Author Topic: ~ வரலாற்று நாயகர்கள் - Mysteryயின் சேகரிப்புகள் ~  (Read 85799 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஹான்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சன் - வரலாற்று நாயகர்!
 
வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்போரும், வாழ்க்கையை வாழ்ந்து முடிப்போரும் மீண்டும் ஒரு பருவத்திற்காக ஏங்குவார்கள் என்றால் அது நிச்சயம் பிள்ளைப்பருவமாகத்தான் இருக்கும். மழலைப்பேச்சும், கள்ளகபடமற்ற சிரிப்பும் நிறைந்த அந்த பிள்ளைப்பருவத்தில் வேறு எந்த தொல்லைகளும் இருக்காது என்பது ஒரு காரணம். இன்னொரு காரணம் அந்த பருவத்தில்தான் எந்த கட்டுப்பாடுமின்றி கற்பனைகளில் சஞ்சரிக்க முடியும். கனவுலகில் சிறகடிக்க முடியும் என்பது. உங்கள் பிள்ளைப்பருவத்தை சற்று பின்னோக்கிப் பாருங்கள் அந்தப் பருவத்தைப் பற்றி உங்களுக்கு எது ஞாபகத்திற்கு வருகிறதோ இல்லையோ ஒன்று மட்டும் நிச்சயமாக நினைவுக்கு வரும். அதுதான் fairy tales எனப்படும் புனைக்கதைகள். பெரும்பாலும் விலங்குகளை கதாபாத்திரங்களாக கொண்டு சின்ன சின்ன நீதிகளையும், கருத்துகளையும் சொல்லும் ஓர் அற்புத புனைக்கதைத் தொகுப்புதான் fairy tales. இன்றும் உலகம் முழுவதும் உள்ள சிறுவர்களை கட்டிப்போட்டிருக்கும், சிறுவர்களை கவர்ந்திருக்கும் அந்த புகழ்பெற்ற புனைக்கதைகளை நமக்கு தந்தவரைத்தான் சந்திக்கவிருக்கிறோம். அவர்தான் டென்மார்க் தந்த புகழ்பெற்ற கதாசிரியர் Hans Christian Andersen.

1805-ஆம் ஆண்டு ஏப்ரல் 2-ஆம் நாள் டென்மார்க்கில் பிறந்தார் கிரிஸ்டியன் ஆண்டர்சன். அவரது தந்தை சோகமே உருவான ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி. அவருக்கு வாய்த்தது சேரிப்புற வாழ்க்கைதான். தினசரி தன் மகனுக்கு எதாவது கதை படித்து சொல்வார் தந்தை. ஆண்டர்சன் சிறுவயதில் உடல் மெலிந்தும், சுத்தமில்லாமலும் இருப்பார். பெற்றோருக்கு போதிய வருமானம் இல்லாததால் அவரை பள்ளிக்கு அனுப்ப இயலவில்லை. சிறுவயதில் பிள்ளைகளுக்கு நிறைய கனவுகள் இருக்குமல்லாவா! ஆண்டர்சனுக்கும் ஒரு கனவு இருந்தது பெரிய பாடகராக வரவேண்டும் என்று. வறுமையைப் போக்கிக்கொள்ளவும், வாய்ப்புகளைத் தேடிக்கொள்ளவும் அவர் தமது பதினான்காம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி டென்மார்க் தலைநகர் Copenhagen வந்து சேர்ந்தார்.



Copenhagen தெருக்களில் பாட்டு பாடி மக்களை கவர முயன்றார். ஆனால் அவருக்கு பாட்டுப் பாட வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததே தவிர, அதற்கான குரலோ ஞானமோ அறவே இல்லை. அதனை சில நாட்களில் புரிந்துகொண்ட ஆண்டர்சன் இசையோடு நடனமாடி நடித்து மக்களை கவர நினைத்தார். அதிலும் அவருக்கு தோல்விதான் மிஞ்சியது. ஆனால் எதையாவது செய்து புகழ்பெற வேண்டும் என்ற அவரது எண்ணமும் அதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளும் எதிர்பாரத ஒரு பலனை அவருக்கு பெற்று தந்தன. அப்போது டென்மார்க்கின் மன்னனாக இருந்தவர் ஆறாம் Frederick அவருக்கு தெரிந்த ஒரு பிரமுகர் ஆண்டர்சனின் முயற்சிகளைப் பார்த்துவிட்டு மனமிறங்கி அவரது கல்விக்காக உதவி செய்யும்படி மன்னரிடம் கேட்டுக்கொண்டார். மன்னரும் ஆண்டர்சனின் கல்விக்காக ஏற்பாடு செய்து தந்தார். 

கல்வி கற்று பெரியவர் ஆனதும் பிள்ளைகளைக் குறியாகக் கொண்டு எழுதத் தொடங்கினார் ஆண்டர்சன். 1828-ஆம் ஆண்டு அவர் சிரிப்பும், பொழுதுபோக்கும் நிறைந்த  A Journey on Foot என்ற நகைச்சுவை கதையை எழுதினார். ஏழு ஆண்டுகள் கழித்து அவர் எழுதிய The Improvisatore என்ற நாவல் அவருக்கு பெரும் புகழைப் பெற்றுதந்தது. அவரது திறமையை மெச்சிய டென்மார்க் மன்னர் ஐரோப்பா முழுவதும் பயணம் செய்ய ஆண்டர்சனுக்கு நிதியுதவி வழங்கினார். அந்த பயணத்தின்போது பல புகழ்பெற்ற மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. பின்னாளில் Thumbelina, The Little Mermaid, The Emperor's New Clothes,  Picture-Book without Pictures, The Tinderbox,  Fairy Tales போன்ற புகழ்பெற்ற படைப்புகளை வழங்கினார். தம் வாழ்நாளில் சுமார் 350 கதைகளை எழுதினார்.



