Author Topic: ஹதயோகம்  (Read 2957 times)

Offline Anu

ஹதயோகம்
« on: May 17, 2012, 01:16:11 PM »
நமது பாரத கலாச்சாரம் யோகசாஸ்திரத்தின் களஞ்சியமாக இருக்கிறது என்றால் மிகையில்லை. யோகத்தின் அனைத்து பரிணாமங்களையும் உலகுக்கு அளித்தது பாரதம்.

யோகம் என்றவுடன் பலருக்கு நினைவு வருவது உடலை ரப்பராக வளைத்து முறுக்கும் யோகாசனங்கள். ஆசனங்கள் யோத்தின் ஒரு பகுதியே தவிர யோகம் என்றாலே ஆசனம் ஆகிவிடாது. யோகம் என்றால் என்ன என சிறிது விளக்கமாக பார்ப்போம்.

யோகம் என்றால் ஒன்றிணைதல் என பொருள். பிரிந்த ஒன்று மீண்டும் அத்துடன் இணைவது யோகம் என்கிறோம். யோக் எனும் சமஸ்கிருத வார்த்தையின் தமிழ் வடிவம் தான் யோகம். பரமாத்ம சொரூபத்தில் இருந்து பிரிந்து ஜீவாத்மாவாக இப்பிறவியை எடுத்த நாம் மீண்டும் பரமாத்மாவுடன் ஐக்கியமாவதை யோகம் என கூறலாம்.

யோகம் என்றவுடன் ஒரே ஒரு யோக முறைதான் இருப்பதாக நினைக்கவேண்டாம். யோகம் பலவகையாக இருக்கிறது. யோக முறைகளில் முக்கியமானது ஜப யோகம், பக்தி யோகம், ஞான யோகம், ஹத யோகம், கர்ம யோகம். பகவான் ஸ்ரீகிரிஷ்ணர் பகவத் கீதையில் ஞான யோகம், கர்ம யோகம் மற்றும் பக்தியோகத்தை பற்றி விளக்குகிறார்.

நமது ஆன்மீக நூல்களில் ஒரே நேரத்தில் மூன்று யோகமுறையை கையாண்ட தன்மை பகவத் கீதை பெறுகிறது. பகவத் கீதையில் எத்தனையோ சிறப்புகள் இருந்தாலும் அதில் முக்கியமானது யோக விளக்கம் எனலாம்.

தன்னில் மனிதன் ஐக்கியமாகிவிட இறைவன் உபதேசித்த வழி யோக மார்க்கம். இறைவனை அடைய எத்தனையோ வழிகள் உண்டு. அதில் யோகமும் ஒருவழி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஞான யோகம் : தன்னை முழுமையாக அறிதல் ஞான யோகம், தான் யார் என்றும் தனது இருப்பி நிலையை உணர்வது ஞான யோகம் என்று கூறுகிறோம். ஞான யோக வழிவந்தவர்கள் ஆதி சங்கரர் மற்றும் பகவான் ஸ்ரீ ரமணர்.

பக்தி யோகம் : இறைவனை பக்தி செய்வதை காட்டிலும் வேறு செயல் இல்லாமல் பக்தியாலேயே இரண்டர கலப்பது பக்தி யோகம். பக்த மீரா, புரந்தர தாசர்,திரு ஞானசம்பந்தர் போன்றவர்கள் பக்தி யோகம் செய்தவர்கள்.

கர்ம யோகம் : கடவுளுக்கு சேவை செய்வதையே வாழ்க்கையாக கொண்டு சேவையிலேயே தன்னை ஐக்கியப்படுத்தி கொள்ளுதல். அப்பர், சிவனடியாருக்கு சேவை செய்த நாயன்மார்கள்.

ஜபயோகம்: கடவுளைக்காட்டிலும் கடவுளின் நாமத்தில் தம்மை ஐக்கியமாக்கிக்குள்ளுதல் ஜபயோகம். இடைவிடாது மந்திரத்தை ஜபம் செய்வதால் இறைவனுடன் இரண்டறகலத்தலை ஜெபயோகம் குறிக்கிறது. நாரதர், வால்மீகி என பலர் நாம ஜபத்தால் ஜபயோகத்தை செய்தவர்கள்.

