Author Topic: மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை  (Read 39271 times)

Offline Anu

பல மதங்களைக் குறித்து ஆராய்ச்சி

இந்திய சமூகத்தின் சேவையிலேயே நான் முற்றும் மூழ்கி இருந்தேன் என்றால், அதற்கு முக்கியமான காரணம், ஆத்மானு பூதியைப் பெற வேண்டும் என்பதில் நான் கொண்டிருந்த ஆர்வம் தான். சேவையின் மூலமே ஆண்டவனை அடைய முடியும் என்பதை அறிந்தேன். ஆகையால், சேவையையே என்னுடைய மதம் ஆக்கிக் கொண்டேன். என் அளவில் சேவையென்றால் அது இந்தியாவுக்குச் செய்யும் சேவையே. அதற்கான மன இசைவும் என்னிடம் இருந்தது. பிரயாணம் செய்ய வேண்டும் என்பதற்காகவும், எனக்குப் பிழைப்பைத் தேடிக் கொள்ளுவதற்காகவுமே நான் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றேன். ஆனால் நான் முன்னால் கூறியதைப் போல், ஞானமடையும் முயற்சியில் முனைந்திருப்பதையும் கண்டேன்.

எனக்கு இருந்த அறிவுப் பசியைக் கிறிஸ்தவ நண்பர்கள் இன்னும் அதிகக் கடுமையானதாக்கிவிட்டார்கள். அப் பசியோ தணியாப் பசியாகி விட்டது. நான் அசிரத்தையாக இருந்து விட விரும்பினாலும் அவர்கள் என்னைச் சும்மா விடவில்லை டர்பனில் உள்ள தென்னாப்பிரிக்கப் பொது மிஷின் தலைவரான ஸ்ரீ ஸ்பென்ஸர் வால்டன் என்னைக் கண்டு கொண்டார். நான் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனாகவே ஆகிவிட்டேன். பிரிட்டோரியாவில் கிறிஸ்தவர்களுடன் எனக்கு இருந்த தொடர்பே, இப்பழக்கத்திற்குக் காரணமாக இருந்தது என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஸ்ரீ வால்டனின் போக்கே அலாதியானது. கிறிஸ்தவ சமயத்தில் சேர்ந்து விடுமாறு எப்பொழுதாவது அவர் என்னை அழைத்ததாக எனக்கு நினைவேயில்லை. ஆனால், அவர் தமது வாழ்க்கையைத் திறந்த புத்தகம் போல் என் முன்பு வைத்து விட்டார். அவருடைய செயல்கள் யாவற்றையும் நான் காணும்படி செய்தார். ஸ்ரீமதி வால்டன், கண்ணியமுள்ள, திறமைசாலியான பெண்மணி. இத்தம்பதிகளின் போக்கு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எங்களுக்குள் இருந்த அடிப்படையான பேதங்களை நாங்கள் அறிவோம். எவ்வளவுதான் விவாதித்தாலும் அந்தப் பேதங்கள் மறையமாட்டா. என்றாலும், சகிப்புத் தன்மை தாராளம், உண்மை ஆகியவை இருக்குமிடத்தில் பேதங்களும் பயன் அளிப்பவையாகவே உள்ளன. வால்டன் தம்பதிகளின் அடக்கம், விடாமுயற்சி, உழைப்பில் ஈடுபாடு ஆகியவை எனக்குப் பிடித்திருந்தன. நாங்கள் அடிக்கடி சந்தித்து வந்தோம்.

இந்த நட்பு எனக்குச் சமய விஷயங்களில் தொடர்ந்து சிரத்தை இருந்து வரும்படி செய்தது. சமய சம்பந்தமான நூல்களைப் படிப்பதற்குப் பிரிட்டோரியாவில் எனக்கு இருந்து ஓய்வு இங்கே கிடைப்பதற்குச் சாத்தியமில்லை. என்றாலும் எனக்குக் கிடைக்கும் கொஞ்ச ஓய்வு நேரத்தையும் நல்வழியில் பயன்படுத்தி வந்தேன். சமய சம்பந்தமாக நான் தொடர்ந்து கடிதப் போக்குவரத்து நடத்தி வந்தேன். ராய்ச்சந்திரபாய் எனக்கு வழிகாட்டி வந்தார். நர்மதா சங்கர் எழுதிய, தரும விசாரணை என்ற நூலை ஒரு நண்பர் எனக்கு அனுப்பினார். அதன் முன்னுரை அதிக உதவியாக இருந்தது. இக்கவி, ஆரம்பத்தில் நடத்தி வந்த துன்மார்க்க வாழ்க்கையைக் குறித்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன். சமய நூல்களின் ஆராய்ச்சியினால், தமது வாழ்க்கையில் ஏற்பட்ட புரட்சிகரமான மாறுதல்களைக் குறித்து, அவர் முன்னுரையில் விவாதித்திருந்தது என் மனத்தைக் கவர்ந்தது. அந்நூல் எனக்குப் பிரியமானதாக இருந்ததால் ஓர் எழுத்து விடாமல் அதைக் கவனமாகப் படித்தேன். மாக்ஸ் முல்லர் எழுதிய இந்தியா அது நமக்கு என்ன போதிக்க முடியும் ?" என்ற நூலையும் சிரத்தையுடன் படித்தேன். பிரம்மஞான சங்கத்தினர் வெளியிட்டிருந்த உபநிடதங்களின் மொழிப்பெயர்ப்பையும் படித்தேன். இவைகளினால் எல்லாம் ஹிந்து மதத்தினிடம் எனக்கு இருந்த மதிப்பு அதிகரித்தது. அதிலிருந்த அழகுகளையும் அதிகமாக உணரலானேன். என்றாலும், இதனால் மற்ற மதங்களின் மீது நான் துவேஷம் கொள்ளவில்லை. வாஷிங்டன் இர்விங் எழுதிய "முகமதுவும் அவருடைய சீடர்களும் என்ற புத்தகத்தையும் படித்தேன். முகம்மது நபியைக் குறித்துக் கார்லைல் எழுதிய புகழுரைகளையும் படித்தேன். இந் நூல்களெல்லாம் முகம்மதுவிடம் நான் கொண்டிருந்த மதிப்பை மேலும் அதிகப் படுத்தின. ஜாரதூஷ்டிரரின் திருவாக்குகள் என்ற நூலையும் படித்தேன்.

இவ்விதம் பல சமயங்களையும் பற்றிய அறிவு எனக்கு அதிகமாயிற்று. இந்த ஆராய்ச்சி, என் ஆன்ம பரிசோதனையை ஊக்குவித்தது. நான் படிப்பவைகளில் எவையெவை சிறந்தவைகள் என எனக்குத் தோன்றுகின்றனவோ, அவற்றை அனுஷ்டானத்தில் கொண்டு வரும் பழக்கமும் எனக்கு உண்டாயிற்று. இவ்விதம் ஹிந்து நூல்களில் யோகாப்பியாசத்தைக் குறித்து நான் படித்து புரிந்து கொண்ட மட்டில் யோக சாதன முறைகள் சிலவற்றைச் சாதகம் செய்யவும் முயன்றேன். ஆனால், இதில் நான் வெகுதூரம் முன்னேற முடியவில்லை. நான் இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு ஒரு நிபுணரின் உதவியைக் கொண்டு அதைப் பின்பற்றுவதென்று தீர்மானித்தேன். அந்த ஆசை நிறைவேறவே இல்லை. டால்ஸ்டாயின் நூல்களையும் அதிக் கவனத்துடன் படித்து வந்தேன். சுவிசேஷங்களின் சுருக்கம். செய்ய வேண்டியது யாது ? என்ற நூல்களும் மற்றவைகளும் என் மனத்தைக் கவர்ந்தன. பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றினிடமும் அன்பு செலுத்துவதற்கான எண்ணிறந்த வழிகளை மேலும் மேலும் உணரலானேன்.

அந்த சமயத்தில் மற்றொரு கிறிஸ்துவக் குடும்பத்துடனும் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் கூறிய யோசனையின் பேரில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வெஸ்லியின் கிறிஸ்தவாலயத்திற்குச் சென்று வந்தேன். இத் தினங்களில் தங்கள் வீட்டுக்குச் இரவுச் சாப்பாட்டுக்கு வரும்படியும் என்னை அவர்கள் அழைத்திருந்தார்கள். அக்கோயிலுக்குப் போய் வந்ததில் என் மனத்தில் திருப்தி உண்டாகவில்லை. அங்கே செய்யப்பட்ட உபதேசங்கள் பக்தி சிரத்தையை உண்டாக்குபவையாகத் தோன்றவில்லை. அங்கே வந்து கூடியிருந்தவர்களும் முக்கியமாகக் சமய சிரத்தையுடன் வந்திருந்ததாக எனக்குத் தோன்றவில்லை. அக்கூட்டம் பக்திமான்களின் கூட்டம் அன்று. உலகப் பற்றே அதிகமாக உள்ளவர்கள், பொழுது போக்குக்காகவும், பழக்கத்தை யொட்டியும் கோயிலுக்கு வந்திருப்பதாகவே தோன்றியது. அங்கே, சில சமயங்களில் என்னையும் அறியாமலேயே எனக்கு தூக்கம் வந்து விடுவது உண்டு. இது எனக்கு வெட்கமாக இருக்கும். ஆனால், என் பக்கத்தில் இருப்பவர்களில் சிலரும் அப்படித்தான் தூங்குகிறார்கள் என்பதைப் பார்த்ததும் என் வெட்கம் குறைந்து விடும். இப்படியே நான் நீண்டகாலம் கோயிலுக்குப் போய்க் கொண்டிருக்க முடியாது. ஆகவே கோயிலுக்குப் போவதைச் சீக்கிரத்தில் நிறுத்தி விட்டேன்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நான் போய்க் கொண்டிருந்த குடும்பத்துடன் தொடர்பு திடீரென்று முறிந்தது. உண்மையில் இனி வர வேண்டாம். என்று நான் எச்சரிக்கை செய்யப்பட்டேன் என்று சொல்லலாம். இது நிகழ்ந்த விதம் இதுதான். அந்த வீட்டு அம்மாள் நல்லவர், சூதுவாது இல்லாதவர், ஆனால், அவருக்குக் கொஞ்சம் குறுகிய புத்தியும் உண்டு. எப்பொழுதும் நாங்கள் சமய சம்பந்தமான விஷயங்களைக் குறித்து விவாதிப்போம். அச்சமயம் நான் அர்னால்டு எழுதிய ஆசிய ஜோதி என்ற நூலைப் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு சமயம் ஏசுநாதரின் வாழ்க்கையோடு புத்த பகவானின் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பேசலானோம். நான் சொன்னேன், புத்தரின் அபாரமான கருணையைப் பாருங்கள்! அக் கருணை, மனிதவர்க்கத்தோடு நின்றுவிடவில்லை, எல்லா ஜீவராசிகளிடத்திலும் அக் கருணை பரவியது. அவருடைய தோள்களில் ஆட்டுக்குட்டி ஆனந்தமாகப் படுத்துக் கொண்டிருந்ததை எண்ணும்போது நம் உள்ளத்தில் அன்பு வெள்ளம் பொங்குகிறதல்லவா ? இவ்விதம் எல்லா ஜீவராசிகளிடத்தும் அன்பு கொள்ளுவது என்பது ஏசுநாதரின் வாழ்க்கையில் காணப்படவில்லை. இவ்விதம் நான் ஒப்பிட்டுக் கூறியது அந்த நல்ல பெண்மணிக்கு மனவருத்தத்தை உண்டாக்கி விட்டது. அவருக்கு ஏற்பட்ட உணர்ச்சியை நான் அறிந்தேன். அப் பேச்சை நிறுத்தி விட்டேன். பிறகு சாப்பிடப் போனோம். ஐந்து வயது கூட ஆகாத அவருடைய ஆண் குழந்தையும் எங்களுடன் இருந்தான், குழந்தைகளின் நடுவில் இருக்கும்போது நான் அதிக ஆனந்தத்துடன் இருப்பேன், நீண்ட நாட்களாகவே அச்சிறுவனும் நானும் நண்பர்கள். சாப்பிடும் போது, அவன் தட்டில் இருந்த மாமிசத்தை இகழ்ச்சியாகவும், என் தட்டில் இருந்த ஆப்பிள் பழத்தைப் பெருமைப்படுத்தியும் பேசினேன். கள்ளங் கபடம் அற்ற அச்சிறுவன் என் பேச்சில் மயங்கி விட்டான். அவனும் ஆப்பிள் பழத்தின் பெருமையைப் பேச ஆரம்பித்து விட்டான்.

ஆனால், அவன் தாயாரோ அப்படியே திகைத்துப் போய்விட்டார். அது எனக்கு எச்சரிக்கையாக இருந்தது என் பேச்சை நிறுத்தி, வேறு விஷயத்தைக் குறித்து பேச ஆரம்பித்தேன். வழக்கம்போல் அடுத்த வாரம் அவ்வீட்டுக்குப் போனேன். நடுக்கத்தோடுதான் போனேன். அங்கே போகாமல் இருந்து விட வேண்டும் என்றும் எனக்குத் தோன்றவில்லை, அப்படியே போகாது நின்றுவிடுவது சரி என்றும் எனக்குப் படவில்லை. ஆனால் அந்த நல்ல பெண்மணி எனக்கு வழியை எளிதாக்கி விட்டார்.

அவர் கூறியதாவது, "ஸ்ரீ காந்தி ! உம்முடைய சகவாசம் என் பையனுக்கு நன்மையானதாகாது என்று நான் உங்களுக்குச் சொல்லிவிட வேண்டியிருக்கிறது. இப்படிச் சொல்ல நேர்ந்ததற்காகத் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். ஒவ்வொரு நாளும் அவன் மாமிசம் சாப்பிடத் தயங்குகிறான். உங்கள் வாதத்தை நினைவு படுத்தி பழமே வேண்டும் என்கிறான். காரியம் மிஞ்சி விட்டது அவன் மாமிசம் சாப்பிடுவதை விட்டுவிட்டால் அவன் நோயுறாவிட்டாலும் அவன் இளைத்தாவது போவான். இதை நான் எப்படி சகிப்பது? இனிமேல் உங்களுடைய வாதங்கள் எல்லாம் பெரியவர்களாகிய எங்களிடம் மட்டும் இருக்கட்டும் அந்த வாதங்களினால் குழந்தைகள் கெட்டுப் போவது நிச்சயம்."

நான் பின்வருமாறு பதில் சொன்னேன். "அம்மா ! நான் மிகவும் வருந்துகிறேன். எனக்கும் குழந்தைகள் இருக்கின்றன. ஆகையால் தாய் என்ற வகையில் உங்களுடைய உணர்ச்சிகளை நான் அறிகிறேன். இத்தகைய வருந்தத்தக்க நிலைமையை நாம் எளிதில் ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து விட முடியும் நான் வாயால் சொல்வதை விட நான் எதைச் சாப்பிடுகிறேன். எதைச் சாப்பிடாமல் ஒதுக்குகிறேன் என்பதைப் பார்ப்பது, குழந்தையின் மனத்தில் இன்னும் அதிக மாறுதல் உண்டாக்கிவிடக் கூடும். ஆகையால் சிறந்த வழி, நான் இங்கே வருவதை நிறுத்திக் கொள்ளுவதே. இது நிச்சயமாக நம் நட்பைப் பாதிக்க வேண்டியதே இல்லை." அந்தப் பெண்மணி உடனே பெரிய பாரம் நீங்கியதைப் போல், "உங்களுக்கு நன்றி" என்றார்.


Offline Anu

குடித்தனக்காரனாக ...

ஒரு குடித்தனம் வைப்பதென்பது எனக்குப் புதிய அனுபவம் அன்று. ஆனால், பம்பாயிலும் லண்டனிலும் நான் நடத்திய குடித்தனத்திற்கும் நேட்டாலில் வைத்த குடித்தனத்திற்கும் வித்தியாசம் உண்டு. இத்தடவை செலவில் ஒரு பகுதி, முற்றும் கௌரவத்திற்காக மட்டுமே ஆயிற்று. நேட்டாலில் இருக்கும் இந்தியப் பாரிஸ்டர் என்ற வகையிலும், ஒரு பிரதிநிதி என்ற வகையிலும், என் அந்தஸ்திற்கு ஏற்றதான ஒரு குடித்தனத்தை அமைக்க வேண்டியது அவசியம் என்று எண்ணினேன். பிரபலமான பகுதியில் அழகான ஒரு சிறு வீட்டை அமர்த்தினேன். தக்க வகையில் அதில் மேசை, நாற்காலி முதலிய சாமான்களெல்லாம் போடப்பட்டன. சாப்பாடு எளிமையானது. ஆனால் ஆங்கில நண்பர்களையும் இந்தியச் சக ஊழியர்களையும் நான் சாப்பிடக் கூப்பிடுவதால் குடித்தனச் செலவு எப்பொழுதும் அதிகமாகவே இருந்தது.

ஒவ்வொரு குடித்தனத்திற்கும் ஒரு நல்ல வேலைக்காரன் அத்தியாவசியம். ஆனால், ஒருவரை வேலைக்காரனாக வைத்து நடத்துவது எப்படி என்பதைப்பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. எனக்குச் சகாவாகவும் உதவி செய்பவராகவும் ஒரு நண்பர் இருந்தார். சமையற்காரர் ஒருவர் உண்டு. அவர் குடும்பத்தைச் சேர்ந்தவராகவே ஆகிவிட்டார். என் காரியாலயகுமாஸ்தாக்களும் என்னோடு தங்கி, அங்கேயே சாப்பிட்டும் வந்தனர். இந்தப் பரிசோதனையில் ஓரளவுக்கு நான் வெற்றி பெற்றேன் என்றே நினைக்கிறேன். ஆனால், வாழ்க்கையின் கசப்பான அனுபவங்களில் ஒரு சிறிது இதில் இல்லாமல் போகவில்லை. என்னுடைய சகா அதிக சாமர்த்தியசாலி. அவர் என்னிடம் உண்மையாக நடந்து கொண்டு வருகிறார் என்றே நினைத்திருந்தேன். ஆனால், இதில்தான் நான் ஏமாற்றப்பட்டு விட்டேன். என்னுடன் தங்கியிருந்த ஆபீஸ் குமாஸ்தா ஒருவர்மீது, என்னுடைய அந்தச் சகாவுக்குப் பொறாமை ஏற்பட்டு விட்டது. குமாஸ்தா மீது நான் சந்தேகம் கொள்ளும் வகையில் அவர் ஒரு வலையை விரித்து விட்டார். அந்தக் குமாஸ்தா நண்பரோ, அதிக ரோஷக்காரர். தம்மீது எனக்குச் சந்தேகம் ஏற்பட்டுவிட்டது என்பதைக் கண்டதுமே அவர் வீட்டை மாத்திரமே அன்றிக் காரியாலயத்தையும் விட்டுப் போய்விட்டார். இது எனக்கு வருத்தமாக இருந்தது. ஒரு வேளை அவருக்கு நான் அநீதி செய்திருக்கக் கூடும் என்று உணர்ந்தேன். என் மனச்சாட்சியும் சதா உறுத்திக் கொண்டே இருந்தது.

இதற்கு மத்தியில் சமையற்காரர், சில தினங்கள் ஓய்வு எடுத்துக் கொண்டதாலோ, வேறு காரணத்திற்காகவோ வீட்டில் இல்லை. அவர் இல்லாதபோது வேறு ஒரு சமையற்காரரை வைக்க வேண்டியது அவசியமாயிற்று. புதிதாக வந்தவர், அசல் போக்கிரி என்பது பின்னால் தெரிய வந்தது. ஆனால் எனக்கோ, அவர் கடவுள் அனுப்பிய தூதர் போன்றே ஆனார். என் வீட்டில் எனக்குத் தெரியாமலேயே சில ஒழுங்கீனங்கள் நடந்து வருகின்றன என்பதை அவர், தாம் வந்த இரண்டு மூன்று நாட்களிலேயே கண்டுபிடித்தார். என்னை எச்சரிக்கை செய்வதென்றும் தீர்மானித்தார். யாரையும் நான் எளிதில் நம்பிவிடக் கூடியவன். ஆனால் நேர்மையானவன் என்ற பெயர் அப்பொழுதே எனக்கு உண்டு. இதனால் அந்தப் புதுச் சமையற்காரர் கண்டு பிடித்த விஷயம், அவருக்கு இன்னும் அதிக அதிர்ச்சியை அளித்தது. தினமும் மத்தியானச் சாப்பாட்டுக்கு ஒரு மணிக்குக் காரியாலயத்திலிருந்து நான் வீடு திரும்புவேன். ஒரு நாள் 12 மணிக்குச் சமையற்காரர் தலைதெறிக்க காரியாலயத்திற்கு ஓடி வந்தார். தயவு செய்து உடனே வீட்டுக்கு வாருங்கள் நீங்கள் பார்க்க வேண்டிய அதிசயம் ஒன்று இருக்கிறது என்றார்.

அது என்ன ? சங்கதி இன்னது என்பதை நீ இப்பொழுது சொல்லியாக வேண்டும். அதைப் போய்ப் பார்க்க வேண்டும் என்பதற்காக இந்த நேரத்தில் நான் காரியாலயத்தை விட்டு எப்படி வரமுடியும் ? என்றேன். நீங்கள் இப்பொழுது வராவிடில் அதற்காகப் பிறகு வருத்தப் படுவீர்கள். அவ்வளவுதான் நான் சொல்ல முடியும் என்றார் சமையற்காரர். அவர் பிடிவாதத்தில் ஏதோ விஷயம் இருக்க வேண்டும் என்று எண்ணினேன். ஒரு குமாஸ்தா உடன் வர வீட்டுக்குப் போனேன். சமையற்காரர் எங்களுக்கு முன்னால் வேகமாகப் போனார். என்னை நேரே மேல் மாடிக்கு அழைத்துச் சென்றார் என் சகாவின் அறையைச் சுட்டிக் காட்டினார். அந்தக் கதவைத் திறந்து நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார்.

எனக்கு அப்பொழுது எல்லாம் விளங்கிவிட்டன. கதவைத் தட்டினேன். பதில் இல்லை * சுவர்களெல்லாம்கூட அதிரும்படியாகக் கதவைப் பலமாக இடித்தேன். கதவு திறந்தது. உள்ளே ஒரு விபசாரியைக் கண்டேன். திரும்ப அங்கே அடியெடுத்து வைக்கச் கூடாது என்று கூறி, அவளை வெளியே போகச் சொன்னேன். என் சகாவிடம், இந்தக் கணத்திலிருந்து உமக்கும் எனக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை. நெடுக நான் ஏமாற்றப்பட்டு வந்திருக்கிறேன். எனக்கு நானே பைத்தியக்காரப் பட்டம் கட்டிக் கொண்டேன். உம்மிடம் நான் வைத்த நம்பிக்கைக்கு நீர் செய்யும் பிரதியுபகாரம் இதுதானா ? என்றேன்.

அப்பொழுதும் நல்லறிவு பெறாத அவர், என் சங்கதிகளை அம்பலப்படுத்தி விடுவதாக என்னை மிரட்டினார். மறைத்து வைக்க என்னிடம் எதுவுமே இல்லை. நான் செய்தது ஏதாவது இருந்தால் அம்பலப்படுத்தும். ஆனால், இந்தக் கணமே நீ இந்த இடத்தை விட்டுப் போயாக வேண்டும் என்றேன். இதைக் கேட்டதும் அவர் இன்னும் அதிகமாகக் கோபாவேசம் கொண்டார். வேறு வழி இல்லாது போகவே, கீழே இருந்த குமாஸ்தாவைக் கூப்பிட்டேன். உடனே, போலீஸ் சூப்பரின்டென்டிடம் போய், என் வந்தனங்களை அவருக்குத் தெரிவித்து விட்டு, என்னிடம் வசித்து வந்த ஒருவர், ஒழுங்கீனமாக நடந்து கொண்டார் என்றும், என் வீட்டில் அவரை வைத்துக் கொள்ள நான் விரும்பவில்லை என்றும், அவர் வெளியே போக மறுக்கிறார் என்றும், போலீஸ் உதவியை அனுப்பினால் மிக்க நன்றியறிதல் உள்ளவனாவேன் என்றும் அவரிடம் சொல்லும் என்றேன்.

நான் கண்டிப்பாகத்தான் இருக்கிறேன் என்பதை இது அவருக்குக் காட்டியது அவர் குற்றமே அவரைப் பலவீனப் படுத்தியும் விட்டது, என்னிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். போலீஸுக்குத் தெரிவிக்க வேண்டாம் என்று வேண்டிக் கொண்டார். வீட்டை விட்டு உடனே போய் விடவும் ஒப்புக் கொண்டார். போயும் விட்டார்.

இச் சம்பவம் என் வாழ்க்கையில் தக்க சமயத்தில் செய்ததோர் எச்சரிக்கையாக அமைந்தது. கெட்டிக்காரத்தனமுள்ள இந்தத் தீய ஆசாமி, நெடுக, என்னை எவ்வளவு தூரம் ஏமாற்றி வந்திருக்கிறார் என்பதே இப்பொழுதுதான் என்னால் தெளிவாகக் காண முடிந்தது. அவர் என்னிடம் இருக்க இடம் கொடுத்தது. நான் ஒரு நல்ல காரியத்திற்குக் கெட்ட முறையை அனுசரித்தாதாயிற்று. நெருஞ்சிச் செடியிலிருந்து அத்திப் பழம் எடுக்கலாம் என்று நான் எதிர் பார்த்து விட்டேன். அந்தத் தோழர் கெட்ட நடத்தை உள்ளவர் உண்மையாக நடந்து கொள்ளுவாரென்று நம்பிவிட்டேன். அவரைச் சீர்திருத்துவதற்கு நான் செய்த முயற்சியில் என்னையே நாசப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு நெருங்கி வந்து விட்டேன். அன்புள்ள நண்பர்களின் எச்சரிக்கைகளையெல்லாம் உதாசீனம் செய்து விட்டேன். அவரிடம் நான் கொண்டிருந்த பிரியம் என்னை முற்றும் குருடனாக்கி விட்டது.

புதிய சமையற்காரர் காட்டாதிருந்தால், உண்மையை நான் கண்டுகொண்டிருக்கவே மாட்டேன். இச்சம்பவத்திற்குப் பிறகு நான் பற்றாற வாழ்க்கையை நடத்த ஆரம்பித்து விட்டேன். இச்சம்பவத்தை நான் அறியாமல் இருந்திருந்தால், அந்தச் சகாவின் தொடர்பினால் இந்த பற்றாற வாழ்க்கையை நான் நடத்த முடியாமலும் போயிருக்கக் கூடும். என்னை இருட்டிலேயே வைத்திருந்து, நான் தவறான வழியில் சென்றுவிடும்படி செய்துவிடும் சக்தி, அவருக்கு உண்டு. ஆனால், முன்பு போலவே கடவுள் என்னைக் காத்தருள வந்தார். என் நோக்கங்கள் தூய்மையானவை. ஆகையால், நான் தவறுகள் செய்திருந்தும், காப்பாற்றப்பட்டேன். ஆரம்பத்தில் ஏற்பட்ட இந்த அனுபவம், வருங்காலத்திற்கான ஒரு நல்ல முன்னெச்சரிக்கையாயிற்று.