ஆண்டர்சனின் படைப்புகளில் அவருக்கு உலக புகழைப் பெற்று தந்தவை அவர் எழுதிய 'Fairy Tales' என்ற புனைக்கதைகள்தான். அந்த புனைக்கதைகளில் ஒன்று The ugly duckling அதாவது அழகில்லாத வாத்து. அந்த கதையில் மற்ற வாத்துகளைப்போல் தாம் அழகாக இல்லை என்று கவலைப்பட்ட ஒரு வாத்து பின்னர் அன்னமாக மாறுகிறது. ஹான்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சனின் வாழ்க்கைக்கும், அந்த கதைக்கும் அவ்வுளவு வேறுபாடு இல்லை. ஆண்டர்சனும் தன் உருவத்தைப் பற்றி கவலைப்பட்டவர்தான். ஆனால் டென்மார்க் மன்னரின் கவனம் கிடைத்தவுடன் தன்னம்பிக்கை பெற்று தாழ்வு மனப்பான்மையை மறந்து பிள்ளைகளின் வாழ்க்கையில் நீங்கா இடம் பிடித்தார். வெளித்தோற்றத்தை வைத்து எவரையும் மதிப்பிடக்கூடாது அவர்களது உள்ளம் அழகாக இருக்கும் என்ற கருத்தை அவர் பல கதைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

தன் வாழ்நாளில் இருமுறை காதல் வயப்பட்டார் ஆண்டர்சன். ஆனால் இரண்டுமே ஒருதலை காதலாக இருந்தது. 1875-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4-ஆம் நாள் தமது 70-ஆவது வயதில் அவர் தனிமையிலேயே காலமானார். அவரது வாழ்க்கை தனிமையில் முடிந்திருக்கலாம். ஆனால் உலகம் முழுவதும் சிறுவர்களின் வாழ்க்கையில் தனிமையில்லாமல் பார்த்துக்கொள்பவை அவர் உருவாக்கித் தந்த Fairy Tales தான். மக்களை குறிப்பாக சிறுவர்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்டவைதான் The Fairy Tales. தன்னைபோன்ற சோகமான பிள்ளைப்பருவம் பிறருக்கு வாய்க்கக்கூடாது என்பதும் ஆண்டர்சனின் எண்ணமாக இருந்தது. உலக குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை கொண்டு வந்த அவரது நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அவர் பிறந்த தினத்தை 'Odin's story day' என கொண்டாடுகிறது டென்மார்க். புதிய பொருட்கள் வாங்குவதில் அவருக்கு எப்போதுமே பிரியம். ஆனால் ஏழ்மை காரணமாக அவரால் விரும்பியவற்றை வாங்க முடிந்ததில்லை.



ஓர் ஏழையாக பிறந்தாலும் உலக குழந்தைகளை கவரும் உன்னத படைப்புகளை தந்ததால் உலகப் புகழ் பெற்றார் ஆண்டர்சன். பல வரலாற்று நாயகர்களுக்கு வாழ்க்கை முழுவதும் துணை வந்த வறுமைதான் இவருக்கும் துணை வந்திருக்கிறது. ஆனால் வறுமைக்கும், திறமைக்கும் சம்பந்தமில்லை என்பதை மெய்ப்பித்ததால்தான் வரலாறு ஹான்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சன் போன்றவர்களை நினைவில் வைத்திருக்கிறது. அவருக்கு 'புனைக்கதைகள்' என்ற வானம் வசப்பட்டதால்தான் அவரது நூல்கள் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஹான்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சனைப் போல் வறுமைய மறந்து திறமையை மூலதனமாக்கி விடாமுயற்சியோடும், தன்னம்பிக்கையோடும் உழைத்தால் நமக்கும் நாம் விரும்பும் வானம் நிச்சயம் வசப்படும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
புளோரன்ஸ் நைட்டிங்கேல் ("The Lady with the Lamp") - வரலாற்று நாயகர்!
 
மரணம் எவருக்குமே மகிழ்ச்சியை கொண்டு வருவதில்லை. மரணத்தை தள்ளிப் போடவோ அல்லது தடுக்கவோ ஒரு துறையால் முடியுமென்றால் அது மருத்துவதுறைதான். அதனால்தான் மருத்துவர்களை சிலசமயம் கடவுளுக்கு நிகராக ஒப்பிட்டு பார்க்கின்றனர் மரணவாயில் வரை சென்று திரும்பியோரும் அவர்களது குடும்பத்தினரும். மருத்துவர்களுக்கு கிடைக்கும் அந்த கெளரவம் அவர்களுக்கு உறுதுணையாய் இருக்கும் தாதியர்களுக்கு கிடைக்கிறதா? என்பது கேள்விக்குரிய ஒன்றுதான். ஆனால் ஆயிரமாயிரம் தன்னலமற்ற தாதியர்களை இந்த உலகம் சந்தித்திருக்கிறது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. அந்த தாதியர்களுக்கெல்லாம் முன்னொடியாக விளங்கிய ஒரு அதிசய நங்கையைப் பற்றிதான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம்.

'விளக்கேந்திய நங்கை' என்று அழைக்கப்படும் புளோரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale) இத்தாலியின் புளொரன்ஸ் (Florence) நகரில் 1820 ஆம் ஆண்டு மே மாதம் 12-ஆம் நாள் பிறந்தார். அவரது பெற்றோர் பெரும் செல்வந்தர்கள். சமூக மற்றும் அரசியல் தலைவர்களிடம் நெருக்கமான தொடர்பு கொண்டவர்கள். தங்களைப்போலவே தங்கள் இளைய மகளும் செளகரியமான செல்வம் கொழிக்கும் வாழ்க்கை வாழ வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். ஆனால் சுகபோக வாழ்க்கையில் நாட்டம் இல்லாத புளோரன்ஸ் தன் வாழ்நாளில் மனுகுலத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று சிறுவயதிலிருந்தே கனவு கண்டார்.



