Author Topic: உபநிஷதம்  (Read 4896 times)

Offline Anu

உபநிஷதம்
« on: March 29, 2012, 12:52:22 PM »
கட உபநிஷதம்
(மரணத்திற்கு பின்னால்) ஒரு கண்ணோட்டம்!


வேதங்கள்: உலகின் பெரும் பகுதி அறியாமை இருளில் மூழ்கி, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது பாரதத் திருநாடு ஆன்மஒளியில் விழித்தெழுந்தது. அதன் தவப் புதல்வர்களாகிய ரிஷிகள், இருளைக் கடந்து, பொன்னிறத்தில் ஒளிரும் மாபெரும் இறைவனை நான் அறிந்துகொண்டேன். அவரை அறிவதால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும். வேறு எந்த வழியும் இல்லை. ( வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்யவர்ணம் தமஸ: பரஸ்தாத் தமேவ விதித்வா திம்ருத்யுமேதி நான்ய: பந்தா வித்யதேயனாய- சுவேதாஸ்வதர உபநிஷதம், 3. 8) அழியாத அமரத்துவத்தின் குழந்தைகளே, கேளுங்கள் (ச்ருண்வந்து விச்வே அம்ருதஸ்ய புத்ரா சுவேதாஸ்வதர உபநிஷதம், 2.5) என்று பூமியில் வாழ்பவர்களை மட்டுமல்ல, பிற உலகங்களில் வாழ்வோரையும் அறை கூவினர். குறித்து வைக்கப்பட்ட சரித்திரமோ, பாரம்பரியத்தின் மங்கிய வெளிச்சமோகூட ஊடுருவ முடியாத, காலத்தின் அந்த நீண்ட நெடுந்தொலைவில் இந்த உலகை புனிதமாக்கியபடி வாழ்ந்த அந்த ரிஷிகள் அனுபூதியில் கண்ட உண்மைகளின் தொகுப்பே வேதங்கள்.

உலகிலேயே மிகப்பழைய நூல் இந்த சிந்தனைக் கருவூலம்தான். இது எப்போது தோன்றியது என்பது ஒருவருக்கும் தெரியாது. இக்கால ஆராய்ச்சியாளர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். இது எட்டாயிரம் அல்லது ஒன்பதாயிரம் வருடங்களுக்கு முன்பு தோன்றியதாக இருக்கலாம்.........ஆனால் அன்று போலவே இன்றும் அவை புதுமை மாறாமல் இருக்கின்றன; ஏன் முன்னைவிட புதுப் பொலிவுடன் திகழ்வதாகவே கூறலாம்.

வேதங்கள் யாராலும் எழுதப்பட்டவை அல்ல. என்றென்றும் நின்று நிலவுகின்ற உண்மைகளின் தொகுப்பே வேதங்கள். புவியீர்ப்பு விதி, அது கண்டறியப்படும் முன்னரே இருந்தது. மனித இனம் முழுவதும் அதை மறந்து விட்டாலும் இருக்கும். அவ்வாறுதான் ஆன்மீக உலகின் விதிகளும்........அவை கண்டு பிடிக்கப்படுவதற்கு முன்னரும் இருந்தன, நாம் அவற்றை மறந்தாலும் இருக்கும்  என்று எழுதுகிறார் சுவாமி விவேகானந்தர், ரிஷிகள் அந்த விதிகளை வெளிப்படுத்தினார்கள், அவ்வளவுதான்

அவ்வாறு ரிஷிகள் வெளிப்படுத்திய அந்த உண்மைகள் பின்னாளில் வியாச முனிவரால் நான்காகத் தொகுக்கப்பட்டன. அவை ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள். ஒவ்வொரு வேதமும் மூன்று முக்கியப் பிரிவாக பிரிக்கப்படுகின்றன. அவை சம்ஹிதை (பல்வேறு தேவர்களிடம் பிரார்த்தனைகள்) பிராம்மணம் (யாக விவரங்கள்) ஆரண்யகம் (உபநிஷதங்கள்; அறுதி உண்மையைப் பற்றிய ஆராய்ச்சி.)

உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம், ஸ்ரீமத் பகவத்கீதை மூன்றும் ப்ரஸ்தான த்ரயம் என்று வழங்கப்படுகின்றன. அறுதிப் பிரமாணமாக அமைந்த மூன்று நூல்கள் என்பது இதன் பொருள்.

வேதகாலச் சிந்தனையின் மணிமகுடமாகத் திகழ்பவை உபநிஷதங்கள். அறுதி உண்மையைப் பற்றிய ஆராய்ச்சியில் மனித மனத்தால் தொடக்கூடிய எல்லையை உபநிஷதங்கள் தொட்டுவிட்டன என்றே உலகின் சிந்தனையாளர்கள் கருதுகின்றனர்.

உபநிஷதங்கள் பல. அவற்றுள் 108 பொதுவாக கணக்கில் கொள்ளப்படுகின்றன. அவற்றில் பதினான்கு உபநிஷதங்கள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. அவை ஈச, கேன, கட, ப்ரச்ன, முண்டக, மாண்டூக்ய, ஐதரேய, தைத்திரீய, சாந்தோக்ய, பிருஹதாரண்யக, சுவேதாஸ்வதர, கவுசீதகி, மஹாநாராயண, மைத்ராயணி உபநிஷதங்கள் ஆகும். இவற்றுள் முதல் பத்து உபநிஷதங்களுக்கு ஸ்ரீசங்கரர் விளக்கவுரை எழுதியுள்ளார், 14 உபநிஷதங்களும் கீழ்க்கண்ட பட்டியலின்படி நான்கு வேதங்களில் அமைந்துள்ளன.

வேதம்-உபநிஷதம்

ரிக்- ஐதரேய, கவுசீதகி

யஜுர்- ஈச, கட, தைத்திரீய, பிருஹதாரண்யக, சுவேதாஸ்வதர, மைத்ராயணீ, மஹாநாராயண

சாம-கேன, சாந்தோக்கிய

அதர்வண- ப்ரச்ன, முண்டக, மாண்டூக்ய

யஜுர் வேதத்தில் சுக்ல யஜுர் தேவம், கிருஷ்ண யஜுர் வேதம் என்று இரண்டு பிரிவுகள் உள்ளன. கிருஷ்ண யஜுர் வேதத்தில் தைத்திரீய ஆரண்யகம் என்ற பகுதியில் கட உபநிஷதம் உள்ளது. கடர் என்ற முனிவர் இதை அருளியதால் கட உபநிஷதம் என்று வழங்கப்படுகிறது.

கட உபநிஷதத்தில் இரண்டு பகுதிகள் உள்ளன. முதற்பகுதியில் மூன்று அத்தியாயங்கள், இரண்டாம் பகுதியில் மூன்று அத்தியாயங்கள். இந்த ஆறு அத்தியாயங்களிலுமாக 119 மந்திரங்கள் ( இன்றைய வழக்கில் மீண்டும் மீண்டும் சொல்லி, அதாவது ஜபித்து உய்வு பெறுவதற்கான ஒன்றே மந்திரம்(மனனாத் த்ராயதே இதி மந்த்ர) என்று கொள்ளப்படுகிறது. ஆனால் வேதப் பாடல்கள் அனைத்துமே மந்திரங்கள் என்றுதான் வழங்கப்படுகின்றன) உள்ளன.

பாரதத்தின் பண்டைய ஆச்சாரியர்களும் சரி, இன்றைய ஆச்சாரியர்களும் சரி கதைகள்மூலம் உயர் உண்மைகளைப் போதிப்பதில் நிகரற்று விளங்குகிறார்கள். அதற்கு முன்னோடியாகத் திகழ்பவை உபநிஷதங்கள். கட உபநிஷதத்திலும், உலகையே வெல்வதற்காக வாஜசிரவஸ் என்ற பணக்காரர் செய்த யாகம் மற்றும் அதைத் தொடர்ந்த நிகழ்ச்சிகளின்மூலம் உண்மை புகட்டப்படுகின்றன.

நசிகேதன் ஒரு சிறுவன், வாஜசிரவஸின் மகன். தந்தை, யாக நியதிகளைச் சரியாகக் கடைபிடிக்கவில்லை என்பதைக் கண்ட அவன் தந்தையின் தவறைச் சுட்டிக்காட்ட முற்பட்டான். அதை வாஜசிரவஸ் விரும்பாததால் அவன் எமதர்மனிடம் செல்ல நேர்ந்தது. எமதர்மனிடம் மூன்று வரங்கள் பெற்றான் அவன். மூன்று வரங்களின்மூலம் இந்த உபநிஷதத்தில் உயர் உண்மைகள் போதிக்கப்படுகின்றன.

பிறப்பும் மரணமும் வாழ்க்கையின் இரண்டு மாபெரும் புதிர்கள். பிறப்பு நம் வாழ்வில் நடந்துவிட்ட ஒன்று; அதைப்பற்றி நாம் ஒன்றும் செய்வதற்கில்லை. மற்றொரு புதிர் மரணம். மரணம் என்றால் என்ன, அப்போது மனிதனுக்கு என்ன நடக்கிறது, அதன்பிறகு அவன் என்ன ஆகிறான் போன்ற கேள்விகளுக்கு விடை காண அன்றிலிருந்து இன்று வரை மனிதன் முயன்று கொண்டிருக்கிறான். சாஸ்திரங்களும் அதனைப் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து விளக்கத்தான் செய்துள்ளன. ஆனாலும் மரணம் என்பது இன்றுவரை ஒரு புதிராகவே உள்ளது.

கட உபநிஷதம் தனக்கென்று ஒரு கோணத்தை எடுத்துக்கொண்டு மரணத்தை ஆராய்கிறது. மரணத்தின் போது என்ன நடக்கிறது என்பதைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் இந்த உபநிஷம் கூறுகிறது(2.2). ஆனால் மரணத்தைப்பற்றி ஆராய்வதைவிட அதை வென்று அறுதி உண்மையை அடைவதே முக்கியம்; நம்மிடம் தரப்பட்டுள்ள வாழ்க்கையை உரிய முறையில் வாழ்வதே அதற்கு வழி என்று சுட்டிக் காட்டுகிறது இந்த உபநிஷதம்(உதாரணமாக 1.1.18)

வித்யைகள்: மனிதன், உலகம், இறைவன் என்பவை மூன்று அடிப்படை உண்மைகள். உபநிஷதங்கள் இந்த மூன்றையும், இவற்றிக்கு இடையே நிலவுகின்ற தொடர்பையும் ஆராய்கின்றன. அறுதி உண்மையாகிய இறைவனை ஒவ்வொரு மனிதனும், ஒவ்வோர் உயிரும் சென்று அடைவதே வாழ்க்கையின் லட்சியம், அதற்கான களமே உலகம். உலகம் தருகின்ற அனுபவங்களைப் பாடமாகக் கொண்டு, உலகில் வாழ்ந்தபடியே அந்த லட்சியத்தை அடையுமாறு உபநிஷதங்கள் வலியுறுத்துகின்றன. இதற்கு ஒவ்வோர் உபநிஷதங்களும் தங்களுக்கென்று சில குறிப்பிட்ட பாதைகளைக் காட்டுகின்றன. இவை வித்யை எனப்படுகின்றன. வித்யைகள் எண்ணற்றவை. ஆனால் தற்போது சுமார் 35 வித்யைகள். இந்த 14 முக்கிய உபநிஷதங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன. காலங்கள் பல கடந்து விட்டதாலும், வேறு பல காரணங்களாலும் இந்த வித்யைகளின் செயல்முறையோ சரியான பொருளோ நமக்கு தெரியாமல் போய் விட்டது.

கட உபநிஷதத்தில் இரண்டு வித்யைகள் கூறப்பட்டுள்ளன 1. நசிகேத வித்யை(1.1.14 மற்றும் 1.3.2) 2. அங்குஷ்ட்ட மாத்ர வித்யை(2.1.12 மற்றும் 2.3.17). இந்த இரண்டு வித்யைகளும் இரண்டு படிகள் போல் அமைந்து, இறைவனை உணர்வதற்கான, மரணத்தை வெல்வதற்கான ஒரு பாதையாக விளங்கியிருக்க வேண்டும் என்று ஊகிக்கலாம்.

மொழிபெயர்ப்பு: 1935-இல் கடலங்குடி ஸ்ரீநடேச சாஸ்திரிகள் ஸ்ரீசங்கரரின் விளக்கவுரையைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். தற்போது வெளிவருகின்ற இந்த மொழிபெயர்ப்பு, கடஉபநதிஷதத்தை முதன்முதலாகப் படிப்பவர்களை நோக்கமாகக் கொண்டு செய்யப்பட்டுள்ளது. எனவே இரண்டு முக்கியமான விஷயங்கள் இந்த மொழிபெயர்ப்புக்கு அடிப்படையாக வைக்கப்பட்டுள்ளன.

1. தத்துவச் சிக்கல்கள் எதையும் கருத்தில் கொள்ளவில்லை. உதாரணமாக, ஈசுவரன், பிரம்மம் போன்ற வார்த்தைகள் தத்துவரீதியாக பரம்பொருளின் வெவ்வேறு நிலைகளைக் குறிப்பிடுபவை. இருப்பினும் தமிழில் இறைவன் போன்ற பொதுப்பதங்களையே பயன்படுத்தியுள்ளோம். இறைவன் என்ற மாபெரும் சக்தியுடன் நாம் தொடர்பு கொள்கிறோம் என்ற உணர்வுக்கு முதலிடம் கொடுத்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
2. அதுபோலவே காலம், இடம் போன்ற இலக்கண நியதிகளுக்கும் மொழிபெயர்ப்பில் முக்கிய இடம் அளிக்கவில்லை.

அமைப்பு: ஒவ்வொர் அத்தியாயத்திலும் முதலில் அந்த அத்தியாயத்தின் கரு கூறப்படுகிறது. பிறகு சம்ஸ்கிருத மூலம், தமிழ் வடிவம், வார்த்தைக்கு வார்த்தை பொருள், திரண்ட பொருள் விளக்கம் என்று ரீதியில் நூல் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொர் அத்தியாயத்தின் கடைசியிலும் தரப்பட்டுள்ள சுருக்கம் என்ற பகுதி, விரிவாகப் படித்ததை எளிதாக மனத்தில் வைத்துக்கொள்ள உதவுகிறது. அதே வேளையில் பொருள் குறிப்பு அகராதியாகவும் அதைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஒரு வார்த்தை: உபநிஷதங்கள் ரிஷிகளின் அனுபவ உண்மைகள். வெறும் நூலறிவு கொண்டோ, சம்ஸ்கிருதப் புலமை கொண்டோ அவற்றின் உண்மையான பொருள் அறிந்து கொள்வது சாத்தியம் அல்ல. உண்மையான சாதனை வாழ்வில் ஈடுபட்டு, மனம் தூய்மைபெற்று நாம் இறைவனை நோக்கி முன்னேற முன்னேற இவற்றின் உட்பொருள் மேன்மேலும் ஆழமாக நமக்குப் புரியும். மீண்டும் மீண்டும் படித்து, மந்திரங்களின் பொருளை ஆழமாகச் சிந்தித்து, சாதனைகளிலும் ஈடுபட்டால்தான் உபநிஷதங்களை உண்மையாகப் புரிந்துகொள்ள முடியும்; அவற்றின் அற்புதத்தில் ஆழ்ந்து மனம் மகிழ முடியும். பல மந்திரங்களின் பொருள் சுலபத்தில் அறிந்து கொள்ளத் தக்கதாக இல்லை. பொருள் புரியவில்லை என்பதற்காக சோர்ந்துவிடாமல், புரிந்த மந்திரங்களின் பொருளை ஆழ்ந்து சிந்தித்து சாதனைகளின் உயர்வடைய முயற்சிக்க வேண்டும்.

சாந்தி மந்திரம்: எந்த ஒன்றையும் செய்யும்போது அதற்குரிய மனநிலை இருக்கப் பெறுவது இன்றியமையாதது. எந்தக் காரியத்தைச் செய்கிறோமோ அதற்குரிய மனநிலையை வரவழைத்துக்கொண்டு, அதன்பிறகு அந்தச் செயலில் ஈடுபடுவது சிறப்பான பலனை அளிக்கும். நமது கோயில்களில் பல பிரகாரங்கள் அமைந்திருப்பதன் காரணம் இதுவே. ஒவ்வொரு பிரகாரத்தில் சுற்றி வரும்போதும் மற்ற எண்ணங்களை எல்லாம் விட்டு, கடைசியாக கருவறையில் சென்று தெய்வத்தைத் தரிசிக்கும் போது, நம்மால் முழுமனத்துடன் தெய்வ சிந்தனையில் ஈடுபட முடிகிறது. அதுபோல் அனுபூதிக் கருவூலமான உபநிஷதங்களைப் படிக்கப் புகுமுன் நமது சிந்தனையை அவற்றுடன் இயைபுபடுத்த சாந்தி மந்திரங்கள் உதவுகின்றன.

உபநிஷதங்களின் உண்மைப் பொருளை வெறும் புலமையால் உணர முடியாது. பணிவுடனும் வழிபாட்டு உணர்வுடனும் அணுகும்போது மட்டுமே அதனைப் புரிந்துகொள்ள முடியும். அத்தகைய மனப்பான்மையை மனத்தில் கொள்வதற்காக இந்த மந்திரங்கள் முதலில் ஓதப்படுகின்றன.

கட உபநிஷதத்திற்கான சாந்தி மந்திரம் இது.

ஓம் ஸஹ நாவவது
ஸஹ நௌ புனக்து
ஸஹ வீர்யம் கரவாவஹை
தேஜஸ்வி நாவதீதமஸ்து மா வித்விஷாவஹை
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

ஸஹ நௌ-நம் இருவரையும்; அவது-காப்பாராக; ஸஹ நௌ-நம் இருவரையும்; புனக்து-அனுபவிக்குமாறு ஊக்குவிப்பாராக; ஸஹ-சேர்ந்து; வீர்யம்-ஈடுபாடுமிக்க ஆற்றலுடன்; கரவாவஹை-உழைப்போமாக; அதீதம்-கற்றது; நௌ-நமக்கு; தேஜஸ்வி-பயனுள்ளதாக; அஸ்து-விளங்கட்டும்; மா வித்விஷாவஹை-வெறுக்காமல் இருப்போமாக!

ஆச்சாரியர், சீடர் ஆகிய நம் இருவரையும் இறைவன் காப்பாராக!
அறிவன் ஆற்றலை நாம் இருவரும் அனுபவிக்குமாறு ஊக்குவிப்பாரக!
நாம் இருவரும் ஈடுபாடுமிக்க ஆற்றலுடன் உழைப்போமாக!
கற்றது நமக்குப் பயனுள்ளதாக விளங்கட்டும்!
எதற்காகவும் நாம் ஒருவரையொருவர் வெறுக்காமல் இருப்போமாக!

குறைகளும் தடைகளும் இல்லாமல் உபநிஷதக் கல்வி நிறைவேற இந்த மந்திரம் பிரார்த்திக்கிறது.

வேத மந்திரங்கள் அனைத்தும் இறுதியில் ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: என்று நிறைவுறுவதைக் காணலாம். சாந்தி: என்றால் அமைதி. மூன்றுவிதமான தடைகளிலிருந்து நாம் விடுபடுவதற்காக மூன்று முறை சொல்லப்படுகிறது. மூன்றுவகைக் தடைகள் வருமாறு.

1. ஆத்யாத்மிகம் : நம்மால் வரும் தடை; உடல் நோய், மனப் பிரச்சனைகள் போன்றவை.
2. ஆதி பவுதிகம் : பிற உயிர்களால் வரும் தடை
3. ஆதி தைவிகம் : இயற்கை சக்திகளால் வரும் தடை; மழை, இடி, தீ போன்றவற்றால் வருபவை.

மூன்றுமுறை சொல்வதன்மூலம் இந்த மூவகை தடைகளிலிருந்து விடுபட்டு, இந்த உபநிஷதத்தைப் படிப்பதற்கான நமது முயற்சி வெற்றி பெறுவதற்காக பிரார்த்திகிறோம்.

(நன்றி: ராமகிருஷ்ணமடம்)


Offline Anu

Re: உபநிஷதம்
« Reply #1 on: March 29, 2012, 12:55:05 PM »
1.1  எல்லாம் உன்னுள்

நசிகேதன்(1-5)

கட உபநிஷதத்திற்கு ஒரு முன்னுரைபோல் அமைகிறது இந்த முதல் அத்தியாயம். மரணத்தை ஆராய, மறு வாழ்க்கையைச் சிந்திக்க, உயர் வாழ்க்கையை விரும்ப, ஆன்மாவை உணர, இறைவனை நாட எத்தகைய மனப்பக்குவம் தேவை, என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பதையெல்லாம் இங்கே நாம் காண்கிறோம். நசிகேதன் என்ற சிறுவனிடம் இவையெல்லாம் இருந்தன என்று கூறுவதன்மூலம், உயர்வாழ்க்கையை விரும்புவர்களிடம் இத்தகைய பண்புகள் வேண்டும் என்பதை இந்த அத்தியாயம் சுட்டிக்காட்டுகிறது.

நசிகேதனின் தந்தை செய்த யாகம்

1. ஓம் உசன் ஹ வை வாஜச்ரவஸ: ஸர்வவேதஸம் ததௌ
தஸ்ய ஹ நசிகேதா நாம புத்ர ஆஸ

ஹ வை-முன்பொரு சமயம்; வாஜச்ரவஸ-வாஜசிரவஸ்; உசன்-பலனில் ஆசை கொண்ட வராய்; ஸர்வவேதஸம்-தன்னிடமுள்ள எல்லாப் பொருட்களையும்; ததௌ-கொடுத்தார்; தஸ்ய-அவருக்கு; நசிகேதா நாம-நசிகேதன் என்ற பெயருள்ள; புத்ர:-மகன்; ஆஸ ஹ-இருந்தான்.

பொருள் : முன்பொரு சமயம் வாஜசிரவஸ் என்பவர் பலனில் ஆசை கொண்டவராய் தன்னிடமுள்ள எல்லாப் பொருள்களையும் தானமாகக் கொடுத்தார். அவருக்கு நசிகேதன் என்ற மகன் இருந்தான்.

இயற்கையை எண்ணற்ற சக்திகள் ஆட்சி செய்கின்றன. ஒவ்வொரு சக்தியையும் ஒரு தேவனாகக் கண்டார்கள் வேத முனிவர்கள். காற்று வீசுவதும். சூரியன் சுடுவதும், மழை பெய்வதும் எல்லாம் இந்த தேவர்களின் ஆற்றலால் என்று அவர்கள் கருதினர். இந்த தேவர்களை வழிபடுவதன்மூலம் உலக வாழ்க்கைக்கான அனைத்தையும் பெறலாம் என்று கண்ட அவர்கள், தேவர்களை வழிபடுவதற்காகக் கண்ட வழிமுறையே யாகம். இக உலக வாழ்க்கைக்கான வசதிகளைப் பெறுவதற்கானாலும், சொர்க்க போகங்களை அனுபவிப்பதற்கானாலும், மோட்ச மார்க்கத்திற்கு ஆனாலும் அவர்கள் யாகத்தை வழியாகக் கொண்டனர்.

யாக குண்டத்தில் அக்கினி வளர்த்து, குறிப்பிட்ட தேவனை உத்தேசித்து, உரிய மந்திரங்களுடன் உரிய பொருட்களைச் சமர்பித்து வழிபடும்போது அந்த யாகம் அதற்குரிய பலனைத் தருகிறது. அத்தகையதொரு யாகம் விசுவஜித். பேரரசனாகி உலகத்தையே ஆள்வது இந்த யாகத்தால் பெறப்படும் பலன். ஆனால் அந்த யாகத்திற்கான நிபந்தனை வினோதமானது-அனைத்தையும் ஆள்வது நோக்கம், நிபந்தனை என்னவென்றால் தன்னிடமுள்ள அனைத்தையும் தானம் செய்ய வேண்டும்.

வாழ்க்கையைக் கொடுத்தால் வாழ்க்கையைப் பெறலாம் என்பார் சுவாமி விவேகானந்தர். எல்லாம் நமக்கு வேண்டுமென்றால் நாம் எல்லாவற்றையும் விட வேண்டும். அதாவது அனைத்தையும் துறந்தவனுக்கு அனைத்தும் உரியதாகும். வேதகாலத்திலிருந்தே வந்திருக்கின்ற கருத்துச் செல்வம் இது. உலகையே ஆளும் நோக்கத்துடன் விசுவஜித் யாகத்தைச் செய்தார் வாஜசிரவஸ். யாக முடிவில் தமது செல்வம் அனைத்தையும் தானம் செய்தார்.

தானப் பொருட்களைக் கண்ட நசிகேதனின் சிந்தனை

2. தம் ஹ குமாரம் ஸந்தம் தக்ஷிணாஸு நீயமானாஸு ச்ரத்தா விவேச ஸோமன்யத

தக்ஷிணாஸு-தட்சிணைகள்; நீயமானாஸு-எடுத்துச் செல்வதைக் கண்டபோது; குமாரம்-சிறுவனாக; தம் ஹ ஸந்தம்- இருக்கின்ற அவனை; ச்ரத்தா-சிரத்தை; ஆவிவேச-வந்தடைந்தது; ஸ-அவன்; அமன்யத-சிந்திக்கலானான்.

பொருள் : தட்சிணைகள் எடுத்துச் செல்வதைச் சிறுவனான நசிகேதன் கண்டான். சிரத்தை அவனை வந்தடைந்தது. அவன் சிந்திக்கலானான்.

சிரத்தை என்றால் செயல்பாட்டுடன் கூடிய நம்பிக்கை என்று பொருள் கொள்ளலாம். நம்புகிறேன் என்று சொல்லிக் கொண்டு சும்மா இருப்பதல்ல; அந்த நம்பிக்கையைச் செயல்படுத்துவது, அந்த நம்பிக்கையின் லட்சியத்தை அடையப் பாடுபடுவது-இதுவே சிரத்தை. உயர் லட்சியத்தை அடைவதற்கான எல்லா முயற்சிகளுக்கும் சிரத்தை தேவை (ச்ரத்தா யத்பூர்வக: ஸர்வ புருஷார்த்த ஸாதன ப்ரயோக-முண்டக உபநிஷதம்)என்கிறார் ஸ்ரீ சங்கரர். இத்தகைய சிரத்தையே இன்று நமக்கு வேண்டியது என்பார் சுவாமி விவேகானந்தர். சிரத்தையின் பெருமையைப் போற்றுவதாகவும் அது நம்மிடம் வருமாறு பிராத்திப்பதாகவும் ரிக் வேதத்தில் ச்ரத்தா ஸூக்தம் என்று ஒரு பாடலே உள்ளது. சிரத்தை இறைவனின் தலையில் உள்ளது. இதய தாகத்தால் அது அடையப்படுகிறது என்று அந்தப் பாடல் கூறுகிறது. அத்தகைய சிரத்தை நசிகேதனிடம் வந்தது.

நசிகேதனின் சிந்தனைக்கான காரணம்

3. பீதோதகா ஜக்தத்ருணா துக்ததோஹா நிரிந்த்ரியா
அனந்தா நாம தே லோகாஸ்தான் ஸ கச்சதி தா ததத்

பீத உதகா-தண்ணீர் குடித்து முடித்த: ஜகத் த்ருணா-புல் மேய்ந்து முடித்த; துக்த தோஹா-பால் கறந்து முடித்த; நிரிந்த்ரியா-கன்று போடும் சக்தி இழந்த; தா-அந்தப் பசுக்களை; ததத்-தானம் செய்பவன்; அனந்தா நாம-மகிழ்ச்சி இல்லாத; தே லோகா; தான்-அந்த உலகங்களை; கச்சதி-அடைகிறான்.

பொருள் : தண்ணீர் குடித்து முடித்த, புல் மேய்ந்து முடித்த, பால் கறந்து முடித்த, கன்று போடும் சக்தியை இழந்த பசுக்களைத் தானம் செய்பவன் மகிழ்ச்சி இல்லாத உலகங்களை அடைகிறான்.

ஒருவனிடம் இருக்கும் பசுக்களின் எண்ணிக்கையை வைத்து அவனது செல்வாக்கை அந்த நாட்களில் மதிப்பிட்டார்கள். எனவே பசுக்களைத் தானம் செய்வது தானங்களில் சிறந்த ஒன்றாகக் கருதப்பட்டது. விசுவஜித் யாகத்தின் முடிவில் அனைத்தையும் தானம் செய்ய வேண்டும். ஆனால் வாஜசிரவஸ் தனக்கு உதவாதவற்றையெல்லாம் தானம் என்ற பெயரில் கொடுத்தார், ஒன்றுக்கும் உதவாத கிழட்டு பசுக்களைக் கொடுத்தார். இதனால், தானத்தின் பலன் கிடைக்காமல் போவது மட்டுமல்ல, தானத்தின் அடிப்படைக் கருத்தைச் சரியாகக் கடைபிடிக்காததால் இரட்டைத் தவறுக்கு உள்ளானார் வாஜசிரவஸ். அதற்குத் தண்டனையாக மகிழ்ச்சியற்ற உலகங்களில் வாழவும் நேரும் என்பதைப் புரிந்துகொண்ட நசிகேதன் ஆழ்ந்த சிந்தனை வசப்பட்டான்.

நசிகேதன் தந்தைக்கு உண்மையை அறிவுறுத்துதல்

தந்தை செய்யும் தவறை மறைமுகமாகச் சுட்டிக் காட்டும் நோக்கத்துடன் நசிகேதன் அவரிடம் சென்று கூறினான் :

4. ஸ ஹோவாச பிதரம் தத கஸ்மை மாம் தாஸ்யஸீதி
த்வதீயம் த்ருதீயம் தம் ஹோவாச ம்ருத்யவே த்வா ததாமீதி

ஸ-அவன்; தத-அப்பா; மாம்-என்னை; கஸ்மை-யாருக்கு; தாஸ்யஸி-கொடுக்கப் போகிறீர்கள்; இதி-என்று; பிதரம்-தந்தையை; உவாச ஹ-சொன்னான்; த்விதீயம்-இரண்டாவது முறை. த்ருதீயம்-மூன்றாம் முறை; த்வா உன்னை; ம்ருத்யவே-எமனுக்கு; ததாமி-கொடுக்கிறேன்; இதி-என்று; தம்-அவனிடம்; உவாச ஹ-சொன்னார்.

பொருள் : நசிகேதன் தந்தையிடம் சென்று, அப்பா, என்னை யாருக்குக் கொடுக்கப் போகிறீர்கள்? என்று கேட்டான். இரண்டாவது முறையும் மூன்றாவது முறையும் கேட்டான். அதற்குத் தந்தை, உன்னை எமனுக்குக் கொடுக்கப் போகிறேன் என்று கூறினார்.

தந்தை தவறு செய்வதைக் கண்டு ஆழ்ந்து சிந்தித்த நசிகேதன், அவரைத் தவறிலிருந்து காப்பாற்றி, அவர் மகிழ்ச்சியற்ற உலகங்களை அடையாமல் தடுப்பது தனது கடமை என்று உணர்ந்தான். சிறுவனான தான் நேரடியாக நீங்கள் செய்வது தவறு என்று தந்தையிடம் கூறினால் அது அதிகப்பிரசங்கித்தனமாக ஆகிவிடும் என்று கருதி, மறைமுகமாக அவருக்கு விஷயத்தைத் தெளிவுபடுத்த எண்ணினான்.

சிறந்தவற்றை தானம் செய்ய வேண்டும் என்பது யாகத்தின் நிபந்தனை. ஒரு தந்தைக்கு நல்ல மகனைவிடச் சிறந்த செல்வம் இல்லை. எனவே என்னை யாருக்கு தானமாகக் கொடுக்கப் போகிறீர்கள்? என்று நசிகேதன் வாஜசிரவஸிடம் கேட்டான். இதன் மூலம் சிறந்தவற்றை தானம் செய்ய வேண்டும் என்பதை மறந்துவிட்டீர்களே! என்று அவருக்கு நினைவூட்டினான்.

நசிகேதனின் இந்தக் கேள்வியை முதலில் வாஜசிரவஸ் பொருட்படுத்தவில்லை. சிறுவன் ஏதோ சொல்கிறான் என்று விட்டுவிட்டார். ஆனால் நசிகேதன் விடவில்லை. தந்தையை அணுகி மீண்டும் கேட்டான். அதற்கும் வாஜசிரவஸ் பதில் சொல்லவில்லை எனவே மூன்றாம் முறையாகக் கேட்டான். அதனால் கோபமுற்ற வாஜசிரவஸ், உன்னை எமனுக்குக் கொடுக்கிறேன், அதாவது, நீ செத்துத் தொலை என்று ஆத்திரத்துடன் கூறினார்.

நசிகேதனின் சுய மதிப்பு

5. பஹூனாமேமி ப்ரதமோ பஹூனாமேமி மத்யம
கிம் ஸ்வித் யமஸ்ய கர்த்தவ்யம் யன்மயாத்ய கரிஷ்யதி

பஹூனாம்-பல விஷயங்களில்; ப்ரதம: ஏமி-முதல் நிலையில் உள்ளேன்; பஹூனாம்-பல விஷயங்களில்; மத்யம: ஏமி-இடைநிலையில் இருக்கிறேன்; யமஸ்ய-எமனுக்கு; கிம்ஸ்வித்-என்ன; மயா-என்னால்; கரிஷ்யதி-செய்யப் போகிறார்; அத்ய-இப்போது; கர்த்தவ்யம்-செய்யத் தக்கது; யத்-என்ன.

பொருள் : பல விஷயங்களில் நான் முதல் நிலையில் இருக்கிறேன். பல விஷயங்களில் இடைநிலையில் இருக்கிறேன். என்னை எமனிடம் அனுப்புவதன்மூலம் தந்தை என்ன சாதிக்கப் போகிறார்? என்று சிந்தித்தான் நசிகேதன்.

நசிகேதனிடம் நாம் காணும் ஒரு முக்கியப் பண்பு இது: சுய மதிப்பு. தன்னை, வாழ்க்கையில் தனது இடத்தை, தனது குறைநிறைகளை அறிந்து வைத்திருந்தான் அவன். எனவே, அவன் பல விஷயங்களில் முதல் நிலையில் உள்ளேன், பல விஷயங்களில் இடை நிலையில் உள்ளேன். ஆனால் எதிலும் கடை நிலையில் இல்லை என்று துணிச்சலாக தன்னை மதிப்பிடுகிறான்; அப்படிப்பட்ட என்மீது தந்தை ஆத்திரப்படுகிறாரே! எதற்காக நான் அவரிடம் இதைச் சொல்கிறேன் என்பதைப் புரிந்துகொள்ளாமல் என்னை எமனிடம் அனுப்புவதாகக் கூறிவிட்டாரே என்று ஆதங்கப்படுகிறான்.

நசிகேதன் தந்தையிடம் சிந்திக்குமாறு கூறியது

தந்தை ஆத்திரத்தால் சொன்னாலும், சொன்னது சொன்னதுதான், தான் எமனிடம் போயே ஆக வேண்டும் என்பதை நிச்சயித்துக்கொண்டான் நசிகேதன். ஆனால் போகுமுன் அவருக்கு உண்மையை உணர்த்த விரும்பிய அவன் அவரிடம் கூறினான்.

6. அனுபச்ய யதா பூர்வே ப்ரதிபச்ய ததாபரே
ஸஸ்யமிவ மர்த்ய பச்யதே ஸஸ்யமிவாஜாயதே புன

பூர்வே-முன்னோர்; அனு-முறையே; யதா-எப்படி இருந்தார்களோ; பச்ய-பாருங்கள்; ததா-அப்படியே செய்யுங்கள்; மர்த்ய-மனிதன்; ஸஸ்யம் இவ-செடிகொடிகளைப் போல்; பச்யதே-அழிகிறான்; புன-மீண்டும்; ஸஸ்யம் இவ-செடிகொடிகளைப் போலவே; ஆஜாயதே-பிறக்கிறான்.

பொருள் : முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள். இப்போதுள்ளவர்கள் எப்படி வாழ்கிறார்களோ அதையும் சிந்தித்துப் பாருங்கள். செடிகொடிகளைப்போல் மனிதன் பிறக்கவும் இறக்கவும் செய்கிறான் என்று தந்தையிடம் கூறினான் நசிகேதன்.

வாழ்க்கையில் அனுபவங்கள் பெரிய வழிகாட்டிகள். நமது அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது உண்மை. ஆனால் பிறருடைய அனுபவங்களிலிருந்தும் நாம் நிறைய கற்றுக்கொள்ள முடியும். தீ சுடும் என்பதை நாமே அனுபவித்துப் பார்க்க வேண்டியதில்லை. பிறருடைய அனுபவத்திலிருந்தே அதைப் புரிந்துகொள்ளலாம். அதுபோல், பிறருடைய அனுபவங்களிலிருந்து உண்மையைக் கற்றுக்கொள்ளுமாறு வாஜசிரவஸிடம் கூறினான் நசிகேதன். நல்லவர்கள் இவ்வாறு தானம் செய்யவில்லை, அப்படிச் செய்தவர்கள் மகிழ்ச்சியற்ற உலகங்களை அடையாமலும் இல்லை. எனவே உண்மையாக நடந்துகொள்ளுங்கள் என்று தந்தைக்கு அறிவுறுத்துகிறான் அவன்.

அதுமட்டுமல்ல; தன்னை எமனுக்குக் கொடுப்பதாக தந்தை ஆத்திரத்திலோ கோபத்திலோ சொல்லியிருந்தாலும் அவர் சொன்ன வாக்கு காப்பாற்றப்பட வேண்டும், தான் எமனிடம் போயே ஆக வேண்டும் என்று அதனை எவ்வித எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொண்டான் நசிகேதன், அவனுக்குத் தந்தையிடம் வருத்தமோ கோபமோ வரவில்லை  என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும்.

பிறகு, எமலோகம் போவதான தன் முடிவைத் தந்தையிடம் கூறினான் நசிகேதன். ஆத்திரத்தில், தான் செய்து விட்டதை எண்ணிய வாஜசிரவஸ் கவலையில் ஆழ்ந்தார். அதைக் கண்ட நசிகேதன் அவருக்கு வாழ்க்கையின் உண்மையை எடுத்துக் கூறினான். வாழ்க்கை நிலையற்றது. மனிதன் செடிகொடிகளைப்போல் பிறக்கவும் இறக்கவும் செய்கிறான். பிறந்தவர்கள் இறப்பதும் இறந்தவர் பிறப்பதும் உறுதி. எனவே நான் எமலோகம் போவதுபற்றி கலங்க வேண்டாம் என்று அவரிடம் கூறிவிட்டு, எமலோகம் சென்றான் அவன்.

எமதர்மனிடம் மந்திரிகள் கூறியது : 7-8

நசிகேதன் சென்றபோது எமதர்மன் அங்கே இல்லை. எனவே அவன் எமனின் மாளிகையின் முன்னால் மூன்று நாட்கள் காத்திருக்க நேர்ந்தது, அதன்பிறகே எமதர்மன் வந்தான். அவனது மந்திரிகள் அவனிடம் சென்று நசிகேதன் வந்து காத்திருப்பதைப் பற்றி கூறினர்.

7. வைச்வானர: ப்ரவிசதி அதிதிர் ப்ராஹ்மணோ க்ருஹான்
தஸ்யைதாம் சாந்திம் குர்வந்தி ஹர வைவஸ்வதோதகம்

அதிதி-விருந்தினனாக; ப்ராஹ்மண:-தூயவன்; வைச்வானர-நெருப்பு; க்ருஹான்-வீட்டில்; ப்ரவிசதி-நுழைகிறான்; தஸ்ய-அவனுக்கு; ஏதாம்-இவற்றைக் கொடுத்து; சாந்திம்-அமைதியை; குர்வந்தி-செய்கின்றனர்; வைவஸ்வத-எம தர்மனே; உதகம்-தண்ணீர்; ஹர-கொண்டுவா

பொருள் : தூயவன் ஒருவன் விருந்தினனாக வரும்போது நெருப்புப் போலவே நுழைகிறான். நல்லவர்கள், அவனுக்குத் தண்ணீர் முதலானவற்றைக் கொடுத்து, உபசரித்து அவனை அமைதிப்படுத்துகின்றனர். எமதர்மனே! நீயும் அந்தச் சிறுவனுக்கு தண்ணீர் முதலியவற்றைக் கொடு என்று மந்திரிகள் எமதர்மனிடம் கூறினர்.

விருந்தினர் என்பவர் வழிபாட்டிற்குரியவர். அந்த வேளைக்கு அவர் தெய்வமே; அந்த நிலையில் அவர் போற்றப்பட வேண்டும் என்கிறார் சுவாமி விவேகானந்தர். அவர் கூறுவதுபோல், விருந்தினரை உபசரித்தல் என்பது இந்தியாவில் ஒரு காலத்தில் வழிபாடாகவே செய்யப்பட்டு வந்தது. அதன் முக்கியத்துவத்தை இங்கே மந்திரிகள் எமதர்மனிடம் தெரிவிக்கின்றனர்.

8. ஆசா ப்ரதீ÷க்ஷ ஸங்கதம் ஸூன்ருதாம்ச
இஷ்ட்டாபூர்த்தே புத்ர பசூம்ச்ச ஸர்வான்
ஏதத் வ்ருங்க்தே புருஷஸ்யால்பமேதஸோ
யஸ்யானச்னன் வஸதி ப்ராஹ்மணோ க்ருஹே

அல்பமேதஸ-அற்ப புத்தியுடைய; யஸ்ய புருஷஸ்ய-எந்த மனிதனின்; க்ருஹே-வீட்டில்; ப்ராஹ்மண-தூயவன்; அனச்னன்-உணவின்றி; வஸதி-வசிக்கிறானோ; ஆசா-நம்பிக்கைகள்; ப்ரதீக்ஷõ-எதிர்பார்ப்புகள்; ஸங்கதம்-புண்ணிய பலன்; ஸூன்ருதாம்-இனிய பேச்சின் பலன்; இஷ்ட்டா பூர்த்தே-யாக பலன். நற்பணிகளின் பலன்; ஸர்வான்-எல்லாம்; புத்ர பசூன் ச-பிள்ளைச் செல்வம், கால்நடைச் செல்வம்; ஏதத்-அனைத்தையும்; வ்ருங்தே-நாசமாக்குகிறான்.

பொருள் : யாருடைய வீட்டில் தூயவன் ஒருவன் உணவின்றி இருக்க நேர்கிறதோ, அற்ப புத்தி உடையவனான அவனது நம்பிக்கைகள், எதிர்ப்பார்ப்புகள் எல்லாம் அழிகின்றன. தான் செய்த புண்ணியங்களின் பலன், இனிய பேச்சின் பலன், யாகங்கள் வழிபாடு போன்றவற்றின் பலன், நற்பணிகளின் பலன் அனைத்தையும் அவன் இழக்கிறான். அவனது பிள்ளைச் செல்வம், கால்நடைச் செல்வம் அனைத்தும் அழிகின்றன.

தூயவன் ஒருவன் வீட்டிற்கு வந்தால் அவனை உபசரிக்க வேண்டியது கடமை என்பதை இந்த மந்திரம் உணர்த்துகிறது. உபசரிக்காவிட்டால் எல்லா செல்வமும் அழியும். அதேவேளையில், உபசரித்து அவர்களின் மனம் கனிந்த ஆசிகளைப் பெற்றால் செல்வம் அனைத்தும் சேரும் என்பது உணர்த்தப்படுகிறது.

எமதர்மனின் உபசாரம்

மந்திரிகள் கூறியதைக் கேட்ட எமதர்மன் நேராக நசிகேதனிடம் சென்று அவனை உபசரித்தான்

9. திஸ்ரோ ராத்ரீர் யதவாத்ஸீர் க்ருஹே மே
னச்னன் ப்ரஹ்மன் அதிதிர் நமஸ்ய
நமஸ்தேஸ்து ப்ரஹ்மன் ஸ்வஸ்தி மேஸ்து
தஸ்மாத் ப்ரதி த்ரீன் வரான் வ்ருணீஷ்வ

ப்ரஹ்மன்-வழிபாட்டிற்கு உரியவனே; அதிதி-விருந்தாளி; நமஸ்ய-வணங்கத் தக்க; திஸ்ர; ராத்ரீ-மூன்று இரவுகள்; அனச்னன்-உணவின்றி; மே-எனது; க்ருஹே-வீட்டில்; யத் அவாத்ஸீ-வசித்தாய்; ப்ரஹ்மன்-தூய பாலனே; தஸ்மாத்-அதனால்; மே-எனக்கு; ஸ்வஸ்தி-நன்மை; அஸ்து-உண்டாகட்டும்; தே-உனக்கு; நம: அஸ்து-வணக்கம்; ப்ரதி-அதற்காக; த்ரீன்-மூன்று; வரான்-வரங்களை; வ்ருணீஷ்வ-கேட்டுக்கொள்.

பொருள் : வழிபாட்டிற்கு உரியவனே! விருந்தாளியும் வணங்கத் தக்கவனுமான நீ உணவின்றி என் வீட்டில் மூன்று இரவுகள் தங்க நேர்ந்தது. தூய பாலனே! அந்தக் குற்றம் என்னைப் பாதிக்காமல் எனக்கு நன்மை உண்டாகட்டும். உனக்கு வணக்கம். நீ மூன்று இரவுகள் தங்க நேர்ந்ததற்காக என்னிடமிருந்து மூன்று வரங்களைப் பெற்றுக்கொள்.

முதல் வரம் : தந்தையின் நலம்(10-11)

நசிகேதன் கேட்டது

10. சாந்த ஸங்கல்ப: ஸுமனா யதா ஸ்யாத்
வீதமன்யுர் கௌதமோ மாபி ம்ருத்யோ
த்வத் ப்ரஸ்ருஷ்ட்டம் மாபி வதேத் ப்ரதீத
ஏதத் த்ரயாணாம் ப்ரதமம் வரம் வ்ருணே

ம்ருத்யோ-எமதர்மனே; கௌதம-கௌதமர்; த்வத் ப்ரஸ்ருஷ்ட்டம்-உன்னால் அனுப்பப்பட்ட; மா அபி-என்னை; ப்ரதீத-நினைவைப் பெற்று; சாந்த ஸங்கல்ப-மனக்கவலை அற்றவராக; ஸுமனா: தெளிந்த மனத்தினராக; வீத மன்யு-கோபம் அற்றவராக; ஸுமனா-தெளிந்த மனத்தினராக; வீத மன்யு-கோபம் அற்றவராக; யதா ஸ்யாத்-எவ்வாறு ஆவாரோ; வதேத்-பேச வேண்டும்; த்ரயாணாம்-மூன்று வரங்களுள்; ஏதத்-இதனை; ப்ரதமம் வரம்-முதல் வரமாக; வ்ருணே-கேட்கிறேன்.

பொருள் : எமதர்மனே! உன்னிடமிருந்து திரும்பிச் செல்கின்ற என்னை எனது தந்தையாகிய கவுதமர் புரிந்துகொள்ளவேண்டும். என்னை ஏற்றுக்கொண்டு, மனக்கவலை அற்றவராக, தெளிந்த மனத்தினராக, கோபம் அற்றவராக என்னுடன் பேச வேண்டும் மூன்று வரங்களுள் இதையே முதல் வரமாகக் கேட்கிறேன்.