ஹதயோகம் : பிற யோக முறைகள் மனம், விழிப்புணர்வு நிலை மற்றும் குணம் சார்ந்து இருக்கிறது. ஹதயோகம் உடல் சார்ந்தது எனலாம்.உடல் இறைவனின் இருப்பிடமாக எண்ணி , உடலை தூய்மையாகவும் சக்தியுடன்னும் பராமரிப்பது ஹதயோகம். சீரடி சாய்பாபா மற்றும் ஏனைய யோகிகள்.

மேற்கண்ட யோக முறைகளில் எந்த யோகமுறை சிறந்தது என கேட்டால் அவரவர் வாழ்வியல் சூழலுக்கும், தன்மைக்கும் ஏற்ப யோகமுறையை பின்பற்றவேண்டும்.

யோகத்தில் முக்கியமான இந்த ஐந்து யோக முறைகளும் பஞ்சபூதத்தின் வடிவங்களாக இருக்கிறது. ஆகயத்தின் தன்மையை ஞான யோகமும், நீரின் தன்மையை கர்ம யோகமும், காற்றின் தன்மையை ஜபயோகமும், அக்னியின் தன்மையை பக்தியோகமும், மண்ணின் தன்மையை ஹத யோகம் கூறிப்பிடுகிறது.இவ்வாறு யோக முறைகள் பஞ்சபூதத்தின் தன்மையை கூறுவதால் ஏதாவது ஒரு பூதத்தின் தன்மை இல்லை என்றாலும் பிரபஞ்ச இயக்கம் செயல்படாது. அது போல அனைத்து யோக முறையும் இன்றியமையாதது.

பிற யோக முறைகளை விளக்க அனேக நூல்கள் மற்றும் மஹான்கள் இருக்கிறார்காள். ஆனால் ஹதயோகம் பற்றி விளக்க சரியான நூல்கள் இல்லை என கூறவேண்டும். உடல் நிலையை பராமரிப்பது. நோயின்றி இருப்பது என பல விஷயங்கள் நமக்கு தேவையான விழிப்புணர்வு இல்லை எனலாம். கர்ம வினை என்ற சித்தாந்தத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் நோய்வருவதற்கு முன்வினை கர்மம் காரணம் என்கிறார்கள். வினை எவ்வாறு இருந்தாலும் சிறப்பான நிலையில் ஹதயோகம் பயிற்சி செய்து வந்தால் உடல், மனம் மற்றும் ஆன்மாவில் பலம் ஏற்படும்.
ஒரு கிராமத்தில் ஒரு வீடு மண்ணால் கட்டப்பட்டுள்ளது மற்றொரு வீடு சிமெண்டால் கட்டப்பட்டுள்ளது என்றால், அடர்த்தியான மழைவரும் காலத்தில் மண்வீடு தான் பாதிப்பு அடையும். மழைவருவது கர்மா மற்றும் இயற்கை, ஆனால் நம்மிடம் இருப்பது மண்வீடா, சிமெண்ட் வீடா என நாம் தான் முடிவு செய்ய வேண்டும். அது போல உடல் வலுவான மற்றும் தூய்மையான நிலையில் நாம் வைத்திருந்தால் நமது கர்மங்கள் நம்மை தாக்காது.

ஹத யோகம் என்ற பெயர் காரணத்திற்கான விளக்கம் பார்ப்போம். ஹட யோகம் என்ற பெயரே சரியானது. ஹட என்றால் இருபுலம் என மொழிபெயர்க்கலாம். காந்தம் எப்படி இரு புலத்துடன் செயல்படுகிறதோ அது போக நமது உடல்,மனம் ஆகியவை இரு புலத்திற்கு இடையே ஊசலாடிய படி இருக்கும். அதை ஒருநிலைப்படுத்தி இரு துருவங்களுக்கு நடுவில் இருக்க வைப்பது ஹட யோகம் ஆகும்.