அந்தச் சமையற்காரர், கடவுளால் அனுப்பப்பட்ட தூதுவர் போன்றே ஆனார். அவருக்குச் சமையல் வேலை தெரியாது. ஆகையால், சமையற்காரராக அவர் என்னிடத்தில் இருந்திருக்க முடியாது. ஆனால், வேறு யாரும் என் கண்களைத் திறந்திருக்க முடியாது. என் வீட்டிற்குள் அந்த விபசாரி அழைத்துக் கொண்டு வரப்பட்டது. அது முதல் தடவை அன்று என்பதைப் பின்னால் தெரிந்து கொண்டேன். அவள், முன்னால் அடிக்கடி வந்திருக்கிறாள். ஆனால், இந்தச் சமையற்காரருக்கு இருந்த தைரியம் வேறு யாருக்கும் இல்லை. ஏனெனில், கண்ணை மூடிக்கொண்டு அந்தச் சகாவை நான் எவ்வாறு நம்பி வருகிறேன் என்பதை எல்லோரும் அறிவார்கள். இந்தச் சேவையைச் செய்வதற்கென்றே அச்சமையற்காரர் அனுப்பப்பட்டது போல் இருந்தது. ஏனெனில் அக்கணத்திலேயே தாம் போய்விடப் போவதாக என்னிடம் அவர் அனுமதி கேட்டார்.

நான் உங்கள் வீட்டில் இருக்க முடியாது. உங்களைத் சுலபமாகப் பிறர் ஏமாற்றி விடுகிறார்கள். இது எனக்கு ஏற்ற இடம் அல்ல என்று சமையற்காரர் கூறினார். அவர் போக அனுமதியும் கொடுத்துவிட்டேன். குமாஸ்தாவைக் குறித்து சந்தேகம் ஏற்படும்படி செய்ததும் இந்த என் சகாவைத் தவிர வேறு யாரும் அல்ல என்பதையும் இப்பொழுது கண்டு கொண்டேன். குமாஸ்தாவுக்கு நான் செய்துவிட்ட அநீதிக்குப் பரிகாரம் செய்துவிட எவ்வளவோ கஷ்டப்பட்டு முயன்றேன். அவருக்கு முற்றும் திருப்தி ஏற்படும்படி செய்ய முடியாது போனது எனக்கு நிரந்தரமான துக்கமாக இருந்து வருகிறது. ஒருமுறை பிளவு ஏற்பட்டு விட்டால், பிறகு என்னதான் ஒட்டுப்போட்டாலும், பிளவு பிளவுதான்


Offline Anu

தாய் நாடு நோக்கி

நான் தென்னாப்பிரிக்காவுக்கு வந்து, இப்பொழுது மூன்று ஆண்டுகள் ஆயின. அங்கிருந்த மக்களை நான் தெரிந்து கொண்டேன். அவர்களும் என்னை அறிந்து கொண்டார்கள். அங்கே நான் நீண்டகால ஆறு மாதங்களுக்கு தாய்நாடு போய்வர 1896-ல் நான் அனுமதி கேட்டேன். வக்கீல் தொழிலும் நன்றாகவே நடந்து வந்தது. நான் இருக்க வேண்டியது அவசியம் என்று மக்கள் உணர்ந்தனர் என்பதையையும் கண்டேன். ஆகவே, தாய் நாட்டிற்குச் சென்று, மனைவியையும் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வந்து, அங்கேயே தங்குவது என்று தீர்மானித்துக் கொண்டேன். மேலும், தாய் நாட்டிற்குச் சென்றால் விஷயங்களைப் பொது மக்களுக்கு எடுத்துக் கூறித் தென்னாப்பிரிக்காவில் இருக்கும் இந்தியர் சம்பந்தமாக அவர்களுக்கு அதிகச் சிரத்தை உண்டாகும் படி செய்து, ஏதாவது பொதுவேலை செய்யலாம் என்றும் நினைத்தேன். மூன்று பவுன் வரி, ஆறாப் புண்ணாக இருந்து வந்தது. அது ரத்துச் செய்யப்படும் வரையில் அமைதி கிட்டுவதற்கில்லை.

ஆனால், நான் இல்லாதபோது காங்கிரஸின் வேலைகளையும், கல்விச் சங்கத்தையும் ஏற்று நடத்துவது யார் ? இதற்குத் தகுதி வாய்ந்தவர்களாக ஆதம்ஜி மியாகான், பார்ஸி ருஸ்தம்ஜி ஆகிய இருவரையே நான் நினைக்க முடியும். வர்த்தகர்கள் வகுப்பில் பொது வேலையில் ஈடுபடக்கூடிய ஊழியர்கள் அப்போது பலர் இருந்தனர். ஆனால் அவர்களில் ஓழுங்காக வேலை செய்து காரியதரிசியின் கடமையை நிறைவேற்றக் கூடியவர்களும், இந்தியர் சமூகத்தின் மதிப்பைப் பெற்றிருந்தவர்களும் அந்த இருவருமே. காரியதரிசியாக இருப்பவருக்கு ஓரளவு ஆங்கிலம் நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும். காங்கிரஸுக்குக் காலஞ் சென்ற ஆதம்ஜி மியாகானின் பெயரைச் சிபாரிசு செய்தேன். அவரைக் காரியதரிசியாக நியமிப்பதைக் காங்கிரஸும் அங்கீகரித்தது. அவரைத் தேர்ந்தெடுத்தது மிகவும் சரியானது என்பது பிறகு அனுபவத்தினால் தெரிந்தது. ஆதம்ஜி மியாகான், விடாமுயற்சி உள்ளவர் தாராளமானவர், இனிய தன்மையுள்ளவர், மரியாதையுள்ளவர். அந்த நற்குணங்களால் அவர் எல்லோருக்கும் திருப்தியளித்தார். அதோடு காரியதரிசி வேலைக்குப் பாரிஸ்டர் பட்டம் பெற்றவரோ, அதிகமாக ஆங்கிலம் படித்தவரோ தேவையில்லை என்பதையும் அவர் எல்லோருக்கும் நிரூபித்துக் காட்டி விட்டார்.

1896-ஆம் ஆண்டு மத்தியில் கல்கத்தாவுக்குச் சென்ற, பொங்ககோலோ என்ற கப்பலில் நான் தாய் நாட்டிற்குப் புறப்பட்டேன். கப்பலில் பிரயாணிகள் குறைவாகவே இருந்தனர். அவர்களில் இருவர் ஆங்கில அதிகாரிகள். அவர்களுடன் எனக்கு நெருங்கிய பழக்கம் உண்டாயிற்று. அவர்களில் ஒருவருடன் தினம் ஒரு மணி நேரம் சதுரங்கம் விளையாடுவேன். கப்பல் டாக்டர் எனக்கு, தமிழ்ச் சுயபோதினி என்ற புத்தகத்தைக் கொடுத்தார். அதைப் படிக்க ஆரம்பித்தேன். முஸ்லீம்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டுமாயின், உருது மொழி தெரிந்திருப்பதும் சென்னை இந்தியருடன் நெருங்கிய பழக்கம் ஏற்படுத்திக் கொள்ளுவதற்குத் தமிழ் தெரிந்திருக்க வேண்டியதும் அவசியம் என்பதை நேட்டால் அனுபவத்திலிருந்து தெரிந்து கொண்டேன்.

அந்த ஆங்கில நண்பரும் என்னுடன் உருது படித்தார். அவர் கேட்டுக் கொண்டதன் பேரில், மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளிடையே ஒரு நல்ல உருது முன்ஷியைக் கண்டு பிடித்தேன். எங்களுடைய இப்படிப்பில் நல்ல முன்னேற்றமும் கண்டோம். அந்த அதிகாரிக்கு என்னை விட ஞாபக சக்தி அதிகம். ஒரு சொல்லைப் பார்த்து விட்டால் பிறகு அதை அவர் மறக்கவே மாட்டார். உருது எழுத்துக்களை நினைவில் வைத்திருப்பது எனக்குச் சிரமமாக இருந்தது. அதிக விடா முயற்சியுடனேயே நான் படித்தேன். ஆனால், அந்த அதிகாரியை மிஞ்சிவிட முடியவே இல்லை. தமிழிலோ, நல்ல அபிவிருத்தி அடைந்து வந்தேன். இதைச் சொல்லிக் கொடுக்க யார் உதவியும் கிடைக்கவில்லை. ஆனால் தமிழ்ச் சுயபோதினி நன்றாக எழுதப்பட்ட புத்தகம் இன்னொருவர் உதவி அவசியம் என்று எனக்குத் தோன்றவே இல்லை.

இந்தியாவுக்குப் போய் சேர்ந்த பிறகும், இம் மொழிகளைத் தொடர்ந்து படிக்கலாம் என்று நம்பியிருந்தேன். ஆனால், அது சாத்தியமில்லாது போயிற்று. 1893-க்குப் பிறகு நான் அதிகமாகப் படித்ததெல்லாம் சிறையிலேதான். சிறைகளில், தமிழிலும் உருதுவிலும் எனக்குக் கொஞ்சம் முன்னேற்றம் ஏற்பட்டது. தென்னாப்பிரிக்கச் சிறைகளில் தமிழ் படித்தேன். உருது படித்தது ஏராவ்டா சிறையில், ஆனால் தமிழ் பேசக் கற்றுக்கொள்ளவே இல்லை. நான் படித்த கொஞ்சம் தமிழும், பயிற்சி இன்மையால் துருப் பிடித்துக் கொண்டிருந்தது.

தமிழ் அல்லது தெலுங்கு தெரியாமல் இருப்பது எவ்வளவு பெரிய இடையூறு என்பதை இன்னமும் நான் உணர்ந்து வருகிறேன். தென்னாப்பிரிக்காவில் இருந்த திராவிடர்கள் என் மீது பொழிந்த அன்பு இன்றும் எண்ணிப் போற்றுவதற்கு உரிய நினைவாக இருந்து வருகிறது. தமிழ் அல்லது தெலுங்கு நண்பர் ஒருவரை நான் காணும்போது, தென்னாப்பிரிக்காவில் இருக்கும் அவர்களுடைய இனத்தினரான தமிழரும் தெலுங்கரும் நினைக்காமல் இருக்க என்னால் முடிவதில்லை. அவர்களில் பெரும் பாலானவர்கள் எழுத்து வாசனையே இல்லாதவர்கள். அவர்கள் பெண்களும் அப்படியே. இப்படிப்பட்டவர்களுக்காக நடந்ததே தென்னாப்பிரிக்கப் போராட்டம். எழுதப் படிக்கத் தெரியாத சிப்பாய்களே அப்போரில் ஈடுபட்டனர், ஏழைகளுக்காக நடந்த போர் அது. அதில் அந்த ஏழைகள் முழுப் பங்கும் வகித்தனர். என் நாட்டினரான கள்ளங் கபடமற்ற அந்த நல்ல மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளுவதற்கு, அவர்களுடைய மொழி எனக்குத் தெரியாதது ஓர் இடையூறாக இருந்ததே இல்லை. அரைகுறை ஹிந்துஸ்தானியோ, அரைகுறை ஆங்கிலமோ அவர்கள் பேசுவார்கள். அதைக் கொண்டு எங்கள் வேலைகளைச் செய்து கொண்டு போவதில் எங்களுக்குக் கஷ்டமே தோன்றியதில்லை. ஆனால், அவர்கள் என்னிடம் காட்டிய அன்புக்கு நன்றியறிதலாகத் தமிழும் தெலுங்கும் கற்றுக்கொண்டு விட வேண்டும் என்று விரும்பினேன். முன்பே நான் கூறியது போல், தமிழக் கல்வியில் கொஞ்சம் அபிவிருத்தியடைந்தேன். ஆனால், இந்தியாவில் தெலுங்கு கற்றுக் கொள்ள முயன்றும் நான் நெடுங்கணக்கை தாண்டி அப்பால் போகவில்லை. இம்மொழிகளை நான் இனி கற்றுக் கொள்ளவே முடியாது என்று இப்பொழுது அஞ்சுகிறேன். ஆகையால், திராவிடர்கள் ஹிந்துஸ்தானி கற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். தென்னாப்பிரிக்காவில் இருக்கும் இவர்களில் ஆங்கிலம் தெரியாதவர்கள் தட்டுத்தடுமாறியேனும் ஹிந்தி அல்லது ஹிந்துஸ்தானி பேசுகிறார்கள். ஆங்கிலம் பேசுகிறவர்கள் மாத்திரமே, ஆங்கிலம் தெரிந்திருப்பது நமது சொந்த மொழிகளை அறிந்து கொள்ளுவதற்குத் தடையாக இருப்பது போல ஹிந்தி கற்றுக் கொள்ளுவதில்லை.

நான் விஷயத்தை விட்டு எங்கோ போய்விட்டேன். என் பிரயாண விவரத்தை கூறி முடித்து விடுகிறேன். பொங்கோலா-க் கப்பலின் காப்டனை நான் உங்களுக்கு அறிமுகம் செய்த வைக்க வேண்டும். நாங்கள் நண்பர்கள் ஆனோம். அந்த நல்ல காப்டன், பிளிமத் சகோதரர்கள் என்ற கிறிஸ்தவ கோஷ்டியைச் சேர்ந்தவர். கப்பல் ஓட்டும் விஷயத்தைக் காட்டிலும், எங்கள் பேச்சு, அதிகமாக ஆன்மிக விஷயங்களைப் பற்றியதாகவே இருந்தது. ஒழுக்கத்திற்கும் சமயத்திற்கும் நடுவே அவர் ஒரு வரம்பை இட்டுவிட்டார். பைபிளில் கண்ட உபதேசங்கள் அவருக்குக் குழந்தை விளையாட்டாகத் தோன்றின. அதன் அழகு அவற்றின் எளிமையிலேயே இருக்கிறது என்றார். ஆண், பெண், குழந்தைகள் ஆகிய எல்லோரும் ஏசுநாதரிடமும் அவர் தியாகத்திலும் நம்பிக்கை வைக்கட்டும். அவர்கள் பாவங்களிலிருந்து நிச்சயம் விமோசனம் அடைவார்கள் என்றும் அவர் கூறுவார். பிரிட்டோரியாவில் இருந்த பிளிமத் சகோதரர்களின் நினைவு எனக்குத் திரும்ப வரும்படி இந்த நண்பர் செய்தார்.

ஒழுக்கச் கட்டுத் திட்டங்களை விதிக்கும் எந்த மதமும் பயனற்றது என்பது இவர் கருத்து. இந்த விவாதமெல்லாம் என்னுடைய சைவ உணவின் பேரில் எழுந்தவையே. மாமிசம் ஏன் திண்ணக் கூடாது மாட்டிறைச்சி தின்றால்தான் என்ன மோசம் ? தாவர வர்க்கத்தை மனிதன் அனுபவிப்பதற்கென்றே கடவுள் படைத்திருக்கிறார். மிருகங்கள் போன்ற கீழ் உயிர் இனங்களையும் அதற்காகவே கடவுள் படைத்திருக்க வில்லையா? இந்தக் கேள்விகளெல்லாம் அநேகமாகச் சமய சம்பந்தமான விவாதத்தில் கொண்டு போய் விட்டன. எங்களில், ஒருவர் கருத்தை மற்றவரால் மாற்றிவிட முடியவில்லை. மதமும் ஒழுக்கமும் ஒன்றே என்ற கருத்தில் நான் உறுதியுடன் இருந்தேன். இதற்கு மாறுபட்டு, தாம் கொண்ட கருத்தே சரியானது என்பதில் காப்டனுக்குக் கொஞ்சமும் சந்தேகம் இல்லை. இருபத்து நான்காம் நாள் முடிவில் இன்பகரமான அக்கப்பல் பிரயாணம் ஒரு முடிவுக்கு வந்தது. ஹூக்ளி நதியின் அழகைக் கண்டு வியந்தவண்ணம் நான் கல்கத்தாவில் இறங்கினேன். அன்றே பம்பாய் செல்ல ரெயில் ஏறினேன்


Offline Anu

இந்தியாவில் ...

பம்பாய்க்குப் போகும் வழியில் ரெயில் அலகாபாத்தில் நாற்பத்தைந்து நிமிடங்கள் நின்றது. அந்த நேரத்தில் அந்நகரைச் சுற்றிப் பார்த்து விடலாம் என்று முடிவு செய்தேன். மருந்துக் கடையில் சில மருந்துகள் வாங்க வேண்டியிருந்தது. மருந்துக் கடைக்காரரோ தூங்கி விழுந்து கொண்டிருந்தார். நான் கேட்ட மருந்தை எடுத்துக் கொடுப்பதில் அநியாயமாக நேரம் கடத்தி விட்டார். இதன் பலன் என்னவென்றால் நான் ஸ்டேஷன் வந்து சேர்ந்த போது, அப்பொழுதுதான் ரயில் புறப்பட்டு போய் விட்டது. எனக்காக ஸ்டேஷன் மாஸ்டர் அன்போடு ஒரு நிமிடம வண்டியை நிறுத்தி வைத்திருந்து இருக்கிறார். நான் வரவில்லை. என்று தெரிந்ததும், உஷாராக என்னுடைய சாமான்களை ரெயிலிலிருந்து இறக்கி வைத்து விடும்படியும் செய்திருக்கிறார்.

கெல்னர் கட்டிடத்தில் ஓர் அறையை அமர்த்திக் கொண்டேன். என் வேலையை அப்பொழுதே ஆரம்பித்து விடுவது என்று தீர்மானித்தேன். அலகாபாத்திலிருந்து பிரசுரமாகும் பயோனீர் பத்திரிகையைக் குறித்து நான் அதிகமாகக் கோள்விப்பட்டிருந்தேன். இந்தியரின் தேசியக் கோரிக்கைகளை எதிர்க்கும் பத்திரிகை அது என்றும் அறிந்து கொண்டிருந்தேன் அச்சமயம் ஸ்ரீ செஸ்னே ( இளையவர் ) அதன் ஆசிரியராக இருந்தார் என்று எனக்கு ஞாபகம். எல்லாக் கட்சியினரின் ஆதரவையும் பெற நான் விரும்பினேன். ஆகவே, ஸ்ரீ செஸ்னேக்கு ஒரு குறிப்பு அனுப்பினேன். அதில், எனக்கு ரெயில் தவறிவிட்ட விவரத்தைக் கூறினேன். மறுநாள் வண்டிக்கு நான் புறப்படுவதற்கு முடியும் வகையில் சந்தித்து பேச என்னை அனுமதிக்க வேண்டும் என்றும் அதில் கோரினேன்.

சந்தித்துப் பேச உடனே அனுமதித்தார். மகிழ்ந்தேன். முக்கியமாக நான் கூறியதையெல்லாம் அவர் பொறுமையாகக் கேட்டுக் கொண்டதைக் குறித்து, நான் அதிக சந்தோஷம் அடைந்தேன். நான் என்ன எழுதினாலும் அதைக் குறித்துத் தம் பத்திரிகையில் அபிப்பிராயம் எழுதுவதாகவும் கூறினார். அதோடு இன்னும் ஒன்றும் கூறினார். ஆப்பிரிக்காவில் குடியேறி இருக்கும் வெள்ளைக்காரர்களின் கருத்தையும் அறிந்து, அதற்குரிய மதிப்பையும் கொடுக்கத் தாம் கடமைப்பட்டிருப்பதால் இந்தியரின் கோரிக்கைகள் எல்லாவற்றையும் ஆதரிப்பதாகத் தாம் வாக்களிக்க முடியாது என்றார். "இப்பிரச்னையை நீங்கள் கவனித்து, அதைக் குறித்துப் பத்திரிகையில் விவாதிப்பதே போதும். நான் கேட்பதும் அடைய விரும்புவதும் எங்களுக்கு உரிய நியாயமான உரிமைகளை மாத்திரமே அன்றி வேறு எதையும் அல்ல" என்றேன்.

அன்றைய மீதிப் பொழுதை, ஊரைச்சுற்றிப் பார்ப்பதிலும், திரிவேணி சங்கமத்தின் அற்புதக் காட்சியைக் கண்டு ஆனந்திப்பதிலும் கழித்தேன். என்னுடைய வேலைத் திட்டத்தைக் குறித்தும் சிந்தித்தேன். எதிர்பாராத விதமாக நான் ப்யோனீர் ஆசிரியரைச் சந்தித்துப் பேசியது, தொடர்ந்து நடந்த பல சம்பவங்களுக்கு அடிப்படை ஆயிற்று. இறுதியில் என்னை நேட்டாலில் அடித்துக் கொல்ல முயன்றதில் போய் இது முடிந்தது.

பம்பாயில் தங்காமல் நேரே ராஜ்கோட்டிற்குச் சென்றேன். அங்கே தென்னாப்பிரிக்க இந்தியர் நிலைமையைக் குறித்து ஒரு துண்டுப் பிரசுரத்தை எழுதுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தேன். அதை எழுதவும் அச்சிடவும் ஒரு மாதம் ஆயிற்று. அதற்குப் பச்சை நிற மேல் அட்டை போடப்பட்டது. ஆகவே அது பச்சைத் துண்டுப் பிரசுரம் என்று வழங்கலாயிற்று. அதில் தென்னாப்பிரிக்க இந்தியரின் நிலையைக் குறித்து வேண்டுமென்றே அடக்கமாக குறைத்தே கூறியிருந்தேன். முன்னால் நான் இரு துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டதாகக் கூறியிருக்கிறேன். அவற்றில் இருந்ததைவிட இதில் நிதானமான பாஷையையே உபயோகித்திருந்தேன். ஏனெனில், ஒரு விஷயத்தைத் தூரத்திலிருந்து கேள்விப்படும் போது உள்ளதையும்விடப் பெரியதாகவே அது தோன்றி விடுகிறது என்பதை நான் அறிவேன்.

பத்தாயிரம் பிரதிகள் அச்சிட்டேன். இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் இருக்கும் பத்திரிகைகளுக்கும் தலைவர்களுக்கும் அதை அனுப்பினேன். அதைக் குறித்து முதலில் தலையங்கம் எழுதிய பத்திரிகை பயோனீர். அத் தலையங்கத்தின் சுருக்கத்தை ராய்ட்டர் செய்தி ஸ்தாபனம் இங்கிலாந்துக்குத் தந்தி மூலம் அனுப்பியது. அந்தச் சுருக்கத்திற்கு ஒரு சுருக்கத்தை ராய்ட்டரின் லண்டன் காரியாலயம் நேட்டாலுக்கு அனுப்பிற்று. அந்த தந்தி அச்சில் மூன்று வரிக்கு மேல் இல்லை. செய்தி, அவ்வளவு சிறியதாக இருந்தாலும் நேட்டாலில் இந்தியர்கள் நடத்தப்படும் விதத்தைக் குறித்து, நான் கூறியதை அச் செய்தி மிகைப்படுத்திக் கூறுவதாக இருந்தது. மேலும், அச் செய்தி என் வார்த்தைகளைக் கொண்டு வரையப்பட்டதாகவும் இல்லை. நேட்டாலில் இதன் விளைவு என்னவாயிற்று என்பதைப் பிறகு கவனிப்போம். இதற்கு மத்தியில், முக்கியமான பத்திரிகைகள் எல்லாமே இப் பிரச்னையைக் குறித்து விரிவாக அப்பிராயங்கள் கூறின.

இத் துண்டுப் பிரசுரங்களைத் தபாலில் அனுப்புவதற்குத் தயார் செய்வது சுலபமான வேலையே அல்ல. இவற்றைக் காகிதம் போட்டுச் சுற்றி அனுப்புவது போன்ற வேலைகளுக்குக் கூலி கொடுத்து ஆள் அமர்த்தினால் அதிகச் செலவு ஆகியிருக்கும். ஆகவே, மிக எளிதான உபாயம் ஒன்றைக் கண்டுபிடித்தேன். பக்கத்தில் இருந்த குழந்தைகளையெல்லாம் திரட்டினேன். பள்ளிக் கூடம் இல்லாதபோது காலையில் இரண்டு, மூன்று மணி நேர உழைப்பை வலிய அளிக்க முன்வருமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டேன். அப்படியே செய்ய அவர்கள் மனம் உவந்து ஒப்புக் கொண்டார்கள். அவர்களை வாழ்த்தி, நான் சேர்த்து வைத்திருந்த பழைய தபால் ஸ்டாம்புகளை அவர்களுக்குப் பரிசாகக் கொடுப்பதாகவும் கூறினேன். குழந்தைகள் கொஞ்ச நேரத்தில் வேலையை முடித்து விட்டார்கள். சிறு குழந்தைகளைத் தொண்டர்களாக உபயோகிப்பதில் இதுவே என் முதல் பரீட்சை அக் குழந்தைககளில் இருவர் இன்று என் சக ஊழியர்களாக இருக்கின்றனர்.

அச் சமயம் பம்பாயில் பிளேக் நோய் பரவியது. இதனால் சுற்றுப்புறங்களில் எல்லாம் ஒரே பீதி ஏற்பட்டது. ராஜ்கோட்டிலும் அந்த நோய் பரவிவிடும் என்ற பயம் இருந்தது. சுகாதார இலாகாவுக்கு நானும் கொஞ்சம் உதவியாக இருக்கலாம் என்று எண்ணினேன். சேவை செய்யத் தயார் என்று அரசாங்கத்திற்கு அறிவித்தேன். அவர்களும் ஏற்றுக்கொண்டனர். அதன் பேரில் இது சம்பந்தமாகக் கவனிக்க நியமித்த ஒரு கமிட்டியில் என்னையும் சேர்த்தனர். கக்கூசுகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டு;ம் என்று நான் முக்கியமாக வற்புறுத்தினேன். ஒவ்வொரு தெருவிலும் கக்கூசுகள் இருக்கும் நிலையைப் போய் பார்வையிடுவது என்று கமிட்டி முடிவு செய்தது. தங்கள் கக்கூசுகளைப் போய் பார்ப்பதை. ஏழைகள் ஆட்சேபிக்க வில்லை நாங்கள் கூறிய யோசனைகளையும் அவர்கள் நிறைவேற்றிக் கக்கூசுகளைச் சுத்தமாக வைத்தனர். ஆனால் பணக்காரர்கள் வீட்டுக் கக்கூசுகளைப் பார்க்க நாங்கள் சென்றபோது. அவர்களில் சிலர் நாங்கள் அவற்றைப் பார்க்க அனுமதிக்கக்கூட மறுத்து விட்டனர். அப்படியிருக்க, நாங்கள் கூறிய யோசனையை அவர்கள் காது கொடுத்துக் கேட்டார்களா என்பதைப்பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. பணக்காரர்கள் வீட்டுக் கக்கூசுகளே அதிக ஆபாசமாக இருந்தன என்பது எங்கள் பொதுவான அனுபவம். அவை இருண்டிருந்தன. ஒரே துர் நாற்றம், ஒரே ஆபாசம், புழுக்களும் நெளிந்து கொண்டிருந்தன. செய்யுமாறு நாங்கள் கூறிய அபிவிருத்திகள் மிகச் சுலபமானவை அதாவது, கழிக்கும் மலம் தரையில் விழாதவாறு அதற்குத் தொட்டி வைக்குமாறு கூறினோம். மூத்திரமும் தரையில் விழுந்து, அந்த இடம் ஒரே ஈரம் ஆகிவிடாமல் அதையும் தொட்டியில் பிடிக்கும்படி சொன்னோம். கக்கூசுகளில் வெளிச்சமும் காற்றோட்டமும் இருப்பதற்காகவும், அவற்றைத் தோட்டி நன்றாக சுத்தம் செய்வதற்கு வசதியாக இருப்பதற்காகவும் வெளிச் சுவருக்கும் கக்கூசுக்கும் மத்தியில் இருக்கும் சிறு சிறு தடுப்புக்களையெல்லாம் இடித்து விடுமாறும் கேட்டுக் கொண்டோம். இந்தக் கடைசிக் சீர்திருத்ததத்திற்குப் பணக்காரர்கள் ஏராளமான ஆட்சேபங்களைக் கூறினார்கள். அநேகர் நாங்கள் கூறியதைப் பின் பற்றி எதுவுமே செய்யவில்லை.

