Author Topic: இது காதல் காலமடி சகி!  (Read 723 times)

Offline Guest 2k

இது காதல் காலமடி சகி!
« on: February 13, 2019, 06:54:30 PM »
துரத்திப் பிடிக்கும் பழங்கனவுகளுக்கு
அறைகளென்று எதுவுமில்லை
எல்லாவற்றையும் துடைத்தெறிந்தும்
இச்சிறு புகைப்படத்தை
ஒவ்வொரு முறையும்
மீண்டுமொரு முறை
கிழித்தெறிவதற்கென வைத்திருக்கிறேன்
நீலவானத்தின் கீழ் நிற்கும்
மலைமுகடுகளின் ஓரம் நின்று
உன் நினைவுகளை
விசிறியடிக்கும்
சாத்தியங்களை தேடியிருக்கிறேன்
எதுவுமின்றியும், எல்லாமும் நிறைந்திருக்க கூடியதுமான
இந்த இடைவெளிகள்
நிரப்பக் கூடியதல்ல..

நானெப்படும் நான்
மரணித்து
நாட்கள் ஆகின்ற,
எஞ்சியிருப்பது
இந்த காதல் மட்டும் தான்

°°°°°°°°°°°°°°°°
காதலெனப்படுவது
தாய் மடியின் கதகதப்பு
காதலெனப்படுவது
தேவதை கரங்களின் குளுமை
காதலெனப்படுவது
கால ஓடத்தை செலுத்திச் செல்லும்
வற்றாத ஜீவநதி
காதலெனப்படுவது
பெருங்கருணையின் பேராறு
காதலெனப்படுவது
பேரன்பின் ஆதி ஊற்று
காதலெனப்படுவது
முடிவிலி

°°°°°°°°°°°°°°°°

முதல் முறையாக இளஞ்சூரியனின்
வெம்மை உணர்கிறேன்
பெருக்கித் துடைக்கப்பட்ட வாசலில்
உதிர்ந்து கொட்டியிருக்கும்
பூவரசம்பூவின் மஞ்சள் ஒளியில்
கவனமிழக்கிறேன்
மின்மினிப்பூச்சியின் சாயல்
சுமந்து திரிகிறேன்
அம்மம்மாவின் கன்னச் சுருக்கங்களுக்கு
மணிக்கொரு முத்தம்
பரிசளிக்கிறேன்
முடிந்த இடத்தில்
மீண்டும் தொடங்குகிறேன்
தொடங்கிய இடத்தில்
மீண்டும் தொடர்கிறேன்
இது
மாய சுழற்சியா இல்லை நேர வளையமா
என குழம்பி நிற்கும் வேளையில்
காதல் காதலென்றொரு
அசரீரி
வெகு தொலைவிலும்
மிக அருகிலும்
கேட்டுக் கொண்டே இருக்கிறது

°°°°°°°°°°°°°°°°
தோற்றப்பிழைகளுக்கு தோதாக
பேதலித்து கிடக்கின்றது மனம்
அனிச்சை செயல்கள்
ஸ்மரணையற்று போயிருக்கின்றன
பாதையின் தடம் பழகிய கால்கள்
கூட
கடக்கவியலாததொரு கடவையென
தொக்கி நிற்கின்றன

இரக்கமின்றி கடந்து சென்றுவிடாதீர்கள்
ஒரு கணம் நின்று
காதலின் கதையை கேட்டிடுங்கள்
ஏனெனில்
இந்த காதல் படுத்தும்பாடு
சொல்லி மாளாதது

°°°°°°°°°°°°°°°°

முடிவிலியாய் நீளும்
காத்திருத்தலின் வாதையும்
வெயில் கூடு சுமக்கும்
நத்தையென
யுகமாய் நகரும் நொடிகளின் நீட்சியும்
காதலின் நித்திய கரங்களில்
வீழும் கணம்
துல்லியமாய் தொலைந்து போகும்