அர்த்தனாரிஸ்வர தத்துவம் போல நம் உடல் சூரியனுக்கு உண்டான அக்னி தன்மை வலது பக்கமும் சந்திரனுக்கு உண்டான குளிர்ச்சி இடது பக்கமும் கொண்ட அமைப்பால் ஆனது. இருதன்மைகளில் ஏதாவது ஒன்று மிகும் சமயம் நமது வாழ்க்கை தன்மை சமநிலை தவறுகிறது. சூரிய-சந்திர மையத்தில் இருக்க செய்வது ஹடயோகம். ஹ என்றால் வெப்பம் - டா என்றால் குளிர்ச்சி என்றும் வழங்குவார்கள்.


உடலை பாதுகாத்து ஆசனங்கள் செய்வது நமது ஆன்மீக வாழ்க்கையில் நன்மையை கொடுக்கமா என கேட்கலாம். திருமூலர் கூறும் அருமையான கருத்துக்களை கேளுங்கள்.

உடம்பார் அழியில் உயிரார் அழிவார்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.

எனைய யோக முறை இருந்தாலும் அதை பின்பற்றும் மனிதனுக்கு அவற்றை சிறப்பாக செய்ய உடலும் உயிரும் அவசியம்.
உடல் என்பது உயிரை தாங்கும் பாத்திரம். உடல் அழிந்தால் உயிர் அதில் தங்கமுடியாது. மேலும் ஞானம் அடைய எந்த ஒரு யோக முறையையும் பயன்படுத்த முடியுது. இதில் திருமூலர் 'உடம்பை வளர்க்கும் உபயம் அறிந்தே' என ஹதயோகத்தை குறிக்கிறார். ஹதயோகத்தில் உடம்பு வலு பெறும் அதனால் உயிர் அழியாது ஞானத்தை நோக்கி செல்லலாம் என கூறிகிறார். இதைவிட எளிமையாக ஹதயோக சிறப்பை கூறமுடியுமா?

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்.
உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று
உடம்பினை யானிருந்து தோம்புகின் றேனே.

தனது நிலையை தெள்ளத்தெளிவாக்கி ஹதயோகத்தின் அவசியமும் உடலை நன்மையாக காக்க வேண்டியதின் அவசியத்தையும் கூறுகிறார். உடலின் உள்ளே இறைவன் வசிக்கிறார். அதனால் உடலை பேணிக்காப்பது அவசியம். உடல் இறைவன் வசிக்கும் கோவில் என்பதால் உடலை கவனிக்க தவறுவது கோவிலை சரியாக பராமரிப்பு இல்லாமல் வைத்திருக்கும் பாவத்திற்கு சமமானது. திருமூலர் இதனால் உடலை நான் இங்கே மேம்படுத்துகிறேன் என்கிறார்.

இதற்கு எல்லாம் முத்தாய்ப்பாக ,

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிவார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்துங் காளா மணிவிளக்கே.

உள்ளமும் உடலும் ஆலயத்திற்கு ஒப்பாகும் நமது உணர்வு உறுப்புக்கள் அதில் இருக்கும் விளக்காகவும், ஆன்மா சிவலிங்கத்திற்கு சமமாக சொல்லி ஹதயோகத்திற்கான அவசியத்தை வலியுறுத்துகிறார்.

ஹதயோகம் பல உட்பிரிவை கொண்டது. ஆசனம், பிராணாயாமம், முத்திரை, பந்தங்கள் மற்றும் கிரியா என அவற்றை வகைப்படுத்தலாம்


Offline Anu

Re: ஹதயோகம்
« Reply #1 on: May 17, 2012, 01:19:39 PM »
நவநாகரீகம் என்ற பெயரில் உடலை நாம் மிகவும் கடினமாக நடத்துகிறோம். உடல் தனது வளைவு தன்மையை சிறுவயதில் இழந்து விடுகிறது. குழந்தைகள் தற்காலத்தில் மைதானத்தில் விளையாட அனுமதிக்கப்படுவதில்லை. படி என சொல்லியும் வீட்டிலேயே விளையாடு என்றும் அவர்களுக்கு பதின்ம வயதில் உடல் பருமன் அதிகரித்து இள வயதில் அதிக வியாதியின் இருப்பிடமாகிறார்கள்.