பெற்றோர் ஆரம்பத்தில் அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தாலும் புளோரன்ஸின் உயரிய கொள்கைக்கு முன் அவர்களின் எதிர்ப்பு இருந்த இடம் தெரியாமல் போனது. தமது 31-ஆவது வயதில் தனது குடும்பத்தின் செல்வத்தையும், சுகபோகங்களையும் துறந்து நோயாளிகளையும், போரில் காயமடைந்தவர்களையும் கவனித்து கொள்ளும் தமது நீண்ட நாள் விருப்பத்தை நோக்கி புறப்பட்டார். இங்கிலாந்தை பொருத்தமட்டிலும் அந்தக்காலத்தில் தாதிமை தொழில் என்பது பலர் அருவெறுத்து ஒதுக்கிய ஒரு துறையாக இருந்தது. சமூகத்தின் விரும்பதகாத பிரிவுகளை சேர்ந்தவர்கள்தான் தாதியராக பணியாற்ற முன்வந்தனர்.

தாதிமை பயிற்சி என்ற ஒன்று அப்போது கிடையாது. தாதியர்களுக்கான சம்பளமும் கூலிகளுக்கு கிடைப்பதைவிட குறைவாக இருந்தது. படிப்பறிவு இல்லாதவர்கள் சுத்தம் என்பதே என்னவென்று தெரியாதவர்கள், ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடுவோர் இவர்களைப்போன்றவர்கள்தான் தாதியர்களாக செயல்பட்டனர். இந்த துறையைத்தான் மாற்றி அமைக்க வேண்டும் என்று துணிந்தார் புளோரன்ஸ்.

ஜெர்மனியிலும், பிரான்ஸிலும் தாதியர்களுக்கான அடிப்படை பயிற்சியைப் பெற்றார். அந்த பயிற்சியை வைத்து அவர் பிரிட்டிஷ் மருத்துவமனைகளை மாற்றி அமைக்க முனைந்தார். ஜெர்மனியில் அவர் பயிற்சி பெற்ற போது தன்னைத்தானே வருத்திக்கொண்டார். அதிகாலை எழுந்து எல்லா பணிவிடைகளையும் செய்து எளிய உணவுகளை பகிர்ந்துகொண்டு தாதியர்களுக்கான விரிவுரைகளுக்கு சென்று வந்தார். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது மிக முக்கியமான அம்சங்கள் தூய்மையும், தூய்மையான காற்றும்தான் என்று நம்பினார் அவர். எனவே அந்தக்கால வழக்கத்திற்கு மாறாக காற்றோட்டமாக இருக்க வேண்டுமென்பதற்காக மருத்துவமனை கட்டடங்களில் பெரிய சன்னல்களை அமைக்க வற்புறுத்தினார். மேலும் தற்போதைய தாதிமை தொழிலில் உள்ள பெரும்பாலான நடைமுறைகளை அவர்தான் முதன்முதலில் சிந்தித்து செயல்படுத்தினார்.

அவரது சிந்தனைகளும், கோட்பாடுகளும் நாடு முழுவதும் பரவத்தொடங்கின. ஆனாலும் அவரது மாபெரும் தொண்டை உலகம் அறிய செய்ய ஒரு போர் தேவைப்பட்டது என்பதுதான் வரலாற்று உண்மை. 1854-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கிரைமியன் போர் (Crimean War) வெடித்தது. போரில் படுகாயமடைந்தவர்களையும், உறுப்புகளை இழந்தவர்களையும் கவனிக்கும் முறை என்ற ஒன்றே அப்போது இல்லாமல் இருந்தது. போர் வீரர்களின் அவலநிலை நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்திய சமயம் அவர்களை எப்படி கவனித்து கொள்ளலாம் என்பதை செய்துகாட்ட புளோரன்ஸுக்கு அழைப்பு விடுத்தார் போர்க்கால நாடாளுமன்ற செயலாளர் அதனை ஏற்று இங்கிலாந்தின் விக்டோரியா ராணியும் அவருக்கு ஆசி வழங்கி அனுப்பினார்.

நவம்பர் 4-ஆம் தேதி போர் முகாமான Scutari-ஐ வந்தடைந்தார் புளோரன்ஸ். நாற்பது தேர்ந்தெடுக்கப்பட்ட தாதிகளுடன் அவர் தமது பணியைத் தொடங்கினார். நோயாளிகளை நிர்வகிப்பதில் அவர் வகுத்து தந்த திட்டங்கள் போர்க்கால அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. மிக கடுமையான ஒழுங்குமுறையை அடிப்படையாக கொண்டவை. அதனை பின்பற்ற தயங்கியோரும், செயல்படுத்த தவறியோரும் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். புளோரன்ஸின் அந்த இரும்புகர நடவடிக்கை அபரிமிதமான பலனைத் தந்தது. அவர் வருவதற்கு முன் 42 விழுக்காடாக இருந்த மரண விகிதம் குறைந்து இரண்டு விழுக்காடானாது.