தீண்டாதார் குடியிருந்த வீடுகளையும் கமிட்டி போய்ப் பார்க்க வேண்டியிருந்தது. அங்கே என்னுடன் வருவதற்குக் கமிட்டி அங்கத்தினர்களில் ஒருவர் மாத்திரமே தயாராக இருந்தார். மற்றவர்களோ, அவ்வீடுகளுக்குப் போவது என்பதே மகா பாதகமான காரியம் என்று நினைத்தனர். அதிலும் அவர்களுடைய கக்கூசைப் போய்ப் பார்ப்பது இன்னும் அதிக மோசமானது என்று எண்ணினர். ஆனால், அவ்வகுப்பினரின் இருப்பிடங்களைப் பார்த்ததும் நான் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தேன். அத்தகைய பகுதிகளுக்கு நான் சென்றது அதுதான் முதல் தடவை. அங்கிருந்த ஆண்களும் பெண்களும் நாங்கள் வந்ததைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தனர். அவர்களுடைய கக்கூசுகளைப் பார்க்க வேண்டும் என்று நான் கேட்டேன். "எங்களுக்கும் கக்கூசுகளா" என்று அவர்கள் வியந்தார்கள். பிறகு "வெளியே திறப்பான இடங்களில் நாங்கள் போய் மலஜலம் கழித்துவிடுவோம் உங்களைப் போன்ற பெரிய மனிதர்களுக்கல்லவா கக்கூசு" என்றனர்.

"சரி, அப்படியானால் உங்கள் வீட்டுக்குள் வந்து, நாங்கள் பார்ப்பதைப்பற்றி உங்களுக்கு ஆட்சேபம் இல்லை அல்லவா ?" என்று கேட்டேன். "நன்றாக வாருங்கள், வந்து பாருங்கள், ஐயா. எங்கள் வீடுகளின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் நீங்கள் பார்க்கலாம் எங்கள் வீடுகள், வீடுகளா ? அவை வளைகள்" என்றனர். உள்ளே போனேன். வெளிப்புறத்தில் இருப்பதைப் போலவே உள்ளேயும் சுத்தமாக இருப்பதைக் கண்டு ஆனந்தம் அடைந்தேன். வாசல்களையும் நன்றாக வைத்து இருந்தனர். தரையைச் சாணம் கொண்டு அழகாக மெழுகி இருந்தனர். அங்கே இருந்த பானைகளும் தட்டுகளும் கொஞ்சம்தான். என்றாலும் அவை சுத்தமாகவும் பளபளப்பாகவும் இருந்தன. அப்பகுதியில் பிளேக் நோய் பரவிவிடும் என்ற பயமே இல்லை.

மேல் சாதியினர் வசிக்கும் பகுதியில் நாங்;கள் ஒரு கக்கூசைப் பார்த்தோம். அதைப்பற்றிக் கொஞ்சம் சொல்லாமல் இருப்பதற்கு இல்லை. வீட்டின் ஒவ்வோர் அறைக்கும் ஒரு ஜலதாரை இருந்தது. தண்ணீர் விடவும் மூத்திரம் கழிக்கவும் அந்த ஜலதாரை உபயோகிக்கப்பட்டது. அதனால் வீடு முழுவதுமே துர்நாற்றம் இருக்கும். நாங்கள் பார்த்த வீடுகள் ஒன்றில், மாடியிலிருந்த ஒரு படுக்கை அறையையும் பார்த்தோம். அதிலிருந்த ஜலதாரை, மலஜலம் இரண்டும் கழிக்கக் கக்கூசாக உபயோகிக்கப்பட்டு வந்தது. அந்த ஜலதாரை கீழே போக ஒரு குழாயும் இருந்தது. அந்த அறையிலிருந்த துர்நாற்றத்தைச் சகித்துக்கொண்டு அங்கே நிற்கவே முடியவில்லை. அங்கே எப்படித்தான் படுத்துத் தூங்குகிறார்கள் என்பதை வாசகர்களே சிந்தித்துப் பார்த்துக் கொள்ள விட்டுவிடுகிறேன்.

வைஷ்ணவக் கோயிலுக்கும் கமிட்டி போய்ப் பார்த்தது. அந்தக் கோயிலின் அர்ச்சகர் எங்கள் குடும்பத்திற்கு வேண்டியவர். ஆகவே, எல்லாவற்றையும் பார்த்து, நாங்கள் செய்ய விரும்பும் சீர்திருத்தங்களைக் கூறலாம் என்று அவர் ஓப்புக் கொண்டார். அக் கோயிலின் ஒரு பகுதியை அவர் கூடப் பார்த்ததே இல்லை. அந்த இடத்தில்தான் குப்பை கூளங்களையும் எச்சில் இலைகளையும் சுவரைத் தாண்டி வீசிப் போட்டுவிடுவது வழக்கம் காக்கைகளும் பருந்துகளும் அங்கே எப்பொழுதும் இருந்து வந்தன. கக்கூசுகளும் மிக ஆபாசமாக இருந்தன. நாங்கள் கூறிய யோசனைகளை எவ்வளவு தூரம் அந்த அர்ச்சகர் நிறைவேற்றிவைத்தார். என்பதைப் பார்க்க நான் அதிக நாட்கள் ராஜ்கோட்டில் இல்லை. கடவுளை வழிபடும் இடங்களில் அவ்வளவு அசுத்தங்கள் இருப்பதைக் கண்டு மனவேதனைப்பட்டேன். தெய்வீகமானது என்று கருதப்படும். ஓர் இடத்தில் சுகாதார விதிகள் கவனமாக நிறைவேற்றப்பட்டிருக்கும் என்றே யாரும் எதிர்பார்ப்பார்கள் அகம், புறம் ஆகிய இரு தூய்மைகளும் இருக்க வேண்டியது முக்கியம் என்று ஸ்மிருதி கர்த்தாக்கள் மிகவும் வற்புறுத்திக் கூறியிருக்கிறார்கள் என்பதை அப்பொழுதே நான் அறிந்திருந்தேன்


Offline Anu

இரு ஆர்வங்கள்

பிரிட்டிஷ் அரசியல் முறைகளிடம் எனக்கு இருந்த அவ்வளவு விசுவாசத்தைப்போல் வேறு யாருக்கும் இருந்ததாக நான் அறிந்ததில்லை. சத்தியத்தினிடம் எனக்கு இருந்த பற்றே இத்தகைய விசுவாசத்திற்கு அடிப்படையாக இருந்தது என்பதை நான் அப்பொழுது காண முடிந்தது. விசுவாசமோ, வேறு ஒரு நற்குணமோ என்னிடம் இருப்பதாக நடிப்பது என்பது மாத்திரம் என்னால் என்றுமே ஆகாது. நேட்டாலில் நான் போகும் ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் ராஜ வாழ்த்துக் கீதம் பாடப்படும். அதைப் பாடுவதில் நானும் கலந்துகொள்ள வேண்டும் என்று அப்பொழுது நான் எண்ணினேன். பிரிட்டிஷ் ஆட்சியில் இருக்கும் குறைகளை நான் அறியவில்லை என்பதல்ல. ஆனால் மொத்தத்தில் பார்த்தால் அந்த ஆட்சி, ஏற்றுக் கொள்ளக் கூடியதே என்று நினைத்தேன். பொதுவாக பிரிட்டிஷ் ஆட்சி ஆளப்படுவோருக்கு நன்மையானது என்றும் அந்த நாட்களில் நம்பினேன்.

தென்னாப்பிரிக்காவில் நிற வெறியைக் கண்டேன். ஆனால் அது பிரிட்டிஷ் பாரம்பரிய குணத்திற்கு மாறுபட்டது என்று கருதினேன். அது தற்காலிகமானது, தென்னாப்பிரிக்காவில் மாத்திரம் இருப்பது என்று நம்பினேன். ஆகையால், ஆங்கிலேயருடன் போட்டி போட்டுக் கொண்டு, மன்னரிடம் விசுவாசம் காட்டினேன். ராஜ வாழ்த்துக் கீதத்தின் மெட்டைக் கவனத்துடனும் விடாமுயற்சியுடனும் கற்றுக்கொண்டேன். அக்கீதம் பாடப்படும் போதெல்லாம் நானும் சேர்ந்து பாடி வந்தேன். ஆர்ப்பட்டாமும் வெளிப்பகட்டும் இல்லாமல் ராஜவிசுவாசத்தைத் தெரிவிக்கும் சமயம் வந்தபோதெல்லாம் அதில் நானும் தயங்காது பங்குகொண்டேன்.

இந்த விசுவாசத்தை என் வாழ்க்கையில் என்றுமே நான் பயன்படுத்திக் கொண்டதில்லை. அதைக் கொண்டு சுயலாபத்தை அடைவதற்கு நான் என்றும் நாடியதும் இல்லை. விசுவாசம் காட்ட வேண்டியது என் அளவில் ஒரு கடமையாக இருந்தது. வெகுமதி எதையும் எதிர்பாராமல் அதை நான் காட்டி வந்தேன். நான் இந்தியாவுக்கு வந்தபோது, விக்டோரியா மகாராணியின் வைர விழாவைக் கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. ராஜ்கோட்டில் இதற்காக அமைக்கப்பட்டிருந்த கமிட்டியில் சேருமாறு என்னை அழைத்தார்கள். அழைப்பை ஏற்றுக்கொண்டேன். ஆனால், கொண்டாட்டம் பெரும்பாலும் பகட்டாக இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. வெளிவேஷமாகவே காரியங்கள் நடந்ததைக்கண்டு, மனவருத்தம் அடைந்தேன். கமிட்டியில் நான் இருக்க வேண்டுமா ? என்று என்னை நானே கேட்டுக்கொள்ள ஆரம்பித்தேன். ஆனால், முடிவாக நான் செய்ய வேண்டியதைச் செய்து கொண்டுபோவது என்று தீர்மானித்துக்கொண்டேன்.

விழாவை ஒட்டிச் செய்யப்பட்ட யோசனைகளில் ஒன்று, மரம் நடுவது என்பது, அநேகர் இதைப் பகட்டுக்காகவும் அதிகாரிகளைத் திருப்தி செய்ய வேண்டும் என்பதற்காகவும் செய்ததைக் கண்டேன். மரம் நடுவது, கட்டாயமானது அல்ல என்றும், அது ஒரு யோசனையே என்றும் அவர்களிடம் நான் எவ்வளவோ வாதாடிப் பார்த்தேன். செய்வதானால் சரியாகச் செய்ய வேண்டும், இல்லா விட்டால் சும்மா இருந்து விட வேண்டும். என் கருத்தைக் கேட்டு அவர்கள் நகைத்தார்கள் என்றே எனக்கு ஞாபகம். என் பங்குக்கு ஏற்பட்ட மரத்தை நான் உண்மையான சிரத்தையுடனேயே நட்டு, ஜாக்கிரதையாகத் தண்ணீர் ஊற்றியும் வளர்த்தேன் என்பது எனக்;கு நினைவு இருக்கிறது.

அதேபோல என் குடும்பத்தில் இருந்த குழந்தைகளுக்கு ராஜ வாழ்த்துக் கீதம் பாடக்கற்றுக் கொடுத்தேன். உள்ளூர்ப் போதனாமுறைக் கல்லூரி மாணவர்களுக்கும் அதை நான் சொல்லிக் கொடுத்தது நினைவிருக்கிறது. ஆனால் அப்படி நான் சொல்லிக் கொடுத்தது ஜுபிளி சமயத்திலா அல்லது இந்தியாவின் சக்கரவர்த்தியாக ஏழாம் எட்வர்டுக்கு முடி சூட்டு விழா நடந்தபோதா என்பது எனக்கு ஞாபகம் இல்லை. பிற்காலத்தில் அப் பாடலின் அடிகள் எனக்கு அருவருப்பை உண்டாக்கின. அகிம்சையைப் பற்றிய என் எண்ணங்கள் வளர்ச்சியடையவே, நான் எண்ணுவதிலும் பேசுவதிலும் அதிக எச்சரிக்கையுடன் இருக்க ஆரம்பித்தேன்.

"அவள் விரோதிகளைச் சிதறடித்து
அவர்கள் வீழ்ச்சியடையச் செய்யும்,
அவர்களது ராஜ்யம் குழப்பமடைந்து
வஞ்சகமான அவர்கள் தந்திரங்கள் நிறைவேறாது செய்யும்."

முக்கியமாக அந்தக் கீதத்தின் மேற்கண்ட வரிகளே அகிம்சையைப்பற்றி என் உணர்ச்சிக்கு முரணாக இருந்தன. என் அபிப்பிராயத்தை டாக்டர் பூத்திடம் தெரிவித்தேன். அகிம்சையில் நம்பிக்கையுள்ள ஒருவர், அந்த வரிகளைப் பாடுவது சரியல்ல என்பதை அவரும் ஓப்புக் கொண்டார். விரோதிகள் என்று சொல்லப்படுகிறவர்கள், வஞ்சகர்களாகவும் இருப்பார்கள் என்று நாம் எப்படி எண்ணிக் கொள்ளுவது ? விரோதிகள் என்பதால் அவர்கள் கட்டாயம் தவறு செய்பவர்களாகவும் இருக்க வேண்டுமா ? ஆண்டவனிடமிருந்து நாம் நீதியையே கேட்கலாம். டாக்டர் பூத் என் உணர்ச்சிகளைப் பூரணமாக அங்கீகரித்தார். தமது பிரார்த்தனைக் கூட்டத்திற்கு என்று புதியதொரு ராஜ வாழ்த்துக்கீதத்தையும் இயற்றினார். டாக்டர் பூத்தைக் குறித்து மேற்கொண்டு பிறகு கவனிப்போம்.

ராஜவிசுவாசத்தைப் போலவே, நோயுற்றிருப்போருக்குப் பணிவிடை செய்யவேண்டும் என்ற ஆர்வமும் என் சுபாவத்திலேயே ஆழ வேர்விட்டிருந்தது. நண்பர்களாக இருக்கட்டும், முன் பின் தெரியாதவர்களாக இருக்கட்டும், பிறருக்குப் பணிவிடை செய்வதில் எனக்கு ஆசை அதிகம். தென்னாப்பிரிக்க இந்தியர் சம்பந்தமான துண்டுப் பிரசுர வேலையில் நான் ராஜ்கோட்டில் தீவிரமாக ஈடுபட்டிருந்த சமயம், பம்பாய்க்கு உடனே போய்த் திரும்ப வேண்டிய சந்தர்ப்பம் நேரிட்டது. தென்னாப்பிரிக்க இந்தியர் விஷயமாக நகரங்களில் பொதுகூட்டங்களை நடத்திப் பொதுமக்கள் அந்த நிலைமையை அறியும்படி செய்யவேண்டும் என்பது என் நோக்கம். இதற்கு முதல் நகரமாகப் பம்பாயைத் தேர்ந்தெடுத்தேன். முதலில் நீதிபதி ரானடேயைச் சந்தித்தேன். நான் சொன்னதை அவர் கவனமாகக் கேட்டுக்கொண்டார். ஸர் பிரோஸ்ஷா மேத்தாவைச் சந்திக்குமாறு கூறினார். அடுத்தபடியாக நான் சந்தித்த நீதிபதியான பத்ருதீன் தயாப்ஜியும் அதே யோசனைதான் கூறினார். "நீதிபதி ரானடேயும் நானும் உங்களுக்கு அதிகமாக எந்த உதவியும் செய்வதற்கு இல்லை. எங்கள் நிலைமையை நீங்கள் அறிவீர்கள். பொது விஷயங்களில் நாங்கள் தீவிரப் பங்கு எடுத்துக்கொள்ளுவதற்கில்லை. ஆனால், எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு. உங்களுக்குச் சரியானபடி வழிகாட்டக் கூடியவர், ஸர் பிரோஸ்ஷா மேத்தாவே" என்றார்.

நிச்சயமாக நானும் ஸர் பிரோஸ்ஷா மேத்தாவைப் பார்க்க வேண்டும் என்றுதான் இருந்தேன். அவர் யோசனைப்படி நடந்து கொள்ளுமாறு இப் பெரியவர்கள் எனக்குப் புத்திமதி கூறியது, பொதுமக்களிடைய சூஸர் பிரோஸ்ஷாவுக்கு இருந்த மகத்தான செல்வாக்கை நான் நன்றாக அறிந்துகொள்ளும்படி செய்தது. பிறகு அவரிடம் சென்றேன். அவர் முன்னிலையில் பயத்தால் திகைத்து நின்றுவிட நான் தயாராக இருந்தேன். பொதுமக்கள் அவருக்குக் கொடுத்திருந்த பட்டங்களைக் கேள்விப் பட்டிருக்கிறேன். பம்பாயின் சிங்கத்தை மாகாணத்தின் முடி சூடா மன்னரை நான் பார்க்க வேண்டியிருக்கிறது என்பதையும் அறிவேன். ஆனால், மன்னர் முன்னெச்சரிக்கையுடன் என்னை அடக்கிவிடவில்லை. அன்புமிக்க ஒரு தந்தை, தம்முடைய வயது வந்த மகனை எவ்விதம் சந்திப்பாரோ அவ்வாறே என்னை அவர் சந்தித்தார். நான் அவரைச் சந்தித்தது, ஹைகோர்ட்டில் அவர் காரியாலயத்தில். பல நண்பர்களும் சீடர்களும் அவரைச் சூழ்ந்து கொண்டிருந்தனர். ஸ்ரீ டி.ஈ. வாச்சாவும் ஸ்ரீ காமாவும் அங்கே இருந்தனர். ஸர் பிரோஸ்ஷா மேத்தா, அவர்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார். ஸ்ரீ வாச்சாவைக் குறித்து முன்பே கேள்விப்பட்டிருக்கிறேன். ஸர் பிரஸ்ஷாவுக்கு அவர் வலக்கரம் போன்றவர் என்று கருதப்பட்டு வந்தார். புள்ளி விவரங்களில் அவர் பெரிய நிபுணர் என்று ஸ்ரீ வீரசந்திர காந்தி எனக்குச் சொல்லியிருக்கிறார். "காந்தி, நாம் திரும்பவும் சந்திக்க வேண்டும்" என்றார் ஸ்ரீ வாச்சா.

இவ்விதம் அறிமுகம் செய்துவைத்ததெல்லாம் இரண்டே நிமிஷங்களில் முடிந்து விட்டது. நான் கூறியதையெல்லாம் ஸர் பிரோஸ்ஷா கவனமாகக் கேட்டுக்கொண்டார். நீதிபதிகள் ரானடேயையும் தயாப்ஜியையும் நான் பார்த்தேன் என்றும் சொன்னேன். "காந்தி, உமக்கு நான் உதவி செய்தாக வேண்டும் என்பதைக் காண்கிறேன். இங்கே நான் ஒரு பொதுக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று சொல்லிவிட்டுத் தம் காரியதரிசி ஸ்ரீ முன்ஷியைப் பார்த்து, கூட்டத்திற்குத்தேதியை நிச்சயிக்கும்படி கூறினார். தேதியும் முடிவாயிற்று. பொதுக்கூட்டத்திற்கு முதல் நாள், தம்மை வந்து பார்க்கும் படி கூறி, எனக்கு அவர் விடை கொடுத்து அனுப்பினார். இந்தச் சந்திப்பு அவரிடம் எனக்கிருந்த பயத்தைப் போக்கிவிட்டது. குதூகலத்துடன் வீடு திரும்பினேன்.

இச்சமயம் பம்பாயில் இருந்தபோது அங்கே நோயுற்றிருந்த என் மைத்துனரைப் பாரக்கப் போனேன். அவர் வசதியுடையவர் அல்ல. என் சகோதரி ( அவர் மனைவி ) யாலும் அவருக்குப் பணிவிடை செய்யமுடியவில்லை. நோயோ கடுமையானது. அவரை ராஜ்கோட்டுக்கு அழைத்துக் கொண்டு போய்விடுவதாகக் கூறினேன். அவரும் ஒப்புக் கொண்டார். எனவே என் சகோதரியுடனும் அவர் கணவரோடும் நான் வீடு திரும்பினேன். நான் எதிர்ப்பார்த்ததைவிட அவருடைய நோய் அதிக நாள் நீடித்திருந்தது. என் மைத்துனரை என் அறையில் தங்கச் செய்து. இரவும் பகலும் அவருடனேயே இருந்தேன். இரவில் பாதி நேரம் நான் விழித்திருக்க வேண்டியிருந்தது. அவருக்குப் பணிவிடை செய்து கொண்டே என் தென்னாப்பிரிக்க வேலைகள் சிலவற்றையும் நான் செய்ய வேண்டியிருந்தது. முடிவாக நோயாளி இறந்து விட்டார். ஆனால், அவருடைய கடைசி நாட்களில் அவருக்குப் பணிவிடை செய்யும் வாய்ப்புக் கிடைத்தது, எனக்குப் பெரிய ஆறுதலாக இருந்தது.

நோயாளிகளுக்குப் பணிவிடை செய்வதில் எனக்கு இருந்த விருப்பு, நாளாவட்டத்தில் அடங்காத அவாவாக வளர்ந்து விட்டது. இதன் பலனாக நான் என்னுடைய மற்ற வேலைகளைப் பல சமயங்களில் சரிவரக் கவனிப்பதில்லை. சில சமயம் இவ்விதம் பணிவிடை செய்வதில் என் மனைவிக்கும் வேலை கொடுத்து, வீட்டிலிருந்த எல்லோரையும் அவ் வேலையில் ஈடுபடுத்திவிடுவேன். ஒருவர் இத்தகைய சேவையைச் செய்வதில் இன்பம் கொண்டாலன்றி இதைச் செய்வதில் அர்த்தமே இல்லை வெளிப்பகட்டுக்காகவோ, பொதுஜன அபிப்பிராயத்திற்குப் பயந்தோ இதைச் செய்வதாயின், அப்படிச் செய்பவரின் ஆன்ம வளர்ச்சியை அது குன்றச் செய்து, உணர்ச்சியையும நசுக்கி விடுகிறது. சந்தோஷம் இல்லாமல் செய்யும் சேவையினால் செய்கிறவருக்கும் நன்மை இல்லை, சேவை பெறுகிறவருக்கும் நன்மை இல்லை. மகிழ்ந்து செய்யும் சேவையுடன் ஒப்பிட்டால், மற்றெல்லா இன்பங்களும் உடைமைகளும் பயனற்றவை என்ற வகையில் மங்கிப் போகின்றன.


Offline Anu

பம்பாய்க் கூட்டம்

என் மைத்துனர் இறந்த அன்றே பொதுக் கூட்டத்திற்காக நான் பம்பாய் போக வேண்டியிருந்தது. நான் அங்கே செய்ய வேண்டிய பிரசங்கத்தைக் குறித்துச் சிந்திக்கக்கூட எனக்கு அவகாசம் இல்லை. இரவும் பகலும் கவலையுடன் விழித்திருக்க நேர்ந்ததால், நான் களைத்துப் போனேன். தொண்டையும் கம்மிப் போயிருந்தது. என்றாலும், கடவுளிடமே முழு நம்பிக்கையையும் வைத்து, நான் பம்பாய்க்குப் போனேன். என் பிரசங்கத்தை முன்னாலேயே எழுத வேண்டியிருக்கும் என்று நான் கனவிலும் எண்ணவில்லை.

ஸர் பிரோஸ்ஷா கூறியிருந்தபடி, பொதுக் கூட்டம் நடப்பதற்கு முதல் நாள் மாலை 5 மணிக்கு, அவர் காரியாலயத்திற்குப் போனேன். "காந்தி, உமது பிரசங்கம் தயாராக இருக்கிறதா ?" என்று அவர் என்னைக் கேட்டார். "இல்லை, ஐயா, ஞாபகத்தில் இருந்தே கூட்டத்தில் பேசிவிடலாம் என்று இருக்கிறேன்" என்று நான் நடுங்கிக் கொண்டே சொன்னேன். "பம்பாயில் அது சரிப்பட்டது. இங்கே நிருபர்கள் பத்திரிக்கைக்குச் செய்தி அனுப்புவது மோசமாக இருக்கிறது. இந்தக் கூட்டத்தினால் நாம் பயனடைய வேண்டுமாயின், உமது பிரசங்கத்தை நீர் எழுதி விட வேண்டும். அதோடு நாளை விடிவதற்குள் அதை அச்சிட்டும் விட வேண்டும். இதைச் செய்துவிட உம்மால் முடியும் என்றே நம்புகிறேன்" என்றார்.

எனக்கு ஒரே நடுக்கம் எடுத்துவிட்டது என்றாலும் முயல்வதாகச் சொன்னேன். "அப்படியானால், கையெழுத்துப் பிரதியை வாங்கிக் கொள்ள ஸ்ரீ முன்ஷி உம்மிடம் எந்த நேரத்திற்கு வர வேண்டும்" என்பதைச் சொல்லும் என்றார். இரவு பதினொரு மணிக்கு என்றேன். அடுத்த நாள் கூட்டத்திற்குப் போனதும், ஸர் பிரோஸ்ஷா கூறிய யோசனை, எவ்வளவு புத்திசாலித்தனமானது என்பதைக் கண்டு கொண்டேன். ஸர் கோவாஸ்ஜி ஜஹாங்கீர் இன்ஸ்டிடியூட் மண்டபத்தில் பொதுகூட்டம் நடந்தது. ஒரு கூட்டத்தில் ஸர் பிரோஸ்ஷா மேத்தா பேசுகிறார் என்றால் எப்பொழுதுமே மண்டபம் நிறைந்துவிடும். அவர் பிரசங்கத்தைக் கேட்க வேண்டும் என்ற ஆர்வத்தில், முக்கியமாக மாணவர்கள், எள் விழவும் இடமின்றி வந்து கூடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். என் அனுபவத்தில் அப்படிப்பட்ட முதல் கூட்டம் இதுதான் நான் பேசுவது, சிலருக்கு மாத்திரமே கேட்கும் என்பதைக் கண்டேன். என் பிரசங்கத்தைப் படிக்க ஆரம்பித்ததுமே என் உடம்பெல்லாம் நடுங்கிற்று. உரக்க, இன்னும் கொஞ்சம் உரக்கப் பேசும்படி கூறி ஸர் பிரோஸ்ஷா தொடர்ந்து என்னை உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார். அது என்னை உற்சாகப் படுத்துவதற்குப் பதிலாக, என் தொனி மேலும் மேலும் குறைந்து கொண்டு போகும்படியே செய்தது என்பது என் ஞாபகம்.

எனது பழைய நண்பர் கேசவரால் தேஷ்பாண்டே என்னைக் காப்பாற்ற வந்தார். என் பிரசங்கத்தை அவர் கையில் கொடுத்து விட்டேன். அவர் பேச்சுத் தொனிதான் ஏற்ற தொனி. ஆனால் கூடியிருந்தவர்களோ, அவர் பேச்சைக் கேட்க மறுத்துவிட்டனர். "வாச்சா" "வாச்சா" என்ற முழக்கம் எங்கும் எழுந்தது. ஆகவே, ஸ்ரீ வாச்சா எழுந்து என் பிரசங்கத்தைப் படித்தார். அற்புதமான பலனும் ஏற்பட்டது. கூட்டத்தில் இருந்தவர்கள் முற்றும் அமைதியோடு இருந்து, பிரசங்கத்தைக் கேட்டார்கள். அவசியமான இடங்களில் கரகோஷமும், வெட்கம் என்ற முழக்கமும் செய்தார்கள். இது என் உள்ளத்துக்குக் குதூகலம் அளித்தது. பிரசங்கம் ஸர் பிரேஸ்ஷாவுக்குப் பிடித்திருந்தது. நான் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன்.