பெண்களும் தங்களுக்கு உண்டான உடல் வேலைகளை அசைவு பெற செய்வதில்லை. இதனால் 50% சுகப்பிரசவம் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறார்கள். 50% அவர்களின் பிறப்பு தன்மை காரணம். சரியான யோகபயிற்சியால் பெண்களுக்கு சிசரியன் பிரசவமும், அது தொடர்ந்து வரும் மன அழுத்தமும் தவிர்க்கலாம். இதற்கு ஹதயோகம் அருமையான வழி.

தற்காலத்தில் எத்தனை பேர் தரையில் நீண்ட நேரம் உட்கார முடியும்? உணவருந்த டைனிங் டேபிள் உடல் அசையா வாகனம், தொலைக்காட்சி பார்க்கும் பொழுது சொகுசு சோபா என எதற்கும் உடலை வளைவு தன்மைக்கு கொண்டு செல்லுவதில்லை. வீட்டில் இருக்கும் மர சாமான்களுக்கு இணையாக நம்மிடமும் வளைவு தன்மை இல்லாமல் மரசட்டம் போல் இருக்கிறது. உடல் வளைவு தன்மை இல்லாத காரணத்தால் நோய் வருவதும், அந்த நோயை குணமாக முயற்சிக்கையில் உடல் மருத்துவத்தை ஏற்றுகொள்ளாத நிலையும் ஏற்படும்.

சரி........ நாகரீகம் என்றால் ஐந்திலும் வளைவதில்லை ஐம்பதிலும் வளைவதில்லை என்பது தானே?

ஹதயோகத்தின் உற்பிரிவுகளை கூறுகிறேன் என்றேன் அல்லவா அதை பார்ப்போம்.

ஆசனம் : உடலை சில இயக்க நிலைக்கு உற்படுத்தி அதை இயக்கமற்ற நிலைக்கு மாற்றுவது ஆசனம். நமது உடலின் அனைத்து பகுதியையும் நாம் இயக்குவது இல்லை. அதனால் நமக்கு மனதிலும் உடலிலும் ஓர் இறுக்க நிலை தோன்றும். பூனை, நாய் போன்ற விலங்குகள் தூக்கத்திலிருந்து எழுந்ததும் தங்களின் உடலை முறுக்கேற்றி உற்சாகம் ஆக்கிக்கொள்வதை பார்த்திருப்பீர்கள். அது போல விலங்குகள், இயற்கையில் இருக்கும் பொருகளின் அசைவு நிலையை பயன்படுத்தி நாமும் உடலை உற்சாகமூட்டுவது ஆசனங்கள் ஆகும்.

பிராணாயாமம் : பிராணன் என்பது உயிர்சக்தி. நமது சுவாசம் மூலம் உயிர்சக்தியானது பிரபஞ்ச ஆற்றலுடன் இணைகிறது. பிராணனை வளப்படுத்தி நமது உயிர்சக்தியையும் மேம்படுத்தும் முறைக்கு ப்ராணாயாமம் என பெயர்.

முத்திரைகள் : உடலில் சில பகுதிகளை குறிப்பிட்ட சைகை முறையில் வைப்பது முத்திரை எனலாம். இறைவனின் விக்ரஹங்களில் அவர்கைகளில் ஒரு வித சைகை இருப்பதை பார்த்திருப்போம். உதாரணமாக அம்மன் விக்ரஹத்தில் உள்ளங்கள் நம்மை பார்த்துகாட்டி ஆசிர்வதிப்பதை போன்று இருக்கும். இதற்கு அபயஹஸ்த முத்திரை என பெயர்.
[முத்திரை பற்றிய விரிவான கட்டுரை விரைவில் வர இருக்கிறது. வலையுலகில் அப்படி முத்திரை பதிச்சாத்தான் உண்டு...! ]

பந்தங்கள் : நமது சுவாசம் மற்றும் உடலில் உள்ள மின்சக்தியை ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிலைநிறுத்தி அல்லது கட்டிவைப்பது பந்தங்கள். இதனால் அந்த சக்தியானது குறிப்பிட்ட உடல்பகுதியில் வலுசேர்க்கும். வட மொழியில் பந்தா என இதற்கு பெயர். யோகிகள் காட்டும் ஒரே 'பந்தா' இது தான்.