எமனைச் சந்தித்து வருகின்ற இவன் ஆவியல்ல, என் மகன்தான் என்று வாஜசிரவஸ் புரிந்துகொள்ள வேண்டும், தான் ஒரு தவறு செய்ததாகக் கோபம் கொண்ட அவர் இப்போது அந்தக் கோபத்தை விட்டிருக்க வேண்டும். சுருக்கமாகச் சொல்வதானால், தந்தை தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நசிகேதன் முதல் வரமாகக் கேட்டான்.

எமதர்மன் வரமளித்தல்

11. யதா புரஸ்தாத் பவிதா ப்ரதீத
ஒளத்தாலகிராருணிர் மத்ப்ரஸ்ருஷ்ட்ட
ஸுகம் ராத்ரீ: சயிதா வீதமன்யு
த்வாம் தத்ருசிவான் ம்ருத்யு முகாத் ப்ரமுக்தம்

ஆருணி-அருணனின் மகனான; ஒளத்தாலகி: உத்தாலகர்; புரஸ்தாத்-முன்னால்; யதா-எப்படி; ப்ரதீத: நினைவைப் பெற்று; மத்ப்ரஸ்ருஷ்ட்ட-என்னால் அனுமதிக்கப்பட்டு; ராத்ரீ-இரவில்; ஸுகம்-நன்றாக; சயிதா-தூங்குபவராக; ம்ருத்யு-முகாத்-எமனிடமிருந்து; ப்ரமுக்தம்-திரும்பிச் செல்கின்ற; த்வாம்-உன்னை; தத்ருசிவான்-கண்டு; வீதமன்யு-கோபம் அற்றவராக; பவிதா-ஆவார்.

பொருள் : அருணனின் மகனும் உனது தந்தையுமாகிய உத்தாலகர் உன்னைக் காணும்போது முன்பு போலவே உன்னைப் புரிந்துகொள்வார். என் அருளால் இரவுகளில் கவலையற்று தூங்குவார். என்னிடமிருந்து திரும்பிச் செல்கின்ற உன்னைக் கண்டு கோபம் கொள்ளவும் மாட்டார் என்று கூறி முதல் வரத்தை அளித்தான் எமதர்மன்.

இரண்டாம் வரம் (12-18)

இரண்டாம் வரம்: சொர்க்க லோகம் 12-13

12. ஸ்வர்கே லோகே ந பயம் கிஞ்சனாஸ்தி
ந தத்ர த்வம் ந ஜரயா பிபேதி
உபே தீர்த்வா சனாயாபிபாஸே
சோகாதிகோ மோததே ஸ்வர்கலோகே

ஸ்வர்கே லோகே-சொர்க்கத்தில்; கிஞ்சன-சிறிதும்; பயம்-பயம்; ந அஸ்தி-கிடையாது; தத்ர-அங்கே; த்வம்-நீ; ந-இல்லை; ஜரயா-மூப்பினால்; ந பிபேதி-பயப்படுவதில்லை; ஸ்வர்க லோகே-சொர்க்கத்தில் உள்ளவன்; அசனாயாபிபாஸே-பசியையும் தாகத்தையும்; உபே-இரண்டையும்; தீர்த்வா-தாண்டி; சோகாதிக-கவலையற்றவனாய்; மோததே-மகிழ்கிறான்.

பொருள் : சொர்க்கத்தில் சிறிதும் பயம் கிடையாது. மரண தேவனாகிய நீயும் அங்கில்லை. அங்கே யாரும் மூப்பினால் பயப்படுவதில்லை. அவர்களுக்குப் பசி, தாகம் இரண்டும் கிடையாது. அவர்கள் கவலையற்றவர்களாக மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்கள்.

13. ஸ த்வமக்னிம் ஸ்வர்க்யமத்யேஷி ம்ருத்யோ
ப்ரப்ரூஹி தம் ச்ரத்ததானாய மஹ்யம்
ஸ்வர்கலோகா அம்ருதத்வம் பஜந்தே
ஏதத் த்விதீயேன வ்ருணே வரேண

ம்ருத்யோ-எமதர்மனே; ஸ்வர்கலோகா-சொர்க்க லோகத்தில் வாழ்பவர்கள்; அம்ருதத்வம்-தேவத்தன்மையை; பஜந்தே-பெறுகின்றனர்; ஸ்வர்க்யம் அக்னிம்-சொர்க்கலோகத்திற்கு அழைத்துச் செல்லக் கூடிய யாகத்தைப் பற்றி; ஸ: த்வம்-உனக்கு; அத்யேஷி-தெரியும்; ச்ரத்ததானாய-சிரத்தை மிக்கவனான; மஹ்யம்-எனக்கு; த்வம்-நீ; ப்ரப்ரூஹி-சொல்; ஏதத்-இதனை; த்வதீயேன வரேண-இரண்டாவது வரமாக; வ்ருணே-கேட்கிறேன்.

பொருள் : எமதர்மனே! சொர்க்கத்தில் வாழ்பவர்கள் தேவத்தன்மையைப் பெறுகின்றனர். அங்கே அழைத்துச் செல்லக் கூடிய யாகத்தைப்பற்றி உனக்குத் தெரியும். சிரத்தை மிக்கவனான எனக்கு அதைப்பற்றி சொல். இதனை இரண்டாவது வரமாகக் கேட்கிறேன்

மனிதனுக்கு இன்ப நுகர்ச்சியிலுள்ள நாட்டம் முடிவற்றது, ஆயுளோ குறைவு. எனவே இங்கே கிடைக்காத, இங்கே பூர்த்தி செய்ய முடியாத இன்பங்கள் வேறோர் உலகத்தில் இருப்பதாகக் கொண்டு, அங்கே சென்று தனது சுகபோக வாழ்க்கையைத் தொடர நினைக்கிறான் அவன். இதன் விளைவாக எழுந்ததே சொர்க்கம் என்ற கருத்து. எல்லா நாட்டுப் புராணங்களிலும் இந்தக் கருத்து இருப்பதைக் காணலாம். பசி, தாகம், மூப்பு, அனைத்திற்கும் மேலாக மரணம் போன்றவை சுகபோகங்களுக்குத் தடையாக உள்ளன. எனவே அந்தத் தடைகள் இல்லாத உலகமாக சொர்க்கத்தைக் கருதினான் மனிதன்.

சொர்க்கத்திற்குப் போவது எப்படி?

வாழ்வில் சாதிக்க வேண்டிய அனைத்திற்கும் யாகத்தை நாடினான் வேதகால மனிதன் என்பதை 1.1.1 விளக்கவுரையில் கண்டோம். சொர்க்கத்திற்குப் போவதற்கென்றும் தனியாக யாகங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றுள் ஒன்றைப்பற்றி எமதர்மனிடம் இரண்டாவது வரமாக நசிகேதன் கேட்கிறான்.

நசிகேத வித்யை

யாகங்கள் புறத்தில் செய்யப்படுபவை. சில பொருட்களைக் கொண்டு புறத்தில் செய்யப்படுகின்ற கிரியைகள் புண்ணியத்தைத் தரலாம், சொர்க்க வாழ்வைப் பெற்றுத் தரலாம்; ஆனால் அக வளர்ச்சியைத் தருமா, அனுபூதியைத் தருமா என்ற கேள்வி காலப்போக்கில் எழுந்தது. அகப் பயிற்சிகளே அக வளர்ச்சியைத் தர முடியும் என்ற கருத்து வலுப்பெற்றது யாகங்கள் அகமுகமாக்கப்பட்டன. வித்யைகள் உருவாயின. இந்த மந்திரத்தில் யாகம் வித்யை யாகப் பரிணமிப்பதைக் காண்கிறோம்.

14. ப்ர தே ப்ரவீமி தது மே நிபோத
ஸ்வர்க்யமக்னிம் நசிகேத: ப்ரஜானன்
அனந்த கோலகாப்திமதோ ப்ரதிஷ்ட்டாம்
வித்தி த்வமேதம் நிஹிதம் குஹாயாம்

நசிகேத: நசிகேதா; தத் உ-நீ கேட்ட அதை; ப்ரஜானன்-அறிந்த நான்; தே-உனக்கு; ப்ர ப்ரவீமி-சொல்கிறேன்; ஸ்வர்க்யம்-சொர்க்கத்தைத் தருவதான; அக்னிம்-யாகத்தை; நிபோத-விழிப்புற்றவனாகக் கேள்; அனந்த லோக ஆப்திம் அதோ-சொர்க்கத்தைத் தருவதும்; ப்ரதிஷ்ட்டாம்-பிரபஞ்சத்திற்கு ஆதாரமானதும்; குஹாயாம்-இதயக் குகையில்; நிஹிதம்-இருப்பதாகவும்; த்வம்-நீ; ஏதம்-இதனை; வித்தி-அறிந்துகொள்.

பொருள் : நசிகேதா! சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்கின்ற யாகத்தைப்பற்றி கேட்டாய். அது எனக்குத் தெரியும். அதை உனக்குச் சொல்கிறேன். விழிப்புற்றவனாகக் கேள்.  சொர்க்கத்தைத் தருவதும், பிரபஞ்சத்திற்கு ஆதாரமானதுமான அந்த அக்கினி இதயக்குகையில் உள்ளது.

சொர்க்கத்திற்குப் போவதுபற்றிய யாகத்தை அறிய விரும்பினான் நசிகேதன். அது தனக்குத் தெரியும் என்கிறான் எமதர்மன். புறக் கரியையாகச் செய்யும் போது சொர்க்கத்தைத் தருகின்ற அதே யாகம் அக அக்கினியாக, ஆன்ம அக்கினியாகக் கொண்டு வித்யையாகச்  செய்யப்படும்போது பிரபஞ்சத்திற்கு ஆதாரமான இறைவனை அடைவதற்கான ஒரு சாதனை ஆகிறது.

இறை வாழ்வில் முன்னேற முன்னேறத்தான் உபநிஷதங்களின் உட்பொருள் விளங்கும் என்று ஏற்கனவே கண்டோம். விழிப்புற்றவனாகக் கேள் என்று எமதர்மன் அதையே குறிப்பிடுகிறான். அந்த அக்கினி இதயக் குகையில் உள்ளது என்கிறான் எமதர்மன். இதுவே நசிகேத வித்யை. இதயக்குகை என்பதை அறிவதற்கான, புத்தியை விழிப்புறச் செய்வதற்கான ஒரு பயிற்சியாக இது இருந்திருக்க வேண்டும்.
ஆன்மீக உண்மைகளை இறைவனைப்பற்றிய உண்மைகளை அறிய புத்தி விழிப்புற்றிருக்க வேண்டும். இந்தக் கருத்து பல இடங்களில் வலியுறுத்தப் படுவதைக் காணலாம்.

நசிகேத யாகம்: 15-16

சொர்க்கத்தை அடைவதற்கான வழி இதயக் குகையில் இருக்கிறது என்று நசிகேத வித்யையைச் சுட்டிக்காட்டிய எமதர்மன், புறத்தில் அதை யாகமாகச் செய்வதற்கான வழிமுறைகளைக் கூறுகிறான்.

15. லோகாதிமக்னிம் தமுவாச தஸ்மை
யா இஷ்ட்டகா யாவதீர்வா யதா வா
ஸ சாபி தத்ப்ரத்யவதத் யதோக்தம்
அதாஸ்ய ம்ருத்யு: புனரேவாஹ துஷ்ட்ட

லோகாதிம்-ஆதியில் தோன்றிய; தம் அக்னிம்-அந்த யாகத்தை; யா இஷ்ட்டகா-எத்தகைய செங்கற்கள்; யாவதீ: வா-எத்தனை; யதா வா-எவ்வாறு; தஸ்மை-நசிகேதனுக்கு; உவாச-சொன்னான்; ஸ: சஅபி-நசிகேதனும்; தத்-அதனை; யதா உக்தம்-சொன்னதுபோலவே; ப்ரதி அவதத்-திருப்பிச் சொன்னான்; அத-பிறகு; தஸ்ய-நசிகேதனின் பதிலால்; துஷ்ட்ட: மகிழ்ந்த: ம்ருத்யு-எமன்; புன: ஏவ-மீண்டும்; ஆஹ-சொன்னான்.

பொருள் : ஆதியில் தோன்றிய அந்த யாகத்தைப்பற்றி எமதர்மன் நசிகேதனுக்குக் கூறினான். அந்த யாகத்திற்கு எத்தகைய செங்கற்கள் வேண்டும், எத்தனை வேண்டும், எவ்வாறு யாக குண்டத்தை அமைக்க வேண்டும் என்பதையெல்லாம் உபதேசித்தான். எம தர்மன் கூறியவற்றை நசிகேசன் அப்படியே திருப்பிக் கூறினான். நசிகேதன் அவற்றைப் புரிந்துகொண்டதைக் கண்டு மகிழ்ந்த எமதர்மன் மீண்டும் கூறினான்.

16. தமப்ரவீத் ப்ரீயமாணோ மஹாத்மா
வரம் தவேஹாத்ய ததாமி பூய
தவைவ நாம்னா பவிதாயமக்னி
ஸ்ருங்காம் ச இமாமனேகரூபாம் க்ருஹாண

ப்ரீயமாண-மகிழ்ச்சியுற்ற; மஹாத்மா-மகாத்மாவாகிய எமதர்மன்; தவ-உனக்கு; பூய-மீண்டும்; வரம்-வரத்தை; இஹ-இங்கே; ததாமி-தருகிறேன்; தம்-நசிகேதனிடம்; அப்ரவீத்-கூறினான்; அயம்-இந்த; அக்னி-யாகம்; தவ-உனது; நாம்னா ஏவ-பெயராலேயே; பவிதா-விளங்கட்டும்; அனேக ரூபாம்-பல்வேறு வண்ணங்களைக் காட்டுகின்ற; இமாம்-இந்த; ஸ்ருங்காம்-மாலையை; க்ருஹாண-பெற்றுக்கொள்.

பொருள் : நசிகேதனின் பதிலால் மகிழ்ச்சியுற்ற மகாத்மாவாகிய எமதர்மன் அவனிடம், உனக்கு இன்னொரு வரமும் தருகிறேன்: இந்த யாகம் இனி உனது பெயராலேயே விளங்கும். மேலும், பல வண்ணங்களைக் காட்டுகின்ற இந்த மாலையையும் பெற்றுக்கொள் என்று கூறினான்.

நல்ல திறமையான மாணவர்களிடம் ஓர் ஆசிரியருக்கும், தகுதிவாய்ந்த சீடனிடம் குருவிற்கும் ஏற்படுகின்ற உணர்ச்சியில் எமதர்மன் கூறிய வார்த்தைகள் இவை. இரண்டாவது வரத்தையும் அளித்துவிட்டு, இந்த இரண்டு வரங்களையும் அதிகமாகக் கொடுத்தான் அவன். எந்த யாகத்தால் சொர்க்கத்தை அடைய முடியமோ அது நசிகேத யாகம் என்று வழங்கப்படும் என்பது முதல் வரம். இரண்டாவதாக ஓர் அழகிய ரத்தின மாலை. இந்த ரத்தின மாலை என்பது பல்வேறு யாகங்களைப் பற்றிய அறிவைக் குறிக்கிறது( ஸ்ருங்காம் அகுத்ஸிதாம் கதிம் கர்ம மயீம் க்ருஹாண-ஸ்ரீசங்கரர்)

நசிகேத வித்யையின் மகிமை: 17-19

17. த்ரிணாசிகேதஸ்த்ரிபிரேத்ய ஸந்திம்
த்ரிகர்மக்ருத் தரதி ஜன்ம ம்ருத்யூ
ப்ரஹ்ம ஜஜ்ஞம் தேவமீட்யம் விதித்வா
நிசாய்யேமாம் சாந்திமத்யந்தமேதி

த்ரிணாசிகேத-நசிகேத யாகத்தை மும்முறை செய்து; த்ரிபி-மூவருடன்; ஸந்திம் ஏத்ய-தொடர்புகொண்டு; த்ரிகர்ம க்ருத்-மூன்று பயிற்சிகளைச் செய்து; ஜன்ம ம்ருத்யூ-பிறப்பையும் இறப்பையும்; தரதி-கடக்கிறான்; ப்ரஹ்மஜஜ்ஞம்-பிரம்மத்திலிருந்து தோன்றிய; ஈட்யம்-வழிபடத் தகுந்த; தேவம்-இறைவனை; விதித்வா-அறிந்து; நிசாய்ய-அனுபவித்து; இமாம்-இந்த; அத்யந்தம்-நிலைத்த; சாந்திம்-அமைதியை; ஏதி-பெறுகிறான்.

பொருள் : நசிகேத யாகத்தை மும்முறை செய்தவன் மூவருடன் தொடர்பு கொண்டு மூன்று பயிற்சிகளைச் செய்யும்போது பிறப்பையும் இறப்பையும் கடக்கிறான். பிரம்மத்திலிருந்து தோன்றியவரும் வழிபடத்தகுந்தவருமான இறைவனை அறிந்து அனுபவித்து அவன் நிலைத்த அமைதியைப் பெறுகிறான்.

நசிகேதனின் இரண்டாவது வரம் சொர்க்கத்திற்குப் போவதற்கான வழிபற்றியது. அந்த வழி நசிகேத யாகம். அந்தப் புற யாகத்தை சில நிபந்தனைகளுடன் செய்தால் அதுவே ஓர் அகப் பயிற்சியாக, ஒரு வித்யையாக இறை நெறியில் நம்மைச் சேர்க்கும் என்பதை இந்த மந்திரம் சுட்டிக்காட்டுகிறது. அந்த நிபந்தனைகள் என்னென்ன?

1. மூவருடன் தொடர்பு: தாய், தந்தை, குரு ஆகிய மூவர் காட்டும் வழியில் செல்ல வேண்டும். தாயின் அரவணைப்பு, உலக விஷயங்களில் தந்தையின் வழிகாட்டுதல், அக வாழ்க்கையில் தகுந்த குருவின் வழிநடத்தல் ஆகிய மூன்றும் உரிய வேளையில் சரியாகக் கிடைப்பவனின் வாழ்க்கை வெற்றிகரமானதாக அமைகிறது. இதில் ஒன்று குறைந்தாலும் அந்த வாழ்க்கை நிறைவு பெறுவதில்லை. எனவே இந்த மூவரின் ஆசிகளால் வாழ்க்கை நிறைவு பெற்றவனாக இருக்க வேண்டும்.

இந்த மூவரின் தொடர்பால் ஒருவன் இறைவனை அறிகிறான்; அதாவது இறைவன் ஒருவர் இருக்கிறார், அவரை அடைவதே வாழ்க்கையின் நோக்கம் என்பது அவனுக்குத் தெரிய வருகிறது. இதனையே மந்திரத்தில் வரும் அறிந்து (விதித்வா) என்ற வார்த்தை குறிப்பிடுகிறது ஆனால் அப்படி அறிவது மட்டும் போதாது. அனுபூதியில் இறைவனை உணர வேண்டும், அனுபவிக்க வேண்டும் இதனை மந்திரத்தில் வரும் அனுபவித்து (நிசாய்ய) என்ற வார்த்தை குறிப்பிடுகிறது. அதற்கான பயிற்சிகள் எவை?

2. மூன்று பயிற்சிகள்: தவம், ஸ்வாத்யாயம், ஈசுவர ப்ரணிதானம் என்பவை மூன்றும் கர்மங்கள் அல்லது மூன்று பயிற்சிகள் என்று பதஞ்ஜலி முனிவர் கூறுகிறார்( தப: ஸ்வாத்யாயேச்வர ப்ரணிதானானி க்ரியாயோக:).

சொந்த தேவைகளைச் சுருக்கிக்கொள்வதும், தனது வாழ்க்கை பிறருக்குப் பயனுள்ளதாக அமையும் வண்ணம் வாழ்வதும் தவம். நல்ல நூல்களைப் படித்தல், நல்ல கருத்துக்களைப் பிறருக்குச் சொல்லுதல், மந்திர ஜபம், சுய ஆராய்ச்சி போன்றவை ஸ்வாத்யாயம். இறைவனை வழிபடுவதும், அவரைச் சரணடைந்து வாழ்வதும் ஈசுவர ப்ரணிதானம். இவ்வாறு மூவரின் தொடர்புடன் மூன்று பயிற்சிகளைச் செய்பவன் இறைவனை அடைகிறான். அந்த இறைவன் யார்?

பிரம்மத்திலிருந்து தோன்றியவர். உருவமற்ற, குணங்களற்ற அறுதி நிலையில் இறைவன் பிரம்மம் என்று வழங்கப்படுகிறார். சாதாரண மனிதர்கள் புரிந்துகொள்ளத்தக்க நிலையில் குறிப்பிட்ட வடிவத்துடனும் குணங்களுடனும் இருக்கின்ற நிலையில் இறைவன், கடவுள் மற்றும் சிவன், விஷ்ணு, தேவி என்றும் பல்வேறு பெயர்களைப் பெறுகிறார். இந்த நிலையிலுள்ள இறைவனை அவன் அடைகிறான்.

அதனால் விளையும் பலன் என்ன? நிலைத்த அமைதி.

இறைவனைத் தவிர வேறு எதன்மூலம் கிடைக்கின்ற அமைதியும் நிலையானதல்ல. சில புறக் காரணங்களின் வாயிலாகக் கிடைக்கின்ற அமைதி, அந்தக் காரணம் விலகியதும் குலைந்துவிடும். ஆனால் இறைவனைப் பெறுவதால் கிடைக்கின்ற அமைதி, எதனாலும் குலையாது.

18. த்ரிணாசிகேதஸ் த்ரயமேதத் விதித்வா
ய ஏவம் வித்வாம்ச் சினுதே நாசிகேதம்
ஸ ம்ருத்யுபாசான் புரத: ப்ரணோத்ய
சோகாதிகோ மோததே ஸ்வர்க லோகே

த்ரிணாசிகேத:-மும்முறை நசிகேத யாகம் செய்த; ய-யார்; ஏதத்-இந்த; த்ரயம்-மூன்றையும்; ஏவம்-இவ்வாறு; வித்வான்-அறிந்தவன்; விதத்வா-அறிந்த பிறகு; நாசிகேதம்-நசிகேத யாகத்தை; சினுதே-செய்கிறானோ; ஸ-அவன்; ம்ருத்யுபாசாத்-எமனின் பாசக்கயிற்றை; புரத-முன்பே; ப்ரணோத்ய-உதறிக்கொண்டு; சோகாதிக-கவலையைக் கடந்து;ஸ்வர்கலோகே-சொர்க்கத்தில்; மோததே-மகிழ்கிறான்.

பொருள் : (முந்தின மந்திரத்தில் கூறிய) மூன்றையும் அறிந்து யார் நசிகேத யாகத்தைச் செய்கிறானோ அவன் உடல் விழும்முன்பே மரணத்தை வென்று, கவலைகளைக் கடந்து சொர்க்க லோகத்தில் மகிழ்ந்திருக்கிறான்.

நசிகேத யாகத்தை ஒரு வித்யையாகச் செய்யுமாறு இந்த சுலோகம் வலியுறுத்துகிறது. வெறுமனே நசிகேத யாகத்தைச் செய்வதால் சொர்க்க லோகத்திற்குச் செல்கிறான். மூன்றையும் அறிந்து நசிகேத வித்யையைச் செய்பவன் மரணத்தை வெல்கிறான்.

உடல் விழும் முன்பே, அதாவது வாழும்போதே மரணத்தை வெல்வது என்றால் என்ன என்பதை அற்புதமாக விளக்குகிறார் ஸ்ரீசங்கரர். அவன் அறியாமையிலிருந்து விடுபடுகிறான்; ஆசை, வெறுப்பு போன்ற உணர்ச்சிகளின் பிடியிலிருந்து விடுபட்டு வாழ்கிறான் என்கிறார் அவர் (ம்ருத்யுபாசான் அதர்ம அஜ்ஞான ராக த்வேஷாதி லக்ஷணான்) அறியாமை, ஆசை போன்றவற்றின் வசப்பட்டு பிணைக்கிறது; தொடர்ந்த பிறவிக்கு வழியாகிறது. ஆசையோ வெறுப்போ அற்றவனாக வாழும்போது பிறவியற்றுப் போவதால் அது மரணத்தை வென்ற வாழ்க்கை ஆகிறது.

19. ஏஷ தேக்னிர் நசிகேத: ஸ்வர்க்யோ
யமவ்ருணீதா த்விதீயேன வரேண
ஏதமக்னிம் தவைவ ப்ரவக்ஷ்யந்தி ஜனாஸ
த்ருதீயம் வரம் நசிகேதோ வ்ருணீஷ்வ

நசிகேத: நசிகேதா; த்விதீயேன-இரண்டாவது; வரேண-வரத்தால்; யம்-எதனை; அவ்ருணீதா-கேட்டாயோ; ஸ்வர்க்ய-சொர்க்கத்தைத் தருவதான; ஏஷ-இந்த; அக்னி-யாகம்; தே-உனக்கு; உக்த; சொல்லப்பட்டது; ஏதம்-இந்த; அக்னிம்-யாகத்தை; ஜனாஸ-மக்கள்; தவ ஏவ-உனது பெயராலேயே; ப்ரவக்ஷ்யந்தி-அழைப்பார்கள்; நசிகேத-நசிகேதா; த்ருதீயம்-மூன்றாவது; வரம்-வரத்தை; வ்ருணீஷ்வ-கேள்

பொருள் : நசிகேதா! சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்கின்ற எந்த யாகத்தைப்பற்றி கேட்டாயோ அதை உனக்குச் சொன்னேன். இந்த யாகத்தை மக்கள் இனி உன் பெயராலேயே அழைப்பார்கள். இனி மூன்றாவது வரத்தைக் கேள்.

மூன்றாவது வரம்(20-29)

மரணத்திற்குப்பிறகு மனிதனின் நிலை: 20-22

இந்த உபநிஷதத்தின் மையக்கருவான மரணத்திற்குப் பிறகு மனிதனின் நிலை பற்றிய உபதேசம் இங்கிருந்து தொடங்குகிறது.

20. யேயம் ப்ரேதே விசிகித்ஸா மனுஷ்யே
ஸ்தீத்யேகே நாயமஸ்தீதி சைகே
ஏதத்வித்யாமனுசிஷ்ட்டஸ்த்வயாஹம்
வரணாமேஷவரஸ்த்ருதீய

ப்ரேதே மனுஷ்யே-மரணத்திற்குப் பிறகு; அஸ்தி-இருக்கிறான்; இதி-என்று; ஏகே-சிலரும்; அயம்-இது; ந அஸ்தி-இல்லை; இதி-என்று சிலரும்; யா இயம் இந்த-விசிகித்ஸா-சந்தேகம்; ஏதத்-இதனை; அஹம்-நான்; த்வயா-உன்னிடமிருந்து-அனுசிஷ்ட்ட-கேட்டு; வித்யாம்-தெரிந்துகொள்கிறேன்; ஏஷ-இது; வாராணாம்-வரங்களுள்; த்ருதீய-மூன்றாவது; வர-வரம்.

பொருள் : மரணத்திற்குப் பிறகு மனிதன் வாழ்கிறான் என்று சிலரும், இல்லை என்று சிலரும் கூறுகின்றனர். இந்தச் சந்தேகத்தை உன்னிடம் கேட்டுத் தெளிவுபெற விரும்புகிறேன். நான் கேட்க விரும்பும் மூன்றாவது வரம் இதுவே.

எமதர்மனின் பதில்

21. தேவைரத்ராபி விசிகித்ஸிதம் புரா
ந ஹி ஸுவிஜ்ஞேயமணுரேஷ தர்ம
அன்யம் வரம் நசிகேதோ வ்ருணீஷ்வ
மா மோபரோத்ஸீரதி மா ஸ்ருஜைனம்

நசிகேத:-நசிகேதா; அத்ர-இந்த விஷயத்தில்; தேவை: அபி-தேவர்களுக்கும்கூட; புரா-முன்னர்; விசிகித்ஸிதம்-சந்தேகம் உள்ளது; ஏஷ-இந்த; தர்ம-விஷயம்; அணு-நுண்மையானது; ந ஹி ஸுவிஜ்ஞேயம்-எளிதாக அறியக்கூடியதல்ல; அன்யம்-வேறு; வரம்-வரத்தை; வ்ருணீஷ்வ-கேட்டுக்கொள்; மா-என்னை; மா உபரோத்ஸீ-கட்டாயப்படுத்தாதே; ஏனம்-இதனை; மா-என்னை; அதிஸ்ருஜ-விட்டுவிடு.

பொருள் : நசிகேதா! இந்த விஷயத்தில் தேவர்களுக்கும்கூட சந்தேகம் உள்ளது. இந்த விஷயம் மிகவும் நுண்மையானது; எளிதாக அறியக்கூடியதல்ல. எனவே வேறு வரம் கேட்டுக்கொள். என்னைக் கட்டாயப்படுத்தாதே, விட்டுவிடு.

நசிகேதனின் பதில்

22. தேவைரத்ராபி விசிகித்ஸிதம் கில
த்வம் ச ம்ருத்யோ யன்ன ஸுஜ்ஞேயமாத்த
வக்தா சாஸ்ய த்வாத்ருகன்யோ ந லப்யோ
நான்யோ வரஸ்துல்ய ஏதஸ்ய கச்சித்

அத்ர-இந்த விஷயத்தில்; தேவை: அபி-தேவர்களுக்கும்; விசிகித்ஸிதம் கில-சந்தேகம் உள்ளதா; ம்ருத்யோ-எமதர்மனே; ந ஸுஜ்ஞேயம்-எளிதாக அறிய முடியாது; த்வம் ச-நீயும்; யத்-எதனால்; ஆத்த-சொல்கிறாயோ; அஸ்ய-இதனை; வக்த-உபதேசிப்பவர்; த்வாத்ருக்-உன்னைப்போல்; அன்ய-வேறொருவர்; ந லப்ய-கிடைக்க மாட்டார்; அன்ய-வேறு; கச்சித் வர-எந்த வரமும்; ஏதஸ்ய-இதற்கு; துல்ய-இணையாக; ந-ஆகாது.

பொருள் : இந்த விஷயத்தில் தேவர்களுக்கும் சந்தேகம் உள்ளதா! எமதர்மனே! இதனை எளிதாக அறிய முடியாது என்று நீயும் சொல்கிறாய். ஆனால் இதை உபதேசிப்பதற்கு உன்னைப்போல் வேறொருவர் கிடைக்க மாட்டார். வேறு எந்த வரமும் இதற்கு இணையாகவும் ஆகாது.

நசிகேதனைத் திசைதிருப்ப எமதர்மனின் முயற்சி : 23-25

23. சதாயுஷ: புத்ர பௌத்ரான் வ்ருணீஷ்வ
பஹூன் பசூன் ஹஸ்தி ஹிரண்யமச்வான்
பூமேர் மஹதாயதனம் வ்ருணீஷ்வ
ஸ்வயம் ச ஜீவ சரதோ யாவதிச்சஸி

சதாயுஷ: நூறாண்டு ஆயுள் உள்ள; புத்ர பௌத்ரான்-மகன்களையும் பேரன்களையும்; வ்ருணீஷ்வ-கேள்; பஹூன்-ஏராளம்; பசூன்-பசுக்கள்; ஹஸ்தி ஹிரண்யம்-யானை, பொன், அச்வான்-குதிரைகள்; பூமியில்; மஹத்-பரந்த; ஆயதனம்-அரசையும்; வ்ருணீஷ்வ-கேட்டுக்கொள்; யாவத்-எதுவரை; இச்சஸி-விரும்புகிறாயோ; சரத-வருடங்கள்; ஸ்வயம் ச-நீயும்; ஜீவ-வாழ்க.

பொருள் : நூறாண்டு ஆயுள் உள்ள மகன்களையும் பேரன்களையும் கேள். ஏராளம் பசுக்கள், யானை, பொன், குதிரை போன்றவற்றைக் கேள். பூமியில் பரந்த அரசைக் கேள். நீயும் எவ்வளவு விரும்புகிறாயோ அதுவரை வாழ்ந்துகொள்.

24. ஏதத் துல்யம் யதி மன்யஸே வரம்
வ்ருணீஷ்வ வித்தம் சிரஜீவிகாம்
மஹாபூமௌ நசிகேதஸ்த்வமேதி
காமானாம் த்வா காமபாஜம் கரோமி

ஏதத் துல்யம்-இதற்கு இணையான; வரம்-வரமாக; யதி மன்யஸே-நினைத்தால்; வ்ருணீஷ்வ-கேள்; வித்தம்-செல்வம்; சிர ஜீவிகாம் ச-நீண்ட ஆயுள்; நசிகேத-நசிகேதா; மஹா பூமௌ-பரந்த பூமியில்; த்வம்-நீ; ஏதி-இரு; த்வா-உன்னை; காமானாம்-ஆசைகளையெல்லாம்; காமபாஜம்-அனுபவிப்பவனாக; கரோமி-செய்கிறேன்.

பொருள் : நசிகேதா! இதற்கு இணையான வரம் என்று நீ எதையாவது கருதினால் அதைக் கேள். செல்வம், நீண்ட ஆயுள், பரந்த பூமியில் அதிபதியாக வாழ்க்கை என்று எதை வேண்டுமானாலும் கேள். உன்னை எல்லா ஆசைகளையும்  அனுபவிப்பவனாகச் செய்கிறேன்.

25. யே யே காமா துர்லபா மர்த்யலோகே
ஸர்வான் காமான்ச் சந்தத: ப்ரார்த்தயஸ்வ
இமா ராமா: ஸரதா: ஸதூர்யா
நஹீத்ருசா லம்பனீயா மனுஷ்யை
ஆபிர்மத்ப்ரத்தாபி: பரிசாரயஸ்வ
நசிகேதோ மரணம் மானுப்ராக்ஷீ

நசிகேத-நசிகேதா; மர்த்யலோகே-மானிட உலகில்; துர்லபா-அடைதற்கரிய; காமா-ஆசைகள்; யே யே-எவை எவை; ஸர்வான் காமான்-யுல்லா ஆசைகளையும்; சந்தத-விருப்பம்போல்; ப்ரார்த்தயஸ்வ-கேட்டுக்கொள்; ஸரதா-தேர்களுடனும்; ஸதூர்யா-வாத்தியக் கருவிகளுடனும்; ராமா-ஆண்களை மயக்குகின்ற; இமா-இந்தப் பெண்கள்; ஈத்ருசா-இத்தகைய பெண்கள்; மனுஷ்யை-மனிதர்களால்; ந லம்பனீயா: ஹி-அடையக் கூடியவர்கள் அல்ல; மத் ப்ரத்தாபி-என்னால் தரப்பட்ட; ஆபி-இவர்களால்; பரிசாரயஸ்வ-பணிவிடை பெற்றுக்கொள்; மரணம்-மரணத்தைப்பற்றி; மா அனுப்ராக்ஷீ-கேட்காதே

பொருள் : நசிகேதா! மானிட உலகில் அடைதற்கரிய ஆசைகள் எவையெவை உண்டோ அவை அனைத்தையும் உன் விருப்பம்போல் கேட்டுக்கொள் சாரதிகளுடன் தேர்களைத் தருகிறேன். வாத்தியக் கலைஞர்களைத் தருகிறேன். ஆண்களை மயக்குகின்ற இந்த தேவலோகப் பெண்களைத் தருகிறேன். இத்தகைய பெண்கள் மனிதர்களுக்குக் கிடைக்கக் கூடியவர்கள் அல்லவே! நான் தருகின்ற இவர்களால் நீ வேண்டிய பணிவிடை பெற்றுக்கொள். ஆனால் மரணத்தைப்பற்றி மட்டுமே கேட்காதே.

நசிகேதனின் ஆசையின்மை : 26-29

26. ச்வோபாவா மர்த்யஸ்ய யதந்தகைதத்
ஸர்வேந்த்ரியாணாம் ஜரயந்தி தேஜ
அபி ஸர்வம் ஜீவிதமல்பமேவ
தவைவ வாஹாஸ்தவ ந்ருத்ய கீதே

அந்தக-மரணதேவனே; ச்வோ பாவா-நிலையற்றவை; மர்த்யஸ்ய-மனிதனின்; ஸர்வ இந்த்ரியாணாம்-எல்லா புலன்களின்; யத் தேஜ-ஆற்றலையும்; தத் அவை; ஜரயந்தி-வீணாக்குகின்றன; ஸர்வம் ஜீவிதம் அபி-எல்லா வாழ்க்கையும்; அல்பம் ஏவ-குறுகியதே; தவ-உனது; வாஹா-குதிரைகளும்; ந்ருத்ய கீதே-ஆடல்களும் பாடல்களும்; தவ ஏவ-உன்னிடம் இருக்கட்டும்

பொருள் : மரணதேவனே! நீ கூறுகின்ற இன்பங்கள் அனைத்தும் நிலையற்றவை அவை மனிதனுடைய புலன்கள் அனைத்தின் ஆற்றலையும் வீணாக்குகின்றன. வாழ்க்கையோ குறுகியது. எனவே நீ சொன்ன குதிரைகள், ஆடல்கள், பாடல்கள் எல்லாம் உன்னிடமே இருக்கட்டும்.

உலகின் இன்பங்கள் நிலையற்றவை. அதாவது உலகப் பொருட்களிலிருந்து கிடைக்கும் இன்பம் நிலையாக இருக்காது. அந்த இன்பங்களைத் தொடர்ந்து எப்போதும் துன்பங்கள் வரும். அது மட்டுமல்ல, இன்பங்களை அனுபவிக்க அனுபவிக்க அது ஆற்றலை விரயம் செய்து புலன்களை அழிக்கின்றன. நம்மையும் அழித்து, துன்பங்களையும் விளைவாகக் கொண்டுவருகின்ற இந்த உலக இன்பங்களை நாடக் கூடாது. மனிதனின் ஆயுள் மிகவும் குறுகிறது. இறைவன் தந்துள்ள இந்தக் குறுகிய ஆயுளை அற்ப சுகங்களில் செலவிடக்கூடாது; உயர் லட்சியத்தை அடைவதற்காகவே பயன்படுத்த வேண்டும். இதனைப் புரிந்துகொண்டு, எமதர்மன் அளித்த சுகபோகங்களை மறுத்துவிட்டான் நசிகேதன்.

27. ந வித்தேன தர்ப்பணீயோ மனுஷ்யோ
லப்ஸ்யாமஹே வித்தமத்ராக்ஷ்ம சேத் த்வா
ஜீவிஷ்யாமோ யாவதீசிஷ்யஸி த்வம்
வரஸ்து மே வரணீய: ஸ ஏவ

மனுஷ்ய-மனிதன்; வித்தேன-பணத்தால்; ந தர்ப்பணீய-திருப்தி அடையக்கூடியவன் அல்ல-த்வா-உன்னை; அத்ராக்ஷ்ம சேத்-பார்த்ததால்; வித்தம்-செல்வம்; லப்ஸ்யாமஹே-பெறுவோம்; த்வம்-நீ யாவத்-எதுவரை; ஈசிஷ்யஸி-ஆள்கிறாயோ; ஜீவிஷ்யாம-வாழ்வோம்; மே-என்னால்; வரணீய-கேட்கத் தக்க; வர: து-வரமோ; ஸ ஏவ-அதுவே.

பொருள் : மனிதன் பணத்தால் திருப்தி அடையக்கூடியவன் அல்ல. உன்னை பார்த்ததால் வேண்டிய செல்வம் பெறுவது உறுதி. நீ ஆளும்வரை என் ஆயுளுக்கும் பஞ்சமில்லை. எனவே ஆயுளோ செல்வமோ எதுவும் எனக்கு வேண்டாம். நான் கேட்கத் தக்க வரம் அது ஒன்றே.

பத்து ரூபாய் கிடைத்தால் நூறு போதும் என்று தோன்றும் நூறு கிடைத்தால் ஆயிரம் சரி என்று தோன்றும். இவ்வாறு வளர்ந்துகொண்டே செல்வது பணத்தின்மீது உள்ள ஆசை என்று எழுதுகிறார் கேரளத்தில் வாழ்ந்த மகானான பூந்தானம். அதனால்தான் ஆசையை ஒரு சங்கிலி (நிகளம்) என்று குறிப்பிட்டார் அருணகிரி நாதர்( ஆசா நிகளம் துகளாயின பின் பேசா அனுபூதி பிறந்ததுவே), பணம் என்று மட்டுமல்ல, உலக இன்பங்கள் எதிலும் திருப்தி என்பது வராது. எமதர்மன் கொடுத்த அத்தனை செல்வத்தை அனுபவித்தாலும் விளைவு ஒன்றாகத்தான் இருக்கும்; அதாவது திருப்தி கிடைக்கப்போவதில்லை. எனவே அதை நாடிப் பலனில்லை,

புண்ணிய பாவங்களுக்கு ஏற்ப ஒருவரது ஆயுளை நிர்ணயிப்பவன் எமதர்மன். வேண்டிய காலம் வரை வாழ்வதற்கான வரத்தை நசிகேதனுக்கு அவனே அளித்துள்ளான். ஆனாலும் அந்தக் காலம் முடிந்தபின் இறக்கத்தான் வேண்டும். எனவே நீண்ட ஆயுளாலும் பலன் இல்லை. அதனால், மரணத்தைப்பற்றி தான் கேட்டதற்கு விடை வேண்டும், அது மட்டுமே வேண்டும் என்று சாதிக்கிறான் நசிகேதன்.

28. அஜீர்யதாமம்ருதானாமுபேத்ய
ஜீர்யன் மர்த்ய: க்வத ஸ்த: ப்ரஜானன்
அபித்யாயன் வர்ணரதி ப்ரமோதான்
அதிதீர்கே ஜீவிதே கோ ரமேத

அஜீர்யதாம்-மூப்பற்றவர்களும்; அம்ருதானாம்-மரணமற்றவர்களும்; உபேத்ய-அடைந்து; ப்ரஜானன்-அறந்து ஜீர்யன்-மூப்படையக்கூடிய; மர்த்ய-இறக்கக்கூடிய; க்வத; ஸ்த-கீழ் உலகங்களில் வாழ்கின்ற ஒருவன்; வர்ண ரதி ப்ரமோதான்-பாடல், உடல்சுகம்-இவற்றால் உண்டாகும் இன்பத்தை; அபி த்யாயன்-சிந்தித்து; அதி தீர்கே-நீண்ட காலமானாலும்; ஜீவிதே-வாழ்க்கையில்; க-யார்; ரமேத-ஆசைப்படுவான்.

பொருள் : மூப்பற்றவர்களும் மரணமற்றவர்களுமான உங்களை அடைந்து உண்மையை அறிந்துகொண்டேன். நானோ; மூப்பும் மரணமும் உள்ள கீழ் உலகில் வசிப்பவன்; பாடல், உடல்சுகம் முதலியவற்றால் உண்டாகும் இன்பம் என்ன என்பதைச் சிந்தித்து அறிந்தவன். எனவே எவ்வளவுதான் நீண்ட ஆயுள் தந்தாலும் அந்த வாழ்க்கையில் நான் ஆசை வைப்பேனா?

தேவர்கள் மூப்பற்றவர்கள், மரணமற்றவர்கள் என்று கூறப்படுகின்றனர். அதாவது நம்முடன் ஒப்பிடும் போது அவர்கள் இன்னும் நீண்ட காலம், மிக நீண்ட காலம் வாழ்கிறார்கள், ஆனால் அவர்களும் அநதக் காலம் முடிந்ததும் மீண்டும் பிறப்பிற்கு உள்ளாகியே தீர வேண்டும். உங்களை அடைந்து உண்மையை அறிந்துகொண்டேன் என்று நசிகேதன் குறிப்பிடுவது இதைத்தான். தேவர்களே ஒருநாள் மரணத்தைத் தழுவ வேண்டுமானால் மனிதனின் ஆயுள் எவ்வளவு சிறியது! அதனை இந்த நிலையற்ற உலக இன்பங்களில் செலவிடுவேனா என்பது நசிகேதனின் கேள்வி. மரணத்திற்குப் பின்னால் என்ன உள்ளது என்பதை மட்டுமே அறிய விரும்புகிறான் அவன்.

29. யஸ்மின்னிதம் விசிகித்ஸந்தி ம்ருத்யோ
யத்ஸாம்பராயே மஹதி ப்ரூஹி நஸ்தத்
யோயம் வரோ கூடமனுப்ரவிஷ்ட்டோ
நான்யம் தஸ்மான்னசிகேதா வ்ருணீதே

ம்ருத்யோ-மரண தேவனே; யஸ்மின்-எதைப்பற்றி; இதம் விசிகித்ஸந்தி-இந்த சந்தேகம் நிலவுகிறதோ; மஹதி-பெரும் பலனைத் தருகின்ற-ஸாம்பராயே-மறு உலக விஷயத்தில்; யத்-எது உண்டோ; தத்-அதை; ந-எங்களுக்கு; ப்ரூஹி-சொல்; ய: வர-எந்த வரம்; கூடம் அனுப்ரவிஷ்ட்ட-ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதோ; அயம்-இந்த; தஸ்மாத்-அதைவிட; அன்யம்-வேறு வரத்தை; நசிகேதா-நசிகேதன்; ந வ்ருணீதே-கேட்க மாட்டேன்.

பொருள் : மரண தேவனே! எந்த விஷயத்தில் இந்தச் சந்தேகம் நிலவுகிறதோ, மறுஉலக விஷயத்தைப் பற்றிய எதனை அறிந்தால் பெரும் பலன் கிடைக்குமோ, எந்த உண்மை மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதோ அதை நான் தெரிந்துகொள்ள வேண்டும். வேறு எந்த வரமும் எனக்கு வேண்டாம்.

இதி காடக உபநிஷதி ப்ரதம அத்யாயே ப்ரதமா வல்லீ இவ்வாறு கட உபநிஷதத்தில் முதல் அத்தியாயத்தில் முதல் பகுதி நிறைவுறுகிறது

மூன்று வரங்கள்: ஒரு கண்ணோட்டம்

நசிகேதன்

உயர் உண்மையை நாடுபவர்களுக்கு நசிகேதனின் கதை ஒரு கலங்கரை விளக்கம். அவர்களிடம் இருக்க வேண்டிய சில முக்கியமான குணங்கள் நசிகேதனின்மூலம் வெளிப்படுத்தப்படுகின்றன.

முதலாவதாக சிரத்தை(2) வெறும் நம்பிக்கை மட்டுமல்ல, அந்த நம்பிக்கையைச் சாதிக்கின்ற செயல்திறன்.

இரண்டாவது சுய மதிப்பு. தனது மதிப்பு நசிகேதனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அதாவது, தன்னைப்பற்றி அவன் அறிந்திருந்தான். சிரத்தை மிக்கவனான எனக்குச் சொல் என்று (13) அவன் சொல்வதிலிருந்து இதனை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. சிரத்தை உள்ளவரிடம் சொன்னால் அது வீண் போகாது. ஏனெனில் அதை அவன் செயல்படுத்துவான். தன்னால் செயல்படுத்த முடிந்ததையே அவன் கேட்பான். கேட்டதைச் செயல் படுத்துவான். தன்னிடம் அந்தப் பண்பு இருப்பதை, எமன் சொல்வதைக் கடைபிடிக்கின்ற திறமை தன்னிடம் இருப்பதை உணர்ந்திருந்தான் நசிகேதன். இதுவே சுய மதிப்பு என்பது.