ஸ்ரீ தேஷ்பாண்டே, ஒரு பார்ஸி நண்பர் ஆகியவர்களின் ஆதரவை இக்கூட்டம் எனக்குத் தேடித் தந்தது. அந்தப் பார்ஸி நண்பர் இன்று உயர்தர அரசாங்க அதிகாரியாக இருப்பதால் அவர் பெயரைக் கூற நான் தயங்குகிறேன். இருவரும் என்னுடன் தென்னாப்பிரிக்காவுக்கு வர முடிவு செய்து இருப்பதாக என்னிடம் தெரிவித்தனர். அப்போது ஸ்மால் காஸ் கோர்ட்டு நீதிபதியாக இருந்த ஸ்ரீ சி. எம். குர்ஸேத்ஜி, அந்தப் பார்ஸி நண்பர்க்குக் கல்யாணம் செய்துவிடத் திட்டம் போட்டிருந்தார். ஆகவே, அவர் பார்ஸி நண்பரைத் தமது தீர்மானத்தை மாற்றி கொள்ளும்படி செய்துவிட்டார். கல்யாணமா தென்ஆப்பிரிக்காவுக்கு போவதா? இந்த இரண்டில் ஒன்றை அவர் தீர்மானிக்க வேண்டியதாயிற்று. அவர் கல்யாணத்தையே ஏற்றுக் கொண்டார். ஆனால் இவ்விதம் அவர் தீர்மானத்தைக் கைவிட்டதற்காக, பிற்காலத்தில் அச்சமூகத்தைச் சேர்ந்த பார்ஸி ருஸ்தம்ஜி பரிகாரம் செய்துவிட்டார். அநேகப் பார்ஸிப் பெணகள், கதர் வேலைக்குத் தங்களை அர்ப்பணம் செய்து கொண்டதன் மூலம், அந்தப் பார்ஸி நண்பர் உறுதியை மீறுவதற்குக் காரணமாக இருந்த, அவர் மனைவிக்காகப் பரிகாரம் செய்து விட்டனர். ஆகையால், அத் தம்பதிகளுக்குச் சந்தோஷமாக நான் மன்னிப்பு அளித்து விட்டேன். ஸ்ரீ தேஷ்பாண்டேக்குக் கல்யாண ஆசை எதுவும் இல்லை என்றாலும் அவராலும் வர முடியவில்லை. அவர் அப்பொழுது தம் வாக்குறுதியை மீறியதற்கு, இப்பொழுது தக்க பிராயச்சித்தங்களைச் செய்து கொண்டு வருகிறார். நான் தென்னப்பிரிக்காவிற்குத் திரும்பிப்போன போது ஜான்ஸிபாரில் தயாப்ஜி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரைச் சந்தித்தேன். என்னுடன் வந்து, எனக்கு உதவி செய்வதாக அவரும் வாக்களித்தார். ஆனால் அவர் வரவே இல்லை. அந்தக் குற்றத்திற்கு ஸ்ரீ அப்பால் தயாப்ஜி இப்பொழுது பரிகாரம் தேடி வருகிறார். இவ்விதம் சில பாரிஸ்டர்கள் தென்னாப்பிரிக்காவுக்குப் போகும்படி செய்ய நான் செய்த மூன்று முயற்சிகளும் பலன் அளிக்கவில்லை.

இது சம்பந்தமாக ஸ்ரீ பேஸ்தன்ஜி பாத்ஷாவின் நினைவு எனக்கு இருக்கிறது. நான் இங்கிலாந்தில் இருந்த காலம் முதற்கொண்டு அவரிடம் நட்புடன் இருந்தேன். லண்டனில் ஒரு சைவ உணவு விடுதியில் அவரை முதன் முதலில் சந்தித்தேன். அவருடைய சகோதரர் ஸ்ரீ பர்ஜோர்ஜி பாத்ஷா ஒரு கிறுக்கர் என்று பெயர் பெற்றிருந்ததைக் கொண்டு, அவரைக் குறித்தும் எனக்குத் தெரியும். நான் அவரைப் பார்த்ததே இல்லை. அவர் விசித்திரப் போக்குடையவர் என்று நண்பர்கள் சொன்னார்கள். குதிரைகளிடம் இரக்கப்பட்டு அவர் ( குதிரை பூட்டிய ) டிராம் வண்டிகளில் ஏறுவதில்லை. அவருக்கு ஞாபக சக்தி அபாரமாக இருந்தும், பரீட்சை எழுதிப் பட்டங்களைப் பெற மறுத்து விட்டார். சுயேச்சையான மனப் போக்கை வளர்த்துக் கொண்டிருந்தார். பார்ஸி வகுப்பினராக இருந்தும் அவர் சைவ உணவே சாப்பிடுவார். பேஸ்தன்ஜிக்கு இத்தகைய கியாதி இல்லை. ஆனால் அவரது புலமைக்கு லண்டனிலும் பிரபல்யம் இருந்தது. எங்கள் இருவருக்கும் இருந்த ஒற்றுமை சைவ உணவில்தான். புலமையில் அவரை நெருங்குவதென்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது.

அவரை நான் பம்பாயில் மீண்டும் சந்தித்தேன். அவர் ஹைகோர்ட்டின் பிரதம குமாஸ்தாவாக வேலை பார்த்து வந்தார். நான் அவரைச் சந்தித்தபோது, அவர் உயர்தரக் குஜராத்தி அகராதி ஒன்று தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். என் தென்னாப்பிரிக்க வேலையில் எனக்கு உதவி செய்யுமாறு நான் கேட்காத நண்பர் இல்லை. பேஸ்தன்ஜி பாத்ஷா எனக்கு உதவி செய்ய மறுத்த தோடல்லாமல், இனி தென்னாப்பிரிக்காவுக்குத் திரும்ப வேண்டாம் என்று எனக்குப் புத்திமதியும் சொன்னார்.

அவர் கூறியதாவது "உமக்கு உதவி செய்வது சாத்தியமில்லை. நீர் தென்னாப்பிரிக்காவுக்குப் போவது என்பது கூட எனக்குப் பிடிக்கவில்லை. செய்வதற்கு நம் நாட்டில் வேலையே இல்லையா ? இப்பொழுது பாரும், நம் மொழிக்குச் செய்ய வேண்டியதே எவ்வளவோ இருக்கிறது. விஞ்ஞானச் சொற்களை நம் மொழியில் நான் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. ஆனால், செய்ய வேண்டியிருக்கும் வேலையில் இது ஒரு சிறு பகுதியே, நாட்டில் இருக்கும் வறுமையை எண்ணிப்பாரும்."

"தென்னாப்பிரிக்காவில் இருக்கும் நம் மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் உம்மைப்போன்ற ஒருவர் அந்த வேலைக்காகப் பலியிடப்படுவதை நான் விரும்பவில்லை. முதலில் இங்கே சுயாட்சியைப் பெறுவோம். அதனால் அங்கிருக்கும் நம்மவர்களுக்குக் தானே உதவி செய்தவர்கள் ஆவோம். உம் மனத்தை மாற்ற என்னால் ஆகாது என்பதை அறிவேன். என்றாலும் உம்மைப் போன்றவர்கள் யாரும் உம்முடன் சேர்ந்து உம்மைப் போல் ஆகிவிடுவதற்கு உற்சாகம் ஊட்டமாட்டேன்."

இந்தப் புத்திமதி எனக்குப் பிடிக்கவில்லை. ஆயினும் ஸ்ரீ பேஸ்தன்ஜி பாத்ஷா மீது நான் கொண்டிருந்த மதிப்பை இது அதிகமாக்கியது. நாட்டினிடமும் தாய் மொழியினிடமும் அவர் கொண்டிருந்த பக்தி என் மனத்தைக் கவர்ந்தது. இச் சம்பவம் எங்களை இன்னும் அதிகமாக நெருங்கிப் பழகும்படி செய்தது. என்றாலும் தென்னாப்பிரிக்காவில் எனக்கு இருந்த பணியை நான் விடுவதற்குப் பதிலாக என்னுடைய தீர்மானத்தில் நான் அதிக உறுதி கொள்ளலானேன். தாய்நாட்டிற்குச் செய்ய வேண்டிய வேலையின் எப்பகுதியையும் தேசபக்தி உள்ள ஒருவர் அலட்சியம் செய்துவிட முடியாது. எனக்கோ கீதையின் வாசகம் மிகத் தெளிவாகவும் கண்டிப்பாகவும் இருந்தது, நன்றாக அனுஷ்டிக்கப்பட்ட பிறருடைய தருமத்தைவிட, குணமற்ற தனது தருமமே சிறந்ததாகும். தனது தருமத்தை நிறைவேற்றும் போது இறப்பது சிறந்தது. பிறர் தருமம் பயத்தைக் கொடுப்பதாகும்.


Offline Anu

புனாவும் சென்னையும்

என் வேலையை ஸர் பிரோஸ்ஷா எளிதாக்கிவிட்டார். ஆகவே, பம்பாயிலிருந்து புனாவுக்குப் போனேன். அங்கே இரு கட்சியினர் இருந்தார்கள். எல்லாவிதக் கருத்துக்களும் கொண்ட எல்லோருடைய உதவியும் எனக்குத் தேவை. முதலில் லோகமான்யத் திலகரைப் பார்த்தேன். அவர் கூறியதாவது.

"எல்லாக் கட்சியினரின் உதவியையும் நீங்கள் நாடுவது மிகவும் சரி. தென்னாப்பிரிக்கப் பிரச்னை சம்பந்தமாக அபிப்பிராய பேதமே இருப்பதற்கில்லை. ஆனால், எக் கட்சியையும் சேராதவரான ஒருவர், உங்கள் பொதுக் கூட்டத்திற்குத் தலைவராக இருக்க வேண்டும். பேராசிரியர் பந்தர்காரைச் சந்தியுங்கள். கொஞ்ச காலமாக அவர் பொதுஜன இயக்கம் எதிலும் ஈடுபடுவதில்லை. அவரைப் பார்த்துவிட்டு, அவர் என்ன சொல்கிறார் என்பதை என்னிடம் கூறுங்கள். என்னால் ஆன எல்லா உதவியையும் உங்களுக்குச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். நீங்கள் விரும்பும் போதெல்லாம் வந்து என்னைத் தாராளமாகப் பார்க்கலாம். வேண்டியதைச் செய்ய எப்பொழுதும் தயாராக இருக்கிறேன்."

லோகமான்யரை நான் சந்தித்தது இதுவே முதல் தடவை. பொதுமக்களிடையே அவருக்கு இருந்த இணையில்லாத செல்வாக்கின் ரகசியத்தை இச் சந்திப்பு எனக்கு வெளிப்படுத்தியது. பின்பு கோகலேயைப் போய் பார்த்தேன். பெர்குஸன் கல்லூரி மைதானத்திலேயே அவரைக் கண்டேன். அன்போடு அவர் என்னை வரவேற்றார். அவருடைய இனிய சுபாவம் அப்பொழுதே என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டது. அவரைச் சந்திப்பதும் இதுதான் முதல் தடவை. என்றாலும் ஏதோ பழைய நட்பை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளுவதைப் போலவே தோன்றியது. ஸர் பிரோஸ்ஷா எனக்கு இமயமலைபோல் தோன்றினார். லோகமான்யரோ எனக்கு சமுத்திரம்போல் காணப்பட்டார். ஆனால், கோகலேயோ கங்கையைப் போல் இருந்தார். அந்த புண்ணிய நதியில் யாரும் நீராடி இன்புற முடியும். ஹிமாலயம் ஏறிக் கடப்பதற்கு அரியது. கடலில் யாரும் துணிந்து எளிதில் இறங்கிவிட முடியாது. ஆனால் கங்கையோ அரவணைத்துக் கொள்ள எல்லோரையும் அன்புடன் அழைக்கிறது. கையில் துடுப்புடன் படகில் ஏரி, அதில் மிதப்பதே இன்பம் பள்ளிக்கூடத்தில் சேர வரும் ஒரு மாணவனை ஓர் உபாத்தியாயர் எவ்விதம் பரீட்சிப்பாரோ அதே போலக் கோகலே என்னை நுட்பமாகப் பரீட்சை செய்தார். யாரிடம் போகவேண்டும் என்பதை அவர் எனக்குச் சொன்னார். நான் செய்ய இருக்கும் பிரசங்கத்தை முன்னால் தாம் பார்க்க விரும்புவதாகக் கூறினார். கல்லூரி முழுவதையும் சுற்றிக் காட்டினார். தம்மால் ஆனதைச் செய்யத் தாம் எப்பொழுதும் தயாராக இருப்பதாகவும் எனக்கு உறுதியளித்தார். டாக்டர் பந்தர்காரைச் சந்தித்ததன் முடிவைத் தமக்கு அறிவக்கச் சொன்னார். மிக்க மகிழச்சியுடன் என்னை அனுப்பினார். அன்று முதல் ராஜியத் துறையில் அவர் ஜிவித்திருந்த காலத்திலும் அதற்குப் பின்னர் இன்றளவும் முற்றும் என் உள்ளத்தில் இணையற்றதான பீடத்தில் கோகலே அமர்ந்து விட்டார்.

டாக்டர் பந்தர்கார், நத்தைக்கு மகனிடம் இருக்கும் அன்புடன் என்னை வரவேற்றார். நான் அவரைப் பார்க்கப் போனது மத்தியான வேளை. அந்த நேரத்தில்கூட ஓய்வின்றி நான் எல்லோரையும் சந்தித்த வந்தது, சோர்வு என்பதையே அறியாத அப் பண்டித மணிக்கு என் மீது அதிகப் பரிவை உண்டாக்கியது. பொதுக்கூட்டத்திற்கு எக் கட்சியையும் சேராதவரே தலைவராக இருக்க வேண்டும் என்று நான் வற்புறுத்தியதை உடனே அவர் ஏற்றுக்கொண்டார். அதுதான் சரி அதுதான் சரி என்றும் அவராகவே ஆனந்தத்துடன் கூறினார்.

நான் கூறியதையெல்லாம் கேட்டுக்கொண்ட பிறகு அவர் கூறியதாவது "ராஜிய விஷயங்களில் நான் சம்பந்தம் வைத்துக் கொள்ளுவதில்லை என்பதை எல்லோரும் உங்களுக்குச் சொல்வார்கள். ஆனாலும், உங்கள் கோரிக்கையை மறுக்க என்னால் முடியாது. உங்கள் கட்சி மிகவும் நியாயமானது. உங்கள் முயற்சியோ அற்புதமானது. ஆகவே, உங்கள் பொதுக்கூட்த்தில் பங்கெடுத்துக்கொள்ள நான் மறுத்து விடுவதற்கில்லை. திலகரையும் கோகலேயையும் நீங்கள் கலந்து ஆலோசித்தது மிகவும் சரியானதே. அவர்களுடைய இரு சபைகளின் கூட்டு ஆதரவில் நடக்கும் பொதுக் கூட்டத்திற்குத் தலைமை வகிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தயவு செய்து அவர்களிடம் சொல்லுங்கள் கூட்டத்தின் நேரத்தைக் குறித்து, நீங்கள் என்னைக் கேட்க வேண்டியதில்லை. அவர்களுக்குச் சௌகரியப்படும் நேரம் எனக்கும் சௌகரியமானதே." இவ்விதம் கூறி எனக்கு வாழ்த்தும் ஆசீர்வாதமும் தந்து, அவர் விடை கொடுத்து அனுப்பினார்.

புலமை மிக்கவர்களும், தன்னலமே இல்லாதவர்களுமான புனாத் தலைவர்கள் குழாத்தினர், எந்தவிதப் படாடோபமும் இன்றி, ஆடம்பரம் இல்லாத ஒரு சிறு இடத்தில் கூட்டத்தை நடத்தினார்கள். நான் பெரும் மகிழ்ச்சியும், என் வேலையில் மேலும் அதிக நம்பிக்கையும் கொண்டவனாகத் திரும்பும்படி என்னை அனுப்பியும் வைத்தார்கள்.

அடுத்தபடியாக நான் சென்னைக்குச் சென்றேன். அங்கே மட்டற்ற உற்சாகம் கொண்டிருந்தனர். பாலசுந்தரம் பற்றிய சம்பவம், பொதுகூட்டத்தில் எல்லோருடைய உள்ளத்தையும் உருக்கிவிட்டது. என் பிரசங்கம் அச்சிடப் பட்டிருந்தது. எனக்கு அது ஒரு நீண்டதொரு பிரசங்கமே. ஆனால், கூட்டத்தில் இருந்தவர்கள் ஒவ்வொரு சொல்லையும் கவனமாகக் கேட்டனர். கூட்டத்தின் முடிவில் பச்சைத் துண்டுப் பிரசுரத்திற்கு ஒரே கிராக்கி சில மாற்றங்களுடன் இரண்டாம் பதிப்பில் 1,, பிரதிகள் அச்சிட்டேன். அவை ஏராளமாக விற்பனையாயின. என்றாலும் அவ்வளவு அதிகமான பிரதிகளை அச்சிட்டிருக்க வேண்டியதில்லை என்று எண்ணினேன். என் உற்சாகத்தில், இருக்கக்கூடிய தேவையை அதிகப்படியாக மதிப்பிட்டு விட்டேன். நான் பிரசங்கம் செய்தது, பொது ஜனங்களில் ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கே. சென்னையில் அந்த வகுப்பினர் இவ்வளவு பிரதிகளையும் வாங்கிவிட முடியாது.

சென்னையில் எல்லோரையும்விட அதிகமாக உதவி செய்தவர், மதராஸ் ஸ்டாண்டர்டு பத்திரிக்கையின் ஆசிரியரான காலஞ்சென்ற ஸ்ரீ. ஜி. பரமேஸ்வரன் பிள்ளையாவார். இப்பிரச்னையை அவர் கவனமாக ஆராய்ந்தார். அடிக்கடி தமது காரியாலயத்திற்கு என்னை அழைத்து, வேண்டிய யோசனைகளைக் கூறினார். ஹிந்து பத்திரிகையின் ஸ்ரீ. ஜி. சுப்பிரமணியமும், டாக்டர் சுப்பிரமணியமும் அதிக அனுதாபம் காட்டினார்கள். ஸ்ரீ ஜி. பரமேசுவரன் பிள்ளை தமது மதராஸ் ஸ்டாண்டர்டு பத்திரிகையில் நான் எழுதுவதையெல்லாம் தாராளமாகப் பிரசுரிக்க முன் வந்தார். அந்த வாய்ப்பை நானும் தாராளமாகப் பயன்படுத்திக் கொண்டேன். பொதுக்கூட்டம் பச்சையப்பன் மண்டபத்தில் டாக்டர் சுப்பிரமணியம் தலைமையில் நடந்தது என்றே எனக்கு ஞாபகம். நான் சந்தித்தவர்களிடமெல்லாம் ஆங்கிலத்திலேயே பேச வேண்டி இருந்தபோதிலும் அந்நியர் நடுவில் இருப்பதாகவே எனக்குத் தோன்றவில்லை. நான் சந்தித்த நண்பர்கள் எல்லோருமே என்மீது அன்பைப் பொழிந்தார்கள். நான் கொண்டிருந்த லட்சியத்திலும் அவர்கள் அதிக உற்சாகம் காட்டினர். அன்பினால் தகர்த்துவிட முடியாத தடையும் உண்டா?


Offline Anu

விரைவில் திரும்புங்கள்

 
 சென்னையிலிருந்து கல்கத்தாவுக்குப் போனேன். அங்கே சங்கடங்கள் என்னைச் சூழ்ந்துகொண்டன. யாரையுமே அங்கே எனக்குத் தெரியாது. ஆகவே கிரேட் ஈஸ்டர்ன் ஹோட்டலில் ஓர் அறையை அமர்த்திக் கொண்டேன். டெயிலி டெலிகிராப் பத்திரிகையின் பிரதிநிதியுடன் அங்கே எனக்குப் பழக்கம் உண்டாயிற்று. தாம் தங்கியிருந்த ஐரோப்பியரின் பெங்கால் கிளப்புக்கு என்னை அழைத்தார். அந்தக் கிளப்பின் பிரதான அறைக்கு இந்தியர் எவரையும் அழைத்துக் கொண்டு போகக்கூடாது என்பது அவருக்குத் தெரியாது. இவ்விதத் தடை இருப்பதை அவர் கண்டு கொண்டதும், தம் அறைக்கு என்னை அழைத்துச் சென்றார். கல்கத்தாவில் இருக்கும் ஆங்கிலேயர், இத்தகைய துவேஷம் காட்டி வருவதைக்குறித்துத் தமது வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டார். பிரதான அறைக்கு என்னை அழைத்துக் கொண்டு போக முடியாது போய் விட்டதற்கு என்னிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

வங்காளத்தின் தெய்வம் என்று வழங்கப்பட்டு வந்த சுரேந்திரநாத் பானர்ஜியை நான் பார்க்க விரும்பினேன். அவரைச் சந்தித்தேன். பல நண்பர்கள் அவரைச் சூழ்ந்துக் கொண்டிருந்தனர் அவர் கூறியதாவது. "உங்கள் வேலையில் மக்கள் சிரத்தை எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்றே அஞ்சுகிறேன் இங்கே எங்களுக்கு இருக்கும் கஷ்டங்கள் கொஞ்சம் அல்ல என்பதை நீங்களும் அறிவீர்கள் என்றாலும், உங்களால் முடிந்த வரையில் நீங்கள முயலவே வேண்டும். மகாராஜாக்களின் ஆதரவை நீங்கள் தேடிக் கொள்ள வேண்டும் பிரிட்டிஷ் இந்தியர் சங்கப் பிரதிநிதிகளைச் சந்திக்கத் தவறிவிடாதீர்கள். ராசா ஸர் பியாரி மோகம் முகர்ஜியையும் மகாராஜா டாகுரையும் நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டும். அவர்கள் இருவரும் தாராள மனம் படைத்தவர்கள், பொது வேலையில் அவர்களுக்கு நல்ல ஈடுபாடு உண்டு."

அந்தக் கனவான்களையும் பார்த்தேன். ஆனால், ஒன்றும் பயன் இல்லை. அவர்கள் என்னைச் சரியாக ஏற்றுப் பேசக்கூட இல்லை. கல்கத்தாவில் பொதுக்கூட்டம் நடத்துவது என்பது எளிதான காரியமே அல்ல என்றார்கள். ஏதாவது செய்ய முடியும் என்றால் அது நடப்பது முக்கியமாகச் சுரேந்திரநாத் பானர்ஜியையே பொறுத்தது என்றும் கூறினர். என் வேலை வர வர அதிகக் கஷ்டமாகிக்கொண்டு வருவதைக் கண்டேன். அமிர்த பஜார் பத்திரிகையின் காரியாலயத்திற்குப் போனேன். அங்கே நான் சந்தித்த ஆசிரியக் கனவான். நான் ஊர் சுற்றித் திரியும் பேர்வழி என்று எண்ணிக்கொண்டு என்னிடம் ஒன்றும் பேசாமலே என்னைப் போகச் சொல்லிவிட்டார். வங்கவாசி பத்திரிகையோ இன்னும் கொஞ்சம் அதிகமாகப் போய்விட்டது. அதன் ஆசிரியர் என்னை ஒரு மணி நேரம் காக்க வைத்தார். அவரைக் கண்டு பேசப் பலர் வந்திருந்தார்கள். ஆனால், மற்றவர்களலெ;லாம் பேசிவிட்டுப்போன பின்புகூட என்னைக் கண்ணெடுத்துப் பார்க்க அவருக்குத் தயவு பிறக்கவில்லை. நீண்ட நேரம் காத்துக்கொண்டிருந்த பிறகு அவரைப் பார்த்து, என் விஷயத்தைச் சொல்ல ஆரம்பித்தேன்.

உடனே அவர் "ங்களுக்கு வேலை தலைக்கு மேல் இருக்கிறது என்பதை நீர் பார்க்கவில்லையா ? உம்மைப்போல் உண்டு பேச வருகிறவர்களின் தொகைக்கு முடிவே இல்லை. நீர் போய்விடுவதே மேல் நீர் சொல்வதைக் கேட்க எனக்கு இப்பொழுது சௌகரியப்படாது" என்றார். நான் அவமதிக்கப்படுவதாக ஒரு கணம் எண்ணினேன். ஆனால் உடனே ஆசிரியரின் நிலைமையையும் புரிந்து கொண்டேன். வங்கவாசியின் புகழைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆசிரியரைப் பார்க்க ஓயாமல் பலர் வந்து கொண்டே இருக்கிறார்கள் என்பதையும் இப்போது பார்த்தேன். அவர்கள் எல்லாம் அவருக்குப் பழக்கமானவர்கள். அவருக்கு தம் பத்திரிகையில் எழுதுவதற்கு விஷயங்களுக்கும் பஞ்சம் இல்லை. தென்னாப்பிரிக்கா விஷயமோ அச்சமயம் இங்கே அவ்வளவு நன்றாகத் தெரியாத சங்கதி.

எந்தக் குறையினால் ஒருவன் கஷ்டப்படுகிறானோ அவனுக்கு அக்குறையே பெரிது என்று தோன்றும். ஆசிரியரின் காரியாலயத்திற்குப் படையெடுத்து வரும் அநேகரில் நானும் ஒருவன். அப்படி வரும் மற்றவர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர்கள் குறை இருக்கத்தான் இருக்கிறது. எல்லோருக்குமே ஆசிரியர் என்ன செய்ய முடியும் ? மேலும் ஆசிரியர், நாட்டில் பெரிய சக்தி வாய்ந்தவர் என்று கஷ்டப்படுகிறவன் நினைக்கிறான். ஆனால், தமது சக்தி தம் காரியலாயத்தின் வாசலுக்கு அப்பால் செல்லாது என்பது ஆசிரியருக்கு மாத்திரமே தெரியும். நான் சோர்வடைந்து விடவில்லை. மற்றப் பத்திரிகைகளின் ஆசிரியர்களை விடாமல் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். வழக்கம்போல், இந்தியாவில் இருந்த ஆங்கிலேயர் பத்திரிகைகளின் ஆசிரியர்களையும் சந்தித்தேன். ஸ்டேட்ஸ்மனும் இங்கிலீஷ்மனும் இப்பிரச்னையின் முக்கியத்துவத்தை உணர்ந்தன. அப்பத்திரிகை நிருபர்களுக்கு நான் நீண்ட பேட்டிகள் அளித்தேன். அவை முழுவதையும் அப்பத்திரிகைகள் பிரசுரித்தன.

இங்கிலீஷ்மன் பத்திரிகையின் ஆசிரியர் ஸ்ரீ சாண்டர்ஸ், என்னைத் தமது சொந்த மனிதனாகவே கொண்டார். தமது காரியாலயத்தையும் தமது பத்திரிகையையும் என் இஷ்டத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார். தென்னாப்பிரிக்க இந்தியர் நிலைமையைக் குறித்து, அவர் எழுதிய தலையங்கங்களின் அச்சு நகல்களை முன் கூட்டியே அவர் எனக்கு அனுப்புவார். அத் தலையங்கங்களில் நான் விரும்பும் திருத்தங்களைச் செய்து கொள்ளவும் அவர் என்னை அனுமதித்தார். எங்களுக்கிடையே நட்பு வளர்ந்துவிட்டது என்று சொல்லுவதும் மிகையாகாது. தம்மால் இயன்ற உதவிகளை எல்லாம் செய்வதாக அவர் எனக்கு வாக்களித்தார். வாக்களித்தபடியே நிறைவேற்றியும் வந்தார். அவர் கடுமையான நோய்வாய்ப்படும் வரையில் என்னுடன் கடிதப் போக்குவரத்தும் வைத்துக் கொண்டிருந்தார்.