கிரியா : கிரியா என்றால் செயல் என பொருள் கொள்ளலாம். ஹடயோகத்தில் கிரியா என்றால் உடலை தூய்மையாக்கும் செயல் என பொருள். உடலில் கழிவுகள் சேருவது இயற்கை, அதை தக்க முறையில் தூய்மையாக்க ஆறு வழிகள் ஹடயோகம் கூறுகிறது. இவை ஷட்கிரியா என வழங்கப்படுகிறது.

ஹதயோகம் என்றவுடன் தலைகீழாக நிற்பது கடினமாக உடலை வளைப்பது என்று பலர் நினைத்துவிடுகிறார்கள். இயல்பான வாழ்க்கை நிலையில் ஒருவர் ஹதயோகத்தை செய்ய முடியும். மேலும் ஹதயோகம் மொழி, மதம், ஜாதி என எதற்கும் சார்ந்தது இல்லை. உடல் இருப்பவர்கள் யார் செய்தாலும் வேலை செய்யும். அதனால் தான் ஹதயோகம் ஒரு விஞ்ஞானமாக கருதப்படுகிறது. மருத்துவ உலகம் அதை ஏற்றுக்கொண்டுள்ளது. மருத்துவ முறைக்காக மட்டுமே உபயோகப்படும் ஹதயோகத்தை யோகசிகிச்சை என பெயர். ஹதயோகம் மருத்துவ முறைக்கானது மட்டுமல்ல அதனால் எண்ணிலடங்கா பலன்கள் உண்டு.

ஹதயோகத்தை பயன்படுத்தும் அவசியத்தை பற்றி ஏனைய நூல்கள் கூறினாலும், ஹதயோக பரதீப்பிகா எனும் நூல் ஹதயோகம் செய்யும் முறையை விரிவாக அலசுகிறது. இந்த நூல் ஐயாயிரம் வருடத்திற்கு முற்பட்டது என்பதிலிருந்து நமது நாட்டின் தொன்மையை தெரிந்து கொள்ளுங்கள்.

பதஞ்சலி யோக சூத்திரம் எனும் நூலில் பதஞ்சலி முனிவர் ஆசனம் செய்வதின் அவசியமும், எவ்வாறு செய்ய வேண்டும் என்றும் ஒற்றை வரியில் சொல்லிகிறார்.
“ஸ்திரம் சுகம் ஆசனம்”

உங்களை தியானத்திற்கு ஸ்திரமாக அமருவதற்கு ஆசனம் தேவை. ஆசனம் செய்யும் பொழுது உங்கள் உடல் சிரமப்படக்கூடாது. ஸ்திரமாகவும் சுகமாகவும் உங்களை வைத்திருக்க எது உதவுமோ அதுவே ஆசனம்.

தற்கால நவநாகரீக உலகில் உணவு முறை என்பது துரித உணவின் தாக்கத்தால் சீரிழிந்து வருகிறது. உடலையும், மனதையும் பேணிக்காப்பதால் மட்டுமே சிறந்த ஆன்மீக வளர்ச்சி அடைய முடியும்.
சிறிது நேரம் தியானத்தில் உற்காருவதற்குள் கால்கள் மரத்து போவது, உடல் பிடிப்பு ஏற்படுவது, கீழே உற்கார உடல் ஒத்துழைக்காதது என பல பிரச்சனைகளுக்கு ஹதயோகம் தீர்வாகும். இதனால் தான் எனது யோக பயிற்சி முறையில் ஹதயோகத்துடன் அனைத்து யோக முறையும் இணைத்துள்ளேன்.

சிறந்த யோக ஆசிரியரை நாடி, உங்கள் வயது வாழ்க்கை சூழலுக்கு தக்க ஹதயோக பயிற்சியை தினமும் செய்யுங்கள். ஹதயோக ஆசனங்களை செய்து உங்கள் உடலை இறைவன் இருக்கும் அரியாசனமாக்குங்கள். ஹரி அந்த ஆசனத்தில் நிரந்தரமாக வீற்றிருப்பான்.