அது மட்டுமின்றி, செல்வம், பதவி, பெண் என்று பல விஷயங்களைக் காட்டி திசைதிருப்ப எமதர்மன் முயற்சித்த போது இந்த இன்பம் என்ன என்பதைச் சிந்தித்து அறிந்தவன் நான்(28) என்று தைரியமாகக் கூறுகிறான் நசிகேதன். இதுவும் அவன் தன்னைப்பற்றி அறிந்திருந்தான், தன்னைப்பற்றிய உயர்ந்த மதிப்பு வைத்திருந்தான் என்பதையே காட்டுகிறது. சுயமதிப்பை ஆணவத்துடன் குழப்பிக்கொள்ளக் கூடாது. இல்லாத திறமைகளை இருப்பதாகக் காட்டிக் கொள்வதும், பலவீனங்களை மறைப்பதற்காக இடுவதுமான முகமூடியே ஆணவம். சுய மதிப்பு என்பது தன்னிடம் இருப்பதைப் புரிந்துகொள்வது. ஆணவம் பிறரைக் கீழாகப் பார்க்கும், சுய மதிப்பு அனைவரையும் சமமாகப் பார்க்கும். எனவே தன்னறிவு, அதன் விளைவாக வருகின்ற சுய மதிப்பு இரண்டும் உயர் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது.

அடுத்தது உண்மையை ஏற்றுக்கொள்ளல். வாஜசிரவஸ் நசிகேதனை மரண தேவனிடம் அனுப்பத் துணிந்தபோதும் கோபமோ ஆத்திரமோ அடையாமல் அதனை அப்படியே ஏற்றுக் கொண்டு ஆழ்ந்து சிந்திக்கிறான் அவன்(5,6) சூழ்நிலை கொண்டு வருபவற்றை, அவை நல்லவையானாலும் கெட்டவையானாலும், அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். உயர் உண்மையை நாடுபவன் ஒருபோதும் சூழ்நிலைகளை மாற்றியமைக்க முயற்சி செய்யக் கூடாது. எத்தகைய சூழ்நிலை வந்தாலும், உடனே மனத்தை உள்ளே திருப்பி அதனை அகவளர்ச்சிக்கான ஒரு படியாக மாற்றும் திறமை வேண்டும்.

அடுத்தது துணிச்சல்(10). எமனையே நேரில் சந்தித்துப் பேசுகின்ற துணிச்சலை நசிகேதனிடம் காண்கிறோம். பாதையில் எத்தனை இடர்கள் வந்தாலும் அத்தனையையும் எதிர்கொண்டு, தான் லட்சியமாகக் கொண்டதைச் சாதிப்பதற்கான துணிச்சல், உண்மையை நாடுபவனிடம் வேண்டும்.

கடைசியாக ஆசையின்மை(29). உயர் உண்மையை நாடுபவனிடம் உலகைப்பற்றிய, அதன் சுகபோகங்களைப் பற்றி தெளிவான கருத்து இருக்க வேண்டும். அப்போது மட்டுமே அவன் தனது லட்சியத்தை அடைய முடியும். உலகம், அதன் சுகபோகங்கள் என்றால் என்ன? அவற்றிற்கு வாழ்க்கையில் எந்த அளவு இடம் கொடுக்க வேண்டும் என்பது மிக முக்கியமான ஒன்று. உலகின் சுகங்கள் அத்தனையையும் எமதர்மன் கொடுத்த பிறகும் நசிகேதன் அவற்றை உதறிவிட்டு, லட்சியத்திலேயே குறியாக இருக்கிறான். ஏனெனில் அந்த சுகபோகங்களின் நிலையாமையை அவன் சிந்தித்து அறிந்திருக்கிறான்(28). எனவே உண்மையை நாடுபவனுக்கு உலகின் கவர்ச்சிகள் எதனாலும் நிலைகுலையாத மனம் வேண்டும்

மூன்று வரங்கள்

நசிகேதன் எமனிடம் கேட்கின்ற மூன்று வரங்களில் ஒரு தெளிவான, படிப்படியான லட்சிய நாட்டத்தைக் காண்கிறோம். உயர் வாழ்க்கையை, ஆன்மீக வாழ்க்கையை நாடுகிறோம் என்பதற்காக உலகின் உண்மையையோ சமுதாய உறவுகளையோ தூக்கி எறிய வேண்டும் என்பதில்லை. நசிகேதனின் முதல் வரம் தந்தை தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதாக இருந்தது. இது குடும்பத்தில் ஒரு நல்ல உறவு நிலவ வேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறது. பெற்றோருடனும் குடும்பத்தில் உள்ளவர்களிடமும் சரியான உறவு நிலவ வேண்டும்.

இரண்டாம் வரம் யாகம் பற்றியது. யாகங்களின் மூலம் இயற்கை சக்திகளுடன் நாம் தொடர்புகொள்கிறோம். நமக்கு வேண்டியவற்றை இயற்கை சக்திகளின்மூலம் சாதித்துக் கொள்கிறோம். அதாவது, இயற்கையைப் பேணுதல் சமுதாயத்துடனும் இயற்கையுடனும் இயைந்து வாழ நாம் கற்றிருக்க வேண்டும்.

மூன்றாம் வரம் உயர் உண்மையைப்பற்றியது

குடும்பத்துடனும் சமுதாயத்துடனும் இயற்கையுடனும் நல்ல உறவை வைத்துக்கொண்டே உயர் ஆன்மீக உண்மைகளை நாம் அடைய முடியும் என்பதை இந்த மூன்று வரங்களும் நமக்குக் காட்டுகின்றன.


Offline Anu

Re: உபநிஷதம்
« Reply #2 on: March 29, 2012, 12:59:33 PM »
மரணத்தை எதிர்கொள்வது எப்படி?

1.2 பிரித்திறந்து வாழ்!

மரணத்திற்குப் பிறகு மனிதனின் நிலை என்ன என்று கேட்டான் நசிகேதன். பலவிதங்களில் சோதித்து அவனது தகுதியை அறிந்த பிறகு சொல்லத் தொடங்குகிறான் எமதர்மன்.

மரணத்திற்குப் பின்னால் என்ன உள்ளது என்பதைப் பற்றி அறிய வேண்டுமானால் மரணத்தை எதிர் கொள்ள வேண்டும். இறக்கின்ற ஒவ்வொருவரும் மரணத்தை எதிர்கொள்வதில்லையா? இல்லை. பெரும்பாலோரும் மரணம் வருமுன்பு பயத்திலேயே செத்து விடுகின்றனர். எனவே அவர்கள் மரணத்தை எதிர்கொள்வதில்லை.

மரணத்தை எதிர்கொள்வது எப்படி?

வாழ்கையில் கவனம் செலுத்துவதன்மூலம். இந்த வாழ்க்கையைச் சிறப்பாக, உரிய முறையில் வாழ்பவனே இறைநிலையை அடைகிறான் (வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்) என்கிறார் தெய்வப் புலவர். வாழ்க்கை நம் முன் பல அனுபவங்களைக் கொண்டு வரும், சூழ்நிலைகளை உருவாக்கும், வாய்ப்புகளைத் தரும். அவற்றுள், நமது லட்சியத்திற்கானவற்றை மட்டும் ஏற்றுக் கொண்டு மற்றவற்றை விலக்கி வாழ அறிந்திருக்க வேண்டும். இவ்வாறு பிரித்தறிந்து வாழ்வதை அத்யாத்ம யோகம் என்று இந்த அத்தியாயத்தில் விளக்குகிறான் எமதர்மன் இவ்வாறு வாழத் தெரிந்தவனால் மரணத்தை எதிர்கொள்ள முடியும். மரணத்திற்கு அப்பால் உள்ளது என்ன என்பதை அறிய முடியும். 

எனவே வாழ்க்கையின் ஓர் அற்புதமான சித்திரத்துடன் தனது விளக்கத்தைத் தொடங்குகிறான் எமதர்மன்.

வாழ்க்கையின் இரண்டு கோணங்கள்(1-6)

பொதுவாக ஒருவனிடம் இருப்பவற்றை வைத்தே அவனை எடைபோடுகிறோம். வீடு, செல்வம், பதவி, அந்தஸ்து போன்ற புற வளர்ச்சிகளே அவனை நிர்ணயிக்கின்றன. ஆனால் அக வளர்ச்சி, உணர்வின் விரிவு என்று ஒன்று உள்ளது. மனிதன் அகத்திலும் வளர்கிறான். அன்பு, இரக்கம், விவேகம் போன்ற அவனது பண்புகள் விரிகின்றன. தன் உடம்பை, தன்னை மட்டுமே நேசித்தவன், தன் வீடு, தன் கிராமம், தன் நாடு, உலகம் என்ற பிரபஞ்சம் முழுவதையுமே தனதாகக் கண்டு, தானாகக் கண்டு நேசிக்கும் அளவிற்கு அவனது உணர்வு விரிகிறது.

இந்த அக வளர்ச்சிதான் உண்மையான வளர்ச்சி. புற வளர்ச்சிக்குக் காரணமாக அவனிடம் சேர்ந்தவை விலக நேர்ந்தால் அவன் பழையபடியே ஆகிவிட நேர்கிறது. ஆனால் அக வளர்ச்சியில் எதையும் இழக்கும் அபாயம் இல்லை.

அக, புற வளர்ச்சிகளுக்கான களம் உலகம் : 1-3

அக வளர்ச்சி, புற வளர்ச்சி இரண்டிற்குமான களமாக உள்ளது உலகம். அதாவது உலகம் இரண்டிற்கும் வாய்ப்பு தருகிறது.

1. அன்யச்ச்ரேயோ ன்யதுதைவ ப்ரேய
தே உபே நானார்த்தே புருஷம் ஸினீத
தயோ: ச்ரேய ஆததானஸ்ய ஸாது பவதி
ஹீயதேர்த்தாத் ய உ ப்ரேயோ வ்ருணீதே

ச்ரேய-மேலானது; அன்ய-வேறு; உத-மேலும்; ப்ரேய-சுகம் தருவது; அன்யத் ஏவ-வேறானது; தே உபே-அவை இரண்டும்; நானா அர்த்தே-வேறுபட்ட பலன்களைத் தந்து; புருஷம்-மனிதனை; ஸினீத-பிணைக்கின்றன; தயோ-அந்த இரண்டினுள்; ச்ரேய-மேலானதை; ஆததானஸ்ய-ஏற்றுக்கொள்பவனுக்கு; ஸாது-நன்மை; பவதி-உண்டாகிறது; ய-யார்; ப்ரேய: உ-சுகம் தருவதை; வ்ருணீதே-நாடுகிறானோ; ஸ:-அவன்; அர்த்தாத்-லட்சியத்திலிருந்து; ஹீயதே-வீழ்கிறான்.

பொருள் : மேலானது வேறு, சுகம் தருவது. அவை இரண்டும் வேறுபட்ட பலன்களைத் தந்து அவற்றின் மூலம் மனிதனைப் பிணைக்கின்றன. மேலானதை ஏற்றுக்கொள்பவனுக்கு நன்மை உண்டாகிறது. சுகம் தருவதை நாடுபவன் லட்சியத்திலிருந்து வீழ்கிறான்.

உலகையும் அது தரும் சுகபோகங்களையுமே முடிவாகக் கொண்டு அவற்றைத் தேடுபவர்கள் பலர்; அவை பாதையில் சில படிக்கற்கள் மட்டுமே என்று கண்டு உயர் லட்சியங்களை நாடுபவர்கள் சிலர். இரு சாராரின் முன்னாலும் உலகம் உள்ளது. முன்னது புற வளர்ச்சிக்கு உதவுகிறது, மேலானது. உலகின் சுகங்கள், அனுபவிக்கின்ற அந்த நேரத்திற்கு இன்பத்தைத் தந்தாலும் முடிவில் துயரத்தில் ஆழ்த்துகின்றன. உயர் லட்சியங்கள் ஆரம்பத்தில் சிரமமாக, துன்பம் தருபவையாக இருந்தாலும் முடிவில் பேரின்பத்தில் சேர்க்கின்றன. மேலோட்டமாக இன்பத்தை நாடுபவன் முடிவில் துன்பத்தல் ஆழ்கிறான் என்பதையே இந்த மந்திரம், அவன் லட்சியத்திலிருந்து வீழ்கிறான் என்று கூறுகிறது.

2. ச்ரேயச்ச ப்ரேயச்ச மனுஷ்யமேத
தௌ ஸம்பரீத்ய விவினக்தி தீர
ச்ரேயோ ஹி தீரோபி ப்ரேயஸோ வ்ருணீதே
ப்ரேயா மந்தோ யோக ÷க்ஷமாத் வ்ருணீதே

ச்ரேய: ச-மேலானதும்; ப்ரேய: ச-சுகம் தருவதும்; மனுஷ்யம்-மனிதனை; ஏத-அணுகுகின்றன; தீர;-அறிவாளி ; தௌ-அவற்றை; ஸம்பரீத்ய-ஆராய்ந்து; விவினக்தி-பாகுபடுத்துகிறான்; ப்ரேயஸ-சுகம் தருவதை விட்டு; ச்ரேய; ஹி-மேலானதையே; அபி வ்ருணீதே-தேர்ந்தெடுக்கிறான். மந்த-மூடன்; யோக ÷க்ஷமாத்-உடம்பின் வளர்ச்சி, பாதுகாப்பு ஆகியவற்றிற்காக; ப்ரேய:-சுகம் தருவனவற்றை; வ்ருணீதே-வேண்டுகிறான்.

பொருள் : மேலானது, சுகம் தருவது இரண்டும் மனிதனை அணுகுகின்றன. அறிவாளி அவற்றை ஆராய்ந்து, அவை இரண்டையும் பாகுபடுத்துகிறான்; சுகம் தருவனவற்றை விட்டுவிட்டு மேலானதைத் தேர்ந்தெடுக்கிறான். மூடன், உடம்பின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு சுகம் தருவனவற்றை நாடுகிறான்.

பாதையில் பணக்கட்டு ஒன்று கிடக்கிறது, அருகில் யாரும் இல்லை. அதை இறைவன் தந்தது என்று எடுத்து பையில் இட்டுக்கொண்டு எதுவும் அறியாயதுபோல் அங்கிருந்து அகலலாம், எடுத்து உரியவனைக் கண்டுபிடித்து அதைச் சேர்க்கலாம், எடுத்து நல்ல பணிகளில் செலவிடலாம், போலீஸ் ஸ்டேஷனில் தகவல் தெரிவிக்கலாம், நமக்கேன் வம்பு என்று அதை அங்கேயே விட்டுச் செல்லலாம். பொறுப்பு நம் கையில். அந்தப் பணத்தைப் பையில் இட்டுக் கொள்பவன் சுகம் பெறுகிறான்; ஆனால் அது திருட்டு என்பதால் மேலானதை இழக்கிறான்; இறைநெறியில் செல்வதற்கான தகுதியை இழக்கிறான். இவ்வாறு உலகம் வாய்ப்புகளைத் தருகிறது, சூழ்நிலைகளை உருவாக்குகிறது. நமது லட்சியம் என்ன, அந்த லட்சியத்திற்கான பாதை எது, இந்தச் சூழ்நிலையில் நான் எப்படி நடந்துகொண்டால் அது அந்த லட்சியத்தை அடையத்துணை செய்யும் என்பதை மனத்தில்கொண்டு செயல்பட வேண்டும். பிரித்தறிந்து வாழ்வது என்பது இதுவே.

3. ஸ த்வம் ப்ரியான் ப்ரியரூபாம்ச்ச காமான்
அபித்யாயன்  நசிகேதோ த்யஸ்ராக்ஷீ
ஸநதாம் ஸ்ருங்காம் வித்தமயீமவாப்தோ
யஸ்யாம் மஜ்ஜந்தி பஹவோ மனுஷ்யா

நசிகேத-நசிகேதா; ஸத்வம்-நீயோ; அபி த்யாயன்-நன்றாகச் சிந்தித்து; ப்ரியான்-செல்வங்களையும்; ப்ரியரூபான்-அழகிய பெண்களையும்; அத்யஸ்ராக்ஷீ-ஒதுக்கிவிட்டாய்; யஸ்யாம்-எந்தப் பாதையில்; பஹவ-பெரும்பாலான; மனுஷ்யா-மனிதர்கள்; மஜ்ஜந்தி-உழல்கிறார்களோ; வித்தமயீம்-செல்வத்தைக் குறிக்கோளாகக் கொண்டது; ஏதாம்-இந்த; ஸ்ருங்காம்-பாதையை; ந அவாப்த; -தேர்ந்தெடுக்கவில்லை.

பொருள் : நசிகேதா! நீயோ நன்றாகச் சிந்தித்து, செல்வங்களையும் அழகிய பெண்களையும் ஒதுக்கிவிட்டாய், எந்தப் பாதையில் பெரும்பாலான மனிதர்கள் உழல்கிறார்களோ அது செல்வத்தைக் குறிக்கோளாகக் கொண்டது. அந்தப் பாதையை நீ தேர்ந்தெடுக்கவில்லை.

இறைநெறியும் உலகியலும்

4. தூரமேதே விபரீதே விஷூசீ
அவித்யா யா ச வித்யேதி ஜ்ஞாதா
வித்யாபீப்ஸினம் நசிகேதஸம் மன்யே
ந த்வா காமா பஹவோலோகலுபந்த

யா-எது; அவித்யா-உலகியல்; யா-எது; வித்யா-இறைநெறி; இதி-என்று; ஜ்ஞாதா-அறியப்படுகின்றனவோ; ஏதே-இரண்டும்; தூரம்-வேறுபட்டவை; விபரீதே-நேர்மாறானவை; விஷூசீ-வேறான பாதைகளைப் பின்பற்றுபவை; பஹவ-பல; காமா-ஆசைகள்; த்வா-உன்னை; ந அலோலுபந்த-விலக்கவில்லை; நசிகேதஸம்-நசிகேதனை; வித்யாம் அபி-இறைநெறியில்; ஈப்ஸினம்-நாட்டமுடையவனாக; மன்பே-கருதுகிறேன்.

பொருள் : இறைநெறி, உலகியல் இரண்டும் வேறுபட்டவை, நேர்மாறானவை, வேறுவேறான பாதைகளைப் பின்பற்றுபவை. எந்த ஆசையும் உன்னை மேலான பாதையை நாடுவதிலிருந்து விலக்கவில்லை. எனவே நீ இறைநெறியில் நாட்டமுடையவன் என்று நான் கருதுகிறேன்.

வித்யை(இறை நெறி), அவித்யை(உலகியல்) இரண்டும் உள்ளன. அவித்யை மோகத்தில் ஆழ்த்துகிறது. காமமும் பணத்தாசையும் அதிலிருந்தே உண்டாகிறது, அது மனிதனை மோகத்தில் ஆழ்த்துகிறது. பக்தி, தயை, ஞானம், பிரேமை இவற்றைத் தோற்றுவிப்பது வித்யை. இது இறை நெயில் நம்மை அழைத்துச் செல்கிறது. என்று விளக்குகிறார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

உலகியல் வழிச் செல்பவர்களின் கதி: 5-6

5. அவித்யாயாமந்தரே வர்த்தமானா
ஸ்வயம் தீரா: பண்டிதம் மன்யமானா
தந்த்ரம்யமாணா: பரியந்தி மூடா
அந்தேனைவ நீயமானா யதாந்தா

அவித்யாயாம்-உலகியலின்; அந்தரே-நடுவில்; வர்த்தமானா-வாழ்பவர்கள்; ஸ்வயம்-தங்களை; தீரா-அறிவாளிகள்; பண்டிதம்-பண்டிதர்கள்; மன்யமானா-கருதுபவர்கள்; மூடா-மூடர்கள்; தந்த்ரம்யமாணா-குறுக்குவழிகளைப் பின்பற்றுபவர்கள்; அந்தேன-குருடனால்; நீயமானா-வழிகாட்டப்படுகின்ற; அந்தா யதா இவ-குருடனைப்போல்; பரியந்தி-உழல்கிறார்கள்.

பொருள் : உலகியலின் நடுவில் வாழ்கின்ற மூடர்கள் தங்களை அறிவாளிகள் என்றும் பண்டிதர்கள் என்றும் கருதி குறுக்கு வழிகளைப் பின்பற்றுகிறார்கள். குருடனால் வழிகாட்டப்பட்ட குருடனைப்போல் இவர்கள் மீண்டும்மீண்டும் பிறவிச் சுழலில் உழல்கிறார்கள்.

மேலானது என்று எமதர்மன் குறிப்பிடுகின்ற அகவளர்ச்சி அல்லது இறைநெறியில் குறுக்கு வழி எதுவும் கிடையாது. உலகில் சுக போகங்களை அனுபவித்து அல்லது குருவருளாலோ இறையருளாலோ புரிந்துகொண்டு, இந்த உலகம் போதும், இனி இறைவன் ஆசைகளை வைத்துக்கொள்ளலாம், கொஞ்சம் இறைவனையும் தேடலாம் என்றெல்லாம் கூறுபவர்கள் உண்மையை அறியாதவர்கள். சுயநலங்களுக்காக பிறருக்கு தவறான வழிகாட்டுபவர்கள். அவர்கள் காட்டும் பாதைகள் ஆரம்பத்தில் இதம் தருபவையாகத் தோன்றும். ஆனால் இறுதியில் படுகுழியிலேயே ஒருவனை ஆழ்த்தும். அத்தகைய வழிகாட்டுபவன். பின்பற்றுபவன் இருவருமே படுகுழியில் வீழ்கிறார்கள்
(குருட்டிகனை நீக்கும் குருவினைக்  கொள்ளார்
குருட்டினை நீக்கா குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டாம் ஆடி
குருடும் குருடும் குழிவிழுமாறே)என்று எச்சரிக்கிறார் திருமூலர்.

அக வளர்ச்சி நோக்கமாகக் கொண்ட இறைநெறி என்பது ஆரம்பத்தில் கடினமாகத் தெரிகிறது. ஆனால் இறுதியில் பேரின்பத்தைத் தருகிறது. எனவே குறுக்கு வழிகளை நாடாமல், சிரமமாக இருந்தாலும், உண்மையான வழிகளை நாட வேண்டும் என்பது இந்த மந்திரத்தின் கருத்து.

6. ந ஸாம்பராய: ப்ரதிபாதி பாலம்
ப்ரமாத்யந்தம் வித்தமோஹேன மூடம்
அயம் லோகோ நாஸ்தி பர இதி மானீ
புன: புனர் வசமாபத்யதே மே

ப்ரமாத்யந்தம்-குறுக்குவழியில் செல்கின்ற; வித்த மோஹேன-பணத்தாசையால்; மூடம்-அறிவிழந்த; பாலம்-மனப்பக்குவமற்றவனுக்கு; ஸாம்பராய;-மறுவுலகம்; ந ப்ரதிபாதி-புரிவதில்லை; அயம்-இந்த; லோக:-உலகம்; பர-வேறு; ந அஸ்தி-கிடையாது; இதி-என்று; மானீ -கருதுபவன்; புன: புன: மீண்டும் மீண்டும்; மே வசம்-என்னை; ஆபத்யதே-அடைகிறான்.

பொருள் : குறுக்குவழியில் செல்கின்ற, பணத்தாசையால் அறிவிழந்த. மனப்பக்குவமற்றவர்களுக்கு மறுவுலக உண்மைகள் புரிவதில்லை. இந்த உலகம்தான் எல்லாம், வேறு எதுவும் கிடையாது என்று கருதுகின்ற அவர்கள் மீண்டும் மீண்டும் என்னை அடைகிறார்கள்.

குருக்குவழிகளை நாடுபவர்கள் மீண்டும் மீண்டும் மரண தேவனிடம் செல்கிறார்கள், அதாவது பிறப்பு-இறப்புச் சுழலில் உழல்கிறார்கள். அவர்கள் உயர்ந்த கதியை அடைவதில்லை. ஏன்? ஏனெனில் அவர்களுக்கு உண்மை புரியவில்லை; உலகமும் அது தருகின்ற சுகங்களும்தான் எல்லாம், அவற்றை அனுபவிப்பதே லட்சியம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்; அக வளர்ச்சி, உயர் லட்சியம் எதையும் அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.

மரத்தால் செய்யப்பட்ட யானைச்சிலை ஒன்று உள்ளது. குழந்தை அதைப் பார்க்கும்போது யானை என்று பயப்படுகிறது. அங்கே அது மரத்தைக் காணவில்லை. மனவளர்ச்சி பெற்ற ஒருவன் அதே சிலையைக் காணும்போது அவன் பயப்படுவதில்லை. ஏனெனில் அங்கே அவன் யானையைக் காண்பதில்லை, மரப் பொம்மையைக் காண்கிறான். அதுபோல்தான் இந்த உலகமும். சுகபோகங்களும் காமமும் பணத்தாசையும் நம்மீது ஆதிக்கம் செலுத்தும் வரை உயர் லட்சியங்களோ அகவுலகமோ எதுவும் நம்  சிந்தையில் வருவதில்லை. அக வளர்ச்சி பெற்று உயர் லட்சியங்களை ஏற்று இறைநிலையை அடையும்வரை பிறவிச் சுழலிலிருந்து விடுபட முடியாது என்கிறது இந்த மந்திரம்.

உண்மையான குருவும் சீடரும் அபூர்வம்: 7-10

7. ச்ரவணாயாபி பஹுபிர்யோ ந லப்ய
ச்ருண்வந்தோபி பஹவோ யம் ந வித்யு
ஆச்சர்யோ வக்தா குசலோஸ்ய ஸப்தா
ஆச்சர்யோ ஜ்ஞாதா குசலானுசிஷ்ட்ட

ய:-எதனை; பஹுபி: பலரால்; ச்ரவணாய அபி-கேட்கவும்; ந லப்ய:-முடியவில்லையோ; ச்ருண்வந்த: அபி-கேட்டபோதிலும்; பஹவ-பலரால்; யம்-எதனை; ந வித்யு: அறிய முடியவில்லையோ; அஸ்ய-இதனை; வக்தா-உபதேசிப்பவரும்; ஆச்சர்ய:-அபூர்வம்; லப்தா-கேட்பவரும்; குசல:-அபூர்வம்; குசல அனுசிஷ்ட்ட: சிறந்த ஒருவரைப் பின்பற்றி; ஜ்ஞாதா அறிபவரும் ஆச்சர்ய-அபூர்வம்.

பொருள் : எதைப்பற்றி பலரால் கேட்க முடியவில்லையோ, கேட்கும் பலரால் எதனை அறிய முடியவில்லையோ அந்த ஆன்மாவைப்பற்றி உபதேசிப்பவரும் அபூர்வம், கேட்பவரும் அபூர்வம். அத்தகைய அபூர்வமான ஒருவரைப் பின்பற்றி அதனை அறிபவரும் அபூர்வம்.

ஆன்மா, ஆன்மீகம், கடவுள், அக வளர்ச்சி, உணர்வு போன்ற உயர் உண்மைகளைப்பற்றி கேட்கும் வாய்ப்பு பெரும்பாலோருக்கும் கிடைப்பதில்லை என்பது உண்மை தான். ஆனால் நாம் உயர் உண்மைகளை உணர்வதற்கான தகுதி பெறும்போது, நமது மனம் அதற்கான பக்குவம் பெறும்போது அந்த உண்மைகளை உபதேசிப்பவர் வந்து சேர்வார் என்பதும் உண்மை. வயல் தயாரானதும், விதை வந்து சேர்ந்தேயாக வேண்டும் என்பது இயற்கையின் அறிய இயலாத நியதியாகும்........ நாம் எவ்வளவோ விரும்பியும், நமக்கு உண்மை இன்னும் கிடைக்கவில்லை என்று நாம் அங்கலாய்த்துக் கொள்ளும்போது, நமது முதல் கடமை, நம்முடைய  உள்ளத்தையே ஆராய்ந்து பார்த்து, உண்மையிலேயே நாம் உண்மையை விரும்புகிறோமோ என்று கண்டுபிடிப்பதுதான். பெரும்பாலோர் விஷயத்தில் நாம் இன்னும் தகுதி பெறவில்லை, நமக்கு உண்மையான ஆன்மீக தாகம் இன்னும் ஏற்படவில்லை என்பதையே காண்போம். என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

தகுதியான ஒருவர் வந்து அவரிடம் உபதேசம் பெற்றாலும், நமது நம்பிக்கை திடமாக இல்லாவிட்டால் பயனில்லை. என்னால் உயர் உண்மைகளை அடைய முடியும் என்ற நம்பிக்கை வேண்டும். இவரால் எனக்கு வழி காட்ட முடியும் என்ற நம்பிக்கை வேண்டும். இந்த வழி என்னை என் லட்சியத்திற்கு எடுத்துச் செல்லும் என்ற நம்பிக்கை வேண்டும். இவற்றுள் ஒன்று ஊசலாடினாலும் நமது முன்னேற்றம் தடைபடும். எனவேதான் தகுதி வாய்ந்த குருவும் அபூர்வம், தகுதி வாய்ந்த சீடனும் அபூர்வம் என்று இந்த மந்திரம் கூறுகிறது. ஆன்மீகத்தைப் பற்றிப் பேசுபவர் அற்புதமானவராக இருக்க வேண்டும். கேட்பவரும் அப்படியே இருக்க வேண்டும். இருவரும் சிறப்பான, அசாதாரணமானவர்களாக  இருக்கும்போது மட்டுமே மிகச் சிறந்த ஆன்மீக வளர்ச்சி ஏற்படுகிறது. இல்லாவிட்டால் ஏற்படாது. இவர்களே உண்மையான குருமார்கள், இவர்களே உண்மையான சீடர்கள். இவர்களோடு ஒப்பிடும்போது மற்றவர்கள் ஆன்மீகத்தோடு விளையாடுகிறார்கள்; தங்கள் அறிவாற்றலுக்குப் பயிற்சி கொடுக்கிறார்கள்; தங்கள் ஆர்வத்தைச் சிறிது தீர்த்துக் கொள்கிறார்கள்; ஆனால் உண்மையில், இன்னும் வெளிவிளிம்பில் நின்றுகொண்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும் என்று விளக்குகிறார் சுவாமி விவேகானந்தர்.

8. ந நரேணாவரேண ப்ரோக்த ஏஷ
ஸுவிஜ்ஞேயோ பஹுதா சிந்த்யமான
அனன்ய ப்ரோக்தே கதிரத்ர நாஸ்தி அணீயான்
ஹ்யதர்க்யம் அணுப்ரமாணத்

ஏஷ-இந்த ஆன்மா; அவரேண நரேண-உலகியல் மனிதனால்; ப்ரோக்த-கூறப்படும்போது: ந ஹி ஸுவிஜ்ஞேய-நன்றாக அறியப்படுவதில்லை; பஹுதா -பலவிதமாக; சிந்த்யமான-கருதப்படுகிறது; அனன்ய-அனுபூதி பெற்றவரால்; ப்ரோக்தே-உபதேசிக்கப்படும் போது; அத்ர-இந்த விஷயத்தில்; கதி-குழப்பம்; ந அஸ்தி-இல்லை; அணு ப்ரமாணாத்-அணுவைவிட-அணீயாள்-நுண்ணியது; அதர்க்யம்-வாதங்களுக்கு அப்பாற்பட்டது.

பொருள் : உலகியல் மனிதர்கள் கூறும் வழிகளால் இந்த ஆன்மாவை அறிய முடியாது; ஏனெனில் அவர்கள் பலவிதமாகக் கூறுகின்றனர். அனுபூதி பெற்றவனின் உபதேசங்களைப் பின்பற்றினால் குழப்பம் இல்லை. இந்த ஆன்மா அணுவைவிட நுண்ணியது. எனவே வாதங்களுக்கு அப்பாற்பட்டது.

ஆன்மா அனுபவித்திற்கு உரியது; ஆராய்ச்சிக்கோ வாதங்களுக்கோ உரியது அல்ல. கடலை நேரில் காணாத ஒருவனுக்கு, எவ்வளவு விளக்கினாலும் அவனால் கடலைப் புரிந்துகொள்ள முடியாது. அதுபோலவே ஆன்மாவையும் விளக்கங்களால் புரிந்துகொள்ள முடியாது. ஆன்மா என்ற ஒன்று உண்டு. அது பெரியது, அது சிறியது என்றெல்லாம் பல விளக்கங்களை நூல்களில் காண முடியும். அவற்றையும் படித்துவிட்டு விளக்க முயன்றால் அது சரியான விளக்கமாக அமையாது, அந்த விளக்கத்தைக் கேட்டு அதைப் பின்பற்ற முயற்சிப்பவனும் 1.2.5-இல் கண்டதுபோல் படுகுழியிலேயே வீழ்வான்.

ஆனால் ஆன்மாவை அனுபூதியில் அறிந்தவன் சரியான வழியைக் காட்டுவான். அந்த வழியில் செல்பவனும் அதனை அடைவான்.

நசிகேதனின் மனவுறுதி: 9-11

9. நைஷா தர்க்கேண மதிராபனேயா
ப்ரோக்தான்யேனைவ ஸுஜ்ஞானாய ப்ரேஷ்ட்ட
யாம் த்வமாப: ஸத்யத்ருதிர் பதாஸி
த்வாத்ருங் நோ பூயாந்நசிதேத: ப்ரஷ்ட்டா

ப்ரேஷ்ட்ட-அன்பற்குரியவனே; த்வம்-நீ யாம்-எந்த அறிவை; ஆப:-அடைந்துள்ளாயோ; ஏஷா -இந்த; மதி-அறிவு; தர்க்கேண-வாதங்களினால்; ந ஆபனேயா-அடையக் கூடியது அல்ல; அன்யேன ஏவ-மற்றவரால்; ப்ரோக்தா-உபதேசிக்கப்படும்போது; ஸுஜ்ஞானாய-மேலான ஞானத்திற்கு; ஸத்யத்ருதி; பத அஸி-உண்மையில் உறுதி உடையவனாக இருக்கிறாய்; நசிகேத:-நசிகேதா; ந-எங்களுக்கு; த்வாத்ருக்-உண்னைப்போல்; ப்ரஷ்ட்டா-மாணவன்; பூயாத்-உண்டாகட்டும்.

பொருள் : அன்பிற்குரியவனே! நீ அடைந்துள்ள இந்த அறிவு வாதங்களினால் அடையக்கூடியது அல்ல. உண்மையை உணர்ந்த ஒருவர் உபதேசித்து, அதைப் பின்பற்றும்போது அது ஒருவனை மேலான ஞானத்திற்கு அழைத்துச் செல்கிறது. நசிகேதா! உண்மையை அடைவதில் நீ உறுதி உடையவனாக இருக்கிறாய். உன்னைப்போன்ற மாணவர்கள் எங்களுக்குக் கிடைக்க வேண்டும்.

ஒரு லட்சியத்தை எடுத்துக்கொண்டால் அதனை அடைவதற்கான உறுதி வேண்டும் வழியில் எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றைத் தகர்த்தெறிந்து முன்னேறுகின்ற ஆற்றல் வேண்டும். அத்தகைய ஒருவனே லட்சியத்தை அடைவான். நசிகேதன் மரணத்திற்கு அப்பாலுள்ள  உண்மையை அறிய வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டான். அதிலிருந்து அவனை விலக்குவதற்காக எமன் எத்தனையோ ஆசைகளைக் காட்டினான். அவை அனைத்தையும் மறுத்துவிட்டு உண்மையை அடைய வேண்டும் என்ற ஒன்றிலேயே உறுதியாக இருந்தான் நசிகேதன். அத்தகைய மாணவர்கள் தனக்கு வேண்டும் என்று கூறி அவனைப் புகழ்கிறான் எமதர்மன்.

10. ஜானாம்யஹம் சேவதிரித்யநித்யம்
ந ஹ்யத்ருவை: ப்ராப்யதே ஹி த்ருவம் தத்
ததோ மயா நசிகேதச் சிதோக்னி
அநித்யைர் த்ரவ்யை: ப்ராப்தவானஸ்மி நித்யம்

சேவதி-வினைப்பயன்கள்; அநித்யம்-நிலையற்றவை; இதி-என்று; அஹம்-நான்; ஜானாமி-அறிவேன்; அத்ருவை; -நிலையற்ற பொருட்களால்; த்ருவம்-நிலையான; தத்-அந்த ஆன்மா; ந ப்ராப்யதே ஹி-அடையப்படாது; தத:-அதனால்தான்; அநித்யை: த்ரவ்யை யாகத்தை; சித-செய்து; நித்யம்-எம பதவியை; ப்ராப்தவான் அஸ்மி-அடைந்திருக்கிறேன்.

பொருள் : வினைப்பயன்கள் நிலையற்றவை என்று நான் அறிவேன். நிலையற்ற அவற்றால் ஆன்மாவை அடைய முடியாது. அதனால்தான் நிலையற்ற பொருட்களால் நசிகேத யாகத்தைச் செய்த நான் எம பதவியை அடைந்திருக்கிறேன்.

நாம் செய்கின்ற நல்ல மற்றும் தீய செயல்களால் விளைபவை வினைப்பயன்கள். எவ்வளவு நல்ல செயலாக இருந்தாலும், அதன் விளைவாக எவ்வளவு உயர்ந்த சொர்க்க பதவி கிடைத்தாலும் அது நிலையற்றதே. ஏனெனில் புண்ணியம் நிறைவுற்றதும் பூமியில் பிறந்தேயாக வேண்டும். ஆசைகளற்ற நிலையை அடையும்போது மட்டுமே பிறப்பு-இறப்பு என்னும் சுழலிலிருந்து விடுபட்டு நிலையான இறைவனை அடைய முடியும்.

இங்கே எமதர்மன் தன்னையே உதாரணமாகக் காட்டுகிறான். நசிகேத யாகத்தைச் செய்ததால் தனக்கு சொர்க்கத்தில் பதவி, அதாவது எம பதவி கிடைத்துள்ளது என்கிறான் அவன். அவனது புண்ணிய காலம் தீர்ந்ததும் இந்த எமபதவியும் போய்விடும்.

நிலையற்ற பொருட்களால் என்று எமன் இங்கே குறிப்பிடுவதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஹோம குண்டம், விறகு, நெய், போன்ற புறப்பொருட்களால் செய்த யாகத்தை எம தர்மன் இங்கே குறிப்பிடுகிறான். இது நிலையற்ற சொர்க்க பதவியையே தரும். அதே யாகத்தை ஓர் அக யாகமாக, ஆன்மீக சாதனையாக, ஒரு வித்யையாகச் செய்யும்போது அது நிலையான முக்திப்பேற்றைத் தருகிறது. அந்த சாதனையையே 12-ஆம் மந்திரம் விளக்குகிறது.

11. காமஸ்யாப்திம் ஜகத: ப்ரதிஷ்ட்டாம்
க்ரதோரனந்த்யமபயஸ்ய பாரம்
ஸ்தோமம் மஹதுருகாயம் ப்ரதிஷ்ட்டாம் த்ருஷ்ட்வா
த்ருத்யா தீரோ நசிகேதோ த்யஸ்ராக்ஷீ

நசிகேத-நசிகேதா, காமஸ்ய-ஆசைகளின்; ஆப்திம்-நிறைவிடம்; ஜகத-உலகின்; ப்ரதிஷ்ட்டாம்-ஆதாரமானது; க்ரதோ-யாகங்களின்; அனந்த்யம்-அளவற்ற பலனாக இருப்பது; அபயஸ்ய-பயமின்மைக்கு; பாரம்-மேலான இடமானது; ஸதோம-போற்றத் தக்கது; மஹத்-மகிமை வாய்ந்தது; உருகாயம்-நீண்ட காலம் நிலைத்திருப்பது; ப்ரதிஷ்ட்டாம்-மேலானது; த்ருஷ்டவா-அறிந்து; தீர-புத்திசாலியான நீ; த்ருத்யா-உறுதியுடன்; அத்யஸ்ராக்ஷீ-மறுத்துவிட்டாய்.

பொருள் : நசிகேதா! சொர்க்க லோகம் ஆசைகளின் நிறைவிடம், உலகின் ஆதாரம், யாகங்களின் பலனாகக் கிடைக்கின்ற அளவற்ற இன்பங்களின் இருப்பிடம், பயமின்மையின் உறைவிடம், போற்றத் தக்கது, மகிமை வாய்ந்தது, நீண்ட காலம் நிலைத்திருப்பது, மேலானது. புத்திசாலியான நீ(இந்த உண்மைகளை அறிந்தும், அது நிலையற்றது என்பதற்காக) அதனை உறுதியுடன் மறுத்துவிட்டாய்.

பூமியில் அனுபவிக்கின்ற சுகபோகங்கள் போதாமல் சொர்க்கத்தை நாடுகிறான் மனிதன். எனவே சொர்க்கம் என்பது அனைத்து ஆசைகளும் நிறைவேறுகின்ற இடமாகக் கருதப்படுகிறது.

பிரபஞ்சத்தை இயக்குகின்ற பல்வேறு சக்திகள் தேவர்களாக உருவகிக்கப்பட்டிருப்பதை 1.1.1 விளக்க வுரையில் கண்டோம். யாகங்களின்மூலம் மனிதர்கள் தேவர்களைப் பேண வேண்டும், பதிலாக தேவர்கள் மழை, காற்று முதலானவற்றின்மூலம் மனித குலத்தை வளர்ப்பார்கள். இந்தச் சுழற்சியில் ஏற்றத் தாழ்வு ஏற்படும்போது இயற்கை வளம் குன்றுகிறது. எனவேதான் சொர்க்கம் உலகிற்கு ஆதாரமாகக் கூறப்பட்டது.

நசிகேத வித்யை (12-17)

புற யாகத்தால் தனக்கு எம பதவி மட்டுமே கிடைத்தது(1.2.10) என்றும், இத்தகைய உலகங்களின் நிலையாமையை உணர்ந்த நசிகேதன் அவற்றை மறுத்து விட்டான் என்றும் (1.2.11) கூறிய எமதர்மன் அக யாகத்தைப் பற்றி அதாவது நசிகேத வித்யையைப்பற்றி கூற ஆரம்பிக்கிறான்.

அந்த அக்கினி இதயக் குகையில் உள்ளது. (1.1.13) என்பது நசிகேத வித்யையின் அடிப்படைக் கருத்தாக உள்ளது. அந்த இதயக் குகை பற்றிய விளக்கம் ஆரம்பிக்கிறது.

இதயக் குகை

12. தம் துர்தர்சம் கூடமனுப்ரவிஷ்ட்டம்
குஹாஹிதம் கஹ்வரேஷ்ட்டம் புராணம்
அத்யாத்ம யோகாதிகமேன தேவம்
மத்வா தீரோ ஹர்ஷ சோகௌ ஜஹாதி

துர்தர்சம்-சிரமப்பட்டு அடைய வேண்டியது; கூடம்-மறைவான இடத்தை; அனுப்ரவிஷ்ட்டம்-அடைந்தது; குஹாஹிதம்-இதயக் குகையில் உள்ளது; கஹ்வரேஷ்ட்டம்-இருண்ட பகுதியில் உள்ளது; தீர-புத்திவிழிப்புற்றவன்; புராணம்-பழமையானது; தம்-அந்த; வேதம்-ஒளிமயமானதை; அத்யாத்ம யோக அதிகமேன-அத்யாத்ம யோகத்தால்; மத்வா-தியானித்து; ஹர்ஷ சோகௌ-இன்ப துன்பங்களை; ஜஹாதி-கடக்கிறான்.

பொருள் : நீ கேட்ட ஆன்மா சிரமப்பட்டு அடைய வேண்டியது, மறைவான இடத்தில் இருப்பது, இதயக் குகையில் ஒளிர்வது, இருண்ட பகுதியில் உள்ளது, பழமையானது. புத்தி விழிப்புற்றவன் ஒளிமயமான அந்த ஆன்மாவை அத்யாத்ம யோகத்தால் தியானித்து இன்பதுன்பங்களைக் கிடக்கிறான்.

நம்முள்ளே இருக்கின்ற, நமக்கு ஆதாரமான ஆன்மா எளிதாக அறியத்தக்கது அல்ல. புறமுகமாக இயங்குகின்ற புலன்களை அகமுகமாக்கி ஆன்மாவைத் தேடுவது அவ்வளவு எளிய காரியம் அல்ல. எனவேதான் அதனை சிரமப்பட்டு அடைய வேண்டியது என்று இந்த உபநிஷதம் குறிப்பிடுகிறது.

இதயக் குகையில் ஆன்மா இருப்பதாக ஏற்கனவே (1.1.14) கண்டோம். ஆனால் இதயக் குகை என்ற ஒன்று இருப்பதாகவே நாம் அறிவதில்லையே, ஏன்? இதனைச் சற்று விரிவாக அறிய வேண்டியது அவசியம்.

இதயக் குகைபற்றி பேசப்படுகிறது இது எந்த இதயம்? லப்டப் என்று துடித்துக் கொண்டிருக்கின்ற பவுதீக இதயம் அல்ல இது. இது ஆன்மீக இதயம். இதற்கு மூன்று அடையாளங்களைச் சொல்கிறது நாராயண ஸூக்தம். ஒன்று, தொப்புளுக்கு மேலே ஒரு சாண் தூரத்தில் உள்ளது, ஆனால் அது சற்று இடது புறம் உள்ளது. ஆனால் ஆன்மீக இதயம் நடுவில் உள்ளது. இரண்டு, சுடர் வரிசையால் சூழப்பட்டுள்ளது. மூன்று, அந்த இதயம் பிரகாசிக்கிறது.(அதோ நிஷ்ட்ட்யா விதஸ்த்யாந்தே நாப்யாமுபரி திஷ்ட்டதி ஜ்வாலமாலாகுலம் பாதீ விச்வஸ்யாயதனம் மஹத் நாராயண ஸூக்தம், தைத்திரீய ஆரண்யாகம், 4.10.13.7). இந்த மூன்று அடையாளங்களும் பவுதீக இதயத்திற்குப் பொருந்தாது. இந்த ஆன்மீக இதயம்தான் இதயக் குகை. ஆனால் இதனை நாம் உணர்வதில்லையே! உணர்வதில்லை. ஆனாலும் அது அங்கே உள்ளது. இதுவே புத்தி, தீ; இதயத் தாமரை, மூன்றாம் கண் ஞானக் கண் என்றெல்லாம் சாஸ்திரங்களில் கூறப்படுகிறது. மிகப் பெரும்பாலோரிடம் இந்த ஆன்மீக இதயம் மலராமல் அரும்பாகவே உள்ளது. இதனால்தான் இது குகை, இருண்ட பகுதி, மறைவான இடம் என்றெல்லாம் கூறப்பட்டது முதலில் அதை மலரச் செய்ய வேண்டும், உணர வேண்டும்.

இதயக் குகையை உணர்வதற்கான ஒரு வழியாக இந்த உபநிஷதம் கூறுவது அத்யாத்ம யோகம். யோகம் என்றால் பொருந்துதல் அல்லது இணைதல். அத்யாத்ம யோகம் என்றால் ஆன்மாவுடன் இணைதல். புறப்பொருட்களை விட்டுவிட்டு அகத்தை நாடுந்தோறும் நாம் மேலும்மேலும் இதயக் குகையை உணர்வோம். புறப்பொருட்களிலிருந்து விலகவிலக, நம்முள் புற உலகால் பாதிக்கப்படாத அகஉலகம் ஒன்று இருப்பதை நாம் உணர்வோம். நம்முள் உள்ள இந்த அமைதிப் பிரதேசத்தை உணரத் தொடங்கிவிட்டது புற உலகம் நம்மைப் பாதிப்பது படிப்படியாகக் குறைத்து விடும். இதையே இந்த மந்திரம் இன்ப துன்பங்களைக் கடக்கிறான் என்று கூறுகிறது.

