FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest 2k on September 17, 2019, 11:34:08 AM

Title: என்றென்றைக்குமாய் தொலைந்து போனவன்
Post by: Guest 2k on September 17, 2019, 11:34:08 AM
"Shiva passed away. Lightning strike"
என்றொரு குறுஞ்செய்தி
உணர்வுகளை அதிரச் செய்து
தூக்கத்தை கலைத்து போட்டது
"Which Shiva" என கேட்க நினைத்த
மனதின் அபத்தத்தை
குறைப்பட்டுக் கொண்டு அமைதியாக
குறுஞ்செய்தியை பார்த்தபடி அமர்ந்திருந்தேன்


பேரன்பிற்குரிய நண்பன் ஒருவனின்
இழப்புச் செய்தியை
தாங்கி நின்றிருக்கும் இந்த விடியலை
எங்ஙகனம் வரவேற்பது
பேரன்பிலும் பேரன்பிற்குரிய
நண்பன் அவன்
எள்ளளவும் சிறியதொரு பிரச்சனைக்கு
நான்கு வருடங்கள்
நான்
முகம் திருப்பிக் கொண்ட
நண்பன் அவன்


சண்டைகள் ஏதுமில்லாமல்
காரணங்கள் கூறிக்கொள்ளாமல்
அவனை நான்
விலக்கி வைத்தேன்
முன்னெப்பொழுதும் இல்லாத
எளிய வழிகளாக
விலக்கி வைத்தல்களை
சமூக வலைதளங்கள் சாத்தியமாக்கியிருக்கின்றன
எளிதாக
மிக எளிதாக
காரணங்களை கூறிக்கொள்ளாமல்
அவனை நான்
விலக்கி வைத்தேன்


பிறிதொரு நாள் தோழி ஒருத்தியை
என் வீட்டிற்கு அழைத்த வந்த
நண்பனிடம்
முதுகு காட்டி நின்றேன்.
குன்றியிருக்கும் அவன் முகம்
என
பாராமலே தெரிந்து தான் இருந்தது எனக்கு
வேதனைகளும், மௌனங்களும், குழப்பங்களும்
நிறைந்த
ஒரு பனிப்போர் நிகழ்ந்து கொண்டிருந்தது
பனிப்போரின் வெட்கை தாளாமல்
அவனின் முகம் பாராமல்
திரும்பிச் சென்றேன்
அதுவே கடைசி முறை என்றறிந்திருந்தால்
நின்று ஒரு கணம் நோக்கியிருப்பேன்
ஒளிர்ந்திடும் அந்த கண்களை
எனை பார்த்தும் இதழோரம்
நெளியும் அந்த குறுநகையை
கோபங்களையும், வெறுப்பினையும் விடுத்து
பார்த்திருக்கலாம் அந்த முகத்தை
ஒருமுறையேனும்


நான்கு வருடங்கள் குறுஞ்செய்திகள் இன்றி,
முக எதிர்கொள்ளல்கள் இன்றி, சுவாரசிய தருணங்கள் இன்றி, அவனுடைய புதிய புதிய நண்பர்களுடனும்
என்னுடைய புதிய புதிய நண்பர்களுடனும்
கழிந்து போயின நாட்கள் எப்பொழுதை போலவும்


எங்கோ யாருடனோ அவன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்
நிலைத்தகவல்களாக வரும்பொழுது
தன்னிச்சையாக
விருப்பக்குறியிட்டு விருப்பக்குறியை
அழிக்கிறேன்.
விருப்பங்கள் வெறுப்புகளாக
மாறிய கணங்கள் யாருமே எதிர்பார்த்திராதவை தான்.
இன்று முகம் காட்டி பேசி சிரிக்கும்
நண்பனனொருவனோ
தோழியொருத்தியோ
நாளை முகம் திருப்பி செல்லலாம்.
நினைவுகளை அறுத்துக் கொண்டே
இருக்க இருக்க
மீண்டுமொரு புதிய நினைவு
தந்திகளில் கோர்த்துக் கொள்கிறது


இனி புகைப்படங்களில் மட்டுமே
மீதமிருக்கும்
அவன் நினைவுகளை மீட்டெடுத்துக்கொள்ள வேண்டும்
எப்பொழுதோ அனுப்பிய குறுஞ்செய்திகளின் நேசங்களை
மீதமிருக்கும் நாட்களுக்காக
சேமித்துக்கொள்ள வேண்டும்
ஏனெனில்
இனியொருமுறை அவனிடம் முதுகு காட்டி நிற்க இயலாது
இனியொருமுறை அவனுடன் முகம் பூத்து சிரிக்க இயலாது

ஒருமுறை தொலைபேசியை எடுத்து அவன் எண்ணிற்கு அழைக்கிறேன்
பதிவு செய்யப்பட்ட குரல் ஒலிக்கிறது
"நீங்கள் தொடர்புகொள்ளும் நபர் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார்" என
எப்பொழுதிருந்தோ அவன்
என் தொடர்பு எல்லைக்கு அப்பால் தான்
இருந்திருக்கிறான்

"Life is so uncertain and cruel" என குறுஞ்செய்திக்கு
பதில் அனுப்பி
முழங்கால்களில் முகம் புதைத்து அழுகிறேன்
இப்பொழுதைக்கு என்னால் செய்ய இயன்றது அதுமட்டும் தான்
Title: Re: என்றென்றைக்குமாய் தொலைந்து போனவன்
Post by: Unique Heart on October 28, 2019, 09:35:21 PM
நினைவுகள் நெஞ்சில் இருக்கும் வரை, நிரந்தர
பிரிவு என்றும் இல்லை. 

கவலை வேண்டாம்..