் அருந்ததி...இப்படி பல புராணப் பாத்திரங்களை தன் வருங்கால மருமகள்களுக்கு உதாரணமாக காட்டினார். அப்போது தான் இந்தக் கதையின் துவக்கத்தில் வந்த வரிகளை அம்மாவிடம் சொன்னார் குதம்பையார். அம்மாவுக்கு அதிர்ச்சி. என்னடா! சித்தன் போல் பேசுகிறாயே! இல்லறமே துறவறத்தை விட மேலானது. உன்னைப் பெற்றதால் நான் மகிழ்ந்தேன். நீ பெறும் குழந்தைகளாலும் நான் மகிழ வேண்டும். ஒரு தாயின் நியாயமான ஆசை இது. அதை நிறைவேற்றி வை, அம்மாவின் கண்ணீர் குதம்பையாரை வருந்தச் செய்யவில்லை. அவரது எண்ணமெல்லாம், முந்தைய பிறவியின் தொடர்ச்சியாக தவம் செய்வதிலேயே இருந்தது. அன்றிரவு அம்மாவும், அப்பாவும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர். குதம்பையார் கதவைத் திறந்து வெளியே வந்தார். சந்திர ஒளியில் மிக வேகமாக நடந்தார். மனதின் வேகத்தை விட அதிக வேகம் அது! அந்த வேகத்துடன் சென்றவர் காட்டில் போய் தான் நின்றார். பூர்வஜென்மத்தில் அவர் மீது சாய்ந்த மரம் இருந்த பகுதி அது. ஆனால், குதம்பையாருக்கு அது தெரியவில்லை. அங்கு நின்ற அத்தி மரத்தில் ஒரு பெரிய பொந்து இருந்தது. அதற்குள் குதம்பையார் அமர்ந்தார். ஒருவேளை, தாய் தந்தை காட்டுக் குள் தேடி வந்து நம் தவத்தைக் கலைத்து அழைத்துச் சென்று விட்டால் என்னாவது என்ற முன்னெச்சரிக்கையால் இப்படி செய்தார். தவம்... தவம்... தவம்... எத்தனையோ ஆண்டுகள் உணவில்லை, கண்கள் மூடவில்லை. இறைவனின் சிந்தனையுடன் இருந்தார். இறைவா! உன்னை நேரில் கண்டாக வேண்டும், என்னைக் காண வா! அல்லது உன் இருப்பிடத்திற்கு கூட்டிச்செல். ஏ பரந்தாமா! எங்கிருக்கிறாய்! கோபாலா வா வா வா, இது மட்டுமே மனக்கூட்டுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது. அப்போது பரந்தாமன் உருவமற்ற நிலையில் அசரீரியாக ஒலித்தான்.

குதம்பை! நீ இப்போது வைகுண்டம் வர வேண்டாம். உன்னால் இந்த உலகத்துக்கு இன்னும் நன்மைகள் நடக்க வேண்டியிருக்கிறது. நீ இப்போது இருப்பது விந்திய மலைப்பகுதியில். இங்கே பல யானைகள் இருக்கின்றன. இந்த யானைகளுக்கு மந்திரங்களை ஈர்க்கும் சக்தியுண்டு. உனக்கு மழை பெய்வதற்குரிய வருண மந்திரத்தை உபதேசிக்கிறேன்.  இந்த மந்திரத்தை இங்குள்ள யானைகளின் காதில் விழும்படியாக நீ உச்சாடனம் செய். அவை பிளிறும்போது அந்த ஓசை மந்திரமாக வெளிப்படும். அப்போது பூமியில் அமுதம் போல் மழை கொட்டும். அந்த மழையால் உலகம் செழிப்படையும். என்றான். குதம்பையாருக்கு வருணமந்திரமும் உபதேசிக்கப்பட்டது. குதம்பையாரும் காட்டில் இருந்தபடியே அதை உச்சாடனம் செய்தார். மழை பொழிந்து காடு செழித்தது. யார் வாசியோகம் என்ற  கலையைப் பயின்று, ஆழ்ந்த நிலையில் இறைவனை வணங்குகிறாரோ, அவர்களெல்லாம் குதம்பைச் சித்தரை மானசீக குருவாக ஏற்று மழை வேண்டி வணங்கினால், இன்றும் மழை பெய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது. யோக வித்வான்கள் வாசியோகம் (பிராணாயாமம் போன்றது) பற்றி இளைய தலைமுறைக்கு கற்றுக் கொடுத்து அதன் மூலம் எதிர் காலத்தில் தண்ணீர் கஷ்டமின்றி வாழ ஏற்பாடு செய்ய வேண்டும்.இந்த அரிய வரத்தை நமக்கு அருளும் குதம்பைச் சித்தர் மயிலாடுதுறையில் சித்தியடைந்தார். அவரது திருவுருவத்தை மயூரநாதர் கோயிலில் தரிசிக்கலாம். மழை வேண்டி இவருக்கு விசேஷ பூஜை செய்தால், பெய்யெனப் பெய்யும் மழை!