அத்யாத்ம யோகப் பயிற்சி

13. ஏதச்ச்ருத்வா ஸம்பரிக்ருஹ்ய மர்த்ய
ப்ரவ்ருஹ்ய தர்ம்யமணுமேதமாப்ய
ஸ மோததே மோதனீயம் ஹி லப்த்வா
விவ்ருதம் ஸத்ம நசிகேதஸம் மன்யே

ஏதத்-இந்த உண்மையை; ச்ருத்வா-கேட்டு; ஸம்பரிக்ருஹ்ய-ஆராய்ந்து; தர்ம்யம்-ஆன்மாவை; ப்ரவ்ருஹ்ய-பிரித்து; ஏதம்-இந்த; மோதனீயம்-ஆனந்தம் நிறைந்த; அணும்-அணு போன்ற ஆன்மாவை; ஆப்ய-அடைந்து; ஸ; மர்த்ய-மனிதன்; மோததே-மகிழ்கிறான்; ஸத்ம-அந்தப் பாதை; நசிகேதஸம்-நசிகேதனாகிய உனக்கு; விவ்ருதம்-திறந்திருப்பதாக; மன்யே-நினைக்கிறேன்.

பொருள் : இந்த உண்மையைத் தகுந்த குருவிடமிருந்து கேட்டு, ஆராய்ந்து அறிய வேண்டும். பிறகு, உடம்பிலிருந்து அதனைப் பிரித்து உணர வேண்டும். அணு போன்றதும், ஆனந்தம் நிறைந்ததுமான ஆன்மாவை இவ்வாறு பிரித்தறிபவன் ஆனந்தம் பெறுகிறான். நசிகேதா! உனக்கு அந்தப் பாதை திறந்திருப்பதாக நினைக்கிறேன்.

தலைவவி வந்தால் தலைவலி மாத்திரை சாப்பிடுகிறோம். இது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இது நோயை நிரந்தரமாக குணப்படுத்துவதற்கான வழி அல்ல, அதற்கு டாக்டரை அணுக வேண்டும். தலைவலிக்கான காரணத்தை ஆராய்ந்து அதற்குரிய மருந்தைத் தர அவரால் மட்டுமே முடியும். அவரது ஆலோசனைப்படி சிகிச்சை செய்தால் தலைவலியை முற்றிலுமாக குணப்படுத்த முடியும். அதுபோல்தான் அகவுலக உண்மைகளும், ஆன்மா, கடவுள் போன்ற விஷயங்களும் பல நூல்களில் காணப்படலாம், பலர் சொல்ல கேட்கவும் செய்திருக்கலாம். ஆனால் இவற்றை அனுபவித்து அறிந்த, ஆன்மாவை அனுபூதியில் உணர்ந்த, இறைவனை நேரடியாகக் கண்ட ஒருவரிடமிருந்து இந்த உண்மைகளை அறிந்தால் மட்டுமே அது நம்மைச் சரியான வழியில் அழைத்துச் செல்லும். அத்தகைய ஒருவரே குரு எனப்படுகிறார். எனவே உயர் வாழ்க்கை அல்லது ஆன்மீக வாழ்க்கைக்கு முதல் தேவை தகுந்த குரு. அவரிடமிருந்து நேரடியாக உண்மைகளைப் பெற வேண்டும்.

அடுத்ததாக குருவிடமிருந்து பெற்ற உண்மைகளை நன்றாக ஆராய்ந்து அதனை நமக்குரியதாக்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு மனத்தளவில் உடம்பு வேறு ஆன்மா வேறு என்று பிரித்தறிந்து பழக வேண்டும். இவ்வாறு தொடர்ந்து மனத்திற்குப் பயிற்சி அளிப்பது ஆரம்பகால அடிப்படைப் பயிற்சிகளுள் ஒன்றாகும். சாதாரணமாக நமது வாழ்வில் உடம்பே எல்லாமாக இருக்கிறது. உடம்பே எல்லாம், அதைத் தவிர எதுவுமில்லை என்பதை அடிப்படையாக வைத்தே நமது வாழ்க்கை செல்கிறது. ஆனால் உடம்பு ஒரு கருவி மட்டுமே, வாழ்க்கை என்னும் மாபெரும் பயணத்தில் நாம் அணிகின்ற ஒரு சட்டை மட்டுமே உண்மையான நாம் என்பது இந்த உடம்பினுள் ஒளிர்கின்ற ஆன்மா என்பதை மனத்திற்குப் புரியவைக்க வேண்டும்.

நசிகேதனைப் பொறுத்தவரை இந்த மூன்று படிகளையும் கடந்து ஆன்மீக பாதையில் பயணம் செய்யத் தயாராக இருக்கிறான் என்பதை இங்கே எமதர்மன் சுட்டிக்காட்டுகிறான்.

நசிகேதனின் கேள்வி

14. அன்யத்ர தர்மாத் அன்யத்ராதர்மாத்
அன்யத்ராஸ்மாத் க்ருதாக்ருதாத்
அன்யத்ர பூதாச்ச பவ்யாச்ச
யத்தத் பச்யஸி தத்வத

தர்மாத்-தர்மத்திலிருந்து; அன்யத்ர-வேறுபட்டது; அதர்மாத்-அதர்மத்திலிருந்து; அன்யத்ர-வேறுபட்டது; அஸ்மாத்-இந்த; க்ருத அக்ருதாத்-காரியம், காரணம் ஆகியவற்றிலிருந்து; அன்யத்ர-வேறுபட்டது; பூதாத் ச-இறந்த காலத்திலிருந்து; பவ்யாத் ச-எதிர்காலத்திலிருந்து; அன்யத்ர-வேறுபட்டது; யத் தத்-எதை; பச்யஸி-காண்கிறாயோ; தத்-அதை; வத-சொல்வாய்.

பொருள் : தர்மம், அதர்மம் காரியம், காரணம், இறந்த காலம், எதிர் காலம் ஆகியவற்றிலிருந்து வேறு பட்டதாக நீ எதைக் காண்கிறாயோ அதை எனக்குச் சொல்வாய்.

பிரணவ தியானம்: 15-17

அத்யாத்ம யோகத்தின் சாதனையாக ஓங்காரம் அல்லது பிரணவ மந்திரத்தை தியானிக்குமாறு கூறுகிறது உபநிஷதம். இது ஓங்காரம், சப்த பிரம்மம், நாத பிரம்மம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. உலகம் படைக்கப்பட்ட போது முதலில் எழுந்தது இந்த ஓங்கார த்வனி. இது எங்கும் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் யோகிகளால் இதனைக் கேட்க முடியும் என்றும் கூறப்படுகிறது. யாராலும் எழுப்பப்படாத ஓசை ஆதலால் இது அனாஹத த்வனி எனப்படுகிறது. ஓங்காரமும் அதன் உபாசனை முறையும் நமது உபநிஷதங்களில், குறிப்பாக மாண்டூக்யம் போன்றவற்றில், சிறப்பாக பேசப்படுகிறது. பிரம்மம் என்ற அறுதி நிலையிலிருந்து எழுந்த முதல் நாதம் ஆதலால் இதனைப் பின்பற்றிச் செல்லும்போது இறைவனை அடையலாம். தொலைவிலிருந்து அலையோசையைக் கேட்கிறோம். அந்த ஓசையைப் பின்பற்றிச் சென்றால் கடலை அடைந்து விடலாம். அலையோசை இருந்தால் கடலும் இருக்கிறது. அதுபோல் அனாஹத த்வனியைப் பற்றியவாறே சென்றோமானால் அந்த த்வனி குறிப்பதான பிரம்மத்திடம் போய்ச் சேரலாம். அதுவே பரமபதம் எனப்படுகிறது. என்கிறார் ஸ்ரீராமகிருஷ்ணர். பிரணவ மந்திரத்தின் மகிமையை தொடரும் மூன்று மந்திரங்கள் கூறுகின்றன.

15. ஸர்வே வேதா யத்பதமாமனந்தி
தபாம்ஸி ஸர்வாணி ச யத் வதந்தி
யதிச்சந்தோ ப்ரஹ்மசார்யம் சரந்தி
தத்தே பதம் ஸங்க்ரஹேண ப்ரவீமி ஓமித்யேதத்

ஸர்வே-எல்லா; வேதா-வேதங்களும்; யத் பதம்-எந்த லட்சியத்தை; ஆமனந்தி-உபதேசிக்கின்றனவோ; ஸர்வாணி-எல்லா; தபாம்ஸி ச-தவங்களும்; யத்-எதை; வதந்தி-சொல்கின்றனவோ; யத்-எதை; இச்சந்த-விரும்பி; ப்ரஹ்மசர்யம்-பிரம்மச்சரியத்தை; சரந்தி-கடைப்பிடிக்கிறார்களோ; தத்-அந்த; பதம்-சொல்லை; ஸங்க்ரஹேண-சுருக்கமாக; தே-உனக்கு; ப்ரவீமி-சொல்கிறேன்; ஏதத்-அது; ஓம் இதி-ஓம் ஆகும்.

பொருள் : எல்லா வேதங்களும் எந்த லட்சியத்தை உபதேசிக்கின்றவோ, எதற்காக எல்லா தவங்களும் செய்யப்படுகின்றனவோ, எதை விரும்பி பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்கிறார்களோ அந்த லட்சியத்தை அடைவதற்கான மந்திரத்தைச் சுருக்கமாக உனக்குச் சொல்கிறேன். அது ஓம்

16. ஏதத்த்யேவாக்ஷரம் ப்ரஹ்ம ஏதத்த்யேவாக்ஷரம் பரம்
ஏதத்த்யேவாக்ஷரம் ஜ்ஞாத்வா யோ யதிச்சதி தஸ்ய தத்

ஏதத்-இந்த; அக்ஷரம் ஏவ-மந்திரமே; ப்ரஹ்ம-இறைவன்; ஏதத்-இந்த; அக்ஷரம் ஏவ-மந்திரமே; பரம்-மேலானது; ஏதத்-இந்த; அக்ஷரம் ஏவ-மந்திரத்தை; ஜ்ஞாத்வா-அறிந்து; ய-யார்; யத்-எதை; இச்சதி-விரும்புகிறானோ; தஸ்ய-அவனுக்கு; தத்-அது கிடைக்கிறது.

பொருள் : ஓம் என்ற இந்த மந்திரமே இறைவன். இந்த மந்திரம் மேலானது. இந்த மந்திரத்தை அறிந்து யார் எதை விரும்புகிறானோ அவனுக்கு அது கிடைக்கிறது.

17. ஏததாலம்பனம் ச்ரேஷ்ட்டம் ஏததாலம்பனம் பரம்
ஏததாலம்பனம் ஜ்ஞாத்வா ப்ரஹ்ம லோகே மஹீயதே

ஏதத்-இந்த; ஆலம்பனம்-பாதை; ச்ரேஷ்ட்டம்-சிறந்தது; ஏதத்-இந்த; ஆலம்பனம்-பாதை; பரம்-மேலானது; ஏதத்-இந்த ஆலம்பனம்-பாதையை; ஜ்ஞாத்வா-அறிந்து; ப்ரஹ்ம லோகே-பிரம்ம லோகத்தில்; மஹீயதே-சிறப்பு பெறுகிறான்.

பொருள் : இந்தப் பாதை சிறந்தது. இந்தப் பாதை மேலானது. இந்தப் பாதையை அறிந்து அதன் வழிச் செல்பவன் பிரம்ம லோகத்தில் சிறப்பு பெறுகிறான்.

மரணம் யாருக்கு? (18-22)

உடம்பு, உயிர், ஆன்மா என்ற மூன்றின் சேர்க்கையே மனிதன். நாம் பொதுவாக மரணம் என்று குறிப்பிடுவது உடம்பின் மரணத்தை மட்டுமே. பழைய சட்டையைக் களைந்துவிட்டு புதிய சட்டை அணிந்து கொள்வதுபோல் ஜீவன் ஓர் உடம்பைக் களைந்துவிட்டு புதிய உடம்பை எடுக்கிறது.
(வாஸாம்ஸி ஜீர்ணானி யதா விஹாய நவானி க்ருஹ்ணாதி நரோபராணி
ததாசரீராணி விஹாய ஜீர்ணானி அன்யானி ஸம்பாதி நவானி தேஹீ) உடம்பைக் களைதலையே மரணம் என்கிறோம். ஆனால் நாம் ஆன்மா, நமக்கு மரணமில்லை. உடம்பின் மரணத்திற்குப் பிறகும் நாம் வாழ்கிறோம். என்றென்றும் நாம் வாழ்கிறோம்.

ஆன்மாவில் எந்த மாற்றங்களும் இல்லை: 18-19

18. ந ஜாயதே ம்ரியதே வா விபச்சித்
நாயம் குதச்சித் ந பபூவ கச்சித்
அஜோ நித்ய: சாச்வதோயம் புராணோ
ந ஹன்யதே ஹன்யமானே சரீரே

விபச்சித்-ஆன்மா; ந ஜாயதே-பிறப்பதில்லை; ம்ரியதே வா-இறப்பதும் இல்லை; அயம்-இது; குதச்சித்-எதிலிருந்தும்; ந பபூவ-உண்டானதில்லை; கச்சித்-எதுவும்; அயம்-இது; அஜ-பிறப்பற்றது; நித்ய-என்றென்றும் இருப்பது; சாச்வத; நிலையானது; புராண-பழமையானது; சரீரே-உடம்பு; ஹன்யமானே-அழிக்கப்பட்டாலும்; ந ஹன்யதே-அழியாதது.

பொருள் : ஆன்மா பிறப்பதில்லை, இறப்பதும் இல்லை, இது எதிலிருந்தும் உண்டானதில்லை, எதுவும் இதிலிருந்தும் உண்டாவதில்லை. இது பிறப்பற்றது, என்றென்றும் இருப்பது. நிலையானது, பழமையானது; உடம்பு அழிக்கப்பட்டாலும் அழியாதது.

19. ஹந்தா சேன்மன்யதே ஹந்தும்
ஹதச்சேன் மன்யதே ஹதம்
உபௌ தௌ ந விஜானீதோ
நாயம் ஹந்தி ந ஹன்யதே

ஹந்தா-அடிப்பவன்; ஹந்தும்-அடிப்பதாக; மன்யதே சேத்-நினைப்பானானால்; ஹத-அடிபட்டவன்; ஹதம்-அடிபட்டதாக; மன்யதே சேத்-நினைப்பானானால்; தௌஉபௌ-இருவரும்; ந விஜானீத-அறியாதவர்கள்; அயம்-இந்த ஆன்மா; ந ஹந்தி-அடிப்பதும் இல்லை; ந ஹன்யதே-அடிபடுவதும் இல்லை.

பொருள் : தான் அடிப்பதாக நினைப்பவன், தான் அடிபட்டதாக நினைப்பவன் இருவருமே உண்மையை அறியாதவர்கள். ஆன்மா அடிப்பதும் இல்லை, அடிபடுவதும் இல்லை.

ஆன்மாவின் இயல்புகள்: 20-22

அறிவு, உணர்ச்சி இரண்டும் வெவ்வேறானவை, நமது வாழ்க்கை, இரண்டுடனும் பின்னிப் பிணைந்ததாக உள்ளது. அன்பு, ஆசை, கோபம், பயம், வெறுப்பு என்று பொதுவாக நமது வாழ்க்கையில் உணர்ச்சிகளே ஆதிக்கம் செலுத்துகின்றன; அறிவின் செயல்பாடு மிகக் குறைவே. அதிலும் ஆன்மீகம், கடவுள், ஆன்மா போன்ற உண்மைகளை அறிவினால் ஆராய்ந்து புரிந்துகொள்ள முடியாது, உணர மட்டுமே இயலும்.

ஆன்மா, கடவுள் போன்றவைபற்றி படிக்கும்போது இந்தக் கண்ணோட்டம் நமக்கு மிக முக்கியமானது. அறிவுக்கு எட்டாதது என்பதை உணர்த்துவதற்கே நமது ரிஷிகள் முரண்பட்ட இயல்புகளால் அவற்றை விளக்க முயல்கின்றனர். தொடரும் மந்திரங்களை, சாதனைகள் செய்து உணர முடியுமே தவிர அறிவினால் விளக்கவோ அறியவோ முடியாது. அதற்கான ஒவ்வொரு முயற்சியும் நம்மை மேலும் குழப்பத்திலேயே ஆழ்த்தும்.

20. அணோரணீயன் மஹதோ மஹீயான்
ஆத்மாஸ்ய ஜந்தோர் நிஹிதோ குஹாயாம்
தமக்ரது: பச்யதி வீதசோகோ
தாதுப்ரஸாதான் மஹிமானமாத்மன

அணோ-அணுவைவிட; அணீயாள்-அணுவானதும்; மஹத: பெரியதைவிட; மஹீயான்-பெரியதும்; ஆத்மா-ஆன்மா; அஸ்ய-இந்த; ஜந்தோ-உயிரினங்களின்; குஹாயாம்-இதயக் குகையில்; நிஹித-இருக்கிறது; தம்-அதனை; அக்ரது-ஆசையற்றவன்; பச்யதி-காண்கிறான்; தாது ப்ரஸாதாத்-மனத் தெளிவினால்; ஆத்மன-ஆன்மாவின்; மஹிமானம்-மகிமையை; வீதசோக-கவலைகளைக் கடக்கிறான்.

பொருள் : அணுவைவிட அணுவானதும், பெரியதைவிடப் பெரியதுமான இந்த ஆன்மா உயிரினங்களின் இதயக் குகையில் இருக்கிறது. ஆசையற்றவன் அதனைக் காண்கிறான். மனத்தெளிவினால் ஆன்மாவின் மகிமையை உணர்கின்ற அவன் கவலைகளைக் கடந்து செல்கிறான்.

21. ஆஸீனோ தூரம் வ்ரஜதி சயானோ யாதி ஸர்வத
கஸ்தம் மதாமதம் தேவம் மதன்யோ ஜ்ஞாதுமர்ஹதி

ஆஸீன-உட்கார்ந்தபடியே; தூரம்-வெகுதூரம்; வ்ரஜதி-செல்கிறது; சயான-படுத்துக்கொண்டே; ஸர்வத-எல்லா இடங்களுக்கும்; யாதி-செல்கிறது; மத அமதம்-இன்ப துன்ப வடிவானது; தேவம்-ஒளி மயமானது; தம்-அந்த ஆன்மாவை; மத் அன்ய-என்னைத் தவிர; க-யார்; ஜ்ஞாதும்-அறிவதற்கு; அர்ஹதி-தகுந்தவன்.

பொருள் : அந்த ஆன்மா உட்கார்ந்தபடி வெகுதூரம் செல்கிறது. படுத்துக்கொண்டே எல்லா இடங்களுக்கும் செல்கிறது. அது இன்ப வடிவானது. துன்ப வடிவானதும் அதுவே. அது ஒளி மயமானது என்னைத் தவிர வேறு யார் அதனை அறிவதற்குத் தகுதியானவன்?

என்னைத் தவிர யார் தகுதியானவன்? என்று மரணதேவன் கேட்கிறான். அதாவது மரண நிலையைப் போன்ற தொரு நிலையிலேயே ஆன்மாவை உணர முடியும். இதன் பொருள் என்ன? மரணத்தில் புலன்கள், மனம் எல்லாம் செயலிழக்கின்றன. அதுபோல் புலன்களும் மனமும் செயலிழந்த, அதாவது புலன்களையும் மனத்தையும் கடந்த ஒரு நிலையில்தான் ஆன்மாவை உணர முடியுமே தவிர புலன்களாலோ மனத்தாலோ அதனை அறிய முடியாது என்பதை இங்கே குறிப்பால் உணர்த்துகிறான் எமதர்மன்.

22. அசரீரம் சரீரேஷு அனவஸ்தேஷு அவஸ்திதம்
மஹாந்தம் விபுமாத்மானம் மத்வா தீரோ சோசதி

சரீரேஷு-உடல்களில்; அசரீரம்-உடல் அற்றது; அனவஸ்தேஷு-நிலையற்ற பொருட்களில்; அவஸ்திதம்-நிலையானது; மஹாந்தம்-பெரியது; விபும்-எங்கும் நிறைந்தது; ஆத்மானம்-ஆன்மாவை; மத்வா-அறிந்து; தீர-புத்தி விழிப்புற்றவன்; ந சோசதி-கவலைப்படுவதில்லை.

பொருள் : ஆன்மா உடல்களில் உடலற்றது; நிலையற்ற பொருட்களில் நிலையானது; பெரியது; எங்கும் நிறைந்தது. புத்தி விழிப்புற்றவன் அதனை அறிந்து கவலைகள் நீங்கப் பெறுகிறான்.

ஆன்மா எல்லா உடல்களிலும் உறைகிறது. ஆனால் அதற்கென்று ஒரு தனியான உடலோ உருவமோ இல்லை. உடல்கள் உட்பட இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே நிலையற்றது, மாறுவது, தோன்றி மறைவது. ஆனால் இந்த மாற்றங்கள் எதுவுமே இல்லாமல் நிலைத்திருப்பது ஆன்மா.

நாளை உணவு கிடைக்காதோ என்ற எண்ணம் கவலையைத் தருகிறது. நாளை இறந்து விடுவோமோ என்ற பயம் கவலையைத் தருகிறது. அதாவது, வாழ்க்கையில் நிகழும் மாற்றங்களே கவலையையும் பயத்தையும் தருகின்றன. ஆன்மா இந்த மாற்றங்கள் அனைத்தையும் கடந்தது. ஆதலால் அந்த நிலையை அடைபவன் கவலைகள் நீங்கப் பெறுகிறான்.

நான் ஆன்மா என்று யாரால் உணர முடியும்? 23-24

23. நாயமாத்மா ப்ரவசனேன லப்யோ
ந மேதயா ந பஹுனா ச்ருதேன
யமேவைஷ வ்ருணுதே தேன லப்யஸ்
தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தனூம் ஸ்வாம்

அயம்-இந்த; ஆத்மா-ஆன்மா; ப்ரவசனேன-சொற்பொழிவுகளால்; ந லப்ய-அடையப்படுவதில்லை; ந மேதயா-புலமையால் அல்ல; பஹுனா ச்ருதேன-எவ்வளவோ கேட்பதாலும் அல்ல; யம் ஏவ ஏஷ-யார் அதற்காகவே; வ்ருணுதே-மன ஏக்கம் கொள்கிறானோ; தேன-அவனால்; லப்ய-அடையப்படுகிறது; தஸ்ய-அவனுக்கு; ஸ்வாம்-தனது; தனூம்-சொந்த இயல்பை; விவ்ருணுதே-வெளிப்படுத்துகிறது.

பொருள் : சொற்பொழிவுகளாலோ, புலமையாலோ, பலவற்றைக் கேட்பதாலோ இந்த ஆன்மாவை அடைய இயலாது. யார் அதை அடைவதற்காக மன ஏக்கம் கொள்கிறானோ அவன் மட்டுமே அதனை அடைகிறான். அந்த ஆன்மா அவனுக்குத் தனது சொந்த இயல்பை வெளிப்படுத்துகிறது.

மன ஏக்கம் என்பதை ஸ்ரீராமகிருஷ்ணர் ஓர் ஆன்மீக சாதனையாகக் கூறுவதுடன். இறைக் காட்சிக்கு முந்தின நிலையாகவும் வைக்கிறார்; ஆழ்ந்த மன ஏக்கத்துடன் அழுதால் அவரைக் காண முடியும்....... மன ஏக்கம் வந்து விட்டாலே அருணோதயம் ஆகிவிட்டது. அதன்பிறகு கதிரவன் தன்னைக் காட்டியருள்வான். அதுபோல் மனஏக்கத்திற்குப் பிறகு இறைக்காட்சி வருகிறது.

தீவிரமான தேவை ஏற்படும்போதுதான் மன ஏக்கம் வருகிறது. உள்ளார்ந்த ஏக்கமின்றி, சொற்பொழிவுகளைச் செய்வதாலோ கேட்பதாலோ, நூல்களைப் படிப்பதாலோ ஆன்மீகத்தில் எதையும் அடைய இயலாது. உயர் உண்மையை அடைய வேண்டும், இறைவனைக் காண வேண்டும் என்பதெல்லாம் உணவு, உடை போன்ற நமது அன்றாடத் தேவைகளுள் ஒன்றாக வேண்டும். அப்போது மட்டுமே அதற்காக நாம் ஏக்கம் கொள்வோம். ஏக்கம் கொள்ளும்போதுதான் வழி பிறக்கும், உண்மை தெரியும்.

24. நாவிரதோ துச்சரிதாத் நாசாந்தோ நாஸமாஹித
நாசாந்தமானஸோ வாபி ப்ரஜ்ஞானேன ஏனமாப்னுயாத்

துச்சரிதாத்-தீய ஒழுக்கத்திலிருந்து; ந அவிரத-விலகாதவன்; ந அசாந்த-புலனடக்கம் இல்லாதவன்; ந அஸமாஹித-மன ஒருமைப்பாடு இல்லாதவன்; ந அசாந்த மானஸ; வா அபி-மனத்தின் பரபரப்பு அடங்கப் பெறாதவன்; ப்ரஜ்ஞானேன-அறிவினால்; ஏனம்-இந்த ஆன்மாவை; ந ஆப்னுயாத்-அடைவதில்லை.

பொருள் : தீய ஒழுக்கத்திலிருந்து விலகாதவன், புலனடக்கம் இல்லாதவன், மன ஒருமைப்பாடு இல்லாதவன், மனதில் பரபரப்பு அடங்கப் பெறாதவன்-இத்தகையவன் எவ்வளவுதான் அறிவாளியாக இருந்தாலும் ஆன்மாவை அடைவதில்லை.

உயர் உண்மைகளை அடைவதற்கான சில அடிப்படை பண்புகள் இங்கே கூறப்படுகின்றன.

1. நல்லொழுக்கம்: எந்த ஒன்றையும் செய்ய வேண்டுமானால் அதற்கு ஆற்றல் தேவை. பவுதீகமாக ஒன்றைச் செய்ய உடம்பின் ஆற்றல் வேண்டும். மனத்தால் ஒன்றைச் செய்ய வேண்டுமானால் மன ஆற்றல் வேண்டும். உயர் உண்மைகளை நாடி, இறைவனைத் தேடி செய்யப்படுகின்ற அனைத்தும் மனத்தின்மூலமே செய்யப்படுகின்றன. அதற்கு மன ஆற்றல் தேவை. இந்த ஆற்றல் ஒழுக்க வாழ்வின்மூலம் மட்டுமே அடையப்படுகிறது. தூய்மையின் ஆற்றல் நிலையான ஆற்றல் என்கிறார் சுவாமி விவேகானந்தர். மனத்திற்கு இந்த ஆற்றல் வரும்போது தான் அதனால் உயர்ந்த உண்மைகளைச் சந்திக்க முடிகிறது, அதற்கான வழியில் செல்ல முடிகிறது. இந்த ஆற்றலை தருவது நல்லொழுக்க வாழ்க்கை மட்டுமே.

2. புலனடக்கம்: புலன்கள் புற உலகை நாடுமாறே படைக்கப்பட்டுள்ளன என்று இதே உபநிஷதம் பின்னால் (2.1.1) கூறுகிறது. எனினும் ஒரு லட்சியத்தை எடுத்துக் கொண்டால், அதற்கு ஏற்புடையவற்றை மட்டுமே நாடுமாறு அவற்றிற்குப் பயிற்சி அளிக்க வேண்டும். இது புலனடக்கம். தொடர்ந்த பயிற்சியால் இதனைச் சாதிக்க முடியும்.

3. மன ஒருமைப்பாடு: பணம் சம்பாதிப்பதிலும் சரி, கடவுளை வழிபடுவதிலும் சரி, மற்ற எதைச் செய்வதிலும் சரி, மன ஒருமைப்பாடு ஆற்றல் வாய்ந்ததாக இருக்கின்ற அளவுக்கு அந்த காரியத்தை நன்றாகச் செய்ய முடியும். இந்த ஒரு முயற்சியால் மட்டுமே, இந்த ஒரு சாவியால் மட்டுமே இயற்கையின் கதவுகளைத் திறக்க முடியும், அதன் ஒளியை வெளியே கொண்டுவர முடியும். இந்த ஒருமைப்பாட்டுச் சக்தியே அறிவுப் பொக்கிஷத்திற்கான ஒரே திறவுகோல் என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

4. பரபரப்பின்மை: எந்தப் பூவிலும் அமராமல் படபடத்தபடியே பறக்கின்ற வண்ணத்துப்பூச்சிபோல் மனம் சிலவேளைகளில் பரபரப்பதை அனைவரும் உணர முடியும். இந்த நேரங்களில் மனத்தால் எதிலும் ஆழ்ந்து ஈடுபட இயலாது; ஜபம் தியானம் போன்றவற்றில் கட்டாயமாக மனத்தைச் செலுத்த முடியாது.

புலனடக்கம், மன ஒருமைப்பாடு, மனத்தின் பரபரப்பின்மை அனைத்தையும் ஒழுக்க வாழ்வின்மூலம் நாம் அடைய முடியும். அதைத் தவிர வேறு வழியில்லை. அனைத்திற்கும் மூலமாக அமைவது நல்லொழுக்கம். ஆன்மீக வாழ்வில் ஈடுபட விரும்பும் ஒருவருக்குச் சிந்தையில், சொல்லில், செயலில் தூய்மை முற்றிலும் இன்றியமையாதது என்கிறார் சுவாமி விவேகானந்தர். ஒழுக்கவாழ்க்கை இல்லாமல் எவ்வளவு கற்றாலும் கேட்டாலும் முயற்சித்தாலும் ஆன்மாவை அடைய முடியாது என்பது இங்கே ஆணித்தரமாகக் கூறப்படுகிறது.

ஆன்மாவின் மகிமை

25. யஸ்ய ப்ரஹ்ம ச க்ஷத்ரம் ச உபே பவத ஓதன
ம்ருத்யுர் யஸ்யோபஸேசனம் க இத்தா வேத யத்ர ஸ

யஸ்ய-யாருக்கு; ப்ரஹ்ம ச-அறிவின் ஆற்றல்; க்ஷத்ரம் ச-தோள் வலிமை; உபே-இரண்டும்; ஓதன-உணவாக; பவத-ஆகிறதோ; யஸ்ய-யாருக்கு; ம்ருத்யு-மரணம்; உபஸேசனம்-ஊறுகாயாக உள்ளதோ; ஸ-அது; யத்ர-எங்கே உள்ளது; இத்தா-இவ்வாறு; க-யார்; வேத-அறிவார்.

பொருள் : அறிவின் ஆற்றல், தோள் வலிமை இரண்டும் யாருக்கு உணவாக உள்ளதோ, மரணம் யாருக்கு ஊறுகாயாக உள்ளதோ அது எத்தகையது என்பதை யார் அறிவார்?

நம்மை இயக்குபவற்றுள் அறிவின் ஆற்றல், தோள் வலிமை இரண்டும் முக்கியமானவை. இந்த இரண்டும் ஆன்மாவிற்கு உணவு போன்றவை. அனைவரும் பயப்படும் மரணம் அதற்கு ஊறுகாய் போன்றது. அதாவது ஆற்றல்கள், மரணம் எல்லாம் ஆன்மாவின் முன் மண்டியிடுகின்றன. இத்தகைய ஆற்றல்களால் ஆன்மாவை அறிய முடியாது. மன ஏக்கம் ஆகிய அன்பின் ஆற்றல் ஒன்றினாலேயே அதனை அடைய இயலும் என்பது இங்கே சுட்டிக்காட்டப்படுகிறது.

இதி காடக உபநிஷதி ப்ரதம அத்யாயே த்விதீயா வல்லீ
 
 


Offline Anu

Re: உபநிஷதம்
« Reply #3 on: March 29, 2012, 01:02:29 PM »
மனிதன் என்றால் யார்?

1.3 விழித்தெழு!

உடம்பின் மாற்றங்களாலோ மனத்தின் மாற்றங்களாலோ பாதிக்கப்படாத ஆன்மா என்ற ஒன்று இதயக்குகையில் உள்ளது. அதை அறிய வேண்டும். பிரித்தறிந்து வாழ்தல், பிரணவ தியானம் போன்றவை அதற்குரிய சாதனைகள் என்பதைச் சென்ற அத்தியாயத்தில் கண்டோம். ஆனால் இந்தச் சாதனைகள் சிறந்த பலனளிக்க வேண்டுமானால் புத்தி விழிப்புற்றிருக்க வேண்டும் என்பதை இந்த அத்தியாயம் வலியுறுத்துகிறது.

வாழ்க்கையை ஒரு தேர்ப் பயணத்துடன் ஒப்பிட்டுக் கூறுகின்ற எமதர்மன் தேரோட்டி விழித்திருக்க வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதைக் கூறுவதன்மூலம் புத்தியின் விழிப்பு எவ்வளவு முக்கியம் என்பதைச் சுட்டிக் காட்டுகிறான்.மனிதன் என்றால் யார் என்பது பற்றிய ஒரு தெளிவான விளக்கத்தையும் இங்கு நாம் காண்கிறோம்.

1. ரிதம் பிபந்தௌ ஸுக்ருதஸ்ய லோகே
குஹாம் ப்ரவிஷ்ட்டௌ பரமே பரார்தே
சாயாதபௌ ப்ரஹ்மவிதோ வதந்தி
பஞ்சாக்னயோ யே ச த்ரிணாசிகேதா

ஸுக்ருதஸ்ய-செயல்களின்; ரிதம்-பலனை; பிபந்தௌ-அனுபவிக்கின்ற இருவர்; லோகே-உடம்பில் பரமே-மேலான; பரார்தே-நுண்ணியதான; குஹாம்-இதயக் குகையில்; ப்ரவிஷ்ட்டௌ-புகுந்தவர்கள்; சாயா தபௌ-நிழலும் வெயிலும் போன்றவர்கள்; ப்ரஹ்மவித-மகான்கள்; பஞ்சாக்னய-ஐந்து அக்கினி உடையவர்கள்; த்ரிணாசிகேதா; மூன்றுமுறை நசிகேத யாகம் செய்தவர்கள், யே-யாரோ; வதந்தி-சொல்கின்றனர்.

பொருள் : செயல்களின் பலனை அனுபவிக்கின்ற இருவர் இந்த உடம்பில் உள்ளனர். அவர்கள் நிழலும் வெயிலும் போல் ஒருவருக்கொருவர் மாறுபட்டவர்கள்; இந்த உடம்பிலுள்ள நுண்ணியதான இதயக் குகையில் புகுந்தவர்கள். மகான்களும், ஐந்து அக்கினியை உடையவர்களும், மூன்றுமுறை நசிகேத யாகம் செய்தவர்களும் இவ்வாறு கூறுகின்றனர்.

இந்த உடம்பில் இருவர் இருப்பதாக சொல்லப்படுகிறது. இருவரும் செயல்களின் பலனை அனுபவிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் நிழலும் வெயிலும்போல் ஒருவருக்கொருவர் மாறுபட்டவர் என்று கூறுவதால் ஒருவர் செயல்களின் பலனை அனுபவிக்கிறார், மற்றவர் எதிலும் பங்கெடுக்காமல் சாட்சியாக இருக்கிறார் என்றும் கொள்ள வேண்டும் என்று ஸ்ரீசங்கரர் விளக்குகிறார் (தௌ ச சாயாதபாவிவ விலக்ஷணௌ ஸம்ஸாரித்வ அஸம்ஸாரித்வத்வேன ப்ரஹ்மவிதோ வதந்தி)

ஸ்ரீராமகிருஷ்ணரின் அனுபவ வார்த்தைகள் இதனை விளக்குகிறது. தமது கையில் அடிப்பட்டபோது அவர் கூறினார் இதனுள்(உடம்பினுள்) இருவர் இருக்கின்றனர். ஒன்று அன்னை....இன்னொருவர் பக்தனாக ஆகியுள்ளான். பக்தனுக்குத்தான் கை உடைந்தது. இப்போது நோய் வந்திருப்பது அவனுக்குத்தான் புரிகிறதா?

முண்டக உபநிஷதம் ஒரு கதையின்மூலம் இந்தக் கருத்தை விளக்குகிறது. ஒரு மரத்தில் இரண்டு பறவைகள் வாழ்கின்றன. ஒன்று அந்த மரத்திலுள்ள இனிப்பும் புளிப்பும் கசப்புமான பல்வேறு பழங்களைத் தின்கிறது.; அதன் காரணமாக இன்ப துன்பங்களை மாறிமாறி அனுபவிக்கிறது. மற்றொரு பறவை எதையும் திண்ணாமல் அமைதியாக அனைத்தையும் பார்த்தவண்ணம் இருக்கிறது( த்வாஸுபர்ணாஸபுஜாஸகாயாமானம்வ்ருக்ஷம் பரிஷஸ்வாஜாதே தயோரன்ய: பிப்பலம் ஸ்வாத்வத்யனச்னன் அன்யோ அபிசாகசீதி)

செயல்களின் ஈடுபட்டு, சுகதுக்க அனுபவங்களைப் பெற்று, அவற்றின் பலனை அனுபவிப்பது ஜீவன் அல்லது உயிர். மனம் மற்றும் பிராணனின் சேர்க்கை இது. எதிலும் பங்கெடுக்காமல் அனைத்தையும் பார்த்து கொண்டு சாட்சியாக நிற்கின்ற ஒன்றே ஆன்மா. ஆன்மாவுடன் நம்மை ஒன்றுபடுத்தி காணக்காண நாம் இறைநிலையை அடைவோம். ஜீவனுடன் நம்மை ஒன்றுபடுத்தி காணக்காண நாம் உலகியலில், குழப்பங்களில் அழுந்துவோம்.

மேலே கண்ட உண்மையை மகான்களிடமிருந்து கேள்விப்பட்டதாக உபநிஷத முனிவர் கூறுகிறார். மூன்று வகையான மகான்களைப்பற்றி அவர் கூறுகிறார்

1. மகான்கள் : இறைவனை உணர்ந்தவர்கள் என்று பொருள்படுகின்ற ப்ரஹ்மவித என்ற வார்த்தை இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது.

2. ஐந்து அக்கினி உடையவர்கள்: கார்ஹபத்யம், ஆஹவனீயம், தக்ஷிணாக்னி, ஸப்யம், ஆவஸத்யம் என்பவை ஐந்து அக்கினிகள். இல்லறத்தான் இந்த ஐந்து அக்கினிகளையும் வீட்டில் நிறுவி வழிபட வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

கார்ஹபத்யம்-குல தெய்வத்தின் வடிவமாகக் கருதப்படுவது. இல்லற தர்மத்தைப் பரிபாலிப்பதுவரை இந்த அக்கினி எரிய வேண்டும்.

ஆஹவனீயம்-ஆஹுதி அளிப்பதற்கான அக்கினி

தக்ஷிணாக்னி-தக்ஷிணம் என்றால் மகிழ்ச்சி. மகிழ்ச்சியைத் தருகின்ற அக்கினி. இது தெற்கு மூலையில் நிறுவப்படுகிறது.

ஸப்யம்-சாட்சி ரூபமாக விளங்குகிறது. செயல்கள் அனைத்தையும் இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதை உணர்த்துகின்ற அக்கினி.

ஆவஸத்யம்-ஆவஸத்யம் என்றால் வீடு. வீட்டிற்கு மங்கலத்தைத் தருகின்ற அக்கினி.

3. மூன்று முறை நசிகேத யாகம் செய்தவர்கள்; நசிகேத யாகம்பற்றி ஏற்கனவே(1.1.15-19) கண்டோம்.

ஒரு சுயத் தூண்டுதல்

2. ய: ஸேதுரீஜானானாம் அக்ஷரம் ப்ரஹ்ம யத் பரம்
அபயம் திதீர்ஷதாம் பாரம் நாசிகேதம் சகேமஹி

ய-எந்த வித்யை; ஈஜானானாம்-பின்பற்றுபவர்களுக்கு; ஸேது-பாலம் ஆகிறதோ; தம்-அந்த; நாசிகேதம்-நசிகேத வித்யையை; சகேமஹி-செய்ய வல்லவர்கள் ஆவோம்; அபயம்-பயமற்ற; பாரம்-கரையை; திதீர்ஷதாம்-அடைய விரும்புபவர்களுக்கு; யத் அக்ஷரம்-அழிவற்ற எந்த; ப்ரஹ்ம-இறைவன்; பரம்-அடைக்கலமானவரோ; தத்-அந்த இறைவனை.

பொருள் : பின்பற்றுபவர்களுக்கு எந்த வித்யை பாலமாக அமைகிறதோ அந்த நசிகேத யாகத்தைச் செய்ய வல்லவர்கள் ஆவோம். பயமற்ற கரையை அடைய விரும்புபவர்களுக்கு அழிவற்ற எந்த இறைவன் அடைக்கலமானவரோ அந்த இறைவனை அறிய வல்லவர்கள் ஆவோம்.

ஒரு லட்சியத்தை எடுத்துக்கொண்டு முன்னேறும் போது, சிலவேளைகளில் லட்சியத்தை மறந்துவிடுவதுண்டு; அதுபோலவே சிலவேளைகளில் லட்சிய நாட்டம் நீர்த்துப்போவதும் உண்டு. எனவே தினமும் அதனை நினைவூட்டிக் கொள்வது நல்லது. இது சுயத் தூண்டுதல் எனப்படுகிறது. இத்தகைய மந்திரங்கள் நமது வேதங்களிலும் உபநிஷதங்களிலும் ஏராளம் உள்ளன. உபநிஷதங்களைப் படிக்கும்போது மட்டுமல்லாமல் இவற்றைப் பொருளுணர்ந்து அவ்வப்போது ஓதுவது நாம் நமது லட்சியத்தில் உறுதியாக இருக்க உதவும். அத்தகைய தொரு மந்திரம் இது.

வாழ்கையும் தேர்ப் பயணமும் (3-9)

நமது வாழ்க்கையின் ஓர் அற்புதமான சித்திரம் இந்த ஏழு மந்திரங்களில் கூறப்படுகிறது.

3. ஆத்மானம் ரதினம் வித்தி சரீரம் ரதமேவ து
புத்திம் து ஸாரதிம் வித்தி மன: ப்ரக்ரஹமேவ ச

ஆத்மானம்-ஆன்மாவை; ரதினம்-சுவாரி செய்பவனாக; வித்தி-அறிந்துகொள்; சரீரம் து-புத்தி; ஸாரதிம்-தேரோட்டி; மன-மனம்; ப்ரக்ரஹம் ஏவ-கடிவாளம்; வித்தி-அறிந்துகொள்.

பொருள் : ஆன்மா பயணம் செய்பவன், உடம்பு தேர், புத்தி தேரோட்டி, மனம் கடிவாளம்.

4. இந்த்ரியாணி ஹயானாஹு: விஷயாம்ஸ் தேஷு கோசரான்
ஆத்மேந்த்ரிய மனோயுக்தம் போக்தேத்யாஹுர் மனீஷிண

இந்த்ரியாணி-புலன்கள்; ஹயான்-குதிரைகள்; தேஷு-அவற்றிற்கு; விஷயான்-உலகப் பொருட்கள்; கோசரான்-பாதைகள்; ஆஹு-சொல்கின்றனர்; ஆத்ம இந்த்ரிய மனோ யுக்தம்-உடம்பு, புலன்கள், மனம் ஆகியவற்றுடன்கூடிய ஜீவன்; போக்தா-அனுபவிப்பவன்; மனீஷிண-மகான்கள்; ஆஹு-சொல்கின்றனர்.

பொருள் : புலன்கள் குதிரைகள்; உலகப் பொருட்கள் அந்தக் குதிரைகள் செல்வதற்கான பாதைகள்; உடம்பு புலன்கள், மனம் ஆகியவற்றுடன்கூடிய ஜீவன் வாழ்க்கையை அனுபவிப்பவன் என்று மகான்கள் சொல்கின்றனர்.

5. யஸ்த்வவிஜ்ஞானவான் பவதி அயுக்தேன மனஸா ஸதா
தஸ்யேந்த்ரியாணி அவச்யானி துஷ்ட்டாச்வா இவ ஸாரதே

ய: து-யார்; அவிஜ்ஞானவன்-வழிப்புறாத வனோ; ஸதா-எப்போதும்; அயுக்தேன-பிளவுபட்ட; மனஸா-மனத்தினனாக; பவதி-ஆகிறானோ; ஸாரதே-தேரோட்டிக்கு; துஷ்ட்ட அச்வா; இவ-அடங்காத குதிரைகள்போல்; தஸ்ய-அவனுடைய; இந்த்ரியாணி-புலன்கள்; அவச்யானி-வசப்படாமல் போகின்றன.

பொருள் : யார் விழிப்புறாதவனோ, பிளவுபட்ட மனத்தை உடையவனோ, அவனுடைய புலன்கள் தேரோட்டிக்கு அடங்காத குதிரைகள்போல் வசப்படாமல் போகின்றன.

6. யஸ்து விஜ்ஞானவான் பவதி யுக்தேன மனஸா ஸதா
தஸ்யேந்த்ரியாணி வச்யானி ஸதச்வா இவ ஸாரதே

ய:து-யார்; விஜ்ஞானவான்-விழிப்புற்றவனோ; ஸதா-எப்போதும்; யுக்தேன-பொருந்திய; மனஸை-மனத்தினமாக; பவதி-ஆகிறானோ; ஸாரதே-தேரோட்டிக்கு; ஸத் அச்வா: இவ-அடங்கிய குதிரைகள்போல்; தஸ்ய-அவனுடைய; இந்த்ரியாணி-புலன்கள்; வச்யானி-வசப்பட்டவை ஆகின்றன.

பொருள் : யார் விழிப்புற்றவனோ, பொருந்திய மனத்தை உடையவனோ, அவனுடைய புலன்கள் தேரோட்டிக்கு அடங்கிய குதிரைகள்போல் வசப்படுகின்றன.

7. யஸ்த்வவிஜ்ஞானவான் பவதி அமனஸ்க: ஸதாசுசி
ந ஸ தத் பதமாப்னோதி ஸம்ஸாரம் சாதிகச்சதி

ய:து-யார்; அவிஜ்ஞானவான்-விழிப்புறாதவனாக; அமனஸ்க-அடங்காத மனத்துடன்; ஸதா-எப்போதும்; அசுசி-தூய்மை அற்றவனாக; பவதி-இருக்கிறானோ; ஸ-அவன்; தத்-அந்த; பதம்-இறைநிலையை; ந ஆப்னோதி-அடைய மாட்டான்; ஸம்ஸாரம் ச-உலகியலிலும் அதிகச்சதி-ஆழ்கிறான்.

பொருள் : யார் விழிப்புறாதவனாக, அடங்காத மனத்தை உடையவனாக தூய்மை இல்லாதவனாக இருக்கிறானோ அவன் இறைநிலையை அடைய மாட்டான்; உலகியலிலும் ஆழ்கிறான்.

8. யஸ்து விஜ்ஞானவான், பவதி ஸமனஸ்க: ஸதா சுசி
ஸ து தத் பதமாப்னோதி யஸ்மாத் பூயோ ந ஜாயதே

ய: து-யார்; விஜ்ஞானவான்-விழிப்புற்றவனாக; ஸமனஸ்க-அடங்கிய மனத்துடன்; ஸதா-எப்போதும்; சுசி-தூயவனாக; பவதி-இருக்கிறானோ; ஸ: து-அவன்; யஸ்மாத்-எங்கிருந்து; பூய: மீண்டும்; ந ஜாயதே-பிறக்கமாட்டானோ; தத்-அந்த; பதம்-இறைநிலையை ஆப்னோதி-அடைகிறான்.

பொருள் : யார் விழிப்புற்றவனாக, அடங்கிய மனத்தை உடைவனாக, எப்போதும் தூயவனாக இருக்கிறானோ அவன், எங்கே சென்றால் மீண்டும் பிறப்பு இல்லையோ அந்த இறைநிலையை; ஆப்னோதி-அடைகிறான்.