என் வாழ்க்கை முழுவதுமே இவ்விதமான பல நண்பர்களைப் பெறும் பாக்கியம் எனக்கு இருந்திருக்கிறது. இந்தச் சிநேகங்கள் எதிர்பாராத விதமாகத் திடீரென்று ஏற்பட்டவை. மிகைப்படுத்தாமல் உள்ளதை உள்ளபடியே கூறும் என் குணமும், உண்மையினிடம் எனக்கு இருந்த பற்றும், ஸ்ரீ சாண்டர்ஸூக்கு என்னிடம் பிரியத்தை உண்டாக்கின. நான் மேற்கொண்ட வேலையைக் குறித்து, வெகு நுட்பமாகக் குறுக்குக் கேள்விகள் எல்லாம் போட்டுத் தெரிந்து கொண்ட பிறகே என் முயற்சிக்கு அனுதாபம் காட்ட அவர் முற்பட்டார். தென்னாப்பிரிக்க வெள்ளையரின் கட்சியையும் பாரபட்சமின்றி அவருக்கு எடுத்துக் காட்டுவதற்குச் சிரமத்தைப் பாராமல் நான் செய்த முயற்சியையும் கண்டார். இதற்காக என்னை அவர் பாராட்டினார்;.

எதிர்க்கட்சிக்கு நியாயத்தைச் செய்வதன் மூலம் தன் கட்சிக்குப் நியாயம் சீக்கிரத்தில் கிடைக்கிறது என்பதை என் அனுபவம் காட்டியிருக்கிறது. எதிர்பாராத வகையில் ஸ்ரீ சாண்டர்ஸின் உதவி கிடைத்ததால் முடிவில் கல்கத்தாவிலும் பொதுக்கூட்டத்தை நடத்துவதில் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. அப்பொழுது டர்பனிலிருந்து ஙபார்லிமெண்டு ஜனவரியில் ஆரம்பமாகிறது. விரைவில் திரும்புகங என்று தந்தி வந்தது. ஆகவே, பத்திரிகைகளில் பிரசுரிப்பதற்கு ஒரு கடிதம் அனுப்பினேன். திடீரென்று கல்கத்தாவைவிட்டு நான் ஏன் புறப்பட வேண்டியிருக்கிறது என்று அதில் விளக்கிக் கூறிவிட்டுப் பம்பாய்க்குப் புறப்பட்டேன். புறப்படும் முன்பு தாதா அப்துல்லா கம்பெனியின் பம்பாய் ஏஜெண்டுக்கு ஒரு தந்தி கொடுத்து தென்னாப்பிரிக்காவிற்கு முதலில் புறப்படும் கப்பலில் எனக்கு இடத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு அறிவித்தேன். தாதா அப்துல்லா அப்பொழுதுதான், கோர் லாண்டு என்ற கப்பலை வாங்கியிருந்தார்.

அக்கப்பலிலேயே நான் போக வேண்டும் என்று வற்புறுத்தியதோடு என்னையும் என் குடும்பத்தையும் கட்டணம் வாங்காமல் ஏற்றிச் செல்வதாகவும் அறிவித்தார். இதை நன்றியுடன் ஏற்றுக் கொண்டேன். டிசம்பர் ஆரம்பத்தில் இரண்டாம் முறையாக நான் தென்னாப்பிரிக்காவுக்குப் புறப்பட்டேன். இப்பொழுது என் மனைவி, இரு குமாரர்கள், விதந்துவாகிவிட்ட என் சகோதரியின் ஒரே குமாரன் ஆகியவர்களுடன் பயணமானேன். அதே சமயத்தில் நாதேரி என்ற மற்றொரு கப்பலும் டர்பனுக்குப் புறப்பட்டது. அக்கப்பல் கம்பெனிக்கு தாதா அப்துல்லா கம்பெனியே ஏஜெண்டுகள். இந்த இரு கப்பல்களிலும் சுமார் எண்ணூறு பிரயாணிகள் இருந்திருப்பார்கள். அவர்களில் பாதிப்பேர் டிரான்ஸ்வாலுக்குப் போகவேண்டியவர்கள்.


Offline Anu

மூன்றாம் பாகம்

புயலின் குமுறல்கள்

நான் மனைவியுடனும் குழந்தைகளோடும் கப்பல் பிரயாணம் செய்வது இதுதான் முதல் தடவை. ஹிந்துக்களில் மத்திய தரவகுப்பினரிடையே பால்ய விவாகம் செய்து விடும் வழக்கம் இருப்பதால் கணவன் படித்திருப்பான், மனைவி சொஞ்சம்கூட எழுத்து வாசனையே இல்லாதிருப்பாள் என்பதை இச் சரித்திரத்தில் அடிக்கடி கூறி வந்திருக்கிறேன். இவ்விதம் அவர்கள் இருவர் வாழ்க்கைக்கும் இடையே பெரும் அகழ் ஏற்பட்டு, அவர்கள் வாழ்வைப் பிரித்து நின்றது. கணவன் மனைவிக்கு ஆசானாகவும் இருக்க வேண்டியிருந்தது. ஆகையால் என் மனைவியும் குழந்தைகளும் அணிய வேண்டிய உடைகள் யாவை, அவர்கள் சாப்பிட வேண்டியது என்ன, புதிய சூழ்நிலைக்கு ஏற்ப அவர்கள் எந்தவிதமாக நடந்துக்கொள்ள வேண்டும் என்பனவற்றையெல்லாம் நானே சிந்தித்து முடிவு செய்ய வேண்டியிருந்தது அந்த நாட்களைப் பற்றிய சில நினைவுகள் இப்பொழுது நகைப்பை ஊட்டுபவைகளாக இருக்கின்றன.

கணவன் சொல் தவறாமல் பணிந்து நடந்து வருவதே தனக்கு உயர்ந்த தருமம் என்று ஒரு ஹிந்து மனைவி கருதுகிறாள். ஒரு ஹிந்துக் கணவனோ, மனைவிக்கு எஜமானனும் எல்லாமும் தானே என்று எண்ணுகிறான், தன் மனைவி, தான் காலால் இடும் வேலையைத் தலையால் செய்ய வேண்டியது கடமை என்றும் கருதுகிறான். நாம் நாகரிகம் உள்ளவர்களாகத் தோன்ற வேண்டுமாயின் நடை உடை பாவனைகளெல்லாம் சாத்தியமானவரை ஐரோப்பியத் தரத்திற்குப் பொருத்தமாக இருக்க வேண்டும் என்று எந்தச் சமயத்தைப் பற்றி எழுதுகிறேனோ அந்தச் சமயத்தில், நான் நம்பி வந்தேன். ஏனெனில், அப்படிச் செய்தால் தான் நமக்குக் கொஞ்சம் செல்வாக்காவது இருக்கும். அந்தச் செல்வாக்கு இல்லாது போனால் சமூகத்திற்குச் சேவை செய்வது சாத்தியமாகாது என்றும் நான் அப்போது எண்ணினேன்.

ஆகையால் என் மனைவியும் குழந்தைகளும் எந்தவிதமான ஆடைகள் அணிவது என்பதில் ஒரு தீர்மானத்திற்கு வந்தேன் அவர்கள் கத்தியவார்ப் பனியாக்கள் என்று கொள்ளக் கூடியவாறு அவர்கள் உடை இருப்பதை நான் எப்படி விரும்ப முடியும் ? இந்தியர்களில் பார்ஸிகளே, அதிக நாகரிகம் உள்ளவர்களாக அப்பொழுது கருதப்பட்டு வந்தார்கள். ஆனாலும் முழு ஐரோப்பிய உடை சரிப்படாது என்று தோன்றவே பார்ஸி உடையை அவர்கள் அணிய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். அதன்படி என் மனைவி பார்ஸிப் புடவை உடுத்திக் கொண்டாள். சிறுவர்கள், பார்ஸிக் கோட்டும் கால்சட்டைகளும் போட்டுக் கொண்டனர். பூட்ஸும் ஸ்டாக்கிங்கும் இல்லாமல் யாரும் இருப்பதற்கில்லை. அவற்றைப் போட்டு பழக்கப்படுவதற்கு என் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் நீண்ட காலம் பிடித்தது. பூட்ஸ்கள் அவர்கள் காலை நசுக்கின. ஸ்டாக்கிங்குகளோ, வியர்வையால் நாற்றம் எடுத்துவிட்டன. கால்விரல்கள் அடிக்கடி புண்ணாயின். இவைகளையெல்லாம் சொல்லி அவற்றைப் போட்டுக் கொள்ள அவர்கள் ஆட்சேபிக்கும் போதெல்லாம் அதற்குச் சமாதானம் கூற நான் பதில்களைத் தயாராக வைத்திருப்பேன்.

ஆனால் என் பதில்களால் திருப்தியடைந்து விடாமல், என் அதிகாரத்திற்குப் பயந்தே, அவர்கள் விடாமல், அவற்றை அணிந்து வந்தார்கள் என்று நினைக்கிறேன். வேறு வழி இல்லை என்பதனாலேயே அவர்கள் உடை மாற்றத்திற்கும் சம்மதித்தார்கள். அந்த உணர்ச்சி காரணமாகவே, ஆனால் இன்னும் அதிகத் தயக்கத்துடனேயே, கத்தியையும் முள்ளையும் கொண்டு சாப்பிடவும் சம்மதித்தார்கள். இந்த விதமான நாகரிக சின்னங்களின் மீது எனக்கு இருந்த மோகம் குறைந்த பிறகு அவர்கள் கத்தியையும் முள்ளையும் உபயோகித்துச் சாப்பிடும் வழக்கத்தைக் கைவிட்டார்கள். புதிய முறைகளில் நீண்ட காலம் பழகிவிட்டதால், பழைய வழக்கத்திற்குத் திரும்புவதும் அவர்களுக்குச் சங்கடமாகவே இருந்தது. ஆனால் நாகரிகத்தின் இந்தப் பகட்டுகளையெல்லாம் உதறி எறிந்து விட்ட பிறகு, நாங்கள் சமையெல்லாம் நீங்கி விடுதலை பெற்ற உணர்ச்சியோடு இருந்ததை நான் இன்று காண முடிகிறது.

அதே கப்பலில் என் உறவினர்கள் சிலரும் எனக்குப் பழக்கமானவர்களும் இருந்தனர். எனது கட்சிக்காரரின் நண்பருக்கு அக் கப்பல் சொந்தமானதாகையால், அதில் நான் விரும்புகிற இடத்திற்கெல்லாம் தாராளமாகப் போக முடிந்தது. அதனால் இந்த உறவினர் முதலியவர்களையும் மூன்றாம் வகுப்பில் வந்த மற்றப் பிரயாணிகளையும் நான் அடிக்கடி சந்தித்து வந்தேன். மத்தியில் எந்தத் துறைமுகத்திலும் நிற்காமல், கப்பல் நேரே நேட்டாலுக்குப் போய்க் கொண்டிருந்தது. ஆகையால், எங்கள் பிரயாணம் பதினெட்டு நாட்களில் முடிந்துவிடும். ஆனால், ஆப்பிரிக்காவில் அடிக்கவிருந்த தீவிரமான போராட்டப் புயலைக் குறித்து எங்களுக்கு எச்சரிக்கை செய்வதைப்போல் நேட்டாலுக்கு இன்னும் நான்கு நாள் பிரயாணமே பாக்கி இருந்த சமயத்தில், கடலில் கடுமையான புயல் காற்று வீசியது. அது டிசம்பர் மாதம் பூமத்திய ரேகைக்குத் தெற்கிலுள்ள பகுதிக்கு அதுவே கோடைக் காலம். ஆகையால், அப் பருவத்தில் தென் சமுத்திரத்தில், பெரியதும் சிறியதுமாகப் புயல்காற்றுகள் அடிப்பது சகஜம். ஆனால் எங்களைத் தாக்கிய புயலோ மிகக் கடுமையானது. நீண்ட நேரம் அடித்தது. எனவே, பிரயாணிகள் திகல் அடைந்து விட்டனர். அது பயபக்தி நிறைந்த காட்சியாக இருந்தது. எல்லோருக்கும் பொதுவாக ஏற்பட்ட அபாயத்தில் சகலரும் ஒன்றாகிவிட்டனர். முஸ்லிம்கள், ஹிந்துக்கள் கிறிஸ்தவர்கள் முதலிய எல்லோரும், தங்களுடைய வேற்றுமைகளை யெல்லாம் மறந்து விட்டு ஒன்றை ஒரே கடவுளை நினைத்தார்கள். சிலர் அநேக வேண்டுதல்களைச் செய்துகொண்டனர்.

பிரயாணிகளின் பிரார்த்தனைகளில், கப்பல் காப்டனும் கலந்து கொண்டார். புயல் ஆபத்துக்கு இடமானதுதான் என்றாலும் அதையும்விட மோசமான புயல்களைத் தாம் அனுபவித்திருப்பதாகக் காப்டன் பிரயாணிகளுக்கு உறுதி கூறினார். சரியான வகையில் கட்டப்பட்ட கப்பல், எந்தப் புயலையும் சமாளித்துத் தாங்கிவிடும் என்றும் விளக்கினார். ஆனால், பிரயாணிகளைத் தேற்ற முடியவில்லை. கிரீச் என்ற சப்தமும், முறியும் சப்தமும் கப்பலின் பல பாகங்களிலும் ஒவ்வொரு நிமிடமும் கேட்டுக் கொண்டே இருந்தன. கப்பலில் பிளவு கண்டு, எந்த நேரத்திலும் தண்ணீர் உள்ளே புகுந்துவிடக் கூடும் என்பதை அந்தச் சப்தங்கள் நினைவுபடுத்தி வந்தன. கப்பல் அதிகமாக ஆடியது. உருண்டது எந்தக் கணத்திலும் கவிழ்ந்துவிடக் கூடும் என்று தோன்றியது மேல் தளத்தில் இருக்க முடியும் என்ற பேச்சிற்கே இடமில்லை. எல்லாம் அவன் சித்தம்போல் நடக்கும் என்று சொல்லாதவாறு இல்லை. இருபத்து நான்கு மணி நேரம் இவ்விதம் அல்லல் பட்டிருப்போம் என்பது என் ஞாபகம். கடைசியாக வானம் நிர்மலமாயிற்று, சூரியனும் காட்சியளித்தான். புயல் போய்விட்டது என்று காப்டன் அறிவித்தார். கப்பலில் இருந்தவர்களின் முகங்களில் ஆனந்தம் பொங்கியது. ஆபத்து மறைந்ததோடு அவர்களின் நாவிலிருந்து கடவுள் நாமமும் மறைந்தது. திரும்பவும் தின்பது, குடிப்பது, ஆடுவது பாடுவது என்பவற்றில் அவர்கள் இறங்கி விட்டார்கள். மரண பயம் போய்விட்டது. ஒரு கணம் மெய் மறந்து ஆண்டவனைத் துதித்த பக்தி போய், அவ்விடத்தை மாயை மூடிக்கொண்டுவிட்டது. வழக்கமான நமாஸ்களும் பிரார்த்தனைகளும் பின்னாலும் நடந்து வந்தன என்பது உண்மையே ஆனாலும், அந்த பயங்கர நேரத்தில் இருந்த பயபக்தி அவற்றில் இல்லை.

அப்புயல் மற்றப் பிரயாணிகளுடன் என்னை ஒன்றாகப் பிணைத்துவிட்டது. இதுபோன்ற புயல்களின் அனுபவம் எனக்கு இருந்ததால் புயலைப்பற்றிய பயம் எனக்குச் சிறிதும் இல்லை. கடல் பிரயாணம் எனக்குப் பழக்கப்பட்டு போனபடியால் எனக்கும் மயக்கம் வருவதே இல்லை. ஆகையால், பயமின்றிப் பிரயாணிகளிடையே நான் அங்கும் இங்கும் போக முடிந்தது. அவர்களுக்கு ஆறுதல் கூறி உற்சாகப்படுத்தி வந்தேன். புயல் நிலைமையைக் குறித்துக் காப்டன் கூறிய தகவலைப் புயல் அடித்த போது மணிக்கு மணி அவர்களுக்குக் கூறுவேன். இவ்விதம் ஏற்பட்ட நட்பு எவ்வளவு தூரம் எனக்கு உதவியாக இருந்தது என்பதை பின்னால் கவனிப்போம். டிசம்பர் 18 அல்லது 19 தேதி கப்பல் டர்பன் துறைமுகத்தில் ரங்கூரம் பாய்ச்சியது. நாதேரி என்ற கப்பலும் அன்றே வந்து சேர்ந்தது. ஆனால், உண்மையான புயல் இனிமேல்தான் அடிக்க வேண்டியிருந்தது!


Offline Anu

புயல்

டிசம்பர் 18 ஆம் தேதி, இரு கப்பல்களும் டர்பன் துறைமுகம் வந்து சேர்ந்தன என்பதைக் கவனித்தோம். தென்னாப்பிரிக்கத் துறைமுகங்களில் நன்றாக வைத்தியப் பரிசோதனை செய்யப்படுவதற்கு முன், பிரயாணிகள் இறங்க அனுமதிக்கப் படுவதில்லை. தொத்து நோயால் பீடிக்கப் பட்டவர் எவராவது கப்பலில் இருந்தால், அந்தக் கப்பலிலிருந்து யாரையும் இறங்கவிடாமல் குறிப்பிட்ட காலத்திற்கு வைத்தியக் கண்காணிப்பில் தூரத்தில் நிறுத்தி வைத்து விடுவார்கள். நாங்கள் கப்பல் ஏறிய சமயத்தில் பம்பாயில் பிளேக் நோய் பரவி இருந்ததால், கொஞ்ச காலத்திற்கு இந்த விதமான சுத்திகரணத்திற்கு நாங்கள் ஆளாக நேரலாம் என்று பயந்தோம். வைத்தியப் பரிசோதனைக்கு முன்னால் ஒவ்வொரு கப்பலிலும் ஒரு மஞ்சள் நிறக் கொடி பறக்க வேண்டும். யாருக்கும் நோய் இல்லை என்று டாக்டர் அத்தாட்சி கொடுத்த பிறகே அக்கொடி இறக்கப் படும். அந்த மஞ்சள் கொடியை இறக்கிய பின்னரே பிரயாணிகளின் உற்றார் உறவினர்கள் கப்பலுக்குள் வர அனுமதிக்கப்படுவார்கள்.

அதன்படி எங்கள் கப்பலிலும் மஞ்சள் கொடி பறந்தது. டாக்டர் வந்து, எங்களைப் பரிசோதித்துப் பார்த்தார். ஐந்து நாட்களுக்கு இக்கப்பலிலிருந்து யாரையும் இறங்க அனுமதிக்கக்கூடாது என்று டாக்டர் உத்தரவிட்டார். ஏனெனில் பிளேக் கிருமிகள் வளருவதற்கு அதிகபட்சம் இருபத்து மூன்று நாட்கள் ஆகும் என்பது அவர் கருத்து, ஆகையால் எங்கள் கப்பல் பம்பாயிலிருந்து புறப்பட்டு இருபத்து மூன்றாம் நாள் முடியும் வரையில் அதிலிருந்து பிரயாணிகளை இறக்காமல் தனித்து வைக்குமாறு உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்குக் காரணம் சுகாதாரத்தைப் பற்றிய கவலைமட்டும் அல்ல, அதைவிட முக்கியமான வேறு காரணங்களும் உண்டு.

டர்பனில் இருந்த வெள்ளைக்காரர்கள், எங்களைத் திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்று கிளர்ச்சி செய்து கொண்டிருந்தார்கள். அந்த உத்தரவுக்கு இக்கிளர்ச்சி ஒரு காரணம். டர்பனில் அன்றாடம் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைத் தாதா அப்துல்லா கம்பெனியார் தவறாமல் எங்களுக்கு அறிவித்துக் கொண்டிருந்தனர். வெள்ளைக் காரர்கள் தினந்தோறும் பெரிய பொதுக்கூட்டங்களை நடத்தி வந்தனர். தாதா அப்துல்லா கம்பெனியை, எல்லா விதங்களிலும் மிரட்டிக் கொண்டிருந்தார்கள். சில சமயங்களில் அக் கம்பெனிக்கு ஆசை வார்த்தைகளையும் கூறி வந்தனர். இரு கப்பல்களும் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டால் கம்பெனிக்குத் தக்க நஷ்ட ஈடு கொடுத்துவிடுவதாகவும் சொன்னார்கள்.

ஆனால், இந்த மிரட்டல்களுக்கெல்லாம் பயந்துவிடக் கூடியவர்கள் அல்ல தாதா அப்துல்லா கம்பெனியார். சேத்து அப்துல் கரீம் ஹாஜி ஆதம், அச்சமயம் அந்தக் கம்பெனியின் நிர்வாகப் பங்குதாரராக இருந்தார். எப்படியும் கப்பல்களைக் கரைக்குக் கொண்டு வந்து, பிரயாணிகளை இறக்கியே தீருவது விவரமாகக் கடிதங்களை எழுதி எங்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார். என்னைப் பார்ப்பதற்காக டர்பனுக்கு வந்த காலஞ்சென்ற திரு மன்சுக்லால் நாஸர், அச்சமயம் அதிர்ஷ்வசமாக அங்கே இருந்தார். அவர் திறமை வாய்ந்தவர், அஞ்சாதவர். இந்திய சமூகத்திற்கு வழிகாட்டி வந்தார். அக் கம்பெனியின் வக்கீலான திரு லாப்டனும் அஞ்சா நெஞ்சம் படைத்தவர். வெள்ளைக்காரர்களின் போக்கை அவர் கண்டித்தார். இந்திய சமூகத்தினிடம் கட்டணம் வாங்கும் வக்கீல் என்ற முறையில் மட்டும் அன்றி அச் சமூகத்தின் உண்மையான நண்பர் என்ற முறையிலும் அவர்களுக்கு அவர் ஆலோசனை கூறி வந்தார்.

இவ்வாறு சம பலம் இல்லாத ஒரு கட்சியினரின் போர்க்களமாக டர்பன் ஆயிற்று. ஒரு பக்கத்தில் ஒரு சிலரேயான ஏழை இந்தியரும் அவர்களுடைய ஆங்கில நண்பர்கள் சிலரும், மற்றொரு பக்கத்திலோ ஆயுதங்களிலும் எண்ணிக்கையிலும், படிப்பிலும், செல்வத்திலும் பலம் படைத்திருந்த வெள்ளையர்கள் நேட்டால் அரசாங்கமும் அவர்களுக்குப் பகிரங்கமாக உதவி செய்து வந்ததால், அரசாங்கத்தின் பக்க பலமும் அவர்களுக்கு இருந்தது. மந்திரி சபையில் அதிகச் செல்வாக்கு வாய்ந்த அங்கத்தினராயிருந்த திரு ஹாரி எஸ்கோம்பு வெள்ளையரின் பொதுக்கூட்டங்களில் பகிரங்கமாகக் கலந்து கொண்டார்.

கப்பல் பிரயாணிகளை அல்லது கப்பல் ஏஜெண்டுகளான கம்பெனியை எப்படியாவது மிரட்டி பிரயாணிகள் இந்தியாவுக்குத் திரும்பிப் போய்விடுமாறு பலவந்தப்படுத்திவிட வேண்டும் என்பதே கப்பல் கரைக்கு வராமல் நிறுத்தி வைத்ததன் உண்மையான நோக்கம். இப்பொழுது எங்களை நோக்கியும் மிரட்டல்களை ஆரம்பித்து விட்டார்கள். திரும்பிப் போய்விடாவிட்டால் நீங்கள் நிச்சயம் கடலில் தள்ளப்படுவீர்கள் திரும்பிவிட ஒப்புக் கொள்ளுவீர்களாயின் உங்கள் கப்பல் கட்டணத்தொகையும் உங்களுக்குக் கிடைத்துவிடும் என்று மிரட்டினர். இதற்கெல்லாம் நாங்கள் மசியவில்லை. என்னுடைய சகப்பிரயாணிகளிடம் சதா போய், அவர்களை நான் உற்சாகப்படுத்தி வந்தேன். நாதேரி கப்பலில் இருந்த பிரயாணிகளுக்கும் ஆறுதலான செய்திகளை அனுப்பிக்கொண்டு வந்தேன். அவர்கள் எல்லோருமே அமைதியாகவும் தைரியமாகவும் இருந்து வந்தனர்.

பிரயாணிகளின் பொழுது போக்குக்காக எல்லா வகையான விளையாட்டுக்களுக்கும் ஏற்பாடு செய்தோம். கிறிஸ்துமஸ் தினத்தன்று, காப்டன, மேல் வகுப்புப் பிரயாணிகளுக்கு விருந்தளித்தார். விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தவர்களில் முக்கியமானவர்கள் நானும் என் குடும்பத்தியரும். விருந்து முடிந்த பிறகு பிரசங்கங்களும் நடந்தன. அப்பொழுது நான் மேற்கத்திய நாகரிகத்தைப் பற்றிப் பேசினேன். பெரிய விஷயங்களைக் குறித்துப் பேச அது சமயம் அல்ல என்பதை நான் அறிவேன். ஆனால் என் பேச்சு வேறுவிதமாக இருப்பதற்கில்லை. பிறகு நடந்த களியாட்டங்களில் நானும் பங்கெடுத்துக் கொண்டேன். ஆனால் என் மனமெல்லாம் டர்பனில் நடந்து கொண்டிருக்கும் போராட்டத்திலேயே ஈடுபட்டிருந்தது. உண்மையில் அப் போர் என்னை எதிர்பார்த்து நடந்ததேயாகும். என் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் இரண்டு.

1. நான் இந்தியாவில் இருந்தபோது நேட்டால் வெள்ளைக் காரர்களை அக்கிரமமாகக் கண்டித்தேன் என்பது.

2. நேட்டாலை இந்திய மயம் ஆக்கிவிட வேண்டும் என்பதற்காக, அங்கே குடியேறுவதற்கு இரு கப்பல்கள் நிறையப் பிரயாணிகளைக் கொண்டு வந்திருக்கிறேன் என்பது.

என் பொறுப்பை நான் அறிவேன. என்னால் தாதா அப்துல்லா கம்பெனியார், பெரிய ஆபத்துக்கு ஆளாகி இருக்கின்றனர். பிரயாணிகளின் உயிர்களுக்கு ஆபத்து இருக்கிறது. என் குடும்பத்தினரையும் அழைத்து வந்ததால் அவர்களையும் ஆபத்தில் வைத்துவிட்டேன் என்பவற்றை எல்லாம் அறிவேன். ஆனால் நான் முற்றும் குற்றம் அற்றவன். நேட்டாலுக்குப் போகுமாறு நான் எவரையும் தூண்டவில்லை. பிரயாணிகள் கப்பலில் ஏறியபோது அவர்கள் யார் என்பதே எனக்குத் தெரியாது. என் உறவினர் இருவரைத் தவிர கப்பலில் இருந்த பிரயாணிகளில் ஒருவருடைய பெயர், விலாசம் கூட எனக்குத் தெரியாது. நேட்டாலில் நான் இருந்தபோது வெள்ளைக்காரர்களைக் குறித்து நான் கூறாத வார்த்தை ஒன்றையேனும், இந்தியாவில் இருந்தபோது நான் சொன்னதே இல்லை. மேலும் நான் சொன்னது இன்னது என்பதற்கு ஏராளமான சாட்சியங்களும் இருக்கின்றன.

