Author Topic: குந்தவை  (Read 2918 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
குந்தவை
« on: June 26, 2013, 02:18:52 AM »
குந்தவை

சோழரது புகழ் பெற்ற மன்னருள் ஒருவனான முதலாம் இராஜராஜனின் தமைக்கையும், ஆதித்த கரிகாலனின் தங்கையும், சுந்தர சோழரின் மகளுமாவாள். சோழர்களின் மாதண்ட நாயக்கர்களுள் ஒருவரும் வாணர் குலத்து குறுநில மன்னனுமான வல்லவரையன் வந்தியத்தேவனை மணமுடித்தவள். இராஜராஜனின் ஆட்சிக் காலத்தில் மதிப்புடன் இருந்ததாகவும் பல தானங்கள் தருமங்கள் செய்திருக்கிறாள் என்றும் முதலாம் இராஜராஜனின் கல்வெட்டுக்கள் மூலம் தெரியவருகிறது.

கல்வெட்டு ஆதாரங்கள்

இராஜராஜனின் தந்தையின் பெயரால் அமைக்கப்பட்ட "சுந்தர சோழ விண்ணகர்" என்னும் விஷ்ணு கோயிலில் ஒரு மருத்துவமனை இருந்து வந்துள்ளது, அந்த மருத்துவமனைக்கு குந்தவை பிராட்டி பல தானங்கள் வழங்கியிருக்கிறார் என்று கல்வெட்டுக்கள் மூலம் அறியமுடிகிறது. இராஜராஜனின் 17-ம் ஆண்டில்(கி.பி. 1002ல்) ஒரு பொதுக்கட்டளை பிறப்பிக்கப்பட்டது என்றும் அதன்படி பிரமதேயங்களிலுள்ள நிலம் வைத்திருக்கும் மற்ற வகுப்பினர் எல்லோரும் தங்களுடைய நிலங்களை விற்றுவிட வேண்டும் என்றும் இந்த கட்டளைக்கு நிலம் பயிரிடுவோரும் மற்ற நில மானியங்களை அனுபவிப்போர் மட்டும் விதிவிலக்கென்று கொண்டுவரப்பட்டதாகவும் கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது. இப்படி இராஜகேசரி சதுர்வேதி மங்களத்தில் விற்கப்பட்ட நிலங்களை அரசனின் தமக்கை குந்தவை தேவியாரே வாங்கி, அவ்வூர்க் கோயிலுக்குத் தானமாக அளித்தார் என்றும் தெரியவருகிறது.

இப்பொழுது 'தாராசுரம்' என வழங்கும் இராஜராஜபுரத்தில் குந்தவை தேவி, பெருமாளுக்கு ஒரு கோயிலும், சிவனுக்கு ஒரு கோயிலும், ஜீனருக்கு ஒரு கோயிலுமாக மூன்று கோயில்களை ஓரிடத்திலேயே கட்டினாள். இம்மூன்று தேவாலங்களுக்கும் அவள் வழங்கிய கொடைகளை அங்கிருக்கும் ஒரு கல்வெட்டு கூறுகிறது. குந்தவை தேவி அளித்த நகைகளின் பட்டியல்களில் தங்கத்தால் ஆனதும், வைணவர்கள் நெற்றியும் இட்டுக் கொள்ளும் சின்னமாகிய 'நாமம்' என்னும் இறுதிச் சொல்லுடன் முடிவடையும் நகைகளின் பெயர்களும் உள்ளன. இப்படி பல தானங்களைக் கோயில்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் செய்யும் வலமிக்கவராக முதலாம் இராஜராஜன் மற்றும் இராஜேந்திரன் காலத்தில் குந்தவை தேவியார் இருந்திருக்கிறார்.

அதே போல் இராஜராஜன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலுக்கு குந்தவை தேவி, 10,000 கழஞ்சு எடையுள்ள தங்கத்தையும் 18,000 கழஞ்சு மதிப்புள்ள வெள்ளிப் பாத்திரங்களையும் கொடுத்து சிறப்பித்திருக்கிறார் என்று, பெரிய கோவில் சுவர்களும் தூண்களும் சொல்லுகின்றன. சமணர்களுக்கான ஒரு சமணர் கோயிலை திருச்சிராய்ப்பள்ளி மாவட்டம் திருமழபாடியில் கட்டிக் கொடுத்திருக்கிறார்.

புதினங்கள்

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்தில் ஆதித்த கரிகாலனின் தங்கையும் அருள் மொழி வர்மனின் தமக்கையுமான குந்தவை மிக முக்கியமான பாத்திரமாக இருக்கிறார். வரலாற்று நிகழ்வுகளை ஒட்டி எழுதப்பட்ட இந்தப் புதினத்தில் இவர் கதையின் நாயகனான வந்தியதேவனின் காதலியாக படிப்பவர் உள்ளங்களைக் கொள்ளை கொள்கிறார்.