9. விஜ்ஞானஸாரதிர் யஸ்து மன: ப்ரக்ரஹவான் நர
ஸோத்வன பாரமாப்னோதி தத் விஷ்ணோ: பரமம் பதம்

ய: நர-எந்த மனிதன்; விஜ்ஞான ஸாரதி-விழிப்புற்ற தேரோட்டியுடனுன்; ப்ரக்ரஹவான் மன-கடிவாளமாகிய மனத்தைக் கைப்பற்றியவனாகவும்; ஸ: து-அவனே; அத்வன: பாரம்-பாதையின் முடிவை; ஆப்னோதி-அடைகிறான்; தத்-அது; விஷ்ணோ-இறைவனின்; பரமம்-மேலான; பதம்-இருப்பிடம்.

பொருள் : யார் விழிப்புற்ற தேரோட்டியுடனும், கடிவாளமாகிய மனத்தைக் கைப்பற்றியவனாகவும் இருக்கிறானோ அவனே பாதையின் முடிவை அடைகிறான். அது இறைவனின் மேலான இருப்பிடம்.

வாழ்க்கைப் பயணம்: ஒரு கண்ணோட்டம்

3 முதல் 9 வரையுள்ள மந்திரங்களில் நமது வாழ்க்கைப் பயணம் ஒரு தேர்ப் பயணத்திற்கு ஒப்பிடப்படுகிறது. முதலில் உவமையைக் காண்போம், பிறகு அது தரும் செய்தியைப் பார்ப்போம்.

தேர்ப் பயணமும் வாழ்க்கையும்

தேரில் ஒருவன் பயணம் செய்கிறான். தேரோட்டி ஒருவன் உள்ளான். அவன் கடிவாளத்தைப் பிடித்திருக்கிறான். ஐந்து குதிரைகள் தேரை இழுக்கின்றன. தேர் செல்லும் பாதை ஒன்று உள்ளது. இது தேர்ப் பயணம்.

நமது வாழ்க்கைக்கு உதாரணமாக இது கூறப்பட்டுள்ளது.

ஆன்மா- பயணம் செய்பவன்
புத்தி- தேரோட்டி
மனம்- கடிவாளம்
புலன்கள்- குதிரைகள்
உலகப் பொருட்கள்- பாதை

தேர்ப் பயணம் தரும் செய்தி

1. பயணம் உலகப் பொருட்களாகிய சாலை வழியாகத்தான் சென்றாக வேண்டும். அதாவது உலகப் பொருட்களிலிருந்து, உலகிலிருந்து விலக முடியாது. நாம் எதைச் செய்ய வேண்டுமானாலும் உலகப் பொருட்களுடன் வாழ்ந்தபடியேதான் சாதிக்க வேண்டும்.

2. பயணத்தின் வேகமும் வெற்றியும் குதிரைகளைப் பொறுத்து அமைகிறது. குதிரையின் வேகம் கடிவாளத்தால் கட்டுப்படுகிறது. கடிவாளத்தின் இயக்கம் தேரோட்டியைப் பொறுத்தது. எனவே பயணத்தின் வெற்றியோ தோல்வியோ தேரோட்டியால் நிர்ணயிக்கப்படுகிறது. குதிரைகளுடன் போராடுவதாலோ கடிவாளத்தில் மாற்றங்களைச் செய்வதாலோ எந்தப் பயனும் இல்லை.

தேரோட்டி திறமைசாலியாக இருந்தால் பயணம் எவ்விதத் தடங்கலுமின்று நடைபெறும். தேரோட்டி தூங்கிக்கொண்டிருந்தால் பயணம் என்னவாகும்? இதுவே சாதாரணமாக நம் வாழ்க்கையில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. புலன்கள் தங்கள் போக்கில் போகின்றன. மனம் கட்டவிழ்ந்து பல திசைகளில் பரந்து கிடக்கிறது. ஏனெனில் புத்தி விழிப்புறவில்லை. இந்த நேரத்தில் தேரோட்டியாகிய புத்தியை எழுப்புவதே நாம் செய்ய வேண்டியது. அதை விட்டுவிட்டு மனத்துடனோ புலன்களுடனோ போராடுவது பெரிதாக பலனளிப்பதில்லை.

3. புத்தியை எழுப்புதல் அல்லது புத்தி விழிப்படைதல் என்றால் என்ன?

சாதாரணமாக அறிவு மூன்று நிலைகளில் செயல்படுகிறது-1. இயல்புணர்ச்சி , 2. அறிவு, 3. உள்ளுணர்வு.

1. இயல்புணர்ச்சி: ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் இயல்பாக எழுகின்ற உணர்ச்சி, வாத்துக்குஞ்சு நீந்துவதும் குருவிகள் கூடுகட்டுவதும் யாரும் கற்றுக்கொடுத்ததல்ல. பிறவியிலிருந்தே இவை அவற்றிடம் இயல்பாக உள்ளன. அதுபோல ஒவ்வொரு மனிதனிடமும் இயல்பாகக் காணப்படுகின்ற இயற்கையான மனப்போக்குகளே இயல்புணர்ச்சி. இது ஆழ்மனத்திலிருந்து வருவதால் பொதுவாக தவறுவதில்லை. பொதுவாக, இதற்கேற்பவை ஒருவன் வாழ்க்கைச் சூழ்நிலைகளை எதிர்கொள்கிறான். எனினும் இது நமது ஆதிக்கத்தின் கீழ் இல்லாததால் நாம் விரும்பிய விதத்தில் இதனைப் பயன்படுத்த முடிவதில்லை.

2. அறிவு: புற உலகிலிருந்தும் வாழ்க்கை அனுபவங்களிலிருந்தும் பெறுகின்ற அறிவு, புற உலகைச் சார்ந்திருப்பதால் இந்த அறிவு தவறாக இருக்கவும் வாய்ப்பு உண்டு. எனவே இதனை முழுமையாக நம்பி நாம் செயல்பட முடியாது.

3. உள்ளுணர்வு: கற்றறிவு, கேட்டறிவு போன்ற எந்தப் புற உபகரணங்களின் துணையும் இன்றி உணர்வின் ஆழங்களிலிருந்து எழுகின்ற அறிவு இது. இது ஒரு போதும் பொய்ப்பதில்லை, இந்த உள்ளுணர்வு விழிக்கப் பெற்றவர்களே படைப்பாளிகளாக இருந்தார்கள்.

இது எல்லோரிலும் செயல்படத் தொடங்கவில்லை. கல்வி, விஞ்ஞானம், கலை, மதம் என்று எந்த துறையை எடுத்தாலும் அவற்றின் உன்னத சிகரங்களுக்கான வாசலாகத் திகழ்கிறது உள்ளுணர்வு. இது விழிப்பதே புத்தி விழிப்பது. இதை புத்தியோகம் என்று கீதை(2.49-58) கூறுகிறது.

இதயத் தூய்மையாலும், பிரார்த்தனையாலும், காயத்ரி போன்ற மந்திர ஜபங்களாலும் புத்தி விழிப்படைகிறது.

பயண லட்சியம் 10-11

இந்தப் பயணத்தின் லட்சியம் இறைவன். அனைத்திலும் வலிமை வாய்ந்தவர் அவர், எனவே பயணத்தின் வெற்றிக்கு அவரை நாடுவதே வழி என்பதைப் படிப்படியாக இரண்டு மந்திரங்கள் விளக்குகின்றன.

10. இந்த்ரியேப்ய: பராஹ்யர்த்தா: அர்த்தேப்யச்ச பரம் மன
மனஸஸ்து பரா புத்தி: புத்தேராத்மா மஹான் பர

இந்த்ரியேப்ய-புலன்களைவிட; அர்த்தா-உலகப் பொருட்கள்; பரா: ஹி-வலிமை வாய்ந்தவை; அர்த்தேப்ய ச-பொருட்களைவிட; மன-மனம்; பரம்-வலிமை வாய்ந்தது; மனஸ: து-மனத்தைவிட; புத்தி:-புத்தி; பரா-வலிமை வாய்ந்தது; மஹான் ஆத்மா-மகிமை வாய்ந்ததான ஆன்மா; புத்தே-புத்தியைவிட; பர-வலிமை வாய்ந்தது.

பொருள் : புலன்களைவிட உலகப் பொருட்கள் வலிமை வாய்ந்தவை. பொருட்களைவிட மனம் வலிமை வாய்ந்தது. மனத்தைவிட புத்தி வலிமை வாய்ந்தது. மகிமை வாய்ந்ததான ஆன்மா புத்தியைவிட வலிமை வாய்ந்தது.

11. மஹத: பரமவ்யக்தம் அவயக்தாத் புருஷ: பர
புருஷான்ன பரம் கிஞ்சித் ஸா காஷ்ட்டா ஸா பராகதி

மஹத-மகிமை வாய்ந்ததான ஆன்மாவைவிட; அவ்யக்தம்-அவ்யக்தம்; பரம்-வலிமை வாய்ந்தது; அவ்யக்தாத்-அவ்யக்தத்தைவிட; புருஷ-இறைவன்; பர-வலிமை வாய்ந்தவர்; புருஷாத்-இறைவனைவிட; பரம்-வலிமை வாய்ந்தது; ந கிஞ்சித்-எதுவும் இல்லை; ஸா-அவரே; காஷ்ட்டா-அறுதிப் பொருள்; ஸா-அவரே; பரா கதி-கடைசிப் புகலிடம்.

பொருள் : மகிமை வாய்ந்ததான ஆன்மாவைவிட அவ்யக்தம் வலிமை வாய்ந்தது. அவ்யக்தத்தைவிட இறைவன் வலிமை வாய்ந்தவர். இறைவனைவிட வலிமை வாய்ந்தது எதுவும் இல்லை. அவரே அறுதிப் பொருள். அவரே கடைசிப் புகலிடம்.

எந்த ஒன்றையும் வசப்படுத்த வேண்டுமானால் அதை விட உயர்ந்த ஒன்றை நாட வேண்டும். மேற்கிலிருந்து விலக வேண்டுமானால் விலக வேண்டும், விலக வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்வதாலோ, அங்கே நின்ற போராடுவதாலோ பயனில்லை. செய்ய வேண்டியதெல்லாம் கிழக்கு நோக்கி நடப்பதே. கிழக்கு நோக்கி நடந்தால் தானாகவே மேற்கிலிருந்து விலகிவிடுவோம். அது போலவே மனத்தை வசப்படுத்த, புலன்களை ஒரு கட்டுக்குள் கொண்டுவர அவற்றுடன் போராடுவதோ, அவற்றை அந்த நிலையிலேயே அடக்க முயற்சிப்பதோ பயனற்றது. இதையே கீதை, அடக்குவதால் என்ன பயன்?(நிக்ரஹ: கிம் கரிஷ்யதி?) என்று கேட்கிறது எனவே கீழானதை வசப்படுத்த மேலானதைப் பற்றிக்கொள்ள வேண்டும்.

புலன்களாகிய கண், காது, மூக்கு, வாய், உடம்பு இவற்றின்மூலமே நாம் செயல்படுகிறோம். இவை தன்னிச்சையாகச் செயல்படுவதில்லை. பார்க்குமாறு தூண்டப்படும்போது கண்கள் பார்க்கின்றன, கேட்குமாறு தூண்டப்படும்போது காதுகள் கேட்கின்றன. இவ்வாறே ஒவ்வொரு புலனும் செயல்படுகிறது. புலன்களைத் தூண்டுபவை உலகப் பொருட்கள். அவற்றின் மீதுள்ள கவர்ச்சியாலேயே நாம் உலகை அனுபவக்கிறோம். அதனால்தான் புலன்களைவிட உலகப் பொருட்கள் வலிமை வாய்ந்தவை என்று கூறப்பட்டது.

புலன்களின் கவனத்தைக் கவரக்கூடிய பொருட்கள் வெளியில் இருந்தாலும் மனம் புலன்களுடன் ஒத்துழைக்கவில்லை என்றால் அந்தப் பொருட்கள் புலன்களைத் தூண்ட முடியாது. உதாரணமாக அழகிய தாமரை மலர் ஒன்றை நாம் இருக்கின்ற வழியாக ஒருவன் கொண்டு செல்கிறான். அந்த வேளையில் நாம் எதையாவது தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தால் அந்த மலரை நாம் கண்டிருக்கமாட்டோம். பிறகு கேட்டால், நான் பார்க்கவில்லையே என்போம். சாதாரண வேளையில் நம் கண்களைக் கவர்ந்திழுக்கக்கூடிய மலர் இப்போதும் இருந்தது. ஆனால் மனம் ஈடுபடாததால் நம் கண்களைக் கவர அந்த மலரால் முடியவில்லை. எனவே புறப் பொருட்களைவிட மனம் வலிமை வாய்ந்தது.

நமது வாழ்க்கைப் பயணத்தின் இந்த மூன்று பகுதிகளையும் நாம் அறிவோம்: புற உலகம் நமக்குத் தெரியும், புலன்களை நாம் அறிவோம் மனத்தை நாம் உணர்கிறோம். இதற்குமேல் உள்ளவை சாதாரணமாக நம்மால் உணரப்படாதவை. இவற்றுள் முதலில் வருவது புத்தி. இது விழிப்புறாத நிலையில் உள்ளது. புத்தியைவிட வலிமை வாய்ந்தது ஆன்மா.

ஆன்மாவைவிட வலிமையானது அவ்யக்தம். அவ்யக்தம் என்றால் இறைவனின் ஆற்றல். எந்த ஆற்றலால் இந்தப் பயணம் மட்டுமல்ல இந்தப் பிரபஞ்சமே வெளிப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கிறதோ அந்த ஆற்றல் ஆனால் அந்த ஆற்றலும் இறைவனாகிய தனம் இல்லாமல் இயங்க முடியாது. எனவே அவ்யக்தத்தைவிட வலிமை வாய்ந்தவர் இறைவன். அவரே கடைசிப் புகலிடம்.

புத்தி விழிப்புற வேண்டும்

12. ஏஷ ஸர்வேஷு புதேஷு
கூடோத்மா ந ப்ரகாசதே
த்ருச்யதே த்வக்ர்யயா புத்த்யா
ஸூக்ஷ்மயா ஸூக்ஷ்ம தர்சிபி

ஏஷ-இந்த; ஆத்மா-ஆன்மா; ஸர்வேஷுபூதேஷு-எல்லா உயிர்களிலும்; கூட-மறைவாக உள்ளது; ந ப்ரகாசதே-வெளிப்பட்டுத்  தெரிவதில்லை; து-ஆனால்; அக்ர்யயா-ஒருமைப்படுத்தப்பட்ட; ஸூக்ஷ்மயா-நுண்ணிய; புத்த்யா-புத்தியால்; ஸூக்ஷ்ம தர்சிபி-மகான்களால்; த்ருச்யதே-காணப்படுகிறது.

பொருள் : இந்த ஆன்மா எல்லா உயிர்களிலும் மறைவாக உள்ளது. வெளிப்பட்டுத் தெரிவதில்லை. ஆனால் ஒருமைப்படுத்தப்பட்ட நுண்ணிய புத்தியால் மகான்கள் இந்த ஆன்மாவைக் காண்கின்றனர்.

எப்போதும் சஞ்சலப்படுவது மனம், ஒன்றை நிச்சயமாக முடிவு செய்வது புத்தி. (மனோ நாம ஸங்கல்ப விகல்பாத்மிக அந்த: கரண வ்ருத்தி புத்திர் நாம நிச்சயாத்மிக அந்த: கரண வ்ருத்தி வேதாந்த சாரம், 66, 65) ஆனால் இந்த புத்தியால் புற விஷயங்களை மட்டுமே முடிவு செய்ய இயலும்; அக உண்மைகளைக் காணும் ஆற்றல் இதற்கு இல்லை. ஏனெனில் இது விழிப்புறாத நிலையில் உள்ள புத்தி. அது விழிப்புறும்போது மட்டுமே நுண்மை பெறுகிறது. அந்த நுண்ணிய புத்தியால்தான் ஆன்மாவை உணர முடியும்.

புத்தி விழிப்புற என்ன செய்ய வேண்டும்?

13. யச்சேத்வாங்மனஸீ ப்ராஜ்ஞ
தத் யச்சேத் ஜ்ஞான ஆத்மனி
ஜ்ஞானமாத்மனி மஹதி நியச்சேத்
தத் யச்சேத் சாந்த ஆத்மனி

ப்ராஜ்ஞ-அக நாட்டம் உடையவன்; வாக்-பேச்சை; மனஸீ-மனத்தில்; யச்சேத்-ஒடுக்க வேண்டும்; தத்-அந்த மனத்தை; ஜ்ஞானே-விழிப்புற்ற; ஆத்மனி-புத்தியில்; யச்சேத்-ஒடுக்க வேண்டும்; ஜ்ஞானம்-புத்தியை; மஹதி-மகிமை வாய்ந்த; ஆத்மனி-ஆன்மாவில்; நியச்சேத்-ஒடுக்க வேண்டும்; தத்-அந்த ஆன்மாவை; சாந்தே-அமைதியின் இருப்பிடமான; ஆத்மனி-இறைவனில்; யச்சேத்-ஒடுக்க வேண்டும்.

பொருள் : அக நாட்டம் உடையவன் பேச்சை மனத்தில் ஒடுக்க வேண்டும். மனத்தை விழிப்புற்ற புத்தியில் ஒடுக்க வேண்டும். புத்தியை மகிமை வாய்ந்த ஆன்மாவில் ஒடுக்க வேண்டும். ஆன்மாவை அமைதியின் இருப்பிடமான இறைவனில் ஒடுக்க வேண்டும்.

சாதனைமுறை இங்கே கூறப்படுகிறது. சாதாரண படியிலிருந்து ஆரம்பிக்கிறது இந்த சாதனை. பேச்சை மனத்தில் ஒடுக்க வேண்டும்-இது முதற்படி. உயர் வாழ்க்கைக்கு முதற்படி பேச்சுக் கட்டுப்பாடு. (யோகஸ்ய ப்ரதம த்வாரம் நிரோத) என்கிறார் ஸ்ரீசங்கரர். தேவையற்ற பேச்சு உயர் வாழ்க்கைக்கு என்றல்ல, சாதாரண வாழ்க்கைக்கும் பெரிய தடையாகும். நமது ஆற்றலில் முக்கியப் பகுதி பேச்சில் செலவழிகிறது. அதனைச் செலவிடாமல் சேமித்தால் அக வாழ்க்கை போன்ற உயர் தேவைகளுக்காக அதனைப் பயன்படுத்த முடியும்.

பேச்சு இரண்டு வகை-புறப் பேச்சு, அகப் பேச்சு; அதாவது வாய் பேசுவது மற்றும் எண்ணங்களின் கிளர்ச்சி. வாய் பேசாமல் இருந்தாலும் எண்ணங்கள் ஆர்ப்பரித்து எழும். இரண்டும் அடங்க வேண்டும். தேவையற்ற பேச்சைப் பயிற்சியின்மூலம் குறைக்கவோ தவிர்க்கவோ முடியும். ஆனால் எண்ணங்கள் எழுவதை எப்படித் தவிர்ப்பது? ஒரு சாட்சியாக நின்று எண்ணங்கள் எழுந்து அடங்குவதைக் கவனிக்க வேண்டும். எழுகின்ற எண்ணங்களுடன் சேர்ந்து மிதக்காமல் தனித்து நின்று அவற்றைக் காண்பதற்குப் பழக வேண்டும். பேச்சு என்பது ஓர் உதாரணமாகக் கூறப்பட்டது. இவ்வாறே அனைத்துப் புலன்களையும் வசப்படுத்த வேண்டும். அதாவது புலன்களின் போக்கில் போகாமல் சாட்சியாக நின்று பழக வேண்டும்.

இதுவே பேச்சை மனத்தில் ஒடுக்குவது என்ற முதற்படி. இந்தப் பயிற்சி மனத்திற்குப் பெரிய ஆற்றலையும் அமைதியையும் தருவதை நாம் உணர முடியும்.
தொடரும் படிகள் நாம் முன்னேற முன்னேற தாமாகவே நிகழ்வதை நாம் காணலாம். மனம் என்ற ஒன்றை நாம் அறிந்திருப்பதால் முதற்படி எளிதாக விளங்குகிறது. ஆனால் விழிப்புற்ற புத்தியோ, ஆன்மாவோ, இறைவனோ நாம் அறியாதவை. எனவே சாதனை முறையின் இரண்டாவது படியான விழிப்புற்ற புத்தி அல்லது புத்தி விழிப்புறுவதை உணரும் போதுதான் மனத்தை விழிப்புற்ற புத்தியில் ஒடுக்குவது என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடியும். தொடரும் படிகள் அனைத்தும் இவ்வாறே. எனவே பேச்சைக் கட்டுப்படுத்தி பயிற்சியைத் தொடங்க வேண்டியதே முக்கியம். பேச்சைக் குறைத்து அமைதியைக் கடைப்பிடிப்பதன்மூலம் அமைதியின் உறை விடமான இறைவனை அடைகிறோம்.

குரு தேவை

14. உத்திஷ்ட்டத ஜாக்ரத ப்ராப்ய வாரன் நிபோதத
க்ஷúரஸ்ய தாரா நிசிதா துரத்யயா ஆர்கம் பதஸ்தத்கவயோ வதந்தி

உத்திஷ்ட்டத-எழுங்கள்; ஜாக்ரத-விழியுங்கள்; வரான்-தகுந்த குருவை; ப்ராப்ய-அடைந்து; நிபோதத-அனுபூதி பெறுங்கள்; நிசிதா-கூரான;க்ஷúரஸ்ய-கத்தியின்; தாரா-முனை; துரத்யயா-நடக்க இயலாதது; தத்-அது; துர்கம்-கடினமானது; கவய;-சான்றோர்கள் வதந்தி-கூறுகின்றனர்.

பொருள் : எழுங்கள், விழியுங்கள், தகுந்த குருவை அடைந்து அனுபூதி பெறுங்கள். கூரான கத்தியின் முனைமீது நடப்பதுபோன்று இறைநெறி கடினமானது என்று சான்றோர்கள் கூறுகின்றனர்.

தகுந்த குரு ஒருவரை அடைய வேண்டும். ஆனால் அதற்கு முன் நாம் செய்ய வேண்டிய இரண்டு விஷயங்களை இந்த மந்திரம் தெரிவிக்கிறது. முதலில் எழுந்திருக்க வேண்டும், பிறகு விழிக்க வேண்டும். எழுந்து, விழித்து, தகுந்த குருவை அடையும்போது அவர் அனுபூதி நிலைக்கான வழியைக் காட்டுவார். இந்த மூன்று படிகளையும் அப்யாரோஹ மந்திரம் (ஓம் அஸதோ மா ஸத்கமய தமஸோ மா ஜ்யோதிர் கமய ம்ருத்யோர்மா அம்ருதம் கமய) விளக்குகிறது.

உண்மையற்ற நிலையிலிருந்து என்னை
உண்மை நிலைக்கு அழைத்துச் செல்வாயாக!
அறியாமை இருளிலிருந்து என்னை
அறிவுப் பேரொளிக்கு அழைத்துச் செல்வாயாக!
மரணத்திலிருந்து என்னை
மரணமிலாப் பெருநிலைக்கு அழைத்துச் செல்வாயாக!

என்று பிரார்த்திக்கிறது அந்த வேத மந்திரம். எழுந்திருத்தல் என்றால் உண்மையற்றதிலிருந்து உண்மையைப் பிரித்தறிதல். விழித்தல் என்றால் அறியாமையிலிருந்து விடுபடல். மூன்றாவதாக மரணமிலாப் பெருநிலையாகிய அனுபூதியை அடைதல். உண்மையற்ற உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்; இதில் உண்மையான இன்பத்தையோ அமைதியையோ அடைய முடியாது என்பதை உணர்வது முதற்படி. இது வெறும் புத்தக அறிவாக இல்லாமல் மனத்தின் அடியாழங்களில் பதிய வேண்டும். அப்போது தான் நமது செயல்கள் அதற்கேற்ப அமையும்.

உண்மையற்றதிலிருந்து உண்மையைப் பிரித்தறியும் போது நமக்குத் தெரிவது என்ன? நாம் அறியாமையில் மூழ்கியிருக்கிறோம் என்ற உண்மை. எது அறியாமை? புற வளர்ச்சியை உண்மையான வளர்ச்சி என்று நம்பி அகவளர்ச்சியில் நாட்டம் செலுத்தாமல் இருப்பதுதான் அது. இந்த உண்மையைப் புரிந்துகொண்டு அக வளர்ச்சியில் நாட்டம் செலுத்துவதுதான் விழித்தல் என்கின்ற இரண்டாம்படி. அக வளர்ச்சியில் நாட்டம் செலுத்தும்போதுதான் குருவின் தேவையை உண்மையாக நாம் உணர்வோம். உண்மையான தேவையுடன் தகுந்த குருவை அடைந்து அவரால் வழிகாட்டப்படும்போது இறையனுபூதி வாய்க்கிறது.

இறையனுபூதியின் மகிமை

15. அசப்தமஸ்பர்சமரூபமவ்யயம்
ததாரஸம் நித்யமகந்தவச்ச யத்
அனாத்யனந்தம் மஹத: பரம் த்ருவம்
நிசாய்ய தன்ம்ருத்யுமுகாத் ப்ரமுச்யதே

யத்-எது; அசப்தம்-ஒலியைக் கடந்தது; அஸ்பர்சம்-தொடு உணர்ச்சியைக் கடந்தது; அரூபம்-காட்சியைக் கடந்தது; அரஸம்-சுவையைக் கடந்தது; அந்தவத் ச-மணத்தைக் கடந்தது; ததா-அதுபோல்; அவ்யயம்-அழிவற்றது; நித்யம்-என்றென்றும் இருப்பது; அனாதி-ஆரம்பம் இல்லாதது-அனந்தம்-முடிவற்றது; மஹத-புத்தியைவிட; பரம்-மேலானது; த்ருவம்-நிலையானது; தத்-அதை; நிசாய்ய-அனுபூதியில் உணர்ந்து; ம்ருத்யுமுகாத்-மரணத்தின் பிடியிலிருந்து; ப்ரமுச்யதே-விடுபடுகிறான்.

பொருள் : ஒலி, தொடு உணர்ச்சி, காட்சி, சுவை, மணம் என்று புலன்களால் உணரக்கூடிய அனைத்தையும் கடந்த, அழிவற்ற, என்றென்றும் உள்ள, ஆரம்பம் இல்லாத, முடிவற்ற, புத்தியைவிட மேலான, நிலையான இறைவனை அனுபூதியில் உணர்பவன் மரணத்தின் பிடியிலிருந்து விடுபடுகிறான்.

உபநிஷத மகிமை 16-17

பொதுவாக ஒரு நூலின் முடிவில்தான் உபநிஷத மகிமை சொல்லப்படும். தொடரும் இரண்டு மந்திரங்களுடன் கட உபநிஷதத்தின் முதல் பகுதி நிறைவுறுவதால் இங்கும் கூறப்படுகிறது.

16. நாசிகேதமுபாக்யானம் ம்ருத்யு ப்ரோக்தம் ஸனாதனம்
உக்த்வா ச்ருத்வா மேதாவீ ப்ரஹ்ம லோகே மஹீயதே

நாசிகேதம்-நசிகேதன் கேட்ட; ம்ருத்யு ப்ரோக்தம்-எமதர்மன் கூறிய; ஸனாதனம்-பழமையான; உபாக்யானம்-விஷயத்தை; உக்த்வா-சொல்லி; ச்ருத்வா ச- கேட்கின்ற; மேதாவீ-புத்தி வழிக்கப் பெற்றவன்; ப்ரஹ்மலோகே-உயர் உலகங்களில்; மஹீயதே-போற்றப்படுகிறான்.

பொருள் : நசிகேதனுக்கு எமதர்மன் கூறிய இந்தப் பழமையான விஷயத்தை விழிப்புணர்வு பெற்ற ஒருவன் சொல்லவும் கேட்கவும் செய்தால் உயர் உலகங்களில் போற்றப்படுகிறான்.

17. ய இமம் பரமம் குஹ்யம்
ச்ராவயேத் ப்ரஹ்ம ஸம்ஸதி
ப்ரயத: ச்ராத்தகாலே வா ததானந்த்யாய கல்பதே
ததானந்த்யாய கல்பத இதி

ய-யார்; ப்ரயத-தூயவனாக இருந்து; பரமம்-மேலான; குஹ்யம்-பொருளாழம் மிக்க; இமம்-இதனை; ப்ரஹ்ம ஸம்ஸதி-சான்றோர்களின் சபையிலோ; ச்ராத்தகாலே வா-சிராத்த காலத்திலோ; ச்ராவயேத்-கேட்கச் செய்கிறானோ; தத்-அது; அனந்த்யாய-எல்லையற்ற பலனை; கல்பதே-தருகிறது.

பொருள் : மேலான, பொருளாழம் மிக்க இந்த உபநிஷதத்தைச் சான்றோர்களின் சபையிலோ சிராத்த காலத்திலோ தூயவனான ஒருவன் படித்தால் அது எல்லையற்ற பலனைத் தருகிறது.

பொதுவாக உபநிஷதங்கள் போன்றவற்றைப் படிப்பது ஒரு புண்ணிய செயலாகக் கருதப்படுகிறது. ஆனால் அதன் முழுப் பலனையும் பெற வேண்டுமானால் புத்தி விழிக்கப் பெற்ற தூயவனாக இருத்தல் அவசியம் என்பதை இந்த 16 மற்றும் 17 ஆம் மந்திரங்கள் கூறுகின்றன. அவர்களால்தான் உபநிஷங்களின் உட்பொருளை உணர்ந்துகொள்ள முடியும்; அதற்கேற்ப செயல்பட முடியும் என்பதே இதன் கருத்து. பாடுபடுபவர்களுக்கே பலன், வெறுமனே கிளிப்பிள்ளைபோல் படிப்பவர்கள் உயர்ந்த பலனை எதிர்ப்பார்க்கக் கூடாது.

இதி காடக உபநிஷதி ப்ரதம அத்யாயே த்ருதீயா வல்லீ


Offline Anu

Re: உபநிஷதம்
« Reply #4 on: March 29, 2012, 01:07:42 PM »
ஆன்மாவை அறிவதற்கான அடிப்படை நிபந்தனை ..

2.1 அதுவே நீ

கட உபநிஷதத்தின் இரண்டாம் பகுதி ஆரம்பிக்கிறது. உயர் வாழ்விற்கான அடிப்படைகள் சிலவற்றை முதற் பகுதியில் கண்டோம். சிரத்தை, ஆசையின்மை போன்ற அடிப்படைப் பண்புகளுடன் புத்தியின் விழிப்பு மிகவும் அவசியம் என்பது அங்கே விளக்கப்பட்டது.

விழிப்புற்ற புத்தியில் எவ்வாறு ஆன்ம தரிசனம் உண்டாகிறது, இறையனுபூதி என்றால் என்ன போன்றவற்றை விளக்குகிறது இந்த இரண்டாம் பகுதி. கட உபநிஷதம் கூறுகின்ற வித்யைகளுள் ஒன்றான அங்குஷ்ட்டமாத்ர வித்யை இந்தப் பகுதியில் வருகிறது.

மரணத்திற்குப் பின்னால் என்ன நிகழ்கிறது என்பது நசிகேதனின் கேள்வி. மரணம் என்பது உடம்புக்கு மட்டுமே, மரணத்தால் பாதிக்கப்படாத ஒன்று இந்த உடம்பினுள் உள்ளது. அதுவே நீ என்று அவனுக்கு இங்கே உபதேசிக்கிறான் எமதர்மன். அது எனப்படுகின்ற அந்த ஆன்மா மூன்று அத்தியாயங்களிலுமாக 10 கோணங்களில் விளக்கப்படுகிறது.

ஆழ்ந்த சிந்தனைக்கு, தியானத்திற்கு உரியது இந்தப் பகுதி. எதை நினைக்கிறோமோ அது ஆகிறோம் என்பார் சுவாமி விவேகானந்தர். நான் உடம்பல்ல, உயிரல்ல; அனைத்தையும் கடந்த ஆன்மா என்பதைத் திரும்பத்திரும்ப பல்வேறு கோணங்களில் ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டுகிறது அதுவே நீ என்ற இந்த உபதேசப் பகுதி. அதுவே நான் என்ற இந்த உயர்நிலை தியானத்தின்மூலம் நாம் ஆன்மா என்பதை உணர்கிறோம், ஆன்மா ஆகிறோம்.

ஆன்மாவை அறிவதற்கான அடிப்படை நிபந்தனையுடன் அத்தியாயம் தொடங்குகிறது.

புலன்களை உள்ளே திருப்புதல் : 1-2

1. பராஞ்சி கானி வ்யத்ருணத் ஸ்வயம்பூ
தஸ்மாத் பராங் பச்யதி நாந்தராத்மன்
கச்சித்தீர: ப்ரத்யகாத்மானமைக்ஷத்
ஆவ்ருத்த சக்ஷúரம்ருதத்வமிச்சன்

கானி-புலன்களை; பராஞ்சி-புற நோக்குடன்; ஸ்வயம்பூ-இறைவன்; வ்யத்ருணத்-அமைத்துள்ளார்; தஸ்மாத்-அதனால்; பராங்-வெளியில்; பச்யதி-பார்க்கின்றன; ந அந்தராத்மன்-அகத்திலுள்ள ஆன்மாவைப் பார்ப்பதில்லை; அம்ருதத்வம்-மரணமற்ற நிலையை; இச்சன்-விரும்புகின்ற; கச்சித்-யாரோ; தீர-விவேகி; ஆவ்ருத்த சக்ஷú-அக நோக்குடன்; ப்ரத்யகாத்மானம்-ஆன்மாவை; ஐக்ஷத்-பார்க்கிறான்.

பொருள் : புலன்களைப் புற நோக்குடன் இறைவன் அமைத்துள்ளார். அதனால் அவை வெளியில் பார்க்கின்றன; அகத்திலுள்ள ஆன்மாவைப் பார்ப்பதில்லை. மரண மற்ற நிலையை விரும்புகின்ற யாரோ விவேகி அக நோக்கு உடையவனாய் ஆன்மாவைப் பார்க்கிறான்.

தொலைநோக்கியால் தூரத்திலுள்ள  பொருட்களைப் பார்க்க முடியும்; அருகிலுள்ள ஒன்றைப் பார்க்க முடியாது. தூரத்தில் உள்ளவற்றைப் பார்ப்பதற்காகவே தொலைநோக்கி உருவாக்கப்பட்டுள்ளது. அதுபோலவே புலன்கள் வெளியுலகை அனுபவிப்பதற்காக உள்ளவை. அவற்றை உள்ளே திருப்புவது என்றால் அவற்றின் புற நாட்டத்தைத் தடுப்பது, அவ்வளவுதான். அவை புறமுகமாகச் செயல்படாமல் இருக்குமானால் அக வளர்ச்சியும் அக மாற்றங்களும் இயல்பாகவே நிகழும். இது சொல்வது எளிது, செய்வது மிகமிகக் கடினமானது. அதனால்தான் யாரோ விவேகி ஒருவன் அக வளர்ச்சியை நாடுவாக மந்திரம் கூறுகிறது.

2. பராச: காமானனுயந்தி பாலா
தே ம்ருத்யோர்யந்தி விததஸ்ய பாசம்
அத தீரா அம்ருதத்வம் விதித்வா
த்ருவமத்ருவேஷ்விஹ ந ப்ரார்த்தயந்தே

யே-எந்த; பாலா-மனப்பக்குவம் இல்லாதவர்கள்; பராச-புறத்திலுள்ள ;காமான்-சுகபோகப் பொருட்களை; அனுயந்தி-நாடுகிறார்களோ; தே-அவர்கள்; விததஸ்ய-எங்கும் இருக்கின்ற; ம்ருத்யோ-மரணத்தின்; பாசம்-வலையை; யந்தி-அடைகின்றனர்; அத-எனவே; தீரா-விவேகிகள்; அத்ருவேஷு-நிலையற்றவற்றில் அம்ருதத்வம்-அழிவற்ற; த்ருவம்-நிலையானதை; விதித்வா-அறிந்து; இஹ-இங்கே; ந ப்ரார்த்தயந்தே-விரும்புவதில்லை.

பொருள் : மனப்பக்குவம் இல்லாதவர்கள் புறத்திலுள்ள சுகபோக பொருட்களை நாடுகின்றனர். எங்கும் இருக்கின்ற மரண வலையில் அவர் வீழ்கின்றனர். ஆனால் நிலையற்ற உலகில் அழிவற்ற நிலையான பொருள் ஒன்று இருப்பதை விவேகிகள் அறிகின்றனர். எனவே அவர்கள் சுகபோகப் பொருட்களை விரும்புவதில்லை.

சுகபோகப் பொருட்கள் புலன்களின் ஆற்றலை அழித்துவிடுகின்றன என்று ஏற்கனவே(1.1.26) கண்டோம். எனவே சுகபோகங்களை நாடுபவர்கள் விரைவில் மரணத்தின் பிடியில் சிக்குகிறார்கள் என்பது இங்கே குறிப்பால் உணர்த்தப்படுகிறது.

மரணம் எங்கும் நிறைந்ததாகக் கூறப்படுவதைக் கருத்தில்கொள்ள வேண்டும். உண்மையில் இந்த உலகம் மரணத்தின் நிழல் பிடிந்தது. தோன்றிய அனைத்தும் மரணம் என்ற மாபெரும் அழிவை நோக்கியே சென்று கொண்டிருக்கின்றன. புலன்களின் வசப்பட்டு, அவற்றின் போக்கிலேயே சென்று கொண்டிருந்தால் நாமும் மரண வலையில் விழுவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் இந்த நிலையற்ற உலகின் உள்ளே, அதாவது அதன் பின்னணியில், அழிவற்ற, நிலையான இறைவன் உள்ளார். அவரை நாடும்போது சுகபோகப் பொருட்களிலிருந்து நாம் விலகுகிறோம்; மரணத்திலிருந்து விலகுகிறோம். இவ்வாறு விவேகி சுகபோகப் பொருட்களை நாடாமல் இருக்கிறான், புலன்களின் போக்கைத் தடுத்து, புற வளர்ச்சியை விரும்பாமல் அக வளர்ச்சியில் நாட்டம் செலுத்தி மரணத்தை வெல்கிறான்.

அதுவே நீ (3-9)

அதுவே நீ என்ற இந்தப் பகுதி ஆழ்ந்த சிந்தனைக்கு உரியதாகும். ஆழ்ந்த சிந்தனையின்மூலம் இந்த உணர்வு, அதாவது உடம்பையும் மனத்தையும் கடந்த ஆன்மா நான் என்ற உணர்வு நம்மிடம் வலுப்படுகிறது. புலன்களை வசப்படுத்துவதில் இது மிகவும் உதவுகிறது. புலன்கள் வசப்படும்போது அக வளர்ச்சி உண்டாகிறது. அக வளர்ச்சி ஆன்ம அனுபூதியில் நிறைவுறுகிறது.

சாட்சிப் பொருள் நீ : 3-4

புலன்களின் புற நாட்டத்தைத் தடுக்க வேண்டும். எப்படி? அவற்றிற்கு உண்மையை உணர்த்த வேண்டும்; உலகின் அனுபவங்களில் உள்ளீடு எதுவும் இல்லை என்பதை அவை புரியுமாறு செய்ய வேண்டும். அதற்கான பயிற்சியை இந்த மந்திரங்கள் தெரிவிக்கின்றன.

வாழ்வில் எவ்வளவோ நிகழ்கின்றன. உடம்பிற்கு எத்தனையோ அனுபவங்கள் வருகின்றன. எத்தனையோ விஷயங்கள் மனத்தைக் கடந்து செல்கின்றன. அவற்றுடன் இணைந்து நாமும் துயரப்படுகிறோம், சுகத்தை அனுபவிக்கிறோம், வெறுக்கிறோம், விரும்புகிறோம், அழுகிறோம், சிரிக்கிறோம், ஆனால் இவை எதிலும் பங்கெடுக்காமல் நம்முள் ஒன்று இருப்பதாக ஏற்கனவே (1.3.1) கண்டோம். அதுவே ஆன்மா. அதனுடன் நம்மை ஒன்றுபடுத்திக் கொள்ள வேண்டும்.

3. யேன ரூபம் ரஸம் சப்தான் ஸ்பர்சாம்ச்ச மைதுனான்
ஏதேனைவ விஜானாதி கிமத்ர பரிசிஷ்யதே ஏதத்வை தத்

ரூபம்-காட்சி; ரஸம்-சுவை; கந்தம்-மணம்; சப்தான்-ஒலி; ஸ்பர்சான்-தொடு உணர்ச்சி; மைதுனான் ச-உடலின்பம்; யேன-எதனால்; விஜானாதி-உணர்கிறானோ; ஏதேன-எதனால்; அத்ர-இவற்றில்; கிம்-என்ன; பரிசிஷ்யதே-எஞ்சியிருக்கிறது; ஏவ-என்று; ஏதத்வை-இதுவே; தத்-அது.

பொருள் : காட்சி, சுவை, மணம், ஒலி, தொடு உணர்ச்சி, உடலின்பம் முதலியவற்றை எதனால் ஒருவன் உணர்கிறானோ, இந்த அனுபவங்களில் என்ன எஞ்சியிருக்கிறது என்பதையும் எதனால் தெரிந்துகொள்கிறானோ அதுவே நீ கேட்ட பொருள்.

அழகிய பூவை ரசிக்கிறோம். நம்முள்ளே உணர்வுப் பொருளாகிய ஆன்மா இருப்பதால்தான் அதனை நம்மால் ரசிக்க முடிகிறது என்பதை மறந்துவிடுகிறோம். உயிரற்ற உடலின் முன்னால் அழகோ நறுமணமோ எந்த விளைவையும் ஏற்படுத்துவதில்லை. நம்முள் இருக்கின்ற இருவருள் ஒருவர் அனுபவங்களில் ஈடுபட்டு அனுபவிக்கிறார். மற்றொருவர் சாட்சியாக நின்று அவற்றைக் கவனிக்கிறார் அனுபவங்களைப் பெறுபவருடன் நம்மை ஒன்றுபடுத்திக் கொள்ளும்போது மேலும்மேலும் செயல்களில் ஈடுபட்டு தளைகளை அதிகப்படுத்திக் கொள்கிறோம். மாறாக, சாட்சியாக நிற்கின்ற ஆன்மாவுடன் நம்மை ஒன்றுபடுத்திக் கொண்டு, விலகி நின்று, அனுபவங்களின் உள்ளீடற்ற தன்மை நமக்கு மேலும்மேலும் தெரியவரும்.

புலன் அனுபவங்கள் உள்ளீடற்றவை என்ற கருத்து நம்முள் பதியும்போது புலன்கள் புறவுலகை நாடுவதை இயல்பாகவே விட்டுவிடுகின்றன; அக நோக்கு என்பது தானாகவே நிகழ்கிறது. எனவே, சாட்சியாக இருந்து பழகுவது என்பது புலன்களை வசப்படுத்துவதற்கான ஒரு சிறந்த பயிற்சி ஆகிறது.

நாம் ஆன்மா என்ற உணர்வு இந்தப் பயிற்சியின் மூலம் வலுப்பெறுகிறது. எனவே சுகதுக்க அனுபவங்கள் நம்மை அணுகும்போது அவற்றுடன் நம்மை இணைத்துக் கொள்ளாமல் விலகி நின்று பார்க்க நம்மைப் பழக்கம் படுத்திக் கொள்ள வேண்டும்.

4. ஸ்வப்னாந்தம் ஜாகரிதாந்தம் சோபௌ யேனானுபச்யதி
மஹாந்தம் விபுமாத்மானம் மத்வா தீரோ ந சோசதி

ஸ்வப்ன அந்தம்-கனவு நிலை; ஜாகரித அந்தம்-விழிப்பு நிலை; ச உபௌ-இரண்டு நிலைகளையும்; யேன-எதனால்; அனுபச்யதி-பார்க்கிறானோ; மஹாந்தம்-மகிமை வாய்ந்த; விபும்-எங்கும் நிறைந்த; ஆத்மானம்-ஆன்மாவை; மத்வா-அனுபூதியில் உணர்கின்ற; தீர-விவேகி; ந சோசதி-கவலைப்பட மாட்டான்.

பொருள் : கனவு, விழிப்பு ஆகிய இரண்டு நிலைகளையும் எதனால் ஒருவன் உணர்கிறானோ அதுவே ஆன்மா, அது மகிமை வாய்ந்தது, எங்கும் நிறைந்தது. அதனை அனுபூதியில் உணர்கின்ற விவேகி கவலையிலிருந்து விடுபடுகிறான்.

நாம் சாட்சிப் பொருள் என்பதை இங்கே மற்றொரு கோணத்திலிருந்து விளக்க முற்படுகிறான் எமதர்மன். கனவு, விழிப்பு, ஆழ்ந்த தூக்கம் இந்த மூன்று நிலைகளின் வழியாக நாம் தொடர்ந்து சஞ்சரித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு மாலையிலுள்ள நூல் பல முத்துக்களைக் கோர்த்து, அவற்றிற்கிடையே ஒரு தொடர்பை உண்டாக்குவதுபோல் நமது இந்த மூன்று நிலைகளையும் தொடர்பு படுத்திக்கொண்டு நிற்கின்ற பொருளே ஆன்மா.

கனவுலகம் வேறு, விழிப்பில் நாம் வாழ்கின்ற உலகம் வேறு, ஆழ்ந்த தூக்கத்தை அனுபவிக்கின்ற உலகம் வேறு, ஆனால் இந்த மூன்றிலும் நான் என்ற உணர்வு இருக்கிறது. அதனால்தான் நான் கனவு கண்டேன் நான் விழித்திருக்கிறேன். நான் ஆழ்ந்து தூங்கினேன் என்று சொல்கிறோம். கனவில் நனவுலகம் மறைகிறது, ஆழ்ந்த தூக்கத்தில் இரண்டு உலகங்களுமே மறைகின்றன. மறைகின்ற எதுவும் உண்மையாக இருக்க முடியாது. எனவே இந்த மூன்று நிலைகளும் உண்மை அல்ல. இந்த நிலைகள் எதனுடனும் சம்பந்தப் படாமல், மூன்று நிலைகளும் தன்னைக் கடந்து செல்வதை ஒரு சாட்சியாக நின்று காண்கிறது ஆன்மா.

காலத்தின் தலைவன் நீ

நமது உணர்வைப் பிரபஞ்சம் முழுவதுமாக விரிப்பதற்கான ஒரு முயற்சியை இந்த மந்திரத்திலிருந்து காண்கிறோம். உடம்பினும் இதயக் குகையினுள் உள்ள ஆன்மா நான் என்ற கருத்தும் பிரபஞ்சம் முழுவதும் நிறைந்துள்ள பொருளே நான் என்ற கருத்தும் ஒவ்வொரு மந்திரத்திலும் வருகிறது. உணர்வை விரிப்பதற்கான சாதனை இது.

5. ய இமம் மத்வதம் வேத ஆத்மானம் ஜீவமந்திகாத்
ஈசானம் பூத பவ்யஸ்ய ந ததோ விஜுகுப்ஸதே ஏதத்வை தத்

ய-யார்; மத்வதம்-கர்ம பலன்களை அனுபவிக்கின்ற; ஜீவம்-உயிருக்கு ஆதாரமான; இமம்-இந்த; ஆத்மானம்-ஆன்மாவை; அந்திகாத்-அருகில் இருப்பதாக; பூத பவ்யஸ்ய-இறந்த காலம் மற்றும் எதிர்காலத்திற்கு; ஈசானம்-தலைவனாக; வேத-அறிகிறானோ; தத-பிறகு; ந விஜுகுப்ஸதே-வெறுப்பதில்லை; ஏதத் வை-இதுவே; தத்-அது.