நேட்டால் வெள்ளைக்காரர்கள் எந்த நாகரிகத்தின் கனிகளோ, எந்த நாகரிகத்தின் பிரதிநிதிகளாக இருந்து அதை ஆதரிக்கிறார்களோ அந்த நாகரிகத்திற்காக நான் வருந்தினேன். அந்த நாகரிகம் எப்பொழுதும் என் மனத்தில் இருந்து வந்தது. ஆகவே, அச்சிறு கூட்டத்தில் நான் பேசியபோது, அந்த நாகரிகத்தைப் பற்றி என் கருத்தை எடுத்துக் கூறினேன். காப்டனும் மற்ற நண்பர்களும் பொறுமையுடன் கேட்டனர். எந்த உணர்ச்சியுடன் நான் பேசினேனோ அதே உணர்ச்சியுடன் என் பிரசங்கத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். அவர்கள் வாழ்க்கையின் போக்கை அப்பேச்சு எந்த வகையிலாவது மாற்றியதா என்பது எனக்குத்தெரியாது. ஆனால் அதற்குப் பின்னர் காப்டனுடனும் மற்ற அதிகாரிகளோடும் மேனாட்டு நாகரிகத்தைக் குறித்து, நீண்ட நேரம் நான் பேசிக் கொண்டிருந்தேன். கிழக்கத்திய நாகரிகத்தைப்போல் அல்லாமல் மேற்கத்திய நாகரிகம் முக்கியமாக பலாத் காரத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்று என் பிரசங்கத்தில் விவரித்தேன். என் கொள்கையை நானே நிறைவேற்ற முடியுமா என்று சிலர் கேள்வி கேட்டனர். அவர்களில் ஒருவர் காப்டன் என்பது எனக்கு ஞாபகம்.

அவர் என்னை நோக்கி வெள்ளைக்காரர்கள் தங்கள் மிரட்டலை நிறைவேற்றுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளவோம். அப்பொழுது உங்களுடைய அகிம்சைக் கொள்கையை எப்படிக் கடைப்பிடிப்பீர்கள் என்ற கேட்டார். அதற்கு நான் பின்வருமாறு பதில் சொன்னேன். அவர்களை மன்னித்து, அவர்கள் மீது வழக்குத் தொடராமல் இருந்துவிடும் தீரத்தையும் நற்புத்தியையும் கடவுள் எனக்கு அளிப்பார் என்றே நம்புகிறேன். அவர்கள் மீது எனக்குக் கோபம் இல்லை. அவர்களுடைய அறியாமைக்கும் குறுகிய புத்திக்கும் வருத்தமே கொள்ளுகிறேன். தாங்கள் இன்று செய்துகொண்டிருப்பது சரியானது, நியாயமானது என்று அவர்கள் உண்மையாகவே நம்புகிறார்கள் என்பதை அறிவேன். ஆகையால், அவர்கள் மீது நான் கோபம் கொள்ளுவதற்கு எந்தக் காரணமும் இல்லை.

கேள்வி கேட்டவர் ஆயாசத்தை உண்டு பண்ணி வண்ணம் நீண்டு கொண்டே இருந்தன. இப்படிக் கப்பல் ஒதுக்கி வைக்கப் பட்டிருப்பது எப்பொழுது ரத்தாகும் என்பது நிச்சயம் இல்லாமல் இருந்தது. இப்படிக் கப்பலை நிறுத்தி வைக்க உத்தரவிட்ட அதிகாரியோ, விஷயம் தம் கையை விட்டுக் கடந்துவிட்டது என்றும் அரசாங்கத்தின் உத்தரவு வந்ததுமே கப்பலில் இருந்து இறங்க எங்களை அனுமதித்து விடுவதாகவும் கூறினார். கடைசியாக எனக்கும் பிரயாணிகளுக்கும் இறுதி எச்சரிக்கைகள் வந்து சேர்ந்தன. உயிரோடு நாங்கள் தப்பிப் போய்விட வேண்டுமானால், பணிந்துவிடுமாறு எங்களுக்குக் கூறபட்டது, எங்கள் பதிலில், பிரயாணிகளும் நானும் நேட்டால் துறைமுகத்தில் இறங்குவதற்கு எங்களுக்கு உள்ள உரிமையை வற்புறுத்தினோம். என்ன கஷ்டம் நேருவதாயினும், நேட்டாலில் பிரவேசித்தே தீருவது என்று நாங்கள் கொண்டிருந்த உறுதியையும் தெரிவித்தோம். இருபத்து மூன்று நாட்கள் கழித்து, எங்கள் கப்பல்கள் துறைமுகத்திற்கு வர அனுமதித்தார்கள். பிரயாணிகள் இறங்குவதை அனுமதிக்கும் உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டன.


Offline Anu

சோதனை

கப்பல்களைக் கரையோரமாகக் கொண்டு போய் நிறுத்தினர், பிரயாணிகளும் இறங்க ஆரம்பித்தார்கள். அப்பொழுது திரு எஸ்கோம்பு, காப்டனுக்கு ஒரு சமாசாரம் சொல்லியனுப்பியிருந்தார். வெள்ளைக்காரர்கள் என்மீது மிகுந்த கோபத்துடன் இருக்கிறார்கள் என்றும், அதனால் என் உயிர் ஆபத்தில் இருக்கிறது என்றும் நானும் என் குடும்பத்தினரும் இருட்டிய பிறகு கப்பலிலிருந்து இறங்கும்படி சொல்லுமாறும், அப்பொழுது துறைமுக சூப்பரிண்டெண்டென்டு திரு டாட்டம், எங்களைப் பத்திரமாக வீடு கொண்டு போய்ச் சேர்ப்பார் என்றும் சொல்லி எச்சரித்தார். அப்படியே செய்வதாக நானும் ஒப்புக்கொண்டேன். அரை மணி நேரம்கூட ஆகியிராது. திரு லாப்டன், காப்டனிடம் வந்தார். அவர் சொன்னதாவது. திரு காந்திக்கு ஆட்சேபம் இல்லையென்றால் அவரை என்னுடன் அழைத்துப் போக விரும்புகிறேன். திரு எஸ்கோம்பு உங்களுக்குச் சொல்லியனுப்பி யிருப்பதை நிறைவேற்ற வேண்டிய கடமை உங்களுக்கு இல்லை. கப்பல் ஏஜெண்டான கம்பெனியின் சட்ட ஆலோசகன் என்ற முறையில் இதைக் கூறுகிறேன்.

பிறகு அவர் என்னிடம் வந்து பின்வருமாறு கூறினார். நீங்கள் பயப்பட வில்லையானால், நான் ஒரு யோசனை கூறிகிறேன். திருமதி காந்தியும் குழந்தைகளும் திரு ருஸ்தம்ஜியின் வீட்டிற்கு வண்டியில் முன்னால் போகட்டும் அவர்களுக்குப் பின்னால் நீங்களும் நானும் நடந்தே போவோம். இரவில் திருடனைப்போல் நகருக்குள் நீங்கள் பிரவேசிப்பது எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. உங்களை துன்புறுத்தி விடுவார்கள் என்று அஞ்சுவதற்கு இடம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. இப்பொழுது எல்லாம் அமைதியாக இருக்கிறது. வெள்ளைக்காரர்கள் எல்லோரும் கலைந்து போய்விட்டனர். ஆனால், எப்படியும் நீங்கள் ஒளிந்துகொண்டு நகருக்குள் வரக்கூடாது என்று மாத்திரம் நான் உறுதியாக எண்ணுகிறேன். இதற்கு நான் உடனே ஒப்புக்கொண்டேன். என் மனைவியும் குழந்தைகளும் வண்டியில் பத்திரமாக திரு ருஸ்தம்ஜியின் இடத்துக்குப் போய் சேர்ந்துவிட்டனர். காப்டனின் அனுமதியின் பேரில் திரு லாப்டனுடன் நான் கப்பலிலிருந்து இறங்கினேன். துறைமுகத்திலிருந்து திரு ருஸ்தம்ஜி வீடு இரண்டு மைல் தூரம்.

நாங்கள் கீழே இறங்கியதும், சில சிறுவர்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டனர். காந்தி, காந்தி என்று சப்தம் போட்டனர். இதைக் கேட்டதும் ஐந்நூறு பேர் அங்கே ஓடி வந்தார்கள். அவர்களும் சேர்ந்து கூச்சல் போட்டனர். கூட்டம் பலத்துவிடக் கூடும் என்று திரு லாப்டன் பயந்தார். பக்கத்தில் நின்ற ஒரு ரிக்ஷாவைக் கூப்பிட்டார். ரிக்ஷாவில் ஏறுவது என்பதே எனக்கு எப்பொழுதும் பிடிப்பதில்லை. அப்படி ஏறியிருந்தால் அதுவே எனக்கு முதல் அனுபவமாக இருந்திருக்கும். ஆனால் நான் ரிக்ஷாவில் ஏறச் சிறுவர்கள் விடவில்லை. ரிக்ஷாக்காரனைக் கொன்றுவிடுவதாக மிரட்டினார்கள். அவன் ஓட்டம் எடுத்துவிட்டான். நாங்கள் போக ஆரம்பித்தோம். கூட்டம் அதிகமாகிக் கொண்டே வந்தது. மேற்கொண்டும் போக முடியாத அளவுக்குக் கூட்டம் பெருகிவிட்டது. முதலில் திரு லாப்டனைப் பிடித்து அப்புறப்படுத்தி எங்களைத் தனித் தனியாகப் பிரித்துவிட்டனர். பிறகு என்னைக் கற்காளாலும் அழுகிய முட்டைகளாலும் அடித்தார்கள்.

ஒருவர் என் தலைப்பாகையைப் பிடுங்கிக் கொண்டார். மற்றவர்கள் என்னை அடிக்கவும் உதைக்கவும் ஆரம்பித்தனர். உணர்வு இழந்து சோர்ந்துவிட்டேன். கீழே விழுந்து விடாமல் இருக்க ஒரு வீட்டின் முன்புறக் கிராதியைப் பிடித்துக் கொண்டேன். சற்று மூச்சுவிடலாம் என்று அங்கே நின்றேன். ஆனால், முடியவில்லை. அங்கே வந்ததும் என்னை முஷ்டியால் சூப்பிரிண்டெண்டென்டின் மனைவியார் அப்பக்கம் வந்தார். அந்த வீரப் பெண்மணி என்னிடம் வந்தார். அப்பொழுது வெளியில் இல்லை என்றாலும் தம் கைக்குடையை விரித்துக் கொண்டு எனக்கும் கூட்டத்திற்கும் நடுவில் நின்றுகொண்டார். அக்கூட்டத்தின் கோபவெறியை இது தடுத்தது. போலீஸ் சூப்பரிண்டெண்டென்ட்டான திரு அலெக்ஸாண்டரின் மனைவிக்குத் துன்பம் இழைக்காமல் அந்த வெறியர்கள் என்னை அடிப்பது சிரமம் ஆகிவிட்டது.

இதற்கு மத்தியில் இச்சம்பவத்தைப் பார்த்த ஓர் இந்திய இளைஞர், போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடினார். என்னைச் சுற்றி நின்று கொண்டு நான் போக வேண்டிய இடத்தில் என்னை கொண்டு போய்ச் சேர்த்துவிட்டு வருமாறு கூறிப்போலீஸ் சூப்பரிண்டெண்டென்டான திரு அலெக்ஸாண்டர், போலீஸ்காரர்களை அனுப்பினார். நல்ல சமயத்தில் அவர்களும் வந்து சேர்ந்தனர். போலீஸ் ஸ்டேஷன் நாங்கள் போகும் வழியில் இருந்தது. நாங்கள அங்கே போனதும், ஸ்டேஷனிலேயே பத்திரமாகத் தங்கிவிடுமாறு சூப்பரிண்டெண்டென்டு கூறினார். அவர் யோசனைக்கு நன்றி கூறினேன். ஆனால் அங்கே தங்க மறுத்துவிட்டேன். தங்கள் பிழையை உணரும்போது அவர்கள் சாந்தம் அடைந்துவிடுவது நிச்சயம். அவர்களுக்கு நியாய புத்தியும் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்றேன். பின்னர், போலீஸ் பாதுகாப்புடன் மேற்கொண்டு எவ்விதத் துன்பமும் இல்லாமல் திரு ருஸ்தம்ஜியின் வீட்டை அடைந்தேன். உடம்பெல்லாம் இசிவு, ஊமைக்காயம். ஓர் இடத்தில் மாத்திரம் தோல் பெயர்ந்து காயம் ஏற்பட்டிருந்தது. அங்கே இருந்த கப்பலின் டாக்டர் தம்மால் சாத்தியமான எல்லா உதவிகளையும் செய்தார்.

வீட்டிற்குள் அமைதியாக இருந்தது, ஆனால் வெளியிலோ வெள்ளையர், வீட்டைச் சுற்றி வளைத்துக்கொண்டனர். இரவும் வந்து காந்தியை வெளியே அனுப்பு என்று அந்த ஆவேசக் கூட்டம் கூச்சல் போட்டு கொண்டிருந்தது. நிலைமையை உடனே அறிந்து கொண்ட போலீஸ் சூப்ரிண்டெண்டென்டு, கூட்டம் கட்டுக்கடங்காது போய்விடாதபடி ஏற்கனவே வந்து சமாளித்துக் கொண்டிருந்தார். கூட்டத்தை அவர் விரட்டவில்லை. அவர்களிடம் தமாஷ் செய்தே சமாளித்து வந்தார். என்றாலும் நிலைமை அவரும் கவலைப்பட வேண்டியதாகவே இருந்தது. பின்வருமாறு என்குச் செய்தி அனுப்பினார். உங்கள் நண்பரின் வீட்டையும் சொத்துக்களையும் உங்கள் குடும்பத்தையும் நீங்கள் பாதுகாக்க விரும்பினால், என் யோசனைப்படி மாறுவேடத்துடன் நீங்கள் வீட்டிலிருந்து தப்பி வெளியே வந்துவிட வேண்டும்.

இவ்விதம் ஒரே நாளிலேயே, ஒன்றுக்கொன்று மாறுப்பட்ட இரு நிலைமைகளை நான் சமாளிக்க வேண்டியதாயிற்று. உயிருக்கு ஆபத்து நேரலாம் என்று கற்பனையில் மாத்திரமே பயந்த திரு லாப்டன், என்னைப் பகிரங்கமாக வெளியில் வருமாறு யோசனை கூறினார். அந்த யோசனையை ஏற்று நடந்தேன். ஆபத்து முற்றும் உண்மையாகவே இருந்த சமயத்தில், மறறொரு நண்பர் அதற்கு நேர்மாறான யோசனையைக் கூறினார். அதையும் ஏற்று நடந்தேன். என் உயிர் ஆபத்தில் இருக்கிறது என்பதனால் அப்படிச் செய்தேனா, அல்லது என் நண்பரின் உயிருக்கும் சொத்துக்கும் என் மனைவி மக்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுவிட வேண்டாம் என்பதற்காக அப்படிச் செய்தேனா என்பதை யார் கூற முடியும் ? மேலே கூறியது போல், முதலில் கூட்டத்தை நான் தைரியமாக எதிர்த்து நின்றது, பின்னால் மாறுவேடத்துடன் நான் தப்பியது ஆகிய இரண்டிலும் நான் செய்தது சரிதான் என்று யாரால் நிச்சயமாகச் சொல்ல முடியும் ?

நடந்து போய்விட்ட சம்பவஙகளைக் குறித்து, அவை சரியா, தப்பா என்ற ஆராய்ச்சியில் இப்பொழுது இறங்குவது வீண் வேலை. அவைகளைப் புரிந்து கொள்ளுவதும், சாத்தியமானால் அவைகளிலிருந்து அனுபவம் பெறுவதும் பயன் உள்ளதே. குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட ஒருவர் இவ்வாறுதான் நடந்து கொள்ளுவார் என்று நிச்சயமாகச் சொல்லுவது கஷ்டம். அதோடு, ஒருவருடைய வெளிப்படையான காரியங்களிலிருந்து, அவருடைய குணத்தைச் சந்தேகத்திற்கு இடமின்றிக் கண்டு அறிந்துவிட முடியாது என்பதையும் நான் காணலாம். ஏனெனில், அவருடைய குணத்தைக் கண்டு அறிந்துவிட, அவருடைய வெளிப்படையான காரியங்கள் மாத்திரம் போதுமான ஆதாரங்கள் ஆகிவிடா.

அது எப்படியாவது இருக்கட்டும். தப்பிப் போய் விடுவதற்குச் செய்த ஏற்பாடுகளில் என் காயங்களை மறந்து விட்டேன். சூப்பரிண்டெண்டென்டின் யோசனைப்படி, இந்தியக் கான்ஸ்டாபிளின் உடையைப் போட்டுக்கொண்டேன். ஒரு சட்டி மீது மதராஸி அங்கவஸ்திரத்தைச் சுற்றிக் கவசமாகத் தலையில் வைத்துக் கொண்டேன். என்னுடன் இரண்டு துப்பறியும் போலீஸார் வந்தனர். அவர்களில் ஒருவர், இந்திய வர்த்தகர் வேஷம் போட்டுக்கொண்டார். இந்தியரைப்போல் தெரிய வேண்டும் என்பதற்காக அவர், தம் முகத்தில் வர்யம் பூசிக்கொண்டார். மற்றொருவர் என்ன வேடம் போட்டுக் கொண்டார் எனக்கு ஞாபகம் இல்லை. ஒரு குறுக்குச் சந்தின் வழியாகப் பக்கத்துக் கடைக்குள் புகுந்தோம். அங்கே அடுக்கிக் கிடந்த சாக்குக் கட்டுகளின் ஊடேசென்று, அக்கடையின் வாசலை அடைந்தோம். அங்கிருந்து கூட்டத்திற்குள் புகுந்து, தெருக்கோடிக்குப் போனோம். அங்கே ஒரு வண்டி எங்களுக்குக்கென்று தயாராக வைக்கப்பட்டிருந்தது, அதில் ஏறி, போலீஸ் ஸ்டேஷனை அடைந்தோம். எனக்கு அடைக்கலம் தருவதாக திரு அலெக்ஸாண்டர், கொஞ்ச நேரத்திற்கு முன்னால் சொன்னதும், அதே போலீஸ் ஸ்டேஷன்தான். அவருக்கும் துப்பறியும் அதிகாரிகளுக்கும் நன்றி கூறினேன்.

இவ்வாறு நான் தப்பி வந்து கொண்டிருந்த சமயத்தில் திரு அலெக்ஸாண்டர் புளிப்பு ஆப்பிள் மரத்தில், கிழட்டுக் காந்தியைத் தூக்கில் போடு என்று பாட்டுப்பாடி, அவர்களுக்குச் சுவாரஸ்யம் அளித்துக்கொண்டிருந்தார். நான் போலீஸ் ஸ்டேஷனுக்குப் பத்திரமாகப் போய்ச் சேர்ந்து விட்டேன் என்பது தெரிந்ததும், அவர் பின்வரும் செய்தியைக் கூட்டத்தினருக்கும் வெளியிட்டார். சரி நீங்கள் தேடும் ஆசாமி, பக்கத்துக் கடைவழியாகத் தப்பிப் போய்விட்டார். ஆகையால், இப்பொழுது நீங்கள் வீட்டுக்குப் போகலாம். இதைக் கேட்டுச் சிலர் கோபம் அடைந்தனர். மற்றவர்களோ சிரித்தனர். இக்கதையைச் சிலர் நம்பவே மறுத்துவிட்டனர்.

சூப்பரிண்டெண்டென்டு கூறியதாவது. நான் சொல்லுவதை நீங்கள் நம்பவில்லையென்றால், உங்கள் பிரதிநிதியாக ஒருவரை அல்லது இருவரை நியமியுங்கள். அவர்களை வீட்டுக்குள் அழைத்துப் போக நான் தயார். அவர்கள் காந்தியை அங்கே கண்டுபிடித்து விட்டால் அவரை உங்களிடம் ஒப்படைத்து விடுகிறேன். அவர்கள் கண்டுபிடிக்கவில்லையென்றால் நீங்கள் கலைந்து போய்விடவேண்டும். திரு ருஸ்தம்ஜியின் வீட்டை நாசப்படுத்த வேண்டும் என்பதோ, திரு காந்திஜியின் மனைவியையும் குழந்தைகளையும் துன்புறுத்த வேண்டும் என்பதோ உங்கள் நோக்கம் அல்ல என்று நம்புகிறேன். வீட்டைச் சோதிக்கக் கூட்டத்தினர் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பினார்கள். ஏமாற்றச் செய்தியுடன் அவர்கள் சீக்கிரமே திரும்பிவிட்டனர். கடைசியாகக் கூட்டமும் கலைந்தது. அவர்களில் பெரும்பாலானவர் சூப்பரிண்டெண்டென்டு சாமர்த்தியமாக நிலைமையைச் சமாளித்திருப்பதைப் பாராட்டினர். மற்றும் சிலரோ, ஆத்திரத்தினால் குமுறிக் கொண்டே போனார்கள்.

காலஞ்சென்ற திரு சேம்பர்லேன் அப்பொழுது குடியேற்ற நாடுகளின் மந்திரியாக இருந்தார். என்னைத் தாக்கியவர்களைக் கைது செய்து, வழக்குத் தொடருமாறு நேட்டால் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டு அவர் தந்தி கொடுத்தார். திரு எஸ்கோம்பு என்னைக் கூப்பிட்டனுப்பினார். எனக்கு ஏற்பட்ட காயங்களுக்காக வருத்தம் தெரிவித்துக் கொண்டார். அவர் கூறியதாவது. உங்கள் உடம்புக்கு மிகச் சொற்ப தீங்க இழைக்கப்படினும் அதற்காக நான் வருந்தாமல் இருக்க முடியாது. இதை நீங்கள் நம்புங்கள். என்ன வந்தாலும் சரி திரு லாப்டனுடைய யோசனையை ஏற்றுக் கொள்ளுவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் என் யோசனையை நீங்கள் கொஞ்சம் கவனித்திருப்பீர்களாயின், இந்தத் துக்ககரமான சம்பவங்கள் நிகழ்ந்தே இராது என்பது நிச்சயம். உங்களைத் தாக்கியவர்களை நீங்கள் அடையாளம் காட்டினால் அவர்களைக் கைது செய்து, வழக்குத் தொடர நான் தயாராக இருக்கிறேன். நான் அவ்வாறு செய்ய வேண்டும் என்றே திரு சேமபர்லேனும் விரும்புகிறார்.

அதற்கு நான் பின்வருமாறு பதில் சொன்னேன். யார் மீதும் குற்றஞ்சாட்டி வழக்குத் தொடர நான் விரும்பவில்லை. அவர்களில் இரண்டொருவரை நான் அடையாளம் கண்டுபிடிப்பதும் சாத்தியமாக இருக்கலாம். ஆனால், அவர்கள் தண்டனை அடையும்படி செய்வதால் என்ன பயன் ? மேலும் அடித்தவர்களே குற்றஞ் சொல்ல வேண்டும். மக்களைச் சரியான வழியில் நீங்கள் நடத்திச் சென்றிருக்கலாம். ஆனால், ராய்ட்டரின் செய்தியை நீங்களும் நம்பிவிட்டீர்கள். இல்லாததையெல்லாம் நான் கூறியிருப்பேன் என்று நீங்களும் எண்ணிக்கொண்டீர்கள். யார்மீதும் குற்றஞ்சாட்டி வழக்குத் தொடர நான் விரும்பவில்லை. உண்மை தெரிந்ததும், தாங்கள் நடந்து கொண்டு விட்டதற்கு அவர்களே வருந்துவார்கள் என்பதை நான் நிச்சயமாக அறிவேன்.

நீங்கள் கூறியதைத் தயவு செய்து எழுத்து மூலம் கொடுக்கிறீர்களா ? என்று திரு எஸ்கோம்பு கேட்டார். அவர் மேலும் கூறியதாவது. ஏனெனில், அப்படியே நான் திரு சேம்பர்லேனுக்குத் தந்தி மூலம் அறிவித்துவிட வேண்டியிருக்கிறது. அவசரத்தில் நீங்கள் எதையும் எழுதிக் கொடுக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. திட்டமான ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்னால், நீங்கள் விரும்பினால் திரு லாப்டனையும் மற்ற நண்பர்களையும் கலந்து ஆலாசித்துக் கொள்ளுங்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் ஒன்றை மாத்திரம் உங்களிடம் ஒப்புக்கொண்டு விடுகிறேன். உங்களைத் தாக்கியவர்கள் மீது குற்றஞ்சாட்டி வழக்குத் தொடரும் உரிமையை நீங்கள் விட்டுக் கொடுத்து விடுவீர்களாயின், அமைதியை நிலைநாட்டுவதற்கு அதிக அளவு எனக்கு உதவி செய்தவர்கள் ஆவீர்கள். அதோடு உங்கள் பெருமையையும் உயர்த்திக் கொண்டவர்கள் ஆவீர்கள். உங்களுக்கு நன்றி நான் யாரையும் கலந்து ஆலோசிக்க வேண்டியதில்லை. உங்களிடம் வருவதற்கு முன்னாலேயே இது சம்பந்தமாக நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். என்னைத் தாக்கியவர்கள்மீது குற்றஞ் சாட்டி, வழக்குத் தொடரக்கூடாது என்பது என் கொள்டிகை. என் தீர்மானத்தை இப்பொழுதே எழுத்து மூலம் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறேன். இப்படிக் கூறி அவசியமான அறிக்கையை எழுதிக் கொடுத்தேன்.


Offline Anu

புயலுக்குப் பின் அமைதி

இன்னும் போலீஸ் ஸ்டேஷனை விட்டு, நான் வீட்டுக்குப் போகவில்லை. இரண்டுநாள் கழித்துப் போலீஸ் ஸ்டேஷனில் இருந்தபடியே என்னை ஸ்ரீ எஸ்கோம்பிடம் அழைத்துச் சென்றனர். எனக்குப் பாதுகாப்பு, முன் எச்சரிக்கை எதுவுமே தேவை இல்லாதிருந்தும் என் பாதுகாப்புக்காக இரு போலீஸாரை என்னுடன் அனுப்பினர்.

கப்பலிலிருந்து இறங்கிய அன்று, மஞ்சள் கொடி இறக்கப் பட்டதும் நேட்டால் அட்வர்டைஸர், பத்திரிகையின் பிரதிநிதி, என்னைப் பேட்டி காண்பதற்குக் கப்பலுக்கு வந்தார். அவர் என்னைப் பல கேள்விக் கேட்டார். அவற்றிற்குப் பதில் அளிக்கையில் என்மீது கூறப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டையும் நான் மறுக்க முடிந்தது. இந்தியாவில் நான் செய்த பிரசங்கங்கள் யாவும் எழுதிப் படித்தவை. இதற்காக ஸர் பிரோஸ்÷ஷா மேத்தாவுக்கு நான் நன்றி செலுத்த வேண்டும். அந்தப் பிரசங்கங்களின் பிரதிகளும் என்னிடம் இருந்தன. நான் மற்றபடி பத்திரிககைளுக்கு எழுதியவைகளுக்கும் நகல் வைத்திருந்தேன். என்னைப் பேட்டிகாண வந்த நிருபரிடம் அவைகளையெல்லாம் கொடுத்தேன். தென்னாப்பிரிக்காவில் அதிகக் கடுமையான பாஷையில் சொல்லாதது எதையும் நான் இந்தியாவில் சொல்லி விடவே இல்லை என்பதையும் அவருக்குக் காட்டினேன். கோர்லாண்டு, நாதேரி கப்பல்களில், பிரயாணிகள் தென்னாப்பிரிக்காவுக்கு வந்ததில், என் சம்பந்தம் எதுவுமே இல்லை என்பதையும் அவருக்குக் காட்டினேன். அப்பிரயாணிகளில் அநேகர், முன்பே அங்கே வசிப்பவர்கள். மற்றும் பலர் டிரான்ஸ்வாலுக்குப் போகிறவர்களேயன்றி நேட்டாலில தங்க விரும்புகிறவர்கள் அல்ல. அந்தக் காலத்தில் செல்வம் தேட வருகிறவர்களுக்கு நேட்டாலை விட டிரான்ஸ்வால்தான் அதிகச் சௌகரியமானதாக இருந்தது ஆகையால் இந்தியரில் அநேகர் அங்கே போகவே விரும்பினார்கள்.