ஒரு நாளுக்கு 20 மணி நேரம் வரை நோயாளிகளின் நலனில் செலவிட்டார் புளோரன்ஸ். திட்டங்களை வகுத்து தந்ததோடு மட்டுமின்றி சமைப்பது, மருத்துவகருவிகளை கழுவி சுத்தமாக்குவது, குப்பைகளை அகற்றுவது மற்றும் அனைத்து வேலைகளையும் அவர் கைப்படவே செய்தார். ஒவ்வொரு இரவும் அல்லது ஒவ்வொரு அதிகாலையிலும் கையில் ஒரு விளக்கை ஏந்தியபடியே எல்லா வார்டுகளையும் ஒருமுறை சுற்றிப் பார்த்து விட்டு நோயாளிகள் அனைவரும் அமைதியாக உறங்குவதை உறுதி செய்த பிறகே அவர் உறங்க செல்வார். அதனால்தான் வரலாறு அவரை 'விளக்கேந்திய நங்கை' ("The Lady with the Lamp") என்று நினைவில் வைத்திருக்கிறது. நோயாளிகளின் வாழ்க்கையில் விளக்கேற்ற உதவியவர் என்ற இன்னொரு பொருளையும் நாம் எடுத்துக்கொள்ளலாம்.

தமது பணியை செம்மைப்படுத்திக்கொள்ள அவர் மூன்று முறை போர் முனைக்கும் செல்ல தயங்கவில்லை. கடுமையாக உழைத்த அவருக்கு கடுமையான நோய் ஏற்பட்டு தனது கூந்தலையும் அவர் இழந்தார். போர்ப்பணி முடிந்து அவர் 1856-ஆம் ஆண்டு இங்கிலாந்து திரும்பியபோது அந்த தேசமே அவரை கைகூப்பி வணங்கியது. இங்கிலாந்தின் செயிண்ட் தாமஸ் மருத்துவமனையில் நைட்டிங்கேல் தாதியர் பயிற்சிப் பள்ளியை நிறுவினார். 1858-ஆம் ஆண்டு 800 பக்க ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதுவே பிரிட்டிஷ் இராணுவ சுகாதாரத்திற்கு அடிப்படையாக அமைந்தது.

தம் வாழ்நாளில் மருத்துவமனை ஊழியர்களின் பணி, மருத்துவப்பொருட்கள் வாங்குதல், மருத்துவமனை   அறைகலன்களை தேர்ந்தெடுத்தல், தூய்மைப்படுத்துதல், நோயாளிகளுக்கான உடை மற்றும் உணவு ஆகிய அனைத்து மருத்துவமனை சார்ந்த நடவடிக்கைக்கும் தேவையான அடிப்படைகளை வகுத்துத் தந்தார் புளோரன்ஸ். உலகம் முழுவது அவர் வகுத்துதந்த முறைகள் பின்பற்றப்பட்டன. அவர் உருவாக்கித்தந்த முறைகள்தான் இன்றைய நவீன தாதிமைத் தொழிலுக்கும், நவீன மருத்துவமனை வசதிகளுக்கும் அடிப்படையாக விளங்குகிறது.



தாதிமைத் துறையில் அவரது அரிய சேவையை பாராட்டி இங்கிலாந்து ராணி 'Order of Merit' என்ற ஆக உயரிய பட்டத்தை 1907-ஆம் ஆண்டு அவருக்கு வழங்கி சிறப்பித்தார். அந்த விருதை பெற்ற முதல் பெண்மனி அவர் என்பது குறிப்பிடதக்கது. அதற்கு அடுத்த ஆண்டு 'Freedom of the City of London' என்ற உயரிய அங்கீகாரத்தையும் பெற்ற புளோரன்ஸ் நைட்டிங்கேல் 1910-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் நாள் தமது 90-ஆவது அகவையில் இங்கிலாந்தில் காலமானார். அவர் மறைந்தாலும் இன்றும் ஒவ்வொரு தாதியரின் உருவிலும் உலா வந்துகொண்டிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

அடுத்த முறை நீங்கள் ஒரு தாதியரை சந்தித்தால் அவருக்கு நன்றி சொல்லுங்கள். அதற்கும் மேலாக அவரைப் போன்றவர்களை உருவாக்க தமது வாழ்க்கையை அர்ப்பணித்து வலுவான அடித்தளம் அமைத்துத்தந்த அந்த விளக்கேந்திய நங்கை புளோரன்ஸ் நைட்டிங்கேலுக்கு நன்றி கூறுங்கள். புளோரன்ஸ் நைட்டிங்கேல் போல் மனுகுலத்தை ஓர் அங்குலமாவது உயர்த்தி விட வேண்டும் என்று எண்ணுவோருக்கும், எண்ணித்துணிவோருக்கும் எத்தனை தடைகள் வந்தாலும் நிச்சயம் அவர்கள் விரும்பும் வானம் வசப்படும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஜீன் ஹென்றி டுனாண்ட் (Jean Henri Dunant) - வரலாற்று நாயகர்!
 
2001-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய குடியரசு தினத்தன்று குஜராத்தை தாக்கிய நிலநடுக்கத்தை நாம் மறந்திருக்க முடியாது. இயற்கையின் முப்பது வினாடி சீற்றத்தால் குஜராத் மாநிலம் துவண்டு போனபோது அங்கு துயர் துடைப்பிற்காக விரைந்து வந்த முதல் அமைப்பு அனைத்துலக செஞ்சிலுவை சங்கம். அந்த குஜராத் பூகம்பத்திற்கு மட்டுமல்ல உலகின் பெரும்பாலான பகுதிகளில் இயற்கையும், செயற்கையும் துயரங்களை விளைவிக்கும்போது விரைந்து சென்று உதவிக்கரம் நீட்டும் ஓர் உன்னத அமைப்புதான் செஞ்சிலுவை சங்கம். உலகில் மனிதநேயம் இன்னும் மாய்ந்து விடவில்லை என்பதை அன்றாடம் உணர்த்தும் ஓர் மனிதநேய அமைப்பு அது. அந்த அற்புத அமைப்பை உலகிற்கு தந்தவர் ஜீன் ஹென்றி டுனாண்ட் (Jean Henri Dunant) செல்வந்தராக பிறந்து செஞ்சிலுவை சங்கத்திற்காக சொத்தையெல்லாம் செலவழித்து இறுதியில் ஏழ்மையில் இறந்துபோன அந்த உன்னத மனிதரின் வரலாற்றை தெரிந்துகொள்வோம்.