Offline Anu

Re: 18 சித்தர்
« Reply #17 on: March 29, 2012, 12:42:43 PM »
பிண்ணாக்கீசர்

கோபாலா, எனக்கு பசிக்கிறதே! யாராவது உணவு தாருங்களேன், என்று அரற்றினார் பிண்ணாக்கீசர்.இவர் ஒரு அத்திமரப் பொந்தில் வசித்து வந்தார். கார்காத்தார் என்ற குலத்தில் இவர் அவதரித்ததாகச் சொல்கிறார்கள். இவருக்கு தந்தை கிடையாது. கன்னித்தாய் ஒருத்தி இறையருளால் இவரைப் பெற்றெடுத்தாள். அவரைப் பற்றிய தகவல்கள் இல்லை. குழந்தையைப் பெற்றெடுத்த அந்தத்தாய் எந்நேரமும் இறை சிந்தனையிலேயே இருப்பாள். கோயில்களுக்குச் சென்று அங்கேயே தங்குவார். பிரசாதம் தான் உணவு. கோயிலுக்கு வருவோர் போவோரும் உணவளிப்பர். இதை மட்டுமே சாப்பிட்டு வளர்ந்ததால், பிண்ணாக்கீசருக்கு எவ்வித கெட்ட வழக்கங்களுக்கும் ஆளாக வழியில்லாமல் போனது.சமையல் என்பது முக்கியமான ஒரு விஷயம். பெண்ணோ ஆணோ வீட்டில் சமைக்கும் போது, நல்ல எண்ணங்களுடன் சமைக்க வேண்டும். நாம் என்ன எண்ணியபடி சமைக்கிறோமோ, அந்த எண்ணங்கள் உணவில் ஊறிப்போகும். நல்லதை எண்ணியிருந்தால், தெய்வ ஸ்லோகங்களைச் சொல்லியபடியோ, கேட்ட படியோ சமையல் செய்திருந்தால் அதை சாப்பிடுவோரின் உடல்நலன் மட்டுமின்றி உள்ளத்தின் நலனும் வளரும். டாக்டர் சொன்னபடி சரியான உணவு வகைகளை எடுத்துக் கொள்வோருக்கு கொழுப்பு, சர்க்கரை, உப்பு முதலிய சத்துக்கள் ரத்தத்தில் முன்பை விட அதிகரிக்கும். காரணம் என்ன தெரியுமா? எண்ணங்களின் வண்ணம் தான்! கெட்ட எண்ணங்கள், பிறரை வஞ்சிக்கும் குணம், பணத்தைப் பற்றிய நினைப்பு, அதைக் காப்பாற்றுதல் அல்லது பெருக்குதல் போன்ற சிந்தனைகளுடன் சமையல் செய்தால் பேராசையும், அந்த ஆசையை எட்டுவதற்கு என்னென்ன பாதகங்கள் செய்யலாம் என்ற எண்ணமே வளரும்.இத்தகைய எண்ணங்களுக்கு கோயில் பிரசாதத்தில் இடமில்லை. சாப்பிடும் முன் அந்த உணவை கடவுளுக்கு சமர்ப்பித்து விட்டு சாப்பிடுபவர்கள் நல்ல குணம், செழிப்புடன் திகழ்வார்கள். இதே போல், பிண்ணாக்கீசர் தன் தாய் கொடுத்த கோயில் பிரசாதத்தை மட்டுமே சாப்பிட்டு உயிர் வளர்த்தார். அவர் ருசிக்கு சாப்பிடுவதில்லை. பசிக்கு சாப்பிடுவார்.