பத்திரிகை நிருபருக்கு அளித்த பேட்டியும், என்னைத் தாக்கியவர்கள் மீது வழக்குத் தொடர நான் மறுத்ததும், மிகச் சிறந்த வகையில் என் பேரில் நல்லெண்ணத்தை உண்டாக்கி விட்டன. தங்கள் நடத்தைக்காக டர்பன் ஐரோப்பியர்கள் வெட்கப்பட்டனர். நான் ஒரு பாவமும் அறியாதவன் என்று பத்திரிகைகள் கூறின, ஜனக்கூட்டத்தின் செயலைக் கண்டித்தன. இவ்விதம் என்னை ஆத்திரத்துடன் கொல்ல முயன்றது, எனக்கு  அதாவது என் லட்சியத்திற்கு பெரும் நன்மையாகவே முடிந்தது. தென்னாப்பிரிக்காவில் இந்திய சமூகத்தின் கௌரவம் இதனால் உயர்ந்தது என் வேலையையும் இது எளிதாக்கியது.

மூன்று நான்கு நாட்களில் நான் என் வீட்டிற்குத் திரும்பினேன். சீக்கிரத்திலேயே வழக்கம்போல வாழ்க்கையை நடத்த ஆரம்பித்து விட்டேன். மேற்கண்ட சம்பவம் என் வக்கீல் தொழிலிலும் வருமானம் அதிகமாகும்படி செய்தது. சமூகத்தின் கௌரவத்தை அது அதிகமாக்கியதுடன் சமூகத்தின்மீது இருந்த துவேஷத்தையும் அது வளர்த்துவிட்டது. இந்தியன், ஆண்மையுடன் எதிர்த்தும் போராடுவான் என்பது நிரூபிக்கப்பட்ட உடனே அவன், தங்கள் நலத்துக்கு ஓர் ஆபத்து என்றும் வெள்ளைக்காரர்கள் கருதலானார்கள். நேட்டால் சட்டசபையில் இரு மசோதாக்களைக் கொண்டு வந்தார்க்ள். அதில் ஒன்று, இந்திய வர்த்தகர்களுக்குப் பாதகம் விளைவிக்கக்கூடியது, மற்றொன்று, இந்தியர் வந்து குடியேறுவதற்கு கடுமையான தடையை விதிப்பது. வாக்குரிமைக்காக நடத்திய போராட்டத்தினால் அதிர்ஷ்டவசமாக ஒரு பலன் ஏற்பட்டிருந்தது. அதாவது நிறம் அல்லது இனத்தைக் குறித்துச் சட்டம் பேதம் காட்டச் கூடாதாகையால், இந்தியர் என்ற வகையில் அவர்களுக்கு விரோதமாக எந்தச் சட்டமும் செய்யக்கூடாது என்று முடிவாகி இருந்தது. ஆகையால், மேற்கண்ட மசோதாக்களின் வாதம். எல்லோருக்கும் அச்சட்டம் அமுலாகும் என்ற முறையில் இருந்தது. ஆனால் அவர்களுடைய உண்மையான நோக்கம் நேட்டாலில் இருக்கும் இந்தியருக்கு மேற்கொண்டும் நிர்பந்தங்களை உண்டாக்குவதேயாகும்.

இம் மசோதாக்கள், எனக்கு இருந்த பொது வேலையை அதிக அளவுக்கு அதிகமாக்கிவிட்டன. சமூகம் எப்பொழுதையும்விட நன்றாகத் தன் கடமையை உணர்ந்திருக்கும்படியும் இவை செய்தன. அம் மசோதாக்களில் மறைந்திருந்த விஷம நோக்கத்தைச் சமூகத்தினர் அறியும்படி செய்வதற்காக அவைகளை இந்திய மொழிகளில் மொழிபெயர்த்து, முற்றும் விளக்கியும் வைத்தோம். குடியேற்ற நாட்டு மந்திரிக்கு விண்ணப்பித்துக் கொண்டோம். இதில் தலையிட அவர் மறுத்துவிட்டதால் மசோதாக்கள் சட்டம் ஆகிவிட்டன. நேரம் முழுவதையும் அநேகமாக நான் பொது வேலைக்கே செலவிட வேண்டியதாயிற்று. நான் முன்பு கூறியது போல் ஸ்ரீ மன்சுக்லால் நாஸர் டர்பனுக்கு முன்பே வந்து விட்டதால், அவர் என்னுடன் தங்கலானார். தம் நேரத்தை அவர் பொது வேலைகளில் செலவிட்டதால் ஓரளவுக்கு எனக்கு இருந்த வேலை குறைந்தது.

நான் இல்லாதிருந்த சமயத்தில் எனக்குப் பதிலாக காங்கிரஸ் காரியதரிசியாக இருந்த சேத் ஆதம்ஜி மியாகான், போற்றத்தக்க வகையில் தமது கடமையை நிறைவேற்றியிருந்தார். அங்கத்தினர்கள் தொகையை அதிகமாக்கியிருந்தார். அதோடு நேட்டால் இந்தியக் காங்கிரஸின் நிதியிலும் சுமார் ஆயிரம் பவுன் அதிகமாக்கியிருந்தார். இம் மசதோக்களினாலும் நாங்கள் கப்பலிலிருந்து இறங்கியபோது நடந்த ஆர்ப்பாட்டங்களினாலும் இந்தியரிடையே ஏற்பட்டிருந்த விழிப்பை நான் நல்ல வழியில் பயன்படுத்திக் கொண்டேன். அங்கத்தினர்கள் அதிகமாகச் சேருவதுடன் பணமும் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். இப்பொழுது நிதி 5,000 பவுன் ஆயிற்று காங்கிரஸுக்கு நிரந்தரமான நிதியைத் திரட்டி அந்த நிதியைக்கொண்டு சொத்துக்களை வாங்கி, அச்சொத்துக்களிலிருந்து கிடைக்கும் வாடகையைக் கொண்டு ஸ்தாபனம் நடந்துவருமாறு செய்ய வேண்டும் என்று விரும்பினேன். ஒரு பொது ஸ்தாபனத்தை நிர்வகிப்பதில் எனக்கு இது முதல் அனுபவம். என் யோசனையை என் சக ஊழியர்களிடம் அறிவித்தேன். அவர்களும் இதை ஆதரித்தனர். வாங்கிய சொத்து, வாடகைக்கு விடப்பட்டது. கிடைத்த வட்டி, காங்கிரஸின் நடைமுறைச் செலவுக்குப் போதுமானதாக இருந்தது. சொத்தை நிர்வகிப்பதற்குச் செலவுக்குப் போதுமானதாக கொண்ட தர்மகர்த்தா சபையையும் அமைத்தோம். இன்றும் கூட அது இருந்து வருகிறது. ஆனால், அது இடைவிடாத சச்சரவுக்கு இடமாகி விட்டது. இதன் காரணமாக இப்பொழுது அச் சொத்தின் வாடகைப் பணமெல்லாம் கோர்ட்டில் சேர்ந்து கொண்டிருக்கிறது.

இந்தத் துக்ககரமான நிலைமை நான் தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்த பிறகு உண்டாயிற்று. ஆனால் இந்தத் தகராறு ஏற்படுவதற்கு வெகு காலத்திற்கு முன்பே, பொது ஸ்தாபனங்களுக்கு நிரந்தரமான நிதி இருக்க வேண்டும் என்று எனக்கு இருந்த கருத்து மாறிவிட்டது. இப்பொழுதோ, பல பொது ஸ்தாபனங்களை நான் நிர்வகித்திருப்பதால் எனக்கு அதிக அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. நிரந்தரமான நிதியின் மூலம் பொது ஸ்தாபனங்களை நடத்துவது நல்லது அல்ல என்பதே இப்பொழுது என்னுடைய திடமான கருத்தாகி விட்டது. நிரந்தரமான நிதி ஒரு ஸ்தாபனத்திற்கு இருக்குமாயின் அந்த ஸ்தாபனத்தின் ஒழுக்கச் சிதைவுக்கான வித்தும் அந்நிதியுடன் ஊன்றப்பட்டு விடுகிறது. பொதுமக்களுடைய அங்கீகாரத்தின் பேரில், அவர்கள் அளிக்கும் நிதியைக் கொண்டு நடப்பதே பொது ஸ்தாபனம். அத்தகைய ஸ்தாபனத்திற்குப் பொதுஜன ஆதரவு இல்லையென்றால், பின்னும் நீடிப்பதற்கு அதற்கு எந்த உரிமையும் இல்லை. நிரந்தரமான நிதியைக் கொண்டு நடப்பதே பொது ஸ்தாபனம். அத்தகைய ஸ்தாபனத்திற்குப் பொதுஜன ஆதரவு இல்லையென்றால், பின்னும் நீடிப்பதற்கு அதற்கு எந்த உரிமையும் இல்லை. நிரந்தரமான நிதியைக் கொண்டு நடத்தப்படும் பொது ஸ்தாபனங்கள், பொதுஜன அபிப்ராயத்திற்கு மாறுபட்ட காரியங்களையும் அடிக்கடி செய்கின்றன.

நம்நாட்டில் இதை நாம் ஒவ்வொரு கட்டத்திலும் அனுபவித்துக் கொண்டு வருகிறோம். மத சம்பந்தமான தரும ஸ்தாபனங்கள் என்று கூறப்படும் சில ஸ்தாபனங்கள், கணக்குக் காட்டுவது என்பதையே விட்டுவிட்டன. தருமகர்த்தாக்களே, அச் சொத்துக்களுக்குச் சொந்தக்காரர்கள் ஆகிவிட்டார்க்ள. அவர்கள் யாருக்கும் பொறுப்பாளிகள் அல்ல. இயற்கையைப் போல அன்றைக்குத் தேவையானதைப்பெற்று வாழ்வதே பொது ஸ்தாபனங்களுக்கு உகந்தது என்பதில் எனக்கு எந்த விதமான சந்தேகமும் இல்லை. பொதுஜன ஆதரவைப் பெற முடியாத ஸ்தாபனத்திற்கு பொதுஜன ஸ்தாபனமாக இருந்து வரும் உரிமையே இல்லை. வருடந்தோறும் ஒரு ஸ்தாபனத்திற்குக் கிடைக்கும் சந்தாத்தொகை, அதன் செல்வாக்கு, அதன் நிர்வாகம் எவ்வளவு யோக்கியமாக நடந்து வருகிறது என்பதற்கும் சரியான அளவுகோல் ஆகும். ஒவ்வொரு பொது ஸ்தாபனமும் இந்த அளவுகோலுக்கு உட்பட வேண்டும் என்பது என் கருத்து. ஆனால் யாரும் என்னைத் தவறாக எண்ணிக்கொண்டுவிட வேண்டாம். சில ஸ்தாபனங்களை அவைகளின் தன்மையை அனுசரித்து நிரந்தரமான கட்டடம் இல்லாமல் நடத்த முடியாது. நான் கூறியவை அத்தகைய ஸ்தாபனங்களுக்கு பொருந்தாது. பொது ஸ்தாபனங்களின் நடைமுறைச் செலவுகளை ஒவ்வொரு வருடமும் தானாகக் கிடைக்கும் சந்தாப் பணத்தை கொண்டு நிர்வகித்து வரவேண்டும் என்று சொல்லவே நான் விரும்புகிறேன்.

தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரக நாட்களில் இக் கருத்து ஊர்ஜிதமாயிற்று. அந்த மகத்தான பேராட்டம், ஆறு ஆண்டுகள் வரை நடந்தது. அதற்கு லட்சக்கணக்கான ரூபாய் தேவைப்படும். நிரந்தரமான நிதி எதுவும் இல்லாமலேயே அதை நடத்தினோம். சந்தா கிடைக்காவிட்டால் அடுத்த நாளைக்கு என்ன செய்வதென்று எனக்குத் தெரியாமல் இருந்த சமயங்களும் எனக்கு நினைவில் இருக்கின்றன. ஆனால் வருங்காலத்தில் என்ன நேரும் என்பதை நான் இப்பொழுது சொல்லுவதற்கில்லை. இனிக் கூறப்போகும் வரலாற்றில், மேலே சொன்ன கருத்துக்கள் சரியானபடி நிரூபிக்கப்பட்டிருப்பதை வாசகர்கள் காணலாம்.


Offline Anu

குழந்தைகளின் படிப்பு

1897 ஜனவரியில், டர்பனில் நான் இறங்கியபோது என்னுடன் மூன்று குழந்தைகள் இருந்தார்கள். என் சகோதரியின் பத்து வயதான மகன் ஒருவன், ஒன்பது வயதும், ஐந்து வயதும் உள்ள என் புத்திரர்கள் இருவர் இவர்களை எங்கே படிக்க வைப்பது. ஐரோப்பியக் குழந்தைகளுக்கு என்று இருக்கும் பள்ளிக் கூடங்களுக்கு நான் அவர்களை அனுப்பியிருக்கலாம். ஆனால் என் குழந்தைகளுக்குச் சலுகை அளித்து, விதிவிலக்குப் பெற்றால்தான் அங்கே சேர்த்துக் கொள்ளுவார்கள். வேறு எந்த இந்தியரின் குழந்தைகளையும் இப் பள்ளிக்கூடங்களில் சேர்த்துக் கொள்ளுவதில்லை. இந்தியக் குழந்தைகளுக்கென்று, கிறிஸ்தவப் பாதிரிகள் வைத்திருக்கும் பள்ளிக்கூடங்களில் அளிக்கப்படும் கல்வி எனக்குப் பிடிக்கவில்லையாகையால் என் குழந்தைகளை அங்கே அனுப்ப நான் தயாராக இல்லை. இதற்கு ஒரு காரணம் அங்கே ஆங்கிலத்திலேயே எல்லாப் பாடங்களும் போதிக்கப்பட்டு வந்ததாகும். இல்லாவிட்டால், பிழையான தமிழ் அல்லது ஹிந்தியில் போதிப்பார்கள். இதையும் கஷ்டத்தின் பேரில்தான் ஏற்பாடு செய்யவேண்டி இருந்திருக்கும். இதையும் மற்ற அசௌகரியங்களையும் சமாளித்துக் கொண்டு போக என்னால் முடியாது. இதற்கு மத்தியில் இக் குழந்தைகளுக்கு நானே போதிப்பது என்று சொந்த முயற்சியும் செய்து கொண்டிருந்தேன். ஆனால் நான் சொல்லிக்கொடுப்பது என்றால் ஒழுங்காகச் சொல்லிக் கொடுப்பதாக இருக்க முடியாது. தக்க குஜராத்தி உபாத்தியாயரும் எனக்குக் கிடைக்கவில்லை.

ஆகையால், என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தேன். என் மேற்பார்வையில் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க ஓர் ஆங்கில உபாத்தியாயர் தேவை என்று விளம்பரம் செய்தேன். இந்த உபாத்தியாயர் ஒழுங்காக ஏதாவது சொல்லிக்கொடுத்துக் கொண்டு வரவேண்டும். மற்றப்படிப்பு விஷயங்களைப் பொறுத்த மட்டும், எனக்கு ஒழிந்தபோது அப்போதைக்கப்போது நான் சொல்லிக் கொடுப்பதோடு குழந்தைகள் திருப்தியடைய வேண்டியதே என்று முடிவு செய்தேன். ஆகவே ஓர் ஆங்கில மாதை, மாதம் ஏழு பவுன் சம்பளத்தில், குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்க அமர்த்தினேன். இந்த ஏற்பாடு கொஞ்ச காலம் நடந்து வந்தது. ஆனால், எனக்கு இது திருப்திகரமாக இல்லை, நான் எப்பொழுதும் குழந்தைகளுடன், தாய்மொழியிலேயே பேசிப் பழகி வந்தேன். இதனால், அவர்களுக்குக் கொஞ்சம் குஜராத்தி தெரியவந்தது. குழந்தைகளைத் திரும்ப இந்தியாவிற்கு அனுப்பிவிடுவதற்கும் எனக்கு விருப்பம் இல்லை. ஏனெனில், சிறு குழந்தைகளைப் பெற்றோரிடமிருந்து பிரிக்கவே கூடாது என்று அந்த நாளிலிருந்தே நான் கருதிவந்தேன்.

ஒழுங்கான ஒரு குடும்பத்தில், குழந்தைகள் இயற்கையாகவே அடையும் கல்விப் பயிற்சியை, மாணவர்களின் விடுதிகளில் அவர்கள் அடைய முடியாது. ஆகையால் என் குழந்தைகளை என்னுடனேயே வைத்துக்கொண்டேன். என் சகோதரியின் மகனையும் என் மூத்த மகனையும், இந்தியாவில் மாணவர்கள் தங்கிப் படிக்கும் ஒரு பள்ளிக்குக் கொஞ்சக்காலம் அனுப்பினேன். ஆனால் சீக்கிரத்திலேயே அவர்களைத் திருப்பி அழைததுக் கொண்டுவிட வேண்டியதாயிற்று. பிறகு என் மூத்த மகன், வயதடைந்த வெகு காலத்திற்குப் பிறகு என்னிடம் மனஸ்தாபம் கண்டு, இந்தியாவுக்குப் போய்விட்டான். அங்கே அகமதாபாத்தில் ஓர் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தான். ஆனால் என் மருமகனோ, என்னால் கொடுக்க முடிந்த கல்வியோடு திருப்தியடைந்து என்னுடனேயே இருந்துவிட்டான் என்று ஞாபகம். நல்ல வாலிபப் பருவத்தில் அவன் துரதிருஷ்டவசமாகச் சிறிது காலம் நோயுற்றிருந்து இறந்து போய்விட்டான். என் குமாரர்களில் மற்ற மூவரும் பொதுப் பள்ளிக்கூடத்திற்குப் போய் படித்ததே இல்லை. ஆனால் தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு இருந்தவர்களின் குழந்தைகளுக்கென்று நான் ஆரம்பித்துச் சிறிது காலம் நடத்திக் கொண்டிருந்த வசதிக் குறைவான பள்ளிக்கூடங்களில் இவர்கள் சிறிது காலம் ஒழுங்காகப் படித்து வந்தனர்.

இந்தப் பரிசோதனைகளெல்லாம் அரைகுறையானவைகளே. நான் விரும்பிய அளவு, குழந்தைகளுக்காக என் நேரத்தைச் செலவிட என்னால் முடியவில்லை. அவர்கள் விஷயத்தில் போதிய கவனம் செலுத்த என்னால் முடியாது போனதும் தவிர்க்கமுடியாத வேறு காரணங்களும், அவர்களுக்கு நான் அளிக்க விரும்பிய இலக்கியக் கல்வியை அளிக்க முடியாதபடி செய்துவிட்டன. இவ்விஷயத்தில் என்மீது என் குமாரர்கள் குறைகூறியிருக்கின்றனர். எம்.ஏ. அல்லது பி.ஏ. படித்தவரையோ அல்லது மெட்ரிகலேஷனாவது படித்தவர்களையோ அவர்கள் சந்திக்கும் போதெல்லாம் பள்ளிக்கூடப் படிப்பு இல்லாததன் கஷ்டத்தை அவர்கள் உணருவதாகத் தோன்றுகிறது.

அது எப்படியானாலும் என் அபிப்பிராயம் வேறு, எப்படியாவது அவர்களைப் பொதுப் பள்ளிக்கூடத்தில் பிடிவாதமாகப் படிக்கவைத்திருந்ததேனாயின், அனுபவம் என்ற பள்ளிக்கூடத்தில் மாத்திரம் கிடைக்கக்கூடியதான, பெற்றோருடன் இருப்பதால் அடைவதான கல்வி, அவர்களுக்கு இல்லாது போயிருக்கும் அவர்களைப்பற்றி நான் இன்று கொஞ்சமும் கவலை இல்லாமல் இருக்கிறேன், இப்படி இருக்கமுடியாமலும் போயிருக்கும். என்னை விட்டுபிரிந்து, இங்கிலாந்திலோ, தென்னாப்பிரிக்காவிலோ அவர்கள் பெற்றிருக்கக்கூடிய இயற்கையல்லா கல்வி, இன்று வாழ்க்கையில் அவர்கள் காட்டி வரும் எளிமையையும், சேவா உணர்ச்சியையும் அவர்களுக்குப் போதித்தே இராது. மேலும் அவர்களுடைய செயற்கை வாழ்க்கை முறை எனது பொது வேலைக்குப் பெரிய இடையூறாகவும் இருந்திருக்கும். ஆகையால் என் திருப்திக்கு ஏற்ற வகையிலோ, அவர்கள் திருப்தியடையும் வகையிலோ, அவர்களுக்கு இலக்கியக் கல்வியை அளிக்க என்னால் முடியாது போயிற்று. ஆனாலும், என்னுடைய சக்திக்கு எட்டிய மட்டும், அவர்களுக்குச் செய்ய வேண்டிய என் கடமையை நான் செய்யாமல் இருந்துவிடவில்லை என்று நான் வருந்தவே இல்லை.

இன்று என் மூத்த மகனிடம் விரும்பத்தகாத குணங்களை நான் காண்கிறேன் கட்டுத் திட்டமும் ஒழுங்கும் அற்ற என் இளவயதின் எதிரொலியே அப்பகுதி, அரைகுறையான அறிவும், சுகபோகப் பற்றும் நிரம்பியிருந்த காலம் என்று கருதுகிறேன். அந்த காலமும் என் மூத்த மகனுக்கு நன்றாகப் புத்தி தெரிந்த காலமும் ஒன்றாக இருந்தன. அது நான் அனுபவம் இன்மையிலும், இன்ப நுகர்ச்சியிலும் திளைத்த காலம் என்று கருத இயற்கையாகவே அவன் மறுத்துவிட்டான். இதற்கு நேர்மாறாக அதுவே என்னுடைய வாழ்க்கையின் மிக சிறந்த காலம் என்றும், பின்னால் எனக்கு ஏற்பட்ட மாறுதல்கள், அறிவுத்தெளிவு என்று தவறாகக் கூறப்படும் மதிமயக்கத்தினால் ஏற்பட்டவை என்று அவன் கருதிவிட்டான். அவன் அப்படியே எண்ணியிருக்கட்டும். என் வாழ்க்கையின் ஆரம்ப காலம், நான் புத்தித்தெளிவு பெற்றிருந்த காலம் என்றும் பெரிய மாறுதல்கள் ஏற்பட்ட பிந்திய காலமே மாயையும், அகந்தையும் நிறைந்த காலம் என்றும், அவன் ஏன் எண்ணக்கூடாது? அடிக்கடி நண்பர்கள் என்னைக் கீழ்வரும் பல கேள்விகளைக் கேட்டு மடக்கப் பார்த்திருக்கின்றனர். உங்கள் குழந்தைகளுக்குக் கலாசாலைப் படிப்பு அளித்திருந்தால் அதனால் என்ன தீமை விளைந்திருக்கும்? இவ்விதம் அவர்களுடைய சிறகுகளைத் துண்டித்துவிடுவதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? படித்துப் பட்டம் பெற்று, தங்களுக்கு விருப்பமான வாழ்க்கைத் துறைகளை அவர்கள் மேற் கொள்ளுவதற்கு நீங்கள் ஏன் குறுக்கே நின்றிருக்க வேண்டும்?

இந்த விதமான கேள்விகளில் அதிக முக்கியத்துவம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. எத்தனையோ மாணவர்களுடன் நான் பழகியிருக்கிறேன். கல்வியைக் குறித்து எனக்குள்ள கொள்கைகளை நானாகவோ, மற்றவர்களின் மூலமோ வேறு குழந்தைகளிடமும் அனுசரித்து, அதன் பலனையும் கவனித்திருக்கிறேன். என் புத்திரர்களின் வயதினரான மற்றும் பல இளைஞர்களை எனக்குத் தெரியும். மனிதனுக்கு மனிதன் ஒப்பிட்டுப் பார்த்தால், என் புதல்வர்களைவிட அவர்கள் எந்த விதத்திலும் மேலானவர்கள் என்றோ, அவர்களிடமிருந்து என் புதல்வர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய எதுவும் இருப்பதாகவோ நான் எண்ணவில்லை.

ஆனால் என்னுடைய சோதனைகளின் முடிவான பலன் காலத்தின் கருப்பையில் இருக்கிறது. இந்த விஷயத்தை இங்கே விவாதிப்பதற்கு முக்கியமான நோக்கம் ஒன்று உண்டு. நாகரிக வளர்ச்சியின் வரலாற்றை ஆராயும் ஒருவர் கட்டுப்பாட்டோடு கூடிய வீட்டுப் படிப்பிற்கும், பள்ளிக்கூடப் படிப்பிற்கும் உள்ள வித்தியாசத்தையும் பெற்றோர்கள் தங்களுடைய வாழ்க்கையிலே செய்யும் மாறுதல்களுக்கு ஏற்ற வகையில் குழந்தைகளிடையே ஏற்படும் மாறுதல்களையும் ஓரளவு அறிந்துகொள்ளக் கூடும் அல்லவா? இந்த அத்தியாயத்தை எழுதுவதற்கு மற்றொரு காரணமும் உண்டு.

சத்தியத்தை நாடும் ஒருவர், சத்தியத்தைக்கொண்டு தாம் செய்யும் சோதனைகளில் எவ்வளவு தூரம் போக வேண்டியிருக்கிறது என்பதையும் சுதந்திரத்தை நாடுபவரிடமிருந்து அக்கண்டிப்பான சுதந்திர தேவி, என்ன என்ன தியாகங்களை எதிர் பார்க்கிறாள் என்பதையும் காட்டுவதே அக்காரணம் ஆகும். எனக்குச் சுயமரியாதை உணர்ச்சி இல்லாதிருக்குமானால், மற்றவர்களுக்குக் கிட்டாத கல்வி, என் குழந்தைகளுக்குக் கிடைப்பதைக் கொண்டு நான் திருப்பதியடைந்து விடுபவனாக இருந்திருந்தால் அவர்களுக்கு நல்ல இலக்கியக் கல்வியை அளித்திருப்பேன். ஆனால் சுதந்திரத்திலும் சுயமரியாதையிலும் அவர்கள் பெற்றிருக்கும் அனுபவப் படிப்பு, அப்போது அவர்களுக்கு கிடைத்திருக்காது. சுதந்திரம் அல்லது படிப்பு ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டியவரும்போது, படிப்பைவிடச் சுதந்திரமே ஆயிரம் மடங்கு மேலானது என்ற யார் தான் கூறமாட்டார்கள்? இந்திய இளைஞர்களை, அவர்களுடைய அடிமைத் தனத்தின் கோட்டைகளில் இருந்து - அதாவது அவர்களுடைய பள்ளிக் கூடங்களிலும் கல்லூரிகளிலும் இருந்து வெளியேறிவிடுமாறு 1920 இல் நான் அழைத்தேன். அடிமை விலங்குகளுடன் இலக்கியக் கல்வி கற்கப் போவதைவிட சுதந்திரம் பெறுவதற்காக எழுத்து வாசனையே இல்லாமல் இருந்து, கல்லுடைத்து வாழ்வதே எவ்வளவோ மேல் என்று அப்பொழுது அவர்களுக்குச் சொன்னேன். எந்த ஆதாரத்துடன் நான் இந்தப் புத்திமதியைக் கூறினேன் என்பதை இளைஞர்கள் இப்பொழுது கண்டு கொள்ளலாம்.