1828-ஆம் ஆண்டு மே மாதம் 8-ஆம் நாள் சுவிட்சர்லாந்தில் ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்தார் டுனாண்ட். பெற்றோர்கள் மதபற்று கொண்டவர்களாக இருந்ததால் இயற்கையிலேயே டுனாண்டும் மதபற்றில் அதிக ஈடுபாடு காட்டினார். உயர் நிலைப் பள்ளிப் படிப்பை முடிக்காமல் வெளியேறிய அவர் சிறிது காலம் ஜெனிவா வங்கியில் வேலை செய்தார். 26 வயதானபோது அவர் வர்த்தகத் துறையில் அடியெடுத்து வைத்தார். அல்ஜீரியாவுக்கு (Algeria) சென்று சுவிஸ் காலனியான Setif என்ற இடத்தில் ஒரு நிலத்தை வாங்கினார். அதில் விவசாயம் செய்தும், பண்ணை நடத்தியும் தன் தந்தையைப் போல் பெரும் செல்வந்தராக வேண்டும் என்று அவர் விரும்பினார். அந்த பண்ணைக்குத் தேவையான தண்ணீரை குழாய் மூலம் கொண்டு வரவேண்டியிருந்தது. பக்கத்திலிருந்த நிலப்பகுதியோ பிரெஞ்சு அரசாங்கத்துக்கு சொந்தமான பகுதி எனவே அங்கு குழாய் போட பிரெஞ்சு அரசாங்கத்தின் அனுமதியை அவர் பெற வேண்டியிருந்தது.

பலமுறை பிரெஞ்சு அதிகாரிகளை சந்தித்தும் பலன் கிட்டாததால் அப்போது பிரான்சை ஆண்டு வந்த மன்னன் மூன்றாம் நெப்போலியனை நேரில் சந்தித்து அனுமதி பெற முடிவெடுத்தார் டுனாண்ட். அந்த முடிவுதான் அவரது வாழ்க்கையை திசை திருப்பியது. அந்த சமயம் ஆஸ்திரிய படைகளை இத்தாலியிருந்து துரத்தியடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது பிரெஞ்சு இராணுவம். அந்த இராணுவத்தை வழி நடத்தி போரில் ஈடுபட்டிருந்தார் மூன்றாம் நெப்போலியன். இத்தாலியில் அமைந்திருந்த நெப்போலியனின் போர்த்தலைமையகமான  Solferino முகாமுக்கு நேரடியாக சென்றார் டுனாண்ட். நெப்போலியனை சந்திக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் தர வேண்டியிருக்கும் என்று நம்பியதால் தன்னுடன் நிறைய பணத்தையும் அவர் கொண்டு சென்றிருந்தார் அந்த ஆண்டு 1859. போகும் வழியிலேயே போரின் அவலங்கள் அவரின் கண்களில் பட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டிருந்தன, பாலங்கள் தகர்க்கப்பட்டிருந்தன. எப்படியோ ஒரு மாட்டு வண்டி துணையுடன் Solferino-க்கு அருகிலுள்ள  Castiglione என்ற சிற்றூரை அடைந்தார்.

அந்த சிற்றூரிலிருந்த ஒரு மலை உச்சியிலிருந்து அவர் கண்ட காட்சிகள் அவரை கலங்கடித்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிக மூர்க்கமான போர்களில் ஒன்றை அவர் நேரடியாக கண்ணுற்றார். போர்க்களத்தில் பத்தாயிரம் பேர் மடிந்தனர் பதினைந்தாயிரம் வீரர்கள் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். அந்த அவலங்களைக் கண்ட டுனாண்டுக்கு வந்த வேலை மறந்து போனது மனிதநேயம் பீறிட்டு எழுந்தது. காயமடைந்த வீரர்களில் சுமார் 500 பேர் அந்த சிற்றூரிலிருந்த தேவலாயத்துக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கு விரைந்த டுனாண்ட் எந்தவித மருத்துவ அனுபமும் இல்லாதிருந்தும்கூட முதலுதவி செய்து காயங்களை சுத்தம் செய்யத்தொடங்கினார். அந்த ஊரிலிருந்த இரண்டு மருத்துவர்களை அழைத்து வந்து மருத்துவம் பார்க்க சொன்னார். இறக்கும் தருவாயில் இருந்த வீரர்கள் கூறிய விபரங்களை எழுதி வைத்துக்கொண்டு அந்தந்த குடும்பங்களுக்கு செய்திகளை அனுப்ப ஏற்பாடு செய்தார். தான் கொண்டு வந்திருந்த பணத்தை வைத்து உணவு ஏற்பாடு செய்ததோடு இன்னும் கூடுதல் மருத்துவர்களை வரவழைத்து மருத்துவம் பார்த்தார்.