பொருள் : கர்ம பலன்களை அனுபவிக்கின்ற உயிருக்கு ஆதாரமான இந்த ஆன்மாவை இருப்பதாகவும், அதேவேளையில் இறந்தகாலம் மற்றும் எதிர்காலத்திற்குத் தலைவனாகவும் அறிபவன் யாரையும் வெறுப்பதில்லை. அதுவே நீ கேட்ட பொருள்.

நம்முள் உள்ள இருவரில் (1.3.1) ஒருவர் அனுபவங்களைப் பெறுகிறார். மற்றொருவர் அந்த அனுபவங்களைப் பெறுவதற்கு ஆதாரமாக இருக்கிறார். அதுவே ஆன்மா. அதுவே நாம். நம்முள் உள்ள ஆன்மாவே நாம் என்று கூறிவிட்டு, அடுத்த வரியிலேயே, காலத்தின் தலைவன் நாம் என்று நமது உணர்வை விரிக்கிறது உபநிஷதம்.

காலத்தின் தலைவன் ஆவது என்றால் என்ன?

பொதுவாக நாம் கடந்த காலத்தை அசை போட்டுக் கொண்டிருப்போம், அல்லது எதிர்காலக் கற்பனைகளில் மிதந்து கொண்டிருப்போம். அதாவது நமது வாழ்க்கை இறந்த மற்றும் எதிர்காலங்களில் உழன்று கொண்டிருக்கிறது. நாம் நிகழ்காலத்தில் வாழ்வதே இல்லை. காலத்தின் தலைவனாக இருப்பது என்றால் இறந்த மற்றும் எதிர்காலங்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபடுவது; நிகழ்காலத்தில் வாழ்வது. நிகழ்காலத்தில் வாழ்வது என்றால் நிரந்தர தியான நிலையில் திளைப்பது என்கிறார். (ம-என்ற புனைபெயரில் தம்மை மறைத்துக்கொண்ட மகேந்திரநாத் குப்தர் ஸ்ரீராம கிருஷ்ணரின் சீடர்; இல்லற ஞானி காலத்தால் அழியாத காவியமான அமுதமொழிகள் என்ற நூலை உலகிற்குத் தந்தவர்) தியானத்தில் கால இடைவெளி மறைகிறது. அன்பு செய்வது பக்தி செய்வது என்றால் நிரந்திர நிகழ்காலத்தின் சன்னதியில் இருப்பது; அங்கே கடந்தகாலத்திற்கோ எதிர் காலத்திற்கோ எந்தத் தொடர்பும் இல்லை என்று விளக்குகிறார் அவர்.

எனவே காலத்தை வெல்வது என்றால் கடந்த மற்றும் எதிர்காலங்களில் பிடியிலிருந்து விடுபட்டு நிகழ்காலத்தில் வாழ்வது என்றாகிறது. இதை எப்படிச் செய்வது? கடந்த மற்றும் எதிர்காலங்கள் நம்மீது எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகின்றன? எண்ணங்களின்மூலம். எனவே மனத்தில் எண்ணங்களே எழாமல் தடுப்பது நிகழ்காலத்தில் வாழ்வதற்கான வழிகளுள் ஒன்றாகும்.

ஓர் எண்ணம் எழுந்து மறைந்தபிறகு அடுத்த எண்ணம் எழுகிறது. இரண்டு எண்ண அலைகளுக்கு இடையேயுள்ள காலத்தை அதிகப்படுத்தும்போது இது நிகழ்கிறது. ( இங்கு ஒரு விஷயத்தைக் கவனத்தில்கொள்ள வேண்டும். இந்தப் பயிற்சிகள் மனக்கட்டுபாடு உடைய, நல்லொழுக்க வாழ்வில் நிலைபெற்ற உயர்நிலை சாதர்களுக்கு உரியவை. அதுவும், தகுந்த குருவின் வழிகாட்டுதலுடன் செய்யப்பட வேண்டியவை. முதற்பகுதியில் நல்லொழுக்கம் போன்ற அடிப்படை பண்புகளைக் கூறிய பிறகு இரண்டாம் பகுதியில் இவை கூறப்படுவதைக் கருத்தில்கொள்ள வேண்டும். )

முதலில் தோன்றியவன் நீ

6. ய பூர்வம் தபஸோ ஜாதமத்ப்ய பூர்வமஜாயத
குஹாம் ப்ரவிச்ய திஷ்ட்டந்தம் யோ பூதேபிர் வ்யபச்யத ஏதத்வை தத்

ய-யார்; பூர்வம்-முன்னால் ; தபஸ-தவத்தினால்; ஜாத-தோன்றியவரோ; அத்ப்ய-தண்ணீர் முதலான பஞ்ச பூதங்களுக்கு; பூர்வம்-முன்னால்; அஜாயத-தோன்றியவரோ; ய-யார்; பூதேபி-உயிர்களின்; குஹாம்-இதயக் குகையில்; ப்ரவிச்ய-புகுந்து; திஷ்ட்டந்தம்-உறைகிறாரோ; வ்யபச்யத-காண்கிறார்.

பொருள் : யார் தண்ணீர் முதலான பஞ்ச பூதங்களுக்கும் முன்னால் தவத்தினால் தோன்றியவரோ, யார் உயிர்களின் இதயக் குகையில் உறைபவரோ அவரே அனைத்தையும் காண்கிறார். அதுவே நீ கேட்ட பொருள்.

பிரபஞ்ச்சத்திற்கு ஆதாரமான பேருணர்வுப் பொருள் தான் நம்முள் ஆன்மாவாக உறைகிறது என்ற உண்மை இங்கே மற்றொரு கோணத்தில் கூறப்படுகிறது. பூமி, தண்ணீர், அக்கினி, காற்று, ஆகாசம்(வெளி) ஆகிய ஐந்தும் பஞ்ச பூதங்கள் அதாவது ஐந்து அடிப்படைப் பொருட்கள். இந்த ஐந்தின் சேர்க்கையாலேயே உலகமும் உயிர்களும் தோன்றியுள்ளன. (ஸ்ரீமத் பகவத்கீதை (7.4-5), பக். 308-311. அவற்றிற்கு முன்பே தோன்றியவர் இறைவன். அந்த இறைவன்தான் நம்மில் ஆன்மாவாக நமது இதயக் குகையில் விளங்குகிறார்.

இறைவன் தவத்தினால் தோன்றியவர் என்று கூறுவதன்மூலம், அவரது அம்சமான ஆன்மாவை அடைய வேண்டுமானால் தவம் வேண்டும் என்பது குறிப்பால் உணர்த்தப்படுகிறது. தவத்தினால் மரணத்தையே வெல்லலாம். (கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றிலின்; ஆற்றல் தலைப்பட்ட டவர்க்கு  திருக்குறள், 27.9)
என்கிறார் திருவள்ளுவர். தவம்பற்றி பகவத்கீதை விரிவாக ஆராய்கிறது. (ஸ்ரீமத் பகவத்கீதை(17. 14-19). உணவு, உடை, சுகபோகப் பொருட்கள் என்ற புறமுகமாக செலவிடப்படுகின்ற ஆற்றலைச் சுருக்கி அந்த ஆற்றலை உயர்ந்த லட்சியங்களுக்காகப் பயன்படுத்துவது தவம்.

பிரபஞ்சத்தை இயக்கும் சக்தி நீ

7. யா ப்ராணேன ஸம்பவதி அதிதிர் தேவதாமயீ
குஹாம் ப்ரவிச்ய திஷ்ட்டந்தம் யா பூதேபிர் வ்யஜாயத ஏதத்வை தத்

ப்ராணேன ஸம்பவதி-பிராண வடிவானவளும்; தேவதாமயீ-எல்லா தெய்வங்களின் வடிவனவளும்; பூதேபி-பஞ்ச பூதங்களுடன்; வ்யஜாயதே-தோன்றியவளும்; யா-எந்த; அதிதி-தேவி; குஹாம்-இதயக் குகையில்; ப்ரவிச்ய-புகுந்து; திஷ்ட்டந்தீம்-உறைகிறாளோ; ஏதத்வை தத்-இதுவே அது.

பொருள் : பிராண வடிவானவளும், எல்லா தெய்வங்களின் வடிவானவளும், பஞ்ச பூதங்களுடன் தோன்றியவளுமாகிய எந்த தேவி உயிர்களின் இதயக் குகையில் புகுந்து உறைகிறாளோ அந்த தேவியின் வடிவாக இருப்பதே நீ கேட்ட பொருள்.

மின்சாரத்தின் ஆற்றலால் விளக்குகள் எரிவதைக் காண்கிறோம்; விசிறிகள் சுழல்வதைக் காண்கிறோம்; இன்னும் எத்தனையோ இயக்கங்களைக் காண்கிறோம். ஆனால் மின்சாரத்தைக் காண்பதில்லை. அதுபோல் இந்தப் பிரபஞ்சத்தில் எத்தனையோ இயக்கங்களைக் காண்கிறோம். பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உயிரினங்கள் தோன்றுகின்றன, மறைகின்றன, தீ எரிகிறது, தண்ணீர் ஓடுகிறது, சூரியன் உதிக்கிறது. இவ்வாறு எத்தனையோ செயல்களைக் காண்கிறோம். இதற்குக் காரணமான சக்தியை நாம் காண்பதில்லை. அதுவே பிராண சக்தி. இதனை விளக்குகிறார் சுவாமி விவேகானந்தர்:

இந்தியத் தத்துவ ஞானிகள் கொள்கைப்படி பிரபஞ்சம் இரண்டு பொருட்களால் ஆக்கப்பட்டுள்ளது. அவற்றுள் ஒன்று ஆகாசம். இது எங்கும் வியாபித்து அனைத்தையும் ஊடுருவியுள்ளது. உருவம் உள்ள அனைத்தும், சேர்க்கையால் விளைந்த அனைத்தும் ஆகாசத்திலிருந்தே வெளிப்பட்டுள்ளன. ஆகாசமே காற்றாகவும், திரவப் பொருட்களாகவும், திடப் பொருட்களாகவும் ஆகியுள்ளது. சூரியனாக, சந்திரனாக, பூமியாக, நட்சத்திரங்களாக, வால் நட்சத்திரங்களாக ஆகியுள்ளதும் ஆகாசமே. மனித உடல், பிராணி உடல், தாவரங்கள் அனைத்தும், நாம் காண்கின்ற, நாம் உணர்கின்ற அனைத்தும், இருப்பவை அனைத்துமாக இருப்பதும் ஆகாசமே........

எந்தச் சக்தியால் இந்த ஆகாசம் பிரபஞ்சமாகிறது? பிராண சக்தியால்தான்.......... இந்தப் பிராணனிலிருந்தே நாம் ஆற்றல் என்று அழைக்கின்ற நாம் சக்தி என்று அழைக்கின்ற அனைத்தும் வெளிப்படுகின்றன. புவியீர்ப்பாக, காந்த சக்தியாக வெளிப்படுவதும் பிராணனே. உடல் இயக்கங்களாக, நாடி ஓட்டங்களாக, எண்ணச் சக்தியாக வெளிப்படுவதும் பிராணனே. எண்ணம் முதல் மிகச் சாதாரண சக்திவரை எல்லாம் பிராணனின் சக்தியடா என்று பாடினார் பாரதியார். எங்கும் நிறைந்துள்ள இறைவன் நம்முள் ஆன்மாவாக விளங்குவது போல் பிரபஞ்சத்தை இயக்குகின்ற இந்தப் பிராண சக்தியே நம்முள் நமது உடம்பையும் மனத்தையும் இயக்குகின்ற பிராணனாகச் செயல்படுகிறது. பிரபஞ்ச நிலையில் அந்தப் பிராணன் எல்லா தெய்வங்களின் வடிவாக, அதாவது அனைத்து ஆற்றல்களின் உறைவிடமாக, பஞ்ச பூதங்களுடன் தோன்றியதாகக் கூறப்படுகிறது.

ஆன்ம அக்கினி நீ

8. அரண்யோர்நிஹிதோ ஜாதவேதா
கர்ப இவ ஸுப்ருதோ கர்பிணீபி
திவே திவ ஈட்யோ ஜாக்ருவத்பி
ஹவிஷ்மத்பிர் மனுஷ்யேபிரக்னி ஏதத்வை தத்

அரண்யோ-அரணிக்கட்டைகளில்; நிஹித-இருக்கின்ற; ஜாதவேதா-அக்கினி; கர்பிணீபி-கருவுற்ற பெண்களால்; கர்ப இவ-கருபோல்; ஸுப்ருத-காக்கப்படுகிறது; ஜாக்ருவத்பி-விழிப்புணர்ச்சி பெற்றவர்களால்; ஹவிஷ்மத்பி; மனுஷ்யேபி; யோகிகளான மனிதர்களால் அக்னி-ஆன்ம அக்கினி; திவே திவே-நாள்தோறும்; ஈட்ய:-வழிபடப்படுகிறது.

பொருள் : கருவுற்ற பெண்கள் கருவை எச்சரிக்கையாகக் காப்பதுபோல் அரணிக்கட்டைகளில் அக்கினி பாதுகாக்கப்படுகிறது. விழிப்புணர்ச்சி பெற்ற யோகிகள் ஆன்ம அக்கினியை அதுபோல் கவனமாக நாள்தோறும் வழிபடுகின்றனர். அந்த ஆன்ம அக்கினியே நீ கேட்ட பொருள்.

யாக குண்டங்களில் வளர்க்கப்படுகின்ற அக்கினி ஏற்கனவே எரிகின்ற தீயால் ஏற்றப்படுவதில்லை. யாக அக்கினி அவ்வளவு புனிதமாகக் கருதப்படுகின்றது. யாகத்திற்குத் தீ மூட்ட அரணிக்கட்டைகளைப் பயன்படுத்துகின்றனர். மேலொன்றும் கீழொன்றுமாக உள்ள இரண்டு கட்டைகள் அவை. அவற்றை உரசுவதால் ஏற்படுகின்ற தீப்பொறியால் யாக அக்கினியை வளர்க்கின்றனர். அரணிக்கட்டைகளில் மறைந்துள்ள அந்த அக்கினி கருவிற்கு ஒப்பிடப்படுகிறது. கருப்பைக்குள் கரு எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது என்பது பிரமிப்பூட்டுகின்ற ஒரு விஷயமாகும். இயற்கையின் மகிமைகளின் ஒன்றாகக் கருதப்பட வேண்டியது அது. எவ்வாறு கரு வெளியில் தெரிவதில்லையோ அதுபோல் அரணிக்கட்டைகளில் மறைந்துள்ள அக்கினியும் வெளியில் தெரிவதில்லை.

நமது ஆன்மா அந்த அக்கினிபோல் வெளியில் தெரியாததாக, கருப்பைக்குள் கரு பாதுகாக்கப்படுவது போல் இதயக் குகைக்குள் விளங்குகிறது. அரணிக்கட்டைகளை உரசும்போது எவ்வாறு அக்கினி வெளிப்படுகிறதோ அதுபோல் தியானத்தின்மூலம் யோகிகள் அந்த ஆன்மாவைக் காண்கின்றனர்.

ஆணையிடுபவன் நீ

9. யதச்சோதேதி ஸூர்யோ அஸ்தம் யத்ர ச கச்சதி
தம் தேவா ஸர்வே அர்ப்பிதாஸ்தது நாத்யேதி கச்சன ஏதத் வை தத்

யத- யாரிலிருந்து; ஸூர்ய-சூரியன்; உதேதி-உதிக்கிறானோ; யத்ர-எங்கே; அஸ்தம் கச்சதி ச மறைகிறானோ; தம்-அந்த இறைவனை; ஸர்வே-எல்லா; தேவா-தெய்வங்களும்; அர்ப்பிதா;-அடைகின்றனர்; தத் உ- அவரை; கச்சன-யாரும்; ந அத்யேதி-கடப்பதில்லை.

பொருள் : யாரிலிருந்து சூரியன் உதிக்கிறானோ, எங்கே மறைகிறானோ, அந்த இறைவனை எல்லா தெய்வங்களும் போற்றுகின்றனர். அவரை மீறி யாரும் நடப்பதில்லை. நீ கேட்ட பொருள் அந்த இறைவனே.

பிராண சக்தி நம்மை இயக்குகிறது, பிரபஞ்சத்தை இயக்குகிறது, தெய்வமாகப் போற்றப்படுகிறது என்று 7-ஆம் மந்திரத்தில் கண்டோம். பல்வேறு விதமாகச் செயல்படுகின்ற பிராண சக்தி பல்வேறு தெய்வங்களாகக் கொண்டாடப்படுகிறது. அந்த தெய்வங்கள் அனைத்தும், அதாவது பிராண சக்தி முழுவதும் முழுமுதற்பொருளாகிய இறைவனுக்கு அடங்கியதே. அவரது ஆணையால்தான் இந்தப் பிரபஞ்சம் இயங்குகிறது. அந்த இறைவனே நம்முள் ஆன்மாவாக விளங்குகிறார், அந்த ஆன்மாவை நீ என்று நசிகேதனுக்கு எமதர்மன் அறிவுறுத்துகிறான்.

இங்கே இருப்பதே அங்கே உள்ளது

10. யதேவேஹ ததமுத்ர யதமுத்ர ததன்விஹ
ம்ருத்யோ ஸ ம்ருத்யுமாப்னோதி ய இஹ நானேவ பச்யதி

இஹ-இங்கே; யத் ஏவ-எதுவோ; தத்-அது; அமுத்ர-அங்கே; யத்- எது; அமுத்ர-அங்கே; தத்-அது; அனு இஹ-இங்கே; ய-யார்; இஹ-இங்கே; நானா இவ-வேறுபாடு இருப்பதுபோல்; பச்யதி-காண்கிறானோ; ஸ:-அவன்; ம்ருத்யோ-மரணத்திலிருந்து; ம்ருத்யும்-மரணத்தை; ஆப்னோதி-அடைகிறான்.

பொருள் : இங்கே எது இருக்கிறதோ அதுவே அங்கே இருக்கிறது. அங்கே எது இருக்கிறதோ அதுவே இங்கும் இருக்கிறது. இந்த உலகில் வேறுபாடு இருப்பது போல் யார் காண்கிறானோ அவன் மரணத்திலிருந்து மரணத்தை அடைகிறான்.

இறைவனை எங்கும் தேடி கிடைக்காமல், கடைசியில் தன்னுள்ளே கண்டதாகக் கூறுகிறார் அப்பர் பெருமான்.
(தேடிக் கண்டுகொண்டேன் திருமாலொடு நான்முகனும்
தேடிக் தேடொணா தேவனே என்னுள்ளே
தேடிக் கண்டுகொண்டேன்-திரு அங்கமாலை தேவாரம்.)
எங்கும் நிறைந்துள்ள இறைவன் நம்முள்ளே ஆன்மாவாக விளங்குகிறார். எனவே இறைவனைத் தேட வேண்டுமானால் முதலில் நம்முள் தேட வேண்டும். இறைவனை அடைவதற்கான பாதை நம்முள்தான் இருக்கிறது.

மந்திரத்தின் இரண்டாம் வரி கருத்துச் செறிந்த ஒன்றாகும். இறைவன் என்னும் பேரொளியின் சுடர் ஒன்று நம்மில் இருக்கிறது; நம் ஒவ்வொருவருள்ளும் இருக்கிறது; மனிதர்கள் என்றல்ல, மிருகங்கள், தாவரங்கள் என்று உயிரினங்கள் அனைத்திலும் இருக்கிறது. சமுதாயத்தை நாம் அணுகுவதற்கான ஒரு முக்கிய அடிப்படைக் கருத்தை இங்கே காண்கிறோம். நம் ஒவ்வொருவருள்ளும் இருப்பது ஒரே இறைவனின் அம்சம் என்றால் நம்மில் வேறுபாடு இல்லை என்றாகிறது. எனவே வெறுப்பு, கோபம் போன்ற எதிர்மறை பண்புகளுக்கு இடமில்லாமல் போய்விடுகிறது.

எல்லாரிலும் எல்லா இடங்களிலும் இறைவன் இருக்கிறார் என்ற கருத்து நல்லொழுக்கத்திற்கு ஒரு சிறந்த அடிப்படை ஆகிறது. நான் ஏன் அடுத்தவனைத் துன்புறுத்தக் கூடாது? போன்ற கேள்விகளுக்கு இறைவன் நம்மைத் தண்டிப்பார் என்பதல்ல பதில்; நான் இறைவனின் அம்சம், நல்லவனாக இருப்பது என் இயல்பு என்பதே பதில். நான் எதற்காக என்னைச் சுற்றியிருப்பவர்களிடம் அன்பு பாராட்ட வேண்டும்? ஏன் மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும்? என்னைக் கட்டாயப்படுத்துவது எது? அதுதான் இரக்கம்; எங்கும் ஒரே பொருள் உள்ளது என்ற உணர்ச்சி என்று விளக்குகிறார் சுவாமி விவேகானந்தர்.

இவ்வாறு எல்லோரிலும் இறையம்சத்தைக் கண்டு அனைவரையும், அனைத்தையும் நேசிக்காதவன் மீண்டும் மீண்டும் பிறவிக்கு உள்ளாகிறான். எங்கும் ஒரே பேருணர்வு நிலவுவதைக் காண்கின்றவன் பிறவிச் சுழலிலிருந்து விடுபடுகிறான்.

உண்மையை அறிய மனனே கருவி

11. மஜஸைவேதமாப்தவ்யம் நேஹ நானாஸ்தி கிஞ்சன
ம்ருத்யோ ஸ ம்ருத்யும் கச்சதி ய இஹ நானேவ பச்யதி

இதம்-இந்த உண்மை; மனஸா-மனத்தினால்; ஆப்தவ்யம்-அடையப்படுகிறது; இஹ-இங்கே; நானா-வேறுபாடு; கிஞ்சன-எதுவும்; ந அஸ்தி- இல்லை; ய-யார்; இஹ-இங்கே; நானா இவ-வேறுபாடு இருப்பதுபோல்; பச்யதி-காண்கிறானோ; ஸ-அவன்; ம்ருத்யோ-மரணத்திலிருந்து; ம்ருத்யும்-மரணத்திற்கு; கச்சதி-செல்கிறான்.

பொருள் : இந்த உண்மை மனத்தினால் உணரப்படுகிறது. இந்த உலகில் வேறுபாடு எதுவும் இல்லை. இங்கே வேறுபாடு இருப்பதுபோல் யார் காண்கிறோனோ அவன் மரணத்திலிருந்து மரணத்திற்குச் செல்கிறான்.

எங்கும் இறைவன் இருக்கிறார், நம் ஒவ்வொருவருள்ளும் இறைவனின் அம்சமே நிலவுகிறது என்ற உண்மையை அறிவதற்கு நம்மிடமுள்ள ஒரே கருவி மனம். இந்த மனம் தூயதாகும்போது, ஒன்றாகும்போது அது இந்த உண்மையை அறிவதற்கான தகுதி பெறுகிறது.

தூய மனம் என்றால் என்ன?

எண்ணங்களே எழாத ஒருங்கிணைந்த மனமே தூய மனம், அந்த மனமே உண்மையைக் காட்ட வல்லது, சற்று விளக்கமாகக் காண்போம்.

தண்ணீர் தூய்மையாக இருக்கும்போது அதில் நாம் முகம் பார்க்க முடியும். அதில் எதைக் கலந்தாலும் அதன் தூய்மை கெடுகிறது. கலப்பது பாலாக இருந்தாலும், விஷமாக இருந்தாலும் விளைவு ஒன்றுதான். நமது முகம் அதில் பிரதிபலிக்காது. அதுபோல் மனமும் ஆன்மாவைப் பிரதிபலிக்க வேண்டுமானால் அதில் எண்ணங்களே இருக்கக் கூடாது. முதலில் நல்ல எண்ணங்களை மனத்தில் நிரப்புவதன்மூலம் தீய எண்ணங்களை விரட்ட வேண்டும். பிறகு நல்ல எண்ணங்களையும் விட்டுவிட வேண்டும். காலில் முள் ஒன்று தைத்தால் மற்றொரு முள்ளைக் கொண்டுவர வேண்டும். காலிலிருந்து முள்ளை எடுத்தபிறது இரண்டு முட்களையும் எறிந்துவிடுகிறோம். அதுபோல் அஞ்ஞான முள்ளை எடுப்பதற்கு ஞான முள்ளைத் தேட வேண்டியிருக்கிறது. அஞ்ஞானம் அழிந்ததும், ஞானம் அஞ்ஞானம் இரண்டையும் எறிந்துவிட வேண்டும் என்று இதனை விளக்குகிறார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

அதுபோலவே, மனத்தை உன்னிப்பாகக் கவனிக்கின்ற யாருக்கும் ஓர் உண்மை புரிய வரும். மனம் பல்வேறாகப் பிரிந்து கிடப்பதுதான் அது. ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொன்றை நிறைவேற்றத் துடித்துக் கொண்டிருப்பதை நாம் உணர முடியும். ஒரு தேரில் பூட்டப்பட்ட குதிரைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் செல்ல முற்படுமானால்  அதில் பயணம் செய்பவனின் கதி என்னவாகும்? மனம் பிளவுபட்டுக் கிடக்கின்ற ஒருவனின் கதியும் அதுதான். அவனால் எதையும் ஒழுங்காகச் செய்ய முடியாது. புற விஷயங்களையே செய்ய முடியாத அவனால் அக வாழ்க்கை என்பதை நினைத்துப் பார்க்கவே முடியாது. ஒருங்கிணைந்த மனம்தான் தூய மனம்.

தூய மனம் என்று கூறும்போது இந்த இரண்டு கருத்துக்களையும் மனத்தில்கொள்ள வேண்டும்.

அங்குஷ்ட்ட மாத்ர வித்யை : 12-13

இங்கே அங்குஷ்ட்ட மாத்ர வித்யை கூறப்படுகிறது. அங்குஷ்ட்டம் என்றால் பெருவிரல் இறைவன் பெருவிரல் அளவினராக இதயக் குகையில் உறைகிறார்.

12. அங்குஷ்ட்ட மாத்ர: புரு÷ஷா மத்ய ஆத்மனி திஷ்ட்டதி
ஈசனோ பூதபவ்யஸ்ய ; ததோ விஜுகுப்ஸதே ஏதத் வை தத்

அங்குஷ்ட்ட மாத்ர-பெருவிரல் அளவில்; புருஷ-இறைவன்; ஆத்மனி-உடம்பின்; மத்யே-நடுவில்; திஷ்ட்டதி-இருக்கிறார்; பூத பவ்யஸ்ய-இறந்த மற்றும் எதிர்காலங்களுக்கு; ஈசான-தலைவர்; தத-இந்த அறிவினால்; ந விஜுகுப்ஸதே-வெறுப்பதில்லை.

பொருள் : எங்கும் நிறைந்தவரும், இறந்த மற்றும் எதிர் காலங்களுக்குத் தலைவரும் ஆன இறைவன் உடம்பின் நடுவில் இதயக் குகையில் பெருவிரல் அளவில் இருக்கிறார். அவரை அறிந்தவன் யாரையும் வெறுப்பதில்லை. நீ கேட்ட பொருள் அவரே.

13. அங்குஷ்ட்டமாத்ர புரு÷ஷா ஜ்யோதிரிவாதூமக
ஈசானோ பூதபவ்யஸ்ய ஏவாத்ய ஸ உச்வ ஏதத் வை தத்

அதூமக-புகையற்ற; ஜ்யோதி: இவ-ஒளி போல்; அங்குஷ்ட்டமாத்ர-பெருவிரல் அளவில்; புருஷ-இறைவன்; பூத பவ்யஸ்ய-இறந்த மற்றும் எதிர்காலங்களுக்கு; ஈசான-தலைவர்; ஸ ஏவ-அவரே; அத்ய-இப்போது; ஸ உ- அவரே; ச்வ-பின்னர்.

பொருள் : எங்கும் நிறைந்தவரும், இறந்த மற்றும் எதிர் காலங்களுக்குத் தலைவருமான இறைவன் புகையற்ற ஒளிபோல் பெருவிரல் அளவினராக உள்ளார். இப்போது இருப்பவர் அவரே, என்றென்றும் நிலைத்திருப்பவரும் அவரே நீ கேட்ட பொருள் அவரே.

இறைவன் நம் இதயத்தில் ஆன்மாவாக விளங்குகின்ற நிலையில் அவருக்கு இங்கே ஒரு பரிமாணம் கூறப்படுகிறது. ஆன்மா பெருவிரல் இருப்பதாக இந்த மந்திரங்கள் கூறுகின்றன.

அளவில் பெரியதாக இருக்கின்ற மரத்தைப் புகைப்படம் எடுத்தால் அது அந்த புகைப்படச் சுருளின் அளவினதாக இருக்கும். அதுபோல், இதயத்தில் இஷ்டதெய்வத்தை தியானிக்கும்போது, ஆரம்ப காலங்களில் சிறிய உருவத்தையே தியானிக்க முடியும். இவ்வாறு தியானத்திற்கு வசதியாக இருப்பதைக் குறிப்பிடுவதற்காக பெருவிரல் அளவு என்று கூறப்பட்டுள்ளது.

அளவில் சிறியதாக இருப்பதால் அது ஆன்மா அல்ல, இறைவனின் அம்சம் என்று நினைத்துவிடக் கூடாது என்பதற்காகவே 13-ஆம் மந்திரம் அதனை ஒளி என்று குறிப்பிடுகிறது. சிறிய பொருளின் ஒளி சிறியதாக இருக்கும், பெரிய பொருளின் ஒளி பெரியதாக இருக்கும் என்று எந்த நியதியும் கிடையாது; சிறிய நவீன மின்விளக்குகள் பெரிய அரங்கங்களை ஒளிரச் செய்வதைக் காண்கிறோம். அது போல் பெருவிரல் அளவுடைய இந்த ஆன்மாவும் உணர்வுப் பேரொளியால் உடம்பையும் மனத்தையும் ஒளிரச் செய்கிறது.

புகையற்ற ஒளி என்பதும் கருத்தில்கொள்ள வேண்டிய ஒன்றாகும். ஒரு பொருள் எரிவதால் ஒளி உண்டாகிறது.

அந்தப் பொருளின் தன்மையைப் பொறுத்து புகை அதிகமாக இருக்கலாம், குறைவாக இருக்கலாம்; சில வேளைகளில் கண்ணுக்குத் தெரியாத அளவிற்குக்கூட இருக்கலாம். ஆனால் புகை இருந்தே தீரும். புகையற்ற ஒளி என்றால் அது எதையும் சாராத ஒளி என்பது பொருள்.

இறைவனின் அம்சமான இத்தகைய ஒளிப் பொருள் நம்மில் உள்ளது. அதை உணர்ந்தவன் மரணத்தை வெல்கிறான் என்று நசிகேதனுக்கு உணர்த்துகிறான் எமதர்மன்.

உண்மையை அறியாதனும் அறிந்தவனும் : 14-15

14. யதோதகம் துர்கே வ்ருஷ்ட்டம் பர்வதேஷ விதாவதி
ஏவம் தர்மான் ப்ருதக் பச்யன்ஸ்தானேவானுவிதாவதி

பர்வதேஷு-மலைகளில்; துர்கே-உயர்ந்த பகுதியில்; வ்ருஷ்ட்டம்-பெய்த; உதகம்-மழை நீர்; யதா-எவ்வாறு; விதாவதி-ஓடிவிடுகிறதோ; ஏவம்-அவ்வாறு; தர்மான்-உயிரினங்களை; ப்ருதக்-வேறாக; பச்யன்-காண்பவன்; தான் ஏவ-அவற்றையே; அனுவிதாவதி-பின்பற்றி ஓடுகிறான்.

பொருள் : மலைகளின் உயர்ந்த பகுதியில் பெய்த மழை நீர் எவ்வாறு தாழ்ந்த பகுதிகளுக்கு ஓடிவிடுகிறதோ, அவ்வாறே உயிரினங்களை வெவ்வேறாகக் காண்பவன் மீண்டும் மீண்டும் அவையாகப் பிறக்கிறான்.

இறைவன் ஆன்மாவாக நம்மில் உறைகிறார் என்று கண்டோம். எல்லோரிலும் உள்ளது. இறையம்சம் என்றால் வேறுபாட்டுக்கு இடமேது? வேறுபாடு காண்பவன் உண்மையை அறியவில்லை. உண்மையை உணராததால் மீண்டும் மீண்டும் பிறப்புக்கு உள்ளாகிறான். இந்தக் கருத்தை 10 ஆம் மந்திர விளக்கவுரையில் விரிவாகக் கண்டோம்.

15. யதோதகம் சுத்தே சுத்தம் ஆஸிக்தம் தாத்ருகேவ பவதி
ஏவம் முனேர் விஜானத ஆத்மா பவதி கௌதம

கௌதம-நசிகேதா; சுத்தே-தெளிந்த நீரில்; ஆஸிக்தம்-விடப்பட்ட; சுத்தம்-தெளிந்த; உதகம்-நீர்; யதா-எவ்வாறு; தாத்ருக் ஏவ-அதுவாகவே; பவதி-ஆகிறதோ; ஏவம்-அவ்வாறு; விஜானத-உண்மையை உணர்ந்த; முனே-மகானின்; ஆத்மா-ஆன்மா; பவதி-ஆகிறது.

பொருள் : நசிகேதா தெளிந்த நீரில் விடப்பட்ட தெளிந்த நீர் எவ்வாறு அதுவாகவே ஆகிறதோ அவ்வாறு உண்மையை உணர்கின்ற மகான் ஆன்ம வடிவாகவே ஆகிறார்.

குளவியை எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருக்கின்ற புழு கடைசியில் குளவியாகவே மாறிவிடுகிறது என்பதை நீ கேட்டதில்லையா?  என்று விளக்குகிறார் ஸ்ரீராமகிருஷ்ணர். நான் ஆன்மா என்பதைப் பல்வேறு கோணங்களில் ஆழ்ந்து சிந்திக்கும்போது நான் ஆன்மா என்ற ஆன்ம அனுபூதி வாய்க்கிறது.

இதி காடக உபநிஷதி த்விதீயாத்யாயே ப்ரதமா வல்லீ


Offline Anu

Re: உபநிஷதம்
« Reply #5 on: March 29, 2012, 01:13:31 PM »
மரணத்திற்குப் பின்னால் ..

மரணத்திற்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பதை இந்த அத்தியாயம் கூறுகிறது. நம்மில் இருவர் இருப்பதாக ஏற்கனவே (1.3.1) கண்டோம். ஒன்று ஜீவன்; இன்ப துன்ங்களை அனுபவிப்பது. மற்றொன்று எதிலும் கலந்து கொள்ளாமல் சாட்சியாக நிற்கின்ற ஆன்மா. உடல் வீழ்ந்தபிறகு ஜீவன் தனது பயணத்தைத் தொடர்கிறது; வாழும்போது செய்த செயல்களுக்கும் பெற்ற அனுபவங்களுக்கும் ஏற்ப மனிதனாகவோ மற்ற உயிரினங்களாகவோ பிறக்கிறது. ஜீவனின் இந்த மாற்றங்களால் ஆன்மா பாதிக்கப்படுவதில்லை.

அதுவே நீ என்ற உயர்நிலை தியானப் பகுதி இங்கும் மூன்று கோணங்களில் (1,4,8) கூறப்படுகிறது.

ஆன்ம அனுபூதி பற்றிய சிறந்த விளக்கம் ஒன்றையும் நாம் காண்கிறோம்.

உடம்பென்னும் நகரம்

1. புரமேகாதச த்வாரம் அஜஸ்யாவக்ரசேதஸ
அனுஷ்ட்டாய ந சோசதி விமுக்தச்ச விமுச்யதே ஏதத் வை தத்

ஏகாதச த்வாரம்-பதினொரு வாசல்களை உடைய; புரம்-உடம்பு; அஜஸ்ய-பிறப்பற்ற; அவக்ர சேதஸ-மாறுபாடற்ற உணர்வின்; அனுஷ்ட்டாய-தியானித்து; ந சோசதி-கவலைப்பட மாட்டான்; விமுக்த-சுதந்திரனாகி; விமுச்யதே-விடுபடுகிறான்; ஏதத் வை-இதுவே; தத்-அது.

பொருள் : பதினொரு வாசல்களை உடையதான உடம்பு, பிறப்பற்ற, மாறுபாடற்ற உணர்வை உடைய ஆன்மாவின் கருவியாகும். இவ்வாறு தியானித்து ஒருவன் கவலைகளிலிருந்து விடுபடுகிறான்; சுதந்திரனாகி பிறவிகளிலிருந்து விடுபடுகிறான். நீ கேட்டது இந்த ஆன்மாவைப்பற்றியே.

உடம்பை ஒரு தடையாக நினைத்திருந்தேன். ஆனால் உடம்பில் இறைவன் கோயில் கொண்டிருக்கிறான் என்பதைக் கண்டபிறகு அதனை ஒரு கோயிலாக எண்ணி கவனமாக பாதுகாக்கிறேன் 
உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்பினுக்குள்ளே கோயில் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே-திருமந்திரம்

என்கிறார் திருமூலர். உபநிஷதம் உடம்பை ஆன்மாவின் கருவியாகக் கூறுகிறது. உடம்பை எப்படிப் பேண வேண்டும் என்பதற்கு இந்த மந்திரங்கள் வழிகாட்டுகின்றன. உடம்பை ஒருபோதும் வெறுக்கவோ, ஒரு தடையாகக் கருதவோ கூடாது. ஆன்மாவை உணர்வதற்காக இறைவன் நமக்குக் கொடுத்துள்ள கருவியே உடம்பு என்ற எண்ணம் வேண்டும்.

இந்த உடம்பு பதினொரு வாசல்களை உடைய ஒரு நகரம் (புரம்) என்று கூறப்படுகிறது. இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு நாசி துவாரங்கள், வாய், தொப்புள், குறி, குதம் மற்றும் உச்சந்தலையிலுள்ள பிரம்மரந்திரம் (பிரம்ம ரந்திரம் என்பது உச்சந்தலையில் உள்ள ஒரு நுண்ணிய துவாரம். சாதாரண கண்களுக்கு புலப்படாதது. யோகிகள் மரண வேளையில் இதன் வழியாக தங்கள் பிராணனை (உயிரை) விடுவார்கள் என்று கூறப்படுகிறது.) ஆகியவை பதினொரு வாசல்களை. உடம்பை ஒரு நகரமாகக் கூறுவது எண்ணிப் பார்க்கத்தக்கது. ஒரு நகரத்தில் நடைபெறுகின்ற அத்தனை செயல்பாடுகளும் உடம்பில் நிகழ்வதை இன்றைய உடலியலின் துணையால் நாம் நன்றாக அறிய முடியும். சமுதாய வாழ்க்கை, கல்வி, கோயில், போக்குவரத்து, நதிகள், உணவு, உற்பத்தி, சுத்திகரிப்பு, கழிவை வெளியேற்றுதல், காவல் என்று ஒன்றுவிடாமல் எல்லா துறைகளும் உடம்பினுள் உள்ளன. நமது முனிவர்கள் விஞ்ஞானத்தின் துணையின்றி அன்றே இதனை உணர்ந்து கூறியிருப்பது வியக்கத்தக்கது. சாந்தோக்ய உபநிஷதம் உடம்பை வெறும் நகரம் என்று கூறாமல், இறைவன் வாழும் நகரம்(பிரஹ்ம புரம்) (சாந்தோக்ய உபநிஷதம், 8.1.1.) என்று கூறுகிறது.

அதுவே நீ என்ற தியானப் பகுதி இது. ஆன்மா வாழும் வீடு இந்த உடம்பு. அதாவது உள்ளே உறைகின்ற ஆன்மா என்பது ஒன்று, உடம்பு என்பது வேறொன்று. இதனை தியானிப்பவன், இந்த உண்மையை ஆழ்ந்து சிந்தித்து தனக்கு உரியதாக்கிக் கொள்பவன். அந்த உணர்விலேயே வாழ முடிந்தவன் சுதந்திரனாகிறான். அதாவது உடம்பு, மனம் போன்ற கருவிகள் தன்னைக் கட்டுப்படுத்துவதிலிருந்து விடுபடுகிறான், உடம்பும் மனமும் தன்னிலிருந்து வேறானவை, அவை தன்னைக் கட்டுப்படுத்துவதில்லை என்று உணர்கின்ற ஒருவன் மரணத்திலிருந்து விடுபடுகிறான். ஏனெனில் மணம் உடம்பிற்கு மட்டுமே. சுருக்கமாகச் சொல்வதானால் அவன் மரணத்தை வெல்கிறான். உடம்பு வீழ்ந்தபிறகு, மீண்டும் பிறவாத நிலையை அடைகிறான்.

2. ஹம்ஸ சுசிஷத் வஸுரந்தரிக்ஷஸத்
ஹோதா வேதிஷத் அதிதிர் துரோணஸத்
ந்ருஷத் வரஸத் ரிதஸத் வ்யோமஸதப்ஜா
கோஜா ரிதஜா அத்ரிஜா ரிதம் ப்ருஹத்

ஹம்ஸ-எங்கும் செல்வது; சுசிஷத்-தூய ஆகாயத்தில் சூரியனாக இருப்பது. வஸு-அனைத்திற்கும் ஆதாரமானது; அந்தரிக்ஷஸத்-வெளியில் காற்றாக இருப்பது;ஹோதா-அக்கினியாக; வேதிஷத்-பூமியில் இருப்பது; அதிதி-விருந்தினனாக; துரோணஸத்-வீட்டில் இருப்பது; ந்ருஷத்-மனிதனில் உறைவது; வரஸத்-தேவனில் உறைவது; ரிதஸத்-உண்மையில் உறைவது; வ்யோமஸத்-ஆகாயத்தில் உறைவது; அப்ஜா-நீரில் தோன்றுவது; கோஜா-பூமியில் தோன்றுவது; ரிதஜா-யாகத்தில் தோன்றுவது; அத்ரிஜா-மலையில் தோன்றுவது; ரிதம்-பிரபஞ்ச நியதியாக விளங்குவது; ப்ருஹத்-பெரியது.

பொருள் : அந்த ஆன்மா எங்கும் செல்வது, தூய ஆகாயத்தில் சூரியனாக இருப்பது. அனைத்திற்கும் ஆதாரமானது, வெளியில் காற்றாக இருப்பது. அக்கினியாக பூமியில் இருப்பது, விருந்தினனாக வீட்டில் இருப்பது, மனிதனில் உறைவது, தேவனில் உறைவது, உண்மையில் உறைவது, ஆகாயத்தில் உறைவது, நீரில் தோன்றுவது, பூமியில் தோன்றுவது, யாகத்தில் தோன்றுவது, மலையில் தோன்றுவது, பிரபஞ்ச நியதியாக விளங்குவது, பெரியது.

ஆன்மாவின் எங்கும் நிறைந்த தன்மைக்கான ஒரு பரந்த விளக்கத்தை இங்கே காண்கிறோம்.

எங்கும் நிறைந்ததாக இருப்பதால் அது செல்ல முடியாத இடம் என்ற ஒன்று இல்லை. எனவே எங்கும் செல்வது.

விருந்தினர் தெய்வமாகவே கருதப்பட வேண்டும் (அதிதி தேவோ பவ-தைத்திரீய உபநிஷதம் 1.11.2) என்கிறது தைத்திரீய உபநிஷதம். ஒரு காலத்தில் இந்தக் கருத்து பிரபலமாக இருந்ததாகவும் தற்போது மறைந்து வருவதாகவும் சுவாமி விவேகானந்தர் குறிப்பிடுகிறார்.

சங்கு, சிப்பி, முத்து, மீன் போன்ற நீர்வாழ் உயிரினங்கள் நீரில் தோன்றுபவை. தானியங்கள் முதலானவை பூமியில் தோன்றுபவை. பிரபஞ்சத்தில் பல்வேறு சக்திகள் செயல்படுவதையும். அந்த சக்திகளே பிரபஞ்சத்தை இயக்குவதையும் கண்ட வேத கால மனிதன் வாழ்வின் வளத்திற்கும் நலத்திற்கும் அந்த தேவர்களை நாடினான். யாகங்களின்மூலம் அவர்களுடன் தொடர்பு கொண்டான். எனவே யாகம் என்பது பொதுவாக வேத சக்திகளின் சின்னமாக உள்ளது. அந்த வேத சக்திகளாகவும் ஆன்மா இருக்கிறது. அதுவே யாகத்தில் தோன்றுவது என்று கூறப்பட்டது.

மலையிலிருந்து தோன்றுகின்ற நதிகள் முதலானவையாகவும் ஆன்மா உள்ளது. சற்றே அமைதியாக நின்று இந்த உலகை, அதன் செயல்பாடுகளை ஒருமுறை பார்க்கத் தெரிந்த யாருக்கும் இந்த உலகின் இயக்கம் ஒரு மாறாத நியதிக்குக் கட்டுப்பட்டு நடைபெறுவது தெரியவரும். சூரிய உதயம், காற்றின் இயக்கம், பூக்களின் மலர்ச்சி, நட்சத்திரங்களின் பயணம், உயிரினங்களின் செயல்பாடுகள் என்று அனைத்திலும் ஒரு நியதி, ஓர் ஒழுங்கு நிலவுகிறது. இந்த ஒழுங்காகவும் நியதியாகவும் ஆன்மாவே உள்ளது.

உடம்பின் தலைவன்: ஜீவன்

3. ஊர்த்வம் ப்ராணமுன்னயதி
அபானம் ப்ரத்யகஸ்யதி
மத்யே வாமனமாஸீனம்
விச்வே தேவா உபாஸதே

ப்ராணம்-பிராணனை; ஊர்த்வம்-மேலே; உத் நயதி-இயக்குவது; அபானம்-அபானனை; ப்ரத்யக்-கீழே; அஸ்யதி-தள்ளுவது; மத்யே-உடம்பின் நடுவில்; அஸீனம்-உள்ளது; வாமனம்-ஜீவனை; விச்வே-எல்லா; தேவா-புலன்களும்; உபாஸதே-சார்ந்திருக்கின்றன.

பொருள் : பிராணனை மேலே இயக்குவதும். அபானனைக் கீழே தள்ளுவதுமான ஜீவன் உடம்பின் நடுவில் உள்ளது. எல்லா புலன்களும் அதனைச் சார்ந்திருக்கின்றன.

இந்திய ரிஷிகளின் மாபெரும் கண்டுபிடிப்புகளுள் ஒன்று பிராணன். இதுபற்றி 2.1.7-இல் கண்டோம். எங்கும் நிறைந்த, பிரபஞ்சத்தின் எல்லா இயக்கங்களுக்கும் காரணமான இந்தப் பிராணன் உடம்பில் பத்துவித செயல்களில் ஈடுபட்டு உடம்பை இயக்குகிறது

பிராணன்-மேல் நோக்கிய இயக்கம்
அபானன்- கீழ் நோக்கிய இயக்கம்
வியானன்- எல்லாப் பக்க இயக்கம்
உதானன்- மரண வேளையில் ஜீவன் வெளியேற உதவுதல்
ஸமானன்- உணவு ஜீரணம், உணவை ரத்தம் போன்றவையாக மாற்றுதல்
நாகன்-வாந்தி, ஏப்பம்
கூர்மன்- கண் இமைகளின் இயக்கம்
க்ருகலன்- பசி
தேவதத்தன்- கொட்டாவி
தனஞ்ஜயன்- உடம்பிற்கு ஆரோக்கியம் அளித்தல்

இவை அனைத்தும் மொத்தமாக பிராணன் என்று அழைக்கப்படுகின்றன.
இந்தப் பிராணனை இயக்குவது ஜீவன் என்கிறது இந்த மந்திரம். ஜீவன் இந்தப் பிராணனின் மூலமாக உடம்பையும் மனத்தையும் கட்டுப்படுத்தி அவற்றின் வாயிலாக சுகதுக்க அனுபவங்களைப் பெறுகிறது. இவ்வாறு உடம்பிற்கும் மனத்திற்கும் தலைவனாக உள்ளது. ஜீவன் அல்லது உயிர்.

