Author Topic: முதல் தியாகம்!!!  (Read 1080 times)

Offline Yousuf

முதல் தியாகம்!!!
« on: September 09, 2011, 04:18:02 PM »
நிசப்தமான நடுப்பகல் நேரத்தில் இங்கும் அங்குமாக சில ஒட்டகங்கள் மலைப்பகுதியின் அடிவாரத்தில் கற்களை உணவுகளாக சுவைத்துக் கொண்டிருந்தன. பாலையின் அனல் பறக்கும் வெயிலில் மணல்களின் மேல் பகுதி உறுக்கி ஓட வைத்த தங்கம் போல் பளபளத்துக் கொண்டிருந்தது. இந்தப் பகுதி மக்ஸூம் எனும் குலத்தினருக்கு சொந்தமான பூமியாக இருந்தது.

திடீரென்று... வீல் ... என்ற ஒரு பெண்ணின் அலறல் அந்த நிசப்தத்தை கொடூரமாக கலைக்கவே அதைத் தொடர்ந்து ஒரு ஆணின் அழுகுரலும் சேர்ந்தது. பாலையின் அந்த மலையடிவாரம் திடீரென ஒரு பதை பதைக்கும் இடமாக மாறியது. ஒட்டகங்கள் தலையை திருப்பி சத்தம் வரும் இடத்தை நோக்கி பார்த்தன. 'இது தினமும் கேட்கும் சத்தம்தான்' என்று நினைத்தனவோ என்னவோ சிறிது நேரத்தில் ஒட்டகங்கள் தலையை தொங்கவிட்டு தங்கள் வேலையைப் பார்க்க ஆரம்பித்தன.

மீண்டும், மீண்டும் அந்த பெண்ணின் அலறல் மணல்வெளியில் முட்டி மோதி காணமல் போகவே, அந்த ஆண் பெண் அழுகுரல்களைத் தொடர்ந்து சில ஆண்களின் கேளிக்கை சிரிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகியது.

சாட்டையின் விளாசல்கள் தொடர அதைத் தொடர்ந்து ஒரு ஆணின் தளர்ந்த அழுகுரல் வலியால் சத்தமிடவே, அலறிய பெண்ணின் குரல் அடிக்காதீர்கள்... அவரை அடிக்காதீர்கள்.. என்று சத்தமிட்டது. ஆனால், அந்த சாட்டையடி சத்தங்கள் நிற்காமல் தொடரவே, அழும் அந்த ஆண், பெண் குரல்களை பின்னுக்குத் தள்ளின அங்கிருந்து வந்த ஆண்களின் கேளிக்கை சிரிப்புகள்.

தூரத்தில் இரு இளைஞர்கள் தங்கள் தலையில் கை வைத்தவர்களாக கண்களில் தாரை தாரையாக நீர் சொரிய அழுது கொண்டிருந்தார்கள். ஏன் இந்த அழுகை? கேட்க யாருமில்லை. பலைவனத்தின் மணல்களும், மலைகளின் பாறைகளும்தான் இந்த அழுகைகளை ஏன் என்று கேட்க வேண்டும். யாருமற்ற, அநாதைகளாக அந்த இருவரும் அங்கே அழுவதும் அதை இந்த மலைகளும், பாறைகளும், மணல் வெளிகளும் வெறும் வாய் மூடி மௌனமாக கேட்பதுமாக நாழிகைகள் நகர்ந்தன.

சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக மேற்கு நோக்கி சாய்ந்துக் கொண்டிருந்தான். இரு இளைஞர்களும் அழுகை வந்த திக்கை நோக்கி மெதுவாக நடக்கத் தொடங்கினார்கள். அப்துல்லாஹ் மற்றும் அம்மார் என்ற பெயருடைய இந்த இரு இளைஞர்கள் தளர்ந்த நடையுடன் கேளிக்கையும் கும்மாளமுமாக சிரித்துக் கொண்டிருக்கும் கூட்டத்தை நெருங்கினார்கள். இந்த இருவரையும் பார்த்தவுடன் அந்த கூட்டத்தினர் இன்னும் சத்தமிட்டு சிரித்து இருவரையும் வரவேற்று..

'அழைத்து செல்லுங்கள்.. அடிமைகளுக்கு பிறந்த அடிமைகளே' என்று சத்தமிட்டனர்.

'நாளை இந்த இரு கிழங்களும் உயிரோடு கண் விழித்தால் வழக்கம் போல் திரும்பவும் அழைத்து வரவேண்டும்.. புரிகிறதா..' என்று முழக்கமிட.. இரு இளைஞர்களும் தலையசைத்து ஆமோதித்தவாறு.. மணலில் கிடத்தி இருந்த அந்த இருவரையும் நோக்கி நகர்ந்தார்கள்.

எக்காளமிட்டு சிரித்த அபூ ஹுதைஃபா இப்ன் முகீரா என்பவரின் வாரிசுகள் அந்த இடத்தைவிட்டு நகரவே.. அப்துல்லாவும் அம்மாரும் அழுத வண்ணம் மணலில் கிடத்தியிருந்த தனது பெற்றோரின் அருகில் சென்று நின்றார்கள்.

மணலில் கிடத்தப்பட்டிருந்த வயதான தனது தந்தை யாசிரின் மார்பில் பாரமாக வைத்திருந்த சுடும் பாறையை தூரமாக தள்ளி வைத்துவிட்டு அவரை தூக்கிப் பிடித்து எழுந்து அமர வைத்தார்கள். அவரின் உடலேல்லாம்.. இரும்புக் கம்பியால் பழுக்கக் காய்ச்சி சூடு போடப்பட்டிருந்தது. மேனி முழுவதும் இரத்தம் ஒழுகி... சின்ன பின்னப்படுதப்பட்ட உடலாக இருந்தார்.. யாசிர் எனும் பெயர் கொண்ட அந்த முதியவர்.

இரும்புக் கவசம் அணிவித்து சுடுமணலில் கிடத்தப்பட்டிருந்த தனது தாய் சுமையாவின் அந்த சுட்டெரிக்கும் கவசங்களை அப்புறப்படுத்திவிட்டு அவரையும் தூக்கி அமரவைக்கவே... அம்மாரல் இனிமேலும் அடக்கி வைக்கமுடியாத அழுகை சத்தமாக பீறிட்டு வந்தது.

அடிமைகளுக்கு அழும் உரிமை கூட கிடையாதே என்று ஆக்ரோஷமாக அழுத அம்மாரும் அப்துல்லாவும்.. இன்னும் எத்தனை நாளைக்குத்தான்.. இப்படி இந்த மக்ஸூம் கூட்டதினரின் சித்திரவதைகளை அனுபவிக்கப் போகிறோம் என்று தாய் தந்தையரின் இரத்தங்களை துடைத்தவாறு.. கண்ணீர் விட்டனர்.

இப்படி சொல்ல முடியாத சித்திரவதைகளை அனுபவித்து வரும் இந்த இரு தள்ளாத வயதினரின் குற்றம்தான் என்ன?

ஏக இறைவனை.. கடவுளாகவும்.. முகம்மது (சல்) அவர்களை இறைத்தூதராக ஏற்றுக் கொண்டதுதான்..

'மகன்களே.. நிச்சயமாக.. ஒரு நாள்.. நீங்கள் இருவரும் அடிமைத் தனத்திலிருந்து விடுபட்டு விடுவீர்கள். இறைத்தூதர் முகம்மது கொண்டுவந்த அந்த செய்தி உண்மையானது.. இறைவன் பெரியவன். இறைவன் இந்த கொடுமைகளுக்கு பகரமாக உங்களின் எதிர் காலத்தை நன்மையாக்கி வைப்பான். இந்த அடிமைச் சங்கிலியிலிருந்து உங்களுக்கு உரிமைக் கிடைத்துவிடும்' என்று பிள்ளைகளுக்கு ஆறுதல் சொல்லிய்வாறு.. தனது குடிலை நோக்கி நால்வரும் நடக்கத் தொடங்கினர்.

சுமையா என்ற அந்த மூதாட்டி... அபூ ஹுதைஃபாவிடம் அடிமையாக வேலையில் செர்ந்தவர். அதாவது முகம்மது நபியவர்கள் பிறப்பதற்கு முன்னால். சுமையாவிற்கு.. ஏமன் நாட்டிலிருந்து கஹ்தான் குலத்திலிருந்த வந்த யாசிர் என்பவரை அபூ ஹுதைஃபாதான் கணவனாக மணம் முடித்து இருவரையும் தனக்கு அடிமையாக நடத்தி வந்தார். இந்த யாசிர் சுமையாக என்ற தம்பதியினருக்கு பிறந்த பிள்ளைகள்தான் அப்துல்லாஹ் மற்றும் அம்மார் இருவரும். அபூ ஹுதைஃபா மரணமடைந்தவுடன்..அவரின் வாரிசுகளுக்கு இந்த யாசிரின் குடும்பம் அடிமையாக பணி செய்து வந்தது. அபூ ஹுதைஃபா என்பவர் இஸ்லாத்தின் ஆரம்ப கால எதிர்ப்புகளின் தலைவராக இருந்த அபூ ஜஹ்லின் பெரிய தந்தையாவார்.

முகம்மதின் 'தூதுத்தவத்தை ஏற்றுக் கொண்டு... லாயிலாஹா.. இல்லல்லாஹ்' வணங்குவதற்கு உரியவன்.. அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை என்று மொழிந்த ஒரே குற்றத்திற்காக தினம் தினம் உயிர் போகும் சித்திரவதை அனுபவித்து வந்தார்கள் யாசிரும் சுமையாவும்.

இஸ்லாம் மீண்டும் இம்மண்ணில் முளையிடத் தொடங்கிய காலம் அது. நபியவர்களுக்கு நபித்துவம் கிடைத்து ஐந்து வருடம் இருக்கலாம் என்று வரலாற்றுக் குறிப்புகள் சொல்லுகின்றன. மக்காவின் ஆரம்ப காலத்தில் இது போன்று முஸ்லீமாக தன்னை அறிவிப்பு செய்தவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் மட்டுமே. இறை செய்தியை பிறருக்கு எத்தி வைக்க ஆணை கிடைத்து ஒவ்வொரு மனிதராக ரகசியமாகவும்.. பலம் நிறைந்தவர்கள் வெளிப்படையாகவும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு முஸ்லீம்களாக மாறிய காலம் அது.

ஒரு முறை அவ்வாறு கொடுமைப்படுத்தப்பட்ட போது அவ்வழியாக சென்ற முகம்மது (சல்) அவர்கள் அந்த கொடுமை தடுக்க முடியாமலும்.. அந்த கூட்டத்தினரை தட்டி கேட்க முடியாமலும், கண்ணீர் விட்டவாறு.. 'யாசிரின் குடும்பத்தினரே... பொறுமையுடன் இருங்கள்.. உங்களுக்கு சுவர்க்கம் வாக்களிக்கப் பட்டிருக்கிறது' என்று சொல்லவும், அவர்களுக்காக பிரார்த்தனை செய்ய முடிந்தவர்களாக மட்டுமே இருந்தார்கள்.

இந்தக் குடும்பத்தினரின் மீதான கொடுமைகள் கொஞ்சம் கொஞ்சமாக அதிமாகி, கேட்க ஆளில்லை என்பதால் அவர்களது பிள்ளைகளும் (அப்துல்லவும் அம்மாரும்) சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.

மற்றுமொருமுறை முகம்மது நபியவர்கள் அவர்களின் கொடுமைகளை கண்ணுற்றபோது.. அழுதவர்களாக.. 'யாசிரின் குடும்பத்தினரே, பொறுமையுடன் இருங்கள்' என்று கூறிவிட்டு.. 'இறைவா.. யாசிரின் குடும்ப்பத்தினருக்கு மன்னிப்பு வழங்குவாயாக' என்று பிரார்த்தித்தார்கள்.

இந்தக் கொடுமைகளை தாங்க இயலாத முதியவர் யாசிர் ஒரு நாள் மரணடைந்துவிட்டார். அவருடைய மரணம் இந்த கொடுமைக்கார குரைஷிகளை பொருத்தவரை ஒரு சாதாரண விஷயம், அதிலும் அவர் ஓர் அடிமை என்பதால் அந்த மரணத்திற்கு பகரமாக ஏதும் செய்ய வேண்டியதில்லை, மேலும் அதைக் கேட்க யாருக்கும் உரிமையும் கிடையாது. ஆனால் யாசிரின் மரணம் அந்த குரைஷி மக்ஸூம் கூட்டத்தினரை கொஞ்சமும் அசைக்கவில்லை. மாறாக அவர்களது கொடுமைகள் இன்னும் அதிகமாகி யாசிருக்கு பகரமாக அவரது புதல்வர்களான அப்துல்லாவையும், அம்மரையும் சேர்த்து கொடுமைப்படுத்தத் தொடங்கினார்கள். சுமையாவையும் அவரது புதல்வர்களையும் சாட்டைகளால அடிப்பதும், இரும்புக் கம்பிகளால் சூடு வைப்பதுமாக தனது கொடுமைகளை ரசித்து வந்தார்கள்.

ஒரு நாள்... மாலை நேரத்தில் வீடு நோக்கி வரும் சுமையா, அப்துல்லாஹ் மற்றும் அம்மாரின் வருகைக்காக காத்திருந்தான் குரைஷிகளின் தலைவன், முகம்மது நபிகளாரின் எதிரி அபூ ஜஹல்.

பகல் முழுவதும் துன்பங்களை சகித்து இரவிலாவது நிம்மதியாக இருக்கலாம் என்று வீட்டிற்கு வந்த சுமையா, வாசலில் அபூ ஜஹல் காத்திருப்பதைக் கண்டு கலங்கி தன் இரு மக்களின் கைகளை பிடித்தவாறு.. தள்ளாடி வந்து சேர்ந்தார்.