ஒருமாதம் அங்கேயே தங்கி வீரர்களை கவனித்தார் டுனாண்ட். இறுதியில் நூறு வீரர்கள் மடிந்தனர், நானூறு வீரர்கள் அவரது முயற்சியால் குணமடைந்து இல்லம் திரும்பினர். பின்னர் சுவிட்சர்லாந்து திரும்பிய டுனாண்டுக்கு தன்னுடைய அல்ஜீரியா பண்ணைப் பற்றி முற்றிலும் மறந்து போனது. இரவு பகலாக போர்க்காட்சிகளே அவர் கண்முன் தோன்றின. எத்தனைப் போர்க்களங்களில் எத்தனை வீரர்கள் கவனிப்பின்றி இறந்திருப்பார்கள் என்று நினைத்து கலங்கினார். இனி எதிர்காலத்தில் உலகில் எந்த மூலையில் போர் நிகழ்ந்தாலும் அதில் காயம்படும் வீரர்களுக்கு முதலுதவி வழங்கி அவர்களின் உயிரை காப்பாற்ற ஓர் அனைத்துலக அமைப்பை உருவாக்க வேண்டும் என்று நினைத்தார். போரில் தான் கண்ட காட்சிகளையும், பெற்ற அனுபவங்களையும் Solferino- நினைவுகள் எனும் தலைப்பில் நூலாக எழுதினார். 

போரில் காயமடையும் எந்த தரப்பு வீரருக்கும் பாகுபாடின்றி மருத்துவ சிகிச்சை வழங்கப்படவேண்டும் அவர்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்களும், தாதியர்களும் தங்கு தடையின்றி அனுமதிக்கப்பட வேண்டும். போர்க்காலத்தின்போது உதவ பொதுமக்களுக்கு பயிற்சியளிக்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட திட்டத்திற்கு உலக நாடுகள் அனைத்தும் ஒத்துழைக்க வேண்டும் என்று அந்த நூலில் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். டுனாண்ட் அச்சிட்டு வெளியிட்ட அந்த நூலில் முதல் இரண்டு பதிப்புகள் விரைவாக விற்று தீர்ந்தன. அதனால் ஊக்கம் பெற்ற டுனாண்ட் அடுத்த பதிப்பில் தனது கோரிக்கையை விரிவுபடுத்தினார். அதன்படி போர்களின்போது மட்டுமின்றி எந்த ஒரு நாட்டில் வெள்ளம், புயல், நிலநடுக்கம், தீவிபத்து போன்ற இயற்கை சீற்றங்கள் நிகழ்ந்தாலும் அங்கு நேரடியாக நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கு அனைத்துலக அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று தனது எண்ணத்தை வெளியிட்டார். 



பின்னர் ஐரோப்பா முழுவதும் பயணம் செய்து அப்படி ஒரு அமைப்பு உருவாக்கப்படுவதற்கு ஆதரவு திரட்டினார். அவரது அயராத உழைப்பால் 1864-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22-ஆம் நாள் பனிரெண்டு நாடுகள் கூடி ஜெனிவா உடன்படிக்கையில் கையெழுத்திட்டன அனைத்துலக செஞ்சிலுவை சங்கம் உதயமானது. அந்த சங்கம் சுவிட்சர்லாந்தில் உருவானதால் அந்த நாட்டுக்கொடியின் வண்ணங்கள் தலைகீழாக மாற்றப்பட்டு அதுவே செஞ்சிலுவை சங்கத்தின் கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த சங்கத்தின் தோற்றத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும் தனது சொத்தையெல்லாம் செலவழித்து மிகுந்த எழ்மைக்குள்ளானார் டுனாண்ட். உலகிற்கு மிகப்பெரிய அமைப்பை உருவாக்கிக்கொடுத்தும் அவரிடம் பணம் இல்லாமல் போனதால் உலகம் அவரை ஒட்டுமொத்தமாக மறந்து போனது. சில சமயங்களில் அடுத்த வேளை உனவுகூட இல்லாமல் அவர் சிரமப்பட்டதாக சில வரலாற்றுக்குறிப்புகள் கூறுகின்றன.

சுமார் முப்பது ஆண்டுகள் ஒதுங்கியே வாழ்ந்த அவரை 1895-ஆம் ஆண்டு அடையாளம் கண்டு உலகிற்கு அறிமுகப்படுத்தினார் ஒரு பத்திரிக்கையாளர். அதன்பிறகு 1901-ஆம் ஆண்டு அமைத்திக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கி கெளரவித்தது நோபல் குழு. தாம் ஏழ்மையில் இருந்தபோது கூட அந்த நோபல் பரிசுத்தொகையை பயன்படுத்தவில்லை. தன் மரணத்திற்கு பிறகு அந்த பரிசுத்தொகையில் ஒரு பாதியை சுவிட்சர்லாந்து ஏழைகளுக்கும், மறு பாதியை நார்வே ஏழைகளுக்கும் கொடுத்து உதவ ஓர் அறக்கட்டளையை உருவாக்கினார். வாழ்நாளின் இறுதிவரை பிறரது நலனையே விரும்பிய அந்த உன்னத மனிதரின் உயிர் 1910-ஆம் ஆண்டு அக்டோபர் 30-ஆம் நாள் அவரது 82-ஆவது அகவையில் பிரிந்தது.   



இன்று செஞ்சிலுவை சங்கம் இல்லாத நாடே இல்லை என்று சொல்லுமளவுக்கு அந்த அமைப்பு உலகம் முழுவதும் விரிவடைந்திருக்கிறது. துயர்துடைப்பு என்றால் நம் நினைவுக்கு வரும் முதல் அமைப்பு செஞ்சிலுவை சங்கமாகத்தான் இருக்கும். ஆண்டுதோறும் டுனாண்டின் பிறந்த தினமான மே எட்டாம் நாள் செஞ்சிலுவை சங்க தினமாக கொண்டாடப்படுகிறது. ஜீன் ஹென்றி டுனாண்ட் வரலாற்றில் இவ்வுளவு பெரிய சுவட்டை பதிக்க முடிந்ததற்கு காரணம்  மனுக்குலத்தின் இன்னல்களை களைய வேண்டும் என்ற உயரிய சிந்தனையும், துயர்துடைப்பிற்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்ற மனிதநேயமும், தடைகளை கண்டு துவண்டு போகாத மனோதையரியமும்தான். டுனாண்டைப் போன்று உயரிய சிந்தனைகளோடு மனிதநேயமும், மனோதைரியமும் இணையும் போது நம்மாலும் நாம் விரும்பும் வானத்தை வசப்படுத்த முடியும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்!
 