மரணத்திற்குப் பின்னால்: 4-11

மனிதன் ஐந்தின் தொகுதியால் சூழப்பட்டவன் உடம்பு, மனம், பிராணன், விஞ்ஞானம் (புத்தி), ஆனந்தம், இந்த ஐந்தும் ஆன்மாவின் உறைகளாக, சட்டைகளாகக் கருதப்படுகின்றன. இவை ஒவ்வொன்றிற்கும் தனித்தனியான வாழ்க்கை இருக்கிறது. தைத்திரீய உபநிஷதம் இவை ஒவ்வொன்றையும் ஆன்மா என்றே அழைப்பது கருத்தில் கொள்ளத்தக்கது. கடைசி நான்கையும் சேர்த்தே பொதுவாக நாம் உயிர் என்று அழைக்கிறோம். இந்த உடம்பினுள் இரண்டு ஆன்மா இருப்பதாகவும் ஒன்று அனுபவங்களைப் பெறுவதாகவும், மற்றொன்று சாட்சியாக இருப்பதாகவும் 1.3.1 இல் கண்டோம். இதில் அனுபவங்களைப் பெறுகின்ற ஆன்மாவாகக் கூறப்பட்டது உயிர், சாட்சியாக இருப்பது ஆன்மா. உடம்பு என்ற கருவியைப் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் போகும்போது உயிர் அதனை விட்டுவிடுகிறது. இதனையே நாம் மரணம் என்கிறோம். எனவே மரணம் என்பது உடம்பிற்கு மட்டுமே. மனம், பிராணன் போன்ற தொகுதிகளின் சேர்க்கையாகிய உயிரின் பயணம் தொடர்கிறது. ஆன்மா இவை அனைத்திற்கும் சாட்சியாக நிற்கிறது.

மரணத்திற்குப் பின்னால் என்ன எஞ்சும்?

4. அஸ்ய விஸ்ரம்ஸமானஸ்ய சரீரஸ்தஸ்ய தேஹின
தேஹாத் விமுச்யமானஸ்ய கிமத்ர பரிசிஷ்யதே ஏதத் வை தத்

சரீரஸ்தஸ்ய-உடம்பில் இருக்கின்ற; அஸ்ய-இந்த; தேஹின-உயிர்; தேஹாத்-உடம்பிலிருந்து; விஸ்ரம்ஸமானஸ்ய-விடுபட்டு; விமுச்யமானஸ்ய-வெளியேறிவிட்டால்; அத்ர-இங்கே; கிம்-என்ன பரிசிஷ்யதே-எஞ்சும்.

பொருள் : உடம்பில் இருக்கின்ற இந்த உயிர் உடம்பிலிருந்து விடுபட்டு வெளியேறிவிட்டால் இங்கே என்ன எஞ்சும்? அதுவே நீ கேட்ட பொருள்.
உடம்பு வீழ்ந்துவிட்டது, உயிர் வெளியேறி விட்டது. எஞ்சுவது எதாவது உண்டா? அதாவது, இந்த இரண்டின் மாற்றங்களால் பாதிக்கப்படாத ஏதாவது நம்மில் உள்ளதா என்பது கேள்வி. உள்ளது, அதுவே ஆன்மா. அதுவே நீ தியானத்தின் ஒரு முக்கியமான பகுதி இது. மரணத்தையே தியானிக்கத் தூண்டுகிறது இந்தப் பகுதி. சுவாமி விவேகானந்தரின் உரையாடலில் வருகின்ற ஓர் அற்புதமான பகுதியை இந்த இடத்தில் சிந்திப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

சுவாமிஜி : வாழ்வில் மிக மேலான உண்மை எது வென்று சொல்லுங்கள், பார்க்கலாம்.
(யாரும் பதில் சொல்லாதது கண்ட சுவாமிஜி தொடர்ந்தார்)

இதோ பாருங்கள், நாம் அனைவரும் இறந்துவிடுவோம் இந்த உண்மையை எப்போதும் உங்கள் மனத்தில் கொள்ளுங்கள். அப்போது மட்டுமே உங்கள் மனத்திலிருந்து அற்பத்தனம் விலகும்; செயல்திறன் உருவாகும்; உடலும் உள்ளமும் புத்தெழுச்சி பெறும்! உங்களுடன் தொடர்பு கொள்பவர்களும் தாங்கள் நன்மை அடைந்ததாகக் கருதுவார்கள்.

ஒருவர்: ஆனால் சுவாமிஜி, மரணத்தைப்பற்றி நினைப்பதால் மனம் உடைந்து சோகம் உண்டாகாதா?

சுவாமி: உண்டாகும். முதலில் மனமுடைந்து சோகமும் துயர எண்ணங்களும் எழத்தான் செய்யும். சில நாட்கள் அப்படியே கழியட்டும். பின்னர் இதயத்தில் புதிய வலிமை புகுவதைக் காண்பீர்கள். எப்போதும் மரணத்தைப்பற்றி நினைப்பது உங்களுக்கு ஒரு புதிய வாழ்வைத் தந்து உங்களை மேன்மேலும் சிந்திக்கத் தூண்டுகிறது; வெறுமை, வெறுமை அனைத்தும் வெறுமை என்பதன் உண்மையை உங்கள் கண்முன் ஒவ்வொரு கணமும் கொண்டுவருகிறது. நாட்கள், மாதங்கள், ஆண்டுகள் கடந்து செல்லட்டும். உங்கள் ஆன்மா சிங்கத்தின் வலிமையுடன் விழித்தெழுவதைக் காண்பீர்கள். உள்ளேயிருந்த சிறிய ஆற்றல், பேராற்றலாக மாறுவதை உணர்வீர்கள். எப்போதும் மரணத்தை நினையுங்கள்.

மாற்றங்களால் ஆன்மா ஏன் பாதிக்கப்படுவதில்லை?

5. ந ப்ராணேன நாபானேன மர்த்யோ ஜீவதி கச்சன
இதரேண து ஜீவந்தி யஸ்மின் ஏதாவுபாச்ரிதௌ

கச்சன- எந்த; மர்த்ய-மனிதனும்; ப்ராணேன-பிராணனாலோ; அபானேன-அபானனாலோ; ந ஜீவதி-வாழ்வதில்லை; ஏதௌ-இவை; யஸ்மின்-யாரை; உபாச்ரிதௌ-ஆதாரமாகக் கொண்டுள்ளனவோ; இதரேணது-அனைத்தும்; ஜீவந்தி-வாழ்கின்றன.

பொருள் : எந்த மனிதனும் பிராணனாலோ அபானனாலோ வாழ்வதில்லை. எதனை ஆதாரமாகக்கொண்டு இந்தப் பிராணனும் அபானனும் இயங்குகின்றனவோ, அதனை ஆதாரமாகக் கொண்டே அனைத்தும் வாழ்கின்றன.

பிராணனும் அபானனும் முறையே உள்மூச்சு மற்றும் வெளிமூச்சிற்குக் காரணமானவை. எனவே மூச்சு விடுவது என்ற செயல் இங்கே உணர்த்தப்படுகிறது. மூச்சு விடுவதால் மட்டும் மனிதன் உயிர்வாழ்ந்து விடுவதில்லை; ஏனெனில் வேறு ஏதோ இருப்பதால்தான் மூச்சு விடுவதே நடை பெறுகிறது என்கிறது இந்த மந்திரம்.

விளக்கு, விசிறி போன்ற மின்சாதனங்கள் மின்சாரத்தால் இயங்குகின்றன. விளக்கை நிறுத்துவதோ, விளக்கிருந்த இடத்தில் விசிறியைப் பொருத்துவதோ மின்சாரத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. மின்சாதனங்கள் மின்சாரத்தைச் சார்ந்துள்ளனவே தவிர மின்சாரம் சாதனங்களைச் சார்ந்தது அல்ல. அதுபோல் பிராணனும் அபானனும் மட்டுமல்ல அனைத்தும் ஆன்மாவைச் சார்ந்துள்ளன. ஆன்மா எதையும் சார்ந்திருக்கவில்லை. எனவே உடம்பு, உயிர் என்று எதில் நிகழும் மாற்றமும் அதனைப் பாதிப்பதில்லை.

மரணத்திற்குப் பின்னால் உயிரின் நிலை: 6-7

6. ஹந்த த இதம் ப்ரவக்ஷ்யாமி
குஹ்யம் ப்ரஹ்ம ஸனாதனம்
யதா ச மரணம் ப்ராப்ய ஆத்மா பவதி கௌதம

கௌதம-நசிகேதா; ஹந்த-நல்லது; மரணம்-மரணத்தை; ப்ராப்ய-அடைந்து; ஆத்மா-உயிர்; யதா-எவ்வாறு; பவதி-ஆகுமோ; ச-மேலும்; குஹ்யம்-ரகசியமானதும்; ஸனாதனம்-அழிவற்றதுமான; ப்ரஹ்மம்-ஆன்மாபற்றியும்; இதம்-இப்போது; தே-உனக்கு; ப்ரவக்ஷ்யாமி-சொல்கிறேன்.

பொருள் :  நசிகேதா! நல்லது. மரணத்திற்குப் பின்னால் உயிர் என்ன ஆகும் என்பது பற்றியும், ரகசியமானதும் அழிவற்றதுமான ஆன்மா பற்றியும் உனக்கு இப்போது சொல்கிறேன்.

7. யோனிமன்யே ப்ரபத்யந்தே சரீரத்வாய தேஹின
ஸ்தாணுமன்யே னுஸம்யந்தி யதா கர்ம யதா ச்ருதம்

அனு-பிறகு; அன்யே-சில; தேஹின-உயிர்கள்; சரீரத்வாய-உடம்பைப் பெறுவதற்காக; யோனிம்-யோனியை; ப்ரபத்யந்தே-அடைகின்றனர்; அன்யே-சிலர்; ஸ்தாணும்-தாவரம் போன்றவற்றை; ஸம்யந்தி-அடைகின்றனர்; யதா கர்ம-வினைப்பயன் எப்படியோ; யதா ச்ருதம்-அனுபவம் எப்படியோ.

பொருள் : மரணத்திற்குப்பிறகு சில உயிர்கள் மனித உடம்பைப் பெறுகின்றனர்; சில உயிர்கள் தாவரம் போன்ற நிலைகளை அடைகின்றனர். வினைப்பயனும், பெற்ற அனுபவமும் எப்படியோ அப்படியே அடுத்த பிறவி அமையும்.

உயிர்கள் பல்வேறு பிறவிகளை எடுத்து கடைசியில் நிறைநிலையை அடைகின்றன என்பது மறுபிறவிக் கோட்பாடு. வாழும் காலத்தில் எத்தகைய செயல்களைச் செய்கிறோமோ, என்னென்ன அனபவங்களைப் பெறுகிறோமோ அதற்கேற்ப அடுத்த பிறவி வாய்க்கிறது. சாதாரணமாக வாழ்கின்ற ஒருவன் மீண்டும் மனிதப் பிறவியைப் பெறுகின்றான். ஏராளமாக நற்செயல்கள் செய்பவன் அதிக புண்ணியம் பெற்று தேவலோகத்தில் வாழ்கிறான். தீமைகள் செய்பவன் மிருகங்களாக தாவரமாகப் பிறக்கிறான்.

எனவே எதைச் செய்கிறோம் என்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். எத்தகைய எண்ணங்களை நம் மனத்தில் நினைக்கிறோம் என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் எண்ணங்களே செயலாக உருவெடுக்கின்றன. செயலும் அனுபவமும், அவற்றிற்கேற்ப அடுத்த பிறவியும் உயர்வானதாக அமையும்.

ஆன்மா பாதிக்கப்படுவதில்லை

8. ய ஏஷ ஸுப்தேஷு ஜாகர்த்தி
காமம் காமம் புரு÷ஷா நிர்மிமாண
ததேவ சுக்ரம் தத் ப்ரஹ்ம ததேவாம்ருதமுச்யதே
தது நாத்யேதி கச்சன ஏதத் வை தத்

ஏஷ - இவை; ஸுப்தேஷு-தூங்கும்போது; காமம் காமம்-விருப்பமானவற்றை; நிர்மிமாண-உருவாக்கிய படி; ய-எது; ஜாகர்த்தி-விழித்திருக்கிறதோ; தத் ஏவ-அதுவே; சுக்ரம்-தூயது; தத்-அதுவே; ப்ரஹ்ம-ஆன்மா; தத் ஏவ-அதுவே; அம்ருதம்-மரணமற்றது; உச்யதே-சொல்லப்படுகிறது; தஸ்மின்-அதனிடமே; ஸர்வே-எல்லா லோகா:-உலகங்களும்; ச்ரிதா-சார்ந்திருக்கின்றன; தத்-அதனை; கச்சன-யாரும்; ந அத்யேதி-கடந்திருக்கவில்லை.

பொருள் : புலன்கள் தூங்கும்போது தனக்கு விருப்பமானவற்றை உருவாக்கியபடி எது விழித்திருக்கிறதோ அதுவே தூய மரணமற்ற ஆன்மா என்று சொல்லப்படுகிறது. எல்லா உலகங்களும் அதனையே சார்ந்திருக்கின்றன. அதனைக் கடந்தவனாக யாரும் இல்லை.

வாழ்க்கையின் எத்தனையோ புதிர்களுள் தூக்கமும் கனவும் முக்கியமான இடம் வகிப்பவை. அன்று முதல் இன்றுவரை இவைபற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. இந்த மந்திரம் கனவுபற்றி கூறுகிறது.

உடம்பும் மனமும் கருவிகள். அவற்றிற்கு ஓய்வு தேவை. உடம்பு ஓய்வெடுப்பது தூக்கம் எனப்படுகிறது. அப்போதும் மனம் தொடர்ந்து செயல்படுகிறது. அதுவே கனவு.
அங்கே தேரில்லை, இழுக்க மிருகங்கள் இல்லை, சாலைகள் இல்லை, அங்கே இன்பம் இல்லை, களிப்பு இல்லை, ஆனந்தம் இல்லை, அங்கே குளம் இல்லை, ஏரி இல்லை, நதிகளும் இல்லை, அவன் அனைத்தையும் உருவாக்குகிறான் ஏனெனில் அவனே அனைத்தையும் உருவாக்குபவன் ( ந தத்ர ந ரதயோகா பந்தானோ பவந்தி, அத ரதான் ரதயோகான் பத: ஸ்ருஜதே; ந தத்ர ஆனந்தா முத: ப்ரமுதோ பவந்தி, அத ஆனந்தான் முத: ப்ரமுத; ஸ்ருஜதே; ந தத்ர வேசாந்தா: புஷ்கரிண்ய: ஸரவந்த்யோ பவந்தி, அத வேசாந்தான் புஷ்கரிணீ: ஸ்ரவந்தீ: ஸ்ருஜதே: ஸ ஹி கர்த்தா-பிருஹதாரண்யக உபநிஷதம், 4.3.10.) என்று கனவுலகத்தைப்பற்றி பிருஹதாரண்யக உபநிஷதம் கூறுகிறது. உடம்பு ஓய்வெடுக்கும்போது மனம் செயல்படுகின்ற நிலை இது. விழிப்புநிலையில் நடைபெற்ற சில நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக இது அமையலாம்; சிலவேளைகளில் ஆசைகளில் வெளிப்பாடாக இருக்கலாம்; சிலவேளைகளில் எதிர்காலத்தைப்பற்றி அறிவிப்பாகவும் இருக்கலாம். மனம் இங்கே தனக்கென்று ஓர் உலகை உருவாக்கி இன்ப துன்பங்களை அனுபவிக்கிறது.

இன்னும் ஆழ்ந்த நிலையில் மனமும் ஓய்வெடுக்கிறது. அது ஆழ்ந்த தூக்கம். ஆழ்ந்த தூக்கத்தின் போதும் நம்மில் யாரோ ஒருவர் விழித்திருந்து நாம் ஆழ்ந்து தூங்குவதைக் கவனிக்கிறார். அதனால்தான் விழித்ததும், நான் நன்றாகத் தூங்கினேன் என்று சொல்ல முடிகிறது. ஆழ்ந்த தூக்கத்திலும் சரி, கனவிலும் சரி, விழிப்பு நிலையிலும் சரி அந்த ஒருவர் விழித்திருப்பதால்தான் அனைத்தையும் நாம் உணர முடிகிறது. அந்த ஒருவரே ஆன்மா. அதுவே நீ என்று எமதர்மன் கூறுகிறான்.
ஆன்மா இருப்பதால்தான் நாம் மூன்று நிலைகளிலும் மாறிமாறி சஞ்சரிக்க முடிகிறது. இந்த நிலைகளில் மூலமாகத் தான் நாம் பல்வேறு உலகங்களையும் பல்வேறு விதமாக அனுபவிக்க முடிகிறது. அதனால்தான் எல்லா உலகங்களும் ஆன்மாவைச் சார்ந்திருப்பதாகக் கூறப்பட்டது.

இவ்வாறு மூன்று நிலைகளிலும் சாட்சியாக நிற்கின்ற பொருளே நாம் என்பதை உணரும்போது உடம்பின் மாற்றங்களோ, மனத்தின் செயல்பாடுகளோ நம்மீது ஆதிக்கம் செலுத்துவதில்லை. உடம்பின் மாற்றமாகிய மரணமும் நம்மைப் பாதிக்காத நிலையை நாம் அடைந்து விடுகிறோம் அதுவே நீ தியானப் பகுதி இது.

ஆன்மாவின் பாதிக்கப்படாத தன்மை மூன்று உவமைகள்: 9-11

மரணத்திற்குப் பின்னால் உடம்பு வீழ்கிறது, உயிர் பயணத்தைத் தொடர்கிறது; ஆன்மா எந்தப் பாதிப்புமின்றி அனைத்து மாற்றங்களுக்கும் சாட்சியாக எப்போதும் போல் இருக்கிறது. தொடரும் மூன்று மந்திரங்களில் இது மூன்று உவமைகள்மூலம் விளக்கப்படுகிறது.

9. அக்னிர்யதைகோ புவனம் ப்ரவிஷ்ட்டோ
ரூபம் ரூபம் ப்ரதிரூபோ பபூவ
ஏகஸ்ததா ஸர்வ பூதாந்ராத்மா
ரூபம் ரூபம் ப்ரதிரூபோ பஹிச்ச

ஏக-ஒன்றான; அக்னி-அக்கினி; புவனம்-உலகில்; ப்ரவிஷ்ட்ட-வந்து; யதா-எவ்வாறு; ரூபம் ரூபம்-பல்வேறு பொருட்களில்; ப்ரதிரூப-அந்தந்த வடிவத்தில்; பபூவ-விளங்குகிறதோ; ததா-அவ்வாறே; ஸர்வ பூத அந்தராத்மா-எல்லா உயிர்களிலும் இருக்கின்ற ஆன்மா; ஏக-ஒன்றாக இருந்தாலும்; ரூபம் ரூபம்-பல்வேறு உயிரினங்களில்; ப்ரதிரூப-அந்தந்த வடிவத்தில்; பஹி: ச-வெளியிலும்.

பொருள் :  ஒன்றான அக்கினி உலகில் வந்து எவ்வாறு பல்வேறு பொருட்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறதோ அவ்வாறே எல்லா உயிர்களிலும் இருக்கின்ற ஆன்மா ஒன்றாக இருந்தாலும் பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது. அதே வேளையில், அந்த வடிவங்களுக்கு வெளியிலும் திகழ்கிறது.

பஞ்ச பூதங்களாகிய பூமி, தண்ணீர், அக்கினி, காற்று, ஆகாசம் என்ற ஐந்து அடிப்படைப் பொருட்களின் சேர்க்கையால் ஆகியது உலகம். இந்த ஐந்தும் உலகின் ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வோர் இடத்திலும் நிறைந்துள்ளது. அவ்வாறு அக்கினியும் எல்லா இடங்களிலும் உள்ளது. ஆனால் கட்டை, விறகு போன்ற எரிப்பொருட்களில் அது அதிகமாக வெளிப்படுகிறது. ஒரு கட்டையில் எந்த இடத்தைப் பற்ற வைத்தாலும் பற்றிக்கொள்கிறது. அதாவது அக்கினி அந்தக் கட்டை முழுவதிலும் வியாபித்துள்ளது. அந்தப் பொருள் முழுவதும் வியாபிக்கின்ற தன்மையே இங்கு அந்த வடிவத்தில் விளங்குகிறது என்று கூறப்பட்டது.

அக்கினி ஒரு விறகில் இருக்கின்ற அதே வேளையில் எங்கும் நிறைந்ததாகவும் உள்ளது. எனவே விறகிலோ கட்டையிலோ ஏற்படும் மாற்றங்கள் அக்கினியைப் பாதிப்பதில்லை. அதுபோலவே ஆன்மாவும்.

அடுத்த உவமையில் இது இன்னும் தெளிவாக விளங்கும்

10. வாயுர்யதைகோ புவனம் ப்ரவிஷ்ட்டோ
ரூபம் ரூபம் ப்ரதிரூபோ பபூவ
ஏகஸ்ததா ஸர்வ பூதாந்தராத்மா
ரூபம் ரூபம் ப்ரதிரூபோ பஹிச்ச

ஏக-ஒன்றான; வாயு-காற்று; புவனம்-உலகில்; ப்ரவிஷ்ட்ட-வந்து; யதா-எவ்வாறு; ரூபம் ரூபம்-பல்வேறு பொருட்களில்; ப்ரதிரூப-அந்தந்த வடிவத்தில்; பபூவ-விளங்குகிறதோ; ததா-அவ்வாறே; ஸர்வ பூத அந்தராத்மா-எல்லா உயிர்களிலும் இருக்கின்ற ஆன்மா; ஏக-ஒன்றாக இருந்தாலும்; ரூபம் ரூபம்-பல்வேறு உயிரினங்களில்; ப்ரதிரூப-அந்தந்த வடிவத்தில்; பஹி: ச-வெளியிலும்.

பொருள் : ஒன்றான காற்று உலகில் வந்து எவ்வாறு பல்வேறு பொருட்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறதோ அவ்வாறே எல்லா உயிர்களிலும் இருக்கின்ற ஆன்மா ஒன்றாக இருந்தாலும் பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறதோ அதேவேளையில் அந்த வடிவங்களுக்கு வெளியிலும் நிகழ்கிறது.

குடம் ஒன்று உள்ளது. குடத்திற்கு உள்ளேயும் காற்று உள்ளது. வெளியிலும் காற்று உள்ளது. குடத்திற்கு உள்ளே உள்ள காற்று குடத்தின் வடிவத்தைப் பெறுகிறது. குடத்தின் வடிவங்களும் அளவுகளும் மாறுபடுவதற்கு ஏற்ப உள்ளே உள்ள காற்றின் வடிவமும் அளவும் மாறுபடுகிறது. குடத்தை உடைத்துவிட்டால் காற்றுக்கு குடத்தின் வடிவம் போய்விடுகிறது; அது எங்கும் நிறைந்த தன்மையை அடைந்துவிடுகிறது. அதுபோல் ஆன்மாவும் எங்கும் நிறைந்தது. அதேவேளையில் ஒவ்வோர் உயிரினங்களிலும் அந்தந்த வடிவத்தைப் பெற்று விளங்குகிறது, எவ்வாறு காற்று குடத்தால் பாதிக்கப்படுவதில்லையோ அவ்வாறே ஆன்மாவும் உடம்பால் பாதிக்கப்படுவதில்லை.

அந்தந்த வடிவம் என்று சொல்லும்போது, 2.1.12.13-இல் கண்ட உவமையை நினைவில்கொள்ள வேண்டும். ஆன்மா பெருவிரல் அளவில் இருப்பதாக அங்கே கூறப்பட்டது. ஆனால் அது ஓர் ஒளி என்பதால் தான் நம்மால் அதனைப் புரிந்துகொள்ள முடிந்தது. இங்கும் ஒவ்வோர் உடம்பில் ஆன்மா ஒவ்வொரு வடிவத்தில் இருப்பதாகக் கூறும்போது அதனை ஓர் ஒளியாக ஒளிபோல் எங்கும் பரவியிருப்பதாக நாம் புரிந்துகொள்ள வேண்டும், மாறாக, ஆன்மா ஓர் மனித வடிவிலோ தாவர வடிவிலோ மாறுகிறது என்பதல்ல.

11. ஸூர்யோ யதா ஸர்வலோகஸ்ய சக்ஷú
ந லிப்யதே சாக்ஷúஷைர் பாஹ்யதோஷை
ஏகஸ்ததா ஸர்வபூதாந்தராத்மா
ந லிப்யதே லோகது கேன பாஹ்ய

ஸூர்ய-சூரியன்; ஸர்வலோகஸ்ய-எல்லோருடைய; சக்ஷú-காட்சிக்கு ஆதாரமானவன்; சாக்ஷúஷை-பார்வை சம்பந்தப்பட்ட; பாஹ்ய தோஷை-புறக் குறைபாடுகளால்; யதா-எவ்வாறு; ந லிப்யதே-பாதிக்கப்படுவதில்லையோ; ததா-அவ்வாறே; ஏக-ஒன்றான; ஸர்வ பூத அந்தராத்மா-எல்லோரிலும் இருக்கின்ற ஆன்மா; லோக து: கேன-உலகின் துக்கங்களால்; ந லிப்யதே-பாதிக்கப்படுவதில்லை; பாஹ்ய-கடந்தது.

பொருள் : எல்லோருடைய காட்சிக்கும் ஆதாரமாக இருப்பவன் சூரியன். ஆனால் பார்வைக் கேளாறுகளோ மற்ற புறக் குறைபாடுகளோ சூரியனைப் பாதிப்பதில்லை. அதுபோல் ஒன்றேயான ஆன்மா எல்லோரிலும் இருந்தாலும் உலகின் துக்கங்களால் பாதிக்கப்படுவதில்லை. ஏனெனில் அது அனைத்தையும் கடந்தது.

இங்கே சூரியன் என்பது ஒளியின் சின்னமாகக் கூறப்படுகிறது. எதைக் காண வேண்டுமானாலும் ஒளி வேண்டும். ஒளியின்றி எதையும் காண முடியாது. காண்பவன் இருந்தாலும், பொருள் இருந்தாலும் ஒளி இல்லாவிட்டால் பார்க்க முடியாது. அதனால்தான் சூரியன் காட்சிக்கு ஆதாரமானவனாகக் கூறப்படுகிறான்.

ஒவ்வொரு கண்ணின் பார்வைக்கும் அடிப்படைக் காரணமாக இருப்பது சூரியன். என்றாலும் எந்தக் கண்களில் உள்ள குற்றமும் அதனை எவ்விதத்திலும் பாதிப்பதில்லை. காமாலை நோயாளி எல்லாவற்றையும் மஞ்சள் நிறமாகக் காண்கிறேன். அவனது பார்வைக்கும் ஆதாரம் சூரியன்தான். ஆனால் இந்தக் குகை சூரியனைப் பாதிப்பதில்லை. இதைப் போலவே ஒன்றேயான இந்தப் பரம்பொருள் எல்லாவற்றிற்கும் ஆன்மாவாக இருந்தாலும் வெளியே உள்ள தூய்மையோ தூய்மையின்மையோ அதைப் பாதிப்பதில்லை. என்று விளக்குகிறார் சுவாமி விவேகானந்தர்.

அதுபோலவே புறக் குறைபாடுகளும். ஒரே சூரியன் கங்கையிலும் பிரதிபலிக்கிறது, சாக்கடையிலும் பிரதிபலிக்கிறது. இந்த வேறுபாடு எந்த விதத்திலாவது சூரியனைப் பாதிக்குமா? இல்லை. அதுபோல் நல்லவர்-தீயவர், சிறியவர்-பெரியவர் என்று எல்லோரிலும் ஆன்மா இருந்தாலும் இந்த வேறுபாடுகளோ, அவர்கள் அனுபவிக்கின்ற சுகதுக்கங்களோ எதுவும் ஆன்மாவை பாதிப்பதில்லை. சூரியன் எல்லாக் காட்சிகளுக்கும் ஆதாரமாக இருந்தாலும் எவ்வாறு எந்தச் செயலிலும் பங்கு கொள்ளாமல் தனித்து நிற்கிறானோ அதுபோல் எல்லா செயல்பாடுகளுக்கும் ஆதாரமாக இருந்தாலும் ஆன்மா அவற்றைக் கடந்ததாக இருப்பதால் எந்தச் செயலும் அதனைப் பற்றுவதில்லை.

ஆன்ம அனுபூதி(12-15)

மரணத்தால் பாதிக்கப்படாததாக உள்ளது ஆன்மா. அந்த ஆன்மா நான் என்ற உண்மையை உணர முடியுமானால் அதுதான் பெரிய விஷயம். தவத்தாலும் ஆன்மீக சாதனைகள்மூலம் இந்த அனுபூதியைப் பெற வேண்டும்.

ஆன்ம அனுபூதியின் மகிமை : 12-13

12. ஏகோ வசீ ஸர்வபூதாந்தராத்மா
ஏகம் ரூபம் பஹுதா ய: கரோதி
தமாத்மஸ்தம் யேனுபச்யந்தி தீரா
தேஷாம் ஸுகம் சாச்வதம் நேதரேஷாம்

ஏக-ஒன்று; வசீ- அனைத்தையும் ஆள்வது; ஸர்வ பூத அந்தராத்மா-எல்லோரிலும் இருப்பது; ய-எந்த ஆன்மா; ஏகம் ரூபம்-ஒன்றேயான பொருள்; பஹுதா-பலவாக; கரோதி-செய்கிறதோ; ஆத்மஸ்தம்-இதயத்தில் உறைகின்ற; தம்-அந்த ஆன்மாவை; யே-எந்த; தீரா-விவேகிகள்; அனுபச்யந்தி அனுபூதியில் உணர்கிறார்களோ; தோஷம்-அவர்களுக்கே; சாச்வதம்-நிலையான; ஸுகம்-இன்பம்; ந இதரேஷாம்-மற்றவர்களுக்கு இல்லை.

பொருள் :  ஒன்றேயானதும், அனைத்தையும் ஆள்வதும், எல்லோரிலும் இருப்பதும், இதயத்தில் உறைவதும், ஒன்றாக இருந்தும் பலவாகத் தோன்றுவதுமான ஆன்மாவை அனுபூதியில் விவேகிகளுக்கே நிலைத்த இன்பம் உரித்தாகும்; மற்றவர்களுக்கு இல்லை.

இறைவனின் சக்தி மாயை எனப்படுகிறது, இதற்கு இரண்டு பண்புகளை நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன: ஒன்று இருப்பதை மறைப்பது; இரண்டு, இல்லாததை இருப்பதாகக் காட்டுவது (வேதாந்த சாரம், 51-54). உலகம், உயிர்கள் என்று அனைத்திலும் நிலவுவது ஒரே ஆன்மா, ஒரே உணர்வுப் பொருள். இந்த உண்மை மறைக்கப்பட்டு, உலகையும் மனிதர்களையும் உயிரினங்களையும் வெவ்வேறாக நாம் காண்கிறோம். இப்படி நமக்குக் காட்டுவது இறைவனின் சக்தியாகிய மாயை. அந்த இறைவனே ஆன்மாவாக நம் உடம்பில் உறைகிறார். ஆன்மாவை அனுபூதியில் உணர்பவன் நிலைத்த இன்பத்தைப் பெறுகிறான்; மற்றவர்கள் பெறுவதில்லை. வேறுபாட்டு உணர்வு இருக்கும்போது பயம் தவிர்க்க முடியாதது. ஆனால் ஒருமை உணர்வில் பயமோ துன்பமோ இல்லை. ஏனெனில் யார் யாரைக் கண்டு பயப்படுவது? யார் யாருக்குத் துன்பம் செய்வது? இருப்பது ஒன்றே அல்லவா! எனவே இதை உணர்ந்தவன் எப்போதும் இன்பத்தில் திளைத்திருக்கிறான். உணராதவனுக்கு அந்த வாய்ப்பு இல்லை.

13. நித்யோநித்யானாம் சேதனச் சேதனானாம்
ஏகோ பஹுனாம் யோ விததாதி காமான்
தமாத்மஸ்தம் யேனுபச்யந்தி தீரா
தேஷாம் சாந்தி சாச்வதீ நேதரேஷாம்

அநித்யானாம்-நிலையற்றவற்றில்; நித்ய-நிலையானவரும்; சேதனானாம்-உயிரினங்களில்; சேதன-உணர்வாக விளங்குபவரும்; பஹுனாம்-பன்மையில்; ஏக-ஒருமையானவரும்; காமான்-ஆசைகளை; விததாதி-நிறைவேற்றுபவரும்; ய-எந்த இறைவனோ; தம்-அவரை; ஆத்மஸ்தம்-இதயத்தில் உறைபவராக; யே-எந்த; தீரா-விவேகிகள்; அனுபச்யந்தி-அனுபூதியில் உணர்கிறார்களோ; தேஷாம்-அவர்களுக்கே; சாச்வதீ-நிலைத்த; சாந்தி-அமைதி; ந-இதரேஷாம்-மற்றவர்களுக்கு இல்லை.

பொருள் :  நிலையற்றவற்றில் நிலையானவரும், உயிரினங்களில் உணர்வாக விளங்குபவரும், பன்மையில் ஒருமையானவரும், ஆசைகளை நிறைவேற்றுபவருமான இறைவனை எந்த விவேகிகள் இதயத்தில் ஆன்மாவாக உறைபவராக அனுபூதியில் உணர்கிறார்களோ அவர்களுக்கே நிலைத்த அமைதி உரித்தாகும்; மற்றவர்களுக்கு இல்லை.

ஆன்ம அனுபூதி என்பது என்ன? : 14-15

ஆன்ம அனுபூதி, இறையனுபூதி, இறைக்காட்சி என்றெல்லாம் பொதுவாக நாம் கேள்விப்படுகிறோம், படிக்கிறோம். உண்மையில் அது என்ன என்பதுபற்றி யாராலும் சொல்ல முடியாது. ஏனெனில் அது ஆராய்ச்சிக்கோ விளக்கத்திற்கோ உரியது அல்ல; அது அனுபவத்திற்கு உரியது. இருப்பினும் ஆராய்ச்சி முயற்சிகள் தொடரவே செய்கின்றன. நசிகேதனும் இங்கே அதுபற்றி கேட்கிறான். எமதர்மன் சிறந்ததொரு பதிலை அதற்குக் கொடுக்கிறான்.

14. ததேததிதி மன்யந்தே நிர்தேச்யம் பரமம் ஸுகம்
கதம் நு தத் விஜானீயாம் கிமு பாதி விபாதி வா

அநிர்தேச்யம்-குறிப்பிட்டுக் சொல்ல முடியாத; பரமம்-மேலான; தத்-அந்த; ஸுகம்-அனுபூதி இன்பத்தை; ஏதத் இதி-நேரடியாக; மன்யந்தே-அனுபவிக்கின்றனர்; தத்-அந்த அனுபவம்; கிமு பாதி-ஒளிர்கிறதா; வா-அல்லது; விபாதி-ஒளிரச் செய்யப்படுகிறதா; கதம் நு-எவ்வாறு விஜானீயாம்-அறிய விரும்புகிறேன்.

பொருள் :  குறிப்பிட்டுச் சொல்ல முடியாததும் மேலானதுமான அந்த அனுபூதி இன்பத்தை நேரடியாக அனுபவிக்கின்றனர். அந்த அனுபவம் தானாக ஒளிர்கிறதா அல்லது வேறொன்றால் ஒளிரச் செய்யப்படுகிறதா? இதுபற்றி நான் அறிய விரும்புகிறேன்.

ஆன்ம அனுபூதி பெற்றதாக, இறைவனைக் கண்டதாக மகான்கள் பலரும் கூறியுள்ளனர். அது அகத்தே உணரப்பட்ட ஓர் அனுபவமா அல்லது புறப் பொருட்களைப் காண்பதுபோல் ஒரு புறக் காட்சியா என்பது நசிகேதனின் கேள்வி.

15. ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ர தாரகம்
நேமா வித்யுதோ பாந்தி குதோயமக்னி
தமேவ பாந்தமனுபாதி ஸர்வம்
தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி

தத்ர-அங்கே; ஸூர்ய-சூரியன்; ந பாதி-ஒளிர்வதில்லை; சந்தர தாரகம்-சந்திரனும் நட்சத்திரங்களும்; ந-ஒளிர்வதில்லை; இமா-இந்த; வித்யுத-மின்னல்; ந பாந்தி-ஒளிர்வதில்லை; அயம்-இந்த; அக்னி-அக்கினி; குத-எங்கே; பாந்தம்-ஒளிர்கின்ற; தம்-அதனை; அனு ஏவ-அனுசரித்தே; ஸர்வம்-எல்லாம்; பாதி-ஒளிர்கின்றன; இதம் ஸர்வம்-இந்த அனைத்தும்; தஸ்ய-அதன்; பாஸா=ஒளியால்; விபாதி-ஒளிர்கின்றன.

பொருள் : அங்கே சூரியன் ஒளிர்வதில்லை; சந்திரனும் நட்சத்திரங்களும் ஒளிர்வதில்லை; மின்னல் ஒளிர்வதில்லை. இந்த அக்கினி எப்படி ஒளிர முடியும்? ஒளிர்கின்ற ஆன்மாவை அனுசரித்தே மற்ற அனைத்தும் ஒளிர்கின்றன. அனைத்தும் அதன் ஒளியால் ஒளிர்கின்றன.

ஆன்ம அனுபூதி என்பது ஒரு புறக்காட்சி அல்ல என்று இங்கே கூறப்படுகிறது. அனைத்தையும் காண ஒரு விளக்கு தேவை. சூரியனைக் காண விளக்கு தேவையா? தேவையில்லை. ஏனெனில் சூரியனின் ஒளியால்தான் அனைத்தும் ஒளிர்கின்றன. அதுபோல் ஆன்ம ஒளியால்தான் நாம் அனைத்தையும் காண்கிறோம். உலகப் பொருட்களைக் காண்பதற்கு உதவுகின்ற சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் அனைத்தும் பிரகாசிப்பது ஆன்ம ஒளியால்தான். எனவே ஆன்ம ஒளியைக் காட்ட இந்த ஒளிகளால் இயலாது.

பொதுவாக ஒளி, காட்சி என்றெல்லாம் படிக்கும்போது அது சாதாரணமாக நாம் காண்கின்ற ஒளியைப் போன்றது, அதைவிடப் பேரொளியானது என்றெல்லாம் எண்ணிக்கொள்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல. பெட்ரோமாக்ஸ் விளக்கிலிருந்து வருகின்ற ஒளி போன்றதல்ல ஆன்ம ஒளி. அனைத்தையும் நாம் அறிந்துகொள்வது ஆன்ம ஒளியால் தான். அதன் காரணமாகவே அது ஒளி என்று கூறப்பட்டுள்ளது என்று இதனை விளக்குகிறார் ஸ்ரீரமண மகரிஷி. இந்த ஒளி ஒரு நிலையைக் குறிக்கிறது என்று கூறுகிறார் ஸ்ரீராமகிருஷ்ணர்; இந்த நிலையை இருளுக்கும் ஒளிக்கும் இடைப்பட்ட நிலை எனலாம். இந்த ஒளி நாம் காண்கின்ற ஒளி அல்ல; பவுதீக ஒளி அல்ல என்கிறார் அவர்.

ஆன்ம அனுபூதி, இறையனுபூதி என்பது ஓர் அனுபவம்; உணர வேண்டியது. ஒரு புறக் காட்சி போல் அதனைக் காண முடியாது. அன்பு, இரக்கம், இன்பம் போன்றவற்றை யாரும் காண முடியாது; அனுபவிக்கவே முடியும். அதுபோல் ஆன்ம அனுபூதியையும் அனுபவிக்க முடியுமே தவிர காண முடியாது. இதையே ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனிடம், உனது இந்தக் கண்ணினால் என்னைப் பார்க்க இயலாது. எனவே உனக்கு தெய்வீகக் கண்ணைத் தருகிறேன் (கீதை, 11.8)என்று கூறுகிறார்.

எனினும் மிக உயர்ந்த நிலைகளில் புறக் கண்களாலேயே இந்தக் காட்சிகளைக் கண்டதாக பல மகான்களின் வரலாறு தெரிவிக்கிறது. குறிப்பாக பகவான் ஸ்ரீராம கிருஷ்ணர், அன்னை ஸ்ரீசாரதா தேவி ஆகியோரின் வாழ்க்கையில் இதனை நாம் காண்கிறோம். அன்னையிடம் இதுபற்றி சீடர் ஒருவர் கேட்டபோது அன்னை, பொதுவாக இவை அகக் காட்சிகள்தான். ஆனால் ஒருமுறை நான் நேரடியாகவே கண்டேன் என்று பதில் கூறுனார்.

இதி காடக உபநிஷத த்விதீயாத்யாயே த்விதீயா வல்லீ


Offline Anu

Re: உபநிஷதம்
« Reply #6 on: March 29, 2012, 01:16:02 PM »
மரண பயத்தை வெல்!

மரணத்தைவிட கொடியது மரண பயம். மரணம் ஒரு முறைதான் மனிதனைக் கொல்கிறது. ஆனால் மரண பயம் ஒவ்வொரு கணமும் அவனைக் கொன்று கொண்டிருக்கிறது. எனவே மரண பயத்தை விடுமாறு இந்தக் கடைசி அத்தியாயத்தில் எமதர்மன் அறிவுரை கூறுகிறான். ஆன்ம அனுபூதி, இறையனுபூதி என்று அனைத்து உயர் அனுபவங்களுக்கும் இது முதற்படியாக அமைவது இங்கே விளக்கப்படுகிறது.

மரணத்திற்குப் பின்னால் என்ன உள்ளது என்பது நசிகேதனின் கேள்வி. அதற்கு மரணத்திற்குப் பின்னால் ஆன்மா இருக்கிறது. உண்மையில் நீ ஆன்மா, மரணம் என்பது உடம்பிற்கு மட்டுமே. உனக்கு மரணம் இல்லை என்று பல கோணங்களில் இதுவரை எமதர்மன் கூறியதைக் கண்டோம்.

நமக்கு மரணம் இல்லாததால் நாம் தைரியமாக மரணத்தை எதிர்கொள்ளலாம் அதற்கு ஒரு படியாக வாழும்போதே மரண பயத்தை விலக்கி வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.

எப்படி கற்றுக்கொள்வது?

அதற்கு மூன்று அடிப்படை உண்மைகளைப் புரிந்து கொள்ளுமாறு கூறுகிறார் எமதர்மன்.

மூன்று உண்மைகள்(1-4)

வாழ்க்கை ஒரு பிரதிபிம்பம்

1. ஊர்த்வமூலோ வாக்சாக ஏ÷ஷாச்வத்த ஸனாதன
ததேவ சுக்ரம் தத் ப்ரஹ்ம ததேவாம்ருதமுச்யதே
தஸ்மின் லோகா ச்ரிதா ஸர்வே
தது நாத்யேதி கச்சன ஏதத்வை தத்

ஏஷ-இந்த; அச்வத்த-அரச மரம்; ஸனாதன-பழமையானது; ஊர்த்வ மூல-மேலே வேர் உள்ளது; அவாக் சாக-கீழே கிளைகள் உடையது; தத் ஏவ-அதுவே; சுக்ரம்-தூயது; தத்-அதுவே; ப்ரஹ்ம-இறைவன்; தத் ஏவ-அதுவே; அம்ருதம்-அழிவற்றது; உச்யதே-சொல்லப்படுகிறது; தஸ்மின்-அதில்; ஸர்வே-எல்லா; லோகா-உலகங்களும்; ச்ரிதா-சார்ந்திருக்கின்றன; தத் உ-அதனை; கச்சன-எதுவும்; ந அத்யேதி-கடந்திருக்கவில்லை.

பொருள் : இந்த அரச மரம் பழமையானது, மேலே வேரும் கீழே கிளைகளும் உடையது. அதுவே தூயது. அதுவே இறைவன். அது அழிவற்றது. எல்லா உலகங்களும் அதையே சார்ந்திருக்கின்றன. அதை யாரும் கடந்து செல்ல முடியாது. நீ கேட்ட உண்மை அதுவே.

தலைகீழாக நிற்கின்ற ஓர் அரச மரத்திற்கு வாழ்க்கை ஒப்பிடப்படுகிறது (இத்தகைய உவமை கீதையிலும்(15.1.3) வருகிறது. அங்கே இன்னும் விரிவாக ஆராயப்படுகிறது.) எப்போது ஒரு பொருள் தலைகீழாகத் தெரியும்? பிரதிபலிக்கும்போது. ஆற்றின் கரையில் நிற்கின்ற மரத்தின் பிரதிபிம்பத்தைத் தண்ணீரில் பார்க்கும் போது மரம் தலைகீழாக நிற்பதுபோல் தோன்றும். அதன் வேர்ப் பகுதி மேலேயும், கிளைகள் கீழேயும் இருப்பதாகத் தெரியும். பிரதிபிம்பம் உண்மையல்ல.

இங்கே வாழ்க்கை ஒரு தலைகீழான மரத்திற்கு ஒப்பிடப்படுகிறது. அதாவது வாழ்க்கை ஒரு பிரதிபிம்பம். எனவே இது உண்மையல்ல. அதாவது வாழ்க்கையில் காண்பது உண்மையல்ல, தலைகீழ்த் தோற்றம். இதன் பொருள் என்ன?

வாழ்க்கையில் நாம் இன்பமாகக் காண்பவை உண்மையில் இன்பம் அல்ல. அதுபோலவே துன்பமாகக் காண்பவை துன்பம் அல்ல, பிறப்பை நாம் இன்பமாகக் காண்கிறோம், மரணத்தைக் கண்டு நடுங்குகிறோம். ஆனால் உண்மையை உணர்ந்த மகான்கள் பிறப்பு வேண்டாம் என்கிறார்கள், மரணத்தைக் கண்டு சிரிக்கிறார்கள். மரணத்தை நேசிக்க வேண்டும் என்கிறார் சுவாமி விவேகானந்தர்; துறவு என்பது மரணத்தை நேசித்தல். சாதாரண மனிதர்கள் வாழ்வை நேசிக்கிறார்கள். துறவி மரணத்தை நேசிக்க வேண்டும். அது போலவே, உலகம், அதன் உறவுகள், அது தரும் சுகங்கள் எல்லாவற்றையும் உண்மை, நிலையானவை என்று நம்புகிறோம், ஆனால் உண்மை அதுவல்ல.

அப்படியானால் உண்மை என்ன?

ஆற்று நீரில் மரம் தலைகீழாக தெரிகிறது. அதன் உண்மையை உணர வேண்டுமானால் அந்தப் பிரதிபிம்பத்தை விட்டுவிட்டு, அந்தப் பிரதிபிம்பத்திற்கு ஆதாரமான மரத்தைப் பார்க்க வேண்டும். அதுவே உண்மை. அது போலவே வாழ்க்கையின் உண்மையை அறிய வேண்டுமானால் வாழ்க்கைக்கு ஆதாரமான இறைவனை நாட வேண்டும்.