°°°°°°°°°°°°°°°°
ஒரு பார்வையும்,
இதழ் பூக்கும் புன்னகையும்,
சிறு மௌனமும் கூட போதும்
இந்நொடி
காதலாகி கசிந்துருகிட

°°°°°°°°°°°°°°°°
மழை தரும் சுகமும்
வெயில் தரும் இதமும்
ஒரு அணைப்பு தருவது
பெருங்காதலின் பேரன்புதானே

°°°°°°°°°°°°°°°°

மிச்சமிருக்கும் காதலை
உறங்கிக் கொண்டிருக்கும்
மிருகத்திற்கு புகட்டுகிறேன்
மெல்லிய அதன் வாலசைப்பும்
நெகிழ்ந்து கொடுக்கும் அதன் குழைவும்,
சர்வநிச்சயமாய்
இம்மிருகத்தினுள் காதல்
குடிபுகுந்து தான் விட்டது
இனி இம்மிருகத்தை
காதல் மிருகம் என்றே அழைத்திடுங்கள்

°°°°°°°°°
பெருவனத்தின் தாழ் திறக்கும்
சாவியொன்று
காதலெனும் சாத்தான் கையில்
உள்ளது.
கவனம்,
தாழ் திறக்கும் நொடி
காதலெனும் சாத்தானை
ஏந்தி நிற்கும்
தேவதையாக்கப்படுவீர்கள் நீங்கள்

°°°°°°°°°°°°
எவ்வளவு மடக்கி போட்டு
எழுதியும்
ஈறிலியாய் நீண்டு கொண்டிருக்கும்
இந்த காதல் கவிதைக்கு
தயை கூர்ந்து கொஞ்சமே கொஞ்சமேனும்
காதலை பரிசளித்திடுங்கள்
கவிதைக்கும்
ஓய்வு தேவை தானே,
அந்த நேரத்தில் நானும்
கொஞ்சம் காதல் செய்து கொள்கிறேன்

°°°°°°°°°°°°°°°°
காதல்
மதுக்குவளையின் மலர்
இனி
தெளிந்து நிற்பது
சிறிது கடினம் தான்

°°°°°°°°°°°°°°°°
ஆழ அகன்றும்
இன்னமும்
புரிந்துகொள்ள முடியாமல்
காலத்தை வென்று நிற்பது
பேரண்டமும் சிறு அணுவும்
பெருங்காதலும் தான்

°°°°°°°°°°°°°°°°
தனிமைகளும், தீவாந்திரங்களும்
நிறைந்த இவ்வுலகில்
கடக்க முடியாத எல்லைகளில்
தேங்கி நிற்கும்
எனக்கு
காதல் தான்
புதிரற்ற பாதைக்கு இட்டுச் செல்லும்
திசைக்காட்டி

சீரற்று கலைந்து கிடக்கும்
எண்ணங்களின்
மெய் - மெய்நிகர் பிம்பங்களில்
குழம்பி நிற்கும்
எனக்கு
காதல் தான்
தோற்றப் பிழைகளை சீராக்கும்
மாயக்கண்ணாடி

விதி கோர்த்த நூலின்
இரு எதிர் முனைகளில்
தொட்டுவிட முடியாத தூரத்தில்
நிற்கும்
எனக்கு
காதல் தான்
காலத்தை கடத்திச் செல்லும்
கருந்துளை

இறந்தகாலத்தின்
நீட்சி என தொடரும் இவ்வாழ்வில்
பெருங்காதலில் சுற்றித் திரியும் எனக்கும்
பைத்திய நிலைகள் அடர்ந்திருக்கும்
இப்பின்னிரவுகளுக்கும்
'எப்பொழுதும்' என்ற வார்த்தை
உணர்த்தும் தருணத்திற்கும்
பெருங்காதலினால் என்
காலடியில் நழுவி விழும்
இப்பூமிக்கும்
காதல் தான்
பேரன்பின் ஆதி ஊற்று

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்