உலகில் அமைதி செழிக்க வேண்டும் உலக நாடுகள் சமாதானமாக வாழ வேண்டும் என்பதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட ஓர் உயர்ந்த மனிதரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். அவர்தான் 1901-ஆம் ஆண்டு அமைதிக்கான முதல் நோபல் பரிசை வென்ற பிரெஞ்சு நாட்டவரான பிரெட்ரிக் பாஸி (Frederic Passy). அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்தைத் தோற்றுவித்ததற்காக அதே ஆண்டில் ஹென்றி டுனான்டிற்கும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இருவருமே அமைதிக்காக அடித்தளமிட்டவர்கள் என்றாலும் அவர்களின் அணுகுமுறையில் வேறுபாடு இருந்தது.

உலக நாடுகளிடையே போர் ஏற்படுவது தவிர்க்க முடியாதது அத்தகைய போர்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவை என்ற அடிப்படையில்தான் செஞ்சிலுவை சங்கத்தைத் தொடங்கினார் ஹென்றி டுனாண்ட். ஆனால் பிரெட்ரிக் பாஸி ஒருபடி மேலே சென்று நாடுகளிடையே போர் ஏற்படுவதற்கான அடிப்படைகளை அடையாளம் கண்டு போர்களை அறவே ஒழித்து நாடுகளிடையே சமாதானம் நிலவ வழிவகை செய்ய வேண்டும் என்று விரும்பினார். அதனால பெரும் முயற்சி மேற்கொண்டு போரை விரும்பாத நாடுகளை ஒன்றாக அணி சேர்த்து நடுநிலை சமாதான நாடுகள் எனும் அனைத்துலக அமைப்பை உருவாக்கினார். உலக அமைதிக்காக கிட்டதட்ட வாழ்நாளின் பாதியை அர்ப்பணித்த அந்த உன்னத மனிதனின் வாழ்க்கையை தெரிந்துகொள்வோம்.



1822-ஆம் ஆண்டு மே மாதம் இருபதாம் நாள் பாரிஸில் (Paris) பிறந்தார் பிரெட்ரிக் பாஸி (Frederic Passy). கல்வியில் சிறந்து விளங்கிய பாஸி சட்டத்துறையில் பட்டம் பெற்று தனது 22-ஆவது வயதில் அரசாங்க சேவையில் ஓர் எழுத்தராக சேர்ந்தார். அந்த வேலை அவ்வுளவு பிடிக்காமல் போனதால் பத்திரிகை நிருபராகவும், பொருளாதார கட்டுரைகள் எழுதும் எழுத்தாளராகவும் சில ஆண்டுகள் பணி புரிந்தார் பின்னர் கல்லூரி ஒன்றில் பொருளாதார விரிவுரையாளராக பணியாற்றினார். அந்த காலக்கட்டத்தில்தான் பிரான்சு, இங்கிலாந்து, துருக்கி ஆகிய மூன்று நாடுகள் இணைந்து ரஷ்யா மீது போர்த்தொடுத்தன. பலத்த உயிருடல் சேதத்தை ஏற்படுத்திய அந்த 'கிரைனியன் போர்' பாஸியின் மனத்தை வெகுவாக பாதித்தது. அதுமட்டுமல்லாமல் இன்னொரு உண்மையும் அவருக்கு வேதனையை உண்டாக்கியது.

ஒருமுறை பிரான்சில் பயங்கரமான வெள்ளம் ஏற்பட்டு பலத்த உயிர் சேதமும் பொருளிழப்பும் ஏற்பட்டது. அந்த வெள்ளம் விளைவித்த சேதத்தை உணர்ந்த மக்கள் அது போன்ற இன்னொரு வெள்ள சேதம் ஏற்படுவதற்கு முன் அதிலிருந்த தப்ப பல முன்னெச்சரிக்கை நடைவடிக்கைகளை நிறைவேற்றினர். ஆனால் அதே பிரெஞ்சு மக்களும், பாதிக்கப்பட்ட மற்ற நாட்டு மக்களும் கிரைனியன் போரினால் ஏற்பட்ட உயிருடல் மற்றும் பொருள் சேதங்களைப்பற்றி ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. போர் என்பது தவிர்க்க முடியாதது ஒன்று என மக்களும், அரசும் கருதியதே அந்த அலட்சியபோக்குக்கு காரணம் என்று நம்பினார் பாஸி. இயற்கை பேரிடர்களிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள மனுகுலம் எடுக்கும் முயற்சிகளை செயற்கை போர்களுக்கு எதிராகவும் எடுக்க வேண்டும் என்று விரும்பினார் அவர். அதனால் 'அனைத்துல சமாதான இயக்கம்' ஒன்றைத் தொடங்க வேண்டும் என்ற வேட்கை அவருக்குள் எழுந்தது.