வாழ்க்கை-மரத்தையே இறைவனாகக் கூறுவது மந்திரம். வேத, உபநிஷதக் கண்ணோட்டத்தின் அடிப்படையை இங்கே காண்கிறோம். ஒருமை உணர்வு என்பது வேத ரிஷிகளின் அனுபூதியாக இருந்தது. அவர்கள் எங்கும் ஒரே உணர்வுப் பொருளையே கண்டனர். வாழ்க்கை என்பது இறைவனிலிருந்து வேறுபட்டது அல்ல. ஆன்மா, கடவுள் அனுபூதி என்று எது வேண்டுமானாலும் இந்த வாழ்க்கையிலிருந்து விலகி ஓடுவதால் பயனில்லை. இந்த எல்லா நிலைகளும் வாழ்க்கையைச் சார்ந்துள்ளன என்பதையே எல்லா உலகங்களும் அதையே சார்ந்திருக்கின்றன என்று மந்திரம் கூறுகிறது. அதுவே நீ தியானப் பகுதி இது.

இறைவனே தலைவர்

2. யதிதம் கிஞ்ச ஜகத் ஸர்வம் ப்ராண ஏஜதி நி ஸ்ருதம்
மஹத்பயம் வஜ்ரமுத்யதம் ய ஏதத்விதுரம்ருதாஸ்தே பவந்தி

இதம்-இங்கே; யத் கிம் ச-எந்தெந்த; ஜகத்-உலகங்கள் உண்டோ; ஸர்வம்-அனைத்தும்; ப்ராணே-பிராணனில்; நி:ஸ்ருதம்-வெளிப்படுகிறது; ஏஜதி-இயங்குகிறது; மஹத் பயம்-பெரும் பயம்; உத்யதம்-உயர்த்திய; வஜ்ரம்-வஜ்ராயுதம்போல்; ய-யார்; ஏதத்-இதனை; விது-அறிகிறார்களோ; தே-அவர்கள்; அம்ருதா-மரணமற்றவர்களாக; பவந்தி-ஆகின்றனர்.

பொருள் : இந்த உலகங்கள் அனைத்தும் பிராணனிலிருந்து வெளிப்படுகின்றன; பிராணனால் இயங்குகின்றன. வஜ்ராயுதத்தை உயர்த்திப் பிடித்திருப்பதுபோல் இறைவன் இருக்கின்ற பெரும் பயம் காரணமாகத் தான் இந்த இயக்கங்கள் நடைபெறுகின்றன. இதனை அறிபவர்கள் மரணமற்றவர்கள் ஆகின்றனர்.

பிராணனால்தான் அனைத்தும் இயங்குகின்றன என்பது பற்றி 2.1.7 விளக்கவுரையில் விரிவாகக் கண்டோம். இறைவனின் சக்தியாகிய அந்தப் பிராணன் எவ்வாறு இயங்குகிறது? இறைவனிடம் உள்ள பயத்தால் என்கிறது இந்த மந்திரம்.

வஜ்ராயுதம் என்பதற்கு இரண்டு பொருள் உண்டு. ஒன்று, இடி; மற்றொன்று, விருத்திராசுரனை அழிப்பதற்காக ததீசி முனிவரின் எலும்பிலிருந்து செய்யப்பட்ட ஆயுதம். இரண்டும் பேராற்றலின் சின்னங்கள். இறைவன் பேராற்றலின் வடிவமாக உள்ளார் என்பது இங்கே சுட்டிக்காட்டப்படுகிறது.

வாழ்க்கையின் உண்மையை அறிய வேண்டுமானால் இறைவனை நாட வேண்டும் என்று கண்டோம்(1). அந்த இறைவன் பேராற்றலின் உறைவிடம், அனைத்திற்கும் தலைவர் என்பதை இந்த மந்திரம் கூறுகிறது.

பயம் ஓர் அடிப்படை உணர்ச்சி

3. பயாதஸ்யாக்னிஸ்தபதி பயாத் தபதி ஸூர்ய
பயாதிந்த்ரச்ச வாயுச்ச ம்ருத்யுர் தாவதி பஞ்சம

அஸ்ய-அவர்மீதுள்ள; பயாத்-பயத்தினால்; அக்னி-அக்கினி; தபதி-எரிக்கிறது; ஸூர்ய-சூரியன்; தபதி-சுடுகிறது; இந்த்ர: ச-இந்திரனும்; வாயு ச-வாயு தேவனும்; பஞ்சம-ஐந்தாவதான; ம்ருத்யு-மரண தேவனும்; பயாத்-பயத்தினால்; தாவதி-ஓடுகின்றனர்.

பொருள் : இறைவன் மீதுள்ள பயத்தினால் அக்கினி எரிக்கிறது; சூரியன் சுடுகிறது. இந்திரனும் வாயுதேவனும் தத்தம் வேலைகளைச் செய்கின்றனர். ஐந்தாவதான மரண தேவனும் அந்த பயத்தினால்தான் தன் தொழிலைச் செய்கின்றான்.

எனக்கு மேல் ஒருவன் இருக்கிறான். அவனுக்குப் பதில் சொல்ல நான் கடமைப்பட்டவன் என்ற உணர்ச்சி இருக்கும்போது ஒருவன் கண்ணும்கருத்துமாக வேலை செய்கிறான். இயற்கைச் சக்திகள் அனைத்தும் அவ்வாறு செயல்படுவதாக இங்கே கூறப்படுகிறது. தாங்கள் தவறினால் தண்டிப்பதற்காக ஒருவர் உயர்த்திய ஆயுதத்துடன் நிற்கிறார் என்ற பயத்துடன் இயற்கை சக்திகள் வேலை செய்கின்றன.

பொதுவாக இறைவனை அன்பு, இனிமை, மென்மை, கருணை போன்ற அமைதியான குணங்களின் இருப்பிடமாகத்தான் கருதுகிறோம். ஆனால் வாழ்க்கைக்கு மறுபக்கம் ஒன்று உள்ளது. பயங்கரம், கொடுமை போன்ற பண்புகள் உலகில் நிலவுவதை யாரும் மறுக்க முடியாது. அவையும் இறைவனிலிருந்தே வந்திருக்க வேண்டும். இல்லையென்றால் இறைவனின் ஆதிக்கம் இல்லாத இடங்களும் இருப்பதாக ஆகிவிடும். எனவே பயங்கரம் போன்ற பண்புகளையும் சேர்த்து இறைவனைக் காணும்போதுதான் வாழ்க்கையை முழுமையாக ஏற்றுக்கொண்டவர்கள் ஆவோம். படுபயங்கரத்தின் உறைவிடமாக ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்குக் காட்டிய விசுவரூப தரிசனம் வாழ்க்கையின் இந்த மறுபக்கமே(ஸ்ரீமத் பகவத்கீதை(11.1.44). காளி, நரசிம்ம மூர்த்தி, ருத்திரன் போன்ற பயங்கர வடிவில் தெய்வத்தை வழிபடுவதன் உண்மை இதுவே.

இவ்வாறு மரணபயம் முதலான அனைத்து எதிர்மறை உணர்ச்சிகளையும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையை முழுமையாக இறைவனை நோக்கித் திருப்புமாறு இந்த மந்திரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த உண்மைகள் உணர்வதன் விளைவு

4. இஹ சேதசகத் போத்தும் ப்ராக் சரீரஸ்ய விஸ்ரஸ
தத ஸர்கேஷு லோகேஷு சரீரத்வாய கல்பதே

இஹ-இங்கே; சரீரஸ்ய-உடம்பு; விஸ்ரஸ-விழுவதற்கு; ப்ராக்-முன்பு; போத்தும்-உணர்வதற்கு; அசகத் சேத்-முடியுமானால்; தத-இல்லாவிட்டால்; ஸர்கேஷு லோகேஷு-உயிரினங்கள் உள்ள உலகில்; சரீரத்வாய-உடலைப் பெற; கல்பதே-நேர்கிறது.

பொருள் : இங்கே உடம்பு வீழ்வதற்கு முன்பு இந்த உண்மைகளை உணர முடியாமானால் அகக் காட்சி வாய்க்கிறது. உணர முடியாவிட்டால் உலகில் மீண்டும் மீண்டும் பிறக்க நேர்கிறது.

அகக் காட்சியின் படிகள்

வாழ்க்கையை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் போது அகக் காட்சி தெளிவு பெறுகிறது. ஆன்ம அனுபூதியை நாடி ஆன்மீகப் பயணத்தை மேற்கொள்பவர்கள் முதலில் சந்திப்பது இருளையே, குழப்பத்தையே. குரு ஒருவரின் வழிகாட்டுதலுடன் தொடர்ந்து சாதனைகளில் ஈடுபடும் போது இந்த குழப்பங்கள் விலகுகின்றன. மனம் பக்குவம் பெறப்பெற அகவுலகக் காட்சி தெளிவாகிறது; புறவுலகை விட அகவுலகம் உண்மையானதாகத் தெரியத் தொடங்குகிறது. இவ்வாறு அகக் காட்சி தெளிவு பெறுவதை இந்த மந்திரம் நான்கு படிகளாகக் கூறுகிறது.

5. யதாதர்சே ததாத்மனி யதா
ஸ்வப்னே ததா பித்ருலோகே
யதாப்ஸு பரீவ தத்ருசே ததா கந்தர்வலோகே
சாயாதபயோரிவ ப்ரஹ்ம லோகே

ஆதர்சே-கண்ணாடியில்; யதா-எவ்வாறோ; ததா-அவ்வாறு; ஆத்மனி-புத்தியில்; ஸ்வப்னே-கனவில்; யதா-எவ்வாறோ; ததா-அவ்வாறு; பித்ருலோகே-பித்ருலோகத்தில்; அப்ஸு தண்ணீரில்; யதா-எவ்வாறோ; பரிஇவ-தெளிவற்று; த்தருசே-காணப்படுகிறதோ; ததா-அவ்வாறு; கந்தர்வ லோகே-கந்தர்வ லோகத்தில்; சாயா தபயோ; இவ-நிழலும் வெயிலும்போல்; ப்ரஹ்மலோகே-பிரம்ம லோகத்தில்.

பொருள் : புத்தியில் கண்ணாடியில் போலவும், பித்ரு லோகத்தில் கனவில் போலவும், கந்தர்வ லோகத்தில் தண்ணீர்போல் தெளிவற்றும், பிரம்ம லோகத்தில் நிழலும் வெயிலும் போல் தெளிவாகவும் அகக் காட்சி வாய்க்கிறது.

1. கந்தர்வ லோகம்: இதுபோன்ற உலகங்கள் போகங்களுக்கு உரியவை. பூமியில் ஏராளம் நற்பணிகள் செய்தவர்கள் தங்கள் புண்ணிய பலனை அனுபவிப்பதற்காகச் செல்கின்ற உலகங்கள் இவை.

சுகபோக நாட்டங்களிலிருந்து விடுபடாத நிலைக்கு இந்த உலகங்கள் உதாரணமாகக் கூறப்பட்டுள்ளன. மனம் சுகபோகங்களை நாடுகின்ற நிலையில் ஆன்மா பற்றி உண்மைகள் தெளிவற்றதாக உள்ளன. நீரில் தெரிகின்ற பிம்பம் ஒரு சிறிய அலை எழுந்தாலும் எவ்வாறு தெளிவற்றுப் போய்விடுகிறதோ, அவ்வாறே இந்த நிலையில் இருப்பவனின் விவேகம், லட்சிய நாட்டம் போன்றவை சிறிய எதிர்மறை எண்ணங்களாலும் கலங்கிவிடுகின்றன.

2. பித்ரு லோகம்: இறந்தவர்கள் வாழும் உலகம் இது. உடம்பு வீழ்ந்த பிறகு உள்ள நிலை இது. சாதனைகளின்மூலம் உடம்பிலிருந்து தன்னைப் பிரித்தறியத் தெரிந்த ஒருவனின் நிலைக்கு உதாரணமாக இது கூறப்படுகிறது. இங்கே ஆன்மா பற்றிய உண்மைகள் கனவுக் காட்சிகள் போல் உள்ளன. கனவுக் காட்சிகள் அந்த நேரத்திற்கு முற்றிலும் உண்மைப்போல் விழித்தபிறகு உண்மையற்றவை என்றும் தெரிபவை. அதுபோல், உடம்பு வேறு, தான் வேறு என்பதை அனுபவரீதியாக உணராதவன் சில நேரங்களில் அக உலகத்திற்கும் சில நேரங்களில் புற உலகத்திற்குமாக ஊசலாடுகிறான். இரண்டும் அந்தந்த நேரங்களுக்கு உண்மைபோலவே தெரிகின்றன.

3. புத்தி: புத்தி பற்றியும் அதன் விழிப்புபற்றியும் ஏற்கனவே(1.3.3.9) விரிவாகக் கண்டோம். புத்தி விழிப்புற்ற நிலையில் அவனுக்கு அக உண்மைகள் அழுக்கற்ற கண்ணாடியில் தெரிகின்ற பிம்பம்போல் தெளிவாக உள்ளன. இருந்தாலும் கவனமில்லாமல் இருந்தால் கண்ணாடி அழுக்குற வாயப்பு உள்ளது. எனவே புத்தி விழிப்புற்ற நிலையில் இருப்பவனும் கவனமாக இருக்க வேண்டும்.

4. பிரம்ம லோகம்: பிரம்ம லோகம், கைலாசம், வைகுண்டம் போன்றவை தெய்வங்களின் உறைவிடங்களாகக் கருதப்படுபவை. சாதனைகள்மூலம் இறைநிலை பெற்றவர்களுக்கு உவமையாக இங்கே கூறப்பட்டுள்ளது. நிழலும் வெயிலும் என்ற உவமை நேரடியாக பொருந்துவதல்ல. இறைநிலை அல்லது ஆன்ம நிலை என்பது எந்த உவமையாலும் விளக்கப்பட முடியாதது. எனவே கோடி காட்டுவதுபோல் ஓர் உதாரணம் சொல்லப்பட்டுள்ளது.  நிழலும் வெயிலும் எதிரிடையானவை. நிழல் இருப்பதால் வெயிலும், வெயில் இருப்பதால் நிழலும் தெளிவு பெறுகின்றன. அவ்வாறு துல்லியமாக தெளிவாக ஆன்மக் காட்சி கிடைப்பதாக இங்கே கூறப்படுகிறது.

சாதனை முறை : 6-8

அகக் காட்சி தெளிவுற்று, மனம் குழப்பங்களிலிருந்து விடுபட்ட பிறகுதான் உண்மையான ஆன்மீக சாதனை ஆரம்பிக்கிறது. இந்த மூன்று மந்திரங்கள் சாதனைபற்றி கூறுகின்றன. புலன்களைபற்றிய உண்மையை அறிவதிலிருந்து சாதனை தொடங்குகிறது.

6. இந்த்ரியாணாம் ப்ருதக் பாவம் உதயாஸ்தமயௌ ச யத்
ப்ருதக் உத்பத்யமானானாம் மத்வா தீரோ சோசதி

இந்த்ரியாணாம்-புலன்களின்; ப்ருதக்-தனி; யத்-எந்த; பாவம்-தன்மை; உதய அஸ்தமயௌ ச-எழுச்சி மற்றும் ஒடுக்கத்தையும்; ப்ருதக் -தனியாக; உத்பத்ய மானானாம்-உண்டானவதையும்; மத்வா-பகுத்தறிகின்ற; தீர-விவேகி; ந சோசதி-கவலைப்படுவதில்லை.

பொருள் : புலன்களின் தனித்தன்மை, அவற்றின் எழுச்சி மற்றும் ஒடுக்கம், தனித்தனியான உற்பத்தி ஆகியவற்றைப் பகுத்தறிகின்ற விவேகி கவலையிலிருந்து விடுபடுகிறான்.

ஐந்து புலன்களும் பஞ்சபூதங்களின் தன்மைகளை அடிப்படையாகப் பெற்றுள்ளன. பஞ்சபூதங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பண்பு உள்ளது.

காது-ஆகாசம்-ஒலி
மூக்கு-வாயு-மணம்
கண்-அக்கினி-ஒளி
நாக்கு-தண்ணீர்-சுவை
உடம்பு(தோல்)-பூமி-ஸ்பரிசம்

இவ்வாறு ஒவ்வொரு புலனும் பஞ்ச பூதங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் தனித்தனியாகத் தோன்றின, தனித்தனி செயல்களைச் செய்கின்றன. விழிப்புநிலையில் எல்லா புலன்களும் செயல்படுகின்றன. கனவிலும் தூக்கத்திலும் ஒடுங்கிவிடுகின்றன.

புலன்களின் ஆரம்பமும் சரி, செயல்படுகின்ற நேரமும் சரி, ஒடுக்கமும் சரி எல்லாம் ஜீவனுடன், பிராணனுடன் சம்பந்தப்பட்டவை; ஆன்மாவுடன் எந்த விதத்திலும் சம்பந்தப்படாதவை. புலன்களின் செயல்பாட்டிற்கும் ஆன்மாவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதே இங்கு நாம் கருத்தில் கொள்ள வேண்டியது. இந்த உண்மையை அறிபவன் புலன்களின் செயல்பாட்டால் கலங்குவதில்லை; தான் ஆன்மா என்பதில் நிலைபெற்று நிற்கிறான் அவன்.

7. இந்த்ரியேப்ய பரம் மனோ மனஸ ஸத்வமுத்தமம்
ஸத்வாததி மஹானாத்மா மஹதோ வ்யக்தமுத்தமம்

இந்த்ரியேப்ய-புலன்களைவிட; மன-மனம்; பரம்-வலிமையானது; மனஸ-மனத்தைவிட; ஸத்வம்-புத்தி; உத்தமம்-வலிமையானது; ஸத்வாத்-புத்தியைவிட; ஆத்மா-ஆன்மா; அதிமஹான்-மிக மேலானது; மஹத-மேலான ஆன்மாவைவிட; அவ்யக்தம்-அவ்யக்தம்; உத்தமம்-மேலானது

பொருள் : புலன்களைவிட மனம் வலிமையானது. மனத்தை விட புத்தி வலிமையானது. புத்தியைவிட ஆன்மா மிக மேலானது. மேலான ஆன்மாவைவிட மாயை மேலானது.

8. அவ்யக்தாத் து பர: புரு÷ஷா வ்யாபகோலிங்க ஏவ ச
யம் ஜ்ஞாத்வா முச்யதே ஜந்து அம்ருதத்வம் ச கச்சதி

அவ்யக்தாத் து-அவ்யக்தத்தைவிட; புருஷ-இறைவன்; பர-மேலானவர்; வ்யாபக-எங்கும் நிறைந்தவர்; அலிங்க; ஏவ ச-எந்த அடையாளமும் இல்லாதவர்; யம்-யாரை; ஜ்ஞாத்வா-அனுபூதியில் உணர்வதால்; ஜந்து-மனிதன்; முச்யதே-விடுபடுகிறான்; அம்ருதத்வம் ச-மரணமிலாப் பெருநிலையையும்; கச்சதி-அடைகிறான்.

பொருள் : அவ்யக்தத்தைவிட இறைவன் மேலானவர். அவர் எங்கும் நிறைந்தவர். (இவர்தான் என்று சுட்டிக்காட்டுவதற்கு) எந்த அடையாளமும் இல்லாதவர். அவரை அனுபூதியில் உணர்வதால் மனிதன் (தளைகளிலிருந்து) விடுபடுகிறான்; மரணமிலாப் பெருநிலையையும் அடைகிறான்.

புலன்களின் செயல்பாடு தனியானவை அவற்றுடன் ஆன்மாவிற்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பதை உணர்ந்து மனம் ஆன்மாவில் நிலைபெறும்போது புலன்கள் இயல்பாகவே தங்கள் வேகத்தை இழக்கின்றன. இதனைப் படிப்படியாக 7 மற்றும் 8 ஆம் மந்திரங்கள் தெரிவிக்கின்றன 1.3.10-11 மந்திரங்களும் இதே கருத்தை வலியுறுத்துவதாக அமைந்தது ஒப்புநோக்கத் தக்கது.

இறையனுபூதி : (9-16)

இறைவனை உணர்ந்தால் மனிதன் மரணமிலாத நிலையை அடைகிறான். அந்த நிலையைப்பற்றிய சில விளக்கங்கள் இங்கே தரப்படுகின்றன.

இந்தக் கண்களால் காண முடியாது

9. ந ஸந்த்ருசே திஷிட்டதி ரூபமஸ்ய
ந சக்ஷúஷா பச்யதி கச்சனைனம்
ஹ்ருதா மனீஷா மனஸா பிக்ல்ருப்தோ
ய ஏதத் விதுரம்ருதாஸ்தே பவந்தி

அஸ்ய-அவரது; ரூபம்-உருவம்; ஸந்த்ருசே-காணக்கூடியதாக; ந திஷ்ட்டதி-இல்லை; ஏனம்-அவரை; கச்சன-யாரும்; சக்ஷúஷா-கண்களால்; ந பச்யதி-காண்பதில்லை; ஹ்ருதா-இதயத்திலுள்ள பொருளால்; மனீஷா-விழிப்புற்ற புத்தியில்; மனஸா-மனத்தின் தொடர்ந்த முயற்சியால்; அபி க்ல்ருப்த-உணரப்படுகிறார்; ய-யார்; ஏதத்-அதனை; விது-அறிகிறாரோ; தே-அவர்கள்; அம்ருதா-மரணமற்றவர்களாக; பவந்தி-ஆகின்றனர்.

பொருள் : இறைவனுடைய உருவம் புறத்தில் காணக் கூடியதாக இல்லை. யாரும் அவரைக் கண்களால் காண்பதில்லை. இதயக் குகையிலுள்ள ஆன்மாவால், விழிப்புற்ற புத்தியில், மனத்தின் தொடர்ந்த முயற்சியால் உணரப்படுகிறார். அவரை அறிபவர்கள் மரணமற்றவர்களாக ஆகின்றனர்.

மிகவும் பொருள் பொதிந்த மந்திரம் இது. இறையனுபூதி என்பதன் ஒரு தெளிவான விளக்கத்தை இங்கு நாம் காண்கிறோம். இறையனுபூதிக்கு இங்கே ஐந்து விளக்கங்கள் தரப்படுகின்றன.

1. புறத்தில் காணக்கூடியதல்ல; 2. கண்களால் காண்பதில்லை: இந்தக் கருத்துக்களை ஏற்கனவே(2.2.14-15)கண்டோம்.

3. ஆன்மாவால் காணப்படுகிறது. உடம்பிலுள்ள சாதாரணக் கண்கள் இறைவனைக் காண்பதில்லை என்றால் அவரைக் காண்பது, உணர்வது யார்? இதயக் குகையிலுள்ள ஆன்மா. இதயக் குகை பற்றியும் ஆன்மா பற்றியும் ஏற்கனவே விரிவாகக் கண்டுள்ளோம். இறைவன் ஒரு பேரொளி என்றால் ஆன்மா ஒரு சுடர், ஒரு பொறி. ஒவ்வொருவரிலும் அந்தப் பொறி உள்ளது. அந்தப் பொறிதான் இறைவனை அறிகிறது.

4. புத்தி தெளிய வேண்டும்: ஆன்மா இறைவனை எங்கே காண்கிறது? விழிப்புற்ற புத்தியில். இதுபற்றியும் ஏற்கனவே (1.3.6-9) விரிவாகக் கண்டுள்ளோம்.

5. மனத்தின் தொடர்ந்த முயற்சி வேண்டும்: ஆன்மா, இதயக் குகை, புத்தி என்றெல்லாம் கூறியதால் அவை ஏதோ நம்மை மீறிய விஷயங்கள் என்று எண்ணி விடாமல், நமது கருவியாகிய மனத்தைத் தொடர்ந்து சாதனைகளில் ஈடுபடுத்த வேண்டும். ஏதாவது ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து முழுமூச்சுடன் அதில் முன்னேற வேண்டும்.

இவ்வாறு மனத்தின் தொடர்ந்த முயற்சியால் புத்தி தெளிகிறது. தெளிந்த புத்தியால் தன்னை ஆன்மாவுடன் ஒன்றுபடுத்திக் காண முடிகிறது. நம்மில் உள்ள இருவரில் (1.3.1) நாம் ஜீவன் என்ற நிலை மாறி நாம் ஆன்மா என்ற நிலை உருவாகிறது. இந்த ஆன்மா நிலையில் இறைக் காட்சி கிடைக்கிறது.

இறையனுபூதி ஓர் ஓய்வுநிலை

10. யதா பஞ்சாவதிஷ்ட்டந்தே ஜ்ஞானானி மனஸா ஸஹ
புத்திச்ச ந விசேஷ்ட்டதி தாமாஹு பரமாம் கதிம்

யதா-எப்போது; பஞ்ச-ஐந்து; ஜ்ஞானானி-புலன்களும்; மனஸா ஸஹ-மனமும்; அவதிஷ்ட்டந்தே-ஓய்வுநிலையில் இருக்கின்றனவோ; புத்தி:ச-புத்தியும்; ந விசேஷ்ட்டதி-முயற்சியற்று இருக்கிறதோ; தாம்-அது; பரமாம் கதிம்-மிக மேலான நிலை; ஆஹு-சொல்லப்படுகிறது.

பொருள் : எப்போது ஐந்து புலன்களும் மனமும் ஓய்வு நிலையில் இருக்கின்றனவோ, புத்தி முயற்சியற்று இருக்கிறதோ அது மிக மேலான நிலை என்று சொல்லப்படுகிறது.

எந்தச் செயலுமற்ற நிலை மிக மேலான நிலையாகச் சொல்லப்படுகிறது. இதனைச் சரியாகப் புரிந்துகொள்வது மிகவும் இன்றியமையாதது. சோம்பிக் கிடப்பதையும் தூக்கத்தையும் இதனுடன் குழப்பிடப்பட்டுள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சாதாரண மனிதர்களிடம் புத்தி விழிப்புறவில்லை என்பதை ஏற்கனவே பல இடங்களில் கூறியுள்ளோம் எனவே புத்தி விழிப்புற வேண்டும். அப்போதுதான் புலன்களும் மனமும் ஓய்வு நிலையை அடையும். அதன் பிறகு செயலற்ற நிலை உண்மையில் வாய்க்க முடியும். அக விழிப்புணர்வு ஏற்பட்டு, மனமும் புலன்களும் நமக்கு வசப்பட்ட பிறகே இந்த நிலைபற்றி யோசிக்க வேண்டும். அதற்கு முன்னால் செயலற்ற நிலைக்காக முயற்சிப்பது தவறான முயற்சியாகும்.

தன்னுணர்வு நிலை

11. தாம் யோகமிதி மன்யந்தே ஸ்திராமிந்த்ரியதாரணாம்
அப்ரமத்தஸ்ததா பவதி யோகோ ஹி ப்ரபவாப்யயௌ

இந்த்ரியதாரணாம்-புலன்கள் வசப்பட்டு; ஸ்திராம்-நிலையாக நிற்கின்ற; தாம்-அந்த நிலை; யோகம்-யோகம்; இதி-என்று; மன்யந்தே-கருதப்படுகிறது; ததா-அப்போது; அப்ரமத்த-தன்னுணர்வு உடையவனாக; பவதி-ஆகிறான்; ஹி-ஆனால்; யோக-யோக நிலை; ப்ரபவ-அப்யயௌ-வளர்வது, வீழ்வது.

பொருள் : புலன்கள் வசப்பட்டு, நிலையாக நிற்கின்ற அந்த நிலை யோகம் என்று கருதப்படுகிறது. அந்த நிலையை அடைந்தவன் தன்னுணர்வு உடையவனாக ஆகிறான். ஆனால் யோக வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் உட்பட்டது.

தன்னுணர்வு என்றால் என்ன? இதனை சத்வ நிலை என்று கீதை விளக்குகிறது(ஸ்ரீ மத் பகவத்கீதை, 14.11) புலன்கள் எதுவும் தங்கள் பாதையில் திரியாமல், அதே வேளையில் தூக்கத்திலும் ஆழ்ந்துவிடாமல் சுற்றி நடக்கின்ற அனைத்தையும் அறிந்த வண்ணம் உணர்வுபூர்வமாக நிற்கின்ற அமைதி நிலை இது. புலன்கள் என்பவை மனத்தின் வாசல்கள், இவ்வாறு வாசல்கள் அடைபட்டுவிட்ட இந்த நிலையில் மனத்தை எங்கு செலுத்தினாலும் அது ஆழமாகச் செல்ல முடியும். படிப்பு, ஆராய்ச்சி, ஆன்மீக சாதனைகள் போன்றவற்றை இந்த நேரம் செய்தால் விரைவில் வெற்றி கிடைக்கும்.

இந்த நிலையை சுவாமி விவேகானந்தர் மிகவும் புகழ்ந்து கூறுகிறார்; உறங்கும் ஆன்மாவை எழுப்புங்கள், அது எவ்வாறு விழித்தெழுகிறது என்பதைப் பாருங்கள். உறங்குகின்ற ஆன்மா மட்டும் விழித்தெழுந்து தன்னுணர்வுடன் செயலில் ஈடுபடுமானால் சக்தி வரும், பெருமை வரும், நன்மை வரும், தூய்மை வரும், எவை யெல்லாம் மேலானதோ அவை  அத்தனையும் வரும் என்கிறார் அவர்.

புத்தி விழித்தெழுந்து, அந்த நிலையில் மனத்தை எதில் செலுத்தினாலும் அதில் பல அரிய விஷயங்களைச் சாதிக்க முடியும். விஞ்ஞானம், கலை என்று எந்தத் துறையை எடுத்தாலும் அதில் உன்னதங்களைக் காண முடியும். ஆனால் ஆன்மீகத்தில் சாதிக்க வேண்டுமானால் புத்தியும் மனமும் செயலற்றதாக வேண்டும் என்பதை முந்தின மந்திரம் வலியுறுத்தியதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

யோக நிலையை அடைந்து, அதன்பிறகு நாம் எந்தத் துறையை மேற்கொண்டாலும் அதில் வெற்றி பெற முடியும். ஆன்மீகம் அல்லது உயர் வாழ்வு வேண்டுமானால் மனத்தையும் புத்தியையும் புறத்தில் செல்ல விடாமல் அகத்தில் நிலை நிறுத்த வேண்டும்.

மற்றொரு கருத்தும் இங்கே கூறப்பட்டுள்ளது. இந்த யோக நிலை என்பது எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் உட்பட்டது. அதாவது புத்தி விழித்தெழுந்த நிலையை அடைந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது இன்றியமையாதது. ஒருமுறை யோக நிலை வாய்த்தாலும் தொடர்ந்த பயிற்சியின் மூலம் அதைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அந்த நிலையிலிருந்து வீழ்ச்சி அடைய நேரும்.

விளக்க முடியாத நிலை: 12-13

12. நைவ வாசா ந மனஸா ப்ராப்தும் சக்யோ ந சக்ஷúஷா
அஸ்தீதி ப்ருவதோன்யத்ர கதம் ததுபலப்யதே

வாசா-வாக்கினாலோ; மனஸா-மனத்தினாலோ சக்ஷúஷா-கண்களாலோ; ப்ராப்தும்-அடைவதற்கு; ந சக்ய: ஏவ-முடியாது; அஸ்தி-இருக்கிறது; இதி-என்று; ப்ருவத-சொல்பவன்; அன்யத்ர-வேறொருவர்; கதம்-எப்படி; தத்-அதனை; உபலப்யதே-அடைவது.

பொருள் : வாக்கினாலோ மனத்தினாலோ கண்களாலோ அந்த அறுதி உண்மையை அடைய இயலாது. இருக்கிறது என்று சொல்பவனைத் தவிர வேறு யார் அதனை அடைய முடியும்?

அன்பு, பாசம் போன்றவற்றை அனுபவிக்காத மனிதர்கள் இருக்க முடியாது ஆனால் அறிவினால் அவற்றை விளக்க இயலாது, இதயத்தால் அவற்றை உணர மட்டுமே முடியும். அதுபோலவே இறைவன், ஆன்மா போன்ற உண்மைகளையும் சாதாரண அறிவினால் அடைய இயலாது. கடவுள் ஒருவர் இருக்கிறார் ஆன்மா என்ற ஒன்று இருக்கிறது, என்பதையெல்லாம் நூலறிவு போன்ற எந்த அறிவின் துணையும் இன்றி இயல்பாகவே உணர்ந்து யார் இறைவனை நாடுகிறானோ அவனே வெற்றி பெறுகிறான்.

13. அஸ்தீத்யேவ உபலப்தவ்ய தத்வபாவேன சோபயோ
அஸ்தீத்யேவ உபலப்தவ்ய தத்வபாவேன ப்ரஸீததி

அஸ்தி-இருக்கிறது; இதி ஏவ-என்று; தத்வ பாவேன-உண்மை நிலையில்; உபலப்தவ்ய-உணர வேண்டும்; உபய-இரண்டுள்; அஸ்தி-இருக்கிறது; இதி ஏவ-என்று; உபலப்தஸ்ய-உணர்பவனுக்கு; தத்வ பாவ-உண்மைநிலை அனுபூதி; ப்ரஸீததி-இயல்பாக வாய்க்கிறது.

பொருள் : இந்த உண்மை இருக்கிறது என்று முதலில் அறிய வேண்டும், பிறகு அதன் உண்மைநிலையில் உணர வேண்டும். இருக்கிறது என்ற நிலையில் ஆழமாக உணரும்போது, அதிலிருந்து உண்மை நிலை அனுபூதி இயல்பாக வாய்க்கிறது.

பாவனையே தெய்வப் பேருணர்வின் வாசல் என்கிறார் சுவாமி விவேகானந்தர். ஓர் உண்மையை அடைய வேண்டுமானால் அதனை மீண்டும் மீண்டும் சிந்திக்க வேண்டும். அதைப்பற்றி கேட்க வேண்டும், சிந்திக்க வேண்டும் தியானிக்க வேண்டும்(ச்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாஸிதவ்ய பிருஹதாரண்யக உபநிஷதம், 2.4.5, 4.5.6)

மரணமிலாப் பெருநிலை : 14-15

14. யதா ஸர்வே ப்ரமுச்யந்தே காமா யேஸ்ய ஹ்ருதி ச்ரிதா
அத மர்த்யோ ம்ருதோ பவதி அத்ர ப்ரஹ்ம ஸமச்னுதே

ஹ்ருதி-மனத்தை; ச்ரிதா-சார்ந்திருக்கும்; யே ஸர்வே-எல்லா; காமா-ஆசைகளும்; ப்ரமுச்யந்தே-விலகுகின்றனவோ; அஸ்ய-அவனது; அத-பிறகு; மர்த்ய-மனிதன்; அம்ருத-அவனது; அத-பிறகு; மர்த்ய;-மனிதன்; அம்ருத-மரணமற்றவன்; பவதி-ஆகிறான்; அத்ர-இங்கேயே; ப்ரஹ்ம-இறைநிலையை; ஸமச்னுதே-அடைகிறான்.

பொருள் : மனத்தைச் சார்ந்திருக்கும் எல்லா ஆசைகளும் விலகும்போது மனிதன் மரணமற்றவன் ஆகிறான்; இங்கேயே இறைநிலையை அடைகிறான்.

எப்போது ஆசைகளை விட முடியும்? முந்தின மந்திரம் கூறிய, இருக்கிறது என்ற கருத்து ஆழ்ந்த சிந்தனையின் மூலம் நம்மில் நிலைபெறும்போது. ஒன்றிலிருந்து ஒன்றிற்குத் தாவிக்கொண்டிருப்பது மனத்தின் இயல்பு. வெளியில் அது அலைபாயாமல், ஆசை வசப்பட்டு பொருள்களின் பின் செல்லாமல் இருக்க வேண்டுமானால் உள்ளே அது நிலைபெற ஓர் இடம் வேண்டும். அந்த இடம் புற உலகத்தைவிட உண்மையானது, இன்பமானது, இனிமையானது என்பதை மனம் நம்ப வேண்டும். அப்போது மட்டுமே அது புற ஆசைகளை விடும். அதனால்தான் ஆன்மா என்ற ஒன்று இருக்கிறது, கடவுள் ஒருவர் இருக்கிறார் என்ற கருத்தை மீண்டும்மீண்டும் சிந்திக்க வேண்டும் என்று முந்தின மந்திரம் கூறியது.

15. யதா ஸர்வே ப்ரபித்யந்தே ஹ்ருதயஸ்யேஹ க்ரந்தய
அத மர்த்யோம்ருதோ பவதி ஏதாவத்யனுசாஸனம்

ஹ்ருதயஸ்ய-மனத்தின்; ஸர்வே-எல்லா; க்ருந்தய-முடிச்சுகளும்; யதா-எப்போது; ப்ரபித்யந்தே-அவிழ்கின்றனவோ; அத-பிறகு; மர்த்ய-மனிதன்; அம்ருத:-மரணமற்றவன்; பவதி-ஆகிறான்; அனுசாஸனம்-உபதேசம்; ஏதாவத் ஹி-இவ்வளவுதான்.

பொருள் : மனத்தின் எல்லா முடிச்சுகளும் அவிழும்போது மனிதன் மரணமற்றவன் ஆகிறான். உபதேசம் இவ்வளவுதான்.

ஆசைகள் மட்டுமல்ல; மனத்தில் இன்னும் எவ்வளவோ உள்ளன. உணர்ச்சிப் போரட்டங்கள், உணர்ச்சிக் சிக்கல்கள் என்று எத்தனையோ விஷயங்கள் மனத்தில் உள்ளன. அவை அனைத்தும் சரியாக வேண்டும். மனம் தூய்மை பெறுவது தான் ஆன்ம வாழ்வின் அடிப்படை என்பதை ஒரு சத்தியப் பிரமாணம் போல் சொல்வதற்காக உபதேசம் இவ்வளவு தான் என்று கூறுகிறான் எமதர்மன்.

16. சதம் சைகா ச ஹ்ருதயஸ்ய நாட்ய
தாஸாம் மூர்தானமபி நி ஸ்ருதைகா
தயோர்த்வமாயன் அம்ருதத்வமேதி
விஷ்வங்ஙன்யா உத்க்ரமணே பவந்தி

ஹ்ருதயஸ்ய-இதயத்தின்; நாட்ய-நாடிகள்; சதம் ச ஏகா-நூற்றொன்று; தாஸாம்-அவற்றுள்; ஏகா-ஒன்று மூர்தானம்-உச்சந்தலையை; அபிநி; ஸ்ருதா-பிளந்து செல்கிறது; தயா-அதன் வழியாக; ஊர்த்வம்-மேலே; ஆயன்-செல்பவன்; அம்ருதத்வம்-மரணமற்ற நிலையை; ஏதி-அடைகிறான்; அன்யா-மற்றவை; உத்க்ரமணே-வெளியேறுவதில்; விஷ்வக்-பல திசைகளாக; பவந்தி-ஆகின்றன.

பொருள் : இதயத்தின் நாடிகள் நூற்றொன்று. அவற்றுள் ஒன்று உச்சந்தலையைப் பிளந்து செல்கிறது. அதன் வழியாக மேலே செல்பவன் மரணமற்ற நிலையை அடைகிறான். மற்ற நாடிகளின் வழியாக வெளியேறுபவன் பல்வேறு கீழ் உலகங்களில் உழல்கிறான்.

இதயம் என்பது பிராணனின் இருப்பிடம் உணர்ச்சிகள், செயல்பாடுகள் என்று வாழ்க்கையின் அனைத்தும் இங்கிருந்தே கட்டுப்படுத்தப்படுகின்றன. விஞ்ஞானத்தைப் பொறுத்தவரை மூளை அனைத்துச் செயல்களின் மையமாக இருந்தாலும் நமது சாஸ்திரங்கள் இதயத்தையே மையமாகக் கொள்கின்றன. நான் என்று சொல்லும்போது சரி, ஆழ்ந்த மனக் கவலை, அளவற்ற சந்தோஷம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் போதும் சரி, இதயத்தில் கைவைத்தே நாம் பேசுவது இங்கு நினைவுகூரத் தக்கது. இந்த இதயம் நாம் அறிந்த பவுதீக இதயம் அல்ல. இது உணர்ச்சி இதயம்.

இந்த இதயத்திலிருந்து நூற்றொரு நாடிகள் புறப்பட்டுகின்றன. இவற்றின்மூலமே கட்டளைகள் இடப்படுகின்றன, அனுபவங்கள் பெறப்படுகின்றன. நாடிகள் சாதாரண கண்களுக்குப் புலனாகாதவை. இவற்றுள் ஒன்று உச்சந்தலை வழியாக செல்கிறது. உச்சந்தலையில் பிரம்ம ரந்திரம் உட்பட இந்த உடம்பில் பதினொரு துவாரங்கள் இருப்பதாக ஏற்கனவே(2.2.1) கண்டோம். இந்த பிரம்ம ரந்திரத்தின் வழியாக ஒரு நாடி செல்கிறது. இதன் வழியாக உயிரை விடுபவன் மரணமற்ற நிலையை அடைகிறான். மற்ற நூறு நாடிகளும் மீதி பத்து வாசல்களுள் ஏதாவது ஒன்றில் நினைவுபெறுகின்றன. இவற்றின் வழியாக உயிர் வெளியேறினால் மீண்டும் பிறவி வாய்க்கிறது. ஆசைகளற்ற யோகியால் மட்டும் பிரம்ம ரந்திரத்தின் வழியாக உயிரை வெளியேற்ற முடியும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அங்குஷ்ட்டமாத்ர புருஷ வித்யை

17. அங்குஷ்ட்ட மாத்ர புரு÷ஷாந்தராத்மா
ஸதா ஜனானாம் ஹ்ருதயே ஸன்னிவிஷ்ட்ட
தம் ஸ்வாச்சரீராத் ப்ரவ்ருஹேன்
முஞ்ஜாதிவேஷீகாம் தைர்யேண
தம் வித்யாச்சுக்ரமம்ருதம் தம் வித்யாச்சுக்ரமம்ருதமிதி

புருஷ-உடம்பில் உறைகின்ற; அந்தராத்மா-ஆன்மா; அங்குஷ்ட்ட மாத்ர-பெருவிரல் அளவுடையது; ஜனானாம்-மக்களின்; ஹ்ருதயே-இதயத்தில்; ஸதா-எப்போதும்; ஸன்னிவிஷ்ட்ட-உள்ளது; தம்-அதனை; முஞ்ஜாத்-முஞ்சைப் புல்லிலிருந்து; இஷீகாம் இவ-ஈர்க்குச்சியைப் பிரிப்பதுபோல்; ஸ்வாத் சரீராத்-சொந்த உடம்பிலிருந்து; தைர்யேண-பொறுமையுடன்; ப்ரவ்ருஹேத்-பிரிக்க வேண்டும்; தம்-அதனை; சுக்ரம்-தூய்மையானது; அம்ருதம்-அழிவற்றுது. இதி-என்று; வித்யாத்-அறி.

பொருள் : உடம்பில் உறைவதான ஆன்மா பெருவிரல் அளவுடையது; மக்களின் இதயத்தில் எப்போதும் உள்ளது. முஞ்சைப் புல்லிலிருந்து ஈர்க்குச்சியைப் பிரிப்பதுபோல் அதனைச் சொந்த உடம்பிலிருந்து பொறுமையுடன் பிரிக்க வேண்டும். அந்த ஆன்மா தூயது, அழிவற்றது என்று அறிந்துகொள். அந்த ஆன்மா தூயது, அழிவற்றது என்று அறிந்துகொள்.

நசிகேதனுக்கு எமதர்மன் கூறிய உபதேசத்தைப் பொறுத்தவரை கடைசி மந்திரம் இது. கட உபநிஷதம் அங்குஷ்ட்ட மாத்ர புருஷ வித்யை, நாசிகேத வித்யை என்ற இரண்டு முறைகளை போதிப்பதாக ஏற்கனவே கண்டோம். பெருவிரல் அளவுடைய ஒளிப் பொருள் ஒன்று நம்முள் இதயக் குகையில் உள்ளது. அதனை உடம்பிலிருந்து பிரித்தறிய வேண்டும். அந்த ஆன்மாவை எங்கும் நிறைந்த பரம்பொருள் என்பதை உணர வேண்டும் இதுவே இந்த இரண்டு வித்யைகளின் பொதுவான கருத்து ஆகும். இந்தக் கடைசி மந்திரத்தில் மீண்டும் ஒருமுறை அந்தக்  கருத்தை வலியுறுத்தி உபதேசித்தை நிறைவு செய்கிறான் எமதர்மன்.

ஆன்மா, அதை உணர்வது போன்றவை அவ்வளவு சுலபமானவை அல்ல. சாதனைகளின் விடா முயற்சியும். உடனடியாக பலன் தெரியாத நிலையில் பொறுமையும், பலர் இதனைச் சாதித்திருக்கிறார்கள் என்னாலும் முடியும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையும் வேண்டும். அதனை இந்த மந்திரம் வலியுறுத்துகிறது.

நிறைவு

18. ம்ருத்யுப்ரோக்தாம் நசிகேதோத லப்த்வா
வித்யாமேதாம் யோகவிதிம் ச ச்ருத்ஸ்னம்
ப்ரஹ்ம ப்ராப்தோ விரஜோபூத் விம்ருத்யு
அன்யோ ப்யேவம் யோவிதத்யாத்மமேவ

ம்ருத்யு ப்ரோக்தாம்-எமதர்மனால் சொல்லப்பட்ட ஏதாம்-இந்த; வித்யாம்-வித்யையையும்; க்ருத்ஸ்னம்-எல்லா; யோக விதிம்-யோக விதிகளையும்; லப்த்வா-ஏற்றுக்கொண்டு; நசிகேத-நசிகேதன்; விரஜ-தூயவனாகி; விம்ருத்யு-மரணமற்றவன் ஆனான்; அத-பிறகு; ப்ரஹ்ம-இறைவனை; ப்ராப்த-அபூத்-அடைந்தான்; அன்ய: அபி-மற்றவர்களும்; ஏவம்-இவ்வாறு; வித்-அறியும்போது அத்யாத்மம் ஏவ-இறை நிலையையே அடைகிறார்கள்.

பொருள் : எமதர்மனால் சொல்லப்பட்ட இந்த வித்யைகளையும், எல்லா யோக விதிகளையும் ஏற்றுக் கொண்டு நசிகேதன் தூயவனாகி மரணமற்றவன் ஆனான் பிறகு இறைவனை அடைந்தான். மற்றவர்களும் இந்த வித்யையை அறிந்து பின்பற்றும் போது இறைநிலையை அடைகிறார்கள்.

உபதேசத்தைக் கேட்டதுடன் நசிகேதன் நின்றுவிடவில்லை. அதனைப் பின்பற்றினான். மனத்தைத் தூய்மைப்படுத்தினான், மரணமற்ற நிலையை அடைந்தான்; இறுதியாக இறைவனை அடையப் பெற்றான். இந்தப் பேறு ஒருவருக்கு மட்டும் உரியதல்ல; பின்பற்றுகின்ற யாரும் இதனை அடையலாம். பின்பற்றிப் பாருங்கள் என்று ஒரு சவால் போல் இந்த மந்திரத்தைக் கூறுவதுடன் உபநிஷதம் நிறைவுபெறுகிறது.

இதி காடக உபநிஷதி த்விதீயாத்யாயே த்ருதீயா வல்லீ

இதி காடோபநிஷத் ஸமாப்தா

இவ்வாறு கட உபநிஷதம் நிறைவு பெறுகிறது.

ஓம் ஸஹ நாவவது ஸஹ நௌ புனக்து
ஸஹ வீர்யம் கரவாஹை
தேஜஸ்வி நாவதீதமஸ்து மா வித்விஷாவஹை
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: