Author Topic: இறையச்சம்!!!  (Read 1848 times)

Offline Yousuf

இறையச்சம்!!!
« on: July 18, 2011, 11:04:14 AM »
நன்மையான செயல்  – நல்லன செய்தல், (ஈமான்) நம்பிக்கை, இவைகளின் கீழ் விவாதித்தவை இறையச்சத்திற்கும் பொருந்தும். இறையச்சம் எனப்படுவது வெறும் வார்த்தை விளையாட்டு அல்ல. அல்லது நமது வசதிக்குத் தக்கப்படி வைத்துக்கொண்டதும் அல்ல. இறையச்சம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இங்கேயும் திருக்குர்ஆனே நமது முதல் ஆதாரமாக பயன்படும். திருக்குர்ஆன் இறையச்சம் மிக்கோரைப்பற்றி குறிப்பிடும்போது:[/b]

“(பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள். தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள். இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள். இன்னும் ஆகிரத்தை (மறுமையை) உறுதியாக நம்புவார்கள். இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள். மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (திருக்குர்ஆன்: 2:3-5)

(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள். தவிர கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள். (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான். தவிர, மானக்கேடான ஏதேனும் ஒரு செயலை அவர்கள் செய்துவிட்டாலும், அல்லது (ஏதேனும் பாவத்தினால்) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலும். உடனே அவர்கள் (மனப்பூர்வமாக) அல்லாஹ்வை நினைத்து தங்கள் பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர வேறு யார் பாவங்களை மன்னிக்க முடியும்? மேலும், அவர்கள் அறிந்து கொண்டே தங்கள் (பாவ) காரியங்களில் தரிபட்டிருந்து விடமாட்டார்கள். அத்தகையோருக்குரிய (நற்) கூலி, அவர்களுடைய இறைவனிடமிருந்து மன்னிப்பும், சுவனபதிகளும் ஆகும். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டே இருக்கும். அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பர். இத்தகைய காரியங்கள் செய்வோரின் கூலி நல்லதாக இருக்கிறது. (திருக்குர்ஆன்: 3:134-136)

மேலே சொன்ன வசனங்கள் இறையச்சம் என்றால் என்ன? என்பதை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. இறையச்சம் என்பது இறைவனையும், உலக வாழ்வின் தன்மையையும் தெளிவாகப் புரிந்து கொள்வது என்று பொருள். எல்லாச் சூழ்நிலைகளிலும் இறைவனால் நமக்கு அருளப்பட்ட செல்வங்களை இறைவனின் வழியில் செலவு செய்திட வேண்டும். இதுவே செல்வத்தின் முறையான உபயோகமாகும். அதுபோலவே தொழுகையை நிறைவேற்றுவதன் மூலம் நமது உடல் பலத்தையும் ஆன்மீக உணர்வுகளையும் முறையாகப் பயன்படுத்துவது, இன்னும் இறையச்சம் என்பது ஒருவர் தனது கோபங்களை, உணர்வுகளை கட்டுப்படுத்துவது என்றும் பொருள்படும். பொறுமையை மேற்கொள்வதும், நமக்கு இடர் விளைவித்தவர்களை மன்னிக்கின்ற மாண்பினை பெறுவதும் இறையச்சத்தில் அடங்கும். பாவம் செய்திட்டபோது இறைவன் பக்கம் திரும்பி பாவமன்னிப்பு தேடிட வேண்டும் என்ற மன உந்துதலைப் பெறுகின்ற பக்குவ நிலையும் இறையச்சத்தில் அடங்கும்.

இறையச்சத்துடன் இருப்பதென்பது, உறுதியாக ஈமானோடு (நம்பிக்கை)  இருப்பதென்பதாகும். இதயத்தில் இறைவனைப் பற்றிய தெளிவுடன் இருப்பதாகும். துணிவுடன் நன்மையை ஏவி தீமையை தடுப்பது என்பதாகும். தூய்மையான பண்புகளுடன் இருப்பது என்பதாகும். இவைகளுக்கு மேல் இறைவனின் அடியானாக இருப்பதென்பதாகும்.

இறையச்சம், நேர்மை நன்மையானவற்றை செய்தல், உண்மையான ஈமான் (நம்பிக்கை) இவைகள் அனைத்தும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவைகளே. இவைகளெல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து ஒரு உன்னதமான மனிதனை உருவாக்குகின்றது. அவனே ஒரு உண்மையான முஸ்லிம்(இறைவனுக்கு முற்றிலும் அடிபணிந்தவன்).