கொள்கைப்பிடிப்பும்.. முகம்மது அவர்களின் மேல் இருந்த உண்மையான அபிமானமும்.. அவர் சொன்ன செய்திகளில்... ஏக இறைவனின்.. உன்னதமான இறைச் செய்தியை சுவைத்த அனுபவமும் சுமையாவிற்கு.. போதுமான உளத்திறனை கொடுத்தது. தான் ஏற்றுக் கொண்ட இந்த கொள்கையால் நிச்சயம் ஒரு நாள் இந்த பூமியில் பெருத்த மாற்றம் வர இருக்கிறது.. இந்த உலகக் கொடுமைகளிலிருந்தும் அடிமைத்தனத்திலிருந்தும்.. இந்த பூமி விடுபட இருக்கிறது. காலம் காலமாக அனுபவித்து வந்த அவமானங்கள், கேவலமான வாழ்க்கை முறைகள், ஒழுக்கக் கேடுகள் எல்லாவற்றிலிமிருந்தும் விரைவில் விடுதலை கிடைக்கும் என்ற சத்தியப்பிடிப்பு அவரை இத்தனை கொடுமைகளுக்கும் மத்தியிலலும் இன்னும் உயிர் வாழ வைத்தது. அது மட்டுமல்லாமல்.. தனது இந்த நம்பிக்கையால்.. நிச்சயம் தனது இரு ஆண் மகவுகளும் இந்த அடிமைச் சங்கிலியிலிருந்து விரைவில் விடுபடுவார்கள் என்ற ஆழ்ந்த எதிர்பார்ப்பும் நிறையவே இருந்தது.

அத்தருணத்தில்.. முகம்மது நபியவர்களே தனது உயிரை பாதுகாக்க போராட வேண்டிய சூழலில் இருந்தது சுமையா போன்ற சாமனிய மனிதர்களுக்கு பெரும்பாதகமான சூழலாக இருந்தது. அபூ ஜஹல், அபூ லஹப் போன்ற குரைஷி தலைவர்கள்.. முகம்மதை நேரடியாக தாக்க இயலாத காரணத்தால்.. அவரின் கொள்கைகளை பின் பற்றுபவர்களை கொடுமையாக தாக்கி வந்தார்கள். அவரின் வழி பின்பற்றி நடப்பவர்களை கொடுமைப் படுத்துதல், கொலை செய்தல் போன்ற செயல்களால் முகம்மதின் உறுதியை குலைக்க எண்ணி படுபாதக செயல்கள் பலவும் செய்து வந்தார்கள்.

இந்த பாதுகாப்பற்ற சூழலில் மக்ஸூம் கூட்டதினரையும் அவர்களது உறவினர்களையும் காணும் போதெல்லாம் சுமையாவின் உள்ளம் மட்டுமல்ல உடலும் நடுங்கியது. தனது வீட்டு வாசலில் அபூ ஜஹல் காத்து நிற்பதை கண்ட சுமையாவின் முதல் பயம் பகல் முழுவதும் கொடுமைகளை அனுபவித்து விட்டு இப்போதுதான் திரும்பி வரும் தன்னைவிட தனது பிள்ளைகளை அந்த பாதகன் இன்னும் அதிக கொடுமைப் படுத்துவானோ என்ற பீதி அவளைப் பற்றிக் கொண்டது.

'வா.. சுமையா.. அடிமையான உனக்கு.. எத்தனை தைரியமிருந்தால் நீ... இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வாய்' என்று கோபத்துடன் அந்த பெண்மணியை தாக்கத் தொடங்கினான்.

அன்னை தாக்கப்படுவதை அப்துல்லாவும், அம்மாரும் தடுக்க முயன்றும், அபூ ஜஹல் தனது ஈட்டியால் இருவரையும் திருப்பித் தாக்கினான்.

கண்மூடித்தனமான அபூ ஜஹலின் தாக்குதலில் சுமையா.. இறுதியாக தனது உயிரைத் துறந்தார். ஒரு செய்தியில் அபூ ஜஹல் தனது ஈட்டியால் அம்மூதாட்டியின் பெண்குறியில் குத்தி மரணமடைய வைத்தான் என்று தெரியப்படுத்துகிறது. இன்னொரு செய்தியில் அப்துல்லாவையும் தனது ஈட்டியால் குத்திக் கொன்றதாக (அப்துல்லாவும் ஷஹீதாக்கப்பட்டதாக) வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கன்றன.

வரலாற்று வல்லுநர்கள்.. சுமையாவின் மரணத்தை இஸ்லாத்தின் முதல் பெண்ணின் உயிர்த்தியாகம் (ஷஹீத்) என்று அறிவிக்கின்றார்கள்.
« Last Edit: September 11, 2011, 12:41:02 PM by Yousuf »