அனைத்துலக சமாதானம் குறித்து அவர் பல பத்திரிகைகளில் பல கட்டுரைகள் எழுதினார். பொதுக்கூட்டங்களில் உணர்ச்சிப்பூர்வமாக பேசினார். தனி அமைப்புகளிடமும் மட்டுமின்றி மற்ற நாட்டு அமைச்சுகளுடனும் தொடர்பு கொண்டு சமாதானத்திற்காக குரல் கொடுத்தார். 1867-ஆம் ஆண்டு 'சமாதான சங்கம்' ஒன்றை தொடங்குவது குறித்து அவர் பாரிஸ் பத்திரிக்கை ஒன்றில் கட்டுரை வெளியிட்டார். பொதுமக்களிடையே அதற்கு பலத்த ஆதரவு கிடைக்கவே கட்டுரை பிரசுரமான அறுபதே நாட்களில் 'பிரெஞ்சு சமாதான இயக்கம்' என்ற அமைப்பைத் தோற்றுவித்தார் பாஸி. அந்த அமைப்பின் செயலாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1870-ஆம் ஆண்டு பிரான்சுக்கும், ஜெர்மனிக்கும் இடையே போர் மூண்டது. அந்தப் போரை தடுக்க தனது சமாதான இயக்கம் மூலம் எவ்வுளவோ முயன்றார் பாஸி.



பத்திரிகைகளில் எழுதியதோடு மட்டுமின்றி இருநாட்டு அரச தந்திரிகளை பலமுறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் ஆனால் அது பலனிக்காமல் போகவே போர் மூண்டது. அதில் வேதனையான உண்மை என்னவென்றால் போர் கூடாது என்று நல்லெண்ணத்துடன் போராடிய பாஸியையும், அவரது இயக்க உறுப்பினர்களையும் கண்டால் சுட்டுத்தள்ளுமாறு இரு நாட்டு வீரர்களுக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது. அதனால் போரின்போது பாஸி தலைமறைவாக இருக்க நேரிட்டது. போர் முடிந்ததும் மீண்டும் அவர் தையரியமாக சமாதான பணிகளில் ஈடுபட்டார். அந்த சமயத்தில் பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது சமாதான பணியை விரிவாக்க அது ஒரு நல்ல அடித்தளமாக அமைந்தது. அவரது தீவிர முயற்சியால் அமெரிக்காவுக்கும், பிரான்சுக்கும் இடையே சமாதான உடன்படிக்கை ஏற்பட்டது. அதுமட்டுமல்ல மற்ற நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நல்லதொரு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார் பாஸி.

பாஸியின் பெரும் முயற்சியால் 1889-ஆம் ஆண்டு பிரான்சு, இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின், டென்மார்க், ஹங்கேரி, பெல்ஜியம், அமெரிக்கா ஆகிய நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுகூடி Inter-Parliamentary Union என்ற அனைத்துலக பாராளுமன்றத்தை உருவாக்கினர். அதன் மூன்று தலைவர்களில் ஒருவராக பாஸி தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த சங்கம் நாடுகளுக்கிடையே உருவாகும் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் நடுநிலை சங்கமாக இன்றும் செயல்பட்டு வருகிறது. 1890-ஆம் ஆண்டு பல நாட்டு சங்கங்களின் பிரதிநிதிகளை பாரிசில் ஒன்றுகூட்டினார் பாஸி. அந்தக்கூட்டத்தில் சமாதானமே என்றும் நிம்மதியைத் தரும் எனவே ஒவ்வொருவரும் உயிர் மூச்சு உள்ளவரை சமாதானத்திற்காக போராட வேண்டும் என்று உருக்கமாக கோரிக்கை விடுத்தார். அந்த சொற்பொழிவின் விளைவாக அடுத்த ஆண்டே நிரந்தர 'சமாதான தலைமையகம்' உருவானது.     

உலக அமைதிக்காக கிட்டதட்ட வாழ்நாளின் பாதியை செலவழித்த பாஸியை 'அமைதியின் தூதுவன்' என்று உலகம் போற்றியது. அவர் ஏற்படுத்திய விழிப்புணர்ச்சியால் உலக நாடுகளில் பெரும்பாலானவை போர்களை தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டன. உலக அமைதிக்காக தனியொரு மனிதனாக கூக்குரல் கொடுத்த பாஸிக்கு அமைதிக்கான முதல் நோபல் பரிசை வழங்கி நன்றியை தெரிவித்துக்கொண்டது உலகம். அப்போது அவருக்கு வயது 79 அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற அந்த வயதிலும் அமைதி மீதான அவரது ஆர்வம் தளரவில்லை. அடுத்த பதினொரு ஆண்டுகளும் அமைதியின் முக்கியத்துவம் பற்றி தொடர்ந்து எழுதினார், கூட்டங்களில் பேசினார். 1912-ஆம் ஆண்டு ஜூன் 12-ஆம் நாள் தொன்னூறாவது வயதில் அந்த அமைதிப்புறாவின் உயிர் பிரிந்தது.

பாஸியின் கொள்கையைப் பின்பற்றிதான் இன்று அணிசேரா நாடுகளின் இயக்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன. அமைதிக்காக ஒருவர் குரல் கொடுத்தே இவ்வுளவு நன்மை விளைந்திருக்கிறதென்றால் நாம் ஒவ்வொருவரும் முயன்றால் நம் உலகம் யுத்தமில்லாத பூமியாக மாறாதா? என்ற சிந்தனைதான் பாஸியின் வாழ்க்கை நமக்கு விட்டு சென்றிருக்கும் காணிக்கை. மனுகுல சமாதானத்திற்காக பாடுபட வேண்டும் என்ற உயரிய எண்ணமும், அதற்கான அயராத உழைப்பும்தான் பிரெட்ரிக் பாஸிக்கு அமைதி என்ற வானத்தை வசப்படுத்தின. பாஸியைப் போன்ற உயரிய எண்ணமும், கடும் உழைப்பும், விடாமுயற்சியும் நமக்கு நோபல் பரிசை பெற்றுத்தராவிட்டாலும் நாம் விரும்பும் வானத்தை வசப்படுத்தும்.