தமிழ்ப் பூங்கா > இங்கு ஒரு தகவல்

விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வது

(1/1)

vaseegaran:
நம்மைப் பற்றிய வாய்வழி விமர்சனங்களும் அடுத்தவர்களால் புழங்கவிடப்படும் எதிர்மறையான சொற்களும் நம்மை வெகுவாகச் சீண்டக் கூடியவை. அலைகழிக்கச் செய்யக் கூடியவை. உள்ளூரக் கொதிக்கச் செய்வன. அவற்றை எதிர்கொள்வதில்தான் நம்முடைய வெற்றியின் சூட்சமம் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை. உள்ளே புழுங்கத் தேவையில்லை. அவற்றை உதாசீனப்படுத்தியபடி தாண்டிச் செல்வதும் கூட உத்தமமான எதிர்கொள்ளல்தான். அடுத்தவன் நம்மைப் பற்றிப் பேசுகிறான்; நம்மைப் பார்த்துச் சிரிக்கிறான்; யோசித்தால் நாம் அவனுக்கு பதில் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டியதுதான். முதன் முறையாகக் கேள்விப்படும் போது எரிச்சலாகத்தான் இருக்கும். ‘அவன் ஏன் நம்மை நோண்டுகிறான்’ என்று குழப்பமாகத்தான் இருக்கும். விமரசனங்களுக்கு பதில் சொல்வது என்பது நம்மைச் சீண்டுபவர்களை நாம் சொறிந்துவிடுவது மாதிரிதான். அந்த சுகானுபவம் அவனை இன்னமும் உசுப்பேற்றும். மேலும் குத்துவான். இன்னமும் குடைவான். யாரைப் பற்றியும் அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. எந்தத் திசையில் செல்ல வேண்டும் என்பதை மட்டும் முடிவு செய்து கொண்டபிறகு ஓட்டத்தை ஆரம்பித்துவிட வேண்டும். வெறியெடுத்த ஓட்டம். ஓடுகிற ஓட்டத்துக்குப் பின்னால் அத்தனை சொற்களும் துவண்டு விழ வேண்டும்.

PraBa:
அருமையாக பதிவு  நண்பா

Maran:


அடுத்தவர்கள் மீதான விமர்சனங்கள் பெரும்பாலும் பொறாமையின் காரணத்தாலே எழுகின்றன. விமர்சனங்கள் இல்லாமல் வாழ்க்கையை அழகாக்க முடியாது விமர்சனங்களுக்கு பயந்தால் வாழவே முடியாது..!!

விமர்சனங்கள் என்பது அடுத்தவர் மனபிம்பத்தைப் பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடி.

நீங்கள் கூறியதைப்போல தேவையற்ற அவமானங்கள் விமர்சனங்கள் வரும்போது "சகிப்புதன்மையும்" வெற்றிகள் வரும்போது "தன்னடக்கமும்" இருந்தாலே போதும் வென்றிடலாம் வாழ்வை!


KavithaMohan:
நல்ல பகிர்வு.  தாழ்வுமனப்பான்மை பற்றி நான் படித்ததில் எனக்கு பிடித்தது 


வேண்டியதில்லை தாழ்வுமனப்பான்மை ; வேண்டியது தன்னம்பிக்கை மட்டுமே.



இந்த உலகினில் முதலாளிகளை விடவும்,பெருமைக்குரியவர்கள் கடைநிலை தொழிலாளர்கள்தான் என்றால் அதுமிகையில்லை. அதேபோல் எந்த தொழிலும் இழுக்கினுக்கு உரியதில்லை என்பது நூறு சதவிகிதம் உண்மை. அதனை மெய்ப்பிக்கிற வகையில் ஆபிரஹாம் லிங்கன் அவர்களது வாழ்வினில் நிகழ்ந்ததோர் சம்பவத்தினை கீழே காணலாம்.

ஆபிரஹாம் லிங்கனின் தந்தை ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளி. ஆனால் தமது உழைப்பாலும் முயற்சியாலும் அமெரிக்க ஜனாதிபதியானார் லிங்கன். அவரை அவமானப்படுத்தும் எண்ணத்துடன் அமெரிக்கப் பாராளுமன்றத்தில் ஒருவர் பேசினார்.


"மிஸ்டர் லிங்கன்,உங்களை இங்கு பலர் பாராட்டிப் பேசினார்கள். அது குறித்து நீங்கள் மகிழ்ந்துவிட வேண்டாம். உங்கள் பழைமை குறித்து நான் நினைவூட்ட வேண்டும். உங்கள் அப்பா தைத்துக் கொடுத்த ஷூ இன்னும் என் காலில் இருக்கிறது. ஞாபகம் இருக்கட்டும்" என்று லிங்கன் தந்தை செருப்புத் தைப்பவர் என்று குத்திக் காட்டினார்.

ஆபிரஹாம் லிங்கனோ சற்றும் பதற்றப்படாமல்- "நண்பரே, என் தந்தை மறைந்து பலகாலம் ஆயிற்று. ஆனாலும் அவர் தைத்துக் கொடுத்த காலணி இன்னும் உங்களிடம் உழைக்கிறது என்றால் என்ன பொருள்? அவர் எவ்வளவு சிறந்த தொழிலாளி என்பது தெரிகிறது அல்லவா? அப்படி ஒரு சிறந்த தொழிலாளியின் மகனாகப் பிறந்தது குறித்து நான் பெருமை அடைகிறேன்.


அது மட்டுமல்ல, இப்போது அந்த செருப்பு கிழிந்து போனாலும் என்னிடம் கொடுங்கள். நான் அதைச் சரி செய்து தைத்துத் தருவேன். அந்தத் தொழிலையும் நான் நன்கு அறிவேன்.எனக்கு செருப்புத் தைக்கவும் தெரியும்,நாடாளவும் தெரியும். ஒரு முக்கியமான விஷயம், இரண்டுமே நன்றாகத் தெரியும்" என்று மிகுந்த பணிவுடன் பேசினார்.

இயலாமையோ, வறுமையோ வெட்கத்திற்குரியது அல்ல. தாழ்வு மனப்பான்மை தவறானது. தாழ்வு மனப்பான்மையைத் தூக்கியெறிந்தால் வெற்றி நிச்சயம்.

Navigation

[0] Message Index

Go to full version