இப்படி நற்சிந்தனைகளுடன் வளர்ந்த அவர், தன் தாயின் காலத்திற்குப் பிறகு கண்ண பரமாத்மாவின் நிரந்தர பக்தரானார். கண்ணா, கண்ணா, கண்ணா இதைத் தவிர அவர் வாயில் வேறு எதுவும் வராது. பசி வந்தால் கோபாலா, எனக்கு உணவு கொடேன், எனக் கதறுவார்.அந்நேரத்தில் யாராவது ஒருவர் பால், பழம் கொண்டு வந்து கொடுப்பார். ஒரு பழம், கொஞ்சம் பால்...அவ்வளவு தான் சாப்பிடுவார். பசி தீர்ந்து விடும். மீண்டும் மரப்பொந்தில் போய் அமர்ந்து, இறைவனைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்து விடுவார். இப்படியே காலம் கடந்த வேளையில், ஒருநாள் பாம்பாட்டி சித்தர் அவர் முன்பு தோன்றினார். சீடனே, பொந்தில் இருந்து வெளியே வா, என்றார். கண்ணால் பார்த்து நயன தீட்சை அளித்தார். கையால் தொட்டு ஸ்பரிச தீட்சை கொடுத்தார். கால்களால் அவருக்கு திருவடி தீட்சை கொடுத்தார். உலக நன்மையே உன் குறிக்கோளாக இருக்கட்டும் என்று உபதேசம் செய்து விட்டு மறைந்து விட்டார். குருவின் போதனையை நிறைவேற்ற கண்ணனை நினைத்து கடும் தவத்தில் ஆழ்ந்தார் பிண்ணாக்கீசர். இதனால் அவருக்கு அஷ்டமாசித்திகளும் கைகூடின. ஒருமுறை சிவ தியானத்திலும் அவர் ஆழ்ந்தார். தன் தவத்தின் முடிவில் நோயற்ற வாழ்வே பெரும் செல்வம் என்ற தத்துவத்தை அறிந்தார். நோயற்ற மக்களைக் குணப்படுத்த முடிவு செய்தார். அவரைப் பார்த்தாலே சிலருக்கு நோய்கள் பறந்தன. சிலரை அவர் தொட்டவுடன் நோய் குணமானது. சிலருக்கு மண்ணையே மருந்தாக அவர் கொடுத்தார். அவர் கொடுத்த மண்ணை வாயில் போட்டதும் சர்க்கரை போல நோயாளிகளுக்கு இனித்தது. மண்ணைத் தின்ற மாத்திரத்தில் நோய்களும் விலகின. இதனால், அவரைத் தேடி ஆயிரக் கணக்கானோர் வர ஆரம்பித்து விட்டனர். கேரளாவில் உள்ள நாங்கணாச் சேரி என்ற கிராமத்திற்கு அவர் சென்றார்.

தகரத்தைப் பொன்னாக்கும் ரகசியம், உடலை எத்தனை வயதானாலும் இளமையுடன் வைத்திருக்கும் காயகல்ப ரகசியம் ஆகியவற்றைப் படித்தார். அந்தக்கலையைப் படிப்பதற்காக பல இளைஞர்கள் அவரைத் தேடி வந்தனர். தங்களைச் சீடர்களாக ஏற்று, அந்த ரகசியங்களைக் கற்றுத் தருமாறு கேட்டனர். அந்த இளைஞர்கள் இந்த வித்தைகளைக் கற்று சுயநலத்துடனும், உலகை மிரட்டும் நோக்குடனும் செயல்படுவார்கள் என்பதை ஞானதிருஷ்டியால் உணர்ந்த சித்தர், அதற்கு மறுத்து விட்டார். மேலும், தனக்கு சீடர்களே வேண்டாம் எனச் சொல்லி விட்டார். பின்னர், ஒரு மரப்பொந்தில் தங்கிக் கொண்டார் சித்தர். அங்கிருந்தபடியே மக்களுக்கு வைத்தியம் செய்ய ஆரம்பித்தார். இந்த உடலில் கட்டப் பட்டிருக்கும் கோவணம் கூட இறைவனால் தரப்பட்ட இரவல் தான். உன் உயிர் பிரிந்து உன்னை எரிக்கவோ, புதைக்கவோ செய்தால் இந்த  கோவணம் உன்னோடு வருமா? கோவணமும் இரவல் கொண்ட தூலம் இது என்று உடலைப் பற்றி அவர் பாட்டுப் பாடி மக்களை உலகப்பற்றில் இருந்து விடுவிக்க முயற்சியெடுத்தார். அவற்றைப் பாடல்களாக வடித்தார். ஒருநாள் அவர் சிவபூஜையில் ஆழ்ந்தார். அப்படியே சமாதி நிலைக்குச் சென்றவர், அந்த மரப்பொந்தை விட்டு வெளியே வரவில்லை. ஒரு காலத்தில் அந்தப் பொந்தும் அடைபட்டுப் போனது. சித்தர் சமாதியாகி விட்டார் என்பதை அறிந்த மக்கள், அந்த மரத்தையே அவரது சமாதியாகக் கருதி வழிபடத் துவங்கினர். 18 சித்தர்கள் தொடரை படித்த நாம், அவர்களை தினமும் மனதார வணங்கி, தங்கத்தின் மீதான ஆசையை ஒழிக்க அருள்புரியுமாறு வேண்டிக் கொள்ள வேண்டும்.