Offline Anu

தொண்டில் ஆர்வம்

என்னுடைய வக்கீல் தொழில் நன்றாகவே நடந்து வந்தது. ஆனால் அதைக் கொண்டு மாத்திரம் நான் திருப்தி அடைந்து விடவில்லை. மேற்கொண்டும் என்னுடைய வாழ்க்கையை எளிமை ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பதும் என்னுடைய சகோதர மக்களுக்கு உருப்படியான தொண்டு எதையாவது செய்ய வேண்டும் என்பதும் என் மனத்தில் இடையறாத ஆர்வமாக இருந்து வந்தன. அந்தச் சமயத்தில் ஒரு குஷ்டரோகி என் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். ஒரு வேளைச் சாப்பாட்டோடு அவரை அனுப்பிவிட எனக்கு மனம் இல்லை. எனவே, என் வீட்டிலேயே அவரை இருக்கச் சொல்லி அவருடைய புண்களுக்குக் கட்டுக் கட்டினேன். அவருக்கு வேண்டிய மற்ற சௌகரியங்களையும் கவனித்து வந்தேன். ஆனால் நான் நிரந்தரமாக இப்படிச் செய்துகொண்டு போக முடியாது. இது என்னால் ஆகாது. எப்பொழுதுமே அவரை என்னுடன் வைத்துக் கொள்ளுவதற்கான உறுதியும் என்னிடம் இல்லை. ஆகவே, ஒப்பந்தத் தொழிலாளருக்காக இருந்த அரசாங்க வைத்திய சாலைக்கு அவரை அனுப்பினேன்.

ஆனால், என் மனம் மாத்திரம் அமைதி இல்லாமலேயே இருந்தது. நிரந்தரமான ஜீவகாருண்யத் தொண்டு செய்ய வேண்டும் என்று என் மனம் அவாவுற்றது. செயின்ட் எயிடானின் மிஷனுக்கு டாக்டர் பூத் தலைவராக இருந்தார். அவர் அன்பு நிறைந்த உள்ளம் படைத்தவர். தம்மிடம் வரும் நோயாளிகளுக்கு இலவசமாக அவர் வைத்தியம் செய்து வந்தார். பார்ஸி ருஸ்தம்ஜீயின் தருமத்தைக் கொண்டு டாக்டர் பூத்தின் நிர்வாகத்தின் கீழ், ஒரு சிறு தரும வைத்திய சாலையை ஆரம்பிக்க முடிந்தது. அந்த வைத்திய சாலையில் நோயாளிகளுக்குப் பணிவிடை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் எனக்குப் பலமாக இருந்தது. மருந்து கலந்து கொடுக்கும் வேலை தினமும் இரண்டொரு மணி நேரத்திற்கு இருக்கும். அந்த அளவுக்கு என் காரியாலயத்தின் வேலையைக் குறைத்துக் கொண்டு, அங்கே கம்பவுண்டராக இருப்பது என்று தீர்மானித்தேன். என் வக்கீல் தொழில் சம்பந்தமான வேலை, பெரும்பாலும் என் ஆபீஸிலேயே கவனிக்க வேண்டிய வேலைதான்.

சாஸனப் பத்திரங்களை எழுதுவதும் மத்தியஸ்தம் செய்வதுமே இந்தத் தொழிலில் என் முக்கியமான அலுவல். மாஜீஸ்டிரேட் கோர்ட்டில் எனக்குச் சில வழக்குகள் இருக்கும். ஆனால் அவை பெரும்பாலும் அதிக விவாதத்திற்கு இடம் இல்லாதவைகளாக இருக்கும். என்னுடன் தென்னாப்பிரிக்காவுக்கு வந்து, அப்போது என்னோடேயே வசித்து வந்த ஸ்ரீ கான் நான் இல்லாத சமயத்தில் என் வழக்குகளைக் கவனித்துக் கொள்ளுவதாக கூறியிருந்தார். ஆகவே அச் சிறு வைத்திய சாலையில் சேவை செய்வது கொஞ்சம் சாந்தியை அளித்தது. வரும் நோயாளிகளின் நோயைக் குறித்து விசாரிப்பது. அந்த விவரங்களை டாக்டருக்குக் கூறுவது, மருந்துகளைக் கலந்து கொடுப்பது ஆகியவையே அந்த வேலை. அது துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்தியருடன், நான் நெருங்கிப் பழகும்படி செய்தது. அவர்களில் அநேகர் ஒப்பந்தத் தொழிலாளர்களான தமிழர், தெலுங்கர் அல்லது வட இந்தியர் ஆவர்.

போயர் யுத்தத்தின் போது நோயுற்றவர்களுக்கும் காயம் அடைந்தோருக்கும் பணிவிடை செய்வதற்கு, என் சேவையை அளிக்க நான் முன் வந்தபோது, இந்த அனுபவம் எனக்கு அதிக உதவியாக இருந்தது. குழந்தைகளை எவ்விதம் வளர்ப்பது என்ற பிரச்சினை எப்பொழுதும் என் முன்பு இருந்து வந்தது. தென்னாப்பிரிக்காவில் எனக்கு இரு புதல்வர்கள் பிறந்தார்கள். அவர்களை வளர்ப்பது சம்பந்தமான பிரச்னையைத் தீர்க்க நான் வைத்தியசாலையில் செய்து வந்த தொண்டு பயனுள்ளதாயிற்று. என்னுடைய சுயேச்சை உணர்ச்சி, எனக்கு அடிக்கடி சோதனைகளைக் கொடுத்து வந்தது. என் மனைவியின் பிரசவ காலத்தில் சிறந்த வைத்திய உதவியை ஏற்பாடு செய்து கொள்ளுவது என்று நானும் என் மனைவியும் தீர்மானித்திருந்தோம். ஆனால் சமயத்தில் டாக்டரும் தாதியும் எங்களைக் கைவிட்டுவிட்டால் நாங்கள் என்ன செய்வது? அதோடு தாதி, இந்தியப் பெண்ணாகவும் இருக்க வேண்டும். பயிற்சி பெற்ற இந்தியத் தாதி கிடைப்பது இந்தியாவிலேயே கஷ்டம் என்றால் தென்னாப்பிரிக்காவில் எவ்வளவு கஷ்டம் என்பதைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

எனவே, பிரசவ சிகிச்சை சம்பந்தமாகத் தெரிந்திருக்க வேண்டியவைகளையெல்லாம் நானே படித்துக் கொண்டேன். டாக்டர் திரிபுவனதாஸ் எழுதிய தாய்க்குப் புத்திமதி என்ற நூலைப் படித்தேன். மற்ற இடங்களில் அங்கும் இங்குமாக நான் பெற்ற அனுபவங்களையும் வைத்துக் கொண்டு, அந்த நூலில் கூறப்பட்டிருந்த முறைகளை அனுசரித்து என் இரு குழந்தைகளையும் வளர்த்தேன். ஒவ்வொரு பிரசவ சமயத்திலும் குழந்தையைக் கவனிக்க ஒரு தாதியை அமர்த்துவோம். ஆனால் இரண்டு மாதங்களுக்கு மேல் அந்தத் தாதியை வைத்துக் கொள்ளுவதில்லை. தாதியை அமர்த்துவதும் என் மனைவியைக் கவனித்துக் கொள்ளுவதற்கே அன்றி, குழந்தைகளைப் பராமரிப்பதற்கு அன்று. அந்த வேலையை நானே பார்த்துக் கொண்டேன்.

கடைசிக் குழந்தையின் பிரசவந்தான் என்னை மிகவும் கடுமையான வேதனைக்கு உள்ளாக்கி விட்டது. திடீரென்று பிரசவவேதனை ஏற்பட்டது. உடனே வைத்தியர் கிடைக்கவில்லை. மருத்துவச்சியை அழைத்து வரவும் கொஞ்ச நேரம் ஆகிவிட்டது. அவள் வந்திருந்தாலும் பிரசவத்திற்கு அவள் உதவி செய்திருக்க முடியாது. சுகப்பிரசவம் ஆகும்படி நானே கவனித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. டாக்டர் திரிபுவன தாஸின் நூலை நான் நன்றாகப் படித்து வைத்திருந்தது எனக்கு அதிக உதவியாக இருந்தது. எனக்குக் கொஞ்சமேனும் பயமே ஏற்படவில்லை.

குழந்தைகளைச் சரியானபடி வளர்க்க வேண்டுமானால், சிசுக்களைப் பேணும் முறை, பெற்றோருக்குத் தெரிந்திருக்க வேண்டியது அவசியம் என்று நான் நிச்சயமாகக் கருதுகிறேன். இது விஷயமாக நன்றாகப் படித்திருந்தது எவ்வளவு பயன் உள்ளதாக இருந்தது என்பதை ஒவ்வொரு கட்டத்திலும் நான் பார்த்திருக்கிறேன். இதைக் குறித்து நான் ஆராய்ந்து, அந்த அறிவைப் பயன்படுத்தியிராது போனால், என் குழந்தைகள் இன்று இருப்பதைப் போல் இவ்வளவு உடல் நலத்துடன் இருந்திருக்க மாட்டார்கள். குழந்தை அதன் ஐந்து வயது வரையில் கற்றுக்கொள்ள வேண்டியது எதுவும் இல்லை என்ற ஒரு மூடநம்பிக்கை நமக்கு இருந்து வருகிறது. இதற்கு மாறாக உண்மை என்னவென்றால், ஒரு குழந்தை அதன் முதல் ஐந்து வயதிற்குள் கற்றுக்கொள்ளாததைப் பின்னால் எந்தக் காலத்திலும் கற்றுக் கொள்ளுவதே இல்லை. கருவில் இருக்கும் போதே ஒரு குழந்தையின் படிப்பு ஆரம்பம் ஆகிவிடுகிறது. கருத்தரிக்கும் போது, பெற்றோருக்கு இருக்கும் உடல், மன நிலைகளே குழந்தைக்கும் ஏற்பட்டு விடுகின்றன. கர்ப்பத்தில் இருக்கும் போது தாயின் மனநிலைகள், ஆசாபாசங்கள், தன்மைகள் ஆகியவைகளால் குழந்தை பாதிக்கப்படுகிறது. பின்னர், குழந்தை பிறந்ததும், பெற்றோர்களைப் போலவே எதையும் செய்ய அது கற்றுக்கொள்கிறது. அப்புறம் அதிக காலம் வரையில் குழந்தையின் வளர்ச்சி, பெற்றோரைப் பொறுத்ததாகவே இருக்கிறது.

இந்த உண்மைகளையெல்லாம் அறிந்துகொள்ளும் தம்பதிகள், தங்களுடைய காம இச்சையைத் தீர்த்துக் கொள்ளுவதற்காக உடற்கலப்பு வைத்துக் கொள்ள மாட்டார்கள். குழந்தைப் பேறு வேண்டும் என்று விரும்பும்போது மாத்திரமே கூடுவார்கள். உண்பதையும் உறங்குவதையும் போல் ஆண் - பெண் சேர்க்கையும் அவசியமான செயல்களில் ஒன்று என நம்புவது அறியாமையின் சிகரமே ஆகும் என்று நான் கருதுகிறேன். உலகம் நிலைத்திருப்பது, சந்ததி விருத்திச் செயலைப் பொறுத்திருக்கிறது. உலகமே ஆண்டவனின் திருவிளையாட்டு ஸ்தலம், அவனுடைய மகிமையின் பிரதிபிம்பம். எனவே, இந்த உலகத்தின் ஒழுங்கான வளர்ச்சிக்கு ஏற்ற வகையிலேயே சந்ததி விருத்திச் செயல் இருக்க வேண்டும். இதை உணருகிறவர்கள், எப்பாடுபட்டும் தங்கள் காம உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக் கொள்ளுவார்கள், தங்கள் குழந்தைகளின் உடல் நலனுக்கும் மன நலனுக்கும் ஆன்ம நலனுக்கும் வேண்டிய அறிவைப் பெற்றுக் கொள்ளுவார்கள், பெற்றுக்கொண்ட அறிவின் பயனைச் சந்ததிகளுக்கு அளிப்பார்கள்.


Offline Anu

பிரம்மச்சரியம்-1

இவ்வரலாற்றில், பிரம்மச்சரிய விரதத்தை மேற்கொள்ளுவதைப் பற்றி நான் தீவிரமாக நினைக்கத் தொடங்கிய கட்டத்திற்கு இப்பொழுது நாம் வந்திருக்கிறோம். எனக்கு மணமான காலத்தில் இருந்தே நான் ஏக பத்தினி விரதத்தில் உறுதிகொண்டிருந்தேன். என் மனைவியிடம் உண்மையோடு நடந்துகொள்ளுவது என்பது, சத்தியத்தினிடம் நான் கொண்டிருந்த பக்தியின் ஒரு பகுதியாயிற்று. ஆனால், என் மனைவி சம்பந்தமாகக்கூட பிரம்மச்சரியத்தை அனுசரிக்க வேண்டியது முக்கியம் என்பதைத் தென்னாப்பிரிக்காவிலேயே நான் உணர ஆரம்பித்தேன். இந்த வழியில் என் எண்ணத்தைத் திருப்பியது எந்தச் சந்தர்ப்பம் அல்லது நூல் என்பதை என்னால் திட்டமாகக் கூறமுடியாது. ராய்ச்சந்திர பாயைக் குறித்து நான் முன்பே எழுதியிருக்கிறேன். அவருடைய நட்பே இதில் முக்கியமான அம்சமாக இருந்திருக்கக்கூடும் என்பது என் ஞாபகம். ஸ்ரீ மதி கிளாட்ஸ்டன், தமது கணவரிடம் வைத்திருந்த அபார பக்தியைக் குறித்துப் புகழ்ந்து ஒரு சமயம் ராய்ச்சந்திரபாயிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.

ஸ்ரீ கிளாட்ஸ்டன் பார்லிமெண்டுக் கூட்டத்தில் இருக்கும்போது கூட அவருக்குத் தம் கையினாலேயே தேயிலைப் பானம் தயாரித்துக் கொடுக்க வேண்டும் என்று அவர் மனைவி வற்புறுத்தி வந்தார் என்று நான் எங்கோ படித்திருந்தேன். புகழ்பெற்ற இத் தம்பதிகளின் ஒழுங்குபடுத்தப்பட்ட வாழ்க்கையில் இது ஒரு நியதியாக ஆகிவிட்டதாம். இதைக் கவிஞரிடம் நான் கூறியதோடு, சாதாரணமாக சதிபதிகளின் காதல் வாழ்வைப் பற்றியும் புகழ்ந்து பேசினேன். அதன் பேரில் ராய்ச்சந்திரபாய் என்னைப் பின்வருமாறு கேட்டார். ஸ்ரீ மதி கிளாட்ஸ்டன், மனைவி என்ற முறையில் தம் கணவரிடம் கொண்ட அன்பு பெரிதா? ஸ்ரீ கிளாட்ஸ்டனிடம் அவருக்கு உள்ள உறவு எதுவானாலும் அதைப் பற்றிய சிந்தனையின்றி ஸ்ரீமதி கிளாட்ஸ்டன் அவருக்குப் பயபக்தியோடு செய்து வந்த சேவை பெரிதா? இந்த இரண்டில் எதைப் பெரியது என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்? அப் பெண்மணி, அவருடைய சகோதரி என்றோ, வேலைக்காரி என்றோ வைத்துக் கொள்ளுவோம்.

இதே கவனிப்போடு அப்போதும் தொண்டு செய்திருந்தால் அப்பொழுது நீங்கள் அந்தச் சேவையைப் பற்றி என்ன கூறுவீர்கள்? இத்தகைய அன்புள்ள சகோதரிகளையும் வேலைக்காரர்களையும் பற்றி நாம் கேளவிப்பட்டதில்லையா? அதே அன்பு நிறைந்த பக்தியை ஒரு வேலைக்காரனிடம் காண்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுவோம். இப்போது ஸ்ரீமதி கிளாட்ஸ்டனின் விஷயத்தில் திருப்தியடைவதைப் போல் திருப்தியடைவீர்களா? நான் கூறிய இக் கருத்தைக்கொண்டு விஷயத்தைச் சிந்தித்துப் பாருங்கள்.

ராய்ச்நதிரபாயும் விவாகம் ஆனவரே. அவர் கூறியவை கொஞ்சம் கடுமையாக இருந்ததாக அப்பொழுது எனக்குத் தோன்றின என்பது என் நினைவு. ஆனால், அவர் கூறியவை என் உள்ளத்தில் மிகவும் ஆழப்பதிந்துவிட்டன. கணவனிடம் மனைவி கொள்ளும் பக்தி விசுவாசத்தைவிட, வேலைக்காரனின் பக்தி, ஆயிரம் மடங்கு போற்றா;கு உரியது என்று நான் எண்ணினேன். கணவனுக்கும் மனைவிக்கும் இடையே பிரிக்க முடியாத பந்தம் இருக்கிறது. ஆகையால் கணவனிடம் மனைவி பக்தி கொள்ளுவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. இந்தப் பக்தி முற்றிலும் இயற்கையானது. ஆனால் எஜமானனுக்கும் வேலைக்காரனுக்கும் இடையே இதற்கு இணையான ஒரு பக்தியை வளர்ப்பதற்கே விசேட முயற்சி அவசியம் ஆகிறது. கவிஞரின் கருத்து எனக்கு மெள்ள மெள்ள விளங்கலாயிற்று.

அப்படியானால், எனக்கும் என் மனைவிக்கும் இடையே இருக்கும் உறவு எப்படி இருக்க வேண்டும்? இவ்வாறு என்னை நானே கேட்டுக்கொண்டேன். அவளிடம் உண்மையோடு நடந்து கொள்ளுவது என்பதில், என்னுடைய காம இச்சைக்கு அவளை கருவியாக்கிக் கொள்ளுவது என்பதும் அடங்கியிருக்கிறதா? காம இச்சைக்கு நான் அடிமையாக இருக்கும் வரையில் மனைவியிடம் நான் உண்மையான அன்போடு இருக்கிறேன் என்பதற்கு மதிப்பே இல்லை. என் மனைவியைப் பொறுத்தவரை நேர்மையாகச் சொல்லுவதானால், காம இச்சைக்கு என்னைத் தூண்டுபவளாக அவள் என்றுமே இருந்ததில்லை என்றே கூறவேண்டும். ஆகையால், எனக்குத் திடமான உறுதி மாத்திரம் இருந்திருந்தால், பிரம்மச்சரிய விரதம் கொள்ளுவது எனக்கு மிக எளிதான காரியம். எனக்கு மன உறுதி இல்லாததுதான் அல்லது காம இச்சைதான் இதற்குத் தடையாக இருந்தது.

இவ்விஷயத்தில் என் மனச்சாட்சி விழப்படைந்து விட்டபிறகும் கூட இரு தடவைகளில் நான் தவறிவிட்டேன். முயற்சிக்குத் தூண்டுதலாக இருந்த நோக்கம், உயர்வானதாக இல்லாது போனதனாலேயே நான் தவறினேன். மேற்கொண்டு குழந்தைகளைப் பெறாமலே இருக்க வேண்டும் என்பதே என் முக்கியமான நோக்கமாக இருந்தது. இங்கிலாந்தில் இருந்தபோது, செயற்கைக் கர்ப்பத்தடை முறைகளைக் குறித்து ஏதோ படித்திருந்தேன். சைவ உணவைப் பற்றிய அத்தியாயத்தில் டாக்டர் அல்லின்ஸனின் கர்ப்பதடைப் பிரச்சாரத்தை குறித்து, முன்பே கூறியிருக்கிறேன். அப் பிரச்சாரத்தினால் என் மனம் செயற்கைக் கர்ப்பத்தடை முறைகளில் சிறிதளவு சென்றிருந்தாலும், அத்தகைய முறைகளை ஸ்ரீ ஹில்ஸ் எதிர்த்துக் கூறியது என் மனத்தை உடனே மாற்றி விட்டது.

வெளி உபாயங்களுக்குப் பதிலாக உள் முயற்சியே, அதாவது புலன் அடக்கமே சிறந்தது என்று அவர் கூறியது என் மனத்தில் ஆழப் பதிந்ததோடு, நாளாவட்டத்தில் மனத்தை ஆட்கொண்டும் விட்டது. ஆகையால் மேற்கொண்டும் குழந்தைகள் வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை என்பதைக் கண்டதும் புலனடக்கத்திற்கான முயற்சியில் ஈடுபட ஆரம்பித்தேன். ஆனால், இம் முயற்சியில் கணக்கில்லாத கஷ்டங்கள் இருந்தன. தனித் தனிப் படுக்கைகளில் தூங்க ஆரம்பித்தோம். நாளெல்லாம் நன்றாக உழைத்துக் களைத்துப் போன பிறகே படுக்கைக்குப் போவது என்று தீர்மானித்தேன். இந்த முயற்சிகளெல்லாம் அதிகப் பலன்தரவில்லை. ஆனால், வெற்றி பெறாது போன இத்தகைய எல்லா முயற்சிகளின் ஒருமித்த பயனே, முடிவான தீர்மானமாக உருவாகியது என்று, அக் காலத்தைப் பற்றி நான் இப்பொழுது எண்ணிப் பார்க்கும்போது உணருகிறேன்.

இப்படியே காலம் கடந்து வந்து 1906 ஆம் ஆண்டில்தான் இறுதியான தீர்மானத்திற்கு வர என்னால் முடிந்தது. சத்தியாக்கிரகம் அப்பொழுது ஆரம்பம் ஆகிவிடவில்லை. அப்போராட்டம் வரும் என்ற எண்ணங்கூட எனக்குச் சிறிதும் இல்லை. போயர் யுத்தத்தைத் தொடர்ந்து, நேட்டால் ஜூலுக் கலகம் ஆரம்பம் ஆயிற்று. அப்பொழுதுநான் ஜோகன்னஸ் பர்க்கில் வக்கீல் தொழில் நடத்திக் கொண்டிருந்தேன். அச்சமயம் எனது சேவையைத் தேசிய சர்க்காருக்கு அளிக்க வேண்டும் என்று எண்ணினேன். என் சேவை ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதைக் குறித்து மற்றோர் அத்தியாயத்தில் கவனிப்போம். ஆனால் அவ்வேலை, புலன் அடக்கத் துறையில் என்னை வெகு தீவிரமாகச் சிந்திக்கச் செய்தது. வழக்கம்போல இதைக் குறித்தும் என் சக ஊழியர்களுடன் கலந்து ஆலோசித்தேன். பிள்ளைப்பேறும், அதன் விளைவாக ஏற்படும் குழந்தை வளர்ப்பும் பொது ஜன சேவைக்கு உகந்தவை அல்ல என்பது எனக்கு உறுதியாகப்பட்டது.

கலகத்தின்போது சேவை செய்வதற்குச் சௌகரியமாக இருப்பதற்காக ஜோகன்ஸ்பர்க்கில் இருந்த என் குடித்தனத்தைக் கலைத்துவிட வேண்டியதாயிற்று. சேவை செய்ய நான் ஒப்புக் கொண்ட ஒரு மாதத்திற்குள், எவ்வளவோ சிரமப்பட்டு வேண்டிய வசதிகளையெல்லாம் நான் செய்து வைத்திருந்த வீட்டை காலி செய்துவிட வேண்டி வந்தது. என் மனைவியையும் குழந்தைகளையும் போனிக்ஸூக்குக் கொண்டுபோய் விட்டுவிட்டு நேட்டால் படையுடன் சேர்க்கப்பட்டிருந்த இந்திய வைத்தியப் படைக்குத் தலைவனாகச் சென்றேன். அதிகக் கஷ்டங்களுடன் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு அணி வகுத்துச் செல்ல நேர்ந்த அச் சமயத்தில்தான், முடிவான எண்ணம் என் மனத்தில் பளிச்சென்று உதயமாயிற்று. அதாவது, சமூகத்தின் சேவைக்கே என்னை இந்த வகையில் அர்ப்பணம் செய்து கொள்ள விரும்பினால் பிள்ளைப் பேற்றில் அவாவையும் பொருள் ஆசையையும் அறவே ஒழித்துவிட்டுக் குடும்பக் கவலையினின்றும் நீங்கியதான வானப் பிரஸ்த வாழ்க்கையை நான் மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உதயமாயிற்று.

அக் கலகம் சம்பந்தமாக எனக்கு ஆறு வார காலமே வேலை இருந்தது. ஆனால் இந்தக் குறுகிய காலம், என் வாழ்க்கையில் மிக முக்கியமானதாயிற்று, விரதங்களின் முக்கியத்துவம் முன்பு இருந்ததைவிட எனக்கு இன்னும் அதிகத் தெளிவாக விளங்கியது. ஒரு விரதம், உண்மையான சுதந்திரத்தின் கதவை அடைத்து விடுவதற்குப் பதிலாக அக் கதவைத் திறந்து விடுகிறது என்பதை உணர்ந்தேன். போதிய அளவு உறுதி என்னிடம் இதற்கு முன்னால் இல்லை, என்னிடத்திலேயே எனக்கு நம்பிக்கை இல்லை. கடவுளின் அருளிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. என் மனம், சந்தேகமாகிய அலை பொங்கும் கடலில் அங்கும் இங்கும் அலைப்புண்டு, அல்லல்பட்டுக் கொண்டிருந்தது. இதனாலேயே அச்சமயம் வரையில் நான் வெற்றியடையவில்லை. ஒரு விரதத்தை மேற்கொள்ள மறுப்பதனால் மனிதன் ஆசை வலைக்கு இழுக்கப்பட்டு விடுகிறான். ஒரு விரதத்தினால் கட்டுண்டுவிடுவது, நெறியற்ற வாழ்க்கையிலிருந்து உண்மையான ஏகபத்தினி மண வாழ்வுக்குச் செல்வதைப் போன்றது என்பதை அறிந்துகொண்டேன். முயற்சி செய்வதில் எனக்கு நம்பிக்கை உண்டு.

அதனால் விரதங்களினால் என்னைக் கட்டுப் படுத்திக் கொள்ள விரும்பவில்லை என்பது பலவீனத்தின் புத்திப் போக்கு. எதை விலக்க வேண்டும் என்று இருக்கிறோமோ அதனிடம் உள்ளுக்குள் ஆசை இருந்து வருகிறது என்பதையே இது வெளிப்படுத்துகிறது. இல்லையானால் முடிவான தீர்மானத்திற்கு வந்துவிடுவதில் என்ன கஷ்டம் இருக்க முடியும்? பாம்பு என்னைக் கடித்து விடும் என்பது எனக்குத் தெரியும். அதனிடமிருந்து ஓடிவிட வெறும் முயற்சி செய்வதோடு நான் இருந்துவிடுவதில்லை. வெறும் முயற்சிதான் என்றால் பாம்பு என்னைக் கட்டாயம் கடித்துவிடும் என்ற நிச்சயமான உண்மையை அறியாமல் இருக்கிறேன் என்பதுதான் பொருள். ஆகையால் வெறும் முயற்சியைக் கொண்டே நான் திருப்தி அடைந்து விடுவது, திட்டமான செயலின் அவசியத்தை நான் இன்னும் உணர்ந்து கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.

வருங்காலத்தில் என் கருத்துக்கள் மாறிவிடுகின்றன என்று வைத்துக் கொள்ளுவோம். அந் நிலைமையில் என்னை விரதத்தினால் எப்படிக் கட்டுப்படுத்திக் கொள்ளுவது? இத்தகைய சந்தேகமே நம்மை அடிக்கடி தடுத்துவிடுகிறது. குறிப்பிட்ட ஒன்றைத் துறந்தாக வேண்டும் என்பதில் தெளிவான எண்ணம் இன்னும் ஏற்படவில்லை என்பதையே அந்தச் சந்தேகம் காட்டுகிறது. இதனாலேயே ஒன்றில் வெறுப்பு ஏற்படாத துறவு நிலைத்திராது என்று நிஷ்குலானந்தர் பாடியிருக்கிறார். எங்கே ஆசை அற்று விடுகிறதோ அங்கே துறவின் விரதம் இயல்பான தவிர்க்க முடியாத பலனாக இருக்கும்.